Home / Top10Misc

Top10Misc


2013 டாப் 10 மனிதர்கள் - ஆனந்த விகடன் - 2014-01-01

 நீதித் தமிழ்!

ழக்கறிஞராக 20 ஆண்டுகள், சீனியர் கவுன்சிலராக 10 ஆண்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்த சந்துரு, 2013 மார்ச்சில் ஓய்வுபெற்றார்.

ஏழு ஆண்டுகளில் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளித்தது, அர்த்தமுள்ள ஒரு சாதனை. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ள உத்தரவிட்டது, கோயில்களில் பெண்கள் பூசாரிகளாகப் பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தது, 'பெரியார் அனைவருக்கும் பொதுவானவர்’ என்று அவரின் படைப்புகளை பொதுவுடைமை ஆக்கியது என, தன் பணிக்காலம் முழுக்க நீதியை நிலைநாட்டினார் சந்துரு.

கிட்னி பழுதான டாஸ்மாக் ஊழியர் தொடுத்த வழக்கில், 'மக்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும் மறைமுகமாகப் பாழ்படுத்தும் டாஸ்மாக் நிறுவனம், மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. ஆனால், அதன் ஊழியரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள மறுப்பது தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி, அந்த ஊழியரின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

ஒரு நீதிபதியாகத் தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் சந்துரு. நீதிபதியாகப் பொறுப்பேற்ற மேடையிலேயே தன் சொத்துக் கணக்கை வெளியிட்டு, இந்திய நீதித் துறைக்கு முன்மாதிரி ஆனார். நீதிபதிக்கு முன்பாக வெள்ளைச்   ச¦ருடை ஊழியர்கள், செங்கோல் ஏந்தி 'உஷ்’ என்று சத்தம் எழுப்பிக்கொண¢டு செல்லும் நடைமுறையை நிராகரித்தார். தன் நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதியை 'மை லார்ட்...’ என்று அழைக்கத் தேவை இல்லை என்று உத்தரவிட்டார். ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைக்கூட மறுத்து, 'இத்தகைய சடங்குகள் வீண் செலவு’ என்று தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி விடைபெற்றார். வழக்காடிய கனல் காலங்கள், வழங்கிய கனல் தீர்ப்புகளைப் போலவே, ஓய்வுக்குப் பிறகான கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் அருமைத் தமிழன்... நம் பெருமைத் தமிழன்!

 'விண்’ணர்!

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்’ திட்டத்தின் தூண், சுப்பையா அருணன்! அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய வியூகம் வகுத்த வியத்தகு அறிவியல் தமிழன்.

'மங்கள்யான்’ திட்ட இயக்குநரான இவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் கோதைச்சேரி சொந்த ஊர். 'சந்திராயனில்’ திட்டத் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு... மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியவர் அருணன். மிகுந்த சிக்கலான, பல நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த 'மார்ஸ் மிஷன்’ திட்டத்தை மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் அருணன், இந்தியர்களின் அறிவியல் தீரத்தை பூமி தாண்டி மேலே, உயரே, உச்சியிலே பறக்கச் செய்கிறார்!

அற்புதம் அம்மா!

வியர்த்துக் களைத்த உருவம், காலில் ரப்பர் செருப்பு, தோளில் ஒரு துணிப்பை... ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் அடையாளம் இவைதான்.

22 ஆண்டுகளாக ஒற்றை மனுஷியாக தன் மகனின் உயிரைக் காப்பாற்ற உண்ணாது, உறங்காது ஊரெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார். பேரறிவாளனின் 'தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலை ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் தரப்பு அரசியல் நியாயத்தை உலகம் அறியச் செய்தார்.

இந்தியா முழுவதிலும் உள்ள 14 தூக்குக் கைதிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் மொத்தமாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், தன் மகனை நிரபராதி என்று நிரூபிக்க நம்பிக்கைக்குரிய காய் நகர்த்தல்களைச் செய்திருக்கிறார் அற்புதம் அம்மாள். அதில் விழுந்த கடைசிக் கல்தான் சி.பி.ஐ. முன்னாள் எஸ்.பி., தியாகராஜனின் வாக்குமூலம். ஒரு போலீஸ் அதிகாரியின் மனசாட்சியில் உறைந்திருந்த குற்ற உணர்ச்சியை, மெதுமெதுவாகக் கரைத்து வெளியே கொண்டுவந்தது அற்புதம் அம்மாளின் இடைவிடாத போராட்டம். இவரது உழைப்பின் பயனாக, மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்தில் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது!

குரு தெய்வம்!  

ஓர் ஆசிரியர் நினைத்தால் பள்ளிக்கூடத்தை மட்டுமா, அங்கு பயிலும் மாணவர்களை மட்டுமா... ஒரு கிராமத்தையே  மாற்றிக் காட்டலாம் என நிரூபித்திருக்கிறார் கருப்பையா. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையா, 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் சுகாதார வசதிகள் இல்லாமல், படிப்பறிவு பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருந்த கிராமத்தைத் தலைகீழாக மாற்றியிருக்கிறார். ஊரில் கூட்டம் நடத்தி இளைஞர்களை அணிசேர்த்தவர், அதிகாலையில் டார்ச் லைட்டுடன் சத்தம் எழுப்பிக்கொண்டே வலம்வந்து திறந்தவெளியை மக்கள் கழிப்பறையாகப் பயன்படுத்துவதைக் குறைத்தார்.

மானியம் பெற்று கிராமத்தில் கழிப்பறைகள் கட்டியவர், 'சுகாதாரமான கிராமம்’ என்று அந்தக் கிராமம் பரிசு பெறச் செய்தார். பள்ளி மாணவர்களுக்குத் தலைமைப் பண்புகளைக் கற்றுத்தந்தார். பள்ளியை கணினிமயப்படுத்தினார். இப்போது இந்தப் பள்ளியின் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வலைப்பதிவு எழுதுகின்றனர். பின்தங்கிய நிலையில் மண்ணாக மட்கிக்கிடந்த ஒரு பள்ளியை, குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்கவைத்த கருப்பையாவுக்கு, மேளதாளம் முழங்க 100 தட்டுகளில் சீர்வரிசை வைத்து, 'கல்விச்சீர்’ கொடுத்து நெகிழ்ச்சி நன்றி செலுத்தினர் நெடுவாசல் வடக்கு ஊர் மக்கள்!

தோள் கொடுக்கும் தோழி!

தேவகோட்டை அருகேயுள்ள 'ஓரிக்கோட்டை’ என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தனமேரி. சாதி ஆதிக்கத்தின் சகல கூறுகளாலும் ஒடுக்கப்பட்ட சந்தனமேரியின் மனதினுள் கனன்ற நெருப்புக் கனல், அவரை கம்யூனிஸ்ட் ஆக்கியது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கம் ஒன்றில் இணைந்தார்.

தேவகோட்டை, காளையார்கோயில், ஆவணம் கைகாட்டி பகுதிகளில் இவரது ஒருங்கிணைப்பில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு கணக்கு இல்லை. தன் சொந்த ஊரான ஓரிக்கோட்டையில் உள்ள தலித்கள், 'சாவுக்குக் கேதம் சொல்வது, பறை அடிப்பது, செத்த மாடு தூக்குவது... போன்ற அடிமை வேலைகளை இனி செய்ய மாட்டார்கள்’ என அறிவித்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 'உழைக்கும் பெண்கள் இயக்கம்’ அமைத்து அதன் மூலம் சுற்றிச் சுழலும் சந்தனமேரி, எந்த அதிகாரத்துக்கும் அரசுக்கும் அஞ்சாத மேரி!

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் வாலிபர்களே!  

விறுவிறு வளர்ச்சியில் தமிழ்த் திரையின் தவிர்க்க முடியாத நாயகர்களாக உயர்ந்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்!

'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்ற சாதாரண வசனம், விஜய் சேதுபதியிடம் இருந்து வரும்போது பன்ச் டயலாக் ஆகிவிடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத, சினிமாவுக்கே உரிய பில்டப் ஏதும் இல்லாத விஜய் சேதுபதி, இந்த ஆண்டு தொட்டது எல்லாம் ஹிட். 'நாளைய இயக்குநர்கள்’ அத்தனை பேரின் விருப்ப நாயகனாக இருக்கும் இந்த 'சுமார் மூஞ்சி குமார்’, சின்சியர் சினிமாக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதால், சினிமாவே ஹேப்பி அண்ணாச்சி!

குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!

சுயமரியாதைமிக்க பக்தர்!

தில்லை சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமைக்காகக் களம் கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வர் பாடிய தேவாரத்தை, உலக சைவர்களின் ஒரே கோயிலான சிதம்பரம் கோயிலில் பாடும் உரிமையை நீதிமன்ற உத்தரவு மூலம் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது முதலுக்கே மோசம் வந்திருக்கிறது. சிதம்பரம் கோயிலின் உரிமை தொடர்பான வழக்கில், '45 ஏக்கர் கோயிலும், கோயிலுக்குச் சொந்தமான 2,500 ஏக்கர் நிலமும் எங்களுக்கே சொந்தம்’ என்கிறார்கள் தீட்சிதர்கள்.

வழக்கு விசாரணைகளில் தமிழக அரசு ஒப்புக்குச் சப்பாணியாக வாதாடி, கோயிலை தீட்சிதர்களுக்கே விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தபோது... ஆறுமுகசாமி அதிரடியாக தில்லைக் கோயிலில் நுழைந்தார். கொட்டும் மழையில் சிற்றம்பல மேடையேறி 'சாகும் வரை தேவாரம் பாடும்’ போராட்டத்தை அறிவித்து, காவல் துறையினரின் நெருக்கடிகளைத் துணிவுடன் எதிர்கொண்டார். ஆறுமுகசாமியின் உடலுக்கு வயதாகலாம். அவரது சுயமரியாதைத் தாண்டவத்தை சிதம்பரம் மறக்காது!

தொல்லியல் வேந்தன்!

ந்திய தொல்லியல் துறை கொண்டாடும் மகத்தான மனிதர் பேராசிரியர் ராஜன். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜன், தன் ஆய்வு மாணவர்களோடு பழநி அருகே 'பொருந்தல்’ என்ற கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு, பல புதிய திறப்புகளை வழங்கியுள்ளது. ஒரு ஜாடியில் இருந்த இரண்டு கிலோ நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பரியம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நிரூபித்தது. அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் 'வயிர’ என்ற தமிழ் பிராமி எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழ் வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...’ என்பதை வெறுமனே இலக்கியப் பெருமிதமாகப் பேசித் திரிந்ததை வரலாற்று ஆவணங்களுடன் நிரூபித்த ராஜனின் பணி மகத்தானது!

எருக்கம்பூ கலகக்காரர்!

முழுநேர விவசாயப் போராளி சுந்தர விமலநாதன். காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளரான இவர், விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், துயர் துடைக்க முதல் ஆளாக நிற்பார். தூர் வாரியதாகச் சொல்லி துட்டு வாரியவர்களையும், குளம் வெட்டியதாகச் சொல்லி பைசா அள்ளியவர்களையும், மதகு கட்டியதாகச் சொல்லி மாடிவீடு கட்டியவர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்திவருபவர். 'சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு பூச்செண்டு கொடுப்பது எங்கள் வழக்கம். நீங்களோ மிகமிக மோசமாகச் செயல்படுகிறீர்கள். எனவே, உங்களுக்கு நினைவுப் பரிசாக இந்த எருக்கம்பூவைத் தருகிறோம்’ என்று சபைகளில் வைத்து அதிகாரிகளைக் கலங்கடிக்கும் கலகக்காரர்.

விவசாயக் கடன் தள்ளுபடியானாலும், விவசாய வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் என்றாலும் அங்கே சுந்தர விமலநாதன் ஆஜராவார். விவசாயிகளின் பிரச்னைகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட இவர், திருமணமே செய்துகொள்ளவில்லை!

மண்புழு விஞ்ஞானி!

டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னை, புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர். 'மண்புழு விஞ்ஞானி’ என்பதுதான் அவரது நிரந்தர அடையாளம். இப்போது உலக அளவில் மண்புழு உரம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகக் கடந்த 20 வருடங்களாக ஆய்வுசெய்து அப்போதே மண்புழு உரத்தை உருவாக்கியவர்!

மண்புழு உரத் தொழில்நுட்பத்தைக் குறிக்க 'வெர்மி டெக்’ என்ற வார்த்தையை உருவாக்கிய இவர், உலகம் முழுக்கப் பயணித்து மண்புழு உரத்தின் பெருமைகளை உரக்கப் பேசிவருகிறார். இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுபவர், பள்ளிக் குழந்தைகளுக்கு 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். அந்த அடிப்படை செய்முறை அறிவியலை தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பொறுப்பை மத்திய அரசு இவரிடமும் ஒப்படைத்துள்ளது. கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களைச் செழிக்கச் செய்திருக்கிறார் இஸ்மாயில்!



2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் - ஆனந்த விகடன் - 2014-01-01

மின்வெட்டு தொடர்பான கண்துடைப்பு நாடகங்கள் இந்த வருடமும் தொடர்ந்தன. தேங்காய் சட்னி அரைக்கக்கூட மின்சாரம் விநியோகிக்க முடியாமல் திணறியது மின்சார வாரியம். அனல், புனல் மின் நிலையங்கள் பல நேரங்களில் படுத்துவிட்டன. கூடுதல் மின்சாரம் கேட்ட தமிழக அரசுக்கு, 'பெப்பே’ காட்டியது மத்திய அரசு. சராசரி எட்டு மணி நேர மின்வெட்டு, மாநிலத்தில் வளர்ச்சி விகிதத்தை 4.6 சதவிகிதம் வரை குறைத்துவிட்டது. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, 'இது தற்காலிகத் தட்டுப்பாடு. கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்தேவை காரணமாக இந்த மின்வெட்டு’ என்று கூசாமல் பொய் சொன்னார். குளிர்காலத்திலும் கோக்குமாக்காக மின்வெட்டு தொடர, 'காற்று வீசவில்லை’ என்று கதறினார்!

'தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே, சந்தாதாரர்களின் டி.டி.ஹெச்-சில் படம் ஒளிபரப்பப்படும்!’ - 'விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்துக்கு கமல் திரி கிள்ள, திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, பணப் பஞ்சாயத்து என்று அதகளம் ஆரம்பம். இடையில் எதிர்பாராமல் புகுந்தது மதம். விசேஷத் திரையிடலில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க, 'விஸ்வரூபம்’ வெளியீட்டுக்கு விழுந்தது தற்காலிகத் தடை. 'என் படைப்புச் சுதந்திரத்துக்கு பங்கம் வந்தால், நாட்டை விட்டே வெளியேறுவேன்!’ என்று அந்த வினோதமான சூழலை கமல் வெகு கவனமாகக் கையாண்டார். 'விஸ்வரூபம் வெளியாகும் 524 திரையரங்குகளில் பாதுகாப்புக்கு என நியமிக்க 56,440 போலீஸ் நம்மிடம் இல்லை’ என்று 'விஸ்வரூபம்’ தொடர்பான நீண்ட விளக்கத்தில் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

தேசியக் கவனத்தை ஈர்த்த விவகாரம், ஏகப்பட்ட பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ஏழு காட்சிகள்’ நீக்கப்பட்டு வெளியானது. சர்ச்சை கொடுத்த ஓப்பனிங் ப்ளஸ் கமலின் ஆக்ஷன் அவதாரம் படத்துக்கு 'விஸ்வரூப’ வெற்றி கொடுத்தது!

'2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்க, உடனடியாக அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட, 'என் 30 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் இதைத்தான் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்’ என்று பூரித்தார் ஜெயலலிதா. காவிரிப் பாசன விவசாயச் சங்கங்கள், ஜெயலலிதாவுக்கு 'பொன்னியின் செல்வி’ விருது வழங்கின. தீர்ப்பு, அரசிதழில் இடம்பிடித்ததில் தி.மு.க-வின் பங்கு குறித்து அறிக்கை வாசித்தார் கருணாநிதி!

'அழகிரிக்கு யார் ஆதர்சம்?’ என்பதில் தொடங்கியது 'பொட்டு’ சுரேஷ§க்கும், 'அட்டாக்’ பாண்டிக்குமான போட்டி. இந்த இருவரின் முட்டல், மோதல் அடிக்கடி தீப்பிடிக்க, திகில் அடித்தது மதுரை. கைமீறிய விபரீதம் காரணமாக, தன் வீட்டின் அருகிலேயே காரில் வந்த 'பொட்டு’ சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத்தள்ளுவதற்காக பல மாதங்களுக்கு முன்னரே மதுரையைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படும் 'அட்டாக்’ பாண்டியை, இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறது தனிப்படை போலீஸ். இடையில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டுவிட்டதாகக் கிளம்பியது பரபர வதந்தி!

கருணாநிதி, சுமார் 450 கோடிகளை வாரியிறைத்து ஆசை ஆசையாக இழைத்துக் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, சிறப்புப் பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா அரசு. அதை எதிர்த்த வழக்கை, 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று நிராகரித்தது உயர் நீதிமன்றம். தி.மு.க-வின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரிக்க, பசுமைத் தீர்ப்பாயம் மருத்துவமனைக்கு பச்சைக் கொடி காட்ட உற்சாகமான ஜெயலலிதா, இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும், புனரமைக்கும் பணிகளுக்கென ஒட்டுமொத்தமாக 104 கோடிகளை ஒதுக்கினார்!

தி.மு.க-வில் தன் நட்சத்திர அந்தஸ்தை மெருகேற்றிக்கொண்டார் குஷ்பு. 'தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் தி.மு.க-வின் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குஷ்பு ஜஸ்ட் லைக் தட் சொல்ல, கொதித்துக் கிளம்பிய ஸ்டாலின் அணித் தொண்டர்கள், திருச்சி சென்ற குஷ்பு மீது செருப்பு வீச்சும், சென்னையில் அவர் வீட்டில் கல்வீச்சும் நடத்தினர். அப்செட் குஷ்பு, அமைதியாக இருந்தார். இதில் கருணாநிதியின் ஆதரவு குஷ்புவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட, நீறுபூத்த நெருப்பாக அடங்கியது போல இருக்கிறது விவகாரம்!

இது நிச்சயம் பகீர், திகீர் புள்ளிவிவரம்! 'கடந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலைக் கைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, சுமார் ஒன்பது லட்சம்’ என்றது தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அன்று, ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கலாம். இன்று, டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ 5 ரூபாய். கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவு, ஆட்கள் பற்றாக்குறை... போன்ற பல காரணங்கள், விவசாயிகளை 'டவுன்’ பஸ் ஏறவைத்துவிட்டது! ஏர் உழைப்பாளர்களின் கோரிக்கைகள், 'பார்’ நடத்தும் அரசாங்கத்தின் செவிகளை எட்டுவதாக இல்லை!

ஆசிட் விற்பனை தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வினோதினியின் உயிரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தன் காதலை ஏற்றுக்கொள்ளாத வினோதினி மீது, 2012 நவம்பரில் ஆசிட் வீசினான் சுரேஷ்குமார். முகம் முழுக்க வெந்து, கண் பார்வையைப் பறிகொடுத்த வினோதினி, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, நான்கு மாத சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மகளின் மரணம் அளித்த நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழல் காரணமாக, வினோதினியின் தாய் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்!

சென்னைப் பாட்டாளிகளின் பகல் உணவுக்குப் பந்தி வைக்க, ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக உதயம் ஆனது 'அம்மா உணவகம்’. இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்... என மலிவு விலை உணவகங்களைத் தொடங்கியது சென்னை மாநகராட்சி. அந்த மலிவு விலையும், தரமும், சுவையும் பாராட்டுகளைக் குவிக்க, எலுமிச்சை / கறிவேப்பிலை சாதங்கள் என மெனு நீண்டதோடு, உணவகங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயர்ந்தன. தொடர்ந்து 'அம்மா காய்கறி அங்காடி’, 'அம்மா குடிநீர்’ என மலிவு விலை பஜார்கள் தோன்றின!

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ முகாமின் மணல் மூட்டைகளுக்கு மத்தியில் பிஸ்கட் சாப்பிடும் படத்தையும், பிறகு அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் காட்சிகளை யும் வெளியிட்டது சானல் 4. அந்தப் படங்கள் தமிழ கத்தைக் கொதிகலனாக்கின. குறிப்பாக, தமிழகக் கல்லூரி மாணவர்கள், ஐ.நா.சபையில் தாக்கல்செய்யப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் வீதிக்கு வந்து போராடினர். போராட்ட அனலைத் தாங்க முடியாமல், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்!

2012 அக்டோபரில், சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து தப்பும்போது மரணமடைந்தார் மெரைன் இன்ஜினீயர் நிரஞ்சன். ஒரே மகனை இழந்து பரிதவித்து நின்ற நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி-பாரதி தம்பதியை, மகனின் படிப்புக்கு வாங்கிய கடன் சுமையும் அழுத்தியது. துயரம் தாளாமல் தங்களின் 28-வது திருமண நாளில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிரதீபா காவேரிக் கப்பல் நிர்வாகம் வழங்கிய இடைக்கால நஷ்டஈட்டுத் தொகையை நீதிமன்றம் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பணி அலட்சியத்தால் நஷ்டஈடு உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காததால், இரண்டு உயிர்கள் பறிபோயின!

துயரப் பெருங்கடலில் மிதக்கிறார்கள் தமிழகத் தில் வசிக்கும் 'இந்திய’ மீனவர்கள்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, வலை-படகுகள் பறிமுதல்... என அட்டூழியத்தின் உச்சத்துக்குச் சென்றன சிங்களக் கடற்படையின் வரம்புமீறல்கள். '1974-ல் கச்சத்தீவைத் தாரைவார்த்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் செல்லாது’ என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய, 'அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை கிடையாது’ என தன் பங்குக்கு அதிர்ச்சி அளித்தது மத்திய அரசு!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம், இரண்டு முழு ஆண்டுகளைப் பூர்த்திசெய்தது. இடிந்தகரை போராட்டப் பந்தலில் உறுதியுடன் அமர்ந்திருந்த மக்களின் உறுதியைக் குலைக்க, மணல் ஆலை அதிபர்கள் மீனவர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை மேற்கொள்ள, சமீபமாக இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 8 பேர் பலியானார்கள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மாற்ற முயற்சிக்க, விரக்தியானார் சுப.உதயகுமார். மறுபக்கம் கூடங்குளம் அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டதாக, அரசாங்கம் கூறுகிறது!

தொகுதி வளர்ச்சிக்காக, அம்மாவிடம் ஆசி வாங்க... என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ஏழு பேர் அடுத்தடுத்து ஜெயலலிதாவிடம் சரண்டர் ஆனார்கள். 29 எம்.எல்.ஏ-க்களோடு எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த விஜயகாந்த்துக்கு, இப்போது 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே. 'தே.மு.தி.க. வேட்பாளராகப் பெற்ற பதவியை ராஜினாமா செய்யுங்கள்’ என்று விஜயகாந்த் சொல்ல, 'தைரியம் இருந்தால் எங்களை நீக்குங்கள்’ என்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சொல்ல, வருட இறுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெடித்தது அதிர்வேட்டு!

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சட்டப் போராட்டம் 15 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. மார்ச் மாதம், அந்த ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேற, உடனடியாக ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டதோடு, ஆலையின் மின்சார இணைப்பையும் துண்டித்தது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றம், 'ஆலை இயங்கலாம்’ என்று இறுதித் தீர்ப்பு அளித்தது. அசுர பலமிக்க பன்னாட்டு ஆலையைக் கட்டுப்படுத்தும் சக்தி, மக்களின் போராட்டங்களுக்கோ, மாநில அரசுகளுக்கோகூட இல்லை என்பதை உணர்த்தியது ஸ்டெர்லைட்!

மீண்டும் சாதிக் குதிரையைத் தூண்டி அரசியல் சதுரங்கத்தில் வியூகம் வகுத்தார் டாக்டர் ராமதாஸ். மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பாக நடந்த சித்திரை முழு நாள் நிலவு மாநாட்டில், தலித் மக்களுக்கு எதிராக 'காடுவெட்டி’ குரு கக்கிய வசனங்கள் அச்சில் ஏற்ற முடியாதவை. ராமதாஸ், 'காடுவெட்டி’ குரு ஆகியோர் கைதாக, தொடர் கலவரங்களில் வட தமிழ்நாடே இரண்டு வாரங்கள் ஸ்தம்பிக்க, 1,027 பேர் மீது வழக்குகளைப் பதிந்தது காவல் துறை. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் சட்டத்தின்படி, 100 கோடி ரூபாய் அளவுக்கு பா.ம.க-விடம் நஷ்டஈடு வசூலிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் தந்தியடித்தன!

தந்திச் சேவை, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 160 ஆண்டுகளாக கடைக்கோடி இந்தியனிடமும் தகவலைக் கொண்டுசேர்த்த தந்தி சேவைக்கு, சமீபமாக மக்களிடையே வரவேற்பு குறைந்தது. வருடத்துக்கு 75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தந்தி சேவைக்கு, 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தது பி.எஸ்.என்.எல். நிறுவனம். தந்திக்கு 'தந்தி’யடித்த ஜூலை 15-ம் தேதி அன்று, தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட் டோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு 'இறுதித் தந்தி’ அனுப்பி வரலாற்றுப் பெருமை ஈட்டும் காகிதத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் அந்தஸ்த்தில் இருக்கும் குருநாத் மெய்யப்பன் மீதே சூதாட்டப் புகார் எழுந்தது, தேசிய சர்ச்சையானது! 'அந்த ஐ.பி.எல். அணி யின் உரிமையாளர் என்.சீனிவாசன், எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தலைவராக முடியும்?’ என்ற சர்ச்சையை நீதிமன்றம் சென்று முறியடித்தார் சீனிவாசன். 'கிரிக்கெட், வெறும் விளையாட்டு மட்டுமல்ல; கொள்ளைப் பணம் கொழிக்கும் வியாபாரம்’ என்று உணர்த்தியது இந்த விவகாரம்!

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரை உருவாக்கிய அண்ணாமலை அரசர், 1928-ம் ஆண்டு கல்வி நிலையங்களையும், 20 லட்ச ரூபா யையும் ஊராட்சி அமைப்பிடம் கொடுத்துவிட்டு, தன் வாரிசுகளை இணைவேந்தர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் விட்டுச் சென்றார். ஆனால், அவருடைய வாரிசுகள் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு எனக் கடும் நடவடிக்கைகள் எடுக்க, கடந்த ஓர் ஆண்டாக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறப்புச் சட்டம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது தமிழக அரசு!

நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று, எழும்பூர் சாலையோரத்தில் தூங்கிய 13 வயது முனிராஜைக் கொன்று, 10 வயது சிறுமி சுபாவைப் படுகாயப்படுத்தினார் ஷாஜி. மோகன் பிரீவரீஸ் நிறுவன உரிமையாளர் புருஷோத்தமனின் மகனான ஷாஜி, 20 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு, ரகசியமாக வந்து ஜாமீன் பெற்றுவிடலாம் என்று பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு வர, அங்கேயே அவரைக் கைது செய்தது போலீஸ். அதிகாரமும் பணமும் இருந்தால் ஆட்டம் போடலாம் என்ற எண்ணத்துக்கு செக் வைத்தது சென்னை போலீஸ்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் பெருமளவு மின்தேவையைப் பூர்த்திசெய்கிறது. இதன் 6.44 சதவிகிதப் பங்குகள் ஏற்கெனவே விற்கப்பட்ட நிலையில் மேலும் இதன் 5 சதவிகிதப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று 460 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசுக்கு, செபி பரிந்துரைத்தது. தொழிலாளர்கள் அதை எதிர்க்க, முதல்வர் ஜெயலலிதா அந்தப் பங்குகளை தமிழகத் தொழில் துறை நிறுவனங் களான சிப்காட், டிட்கோ வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். தமிழக அரசியல் கட்சிகளை அபூர்வமாக ஓர் அணியில் திரளவைத்த நிகழ்வு!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாகச் செயல்பட்ட கிரானைட் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பூட்டி சீல் வைத்தார். பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து அன்சுல் மிஸ்ரா திடீரென மாற்றப்பட்டார். கிரானைட் மோசடி தொடர்பாக பதிவான 74 வழக்குகளில், 44, பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பாய்ந்தன. தங்கள் நிறுவனத்தைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பி.ஆர்.பி., உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது!

திவ்யா, தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளவரசனைத் திருமணம் செய்ததை ஆதிக்கச் சாதிக்கும்பல் எதிர்த்தது. 'நாடகக் காதல்’ என்று டாக்டர் ராமதாஸ் கொச்சைப்படுத்திய அந்தக் காதலை, தன் உயிரை மாய்த்துக்கொண்டு வரலாற்றில் இடம்பெறச் செய்தார் தர்மபுரி இளைஞர் இளவரசன். திவ்யாவின் அப்பா நாகராஜ் தற்கொலை செய்துகொள்ள... திவ்யா, 'என் அம்மா எனக்கு முக்கியம்’ என்று இளவரசனைப் பிரிந்து அம்மா வீடு சென்றார். மனம் உடைந்த இளவரசன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இளவரசன் மரணம் குறித்து நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணைக் கமிஷனின் விசாரணை தொடர்கிறது!

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரிலும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும் மற்றும் சில இந்து அமைப்புகளின் பிரமுகர்களும் கொடூரமாகக் கொல்லப்பட, 'அரசும் போலீஸாரும், இந்து அமைப்பினரின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக’ பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஆடிட்டர் ரமேஷைக் கொலைசெய்தது 'போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுக்கர் சித்திக் ஆகிய தீவிரவாதிகள்தான் என்று போலீஸ் அறிவித்தது. அந்த நால்வரில் அபுபக்கர் தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்!

'டைம் டு லீட்’ தலைவா 'டைம் டு ஜெர்க்’ ஆனார்! 'தலைவா’ படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலால், திரையரங்க உரிமையாளர்கள் மிரள, 'தலைவா’ தமிழகத்தில் வெளியாகவில்லை. விஜய், கொடநாட்டுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருந்தும் பாராமுகம்தான். இதற்கிடையில் படத்தின் திருட்டு டி.வி.டி. அமோகமாக விற்க, படத்தயாரிப்பாளர் கதறி அழ, ஒருவழியாக, படத் தலைப்பில் 'Time to lead’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, வெளியானது. கடைசி வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் பிளாக் காமெடி!

'என் அப்பா, என் காதலைப் பிரிக்க முயற்சி செய்கிறார்’ என்று இயக்குநர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துருவோடு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்ச மடைந்தார். பரபர பஞ்சாயத்துகளைத் தொடர்ந்து, சந்துருவிடம் இருந்து 15 நாட்கள் பிரித்துத் தங்க வைக்கப்பட்ட தாமினி, இறுதியில் பெற்றோருடனேயே செல்ல முடிவெடுத்தார். 'நான் என் மகளின் காதலை எதிர்க்கவில்லை. காதலன் நல்லவன் இல்லை என்பதால், அவனை எதிர்த்தேன்!’ என்று தழுதழுத்த சேரன், ஊடகங்கள் முன் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது, இந்தக் காதல் அத்தியாயத்தின் க்ளைமேக்ஸ்!

சென்னையில் ஆட்டோக்களுக்கு, குறைந்த பட்சக் கட்டணமாக முதல் 1.8 கி.மீட்டருக்கு 25 ரூபாய் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 12 ரூபாய் என்றும் அறிவித்து நடைமுறைப்படுத்தியது தமிழக அரசு. மீட்டர் கட்டணம் வசூலிக்காமல் முரண்டுபிடிக்கும் ஓட்டுநர்கள் குறித்து புகார் தெரிவிக்க, பிரத்யேக எண்களை வழங்கினார்கள். ஆரம்ப தட்டுத்தடுமாற்றங்களுக்குப் பிறகு, ஒருவழியாக சென்னையில் அமலுக்கு வந்தது மீட்டர் கட்டணம். ஆனாலும், வலியுறுத்தி மீட்டரை இயக்கச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனஉறுதியில்தான் இன்னமும் தொக்கி நிற்கிறது!

குடிநீருடன் கழிவுநீர் கலப்பது சென்னையில் சர்வசாதாரணம். ஆனால், இந்த வருடம் கச்சா எண்ணெய் கலந்தது திகீர் களேபரம். வட சென்னை தண்டையார்பேட்டை பகுதி நிலத்தடி நீரில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கலந்தது. 'பாதிக்கப்பட்ட வீடுகளில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்ற வேண்டும். அதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு எண்ணெய் நிறுவனமே வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனாலும் தரமான குடிநீர் கிடைக்காமல் அவதியில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட சரத்குமார் தலைமையிலான அணி ஓர் ஒப்பந்தம் போட்டுவிட, விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் பின்ன ணியுடன் அரங்கேறிய சங்கத்தின் 60-வது பொதுக் குழுவில், நீலநிற ஜீன்ஸ், வெள்ளைச் சட்டை அணிந்துவந்த விஷால், ஆர்யா, ஜீவா, 'ஜெயம்’ ரவி... உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டியினர், காரசாரமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 'சங்கத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும்’ என்று பூசி மெழுகினார் சரத்குமார்!

கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கொலைவாளினை எடுத்த மூன்று கல்லூரி மாணவர்களால் அதிர்ந்தது தமிழகம். தூத்துக்குடி மாவட்டம் இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை, அதே கல்லூரி மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகியோர் துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றனர். சக மாணவிகளைக் கிண்டலடித்த அந்த மூவரையும் முதல்வர் சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அந்தக் கோபமே, கொலை செய்யத் தூண்டியது என்கிறது காவல் துறைக் குறிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கலந்துகொண்ட 6.6 லட்சம் பேரில் 27,092 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 'தேர்வு வாரியத்தின் அணுகுமுறை எதேச்சதிகாரமாக இருக்கிறது. கடந்த ஜூலையில் நடந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாளில் கணியன் பூங்குன்றனாரை 'கனியன்பூதுகுன்றனார்’ என்றும், இளங்கோவடிகளை 'இளதுகோவடிகள்’ என்றும் குறிப்பிட்டது உள்ளிட்ட 47 அச்சுப்பிழைகள். ஆகவே, அந்தத் தேர்வு முடிவை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, 'இதுபோன்ற எழுத்துப்பிழைகளுக்கு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ எனக் கடுமையாகக் கண்டித்தார்!

1913-ல் 'ராஜா ஹரிச்சந்திரா’வை, தாதா சாஹேப் பால்கே வெளியிட்டதில் தொடங்கும் இந்திய சினிமாவின் வரலாறுக்கு இது 100-வது ஆண்டு. 'சினிமா-100’ கொண்டாட்டத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து அரங்கேற்றியது தமிழக அரசு. ஆனால், முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையுமான கருணாநிதியின் படைப்புகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டது முதல் ரஜினி, கமலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது வரை ஏகப்பட்டக் குளறுபடிகள். மக்களின் வரிப்பணமான 10 கோடி செலவில் முதல்வரின் புகழ்பாடும் நிகழ்ச்சியாகவே முடிந்தது 'சினிமா-100’ விழா!

சென்னை திருவள்ளூர் டி.டி.நாயுடு மருத்துவக் கல்லூரி நடத்திவரும், 'அதிரடி-அடிதடிக் கல்வித் தந்தை’ டி.டி.நாயுடு. முதலாமாண்டு படிப்புக்கு மட்டும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியைப் பெற்றுவிட்டு, அடுத்தடுத்த வருட வகுப்புகளை டி.டி.நாயுடு நடத்த, 'எங்கள் எதிர்காலத்துக்குப் பதில் சொல்லுங்கள்!’ என்று கொந்தளித்த மாணவர்கள் மிரட்டப்பட்டார்கள். மற்ற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து டி.டி. கல்லூரி மாணவர்கள் கோட்டையை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல்... என்று போராடத் தொடங்க, மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டும் தமிழகத்தின் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட, வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார் டி.டி.நாயுடு!

தென்தமிழகக் கடற்கரையோர செந்நிற மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 'சட்டவிரோதமாகச் செயல்பட்டு, 96,120 கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறது’ என்று புகார் கிளம்ப, மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார், வைகுண்டராஜனின் நிறுவனங்களைச் சோதனையிட உத்தரவிட்டார். ஆனால், சோதனை நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆஷிஸ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்! வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சோதனைக்குப் பிறகு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது!

'அரசு வேலைவாய்ப்புகளில் அதிக இடஒதுக்கீடு’ உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைளை வலியுறுத்தி விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னையில் போராடினார்கள். கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து திடீர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மொத்தமாகப் பிடித்துச் சென்று புறநகர்ப் பகுதிகளிலும் சுடுகாடுகளிலும் இறக்கிவிட்டு வந்தது போலீஸ். திசை புரியாமல் பசியில் சுருண்டு விழுந்தவர்கள் முன்னிலும் தீவிரமாகப் போராடினார்கள். காவல் துறையின் அராஜகத்தை உயர் நீதிமன்றம், 'மனித உரிமை மீறல்’ எனக் கண்டிக்க, அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை நடந்திருக்கிறது!

'அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று ஒழித்தது இலங்கை. அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். 'இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்ட சபையும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, 'அரசியல் நெருக்கடியால் மன்மோகன் சிங் வரவில்லை!’ என்பது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கிண்டல்!

மதுரையில் அத்வானியின் பயண வழியில் பைப் வெடிகுண்டு வெடிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 'போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொலைகளில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் 'போலீஸ்’ பக்ருதீன் பிடிபட, ஆந்திராவின் புத்தூரில் பதுங்கியிருந்த மற்ற தீவிரவாதிகளைப்  பிடிக்கச் சென்றபோது இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பதிலடியாகத் தாக்கிய போலீஸார், அவர்களைக் கைது செய்ததோடு 17 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றினர்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து முறை பட்டம் வென்ற 'சென்னை கிங்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையிலேயே செக் விழுந்தது. நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நார்வே நாட்டின் கார்ல்சன் மேக்னஸிடம் 12 சுற்றுகள் கொண்ட போட்டித் தொடரில் 10-வது சுற்றிலேயே தோல்வியடைந்தார் ஆனந்த். 'நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’  என்று கூறினார் விஸ்வநாதன் ஆனந்த்!

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராகத் தீர்மானம்இயற்றிக்கொண்டே, ஈழத் தமிழர்களின் தியாகங்களைப் போற்ற தஞ்சையில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்தது தமிழக அரசு. முற்றத்துக்கு முன் இருக்கும் பூங்காவும் சுற்றுச்சுவரும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. இடிக்கும் பணிகளைத் தடுக்க முயன்ற பழ.நெடுமாறன் சிறையில் அடைக்கப் பட்டார். வைகோ, சீமான் ஆகியோர் ஆதரவாளர் களுடன் கூடி கோஷமிட்டார்கள். ஜாமீனில் வெளியான நெடுமாறன், 'சட்டரீதியாக இந்தப் பிரச்னையைச் சந்திப்போம்’ என்றார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய எஸ்.பி., தியாகராஜன்,  ''விசாரணையில் பேரறிவாளன், 'சிவராஜனுக்கு நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் சொன்னார். ஆனால், 'சிவராஜனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தேன்’ என்பதை மட்டுமே பேரறிவாளனின் வாக்குமூலமாக நான் பதிவு செய்தேன்!'' என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உரைத்தார். இளமையை சிறையில் தொலைத்த பேரறிவாளனின் வாழ்க்கையில் சின்ன நம்பிக்கைக் கீற்று!

சிங்கம்-II படத்தைப் போல ஒரு ரியல் திகில் தூத்துக்குடிக் கடலோரத்தில் அரங்கேறியது. அமெரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்த ஆயுதக் கப்பல் சீமன் கார்டு ஒகியா, தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் உலவிக் கொண்டிருந்தது. தமிழக போலீஸார் கப்பலைக் கைப்பற்றி, அதில் பயணித்த 35 பேரைக் கைதுசெய்தனர். கப்பலில் ஆபத்தான ஆயுதங்களும் 5,680 தோட்டாக்களும் இருந்தன. கைதுசெய்யப்பட்டவர்களிடம் முறையான ஆவணங்களும் ஆயுதங்களுக்கு முறையான அனுமதியும் இல்லாததால் கப்பல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது!

சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், சிலையை அகற்றக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. போக்குவரத்து போலீஸாரும் அதை ஆமோதிக்க, 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை’யினர் '2006-ம் வருடம் இதே சிலையால் இடையூறு இல்லை என தமிழக அரசு கூறியது. இப்போது ஆட்சி மாறியதால் அரசின் கொள்கையை மாற்றிவிட முடியாது’ என்று மனுத் தாக்கல் செய்தார்கள். விசாரணை முடிவை எதிர்நோக்கி இருக்கிறது சிவாஜி சிலை!  

இந்து மடங்கள் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையானார்கள். ''முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பிறழ்சாட்சியாகிவிட்டனர். சாட்சிகளும் பல்டி அடித்துவிட்டார்கள். எனவே, அனைவரையும் விடுதலை செய்கிறேன்'' என்றார் நீதிபதி முருகன். 'நீதி வென்றது, தர்மம் வென்றது’ என்று ஜெயேந்திரர் பக்தர்கள் குதூகலப்பட, கொல்லப்பட்ட சங்கர்ராமனின் மனைவி, மகனின் இழப்புக்கும் கண்ணீருக்கும் அர்த்தமே இல்லாமல் போனது காலக் கொடுமை!

மரணம் அடைந்தார் ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாள். இடைத்தேர்தலில் அவரது மனைவி சரோஜா அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட, தி.மு.க. தரப்பில் மாறன் போட்டியிட்டார். தமிழக அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்காடு தொகுதியில் முகாமிட, இரு தரப்பும் சளைக்காமல் செலவழித்தன. 'தேர்தல் பிரசாரத்தின்போது புதிய திட்டங்களை அறிவிப்பதில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கவன மாக இருக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திடம் குட்டு வாங்க... பரபர களேபரங்களுக்கு இடையில் 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா வென்றார்!  

தே.மு.தி.க. எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து வருட இறுதியில் தன் பெட்டியைக் கழற்றிக்கொண்டு விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன். 'கட்சித் தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தே.மு.தி.க-வுக்கான செல்வாக்கைக் குறைக்கிறது!’ என்று சொல்லி ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் தே.மு.தி.க-வின் அவைத் தலைவர் பொறுப்புகளில் இருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன். கட்சியில் அவைத் தலைவர் பொறுப்பையே நீக்கினார் விஜயகாந்த்!

தமிழக சிறைச்சாலைகளில் பல மாற்றங்கள் அரங்கேறின. சேலம், கோவை சிங்காநல்லூர், சிவகங்கை போன்ற ஊர்களில் அமைந்திருக்கும் திறந்தவெளிச் சிறைகளில் கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சென்னை புழல் சிறையில் கைதிகள் தயாரித்த ஆயத்த ஆடைகள், சோப், மெழுகுவத்தி, கொசுவலை ஆகியவற்றை விற்க அங்காடியும் தொடங்கப்பட்டது. சிறைவாசிகள் மாதத்துக்கு மூன்று முறை தன் குடும்பத்தினருடன் தொலை பேசி மூலம் பேசிக்கொள்ள, சிறைக்குள் தொலைபேசி வசதி அளிக்கப்பட உள்ளது!

தமிழ்நாட்டின் பெரிய கோயில்கள் அனைத்தும், இந்து சமய அறநிலையத் துறைக்கே சொந்தம். ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டும் 'எங்களுக்கே சொந்தம்’ என்கிறார்கள் தில்லை தீட்சிதர்கள். ஆனால், 'கோயில் அரசுக்கே சொந்தம்’ என, நீதிமன்றம் இருமுறை தீர்ப்பு அளித்துள்ளது. எனினும், தீட்சிதர்கள் தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில், வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டில். இறுதி விசாரணையில் தமிழக அரசு கண்துடைப்பாக வழக்கு நடத்தியதைக் கண்டித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர். வழக்கு, விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது!

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகள் டிசம்பரில் நடத்திய செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை முறையே கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வசம் அளித்தது. 'பிரதமராக என்னை முன்னிறுத்துவது கட்சியினரின் உணர்வு. அதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை’ என்றார். ஆனால், பெங்களூரில் நடைபெற்றுவரும் அவரின் சொத்துக்குவிப்பு வழக்கு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியிருப்பது ஜெ.வின் பிரதமர் கனவுக்குப் பெரும் சவாலாக அமையலாம்!

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரை இணைக்க பெரும் முயற்சி எடுத்துவருகிறார் தமிழருவி மணியன். விஜயகாந்த் மட்டும் மழுப்பிக்கொண்டிருக்க, வைகோவும் அன்புமணியும் டெல்லிக்குச் சென்று ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்கள். 'நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவராகத்தான் இங்குமங்கும் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று தமிழக பா.ஜ.க. தரப்பு தமிழருவி மணியனை உதாசினப்படுத்தினாலும், சளைக்கவில்லை இந்த 'காந்தி’ தொண்டர்!

நாடாளுமன்றக் கூட்டணிக்கு திராவிடக் கட்சிகளின் துணை கிடைக்காத விரக்தியில், புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் கூட்டினார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஓர் ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்பது மாமாங்க அதிசயம். ஆனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 'ஏன் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தலைவர்களைக் கூப்பிடலை?’ என்று வெகுண்டெழுந்து தங்கபாலு கோஷ்டி வெளிநடப்பு செய்ய, 'மேலிடப் பார்வையாளர்கள் சொல்றதைத்தானே செய்றேன்’ என்று கையைப் பிசைந்தார் ஞானதேசிகன்!




2013 டாப் 10 நம்பிக்கைகள் - ஆனந்த விகடன் - 2014-01-01

எழுச்சித் தமிழச்சி!

பாலகன் பாலச்சந்திரனின் மரணத்துக்கு முன்-பின்னான புகைப்படங்கள் தமிழகத்தில் உருவாக்கிய எழுச்சி, கல்லூரி மாணவர்களிடையே அனல் வேள்வியைப் பற்றவைத்தது. அந்த இளைஞர் பட்டாளத்தை, 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’வாக ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் திவ்யா.

அறச்சீற்றத்துடன் வெடித்த திவ்யாவின் முழக்கங்கள், தமிழகக் கல்லூரி வளாகங்களில் பிரளயத்தை உருவாக்கின. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திவ்யா, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்த கம்யூனிஸ்ட் களப்பணியாளர். பின்னாட்களில் மாணவர்களின் போராட்டக் கனல் தணிந்தபோதும், 'தமிழ்நாடு மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் இப்போதும் தமிழகம் முழுக்க இயங்கி வருகிறார் திவ்யா!

மிஸ்டர் கறார் ஐ.ஏ.எஸ்.!

டந்த செப்டம்பர் மாதம், திண்டுக்கல் சார் ஆட்சியராகப் பொறுப்பேற்றார் மதுசூதன ரெட்டி. அன்றே மணல் மாஃபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையைத் தொடங்கினார். 200-க்கும் அதிகமான கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து, கிடப்பில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கவைத்தார். மிரட்டல்களைப் புறந்தள்ளி மணல் மாஃபியாக்களைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தவரை, இரண்டு மாதங்களுக்குள் பெரம்பலூருக்குத் தூக்கியடித்தது அரசு இயந்திரம். இப்போது பெரம்பலூரில் குவாரி முறைகேடுகளைக் குறிவைத்து வளைத்துக்கொண்டிருக்கிறார் மதுசூதன ரெட்டி!

மண்ணின் மைந்தன்!

யற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை எதிர்த்து இடைவிடாமல் போராடும் வாஞ்சி நாதன், 'மனித உரிமைப் பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பின் மூலம், கடந்த ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்த வழக்கறிஞர். தென்தமிழகக் கடலோரப் பகுதியில் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளைக்கு எதி ராகச் செயல்படும் இவரது தலைமையிலான உண்மை அறியும் குழு, தாது மணல் ஆலைகளுக்குள் புகுந்து, அதன் செயல்பாடுகளை முதன்முதலாக உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயற்கை அன்னை மெச்சும் மண்ணின் மைந்தன்... இந்த வாஞ்சிநாதன்!

சகலகலா வல்லவன்!

கொத்தனார், சென்ட்ரிங் பணியாளர், பெயின்டர்... என கிடைத்த வேலைகளைச் செய்து ஜீவிக்கும் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி, இளம் தலைமுறையினருக்குப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தருவதை ஒரு தவமாகச் செய்கிறார். பரம்பரையாக சிலம்பம் சுற்றும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஏராளமானோருக்கு சிலம்பம், பறை உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் கற்றுத்தருகிறார். ஏழை மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், இதுவரை

10 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்திருக்கும் தங்கபாண்டி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று அரசு சார்பான விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டிருக்கிறார். தன்னலம் கருதாத துரோணாச்சாரியார்!

இனிய இசைஞன்!

.ஆர்.ரஹ்மான் இசைப் பட்டறையில் இருந்து வந்த 'எலெக்ட்ரிக்’ இசைஞன் சந்தோஷ் நாராயணன். ஆஸ்திரேலியாவில் ஆடியோ இன்ஜினீயரிங் படித்த திருச்சிப் பையன்.  அறிமுக 'அட்டகத்தி’யில் பின்னணி இசை, அதிரடி கானா என பின்னியெடுத்த சந்தோஷ், திகில் 'பீட்சா’விலும் திடுக்கிடவைத்தார். சிட்னி 'சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா’, ஆஸ்திரேலியா 'ஸ்டுடியோ 301’ என நவீன இசை வடிவங்களை தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் கலைஞன். 'காசு... பணம்... துட்டு... மணி மணி’ என கானாவுக்குப் புத்துயிர் கொடுத்த சந்தோஷின் இசை, ரோல்ஸ்ராய்ஸ் கார் முதல் ராயபுரம் கார்ஷெட் வரை தடதடக்கிறது... கலகலக்கிறது!

நியூ வேவ் படைப்பாளிகள்!

'சூது கவ்வும்’ நலன் குமாரசாமி - 'மூடர் கூடம்’ நவீன் ஷேக் தாவூத்... யதார்த்த மாந்தர்கள், பகடி வசனங்கள், எளியவர்களின் கொண்டாட்டங்களை திரையில் பதிவுசெய்த 'நியூ வேவ்’ இளைஞர்கள்!

'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு மிகக் குறுகிய இடைவெளிக்குள் படத்தை அனுப்பவேண்டிய கட்டாயத்தில், டெட்லைன் டென்ஷனில் தவிக்கும் ஒரு குறும்பட இயக்குநரின் கதையையே 'ஒரு படம் எடுக்கணும்’ என்று இயக்கி, அனுப்பிவைத்தார் நலன். அந்தப் படம் குவித்த 'வார்ம் வெல்கம்’ வரவேற்பு, நலனை சில்வர் ஸ்கிரீனிலும் சிக்ஸர் அடிக்கவைத்தது!

'மூடர் கூடம்’ திரைக்கதையில், 'நாலு திருட்டுப் பசங்களும் பார்ல குடிச்சுட்டு குத்தாட்டம் போடுற மாதிரி ஒரு டான்ஸ் சேருங்க’ என்று தயாரிப்பாளர்கள் கரெக்ஷன் சொல்ல... நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சொந்த பேனரில் 'மூடர் கூடம்’ உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு வெரைட்டி விருந்து படைத்தார் நவீன். தரமான சினிமா ரசனைக்கு உத்தரவாதம் அளிக்கும் இளைஞர்கள்!

மாற்றி யோசித்தவர்!

சுமார் 400 பேர்... விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் போராட்டங்களால் 12 நாட்கள் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடிய அவர்களை ஒருங்கிணைத்தவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் எது என்பதை கடைசி சில நிமிடங்களுக்கு முன்னர் முடிவு செய்வது, சிறுசிறுக் குழுக் களாகப் பிரிந்து பல்முனை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என காவல் துறையினரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது 28 வயது நாகராஜனின் ஒருங்கிணைப்பு. அந்தக் கோரிக்கைகள் தமிழக அரசின் உத்தரவாக மாறவிருப்பது, இவர்களின் வியூகம்-வியர்வைக்குக் கிடைத்த வெற்றி!

நீச்சல் ஏஞ்சல்!

ண்ணனின் நீச்சல் பயிற்சியைப் பார்க்கச் சென்ற ஜெயவீணாவுக்கும் நீச்சல் ஆசை தொற்றிக்கொள்ள, இரண்டரை வயதிலேயே குளத்துக்குள் குதித்துவிட்டார். இப்போது 15 வயதில் சீனியர்களுடன் தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்க வேட்டையாடி வருகிறார் ஜெயவீணா. 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் இண்டிவிஜுவல் மெட்லே பிரிவில் ஜெயவீணாவை வெல்ல இந்தியாவில் இப்போதைக்கு ஆளே இல்லை. 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை ஜெயவீணாவின் ஸ்ட்ரோக்குகளில் இருக்கிறது!  

கிராண்ட் மாஸ்டர்களின் மாஸ்டர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் பட்டம் வென்றபோது, அரவிந்தனின் வயது 12. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் அந்தப் பட்டம் வென்ற அரவிந்தன், காமன்வெல்த் போட்டியில் 'அண்டர் 14’ பிரிவில் தங்கம் தட்டினான். இந்த ஆண்டு ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற அரவிந்தன், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டித் தொடரில் 6 கிராண்ட் மாஸ்டர்களோடு மோதி சாம்பியன் பட்டம் தட்டியது மாஸ்டர் மூவ். விஸ்வநாதன் ஆனந்தை சமீபத்தில் வீழ்த்திய மேக்னஸ் கார்ல்சனின் அதிவிரைவாகக் காய்களை நகர்த்தும் பாணிதான் அரவிந்தனின் ஸ்டைலும்!

எள்ளல் ரசிகன்!

விஞர், புவியியல் ஆசிரியர் என இரு தளங்களிலும் சீரான படைப்பூக்கங்களை அளிக்கும் லிபி ஆரண்யாவின் இயற்பெயர் சரவணன். மதுரையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் லிபி எழுதிய 'தப்புகிறவன் குறித்தான பாடல்கள்’, 'உபரி வடைகளின் நகரம்’ ஆகிய இரண்டு நவீனக் கவிதைத் தொகுப்புகள் சூழலியல், தனியார்மயக் கொள்கைகள், பி.வி.சி. பைப் புழக்கத்தால் அதிகரிக்கும் உடல்நலக் கோளாறு... என சமகாலப் பிரச்னைகளைப் பேசும். தமிழ்நாடு பாடநூல் ஆசிரியர் குழுவின் 13 புத்தகங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கெடுத்தவர். கவிதைகளை, சிறுகதைகளை எள்ளல் நகைச்சுவையுடன் விமர்சிப்பதில் தனி பாணியை உருவாக்கியவர்.




2013 டாப் 25 பரபரா - ஆனந்த விகடன் - 2014-01-01

கலக நாயகனே!  

ருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்’. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...’ என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...’ என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல’ என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...’ என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது படம்’ என்று அடுத்தக்

கச்சேரிக்கு மைக் கட்டின முஸ்லிம் அமைப்புகள். 'படம் காமிக்கிறேன்... ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனா பிரியாணி செஞ்சு போடுவீங்களா?’ என்று லந்து கொடுத்தபடியே, 23 அமைப்புகளைக் கூட்டிப் படத்தைப் போட்டுக்காட்டினார் கமல். 'ரைட்டு, நாங்க சந்தேகப்பட்டது கன்ஃபார்ம்தான்’ என்று முஸ்லிம் அமைப்புகள் வெகுண்டெழ, கன்ஃப்யூஸானார் கமல்.

'சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரும்’ என்று படத்துக்கு கேட் போட்டது தமிழக அரசு. முன்னர் 'வேட்டி கட்டியவர்தான் பிரதமர் ஆக வேண்டும்’ என்று கமல் வைத்த ஐஸில்தான் அம்மா சூடானார் என செய்திகள் வர, 'படம் ரிலீஸ் ஆகலைனா நான் நாட்டை விட்டு வெளியில போயிடுவேன்’ என்று சென்டிமென்ட் ராக்கெட்டை கமல் ஏவ, ஃபீலிங்கானான் தமிழன். அதற்குள் படம் ஆந்திராவில் ரிலீஸாக, வண்டி கட்டிப்போய் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள் தமிழர்கள். முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் முடிவில் சிலபல கட்களுக்குப் பிறகு விஸ்வரூபம் வெளியாக, இந்தப் பஞ்சாயத்துகளாலேயே படம் ஹிட். ஆனா, இதெல்லாம் காமெடி இல்ல பாஸ்!

கடுப்பு எம்.ஜி.ஆர்.!

ண்டு முழுவதும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிக்கொண்டே இருந்தார் கேப்டன்.

'நீ போலிங் போடு... நீ ஸ்லிப்புக்குப் போ...’ என கேப்டன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'பக்கத்தூர்ல கபடி... நாங்க போறோமே...’ என சரமாரியாக சைக்கிள் மிதித்தார்கள் ஏழு எம்.எல்.ஏ-க்கள். அம்மா வேறு தாறுமாறாக அவதூறு வழக்குகளைப் போட்டுப் புரட்ட, 'ஆங்... அக்கக்காங்...’ என கோர்ட்டுக்கும் கோயம்பேட்டுக்குமாகக் குடை ராட்டினத்திலேயே இருந்தார். ஆனாலும் அசராமல் கூட்டத்துக்குக் கூட்டம் ஜெ-வைக் கொத்து பரோட்டா போட்டார்.

ராஜ்யசபா தேர்தலில் தனது கட்சி வேட்பாளரையே நிறுத்தியது ரொம்பத் தெகிரியம். உச்சகட்டமாக ஏற்காடு இடைத்தேர்தலைப் புறக்கணித்தவர், டெல்லி சட்டசபைத் தேர்தலில் 'பதிணொண்ணுல நிக்கிறோம்’ என பாண்டிபஜாரில் ஸ்வெட்டர் வாங்கியபோது எகிறியது டாஸ்மாக் விற்பனை. டெல்லியில் நின்ற அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் அந்து, 'மாமா டவுசர் கழண்டுச்சு’ என அலற, 'இந்தி நை மாலும்... ஆங்ங்...’ என ஜாலியானார் கேப்ஸ். கடைசியாக ஷ§கர் அண்ணாச்சி பண்ருட்டியாரும் வாக் அவுட் பண்ண, 'பட் பிரேமா ஹேப்பி அண்ணாச்சி...’ என தொகிறியவர், மகன் சண்முகபாண்டியனை வைத்து 'சகாப்தம்’ ஆரம்பித்து, தமிழகத்துக்கு அடுத்த டைம் பாஸ் ஆரம்பித்தார்!

கருத்து புத்திரன்!

னுஷ்ய புத்திரன்தான் 2013-ன் கருத்து கந்தசாமி! அண்ணன் பல்லு வெளக்கும்போதே கார் ஹார்ன் அடிக்கும். 'பேக்ட்ராப் வெள்ளை... நீங்க ஊதா கலர் டி-ஷர்ட்டோட வந்துருங்க...’ என யார்போன் அடித்தாலும், போக ஆரம்பித்தார் கவிஞர். ''தலைவா’ பிரச்னைல என்ன சொல்றீங்க...’, 'பூனைக்கண் புவனேஸ்வரி இப்ப என்ன பண்றாங்க?’ என யார் என்ன கேட்டாலும் முக்கால் மணி நேரத்துக்கு மெட்டீரியல் ரெடி பண்ணிப் பொளந்த மனுஷைப் பார்த்து மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் மிரண்டார்கள். சித்த வைத்தியசாலை சிவராஜ், ஆண்மை டாக்டர் அகமது, ஆசீர்வாதக் கூட்டம் எல்லாவற்றையும் லெஃப்ட்டில் அடித்து, ஃபுல் ஃபார்மிலேயே இருந்தார் புத்திரன்.

ஹிப்-ஹாப் தலையோடு மீடியம் மேக்கப்பில் மனுஷ் தோன்றினாலே, சுட்டி டி.வி-க்கு ஓடினார்கள் மக்கள். ஃபேஸ்புக்கில் பரதேசியாகவும் கங்காணியாகவும் பல ரூபங்கள் எடுத்து மனுஷ் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு பின்னிப் பிரித்தது ரெஸ்பான்ஸ். மனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு, சாரு நிவேதிதா மதியமே தியானத்தில் மூழ்க ஆரம்பிக்க, எஸ்.ரா-வும் ஜெயமோகனும் தீவிரமாக நோபல் பரிசுக்கு டிரை பண்ண ஆரம்பித்தார்கள். 'கலைஞர் 90’ நிகழ்ச்சியில் கருணாநிதியைப் பாராட்டிப் பேசியது, ஜாலி பேட்டி கொடுத்தது, ஒருகாலத்தில் தூர்தர்ஷனை ஆன் பண்ணினாலே ராஜீவ் காந்தி முகம் தெரிந்த மாதிரி இப்போது எல்லா சேனல்களிலும் தெரிவது... என இலக்கிய உலகின் பவர் ஸ்டார், இந்தக் கண்ணாடி அங்கிள்தான்!

'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே!

'நாட்ல எது நடக்குதோ இல்லையோ... இவர் நடக்கறது மட்டும் நடக்குது...’ என கிரேஸி மோகன் வகையறா வசனம் எழுதுகிற அளவுக்கு இந்த வருஷமும் வாக்கிங்கிலேயே இருந்தார் வைகோ. 'கட்சியைக் கலைச்சிரலாமா... கட்சியைக் கலைச்சிரலாமா...’ எனத் தினமும் 'மல்லை’ சத்யா போன் அடிக்க, 'பொறு தம்பி... பொறு தம்பி’ எனத் துண்டு முறுக்கலிலேயே இருந்தார் தாயகத் தலைவர். ஆளாளுக்கு அனல் அரசியலில் இருக்க, 'கம்பன் கழகத்துக்கு கால் டாக்ஸி சொல்லியாச்சா?’, 'நெடுமாறனை கண்ணதாசன் மெஸ்ஸுக்கு வரச் சொல்லுங்க’ எனத் தனி ரூட்டில் போய்க்கொண்டிருந்தார் வைக்ஸ்.

'இப்பிடியே இருந்தா எப்பிடி?’ எனக் கௌளி கத்த, 'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்று நடைப்பயணத்தைக் கிளப்பினார். அங்கே கிடைத்தது குபீர் பப்ளிக்குட்டி. வைகோ நடைப்பயணம் போகிற வழியில் காரில் வந்த ஜெயலலிதா, திடுதிப்பென்று இறங்கி வைகோவை விசாரிக்க, பரபரப்பானது பாலிடிக்ஸ். 11 நாளாக பூரண மதுவிலக்குக் காக நடைப்பயணம் மேற்கொண்ட வைகோவிடம், 'எதுக்காக இந்த நடைப்பயணம்?’ என்று ஜெயலலிதா கேட்க, பொறுப்பாகப் பதில் சொன்னார் வைகோ. முள்ளிவாய்க்கால் முற்றச் சுவர் இடிப்பு, கொளத்தூர் மணி கைது என்று ஈழ ஆதரவாளர்கள் மேல் ஜெ. அரசு எகிறி அடிக்க, வைகோ கொந்தளித்தது... கோபக் காமெடி!

ஹன்சிகாவுக்காக ப்ரே பண்ணுவோம்!  

ரு வெள்ளிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு டி.ஆர். வடமாலை சாத்திக்கொண்டிருந்தபோது, 'சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஆக்ரி பூக்ரி...’ என அதிகாரபூர்வ அரசாணை வெளியானது. 'மேட்டர் கன்ஃபார்மா..?

டீ கேன்சல்...’ என பிஸியானார்கள் சினிமா ரிப்போர்ட்டர்கள். 'ஆமாண்ணே... ஒரு மாரியா இருக்குண்ணே’ என சிம்பு மறுபடி லெக்பீஸ் கடிக்க, சிந்திக்க ஆரம்பித்தான் தமிழன். 'எங்களுக்குள்ள லவ்தான்... ஆனா அஞ்சு வருஷம் கழிச்சுதான் மேரேஜ்...’ என ஹன்சிகா ட்வீட்ட, தீவிர சிந்தனைக்குப் போனான் தமிழன். திகீரென்று காவி, ருத்ராட்சம், தலைப்பாக்கட்டோடு சிம்பு காசிக்கு ஆன்மிக ட்ரிப் அடிக்க, 'அகம் பயம்மாஸ்மி’ என அலறினார்கள் அகோரிகள்.

அஞ்சாவது நாள் சிம்பு-ஹன்சிகா கட்டிப்பிடித்து கொஞ்சுகிற பெர்சனல் போட்டோ இணையத்தில் ரிலீஸாக, 'ப்ரே பண்ணுவோம்... எல்லா சாமியும் நல்லா இருக்க ப்ரே பண்ணுவோம்’ என எகிறியது பல்ஸ். வருஷக் கடைசியில் சிம்புவுக்கு ஜோடி நயன்தாரா என கன்ஃபார்ம் செய்தி வர, 'தூக்கந்தான் பிரச்னை டாக்டர்...’ என ஆஸ்பத்திரிகளில் கும்மியது கூட்டம்!

லுல்லுலாயி ஷோ!

'டெசோ’தான் இந்த வருடத்தின் கைப்புள்ள காமெடி! போர் நடக்கும்போதெல்லாம் நாட் ரீச்சபிளில் இருந்தவர்கள், திடுதிப்பென 'டெசோ’ லைனில் வந்தனர். 'அய்யகோ தமிழா...’ எனக் கலைஞர் திடீரென டெசோவைத் தூசு தட்ட, தும்மியபடி பெரியப்பு வீரமணியும் வர, கலகலப்பானது அரசியல். 'ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் செய்யவேண்டும்’ என டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து, 'எல்லாரும் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்திருங்க... முற்றுகைப் போராட்டம்...’ என ஜாலியானார் ஸ்டாலின். 'டெசோ’ அறிவித்த பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. ''டெசோவா... ஏர்டெல்ல புது பிளான் பேரா..?'' என தமிழன் கேட்க, தி.மு.க-காரர்கள் கூட்டம் கூட்டமாக கல்யாண மண்டபங்களில் கூடிக் கும்மியடித்தார்கள். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது... ச்சும்மா லுல்லுலாயி!

கொம்பன் இறங்கிட்டான்!

'நூறாவதுநாள்’ திகில் படத்தைவிட, திகிலைக் கிளப்பியது ராஜகுமாரன் நடத்திய 'திருமதி தமிழின்’ 100-வது நாள் விழா. மன்சூர்அலிகான், ரித்தீஷ், பவர் ஸ்டார் வரிசையில் 'இந்த வருஷக் கோட்டா நாந்தேன்’ என்று பப்பரக்கா பவுடர் அடித்துவந்தார் ராஜகுமாரன். 'திருமதி தமிழ்’ படத்துக்காக ராஜகுமாரனும் தேவயானியும் கொடுத்த ரொமான்டிக் விளம்பரங்கள் சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாக நாசமாக்கின. ரத்த வெறி அடங்காத ராஜகுமாரன், கௌபாய் தொப்பி, கோட்டிங் பவுடர், லிப்ஸ்டிக் என எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தார். ஐஸ் கட்டியில் படுக்கவைத்து, லத்தி சொருகும் வைபவத்துக்குச் சற்றும் குறையாத சித்ரவதையாக அமைந்தது அன்னாரின் அலப்பறைகள்.

'திருமதி தமிழ்’ படம் பார்க்கப்போனவர்கள், 'கொம்பன் எறங்கிட்டான்... கொம்பன் எறங்கிட்டான்’ எனத் தெறித்து ஓடிவந்தார்கள். ரிசல்ட் கேட்டு 'சாவட்டும்... ஜனங்க சாவட்டும்...’ எனக் கொக்கரித்தன ராஜகுமாரனின் நாஜிப் படைகள். 'யாராச்சும் பட்டம் தாங்களேன்’ என கேட்டுப்பார்த்தவர், கடுப்பாகி அவருக்கு அவரே 'சோலார் ஸ்டார்’ பட்டம் கொடுத்துக்கொண்டார். 'பவர் போனாலும் சோலார் இருக்கும்ல’ என்ற இவரது கமென்ட்டுக்கு புழலில் இருந்த பவருக்கே புரையேறியது. 'தேவயானியை வைத்து இயக்க இருக்கும் அடுத்த படம்... 'உலக நாயகி’ என்று இவர் அறிவிக்க, வீடு வீடாக வசூலித்து வெள்ளை வேன் வைக்க ரெடியாகிறது தமிழகம்!

தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல!

து பப்ளிக்குட்டி காமெடி! தொடர்ந்து இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் கொலைகளுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று காவிக் கட்சிக்காரர்கள் எகிற, அந்த கேப்பில் விளம்பரக் கெடா வெட்டினார்கள் சில அல்லுசில்லுகள். கன்னியாகுமரியில் அனுமன்சேனாவைச் சேர்ந்த ஒருவரை யாரோ கடத்திவிட்டார்கள் என்று பரபரப்பு கிளம்ப, கடைசியில் அவரே டெம்போ புக் பண்ணி கடத்தல் நாடகம் ஆடியது அவுட்டானது. கோவையில் ராமநாதன் என்கிற பா.ஜ.க-காரர் தன் வீட்டுக்குத் தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, 'தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல... குண்டு வீசிட்டாப்ல’ என்று புகார் சொல்ல, 'அந்தத் தீவிரவாதியே நீங்கதான் சார்’ என்று கண்டுபிடித்து ராட்டி தட்டியது போலீஸ். திண்டுக்கல் பி.ஜே.பி-காரர் பிரவீண்குமாரும் சொந்த செலவில், தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிக் கைதாக, 'அத்வானிகூட மதுரைக்கு வரும்போது அவரே பைப் வெடிகுண்டு பார்சல் வாங்கி வந்திருப்பாரோ?’ என பலரும் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். ஜாமீனில் வந்த கோவை ராமநாதனை பா.ஜ.க-வைச் சேர்ந்த விஜயகுமாரும் ரமேஷ§ம், 'கட்சிப் பேரைக் காலி பண்ணிட்டியேடா’ என்று கத்தியில் பின்னடிக்க, இப்போது மூவரும் ஜெயிலில் பாத்ரூம் போகிறார்கள். 'அட நான்சென்ஸ்களா...’ என டென்ஷன் பண்ணியது இந்த டெரர் காமெடி!

டைம் டூ ஹைட்!  

மலுக்கு 'விஸ்வரூபம்’ என்றால் விஜய்க்கு 'தலைவா’! 'டைம் டூ லீட்’ என கேப்ஷன் போட்டு போஸ்டருக்குக் கஞ்சி காய்ச்சியபோதே, ஆரம்பித்தது பஞ்சாயத்து. 'தம்பி... நீதான் அடுத்த சி.எம். ராம்ராஜ்ல பத்து வெள்ளை வேட்டி-சட்டை சொல்லியாச்சு. எல்லாம் சுத்தபத்தமாத்தான இருக்கு..?’ என சாலிகிராமம் வீட்டில் எஸ்.ஏ.சி. சலம்பியதை உளவுத்துறை குறிப்பெடுத்து, வருங்கால பிரதமருக்கு அனுப்ப, 'ஆல்ட்... டெலிட்... கன்ட்ரோல்... ஓவர்...’ என வைப்ரேஷனிலேயே இருந்தன வயர்லெஸ்கள். தியேட்டர்காரர்கள் கேட்டை மூடினார்கள். படம் ரிலீஸ் ஆகவே இல்லை. திருட்டு டி.வி.டி-கள் ரவுண்டு கட்டின. 'உண்ணாவிரதம் இருப்போம் தலைவா...’ என ரசிகர்கள் ஊறுகாய் பாக்கெட் கடித்தனர். 'ரைட்டு... வெஜ் தனி... நான்வெஜ் தனி...’ எனப் படக்குழு மனு போட, அதில் பஜ்ஜி மடித்தார் கமிஷனர். கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க விஜய்யும் எஸ்.ஏ.சி-யும் போனார்கள். 'உள்ளே விடலையாம்...’ என ஸ்கூப்புகள் வர, அமைதி காத்தது விஜய் தரப்பு. ஒருவழியாக கேப்ஷனைக் காவு கொடுத்து 'தலைவா’ வெளிவரும்போது, தமிழ்நாட்டில் பாதிப் பேர் டி.வி.டி. பார்த்திருந்தார்கள். இடையில் 'புரட்சித்தலைவி ஆட்சி... பொற்கால ஆட்சி’ என்று விஜய் கைகட்டிப் பேட்டி தந்தது... துன்பியல் நகைச்சுவை!

அப்போ கம்பி... இப்போ எம்.பி.!

'போன வருஷம் கம்பி... இந்த வருஷம் எம்.பி.’ என எகிறிய கனிமொழியின் ராஜ்ய சபாக் கூத்துகள், அலேக் அரசியல் காமெடி. திஹாரில் இருந்து திரும்பிய கனிமொழி, 'கொசு கடித்தது... வாழ்க்கை புரிந்தது...’ என உணர்ச்சிப் பேட்டிகளில் பிஸியானார். 'கனியை எம்.பி. ஆக்குங்க...’ என ராஜாத்தியம்மாள் 'அன்பாக’ எடுத்துச் சொல்ல, கியர் தட்டிக் கிளம்பினார் கருணாநிதி. ஐந்து ராஜ்ய சபா சீட்களில் அ.தி.மு.க-வே லம்படிக்க, விஜயகாந்தை வளைக்க கலைஞர் மேப் போட, 'அக்காங்.... நாங்களும் குதிப்போம்ல...’ என கேப்டனும் வேட்பாளரை நிறுத்தினார். 'மாணவர் போராட்டத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிவிட்டது’ என்ற கலைஞர், 'கனிமொழிக்கோசரம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தா... ஓகே...’ எனப் பொறி போட்டார். காங்கிரஸும் ஆதரவு அல்வா நீட்ட, 'தப்பாச்சே...’ என மண்டை காய்ந்தான் தமிழன். தே.மு.தி.க-வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 7 பேரும், 'நெல்லுச்சோறு... கூதலுக்குக் கம்பளி’ என அ.தி.மு.க. பக்கம் கிளம்பிப் போக, அந்த கேப்பில் கனிமொழி எம்.பி. ஆக, கேம் ஓவர்!

அலாப் பலாக் அமைச்சரவை!  

மிழக அமைச்சரவை மாற்றம்தான் இந்த வருடத்திலும் இடியாப்பக் காமெடி! அமாவாசை வந்தாலே அலற ஆரம்பித்தார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். 'யாரும் தூங்கக் கூடாது... பிரம்ம முகூர்த்தத்துலகூட தூங்கக் கூடாது’ என அத்தனை பேரையும் ரவுண்டு கட்டி அடித்தார் மம்மி. 'இப்போது இங்கு வந்திருக்கும் பால்வளத் துறை அமைச்சர் அவர்கள்...’ என அறிவித்துக் கொண்டிருக்கும்போதே 'டிஸ்மிஸ்’ எனத் துண்டு சீட்டு வந்ததில், கிறுகிறுத்தது அமைச்சர்கள் ஏரியா. பள்ளிக் கல்வி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைகைச்செல்வன், ஆசிரியர் தினத்தன்று அப்பீட்டு. 'ஓ.பி.எஸ்-க்குத் தண்ணி தெளிக்கப் போறாங்க...’ என வதந்தி கிளம்ப, அக்குளில் பவுடர் அடிக்காமலே இருந்தார் பணிவுப் பன்னீர். ரைட் சைடில் இன்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்டில் வண்டியை வளைக்கிற ஜெயலலிதா, ஓ.பி.எஸ்-க்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்ததுதான் ஜாலி ட்விஸ்ட்!

ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது!

சென்ற வருடம் வாங்கிய மெடல்களோடு இந்த வருடம் அமெரிக்காவில் ரெஸ்ட் போடப் போனார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுரை திரும்பியவரை, கோரிப்பாளையம் சிக்னலில் நிறுத்திய ட்ராஃபிக் போலீஸ், 'ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது...’ என அதட்ட, நிலவரம் புரிந்தது அண்ணனுக்கு. ஊரில் ஒரு ஃப்ளெக்ஸ் இல்லை... பேனர் இல்லை. 'சாம்பவி மகாமுத்ரா க்ளாஸ் போகலாமா..?’ என யோசிக்கும்போதே, 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத் தள்ளினார்கள். உடனே டிபார்ட்மென்ட் தொப்பி மாட்டிக் கிளம்ப, 'அட்டாக்’ பாண்டி அப்ஸ்கான்ட் ஆனார். 'அடுத்து என்ன நடக்குமோ?’ என்று திகில் திருவிழா கொண்டாடினார்கள் மிச்சமிருக்கும் அழகிரி ஆதரவாளர்கள். இந்த நிலவரக் கலவரமே புரியாமல் துரை தயாநிதி, உதயநிதி, அருள்நிதி சேர்ந்து கொண்டு 'வலைபாயுதே’விலேயே இருக்க, 'நாங்க காட்டுமிராண்டிகதேன்... இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கு என்ன பண்ணீக..?’ என கடுப்ஸிலேயே இருந்தார் அழக்ஸ். ஸ்டாலின் ஃபீவரில் தி.மு.க-வில் நடந்த பொதுக்குழு, செயற்குழு எதற்கும் போகாமல் அண்ணன் காட்டியது தனி சர்க்கஸ்!

காமெடி காம்ரேட்!

''பொருள் முதல் வாதம் தோன்றியதே போயஸ் கார்டனில் இருந்துதான். மூலதனத்தை எழுதியது சசிகலா. ரஷ்யாவின் தலைநகரம் கொடநாடு...'' என்ற அளவுக்குத் தலைவிரித்தாடிய தா.பாண்டியனின் காமெடிகள்தான் இந்த வருடத்தின் கெக்கிளி பிக்கிளி. அ.தி.மு.க. ஆதரவுடன் ராஜ்ய சபா எம்.பி-யைப் பெற்றுவிடலாம் என்ற கனவில் தகர டப்பா அடித்தபடி கயிற்றில் நடந்த தா.பா-வைப் பார்த்து, தோழர்கள் எல்லாம் கோபத்தில் உண்டியல் உடைத்தார்கள். அந்த அளவுக்கு அறிவிக்கப்படாத அ.தி.மு.க-காரராகவே வலம் வந்தார் தா.பா. 'கூடவே சுத்துறாரே செவ்வாழை... அவருக்குத்தான் சீட்டு கிடைக்கும்’ என்று நினைத்துக்கொண்டிருக்க, தோழர்களோ டி.ராஜாவையே மறுபடியும் வேட்பாளர் ஆக்கினார்கள். ''எங்களது கட்சிக்குள் எந்த மோதலும் நடக்கவில்லை'' என திண்ணையில் தன்னிலை விளக்கம் கொடுத்த தா.பா., கொல்லைக்குப் போய் கதறியது... ஃபுல் மீல்ஸ் காமெடி!

பன்ச்சரான பவர்!

போன வருடம் பொலிகாளையாகத் திரிந்த சீனியை, இந்த வருடம் காயடித்தது காவல் துறை. ஒன் ஃபைன் டே தலைவனை போலீஸ் பொடனியில் அடித்து புழலுக்குக் கொண்டுபோக, கொந்தளித்தது தமிழகம். 'நான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன். என்னை வெளியில விட்டா, ஒரே வருஷத்துல  எல்லாக் கடன்களையும் வட்டியோட திருப்பித் தந்துடுவேன்!’ என ஜெயில் பேட்டிகள் தட்டி அலுமினியத் தட்டு அடிகள் வாங்கினார் பவர். பவர், பயன்படுத்திய காரின் பதிவு எண்ணில் முறைகேடு என விருதுநகர் ஆர்.டி.ஓ. புகார் கொடுக்க, திடுதிப்பென்று வடநாட்டு போலீஸ் வந்து பிடித்துச் செல்ல... பவரின் புகழ் எல்லை தாண்டியது. திகாரிலும் களி தின்றவர், 'சிம்பு, ஆர்யா, சந்தானம்லாம் என் தம்பிங்க...’ எனக் கோணியில் ஆள் பிடித்தார். எல்லோரும் தெறித்து ஓட, பவருக்கு ஃப்யூஸ் போனது. இவ்வளவுக்குப் பிறகும் விக்கும் கலர் சட்டைகளும் மாட்டிக்கொண்டு வந்து, 'ரஜினி போன் பண்ணார்ல...’ என கார் பேட்டி குடுக்குதே... அதான் பவரு!

சங்கத்து ஆள அடிச்சது எவன்டா?

2013-ல் சினிமாவில் எல்லா சங்கங்களுமே அபராதத்தில்தான் ஓடின. கேயார் - எஸ்.ஏ.சி-யின் சங்கச் சடுகுடுகள்தான் டாப் கியர். அணிலின் அப்பா மீது கேயார் குரூப் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றி பெற்றாலும், 'எந்திரிக்க மாட்டேனே...’ என ஃபெவிகால் போட்டார் எஸ்.ஏ.சி. கமிஷனர் ஆபீஸுக்குக் கூட்டத்தோடு போய் மனு கொடுத்தார் கேயார். கோர்ட் மேற்பார்வையில் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட, இங்கிட்டு தாணு, அங்கிட்டு கேயார் என்று கும்கி - கொம்பன் விளையாட்டு ஆரம்பித்தது. 'விஜய்யின் ஆதரவு பெற்ற அணி’ என்று யாரோ கிளப்பிவிட, 'ஐயையோ எனக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் வேண்டும்’ என்று பதறிப்போய் அறிக்கை விட்டார் பன்ச் தளபதி. தேர்தல் அன்று பேப்பரில் 'அம்மா ஆதரவு பெற்ற அணி’ என்று கேயார் அணியைக் குறிப்பிட்டு, சரத்குமார் விளம்பரம் செய்ய... 'சங்கத்து ஆள அடிச்சது எவன்டா....’ என ஆளாளுக்கு சூப்படித்தார்கள். கடைசியில் கேயார் வின்னடிக்க, கோர்ட்டுக்குப் போனது எதிர் அணி!

'தாதா’ தாஸ்!

ரசியல் நிலவரம் கிறுகிறுவென சரிய, 'காரெடுங்க சென்ட்ராயன்...’ என கலவரத்துக்கு கால் வெயிட்டிங்கிலேயே இருந்தார் டாக்டர். அரசியலில் கூட்டணிகள் அம்பேல் ஆனதால், மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்தார் தாஸ். 'வேணாம் மச்சான் வேணாம் இந்த சாதி மறுப்புக் காதலு’ என்று ராமதாஸும் 'காடுவெட்டி’ குருவும் ரணகளப் பாட்டுப் பாடினார்கள். சொந்த சாதியிலேயே செல்வாக்கு இல்லாத லெட்டர்பேடு தலைவர்களைக் கூட்டி, 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ ஆரம்பித்தார் அய்யா. 'மதுரைக்கு வராதீங்க...’ என்று சாதிப் பூனைக்கு மணி கட்டினார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அப்படியே மேட்டர் பரவி, 'மருத்துவரை மறிங்கடா... மருத்துவரை  மறிங்கடா...’ என ஊருக்கு ஊர் குதூகலமானார்கள். ராமநாதபுரம், கடலூர் என்று 'நோ என்ட்ரி' போர்டுகள்தான் ராமதாஸை வரவேற்றன. மாமல்லபுர சித்திரை முழு நிலவு மாநாட்டில், 'இந்தா டைமைத் தாண்டிப் பேசறோம்ல... போட்டுப் பாரு கேஸை’ என்று சவால்விட, 'அதான் சொல்லிட்டார்ல... தூக்கிர வேண்டியதுதான்...’ என ஆள் அனுப்பினார் அம்மா. திருச்சி ஜெயிலில், ''ஃபேன அஞ்சுல வை... மண் பானைல கூழ வை...'' என அந்து அவலானவர், ஒருவழியாகப் பாடுபட்டு ரிலீஸ் ஆனார்!

எங்கேருக்க அஞ்சலி... எங்கேருக்க அஞ்சலி..?

'அஞ்சலியைக் காணும்... அஞ்சலியைக் காணும்...’ என ஒருநாள் மீடியா அலற, போட்ட வேலையைப் போட்டபடி ஓடிவந்தான் தமிழன். திடீரென வீட்டைவிட்டு எஸ்கேப்பான அஞ்சலி, தனது சித்தி பார்வதிதேவி, டைரக்டர் களஞ்சியம் மீது சரமாரியாகப் புகார் கொடுத்தார். 'என்னை சித்ரவதை பண்றாங்கோ... சொத்துக்களைப் பறிக்கிறாங்கோ...’ என

அஞ்சலி விசும்ப, ''அவ பல தடவை ஓடிப்போயிருக்கா...'' என சித்தி வெடிக்க, 'ஓ மை காட்...’ சொன்னது தமிழகம். '’இப்ப நான் தெரியுறனா...'' என தலைக்குக் குளித்துவிட்டு போட்டோவுக்கு ஓடிவந்த களஞ்சியம், ''என்னை அந்தப் புள்ள அவமானப்படுத்திருச்சு... ரகசியங்களை வெளியிடுவேன்'' என ஜாலி பிஸியானார். அஞ்சலி மீது களஞ்சியம் அவதூறு வழக்குத் தொடர, நான்கு நாட்கள் அலப்பறைகளுக்குப் பின் அஞ்சலி ஹைதராபாத் கமிஷனர் ஆபீஸில் ஆஜரானார். ''யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தைக் குறைக்கவே வீட்டைவிட்டு வெளியேறினேன். இனி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்வேன்!'' என்று பிரச்னைகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார்.

'தூம்... தூம்... டுஃப் டாக் டுஃப் டாக்’!

டி.ஆர்-தான் 2013-ன் காமெடி ஜட்ஜ். டி.வி. நிகழ்ச்சியில் நீதிபதியாக வந்து இவர் பண்ணிய அலப்பறைகள் எல்லாம் மன்னிக்க முடியாத காமெடிகள். ஷோவில் வரும் உறுப்பினர்களை ஆடவிடாமல், 'டிப்ஸ் கொடுக்கிறேன்’ என்று இவர் போட்ட ஆட்டங்கள்... மன்மோகன் சிங் வரை மன உளைச்சலை ஏற்படுத்தின. 'தூம் தூம்... டுஃப் டாக் டுஃப் டுஃப் டாக்’ எனப் புத்தம்புது வார்த்தைகளை உருவாக்கி, இவர் பேய்த்தனமாக பேன் பார்க்க, அழிகிற மொழிகள் பட்டியலில் தமிழ் சல்லென்று முன்னேறியது. மீனா, சங்கீதா என பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜட்ஜ்களுக்கு எல்லாம் டெங்கு வருகிற மாதிரி ஆடிப் பாடினார். ல.தி.மு.க. கூட்டங்கள், சிம்பு லவ் மேட்டர், குத்து டான்ஸ், 'ஒருதலைக் காதல்’ ஷூட்டிங்... என எப்போதும் பிஸியாக இருக்கிற டி.ஆர்-க்கு, இந்தப் பட்டியலில் ஆல்டைம் இடம் உண்டு!

ஜிங்குச்சா... ஜிங்குச்சா... பிரதமருக்கு பஹுத் அச்சா!

ரத்குமார்தான் 2013-ன் காமெடி ஜிங்குச்சா! வருடம் முழுக்க அவர் அடித்த அம்மா டைவ்களைப் பார்த்து, அ.தி.மு.க. அமைச்சர்களே டென்ஷனானார்கள். காலையில் தம்புள்ஸ் போடுகிற கேப்பில், 'அம்மா உணவகத்துல பொங்கல்... சான்ஸே இல்லப்பா’ என அறிக்கை விடுகிற அளவுக்குத் தொகிறியது சரத் டார்ச்சர். 'நான் உங்கள் அட்ட்டிம்ம்ம்மை...’ என சரத் ஓட்டிய காக்காக்களைக் கண்டு ஓ.பன்னீர்செல்வமும்

தா.பாண்டியனும் 'இதுக்கும் வந்துட்டாய்ங்களா...’ என ரூம் போட்டு அழுதார்கள். 'வாட்டர் பாட்டில் சூப்பரு... மினி பஸ் அச்சா....’ என இவர் பாட்டுக்கு தேங்காய் பொறுக்கலிலேயே இருக்க, 'நீங்க ஒரு கட்சிக்குத் தலைவருங்க... அக்கவுன்ட்ல எவ்வளவு இருக்கு..?’ என ராதிகாவும் ரசிகர்களும் கடுப்பிலேயே இருந்தார்கள்.

திடீரென செட்டு சேர்த்துக்கொண்டு வந்த விஷால், 'இந்த வருஷம் திருவுழால திண்டுக்கல் ரீட்டாவோட ஆடலும் பாடலும் வைக்கிறீங்க... சங்கத்துக் கணக்கைச் சொல்லுங்க சிவனாண்டி...’ எனக் கலகத்தில் இறங்க, ராதாரவி, 'வாகை’சந்திரசேகர், கிங்காங் என கான்ஃபரன்ஸிலேயே இருந்தார் தலைவர். 'இந்தியாவுக்குப் பிரதமர் ஆக அம்மாவுக்கு மட்டும்தான் தகுதி இருக்கு’ என சொல்லிவிட்டு, 'அப்ப நீங்க..?’ என்ற கேள்விக்குக் கை பிசைந்தது நான்ஸ்டாப் காமெடி.

திருநெல்வேலியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ''கட்சிக்கு போட்டி போட்டுக்கொண்டு நிதி கொடுக்க வேண்டும். யார் அதிக நிதி கொடுக்கிறார்களோ, அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன்'' என்று அதிரடியாக அறிவிக்க, 'சச்சினுக்கு முன்னாடி இவருக்குத்தான் பாரத் ரத்னா அறிவிச்சிருக்கணும்...’ என ஃபீலானான் தமிழன்!

மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு சொல்லு!

னகா... இந்த வருடத்தின் ரூமர் ஆன்ட்டி! 'கனகாவுக்கு கேன்சர்...’ என எவனோ நாலாவது லார்ஜில் கிளப்பிவிட, 'உருக்கிரணும்யா...’ என ஃபீலிங் ரிப்போர்ட்டர்கள் ரெக்கார்டரோடு கிளம்பினார்கள். ஆன் தி வேயில் எவனோ எட்டாவது லார்ஜில், 'கனகா இறந்துவிட்டார்’ என அடுத்த ஸ்டேட்டஸ் போட, கேமராக்களோடு கனகா வீட்டை ரவுண்ட் பண்ணியது மீடியா.

ரொம்ப நேரத்துக்குப் பிறகு புசுபுசுவென ஃபுல் ஸ்மைலில் வந்த கனகா, ''நான் நல்லாருக்கேன்... கரகம் இருக்கா... ஒரு டான்ஸ் வேண்ணா போடுறேன்...'' என சிரிக்க, 'இதுவும் நியூஸு...’ என ஜாலியானது ஏரியா. ''நான் பூனைங்க நாய்களோட நிம்மதியா இருக்கேன்... எல்லாம் எங்க அப்பா செய்ற சதி...'' என கனகா ஓட்டியது செம சீரியல். கொஞ்ச நேரத்தில் அப்பா கேரக்டரும் என்ட்ரி கொடுத்து, ''இல்லைங்க... இவ லூஸு... நான் ரொம்ப லூஸு... அதுலயும் பாத்தீங்கன்னா...'' என எபிசோடை இழுக்க... எகிறியது டி.ஆர்.பி!

மகா குண்டலினீ யோக முனி!

லஹாபாத் கும்பமேளாவில் ஆரம்பித்து 'நித்ய தர்மம்’ நிகழ்ச்சி வரை நித்தியானந்தா நடத்தியதெல்லாம் அட்ராசிட்டி பப்ளிசிட்டி.  கும்பமேளாவில் நித்திக்கு 'மகா மண்டலேஸ்வரர்’ என்ற விருது வழங்கப்பட, ஏற்கெனவே 'குண்டலினீ யோகம்’னு குண்டக்க மண்டக்கப் பறக்கவிட்டவர் ஆச்சே என்று பக்தகோடிகள் பல்லுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஆனானப்பட்ட அகோரி சாமியார்கள் எல்லாம் சிம்பிள் டென்டில் தங்கியிருக்க, சினிமா செட்டுக்கு இணையாக டென்ட் போட்டு நூறு பேர் புடைசூழ நித்தி வத்து கும்பமேளாவில் கெத்து பொங்கல் வைத்தார். 'நித்ய தர்மம்’ என்ற பெயரில் பஞ்சாயத்துப் பண்ணும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். ஏற்கெனவே இவர் மீதே பல பஞ்சாயத்துகள் இருக்க, இவருக்கு எதுக்குய்யா இந்தப் பஞ்சாயத்து என்று ஆதங்கத்தோடு... நாங்க கேட்கலைங்க, நேயர்கள் கேட்கிறாங்க!

அம்மம்மா!

வாட்டர் பாட்டிலில் இருந்து மினி பஸ் வரை ஜெயலலிதா 'இரட்டை இலை’யைப் போட்டுத் தாக்க, ''புதுசா ரெட்ட எல சரக்கு வந்தி ருக்கா..?'' என விசாரித்தார்கள் ட்ரிங்ஸ் தமிழர்கள். அந்த அளவுக்கு எகிறியது இலைக் குடைச்சல். குதிரை றெக்கை, இயற்கைக் காட்சி, பசுமையின் அடையாளம் என்று பாணபத்திர ஓணாண்டிப் புலவர்களே எகிறித் தெறிக்கிற அளவுக்கு பல பொழிப்புரைகளை அம்மா கட்சிக்காரர்கள் கொடுக்க, மன உளைச்சலில் அலைந்தார்கள் மக்கள். 'நியாயமாரே...’ என அலறின எதிர்க்கட்சிகள். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்து, அம்மா காய்கறிக் கடை... அம்மம்மா... அநியாயம்மா!

டூத்பேஸ்ட்ல இருக்குற உப்பு சத்தியமா..!

மிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கதகளி தாராபுரத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம்தான். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கருவூலத் துறையின் கடன் பத்திரத்தின் மதிப்பு மட்டுமே 27,500 கோடி. 'என்ன சார் நடக்குது இங்க?’ என்ற கிறுகிறுப்பில் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பித்தது வருமான வரித் துறை. ராமலிங்கமோ கொஞ்சமும் கவலைப்படாமல் கூல் ஸ்டேட்மென்ட்களை அள்ளிவிட்டார். ராமநாதபுரத்தில் பெட்ரோல் நிறுவனம் தொடங்கப்போவதாக ராமலிங்கம் சொல்ல, 'அடங்கொன்னியா...’ என்று ஆடிப்போனார்கள் அம்பானி, டாடா வகையறாக்கள். 'கண்டிப்பா இது போலிப் பத்திரம்தான்’ என்று பலர் சொல்ல, 'என் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு’ என்று அடித்து சத்தியம் செய்தார் ரணகள ராமலிங்கம். க்ளைமேக்ஸில் அத்தனையும்  டுபாக்கூர் பத்திரங்கள் என்றது அமெரிக்க வங்கி. டாக்ஸ் போடும் வருமான வரித் துறையே டயர்டு ஆகிப்போனது!

கட்டுமரத்தை மூழ்கடிப்போம்ல..!

மாணவர்கள் போராட்டம் காரணமாக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்த கருணாநிதி, கனிமொழியை ராஜ்ய சபா தேர்தலில் ஜெயிக்கவைக்க  மறுபடியும் ஒரு 'உள்ளே வெளியே’ வெளாட்டு காட்டியது இந்த வருட சாதனை! ஆனால், இந்த வெளாட்டு காங்கிரஸோடு நிற்கவில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில், 'உங்கள் ஓட்டு எங்கள் கட்சி வேட்பாளருக்கே...’ என்று லெட்டர் எழுதி அத்தனை கட்சி அட்ரஸுக்கும் தட்டிவிட்டார். டெக்னாலஜி கில்லி ஆக வேண்டும் என்று ட்விட்டர், ஃபேஸ்புக் கடலில் தன் கட்டுமரத்தை மிதக்கவிட்டார். ஆனால், கழுவிக் கழுவி ஊத்திய கமென்ட்களால்  கட்டுமரமே மூழ்கியது. ஆனாலும் சளைக்காமல், 'கல்லக்குடி தண்டவாளத்திலேயே தலை வெச்சவன்டா நான்’ என மீண்டும் வந்து ஃபேஸ்புக் கணக்கில் 'நானே கேள்வி... நானே பதில்’களைத் தூவிக்கொண்டிருக்கிறார். 'விஜயகாந்த் மீது ஆளுங்கட்சி இத்தனை வழக்குகள் பாய்வதைப் பார்த்தால் கண்ணு வேர்க்குது’ என்று கறுப்பு எம்.ஜி.ஆருக்கு வெள்ளைக்கொடி ஆட்டினாலும், அவர் கண்டுகொள்ளவில்லை.

கடைசியாகக் கூடிய பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணிக்கு குட்பை சொன்னவர், 'காவிக் கட்சியோடும் கை குலுக்கப்போவதில்லை. தனியாக நிற்போம்’ என்றார். ஆனால், மறுநாளே தாமரைப் பாச வார்த்தைகளை வீசுகிறார். 'அம்பது வருசமா இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று சேனல் மாற்றினான் தமிழன்!  

இனிய இயக்குநர்களுக்கு இனிமா!

சீனியர் டைரக்டர்களுக்கு இது சிக்கல் வருடம்! புதிய புதிய தளங்களுக்கு தமிழ் சினிமாவைத் தூக்கிப் போக, பல இளைஞர்கள் வந்துகொண்டிருக்க, சீனியர்கள் பண்ணியதெல்லாம்... டார்ச்சர் காமெடி. 'கடலை’ கொடுத்துக் குடலை உருவிய மணிரத்னம்தான் கணக்கை ஆரம்பித்துவைத்தது. 'சாத்தான்... பெர்கிஸ்...’ என்றெல்லாம் படத்தில் ஏதேதோ பேச, 'போகாதீங்க... போகாதீங்க...’ என மொபைலில் இருந்து முகப்புத்தகம் வரை சூனியம் வைத்தார்கள்.

பாராதிராஜாவின் 'அன்னக்கொடி’யில் சடையன் போட்ட கணக்கு ரத்தக்காவு வாங்கியது. செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ போனவர்கள் 'கண்ணி வெடியில கால் வெச்சுட்டமே...’ என உசுருக்குப் பயந்து ஓடிவந்தார்கள். காமெடி கிங் ராஜேஷின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ரிலீஸான அன்று அத்தனை ஆம்புலன்ஸ்களும் பிஸியாக இருந்தன. காப்பியடித்தாலும் கச்சிதமாக அடிக்கிற விஜய், 'தலைவா’வில் 'நாயகன்’, 'புதிய பறவை’யையெல்லாம் காப்பியடித்து பித்தக் கஷாயம் தேடவைத்தார். 'தொப்புளைக் காட்டிட்டாய்ங்க...’ என நஸ்ரியா கொந்தளித்ததில் சற்குணத்தின் 'நய்யாண்டி’க்கு பப்ளிஸிட்டி எகிறியது. ஆனால், படம் ரிலீஸான அன்றே, மிஷ்கின் பட ரோடு மாதிரி வெறிச்சோடிக் கிடந்தன தியேட்டர்கள். 'ஒரத்தநாட்லயுமா படம் ஓடலே?’ என சற்குணம் கேட்க, 'மும்பைல மூணு ஷோ ஃபுல்லாம்...’ என தனுஷ் சொல்ல... மொக்கை காமெடியானது 'நய்யாண்டி’. ஆர்.கண்ணன் 'சேட்டை’ படத்தில் ரசிகர்களை ரத்த வேட்டை ஆட... இவர்களை எல்லாம்  'அப்டேட் ஆகுங்க பாஸ்’ என்று சொல்லாமல் சொல்லியது 2013!




 



     RSS of this page