Home / Thamizachi

Thamizachi


''அழகே... உன்னை... ஆராதனை செய்கிறேன்...'' -தமிழச்சி தங்கபாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், இப்படியொரு ஆராதனை நம்மைத் தாலாட்டுகிறது. அந்தளவுக்கு அழகுணர்ச்சி நிரம்பியவராக இருக்கிறார் தமிழச்சி!

நேர்காணலுக்காக, வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்றபோது அதிர்ச்சி. நடக்கமுடியாத அளவுக்கு காலில் பெரிய மாவுக்கட்டுடன் அமர்ந்திருந்தார். ''சின்ன காயம். மூணு வாரம் நடக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். ஆனாலும், ரொம்ப சந்தோஷமா இருக்கு. நலம் விசாரிக்க தினமும் ஆட்கள் வந்துட்டே இருக்காங்க. காலைப் பாத்தீங்களா? மாவுக்கட்டு முழுக்க ஒரே... ஆட்டோகிராப்தான்! இடுக்கண் வருங்கால் நகுக'' என்று சொல்லிச் சிரிக்கிறார்.

''உங்களின் தோற்றத்தில் தொடங்கி, தொலைபேசி பாடல்வரை ஒரு அழகியல் தெரிகிறதே! அழகியல் பற்றிய உங்களின் கருத்து என்ன?''

''அழகியல் இன்றி வாழ்வது எனக்குள் சாத்தியமில்லை. என் அப்பாவுக்குப் பிறகு நான் அதிகம் நேசிப்பது என்னைத்தான். அழகியல் என்பது மனிதனுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று. இதில் ஆண்கள், பெண்கள் விதிவிலக்கு இல்லை. 'ஐ ஆம் எ பொயட் ஆஃப் சென்சஸ்' என்று இங்கிலாந்துக் கவிஞர் ஜான் கீட்ஸ் சொல்வார். அதுபோல... கவிதைகளும் அழகு, கவிஞனும் அழகு. புற உலகின் அழகியலை மனிதன் அனுபவிக்கும்போது, மனசும் அழகால் நிரம்புகிறது. அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. காய்ந்த சருகொன்று சாலையில் கிடப்பதை ஒரு புகைப்படக் கலைஞன் அழகாய்ப் பார்க்கிறான். அது உங்களுக்குள் பாய்கிறதல்லவா? அதுதான் அழகியல். அது பார்வையைப் பொறுத்தது!''

''உங்களின் முதல் கவிதைத் தொகுப்பான 'எஞ்சோட்டுப் பெண்', இரண்டாவது தொகுப்பான 'வனப்பேச்சி' இரண்டுமே கிராமத்துப் பெயர்களாக இருக்கின்றன. கவிதை என்றில்லாமல் உங்களின் பேருந்துப் பயணமும் அடிக்கடி கிராமத்தை நோக்கி நீள்கிறதே?''

''உண்மைதான். 'மல்லாங்கிணறை' என்னால் மறக்கவே முடியாது. உணர்வுப்பூர்வமாக... எனக்கான மொழியை, வாழ்வனுபவத்தைக் கொடுத்தது மல்லாங்கிணறு கிராமம். அந்த இருத்தலில் இருந்து என்னைப் பிரித்தெடுப்பது சாத்தியமற்ற ஒன்று. வாழ்தலுக்கும் இருத்தலுக்குமான ஒரு வெளியில் என்னுடைய கிராமத்தை வைத்திருக்கிறேன். அது குறித்து, 'மிகைப்படுத்தப்பட்ட சொர்க்க வாழ்வு' என்பதான விமர்சனமும் என் மீது வைக்கப்படுகிறது. 'கிராமங்களில் சாதிக் கொடுமையும், தனிமனித சுதந்திரமும் நசுக்கப்படுகிறது' என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நகர வாழ்க்கையின் நம்பகமற்றத் தன்மை நிச்சயமாய் அங்கே இல்லை. என் நிலம், என் மழை என மண்ணோடும் வேறோடும் சார்ந்த உறவுகளாக கிராமம் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.''

''பெண்ணியம் பற்றிய உங்கள் கருத்தென்ன? உங்களை ஒரு ஃபெமினிஸ்ட்டாக நினைக்கிறீர்களா?''

''மூன்றம் உலக நாடுகளில், அடிப்படைத் தேவைக்காக நீர் மற்றும் விறகுக்காக அலைகிற பெண்ணுக்கும், வரைமுறையற்ற சுதந்திரத்தைக் கேட்கிற ஒரு ஐரோப்பிய பெண்ணுக்கும் ஒரே மாதிரியான சமுதாயப் பார்வை சாத்தியமில்லை. ஆக, பூர்ஷ்வாத்தனம் இல்லாத பாட்டாளி வர்க்க கிராமியப் பென்ணியம் என்பது வேறு. மேலைநாட்டு கட்டற்ற சுதந்திரத்தைக் கேட்கும் பெண்ணியம் என்பது வேறு. இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்க, படிப்பறிவற்ற அல்லது ஓரளவு படித்திருக்கும் பெண்களை குடும்பம், மதம் போன்ற நிறுவனங்கள் எப்படிக் கட்டுப்படுத்துகின்றன? பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையாத நிலையில், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? தன் உடல்மீது தனக்கிருக்கும் உரிமைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்களா? அதை இந்த ஆணாதிக்க 'தந்தமை சமுதாயம்' கொடுத்திருக்கிறதா? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதுதான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும்.

இதை நீங்கள், பொதுவான 'வெஸ்டர்ன் ஃபெமினிஸம்' என்கிற வரையறைக்குள் பொருத்திப் பார்க்க முடியாது. என் பயணம், இப்படியான பெண்களுக்குள் திருமணம், குழந்தைப்பேறு அல்லது கருத்தடை போன்றவற்றை முடிவு செய்யக்கூடிய ஒரு விழிப்பு உணர்வை உருவாக்கினால், அதுவே பெண்ணியத்திற்கான பாதையாகக் கருதுகிறேன். கவிதைகள் எழுதுகிற பெண்ணாக, ஓரளவு சமூகம் சார்ந்து இயங்குகிறவளாக இருந்தபோதும், குடும்பம் என்கிற வரையறைக்குள் இயங்குவதால் ஃபெமினிஸ்ட் என்று அறிவித்துக்கொள்ளும் அறம் எனக்கில்லை.''

''அப்படியென்றால், முழுமையான ஃபெமினிஸ்ட் என்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்?''

''பெரியார் சொல்கிற மாதிரி குடும்பமோ, மதமோ... அதைத் தாண்டிச் செயல்படக்கூடியவர்களாக இருக்கவேண்டும். குடும்பம் பெண்களுக்கு ஏகப்பட்ட அநீதிகளை இழைத்துள்ளது. கிராமமோ, நகரமோ... தன் முடிவுகளை தானே எடுக்கமுடியாத நிலையில்தான் பெண் இருக்கிறாள். அந்த அமைப்புக்குள் நானும் நிறைய காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டிருக்கிறேன். 'ஃபெனட்டிஸிசம்' என்கிற வார்த்தை உங்களுக்குத் தெரியும். தீவிரமான அந்தப் பார்வை எந்த விதத்தில் வந்தாலும் எதிர்த்தாக வேண்டும். பெண்களுக்குரிய உரிமைகளை யாரிடமும் யாசித்துப் பெறவேண்டிய அவசியமில்லை. சில விஷயங்கள் புனிதம் என்கிற பெயரில் அவர்கள்மீது சுமத்தப்படுகிறது.

புனிதத்தன்மையை உடைத்துவிட்டு வெளியேறக்கூடிய தெளிவைக் கொடுக்கக்கூடியது படிப்புதான். அதேசமயம் கல்வியறிவு இல்லாமல் முற்போக்குவாதிகளாக இருந்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன். பெரியாருடைய சிந்தனைகள் பெண்களுக்குள் ஆழமாக ஊடுருவினால்தான் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய நிலையை பெற முடியும், குறிப்பாக தமிழ்நாட்டில். ஆனால், குடும்பத்தில் இருந்துகொண்டே பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்ச்சியை உருவாக்கமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதை நோக்கித்தான் நான் போய்க்கொண்டிருக்கிறேன். கிராமப்புற அடிமட்டத்துப் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துபவர்கள்தான் உண்மையான ஃபெமினிஸ்ட்களாக இருக்க முடியும்.''

''சிறு பத்திரிகை உலகில் பெண்களைப் பிரித்தாள்வதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே! ஒரு கவிஞராக உங்களுடை கருத்து என்ன?''

''சிறு பத்திரிகை உலகில் கவிதை எழுதக்கூடிய ஒரு பெண்ணாக, என்னைக் குறித்த சிறிய பிரக்ஞை இருப்பதாகக் கருதுகிறேன். அதில் இருக்கக்கூடிய குழு மனப்பாண்மை பல சமயங்களில் என்னைத் தொல்லைப்படுத்தியிருக்கிறது. நம்பிக்கை இழக்கச் செய்திருக்கிறது. அதே சமயம், நிறைய குழுக்கள் உருவாவது நிறைய படைபாளிகள் உருவாவதற்கான தூண்டுகோலாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட பதிப்பகத்தில் தன் படைப்புகளை அச்சேற்றுகிற ஒரு படைப்பாளியின் கவிதைகளை இன்னொரு பதிப்பகம் புறக்கணிக்கிறபோது, 'இலக்கியம் பேசி என்ன ஆகப்போகிறது?' என்கிற ஆயாசம் எழுகிறது. மக்களின் நம்பிக்கைகளை, மதில்மேல் பூனையாக அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனித மனங்களை, குறிப்பிட்ட புள்ளியில் கட்டமைப்பதில் ஊடகத்தின் பங்கு மிக முக்கியமானது. எனவே பிரித்தாள்வதென்பது சங்கடமான ஒன்றுதான்.''

''பெண்களை வியாபாரப்பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுத் தொடர்ந்து வைக்கப்படுகிறதே?''

''முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். நடிகையோ, மாடலோ! 'அவள் குடிப்பது கோகோ கோலா, பெப்சியா? தின்பது மெக்டொனால்ட் சிக்கனா?' என்பதை விடுத்து, அவளது அலங்காரங்களில் கண் வைப்பதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப்பற்றிய அபாயங்களை மறைத்துவிடுகிறோம். பெப்சி என்கிற ஒரு நிறுவனம், எப்படி நமது நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது? இதனால், தாமிரபரணி ஆறு வரைபடத்திலேயே இல்லாமல் போகலாம். ஆக, அதுபற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. மற்றபடி விளம்பரங்களில் தோன்றுவது, பெண்களின் பொருளாதார சுயசார்பில் நிலைகொண்டிருக்கிறது. அவளுடை முடிவெடுக்கும் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆக்கப்பூர்வமான விஷயங்களை விட்டுவிட்டு வெட்டிப்பேச்சு பேசுகிற ஆட்களின் வேலையாக இந்த விமர்சனத்தைக் கொள்ளலாம்.''

''நீங்கள் தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருப்பதினால், சினிமாவில் கால் பதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? நடிக்க அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?''

''கண்டிப்பாக என்னால் சினிமாவுக்குள் நுழைய முடியாது. அதற்குக் காத்திரமான இரண்டு காரணங்களுண்டு. இன்றைய தேதியில் பெண்களுக்கான வெளியைக் கொடுக்கக்கூடிய கதைகளோ, கதாபாத்திரங்களோ தமிழ்ப்படங்களில் இல்லை. எனவே அப்படிப்பட்ட தளத்தில் என்னால் இயங்க முடியாது. இரண்டாவது, நான் புழங்கும் அரங்கம் என்பது வித்தியாசமான ஒரு தளம். பார்வையாளர்களுடன் நேரடியாய் கைகோர்த்து இயங்குகிற அந்த சந்தோஷம் திரைப்படத்தில் கிடைக்காது. மேலும், 'வாங்க பழகலாம்' என்று அங்கவை, சங்கவையை அவமானப்படுத்தியது போன்ற அநாகரிகங்கள் வந்துவிழ வாய்ப்பிருப்பதால் சினிமாவைப்பற்றி யோசிப்பதற்கில்லை.''

''புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆங்கிலவழிப் படைப்பிலக்கியம் குறித்து நீங்கள் ஆய்வு செய்து வருகிறீர்கள். அதையும் தாண்டி ஈழத்தமிழர்கள் குறித்த உங்கள் மனவோட்டம் என்னவாக இருக்கிறது?''

''ஈழத்தமிழர்கள்மீது எனக்கிருக்கும் உணர்வுபூர்வமான ஒட்டுதல், தொப்புள்கொடி உறவைப் போன்றது. அவர்கள் வடிக்கிற ஒவ்வொரு துளி கண்ணீருக்கும், நாம் ஒவ்வொருவரும் பதில் சொல்லியாகவேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தைச் சந்தித்துகொண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பிலிருந்து வேறோடு பிடுங்கியெறியப்பட்ட மக்கள், வேறு நாட்டில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 'அதை எப்படி அவர்கள் தங்களுடைய படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள்? அதில் குறிப்பாக ஏன் ஆங்கில எழுத்தாளர்கள்?' என்றால்- ஈழத்தமிழர்கள் தங்களுடைய வாழ்வியலையும் போராட்டத்தையும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும்போது, உலகளாவிய கவனத்தைப் பெறுகிறது.

போரின் காரணமாக அத்யாவசியப் பொருட்களின் விலை எந்தளவு உயர்ந்திருக்கிறது? அன்றாட வாழ்க்கை எந்தளவு பாடிக்கப்பட்டிருக்கிறது? குறிப்பாக ஈழத்தமிழ்ப் பெண்களின் நிலைமை? இதையெல்லாம் உலகின் கவனத்துக்கு கொண்டுவருவதால்தான் ஆங்கிலப் படைப்பாளிகளை தேர்வுசெய்தேன். என்னுடைய ஆதங்கம், எப்படியாவது விரைவிலேயே நல்ல தீர்வு வரவேண்டும் என்பதுதான். அவர்கள் மீதான அக்கறையும், போர் குறித்ததான ஒரு கவலையும் இல்லாமல் யாருமே தமிழகத்தில் இருக்க முடியாது. அவர்களுடைய பிரச்னை அதிதீவிரமாக பேசப்பட்டு, உலகளாவிய கவனத்துக்கு வரவேண்டும். அதை ஒரு படைப்பாளியின் தார்மீகரீதியான விஷயமாகப் பார்க்கிறேன்.''

''புலம் பெயர்ந்த தமிழர்களின் அடுத்தத் தலைமுறை, தமிழ்நாட்டு இளைஞர்களைப் போலவே அஜித்துக்கும், விஜய்க்கும் விசிறியாகிக் கிடக்கிற போக்கு வளர்ந்துகொண்டிருப்பதை கவனித்தீர்களா?''

''எனக்கும் அதுதான் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. நன்பர்களிடத்திலேயும் எடுத்துச் சொன்னேன். 'விஜய் படமோ, ரஜினி படமோ கொடுப்பதல்ல தமிழக் கலாச்சாரம். 'ஏன் திரைப்படத்தின் தாக்கம் இவ்வளவு அதிகமாக பரவ அனுமதிக்கிறீர்கள்' என்றபோது, 'இதன் மூலமாவது அவர்கள் தமிழைக் கற்றுக்கொள்கிறார்கள். தமிழ்க்கலாச்சாரத்தை தெரிந்துகொள்கிறார்கள்' என்றார்கள். 'தமிழ்மீது எங்களைவிட ஆளுமையும், பற்றும் இருக்கிற இனம் உங்களுடையது. ஒப்பீட்டளவில் வங்கமொழிபடமோ, மலையாளப் படமோ பிரதிபலிக்கிற மக்கள் கலாச்சாரத்தைக்கூட தமிழ்ப்படங்கள் தருவதில்லை. கிராமத்துப் பெண்கள்கூட அரைகுறை ஆடைகளில் வருகிறார்கள். அப்படியிருக்கையில், இளைய தலைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் இந்த விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை' என்றேன். தமிழ்நாட்டைத்தான் அவர்கள் தாய்நாடாகப் பார்க்கிறார்கள். இங்கிருந்து போகக்கூடிய பாடலாகட்டும், திரைப்படமாகட்டும் வெறும் கேளிக்கை தருகிற விஷயங்களாக மட்டுமே இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.''

''தொடர்ந்து அரசியல் மேடைகளில் காணப்படுகிறீர்கள். கடலூர் மகளிர் மாநாட்டு அனுபவம் எப்படி இருந்தது. இனி முழுநேர அரசியல்தானா?''

''வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டியிருப்பதால், விமர்சனங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. பாரம்பரியமான தி.மு.க குடும்பத்தில் பிறந்தவள் நான். வளர்ந்ததெல்லாம் பெரியார் அண்ணா, கலைஞருடைய பெயரைக் கேட்டுத்தான். கடந்த வருடம் திருநெல்வேலி மாநாட்டில் கொடியேற்றுதல் மூலமாக தீவிரமான அரசியல் செயல்பாட்டுக்குள் வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம், ஆரம்பத்திலிருந்தே பெண்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்துவந்திருக்கிறது. உதாரணத்துக்கு வை.சு.மஞ்சுளா, அலமேலு அப்பாதுரை, சத்தியவாணி முத்து போன்ற பலரைச் சொல்லமுடியும். அதனுடைய நீட்சியாகத்தான் என்னைப் பார்க்கிறேன். கடலூர் மாநாட்டுக்கு வந்திருந்த பெண்களின் எழுச்சியைப் பார்த்தபோது, மிக சந்தோஷமாக இருந்தது.

'ஊடகங்களில் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கக்கூடாது, 33% சதவிகித இடஒதுக்கீட்டை வலியுறுத்திப் பெறுவது' போன்ற நம்பிக்கைக்குரிய தீர்மாணங்கள் அதிலே போடப்பட்டன. இதற்கு முன்னால்வரை பெரிதாக இலக்குகளில் நம்பிக்கை இல்லாத பெண் நான். கவிதைகள் எழுதிக்கொண்டு... சமூகம் சார்ந்த விஷயங்களை முடிந்தளவு நேர்மையோடு பதிவு செய்துகொண்டு இருந்தேன். இன்று அரசியல் தளத்திற்கென்று வரும்பொழுது முன்பு தி.மு.க-வில் இருந்த பெண்கள், எப்படிப்பட்ட வழித்தடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்களோ, அதில் பயணம் செய்வதே லட்சியமாகக் கருதுகிறேன்.

இங்கே எனது நம்பிக்கைக்குரிய நபராக கவிஞர் கனிமொழியைப் பார்க்கிறேன். ஏனென்றால், தீவிரமான அரசியல் தளத்துக்கு வரும் முன்பே தனக்கான தனித்தன்மையை அடையாளப்படுத்தியவர் கனிமொழி. அவரோடு சேர்ந்து, அடுத்தத் தலைமுறையினருக்கு புது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரமுடியும் என்கிற நம்பிக்கையுடன் என் பயணம் தொடர்கிறது!''





     RSS of this page