VikatanBlurp1

தொலைத் தொடர்புக்கு உள்ளேயே இரு !
அடுத்தடுத்து பலகட்டத் தேர்வுகள் அடங்கிய பரீட்சை அது. மனநலவியல் பேராசிரியர் ஒருவருடன் அந்த அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். உள்ளே இரண்டு நபர்கள் நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் சங்கடம் போக்க, அவர்கள் இருவர் மீதும் பெட்ஷீட்டைப் போர்த்துகிறார் பேராசிரியர். 'இவர்களில் ஒருவர், மல்டிநேஷனல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சி.இ.ஓ. இன்னொருவர், அதே நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளி. இவர்களில் யார் சி.இ.ஓ... யார் தொழிலாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!' என்கிறார்.

இருவரும் ஒரே உயரம், நிறம், வயதினர். இருவர் சிரிப்பிலும் ஏறக்குறைய வித்தியாசம் இல்லை. கண்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்கின்றன. நீங்கள் திணறுகிறீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக இருவர் மீதுமஇருக்கும் பெட்ஷீட்டை முட்டி வரை உயர்த்துகிறார் பேராசிரியர். இருவர் பாதங்களை வைத்தும் ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. மீண்டும் பெட் ஷீட்டைப் பிடிக்கக் கீழே குனிகிறார் பேராசிரியர். அடுத்து நடக்கப்போவதை நினைத்து நடுங்கி, நீங்கள் கண்களை மூடிக்கொள்கிறீர்கள். சில நொடிகள் கழித்துத் தயக்கத்துடன் கண்களைத் திறக்க, இருவரின் தலை முதல் மார்பு வரை பெட்ஷீட் இறக்கப்பட்டு இருக்கிறது. 'ஊப்ப்ப்ஸ்!' என்று பெருமூச்சுவிடுகிறீர்கள். ஆனால், அப்போதும் உங்களால் 'யார் சி.இ.ஓ', 'யார் க்ளீனர்?' என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

'நன்றி. நீங்கள் இருவரும் கிளம்பலாம்!' என்று பேராசிரியர் அந்த நிர்வாண நாயகர்களுக்கு விடை கொடுக்கவும், சடாரென பெட்ஷீட்டால் தங்களை மறைத்துக்கொண்டு வாசல் நோக்கி நடக்கிறார்கள். வெளியேறும் முன், திரும்பும் முதல் நபர், 'நல்லவேளை இந்த டெஸ்ட் முடிந்ததே என்று நீங்கள் சந்தோஷப்பட்டு இருப்பீர்கள் நண்பரே. உங்கள் அடுத்த பரீட்சையாவது இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!' என்று புன்சிரிப் போடு விடைபெறுகிறார். இரண்டாமவர், 'என்னால் உங்களுக்கு உதவ முடிந்ததற்கு நன்றி!' என்று சொல்லி, கதவருகே தயங்கி நிற்கிறார். பேராசிரியர் சில ரூபாய் தாள்களை அவர் கையில் திணிக்க, கண்களில் மின்ன லுடன் இடத்தைக் காலி செய்கிறார்.

பேராசிரியர் அர்த்தமுடன் உங்களை நிமிர்ந்து பார்க்க, 'முதல் நபர்தான் சி.இ.ஓ. இரண்டாமவர் க்ளீனர்!' என்கிறீர்கள் வெற்றிப் புன்னகையுடன்.

இதில் இருந்து நீங்கள் பெற வேண்டிய மெசேஜ்... உங்கள் நிறம், அழகு, உயரம், ஆடைகள், இளமை போன்ற புறக் காரணிகள் மற்றவர்களுடனான உங்கள் உறவை எவ்விதத்திலும் பாதிக்காது. நீங்கள் எதிராளியை எதிர்கொள்ளும் விதம், பழகும் பாங்கு, ரியாக்ட் செய்யும் தொனி போன்றவைதான் அவருடனான உங்கள் தொடர்பை இயல்பாக்கும். அப்படி ஒரு நபருடன் முதல் சந்திப்பிலேயே இயல்பாக, 96 ட்ரிக்குகளைச் சொல்லித் தருகிறார் லெய்ல், தனது 'How to instantly connect with anyone' புத்தகத்தில். அதில் இருந்து சில புக்மார்க்குகள்!

கண்ணைப் பார்... சிரி!

அடர்ந்த காட்டில் இரண்டு புலிகள் நேருக்கு நேர் சண்டையிடுகின்றன. நெருப்பு மின்னும் விழிகளோடு இரண்டும் ஒன்றையன்று மூர்க்கமாக முறைக்கும். கண்ணுக்குக் கண் நேர்க் கோடாகத்தான் அவற்றின் பார்வை பயணிக்கும். எந்தப் புலி அசந்து கண் சிமிட்டுகிறதோ, அல்லது பார்வையை ஒரு கணம் திசை தப்பவிடுகிறதோ... அது காலி. நொடியும் காத்திருக்காமல் சரேலெனப் பாய்ந்துவிடும் கில்லி புலி. பார்வைக்கு அந்த பவர் முக்கியம். ஆம், எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கண் பார்த்துப் பேசும் கலைக்குச் சில சிம்பிள் டிப்ஸ் இதோ...

எதிராளியின் கண்கள் என்ன நிறம் என்று கண்டு பிடியுங்கள். (உங்கள் நெருக்கமான நண்பர்களில் மூன்று பேரின் கருவிழி நிறங்களையாவது நினைவு கொள்ள முடிகிறதா உங்களால்?) நிறத்துக்குப் பிறகு கண்களின் வடிவத்தைக் கண்டுபிடியுங்கள். இரண்டு கண்களுக்கும் இடையிலான இடைவெளியை அளந்து பாருங்கள். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கிறாரா? அணிந்திருந்தால் என்ன கலர்?

இதயத்தைத் தொடுங்கள்!

கண்ணோடு கண் நோக்குவதற்கு அடுத்து மிக முக்கியமானது கைகுலுக்கல். மைக்ரோசாஃப்ட் நிறுவ னத்தின் மிக உயர்ந்த பதவிக்கான நேர்காணல் அது. இரண்டு திறமைசாலிகள் இறுதிக் கட்டம் வரை விடாமல் முன்னேறி, சளைக்காமல் மல்லுக்கட்டுகிறார்கள். தகுதி, திறமை, நேர்மை, புத்திக்கூர்மை என அனைத் திலும் ஒருவருக்கு நிகர் மற்றொருவர். ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இன்டர்வியூ செய்தவர் அறையைவிட்டு வெளியேறி, 'இரண்டாம் நபருக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுங்கள்' என்றார். 'எதனால் முதலாமவரை விலக்கினீர்கள்?' என்று கேட்டேன். 'சிம்பிள். அவருடன் கைகுலுக்கியபோது ஒரு நடுக்கம் தெரிந்தது. ஆனால், இரண்டாமவரின் கைகளில் நம்பிக்கையும் அன்பும் அழுத்தமாகப் பதிந்திருந்தது!' ஒரு 'ஹேண்ட்ஷேக்' சமயங்களில் உங்கள் எதிர்காலத்தையே ஷேக் செய்யும் என்பதற்கு மிகச் சின்ன உதாரணம் இது!

அழுத்தமாகக் கை குலுக்குங்கள் என்பதும் அடிப் படை மேனெஜ்மென்ட் பாடங்களுள் ஒன்றுதான். ஆனால், அது எப்படி? இதற்கும் ஒரு சுலப வழிஒன்று இருக்கிறது. எதிரில் இருப்பவருடன் கைகுலுக்கும்போது உங்கள் ஆள்காட்டி விரலால் அவரது மணிக்கட்டு நரம்பை மிருதுவாக அழுத்திக்கொடுங்கள். (பல்ஸ் பார்க்க மருத்துவர்கள் உங்கள் மணிக்கட்டில் அழுத்திப் பிடிப்பார்களே... அதேதான்!) அந்த நரம்பு நேரடியாக இதயத்துக்கு ரத்தம் பாய்ச்சும் மகா தமனி. அது உணரும் எந்த உணர்வும், இதயத்தாலும் அழுத்தமாகவே உணரப்படும். நண்பர்களிடையே இதை முதலில் பழுகுங்கள். உஷார்... 'ஃபெதர் டச்' என்பார்களே... அப்படி இருக்க வேண்டும் உங்கள் அழுத்தம்!

அடக்கி வாசி மாப்ள!

பள்ளி, கல்லூரிக் காலங்களில் அடிக்கடி புதுப் புது நபர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த மாதிரி யான தருணங்களில், டாப் அடிக்க வேண்டியிருக்கும். அப்போது யார் என்ன பேசினாலும், உடனே முந்திக்கொண்டு கமென்ட் அடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். அடிக்கடி நீங்கள் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருந்தால், உங்கள் கருத்துக்களுக்கு அங்கே மதிப்பு இல்லாமல் போகக் கூடும். அதுவே, அரட்டை ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களுக்கு நீங்கள் 'சைலன்ஸ் மெயின்டெய்ன்' செய்துபாருங்கள். உங்கள் அமைதி அவர்களை உறுத்தி, 'என்னடா ஆச்சு... எதுனாசொல்லு?' என்று உங்களிடம் கருத்துக் கேட்பார்கள். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சமயம் உங்கள் வார்த்தைகளுக்கு அதிக மரியாதை இருக்கும். இது நண்பர்களுடன் அரட்டையடிக்க மட்டுமல்ல; ஆலோசனைக் கூட்டம், வகுப்பறை, குடும்ப விசேஷம் என எந்தச் சூழலுக்கும் பொருந்தும்!

தாமதத்துக்கு நோ தாம்தூம்!

மீட்டிங், வகுப்பறை, ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றுக்குச் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள். தவிர்க்க முடியாமல் தாமதமாகிவிட்டால், மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்ததும் 'எக்ஸ்கியூஸ் மீ', 'என்னை எல்லாரும் மன்னித்துவிடுங்கள்!' என தாம்தூம் என உங்கள் வருத்தத்தைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டாம்.

அமைதியாக உங்கள் இருக்கையை ஆக்கிரமித்து, மீட்டிங்கின் போக்குக்குக் காது கொடுங்கள். எங்கேனும் நீங்கள் குறுக்கிடும் சமயம், 'மன்னிக்கவும் இந்த டாபிக் பற்றி நீங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. நண்பனுக்கு ஆக்சிடென்ட். அவனை மருத்துவமனையில் சேர்த்து, ரத்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குள் மீட்டிங்கின் ஆரம்ப நிமிடங்களைத் தவறவிட்டுவிட்டேன். அதனால் நான் எனது கருத்தை இப்போது பதிவுசெய்கிறேன்!' என்று தொடர்ந்து உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிடுங் கள்.

இதனால் உங்கள் மேல் இருக்கும் கோபம் தணிந்து, பிறர் உங்களுக்கு உதவ ஆர்வமாக விசாரிக்கவும் செய்வார்கள். பாலீஷாக உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தது போலவும் ஆகிவிடும்!
.அந்த 5 ரகசியங்கள் !

நீங்கள் எப்போது இறக்கத் தொடங்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு மிக நேர்மையான பதில்... 'பிறந்த அடுத்த நொடியில் இருந்து' என்பதுதானே! 'நான் உற்சாகமானவன், சாதிக்கப் பிறந்த வன்' என்றெல்லாம் நீங்கள் எகிடுதகிடு தன்னம்பிக்கை வார்த்தைகள் வாசித்தா லும், நிதர்சன உண்மை அதுதான். ஆக, இறப்புதான் (இந்த வார்த்தையை அடிக் கடி உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்!) நமது இலக்கு என்றால், அந்தப் பயணத்தைப் பக்காவாகத் திட்டமிட வேண்டும் அல்லவா? அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கு முன் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களை உங்களுக்குச் சொல்கிறார் ஜான் இஸ்ஸோ தனது 'The Five Secrets You Must Discover before you die' புத்தகத்தில்.

'இவர் தனது வாழ்நாள் முழுக்கச் சந்தோஷமாகக் கழித்தார்!' என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்ட 200 நபர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் ஜான். 60 முதல் 106 வயது வரையிலான அந்த 200 பேரின் 18,000 வருட அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டு, இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ஜான். 'வாழ்க்கையில் உங்களுக்கு அதீத சந்தோஷத்தைத் தந்தது எது? வாழ்க்கை யில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதுவது எதை?' இவை போன்றவைதான் அவர்களிடம் ஜான் கேட்ட கேள்விகள். அந்தப் பதில்களைச் செதுக்கி, சீராக்கி, வடிகட்டி வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களைப் பட்டிய லிடுகிறார் ஜான். உங்களுக்கும் நிச்சயம் உதவும் ரகசியங்கள்...

1) உங்களுக்கு உண்மையாக இருங்கள்!

தனது 75 வயது ஆயுளில் ஜார்ஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை பிசிக்ஸ் புரொஃபசராகக் கழித்திருக்கிறார். அவரிடம் மாணவர்களின் மனப்போக்கு குறித்துக் கேட்டேன். 'தனது இதயம் செலுத்திய பாதையில் பயணித்தவர்களுக் கும் அந்தப் பாதையைப் புறக்கணித்தவர் களுக்கும் இடையே மலையளவு வித்தியாசத்தை நான் கவனித்திருக்கிறேன். தனது தோளில் ஏற்றப்பட்ட பிறரது கனவுகள், ஆசைகள், லட்சியங்களை வேறு வழியில்லாமல் தூக்கிச் சுமந்த மாணவர்கள், வாழ்நாட்களைக் கழித் தார்கள். ஆனால், தனது மனம் விரும்பிய படிப்பைப் படித்த மாணவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஆயுளைக் கழிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியா சங்கள் இருக்கின்றன. தனக்கே உண்மையாக இல்லாதவர்கள் பிறருக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள்?' என்றார் அந்த புரொஃபசர்.

2) எந்த ஏக்கத்தையும் மிச்சம்வைக்காதீர்கள்!

84 வயது டோனல்ட் ஆறு வருடங்களுக்கு முன்தான் தனது பிரியமான மனைவியை இழந்திருந்தார். மனைவி யுடனான 56 வயது மணவாழ்க்கைதான் தனது ஆயுளின் ஆகப் பெரிய சொத்து என்று புளகாங்கிதப்பட்டார் டோனல்ட். 'கல்லூரியின் முதல் வருட வாழ்க்கை முழுக்க நான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவி. அப்போது எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள் அவள். க்ரீம் கலர் ஸ்வெட்டர் அணிந்து மிக மிருதுவான கூந்தலுடனும் தேவதைச் சிரிப்புடனும் வளைய வந்த அவளைச் சுற்றிலும் எப்போதும் அழகிய பெண்களின் கூட்டம்தான். அன்று காலேஜ் டே. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நடனமாடலாம். அவளை என்னுடன் டான்ஸ் ஆட அழைக்கச் சொல்கிறது மனதின் ஒரு மூலை. பலவந்தமாகப் பிடித்துப் பின்னிழுக்கிறது மூளை. ஒரு வேகத்தில் என் கூச்சம் தவிர்த்து அவளிடம் சென்று, 'நீதான் நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!' என்றேன். சின்ன ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே என்னுடன் அப்போது டான்ஸ் ஆடினாள். அதன் பிறகு அடிக்கடி அவளைச் சந்தித்தேன். எனது விருப்பத்துக்குச் சம்மதிக்கவைத்தேன். 56 வருட ஹனிமூன்!

ஒருவேளை அந்த ஆரம்பத் தயக்கம் என்னைத் தடுத்திருந்தால், இன்று மரணப் படுக்கையில் 'அன்று அவளிடம் எனது ஆசையை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ' என்ற ஏக்கம் மிச்சம் இருந்திருக்கும். இப்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். நான் என் வாழ்க்கையை முழுக்க வாழ்ந்திருக்கிறேன்!' என்றார் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன்.

3) அன்பின் வடிவமெடுங்கள்!

டேவிட் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம் விசேஷமானது. 'எனது தந்தை தனியரு ஆளாக உழைத்து முன்னேறி கோடீஸ்வரனாகி எங்கள் குடும்பத்தையே உச்ச நிலைக்குக் கொண்டுசென்றவர். அவர் தனது மரணப் படுக்கையில் இருந்த கடைசி சில நாட்களில் அத்தனை வருடங்களில் தான் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரையிலான புகைப்படங்களைத் தன்னைச் சுற்றிப் பரப்பிவைத்துக் கொண்டார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த மனிதர்களுடனான தனது பாசப் பிணைப்பு குறித்து மட்டுமே பேசி நெகிழ்ந்துகொண்டு இருந்தார். அத்தனை பேரின் அன்பைச் சம்பாதித்ததைத்தான் தனது மிகப் பெரிய சாதனையாக நினைத்து, நிறைவான நிறைவை எட்டினார்!' அந்த நிறைவை எட்டுவதற்கு முதலில் நீங்கள் காதலிக்க வேண்டிய நபர் நீங்கள் தான்!

4) இந்த நொடி, இந்த நிமிடம் வாழுங்கள்!

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாழ்க்கை யாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்குதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... குறிப்பிட்ட ஆனால், தீர்மானிக்கப்படாத வருடங்கள்தான் உங்கள் ஆயுட்காலம். அது 40 வருடமோ அல்லது 70 வருடமோ! அந்த வருடங்களின் எந்த ஒரு நொடி கடந்தாலும் அதை மீண்டும் நாம் திரும்பப் பெற முடியாது. உலகின் மிக உன்னத பொக்கிஷம் உங்கள் ஆயுளின் ஒரு நொடிதான். அப்படியிருக்க, அந்த தங்கத் தருணங்களை வெறுப்பு, கோபம், துவேஷம் என்று செலவழிப்பானேன். கொண்டாடுங்கள். உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் அதைக் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்.

93 வயது ஜான் ஒவ்வொரு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் கண்டு களிக்கிறார். அந்தக் குதூகலத்தை 93 வயதில்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே, அத்தனை வயது வரை நாம் மிஞ்சி இருப்போமா மாட்டோமா என்ற உத்தரவாதம் இல்லாத போது!

5) பெறுவதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுங்கள்!

அந்தச் சிறிய கிராமத்துக்கு கென் ஒருவர்தான் பார்பர். ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் கென்தான் கத்தியைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். அவரி டம் பேசிக்கொண்டு இருந்தபோது சிம்பிளாக ஒரே வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொன்னார், 'இந்த ஊரில் யார் இறந்தாலும் நான் சென்று என் வேலையை முடித்த பிறகு தான் இறுதிச் சடங்குகள் துவங்கும். பல சமயங்களில் நான் எனது கத்தியைக் கழுவிப் பெட்டியில் வைப்பதற்குள் பத்து நிமிடங்களில் சடங்குளை முடித்து, கிட்டத்தட்ட இறந்தவரைத் துரத்தியடிப்பார்கள். ஆனால், சில சமயங் களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக சடங்கு களை நீட்டித்து இறந்தவரைப் பிரிய மனம் இல்லாமல் கண்களில் நீருடன் வழியனுப்பி வைப்பார்கள். காரணம், அவர் தன் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காக வாழ்ந்து இருப்பார். என் இறுதிச் சடங்கும் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்காகவே இந்த உலகத்தின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன்!' என்றார்.

இந்த உலகத்தின் மீது ஆசைவையுங்கள்... சொல்லப்போனால் அத்தனை ரகசியங்களிலும் இது மிகவும் சுலபமானது!


'எந்த வயதில் நாம் அதிகமாகக் காதலிக்கிறோம்?'

ந்த வயதில் நாம் அதிகமாகக் காத லிக்கிறோம்? 'டீனேஜ் பருவத்தில்', 'படித்து முடித்து வேலை கிடைக்காமல் சுற்றும்போது', 'நல்ல வேலை கிடைத்து செட்டிலானதும் பூப்பதுதான் மெச்சூர்டான காதல்', 'எங்கங்க... இப்பெல்லாம் அஞ்சாப்பு படிக் கிறப்பவே காதலுக்காக உயிரைக் கொடுப் பேன்னு டயலாக் பேசுதுங்க!' என்று வித விதமாகப் பதில்கள் வந்து விழலாம்.

ஓர் ஆண் அல்லது பெண் தனது வாழ்க் கைத் துணை அல்லது பார்ட்னரிடம் வெளிப் படுத்தும் அன்புதான் காதல் என்ற அழுத்த மான பிம்பம்தான் இந்தப் பதில்களுக்கான காரணம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்கள் 70 வயது அப்பா, உங்கள் மூன்று வயது மகனிடம் வைத்திருக்கும் அன்பும் காதல்தானே? மனதுக்கு மிகவும் விருப்ப மான, நெருக்கமான உங்கள் நண்பரிடம் நீங்கள் காட்டும் பிரியமும் காதல்தானே? உங்கள் லட்சியத்தை அடைய உங்களுக்கு வழிகாட்டும் காட்ஃபாதர் போன்ற ஒருவரி டம் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை காதல்தானே? அன்பு, பாசம், நேசம், பிரியம், தோழமை, நட்பு என்று அத்தனை அம்சங்களும் காதல் என்ற ஒரு குடையின் கீழ் அடங்கிவிடும் உணர்ச்சிகள்தாமே!

இப்போது சொல்லுங்கள்... எந்த வயதில் நாம் அதிகமாகக் காதலிக்கிறோம்? பிறந்த நொடி முதல் மரணத் தருணம் வரை காதல் நம்மைப் பற்றிப் படரும். அதிலும் குறிப்பாக, கல்லூரிப் பருவத்தில் கிடைக்கும் அறிமுகங் கள், நமது வாழ்க்கைத் துணை, வழித்துணை களைத் தீர்மானிக்கிறது. அந்தக் காலகட்டத் தில் நமது காதலைச் சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படுத்த வேண்டும் என்கி றார் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவரின் ''The Rules of Love என்ற புத்தகம் பேசும் விஷயங்கள், 'அட, ஆமாம்ல!' என்று மூளைக்குள் ஒரு பளீர் பல்பை ஒளிரச் செய்கிறது.

சட்டத்தைக் கையிலெடுக்கும் நட்பு!

எதற்கும் கட்டுப்படாதது நட்பு. நமது நண்பர்களை 'நீ இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்!' என்று எந்த நிலையிலும் நாம் கட்டுப்படுத்த முடியாது. என் நண்பன் ஒருவனை எப் போதும் எதிர்பார்க்கவே முடியாது. இரண்டே நிமிடங் களில் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, ஒரு வாரம் கழித்து தலையைக் காட்டுவான். 'வரவே மாட்டான்' என்று நினைத்திருக்கும்போது பின்னால் இருந்து தோள் தட்டிச் சிரிப்பான். சினிமாவுக்கு வரச் சொல்லிவிட்டு டிக்கெட் எடுக்க மறந்துவிட்டேன் என்பது, நாலு பேருக்கு வாங்கிய உணவினை ஒற்றை ஆளாக காலி செய்வது, நம் அனுமதியின்றி நமது உடைகளை உரிமையோடு எடுத்து அணிவது என்று, எந்த 'லைன் ஆஃப் கன்ட்ரோலு'க்கும் அடங்க மாட்டான். ஒரு கட் டத்தில் அவனுடனான நட்பைத் துண்டித்துவிடலாமா என்றுகூட யோசித்தேன்.

ஆனால், அவனைப்போல அந்த நொடி வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று எப்போதுமே எனக்குள் ஓர் ஆசை. அது முடியாததால்தான் அவன் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு. அவனை நண்பனாக்கிக்கொண்டேன். இப் போது திடீரென்று அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டு அவனது இயல்பை மாற்றிக்கொள்ளச் சொல்வது என்ன நியாயம்? குறிப்பிட்ட குணம், பழகும் தன்மையுடன் இருந்ததால்தான் நீங்கள் ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்கிறீர்கள். அதனால், அந்தக் குணம், மணம், நிறத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள்!

நல்ல நண்பன் வேண்டுமென்றால், நீங்கள் நல்ல நண்பனாக இருங்கள்!

இது கொஞ்சம் அநியாயமாகக்கூட உங்களுக்குத் தோன்றலாம். 'உங்கள் நண்பனை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, என்னை மட்டும் நல்ல நண்பனாக இருக்கச் சொல்கிறீர்களே?' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வேறு வழி இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், நிச்சயம் பலன் அளிக்கும் இந்தச் சட்டம். உங்கள் நண்பனுக்கு நீங்கள் தேவைப்படும் சமயம், அவருக்குத் தோள் கொடுக்கும் குணமே உங்களை நல்ல நண்பனாக வைத்திருக்கும். உங்கள் நண்பனின் புலம்பல்களுக்குக் காது கொடுப்பது, ஆறுதல் அளிப்பது, ஆதரவாக இருப்பது போன்றவை தான் உங்களை நல்ல நண்பராக்கும். நெருக்கமான நண்பர்களிடம்கூட திருமணம், குழந்தைகள், வேலைப் பளு போன்றவை பெரிய இடைவெளியை உண்டாக்கும். ஆனால், நீங்கள் அவர்களுக்கு 'நல்ல நண்பராக' இருந் திருந்தால், எத்தனை பெரிய இடைவெளிக்குப் பிறகும் விட்ட இடத்தில் இருந்து நட்பு துளிர்க்கும்.

திருப்பிக் கேட்கப்போவது இல்லையென்றால் மட்டுமே நண்பர்களுக்குக் கடன் கொடுங்கள்!

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் பிரச்னை யில்தான் பல நட்புப் பாலங்கள் விரிசலடைகின்றன. உங்கள் நண்பன் உங்களிடம் கடன் கேட்கும் சமயம்... அவரது நட்பு அல்லது அந்தக் கடன் தொகை இரண்டில் எது அதிக விலைமதிப்புள்ளது என்று பாருங்கள். நட்பு பெரிதென்றால் திரும்ப வரவே வேண்டாம் என்ற மன நிலையுடன் அந்தக் கடனைக் கொடுங்கள். அந்தப் பணம்தான் பெரிதென்றால், 'ஸாரிடா மச்சான்!' என்று சொல்லிக் கை விரித்துவிடுங்கள்.

ஆனால், இக்கட்டான சமயங்களில் நண்பர்களிடம்தான் முதலில் உதவி கேட்கத் தோன்றும், நட்பைவிட விலை மதிப்புமிக்க எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்!

கண்டதும் காதலை உணர்வீர்கள்!

'கண்டதும் காதல்' என்பதற்கு அறிவியல்ரீதியான விளக்கங்கள் எதுவும் கிடையாது. ஆனால், உளவியல்ரீதி யாக அது 100 சதவிகிதம் பலனளிக்கக்கூடியது. ஒருவ ரைக் கண்டதும் உங்களுக்குள் காதல் (இந்த இடத்தில் 'காதல்' என்பது எதிர்பாலின ஈர்ப்பு!) கண் சிமிட்டினால், ஒருவேளை அவர் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணை ஆகக்கூட வாய்ப்பிருக்கிறது. அதே முதல் பார்வை அல்லது சந்திப்பில் உங்களை எந்த விதத்திலும் ஈர்க்காதவரோடு பின்னாட்களில் உங்களுக்குக் காதல் கனிந்தாலும், அதைத் திருமணம் வரை கொண்டுசெல்ல வேண்டுமா என்று ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.

ஒருவரைப் பார்த்ததுமே உங்களுக்குள் பட்டாம்பூச்சி பறந்திருந்தால், உங்கள் ஆழ்மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு விசேஷம் அவரிடம் இருக்க வேண்டும். அதனால் தான் பெயர், ஊர் தெரியாத நிலையிலும் உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. பழகப் பழக ஒருவரைப் பிடித்ததாலோ அல்லது அவர் உங்களிடம் காதல் சொன்னதாலோ, நீங்கள் அவர் கைபிடித்து மணமேடை யில் நிற்கிறீர்கள். அந்த சமயம், 'நம்ம ஆள் இவர் தானா?' என்று உங்களுக்குள் ஒரு சந்தேகம் முளைத் தால்... அது ஆயுளுக்கும் அடங்காது. ஆக, 'கண்டதும் காதல்'கொள்ளவைக்கும் சமிக்ஞைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!


உங்களுக்குள் இரண்டு தொழிலாளிகள்!

லகம் முழுக்க நுகர்வோர் பொருட்களை விற்கும் பிரமாண்டமான நிறுவனத்தின் சேல்ஸ் மீட்டிங் அது. அந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் டாலர்கள் வருமானம் ஈட்டித் தந்த உற்சாகத்தில் மார்க்கெட்டிங் ஆட்கள் குழுமியிருந்தார்கள். ஜான் என்ற கடைநிலை சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ்வுடன் வந்து அமர்ந் தார், நிறுவனத்தின் துணைத் தலைவர்.

மீட்டிங் துவங்கு முன், ''நீங்கள் அனைவரும் ஜானை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் ஜான் மூலம் நமது நிறுவனத்துக்குக் கிடைத்த வருமானம் 60 ஆயிரம் டாலர்கள். நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் உங்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக மார்க் கெட்டிங் செய்திருக்கிறார் ஜான். இத்தனைக்கும் ஜான் உங்களைவிட ஸ்மார்ட் இல்லை. உங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக வேலை செய்ய வில்லை. சொல்லப்போனால், உங்களைவிட அதி கமாக லீவு எடுத்திருக்கிறார் ஜான். உங்களைவிட செழிப்பான மார்க்கெட் பகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. உங்களைவிட ஐந்து மடங்கு அதிக ஆரோக்கியமானவரோ, கல்வியறிவு படைத் தவரோ இல்லை. ஆனாலும், உங்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக அவர் வருமானம் ஈட்ட ஒரே ஒரு காரணம்தான். அது என்ன என்று உங்களால் யோசிக்க முடிகிறதா?'' என்று கேட்டு, சின்ன இடைவெளிவிட்டார் துணைத் தலைவர்.

எல்லோரும் உதட்டைப் பிதுக்கினார்கள்.

''ரொம்ப சிம்பிள். ஜான் உங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகச் சிந்திக்கிறார்!''

இவ்வளவுதான் வாழ்க்கை என்கிறார் ஜே.டேவிட். சின்னதோ, பெரிதோ எப்படி யோசித்தாலும் அதற்கான மெனக்கெடல்கள் ஒன்றுதான். அப்படிஇருக்க பெரிதாக, பிரமாண்டமாக, அட்டகாசமா கவே சிந்தித்துப் பழகலாமே என்கிறார் டேவிட், தனது ‘The Magic Of Thinking Big’ புத்தகத்தில்.

சிந்தனைத் தொழிற்சாலை!

விழித்திருக்கும் ஒரு கணத்தையும் வீணாக்காமல் ஏதேனும் யோசனைகள், கருத்துக்கள், பிம்பங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும் சிந்தனைத் தொழிற்சாலைதான் நமது மூளை. அந்தத் தொழிற்சாலைக்கு இரண்டே இரண்டு தொழிலாளர்கள்தான் பொறுப்பு. ஒருவர் பெயர் வெற்றி. இன்னொருவர் பெயர் தோல்வி. வெற்றியின் வேலை பாசிட்டிவ்வான, உற்சாகமளிக்கும் எண்ணங்களை மட்டுமே உற்பத்தி செய்வது. 'ஒரு காரியத்தை உங்களால் எப்படிக் கச்சிதமாக முடிக்க முடியும். அதற்கென உங்களிடம் குவிந் திருக்கும் தகுதிகள் என்னென்ன, எத்தனை ஈடுபாட்டுடன் உங்களால் அந்தச் செயலைச் சாதிக்க முடியும்' என்றெல்ல£ம் பாசிட்டிவ் சிந்தனைகளை உங்களுக்குள் உருவாக்குவான், வெற்றி என்னும் அந்தத் தொழிலாளி.

மற்றொரு தொழிலாளியான தோல்வியும் வெற்றிக்குச் சளைக்காமல் உழைப்பவன்தான். ஆனால், 'ஒரு காரி யத்தைச் செய்வதற்கு முன் என்னென்ன எதிர்ப்புகள் எழும், அதைச் சமாளிக்கத் திணறும் உங்கள் பலவீனங்கள் என்னென்ன, உங்களைப் பின்னுக்கு இழுக்கும் சக்தி கள் என்னென்ன?' போன்ற எதிர்மறைச் சிந்தனைகளை உங்களுக்குள் தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பது, தோல்வித் தொழிலாளியின் வேலை. நீங்கள் முதல் எட்டு எடுத்துவைக்கும் முன்னரே, ஒருவேளை நீங்கள் தோற்றால், அடுக்கவேண்டிய காரண காரியங்களை அலசுவது மட்டுமே தோல்வித் தொழிலாளியின் வேலை.

தினமும் காலையில் எழுந்ததும் 'இந்த நாள் இனிய நாள்' என்று நீங்கள் நினைத்தால், அது வெற்றித் தொழிலாளியைத் தூண்டும் பச்சை சிக்னல். மாறாக, 'சுத்தம், இன்னிக்கு செமஸ்டர்... வெளங்குனாப்லதான்!' என்று நினைத்தால், அது தோல்வித் தொழிலாளியைத் தூண்டும் சிவப்பு சிக்னல். இனி, நீங்கள் எந்தத் தொழி லாளிக்கு அதிகமாக வேலை கொடுப்பீர்கள்?

ஆழமாக, மிக ஆழமாகத் தோண்டுங்கள்!

உங்களுக்குப் பிடிக்காத அல்லது உங்களை வசீகரிக்காத இரண்டு விஷயங்களை நினைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக இன்டர்நெட் பரிச்சயம், கர்னாடக சங்கீதக் கச்சேரிகள், டூ வீலர் ஓட்டுவது, மாடர்ன் ஆர்ட் ரசிப்பது, வரலாறுபற்றி படிப்பது, சாகித்ய அகாடமி பரிசு வென்ற நாவல் படிப்பது, ஜிம்முக்குச் செல்வது, ஆங்கிலம் கற்றுக்கொள்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுநாள் வரை உங்களுக்குப் பிடிக்காத அந்த சங்கதிகளைப்பற்றிய பேச்சு எழுந்தாலே, சின்ன முகச்சுளிப்புடன்தான் நீங்கள் அதை எதிர்கொண்டு இருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் வெறுக்கும் அல்லது விரும்பாத அந்தச் சங்கதிகளைப்பற்றி நீங்கள் எந்த அளவுக்கு அறிந் திருப்பீர்கள்? 'அதிகமாக எதுவும் தெரியாது' என்பதுதானே உங்கள் பதிலாக இருக்கும்! சாக்லேட்டின் இனிப்பை ருசிக்கும்வரை ஒரு குழந்தைக்கு சாக்லேட் மீது எந்த ஆசையும் இருக்காது. அப்படியான மனநிலைதான் ஒரு விஷயத்தின் மீதான நமது வெறுப்பும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுக்க அறிந்துகொண்ட பிறகுதானே அதன் மீதான விருப்பு, வெறுப்பை நாம் தீர்மா னிக்கமுடியும்? ஆரம்பத் தயக்கங்கள் பயங்களை உதறி, நன்றாக நீந்தக் கற்றுக்கொண்ட பிறகு, நீச்சல் குளத்தி லேயே பழியாகக் கிடப்பவர்கள்தான் அதிகம். எந்த ஒரு விஷயத்தின் மீதும் முடிவெடுக்கும் முன் அதைப்பற்றி ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளுங்கள். 'ஏதோ

செல்போனாம்; தினமும் சார்ஜ் போட்டாத்தான் பேச முடியுமாம்; முன்னாடியே காசு கட்டிரணுமாம். எனக்கு லேண்ட் லைனே போதும்பா!' என்று செல்போனைப்பற்றி எதுவுமே தெரியாமல், அதன் மேல் வெறுப்பு காட்டுவது புத்திசாலித்தனமா என்ன?


இதுவா... அதுவா?

தோ ஒரு விஷயத்தில் நீங்கள் முக்கியமான ஒரு முடிவெடுத்தாக வேண்டும், அதுவும் உடனடியாக! ஆனால், எது நல்ல முடிவு என்று தெரியாமல் உங்கள் மனம் அலை பாய்கிறது. 'இதுவா... அதுவா?' என்று குழம்பித் தவிக்கிறீர்கள். இந்தச் சமயம் நீங்கள் என்ன செய்வீர்கள்?

'அந்தக் குழப்பமான சூழலில் நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்?', 'உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று ஒரு தம்மைப் போடுவேன்', 'மூளை சுறுசுறுப்பாக யோசிக்க வேண்டும் என்பதற்காக காபி அல்லது டீ குடிப்பேன்', 'ரொம்ப மன உளைச்சலாக இருந்தால், அதைப்பற்றியே யோசிக்காமல் சினிமா, டி.வி, நண்பர்கள் என்று வேறு எதிலாவது கவனத்தைத்திசை திருப்புவேன்!'

இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் உங்கள் பதிலா? வெல்கம் ஜென்டில்மேன்... ஏன் சராசரிகளில் ஒருவராகவே இருக்க விரும்புகிறீர்கள்?

ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ளத் தயங்கித்தானே 23-ம் புலிகேசிபோல அதற்குப் புறமுதுகு காட்டுகிறீர்கள். மேற்குறிப்பிடப்பட்ட சூழல்கள் ஒரு பிரச்னையை ஆக்கப்பூர்வமான நிலையில் கையாளத் தெரியாமல் திண்டாடும் நிலையைக் குறிப்பவை. மீண்டும் மீண்டும் யோசிப்பது, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அதுவரை யோசித்திருக்காத வழியில் யோசிப்பது, மற்றவர்களுடன் அந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பது, துல்லியமான தகவல்களைத் திரட்டிக் கச்சிதமான முடிவை நோக்கிக் காய் நகர்த்துவது, பிரச்னையைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு தாளில் எழுதிப் பார்ப்பது... இவைதான் குறிப்பிட்ட பிரச்னையைத் தீர்க்க முனையும் சின்சியர் முயற்சிகள்.

இப்படி எதையும் பிளான் செய்து செயல்படுத்தினால், நாம் எப்போதும் ஓ.கே-வாக இருப்போம் என்கிறார்கள் ஆமியும் தாமஸ் ஹாரிசும். 'staying ok' என்ற புத்தகம் முழுக்க நாம் நம்மைப்பற்றியே விவாதிக்கத் தயங்கும் ஆனால், விவாதித்தாக வேண்டிய சங்கதிகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.

மாங்குமாங்கென்று வாங்கிக் குவிக்காதீர்கள்:

பேனா, கர்ச்சீப், ஃபாஸ்ட் டிராக் வாட்ச், செல்போன், சுடிதார் மெட்டீரியல், சேலை, ஷூ, க்ளிப், ஹேர் பேண்ட், பொட்டு என்று கண்ணில்படும், மனம் ஆசைப்படும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பவரா நீங்கள்? ஒரு பொருளுக்கு என்று நீங்கள் கொடுக்கும் விலை அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவுகளுக்கு மட்டுமல்ல... உங்கள் பொன்னான நேரத்துக்கும்தான். கடை கடையாகத் தேடித் திரிந்து அலுத்துப்போகும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சேர்த்துதான் காசைச் செலவழிக் கிறீர்கள். வாங்கி வந்த பிறகும் அந்தப் பொருளைப் பராமரிப்பதற்கும் நேரம் செலவாகும். தள்ளுபடியில் கிடைக்கிறதே என்று ஆசைப்பட்டு கடனுக்கு வாங்கிய ஒரு பொருள் உபயோகப்படுத்தப்படாமலேயே தூசி படிந்து மூலையில்கிடந்தால், இழப்பு யாருக்கு?

'முடியாது' என்று சொல்லத் தயங்காதீர்கள்:

சினிமாக்களில் ஒரே பாட்டில் அல்லது சொல்லிய காபி வந்து சேர்வதற்குள் குபீர் கோடீஸ்வரனாகும் ஹீரோ, 'முடியாதுங்கிற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது!' என்று சொல்வது ஸ்டைலாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் 'முடியாது' என்று நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கும். மறுநாள் செமஸ்டருக்குப் படிக்கும் சமயம் சினிமாவுக்கு அழைக்கும் நண்பனிடம், முக்கியமான இன்டர்வியூவுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் சமயம் சொந்தக்காரர்கள் விசேஷத்துக்குச் சென்று தலைகாட்டி மொய்வைக்கச் சொல்லும் அம்மாவிடம், 'இன்டர்னலில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? காலேஜ் முடிந்ததும் என்னை என் ரூமில் வந்து பார்!' என்று சொல்லும் பேராசிரியரிடம் 'முடியாது' என்று அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்!

தொலைக்காட்சியில் இல்லை காட்சி:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமது நேரத்தை எவ்வ ளவு அபகரிக்கின்றன என்று என்றாவது கணக்கிட்டு இருக்கிறோமா? கொஞ்சம் கேளிக்கைக்கு டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதையே போதையாகக்கொண்டு நமது பொழுதைக் கொல்லலாமா? தொலைக்காட்சிகளின் முக்கியமான குறை, அதைப் பார்க்கும் சமயம் எல்லாம் நமது சிந்தனை தற்காலிகமாக பூட்டிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலையில் கட்டுண்டுகிடப் போம். ஒரு நாளில் நாம் விழித்திருக்கும் பெரும்பா லான நேரம் நமது சிந்தனைகளைக் கட்டிப்போட்டிருந் தால்... அது ஆரோக்கியமானதா? உங்கள் கற்பனை களைச் சிறகடிக்கச் செய்யும் செயல்களைச் செய்து கொண்டு இருக்கும்போதுதான் நீங்கள் உயிர்ப்பாக, துடிப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது டி.வி-க்கு எதிரான பிரசங்கம் அல்ல. மனதைச் செலுத்தாமல் செய்துகொண்டு இருக்கும் எந்த வேலைக்குமான உதாரணம் மட்டுமே!

உங்கள் ப்ரைம் டைம் எது?

டி.வி-யில் முடித்ததால், அதில் இருந்தே இந்தப் பத்தியைத் தொடங்குவோம். சேட்டிலைட் சேனல்களில் ப்ரைம் டைம் என்று குறிப்பிட்ட நேரம் இருக்கும்.அதிக அளவில் பார்வையாளர்கள் டி.வி. முன் தவம் இருக்கும் அந்த நேரத்தில், விளம்பரங்களுக்கு டபுள் ஸ்பெஷல் கட்டணம். அதைப்போல உங்களுக்கான ப்ரைம் டைம் எது? ஒரு நாளில் எந்தச் சமயம் நீங்கள் ஃப்ரெஷ்ஷாக, முழு ஆற்றலை வெளிப்படுத்தும் திறனுடன், கவனம் கலையாத அக்கறையுடன் இருப்பீர்கள். அந்தச் சமயத் தில் உங்கள் தினசரி நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளுங்கள். தினமும் நீங்கள் செய்து முடிக்கும் ஏதோ ஒரு காரியம்தான் உங்கள் மறுநாளைத் திட்டமிடும். அதிகாலை, நண்பகல், நடுராத்திரி என்று ஒவ்வொருவருக்கும் அந்த நேரம் மாறுபடும். ஆனால், உங்களுக்கான தங்கத் தருணத்தைத் தவறவிடாதீர்கள்!

டைமிங் மிக முக்கியம்... அமைச்சரே!

உங்கள் பேராசிரியரிடம் சந்தேகம் கேட்கச் செல்வதோ, அப்பாவிடம் பைக் வாங்கித் தரச் சொல்லிக் கேட்பதோ, அம்மாவிடம் காதலியை அறிமுகப்படுத்தச் செல்வதோ, மேலதிகாரியிடம் புரொமோஷனுக்காகப் பேசுவதோ... எதற்கும் டைமிங் மிக முக்கியம். சம்பந்தப்பட்டவர்கள் அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டு இருக்கும்போதோ, கவலையிலோ-வெறுப்பிலோ இருக்கும்போதோ நீங்கள் உங்கள் கோரிக்கையைவைத்தால், ஒரேபார்வையில் உதாசீனப்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். கூட்டம் நிரம்பி வழியும் 23சி பேருந்தில் இருந்து இறங்கி நிற்கையில், உங்கள் பர்ஸைக் காணவில்லை. பேருந்தும் கிளம்பித் தொலைவுக்குச் சென்றுவிட்டது. நீங்கள் பேஸ்தடித்து நிற்கையில் ஒரு பெரியவர், 'தம்பி 23சி பஸ் போயிடுச்சா?' என்று விசாரித்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்.

நீங்கள் அந்தப் பெரியவராக இருக்காதீர்கள்!
உங்களுக்குள் ஓர் உருளைக்கிழங்கு!

னிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்!

அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ததும் அவற்றின் அளவு, எடைக்கேற்ப வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி, லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட ஒருநாள் செலவாகும். ஆனால், ஒரே ஒரு விவசாயி மட்டும் உருளைகளை மெனக்கெட்டு தரம் பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக லாரியில் அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்வார். மற்றவர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே சரக்குகளைக் காலி செய்துவிட்டு ஹாயாக காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.

'நீங்கள் மட்டும் ஏன் உருளைகளைத் தரம் பிரிப்பது இல்லை?' என்று ஒருநாள் அவரிடம் மற்ற விவசாயிகள் கேட்டுஇருக்கிறார்கள். 'நீங்கள் ஒருநாள் செலவழித்து உருளைகளை தரம் பிரித்து லாரியில் ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில் மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான் மொத்தமாக உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த எட்டு மைல் காட்டுப் பாதையில் லாரி அலுங்கிக் குலுங்கிச் செல்லும்போது, பொடிஉருளைகள் தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும். நடுவாந்திரமான உருளைகள் நடுவில் சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய உருளைகள் ஜம்மென்று மேலே தங்கிவிடும். மார்க்கெட்டுக்குச் சென்றதும் அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட வேண்டியதுதான் பாக்கி!'' என்றாராம்.

இந்த விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம் வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச் சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப் பயந்து பின்வாங்கிவிடுபவர்கள் பொடி உருளைகளாகத் தேங்கித் தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும் பாதை கடினமாக இருக்கலாம், உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையாமல் போகலாம். காயங்களை மட்டுமே எதிர்கொண்டு இருக்கலாம்... ஆனால், அவை எவையும் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக இருந்தால், எந்தச் சவாலும் ஒருநாளுக்கு மேல் உங்களிடம் தாக்குப்பிடிக்காது.

உங்கள் பாதை கடினமாக இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள். அந்தப் பாதைதான் உங்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட். 'Tough Times Never Last, But Tough People Do!' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வாழ்வில் அனுதினமும் நாம் சமாளிக்கவிருக்கும் சவால் சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது!

டேட்டிங் செல்லுங்கள்!

படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிப்பவரா நீங்கள்? 'நான் அன்எம்ப்ளாய்ட்!' என்ற கழிவிரக்கத்தில் தத்தளிக்கிறீர்களா? நீங்கள் வேலை தேடும் முறைகளில் எங்கோ ஏதோ சிக்கல். சிம்பிளாக ஒரு வழி சொல்லவா? நீங்கள் உங்களுக்கு காதலன்/காதலி தேடினால், என்னென்ன தகுதிகளுடன் தேடுவீர்களோ, அப்படி உங்களுக்கு ஒரு வேலை தேடுங்கள். வேலை நேரம், அலுவலக அமைப்பு, சம்பளம், ஊர், வேலை அலுவலகத்திலா... ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதா என்று நீங்கள் விரும்பும் சங்கதிகள் எல்லாம் எந்த வேலைகளில் இருக்கிறதோ,அவற்றுக்குக் குறிவையுங்கள். இன்றைய பரந்து விரிந்த உலகத்தில் நீங்கள் என்ன தகுதிகள் எதிர்பார்த்தாலும், அந்தத் தகுதிகளுடன் எங்கோ ஒருமூலையில் ஒரு வேலை காத்துக்கொண்டு இருக்கும் உங்களுக்காக.

ஓ.கே காதலன்/காதலியை ஃபிக்ஸ் செய்தாயிற்று. அடுத்து? உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் உங்கள் காதலைத் தெரிவிக்க எப்படியெல்லாம் ரிகர்சல் செய்வீர்கள். அதுபோல, உங்களுக்குப் பிடித்த வேலைக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி இன்டர்வியூவில் கலந்துகொள்வது வரை முன் திட்டமிட்டுச் செயல் படுங்கள். இத்தனை காதலுடன் நீங்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, உங்களின் உடல்மொழியில் தொனிக்கும் அந்த ஆர்வமே உங்கள் 'காதலை' உங்களிடம் சேர்த்துவிடும். என்ன, உடனே 'டேட்டிங்'கை ஆரம்பிக்க வேண்டியதுதானே!

விட்டுக்கொடுக்காதே!

அப்பா தன் மகனை அழைத்தார். ''மகனே, வாழ்க்கையில் உனக்கென்று ஒரு கொள்கை வைத்துக்கொள். அந்தக்கொள்கையை அடையும் முயற்சிகளை ஒருநாளும் விட்டுக்கொடுக்காதே. உனக்கு மகாத்மா காந்தி யாரென்று தெரியுமா?''

''தெரியும்!''

''கபில்தேவ்?''

''தெரியும்!''

''ஏ.ஆர்.ரஹ்மான்?''

''தெரியும்!''

''இவர்கள் எல்லாருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?''

''என்ன?''

''அவர்கள் எந்தச் சமயத்திலும் தாங்கள்கொண்ட கொள்கையில் இருந்து விலகவில்லை. உனக்கு சந்தான கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா?''

''தெரியாதே... யார் அவர்?''

''அவர் பாதியில் விலகிவிட்டார். அதனால்தான் உனக்கு அவரைத் தெரியவில்லை!'' என்றார் அப்பா.

இதுதான். இவ்வளவுதான். உலக சமாதானமோ, உலகக் கோப்பையோ, ஆஸ்கர் விருதோ, ஆறிலக்கச் சம்பளமோ, தூத்துக்குடி அவுட்டரில் சொந்தமாக ஒரு வீடோ... எந்தச் சமயத்திலும் உங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காதீர்கள்!

முழுமையாக ஒப்படை!

கேதே மில்லர்பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அபாரமான ஓட்டப் பந்தய சாம்பியன். பள்ளி நாட்களில் கேதே கலந்துகொள்ளும் எந்தப் போட்டிகளிலும் அவள்தான் வின்னர். எதிர்காலத்தில் அபாரமான உலக சாதனைகளைப் படைப்பாள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த அவளது 13-வது வயதில் கேதே ஒரு மோசமான விபத்தில் சிக்கினாள். மிக மிக மூர்க்கமான விபத்து. கிட்டத்தட்ட மூளை சிதைந்துவிட்டது. 11 வாரங்கள் கழித்து கண் விழித்த கேதே, அதன் பிறகு மூச்சுவிட, தண்ணீர் குடிக்க, நடக்க, பேச, ஆரம்பம் முதல் பழக வேண்டி இருந்தது. சரசரவென குறைந்த எடை, உடலில் ஒரு துளி உயிரையும் சொற்ப எலும்புகளையுமே மிச்சம் வைத்திருந்தது. ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்வதைப்பற்றி கேதே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்கள் மருத்துவர்கள்.

ஆனால், ஒருநாள் கேதே மீண்டும் ரேஸ் டிராக்குக்கு வந்தாள். துப்பாக்கி வெடித்து மற்றவர்கள் பாதி தூரம் கடந்த பிறகுதான் கேதேவால் எழுந்து நிமிர்ந்து எட்டுவைக்க முடிந்தது. நடுநடுவே பொத்பொத்தென்று கீழே விழுந்து எழுந்ததில் உடலெங்கும் காயங்கள். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் ரத்தம் கசிகிறது. ஆனாலும், விடாமல் ஓடி எல்லைக் கோட்டைத் தாண்டுகிறார் கேதே.

'முதன்முறையாக ரேஸில் கடைசி இடம் பிடித்து வெற்றியை நழுவவிட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர் கள்?'' என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.

''முதல் இடத்தைப் பிடிப்பதுதான் வெற்றி என்று நான் எண்ணவில்லை. இந்த ரேஸை நான் முடிப்பதே எனக்கு வெற்றிதான். முதல் இடமோ, கடைசி இடமோ, நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதி நிச்சயம் எனக்கு மகிழ்ச்சிதான். நமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்திய பிறகு விளையும் விளைவுகளுக்கு நிச்சயம் நாம் பொறுப்பாக மாட்டோம்!'' என்றார் கேதே.

உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் ஒப்படைக்கவிருப்பது எப்போது?


இவ்வளவுதான் ஆண்!

ஸாரி ஜென்டில்மேன்... இந்த ஒரு வரி மட்டும்தான் உங்களுக்கு. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க உங்களைச் சமாளிக்க, பெண்களுக்கு டிப்ஸ் கொடுக்கப்போகிறது. நீங்களும் படித்துத் தெரிந்துகொண்டால், கொஞ்சம் உஷா ராக இருக்கலாம்! ஓ.கே. லேடீஸ்... இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வருடத்தின் எந்த நாளிலும், ஒருநாளின் எந்த நேரத்திலும் 'ஆண்களை' எதிர்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. அப்பா, சகோதரன், நண்பன், ஆசிரியர், காதலன், கணவன், சக ஊழியர், மேலதிகாரி, கடைநிலை ஊழியர், டிரைவர், மகன், மருமகன் என எங்கெங்கு காணிணும் ஆண்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆண்களுடன் இணைந்துதான் பல சமயங்களில் நீங்கள் செயல் பட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர்களை முழுக்கவே நீங்கள் உதாசீனப்படுத்திவிட முடியாது. உங்களுக்குச் சேவை செய்வதற்கு அவர்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், கொஞ்சம் கெத்து காட்டுவது அவர்கள் பழக்கம். சிலருக்கு உள்ளபடியே பெண்கள் என்றால் வேம்பாகக் கசக்கவும் செய்யும். பலருக்குத் தானாக முன்வந்து உங்களுக்கு உதவுவதற்குக் கூச்சமாக இருக்கும். அது போன்ற சமயங்களில், ஒரு சின்னப் புன்னகை, ஆதரவான தலையசைப்பு, கண்களில் தொனிக்கும் நட்பு... இவை போதும் எவரையும் உங்களை நோக்கிக் காந்தமாகக் கவர! வாருங்கள் பெண்களே, இந்த உலகை ஆள வந்ததாக எண்ணிக்கொண்டு இருக்கும் ஆண்களை ஆளலாம் என்று அழைக்கிறார் மேரி ஃபோர்லோ. 'Make Every Man Want You' புத்தகத்தில் ஓர் ஆயுளுக்குமான அனுபவங்களை டிப்ஸ்களாக வழங்குகிறார் மேரி.


கேளடி கண்மணி!

கிட்டத்தட்ட பெண்கள், ஆண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பது இல்லை. ஓர் ஆண் நம்மிடம் பேசும்போது, வெறுமனே காது கொடுத்துக் கேட்பது மட்டும் கவனிப்பது ஆகாது. மனதைக் கொடுத்து அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பதுதான் கவனிப்பதாகும்.

ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் எதைப்பற்றிப் பேசினாலும், அது தனக்குப் பிடித்த விஷயமா, பிடிக்காத ஒன்றா என்பதை ஆராய்வதிலேயே முழுக் கவனத்தையும் செலவிடுவாள். அந்த விஷயம் தனது கொள்கையை எங்காவது காயப் படுத்துகிறதா, இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, கூடாதா என்று அவளுக்குள்ளேயே ஒரு குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும். அந்த உள்ளலிக் குரலைக் கொஞ்ச நேரம் மியூட் செய்துவிட்டு, உங்கள் முன் உயிரும், சதையும், உணர்வுமாக நிற்கும் அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

ஒருவனின் வார்த்தைகளை நீங்கள் உள்ளபடியே முழுக் கவனத்துடன் கேட்கும்போது, அவன் கண்களுக்கு நீங்கள் தேவதையாகத் தெரிவீர்கள். 'ஆஹா! நாம் பேசுவதைக் கேட்பதற்கு இந்த உலகத்தில் ஒருத்தி இருக்கிறாள்' என்று உளமகிழ்ந்து, அகம் நெகிழ்ந்து உங்களுடன் ஒரு நெருக்கத்தை உணர்வான் அந்த அப்பாவி. அதற்காக உங்களிடம் பிளேடு போடுபவர்களிடம் எல்லாம் நீங்கள் பொறுமையாகக் காது கொடுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் நெருங்கிய நட்பு வட்டம், மனம் கவர்ந்தவர்களிடமாவது நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம்!

அழகுக் குட்டிச் செல்லம்!

கொஞ்சம் நேர்மையாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வோமா? முதல் பார்வையில் நாம் எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பதும் முக்கியம். அழுக்குச் சட்டை, தொளதொள பேன்ட், முள் தாடி, காடாக மண்டிக்கிடக்கும் தலைமுடியுடன் ஒரு ஆணை நீங்கள் பார்த்தால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள். அதே மனநிலைதான் அவர்களுக்கும் பெண்களைப் பார்க்கும்போது. நீங்கள் கனிவானவர்தான், ஜீனியஸ்தான், நண்பர்களுக்கு என்றால் எந்த உதவியும் செய்யக்கூடியவர்தான். ஆனால், உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமே! அத்தனை தகுதிகள் இருந்தாலும், சின்ன பவுடர் பூச்சு, ஒற்றைச் சுருள் நெற்றியில் புரளும் கூந்தல் பின்னல், பேசும்போது மின்மினியாகச் சிலுசிலுக்கும் குட்டித் தோடுகள், உங்களுக்குப் பொருந்தும் நிறத்தில் கச்சிதமான ஆடைகள் என ஒரு கண்கவர் பொக்கேவாக இருந் தால் உங்கள் மதிப்பு பல மடங்குகளில் எகிறும். பேரழகி, பிரபஞ்ச அழகியாகத் தோற்றமளிக்க வேண்டாம். 'மச்சான் கீதா என் ஃப்ரெண்டுடா!' என்று மற்றவர்களிடம் பெருமிதம்கொள்ளும் சந்தோஷத்தை உங்கள் நண்பனுக்குக் கொடுக்கும்விதத்தில் உங்கள் தோற்றம் இருந்தால் யாவரும் நலம்!

என்னைக் கொஞ்சம் மாற்றி...

'நான் குண்டாக இருக்கிறேனா?', 'நான் அழகாக இல்லையோ?', 'அவள் என்னைவிட அழகோ?', 'என்னை உனக்குப் பிடிக்கவில்லையா?', 'நான் உனக்குப் பொருத்தமானவள் இல்லையா?', 'நீ என்னை உண்மையிலேயே காதலிக்கிறாயா?'

இப்படியெல்லாம் உங்கள் கணவரிடமோ, காதலரிடமோ தொடர்ந்து சந்தேகம் எழுப்பிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் ஈகோவை இந்தக் கேள்விகளே தூண்டிவிட்டு, 'ஏன் அவளுக்கு இவ்வளவு சந்தேகம்? ஒருவேளை அப்படித்தானோ?!' என்று உங்கள் சந்தேகங்களே தேவை இல்லாத சங்கடங்களில் கொண்டுவந்து நிறுத்தும். இதுபோன்ற அர்த்தம் பொருத்தம் இல்லாத சந்தேகங்கள் உங்களுக்குள் உதித்துவிட்டால், அவற்றை எந்த ஆறுதலும் சமாதானமும் களைந்துவிடாது. ஏனென்றால், அந்தச் சந்தேகங்கள் அனைத்தும் மாயை, கற்பனை. கற்பனையான ஒரு பிரச்னைக்கு எப்படி ஒரு தீர்வினைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் மனதில் இருக்கும் தேவை இல்லாத பயம், பதற்றங்களைக் களைவதுதான் இதற்கு ஒரே தீர்வு. அந்தப் பதற்றங்களை உங்கள் பார்ட்னர் மனதுக்குள் செலுத்திவிடாமல், இருவருமாக இணைந்து ஒரு தீர்வினை எட்டுங்கள்!

இவன்தானா... இவன்தானா?

உங்களவனை ஃபிக்ஸ் செய்துவிட்டீர்கள். ஆனால், 'இவன்தானா... இவன்தானா?' என்று இன்னும் உள்ளுக்குள் சின்னதாக ஒரு சந்தேகம் உருண்டுகொண்டே இருக்கிறது. எப்படி அவனை கன்ஃபார்ம் செய்வது? வேறு வழியே இல்லை... அவனை முழுமையாக நம்பி, உங்கள் நம்பிக்கைக்கு அவன் எந்தளவுக்கு உரியவன் என்பதை உங்கள் உள்மனம் உணர்வதுதான் ஒரே வழி. 'தி கேர்ள் திங்' என்பார்கள். ஒருவனுடனான சில நாள், சில மணி நேரங்களிலேயே உங்களுக்குத் தெரிந்துவிடும்... இவன் நமக்கானவனா இல்லையா என்று! ஆனால், அந்த உணர்வுத் தெளிவு வரும் வரை உங்களிடம் இருக்கும் அத்தனை அன்பையும் அவனுக்கு வாரி வழங்குங்கள். அவனிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, தோழமை, காதல் ஆகியவற்றைக் காட்டிலும் நீங்கள் வெளிப்படுத்தும் அன்பின் அடர்த்தி அதிகமாக இருக்கட்டும். அந்த அடர்த்தியின் பிரதிபலிப்புகளே 'அவன் யார்?' என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... நீர் பாய்ச்சப்படும் புற்கள்தான் பளிச் பச்சையுடன் பசுமையை வெளிப்படுத்தும். ஆல் தி பெஸ்ட் கேர்ள்ஸ்!


டா வின்சி போல யோசி!

லியோனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? உடற்கூறு வல்லுநர், பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் அறிஞர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவமேதை, இயற் பியல் மேதை... இன்னும் என்னவெல்லாம்?

இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்த மானவர், லியோனார்டோ டா வின்சி. 'சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. 'அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப்போல உள்ளதே 'think like da vinci' என்ற புத்தகத்தின் தலைப்பு' என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!'இப்படி ஆரம்ப வரிகளிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.

டா வின்சி மறைந்தபோது, 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடுசெய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழி முறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.

ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள்!

ஜீனியஸ்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன்குழந்தை கள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்வி களைக் கேட்டுக்கொண்டே இருக்கும். 'அம்மா, இந்த கிரைண்டர் எப்படி வேலை செய்கிறது?', 'நான் எப்படிப் பிறந்தேன்?', 'அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது?', 'ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு?', இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில் தான் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள். டா வின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாகவைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக் குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக்கொள்வார் டா வின்சி. பின்னர், அவற்றுக் கான பதிலுக்காக மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்.

நீங்களும் எந்தச் சின்னச் சம்பவமாக இருந்தாலும், அதைப்பற்றி டாப் 10 கேள்விகள் எழுப்பிப் பழகுங்கள். உதாரணமாக, ஒரு பறவை பறக்கிறதென்றால்,

ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?

ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?

அது எப்படி மேலெழும்புகிறது?

எப்படித் தன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது?

எப்படி வேகம் எடுக்கிறது?

எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?

அது எப்போது தூங்கும்?

அதன் பார்வைத் திறன் எவ்வளவு?

எப்படி அது உண்ணும்?

பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை யோசிக்கத் தொடங்கினாலே, பறவையின் மறுபக்கம் குறித்துப் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வோம்தானே! நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது இல்லை.ஆனால், அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஓர் உற்சாகத்தை ஊற்றுவிக்கும்!

எனது ப்ளஸ், மைனஸ்!

1) எனது பலம், சிறந்த குணங்கள் என்ன?

2) எனது பலவீனம், திருத்திக்கொள்ள - கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

3) இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மை கொண்ட, சின்ஸியரான நபராக ஆளுமையைவளர்த்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

அதிகபட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான நலன்விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுக்கு ஏற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள் ளுங்கள். கல்லூரி-அலுவலகங்களில் உங்கள் ஜூனியர், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரிடம்இருந்து வரும் பதில்களைக்கூட உதாசீனப்படுத்தாதீர்கள். பதில் கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால், உஷார் ஆக வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்!

எனி டைம் மாணவன்!

கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடித்து, ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம்பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப்போகி றோம். டா வின்சி மரணப் படுக்கையில் விழும் கடைசி நொடி வரை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளி, கல்லூரிப் பருவங்களைத்தானே ஆயுளுக்கும் குறிப்பிடு வோம். காரணம், அந்தக் காலங்களில் நம்மை உற்சாக மாக வைத்திருக்கும் அந்த மாணவ மனப்பான்மை தான். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மனது தனது கதவு, ஜன்னல் களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. புதிதாக ஓர் ஆடையோ, செல்போனோ, கார் - பைக்கோ வாங்கும்போது எப்படிக் குதூகலம் அடைகிறோமோ, அதேபோலத்தான் நமது அறிவு அப்டேட் ஆகும்போது உற்சாகமாக இருக்கும். புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது, கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத் தலாம்.

ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பயிற்சி யின்போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்துகொண்டு, தெரிந்தவர் கள் வழிநடத்துவதை - அவர்கள் நம்மைவிட எவ்வ ளவு சிறியவர்களாக இருந்தாலும் - ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதைமுடிக் காமல்விடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கவேண் டும்!

வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடுசெய்வோம்!

அந்த 100 நிமிடங்கள்!

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய '100 MINUTES That’ll change THE WAY YOU LIVE' புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே...

எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை!

ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்களுக்குத் தனது நண்பர்கள், உறவினர்களை அழைத்திருந்தான். பெண்கள் டி.வி. அறையில் அரட்டை அடிக்க, ஆண்களின் கச்சேரி ஹாலில் களைகட்டிஇருந்தது. பேச்சுவாக்கில் முந்தைய நாள் ஹோட்டல் டின்னர்பற்றி சிலாகித்த ஆனந்த், ''அந்த ஹோட்டல் இங்கேதான் அண்ணா நகர் ரவுண்டானாகிட்டே... பேருகூட நல்ல பேருப்பா! ஆங்... மறந்துருச்சே. இது இந்த ராக்கெட்ல நிலவுக்குப் போச்சே ஓர் அமெரிக்கப் பொண்ணு... அட 'கஜினி' படத்துலகூட அசின் பேருப்பா!'' என்று யோசிக்க, 'கல்பனா கல்பனா!' என்று எடுத்துக் கொடுத்தார் நண்பர் ஒருவர். ''ஆங்! கல்பனா.'' என்று பிரகாசமான ஆனந்த், உள்ளே டி.வி. அறை நோக்கித் திரும்பி, ''கல்பனா... கல்பனா மை டார்லிங். நேத்து நாம சாப்பிட்ட ஹோட்டல் பேர் என்னடா குட்டி? சட்டுனு மறந்துருச்சு!'' என்றார்!

எல்லாமே நல்லதாக இருந்தால், எங்கோ... ஏதோ தப்பு!

உலகின் ஐந்தாவது பணக்காரர் அவர். நியூயார்க் ஏர்போர்ட்டில் அவர் நுழைந்தபோது தூக்க முடியாமல் இரண்டு சூட்கேஸ்களைக் கைக்கு ஒன்றாகச் சுமந்தபடி சிரமப்பட்டு நடந்துகொண்டு இருந்த ஒருவனைக் கண்டார். அவனிடம் இவர், ''மணி எத்தனை?'' என்று கேட்டார். உடனே அவன், அந்த இரண்டு பெட்டிகளையும் கவனமாகக் கீழேவைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டைக்குள் ஒளிந்திருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் இருந்து உலகத்தின் முக்கிய நகரங்களின் நேரங்களைத் துல்லியமாகச் சொன்னான். மில்லியனர் ஆச்சர்யம் காட்டவும், 'இதில் செய்திகளும் வரும்!' என்று அதன் சின்ன ஸ்க்ரீனில் லைவ் நியூஸ் காண்பித்தவன், அந்த வாட்ச்சில் இருந்தே தன் மனைவியின் செல்போனுக்கு அழைத்துப் பேசினான். பிறகு, அந்த மில்லியனருடன் அந்த வாட்ச்சிலேயே போட்டோ எடுத்துக்கொண்டு அதை அவருக்கு அந்த வாட்ச்சிலிருந்தே இ-மெயில் செய்தான். அசந்துபோன மில்லியனர் எந்தப் பேரத்துக்கும் இடம் கொடுக்காமல், அவன் சொல்லிய விலையைக்காட்டிலும் இரு மடங்கு கொடுத்து அந்த வாட்ச்சை வாங்கிக்கொண்டார். பெருமையாக அந்த வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு மில்லியனர் நடக்கத் துவங்க, அவரைத் தடுத்து நிறுத்திய அவன், ''நீங்கள் அந்த வாட்ச்சின் பேட்டரியை மறந்துவிட்டுச் செல்கிறீர்கள்!'' என்று அந்தக் கனத்த இரண்டு சூட்கேஸ்களைக் காட்டினான்!

சத்தியம் செய்யும் முன் சகலமும் யோசி!

கண்ணாடிக் கடையில் கண்ணின் பவர் பரிசோதிக்கப்படக் காத்திருந்த பெரியவர், கடைச் சிப்பந்தியிடம், 'புதுக் கண்ணாடி மாட்ட எவ்வளவு நேரம் ஆகும்?' என்று கேட்டார். 'அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும்!' 'நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். ஒரு மணி நேரம்தான் ஆகுமா? ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நான் இந்தப் புத்தகத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்தானே?' என்று கையில் இருந்த புத்தகத்தைக் காட்டி உறுதி கேட்டார். 'ம்ம்... 15 நிமிடம் முன்னே பின்னே இருந்தாலும், அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்துக்குள் நீங்கள் கண்ணாடி அணிந்து வாசிக்க முடியும்!' என்றார் சிப்பந்தி. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் இறுமாப்போடு முணுமுணுத்தார்... 'யாரை ஏமாத்தாப் பாக்குறாய்ங்க... நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆறுல இருந்து எட்டு மாசம் ஆகும்னு முதியோர் கல்வி வாத்தியார் சொன்னானே. கண்ணாடி கைக்கு வரட்டும். வெச்சுக்குறேன் அவனை!'

திர்பார்ப்புகளுக்கும் உண்டு எல்லை!

கசக்கிக் கட்ட கந்தைகூட இல்லாத ஏழை அவன். தன் வறுமையைப் போக்க இறைவனிடம் வரம்வேண்டி இமயமலைக்குச் சென்று தவம் இருந்தான். முழுதாக 36 வருடங் கள் கழித்து அவன் முன் தோன்றி னார் இறைவன். 'அடக் கடவுளே! 36 வருடங்களுக்குப் பிறகுதான் என் பக்தி உன்னை எட்டியதா?' என்று அவன் கேட்க, மெலிதாகச் சிரித்தார் இறைவன். 'பக்தா தேவ லோகத்தில் நாளும், நேரமும் மிக மிக மெதுவாகத்தான் பயணிக்கும். பூலோகத்தின் 36 வருடங்கள் தேவலோகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். என்னைப் பொறுத்தவரை நீ தவத்துக்கு என அமர்ந்ததுமே நான் உன் முன் தோன்றிவிட்டேன்!' உடனே வியப்படைந்த பக்தன், 'ஆஹா... அப்போ இதேபோல செல்வத்தின் மதிப்பும் பூலோகத்தைக் காட்டிலும் பெருமளவு வேறுபடுமா?' என்று ஆர்வமாகக் கேட்டான். 'நிச்சயம் பக்தா. தேவலோகத்தின் ஒரு தங்கக் காசை வைத்து இந்த பூமியையே விலைக்கு வாங்கிவிடலாம்!' என்றார். உடனே கண்கள் மின்ன, 'ஆஹா! சாமி இதற்காகத்தானே காத்திருந்தேன்... எனக்கு இரண்டே இரண்டு தங்கக் காசுகள் மட்டும் கொடுங்களேன்!' என்றார் அந்த பக்தன். 'ஒரே ஒரு நிமிஷம் பொறு பக்தனே. இதோ வருகிறேன்!' என்று விஷ்ஷ்ஷ்க்கென மறைந்தார் கடவுள். காத்திருக்கத் தொடங்கினார் பக்தன்!

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!

ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை. மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருக்கிறார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்கிறார். சீனியர் துறவிகளில் ஒருவர் திடீரென எழுந்து ஆற்றின் மீது நடந்து சென்றார். சிறிது நேரத்தில் மற்ற இருவரும் அப்படியே நடந்து செல்கிறார்கள். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட இளந்துறவி, தன்னாலும் அப்படி நடக்க முடியும் என்று முடிவெடுத்து ஆற்றுக்குள் கால்வைக்கிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அதைப் பார்த்த சீனியர் துறவி ஒருவர் மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார், 'ஆற்றுக் குள் கால்வைத்து நடக்க எங்கெங்கு கற்கள் புதைந்திருக்கின்றன என்பதை நாம் அவருக்குச் சொல்லிஇருக்க வேண்டும்!'

எதிர்மறை விளைவுகளுக்கும் தயாராக இருங்கள்!

அவனுக்கு அன்றுதான் திருமணம் முடிந்தது. தன் மனைவியை உயர் ரக அரபுக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச்சென்றுகொண்டு இருந்தான். பாதையில் ஒரு குழியில் விழுந்து எழுந்தது சாரட் வண்டி. 'முதல் எச்சரிக்கை!' என்றவன், குதிரையின் முதுகில் சாட்டையில் ஒரு இழு இழுத்தான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. 'இரண்டாவது எச்சரிக்கை!' என்றவன் மீண்டும் சாட்டையால் குதிரையை அடித்தான். மூன்றாவது முறையும் சாரட் பள்ளத்தில் விழுந்து எழ, கோபத்துடன் சாரட்டை விட்டுக் கீழே இறங்கினான். துப்பாக்கியை எடுத்து குதிரை யைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதிர்ச்சியடைந்த மனைவிசாரட்டை விட்டு இறங்கி, 'உனக்கு அறிவே இல்லையா? அந்தக் குதிரை எத்தனை காஸ்ட்லி தெரியுமா?' என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், 'முதல் எச்சரிக்கை!' என்றான். அதன்பிறகு 40 வருடங்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லாமல், அந்தத் தம்பதி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி னார்கள்!


சிரித்துக்கொண்டே இறப்பீர்களா?

ம்ஸ்கிருதத்தில் இப்படிச் சொல்வார்கள்... 'நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள். ஆனால், இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்!'

மரணப் படுக்கையில் இருந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம், 'நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்றால், அதனை எப்படிக் கழிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். நீண்ட பெருமூச்சுடன் பெர்னாட்ஷா இப்படிப் பதிலளித்தார், 'இப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, எப்படி எல்லாம் வாழாமல் இருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்வேன்!'

சம்ஸ்கிருத வாக்கியத்துக்கும் பெர்னாட்ஷாவின் கூற்றுக்கும் இடையே ஏதோ ஓர் ஒற்றுமை இழை ஒளிந்திருக்கிறது. அது என்னவென்று கண்டுகொண்டால்... அதுதான் வாழ்க்கைக்கான மந்திரம். இந்தப் பயிற்சி கஷ்டமாக இருந்தால், உங்கள் இறப்புக்கு யாரெல்லாம் அழுவார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஒற்றைப் படையில் எண்ணிக்கை இருந்தால்... நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எதையோ மிஸ் செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். வாருங்கள் அந்த எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று அழைக்கிறார் ராபின் ஷர்மா. 'The monk who sold his ferrari' என்ற ஒற்றைப் புத்தகத்தின் மூலம் தன்னம்பிக்கை குரு அந்தஸ்து எட்டியவர் இவர். 'who will cry when you die?' என்ற புத்தகத்தின் மூலம் 101 வழிகளில் உங்களை இனிமையானவர் ஆக்கிக்கொள்ள வழி சொல்கிறார் ராபின் ஷர்மா.

'ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா?

நமக்குப் பிடிக்காத செயலாக இருந்தாலும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் அதை சிறப்பாகச் செய்துமுடிக்கும் வல்லமையைக் கற்றுக்கொடுப்பதுதான் எந்த ஒரு கல்வியின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். 'படிக்காத மேதை' என்று போற்றப்படுவர்களிடம் இந்தத் தகுதி தவறாமல் குடிகொண்டு இருக்கும். ஒரே வரியில் சொன்னால், 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதி உங்களிடம் இருக்கிறதா?

நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பது, மற்றவர்களிடம் இனிமையாகப் பழகுவது, துல்லியமான, தெளிவான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவது, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது போன்றவை சுய ஒழுக்கம் இல்லாமல் சாத்தியமாகாது. வேதனை தரும் என்றாலும் சில செயல்களைச் செய்யத் தயங்காததால்தான், சாதனையாளர்கள் என்ற பட்டம் சுமக்கிறார்கள் சிலர். தயங்குபவர்கள் பின்தங்கித் தேங்கிவிடுகிறார்கள். அழகைத் தாண்டி சில பிரத்யேக குணங்கள் தான் ஓர் ஆண்/பெண் மீது காதல்கொள்ள நம்மைத் தூண்டும். அதேபோல 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதிதான் நம் மீது நமக்குக் காதல் தூண்டும். 'ஐ லவ் மீ' சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?

சூரியனாக ஜொலிக்க ஆசையா?

யாருக்குத்தான் இந்த உலகில் சூரியனாக ஜொலிக்க ஆசை இருக்காது. அதற்கு அடிப்படை முதல் காரியமாக நீங்கள் செய்ய வேண்டியது... சூரியனோடு சேர்ந்து எழுவது. சூரியன் தோன்றிய காலந்தொட்டு கடைபிடிக்கச் சொல்லப்படும் பழக்கம்தான் என்றாலும், சூரியன் இருக்கும் வரை ஸ்கோர் செய்ய உதவும் பழக்கம். அதிகாலை ஐந்து மணியில் இருந்து எட்டு மணி வரை சுற்றுப்புறத்தில் நிலவும் ஓர் அமைதி, ஒரு நாளின் மற்ற எந்த நேரத்திலும் கிடைக்காது. மகாத்மா காந்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சூரியனோடு சேர்ந்து எழுந்தவர்கள். சூரியனாக ஜொலித்தவர்கள். அந்த அந்தஸ்தை எட்ட ஆசைப்படுபவர்களுக்கு சில சிம்பிள் டிப்ஸ்...

எட்டு மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாதீர்கள்.

உறங்கச் செல்வதற்கு முன் செய்தி சேனல்களைப் பார்க்காதீர்கள்.

படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்காதீர்கள்.

படுக்கையில் இருக்கும்போது மறுநாள் அலுவல் களைப்பற்றிய முன்னோட்டம் ஓட்டாதீர்கள்.

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துகொள்ள ஆரம்ப நாட்களில் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், எது ஒன்று கஷ்டமாக இருக்கிறதோ, அதுதான் அதிகப் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தவர்தானே நீங்கள்?

மூன்று வாசல் சோதனைகள்?

'எவராலும் எவர் மீதும் கோபம்கொள்ள முடியும். ஆனால், சரியான நபர் மீது சரியான விகிதத்தில், தக்க தருணத்தில், கச்சிதமான காரணத்துக்காகக் கோபம்கொள்வது ஒரு கலை!' என்கிறார் அரிஸ்டாட்டில்.

இத்தனை சங்கதிகளை உங்களால் கவனத்தில் வைத்துக்கொண்டு கோபம்கொள்ள முடியவில்லை என்றால், இன்னொரு ஐடியா இருக்கிறது. புத்த பிட்சு கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 'அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா?' என்பது முதல் வாசல் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் 'ஆம்' என்றால்தான், அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும். இரண்டாவது வாசலில், 'இந்த வார்த்தைகள் அவசியம்தானா?' என்பது கேள்வி. அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு 'அந்த வார்த்தைகள் கனிவானவையா?' என்பது மூன்றாவது வாசல் கேள்வி. இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள். நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும், கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல் கள் வழி அனுப்பலாமே!

ஒளிவுமறைவு இல்லாத உண்மை!

ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை... உலகத்தையே அடக்கியாளப் புறப்பட்ட பேரரசன் நெப்போலியனாக இருந்தாலும் சரி... ஒண்டுக் குடித்தன வீட்டில் மூன்றாவது பெண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாமல் தவித்த நாகராஜனாக இருந்தாலும் சரி... அவர்களது மரணப் படுக்கை மனநிலை என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கும்! 'இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் வாட்டர்லு போரில் வெற்றி பெற்றிருக்கலாம்' என்று நெப்போலியனும், 'பயப்படாம அந்த சீட்டுப் பணத்தை வாங்கியிருந்தா மூணாவது மகளுக்கும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்!' என்று நாகராஜனும் வருந்திக்கொண்டு இருப்பார்கள். 'அந்த ரிஸ்க்' உங்கள் வாழ்க்கையில் எந்தச் சமயத்தில் உங்களை எதிர்கொள்கிறது என்பதைக் கணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் மிக வசதியாக இருப்பதாக உணர்ந்தால், அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் துவங்க வேண்டிய சமயம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வசதியை எட்டுவதற்கு முன் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை எண்ணிப்பாருங்கள். அடுத்தகட்டச் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

காதல் திருமணத்தை நிச்சயிப்பது எப்படி?
கி.கார்த்திகேயன்

மீண்டும் மீண்டும் அதே நபருடன் காதலில் விழுந்தால்தான், ஒரு திருமணம் வெற்றியடையும்!

ஒரு ஆண்/பெண் அலுவலகம் செல்வதற்கு வசதியாக இருக்குமே என்று ஒரு இரு சக்கர வாகனம் வாங்கத் திட்டமிட்டால், என்னவெல்லாம் யோசிப்பார்கள்? அந்த வண்டியின் விலை, மைலேஜ், நிறம், நிறுவனம், நம்பகத்தன்மை, பயன்பாட்டுத் திறன் என பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்துதானே வாங்குவார்கள். ஒரு நாளில் அதிகபட்சம் அரை மணி நேரம் பயணிக்கவிருக்கும் இரு சக்கர வாகனத்துக்கே இத்தனை திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்க்கை முழுக்க தன்னுடன் கை கோர்த்து இரவு, பகல், கிறிஸ்துமஸ், தீபாவளி, ஜனவரி, டிசம்பர்களைக் கழிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு ஆண் அல்லது பெண் இத்தனை தெளிவாகத் திட்டமிடுகிறார்களா? தேர்ந்தெடுத்த பிறகு அந்த இரு சக்கர வாகனம் மட்டும்தான் நமக்குச் சொந்தமாகும். ஒரு திருமணத்துக்குப் பிறகு அவன்/அவளின் குடும்பம், உறவினர்கள், அவர்களின் கோபதாபங்கள் அனைத்தும் இலவச இணைப்பாக வரும். அவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திட்டமிருந்தால்... திருமணம் என்ற ஆபரேஷன் சக்சஸ்தான் என்கிறார் மீரா ரவி.

இவரது 'Arrange Your Love Marriage' என்ற புத்தகம் முழுக்க காதல், திருமண வடிவமெடுக்கும் போது முட்டி மோதவரும் பிரச்னைகளைப் பற்றியே முன்னோட்டங்கள். காதலிக்கும் சமயம் நீங்கள் கவனிக்க மறந்த விஷயங்களைப் பற்றிய நினைவூட்டல்களும் கூட நிறைய..!

திருமணங்கள் ஆச்சரியங்களில் நிச்சயிக்கப்படுவதில்லை!

இந்தியாவில் ஒவ்வொரு திருமணமும் பிரமாண்டக் கொண்டாட்டம். மணமேடை, நகைகள், பட்டுப் புடவை, வேஷ்டிகள், விருந்துகள் என்று இரண்டு நாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு உறவினர்கள் அனைவரும் கலைந்து செல்ல, வாழ்க்கை எனும் ஓடத்தில் 'தனிமை'யில் பயணிப்பார்கள் தம்பதியர். அந்த சமயம் அவர்களுக்குள் ஏற்படும் புரிதலும் நேசமும்தான் வாழ்க்கை மொத்தத்துக்குமான எரிபொருளாக இருக்கும்.

'எனக்கு குழந்தை என்றால் மிகவும் ஆசை. ஆனால், இவன் இன்னும் மூன்று வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்கிறான்!' என்று என்னிடம் முறையிட்ட பெண், மூன்று வருடக் காதலுக்குப் பிறகு அவனை மணம் செய்து கொண்டவள்.

'அவள் அக்கா கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை நாங்கள் காதலித்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட அவள் தெரிவித்ததில்லை. அது ஏதோ பரம்பரை வியாதி என்கிறார்கள். ஐந்தாண்டு காலக் காதலில் தெரிந்து கொள்ளாத உண்மையை திருமணத்துக்கு மறுநாள் சொன்னால்... எனக்கு வரும் கோபம் நியாயமானதுதானே!' என்று விவாகரத்து கோருகிறார் ஒரு கணவர்.

"காதலிக்கிறோம் என்று சொல்லி எங்கள் வாழ்க்கையின் மூன்று பொன்னான ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம். அந்தக் காலகட்டம் முழுக்க நாங்கள் எவற்றைப் பற்றியெல்லாம் பேசியிருக்க வேண்டுமோ, அவற்றைத் தவிர எல்லாவற்றைப் பற்றியும் பேசியிருக்கிறோம்!' என்று புலம்பும் காதலன்/காதலி பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்காதீர்கள்!

'என்னுடையது இனிய இல்லறம்' என்பவர்களை உலகம் சந்தேகத்துடனேயே எதிர்கொள்கிறது!

அவள் இரவு உணவு தயாரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த கணவன் அவளிடம் கேட்டான், 'நீ ஏன் உருளைக்கிழங்குகளை இவ்வளவு பொடிப்பொடியாக நறுக்குகிறாய்?' 'என் அம்மா இப்படித்தான் நறுக்குவார்கள்!' என்றாள் மனைவி. உடனே அவன் தன் மாமியாரிடம் அதே கேள்வியைக் கேட்டான். 'என் அம்மா அப்படித்தான் நறுக்குவார்கள்... அதனால்தான்!' என்று அதே பதிலை அந்த மாமியாரும் சொன்னார். அதிர்ஷ்டவசமாக (!) மாமியாரின் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டான் அவன். 'அப்போது என்னிடம் இருந்த வறுக்கும் வாணலி சின்னதாக இருந்தது. அதனால், நான் உருளைகளை பொடிப்பொடியாக நறுக்கினேன்!' என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் வழிவழியாக சில அர்த்தமில்லாத பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் குடும்பப் பாரம்பரியமாகத் தொட்டுத் தொடரும். அந்தக் காலத்தில் அதற்குண்டான அர்த்தங்களோடு கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள், இக்காலத்தில் அர்த்தமில்லாத சம்பிரதாயங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும். அத்தனை வருடங்கள் நிலவி வந்த நடைமுறையை ஒரே நாளில் நம்மால் மாற்றிவிட முடியாது. அதற்காக அவற்றைச் சகித்துக் கொண்டும் இருக்க முடியாது. ஆனால், கடந்த காலம் கடந்துவிட்டது. நிகழ்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் புரிய வையுங்கள். எல்லாம் சுபம்!

அனைத்து துன்பங்களுக்கும் முடிவு மரணம். அனைத்து இன்பங்களுக்கும்... திருமணம்!

ஒரு சுவாரஸ்யமான பயிற்சி.

செல்போன், டி.வி, அழைப்பு மணிகள் தொந்தரவு செய்யாத ஒரு இடத்தில் தனிமையில் அமருங்கள். கண்களை மூடிக் கொண்டு உங்கள் திருமண தினத்தை கற்பனை செய்யுங்கள். உங்கள் உடை, அலங்கார நகைகள், மணமேடை அமைப்பு, எதிரே குழுமியிருக்கும் உறவினர்கள், பந்தியில் பரிமாறப்பட்டிருக்கும் உணவு வகைகள் என ஒவ்வொரு சின்னச் சின்ன நுணுக்கமான விவரங்களையும் கற்பனை செய்யுங்கள். அந்த நேரத்து உங்கள் உணர்வுகளை, மகிழ்ச்சியை மனத்திரையில் பிரதிபலிக்கச் செய்யுங்கள். அவற்றை சின்னச் சின்ன குறிப்புகளாக ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள்.

ஓ.கே... இப்போது அதே போல உங்கள் பத்தாவது திருமண தினத்தை கற்பனை செய்யுங்கள். நீங்கள் எங்கு, என்னாவாக இருப்பீர்கள்? உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும்? சொந்த வீடா... வாடகை வீடா? வீட்டில் என்னவெல்லாம் பொருட்களை அடுக்கியிருப்பீர்கள்?

கண் திறந்து இவற்றையும் ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள்.

இந்த இரு கற்பனைகளின்போது உங்களுக்குள் இன்பம்/துன்பம்/குதூகலம்/ பயம்/அதிர்ச்சி/உற்சாகம் ஆகியவற்றில் எந்த உணர்ச்சி அதிகளவில் ஊற்றெடுக்கிறது என்பதை உணருங்கள். சந்தோஷம் சலும்பித் தளும்பினால் ஓ.கே. சங்கடங்களும் பயங்களும் பூதாகரமாக இருந்தால், உங்கள் 'ரிலேஷன்சிப்'பை நீங்கள் செப்பனிட வேண்டிய நேரம் இது. உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் சில வருடப் பழக்கமென்றால், இருவரும் சேர்ந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் இருவரின் கற்பனை எல்லைகள் எந்தளவுக்கு விசாலமாக இருக்கின்றன என்பதை உணரலாம். முக்கியமாக,

நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் குறைக்க இப்பயிற்சி உதவும்!

காதல் செய்யக் கற்றுக் கொள்வது போலவே... யுத்தத்துக்கும் பழகுங்கள்!

கீழ்கண்ட காரணங்கள்தான் உங்கள் திருமணத்தை தீர்மானிக்கிறதா?

"வயசாயிட்டே போகுது... இப்போ கல்யாணம் முடிக்கலைன்னா வேற எப்பதான் முடிக்கிறது?"

என் வயது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கல்யாணமாகி குழந்தையெல்லாம் பெற்றுவிட்டார்கள்!'

' 'என்ன இன்னும் உங்க புள்ளைக்கு கல்யாணம் முடிக்கலையா?'னு எங்க அப்பா-அம்மாவை எல்லா சொந்தக்காரங்களும் கேள்வி கேக்குறாங்க!'

'என் கல்யாணம் லேட் ஆகுறதுனால, என் தங்கச்சி கல்யாணமும் தள்ளிப் போகுது!'

'ஒருவேளை எனக்கு கல்யாணம் ஆகாமலே போயிட்டா!'

மேற்கண்ட ஏதேனும் ஒரு சூழ்நிலை நிச்சயம் உங்கள் மனநிலையில் ஒரு பிரஷர் உண்டாக்கும். அப்படியான சூழல் நீங்கள் உங்கள் திருமணம் குறித்து எடுக்கும் முடிவில் கண்டிப்பாக ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும். இக்கட்டுக்குப் பணிந்து ஒரு அவசர முடிவெடுத்துப் பிறகு வாழ்நாள் முழுக்க வருத்தப்பட்டு பாரம் சுமப்பதைக் காட்டிலும், நிதானமாக அலசி ஆராய்ந்து உங்கள் மனதுக்கு நெருக்கமான, விருப்பமான ஒரு முடிவெடுங்கள். முக்கியமாக, உங்கள் தீர்மானங்களுக்கு வேறு எவரையும் பொறுப்பாக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!


நாலு நிமிஷ வேஷம்!

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சிலபல செயல்களைத் தினமும் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்வுகளுக்குப் படிப்பது, அலுவலகப் பணிகளை முடிப்பது, வீட்டுப் பரணை ஒழிப்பது போன்ற வழக்கமான வேலைகளாக இருந்தாலும் சரி, காதலிக்குக் கடிதம் எழுதுவது, பால்ய கால நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது, மனைவியின் கால்களை அமுக்கிவிடுவது போன்ற 'ஸ்பெஷல் அசைன்மென்ட்'களாக இருந்தாலும் அவற்றை ஆரம்பிக்க மலையளவு தயக்கம் நம்மைத் தடுக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் 'நாலு நிமிஷ வேஷம்' கொள்கையை அமல்படுத்திப் பாருங்கள். அதாவது, தயக்கம் தடுத்துவைத்திருக்கும் எந்த ஒரு செயலையும் நாலே நாலு நிமிடங்கள் மட்டும் செய்யலாம் என்று முயன்றுபாருங்கள். நாலு நிமிடங்களுக்குப் பின் அதைத் தொடர்ந்து செய்யப் பிடிக்காவிட்டால், விட்டுவிடலாம் என்று தாஜா செய்து உங்கள் மனதை அதற்குத் தயார்ப்படுத்துங்கள். பெரும்பாலானவர்கள் ஒரு செயலை நாலு நிமிடங்கள் செய்யத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அதை நிறுத்துவது இல்லையாம். ஒரே ஒரு முறை தள்ளிவிட்டால், அந்த விசையைப் பற்றிக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும் பெண்டுலம்போல. முதல் நாலு நிமிடங்களைக் கடத்திவிட்டால், ஆறு, ஏழு, எட்டாவது நிமிடங்கள் கடப்பதே தெரியாமல் கடந்துவிடும்.

பி.கு: ஒரு நிமிடம் கூடுதலாகத் தாங்குபவர்களைத்தான் ஹீரோ/ஹீரோயின் என்பார்கள்!

இதுபோல 60 க்யூட் டிப்ஸ் தருகிறார் ஜெஃப் டேவிட்ஸன். சின்னச் சோம்பல்கள் காரணமாக நாம் உதாசீனப்படுத்தும் சில சம்பவங்கள்தான் பெரிய பெரிய வருத்தங்களை பின்னர் ஏற்படுத்தும். அந்த சின்னச் சோம்பல்களை எதிர் கொண்டு வெற்றிபெறும் தந்திரங்கள்தான் 'The 60 Second Self Starter' புத்தகம் முழுக்க. அவற்றில் இருந்து சில தந்திரங்கள் மட்டும்...

விமானந்தாங்கி கப்பல்களின் மேல்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிவேக ஜெட் விமானங்கள் ஒலி வேகத்தில் வந்து தளம் தொட்டு சொற்ப தூரத்தில் மொத்த வேகமும் இழந்து கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். எத்தனைதான் பயிற்சி பெற்ற, அனுபவம் நிரம்பிய பைலட் கையாண்டாலும், அத்தனை வேகத்தில் கப்பல் மீது விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இருக்கும் சின்னக் காகிதச் சுருள் அல்லது ஆயில் கறைகூட அந்த விமானத்தை நிலைகுலையச் செய்துவிடலாம். இதனாலேயே கப்பலின் கேப்டனாக இருந்தாலும், சுற்றுப்புறத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு விமானம் தளம் இறங்குவதற்கும் முன்னரும் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது விமானந்தாங்கி கப்பல்களில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய விதி.

கிட்டத்தட்ட நமது மேஜையும் அதேபோன்ற ஒரு விமானந்தாங்கி தளம்தான். நமது தினசரி அலுவல்களின் தீவிரத்தை, வேகத்தை, அதற்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நமது மேஜையும் தீர்மானிக்கும். முந்தைய நாள் குப்பைகள், கடந்த மாத நினைவூட்டல் கடிதங்கள், நினைவில் நிற்காத குறிப்புக் காகிதங்கள் - ஃபைல்கள் போன்றவை உங்கள் மேஜையை அடைத்துக்கொண்டு இருந்தால், அன்றைய தினம் நீங்கள் கிளப்ப வேண்டிய ஜெட் விமானத்தை அந்தக் குப்பைக் கூளங்களுக்குள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? சடசடவென முடிவெடுத்து முடித்த காரியங்களின் குப்பைகளைக் கடாசிவிடுங்கள். முடிக்க வேண்டிய காரியங்களின் குறிப்புகள் மட்டுமே உங்கள் முன் இருந்தால், மலைஅளவு நிம்மதியை உணர்வீர்கள். மலையளவு குப்பை குவிந்துகிடந்தால், உலகளவு அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் ஜெட் விமானம் சீறிப் பாய வாழ்த்துக்கள்!

பி.கு: நாம் பழகும் சில பழக்கங்கள்தான், பிறகு நம்மை வடிவமைக்கின்றன!

சின்ன வயதில் பாட்டிகள் நமக்கு புவ்வா ஊட்ட, குளிக்கவைக்க நம்மை எப்படியெல்லாம் தாஜா செய்திருப்பார்கள். 'நீ இப்போ இந்த கீரைச் சாதத்தைச் சாப்பிட்டாதான், உனக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்', 'ரெண்டே ரெண்டு மாத்திரை. அவ்வளவுதான்... உனக்கு சிவப்பு கலர் பலூன் வாங்கித் தாரேன்', 'மாவு மில்லுக்குப் போயி கோதுமையை அரைச்சுட்டு வந்தா, ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டிக்கோ' - இப்படி அப்படி தாஜா செய்து தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வது பாட்டிகள் பழக்கம். அந்தப் பாட்டி பழக்கத்தை இப்போது நாம் செயல்படுத்தினால் என்ன?

அதாவது, நமக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலைச் செய்து முடித்ததும், ரொம்பவே பிடித்தமான ஒரு செயலைச் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுவது. உதாரணமாக, செமஸ்டர் தேர்வுகளுக்குப் படித்து முடித்ததும் டி.வி.டி-யில் ஜாக்கிசான் படம் பார்க்கலாம், அசைன்மென்ட் எழுதி முடித்ததும் காதலன்/காதலிக்கு எஸ்.எம்.எஸ்ஸலாம், இரவுக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டால், நைட் ஷோ சினிமாவுக்குச் செல்லலாம், இந்த மாத டார்கெட்டை முதல் 25 நாட்களிலேயே எட்டிவிட்டால், கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ ஒரு ட்ரிப் அடிக்கலாம் என அவரவருக்குப் பிடித்த பின்விளைவுகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தப் பிடித்த இரண்டாம் பாதியை எட்டுவதற்காக, முனைந்து முன்பாதியை முடித்துவிடுவீர்கள். ஆனால், விதிக்கப்பட்ட செயலைச் செய்து முடித்த பிறகுதான், விருப்பப்பட்ட செயலை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

பி.கு: எந்தக் கடின வேலையும், என்றோ ஒருநாள் செய்ய மறுத்த சுலப வேலைதான்!

எந்த ஒரு காரியத்துக்கும் டெட்லைன் விதித்துச் செயல்படுங்கள். காலையில் குளிக்கச் செல்வது, தினசரி அரட்டை நேரம், ஷாப்பிங் மணித் துளிகள், புராஜெக்ட் வேலைகள் என எந்த வேலையானாலும், மனசுக்குள் சின்ன காலக்கெடு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தக் காலக்கெடுவைத் தாண்டிவிட்டால், நீங்கள் பயப்படும் ஒரு அபாராதம் விதித்துக்கொள்ளுங்கள். 'டெட்லைன்' என்பதற்கு அர்த்தம் என்ன? அந்தக் கோட்டைத் தாண்டிவிட்டால், மரணம் நிச்சயம். அந்த 'மரண பயத்துடன்' எந்த ஒரு காரியத்தையும் செய்து பழகுங்கள். ரஜினி படத்தை முதல் ஷோவில் அமர்ந்து பார்க்க முண்டியடிக்கும் அதே ஆர்வத்தை 'டெட்லைன்' சங்கதிகளிலும் காட்டுங்கள்!

பி.கு: இந்த நொடிதான் என்றுமே வாழ்க்கையில் மிக முக்கியமானது!
நீங்களும் ஆகலாம் ஒன் மினிட் மேனேஜர்!


ங்களுக்கு ஒரு சவால். தினமும் உங்களுக்கு 86,400 ரூபாய் தருகிறோம். அதை அன்றே நீங்கள் செலவழிக்க வேண்டும். அந்தப் பணத்தை நீங்கள் எந்த விதத்திலும் சேமிக்க முடியாது. மறுநாள் மீண்டும் இன்னொரு 86,400 ரூபாய் தரப்படும். இப்போது உங்களுக்கான கேள்வி... தினமும் அந்த 86,400 ரூபாயை எப்படி உபயோகமாகச் செலவழிப்பீர்கள்?

'தினமுமே 86,400 ரூபாயா? மொத்தமாக ஒரு வாரப் பணத்தை முன்கூட்டியே தர மாட்டீர்களா' என்று யோசிக்கிறீர்களா? நண்பர்களே... ஏற்கெனவே தினமும் உங்களுக்கு அந்த '86,400 ரூபாய்' தரப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவர்களுக்கு கங்கிராட்ஸ்... புரியாதவர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில் உள்ள 86,400 நொடிகள்தான் உங்களுக்கு வழங்கப்படும் அந்த 86,400 ரூபாய்! 'Nobody plans to fail, but fails to plan' என்ற ஆங்கிலப் பழமொழி உணர்த்தும் அர்த்தம் உணர்ந்தவர்களுக்கு, நேர நிர்வாகத்தின் மதிப்பு தெரியும்.

'அட போப்பா! எவ்வளவு வேகமா உழைச்சாலும் நேரமே கிடைக்க மாட்டேங்குதே?' என்று புலம்புபவராக இருந்தாலும், 'என்னதான் வேலை செஞ்சாலும் பொழுதே போகமாட்டேங்குதே!' என்று அங்கலாய்ப்பவராக இருந்தாலும் உங்கள் பொன்னான நேரத்தை இந்தக் கட்டுரையைப் படிப்பதில் கொஞ்சம் முதலீடு செய்யுங்கள்.

'ஒன் மினிட் மேனேஜர்' (One Minute Manager) ஆகச் செயல்படுபவர்கள்தான் சாதாரண நிலையில் இருந்து வி.ஐ.பி. அந்தஸ்துக்கு உயர்கிறார்கள். பில்கேட்சுக்கும் அவர் அலுவலக அட்டெண்டருக்கும் 24 மணி நேரம் என்பது ஒன்றுதான். ஆனால், அந்த 24 மணி நேரத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் இருவரின் அந்தஸ்தும் வித்தியாசப்படுகிறது. ஒரு நாளை நாம் நேரங்களாகப் (Hours)(Seconds) வைத்துத்தான் திட்டமிட வேண்டும். அப்போதுதான் நாம் வீணடிக்கும் மணித்துளிகளின் அளவு தெரியும். பிரித்துப் பார்க்கக் கூடாது. விநாடிகளாக

மனிதவள மேம்பாட்டு நிபுணரும், நேர மேலாண்மை குறித்த கருத்தரங்குகளில் பங்குகொள்ளும் ஜேசீஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் பயிற்சியாளர் டி.கே.சந்திரசேகர், ''நேர நிர்வாகத்தைத் திட்டமிடுவது எப்படி?'' என்று விளக்குகிறார். 'இன்றைய வேலையை இன்றே செய், முடிந்தால் நாளைய வேலையையும் இன்றே செய். ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதே, ஏனென்றால், நாளை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டாலே போதும். நேரடியாகப் பார்த்தால், நேர மேலாண்மை என்ற வார்த்தையே தவறானது. ஏனென்றால் நேரம் என்பது உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளத் தக்கது அல்ல. நேரம் நிலையானது. உங்களுக்குக் கிடைத்திருக்கும் நேரத்தைச் சரியானவிதத்தில் பயன்படுத்திக்கொள்ள சுய மேலாண்மையில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

'லொம்பார்டி கோட்பாடு' என்பது பிரசித்தமானது. புகழ்பெற்ற கால்பந்து பிளேயராக இருந்து பின்னாளில் பயிற்சியாளர் ஆனவர் லொம்பார்டி. இவர் பயிற்சி அளிக்கும் அணி வீரர்கள் பயிற்சி நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே மைதானத்துக்கு வந்து காத்திருக்க வேண்டும். 2.30 மணிக்குப் பயிற்சி ஆரம்பம் என்றால், 2 மணிக்கே மைதானத்தில் இருக்க வேண்டும். 2.05-க்கு வந்தால்கூட தாமத வருகைதான் அது. ஆனால், அந்த அரை மணி நேரத்தில் வீரர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. வெறுமனே மைதானத்தில் அமர்ந்து பயிற்சிக்குக் காத்திருக்க வேண்டும். டாணென்று 2.30-க்குப் பயிற்சி ஆரம்பிக்கும். இந்த முறையில் பயிற்சியைத் தொடங்கியதில் இருந்து, லொம்பார்டியின் அணி வீரர்கள் கால்பந்து போட்டி தொடங்கிய நிமிடத்தில் இருந்தே கோல் மழை பொழிய ஆரம்பித்தார்கள். தொடர் வெற்றிகளைக் குவிக்கவைத்தது லொம்பார்டி கோட்பாடு. அதனை ஆராய்ந்த உளவியலாளர்கள் காரணத்தை இப்படி விளக்கினார்கள்.

'போட்டி இரண்டரை மணிக்குத்தான் என்றாலும், 2 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும் என்ற மனப்

போக்கு, துவக்க நிமிடத்தில் இருந்தே நமது பெஸ்ட்டைத் தர வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களின் மனதில் உருவாக்குகிறதாம். 'போட்டிதான் ஒன்றரை மணி நேரம் நடக்குமே... முதல் இடைவேளைக்குப் பிறகு கோல் அடித்துக்கொள்ளலாம். எதிரணிதான் இன்னும் கோல் போடவில்லையே. அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!' போன்ற சாக்கு தேடும் மனப்போக்கினை அந்த முந்தைய அரை மணி நேரம் அடித்து உடைத்து விடுகிறது. அதுவும் இல்லாமல் போட்டி முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வீரர்களின் ஆழ்மனம் உணர் வதால், அரை மணி நேரம் முன்பாகவே போட்டி முடிந்துவிடும் என்ற எண்ணமும் அவர்களை அறியாமல் மனதில் பதிந்து எதிரணியைக் காட்டிலும் ஓட்டமாக ஓடுகிறார்கள். இதன் மூலமே லொம்பார்டி அணி வெற்றிகளைக் குவித்தது!'

இந்தக் கோட்பாடு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும். 'செமஸ்டர் மார்ச்சில்தானே... இப்போது நவம்பர்தானே!' என்ற எண்ணம் பாஸ் மார்க் வாங்கப் போதுமானதாக இருக்கும். ஆனால், நூற்றுக்கு நூறு மனோபாவத்துக்கு இந்த எண்ணம்தான் முதல் எதிரி. இந்த மனோபாவத்தை மாற்றி ஆரம்பம் முதலே நமது பெஸ்ட்டைக் கொடுப்பதன் மூலம், நம் இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அடைந்துவிடலாம்.

மேலைநாட்டு மக்களிடம் வாழ்நாள் முழுக்க இந்த மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. இளமையும் துடிப்பும் இருக்கும்போதே அவர்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள். பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேல் வேலை செய்வது இல்லை. அவர்களுக்கான வாழ்க்கையை நிம்மதியாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், இங்கே ஒருவரது கேரியர் நிலையாவதற்கே 35 வயது பிடிக்கிறது. அதன் பிறகு 45 வயதில் அசுரத்தனமாக உழைத்து ஓய்வு பெறும் 58 வயது வரை வீட்டு லோன், குழந்தைகளின் திருமணக் கடன் என்று டென்ஷனுடன் கழிக்கவேண்டி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் லொம்பார்டி கோட்பாடு சிறந்த தீர்வு!

அதே சமயம் 'அதான் வேலை கிடைத்துவிட்டதே', 'திருமணமாகிவிட்டதே' என்பதுபோன்ற அசட்டை மனோபாவம் நமது பல திறமைகளை மழுங்கடிக்கிறது. கல்லூரி நாட்களில் நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுபவராகவோ, பாடுபவராகவோ இருந்திருக்கலாம். ஆனால், வேலை கிடைத்த பிறகு அதற்கெல்லாம் நேரம் இல்லை, ஆர்வம் இல்லை என்று ஏதேனும் காரணம் கற்பித்து வேறு எந்த விஷயத்திலும் நாம் கவனம் செலுத்துவது இல்லை. அப்படிச் சோர்ந்துவிடாமல் வேலைக்கும், ஆர்வத்துக்கும் சம்பந்தமே இல்லையென்றால்கூட, கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், இரண்டிலுமே சாதிக்கலாம். இதற்கு மிகப் பெரிய உதாரணம், எழுத்தாளர் சுஜாதா. தொழில்நுட்பம் சார்ந்த உயர் அரசுப் பணியில் இருந்தாலும், எழுத்தின் மீதான தணியாத ஆர்வத்தால் தமிழ் இலக்கியத்தின் மறக்க முடியாத பல படைப்புகளை உருவாக்கினார். நீங்களும் சாதிக்கப் பிறந்தவர்தான் என்பதை மனதில்கொள்ளுங்கள்!'' என்று ஒரே மூச்சில் முடித்தார் சந்திரசேகர்.

நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பயிற்சிப் பிரிவில் கூடுதல் முதன்மை மேலாளராக இருக்கும் சண்முகசுந்தரம், ''நாம் ஒரு செயலைச் செய்வதன் மூலம், அதற்கென ஒதுக்கப்படும் நேரத்தைச் செலவிடுகிறோமா, வீணடிக்கிறோமா அல்லது முதலீடு செய்கிறோமா என்பதைத் தீர்மானித்தாலே, நேர நிர்வாகத்தில் அடிப்படை நமக்குக் கைவந்துவிட்டது என்று உணரலாம்!'' என்கிறார். என்.எல்.சி. ஊழியர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வரும் சண்முகசுந்தரம், தேவைகளின் திறன் அறிந்து அதற்கு நேரம் ஒதுக்கப்படும் கலை குறித்து விவரிக்கிறார்.

''சாப்பிடுவது, குளிப்பதுபோன்ற அன்றாட விஷயங்களுக்கு நாம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். அந்த நேரத்தைச் செலவழிக்கிறோம் எனலாம். டி.வி. பார்ப்பது, இணையத்தில் விளையாடுவது, கல்லூரி வகுப்பிலோ, பணியிடத்திலோ வெட்டி அரட்டைகளில் ஈடுபடுவது நேரத்தை வீணடிக்கும் பட்டியலில் சேரும். உடற்பயிற்சி, நல்ல புத்தகங்களைப் படிப்பது, புதிய மொழியைக் கற்றுக்கொள்வதுபோன்றவை நேரத்தை முதலீடு செய்யும் வகையில் அடங்கும். நமது எந்தச் செயலையுமே நிச்சயம் இந்த மூன்று பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றில் அடக்கிவிடலாம். நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போது, இவற்றுள் எந்தப் பட்டியலில் அது அடங்கும் என்பதை நேர்மையாகத் தீர்மானியுங்கள். அப்படி கணிக்கத் துவங்கினாலே, உங்களது பெரும்பாலான விரயங்களும், அநாவசியச் செலவுகளும் முதலீடாக மாறும்.

நமக்குப் பிடிக்காத, அவ்வளவாக ஆர்வத்தைத் தூண்டாத வேலைகளையும் நாம் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் கடினமானதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பதிலை மட்டும் பிறகு படிக்கலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். தொடர்ந்து படிக்கும்போது, அதேபோல மேலும் நான்கைந்து கேள்விகள் கடினமாக இருந்தால், அவற்றையும் 'பிறகு படிக்கலாம்' என்று அடுக்கிவைக்கிறீர்கள். பிறகு என்ன நடக்கும்? சுலபமான பதில்களைப் படிக்கும்போதுகூட, மிச்சம் இருக்கும் அந்தக் கடினமான பதில்கள்தான் உங்கள் மனதுக்குள் பூதமாக அமர்ந்திருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்ற பதற்றத்திலேயே உங்கள் இயல்பான திறன் பாதிக்கப்படலாம். அதற்குப் பதில் அந்தக் கடினமான பதிலை முதலிலேயே படித்து முடித்துவிட்டால், பெரும் சுமை நீங்கிய திருப்தியுடன் மற்ற பகுதிகளை எதிர்கொள்ளலாம். ஆர்வம் இல்லாத அல்லது கடினமான வேலைகளை முதலிலேயே முடித்துவிடுவதன் மூலம், தேவை இல்லாத எரிச்சலைத் தவிர்க்கலாம்!''

நேர நிர்வாகம்பற்றி மணிக்கணக்காகப் பேசலாம், சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் புரட்டலாம், கருத்தரங்குகள், பயிலரங்குகளில் கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களுக்குள் இருந்து முன்முனைப்பு கிளை விடவேண்டும் என்பதை உணருங்கள். 'மனித வாழ்க்கை என்பது ஒரு நொடிதான்' என்ற புத்தன் வாக்கைப் புரிந்துகொள்ளுங்கள்!

The Power of Now

இன்றைய 24*7 உலகில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் ஒரு குணம் 'டெட்லைன்'களுக்குள் வேலையை முடிக்கும் சாமர்த்தியம். அன்றைய தினத்தின் வேலையை அன்றே செய்து முடிப்பதுதான் இந்த டெட்லைன் குணத்தை வளர்த்தெடுக்கும்.

'ஹார்டுவொர்க்' என்பதைக் காட்டிலும் இன்று 'ஸ்மார்ட்வொர்க்'தான் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் மிகத் திறமையாகச் செயல்களைச் செய்து முடிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அது பயிற்சியினால் மட்டுமே வரக்கூடியது. அதற்கு 'ஹார்டுவொர்க்' அவசியம்.

மறுநாள் அணிய வேண்டிய உடைகளை முந்தைய நாள் இரவே தேர்ந்தெடுத்துவையுங்கள். இதனால் அதிஅவசர காலைப் பொழுதில் துணிமணிகள் சிக்காத பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குறிப்பிட்ட மணிக்குப் படுத்து, இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

'சும்மாதானே இருக்கிறோம்' என்று ஏற்கெனவே பார்த்த ஐ.பி.எல். போட்டிகளின் மறுஒளிபரப்புகளைப் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அந்த நேரத்தைத் தோட்டத்திலோ, அம்மாவுடன் கிச்சன் வேலைகளிலோ செலவிடுங்கள்.

மாதத்தில் ஏதேனும் ஒருநாள் முழுக்க டி.வி., கம்ப்யூட்டர், செல்போனுக்கு விடுமுறை அளியுங்கள். ஒரு நாளின் 24 மணி நேரம் எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.

வீட்டில் அனைவருடனும் பேச நேரம் இருப்பது இல்லையா? இரவு உணவை எல்லோரும் நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடுங்கள். ஒவ்வொருவரின் நாள் குறித்தும் அப்போது விவாதியுங்கள்!

First Things First

உங்களின் அன்றாட செயல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1) முக்கியமானது, அவசரமானது (Important and Urgent)

2) முக்கியம் இல்லாதது. ஆனால், அவசரமானது (Unimportant but Urgent)

3) முக்கியமானது. ஆனால் அவசரம் இல்லாதது. (Important but not urgent)..

4) முக்கியம் இல்லாதது, அவசரம் இல்லாதது (Unimportant and Not urgent). இந்த நான்கு விதிகளின் அடிப்படையில் உங்களின் ஒரு வாரத்துக்கான, மாதத்துக்கான வேலைகளைத் திட்டமிடுங்கள். உங்களின் பணி வெகு சுலபமாக முடியும்.

பல வேலைகள் உங்கள் முன் இருந்தாலும் முதலில் உங்களுக்கு என்ன பணி வந்ததோ அதை முதலில் முடிக்கப் பழகுங்கள்.

எந்த ஒரு வேலையையும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இழுத்துக்கொண்டு இருக்காதீர்கள்.

உங்களால் முடிந்தால் மட்டுமே எந்தச் செயலிலும் இறங்குங்கள். முடியாது என்று தெரிந்துவிட்டால் அதைக் கை கழுவிவிடுவது உத்தமம். காரணம், நேரம் மிச்சம்!

சில செயல்களுக்குப் பெரிதாக 'புரொஃபஷனலிசம்' அல்லது 'பெர்ஃபக்ஷனலிசம்' தேவைப்படாது. இ-மெயில் அனுப்புவது, ஆர்குட் ஸ்கிராப், எஸ்.எம்.எஸ். அனுப்புவது போன்ற 'சின்னப்புள்ளத்தனமான' நடவடிக்கைகளுக்கு நிபுணத்துவம் தேவை இல்லை. ஆகவே, இந்தக் காரியங்களுக்கு மெனக்கெட்டு உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டாம்.

உங்கள் வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதேபோல மற்றவர்களின் வேலையை நீங்கள் செய்யாதீர்கள்!


தினமும் ஒரு இஞ்ச்!

'இது ஃபாஸ்ட் ஃபுட் காலம். எங்கும், எதிலும், எப்போதும் அவசரம்தான் வேதம். இந்த நிலையில், தன்னம்பிக்கையை வளர்க்க வாரக்கணக்கில் கோச்சிங் கிளாஸ், மாதக் கணக்கில் புத்தகங்கள் என்று திரிய முடியாது. இப்போதே, இந்த நிமிடமே, இந்த நொடியே எனது தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும்!' என்கிற பார்ட்டியா நீங்கள்? உங்களுக்காகவே 'Instant Confidence' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார் பால் மெக்கென். அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப நிமிடங்களில் உங்கள் தன்னம்பிக்கை மீட்டரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளும் யுக்திகள் புத்தகம் முழுக்க...

உள்ளுக்குள் உறங்குது எரிமலை!

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டீர்கள். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் சில முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறீர்கள். அப்போது என்ன செய்வது? இந்த இடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்...

1) உங்கள் வீட்டுக் கதவின் நிறம் என்ன?

2) அந்தக் கதவில் சாவித் துவாரம் எந்தப் பக்கம் இருக்கிறது?

இந்த நொடி உங்கள் கற்பனையில் உங்கள் வீட்டுக் கதவு, அதன் நிறம், சாவித் துவாரம் ஆகியவை காட்சி களாக விரிகின்றனவா? அதுதான்... அதேதான்!

இந்த நிஜத்தைக் கற்பனை செய்யும் யுக்தியைத்தான் சிக்கலான சூழல்களைச் சமாளிக்கவும் நாம் கையாள வேண்டும். மனம் நொந்து வெந்து நீங்கள் சொதப்பிக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு நிமிடம் அமைதியாக உட்காருங்கள். அதற்கு முன் உங்கள் சாதனை என்று நீங்கள் நினைக்கும் சம்பவத் தருணங்களையோ, 'பின்னிட்டப்பா!' என்று மற்றவர்கள் உங்களைப் பாராட் டிய தருணங்களையோ மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள். முன்னரே நீங்கள் அனுபவித்த இனிய நினைவுகளை 'ஃப்ளாஷ்பேக்'கும்போது உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தருணத் துக்கே சென்று மீளும். நிற்க. அதிகபட்சம் ஒரு நிமிடம் தான். அந்த சந்தோஷத் தருணத்தில் கொஞ்சமே கொஞ்சம் நீச்சலடித்து மீண்ட பிறகு, இந்த நொடிக்குத் திரும்புங்கள். இப்போது உங்கள் முன் இருக்கும் இக்கட்டு அத்தனை மிரட்டலாக இருக்காது!

இலகுவானது அல்ல இலக்கு!

'size does matter' என்பார்கள். அதாவது, அளவும் முக்கியம்! வெறுமனே இலக்குகளை நிர்ணயிப்பது மட்டும் போதாது. உங்களைச் செயல்படத் தூண்டும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக, 'நாளை எழுந்து எட்டாவது சேப்டரை மட்டும் படித்தால் போதும்' என்பது இலக்காக இருந் தால், தாமதமாகப் படுத்து சோம்பலாக எழுந்து நிதானமாக அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பீர்கள். அதுவே, '10, 11, 12 என மூன்று சேப்டர்களை முடிக்க வேண்டும்' என்பதை இலக்காக நிர்ணயித்துக்கொண்டால், அதிகாலை ஐந்து மணிக்கு மேல் உங்களுக்குத் தூக்கம் பிடிக்காது. தீப்பிடித்ததுபோல அலறி ஓடுவீர்கள். அந்த ஓட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு பவுன் தங்கக் காசுதான்.

படிப்பு, வேலை என்றில்லை... அன்றைய தினம் நீங்கள் எது சம்பந்தமாகத் திட்டமிட்டு இருந்தாலும், அதன் இலக்கைச் சில மி.மீ. (முடிந்தால் கி.மீ.) உயர்த் துங்கள். 'ஐந்துக்குப் பதில் இன்று 50 வாடிக்கை யாளர்களைச் சந்திப்பேன்!', 'இன்றைய பார்ட்டியில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்கும்படி ஜோக் அடிப்பேன்', 'இன்று ஜிம்மில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் அதிகமாகச் செலவழிப்பேன்!' என்று அன்றைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலக்கு நிர்ணயிங்கள். இவ்வாறு நீங்கள் செயல்படும்போது, உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை மற்றவர்கள் பளிச் என உணர்வார்கள். இப்படி இலக்குகளை உயர நிர்ண யிப்பதில் இன்னொரு வசதி என்னவென்றால், இலக் கில் பாதியை எட்டினாலே அது வழக்கத்தைக் காட்டி லும் அபாரப் பாய்ச்சலாக இருக்கும்!

இந்த நாள்... உன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!

வீடு வாங்குவது, இன்ஜினீயரிங் படிப்பில் டிஸ்டிங்ஷன் பெறுவது, விருப்பப்பட்ட வேலையைப் பெறப் போராடுவது, ஆசைப்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது, பிரபல பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என எந்த இலக்கு நிர்ணயித்தாலும், தினமும் அதை நோக்கி ஒரு இன்ச் ஆவது முன்னேறுங்கள். அதாவது அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் நாம் அலுவலகத் துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்கிறோம். எத்தனை அவசரம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஆடை அணிய மறந்து நிர்வாணமாக அந்த இடங் களுக்குச் சென்றிருக்கிறோமா? 'அடச்சே! அவசர அவசரமாக் கிளம்புனேனா... அதான் டிரெஸ் போட மறந்து அப்படியே வந்துட்டேன்' என்று நம்மில் யாராவது புலம்பி இருக்கிறார்களா? மாட்டார்கள். ஆடை அணிவதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டதால் எத்தனை சிக்கலான சூழலாக இருந்தாலும், ஆடை அணிய மறக்க மாட்டோம். இலக்கை நோக்கிய உங்கள் நடவடிக்கைகளையும் அப்படி தினசரி நடவடிக்கை ஆக்கிக்கொள்ளுங்கள். அது உள்ளுக்குள் ஊறிவிட்டால், போகிறபோக்கில் நீங்கள் உயரங்களை எட்டிப் பிடித்து விடுவீர்கள்!

நான்கு வழிச் சாலைப் பயணம்!

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதி களைக் கட்டாயம் கடைபிடியுங்கள்.
1) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்!

2) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்!

3) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்!

4) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்!

வாழ்த்துக்கள்!


தலைவன் இருக்கிறான்!

திடீர் என்று திரும்பிப்பார்த்தால், அட... உலகத்தில் தலைவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டார்கள்? அரசாங்க - தனியார் நிறுவனங்கள், கல்வி, வணிகம், மதம், கலை எனப் பல துறைகளிலும் தலைமைப் பண்பு நிரம்பியவர்களுக்கு ஏன் திடீர் என்று இங்கு பஞ்சம்? இணையம், செல்போன், இ-மெயில் என முன்னைக் காட்டிலும் உலகம் மிகவும் சுருங்கியுள்ள இந்தத் தருணத்தில், தகுதியான தலைவர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் சுருங்கிவிட்டது ஏன்? இதற்குப் பலவாறாக அடுக்கப்படும் காரணங்களில் முக்கியமானது, மேற்கூறிய அமைப்புகள் அனைத்தும் ஆதி கால வடிவத்தில் இருந்து தங்களைப் புதுப்பித்து இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அதற்கு ஏற்ப அதன்'தலைவர்' களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதட்டி வேலைவாங்கு வதோ, மிரட்டிப் பணியவைப்பதோ, தண்டித் துத் தட்டிக்கேட்பதோ இந்த மில்லினியச் சூழலில் துளிகூடப் பலன் தராத தலைமைப் பண்புகள். இன்றைய தலைவன் எப்படி இருக்க வேண்டும்?

அவனுடன் இணைந்து செயல்படுபவர் களுக்குச் சேவகனாக இருக்க வேண்டும். ஆனால், அடிமையாக அல்ல; நம்பிக்கைக்கு உரியவனாக, பொறுப்புகளையும் கூடவே அதிகாரங்களையும் பகிர்ந்து அளிப்பவனாக, துரிதமாகச் சமயோசித முடிவுகளை எடுப்பவனாக இருக்க வேண்டும்.

இப்படி இன்றைய 'தலைவனு'க்கான பரிணமிக்கப்பட்ட தகுதிகளைச் சுமார் 250 பக்கங்களில் விளக்கிச் சொல்கிறது 'Leadership Mastery' புத்தகம். 1912-களிலேயே ஆளுமைத் திறன் குரு என்று பெயரெடுத்த டேல் கார்னகியின் ஆளுமைத்திறன் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகம் இது.

சில வருடங்களுக்கு முன் உலகின் டாப் 100 நிறுவனங்கள் ஒன்றின் மேல்மட்ட அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தன் துறை சம்பந்தமாக ஏதேனும் ஒரு தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும். அப்போது முதல் நபராக சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆபீஸர் பேசினார். அவர் பேசி முடித்ததும், 'ச்சே! என்ன அழகாப் பேசினாரு மனுஷன்!', 'நிறையப் புது விஷயங்கள் சொன்னார்ல!' என்பதுபோல விமர்சனங்கள் எழுந்தன. அடுத்துப் பேச வந்தார் சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர். அரை மணி நேரம் விறுவிறுவெனப் பேசி நன்றி சொல்லி முடித்தார். உடனே இருக்கையில் இருந்து எழுந்த மற்றவர்கள், 'நாம் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதை உடனடியாக முடிக்க வேண்டும்!' என்று சொல்லிக் கலைந்தனர். ஒரு தலை வனாகப்பட்டவனின் உரை அப்படித் தீப்பிடித்தாற்போல இருக்க வேண்டும். வார்த்தைக் கவர்ச்சிகளும், வெற்றுத் தத்துவங்களும் நிரம்பிய உரை கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால், அதனால் விளையும் நன்மை பூஜ்யம். எந்தக் கணக்கையும் பூஜ்யத்தில் இருந்து துவக்காதீர்கள்.

எவரையும் எந்த வேலையையும் செய்யவைக்க, அவருக்குள் அந்த வேலையைச் செய்யும் ஆசையைத் தூண்ட வேண்டும்!

தான் நினைப்பதை எதிராளிக்குப் புரியவைக்கும் தகவல் தொடர்பில் தலைவன் எனப்படுபவன் கொஞ்சமும் சறுக்கக் கூடாது. சொல்ல வந்ததைச் சுருக்கமாக, அழுத்தமாக, வீரியமாக, எதிராளி மனதில் பதியவைப்பது தனித் திறமை. தலைமைப் பொறுப் பில் இருப்பவர்கள் அல்லது அந்த இடத்துக்கு வர நினைப்பவர்கள் அடிக்கடி நாலு பேர் மத்தியில் பேச நேரிடும். அப்படிப் பேசும் தருணங்களை கார் ஓட்டுவதோடு ஒப்பிடலாம். அதாவது, காருக்குள் ஓட்டுநர் இருக்கை ஒன்றுதான் இருக்கும். காரின் அனைத்து இயக்கங்களும் ஓட்டுநரின் அசைவை நம்பித்தான்இருக்கும். மித வேகத்தில் இலகுவாக ஓட்டி காருக்குள் அமர்ந்து இருப்பவர்களை உறங்கவைப்பதும், கடா முடா என்று செலுத்தி, திகிலில் உறையவைப்பதும் ஓட்டுநரின் சாமர்த்தியம். தன் குழுவினர் மத்தியில் உரை நிகழ்த்தும் ஒருவர் அந்த ஓட்டுநரின் நிலையில் தான் இருப்பார். பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தி தனது உரையின் உட்கருத்தை அவர்கள் மனதில் பற்றிக்கொள்ளவைக்கும் சாமர்த்தியம் கற்பது அவசியம்!

அமெரிக்கத் தொழிலதிபர் ராக்ஃபெல்லர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது சொன்னது இது, 'பிற மனிதர்களுடன் பழகும் பண்பு... காபி, குளிர்பானம் போலக் காசு கொடுத்து வாங்கும் பொருளாக இருந் தால், அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகப் பணம் செலவழித்து வாங்கத் தயாராக இருக்கிறேன்!' ஆம்! அனுபவஸ்தர் ராக்ஃபெல்லர் வார்த்தைகளில் உணர்த் துவது அத்தனையும் உண்மை.

இன்றைய கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்ட தினமும் ஓர் அந்நியருடனாவது நாம் அந்நியோன்யமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு கணக் கெடுப்பில் எங்கள் நிறுவனம் கண்டறிந்த உண்மை இது... முழுக்க முழுக்க டெக்னிக்கல் திறமை மட்டுமே தேவைப்படும் என்று நாம் கருதும் இன்ஜினீயரிங் வேலை செய்பவர்களிடம் மேற்கொண்ட சர்வே இது. அந்த இன்ஜினீயர்களின் 15 சதவிகித வருமானத்துக்கு மட்டுமே டெக்னிக்கல் திறமை காரணமாக இருக்கிறது. மீதமுள்ள 85 சதவிகித வருமானத்துக்குப் பிற ஊழியர் களுடன் பழகும் பண்பு மட்டுமே காரணமாக இருக்கிறதாம். சர்வேயில் கலந்துகொண்ட அனைத்து இன்ஜினீயர்களும் ஒருமித்த குரலில் ஆமோதித்த கருத்து இது. டெக்னிக்கல் திறமை உள்ள இன்ஜினீயர்களுக்கே இந்த நிலை என்றால், வாடிக்கையாளர் சேவைத் துறைகளில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு அந்தப் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

ஒரு வரியில் சொல்வதென்றால், எவரையும் உங்கள் நண்பராக நினைத்துப் பழகுங்கள்!

ஒரு நிறுவனத்துக்குத் தலைவர் ஆக ஆசைப் படுபவர், அந்த நிறுவனத்தின் எந்த வேலையையும்செய்யத் துணிந்தவராக, தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு தலைவனுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி இது. இந்தத் தகுதிகள் உடையவர்கள்தான் 'தலைவனாக' இருக்கிறார்கள் அல்லது 'தலைவனாக' இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தத் தகுதிகள் இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருப்பவருக்கு இன்ஜின் ஆயில் அளவைப் பரிசோதிக்கத் தெரியாவிட்டாலோ, சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவருக்கு இ-மெயிலில் ஒரு ஃபைல் அட்டாச் செய்யத் தெரியாவிட்டாலோ... அந்த நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உங்களுக்குள் ஒரு 'தலைவன் இருக்கிறான்' என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்!
கி.கார்த்திகேயன்
விற்க... நிமிர்ந்து நிற்க!

'இலக்கை எட்டியவர்களுக்குத்தான் வெகுமதி அளிக்கப்படும். அதற்கென முயற்சித்தவர்களுக்கு அல்ல!'

முகப்பு அட்டையின் ஒற்றை வரியிலேயே ஈர்க்கத் தொடங்குகிறது ஷிவ் கேராவின் 'you can sell' புத்தகம்.'you can win' புத்தகம் மூலம் உலகப் பிரபல அந்தஸ்துபெற்ற ஆளுமைப் பயிற்சியாளர். கிட்டத் தட்ட ஒன்றரை மில்லியன் விற்ற 'you can win' புத்தகம்தான், இன்றைய கார்ப்பரேட் கலாசாரத்தின் தேவைகளை உணர்ந்து, தன்னம்பிக்கை டானிக் ஏற்றிய முழுமையான புத்தகம் என்பது அதற்கான பெருமித அறிமுகம். கார் கழுவும் வேலை, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என மேற்கொண்ட பணிகளில் மனித மனங்களுடன் பழகிய அனுபவங்களைத்தான் மேனேஜ்மென்ட் கோட்டிங் தடவிச் சொல்கிறார் ஷிவ் கேரா. 'you can' என்ற வார்த்தை தரும் தன்னம்பிக்கை வலிமையை இழக்க விரும்பாமல், இந்தப் புத்தகத் தலைப்பிலும் அவற்றைச் சேர்த்திருக்கிறார் ஷிவ். ஒரே வாசிப்பில் வாசித்து முடிக்காமல், தினசரிப் பயிற்சியாக நமது வாழ்க்கை முறையைச் செதுக்க முற்படுகிறது இந்தப் புத்தகம்!

யார் எல்லாம் விற்பனையாளர்கள்?

எம்.பி.ஏ., முடித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து, காட்டன் சட்டை, டை அணிந்து பொருட்களை விற்பவர்கள் மட்டுமே விற்பனையாளர்கள் அல்ல; உலகப் பிரஜைகள் அனைவருமே விற்பனையாளர்கள்தான். விற்பனை நடக்கும் இடத்தில், வாங்குபவருக்கு அந்தப் பொருள் அல்லது சேவை மூலம் மனத் திருப்தி கிடைக்க வேண்டும். விற்பவருக்குப் பணரீதியான அல்லது இமேஜ்ரீதியிலான லாபம் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்தால்தான் அந்த விற்பனை சிறப்பான முறையில் நடந்ததாக அர்த்தம்.

நேர்முகத் தேர்வில் தன்னைத் தகுதியுள்ளவன் என்று நிரூபித்து விற்க முயலும் இளைஞன்.

மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் தன் காதலை உணர்த்த விரும்பும் காதலன்.

பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளைக் கவர விரும்பும் அரசியல்வாதி.

தன் பெரியம்மா மகள் திருமணத்துக்கு ஏன் செல்ல வேண் டும் என்று கணவனைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும் மனைவி.

நல்ல பழக்கவழக்கங்களைத் தனது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தாய்...

இப்படி அனைவரும் தினம் தினம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தங்களை, தங்கள் சேவைகளை, தேவைகளை விற்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். எதிராளியிடம் நினைப்பதைச் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அனைவரும் விற்பனையாளர் அவதாரம் எடுக்கத்தான் செய்கிறோம்!

ரேஸில் ஜெயிக்கும் குதிரையிடம் என்ன ஸ்பெஷல்?

குதிரை ரேஸ் பற்றிக் கேள்விபட்டு இருப்பீர்கள்தானே! ஓவ்வொரு குதிரையின் மீதும், அது முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைக் கணித்துப் பந்தயம் கட்டு வார்கள். அதாவது 10-க்கு 1 (10-க்கு ஒருமுறை வெற்றியடையும்). மிகக் குறைந்த பந்தய அனுமானங்களைத் தாண்டியும் சில குதிரைகள் சமயங்களில் ஜெயிக்கும். இப்போது ஒரு கேள்வி, 10-க்கு 1 என்ற கணிப்பை மீறி முதலாவதாக ஜெயிக்கும் குதிரை, இரண்டாவதாக வந்த குதிரையைக் காட்டிலும் பத்து மடங்கு வேகமாகவா ஓடி வந்திருக்கும்? 'fraction of a second' என்பார்கள். அதாவது, ஒரு நொடியின் நூற்றில் ஒரு பங்கு. எல்லைக் கோட்டை நெருங்கும் சமயம், அப்படியான ஒரு நூலிழை வித்தியாசத்தில் மூக்கு நீட்டி முந்தியிருக்கும் ஒரு குதிரை. அது வெற்றியாளன்! 2008 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை அள்ளியவர் மைக்கேல் பெல்ப்ஸ். அவர் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சலில் வென்றதன் வித்தியாசம் ஒரு நொடியின் நூற்றில் ஒரு பங்கு. வெற்றியாளன்! தினமும் நீங்களும் ஏதோ ஒரு பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப்பீர்கள்தான். உங்கள் போட்டியாளரைக் காட்டிலும் நீங்கள் 10 மடங்கு அதிகமாக உழைக்கத் தேவை இல்லை. ஆனால், அந்த 'நொடியின் நூற்றில் ஒரு பங்கு' வித்தியாசம் காட்ட வேண்டிய இடத்தில் ஸ்கோர் செய்வது அவசியம்!

சிறப்புகள்... பலன்கள் என்ன வித்தியாசம்?

உங்களுக்கு ஒரு காரியம் வேண்டி ஒருவரைச் சந்திக்கிறீர்கள். அவரைச் சமாதானப்படுத்தினால், உங்களுக்குச் சில லாபங்கள் நிகழலாம். இந்தச் சமயத்தில் அவரை எப்படி உங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவைப்பீர்கள்? இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்...

மைக்கேல் ஃபாரடே எலெக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்த தருணம். தொழிற் புரட்சிக்கு முதற்புள்ளி அதுதான். ஆனால், அந்த மோட்டாரை வணிகரீதியாக மார்க்கெட்டிங் செய்ய ஃபாரடேவிடம் வசதி வாய்ப்புகள் இல்லை. உடனே, இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த மோட்டாரைத் தூக்கிச் செல்கிறார். பிரதமர் கிளாட்ஸ்டோன் அருகே மோட்டாரை வைத்துவிட்டு, அதன் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டார் ஃபாரடே. ஆனால், கிளாட்ஸ்டோன் கொஞ்சமும் ஆர்வம் காட்டாமல், 'எல்லாம் சரி... இதனால் என்ன பயன்? இது எந்தவிதத்தில் லாபம் அளிக்கும் என்பது எனக்குப் புரியவில்லை!' என்றார். ஃபாரடேவுக்குப் பயங்கர ஏமாற்றம். 'நான் எத்தனை வருட உழைப்பைக் கொட்டி இதைக் கண்டுபிடித்து இருக்கிறேன். 10 மனிதர்கள் 10 மணி நேரத்தில் முடிக்கும் வேலையை இந்த ஒற்றை இயந்திரம் ஒரு மணி நேரத்தில் முடிக்குமே. நாலு குதிரை சக்திகொண்ட இதன் விசை, திறன், தொழில்துறையில் ஏற்படுத்தவிருக்கும் புரட்சியைப்பற்றிய தெளிவில்லாத நீ எப்படி இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறாய்?' என்றெல்லாம் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்கவில்லை ஃபாரடே. மாறாக, 'இந்த இயந்திரம் நிச்சயம் தொழில்முனைவோர்களுக்கு அவசியத் தேவை. ஆயிரக்கணக்கில் வாங்கிக் குவிப்பார்கள். அந்த விற்பனையின்போது, நீங்கள் வரி விதித்தால் உங்களுக்கு ஏகப்பட்ட வருமானம் குவியும்!' என்றார் ஃபாரடே. உடனே, கிளாட்ஸ்டோனின் கண்களில் பளீர் மின்னல். 'எலெக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே' என்று வரலாற்றில் ஃபாரடேவை இடம் பெறவைத்தது அவரது அணுகுமுறைதான்.

உள்ளங்கை அகல சினிமா டிக்கெட்டின் அழகில் மயங்கி நாம் அதை விலை கொடுத்து வாங்குவது இல்லை. அந்த சினிமாவை ரசிப்பதன் மூலம் கிடைக்கும் உற்சாகம் அல்லது ரிலாக்சேஷன்தான் டிக்கெட்டை வாங்கத் தூண்டும் காரணங்கள். அப்படி எந்த ஒரு பொருள் அல்லது சேவையின் சிறப்புகளை அடுக்குவதைக் காட்டிலும், நுகர்வோருக்கு அதனால் கிடைக்கும் பலனை வசீகர வார்த்தைகளில் விவரியுங்கள். நிச்சயம் நீங்கள் பலனடைவீர்கள்!

விற்பனையாளர் டு சாதனையாளர் ஆக வாழ்த்துக்கள்!


சிரிக்கத் தெரிந்தவந்தான் சிங்கம்!
அ.ஐஸ்வர்யா

 

1.ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன! - சரி/தவறு

2. ஆண் மூளைதான் பெரியது! - சரி/தவறு

3. ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்த வல்லவர்கள் பெண்கள். ஆண்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே செயலில்தான் கவனம் செலுத்துவார்கள்! - சரி/தவறு

4. உடல், மன வளர்ச்சிகள் ஆண், பெண்ணுக்கு வெவ்வேறு பருவங்களில் நிகழும்!- சரி/தவறு


5. ஒரு பிரச்னையைத் தீர்க்கப் பல காரணங்களை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய சமயத்தில், ஆண்-பெண்இரு வரும் ஒரே விதமாகத்தான் முடிவெடுப்பார்கள்! -சரி/தவறு

மேற்கண்ட ஐந்து வாக்கியங்களில் எவை எவை சரி/தவறு என்று தீர்மானித்துக்கொண்டீர்களா? இதோ விடை... ஐந்தாவது வாக்கியத்தைத் தவிர, மற்ற அனைத்தும் சரி!

இது போன்ற ஒரு வரித் தகவல்களில் துவங்கி, ஆண்-பெண் மனங்களின் நுட்பமான வித்தியாசங்களை எளிமையாகப் பட்டியல் இடுகிறார் டாக்டர் மேரியன் ஜெ.லெகாட்டோ. 'Why men never remember - Women never forget' எனப் புத்தகத்தின் தலைப்பே உள்ளடக்கம் உரைக்கிறது. இதய அறுவை சிகிச்சை நிபுணரான மேரியன் ஒரு மனிதனின் உள்உறுப்புகளின் இயல்பு, அவற்றுக்குள் நிகழும் ரசாயன மாற்றங்கள்தான் ஒட்டுமொத்தமான அவருடைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன என்கிறார். அதன் அடிப்படையில் ஆண்-பெண்களின் இயல்புகளைப்பற்றிப் பட்டியலிடுகிறார். தினசரி வாழ்வில் ஆண்-பெண்களுடனேயே நாம் முட்டி மோத வேண்டியிருப்பதால், அவர்களைச் சமாளிக்கச் சில சங்கதிகளைத் தெரிந்துகொள்வோமே!

சிரிப்பு பேக் சிங்கம்!

தனது காதலன் அல்லது கணவனிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய அத்தியாவசியத் தகுதியாக, பத்துக்கு ஒன்பது பெண்கள் சுட்டிக்காட்டுவது நகைச்சுவை உணர்வு. இயல்பிலேயே ஒருவர் புத்திசாலியாகவும், வசீகரமானவராகவும் இருந்தால்தான், அவரிடம் நகைச்சுவை உணர்வு இருக்கும். இந்தக் குணங்கள்கொண்ட ஆண், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தனக்குப் பாதுகாப்பு அளிப்பான் என்ற எண்ணம் பெண்களின் ஆழ்மனதில் படிந்திருப்பதாலேயே, 'சிக்ஸ்-பேக்' ஆண்களைக் காட்டிலும் சிரிக்கச் சிரிக்கப் பேசும் சிரிப்பு பேக் ஆண்களே பெண்களைக் கவர்கிறார்கள்!

பெண்கள் ஏன் எதையும் மறப்பது இல்லை?

டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், சிறுசிறு கதைகளைக் கூறி யார் அவற்றை சுலபமாகக் கிரகித்துக்கொள்கிறார்கள் என்று சோதித்தார்கள். அதில், பெண்களின் மூளைக்குள் இருக்கும் மொழி சார்ந்த நினைவாற்றல்பற்றிய விவரங் கள் கிடைத்தன. பல சங்கதிகளை நீண்ட காலத்துக்கு மூளையின்நினைவு அறையில் சேமித்துவைக்கும் சக்தி யைப் பெண்களின் பிரத்யேக ஹார் மோனான ஈஸ்ட்ரோஜன் வாரிவழங்கு கிறது. அந்த ஈஸ்ட்ரோஜன்தான் ஆறு மாதங்களுக்கு முன் மூண்டசண்டை யில், 'உன்னைப்போல் யாராலும் மோசமாகச் சமைக்க முடியாது' என்று கோபத்தில் நீங்கள் வெடித்ததை அதன் பிறகான ஒவ்வொரு சண்டையிலும் ரெஃபர் செய்யவைக்கிறது. ஈஸ்ட்ரோ ஜனுக்கு இருக்கும் இந்தப் பிரத்யேகக் குணம்தான், ஆதிகாலத்தில் வேட்டையாடி உணவு கொண்டுவர ஆண் சென்றதும், அதற்கு முன் தான் எதிர்கொண்டஆபத்துக் களை நினைவில்வைத்து தன் குழந் தைகளைக் காப்பாற்றப் பெண்ணுக்கு உதவியது!

அதேபோல் ஆண்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளாததற்கு, அவர்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன்தான் காரணம். ஈஸ்ட்ரோஜன் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது இந்த டெஸ்டோஸ்டீரோன். காதலியின் பிறந்த நாள், முதல் சந்திப்பு விவரங்களை ஆண்கள் மறந்துபோவதற்கு அதுதான் காரணம். கற்காலத்தில் வேட்டையாடும்போது மனதில் ஊடுருவிய உயிர் பயம், நூலிழையில் உயிர் பிழைத்த பதற்றம் எல்லாம் ஓர் ஆணிடம் அப்படியே நிலைத்திருந்தால், அவன் மறுபடி வேட்டைக்குப் போவானா என்ன?

ஆண்களைக் கவனிக்கவைக்க...

பொதுவாகவே, ஆண்களுக்கு மற்றவர் பேசுவதைக் கவனிப்பது ரொம்பவே கஷ்டமான வேலை. அதைச் சுலபமாக்க சில டிப்ஸ்...

1. சீரியஸான விஷயம்பற்றிப் பேசப் போகிறீர்கள் என்பதை முதலிலேயே தெரிவித்துவிடுங்கள். கூறியது போலவே, நீங்கள் பேச வந்த விஷயத்தை சீரியஸாகப் பேசி முடியுங்கள்.

2. உங்களுக்கு என்ன தேவையோ அதைத் துல்லியமாகத் தெரிவியுங்கள். 'இன்னிக்கு ஆபீஸ்ல டெட்லைன். ரொம்ப டயர்டா இருக்கு' என்பதற்குக் கிடைக்கும் ரியாக்ஷன், சத்தியமாக நீங்கள் சோபாவில் சாய்ந்துகொண்டு, வியர்வையைத் துடைத்தபடி விடும் பெருமூச்சுக்குக் கிடைக்காது. உங்கள் பாடி லாங்குவேஜ் மூலம் அவரே புரிந்துகொள்ள வேண்டும் என்பது எல்லாம் வேலைக்கே ஆகாது!

3. பேசுவதற்கு ஏற்ற சூழலில் அவர் இருக்கிறாரா என்பதை கிராஸ்செக் செய்துகொள்ளுங்கள். அடுத்த நாள் மீட்டிங்குக்கு அவர் தயார் செய்துகொண்டு இருக்கும்போது, 'அஞ்சு நிமிஷம் பேச ணும்' என்று பயமுறுத்தாதீர்கள்.

4. நீங்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதற்கு முன்பாகவே பேசி முடித்துவிடுங்கள்.

5. உங்கள் மிக்ஸ் அண்ட் மேட்ச் சுடிதாருக்குத் துப்பட்டா வாங்குவதற்கு எல்லாம் அவரைக் கூப்பிடாதீர்கள். அதற்கு உங்கள் பெண் நண்பர்களோடு ஷாப்பிங் செல்லுங்கள். பிறிதொரு நாளில், நிஜமாகவே முக்கியமான பொருள் வாங்க அவரைக் கூப்பிடும் போது, அதன் முக்கியத்துவத்தை அவர் உணராமல் போகலாம்!

பெண்களுடன் சண்டையைத் தவிர்க்க...

1. முடிந்த வரை ஒற்றை வார்த்தை பதில்களைத் தவிருங்கள். ஒருவருடனான உறவின் ஆரோக்கியத்தைப் பெண்கள் அவர்களோடு தாங்கள் எவ்வளவு பேசுகிறோம் என்பதைவைத்தே அளவிடுவார்கள். நீங்கள் ஒரே வார்த்தையிலோ, ஒரே எழுத்திலோ பதில் கூறினால், அவர்களை இன்சல்ட் செய்கிறீர்கள் என்று நினைப்பார்கள்!

2. உங்கள் அம்மாவோடு, மனைவியையோ, கேர்ள் ஃப்ரெண்டையோ எந்தக் காரணத்துக்காகவும், எந்தக் காலத்திலும் ஒப்பிடாதீர்கள்!

3, சும்மாவேனும் அடுப்படிக்குள் நுழைந்து, 'நான் ஹெல்ப் பண்ணட்டுமா?' என்று கேளுங்கள். ஏதாவது வேலை கொடுத்தால், ஒரு மாற்றத்துக்கேனும் ஜாலியாகச் செய்யுங்கள். அவருக்கு உதவ நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை வார்த்தையால் உணர்த்திக்கொண்டே இருங்கள்!

4. காதலி/மனைவியிடம் அடிக்கடி 'ஐ லவ் யூ' சொல்லி உங்கள் அன்பைத் தெரிவியுங்கள். அப்படி சொல்லக் கூச்சமாக இருந்தால், 'மிஸ் யூ'வாவது சொல்லுங்கள்!

5. பேசும்போது சில்மிஷம் இல்லாத சின்ன பிசிக்கல் கான்டாக்ட் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். விரல்களைத் தொட்டுப் பேசுவது, விளையாட்டாகக் குட்டுவது, கை கோப்பது, சொடுக்கெடுப்பது... இவை எல்லாம் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்குமாம்!


பொய் வேட்டைக்குச் செல்லலாமா?
கி.கார்த்திகேயன்


'பொய் சொல்லக் கூடாது காதலி...

பொய் சொன்னாலும் நீயே என் காதலி!'

ஓ.கே... காதலி பொய் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்தான் (காதலியாக இருக்கும் வரை மட்டும்!). ஆனால், அப்பா, அம்மா, மகன், தங்கை, நண்பன், ஆசிரியர், ஜூனியர், சக அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் பொய் சொன்னால் ரசிப்போமா? சமூகத்தின் எந்த நிலையில், எந்தப் பருவத்தில் இருந்தாலும் நித்தம் நாம் எதிர்கொள்ள வேண்டிய மைக்ரோ யுத்தம்... பொய்!

'நேத்து வீட்ல பவர் கட். அதான் அசைன்மென்ட் முடிக்கலை', 'ரெண்டு நாளா எனக்கு உடம்பு சரியில்லை. அதான் அந்த க்ளையன்ட்டைப் போய்ப் பார்க்க முடியலை', 'ஆபீஸ்ல ஆடிட்டிங். அதான், சாயங்காலம் சீக்கிரம் வர முடியலை!', 'நம்பும்மா, திடீர்னு அந்த சிடுசிடு புரொஃபசர் வந்து ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டார். அதான் லேட்!', 'ஸாரி சார்... பேட்டரி டவுன். அதான் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு!' ஒருநாளில் எத்தனை எத்தனை பொய்கள். ரகரகமாக, விதவிதமாக, வகை வகையாக, அழகழகாக... இந்தப் பொய்களைச் சமாளிப்பது எப்படி, அவை பொய்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி?

'இது என்ன கேள்வி. பொய் பேசும்போதே கண்டுபிடிக்க வேண்டியதுதானே!' என்கிறார் டேவிட்.ஜே.லீபர் மேன். இவர் எழுதிய Never be lied to again என்ற புத்தகம் ஐந்தே நிமிடங்களுக்குள் ஓர் உரையாடலின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி என்று எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறது. (கொஞ்சம் மாத்தி யோசித்தால், பொய் சொல்லும்போது நாம் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்!)

உடல் மொழி பொய் சொல்லாது!

ஒருவரது வார்த்தைகள்தான் பொய் சுமந்து வருமே தவிர, அவரது விரல்கள், தோள்பட்டை, கால்கள், கண்கள்போன்ற உறுப்புகள் எப்போதும் பொய் சொல்லாது. தங்களது உடல் மொழிக்குப் பொய் சொல்லத் தெரியாது என்பது, பாவம் பொய் சொல்பவர்கள் பலருக்குத் தெரியாது. எதிராளியின் உடல் மொழியைக் கணிக்கத் தெரிந்தால், அவரது வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துகொள்ளலாம்!

உரையாடலின்போது மிகக் குறைந்த அல்லது அறவே தவிர்க்கப்படும் கண்ணுக்குக் கண் தொடர்பு, அலைபாய்ந்துகொண்டே இருக்கும் விழிகள், அடிக்கடி தரை நோக்கித் தாழும் பார்வை... மச்சான் பொய் சொல் கிறார் என்று அர்த்தம். அதுவே அழுத்தம் திருத்தமாக கண்ணுக்குக் கண் உற்று நோக்கி பார்வையை விலக்காமல், இமைக்காமல் பேசுபவர்கள் தங்கள் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்த்த விரும்புகிறார்கள் என்று அர்த்தம்!

உங்களையே உற்றுக் கவனியுங்கள். பொய் சொல்லும்போது உங்கள் கைகள், விரல்கள் ஆகியவற்றின் அசைவுகள் மிக மிக மினிமம் ஆக இருக்கும். மணிக்கட்டு தரை நோக்கி இருக்கும் அல்லது விரல்களை இறுக்கமாக மூடிக்கொள்வீர்கள். பேன்ட் பாக்கெட்டில் கைகளைப் புதைத்தோ, மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டோ, ஒரு தற்காப்பு மனநிலையில் இருப்பீர்கள். மாறாக உண்மை உரைக்கும்போது, வானத்தையே அளப்பதுபோல இரண்டு கைகளும் பரந்து விரிந்து உணர்ச்சிகள் காட்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கி அகலத் திறந்து இருக்கும்!

அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கால்களை எக்ஸ்போல மடித்துக்கொண்டோ, கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டோ, உடலின் அருகில் வைத்துக்கொண்டோ இருந்தால், பார்ட்டி தனக்குள் எதையோ பூட்டிக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். இருக்கை நுனியில் அமர்வது, வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொள்ளாமல் ஆகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்துவது போன்றவைகளும் ரெட் சிக்னல்கள்தான்!

பொய் சொல்பவர் எதிராளியுடன் கை குலுக்குவது, தொட்டுப் பேசுவது, விரல்களைப் பின்னிக்கொள்வது, தோளில் தட்டுவதுபோன்ற உடல்ரீதியிலான தொடர்புகளை அறவே தவிர்ப்பார்கள்!

எக்ஸ்பிரஸ் எதிர்மறைப் பதிலா... உஷார்!

ஒரு கேள்விக்குப் பதிலாக வந்து விழும் வார்த்தைகளில் இருந்தே, அது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஆனந்த், நீ என்னை ஏமாற்றுகிறாயா?' என்று காதலி கேட்டதும், 'ச்சேச்சே, உன்னை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன்!' என்று அவசர அவசரமாக சொன்னால், உள்ளே ஏதோ உள்குத்து என்று அர்த்தம். ஒருவரை சந்தேகித்து நாம் ஏதேனும் கேள்வி கேட்கும்போது, நமது கேள்வியில் இருக்கும் வார்த்தைகளைக்கொண்டே உடனடியாகப் பதில் வந்தால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதில் அளிக்காவிட்டால், நமது நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் என்பது நம் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் பிம்பம். அதனால், நமது நேர்மை சோதிக்கப்படும்போது எல்லாம் உடனடியாகப் பதில் சொல்லத்தான் நாம் விரும்புவோம். அந்த சமயம் உண்மையை மறைக்க விரும்பினால், வேறு வார்த்தைகள் மனதில் தோன்றாமல், கேள்வியில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னரே 'இல்லை', 'அப்படியெல்லாம் கிடையாது' என்று எதிர்மறை அர்த்தத்தில் சொல்வோம். அந்த நெருக்கடித் தருணத்தில் பொருத்தமான பதில் சிக்காததால், உடனடிப் பதிலுக்குத் திண்டாடி கேள்வியையே எதிர்மறையாக மாற்றி சமாளிப்போம். எனவே, இனி உங்கள் கேள்விகளுக்கு எதிர்மறை எக்ஸ்பிரஸ் பதில்கள் வந்துவிழும்போது... அலர்ட்!

பதில் இல்லா பதில்!

விமல் முன்பின் பார்த்திராத ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். 'அப்புறம் செல்லம் நீ அழகியா... பேரழகியா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், 'நான் தினமும் ஜிம்முக்குச் செல்வேன். எனக்கு ஏரோபிக்ஸ் தெரியும். பல ஆண் மாடல்கள் என்னை டேட்டிங் குக்குக் கூப்பிடுவார்கள்!' என்று அடுக்குகிறாள். ஊன்றிக் கவனி யுங்கள்.. 'நீ அழகியா?' என்ற கேள்விக்கு, 'ஆம்', 'இல்லை' என்று எந்த நேரிடை பதிலும் சொல்லாமல், 'அழகியாகத்தான் இருப்பாள்' என்று விமலை நம்பச் செய்யும் செய்திகளாக அடுக்குகிறாள். இதுதான் பதில் இல்லா பதில். இன்னோர் உதாரணம் பார்ப்போம்...

வாட்டர்கேட் ஊழல் முதல்முறையாகக் கசிந்தபோது, ஹெலன் தாமஸ் என்ற நிருபருக்கும் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது...

தாமஸ்: "அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி, அதற்கு யாரேனும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்களா?"

ரொனால்ட்: "நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் திரு தாமஸ், வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!"

தாமஸ்: "ஆனால், என் கேள்வி அதுவல்ல. அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி இருக்கிறாரா?"

ரொனால்ட்: "கேள்வி எனக்குப் புரிகிறது. என்னை அதற்குப் பதில் சொல்ல அனுமதியுங்கள். நான் முன்னரே கூறியதுபோலத்தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை எந்த ராஜினாமாக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை!"

'அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்விக்கு இறுதி வரை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் வாட்டர்கேட் விவகாரத்தில் என்ன தில்லுமுல்லு நடந்தது என்பது உலகமே அறியும்.

அந்தப் பதிலில்லா பதில்களின் பின்னணி உணருங்கள்!
'அசல்' ஹீரோ ஆக ஆசையா?
கி.கார்த்திகேயன்


"அமெரிக்காவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் உயர் அதிகாரி பால்

பாய்ன்டன். நிறுவனத்தின் வேலைவாய்ப்புப் பிரிவுக்கு அவர்தான் பொறுப்பு. கிட்டத்தட்ட 60 ஆயிரம் இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வு மேற்கொண்டு இருப்பார். அவரிடம், 'வேலை வேண்டி விண்ணப்பிக்கும்போது பொதுவாக இளைஞர்கள் என்ன மாதிரியான தவறுகளைச் செய்கிறார்கள்?' என்று கேட்டேன். 'அவர்கள் 'அவர்களாக' இருக்க முயற்சிக்க மாட்டேன் என்கிறார்கள். தங்களது ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல், நாம் எதிர்பார்க்கும் தகுதிகள் உள்ளவராக நடிக்கிறார்கள். நாங்கள் என்ன சினிமாவில் நடிக்கவா ஆள் எடுக்கிறோம்? இயல்பான திறமையும் தன்னம்பிக்கையும் தொனிக்க அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினால் நிச்சயம் தேர்வு பெறுவார்கள்!" என்றார் பால்.

இதுதான்... இதுதான் நம்மிடையே உள்ள சிக்கல். நாம் சிலரை ரோல்மாடலாக நினைத்துக்கொள்கிறோம். அவரைப்போலவே நடிக்கத் துவங்கும் முயற்சியில் நம்மை இழக்கிறோம். ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பிரத்யேகத் திறமை என ஒன்று இருக்கும். அதைக் கண்டு உணர்ந்து கூர் தீட்டி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நகலாக நடிக்கக் கூடாது!" என்கிறார் டேல் கார்னெகி. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 'தன்னம்பிக்கை குரு' என்று புகழப்பட்டவர் இவர்.'How to Enjoy your Life and Your job' என்ற இந்தப் புத்தகம், கல்லூரிப் பருவம் முடிவதில் தொடங்கி வேலை செய்து, திருமணம் முடித்து, மனநிலை முதிர்வு அடையும் வரையிலான பருவங்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறது.

பணியிடத்தில் உற்சாகமாக இருக்க மூன்று வழிகள்!

1. முக்கியத்துவத்துக்கு ஏற்ப பணிகளை முடிக்கப் பழகுங்கள்:

எந்த ஒரு செயலின் விளைவையும் சிந்தியுங்கள். அதற்கேற்ப முக்கியத்துவம் வாய்ந்த வரிசையில் அந்தச் செயல்களை முடிக்கத் திட்டமிடுங்கள். ஒரு வங்கியில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்தபோது, வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும் தினமும் ஐந்து பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுவது என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா முடிவெடுத்தார். ஒன்பது வருடங்களில் எழுதிய அத்தனை பக்கங்களின் மூலமும் அவர் அப்போது சம்பாதித்தது முப்பதே முப்பது டாலர்கள்தான். ஆனால், பின்னர் அந்தப் பழக்கம்தான் அவருக்கு எழுத்தாளர் என்ற அந்தஸ்தை அளித்து நிரந்தரப் புகழ் சேர்த்துக் கொடுத்தது!

2. சிறிதோ, பெரிதோ... எந்த விவகாரத்திலும் உடனடி முடிவுஎடுங்கள்!

அமெரிக்காவின் மிகப் பெரிய உருக்கு ஆலை நிர்வாகத்தினர் வாரம் ஒரு முறை நிர்வாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மீட்டிங் போடுவார்கள். ஆனால், எந்த உருப்படியான முடிவுகளும் எடுக்காமல் கூடிக் கலைந்துவிடுவார்கள். ஒவ்வொரு முறை மீட்டிங் முடிந்ததும் அவர்கள் மிகுந்த மனச் சோர்வுடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். புதிதாகப் பொறுப்பேற்ற ஜி.எம், 'எந்த விவகாரத்திலும் உடனடி முடிவு எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 'இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது' என்ற முடிவினையாவது எடுக்க வேண்டும்!' என்று கட்டாயப்படுத்தினார். அடுத்தடுத்த மீட்டிங்குகளில் ஏதேனும் ஒரு முடிவினை எட்டுவார்கள். அனைவரும் உற்சாகமாக, சந்தோஷமாக வீடு திரும்புவார்கள். அது அந்த உருக்கு நிறுவனத்தின் உற்பத்தியிலும் எதிரொலித்தது. இந்த 'உடனடி முடிவெடு' தத்துவம் உருக்கு நிறுவனத்துக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் பொருந்தும்!

3. ஒருங்கிணைக்க, பகிர்ந்தளிக்க, மேற்பார்வையிடக் கற்றுக்கொள்ளுங்கள்!

சில வேலைகளை நாம் செய்தால்தான், சரியாக இருக்கும் என்று எண்ணி இருப்போம். ஆனால், வேலைப் பளு காரணமாக அதைச் செய்து முடிக்க முடியாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் அந்தச் செயல் செய்து முடிக்கப்படாமலேயே போகும். அது தப்பு. எதையும் தெளிவாகத் திட்டமிட்டு, உரிய திறன் உடையவர்களிடம் பொறுப்பைப் பகிர்ந்தளித்து, அவர்கள் முடித்துக் கொண்டுவரும் செயல்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்தப் பண்பை வளர்த்துக்கொள்ளாதவர்கள் மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் சிக்கிச் சின்னாபின்னாமாவார்கள். ஆதாரம் தேவையா? நாளிதழ்களின் 'இறைவனடி சேர்ந்தார்' பக்கங்களைப் பாருங்கள்!

படுக்கையை நனைக்காமல் இருப்பது எப்படி?!

அலுவலகமோ, கல்லூரியோ, வீடோ... எங்குமே அறிந்தவர் அறியாதவர்களைக் கையாள்வதுதான் பெரிய சோதனையாக இருக்கும். ஒருவர் மீது நமக்கு எப்போது வெறுப்பு வரும்? ஒருவர் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பிய செயலை அவர் செய்யாதபோது... அல்லது நமக்குப் பிடிக்காத செயல்களை ஒருவர் செய்யும்போது. இந்த இரண்டு காரணங்கள்தான் பிறர் மீதான 99.99 சதவிகித வெறுப்புகளுக்குக் காரணம். இதில் நமக்குப் பிடிக்காத செயல்களை ஒருவர் செய்தால், அதை நம்மால் பெரும்பாலும் தடுக்க முடியாது. ஆனால், நமக்குப் பிடித்த செயல்களை ஒருவரை செய்யவைக்க முடியும். எப்படி?

அந்தச் செயலைச் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அவரை உணரச் செய்து, அதை அடைவதற்கான உத்வேகத்தை அவருக்குள் உண்டாக்குவதன் மூலம். சின்ன உதாரணம் பார்ப்போம். குட்டிச் சுட்டி சிறுமி சம்யுக்தா எப்போதும் இரவுத் தூக்கத்தில் படுக்கையை நனைத்துவிடுவாள். பாட்டியின் அருகில் படுக்கவைத்து இரவுகளில் அவ்வப்போது எழுப்பி 'உச்சா' செய்தாலும், எப்படியேனும் படுக்கையை நனைக்கத் தவறமாட்டாள். அதட்டி, திட்டி, மிரட்டி, கெஞ்சிப் பார்த்தாலும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

'என்ன செய்தால் நீ படுக்கையை நனைக்க மாட்டாய்?' என்று சம்யுக்தாவிடம் கேட்டார் அவளது அப்பா. 'பாட்டி அருகில் படுக்க மாட்டேன். எனக்கே எனக்கென்று தனியாக ஒரு பெட் வேண்டும். அதில் படுத்தால் நான் சூசூ போக மாட்டேன்!' என்று பழிப்புக் காட்டினாள் சம்ஸ். அவளை உடனே கடைக்கு அழைத்துச் சென்று அவள் ஆசைப்பட்ட படுக்கையை வாங்கிக் கொடுத்தார். பார்சலுடன் வீட்டுக்குள் வந்ததும் கண்களில் உற்சாகம் ஒளிர அனைவரிடமும் தனது படுக்கையை மாய்ந்து மாய்ந்து அறிமுகப்படுத்துகிறாள் சம்யுக்தா. 'நானே செலெக்ட் செஞ்சேனாக்கும்! நான் மட்டும்தான் படுப்பேனாக்கும்!' என்று பெருமை பேசினாள். இரவு படுக்கச் செல்கிறாள். தூங்கி எழுந்ததும் அவளே கொஞ்சம் பயம், பதற்றத்துடன் படுக்கையைச் சோதிக்கிறாள். அது நனையவில்லை. 'என் படுக்கை... நானே தேர்ந்தெடுத்த படுக்கை!' என்ற எண்ணமே அவளது ஆழ் மனதுக்குள் ஒரு உஷார் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட அந்தக் குழந்தையின் மனநிலைதான் நம் எல்லாருக்கும் இருக்கும். அந்தக் குழந்தையைத் திருப்திப்படுத்தியதுபோலவே, எதிராளியின் மனதையும் திருப்திப்படுத்தினால்... இந்த உலகில் எல்லோரும் உங்கள் 'கைப்புள்ள'தான்!