நா.கதிர்வேலன்
சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும்
அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான
சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...
ஸ்ரீரங்கத்தைப்
பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய
உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.
நாவல்கள்,
சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை.
இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான்
ரதங்கள்'!
முதல்
சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர்
கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில்
பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக
எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல்
நாவல் நைலான் கயிறு!
பண்டிதர்களின்
சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார்
பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த
உரைகள்!
இரண்டு
நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா
செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச்
சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும்
வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!
முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள்
ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு
உறுதியாக இருந்தது!
20
திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர்
படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!
சுஜாதா
இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது.
பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக்
கொடுத்துவிட்டார்!
ஒரே
சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு
இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28
பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச்
சுலபமாக்கிவிடுவார்!
தேர்தலில்
பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது
பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும்
நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!
சுஜாதாவின்
கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம்
ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே
இல்லை!
சுஜாதாவின்
கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே
பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர்
சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும்
தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என
விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!
கணையாழி
இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து
எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது
சாதனை!
ஒரு
காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில்
பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை
முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!
உலகின்
முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என
அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி
செய்தவர்!
புனைகதை
எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை
அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள்
இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!
ஹாலில்
ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு
புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற
வழக்கமுடையவர் சுஜாதா!
1993-ல்
மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது,
ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு
அளிக்கப்பட்டது!
சுஜாதா
எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர்
எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள்
வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!
இறப்பதற்கு
நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப்
பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத
தருணம் அது!
அப்பா
இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை
எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!
பெண்
குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள்.
ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா
குறிப்பிடுகிறார்!
பங்களா
வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன்
திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!
கணிப்பொறியியல்,
இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா,
துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை
என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!
சுஜாதாவின்
பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர்
வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை
பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி
ஜோக் அது!