Home / gopikrishnan

gopikrishnan


கீழ் நோக்கிய சுழல்
வெங்கட் சாமிநாதன்
  யாரும் தான் வாழும் காலத்திய அனுபவங்களைப் பற்றியும் நினைவுகளைப் பற்றியும்தான் பேசமுடியும். கடந்த ஐம்பது வருட கால தமிழ் வாழ்க்கையை (அது கலாச்சாரம், அரசியல், அறிவார்த்தம், சமூகம் ஆக எது பற்றியதாக இருந்தாலும்) நினைத்துப் பார்த்தோமானால், அது ஆபாசம் நிறைந்ததாக, அபத்தமானதாக, கோமாளித்தனம் மிகுந்ததாக இருப்பதைத்தான் பார்த்து வருகிறோம்.

இந்தச் சீரழிவைப் பார்த்து வேதனையுற்று, சற்று நின்று நிதானித்து, இதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் ஏதும் உண்டா என்று யோசிக்கும் எண்ணம்கூட இருப்பதாகத் தோன்றவில்லை. அந்த எண்ணம் இனி எப்போதாவது எழும் என்ற நம்பிக்கையும் இல்லை. இதற்கு மாறாக, இப்போது நிலவும் சூழலில், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் இந்த அபத்தமும் கோமாளித்தனமுமே அவ்வத்துறைக்குத் தலைமை தாங்குகிறது. அல்லது அவ்வத்துறையின் தலைமைகள் நிலவும் சூழலுக்கு ஏற்ப தானே வளைந்து கொடுத்துக்கொண்டு அந்தச் சூழலுக்கு அதிகாரமும் மரியாதையும் வழங்கிவிடுகிறது.

இது வெறும் கேலிக்கிடமாகும் விஷயம் மாத்திரமல்ல. நம்மைச் சோகிக்கவைக்கும் கேலிக்கூத்து. இந்தக் காலகட்டம்தான் தமிழ் சரித்திரத்தின் பொற்காலம் என்று கொண்டாடப்படுகிறது. இப்படி தலைமையும் மக்களும் சூழலும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டு மயங்கிக் கிடங்கத் தொடங்கிவிட்டால், இதிலிருந்து மீள்வது என்கிற பேச்சுக்கு இடமிருப்பதில்லை.

இருப்பினும், இந்தச் சமூகத்தின் ஏதோ எளிதில் புலப்படாத மூலை முடுக்குகளில் கொஞ்சம் விவேகமும் மனஆரோக்கியமும் நிதான புத்தியும் மிஞ்சியுள்ளதாகத் தோன்றுகிறதுதான். ஆனால் அது குரல் எழுப்புவதில்லை. பெரும்பாலும் மௌனம் காக்கிறது. அது தன் தன் குரலை எழுப்பினால், அந்தக் குரலும் சற்றுக் கேட்கப்படுவதாகச் சந்தேகம் எழுந்தால், உடனே பெரும்பான்மையின் மிருக பலம் அதன் குரல் வளையை உடன் நசுக்கிவிடும். இந்தப் பெரும்பான்மையில், தலைமைகளும் அடக்கம் என்பதும் உண்மை. எனவே தன் ஆரோக்கியத்தையும் விவேகத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குரல்கள், தன்னைச் சூழ்ந்திருக்கும், தான் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நாற்றத்தை சகித்துக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டுள்ளது. ஒரு எதிர்க் குரல் எழுவதில்லை. ஒரு முணுமுணுப்புகூட கேட்பதில்லை.

நாற்றத்தை நாற்றம் என்றுதானே சொல்லவேண்டும் என்றால், அப்படிச் சொல்வது இன்றைய சூழலில் விவேகமான காரியமில்லை. சமூகம் முழுதுமே கண்டனத்தில் சீறியெழும். ஆனால், சொல்லித் தான் ஆகவேண்டும் என்ற முனைப்பு இருந்தால், சொல்வதற்கு வழிகள் பிறக்கும். குறியீடுகள், உருவகங்கள், உருவகக் கதைகள், சமூக, வரலாற்று விடம்பனங்கள், கேலி, எல்லாம் இத்தகைய சூழலில் எதிர்க் குரலெழுப்பும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகக் கூடும். ஆனால், நுண்ணிய இவையெல்லாம் கூட அதன் கூர் மழுங்கச் செய்துவிடும் அளவுக்கு சமூகத்தின் உணர்வுகள் மொண்ணையாக விருந்தாலோ? கஷ்டம்தான். இன்றைய தமிழ்ச் சமூகம் இத்தகைய குணம் கொண்டதுதான். ஆனாலும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு மௌனமாக இருக்க முடிவது எத்தனை பேரால், எவ்வளவு காலத்துக்கு? ஒரு வேளை எதிர்க்க வேண்டும் என்ற முனைப்பும் தைரியமும் கொஞ்சம் கூட இல்லாது போய்விட்டதோ என்னமோ.

திடீரெனப் புத்துணர்வு தருவதாக ஒரு சிறிய மாற்றம் எதிர்பாராது நிகழ்ந்து விடுகிறது. கோபிகிருஷ்ணன் என்னும் ஒரு எழுத்தாளர், அதிகம் பேசப்படாதவர், அதிகம் அறியப்படாதவர். ஒவ்வாத உணர்வுகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பில் ஒரு பாரா. அந்தப் பாரா கற்பனையான ஒரு செய்தித்தாளில் பிரசுரமாகியுள்ள ஒரு செய்திக் குறிப்பு. ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து கொண்டையா என்னும் ஒரு முதியவர் தன் சகோதரனைப் பார்க்கச சென்னை வருகிறார். அவர் தன் சகோதரனின் வீட்டில் தொலைக்காட்சியில் சித்திரஹார் என்னும் நிகழ்ச்சியைப் பார்த்து அடைந்த ஆச்சரியம் இவ்வளவு அவ்வளவு என்றில்லை. நகரங்களிலும் பெரிய ஊர்களிலும் காணும், சினிமா, டி.வி. இவையெல்லாம் அவருக்கு ரொம்ப புதிய அதிசயமான சமாச்சாரங்கள்.

    "ஒரு வாலிபனும் இளம் பெண்ணும் அதில் கலந்துகொண்டனர். இருவரும் கடலோரத்தில் ஆடிக்கொண்டே பாடினர். திடீரென்று கடலில் நீராடினர். மீண்டும் கரையில் ஆடிப் பாடி அக மகிழ்ந்தனர். பின் நீர்ப்பரப்புக்குக் கீழே ஒரு ஆமை, பல மீன்கள் முதலியன நீந்தின. இவைகளுக்கு நடுவில் இசை முழங்க அந்தப் பையனும் பெண்ணும் மூச்சுப் பிடித்து நீருக்கடியில் நீந்தினர். அடுத்த கணம் கரைக்குக் காய்ந்த ஆடைகளுடன் திரும்பி வந்து மீண்டும் ஆடல் பாடலைத் தொடர்ந்தனர். அடுத்து, பெண் ஒரு படுக்கையிலும், பையன் ஒரு படுக்கையிலும் புரண்டு புரண்டு பாடினர். மீண்டும் கரையேறி, ஆடல்-பாடல். காட்சி முடிந்தது. கொண்டையா இது பற்றி பிரஸ்தாபித்த போது, நீல்காந்த், "அது ஒரு காதல் காட்சி" என்று விளக்கினார். மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், இவ்வளவு குறுகிய காலத்தில் துரித கதியில் ஆடிப் பாடி, நீரில் மூழ்கி, படுக்கையில் புரண்டு, மீண்டும் ஆடிப் பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும் என்றும், என்ன இருந்தாலும் கல்யாணம் செய்துகொள்ள இவ்வளவு சிரமம் தன் காலத்தில் அவர் பட்டதில்லை என்றும் அவர் வியந்தார். இது நாகரிக வளர்ச்சி என்று நீலகாந்த் கூற, இது மிகவும் சிக்கலாக இருக்கிறது என்றும், நாகரிக வளர்ச்சி இவ்வளவு கஷ்டங்களை விளைவித்திருக்கும் போது அது அவசியம்தானா என்றும் அவர் வேதனைப்பட்டார். ஆடல், பாடல், நீரில் மூழ்குதல் போன்றவை தெரியாதவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாததை நினைத்து மிகவும் மனவருத்தம் அடைத்தார். தன் காலம் போல் இப்பொழுது சமாச்சாரங்கள் சுலபமாக இல்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார்."

இன்னொரு கதையில் இன்றைய தமிழ்க் கலாச்சார சூழல் தரும் வேதனைகளில் ஒன்றைச் சொல்கிறார் கோபிகிருஷ்ணன்.

    "தாரா ஒரு பதிவிரதை. பீச்சில் கண்ணகிக்கு அடுத்தாற்போல் தாராவின் சிலை ஒன்றைச் செய்து வைக்க ஆசைதான். பொருள் வசதி இல்லாத காரணத்தால் இந்த உயரிய அவா பகற்கனவு அளவிலேயே இருந்து வருகிறது. உள்ளுக்குள்ளேயே இன்னொரு பயம். எனக்குப் பணவசதி ஒரு காலத்தில் கிடைக்கும் பட்சத்தில், நிறைய சிலைகள் ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்து தாராவின் சிலைக்கு பீச்சில் இடமில்லாது போய்விட்டால் என் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொள்வது?....

தமிழ் மக்களுக்கும் தலைமைகளுக்கும் சிலைகள் வைப்பதிலும், பட்டங்களையும் விருதுகளையும் தூக்கிச் சுமப்பதிலும் உள்ள ஆசை அபத்த எல்லைக்கே நீண்டுள்ளது. இதே கதையில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. மோசடிகளே உருவான ஒரு வியாபாரி. அவனும் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று அலைபவன். அவனுடைய வைப்பாட்டி ஒருத்தியை, கதை சொல்பவரின் இருப்பிடத்தின் பக்கத்தில் குடிவைத்திருக்கிறான். அவனைப் பற்றி கதை சொல்பவர் சொல்கிறார்:

    "நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் என்னைப் பார்த்த பார்வை, "சீ நீயெல்லாம் என்ன மனுஷன், பொடியன்" என்று சொல்வது போல் இருந்தது. கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கனவான் ஒரு சாதாரணப் பிரஜையை வேறு எவ்வாறு பார்க்க இயலும்!"

தமிழ் சமூகம் அப்படித்தான் இருக்கிறது. கோடம்பாக்கத்தின் சந்து பொந்துக் குடிசைகளிலிருந்து வரும் ஒரு எக்ஸ்டிரா நடிகையிலிருந்து, தன் காதலியை மரத்தைச் சுற்றி விரட்டியும் ஆடிப் பாடி, கராத்தே வித்தைகள் செய்து காதலிக்கும் ஹீரோ வரை, மற்ற நேரத்தில் ஏதும் மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டுக்கொண்டு சினிமா படம் எடுக்கும் தயாரிப்பாளரையும் சேர்த்து, எல்லோருமே கலைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தாம். இவர்கள் அவ்வப்போது கொட்டும் அபத்தங்கள் எல்லாம் சிரிப்புக்கு இடமாவதில்லை. போற்றப்படும், கேட்டு மயங்கும் பொன்மொழிகளாகின்றன இந்தச் சமூகத்தில்.

ஓவ்வாத உணர்வுகள் கோபிகிருஷ்ணனிடமிருந்து வந்துள்ள முதல் சிறுகதைத் தொகுப்பு. இவர் எழுத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சமும், அவரது நகை உணர்வு, மொழி நடை, கதைகள் பெறும் வடிவம், அவர் சொல்ல எடுத்துக்கொள்ளும் கதைப்பொருள் எதுவும் சாதாரணமாக, கதை எழுதத் தகுந்த ஒன்றாகக் கருதப்படாது. அவர் கதை சொல்லலில், தன்னையே மட்டமாகவும் கேலிக்குரியவராகவும் ஆக்கிக்கொள்வதும், ஏதும் வார்த்தை ஜாலங்கள் உத்திகள் என்று அலைபடாது மிக இயல்பாகக் கதை சொல்லும் பாணியும், சொல்லப்போகும் விஷயமும், மனிதரின் அபத்தமும் தன் படு பயங்கர கேலிக்காளாவது தெரியாதவாறு ஏதோ ஒன்றுமறியாத பாவனையில் இயல்பாகச் சொல்லிச் செல்வதான அவரது பாணி, எல்லாமே இன்றைய தமிழ் எழுத்துக்குப் புதியவை.

கோபிகிருஷ்ணன் தன்னைச் சுற்றிக் காணும் அல்லது தான் நிகழக் கண்ட ஒரு சம்பவத்தையோ அல்லது மனிதர்களையோ அல்லது அனுபவத்தையோ எடுத்துக்கொள்கிறார். பின் அது சம்பந்தப்பட்ட மனிதர்களையும் அந்த நிகழ்வையும் ஒரு விஷமப் புன்னகையுடன், அது ஏதோ ஒரு சாதாரண சம்பவம் போலும் அது பற்றி தனக்கு ஏதும் அதிகம் தெரியாது போலும் வெகு இயல்பான வார்த்தைகளில் சொல்கிறார். அதில் தன் அறியாமையைச் சொல்லும் பாவனையும் இருக்கும். ஆனால் இவற்றின் பின்னால் மறைந்திருப்பது ஒரு பயங்கர அட்டகாசமான் கேலிதான். கேலி செய்வதாக அவரை யாரும் குற்றம் சாட்டிவிட முடியாது. "அப்படியா? அப்படி நான் ஏதும் சொல்லவில்லியே. நான் சாதாரணமாக, நடந்ததைத் தானே சொன்னேன்? என்பதாகத்தான் இருக்கும் அவர் பதில். "ஆனால், என்னால் தான் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லை. தவறு என்னது தான்" என்பதாக ஒரு நாடக பாவனை இருக்கும்.

அவர் கதைகள் எல்லாம் தன்னிலை ஒருமையில்தான் சொல்லப்படுகின்றன. இது போக, கதை சொல்பவர் உளவியல் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கூட. ஒரு கதையில், ஒரு சம்பவத்தைப் பற்றி ஒரு நீண்ட ஆராய்வை நீட்டி முழக்கிச் சொன்ன பிறகு, "ஆண்டவா, ஏன்தான் உளவியல் படித்தேனோ!" என்று அவர் தன்னையே சபித்துக்கொள்கிறார். பிறகு உடனே அவருக்குத் தெளிவு பிறந்து மறுபடியும் சபித்துக் கொள்கிறார் தன்னையே: "உளவியல் படித்தவன் ஆண்டவனை விளிக்கக்கூடாது. அபசாரம்."

கதை சொல்பவர், எனக்கென்னவோ ஜெராஸ்லாவ் ஹாஸக்கின் ஷ்வைக்கை நினைவு படுத்துகிறார். ஷ்வைக் தன் அறியாத்தனத்தின் தட்டுத் தடுமாறல்களுக்கெல்லாம் தான் இரையாவதில்லை. மற்றவர்கள் தான் சிக்கித் தவிப்பார்கள். ஷ்வைக் நழுவி விடுவான். ஆனால் இங்கு கதை சொல்பவர் தன் அறியாத்தனத்தின் சுமையைத் தானும் அனுபவிக்கிறார்.

கோபிகிருஷ்ணன் தன் புதிய கதை சொல்லும் உத்தியுடன், (உத்தியல்லாத உத்தி இது), புதிய கதை வடிவத்துடன் தன் சமகால தமிழ் வாழ்க்கையினூடே ஒரு புது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் குரல் தமிழுக்கு ஒரு புதிய குரல். இதில் அவர் வெற்றியடைந்துள்ளார் என்று நான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு வருத்தம். கோபிகிருஷ்ணன் தன் பயணத்தில் வெகு தூரம் சென்று விடவில்லை என்று தோன்றுகிறது. அவருடைய இயல்புக்கும், அவர் கதைத் தேர்வின் பார்வைக்கும், அவருக்குக் கதை சொல்ல இன்றைய தமிழ் வாழ்க்கை நிறைய அள்ளித் தரக் காத்திருக்கிறது. அவர் கேலிக்கு, பரிகாசத்திற்கு, தமிழ் வாழ்க்கை மிக வளமானது. தன் முதல் கதைத் தொகுப்பில் கோபிகிருஷ்ணன் செய்துள்ளது, தமிழ் வாழ்க்கையின் மேல் சருமத்தை லேசாகத்தான் கீறியிருக்கிறார். மேலும் கீறியுள்ளது, அவரைச் சுற்றி அவர் காணும் குடும்ப வாழ்க்கை, நண்பர்கள், உடன் காணும் மனிதர்கள்தாம். இவ்வளவிலேயே, அவர் தன் வீட்டு ஜன்னலுக்கு வெளியே சற்று தலை நீட்டிப் பார்த்திருக்கிறார்தான். தன் வீட்டுக் கதவைத் திறந்து தன் தட்டுத் தடுமாறி தன் பயணத்தை நீட்டிப் பார்ப்பாரானால், அவருக்காகக் காத்திருப்பது ஒரு பெரும் சாகஸப் பயணமாக இருக்கும்.

ஏனெனில், இன்றைய தமிழ் வாழ்க்கையில் ஆபாசமற்ற, ஆபாசப்படுத்தப்படாத, ஒரு நிறுவனம், ஒரு வெளிப்பாடு, ஒரு துறை, கேலி உணர்வை நம்மில் எழுப்பாத ஒரு கோமாளித்தனமற்ற பொதுச் செயல்பாடு ஒன்று கூட காணக் கிடைக்காது

கோபிகிருஷ்ணன் தன் திரைச்சீலையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டும். அத்தகைய பெரிய திரைச்சீலையில் அவர் வரைந்து நிரப்பத் தமிழ் வாழ்க்கை நிரம்ப வாய்ப்பளிக்கும். இதன் விளைவாக ஒருவேளை அவர் தமிழ்ச் சமூகமும் வாழ்க்கையும் தன் விவேகத்தைத் திரும்பப் பெறும் சாத்தியங்கள் பிறக்கலாம். 'லாம்' தான். நிச்சயமில்லை. அதன் ஆரோக்கியத்திற்கு வழிவகுத்தவராவார் கோபிகிருஷ்ணன்.



     RSS of this page