| | | |
Uploading ....
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1 - ஆனந்த விகடன் - 2014-05-21''கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளிமடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்!'' - பெரியார், 16.03.1968, விடுதலை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்! சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது. பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது. ''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள். சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும். இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா? ''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம். எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்? ''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார். பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன! சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி. இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார். வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்! பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்? ''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை. உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது. அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர். இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது. 10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது. ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது. சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது? - பாடம் படிப்போம்...
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2 - ஆனந்த விகடன் - 2014-05-28படித்தவன் சூதும் வாதும் செய்தால் வான் போவான் அய்யோன்னு போவான் - பாரதியார் அண்ணாச்சி கடையில் சோப் வாங்கும்போது ஷாம்பு ஆஃபர் தருவதுபோல, முதல் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது குழந்தையையும் சேர்த்தால் கட்டணத்தில் சலுகை வழங்குகின்றன சில பள்ளிகள். இப்படிச் சலுகை வழங்கி 'வள்ளல்’ பெயர் எடுத்து முதல் மாங்காயை அடிக்கும் இவர்கள், பெற்றோர்களை ஈர்த்து இழுத்து இரண்டாவது மாங்காயை அடிக்கின்றனர். 'முதல் குழந்தைக்கு வாங்கிய கடனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது குழந்தைக்காவது கொஞ்சம் கட்டணம் குறைகிறதே!’ என்பது பெற்றோர்களுக்கு சிறு ஆசுவாசம். ஆனால், 'கல்வி வணிகம்’ செய்யும் தனியார் பள்ளிகள், இந்தச் சலுகையை எப்படி வழங்குகின்றன? அவை போணி ஆகாத சீட்டுகள். விற்காத பொருளை நமக்குப் பெருந்தன்மையுடன் வழங்கி ஒரே கல்லில் மூன்றாவது மாங்காயையும் அடிக்கின்றனர். இந்தக் கட்டண சலுகையும் வெகுசில பள்ளிகளில் மட்டுமே. பெரும்பாலான பள்ளிகளில், மூன்றாவது குழந்தையையும் அங்கேயே சேர்த்தாலும்கூட எந்தக் கட்டணச் சலுகையும் கிடையாது. வேண்டுமானால் சீட் கிடைப்பது உறுதியாகலாம். அதுவும்கூட உங்களின் கடந்த கால 'ட்ராக் ரெக்கார்டை’ப் பொறுத்தது. உங்களின் முந்தைய குழந்தைக்கு முறையாகக் கட்டணம் செலுத்தி, உங்கள் குழந்தை நல்ல ரேங்க் வாங்கி, நீங்கள் பணிவன்புடன் நடந்துகொள்பவராக இருந்தால், உங்களைச் சிறந்த 'கஸ்டமர்’ என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஆகவே, இரண்டாவது சீட் கிடைக்கிறது. ஒருவேளை, கடந்த காலத்தில் கட்டணம் செலுத்துவதில் கால தாமதம் செய்திருந்தால், நிச்சயம் உங்களுக்கு இரண் டாவது சீட் அந்தப் பள்ளியில் கிடைக்காது. பெற்றோர்களைப் பொறுத்தவரை இரண்டு குழந்தைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்து விட்டால் அலைச்சல் மிச்சம். அழுது அடம் பிடிக்கும்போது ஒருவரைக் காட்டி ஒருவரை பள்ளிக்கு அனுப்பலாம். விடுமுறை என்றாலும், தேர்வு என்றாலும் ஒன்றாகவே வரும். இதனால்தான் பெற்றோர் எப்பாடுபட்டேனும் ஒரே பள்ளியில் சீட் வாங்க மெனக்கெடுகின்றனர். ஆனால், இது நிறைவேறுகிறதா? பெற்றோர்கள், தங்களின் முதல் குழந்தைக்கு அதிகம் செலவழித்து, புகழ்பெற்ற பெரிய பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அடுத்த குழந்தையையும் அதேபோன்ற பள்ளியில் சேர்க்க பொருளாதாரம் இடம் தருவது இல்லை. போதாக்குறைக்கு, இரண்டாவது குழந்தைக்கும் அதே பள்ளியில் இடம் வாங்குவது சிரமம் என்ற நிலை வரும்போது, வேறு வழியின்றி கட்டணம் குறைவாக உள்ள பள்ளியைத் தேர்வு செய்கின்றனர். இது, குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு வித்தியாசமாகத் தெரிவது இல்லை. சற்றே வளர்ந்த பிறகு 'அவனுக்கு மட்டும் பெரிய ஸ்கூல். எனக்கு மட்டும் சின்ன ஸ்கூலா?’ என்று நினைக்கின்றனர்; அல்லது கேட்கின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் ஆகிவிடுகிறது. இது பெற்றோருக்கு வாழ்நாள் கவலையாக உருவெடுக்கிறது. இப்படி 'ஒஸ்தி பள்ளியில்தான் படிக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் அடம்பிடிப்பதன் பொருள், அவர்கள் வறட்டுப் பிடிவாதம் பிடிக்கின்றனர் என்பது அல்ல. அங்கு படித்தால்தான் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர். அந்தப் பள்ளி, கடந்த காலங்களில் பெற்ற கவர்ச்சியான தேர்ச்சி விகிதங்களும், எத்தனை பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கையும் பெற்றோர்களைச் சுண்டி இழுக்கின்றன. அங்கு சேர்த்துவிட்டால், தன் பிள்ளைகளும் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று எண்ணுகின்றனர். இதன் பொருட்டே பள்ளி நிர்வாகம் செய்யும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக்கொள்கின்றனர். படித்த பெற்றோராயினும் படிக்காத பெற்றோராயினும் இந்தப் பள்ளிகள் அவர்களை நடத்தும்விதம் அநாகரித்தின் உச்சம். ''11 மணிக்குள்ள வரணும்னு சொன்னாங்கல்ல... இப்போ என்ன மணி? இப்போ வந்து நிக்கிறீங்க? கௌம்புங்க, கௌம்புங்க...'' என்று விண்ணப்பப்படிவம் கொடுக்க வந்த ஒரு தந்தையை, பள்ளியின் வாட்ச்மேன் விரட்டி அடித்தபோது நேரம் 11.15. கால் மணி நேர தாமதம், தன் சுயமரியாதையை காலில் போட்டு நசுக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பிறகு வாழ்நாள் எல்லாம் அவர் படப்போகும் அவமரியாதைக்கான முன்னோட்டம் அது. ஆனால், இவற்றை பெற்றோர்கள் தெரிந்தே ஏற்றுக்கொள்கின்றனர் என்பதுதான் முக்கியம். தனியார் பள்ளிகள் அநீதியாகக் கட்டணம் வாங்குகிறார்கள் என்பது எந்தப் பெற்றோருக்குத்தான் தெரியாது? ''வீட்டுல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலதான் ஸ்கூல். இருந்தாலும் தினமும் கொண்டுபோய் விட சிரமமா இருக்குமேனு ஸ்கூல் பஸ்ஸுக்குப் பணம் கட்டினேன். வருஷத் துக்கு 16 ஆயிரம் ரூபா. ஆனா, அந்த பஸ் எங்க வீடு இருக்கிற தெருவுக்குள்ள வராது. அரை கிலோமீட்டர் அந்தப் பக்கம் இருக்கிற மெயின் ரோட்டுலயே வந்துட்டுப் போயிடும். நான் குழந்தையை வண்டியில கொண்டுபோய் அந்த ரோடு வரைக்கும் விடுறேன். இன்னும் அரை கிலோமீட்டர் போனா ஸ்கூல்லயே கொண்டுவிட்டுருவேன். இதுக்கு எதுக்கு ஸ்கூல் பஸ்?'' என்று பொருமுகின்றனர், சேலம் நகரத்தில் வசிக்கும் பழனிச்சாமி-கோமதி தம்பதியினர். மழைக் காலத்தில் இது இன்னும் கொடுமை. காலை 6.30 மணிக்குப் பேருந்து வரும் என்றால், 5 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். அந்தக் காலைக் குளிர் தரும் இதத்தில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, வலுக்கட்டாய மாகக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, புத்தகப் பையுடன் வண்டியில் உட்காரவைத்து அழைத்துச்செல்ல வேண்டும். மழை பெய்கிறதே என்று மெதுவாகப் போக முடியாது. பள்ளிப் பேருந்து, 10 விநாடிக்கு மேல் நிற்காது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்கச் செல்லும் பதற்றத்துடன்தான் பெற்றோர்கள் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க ஓடுகின்றனர். இதை எதிர்த்து பள்ளியில் சென்று கேட்க முடியுமா? பள்ளிப் பேருந்தின் டிரைவரிடம்கூட கேட்க முடியாது. மீறி கேட்டால் என்னவாகும்? தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் வேன், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வரும். 'அப்படி வருகிற பள்ளிக்கூட வேன், முந்தைய ஊர் வரையிலும் வருகிறது. அதை எங்கள் ஊருக்கும் வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சுமார் 20 பெற்றோர்கள் ஒன்றுகூடி பள்ளி நிர்வாகத்திடம் முறையிடச் சென்றனர். அங்கிருந்த ஊழியர் மிகுந்த அவமரியாதையாகப் பேச, கோபம் அடைந்த பெற்றோர்கள், 'அப்படின்னா எங்க குழந்தைங்க எல்லோரையும் வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறோம்’ என்றனர். அவர்கள் நினைத்தது, ஒரே நேரத்தில் இத்தனை பேர் டி.சி. வாங்குவதாகச் சொன்னால், பள்ளிக்கூடத் தரப்புக்கு நஷ்டம்; அதனால் பயந்துபோய் தங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் என்று. ஆனால் நடந்தது, அந்த ஊழியர் யாரையோ அழைத்து, 'இந்த 20 பேரையும் ஹெச்.எம். ரூமுக்கு அழைச்சிட்டுப் போய், இவங்களோட குழந்தைங்க எல்லோருக்கும் டி.சி. கொடுத்து அனுப்புங்க’ என்றார். பெற்றோர்கள் கதிகலங்கிப்போனார்கள். கொஞ்சம் நஞ்சம் இருந்த கடைசித் துளி மரியாதையையும் கடாசிவிட்டுக் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டுவிட்டுக் கிளம்பி வந்தனர். அவர்கள் கேட்டது என்ன? 'நாங்களும் ஸ்கூல் வேனுக்குப் பணம் கட்டுகிறோம். அது எங்கள் ஊருக்கு வருவது இல்லை. வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்பது. இது மிக, மிக நியாயமான கோரிக்கை. ஆனால், பள்ளி நிர்வாகம் இதை அராஜகமாக மறுக்கிறது. என்ன செய்ய முடிந்தது பெற்றோர்களால்? இந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர்கள் பொறுமை காப்பதற்குக் காரணம், 'நாம் ஏதாவது சண்டை போடப்போய், பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ?’ என்ற அச்சம்தான். பெற்றோர்களின் இந்த அச்சம்தான் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கான அச்சாணி. அதை வைத்துதான் அவர்கள் மிரட்டுகின்றனர். எனில், நமது குழந்தைகள் என்ன பணயக் கைதிகளா? யாராவது புதியவர்கள் குழந்தையைக் கொஞ்சினால்கூட சந்தேகத்துடன் பார்க்கும் பெற்றோர், எதிர்த்துப் பேசினால் ஏதாவது செய்துவிடக்கூடிய சாத்தியம் உள்ளவர்களை நம்பி எப்படிப் பிள்ளைகளை அனுப்புகின்றனர்? இத்த னைக்கும் பள்ளிகள் தங்களின் அராஜகத்தை மிகவும் வெளிப்படையாகவே நடத்துகின்றன. நன்கொடை, பருவக் கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை கட்டணம், ஸ்மார்ட் க்ளாஸ் கட்டணம் என்று ஏராளமான கட்டணங்கள். சென்னை, ராயப்பேட்டையின் நெருக்கடி யான தெரு ஒன்றில் உள்ள ஒரு பள்ளியில், எல்.கே.ஜி. குழந்தையிடம் 'பிணையத் தொகை’ (Caution Deposit) என்ற பெயரில் 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். ''எதுக்கு இது?'' என்று கேட்டால், ''மேஜை, நாற்காலியை உங்க குழந்தை உடைச்சிட வாய்ப்பு இருக்குல்ல... அதுக்காக'' என்று பதில் வருகிறது. எல்.கே.ஜி. குழந்தை உட்கார்ந்து நாற்காலி உடைந்துவிடுமாம். அதற்கு 30 ஆயிரம் பிணையத் தொகையாம். 12 கிலோ உள்ள குழந்தை உட்கார்ந்து உடையும் அளவுக்குத்தான் நாற்காலி இருக்கிறது என்றால், முதலில் உங்கள் பள்ளிக்கான உரிமத்தையே ரத்து செய்ய வேண்டும். அந்த வகுப்பில் குறைந்தது 50 மாணவர்கள் இருக்கிறார்கள் எனில், பிணையத் தொகை வசூல் மட்டுமே மொத்தம் 15 லட்சம் ரூபாய். எல்.கே.ஜி-யில் மொத்தம் ஐந்து செக்ஷன்கள். அதையும் கணக்கிட்டால் மொத்தம் 75 லட்சம். எவ்வளவு இலகுவாக, போகிறபோக்கில் முக்கால் கோடியை விழுங்குகிறார்கள் பாருங்கள்! இந்த ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு மட்டும் இவ்வளவு ரூபாய் என்றால், மாநிலம் முழுக்க உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்துக் கணக்கிடுங்கள். அந்தத் தொகை 10 ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குச் சமமானதாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலாவது ஒரு முறை நடந்தது. இது ஆண்டுதோறும் நடக்கிறது! - பாடம் படிப்போம்...
என் குழந்தை... யார் உரிமை? விளையாட்டு தினம், ஆண்டு விழா போன்ற சமயங்களில் தனியார் பள்ளிகளில் புராஜெக்ட் செய்வது ஒரு கலாசாரம். காய்கறி, பழம், பறவை, விலங்கு... என்று ஏதேனும் ஒன்றின் உருவத்தைச் செய்து எடுத்து வர வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் இந்த உருவங்களைச் செய்து தருவதற்கு என்று ஒருவரை ஏற்பாடு செய்து விடுகின்றனர். பணத்தை பள்ளியில் செலுத்திவிட்டால் புராஜெக்ட் தயார். சில ஊர்களில், வெளிச் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தெருவுக்குச் சென்றால், இந்த உருவங்கள் ரெடிமேடாகவே கிடைக்கும். பள்ளிக்கூடங்களில் இப்படி புராஜெக்ட் செய்யப்படுவதன் நோக்கம், மாணவர்களின் கற்பனைத் திறன் பெருக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதையும் பணமாக மாற்றிவிடுகின்றன பள்ளிகள். இந்த 'புராஜெக்ட்’ செய்ய, சுமார் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு பெற்றோரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ''அது மட்டுமல்ல... அறிவியல் உபகரணங்களின் உருவத்தைச் செய்து எடுத்து வரச் சொல்கின்றனர். அது நீளமாக, அகலமாக, அடக்க முடியாத உருவத்தில் இருக்கிறது. அதை வேலை மெனக்கெட்டு நம் குழந்தை செய்யும். டூ-வீலரில் எடுத்துக்கொண்டு நாம் போய் இறங்கினால், பெரிய பெரிய கார்களில் வந்து இறங்கி டிக்கிகளில் இருந்து சினிமா செட் போல எடுத்துவைப்பார்கள். 'அது சூப்பரா இருக்கு. அதுபோலத்தான் எனக்கு வேணும்’ என்று நம் குழந்தை அழ ஆரம்பிக்கும். சமாளிப்பது மிகவும் சிரமம்'' என்கிறார் அனுபவப்பட்ட தந்தை ஒருவர். 'மாறுவேடப் போட்டி’ என்ற பெயரில், இந்தத் தனியார் பள்ளிகள் அடிக்கும் கூத்து தாங்க முடியாத துயரங்களில் ஒன்று. ஏதாவது 'தீம்’ கொடுத்து அதே போல உடை அணிந்து வரச் சொல்கின்றனர் அல்லது அவர்களே உடைகளைத் தயார்செய்துவிட்டு பணத்தை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். வெறும் அரை மணி நேரம் ஆடிவிட்டுக் கழற்றி வீசப்போகும் அந்த உடைக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் என்று மனச்சாட்சியே இல்லாமல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 'என் குழந்தைக்கு மாறுவேடப் போட்டி வேண்டாம்’ என்று எந்தப் பெற்றோரும் மறுக்க முடியாது. ஏனெனில், அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை!
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3 - ஆனந்த விகடன் - 2014-06-04'ஸ்ட்ரிக்ட்டா போலீஸ் ஸ்டேஷன் மாதிரி நடத்தினா, நல்ல பள்ளிக்கூடம்’ என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். கறார்த்தனம்தான் கல்லா கட்டும் வழி என்பதைப் புரிந்துகொண்டுள்ள தனியார் பள்ளிகள், 'கட்டணம்’ என்ற பெயரில் 'மாமூல்’ வசூலிக்கின்றன. எனினும் தனியார் பள்ளிகளிடம் இருப்பது, 'கொட்டக் கொட்டக் கொள்ளாத’ விநோத அட்சய பாத்திரம். அது, நடுத்தர வர்க்கம் ரத்தம் சுண்ட உழைக்கும் வியர்வையின் கடைசித் துளியையும் ஒட்ட உறிஞ்சிவிடுகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், 'ஆமா சார். 20 ஆயிரம் முதலீடு போட்டு அயர்ன் வண்டி கடை வைச்சிருக்கிறவர், தினமும் 500 ரூபா வீட்டுக்கு எடுத்துட்டுப் போறார். 50 ஆயிரம் ரூபா முதலீடு போட்டு டீக்கடை நடத்துறவர், தினமும் 1,000 ரூபா சம்பாதிக்கிறார். நாங்க கோடிக்கோடியாக் கொட்டி ஸ்கூல் நடத்துறோம். இன்னைக்கு ஒரு கிரவுண்ட் நிலம் என்ன விலை? ஒரு கட்டடம் கட்ட என்ன செலவு? எல்லா பணத்தையும் எப்படித் திருப்பி எடுக்கிறது?’ என்று பட்டவர்த்தனமாகக் கேட்டார் கல்வித் தந்தை ஒருவர். 'கல்வி ஒரு சேவை’ என்பது எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. இது பெரிய மீனைப் போட்டு, அதைவிடப் பெரிய மீனைப் பிடிக்கும் தொழில். இந்தத் தொழிலில் யார் தங்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்திக்கொள்கிறார்களோ, அவர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்கின்றனர். வழக்கமாகத் தனியார் பள்ளி முதலாளிகளைப் பற்றிப் பேசும்போது, ஒருகாலத்தில் சாராயக் கடை நடத்தியவர்களும், கந்துவட்டி வசூலித்தவர்களும் இன்று கல்வித் தந்தைகளாகி விட்டார்கள் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், இவர்கள் கல்வியை ஒரு பாரம்பரியத் தொழில் போல நினைத்தார்கள். மாறிவிட்ட புதிய உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை, தங்கள் 'தொழிலை’ மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் இத்தகைய பின்னணியில் இருந்து பள்ளிக்கூடம் நடத்துபவர்கள், இன்று போட்டியின் பின் வரிசையில் இருக்கிறார்கள். எனில், முன் வரிசையில் இருப்பது யார்? அவர்களுக்குச் சாராயப் பின்னணியோ, கந்துவட்டிப் பின்னணியோ கிடையாது. சொல்லப்போனால் பல தலைமுறைகளாகக் கல்விபெறும் வாய்ப்புப் பெற்ற, படித்த வர்க்கத்தினரின் வாரிசுகள் அவர்கள். கல்வி என்பது ஒரு வர்த்தகப் பண்டம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை, தங்களின் கல்வியறிவால் முன்கூட்டியே ஊகித்தவர்கள். மிகவும் நாகரிகமான இந்த மேட்டுக்குடியினர், நகர்ப்புறங்களில் தொடங்கிய தனியார் பள்ளிக்கூடங்கள்தான் இன்று தர வரிசைப் பட்டியலில் முதலில் இருக்கின்றன. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் 90 சதவிகிதம் இவர்களுக்குச் சொந்தமானவையே. இப்படிச் சொல்வதன் நோக்கம், சாராயம் மற்றும் கந்துவட்டிப் பின்னணியுடன் கல்விக்கூடம் நடத்துபவர்கள் மீது பரிதாபத்தைக் கோருவது அல்ல. மாநிலம் முழுவதும் நகரங்களிலும், சிறுநகரங்களிலும், ஊராட்சி அளவிலும் சின்னச் சின்ன தனியார் பள்ளிகளை நடத்தி சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உறிஞ்சுவது இவர்கள்தான். ஆனால், பெற்றோர்களைப் பொறுத்தவரை வேறு வழியின்றியே இந்தப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பெரிய பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்பதால் இங்கு வருகின்றனர். மற்றபடி பெரும்பான்மை மக்களின் மனங்களில் மோகம் கொண்டிருப்பது புகழ்பெற்ற 'பிராண்ட்’ பள்ளிகளே. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் இப்போது 'ஃப்ரான்சைஸ்’ (Franchise) முறைப்படி தங்கள் பள்ளியின் பெயர் உரிமைகளை விற்கத் தொடங்கியுள்ளன. நாமக்கல்லில் புகழ்பெற்ற பல பள்ளிகளின் பெயர்களை, நீங்கள் மாநிலம் முழுக்கவும் பல இடங்களில் பார்க்கலாம். நாமக்கல் பள்ளி ஒன்று, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் தனது பள்ளியின் கிளைகளை விஸ்தரித்துள்ளது. கல்வி என்பது 100 சதவிகிதம் வியாபாரம் ஆகிவிட்டது என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது 'ஃப்ரான்சைஸ்’ அணுகுமுறை. தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, 'என் பேரனுக்கு இந்தப் பள்ளியில் ஒரு சீட் தர மறுத்துவிட்டனர். அதனால் என் மனைவி வருத்தப்பட்டார்’ என்று வெளிப்படையாக மேடையிலேயே பேசினார். ஒரு மாநில முதலமைச்சரின் பேரனுக்கே சீட் மறுக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்த இத்தகைய பள்ளிகள்தான், இன்று பெற்றோர்களின் மோகத்துக்கு உரியவை. இத்தகைய கெடுபிடி அணுகுமுறை குறித்த பேச்சு பரவுவதும், கறார்த்தனத்தைப் பராமரிப்பதும்கூட, இந்தப் பள்ளிகளின் சந்தை மதிப்பை அதிகரிக்கவே உதவி செய்கின்றன! தனியார் பள்ளிகளின் கட்டண விகிதத்தை முறைப்படுத்த, 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’வை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான இந்தக் குழு, அப்போது மாநிலம் முழுவதும் இருந்த சுமார் 10,500 பள்ளிகளுக்கான கட்டணத்தை வரையறுத்து அறிவித்தது. அப்படி அரசாங்கம் வரையறுத்த கட்டணமே அதிகமாக இருக்கிறது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளோ, 'இது மிகக் குறைவான கட்டணம்’ என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இறுதியில் அந்த வழக்கில், 'கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த தொகை சரியானதுதான்’ என்று தீர்ப்பு வந்தது. 2010 நவம்பரில், இந்தக் கட்டண நிர்ணய குழுவுக்கு நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை மறுசீரமைத்து அறிவித்தது. ஒருசிலவற்றைத் தவிர்த்து, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏற்கெனவே இருந்ததைவிட 40 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தித் தந்தது இந்தக் குழு. அதன் பிறகு, 2012-ல் நீதிபதி சிங்காரவேலர் இந்தக் குழுவுக்குத் தலைவர் ஆனார். ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு என்ற சராசரி அளவின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும் தொகை தான் அதிகாரபூர்வமானது என்றாலும், அதுவே இறுதியானது அல்ல. நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்று பள்ளி நிர்வாகம் கருதினால், குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம். கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், கட்டணம் உயர்த்தித் தரப்படுகிறது. இப்படி கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 387 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் உயர்த்தித் தரப்பட்டது. இப்போதும் கட்டண உயர்வுக்கு மேல் முறையீடு செய்ய சிங்காரவேலர் குழுவை தனியார் பள்ளிகள் மொய்த்தபடியே இருக்கின்றன. சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், இந்த ஆண்டு 100 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் இரண்டு மடங்கு உயர்வு. கடந்த ஆண்டில் இருந்ததைவிட இந்த ஆண்டு அந்தப் பள்ளியின் தரம் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது என இதைப் புரிந்துகொள்ள முடியுமா? சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சிங்காரவேலர் கமிட்டி எல்.கே.ஜி-க்கு நிர்ணயித்த தொகை ஆண்டுக்கு 6,500 ரூபாய். ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு பருவத்துக்கு 6,500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை வசூலித்தது. விஷயம் வெளியில் தெரிந்து இப்போது விசாரணை நடைபெறுகிறது. இப்படித்தான் இருக்கிறது யதார்த்த நிலைமை. ஆனால், ஏதோ இந்தக் குழு முடிவு செய்தால்தான் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்க முடியும் என்பதுபோல் இந்தப் பள்ளிகள் மேல் முறையீடு செய்வது எதனால்? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, குழுவே தொகையை அதிகரித்துத்தந்தால், 'வெள்ளைப் பணத்தின்’ அளவு அதிகமாகும். இரண்டாவது, ஓர் ஊரில் எந்தப் பள்ளிக்கு அதிகக் கட்டணமோ, அதுதான் நம்பர் 1 பள்ளி என்று மக்கள் நினைக்கின்றனர். ஆகவே, முதல் வரிசையில் இருந்தால்தான், பெற்றோர்களிடம் பேரம் பேசும் உரிமையைத் தக்கவைக்க முடியும். பிள்ளையைப் பள்ளியில் சேர்த்த பின்பு 'நான் குழு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் கட்டுவேன்’ என்று எந்தப் பெற்றோரேனும் அடம்பிடித்தால், அடுத்து வரும் காலங்களில் அவர்களுக்குக் கடும் மன உளைச்சல் உறுதி. பலர் இப்படி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கட்டணம் மட்டும் கட்டிய மாணவனுக்குப் பாடப்புத்தகம் தருவது இல்லை. சமச்சீர்க் கல்வி என்பதால், வெளிச் சந்தையில் புத்தகம் கிடைக்காது. அதனால் முதலில் இதில் கை வைக்கிறார்கள். வகுப்பறையில் தனியே அமரவைப்பது, வெளியில் நிற்கவைப்பது, வருகைப் பதிவேட்டில் பெயர் அழைக்கும்போது அந்த மாணவனின் பெயரை மட்டும் விட்டுவிடுவது, பேருந்தில் அழைத்துவராமல் வேண்டும் என்றே விட்டுவிட்டு வருவது... என்று ஒரு காவல் நிலையத்தைப் போல விதம்விதமாகத் தண்டிக்கிறார்கள். சிதம்பரத்தில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு இப்படி ஏழெட்டு மாணவர்களுக்குப் புத்தகங்கள் தரவில்லை. பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்து, அவர் சென்றுதான் புத்தகம் வாங்கித் தந்தார். பாடப்புத்தகம் வாங்கித்தர டி.எஸ்.பி. வர வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், இந்தக் கட்டண நிர்ணயக் குழு என்பது, மேலோட்டமான பார்வையில் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவை போலத் தோன்றினாலும், நடைமுறையில் அவ்வாறு இல்லை. குழு, ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கிறது. ஆனால், பள்ளிக்கூட நிர்வாகிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனில், இந்தக் குழுக்களைப் பொருளற்ற வெறும் சடங்கு என்று கருத முடியுமா? நிச்சயம் முடியாது. கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய உரிமை என்ற நிலையை மாற்றி, 'கல்வி என்பது பணம் கொடுத்துப் பெற வேண்டிய பண்டம்’ என்பதைச் சட்டபூர்வமாக நிலைநிறுத்திய வகையில் இந்தக் கட்டண நிர்ணயக் குழுக்களுக்கு ஆழமான பாத்திரம் உள்ளது. எந்தப் பள்ளிக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் என்று அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது, வெறுமனே தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் ஏற்பாடு மட்டுமல்ல; தன் குடிமக்களுக்குக் கல்வி தரும் அடிப்படை கடமையில் இருந்து அரசு விலகிக்கொள்கிறது என்பதுதான் இதில் முக்கியம். அரசு இடைவெளி விடும் இடங்களை தன்னியல்பாகத் தனியார் பள்ளிகள் நிரப்புகின்றன அல்லது தனியார் பள்ளிகள் நிரப்புவதற்காகவே அரசு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது! - பாடம் படிப்போம்... ''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!'' ''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது. உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது. மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள். அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!'' என்கிறார் கல்வியாளர் மாடசாமி.
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 4 - ஆனந்த விகடன் - 2014-06-11
தனியார் கல்வி என்பது, மிகச் சமீப காலத்தைச் சேர்ந்தது. 1985-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தான். அரசு உதவிபெறும் சில தனியார் பள்ளிகள் இருந்தன. எனினும், அவற்றின் கட்டணம் கட்டுப்படியாகக் கூடியதாக இருந்தது. நமது முந்தைய தலைமுறையினர் இந்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். பள்ளி மட்டுமல்ல... உயர் கல்வி வரையிலும் அரசுக் கல்லூரிகளில்தான் பயின்றார்கள். பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்த எல்லோரும், ஒன்றாக இணைந்து புழங்கிய அந்த ஆரோக்கியமான வகுப்பறை, அவர்களுக்கு படிப்புடன் சேர்த்து, சகிப்புத்தன்மையை, மற்றவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, இந்த உலகின் பன்முகத்தன்மையை, சேர்ந்து இயங்குவதன் மகிழ்ச்சியை... என நிறையக் கற்றுத்தந்தது. அதனால்தான், இப்போதும் நமது மூத்தத் தலைமுறைக்குப் பழைய பள்ளி - கல்லூரி நினைவுகள் இனிமை நிரம்பியதாக, எண்ணிப் பார்க்கும்போது ஏக்கம் தருவதாக இருக்கின்றன. '40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வகுப்பில் படித்த கல்லூரி மாணவர்கள் ஒன்றாகச் சந்தித்தோம்’ என்று பலர் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இது இந்தத் தலைமுறைக்குப் பொருந்துவது சந்தேகமே. தகவல்தொடர்பு முன்பைவிட மேம்பட்டிருக்கலாம். ஆனால், காலம் கடந்தும் நட்பின் சாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை, இன்றைய வகுப்பறையில் இல்லை. இன்று 30 வயதுகளில் உள்ளோர், 10 வருடங்களுக்கு முன்பு, கல்லூரியில் படித்த தங்கள் செட் மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால், அது சவாலானதாக இருக்கும். 'ஒன்றிணைய வேண்டும்’ என்ற எண்ணம் மனதளவில் உருவாவதுதான் முதல் சவால். காரணம், இன்றைய வகுப்பறை, மாணவர்களை உதிரிகளாகப் பிரித்துவைக்கிறது. நண்பர்களாக இருக்க வேண்டியவர்களைப் போட்டியாளர்களாக மாற்றுகிறது. ஒருவரை வீழ்த்துவதில்தான் மற்றவரின் முன்னேற்றம் இருப்பதாக, ஆரம்பம் முதலே போதிக்கிறது. இதற்குக் காரணம் தனிப்பட்ட ஆசிரியர்களோ, பள்ளிக்கூடங்களோ அல்ல. தனியார் கல்வியின் அடிப்படைப் பண்பே இதுதான். போட்டியை உருவாக்கி, ஊதி உருப்பெருக்கி, உருவாகும் சூழ்ச்சியில்தான் அது உயிர் வாழ்கிறதே தவிர, அதன் சாமர்த்தியத்தால் அல்ல. 1986-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 'புதிய கல்விக் கொள்கை’யைக் கொண்டுவந்தார். அதுவரை நடப்பில் இருந்த பொதுக் கல்வி முறைக்குச் சவக்குழி தோண்டிய அந்தக் கொள்கை, மேல்தட்டு வர்க்கத்தினருக்கான 'நவோதயா’, 'வித்யாலயா’ பள்ளிகளை உருவாக்க வகை செய்ததுடன் தனியார் பள்ளிகளை வெளிப்படையாக ஊக்குவித்தது. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., தனியார் பள்ளிகளுக்குத் தாராள அனுமதியை வாரி வழங்கினார். அரசியலில் செல்வாக்கு மிகுந்தோர், பண்ணையார்தனம் உருவாக்கிய சமூக சங்கடத்தில் இருந்து விடுபட விரும்பியோர், பாரம்பரிய முதலாளிகள் போன்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுவினார்கள். ஒரே நேரத்தில் பணமும் கிடைத்து; 'கல்வி வள்ளல்’ என்ற பெயரும் எடுத்தனர். தனது பங்களிப்போ, நிதியளிப்போ இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்குவதை எம்.ஜி.ஆர். அரசும், அதன் பின் வந்த அனைத்து அரசுகளும் ஆதரித்தன. அரசியல்வாதிகளுடன் கூட்டுப்பேரம் நடத்திய அரசு அதிகாரிகள், இந்தக் கல்விக் கொள்ளை தடையின்றி தொடர்வதைச் சாத்தியப்படுத்தினார்கள். இதனால் மளமளவென மாநிலத்தின் மூலைமுடுக்குகள் எல்லாம் கான்வென்ட்கள் முளைத்தன. அவை ஆங்கில வழியில் கல்வி கற்பித்ததால், பெற்றோரது மோகம் அதை நோக்கித் திரும்பியது. சின்னச் சின்னக் கிராமங்களில் இருந்தும்கூட, அருகில் நகரங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். 1991-ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது கல்வி, சுகாதாரம், உணவு, மருத்துவம் போன்ற மக்களுக்கான அடிப்படைக் கடமைகளில், அரசு தன் பங்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. 1990-ல் தாய்லாந்தில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் இதை ஒரு கொள்கையாக வெளிப்படையாகவே அறிவித்தனர். இதற்கு 'ஜோம்தியன் பிரகடனம்’ என்று பெயர். 'அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்ல இயலும்?’ என்று சிலர் எண்ணக்கூடும். இதற்கு அவர்கள் சொன்ன விளக்கம், 'சந்தைப் போட்டியில் பங்கேற்று, கல்வியை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்றார்கள். மக்களின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தும் நல்ல நோக்கம் கொண்டவர்களைப்போல பேசினாலும் அவர்களின் மெய்யான இலக்கு வேறு. ஒரு நாட்டு மக்களின் அதிகப்பட்ச நுகர்வு... கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஒட்டியே உள்ளது. அவற்றை அரசே இலவசமாகவோ மானியத்துடனோ வழங்கினால், பிறகு தனியாருக்கு என்ன வேலை? எனவேதான் அரசின் பங்கைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இதை இந்தியா ஏற்றுக்கொண்ட நிலையில், பல்வேறு வகைகளில் தன் பொறுப்பில் இருந்து பின்வாங்கத் தொடங்கியது. உதாரணத்துக்கு 1989-90 காலகட்டத்தில் முதன்முறையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 1997-98ல் 3.49 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து குறைவாகவேதான் ஒதுக்கப்படுகிறது. கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறையும்போது, அரசுப் பள்ளிகளின் தரம் தன்னியல்பாகப் பின்னுக்குப் போகும். அந்த இடத்தைத் தனியார் பள்ளிகள் நிரப்பும். கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்துள்ள தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும், சீரழிந்துள்ள மற்றும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுமே இதற்கு சாட்சிகள். அதாவது அரசு, தன் சொந்தப் பிள்ளையை இரக்கம் இன்றி பட்டினியில் சாகவிட்டு, அந்த உணவை எடுத்து ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறது. இதில் இன்னோர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1990-களுக்கு முன்பு அரசின் சேவைகள் அனைத்தும் 'அனைவருக்கும் கல்வி’, 'அனைவருக்கும் உணவு’, 'அனைவருக்கும் மருத்துவம்’ என்று இருந்தன. புதிய தாராளமயக் கொள்கை, அனைவருக்கும் என்பதை ஒழித்துக்கட்டியது. அதற்குப் பதிலாக 'இலக்கு நோக்கிய மக்களுக்கானதாக’ (Targeted people) திட்டங்களைச் சுருக்கியது. இதனால் ரேஷன் கார்டு இருந்த எல்லோரும் அரிசி, சர்க்கரை வாங்கலாம் என்பது மாறி, 'வறுமைக்கோட்டுக்கு மேல்/கீழ்’ என தரம்/நிறம் பிரித்து குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. 'இதில் என்ன தவறு இருக்கிறது? வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத்தானே இத்தகைய மானியங்கள் தேவைப்படுகின்றன?’ என்று தோன்றலாம். ஆனால், அந்த வறுமைக்கோட்டை வரையறுக்க நம் அரசு வைத்திருக்கும் அளவுகோல் என்ன? 'ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர் தான் ஏழை’ என்கிறது இந்தியத் திட்டக் கமிஷன். இதன்படி பார்த்தால் இந்தியாவில் தினசரி 29 ரூபாய் சம்பாதிக்கும் யாரும் ஏழை அல்ல. அவர்கள் 'இலக்கு நோக்கிய’ மக்கள் பிரிவில் வர மாட்டார்கள். இப்படி 'நூதன முறையில்’ ஏழைகளைக் குறைத்துக்காட்டி பொய்க் கணக்கு எழுதும் இதே வேலைதான் கல்வியிலும் நடக்கிறது. 'அனைவருக்கும் ஆரம்பக் கல்வி’ என்பது இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒலித்து வரும் முழக்கம். 1991-களுக்குப் பிறகு இது 'எழுத்தறிவுத் திட்டம்’ என்றானது. 15 முதல் 35 வயதுள்ளோருக்குக் கையெழுத்துப் போடக் கற்றுத்தருவதும், பொருள்களின் மீதுள்ள விலையைப் படிக்க மற்றும் பேருந்து எண்களை வாசிக்கச் சொல்லித் தருவதும்தான் இந்த எழுத்தறிவுத் திட்டம். கல்வி என்பது இத்தனை தட்டையான, சுருங்கிய வரையறையைக் கொண்டதா? மனிதனின் அறிவு உணர்ச்சி, அழகு உணர்ச்சி, அற உணர்ச்சி... என அனைத்தையும் செம்மைப்படுத்துவதுதான் கல்வி. அப்படிப்பட்ட முறையான கல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முறைசாராக் கல்வியை முதன்மைப் படுத்தியதும்கூட புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான். 2009-ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், 6 முதல் 14 வயது வரையில் கல்வி பெறுவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. அதாவது கல்வி பெறும் உரிமையை 'இலக்கு நோக்கியதாக’க் குறுக்கியுள்ளது. இதன்படி 0-6 வயது வரையில் கல்வி தருவது அரசின் கடமை அல்ல. அதேபோல, 14 வயதுக்கு மேல் கல்வி தருவதும் அரசின் கடமை அல்ல. அது மக்களின் சொந்தப் பொறுப்பு என்றாகிவிடுகிறது. மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும், தங்களிடம் உள்ள மொத்தக் கல்வி இடங்களில் 25 சதவிகிதத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை, எளியோருக்கு ஒதுக்க வேண்டும் என்று 'இலக்கு’ நிர்ணயிக்கிறது. இதன் மூலம் மீதம் உள்ள 75 சதவிகித இடங்களை இஷ்டம்போல நிரப்பிக்கொள்ளும் உரிமையை உத்தரவாதப் படுத்துகிறது. இப்படி... எவை எல்லாம் ஒரு மக்கள் நல அரசின் கடமைகளாக இருந்தனவோ, அவை கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொன்றாகத் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளன. 'அரசுத் துறை என்றால் மோசம். அங்கு எதுவும் தரமாக கிடைக்காது’, 'காசு கொடுத்தாலும் பிரைவேட்காரன் பரவாயில்லை’ ஆகிய இரண்டு கருத்துகளும் சம காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளன. தனியார்மயத்தை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பயிற்றுவித்துள்ளனர். ஆகவேதான் தனியார் கல்வி என்பதை மிகவும் இயல்பாக, ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றின் இன்னொரு வடிவம்போல மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் தனியார்மயத்தின் லாப வெறிக்கு எல்லை இல்லை. அது கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய வடிவங்களைச் சூடிக்கொள்கிறது. அதன் நவீன வடிவம்தான், 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership). எஞ்சி இருக்கும் அரசுப் பள்ளிகளையும் கபளீகரம் செய்ய வந்திருக்கும் இந்தப் புதிய திட்டம், அரசுப் பள்ளிகளின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. 2013-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வருடாந்திரக் கல்வி அறிக்கை (ASER) முடிவுகள், கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டன. அதன்படி, தேசிய அளவில் 2013-ம் ஆண்டில் 6 முதல் 14 வயது வரையில் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 29 சதவிகிதம் பேர் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். 2006-ல் இந்த எண்ணிக்கை 18.7 சதவிகிதமாக இருந்தது. மாநிலவாரியாகக் கணக்கிட்டால் மணிப்பூரில் 70 சதவிகிதம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளா 68.6%, புதுச்சேரி 54.3%, ஹரியானா 51.4%, உத்தரப்பிரதேசம் 49%, பஞ்சாப் 46.7%, ஜம்மு-காஷ்மீர் 45.5%... என்ற பட்டியலில் தமிழ்நாடு 26.8%. பள்ளிகள் விற்பனைக்கு! தனியார் பள்ளிகளின் பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அவர்களால் முதலீட்டுக்கு ஏற்ற வருமானத்தை ஈட்ட முடியவில்லை. இதனால் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ''கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 110 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் முழு செட்-அப்புடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளன. செஞ்சி அருகே 17 ஏக்கரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, 17 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஈரோடு அருகே 1,000 மாணவர்களுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி, பொறியியல், மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுடன் இயங்கிவரும் கல்வி நிலையம் மொத்தமாக 650 கோடி ரூபாய்க்கு ஒரே பேக்கேஜாக விற்பனைக்கு வந்துள்ளது. திருவண்ணாமலையில் 5,வேலூரில் 8, திருவள்ளூரில் 10, தருமபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 5, மதுரையில் 8, ஈரோட்டில் 6, ஊட்டியில் 4, நெல்லையில் 9, கன்னியாகுமரியில் 7, தேனியில் 4, திண்டுக்கல்லில் 3, கரூரில் 2, கள்ளக்குறிச்சியில் 1, சேலத்தில் 2 என மொத்தம் 78 பள்ளிகள் விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன'' என்கிறார் தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார். - பாடம் படிப்போம்... கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5 - ஆனந்த விகடன் - 2014-06-18
'உங்க வீட்ல இருந்து அரிசி கொண்டு வா... எங்க வீட்ல இருந்து உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி, ஊதித் தின்போம்’ என்பார்களே... அது இங்கு அப்படியே பொருந்தும். 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership) என்ற முறையில், மத்திய அரசு நாடு முழுவதும் 2,500 புதிய பள்ளிகளை அமைக்கப்போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு 358 பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் வேகவேகமாக நடைபெற்றுவரும் நிலையில், உண்மையிலேயே இதன் மூலம் ஆதாயம் அடையப்போவது யார்? 'நமது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. மக்கள், தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்து மக்களும் செலுத்தக்கூடியதாக இல்லை. இந்தப் பிரச்னையைச் சரிசெய்து, தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளவைத்தான் இந்த 'பி.பி.பி பள்ளிகள்’ என்கிறது இந்தத் திட்டம் குறித்த மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கை. ஆனால், உண்மை நிலையோ வேறாக உள்ளது. இந்தத் திட்டத்துக்கான அதிகபட்ச நிதியைச் செலவிடப்போவது அரசு. ஆனால், அதன் பலனை அறுவடை செய்யப்போவது தனியார் நிறுவனங்கள். 'அரசு-தனியார்-கூட்டு’ என்ற பெயர், வெளித்தோற்றத்தில் ஜனநாயகத்தன்மை உடையது போல தோன்றினாலும், 'லாபம் வந்தால் தனியாருக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு’ என்பதுதான் இதன் உண்மையான பொருள். முக்கியமாக, முழுமையான தனியார்மயம் என்றால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது என்பதால், இத்தகைய குறுக்குவழியைக் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே பி.பி.பி முறைப்படி இந்தியாவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள், ரயில், விமானம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல்... என எந்தத் துறையும் மீதி இல்லை. நம் திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோகமும், சென்னை - ஆலந்தூர் நகராட்சியின் கழிவு அகற்றலும்கூட பி.பி.பி முறையில்தான் செயல்படுகின்றன. இங்கு எல்லாம் தனியார் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தின் ருசியை அனுபவித்து வருகின்றன. அதனால்தான் கல்வியில் எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் என்று ஒரே பாய்ச்சலாகப் பாய்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளைக் கேட்டால், ரத்தம் கொதிக்கும். அமைக்கப்படப்போகும் புதிய பள்ளிகளுக்கு 'ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்று பெயர். சி.பி.எஸ்.இ. முறைப்படி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல இவை செயல்படும். நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறைப்படி ஒருவர் பள்ளி தொடங்க விரும்பினால், புதிதாக ஆரம்பிக்கலாம் அல்லது தற்போது உள்ள பள்ளியையே இதன்படி மாற்றிக்கொள்ளலாம். ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயருக்கு முன்பாக வேறு பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டுமான செலவின் 25 சதவிகிதத்தை ஆண்டுதோறும் அரசு வழங்கும். மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை 40 சதவிகிதம் இடங்களை அரசு நிரப்பும். 60 சதவிகிதம் இடங்களை தனியார் நிர்வாகம் நிரப்பிக்கொள்ளும். அரசு நிரப்பும் இடங்களைப் பொறுத்தவரை, ஒரு வகுப்புக்கு 140 மாணவர்கள் வீதம் ஏழு வகுப்புகளுக்கு மொத்தம் 980 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கான கல்வித்தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டியது இல்லையே தவிர, அது இலவசம் இல்லை. அந்தத் தொகையை அரசு, பள்ளிக்கு வழங்கிவிடும். அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல... மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு எவ்வளவு ரூபாய் செலவிடப்படுகிறதோ அதைக் கணக்கிட்டு அதே அளவு வழங்கப்படும். கே.வி. பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 2,500 ரூபாய் செலவிடப்படுகிறது. எனில், ராஷ்ட்ரிய ஆதர்ஸ் பள்ளியில் படிக்கும் 980 மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 25 லட்சம் ரூபாய். இந்தப் பணமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு உரியது, மொத்தமாக முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும். தனியார் நிர்வாகமே நிரப்பிக்கொள்ள வேண்டிய 60 சதவிகித சீட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். நிபந்தனைக்கு உட்பட்ட சில இடங்களில் இந்த 60 சதவிகிதம் உயர்த்தித் தரப்படும். தமிழ் மீடியம் எல்லாம் கிடையாது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மட்டும்தான் இருக்கும். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2,500-க்குள் இருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 350 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்பட உள்ள இந்தத் திட்டம், அதன் பிறகு இரு தரப்பும் விரும்பினால் நீட்டிக்கப்படும். ஏற்கெனவே பள்ளிக்கூடம் நடத்தி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் இணைந்துகொள்ளலாம். முதலில் தொடங்கும் மூன்று பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், அதன் பிறகு தொடங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்சம் ரூபாயும் வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். இந்த வைப்பு நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகத் திருப்பி அளிக்கப்படும். மாநில அரசைப் பொறுத்தவரை பள்ளிக்குத் தேவைப்படும் நிலத்தை மானியமாகவோ, நீண்ட காலக் குத்தகையாகவோ வழங்க முயற்சிக்க வேண்டும் (குறைந்தபட்சம் மூன்று ஏக்கர்). 10 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கான நிதி உதவியை மாநில அரசு செய்ய வேண்டும் (எத்தனை ஆண்டுகள் வரை என்ற எந்த வரையறையும் இல்லை!). மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம், மதிய உணவு, இலவச பஸ்பாஸ் போன்றவற்றை மாநில அரசு தர வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு வரை இந்தத் திட்டத்துக்கான உத்தேச செலவு மதிப்பு 21,225 கோடி ரூபாய். இதில் அரசின் பங்களிப்பு 17,650 கோடி ரூபாய். தனியார் பங்களிப்பு 3,575 கோடி ரூபாய். அதாவது அரசுடையது ஐந்து மடங்கு; தனியாருடையது ஒரு மடங்கு! இனிவரும் காலத்தில் நாடு முழுக்க உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் சாத்தியம் இப்போதே தென்படுகிறது. பி.பி.பி திட்ட ஆய்வறிக்கை, 2030-ம் ஆண்டு வரையிலும் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் சாத்தியத்தை விளக்குகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் திட்டம் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்கிறது அறிக்கை. அப்படி பள்ளிகளை அதிகரிக்கும்போது போதுமான எண்ணிக்கையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாதது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். இதனால் நாடு முழுவதும் பி.பி.பி முறையில் 50 ஆசிரியர் பயிற்சி மையங்களை உருவாக்கி, அதற்கான செலவின் 60 சதவிகிதத்தை அரசு வழங்கும். 40 சதவிகிதம் தனியாரால் செலவிடப்படும். இந்த 40 சதவிகிதத் தொகையையும் அடுத்த 15 ஆண்டுகளில் அரசு திரும்பத் தந்துவிடும். இதுவும் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூறப்பட்டுள்ளது. இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. வெறுமனே தனியார் கல்வி நிறுவனம் என்றாலாவது முழு முதலீடும் அவர்களுடையதாக இருக்கும். ஆனால், இந்த பி.பி.பி முறையிலோ, முதலீடுகூட தேவை இல்லை. அதையும் அரசே வழங்கிவிடுகிறது. மிகவும் பச்சையாக அரசின் வளங்களை, அரசின் செலவில் 'மக்களின் பெயரால்’ தனியாருக்குத் தாரை வார்க்கிறார்கள். ஆனால், இதே இந்தியாவில்தான் அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்பட்டுள்ளன. வகுப்பறைகள் இல்லை; சுகாதாரமான கழிப்பறைகள் இல்லை; போதுமான ஆசிரியர்கள் இல்லை. இவற்றை செய்துதர வக்கற்ற அரசு, மக்கள் பணத்தை எடுத்து தனியாருக்கு பாதபூஜை செய்கிறது. இவை அனைத்தும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கின்றன என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. பி.பி.பி முறையை அமல்படுத்துவது குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்தது எல்லாம் ஃபிக்கி, சி.ஐ.ஐ., விப்ரோ போன்ற கல்விக்கு அப்பாற்பட்ட முதலாளிகள்தான். தற்போது பி.பி.பி முறைப்படி பள்ளி தொடங்க விண்ணப்பித்து இருப்பதில் அதிகபட்சம் தனியார் பெரு நிறுவனங்களே! இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு - (Corporate Social Responsibility-CSR) என்பது, இன்று முக்கியமாகப் பேசப்படுகிறது. பெரு நிறுவனங்கள் தங்களது வருமானத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகநலப் பணிகளுக்காகச் செலவிடுவதை வலியுறுத்துவதுதான் சி.எஸ்.ஆர். உதாரணத்துக்கு, கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று, அங்குள்ள பள்ளிகளுக்கு தனது சி.எஸ்.ஆர். நிதியத்தில் இருந்து நிதி உதவி செய்கிறது. இதனால் அந்த நிறுவனத்துக்கு நற்பெயர் கிடைக்கிறது. ஆனால், இதன் மூலம் சிப்காட் வளாகத்தில் அந்த நிறுவனத்தால் சீரழிக்கப்பட்ட மண்வளமும் நீர்வளமும் மறக்கடிக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் சூழல் சீர்கேட்டு சர்ச்சைகளுக்குப் பெயர்போன ஒரு நிறுவனம், மதுரை கண்மாய் ஒன்றைத் தூர்வார நிதி அளித்துள்ளது. இப்படி சி.எஸ்.ஆர் என்பது, பெரு நிறுவனங்கள் தங்களின் தவறுகளை மறைத்துக்கொள்ளும் புதிய முகமூடியாக உருவெடுத்துள்ளது. தவறே செய்யவில்லை என்றாலும், தனது வரம்பற்ற லாபவெறி மக்களிடம் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களே முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர். அடாவடி மன்னன் ஆண்டுக்கு ஒரு முறை உப்பரிகையில் நின்று அள்ளி வீசும் சில்லறைக் காசுகள் என்றும் கூறலாம். தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 499-தான். ஆனால், இந்த பி.பி.பி முறை, ஒரே ஆண்டில் புதிதாக 358 சி.பி.எஸ்.இ. பள்ளிகளை உருவாக்கி உள்ளது. எனில் மொத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை 857. அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.பி.பி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திரும்பிய திசை எங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமே நிறைந்திருக்கும். ஏற்கெனவே சமச்சீர் கல்விமுறை வந்த பிறகு அரசுப் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளுக்கும் இருந்த வித்தியாசம் ஒழிக்கப்பட்டுவிட்டது. 'நாங்கல்லாம் வேற’ என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் எப்பாடுபட்டாவது சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிவிட மெட்ரிக் பள்ளிகள் மெனக்கெடுகின்றன. அவர்களுக்கு இது ஓர் நல்வாய்ப்பு. அதுவும் அரசாங்கமே நிதியை அள்ளித் தருகிறது என்ற நிலையில் நான், நீ என்று போட்டிப்போடுகின்றனர்! - பாடம் படிப்போம்...
வாஜ்பாயில் தொடங்கி சிங் வரை... வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பல்வேறு துறைகளிலும் பி.பி.பி. முறையைக் கொண்டுவருவதற்காக ஒரு குழுவே அமைக்கப்பட்டது. பிறகு அந்தக் குழு திட்டக் குழுவுக்கு மாற்றப்பட்டது. 2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதும் அதே குழு நீடித்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பரில் 'கல்வியில் அனைத்து மட்டங்களிலும் அரசு - தனியார்- கூட்டு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ மன்மோகன் சிங் அறிவித்து, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தங்குதடையில்லாமல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது! கல்வி என்பது, இப்போது மாநிலப் பட்டியலில் உள்ளது. ஆனால் மத்திய அரசோ, ராஷ்டிரிய ஆதர்ஷ் பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகளை நிர்பந்திக்கிறது. காவிரி, மூவர் தூக்கு, முல்லைப் பெரியாறு போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைகளில் மத்திய அரசுடன் சண்டைபோடும் தமிழக முதல்வர், இதில் தொடர்ந்து மௌனம் காக்கிறார்.
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 6 - ஆனந்த விகடன் - 2014-06-25பயணச்சீட்டு வாங்காமல் பேருந்தில் போனால், 500 ரூபாய் அபராதம். பயணச்சீட்டு வாங்கியும் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் போனால், அதற்கும் அபராதம். ஆனால், ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில், எந்தவித அனுமதியும் வாங்காமல் ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கூடம் நடத்தியவர்களை நமது நீதி-நிர்வாக அமைப்பால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒன்று அல்ல; இரண்டு அல்ல... 36 பள்ளிக் கூடங்கள். 'செட்டிநாடு ஏ ஸ்கூல்’ என்ற பெயரில், 2009-ம் ஆண்டில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன. சி.பி.எஸ்.இ முறைப்படி செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், அப்படி எந்த அனுமதியும் பெறப்படவில்லை. கட்டட அனுமதி முதல் சுகாதாரத் துறை அனுமதி வரை எதுவுமே வாங்கவில்லை; வாங்க முயற்சிக்கவும் இல்லை. வாங்கியவை எல்லாம் ஆயிரம் ஆயிரமாகக் கல்விக் கட்டணம் மட்டும்தான். ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகள் இந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்டன. 36 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 3,397 மாணவர்கள் படித்தனர் (இது, பள்ளி நிர்வாகம் சொல்லும் கணக்கு. உண்மை எண்ணிக்கை வேறாகவும் இருக்கலாம்). செட்டிநாடு குழுமக் கல்வி நிறுவனங்கள் புகழ்பெற்றவை என்பதாலும், அதன் மீது உயர்வர்க்க பெற்றோர்களுக்கு அளவு கடந்த மோகம் இருப்பதாலும் இந்தப் பள்ளிகளிலும் அது எதிரொலித்தது. ஏராளமானோர், போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தனர். விண்ணப்பப்படிவம் 1,800 ரூபாய், சேர்க்கைக் கட்டணம் 9,000 ரூபாய், பருவக் கட்டணம் 27,000 ரூபாய், ஸ்நாக்ஸ் 450 ரூபாய், பள்ளி வாகனக் கட்டணம் 6,900 ரூபாய் என்று ஏகப்பட்ட கட்டணங்கள். எனினும், எல்லோரும் வசதி படைத்தவர்கள் என்பதால், அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டாக இல்லை. 'குழந்தைகளுக்கு அபாக்கஸ், சமையல் பயிற்சி, இ-மெயில் முகவரி உருவாக்குதல் போன்றவற்றுக்காக மேலும் 9,800 ரூபாய் கட்ட வேண்டும்’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் கேட்டபோது பெற்றோர்கள் கொந்தளித்தனர். 'பிஞ்சுக் குழந்தைக்கு சமையல் பயிற்சியா, இ-மெயில் முகவரி உருவாக்க 10 ஆயிரமா?’ என்று கடுப்பானார்கள். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுமதி வாங்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொண்டனர். பெற்றோர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பிறகு, 13 மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க, நீதிபதிகள் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில், 36 பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டது சரிதான். ஆனால், இதுவரை அனுமதி இல்லாமல் பள்ளிக்கூடம் நடத்தியதற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. கூவம் கரையோரத்தில் 50 ரூபாய்க்குக் கஞ்சா பொட்டலம் விற்பவன் சமூக விரோதி என்றால், அனுமதி இல்லாமல் 36 பள்ளிக்கூடங்கள் நடத்தி, ஏறக்குறைய 3,000 பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடும் இவர்களுக்கு என்ன பெயர்? இத்தகைய கிரிமினல்கள் நடத்தும் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று தவமாய்த் தவம் இருக்கும் உயர் நடுத்தர வர்க்கம்தான், அரசுப் பள்ளிகளைப் பற்றி அவதூறு செய்கிறது. முறைகேடான வகையில் ஒவ்வொன்றாக 36 பள்ளிகள் தொடங்கப்படும் வரை, கல்வித் துறை அதிகாரிகள் எல்லோரும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா? அப்படிக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? இத்தனைக்கும் பல பெற்றோர்கள், முன்பே புகார் கொடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு, இந்தச் செட்டிநாடு ஏ பள்ளிகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எவற்றையும் பள்ளி நிர்வாகத்தினர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாட்டிக்கொண்டால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்ற தயக்கம்கூட இல்லை. சொல்லப்போனால், சட்டத்தையும் அரசாங்கத்தையும் கால் தூசுக்குச் சமமாக மதித்துள்ளனர். இல்லையெனில், முறைகேடான இத்தனை பள்ளிகளை நடத்தும் நெஞ்சழுத்தம் அவர்களுக்கு எங்கு இருந்து வரும்? இதில் பெற்றோர் தரப்பும் கடும் விமர்சனத்துக்கு உரியவர்களே. பள்ளியின் தரம், ஆசிரியர்கள் இருக்கிறார்களா, போதுமான வசதிகள் இருக்கின்றனவா... என எதையுமே பார்க்காமல் வெறுமனே பிராண்ட் மோகத்தினால் இத்தகைய பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் யாரும் படிக்காதவர்கள் அல்லர். படித்த, வசதி படைத்த, சமூகக் கௌரவம்மிக்க மேல்நிலை மக்கள்தான் இத்தகைய படுகுழியில் பணம் கொடுத்து விழுந்துள்ளனர். இப்போது நீதிமன்றம், 'ஒவ்வொரு மாணவருக்கும், இடைக்கால நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது. உண்மையில், பெற்றோர்கள் கட்டிய பணம், இதைவிட பல மடங்கு அதிகம். அது எதற்கும் பில் கொடுத்திருக்க மாட்டார்கள். 'அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று எந்தப் பெற்றோரும் கேட்கப்போவதும் இல்லை. 'இவங்ககிட்டப் போய் யாருங்க அலைஞ்சுகிட்டு இருக்கிறது? போய்த் தொலையுதுனு விடவேண்டியதான்!’ என்று சொல்வார்கள். திருடியப் பணத்தைத் திருடனிடம் இருந்து திருப்பி வாங்காதது, பெருந்தன்மை அல்ல; கோழைத்தனம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ''நான் விட மாட்டேன். என் மகனின் எல்.கே.ஜி படிப்புக்கு, சுமார் 40 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். அவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு மோசமாக அவமானப்படுத்தினார்கள். புகார் என்று பள்ளிக்குப் போனால் பதில் வராது. மெயில் அனுப்பச் சொல்வார்கள். எத்தனை மெயில் அனுப்பினாலும் பதில் வரவே வராது'' என்கிறார் செட்டிநாடு ஏ பள்ளியில் தன் மகனைப் படிக்க வைத்திருந்த விலாசினி. இந்தப் பள்ளி மட்டுமல்ல... மாநிலம் முழுவதும் இப்படி அங்கீகாரம் பெறாத ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத 42 மழலையர் பள்ளிகளைத் தடைசெய்து கல்வித் துறை உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தொடர் அனுமதி பெற வேண்டும். பல பள்ளிகள் இதைச் செய்வது இல்லை. அதே போல, 'நாங்கள் சி.பி.எஸ்.இ முறைப்படிதான் பள்ளி நடத்துகிறோம். மத்திய கல்வி வாரியத்திடம் அனுமதி வாங்கினால் போதும்’ என்றும் சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இ என்றாலும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளி நடத்தும் அனுமதிபோக, கட்டடச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையில்லாச் சான்று, பள்ளியின் வரைபடச் சான்று, பள்ளியின் தணிக்கை அறிக்கை, விளையாட்டு மைதானப் பத்திரம் அல்லது ஒப்பந்தம்... என ஏராளமானச் சான்றுகளைப் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். சான்று என்றால், வெறுமனே கையெழுத்து இட்ட காகிதத்தைக் காட்டும் சடங்கு அல்ல. விளையாட்டு மைதானச் சான்று என்றால், உண்மையாகவே மைதானம் இருக்க வேண்டும். ஆனால், யதார்த்தம் என்ன? கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், அரசுத் தரப்பில் கூறப்பட்ட தகவல் இது... 'நகரமைப்புத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அதன்படி தோராயமாகக் கணக்கிட்டதில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,906 பொறியியல், மருத்துவ, துணை மருத்துவ, கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் வெறும் 45 கல்லூரிகள் மட்டுமே கட்டடங்கள் கட்ட நகரமைப்புத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளன. இதுபோக, 17 ஆயிரம் பள்ளிகள் கட்டட அனுமதி பெறவில்லை’ என்கிறது அந்தத் தகவல். ஒன்று அல்ல, இரண்டு அல்ல... '17 ஆயிரம் பள்ளிகள், கட்டட அனுமதி பெறவில்லை’ என்று அரசே சொல்கிறது. இதுதான் நம் ஊரில் பள்ளிக்கூடம் நடத்தும் லட்சணம். கட்டட அனுமதி என்பது என்ன? பிஞ்சுப் பிள்ளைகள் படிக்கும் இடம் வசதியானதாக, காற்றோட்டமானதாக, ஆபத்து என்றால் உடனே வெளியேறும் வசதி உடையதாக... எனப் பல விஷயங்கள் அதில் இருக்கின்றன. கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் அறிக்கை, பல பரிந்துரைகளை வழங்கியது. மூன்றாம் வகுப்பு வரையிலும் கண்டிப்பாக தரை தளத்தில்தான் இருக்க வேண்டும். மாடியில் இருக்கக் கூடாது. மாடிப் படிக்கட்டுகள் 16-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு கட்டடத்தில் அதிகபட்சம் இரண்டு தளங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு வகுப்பறைக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும். தூய்மையான குடிநீர், போதுமான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளியின் நுழைவாயில் நெடுஞ்சாலையில் இருக்கக் கூடாது. குளம், காடுகளுக்கு அருகில் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது. பள்ளிக் கட்டடத்தைச் சுற்றி சுவர் இருக்க வேண்டும்... எனப் பல பரிந்துரைகள். இவற்றை, பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிப்பதே இல்லை என்பது வெளிப்படை. பல பள்ளிகள், முட்டுச் சந்துகளிலும், காற்றுப் புக வழி இல்லாத நெருக்கடியான இடங்களிலும்தான் செயல்படுகின்றன. இது ஒன்றும் ரகசியம் அல்ல, எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. எந்த அதிகாரி வந்து நடவடிக்கை எடுத்தார்? இத்தனைக்கும் அதிகாரிகளுக்குப் பஞ்சம் இல்லை. கல்வி ஆய்வாளர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர்... என்று ஏகப்பட்ட பேர். பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், இவர்களுக்கு வேறு என்ன வெட்டிமுறிக்கும் வேலை என்றுதான் தெரியவில்லை! - பாடம் படிப்போம்... பள்ளிகள் ஏலம்! மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் 'பி.எம்.சி பள்ளிகள்’ மகாராஷ்டிராவில் புகழ்பெற்றவை. மொத்தம் உள்ள 1,174 பி.எம்.சி பள்ளிகள், எட்டு பயிற்று மொழிகள், 11,500 ஆசிரியர்கள், நான்கு லட்சம் மாணவர்கள்... என இதன் பலம் மிகப் பெரியது. கல்விக்காக அதிகம் செலவிடும் மாநகராட்சியில், மும்பைக்கு எப்போதும் முதல் இடம். கடந்த ஆண்டு செலவிட்ட தொகை 2,342 கோடி ரூபாய். மும்பையின் கல்வி வரலாற்றில் இந்தப் பள்ளிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் பெரும் வீழ்ச்சி. இதைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த பி.எம்.சி பள்ளிகளையும் பி.பி.பி (Public-Private-Partnership) முறையில் தனியாருக்குக் கொடுக்க முடிவு எடுத்துள்ளது மும்பை மாநகராட்சி. பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், கடந்த ஜனவரியில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. இப்போது பள்ளிகளை, தனியாருக்கு ஒதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.பி.எல் அணி வீரர்களை ஏலம் விடுவதைப் போல பி.எம்.சி பள்ளிகள் ஏலம் விடப்படும். தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்று பள்ளிகளைப் பெறலாம். ''மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது, அதனால் தனியாரிடம் கொடுக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே பி.எம்.சி பள்ளிகளை, பி.பி.பி முறையில் நடத்துவது குறித்து பல என்.ஜி.ஓ-க்கள் பேசி வருகின்றன. அதுமட்டுமல்ல, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த இரு ஆண்டுகளாக பி.எம்.சி பள்ளிகளுக்குச் செலவிடப்படும் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தனியாருக்குத் தரப்போவதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு, மக்கள் பணத்தில் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்துள்ளனர். இது மோசடியானது'' என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் சடகோபால்.
கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7 - ஆனந்த விகடன் - 2014-07-09
''அரசாங்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பட்டப்பேர் வெச்சிருப்பாங்க. ஆனா, தனியார் பள்ளியில் எந்த ஆசிரியருக்காவது பட்டப்பேர் இருக்கா?’ - எழுத்தாளர் இமையம், அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிக் கேட்டார். உண்மைதான்! எந்தத் தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பட்டப்பெயர் பெரும்பாலும் இல்லை. ஏனெனில், ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைத்து, குறுகுறுப்புடன் பேசி மகிழும் அளவுக்கு மாணவனின் மனதில் குதூகலம் இல்லை. தனியார் பள்ளி மாணவர்களின் மனம் முழுக்க பாடம், படிப்பு, டியூஷன், தேர்வு, நுழைவுத்தேர்வு, கட்-ஆஃப் மதிப்பெண்... இவைதான் நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு நிறைய பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்ததன் மூலம் புகழ்பெற்ற தர்மபுரி தனியார் பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவி, கடந்த வாரம் பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயற்சித்துள்ளாள். அந்த அளவுக்கு மன அழுத்தம். காலை 6 மணிக்கு பள்ளிப் பேருந்தில் ஏறி அமர்ந்து, பகல் எல்லாம் பள்ளியில் படித்து, மாலையில் ஒவ்வொரு பாடமாக டியூஷன் சென்று, பிறகு வீட்டுப்பாடங்கள் முடித்து, இரவின் இருளில் மயங்கிச் சரிந்து, அடுத்த நாள் அதிகாலையில் மறுபடியும் எழுந்து பள்ளிக்கு ஓடும் ஒரு மாணவனுக்கு... அந்த ஆசிரியரின் உண்மையான பெயராவது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்புறம் எங்கிருந்து அவன் பட்டப்பெயர் வைப்பது? உண்மையில், பட்டப்பெயர் வைப்பது என்பது வெறுப்பு அல்ல; அது ஒரு வகையான அன்பு. வகுப்பறையில் தன் ஆசிரியரின் உடல் அசைவுகளைக் கவனித்து ஒரு மாணவன் அவருக்கு பெயர் வைக்கிறான் என்றால், அந்த வகுப்பறை அவ்வளவு நெகிழ்ச்சித்தன்மையுடன் இருக்கிறது என்று பொருள். இறுக்கிக் கட்டப்பட்ட முறுக்குக்கம்பியைப் போல் அல்லாமல், தாழப் பறக்கும் தாவரத்தின் கொடிபோல ஆசிரியர் - மாணவர் உறவு இருந்தால்தான் பட்டப்பெயர் எல்லாம் சாத்தியம். நமது முந்தைய தலைமுறை, இந்த மகிழ்ச்சியின் முழுமையை அனுபவித்தது. அவர்களிடம் கேட்டால், தங்கள் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அவர்கள் வைத்த பட்டப்பெயர்களை நினைவுகூர்வார்கள். ஆனால், இன்றைய தனியார் பள்ளியில் மாணவர்களும் பாவம்; ஆசிரியர்களும் பாவம். மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரு தொழிற்சாலை பணிக்கு ஷிஃப்ட்டில் வருவதைப் போலத்தான் வருகின்றனர். பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு எழுதி அரசு வேலைக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். இதனால் ஒரே ஆண்டில் ஒரு பாடத்துக்கு இரண்டு, மூன்று ஆசிரியர்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எந்தவித பிணைப்பும் அற்றதாக, ஒரு பேருந்து பயணத்தில் நடத்துநருக்கும் பயணிகளுக்குமான உறவைப்போல மாறிவிட்டது. நிறுத்தம் வந்ததும் இறங்கிச் செல்ல வேண்டியதுதான். தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினால், அவர்களின் உலகத்தில் இத்தகைய மென்மையான உணர்வுகளுக்கு சற்றும் இடம் இல்லை என்பது புரிந்தது. அந்தப் பையனின் பெயர் அரவிந்த் என்று வைத்துகொள்ளுங்கள். விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலிக்குச் சென்று 9-ம் வகுப்பு படிக்கிறான். தினமும் காலை 6.30-க்கு பள்ளிப் பேருந்து வந்துவிடும். அதற்கு முன்பாக 5.30-க்கு எழுந்து குளித்து, சாப்பிட்டு, தயாராக இருக்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்தே இப்படித்தான் என்பதால், இந்த அதிகாலை வாழ்க்கைக்கு அவன் பழகிவிட்டான். ''காலையில 6 மணிக்கு எப்படிச் சாப்பிட முடியும்?'' என்றால், ''பழகிடுச்சு'' என்கிறான் உணர்ச்சி இல்லாமல். இத்தகைய மாணவர்கள், வீட்டில் இரண்டு இட்லி, பள்ளிக்குச் சென்று பிரேயருக்கு முன்பாக இரண்டு இட்லி என்று காலை உணவை இரு தவணைகளாகச் சாப்பிடுகின்றனர். பல வீடுகளில், தூக்கத்தில் இருந்து எழும்பாத குழந்தைகளை அடித்து எழுப்பி அல்லது அப்படியே தூக்கிச் சென்று தண்ணீரில் போட்டு... துயில் எழுப்புகின்றனர். 'இன்னைக்கு ஸ்கூல் வேண்டாம்’ என்று எழ மறுத்தால், சுளீர் அடியும் உண்டு. பெற்றோர்களைப் பொறுத்தவரை 'வேன் வந்திடும், ஆட்டோ வந்திடும்’ என்ற கவலை, ஓர் அபாய அலாரம்போல அவர்களின் மண்டை முழுவதும் டிக்டிக் என ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஒருவேளை வேன் சென்றுவிட்டால், இவர்கள்தான் பள்ளியில் கொண்டுவிட வேண்டியிருக்கும். அது அன்றைய நாளின் மொத்த நிகழ்ச்சிநிரலையும் குலைத்துவிடும். இதனால் தூங்கும் பிள்ளைகளை அடித்து, எழுப்பி, குளிப்பாட்டி சாப்பிடவைக்கின்றனர். பிள்ளையை அடிப்பதை முன்னிட்டு பல வீடுகளில் கணவனுக்கும் மனைவிக்கும் தினந்தோறும் சண்டை வருகிறது. அடித்து எழுப்பினால்தான் பையன் எழுவான் என்பது அம்மாவின் கணக்கு. அப்பாவோ, 'பச்சப்புள்ளையை அடிச்சா அதுக்கு என்ன தெரியும்?’ என்கிறார். அப்படிச் சொல்லிவிட்டு கால் ஆட்டிக்கொண்டு அவர் காபி குடிப்பார். சமையலும் செய்துகொண்டு, பிள்ளையையும் தயார்செய்யும் அம்மாக்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? உண்மையில் அவர்களின் கோபம், கொஞ்சம்கூட வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளாத கணவர்களின் மீதுதான். கணவனை அடிக்க முடியாத இயலாமையை, அவர்கள் குழந்தை மீது காட்டுகின்றனர். இப்படி குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு வீட்டின் காலை நேரப் பொழுது பரபரப்பானதாக, பதற்றம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. இந்தக் களேபரத்தில் அந்தக் குழந்தை எப்படிச் சாப்பிடும்? பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முதலில் ஒரு டம்ளர் நிறைய ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் அல்லது பால். வாயைத் துடைத்த உடனேயே டிபனைத் திணிக்கின்றனர். பார்க்கப் பாவமாக இருக்கிறது. உங்களால் ஒரு டம்ளர் நிறைய காபி குடித்துவிட்டு உடனே சாப்பிட முடியுமா? குழந்தையால் மட்டும் எப்படி முடியும்? அதன் வயிறு என்ன இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கா... முடிந்தவரைக்கும் நிரப்பிக்கொள்ள? தங்கள் கண் எதிரே பிள்ளை சாப்பிட்டால், பெற்றோர்களுக்கு நிம்மதி. குழந்தைகளுக்கோ, அது பெரும் அவதி. இதனால் குழந்தைகள், அந்தக் காலை நேரத்தில் உடனே சமைக்க முடியாத ஓர் உணவின் பெயரைச் சொல்லி 'அதுதான் வேணும்’ என்று அடம்பிடிக்கின்றனர். 'நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கிறானே’ என்று அடுத்த நாள் செய்தால், அவன் பூரி கேட்பான். மொத்தத்தில் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து, பள்ளிக்கு அனுப்புவது என்பது குடும்பத்தின் நிம்மதியைக் காவு வாங்கிவிடுகிறது. இளம் வயதில் இருந்து இத்தனை டார்ச்சர் செய்வதால், குழந்தைகளுக்குச் சாப்பிடவே பிடிப்பது இல்லை. எத்தனை ருசியானதாக, புதிய வகை உணவாக இருந்தாலும் நாலு வாய் சாப்பிட்டுவிட்டு வைத்துவிடுகின்றனர். உடனே பெற்றோர்கள் பதற்றம் அடைந்து பிள்ளைக்குப் பிடித்ததாகச் செய்துகொடுக்க வேண்டும் என்று ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களுக்குத் தாவுகிறார்கள். அது அவர்களின் உடம்பை மேலும் சிக்கலுக்குள் தள்ளுகிறது. இதில் இன்னொரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. பெற்றோர்கள் வேண்டுமானால் 'ஸ்கூல் வேன் வந்துவிடும்’ என்ற பதற்றத்தில் பிள்ளைகளுக்கு உணவைத் திணிக்கலாம். ஆனால், குழந்தை உடலின் செரிமான உறுப்புகளுக்கு இவை எதுவும் தெரியாது. அவை இந்தத் தாறுமாறான உணவுமுறையை நினைத்து அஞ்சி நடுங்குகின்றன. ஏராளமான பள்ளி மாணவர்கள், மலச் சிக்கலால் கடும் அவதிப்படுகின்றனர். பலர் வீட்டில் கழிப்பறை செல்லாமலேயே கிளம்பி வந்துவிடுகின்றனர். பள்ளிகளில் போதுமான வசதியும் இருப்பது இல்லை. வசதி இருந்தாலுமே வகுப்பறையில் எழுந்து நின்று, 'டீச்சர் பாத்ரூம்’ என்று கை தூக்குவதில் மாணவர்களுக்கு ஏற்படும் மனத்தயக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி, தொடர்ச்சியாகச் செய்தால் அவர்கள் வகுப்பறையில் கேலி செய்யப்படுவார்கள். மாணவிகளின் நிலை இன்னும் பரிதாபம். இதனால் தண்ணீர் குடிப்பதையே அவர்கள் அடியோடு குறைத்துக்கொள்கின்றனர். 'தண்ணீர் குடித்தால்தானே சிறுநீர் வருகிறது?’ என்று தவிர்க்கின்றனர். அது மேலும் கடுமையான உடல் சிக்கல்களுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த மொத்த செயல்பாடுகளும் உணவு என்ற பசி தீர்க்கும் பண்டத்தின் மீது, மாணவர்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிக்கிறது. பல மாணவர்கள், பள்ளிக்குக் கொண்டுசெல்லும் உணவைக் குப்பையில் கொட்டுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலையோ வேறாக இருக்கிறது. அங்கு பிரேயர்களில் மாணவர்கள்... குறிப்பாக மாணவிகள் அடிக்கடி மயக்கம் அடித்து விழுவதைக் காணலாம். காரணம், பசி. வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இருக்காது. அப்பா-அம்மா அதிகாலையில் எழுந்து கூலி வேலைக்குச் சென்றுவிடுவார்கள். படிக்கும் பெண் பிள்ளைகள், எழுந்து வீட்டுவேலைகள் செய்து, தானே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும். தம்பி, தங்கச்சிகள் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து சமைத்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிளம்பி ஓடி வர வேண்டும். பள்ளி, பெரும்பாலும் அருகில் இருக்காது. சைக்கிள் மிதித்தோ, பேருந்து ஏறியோ போக வேண்டியிருக்கும். பஸ் பாஸ் கொடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் வரும் என்பதால் அவசர, அவசரமாக ஓடி வந்தாக வேண்டும். இதனால் அவர்கள் பசித்த வயிற்றுடன் படிக்க வருகின்றனர். அரசின் இலவச மதிய உணவுத் திட்டம் அவர்களின் ஒரு வேளை பசியைத் தணிக்கிறது. அரசுப் பள்ளியின் பிரேயரில் ஒரு மாணவி மயங்கி விழுந்தால், உடனடியாக உணவு கொண்டுவந்துள்ள மற்றவர்கள் அதைப் பகிர்ந்து அளிக்கின்றனர். ஆனால், தன்னால் சாப்பிட முடியாத உணவை குப்பையில் கொட்டுகிறான் ஒரு தனியார் பள்ளி மாணவன். அங்கு பகிர்ந்து உண்ணும் பண்பு அறவே இல்லாமல் போகிறது. அப்படிப் பகிர அவசியம் இல்லாத சூழலில்தான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புப் பாடங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. காலை 7 மணிக்கு பள்ளியின் வேன் வரும். மாணவர்கள் காலை உணவுடன் ஏறிக்கொள்கின்றனர். மறுபடியும் 11 மணிபோல பள்ளி வேன் வருகிறது. ஒவ்வொரு மாணவரின் வீட்டில் இருந்தும் மதிய உணவைச் சேகரித்துக்கொண்டு செல்கிறது. ஒரு வதைமுகாமில் அடைத்து உணவுக் கொடுப்பதைப்போல கொடுக்கிறார்கள். இவர்களுக்கு சக மனிதர்களின் மீது எப்படி அன்பு பிறக்கும்? - பாடம் படிப்போம்...
பயமுறுத்தும் பிரேயர்! கடலூர் தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சொன்னது இது: ''ஸ்கூல்ல இருக்கிறதுலயே பிரேயர்தான் ரொம்ப டார்ச்சர். எப்படியும் அரை மணி நேரம் நடக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள், செய்தி, பிறந்த நாள் வாழ்த்து, பொது அறிவு செய்திகள்னு... வரிசையா சொல்வாங்க. டீச்சர்ஸ்லாம் நிழல்ல நின்னுக்குவாங்க. ஆனா நாங்க, அடிக்கிற வெயில்ல திறந்தவெளியில் நிக்கணும். வியர்த்துக் கொட்டி சட்டை நனைஞ்சிடும். தினசரி யாராவது ரெண்டு பேர் மயக்கம் போட்டு விழுவாங்க. இவங்க அப்பதான் ஏதாவது சீரியஸா கருத்து சொல்லிக்கிட்டு இருப்பாங்க. எங்களுக்கு அவங்க சொல்றது ஒண்ணும் புரியாது. என்னைக்காச்சும் மழை வந்து பிரேயர் இல்லைனு சொன்னா, செம ஜாலியா இருக்கும்'' என்று சொல்லும்போது, ஒரு மழை நாளுக்கான ஏக்கத்தை அந்த மாணவனின் கண்களில் கண்டேன். வெவ்வேறு ஊர்களின் தனியார் பள்ளிகளில் பயிலும் வேறு பல மாணவர்களும், பிரேயரின் மீதான அச்சத்தை உறுதிப்படுத்துகின்றனர். வெயில் தீய்க்கும் கோடையில், தகிக்கும் முன்மதிய வெயிலில் நிற்பது எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்துகொள்ள, குழந்தை மனம்தான் வேண்டும் என்பது இல்லை. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளிகள் பரவாயில்லை. அங்கு இப்போது தினசரி பிரேயர் கிடையாது; வாரம் ஒருமுறைதான்
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 8 - ஆனந்த விகடன் - 2014-07-23சி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள். இப்போது அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின் வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது. முன்பு அரசுப் பள்ளிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கும் வெவ்வேறு பாடத் திட்டங்கள் இருந்தன. 2011-ல் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி, மேற்கண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வகை பாடத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது தனியார் பள்ளியில் பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படும் அதே பாடம், அரசுப் பள்ளியில் இலவசமாக நடத்தப்படுகிறது. ஒரே தரமுள்ள பொருளை ஒருவர் அதிக விலை வைத்தும் இன்னொருவர் இலவசமாகவும் விற்றால், நீங்கள் யாரிடம் வாங்குவீர்கள்? இலவசப் பொருளை வாங்குவதுதான் பொதுவாக நடக்கும். ஆனால், சமச்சீர் கல்வி விஷயத்தில் இது தலைகீழ். எல்லோரும் மெட்ரிக் பள்ளியைவிட அதிக செலவு பிடிக்கக்கூடிய சி.பி.எஸ்.சி-யின் பக்கம் ஓடினார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? அரசுப் பள்ளிகளின் மீது உள்ள ஒவ்வாமையினால் இது வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் சி.பி.எஸ்.இ மோகம் தொடங்கிவிட்டதும் ஒரு காரணம். இந்தச் சூழலைத் துல்லியமாகக் கணித்த தனியார் மெட்ரிக் பள்ளிகள், இதற்கு மேலும் மெட்ரிக் பள்ளிகளாகவே நீடித்தால் மதிப்பிழந்து போவோம் என்பதைப் புரிந்துகொண்டன. ஆகவே, சமச்சீர் கல்வி வரம்புக்குள் வராத சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாறத் தொடங்கின. சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்டதில் இருந்து இதுவரை, தமிழ்நாட்டில் 1,200-க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதற்கு தடையில்லா சான்று கேட்டு மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளன. அதில் 40 சதவிகிதப் பள்ளிகளுக்கு மாநில அரசு சான்று வழங்கப்பட்டுவிட்டது. அவர்கள் இப்போது மத்திய கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளனர். மெட்ரிக் பள்ளியாக இருந்தால், மாநில அரசின் கட்டண நிர்ணய கமிட்டியின் வரம்புக்குள் வந்துவிடும். பெரும்பாலான பள்ளிகள் அந்தக் கட்டணத்தைப் பின்பற்றுவது இல்லை என்றபோதிலும், சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்றால், வரம்புக்குக் கட்டுப்படுவதுபோல போலியாக நடிக்கவேண்டிய சுமைகூட கிடையாது. மத்திய கல்வி வாரியக் கட்டுப்பாடுகளை மட்டும் மதித்தால் போதும். இதனால் 'அதிகக் கட்டணம் கேட்கிறார்கள்’ என்று யாராவது கொடி பிடித்து முழக்கம் எழுப்புவதும் முடியாது. கல்வி உரிமை சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள் ஒதுக்க வேண்டும். இது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றாலும், அதைக் கண்காணிக்க முறையான ஓர் அமைப்பு இல்லை. இப்படி பல சௌகரியங்கள் இருப்பதால், சி.பி.எஸ்.இ பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில் புதுச்சேரி அரசுகூட, அங்குள்ள அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ முறையை அமல்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறது. உண்மையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பில் கடும் குழப்பங்கள் நிலவுகின்றன. 6-ம் வகுப்பில் இருந்துதான் சி.பி.எஸ்.இ கல்விமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அங்கீகாரம் வழங்கும்போது அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில், எந்த முறையில் அந்தப் பள்ளி நடைபெற வேண்டும் என்பதற்கு சி.பி.எஸ்.இ-ல் முறையான வரையறை இல்லை. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில் இருந்தே சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்று பள்ளி நடத்துவதைப் போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கண்காணித்து, கட்டுப்படுத்த ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஒரே ஓர் அலுவலகம்தான் செயல்படுகிறது என்பதால், இந்தப் பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த மோகம் ஒரு பக்கம் இருக்க... ஐ.ஜி.சி.எஸ்.இ (IGCSE - International General Certificate of Secondary Education), ஐ.பி (IB - International Baccalaureate) போன்ற சர்வதேசக் கல்விமுறையைப் பின்பற்றும் பள்ளிகளும் நம் ஊரில் அதிகரித்து வருகின்றன. ஐ.ஜி.சி.எஸ்.இ என்பது, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கல்விமுறை. ஐ.பி - சுவிட்சர்லாந்து நாட்டின் கல்விமுறை. இதில் ஐ.ஜி.சி.எஸ்.இ முறை சற்று பிரபலம். இந்த முறைப்படி தமிழ்நாட்டில் 40-க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன. பிரமாண்டமான வளாகங்கள், மலைக்கவைக்கும் கட்டணம் என்று மற்ற தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் சளைக்காத இந்தப் பள்ளிகளின் பாடத் திட்டம்தான் அச்சுறுத்துகிறது. பொதுவாக ஸ்டேட் போர்டு அல்லது சி.பி.எஸ்.இ கல்வி முறையில், வரலாறு என்றால் இந்திய வரலாறு. அதை முதன்மையாகக்கொண்டுதான் மற்ற உலக வரலாறு விரியும். ஆனால், இந்தப் பள்ளிகளில் வரலாறு என்றால், அது ஐரோப்பாவின் வரலாறு. அதுதான் முதன்மை இடம் வகிக்கும். இங்கிலாந்தின் கோணத்தில் இருந்து இந்தியாவைப் பற்றியும் சில பகுதிகள் சொல்லப்பட்டிருக்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ரத்தம் தோய்ந்த வரலாறு கிடையாது. பகத் சிங்கும், திப்புசுல்தானும், கட்டபொம்மனும் யார் என்றே தெரியாது. இந்தப் பள்ளிகளில் புவியியல் என்றால், அது ஐரோப்பாவின் புவியியல்தான். அங்குள்ள நிலவளம், சுற்றுச்சூழல் பற்றிதான் படிக்கிறார்கள்; இந்தியாவைப் பற்றி அல்ல. இந்தப் பள்ளியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்துக்கோ செல்ல வேண்டியிருந்தால் IELTS (International English Language Testing System), TOEFL (Test of English as a Foreign Language) நுழைவுத்தேர்வுகள் எழுதத் தேவை இல்லையாம். இதை ஒரு சிறப்புத் தகுதியாகச் சொல்கின்றனர். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு, இந்தத் தொலைநோக்குத் திட்டம் பிடித்திருப்பதில் வியப்பு இல்லை. வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்தகைய சர்வதேசப் பள்ளிகள் படிப்படியாகக் கீழே இறங்கி பணக்காரர்களுக்கானதாக மாறின. இப்போது இவை கல்வி வர்த்தகத்தின் அங்கமாகிவிட்டன! - பாடம் படிப்போம்...
சைட் வாங்கினால் ஸீட் ஃப்ரீ! வேலூரில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் விளம்பரம், நகைக்கடை, ரியல் எஸ்டேட் விளம்பரம் போலவே இருக்கிறது. ஒரு மாணவனைத் தேர்வுகளில் சென்டம் எடுக்கவைக்கும் ஆசிரியருக்கு இரண்டு கிராம் தங்கம் தருகிறார்களாம். அப்படி நிறையப் பேரை சென்டம் எடுக்கவைத்த ஓர் ஆசிரியருக்கு, கார் வாங்கித் தந்திருக்கிறார்களாம். இவற்றை விளம்பரப்படுத்தி பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கச் சொல்லி அழைக்கின்றனர். இவர்களிடம் படித்தால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? கிழக்கு தாம்பரத்தில் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்று, ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்கிறது. ஆலப்பாக்கத்தில் இவர்களுக்கு ஒரு லே-அவுட் இருக்கிறது. பள்ளியில் அட்மிஷன் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு 'அங்கு இடம் வாங்கினால், இங்கு ஸீட் ஃபிரீ’ என்று 'காம்போ ஆஃபர்’ தருகின்றனர். பெற்றோர்களுக்கு இந்த டீலிங் பிடித்துவிடுவதால், உடனே வேலை முடிந்துவிடுகிறது. இப்படி மாநிலம் முழுக்க கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில் கல்விக் கொள்ளைகள் நடக்கின்றன! தங்கமே தங்கம்! ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல, பெற்றோர்களின் மோகத்தைப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் அடகுக்கடைக்காரர்கள். புகழ்பெற்ற நகை அடகு நிறுவனங்கள், 'கல்விக் கடன் மேளா’ நடத்துகின்றன. 'உங்கள் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லையா? கவலையைவிடுங்கள். உங்களிடம் உள்ள தங்க நகைகளை எடுத்து வாருங்கள். நாங்கள் கடன் தருகிறோம்’ என்று அழைக்கிறார்கள். ஏதோ நம் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காகவே வந்தவர்கள்போல பாசாங்கு செய்யும் இவர்கள், எரியும் வீட்டில் பிடுங்கிய வரையில் லாபம் பார்க்கின்றனர். மதுரையில் உள்ள சில தனியார் பள்ளிகளின் வாசல்களில், இந்த அடகுக்கடையின் ஊழியர்கள் துண்டு நோட்டீஸ் விநியோகிக்கின்றனர். தனியார் கல்வி மோகத்தால் லாபம் பார்ப்பது கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்ல, இவர்களும்தான்!
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9 - ஆனந்த விகடன் - 2014-07-30கல்வி ஏன் சமமாகவும் சீராகவும் இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் அவசியம் புரியும். ஏனெனில், வரலாற்றில் எப்போதுமே கல்வி சமமாகவும் சீராகவும் இருந்தது இல்லை. அது உயர் வர்க்கத்தைச் சேர்ந்தோருக்கும், சாதி அடுக்கின் மேலே இருப்போருக்கும் மட்டுமே சொந்தமானதாக இருந்தது. சாதாரண மக்களுக்கு, கல்வி எப்போதும் விலக்கப்பட்ட கனிதான். குருகுலக் கல்வியும் திண்ணைக் கல்வியும், குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடையாது. அவை சாதி அடுக்கில் மேலே உள்ளோருக்கானவை. மெக்காலே கல்வியின் வருகைதான் இந்தப் பாகுபாடுகளைக் கலைத்தது. ஆகவே, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சமச்சீர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி! சமச்சீர் கல்விமுறையின்படி கல்விபெற்ற மூன்று 'செட்’ மாணவர்கள், 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை எழுதிவிட்டனர். தேர்வு முடிவுகளின்படி, முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தைவிட இவர்கள் அதிகம் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தேர்வு முடிவு என்ற வெளிப்படையாகத் தெரியும் அடையாளத்தைத் தாண்டி சமச்சீர் கல்வி, வகுப்பறையின் தன்மையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. நமது பாரம்பரிய வகுப்பறையில் ஆசிரியர் சொல்வார்; மாணவர்கள் கேட்டுக்கொள்வார்கள். அது ஒருவழிப்பாதை. அங்கு உரையாடலுக்கு இடம் இல்லை. இந்தப் புதிய வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து இயங்கியாக வேண்டும். மாணவர்களும் வெறுமனே சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக இருக்க முடியாது. புரிந்துகொண்டால்தான் படிக்க முடியும். இது, உறைந்துகிடந்த மாணவனின் சுய அறிவாற்றலைத் தூண்டிவிடுகிறது. பாடப் புத்தகத்துக்கு அப்பாற்பட்டு சொந்தமாகச் சிந்திக்கவைக்கிறது. புத்தகத்தில் இருக்கும் சொற்களை அப்படியே மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்த சொற்களில் தேர்வை எழுதவைக்கிறது. இத்தகைய சுய சிந்தனையை வளர்ப்பதுதான் கல்வியின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் சமச்சீர் கல்வி என்பது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சல். ஆனால், இந்தக் கருத்துடன் பலர் உடன்பட மாட்டார்கள். ஏனெனில், பொதுவெளியில் சமச்சீர் கல்வி குறித்து மிகவும் கீழ்மையான கருத்துகள் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது, 'சமச்சீர் கல்வியில் தரம் இல்லை’ என்ற வாதம். 'தரம்’ என்பதற்கு என்ன அளவுகோல்? அதை நிர்ணயிப்பது யார்? சமச்சீர் கல்வியை எதனுடன் ஒப்பிட்டு இது தரம் குறைவானது என்ற முடிவுக்கு வருகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம், திடீரென ஒரு நாளில் உருவாக்கப்படவில்லை. இந்திய அளவில் பள்ளிக் கல்விக்கான பாட நூல்களை வெளியிடும் நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., வகுப்பு வாரியான பாடத் திட்டத்தை (curriculum) உருவாக்குகிறது. அப்படி உருவாக்கப்பட்ட தேசியப் பாடத் திட்ட வரையறை 2005-ஐ (National curriculum framework 2005) அடிப்படையாகக்கொண்டுதான் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. சமச்சீர் கல்விகுறித்த வழக்கு 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாட நூல்களின் தரம்குறித்து, என்.சி.இ.ஆர்.டி உறுப்பினர்களின் உதவியுடன் பரிசீலித்து, பாட நூல்களை ஆய்வுசெய்து சமச்சீர் கல்வி நூல்கள் மிகவும் தரமுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சான்று அளிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் முன்பாக செய்யப்பட்ட கள ஆய்வில், மெட்ரிக் பள்ளி மற்றும் அரசுப் பள்ளியின் பாடப் புத்தகங்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் படிக்கும் பாடத்தை மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பில் படித்தார்கள். அதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு வகுப்பு முன்னே படித்தனர். சமச்சீர் கல்விமுறை, இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. வகுக்கப்பட்ட புதிய பாடத் திட்டமானது, அந்தந்த வயதின் கற்கும் திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. ஒரு மாணவனோ / மாணவியோ, எந்தக் கல்வியை எந்த வயதில் பெற வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ணயம் இருக்கிறது. பாடத் திட்டம் அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதுதான் அளவுகோல். இதில் தவறு நிகழ்ந்தால், '7-ம் வகுப்புப் பையனுக்கு 5-ம் வகுப்புப் பாடத்தை நடத்துகிறார்கள்’ என்று சொன்னால், தரத்தில் சிக்கல் என்று சொல்லலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தரம் குறித்த அவதூறுகள் கிளப்பப்படுகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னையின் முன்னணி பள்ளியும், தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன. மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் என 344 பேர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம். அவர்களில் 98 சதவிகிதம் பேர் சமச்சீர் கல்வி தரமற்றது என்றும், சி.பி.எஸ்.இ-தான் சிறந்தது என்றும் கருத்துச் சொன்னார்களாம். வெறும் 344 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு அதை ஒட்டுமொத்த சமச்சீர் கல்விகுறித்த பொதுமக்களின் எண்ணம்போல ஊடகங்களில் முன்வைக்கின்றனர். இவர்கள், சமச்சீர் கல்விகுறித்து மக்களிடம் பரப்பப்பட்டுள்ள அவதூறுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து ஒருங்கிணைக்கின்றனர். இந்தக் கருத்துக் கணிப்புக்குப் பின்னால் சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் நோக்கம் இருப்பதாக சந்தேகப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன. ஏன் இவர்கள் எல்லோரும் சமச்சீர் கல்வியை வெறுக்கிறார்கள்? கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் கல்விக் கொள்ளைக்கு இது கடிவாளம் போடுகிறது, அதனால் எதிர்க்கின்றனர். மக்களைப் பொறுத்தவரை ஒரு பிரிவினர், 'சமம்’ என்ற சொல்லையே வெறுக்கிறார்கள். 'பணம் கொடுத்துப் படிக்கும் என் பிள்ளையும், ஓசியில் படிக்கும் உன் பிள்ளையும் எப்படிச் சம கல்வியைப் பெறலாம்?’ என்பது அவர்களின் ஆழ்மன உதறல். ஆகவே, வேறுபட்ட கல்விமுறைகள் வேண்டும் என்கின்றனர். 'ஒரு வாடிக்கையாளருக்குத் தேர்வுசெய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைந்தால் 10 ரூபாய் உள்ளவரும், 50 ரூபாய் உள்ளவரும், 1,000 ரூபாய் உள்ளவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப பொருள் வாங்க முடிய வேண்டும். அதுதான் சந்தை விதி’ என்பது அவர்களின் வாதம். 'கல்வி என்பது சந்தையில் விற்கப்படும் சரக்கு என்றாகிவிட்ட பின்னர், சந்தை விதியையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்பது அவர்களின் தார்மீக கோபத்துக்கான அடிப்படை. இன்னொரு பக்கம் 'சமச்சீர் கல்வி மிகவும் எளிமையாக இருக்கிறது. மாணவர்களை மேலும் சோம்பேறி ஆக்குகிறது’ என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. பாடப் புத்தகம் கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அதிகமான புத்தகங்களைப் படித்தால்தான் அதிக அறிவு வரும் என்று நம்பிப் பழகிவிட்டதுகூட இந்தக் கருத்துக்குப் பின்னால் இருக்கலாம். ஆனால், தனியார் பள்ளிகள் இந்தக் கருத்தைச் சொல்வதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள், தாங்கள் வாங்கும் தாறுமாறான கட்டணத்தை நியாயப்படுத்த, அதிகமாகப் பாடம் நடத்தவேண்டியுள்ளது அல்லது அப்படி ஒரு தோற் றத்தையேனும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. சமச்சீர் கல்வி, 'வாங்கும் காசுக்கு ஏற்ப கூவ முடியாததாக’ இருப்பதுதான் இவர்களுக்குப் பிரச்னை. கடைசியாக, 'சமச்சீர் கல்வியில் படித்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியாது’ என்கிறார்கள். இது பெற்றோர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் வாதம். 'இதுல படிச்சா உன் பிள்ளை ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான்’ என்ற அச்சுறுத்தல். இது முழுக்க, முழுக்க பொய்ப் பிரசாரம் என்பதுடன் எந்த ஆதாரமும் அற்றது. சமச்சீர் கல்வி வந்து மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் இந்த முடிவுக்கு எப்படி வர முடியும்? எனில், மற்ற கல்விமுறைகளில் படித்த எல்லோரும் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிடுகிறார்களா? மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்வதுதான் பள்ளிக்கூடத்தின் வேலையா? எனில், அது பள்ளிக்கூடமா? குதிரை லாயமா? உண்மையில், சமச்சீர் கல்வியின் பிரச்னை என்பது, கல்வி முறையில் இல்லை; செயல்படுத்துவதில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் உள் கட்டுமான வசதிகள் குறைவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவு என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நமது ஆசிரியர்களின் அக்கறையின்மைதான் அங்கு முக்கியமான பிரச்னை. சமச்சீர் கல்வி வகுப்பறையில் மாணவனின் தனித்திறன் வெளிப்படும் தருணத்தை ஓர் ஆசிரியர் கூர்ந்து கண்டறிய வேண்டும். புதிய புதிய முறைகளில் கற்பிக்க வேண்டும். கற்றல் என்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் ரசவாதம் அறிந்திருக்க வேண்டும். அதற்கு, முதலில் அவர்கள் கற்க வேண்டும். தங்கள் துறைகளில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு அதில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவை எவற்றையும் செய்யாமல் மாணவர்களைக் குற்றம் சாட்டி ஒதுங்கிக்கொள்வது நொண்டிச்சாக்கு. - பாடம் படிப்போம்...
உண்மையான முன்னேற்றம் எது? 'இரண்டு கோடி லாபம் நிச்சயம்’ என்கிறது அண்மையில் பத்திரிகைகளில் வெளியான இந்த விளம்பரம். வெளிப்படையாகச் சொல்வதே இவ்வளவுப் பெரிய தொகையெனில், உண்மையான லாபம் எவ்வளவு என்று தெரியவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்காத, தன் ஆசிரியர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்காத, முறையாகக் கணக்கு- வழக்குக் காட்டாத, இந்த முறைகேடுகள் அனைத்தையும் அப்பட்டமாகச் செய்யும் இத்தகைய தனியார் பள்ளிகளில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் நீதி, நியாயம், நேர்மையுடன் வளர்வார்கள் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் பெரிய நகைமுரண். குற்றவாளிகளிடம் ஒப்படைத்தால்தான் குழந்தை முன்னேறும் என்று கருதுவது எப்படிச் சரியாகும்? நாம் வாழ்க்கையின் முன்னேற்றத்தைச் செங்குத்தானதாகக் கருதுகிறோம். அதில் கீழிருந்து மேலாக ஏறிச் செல்ல என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். பணம் சம்பாதிப்பதில் உள்ள வேறுபாடு இதை உண்மைபோல தோன்றவைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றம் என்பது செங்குத்தானது அல்ல; அது கிடைமட்டமானது. எல்லோரும் சமதளத்தில் ஒருவர் கையைப் பற்றிக்கொண்டு, இணைந்து முன்னேறுகிறோம். மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் இருந்து, கடவுள், கடவுள் துகளாக மாறிய நவீன காலம் வரை, இத்தகைய கூட்டு உழைப்புதான் நமக்கு முன்னேற்றத்தைப் பரிசளித்து உள்ளது. ஆகவே, முன்னேற்றம் என்ற சொல்லின் பொருளை கல்விக்குப் பொருத்தும்போது, நாம் ஒரு விரிந்த தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பெறும் கல்வியின் பயன், நம் அடுத்த தலைமுறையை நம்மைவிட அறிவில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டும். இதுவே முதன்மையானது. அந்த அறிவு, பரந்த மனப்பான்மைகொண்டவர்களாக, சுய மரியாதைமிக்கவர்களாக, கருணை உள்ளம் படைத்தோராக, சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாக, நேர்மையானவர்களாக நம் பிள்ளைகளை மாற்ற வேண்டும். இத்தகைய அற உணர்ச்சிமிக்க மனப்பாங்கு, தனியார் பள்ளிகளில் படிக்கும்போது வருகிறதா?
கற்க கசடற விற்க அதற்குத் தக! - ஆனந்த விகடன் - 2014-08-13தமிழகப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் தற்போது அமலில் உள்ள தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous Comprehensive Evaluation சி.சி.இ.), கல்வியாளர்களிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது. 2012-13ம் கல்வி ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் இந்த முறை, நமது பாரம்பர்ய வகுப்பறைச் சூழலை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, கற்கும் முறை, கற்பிக்கும் முறை என அனைத்தையும் மறுசீரமைத்து, புதிய பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. இதன்படி, மாணவர்கள் முழு ஆண்டு தேர்வு வரை மொத்தப் புத்தகத்தையும் படித்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. ஒவ்வொரு பாடப் பிரிவும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முப்பருவத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் அதற்கு உண்டான பகுதியை மட்டும் படித்தால் போதும். இது, மாணவர்களுக்கு பெரிய ஆசுவாசம். காலாண்டுக்குப் படித்து, அதையும் சேர்த்து அரையாண்டுக்குப் படித்து, எல்லாவற்றையும் சேர்த்து முழு ஆண்டுக்குப் படித்து... என்ற சுமை மிகுந்த பழைய முறையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை. பழைய முறையின்படி, வருடம் முழுவதும் நன்றாகப் படிக்கும் மாணவர் இறுதித் தேர்வு சமயத்தில் உடல்நிலை சரியில்லாமலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ சரியாக எழுத முடியாமல் போனால், ஆண்டு முழுவதும் நன்றாகப் படித்திருந்தும்கூட பயன் இல்லை. சி.சி.இ-யின்படி முப்பருவ முறையில் தேர்வுகள் நடப்பதால், மாணவரின் ஆண்டு முழுவதுக்குமான கற்கும் திறன் மதிப்பிடப்படுகிறது. தேர்வுகளில் மட்டுமா... மதிப்பெண் வழங்கும் முறையிலும் மாற்றம் வந்துள்ளது. இதன்படி மாணவர்கள் 60 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு எழுதுகின்றனர். மீதம் உள்ள 40 மதிப்பெண்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. வகுப்பறையில் மாணவர்களின் கவனிக்கும் திறன் எப்படி உள்ளது என்பதற்கு 20 மதிப்பெண்கள். இது முக்கியமானது. ஏனெனில், இதுவரையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ஏதோ ஓர் ஆசிரியர் கேள்வித்தாள் தயாரிப்பார். அதற்கு மாணவர்கள் பதில் எழுத வேண்டும். பாடம் நடத்துவது ஒருவர், கேள்வி கேட்பது இன்னொருவர் என்ற இந்த முறை வன்முறையானது. பாடம் நடத்தியவரே கேள்வி கேட்டால்தான், எந்த மாணவர் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளார், யாருக்குக் கற்றல் குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். சி.சி.இ அதற்கு வாய்ப்பு அளிக்கிறது. இந்த 20 மதிப்பெண்கள் அதற்குத்தான். மற்றொரு 20 மதிப்பெண், ஆசிரியர் தரும் பாடம் சார்ந்த செயல்பாடுகளை (activities) மாணவர் எப்படிச் செய்கிறார் என்பதற்கானது. பருவ முறை தேர்வுகள் பள்ளிகளில் வெற்றிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதற்கு சி.பி.எஸ்.இ பள்ளிகளே உதாரணம். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10-ம் வகுப்பில் இரு பருவத் தேர்வு முறை இப்போதும் அமலில் உள்ளது. சி.சி.இ முறை என்பது, ஆசிரியர்களிடம் கடின உழைப்பைக் கோருகிறது. பழைய முறையில் மொத்த வகுப்புக்கும் ஒரு பாடத்தை நடத்திவிட்டு ஆசிரியர் கிளம்பிவிடுவார். இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட வகையில் கூர்ந்து கவனித்தாக வேண்டும். பழைய முறையில் ஒரு கேள்விக்கு பாடப் புத்தகத்தில் என்ன விடை இருக்கிறதோ அதைத்தான் எழுத வேண்டும்; அதற்குத்தான் மதிப்பெண். அதைவிடக் கூடுதலாகத் தெரிந்திருந்தாலும் அதை எழுத முடியாது. ஒரு நெல் விவசாயி வீட்டு மாணவரிடம், நெல் பயிரிடும் முறைகுறித்து பாடத்தில் இருந்து கேள்வி கேட்பதைக் காட்டிலும் அவரது அனுபவத்தில் இருந்து விவரிக்கச் சொன்னால், மிகச் சரியாகச் சொல்வார். ஒரு கிராமத்து மாணவரிடம், 'பறவை முட்டை போடுமா, குட்டி போடுமா?’ என்று கேட்டால், புன்னகையுடன் தன் ஊர்ப் பறவைகள் குறித்து விவரிப்பார். புதிய சி.சி.இ முறை இந்தச் சுய சிந்தனை முறையை அனுமதிக்கிறது; ஊக்குவிக்கிறது; மதிப்பெண் வழங்குகிறது. உதாரணமாக, சி.சி.இ 6-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ரயில், பேருந்து இரண்டிலும் மக்கள் கூட்டம் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் அருகருகே தரப்பட்டுள்ளன. 'இதைப் பற்றிய உன் கருத்தை ஐந்து நிமிடங்கள் பேசுக’ என்பது கேள்வி. கூட்டம் நிரம்பிய ரயில்களையும் பேருந்துகளையும் தினசரி பார்க்கும்; அதில் பயணிக்கும் நகரத்து மாணவர், அந்தப் புகைப்படங்கள் குறித்து எண்ணற்ற கருத்துகளைச் சொல்ல முடியும். வாகனப் பற்றாக்குறை, மக்கள்தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், உயிர் ஆபத்து, போக்குவரத்து விதிகள்... என்ற பல விடைகளைத் தருவதற்கான சாத்தியங்களை அது உள்ளடக்கியுள்ளது. முக்கியமாக, இதற்கான விடைகளை மாணவர் எழுதத் தேவை இல்லை; வகுப்பில் பேசினாலே போதுமானது. அதற்கும் மதிப்பெண் உண்டு. நமது கல்வி முறை, எழுத்துடன் பிரிக்க முடியாத வகையில் காலங்காலமாக ஒட்டவைக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கான விடை தெரிந்து, அதைச் சொன்னால் மதிப்பெண் கிடையாது. எழுதிக் காட்ட வேண்டும். அப்போதுதான் மதிப்பெண். இந்த இறுக்கமான முறையைத் தளர்த்தி சொல்வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் தருகிறது சி.சி.இ. ஒரு மாணவர் வகுப்பறையில் பாடிக்கொண்டே இருக்கிறார் என்றால், 'படிக்க வந்த இடத்துல என்ன பாட்டு வேண்டியிருக்கு?’ என்று தட்டிவைப்பது பழைய முறை. இப்போது அந்த மாணவரின் பாடும் திறனை வளர்க்கவேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. முதல் பருவத்தில் அவரது பாடும் திறன் எப்படி இருந்தது, இறுதிப் பருவத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணித்து அந்த மாணவருக்கு என்று ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மாணவருக்கும் செய்ய வேண்டும். முன்பு தேர்வு விடைத்தாள்களை ஓர் ஆசிரியர் திருத்துகிறார் என்றால், எல்லா விடைத்தாள்களிலும் ஒரே பதில்தான் இருக்கும். அதாவது 'பூக்கும் வகைத் தாவரங்கள் எவை?’ என்றால், பதில் ஒன்றுதான். புதிய முறை அப்படி அல்ல. இதில் கேள்வியின் தன்மையும் மாறுகிறது; பதில்களும் மாறுகின்றன. ஒரு வகுப்பறையில் 40 பேர் இருக்கிறார்கள் என்றால், 40 விதமான விடைகள் கிடைக்கின்றன. சி.சி.இ முறை வந்த பிறகு பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், 'கல்வியின் தரம் குறைந்துவிட்டது. 7-ம் வகுப்பு மாணவருக்கு 'அ’னா, 'ஆ’வண்ணாகூடத் தெரியவில்லை’ என்று சிலர் விமர்சிக்கின்றனர். எங்கேனும் சில இடங்களில் அப்படி இருக்கலாம். ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் அது மாணவரின் தவறோ, சி.சி.இ முறையின் தவறோ அல்ல. நமது கல்வித் துறையின் நிர்வாகத் தவறாகவோ, ஆசிரியர்களின் 'அரசு ஊழியர் அசட்டை மனநிலை’யாகவோதான் இருக்கும். முந்தைய நமது கல்விமுறை, ஒரு மாணவருக்கு எதுவெல்லாம் தெரியாது என்பதைக் கண்டறிவதைத்தான் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. பழைய கேள்வித்தாள்களை நினைவுபடுத்திப் பார்த்தாலே இது புரியும். சி.சி.இ முறை, ஒரு மாணவருக்கு எதுவெல்லாம் தெரியும் என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நேர்மறையில் வழங்கப்படும் இதுதான், கல்வியின் உண்மையான நோக்கத்தைப் பூர்த்தி செய்கிறது! இன்றைய நிலையில் ஒரு மாணவர் எல்.கே.ஜி-யில் தொடங்கி +2 வரையிலும் 14 ஆண்டுகள் பள்ளிக்கூடம் செல்கிறார். ஆனால் +2-வில் நான்கு பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் அவரது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. அதாவது 14 ஆண்டு காலப் படிப்பை வெறும் நான்கு நாட்களை வைத்து முடிவுசெய்கிறோம். இதில் உள்ள அநீதியை உணரும் யாரும், சி.சி.இ முறையை வரவேற்கவே செய்வார்கள். நமது ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்கூட இதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பெரும்பகுதி ஆசிரியர்கள் புதிய சி.சி.இ முறையுடன் பொருந்திப்போவதில் சிரமப்படுகின்றனர். அரசு இந்த முறையை அமல்படுத்தும் முன்பு, ஆசிரியர்களுக்குப் போதுமான அளவில் பயிற்சி அளித்திருக்க வேண்டும்; அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஓடியாடி, உடல் அசைவுகளின் மூலமும் பாடம் நடத்தச் சொல்கிறது சி.சி.இ. இத்தனை நாட்கள் உட்கார்ந்தபடியே பாடம் நடத்திய 50 வயது ஆசிரியரை, திடீரென இப்போது எழுந்து ஓடச் சொன்னால் அவரால் முடியுமா? இவற்றை முன்கூட்டியே பரிசீலித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததன் விளைவுதான் இன்று சரிபாதி ஆசிரியர்கள் 'இந்த முறையே தவறானது. இது, மாணவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவே உதவுகிறது’ என்று குற்றம் சாட்டுகின்றனர். இன்னொரு பக்கம் சி.சி.இ முறை ஆசிரியர்களுக்கான வேலைப்பளுவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஓர் வகுப்பறையில் 20, 25 மாணவர்கள் இருந்தால், ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்த முடியும். ஆனால் நமது அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:60, 1:100 என்பதாகவும், அதைத் தாண்டியும் உள்ளது. இத்தனை பேரையும் ஓர் ஆசிரியர் தனித்தனியே கண்காணிப்பது சாத்தியமே இல்லாதது. கல்வித் துறை அதிகாரிகள் இந்த நடைமுறைச் சிக்கல்களை சரிசெய்யாமல், ஆசிரியர்கள் மீது தொடர்ந்து அழுத்தம் செலுத்துகின்றனர். இதனால் என்ன ஆகிறது என்றால், ஆசிரியர்கள் வெறுமனே ஆவணங்களில் மட்டும் எல்லாவற்றையும் எழுதிவிட்டு நடைமுறையில் எதையும் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? 'ஆசிரியர்களுக்கு தலைக்கு மேல் வேலை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?’ என்று கரிசனத்துடன் இதை அணுக முடியுமா? தலைக்கு மேல் வேலை இருப்பது உண்மைதான். அந்தச் சுமையை இறக்கிவைக்க முயற்சிக்கும் அதே நேரம், கால்களுக்கும் கீழ் இருக்கும் மாணவர்களை அந்தச் சுமை அழுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவர்களின் கடமைதான். சொல்லப்போனால், இரண்டாவதுதான் முதன்மைக் கடமை. அதற்குத்தான் ஆசிரியர்கள் முன்னுரிமை தர வேண்டும்! - பாடம் படிப்போம்...
பத்தாம் வகுப்பிலும் தேவை மாற்றம்! சி.சி.இ முறை 1-9ம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், 10-ம் வகுப்பு பழைய முறையில்தான் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக சி.சி.இ முறையில் பயின்ற மாணவர்கள் இப்போது 10-ம் வகுப்பில் நுழைந்துள்ளனர். இதுவரையில் முப்பருவத் தேர்வு முறையில் தேர்வு எழுதிய இவர்கள், இப்போது மொத்தப் புத்தகத்தையும் படித்தாக வேண்டும். 10-ம் வகுப்புத் தேர்வு எழுதவிருக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது தொடரும். 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் சி.சி.இ முறை; 10-ம் வகுப்பில் இருந்து வேறு முறை... என்பது மாணவர்களை உளவியல்ரீதியாகப் பாதிக்கக்கூடியது. 10-ம் வகுப்புக்கும் சி.சி.இ முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. +1,+2-க்கு இரு பருவத் தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்படுகிறது. இது நியாயமானதும் சரியானதும்கூட. அரசு உடனே இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். இல்லையெனில் நல்ல திட்டம் ஒன்று, தேவை இல்லாமல் சீரழிக்கப்படும் நிலையே ஏற்படும்! கேள்வித்தாளை சுவாரஸ்யப்படுத்துங்கள்! சி.சி.இ. முறையில் கேள்விகள் முக்கியமானவை. கர்நாடக மாநில கேள்வித்தாளில் ஒரு கேள்வி. 'கர்நாடக அரசு, மின் சிக்கனத்தைப் பின்பற்றும் ஒரு குடும்பத்துக்கு விருது தர உள்ளது. கீழ்க்காணும் மூன்று குடும்பங்களில் எந்தக் குடும்பத்துக்கு மின் சிக்கனத்துக்கான விருது தரலாம். பரிந்துரை செய்க’ என்று சொல்லிவிட்டு மூன்று படங்கள் தரப்பட்டுள்ளன. முதல் படத்தில் ஒரு வீட்டில் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிகின்றன்; மின்விசிறிகள் ஓடுகிறன்றன. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் ஓர் அறையில்தான் இருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் எல்லோரும் ஓர் அறையில் அமர்ந்துள்ளனர். அந்த அறையில் மட்டும் விளக்கு; மின்விசிறி இயங்குகிறது. மற்றொரு வீட்டில் எல்லா அறைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதைப் பார்த்து மாணவர் பதில் எழுதும்போது சுயமாகச் சிந்திக்கிறார். மின் சிக்கனத்தில் இருந்து எல்.இ.டி விளக்கு வரை பலவற்றைத் தெரிந்துகொள்கிறான். இத்தகைய கேள்வித்தாள், பல பக்கங்கள் கொண்டதாக ஒரு புத்தகம்போல இருக்கும்; இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அப்படித்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பாடங்களை சி.சி.இ முறையில் நடத்திவிட்டு கேள்வித்தாளை மட்டும் வழக்கம்போல நான்கு பக்கத்தில் அடித்துத் தருகிறார்கள். அதில் 'தஞ்சாவூர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. ஏன்?’ என்று இருக்கிறது. இது மாணவரின் பதில் எழுதும் ஆர்வத்தைக் குறைக்கிறது. அரசு, கேள்வித்தாள்கள் விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அதற்கு ஆகும் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் உடனடியாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
கற்க கசடற விற்க அதற்குத் தக! - ஆனந்த விகடன் - 2014-09-10அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? நம் எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும், கூடுதல் பங்கு அரசு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எந்த அரசுப் பள்ளியில் படித்து அந்த வேலையைப் பெற்றார்களோ, எந்த அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம். ஒரு கிராமத்துப் பள்ளியில் 15 ஆண்டுகள் ஓர் ஆசிரியர் பணிபுரிந்து, அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்யாதவராக இருப்பாராயின், ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சி முடமாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது ஏதோ எதுகை - மோனை வசனம் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தி, செதுக்குவதில் ஆசிரியர் முதன்மையான பாத்திரம் வகிக்கிறார். ஆனால், இதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள், படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றனர். ஆசிரியர் பணியின்மீது சிறு மதிப்பும் இல்லாமல், வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு வந்து, மிகுந்த அவநம்பிக்கையுடன் வகுப்பறைக்குள் நுழைகின்றனர். 'இதுங்கல்லாம் படிச்சு என்ன ஜில்லா கலெக்டர் ஆகப்போகுதுங்களா?’ என்று தன் மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குத் தன்மீதும் மதிப்பு இல்லை; தன் பள்ளியின்மீதும் மதிப்பு இல்லை. ஓர் ஆசிரியர், ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவரிடம் கற்கும் மாணவர்கள், இளமையின் வேகத்துடன் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களை, நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கிக்கொள்கின்றனர். பயிற்றுநர்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்களும் அந்த வேகத்தில் ஓடியாக வேண்டும். ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல... இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஒரு தையல்காரர், 1980-களில் தைத்த 'பெல்பாட்டம் பேன்ட்’போல இன்றும் தைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று அவர் ஸ்லிம் ஃபிட் தைத்தாக வேண்டும். இல்லை என்றால் அவருக்குத் தொழில் இல்லை. 'எனக்கு கம்ப்யூட்டர் இயக்கத் தெரியாது. எழுதியே பழகிவிட்டது’ என்று ஒதுங்கி நின்றவர்களை காலம் ஒதுக்கிவிட்டது. அதைப்போலவே இது ஸ்பெஷலிஸ்ட்களின் காலம். வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு மதிப்பு இல்லை. எம்.டி., எம்.எஸ் என்று ஏதாவது ஒன்றில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க வேண்டும். அதற்காக, 'ஸ்பெஷல் தோசையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது’ என்றாலும் ஹோட்டல் நடத்த முடியாது. உங்கள் ஹோட்டலில் ஸ்பெஷல் தோசைதான் ஸ்பெஷல் என்றாலும், மற்றவையும் அங்கே கிடைக்க வேண்டும். ஏனெனில் இது மல்டிப்ளெக்ஸ்களின் காலம். ஆக, நவீன காலத்துக்கு அப்டேட் ஆவது, தன் துறையில் நிபுணத்துவம் பெறுவது, தன்னைச் சார்ந்துள்ள துறைகளை அறிந்திருப்பது, எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராக இருப்பது... இவை அனைத்துமே இன்று அடிப்படைத் தேவை! சாதாரண ஒரு வேலையைச் செய்யவே இவை அவசியம் என்னும்போது, ஒரு தலைமுறைக்கு அறிவைப் போதிக்கும் பெரும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இந்தத் தகுதிகள் கூடுதலாகவே தேவை. கல்வித் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், நம் நாட்டில் உள்ள கல்விமுறைகளின் சாதக-பாதகங்கள், உலக அளவில் முன்னேறிய நாடுகளில் எப்படி கல்வி போதிக்கப்படுகிறது, நவீனத் தொழில்நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் முறை... என எப்போதும் அவர்கள் தேடுதலுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல்போனால், அதன் பாதிப்பைச் சுமப்பது மாணவர்கள்தான். ஒரு தையல்காரர் நவீன மாற்றங்களை உள்வாங்காமல் தொழில் நடத்த முடியாமல்போவது அவருடைய தனிப்பட்ட நஷ்டம். அதுவே ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கி இருந்தால் நஷ்டம், அந்த வகுப்பறையின் மாணவர்களுக்கு. வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் 50 குடும்பங்களின் வளர்ச்சி பின்தங்கிவிடுகிறது. இத்தகைய பரந்துபட்ட புரிதல் இருக்கும்போதுதான், ஆசிரியர் பணியை ஒட்டுதலுடன் பார்க்க முடியும். அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வராத அரசு, லேப்டாப் தருவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறதே ஏன்? புதிய டாஸ்மாக் திறக்கும் அரசு, புதிய பள்ளிகளைத் திறந்துள்ளதா? இத்தகைய சிந்தனைமுறை ஆசிரியருக்கு இருக்கும்போதுதான், வகுப்பறையை முதிர்ச்சியுடன் வழிநடத்த முடியும். ஒரு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது எனில், அதன் பின்னே உள்ள சமூகக் காரணத்தை அப்போதுதான் இனம் காண முடியும். ஆனால் நடைமுறை யதார்த்தத்தை ஒப்பிடும்போது இது வெகுதூரத்தில் ஒரு கனவுக் காட்சியைப்போல் உள்ளது. பல ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வதையே தியாகம் செய்வதைப்போல உணர்கின்றனர். 10, 15 ஆண்டுகள் சர்வீஸ் போட்டுவிட்ட ஆசிரியர்களுக்கு நிறைய விடுமுறைகள் மிச்சம் இருக்கும். அவர்கள் அற்பக் காரணங்களுக்காக அல்லது காரணமே இல்லாமல்கூட விடுமுறை எடுக்கின்றனர். 'சும்மா அலுப்பா இருக்கு’ என்று 10 நாட்கள் விடுமுறை எடுப்பார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் தன் சொந்த மகன் அல்லது மகளுக்கு ப்ளஸ் டூ பரீட்சை வரும்போது ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுப்பார்கள். அந்த நேரத்தில், தான் பணியாற்றும் பள்ளியில், தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு யார் சொல்லித்தருவது என்பது அவர்களின் எண்ணத்திலேயே இருக்காது. 'பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படி இருக்காங்கதான். நான் மறுக்கலை. அதுக்காக எங்களுக்கு வேலையே இல்லைங்றதைப்போல சொல்லக் கூடாது. குறிப்பா ஆசிரியர்கள் ஒவ்வொருத்தருக்கும் கற்பித்தல் அல்லாத வேலைகள் (Non-Teaching works) மலைமாதிரி குவிஞ்சுகிடக்கு’ என்று ஓர் ஆசிரியர் சொன்னார். இதிலும் உண்மை உள்ளது! பாடம் எடுப்பது மட்டுமே இன்றைய ஆசிரியரின் பணி அல்ல. ரெக்கார்டுகள் எழுதிக் குவிக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் இதற்கே செலவு ஆகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கும் இலவசப் பொருட்களை நிர்வகிக்க வேண்டிய பெரும் சுமை ஆசிரியர்களிடமே இருக்கிறது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சைக்கிள், மாணவிகளுக்கு இலவச நாப்கின், ஃபோலிக் ஆசிட் மாத்திரை, லேப்டாப், வரைபடம், வண்ண பென்சில், ஸ்கூல் பேக், செருப்பு, ஜியாமெட்ரி பாக்ஸ்... போன்ற இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் தரப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் வெவ்வேறு நாட்களில் இவை வந்துகொண்டே இருக்கும். ஒரு பள்ளியில் 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வகுப்புவாரியாகப் பிரித்து இவற்றை வழங்க வேண்டும். அவற்றுக்கான ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்களும், பாடப் புத்தகங்களும் மாவட்ட, வட்டாரத் தலைநகரங்களுக்கு வரும். அதைப்போய் எடுத்துவர வேண்டும். அது ஒரே முறையில் முடிந்துவிடாது. 'அறிவியல் புக் அடுத்த வாரம்தான் வரும்’ என்பார்கள். அதற்கு ஒருமுறை மீண்டும் போக வேண்டும். ஒரு பருவத்துக்குக் குறைந்தது 5 முறை அலைய வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய அரசுப் பள்ளிகளில் நிர்வாக ஊழியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். எல்லா வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்தாக வேண்டியுள்ளது. இதை மறுக்கவில்லை. ஆனால் அப்படி வேலைப்பளு இருந்தால், அதற்காக ஆசிரியர் சங்கம் மூலம் போராடி நியாயத்தைப் பெற வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களின் முதன்மையான நோக்கம் பயிற்றுவிப்பதுதான். அதைப் பின்னுக்குத் தள்ளி இதர வேலைகள் தங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதேநேரம், 'வேலைக்கு அப்பாற்பட்ட வேலை’ பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கான பிரத்யேக சிக்கல் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வின் அழுத்தம் அதிகரித்துவிட்ட நவீன காலத்தில், எல்லா துறைகளிலும் இத்தகைய மதிப்புக் கூட்டு வேலைகள் (Value added works) அதிகரித்துவிட்டன. ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி முன்பு மாதிரி கடையில் உட்கார்ந்துகொண்டு இப்போது தொழில் நடத்த முடியாது. வீட்டுக்குத் தண்ணீர் கேன் போடுவதில் அவருக்கு ஒரு கேனுக்கு 2 ரூபாய்தான் கிடைக்கிறது என்றாலும், மூன்று மாடி ஏறியிறங்கிப் போடுகிறார். அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். 'என் வேலை இது மட்டும்தான்’ என்று யாராலும் கறாராகச் சொல்ல முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் அனைத்து பிரிவினருக்கும் இருக்கிறது. இது சரியா, தவறா என்பது தனி விவாதம். இங்கு சொல்லவருவது, இந்தச் சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை. அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்டிருக்கும் கூலித் தொழிலாளியும் கூடுதல் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இத்தகைய சூழலிலும்கூட தாங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட பணியில் இருப்பதையும், நல்ல ஊதியம் பெறுவதையும்தான். இன்று மாநிலம் முழுக்க ஆசிரியர் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். கணவன் 50 ஆயிரம், மனைவி 50 ஆயிரம் என்று குறைந்தபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பணியாற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து யோசித்திருக்கிறார்களா? மிகமிக சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள் அவர்கள். தங்கள் பிள்ளை படித்து வந்து குடும்பத்தைக் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையின் பிடிமானத்தில் வாழ்கிறார்கள். ஏதுமற்றோரைக் கடைத்தேற்ற கல்வியைவிட்டால் வேறு நாதி ஏது? அதை வழங்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கு தெய்வங்கள். படிக்காத ஒரு தொழிலாளி, ஆசிரியரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடுகிறார் என்றால் அது வெறும் மரியாதை அல்ல. நீங்கள் பெற்றிருக்கும் கல்விமீதான பிரமிப்பு. தன் பிள்ளைக்கும் அதைத் தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி. அந்த நன்றிக்கு உரியவராக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். பள்ளியில் உட்கார்ந்து ரியல் எஸ்டேட், வட்டிக்கு விடுவது போன்ற தலையாயப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்ற குற்றவுணர்ச்சி முதலில் வர வேண்டும். பிற்காலத்தில் தன் ஆசிரியரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, மாணவனின் மனதில் நல்லவிதமாக நீங்கள் பதிவாக வேண்டும். மாறாக 'வட்டி வாத்தியார்’ என்ற கறுப்பு அடையாளத்துடன் அல்ல! - பாடம் படிப்போம்...
இப்படியும் சில ஆசிரியர்கள்... மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனியார் பள்ளிகள் பலவற்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அரசுப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தன் 'பங்குதாரர்’ பள்ளியில் பாடம் நடத்துபவர்கள் பலர். அல்லது அரசுப் பள்ளியில் தன் வேலையை செய்ய 5,000 சம்பளத்துக்கு ஓர் ஆசிரியரை உள் வாடகைக்கு நியமித்துவிட்டு இவர் தனியார் பள்ளியில் பாடம் நடத்துவார். பல இடங்களில் இது நடக்கிறது. முக்கியமாக அரசுப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்தி மாணவர்களை நன்றாகப் படிக்கவைப்பார்கள். அதே பள்ளியில் இருக்கும் இந்த 'பங்குதாரர்’ ஆசிரியரோ... யார் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர் என்பதைக் 'கண்காணித்து’ அவர்களை தன்னுடைய தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆள்பிடி வேலையைச் செய்வார். ஜூன் மாத ஆரம்பத்தில்தான் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்தகைய 'பங்குதாரர்’ ஆசிரியர்கள் பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் மருத்துவ விடுப்புப் போட்டுவிட்டு தனியார் பள்ளிக்கு அட்மிஷனுக்குப் போய்விடுவார்கள். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, தருமபுரி பகுதிகளில் இது மிக அதிகம்.
கற்க கசடற விற்க அதற்குத் தக! - ஆனந்த விகடன் - 2014-09-17அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா... தனியார் பள்ளியிலா? இந்தக் கேள்விகளுக்கான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகப் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைக்கிறார்கள். உச்ச அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரையிலும் பொருந்தும் உண்மை இதுதான். முக்கியமாக, அதிகபட்ச ஆசிரியர்கள் 'தனியார் பள்ளி’ பட்டியலில்தான் வருவார்கள். மாணவர் சேர்க்கை நடைபெறும் நேரத்தில், தன் மகனை/மகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் அமர்ந்தே விவாதிப்பார்கள். பெரும்பாலான சமயம் அவர்களின் எண்ணத்தில், பேச்சில் ஒரு தேர்வாகக்கூட அவர்கள் பணியாற்றும் பள்ளி இருக்காது. தான் பணியாற்றும் பள்ளியின் மீதும், தனது பயிற்றுவிக்கும் திறன் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பு அவ்வளவுதான். அரசு ஆசிரியர்களிடம் சாதாரணமாகப் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள்... 'அரசுப் பள்ளிகள்ல என்ன இல்லை..? சைக்கிள்ல இருந்து லேப்டாப் வரைக்கும் எல்லாம் இலவசமாத் தர்றாங்க. கட்டணம் கிடையாது. முன்ன மாதிரி இல்ல... இப்ப எல்லா ஸ்கூல்லயும் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டியாச்சு. ஆசிரியர்கள் பிரமாதமா பாடம் நடத்துறாங்க. வேற என்ன வேணும்? பசங்க படிச்சா மட்டும் போதும்’ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். அப்புறம் என்ன... அத்தனை பிரமாதமான பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாமே! நம்மில் பலர், அத்தகைய காட்சிகளின் சாட்சிகளாக இருந்துள்ளோம். இளம் வயதில், நாம் படித்த பள்ளியில் ஏதோ ஓர் ஆசிரியரின் மகன், மகள் அதே பள்ளியில் படிப்பார்கள். அவர்கள் பள்ளியில் தன் அப்பாவை 'சார்’ என்றும் 'அப்பா’ என்றும் மாற்றி மாற்றி அழைத்துக் குழம்புவார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது கூடுதல் கரிசனம் பொங்கும். இவை பழங்கால மசமசப்பான காட்சிதான் எனினும் முற்றாக அழிந்துவிடவில்லை. இப்போதும் பல ஆசிரியர்கள் இப்படி இருக்கிறார்கள். தன் மகள்/மகனுடன் அவர்கள் பள்ளிக்குச் சென்று வருவது அழகு மட்டும் அல்ல... அதுதான் மிடுக்கு; கம்பீரம். தனது திறமை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அப்படித்தான் செய்வார்கள். தான் சமைக்கும் உணவின் தரம் சிறந்தது என்று உறுதியாக நம்பும் ஹோட்டல் மாஸ்டர், பக்கத்துக் கடையில் சாப்பிட மாட்டார். ஆனால் நுணுக்கி, நுணுக்கிப் பேசும் இத்தகைய தர்க்கங்களை ஆசிரியர்கள் காதுகொடுத்துக் கேட்கவும் தயார் இல்லை. அவர்கள் மிகவும் வெளிப்படையாக, 'சார்... நாங்க அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள்தான். அரசாங்கம் தர்ற சம்பளம்தான் வாங்குறோம். அதுக்காக எங்க பிள்ளைங்க வாழ்க்கையில ரிஸ்க் எடுக்க முடியாது. அரசுப் பள்ளிகள் எதுவும் சரியா இல்லைங்கிறது எங்களுக்கே தெரியும். நாங்க ஒருத்தர், ரெண்டு பேர் நினைச்சு இதையெல்லாம் மாத்த முடியாது. மொத்தமா மாறுற வரைக்கும் காத்திருக்கவும் முடியாது. அதனால தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறதைத் தவிர வேற வழி இல்லை’ என்று பேசுகிறார்கள். 'ஊராமூட்டு’ பிள்ளைகள் என்றால் 'அரசுப் பள்ளிகள் சூப்பர்’ என்பதும், தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு என்றால், 'அரசுப் பள்ளிகள் உவ்வே’ எனக் குமட்டுவதும் சரியான அணுகுமுறையா? இன்னோர் ஆசிரியை, இந்த விஷயத்தை மிகவும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார். 'என் பிள்ளைக்கு என்ன தலையெழுத்தா, இந்தப் பாடாவதி கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கணும்னு?’ என்றார். அதாவது 'ஏழைகள் படிக்கத்தான் அரசுப் பள்ளிகள். என்னிடம்தான் பணம் இருக்கிறதே, நான் எதற்கு என் பிள்ளையை அங்கு சேர்க்க வேண்டும்?’ என்பது அவரது சீற்றத்தின் அடிப்படை. அரசாங்க வேலை வேண்டும்; அரசாங்க சம்பளம் வேண்டும்; அரசின் அத்தனை சலுகைகளும் வேண்டும். ஆனால், தங்கள் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளி மட்டும் வேண்டாம் என்றால், அது சரியான மனநிலையா? இது ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். நாம் ஆசிரியர்கள் பற்றி கூடுதலாகப் பேசக் காரணம், கற்பிப்பவர்களே இப்படி இருக்கிறார்களே என்பதால்தான். ஆசிரியர் எப்படி தன் பிள்ளை, அரசுப் பள்ளியில் படிப்பதை விரும்புவது இல்லையோ, அதுபோல ஒரு விவசாயி தன் வாரிசு விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்புவது இல்லை. இரண்டையும் ஒப்பிட முடியுமா? விவசாயம் நொடித்துவிட்டது; லாபம் இல்லை என்பது நமக்குத் தெரிந்த கதை. பெரும் முதலீடு, கடும் உழைப்பு எல்லாம் செலுத்தியும் போட்ட முதல்கூட கிடைப்பது இல்லை. ஆனால், விவசாயத்துக்கு இடையூறாக இருக்கும் காரணிகளைச் சரிசெய்யும் உரிமையோ, வலிமையோ விவசாயிக்கு இல்லை. மேட்டூர் அணை வறண்டுவிட்டது என்பதற்காக, நம் ஊர் விவசாயிகள் கர்நாடகாவுக்குச் சென்று காவிரியின் மீதிருக்கும் அணையைத் திறக்க முடியுமா? மழை பெய்யவில்லை என்பதால் மேகங்களைக் குத்தி மழை பெய்யச் செய்ய முடியுமா? அவ்வளவு ஏன்... 'விளைச்சல் குறைவு. ஆகவே, ஒரு கிலோ நெல் 250 ரூபாய்’ என ஒரு விவசாயி தானே விலை நிர்ணயம் செய்யத்தான் முடியுமா? வயல் அவருடையது; உழைப்பும் முதலீடும் விளைச்சலும் அவருடையன. ஆனால், விலை சொல்லும் உரிமை விவசாயிக்கு இல்லை. நிர்ணயிக்கும் உரிமை அல்ல... 'என் நெல் கிலோ இன்ன விலை’ என்று சொல்லும் உரிமைகூட இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி-க்கு எவ்வளவு, எட்டாம் வகுப்புக்கு எவ்வளவு என்பதை அந்தப் பள்ளி முதலாளி இறுதி செய்கிறார். அரசின் கட்டண நிர்ணயக் குழு அதை அங்கீகரிக்கிறது. 'குழு நிர்ணயித்த கட்டணம் போதாது’ என்று அவர்கள் விண்ணப்பித்தால் அதிகரித்தும் தரப்படுகிறது. இந்த முறைப்படியான கட்டணம் போக, எந்த ரசீதும் இல்லாமலும் பிடுங்கப்படும் பணம் தனி. ஆக, ஆசிரியர் - விவசாயி என்ற இந்த ஒப்பீட்டில் தன் தொழிலுக்கு ஏற்படும் இன்னல்களை தனது சொந்த பலத்தால் சரிசெய்யும் சாத்தியம் விவசாயிடம் இல்லை. ஆசிரியர்கள் அப்படி அல்ல. லகான் அவர்களிடம் இருக்கிறது. அக்கறையுள்ள நான்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்தால், அந்தப் பள்ளியையே தலைகீழாக மாற்ற முடியும். கற்றல், விளையாட்டு, கலைகள், ஒழுக்கம்... என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்களை நெறிப்படுத்த முடியும். அதற்குத் தேவையானவை ஆசிரியர்களின் கடின உழைப்பும், நேர்மறை அணுகுமுறையுமே. அதிகபட்ச ஆசிரியர்களிடம் இவை இல்லை என்பதால்தான் இல்லாத, பொல்லாத காரணங்களை முன்வைத்து, தங்களின் சோம்பேறித்தனத்துக்கு முட்டுக்கொடுக்கிறார்கள். 'அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்’ என்பது நம் ஊரில் எழுப்பப்படும் நீண்ட நாள் கோரிக்கை. 'அரசு வேலை வேண்டுமா... அரசுப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவையுங்கள்’ என்று எதிர்த் திசையில் இருந்துகூட இதைச் செயல்படுத்தலாம். இப்படி ஒரு நிபந்தனை விதிப்பது ஜனநாயக மீறல் அல்ல. அதுதான் ஜனநாயகத்தை அனைவருக்கும் சமதரத்தில் பிரித்து அளிக்கும் ஏற்பாடு. அப்படி இல்லாமல் ஓர் ஊரில் பல வகையான பள்ளிகள் இருப்பதும், அதில் பணக்காரப் பள்ளிகள் சொகுசாக வசதியோடு இருப்பதும் அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதும், அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்காகவே விதிக்கப்பட்டு அதில் தரமற்ற கல்வித் தரப்படுவதுமாக இருந்தால் இதுதான் ஜனநாயக விரோதம். 'காசு உள்ளவனுக்கு எலைட் பார்; காசு இல்லாதவனுக்கு சாதாரண பார்’ எனக் குடிக்கும் இடத்தில் தரம் பிரிப்பதைப்போல, பள்ளியையும் பிரிப்பதுதான் ஜனநாயக மரபா? ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 'அருகாமைப் பள்ளி’ என்கிற முறை அமலில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அதே பகுதியில் உள்ள குறிப்பிட்ட பள்ளியில்தான் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அமைச்சரின் குழந்தையாக இருந்தாலும், கடைநிலைத் தொழிலாளியின் குழந்தையாக இருந்தாலும் அந்தப் பள்ளியில்தான் படித்தாக வேண்டும். 'நல்ல ஸ்கூல்’ என்று 50 கி.மீ-க்கு அந்தப் பக்கம் உள்ள பள்ளியில் சேர்க்க முடியாது. இந்த முறையின்படி எல்லாப் பள்ளிகளிலும் எல்லா வர்க்கத்துக் குழந்தைகளும் படிப்பார்கள். இதனால் சமதரம் உள்ள கல்வி உறுதிப்படுத்தப்படுகிறது. முக்கியமாக அதிகாரிகள் வீட்டுப் பிள்ளையும் அதே அரசுப் பள்ளியில்தான் படிப்பார்கள் என்பதால், பள்ளியின் தரம் உத்தரவாதப்படுத்தப்படும். இந்த முறையை அரசு கொண்டுவருகிறதோ இல்லையோ... நம் மக்கள், தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளிக்கு அருகில் வீடு பிடித்துக் குடியேறி, அருகாமைப் பள்ளி என்ற கருத்தாக்கத்துக்குப் புதிய அருஞ்சொற்பொருள் எழுதுகிறார்கள். இவை அனைத்தையும் மீறி அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோரை உறவுகளும் நண்பர்களும் ஏதோ குற்றம் செய்தவர்களைப்போல பார்க்கிறார்கள். தன் தலைமுறைக்கு துரோகம் இழைப்பவர்கள்போல அவச்சொல்லுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொள்கை அளவில் தனியார் பள்ளிகள் வேண்டாம் என்று முடிவு எடுத்து அரசுப் பள்ளிகளை நாடுவோரை, 'உங்க கொள்கைக்காக பிள்ளையோட எதிர்காலத்தை பணயம் வைக்காதீங்க’ என்கிறார்கள். என்றால் குழந்தைகளின் நிகழ்காலத்தை தனியார் பள்ளிகளில் பணயம் வைக்கலாமா? இதைப் பற்றி கேட்டால், 'இப்ப கஷ்டப்பட்டாதான் எதிர்காலம் நல்லா இருக்கும்’ என்று ஆரூடம் சொல்வார்களே தவிர, நேரடிப் பதில் கிடைக்காது! இதுபோன்ற தடைகளைத் தகர்த்து தன் பிள்ளையை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோருக்குப் பெரிய மன உறுதி தேவைப்படுகிறது. அப்படி தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடம் பேசியபோது, '' 'நீங்க ஒரு வக்கீலா இருந்தும் உங்க பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பெரிய விஷயம் சார்’னு அடிக்கடி என்கிட்ட பலர் சொல்றாங்க. கிட்டத்தட்ட என்னைத் தியாகிபோல ஃபீல் பண்ணவைக்கிறாங்க. ஆனா, அதே அரசுப் பள்ளியில் தொழிலாளிகளின் பிள்ளைகளும் படிக்கிறாங்க. அந்தத் தொழிலாளர்களை யாரும் தியாகிகள்னு சொல்றது இல்லை'' என்றார். ஏனென்றால், இங்கு தியாகத்தின் அளவுகோல்கள் மாறிவிட்டன. தியாகம் என்பது இருப்பதை இழப்பது; சுயநலத்தைத் துறப்பது; பொதுநலனை முன்வைத்து இழப்புகளைச் சந்திப்பது. ஆனால், இப்போது திருட்டுத்தனம் செய்யாமல் இருப்பதே தியாகம் என்று ஆகிவிட்டது. ஒரு போலீஸ்காரர் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அது போற்றுதலுக்கு உரிய பண்பு. அரசியல்வாதி ஊழல் செய்யாமல் இருந்தால், அது ஆச்சர்யப்படவைக்கும் செய்தி. ஏனென்றால், லஞ்சம் வாங்கவும், கொள்ளை அடிக்கவும் வாய்ப்புகள் அவர்களிடம் இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே... ஆகவே அது தியாகம் ஆகிவிடுகிறது!
கற்க கசடற விற்க அதற்குத் தக! - ஆனந்த விகடன் - 2014-09-24அரசுப் பள்ளிகளின் வசதிக் குறைவுகள் குறித்து நாம் அறியாதது அல்ல. இப்போது சில பள்ளிகளில் போதுமான கட்டட வசதிகள் வந்துவிட்டன. எனினும், வசதிகள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். ஒரு பள்ளிக்குத் தேவை, கட்டடம் மட்டுமே அல்ல. ஓட்டை இல்லாத கூரை, உடையாத சுவர், சுத்தமான வகுப்பறைகள், குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதி, வகுப்பறையில் மின்விளக்கு, மின்விசிறி, நாற்காலிகள்... இவை எல்லாமே ஒரு பள்ளியின் அடிப்படைத் தேவைகள். வெக்கை அதிகமான கோடைக்காலத்தில் வீட்டுக்குள் இரண்டு மின்விசிறிகளைச் சுழலவிட்டும்கூட வியர்வை பெருக்கெடுக்கும்போது, மின்விசிறி இல்லாத வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு, அது நரகம். அந்தப் பிசுபிசுப்பான அவதியுடன் அவர்கள் எப்படிப் படிக்க முடியும்? 'அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டின் பள்ளிக் கல்வித் துறையின் அரசு ஆணை சொல் கிறது. எந்த அரசுப் பள்ளியிலும் இப்படி இல்லை. 50 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில்கூட அது இல்லை. பல பள்ளிகளில் தண்ணீர் வசதியே இல்லை. மாணவர்கள்தான் வீட்டில் இருந்து எடுத்து வந்தாக வேண்டும். இருக்கும் குடிநீர் குழாய்கள்கூட போதுமான சுத்தம் இல்லாமல், பயன்படுத்த லாயக்கற்றதாக இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதைத் தள்ளிப்போடுகின்றனர்; குறைத்துக்கொள்கின்றனர். அது அவர்களின் உடல்நலத்தைக் கெடுக்கிறது. '20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை; 50 மாணவர்களுக்கு ஒரு மலக் கழிப்பறை இருக்க வேண்டும்’ என்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அரசு ஆணைதான். ஆனால், நிலைமை அப்படியா இருக்கிறது? மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கழிப்பறை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்தை அண்மையில் வெளியிட்டது. 2013-14ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 37,002 அரசுப் பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியே இல்லை. இது மொத்தப் பள்ளிகளில் 15.45 சதவிகிதம். எனில் அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கழிப்பறைக்கு என்ன செய்வார்கள்? புதர்களும் முட்காடுகளுமே அவர்களுக்கான திறந்தவெளிக் கழிப்பறைகள். பள்ளியில் கழிப்பறை மிகவும் அத்தியாவசியம் என்பது, நம் அரசின் மனசாட்சிக்கு உறைக்கவே இல்லை. 'மாநிலத்தின் முதலமைச்சரே ஒரு பெண்தான்’ என்று பெருமை பேசும் அதே வேளையில்தான், பெண்கள் பள்ளிகளில்கூட கழிப்பறைகள் இல்லாத நிலை நீடிக்கிறது! அரசுப் பேருந்துகளை 'லொடலொட’வென ஓடவிட்டு, 'காசு கொடுத்தாலும் பிரைவேட் பஸ் தேவலாம்’ என மக்களை எண்ணவைப்பதுபோல, அரசுப் பள்ளிகளை மிக மோசமான நிலையில் இயங்கவிட்டு, மக்களை தனியார் பள்ளிகள் பக்கம் தள்ளிவிடும் வேலையைச் செய்கிறது அரசு. இதன் ஓர் அங்கம்தான் மேலே சொன்ன வசதிக் குறைவுகள். இதன் விளைவாக மக்கள் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் இருந்து பின்வாங்குகிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை சேர்க்கை எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்து வருகிறது. 2008-09 கல்வியாண்டில் விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,550 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு 1,850 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். மீதம் உள்ள 700 பேர் எங்கே? சொல்லப்போனால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மக்கள் தொகை பெருகியிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கவைப்பதன் அவசியத்தைப் பெற்றோர்கள் முன்பைவிட அதிகமாக உணர்ந்துள்ளனர். ஆக, ஒவ்வொரு வருடமும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்லவா இருக்க வேண்டும்!? மாறாக இருப்பதும் இல்லாமல் போகிறது. மாநிலம் முழுவதுமான நிலைமை இதுதான். தொடக்கப் பள்ளிகளின் நிலைமையோ, இன்னும் மோசம்! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய இரு கிராமங்களில் இருந்த தொடக்கப் பள்ளிகள், கடந்த ஜூலை மாதம் மூடப்பட்டுள்ளன. காரணம் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்குள் சுருங்கி, அவர்களும் மாதக்கணக்கில் பள்ளிக்கு வரவில்லை. இதே ராமநாதபுரம் மாவட்டம் டி.கிளியூர் தொடக்கப் பள்ளியில், கடந்த ஆண்டு த்ரிஷா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வந்தார். அவரும் தேர்ச்சிபெற்று சென்றுவிட்டதால், மாணவர்களே இல்லாமல் அந்தப் பள்ளியும் மூடப்பட்டுவிட்டது. இதுபோல சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் ஏராளமான தொடக்கப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவை மூடுவிழா காணும் செய்திகளை நாம் கவனிக்கலாம்... கவனிக்காமலும் போகலாம்! ஆரோக்கியமான ஒரு சமூகத்தில், பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; மூடப்படக் கூடாது. அப்படித் தொடர்ந்து மூடப்படுகிறபோது, அதன் காரணங்களை ஆய்வுசெய்து சரிசெய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், அரசு இதற்கான முயற்சியைக்கூட எடுக்கவில்லை. மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியரை வேறு பள்ளிக்குப் பணிமாறுதல் செய்துவிட்டு, பள்ளியைப் பூட்டிவிட்டு வேலை முடிந்தது என ஒதுங்கிவிடுகின்றனர். திடீரென ஊருக்குள் பரவிய நோயில் வீழ்ந்து மரணத் தருவாயில் தவித்துப் போராடி ஒருவர் இறந்துபோனால், ஆசுவாசத்துடன் அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் கிளம்பிச் செல்வதைப்போலத்தான் அரசு நடந்துகொள்கிறது. என்ன நோய், நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால்தானே, மேலும் பலரை அந்த நோய் பலிகொள்ளாமல் தடுக்க முடியும்! இப்படி மூடப்படும் பள்ளிக் கட்டடங்கள் பிறகு என்னவாகின்றன? வட சென்னை, ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் இருந்த அரசுப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக மூடப்பட்டது. இப்போது அந்த இடத்தில் திரு.வி.க நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுவதற்கான வேலைகள் நடக்கின்றன. 2009-ம் ஆண்டில் சென்னையில் மொத்தம் 30 பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளிகள் அமைந்திருந்த இடங்களில், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் கட்டப் பயன்படுத்தப்படுகின்றன. மூடப்பட்ட பள்ளிகளைத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால், இயங்கிக்கொண்டிருக்கும் பள்ளிகளை நோக்கியும் வருகிறார்கள். சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும் புதிய சாலை ஒன்றை அமைக்க, அரசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்காக துரைப்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை இடித்துவிட்டு மேம்பாலம் கட்டப்போகிறார்கள். இத்தனைக்கும் அந்தப் பள்ளி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. மதுரவாயலில் மாநகராட்சிக் கட்டடம் கட்டுவதற்காக அரசுத் தொடக்கப் பள்ளிக் கட்டட அறையை எந்தவித அனுமதியும் பெறாமல் இடித்துள்ளனர். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இயங்கிக்கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்துவந்து பள்ளியைத் திறந்தால், வகுப்பறைகளில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் இறைந்துகிடக்கின்றன. பள்ளி அறையை இலவச பார்போல பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காட்சிகள் பெற்றோர் மனதில் அரசுப் பள்ளிகள் குறித்த அச்சத்தையும், அசூயை உணர்வையும் தோற்றுவிக்கின்றன. 'பொதுப் பள்ளிகள்தான் சமத்துவம், ஜனநாயகம், மதச் சார்பின்மை போன்ற உயர்ந்த பண்புகளை சமூகத்தில் நிலைநிறுத்தும். இந்தியா போன்ற நாட்டுக்கு பொதுப் பள்ளி முறைதான் மிகச் சிறந்தது. இதை ஏற்படுத்தவில்லை என்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் உருவாகும்’ என்று 1964-ம் ஆண்டு எச்சரித்தது கோத்தாரி கல்விக் குழு. பிறகு வந்த எத்தனையோ கமிட்டிகள் இதே பொதுக் கல்வி முறையை முன்வைத்தபோதிலும், அவை அறிஞர்களின் ஆய்வுகளாகவே சுருங்கிவிட்டன. பொது விவாதத்துக்கு வரவில்லை; பொதுக் கருத்தாக உருவாகவில்லை. இதன் விளைவாகவே இப்போது அரசுப் பள்ளிகள் அழிவைச் சந்திக்கின்றன! - பாடம் படிப்போம்...
சேப்பாக்கம் மைதானம் குத்தகை ரூ. 50,000 'அரசு - தனியார் கூட்டு’ (Public Private Partnership-P.P.P) என்பதுதான் தனியார்மயத்தின் நவீன வடிவம். உலகம் தழுவிய அளவில் இந்த முறையில் பல்லாயிரம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பி.பி.பி முறைக்கான சோதனைக்கூடமாகத் திகழ்கிறது இந்தியா. விமானத்தளம், சுரங்கம், துறைமுகம், மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம்... என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் பி.பி.பி முறை அமலில் இருக்கிறது. கல்வித் துறையில் இது அதிவேகமாகவே இருக்கிறது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை, தனியார் ஏற்று நடத்தும் வகையில் பி.பி.பி முறையில் குத்தகைக்குவிடுகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சாந்தோம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை... உள்ளிட்ட எட்டு இடங்களில், 30-க்கும் குறைவான மாணவர்களைக்கொண்ட எட்டு பள்ளிகளை, இந்த முறையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இனிவரும் காலத்தில் இது இன்னும் விரிவுபடுத்தப்படலாம். மேம்போக்காகப் பார்ப்பதற்கு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்போல தோன்றினாலும், இது மிக அபாயமானது என்று எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள். குறிப்பாக, இன்று நகர்ப்புறங்களில் நிலம் மிகவும் மதிப்புமிக்கது. ஒரு சதுர அடியே 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் விலைக்குப் போகிறது. அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் ஏக்கர் கணக்கில் நிலம் இருக்கிறது; அதுவும் நகரத்தின் மையப்பகுதியில். இவற்றின் மதிப்பு பல கோடிகளைத் தொடும். அரசு, இந்த நிலத்தையும் பள்ளியையும் தனியாருக்குக் குத்தகைக்குத்தான் விடுகிறது. எனினும், அந்தக் குத்தகை 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என இருக்கும். அத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில், அது அரசு சொத்து என்பது அரசுக்கே மறந்துபோகும். உதாரணமாக அமெரிக்கத் துணைத் தூதரகம் சார்பில் நடத்தப்படும் சர்வதேசப் பள்ளிக்காக தமிழக அரசு, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 12.42 ஏக்கர் நிலங்களை ஒதுக்கியுள்ளது. இந்த மொத்த நிலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக் குத்தகை வெறும் 16.25 லட்சம் ரூபாய். அதேபோல் 12 ஏக்கர் 23 கிரவுண்டு 2,053 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும் அரசுக்குச் சொந்தமானதுதான். அந்த இடத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ஆண்டுக்கு வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டுள்ளது அரசு. மாத வாடகையாகக் கணக்கிட்டால் வெறும் 4 ஆயிரம் ரூபாய். ஆனால், சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியில், 500 சதுர அடி வீட்டின் மாத வாடகை குறைந்தது 10 ஆயிரம் ரூபாய்! இத்தனை குறைந்த தொகைக்கு சேப்பாக்கம் கிரிகெட் மைதானத்தை குத்தகைக்குக் கொடுக்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் என்ன வறுமையில் வாடுகிறதா? ஐ.பி.எல் போட்டிகள் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கிறதே... கிரிக்கெட் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் பிடுங்குகிறார்களே... இப்படி அரசின் மதிப்புமிக்க நிலங்களை போகிற போக்கில் தூக்கித் தருகிற அரசுதான், கூவம் கரையோரக் குடிசைவாசிகளை, குப்பைகளைப்போல் வாரிக் கொண்டுசென்று கண்ணகி நகரில் கொட்டுகிறது. அரசுப் பள்ளிகளை பி.பி.பி முறையில் தனியாரிடம் கொடுக்கும்போது இதே ஆபத்து இருக்கிறது. குத்தகை எடுப்பவர்களின் நோக்கம் கல்விச் சேவை செய்வதுதான் என்றால், அவர்கள் ஏற்கெனவே செய்த 'சேவை’ குறித்து மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏனெனில், அரசுப் பள்ளிகள் என்பவை அரசு சொத்து; மக்கள் சொத்து!
கற்க கசடற விற்க அதற்குத் தக! - ஆனந்த விகடன் - 2014-10-01படங்கள்: ரா.ராம்குமார், வீ.சக்தி அருணகிரி, ரா.சதானந்த்
'கட்டடங்கள் ஒருபோதும் கற்பிக்காது’ - கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் சொல்லும் பொருள்பொதிந்த வார்த்தைகள் இவை. 'அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டடங்கள் இல்லை’, 'உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’... போன்ற புகார்களுக்குப் பதிலாக அவர் இதைச் சொல்கிறார். ஒரு பள்ளிக்கு இவை எல்லாம் அடிப்படைத் தேவைகள்தான். அதேநேரம் போதுமான கட்டடங்கள் இருந்துவிட்டால் கற்றலும் கற்பித்தலும் தானாகவே நடந்துவிடாது. அதை ஆசிரியர்கள்தான் முனைப்புடன் எடுத்துச்செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பினும், ஓர் ஆசிரியர் நினைத்தால், ஒரு பள்ளியில் சிறப்பான கற்பித்தலை நிகழ்த்த முடியும். ஒரு வகுப்பறையில் கற்பித்தல் என்ற நிகழ்வு நடக்க ஆசிரியர்-மாணவர் என்ற இரு தரப்புதான் இன்றியமையாதது. மற்றவை எல்லாம் கல்வியின் மைய நோக்கத்தைக் கூர் தீட்டுபவையே. ஆனால், இப்போது அரசுப் பள்ளிகளில் வசதிகள் இருந்தாலும் கற்பித்தல் முறையாக நடைபெறுவது இல்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் வீழ்ச்சி அடைவதே இதற்கு உதாரணம். அதே நேரம், முற்றிலும் அவநம்பிக்கை அடையும் அளவுக்கு அரசுப் பள்ளிகள் அவலத்தை அடைந்துவிடவில்லை. அந்த விளக்கு மங்கலாக எரிகிறது; அணைந்துவிடவில்லை. நமது கல்விச்சூழல், தனியார் முதலாளிகளின் வேட்டைக்காடாக இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதைச் சாத்தியப்படுத்துகின்றனர். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் அரசுப் பள்ளிகளின் ஆக்ஸிஜன்! மேட்டுப்பாளையம் அருகே இருக்கிறது ராமம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலத்தின் இதர அரசுப் பள்ளிகளைப்போலவே மாணவர் எண்ணிக்கை குறைந்து, எந்தவித வசதிகளும் இல்லாமல் சுணங்கிக்கிடந்தது. இந்த நிலையில் ஃபிராங்க்ளின் என்கிற ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். தலைமை ஆசிரியை சரஸ்வதியின் உதவியுடன் இவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பலனாக, இன்று இது ஒரு முன்மாதிரிப் பள்ளியாகியிருக்கிறது. 'பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்’ என்று கிராம மக்களிடம் ஃபிராங்க்ளின் கேட்டார். எவரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வந்து பள்ளியைத் திறக்கும்போது, 'குடிமகன்’கள் குடித்துவிட்டு பள்ளிக் கட்டடத்துக்குள் வீசிய மது பாட்டில்கள் கிடந்தன. இரண்டு மாதங்கள் பொறுமையாக அவற்றைச் சேகரித்தார். அவற்றைக் கண்காட்சிபோல அடுக்கி வைத்து ஊர் மக்களை அழைத்து வந்து காட்டினார். உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட ஊர் மக்கள் ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் ஃபிராங்க்ளினும், ஆசிரியை சரஸ்வதியும் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி தந்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க, வசதியாக வட்ட வடிவ மேசைகள் அமைக்கப்பட்டன. வகுப்பறையின் நான்கு புற சுவர்களும் கரும்பலகைகளாக மாற்றப்பட்டு, சுவரின் மற்ற பகுதியில் விதவிதமான இயற்கைக் காட்சிகளும் ஓவியங்களும் வரையப்பட்டன. தரைக்கு டைல்ஸ், கூரைக்கு ஃபால்ஸ் சீலிங், கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏ.சி., ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையின் நுழைவுவாயிலில் ஆளுயரக் கண்ணாடி, தரமான கழிப்பறைகள் என ஒவ்வொன்றாக வந்தது. மாணவர்கள் தினம்தோறும் தமிழ், ஆங்கில தினசரி செய்தித்தாள்களை வாசிக்கப் பழக்கப்படுத்தப்பட்டனர். 11 கம்ப்யூட்டர்கள் கொண்ட தனி அறை, தடையில்லா மின்சாரத்துக்கு யு.பி.எஸ் வசதி... என நவீன வசதிகள் புதுப்பிக்கப்பட்டன. 2012-ல் 27 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 62 ஆக உயர்ந்தது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு என்று தனியே நாற்காலி கிடையாது. குழந்தைகளுடன் சமமாக அமர்ந்துதான் அவர்களும் பயிற்றுவிக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகள் குறித்த நம் மனதில் பதிந்துள்ள சித்திரத்துக்கு நேர் எதிராக இருக்கிறது ராமம்பாளையம் அரசுத் தொடக்கப்பள்ளி. பூச்சிவிளாகம் அரசுத் தொடக்கப் பள்ளிக்குள் நுழையும் யாரும், அந்தப் புத்துணர்ச்சியை உணர முடியும். பளிச்செனத் தூய்மையான வளாகத்துடன் நேர்த்தியாக அமைந்திருக்கும் பள்ளி, ஒட்டுமொத்த கிராமத்தின் கூட்டு உழைப்பின் காரணமாக மறுவாழ்வு பெற்றுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள இந்தப் பள்ளிக்கு, 50 ஆண்டு கால பாரம்பர்யம் உண்டு. இந்தப் பகுதியில் இருந்து கல்விபெற்ற முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்கும் இதுதான் முதல் பள்ளி. அதன்பிறகு தனியார் பள்ளி மோகத்தால் மக்கள் இதைக் கைவிட்டனர். மாணவர் எண்ணிக்கை குறைந்து, கிட்டத்தட்ட மூடப்போகும் நிலையில் ஊர்க்கூட்டம் கூடியது. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஊர் சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். முதல் கட்டமாக பள்ளியில் யு.கே.ஜி தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிகளைப்போல குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர வேன், ஆட்டோ போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. படிப்படியாகப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. கடந்த ஆண்டு 65 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இப்போது 112-ஆக அதிகரித்துள்ளது. தலைமை ஆசிரியர் வில்சன்ராஜ் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் கடின உழைப்பால் இப்போது பூச்சிவிளாகம் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க போட்டிப்போடுகின்றனர் பெற்றோர்கள். சென்னை, கூடுவாஞ்சேரி அருகே இருக்கிறது ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசும் அழகில் எல்லோரும் அசந்துபோகிறார்கள். படிப்பது என்றால், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது மட்டும் அல்ல; பேசுவது என்றால் பாடம் சார்ந்த வாக்கியங்களைப் பேசுவது மட்டும் அல்ல. தங்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை ஆங்கிலத்திலேயே உரையாடும் அளவுக்கு இந்தப் பள்ளியின் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறிப்பாக, இவர்களின் ஆங்கில உச்சரிப்பு இந்திய உச்சரிப்பு முறையில் அல்லாமல், பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையில் அமைந்துள்ளது. ''ஒரு மொழியை, அதன் தாய்மொழியினர் எப்படிப் பேசுகிறார்களோ அதைப்போலவே பேச வேண்டும். அதுதான் சரியானது'' என்கிறார் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன். ராயமங்கலம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம். பொதுவாக, அரசுப் பள்ளிகளின் பலவீனமாகச் சொல்லப்படுவது, 'அங்கே படித்தால் ஆங்கிலம் வராது’. இதை மாற்றுவதற்கு முதலில் அய்யப்பன் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்படிக் கற்கும்போது 'ஓசை வடிவில்’ ஆங்கிலத்தைப் பயில்வது அவருக்கு எளிதாகவும் சுலபமாகவும் இருந்துள்ளது. அதை அப்படியே தான் பணிபுரியும் பள்ளியிலும் பரிசோதித்துப் பார்த்தார். ஆச்சர்யப்படும்விதமாக மாணவர்கள் எளிதில் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். இப்போது இவரது ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முறையை, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்து அரசு திட்டம் தீட்டி வருகிறது. பெரியகுளம் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ மலை ஏறினால் பேச்சிப்பாறை அணை. அதையும் தாண்டி மலைப்பாதையில் வளைந்து, வளைந்து சென்றால் ஆறு கி.மீ தொலைவில் கன்னக்கரை என்ற பகுதியில் இருக்கிறது அரசு உண்டு உறைவிடப் பள்ளி. சுற்றிலும் மலைகள், கீழே சலசலத்து ஓடும் காட்டு ஓடை, சில்லெனக் காற்று... என ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இதற்கும் மேல் உள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகள். சாலை வசதி இல்லை. காட்டுத் தடத்தில் நான்கைந்து கி.மீ நடந்துதான் வரவேண்டும். இவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் விஜயராஜா. இவர் அடிப்படையில் ஓர் ஓவியர் என்பதால், பழங்குடி குழந்தைகளின் மனதில் உறைந்துகிடக்கும் தூண்டப்படாத கற்பனைத்திறனை வெளிக்கொண்டுவர நினைத்தார். அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஆச்சர்யங்களால் நிறைந்திருந்தது. ஒரு சிறுவன் வரைந்த ஓவியத்தில், மனிதர்களின் தலைக்கு மேலே சூரிய மின் தகடுகள் நடப்பட்டிருந்தன. ஏனெனில், காட்டுக்குள் அவர்களுக்கு சூரிய மின்தகடு வழியேதான் மின்சாரம் கிடைக்கிறது. இப்படி குழந்தைகளின் உண்மையான படைப்புத்திறனைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதுதான் ஆசிரியர் பணியின் சுவாரஸ்யமும் சவாலும். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன் செய்துவருகிறார் விஜயராஜா. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ளது தூமனூர் நடுநிலைப்பள்ளி. ஆனால் அத்தனை சுலபத்தில் இது நடுநிலைப் பள்ளியாக மாறிவிடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தப் பள்ளிக்கு, ஐந்து கி.மீ. நீளம் கொண்ட காட்டுப்பாதையில்தான் மாணவர்கள் நடந்து வர வேண்டும். அப்போது இது தொடக்கப்பள்ளியாக இருந்தது. அந்த நிலையில்தான் ஆசிரியர் ஜெயராஜ் இங்கு பணியில் சேர்ந்தார். பள்ளியை, முதலில் நடுநிலைப் பள்ளியாக மாற்றினால்தான் மேற்கொண்டு மாணவர்கள் படிப்பார்கள் என்பதால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஊர் மக்களிடம் கடுமையாகப் போராடி அதைச் சாதித்தார். மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர ஒரு ஜீப் வாங்கப்பட்டது. பள்ளிக் கட்டடம் கட்ட ஊர் மக்கள் நிதி திரட்டியபோது, தன் மோதிரத்தை விற்று பணம் தந்தார். தன் குடும்பத்தையும் அதே ஊரில் தங்க வைத்தார். தூமனூர் பள்ளியில் படித்து முடித்த ஐந்து மாணவர்களுக்கான கல்லூரிக் கட்டணத்தையும் தன் சொந்த பணத்தில் இருந்து இவரே கட்டுகிறார். ஒட்டுமொத்த ஊரும் ஆசிரியர் ஜெயராஜை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது! 'பெய்யெனப் பெய்யும் மழை’க்கு இப்படியான உள்ளங்களும் காரணம்! - பாடம் படிப்போம்...
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17 - ஆனந்த விகடன் - 2014-10-08'கனவு ஆசிரியர்’ என்ற ஒரு புத்தகம். க.துளசிதாசன் தொகுத்து, பாரதி புத்தகாலயம் வெளியீடாக வெளிவந்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் 'கனவு ஆசிரியர்’ குறித்து விவரித்துள்ளனர். ஓய்வுபெற்ற பேராசிரியர் ச.மாடசாமி எழுதியிருக்கும் கட்டுரையில் அத்தனை நெகிழ்ச்சி. தன் ஒட்டுமொத்த பணிக் காலத்தையும் காய்த்தல் உவத்தல் இல்லாமல் சுய விமர்சனம் செய்யும் மாடசாமி, வகுப்பறையை மனதின் ஆழத்தில் இருந்து அத்தனை கனிவுடன் அணுகுகிறார். தான் பணியாற்றிய காலத்தில் தினசரி காலை 4 மணிக்கு எழுந்து, அன்று நடத்த வேண்டிய பாடங்களைத் தயார்செய்வார். அன்று வகுப்பறையில் சொல்லவேண்டிய கதைகள், மாணவர்களைச் சிரிக்கவைப்பதற்கான தயாரிப்புகள் என ஒவ்வொன்றாக நுணுக்கமாகக் குறிப்புகள் எடுப்பார். மாணவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக முழுநீள செய்யுள்களை மனப்பாடம் செய்வார். ''இதனால் என் வகுப்பறை என்னுடையதாகவே இருந்தது. என் சாமர்த்தியம்; என் உழைப்பு. நான் பாடம் நடத்த ஆரம்பித்தால், மாணவர்கள் கண்கொட்டாமல் கவனித்தார்கள். அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது, அந்த 'அசையாத’ வகுப்பறையை நான் எதிர்க்கிறேன். அப்படி இருந்ததற்காகக் குற்றவுணர்வு அடைகிறேன். சிந்தித்துப் பார்த்தால் மாணவர்களுடன் சங்கமிப்பதற்காக அல்லாமல், அவர்களை வெற்றிகொள்வதற்காகவே உழைத்திருக்கிறேன். வகுப்பறையில் வெற்றி, தோல்வி என்ற சிந்தனைக்கு இடம் ஏது? வகுப்பறை என்பது மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவர்கள் பேச வேண்டும். நான் உழைத்தேன். ஆனால் என் உழைப்பை, மாணவர்களின் தலைச்சுமை ஆக்காமல், இறக்கை ஆக்கியிருக்க வேண்டும். வகுப்பு முழுக்க அவர்கள் பறப்பதைப் பார்த்திருக்க வேண்டும். ஏரி முழுக்க ஆசிரியர் ஒற்றைப் படகு செலுத்தினால், வேடிக்கை பார்க்கவா மாணவர்கள்? ஏரி முழுக்க ஏராளமான சிறுசிறு படகுகள் மிதக்க வேண்டும். இந்த உண்மைகளை உணர்ந்து என் இரண்டாம் பாதி பணிக் காலத்தில் மாணவர் மைய வகுப்பறையை நோக்கி நான் திரும்பியபோது, வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் புதிய நட்சத்திரங்கள் மின்னக் கண்டேன். புதிய திறமைகளை அடையாளம் கண்டேன்'' என்கிறார் மாடசாமி. இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் என்றபோதிலும், இவர் குறிப்பிடும் வகுப்பறை அணுகுமுறை பள்ளிக்கும் பொருந்தும். ''நான் 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்திருக்கிறேன். ஒரு முறைகூட மாணவர்கள், 'சார், போதும். தாங்க முடியலை’ என்று சொன்னது இல்லை. 30 ஆண்டுகளாக ஒரு முறைகூட குறுக்கீடு செய்ய முடியாததா என் வகுப்பறை? இத்தகைய செயற்கைத் தடைகள் விலகி, வகுப்பறையில் உரிமையான உரையாடல்கள் நிகழ வேண்டும் என்ற ஏக்கம் இறுதிவரை எனக்கு இருந்தது'' என்கிறார். கல்வி நிலைய வளாகத்தைவிட்டு வெளியேறி எத்தனையோ ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த ஏக்கத்தை அடைகாத்துவைத்திருக்கும் இத்தகைய ஆசிரியர்கள்தான், அந்தப் பணியின் மீதான மேன்மையை இன்றளவும் தக்க வைக்கிறார்கள். ஒரு சோவியத் சிறுகதையில், அம்மாவின் மடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பள்ளியில் விடப்படுகிறது ஒரு குழந்தை. தினமும் கத்திக் கதறி அழுதபடிதான், அந்தக் குழந்தை அம்மாவைப் பிரிகிறது. வீட்டில் வளரும் காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் தான் சந்தித்ததை எல்லாம் ஓடிஓடி வந்து ஒன்றுவிடாமல் அம்மாவிடம் சொல்லும் அந்தக் குழந்தை, பள்ளிக்குச் சென்றதும் ஓடிஓடிச் சொல்ல யாரும் இல்லாமல் மௌனத்தில் ஆழ்கிறது. கடுமையான உளவியல் சிக்கல். நாட்கள் செல்லச் செல்ல, வகுப்பின் ஆசிரியை அந்தக் குழந்தையுடன் பேசிப் பழகி, வீட்டில் அம்மாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டதைப் போலவே, தன்னிடமும் பகிர்ந்துகொள்ளச் சொல்லிப் பழக்குகிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள். வீட்டில் ஓர் அம்மா; பள்ளியில் இன்னோர் அம்மா. இந்தக் கதையைப் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ''நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, ஆதிலட்சுமி என்ற ஆசிரியை இருந்தார். பிரியமான முகம். அவர் கட்டியிருந்த சேலையின் நிறம்கூட எனக்கு நினைவில் இருக்கிறது. நான் தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு நின்றபோது, டீச்சர் ஓடிவந்து எனக்கு தண்ணீர் புகட்டினார். அவரது உள்ளங்கை ஸ்பரிசம் என் உதடுகளில் பட்டு என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அப்பேர்ப்பட்ட ஆதிலட்சுமி டீச்சர், தெலுங்கு பேசும் பிள்ளைகளிடம், 'மன பிடலு... வாள பிடலு’ என்று பேசியபோது, திடீரென ஒரு நொடியில் நான் யாரோவாகியிருந்தேன். என் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. 'எதுக்குடா அழுற இப்போ?’ என்று ஆதிலட்சுமி டீச்சர் கேட்டபோது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அந்தச் சிறிய இடைவெளியைக்கூட குழந்தையின் மனதால் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை என்பது இப்போது புரிகிறது'' என்கிறார். எத்தனை நுணுக்கமான உணர்வு! தன் அம்மா திடீரென வேறொரு மொழியில் பேசினால், அவர் யாரோ ஓர் அம்மா ஆகிவிடுவது இல்லையா... அதுபோல்தானே இதுவும்! அந்த சோவியத் சிறுகதையில் வரும் குழந்தையைப்போல, குழந்தையின் மனம் அம்மாவையும் ஆசிரியையும் சமமாகவே பாவிக்கிறது. குழந்தைகளின் இத்தகைய மெல்லிய உணர்வுகள் குறித்து, ஆசிரியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். 'புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடாது எனத் தெரிகிற வயதில், ஒரு குழந்தை தன் பால்யத்தை இழக்கத் தொடங்குகிறது’ என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். பால்யத்தின் சிறகுகள் உதிரத் தொடங்கும் காலம், ஒரு குழந்தைக்கு எத்தனை முக்கியமானது? அந்தக் குழம்பிய மனதின் கலக்கத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் பண்பும் வகுப்பறையில் நிலவ வேண்டும். 40 பேர் கொண்ட வகுப்பில் படிப்பில் சிறந்துவிளங்கும் மாணவர்களை, அனைவரின் முன்னிலையில் பாராட்டுவது நல்ல விஷயம்தான். அது குழந்தைக்கு உற்சாகத்தைத் தரும். அதே நேரம் மீதமுள்ள 39 குழந்தைகளின் மனநிலை என்ன? ஓர் ஆசிரியருக்கு மொத்த வகுப்பறை சூழல்தான் எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அப்படி ஒட்டுமொத்த மாணவர் நலனைக் கருத்தில்கொண்டு அக்கறையுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநிலம் முழுக்க நிறைந்துள்ளனர். ஊட்டி, கோத்தகிரி அருகே பசுமை சூழ்ந்த பிரதேசத்தில் இருக்கிறது அவ்வூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 34 பேர் படித்த பள்ளியில், இப்போது 63 பேர் படிக்கின்றனர். காரணம்... ஆசிரியர் நல்லமுத்து. இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, தாயகம் திரும்பியோரில் ஒருவராக தமிழகம் வந்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவரை, இப்போது அந்தப் பிரதேசமே கொண்டாடுகிறது. பாடம் நடத்துவதில் உள்ள அக்கறை மட்டுமா... பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை அவரே சுத்தம் செய்கிறார்; சிலம்பம் கற்றுத்தருகிறார்; பறை அடிக்கப் பயிற்றுவிக்கிறார்; கேரம்போர்டு, செஸ் இரண்டிலும் அந்த ஊர் பள்ளி மாணவர்கள் வெற்றிகளைக் குவிக்கக் காரணமாக இருக்கிறார். கேரம்போர்டில் இந்தப் பள்ளிதான் மாவட்ட அளவில் முதல் இடம். பள்ளி முழுக்க பல்வேறு போட்டிகளில் வென்ற 300-க்கும் மேற்பட்ட கோப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வர ஒரு வாடகை வேன் அமர்த்தப்பட்டுள்ளது. அதற்கான வாடகையாக, தன் சொந்தப் பணத்தில் இருந்து மாதம்தோறும் 5,000 ரூபாய் தருகிறார். தன் மகளையும் அதே பள்ளியில் சேர்த்துள்ளார். ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர் நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் நாராயணன். இவர் பணியில் சேர்ந்தபோது மாணவர்களின் எண்ணிக்கை 20. அதே நிலை நீடித்திருந்தால், ஒருசில ஆண்டுகளில் அந்தப் பள்ளி மூடப்பட்டிருக்கும். ஆனால், ஆசிரியர் நாராயணன், சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளியில் சேர்த்தார். இப்போது அந்தப் பள்ளியில் 280 பேர் படிக்கிறார்கள். மாணவர் எண்ணிக்கை மட்டும் அல்ல... புத்தகக் கல்விக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்குப் போதித்தார். இதனால் ஊர் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். கடந்த ஜூன் மாதத்தில் அவர் சங்கீதவாடி கிராமத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். விஷயம் தெரிந்ததும் கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பள்ளியைப் பூட்டி சாலை மறியல் செய்தனர். அது ஆசிரியர் நாராயணன், விரும்பிப்பெற்ற பணிமாறுதல் என்பது தெரிந்தும் கனத்த மனதுடன் அவருக்குப் பிரியாவிடை தந்தனர். இப்போது சங்கீதவாடி பள்ளியிலும் மிகுந்த அக்கறையுடன் பணி செய்துவருகிறார். புதுக்கோட்டை அருகே நெடுவாசல் வடக்கு கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ஆசிரியர் கருப்பையன். மிகவும் அவல நிலையில் இருந்த இந்தப் பள்ளியை மாற்றிக் காட்டுகிறேன் என வேண்டி விரும்பி இங்கு வந்தவர். சுத்தம், சுகாதாரத்தில் கிராம மக்கள் பின்தங்கி இருந்ததைப் பார்த்த அவர், கிராமத்து இளைஞர்கள் 10 பேரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அதிகாலை 4 மணிக்கு வீதிகளில் சத்தம் போட்டுக்கொண்டே சென்றனர். பொதுஇடங்களில் அசுத்தம் குறைந்தது. ஒருசில ஆண்டுகளில் முழு சுகாதார கிராமத்துக்கான 3 லட்ச ரூபாய் அரசுப் பரிசை நெடுவாசல் வடக்கு கிராமம் வென்றது. அந்தப் பணத்தைக்கொண்டு மேலும் பல வசதிகளை ஊருக்குச் செய்துதந்தார். அரசின் அத்தனை திட்டங்களையும் கிராமத்துக்குக் கொண்டுவந்தார். மக்கள், ஆசிரியர் கருப்பையன் மீது முழு நம்பிக்கை கொண்டனர். பள்ளி கணினிமயம் ஆனது. பள்ளியின் மாணவர்கள் சிலர் இப்போது வலைப்பூ நடத்துகின்றனர். மாணவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை அறிந்து, எல்லோருக்கும் நவதானியக் கஞ்சி வழங்கச் செய்தார். இப்படி கிராமத்து நலன், மாணவர்களின் உடல் நலன், தரமான கல்வி, ஒழுக்கம்... என அனைத்து அம்சங்களிலும் அந்தக் கிராமத்துடன் ஒன்றிவிட்டார். தங்கள் ஊருக்கு இவ்வளவு செய்த ஆசிரியர் கருப்பையனுக்குக் கைமாறு செய்யும்விதமாக 2010-ம் ஆண்டில், 100 தட்டுகளில் பழம், சீர்வரிசையுடன் 'கல்விச் சீர்’ தந்தார்கள் கிராம மக்கள். இப்படிச் சொல்லிமாளாத அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த ஆசிரியர்கள், மாநிலம் எங்கும் நிறைந்துள்ளனர். பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில், கடந்த ஆண்டு மூன்று அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி எனச் செய்தி வந்தது. கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 113 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி அடைந்துள்ளன. இதற்கு எல்லாம் காரணம், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு. இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? தாங்கள் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை இவர்கள் உணர்ந்துள்ளனர். வகுப்பறையில் தன் முன்னே அமர்ந்திருக்கும் மாணவர்கள் ரத்தமும் சதையுமான உயிர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடவில்லை. தனது கற்பிக்கும் திறன் மூலமாக தன் மாணவர்கள் அத்தனை பேரின் எதிர்காலத்தையும் புரட்டிப்போடும் பேராற்றல், தன்னிடம் இருப்பதை நினைவில் கொண்டுள்ளனர். தங்களின் பணிசார்ந்த அழுத்தங்களும், சொந்த மன நெருக்கடிகளும் மாணவர்களைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். அந்த மனம்தானே, ஓர் ஆசிரியரின் அடிப்படைத் தேவை!
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18 - ஆனந்த விகடன் - 2014-10-15
அரசுப் பள்ளிகளில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவைதான் இன்று ஏழைகள் படிக்க எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. மேலும், கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி லாபநோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகள் எங்கும் சூழ்ந்துள்ள நிலையில், அரசுப் பொதுப் பள்ளிகள்தான் நம் கல்வி உரிமையின் அடையாளங்கள். எந்தக் காரணம்கொண்டும் அவற்றை விட்டுத்தர முடியாது. வசதிக் குறைவுகள் இருக்கலாம். அவற்றை மட்டுமே ஊதி, மிகைப்படுத்தி அரசுப் பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கையை விதைக்க முடியாது. அதனாலேயே, அரசுப் பள்ளிகள் பற்றிய நம்பிக்கை அளிக்கிற, நேர்மறை அம்சங்களையும் பொது சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில் நீங்கள் பார்க்கலாம். மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் இருப்பார்கள். அதிகத் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதல் இடம் வகிக்கும். ஒருசில ஆண்டுகள் நீங்கலாக, இதுதான் தமிழகத்தின் நீண்ட காலக் காட்சி. முதல் மதிப்பெண் கொண்டாடப்படும் அளவுக்கு தேர்ச்சி விகிதம் கொண்டாடப்படுவது இல்லை. 26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்துக்குத்தான் 10-ம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம். கடந்த ஆண்டில்தான் இந்தப் பெருமையை இழந்து ஐந்தாம் இடத்துக்குச் சென்றது. அதேபோல ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதத்திலும் விருதுநகருக்குத்தான் தொடர்ந்து முதல் இடம். ஒருசில மாணவர்களை ஸ்டேட் ரேங்க் எடுக்கவைப்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக்காட்டுவதுதான் உண்மையான சாதனை. விருதுநகரில் மட்டும் அல்ல... மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 482. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 887-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளனர். இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு வருவதன் பின்னால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அசராத உழைப்பு இருக்கிறது. இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளாமல், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடிப்பது ஏன் என்பதை, அந்த மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள திருவண்ணாமலையில் படிக்காத பெற்றோர்கள் அதிகம். அப்பா-அம்மா இருவரும் கூலி வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய நிலையில், பிள்ளைகளை கிராமத்தில் விட்டுவிட்டு வெளியூர் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு உரிய வாழ்க்கைச் சூழல் இல்லை. இத்தகைய இடங்களில் பெற்றோர்களின் இடத்தை நிரப்பவேண்டியவர்கள் ஆசிரியர்களே. அவர்கள்தான் படிப்பின் அவசியத்தைப் புரியவைத்து, இடைநிற்காமல் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். ஆனால், நடப்பது என்ன? இந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிந்த பிறகு, திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 75 சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரை நோக்கி, மாவட்டக் கல்வி அதிகாரி, 'உங்களைச் சுற்றியுள்ள எல்லா பள்ளிகளும் 98 சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருக்கும்போது நீங்கள் மட்டும் ஏன் எல்லா வருடமும் 75 சதவிகிதத்தைத் தாண்டாமல் இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அந்தத் தலைமை ஆசிரியர் சற்றே இழுத்தவாறு, 'சார்... நாங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா எக்ஸாம் நடத்துறோம்’ என்றார். உடனே அந்தக் கல்வி அதிகாரி, 'நீங்க 100 சதவிகிதம் ஸ்ட்ரிக்ட்டா எக்ஸாம் நடத்தணும்னு நான் சொன்னேனா சார்? எனக்குத் தேவை 100 சதவிகித ரிசல்ட்’ எனப் பதில் சொன்னார். 'எப்படியும் தேர்வு நடத்திக்கொள்ளுங்கள். தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டினால் போதும்’ என்றால், இது என்ன நியாயம்? பிட் அடிப்பதை ஊக்குவிக்கும் செயல் அல்லவா இது! தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது மாய மந்திரம் அல்ல. இன்று தூங்கி எழுந்ததும் நாளை காலையில் அது நடந்துவிடாது. அதற்கு நீண்ட கால உழைப்பு தேவை. மாணவர்களைப் படிப்படியாகத்தான் படிக்கவைக்க முடியும். அவசர, அவசரமாகப் படித்து, அரும்பு மீசை படர்வதற்குள் அறிவாளியாகி, தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகளில் வருவதைப்போல 'வயதுக்கு மீறி’ பேசி குழந்தைத்தன்மையை இழப்பதுதான் அறிவா? குழந்தையை அதன் இயல்புடன் இருக்க அனுமதித்து, வயதுக்கு ஏற்ற கற்கும் ஆற்றலுடன் படிக்க அனுமதித்தாலே போதும். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்ட மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை, அதன் சுயத்தன்மையுடன் வெளிக்கொண்டு வரும் முனைப்புகொண்ட ஆசிரியர்கள் எல்லா மாவட்டங்களிலும் நிறைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கறையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் கல்பனா என்கிற தலைமை ஆசிரியை, வில்லுப்பாட்டு மூலம் பாடம் சொல்லித்தருகிறார். பாடமும் இசையும் இணைந்த லயத்தில் மாணவர்கள் லயிக்கின்றனர்; தன்னையும் அறியாமல் படிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டி.யூ.என்.எஸ்.வைத்தியலிங்கம் மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் வில்சன் பிரபாகர், தன் சொந்த செலவில் கம்ப்யூட்டர், புரொஜெக்டர் வாங்கித் தந்திருக்கிறார். இவர்கள் எதை எதிர்பார்த்து இவற்றைச் செய்கின்றனர்? தன்னிடம் படிக்கும் மாணவன் நன்றாக இருக்க வேண்டும், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே இதற்கான அடிப்படை. திருநெல்வேலி மாவட்டம், கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போட்டிபோடுகிறார்கள் என்றால், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்புதான், அந்த நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறது. இந்த இடத்தில் நாம் நாமக்கல் மாவட்டம் பற்றி குறிப்பிட்டுப் பேச வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளின் கொள்ளைக்குக் குறியீடுபோல இருக்கும் இதே மாவட்டத்தில் பைசா செலவு இல்லாமல் மிகச் சிறந்த மதிப்பெண்களும், தேர்ச்சி விகிதமும் பெற்றுவரும் பல அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2,714. இருபாலர் படிக்கும் இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பிரிவு இரண்டுமே செயல்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து உடனடியாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டுவிடுகிறார். 1997-ல் இருந்து இப்போது வரை இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் மட்டும் 2.25 கோடி ரூபாய். தலைமை ஆசிரியர் மதியழகன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் இடைவிடாத உழைப்பின் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பள்ளிதான் மாவட்ட அளவிலான ரேங்க் எடுக்கிறது. இங்கிருந்து மருத்துவம், பொறியியல் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பெரம்பலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை என தொலைதூர ஊர்களில் இருந்து எல்லாம் இந்தப் பள்ளியில் வந்து மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் தங்கிப் படிப்பதற்கு என்றே, பள்ளியைச் சுற்றி எட்டு தனியார் விடுதிகள் முளைத்துள்ளன. இந்தப் பள்ளியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இதே அளவுக்குப் புகழ்பெற்றது. சுமார் 1,600 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியும், ஆர்.புதுப்பாளையம் பள்ளியும்தான் மாவட்ட அளவிலான ரேங்க்கில் ஒவ்வோர் ஆண்டும் போட்டி போடும். இவர்களுடன் போட்டிக்கு நிற்கிறது திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. 1921-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டு ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதம் 98 சதவிகிதம். 10-ம் வகுப்பில் 92 சதவிகிதம். தாலுகா தலைமை இடத்தில் உள்ள இந்தப் பள்ளி, சுற்றிலும் தனியார் பள்ளிகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதனால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே இருக்கும். தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இதைப் புரிந்துகொண்டு உழைக்கின்றனர். மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக, ஸ்போக்கன் இங்கிலீஷ் நடத்துவதற்கு என்றே பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம், ஓர் ஆசிரியரை நியமித்துள்ளனர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இருக்கிறது, நாமக்கல், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. உள்ளடங்கிய கிராமப்புற பள்ளியான இதில் படிப்பது 35 மாணவர்கள்தான். அத்தனை பேரின் கற்கும் திறனும் அசரடிக்கிறது. குறிப்பாக, இந்தப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் இந்த மாவட்டம் முழுவதும் பிரபலம். காரணம், ஆசிரியர் இளங்கோ. 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்த இவர், ஒட்டுமொத்த ஊரையும் மாற்றி அமைத்துள்ளார். குறிப்பாக குழந்தைத் திருமணம் அதிகம் நடந்த ஊர் இது. ஆசிரியர் இளங்கோ இங்கு பணிக்கு வந்ததும், ஒவ்வொன்றாக மாற்றத் தொடங்கினார். கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் பேசி, நிதி திரட்டி பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டினார். தினசரி காலை 7 மணிக்கு எல்லாம் வந்து பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினார். பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் மாலை நேர வகுப்புகள் நடத்தினார். ஊர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இன்று அந்த ஊரில் குழந்தைத் திருமணங்கள் அடியோடு இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார். ஆசிரியர் இளங்கோ, ஆங்கிலம் படித்தவர்தான். எனினும், மாணவர்களுக்கு எளிய முறையில் சொல்லித்தரக் கூடுதலாக நேரம் செலவிட்டு ஆங்கிலம் படித்தார். ஆங்கிலம் வாசிக்க, எழுத, உரையாட என, அவரே ஒரு சிலபஸை வடிவமைத்தார். இன்று இந்தச் சின்னஞ்சிறிய ஊரின் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆங்கில தினசரியைப் படித்து புரிந்துகொண்டு, ஆங்கிலத்திலேயே அதுகுறித்து உரையாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். ''ஒரு குழந்தை, கற்றல் என்பதைத் தொடங்க ஆரம்பிக்கும் நாளில் இருந்து என்னுடன் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னால் அந்தக் குழந்தையைக் கண்காணிக்கவும் முடிகிறது என்பதால், இது எனக்குச் சற்று எளிமையாக இருக்கிறது!'' என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் இளங்கோ. 'நல்லாசிரியர்’ விருதுபெறாத இந்த நல்ல ஆசிரியர்களை வாழ்த்துவோம்!
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19 - ஆனந்த விகடன் - 2014-10-22அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் நிலை என்ன? 2011-12 கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரம் மாணவர்கள் அதில் சேர்க்கப்பட்டனர். 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டு 3,500 பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் எனப் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 'அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களில், குறைந்தது 20 பேர் விரும்பினால், அந்தப் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்’ என்பது அரசின் அறிவிப்பு. தலைமை ஆசிரியர் விரும்பினாலும் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கிக் கொள்ளலாம். தொடங்குவது சரி... ஆங்கில வழியில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு எங்கு போவது? ஆங்கில வழியில் பாடம் நடத்துவதற்கு எனப் பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருப்பவர்கள்தான் இதையும் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் இல்லை என்ற நிலையில், அது ஆசிரியர்களுக்கு மிகவும் சவால். பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளுக்குச் செல்வதை ஆசிரியர்கள் முடிந்த வரை தவிர்க்கிறார்கள். அல்லது தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளிக்கின்றனர். இது ஆசிரியர்களின் தவறு அல்ல. அரசு, ஆங்கில வழியில் வகுப்புகளைத் தொடங்குவது என முடிவு செய்வதற்கு முன்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைத் தயார்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஆசிரியர்களையும் துன்புறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். ஐந்து வகுப்புகளில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், இரண்டு ஆசிரியர்கள்தான், அனைத்து வகுப்புகளையும் சமாளித்தாக வேண்டும். இப்போது ஆங்கிலவழிக் கல்வி என்பது கூடுதல் சுமை. மொத்தத்தில் ஆங்கில வழி வகுப்புகள் செயல்படும் விதம் எந்த விதத்திலும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்... ''இங்கிலீஷ்ல பரீட்சை எழுதின பசங்களோட பேப்பரைத் திருத்தச் சொல்வாங்க. 'இல்ல சார், எனக்கு அவ்வளவா இங்கிலீஷ் நாலெட்ஜ் இல்லை’னு சொன்னா, 'சார், ஆன்ஸர் கீ கையில் கொடுத்துடப்போறோம். இதில் இருக்கிற விடையை எழுதியிருந்தா, மார்க் போடுங்க. இல்லைன்னா போடாதீங்க. நாமெல்லாம் டீச்சர்ஸ். இதைக்கூடச் செய்யலைனா எப்படி?’னு சொல்லித் திருத்தச் சொல்றாங்க. என்னதான் ஆன்ஸர் கீ கொடுத்தாலும், பையன் நேரடியா விடை எழுதாம சுத்தி வளைச்சு சரியான விடையை எழுதியிருந்தா, அதுக்கு அந்த ஆசிரியர் மார்க் போடமாட்டார். முக்கியமா நவீன சி.சி.இ முறை கேள்விகளுக்கு சுயமா சிந்திச்சு விடை எழுதச் சொல்லுது. ஒரு பையன் சுயமா சிந்திச்சு விடை எழுதினா, அதைப் புரிஞ்சுக்கிட்டு மதிப்பெண் வழங்குற திறன் ஆசிரியருக்கு இருக்கணுமே... 'ஆன்ஸர் கீ’ல இல்லேனு திருத்துற ஆசிரியர் மார்க் போடலைன்னா, பாதிப்பு மாணவர்களுக்குத்தான். ஆனா, இதுதான் பல இடங்கள்ல நடக்குது'' என்று இந்த ஆசிரியர் சொல்வது நடைமுறை உண்மையை முகத்தில் அறைகிறது! 'ஆங்கில வழி வகுப்பு’ எனச் சொல்லிவிட்டு தேர்வில் தமிழில் கேள்வித்தாள்கள் வழங்கப்படுவதில் இருந்தே, இதன் அபத்தத்தைப் புரிந்துகொள்ளலாம். எனினும் ஆங்கில மோகம், மக்கள் அடிமனதில் ஆழப் பதிந்துள்ளதால், மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. உதாரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 45 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 57 நடுநிலைப் பள்ளிகளில் 2,736 மாணவர்கள் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்தனர். இந்தக் கல்வி ஆண்டில் 83 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 98 நடுநிலைப் பள்ளிகளில் 7,067 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நிலைதான். இதற்குக் காரணம், தனியார் பள்ளிகளில் அதிகப் பணம் கட்டி பிள்ளைகளைச் சேர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளையும் ஆங்கிலம் பேசாதா என ஏங்குகின்றனர். அரசுப் பள்ளிகளில் இலவசமாகவே இங்கிலீஷ் மீடியம் என்றதும், அந்த ஏக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என எண்ணுகின்றனர். 'ஆனால் அரசு ஒண்ணும் தமிழ் வழிக் கல்வியைக் கைவிடலையே... அதுவும் இருக்கு; இதுவும் இருக்கு. மக்கள் ஆங்கில வழியைத்தான் தேர்வு செய்யுறாங்கனா, அதுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?’ என்பது கல்வித் துறை அதிகாரிகள் சிலரின் எதிர்வாதம். இரண்டும் இருப்பது உண்மைதான். ஆனால் இது தந்திரம் நிறைந்த உண்மை. மக்கள் ஆங்கில மோகத்தில் ததும்பி வழியும் நிலையில் இரண்டையும் ஒன்றாக நீட்டினால், ஆங்கிலம் பக்கம்தான் சாய்வார்கள். ஆகவே இரண்டுக்கும் சம மதிப்பு கொடுத்திருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை. ஆங்கில அறிவைப் பெறுவதற்கு ஆங்கில மொழிக் கல்வியே போதும்; ஆங்கில வழிக் கல்வி தேவை இல்லை. ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்து, மற்றப் பாடங்களை தாய்மொழியிலேயே படிப்பதன் வழியேதான் ஒரு குழந்தை சுயமாகச் சிந்திக்க முடியும். குழந்தையின் முழுமையான திறமை தாய்மொழி வழிக் கல்வியில்தான் வெளிப்படும். வீட்டில், சமூகத்தில், நண்பர்கள் வட்டத்தில் என அனைத்து இடங்களிலும் தமிழில் பேசி, சிந்தித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை பள்ளியில் மட்டும் இவற்றை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்வது, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனையே முடக்கிப்போடுகிறது; அவர்களின் மொத்த ஆளுமையையும் சிதைக்கிறது. தாய்மொழி வழிக் கல்விதான் ஒரு குழந்தையின் உண்மையான அறிவுத்திறனை வளர்க்கிறது என்பது எத்தனையோ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பணக்காரப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும்விதமாக 2009-ம் ஆண்டு 'பிசா-2009’ (Programme for International Student Assessment) என்ற சோதனை நடந்தது. இதில் இந்தியா சார்பாக தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில்இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 74 நாடுகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வாசித்தல், கணிதம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா 72 மற்றும் 73-வது இடத்தையும், அறிவியலில் 74-வது இடத்தையும் பிடித்தது. இருப்பதிலேயே கடைசி! ஆனால், ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்படுகிறது. இது எவ்வளவு பொய்யானது என்பதற்கு, வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளே சாட்சிகள். இவர்களில் கணிசமானோர் ஆங்கில வழியில் படித்தவர்கள். மேலும், 'இப்படித்தான் இந்தி படிப்பதைத் தடுத்து வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டார்கள்’ என்ற வாதத்தையும் இணைத்தே பேசுகின்றனர். இதுவும் பொய்யான கூற்று என்பதற்கு, தமிழகத்தின் வீதிகள்தோறும் பணிபுரியும் இந்தி பேசும் வட இந்தியத் தொழிலாளர்களே சாட்சி. 'இந்தி பேசினால் நல்ல வேலை கிடைக்கும்’ என்றால், அவர்கள் ஏன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆயிரம் மைல் கடந்துவந்து இங்கு அல்லாட வேண்டும்? ஒரு மொழியைப் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்பது மூட நம்பிக்கை. இது தொடர்பான இன்னொரு கோணத்தையும் அடுத்த வாரம் அலசுவோம்..! - பாடம் படிப்போம்...
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 21 - ஆனந்த விகடன் - 2014-11-05'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ எனப் பாடப் புத்தகத்தில் படித்துவிட்டு, வீட்டில் தீண்டாமையைக் கடைப்பிடித்தால், அந்தக் குழந்தை எதைப் பின்பற்றும்? 'ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன்’ எனப் பள்ளியில் சொல்லிவிட்டு, ஏழைகளை பள்ளி காம்பவுண்டு சுவருக்கு வெளியே துரத்தினால், குழந்தையின் மனம் எதை எடுத்துக்கொள்ளும்? பரந்த மனப்பான்மையைப் பக்கத்துக்குப் பக்கம் போதித்துவிட்டு, 'அவன்கூட சேராதே... அவளுக்கு இதைத் தராதே’ எனச் சொல்லித்தந்தால், அந்த சிறுமனம் குழம்பிப் போகாதா? அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை, அதே தெருவில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளிப் பேருந்து ஏற்றிச் செல்லும்போது ஏங்குமா... இல்லையா? இத்தகைய முரண்பாடுகளோடு நம் சமுதாயம் இருப்பதால்தான், மிக இளம் வயதிலேயே மாணவர்களின் மனங்களும் இதற்குப் பழகிப்போகின்றன. உண்மையில் நமக்குத் தேவை வகுப்பறைப் புரட்சி. பணம் உள்ளவனுக்கு முதல் தரக் கல்வி; பணம் இல்லாதவனுக்கு நான்காம் தரக் கல்வி என்றால், அது எவ்வளவு கேடுகெட்ட நிலை? 'சமச்சீர் கல்வி’ என்பது அதன் சாராம்சத்தில் முற்போக்கானது. ஏற்கெனவே இருந்த நமது கல்விச் சூழலுடன் ஒப்பிடும்போது அது ஒரு பாய்ச்சல். ஆனால், சமச்சீர் கல்வியிலும்கூட மேற்கண்ட பாகுபாடுகள் தொடரத்தான் செய்கின்றன. தனியார் பள்ளிகளில் ஏ.சி வகுப்பறைகள் இருக்கும்போது, அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள்கூட இருப்பது இல்லை. பிறகு எப்படி அது சமச்சீர் கல்வி ஆகும்? இதில் இருந்து விடுபடுவதற்கு அடிப்படையான கல்வி அமைப்பிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. மாற்றுவழிக் கல்வி முயற்சிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவலாக நடைபெற்றிருந்தபோதிலும், தமிழகத்தின் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அதில் ஒரு முக்கிய இடம் உண்டு. 1993-ல் சென்னை அம்பத்தூர் பகுதியில் தோழர் தியாகு ஆரம்பித்ததுதான் முதல் தாய்த்தமிழ் பள்ளி. அது தமிழ்நாடு முழுக்க தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசலைப்போல பெருகிக்கொண்டிருந்த நேரம். அரசுப் பள்ளிகள், மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய நேரமும் அதுதான். சரியாக அந்த நேரத்தில் வந்தது தாய்த்தமிழ்ப் பள்ளி. அரசுப் பள்ளிகளில் உள்ள அதே நடைமுறைதான். எல்லா பாடங்களும் தமிழ் வழியில் சொல்லித்தரப்படும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருக்கும். ஆனால் தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் இது மிகவும் தரத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்டது. ஏட்டுக் கல்வி மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகளும், ஒழுக்க நெறிகளும் போதிக்கப்பட்டன. வரலாற்று அறிவு, சமூகம் பற்றிய பார்வை, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என அந்தக் கல்வியில் அனைத்தும் இருந்தன. அரசுப் பள்ளிகளில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் முறை, 20 ஆண்டுகளுக்கு முன்பே தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறையில் இருந்தது. 'மெள்ளத் தமிழ் இனி வாழும்’ எனப் பலரும் அந்தப் பள்ளியைப் புகழ்ந்தனர். இதைத் தொடர்ந்து 1995-ல் திருப்பூரிலும், 1997-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்திலும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பிறகு தமிழ்நாடு முழுக்க மளமளவென ஆரம்பிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அதன் எண்ணிக்கை 40-ஐ தொட்டது. எல்லா பள்ளிகளின் பெயர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் என இருந்தபோதிலும், அவை அனைத்தும் தனித்தனியான நபர்களால் நடத்தப்பட்டன. தாய்த்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிய எவரும் 'கல்வித் தந்தை’கள் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் போதிய பொருளாதார வசதி இல்லாதவர்கள். அரசியல் ஆர்வமும், சமூக மாற்றத்துக்கான கனவையும் மட்டுமே கொண்டிருந்தனர். கல்வி மூலம் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கண்முன்னே இருந்தபோது துணிவுடன் அதில் களம் இறங்கினார்கள். தமிழ்த் தேசிய, திராவிட, கம்யூனிஸ அரசியல் பின்னணியைக் கொண்டிருந்த தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர்கள், அவற்றை கல்வியின் வழியே பள்ளிகளில் கொண்டுசேர்த்தனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாற்றாக மக்களின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கியிருந்த நேரத்தில், 2004-ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடைபெற்றது. 94 இளம் தளிர்களைப் பலிகொடுத்த அந்த நிகழ்வுக்குப் பிறகு பள்ளிகள் மீதான அரசின் இறுக்கம் அதிகரித்தது. ஓலைக் குடிசைகளில் பள்ளி நடத்தக் கூடாது. உறுதியான கட்டட வசதிகள் வேண்டும் என்ற நிபந்தனைகள் பொதுவில் ஏற்கத்தக்கவை. ஆனால், லாப நோக்கம் இல்லாமல் இயங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளிகளால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லை. அரசின் கெடுபிடிகளைச் சமாளித்து, தொடர்ந்து பள்ளியை நடத்த இயலவில்லை. இதனால் 2004-க்குப் பிறகு மாநிலம் முழுவதும் இயங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இப்போது ஒட்டுமொத்தமாகச் சேர்த்து சுமார் 15 பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன. அதில் கோபிசெட்டிப்பாளையத்தில் செயல்பட்டுவரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு, அந்தப் பகுதி மக்களிடம் ஏகோபித்த நன்மதிப்பு. மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்றும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்பதுதான் மழலையர் பள்ளி. அது அரும்பு, மொட்டு, மலர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகுப்புகளிலும் பாடம் என எதுவும் கிடையாது. பள்ளி குறித்த தயக்கத்தை விலக்கி, பள்ளியை விரும்பும் சூழலை உருவாக்குவதுதான் மழலையர் வகுப்புகளின் நோக்கம். ''முழுக்க, முழுக்க விளையாட்டு முறையில்தான் கற்றல் நடக்கும். எடுத்ததுமே அ, ஆ என ஆரம்பிக்க மாட்டோம். புள்ளி, வட்டம், கோடு என உருவங்களில் இருந்து தொடங்குவோம். பிறகு வண்ணங்களை அறிமுகப்படுத்துவது, குழந்தையின் பின்னணியைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சொல்லித் தருவது என இருக்கும். இந்த மூன்று வகுப்புகளிலும் எழுத்துப் பயிற்சி எதுவும் கிடையாது. நேரடியாக 1-ம் வகுப்பில்தான் எழுத்துப் பயிற்சி. இது மழலையர் பள்ளிக்கு என நாங்களே வடிவமைத்துக்கொண்ட பாடத் திட்டம். 1-ம் வகுப்பில் இருந்து அரசின் பாடத் திட்டத்தை நடத்துகிறோம். அதோடு சேர்த்து மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்து, அவர்களை சமூக அக்கறைகொண்ட மனிதர்களாக மாற்றவும் மெனக்கெடுகிறோம்!'' என்கிறார், கோபி தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் குமணன். மாணவர்களைக் கையாள்வது குறித்து கூடுதல் புரிதலை ஆசிரியர்கள் பெறுவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் கல்வியாளர்களை வரவழைத்து பள்ளியின் ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சிப் பட்டறையும் நடத்தப்படுகிறது. சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் பயிலும் இந்தப் பள்ளி மாணவர்கள், பறை இசையிலும் பட்டையைக் கிளப்புகின்றனர். காடுகளுக்குச் செல்வது, நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகங்களுக்குச் செல்வது என வகுப்பறைக்கு வெளியிலான கல்வியையும் இவர்கள் பெறுகின்றனர். முக்கியமாக 'டிஸ்லெக்ஸியா’ என்ற திறன்குன்றிய குழந்தைகளை மருத்துவர்களே இந்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள். கோபி தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நான்கைந்து குழந்தைகள் இப்படிப் படிக்கிறார்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் நடத்தவே மாட்டார்கள் எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். இங்கு ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகச் சொல்லித் தரப்படும். இந்தப் பள்ளியில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கிளாஸ் நடத்துவதற்கு என்றே பிரத்யேகமாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். 1997-ல் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் இப்போது 200 பேர் படிக்கிறார்கள். வாடகை இடத்தில் பள்ளி இயங்கிவரும் நிலையில், நிலத்தின் உரிமையாளர் பள்ளியைக் காலிசெய்யச் சொல்லிவிட்டார். இப்போது தொடர்ந்து இயங்குமா, மூடப்பட்டுவிடுமா என்ற திரிசங்கு நிலையில் இருக்கிறது இந்தப் பள்ளி. இதே கோபியில் தாய்த்தமிழ் மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 6 பேர் முதன்முறையாக 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதினார்கள். அனைவருமே 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனர். ''அனைத்து மாணவர்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தவர்கள். பிரபாகரன் என்கிற ஒரு மாணவன், தனியார் பள்ளியில் படித்து 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் விஷம் குடித்துவிட்டான். ஓர் ஆண்டு காலம் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். அவன் 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் 444. அவனது அப்பாவால் இப்போது வரை நம்ப முடியவில்லை. இந்த ஆண்டுகூட 18 பேர் அரசுப் பொதுத் தேர்வு எழுதப் போகிறார்கள். அனைவரும் மிகவும் வறிய, பின்தங்கிய சூழலில் இருந்து வந்தவர்களே. நிச்சயம் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்'' என்கிறார் குமணன். இந்தத் தாய்த்தமிழ்ப் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த அறிவுத் தென்றல் என்கிற மாணவி, இப்போது தொல்லியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அங்கொன்று, இங்கொன்றுமாக நடந்தாலும் மாற்றுக்கல்வி முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. தங்கள் குழந்தைக்குச் சிறப்பான எதிர்காலத்தைத் தர விரும்பும் பெற்றோர்கள், இத்தகைய மாற்றுவழிப் பள்ளிகளைக் கண்டறிந்து பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்! - பாடம் படிப்போம்...
4-ம் வகுப்புக்கு டேப்லெட்! தனியார் பள்ளிகளின் அட்டகாசத்துக்கு உதாரணம் தேவை இல்லை. ஆனால், இந்த மதுரை பள்ளியில் நடைபெற்றுவரும் கொடுமை அனைத்திலும் உச்சம். மதுரை, திருநகரில் இருக்கிறது அந்தத் தனியார் பள்ளி. இங்கு, நான்காம் வகுப்பில் இருந்து அனைத்து மாணவர்களும் லேப்டாப் மூலம்தான் பாடம் படிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். 3-ம் வகுப்பு தேர்வாகி 4-ம் வகுப்புக்குச் செல்லும்போதே தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் லேப்டாப் வாங்கிக் கொடுத்தாக வேண்டும். 'வசதி இருப்பவர்கள் வாங்கித் தரட்டும். மற்றவர்கள் வழக்கம்போல புத்தகங்கள் மூலம் படிக்கட்டும்’ என மேம்போக்காக விட்டுவிடவில்லை. அனைவரும் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்; அதுவும் அவர்கள் சொல்லும் கடையில். இதனால் ஏழை, நடுத்தரப் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கடன் வாங்கியேனும் லேப்டாப் வாங்கித் தந்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளுகின்றனர். 4, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் மூலம் பாடம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த வயதிலேயே கம்ப்யூட்டரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களின் கண்பார்வை பாதிக்கப்படாதா? எழுதிப் பழக வேண்டிய வயதில் கீ-போர்டைத் தட்டத் தொடங்கினால் எழுத்தின் வாசனைகூட அவர்களுக்கு அறிமுகம் ஆகாதே. பேப்பரையும் பேனாவையும் கொடுத்து எழுதச் சொன்னால் தட்டுத்தடுமாறி அல்லவா போவார்கள். இதைவிடக் கொடுமை இந்த ஆண்டில் இருந்து 'இனி லேப்டாப் வேண்டாம். எல்லோரும் டேப்லெட் வாங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். பல பெற்றோர்கள் வாங்கிக்கொடுத்தும் உள்ளனர். சந்தையில் 5 ஆயிரம் ரூபாய்க்கே நல்ல டேப்லெட் கிடைக்கும் நிலையில், பள்ளி நிர்வாகமோ 15 ஆயிரம் ரூபாய் விலையில், அவர்கள் சொல்லும் ஷோரூமில்தான் டேப்லெட் வாங்க வேண்டும் என்கிறது. இதுபோன்ற மின்னணுப் பொருட்களை நாள் முழுக்க பயன்படுத்தும்போது எந்த நேரமும் சார்ஜிலேயே இருந்தாக வேண்டும். இதனால் வகுப்பறையில் மாணவர்களின் மேஜைகளில் மின்சார இணைப்புக் கொடுத்துள்ளனர். எங்கேனும் சிறிய மின்கசிவு ஏற்பட்டாலும் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். பணம் பிடுங்குவதற்காக மாணவர்களின் உயிருடனும், எதிர்கால வாழ்க்கையுடனும் விளையாடும் இதுபோன்ற பள்ளிகளை, கல்வித் துறை தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்!
|
|
|
| | | |
|