Home / organic

organic


ஆர்கானிக் உணவு... அலைமோதும் கூட்டம்! - அவள் விகடன் - 2015-03-24

உண்மை நிலை என்ன?

'இயற்கையானது’ என்பதைக் குறிக்கும் 'ஆர்கானிக்' எனும் வார்த்தைக்கு மரியாதை பெருகிவருகிறது. 'இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண வேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது’ என்கிற விழிப்பு உணர்வின் வெளிப்பாடுதான் காரணம். இது வரவேற்கத்தக்க விஷயமே! ஆனால், இவை பற்றி மக்களுக்கு சந்தேகங்களும் உள்ளன.

'ஆர்கானிக் உணவுகளை எங்கு வாங்குவது?’, 'அவை இயற்கை விவசாயத்தில் விளைந்ததுதான் என்று எப்படி உறுதிபடுத்திக்கொள்வது?’, 'ஆர்கானிக் உணவுப் பொருட்கள் நமக்குச் செய்யும் நன்மைகள் என்னென்ன?’, 'அவற்றுக்கு நான் கொடுக்கும் விலை நியாயமானதுதானா?’  இப்படி பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசுகிறார்கள், இந்தத் துறை சார்ந்த நிபுணர்களும், வணிகர்களும்!

ஏன் வேண்டும் ஆர்கானிக் உணவுகள்?

புகழேந்தி, பொதுநல மருத்துவர்: "ஆர்கானிக் உணவுப் பொருட்களில் செல் சிதைவு களைக் தடுக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன. இதனால், ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆனால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் இதற்கு நேரெதிர்; வாழும் நாட்களை குறைக்கக் கூடியவை. ரசாயனத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் சத்துகள் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதனால், ஹார்மோன் பிரச்னைகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கல்லீரல் மற்றும் கிட்னி தொடர்பான கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், கரு கலைவது, புற்றுநோய் என பலவிதமான தீமைகள் வருகின்றன. இதனால்தான், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் என்கிற அறிவுரைகள் அதிகரித்து வருகின்றன.

இதைச் சொல்லும்போது, 'நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், முகத்தில் பூசும் க்ரீம் என எல்லாவற்றிலும் ரசாயனம் கலந்துவிட்ட நிலையில், உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக்கொள்வது எந்த அளவுக்குப் பயன் தரும்?’ என்கிற கேள்வி எழக்கூடும். காற்றின் மூலம் குறைந்த அளவு நஞ்சே நம் உடலில் சேரும்; குடிக்கும் தண்ணீரைச் சுத்தப்படுத்திக் குடிக்கலாம்; ரசாயன க்ரீம்கள் சருமத்தில்தான் வினைபுரியும். ஆனால், உணவு என்பது, நம் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் அத்தியாவசியமானது. காற்று, தண்ணீர் போன்ற காரணிகளால் ஏற்படும் நோய்களுடன் மல்லுக் கட்டும் எதிர்ப்புச் சக்தியை நம் உடலுக்குத் தரவல்லது, உணவுதான்! எனவே, அதிலும் ரசாயனத்தைக் கலக்காமல் இயற்கையை நாடுவது, மற்ற பிரச்னைகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய அரணாக அமையும்.''

இயற்கை விளைபொருட்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

கிருஷ்ணமூர்த்தி, டயட்டீஷியன்: "காய்கறிகள், பழங்களைப் பார்க்கும் போதே பளபளவென்று இருந்தால், அது ரசாயன விளைச்சல். இயற்கை விளைபொருட்களில் தோல் மென்மையாக இருக்கும், சீக்கிரம் வேகும். ரசாயன காய்கறிகளின் தோல் தடிமனாக இருப்பதுடன், வேகவும் நேரம் எடுக்கும். இயற்கை விளைபொருட்களில் இருக்கும் ருசி, ரசாயன உணவுகளில் இருக்காது. இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பூச்சி அரிக்கும். கீரைகளில் சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும். ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட விளைபொருட்களை பூச்சி அணுகாது. ஆனால், பூச்சி அரித்த காய்கறிகளை வாங்க மக்கள் தயங்குவார்கள். இதை எப்படிச் சாப்பிடுவது என்று கேட்கலாம். இதனால் எதுவும் தீங்கு இல்லை என்பதே உண்மை. பூச்சி இருக்கும் பகுதியை மட்டும் சுத்தம் செய்துவிட்டு, மற்ற பகுதிகளைப் பயன்படுத்தலாம். பொதுவாகவே, காய்கறிகளை சூடான நீரில் கழுவிவிட்டு, பின்னர் நறுக்கிச் சமைக்க வேண்டும். அதிலும் ரசாயன முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் உள்ள நஞ்சுகள் நீக்கப்பட, இது அவசியம். காய்களை நறுக்கி பின் கழுவுவது தவறான முறை.''

இயற்கையை உறுதிபடுத்துவது எப்படி?

அனந்து, சமூக ஆர்வலர் மற்றும் பாதுகாப்பான உணவுக்கான ஆர்வலர் (safe food activist): "சென்னையில் ஆர்கானிக் ஃபார்மர் மார்க்கெட் (OFM) என்று ஒன்றை கூட்டு முயற்சியுடன் ஆரம்பித்திருக்கிறேன். விவசாயிகளுக்கு நியாயமான லாபமும், நுகர்வோருக்கு நம்பிக்கை யான பொருட்களும் கிடைக்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி, நடுத்தர மக்கள் இருக்கும் பகுதிகளில், சென்னையில் 14 இடங்களில் இந்த மார்க்கெட் செயல்படுகிறது.

ஆர்கானிக் கடைகளில், அவர்கள் தரும் காய்கறிகள் உண்மையிலேயே இயற்கை விளைச்சலில் அறுவடையானவைதானா என்று உறுதிபடுத்திக்கொள்வது அவசியம்.கடைக்காரர் களிடம், 'அந்த உணவுப் பொருட்கள் எந்த ஊரில் இருந்து வருகின்றன? எந்த விவசாயியிடம் இருந்து கொள்முதல் ஆகின்றன? அந்த விவசாயி எந்த செக்கில் எண்ணெய் எடுக்கிறார்?’ இப்படிப்பட்ட கேள்விகளை அவசியம் முன்வையுங்கள். பதில் சொல்லத் தயங்கும் அல்லது மறுக்கும் கடைகளை நம்பாதீர்கள். அதேபோல, ஆர்கானிக்கில் பிராண்ட்களுக்கும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை. அதன் ஆரம்பப்புள்ளி நல்ல நோக்கத்துடன், நேர்மையாக இருந்தாலும், இடையில் கடந்து வரும் பாதையில் பிழை நேரலாம். முடிந்தவரை, விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யும் அங்காடிகளைத் தேர்வு செய்யலாம். கடை நடத்துபவர் மீதான உங்கள் நம்பிக்கையே தரத்தை உறுதிபடுத்தும்.''

ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறதே?

ராமரத்தினம், ஆர்கானிக் அங்காடி உரிமையாளர், சென்னை:"இயற்கை விளைபொருட்களைப் பொறுத்தவரை கொள்முதல் விலையே அதிகம் என்பதால், சில்லறை விலையும் அதிக மாகிறது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் உணவுக்கும் ஆர்கானிக் உணவுக்கும் குறைந்தது 30 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கும். காரணம்... இயற்கை முறையிலான உற்பத்தி குறைவாக இருப்பதுதான். அதிகமான விவசாயிகள் இதில் ஈடுபடும்போதுதான் விலை குறையும். உற்பத்தி அதிகமாக வேண்டுமென்றால், அதன் தேவை அதிகமாக வேண்டும். அதாவது, வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.''

ஆகவே மக்களே... நம் கைகளில்தான் இருக்கிறது, நாளைய தலைமுறைக்கான நஞ்சற்ற உணவு!

நம்பி வாங்கலாம் சிறுதானியம்!

இன்றைய சூழலில் பெரும்பாலான விளைபொருட்களும் ரசாயன முறையில்தான் விளைவிக்கப்படுகின்றன. இதனால், இயற்கை என்று சொல்லி விற்கப்படும் பொருட்களை எதை நம்பி வாங்குவது என்கிற தயக்கமே பலரிடமும் இருக்கிறது. இதற்கு நடுவே, "சற்றும் தயங்காமல் சிறுதானியங்களை நம்பிக்கையோடு வாங்கலாம்... அவை முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது'' என்று சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த 'இயற்கைப் பிரியன்' ரத்தின சக்திவேல். இவர், சமைக்காமலேயே அனைத்துவிதமான உணவுகளையும் உருவாக்குவதில் புகழ்பெற்றவர்.

'சிறுதானியம் குறித்த விழிப்பு உணர்வு பரவலாகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆர்கானிக் உணவுகள் எனும்போது, அதில் கம்பு, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு! இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தப் பயிர்களுக்கு ரசாயன உரங்களையோ... பூச்சிக்கொல்லிகளையோ விவசாயிகள் பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது.

காலையில் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு தோசை என மூன்று நேரமும் அரிசி உணவுகளைதான் சாப்பிடுகிறோம். இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் இந்த நிலை. இதனால்தான் சர்க்கரை வியாதிக்காரர்கள் இங்கே அதிகம் இருக்கிறார்கள். இதற்காக சிறுதானிய வகைகளை மூன்று நேரமும் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம். தாது உப்புகள், நார்ச்சத்து, புரதம், விட்டமின் என எல்லா சத்துகளும் இவற்றில் அதிகம் இருக்கின்றன. சிறுதானியத்தை கூழாகவோ, கஞ்சியாகவோதான் குடிக்க வேண்டும் என்பது கிடையாது. பிரியாணி, விதவிதமான ஸ்நாக்ஸ் எல்லாம் சிறுதானியத்தில் செய்யமுடியும்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் ரத்தின சக்திவேல்.


அறிந்துகொள்வது எப்படி?

இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு, அவற்றுக்கென உள்ள பிரத்யேக மணம் இருக்கும். இதை வைத்தும் கண்டறியலாம். இவற்றின் சுவையும் அருமையாக இருக்கும். இதை வைத்தும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

அவல் வாங்கும்போது, பளீர் என்று பார்த்து வாங்காதீர்கள். இயற்கையான முறையில் விளைந்த அரிசியில் தயாரிக்கப்படும் அவல், பழுப்பு நிறத்தில்தான் இருக்கும்.


இது நல்லெண்ணெய்தானே?!

ஆர்கானிக் பொருட்களின் தரத்தை எப்படி உறுதிபடுத்திக் கொள்வது என்று சென்னையில் ஞாயிறு சந்தை என்ற பெயரில் 14 ஆண்டுகளாக இயற்கை அங்காடி நடத்திவரும் முரளியிடம் கேட்டோம். மனிதர் அக்குவேறு ஆணிவேறாக விஷயங்களைப் புட்டுப் புட்டு வைத்தார்.

'நல்ல அனுபவம் இருந்தாதான் இயற்கையில விளைஞ்சதுக்கும் ரசாயனத்துல விளைஞ்சதுக்கும் உடனே வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பா, விவசாயம் சாராத மக்களுக்கு இதைக் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். இயற்கை பழங்களோ, காய்கறிகளோ அதுக்குனு உரிய மணத்தில் இருக்கும். உதாரணத்துக்கு ஆப்பிள், மாம்பழம்னா... அததுக்குரிய பிரத்யேக மணம் வீசும். காய்கறிகள்னா... நல்லா பச்சை வாசனை வீசும். சுவையும் மிகுதியா இருக்கும்.

இயற்கை முறையில தயாரிக்கப்பட்ட வெல்லம், தொண்டைக்குள் இறங்குற வரைக்குமே இனிப்பா இருக்கும். ரசாயன முறையில தயாரிச்ச வெல்லம்னா... கொஞ்சம் உப்பு கரிக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழம், காய்கறிகள்ல வெளிப்பகுதி பளபளப்பா இல்லாம, வடிவமும் ஒரு ஒழுங்குல இல்லாம இருக்கும். பூச்சிகள்கூட கடிச்சிருக்கும். ஆனா, உள்ள இருக்கிற சதைப்பகுதி பாதுகாப்பா இருக்கும். அதேசமயம், ரசாயனத்துல விளைஞ்ச பொருட்கள், வெளியில பார்க்க அழகா இருக்கும். உள்பகுதி அழுகிப் போயி, சுவையே இல்லாம இருக்கும்.

எண்ணெய் பொருட்கள் விலை குறைவா கிடைச்சா... அது கலப்படம்னு புரிஞ்சுக்கலாம். உதாரணத்துக்கு எள்ளோட விலை அதிகம். இதை செக்கில் ஆட்டி எண்ணெயாக கொண்டு வரும்போது, விலை அதிகமாத்தான் இருக்கும். ஆனா, எள் விலையைவிட குறைவான விலைக்கு நல்லெண்ணெயைத் தர்றாங்க. இது எப்படி சாத்தியம்? எண்ணெயைப் பொறுத்தவரை அதுக்கான இயற்கை குணங்கள் எல்லாத்தையும் சுவையூட்டிகள், ரசாயனம் மூலம் கொண்டு வந்து, கண்ட எண்ணெயிலயும் கலந்து விற்பனை செய்துட்டிருக்காங்க'' என்று அதிர வைக்கிறார் முரளி.


"6 கிலோ... 10 கிலோவுக்கு இணை!''

"இயற்கை விளைபொருட்களின் விலை அதிகம் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது. இது தவறான கருத்து. நீங்கள் ரசாயனத்தில் விளைந்த அரிசியை 10 கிலோ வாங்க வேண்டியிருந்தால், இயற்கை முறையில் விளைந்த அரிசியை 6 முதல் 7 கிலோ வாங்கினாலே போதுமானதாக இருக்கும். இதுவே 10 கிலோ அரிசிக்கு இணையான சாதத்தைத் தரும். இதை ஒப்பிடும்போது, இயற்கை அரிசியின் விலையும் கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும்'' என்கிறார் திருநெல்வேலி, முருகன் குறிச்சியில் இயற்கை அங்காடி நடத்திவரும் கோமதி நாயகம்.

கே.அபிநயா  படங்கள்: இரா.யோகேஷ்வரன்




     RSS of this page