| | | |
Home /
UdhayakumarAV
Uploading ....
விகடன் மேடை : சுப.உதயகுமாரன் - ஆனந்த விகடன் - 2013-05-01
கே.ரவி,
காஞ்சிபுரம்.
''இடிந்தகரை மக்களின் போராட்டம் எந்த
அளவுக்குப் பலன் அளித்திருக்கிறது?''
''கூடங்குளம் அணுமின் நிலையத்தில்
தரமற்ற உபகரணங்கள், உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை இந்திய அணு
சக்திக் கட்டுப்பாட்டு வாரியமே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வீரியமாக
நடந்துவருகிறது, இடிந்தகரை மக்களின் போராட்டம். கூடங்குளம் திட்டம் ஓர்
இறந்து பிறந்த குழந்தை என்பதை ஒட்டுமொத்தத் தமிழகமே, இந்தியாவே
புரிந்துகொள்ளும்படி செய்திருப்பதே இந்தப் போராட்டத்தின் வெற்றி. அணு
சக்தி, அணு மின் நிலையம், அணுக் கழிவு, கதிர்வீச்சு பற்றிஎல்லாம்
அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இருந்த பெரும்பாலான தமிழ் மக்கள்,
இந்தியர் கள் இன்று அவை தொடர்பாகப் பெரும் விழிப்பு உணர்வு அடையும்
அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.''
இராம.வெங்கடேசன், கீழ்க்கொடுங்காலூர்.
'' 'ஜெயலலிதாவை நாங்கள் நம்பவில்லை’
என்று சொல்லும் துணிச்சலை எங்கிருந்து பெற்றீர்கள்?''
''உண்மையைத்தானே சொன்னேன். மக்களை
நம்பித்தான் தலைவர்கள் இருக்கிறார்களே தவிர, தலைவர்களை நம்பி மக்கள்
இல்லை... இருக்கவும் கூடாது!
போராடத் துவங்கும்போது நாங்கள்
யாரையும் நம்பிக் களம் இறங்கவில்லை. 2011 செப்டம்பர் மாதம் எங்கள்
போராட்டம் துவங்கிய மூன்றாவது நாள், 'கூடங்குளம் அணு மின் நிலையம்
பாதுகாப்பானதுதான். அது செயல்பட அனைவரும் ஆதரவு அளியுங்கள்!’ என்று
முதல்வர் ஓர் அறிக்கை விடுத்தார். நாங்கள் தொடர்ந்து போராடினோம். பின்னர்,
எங்கள் நியாயத்தை உணர்ந்து, உறுதியை மதித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்
முதல்வர் ஜெயலலிதா. அவர் எங்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்தபோது,
வீதியில் இறங்கிப் போராடினோம். 2011 அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்
நடந்தபோது, 'உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில்
இடைத்தேர்தல் முடிந்ததும் ஏதேதோ காரணங்களால் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
போராட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள
வேண்டிய நிலையில் இருந்த நாங்களும், எங்கள் உத்திகளை மாற்றி
அமைத்துக்கொண்டோம். களப் போராட்டத்தைக் கடல் போராட்டமாக்கினோம்; அறப்
போராட்டத்தை அறிவுப் போராட்டமாக்கினோம்; அரசின் கொம்பைப் பிடித்து
மோதினால், அது பெரும் வம்பாகிப்போகும் என்று உணர்ந்து காட்டு யானையின்
காது புகுந்த எறும்பாக இயங்கினோம். மின்வெட்டால் அடித்த முதல்வர், நாங்கள்
மாய வலை விரிப்பதாகக் குற்றம் சாட்டினார். 600 நாட்களாகப் போராடி
கூடங்குளம் அணு உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்திஇருப்பதை, மிகப்
பெரிய ஊழல் நடந்திருப்பதை, அது ஆபத்தான நிலையில் இருப்பதை, அணு சக்தித்
துறையின் தகிடுதத்தங்களை அகில இந்தியாவின் கவனத்துக்குக்
கொண்டுவந்துஇருக்கிறோம்.
முதல்வர் நிச்சயமாக இவற்றை அவதானித்
துக்கொண்டுதான் இருப்பார். தமிழக மக்கள் எதிர்கொண்டு நிற்கும் ஆபத்துகளை
உணரும் போது, மீண்டும் தனது நிலையை மாற்றுவார். மக்களை வெற்றியடையவிடும்
தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், நாயகிகள் ஆவதும்; மக்களைத் தோற்கடிக்க
முயலும் தலைவர்கள் கேவலப்பட்டுக் காணாமல்போவதும், 'தலைவர்’ தகுதி
நிரம்பப்பெற்றவர்களுக்கு நிச்சயம் தெரியும்!''
எஸ்.கதிர்வேல்,
திண்டிவனம்.
''உங்களைப் பற்றித்தான் அதிகம் வெளியே
தெரிகிறது. உங்களுடன் இருக்கும் புஷ்பராயன், ஜேசுராஜ், முகிலன்
ஆகியவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?''
''தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த
புஷ்பராயன் 'மக்கள் பணியே மகேசன் பணி’ என்று செயல்படுபவர். கடலோர மக்கள்
பிரச்னைகளில் கருத்தூன்றிச் செயல்படுபவர். விசாலமான பார்வையும் விவேகமும்
கொண்டவர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மைபா.ஜேசுராஜ் கத்தோலிக்கத்
திருச்சபையில் அருட்தந்தையாக இருப்பவர். தமிழ் ஆர்வலர். தமிழக மக்களுக்காக
மாநிலம் முழுக்கச் சுற்றிச் சுழன்று களமாடுபவர். இரா.சா.முகிலன், கொங்கு
நாட்டு நண்பர். அந்தப் பகுதி மக்களின், விவசாயிகளின் பிரச்னைகளில் நீண்ட
காலமாகப் பங்கேற்றுப் போராடிவருபவர். இடிந்தகரை பங்குத் தந்தை ஜெயகுமார்
போராட்டம் தொடங்குவதற்கு முந்தின நாள் அறிமுகமானவர். ஆனால், ராயனோடு பல
ஆண்டு கால நட்பு இருந்தது; பல நிகழ்வுகளில் அவரோடு பங்கேற்றிருக்கிறேன்.
கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தில் நான் பங்கேற்கத் தொடங்கிய
காலகட்டத்தில் இருந்தே மைபா-வும் நானும் நல்ல நண்பர்கள். சாதி, மதம், ஊர்,
தொழில், அரசியல் கடந்த சகோதரர்கள் நாங்கள். பாரதியார் எங்களைப்
பார்த்திருந்தால்,
'மேவி அனைவரும் ஒன்றாய்
நல்ல போர் நடத்துதல் கண்டேன்’
என்று பாடியிருப்பார்!''
வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.
''இடிந்தகரைப் போராட்டம் உளவியல்
ரீதியாக எந்த அளவு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது?''
''போராடுகிற எங்களுக்கு எந்தச்
சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, எங்களைச் சுடப்பட்ட சுண்ணாம்பாக,
வேகவைக்கப்பட்ட செங்கல்லாக, புடம் போடப்பட்ட தங்கமாக மாற்றியிருக்கிறது.
சாதி, மதம் கடந்து ஒன்றாக நின்று... அற வழியில் போராடினால், எத்தனை பெரிய
அரசையும் கேள்வி கேட்க முடியும், நம் கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்ய
முடியும் என்ற நம்பிக்கையை, அரசியல் தைரியத்தை தமிழர்களின் மனங்களில்
இந்தப் போராட்டம் பதியவைத்திருக்கிறது!''
சு.அருளாளன், ஆரணி.
''மத்திய அமைச்சர் நாராயணசாமி..?''
''போராடும் எங்கள் மக்களை பிரதமர்
முதல் பியூன் வரை அனைவரும் புறக்கணித்து வரும் நிலையில், எங்களை வந்து
சந்தித்த ஒரே அமைச்சர் என்பதால், நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒரு
நடுவண் அமைச்சர் என்ற பொறுப்பு உணர்வோடு, மக்களை மதித்து, உண்மைத்
தகவல்களை மட்டும் சொல்லியிருந் தால், அவர் மீது இன்னும் மரியாதை அதிகமாகி
இருக்கும்!''
என்.மதுமிதா,
பம்மல்-75.
''சினிமா பார்ப்பது உண்டா? பிடித்த
படம்?''
''சினிமா பார்ப்பதில்லை.
சினிமாவால்தான் தமிழக அரசியல், பொதுவாழ்வு, கலாசாரம் சீரழிக்கப்பட்டது,
சீரழிக்கப்படுகிறது என நம்புவதால், ஒரு வெறுப்பு மனதில் ஆழமாகப்
பதிவாகியிருக்கிறது!''
சு.ராமஜெயம், அரக்கோணம்.
''இயற்கை வேளாண்மை மீது உங்களுக்கு
ஆர்வமும் விருப்பமும் மேலிட்டது எப்படி?''
''எனது தாத்தா, பாட்டிகளிடமிருந்து!
வயலில் இலை, தழைகளை எருவாகப் பயன்படுத்தும் விதத்தை, வித்து நெல்
தயாரிக்கும் நேர்த்தியை, வயல் வரப்பில் அமர்ந்து சாப்பிடும் சுகத்தை,
வாய்க்காலில் ஓடும் ஆற்று நீரைக் கையால் கோரிப் பருகும் அற்புதத்தை, பழ
மரங் களைப் பிள்ளைகளாய்ப் போற்றும் அன்பை, அடுத்தவருக்குக் கொடுத்து
மகிழும் பெருந்தன்மையை அவர்கள் நால்வரோடு சேர்ந்து அனுபவிக்கும்
பெரும்பேறு பெற்றவன் நான்!''
ம.பன்னீர், மதுரை.
''எது வந்தாலும் ஒரு கை
பார்த்துவிடுவோமே என்கிற துணிச்சலை எங்கு இருந்து பெற்றீர்கள்?''
''மக்களிடமிருந்து!''
அடுத்த வாரம்..
விகடன்
மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள் - ஆனந்த விகடன் - 2013-05-08
எஸ்.ரகுபதி, குரோம்பேட்டை.
''உங்கள்
அடுத்த நடவடிக்கை அரசியலா?''
''இப்போதே
நாங்கள் அரசியலில்தான் இருக்கிறோம். மக்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார
உரிமைகளை, வருங்காலச் சந்ததிகளைக் காக்கும் அரசியலைவிட மேலான அரசியல்
வேறென்ன இருக்கிறது?''
க.நாராயணன், செய்யாறு.
''ஏதோ
ஒரு நாட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு அனுமதி அளித்
தால், எந்த நாட்டைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?''
''நார்வே.
இயற்கையும், இனிமையும், ஜனநாயகமும், சமூக நீதியும் போற்றப்படும் நாடு.
1987-ம் ஆண்டு நான் அங்கே படித்த போது அப்போதைய பிரதமரின் கணவர் ஆஸ்லோ
பல்கலைக்கழக வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்தார். வெளியுறவுத் துறை
அமைச்சரோடு மெட்ரோ ரயிலில் அரட்டை அடித்தபடியே பயணம் செய்ய முடிந்தது.
அங்கு இருக்கும் ஒரே பிரச்னை என்ன வென்றால், கோடைக் காலத்தில் இருட்டே
வராது. குளிர் காலத்தில் சூரியனே வராது. அதனால் என்ன, அங்குதான் ஈழத்
தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே... அது போதாதா?''
ம.ராஜா, கோயம்புத்தூர்.
''நீங்கள்
வேண்டுமானால் நேரடியாக என்.ஜி.ஓ-க்களுடன் (அரசு சாரா தன்னார்வத் தொண்டு
நிறுவனங்கள்) தொடர்பு வைத் திருக்காமல் இருக்கலாம். ஆனால், கூடங்குளம்
போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் கணிசமானோர் என்.ஜி.ஓ-க்களாக
இருக்கிறார்களே..?''
''எங்கள்
போராட்டத்துக்கு எந்த உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமும் பணமோ,
பொருட்களோ, வேறுவிதமான உதவி களோ செய்யவில்லை. நாங்களும் பெற முயற்
சிக்கவில்லை. போராடும் மீனவ மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள்
தரும் நன்கொடையில்தான் போராட்டம் நடக்கிறது. மக்கள் பணியில்
ஈடுபட்டிருக்கும் பல தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் போராட்டத்துக்கு
ஆதரவாகச் சிந்திப்பதில், அவர்கள் பகுதிகளில் அணுசக்திக்கு எதிராகப்
பரப்புரை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?''
எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம்.
''போராட்டத்தை
வாபஸ் வாங்கவைக்க மறைமுகமான பேரங்கள் எதுவும் வந்தனவா?''
''விரும்பிய
நாட்டுக்குச் சென்று பெரு வாழ்வு வாழ ஆவன செய்வதாக ஒரு நண்பர் மூலம் ஆசை
காட்டப்பட்டது. 'என்ன வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்... நாங்கள்
ஏற்பாடு செய்கிறோம்’ என்று பலர் என்
பெற்றோரிடமும்
மனைவியிடமும் சென்று கேட்டார்கள். தூது வந்தவர்கள் விரும்பாத பதிலைத்
'தூ’வென்று வீட்டாரே சொல்லி அனுப்பிவிட்டதால், நான் தலையிட வேண்டிய நிலை
எழவில்லை!''
இரா.அரி, கண்ணமங்கலம்.
''நீங்கள்
இடிந்தகரை மக்களுக்காகப் போராடுவது நல்ல விஷயம். இதே போல தமிழ கத்தின் பிற
பகுதி மக்களும் மின்வெட்டு, ஊழல், ஆற்று மணல் கொள்ளை என்று பலப்பல
விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இப்படியான
போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறீர்களா?''
''தங்களின்
வாழ்வுரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும், வருங்காலச் சந்ததிகளும்
பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த எங்கள் பகுதி மீனவ மக்களும், மற்றவர்
களும் போராடுகிறார்கள். நானும், நண்பர்களும் அவர்கள் சேவகர்களாகப்
பணியாற்றுகிறோம். எங்கெல்லாம் மேற் கண்ட ஆபத்து எழுகிறதோ, அங்கெல்லாம்
மக்கள் தன்னெழுச்சி யோடு முனைப்பாகப் போராடியே தீர வேண்டும். அப்படியான
தருணங்களில் அவர்களுக்காக ஆதரவுக் குரல்களும் கரங்களும் இயல்பாகவே எழும்!''
கே.கலைவாணி, திருத்தணி.
''அணு
உலை பாதிப்பு உண்டாக்கும் என்பது உண்மைதான்... ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்,
வளர்ச்சி கொடுக்கும் வசதிகளை அனுபவிக்க, ஏதோ ஒரு வகையில் இழப்பு
இருக்கத்தானே செய்யும். இப்போது நீங்களே கடைக்கோடி கிராமத்தில்
அமர்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் செய்துவருகிறீர்கள்.
அந்த இணைய இணைப்பு களுக்காக ஆழ்கடல் கேபிள்களைப் பதிப்பதால் கடல் சூழல்
மாசுபடத்தானே செய்கிறது?''
''கற்காலத்துக்குத்
திரும்பச் செல்ல முடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே,
இழப்புகளை நம்மால் முடிந்த வரை குறைத்து... நீடித்த, நிலைத்த வளர்ச்சியை
அடைய முயற்சிக்கலாமே? 'கடலில் கேபிள் போடுவதா, அணுக்கழிவைக் கொட்டுவதா?’
என்றால், கேபிள் போடுவோம் என்பதுதான் என் கட்சி. வாழ்க்கையின்
விளிம்புநிலையில் நின்று உழலும் மீனவர்கள், விவசாயிகள், தலித்
தொழிலாளர்கள் போன்றோர் இழப்புகளைச் சந்திக்க வேண்டும், டாட்டாக்களும்,
மிட்டல்களும், அம்பானிகளும் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வேண்டும்
என்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை அனுமதிக்கவே
முடியாது. ஏனெனில், சொற்ப ஆயிரங்களில் இருக்கும் பணக்காரர்களுக்காக
கோடிக்கணக்கான மக்கள்தொகையின் நலனை நாம் விட்டுக்கொடுக்க முடியாது!''
இராம.பாலசுப்ரமணியன், கொடுங்காலூர்.
''இந்தியாவில்
பாலிதீன் பயன்பாடு அதிகம், அணைகள் ஏகம், மணல் வளம் சகட்டுமேனிக்குக்
கொள்ளை அடிக்கப்படுகிறது, காற்று மாசுபடுதல் அதீதம், காடுகள்
அழிக்கப்படுகின்றன... திரும்பிய திக்கெல்லாம் இயற்கை வளங்கள்
சூறையாடப்படுகின்றன அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில்,
அதிஅவசரமாக இயற்கையின் எந்த வளத்தைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும்...
ஏன்?''
''நாம்
வாழும் பகுதியின் இயற்கை வளங்கள்பற்றிய முழுத் தகவல்களை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும். நமது பகுதியில் நடக்கும் இயற்கை வாழ்வாதாரச் சிதைப்பை,
சீரழிப்பை, திருட்டை, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த அணி திரள வேண்டும்.
அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் இயற்கை பாதுகாப்புக்
கொள்கைகள்குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். அதிகாரிகளின் இயற்கைப்
பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும். தகவல்
அறியும் உரிமைச் சட்டம், பொதுநல வழக்கு, கருத்தரங்குகள், துண்டுப் பிரசுர
விநியோகம், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் எனப் பல வழிகளில் தொடர்ந்து
உழைக்க வேண்டும். பெண்கள், இளையோர், குழந்தைகள் மத்தியில் பரப்புரை செய்ய
வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமையாகும்!''
எஸ்.ஏழுமலை, திருச்சி-3.
''இடிந்தகரை
பெண்களும் போராட்டக் களத்தில் மிகவும் தீவிரமாக நிற்கிறார்கள்.
அவர்களுக்குள் அந்தத் தீவிரத்தை எப்படி உண்டாக்கினீர்கள்?''
''அவர்கள்தான்
என்னையும், நண்பர்களையும் தீவிரமிக்கவர்களாக மாற்றியிருக்கிறார்கள்!''
வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.
''அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்களுடன்
உங்கள் அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறதா? போராட்டத் திசைகுறித்த தகவல்
தொடர்பு உரையாடல்கள் உங்களிடையே நிகழுமா?''
''இருவரோடும்
மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2003-ம் ஆண்டு முதல் மேதா பட்கர்
அவர்களை நாகர்கோவில் பொதுக்கூட்டம், கூடங்குளம் மாநாடு, இடிந்தகரைப்
போராட்டம் எனப் பல முறை அழைத்து வந்திருக்கிறோம். அமெரிக்காவில்
இருந்தபோதே அருந்ததி எனக்குப் பரிச்சயம். அவரும் எங்கள் போராட்டத்தின்
போக்கைக் கவனித்தபடிதான் இருக்கிறார்!''
அந்தோணிசாமி பாட்ரி,
ஃபேஸ்புக்.
''வேறுபட்ட
சிந்தனைகொண்ட மனிதர்களை, சுயநல எண்ணம் மிகுந்தவர் களை இந்தப்
போராட்டத்தின் பொருட்டு எப்படி உங்களால் ஒருங் கிணைக்க முடிந்தது. அதன்
ரகசியம் என்ன?''
''கோஷ்டி
சண்டைக்கும், வேஷ்டிக் கிழிப்புக்கும் பெயர்போன வேறு யாரிடமோ கேட்க
வேண்டிய கேள்வியை எனக்கு அனுப்பிவிட்டீர்களோ? எங்கள் மீனவர்கள்,
விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும்
ஒருமித்த சிந்தனையுடன் பொதுநல எண்ணம் மிகுந்தவர்களாக, சாதி, மதம், ஊர்,
தொழில், அரசியல் கடந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். இது ஒன்றிணைந்து வந்த தமிழர் கூட்டம்; யாராலும்
ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல!''
சு.அருளாளன், ஆரணி.
''உங்கள்
போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் மனதில் ஒரு எண்ணம்
இருக்குமே... அதைச் சொல்லுங்கள்?''
''உண்மையைச்
சொல்லட்டுமா? கூடங்குளம் அணுமின் நிலையம் நிரந்தரமாக இழுத்து மூடப்படும்.
இது உறுதி!''
விகடன் மேடை - சுப.உதயகுமாரன்
பதில்கள் - ஆனந்த விகடன் - 2013-05-15
வி.ராமன், திருத்தணி.
''அணுசக்தியின் முக்கியத்துவம்பற்றி
நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழிகூட கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க
மறுக்கிறாரே?''
'' 'இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம்தான் இந்தியாவின் மீட்சிக்கு ஒரே வழி’ என்று 2007-ம் ஆண்டு தனது
நாடாளுமன்றக் கன்னிப்பேச்சில் காரசாரமாக ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார்
திருமதி கனிமொழி. 'காலச்சுவடு’ மொழிபெயர்த்து வெளியிட்ட அந்தப் பேச்சுக்கு
நான் எதிர்வினை எழுதினேன். அதன் காரணமாகவும் அந்த இதழின் நூலக சந்தா
அப்போதைய கலைஞர் அரசால் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எரிசக்திக்
கொள்கை, அணுசக்தித் திட்டம்பற்றி எல்லாம் ஆழமான புரிதலும், அரசியல்
தெளிவும், கொள்கை நிலைப்பாடும் உள்ளவர்களுடன் அதைப் பற்றி விவாதிக்கலாம்.
ஆனால், சுயநலவாதிகளான, பிழைப்புவாதிகளான, சந்தர்ப்பவாதிகளான நமது
அரசியல்வாதிகள் பெரும்பாலானோருக்குப் பணம், பதவி, பட்டம் கிடைக்கும்
என்றால் வாய் திறப்பார்கள். எதுவும் கிடைக்காது என்றால், வாய் திறக்க
மறுப்பார்கள்!''
பிடல் சேகுவேரா, ராசிபுரம்.
''நடுநிசியில் வீதியில் நடந்து
வந்ததற்காகவே ஓர் இளைஞனைக் கைதுசெய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால்,
எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச்
சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதன் மர்மம் என்ன?''
''எங்கே சுதந்திரமாக
நடமாடவிட்டிருக்கிறார்கள்? நாங்கள் இடிந்தகரையில் திறந்தவெளிச்
சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். குடும்பக் காரணங்களால்
இங்கிருந்து வெளியே சென்ற எங்கள் போராட்டக் குழு உறுப்பினர் திரு
எம்.டி.கணேசன் மார்ச் 22, 2013 அன்று காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு,
பாளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கானோர் மருத்துவச்
சிகிச்சைக்காகக்கூட ஊருக்கு வெளியே போக முடியாமல் இருக்கிறார்கள்.
மண்ணைக் காக்க, மக்களைக் காக்க...
அறவழியில், வன்முறையின்றி, யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தாமல்
போராடும் 2,27,000 பேர் மீது 350-க்கும் அதிகமான வழக்குகள்
போடப்பட்டிருக்கின்றன. முன்னணியினர் மீது தேசத் துரோக வழக்குகள் 20,
தேசத்தின் மீது போர் தொடுத்த வழக்குகள் 20 என
சுமத்தப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகள் மீதுகூட இவ்வளவு வழக்குகள் கிடையாது.
இத்தனை பெரிய, ஆபத்தான, பயங்கரமான குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல் துறை
தயங்குவது நியாயம்தானே?
உண்மை என்ன தெரியுமா? ஒண்ட வந்த
பிடாரி, ஊர்ப் பிடாரிகளைப் பகைத்துக்கொண்டு நீண்ட நாள் கதையை ஓட்ட
முடியாது என்ற அச்சமே காரணம்!''
மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.
''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற
பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலை
இல்லையா?''
''நிச்சயமாகக் கவலை இருக்கிறது.
எனவேதான் தமிழக முதல்வரின் பல்வேறு மாற்று மின் திட்டங்களை, மத்திய
அரசிடம் அவர் வைத்த கோரிக்கைகளை ஆதரித்து பல்வேறு போராட்டங்கள்
நடத்தினோம். கூட்டப்புளி, பெருமணல், கூடங்குளம், வைராவிக்கிணறு,
இடிந்தகரை, கூத்தங்குழி போன்ற எங்கள் கிராமங்களில் குமிழ் விளக்குகளை
மாற்றிவிட்டு, மின்சாரம் சேமிக்கும் குச்சி விளக்குகளைப் பொருத்தினோம்.
சூரிய சக்தியை எங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்த முயற்சிகள்
எடுக்கிறோம். கூடங்குளம் திட்டத்தைக் காற்றாலைகள், கடல் அலை ஆலைகள், சூரிய
ஒளி ஆலைகள்கொண்ட மாதிரி எரிசக்திப் பூங்காவாக மாற்றக் கோருகிறோம்!''
த.சூரியதாஸ், சிலட்டூர்.
''கூடங்குளம் மக்களின் மனநிலையைத்
தமிழகப் பொதுமக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா?''
''நிச்சயமாக! கூலிக்கு மாரடிக்கிற ஒரு
சிறு கூட்டத்தைத் தவிர, எங்காவது தமிழ் மக்கள் 'கூடங்குளம் அணுமின்
நிலையத்தைத் திற’ என்று போராடுகிறார்களா? இல்லையே! கோவை, ஈரோடு,
திருப்பூர் பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிலதிபர்களும் தொழிலாளர்களும்
ஆரம்பக் கட்டத்தில் 'கூடங்குளம் மின்சாரம் வேண்டும்’ என்று குரல்
கொடுத்தார்கள். எங்கள் போராட்டப் பெண்கள் அவர்களை நேரில் சந்தித்து,
'உங்கள் வாழ்வாதாரத் துக்காகப் போராடும் நீங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை
அழிக்க வேண்டுவது முறையாகுமா?’ என்று ஓர் அறவழிக் கருத்துப்
பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள். அந்த மனிதநேய மேஜிக் அற்புத மாக வேலை
செய்தது. அன்றைய தினம் முதல் அந்தக் கொங்குநாட்டுப் பெருமக்கள் 'மின்சாரம்
வேண்டும்’ என்றுதான் போராடினார்கள்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறை சுமார்
4,000 மெகாவாட். இறந்து பிறந்த குழந்தையான கூடங்குளம் அணுமின் நிலையம்
ஒருவேளை எழுந்து நடக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்... மற்ற அணுமின்
நிலையங்கள்போல 40 முதல் 50 சதவிகிதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
அணுமின் நிலையத்தை ஓட்டுவதற்கு வேண்டிய மின்சாரத்தை எடுத்த பிறகு; கேரளா,
கர்நாடகா, ஆந்திரா, மத்தியத் தொகுப்பு அனைவருக்கும் அவரவர் பங்கைக்
கொடுத்த பிறகு; மின் கடத்தலின்போது ஏற்படும் இழப்பு போக, தமிழகத்துக்கு
300 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே அரிது. நமது மின்சாரப் பிரச்னைக்கு
கூடங்குளம் ஒரு தீர்வே அல்ல. இதெல்லாம் தெரியாத, புரியாத முட்டாள்கள் அல்ல
தமிழர்கள்!''
சதீஷ் குமார், ஃபேஸ்புக்.
''அப்துல் கலாம்..?''
''மனிதநேயத்தோடு சிந்திக்கலாம்!''
வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.
''கார் கொடுத்தால் போய்விடுகிறார்கள்,
கரன்சி கொடுத்தால் போய்விடுகிறார்கள், பதவி கொடுத்தால் போய்விடுகிறார்கள்.
ஆனால், நீங்கள் மட்டும் சொன்ன தையே சொல்லிக்கொண்டு பிடிவாதமாகப்
போராடிவருகிறீர்களே... இதனால் உங்களுக்கு என்னதான் லாபம்?''
''என் குழந்தைகள், நம் குழந்தைகள்
நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வத்தோடும் வாழ்வார்களே... அதுதான் லாபம்!
சாகும்போது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நம்மால் முடிந்ததை உண்மையாகச்
செய்தோம் என்ற பேரானந்தத்தைப் பெறலாமே... அந்தத் திருப்தி தரும்
நிறைவுதான் லாபம்!''
நாசரேத் விஜய், கோவை.
''நீங்கள் ஒரு ஆசிரியர். நீங்கள்
சொல்லுங்கள்... நம்முடைய கல்விமுறை சரிதானா? ஏன் தாய்மொழி வழிக் கல்வியை
மறுக்கிறார்கள்? என்ன மாற்றம் நிகழ வேண்டும் நம் கல்வித் துறையில்?''
''சாராய வியாபாரம் செய்யும்
கல்வித்தந்தை, வழிப்பறி நடத்தும் கல்வி நிறுவனம், வட்டிக்குக் கடன்
கொடுக்கும் ஆசிரியர்கள்... இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கல்விமுறை
எப்படி வெற்றி பெறும்? முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது. தாய்மொழி
வழிக் கல்வி மட்டுமே அதைத் தூக்கி நிறுத்திவிடும் என்று நினைப்பது தவறு.
குறைந்தது ஐந்து மொழிகள் மீது பற்றையும், புத்தகங்கள் மீது காதலையும்,
அறிவின் மீது தேடலையும் உருவாக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வியாளர்களே
இன்றைய உடனடித் தேவை!''
மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.
''கூடங்குளம் அணு உலை விஷயத்தில்
இலங்கையும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அப்படி எனில், சந்தர்ப்பம்
அமைந்தால் அந்த நாட்டு அரசோடு இணைந்து போராடுவீர்களா?''
''தமிழர்களை இனப்படுகொலை
செய்த, இஸ்லாமியர்களைக் கொடுமைப்படுத்துகிற இலங்கை அரசோடு
நிச்சயமாக இணைந்து போராட மாட்டோம். சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகாத,
ஈழத் தமிழர்களை, ஈழ இஸ்லாமியர்களை மனிதர்களாக நடத்தும், மனிதநேயம் கொண்ட
சிங்கள மக்களோடு கைகோப்பதில் எந்தச் சுணக்கமும் இல்லை!''
தமிழ்வேல் திருப்பதி, ஃபேஸ்புக்.
''நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு
பெற்று உங்கள் குரலை அங்கும் ஒலிக்கச் செய்யலாமே... என்ன தயக்கம்?''
''நாடாளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கும்
அழகை, ஒலிப்பதற்காக வாங்கும் கிம்பளத்தை, ஒலித்தவுடன் பீறிட்டுக்
கிளம்பும் சமூகப் புரட்சிகளை எல்லாம்தான் கண் குளிரப் பார்த்துக்
கொண்டிருக்கிறோமே! 'ஆளும்’ மன்றங்களை நான் நம்பவில்லை; ஆட்கள்
மன்றத்தைத்தான் நம்புகிறேன்!''
நித்யா ஜெயச்சந்திரன், ஃபேஸ்புக்.
''நீங்கள்
பல நாடுகளில் வசித்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தில் சொல்லுங்கள்...
இந்தியா குறித்த எந்த விஷயம் உங்களை மிகவும் அச்சுறுத்துகிறது? எந்த
விஷயம் பெருமிதம்கொள்ளச் செய்கிறது?
''இந்திய அரசியல்வாதிகள். அரசியல்வாத
இந்தியர்கள்!''
அடுத்த
வாரம்...
விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள் - ஆனந்த விகடன் - 2013-05-22
எம்.நாகராஜன், பொள்ளாச்சி. ''கூடங்குளம்
அணு உலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்குப் பாதகமாக உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்து இருக்கிறது. இனி, உங்கள் வியூகம் என்ன?'' ''கூடங்குளம்,
கல்பாக்கம், நியூட்ரினோ போன்ற மக்களின் வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை
அச்சுறுத்தும் திட்டங்களுக்கு நீதிமன்றங்களிலோ, நாடாளுமன்றங்களிலோ தீர்வு
காண முடியாது. மக்கள் மன்றங்களில்தான் விடை காண வேண்டும் என்பதில் நாங்கள்
உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும்
மூன்று அம்சங்களான தூய்மை, பொறுமை மற்றும் உறுதியுடன் தொடர்ந்து மக்கள்
மன்றத்தில் பணியாற்றுவோம்.‘Slow and steady wins the race’ என்ற பழமொழி இன்றும் செயல்பாட்டில்தான் இருக்கிறது!'' கபிலன், ஃபேஸ்புக். ''இதுவரை
அணுஉலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது அணு
அமைப்புகளின் அறிக்கை. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும்
ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள்.
அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று
பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?'' ''அணுஉலை
விபத்துகளால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது
எல்லோருக்கும் தெரியும். மறைமுகமாகக் கொல்லப்பட்டவர்கள்,
கொல்லப்படுகிறவர்கள், இன்னும் கொல்லப்பட இருப்பவர்களின் எண்ணிக்கையை எந்த
விஞ்ஞானமும், எந்தவிஞ்ஞானி யும் கணக்கிட முடியாது. விபத்துக்கு உள்ளாகாத
நிலையிலும் அணுஉலை ஆபத்தானது என்பதுதான் எங்கள் வாதம். செர்னோஃபில்,
ஃபுகுஷிமா விபத்துகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றி ஐ.நா., உலக சுகாதார
நிறுவனத்தின் பல அறிக்கைகளே உள்ளன. தயவுகூர்ந்து நீங்கள் அவற்றைப் படித்து
நிதர்சனம் உணருங்கள்!'' பாலாஜி, தஞ்சாவூர். ''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?'' ''இது
தவறான தகவல். உண்மையான பொதுவுடமைவாதிகள் அதிகம் கலந்துகொள்ளும் போராட்டம்
எங்கள் போராட்டம். பல மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இயக்கங்கள், சோஷலிஸ்ட்
கட்சிகள் தொடர்ந்து கலந்துகொள்கின்றன, களமாடுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச்
சேர்ந்த நல்லகண்ணு அய்யா, தோழர் சி.மகேந்திரன் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
சி.பி.எம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள்
கலந்துகொண்டார்கள். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி
ஒப்பந்தங்களை எதிர்க்கும் பெரிய கம்யூ னிஸ்ட் கட்சிகள், ரஷ்யா என்றதும்
பழைய நினைப்பில் பதுங்குவதுதான் பிரச்னை!'' மா.மதிவாணன், திருவாரூர். ''உங்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க ஊடகங்களின் உதவி எந்த அளவுக்கு இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது?'' ''அச்சு
ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மையாக, உறுதியாக தமது கடமையைச்
செய்தன, செய்கின்றன. சாதாரண மக்களாகிய எங்களின் உண்மைத்தன்மையை,
வாழ்வாதாரத்துக்காக நாங்கள் போராடுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து நியாயமாகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாளிதழ்கள்,
தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களைக் கடுமையாக எதிர்க்கின்றன. அதனால் அவர்களின்
நம்பகத்தன்மைதான் குறைந்திருக் கிறது!'' கி.சிவநாராயணன், மைசூர். ''பெட்ரோல்,
நிலக்கரி, அணுஉலை என்று எல்லா எரிசக்திகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு
விளைவிப்பவை என்றால், எதுதான் தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருள்? அதன்
பயன்பாடு தமிழகத்தில் சாத்தியமா?'' ''காற்றும்,
கடல் அலையும், கதிரவன் ஒளியும், கழிவுகளும் என எத்தனையோ வழிகள்
இருக்கின்றன. மையப்படுத்தப்படாத, தேவையின் அடிப்படையில் இயங்கும்
(decentralized and demand - based) சிறு சிறு மின் நிலையங்களை நாடெங்கும்
அமைப்பதுதான் நமக்கும், இயற்கைக்கும், எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும்.
மையப்படுத்தப்பட்ட, விநியோகத் தின் அடிப்படையில் இயங்கும் (centralized
and supply-based) மெகா மின் நிலையங்கள் ஊழலின் ஊற்றுக்கண்களாக,
முறைகேடுகளின் முகாம்களாக, அழிவின் ஆதாரங்களாக விளங்கும். கூடங்குளம்,
இடிந்தகரை பகுதிக்கு ஒரு முறை வாருங்கள்; மேற்கண்ட இரண்டுக்குமே
எடுத்துக்காட்டுகளைப் பார்ப்பீர்கள்!'' மெ.திலீப், சிதம்பரம். ''துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் கட்சிகள் எல்லாமே அணுஉலை தேவை என்று சொல்கின்றனவே? இதன் பின்னணி அரசியல் என்ன?'' ''இது
முழு உண்மையல்ல சகோதரா! மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர்
மாவட்டம் ஹரிப்பூர் என்னும் இடத்தில் வரஇருந்த கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு
உலைப் பூங்கா திட்டத்தை, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக் கடுமையாக எதிர்த்து
முற்றிலுமாக நிறுத்திஇருக்கிறது. அதே போல, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி
மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு அணுஉலையை சிவசேனா கட்சியும்,
சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.
கூடங்குளம் அணுக் கழிவு கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கங்களில்
புதைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த தும் காங்கிரஸ், பாரதிய ஜனதா
போன்ற 'தேச பக்தர்கள்’ அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். தேசத்
துரோகிகளான எங்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும் என தமிழக மத்திய
அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் கொக்கரித்துக்கொண்டிருக்கும்போது, கர்நாடக
மத்திய அமைச்சர் திரு.வீரப்ப மொய்லி அந்த மாநில மக்களின் நலனுக்காக
வாதிட்டுக்கொண்டிருந்தார். 'அணு சக்திதான் இந்திய எதிர்காலத்தின் ஒரே வழி’
என்று கூறித் திரியும் பிரதமர், தனது காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள
மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடட்டுமே
பார்ப்போம்! ஊருக்கு இளைத்த தமிழன் பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கப்படு
கிறான். இதுதான் நிதர்சனம்!'' பி.கேசவன், சென்னை-91. ''கடற்கரைப்
பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளாக பாதிரியார்களாலும், சர்ச்களாலும் செய்ய
முடியாத ஒரு சீர்திருத்தத்தை இரண்டே ஆண்டுகளில் உங்களால் சாதிக்க
முடிந்தது எப்படி?'' ''மனதுக்கு
உகந்தவரின் நிறைகளை மிகைப்படுத்துவதும், குறைகளைக் கண்டுகொள்ளாமல்
இருப்பதும், அவர் செய்யாத விஷயங்களைச் சாதனைகள் எனப் போற்றுவதும், செய்த
சிறு செயல்களை அற்புதங்கள் என்று புளகாங்கிதமடைவதும் தமிழராகிய நமக்கே
உரித்தான தனிநபர் துதியின் அம்சங்கள். சீர்திருத்தம் செய்ய வந்த தேவதூதன்
அல்ல நான்; மகாகவி பாரதியார் சொன்னதுபோல, எனக்குத் தொழில் எழுத்து, கவிதை,
நாட்டுக்கு உழைத்தல். அவ்வளவுதான்!'' புகழ்மணி, ஃபேஸ்புக். ''ஓர்
அரசாங்கம் என்பது அனைத்து மக்களின் நலன் சார்ந்துதானே செயல்பட வேண்டும்.
அப்படி இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக
ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது என்ன நியாயம்?'' ''சரி...
உங்கள் போக்கிலேயே வருகிறேன். நம் தமிழக அரசாங்கம் தமிழர்களின் நலன்
சார்ந்துதானே இயங்க வேண்டும். இப்போது தமிழக மீனவ மக்களின் நலனை மட்டும்
விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். சுமார் 600 தமிழக மீனவர்கள் இதுவரை
சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர்
ஊனமுற்றிருக்கிறார்கள் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களால்,
ஏராளமான அனல் மின் நிலையங்களால், உண்டுறை இல்லங் களால், உல்லாச
விடுதிகளால், லட்சக்கணக்கான மீனவர்கள் தொழில் இழப்பு, வருமான இழப்பு, நோய்
நொடி எனத் துன்புறுவார்கள். இதுதான் அரசாங்கத்தின் மீனவர் நலன் சார்ந்த
செயல் பாடா? தமிழக் கடற்கரையோரம் முழுக்க வசிக் கும் மீனவர்களின்
உயிருக்கே இந்த அளவுதான் மதிப்பு என்றால், இடிந்தகரை என்ற சிறு நிலப்
பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்கு என்ன மரியாதை இருந்துவிட முடியும்?
கூடங்குளம் பகுதி மக்களுக்கு 500 கோடி ரூபாயில் ஊருக்கு வெளியே வீடு
கட்டித் தருவார்களாம், நான்கு வழிச் சாலை அமைப்பார்களாம், உயர்தர
மருத்துவமனை கட்டுவார்களாம். 'தின்று விளையாடி இன்புற்றி ருப்பவன்’ வாயில்
மண்ணை வாரிப் போட்டுவிட்டு, ஓடுவதற்கு ரோடும், ஆசுவாசப்படுத்த
ஆஸ்பத்திரியும் தருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? அதனால்தான் போராடுகிறோம்!''
விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள் - ஆனந்த விகடன் - 2013-05-29
கபிலன், ஃபேஸ்புக். ''மீனவ
மற்றும் பீடித் தொழிலாளர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் நீங்கள் பெற்றதாகக்
கூறும் பணம்: ரூபாய் 25,17,991. உங்கள் போராட்டங்களுக்கான மொத்தச் செலவு:
ரூபாய் 17,64,233. ஆனால், நீங்கள் அளித்த புள்ளிவிவரங்களின்படி,
இடிந்தகரையில் தோராயமாக 1,332 குடும்பங்கள் இருக்கலாம். ஆக, நீங்கள்
வசூலித்த நன்கொடை - 1332 x 200 = 2,66,400 என்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் வசூல் கணக்கு காட்டியிருப்பது ரூபாய் 25,17,991.
வித்தியாசமான 22,51,591 எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?'' ''எங்கள்
போராட்டம் சுமார் 10,000 பேர் வசிக்கும் இடிந்தகரை கிராம மக்கள் மட்டும்
நடத்தும் போராட்டம் அல்ல; தமிழகம், கேரளம் முழுவதிலும் இருந்து பல்வேறு
தரப்பு மக்கள் வருகிறார்கள். அவர்கள் நன்கொடை தருகிறார் கள். பள்ளிக்
குழந்தைகள்கூட நிதி திரட்டிக் கொண்டுவருகிறார்கள். எங்கள் பகுதி மீனவர்கள்
தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தங்கள் வருமா னத்தில் ஒரு பகுதியைப்
போராட்டத்துக்குத் தருகிறார்கள். எங்கள் போராட்டக் கணக்கை ஒரு குழு
மேலாண்மை செய்துவருகிறது. அவர்கள் 40 பேர் கொண்ட ஊர் கமிட்டிக்கும்,
பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சமுதாயத் தலைவர்களுக்கும் கணக்குக்
காட்டுகிறார்கள். நீங்கள் எங்களிடம்
கணக்குக் கேட்பதை நான் வரவேற்கிறேன் கபிலன். பதில் சொல்ல நாங்கள்
கடமைப்பட்டிருக்கிறோம். அதுபோல கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில்
4,000 கோடி ரூபாய் அதிகம் செலவு ஆகிவிட்டது என்று திடீரெனச்
சொல்கிறார்களே. இயங்காத திட்டத்தில் எப்படி இவ்வளவு கூடுதல் செலவு
குதித்துவந்தது? மக்கள் பணத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயைப் பாழும்
ரஷ்யக் கிணற்றுக்குள் போட்டும், ஒரு பல்ப் எரிக்கும் அளவுக்குக்கூட
மின்சாரம் இன்னும் வரவில்லையே? அவர்களிடம் கணக்குக் கேட்டீர்களா?
கேட்பீர்களா?'' மகேஷ், கோயம்புத்தூர். ''ரஷ்யாவின்
VVER 1,000 ரியாக்டர்என்பது அமெரிக்காவின் Advanced Boiling
WaterReactor-க்கு இணையானது. இரு டெக்னாலஜிகளுக்கு இடையில்தான் உலக அளவில்
போட்டி நிலவுகிறது. இந்தியா நிறைய அணு உலைகளை நிறுவும் நாடு. ஆகையால், ஒரு
VVER 1,000 வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உலக அளவில் அணு உலைச்
சந்தையில் வியாபாரம் போய்விடும் என்பதற்காக, உதயகுமாரன் மூலம் அணு உலைத்
தரகு வேலை பார்க்கப்படுகிறது என்கிறேன் நான். இந்தச் சந்தேகத்துக்கு
உங்கள் விளக்கம் என்ன?'' ''ரஷ்யா,
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், தென் கொரியா போன்ற அணு உலை வியாபாரம் செய்யும்
நாடுகள் மத்தியில் போட்டி இருக் கலாம். ஆனால், நாங்கள் அனைத்து நாட்டு அணு
உலைகளையும்எதிர்க் கிறோம். இந்தியாவுக்கு மேற்கண்ட கிழக்கிந்தியக்
கம்பெனிகளும் வேண்டாம். இவர்கள் விற்கும் ஆபத்தான அணு உலை களும் வேண்டாம்;
படைப்பாற்றலுடன் தலை மைத்துவத்துடன் சிந்தித்து மக்களை அழிக் காத மாற்று
வழிகளில் எரிசக்தி சுதந்திரம் பெறுவோம் என்கிறோம். சுருக்கமாகச் சொன்னால்,
இந்தியாவுக்கு மேலே ஒரு New Clear Sky வராதா என்று ஏங்குகிறோம் நாங்கள்.
ஆனால், 'நியூக்ளியர் பவர் ஸ்டார்’போல சிந்திக்கிறீர்கள் நீங்கள்!'' ஆர்.பாலகுமாரன், பொன்மலை. ''சார்...
தமிழீழப் பிரச்னையாகட்டும்... நக்சலைட்கள் போராட்டமாகட்டும்... அஹிம்சை
வழியில் ஆரம்பித்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டமாக மாறியது.
அந்த நிலை கூடங்குளம் போராட்டத்துக்கும் ஏற்படுமா?'' ''அந்த
நிலை வரக் கூடாது என்பதுதான் எனது ஆத்மார்த்த விருப்பம், ஆழமான கொள்கை.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் அறவழிப் போராட்டங்களை உதாசீனப்படுத்தி,
மென்முறைப் போராளிகளை ஏறெடுத்தும் பார்க்காது, அகம்பாவத்தோடு, எதேச்சதிகா
ரமாக, அடக்குமுறை செய்தால்... இளைஞர்கள் தவறான பாடங்களைப் பெறுவார்கள்.
பின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகத்தான் இருக்கும். தந்தை
செல்வா, பெரியவர் பொன்னம்பலம் போன்றோர் நடத்திய அஹிம்சைப் போராட்டங்களும்,
சிங்களப் பேரினவாதம் கைக்கொண்ட அணுகுமுறையும் நினைவுக்கு வருகின்றன.
இங்கேயும் இதே போக்குதான் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எந்தப்
பேருந்தையும் உடைக்காத, கொளுத்தாத நெல்லை மாவட்டக் கடலோரக் கிராமங்களுக்கு
கடந்த ஒன்பது மாதங்களாக அரசுப் பேருந்து வருவதில்லை. அழுகிற குழந்தைக்குப்
பால் கொடுத்தால், அடிப்பதைப் பற்றி அது சிந்திக்காது!'' கே.குணா, புதுச்சேரி. ''தமிழகத்தில் புது வெள்ளமாக ஆர்ப்பரித்திருக்கும் மாணவர் சக்தியை உங்கள் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வீர்களா?'' ''பல்வேறு
ஊர்களில் மாணவர்களே ஈழப் பிரச்னைக்கு அடுத்ததாக கூடங்குளம் பிரச்னை பற்றி
தன்னார்வ முன்னெடுப்புடன் பேசினார் கள். தமிழீழம் போன்று, தமிழகத்தின்
இயற்கை வாழ்வாதாரங்களைப் போற்றிப் பாதுகாப்பதும் முக்கியமானது எனும்
விழிப்பு உணர்வு அனைத்து மாணவ, மாணவியருக்கும் நிறையவே இருக்கிறது. எங்களை
அவர்களுடன் இணைத்துக் கொள்ளவும், அவர்களுடன் நாங்கள் இணைந்துகொள்ளவும்
வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன!'' என்.மதுமிதா, சென்ன-75. ''எளிதில்
கட்டுப்படுத்த முடியாதவர்கள், சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்கள்
என்றெல்லாம் சொல்லப்படும் மீனவ மக்களை எப்படி இப்படிக் கட்டுக்கோப்பாகப்
போராடவைக்கிறீர்கள்?'' ''எந்த
ஒரு மனிதக் குழுமத்தையும் இப்படிக் குறிப்பிட்ட குணாதிசயங்களோடு அடையாளப்
படுத்துவது சரியல்ல. பெரும்பாலான மனிதர்களைப் போலவே, மீனவப் பெருமக்களும்
அன்புக்கு அடிமையானவர்கள். ஆனால், அகந் தைக்கு அடங்காதவர்கள். தங்கள்
சாதியை, மதத்தை, ஊரைச் சாராத என்னையும், எனது நண்பர்களையும் இவர்கள்
தங்களில் ஒருவராக ஏற்றெடுத்து அன்பு காட்டுவதும், கண்போலக் காப்பதும்
இந்தியாவில் வேறு எங்கும் நடவாத அதிசயம். சாதித் தீயில் எரியும் இன்றைய
தமிழகத்தின் விடிவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம் மீனவர்கள்!'' ஆனந்த் பாலா, ஃபேஸ்புக். ''நான்
ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியர். அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதுதான்
இருப்பதிலேயே மிக மோசமான வழிமுறை என்பது இங்கு பலருக்குத் தெரியவில்லை.
அணு உலை சக்தியினால் ஏற்படும் விபரீதங்கள், அபாயங்கள் குறித்து நீங்கள்
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்? ஏனெனில், அரசாங்கத் தரப்பில் இருந்து
இதை நாம் எதிர்பார்க்க முடியாது!'' ''கதிர்வீச்சு:
அணு உலையிலிருந்து காற்றின் மூலமாகவும், நீரின் மூலமாகவும் வெளிப்படும்
ஆபத்தான கதிர்வீச்சு... தைராய்டு பாதிப்பு, புற்றுநோய், மலட்டுத்தன்மை,
மூளை வளர்ச்சிக் குறைவு எனப் பல்வேறு நோய்களுக்கு வழி கோலும். அணுக்கழிவு:
அணு உலையில் எரிக்கப்பட்ட யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் எனும் கழிவு
வெளிவரும். இது தனது கதிரியக்கம் முழுவதையும் இழக்க 48,000 (ஆமாம்,
நாற்பத்தெட்டாயிரம்தான்!) ஆண்டுகள் ஆகும். அதுவரை இதைக் கவனமாகக் கையாள
வேண்டும், பாதுகாக்க வேண்டும். 1984-ம் ஆண்டு போபால் விஷவாயு விபத்தில்
வெளிப்பட்டு, வெட்டவெளியில் கிடக்கும் விஷக் கழிவை என்ன செய்வது என்று
இதுவரை முடிவுசெய்ய இயலாத கையாலாகாதவர்கள் ஆளும் நாடு நமது நாடு. விபத்து:
மற்ற தொழிற்சாலைகளைப் போல் அல்லாமல்; அணு உலையில் சிறு விபத்துகூட மிகப்
பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள்
விபத்துக் குப் பிறகு 77 கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115 கி.மீ. வரை 5
ஆண்டுகளுக்கும், 140 கி.மீ. வரை ஓர் ஆண்டு காலத்துக்கும் திரும்பிப் போக
முடியாது. அணு உலை விபத்தில் அன்று கொல் வதைவிட நின்று கொல்வதுதான்
அதிகமாக, அளவிட முடியாததாக இருக்கும். சுற்றுச்சூழல்
சீரழிவு: அணு உலையைக் குளிர்விப்பதற்காகக் கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32
லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப் பட்டு, பின்னர் குறைந்த கதிர்வீச்சு
கலந்த வெந்நீராகக் கடலில் மீண்டும் கொட்டப்படும். இதனால் மீன் வளம்
அழியும், மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாகும், அனைத்து மக்களின் உணவுப்
பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அணு உலையில்
இருந்து காற்றின் மூலம், நீரின் மூலம் பரவும் கதிர்வீச்சு நிலத்தடி நீரைக்
கெடுக்கும், பயிர்களை நச்சுத் தன்மைக்கு உள்ளாக்கும், கால்நடைகளைத்
தாக்கும். பால், இறைச்சி, தானியங்கள் வழி மனித உணவுச் சங்கிலிக்குள்
புகுந்து நோய் களை உண்டாக்கும். பாதுகாப்பு:
அணு உலை என்பது திறந்து கிடக்கும் ஓர் அணுகுண்டு. தீவிரவாதிகளால், எதிரிப்
படையால் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம். பாதுகாப்பு காரணங்களால் அணுஉலைப்
பகுதி ராணுவமயமாக்கப்படும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போகும். அறிவீனம்:
நடு வீட்டுக்குள் நல்ல பாம்பை விட்டுவிட்டு, நிம்மதியாகத் தூங்குங்கள்
என்று சொல்கிறது அரசாங்கம். லஞ்சமும், ஊழலும், திருட்டும், பொய்யும்,
புளுகும் தாண்டவமாடும் நாட்டில் எப்படி நமது குழந்தைகளை நிம்மதியுடன்
விட்டுச்செல்வது? 40 ஆண்டு காலம் நாம் மின்சாரம் பெற, நமது
வழித்தோன்றல்கள் எல்லாம் நாசமாகப் போக வேண்டுமா?'' ஆனந்த் பாலா, ஃபேஸ்புக். ''நீங்களும்
ஃபேஸ்புக்கில் பரபரப்பாக கூடங்குளம் அணு உலை தொடர்பாக ஸ்டேட்டஸ்
பதிவிட்டுக்கொண்டே இருக்கிறீர் கள். அங்கு நடக்கும் மற்ற சந்தடிகளைக்
கவனிப்பீர்களா? ஃபேஸ்புக்கின் பிரபல போராளிகளைப் பற்றி அறிவீர்களா?'' ''நேரம்
கிடைப்பதற்கேற்ப சந்தடிகளைக் கவனிக்கிறேன். போராளிகளை அறிந்து கொள்கிறேன்.
நடுத்தர மக்களைச் சென்றடைய ஃபேஸ்புக் ஒரு நல்ல வழியாக இருந்தாலும்,
ஃபேஸ்புக் புரட்சியோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. அடிமட்ட மக்களோடு
ஃபேஸ் டு ஃபேஸ் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது
நிலைப்பாடு! '' சிவ நாராயணன், ஃபேஸ்புக். ''இன்றைய
இளைஞர்களுக்கு அனுதின வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கிறது.... அவர்கள்
மனதில் பதித்துக்கொள்ள ஒரு வாசகம் சொல்லுங்களேன்?'' ‘‘ Think that you can and you will, It’s all in a state of mind. 'உன்னால் முடியும் என்று நினை, நீ முடிப்பாய்! எல்லாமே மன நிலையில்தான் இருக்கிறது!''’ BBC Archive:
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக் குழு கூறியுள்ளது 21/09/2011 கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை, மக்களின் அச்சம் நீங்கும் வரையில் ஆரம்பிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை. 19/09/2011 கூடங்குளம்
அணு நிலையம் பாதுகாப்பானது என்பதால் உண்ணாவிரதம் கைவிடப்பட வேண்டும் என்று
தமிழக முதல்வர் கேட்டதை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர். 16/09/2011 தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கூடம்குளத்தில் அணு உலைகள் அமைக்கப்படுவதை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்துவருகிறது. 13/09/2011 இந்தியாவும்
ரஷ்யாவும் கூட்டாக இணைந்து புதிய போர் விமானம் ஒன்றினை தயாரிக்கும்
உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் பல ஒப்பந்தங்களும்
ஏற்பட்டுள்ளன 21/12/2010
கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்குவது தடைபட்டுள்ளதற்கு அமெரிக்க தன்னார்வு நிறுவனங்கள் மீது மன்மோஹன் சிங் குற்றச்சாட்டு 24/02/2012 இடிந்தகரையில்
பொதுமக்களின் வீடுகள் அணு மின்நிலையத்துக்கு மிக அருகில் அமைந்திருப்பதால்
மிகுந்த பீதியில் அவர்கள் வாழ்வதாக எமது செய்தியாளர் கூறுகிறார். 20/02/2012 கூடங்குளம்
அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று தமிழக அரசின் வல்லுநர் குழு கூறுறது.
ஆனாலும் போராட்டம் தொடரும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள் 19/02/2012 தமிழகத்தின்
கூடங் குளத்தில் அமைக்கப்பட்ட அணு உலைகள் அங்கு நடைபெறும் போராட்டம்
தொடர்பாக செயல்படாமல் இருப்பது குறித்து ரஷ்யத் தூதர் கவலை. 14/02/2012 கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மக்களின் அச்சங்களை தீர ஆராய்வதற்கு புதிய நிபுணர் குழுவொன்று அமைக்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா 04/02/2012 கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டு பணம் வருகிறது என்று அரசு கூறுகிறது. ஆனால் அது பொய் என்கிறது மறுதரப்பு 25/01/2012 தமிழகம் வந்த பிரமதர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 26/12/2011 கூடங்குளம்
அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கேட்டுள்ளார். 17/12/2011 போராட்டத்தின் காரணமாக தாமதமாகியுள்ள கூடங்குளம் அணு உலை அடுத்த சில வாரங்களில் இயங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 16/12/2011 'கூடங்குளம்
அணுமின் நிலையம் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள்
தொடர்பான சந்தேகங்களுடன் தொடர்புடைய விபரங்களைத் தவிர, வேறு எந்தத்
தகவல்களையும் வெளியிட முடியாது' : பிரதமர் அலுவலகம்
-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன 16/11/2011
இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத் திட்டமான கூடங்குளத் திட்டம் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் விளைவாய் எதிர்கொள்ளும் சவால்கள். 16/11/2011
அணுமின் நிலையம் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு மாநில அரசு நியமித்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 08/11/2011
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்திற்குக் கிடைத்த வரப் பிரசாதம் எனக் கூறியுள்ளார். 06/11/2011
கூடங்குளத்தில்
அணு உலைகள் அமைக்கப்படும் பகுதியையொட்டி வாழும் மக்களோடு பேசுவதற்காக
மத்திய அரசு 15 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அறிவித்துள்ளது. 20/10/2011
கூடங்குளம்
அணு உலை குறித்த அச்சங்கள் முழுமையாக களையப்பட்ட பிறகே மின் உற்பத்தியை
துவக்கவேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 18/10/2011
கூடங்குளத்தில்
அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்திற்கான பணிகள் மக்கள் போராட்டத்தால்
தற்காலிகமாக முடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 15/10/2011
இந்தியாவில் புதிய அணுமின் நிலையங்களைத் துவங்க வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்யக் கோரி புதிய வழக்கு. 14/10/2011
கூடங்குளம் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களை களைவதற்காக நிபுணர் குழு அமைப்பதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 07/10/2011
கூடங்குளம் அணு மின் நிலையயப்பணிகளை நிறுத்திவைக்குமாறு இந்திய அரசை கோரும் தீர்மானம் ஒன்றை தமிழக அமைச்சரவை நிறைவேற்றியிருக்கிறது 22/09/2011
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக் குழு கூறியுள்ளது 21/09/2011 கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை, மக்களின் அச்சம் நீங்கும் வரையில் ஆரம்பிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை. 19/09/2011 கூடங்குளம்
அணு நிலையம் பாதுகாப்பானது என்பதால் உண்ணாவிரதம் கைவிடப்பட வேண்டும் என்று
தமிழக முதல்வர் கேட்டதை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர். 16/09/2011 தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கூடம்குளத்தில் அணு உலைகள் அமைக்கப்படுவதை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்துவருகிறது. 13/09/2011 இந்தியாவும்
ரஷ்யாவும் கூட்டாக இணைந்து புதிய போர் விமானம் ஒன்றினை தயாரிக்கும்
உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் பல ஒப்பந்தங்களும்
ஏற்பட்டுள்ளன 21/12/2010
இரண்டு வல்லுநர் குழுக்கள்; இரண்டு நீதிமன்றங்கள்; ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர்; இவர்கள் அனைவரும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள்: கூடங்குளம் அணுமின் உலை பாதுகாப்பானது, அங்கே மின் உற்பத்தியைத் துவக்கலாம் என. இவர்கள் அனைவரும் துறை சார்ந்த வல்லுநர்கள். நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வரும் நிதானம் கொண்டவர்கள். ஆய்வு மனோபாவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இடிந்தகரை மக்கள் மீது தனிப்பட்ட விரோதம் கிடையாது. பரபரப்பு மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும், அரசியல் லாபம் பெற வேண்டும் என்ற விருப்பம் ஏதும் அவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தங்கள் துறையில் புகழோடு இருப்பவர்கள். சிலர் உலகின் கவனத்தைப் பெற்றவர்கள். நடுநிலையோடு சிந்திப்பவர்கள். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டவர்கள். இவர்களது சொற்களுக்குச் செவி மடுப்பதுதான் நல்லது. தனது தலையங்கங்களில் தெரிவித்து வந்த கருத்துகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலித்திருப்பதைக் கண்டு, ‘புதிய தலைமுறை’ மகிழ்ச்சி கொள்கிறது. உணவு, உடை வீடு, காற்று, நீர் போல மின்சாரமும் ஓர் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது என்று, ‘புதிய தலைமுறை’ 20 அக்டோபர் 2011 தேதியிட்ட தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதே போன்ற ஒரு கருத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் இடம் பெற்றுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது என்று அந்தத் தலையங்கத்தில் எழுதியிருந்தோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய நிபுணர்கள் குழு வழங்கியுள்ள 17 அம்சப் பரிந்துரைகளில், 11 நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் இயற்கைச் சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்பதையும் ஏற்று, கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீர், காற்று ஆகியவற்றில் மாசு ஏற்படும் என்ற அச்சத்தை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதில் தவறேதும் நடக்கவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை எதிரொலித்துள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேண்டுமானால், மின்சாரம் தேவை என்பது ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம். புனல் மின்சாரம் தயாரிக்க, நம் நதிகளில் போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை. அனல் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் கரி, பெட்ரோல் போன்றவை வளி மண்டலத்தில் கரிப்படிவுகளை ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதலை விரைவுபடுத்தும். கதிரொளி கொண்டு மின்சாரம் தயாரிக்க, ஏராளமான இடமும் முதலீடும் தேவை. காற்று, ஆண்டின் எல்லா நாட்களிலும் கை கொடுக்காது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அணு மின்சாரம் என்பதை நிராகரிக்க இயலாது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நடைமுறை யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட ஓர் தீர்ப்பு. இப்போது மின் உற்பத்திக்கான முட்டுக்கட்டை நீங்கிவிட்டதையடுத்து, விரைவில் மின் உற்பத்தி துவங்க வேண்டும். அதில் கணிசமான அளவைத் தமிழகம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றால், மின்தடை நீங்காவிட்டாலும் தளர வாய்ப்புண்டு.
|
|
|
| | | |
|