| | | |
Uploading ....
இந்நாவல் மாதிரியாக என்னை
அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய,
கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று
உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால்
படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா,
அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக்
கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும்
என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும்
உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை
எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
So called திராவிடப் பாரம்பரிய
குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல்
மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின்
துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும்,
நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து
சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால்
கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.
சிறுத்தையை வெட்டிய தாத்தாவின்
கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை
முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம்.
பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே
இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன்
என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால
வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய
தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில்
பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.
முப்பதில் தொடங்கி ஒவ்வொரு
பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார்.
முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம்.
அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம்.
தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த
உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே
இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட
சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும்
உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண
ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக
முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன்,
தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு
குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின்
சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை
தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி
நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.
லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான
நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும்
இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு
பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன்
போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும்
நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இன்றும் கூட திராவிட இயக்கத்தை
பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம்
செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில்
சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம்
இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய
எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள்.
சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள்.
நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில்
சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து
தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை
சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன்
என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து,
சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.
வெட்டுப்புலி போதிப்பது
இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள்.
வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள்.
இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக /
தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில்
இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது.
குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின்
எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது
தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை
அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக
போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு
சோறு பதம்.
தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை
குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க
திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு
ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது
மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி
மடிகிறான்.
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை
குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும்,
அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில்
கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும்
வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி
வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான்
என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.
வர்க்க அடிப்படையில் பின்
தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே
செய்யும்? ‘சோ’ போன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை
பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு
இடஒதுக்கீடு’ என்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில்
பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே
காரணமாக இருக்கக்கூடும்.
பார்ப்பன மேலாதிக்க
விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால்
நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின்
அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல,
நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம்
இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர்
காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே
வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி
அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி
ஆட்டிக்கிட்டு இருக்கணும்..”
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன்
சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம்
முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால
பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு..
இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான்
திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான்
பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.”
முன்பாகவே ஒரு கதாபாத்திரம்
சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை
முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள்
வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள்.
அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள்
குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில்
இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும்
பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது
என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக
முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில்
அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை
ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத்
தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.
அண்ணாசாலை கலைஞர் சிலை,
எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு
இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக
வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு
படக்குறிப்பு எழுதியிருந்தார். “ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க!” –
இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும்
உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.
1991 ராஜீவ்காந்தி கொலை, 1998
திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த
குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில்
படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில்
ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு
மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர்
கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக்
கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார்.
பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி
கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த
எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார்.
“இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?”
பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த
கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு,
ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில்
நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். “வைகோ
பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்” என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.
வெட்டுப்புலி – சமகால தமிழ்
சமூகத்தின் கண்ணாடி!
வெட்டுப்புலி | தமிழ்மகன் |
ரூ.220 | பக்கங்கள் : 376
உயிர்மை பதிப்பகம், 11/29,
சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018. போன் : 24993448 uyirmmai@gmail.com
இணையத்தில் நூலினை வாங்க : http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262
பாரதி மணி said...
தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’க்கு
இதுவரை வந்த விமர்சனங்களில், இது எனக்குபிடித்தது. அலசி ஆராய்ந்து
எழுதியது.
நாவலை முடிக்கும்போது,
வீடுதிரும்பும் வண்டிமாடுகள் மாதிரி கொஞ்சம் விரைசலாக இருந்தது. அதற்கு
உங்கள் காரணங்கள் ஒத்துக்கொள்ளக்கூடியவை தான். A dispassionate Review!
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு
தமிழக வரலாற்றை, சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல்
அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த
நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி
எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால்
நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
பிராமணரல்லாத சாதிகளில் செல்வ
வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக்
குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு
போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:
- வெட்டுப்புலி இளைஞனான சின்னா
ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.
லஷ்மண ரெட்டி காலப்போக்கில்,
குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும்
அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும்
ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின்
வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.
- சினிமா எடுக்க ஆசைப்படும்
ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக
முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய்
புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.
ஆறுமுக முதலியின் அண்ணா கணேச
முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து
எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும்
எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய
நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும்
தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.
- மணி நாயுடு - இது திராவிட
காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன்
பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும்
லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான்
திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன்
பரம்பரையின் ஏறுமுகம்.
பரம்பரைச் செல்வமும் சமூக
செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட
இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த
வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக
கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு
அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான்
எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும்
தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு
நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத
ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும்
சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.
சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த
அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று
காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை
விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு
சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக
இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே
ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.
தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு
சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும்
பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
லஷ்மண ரெட்டியாருக்கு பறையர்
ஜாதியைச்சேர்ந்த குணவதியின் மீது ஏற்படும் காதல் அவரது வாழ்க்கையில் ஒரு
திறப்பினை உண்டாக்குகிறது. பறையர்கள் ஏன் இந்நிலையில் இருக்கிறார்கள்
என்று சிந்திக்க வைக்கிறது.
”பெரிய அளவில் நிலத்தை ஆக்ரமித்து
உழுது பயிர் செய்வதில் அவர்களுக்கு வெட்கமும் தயக்கமும்” இருப்பது லஷ்மண
ரெட்டியால் ”கடுமையான உழைப்பாளிகளாகவும் வைத்து வாழத்தெரியாத
சோம்பேறிகளாகவும்” பறையர்களைப் பார்க்க வைக்கிறது. ஆனால், உண்மை நிலை
என்னவென்றால், நிலத்தை ஆக்ரமித்து உழுது பயிரிட முனைந்தால் உடனடியாக நில
உடமை ஆதிக்க ஜாதிகளுடன் பெரும் பூசல்கள் உருவாகும். அந்த பூசல்களின்
இழப்புகளைத்தாங்கும் வல்லமை இல்லாததால் தம் சமுதாயமே நிர்மூலமாவதை விட
“வாழத்தெரியாத சோம்பேறிகளாக” வாழ்ந்து விட்டுப்போகலாம் என்று அவர்கள்
ஆகியிருக்கலாம் என்கிற கோணம் அவர் சிந்தனைக்கு எட்டுவதில்லை. அவர்கள்
சோம்பேறிகள் என்று சொல்வது தம் ஜாதியின் ”பரம்பரை” மேல்நிலைக்கு எளிதான
ஒரு காரணத்தைக் கொண்டு வந்து அவர் காலடியில் போட்டு விடுகிறது.
இதைப்படிக்கையில், பூர்வீக அமெரிக்க செவ்விந்தியர்களை விரட்டி அவர்களது
சமூகங்களை நிர்மூலமாக்கி விட்டு அவர்களது ஏழ்மைக்கு குடிப்பழக்கம்தான்
காரணம் என்று காரணம் சொல்லும் வெள்ளைக்காரர்களின் வாதம் எனக்கு நினைவுக்கு
வந்தது.
ஆனாலும் குணவதியின் மீதான லஷ்மண
ரெட்டியின் காதல், தோல்வியில்தான் முடிகிறது. இது அவரது வாழ்க்கையில்
முக்கிய திருப்பமாகிறது. லஷ்மண ரெட்டியின் தாய் செலம்பாத்தாளுக்கு கூழ்
ஊற்றி பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொண்டு பையனுக்குக்கட்டி விசாலாட்சியைக்
கட்டி வைக்கிறாள். “ராமகிருஷ்ண பரமஹம்சரோ, பெரியாரோ யாரா இருந்தாலும்
குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பில்லாம சம்பந்தம் வச்சிக்கிடணும்” என்ரு
யதார்த்தம் பேசும் மனைவியாக அறிமுகமாகிறாள் விசாலாட்சி லஷ்மண ரெட்டியை
ஆற்றுப்படுத்துகிறாள்.
அப்படி மாற்றியிராவிட்டால் அவரது
வாழ்க்கையும் கணேச முதலி மகன் தியாகராசன் வாழ்க்கை மாதிரி
ஆகிவிட்டிருக்கலாம். .
ஈவேரா நடத்தும் போராட்டம் அண்ணா
நடத்தும் போராட்டம் என்று இரண்டிலும் கலந்து கொள்ளும் விசித்திரக்குழுவில்
தியாகராஜன் இருக்கிறான். இத்தகையவர்களின் பொது எதிரி பிராமணர்கள். ”சாதி
இழிவு தீர்வதற்கு ஆயிரம் பார்ப்பானைக் கொல்ல வேண்டுமானால் நான் அதையும்
செய்வேன்” என்று பேசிய ஈவேராவின் மீது பக்தி கொண்ட தொண்டனான அவனுக்கு
திருமணமோ ஒரு விபத்து போல நிகழ்கிறது.
தியாகராஜனுக்கு, ஹேமலதா என்கிற
தெலுங்கு நாயக்கர் வீட்டுப்பெண் கட்சிக்காரர்கள் பேசி முடித்த
கலப்புத்திருமணமாக மணமுடிக்கப்படுகிறார். அதற்குப்பின்தான் தியாகராஜனுக்கு
தம் கொள்கைகளுக்கெதிரான தலைவலி வீட்டிற்குள்ளேயே பிரம்மாண்டமாக விஸ்வரூபம்
எடுத்திருப்பது தெரிகிறது. முதலிரவில் அவள் கேட்ட எளிய நேரடிக் கேள்வியில்
அவன் பொறிகலங்கிப்போகிறான்: “எதுக்கு மீட்டிங் வந்தவங்கலாம்
ஐயரைத்திட்டிகினு இருந்தாங்க? வேற வேல கெடயாதா? நாம நம்ம பொழப்ப
பாக்கணும். ஒருத்தர பாத்து வயிறெரியறுது கூடாது…அப்புறம்
இருக்கிறதும்
நம்மளவுட்டுப் போயிடும்”. “அவனுங்களாலதான் நம்ம வாழ்க்கை இப்படி
நாறிகிட்டு இருக்குது” என்கிறான் தியாகராஜன். அவள் தன் கழுத்தில் தொங்கும்
நகையையும் புடவையையும் அவசரமாகப்பார்த்து விட்டு நல்லாத்தானே இருக்கிறோம்
என்று ஏறிட்டுப்பார்க்கிறாள்
சுயமரியாதைத்திருமணம் செய்தவனின்
மனைவி இரண்டாம் நாள் இரவு முந்தானையை விலக்க அங்கே அவன் பார்ப்பதோ ஒரு
பேரதிர்ச்சியை- அவள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டிருந்தது! “அம்மாதான்
கழுத்து மூலியா இருக்க ஒத்துனு செப்பி அரை சவரன்ல தாலி எடுத்துக்
குடுதுச்சி” என்கிறாள்.
தியாகராஜன் தன் வாழ்நாளின்
அதிர்ச்சியை வீட்டிற்குள்ளேயே அனுபவிக்கிறான். ஹேமலதாவோ இவன்
பேசுவதையெல்லாம் வெகுசுலபமாக விளக்குமாற்றால் பெருக்கித் தள்ளுவது போன்று
தன் எளிய எதிர்வாதங்களால் தள்ளிவிட்டு அவனை நிலைகுலையச்செய்து கொண்டே
இருக்கிறாள். தியாகராசனின் முரட்டுக்கோபம் அதிகமாவதை உணராமல் “சாமி லேது;
பூதம் லேதுனு செப்பிதாரண்டே நரகம் நிச்சயம்” என்கிறாள். “ஐயருங்கள திட்றத
விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க?.” என்று உசுப்புபவள்
“அவங்கள மாரி சுத்தபத்தமா இருக்க முடியலைனுதான அவங்க மேல பொறாமை” என்று
கேட்க ”அடிச்செருப்பால” என்று அவள் முகத்தில் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து
அவளை அடிக்கத்தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் இதையும் பிராமணர்கள்
சதியென்று நினைக்கத் தலைப்படுகிறான்.
பிராமணர்கள் மீதுள்ள காழ்ப்பின்
காரணம் இன்னதென்று தெளிவாக கதையில் சொல்லப்படவில்லை என்றாலும்
உரையாடல்களின் வழியாக அவை தொடர்ந்து கோடிகாட்டப்பட்டுக்கொண்டே வருகின்றன:
அசூயை, பொறாமை, ஜாதீய சந்தேகம் ஆகியவைதான் அவை.
அன்று பிராமணர்களின் மேல்
காழ்ப்பு கொள்ள பல காரணங்கள் இருந்தன, அவர்கள் தங்களை
மேலோராய்க்கருதிக்கொண்டிருந்தனர் - என்று ஒரு வாதம் சொல்லப்படுகிறது.
உண்மையில் இந்த குற்றச்சாட்டை எந்த ஜாதியின் மீதும் சுமத்தி விடலாம்- அந்த
ஜாதியால் பாதிக்கப்பட்டதாக உணரப்படும் ஜாதிகளிடம் அந்தப்பொறுப்பை விட்டு
விட வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியதெல்லாம். வன்முறை, வெட்டு குத்து
என்று இறங்காத ஜாதி, அல்லது அப்படிப்பட்ட சமூக பலம் அற்ற ஜாதி என்றால்
இன்னமும் சௌகர்யம். அய்யர்களில் இருந்து அருந்ததிகள் வரை அடித்துத்
துவைத்து விடலாம்.
பிராமணக்காழ்ப்பு உருவானதன்
பின்னால் உள்ள சமூகவியல் காரணிகள்தான் உண்மையில் முக்கியமாக கருத்தில்
கொள்ளப்பட வேண்டியவை. பிரிட்டிஷ் அரசு இந்தியாவை பொருளாதார ரீதியில்
பிழிந்தெடுக்கப்பட வேண்டிய பிரதேசமாக மட்டுமே பார்த்ததில் தொடங்குவது அது.
உற்பத்தியுடன் நேரடித்தொடர்பற்ற
அத்தனை விஷயங்களும் பிரிட்டிஷ் அரசால் கழுத்து நெரிக்கப்பட்டன. பிராமண
சாதி வேதக்கல்வி, கோவில், பூஜைகள் ஆகியவை அடங்கிய ஒரு பொருளாதாரத்தைச்
சார்ந்து வாழ்ந்த ஜாதி. அவர்களுத்தரப்பட்ட நிலங்களும் மேற்சொன்ன தெய்வீக
சூழல் பாதுகாக்கப்பட வேண்டி அளிக்கப்பட்டவையே. வேறு வகையில் பார்த்தால்
தமிழக பிராமண ஜாதி தொழில் புரட்சியின் கச்சாப்பொருட்களைத்தர வேண்டிய
காலனியாக உருவாகிக்கொண்டிருந்த அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிற்கு எந்த
வகையிலும் நேரடி உபயோகமில்லாத ஒரு ஜாதித் தொகை. இதனால் கிராமத்திலும் சிறு
நகரங்களிலும் புரவலர்கள் இல்லாத நிலையில், முதலில் வெளியேறத்தொடங்கிய
ஜாதிகளில் ஒன்றாகவும் அது ஆனது. புதிதாக உருவான நகர்ப்புறங்கள்
பிராமணர்களுக்கு கோவில் சூழல் தாண்டியதோர் தொழிலை, புதிய
வயிற்றுப்பிழைப்பைக் காட்டிக்கொடுத்தன.
சீதாராம அய்யரும் அவருக்குப்பின்
சுப்ரமணிய அய்யரும் தம் ஜாதித்தொழிலிலிருந்து விலகி மோட்டார் இஞ்சின்
ரிப்பேர் செய்கிறார்கள். வயிற்றுப்பிழைப்புக்கு அது போதாமல் போகும்
வேளையில் சுப்ரமணிய அய்யரும் ஒரு கட்டத்தில் ஊரை விட்டு வெளியேறுகிறார்.
ஊரில் வேலையில்லாமல் வெளியூர் சென்று விட்ட நிலமற்ற ஏழை பிராமணக்
குடும்பங்கள் இவை. பணம் என்கிற குறிக்கோளை மையமாக வைக்காத தன் குலத்தொழிலை
விடுத்து, படிப்பையும் உழைப்பையும் நகரத்தில் பணத்துக்காக விற்கும்
நேரத்தில் பிராமண சமூகம் புதிய சமூக அடையாளத்திற்கு வந்தடையத்
தொடங்குகிறது.
நில உடைமையாளர் ஜாதிகளுக்கு கால
நேரம் குறித்துத் தந்து கொண்டிருந்த ஜாதி, ஒரு தலைமுறையில் அவர்களிடம்
நிலவரி கணக்கு கேட்கும் அரசு அதிகாரி என்கிற தரப்புக்கு இடமாற்றம்
அடைகிறது. நிலம் சார்ந்த பொருளாதாரம், தொழில் சார்ந்த பொருளாதாரமாக
மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் முதலில் பாதிப்படைந்த பிராமண ஜாதிகள்
நகரங்களில் வந்தடைந்த இடத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் பிற கிராமப்புற
ஆதிக்க ஜாதிகளும் வந்தடையத்தொடங்கின. ஆனால் கிராமங்களில் இருந்த அதிகார
சமன்பாடு, நகரங்களில் வேறு மாதிரியாக இருந்தது. குறிப்பாக கிராம
பிராமணர்கள் போல் வைதீகம், கோவில், பூஜை, என்று இல்லாமல், நகர பிராமணர்கள்
அரசு மற்றும் தொழிற்சாலை வேலைகளில் இருந்தனர், வேதத்திற்கு பதில்
டிப்ளமாவும், சட்டமும் படித்திருந்தனர். சங்கீதமும், இந்தியும்
கற்றுக்கொடுத்தனர். காபி கிளப் திறந்தனர். மெஸ் வைத்தனர். வேதக்கட்டை
மூலையில் வைத்து விட்டு, தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்றனர்.
கிராமப்புற பொருளாதாரம்
நகர்மயமானதன் முதல் கலாசார பலிகளில் ஒன்றாக இவ்வாறு இடம் பெயர்ந்த பிராமண
ஜாதிகளின் நிலையைக் குறிப்பிடலாம். ஆனால் அதுவே அவர்களில் பலரை அரசியலை
நோக்கியும் செலுத்தியது.
அதே சமயம் இது, நகர்மயமாதல்
விரைவடையத் தொடங்கிய காலத்தில் கிராமத்தை விடுத்து நகரத்திற்கு வந்து
சேர்ந்த கிராமப்புற ஆதிக்க ஜாதிகளுக்கு கடும் அதிர்ச்சியையும் அசூயையும்
அஜீரணத்தையுமே ஏற்படுத்தியது. (இங்கு நகர்ப் புறம் என்று சொல்வது சென்னை
போன்ற பெருநகரங்களை மட்டுமல்ல; அடுத்தகட்ட நகரங்களையும் இதற்குப்
பொருத்திப் பார்க்கலாம்). கிராமங்களில் தன்னை அண்டிக்கிடந்த பிராமணர்கள்
இப்போது அதிகாரத்தின் தரப்பாக ஆவது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. பிராமண
வெறுப்பின் தளத்தில் அவர்கள் தம்மைத்திரட்டிக் கொள்ளத்தொடங்கிறார்கள்.
”பாப்பானைத்திட்டணும்னா அப்படி
ஒரு ஆவேசம் வருதுய்யா உனக்கு” என்று பங்காளி கணேச ரெட்டி ஆச்சர்யப்படும்
அளவுக்கு லஷ்மண ரெட்டியின் தந்தை தசரத ரெட்டி பார்ப்பன வெறுப்பாளராய்
இருக்கிறார். அதற்கென்ன காரணம் என்பதும் அவர் வாயிலாகவே வெளிப்படுகிறது.
”நாமெல்லாம் ஷத்ரிய வம்சம்டா” என்று தந்தை சொல்வதைக் கேட்டு வளர்ந்தவர்
தசரத ரெட்டி. எவன் அதிகாரத்திலிருக்கானோ அவனுக்கு சேவை செய்து
வாழ்க்கையோட்டுவது பார்ப்பான் விதி என்று சொல்லும் கணேச
ரெட்டியைப்பார்த்து “அதிகாரத்துல இருக்கறவனுக்கு சேவகம் செய்றானுங்க…கூடவே
அதிகாரமும் பண்றாங்களே” என்று ஆற்றாமையுடன் சொல்வது திராவிட இயக்கத்தின்
அச்சாணியான உளவியலைப் படம் பிடித்துக்காட்டும் ஓர் இடம். தமக்கு ஒரு வேலை
பார்ப்பானுக்கு ஒரு வேலை என்று இருந்தது, படிப்பு முக்கியமாகிப்போன அந்த
கால கட்டத்தில் “அவன் செய்ற வேலைதான் ஒசத்தினு ஆகிப்போச்சே” என்கிற
எரிச்சலாக வெளிப்படுகிறது.
இந்த எரிச்சலுக்கான வடிகாலாக,
நகர்ப்புறங்களில் பிராமணர்களை எதிர்க்கவும் ஆதிக்க ஜாதிகளின் செல்வாக்கான
கிராமப்புற இடத்தை நகரங்களில் மீளுருவாக்கம் செய்யவும் உருவான கட்சியாக
ஜஸ்டிஸ் கட்சியும் தென்னிந்திய நல உரிமைச்சங்கமும் உருவெடுத்தது. அவற்றில்
பெரும்பான்மையாய் இருந்தது முதலியார்கள். இந்த ஆதிக்கம் நகர்ப்புற
கல்விநிலையங்களிலும் பரவியது.
”தென்னிந்திய நல உரிமைச்சங்கம்,
ஜஸ்டிஸ் பார்ட்டி போன்றவற்றில் முதலியார் சமூகம் அதிகப்பங்கு வகித்ததால்,
பச்சையப்பன் முதலியார் கல்லூரியிலும் அதனுடைய தாக்கமும் இயல்பாகவே
இருந்தது” என்கிறார் ஆசிரியர். பச்சையப்பன்கல்லூரி திராவிட இயக்க வளர்ச்சி
சூல் கொண்ட வளாகமாக ஆவதும் இதனால்தான்.
பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய
பெரியார் தாசன் - இன்றைய அப்துல்லாஹ்-இன் மாணவனாகும் லஷ்மண ரெட்டி மகன்
நடராஜனுக்கும் பார்ப்பனக்காழ்ப்பு பொங்கிப் பொங்கி எழுகிறது.
ஈவேராவைப்போலவே பார்ப்பனர்களைக் கொன்று போட்டு விட வேண்டும் என்று ஆவேசம்
கொள்கிறான். இத்தனைக்கும் எந்த பார்ப்பனனும் அவனுக்கு எதுவும்
செய்யவில்லை. சொல்லப்போனால், பார்ப்பனனிடம் அவன் நேரடியாகப் பேசியது
கூடக்கிடையாது. ஆனால் அவர்கள் தம்மிடமிருந்து வித்யாசமாய் இருப்பதே அவனது
கோபத்தைக்கிளறப் போதுமானதாய் இருக்கிறது. தான் பேசிய முதல் பார்ப்பனப்பெண்
அவனை நட்பாகப் பார்த்து போலிஸிடமிருந்து காப்பாற்றி வீட்டிற்கு
அழைத்துப்போய் காபி கொடுத்து உபசரிக்கிறாள். அந்த அன்பைக்கூட அவனால்
திருப்பித்தர முடியவில்லை. தனக்குள் அவன் உருவாக்கி கூர் செய்து
வைத்திருக்கும் பிராமணக் காழ்ப்பு அவளது அன்பையும் நிராகரிக்கிறது.
திடர்ந்து, காழ்ப்பால் நிறைந்த அவன் மூளை கலங்கிப்போகும் காலமும்
வருகிறது. பிற்காலத்தில் விடுதலைப்புலி ஆதரவாய்ப்பேசப்போய் அதன் தொடர்
விளைவாய் பாழுங்கிணற்றில் விழுந்து தலையில் அடிபட்டு படுத்த
படுக்கையாகிறான். அவனுக்கு ஏன் தலையில் ஏன் அடிபட வேண்டும்? ஒருவேளை
காழ்ப்பு என்பது தன்னையே திருப்பித்தாக்கும் ஆயுதமோ?
கணேச முதலி மகன் தியாகராஜன்
வாழ்க்கையும் ஹேமலதாவால் அடிபட்டு, பாழாகிறது; ஆனால் காழ்ப்பென்ற
கொந்தளிப்பை விட்டு விலகி பாண்டிச்சேரி அன்னையின் தியானத்திற்கு (பிராமண
பாஷை இல்லாமல் சாதாரணமாய்ப் பேசும் ஒரு பிராமணரால்) அறிமுகப்படுத்தப்படும்
நேரத்தில் அது அவனைப் பரந்து கனிந்த ஒரு சம நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.
கணேச முதலி மகன் தியாகராசன்
பாண்டிச்சேரி அன்னையால் ஆற்றுப்படுத்தப்படுகிறான். ஆறுமுக முதலி மகன்
சிவகுரு சினிமா மோகம், பெண் மோகம் என்று திசை மாறி தந்தையால்
கைகழுவப்பட்டு ரோகம் வந்து மாம்பலம் சிவ-விஷ்ணு கோவில் வாசலில்
பிச்சையெடுத்து இறக்கிறான். லஷ்மண ரெட்டியின் பெண் நாகம்மை சாய்
பக்தையாகிறாள்.
எண்ணங்கள் மனோநிலையை
உருவாக்குகின்றன, மனோநிலை அதற்கான கற்பனா உலகில் தனக்கான எதிர்காலங்களைச்
சிருஷ்டித்துக்கொண்டே இருக்கிறது. காழ்ப்பும் வெறுப்பும் ஒருவனை
அவற்றுக்கேயான சம்பவங்களில் கொண்டுபோய்க் கோர்த்துவிட்டு விடுகிறது.
ஒவ்வொரு சம்பவமும் அதற்கானதொரு எதிர்காலத்தைப் பிறப்பித்துக்கொண்டே
போகிறது. சம்பவங்கள் முட்டிக்கொள்கையில் அவற்றின் எதிர்காலங்களும்
மோதிக்கொள்கின்றன. லஷ்மண ரெட்டியைக்கொல்ல துரை ஆள் அனுப்பிய விஷயம்
அவனுக்குத் தெரிந்திருந்தால் வெள்ளைக்காரனை விட பிராமணன் மோசம் என்று
காழ்ப்பை வளர்த்துக்கொள்ளாமல் இருந்திருப்பானோ? பிராமணப்பெண்ணை திருமணம்
செய்திருந்தால் நடராஜனுக்கு தலையடிபட்டு மூளை கலங்கிப்போகாமல்
இருந்திருக்குமோ? விசாலாட்சிக்கு லஷ்மண ரெட்டி விட்டுக்கொடுத்ததுபோல
ஹேமலதாவிற்கு தியாகராஜன் விட்டுக்கொடுத்திருந்தால் அவன் வாழ்க்கை இவ்வளவு
அடிபட்டிருக்காதோ?
ஹேமலதாவின் வெறுப்பு அவள் கையில்
பச்சை குத்தியிருந்த அதிமுக அண்ணா உருவமாய் வடிவெடுத்திருக்கிறது. பர்னர்
சூட்டில் பழுத்துக்கிடந்த இரும்பு வளையத்தை எடுத்து பச்சையாய் இருந்த
”அண்ணாவின் மேல் வைத்தாள்.” அண்ணா உருவம் இல்லாத தன் கையைப்பார்த்து
பரவசம் அடைகிறாள். அவள் பச்சை குத்தியது அண்ணாவை அல்ல, வெறுப்பை என்பது
புரிகிறது. வெறுப்பைச் சுட்டெரித்த அவளுக்கு அந்த வலி இனிக்கிறது. களங்கம்
நீங்கிய புது வெளிச்சம் வீடெங்கும் நிரம்பி வழிகிறது.
லஷ்மண ரெட்டி, பறைப்பெண் மேல்
கொண்ட காதல் அன்று ஒருவித ஜாதிக்காழ்ப்பால் தோல்வியடைய, அவர் மகனுக்குள்
துளிர்க்கும் காதலின் ஈர்ப்பை இன்று அவனுள் உருவாக்கப்பட்டு விட்டிருந்த
வேறுவித ஜாதிக்காழ்ப்பு கொன்று போடுகிறது. கொள்கையை வாழ வைக்க அவர் மகன்
மணந்த ”ஷெட்யுல்ட் காஸ்ட்” பெண் தலையில் அடிபட்டு மூளை கலங்கிக்கிடக்கும்
அவனுக்கு வாழ்க்கை தரும் சேவகியாகிப் போகிறாள்.
ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும்
அந்த காலகட்டத்தின் குரல் போன்று வந்து ஆசிரியர் முழங்கி
விட்டுச்சென்றிருப்பது கொஞ்சம் கூட அவசியமில்லாதது. கதையோட்டத்தில்
ஒட்டாமல் துருத்தி நிற்கும் அபத்தங்கள் அவை. தனது அரசியல் பிரசாரத்தைத்
தூவுவது தவிர படைப்பின் செழுமைக்கு எந்த வகையிலும் அது பயன்படவில்லை.
நாவலின் போக்கில் வரும் ஈவேராவை விதந்தோதும் பிரசாரப்பக்கங்கள் லஷ்மண
ரெட்டி, ஏதோ ஒருதளத்தில் வெட்டுப்புலி ஆசிரியரின் புனைவுலகப் ப்ரதிதானோ என
எண்ணத்தோன்றுகிறது. தீபாவளி மதவாதம், ஆனால் ரம்ஜான் நோன்புக்கஞ்சியும்
கிறிஸ்துமஸ் வாழ்த்தும் அப்பழுக்கற்ற செக்யுலரிஸம் என்கிற வழியில்
இந்துத்துவ கட்சிகளுடன் கூட்டணி வைப்பது மதவாதம், ஆனால் தமுமுக, முஸ்லீம்
லீக், கிறித்துவ ஜனநாயக முன்னணி என்பதெல்லாம் மதவாதமற்ற கட்சிகள் என்கிற
கன கச்சிதமான திராவிட அரசியல் முரண்பாட்டை ஆசிரியரும் எந்த உறுத்தலும்
இன்றி கிளிப்பிள்ளைபோல தானும் சொல்லிச் செல்கிறார்.
இவற்றையெல்லாம் தாண்டி, அரசியல்
கதை என்றாலும், எழுத்து நடையின் அபாரம் அங்கங்கே வைரம் போல பளீரிடுகிறது.
தகவல் முத்துக்கள் நாவலில் வழியெங்கிலும் பொதிந்து கிடக்கின்றன.
சிந்தனைக்கு அழைக்கும் நுட்பமான பல விஷயங்கள் தெளிக்கப்பட்டுள்ளன. கதையின்
மடிப்புகள் பல விதங்களில் கதையைப் படிக்கக்கூடிய சாத்தியங்களை
நமக்குக்காட்டிக்கொண்டே இருக்கின்றன.
லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன்
குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை
தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால்
அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு
வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி
பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார்.
ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர்
வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய்
இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம்
அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும்
கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு
விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?
திராவிட இயக்க அரசியல் சார்ந்த
முதல் இலக்கிய பதிவு
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு
பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது.
இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும்
மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த
உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு
பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக
இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில்
இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.
குறிப்பாக 1916—ல் பிரகடனப்
படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல
அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக
சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி
இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும்
விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால
இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப்
பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும்,
இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம்
என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை
வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை
குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.
ஒன்று விலகி இருந்து சாட்சி
பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத்
தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ
எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக
இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு
தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து
சத்தமிட்டு
கிடப்பவை. அதில் சுயலாபம்
இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில்
திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.
ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ்
மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது
சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு
நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது
இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை
நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன்
வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு
காலமாக சாத்தியமாகியுள்ளது.
தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவல்
தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும்
சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும்
ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு
மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.
வெட்டுப் புலி படம் ஒட்டிய
தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன்.
சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது
வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த
அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக்
கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன்
முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை
என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.
இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி
ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி
மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த
காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள்.
இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை
நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.
எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி
ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று
தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு
லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால்
கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து
பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப்
இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால்
செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில்
துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச்
சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன,
போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.
வெட்டுப்புலி சம்பந்தமில்லாது
ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும்
கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டி தான்
வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத
ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த
சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை.
அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான்
சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள்
சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சி தான் சரித்திரமாக நம்
எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.
பத்திருபது அய்யர்மார்கள் இருந்த
அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது
அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற
இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால்
ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும்,
அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து
வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால்
நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே
போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு
கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.
ஒர் இடத்தில் தஸரத ரெட்டி
சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ
இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே
எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார்.
நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும்
(பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த,
அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப்
போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும்
தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும்,
வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன்
செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு
தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம்
முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம்
வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .
ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது
என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை.
உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன
துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு
பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது.
அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான்
என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச
ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும்
பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக
இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள்
அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல்
போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ்
எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ
மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர
கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச்
சொல்கிறது.
தசரத ரெட்டியும் அவர் மனைவி
மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.
“குருவிக்காரன், பள்ளி, பறையன்,
செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும்
எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.
அதற்கு மங்காத்தா பதில்,
“நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை
பண்ணுவான்.”
இது இந்த இரண்டு பேருடன்
மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல்
மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி
திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர்
பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த
சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.
பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே
குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி
விளக்கமாகச் சொல்கிறார்.
“குருவிக்காரனும் நாமும் சமம்னு
ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம்
போடச் சொல்றாங்க.”
மங்காத்தாவுக்கு இது ஒன்றும்
சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு
தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ,
நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”
இந்தக் கேள்வி பல ரூபங்களில்
இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர்
முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக்
கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப்
போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப்
படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு
தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த
நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு
அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில்
விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.
இது இரண்டு தலைமுறைகள் கடந்து
அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர
காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர
திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும்
ஒரு அப்பாவிக்கும் இடையில்
“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து
சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள்
ஹேமா
“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை
விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”
அதெல்லாம் நடக்ககூடிய காரியம்
இல்லடி.
“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு
தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”
பதில் சொல்லாது அவன் திசை
திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.
“நான் சொன்னதுக்கு பதிலைச்
சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ
பொறாமை?”
“அடி செருப்பாலே”.. மென்ற
வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான்
.”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர்
ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல்
அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”
இது ஒரு காட்சி.
இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக
வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற
ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.
இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது
எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங்
களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார். தமிழ் மகன்
.இதற்கு முந்திய போன
தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது
பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம்
நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.
.பல இடங்களில் இவையெல்லாம்
அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல்
மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற
சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா?
1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக்
காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே
படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர்
மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும்
பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை
இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல
தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின்
தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப்
பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை.
விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல்
செல்கிறோம்.
இருபதுகளில் தொடங்கும்
இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின்
போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம்
தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு
தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும்
ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம்
பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு
பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு
வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க”
என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து.
அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ
நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம்
வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா
அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”.
என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம்
எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு”
என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை,
எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில்
பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.
ஆக, முதலியார்கள்
நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில்
அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக்
காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம்
தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.
இப்போது அறுபதுகளுக்கு வந்தால்,
தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.
நாயுடு என்று சொன்னார்கள். தமிழ்
தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம்
அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள்
“எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு
சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல்.
கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம்
சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.
“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர்
செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக
இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத்
தோன்றுகிறது.
வீட்டில் மாத்திரம் இல்லை. அவன்
வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.
அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர்
நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும்
ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம்
ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத
ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?
அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று
உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ.
“பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான்
வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர்
சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக
இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக
உச்சரிப்பான்.
”என் கூட வேலை செஞ்ச பய” என்று
சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..
லட்சுமண ரெட்டியார் திராவிட கழக
அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன்
குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே
மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக்
காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம்
எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு
லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.
முன்னர் ஜஸ்டீஸ்
பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார்
திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற
பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில்
இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய
கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர்
அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப்
பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து
வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை
வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ
என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.
லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி
வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.
இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு
ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர்
இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம
அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு
பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே
சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம்.
குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி
இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு.
ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.
ஆனால் நடராஜனுக்கு எப்படியோ
பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை
.ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும்
சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.
வ.வு.சி.க்கும் பெரியாருக்கும்
இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை.
மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட
ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க
சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.
நடராஜனுக்கு கன்னிமாரா
லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று
தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில்
உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.
அவர்கள் பேசிக்கொள்வதைக்
கேட்கலாம்:
நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ்
எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன்,
எல்லாம் யாரு?
(பேசிக்கொண்டிருபபது பிராமணப்
பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று
சொல்லியிருப்பான். ).
எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி
போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க
தானே”? என்கிறாள் அவள்.
இதற்கு நடராஜன் பதில்:
“உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”
அவர்களை வழியில் ஒரு போலீஸ்
இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி
இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.
“அப்படி லவ்வு?” என்று கிண்டல்
செய்கிறான்.
“அப்படிலாம் இல்லை சார். இது எங்க
மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன்
கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.
“அப்படியாடா? “ என்று கேட்கிறான்
நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு
படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது
நடராஜன் மனதில்.
நாடு முழுக்க கொந்தளிப்பா
இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு
பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.
இருவரும் கிருஷ்ண்பிரியா
வீட்டுக்குப் போகிறார்கள்.
பாப்பாத்தி என்று மனதில்
வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த
இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று
கேட்கிறான்.
“நான் அப்படிச் சொன்னதாலே தான்
விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.
கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில்
குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார்
நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி
இருக்கிறது.
தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது
ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு
பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக
இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன்
என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப்
பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.
அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித
அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார்
நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.
”சட்ட சபை எங்க கையிலே இல்லை.
நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான்
உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி
இல்லே. ஆ,மாவா இல்லையா?”
எங்களைத் தான் நாட்டை விட்டே
வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு..
செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான்
கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர்
தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச்
செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால்
சாய் பக்தை என்கிறான்.
இது போல்தான், சமூக மாற்றங்கள்,
மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ
நிகழ்கின்றன. என்றாலும்
எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை
மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக்
கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற
பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க
வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த
கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ்
நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.
“அடுத்த காலர் யார்னு பாக்கலாம்.
ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க
கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க…
ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?
இன்னொரு காட்சி. நடேசன் தீவிர
திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர
அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால்
தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால்
ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன்
பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம்
கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு?
கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”
“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா
கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?
பிரேமா இங்கே வந்தாளாக்கும். “
பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.
”யார் சொன்னா என்னா?. சொன்னது
உண்மையானு பாக்கணும்”.
”போடி. நல்ல உண்மையப் பாத்த….
எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா?
உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி
ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”
பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு
இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப்
போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால்
எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…
எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை
யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மூன்று தலைமுறைகளின் வாழ்வில்
காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால்
இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத்
தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி
எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே
ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண
ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப்
படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று
தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை
வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண
மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று
சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே
காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும்
காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.
திராவிட இயக்கமும் சரி,
கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட
வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள்
பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை
இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான்.
தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை
தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.
தமிழ் மகனின் வெட்டுப் புலி
வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட
வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள்,
சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று
தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த
வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள்
செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன
அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான்
இருக்கின்றன.
நான் என் வார்த்தைகளில் சொல்ல
முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும்
மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.
தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு
புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற
பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.
திராவிட இயக்கத்தைப் பர்றிப்
பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும்
எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.
எல்லா புத்தகங்களையும் போல, இதைப்
பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.
நானறிந்தவரை காமராஜர் சுய ஜாதிக்காரர்
என்பதற்காக எவருக்கும் விதிகளை மீறி சலுகைகள் அளித்து மேலே
தூக்கிவிடவில்லை. ஆனால் அவரது ஜாதியினர் தம் ஜாதியைச் சேர்ந்தவர்
முதல்வராக உள்ளார் என்ற உத்சாகத்தில் துணிந்து பல துறைகளில் இறங்கி
முன்னேறினார்கள். நகரத்தார் போலவே அந்த ஜாதியினரும் செயலூக்கம்
மிக்கவர்கள். வெகு காலம் முன்பே மகமை வைத்து சுய ஜாதியினர் ஒற்றுமையாய்
முன்னேற்றம் காண்பதில் ஈடுபாடு காட்டி வந்தவர்கள். நேருவின் கோட்பாடுகளை
முழுமையாக நம்பிய காமராஜர், அவைதாம் நாட்டை முன்னேற்றும் என்று
கண்மூடித்தனமாக ஐந்தாண்டுத் திட்டங்களே தீர்வு என இருந்துவிட்டார். ஆனால்
மாநிலம் முழுவதும் தொழில் பேட்டைகள் உருவாகவும் கிராமப்புற இளைஞர்கள்
பலவாறான தொழில் கற்று முன்னேற இன்டஸ்ட்ரியல் ட்ரயினிங் இன்ஸ்டிட்டியூட்களை
மாவட்டந் தோறும் தொடங்கச் செய்து வறிய நிலையில் உள்ள பிற்பட்ட
வகுப்பாருக்கு உதவித் தொகையுடன் அங்கு பயில ஏற்பாடு செய்யவும் காரணமாக
இருந்தார். ஆர். வெங்கட் ராமனை சுயமாகச் செயல்பட வைத்து இந்தப் பணியை
நன்கு நிறைவேற்றினார். பல கிராமப்புற இளைஞர்கள் ஃபிட்டர்களாக வும்
டர்னர்களாகவும் வெல்டர்களாகவும் வேலை வாய்ப்பு பெற முடிந்தது. காமராஜரின்
தேசிய உணர்வும் உறுதியானது. பாரத தேசத்தின் எந்தப் பகுதி தொழில் வளம்
பெற்றாலும் அது தேசம் முழுமைக்குமே பயன் தரும் என நம்பியவர். ராஜாஜியுடன்
அவருக்கு அரசியல் போட்டி இருந்த போதிலும் அவ்ர் மீது மிகுந்த மரியாதை
வைத்திருந்தவர். அவருக்கு பிராமண துவேஷம் இருந்ததில்லை. அவருக்கு மிகவும்
நம்பிக்கை யானவர்களாகப் பல பிராமணர்களே இருந்தனர். டி.டி.கே., ஆர்.வி.,
மவுண்ட் ஃபார்மசி பாலு, அம்பி என்கிற ஜகந்நாதன் எனப் பலர் என் நினைவில்
நிழலாடுகிறார்கள். 1971-ல் தி.மு.க. வை முறியடிப்பதற்காக ராஜாஜியுடன்
கூட்டு வைக்கவும் பின் கோவை-புதுவை தேர்தல்களின் போது இந்திரா
காங்கிரசுடன் கூட்டு வைக்கவும் தயங்காத அளவுக்கு சுய கவுரவத்தைவிட தேச
நலனுக்கு முக்கியத்துவம் அளித்தவர். உடல் நிலை எவ்வளவு மோசமாக இருப்பினும்
அரசு பொது மருத்துவ மனையில்தான் சிகிச்சை மேற்கொள்வார். அன்றும் சில
தனியார் மருத்துவ மனைகள் இருக்கவே செய்தன. இந்தப் பண்பு அண்ணாவிடமும்
இருந்தது. அவர் மிகவும் பிடிவாதமாக அரசு பொது மருத்துவ மனைக்குத்தான்
போய்க்கொண்டிருந்தார். வேலூர் அமெரிக்கன் மருத்துவ மனையில் சேர
வற்புறுத்தியபோது அது நமது அரசு டாக்டர்கள் மீது நம்பிக்கையில்லை என்பது
போலாகும் என்றார். இது அந்தக் காலத்து ராஜாஜி உள்ளிட அரசியல் தலைவர்கள்
கடைப்பிடித்த ஒழுக்கம். ஆகவே கக்கன் அவ்வாறு சிகிச்சைக்கு மதுரை அரசு
மருத்துவ மனையில் சேர்ந்ததில் வியப்பில்லை. அங்கு அவரை சரியாக கவனிக்காமல்
இருக்கக் காரணம் அவரை யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. நான் முன்னாள்
அமைச்சர் என்று சொல்லி அவர் விசேஷ கவனத்தை எதிர்பார்க்கவும் இல்லை. தனக்கு
உரிய கவனம் தரப்படவில்லை என எவர் மீதும் குறை கூறவும் இல்லை. முதல்வராக
இருந்த எம் ஜி ஆர் தான் அதிர்ச்சியடைந்து ஏக ரகளை செய்து பின்னர் அவருக்கு
உரிய கவனிப்பு கிடைக்கச் செய்தார். காமராஜரும் மேலும் சில ஆண்டுகள்
வாழ்ந்திருப்பின் அவ்வாறே அரசுப் பொது மருத்துவ மனைக்குத்தான் போய்
அவதிப்பட்டிருப்பார்! அரசாங்க மருத்துவமனைகளை நாமே புறக்கணித்தால்
ஜ்னங்கள் அந்த மருத்துவ மனைகளைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுதான்
காமராஜரும் அண்ணாவும் சொல்வார்கள்.
தேர்தல்களில் காமராஜர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக இருந்த
தொகுதிகள்களில்தான் அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற
முடிந்தது என்கிற முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. அவரது ஜாதியினரில்
பலர் இயல்பாகவே காங்கிரஸ் அபிமானிகளாக இருந்தனர். மேலும் காமராஜர்
முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற் காக வட ஆர்க்காடு மாவட்டம்
குடியாத்தம் தொகுதியில்தான் போட்டியிட்டு பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி
கோதண்ட ராமனை வென்றார். தமது சுய ஜாதியினர் கூடுதலாக உள்ள தொகுதியைத்
தேடிப் போகவில்லை. ஆனால் ஜாதி, பண வசதி பார்த்து அவர் காங்கிரசில்
வேட்பாளர்களை நிறுத்தி வந்தது என்னவோ உண்மைதான்.
காமராஜர் காலத்தில் சத்திய மூர்த்தி
பவனில் அலுவலகச் செயலாளராக இருந்தவர் வெங்கட்ராமன் என்ற பிராமணர் என்பதைச்
சொல்ல மறந்தேன். காமராஜருக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை. காமராஜர் சில
சமயங்களில் என் மீது எரிந்து விழுவார். காரணம் அப்போது ப சிதம்பரம், அனந்த
நாயகி, ஏ கே சண்முக சுந்தரம், ஆகியோர் நடத்திய அன்னை நாடு நாளிதழில்
செய்தி ஆசிரியனாக இருந்தேன். காமராஜருக்குதான் நம்மைக் கண்டால் ஆகவில்லையே
என்று அவரிடம் போகாமல் இருந்து விடுவேன். எங்கே அவனைக் காணோம், வரச்
சொல்லு என்று வெங்கட்ராமனைத்தான் அனுப்புவார். அவருக்கு குறுக்கு வெட்டில்
நாட்டு நடப்பு தெரிய வேண்டுமே! வெங்கட்ராமனும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்
சைக்கிளில் வந்து நம்ம பெரியவர்தானே கோபித்துக் கொள்கிறார் அதெல்லாம்
அந்தந்த நேரத்தோடு போய்விடுவதுதானே, வா போகலாம் என்று வண்டியின் பின்னால்
வைத்து அழைத்துப் போவார்! போய் நின்றால் அப்போதும் கோபமான பேச்சோடுதான்
வரவேற்பு கிடைக்கும்!
ஸ்ரீ பரமசிவம் தவறான அனுமானங்களின்
அடிப்படையில் கருத்துகளை வெளியிடுகிறார் என்கிற முடிவுக்கு வர
வேண்டியுள்ளது. அவர் 17,18, 19 ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டு சமூக, அரசியல்
நிலைகளைப் படித்து அறிய வேண்டும். பிராமணர் அல்லாதார் வகுப்புகளில்
ஏராளமான சான்றோர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர்
என்பதோடு அப்போதைய சமஸ்தானங்கள், ஜமீன்கள், பின்னர் கிழக்கிந்திய
ஆங்கிலேய, ஃப்ரெஞ்சு கம்பெனி அலுவலகங்கள், அதன்பின் பிரிட்டிஷ் ராஜாங்க
நேரடி நிர்வாக அலுவலகங்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளனர். சென்னை
ராஜதானியை ஜஸ்டிஸ் கட்சிதான் தொடக்கத்தில் ஆண்டு வந்தது. ஈ.வே.ரா.
அவர்களின் கவனம் பிராமணர் அல்லாத மேல் ஜாதியினருக்குக் கூடுதல் வேலை
வாய்ப்புக் கிட்டச் செய்வதில்தான் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சியை அந்தக்
காலத்தில் முதலியார் கட்சி என்றுதான் சொல்வார்கள்! ஆனால் முதலியார்கள்
அன்றைய ஆட்சியில் நல்ல செல்வாக்கோடுதான் இருந்தார்கள்! பிராமணர் அல்லாத
வகுப்பினரில் பெரும்பான்மையினர் கை கட்டிச் சேவகம் செய்வதைவிட சுயமாக
தொழில் செய்து கவுரவமாக வாழ விரும்பியதால்தான் அவர்கள் அதிக அளவில் அரசுப்
பணிகளில் இருக்கவில்லை. தரம்பால் என்ற சமூகவியல் அறிஞர் தமிழ் நாட்டு
நிலவரம் குறித்து எழுதியுள்ள ஆய்வு நூல்கள் இணையத்தில் இலவசமாகவே
கிடைக்கின்றன. Dharampal என்று கூகிளில் தேடினாலே கிடைத்து விடும்! இவர்
காந்திஜியின் வார்தா ஆசிரமத்தில் வாழ்ந்தவர். கடந்த நூற்றாண்டுகளில்
இருந்த நமது கல்வி முறை குறித்தும் இவர் ஆய்வு நூல் எழுதியுள்ளார்.
Beautiful Tree by Dharampal என்று தேடினால் கிடைக்கும். பார்ப்பனியம்
என்று ஸ்ரீ பரமசிவம் எதைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்தால் நல்லது.
ஈ.வே.ரா.வின் மாபெரும் சாதனை ஹிந்து சமுதாயத்தை பிரமணர்-பிராமணர்
அல்லாதார் என இரு பிரிவுகளாக நிரந்தரமாகப் பிளவு படுத்தியதுதான்! இந்தப்
பார்த்தீனியம் இன்றுவரை உயிர்த்திருப்பதால்தான் ஸ்ரீ பரமசிவம் போன்ற
விவரம் அறிந்தவர்கள் மத்தியில்கூட அம்மதிரியான ஒரு மாச்சரியம்
இருந்துகொண்டிருக்கிறது! ஹிந்துக்கள் இவ்வாறு பிளவு பட்டிருப்பது
பலருக்குக் கொண்டாட்டம்! இதனால் ஹிந்து மதம் என்பதாக எதுவும் இல்லை,
ஜாதிகள்தான் உண்டு என்று பலர் வாதிடவும் ஏதுவாகிறது!
காமராஜர் லோக் சபாவுக்கு வரவேண்டும்
என்று அப்போதைய பிரதமர் இந்திராவும் வற்புறுத்தினார். அவரைத் தமது
அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமும் இந்திராவுக்கு
இருந்தது. இதை ஆஃப்த ரெகார்டாக என்னிடமும் இன்னும் இரு நம்பிக்கையான
பத்திரிகையாளர்களிடமும் காமராஜர் சொல்ல, அதை அப்போது நான் வேலைபார்த்த
செய்தி நிறுவனத் தலைவரிடம் சொல்லப் போக அவர் நான் கூடாது என்று சொல்லியும்
ஸ்கூப்பாக வெளியிட்டுவிட, மறுநாள் பத்திரிகைகள் தமது மந்திரிசபை யில்
காமராஜரை சேர்க்க இந்திரா விருப்பம் என்று ஃப்ளாஷ் செய்துவிட்டன. இதனால்
என் மீது காமராஜருக்கு அடக்க மாட்டாத ஆத்திரம் வந்துவிட்டது. அந்தம்மா
மந்திரிசபையிலே சேர எனக்கு ஆசை அதனால இப்படி நானே ஒரு சேதி வரும்படியா
பண்ணியிருக்கேன்னுதான் பேச்சு வரும்னு உனக்குத் தோணவேயில்லயா? கடைசியிலே
பத்திரிகைக்காரன் புத்தியைக் காமிச்சிட்டியே என்று கடுமையாகப் பேசினார்.
அந்தச் செய்தி வந்தது என் தவறில்லை, நான் பலவாறு சொல்லியும் நிர்வாக
இயக்குனர் ஆர்வக் கோளாறால் அவ்வாறு செய்தி வெளியிட்டு விட்டார் என்று
மன்றாடியும் நா உங்கிட்டதானே சொன்னேன், அதை ஏன் அந்தக் கொம்பன்
கிட்டப்போய் சொன்னே, இனிமே நீ இங்க வரக் கூடாது என்று கண்டிப்பாகக்
கூறிவிட்டார். ஆறுமாத காலம் திருமலைப் பிள்ளை சாலையில் நான் தலை காட்டவே
இல்லை! அதன் பின் அவராகவே சமாதானம் அடைந்து மவுண்ட் ஃபார்மசி பாலுவை
அனுப்பி என்னை வருமாறு அழைத்தார்! இச்சமபவம் குறித்து நான் அக்
காலகட்டத்தில் கணையாழியில் ஒரு கட்டுரை எழுதினேன்!
என் அன்பார்ந்த ஸ்ரீ கோவிந்த கோச்சா,
குடியாத்தத்தில் காமராஜர் போட்டியிட்டபோது தி.மு.க. தேர்தலில்
போட்டியிடும் எண்ணத்திலேயே இல்லை. தன் கொள்கையை ஆதரிப்போருக்கு ஆதரவு என்ற
நிலைப்பாட்டில் அது இருந்து வந்தது. காமராஜருக்கு தி.மு.க.வின் ஆதரவும்
இல்லை, எதிர்ப்பும் இல்லை என்று அண்ணா சொன்னார்.
கவுண்டமணி என்பது யார்? எனது அறியாமையை ஒப்புக்கொள்கிறேன்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர் மிகவும் உயர்ந்த பதவிக்கு வரும்போது
உளவியல் ரீதியாகவே அந்த ஜாதியினருக்கு ஒரு தெம்பு வருவதும் அதிகாரிகள்
அவர்களுக்கு விசேஷ கவுரவம் அளிப்பதும் வழக்கம். காமராஜர் இதனால் எம்
பேரைச் சொல்லிக்கிட்டு எவனும் சலுகை எதிர் பார்த்து வந்தா இணங்கக் கூடாது
என்று உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தார். ராஜாஜியும் அவ்வாறு
கண்டிப்பாக இருந்தவர்தான். பக்தவத்சலமும்கூட. நான் நீண்ட காலம் தமிழக அரசு
தலைமைச் செயலக செய்தி சேகரிப்பாளனாக இருந்தவன். குறையில்லாத மனிதர் இல்லை.
காமராஜர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இங்கு பேசப்படும் விவகாரங்களில்
காமராஜரிடம் குறைகாண இடமில்லை என்றே கருதுகிறேன். முத்துராம லிங்கத் தேவர்
விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட முறை தவறுதான். ஆனால் இது தனியாகப் பேசப்பட
வேண்டிய விஷயம்.
நண்பர்கள் கூடிப் பேசுகையில் அடிக்கடி
அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா என்று கவுண்ட மணி சொல்வதாக அவர்கள் சொல்லிச்
சிரிப்பூட்டுவார்கள். அது ஏதோ முல்லா கதாபாத்திரம்போல என்றுதான் நினைத்து
நானும் இரண்டொருமுறை அவ்வாறு எழுதிக்கூட இருப்பதாக ஞாபகம். ஆனால் ஸ்ரீ
கோச்சா சொல்வதைப் பார்த்தால் நிஜமாகவே அப்படி ஒருவர் இருப்பதாகத்
தெரிகிறது. யார் அவர், ஜாதியையே பெயராகவும் வைத்துக்கொண்டு?
எனக்குத் தெரிந்து ஜாதிப் பெயரையே தனது பெயராக யாரும் வைத்திருப்பதாகத்
தெரியவில்லை.
1953-54 ல் வட ஆர்க்காடு மாவட்டம்
குடியாத்தத்தில் நாடார் பெருமக்களின் எண்ணிக்கை வெற்றி – தோல்வியை
நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கவில்லை. வன்னியர்களூம் தாழ்த்தப்பட்டோரும்
பெருவாரியாக உள்ள தொகுதியாக இருந்தது. மேலும் அச்சமயம் தி.மு.க. ஒரு
பெரும் அரசியல் சக்தியாக உருவாகவில்லை.
அன்று அரசியல் களத்தில் பலம் பொருந்திய சக்தியாக இருந்தது பிளவு படாத
கம்யூனிஸ்ட் கட்சிதான். ராஜாஜி முதல்வராக சட்டசபையில் கம்யூனிஸ்ட் கட்சி
எனது முதல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த காலகட்டம் அது.
ஆரிய வைசிய, வன்னிய குல க்ஷத்திரிய
என்றெல்லாம் வழக்கில் உள்ளது. ராஜபாளையம் ராஜுக்கள் தம்மை க்ஷத்திரியர்
என்றே சொல்லிக் கொள்வது வழக்கம்.
//அவர்கள் வேதம் ஓதியவர்கள்,
ஓதுவித்தவர்கள். நாடாண்ட குலத்தினர்.–> ஏதாவது வரலாற்றுச் சான்று
இருக்கிறதா…? – ஸ்ரீ கோவிந்த கோச்சா//
இருக்கின்றன, என் அன்பார்ந்த ஸ்ரீ கோச்சா. கல்வெட்டுகள், பட்டயங்கள்,
ஆவணங்களும் உள்ளன. எனக்கு நேரமில்லை. இதைவிட முக்கியமான வேலைகளைச் செய்து
கொண்டிருக்கிறேன். இல்லையேல் இது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுத
இயலும். எத்தனை தூண்டில் போட்டும் கிறிஸ்தவராக மதம் மாறாது உறுதியுடன்
ஹிந்துக்களாக நீடிக்கும் கொங்குநாட்டு நாடார் பெருமக்கள் பற்றிய
தகவல்களூக்காகக் காத்திருக்கிறேன். கிடைத்ததும் அதுபற்றி எழுதுவேன்.
அப்போது வேண்டுமானால் நீங்கள் கேட்கும் சான்றுகளையும் சேர்த்துத்
தரப்பார்க்கிறேன்.
-உங்கள் அன்பு மறவாத மலர்மன்னன்
பூவை பூ என்று சொல்லலாம், புட்பம்
என்று சொல்லலாம் ஐயா சொல்றாகளே அதுபோலவும் சொல்லலாம்!
தெரிகிறவர்களுக்குத்தான் தெரியும் கற்பூர வாசனை! ஸ்ரீ யின் மகிமையும்
அவ்வாறே!
அறிவாளர் அவையில் மூடரும் அறிவாளியாக ஏற்கப்படுவர். அவர்கள் மவுனமாக
இருக்கும் வரையில்! அவசரக் குடுக்கையாக வாயைத் திறந்தால் அவமானப்பட
வேண்டியதுதான்.
அரசியலில் அண்ணாவின் சாதனை
குழப்பவாதிகளான கம்யூனிஸ்டுகளை ஓரம்கட்டித் தலையெடுக்கவிடாமல்
செய்ததுதான். ராஜாஜிக்கு அண்ணாமேல் மிகுந்த பாசம் ஏற்பட்டதற்கு அது ஒரு
காரணம். இன்றுவரை தமிழ் நாட்டில் தொகுதி உடன்பாடு என்கிற ஏற்பாடு
இருந்தால்தான் சில பாக்கெட்டுகளிலாவது ஜயிக்க முடியும் என்கிற நிலை இரண்டு
கம்யூனிஸ்டுகளுக்கும்.
கன்னடத்து ஈவேரா காமராஜரை பச்சைத்
தமிழன் என்று அழைத்து ஆதரித்து வந்த்தால் ஈவேரா என்கிற கறை காமராஜர்
மீதும் படிந்திருக்கும் எனப் பலர் கருதுவதால் காமராஜருக்கு பிராமண துவேஷம்
இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் ஈவேராவின்
வற்புறுத்தல் காரணமாக அரசில் பல பிராமணர் அல்லாதவர்களுக்கு
சீனியாரிட்டியைப் பொருட்படுத்தாமல் பதவி உயர்வும் நியமனங்களும் அளிக்க
வேண்டிய கட்டாயம் காமராஜருக்கு ஏற்பட்டதை அறிவேன். பல பிராமண
அதிகாரிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது. அண்ணா முதல்வரானபோது அவர்களில்
பலருக்கு நியாயம் கிடைத்தது. அனவருக்கும் நியாயம் கிடைப்பதற்குள் அண்ணா
மறைந்துவிட்டார்கள். அண்ணா மறைந்ததால் அவ்வாறு நியயம் கிட்டாமல்
போனவர்களில் ஒருவர் வைகுந்த் ஐ.பி.எஸ். இன்னும் பல்ர் உண்டு. பெயர்கள்
நினைவுக்கு வரவில்லை. நேமையும் கண்டிப்பும் மிக்க டி என் சேஷனும் அந்தப்
பட்டியலில் இருந்ததாக நினைவு.
ராஜபாளையத்து ராஜுக்கள் நானூறு – ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்து, தமிழகத்தையே தமது தாயகமாகக் கொண்டு,
தமிழ்ச் சமூகதைக் காத்து தமிழகத்தின் கல்வி, தொழில் வளர்ச்சியில் கணிசமான
பங்களித்திருப்பவர்கள். அவர்களில் சிறந்த தமிழ்ப் புலவர்களும் தமிழ் மொழி
வல்லுனர்களூம் உண்டு. அவர்களை தெலுங்கர் என்று அடையாளம் காட்டி
அந்நியப்படுத்துவது கடைந்தெடுத்த துரோகமாகும். ராஜபாளையத்து ராஜு எவர்
காதிலாவது விழுந்தால் அந்நியப்படுத்தியவன் நாவை அறுத்துவிடுவார்கள்.
இணையத்தில்தானே எழுதுகிறோம் அடையாளத்தைக் காட்டாமல் என்று மனம் போன
போக்கில் எதையாவது எழுதினால் ஒரு சமயம் போல இருக்காது. அரை குறை அறிவிலும்
குறைவாக வைத்துக்கொண்டு சபை நடுவே வந்து குதித்துக் கூத்தாடுவதைக்
கோமாளித்தனம் என்று பிறர் வேண்டுமானால் வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு
காமெடி ரிலீஃபாக!
|
|
|
| | | |
|