தலைப்பை
முடிவு செய்துவிட்டேன். பொருளடக்கமும் கிட்டத்தட்ட தயார். கிரேக்கம்,
ரோம சாம்ராஜ்ஜியம், தாமஸ் ஹோப்ஸ், ரூஸோ, வால்டேர், ஃபிரெஞ்சுப்
புரட்சி, காரல் மார்க்ஸ், சோவியத் யூனியன், லெனின், மாவோ, என்று
ஆரம்பித்து அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்திய
வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சித்தாந்தங்கள்.
ஜனநாயகம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? கம்யூனிஸம்?
சர்வாதிகாரம்? ஃபாசிஸம்? வடிவம் கிடைத்தது.வேகமாக எழுதவும்
ஆரம்பித்துவிட்டேன்.
தொடரை வெளியிட அம்ருதா ஒப்புக்கொண்டது. மாத
இதழ். மாதம் ஒர் அத்தியாயம் எழுதினால் போதும். முடித்துவிடலாம் என்னும்
நம்பிக்கையுடன் முதல் அத்தியாயத்தை அனுப்பினேன். இரண்டு, மூன்று, நான்கு.
பிரச்னை எதுவும் இல்லை. அம்ருதா சிவப்பு நிறத்துக்கு மாறிவருகிறது, அபாயம்
என்று சிலர் கடிதம் எழுதினார்கள். இந்திய தத்துவ மரபை ஏன் கொண்டுவரவில்லை
என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து
எழுதினால் ஓர் அறிமுக ஆவணமாக உருவாகும் என்று சிலர் நம்பிக்கை அளித்தனர்.
ஐந்தாவது அத்தியாயத்தை எழுதி முடிப்பதில் காலதாமதம் ஆகிவிட்டது.
அனுப்பவேண்டிய தினம் கடந்து, ஒரு வாரம் கழித்தே அனுப்பினேன். எப்படியோ
இதழில் கொண்டுவந்துவிட்டார்கள்.
இனி தாமதம் கூடாது. ஆறாவது
அத்தியாயத்துக்கான குறிப்புகளை உடனுக்குடன் எடுத்து வைத்தேன். எழுதவும்
ஆரம்பித்தேன். இன்று, நாளை, மறுநாள் என்று ஒரு மாதம் இழுத்துவிட்டது. சரி,
அடுத்த மாதம் இரண்டு அத்தியாயங்கள் எழுதி முன்கூட்டியே அனுப்பிவிடலாம்
என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த மாதமும் முடியவில்லை. இரு புத்தகங்களை
வாசிக்கத் தொடங்கியிருந்தேன். தாமஸ் ஹோப்ஸின் Leviathan. ரூஸோவின்
Confessions. இடையில், நான் எழுதிய மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு
கிழக்கில் வெளிவந்தது. திருமணம் செய்துகொண்டேன். ஏழாவது அத்தியாயம்
மட்டும் உருபெறவில்லை.
இதுவரை எழுதிய பாகங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். மீண்டும் தொடங்கவேண்டும். தொடங்குவேன்.
அரசியலின் கதை
1. நுழைவாயில்
அரசியல்
என்னும் சொல்லை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று
கவனித்திருக்கிறீர்களா? ’அந்த ஆபிஸ்ல பாலிடிக்ஸ் ஜாஸ்தி. நிம்மதியா வேலை
செய்ய முடியாது. ’ ’ஐயோ அவன்கூட சேரவேகூடாது. அவன் நிறைய பாலிடிக்ஸ்
செய்யறவன்.’
அரசியல்
என்றால் தந்திரம். வஞ்சகம். நம்பிக்கை துரோகம். மிருகத்தனம். பாலிடிக்ஸ்
செய்பவர் பச்சோந்தியுடன் ஒப்பிடப்படவேண்டியவர். அல்லது குள்ள நரியுடன்.
அல்லது பாம்புடன். ஆகவே, நண்பர்களே பாலிடிக்ஸ் செய்பவர்களிடம் இருந்து
விலகி விடுங்கள். அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள்.
அவர்கள் அறிந்த
அரசியல்வாதிகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆரம்பம் தொட்டு இன்று
வரை. எல்லாவற்றிலும் ஒரு போலித்தனம். நடந்து வருவதில். புன்னகை
செய்வதில். கைகூப்பி வணக்கம் செலுத்துவதில். அன்புள்ள வாக்காளப்
பெருமக்களே என்று பிரியம் பொங்க அழைத்து வோட்டு கேட்பதில். ஆட்சிக்கு
வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று பட்டியல் வாசிப்பதில்.
அறிக்கைகள் வெளியிடுவதில். எல்லாமே, எல்லாமே போலியானவை.
அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம் அரசியல் என்று அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்.
ஆகவேதான் நிஜ வாழ்க்கையில் யார் பிசகினாலும், யார் ஏமாற்றினாலும், யார்
அயோக்கியத்தனம் செய்தாலும் அவரை ஓர் அரசியல்வாதியோடு ஒப்பிடுகிறார்கள்.
அவர்கள்
பெற்ற அரசியல் ஞானம் இதுதான். அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு. அதன்
விதிகளை நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. மூர்க்கமும் முரட்டுத்தனமும்
கொண்டவர்களால் மட்டுமே இதில் பங்குபெறமுடியும். மென்மனம்
கொண்டவர்களுக்கு அரசியல் லாயக்கில்லை. மீறி கால் பதித்தாலும் அரசியல்
இவர்களைச் சும்மாவிடாது. நன்றாகப் படித்து, மாநிலத்தில் முதலாவதாக வந்து
ஓர் அரசியல்வாதியாகப் போகிறேன், நான் வாழும் சமூகத்தை
மாற்றியமைக்கப்போகிறேன் என்று எந்த மாணவராவது சொல்லி
கேட்டிருக்கிறீர்களா? டாக்டர் ஆகலாம். சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகலாம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்து காசு பார்க்கலாம். பிசினஸ் நடத்தலாம்.
பொட்டிக்கடைகூட போதுமானதுதான். அரசியல்?
ஐயா,
அரசியலுக்கு இணையான லாபகரமான மற்றொரு தொழில் இன்னொன்று இல்லை.
உண்மைதான். ஆனால் அதற்காக உயிரைப் பணயம் வைக்க முடியுமா? வேண்டாம் சாமி.
அரசியலும் வேண்டாம். அதனால் கிடைக்கும் ஆதாயமும் வேண்டாம். நான் அந்த
ஜாதியில்லை. எனக்கு அரசியல் வேண்டாம்.
இவர்கள் முதல் வகையினர்.
இரண்டாவது
வகையினர் அரசியலை சாக்கடையாகப் பார்க்கிறார்கள். புத்தரும் காந்தியும்
அவதரித்த புண்ணிய தேசம் இது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நமது தியாகிகள்
நடத்திய போராட்டங்களுக்கு ஈடுஇணை உண்டா? அப்பப்பா, இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கிறது. சும்மாவா வந்தது சுதந்தரம்? உயிரைவிட்டு
வாங்கிக்கொடுத்தார்கள் ஐயா. என்ன பயன்? இன்றைய அரசியல்வாதிகள் என்ன
செய்துகொண்டிருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் லஞ்சம். ரௌடித்தனம்.
வெட்டு, குத்து, கொலை. ஈனத்தனமான காரியங்கள் என்னென்ன இருக்கிறதோ
அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். மனிதத்தன்மையற்ற
செயல்களையும்தான். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பின்னால் ஒரு அடியாள்
கூட்டம். அல்லது ஒவ்வொரு அடியாள் கூட்டத்திலிருந்தும் ஒரு அரசியல்வாதி.
ச்சே!
சிறிது காலத்துக்கு முன்புகூட தேசம் நன்றாகத்தான் இருந்தது.
கக்கன், காமராஜர் போன்ற புண்ணியவான்கள் ஆத்மசுத்தியுடன் ஆட்சி
நடத்தியிருக்கிறார்கள். அது அரசியல். இன்று அது போல் ஒருவரை உங்களால்
சொல்லமுடியுமா? ஏன் முடியவில்லை? யார் யாரோ வருகிறார்கள். என்னென்னவோ
செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். அட இவர் நல்லவர் ஆயிற்றே என்று
நினைத்துதான் வோட்டு போடுகிறோம். பிறகு என்ன ஆனது? நான் ஆசையாசையாகத்
தேர்ந்தெடுக்கும் தலைவர் என்னை ஏமாற்றிவிடுகிறார். என்னை மட்டுமல்ல என்
சமூகத்தையும்.
போதும் நாய்வால் கதை. இனி யாரையும் நம்புவதாக
இல்லை. அரசியல் ஒரு சாக்கடை. சுத்தம் செய்யப்போகிறோம் என்று சொல்லி
காலை உள்ளே விடுபவர்களை அந்தச் சாக்கடை இழுத்துக்கொண்டுவிடுகிறது.
முதலில் முகம் சுளித்தவர்களுக்கு அந்த வாடை நாளடைவில்
பழகிப்போய்விடுகிறது. ஒரு மெடிக்கல் சீட்டுக்கு எவ்வளவு தருவாய்? ஒரு
கையெழுத்துப் போட்டால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? பெட்டி
கொண்டுவருபவர்கள் மட்டும் உள்ளே வரவும்.
ஊழல்
வழக்குகளில் சிக்காத அரசியல்வாதி என்று ஒருவரையாவது சொல்லமுடிகிறதா?
இதுவாவது பரவாயில்லை. சிலர் மீது போதைக் கடத்தல் குற்றச்சாட்டு. கொலை
குற்றச்சாட்டு. பாலியல் வன்முறை குற்றச்சாட்டு. சாட்சியங்கள்
இருந்திருக்கிறார்கள். ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் யாராலும்
அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.
அதிகாரம் இருக்கும் போது
யாருக்கு, எதற்கு அஞ்சவேண்டும் சொல்லுங்கள். எல்லோரையும்விட சட்டம்
மேலானது என்பதெல்லாம் வெறும் ஹம்பக்தான். தெருமுனை மீட்டிங்கில் மைக்செட்
போட்டு பேசலாம். எழுதிவைத்து பரவசப்படலாம். ஆனால் நிஜத்தில்
அரசியல்வாதிகளை சட்டம் நெருங்குவதில்லை. ஒரு கும்பிடு போட்டுவிட்டு
வளைந்துபோய்விடுகிறது. ஆகவே நண்பர்களே நானும் விலகிக்கொள்கிறேன்.
மூன்றாவதாக
ஒரு பிரிவினர் உண்டு. பாலிடிக்ஸ்? வொய் ஷுட் ஐ கேர்? யார் ஆட்சிக்கு
வந்தால் எனக்கு என்ன? யார் ஊழல் செய்தால் எனக்கு என்ன? யார் யாரை
வெட்டினால் எனக்கு என்ன? பிஜேபியாக இருந்தால் என்ன காங்கிரஸாக இருந்தால்
என்ன? திமுக வந்தால் என்ன அஇஅதிமுக வந்தால் என்ன? நமக்கும் அரசியலுக்கும்
என்ன சம்பந்தம் சொல்லுங்கள். இந்தா வைத்துக்கொள் என்று யாராவது நமக்கு
அள்ளித்தரப் போகிறார்களா? என் கஷ்டத்தை சுமக்கப்போகிறார்களா? என்
வீட்டுச் செலவை ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா? எனக்கு நல்ல வேலை
வாங்கித்தரப்போகிறார்களா? எதுவுமே இல்லை. என் மீது ஆர்வம் கொள்ளாத
அரசியல் மீது நான் ஏன் ஆர்வம் கொள்ளவேண்டும்?
அரசியலின் கதை : இரண்டு
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதமான காரணத்தை முன்னிறுத்தினாலும் இவர்கள் அனைவரும்
சொல்லவருவது இதைத்தான். அரசியல் எனக்கானது இல்லை. அரசியல்வாதிகள் வேறு
ஜாதிக்காரர்கள். அது வேறு துறை. வேறு இனம். எனக்கு அரசியல் வேண்டாம். ஆளை
விடுங்கள். கதவை இழுத்து மூடிக்கொண்டுவிட்டால் அரசியல் விவகாரங்கள்
எதுவும் தன்னை பாதிக்காது என்பது இவர்கள் நம்பிக்கை. தவிரவும், தனக்கு
அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் பலருக்குப் பெருமையும்
கர்வமும் கூட உண்டு.
அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
இதையேதான். அரசியல் தெரியாது அரசியல் புரியாது அரசியல் பிடிக்காது என்று
முகம் சுளித்து ஒதுங்குபவர்களைத்தான் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை உருவாக்கத்தான் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
எல்லோரும் அப்படி இருந்துவிட்டால் பிரச்னை இருக்காது. யாரும் கேள்விகேட்க
மாட்டார்கள். யாரும் கொடி பிடித்து போராட்டம் நடத்த மாட்டார்கள். யாரும்
விமரிசிக்க மாட்டார்கள். போதாது?
அரசியல் சாக்கடை என்கிறாயா?
ஆமாம் இது சாக்கடைதான். உள்ளே வராதே. நாங்கள் அடாவடிக்காரர்கள் என்கிறாயா?
சரியாகத்தான் சொல்கிறாய். நாங்கள் விவகாரமானவர்கள்தான். எச்சரிக்கை!
எங்களை நெருங்காதே. உன் பிரச்னைகளை என்னிடம் கொண்டு வராதே. ஒதுங்கி
நின்று வேடிக்கை மட்டும் பார். அரசியல் உனக்குப் புரியாது. புரிந்துகொள்ள
முயற்சிக்காதே.
எனில், முயற்சி செய்பவர்களின் கதி? என் சமூகத்தைப்
பற்றி நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருப்பவர்கள் என்ன
ஆகிறார்கள்? செய்தித்தாள்கள்களை வாசிக்கிறார்கள். டிவி பார்க்கிறார்கள்.
இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை கிரகித்துக்கொள்கிறார்கள்.
அரசியல் பற்றி அதிகம் விவாதிப்பவர்களாகவும் கவலைப்படுபவர்களாகவும் இவர்களே
இருக்கிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் தவறாமல் ஓட்டுபோட்டு ஜனநாயகக்
கடமையை நிறைவேற்றுகிறார்கள்.அரசியல் அரங்கில் நடைபெறும் அனைத்து சிறிய
பெரிய மாற்றங்களையும் உன்னிப்பாக இவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சரி.
அரசியல் பற்றிய இவர்கள் புரிதல் என்ன? அரசியல் ஆர்வலர்களான இவர்கள்
அரசியலை எப்படிப் பார்க்கிறார்கள்? இவர்களது பங்களிப்பு என்ன? சமூகத்தை
மாற்ற இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
செப்டம்பர்
11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை
ஆரம்பித்து வைத்தார் ஜார்ஜ் புஷ். அதன் ஒரு அத்தியாயம் இராக். பயங்கர
ஆயுதங்களைத் தேடுகிறோம் என்று சொல்லி பாக்தாத்தில் பீரங்கிகளை
உருட்டிக்கொண்டு போய் நிறுத்தியது புஷ் அரசாங்கம். வேட்டை மிருகத்தைப்
போல் சதாமைத் தேடிப்பிடித்து அடைத்துவைத்தார்கள். கையோடு
குற்றச்சாட்டுகள் பதிவு செய்து பொம்மை விசாரணை நடத்தி தூக்கில்
போட்டார்கள். பாக்தாத் வீதிகளில் ரத்த ஆறு ஓடியது. பல லட்சக்கணக்கான
இராக்கியர்கள் நடுவீதியில் ஆதரவற்று நின்றார்கள். கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுவிட்டது. இராக் முற்றிலுமாகச்
சிதைந்துபோனது. அபு காரிப் சிறையில் அமெரிக்க வீரர்கள் அரங்கேற்றிய
மிருகத்தனமான சித்திரவதைகளைக் கண்டு உலகமே அதிர்ந்து பின்வாங்கியது. இந்த
நிமிடம் வரை இராக் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம். இந்த நிமிடம் வரை
அமெரிக்கர்கள் இராக்கை விட்டு வெளியேறவில்லை.
ஆரம்பத்தில்
அமெரிக்கர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்கோ ஒரு மூலையில்
யாருக்காகவோ நடைபெறும் போர் என்று ஒதுங்கியிருந்தார்கள். அரசியல்
விவகாரம் நமக்கு எதற்கு? இராக்கில் போர் நடந்தால் எனக்கு என்ன? சதாம்
கெட்டவர் கொன்றொழிக்கப்படவேண்டியவர் என்கிறது என் அரசாங்கம். பயங்கர
ஆயுதங்களை அவர் ஒளித்துவைத்திருப்பதாகச் சொல்கிறது என் அரசாங்கம்.
தீவிரவாதத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்தப் போர் என்கிறது என்
அரசாங்கம். அரசாங்கம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இது
அரசாங்கத்தின் முடிவு. நான் என்ன சொல்ல?
அரசியல்
சாக்கடை என்று நினைத்தவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள். அரசியல் ஒரு
அடாவடித்தனம் என்று நினைத்தவர்கள் ஜார்ஜ் புஷ்ஷைத் திட்டி தீர்த்தபிறகு
ஒதுங்கிக்கொண்டார்கள். அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களும் அரசியலை
நிராகரித்தவர்களும் சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் போனார்கள். இராக்
போன்ற விவகாரங்கள் தன்னை பாதிக்காது என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.
போர்
புரியச் சென்ற அமெரிக்கர்கள் பைகளில் மூட்டைகளாக வந்து சேர்ந்தபோதுதான்
இவர்கள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார்கள். ஐயோ இவர் என் கணவர். இவன்
என் மகன். இவன் என் நண்பன். இவன் என் சகோதரன். இவர் என் அப்பா. எதற்கு
இந்தப் பாழாய் போன போர்? அப்போதுதான் கண்களைத் திறந்து பார்த்தார்கள்.
அதிர்ந்தேபோனார்கள். உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு அலைகள்
வெடித்துக்கொண்டிருந்தன. அமெரிக்காவுக்கு எதிராக. புஷ்ஷுக்கு எதிராக.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக. அடக்குமுறைக்கு எதிராக. அமெரிக்காவை உலகம்
எப்படி பார்க்கிறது என்பதை அவர்கள் அழுத்தம்திருத்தமாக உணர்ந்துகொண்டனர்.
எதைப் பற்றியும் யோசிக்காமல், எதையும் தெரிந்துகொள்ளாமல் அலட்சியமாக
இத்தனை காலம் இருந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்கமாட்டோம்.
வீதிகளில் இறங்கினார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க அரசே! உடனடியாக நம்
வீரர்களைத் திரும்பப்பெற்றுக்கொள். போரை உடனே நிறுத்து.
அரசாங்கம்
என்பது புனிதமான அமைப்பு. அரசாங்கம் எது செய்தாலும் அது சரியாகவே
இருக்கும். அரசாங்கத்தை எதிர்ப்பது சட்டத்தை எதிர்ப்பதற்குச் சமமானது.
மெய்யான தேசபக்தி் கொண்ட எவரும் அரசாங்கத்தை எதிர்க்கத் துணியமாட்டார்கள்.
இதுபோல் இன்னும் பல பிம்பங்கள் அரசாங்கத்தின் மீது
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிம்பங்கள் உடைந்தாகவேண்டும்.
உடைத்தாகவேண்டும். அரசாங்கம் தவறுகள் செய்யும். சாதாரண தவறுகள் மட்டுமல்ல
மாபெரும் தவறுகளும். நம்மால் எதுவும் முடியாது என்று இந்தத் தவறுகளை
ஏற்றுக்கொள்வது ஓர் அரசியல். எதிர்ப்பது ஓர் அரசியல். கண்டும் காணாமல்
இருந்துவிடுவது ஓர் அரசியல். தெருவில் இறங்கி வந்து போராடுவது ஓர் அரசியல்.
அரசியலின் கதை : நான்கு’வணக்கம்.
என் பெயர் ஜோ வில்டிங். இது என் வெப்சைட். Wildfire. நான் பார்த்த,
கேள்விப்பட்ட சங்கதிகளை இங்கே பதிவு செய்துள்ளேன். உட்காருங்கள்.
ஒவ்வொன்றாக பொறுமையாகப் படியுங்கள். களைப்படையும்போது, சிறிது தேநீர்
அருந்துங்கள்.’
இப்படித் தொடங்குகிறது அந்த வலைத்தளம். தேதி
வாரியாக, கிழமை வாரியாக கதைகள். அருந்த ஒரு டம்ளர் பால் கிடைக்காமல்
சுருண்டு கிடக்கும் குழந்தைகளைப் பற்றி. ஃபலூஜாவில் திடீர் திடீர் என்று
இடிந்து விழும் கட்டடங்களைப் பற்றி. அமெரிக்கப் படை வீரர்கள் அதிர அதிர
நடத்தும் அட்டகாசங்கள் பற்றி. இன்னமும் நிறைய.
புத்தகம்
எழுதப்போகிறோம், நியூஸ் ஸ்டோரி எழுதுகிறோம் என்று சொல்லி நிருபர்கள்
பலர் இராக்கில் கூடாரம் அடித்து தங்கியிருக்கிறார்கள். சாயந்திரம் வெயில்
இல்லாதபோது பிளாஸ்கில் தேநீர் எடுத்துக்கொண்டு, தோளில் ஒரு காமிராவை
மாட்டிக்கொண்டு எழுதி அனுப்ப மாட்டர் தேறுமா என்று கிளம்பிவிடுவார்கள்.
கிடைத்தால் சரி. கிடைக்காவிட்டாலும் சரி. நான்கு செய்தித்தாள்களைப்
படித்துவிட்டு, ஐந்தாவதாக ஒரு கதையை உருவாக்கிவிடமுடியும். அதிக
சிரமமில்லை. பேனா மூடியை அல்லது லாப்டாப்பை பிரித்து வைத்துக்கொண்டு
உட்கார்ந்தால் மண்டைக்குள் ஏதாவது உதிக்கும்.
ஆனால்,
ஜோவுக்கு உதிக்காது. சீறிப்பாய்ந்து வரும் தோட்டாக்களை அவர்
அருகிலிருந்து தரிசித்திருக்கிறார். கொடுத்த வேலையை சீராக
முடித்துவிட்டு, உருண்டு போகும் பீரங்கியை வெறுப்பு பொங்க
பார்த்திருக்கிறார். இராக்கின் புழுதி, ரத்தம், சத்தம் எல்லாமே இவருக்குப்
பரிச்சயமானவை.
ஜோ வில்டிங் (Jo Wilding) ஒரு பத்திரிகையாளர். வயது
32. பிரட்டன்வாசி. முக்கால் பேண்ட் போட்டுக்கொண்டு இராக் வீதிகளில்
நடந்து சென்று, தான் பார்த்தவற்றை, தன்னை பாதித்தவற்றை அழுத்தத்துடன்
பதிவு செய்து வருகிறார். இராக்கைப் பொறுத்தவரை, ஜோ சொல்லித்தான்
உலகுக்கு பல பதறவைக்கும் கதைகள் தெரியவந்தன.
தீவிர அமெரிக்க
எதிர்ப்பாளர். தீவிர பிரிட்டன் எதிர்ப்பாளர். இராக்குக்கு ஒரு நடை போய்
பாருங்கள் வேறு என்னவாகவும் உங்களால் இருக்க முடியாது என்கிறார் ஜோ. 1991
முதல் 2003 வரை இராக் மீது இந்த இரு தேசங்களும் விதித்த பொருளாதாரத்
தடைகளால் 5,00,000 குழந்தைகள் செத்துப் போனார்கள். குண்டூசி கூட உள்ளே
நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றது அமெரிக்காவும் பிரிட்டனும். விளைவு? ஒரு
துண்டு ரொட்டியை ஒன்பது பேர் மூன்று வேளைக்குச் சாப்பிட்டாகவேண்டிய
நிலைமை. மருந்து மாத்திரைகள் இல்லை. மின்சாரம் இல்லை. உணவுப் பொருள்கள்
இல்லை.
ஜோ முதன் முதலாக இராக் சென்றது 2001-ல். பொருளாதாரத் தடை
என்னும் பெயரில் ஒரு தேசத்தை எப்படியெல்லாம் சித்திரதை செய்யலாம் என்பதை
அவர் நேரடியாகத் தெரிந்துகொண்டது அன்றுதான். பிறகு, 2003-ல் மீண்டும்
இராக் சென்றார். இந்த முறை அவர் சென்றது ஒரு பத்திரிகையாளராக அல்ல.
சர்க்கஸ் உரிமையாளராக. இராக் குழந்தைகளை மகிழ்விக்க சர்க்கஸ்
நடத்திக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் சுற்றி வருகிறோம்.
இராக்குக்கும் வரலாம்தானே? அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுவிட்டு
நுழைந்தார். சர்க்கஸ் நடத்தினார். நரகத்தை, தப்பு, நகரத்தைச் சுற்றிப்
பார்த்தார். கையோடு கொண்டு சென்றிருந்த (ரகசியமாகத்தான்) பிளாஸ்திரி,
மாத்திரை, மாத்திரைகளை தேவைப்படுபவர்களுக்கு விநியோகித்தார். சர்க்கஸ்
டிக்கெட்டில் கிடைத்த பணத்தை இராக்கியர்களுக்காகச் செலவிட்டார்.
ஏப்ரல்
2004-ல் நிலைமை மோசமாக மாறியது. இராக் எரிய ஆரம்பித்தது. குறிப்பாக,
ஃபலூஜா. மூன்றாவது முறையாக இராக்குக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜோ.
வந்ததும் வராததுமாக அவருக்குள் உதித்த கேள்வி இதுதான். பத்திரிகையாளர்கள்
என்று ஒருவரும் இங்கே இல்லையே. ஏன்? எங்கே போய்விட்டார்கள் அவர்கள்?
இராக்கில் போர் என்று சதாமோ புஷ்ஷோ பிரஸ்மீட் வைத்து சொன்னால்தான்
வருவார்களா? போர் எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டாமா? இராக்கியர்கள்
இந்தப் போரை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?
எதற்காக இந்தப் போர் என்று கேட்கவேண்டுமா? போரால் பாதிக்கப்படுபவர்களை
கண்டு பேசி, அவர்கள் துயரங்களை பதிவு செய்ய வேண்டாமா?
அன்று முடிவு
செய்ததுதான். ஏப்ரல் 2004 ஜோ எழுதத்தொடங்கினார். இன்றுமுதல் நான் ஒரு
பத்திரிகையாளர். போர் எத்தனை குரூரமானது, எத்தனை விகாரமானது என்பதை
உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போகிறேன். உண்மை. உண்மையை மட்டும்.
அதுவும் கண்ணால் கண்ட உண்மையை மட்டும்.
ஜோவின் ஒரே ஒரு பதிவு மட்டும் இங்கே.
’ஒரு
வயதான ஆள் வீட்டை விட்டு வெளியில் வந்தார். காற்று வாங்குவதற்காக
இருக்கலாம். அல்லது வெளியில் எங்காவது செல்ல உத்தேசித்திருக்கலாம். ஒரு
நிமிடம்தான் ஆகியிருக்கும். அவர் மார்பை குறிபார்த்து சுட்டுவிட்டார்கள்.
ஏன் எதற்கு என்று தெரியவில்லை. அப்பாவின் அலறல் சத்தம் உள்ளே இருந்த
மகன்களுக்குக் கேட்டது. ஆனால், கதவைத் திறந்து வெளியில் வர அவர்களுக்குத்
துணிச்சலில்லை. ஏதோ ஒரு வேலையாக சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் அந்த
வீட்டை நான் கவனித்தேன். கதவை பலமாகத் தட்டினேன். யாருமில்லை, வெளியில்
வாருங்கள் என்று கத்தினேன். பிறகுதான் அவர்கள் வெளியில் வந்தார்கள்.
இறந்து போன தந்தையை அப்போதுதான் அவர்கள் பார்த்தார்கள்.’
அமெரிக்க
ராணுவ பயங்கரவாதத்தின் உச்சகட்டம் ஃபலூஜா. யாரும் யாரையும் எப்போது
வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம். காரணம் அநாவசியம். இறந்தவர்களையும்
அடிபட்டவர்களையும் ஜோ ஆம்புலன்ஸில் சுமந்து சென்றபோதுகூட, ஆம்புலன்ஸ்
வண்டியை நோக்கி அமெரிக்க வீரர்கள் சரமாரியாக சுட்டிருக்கிறார்கள்.
ஃபலூஜாவில் மட்டுமல்ல. இராக் முழுவதும் இதுபோல் பல நூறு கதைகள்.
மாற்று
ஆடைகள் வாங்குவதற்கு வழியில்லாமல் அவதிப்படும் இராக்கியர்கள்.
பிரசவத்துக்கு வண்டி கிடைக்காமல், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரை விடும்
இளம்பெண்கள். இன்று உயிருடன் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாமல் கண்
விழிக்கும் மக்கள். நேற்று வரை வாழ்ந்த வீடு இன்று இல்லை என்பதால் கை
நீட்டி பிச்சை எடுக்கும் குழந்தைகள். ஜோ இன்னமும்
எழுதிக்கொண்டிருக்கிறார். ஜோவின் வலைதளம் இதோ.
http://www.jowilding.net/
ஜோவுக்கு அரசியல் பிடிக்கும். மாற்று அரசியல்.
அரசியலின் கதை : ஐந்து’உங்கள்
மீது எந்த தவறும் இல்லை, நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது. இப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ அந்த
என்.டி.டி.வி. நிருபர் உமா குரானாவிடம் ஒய்யாரமாகக் கேட்ட கேள்வி இது.
சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, உமாவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி
இதுவே. ஆனால், உமா குரானாவால் இதற்குத் தெளிவான ஒரு பதிலை சொல்ல
முடியவில்லை. முந்தாநாள் வரை, தானுண்டு தன் வகுப்புகள் உண்டு என்று
இருந்தவர் மீது அநாயசமாக ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளே தள்ளினார்கள்.
அதிலும் லேசுபட்ட குற்றச்சாட்டா? தன்னிடம் பயிலும் மாணவிகளைக்
கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறாராம்.
உமா தன்
மாணவிகளுடன் பேசும்போது ரகசியமாகச் சில வீடியோ காட்சிகளை பதிவு செய்து
சில பல ஒட்டு வேலைகளுக்குப் பிறகு, அந்தப் பதிவுகளையே சாட்சியங்களாக
சமர்ப்பித்திருக்கிறார்கள். விஷயம் தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட பள்ளி
உமாவை நிர்த்தாட்சண்யமாக வேலையிலிருந்து துரத்தியிருக்கிறது. மாணவர்களும்
பெற்றோர்களும் கொடுமைக்காரி உமா ஒழிக என்று பள்ளி வாசலில் நின்று கோஷம்
போட்டிருக்கிறார்கள். எங்கள் குலத்துப் பெண்களை எப்படிச் சீரழிப்பாய்
என்று சில மாணவ ஹீரோக்கள் உமா மீது பாய்ந்திருக்கிறார்கள். அவர் கையைப்
பிடித்து இழுத்து வந்து சாலையில் வைத்து நையப் புடைத்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த டெல்லி நகரமும் கொந்தளித்திருக்கிறது. உமா கைது செய்யப்பட்டு
பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்தோ அநியாயம் என்று
சீறிப்பாய்ந்த செய்தித்தாள்கள் உப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாம்
சேர்த்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்தியை சமைத்து
வெளியிட்டிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு, நீதிமன்ற தீர்ப்பு
வந்திருக்கிறது. இது போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. உமா நல்லவர். பிறகு,
என்.டி.டி.வி. பேட்டி. எப்படி உணர்கிறீர்கள் உமா மேடம்?
அந்த
ரிப்போர்ட்டரின் பெயர் பிரகாஷ் சிங். லைவ் இந்தியா நியூஸ் சானல் என்னும்
நிறுவனத்தில் பணிபுரிபவர். தனிப்பட்ட பிரச்னை காரணமாக, உமா மீது வஞ்சம்
தீர்த்துக்கொள்ள இந்த நிருபரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஒரு
பிஸினஸ்மேன். டிவி சானலுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கரையில்லை. சூப்பர்
மாட்டர். பரபரப்புக்குப் பரபரப்பு. விளம்பரத்துக்கு விளம்பரம். தவிரவும்,
எக்கச்சக்கப் பணம். உமா குரானாவின் அந்தரங்க நிகழ்ச்சியின் இப்பகுதியை
உங்களுக்கு வழுங்குபவர்கள் ஸோ அண்டு ஸோ. இருபத்து நான்கு மணி நேரமும்
ஒலிபரப்பியிருக்கிறார்கள். இடையிடையே விவாதங்கள், நேரடி கள ஆய்வுகள்.
எக்கச்சக்க பேட்டிகள். பெண்களின் பாதுகாப்புப் பற்றி. ஆசிரியர்களின் கடமை
பற்றி. சீரழிந்து வரும் கலாசாரம் பற்றி. டி.ஆர்.பி. ரேட்டிங்
உச்சத்துக்குப் போயிருக்கிறது.
உமா நல்லவர். தீர்ப்பு
வந்துவிட்டது. இப்போது இந்த நியூஸ் சானல் என்ன செய்யப்போகிறது? மீண்டும்
ஒரு 24 மணி நேர ஒலிபரப்பு? உமா எத்தனை நல்லவர், அவர் எவ்வளவு பண்பாணவர்
என்பதற்கான வீடியோ ஆதார ஒலிபரப்பு? இந்த நிகழ்ச்சிக்கு யாராவது விளம்பரம்
தருவார்களா? இப்பகுதியை உங்களுக்கு வழுங்குபவர்கள் ஸோ அண்டு ஸோ?
மாட்டார்கள்.
ஒருவர் நல்லவர் என்பது நியூஸ் ஆகாது. இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி.
ரேட்டிங் கிடைக்காது. யாரும் பார்க்கமாட்டார்கள். காரமான சர்ச்சைகள்
வேண்டும். பார்ப்பவர்கள் ஆச்சரியப்படவேண்டும் அல்லது ஆத்திரப்படவேண்டும்
அல்லது அதிர்ச்சியடையவேண்டும்.
சாமியார்
மேட்டரா? சூப்பர். பாலியல் வக்கிரங்களா? எங்கே, எங்கே? உடனே கவர் செய்.
கோரமான விபத்தா? புகைப்படங்கள் நிச்சயம் வேண்டும். கலரில். நடிகர்கள்,
நடிகைகள் பற்றிய கிசுகிசுவா? இங்கே கொண்டா. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர்
திட்டிக்கொள்கிறார்களா? அட்சரம் பிசகாமல் அப்படியே எழுதிக்கொடு. யாருடைய
அந்தரங்கத்தையாவது ரகசியமாகத் தெரிந்து கொள்ள முடியுமா? ஃபோட்டோ எடுக்க
முடியுமா? வீடியோ?
வேறு
வழியில்லை என்கிறது மீடியா. தினம் ஒரு சானல் முளைத்துக்கொண்டிருக்கிறது.
எத்தனை மெகா சீரியல்களைத்தான் எடுப்பது? கற்பனை வக்கிரங்களைப் பார்த்துப்
பார்த்து மக்களுக்குப் போரடித்துவிட்டது. அவர்களை கவர்ந்திழுக்கவேண்டாமா?
சீட்டின் நுனிக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டாமா? தவிரவும், எங்கள்
போட்டியாளர்களை முந்தி நாங்கள் முன்னேறவேண்டாமா? நம்பர் ஒன் டிவி சானல்
என்னும் பெயர் வரவேண்டுமென்றால் சும்மாவா?
மீடியாவின் அரசியலை விரிவாக விவாதிப்போம்.
அரசியலின் கதை : ஆறு
மீடியா முன்வைக்கும் அரசியல் இதுதான். உங்களை மகிழ்விப்பதுதான் எங்கள்
பணி. உங்களது ரசனைதான் எங்கள் முதலீடு. இருபத்து நான்கு மணி நேரமும்
எங்கள் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. கண்டுகளியுங்கள்.
வேறு எதிலும் உங்கள் கவனம் சிதறிப்போகக்கூடாது. என்ன வேண்டும்
உங்களுக்கு? அரசியலா? இதோ. சுடச்சுட விவாதங்கள். சுடச்சுட செய்திகள்.
சர்ச்சைகளா? இதோ. சினிமாவா? எத்தனை வேண்டும்? திரைக்கு வந்து சில
நிமிடங்களே ஆன படம்? நடிகையின் பேட்டி வேண்டுமா? உங்களுக்குப் பிடித்த
நடிகருடன் தொலைபேசியில் பேசவேண்டுமா? வெளிநாட்டுக்குச் சுற்றுலா
செல்லவேண்டுமா? நிகழ்ச்சியின் முடிவில் கொடுக்கப்படும் கேள்விக்கு
விடையளியுங்கள். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப்
பரிசு நிச்சயம்.
காஷ்மீரை
மறந்துவிடுங்கள். அங்கே நிறைந்திருப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்.
பாகிஸ்தானைப் பார்த்தீர்களா? நம் எதிரி தேசம்? நக்ஸலைட்டுகள் தெரியுமா?
பொல்லாதவர்கள். படு பயங்கரமானவர்கள். கொஞ்சம் அசந்தாலும் தலையைக்
கொய்துவிடுவார்கள். இந்தியா முழுவதும் இவர்களைப் போல் பல்வேறு தீவிரவாத
அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் கவலை வேண்டாம். அவர்களை அரசாங்கம்
பார்த்துக்கொள்ளும்.
நீங்கள்
டிவி பாருங்கள். இந்திய வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளைப்
பற்றி ஏன் நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்? உங்களுக்குத்
தெரிந்து என்ன ஆகப்போகிறது? ஏன் அலட்டிக்கொள்கிறீர்கள்? உங்கள் அபிமான
அரசியல் தலைவர் பற்றிய புதிய சர்ச்சையை நீங்கள் அறிவீர்களா? எதிர்கட்சித்
தலைவர் உங்கள் தலைவரைத் தரக்குறைவாகத் திட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்களா?
123 ஒப்பந்தம் பற்றி ஏன் விவாதிக்கிறீர்கள்? ஏன் மண்டையை
உடைத்துக்கொள்கிறீர்கள்? அமெரிக்காவின் நோக்கத்தை ஏன்
சந்தேகப்படுகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த ஒரு புதிய படத்தில் இருந்து
ஒரு பாடலை இப்போது ஒலிபரப்பப்போகிறோம். குஜராத் கலவரங்கள்
பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படவேண்டம் நண்பர்களே. எல்லாம் சரியாகிவிடும்.
சரியாகிவிட்து. நீங்கள் பாடலைத் தொடர்ந்து கேளுங்கள். இணையத்தளத்தில் அதே
பாடல் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கணிப்பொறியில்
இறக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
என்னது? உங்களிடம் கணிப்பொறியே
இல்லையா? டூ வீலர்? ஏஸி? அடப்பாவமே. இவற்றைப் பற்றியல்லவா நீங்கள்
கவலைப்படவேண்டும்? உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டாமா? சரி சரி.
உங்கள் மாதச் சம்பளம் என்னவென்று சொல்லுங்கள். தனியார் வங்கியில் இருந்து
ஓர் இளம்பெண் உங்களைத் தொடர்பு கொள்வார். உடனடிக் கடன். சுலபத்தவணைகள்.
வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு நேநோ கார்
வந்துவிட்டதை உங்களுக்கு ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறோம்.
இளைஞர்களே,
கம்யூனிஸம் போன்ற புரட்சிகரச் சிந்தாந்தங்களில் உங்களை
கரைத்துக்கொண்டுவிடாதீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை, உங்கள் இளமையை
வீணாக்கிக்கொள்ளாதீர்கள். கிரிக்கெட் பாருங்கள். சினிமா பாருங்கள்.
உல்லாசமாக ஊர் சுற்றுங்கள். காதலியுங்கள். உங்களுக்குத் தோதான இணையைத்
தேடவும் தனித்தனியே இணையத்தளங்கள் இருக்கின்றன.
அரசியல் உங்களுக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
அரசியலின் கதை : ஏழுநான்
எதை விரும்புகிறேனோ அதை அடைந்துவிடவேண்டும். என் விருப்பத்துக்கு
ஏற்றாற்போல் வாழவேண்டும். சிட்டுக் குருவியைப் போல் உல்லாசமாக உலகைச்
சுற்றி வந்து அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனின்
விருப்பமும் விழைவும் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.
ஆனால் இது
ஒரு கனவு மட்டுமே. நடைமுறையில் இது சாத்தியமே இல்லை. நேபாளம் ஒரு
சமீபத்திய உதாரணம். உலகின் ஒரே இந்து தேசம். அதாவது, நேற்று வரை.
மக்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அங்கே மன்னராட்சிதான். இடது கை
சுண்டு விரலை நீட்டி மன்னர் அளிக்கும் உத்தரவுகள் அப்படி அப்படியே
நிறைவேற்றப்பட்டன. மன்னர்தான் அரசாங்கம். மன்னர்தான் நிர்வாகம்.
மன்னர்தான் எல்லாமும். ஒருவர் போனால் இன்னொருவர். ஆள்கள்தான்
மாறுவார்கள். ஆட்சி மாறாது. தன் விருப்பப்படி ஆட்சி நடத்தும் உரிமை
மன்னருக்கு உண்டு. மன்னருக்கு மீசை பிடிக்காது என்றால் இப்படி ஒரு
சட்டத்தை அவர் தாராளமாக இயற்றலாம். அடர்த்தியாக மீசை வளர்ப்பவர்களுக்கு
மரண தண்டனை!
இன்று? மன்னரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நடந்து
முடிந்த பொதுத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மை வெற்றி பெற்று
ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள். சரிதான் போப்பா என்று கழுத்தைப்
பிடித்து மக்கள் தள்ளுவார்கள் என்று கனவாவது கண்டிருப்பாரா அந்த மன்னர்?
ரஷ்யா
என்னுடையது. ரஷ்யாவின் வளங்கள் என்னுடையது. மக்கள் அனைவரும் என்னுடைய
அடிமைகள். நான் இட்ட பணிகளை என் விருப்பத்துக்கு ஏற்றாற்போல்
நிறைவேற்றுவது மட்டுமே இவர்களுடைய வேலை. என்னை எதிர்த்து யாரும் கேள்வி
கேட்கக்கூடாது. எதிர் கருத்து, மாற்று கருத்து, வெங்காய கருத்து எதுவும்
சொல்லக்கூடாது. நான் காலால் இடும் பணிகளை தலையால் செய்து நிறைவேற்றுவது
மட்டுமே மக்களின் பணி. கீழ்படிவதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமை
அளிக்கப்பட்டிருக்கிறது.
நான்தான்
அரசாங்கம். நான்தான் ரஷ்யா. நாட்டை விட, மக்களை விட, எனது முறுக்கு மீசை
எனக்கு முக்கியம். எனக்கு நான் முக்கியம். நான் மட்டுமே முக்கியம்.
மக்களைப் பற்றியெல்லாம் அநாவசியமாகச் சிந்தித்து நேரத்தை வீணாக்க என்னால்
முடியாது. இருக்கும் இன்பங்களை அனுபவிக்கவே நேரமில்லை. என்னைப் பார்த்து
எல்லோரும் பயப்பட வேண்டும். சர்வ ஜீவராசிகளும் நடுங்க வேண்டும். சொல்
பேச்சு கேட்டால் பிழைத்து போ என்று விட்டுவிடுவேன். மீறினால், தொலைத்து
விடுவேன். மனித உரிமை, மண்ணாங்கட்டி உரிமை என்றெல்லாம் யாரும்
முணுமுணுக்கக் கூடாது.
அரசாங்க அதிகாரிகளும், அமைச்சர்களும்
ஜாருக்கு ஏத்த மூடிகளாக இருந்தனர். உட்கார் என்றார் உட்கார்ந்தார்கள்.
நில் என்றால் நின்றார்கள். கொல் என்றால் கொன்றார்கள். ரஷ்யர்களைப்
பொருத்தவரை, இதுதான் வாழ்க்கை. இதுதான் விதி. ஜார் தவிர்க்கவே முடியாத
ஒரு சக்தி. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். இரண்டாம் அலெக்ஸாண்டர்
இல்லை என்றால் இருபத்தோராம் அலெக்ஸாண்டர்.
கல்வி
இல்லை. உணவு இல்லை. உரிமை இல்லை. ஆடு, மாடு போல்தான் விவசாயிகளும்
தொழிலாளர்களும் நடத்தப்பட்டனர். ஆனாலும், வேறு மார்க்கம் கிடையாது.
தொண்டைக்குள் சிக்கிய முள்ளை விழுங்கவும் முடியாது. துப்பவும் முடியாது.
ஜார் ஒரு முள்.
வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. அப்படியே
கிடைத்தாலும் எத்தனை மாதங்களுக்கு அல்லது வாரங்களுக்கு வேலை செய்ய
முடியும் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் சம்பளத்துக்கு
உத்தரவாதம் கிடையாது. சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே
கிளம்பினால் எத்தனை மணி நேரங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வருவோம் என்று
தெரியாது. பதினெட்டு மணி நேரம், இருபத்து நான்கு மணி நேரம் என்று
தொடர்ச்சியாக நாள் கணக்கில், வாரக் கணக்கில் இயந்திரங்களோடு
இயந்திரங்களாக மாறி துருப்பிடித்துச் சாக வேண்டியதுதான்.
ஒரு
தொழிலாளி வேலை செய்து கொண்டிருக்கிறான். இயந்திரங்களை பழுது
பார்க்கும்போது, அசதி காரணமாக அவனது கை பல் சக்கரத்தில் சிக்கிக்
கொள்கிறது. அலறுகிறான். துடிக்கிறான். மேற்பார்வையாளர்கள் உடனடியாக
விரைந்து வருகிறார்கள். அந்தக் கணமே இயந்திரம் பழுது பார்க்கப்படுகிறது.
நல்லது என்று கையை கழுவிக் கொண்டுச் சென்று விடுகிறார்கள். அடிபட்ட அந்த
தொழிலாளி? இனி அவன் உதவ மாட்டான். அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, வேறு
ஆளை அமர்த்த வேண்டியதுதான். நஷ்ட ஈடு? ம்ஹும். அவனால்
தொழிற்சாலைக்குத்தான் நஷ்டம். தொழிலாளிகளுக்கு பஞ்சமில்லை. ஒருவன்
செத்தால் இன்னொருவன். அவன் இல்லையென்றால் மற்றொருவன்.
ரஷ்யாவில்
பண்ணையார்கள் மட்டும்தான் மனிதர்கள். 1649-ம் ஆண்டு விதிக்கப்பட்ட
சட்டவிதிகள்படி, விவசாயிகள், அவர்களுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர்
என்று பரம்பரையே நிலப்பிரபுவின் உடைமைகள். பண்ணையில் வேலை செய்பவன்
பண்ணையடிமை. அவ்வளவுதான். குதிரை, உழவு மாடு போல் அவனும் ஒரு பிராணி.
தேவைப்படும் போதெல்லாம் சொடக்குப் போட்டுக் கூப்பிட வேண்டிய பிராணி.
செய்யச் சொல்லும் வேலையை செய்து முடிக்கும் பிராணி. பிடிக்கும் வரை
வைத்திருந்து பிடிக்காமல் போனால் அல்லது நோய்வாய்ப் பட்டால் விற்றுவிட
வேண்டிய பிராணி.
அடிமைகளைத் துன்புறுத்தாத பண்ணையார்களை விரல்
விட்டு எண்ணிவிடலாம். சவுக்கால் அடி பின்னி எடுத்துவிடுவார்கள். தேவை
ஏற்பட்டால் தயங்காமல் கொலை கூட செய்வார்கள். ஆடுகளை, மாடுகளை, அடிமைகளைக்
கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அடிமைகள் தப்பிச்
செல்லவும் முடியாது. தப்பியவர்கள் பிடிபடும் போது, குரூரமாக
சித்ரவதைப்படுவது வழக்கம் என்பதால் தப்பிச் செல்வதாகக் கனவு கூட காண
முடியாது. மொத்தத்தில், அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி
கிடையாது.
1917ம் ஆண்டு லெனின் தலைமையில் நடத்தப்பட்ட ரஷ்யப்
புரட்சி ஜார் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. ஜார் மன்னரின் அரண்மனைச்
சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரண்மனை மக்கள் கூடமாக மாறியது.
மக்கள் ஆட்சி முதல் முறையாக அங்கே மலர்ந்தது.
சமூகத்தோடு ஒட்டி
வாழாதவர்களுக்கும் சமூகத்தை உறிஞ்சி வாழ்பவர்களுக்கும் சரித்திரத்தில்
இடம் இல்லை. அனைவருமே சமுதாயத்தின் ஒரு பாகம்தான். இதில் விதிவிலக்குகளே
கிடையாது. சமுதாயத்தைவிட உயர்ந்தவர் என்று ஒருவரும் இங்கே இல்லை.
எங்கெல்லாம் ஒடுக்குமுறை நீடிக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் எழுச்சி நடைபெறுகிறது. அரசாங்கம் தூக்கியடிக்கப்படுகிறது.
(தொடரும்)
அரசியலின் கதை : எட்டுஅரசியல்
என்றால் அரசைப் பற்றிய இயல் (படிப்பு). அரசியல் விஞ்ஞான நூல் என்றும்
சொல்லாம். Polis என்றால் நகரம். அதாவது City State. நகரத்தைப் பற்றிய
அல்லது நகரத்தைச் சார்ந்த ஒவ்வொரு விஷயமும்
Politics என்று
அழைக்கப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் நகரங்களே பிரதானமாக இருந்தன. ஆகவே
பாலிடிக்ஸ் என்றால் நகரத்தைப் பற்றிய விஷயம் என்று அப்போது
அர்த்தப்படுத்தி இருந்திருந்தார்கள். கிரேக்கத்தைப் போன்ற நகர அமைப்புகள்
இன்று இல்லை. ஆகவே,
Politics என்னும் சொல்லுக்கான பொருளை நாம் சற்று
விரிவாக மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். நகரத்துக்குப் பதிலாகச்
சமுதாயம். சமுதாயத்தைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் படிப்பது அரசியல்.
நாம்
அனைவருமே சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயத்தைப் பற்றியது அரசியல். ஆகவே,
அரசியல் என்பது நம் அனைவருக்குமானது என்று வகுத்துக்கொள்வது சரியாக
இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நம் மீது தொடர்ந்து
திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வரலாறும்
அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு துறைகள். ஒரு பொருளின்
கடந்த காலம்தான் வரலாறு என்றும் அதன் நிகழ்காலம் அரசியல் என்றும்
சொல்பவர்கள் உண்டு. கடந்த கால அரசியலே வரலாறு. இன்றைய அரசியல் எதிர்கால
வரலாறு.
0
எனக்கும்
அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி பலரும் விலகி நிற்பதற்குக்
காரணம் அரசியலைக் கற்பதில் உள்ள சிரமம். அரசியல் சொற்களில் இருந்து
பிரச்னை ஆரம்பமாகிறது. Catalyst, Atomic weight, Hypothalamus போன்ற
சொற்களுக்கு என்ன பொருள் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு
மிக நன்றாகத் தெரியும். அறிவியலின் பலம் இது. எல்லாவற்றுக்கும் பொதுப்
பெயர்கள் உள்ளன. இந்தப் பொதுப் பெயர்களை அனைவரும் கற்றுத் தீரவேண்டியது
அவசியம்.
குடியாட்சி
என்றால் என்ன? சோஷலிசம் என்றால் என்ன? ஏகாதிபத்தியம் என்றால் என்ன?
பொதுவுடைமை என்றால் என்ன? குடியரசு? ஜனநாயகம்? சுதந்தரம்? அனைத்துமே
நமக்குப் பரிச்சயமான சொற்கள்தாம் என்றாலும் இந்தச் சொற்களுக்கான பொருளை
நாம் சரியாக தெரிந்து வைத்திருக்கிறோமா? கிடையாது. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக இவற்றுக்கு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். ஆகவே முதல்
தேவை துல்லியமான கலைச்சொல் வளர்ச்சி. அறிவியல் துறைகளில் இருப்பதைப்
போன்ற திடமான அர்த்தங்கள்.
மற்றொரு
பிரச்னை அலட்சியம். அட, இத்தனை வருடங்களாக செய்தித்தாள்கள் படிக்கிறேன்,
பத்திரிகை படிக்கிறேன், டிவி பார்க்கிறேன். எனக்குத் தெரியாத அரசியலா?
இத்தனை காலம் கழித்தா அரசியல் என்றால் என்ன என்று நான் படிக்கவேண்டும்?
ஐயா, படிப்பதற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது?
அரசியலைப்
பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொண்டுவிட்டதாகப் பலரும்
நினைக்கிறார்கள். வெளிநாட்டு விவகாரங்கள், அந்நியச் செலவாணி, பண வீக்கம்,
அடுத்த பிரதமர் யார், பெட்ரோல் விலை உயர்வு ஏன், பட்ஜெட், வல்லரசு கனவு
இப்படி எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து விவாதித்துக்கொண்டு இருப்பதால்
அரசியல் நமக்குக் கைவந்துவிட்டது என்று பலரும் நம்பி விடுகிறார்கள்.
அரசியலின் கதை : ஒன்பதுபிளேட்டோவின்
நூல் ஒன்றில் இப்படி ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. கிரேக்கர்களே, நீங்கள்
அனைவரும் சிறுவர்கள். உங்களில் வயதானவர் என்று சொல்லத்தக்கவர் ஒருவருமே
இல்லை. எகிப்திய பாதிரியார் ஒருவருடைய குறிப்பு இது. இவ்வாறு அவர்
சொன்னதற்குக் காரணம் உண்டு. கிரேக்கர்கள் கற்பதில் அதிக ஈடுபாடு
கொண்டவர்களாக இருந்தனர். எதையும் தேடிச் சென்று ஆராயும் குணம் அவர்களிடம்
இருந்தது. யாரோ சொன்னார்கள், அப்படியே ஏற்றுக்கொண்டோம் என்று
இருக்காமல் உள்ளே சென்று தோண்டித் துருவி உண்மையை கண்டறிய முயன்றார்கள்.
Thales,
Anaximander, Pythagoras, Heraclitus, Parmenides, Zeno போன்ற
சிந்தனையாளர்கள் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆராய்ந்தவர்கள்.
கடவுள்தான் உலகை சிருஷ்டித்தார். நட்சத்திரங்களையும் காடுகளையும்
மனிதர்களையும் விலங்குகளையும் படைத்தவர் அவரே என்னும் நம்பிக்கை
உலகெங்கும் வலுவாக காலூன்றி இருந்த சமயம், அறிவியில் ரீதியாக ஆராய்ச்சி
நடத்தியவர்கள் இவர்கள். சிசிலியன் கற்களில் படிந்துள்ள படிமங்களை ஆராய
விரும்பினார் Xenophon. மணல், மலை, காலம், பண்பாடு என்று சூரியனுக்குக்
கீழே உள்ள அத்தனை சங்கதிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினார்
Herodotus.
எல்லாவற்றையும்
ஆச்சரியத்துடனும் பரவசத்துடனும் அணுகினார்கள் கிரேக்கர்கள். கல்லிலும்
மண்ணிலும் கற்க என்ன இருக்கிறது என்று அலட்சியம் காட்டவில்லை அவர்கள்.
ஆகவேதான் அறிவியல் மட்டுமல்ல தத்துவத்தின் பிறப்பிடமாகவும் கிரேக்கம்
கருதப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.
ஆர்வம்
காட்டியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. எதைப் பற்றியும்
தெரிந்துகொள்ளமுடியும் என்று நம்பினார்கள். உலகத்தைப் பற்றியும்
மனிதர்களைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் ஆராய முடியும்,
புரிந்துகொள்ளமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.
எனில்
கிரேக்கர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லையா? இருந்தது. வெவ்வேறு
வகையான கடவுள்களை அவர்கள் வழிபட்டனர். ஆராதித்தனர். ஆனால் ஹோமர்
குறிப்பிடுவதைப் போல் கடவுளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறைக்குக்
கட்டுப்பட்டவர். எல்லாவற்றையும் படைத்தவர் ஆகவே எல்லாவற்றையும் விட
உயர்ந்தவர் என்று கடவுளை ஒரு உயர்ந்த பீடத்தில் கிரேக்கர்கள்
நிறுத்தவில்லை. மனிதர்களைப் போலவேதான் கடவுள்களும். இடி கடவுள், மின்னல்
கடவுள், மழை கடவுள் என்று பல வகையான கடவுள்கள் இருந்தனர். உலகின்
தலைசிறந்த காவியங்களில் ஒன்றான இலியட்டில் இந்தக் கடவுள்கள்
இடம்பெறுகிறார்கள். மனிதர்களோடு மனிதர்களாக.
எதற்கும்
விளக்கம் வேண்டும் அவர்களுக்கு. நீங்கள் எது பேசினாலும், அப்படியென்றால்
என்ன சொல்லவருகிறீர்கள் என்று திருப்பிக் கேட்பார்கள். உங்களிடம் இருந்து
ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டுவிட்டால் மிகவும்
மகிழ்ச்சியடைவார்கள். உண்மை என்னும் சொல்லை உச்சரிப்பதிலேயே பேரின்பம்
அடைந்தவர்கள் அவர்கள். பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருப்பதில் பொருள்
எதுவும் இல்லை. நம் கடந்த காலத்தை நாம் ஆராயவேண்டும். நன்மை, தீமை
இரண்டையும் அலசவேண்டும். இதுவரை எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்று
தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொள்ளப்படாத வாழ்க்கையை வாழ்வது வீண்.
சாக்ரடீஸின் நம்பிக்கை இது.
உரக்கச் சிந்திக்கவேண்டும். நிறைய
விவாதிக்கவேண்டும். எந்த வித அச்சமும் பயமும் இன்றி அனைத்தைப் பற்றியும்
விமரிசனம் செய்யவேண்டும். தேவைப்பட்டால் எதனுடனும் எப்போதும் முரண்பட
தயாராக இருக்கவேண்டும். கிரேக்கர்களின் சிந்தனை இப்படித்தான் இருந்தது.
குழு,
சமுதாயம் பற்றி அவர்கள் நிறைய தெரிந்துவைத்திருந்தார்கள். தனித்தனியாக
உதிரியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு குழுவாக, ஒரு அமைப்பாகத்
திரண்டிருக்கவேண்டியது அவசியம் என்று அவர்கள் நம்பினார்கள். City State
என்னும் அமைப்பு தோன்ற இந்தச் சிந்தனையே ஊற்றுவாய். பலகீனமானவர்கள்
தனியாக ஒதுங்கியிருந்தால் பலகீனமானவர்களாகவே இருப்பார்கள். ஒரு சமுதாயமாக
அவர்கள் திரளும்போது பலம் பெருகும் என்று கிரேக்கர்கள் கண்டறிந்தனர்.
உலகில்
உள்ள மற்ற தேசங்கள் கடவுள்களையும், ஆன்மிகத் தத்துவங்களையும்
மன்னர்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. மன்னர் என்பவர்
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர். அவர் சொல்வதுதான் சட்டம். கடவுள்
நிர்பந்திக்கும் மதத்தில்தான் மக்கள் நிலைக்கவேண்டும். அவர் வணங்கச்
சொல்லும் கடவுள்களை மக்கள் வணங்கவேண்டும். மன்னருக்கு வேறு ஒரு புதிய
கடவுள் கிடைத்துவிட்டால் சட்டென்று அவர் தாவிவிடுவார். ஆகவே மக்களும்
தங்கள் நம்பிக்கைகளை துறந்துவிட்டு புதிய மதத்தைத் தழுவிக்கொள்ளவேண்டும்.
மக்கள் சிந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கும் சேர்த்து மன்னரே
சிந்தித்துவிடுவார்.
கிரேக்கம்
மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. மக்களை அது முன்னிறுத்தியது.
சாமானிய மக்களை. சுதந்தரமான சிந்தனையோட்டத்தை அது தூக்கிப்பிடித்தது.
மக்களைப் பற்றி கிரேக்கம் அக்கறையுடன் சிந்திக்க ஆரம்பித்தது. மக்கள்
மேன்மையடைவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தது. மக்களைப் பற்றி
மேற்கொள்ளும் ஆராய்ச்சி வேறு எதைக் காட்டிலும் உன்னதமானது,
அத்தியாவசியமானது என்று கிரேக்கர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். மக்கள்
என்றால் சமூகங்கள். அவர்களுடைய பிரச்னைகள். அவர்களுடைய கனவுகள்.
அவர்களுடைய விருப்பங்கள்.
மனிதன் முக்கியமானவன். தனியாகவும்.
குழுவாகவும். குழு என்று வரும்போது அவன் ஒரு பெரும்கூட்டத்தின் பகுதி.
நான், என் குடும்பம், என் நலன் என்று ஒருவன் சுருங்கியிருக்க வேண்டிய
அவசியமில்லை. அது சரியான வாழ்க்கை முறை கிடையாது. அவனுக்கு மிகப் பெரிய
பொறுப்புகள் இருக்கின்றன. தான் வாழும் சமூகத்தைப் பற்றி அவன்
தெரிந்துவைத்திருக்கவேண்டும். சமூக நிகழ்வுகளை அவன் தொடர்ந்து
உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாக மட்டும்
ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை இயக்கும் ஆதாரப் புள்ளிகளையும் அவன்
உள்வாங்கிக்கொள்ளவேண்டும்.
தன்
சமூகத்துக்காக அவன் சிந்திக்கவேண்டும். சமூகத்தின் நலன்களுக்காக.
சமூகத்தின் எதிர்காலத்துக்காக. தனக்குத் தெரிந்ததை, தான் அறிந்துகொண்ட
உண்மையை அவன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். விவாதம்
செய்யவேண்டும். உண்மையை உணர்த்தவேண்டும். தன் சமூகத்துக்கு ஏதாவது
செய்யவேண்டும் என்று அவன் எப்போது மெய்யாக ஆசைப்படுகிறானோ எப்போது அந்த
ஆசையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் அவன் வளர்ச்சி ஆரம்பமாகிறது.
அரசியலின் கதை : பத்துகருத்துகள்
ஒன்றோடு ஒன்று முட்டி மோத வேண்டும் என்பதில் கிரேக்கர்கள் தெளிவாக
இருந்தார்கள். உன்னுடைய கருத்து உயர்ந்ததா? கடவுள் உண்டு என்று
சொல்கிறாயா? அழகுக்கு நீ கொடுக்கும் விளக்கம் இதுவா? சரி வா. வந்து
என்னோடு வாதச்சண்டை போடு. என்னிடம் சில அற்புதமான கருத்துகள் உள்ளன.
கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். இருவரும் மோதுவோம்.
யாருடைய கருத்து வெல்கிறது என்று பார்ப்போம்.
வாதம். பிரதிவாதம்.
இரண்டுமே மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மல்யுத்தம் போல் கருத்து
யுத்தம் நடத்தப்பட்டது. சிறு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டார்கள்.
இளைஞர்கள், வயதானவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. யுத்தம் மிகவும்
கடினமாக இருக்கும். கேள்விக் கணைகள் சரமாரியாக வந்து விழும்.
எல்லாவற்றையும் சமாளித்தாகவேண்டும். முறியடித்தாகவேண்டும்.
இந்திய
தத்துவ இயலையும் ஐரோப்பிய தத்துவ இயலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா முன்வைக்கும் வாதம் இது. ஐரோப்பிய தத்துவ
இயல் வளர்ச்சி அடைந்ததற்குப் பிரதானமாக காரணம் வெவ்வேறு கருத்துகள்
ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சமர் புரிந்ததுதான். ஒரு கருத்து
நிலைபெறவேண்டுமானால், பிரகாசிக்கவேண்டுமானால் அது எதிர் கருத்துகளைச்
சந்தித்தாகவேண்டும். அதைவிட்டுவிட்டு, இதுவே நிதர்சனம், இதுவே இறுதி
என்னும் நிலையை ஒரு தத்துவம் எட்டிவிடக்கூடாது. இந்திய தத்துவ இயல்
வளர்ச்சி அடையாமல் போனதற்கு இதுவே காரணம். வேதங்களும் உபநிஷத்துகளும்
மாற்று கருத்துகளைச் சந்திக்கவில்லை. இந்து மத ஆதரவாளர்கள் அவற்றை
தூக்கிப் பிடித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதுவே இறுதி இதற்கு
மிஞ்சி எதுவும் இல்லை என்று அவர்கள் கருத ஆரம்பித்துவிட்டனர். ஆகவே தேடல்
முற்றுப்பெற்றுவிட்டது.
அதே சமயம், ஐரோப்பிய தத்துவ இயல்
அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. வெவ்வேறு தத்துவ அறிஞர்கள் தங்கள்
சிந்தனைகளால் தத்துவத்தை செழுமைப்படுத்தினர். வாதிப் பிரதிவாதங்கள் மிக
அதிக அளவில் ஆரோக்கியப் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பியத்
தத்துவம் கிரேக்கத்திடம் இருந்தே ஆரம்பமாகிறது.
கிரேக்க
மொழியின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. Polis என்னும் கிரேக்க
சொல்லை நாம் City State என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறோம்.
இதை சரியான மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நகரம், மாநிலம் போன்ற
பிரிவுகளையும் தாண்டியது சிட்டி ஸ்டேட்.
நீ
யார் என்று ஒரு கிரேக்கரைக் கேட்டால் அவர் தன் பெயரையோ தன் தந்தையின்
பெயரையோ சொல்ல மாட்டார். நான் குறிப்பிட்ட Polis-ல் இருந்து வருகிறேன்
என்று சொல்வார். அதுவும் பெருமிதத்துடன். இது என்னுடைய Polis என்னும்
பெருமை அவரிடம் இருக்கும். எந்தவித Polis-லும் இணையாமல் இருப்பவர்கள்
Idiotes என்று அழைக்கப்பட்டனர். தற்போது நாம் பயன்படுத்தும் முட்டாள்
என்னும் பொருள் தரும் ஆங்கிலப் பதம் இது.
மொழி
பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அரசியலுக்கான அடிப்படை கலைச் சொற்கள்
பலவும் கிரேக்கத்தில் இருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. அரசியலின் பல்வேறு
அம்சங்களைக் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகளை கிரேக்கர்கள்
வடிவமைத்திருந்தார்கள். கிரேக்க மொழியில், வாழ்தல் என்றால் சமுதாயத்தில்
ஓர் அங்கமாக இருத்தல் என்று பொருள்.
சமுதாயத்தின்
அங்கமாக இருக்கக் கடவாய், அரசியல் கற்கக் கடவாய் என்றெல்லாம்
கிரேக்கர்களுக்கு யாரும் உபதேசிக்கவில்லை. அவர்களாகவே அப்படி
புரிந்துவைத்திருந்தார்கள். என்னுடைய polis எதிரிகளால்
ஆக்கிரிமிக்கப்படக்கூடாது என்பதில் ஒவ்வொரு கிரேக்கரும் உறுதியுடன்
இருந்தனர். தன்னுடைய polis-ஐ பாதுகாக்கும் பணியில் முழுமூச்சுடன்
ஈடுபட்டனர். என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன் என்று ஆயுதத்துடன்
முன்னால் வந்து நின்று போரிட்டார்கள்.
வரி
கட்டுவதில் கிரேக்கர்கள் தயக்கம் காட்டியதே இல்லை. எதற்குத்
தயங்கவேண்டும்? என் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத்தானே இந்த நிதி
பயன்படப்போகிறது? என்னுடைய பங்களிப்பு அதில் இடம்பெறவேண்டாமா? வரி
கட்டுங்கள், தயவு செய்து வரி கட்டுங்கள், ஒழுங்கு மரியாதையாக வரி கட்டு
என்றெல்லாம் யாரும் அவர்களை நச்சரிக்கத் தேவையில்லை. கொண்டு போய்
கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்கள். வசதி படைத்த பெரிய ஆள்கள் வரி
கட்டுவதில்லை. அதற்குப் பதிலாக, தம்முடைய polis-க்குச் சொந்தமான படைக்கு
ஆயுதங்களையும் தளவாடங்களையும் வாங்கித் தந்தார்கள். அல்லது முழுச்
செலவையும் ஏற்றுக்கொண்டு நாடகம் நடத்தினார்கள். முந்தைய முறை polis-ஐ
பாதுகாப்பதற்காக. இரண்டாவது, polis-ஐ சேர்ந்த மக்களின் கேளிக்கைக்காக.
நல்ல
மொழி. தெளிவான சிந்தனை. புதிதாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும்
ஆர்வம். ஆராய்ச்சி குணம். சமூகச் சிந்தனை. அறிவை, உண்மையைத் தேடுவதில்
தீராக் காதல். தத்துவத்தை வளர்த்தெடுப்பதில் ஆர்வம். கலை, இலக்கியம்,
நாடகம் போன்றவற்றில் அக்கறை. நல்ல கற்பனை வளம். இத்தனையும் செழித்து
வளர்ந்த கிரேக்கத்தில்தான் புதிய அரசியல் சித்தாந்தங்கள் பலவும் வளர்ச்சி
பெற்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். முதலில், சாக்ரடீஸ்.
கிரேக்க
தத்துவவியல் சாக்ரடீஸிடம் இருந்து தொடங்குகிறது. சாக்ரடீஸ் என்றால்
அறிவுச் சுரங்கம். எதையும் ஆராயச் சொன்ன தத்துவஞானி. பிளேட்டோ,
அரிஸ்டாட்டில் போன்ற சீடர்களை உருவாக்கியவர். சதா சர்வ காலமும்
தத்துவத்தின் புதிரான கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தவர். குள்ளமான
உருவம். அங்கி போன்ற ஏதோ ஒன்றை அணிந்திருப்பார். அவர் மனைவி மிகவும்
கொடுமைக்காரி. அவர் முன்வைத்த சில புரட்சிகரக் கருத்துகளால் கலவரமடைந்த
ஏதென்ஸ் அரசு, அவருக்கு விஷம் (ஹெம்லாக்) கொடுத்துச் சாகடித்துவிட்டது.
சாக்ரடீஸின்
வாழ்க்கையை இப்படிச் சுருக்கமாக ஒரு பத்தியில் அறிமுகப்படுத்திவிட
முடியும். இதில் எது நிஜம் எது கதை என்று தெரியாது. அவருடைய தத்துவங்கள்
பற்றியோ அரசியல் சித்தாந்தம் பற்றியோ ஆராயப் புகுந்தால் தெளிவற்ற ஒரு
சித்திரமே காணக்கிடைக்கிறது. சில அசட்டுத்தனமான பொன்மொழிகளுக்குச்
சொந்தக்காரராக சாக்ரடீஸ் இன்று அறியப்பட்டிருக்கிறார். ஒன்று மட்டும்
இங்கே. திருமணம் செய்துக்கொள். உனக்கு நல்ல மனைவி கிடைத்தால் நீ
மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவஞானி
ஆகிவிடுவாய். இதையெல்லாம் சாக்ரடீஸ் எங்கே சொன்னார்? யாரிடம்?
எவ்வளவு
பெரிய ஞானி, நீங்கள் போய் சிறைச்சாலையில் அடைந்துகிடக்கலாமா? நீங்கள்
தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறேன், கவலைவேண்டாம் என்று அவர் சீடர்
க்ரிட்டோ விண்ணப்பித்துக்கொண்டபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார்
சாக்ரடீஸ். மறுத்தற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒன்று.
நான் தப்பிச்சென்றால் இறப்பதைக் கண்டு அஞ்சுபன் ஆகிவிடுவேன். எனக்கு மரண
பயம் கிடையாது. ஒருவேளை உங்களுக்காக நான் ஓடிவந்துவிட்டால், பிறகு, என்
தத்துவங்களுக்கு நானே எதிரானவராக ஆகிவிடுவேன். இரண்டு. சரி, நான் தப்பிச்
செல்ல சம்மதிக்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். எங்கே கொண்டு போய்
விடப்போகிறீர்கள் என்னை? தொலைவில், கண்காணாத இடத்திலா? நான்தான் எங்கே
சென்றாலும் என் தத்துவங்களைக் கொண்டு செல்கிறேனே? பிறகு எப்படி என்னால்
அமைதியாக ஓரிடத்தில் வசிக்க முடியும்? புதிய பகுதிக்குச் சென்றாலும்
அங்கேயும் நான் பேசிக்கொண்டுதான் இருப்பேன். தர்க்கம் செய்துகொண்டுதான்
இருப்பேன்.
மூன்று.
நான் என் நகரத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளேன். இங்குள்ள
சட்டத்திட்டங்களுக்கு நான் கட்டுப்பட்டவன் ஆகிறேன். ஒருவேளை நான் தப்பி
வந்துவிட்டால், சட்டதிட்டங்களை மதிக்காதவனாக நான் சித்தரிக்கப்படுவேன்.
என் நகரத்துக்கு எதிராகக் குற்றம் செய்தவனாகிவிடுவேன். என்
தத்துவங்களுக்கு எதிரானது இது. சரி இனி மேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று
பிளேட்டோ உள்ளிட்ட சீடர்கள் வெளியேறிவிட்டார்கள். பிறகு, சாக்ரடீஸ்
ஹெம்லாக் அருந்தினார்.
அரசியலின் கதை : 12சாக்ரடீஸ் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பும் அரசியல் சிந்தனைகள் இவை. தனிநபர் என்று ஒருவரும் இல்லை இங்கே. அரசாங்கம் நம்மைவிட பெரியது. நம்மை ஆளக்கூடியது. நாம் நம் அரசாங்கத்தோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். நல்லதோ தீயதோ நம் மீது எது விதிக்கப்படுகிறதோ அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கம் என்றால் அவர் காலத்தில் நகரங்கள். City States.
ஆனால், இதே சாக்ரடீஸ்தான் எதையும் அப்படியே நம்பிவிடாதே கேள்வி கேள், அடங்க மறு என்று கர்ஜித்தவர். எனில், அரசாங்கம் சொன்னால் மட்டும் ஏன் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்? மக்களிடம் சென்று நீ உரையாடியிருக்கிறாய். கண்டதைச் சொல்லி இளைஞர்களைக் கெடுத்திருக்கிறாய். ஏதென்ஸ் அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக மக்களைத் தூண்டிக்கொண்டிருக்கிறாய். உனக்கு மரணத் தண்டை விதிக்கிறோம். இதுதான் சரியான தீர்ப்பா? இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? ஏன்? அரசாங்கம் என்பதாலா? இது தவறான தீர்ப்பு என்று சாக்ரடீஸுக்குத் தெரியாதா? பிறகு ஏன் தப்பிச்செல்ல மறுக்கவேண்டும் அவர்? அரசாங்கத்தின் முடிவு தவறு என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் தர்மமா?
சாக்ரடீஸ் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பிரச்னை இது. அரசியல் என்னும் அமைப்பு உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். ஒன்று இந்தியாவில் இருந்து.
0
முதல் சமிக்ஞை நரேந்திர மோடியிடம் இருந்துதான் வந்திருக்கிறது. அதை சமிக்ஞை என்றுகூட சொல்லமுடியாது. உத்தரவு. உங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான்காவது நாள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். கூடியிருந்தவர்கள் கவலையுடன் கேட்டிருக்கிறார்கள். மோடிஜி, போலீஸ்? நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்கிறேன். உறுமியிருக்கிறார் மோடி. மோடி ஓர் அபூர்வமான அரசியல்வாதி. தான் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் அவர்.
எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் (பிப்ரவரி 27, 2002). அது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. ஏன் தோன்றவேண்டும்? இறந்து போன 58 பேரும் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இந்துக்களுக்கு யார் விரோதி? முஸ்லீம்கள். தீர்ந்தது கதை.
’ஒரு நாள் விளையாட்டுப் போடடியில் முஸ்லீம்கள் விளையாடி 60 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அடுத்து நாம் ஆடவேண்டும். நம்முடைய டார்கெட் 60. ஆனால் 600 ரன்கள் அடிக்கும்வரை நாம் சோர்ந்துபோகக்கூடாது.’ வி.ஹெச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ் நிர்ணயித்த டார்கெட் இது.
அவர்கள் திரண்டார்கள். அவர்கள் என்றால் பஜ்ரங் தள், வி.ஹெச்.பி., கட்சிப் பிரமுகர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், அவர்களுக்குக் கீழே பணிபுரியும் தாதாக்கள், பேட்டைக் கிரிமினல்கள், ரௌடிகள் மற்றும் பாக்கெட் கத்தி அடிப்பொடிகள். அத்தனை பேரையும் ஒரே அணியில் கொண்டு வந்து இணைத்த சக்தி இந்துத்துவா.
தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார்கள். காட்டுத்தனமான ஆட்டம் அது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் மூர்க்கமும் மிருகத்தனமும் கொலை வெறியும் கலந்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு ஆட்டம் சாத்தியம். மூன்று நாள்கள் முடிவுக்கு வந்தபோது மொத்தம் 2000 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. குஜராத் முழுவதும் ரத்தச் சகதி. எல்லாம் முடிந்ததா என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின் மோடி தன் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தினார். அவுட். ஆட்டம் முடிந்தது. எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போகலாம். சிறப்பாக விளையாடிய அத்தனை பேருக்கும் வெகுமதி. தலைமை தாங்கிய மோடிக்குத் தேர்தலில் வெற்றிக்கோப்பை. ஆனால் என்ன? கோப்பையில் நிறைய ரத்தக்கறை. அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? உயிரைக் கொடுத்து விளையாடும்போது ரத்தம் தெறிக்கத்தானே செய்யும்.
எல்லாம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குஜராத் ஃபைலை தெஹல்கா திறந்தது. மோடியின் ஆட்டக்காரர்களைச் சந்தித்து நயமாகப் பேசியிருக்கிறது தெஹல்கா குழு. பெருமிதமும் பூரிப்பும் பொங்க அவர்கள் விவரித்த ரத்த அத்தியாயங்களை அப்படியே பதிவு செய்து வெளியிட்டது.
நெஞ்சு பதைபதைக்க வைக்கும் கதைகள் அவை. முஸ்லீம்கள் வாழும் வீடுகளா? அப்படியே கொளுத்து. என்ன வேண்டும்? பெட்ரோலா? டீஸலா? இப்பொழுதே அனுப்புகிறோம். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டும். முஸ்லீம்கள். அதுதான் அவர்களது அடையாளம். துடைத்து அழித்து ஒழிக்கப்படவேண்டிய அடையாளம்.
சிலர் மொத்தமாக வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். அந்தந்த வீட்டு காஸ் சிலிண்டரே அவர்களைக் கொளுத்தப் போதுமானதாக இருந்தது. இன்னும் சிலர் வீட்டுக்குள் புகுந்து ஆள்களை வெளியில் இழுத்து வந்து வெட்டினார்கள். பயந்து அலறி பாதாளச் சாக்கடையில் ஏபுழுட்டுப் பேர் புகுந்திருக்கிறார்கள். சத்தம் போடாமல் அந்தச் சாக்கடையை அடைத்து மூடிவிட்டார்கள். அங்கேயே சமாதி. இளம்பெண்களை கண்டவுடன் கொளுத்த மனம் ஒப்பவில்லை. எப்படியும் கருகி அழியப்போகும் உடல். அதற்கு முன் ஒரேயொருமுறை? பாதகமில்லை.
நரோதா பாடியாவில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தக் காவல் நிலையம். முஸ்லீம்கள் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டபோதும் சரி. துரத்தித் துரத்தி வெட்டப்பட்டபோதும் சரி. துடித்துக் கதறியபோதும் சரி. ஒரு கான்ஸ்டபிள் கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை. தப்பித்தவறி எட்டிப் பார்த்தவர்களும் நகம் கடித்தபடி வேடிக்கைதான் பார்த்தார்கள். வேலை முடிந்தபோது, நரோதயாவில் மட்டும் இருநூறு உடல்கள். என்ன செய்வது? தூக்கு. பக்கத்துப் பக்கத்து தெருக்களில் கொண்டு போய் வீசு. ஒரு கிணற்றைக் கண்டுபிடித்து அதற்குள் சில உடல்களை வைத்து திணித்திருக்கிறார்கள்.
சாட்சியம் சொல்ல வந்தவர்களை காவல்துறை ச்சீப்போ என்று விரட்டியடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு மருத்துவச் சாட்சியமும் இல்லை. பெரும் புள்ளிகளின் பெயர்கள் விடுபட்டுபோயிருக்கின்றன. ஒரு முக்கியஸ்தரின் பட்டாசு கம்பெனியில் சுடச்சுட வெடிகுண்டு தயாரித்து எடுத்து வந்து கலகக்காரர்களுக்குச் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, துப்பாக்கிகள், கத்திகள், திரிசூலங்கள். ஆனால் காவல்துறை இது வரை கைப்பற்றியுள்ள ஆயுதம், ஒரே ஒரு வீச்சுக்கத்தி மட்டுமே.
ஆரவாரத்துடன் தெஹல்காவுக்குப் பேட்டிக்கொடுத்த கொலைகாரர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இது. மோடியின் உதவி இல்லாமல் இது நடந்திருக்கமுடியாது. மோடிஜிக்கு நன்றி. இது தேசத்தின் அவமானம். நம் எல்லோர் மீதும் குஜராத் ரத்தக்கறை அழுத்தந்திருத்தமாகப் படிந்திருக்கிறது.
நரேந்திர மோடி சாமானியர் அல்லர். குஜராத்தின் முதலமைச்சர். ஏதென்ஸ் நகர அரசு செய்ததைவிட பல நூறு மடங்கு அதிகமாகத் தவறு இழைக்கிறார். இப்போது என்ன செய்யவேண்டும் நாம்? சாக்ரடீஸ் பாணியில் அணுகினால் இதற்கு நமக்குக் கிடைக்கும் பதில் என்ன? கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்தாம். இல்லையா? பிறகு, ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள்? இதை நாம் எப்படி விளங்கிக்கொள்ளவேண்டும்? இந்துக்களைக் காக்கத்தான் இந்த அழித்தொழிப்பு நடந்தது என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளவேண்டுமா? அரசாங்கத்தின் முடிவு என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு டீ சாப்பிடவேண்டுமா?
அரசியலின் கதை : 13அரசாங்கத்தின் விருப்பம் என்ன? மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம் முடிவுகளுக்குக் கட்டுப்படவேண்டும். எதிர்த்துப் பேசக்கூடாது. பேரணி நடத்தக்கூடாது. ஒழிக கோஷம் போடக்கூடாது. ஏசக்கூடாது. தேர்தல் சமயங்களில் மறக்காமல் ஆதரவு அளிக்கவேண்டும். தமக்கு எதிராக விமரிசனங்களை முன்வைப்பவர்களை அரசாங்கம் விரும்புவதில்லை. இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் என்று பேதம் இல்லாமல் அனைவருக்கும் இது பொருந்தும். ஜனநாயக தேசம், சுதந்தர பூமி என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டாலும் விமரிசனம் என்று வரும்போது அரசாங்கம் விழித்துக்கொண்டுவிடுகிறது. தம்மோடு முரண்படுபவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறது.
தீவிரவாதிகள். பயங்கரவாதிகள். புரட்சியாளர்கள். கம்யூனிஸ்ட்டுகள். நக்ஸலைட்டுகள். கலகக்காரர்கள். பிரிவினைக்காரர்கள். தேசத்துரோகிகள். அரசாங்கத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள் இவை. அமெரிக்காவில் Patriotic Act என்று ஒரு சட்டப்பிரிவு உண்டு. இதன்படி சந்தேகப்படும் நபர்களை உடனே உள்ளே தள்ளி முட்டிக்கால்களை பெயர்க்கலாம். அவர் வீட்டு தொலைபேசியை ஒட்டுக்கேட்கலாம். வீடு புகுந்து சோதனை போடலாம். பணத்தை முடக்கலாம். சித்திரவதை செய்யலாம். காலவரையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசமும் இதுபோன்ற சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது. நமக்குப் பொடா.
மேலைநாட்டு தத்துவவியலின் தந்தை என்று சாக்ரடீஸ் அறியப்பட்டதற்கு முக்கியக் காரணம் கேள்வி கேள் என்ற அவரது கர்ஜனைதான். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும் இது ஒரு புரட்சிகர சிந்தனை என்பதில் சந்தேகமில்லை.
இதை Dialectic என்று அழைக்கிறார்கள். அதாவது, தொடர்ச்சியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருப்பது. நீ அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த ஒற்றை வார்த்தையை கேள்விகளால் கட்டுடைக்கலாம். அழகு என்றால் என்ன? எது அழகு? ரோஜா அழகு என்று அவர் பதில் அளித்தால் மீண்டும் கேள்வி. எப்படிச் சொல்கிறீர்கள்? எனில், அனைத்து மலர்களும் அழகானவையா? ரோஜா மட்டும் ஏன் பிரதானம்? அழகாக இருப்பதாக நினைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நினைப்பது என்றால் என்ன? இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம்.
அழகு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? சரி என்றால் என்ன? தவறு என்றால் என்ன? அரசாங்கத்துக்குக் கட்டுப்படவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஏன் அப்படி? அரசாங்கம் என்பது நம்மைவிட பெரிய அமைப்பா? அரசாங்கம் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டுமா? புஷ் செய்துகொண்டிருப்பது சரி என்று அமெரிக்கர்கள் தலையாட்டவேண்டுமா? நாளை இரான் மீதோ ஆப்கனிஸ்தான் மீதோ அமெரிக்கா போர் தொடுத்தால் ஆஹா பேஷ் பேஷ் என்று அமெரிக்கர்கள் துள்ளிக் குதிக்கவேண்டுமா?
மன்மோகன் சிங் ஏன் அணுச்சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இத்தனை ஆர்வம் காட்டுகிறார்? இதுதான் இப்போது இந்தியாவுக்குத் தேவை என்று அவர் பதிலளித்ததால் அப்படியா சரி ஐயா என்று நகர்ந்து விடக்கூடாது. அணுசக்தி இல்லாவிட்டால் இந்தியா குடிமூழ்கிப்போய்விடும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? தேசத்தின் வளர்ச்சிக்காக போடப்படும் ஒப்பந்தம் பற்றிய முழு விவரங்களையும் ஏன் அளிக்க மறுக்கிறீர்கள்? இன்னின்ன காரணங்களால் இந்த ஒப்பந்தம் தேவை என்று ஒரு பட்டியலை ஏன் உங்களால் அளிக்கமுடியவில்லை? தேவையில்லாமல் நாங்கள் பயப்படுகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்கள் பயத்தை போக்குவது உங்கள் கடமை அல்லவா?
இதுதான் Dialectic முறை. கேள்வி. எதிர்க் கேள்வி. தர்க்கம். ஒவ்வொரு பிரச்னையையும் இப்படித்தான் அணுகவேண்டும் என்றார் சாக்ரடீஸ். இதை Socratic Method என்று அழைக்கிறார்கள். தத்துவவியலில் மட்டுமல்ல அரசியலிலும் இது பிரதானமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் உலகம் இந்த முறையை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
(தொடரும்)