Home / Venmurasu

Venmurasu


மகாபாரத அரசியல் பின்னணி

வெண்முரசு விவாதங்கள் : ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்


ஜெ சார்

நீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா? நாவலை மட்டும் வாசித்தால்போதாதா? விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா? ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது,

எம். ஆர்.ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

நான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அவநம்பிக்கை என்பது நம் சூழலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு விஷயம் என்பதனால் விளக்கமாக சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

இலக்கியப்படைப்புகளை நாம் வாசிப்பதுதான் முதன்மையானது. ஆனால் சாதாரணமாக வாசிக்கும் கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. கதைகளை நம் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கிறோம். அறிவதற்கு முயல்வதில்லை. அவை நாம் ரசிப்பதற்காக எழுதப்படுகின்றன

ஆனால் இலக்கியப்படைப்புகள் வாசகனும் பங்கேற்க அழைக்கின்றன. வாசகன் எழுத்தாளன் அளவுக்கே அந்த இலக்கியத்தை தானும் கற்பனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது . வெண்முரசு நாவல்வரிசையில் சொல்லப்பட்டவை மிகக்குறைவு, வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விடப்பட்டவையே அதிகம். ஆகவே வாசகன் எந்த அளவுக்கு விரிகிறானோ அந்த அளவுக்கு அந்நாவல்கள் விரிவடையும்

அதற்குரிய வழிகளில் ஒன்றுதான் விமர்சனம். நாம் ஒருகோணத்தில் வாசித்திருப்போம். இன்னொரு வாசிப்பை விமர்சனம் மூலம் அறியும்போது நம்முடைய வாசிப்பு விரிவடைகிறது. பல கோணங்களில் பலர் முன்வைக்கும் வாசிப்புகளை நாம் அடையும்போது நமக்கு பல கண்கள் வந்ததுபோல. நாம் தவறவிட்டவை பல தெரியவருகின்றன. நாம் பார்த்தபார்வைக்கு மாறான பார்வைகள்கூட கிடைக்கின்றன

உதாரணமாக மரபின்மைந்தன் முத்தையா முதற்கனலுக்கு அவரது இணையதளத்தில் எழுதிவரும் விமர்சனத் தொடர். முதற்கனல் பற்றி அவர் சொல்லும்போது ஒரு பார்வையை முன்வைக்கிறார். அதாவது கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் சரி, கதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் சரி ஒரு பெரிய விதிவிளையாட்டுத்தான் தெரிகிறது. ஆனால் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் அந்த மனிதர்களின் ஆசாபாசங்களே காரணமாக இருப்பதும் தெரிகிறது. இதுதான் மகாபாரதத்தின் இயல்பு. அந்த இயல்பு முதற்கனலில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்

இந்தப்பார்வை நீங்கள் வாசிக்காத ஒரு கோணத்தை திறந்து தந்துவிடும். புதிய பல விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதுதான் விமர்சனம் நமக்கு அளிப்பது. விமர்சனங்கள் நம்மை திசைதிருப்புவதில்லை. நம் வாசிப்பைவிட குறைவான விமர்சனங்களை நாம் பொருட்படுத்தமாட்டோம். நம்மைவிட மேலான வாசிப்பை முன்வைக்கும் விமர்சனங்கள் நம்மை விரிவுபடுத்தும்

வெண்முரசின் உள்ளே மறைந்திருக்கும் நுட்பங்கள் பல. புராணங்கள், படிமங்கள் போன்றவை ஒரு பக்கம் [உதாரணம் ஸ்தூனகர்ணன் என்ற கந்தர்வனின் கதை]. வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் இன்னொரு பக்கம் [உதாரணம் குந்திக்கும் அவள் சிற்றன்னைக்குமான உறவு] மொழியில் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கும் வரிகள் இன்னொருபக்கம். உதாரணம் ‘மூத்தோரும் முனிந்தோரும் மூவைதிகரும் தீச்சொல்லிட உரிமைபெற்றவர்கள்’ போன்றவரிகள். கடைசியாக மகாபாரதத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள்

அவற்றை பலர் எழுதி விவாதித்தே வாசகன் உள்வாங்கிக்கொள்ளமுடியும். வெறுமே வாசித்துப்போனால் வெண்முரசை அடையமுடியாது

ஜெ


http://www.jeyamohan.in/?p=62135 Go through this link. JeMo answers to the solvanam article by suresh!  http://solvanam.com/?p=35582

Full archives at: http://bit.ly/venmurasu

வெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது | கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். bit.ly/venmurasunames 

வெண்முரசு விமர்சனங்கள் http://www.jeyamohan.in/72693
வெண்முரசு- ஒலிநூல் http://www.jeyamohan.in/71280
வெண்முரசு உதவிக்கு…. http://www.jeyamohan.in/70325




     RSS of this page