Home / Top10Problems

Top10Problems


2013 டாப் 10 பிரச்னைகள் - தண்ணீர்... தண்ணீர்...

2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி 
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

"2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில்

தவித்தார்கள். குடிநீர் வணிகர்கள், அரசை மிரட்டினார்கள். பணிந்துபோவதைத் தவிர வேறு வழி இல்லாத அரசு, உடனடியாக மூடப்பட்ட நிறுவனங்களைத் திறந்துகொள்ள அனுமதித்தது. விளைவு... பிடி தங்கள் கையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட புட்டித் தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள், வேலைநிறுத்தத்துக்குப் பிறகு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலையை ஏற்றிவிட்டார்கள். ஆக, குடிநீர் நிறுவனங்கள் பெரும் கொள்ளையில் ஈடுபடுவதுடன், இப்போது சமூகத்தை மிரட்டும் நிலைக்கு வந்துவிட்டன. பொதுமக்களும் தாங்கள் காசு கொடுத்து வாங்கிக் குடித்த தண்ணீர் தரமானது அல்ல என்று தெரியவந்தபோதும், அதற்கு எதிராகக் கொந்தளிக்காமல், 'அந்தத் தண்ணீரை தடையின்றி கொடுங்கள்’ என்றுதான் கேட்டார்கள். அப்படி ஓர் இக்கட்டில் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அரசு. கொடுமையிலும் கொடுமையாக, அரசாங்கமே 10 ரூபாய்க்கு பாட்டில் நீர் விற்கிறது. இந்த நிலையை மீட்க, மூன்று கட்டங்களில் நாம் செயலாற்ற வேண்டும்.

முதல் நிலையில் செயல்பட வேண்டியது, மக்களாகிய நாம்தான். ஒவ்வொரு முறை தண்ணீரை விலைகொடுத்து வாங்கும்போதும், 'தண்ணீர் நமது அடிப்படை உரிமை’ என்பதை நமக்கு நாமே மறுத்துக் கொள்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பாட்டில் மற்றும் கேன் தண்ணீர் மிக அதிகம் விற்பனையாகின்றன. இந்தியாவில் உள்ள பாட்டில் நீர் ஆலைகளில் பாதி தமிழ்நாட்டில் உள்ளன. இது பெருமை தரும் செய்தி அல்ல. தமிழ்நாட்டைவிட குறைந்த நீர் ஆதாரமும் மழைவளமும் கொண்ட பல பகுதிகள் இந்தியாவில் இருந்தும், அங்கெல்லாம் இந்த அளவுக்கு நீர் வணிகம் நடக்கவில்லை. எனில், இந்த வணிகத்தை வளர்ப்பதில் தமிழக மக்களின் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அயல்நாட்டு மக்களின் நுகர்வுக்காக இங்கே பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதை பொருளாதார வளர்ச்சியின் பெருமையாகப் பேசும் நாம், அந்தப் பொருள்களுக்குள் நமக்குச் சொந்தமான 'விலையில்லா நீரும்’ ஒளிந்துகொண்டு ஏற்றுமதியாகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?

இரண்டாம் நிலைச் செயல்பாடு, ஊடகங்களின் பொறுப்பு. லண்டன் மாநகரின் உணவகங்களில், குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனில் பாட்டில் நீர் மட்டுமே ஒரே வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டபோது, 'ஈவினிங் ஸ்டாண்டர்ட்’ என்கிற நாளிதழ் அந்தப் பிரச்னையை கையில் எடுத்தது. உணவகங்களில் பொதுநீர் வசதி வேண்டும் என்பதை மையமாக வைத்து பரப்புரை செய்தது. இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு பெருகவே, வேறு வழியின்றி உணவகங்கள் பொதுக் குடிநீர் வசதியை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த ஆண்டில் பாட்டில் தண்ணீர் வணிகம் 9 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது.

இத்தகைய பொறுப்புமிகுந்த செயல்பாடுகளில் நம் ஊர் ஊடகங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழகத்திலும் பல ஷாப்பிங் மால் உணவகங்கள் மற்றும் சங்கிலித் தொடர் உணவகங்களில் பொதுக் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுப்பதை பெரும் பாவமாகக் கருதும் மரபு நம்முடையது. ஆனால், ஊரின் மையத்தில் ஒரு கடையைத் திறந்துவைத்துக்கொண்டு 'தண்ணீர் வேண்டுமா? பணம் கொடு’ என்று கேட்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதோடு, 'பாட்டில் குடிநீர்தான் உயர்ந்தது. குழாய் நீர் தரமற்றது’ என்ற மனப்பாங்கையும் மாற்ற வேண்டும்.

மூன்றாவதும் தலையாயதும், அரசின் செயல்பாடுதான். உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான பசிபிக் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட 'உலகத் தண்ணீர் அறிக்கை’யில் 'உலகின் பல பாகங்களில் அரசு, பொதுநீரை வழங்கத் தவறியதுதான், தனியார் தண்ணீர் வணிகம் பெருக அடிப்படை காரணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். தாமிரபரணி, பவானி, வைகை... என நமது பாரம்பரிய நீர்வளங்கள் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. மறுபுறம் பொதுக் குடிநீர் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியும், தனியார் தண்ணீரின் எழுச்சியும் எதேச்சையானதா? இல்லை! இரண்டுமே திட்டமிடப்பட்டது என்பதுடன், இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுக் குடிநீரின் வீழ்ச்சியில்தான் பாட்டில் தண்ணீர் எழுச்சி பெறுகிறது. குழாயில் நல்ல தண்ணீர் வந்தால், நீங்கள் எதற்கு பாட்டில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறீர்கள்?''


2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு

ந்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு மின்வெட்டுதான் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக இருக்கும். வறுமைக்கோடு போலவே, மின்சாரப் பற்றாக்குறைக் கோடும் இனி நிரந்தரம்தான். இது எதிர்மறைப் பார்வை அல்ல... யதார்த்தமே இதுதான்.

 தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட். இதில் மூன்றில் ஒரு பங்கான 4,000 மெகாவாட், இப்போது பற்றாக்குறை. ஆண்டின் மூன்றில் ஒரு பகுதிக் காலத்தில் பருவக்காற்று வீசுகிறது. அப்போது தமிழகம் மின் மிகை மாநிலம். ஆண்டில் மூன்றில் ஒரு பங்கான கோடையில் மின் பற்றாக்குறை. மூன்றில் ஒரு பங்கான மழை, பனிக்காலத்தில் மின் பற்றாக்குறை.

 சுய உற்பத்தி, மத்தியத் தொகுப்பு, தனியாரிடம் கொள்முதல்... என மூன்று சம பங்குகளாகப் பெறப்படும் மின்சாரமே, மாநிலம் முழுக்க அனைத்துத் தேவைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

 தமிழக அரசின் மொத்தக் கடன் சுமார் 1,30,000 கோடி ரூபாய். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன், இதில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது சுமார் 40,000 கோடி ரூபாய்.

- மின்வெட்டுச் சிக்கலைப் பற்றி சிந்திக்கும்போது இந்த 'மூன்றில் ஒன்று’ கணக்கு மனதில் வந்துபோனது. ஆனால், தமிழ்நாடு மின் வாரியம் ஒன்றும் சோடையான நிறுவனம் அல்ல!

1985-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்து நாட்டின் சிறந்த உற்பத்தித் திறனுக்கான பரிசை தமிழக அனல்மின் நிலையங்கள் (எண்ணூர் அனல்மின் நிலையம் தவிர்த்து) பெற்றுவருகின்றன. நாட்டின் மொத்தக் காற்றாலை மின் உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. 'தானே’ புயல் சீரழித்த ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் ஒரே மாதத்தில் சரிசெய்தவர்கள் நம் மின்வாரியத் தொழிலாளர்கள். விற்கப்படும் மின்சாரத்துக்கான விலையை முழுமையாக வசூலிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளின் மின்இழப்புக் குறியீடான 10 சதவிகிதத்துக்கு நெருக்கமாக 12.5 சதவிகித மின் இழப்பு உள்ள நகர்ப் பகுதிகள் நம்முடையவை. இப்படிப் பல மெடல்களைத் தாங்கி நின்ற தமிழக மின்சார வாரியத்தின் கோட்டு, இன்று பொத்தல் பொத்தலாகக் கிழிந்து தொங்குகிறது.

2008-ம் ஆண்டு தொடங்கிய மின்வெட்டுக்கு இன்று வயது ஐந்து. தமிழகத்தை ஆண்ட இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகளாக மின்வெட்டைப் பேணிப் பராமரித்துள்ளன. மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அரிய வாய்ப்பு 2012-ல் இருந்தது. கட்டுமானப் பணி முடியும் தருவாயில் இருந்த வடசென்னை 1,200 மெகாவாட், மேட்டூர் 600 மெகாவாட், வல்லூர் 1,041 மெகாவாட், தூத்துக்குடி 387 மெகாவாட், நெய்வேலி 225 மெகாவாட்... எனக் கிட்டத்தட்ட 3,300 மெகாவாட்டுக்கு மேலான சுய உற்பத்தித் திறனை முடுக்கிவிட அரசு முயலவே இல்லை.

ஆண்டுக்கு 1,000 மெகாவாட் அளவுக்கு மின் தேவை அதிகரித்துவரும் நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் மின் பற்றாக்குறை 7,500 மெகாவாட்டாக வளர்ந்து நிற்கும். அப்போது தனியாரிடம் கொள்முதல் செய்வது மட்டுமே அரசுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. துயரம் என்னவெனில், அந்த அளவுக்கான நிதி ஆதாரம் அரசிடம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. இந்த ஆண்டு, தனியாரிடம் வாங்கும் மின்சார விலையை ஈடுகட்ட, மின் கட்டண மானியமாக 5,197 கோடியை ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த காலங்களில் மின்சாரக் கட்டமைப்பு மூலதனமாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி, இன்று மின் கட்டண மானியமாக ஒதுக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் தனியார் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே இருக்கும். மின்சாரத்துக்கு அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை வரும். அது எளியோரிடம் இருந்து மின்சாரத்தைப் பிடுங்கி பணம் உள்ளோருக்கு மட்டும் வழங்கும். அப்போது நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் வெறுமனே காட்சிப் பொருள்களாக மாறிவிடும். இது அடிப்படை இல்லாத கட்டுக்கதை அல்ல. ஒரு புள்ளிவிவரம் பார்த்தால் இது புரியலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 89 லட்சம் வீடுகள், ஆண்டுக்கு 5,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், வெறும் 4.30 லட்சம் வீடுகள் 4,300 மில்லியன் யூனிட்களைப் பயன்படுத்துகின்றன. 89 என்பது, பெரும்பான்மை ஏழை மக்களைக் குறிக்கிறது. 4.3 என்பது, வசதியானவர்களைக் குறிக்கிறது!''


2013 - டாப் 10 பிரச்னைகள் - மாணவர்கள் போராட்டம்

ந்திய வரலாற்றில் 1847-ம் ஆண்டு நடந்த 'பிளாசி யுத்தம்’ ஒரு திருப்புமுனை. இந்தியாவை அடிமைப் பிரதேசமாக ஆக்கியது அந்த 1847. பிளாசி யுத்தத்தில் மன்னர் சிராஜ் உத்தௌலாவை வெற்றிகொண்ட பிரிட்டிஷ் தளபதி ராபர்ட் கிளைவ், 144 சிப்பாய்களுடன் நகரைக் கடந்துபோகிறான். வெறும் 144 சிப்பாய்கள். மக்கள் வீதிகளில், வீடுகளில், சன்னல்களில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க நகரைக் கடந்த கிளைவ், 'அப்பாடா, இப்போதுதான் உயிர்வந்தது. கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து வீசியிருந்தால்கூட நாங்கள் அத்தனை பேரும் இல்லாமல் போயிருப்போம்’ என்றான். வரலாற்றின் முக்கியமான சந்திப்பில் மக்கள் செயலற்று நின்றார்கள். முதல் கல்லெறிதலைச் செய்து ஒருவர் வழிகாட்டியிருந்தால், மற்றவர்கள் தொடர்ந்திருப்பார்கள். வரலாற்றில் வாழுதல் என்பது, இந்த முதல் கல்லெறிதல்தான்!

இலங்கையில் 1956-ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டம் வந்தது. எதிர்ப்புக் குரல் எழுப்பி யாழ் பல்கலை மாணவர்கள் ஊர்வலம் எடுத்தார்கள். 1976-ல் கல்வியில் தரப்படுத்துதலை சிங்களப் பேரினவாதிகள் புகுத்தியபோது உதித்தது, தமிழ் மாணவர் பேரவை. எந்த ஓர் அரசியல் கட்சியின் துணையும் இன்றி கிளர்ந்தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை, யாழ்ப்பாண நகரிலும், தமிழ்ப் பிரதேசத்தின் மற்ற நகர்களிலும் தெருவுக்குத் தெரு, சந்திக்குச் சந்தி, வீட்டுக்கு வீடு மக்கள் மதிப்போடும் ஆர்வத்தோடும் வரவேற்று மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கி ஆதரவு அளித்தனர்.

1965 சனவரி 26, 'இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழி’ என அறிவித்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்தத் திணிப்பை எதிர்த்து தமிழகம் கிளர்ந்து எழுந்தது. எந்த மாநிலத்துக்குள்ளும் புகுந்திராத ராணுவம் முதன்முதலாக தமிழகத்தில் நுழைந்தது. அந்த 65-ன் உணர்வுத் தீ, 50 ஆண்டுகள் கடந்தும் அணைந்துவிடவில்லை என்பதை, இந்த ஆண்டு தமிழகக் கல்லூரி மாணவர்களின் உணர்வெழுச்சியின்போது கண்டோம்!

கையளவு ரொட்டித்துண்டைத் தன் கடைவாயில் ஒதுக்கிய பாலகன் பாலசந்திரன் வியப்பில் நோக்கிய விழிகளில் மரணத்தை வைத்தது யார்? கைதுசெய்து பங்கருக்குள் வைக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுட்டுக் கொல்லப்படுகிறான். 'பாதுகாப்பு வளையம் - இலங்கையின் கொலைக்களம்’ என்ற தனது ஆவணப்படத்தில் இருந்து இந்தக் காட்சியை வெளியிட்ட கெலம்மெகரே, 'இப்போது ஐ.நா. மனித உரிமை அவையில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத்தான் எங்கள் கவனம்’ என்றார். 12 வயதுப் பாலகனின் சடலம் இந்திய அரசின் மனசாட்சியைத் தொட்டதோ இல்லையோ, இங்குள்ள மாணவர் இதயங்களில் நெருப்பை மூட்டியது. லயோலா கல்லூரி மாணவர்கள் கொளுத்திப் பிடித்த முதல் கங்கு, தமிழகம் நெடுக நெடுந்தீயைப் பற்றச்செய்தது.

எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல், அதேநேரம் அனைத்துக் கட்சிகளையும் அந்நியப்படுத்தி மேலெழுந்தார்கள் மாணவர்கள். இது முதல் சாதனை. மாணவ எழுச்சி, தன்னைத் தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிந்து விடுமோ என்ற நடுக்கத்தில், நடுவண் அரசின் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வேகவேகமாக விலகிவந்தது தி.மு.க. இது அடுத்த சாதனை. 'தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இனப் படுகொலையாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பன்னாட்டு விசாரணை நடத்திட ஐ.நா. முன்வர வேண்டும்’ எனும் சிறப்பான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தது மூன்றாவது வெற்றி. போராடும் தம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக, அவர்களின் பெற்றோரும் உடன் இருந்தது இதுவரை காணாத காட்சி!

ஈழத் தமிழருக்கு உண்மையாகக் குரல்கொடுக்க எவரும் இல்லை என்ற கொடுங்கனவின் காலத்தில் தமிழக மாணவர்கள் பிறப்பெடுத்தார்கள். ஆனால், தக்க தலைமை இல்லாமல் அந்தப் போராட்டம் ஒரு கட்டத்துக்குப் பிறகு தணிந்துவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கான சமூக ஆய்வையும் மாணவ சக்தி ஆராய்ந்திட வேண்டும். இங்கே தனித்தீவாக ஒடுக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் தலித்கள். ஒடுக்குமுறைத் தீவில் இருந்து சகமனிதர்களை விடுதலை செய்ய, போராட்டக் கருவியைக் கூர்மைப்படுத்த மாணவ சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும்.

அரசியல் இயக்கங்கள் போல நாற்காலிக் கனவுகளில் மாட்டிக்கொள்ளாமல், இங்குள்ள அடித்தள மக்களின் விடுதலைக்கும் களம் அமைக்க முன்வரவேண்டும் மாணவர்கள்!''


2013 டாப் 10 பிரச்னைகள் - சாதிய வன்முறை

''சாதியின் பெயரால் இளம் காதலர்களைக் கொன்று ரத்தம் குடிக்கும் அசுரர்களாக வலம்வருவதை சாதிப் பெருமையென முழங்குகிறார்கள், தமிழ்நாட்டின் சில சாதித் தலைவர்கள்.

தகவல் தொடர்புகள் பெரிதாக இல்லாத காலத்தில் அரிவாளும் தீப்பந்தமும் ஏந்தி கூட்டமாகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை வெட்டிச் சாய்த்து சேரிகளை எரித்தார்கள். இன்று தொழில்நுட்ப வசதியுடன் கைபேசியில் கான்ஃபரன்ஸ் அழைப்பும் குறுஞ்செய்தியும் அனுப்பி படை திரட்டி, வாகனங்களில் ஆயுதங்களுடன் சென்று சேரிகளை எரிக்கிறார்கள். குடியானவர்களைக் கொடூரர்களாக மாற்றத்தான் இந்த அரசியல் கட்சிகளா? இவைதான் நமது வரலாறா, பாரம்பரியமா? நம் தலைமுறைக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்ட வேண்டிய தமிழரின் வாழ்வியல் இதுதானா? தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காதலர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரம் உண்மையை உரக்கச் சொல்கிறது!

இளவரன்-திவ்யா காதல் திருமணத்தின் கொடூரத் துன்ப நிகழ்வுகளை, 2012 நவம்பரில் இருந்து 2013 ஜூலை வரை ஒரு திரைப்படம் போல நாம் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். 'நல்லவேளை... நமது வீட்டில் இது நடக்கவில்லை’ என்று ஆறுதல்பட்ட நாம், எவ்வளவு குரூரமானவர்கள்? திவ்யாவின் படிப்பை நிறுத்தி அவரது பெற்றோர் வேறு ஓர் இடத்தில் திருமணம் முடிக்க முயன்றதால்தான், திவ்யா வீட்டைவிட்டு வெளியேறி இளவரசனைத் திருமணம் செய்துகொண்டார். அது குற்றமா?

தன் கணவனுக்கு விரைவில் அரசு வேலை கிடைத்துவிடும், சிறிது காலம் கழித்து பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த திவ்யாவின் கனவைக் கொன்றது யார்? தனிப்பட்ட இரு குடும்பங்களின் பிரச்னையைத் தூண்டி கலவரத்தை மூட்டியது யார்? திவ்யாவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து, திவ்யாவின் தந்தை நாகராஜ் உயிர்போகக் காரணம் யார்? நாகராஜின் பிணத்தைக் கிடத்தி நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டியில் தலித்களின் 268 வீடுகளைக் கொள்ளையடித்து எரித்தவர்கள் யார்?

உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாயார் தேன்மொழியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் திவ்யா நேரில் ஆஜராகி, 'இளவரசனுடன்தான் வாழ விரும்புகிறேன்’ என்று சொன்ன பிறகும், அந்த வழக்கு தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னணி என்ன? இளவரசனைவிட்டு விலகும் முடிவை திவ்யா மனதில் விதைத்தது யார்? இளவரசன், தண்டவாளத்தில் பிணமாகக்கிடந்தது யாரால்? ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைச் சுதந்திரத்தில் தலையிட்டு அவளது வாழ்வை நாசமாக்கியவர்களுக்கு என்ன தண்டனை? தமிழக அரசு, ஏன் இத்தனை கொடூரங்களையும் கைகட்டி வேடிக்கைபார்த்தது? இதில் பொதுமக்களின் கருத்து என்ன? சமூக ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள், படைப்பாளிகள், கலைஞர்கள்... இதில் செய்ய வேண்டியது என்ன?

அன்று பெரியார், திண்ணைகள் தோறும் அமர்ந்து பகுத்தறிவை வளர்த்தார். அதே திண்ணைகளில் அமர்ந்து இன்று சாதிவெறியை வளர்க்கிறார்கள். பா.ம.க. தலைமையில் 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ அமைத்து மாவட்ட வாரியாகச் சாதித் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தியதோடு, தலித்களைத் தவிர்த்த மற்ற சாதிகளை உள்ளடக்கிய சமூக ஜனநாயக் கூட்டணியை தற்போது உருவாக்கியுள்ளனர். இது இந்திய ஜனநாயக அரசியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. சட்டம், நீதி என்பதை மதிக்காமல் சாதிப் பஞ்சாயத்து நடத்துதல், ஆதிக்கச் சாதியினரைத் திரட்டி வெறுப்பையும் பகையையும் வளர்த்து தலித்கள் மீது வன்முறையை ஏவுதல், பெண்களின் சட்டபூர்வமான சுதந்திரத்தில் தலையிட்டு உரிமைகளைப் பறித்தல், வன்கொடுமைச் சட்டத்தை தலித்கள் தவறாகப் பயன்படுத்துவதாகப் பொய்ப் பிரசாரம் செய்து சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்தல் என இவர்களின் வன்முறை பல வடிவங்களை எடுத்துள்ளது.

இவற்றின் மூலம் தமிழர்களின் அரசியல், சாதி அரசியல் மட்டும்தான் என நிறுவிக்காட்டி தேர்தலில் வாக்குகளைப் பெறுவது அவர்களின் திட்டம். ஆனால், தமிழர்கள் சாதியை மட்டுமே முன்னிலைப்படுத்தி எவரிடமும் இதுவரை ஆட்சி அதிகாரத்தைக் கையளித்தது இல்லை. அதனை சிலருக்கு அழுத்தமாகக் கற்றுத்தரும் எதிர்வரும் தேர்தல்!''


2013 டாப் 10 பிரச்னைகள் - தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு

க்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்கித் தருவதுதான் சட்டம் ஒழுங்கின் அடிப்படை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, கடந்த ஆண்டும் ஒரு பெரிய விடுப்பில் சென்றுவிட்டதுபோல் இருக்கிறது!

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவை ஒட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட மாவட்டங்கள் வன்முறைப் பூமியானது. பேருந்துகளுக்குத் தீவைப்பு, கல் எறிதல் எனப் பெரும் பதற்றம் நிலவியது. விழுப்புரம், செங்கல்பட்டு பிராந்தியங்களில் பேருந்துப் பயணம் மேற்கொள்வதே பெரும் சவாலாக அமைந்தது!

கடந்த ஆண்டு பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டனர். நாகப்பட்டினம் புகழேந்தி, வேலூர் டாக்டர் அரவிந்த், பரமக்குடி முருகன் என அந்தப் பட்டியல் நீண்டது. இந்தக் கொலைகளை அடுத்து யூகங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால்,  'சொந்தக் காரணங்களுக்காகவும், கொடுக்கல் - வாங்கல், ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவுமே அந்தக் கொலைகள் நடந்துள்ளன’ என விசாரணைக்குப் பிறகு தமிழக டி.ஜி.பி. அறிவித்தார்.

ஆந்திராவின் புத்தூரில் தீவிரவாதிகளை போலீஸார் பிடித்த செய்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அவர்களைப் பிடித்த தமிழகக் காவல் துறையினருக்கு விருதுகளும் சன்மானங்களும் வழங்கப்பட்டன. புத்தூரில் அல்ல, அதற்கு முன்னரே காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துவிட்டனர் என்றும் உண்மை அறியும் குழு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பத்து மணி நேரத் துப்பாக்கிச் சண்டை நடந்த நெருக்கடியான தெருக்களில் ஒரு துப்பாக்கித் தோட்டாவின் சுவடுகூட எந்தச் சுவறிலும் இல்லை. 'தீவிரவாதிகள்’ என்று கொல்லப்பட்டவர்களுடன் தமிழகக் காவல் துறையினர் சிரித்துப் பேசி மகிழும் புகைப்படங்களும் வெளியாகின.

சென்னையில் ஒரு மருத்துவரை சாலையில் வைத்து இருவர் வெட்டிக் கொன்றனர். சி.சி.டி.வி-யில் பதிவான அந்தக் கொலைக் காட்சி சில தினங்கள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டே இருந்தன. பழிக்குப்பழி, நடுவீதியில் கொலை என்பதெல்லாம் தமிழ் சினிமாவைப் போலவே, தமிழர் வாழ்விலும் ஒரு வாழ்முறை அம்சமாக மாறி வருகின்றன. சென்னையில் அற வழியில் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த விழித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்று சென்னைக்கு வெளியே எங்கோ 80 கி.மீ. தூரத்தில் இறக்கிவிட்டு வந்த செயல், ஒரு நாகரிக சமூகம் என்று நாம் நம்மை எப்படி அழைத்துக்கொள்வது என்ற கேள்விகளை ஆழமாக எழுப்பியது.

சிவகங்கை அருகே பாப்பன்குளத்தில் சுதந்திரத் தினத்தன்று காவல் துறையினர் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் சென்று அங்கிருந்த தலித்களின் 28 வீடுகளை இடித்து நொறுக்கி, அவர்களை நான்கு நாட்கள் ஊரைவிட்டு வெளியேறவிடாமல் சுற்றி வளைத்துச் சிறை வைத்தனர். இன்று வரை பாப்பான்குளம் மக்கள், மழைக்கும் வெயிலுக்கும் வானத்தைக் கூரையாக்கி நாட்களைக் கடத்திவருகிறார்கள்.

இப்படி... சட்டம்-ஒழுங்கு தறிகெட்டுக் கிடக்க, ஒரு சம்பவத்தில் மட்டும் தமிழகக் காவல் துறை தாங்கள் ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். முன்னாள் டி.ஜி.பி. வீட்டு முருங்கை மரத்தில் யாரோ கீரை திருடிவிட்டார்கள் என்று, அந்தக் கீரைத் திருடனைப் பிடிக்க 10 காவலர்கள் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது. இருவர் கைதுசெய்யப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த அவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை அதிகபட்ச சிறைத் தண்டனை கிடைக்க சாத்தியம் உள்ள (இந்தியத் தண்டனை சட்டம் 385- அச்சுறுத்தித் திருட முயற்சித்தல்) பிரிவில் கைதுசெய்யப்பட்டனர். முருங்கைக்கீரை திருடுவது அவர்களின் வாழ்க்கை லட்சியமா என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 3,231 கொலைகள் நடந்துள்ளன என்று குவியும் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சி. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்குப் பராமரிப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் காலம் வரும் என்றால், அதுதான் தமிழகத்தின் பொற்காலம்!''


2013 டாப் 10 பிரச்னைகள் - முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகம்

''தமிழ்நாட்டில் ஆக மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே அரசியல்வாதி, ஜெயலலிதாதான்.

ஒரு பக்கம் 'தமிழ்த் தேசியம்’ பேசி அதை மத்திய அரசுக்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டே, மறுபக்கம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தினார். 'இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது’ எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிவர், தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரை இடித்தார். கொளத்தூர் மணியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தார். ஆனால், இதில் விநோதம், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரை இடித்ததற்காக அதன் உருவாக்கத்தில் பங்காற்றிய பழ.நெடுமாறன், முதல்வரைக் கண்டித்துப் பேசாமல், 'போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்றார். கொளத்தூர் மணியின் இயக்கமோ, 'நாங்கள் அரசை எதிர்த்துப் போராடப்போவது இல்லை’ என அறிவித்தது. எப்போதும் முழங்கும் சீமான், எங்கே பதுங்கினார் என்றே தெரியவில்லை.

கூட்டணிக் கட்சிகளை ஜெயலலிதா பொருட்படுத்துவதே இல்லை. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவரது அழைப்புக்காகக் காத்துக்கிடக்கின்றன. இந்திய அளவில் அவரது 'இயற்கைக் கூட்டாளி’யான பா.ஜ.க-வுக்குச் செல்வாக்கு அதிகரிக்கிறது. அவரை எதிர்க்கவேண்டிய காங்கிரஸும் தி.மு.க-வும் பலமான கூட்டணிக்குக்கூட வாய்ப்பு இல்லாமல் பரிதவிக்கிறார்கள். இப்படி, அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எல்லாவற்றையும் சமாளித்தாயிற்று.

சாமானியர்கள் மீதான அவரது கெடுபிடியும் எந்த எதிர்ப்பும் இன்றி தொடர்கிறது. இந்தியாவின் எந்தப் பெரிய நகரங்களிலும் இல்லாத அளவுக்கு, சென்னையில் ஆயிரக்கணக்கில் குண்டர் சட்டக் கைதுகள் நடந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் அமைதி வழியில் போராடும் இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகள் இன்று வரை திரும்பப் பெறப்படவில்லை. தமிழகத்தில் எங்கு பிரச்னை என்றாலும் உடனடியாக 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாதக் கணக்கில் அது நீட்டிக்கப்படுகிறது.  திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் அருந்ததிய இன மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு அவர்கள் கிராமத்தை விட்டு இரண்டாம் முறையாக வெளியேறியுள்ளனர். தமிழகத்தில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுபவர்களின் சதவிகிதம் இந்திய அளவில் சரிபாதிகூட இல்லை.

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆறு தலித்கள் கொல்லப்பட்டதை அனைத்து மனித உரிமை இயக்கங்களும் கண்டிக்க, ஜெயலலிதா அரசு நியமித்த சம்பத் கமிஷனோ, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியது. தமிழர்கள் வாழ்வாதாரத்தையே சீரழிக்கும் மின்வெட்டுச் சிக்கலைத் தீர்க்க, ஜெயலலிதா வாக்களித்தபடி எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

'அம்மா உணவகங்கள்’ விரிவாக்கப்படுதல்,  10 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்படட் குடிநீர், நியாய விலைக் கடைகளில் கூடுதல் சலுகைகள்... ஆகியன மிகமிகச் சொற்ப மக்களுக்கு பலன் அளிக்க, அடிப்படைப் பொருள்களின் ஏகபோகமான விலையேற்றமோ ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவதிக்கு உள்ளாக்கியது. ஒரு பக்கம், 'தமிழகத்துக்கு நிதிப் பங்கீடு போதவில்லை’ என மத்திய அரசுக்குக் கண்டனக் கடிதங்களை அனுப்பிக்கொண்டே, கோடிகளை வாரி இறைத்து 'ஈராண்டு சாதனை’களைக் கொண்டாடினர்.

எதிர்க்கட்சிகளை ஜெயா அரசு எதிர்கொள்ளும் முறை எந்த வகையிலும் ஜனநாயக மரபுக்கு உகந்ததாக இல்லை. தே.மு.தி.க-வை உடைத்து நசுக்குவது, பா.ம.க. மீது போராட்டக் கால இழப்பீடு கேட்டு வழக்குப் போடுவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்குகளைப் போட்டு அலையவிடுவது, இடைத்தேர்தல்களில் அத்தனை அமைச்சர்களையும் களம் இறக்குவது, அமைச்சர்களை சகட்டுமேனிக்குப் பந்தாடுவது என 'குழந்தை கை பொம்மை’யாக தமிழகம் ஜெயலலிதாவிடம் சிக்கியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இடைத்தேர்தல்கள் கையாளப்பட்ட விதத்தை 'திருமங்கலம் ஃபார்முலா’ எனக் கிண்டல் அடித்தவர்கள் அதைவிட மோசமாக இன்று ஏற்காடு இடைத்தேர்தலில் நடந்துகொண்டனர்.

அதனால்தான் சொல்கிறேன், தமிழக அரசியல்வாதிகளில்... ஏன், இந்திய அரசியல்வாதிகளிலேயே ஜெயலலிதாதான் உச்சபட்ச மகிழ்ச்சியில் திளைக்கிறார்!''


2013 டாப் 10 பிரச்னைகள் - ஈழத் தமிழர் நலன் - ஆனந்த விகடன் - 2014-01-01

''இலங்கைத் தமிழர்கள், பூகோள, பொருளாதார, அரசியல் நகர்வுகளை அலசும் ஆழமான அறிவுத்தளத்தில் இல்லாமல் உணர்வுத்தளம் சார்ந்து, 'இந்தியா, தமக்கு எப்படியாவது நல்லதைச் செய்யும்’ என்று நம்பினார்கள். ஆனால், 'இந்தியா ஓர் ஆபத்பாந்தவன்’ என்ற கனவு, இந்திய ராணுவம், இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தோடு பெருமளவு சரிந்தது.

2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை, வெளிப்படையாக விடுதலைப் புலிகளை ஆதரித்த பிற கட்சித் தலைவர்களைவிடவும் கலைஞர் மு.கருணாநிதி மீது அவர்கள் பெருமளவு பரிவோடு இருந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளம் சார்ந்த நெருக்கம் அது. இறுதி யுத்தத்தில் அகப்பட்டு உயிர் பிழைத்திருக்கும் ஒவ்வொருவரையும் இன்றைக்குக் கேட்டாலும், கலைஞர் அந்த யுத்தத்தை நிறுத்திவிடுவார் என நம்பியிருந்ததாகச் சொல்வார்கள். 'ஒட்டுமொத்த இந்திய அரசியல் என்ற சட்டகத்தில் கலைஞருக்கு யுத்தத்தை நிறுத்தும் பலம் இருந்ததா?’ என்பது உரையாடலுக்கு உரியது. ஆனால், அப்படி ஓர் ஆற்றல் தனக்கு இருப்பதாக அவர் தனது உண்ணாவிரதம், பந்த், ராஜினாமா நடவடிக்கைகளின் மூலமாக நம்பவைத்துக்கொண்டிருந்தார்.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து வருகிற கரிசனைகள், இலங்கைத் தமிழர்களின் ஊடக மட்டத்தில் ஆராயப்படுகிறதே தவிர, பொதுஜனப் பரப்பில் எச்சரிக்கை உணர்வுடன் அல்லது கேலியாகவே பார்க்கப்படுகின்றன. இங்கே ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் சாமானிய மனிதர்களுக்கு ஈழ மக்களின்பால் இருக்கும் கரிசனமும் இரக்கமும் அப்பழுக்கற்றது; உண்மையானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மக்களின் உணர்வுகள் திரட்சிவடிவம் பெறும்போது, அவர்கள் சார்ந்திருக்கிற கட்சிகளின் குரலாகவே வெளிப்பட்டாக வேண்டியிருக்கிறது. ஓட்டு அரசியலில் ஈடுபடும் எல்லாக் கட்சிகளும், மக்களின் ஆத்மார்த்தமான உணர்வைப் பயன்படுத்தி தேர்தல் கால அறுவடை எதையாவது செய்யலாமா என முயற்சிக்கும்போதுதான், ஈழத் தமிழர்களின் மீதான அக்கறையின் மீது கபடமும் பொய்மையும் கலக்கப்பட்டுவிடுகின்றன.

'தேர்தல் கால அரசியலாகவே ஆகட்டும்... கட்சிகளால் மட்டும்தானே எதையாவது பெற்றுத்தர முடியும்?’ என்று ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. 'எதைப் பெற்றுக்கொடுத்தார்கள்?’ என்ற கேள்வியோடு இதை மிக இலகுவாகக் கடக்க முடியும். விரிவாக நோக்கினால், தெரிந்த பல உண்மைகளை இந்தக் கட்சிகள் மறைக்கின்றன என்பதை உணரலாம். இந்திய அரசு தன்னுடைய பிராந்தியத்தில், இன்னொரு நாட்டுக்கு தனது அரசியல் அமைப்பைவிட மேலான அல்லது சமமான அரசியல் அமைப்பைப் அனுமதிக்கப்போவது இல்லை. அது ஒருபோதும் சிங்கள அரசின் வகிபாகத்தை மீறியதாக, இலங்கை என்ற இறையாண்மைக்குப் புறம்பாக இருக்கப்போவதும் இல்லை. (அதுதான் மாகாண சபை. இந்தியாவின் இந்தப் பரிந்துரையிலும் அதிகாரங்களைப் பிடுங்கி தன்னுடைய மேலாதிக்கத்தை இலங்கை அரசு நிலைநாட்டி இருக்கிறது!) பூகோள நலன் சார்ந்த இந்த முடிவுகளில் இப்போதைக்கு, காங்கிரஸோ, பா.ஜ.க-வோ அல்லது மூன்றாவது அணியோ மாற்றங்களை ஏற்படுத்தப்போவது இல்லை. இவை எல்லாம் நடைமுறை உண்மைகள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 'ராஜபக்ஷேவுக்குத் தண்டனை’, 'காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகாதே’, 'ராணுவப் பயிற்சி அளிக்காதே’... முதலான அடுக்கடுக்கான தீர்மானங்கள், ஈழத்தின்பால் அன்புகொண்ட அவருடைய கட்சி சார்ந்தவர்களைப் பெருமிதமும் புளகாங்கிதமும் அடையவைக்கவோ அல்லது போட்டி கட்சிகளை எதிர்கொள்ளவோ பயன்பட்டனவே தவிர, அவற்றால் ஈழ மக்களின் அரசியல் வானில் ஒரு சிறு நம்பிக்கை நட்சத்திரமும் ஒளிரவில்லை.

தமிழ்நாட்டின் மாநில அரசியலில் ஈழமும் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு செலுத்துகிறது (ஈழம் மட்டுமே அல்ல) என்பதைத்தான் கடந்த தேர்தல்கள் சொல்லின. இந்த வெற்றி ஃபார்முலாவை நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரயோகித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் தேசியக் கட்சிகள் இருக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங், காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தார். 'இலங்கை அரசு போர்க்குற்றத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்’ என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். 'ஈழத் தமிழர்களும் நாங்களும் நல்ல நண்பர்கள்’ என்று ஆரம்பிக்கிறார்கள் பா.ஜ.க-வினர். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆயினும், 'தேர்தல் விருந்துகளில் மட்டும் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாய்களா நாங்கள்?’ என்ற கவலை ஒவ்வோர் ஈழத் தமிழர் மனதிலும் உண்டு!''


2013 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள் - ஆனந்த விகடன் - 2014-01-01

''தென் தமிழகக் கடலோரத்தில் மணல் வளத்தை வாரிக் குவிக்கும் தாதுமணல் நிறுவனங்கள் கழிவு நீராக வெளியேற்றும் ரசாயனக் கழிவால், கடல் நீர் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமான கடல் ஆமைகள், நண்டுகள், சிங்க இறால், கடல் பூச்சிகள் போன்றவை அதிவேகமாக அழிந்துவருகின்றன. சதுப்புநிலக் காடுகள், சவுக்கு, பனை, தென்னை மரங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, கல்லடைப்பு, தோல் நோய், மூளை வளர்ச்சி குன்றல் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு, கடற்கரைகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாமல் அகதிகளைப் போல வாழ்கிறார்கள் மக்கள்.

இவை எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் இவை.

ஒருமுறை அழிக்கப்பட்டால் மீளப்பெறவே முடியாத இயற்கையின் அரிய கொடையான தாதுமணலில், அணு உலை, உருக்குத் தொழிற்சாலை, விண்கல உபகரணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கார்னெட், இல்மனைட், ரூடைல், சிர்கான், மோனோசைட் போன்ற கனிமங்கள் உள்ளன. சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவான இந்தக் கனிமங்கள், ஆறுகளின் வழியாக இந்தக் கடற்படுகையில் சேகரமாகியுள்ளன.

இத்தகைய அரிய மணல் வளம்கொண்ட கடலோர நிலங்களைத்தான் அரசாங்கம் தனியாருக்குத் தாரைவார்த்திருக்கிறது. 'இருக்கன்துறை’ என்ற கிராமத்தில், 100 ஏக்கர் அரசு நிலம் ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கும், 40 ஏக்கர் நிலம் வெறும் 9 ரூபாய்க்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இரண்டு இட்லிகள் 40 ரூபாய் ப்ளஸ் டாக்ஸ் விற்கும் நாட்டில், 100 ஏக்கர் நிலத்தை வெறும் 16 ரூபாய்க்குக் குத்தகைக்குவிட்டுள்ளனர். இப்படி இந்தியா முழுவதும் இரும்பு, நிலக்கரி, பாக்சைட், கிரானைட், தாதுமணல் போன்ற கனிம வளங்கள் உள்ள 7.50 லட்சம் ஏக்கர் நிலங்கள், முதலாளிகளுக்கு சொற்பமான தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

நிலக்கரி, பருத்தி, தங்கம், காபி, மிளகு போன்ற இந்திய நாட்டின் வளங்கள் ஆங்கிலேயர்களால் கொள்ளைபோனதை எதிர்த்து நடந்ததுதான், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம். 'இயற்கை வளங்களைப் பணத்தால் மட்டுமே மதிப்பிடும் தனியாருக்கு, கனிமவளங்களை வெட்டியெடுக்கும் உரிமை வழங்கக் கூடாது’ என்பதே விடுதலைப் போரின் விளைவால் உருவான அரசின் கொள்கை. ஆனால், 90-களில் கொண்டு வரப்பட்ட தனியார்மயக் கொள்கையால் இது மாற்றப்பட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவிகிதம் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 100-க்கும் அதிகமான கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது. கோடிகளில் விலை வைத்து ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கற்களை இங்கு சொற்ப ஆயிரங்களுக்கு கைப்பற்றி வியாபாரம் செய்து வந்தன பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள். 27 ரூபாய்க்கு ஒரு டன் இரும்புத் தாதுவை அரசிடம் வாங்கி, சர்வதேசச் சந்தையில் 7,000 ரூபாய்க்கு விற்கிறார்கள் கனிம வளக் கொள்ளையர்கள். நாட்டின் கனிம வளங்களை அதிகமாகச் சுரண்டுவோருக்கு 'சிறந்த ஏற்றுமதியாளர்’ விருது தந்து கௌரவமும் சேர்க்கிறது மத்திய அரசு!

இந்தக் கனிமவளக் கொள்ளைக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் கொள்கைதான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் 'புதிய பொருளாதாரக் கொள்கை.’ நாட்டின் பெரும்பான்மை மக்களை அகதிகள் ஆக்கும் இந்தக் கொள்கையின் இரு முகங்கள்தான் தாதுமணல் கொள்ளையும், கூடங்குளம் அணு உலையும். இதை நேரடியாகத் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள தென் தமிழகக் கடலோர மக்கள், முழுவீச்சுடன் போராடி வருகின்றனர். எனினும், இது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. இயற்கை வளங்களைக் காப்பாற்றப் போராடுவது அனைத்து மக்களின் கடமை. இந்தப் போராட்டத்தில் அரசாங்கம் எதிரே வந்தால், அரசையும் எதிர்க்கலாம்; அரசமைப்பையும் மாற்றலாம். இதற்குத் துணைநிற்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனின், மனிதனின் கடமை!''


2013 டாப் 10 பிரச்னைகள் - மீனவர்களின் வாழ்வாதாரம் - ஆனந்த விகடன் - 2014-01-01

மிழக அரசின் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு பற்றிய தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று, இப்படி ஒரு காட்சித் தொகுப்பை முன் வைக்கிறது. கடற்கரையில் குப்பைகளும் சில கட்டுமரங்களும் தெரிகின்றன. கடற்கரை எங்கும் குப்பைகளால் மாசுபட்டுக்கிடப்பதாக அதனுடன் ஒரு விவரணை. அடுத்த காட்சியில் அதே கடற்கரை பளிச்சென்று இருப்பதாகக் காட்டப்படுகிறது. அதில் குப்பைகளுடன் கட்டுமரங்களும் காணாமல்போயிருக்கின்றன. 'கடற்கரையின் சுற்றுப்புறம் இப்படி இருக்க வேண்டும்’ என்கிறது பின்னணிக் குரல். 'கட்டுமரம், கடற்கரையின் சுகாதாரத்தைக் கெடுக்கும் குப்பை’ என்பதுதான் இது முன்வைக்கும் பிரசாரமா? மீனவர்கள் வன்முறையாளர்களாகவும் ரவுடிகளாகவும் திரைப்படங்களில் சித்திரிக்கப்படுகிறார்கள். மீனவர்களின் தொழிற்கருவிகளும் குடியிருப்புகளும் கடற்கரையில் பொருந்தாத பின்னொட்டுகளாக, தேவையற்ற வழிச்சுமையாகக் கட்டமைக்கப்படுகின்றன. தலைநகரவாசிகள் 'காற்று வாங்கிப்போக’ எழில் கொஞ்சும் மெரினாவை உருவாக்கும் முனைப்பில், அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களின் படகுகளை அகற்றும் நடவடிக்கையில் மாநில அரசு துப்பாக்கிச் சூடு வரை துணிந்தது நினைவில் நிழலாடுகிறது.

தமிழ்நாட்டின் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை நெடுக, 600 கடலோரக் கிராமங்களில் வாழும் 9 லட்சம் மீனவர்கள், இவர்களைச் சார்ந்து கரையில் தொழில்செய்யும் சில லட்சம் வணிகர்கள்... இத்தனை பேருக்கும் ஒரே வாழ்வாதாரம் கடல் மட்டும்தான். ஆனால், கடல் இவர்களுக்கு உரியதாக நீடிக்கிறதா? கடற்கரையில் வாழ இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?

கடலை வெறும் கேளிக்கை இடமாகவும் மீனை நுகர்பொருளாகவும் பாவித்துப் பழகிப்போன சமவெளி மனிதர்களுக்கு, கடலை, தாய்மடியாகவும் மீன்களை வாழ்க்கையின் ஜீவாதாரமாகவும் வரித்துக்கொண்ட கடல் பழங்குடிகள் ஒரு பொருட்டாகத் தெரிவதே இல்லை. எண்ணூரில் துறைமுகம் நிறுவ, கல்பாக்கத்தில் அணு உலை நிறுவ, கிழக்குக் கடற்கரைச் சாலை அமைக்க... என அங்கு இருந்து பெயர்த்து எறியப்பட்ட மீனவர்கள் என்னவானார்கள்? யாரேனும் சிந்தித்தார்களா?

வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஆழ்கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்கள் நீதிபெற மஜூம்தார் கமிட்டி (1976), முராரி கமிட்டி (1997) முன்வைத்த பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை பரிசீலிக்கவில்லை. ஆனால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மீன்வள மசோதா (2009), கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை (2011) போன்ற புதிய சட்டங்கள் வருகின்றன!

தமிழ் மக்களின் சாபமாகிப்போன மன்னார் கடலில் 1983-ம் ஆண்டுதொட்டு இன்று வரை 600-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஊனமாக்கப்பட்டோர், தொழில் உடமைகள் பறிமுதல் செய்து விரட்டப்பட்டோர் பல்லாயிரம் பேர். ஊனமுற்ற கணவர்கள், தந்தையர், சகோதரர்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்குமேல் சுமையாகின்றனர். தொழில் கருவிகள், படகுகள் பறிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட நடைப்பிணம்தான். இவ்வாறு பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அரசு என்ன செய்திருக்கிறது? பாதிக்கப்பட்டவர்கள் குறித்த குறைந்தபட்சப் புள்ளிவிவரங்கள்கூட நம்மிடம் இல்லை. நெடுஞ்சாலையில் விழும் தெருநாய்களின் பிணங்கள்போல தமிழக மீனவர்களின் உயிர்கள் மன்னார் கடலில் உதிர்ந்துகொண்டே இருக்கின்றன!

மீனவர்கள் எதிர்கொள்ளும் அத்தனைப் பிரச்னைகளுக்கும் அடிவேராக இரண்டு முக்கியமான கூறுகளைச் சுட்டிக்காட்டலாம்...

கடலோடிகளின் வாழ்க்கை பற்றிய அடிப்படைப் புரிதல் சமவெளி மக்களிடம் இல்லை. அரசும் ஆட்சியாளர்களும் கடலைத் தட்டையாகப் புரிந்துகொண்டுள்ளனர். இந்தத் தட்டையான அணுகுமுறைதான் கொள்கைத் தளங்களிலும் வெளிப்படுகிறது.

 கடலோடிகளிடையே அரசியல் தலைமை இல்லை. தொழில்வர்க்கமாக தங்கள் அரசியல் அடையாளத்தை நிறுவத் தவறிவிட்டனர். புறக்கணிக்கப்பட்ட பிற சமூகத்தினரோடு கை கோக்கவும் தயாராகவில்லை.

பொதுப்பரப்பில் மீனவர்களைக் குறித்த புரிதலை மேம்படுத்துவதுதான் ஆகப் பெரிய நிவாரணமே ஒழிய, அனுதாபங்களும் இலவசங்களும் அல்ல!''


2013 டாப் 10 பிரச்னைகள் - யானைகள் - ஆனந்த விகடன் - 2014-01-01

 ''மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், 'ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், 'யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களோ, பயிர் வயல்களில் நுழைந்துவிட்ட யானைகளை விரட்டியடிக்கிறார்கள். பயிர்கள் நாசமான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வேதனையில் யானைகள் மீது சினம்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. யானைகள் ஒன்றும் பொழுதுபோகாமல் ஊருக்குள் 'வாக்கிங்’ வரவில்லை. அவற்றுக்கு உணவு வேண்டும். அத்தனை பெரிய உடலின் முழுமையான இயக்கங்களுக்கு, ஒரு யானைக்கு நாளன்றுக்கு சுமார் 200 கிலோ உணவு தேவைப்படும். அந்த அளவு உணவு காட்டில் கிடைக்காதபோது, அவை நகர்ந்து வேறு இடங்களுக்கு வருகின்றன. இந்த எளிய உண்மையை நாம் தொடர்ந்து மறுத்துவருகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள். பொதுமக்கள் காடுகளுக்குள் நுழைவது பல அடுக்குகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. துப்பாக்கி உரிமங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழகக் காடுகளில் 'வேட்டை’ என்பது கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தில் வனத்துறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விலங்குகளின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருகவில்லை. ஒரு யானையின் மேய்ச்சலுக்குத் தோராயமாக 2 ஏக்கர் தேவை என்று வைத்துக்கொள்வோம். புதிதாக 300 யானைகள் உருவாகியுள்ளன என்றால், 600 ஏக்கர் தேவை. ஆனால், நம்மிடம் உள்ள காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால், பல இடங்களில் தேயிலை எஸ்டேட், ரியல் எஸ்டேட் என்று அவை அழிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், குறைந்த மேய்ச்சல் நிலத்தை அதிக யானைகள் பங்கிட்டுக்கொள்ளும்போது இயல்பாகவே உணவுப் போட்டியும் பற்றாக்குறையும் உருவாகும். இதனால் காட்டில் உணவு உள்ள மற்ற இடங்களைத் தேடி யானைகள் நகர்ந்து செல்கின்றன. அப்படித்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்கும், பயிர் வயல்களுக்கும் யானைகள் வருகின்றன. அப்படி அவை வருவது, கால் போன போக்கில் வருவது அல்ல.

மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் ஒரு யானை நள்ளிரவில் வந்து நின்றது. விசாரித்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது யானை வழித்தடமாக இருந்துள்ளது. யானைகளின் ஜீன்களில், அதன் பாரம்பரிய வழித்தடங்களின் பாதைகள் பொதிந்துள்ளன. பல தலைமுறைகளுக்கு முந்தைய வழித்தடத்தைக்கூட ஒரு யானையால் கண்டடைய முடியும். ஆனால், அந்த வழித்தடங்கள் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குள் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்களைக் கட்டி யானைகளின் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் குழம்பிப்போகும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவதும் நடக்கிறது.

எப்படி இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது... யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது என்றால் ஒன்று... அதன் வழித்தடம் மறிக்கப்பட்டதால் வழிமாறி வந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அதன் பாரம்பரிய வழித்தடத்தில் வருகிறது என்று பொருள். அவற்றை அப்படியே விட்டால், அதன்போக்கில் கடந்துசென்று, ஏதோ ஓர் இடத்தில் காட்டுடன் இணைந்துவிடும். மாறாக விரட்டிவிடுகிறேன் என்று வெடி வெடித்து விரட்டினால், வழித்தடம் குழம்பி மேற்கொண்டு அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும்.

இன்று தமிழ்நாட்டில் சுமார் 3,000 யானைகளும், கேரளாவில் சுமார் 2,000 யானைகளும், கர்நாடகாவில் சுமார் 1,500 யானைகளும் உள்ளன. இவை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உணவுக் கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன; நகர வேண்டும். அதுதான் ஆரோக்கியமான காட்டுக்கு அழகு. இதற்கு இடையூறு செய்யும் வன ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்புக்கு இதுவே முதல்படி!''

 



     RSS of this page