அணு
ஆட்டம்! - ஜூனியர் விகடன்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள்.
'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே, ஒரு செயலைத் தொடங்க
வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம்
இதுதான்! ஆனால், 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல், எந்த
அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப்
பார்த்தது உண்டா?
ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர்
எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார், ''மூன்றாம் உலகப் போர்
எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம்
உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல்,
வில்கொண்டு போரிடுவார்கள். ஏனெனில், அணு ஆயுதங்களால் இந்த உலகம்
அழிந்து, அதன் பிறகு மீண்டும் ஒரு பெருவெடிப்பின் மூலம் உலகம்
என்ற ஒன்று உருவானால், அப்போது மனிதர்கள் இப்படித்தான்
போரிடுவார்கள்!'' என்றாராம்.
தோழர்களே... தூற்றவும், போற்றவும் ஆள் இல்லாத ஒரு தேசத்தில்,
ஆயுதங்களை வைத்துக்கொண்டு 'நாம் வல்லரசு’ என்று கூக்குரல்
இடுவதில் என்ன இறுமாப்பு இருக்கிறது?
அணுப் பொருளாதாரம், வேறு எந்தப் பொருளாதாரத்தைக் காட்டிலும்
இன்று மிகச் சூடான உரையாடல்களைக் கொண்டுள்ள விஷயம். 'தாங்கள்தான்
பொருளாதாரத்தின் போக்கையே தீர்மானிப்பவர்கள்’ என்று
காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சில மேட்டுக்குடி
அறிவுஜீவிகளும், அணுப் பொருளாதாரம் என்பதை அணு அரசியலாக மாற்றி
இருக்கிறார்கள். இன்று வரையிலும் கணக்கு வழக்கு, லாப - நட்டம்
காட்ட முடியாத துறை என ஒன்று இருந்தால், அது அணு சக்தித் துறை
மட்டும்தான்!
எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், அமெரிக்காவுக்கு வேலை
செய்கிறோமா அல்லது இந்தியாவுக்கா என்றே தெரியாமல் இயங்கி வரும்
ஒரே அரசுத் துறையும் இதுதான்!
'உலகின் அடுத்த வல்லாதிக்க அரசுகளாக சீனாவும் இந்தியாவும்தான்
இருக்கும்’ என்று கணிக்கிறார்கள். எதை வைத்து?
'இந்தியாவிடம் 100 அணுகுண்டுகள் இருக்கின்றன. சீனாவிடமோ 1,000
அணுகுண்டுகள் இருக்கின்றன. என்னிடமோ வெறும் 500
அணுகுண்டுகள்தான்! சீனாவை வளரவிட்டால், அவன் நம் குடுமியைப்
பிடிப்பான். சீனாவுடன் இந்தியா கைகோத்தாலும், உலக நாட்டாமையான
எனக்கு ஆபத்துதான். மூச்சுத் திணறும் வர்த்தகப் போட்டியில்
சறுக்கினாலும் முதலாளித்துவத்தை, சீனன் உள்ளே அனுமதிக்க
மாட்டான். மூச்சுத் திணறிச் செத்தாலும், இந்தியன்,
முதலாளித்துவத்தின் காலை விட மாட்டான். 'வல்லரசாக்குகிறோம்
உங்களை’ என்று சொல்லி அவன் வறுமையை நாம் பயன்படுத்திக்கொள்வோம்’
என்று அமெரிக்கா சிந்தித்ததன் விளைவுதான் அணு ஒப்பந்தம்.
இப்படி எல்லைப் பிரச்னை முதற்கொண்டு போட்டி நாடான சீனாவுக்கும்
நமக்கும் இடையே பள்ளம் பறித்து, திரி கிள்ளி யார்
மாட்டிக்கொண்டாலும், 'ஒரு எதிரி முடிந்தான்’ என்று கொக்கரித்துக்
கொண்டாடக் காத்திருக்கிறது வல்லாதிக்கம். அதன் பிறகு 'எதிரிக்கு
எதிரி நண்பன்’ என்று முதுகுக்குப் பின்னால் கத்தியை
வைத்துக்கொண்டு அமெரிக்காவும் சீனாவுமோ அல்லது அமெரிக்காவும்
இந்தியாவுமோ கட்டித் தழுவிக்கொள்ளும். முதுகுக்குப் பின்னால்
குத்தும் பழக்கம் நம்மிடம் இல்லை என்பதால், அமெரிக்காவிடமும்
சீனாவிடமும் நாம் மார்பு காட்டி நிற்போம். எனவே, அபாயச் சங்கு
அணு ஒப்பந்த வடிவத்தில் ஊதப்பட்டுவிட்டது!
'மக்கள் பாடையில் போனால்தான் என்ன, பட்டினி கிடந்தால்தான் என்ன?
நமக்கு பென்ஸ் காரும், பசிக்கு கேக்கும் இருக்கிறது’ என்கிற
நிலைப்பாட்டில்தான் அரசியல் கட்சிகள் இந்த அணு விஷயத்தில் இயங்கி
வருகின்றன. 'அணு... அதன் பாதிப்பு என்ன?’ என்பதில் துளியேனும்
அக்கறை காட்டப்பட்டு இருந்தால், இன்று இத்தனை அணுமின் நிலையங்கள்
இந்தியாவில் தோன்றி இருக்காது.
கனிமொழி தனது நாடாளுமன்ற உரையில் அணுமின் நிலையங்களின்
தேவையைப்பற்றி, அதன் அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருந்தார்.
அவரின் உரை 'காலச்சுவடு’ இதழில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிர்
வினையாக, அணு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து
நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்தக் கடுப்பில், அரசு
நூலகங்களுக்கான 'காலச்சுவடு’ இதழ் சந்தாவை நிறுத்திவிட்டார்கள்.
சந்தா நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று சொல்லப் படவில்லை.
'இதுவாகவும் இருக்கலாம்’ என்பது என் சுய அனுமானம். அதாவது,
அணு... அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டு உள்ளது!
ஜப்பான், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் எப்படி அணுவால்
தீர்மானிக்கப்படுகிறதோ, அது போன்றதொரு நிலை இந்தியாவுக்கு வரும்
நாள் வெகு தொலைவில் இல்லை. வல்லாதிக்கங்களிடம் இருந்து பணம்
வாங்கிவிட்டு, அரசியல்வாதிகள் விலைபோய் விடுவார்கள். அவர்கள்
அனுமதித்த அணு மின் நிலையங்களை, ஏன் அணு சக்தித் துறையையே
இயக்குவது டாடா, பிர்லாக்களாகத்தான் இருப்பார்கள்.
அணு விஷயத்தில் அரசியல் இவ்வாறு சீர்குலைந்து கிடக்க, நம்
அறிவியலாவது அறிவுபூர்வமானதாக இருக்கிறதா என்றால், அதுவும்
கேள்விக்குறியே!
இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ.
சுனாமியின்போது, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை உள்ள கடலோர
மாநிலங்களில், ஒன்று மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டது, அது
தமிழகம். அதிலும், 13 கடலோர மாவட்டங்கள் மட்டுமே பாதிப்புக்கு
உள்ளாயின. பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே நம் அரசு இயந்திரத்தால்
மறுவாழ்வு நடவடிக்கை ஒன்றைக்கூட முழுமையாகச் செயல்படுத்த
முடியவில்லை. அதற்கும் வெளிநாட்டு ஏஜென்ஸிகள்தான் வரவேண்டி
இருக்கிறது. மன்மோகன் சிங்கும், ஜெயலலிதாவும் சவேரியர் கோயிலில்
நின்றுகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச்
சென்றுவிட்டார்கள். அதே போல் தமிழ் நாட்டில் வெள்ள நிவாரணப்
பணியின்போது, உதவிப் பொருட்களை வாங்கப் போய், அந்த நெரிசலில் 42
பேர் உயிர் இழந்தார்கள். இது நம்மிடையே உள்ள பேரிடர் மேலாண்மை
பற்றிய விழிப்பு உணர்வுக்கு ஓர் உதாரணம்!
அதே சமயம், 'நம் நாட்டில் உள்ள பல விமானிகள் கள்ளச் சான்றிதழ்
மூலம் பணியில் சேர்ந்தவர்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான தகவலை நான்
விமானத்தில் சென்றுகொண்டு இருந்தபோது படித்தேன். நம் மக்களின்
பாதுகாப்பைப்பற்றி நாம்கொண்டுள்ள அறிவு இவ்வளவுதானா?
சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். ஜப்பானில் ஏற்பட்ட அணு
விபத்துக்குப் பிறகு, அடுத்த பத்தே நாட்களில் சீனாவில் ஒரு
மாநாடு ஒன்றைக் கூட்டுகிறார்கள். சீனாவுக்கும் உதயகுமாருக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியான
நாகர்கோவிலில் இருக்கும் என்னை சீனாவுக்கு அழைத்து, சூரிய ஒளி
ஆற்றல் பற்றிப் பேசச் சொல்கிறார்கள். அந்த மாநாட்டில் அணு
தவிர்த்து, புதிய ஆற்றல் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான வாத,
விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் ஐந்து வருடங்களில்
நம்மிடம் இருக்கும் சூரிய ஒளி ஆற்றல் சந்தையை அவர்கள்
எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்.
ஒரு நாட்டில் ஆபத்து ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் அதே
ஆபத்தைத் தடுக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யும் அவர்கள் வல்லரசு
ஆவார்களா? அல்லது 'இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கி 5 மணி
நேரத்துக்குப் பிறகு இந்தியாவில் சுனாமி ஏற்படும்’ என்பது
தெரிந்தும்... நடவடிக்கை எடுக்காத நாம் இந்த உலகத்துக்குத்
தலைமையேற்கப் போகிறோமா?
காற்றில் கலந்திருக்கும் 4 சதவிகிதக் கரியமில வாயுவைக்
கட்டுப்படுத்த 48,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும்
கதிரியக்கம் கொண்டுள்ள அணு மின் நிலையங்கள் தேவைதானா? 40
வருடங்கள் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ
தலைமுறைகளை அழிக்க நமக்கு யார் உரிமை தந்தது?!
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவின் கைகா என்கிற இடத்தில்
உள்ள அணுமின் நிலையத்தில் தீ விபத்து நடந்தது. அந்த நிலையத்தின்
இயக்குநர் குப்தா, 'ஆபத்தாக எதுவும் நடக்கவில்லை’ என்று
செய்திகளில் சொல்கிறார். ஆனால், 'விபத்து ஏற்பட்டது உண்மையா
இல்லையா? அது எவ்வாறு ஏற்பட்டது? அதை எப்படி அணைத்தீர்கள்?’
என்பன போன்ற கேள்விகளைக் கேட்பதற்கும்கூட நமக்கு உரிமை
மறுக்கப்படுகிறது!
சமீபத்தில் பீகாரில் நிதிஷ்குமார், அங்கு உள்ள ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களுக்கு ஐந்தாம் வகுப்புத் தேர்வு ஒன்றை நடத்தினார்.
அதில் 8,000 பேர் தோல்வி. இந்த லட்சணத்தில் இருக்கும்
ஆசிரியர்களால், அடிப்படை அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டால்,
குழந்தைகளுக்கு எவ்வாறு அறிவியல் ஆர்வம் வரும்... வளரும்? 'நான்
என்னவாகப் போகிறேன்?’ என்றே தெரியாமல், பணம் சம்பாதிக்கலாம்
என்கிற 'பாப்புலர் கல்ச்சர்’கொண்டு வளரும் தலைமுறை இன்னொரு
பக்கம்... ஆக, முறையான கல்வித் தலைமையும் நம்மிடம் கிடையாது.
இத்தனைக்குப் பிறகும் நாம் ஏன் வல்லரசாக விரும்புகிறோம்? காலனி
ஆதிக்கக் காலத்தில் இருந்து வருகிற தாழ்வு மனப்பான்மைதான்
இதற்குக் காரணம். 'அமெரிக்காவிடம் உள்ளதுபோல அணு ஆயுதங்கள்
நம்மிடம் இருந்தால், நாமும் நாட்டாமை செய்யலாம்’ என்கிற
நினைப்புதான் வல்லாதிக்கம் பெறுவதற்கான அடிப்படை.
சரி, அப்படியே வல்லரசு ஆகித்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?
குளங்களை வெட்டி குடிமராமத்து செய்து வாழ்ந்தோமே... அது
வளர்ச்சியா? அல்லது குளங்களை மூடிவிட்டு, அதன் மேல் பாலங்கள்
கட்டுகிறோமே... இது வளர்ச்சியா?
மீண்டும் ஒரு முறை மேலே உள்ளக் குறளைப் படியுங்கள். வளர்ச்சி
என்பது விகிதங்கள் சொல்வதில் இல்லை. வறுமையைப் போக்குவதில்
இருக்கிறது. பண வெறி பிடித்த முதலாளிகள், தன்னலம் மட்டுமே
கருதக்கூடிய விஞ்ஞானிகள், மக்கள் மத்தியில் உண்மைகளைச் சொல்லாமல்
ரகசியத்தன்மை வாய்ந்த அரசியல்... இவை மூன்றும்தான் ஒரு
நாட்டுக்கு ஆபத்து. இந்தக் கட்டுமானத்தை உடைப்பதுவே இந்தத்
தொடரின் நோக்கம். நம் அனைவரின் நோக்கமாகவும் இது மலரட்டும்.
இந்தக் கட்டுடைப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.
எப்படி?!
- அதிரும்...
யார் இந்த உதய குமாரன்?
இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு
நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார்.
நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம்
முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி
ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர்
டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும்,
ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும்
பெற்றவர்.
இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய், சமூகப்
பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும்,
மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு
நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
இவர் அணு சக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும்
உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய்
தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள மணல் போன்ற கனிமங்களில்இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக
இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச்
சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் கண்டது.
அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல்
தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழா வரையில்
உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!
களப் பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக
எழுதவும் ஊக்கம் தந்த இவரின் பேராசிரியர் எபினேசர் பால்ராஜும்
புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற
புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.
'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப்
டிசாஸ்டர்’, 'கிரீன் பொலிட்டிக்ஸ் இன் இண்டியா’ புத்தகங்களையும்
எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர்.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில்
வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு
இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து செய்து
வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும்
கல்விச் சாலை ஒன்றினை, மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி
வருகிறார்.
தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக
இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு
இடங்களில் இயங்கி வரும் அணு சக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று
திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக்
கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராகஇருந்து,
சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார்
நம் உதயகுமாரன்!
அது என்ன
மக்கள் விஞ்ஞானம்?
மூட
நம்பிக்கைக்கான விஷ முறி மருந்து அறிவியல்! - ஆடம் ஸ்மித்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், அவரது துணைவியார்
டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்களில் அற்புதமான தத்துவங்களும்,
அரசியல் தர்க்கங்களும், யதார்த்த அலசல்களும் நிறையவே
இருக்கும். ஒரு பாடலில் கலைவாணர் பாடுவார்...''கோழியில்லாமல்
தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்கவெச்சான்,
உங்கொப்பன், பாட்டன் காலத்தில்
யாரிந்த கோளாறைக் கண்டுபிடிச்சா
யாரிந்தக் கோளாறைக் கண்டுபிடிச்சா?''
விஞ்ஞானபூர்வ, தர்க்க ரீதியான, அதிகாரவர்க்க, ஆணாதிக்கப்
பார்வைகளை, சிந்தனைகளை, வாதங்களை அவர் முன்வைக்க, மதுரம்
அம்மையார் அவற்றை லாகவமாக, நறுக்கென எடுத்தெறிவார்:
''அந்தக் குஞ்சுகள் பொரிக்கவெச்ச கோளாறுக்காரனை
முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க பார்ப்போம்,
முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க!''
தயாரிக்கும் திராணியின்றி, பொரிக்கவைப்பதை மட்டுமே,
''என்னே பெரும் விந்தை!’ எனக் கொண்டாடுகிறது நவீன
விஞ்ஞானம். மனித வாழ்வைப் பொறுத்த வரை, விஞ்ஞான - அஞ்ஞான
வரம்புகள் தெளிவாக வரையறுக்கப்பட முடியாதவை. அஞ்ஞானத்தில்
விஞ்ஞானம் கலந்து, அதை நம்பிக்கை, மதம் என்று அழைக்கிறோம்.
விஞ்ஞானத்தில் அஞ்ஞானமும் கலந்து இருப்பதை, பலரும் ஏற்கவே
மறுக்கிறோம்.
ஒருவர் வாழ்வின் அனைத்து சுக, துக்கங்களையும் அனுபவித்து,
100 வயதில் முழுமை அடைகிறார். இன்னொருவர், ஐந்து வயதிலேயே
அகால மரணமடைகிறார். இதை எப்படி விஞ்ஞான ரீதியாக விளக்குவது?
கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டுவதுபோல, ''நடக்குமென்பார்,
நடக்காது; நடக்காதென்பார்,
நடந்துவிடும்!''. அப்படி 'நடப்பது’ விஞ்ஞானமா... அஞ்ஞானமா
அல்லது கலவையா, மந்திர தந்திரமா, வினோதமா, விந்தையா, சாகசமா,
அற்புதமா... என்னவென்பது?
'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி’ என்று தொடங்கும் இன்னொரு
பாடலில் கலைவாணர் சொல்கிறார்...
'அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டி,
அணுசக்தியாலே ஆயுள் விருத்தி பண்ணப் போறேன்டி!’
அரச விஞ்ஞானம் பற்றி அவர் பேசிக்கொண்டு இருக்க, மக்கள்
விஞ்ஞானம்பற்றிக் கேட்கிறார் மதுரம் அம்மையார்,
'வீட்டுக்கென்ன செய்யப்போறீங்க -
அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லிப்போடுங்க!’
இந்த அணுவின் கதையைத்தான் நான் சொல்ல விழைகிறேன், மக்கள்
விஞ்ஞானப் பார்வையில் இருந்து!
சரி, அது என்ன மக்கள் விஞ்ஞானம்?
மக்கள் விஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்தின் அணுகுமுறைகளை,
அனுபவங்களை, அனுகூலங்களை, சாதாரண மக்கள் மத்தியில்
பரவலாக்கும் ஓர் இயக்கம். இப்போதைய உலகில் ஆளும் வர்க்கமும்,
அதன் அடியாட்களும் மட்டுமே விஞ்ஞானத்தின் பயன்களை
அனுபவித்து, தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள
அறிவியலை உபயோகிக்கின்றனர்.
'கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள்
எவையென அறிவுமிலார்’ என்கிறார் பாரதி.
பெரும்பான்மையான மக்கள், அறியாமை, இயலாமை, மூடநம்பிக்கை
ஆகிய மூன்றுக்குள் முடங்கிக்கிடப்பதற்கான காரணம், விஞ்ஞானம்
அவர்களுக்கு மறுக்கப்படுவதுதான். அந்த மறுத்தலை உடைத்தெறிய
உலகின் பல்வேறு இடங்களிலும் பொதுஜன அறிவியல் கூட்டங்கள்
நடத்தப்படுகின்றன. இயக்கங்கள் தோன்றுகின்றன.
பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும், மருத்துவர் நம் மீது
மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அவற்றைப்பற்றிய
தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நமக்கு இருப்பதுபோல,
நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள், கதிரியக்கம், அதன்
விளைவுகள் போன்றவைபற்றி உண்மைகளையும் கேட்டுப் பெற நமக்கு
உரிமை இருக்கிறது. 'கேட்டுப் பெற’ என்கிற உரிமையைக்
காட்டிலும், 'தகவல்கள் தெரிவிக்கும்’ கடமை அவர்களிடத்தில்
அதிகமாகவே இருக்க வேண்டும். அது இல்லை என்பதுதான் இப்போது
பிரச்னை!
ஆயினும், அந்தத் தகவல்களை, கருத்துகளை, கண்டுபிடிப்புகளை
எல்லாம் மக்கள் விஞ்ஞான இயக்கத்தார், அறிவியல் நூல்கள்
மூலமாகவும், கைப்பிரதிகள் மூலமாகவும், குறும் படங்கள்
மூலமாகவும் வட்டார மொழிகளில் மக்களிடையே கொண்டுசென்று
விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விஞ்ஞான அறிவை
விருத்தி செய்யவைக்கும் அதே வேளையில், மக்கள் மத்தியில்
தங்களுக்கு உள்ள நேர்மறை உணர்வுகளைப் பெருக்கி, ஒரு சிறந்த
மாற்று எதிர்காலத்தை தங்களால் கட்டமைக்க
முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்க உழைக்கின்றனர்.
சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கவும், நீடித்த நிலைத்த
வளர்ச்சி எனும் மாற்று வளர்ச்சிச் சிந்தனைகளை
வளர்த்தெடுக்கவும், மக்கள் தொழில்நுட்பத்தை ஊக்குவித்து,
அதற்கான ஆய்வு மற்றும் உருவாக்கலை (Research &
Development) பெருகச் செய்யவும் முனைகிறது மக்கள்
விஞ்ஞானம். சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டுள்ள தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் முதல் பல்வேறு மக்கள் இயக்கங்களும், தொண்டு
நிறுவனங்களும், மக்களுக்கான அறிவியலை எடுத்துச் செல்வதில்
சீரிய பணி ஆற்றி வருகின்றன.
தவிர, பல்கலைக்கழக அளவில் நம் நாடு முழுக்க உள்ள அறிவியல்
ஆசிரியர்கள், அறிவியலாளர்கள் ஆகியோர் வெளியிடும்
கட்டுரைகளின் அளவு... சீனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ
ஒப்பிடும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான்
இருக்கிறது. ஆனால், ஆராய்ச்சிகளுக்குச் செலவிடப்படும் தொகையோ
மிக அதிகம். உங்களின் ஆய்வுகள் தவறாக
இருந்தாலும், அதைக் கட்டுரை வாயிலாகப் பதிவு
செய்துவிடுங்கள். காரணம், நாளை அதே துறையில் உங்கள் வழியைப்
பின்பற்றி வரும் ஒருவர், நீங்கள் விழுந்த அதே இடத்தில்...
விழுந்துவிடாமல் இருக்க, அது உதவும். அவர் மேற்கொள்ளும்
ஆய்வுக்கு உங்களின் 'தவறு’ எந்த விதத்திலேனும் பயன்
அளிக்கவும் செய்யலாம். ஆனால், அதைச் செய்யவும் யாரும்
முன்வருவது இல்லை என்பதுதான் பிரச்னை.
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்க
வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது.
அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அரசு
ஊக்குவிப்பும் போதிய அளவு இருக்க வேண்டும். அப்படி
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை அரசு நூலகங்களில் வாங்கச் செய்ய
வேண்டும் என்றால், அதனை வேண்டிய வழியில், வேண்டிய அளவில்
'கவனித்து’ வாங்கவைக்க, அதற்கெனத் தனி லாபி செயல்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர் அல்லது பதிப்பாளர், அரசு நூலகங்களிடம் காசு
கொடுத்துத்தான் நூல்களை வாங்கச் செய்யும் நிலை தொடரும் ஒரு
சமூகத்தில், அறிவியல் எப்படி மக்களுக்கானதாக இருக்கும்?
நமது நாட்டுப் பொறியியல் கல்லூரிகளும் ஆங்கில மொழியில்தான்
கற்பிக்கின்றன. வெகுஜனப் பத்திரிகைகளில் அறிவியல் சார்ந்த
கட்டுரைகள் எழுதினால், சில அறிவியல் வார்த்தைகளை, தகவல்களைத்
தமிழ்ப்படுத்த முடிவது இல்லை. அந்த வார்த்தையை அப்படியே
உபயோகிக்க வேண்டி இருக்கிறது. இன்றைக்கு இருக்கும்
பெரும்பாலான அறிவியல் பெயர்கள் கிரேக்கம், லத்தீன் போன்ற
மொழிகளில் இருந்துதான் எடுத்தாளப்பட்டு இருக்கின்றன.
அப்படிப் பயன்படுத்தியதாலேயே ஆங்கில மொழி, வளர்ச்சியும்
பெற்றிருக்கிறது. அதேபோல், தமிழிலும் அறிவியல் பெயர்களை, அது
இருக்கும் நிலையிலேயே நாம் எடுத்தாள்வதில் தவறு இல்லை.
இனி வரப்போகும் அத்தியாயங்களில் இதுபோன்ற சில சிக்கல்கள்
இருப்பதால், உங்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டிய கடமை
இருப்பதாக உணர்கிறேன்!
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த
குறள்’ என மனித வாழ்வின் அடிப்படையான அணுவையும், தமிழர்
வாழ்வின் அடிப்படையான குறளையும் இணைத்துப் பேசுகிறோம்.
குறள்போல அணு மிகச் சிறியது. ஆனால், மிகவும் பரந்தது.
அணுபோன்று குறள் எளிமையானது. ஆனால், மிக மிக ஆழமானது.
திருக்குறளை அணுக்குறள் என்பது எவ்வளவு பொருத்தமானதோ, அதுபோல
அணுவைக் குற்றணு என்பதும் சரிதான்.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, அணு என்றால் என்ன? அதன்
கதை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த அணுவின்
கதை....
-
அதிரும்...
அணுசக்தியின்
வலிமை நம் அனைவரின் சிந்திக்கும் தன்மையை
மாற்றியிருக்கிறது. ஏன் மாறியிருக்கிறது
என்பதற்கான பதில் மானுட இதயத்தில் இருக்கிறது. அது
தெரிந்திருந்தால் நான் கடிகாரம் செய்பவனாக
இருந்திருப்பேன்.
-
ஐன்ஸ்டீன்
அணுவின்றி
அவனும் அசையான்!
அணு... சராசரித் தமிழரின், தமிழ்க் குடும்பங்களின்
அன்றாட சொல்வழக்கில் இடம் பெற்றுவிட்ட
வார்த்தை. ''விலைவாசி அணு அணுவாக ஏறுகிறது...’
என்றும், ''இவன் சொல்வதில் அணு அளவுகூட உண்மை
இல்லை...'' என்றும் சொல்கிறோம். 'அவனின்றி ஓர்
அணுவும் அசையாது’ என்பது தமிழ்
சமூகத்தின் நம்பிக்கை! அது சரி, அணுவின்
கதை என்ன?
'அணுவின்றி அவனும் அசையான்!’ என்பதுதான் உண்மை. அணு
என்றதும், அணுகுண்டோ அல்லது கல்பாக்கம், கூடங்குளம் அணு
சக்தி நிலையங்களோ, அல்லது பாகிஸ்தான், சீனா பற்றிய பயமோ
உங்கள் மனத்திரையில் ஓடும். ஆனால், உண்மையில் அணு என்பது
என்ன?
உலகின் அடிப்படைத் தத்துவத்தை உள்ளடக்கி நிற்கிறது இந்த
அணு. 'அனைத்துப் பொருட்களும் அளவற்ற அணுக்களாலேயே
உருவாக்கப்பட்டு இருக்கின்றன’ என்று கிரேக்கத்
தத்துவஞானிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து
இருந்தாலும், 19-வது நூற்றாண்டு விஞ்ஞானிகளால்தான் அது
நிரூபிக்கப்பட்டது. மனித உடல்கள் திசுக்களால்
உருவாக்கப்பட்டு இருப்பதுபோல, ஓங்கி நிற்கும் கோபுரங்கள்
சின்னச் சின்ன கற்களால் கட்டப்பட்டு இருப்பதுபோல, அலைகள்
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடல் அளப்பரிய நீர்த் துளிகளைக்கொண்டு
இருப்பதைப்«பால, ஒவ்வொரு பொருளும் எண்ணற்ற
அணுக்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எறும்புப்
புற்றினை ஒரு பொருள் என எடுத்துக்கொண்டால், எறும்புகள்
அப்பொருளில் ஒரு பகுதி அணுக்கள். இந்த எறும்புகளைப்போலவே
அணுக்களும் ஓய்வு இன்றி இயங்குகின்றன. ஆனால்,
'அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்திருக்கும் அணு’வை
சக்திமிக்க உபகரணங்களின் உதவியோடு மட்டுமே பார்க்க
முடியும்.
இந்த அணுவுக்குள் என்ன இருக்கிறது?
லார்ட் எர்னெஸ்ட் ருதர்ஃபோர்ட் (Lord Ernest Rutherford)
சொன்ன ஓர் உதாரணம், இதனை ஆழமாக விளக்குகிறது.
சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியனை மையமாகக்கொண்டு
பல்வேறு கிரகங்களும் வான்வெளியில் வளைய வருவது
உங்களுக்குத் தெரியும். இந்தச் சூரியனை... நியூக்ளியஸ்,
அதாவது அணு மையம் என்றுகொள்ளுங்கள். சுற்றிவரும் கிரகங்கள்
அனைத்தும் எலெக்ட்ரான்கள். குழப்புகிறதா? இன்னும் எளிதான
ஓர் உதாரணம் எனக்குத் தோன்றுகிறது. நம்மூர் மாதுளம்பழம்போன்றது இந்த
அணு மையம். அதனுள்ளே உள்ள வித்துகள் புரோட்டான்கள்
என்றால், சதைப் பகுதி நியூட்ரான்கள். பழத்தின் வெளியே
மொய்க்கும் ஈக்கள் கூட்டம் எலெக்ட்ரான்கள். இந்த
புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கும் மிக
நுண்ணிய துகள்களை குவார்க்ஸ் (Quarks) என அழைக்கிறோம்.
இந்தக் குவார்க்ஸ்... ப்ரியோன்ஸ் (Preons)அல்லது ரிஷோன்ஸ்
(Rishons) எனும் பன்மடங்கு நுண்ணிய துகள்களால் உருவானவையாக
இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மைக்ரோஸ்கோப்பின் உதவியோடுகூட இந்த குவார்க்ஸையோ,
புரோட்டான், நியூட்ரானையோ நீங்கள் பார்க்க முடியாது.
ஆனால், அண்மையில் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலெக்ட்ரான்
மைக்ரோஸ்கோப் (Fiet Titan 3) மூலம் அனைத்துப் பொருட்களின்
அணுக்களையும் பார்க்க முடியும் என நிரூபித்து
இருக்கின்றனர்.
யுரேனியம், தோரியம் எனும் உலோகங்கள், அபூர்வமானவையோ,
ஆபத்தானவையோ அல்ல. அவை இயற்கையோடு ஒன்றி இருக்கும்போது
பூமியின் பரப்பில் எவ்வளவு ஈயம் (Lead) உறைந்து
இருக்கிறதோ, அதே அளவு யுரேனியமும், தோரியமும் உள்ளன.
யுரேனியத்தை 'ஆற்றலின் மூலம்’ எனும் நோக்கில் பார்த்தால்,
நிலக்கரியைவிட இரண்டரை மில்லியன் மடங்கு மதிப்பு
வாய்ந்தது. ஒரு பவுண்ட், அதாவது 373 கிராம் எடை உள்ள
யுரேனியம், 2.5 மில்லியன் பவுண்ட் எடை உள்ள நிலக்கரிக்கு
சமமாம்!
அபாரமான சக்தியின் மையமாகத் திகழும் சில பொருட்கள்
அபாயமான சாவின் தன்மையையும்கொண்டு இருக்கின்றன என்பதுதான்
விந்தையான வேதனை!
1895-ம் ஆண்டு ரோஞ்சன் (Roentgen), எக்ஸ் ரே எனும்
எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். இந்த எக்ஸ் கதிர் ஓரளவு
ஊடுருவும் சக்திகொண்ட ஒருவித மின் காந்தக் கதிர். மருத்துவ
உபயோகங்களுக்காக டங்க்ஸ்டன் உலோக இழை, அதிக சக்திகொண்ட
எலெக்ட்ரான்களால் தாக்கப்பட்டு இந்த எக்ஸ் கதிர்கள்
பெறப்படுகின்றன. மருத்துவ உலகில் இந்த எக்ஸ் கதிர்
பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகூட
லேசான எக்ஸ் கதிர்களை வீசுகின்றது. இந்தக் கதிர்வீச்சு
ஆபத்தினைக் குறைக்க, விசேஷக் கண்ணாடியினால் இவற்றின்
உட்புறம் பாதுகாக்கப்படுகிறது.
எக்ஸ் கதிரின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரெஞ்சு
அறிவியல் அறிஞர் ஹென்றி பெக்கொரல் என்பவர், யுரேனியம்
உள்ளடக்கிய கனிமத் துகள்களை ஆராய்ந்தார். அவற்றில் இருந்து
ஒருவிதக் கதிர்கள் எழுந்து கறுப்புத் தாளையோ அல்லது ஒளி
புக முடியாத பரப்பினையோ எளிதாக ஊடுருவிச் செல்வதைக்
கண்டார். கனல் கக்கும் வெயிலை கதிரவன் வீசுவதுபோல், மனம்
கவர் மணத்தை மலர்கள் வீசுவதுபோல, இந்த யுரேனியம்...
கதிர்களை வீசுவதைக் கண்டார் பெக்கொரால். கதிர் வீச்சு
எனும் ஒரு புதிய அத்தியாயம் துவங்கிற்று மனித வாழ்வில்!
கதிர்வீச்சு என்பது ஒரு பொருளின் அனைத்து அணுக்களின் அணு
மையங்களிலும் நிகழும் ஒருவித வெளிப்பாடு. ஒவ்வோர் அணு
மையமும், தான் வெளிப்படுத்தும் துகள் மற்றும் புதிய அணு
மையம் என இரண்டாகப் பிளவுபடும். இந்தப் பிளவுகள் மிகத்
துரிதமாக நடைபெறுவதால், எந்த அணு அடுத்ததாகப் பிளவுபடும்
என அறிய முடியாது.
கதிர்வீச்சு எனும் வார்த்தை மிகவும் விரிவான
அர்த்தம்கொண்டது. ஒளி அலைகளையும், கதிர் அலைகளையும்
குறிக்கிறது என்றாலும், பெரும்பாலான சமயங்களில் மின்
அணுக்களை உருவாக்கும் கதிர் வீச்சு என்பதையே
உணர்த்துகிறது. அதாவது, தான் தாக்குகின்ற எந்தவொரு
அணுவையும், மின்சக்தி
வாய்ந்த மின் அணுவாக மாற்றும் வல்லமைமிக்க கதிர்வீச்சில்
மட்டுமே நாம் பெரிதும் கவனம் செலுத்துகிறோம். இது மாதிரிக்
கதிர் வீச்சு நமது உடலில் மின் அணுக்களைத்
தோற்றுவித்தால்... சாதாரண உடற்கூறு, அதன் செயல்பாடுகள்
பாதிக்கப்படும். நமது உடல் நலனுக்கும், உயிர் நலனுக்கும்,
உயிர் வாழ்வுக்கும் பேராபத்தாய் அமையும்.
கதிர்வீச்சு, மனித வாழ்வின் யதார்த்த உண்மைகளில் ஒன்று
என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மைச் சுற்றி இயற்கைக்
கதிர்வீச்சுகள் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
சூரியனில் இருந்தும், விண்வெளியில் இருந்தும் எழும்
கதிர்கள் நம் மீது விழுகின்றன. இயற்கையாகவே உருவாகும்
கதிர் வீச்சுப் பொருட்களும் நமது பூமியில் நிறைந்து
இருக்கின்றன. நாம் வாழும் வீடுகளிலும், வேலை செய்யும்
கட்டடங்களிலும், உண்ணும் உணவிலும், குடிக்கும் நீரிலும்கூட
அவை இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் கதிர்வீச்சு
வாயுக்களும், தூசிகளும், துகள்களும் உள்ளன. நமது உடம்புகூட
இயற்கையாக உருவாகும் கதிர்வீச்சுப் பொருட்களைக்கொண்டு
இருக்கிறது. இந்தத் தவிர்க்கப்பட முடியாத கதிர் வீச்சின்
அளவு, இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இவை தவிர, நாமே
உருவாக்கும் கதிர்வீச்சுக்கும் நாம் ஆளாகிறோம். உதாரணமாக,
மருத்துவ சிகிச்சைக்காக உபயோகிக்கப்படும் எக்ஸ் கதிர்
போன்ற கதிர் வீச்சுகள், அணு ஆயுத வெடிப்புப்
பரிசோதனையின்போது வானத்தில் எழும் கதிர்வீச்சு தூசி,
அணுசக்தி நிலையங்களில் இருந்து கசியும்
கதிர்வீச்சுப் பொருட்கள் என பலவற்றைக் குறிப்பிடலாம்.
இந்தக் கதிர்வீச்சுக்குப் பின்னால், ஒரு கடைக்கண்
வீச்சுக் கதை உண்டு! உயர் கல்வி பெறுவதற்காக போலந்து
நாட்டைச் சார்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் பிரான்சுக்கு
வந்தார். அவர் பெயர் மான்யா. முதுகலைப் பட்டம் பெற்றதும்
ஓர் அறிவியல் நிறுவனத்துக்காகப் பணிபுரியும் வாய்ப்புக்
கிடைத்தது. காந்தவியல் குறித்து ஆய்வு செய்ய ஓர் இடம்
தேடிக்கொண்டு இருந்தபோது, ஒரு போலந்து நாட்டவர் தனது
பிரெஞ்சு நண்பர்பற்றி அவரிடம் சொன்னார். 35 வயதான அந்த
பிரெஞ்சு நண்பரை, தான் அறிமுகம் செய்துவைப்பதாகவும், அவர்
உறுதியாக உதவுவார் என்றும் சொன்னார். அவரது ஏற்பாட்டின்
பேரில் மான்யா சந்திக்க, அவரின் எளிய உடை, இனிய இயல்பு,
மென்மையான கண்கள், மிருதுவான கூந்தல்... பௌதிக அறிஞர்
பூரணமாய்த் தன்னை இழந்தார். ஒப்பற்ற மன உறுதியும்,
ஒருமைப்பாடும்கொண்ட மான்யாவின் இதயமும் அவரது மேதகு
இயல்புகளுக்கு முன் மண்டியிட்டது. கண்கள் கலந்து, காதல்
இதயங்கள் ஒன்றி, கருத்தொருமித்து, கரங்கள் இணைந்தபோது
பியரே கியூரி, மேரி கியூரி எனும் ஓர் உன்னதத் தம்பதியரை
உலகம் பெற்றது!
பெக்கொரல் கண்ட அறிவியல் குழந்தைக்கு ரேடியோ ஆக்டிவிட்டி
(Radioactivity) அதாவது கதிர் வீச்சு எனப் பெயர்
சூட்டினார் கியூரி அம்மையார். இதர உலோகங்களிலும் இந்தக்
கதிர்வீச்சு நிகழலாம் என எண்ணி ஆய்வுகள் நடத்தினர், கியூரி
தம்பதியினர். 1898-ம் ஆண்டு பொலோனியம் (Polonium),ரேடியம்
(Radium) எனும் உலோகங்களைக் கண்டுபிடித்தனர். ஒரு
மில்லிகிராம் எடை உள்ள ரேடியம் குளோரைடின்
கதிர்வீச்சு, யுரேனியத்தைவிட மூன்று மில்லியன் மடங்கு
அதிகம் எனக் கண்டார் திருமதி. கியூரி. நோபல் பரிசும்
கிடைத்தது என்பது குறிப்பிட வேண்டிய தகவல்!
ஒய்.டேவிட்
தமிழகத்தின்
தலைசிறந்த சமூகப் பணியாளர்களில் ஒருவரான ஒய்.டேவிட்,
பலவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டங்கள்
நடத்துபவர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கான அடிக்கல்
நாட்டுவதற்கு 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்
காந்தி வர இருந்தார். இவரது போராட்டம்தான் அதைத் தடுத்து
நிறுத்தியது. அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நானும்,
நண்பர்களும் 'சமாதானகரமான இந்தியப் பெருங்கடலுக்கான குழு’
என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுக்கொண்டு இருந்தோம்.
1999-ம் ஆண்டு முதல், அணு மின் நிலைய எதிர்ப்பு இயக்கம்
என்ற பெயரில் செயலாற்றியபோது 2001 துவக்கத்தில் டேவிட்
அவர்களை மதுரையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.
மதுரையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை டேவிட்
தலைமையில் தொடங்கி இன்று வரை கூடங்குளம் அணு மின்
நிலையத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்!
ஜெய்தாபூர்
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மாத்பன்,
ஜெய்தாபூர் கிராமங்களில் பிரெஞ்சு நாட்டு நிறுவனமான அரேவா
உதவியுடன் 1,650 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 6 அணு
உலைகள்கொண்ட ஓர் அணு மின் பூங்காவை நிறுவ மத்திய அரசு
திட்டம் போட்டு இருக்கிறது. இதில், 1,12,000 கோடி செலவில்
நிறுவப்படும் இ.பி.ஆர். எனும் ஐரோப்பிய அழுத்தம்
ஊட்டப்பட்ட ரியாக்டர் இந்த உலைகளில் நிறுவப்பட இருக்கிறது.
இந்தத் தொழில்நுட்பம் இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று.
பின்லாந்து நாட்டில் இதுபோன்ற ஓர் அணு மின் நிலையத்தை
அரேவா நிறுவனம் கட்டத் துவங்கி, திட்டமிட்ட செலவைத் தாண்டி
கால தாமதமாகி நீண்டுகொண்டு இருப்பது உலகுக்குத் தெரியும்.
நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளதால், ஜெய்தாபூர் அணு
மின் நிலையம் சுனாமியால் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இங்கே வரும் கழிவை என்ன செய்வது என்பதுபற்றியும் மத்திய
அரசு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. வளம் மிக்க ரத்னகிரி
மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும் இந்தத் திட்டத்தைக்
கடுமையாக எதிர்த்து வருகின்றனர்!
வரும்முன்னர் காப்பவன்தான் அறிவாளி
புயல் வந்த பின் காப்பவன் முழு மூடன்
- யாரோ
கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்கள் சத்ராஸ் எனும்
நகரியத்தில் வாழ்வதுபோல, கூடங்குளம்
ஊழியர்கள் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
செட்டிக்குளம் கிராமத்தில் வசிப்பதுபோல, செர்னோபில்
அணு மின் நிலைய ஊழியர்கள் 3 கி.மீ. தூரத்தில்
பிரிபியட் எனும் நகரியத்தில் வாழ்ந்தனர். (எனக்கு ஒரு
சந்தேகம்... அணு மின் நிலையங்களில் எந்தவித ஆபத்தும்
இல்லை என்றால், ஊழியர்களை ஏன் உலைகளுக்கு அருகே
வசிக்கவிடுவது இல்லை. ரயில்வே ஊழியர்கள், ரயில்
நிலையங்களுக்கு அருகேயும், காவல் துறை அதிகாரிகள்
காவல் நிலையங்களுக்கு அருகேயும்தானே வாழ்கிறார்கள்?)
சுமார் 50,000 மக்கள் வாழ்ந்த பிரிபியட் நகரியத்தில்
ஹன்னா சோஸ்லோவா என்ற பெண் தனது கணவருடனும்,
குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தார். கணவர், செர்னோபில் அணு
மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்தார். சோவியத்
தேசியவாதியான ஹன்னா, கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளில்
சிரத்தையோடு பணியாற்றி வந்தார்.
1986 ஏப்ரல் 25-ம் நாள் ஒரு கட்சிக் கூட்டத்துக்குப்
போய்விட்டுக் களைப்புடன் வீடு திரும்பிய ஹன்னா,
சீக்கிரமாகவே தூங்கச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில்
ஒரு பெரிய வெடி சப்தம் கேட்கவே துள்ளி எழுந்து வெளியே
போய்ப் பார்த்தார். சோவியத் ரஷ்யாவுக்கும்,
அமெரிக்காவுக்கும் இடையே போர் எதுவும் துவங்கிவிட்டதா என்ற
ஐயத்தோடு வெளியேவந்தார் ஹன்னா. ஆனால் அது ஓர் அழகான நிலவொளி
ததும்பும் இரவாகவே இருந்தது. ராணுவ முகாமில் ஏதாவது
வெடித்து இருக்கும் என்று எண்ணியவாறே மீண்டும் தூங்கச்
சென்றார்.
அடுத்த நாள் காலை, கணவர் வழக்கமாக வேலைக்குச் சென்றார்.
நான்கரை வயது மகன் விக்டருடன் ஹன்னா, தனது காய்கறித்
தோட்டத்துக்குச் சென்றார். ஆனால் வழியில் சந்தித்த
அறிமுகம் அற்ற ஒரு நபர் ஹன்னாவையும், பையனையும் திரும்பிச்
சென்று வீட்டுக்குள் பதுங்கி இருக்குமாறு அறிவுரைத்தார்.
அந்த எச்சரிக்கையைப் புறந்தள்ளி போய்க்கொண்டு இருந்த
ஹன்னா, முகமூடி அணிந்த ஆண்கள் தெருக்களைக் கழுவிக் கொண்டு
இருப்பதைப் பார்த்தார். அவரது நாக்கில் ஒரு வித உலோகச்
சுவையினையும் உணர்ந்தார். இனம் புரியாத பயம் இதயத்தைக்
கவ்விக்கொள்ள, வேகமாகத் திரும்பி தனது ஒன்பதாவது மாடி
வீட்டுக்குள் போனால்... செர்னோபில் அணு மின் நிலையம்
எரிந்துகொண்டு இருந்தது தெரிந்தது. அவசரமாகப் பதைபதைத்து
கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். குழந்தைகளை
உடனடியாக சற்று தூரத்தில் வசித்த தனது சகோதரன் வீட்டுக்கு
அழைத்துச் சென்றார்.
ஹன்னாவும், குழந்தைகளும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடும் கதிர்வீச்சுக்கு
உள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹன்னா மயக்க
நிலையில் கிடக்க, அவர் கணவர் வயிற்றுப்போக்கால்
அவதியுற்று அங்கே வந்து சேர்ந்தார். குழந்தை விக்டரின்
கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனே அறுவைச் சிகிச்சை
செய்யப்பட வேண்டும் என்றும், முடிவு தங்கள் கைகளில் இல்லை
என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். நீண்ட அறுவை
சிகிச்சைக்குப் பின் அந்தப் பச்சிளங் குழந்தையின்
தைராய்டு சுரப்பி முற்றிலுமாக வெட்டி எடுக்கப்பட்டது.
குரல் வளையில் குறைபாடு ஏற்பட்டதால், விக்டர் தனது குரலை
இழந்தான்.
'எங்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் பரவாயில்லை; எங்கள்
குழந்தையைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினார்கள் அந்தப்
பெற்றோர். விக்டருக்கு உடனடியாக அயோடின் மாத்திரைகள்
கொடுக்க வேண்டும் என்றனர் மருத்துவர்கள். அந்த மருந்துக்கு
எங்கே போவது? அருகே உள்ள ஒரு நகரில் சர்வதேச மருத்துவ
மாநாடு நடப்பதாக அறிந்த ஹன்னா, அங்கே சென்று அந்த
வெளிநாட்டு மருத்துவர்களிடம் மன்றாடி, தன் மகனுக்கு
அயோடின் மாத்திரைகள் அனுப்பித் தரக் கெஞ்சலாம் எனத்
திட்டமிட்டார். அவர்களும் குழந்தைகள் பெற்றவர்கள்தானே?
ஆனால் 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்று
சொல்வதுபோல, அந்த மாநாடு முடிந்துவிட்டிருந்தது.
அழுது புரண்டு அவரது உயிர் அணைந்துவிடும் என்ற நிலைக்கு
வந்தபோது, ஒரு பெண் ஹன்னாவுக்கு அறிவுரைத்தார். 'உனது
மகன் பிழைக்க வேண்டுமானால், நீ வாழ்ந்தே ஆக வேண்டும்’
என்று சொன்னார். விக்டருக்கு இரண்டாவது அறுவைச் சிகிச்சை
செய்ய ஆயத்தம் செய்தபோது, ஒரு பிரெஞ்சு நிறுவனத்தின் உதவி
கிடைத்தது. விக்டரை மட்டும் பிரான்சுக்கு அழைத்துச்
சென்று, மருத்துவம் செய்து, மீட்டுத் தந்தது அந்த
நிறுவனம். மறுபிறவி எடுத்து வந்த தம் ஆசை மகனை அள்ளி
எடுத்து அணைத்துக்கொள்ள விமான நிலையத்தில் காத்துக்
கிடந்தனர் ஹன்னாவும் கணவரும். ஒருநாள் நள்ளிரவில் வந்து
சேர்ந்தான் அந்தப் பச்சைக் குழந்தை. மற்ற குழந்தைகளுக்கும்
மருந்து எடுத்து வந்தவனைக் கட்டிப்பிடித்து அழுதார்கள்.
உரிய தகவல்களும், உற்ற மருந்துகளும் தருவதற்குத் தவறிய
சோவியத் அரசுக்கு எதிராகப் படை திரட்டினார் ஹன்னா.
'செர்னோபில் அணுவால் சிதைக்கப்பட்டோர் இயக்கம்’
துவங்கிற்று!
'செர்னோபில் - 20 ஆண்டுகளும், 20 ஆளுமைகளும்’ எனும்
ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த
சரிதத்தைவிட சங்கடமான பல துயரங்களை, நான் படித்து
இருக்கிறேன். இரும்புத் திரைக்குப் பின்னே இறுமாப்புடன்
நின்ற சோவியத் அரசு முதலில் செர்னோபில் விபத்தை
'சோற்றுக்குள் முழுப் பூசணி’ கதைபோல மறைக்க முயன்றது.
முடியாமல் போகவே மழுப்பி நின்றது, மீசையில் மண் ஒட்டவில்லை
என!
தமிழகத்தின் தென் பகுதியான கூடங்குளத்தில்
நிறுவப்படுகின்ற அணு உலையும், செர்னோபில் அணு உலையும் ஒரே
ரகத்தைச் சார்ந்தவை. ரஷ்யத் தொழில்நுட்பம் பற்றியும், அணு
உலைகளின் தர்க்கங்கள், அமைப்புகள் பற்றியெல்லாம் பல
வல்லுநர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.
அந்த விபத்தில் 28 பேர் உயிர் இழந்தனர். 203 பேர்
உடனடியாகப் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு கணக்கு சொல்கிறது.
இன்னோர் அரசு மதிப்பீடு, இன்னும் கொஞ்சம் விரிவாகப்
பார்க்கிறது. விபத்து நடந்தபோது பணியாற்றிய
அவசரப் பிரிவு ஊழியர்கள் 2,00,000 பேர், விபத்துப்
பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 1,16,000 மக்கள்
மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த 2,70,000 பேர் என
சுமார் ஆறு லட்சம் மக்களில், இதுவரை 4,000 பேர்
புற்றுநோய்களால் இறந்துவிட்டனர் என்கிறது அந்தப் புள்ளி
விவரம்!
ரஷ்யா, பெலரூஸ் நாடுகளைச் சார்ந்த மூன்று புகழ் பெற்ற
அறிஞர்கள், அலக்ஸி யாப்லகோவ், வாசிலி நெஸ்தநெங்கோ, அலக்ஸி
நெஸ்தரெங்கோ ஆகியோர் சென்ற வருடம் ஒரு புத்தகம்
வெளியிட்டனர். 'செர்னோபில் - மனித, சுற்றுச்சூழல்
பேரிடரின் விளைவுகள்'' (சிலீமீக்ஷீஸீஷீதீஹ்றீ:
சிஷீஸீsமீஹீuமீஸீநீமீs ஷீயீ tலீமீ சிணீtணீstக்ஷீஷீஜீலீமீ
யீஷீக்ஷீ றிமீஷீஜீறீமீ ணீஸீபீ tலீமீ
ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீt) எனும் புத்தகத்தில் சுமார் 10
லட்சம் மக்கள் செர்னோபில் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு
இறந்ததாகத் தெரிவிக்கின்றனர். சுமார் 780 மில்லியன் மக்கள்
கதிர்வீச்சினால் பாதிப்பு அடைந்து இருக்கலாம் என்றும்,
எண்ணிலடங்காத மிருகங்களும், பறவைகளும், மீன்களும், செடி
கொடிகளும், மரங்களும், நோய்க் கிருமிகளும்கூட கதிர்
வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும்,
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிலமும், நீரும் கணிசமான
கதிர்வீச்சுடன் இருப்பதால், இன்னும் நீண்ட
நெடுங்காலத்துக்கு நாம் பாதிப்புக்கு உள்ளாவோம் என்றும்
மேற்கண்ட புத்தகம் வாதிடுகிறது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 'செர்னோபிலின் நல்வாழ்வுத்
தாக்கங்கள்’ எனும் 'அணு ஆயுத உபாதையைத் தடுக்கும் சர்வதேச
மருத்துவர்கள்’ அமைப்பின் அறிக்கை வாதிடுவதுபோல, நீண்ட கால
அடிப்படையில் பரந்துபட்ட ஆய்வு ஒன்றினை நடத்துவது இயலாத
விஷயம். தைராய்டு, மார்பக, மூளைப் புற்று நோய்களும்,
புற்று நோய் சாராத மூளைக் கோளாறுகள், மனப் பிரச்னைகள்,
இளமையில் முதுமை போன்ற இடர்களும், மரபணுத் தொடர்பான
குழந்தையின்மை, இறந்து பிறத்தல், அங்கஹீனங்கள் உள்ளிட்ட
பிரச்னைகளும் விரவிக்கிடக்கின்றன. இவை இன்னும் மோசமாகலாம்
என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.
ஜப்பானில் நடந்துகொண்டு இருக்கும் புகுஷிமா விபத்து,
செர்னோபில் விபத்தைவிட மோசமானது என்று வர்ணிக்கப்படுகிறது.
நேற்று... செர்னோபில், இன்று... புகுஷிமா, நாளை..?
ஜார்ஜ்
கோமஸ்
வயது ஏற ஏற
பெரும்பாலோர் பழமைவாதிகளாக மாறுவார்கள். ஆனால்,
தூத்துக்குடி மாவட்டம் குன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த
86 வயதுப் பெரியவர் ஜார்ஜ் கோமஸ், பெரும் புரட்சிப்
பழமாகிவிட்டார். 1942-ம் வருடம் தனது 15-வது வயதிலேயே
இந்திய விடுதலைக்காக மாணவர் இயக்கத்தில் சேர்ந்தவர்.
1950 முதல் துறைமுகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து,
துறைமுகங்கள் தனியார்மயமாவதை எதிர்த்தவர். இலங்கைக்குச்
சென்று, தெற்காசிய அளவில் சோஷலிசக் கட்சியின்
கொள்கைகளைப் பரவச் செய்து, இன்றளவும் ஒரு மாற்று
இடதுசாரி அமைப்பு தோன்ற ஓடியாடி உழைப்பவர். அமைப்பு
சாராத் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடும் ஜார்ஜ் கோமஸ்,
அணு சக்தியியலும், அணு ஆயுதங்களும் ஒரே நாணயத்தின் இரு
பக்கங்கள் எனக்கொண்டு, இந்த இரண்டுக்கும் எதிராகப்
போராடி வருகிறார். என்னைப்போன்ற எத்தனையோ பேர் அவரை
'அப்பா’ என்றே அழைக்கிறோம்!
அணு மார்க்கம்... அதிகாரத் திமிருக்கு
உற்றதோர் உதாரணம்!
- அமெரிக்கத்
துணை அதிபர் ஜோசப் பைடன்
தாராபூர்
முதல் ஜெய்தாபூர் வரை!
அணு மின் நிலையங்கள், வெறுமனே
மின்சாரம் தயாரிக்கும் உலைகள் மட்டும் அல்ல, அணு
ஆயுதத் தயாரிப்போடும் தொடர்பு உடையவை. கண்ணும்
கருத்துமாகக் காப்பாற்றப்பட
வேண்டிய இந்த நிலையங்கள், நாட்டின் பாதுகாப்போடும்,
ராணுவக் கட்டமைப்புகளோடும் நேரடியாகப் பின்னிப்
பிணைந்தவை. உயர் நிலை ரகசியங்களை உள்ளடக்கி நிற்பதால்,
அணு மின் நிலையங்கள்பற்றிய தகவல்களை, மக்களுக்கோ,
மக்கள் பிரதிநிதிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ
தராமல், தட்டிக்கழிக்கிறது அரசு. ஏராளமான பணம், உயர்
மட்ட அரசியல், இறுக்கமான ராணுவப் பாதுகாப்பு, மேல்
தட்டு அறிவியல் என விரவிக்கிடப்பதால், அணு சக்தித்
துறையில், அடக்கி ஆளும் சித்தாந்தம், சந்தேகப் பார்வை,
சர்வாதிகார மனப்பாங்கு கரை புரண்டு ஓடும். வெளிப்படைத்
தன்மையோ, கணக்குக் காட்டுவதோ, பொறுப்பேற்றுக்கொள்வதோ,
ஜனநாயக முறையில் முடிவுகள் எடுப்பதோ இங்கே கிடையவே
கிடையாது. உண்மையை
மறைப்பதும், உண்மைக்குப் புறம்பானவற்றை
உரக்கச் சொல்வதும், முழுமையான தகவல்கள் தராமல்
மழுப்புவதும், இந்தத்
துறையின் திமிர்!
இந்த மாதிரியான மக்கள் விரோத, எதேச்சதிகாரமானப்
போக்கு... ஒரு நாட்டின் பாதுகாப்பு, அறிவியல்,
ஆற்றல், தொழில், கல்வி உள்ளிட்ட கொள்கைகளைத்
தீர்மானிக்கும்போது, சிந்தித்துப் பார்க்க முடியாத
ஒரு பயங்கரமான சித்தாந்தம் முகிழ்க்கிறது.
ஆங்கிலத்தில் நியூக்யலரிசம் (nuclearism) என்று
குறிப்பிடுவதுபோல, தமிழில் இதை அணுத்துவம் என்று
அழைக்கலாம். முதலாளித்துவம், சமத்துவம் போன்ற
கொள்கைகள்போல, அணு சக்தியை, அணு ஆயுதங்களை
முன்னிலைப்படுத்தும் அரசியல் கொள்கைதான் அணுத்துவம்.
இது எப்படி வேலை செய்கிறது என்பதற்கு, எனது சென்ற
வார 'தாராபூர் முதல் ஜெய்தாபூர் வரை’ யாத்திரையே ஓர்
உதாரணம்!
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்,
மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி.கோல்சே
பாட்டில், கடற்படை முன்னாள் தலைவர்கள் அட்மிரல்
ராம்தாஸ், அட்மிரல் விஷ்ணு பகவத் என சுமார் 200
பெரியவர்கள், சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள்,
கல்வியாளர்கள், பொது மக்கள் ஒன்று கூடி, ஏப்ரல்
மாதம் 23, 24, 25 தேதிகளில் ஒரு யாத்திரை
நடத்தினோம். இந்தியாவின் முதல் அணு மின் நிலையமான
தாராபூரில் இருந்து துவங்கி, புதிதாக வேலைகள்
துவங்கப்பட இருக்கும் ஜெய்தாபூருக்கு
யாத்திரையாகச் சென்றோம். இந்தத் திட்டத்தைக்
கைவிடுமாறு கோருவதுதான் எங்கள் நோக்கம். பழம்பெரும்
காந்தியவாதியான பன்வாரிலால் சர்மா தலைமையில்
தொடங்கியது யாத்திரை.
மத்திய அரசும், அணு சக்தித் துறையும், அணு சக்தித்
துறை அமைச்சராக மன்மோகன் சிங்கின் கீழ் பணியாற்றி,
இப்போது மராட்டிய மாநில முதல்வராகப் பொறுப்பேற்று
இருக்கும் பிரிதிவிராஜ் சவான் அரசும் சேர்ந்து,
ஜெய்தாபூர் திட்டத்தை நிறைவேற்றிடத் துடியாய்த்
துடிப்பது அவருக்குத் தெரியும். ரத்னகிரி மாவட்ட
மக்களும், மராட்டிய மக்கள் பெரும்பாலோரும், சிவசேனா
கட்சியும் கடுமையாக எதிர்த்தாலும், அணுத்துவம்
அசையாது நிற்கிறது.
யாத்திரை தொடங்கும் முன்னரே நாங்கள் கைது
செய்யப்படுவோம்; அணுத்துவம் எங்களை
அடியெடுத்துவைக்க அனுமதிக்காது என்று தகவல்கள்
வந்ததால், முக்கியமான ஒரு சிலர் மும்பையில் இருந்து
ரயிலில் பயணம் செய்து தாராபூர் அணு மின் நிலையம்
இருக்கும் போய்சர் எனும் ஊருக்குப் போய்த் துவக்க
விழாவை நடத்திவிடத் திட்டமிட்டோம். எங்களைத்
தொடர்ந்து, இரண்டு பேருந்துகளிலும், இதர
வாகனங்களிலும் பிற யாத்திரையினர் வந்தனர். ஏராளமான
உள்ளூர் மக்களும் உற்சாகமாகக் கலந்துகொள்ளவே,
நூற்றுக்கணக்கான காவல் துறையினர் தள்ளியே நின்றனர்.
துவக்க விழா முடிந்து, யாத்திரை துவங்கியதும்
எங்களை சற்றே முன்னேறிச் செல்ல அனுமதித்துவிட்டு,
காவல் துறையினர் சுற்றிச் சூழ்ந்தனர். எங்களில் 134
பேரை வாகனங்களில் ஏற்றி போய்சர் காவல் நிலையம்
கொண்டுபோய், பெயர், முகவரி போன்ற விவரங்களை
சேகரித்தனர். மும்பை போலீஸ் சட்டம் 68-வது பிரிவில்
வழக்கு தொடர்வதாகவும், விவரங்களை சரிபார்த்த பிறகு
விடுவிப்பதாகவும் சொல்லி, சுமார் ஏழரை மணி நேரம்
எங்களைப் பிடித்துவைத்தனர். வாகன ஓட்டுனர்களின்
உரிமங்கள் பறிக்கப்பட்டன. இரவு 8 மணி கடந்த பிறகும்
எங்களை, குறிப்பாகப் பெண்களை, சட்டவிரோதமாகக் காவல்
நிலையத்தில் அடைத்துவைத்து இருப்பதைக் கண்டித்து
உண்ணாவிரதம் மேற்கொண்டோம். பெண்களையும் முதியோரையும்
விடுவிக்க முன்வந்தபோது, அவர்களே அதை
ஒப்புக்கொள்ளாததால் வேறு வழி இல்லாமல், இரவு 10:30
மணிக்கு எல்லோரையும் விடுவித்தனர்.
எங்கள் பேருந்து ஓட்டுனர்களையும்
உரிமையாளர்களையும் காவல் துறையினர் மிரட்டியதால்,
ஒருவர் ஓடிவிட்டார். மற்றவர்களும் தொடர்ந்து வர
முடியாது என்றதால் மிகவும் சிரமப்பட்டு தாரா எனும்
ஊருக்கு வந்து அதிகாலை 5 மணியில்தான் இரவு உணவையே
உண்டோம். நாங்கள் தங்கியிருந்த காந்தி ஆசிரமத்தைச்
சுற்றி காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஓரிரு மணி
நேர ஓய்வுக்குப் பின் ஐந்து
பேர்கொண்ட குழுக்களாகப் பிரிந்து ஆசிரமத்தின்
பின்புறம் உள்ள காட்டு வழியில் சென்று பென் எனும்
ஊரில் ஒன்று கூடி ஊர்வலமும், பொதுக் கூட்டமும்
நடத்தினோம். அங்கேயும் விரைந்து வந்த காவல் துறை
எங்களில் ஒரு பகுதியினரைக் கைது செய்தனர்.
மற்றவர்களை சுற்றிச் சூழ்ந்து எங்கும் போகவிடாமல்
தடுத்தனர்.
முடக்கப்பட்ட நாங்கள் மீண்டும் காவல் துறையினர்
கண்களில் இருந்து தப்பி, ராயசாட் மாவட்டத்திலுள்ள
மகாட் எனும் நகருக்கு வந்தோம். டாக்டர்
அம்பேத்கர் மனு ஸ்மிருதி நூலை எரித்து, தலித் மக்களை
தண்ணீர் எடுக்கவிடாது வைத்திருந்த குளத்தில் இறங்கி
தீண்டாமையைத் தகர்த்த திருத்தலம் அது. அங்கே இருந்து
ஊர்வலம் புறப்பட்டோம். தகவல் அறிந்த போலீஸார் பறந்து
வந்து பலரைக் கைது செய்தனர். எங்களில் ஒரு சிலர்
பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்க, இன்னொரு
தரப்பு பொதுக் கூட்டம் நடத்தியது. பன்வாரிலால் சர்மா
தலைமையில் ஒரு குழு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
இருக்கும் ஜெய்தாபூர் சென்று, போலீஸ் துப்பாக்கிச்
சூட்டில் இறந்துபோன தாய்ரெஸ் சுயேகர்
குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி, எங்கள் ஆதரவைத்
தெரிவிக்கச் சென்றது.
ஊர்வலம், பொதுக் கூட்டம் மற்றும் ஊடகங்களின்
உதவியோடு எங்கள் கருத்துகளை அமைதியான முறையில்,
அகிம்சை வழியில் தெரிவித்துவிட்டு, தாராப்பூர் முதல்
ஜெய்தாபூர் வரையான யாத்திரையை முடித்து மும்பை
திரும்பினோம்.
செர்னோபில் தினமான ஏப்ரல் 26, 2011 அன்று காலை
பத்திரிகைகளிலே அணுத்துவத்தின் அடுத்த கட்ட
நடவடிக்கை ஆரம்பமாகி இருந்தது. தாராபூர் அணு மின்
நிலையத்தின் ஊழியர்கள் 8 பேர் இரவுப் பணி முடிந்து
ஏப்ரல் 24 ஞாயிறு அன்று அதிகாலை பேருந்தில்
சென்றுகொண்டு இருந்தபோது, யாரோ பெட்ரோல் குண்டுகளை
எறிந்ததாகவும், எங்கள் யாத்திரையில் கலந்துகொண்ட
பன்வாரிலால் சர்மாவின் ''ஆஸாதி பச்சாவோ அந்தோலன்''
(விடுதலை பாதுகாப்பு இயக்கம்) போராளிகளை போலீஸார்
சந்தேகிப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அணு
வல்லரசு இந்தியாவின் அணுத்துவத்துக்கு இந்த நிகழ்வு
ஒரு சிறிய உதாரணம்!
டாக்டர் ஆர்.எஸ்.லால்மோகன்
கடல்
உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர்
லால்மோகன், சுறாக்கள்,
திமிங்கிலங்கள்பற்றி கற்றுணர்ந்த வல்லுநர். இயற்கை
பாதுகாப்பு, கலாச்சாரத் தொன்மை விழிப்பு உணர்வு,
சதுப்பு நில மேம்பாடு எனப் பல தளங்களில்
பணியாற்றும் இவர், அணு சக்தி விழிப்பு உணர்வுக்
குழுவின் மூலம் கதிர் வீச்சு, கடலோர மணல் கொள்ளை,
சுனாமிபோன்ற பல விஷயங்கள் குறித்து கருத்தரங்குகள்
நடத்தி, புத்தகங்கள் எழுதி வருகிறார். கூடங்குளம்
அணு மின் நிலையத்தைத் தொடக்கம் முதலே எதிர்த்து
வரும் இவர், கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கைக்
கதிர் வீச்சை அளந்து, மீனவர்கள், விவசாயிகள்
மத்தியில் எழும் பாதிப்புக்கள்பற்றி ஆய்வறிக்கைகள்
வெளியிட்டு உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
மக்கள் விஞ்ஞானியோடு பணியாற்றி வருகிறேன்!
கூடங்குளம்
- பிரச்னைகள் கூடும் களம்!
''பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு படி
முன்னேறிச் செல்லும்போது, அந்த யதார்த்தத்துக்கு
ஏற்ற அரசியல் அமைப்புகளை உருவாக்கும் சக்திகளும்
தோன்றுகின்றன!''
- கிறிஸ்டியன் லோஸ் லாங்கே
புத்தன், இயேசு, நபி, காந்தி போன்றோரைக்
கருவிலேயே கருணை உள்ளம்கொண்டவர்கள் எனப் போற்றி மகிழ்கிறோம். கருவிலே குறையோடு
பிறக்கும்போது, 'முதல் கோணல், முற்றும் கோணல்’ என
முகம் சுளிக்கிறோம். கூடங்குளம் அணு மின் நிலையத்
திட்டம் ஒரு குறைப் பிரசவக் குழந்தை. செர்னோபில்
விபத்தின் நடுவே பிறந்து, ஃபுகுஷிமா விபத்தின்
மத்தியில் தவழ்ந்துகொண்டு இருக்கிறது!
வி.வி.இ.ஆர்- 1000 என்று ரஷ்ய மொழியில்
அழைக்கப்படும் 'தண்ணீரால் குளிரூட்டப்பட்டு
இயக்கப்படும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும்’
அணு உலைகள்கொண்ட கூடங்குளத்தில், அணு மின்
நிலையங்களை நிறுவுவதற்கான உரிய முறைகள்
கடைப்பிடிக்கப்படவில்லை. மத்திய சுற்றுச்சூழல்
மற்றும் வன அமைச்சகத்திடம் இருந்து, 1989-ம் ஆண்டு
கொல்லைப்புற வழியாக ஓர் அனுமதிக் கடிதம் மட்டும்
பெறப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு
வாரியத்தின் கைகளை முறுக்கி, இதே போன்று இன்னொரு
கடிதம் வாங்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டுச்
சட்டம் 1994 நடைமுறைக்கு வந்தபோது, ஒரு புதிய அனுமதி
வாங்கத் தேவை இல்லை எனப் பிடிவாதம் பிடித்தது அணு
சக்தித் துறை. அணு மின் நிலையத்தை ஏற்படுத்துவதற்கு
முன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை ( Environmental
Impact Assessment ) தயாரிக்கப்படவில்லை. மக்கள்
கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை.
அப்போதைய தமிழகத் தலைமைச் செயலாளர் சங்கர், மாசுக்
கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளோடு, அணு மின்
கழகத்தார் கலந்து பேசி காரியத்தைக் கச்சிதமாக
முடித்துக்கொண்டார்கள். தமிழக அரசின் தண்ணீர்
மற்றும் காற்று சட்டங்களின்படி அனுமதி அளிக்கவும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1998 நவம்பர் 5-ம் தேதி,
அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அன்றைய தலைவர்
பி.ராமராவ், கூடங்குளம் திட்டத்தின் தள ஆய்வறிக்கை
( site evaluation )செய்யப்பட்டுவிட்டதாகச்
சொன்னார். ஆனால், கூடங்குளம் மற்றும் அது சார்ந்த
பகுதியின் நிறை, குறைகள் என்ன, சுற்றுச்சூழலின்
சாதக, பாதகங்கள் என்ன, அணு மின் திட்டத்தின் குணம்,
குற்றம் என்ன என்பன போன்ற தகவல்கள், மக்களோடு,
மக்கள் பிரதிநிதிகளோடு, பத்திரிகையாளர்களோடு
பகிர்ந்துகொள்ளப்படவில்லை. கூடங்குளம் திட்டத்தின்
பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (( Safety Analysis
Report) இன்றளவும் யாரோடும் பரிமாறிக்
கொள்ளப்படவில்லை.
இரண்டாவதாக, கூடங்குளம் அணு மின் திட்டத்தின் நிதி
நிலை, செலவு விவரங்கள் பற்றி நாம் சிந்தித்தாக
வேண்டும். 'சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி
முக்கால் பணம்’ என்பதுதான் அணு சக்தித் துறையின்
பொருளாதார மேலாண்மைக் கொள்கை. 1988-ம் ஆண்டு
கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு (அதாவது முதல்
இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி செலவு ஆகும்
என்றார்கள். ஆனால், 1997 ஏப்ரல் மாதம் இந்தத்
திட்டத்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ஆகும் என்று
சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம், கூடங்குளம் அணு
மின் நிலையங்கள் 2006-ம் ஆண்டு இயங்கும் என்றும்,
310 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 15,500 கோடி) செலவு ஆகும்
என்றும், விளக்கம் அளித்தார்கள். 2001-ம் ஆண்டு
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு,
திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய
அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா
மீதம் இருக்கும் தொகையை 4 சதவிகித வட்டியில்
வழங்கும் எனவும் சொன்னார்கள். முதன் முறையாக
எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்து ஐந்து முறை
எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்தத் தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடன் உதவியாகவே
இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 'தி ஹிந்து’
நாளிதழின் செய்தி (ஜூலை 26, 2001) ஒன்று, ஒரு
மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 7 கோடி செலவு ஆகும் என்று
அறிவித்தது. 10 வருடங்கள் கழிந்த நிலையில்,
இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம்
யூகித்துக்கொள்ள முடியும்!
மூன்றாவதாக, அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்னை.
கூடங்குளம் அணு உலைக் கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச்
செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம்
செய்யப்பட்டது. பின்னர், அது இந்தியாவிலேயே
மறுசுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே
அதற்கான உலை நிறுவப்படலாம் என்றும் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணு உலைகள் வருடத்துக்கு சுமார் 30 டன்
யுரேனியத்தை உபயோகிக்கும். ஏறத்தாழ 30 ஆண்டுகள்
இயங்கும்போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான
கதிர்வீச்சை வெளியிடும் இந்தக் கொடிய விஷத்தை 24,000
ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள்,
அவர்களின் வழித்தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க
வேண்டும். வெறும் 30 ஆண்டுகள் நாம் மின்சாரம்
பெறுவதற்காக, நூற்றுக்கணக்கான தலைமுறைகளை
நாசமாக்குவது எந்த விதத்தில் நியாயம்? நமது கொள்ளுத்
தாத்தா, கொள்ளுப் பாட்டியை எங்கே புதைத்து
இருக்கிறோம் என்றே தெரியாத நாம், எப்படி இந்த விஷக்
கிடங்குகளை பத்திரமாகக் கட்டிக்காக்கப் போகிறோம்?
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், பிணம் தின்றே தீர
வேண்டும்!
நான்காவதாக, மனித எண்ணிக்கை ஒரு முக்கியப் பிரச்னை.
ஓர் அணு மின் நிலையத்தைச் சுற்றி 1.6 கி.மீ
சுற்றளவில் யாரும் வசிக்கக் கூடாது என்பதும், 5
கி.மீ சுற்றளவில் மிகக் குறைவானவர்களே வசிக்கலாம்
என்பதும், 16 கி.மீ சுற்றளவில் மக்கள் தொகை 10,000
பேருக்கு மிகையாக இருக்கக் கூடாது என்பதும்
விதிமுறை. கூடங்குளம் அணுமின் நிலையங்களைச்
சுற்றியுள்ள 3 கி.மீ தூரத்துக்கு உள்ளேயே கூடங்குளம்
கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை
கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450
குடும்பங்களும் வசிக்கிறார்கள். 16 கி.மீ
தூரத்துக்குள் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள்
வாழ்கிறார்கள். நாளை ஒரு விபத்து நடந்தால், இவ்வளவு
எண்ணிக்கையிலான மக்களை எப்படி அதி விரைவாக
அப்புறப்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய
கேள்விக் குறி!
கூடங்குளம்
கடந்து வந்த பாதை!
1986 ஏப்ரல் 26 செர்னோபில் (யுக்ரைன், சோவியத்
ரஷ்யா) அணுமின் நிலைய விபத்து.
1988 நவம்பர் 20 - சோவியத் அதிபர் கோர்ப்பசேவும்,
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் கூடங்குளம் அணு
மின் நிலையத் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து
இட்டனர்.
1989-1991 சோவியத் நாடு சிதறுண்டது. கோர்ப்பசேவ்
பதவி இழந்தார், ராஜீவ் கொல்லப்பட்டார்.
1997 மார்ச் 25 - இந்திய பிரதமர் தேவகவுடாவும்,
ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சினும் துணை ஒப்பந்தம்
ஒன்றில் கையெழுத்து இட்டனர். இரண்டு தமிழர்கள்
(நிதியமைச்சர் ப.சிதம்பரம், அணு சக்தித் துறை தலைவர்
ஆர்.சிதம்பரம்) உடன் இருந்தனர்.
1998 ஜூன் 21 - ரஷ்ய அணு சக்தி அமைச்சர் யெவ்ஜெனி
ஆடமோவ் மற்றும் இந்திய அணு சக்தித் துறை தலைவர்
ஆர்.சிதம்பரம், கூடங்குளம் திட்டம் தொடர்வதற்கான
ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.
2001 நவம்பர் 3 - பொருளாதார விவகாரங்களுக்கான
மத்திய அமைச்சர் குழு கூடங்குளம் திட்டத்தைத் தொடங்க
நிதி ஒதுக்கீடு செய்தது.
2001 நவம்பர் 6 பிரதமர் வாஜ்பாய் கூடங்குளம்
திட்டத்தின் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து
இட்டார்.
சகோதரி அசுந்தா
சென்னையிலும், பெங்களூருவிலும் தனது இளமைக்
காலத்தைக் கழித்த பின்னர், இறைப் பணிக்காக தன்னை
அர்ப்பணித்து 25 வருடங்கள் உழைத்தவர் சகோதரி
அசுந்தா. ஆன்மிக வாழ்வைத் துறந்த பின்னரும்,
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதால், 'சகோதரி’
பட்டம் அவருடன் இருக்கிறது. குழந்தைகளின்
பிரச்னைகள், உரிமைகளில் நாட்டம்கொண்டு உழைத்து
வரும் சகோதரி அசுந்தா, அணு ஆயுதங்களுக்கும், அணு
சக்தி நிலையங்களுக்கும் எதிராகப் போராடுவது
பொருத்தமான ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் 'எப்போதும்
வென்றான்’ எனும் ஊரில் இருந்து இயங்கும் இந்த எளிய
போராளி, தன் அன்பாலும், போராட்ட குணத்தாலும்
எப்போதும் எல்லோரையும் வெல்கிறார்!
கூடங்குளம்
ஒரு
கொலைக் களம்!
''ஆழமான நம்பிக்கையோடு சொல்லப்படும் 'இல்லை’,
பிறரை மகிழ்விப்பதற்காகவோ அல்லது பிரச்னைகளைத்
தவிர்ப்பதற்காகவோ சொல்லப்படும் 'ஆமாம்’
என்பதைவிட மேலானது!''
- மகாத்மா காந்தி
மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத் துறை
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் சமீபத்திய நாடகம்
கூடங்குளத்தில் அரங்கேற்றப்பட்டது!
'கூடங்குளம் விரிவாக்கத் திட்டமான 3, 4, 5, 6
உலைகள் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டத்தை
மீறுவதால், அனுமதி தர இயலாது!’ என மத்திய
அரசின் குழு முடிவு எடுத்தது. எனவே, அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ், 'கூடங்குளம் அணுமின்
நிலையத்தின் வரைமுறைகள் மறுபரிசீலனை
செய்யப்படும்’ என அறிவித்தார். வேடிக்கை என்ன
என்றால், முதல் இரண்டு உலைகள் பற்றி, அவர்
கண்டுகொள்ளவே இல்லை. இந்த இரட்டை வேடப்
போக்கும், இரட்டை நாக்குப் பேச்சும் நாம்
கவனத்தில்கொள்ள வேண்டியது.
கூடங்குளம் திட்டத்தில் உள்ள நான்கு
பிரச்னைகளை கடந்த கட்டுரையில் சொன்னேன்.
ஐந்தாவதாக... கூடங்குளம் அணு மின்
நிலையங்களின் நல்ல தண்ணீர் தேவை பற்றிய
சர்ச்சை. ஜனவரி 5, 2002-ம் தேதியிட்ட
'தினமலர்’ நாளிதழில் வெளியிடப்பட்ட முழுப்
பக்க விளம்பரம், '65 கி.மீ தூரத்தில் உள்ள
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர்
கொண்டுவரப்படும்’ எனச் சொல்கிறது. கூடங்குளம்
அணு மின் திட்ட முன்னாள் இயக்குநர்
எஸ்.கே.அகர்வால், 'நியூக்ளியர் இன்ஜினீயரிங்
அன்ட் டிஸைன்’ எனும் இதழில் 2006-ம் ஆண்டு
வெளியிட்ட கட்டுரையின் 835-வது பக்கத்தில்
பேச்சிப்பாறை தண்ணீர் எடுக்கப்படும் என்று
குறிப்பிடுகிறார். கூடங்குளம் 3, 4, 5, 6
உலைகளுக்கான 'நீரி’ எனும் அமைப்பின்
சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் (பக்கங்கள்
2.35, 2.36) பேச்சிப்பாறை அணைத் தண்ணீர் நாள்
ஒன்றுக்கு 19,200 கன மீட்டர் எடுக்கப்படும்
எனத் தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது.
குமரி மாவட்ட விவசாயிகள் போர்க் கொடி
தூக்கியதும், 'பேச்சிப்பாறை அணையில் இருந்து
நீர் எடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை!’ என்று
'தினகரன்’ நாளிதழில் 28.3.2007 அன்று வெளியான
முழுப் பக்க விளம்பரம் சொல்லியது. ஆனால்,
1.6.2007 அன்று 'தி ஹிந்து’ பத்திரிகையில்
வந்த நான்கு பக்க விளம்பரம், பேச்சிப் பாறை
பற்றிப் பேசவே இல்லை. குமரி மாவட்டத்தைச்
சுற்றி நிலத்தடிக் குழாய்கள் பதிக்கப்படுவது
அனைவருக்குமே தெரியும்.
ஆறாவது... கூடங்குளம் அணு மின் நிலையக்
கட்டுமானப் பணிகள். 'தினகரன்’ (17.6.2004)
நாளிதழில் எஸ்.கே.அகர்வால், ''முதல்
உலைகளுக்கான பணிகள் 2007 டிசம்பர் மாதத்தில்
முடியும் என்று திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே அந்தப்
பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அதுபோல்
2-வது உலை அமைக்கும் பணிகள் 2008-ல்
முடிப்பதாக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் அனைத்துப் பணிகளும்
முடிக்கப்படும்!'' என்றார். ஆனால், இன்று வரை
இது நடக்கவில்லை.
ஏழாவது... இந்தக் காலதாமதம் காரணமாக எழும் பண
விரயம், நஷ்டங்கள், ஊழல்கள்பற்றி சிந்தித்துப்
பாருங்கள். அணு மின் நிலையக் கட்டடங்களின்
தரம், கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதுமான
திருவிளையாடல்கள், உள்ளூர் கான்ட்ராக்டர்களின்
கைங்கரியங்கள், ரஷ்யாவில் இருந்து
தாறுமாறாகவும், தலைகீழாகவும் வரும் உதிரி
பாகங்கள், நிர்வாகக் குழப்பங்கள், குளறுபடிகள்
என அடிவயிறைப் புரட்டிப் போடும் தகவல்கள்
அனுதினமும் வந்துகொண்டே
இருக்கின்றன. ஒரே ஒரு நிகழ்வினைச்
சொல்கிறேன். 26.9.2006 அன்று அப்போதைய
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கூடங்குளம்
அணு மின் நிலையத்துக்கு வருகை தந்தார். அணு
சக்தித் துறை உயர் அதிகாரிகளோடு நின்றுகொண்டு
இருந்தபோது, கூரையில் இருந்து ஊழியர் ஒருவர்
ஓரிரு அடி தூரத்தில் 'பொத்’தென்று விழுந்து
அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத்
தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால்,
குடிமக்களுக்கு..?
எட்டாவது... கூடங்குளம் பகுதியில் இதுவரை
எழுந்திருக்கும் இடர்களும், பேரிடர்களும்
கவனிக்கத்தக்கவை. 2003 பிப்ரவரி 9-ம் தேதி,
இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நில நடுக்கம்
ஏற்பட்டது. 2006 மார்ச் 19-ம் தேதி மாலை 6.50
மணிக்கு, கூடங்குளத்தைச் சுற்றியுள்ள
கன்னன்குளம், அஞ்சு கிராமம், அழகப்பபுரம்,
மைலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில
அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும்
கூரைகளிலும், கீறல்களும் விரிசல்களும்
தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21-ம்
தேதி, கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30
மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள்
உண்டாகின. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய
வானிலை ஆய்வியல் கழகத்துக்கும், புவியியல்
நிறுவனத்துக்கும் சென்று விசாரித்தேன்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுமுறையில்
இருக்கிறார்கள் என்றும், பத்திரிகைச்
செய்திகளின் அடிப்படையில் டெல்லிக்கு அறிக்கை
அனுப்பி இருப்பதாகவும் சொன்னார்கள். வேதனையும்
விரக்தியுமே மிஞ்சின.
2004 டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சுனாமி,
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் வெள்ளப்
பெருக்கு ஏற்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன்.
மத்திய, மாநில அரசுகள் சுனாமி என்ற
வார்த்தையையே நாங்கள் கேள்விப்பட்டது இல்லை
என்று சொல்லிக்கொண்டு இருந்த நிலையில்,
கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம்,
'சுனாமிக்கும் சேர்த்தே திட்டமிட்டு
இருக்கிறோம்’ என்று கதை அளந்தது.
இந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்கள்
கழித்து, 2007 பிப்ரவரி மாதம் தமிழக மின் துறை
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, 'கூடங்குளம்
அணுமின் நிலையத்தைச் சுற்றி வசிப்பவர்களுக்கு
இலவசக் குழுக் காப்பீட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்
(தினகரன் 10.2.2007). 'எங்க அப்பன்
குதிருக்குள் இல்லை’ என்று அவர் சொல்ல, குலை
நடுங்க ஆரம்பித்தது மக்களுக்கு!
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால் இந்திய அணு
மின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள்
வழங்கும் ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் எனும்
ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ரஷ்யா வழங்கும்
உலைகளில் ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால்,
நஷ்ட ஈடு கேட்கும் உரிமை வேண்டும் என இந்தியா
கேட்க, 'அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு
ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற
இந்திய அணு மின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க
வேண்டும்’ என ரஷ்யா காலை வாரியது. 2008-ம்
ஆண்டு ரகசியமாகக் கையெழுத்து இடப்பட்ட இரு
நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது ஷரத்து
இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறதே என்று
கேட்கிறது ரஷ்யா. விழுங்கவும் முடியாமல்,
துப்பவும் முடியாமல் டெல்லி திகைத்து
நின்றாலும், உருளப்போவது உங்கள் தலையும், என்
தலையும், ஊரார் தலையும்தான்.
இந்த ரஷ்ய இழப்பீடு குறித்த குழப்பம்
ஒன்பதாவது முக்கியமான அம்சமாக இருக்கும்
நிலையில், பத்தாவது ரஷ்ய அணுத்
தொழில்நுட்பத்தைப் பார்க்கலாம்.
வி.வி.ஈ.ஆர். 1000 அணு உலைக் கலன் (Reactor
Vessel) மிகப் பெரியது. இதன் உள்ளே இருக்கும்
மையம் அல்லது உள் (core) எப்போதும், எல்லா
நிலையிலும் குளிர்விக்கப்பட வேண்டும். அதில்
தடைகள் ஏற்படும்போது, புகுஷிமாவில்
நடந்ததுபோன்ற வெடிப்புகள் உள்ளடக்கங்களுக்குள்
(containment)நிகழலாம். வி.வி.ஈ.ஆர். 1000 அணு
உலைக் கலனின் ஒருமைப்பாடு கேள்விக்குரியது.
பாதுகாப்புக்கான தானியங்கி மூடும் அமைப்பு,
நம்பகத்தன்மை உடையது அல்ல. நீராவி ஜனனிகள்
(Steam generators) மற்றும் பரந்து
விரிந்துகிடக்கும் நீராவிக் குழாய்களில் எழும்
பிரச்னைகள் கட்டுப்பாட்டு அமைப்புகளையும்,
மின் வழங்கலையும், முக்கியமான பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாக
உள்ளது. எனவே, இதை நம்புவது ஆபத்து என்பதே பல
விஞ்ஞானிகளின் ஒட்டுமொத்தக் கருத்து.
இறுதியாக, உலைகளைக் குளிர்வித்த சூடான கதிர்
வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பகத்தி
(Desalination)ஆலைகளில் இருந்து வெளி வரும்
உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி
ஊட்டச் சத்துமிக்க கடல் உணவையும்
விஷமாக்கப்போகிறோம். உணவுப் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும். மீனவர்களின்,
விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார
உரிமைகளும் பாதிக்கப்படும். விபத்துகளோ,
விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும், அணு
உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்
வீச்சு நச்சுப் பொருட்களை உண்டு... பருகி...
சுவாசித்து... தொட்டு அணுஅணுவாய்
சிதைந்துபோவோம். எதிர்கால தமிழ் சமூகம்,
'கூடங்குளம் ஒரு கொலைக்களம்’ எனக் குற்றம்
சுமத்தும்!
எஸ்.லிட்வின்
தனது
18-வது வயதில் வீடு, குடும்பம் தரும்
பாதுகாப்பையும் இதங்களையும் துறந்து வட
இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றிச்
சுழன்று, பெண்கள், குழந்தைகள் மத்தியில்
விழிப்பு உணர்வுக் கல்விப் பணி ஆற்றியவர்
லிட்வின். 15 வருட சேவைக்குப் பின்
அருட்சகோதரியாக மாறி, பெரு நாட்டிலும்,
திருநெல்வேலி பீடித் தொழிலில் இருக்கும்
பெண்கள் மத்தியிலும், உரிமைகளுக்காக,
உயர்வுக்காக உழைத்தார். 1994-ம் ஆண்டு துறவு
நிலை துறந்து, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்
குழுவில் இணைந்து பெண் உரிமைகளுக்காகப்
பாடுபடுகிறார். புற்று நோயோடு போராடி வென்ற
லிட்வின், குமரி மாவட்டத்தின் பட்டி
தொட்டிகளில் எல்லாம், கூடங்குளம் அணு மின்
நிலைய எதிர்ப்புக் கூட்டங்களையும்,
பிரசாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும்
நடத்தி வருகிறார்!
அமெரிக்காவின் அடியாள்
இந்தியா!
''நமது வலிமையை உலகத்துக்கு
நிரூபிக்க அணுகுண்டு சோதனை
நடத்தப்பட்டது. அதுதான் நமது
வலிமையை உலகத்துக்குப்
பறைசாற்றி, இந்தியாவைப்பற்றிய
மதிப்பை உயர்த்தியது!''
- அப்துல் கலாம்
1998-ம் ஆண்டு மார்ச் மாதம்,
பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி
அரசு பொறுப்பேற்கும் நிலை.
1996-ம் ஆண்டு வாஜ்பாய் இரண்டு
வாரங்கள் மட்டுமே பிரதமராக
இருந்த நிலைபோன்று இல்லாமல்,
நீண்ட காலம் பிரதமராகப்
பணியாற்றுவார் என்பது
உறுதியானது. அமெரிக்காவில்
மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில்
பணியாற்றிக்கொண்டு இருந்த
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.
பி.ஜே.பி., விஸ்வ ஹிந்து
பரீஷத், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்
சங் போன்ற அமைப்புகளைப்
பற்றியும், அவர்களின் இந்துத்வா
சித்தாந்தம்பற்றியும், இந்திய
வரலாற்றை அவர்கள் எடுத்தாளும்
விதம்,
தன்மைபற்றியும் முனைவர்
பட்டத்துக்காக ஆய்வு செய்து
இருந்தேன். இந்த ஆய்வு எனக்குள்
சில தெளிவுகளையும் பயங்களையும்
உருவாக்கி
இருந்தது. வாஜ்பாய்
பதவி ஏற்பதற்கு மூன்று நாட்கள்
முன்பாக, 1998 மார்ச் 16-ம்
தேதி, இந்தியாவில் உள்ள மிகக்
கவனமாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட
சில அறிவுஜீவிகளுக்கு
மின்னஞ்சல் வழியாகக் கடிதம்
எழுதினேன். 'பி.ஜே.பி. அரசு சில
அதிரடிக் கொள்கைகளை, திட்டங்களை
மேற்கொள்ளும்
என நான் அஞ்சுவதால், நாம்
அனைவரும் ஒன்றாய் இணைந்து
'பி.ஜே.பி. அரசு கண்காணிப்பகம்’
என்ற அமைப்பை ஏற்படுத்தி,
அரசின் நடவடிக்கைகளை அவதானிக்க
வேண்டும்’ என அந்த மின்னஞ்சலில்
கோரிக்கைவைத்தேன். 'தி ஹிந்து’
நாளிதழின் ஆசிரியர் என்.ராம்
உடனடியாக என்னைத் தொடர்புகொண்டு,
அந்த முயற்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் வழங்கினார். எங்கள்
முயற்சிக்கு பல்வேறு
பிரமுகர்கள், எழுத்தாளர்கள்,
பத்திரிகையாளர்கள். சமூக
சேவகர்கள் ஆகியோர் ஆதரவு
அளித்தனர். மின்னஞ்சல் செய்தி
மடல்களும், இணையதளமும், அரசியல்
கட்டுரைகளும், எச்சரிக்கை
விவரணங்களுமாக எங்கள்
கண்காணிப்பு கச்சிதமாக
நடந்துகொண்டு இருந்தது.
நாங்கள் எதிர்பார்த்தபடி 1998,
மே 11-ம் தேதி பி.ஜே.பி. அரசு
அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியது.
இரண்டு நாட்கள் கழித்து மே
13-ம் தேதி மேலும் இரண்டு
அணுகுண்டுகள்
பரிசோதிக்கப்பட்டன. 1974-ம்
வருடம், மே 18-ம் தேதி, இந்திரா
காந்தியால் நடத்தப்பட்ட
பொக்ரான் - 1 பரிசோதனைக்குப்
பிறகு நடந்த இந்த சோதனை,
பொக்ரான் - 2 என்று
அழைக்கப்பட்டது.
'நாம் பலவீனமானவர்களாக
இருந்ததால்தான், முகலாயர்களும்
ஐரோப்பியர்களும் நம்மை அடக்கி
ஆண்டார்கள். அணு ஆயுதங்களோடு,
ராணுவத்துவ சிந்தனையும்
செயல்பாடுகளும் இருந்தால்தான்,
நாம் வலிமையோடு வலம் வர
முடியும், இந்த உலகம் நம்மை
மதிக்கும்’ என்று வலதுசாரிக்
கட்சிகளான அகில பாரத இந்து
மகாசபா, பாரதிய ஜனசங்கம்
போன்றவை வாதிட்டு
வந்திருக்கின்றன. இந்த ஜனசங்கம்
கட்சிதான், 1977-ல் ஜனதா
கட்சியோடு இணைந்து, பிறகு
பி.ஜே.பி-யாக உருமாற்றம்
பெற்றது. உருவம் மாறினாலும்,
பெயர் மாறினாலும் அவர்களின்
அணு, அணு ஆயுதங்கள் மீதான
பிடிப்பு மாறவும் இல்லை,
மறையவும் இல்லை.
1962-ம் ஆண்டு நடந்த சீனாவின்
அத்துமீறல், 1964-ம் வருடம்
சீனர்கள் நடத்திய அணு ஆயுதப்
பரிசோதனை போன்ற நிகழ்வுகளின்
காரணமாக, இந்தியாவில் அணு
ஆயுதத் திட்டம் துவக்கப்பட்டது.
கனடா நாட்டின் உதவியோடு
அமைக்கப்பட்ட சிரஸ் அணுமின்
நிலையத்தில் இருந்து பெறப்பட்ட
புளூட்டோனியம், 1974-ம் ஆண்டில்
அணு ஆயுதப் பரிசோதனையில்
உபயோகிக்கப்பட்டது. 1995-ம்
ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக
இருந்தபோது, அணு ஆயுதப்
பரிசோதனை நடத்த முயற்சித்தார்.
ஆனால், அமெரிக்க உளவுத் துறை
உஷாராகி அதை நிறுத்தியது.
அமெரிக்காவின் செயற்கைக்
கோள்களின் கண்களில் இருந்து
தப்பித்துக்கொள்வதற்காக 1998-ம்
ஆண்டு, அணு ஆயுதப் பரிசோதனைத்
தயாரிப்புகள் பெரும்பாலும் இரவு
நேரங்களிலேயே செய்யப்பட்டன.
இரவில் இயங்கிய கனரக வாகனங்கள்
பொழுது விடிவதற்குள், அவை
முந்தின நாள் நின்ற இடங்களிலேயே
கொண்டுவிடப்பட்டன. செயற்கைக்
கோள் படங்களை அலசி ஆராய்கின்ற
அந்நிய நாட்டு உளவுத் துறையினரை
ஏமாற்றவே இந்த ஏற்பாடு
செய்யப்பட்டது. குழிகள்
தோண்டினால், அவை வலைகளால்
மூடப்பட்டன. மண்
குவிக்கப்பட்டால், அது மணல்
குன்றுபோலத் தோன்றுமாறு
செய்யப்பட்டது. விஞ்ஞானிகளும்
பொறியாளர்களும், ராணுவ
வீரர்களின் உடை அணிந்து சிறு
குழுக்களாக வேலை செய்தனர்.
அண்மையில், ஒசாமா பின்லேடனை
அமெரிக்கப் படையினர்
அதிரடியாகத் தாக்கிக்
கொன்றபோது, தகவல் ஏதும் அறியாத
பாகிஸ்தான் தலை குனிந்து
நின்றதுபோல, பொக்ரான் - 2
பரிசோதனைகளை திடுதிப்பென
இந்தியா நடத்தியபோது,
அமெரிக்காவின் உளவுத் துறை
வெட்கித் தலை குனிந்தது. உலக
நாடுகள் தங்கள் வியப்பையும்
அச்சத்தையும்
வெளிப்படுத்திக்கொண்டு இருக்க,
இந்தியாவில் தேசியவாதத்தின்
கோலாகலமான கொண்டாட்டங்கள்
அரங்கேறின. நம்மில் பலர்
திடீரென வலிமை பெற்றுவிட்டதாக
உணர்ந்தனர். அணு ஆயுதங்களால்
வேகமாக ஏராளமானவர்களைக்
கொல்லும் திறன்
பெற்றுவிட்டதால், இந்தியாவின்
மதிப்பு உலக அரங்கில்
உயர்ந்துவிட்டதாகப்
புளகாங்கிதம் அடைந்தனர். வலிமை,
மதிப்புபற்றிய இந்த மாதிரியான
புரிதலை எதிர்த்து, அணு ஆயுதப்
பரிசோதனையை ஆமோதிக்க
மறுத்தவர்களின் நாட்டுப்பற்று
கேள்விக் குறியாக்கப்பட்டது.
அவர்கள் மீது அபாண்டமான
குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டன.
பிரதமரின் அறிவியல் ஆலோசகர்
அப்துல் கலாமும், அணு சக்தித்
துறையின் தலைவர்
ஆர்.சிதம்பரமும் பொக்ரான் - 2
பரிசோதனையை முன்னின்று
நடத்தினர்.
இந்தியாவின் அணு ஆயுதப்
பரிசோதனைக்குப் பதில் அளிக்கும்
விதத்தில், பாகிஸ்தான் 1998, மே
28, 30 ஆகிய தேதிகளில் ஆறு
சோதனைகள் நடத்தி, நமது 1974,
1998 வருட சோதனைகளின் ஸ்கோரை
சமன் செய்தது. பாகிஸ்தானும்
சீனாவும் தங்கள் நட்பை இன்னும்
இறுக்கமாக்கி இருக்கின்றன. நாம்
அமெரிக்காவுக்கு அடிமைகள்
ஆக்கப்பட்டு, அவர்கள் சொல்படி
நடந்து, அவர்களுக்கு வேலை
வாய்ப்பை உருவாக்கிக்
கொடுக்கவும், அவர்களின்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
லாபம் உண்டாக்கித் தரவும்
பணிக்கப்பட்டு இருக்கிறோம்.
அமெரிக்காவின் அடியாளாக
இருப்பதுதான் நமது வலிமையோ?
புத்தர், அசோகர், மகாவீரர்,
திருவள்ளுவர், குருநானக்,
மகாத்மா காந்தி, அம்பேத்கர்,
கான் அப்துல் கபார் கான், அன்னை
தெரசா என அகிம்சை உள்ளங்கள்
வாழ்ந்த மண்ணுக்கு; இந்து மதம்,
புத்த மதம், ஜைன மதம், சீக்கிய
மதம், குறள் நெறி, கிறிஸ்துவ,
இஸ்லாமிய மதங்களின் எத்தனையோ
துணைக் கூறுகள் என உலகம் நலம்
பெற ஒப்பற்ற வழிகளைக் காட்டிய
சமூகத்துக்கு; தத்துவம்,
தர்க்கம், அழகியல், இதிகாசம்,
வானியல், கணிதம், வாழ்வியல்,
அன்பு, வீரம் என வாழ்வாங்கு
வாழ்ந்த மக்களுக்கு மதிப்பு
தருவது எது? 65 ஆண்டுகளுக்கு
முன்பு அமெரிக்கர்கள்
கண்டுபிடித்த, அதைப் பார்த்து
நாம் காப்பியடித்த ஆட்களைக்
கொல்லும் அணுகுண்டுகள்தானா?
பாவம் பாரதத் தாய்!
சி.சிவசுப்பிரமணியன்
கூடங்குளம்
கிராமத்தைச் சார்ந்த
வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன்,
வணிகவியலில் முதுகலைப்
பட்டமும் சட்டக் கல்வியும்
பெற்றவர். 1998-ம் ஆண்டு
டாக்டர் ராம் மனோகர் லோகியா
சட்டக் கல்லூரியில் பட்டம்
முடித்துவிட்டு, வள்ளியூர்
நீதிமன்றத்தில் சிவில்,
கிரிமினல் வழக்கறிஞராகப்
பணிபுரிகிறார். கூடங்குளம்
அணு மின் நிலையத்தார், அந்த
நிலையத்தைப் பார்வையிட ஒரு
சில குடும்பங்களை அழைத்துச்
சென்றபோது, இவர் கேட்ட
கேள்விகளுக்குத் திருப்தியான
பதில்களைத் தராததால், அந்தத்
திட்டத்தை எதிர்க்க முடிவு
செய்தார். 2007 முதல் 'மக்கள்
உரிமை பாதுகாப்பு இயக்கம்’
என்ற அமைப்பின் கீழ் தனது
கிராமத்தாருடன் சேர்ந்து
பல்வேறு போராட்டங்களை நடத்தி
வருகிறார்.
அணு
எதிர்ப்பின்
அடிப்படை...
கதிர்வீச்சு!
''நமது உலகம் மதி
நுட்பமற்ற திறமையையும்,
மனசாட்சியற்ற
அதிகாரத்தையும் பெற்று
இருக்கிறது.
அணு
ராட்சதர்களையும்,
சிறு
பிள்ளைத்தனமான
ஒழுக்கத்தையும்
உடையது நம்
உலகு!''
- அமெரிக்க ஜெனரல்
உமார் பிராட்லி
இந்தியா - பாகிஸ்தான் அணு
ஆயுதப் பரிசோதனைகள், ஆயுதத்
தயாரிப்பு போன்றவற்றின்
அழிவியலைப் புரிந்துகொள்ள,
உலக அணு ஆயுத அரசியலைப்
பற்றியும் தெரிந்துகொள்ள
வேண்டும். அதனை முழுமையாக
உள்வாங்க, கதிர்வீச்சு
அறிவியலை அறிந்துகொள்வது
அவசியம்!
கியூரி தம்பதியும்,
ஏனையோரும் கதிர்வீச்சு பற்றி
ஆய்வு செய்த பிறகு,
இயற்கையாகவே கதிர்வீச்சு
இயல்புள்ள பொருட்கள் மூன்று
விதக் கதிர்களை வீசுவதாகக்
கண்டறிந்தனர். 1899-ம் ஆண்டு
எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட்,
யுரேனியக் கதிர்வீச்சில்
ஆல்ஃபா, பீட்டா என இரு வகை
இருப்பதாகச் சொன்னார்.
வில்லார்ட் எனும் பிரெஞ்சு
அறிஞர் காமா என மூன்றாவதாக
ஒன்றும் இருப்பதாகச்
சொன்னார்.
ஆல்ஃபா கதிர்வீச்சு என்பது
அதிக வேகத்தில் செல்லும்
ஹீலியம் அணுக்களின் அணு
மையங்கள். நமது தோலின்
மேற்பரப்பை ஊடுருவும் சக்தி
வாய்ந்த இதனை, ஒரு தாள்கொண்டு
நிறுத்திவிடலாம்.
சுவாசிக்கும்போதோ, உணவு
அல்லது தண்ணீருடனோ, ஆல்ஃபா
கதிர் வீசும் பொருட்களை
உட்கொண்டுவிட்டால், உடலில்
உள்ள திசுக்கள்
பாதிக்கப்பட்டு ஆபத்து
நேரலாம்.
பீட்டா கதிர்வீச்சு என்பது,
அதிக வேகத்தில் செல்லும்
எலெக்ட்ரான்கள். ஆல்ஃபா
கதிர்களைவிட, ஆழமாக ஊடுருவும்
தன்மை உடையது என்றாலும்
அலுமினியத் தகட்டினால் இதனை
முற்றிலுமாகத் தடுத்துவிட
முடியும்.
கண்ணுக்குத் தெரியும் ஒளிக்
கதிர் போன்ற, ஃபோட்டோன்களின்
அணிவகுப்பை காமா கதிர்வீச்சு
என்கிறோம். காமா கதிர்களால்
மனித உடலை ஊடுருவி மறு
பக்கத்துக்குச் செல்ல இயலும்
என்றாலும், ஒரு மீட்டர்
பருமன் உள்ள கான்கிரீட்டின்
வழி புகுந்து செல்லும்போது,
முழுவதுமாக
கிரகிக்கப்பட்டுவிடும்.
நியூட்ரான் கதிர்வீச்சு
எனவும் ஒன்று உண்டு. தான்
மோதும் எந்த ஓர் அணுவையும்
மின்னணுவாக, அதாவது மின்
சக்தி வாய்ந்த அணுவாக
மாற்றும் இந்த
நியூட்ரான்களால் உடல்
திசுக்களைத் தாக்கி அழிக்க
முடியும்.
நமது உடல் சூரிய
வெளிச்சத்தின் சக்தியைக்
கிரகிக்கும்போது, சூடாக
உணர்கிறோம். அதுபோல,
கதிர்வீச்சு சுமந்து நிற்கும்
சக்தியினையும் நமது உடல்
கிரகிக்கிறது. எந்த விதமான
கதிர்வீச்சு, எவ்வளவு சக்தி
கிரகிக்கப்பட்டு இருக்கிறது
என்பதைத் தக்க உபகரணங்களால்
அறிய முடியும். டாஸ்மாக்
யுகத் தமிழன்
புரிந்துகொள்ளும் ஓர்
உதாரணத்தைச்
சொல்கிறேன். ஒரு
பாட்டில் கள் குடிக்கிறீர்கள்
என்று வையுங்கள். பெரிதாக
ஒன்றும் நடந்துவிடப்
போவதில்லை. அதுவே ஒரு
பாட்டில் விஸ்கி என்றால்
என்னவாகும்? இதுபோல எந்த
விதமான கதிர்வீச்சு என்பது
முக்கியம். குவாட்டருக்கும்
ஃபுல்லுக்கும் உள்ள அளவு
வேறுபாடுபோல, கதிர்வீச்சின்
அளவும் முக்கியமானது.
இரண்டு வழிகளில் நாம்
இயற்கைக் கதிர்வீச்சுக்கு
ஆளாகிறோம். ஒன்று, உடலின்
வெளிப்புறம் உள்ள இயற்கையாகத்
தோன்றும் கதிர்வீச்சுப்
பொருட்களில் இருந்தும்,
விண்வெளிக் கதிர்களில்
இருந்தும் எழும்
கதிர்வீச்சுகள். இன்னொன்று,
உணவு, நீர், காற்று
ஆகியவற்றில் உள்ள
கதிர்வீச்சுப் பொருட்களால்
உடலின் உட்புறம் எழும்
கதிர்வீச்சு. இவை அனைத்தையும்
சேர்த்து, வருடம் ஒன்றுக்கு
சுமார் 2 மில்லி சீவெர்ட்
அளவு, அதாவது 10 எக்ஸ் ரே
படம் எடுக்கும் அளவு நாம்
கதிர்வீச்சுக்கு ஆளாகிறோம்.
இந்த அளவு, நாம் வாழும்
இடம், வாழும் வகையைப்
பொறுத்து வேறுபடலாம்.
கருங்கல், செங்கல்,
கான்கிரீட், மரம் என இதில்
எதனைக்கொண்டு உங்கள் வீடு
கட்டப்பட்டு இருக்கிறதோ,
அதைப் பொறுத்து கதிர்வீச்சின்
வகை, அளவு அமையும். உங்கள்
வீடு கடல் மட்டத்தில் இருந்து
உயரமான இடத்தில் இருந்தால்,
விண்வெளிக் கதிர்களால் எழும்
கதிர்வீச்சின் அளவு
அதிகமாகும். விமானப் பயணிகள்
அதிக அளவு கதிர்வீச்சுக்கு
ஆளாகிறார்கள்.
கல்வி அறிவு பெறாத மக்கள்
இடையே பேசும்போது, இந்த
கதிர்வீச்சைப்பற்றி
விளக்குவது கடினமான விஷயம்.
இதைப் பார்க்க முடியாது,
கேட்க முடியாது, ருசிக்க
முடியாது, நுகர முடியாது, தொட
முடியாது என்று சொல்லும்போது,
கதிர்வீச்சை ஓர் எமன்
என்பார்கள்.
அணு சக்தி சம்பந்தப்பட்ட
பிரச்னைகளில் முதன்மையானது,
இந்தக் கதிர்வீச்சுதான்! ஓர்
அணுகுண்டோ அல்லது அணு உலையோ
வெடித்தால், அருகே வாழும்
மக்களுக்கு கடுமையான
தீப்புண்கள்,
வயிற்றுப்போக்கு, வாந்தி,
குடல்களில் ரத்தக் கசிவுபோன்ற
பல அபாயகரமான பிரச்னைகள்
எழும். இதனை கதிர்வீச்சு நோய்
( Radiation Illness )என்று
அழைக்கிறோம். மிகவும் மோசமாக
பாதிக்கப்படுவோர், உடனே
மரணமடைவார்கள். அந்த
பாக்கியம் கிடைக்காதவர்கள்,
கடும் துன்பத்துக்கு உள்ளாகி,
அனலில் சிக்கிய புழு போல,
துடிதுடித்துப் பரிதவித்து
அணுஅணுவாகச் சாக நேரிடும்.
யுரேனியச் சுரங்கங்கள், அணு
மின் நிலையங்கள், கதிர்
வீச்சுக் கழிவுக் கிடங்குகள்,
கழிவு நீர் வெளியேற்றும்
மையங்கள் ஆகியவற்றின் அருகே
வசிக்கும் மக்கள், குறைந்த
அளவு கதிர்வீச்சுக்கு நீண்ட
நாட்கள் உள்ளாகும்போதும்,
விபரீதமான விளைவுகள்
எழுகின்றன. கதிர்வீச்சு,
உடலைத் துளைத்து திசு மற்றும்
மரபணுக்களை அழிப்பதாலும்,
பாதிப்புக்கு
உள்ளாக்குவதாலும் பல விதமான
புற்று நோய்கள் வருகின்றன.
இன்றைய இந்தியாவில்
ஒருவருக்கு புற்று நோய்
வந்து, துவக்கத்திலேயே
கண்டுபிடிக்கப்பட்டு உரிய
சிகிச்சை
அளிக்கப்படாவிட்டால், அவர்
தப்புவது கடினம். மிக
அதிகமாகச் செலவு செய்து
மருத்துவம் பார்த்தாலும்,
நோய் முற்றிவிட்ட நிலையில்,
எதுவும் செய்ய இயலாது. அவர்
மரணம் அடையும்போது, அவரது
குடும்பம் நடுத்தெருவுக்கு
வந்துவிடுகிறது.
குழந்தைகளும் பெண்களும்தான்
மிக மோசமாக
பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய்
பிரச்னைகள், கருச்சிதைவு,
குறை மாத கர்ப்பம், இறந்து
பிறக்கும் குழந்தை என
எத்தனையோ இன்னல்கள்
எழுகின்றன. சினை முட்டைகளைச்
சுமந்து நிற்கும் பெண்களின்
உடல் பாதிப்புக்கு
உள்ளாகும்போது,
எதிர்காலத்தில் அவர்கள்
வயிற்றில் உருவாகும்
குழந்தைகள்
பாதிக்கப்படுகின்றன. உடலில்
குறைகளோடும், மன வளர்ச்சி
இல்லாமல் பிறக்கும்
குழந்தைகளோடும் பெற்றோர்
அடைகிற வேதனை விவரிக்கப்பட
முடியாதது.
உலகம் முழுவதும் உள்ள அணு
சக்தித் துறைகளும், அரசுகளும்
கதிர்வீச்சுப் பற்றி ஒரே
மாதிரியே பேசுகின்றன. 'இதனால்
எழும் ஆபத்துகள் மிகக்
குறைவானவை. இயற்கைக்
கதிர்வீச்சோடு ஒப்பிடும்
போது, அணு சக்தியால் எழும்
கதிர்வீச்சு அளவு குறைவானது.
ஒருவரின் சராசரி உள்வாங்கல்
குறைவாகவே இருக்கிறது. புற்று
நோய் என்பது பொதுவான நோய்.
கதிர்வீச்சோடு நேரடியாகத்
தொடர்புள்ள புற்று நோய்
குறைவானதே!’ என்கிறார்கள்
அந்த லாபியிஸ்ட்டுகள்.
அணு சக்தி
எதிர்ப்பாளர்களாகிய நாங்கள்
இந்த விவாதத்தில்
மாறுபடுகிறோம். கதிர்வீச்சு
ஆபத்துகள் குறைத்து
மதிப்பிடப்படுகின்றன.
இயற்கைக் கதிர்வீச்சைக்கொண்டு
செயற்கைக் கதிர்வீச்சை
நியாயப்படுத்துவது தவறு.
நேரடி பாதிப்புக்கு
உள்ளாவோரின் கதிர்வீச்சு
உள்வாங்கலைத்தான் கவனிக்க
வேண்டுமே தவிர, அனைத்து
மக்களின் சராசரி உள்வாங்கலை
அல்ல. கதிர்வீச்சோடு
தொடர்புள்ள புற்றுநோய்
குறைவானது என்று
வைத்துக்கொண்டாலும்
சாகடிக்கத்தானே செய்கிறது
இந்த சாத்தான் என்று நாங்கள்
வாதாடுகிறோம்.
அணு சக்தித் தொழிலில்
ஈடுபட்டு இருக்கும்
தொழிலாளர்கள் மற்றும் அவர்
தம் குடும்பங்கள்பற்றியும்
நாம் சிந்தித்தாக வேண்டும்.
இந்தியா முழுவதும்
ஏராளமானவர்கள் நொந்து
சிதைந்துகொண்டு இருப்பதை
நான் பார்த்து இருக்கிறேன்.
அவர்களிடம் பேசி இருக்கிறேன்.
என்னை மிகவும் பாதித்த ஒரு
விஷயத்தைச் சொல்கிறேன்.
கூடங்குளம் அணு மின்
நிலையத்தின் திட்ட
இயக்குநராகப் பணியாற்றி,
பின்னர் இந்தியா முழுவதும்
உள்ள புதிய திட்டங்கள்
அனைத்துக்கும் தலைவராகப்
பொறுப்பேற்றவர் சுனில் குமார்
அகர்வால். நாங்கள் இருவரும்
'எதிரிகள்’ என்றாலும்,
நண்பர்களாகவே பழகினோம். ஒரு
சந்திப்பின்போது, என் அருகில்
அமர்ந்து உணவருந்திப் பேசிக்
கொண்டு இருந்தார்.
விடைபெறும்போது, என்
தோள்களின் மீது வலக் கையைப்
போட்டு அணைத்தவாறே 'ஏன்
இவ்வளவு பயப்படுகிறீர்கள்?
என்னைப் பாருங்கள். இந்தத்
துறையில் இத்தனை வருடங்களாக
வேலை செய்கிறேன். எனக்கு
எதுவும் ஆகவில்லையே?’
என்றார். நானும் எனது இடக்
கையால் அவர் இடுப்பை
அணைத்தவாறு 'அப்படியே
இருக்கட்டும், எனினும் கவனமாக
இருங்கள்’ எனச் சொல்லி
திரும்பி வந்தேன். ஓரிரு
மாதங்களில் அகர்வால்
மரணமடைந்த செய்தியை
நாளிதழ்களில் பார்த்துத்
திடுக்கிட்டுப் போனேன்.
இவ்வளவு ஒரு பெரிய அதிகாரி
இறந்தபோதுகூட, அணு சக்தித்
துறை, அவர் ஏன் இறந்தார்,
எப்படி இறந்தார் என்று வாய்
திறக்கவே இல்லை. 'தி ஹிந்து’
பத்திரிகை, பல உறுப்புகளின்
செயலிழப்பினால் ( Multiple
Organ Failure ) இறந்ததாகக்
குறிப்பிட்டது. புற்று நோயால்
பாதிக்கப்பட்டு இறப்பவர்களின்
மரணத்தை பெரும்பாலும்
மருத்துவ உலகம் இப்படித்தான்
அழைப்பதாகச் சொல்லப்படுகிறது.
நண்பர் அகர்வால் அவர்களின்
ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்க மட்டுமே
முடிந்தது என்னால்!
சி.போஸ்
தாவரவியலில்
இளநிலைப் பட்டம் பெற்ற
கையோடு தமிழகத்தின் பல
பகுதிகளில் தங்கி இருந்து,
சமூகப் பகுப்பாய்வு,
விழிப்பு உணர்வு
பிரசாரங்கள் செய்தவர் போஸ்.
குமரி மாவட்டத்தில் நடந்த
மால்முடிப் போராட்டம்
(1978-80), வெள்ள நிவாரணப்
போராட்டம் (1992)
போன்றவற்றை முன் நின்று
நடத்தியவர். சுற்றுச்சூழல்,
பொருளாதார
ஏற்றத்தாழ்வுபற்றி மக்களைச்
சந்தித்துப் பேசி, சீரிய
சமூக சேவை செய்யும் இந்தச்
சிவப்புச் சிந்தனையாளர்,
துவக்கம் முதலே கூடங்குளம்
அணு மின் திட்டத்தை
எதிர்த்து வருகிறார்.
தேனியில்
ஒரு 'திடுக்’!
''அணு
ஆயுதங்களுக்காகவும்,
பாதுகாப்புக்காகவும்
ஒவ்வொரு வருடமும் நாம்
எவ்வளவு செலவு
செய்கிறோம்
என்பது
உங்களுக்குத்
தெரியும்.
ட்ரில்லியன்
கணக்கான
டாலர்கள்...
அப்படித்தானே?
இதற்குப்
பதிலாக, இப்படி
சிந்தித்துப்
பாருங்கள்.
அந்தப் பணத்தை
உலகம் எங்கும்
உள்ள
ஏழைகளுக்கு,
உணவு,
துணிமணிகள்
வழங்கச் செலவு
செய்தால், நாம்
அனைவரும்
கூட்டாக,
உள்ளேயும்
வெளியேயும்
இயங்கும்
இந்தப்
பிரபஞ்சத்தை
சமாதானமாக
ஆய்வு
செய்யலாமே!''
- பில் ஹிக்ஸ்,
அமெரிக்க நகைச்சுவையாளர்.
இந்தியாவின் தேசியப்
பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்
மேனன், ஃபுகுஷிமா விபத்து
நிகழ்ந்ததும், 'ஜப்பான்போல,
இந்திய அணு மின் நிலையங்களில்
ஆபத்து ஏற்படாது’ என்று
ஆறுதல் சொன்னார். நான்காம்
ஈழப் போரில் ஈழத் தமிழர்கள்
பல்லாயிரக்கணக்கானோர், இனப்
படுகொலை செய்யப்பட்டபோது,
இவர் இந்தியாவின் வெளியுறவுத்
துறைச் செயலராகச் சிறப்புடன்
செயல்பட்டது உங்களுக்கு
நினைவு இருக்கலாம். இவரிடம்
நான் கேட்க விரும்பும் கேள்வி
இதுதான், 'இந்திய அணு மின்
நிலையங்களில் எந்த விதமான
ஆபத்துமே இல்லை என்றால், ஏன்
உங்கள் சொந்த மாநிலமான
கேரளாவில் ஒன்றிரண்டு அணு
மின் நிலையங்களை நிறுவக்
கூடாது?’
உண்மை நிலை என்ன தெரியுமா?
கேரளாவில் உள்ள
பூதத்தான்கட்டு, பெரிங்கோம்
ஆகிய இடங்களில் அணு மின்
நிலையங்கள் தொடங்கப்பட
இருப்பதாக அறிவித்தபோது,
மலையாள மண்ணிலே இந்த அழிவுத்
திட்டம் வேண்டவே வேண்டாம்
என்று கேரளத்தின் அனைத்து
அரசியல் கட்சிகளும், சமூக,
சுற்றுச்சூழல் இயக்கங்களும்
வரிந்து கட்டிக்கொண்டு
எதிர்த்து, இந்தத் திட்டத்தை
முழுவதுமாக நிறுத்தினர்.
'கேரளா காலிங்’ எனும்
பத்திரிகையில் 2003 ஜூன்
இதழில் கேரள விஞ்ஞானி
ஆர்.வி.ஜி.மேனன் என்பவர்,
'கேரளாவில் புதிய அணு மின்
நிலையம் ஒன்றைக் கட்டுவதைவிட,
ஏற்கெனவே கட்டப்பட்டு உள்ள
கூடங்குளத்தில் ஒரு சில
உலைகளை அதிகமாகக் கட்டலாம்’
என்று எழுதுகிறார். 'ஊரான்
வீட்டு நெய்யே, என்
பொண்டாட்டி கையே’ என்பதுபோல
இருக்கிறது கதை!
தமிழகத்தின் தலையும்,
காலும்போன்ற கல்பாக்கம்,
கூடங்குளம் ஊர்களில் தீ
கொளுத்துவதுபோல, வயிற்றுப்
பகுதியான தேனி, மதுரை
மாவட்டங்களில் விஷத்தைக்
கொட்டும் திட்டம் ஒன்றும்
விறுவிறுப்பாக நடந்து
வருகிறது. இது அவ்வளவாக
வெளியே தெரியாத திட்டம்!
பூச்சி இன உலகில் கொசுபோல,
அணுக்களின் பிரபஞ்சத்தில்,
மிகச் சிறிய, ஒளியின்
வேகத்தைக்கொண்ட, மின் சக்தி
கடத்தும் தன்மையற்ற,
பொருட்களின் ஊடே புகுந்து
செல்லும் நுண்ணணுத் துகளை
'நியூட்ரினோ’ என்பார்கள்.
இந்த நுண்ணணுத் துகள்கள்பற்றி
அதிகம் தெரியவில்லை என்பதால்,
பல நாடுகளும், ஆராய்ச்சிக்
கூடங்களும் இவை பற்றி
ஆய்வுகள் செய்து வருகின்றன.
உலகில் வெறும் ஐந்தே
இடங்களில் மட்டும் செயல்படும்
நுண்ணணுத் துகள் நோக்குக்
கூடம் (India-based
Neutrino Observatory -
INO) ஒன்றினை இந்தியாவில்
ஏற்படுத்த அணு சக்தித்
துறையும், இந்திய அரசும்
திட்டம் இட்டன. சுற்றுச்சூழல்
கரிசனங்களால், இத்தாலி,
அமெரிக்காபோன்ற நாடுகளில்
நிறுவப்பட முடியாத இந்தத்
திட்டத்தை, இந்தியாவின்
தலையிலே கட்டுவது எனத்
தீர்மானிக்கப்பட்டதாக,
'நேச்சர்’ பத்திரிகை தனது
2008 செப்டம்பர் இதழில்
குறிப்பிட்டு இருக்கிறது.
1,500 மீட்டர் பருமன் உள்ள
பாறைகளால் பொதியப்பட்டு
இருக்கும் இரண்டு பகுதிகள்
இந்தத் திட்டத்துக்காகத்
தேர்வு செய்யப்பட்டன.
மேற்கு வங்காளத்தில் உள்ள
ராமம் மற்றும் தமிழகத்தில்
உள்ள நீலகிரி மலைப் பகுதி
ஆகியவை பரிசீலிக்கப்பட்டு,
தமிழகமே சிறந்தது எனத் தேர்வு
செய்யப்பட்டது. முதுமலை
வனவிலங்கு சரணாலயத்தின்
சிங்காரா பகுதி
தேர்ந்தெடுக்கப்பட்டு, 2008
டிசம்பர் மாதம் அப்போதைய அணு
சக்தித் துறைத் தலைவர் அனில்
கக்கோட்கர், தமிழக முதல்வர்
கருணாநிதியை சந்தித்து
ஒப்புதல் கேட்டார். ஆனால்,
சிங்காரா பகுதியில் யானைகள்
மற்றும் புலிகள் அதிகம்
உள்ளதால்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு மத்திய
சுற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை அமைச்சகம் திட்டத்தை
நிராகரித்தது. பின்னர் தேனி
மாவட்டம் சுருளி ஆறு பகுதி
பரிசீலிக்கப்பட்டு, அது
மேகமலை வன விலங்கு
சரணாலயத்துக்கு உட்பட்டது
என்பதால், கைவிடப்பட்டது.
இறுதியாக தேனி மாவட்டம்
தேவாரம் பகுதி பொட்டிபுரம்
அருகே உள்ள போடி மேற்கு மலைப்
பகுதியில் நியூட்ரினோ
ஆய்வுக்கூடம் அமைக்கத்
தீர்மானிக்கப்பட்டது. இங்கு
உள்ள மலையில் பல கி.மீ
நீளத்துக்கு பாறையைக்
குடைந்து குகைப் பாதை
அமைக்கப்படும். இதைச்
சுற்றிலும் 1 கி.மீ
தடிமனுக்கு கடினமான பாறை
சூழ்ந்து இருப்பதால்,
நுண்ணணுத் துகள் ஆய்வுக்குப்
பாதுகாப்பாக இருக்கும்
என்றும் சொல்லப்படுகிறது.
2009-ம் ஆண்டு டிசம்பர்
மாதம் தேவாரம்விவசாயிகள்
மற்றும் சுற்றுச்சூழல்
பாதுகாப்புச் சங்கம், மக்கள்
கருத்து அறியும் கூட்டம்
ஒன்றை நடத்தி, மத்திய
அரசையும், தமிழக அரசையும்
வன்மையாகக் கண்டித்தது. 1,200 கோடி
செலவிலான இந்தத்
திட்டம்பற்றிய சுற்றுச்சூழல்
தாக்க அறிக்கை, மக்களோடு
பகிர்ந்துகொள்ளப்படவில்லை.
மக்கள் மத்தியில் எதிர்ப்பு
கிளம்பிவிடுமோ என்று அஞ்சி,
முறையான கருத்துக் கேட்புக்
கூட்டம்கூட நடத்தப்படவில்லை.
2010 ஜூலை மாதம் 8-ம் தேதி
ராமகிருஷ்ணாபுரம் என்ற
கிராமத்தில் வைத்து ஓர்
அறிமுகக் கூட்டம்
நடத்தப்பட்டது. கூட்டத்தில்
கலந்துகொண்ட சின்னமருது என்ற
ப்ளஸ் டூ மாணவன், 'பேரிடர்
நிகழ்ந்தால், தப்பிச்
செல்வதற்கு ஆய்வுக்கூடத்தில்
ஆறு அவசர நிலை வழிகள்
இருக்கும் என்றால், என்ன
மாதிரியான ஆபத்துகளை நாங்கள்
எதிர்நோக்கி நிற்கிறோம் என்று
விளக்குங்கள்’ எனக் கேட்டார்.
சமூகவியலில் முனைவர் பட்டம்
பெற்ற மதுரை அமெரிக்கன்
கல்லூரி முதல்வர் சின்னராஜ்
ஜோசப், 'எந்த விதமான ஆபத்தும்
இல்லை’ என்று பதில்
அளித்தார். 'தண்ணீர்த்
தேவைக்கு என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது,
விஞ்ஞானிகள், 'ஓர் ஆழ்துளைக்
கிணறுகூட தோண்ட மாட்டோம்’
என்றார்கள். செல்லையா எனும்
விவசாயி, அதிகாரிகளின்
பதில்கள் திருப்தியாக இல்லை
என்று முறையிட்டார்.
பொட்டிபுரம் பஞ்சாயத்துத்
தலைவி சுருளியம்மாள் எதுவும்
செய்ய இயலாதவராக இருந்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்
பி.முத்துவீரன், 'உள்ளூர்
மக்கள் திட்டத்தை ஏகமனதாக
ஏற்றுக்கொண்டு இருப்பதால்,
உடனடியாக வேலைகள் துவங்கும்’
என அறிவித்தார்.
தேவாரம் விவசாயிகள் மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்புச்
சங்கம், ஏகப்பட்ட
கேடுகள் நிகழும்
என தங்களது அச்சத்தைத்
தெரிவித்து, இந்தத் திட்டத்தை
தேவாரம் பகுதியில்
செயல்படுத்த வேண்டாம் என
மத்திய, மாநில அரசுகளை
கேட்டுக்கொண்டு
இருக்கின்றனர்.
கல்பாக்கம், கூடங்குளம்,
நியூட்ரினோ, இதர அணு சக்தி
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பல
தமிழகத்தில் இயங்குகின்றன.
இன்னல்களையும்
விளைவிக்கின்றன. இங்கு உள்ள
அரசியல் கட்சிகளும்,
தலைவர்களும் ஏன் வாய் மூடி
மௌனிகளாக இருக்கிறார்கள்?
மேற்கு வங்காளத்தில் பூர்பா
மேதினிப்பூர் மாவட்டம்
ஹரிப்பூரில் திட்டமிடப்படும்
ரஷ்ய அணு உலைத் திட்டத்தை,
திரிணாமூல் காங்கிரஸும்
மாவோயிஸ்ட் இயக்கமும்
எதிர்க்கின்றன. அதுபோல,
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி
மாவட்டத்தில் ஜெய்தாபூர்
எனும் ஊரில் திட்டமிடப்படும்
பிரெஞ்சு நாட்டு அணு உலைத்
திட்டத்தை, சிவசேனா,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கள்
எதிர்க்கின்றனர். ஆனால்,
தமிழகத்தில் இன்னும் ஏன்
அரசியல்ரீதியாக எதிர்ப்பு
எழவில்லை?
பி.சுந்தரராஜன்
ஓரிரு
ஆண்டுகளுக்கு முன்னால்
இந்திய - அமெரிக்க அணு
சக்தி உடன்பாடுபற்றி சென்னை
உயர் நீதிமன்றத்தில் ஒரு
கருத்தரங்கை ஏற்பாடு செய்து
என்னைப் பேச அழைத்தது
முதல், வழக்கறிஞர்
சுந்தரராஜனை நன்கு அறிவேன்.
சென்னை உயர் நீதிமன்ற
வழக்கறிஞரான இவர்,
சட்டத்தில் முதுகலைப்
பட்டம் பெற்றவர். மனித
உரிமை, சுற்றுச்சூழல்
தளங்களில் இயங்கும்
சுந்தரராஜன், 'பூவுலகின்
நண்பர்கள்’ அமைப்புக்கு
சட்ட ஆலோசகர், 'மக்கள்
சட்டம்’ எனும் சட்ட
விழிப்பு உணர்வு இணையத்தின்
நிர்வாகி. அணு சக்தி
சட்டங்களைக் கண்காணித்து
ஆய்வு செய்யும் இவர் www.kalpakkam.netஎன்ற
இணைய தளத்தையும் நடத்தி
வருகிறார்.
lawyersundar.blogspot.com
என்ற வலைப்பூவில்,
சுற்றுச்சூழல், மனித
உரிமைகள் குறித்துத்
தொடர்ந்து எழுதி வருகிறார்.
அணு அரசியலும்
தமிழகத்தின் 'தாழ்ந்த’ நிலையும்...
''நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாட்கள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை
எப்போதும் ஏமாற்றலாம்... ஆனால், எல்லோரையும்... எப்போதும் ஏமாற்ற
முடியாது!''
- ஆபிரகாம் லிங்கன்
தமிழக அரசியல் கட்சிகளின் அணு சக்தி நிலைப்பாடு, இந்தியாவின் மற்ற
கட்சிகளின் நிலையில் இருந்து வேறுபட்டது அல்ல. கிட்டத்தட்ட அனைத்துக்
கட்சிகளுமே அரசக் கூட்டமைப்புக்கு இணங்கி, அதன் வரையறைக்கு உள்ளேயே
இயங்குவதால், அணு சக்தித் திட்டங்களை வளர்ச்சித் திட்டங்களாக,
பாதுகாப்புத் திட்டங்களாகவே பார்க்கின்றனர். அதனால், இந்தத்
திட்டங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்பது, தேவையற்றதாகவும்
தவறானதாகவும் ஆகிறது. எனவே மத்திய அரசும், அணு சக்தித் துறையும்
செய்வதை அப்படியே ஆமோதித்துவிட்டு, 'நமக்கு ஏன் வம்பு?’ என்று
ஒதுங்கிக்கொள்கின்றனர். அணு சக்தித் துறை பலமானதாக ஆகும்போது, அந்த
நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் துறையின் ஒட்டுமொத்தக்
கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதற்கு ஜப்பானும் பிரான்ஸும்
சிறந்த உதாரணங்கள்.
சக்தி மிக்க இந்தத் துறையைப் பகைத்துக்கொள்ளாது, நாட்டின்
வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் எதிரி என்ற அவப் பெயரை
சம்பாதித்துக்கொள்ளாது கவனமாகக் கையாளுகின்றனர் கட்சிகளும்,
தலைவர்களும்.
பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸும், கட்சித் தலைவர் ஜி.கே.மணியும்
பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது மணியிடம்,
கூடங்குளம் அணு மின் திட்டப் பிரச்னைபற்றிப் பேசினேன். அவர் என்னை
ராமதாஸிடம் அறிமுகம் செய்துவைத்து, அவரிடம் பேசச் சொன்னார்.
சுருக்கமாகப் பேசி, 'கூடங்குளம் பிரச்னையில் ஒரு நிலைப்பாடு
எடுங்கள்!’ என்று விண்ணப்பித்தேன். என் கண்களை உற்றுப்
பார்த்துவிட்டு, அமைதியாக... ஆனால், அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.
2007-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடந்த பா.ம.க.
நெல்லை மாவட்ட மகளிர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு
பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ''கூடங்குளம் அணு மின்
நிலையத்தால் இங்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பலர் மனு
கொடுத்தனர். உங்களுடைய கருத்துகளை நான் டெல்லி சென்று அங்கு
உள்ளவர்களிடம் கூறி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்
பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்...'' என்றார்.
2007, மே மாதம் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக்
கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ''கூடங்குளம் அணு மின்
திட்டத்தின் 1,000 மெகா வாட் திறனுடைய முதல் பிரிவின் இயக்கமானது,
டிசம்பர் 2007-ல் இருந்து டிசம்பர் 2008 என்று தாமதமாகிறது. இந்தக்
கால தாமதம் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும்.
எனவே, பிரதம மந்திரியிடம், இந்த அணு மின் திட்டத்தை விரைந்து
இயக்கிவைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!'' என்று அங்கலாய்த்தார்.
2007, டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மேல் சபையில் பேசிய தனது கன்னிப்
பேச்சில் கனிமொழி, ''2020-ம் ஆண்டுக்குள் 30,000 மெகா வாட் மின்சாரம்
தயாரிக்க, நாம் பேராவல் கொண்டுள்ளோம். அமெரிக்காவுடனான 123
ஒப்பந்தம் நிறைவேறாமல், அந்தக் கனவு கை கூடாது. இந்த ஒப்பந்தம், அணு
ஆயுதப் பரவலாக்கத் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாது அணு மின்
தொழில்நுட்பத்தை நாம் பெறவும், 33 வருடத் தடை உத்தரவைக் களைந்து
ராணுவ அணுத் திட்டங்களை நடத்தவும் நமக்கு உதவும் என்று எனது
கட்சியும் நானும் உறுதியாக நம்புகிறோம்...'' என்றார்.
இன்னொரு புறம் தெளிவற்ற நிலையில் தத்தளிக்கும் கட்சிகளைப்
பார்க்கலாம். 2009 அக்டோபரில் அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின்
தேசியக் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் பேரணி நடத்தினோம். அங்கு
வந்த 'புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம், எங்கள்
ஆர்ப்பாட்டத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டபோது, ''கூடங்குளம் அணு
மின் திட்டத்தை உடனே மூட வேண்டும்; பொருள் இழப்புபற்றிக் கவலைப்பட
வேண்டாம்; அரசியல்வாதிகள் ஒரு நாளில் திருடும் பணத்தைத்தான் நாம்
இழப்போம்!'' என உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். ஆனால், ஓரிரு
மாதங்களுக்குள் நிலையினை மாற்றிக்கொண்டு கூடங்குளத்தில் அவர் கட்சி
நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ''கூடங்குளத்தில் உற்பத்தியாகும்
மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்காவிட்டால், தொடர்
போராட்டம் நடைபெறும்!'' என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணு ஆயுதங்களை எதிர்த்தாலும், அணு
உலைகளை ஆதரித்தே வருகிறது. வளர்ச்சி, விஞ்ஞானம் என்று பேசித்
திரிந்தவர்கள், 2008 அக்டோபர் 10-ம் தேதி கையெழுத்து இடப்பட்ட இந்திய
- அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டுக்குப் பின்னர்தான், அணு
மின்சாரத்தின் கடுமையான உற்பத்திச் செலவு, ஆபத்துகள்பற்றிப்
பேசுகின்றனர். பிரகாஷ் காரத் மற்றும் முக்கியத் தலைவர்களோடு, நானும்
நண்பர்களும் நடத்திய விவாதங்கள், உரிய பலனைத் தரவில்லை.
ம.தி.மு.க-வின் கட்சிப் பத்திரிகையான 'சங்கொலி’ இதழில் பொதுச்
செயலாளர் வைகோ, ''கல்பாக்கத்தில் புதிதாக வர்த்தக ரீதியில்
அமைக்கப்பட இருக்கும் இரண்டு 500 மெகா வாட் அதிவேக ஈணுலைகளைக்
கைவிடவும், இருக்கின்ற அணு உலைகளை ஆபத்து இன்றித் தொடர்ந்து
பராமரிக்கவும், விஞ்ஞானிகள் மின்சாரம் தயாரிப்பதற்கான புதிய வழி
வகைகளைக் கண்டறியவும் கேட்டுக்கொள்கிறேன்!'' என்று அறிக்கை
வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கை கூடங்குளம், நியுட்ரினோ பற்றிப்
பேசவே இல்லை.
அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும், மக்களோடும் மக்கள்
பிரச்னைகளோடும் உள்ள தொடர்பு தேய்ந்து வருவது கவனிக்கப்பட வேண்டிய
ஓர் அம்சம். உதாரணம், 2011 மே 19-ம் தேதி வெளியான அதிர்ச்சியான
தகவல். கடந்த இதழில் 'தேனியில் ஒரு 'திடுக்’ என்ற தலைப்பில் தேனி
நியூட்ரினோ திட்டம்பற்றி எழுதி இருந்தோம். அந்தத் திட்டத்துக்கு
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கிவிட்டது என்பதுதான்
அந்தத் தகவல்!
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கின்ற
அ.தி.மு.க. என்ன செய்யப்போகிறது?
அணு சக்திக்கு எதிரான போராட்டத்துக்கு, ஒரு முன்னணி அரசியல்வாதியை
அழைக்கலாம் என்று எண்ணி, சில வருடங்களுக்கு முன் மேனகா காந்தியைத்
தொடர்புகொண்டேன். 'அணு சக்தியை எந்தப் பெண்ணும் ஆதரிக்க மாட்டாள்...’
என்று கடுமையான ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். 'வீதிக்கு வந்து
இதை உரக்கச் சொல்லுங்களேன்’ என்று அழைத்தபோது, 'விருட்’டென்று
விலகிச் சென்றார். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்!
தேனி
நியூட்ரினோ திட்ட அபாயங்கள்
நியூட்ரினோ நோக்குக் கூடம் என்ற சுரங்கம் அமைக்க, பாரம்பரியமாகப்
பயிர் செய்து வரும் வளமான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
சுரங்கம் தோண்டும் வண்டிகள், இயந்திரங்கள் வருவதற்கான பாதைகள்
போடவும் நிலங்கள் எடுக்கப்படும்.
சுரங்கம் தோண்டும்போதும், கற்களை உடைக்கும்போதும் எழும் தூசி,
ஏராளமான பாறைக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில்
கொட்டப்படும்.
கல் பாறைகளில் சுரங்கம் தோண்ட வைக்கும் வெடிகளாலும்,
இயந்திரங்களாலும், எறும்புகள் முதல், மான்கள், சிறுத்தைகள், யானைகள்
வரையுள்ள உயிரினங்களின் வாழ்க்கைமுறை முற்றிலும்
அழிக்கப்பட்டுவிடும்.
சுரங்கத்தைச் சுற்றி 20-30 கி.மீ சுற்றளவுக்கு, மக்களும், கால்
நடைகளும் நடமாட முடியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆடு,
மாடுகள் மேய்க்க முடியாது, மலை ஏற முடியாது.
இந்தத் திட்டம் மத்திய அரசின் அணு ஆய்வுத் திட்டம் என்பதால்,
தேவாரம் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ராணுவக்
களமாக மாற்றப்படும்.
ஹெலிபேடுகள், சிறு விமான தளங்கள் அமைக்கப்படலாம். மக்களின் அன்றாட
வாழ்க்கையும், நடமாட்டமும், முடக்கப்பட்டு, சொந்த ஊரிலேயே அகதிகளாக
வாழ வேண்டி இருக்கும்.
இந்த ஆய்வுக்கூடச் சுரங்கம் அருகே உள்ள ஆனை இறங்கல், இடுக்கி போன்ற
அணைகள் பாதிக்கப்படலாம். இந்த அணைகளின் நீர் அழுத்தத்தால் சுரங்கமே
பாதிக்கப்பட்டு, திட்டம் கைவிடப்பட வேண்டி வரலாம்.
அனைத்துக்கும் மேலாக இந்த ஆய்வுச் சுரங்கத்தில் இருந்து அபாயகரமான
வேதியியல் பொருட்களும், விஷ வாயுக்களும் உருவாகிப் பரவலாம்.
நியூட்ரினோக்கள் கதிர்வீச்சையும் எழச் செய்யும்!
சகோதரி எல்சி ஜேக்கப்
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில்,
கேரளாவில் பிறந்து, தனது 16-வது வயதில் ஜெர்மனிக்குச் சென்று
ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு, பின்னர் அந்த நாட்டிலேயே பாதிரியாராகப்
பயிற்சி பெற்றவர் சகோதரி எல்சி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்தியாவுக்குத் திரும்பியவர் பாதிரியாராகி, சமூக சேவகியாகி,
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, விடுதலைகொண்ட மனித நேயம்
மிக்க சமூகத்துக்காக உழைக்கும் சீர்த்திருத்தவாதியாக உயர்ந்து
நிற்கிறார். மார்த்தாண்டத்தில், 'நவஜோதி’ எனும் அமைப்பை நடத்தி
வரும் இவர், பெண்கள் விடுதலைக்கு உழைப்பவர். உலக சமூக மாமன்றம்
உள்ளிட்ட பல இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். அணு ஆயுதம்,
அணு சக்தி போன்றவற்றுக்கு எதிராக உழைக்கும் உணர்வுபூர்வமான போராளி!
மன்ஹாட்டன்... அணு
ஆயுதப் பயன்பாட்டின் முதல் புள்ளி!
''அணு ஆயுதங்கள் அற்ற உலகம் ஸ்திரத்தன்மை குறைந்ததாகவும், நம்
எல்லாருக்குமே ஆபத்தானதாகவும் இருக்கும்!''
- முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்
கல்லூரி மாணவனாக இருந்தபோதே, அணு ஆயுதங்களை நான் கடுமையாக
எதிர்த்துப் பேசியும், எழுதியும், இயங்கியும் வந்திருக்கிறேன்.
அப்போதைய உலகம், கிழக்கு, மேற்கு என இரு கூறுகளாகப் பிளவுபட்டு
நின்றது. சோவியத் ரஷ்யாவின் தலைமையின் கீழ் இணைந்து நின்ற
கம்யூனிஸ்ட் நாடுகள், வார்சா ஒப்பந்தம் எனும் ராணுவப் பாதுகாப்பு
உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி இருந்தன. மறு பக்கம் அமெரிக்காவின்
தலைமையில் முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி, நேட்டோ எனும் வட
அட்லான்டிக் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினை நிறுவிச் செயல்பட்டன.
இந்தக் கிழக்கு நாடுகள் கம்யூனிஸப் புரட்சியைஉலகெங்கும் பரவச்
செய்து, மொத்த உலகத்தையும் கம்யூனிஸ எதேச்சதிகாரத்துக்குள்
கொண்டுவரத் திட்டம் இடுகின்றன என்று மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின.
மேற்குநாடுகள் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்குள் உலகைத்
தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன என்று கிழக்கு நாடுகள் பதிலடி
கொடுத்தன.
பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றின்
முக்கியத்துவம்பற்றி மேற்கு நாடுகள் பிரசங்கம் செய்தன. பசியின்மை,
பட்டினியின்மை, கலாசார உரிமைகளுக்கு முதலிடம் தந்தன கிழக்கு நாடுகள்.
இரண்டு குழுக்களுக்கும் இடையே பெரும் பனிப் போர் நடந்தது.
கொடூரமான கொலை வெறி அணு ஆயுதங்களையும் பிற சாதாரணமான ஆயுதங்களையும்
குவித்துவைத்துக்கொண்டு, ஆயுதப் போட்டியில் ஈடுபட்டன. தங்களுக்குள்
போர் நிகழ்ந்தால், உலகமே அழிந்துவிடும் என்று பயந்த இந்த இரண்டு
குழுக்களும், மூன்றாம் உலக நாடுகளில் மறைமுகமாக முட்டிக்கொண்டன.
உதாரணமாக, தெற்காசியப் பகுதியில் இந்தியாவை சோவியத் ரஷ்யா ஆதரிக்க,
பாகிஸ்தானை அமெரிக்கா போற்றிப் பாதுகாத்தது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சுபோன்ற நாடுகளின் அணு ஆயுதங்களும்
ஏவுகணைகளும், கிழக்கு நாடுகளைக் குறிவைத்து நிற்க, சோவியத், போலந்து,
கிழக்கு ஜெர்மனி நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ரஷ்ய அணு
ஆயுதங்கள், மேலை நாடுகளைத் தாக்கத் தயாராக நின்றன. ஆயுதக் குரங்கின்
கையில் அபிவிருத்தி அப்பத்தைக் கொடுத்துவிட்டு, அறிவற்ற பூனைகளாய்
அல்லல்பட்டனர்!
எனது தலைமுறையின் இளமைக் கால உலகம் இப்படித்தான் துண்டாடப்பட்டு
இருந்தது. 1989-ம் ஆண்டு உயர் கல்விக்காக நான் அமெரிக்கா சென்றபோது,
சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் கீழே உண்டு, உறைந்து,
உறங்கப்போகிறோமே எனும் பயம் பிடித்து ஆட்டியது. அணு குண்டுகள் வெடிப்பதுபோன்றும், கதிர்
வீச்சுக்கு உள்ளாகி எனது தலைமுடியை இழந்து, நோய்களால்
பரிதவிப்பதுபோன்றும் குரூரமான கனவுகள் தோன்றின. நோடர்டேம்
பல்கலைக்கழகத்துக்கு சென்றதும் நான் கண்ட காட்சி எனது ரத்தத்தை
உறையவைத்தது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஆங்காங்கே கதிர் வீச்சுப்
பதுங்கு குழிகளும், அறைகளும் மஞ்சள் நிற முக்கோண அடையாளங்களுடன்
காட்சி அளித்தன. ஒருக்கால் அணு ஆயுதப் போர் நிகழ்ந்தால், மக்கள் ஓடி
ஒளிந்து கதிர் வீச்சில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவே அந்த
ஏற்பாடு.
இந்த முட்டாள்தனமான அணு ஆயுதப் போட்டியின் வரலாறு, அணுகுண்டு
பிறந்ததில் இருந்து துவங்குகிறது.
1939-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் லியோ சிலார்ட் எனும் இயற்பியல் அறிஞர்,
அமெரிக்க அதிபர் ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அணுப் பிளவு(fission)கோட்பாட்டின் மூலம் சக்தி வாய்ந்த
குண்டு தயாரிக்க முடியும்; ஒரு வேளை, ஜெர்மனியின் நாசிஸ அரசும் இந்த
முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம்; எனவே, அமெரிக்கா இந்த ஆய்வில்
ஈடுபடுவது நல்லது என்று அறிவுரைத்தது அந்தக் கடிதம். ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனும் இந்தக் கடிதத்தில் கையெழுத்து இட்டிருந்தார் (பின்னாளில்
இதற்காக அவர் மனம் வருந்தவும் செய்தார்).
இந்த நிலையில் ஹிட்லர், ஜெர்மனியின் அண்டை நாடான போலந்து நாட்டின்
மீது படையெடுக்க, இரண்டாம் உலகப் போர் துவங்கியது.
ரூஸ்வெல்ட்,யுரேனியம் ஆலோசனைக் குழு ஒன்றை நிறுவினார்.
யுரேனியம் என்பது வெள்ளி நிறத்தில் இருக் கும் உலோக வேதிப் பொருள்.
இயற்கையாகக்கிடைக்கும் யுரேனியம் 99.3 சதவிகிதம் 238 அணு
எடைகொண்டதாகவும் மீதமுள்ள வெறும் 0.7 சதவிகிதம் 235 அணு
எடைகொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டாவது வகை யுரேனியம்தான், அணு
மின்சாரம், அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதைப் பிரித்து
எடுப்பதைத்தான், செறிவூட்டல்(enrichment)என்கிறோம். இது தனது கதிர்
வீச்சில் பாதியை இழக்க 704 மில்லியன் வருடங்கள் ஆகுமாம்!
இப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆய்வுத் திட்டம், மன்ஹாட்டன்
திட்டம் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் 1,30,000 பேர் வேலை
செய்யும் 200 கோடி டாலர் திட்டமாக உருவெடுத்தது. அணு ஆய்வுடன்,
ஜெர்மனி நாட்டில் நடந்துகொண்டு இருந்த ஆய்வுகள்பற்றி உளவு பார்ப்பது,
அணு ஆய்வுக்கான பொருட்களைச் சேகரிப்பது, ஜெர்மனி நாட்டு
விஞ்ஞானிகளைச் சுற்றி வளைப்பது என அராஜகமாகவே வளர்ந்தது மன்ஹாட்டன்
திட்டம்.
1941, டிசம்பர் 7 அன்று ஜப்பானிய விமானங்கள் அமெரிக்காவின் ஹவாய்
தீவுகளில் உள்ள பெர்ல் துறைமுகத்தில் குண்டு மழை பொழிந்தபோது,
அமெரிக்கா... ஜப்பான் மீது போர் தொடுத்தது. நான்கு நாட்கள் கழித்து
ஜெர்மனி, அமெரிக்கா மீது போர் அறிவிப்பை வெளியிட்டது. 'அறிவியல்
ஆய்வு மற்றும் வளர்ச்சி அலுவலகம்’ எனும் அமெரிக்க நிறுவனம் அவசர
அவசரமாகக் கூடி, அணுகுண்டு திட்டம் பற்றி விவாதித்தது.
அடுத்த ஆறு மாதங்களில் ராபர்ட் ஆப்பன்ஹைமர் எனும் விஞ்ஞானியின்
தலைமையில் அணுகுண்டை வடிவமைக்கும் பணி துவங்கியது. அடுத்த இரண்டு
மாதங்களில் டென்னசி மாநிலத்தில் 52,000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு,
ஒரு மாபெரும் பரிசோதனைக் கூடம் நிறுவப்பட்டது. அதேபோல, நியூ மெக்ஸிகோ
மாநிலத்தில் லாஸ் அலமோஸ் எனும் இடத்தில், இன்னும் ஒரு பரிசோதனைக்
கூடம் ஏற்படுத்தப்பட்டது. போர்க் கால அடிப்படையில் திட்டம்
வளர்ந்துகொண்டு இருக்க, 1942-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு
பரீட்சார்த்த அணு உலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில்
இயக்கிவைக்கப்பட்டது.
விறுவிறுவென வேலைகள் தொடர்ந்தன. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், அமெரிக்க
விஞ்ஞானிகளுடன் கைகோத்தனர். முதல் அணு உலை, ஹான்போர்ட் என்கிற
இடத்தில் கட்டப்பட்டது. 1944-ம் வருடம் பல விதமான பரிசோதனைகளும்,
ஆய்வுகளும், முயற்சிகளும் நடந்தன. செப்டம்பர் 2-ம் தேதி இரண்டு
வேதியியல் வல்லுனர்கள் ஃபிலடெல்பியா நகரில் யுரேனியம்
செறிவூட்டப்படும் கருவியைக் கையாளும்போது கொல்லப்பட்டனர். இன்னும்
சிலர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளான ஜப்பானும் ஜெர்மனியும்
பலவீனம் அடைந்து கொண்டு இருந்தன. 1945, மே 7-ம் நாள் நாசி ஜெர்மனி
சரண் அடைந்தது. ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும்,
அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு நடவடிக்கைகளும், ஜப்பான் மீது
வீசுகின்ற திட்டங்களும் தொடர்ந்து கொண்டு இருந்தன. எந்தெந்த
நகரங்களின் மீது அணுகுண்டு வீசலாம் என ஒரு பட்டியலே
தயாரிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனை நடத்தத்
தீர்மானிக்கப்பட்டு, நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள அலமகோர்த்தோ
எனும் இடத்தில், ஜூலை 16 அன்று சோதிக்கப்பட்டது. ஜூலை 24 அன்று
அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை
அழைத்து, அமெரிக்கா அணுகுண்டு தயாரித்துவிட்டது என்று தெரிவித்தார்.
தன் நாட்டு உளவுத் துறை மூலம் இதை ஏற்கெனவே அறிந்திருந்த ஸ்டாலின்
ஆச்சர்யப்பட்டவர்போல நடித்தார். அழிவுக் கோலத்தின் முதல் புள்ளி
வைக்கப்பட்டது!
ச.தனராஜ்
ராதாபுரத்தைச் சார்ந்த,
சட்டம் படித்த இளம் சமூக செயல்பாட்டாளர். அடித்தட்டு மக்களின் நில
உரிமைகளுக்காகச் செயல்படும் 'ஏக்தா பரீஷத்’ எனும் காந்திய
அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர். ஆதிவாசி மக்களின்
உரிமைகளுக்காவும், முன்னேற்றத்துக்காகவும் உழைத்து வரும் தனராஜ்,
அணு உலைகள், அணு ஆயுதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலைச்
சீரழிவுபோன்ற விஷயங்கள் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே
விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்து வருகிறார். தனது கல்லூரி
நாட்களில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டங்களில்,
பொது மக்களையும் இளைஞர்களையும் அணி திரட்டியவர் இவர்!
யார் அந்த ஓபன் ஹெய்மர்?
''அணு ஆயுத வல்லரசு என்பதால், அதுவும் அணு ஆயுதத்தை உபயோகித்து
இருக்கும் ஒரே நாடு என்பதால், அமெரிக்காவுக்கு சில தார்மீகப்
பொறுப்புகள் உள்ளன!''
- அமெரிக்க அதிபர் ஒபாமா
ராபர்ட் ஓபன் ஹெய்மர்... சுருக்கமான வார்த்தைகளில் சொன்னால்,
அணுகுண்டின் தந்தை. மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கியப்
பங்கு வகித்தவர். 1945 ஜூலை 16-ம் நாள் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ
மாநிலத்தில் நடந்த டிரினிட்டி பரிசோதனைதான் உலகின் முதல் அணு ஆயுதப்
பரிசோதனை!
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் முதல் அணுகுண்டு வடிவமைப்பை
முழுவதுமாக மாற்றி இருந்தார். ஓபன் ஹெய்மரின் முதல் காதலி
ஜீன் டாட்லாக், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த அழுத்தமிக்க சூழலில் அணுகுண்டுப் பரிசோதனை ஏற்பாடுகள்
நடந்துகொண்டு இருந்தன.
அந்த நாளும் வந்தது. உலகின் முதல் அணு ஆயுதப் பரிசோதனைக்காக
கட்டுப்பாட்டுப் பதுங்கு குழிக்குள் நின்று இருந்த ஓபன் ஹெய்மர்
மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். மூச்சுவிடக்கூட திணறினார்.
தன்னை நிலைகுலையாமல் வைத்திருக்க அருகே இருந்த ஒரு இரும்புத் தூணைப்
பிடித்துக்கொண்டார். வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். '3...
2... 1...’ என்று அறிவிப்பாளர் முடித்ததும், 'எங்கெங்கு காணினும்
சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடா’ என்று பாரதியார் சொன்னதுபோல, மிகப்
பிரமாண்டமான பிரளய ஒளிப் பிழம்பு தோன்றி ஜொலித்தது. அதைத் தொடர்ந்து
ஒரு சினங்கொண்ட சிங்கத்தின் கர்ஜனையாக அந்த வெடிப்பு ஒலித்தது. ஆழமாக
மூச்சுவிட்ட ஓபன் ஹெய்மர் முகம் இறுக்கத்தின் பிடியில் இருந்து
தளர்ந்தது.
'வேலை செய்துவிட்டது’ என்று மட்டும் அவர் முணுமுணுத்ததாக அருகே
இருந்த, அவர் சகோதரர் ஃபிராங் ஓபன் ஹெய்மர் சொன்னார். பரிசோதனை
வெடிப்பு வெற்றி அடைந்ததும் பகவத் கீதையின் சுலோகம்தான் தன் மனத்தில்
தோன்றியதாக ஓபன் ஹெய்மர் பின்னர் தெரிவித்தார். 'ஓராயிரம் சூரியன்கள்
ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக
இருக்கும்!’ இந்த மாபெரும் சக்தியைப் பார்த்தபோது இன்னொரு கீதையின்
சாரமும் தனக்குள் நினைவு வந்ததாக ஓபன் ஹெய்மர் சொன்னார். அது, 'நான்
மரணமாக மாறிவிட்டு இருக்கிறேன்; உலகங்களை உருக்குலையச்
செய்பவனாகிவிட்டேன்!’
இந்த இணையற்ற இயற்பியல் அறிஞரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது
அவசியம். ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஜவுளி
வியாபாரியான ஒரு பணக்கார யூதருக்கு 1904-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
இவரின் தாய் ஓர் ஓவியர். நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்த
ராபர்ட்டும், அவர் தம்பி ஃபிராங்கும் சிறந்த பள்ளிகளுக்குச் சென்று
சிறப்பாகப் படித்தனர். ஓபன் ஹெய்மர் தனது 20-வது வயதில்
ஐரோப்பாவுக்கு உயர் கல்வி கற்கச் சென்றார். அங்கே தன் ஆசிரியர்
ஒருவரோடு ஏதோ உரசல் வர, அபாயகரமான அமிலத்தில் ஓர் ஆப்பிள்
பழத்தைத் தோய்த்து, அவர் மேஜையில் வைத்துவிட்டார். அதைக்
கண்டுபிடித்த, பல்கலைக்கழகம் இவரைத் தற்காலிக நீக்கம் செய்ய
முடிவெடுத்தபோது, பெற்றோர் மன்றாடித் தடுத்துவிட்டனர்.
ஓயாமல் புகைபிடிக்கும் பழக்கமும், ஓய்வின்றி உழைக்கவும்,
சாப்பிடவும் மறந்துபோகும் ஓபன் ஹெய்மர் அடிக்கடி மனஅழுத்தத்துக்கு
உள்ளானார். பாரிஸில் ஒரு நண்பரை சந்திக்கச் சென்ற ஓபன் ஹெய்மர், தனது
இயற்பியல் ஆய்வுகளை விவரித்துக்கொண்டு இருந்த நேரத்தில், திடீரென
நண்பரின் மீது தாவிக் குதித்து
கழுத்தை நெரித்தார். அந்த நண்பர் அப்போது தப்பித்துக்கொண்டாலும்,
ஓபன் ஹெய்மரின் மனப் பிரச்னைகள் உலகுக்கு வெட்ட வெளிச்சமாயின.
ஆனாலும் 24-வது வயதிலேயே ஓபன் ஹெய்மருக்கு பிரசித்தி பெற்ற ஒரு
கல்வி மானியம் கிடைத்தது.அதைத் தொடர்ந்து, கலிஃபோர்னியா
தொழில்நுட்பக் கல்லூரியும் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் அவரைத்
தமதாக்கிக்கொள்ளப் போட்டியிடவே, இரு கல்வி நிலையங்களிலும் ஓர் ஆண்டு
ஆய்வு செய்யலாம் என ஏற்பாடானது.
முதலில் கலிஃபோர்னியா சென்ற ஓபன் ஹெய்மர், அங்கே லினஸ் பாலிங் என்ற
அறிஞரோடு நட்பானார். பாலிங்கின் மனைவியுடனும் ஓபன் ஹெய்மர்
உரிமையுடன் பழகத் தொடங்கவே, அந்த நட்பு விரைவில் முடிவுக்கு வந்தது.
மீண்டும் ஐரோப்பாவுக்குச் சென்று பரிணாம இயந்திரவியலில் (Quantum
Mechanics) ஆய்வுகள் செய்த ஓபன் ஹெய்மர், 1929-ம் வருடம்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் பேராசிரியராகப்
பொறுப்பு ஏற்றார். அவரது பேரறிவால், மாணவர்களை வசியம் செய்து
தன்னைப்போன்றே சிந்திக்கத் தூண்டினார். நோபல் பரிசு பெற்ற பல
அறிஞர்களோடு பணியாற்றினார். பிற்காலத்தில் புகழ்பெற்ற பல மாணவர்களை
உருவாக்கினார். இயற்பியலில் நிறைய ஆய்வுகள் செய்து, ஏராளமான
கட்டுரைகள் எழுதினார். எனினும் ஒன்றிரண்டு தலைப்புகளில் மட்டும்
ஆழமாகச் சென்று தனக்கென ஓர் இடத்தைத் தேடிக்கொள்ளத் தவறினார்.
1933-ம் ஆண்டு சம்ஸ்கிருத மொழியைப் பயின்றார். பகவத் கீதையை
சம்ஸ்கிருத மொழியில் படித்தார். 'தனது வாழ்க்கைத் தத்துவத்தை
செம்மைப்படுத்திய புத்தகம் அதுதான்’ என்றார். இந்து மதத்திலும், ஏனைய
மதங்களிலும் ஈடுபாடுகொண்டார். இது மாதிரியான பல்வேறு ஈடுபாடுகளால்,
மூன்று முறை நோபல் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட்டும், தேர்வு பெறத்
தவறினார்.
ஓபன் ஹெய்மர், உலக வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கியே நின்றார்.
பத்திரிகைகள் படிப்பது இல்லை, வானொலி கேட்பது இல்லை, தேர்தல்களில்
வாக்களிப்பது இல்லை. தன் தந்தையார் விட்டுச்சென்ற பெரும் தொகையை
அப்படியே கலிஃபோர்னியா பல்கலைக்கழக உயர் கல்வி மாணவர்களின் உதவித்
தொகைக்காக வழங்கினார். இடதுசாரிக் கொள்கைகளிலும், இயக்கங்களிலும்
ஆர்வமாய் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் 'பீப்பிள்ஸ் வேர்ல்ட்’
(மக்களின் உலகம்) எனும் பத்திரிகையின் சந்தாதாரராக இருந்தார்.
ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் விவாதக் குழுக்களில் பங்கேற்கும்
அளவுக்கு இயக்கத்தோடு தொடர்பு. ஆனால், அமெரிக்க அரசின் பாதுகாப்பு
சோதனைகளுக்கு உள்ளானபோது, 'தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்
அல்ல’ என்றும், சக பயணி மட்டுமே என்றும்
சொன்னார். கம்யூனிஸ்ட் கொள்கைகளில் விருப்பம் இருந்தாலும்
கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வரும் கட்டளைகளை ஏற்கவில்லை.
மன்ஹாட்டன் திட்டத்தில் வேலை செய்வதற்காக பாதுகாப்பு அனுமதியை வழங்க
அமெரிக்க அரசு தயங்கியபோது, திட்டத் தலைவர் லெஸ்லி குரோவ்ஸ், இந்த
திட்டத்துக்கு ஓபன் ஹெய்மர் முக்கியமானவர் என்று வற்புறுத்தினார்.
திட்டம் வெற்றி அடைந்து, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்க
அணுகுண்டுத் தாக்குதல் நடத்திய நேரத்தில் ராபர்ட் ஓபன் ஹெய்மர் பெயர்
அமெரிக்க இல்லங்களில் உரக்கவே ஒலித்தது. அணு இயற்பியல் பற்றி அனைத்து
நாடுகளுமே சிந்திக்கத் துவங்கின. மனித குலத்தின் பாதுகாப்பு,
எதிர்காலம்பற்றி ஆழமாகக் கவலைகொள்ளத் தொடங்கியது உலகம்!
1947-ம் ஆண்டு அணு சக்தி ஆணையம் துவங்கப்பட்ட போது, அதன் ஆலோசனைக்
குழுத் தலைவராக ராபர்ட் ஓபன் ஹெய்மர் நியமிக்கப்பட்டார். ஆயுதப்
போட்டிக்கு எதிராகவும், சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டுக்காகவும்
உழைத்தவர் என்றாலும், அணு ஆயுதங்களை முழுவதுமாக எதிர்க்கவில்லை
ராபர்ட்.
காத்ரீன் ஹாரிசன் எனும் திருமணமான ஒரு பெண்ணோடு நெருங்கிப்
பழகினார். அவரைக் கணவரிடம் இருந்து பிரித்து, மணந்துகொண்டார்.
பீட்டர் என்ற மகனும் டோனி என்ற மகளும் பிறந்தார்கள். பின்னர் ஒரு
கட்டத்தில் அமெரிக்க அரசின் சந்தேகத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளான
பிறகு, விர்ஜின் தீவுகளில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, ஒரு வீட்டைக்
கட்டிக்கொண்டு, மனைவியோடும் குழந்தைகளோடும் தனியே போனார். பாய்மரப்
படகு ஓட்டுவதில் பெரும் பகுதி நேரத்தைக் கழித்தார். 1965-ம் ஆண்டு
இறுதியில் ஓபன் ஹெய்மருக்குத் தொண்டையில் புற்று நோய் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
வேதியியல் சிகிச்சை, கதிரியக்க மருத்துவம், அறுவை சிகிச்சை
அனைத்துமே தோற்றுப்போன நிலையில், 1967, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி
கோமாவுக்குப் போனார். அதற்குப் பின் மூன்றே நாட்களில், அணுகுண்டின்
முதல் புள்ளிக்கு முற்றுப் புள்ளி விழுந்தது. 62 வருடங்கள் வாழ்ந்த
இந்த இயற்பியல் மேதையின் வாழ்க்கை, அணு சக்தி எனும் நச்சுப் பாம்பின்
தலைப் பகுதியாகவே இன்று வரை கருதப்படுகிறது!
வே.சாண்டல்
முத்துராஜ்
மாவட்டப் பஞ்சாயத்து
கவுன்சில ராகப் பணியாற்றும் சாண்டல் முத்துராஜ், கூடங்குளம்
கிராமத்தைச் சார்ந்தவர். பாளையங்கோட்டையில் படித்து இளங்கலை பட்டம்
பெற்றவர். முழு நேரச் சமூக சேவகராக இயங்கி வரும் சாண்டல், மக்கள்
உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கூடங்குளம் அணு மின்
நிலையத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை முன் நின்று நடத்தி
வருகிறார். இவர், அணு மின் திட்டம் சம்பந்தமான பிரச்னைகளைத் தனது
அறிக்கைகள் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் அவ்வப்போது
சுட்டிக்காட்டும் இளம் போராளி!
என்ரிகோ ஃபெர்மி - உலகின் முதல் அணு
உலையின் கர்த்தா!
''அணு குண்டு எதிர்காலம், போரைத் தாங்க முடியாததாக மாற்றி
இருக்கிறது!''
- ராபர்ட்
ஓபன்ஹைமர்
அணு ஆயுதம் எனும் சாதத்தை இலையில் பரப்பிப் பரிமாறியவர் ராபர்ட்
ஓபன்ஹைமர் என்றாலும், இதைச் சமைக்க உதவியவர்கள் பலர்!
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், 1905-ம் ஆண்டு தனது
சார்பியல் தத்துவத்தை E = mc2 எனும் எளிய சமன் பாட்டின் மூலம்
சொன்னார். இதில் c என்பது ஒளியின் வேகம். அவ்வளவு ஒரு பெரிய எண்ணை
அந்த எண்ணாலேயேப் பெருக்கி, அந்த அபரிமித வேகத்தோடு ஒரு பொருளை (m -
mass )தாக்கும்போது பிரமாண்டமான அளவு சக்தி (E - energy) பிறக்கும்
என்றார். இதே காலகட்டத்தில், 27 வயதான இளம் பெண் லிசே மெய்ட்னர்,
ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தில் இருந்து
இயற்பியலில் முனைவர் பட்டத்தோடு வெளியே வந்தார். எட்டுக்
குழந்தைகள்கொண்ட ஒரு யூதக் குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்த லிசே
மிகவும் புத்திசாலி. ஆனால், அந்தக் காலத்தில் பெண்கள், கல்லூரிகளில்
படிக்கப் போக முடியாது. எனவே, பெற்றோர் உதவியோடு வீட்டில்
இருந்தபடியே இயற்பியல் பாடங்களைத் திறம்படக் கற்றார். பெர்லின்
நகரில் பணியாற்றிய ஒரு பேராசிரியரிடம் சென்று, இன்னும் படிக்க
விரும்பினார். லிசேயின் முயற்சி வெற்றி அடைந்தது. அந்தப் பேராசிரியர்
லிசேவை மாணவியாக ஏற்றுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து தனது
உதவியாளராகவும் அங்கீகரித்தார். அடுத்து, ஓட்டோ ஹான் எனும்
இயற்பியலாளரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
1930-ம் வருடம் நியூட்ரான் கண்டுபிடிக்கப் பட்டபோது, யுரேனியத்தைவிட
கடினமான உலோகத்தை பரிசோதனைக் கூடத்தில் தயாரிக்க முடியுமா எனும்
கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த சோதனைகள் துவங்கின.
லிசே தனது சகோதரியின் மகன் ஒருவருடன் சேர்ந்து ஆய்வுகள் செய்து
யுரேனியத்தின் அணு மையம் பிளவுபட்டு, பேரியம், கிரிப்டான் அணுக் களாக
மாறுவதையும், உதிரி நியூட்ரான்கள் வெளிப்படுவதையும், இவற்றோடு
மட்டற்ற சக்தி வெளிப்படுவதையும் கண்டார். அணுப் பிளவு எனும் புதிய
அறிவியல் சகாப்தம் உருவாயிற்று!
உலகில் உள்ள பெரும்பான்மையான தனிமங்கள் நிலைத்த தன்மைமிக்க
அணுக்களையே கொண்டுள்ளன. ஆனால், யுரேனியம் எனும் மூலப் பொருள் மட்டும்
நிலைத்த தன்மை உடையதாக இல்லை. யுரேனியத்தில் இரண்டு வித ஐசோடோப்புகள்
உள்ளன. அவை U - 238, U - 235 என்பவையாகும்.
அதாவது இரண்டு வித ரவா லட்டுகள் என்று கற்பனை செய்துகொள்வோம்.
இரண்டிலுமே சீனித் துகள்கள் எனப்படும் புரோட்டான்களும் ரவைத்
துகள்கள் எனப்படும் நியூட்ரான்களும் இருப்பதாகக் கொள்வோம். இதில் ஒரு
ரவா லட்டின் மீது ஒரு ரவைத் துகளை எறிந்தால், அந்த ரவா லட்டு உடனே வெடித்துச் சிதறுகிறது.
அப்படி வெடிக்கும்போது வெளிப்படும் ஒவ்வொரு ரவைத் துகள்களும்
(நியூட்ரான்) அருகே உள்ள ரவைத் துகள்களைத் தாக்கி மீண்டும் வெடிக்கச்
செய்யும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வெடிப்புக்குள்,
வெடிப்புக்குள், வெடிப்புக்குள் என்று தொடர்ந்து நடக்கும்போது அளவிட
முடியாத சக்தி வெளிப்படுகிறது. அணுவுக்குள் நடக்கும் இந்த வாண
வேடிக்கையைத் தொடர் எதிர்வினைகள் என்கிறோம்.
இந்த ரவா லட்டின் மீது இன்னும் கொஞ்சம் பொருட்களைச் சேர்த்து
புளூட்டோனியம் அணுவாக மாற்றி, அதனை அணு குண்டு வெடிப் பொருளாகவும்
பயன்படுத்தலாம். இதனைச் செய்வதற்கு அணு மின் நிலையங்கள் உதவுகின்றன.
எனவேதான் அணு குண்டுகளையும், அணு மின் நிலையங்களையும் ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்களாகப் பார்க்கிறோம். அணு மின் நிலையங்கள் மின்சாரம்
தயாரிப்பதற்காக என்று நம்மிடம் சொல்லப்பட்டாலும், உண்மையிலேயே அவை
அணுகுண்டுக்குப் பயன்படும் வெடிப் பொருளைத் தயாரிக்கின்றன. இந்த அணு
ஆட்டத்தில் 'பூவா தலையா’ என்று கேட்பது தவறு. காரணம், இரண்டுமே
அழிவுதான்!
'அணுப் பிளவு’ பற்றிக் கண்டறிந்த லிசே மெய்ட்னரை மன்ஹாட்டன்
திட்டத்தில் பணியாற்ற அழைத்தபோது, 'அணு ஆயுதத்தோடு எந்தவிதமான நட்போ,
உறவோ வைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
அதனால், என்ரிகோ ஃபெர்மி எனும் இத்தாலிய விஞ்ஞானி பின்னர் மன்ஹாட்டன்
திட்டத்தில் பெரும் பங்கு வகித்தார். உலகின் முதல் அணு சக்தி
நிலையத்தை அமைத்தவர் இவர்தான்.
இளமைப் பருவத்தில் தனது அண்ணனோடு கையில் கிடைத்த இயந்திரங்களை
எல்லாம் உடைத்துப் பிரித்துப் பார்த்தார் என்ரிகோ. அவரது ஆசை அண்ணன்
நோய்வாய்ப்பட்டு இறந்தபோது, அந்த மாபெரும் இழப்பைத் தன் மனதில்
இருந்து அகற்றுவ தற்காக அண்ணன் இறந்த மருத்துவமனை முன்பு நடந்து
திரிந்தபடியே இருந்தாராம். கூடவே இயற்பியல் புத்தகங்களை ஆழ்ந்து
படித்தார். தனது 17-வது வயதில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்
என்ரிகோ எழுதிய கட்டுரையைப் படித்த தேர்வாளர், 'அந்தக் கட்டுரைக்கு
முனைவர் பட்டமே தரலாம்’ என்று வியந்து போற்றினாராம்.
தனது 22-வது வயதில் ஐன்ஸ்டினின் சமன்பாட்டில் அணு சக்தியின் ரகசியம்
அடங்கிக்கிடப்பதாய் சொன்னார். ரோம் நகரில் தங்கியிருந்த என்ரிகோ
நிறையப் பரிசோதனைகள் செய்தார். ஏராளமாக எழுதினார். பின்னாளில் அணு
உலைகளில் பயன்படுத்தப்பட்ட வேகமற்ற நியூட்ரான்கள் பற்றி ஆய்வு
செய்தார். தனது 37-வது வயதில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார்.
அந்தச் சமயத்தில் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினி,
ஜெர்மனியின் கொடுங்கோலன் ஹிட்லரைக் காப்பியடித்து இனப் பிரகடனம்
ஒன்றை வெளியிட்டார். இந்த இனவெறிக் கொள்கை யூதப் பெண்மணியான தனது
மனைவியைப் பாதிக்கும் என்று அஞ்சிய என்ரிகோ, நோபல் பரிசு
பெற்றக் கையோடு தனது மனைவி, குழந்தைகளோடு அமெரிக்காவில் தஞ்சம்
புகுந்தார்.
நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு
இருந்தபோது, லிசே மெய்ட்னரும் அவரது மருமகனும் கண்டு உணர்ந்த அணுப்
பிளவு சோதனைகள்பற்றிக் கேள்விப்பட்டு, தமது பல்கலைக்கழகத்தில்
வெற்றிகரமாக செய்து பார்த்தார். அங்கே இருந்து சிகாகோ
பல்கலைக்கழகத்துக்குச் சென்று பணியாற்றிய என்ரிகோ, முதலாவது அணு
உலையை வடிவமைத்தார். அனைத்துக் கணக்கீடுகளையும் சரியாகக் கணித்து,
அத்தனைப் படிகளையும் துல்லியமாக அமைத்து அன்றைய இயற்பியலில்
உச்சத்தில் ஏறி நின்றார். மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கியப்
பங்காற்றி, ஹான்போர்ட் அணு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு
ஆற்றினார்.
ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுதத் தாக்குதல்களுக்குப் பிறகு, ராபர்ட்
ஓபன்ஹைமரோடு சற்றே இணைந்து பணியாற்றினார். 53 வயதே ஆகியிருந்த
நிலையில், வயிற்றில் புற்று நோய் தாக்கி மரணம் அடைந்தார் என்ரிகோ.
பல்கலைக்கழகத்தில் அவரோடு ஆய்வுகள் செய்த இரண்டு ஆய்வு மாணவர் களும்
புற்று நோய் ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இவர்கள், எவ்வளவு பெரிய
இருளுக்குள் நம் உலகைப் புதைத்துவிட்டனர்
என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது!
எம்.வி. ரமணா
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன்
பல்கலைக்கழகத்தில், 1994-ம் ஆண்டு இயற்பியலில் முனைவர் பட்டம்
பெற்றார் ரமணா. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் 'அறிவியல் மற்றும்
உலகப் பாதுகாப்பு’த் துறையில் பணியாற்றிவிட்டு, 2004 முதல் 2009
வரை பெங்களூருவில் வேலை செய்தார். இப்போது மீண்டும் பிரின்ஸ்டன்
பல்கலைக்கழகம் சென்று பருவ நிலை மாற்றம் மற்றும் அணு ஆயுத நீக்கம்
போன்ற விஷயங்களில் அணு சக்தியின் பங்கு பற்றி ஆய்வுகள் செய்கிறார்.
அணு சக்தி சம்பந்தமான பல்வேறு சர்வதேச குழுக்களில் பங்கேற்கும்
ரமணாவும் நானும், பல நாடுகளுக்குச் சென்று அணு சக்திக்கு எதிராகப்
பேசி, இயங்கி வருகிறோம்!
அணு ஆயுதமும் அரச
பயங்கரவாதமும்!
''அணுகுண்டுவின் துயரம் நிறைந்த முக்கியத்துவத்தை நான் உணர்கிறேன்.
அச்சம் தருகின்ற ஒரு பொறுப்பு எங்களுக்கு வந்திருக்கிறது. எங்கள்
எதிரிக்கு வருவதற்குப் பதிலாக எங்களுக்கு வந்திருக்கிறது என்பதால்
கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். அவரது நோக்கங்களுக்காக அவரது வழிகளில்
அதனை உபயோகிக்க அவர் எங்களை வழிநடத்த பிரார்த்திக்கிறோம்!''
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி ட்ரூமன்
முதல் அணுகுண்டு 1945-ம் ஆண்டு ஜூலை 16 அன்று சோதனை செய்யப்பட்டது.
அதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே ராபர்ட் ஓபன்ஹைமர் தலைமையிலான
ஒரு குழு ஐந்து ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்குதலின்
இலக்குகளாகப் பரிந்துரைத்தது. ஜப்பா னின் மீது அதிக அளவிலான
மனோதத்துவ தாக் கத்தை உண்டு பண்ணவும், சர்வதேச அளவில் அணு
குண்டுகளின் வல்லமையை பறை சாற்றவும் இந்த இலக்குகள் கவனமாகத் தேர்வு
செய்யப்பட்டன!
ஜூலை 26 அன்று அமெரிக்க அதிபர் ட்ரூமன் மற்றும் நேச நாடுகளின்
தலைவர்கள் பாட்ஸ்டாம் பிரகடனம் என ஒன்றை அறிவித்து, ஜப்பான் உடன
டியாக சரண் அடையவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்போவதாகச்
சொன்னார்கள். ஆனால் அந்த பிரகடனம் அணுகுண்டு பற்றி மூச்சு விடவில்லை.
ஜூலை 28 அன்று இந்தப் பிரகடனத்தை தாங்கள் நிராகரிப்பதாக ஜப்பான் அரசு
தெரிவித்தது. ஜூலை 31 அன்று, 'ஜப்பானிய மகுடம் பாதுகாக்கப்பட்டாக
வேண்டும்’ என்று ஜப்பான் அரசர் வலியுறுத்தினார். அமெரிக்கர்களின்
அணுகுண்டுத் தாக்குதல் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.
போர்க்குரல் மட்டுமே எழுப்பினர். ஆனால் அசுரத்தனமான ஓர் ஆயுதத்தோடு
அமெரிக்கர்கள் அமைதியாகத் தாக்குதல் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு
இருந்தனர்.
ஒரு சில தொழிற்சாலைகளையும், இராணுவ முகாம்களையும் கொண்ட ஹிரோஷிமா
நகரம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சுமார் 3.5 லட்சம் மக்கள்
போருடன் வாழ்ந்து, வாழ்க்கையுடன் போராடிக் கொண்டு இருந்தனர்.
ஆகஸ்ட் 6-ம் நாள், மேகங்களற்ற தெளிவான வானிலை தவழ்ந்து கொண்டு
இருந்தது. ஹிரோஷிமாவின் மேல்... பசிபிக் பெருங்கடலின் மேற்குப்
பகுதியிலிருந்து கர்னல் பால் டிபட்ஸ், தனது தாயாரின் பெயரைத் தாங்கிய
'எனோலா கே’ பி-29 ரக விமானத்தில் வீறிட்டுப் பறந்தார். சுமார் ஆறு
மணி நேரம் பறந்து 30,000 அடி உயரத்தில் மிதந்தது விமானம். பாதுகாப்பு
அமைப்புகள் நீக்கப்பட்டு 'லிட்டில் பாய்’ அணுகுண்டு வெடிப்ப தற்குத்
தயார் செய்யப்பட்டது.
ஜப்பானிய ராடார்கள் இந்த விமானத்தையும், துணைக்கு வந்த மற்ற இரண்டு
வகை பி-29 வகை விமானங்களையும் படம் பிடித்துக்காட்டின. ஓரிரு
விமானங்கள் மட்டும்தானே சுற்றிக் கொண்டு இருக்கின்றன என்று
மெத்தனமாய் இருந்த ஜப்பானிய விமானப் படை, தமது விமானங்களையும்,
எரிபொருளை யும் சேமிப்பதற்காக வாளாவிருந்தனர். கர்னல் டிபட் ஸுக்கு
இது சாதகமாகப் போயிற்று.
ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15 மணி. திரும்பிப் படுத்து, சோம்பல்
முறித்து, மெதுவாக கண்களைத் திறந்து, கட்டிலில் இருந்து எழுந்திட
முயற்சி செய்பவனை சம்மட்டியால் தலையில் அடித்து சாய்ப்பதைப் போல,
இயங்கத் துவங்கிய ஹிரோஷி மாவின் இடுப்பு முறிக்கப்பட்டது. 60 கிலோ
எடை உள்ள U235 யுரேனியம் கொண்ட அணுகுண்டு, விமானத்தில் இருந்து 43
வினாடிகள் பயணித்து 1,900 அடி உயரத்தில் மாபெரும் இடியென வெடித்தது.
காற்று வீசிக் கொண்டு இருந்ததால் குறி வைக்கப்பட்ட அயோய் பாலம்
தப்பித்தது. ஆனால் ஹிரோஷிமா நகரின் இதயம் எரிந்து அழிந்தது.
கிட்டத்தட்ட 78,000 பேர், அதாவது ஹிரோஷிமாவின் மக்கள் தொகையில் 30
சதவிகிதம், உடனடியாக வெந்து, கருகி, ஆவியாகி அப்படியே இறந்தனர்.
சுமார் 14,000 பேர் காணாமல் போயினர். ஏறத்தாழ 70,000 மக்கள்
காயமடைந்தனர். ஹிரோஷிமாவில் இருந்த 90,000 கட்டடங்களில் 62,000
அழிந்து போயின. சாவு சதிராட்டம் போட, அழிவு தாண்டவம் ஆட, மனிதகுலம்
நொடிந்து வீழ்ந்தது!
தலைநகர் டோக்கியோவில் இருந்தவர் களுக்கு எதுவும் புரியவில்லை.
ஹிரோஷிமா நகரின் வானொலி நிலையம் செயல் இழந்து விட்டது. தந்தி வழி
தகவல்கள் தடைபட்டன. ராணுவ நிலையங்களில் இருந்து எந்தச் செய்தியும்
வரவில்லை. ஜப்பானிய அதிகாரிகள் ஓர் இளம் இராணுவ வீரரை அனுப்பி
பார்த்துவரச் சொன்னார்கள். அவரும், அவரது விமானியும் 3 மணி நேரம்
பறந்து ஹிரோஷிமாவை நெருங்கியபோது, கண்ட காட்சி அவர்களை அலற வைத்தது.
நகரின் மீது ஒரு புகைப்படலம் பெரிய மேகம் போல படர்ந்து கிடந்தது.
அதற்குக் கீழே ஒட்டு மொத்தமாய் ஊர் எரிந்து கொண்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரூமன், 'ஹிரோஷிமா எனும் இராணுவ முகாம் மீது முதல்
அணுகுண்டு போடப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் கொல்லப்படக்கூடாது
என்பதற்காகவே அப்படி செய்யப்பட்டதாகவும்’ திருவாய் மலர்ந்தருளினார்.
ஹிரோஷிமாவில் பொதுமக்கள் யாருமே இல்லை வெறும் இராணுவ வீரர்கள்
மட்டும்தான் இருந்தார்கள் என்று உலகை நம்ப வைப்பதற்காக அவர் சொன்ன
பொய் இது! ஜப்பானிய அக்கிரமத்துக்குத் தக்க பதிலடி கொடுக்கவும்,
லட்சக்கணக்கான அமெரிக்க உயிர்களை இழக்காமல் இருக்கவுமே அணுகுண்டு
உபயோகிக்கப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு வாதிட்டது. அரசியல்வாதிகளும்,
அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் இந்தப் பிரசாரத்தைத் தொடர்ந்து பரப்பி
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தின!
'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்ற கதை போல சோவியத் ரஷ்யா,
ஆகஸ்ட் 9 அன்று ஜப்பான் மீது போர் தொடுத்தது. அமெரிக்கா தனது
இரண்டாவது அணுகுண்டான 'ஃபேட் மேன்’ என்பதனை கொக்குரா நகர் மீது வீச
எடுத்துச் சென்று... அங்கே மேக மூட்டம் அதிகமாக இருந்ததால், நாகசாகி
நகர் மீது வீசியது. இந்த 6.5 கிலோ புளுட்டோனியம் குண்டு வெடித்ததில்
40,000 முதல் 75,000 பேர் வரை உடனடியாக இறந்தனர். ஆகஸ்ட் மூன்றாவது
வாரத்தில் ஓர் அணுகுண்டும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மூன்று
அணுகுண்டுகள் வீதம் வீசவும் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் எதிரி
யிடம் இருக்கும் புதிய, பயங்கரமான, ஆயுதத்தைக் காரணம் காட்டி,
தொடர்ந்து போரிட்டால் ஜப்பானிய இனமே அழிந்து போகும் என்பதால், சரண்
அடைவது என மன்னர் ஹிரோஹிட்டோ முடிவெடுத்தார்.
ஹிரோஷிமா, நாகசாகி மக்களைப் பலி கொடுத்து சோவியத் ரஷ்யாவுடனான
பனிப்போரின் துவக்கத்தில் அதிக செல்வாக்கு பெற்றது அமெரிக்கா. புதிய
வகை ஆயுதங்களான அணுகுண்டுகளோடு, புதுவிதப் போர் முறையும், அணு
அரசியல் சாதுரியமும், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நீக்கப்
பேச்சுகளும் நுழைந்திருக்கின்றன மனித வாழ்வில். அணு ஆயுதம் என்பது
அரச தீவிரவாதம், பயங்கரவாதம்! அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகத்
தலைமையினை உறுதி செய்து கொள்ளவும், பிற பேட்டை ரவுடிகளான ரஷ்யா,
பிரிட்டன், பிரான்சு, சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் போன்ற
நாடுகள் தங்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்திக் கொள்ளவும் இந்த அரச
பயங்கர வாதத்தைப் பயன்படுத்துகின்றன. பாரதமும் ஒரு பயங்கரவாதியாக
மாறியிருப்பது வேதனையானதும், கேவலமானதுமாகும்!
ப.அப்துல்
சமது
கல்பாக்கம் நகரியத்துக்கு அருகேயுள்ள
புதுப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த அப்துல் சமது மனிதநேய மக்கள்
கட்சியின் பொதுச் செயலாளர். கல்பாக்கம் அணு உலையின்
பாதிப்புகளுக்கு உள்ளாகும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த 10
ஆண்டுகளாக உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, தான் பொறுப்பு வகிக்கும்
த.மு.மு.க./ம.ம.க. இயக்கத்தின் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார்.
அணு உலை பாதிப்பு பற்றிய விழிப்பு உணர்வு மற்றும் பாதிக்கப்படும்
மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சைக்காக
பொதுக்கூட்டம், முற்றுகைப் போராட்டம் என்று தொடர்ந்து களமாடி
வருகிறார்!
ஹிரோஷிமாவின் வேதனை
சில நேரங்களில் இரவு வேளைகளில்
தூக்கம் திடீரென என்னைவிட்டு விலகிவிடுகிறது.
திறந்த கண்களோடு
நான் சிந்திக்கத் துவங்குகிறேன்,
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த அந்த
விஞ்ஞானிகளைப்பற்றி!
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த
பயங்கரமான மனித அழிவுகள் பற்றிக் கேட்ட பிறகு
எப்படி அவர்களால் இரவு தூங்க முடிந்தது?
அதிபயங்கரமான ஆயுதத்தை
உருவாக்கியவர்களின் கண்டுபிடிப்பு
1945 ஆகஸ்ட் நாளின் இருண்ட இரவில்
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது
மரணத்தின் நடனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
இருநூறு ஆயிரம் மக்கள் பலியிடப்பட்டனர்,
பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர்,
அவர்களால் நடத்தப்பட்ட அழிவு அசுரத்தனமானது
என்பதை ஒரு கணமேனும் அவர்கள் உணர்ந்தார்களா?
உணர்ந்தால், காலம் அவர்களைக் கூண்டிலேற்றும்,
இல்லையெனில், வரலாறு அவர்களை ஒரு போதும்
மன்னிக்காது!
- அடல் பிஹாரி வாஜ்பாய்.
1992-ம் வருடம் ஹிரோஷிமா நினைவு நாள்
அனுசரிக்கும்போது, நான் அங்கே போயிருந்தேன். அணுகுண்டுத்
தாக்குதல்களில் சிக்கி மீண்டோர் பலரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு
கிடைத்தது. அவர்கள், காயம்பட்ட உடல்களையும், வடுக்கள்கொண்ட
மனங்களையும், அடிபட்ட ஆத்மாக்களையும்பற்றிப் பேசியது நிலைகுலையச்
செய்தது. ஹிரோஷிமாவில் இருந்த சமாதான அருங்காட்சியகத்தில் நான் கண்ட
காட்சிகள், மிகுந்த வலியினை உருவாக்கின.
அணுகுண்டு வெடித்தபோது ஏதோ ஒரு வீட்டு முற்றத்தில் மூன்று சக்கர
சைக்கிள் ஒன்றை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை... அப்படியே
ஆவியாகி மறைந்து விட, அந்த சைக்கிள் கிட்டத்தட்ட ஒரு பந்து போல
உருண்டு உருக்குலைந்து இருந்தது. அந்தப் பொருளை நீண்ட நேரம்
பார்த்துவிட்டு அந்தக் குழந்தையைப்பற்றிச் சிந்தித்தேன். இவ்வுலக
வன்முறையை, ராணுவம், போர், அணுகுண்டுபோன்ற அநியாயங்களை, அசிங்கங்களை
அந்த வண்ணத்துப் பூச்சியிடம் எப்படி விளக்க முடியும் என்று
அல்லாடியது மனம். முகம் தெரியாத, பெயர் அறியாத அந்தப் பிஞ்சுக்
குழந்தையிடம் வயதில் பெரியவன் என்ற முறையில் மௌனமாக மன்னிப்புக்
கேட்க மட்டுமே என்னால் முடிந்தது!
அணு ஆயுதம்... வாழ்வின் எதிர்ப்பதம். சாவு, மரணம், மறைவு, இறப்பு,
முடிவு, அந்தம், அழிவு, நாசம், நிர்மூலம் என எந்த வார்த்தையை
எடுத்துச் சொன்னாலும், அது அணு ஆயுதத்தின் நேரடி அர்த்தமாகவே
அமையும். அமெரிக்கா அணுகுண்டு தயாரித்து இரண்டாம் உலகப் போரில்
பரிசோதித்து விட்ட நிலையில்... அன்றைய உலகின் இன்னொரு பெரியண்ணன்
சோவியத் ரஷ்யாவுக்கு அரசியல் நெருக்கடி ஆரம்பித்தது.
மன்ஹாட்டன் திட்டத்தில் வேலை செய்த க்ளாஸ் ஃப்யூக்ஸ் என்பவர் பல
முக்கியத் தகவல்களைத் தர, சோவியத் விஞ்ஞானிகளின் முயற்சியில் 1949
ஆகஸ்ட் 29-ம் நாள் சோவியத் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைப்
பரிசோதித்தது. ஓரிரு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும்
ஒருவரையருவர் தாக்கி முற்றிலுமாக அழித்துவிடும் அளவுக்கு அணு
ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்தனர். தொடர்ந்து பிரிட்டன் 1952
அக்டோபர் மாதமும், பிரான்சு 1960 பிப்ரவரியிலும், சீனா 1964 அக்டோபர்
மாதத்திலும் தங்களின் முதல் அணு ஆயுதங்களைப் பரிசோதித்தன.
1970-களில் தொடங்கி அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணு ஆயுதப்
போட்டியைக் குறைக்க, நீக்க, ஆயுதப் பரிசோதனைகளைத் தடுக்க,
ஏவுகணைகளைத் தடை செய்ய, விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவாமல்
இருக்க, பல பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு சில ஒப்பந்தங்களையும்
உருவாக்கின. ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபர் ஆனபோது, அமெரிக்கா மீது
ஏவப்படும் சோவியத் அணு ஆயுதங்கள் தரையைத் தொடும் முன்னரே, அவற்றை
விண்வெளியில் மோதி வெடிக்கச் செய்யும் 'ஸ்டார் வார்ஸ்’ எனும்
திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார். கோர்ப்பசேவ் தலைமையிலான சோவியத்
ரஷ்யா சிதறுண்டபோதும், அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையே சந்தேகமும்
பொறாமையும் ஆயுதப் போட்டியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்று அணு சக்தி பரவலாக்கத் தடை சட்டத்தில் கையெழுத்து இட்டுள்ள
ஐந்து நாடுகளும், இதில் கையெழுத்து இடாத மூன்று நாடுகளும், அணு ஆயுத
வெடிப்பு சோதனை எதுவும் செய்யாத இஸ்ரேல் நாடுமாக மொத்தம் ஒன்பது
நாடுகள் அணு ஆயுதங்களுடன் இருக்கின்றன.
பெட்டிச் செய்தியில் காணப்படும் எண்ணிக்கை தவிர, அமெரிக்க அணு
ஆயுதங்கள், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி
நாடுகளிலும் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. தென் ஆப்பிரிக்கா
1980-களில் ஆறு அணுகுண்டுகளைத் தயாரித்து இருந்தாலும், 1990-களில்
அவற்றைச் செயல் இழக்கச் செய்து முற்றிலுமாக அழித்துவிட்டது.
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் களுக்குப் பிறகு,
நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் எனப் பல வடிவங்களில்
மனிதகுல அச்சங்களும், கரிசனங்களும் வெளிப்படுத்தப் படுகின்றன. ஆக்க
சக்தியை உபயோகித்து அழிவைத் தேடிவைத்து இருக்கும்போது அஞ்சுவதும்,
அதனைப் புரிந்துகொள்ள முயல்வதும் இயல்புதானே?
டாக்டர்
ஸ்ட்ரேன்ஞ்லவ் (Dr.Strangelove) 1964-ம் வருட பிரிட்டிஷ்
திரைப்படம்.
பர்பெல்சன் விமானப் படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஜேக் ரிப்பர்
என்பவருக்கு ஒரு சந்தேகம். அமெரிக்க மக்களின் குடிநீரில் வேதியியல்
பொருட்களைக் கலந்து, அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்க சோவியத் ரஷ்யா
முயல் கிறது என நம்புகிறார். இதனை முறியடிக்க அந்த நாட்டின் மீது அணு
ஆயுதத் தாக்குதலை ஏவுகிறார்.
அமெரிக்க அதிபர், முப்படைகளின் தளபதி யாருக்கும் அவர் தகவல்
தெரிவிக்கவில்லை. இந்த விமானங்களைத் திருப்பி அழைக்கும் ராணுவத்
தலைமையகத்தில் அமெரிக்க அதிபரும், முப்படைத் தளபதியும், அணுசக்தி
ஆலோசகர் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் என்பவரும் அவசர ஆலோசனையில்
ஈடுபடுகிறார்கள். எப்படி இந்த அணு ஆயுதப் போரை நிறுத்துவது என்று
தெரியாமல், அமெரிக்காவுக்கான சோவியத் தூதரை அழைக்கிறார்கள். அவரிடம்
பேசி சோவியத் அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமையை
விளக்கும்படி விண்ணப்பிக்கிறார்கள்.
ஆனால், சோவியத் தூதர் பயங்கரமான ஒரு தகவலைத் தெரிவிக்கிறார். 'இறுதி
நாட்களின் இயந்திரம்’ என ஒன்று இருப்பதாகவும், சோவியத் நாட்டின் மீது
அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்ந்தால், அந்த இயந்திரம் மொத்த உலகத்தையே
அழித்துவிடும் என்றும் தெரிவிக்கிறார்.
டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ், அழகான பெண்களையும், இளமையான ஆண்களையும்
பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் குகைகளுக்குள் வாழச் செய்து, கதிர்
வீச்சு அபாயம் குறைந்த பிறகு அவர்களைவைத்து அமெரிக்காவை மறு
நிர்மாணம் செய்யலாம் என்று அறிவுரை சொல்கிறார். ஸ்டேன்லி க்யூப்ரிக்
இயக்கி 1964-ல் வெளிவந்த இந்த நகைச்சுவைத் திரைப்படம் 'எல்லாக்
காலத்துக்குமான உலகின் சிறந்த 24-வது நகைச்சுவைத் திரைப்படமாக’
அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. புகழ்பெற்ற விமர்சகர் ரோஜர் ஈபெர்ட்
இந்தப் படத்தை, 'இந்த நூற்றாண்டில் வெளியான மிகச் சிறந்த அரசியல்
நையாண்டித் திரைப்படம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டி.கப்ரியேல்
இரண்டாம் உலகப் போருக்குப்
பின்னர், மேற்கு பெர்லின் நகரில் வளர்ந்த கப்ரியேல், இடதுசாரி
மாணவர் அமைப்பில் சேர்ந்து போர்களுக்கு எதிராகப் போராடினார். மதம்,
கலாசாரம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்காக 1972-ம் வருடம்
இந்தியாவுக்கு வந்தார். நாடு முழுக்கச் சுற்றிய கப்ரியேல்
மதுரையில் தனது குடும்பத்தை அமைத்துக்கொண்டு, இந்தியக் குடியுரிமை
பெற்று, இந்தியாவின் சமூக, சுற்றுச்சூழல், மேம்பாட்டுப்
பிரச்னைகளில் அதிதீவிரமாகப் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார். மேதா
பட்கர் தலைமையேற்று நடத்தும் மக்கள் இயக்கங்களின் தேசியக்
கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இயங்கும் கப்ரியேல்,
கூடங்குளம் உள்ளிட்ட பல அணு சக்தி நிறுவனங்களுக்கு எதிராகப்
பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்!
அணுசக்தி முக்கோணம்!
''அணு ஆயுதங்களை நாம் ஒழித்தாக வேண்டும், இல்லையேல் அவை
நம்மை ஒழித்து விடும்!''
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி
1930, 40-களில் தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான்
பிரச்னை!
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒட்டோ, உறவோ இல்லாத இரு வேறு தேசியக்
குழுக்கள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ்
சேர்ந்து வாழ இயலாது என்றும், பாகிஸ்தான் என்ற தனி நாட்டை
முஸ்லிம்களுக்காக உருவாக்குவதே சிறப்பு என்றும் வாதிட்டனர்,
பிரிவினைவாதிகள். அப்படியே நாடு துண்டாடப்பட்டது!
இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் மனதில் தாங்கள் பலவீனமானவர்கள்,
எனவேதான் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் தம்மை ஆக்கிரமித்து,
அடக்கியாள முடிந்தது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை நிலவியது. வலிமை
பெறுவது ஒன்றுதான் பாதுகாப்பான வாழ்வுக்கு வழி என்று பலமாக நம்பினர்.
விரோதம் மிகுந்த இரண்டு அண்டை வீட்டார் போல இந்தியா - பாகிஸ்தான்
உறவு 1947-ல் துவங்கியது. மதத்தால், அரசியலால் பிரிந்து இருந்தாலும்,
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது வரலாற்று உண்மை. ஏழ்மை,
பட்டினி, மக்கள் தொகைப் பெருக்கம், கல்வியறிவு இன்மை, வேலைவாய்ப்பு
இன்மை, பிணி, பெண் அடிமைத்தனம் என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான
பிரச்னைகளையே எதிர்நோக்கி நின்றன. இரு நாட்டு மக்களின்
எதிர்காலங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இருந்தன. இத்தனை
ஒற்றுமைகளும், பொதுமைகளும் இருந்தாலும் போட்டி, பொறாமை, சந்தேகம்,
பயம் எனும் எதிர்மறை உணர்வுகளின் மீதே இரு நாட்டு உறவுகளும் கட்டி
எழுப்பப்பட்டது.
1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா படை எடுத்தது. அடுத்த இரண்டு
வருடங்கள் கழித்து சீனா, அணுகுண்டு பரிசோதனை நடத்தியது. அதற்கு
அடுத்த ஆண்டு, அதாவது 1965-ல், பாகிஸ்தானோடு நடந்த போர், 1971-ம் ஆண்டு
யுத்தம் எனத் தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகள்... இந்திரா காந்தியை
அணு ஆயுதம் பற்றி சிந்திக்கவும் செயல்படவும் வைத்தன. 1974-ம் ஆண்டு
மே 18 அன்று 'சிரிக்கும் புத்தர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் முதல்
அணு குண்டு பரிசோதிக்கப்பட்டது.
இதனைக் கண்டு கவலையுற்ற அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி
புட்டோ, 'நாங்கள் புல்லைத் தின்ன வேண்டி வந்தாலும் பரவாயில்லை,
அணுகுண்டு தயாரித்தே தீருவோம்’ என சூளுரைத்தார். இந்தியாவின்
அணுகுண்டுத் திட்டத்தைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த புட்டோ,
1972-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூல்தான் நகரில் பாகிஸ்தானின் அணு
விஞ்ஞானிகள், பொறியாளர்களின் கூட்டத்தை நடத்தினார். அதில்,
பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் தேவை என்பதை விளக்கிச் சொல்லி, அவர்களால்
தயாரிக்க முடியுமா, எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் எனக் கேட்டார்.
ஐந்து ஆண்டுகள் அவகாசம் கேட்டவர்களிடம், மூன்று ஆண்டுகளில் முடிக்கக்
கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் கீழ் ஆணு ஆயுத வேலைகள் கர்ம
சிரத்தையுடன் துவங்கின. கராச்சி அணு மின் நிலையம் 1972-ம் ஆண்டின்
இறுதியில் துவங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து ககுட்டா ஆய்வு
மையம் துவங்கப்பட்டு, அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் பொறுப்பில்
விடப்பட்டது. 1977 ஜூலை மாதம் புட்டோ பதவியில் இருந்து இறங்குவதற்கு
முன்பு யுரேனியம் செறிவூட்டும் உலையும், புளூட்டோனியம் மறுசுழற்சி
செய்யும் உலையும் நிர்மாணிக்கப்பட்டன. அணு ஆயுதப் பரிசோதனைக்காக
சகாய் மலைப் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அணுகுண்டு வடிவமைப்புப்
பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. புட்டோவைக் கவிழ்த்து ஆட்சியைப்
பிடித்த ஜியா உல் ஹக் ஆட்சிக் காலத்தில்தான் அணுகுண்டுகள்
உண்மையிலேயே தயாரிக்கப்பட்டன. இந்த ராணுவ ஆட்சியால் தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டு சிறையில் வாடிய புட்டோ மனிதாபிமானமற்ற அணு
ஆயுதத்தையும், மதத்தையும், மனித நாகரிகத்தையும் இணைந்து
சிந்தித்தார். 'கிறிஸ்துவ, யூத, இந்து, நாகரி கங்கள் அணு ஆயுதத்
திறன் பெற்று இருக்கின்றன. இஸ்லாமிய நாகரிகம் மட்டும்தான் இதனைப் பெற
வில்லை. ஆனால், இந்த நிலைமை விரைவில் மாறி விடும்’ என்று எழுதினார்.
தனது அணு ஆயுதத் தயாரிப்புக்கு சீனா ஒரு முக்கியமான காரணம் என்று
இந்தியா சொன்னாலும் சீனா, இந்தியா - பாகிஸ்தான் பகைமையின் ஓர்
அம்சமாகவே, தெற்காசிய அணு ஆயுதப் போட்டியைப் பார்க்கிறது. பாகிஸ்தான்
(சீனாவோடு கை கோத்துக் கொண்டு) இந்தியாவையும் இந்தியாவின் அணு
ஆயுதங்களையும் மட்டுமே பிரச்னையாகப் பார்ப்பதாலும், மற்ற உலக
நாடுகள் சீனாவை ஒரு பாதக நாடாக பார்க்காததாலும், இந்திய - பாகிஸ்தான்
அரசுகள் அனைத்துமே இந்த அழிவுத் திட்டத்தில் அக்கறையோடு
செயல்படுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் - சீனா எனும் அணுசக்தி
முக்கோணக் கோட்பாடாகக் கருதப்படுகிறது. இதனை நிரூபிப்பது போல 1998 மே
மாதத்தில் அணுகுண்டுப் பரிசோதனைகளை இந்தியாவில் பி.ஜே.பி-யும்,
பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும் நடத்தின. இனி ஓர் அணு
ஆயுதப் போர் நடப்பதாக இருந்தால், அது நமது பகுதியில் இந்தியா -
பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேதான் நடக்கும் என்று மொத்த உலகமும்
அஞ்சுகிறது!
ஃபெயில் சேஃப் (Fail safe)
1962-ம் வருடம் யர்ஜின் பர்டிக் மற்றும் ஹார்வி வீலர் இணைந்து
எழுதிய நாவலை, 1964-ம் ஆண்டு சிட்னி லுமெட் எனும் இயக்குநர்,
சினிமாவாகத் தயாரித்தார்.
அணுகுண்டுகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானங்கள், சோவியத் ரஷ்யா
மீது தவறுதலாக கம்ப்யூட்டர்களால் ஏவப்படுகின்றன. கர்னல் ஃஜேக் க்ராடி
தலைமையிலான விமானிகள், ராணுவத் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ள
முயன்றால், சோவியத் அதிகாரிகள் அந்த தகவல் பரிமாற்றத்தை சிதைத்து
விடுகிறார்கள். தாக்க வேண்டாம் என்ற சமிக்ஞைகள், அமெரிக்காவில்
இருந்து வராததால், மாஸ்கோ நகர் மீது அணுகுண்டுகள் வீசத் தயாராக
இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் உயர் அதிகாரிகள், அமெரிக்க அதிபரிடம்
நிலைமையைச் சொல்கிறார்கள். அவர் ரஷ்யர்களைத் தொடர்பு கொண்டு தமது
நாட்டு கம்ப்யூட்டர்கள் தன்னிச்சையாகத் தாக்குதலைத் தூண்டிவிட்டதாகச்
சொல்ல, ரஷ்யர்கள் அவர்களின் கம்ப்யூட்டர்கள் தன்னிச்சையாகத் தகவல்
பரிமாற்றங்களை நசுக்கிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு வழியாக
ரஷ்யர்கள் தங்கள் இயந்திரங்களைக் 'கட்டுக்குள்’ கொண்டுவந்து,
அமெரிக்கர்களைத் தங்கள் விமானிகளிடம் பேச அனுமதிக்கிறார்கள். இரு
அரசுகளும் ஒத்துழைத்து, அனைத்து விமானங்களையும் திருப்பி விடுகின்றன.
ஆனால், ஒரு விமானம் முன்னோக்கிப் போய்விடுகிறது. அது மாஸ்கோ மீது அணு
குண்டு போடும்போது, சோவியத் ரஷ்யா பதிலுக்குத் தாக்குதல் நடத்தக்
கூடாது என்றும், அமெரிக்காவே நியூயார்க் நகரின் மீது ஓர் அணுகுண்டை
போட்டுக் கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மாஸ்கோ
தாக்கப்படுகிறது. நியூயார்க் நகரைத் தாக்கும் பொறுப்பு, ஒரு ராணுவ
வீரருக்குக் கொடுக்கப்படுகிறது. அவருடைய மனைவி, குழந்தைகளும்
அங்கேதான் வசிக்கின்றனர். குண்டை போட்டுவிட்டு, அவர் தற்கொலை செய்து
கொள்கிறார். மனிதக் கட்டுப்பாடுகளை இழந்து, இயந்திரங்களால் நாம்
இயக்கப்படும்போது என்னவாகும் என்பதைச் சொல்கிறது இந்தப் படம்!
ஹென்றி டிஃபேன்
மதுரையில் சட்டக்கல்வி
பயின்று 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ஹென்றி
டிஃபேன், 'மக்கள் கண்காணிப்பகம்’ எனும் மனித உரிமைகள் அமைப்பின்
செயலாண்மை இயக்குநர். அணுசக்தி சம்பந்தமான நிறுவனங்களும் மக்கள்
வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை மீறுகின்றன, அழிக்கின்றன எனும்
உண்மையை ஏற்று, இவற்றுக்கு எதிரான போராட்டங்களிலும்,
நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். அணுசக்திக்கு எதிரான
போராளிகளின் மனித உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் எழும்போதும்,
அவர்களுக்காக தயங்காது குரல் கொடுக்கும் சகபோராளி. பல சர்வதேச
அமைப்புகளோடும், தொண்டு நிறுவனங்களோடும், கல்வி நிலையங்களோடும் கை
கோத்து மக்கள் தொண்டு புரிபவர்!
'வினை’யான விஞ்ஞானம்!
''இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்!''
- பாரதியார்
அரசு இயந்திரம், அறிவியல், வளர்ச்சி எனும் மூன்று
அங்கங்கள் அடங்கிய, சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பே இன்றைய உலகின்
அடிப்படை. இந்த அமைப்புக்குள் உருவாக்கப்படும் தனி நபர்கள்,
நிறுவனங்கள், இயக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே
சிந்திக்கின்றனர். தங்கள் தனித்தன்மைகளை இழந்து அல்லது மறந்து
மேற்கத்திய நாடுகள்போன்றே சிந்தித்துச் செயல்படுகின்றனர்.
உதாரணத்துக்கு மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் துறையினையும்,
அறிவியலாளர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இந்தியா, பாகிஸ்தானும்
இதற்கு விதி விலக்கல்ல.
தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள் வாழ்வில் பயன்படும் ஒரு சிறிய
கருவியையோ, உபகரணத்தையோ கூட நமது விஞ்ஞானிகள் புதிதாகக்
கண்டுபிடித்தது இல்லை. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும்
கண்டுபிடிக்கும் இயற்கைக்குக் கேடு செய்கிற, மனித குலத்துக்குப்
பாதகம் விளைவிக்கிற விஷயங்களைக் காப்பியடிப்பதை மட்டுமே
கர்மசிரத்தையுடன் செய்கின்றனர். மேலைநாட்டுக் கண்டுபிடிப்புகளை
மாற்றி அமைக்கிறார்களே ஒழிய, உண்மையான படைப்புத் திறன்மிக்க,
தனித்தன்மை உள்ள எந்த விதமான செயல்பாடுகளும் நம் நாட்டு அறிவியலில்
நடக்கவில்லை.
அத்தி பூத்தாற்போல ஓரிரு விஞ்ஞானிகள் அபூர்வமாக நோபல் பரிசுகளைப்
பெற்றாலும், அவர்கள் அந்நிய நாடுகளில் வாழ்பவராகவோ அல்லது அன்றாட
வாழ்வில் சாதாரண மக்களுக்குப் பயன்படாத பங்களிப்பைச் செய்தவராகவோ
இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்பையும் எதிர்கொள்ளும்போது, நம்
இதிகாசங்களிலும், புராணங்களிலும், இலக்கியப் படைப்புகளிலும் இவை
குறிப்பிடப்பட்டு இருக்கின்றன என்று சொல்லி புளகாங்கிதம் அடைவதே நமது
வழக்கமாக இருந்து வருகிறது.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப் பதற்கு முன்பே நாங்கள்
புஷ்பக விமானம்பற்றி பேசி இருக்கிறோம் என்பதும், அணுவைப் பிளந்து
ஆற்றல் தயாரிக்க முடியும் என்று எங்கள் முன்னோர் அறிந்து இருந்தனர்
என்று மார் தட்டுவதும் வாடிக்கையானது. இவற்றை எல்லாம் நமது
முன்னோர்கள் ஏன் செய்து பார்க்கத் துணியவில்லை என்று சிந்திப்பதோ,
வினவுவதோகூட கிடையாது.
இந்திய விஞ்ஞானத்தின் வெறு மைக்கும், வாய்ச்சவடாலுக்கும் ஏற்ற ஓர்
உதாரணம்... இந்திய அணு சக்தித் துறை. இந்திய
மக்களின் வரிப் பணத்தில் கோடானுகோடி ரூபாய்களை விழுங்கி ஏப்பம்விட்ட
பிறகும், நாட்டுக்காக இந்தத் துறை சாதித்து இருப்பது வெறும் 3
சதவிகித மின்சாரம்தான். 1998 மே மாதம் இந்தியா அணுகுண்டு சோதனை
செய்தபோது, அது தங்களின் பெரும் பங்களிப்பு என்று பறை சாற்றியது
இந்தத் துறை.
அணு சக்தித் துறையும், அந்தத் துறையோடு நெருங்கியத் தொடர்புகொண்ட
ஏனைய துறைகளும், இந்தத் துறைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளில், பொறி
யாளர்களில் பெரும்பாலானோரும் ராணுவரீதியான இயந்திரமயமாக்கல்,
தொழில்மயமாக்கல் சார்ந்த வளர்ச்சியே சிறந்தது என்று சிந்தித்தும்
செயல்பட்டும் வருகின்றனர். சந்திர மண்டலத்துக்கு விண்கலங்கள்
அனுப்பவும், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்கள் அனுப்பவும்,
சந்திரனுக்கு இந்திய விண்வெளி வீரர்களைக் கொண்டுசெல்லவும் முயற்சி
செய்கின் றனர். ஆனால், இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் ஒரு
வேளைச் சோற்றுக்கும், பாதுகாப்பான குடிநீருக்கும், ஒண்டிக்கிடக்க ஓர்
உறைவிடத்துக்கும் வழி இல்லாது உழலும் நிலையில் விண்வெளி
சாகசங்களுக்காக நமது விஞ்ஞானிகள் அலைவது விந்தையாக இருக்கிறது.
'அப்பன் சோற்றுக்கு அழுதானாம், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம்
செய்தானாம்’ எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா
பாட்டீல், டி.ஆர்.டி.ஓ. எனும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி
நிறுவனத்தைக் குத்திக்காட்டிக் கடிந்துகொண்டார். புதிய தொழில் நுட்ப
ஆய்வுக்கும், ராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கும் இந்த நிறுவனம்
எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தைக் குறைத்துக்கொள்ளக் கோரினார். ராணுவ
அமைச்சரான ஏ.கே.அந்தோணியும் தனது பங்குக்கு லேசாகக் கடிந்துகொண்டார்.
27 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் துறையினால் தயாரிக்கப்பட்ட அர்ஜுன்
டாங்கி திறமையாகச் செயல்படவில்லை என்றும், அந்தத் திட்டம் ஒரு
மாபெரும் தோல்வி என்றும் செய்திகள் வெளியாகின. 1974-ம் வருடம் ஒரு
டாங்கி தயாரிக்க 15.5 கோடி ஆகும் எனக் கணக்கிடப்பட்டு இருந்தாலும்,
2005-ம் ஆண்டு 306 கோடி தேவைப்பட்டன. இத்தனை கோடிகளைக் கொட்டியும்,
நாட்டின் பாதுகாப்புக்கு இவை உதவவில்லை. அதேபோல 2004-ம் ஆண்டு
டிசம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமியின்போது, இந்தியாவை வல்லரசாக்கத்
துடிக்கும் விஞ்ஞானிகளால் ஒரு சிறு முன்னறிவிப்பைக்கூடத் தர
முடியவில்லை. இந்தியப் பகுதிகளான அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுனாமி
அலைகள் தாக்கிய பிறகும், இந்த விஞ்ஞானிகளால் நமது மக்களை எச்சரிக்க
முடியவில்லை.
இந்திய விஞ்ஞானக் கொள்கை, ராணுவத்தின் நலன்களையும், அரசியல்வாதிகள்,
அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், லாபங்கள்
ஆகியவற்றையே குறியாகக்கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பணம்
படைத்தோருக்கும், பதவியில் உள்ளோருக்கும், படித்தவர்களுக்கும்
பயன்படும் விஞ்ஞானம், பாமர மக்களை ஒரு பொருட்டாகக் கொள்வதே
இல்லை!
த டே ஆஃப்டர்
(The Day After)
1983-ம் ஆண்டு
அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக் காட்சியினால் தயாரிக்கப்பட்ட இந்தத்
திரைப்படத்தை எட்வர்ட் ஹ்யூம் எழுத, நிக்லஸ் மேயர் இயக்கினார்.
சோவியத் ரஷ்யாவின் ராணுவம், மேற்கு பெர்லின் நகரில் இருந்து
அமெரிக்கர்களை விரட்டுவதற்காக, கிழக்கு ஜெர்மனி நாட்டில் தனது படை
களைக் குவிக்கிறது. 'அடுத்த நாள் காலை 6 மணிக்குள் சோவியத் தனது
படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும், இல்லை யேல் போர் அறிவிப்பு
செய்வோம்’ என அமெரிக்கா மிரட்டுகிறது. நேட்டோ படைகள் கிழக்கு
ஜெர்மனிக்குள் நுழைய, ரஷ்யா கணக்கற்ற சிப்பாய்களைக் கொல்கிறது. போர்
உக்கிரமாகிறது. இரு தரப்பிலும் அணு குண்டுகள் வீசப்படுவதாக புரளி எழ,
மாஸ்கோவும், பல அமெரிக்க நகரங்களும் காலி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் சோவியத் ராணுவம் பிரான்ஸுக்குள் நுழைய முயற்சிக்க,
நேட்டோ மூன்று அணுகுண்டுகளைப் போட்டு அதனை முறியடிக்கிறது. பதிலுக்கு
நேட்டோ தலைமையகம் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு,
இங்கிலாந்து, கலிபோர்னியா போன்ற இடங்களில் உள்ள படைத்தலங்களையும்
ரஷ்யா தாக்குகிறது. அமெரிக்க அதிபர் அணு ஆயுதத் தாக்குதலை அறிவிக்க,
சோவியத் தனது அணுகுண்டுகளால் பதில் அளிக்க, யார் யார்... எங்கே...
எப்படி... எப்போது அணுகுண்டு போட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்
மத்திய அமெரிக்கா எரிந்து, கரிந்து வீணாகிக்கிடக்கிறது. கதிர்வீச்சு
நோய், தீப்புண்களோடு பல்லாயிரக்கணக்கானோர் வதைபடுகின்றனர். அணு
ஆயுதப் போருக்கு அடுத்த நாள் சில தனிப்பட்ட குடும்பங்கள் மீது, தனி
நபர்கள் மீது, அரசாங்கம் மீதான தாக்கம் பற்றி இந்தப் படம் அருமையாக
எடுத்துச் சொல்கிறது!
மு.வெற்றிச்செல்வன்
சட்டத்தில் முதுகலைப்
பட்டம் பெற்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். கல்பாக்கம் அணு
மின் நிலையம் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நேரடி
ஆய்வுகளிலும், கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடுகிறார். மரபணு
மாற்றுத் தொழில்நுட்பம் குறித்த இவரது எழுத்துகளும்,
செயல்பாடுகளும் பலரைக் கவர்ந்துள்ள நிலையில், அணு சக்தி தொடர்பான
பல்வேறு சட்டங்களைத் தொகுத்தளிக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன்
பணி ஆற்றுகிறார். மனித உரிமை, சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம்
உள்ள வெற்றிச் செல்வன், 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்புக்கும்
அவர்களின் 'பூவுலகு’ இதழுக்கும் சட்ட ஆலோசகராகவும் இயங்குகிறார்.
எதிர்மறை
எதிர்காலம்!
சிவப்பு தேசத்துக்
கதிர்வீச்சு!
சைபீரியக் காட்டின் ஓலம்
கதிர்வீச்சால் கருகியது
ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டி
என் உயிரைக் குடிக்காது.
அனுதாபப்பட்டு
அமைதியானேன்
அரைநாள் தூரத்தில்
அபாயம்
கடற்கரையில் காலன்
எந்நேரமும் வெடிக்கலாம்
ஆனாலும் பயமில்லை
பாதுகாப்பான தொலைவுதான்
ஏதும் நடந்தால்
முகமறியா மனிதர்களுக்கு
ஒரு சொட்டுக் கண்ணீர்
சிவப்பு தேசத்திலிருந்து வந்தது
எங்கள் தெற்குத்திசை நோக்கி
எங்களுக்கு அணுவும் தெரியாது
ஒரு மண்ணும் தெரியாது
எந்நேரமும் நாங்கள் சாகலாம்
உயிர் இருப்பதால்தானே
மின்சாரம் தேவைப்படுகிறது
முதலில் உயிர்களைக் கொல்வோம்!
- பவுத்த அய்யனார்
பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பில் அப்துல் காதிர் கான் பெரும்
பங்கு ஆற்றியதுபோல, வேகமாக... அதிகமாக... பரவலாக மனிதர்களைக் கொன்று
குவிக்கும் ஓர் அழிவு ஆயுதத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு
வகித்தவர் என்ற முறையில் அப்துல் கலாம் இந்திய மக்களால் போற்றிப்
புகழப்பட்டார். 'சாந்தி, சாந்தி, சாந்தி’என்று சமாதானம் பாடிய
நாட்டில், அணு ஆயுதம் தயாரிக்க உதவியவர் முதல் குடிமகனாக
ஆக்கப்பட்டார். குடியரசுத் தலைவரான அப்துல் கலாம், 'இந்தியா 2020’
எனும் நூலை வெளியிட்டு, அதில், தான் கனவு காணும் இந்தியா எப்படி
இருக்க வேண்டும் என்று விவரித்து இருந்தார். 'குருடர்கள்
ராஜ்ஜியத்தில் ஒற்றைக் கண்ணன் ராஜா’ என்பதுபோல நாட்டின்
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், செயல்திட்டங்கள், ஆசைகள், கனவுகள்
எதுவும் அற்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், வர்த்தகர்
களையும், விஞ்ஞானிகளையும்கொண்ட நமது நாட்டில், அப்துல் கலாமின்
புத்தகம் பெரும் பொக்கிஷமாகப் போற்றப்பட்டது.
அப்துல் கலாம் தனது புத்தகத்தை 10 வயது சிறுமி ஒருத்திக்கு
சமர்ப்பணம் செய்திருந்தார். கலாமின் கூட்டம்ஒன்றில்அவரை சந்தித்த
அந்தச் சிறுமி, 'வளர்ச்சியடைந்த இந்தியாவில் தான் வாழ
விரும்புவதாக’த் தெரிவித்து இருந்தாளாம். அவள் கனவு கண்ட வளர்ச்சி
எத்தகையது, எதை அவள் வளர்ச்சி என்று குறிப்பிடுகிறாள் என்பதுபற்றி
அந்தச் சிறுமியிடம் எதுவும் கேட்காமல், தான் விரும்பும் ராணுவரீதியான
இயந்திரமயமாக்கல், தொழில்மயமாக்கல் சார்ந்த வளர்ச்சியே சிறந்தது
எனக்கொண்டு அந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் அப்துல் கலாம்.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடாவதும், பலமான ராணுவம், கடுமையான
தேசியப் பாதுகாப்பு, சக்திமிக்க பொருளாதாரம்கொண்ட ஒரு வல்லரசு
ஆவதும்தான் வளர்ச்சி என எழுதப்பட்டது, 'இந்தியா 2020’ புத்தகம். ஏவுகணை,
அணுகுண்டுகள்போன்ற தொழில்நுட்பங்களை விருத்திசெய்து, அவற்றைத்
தொடர்ந்து துலக்குகின்ற திறனும்கொண்டு இருப்பதுதான் வளர்ச்சியின்
அடிப்படை என்பது கலாமின் பொதுவான வாதம். இந்தப்
புத்தகத்தில் 'நீடித்த நிலைத்த வளர்ச்சி’ மற்றும்
'பொருத்தமான தொழில்நுட்பம்’ எனும் வார்த்தைகளோ... தத்துவங்களோ
குறிப்பிடப்படவே இல்லை!
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஆற்றல் பாதுகாப்பு,
ஆற்றல் சுதந்திரம் பற்றி அடிக்கடி பேசி வந்தார். இந்திய அணு சக்தித்
துறை 2020-ம் ஆண்டுக்குள் 20,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க
இருப்பதாக சொல்லித் திரிந்தது. இப்பெரும் திட்டத்துக்கான முதலீடு
எங்கே இருந்து வரப்போகிறது, இதற்குத் தேவையான பெரும் அளவு
யுரேனியத்துக்கு என்ன செய்வது, இத்தனை அணு மின் நிலையங்களில் இருந்து
வெளியாகும் ஆபத்தான கழிவுப் பொருளை எப்படிப் பாதுகாப்பது, 40 ஆண்டு
காலம் மின்சாரம் உற்பத்தி செய்த பிறகு அணு மின் நிலையங்களை எப்படி
செயல் இழக்கச் செய்து கட்டிக் காப்பது போன்ற பல விஞ்ஞான ரீதியான
கேள்விகளை எந்த அணு சக்தி விஞ்ஞானியும் கேட்கவும் இல்லை;
கேட்டவர்களுக்குப் பதில் சொல்லவும் இல்லை!
அப்துல் கலாம் ஒரு பள்ளிக்குப் பேசச் சென்றபோது, ஒரு மாணவன் 'ஏழை
நாடான நமக்கு இவ்வளவு பொருட் செலவில் ஏவுகணைத் திட்டம் எதற்கு?’ எனக்
கேட்டான். அதற்குப் பதில் அளித்த கலாம், 'நமக்கு வளர்ச்சி வேண்டும்
என்றால், நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதி வேண்டும் என்றால்,
பலம் இருக்க வேண்டும். நாடு பலமாக இருப்பதற்குத்தான் ஏவுகணைகள்
உதவுகின்றன!’ என்றார். 'பெரும் பொருட் செலவில் சந்திரனுக்குப் போய்
நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?’ என்று இன்னொரு மாணவன் கேட்டதற்கு,
'சந்திர மண்டலத்தில் சில அரிய வகைத் தாதுக்கள் உள்ளன. அவற்றை நாம்
ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ எனப் பதில் சொன்னார் அப்துல் கலாம்.
இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. ஏவுகணைத் திட்டங்கள், அணு ஆயுதத் திட்டம்
எதிலுமே ஜனநாயக முறையில் முடிவுகள் எடுக்கப்பட்டது இல்லை. கணக்கு
வழக்கு விவாதிக்கப்பட்டது இல்லை. வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை.
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விதத் தான்தோன்றித்தனமும், சுயநலமும்
தலைவிரித்து ஆடுகின்றன. மொத்த உலகுக்கும் மனிதன்தான் உரிமையாளன்
என்றும், இயற்கை அவனது சுயநலத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டது
என்றும், அதை எப்படி வேண்டும் என்றாலும் மிதித்து அழிக்கலாம்
என்றும், இதுபோன்ற மனப்பாங்கே வளர்ச்சியின் அடிப்படை என்றும்
கருதுகின்றனர் பெரும்பாலான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும். இந்த
நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகள், பழைமைவாதிகள்,
வளர்ச்சிக்கு எதிரானவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றெல்லாம்
தூற்றப்படுகின்றனர்.
1971-ம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் காபோர் எனும்
பிரிட்டிஷ் விஞ்ஞானி, மனித சமூகத்தை இரண்டு கூறுகளாகப் பிரிக்கிறார்.
ஒன்று தர்க்க ரீதியாக, ஆழமான வாதங்களை சீர்தூக்கி சிந்திக்கும்
திறனற்ற சாதாரண மனிதர்கள். இன்னொன்று, தங்கள் மன ஆற்றலை திறமையாகப்
பயன்படுத்தும் தனித் திறமையுள்ள விஞ்ஞானிகள். இவர்களால்தான் உலகம்
மேம்பட்டு இருக்கிறது. மனித சமூகத்தைக் காக்கும் இவர்கள் மனிதருக்கு
விருப்பமான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள் என்று
வாதிடுகிறார் காபோர். இந்த மாதிரியான காபோரியச் சிந்தனை விஞ்ஞானிகளை
தேவர்களாகவும், நம் போன்றோரை அசுரர்களாகவும் பார்க்கிறது.
அமெரிக்கர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பல விஷங்களை நம் தலையில்
கொட்டி பசுமைப் புரட்சி நடத்தியோரும், 'சூப்பர் பவர்’ ஆக்குகிறோம்
என்று ஆசை காட்டி பண விரயத்தால் நம்மை 'சூப்பர் புவர்’(super poor)
ஆக்கும் ஆற்றல் அரசர்களும், சாப்பாடு இல்லாமல் இருப்போரை
சந்திரனுக்கு அழைத்துப் போகிறோம் என்று ஜாலம் காட்டும்
சந்தர்ப்பவாதிகளும் நம்மை ஏய்க்கின்றனர். இவர்கள் கனவு காணும்
எதிர்காலம் எதிர் மறையானது, இருண்டது, இயற்கைக்கு விரோதமானது!
அபாயம் (நாவல்)
ஜோஷ் வண்டேலூ என்பவர்
ஃபிளமிஷ் எனும் ஐரோப்பிய மொழியில் எழுதிய இந்த நாவல், 1986-ம் ஆண்டு
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. என்.சிவராமன் தமிழாக்கம் செய்ய,
க்ரியா 1992-ல் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியானது.
ஆல்ஃபிரட் பென்ட்டிங், மார்ட்டின் மோலினுர், பூபோன் மூவரும் அணு உலை
மையத்தில் ஆபத்தான வேலை செய்பவர்கள். கடுமையான கதிர்வீச்சுக்கு ஆளாகி
மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். பேராசிரியர் வென்ஸ் சிகிச்சை
அளிக்கிறார். அவர்கள் மரணப் போராட்டத்தைப் படம் பிடித்துக்
காட்டுகிறது, இந்த நாவல். மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்வதன்
மூலமே நிவாரணமடைய முடியும் என்று நினைக்கிறார்கள் மூவரும். ஆனால்,
வெளி உலகமும் அப்படி ஒன்றும் அற்புதமாக இல்லை. அன்பு, இரக்கம்,
பாதுகாப்பு, நேர்மை என்பவற்றைவிட விஞ்ஞான முன்னேற்றமும், பொருளாதார
மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் ஒரு சமூகத்தில் அபாயம் என்பது
தனித்த நிகழ்வல்ல. இது போன்ற சமூக அமைப்பை உருவாக்கும்
கோட்பாடுகளிலிருந்து பிறப்பதுதான் இந்த அபாயம் என உணர்த்துகிறது இந்த
நாவல். இந்த நாவலின் கதாபாத்திரங்கள் தனித்தன்மையுடன்
உருவாக்கப்படவில்லை. காரணம், அனைவருமே பலிகடாக்கள், கருவிகள்.
முடிவு முதலிலேயே தெரிந்திருக்கும் இந்த அபாயமான போட்டியில்
சூதாடிகள் நாவலுக்கு வெளியே இருக்கிறார்கள்!
கே.பத்மதாஸ்
சட்டத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற
முழு நேர சமூகப் பணியாளர். விவசாயத்தையும், விளைபொருட்களையும்
பாதுகாக்கும் குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு சங்கங்களின்
கூட்டமைப்புத் தலைவர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு
செய்யப்பட்டபோது, கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், தொடர் உண்ணாவிரதப்
போராட்டம் எனக் களமாடியவர். அணு உலை எதிர்ப்பு நடவடிக்கைகளில்
தீவிரமாக ஈடுபடுபவர். கௌரவ டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்!
அணு சக்தித் துறை பிறந்த கதை!
''உங்கள் தேசத்தை எப்போதும் நேசியுங்கள். ஆனால், உங்கள் அரசை... அது
தகுதி உள்ளதாக இருக்கும்போது மட்டும் மதியுங்கள்!''
- அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்
சுதந்திர இந்தியாவில் 'அறிவியல் ஆய்வுத் துறை’யின்
கீழ் 1948 ஆகஸ்ட் மாதம் இந்திய அணு சக்தி ஆணையம் துவங்கப்பட்டது. ஆறு
வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 3, 1954 அன்று பிரதமரின் நேரடிக்
கண்காணிப்பில் இயங்கும் அணு சக்தித் துறை (Department of Atomic
Energy)உருவாக்கப்பட்டது. இந்தத் துறை உருவாக்கப்பட்டு மூன்று
மாதங்கள் ஆனபோது, 'சமாதானகரமான விவகாரங்களுக்காக அணு சக்தியை
உருவாக்குவது’ எனும் மாநாடு ஒன்றில் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு
பேசினார். 'நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாததாக
இருப்பதால், நாம் அணு சக்தியை உபயோகித்து மின்சாரம் தயாரிக்க
வேண்டும்’ என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
அணு சக்தித் துறையின் முதல் செயலராகப் பணியாற்றிய ஹோமி ஜஹாங்கீர்
பாபா 1962-ம் ஆண்டு, ''இன்னும் 25 ஆண்டுகளுக்குள் 18 முதல் 22 கிகா
வாட் வரை, (அதாவது, 18,000 முதல் 22,000 மெகா வாட்) மின்சாரத்தை தமது
துறை உற்பத்தி செய்யும்'' என்று சொன்னார். ஆனால், உற்பத்தி செய்தது
வெறுமனே ஒரே ஒரு கிகா வாட்தான்.
1966-ம் வருடம், விமான விபத்து ஒன்றில் பாபா மரணமடைந்ததும், விக்ரம்
அம்பாலால் சாராபாய் பொறுப்பு ஏற்றார். 1970-ம் ஆண்டு சாராபாய்,
'1972-73 முதல் ஆண்டுக்கு 500 மெகா வாட் வீதம் அணு சக்தித் துறை
மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று சொன்னார். 1971-ம் ஆண்டின் கடைசி
நாளன்று திருவனந்தபுரம் வந்து தங்கியிருந்த சாராபாய் தூக்கத்திலேயே
மாரடைப்பு ஏற்பட்டு புத்தாண்டு புலர்வதற்கு முன்னரே இறந்துபோனார்.
பின்னர் அணு சக்தித் துறைக்குத் தலைமையேற்ற ஹோமி நுசர்வாஞ்சி
சேத்னா, ராஜா ராமண்ணா உதவியோடு 1974-ம் ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனையை
நடத்தினார்.
1957-ம் ஆண்டு ஜூலை 24 அன்று நேரு, நாடாளுமன்றத்துக்குக் கொடுத்த
கீழ்க்கண்ட வாக்குறுதி அவரது மகளாலேயே புதைக்கப்பட்டது.
'அணுகுண்டுகள் தயாரிப்பதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை என்பதை நாங்கள்
தெள்ளத்தெளிவாக அறிவித்து இருக்கிறோம். அப்படியே குண்டுகள்
தயாரிக்கும் திறன் பெற்றாலும், அணு சக்தியை ஒரு போதும் அழிவு
நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம். இதுவே அனைத்து எதிர்கால
அரசுகளின் கொள்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறி
இருந்தார். 'இந்தியாவில் அணு ஆயுதப் பரிசோதனை நடத்தப்பட்டதும்,
வெளிநாட்டு உதவிகள் தடைபட்டுவிட்டன. எனவேதான், எங்களால்
திட்டமிட்டதுபோல மின்சாரம் தயாரிக்க முடியவில்லை’ என்று நொண்டிச்
சாக்கு சொன்னார்கள் அணு சக்தித் துறையினர்.
1989-ம் ஆண்டு துறைத் தலைவராக இருந்த எம்.ஆர்.ஸ்ரீனிவாசன், 2,000
ஆண்டுக்குள் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய
உறுதிபூண்டார். வழக்கம்போல அதுவும் வெற்றுப்பேச்சாகவே போயிற்று.
2003-ம் ஆண்டு அனில் கசோட்கர், 'இன்னும் நான்கு வருடங்களுக்குள்
6,800 மெகா வாட் மின்சாரம் தயாரிப்போம்’ என்றார். எட்டு வருடங்கள் ஆன
பிறகும் 4,000 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தயாரித்து
தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. அணு சக்தித் துறையின் தற்போதைய
வாக்குறுதி என்ன தெரியுமா? 2032-ம் வருடத்துக்குள் 60,000 மெகா வாட்
மின்சாரம் தயாரிப்பார்களாம்!
அணு சக்தித் துறையின் அனைத்து வாக்குறுதிகளுக்கும் முத்தாய்ப்பாக
ஓர் உலக மெகா வாக்குறுதியை அணு சக்தி அமைச்சர் நமது அருமை பிரதமர்
மன்மோகன்சிங் அருளினார். 2009-ம் ஆண்டு அக்டோபர் 1, 2 தேதிகளில் அணு
சக்திக்கு எதிராக நாங்கள் 'டெல்லி பேரணி’ நடத்துவதற்கான ஆயத்தப்
பணிகளில் ஈடுபட்டபோது, செப்டம்பர் 29-ம் தேதி அணு சக்தித் துறை,
டெல்லியில் மூன்று நாள் மாநாடு நடத்தியது. துவக்கிவைத்துப் பேசிய
பிரதமர் 2050-ம் ஆண்டுக்குள் 4,70,000 மெகா வாட் மின்சாரத்தை அணு
சக்தித் துறை தயாரிக்கும் என்று ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.
ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரையுள்ள ஊடகங்கள் பல என்னையும், பிற
எதிர்ப்பாளர்களையும் தொடர்புகொண்டு, 'இது சாத்தியமா?’ எனக் கேட்டனர்.
'சத்தியமாக சாத்தியம் இல்லை!’ என்றோம். 'குங்குமம் என்பதை நான்
அறிவேன், அது மஞ்சள்போல வெண்மையாய் இருக்கும்’ என்ற கதைபோலத்தான்
மன்மோகன் சிங்கின் மெகா வாட், கிகா வாட் கதையும்!
இந்திய அரசின் 1958-ம் ஆண்டு தீர்மானம் மூலமாக அணு சக்தி ஆணையம்
ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம்தான் அணு சக்தித் துறைக்கும் அணு
சக்தி ஒழுங்காற்று வாரியத்துக்கும் (AERB- Atomic Energy
Regulatory Board) தலைவராகச் செயல்படுகிறது. ஆணையத்தின் தலைவரே
பெரும்பாலும் அணு சக்தித் துறையின் செயலாளராகவும் இயங்குகிறார்.
ஒழுங்காற்று வாரியம் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருக்கிறது.
இரட்டை வேடப் படத்தில், எம்.ஜி.ஆரே திருடனாகவும் போலீஸாகவும்
நடிப்பதுபோல, அணு சக்தித் துறையே ஆபத்துகளை உருவாக்கும்... அந்தத்
துறையே தவறுகளையும் கண்டுபிடிக்கும். இல்லை, கண்டுபிடிப்பதுபோல
நடிக்கும். கள்வனும் நானே, காவலனும் நானே!
அணு சக்தித் துறையின் நடவடிக்கைகளைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்
என்றால், 'வேலியே பயிரை மேயும் கதை!’
அணு சக்தி அம்மன்
- ஓரங்க நாடகம்
காலன்குளம் அணு மின்
மற்றும் அணுகுண்டுத் திட்டம் 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு
வருகிறது. காலன்குளத்தைச் சுற்றிலும் இருந்த விவசாயக் கிராமங்கள்,
மீனவக் கிராமங்கள், தலித் கிராமங்கள் எல்லாம் காலி செய்யப்பட்டு,
மக்கள் அனைவரும் மேம்பாட்டுக் குடியிருப்பு என்று அழைக்கப்படும்
நவீனக் குடியிருப்புக்கு மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால், தமது நிலம்,
கடல், பாரம்பரிய வாழிடத்தைப் பறிகொடுத்த மக்கள் கொடும் வறுமையிலும்,
பெரும் துயரத்திலும் தள்ளப்பட்டனர்.
ஓர் ஏழைப் பெண்ணின் மகனுக்குப் புற்றுநோய் வந்து என்னவென்று
தெரியாது உரிய சிகிச்சையின்றி, உள்ளூர் சாமியாரிடம் உதவி கேட்கிறார்.
சாதாரண மக்கள் இப்படித் துயரப்படும்போது, விஞ்ஞானிகளும்,
அரசியலாளர்களும், பத்திரிகையாளர்களும், சமயக் குருமார்களும் தத்தம்
சுய லாபங்களை நிறைவேற்றிக்கொண்டு உயர் வாழ்க்கை வாழ்வதைக்
கோடிட்டுக் காட்டி, காலன்குளம் அணு உலையின் பின்புலத்தில், இந்த இரு
உலகங்களும் உரசுவதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நாடகம்.
ஆங்கிலத்தில் நான் எழுதியதை, காலஞ் சென்ற என் எழுத்தாள நண்பரும்,
சுற்றுச்சூழல் போராளியுமான அசுரன் தமிழில் மொழிபெயர்த்தார். அணு
சக்தி இயற்பியல், அரசியல், பொருளாதாரம், சட்டம், சர்வதேச நிகழ்வுகள்
எல்லாம் மெத்தப் படித்தவர்களுக்கே முழுக்கப் புரியாதிருக்கும்
நிலையில், சாதாரண மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல நாடகம் வழி
முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.
ஓரிரு இடங்களில் நடிக்கப்பட்டும், உலகெங்கும் படிக்கப்பட்டும்
வருகிறது.
ஜ.ஸ்ரீராமன்
இந்தியா 1998-ம் ஆண்டு
அணுகுண்டு பரிசோதனை செய்தபோது, ஸ்ரீராமன், இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகையில் பணிபுரிந்தார். நண்பர்களோடு சேர்ந்து 'அணு
ஆயுதங்களுக்கு எதிரான பத்திரிகையாளர்கள்’ அமைப்பினைத்
துவக்கினார். பின்னர் 30-க்கும் அதிகமான இயக்கங்களுடன் சேர்ந்து,
'அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்’ ஒன்றைத் துவங்கி, அதன்
ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் அணு
ஆயுதப் போட்டிக்கு எதிரான 'ஃபிளாஷ்பாயின்ட்’ எனும் புத்தகத்தை
எழுதியிருக்கும் இவர், முன்னணிப் பத்திரிகைகளில் கட்டுரைகள்
எழுதுகிறார். அணு ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானக் கூட்டிணைவின்
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்!
அணு சக்தியின் நிதி நிலை!
''அணு ஆயுதம் என்ற இனத்தோடு ஒரு போதும் மனித இனம் வாழ முடியாது!''
- இக்ஹோ இடோஹ்,
மேயர், நாகசாகி, ஜப்பான்
கலைவாணரின் பாடல் ஒன்றில் பட்ஜெட்டின்
அடிப்படையை அழகாக, ஆழமாகச் சொல்வார்.
''அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி
தினம் ஒன்பது தடவை காபி குடிப்பது அநீதி,
எண்பது ரூபா புடவை கேட்டா குடும்பத்துக்கே விரோதி!''
இந்தியாவின் வரவு, செலவுத் திட்டம் இதே நிலையில்தான் தத்தளிக்கிறது.
இன்றைய இந்தியாவில் 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (லோக்சபா)
கோடீஸ்வரர்களாக வலம் வருகின்றனர். அதேநேரம் கிட்டத்தட்ட 83 கோடி
மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 20-ல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். 20-க்கு இன்றைய விலைவாசியில் என்னென்ன வாங்க முடியும்,
எப்படி வாழ்வின் பொருளாதாரத்தை எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்களே
சிந்தித்துக்கொள்ளுங்கள்.
2010-11 நிதி ஆண்டில் நமது நாட்டின் மொத்த வரவைவிட, செலவு 3,62,000 கோடி அதிகம். இதில் பாதுகாப்புக்காக
செலவிடப்பட்டது 1,47,344 கோடி. 2011-12 நிதி ஆண்டுக்கு 1,64,415 கோடி பாதுகாப்பு செலவுக்கு என்று
ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டைவிட 17,071 கோடி அதிகமாகச் செலவு
செய்யப்போகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக நமது நாடு எந்த ஒரு முழு
வீச்சிலான போரிலும் ஈடுபடவில்லை. 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர்,
ஒரு சிறிய ராணுவ நிகழ்வுதான். அப்படியானால், இவ்வளவு பணத்தை ஏன்
பாதுகாப்பு என்ற பெயரில் விரயம் செய்கிறோம்?
கடந்த நிதி ஆண்டில் அணு சக்தித் துறையின் மொத்தச் செலவு 14,426 கோடி. இதில் பாமர மக்களுக்காக செலவிடப்பட்டது
எவ்வளவு? இந்தக் கேள்வியை சற்றே மாற்றிக் கேட்போம். இவ்வளவு பெரிய
தொகையை அணு சக்தித் துறை செலவு செய்ததன் பலனாக சராசரி இந்தியக்
குடிமகனுக்குக் கிடைத்த பயன் என்ன? எதுவுமே இல்லை!
இந்திய அணு மின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) மார்ச் 2011-ல் முடிந்த
நிதி ஆண்டில் சுமார் 3,639 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. ஏறத்தாழ 2,465 கோடி செலவு செய்த பிறகு, வட்டி கட்டிய பிறகு,
நிகர லாபம் 953 கோடி. இதைப் பார்த்தும் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
காரணம் மதிப்பிறக்கம் (depreciation) என்ற பெயரில் 426 கோடியும், நிகரச் செலவுகள் என்ற பெயரில் 368 கோடியும் செலவிடப்பட்டு இருக்கிறது.
1948-ம் ஆண்டு முதல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை, நேரத்தை,
சக்தியை, மனித ஆற்றலை, பிற வளங்களைக் கொட்டிக் குவித்து இந்த கரிந்த
பயிரை அறுவடை செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
குருடர்கள் யானையின் அவயங்களைத் தடவிப் பார்த்து அனுமானங்கள்
செய்ததுபோல் அல்லாமல், கண்களைத் திறந்து வீட்டுக்கு நடுவே நிற்கும்
யானையை ஒரு சேரப் பார்த்தோமானால், 'வரவு எட்டணா, செலவு எண்பதணா’
என்பதாக அணு மின் நிலையத்தின் பொருளாதாரம் அப்பட்டமாகத் தெரியும்.
ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அணு உலை
இயக்குவோரின் சர்வதேசக் கழகம் (வானோ) எனும் அமைப்பில் இருந்து 400
பேர் இந்தியாவுக்கு வந்து, அந்த அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில்
கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தை நடத்தி, வந்து இருந்த
விஞ்ஞானிகளை, பொறியாளர்களைப் பாராட்டி, சீராட்டி, பல இடங்களுக்கும்
அழைத்துச் சென்றது இந்திய அணு மின் கழகம். இதில் 21 பேர்
திருவனந்தபுரம் வழியாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வந்தனர்,
பிப்ரவரி 4-ம் நாள். விமான நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக,
கன்னியாகுமரி, கூடங்குளம் வரை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர்களைக்கூட சுதந்திரமாக உலவ
விடவில்லை. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. தலைமையில் ஒரு பெரும் காவல்
படை ரோந்துப் பணியில் ஈடுபட்டது. விமான நிலையம் முதல் அணு மின்
நிலையம் வரை பாதுகாப்பு வெள்ளோட்டம்கூட நடத்தினார்கள்.
இவ்வளவு பெரிய பொருட்செலவில் பந்தாவாக வந்த 21 உலக அணு உலை
வல்லுநர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெறுமனே தலையைக்
காட்டிவிட்டு கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, கூடங்குளம் அணு உலை பிரமாதம் என்று
அறிக்கை வேறு வெளியிட்டார்கள். அணு மின் நிலையத்தின் மேம்போக்கான
இந்த நடவடிக்கையைக் கண்டு எரிச்சல் அடைந்து, 'இந்த விஞ்ஞானிகள்
எவ்வளவு நேரம் உலைக்குள்ளே இருந்தார்கள், என்னென்ன பரிசோதனை
செய்தார்கள், இவர்களின் பயணம், தங்கும் இடம், பாதுகாப்பு
போன்றவற்றுக்கு அணு மின் கழகம் எவ்வளவு செலவு செய்தது’ போன்ற
தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டேன். இன்று வரை
பதில் இல்லை.
ஊழலுக்கு எதிராக, அரசின் உதாசீனத்துக்கு எதிராக, அரசு நிறுவனங்களின்
பண விரயத்துக்கு எதிராக, மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராட
விரும்பும் இளம் ஹஜாரேக்கள் இங்கே இருந்துதான் இயங்கத் துவங்க
வேண்டும்!
த கூடங்குளம் ஹேண்ட்புக்
(ஓர் ஆவணத் திரட்டு)
கூடங்குளம் அணு மின்
நிலையத் திட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட, அணு சக்தித்
துறையோ, மத்திய அரசோ தராமல் இருந்த நிலையில், திட்டம் சம்பந்தமான
பத்திரிகைச் செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், போராட்டத் தகவல்கள்
போன்றவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தகவல்கள் தர மறுத்த அதிகார வர்க்கத்துக்குத் தக்க பதிலாக அமைந்தது
இந்தக் கையேடு. இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியனாக இருக்க நான்
வாய்க்கப்பெற்றது பெரும்பேறு!
கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தைப்பற்றிய ஒரு பொது
விவாதத்தைத் துவக்குவதும், அணு சக்தித் துறை எனும் 'புனிதப் பசு’வின்
போலி வேடங்களைத் தோலுரித்துக் காட்டுவதும், அணு சக்திக்கு எதிரான
போராளிகளுக்குப் பயன்படும் தகவல்களைத் திரட்டி வழங்குவதுமே
புத்தகத்தின் நோக்கங்கள். 382 பக்கங்கள்கொண்ட இந்த ஆவணத் திரட்டு...
திரைப்படங்களும், நாவல்களும், நாடகங்களும், கவிதைகளும் சாதிக்க
முனைவதை ஆவணங்கள் வழியாக அடைய முயற்சிக்கிறது.
போராட்ட களத்தில் புல்லும்
ஆயுதமோ?
மாஸ்கோ நகரில் இருந்து பெட்ரோ சவோஸ்க் எனும் ஊருக்குப் போய்க்கொண்டு
இருந்த ரஷ்ய விமானம் ஜூன் 21, 2011 அன்று விபத்துக்கு உள்ளாகி 44
பேர் மரணம் அடைந்தனர். இறந்தவர்களுள் முக்கியமானவர்கள், கூடங்குளம்
அணு மின் நிலையத்தின் அணு உலைக் கலனை வடிவமைத்த கில்டோபிரஸ் எனும்
நிறுவனத்தின் தலைவர், துணைத் தலைவர், உலை வடிவமைப்பாளர் மற்றும்
இரண்டு பொறியாளர்கள்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கூடங்குளம் பகுதி மக்கள் தங்கள் மண்
விசுவாமித்திரர் கோயிலால் பாதுகாக்கப்படுவதாகவும், உலை சம்பந்தப்பட்ட
ராஜீவ் காந்தி, போரிஸ் எல்ட்சின், எஸ்.கே. அகர்வால் போன்றோர் உயிர்
இழந்துவிட்டதாகவும், மிக்கய்ல் கோர்பசேவ், தேவகவுடா போன்றவர்கள்,
பதவிகளை இழந்துவிட்டதாகவும், இந்த மாதிரியான சாபக்கேடுகள் தொடரும்
என்றும் பேசிக்கொள்கிறார்கள்!
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். வலிமையுற்ற ஓர் அமைப்பை,
வலிமையற்ற ஒரு தரப்பு எதிர்த்துக் களமாடும்போது கையில் கிடைக்கும்
ஆயுதங்களை எல்லாம் பிரயோகிக்க முயல்கின்றனர். ஹிட்லருக்கு எதிரான
பொய்களும், கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிரான நகைச்சுவைகளும்,
கலவரங்களின்போது வதந்திகளும் என நீண்ட பட்டியலையே தரலாம். அந்த
வகையில் இந்த நம்பிக்கையும் கூடங்குளம் மக்களுக்கு ஓர் ஆயுதம்தானோ?
மருத்துவர்
வி.புகழேந்தி
மதுரை மருத்துவக் கல்லூரியில் 1989-ம்
ஆண்டு தங்கப் பதக்கத்துடன் கல்வியை நிறைவு செய்த இந்த
அருப்புக்கோட்டைக்காரர், கல்பாக்கத்தைக் களமாக்கிக்கொண்டார். 1990
முதல் இன்று வரை குறைந்த செலவில் நிறைந்த மருத்துவ சேவை செய்து
வரும் புகழேந்தி, கல்பாக்கம் பகுதியில் நிலவும் எலும்பு மஜ்ஜை
இழப்பு நோய், ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய், தைராய்டு புற்று நோய்
மரணங்கள் போன்ற முக்கியமான ஆய்வுகளைச் செய்து வருகிறார்.
'பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள்’ எனும் அமைப்பினை
நிறுவி, அணு உலைகளுக்கு எதிராகப் பேசியும், எழுதியும் வரும் இவர்
'தமிழகத்தை சூழும் அணுஉலை அபாயம்’ எனும் கையேட்டை எழுதி
வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்க - இந்தியக் காதலின்
ஆரம்பம்!
''நட்பின் மீது ஏற்படுத்தப்பட்ட வியாபாரத்தைவிட, வியாபாரத்தின் மீது
ஏற்படுத்தப்பட்ட நட்பே சிறந்தது!''
- யாரோ
கோல்ட்மேன் சாக்ஸ் எனும் அமெரிக்க நிறுவனத்தின்
இரண்டு பொருளாதார நிபுணர்களான டாமினிக் வில்சன் மற்றும் நியூ
ஜெர்ஸியில் என் மாணவியாக இருந்த ரூபா புருஷோத்தமன் ஆகியோர் 2003-ம்
ஆண்டு ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்கள். அடுத்த 50 ஆண்டுகளில்
பிரிக் நாடுகள்(BRIC -Brazil, Russia, India, China) உலகப்
பொருளாதாரத்தில் முன்னிலை பெற்றுவிடும். தற்போது சக்தி வாய்ந்த
பொருளாதார நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ்
போன்ற நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று அறிவித்தனர்.
அவர்கள் சொன்னதுபோலவே, உலகப் பொருளாதாரம் தொய்வடைந்து இருக்கும்
நிலையிலும் தென் ஆப்பிரிக்காவையும் தற்போது அணி சேர்த்துக்கொண்டு
இருக்கின்ற பிரிக்ஸ் நாடுகள் படுவேகமாக முன்னேறிக்கொண்டு
இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு சர்வதேச நாணயத்தை
வெளியிட எத்தனிக்கும் அளவுக்கு அவர்களின் பலம் அதிகமாகி இருக்கிறது.
பிரிக்ஸ் அமைப்புக்குள் ரிக் (RIC) எனும் ஒரு கூட்டணி அமைப்பும்
இயங்குகிறது. ரஷ்யா, இந்தியா, சீனா மூன்று நாடுகளும் ஆண்டுதோறும்
சந்தித்து கலந்து உரையாடி வருகின்றன. ஏற்கெனவே, அமெரிக்காவும்
ஐரோப்பாவும், முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளான போலந்து, ருமேனியா
போன்றவற்றைத் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதால், ரஷ்யா
புழுங்கிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தைப்
பின்னால் தள்ளிவிட்டு, உலகத் தலைமையை நோக்கி சீனா மெதுவாக
நகர்ந்துகொண்டு இருக்கிறது. ராணுவ பலம் மட்டும் இல்லாமல் போனால்,
அமெரிக்காவின் தலைமை அடிபட்டுப்போகும்.
காலத்துக்கு ஏற்ற மாதிரி வளைந்தும், இடத்துக்கு ஏற்றாற்போல்
நெளிந்தும், தேவைக்கு ஏற்பக் குனிந்தும், நிமிர்ந்தும்
தனக்கு வேண்டியதைத் தேர்ந்துகொள்ளும் அங்கிள் சாம் (Uncle Sam)
ஆழமாய்ச் சிந்தித்தார். சிகப்பு சீனாவுடனோ, முன்னாள் எதிரி
ரஷ்யாவுடனோ சேர்ந்து கடை விரிப்பதைவிட, ஜனநாயகம் பேசும், ஆனால்...
சக்தி மிக்க குடும்பங்களால், குழுக்களால் ஆளப்படும் இந்தியாவே ஏற்றது
என்று உணர்ந்தார்.
1947 முதல் பாகிஸ்தானோடு மோகத்தில் திளைத்த அமெரிக்க ஆளும்
வர்க்கம், இந்தியாவை ஏறிட்டுப் பார்த்தது. 1962-ம் வருட சீனப்
போருக்குப் பிறகு இந்தியா அந்த நாட்டின் மீது ஒரு கசப்பு
உணர்வுகொண்டு இருப்பது, காஷ்மீரிலும், அருணாசல பிரதேசத்திலும்
முட்டிக்கொள்வது, இந்திரா காந்திக்குப் பிறகு இந்திய - ரஷ்ய நட்பு
தளர்ந்து இருப்பது, சீனா போன்றே விரைவாக வளர்ந்துகொண்டு இருப்பது -
போன்ற காரணங்களினால் அமெரிக்காவுக்கு இந்தியா மீது
ஈர்ப்பு ஏற்பட்டது! இந்தியாவை ஏறிட்டுப் பார்த்தது. பில் கிளின்டனும்
வாஜ்பாய் அரசும் அஸ்திவாரம் அமைக்க, அதன் மீது தாஜ்மஹாலை
கட்டிக்கொண்டு இருக்கிறார் மன்மோகன் சிங்.
2005-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் அணு ஒப்பந்தம் ஒன்று
ஏற்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷ§ம், மன்மோகன்
சிங்கும் வாஷிங்டன் டி.சி. நகரில் அறிவித்தனர். அரசியல் உறவோடு அணு
சக்தி வியாபாரமும், ஆயிரக்கணக்கான கோடி லாபமும், ராணுவ
ஒப்பந்தங்களும், வீதிகளில் அலைந்து திரியும் தம் மக்களுக்கு வேலை
வாய்ப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பற்பல சலுகைகளும்
கிடைக்கிறது என்றால் விடுவாரா அங்கிள் சாம்?
இந்தியாவின் அணு சக்தி வரலாறு அடுத்த கட்டத்துக்குள் நுழைந்தது.
2006-ம் ஆண்டு மார்ச் மாதம் புஷ், இந்தியாவுக்கு வந்தார். அவரும்
மன்மோகன் சிங்கும் அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய கூட்டு அறிக்கை
வெளியிட்டனர். அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123-வது பிரிவை
இந்தியாவோடு அணு சக்தி உடன்பாடு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி
அமைக்க, 'ஹென்றி ஹைட் அமெரிக்கா - இந்தியா சமாதானகரமான அணு சக்தி
ஒத்துழைப்புச் சட்டம் 2006’ எனும் சட்டத்தை, 2006 ஜூலை மாதம்
அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றியது.
இந்திய அணு சக்தித் துறையும் 123 ஒப்பந்தத்தை முதலில் எதிர்த்தது.
அமெரிக்கா தரும் எரிபொருளில் இருந்து ஆயுதம் தயாரிக்கும் உரிமை,
தங்கு தடை இன்றி அமெரிக்கா எரிபொருள் தருவது, ஐ.ஏ.இ.ஏ. எனும் சர்வதேச
அணு சக்தி முகமையின் கட்டுப்பாடுகளுக்கு மட்டும் ஆளாவது, இந்தியா
ஆயுதப் பரிசோதனை செய்தால், அமெரிக்கா தனது தொழில்நுட்பம்,
உபகரணங்கள், எரிபொருள் - போன்றவற்றைத் திருப்பி எடுத்துக்கொள்ளாமல்
இருப்பது என இந்த மாதிரியான விஷயங்கள் குறித்துத் தயங்கி நின்றனர்.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, 2007 ஜூலையில் புதிய ஒப்பந்த வரைவு
உருவாக்கப்பட்டது. அணு சக்தித் துறையும், வெளியுறவுத் துறை
அமைச்சகமும், தேசிய பாதுகாப்புத் துறையும் சேர்ந்து மேற்கண்ட
விஷயங்கள் குறித்த ஷரத்துகளைச் சேர்த்தார்கள். ஆகஸ்ட் மாதம் இரு
ஜனநாயக நாடுகளும் 123 ஒப்பந்தத்தை எந்த விதமான பொதுமக்கள்
பங்களிப்பும் இன்றி உருவாக்கி அறிவித்தார்கள்.
'அணு சக்தித் தொழில்நுட்பம்கொண்ட பொறுப்பான நாடு என்ற முறையில்,
அமெரிக்காவிடம் இருந்து மற்ற நாடுகள் பெறும் பலன்களையும்
நலன்களையும் இந்தியாவும் பெற வேண்டும்’ என்று புஷ் அறிவித்தார்.
புரிகிறதா கதை?
அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை நமது 'பலனாக, நலனாக’ திருப்பிப்
போட்டு நம்மை ஏய்க்க, இங்கே இருப்பவர்கள் ஏமாளிகளாக அதை
ஏற்றுக்கொண்டு, வெற்றி விழா நடத்தினர். இந்தியாவின் சுதேசி அணு
விஞ்ஞானத்தை முடக்குவது, இந்திய அணு சக்தித் துறையில் ரஷ்யாவின்
பங்களிப்பைக் குறைப்பது, சீனா அளவுக்கு இந்தியா அணு ஆயுதங்கள்
தயாரிக்க உதவி செய்து சீனாவின் பலத்தை அழிப்பது எனும் முப்பெரும்
நோக்கங்களோடு அமெரிக்கா இயங்க, சதியில் வீழ்ந்துகிடக்கும் மன்மோகன்
சிங் அரசு அதனைத் தன் சாதனையாக நினைத்துக்கொண்டு இருக்கிறது!
பொன்னுத்தாய்
திருநெல்வேலி மாவட்டம்
வாசுதேவநல்லூரில் தனது 25 வயது மகனுடன் இயற்கை விவசாயம் செய்து
வரும் பொன்னுத்தாய், ஒரு பெண்ணியச் செயல்பாட்டாளர். 10 வருடத்
திருமண வாழ்வில் பல துன்பங்களுக்கு ஆளாகி, தமிழ்நாடு பெண்கள்
இணைப்புக் குழுவில் இணைந்து, பெண்களின், சமூக, பொருளாதார, அரசியல்,
கலாசாரத் தலைமைக்காக உழைத்து வருகிறார். கூடங்குளம் அணு மின்
நிலையம் திட்டமிடப்பட்டது முதலே அதனைக் கடுமையாக எதிர்த்துவரும்
பொன்னுத்தாய், சிறந்த பேச்சாளர், சீரிய போராளி.
அணு சக்தி ஒப்பந்தமும்,
பின்னணி அரசியல் நாடகங்களும்!
''பாவம் மெக்ஸிகோ! கடவுளிடம் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம்,
ஆனால், அமெரிக்காவுக்கு அருகில் இருக்கிறோம்!''
-
முன்னாள் மெக்ஸிகோ அதிபர் பொர்ஃபீரியோ தியாஸ்
'ஆமை புகுந்த வயலும், அமினா புகுந்த வீடும்
உருப்படாது’ என்பது பரவலான மக்கள் நம்பிக்கை. இந்த வரிசையில்,
அமெரிக்கா புகுந்த நாடும் உருப்படாது என்பது அண்மைக்கால அரசியல்
யதார்த்தம். ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் சமீபத்திய உதாரணங்கள்.
சர்வதேச அரசியல் யதார்த்தங்களைப் புறந்தள்ளி, அமெரிக்காவோடு
நெருங்கிய உறவுக்காக அலையும் மன்மோகன் சிங்
அரசு, கடந்த 2007 ஆகஸ்ட் மாதம் இந்தியா - அமெரிக்கா அணு சக்தி
உடன்பாடு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதிருப்தியுற்ற
இடதுசாரிக் கட்சிகள், 'சிங் அரசுடனான திருமணம் தொடர்ந்தாலும்,
தேனிலவு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று அறிவித்தார்கள்.
ஆற்றல் சுதந்திரமும், பாதுகாப்பும் பெற்று, ஜப்பான், ஜெர்மனி போன்ற
வல்லமைமிக்க நாடாக இந்தியா மாறுவதற்கு அமெரிக்கா உடனான அணு சக்தி
ஒப்பந்தம் தேவை என காங்கிரஸ் அரசு கருதியது. இந்தியாவின் சக்திமிக்க
முதலாளிகளும், அவர்களின் நிறுவனங்களும் அமெரிக்கா எனும் யானை, கொள்ளை
லாபக் கவளங்களை விழுங்கும்போது சிந்துகின்ற சிறு துளிகள் நமக்கும்
கிடைக்குமே என்று எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவு அளித்தார்கள்.
அமெரிக்க ஆய்வாளர்களும், சர்வதேச வல்லுநர்களும் நமது
கையாலாகாத்தனத்தைக் கண்டுபிடித்துவிடுவார்களே என்று இந்திய அணு
சக்தித் துறை பயந்தது. 'பிச்சை எடுத்தாராம் பெருமாள், அதைப்
பிடுங்கினாராம் அனுமார்’ என்ற கதையாக தனது லாபங்களை அள்ளிச் செல்வாரோ
அங்கிள் சாம் என்றும் தயங்கியது. எனினும் அரசை ஆதரித்தே தீரவேண்டிய
கட்டாயத்தினால், அமைதியாக உடன் சென்றார்கள். அமெரிக்க அரசும்
நிறுவனங்களும் அதீதக் கனவுகளுடன் ஆசை காட்டினார்கள். பி.ஜே.பி-யைப்
பொறுத்தவரை 'காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன்
கொண்டுபோகிறானே’ என்ற கவலை. கமிஷன் எனும் வெண்ணெய் திரளும்போது,
அதிகாரம் எனும் தாழி அடுத்தவன் கையில் இருக்கிறதே என்று
நொந்தவர்களிடம் வேறு கொள்கைகளோ, நியமங்களோ இருக்கவில்லை.
இடதுசாரிக் கட்சிகள், இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தைக்
கடுமையாக எதிர்த்தார்கள். இது வெறும் ஆற்றல் பற்றிய உடன்பாடு அல்ல,
பெரும் அரசியல், பொருளாதாரக் கலகங்கள்கொண்ட நிகழ்வு என சரியாகக்
கணித்தார்கள். ராணுவ ஒப்பந்தங்களோடும் வியாபாரங்களோடும் இணைத்தே இந்த
உடன்பாட்டைப் பார்க்க வேண்டும் என வாதாடினார்கள். இது அமெரிக்கப்
போர் இயந்திரத்துக்குள் இந்தியாவை சிக்கவைத்துவிடும் என்று அஞ்சினர்.
அணு ஆயுதப் பரவலாக்கத்
தடைச் சட்டத்தில் நாம் எடுக்கும் நிலைப்பாடும், அணி சேரா
வெளிநாட்டுக் கொள்கை, மத்திய கிழக்கு நாடுகளுடனான நல்லுறவு,
அனைத்துக்கும் மேலாக நமது இறையாண்மை, சுயாட்சி போன்றவற்றின் இழப்பு
எனப் பெரும் பிரச்னைகளுக்கு நாம் ஆளாவோம் என்று பயந்தனர். இந்த
ஒப்பந்தத்தைவிட ஹைட் சட்டத்தின் கைதான் ஒங்கி இருக்கும், இந்தியா
இரண்டாந்தர நிலைமைக்குத் தள்ளப்படும் என எச்சரித்தனர். அமெரிக்க
நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க, இந்திய மக்களுக்கு எதுவும் கிடைக்காது
என்று துல்லியமாகக் கணித்தார்கள்.
2007 செப்டம்பர் மாதம் மன்மோகன் சிங் அரசின் அமைச்சர்கள் சிலரும்,
இடது சாரிக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய குழு ஒன்றும் அணு சக்தி
ஒப்பந்தம்பற்றி விவாதிக்கத் துவங்கியது. உடன்பாடு ஏற்படாமல் போகவே,
இடது சாரிக் கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த தமது ஆதரவை 2008 ஜூலை 8
அன்று விலக்கிக்கொண்டன. ஆனாலும் ஜூலை 22-ம் தேதி, மன்மோகன் சிங் அரசு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, வெற்றி பெற்றது.
முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அற்புதமான கதை ஒன்றைச் சொல்லியது.
அதன் முதலாளித்துவ புரோக்கர் அமர்சிங் உட்பட்டோர், அப்துல் கலாமோடு
இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம்பற்றி விவாதித்ததாகவும்,
அவர் தம்மை நம்பச் செய்துவிட்டதால் ஒப்பந்தத்தை ஆதரித்ததாகவும்
நொண்டிச் சாக்கு சொன்னார்கள். குதிரை பேரங்களும், பெட்டி பெட்டியாகப்
பணம் கை மாறிய காட்சிகளும் ஊடகங்களில் காட்டப்பட்டு,
அதிகாரத்துக்காகவும், அமெரிக்காவுக்காகவும், ஆளும் கட்சி எதையும்
செய்ய எத்தனிக்கும் என்பது நிறுவப்பட்டது. நாடாளுமன்றமே நாறியது.
ஜனநாயகத்தை பணநாயகம் கழுத்தை நெரித்துக் கொன்றது. பத்தரை மாற்றுத்
தங்கமான நமது பிரதமருக்கு வழக்கம்போல எதுவுமே தெரியாமல் போனது!
இந்த அசிங்கங்களுக்குப் பின்னால் இருந்த அங்கிள் சாம்
சிரித்துக்கொண்டார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், அவருக்கு 4.5 லட்சம் கோடிக்கு அணு சக்தி வியாபாரம் நடக்கும்.
அவருக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவ்வாடா எனும்
இடத்திலும், குஜராத் மாநிலம் பாங்நகர் மாவட்டம் மிதி விர்தி எனும்
ஊரிலும் மாபெரும் அணு உலைப் பூங்காக்கள் அமைக்க ஏராளமான நிலம் தாரை
வார்க்கப்பட்டது.
இவை தவிர, அன்னை பாரத மாதா, அங்கிள் சாமிடம் இருந்து சுமார் 200 கோடி மதிப்புள்ள இரண்டு பழைய போர்க் கப்பல்களை
வாங்குகிறாள். ஏறத்தாழ 4,000 கோடிக்கு ஆறு ஹெர்குலிஸ் ராணுவப் போக்குவரத்து
விமானங்கள் வாங்குவதற்கு, 2008 ஜனவரி 30-ம் தேதி (மகாத்மா காந்தி
நினைவுநாள்) அன்று காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்டது. கிட்டத்தட்ட 42,000 கோடிக்கு 126 போர் விமானங்கள் வாங்கவும் இந்தியா
விருப்பம் தெரிவித்தது. இப்போது புரிகிறதா, இந்தியா - அமெரிக்கா, அணு
சக்திக் காதலின் பின்னால் இருப்பது இந்தியாவின் ஆயுதக் காமமும்,
அமெரிக்காவின் கொள்ளை லாபப் பாவமும் என்று?
2008 செப்டம்பர் 26 அன்று, பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் புஷ்ஷை
வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது, திட்டமிட்டபடி அணு சக்தி
ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியவில்லை. காரணம் 27-ம் தேதிதான்
அமெரிக்க நாடாளுமன்றக் கீழ் சபை ஒப்பந்தத்தை ஆமோதித்தது. அக்டோபர் 1
அன்று மேல் சபையும் அங்கீகரிக்க, 8-ம் தேதி புஷ் கையெழுத்திட்டு
சட்டமாக்க, 10-ம் தேதி பிரணாப் முகர்ஜியும், கான்டலீசா ரைஸ்ஸும்
வாஷிங்டன் டி.சி. நகரில் சந்தித்து, இந்தியா - அமெரிக்கா சிவில் அணு
சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். அணு சக்தியும்,
அணியாக வர, அமெரிக்காவின் காலனி ஆதிக்கம் அற்புதமாக ஆரம்பம் ஆயிற்று!
அ.முத்துக்கிருஷ்ணன்
விளிம்பு நிலை மக்கள்,
சிறுபான்மையினர், சுற்றுச்சூழல், அணு ஆயுதம், அணு உலைகள், உலகமயம்,
மனித உரிமைகள் எனப் பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும்
இயங்கியும் வருபவர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன். கூடங்குளம்,
ஜைதாப்பூர், தாராபூர், கல்பாக்கம் என பல இடங்களுக்கு களப்
பணிக்காகச் செல்பவர். மிக அபூர்வமான பல தகவல்களை, பார்வைகளை தமிழக
வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தன் எழுத்தின் ஒரு பகுதியாக
முக்கியப் படைப்புகளைத் தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார்.
குஜராத் இனப் படுகொலை குறித்த தெஹல்கா இதழின் ஆவணங்கள், 'அப்சலைத்
தூக்கிலிடாதே’, 'தோழர்களுடன் ஒரு பயணம்’ ஆகியவை இவரின் முக்கிய
மொழியாக்க நூல்கள். 'ஒளிராத இந்தியா’, 'மலத்தில் தோய்ந்த மானுடம்’
ஆகியவை இவரின் கட்டுரைத் தொகுதிகள்.
ஹைட் சட்டமும், 123
ஒப்பந்தமும்!
''மற்ற எல்லா விஷயங்களையும்விட மக்களிடையே அல்லது நாடுகளிடையே
கருத்து வேறுபாடுகளை உருவாக்குவது 'உடன்பாடு’தான்!''
- அமெரிக்க எழுத்தாளர் எல்வின் புரூக்ஸ் ஒயிட்
'நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், நாம் இரண்டு பேரும்
ஊதி ஊதித் தின்னலாம்’ என்ற ஒப்பந்தம்பற்றிக் கேள்விப்பட்டு
இருப்பீர்கள். இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம்
இதைப்போன்றதுதான். இதன் பயனாக, நமக்கு நிறைய அமெரிக்க உமி
கிடைக்கும். அவர்களுக்கு, நமது அவல் அப்படியே போய்ச் சேரும்.
2006-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் அணு
சக்தி ஒப்பந்தத் திட்டத்தை அறிவித்தாலும், ஒரு சிறிய சட்டச் சிக்கல்
குறுக்கே நின்றது. அதாவது, 'அணு ஆயுதங்கள் தயாரிக்கும் எந்த ஒரு
நாட்டுக்கும், அணு சக்தித் தொழில்நுட்பத்தைக் கொடுக்கக் கூடாது’
என்று அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர் லேரி பிரஸ்லர் ஒரு
சட்டத் திருத்தத்தை உருவாக்கிவைத்து இருந்தார். இந்த பிரஸ்லர் சட்டத்
திருத்தத்தை எப்படி மீறுவது என்று ஆலோசித்த அதிபர் புஷ், ஹைட்
சட்டத்தை நிறைவேற்ற எத்தனித்தார்.
ஹென்றி ஹைட் எனும் நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட
சட்ட வரைவு 2006-ம் ஆண்டு ஜூலை 26 அன்று கீழ் சபையிலும் நவம்பர் 16
அன்று மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் 18 அன்று அதிபர்
புஷ்ஷால் கையெழுத்து இடப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
2005 ஜூலை 18 மற்றும் 2006 மார்ச் 2 ஆகிய நாட்களில் அறிவிக்கப்பட்ட
புஷ் - மன்மோகன் சிங் கூட்டு அறிக்கைகள் 123 ஒப்பந்தத்துக்கு
அடிப்படையாக அமைந்தன. அமெரிக்காவின் அணு சக்தி ஒத்துழைப்பைப் பெற
அனைத்துத் தடைகளையும் அவர்கள் நீக்கிவிடும் பட்சத்தில், இந்திய அரசு
ஏழு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது:
1. ராணுவத் தொடர்பற்ற அணு சக்தி நிலையங்களையும், ராணுவம்
சம்பந்தப்பட்டவற்றையும் பிரித்துவிடுவது.
2. ராணுவத் தொடர்பு இல்லாதவற்றை ஐ.ஏ.ஈ.ஏ. எனப்படும் சர்வதேச அணு
சக்தி முகமையின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது.
3. மேலதிகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்படுவது.
4. புதிய அணு ஆயுதப் பரிசோதனைகள் செய்வது இல்லை எனும் சுய
கட்டுப்பாட்டைத் தொடர்வது.
5. அணு ஆயுத ஊடு பொருட்களைக் குறைக்கும் உடன்படிக்கையை
அமெரிக்காவோடு சேர்ந்து ஏற்படுத்திக்கொள்வது.
6. செறிவூட்டும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை
பரவலாக்காமல் இருப்பது.
7. அணு சக்தி பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் ஏற்றுமதி
செய்யாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது.
இப்படி கை கூப்பிக் கும்பிட்டு, குனிந்து, நின்ற பிறகும், ஈரான்,
அணு ஆயுதப் பரவலாக்கம், ஆயுதக் குறைப்புபோன்ற இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கைகளிலும் அமெரிக்கா மூக்கை நுழைத்தது. ஹைட் சட்டம்
அமெரிக்காவின் தேசிய சட்டம் என்பதால், 123 ஒப்பந்தத்தைவிட
முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அதன் கையே ஓங்கி நிற்கும்பட்சத்தில்,
இந்தியாவையும் அவர்களின் தேசியச் சட்டங்களுக்கு கீழ்ப்பட்டு நடக்கச்
செய்யும். நமது அரசின் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதோடு
மட்டும் இன்றி, இந்தியாவின் இறையாண்மையே பாதிக்கப்படும் அபாயம்
எழுந்தது.
ஓர் உதாரணம் சொல்கிறேன், ஆற்றலுக்காக அலையும் இந்தியா, 740 கோடி
டாலர் செலவில் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக 2,700 கி.மீ.
தூரத்துக்கு குழாய் பதித்து எரிவாயு கொண்டுவரத் திட்டமிட்டது.
இவ்வளவு பெரிய தொகையை ஈரான் அந்நிய செலாவணியாகப் பெற்றால்,
அணுகுண்டுகள் விரைந்து தயாரித்துவிடும் என்று அஞ்சிய அமெரிக்கா,
இந்தியாவின் கைகளை முறுக்கி ஈரானுக்கு எதிராக செயல்படவைத்தது.
2006 டிசம்பரில் அமலுக்கு வந்த ஹைட் சட்டமும், 2007 ஆகஸ்டில்
அறிவிக்கப்பட்ட 123 ஒப்பந்தமும் முக்கியமான மூன்று விஷயங்களில்
முரண்படுகின்றன.
ஒன்று, 123 ஒப்பந்தம் இந்தியா அணு சக்தி எரிபொருளை சேமித்து
வைத்துக்கொள்ள உதவும் என்று வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால், ஹைட்
சட்டம், இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு, இந்தியா அணு ஆயுதங்கள்
தயாரிக்க ஒரு போதும் உதவி செய்யாது என்று திட்டவட்டமாக மறுக்கிறது.
இரண்டு, 123 ஒப்பந்தம் உரிய திருத்தங்களைக் கொண்டுவந்து, அவற்றின்
உதவியோடு அணு சக்தி, கன நீர் போன்ற தொழில்நுட்பங்களையும்
பகிர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கிறது. ஆனால், ஹைட் சட்டம் 'அணு சக்தி
வழங்குவோர் குழுமம்’ எனும் என்.எஸ்.ஜி. விதிமுறைகளை மீறும்பட்சத்தில்
எந்தத் தொழில் நுட்பமும் தர முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது.
மூன்று, 123 ஒப்பந்தம் இந்தியாவின் சிவில் அணு சக்தி நிலையங்களை
விசேஷக் கண்காணிப்புக்கு உட்படுத்த வழிவகை செய்கிறது. ஆனால், ஹைட்
சட்டம் ஐ.ஏ.ஈ.ஏ. கொள்கைகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் உட்பட்டு,
கண்காணிப்பு ஒப்பந்தங்களை உருவாக்கக் கேட்டுக்கொள்கிறது.
மொத்தத்தில் அமெரிக்கா, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும்
ஆட்டுகிறது. பணத்தைத் தவிர, வேறு எந்தக் கொள்கைகளும் இன்றி இயங்கும்
இந்தியத் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா?
மருத்துவர் சுமித்ரா ரகுவரன்
கேரள மாநிலம் திருச்சூரில்
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருவனந்தபுரம் மருத்துவக்
கல்லூரியில் பட்டம் பெற்றவர் சுமித்ரா ரகுவரன். இங்கிலாந்தில் உள்ள
லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பயிற்சி
பெற்று, ஏழு ஆண்டுகள் அந்த நாட்டில் வாழ்ந்து, 1977-ம் ஆண்டு
நாகர்கோவில் வந்தார். தன் மாமனார் நடத்திய மருத்துவமனையில்
சேர்ந்து, கடலோரக் கிராமங்களில் காணப்படும் அதீத
புற்றுநோய்கள்பற்றியும், பெண்களின் மீதான தாக்கங்கள்பற்றியும்
ஆய்வுகள் நடத்தினார். மகப்பேறு மருத்துவர்களை ஒருங்கிணைத்து ஓர்
இயக்கமாக இயங்கவைக்கும் சுமித்ரா ரகுவரன், கூடங்குளம் அணு மின்
நிலையத்தை 1988 முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார்.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், பிணம் தின்றே
தீரவேண்டும். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 123 ஒப்பந்தம்
வேகமாக நிறைவேறிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒரு முக்கியமான தடையை அது தாண்ட வேண்டி இருந்தது. என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group) எனும் அணு சக்தி வழங்குவோர் குழுமத்திடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது இருந்தது.
இந்தக் குழுமம் தொடங்கப்படுவதற்குக் காரணமே இந்தியா என்பதுதான் வேடிக்கை. 1974-ம் ஆண்டு இந்தியா அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியபோது, கனடா நாட்டில் இருந்து பெற்ற உபகரணங்களைப் பயன்படுத்தியதால் சினங்கொண்ட ஏழு நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், கனடா) 1975 ஏப்ரல் மாதம் லண்டன் மாநகரில் ரகசியமாகக் கூடி, அணு சக்தி வர்க்கத்தின் விதிமுறைகளைக் கடுமையாக்குவது பற்றி விவாதித்தார்கள். அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் பெற்று இருந்த ஐந்து நாடுகள் தவிர, மற்ற நாடுகளுக்கு அணு சக்திப் பொருட்களைக் கொடுப்பது இல்லை, ஏற்றுமதி விதிகளைத் தளர்த்துவதும் இல்லை என்று முடிவாயிற்று. ஒன்றன் பின் ஒன்றாகப் பல நாடுகள் இந்தக் குழுமத்தில் உறுப்பினராக இணைந்தன.
1990-களின் தொடக்கத்தில் 20 நாடுகளே அணு ஆயுதப் பரவலாக்கத் தடைச்
சட்டத்தில் கையெழுத்து இடாமல் இருந்தன. முக்கியமாக, இந்தியா,
பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் விலகிச் சென்றதால், இவர்களை அணு
ஆயுதங்களைத் துறக்கச் செய்வதற்காக, என்.எஸ்.ஜி. ஒரு நிபந்தனையை
முன்வைத்தது. அதாவது இந்த நாடுகள் அணு சக்தி வர்த்தகத்தில் ஈடுபட
வேண்டும் என்றால், தமது அணு சக்தி நிலையங்கள் அனைத்தையும் முழு
வீச்சிலான சர்வதேசக் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான்
அது. அணு ஆயுதம் பரவாமல் இருக்க, இந்த நடவடிக்கைகளும் நிபந்தனைகளும்
உதவியது உண்மை!
ஆனால், இந்திய அரசு தங்களது நிலைமையே வேறு என வாதிட்டது. இந்தியா
ஏற்கெனவே அணு ஆயுதம் தயாரித்துவிட்டதால், தம்மை அணு ஆயுதமற்ற நாடாக
பாவிக்கக் கூடாது என்றது. மேலும் மிகுந்த பொறுப்புடன்
நடந்து, அணு சக்திப் பொருட்கள் ஏற்றுமதியில் கட்டுப்பாட்டோடு இருந்து
வருவதையும் சுட்டிக்காட்டியது.
அமெரிக்காவோடு செய்துகொண்டுள்ள 123 ஒப்பந்தத்தின்படி, இந்தியா உடனான
முழு அணு சக்தி ஒத்துழைப்பையும் வர்த்தகத்தையும் நிறைவேற்ற,
அமெரிக்கா தனது நண்பர்களையும் சகாக்களையும் வற்புறுத்திட உறுதி
பூண்டுள்ளது. எனவே, தம் மீது எவ்விதமான கண்காணிப்புக்
கட்டுப்பாடுகளோ, வேறு நிபந்தனைகளோ சுமத்தப்படக் கூடாது என்று
வலியுறுத்தியது.
அணு சக்தி வழங்குவோர் குழுமத்திடம் இருந்து இந்தியாவுக்கு விலக்கு
வேண்டுவதற்காக, 2006 மார்ச் மாதம் ஆறு பத்திகள் மட்டுமேகொண்ட
சுருக்கமான ஒரு வரைவை அமெரிக்கா எழுதி, 45 உறுப்பு நாடுகளிடையே
விநியோகித்தது. வேடிக்கை என்னவென்றால், அந்த வரைவு இந்தியாவோடு
பகிர்ந்துகொள்ளப்படவில்லை. 123 உடன்பாட்டுக்கு, இந்தியாவில் புதிதாக
எதிர்ப்புகள் முளைத்துவிடக் கூடாது என அமெரிக்கா அஞ்சியதே இந்த ரகசிய
முயற்சிக்குக் காரணம். இன்னும் ஒரு பிரச்னையும் எழுந்தது. 'தனிப்பட்ட
குழும உறுப்பு நாடுகளை வழிக்குக் கொண்டுவருவது தனது பொறுப்பு. ஆனால்,
ஒட்டுமொத்தக் குழுமத்திடம் இருந்து விலக்கு வாங்கித் தருவது
அமெரிக்காவின் கடமை!’ என இந்தியா வாதாடியது. ஆனால், அமெரிக்காவோ,
என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகளை சமாளிப்பது உங்கள் வேலை, உறுதுணையாக
இருப்பது மட்டுமே எங்களது பணி என்று கையைக் கழுவியது.
ஒரு வழியாக இன்னும் ஒரு வரைவு 2008-ம் ஆண்டு இந்தியாவின்
கலந்தாலோசனைகளோடு தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 21, 22 தேதிகளில்
வியன்னாவில் நடந்த குழுமக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அணு
ஆயுதங்கள் இம்மாதிரியான அரை வேக்காட்டு முயற்சிகளால் பரவிவிடக்
கூடாது எனக் கவலைப்பட்டவர்கள், இந்த அமெரிக்க - இந்தியக் கூட்டு
முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
குழுமத்தின் ஏற்றுமதி நியமங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று
விண்ணப்பித்தனர். இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படுமானால், அது தனது
ராணுவம் சம்பந்தப்பட்ட அணு சக்தி நிலையங்களை சர்வதேச அணு சக்தி
முகமையிடம் இருந்து மறைக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை
பலவீனப்படுத்தவும் செய்யும் என்று முறையிட்டனர். செறிவூட்டும், மறு
சுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களைப் பரவச் செய்து, இந்தியா மேலும்
அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் என்று அஞ்சினர். மீண்டும் அணு ஆயுதப்
பரிசோதனைகளை இந்தியா செய்திட என்.எஸ்.ஜி. விலக்கு வழிவகுக்கும் என்று
எச்சரித்தனர்.
2008 ஆகஸ்ட் குழுமக் கூட்டத்தில் நியூசிலாந்து, அயர்லாந்து,
ஆஸ்திரியா, பின்லாந்து, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்,
மற்றும் நெதர்லாந்து நாடுகள் கடுமையாக எதிர்க்கவே, இந்தியா
எதிர்பார்த்த விலக்கு கிடைக்கவில்லை. ஒப்பந்த வரைவு மீண்டும் மாற்றி
எழுதப்பட்டது. 2008 செப்டம்பரில் நடந்த குழுமக் கூட்டத்தில் அதிபர்
புஷ் களம் இறங்கி கடுமையாகப் பிரசாரம் செய்ததன் பலனாக, சமன்பாடு
ஏற்பட்டது. 34 வருடங்களாக அணு சக்தி வழங்குவோர் குழுமம்
கடைப்பிடித்த நியமங்களில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு
அளிக்கப்பட்டது. உடனடியாக 123 ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
என்.எஸ்.ஜி. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வாய்ப்பு
கண்களில் தென்படுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னால் நெதர்லாந்தில்
கூடிய குழுமம், தனது விதிமுறைகளைக் கடினமாக்குவது பற்றி சற்றே உரத்த
குரலில் பேசி இருக்கிறது. அரண்டுபோன மன்மோகன் சிங் அரசு, எங்களுக்கு
ஏற்கெனவே தரப்பட்டிருக்கும் விலக்கை மீற முடியாது என்கிறது. மடியில்
கனம் இருந்தால், வழியில் பயம் இருக்கத்தானே செய்யும்?
கோ.சுந்தர்ராஜன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன், திருநெல்வேலி மாவட்டம்,
சங்கரன்கோவில் பகுதியைச் சார்ந்தவர். சென்னையில் மென்பொருள்
நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கூடங்குளம், கல்பாக்கம் அணு
உலைகள் ஆகியவற்றுக்கு எதிராக முனைப்புடன் செயல்படுகிறார்.
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பில் தீவிரமாக ஈடுபடும் சுந்தர்ராஜன்,
அணு சக்திக்கு மாற்றான மரபு சாரா எரிசக்திகள் பற்றி மக்களிடையே
விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்!
சர்வதேச
அணு சக்தி முகமையும், சதியும்!
''அணு மின்சாரத்தின் பாதுகாப்புபற்றிய பொது மக்களின் நம்பிக்கை, மிக
மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது!''
- யுகியா அமானோ,
ஐ.ஏ.சி.ஏ. இயக்குநர்
சர்வதேச அணு சக்தி சந்தைக்குள் சென்று, நமக்கு
வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ள விரும்புகிறது இந்தியா. ஆனால் 'நீ
வெடிகுண்டு தயாரிப்பவன், நம்பகத்தன்மை அற்றவன்’ என்று குற்றம்
சாட்டி, இந்தியாவை இந்த சந்தைக்குள் நுழையவிடவில்லை கடைக்காரர்கள்.
கனடா 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் சிரஸ் எனும் ஆய்வு அணு
உலையை விற்றபோது, அமைதியான உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம்
என்று வாக்குறுதி கொடுத்து வாங்கிவிட்டு, பின்னர் 1974-ம் ஆண்டு
அணுகுண்டுப் பரிசோதனைக்கு நாம் எடுத்தாண்ட தால், நம்மை நம்ப
மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் புதுப் பணக்காரராக மாறிக் கொண்டு இருக்கும் நமது பணப்
பையைக் கவனித்த 'அங்கிள் சாம்’, நமது கையைப் பிடித்து இழுத்து அவர்
கடைக்குக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்.
'அணு சக்தி வழங்குவோர் குழுமம்’ எனும் வர்த்தக சங்கத்தின் சிறப்பு
அனுமதியை வாங்கித் தந்து, சந்தையின் வாசலில் நிற்கும் ஐ.ஏ.ஈ.ஏ. எனும்
'சர்வதேச அணு சக்தி முகமை’ காவல ரின் கண்காணிப்பு ஒத்துழைப்புக்கும்
வழி செய்கிறார் அங்கிள் சாம். இந்தக் காவலரிடம் நமது பைகளைத் திறந்து
காட்டி, நாம் வாங்கும் பொருட்களை என்ன செய்கிறோம், எப்படிக்
கையாள்கிறோம் என்று விளக்க வேண்டும். அதற்காக கண்காணிப்பு
உடன்படிக்கை ஒன்றை அவரோடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
யார் இந்த முகமை? 1957-ம் ஆண்டு, 'அமைதிக்கான அணுக்கள்’ என்ற
கொள்கைக் குரலோடு, ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்ட
ஒரு நிறுவனம். இது உறுப்பு நாடுகளுடனும், உலகளாவிய பலதரப்பட்ட
நிறுவனங்களுடனும் சேர்ந்து, பாதுகாப்பான, அமைதியான அணு சக்தியின்
வளர்ச்சிக்கு உழைக்கிறது. யுனெஸ்கோ, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம்
எனப் பல உன்னதமான அங்கங்களைக்கொண்டு உலகின் நல்வாழ்வுக்காக இயங்கும்
ஐ.நா. சபைக்கு திருஷ்டிப் பரிகார கொம்புகளாக இருக்கின்றன இந்த
முகமையும், உலக வங்கிபோன்ற நிதி நிறுவனங்களும்!
சர்வதேசியம், கருத்துப் பரிமாற்றம், பன்முகப் பார்வை,
வெளிப்படைத்தன்மை, மனித நேயம் என நேர்மறை இயல்புகளை ஏராளமாகக்கொண்ட
ஐ.நா. சபை அலுவலகங்களுக்கும், கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும்
செல்வது ஓர் அலாதியான அனுபவம். ஆனால், ஆஸ்திரியா நாட்டின் அழகான
தலைநகரான வியன்னாவில் அமைந்திருக்கும் ஐ.ஏ.ஈ.ஏ. அலுவலகம்,
விறைப்பாகவும் முறைப்பாக வும் இருக்கிறது. உள்ளே விடுவதற்கே ஓராயிரம்
கேள்விகள் கேட்டார்கள். ஒரு வழியாக உள்ளே போய் தகவல்களைக் கேட்டால்,
'பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கொட்டைப் பாக்குக்கு விலை
சொன்னதுபோல’ ஏதேதோ பேசினார்கள். அணு சக்தி என்றாலே இப்படி ஆகி விடுமோ
என்னவோ?
எகிப்து நாட்டைச் சார்ந்த முகமது எல் பாரடை, இதன் தலைவராகப்
பணியாற்றினார். 2009 டிசம்பர் முதல் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யுகியா
அமானோ வழிநடத்துகிறார். 35 நாடு களைச் சார்ந்த பிரதிநிதிகள்,
ஆளுநர்களாக ஆட்சி பரிபாலனம் செய்கின்றனர். இந்த உயர் மட்டக் குழுவோடு
இந்தியா கண்காணிப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டது.
இந்திய அணு சக்தித் துறையைச் சார்ந்தவர்கள் சிலர், இதனை
எதிர்த்தனர். சர்வதேச அணு சக்தி முகமைப் பரிசோதனைகளுக்கு நாம்
அடிபணிந்தால், அது நமது ஆய்வுகளின் போக்கையும் தரத்தையும்
கெடுத்துவிடும் என்றனர். ஓர் அணு மின் நிலையத்தில் ஒரு மூலையில்
இருந்து எரிபொருளை எடுத்து இன்னொரு மூலைக்குக் கொண்டுபோனாலும்,
முகமைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர் களின் பரிசோதகர்கள் வந்து,
பார்த்து அனுமதி தந்தால்தான், நாம் இயங்க முடியும் என்று தயங்கி
னார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் உலையில்
இருந்து எரிந்துபட்ட எரிபொருளை நம் நாட்டு ஈனுலையில் உபயோகித்தால்,
அந்த ஈனுலையும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் என வேதனைப்பட்டனர்.
இந்தியாவும் முகமையும் நீண்ட நெடும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி
சில முடிவுகள் எடுத்தனர். ராணுவத் தொடர்பு கள் ஏதும் இல்லாத 14 அணு
உலைகளை முகமையின் கண்காணிப்புக்குள் கொண்டுவர இந்தியா சம்மதித்தது.
ஆனாலும் இரண்டு பிரச்னைகளில் தீர்வு ஏற்படவில்லை, ஒன்று, இந்த அணு
உலைகளின் மொத்த வாழ்நாளுக்கும் தேவையான எரிபொருளை இந்தியா சேமித்து
வைத்துக்கொள்வதை முகமை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு, ஏதேனும்
காரணங்களால் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அணு மின் நிலையங்களுக்கு
சர்வதேச எரிபொருள் நிறுத்தப்பட்டால், அந்த நிலைமையை
சரிப்படுத்திக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.
முகமைக்குள் வேறு குழப்பமான கருத்துகளும் நிலவின. அதிகமான இந்திய
உலைகள் கண்காணிப்புக்குள் வருவதால், ஆயுதப் பரவலாக்கம் நிகழாது
என்றனர் சிலர். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவைப்போன்று
சலுகைகள் பெற முயற்சிக்கும் என்றனர் பிறர். இப்படியான
குழப்பங்களுக்கு மத்தியிலும் மன்மோகன் சிங் அரசு இந்த உடன்படிக்கையை
ஏற்படுத்தியே தீர்வது எனக் கங்கணம் கட்டிக் காரியத்தில் ஈடுபட்டது.
உடன்படிக்கைபற்றிய எந்தத் தகவலையும், மன்மோகன் அரசு தோழமைக்
கட்சிகளுக்கோ, எதிர்க் கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ,
பத்திரிகையாளர்களுக்கோ, அனைவருக்கும் மேலான இந்தியக் குடிமக்களுக்கோ
அறியத் தரவில்லை. முகமையின் ஆளுநர் குழுவுக்கு உடன்படிக்கையின் நகல்
இன்னும் அனுப்பப்படாததால் வெளியிட இயலவில்லை என்று போக்குக்
காட்டியது டெல்லி அரசு.
2008 ஜூன் 17 அன்று பிரணாப் முகர்ஜி, இடதுசாரிக் கட்சித்
தலைவர்களைச் சந்தித்து, இந்த உடன்படிக்கையை மட்டும் நிறைவேற்றிக்
கொள்கிறோம் எனக் கெஞ்சிக் கூத்தாடி ஒப்புதல் பெற்றார். ஜனநாயக
மரபுகள் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டன. ஜூலை மாதம் முழுவதும் ஆளும்
கட்சியினரும், அவர்களின் அதிகாரிகளும் ஓடியாடி, ஆகஸ்ட் 1 அன்று நடந்த
முகமையின் ஆளுநர் குழுக் கூட்டத்தில் உடன்படிக்கையை ஏகமனதாக
ஏற்றுக்கொள்ளச் செய்தனர். அங்கிள் சாமும் அவர் பங்கைச் செய்தார்.
2009 மார்ச் மாதம் முகமையின் கூடுதல் வரைவு எனும் அடுத்த கட்ட
ஆமோதிப்பையும் பெற்று, அமெரிக்காவின் கடையில் அடிமையாக அடைக்கலம்
புகுந்துவிட்டோம்.
அணு சக்தி சந்தைக்குள்ளே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி,
ஜப்பான் எனப் பல கடைகள் மூடப்படுகின்றன. ஆனால், இந்திய அரசோ கடந்த
ஆறேழு வருடங்களாக அணு சக்தியை 'வாராது வந்து மாமணி’ எனப் போற்றி
புகழ்ந்து வருகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்! உள்ளே
இருக்குமாம் ஈரும் பேனும்!
இரா.பொன்னம்பலம்
தமிழக வேளாண்மை விற்பனைத்
துறையில் கண்காணிப்பாளராக 33 ஆண்டுகள் பணிபுரிந்த பொன்னம்பலம்,
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டணி சந்தையைச் சிந்தித்து
வடிவமைத்தார். நுகர்வோர் உரிமைகளுக்காக, குறிப்பாக உணவு
உத்தரவாதத்துக்காக, அதிலும் நெல் பயிரின் முக்கியத்துவத்துக்காக
உழைக்கும் இந்த செயல் வீரர், அணு மின் நிலையங்கள், நுகர்வோரின்
சுற்றுச்சூழல், உணவு உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிடுகிறார்.
பரந்துபட்ட தெளிவான இந்தப் பார்வையோடு, கூடங்குளம், கல்பாக்கம் அணு
மின் நிலையங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அணு விபத்து இழப்பீடு எனும்
மோசடி!
தே மலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
சித்தத்திலே சேர்ப்போம்;
'சேமம் எல்லார்க்கும்’ என்றே சொல்லிப் பேரிகை
செகம் முழக்கிடுவாய்!
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
இயங்காத துறையின் இயலாத அமைச்சராக இருந்த ஆற்காடு
வீராசாமி, 2007 பிப்ரவரி மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
'கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 20 கி.மீ. சுற்றளவில்
வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி 558 காப்பீட்டுத் தொகையாக
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 300 மத்திய அரசு தரும், மீதித் தொகையை அணு மின் நிலையம்
தரும்’ என்று சொல்லி இருந்தார்.
கூண்டோடு கைலாசம் போகிறவர்களுக்கு குழுக் காப்பீடு எப்படி உதவும்?
அணு மின் நிலையம் வெடித்தால், உடுத்தி இருக்கும் துணி யோடு ஊரைவிட்டு
ஓடுபவர்கள், இன்ஷூரன்ஸ் பாலிசி எங்கே என்று தேடிக்கொண்டா
இருப்பார்கள்? ஒருவேளை பாலிசி கையில் இருந்தால்கூட, கதிர் வீச்சு
காரணமாக முகம் கருகி, உடல் கரிந்து, வாந்தி எடுத்து, பேதியாகிப்
பேதலிக்கும்போது, இந்த இன்ஷூரன்ஸ் தொகையை யார் போய், எப்படி
வாங்குவது? கண்களை இழந்தவனுக்கு கைகள் நிறையச் சித்திரங்கள்
கொடுப்பதால் என்ன பயன்? ஆழமான இந்தக் கேள்விகளுக்கு ஆற்காட்டார்
பதில் அளிக்க முடியாமல் பரிதவித்தார்.
இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட
நிலையில், இந்திய அரசு இழப்பீடுச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று
ஏவிக்கொண்டு இருந்தது அமெரிக்கா. அணு சக்தி இழப்பீடு சட்ட முன்வரைவு,
மத்திய அமைச்சரவையால் நவம்பர் 20, 2009 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வழக்கம்போலவே மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு இந்த சட்ட முன்வரைவை
மக்களிடம் இருந்து மறைத்து வைத்தது.
மார்ச் 10, 2010 அன்று காங்கிரஸ் அரசு அவசர கதியாக இதனை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட
நிலையிலேயே எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால், வாக்கெடுப்பு நடத்த
வேண்டி வரும் என்பதாலும், அப்படி வாக்கெடுப்பு நடத்தி னால்
'முதலுக்கே மோசம்’ வரலாம் என்ப தாலும், அந்த முன்வரைவைத் திரும்பப்
பெற்றுக்கொண்டது அரசு!
28 பக்கங்களும், ஏழு பகுதிகளும், 49 ஷரத்துகளும்கொண்ட இழப்பீடு சட்ட
வரைவு மூன்று நோக்கங்களைக்கொண்டது. அணு மின் விபத்துகளுக்கு இழப்பீடு
வழங்குவது, இழப்பீடு கோரல்களுக்கு இயக்குநரை நியமிப் பது, மற்றும்
கோரல்களுக்கான இயக்ககம் தோற்றுவிப்பது.
இந்த சட்ட வரைவில் காணப்பட்ட பல பிரச்னைகளுள் ஒன்று, தனியார்
நிறுவனங்கள் வெறும் லாப நோக்கோடு அணு மின்சாரத் தயாரிப்பில் நுழைய
வழி வகுப்பது. இந்திய அணு மின் நிலையங்கள் அனைத்தும் இதுவரை இந்திய
அரசின் அணு மின் கழகமான என்.பி.சி.ஐ.எல். மூலமே நிறுவப்பட்டும்
இயக்கப்பட்டும் வருகின்றன. இதற்குள்ளேயே எத்தனையோ பிரச்னைகள்
இருக்கும் நிலையில்... தனியாரையும் உள்ளேவிடுவது சரிதானா என்பது
விவாதத்துக்கு உரியது. மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் இந்திய அரசு
நிறுவனமே, எந்தத் தகவலையும் மக்களுக்குத் தராமல் தான்தோன்றித்தனமாக
இயங்கும்போது, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளும் தனியார்
நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்யும்... எப்படி எல்லாம் இயங்கும்? அணு
மின் நிலையம்போன்ற மிகுந்த ஆபத்தான தொழிற்சாலைகளைத் தனியாருக்குத்
தாரை வார்ப்பது, பேரிடர்களை வருந்தி அழைப்பதுபோன்றது. சுயமாக
இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஏதுமற்ற நிலையில், இது இன்னும்
ஆபத்தாகவே அமையும்.
இந்தச் சட்ட வரைவு அணு மின் விபத்து இழப்பீட்டுக்கு உச்சக்கட்ட
வரம்பை நிர்ணயித்தது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது, கூடாதது. ஒரு தீ
விபத்து இழப்பீடு நிர்ணயம் என்றால், என்னென்ன பொருட்கள் எரிந்து
சாம்பலாகும், எவ்வளவு இழப்பு வரும், எப்படி உச்ச வரம்பை
நிர்ணயிக்கலாம் என்பனவற்றை லகுவாக முடிவு செய்யலாம். ஆனால் அணு மின்
விபத்து எண்ணற்ற வழிகளில், எத்தனையோ தலைமுறைகளை, எப்படி எல்லாமோ
பாதிக்கிற விஷயம், இதற்கு எப்படி உச்சவரம்பு நிர்ணயிப்பது?
அரசு சார்ந்த அணு மின் நிறுவனத்துக்கு உச்ச வரம்பு 2,100 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அமெரிக்க
டாலரில் கணக் கிட்டால், இது 450 மில்லியன் டாலராக இருக்கும். 1986
ஏப்ரல் மாதம் நடந்த செர்னோபில் அணு மின் நிலைய விபத்தின் காரணமாக
அண்டை நாடான பெலரூஸ் 1991 முதல் 2003 வரையிலான 13 ஆண்டு
காலகட்டத்துக்குள் மட்டுமே 13,000 மில்லியன் டாலர் நிவாரணப்
பணிகளுக்காக செலவு செய்து இருக்கிறது. இதில் இருந்தே, 450 மில்லியன்
டாலர் இழப்பீடு என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது
என்பது புலப்படும். அரசு சாராத அணு மின் நிறுவனம் வழங்கும் இழப்பீடு
அதிகபட்சமாக 500 கோடியாகவும், குறைந்த பட்சமாக 100 கோடியாகவும் இருக்கும் என வரையறுத்தது சட்ட வரைவு.
மத்திய அமைச்சரவை நிர்ண யித்த 300 கோடி உச்சவரம்பு 500 கோடியாக உயர்த்தப்பட்டாலும், குறைந்தபட்சத் தொகை
மாற்றப்படாதது மோசடி என்றே எண்ணத் தோன்றியது.
அணு உலை இயக்குபவர் வழங்கவேண்டிய இழப்பீட்டைப்பற்றி மட்டுமே பேசிய
சட்ட வரைவு, உபகரணங்கள் வழங்குபவர், அணு மின் நிலையம் கட்டுபவர்
போன்றோர் வழங்க வேண்டிய இழப்பீடுபற்றி வாய் திறக்கவே இல்லை. இது
அமெரிக்க கம்பெனிகளை பாதுகாப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்றே
தோன்றியது.
இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்குவது என்றால், இன்றைய நிலையில்
இந்தியாவில் என்.பி.சி.ஐ.எல். நிறுவனம் மட்டுமே அணு மின் நிலையங்களை
இயக்குகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இது மக்கள் வரிப்
பணத்தில் இயக்கப்படும் ஒரு பொதுத் துறை நிறுவனம். இந்திய அரசு நம்
மக்கள் பணத்தை எடுத்து நமது மக்களுக்கே இழப்பீடு வழங்கிக்கொண்டு
இருக்க, அமெரிக்க கம்பெனிகள் கையில் கிடைத்ததை எல்லாம்
சுருட்டிக்கொண்டு ஜூட் விடலாம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத
ஏற்பாடு. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு
உடைத்துவிட்டு, வரத்தை எல்லாம் வாங்கிக்கொள்ள முனைவது என்ன நியாயம்?
இவை எல்லாவற்றையும்விட வேடிக்கையானது, இழப்பீடு வழங்கப்பட வேண்டிய
கால கட்டத்தை 10 வருடங்கள் என்று குறிப்பிட்டது. அணு மின் நிலைய
விபத்து ஆண்டாண்டு காலமாய் அவதிக்கு உள்ளாக்கும்போது, 10 வருடங்கள்
மட்டுமே இழப்பீடு வழங்குவது பைத்தியக்காரத்தனமானது. இத்தனை ஓட்டைகளை
உள்ளடக்கிய சட்ட வரைவை சட்டமாக்கி, சிட்டாகப் பறந்து வாஷிங்டன்
எஜமானர்களை மகிழ்விக்கத் துடித்த மன்மோகன் சிங் அரசு, தனது
சிந்தனைகளில், செயல்பாடுகளில், சராசரி இந்தியக் குடிமகனின்
பாதுகாப்புக்கு, நல் வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்காதது பெரும்
துரதிர்ஷ்டம்!
அன்பு செல்வம்
கல்பாக்கத்திலும் தாராபூரிலும் உள்ள
அணு மின் நிலையங்களில் பணி ஆற்றியவர். அணு உலைப் பராமரிப்பில்
ஈடுபட்டு அணுக் கதிர் வீச்சின் அபாயத்தை நேரடியாக உணர்ந்தவர்
என்பதால், அது குறித்த விழிப்பு நிலையை இளைஞர்களுக்கு எடுத்துச்
சொல்லியும், எழுதியும் வருகிறார். 2000-ம் ஆண்டு கல்பாக்கத்தில்
இருந்து கூடங்குளம் வரை நகரப் பேருந்தின் மூலம் ஓர் அணு
எதிர்ப்புப் பிரசாரத்தை 'அரசரடி மனித உரிமைக் குழு’வுடன்
மேற்கொண்டவர். மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணியாற்றிய
அன்பு செல்வம், புதுச்சேரியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு
வருகிறார்!
தொடரும் இழப்பீடு நாடகம்
''நீங்கள் சுறுசுறுப்பாக வேறு திட்டங்கள் தீட்டிக்கொண்டு
இருக்கும்போது உங்களுக்கு நேர்கிறதே, அதுதான் வாழ்க்கை!''
- ஜான் லெனின்
தீபாவளிக்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்குகிறீர்கள்.
உங்கள் குடும்பத்துக்கு 'மன்னார் அண்ட் கம்பெனி’ தயாரித்த அந்த சலவை
இயந்திரத்தை, 'ஓஹோ புரொடக்ஷன்ஸ்’ கடையில் இருந்து பெறுகிறீர்கள்.
பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதுபோல, உங்கள் மனைவியே
இயந்திரத்தில் துணிகளைத் துவைக்கிறார். ஒரு நாள் இயந்திரம் பழுதாகி
வீடெல்லாம் வெள்ளக்காடாகி, வீட்டில் உள்ளோர்வழுக்கி விழுந்து பெரும்
விபத்து நடந்துவிடுகிறது. மன்னார் அண்ட் கம்பெனியோ, ஓஹோ
புரொடக்ஷன்ஸோ எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இயக்குபவர் என்ற முறையில் உங்கள் மனைவிதான் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
அவர் உங்கள் சட்டைப் பையில் இருந்து 100 ரூபாயை எடுத்து
உங்களுக்கே தருவார். நீங்கள் அதை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். இது
ஏதோ பரமார்த்த குரு கதையோ... அல்லது முல்லா நஸ்ருதீன் கதையோ அல்ல,
இதுதான் அணு சக்தி இழப்பீட்டுக் கதை!
'ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்’ என்பார்கள். இளிச்சவாயன்
இந்தியனிடத்தில், தத்துப்பிள்ளை தமிழனிடத்தில் இதுவும் நடக்கும்,
இன்னமும் நடக்கும். இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டி இருந்தால்,
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அணு சக்தித் துறையில் முதலீடு செய்ய
விரும்ப மாட்டார்கள். எனவே, சாதகமான இழப்பீட்டு சட்டத்தை
உருவாக்குங்கள் என பெரியண்ணன் அமெரிக்கா பிடித்து அமுக்கிக்கொண்டு
இருந்தார். தனது நாட்டு நிறுவனங்களான ஜெனரல் எலெக்ட்ரிக், வெஸ்ட்டிங்
ஹவுஸ் போன்றோர் பெரும் லாபம் சம்பாதிக்க அவர் விரும்பினார். பிரான்ஸ்
நாட்டின் அரேவா கம்பெனியும், ரஷ்யாவின் ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்
நிறுவனமும் அரசு சார்ந்தவையாக இருந்தாலும், அவர்களும் நமக்கு அல்வா
கொடுப்பதில் குறியாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.
அமெரிக்காவைப்போலவே ரஷ்யப் பெரியண்ணனும் தாங்கள் இந்தியாவுக்கு
விற்கும் அணு உலைகளில் ஏதாவது விபத்து நடந்தால், இழப்பீடு வழங்குவது
உலையை இயக்குபவர் பொறுப்பே தவிர எங்களது கடமை அல்ல என்றார்.
கூடங்குளம் அணு உலைகள் 3, 4, 5, 6 போன்றவற்றுக்கான இழப்பீடு
பேச்சுவார்த்தை 2010 ஜூலை மாதம் மாஸ்கோ நகரில் நடந்தது. ரஷ்யா
வழங்கும் உலைகளில் விபத்து நடந்தால், அவர்களிடம் உதவி நாடும் உரிமை
ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும் என இந்தியா வாதிட்டது. ஆனால், ரஷ்யா
2008-ம் ஆண்டு இந்தியாவோடு ரகசியமாகச் செய்துகொண்ட
உடன்படிக்கையைச் சுட்டிக்காட்டி, இழப்பீடு வழங்குவது உங்களை
இயக்குபவரே அன்றி நாங்கள் அல்ல என்றது. 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
முடிவு செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் கையெழுத்து இடப்பட்ட இந்த ரகசிய
உடன்படிக்கையைப்பற்றி இந்தியப் பெருங்குடி மக்கள் முதன்முதலாக
கேள்விப்பட்டார்கள். 2010 ஜூலை 30-ம் தேதியிட்ட 'தி ஹிண்டு’
செய்தியில் சித்தார்த் வரதராஜன் எனும் நிருபர், இந்தத் தகவல்களை
வெளியிட்டு, இந்த உடன்படிக்கையின் பிரதி தங்களிடம் இருப்பதாகக்
குறிப்பிட்டார்.
நன்கு அறிமுகமான நண்பர் என்பதால் என்னோடு பகிர்ந்துகொள்ளும்படி
நான் கேட்டுக்கொண்டும் அவர் தரவில்லை. இந்திய மக்களின் உயிர்களை,
உடைமைகளை, இறையாண்மையை கண்போன்று கட்டிக் காக்க வேண்டிய அரசு,
அமெரிக்கர்களிடமும் ரஷ்யர்களிடமும் ரகசிய உடன்படிக்கைகளும்,
ஒப்பந்தங்களும் செய்து, நம்மைக் காட்டிக்கொடுப்பதை என்னவென்பது?
அப்பாவி மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கும் பயங்கரவாதத்துக்கு
ஒப்பானதுதானே இந்தத் துரோகம்? இந்த ஒளிப்பும், மறைப்பும், உருட்டும்,
புரட்டும், நழுவலும், மழுப்பலும், இவர்கள் செய்யும் காரியங்கள்
எல்லாம் மக்களுக்குத் தீங்கானவை என்பதைத்தானே சுட்டிக் காட்டுகின்றன?
இவர்களது செயல்பாடுகள் எல்லாம் மின்சாரத்துக்காகவும்,
வளர்ச்சிக்காகவும் என்றால், ஏன் இத்தனை ரகசியமும், பித்தலாட்டமும்,
பேடிமையும்?
2008-ம் ஆண்டின் இந்திய - ரஷ்ய ரகசிய உடன்படிக்கையின் 13-வது ஷரத்து
தெளிவாகச் சொல்கிறது என்று ஒன்றைக் குறிப்பிடுகிறார் சித்தார்த்.
அதாவது, கூடங்குளம் அணு மின் நிலையங்கள் கட்டப்படுகின்ற,
இயக்கப்படுகின்ற எல்லா நிலைகளிலும் தருணங்களிலும், இந்தியாவும் அதன்
பொறுப்பான நிறுவனமும்தான் இயக்குபவராகக் கருதப்படுவார்.
கூடங்குளத்தில் ஒரு விபத்து நிகழ்ந்து, அதனால் இந்தியாவுக்கு உள்ளேயோ
அல்லது வெளியேயோ, தனி நபர்களுக்கோ, சொத்துகளுக்கோ சேதம் நிகழ்ந்தால்,
மேற்கண்ட இயக்குபவரே முழுப் பொறுப்பாவார்.
இவ்வளவு தெளிவாக எழுதி, ஏற்றுக்கொண்ட பிறகு, இழப்பீடு, கத்தரிக்காய்
என்று பிதற்றுகிறீர்களே என வாதிட்டது ரஷ்யா. உண்மைதான் என
ஒப்புக்கொண்ட இந்தியா, அந்த நேரத்தில் என்.எஸ்.ஜி-யோடு வேறு ஒரு
பேச்சுவார்த்தையில் (அதுவும் ரகசியமானதுதான்) ஈடுபட்டு இருந்ததால்,
தன்னால் தீவிரமாகப் பேரம் பேச முடியவில்லை என்றது. இந்த ரஷ்ய சிக்கலை
பேசித் தீர்த்துக்கொள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ்
அவசர அவசரமாக மாஸ்கோவுக்கு 2010 ஆகஸ்ட் 2 அன்று புறப்பட்டுச்
சென்றார். என்ன பேசினார்கள், எப்படி முடிவு எடுத்தார்கள் என்பது
ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. வாழ்க
இந்திய ஜனநாயகம்!
இந்திய அணு சக்தித் துறை தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜியிடம் இழப்பீடு
பிரச்னையில் அமெரிக்க, ரஷ்ய நிலைப்பாடுபற்றிக் கேட்டபோது, 'இவை
எல்லாம் பிற நாடுகளின் கொள்கை விஷயங்கள். நான் கருத்து எதுவும் கூற
விரும்பவில்லை!’ என்றார். அழகான துறை, அற்புதமான தலைவர்.
இழப்பீடு சட்ட வரைவை, பி.ஜே.பி-யும் இடதுசாரிக் கட்சிகளும் கடுமையாக
எதிர்த்தன. ஆனால், குஜராத்தின் ஹிட்லர் நரேந்திர மோடியை
சி.பி.ஐ-யிடம் இருந்து காங்கிரஸ் அரசு காப்பாற்றவே, கைம்மாறாக அவரது
கட்சி சட்ட வரைவை ஆதரித்தது. நாடாளுமன்றம் 2010 ஆகஸ்ட் 25 அன்று
குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்ற, செப்டம்பர் 21 அன்று
கையெழுத்திட்டு சட்டமாக்கினார் குடியரசுத் தலைவர். இந்திய
ஜனநாயகத்தின் கை, கால்களில் இன்னும் ஒரு விலங்கு வெற்றிகரமாக
மாட்டப்பட்டது.
இந்த நேரத்தில் டெல்லி அன்னையையும், சென்னை அம்மாவையும் சந்தித்துப்
போயிருக்கிறார், அமெரிக்கப் பெரியம்மா ஹிலாரி கிளின்ட்டன். அணு உலை
வழங்குபவர்களைக் கட்டுப்படுத்தாத இழப்பீடு சட்டம் உருவாக்கி சர்வதேச
நிலைக்கு நாம் உயர்ந்தால், பிரமாதமான பலன்களை நாம் அறுவடை
செய்யலாமாம். தொடர் நஷ்டஈடு உடன்பாட்டை இந்த வருடத்துக்குள்
நிறைவேற்ற வேண்டுமாம். பார்த்துக்கொண்டே இருங்கள், ஒண்ட வந்த பிடாரி
ஊர்ப் பிடாரியை விரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!
எம்.கிருஷ்ண
மூர்த்தி
பொருளாதாரத்தில் இளநிலைப்
பட்டம் பெற்ற கிட்டு என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி 1996-ம்
ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடி பல வழக்குகளை
சந்தித்திருக்கிறார். அப்போது எழுந்த சுற்றுச் சூழல் கரிசனம் அணு
உலைகளுக்கு எதிராகப் போராடவும் உந்துதல் அளித்தது. அமைப்பு
சாராத் தொழிலாளர் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட
ஒருங்கிணைப்பாளராக இயங்கும் கிட்டு, கூடங்குளம் அணு மின்
நிலையத்துக்கு எதிராக முனைப்புடன் செயல்படுகிறார்.
அணு சக்தி சட்டத்தில் என்ன
இருக்கிறது?
''ஒரு மோசமான சட்டத்தை ரத்து செய்வதற்குச் சிறந்த வழி, அதை
உறுதியாகச் செயல்படுத்துவதுதான்!''
- ஆபிரகாம் லிங்கன்
பாகிஸ்தான், இஸ்ரேல் நாடுகளைப்போன்று இந்தியாவும்
அணுஆயுதப் பரவலாக்கத் தடை சட்டத்தில் இதுவரை கையெழுத்து இடவேஇல்லை.
1967-ம் ஆண்டுக்கு முன் அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியவர்களை
சட்டபூர்வமான அணு சக்தி யோக்கியர்கள் என்றும், மற்ற நாடுகளை அயோக்கி
யர்கள் என்றும் பிரிக்கிற வினோதத்தை மேற்கண்ட மூன்று நாடுகளும்
எதிர்க்கின்றன.
பொருளாதார நெருக்கடிக்குள்ளும், வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு
உள்ளும் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, எதை விற்றாவது பணம் பண்ணியாக
வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கியாக வேண்டும். எனவேதான் 123
ஒப்பந்தம் தீட்டப்பட்டது. அதை ஆமோதிக்க ஹைட் சட்டம் இயற்றப்பட்டது.
சர்வதேச அணு சக்தி முகமையோடு கண்காணிப்பு உடன்படிக்கை
ஏற்படுத்தப்பட்டது. அணு சக்தி வழங்குவோர் குழுமத்திடம் தடையின்மைச்
சான்று வாங்கப்பட்டது. இழப்பீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்ததாக, தொடர் நஷ்டஈடு உடன்பாட்டில் கையெழுத்து போட்டு விட் டால்,
அமெரிக்காவின் அணு ஆட்டம்
முழு வீச்சில் தொடங்கிவிடும். ரஷ்யாவும், பிரான்ஸும் துணைக்
கதாநாயகர்களாக ஆடுவர். நமது வாழ்வும், வளமும், பாதுகாப்பும்,
இறையாண்மையும் அணு அணுவாக ஆட்டம் கண்டு நிற்கும்.
இந்திய ஆளும் வர்க்கம் இன்னும் ஒரே ஒரு விஷயத்தைச் செய்ய முனைந்து
நிற்கிறது. 1962-ம் வருடம் இயற்றப்பட்ட அணு சக்தி சட்டத்தை சற்றே
மாற்றி அமைப்பதுதான் அது. இந்தச் சட்டத்தின் தற்போதைய குறிக்கோள்கள்
என்ன தெரியுமா?
இந்தியாவின் சாதாரணக் குடிமக்களின் பாது காப்பை மேம்படுத்துவது;
இந்தியாவின் இயற்கை வளங்களையும், திறமைகளையும் நாட்டின் வளர்ச்சி கள்
என்று உறுதிப்படுத்துவது; அணு சக்தியை இந்தியர்களின் நலனுக்காகவும்,
பிற அமைதியான காரணங்களுக்காகவும் கட்டுப்படுத்துவது, உபயோகிப் பது.
ஆனால், உண்மையில் நடப்பது என்ன? மேற்கண்ட மூன்று குறிக்கோள்களிலும்
இந்தச் சட்டம் மிக மோசமாகத் தோற்றுப்போய் இருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால், அணு சக்தித் துறையில் அராஜகங் களை எதிர்ப்போரை
மிரட்டவும், இந்தியாவின் ஜன நாயகப் பாரம்பரியத்தை அழிக்கவும்,
விரைவில் தனிப்பட்ட முதலாளிகள் பெரும் லாபம் சம்பாதிக்க உதவவும்
பயன்படுத்தப்படுகிறது இந்தச் சட்டம்.
அணு சக்தி சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும், கதிர்வீச்சு
ஆபத்துகளையும் பற்றி அணு சக்தி சட்டத்தின் பிரிவுகள் 3, 16, 17, 23
பேசுகின்றன. அணு சக்தி ஒழுங்காற்று வாரியம் இவை அனைத்தையும்
நிர்வகிக்கும் உரிய அதிகார அமைப்பாக இருக்கும் என இந்திய அரசு
சொல்கிறது. 1993 முதல் 1996 வரை இந்த வாரியத்தின் தலைவராக இருந்த
ஆ.கோபாலகிருஷ்ணன் இந்திய அணு உலைகளின் பாதுகாப்புப் பிரச்னைகள்பற்றிய
ஓர் அறிக்கையை வெளியிட்டார். பார்க் (BARC) என்று அழைக்கப் படும்
பாபா அணு ஆய்வு மையம், மேற்கண்ட அறிக்கையின் ஆலோசனைகளை முழுக்க
நிராகரித் தது. 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய அணு சக்தித்
துறைத் தலைவர் ஆர்.சிதம்பரம், ஒழுங்காற்று வாரியத்தின் அதிகாரங்களை
ரத்து செய்துவிட்டு, அந்தப் பொறுப்புகளை அப்படியே 'பார்க்’ குழு
ஒன்றிடம் ஒப்படைத்தார். நமது பாதுகாப்பு, அணு சக்தி சட்டத்தால்
எப்படி மேம்படுத்தப்படுகிறது என்பது புரிகிறதா?
ஜவஹர்லால் நேரு, ஏப்ரல் 6, 1948 அன்று முன்மொழிந்த, 'அணு சக்தி சட்ட
வரைவு - 1948’ மேம்போக்காக அணு சக்திக் கனிமங்கள் அனைத் தையும் அரசே
அடக்கி ஆளும் என்றது. ஆனால், 1962-ம் ஆண்டு, சட்டம் 4 முதல் 13
வரையிலான பிரிவுகளில் கனிமங்கள்பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டது.
இருந்தாலும் தென் தமிழகத்தின் மற்றும் தென் கேரளத்தின் கடற்கரைகளில்
தனியார் மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. கடல் அரிப்பை
ஏற்படுத்தி, இயற்கை கதிர்வீச்சை அதிகமாக்கி, மீன்பிடித் தொழிலை
நசுக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இந்த மணல் மாஃபியா நமது கனிம
வளங்களைச் சுரண்டி விற்று, ஓகோவென வாழ்கிறது. அணு சக்தி சட்டம்
இவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதுஇல்லை.
1998, மே மாதம் நடந்த அணு ஆயுதப் பரிசோத னைகளும், இவற்றின் நேரடித்
தாக்கமான கார்கில் போரும், அணு சக்தியை இந்திய அரசு
இந்தியர்களுக்காகவும், அமைதிக்காகவும் உபயோகிக்கும் விதம்பற்றிச்
செவ்வனே விளக்கும். அணு சக்தி சட்டம் 1962, அணு சக்தி எதிர்ப்
பாளர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் பாயலாம். கூடங்குளம் அணு மின்
நிலையத்தைப் பார்வையிட வந்த ஆர்.சிதம்பரம் ஒரு முறை பட்டவர்த்தனமாகவே
எச்சரித்தார். அணு மின் நிலையத்தைப்பற்றித் தவறான தகவல்களைப்
பரப்பினால், அவர்கள் மீது இந்தச் சட்டம் பாயும் என்றார்.
நாளிதழ்களில் இந்த எச்சரிக்கை பிரசுரிக்கப்பட்டாலும், யாரும் இந்த
மிரட்டலைத் தட்டிக்கேட்கவே இல்லை.
இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவு மத்திய அரசுக்கு வானளாவிய
அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதாவது எந்தத் தகவலையும் வரையறுக்கப்பட்ட
தகவலாக, எந்தப் பகுதியையும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கலாம்.
18-வது பிரிவும் தகவல் பரவலாக்கத்தைத் தடை செய்கிறது. 1995, நவம்பர்
மாதம் வெளியிடப்பட்ட ஒழுங்காற்று வாரியத்தின் அணு உலைகள்
பாதுகாப்புபற்றிய அறிக்கையை வெளியிடக் கோரி பி.யூ.சி.எல். எனும் மனித
உரிமைக்குழுவும், பாம்பே சர்வோதய மண்டல் எனும் காந்திய அமைப்பும்,
பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 1997, ஜனவரி மாதம்
உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்ச
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, 2004 ஜனவரி மாதம் ஒரு
வினோதமான தீர்ப்பு வெளிவந்தது. 'தேசியப் பாதுகாப்பே மிக முக்கியமானது
என்பதால், அணு உலைகள் பற்றிய ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்,
அவற்றை மக்களுக்குத் தராமல் இருக்கவும் மத்திய அரசுக்கு எல்லா
அதிகாரமும் உள்ளது!’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் செய்கிறோம் என்று
சொல்லி, சுமார் 2,000 கோடியை அணு சக்தித் துறை ஏப்பம் விட்டபோது,
கேப்டன் பி.கே.சுப்பாராவ் தோலு ரித்துக் காட்டினார் என்பதற்காக, அவர்
மீது ஒற்றர் பட்டத்தினை சுமத்தி பொய் வழக்குகள் புனைந்தனர். 1988-ம்
ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் 20 மாதங்கள் சிறையில் வாட, தன் மீது
இருந்த வழக்குகளை தானே நடத்தி, நிரபராதியாக வெளியே வந்தார். அணு
சக்தி சட்டம் இந்திய ஜனநாயகத்துக்கு எமன் என்பது முற்றிலும் உண்மை.
இவை அனைத்துக்கும் மேலாக, அணு சக்தி உற்பத்தியில் தனியார்
பங்கேற்பதை ஆதரிக்கும் விதமாக இந்த சட்டம் மாற்றி அமைக்கப்பட
இருக்கிறது. அணு சக்தி ஆய்வுகள், யுரேனியம் செறி வூட்டல், அணுக்
கழிவு மேலாண்மை, உலைகளைச் செயலிழக்கச் செய்தல் என அனைத்தையும் அரசு,
பொதுமக்கள் பணத்தில் இலவசமாகச் செய்து கொடுக்க, முதலாளிகள் தங்கள்
கொள்ளை லாபங்களைக் குவித்துக்கொண்டு இருக்கலாம். மூடி மறைக்கும்
அரசும், சுயநலமிகளான அணு சக்தித் துறை ஆசாமிகளும், கொள்ளைக்கார
முதலாளிகளும் கூடிக் குலவும்போது, எண்ணற்ற தலைமுறை இந்தியர்களின்
பாதுகாப்பும், உடல் நலமும், நல் வாழ்வும், எதிர் காலமும்
பாழ்பட்டுப்போகுமே?
இந்தியாவின் அணு சக்தித்
திட்டமும், பாகிஸ்தானின் அதிரடிப் பதிலும்!
''பாகிஸ்தானும் இந்தியாவும் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள்ளாமல்
இருந்தால், இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்க முடியும்.
இப்போது இருப்பதைவிட அதிக முன்னேற்றம் அடைந்திருக்க முடியும்.
பெரும்பாலான நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காண உருப்படியாக
உதவியிருக்க முடியும்!''
- மால்கம் எக்ஸ்
இந்தியா, அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம்
ஏற்படுத்திவேக மாகப் பயணம் செய்யத் துவங்கியபோது, பக்கத்து
நாடுகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சீனா பெரிதாக அலட்டிக்
கொள்ளவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்குப் பதற்றம். அமெரிக்க - இந்திய
ஒப்பந்தத்தை எதிர்த்த கையோடு, தங்களோடும் அதேபோன்ற ஓர்
உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வற்புறுத்தியது. அமெரிக்கா உடன்பட
முடியவில்லை.
பாகிஸ்தான் உடனடியாக சீனாவுடன் ஓர் அணு சக்தி ஒப்பந்தத்தை
ஏற்படுத்தியது. அதன்படி, பாகிஸ்தானில் புதிய அணு மின் திட்டங்கள்
ஏற்படுத்த சீனா உதவும் என்று அறிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும்
தங்கள் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய, அதிக எண்ணிக்கையில் அணு
உலைகள் அமைக்கப்போவதாக, அந்த நாட்டு பிரதமர் கிலானி அறிவித்தார்.
2030-ம் ஆண்டுக்குள் 8,800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்போவதாகச் சொன்னார்.
'அதிக மின்சாரம்’ என்று, இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் சொல்வதை,
'அதிக அணு குண்டுகள்’ என்றுதான் நாம்
புரிந்துகொள்ள வேண்டும். சிப்ரி என்று சுருக்கமாக அழைக்கப்படும்
ஸ்டாக் ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம், தனது சமீபத்திய
அறிக்கையில் கீழ்க்காணும் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. அதாவது,
இந்தியா இந்த வருடம் 80 முதல் 110 அணுகுண்டுகள் வைத்து
இருப்பதாகவும், பாகிஸ்தான் 90 முதல் 110 வரையிலான அணு
ஆயுதங்கள்கொண்டு இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. இரண்டு
நாடுகளும் ஒரு வருடத்தில் 20 முதல் 30 அணு குண்டுகள் வரை தயாரித்து
இருக்கிறார்கள்.
'இந்தியா 1974-ம் ஆண்டு அணு ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டதால்தான்
பாகிஸ்தான் அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாகவும், தான்
பாகிஸ்தானுக்குத் திரும்பிவந்து அணு குண்டுகள் தயாரிப்பதற்குக்
காரணமும் அதுதான்!’ என்று பாகிஸ்தானிய அணு விஞ்ஞானி அப்துல் காதிர்
கான் சொன்னார்.
யார் இவர்? அணு சக்தி உலகின் மிக ஆபத்தான மனிதர்களில் ஒருவர்
அப்துல் காதிர் கான். ஏ.க்யூ.கான் என்று சுருக்கமாக அழைக்கப்படும்
இவர், மத்தியப் பிரதேச மாநில போபால் நகரில் 1936-ம் ஆண்டு பிறந்தார்.
இவரது தந்தையார் பிரிட்டிஷ் இந்திய அரசின் கல்வித் துறையில்
பணியாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு குடும்பம் பாகிஸ்தானுக்கு
இடம் பெயர்ந்து சென்றது. லாகூர் நகரில் பள்ளிக் கல்வியும்,
கராச்சியில் கல்லூரிப் படிப்பும் முடித்து, இயற்பியல், கணிதம்,
உலோகவியல் எனும் மூன்று பாடங்களில் இள நிலைப் பட்டங்கள் பெற்றார்.
கராச்சியில் ஓரிரு மாதங்கள் வேலை செய்துவிட்டு, 1961-ம் ஆண்டு
அப்போதைய மேற்கு ஜெர்மனி நாட்டுக்குச் சென்று உலோகவியல் குறித்த உயர்
கல்வியைத் தொடர்ந்தார். பிறகு நெதர்லாந்து நாட்டுக்குச் சென்று
பொறியியலில் முதுகலைப் பட்டமும், 1972-ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டுப்
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். ஜெர்மன், பிரெஞ்சு,
ஆங்கில மொழிகளில் அத்துப்படியான கான், ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த
ஓர் ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த ஆய்வுக்கூடம்
யுரென்கோ எனும் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனத்துடன் சார்பு
ஒப்பந்தக்காரராகப் பணியாற்றி வந்தது. யுரென்கோ ஐரோப்பாவிலுள்ள பல அணு
உலைகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கி வந்த பெரிய சக்தி
வாய்ந்த நிறுவனம். அணு சுழற்சி உபகரணத்தின் வரைபடங்கள் முதல் பல
நுண்ணிய அரிய தகவல்கள், கான் கைக்குக் கிடைத்தன. யுரென்கோ ஆலைகளில்
எந்த மூலைக்கும் சென்று வரும் அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்டார்.
1974-ம் ஆண்டு மே மாதம் இந்தியா அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியதும்,
'பாகிஸ்தான் அணு குண்டு தயாரிக்க, தன்னால் உதவ முடியும்’ என்று
பாகிஸ்தான் அணு சக்திக் கழக விஞ்ஞானிகளிடம் கான் விண்ணப்பித்தார்.
உலோகவியல் படித்த ஒருவருக்கு இங்கே வேலை தர முடியாது என விரட்டினர் அணு சக்திக்
கழகத்தினர். விடாப்பிடியாக பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி
புட்டோவுக்குக் கடிதம் எழுதினார். 1974 டிசம்பர் மாதம் இருவரும்
சந்தித்தனர். முட்டுக்கட்டைகள் போட்ட அணு சக்தித் துறையை மீறி,
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசியோடு வளர்ந்தார் கான். நெதர்லாந்து
நாட்டில் இருந்து திருடிய அணு சக்தி ரகசியங்களோடு, பாகிஸ்தானில்
ஆய்வு பரிசோதனைக் கூடம் ஒன்றை நிறுவினார். அணு ஆயுதம் பற்றிய
தகவல்கள், நுணுக்கங்களை பாகிஸ்தான், லிபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு
வழங்கினார். 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானின் அணு ஆயுத
சோதனைகளில் பெரும் பங்காற்றிய கான், வட கொரியா, ஈராக் நாடுகளுக்கும்
அணு ஆயுதத் தகவல்களை அளித்து இருக்கிறார்.
இந்தத் தகவல்கள் வெளியானதும் பாகிஸ்தானின் அதிபர் பெர்வேஸ் முஷ்ரப்,
2004-ம் ஆண்டு கானை வீட்டுக் காவலில்வைத்தார். முஷ்ரப் 2008-ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் பதவி விலகியபோது, தன்னை விடுதலை செய்யுமாறு இஸ்லாமாபாத்
உயர் நீதி மன்றத்திடம் முறையிட்டார். கான் மற்றும் பாகிஸ்தான்
அரசுகளுக்கிடையே ரகசிய ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கிவிட்டு,
நீதிமன்றம் 2009 பிப்ரவரி மாதம் கானை வீட்டுக் காவலில் இருந்து
விடுவித்தது.
ஓரிரு வாரங்களுக்கு முன்னால் நியூஸ் வீக் இதழில் கட்டுரை எழுதிய
கான், 'இந்தியாவும்பாகிஸ் தானும் கடந்த 40 ஆண்டுகளாகப் போரைத்
தவிர்க்க முடிந்ததற்கு காரணம் அணு குண்டுகள்தான்!’ எனக் குறிப்பிட்டு
இருக்கிறார். வெறும் ஐந்து அணுகுண்டுகளுடன், பாகிஸ்தான் கதையை
இந்தியா முடித்துவிடலாம் என்றும்... பாகிஸ்தான், இந்தியாவை அழிக்க 10
குண்டுகள் வரை தேவைப்படும் என்றும் கணக்குச் சொல்கிறார், கான்.
'இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கான தகராறுகள் தீரும் வரை, அணுகுண்டுகள்
உறுதியாகத் தேவைப்படுகின்றன!’ என்கிறார் கான். இவர் பாடும்
ராகத்தையே, பாகிஸ்தான் ராணுவமும் அரசியல்வாதிகளும் பாடுகின்றனர்.
இளமையும், இனிமையும் வாய்ந்த பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறை
பெண் அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
இந்தியத் தரப்பு என்ன சொல்கிறது?
பி.ஜே.பி-யின் யஷ்வந்த் சின்ஹா, 'அமெரிக்கா, ஒசாமா பின்லேடனை
அழித்து ஒழித்ததுபோல... இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை
அதிரடியாக உள்ளே சென்று அழிக்க வேண்டும்!’ என்கிறார். இவர்
அமைச்சராக இருந்த பி.ஜே.பி. அரசு, தீவிரவாதிகளை விமானத்தில் ஏற்றி
பத்திரமாக இறக்கிய கதையை எளிதாக மறந்துவிட்டார். 'தாலிபன்கள்
விரைவில் பாகிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள், அணு ஆயுதங்கள்
அவர்களின் கைகளில் சிக்கலாம், அதனால், நமது வாழ்க்கை
சிக்கலாகிவிடும்!’ என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உட்பட
பலர் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
அண்மையில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 81
சதவிகிதம் இந்தியர்கள், 'நாம் தொடர்ந்து பாகிஸ்தானோடு கருத்துப்
பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும்!’ என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அணு ஆயுதம் எனும் நச்சுப் பாம்பினை மக்கள் வெறுத்தாலும் நமது
தலைவர்கள் இரண்டு நாடுகளிலும் தொடர்ந்து பால் வார்த்துக்கொண்டு
இருக்கிறார்களே?
அமெரிக்காவும் சீனாவும் குட்டைக்குள் இறங்கி இன்னும் குழப்பும்போது
என்ன நடக்கும்?
'கெடுவான் கேடு நினைப்பான்!’
'தேவையா இந்த அணு உலைகள்?’
அணு உலைகளைப் பற்றியோ, அவை
தமிழகத்துக்கு, தமிழ் இனத்துக்குத் தருகின்ற அச்சுறுத்தல்கள் பற்றியோ
தமிழக அரசியல் கட்சிகளோ, பிற சமூக, கலாசார அமைப்புக்களோ பெரிதாகக்
குரல் எழுப்பாத நிலையில் சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், தான்
எழுதிய ஐந்து கட்டுரைகளை சேர்த்து, இந்த 40 பக்க சிறு நூலை
வெளியிட்டு இருக்கிறார். அணிந்துரை எழுதியிருக்கும் லஷ்மி
மணிவண்ணன் சொல்வது சிந்திக்க வைக்கிறது.
விருப்பமின்றி விபத்துகள் நடப்பதில்லை
அணு உலை விபத்திலிருந்து சாலையோர
விபத்துகள் வரை எல்லாம்
விருப்பத்தின் பேரில் நடப்பவையே.
தோழர் செல்லையா
1965 முதல் இன்று வரை பல்வேறு
புரட்சிகர அமைப்புகள் மூலம் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி
வருபவர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் நியூட்ரினோ திட்டம்
வருவது அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, தொடர் முழக்க
ஆர்ப்பாட்டம் என பல வழிகளில் மக்களைத் திரட்டி களமாடி வருகிறார்.
துண்டறிக்கைகள் மூலம் தேவாரம் பகுதி கிராமங்களில் விழிப்பு உணர்வு
ஏற்படுத்தி, கலந்தாய்வுகளில் பங்கேற்று, போராட்டங்கள் நடத்தி
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோழர்
செல்லையாவின் பணி தமிழகமெங்கும் அறியப்பட வேண்டும்.
காலனைக் கண்டேன் கண்
எதிரில்!
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
(துன்பம் வருவதற்கு முன்னால் காத்துக்கொள்ளாதவன் வாழ்க்கை, தீயின்
முன் வைக்கப்பட்ட துரும்புபோல அழிந்துபோகும்.)
- திருவள்ளுவர்
'ஜப்பானுக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோதே
வீட் டாரும், நண்பர்கள் சிலரும்
கடுமையாக எதிர்த்தனர். 'அத்தனை கதிர் வீச்சையும் வாங்கிக்கொள்ளவா போகி
றீர்கள்?’ என்று நாசூக்காகக் கடிந்துகொண்டார் என் இளைய மகன்.
புறப்படும் நாளன்று ஏராளமான தொலைபேசிகள், அறிவுரைகள், அன்புக்
கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன.
கதிர் வீச்சு ஆபத்துபற்றி உணர்ந்து இருந்தாலும், கூடங்குளம் அணு
மின் நிலையம் திறக்கப்பட இருக்கும் இந்தத் தருணத்தில், ஃபுகுஷிமாவைப்
பார்த்து வந்தால், இன்னும் அழுத்தமாகப் பேசவும், எழுதவும் முடியுமே
எனத் தோன்றியது. 'அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதற் காக,
சிறை சென்றவர்களும், செக்கு இழுத்தவர்களும், துக்கங்களைச்
சுமந்தவர்களும், தூக்கு மேடைக்குச் சென்றவர்களும் வாழ்ந்த சமூகத்தில்
பிறந்த நாம், இந்த மிகச் சிறிய ஆபத்தைக்கூட எதிர்கொள்ளவில்லை
என்றால்... நான் என்ன போராளி, புண்ணாக்கு!’ எனத் தோன்றியது.
ஜூலை 29 அன்று இரவு டோக்கியோ நகரின் நரீட்டா விமான நிலையத்தில்
இறங்கியபோது, நண்பர் டைசுக்கே சாட்டோ வரவேற்றார். ஃபுகுஷிமாவில்
இருந்து 240 கி.மீ தெற்கே இருந்தாலும், டோக்கியோ நகரிலும் கணிசமாக
கதிர் வீச்சு இருப்பதாகச் சொன்னார். மறுநாள் பலரிடம் வலியச் சென்று
பேசினேன். கதிர் வீச்சு எனும் கண்ணுக்குத் தெரியாத அரக்கன், தங்களைத்
தொடர்ந்து துரத்தி வந்து, கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பதை
பெரும்பாலோர் உணர்ந்தே இருந்தார்கள். அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி
இருந்தது என்றால், நம் ஊரில் சொல்வோமே... 'தலைக்கு மேல் வெள்ளம் போன
பிறகு... சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?’ என்ற மாதிரிதான்.
நோய் என்றால், வைத்தியம் பார்க்கலாம். பேய் என்றால், மந்திரம்
போடலாம். வாய் என்றால், அடைக்கவோ, அடக்கவோ செய்யலாம். ஆனால் பிரச்னை,
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கதிர்வீச்சு
ஆயிற்றே? என்ன செய்வது? எப்படிக் கையாள்வது? பெரும்பாலான டோக்கியோ
மக்கள் கண்டும் காணாததுபோல் ஓடிக் கொண்டு இருந்தனர். பெரு நகரப்
பெருவாழ்வில் எப்படி நிற்க முடியும்? மற்றவர்கள் தம்மைக் காத்திட
முகமூடி அணிந்துகொண்டும், முடிந்ததைச் செய்துகொண்டும் இருந்தனர்.
'அணு சக்தியற்ற ஆசிய மன்றம்’ எனும் அமைப்பைச் சார்ந்த நண்பர்கள்,
விருப்பம் உள்ளோரை மட்டும் ஃபுகுஷிமாவுக்கு அழைத்துச் செல்லத் தயாராக
இருப்பதாகச் சொன்னார்கள். போக விரும்பாதவர்களுக்கு, டோக்கியோவில்
மாற்று ஏற்பாடு செய்து இருந்தார்கள். பாதிப் பேர் ஒதுங்கிக்கொள்ள, மீதிப்
பேர் புறப்பட்டோம். அனைவருமே அணு சக்திக்கு எதிராகப் போராடுபவர்கள்
என்பதால், யாரும் இந்தப் பயணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மாறாக, முகமூடி அணிந்து, முழு உடலையும் மறைக்கிற உடைகள் அணிந்து,
கால் பாதங்களைக் காத்துக்கொள்ள கடினமான பூட்ஸ் அணிந்து, மழை பெய்தால்
தற்காத்துக் கொள்ள குடைகள் சகிதமாகப் புறப்பட்டோம்.
ஃபுகுஷிமா ரயில் நிலையம் வந்து சேர்ந்ததுமே, கதிர் வீச்சுமானி
இயக்கப்பட்டது. 0.24 மைக்ரோ சீவர்ட் எனத் தொடங்கிய கணக்கு, ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும் போதும் உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு
கட்டத்தில் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்கிற மாதிரி...
இனி இதைப் பார்ப்பதால் என்ன பயன் என்று அனைவருமே திரும்பி விட்டோம்.
ஜூலை 31, 2011 அன்று காலை நாங்கள் ஃபுகுஷிமாவுக்குப் புறப்படுவதற்கு
ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால், ரிக்டர் அளவையில் 6.4 அளவிலான
நில நடுக்கம் ஃபுகுஷிமாவில் நடந்தது. இந்த நிகழ்வு இன்னும் அதிகமான
அச்சத்தை உருவாக்கியது. ஃபுகுஷிமா என்றால் 'அதிர்ஷ்டத் தீவு’ என்று
அர்த்தமாம். ஆனால், அது துன்பங்களின் தீவாகத் துவண்டு கிடப்பதைப்
பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
நகரில் இருந்து சற்றே தூரத்தில் உள்ள அணு உலைகள், இன்னும் ஆபத்து
நிலையைத் தாண்ட வில்லை. கட்டுங்கடங்காத கதிர்வீச்சு இன்னும்
பரவிக்கொண்டு இருக்கிறது. மண் மீதும், பயிர்கள் மீதும் விழும்
கதிர்வீச்சு உணவை விஷமாக்கி இருக்கிறது. கதிர்வீச்சுக்கு உள்ளான
புல்லைத் தின்னும் மாடுகளின் பாலும் இறைச்சியும்கூட நச்சாகிவிட்டன.
நீர்நிலைகள் எல்லாம், மீன் உணவு எல்லாம் நஞ்சான பிறகு, எஞ்சி
இருப்பது என்ன? காற்று! அதுதான் முதலிலேயே விஷமாகிவிட்டதே. மூக்கு
வழியாகவும், வாய் வழியாகவும் உள்ளே செல்லும் காலன், காரியத்தில்
இறங்குவான். காலம் கனியும்போது, ஆங்காங்கே புற்றாகப் புடைப்பான்.
உள்ளுக்குள் உள்ள பாதுகாப்புகளை ஒவ்வொன்றாக உடைப்பான், உயிரைக்
குடிப்பான், குடியைக் கெடுப்பான்.
ஃபுகுஷிமாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 2,000 பேரும்
நாங்களுமாகச் சேர்ந்து ஓர் ஆர்ப்பாட்டத்துக்கும், பேரணிக்கும்,
பொதுக் கூட்டத் துக்கும் ஏற்பாடு செய்து இருந்தோம். கொட்டும்
மழையிலும், மழை வளி மண்டலத்தில் இருக்கும் கதிர்வீச்சை இன்னும்
அதிகமாக நம் தலையில் கொட்டும் என்பது தெரிந்தும், ஏராளமானோர்
கலந்துகொண்டனர். மண்ணும், சரித்திரமும், கலா சாரமும், அடையாளமும்,
எதிர்காலமும் ஒன்றெனக் கலந்தவை என உணர்ந்த மக்கள் என்பதால்,
ஊருக்குத் திரும்புவதில் அக்கறையாக இருக்கின்றனர் ஃபுகுஷிமாவினர்.
ஆனால், டெப்கோ எனும் ஃபுகுஷிமா அணு உலைகளை இயக்கும் டோக்கியோ
எலெக்ட்ரிக் பவர் நிறுவனம், அசிரத்தையுடன் இயங்குகிறது. இன்னொரு
புறம் தாங்கள் இனம் கண்டு சொல்பவர்கள்தான் இடப்பெயர்ச்சி செய்ய
வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. காரணம், இடப் பெயர்ச்சி
செய்யப்படுபவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமே? உங்கள்
குழந்தைகளின் அல்லது தாய்மை அடைந்து இருக்கும் மனைவியின் அல்லது
உடல்நலம் இல்லாத கணவரின் நலத்துக் காக நீங்கள் உங்கள் குடும்பத்தை
இடப் பெயர்ச்சி செய்துகொண்டால், டெப்கோ எந்தப் பொறுப்பும் ஏற்காது.
அது உங்கள் பிரச்னை. இப்படி ஒருதலைப் பட்சமான, சற்றும் நியாயமற்ற,
மக்கள் விரோதமான ஏற்பாடுகளை, உடன்படிக்கைகளை, கற்கால மனிதர் கள்கூட
செய்யவில்லை.
ஆகஸ்ட் 2-ம் நாள், டெப்கோ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
ஃபுகுஷிமா குழந்தைகளைக் காப்பாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்கப்
படுகின்றன எனக் கேட்டேன். 'தங்கள் ஆலோ சனைக்கு மிக்க நன்றி’ என்றார்
டெப்கோ மேலாளர். காரணம், எதுவும் செய்யவில்லை இதுவரை!
அணு உலைகளை மேற்பார்வை செய்யும் ஜப்பானிய அரசின் அமைச்சக அதிகாரிகளை
சந்தித்தோம். இது ஒரு தனியார் கம்பெனி சம்பந்தப் பட்ட விவகாரம்.
இதில் அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று, கை கழுவினார்கள். அரசு,
அணு சக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுகிறதே... எங்கள் நாட்டோடும்
ஓர் ஒப்பந்தம் போட்டு இருக் கிறீர்களே எனக் கேட்டேன். நெளிந்தார்கள்.
அணு குண்டுகளாலும், அணு உலைகளாலும் நேரடியாக, மிக மோசமாக
பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரே நாடு, ஜப்பான். கட்டுக்கோப்பான,
கல்வியறிவு மிக்க, கடமை உணர்வுகொண்ட மக்களும், மக்களாட்சி, மக்கள்
உரிமைகளை ஓரளவு மதிக்கிற அரசும் இருக்கும் ஜப்பானுக்கே இந்த கதி
என்றால், நான் நமது நாட்டைப்பற்றி எண்ணிப் பார்க்கிறேன். ஏன்
கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இவ்வளவு கூட்டம்
என்பது புரிகிறது. உண்மை என்ன தெரியுமா? தன்னைத்தானே காத்துக்
கொள்ளாதவர்களை... கடவுள்கூட காப்பாற்ற மாட்டார்!
பெ.சகுந்தலா
1977-ம் ஆண்டு முதல் தீவிர
சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சகுந்தலா, பல்வேறு போராட்டக்
களங்களைக் கண்டவர். சமூகப் பகுப்பாய்வு, இளைஞர்களை வழிநடத்துதல்
எனத் துவங்கிய சேவை, ஜனநாயக மாதர் சங்கத்துக்கு இட்டுச் சென்றது.
தனது சுதந்திரம் பறிக்கப்படுவதாக உணர்ந்தவர், 1987 முதல்
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெண்கள் கூட்டமைப்பில் இணைந்து
பணியாற்றினார். கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் துவக்கம் முதலே
தீவிரமாக எதிர்த்து வரும் உன்னதமான போராளி.
யுரேனியக் கிணறும், கதிர்
வீச்சுப் பூதமும்!
''சுரங்கத் தொழில் என்பது தேடிக் கண்டுபிடித்து, அழிக்கும்
நடவடிக்கைக்கு ஒப்பானது!''
- ஸ்டூவர்ட் உடால்
அணு சக்தி எனும் தீங்கின் அந்தம்... அணுகுண்டு என்றால், ஆதி...
யுரேனியம். இது யு-235, யு-238 என பல ஐசோடோப்புகளாகக் கிடைக்கிறது.
யு-235 அணு மின் நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும்
பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி நிறம்கொண்ட உலோகத்தன்மை பெற்ற இந்த
வேதியல் பொருள், கதிர் வீச்சுத்தன்மை கொண்டது. 1789-ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டு, யுரேனஸ் கிரகத்தின் பெயர் சூட்டப்பட்ட இந்த
பொருள் கதிர் வீச்சுத் தன்மை வாய்ந்தது என்பது 1896-ம் ஆண்டுதான்
புலனாயிற்று. கண்ணாடித் தயாரிப்பில் வண்ணம் கலக்க உபயோகப்பட்ட இந்தப்
பொருளை, அணு உலை எரி பொருளாக, என்ரிகோ ஃபெர்மி என்பவர் 1934-ம் ஆண்டு
பயன்படுத்தினர்.
2009-ம் ஆண்டு சுமார் 50,000 டன் யுரேனியம், சுரங்கங்களில்
இருந்து வெட்டி எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு,
செறிவூட்டப்பட்டது. இதில் பாதி கஜகஸ்தான் மற்றும் கனடா நாடுகளிலும்,
மீதி ஆஸ்திரேலியா, நமீபியா, ரஷ்யாவிலும் உற்பத்தி செய் யப்பட்டது.
மன்மோகன் சிங் அரசு, மேற்கண்ட அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம்
செய்து, யுரேனியத்தை வாங்கிக் கட்டிக்கொள்ள வரிந்துகட்டி நிற்கிறது.
எண்ணெய், எரிவாயு போன்றவை சீக்கிரமே தீர்ந்து போகும் என்பதால்,
யுரேனியமே கதி என்று வாதிடுகின்றனர் சிலர். அதுவும் சீக்கிரம்
தீர்ந்துபோகும் என்ற உண்மையை உணரவில்லை அல்லது ஒப்புக் கொள்வது
இல்லை.
இந்தியாவில், 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்’ எனும்
அரசு நிறு வனம்தான் யுரேனிய உற்பத்தியை நடத்துகிறது. ஜார்கண்ட்
மாநிலம் ஜாடுகொடாவிலும் ஆந்திரப் பிரதேசம் நால்கொண்டாவிலும் யுரேனிய
உற்பத்தி நடக்கிறது. கடந்த மாதம், 'ஆந்திராவில் துமலபள்ளி எனும்
இடத்தில் உலகின் மிகப்பெரிய யுரேனியப் படுகையைக்
கண்டுபிடித்திருக்கிறோம்’ என்று அணு சக்தித் துறை அறிவித்தது. சுமார்
49,000 டன் யுரேனியம் அங்கே இருக்கிறது என்றும் இனி, வெளி நாடுகளில்
இருந்து வாங்கும் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும், பெரிய
பில்ட்-அப் நடந்தது. ஆந்திராவில் உள்ள லம்பாபூர், கர்நாடகாவில் உள்ள
கோகி, மேகாலயாவில் உள்ள காசி மலைப் பகுதியிலும் ஏராளமான யுரேனியம்
இருக்கிறது. அனைத்தையும் தோண்டி எடுத்து, ஒளிரும் இந்தியாவை
உருவாக்காமல் விட மாட்டோம் என்கிறது அணு சக்தித் துறை.
ஆனால், உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு
வருடங்களுக்கு முன்னால் ஜாடுகொடா யுரேனிய சுரங்கப் பகுதிக்குப்
போயிருந்தேன். சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண்
கலந்த மஞ்சள் கேக் எனும் தாதுப்பொருள், லாரிகளில் மில்களுக்கு
எடுத்துச் செல்லப்படுகிறது. இதிலிருந்து வரும் கழிவுப் பொருள்
கதிர்வீச்சுத் தன்மையதாக, ஆபத் தானதாக இருக்கிறது. அது Tailing Pond
எனப்படும் குளம் போன்ற பெரிய தேக்கங்களில் நிரப்பப்படுகிறது.
லாரிகளின் பாதையெங்கும் கதிர் வீச்சு கலந்த தூசி, காற்றிலே கலந்து
மக்கள் நுரையீரல்களில் படிகிறது. வழிநெடுக சாலைகளில் எல்லாம் மஞ்சள்
நிற மண் கட்டிகள் விழுந்துகிடக்கின்றன. இந்த லாரிகள் முழுமையாக
மூடிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நியமங்கள் இருந்தாலும், நான்
பார்த்த லாரிகளின் மீது ஒரு கிழிந்த சாக்குகூடப் போடப்படவில்லை.
மில்களில் இருந்து வரும் கழிவுகள் நான்கைந்து கால்பந்து மைதானங்களின்
பரப்பளவுகொண்ட செயற்கைத் தேக்கங்களில் தேக்கி வைக்கப்படுகிறது.
எங்கே, டெல்லியிலா? இல்லை! எந்த ஆதிவாசி மக்களின் கிராமங்களில்
இருந்து யுரேனியம் தோண்டி எடுக்கப்படுகிறதோ, அதே கிராமங்களுக்கு
கதிர் வீச்சுக் கழிவுகள் குழாய்கள் வழியாகவும், பீப்பாய்களிலும்
திரும்பி வருகின்றன. இந்தக் குழாய்கள் உடைவதும், கதிர்வீச்சு நச்சுப்
பொருட்கள் ஊருக்குள் கசிவதும், பரவுவதும் வாடிக்கை. இவை
எல்லாவற்றையும்விட கொடுமையானது, காற்றும் நிலத்தடி நீரும்
நஞ்சாவதுதான்.
இந்தக் காற்றை சுவாசித்து, தண்ணீரைப் பருகி வாழும் மக்கள், பல
விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆதிவாசிப் பெண்கள், குழந்தைகள்
படும் துயரை ஊருக்குள் நடந்து பார்த்து, மனம் ஒடிந்து கண்ணீர்
சிந்தினேன். ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குறைப் பிரசவத்துக்கு ஆளானோர் என்று
வீட்டுக்கு வீடு இருக்கின்றனர். ரேடான் வாயு, ரேடியம், தோரியம்போன்ற
கதிர் வீச்சுப் பொருட்களும், ஆர்சனிக், ஈயம், நிக்கல் போன்ற கடின
உலோகங்களும் இந்த கல்வி அறிவற்ற ஏழை மக்களை முடிந்த வரை
துன்புறுத்துகின்றன.
மலைப்பாங்கான மேகாலயாவில் நிறைய யுரேனியம் இருப்பதால், அங்கேயும்
போய்த் தோண்டலாம் என ஆசைப்பட்டது அணு சக்தித் துறை. என்ன நடக்கிறது
என்று தெரிந்துகொள்வதற்காக ஷில்லாங் நகருக்குப் போய் விசாரித்தேன்.
காசி மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் தடதடவென வந்தார்கள்
எனது ஹோட்டல் அறைக்கு. காசி என்பது மேகாலயாவின் முதன்மை இன மக்களில்
முக்கியமானவர்கள். 'நாங்கள் இருக்கும் வரை, இங்கே எதுவும் நடக்காது!’
என்றார்கள், அந்த படித்த, சுற்றுச்சூழல் ஆர்வம்மிக்க புத்திசாலி
இளைஞர்கள். இதுவரை எதுவும் நடக்கவில்லை.
யுரேனியம், தோரியம், நியோபியம், டாண்டலம், பெரிலியம், சிர்கோனியம்,
லித்தியம் எனப் பல்வேறு தாதுக்கள் அணு சக்தி உற்பத்திக்குத்
தேவைப்படுவதாகவும், இவை இந்தியாவின் 10 மாநிலங்களில்
பரந்துகிடப்பதாகவும் அணு சக்தித் துறை தம்பட்டம் அடிக்கிறது.
யுரேனியம் பற்றாக்குறை எதிர்காலத்தில் எழலாம் என்பதால், தோரியம்
எனும் மூலப்பொருளை உபயோகித்து அணு மின் நிலையங்களை இயக்கலாம் என்பது
இந்திய அணு சக்தித் துறையின் கனவு. நார்வே, துருக்கிபோன்ற
நாடுகளைப்போல நமது நாட்டு கடற்கரை மணலில் தோரியம் அதிகமாக
இருக்கிறது. தமிழகத்தின் மீது தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் மீது
மண்ணை வாரிப் போடும் நாள் விரைவில் வரலாம். காப்பியடிக்க மட்டுமே
தெரிந்த நமது விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் யாராவது வெள்ளைக்காரன்
தோரிய அணு உலைகளைக் கண்டுபிடிக்க மாட்டானா எனக் காத்திருக்கிறார்கள்.
அணு சக்திக் குரங்கின் கையில் சிக்கிய அழகான மாலையாக ஆகிப்போகுமோ
தமிழகம்?
என்.பாலகணேசன்
இயற்பியலில் இளங்கலை கல்வி
பயின்ற பாலகணேசன், கணினி சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கிறார்.
கூடங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர். அணு மின் நிர்வாகம் நடத்தும்
கருத்துக் கேட்பு கூட்டங்களில் அணு சக்தித் துறை செய்த
பித்தலாட்டங்கள், மக்களைத் திசை திருப்புகின்ற வேலைகள்,
இடப்பெயர்ச்சி செய்வதுபற்றி முழுத் தகவல்களையும் மக்களுக்குத்
தெரிவிக்காது நழுவும் செயல்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
'கூடல்பாலா’ என்ற பெயரில் வலைப்பூ ஒன்றை எழுதி வருகிறார்!