Home / SubramaniyaSwami

SubramaniyaSwami


(பேட்டி) சு.சுவாமியின் சுடும் வாதம்
''ஆ.ராசாவை வீட்டுச் சிறையில் வையுங்கள்!''
'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத் திராவிட்டால், இன்றைக்கு ஆ.ராசா அதே பதவியில் இருந் திருப்பார். பிரதமரும் தலைவலி இல்லாமல் வளைய வந்திருப்பார். நாடாளுமன்றத்தை உலுக்குவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வலுவான பிடி கிடைத்திருக்காது. இத்தனைக்கும் ஆரம்பகர்த்தாவாக இருந்திருப்பவர் - சுப்பிர மணியன் சுவாமி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோண்டி எடுத்து பிரதமர் கவனத்துக்கு சுவாமிதான் கொண்டு போனார். அதற்கு உரிய பலன் கிடைக்காததால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்தார். சுப்பிரமணியன் சுவாமி அன்றே முன்வைத்த குற்றச்சாட்டுகளில் சத்தும் சாரமும் இருப்பதாக இப்போது ஒட்டுமொத்த 

மீடியாக்களும் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக, அரசியல் பூகம்பத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன் சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசினோம்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நினைத்தாலே எனக்கு அலி பாபாவும் 40 திருடர்களும் கதைதான் ஞாபகம் வருது. திகிலும் திருப்பங்களும் நிறைந்த விஷயம் இது. இன்னும் போகப் போக பாருங்க. ஷாக் நிறைய கிடைக்கும்!'' என்ற பீடிகை போட்டவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்!

''பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால், அதில் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்களே?''

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடந்ததுள்ளது எந்த அளவு உண்மையோ அந்தளவு உண்மை... இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பங்கு இல்லை என்பதும்! ஒரு காசுகூட அவர் வாங்கவில்லை என்று நான் நம்புகிறேன். என்னுடைய குற்றச்சாட்டு சோனியாவையும், கருணாநிதியையும்

நோக்கித்தான் இருக்கிறது. எனவே, பிரதமரை பதவி விலகச் சொல்லமாட்டேன். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழு உண்மைகள் தெரியவேண்டுமானால், கருணாநிதியையும் அவரது குடும்பத்தில் உள்ள சிலரையும் முழுமையாக விசாரித்தாக வேண்டும். அப்போது முழு உண்மையும் தெரியவரும் என்பதே என் கருத்து.''

''பிரதமருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது போல இதைச் சிலர் சொல்கிறார்களே! இதே பிரதமர்தானே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீது நீங்கள் வழக்குப்போட அனுமதி கேட்டு கடிதம் எழுதியபோது, பல மாதங்கள் பதிலே போடாமல் இழுத்தடித்தவர்..?''

''உண்மைதான். பிரதமர் அலுவலகம் சார்பில் எனது எல்லாக் கடிதங்களுக்கும் பதில் அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு ஒரே ஒரு கடிதம்தான்வந்ததுள்ளது. கூட்டணி தொடர்பான பல நிர்பந்தங்கள், அவரை இந்த விஷயத்தில் உடனடியாக எதுவும் செய்யவிடாமல் தடுத்திருக்கலாம். அவருடைய விருப்பம் இல்லாமலே, அவருடைய வாயை சிலர் அடைத்திருக்கலாம். கைகளை சிலர் கட்டிப் போட்டிருக்கலாம். அதுதான் பதில் வரத் தாமதம் என்று நான் நினைக்கிறேன்!''

''மத்திய அமைச்சர்களிடம் அவர்களது சொத்துக் கணக்கை பிரதமர் கேட்டு இருக்கிறார். அவற்றை இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாகவும் ஒரு தகவல் உள்ளதே...?''

''இது காலதாமதமான நடவடிக்கை என்றாலும், பிரதமர் கேட்பது சட்டப்படி சரியானதுதான். தனக்குக் கீழே பணி யாற்றும் மந்திரிகளின் சொத்துக் கணக்கு மன்மோகன் சிங்குக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது சரிதான். எனவே இதை நான் வரவேற்கிறேன். ஆனால், மந்திரிகள் உண்மையான கணக்கைத்தான் தருகிறார்களா என்பதை பிரதமர் விசாரணை செய்ய வேண்டும். எப்படியிருந்தாலும், உண்மையான சொத்துக் கணக்கை மந்திரிகள் கொடுப் பார்கள் என்று நான் நம்பவில்லை!''

''மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஆ.ராசா ராஜினாமா செய்து விட்டார். இந்த விவகாரத்தில் அடுத்து எனன நடக்கும்?''

''இனிமேல்தான் விவகாரமே இருக்கிறது. விசாரணை நடக்கும் நேரத்தில் சம்பந்தப் பட்டவர் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதால்தான் ஆ.ராசாவின் ராஜினாமா வலியுறுத்தப்பட்டது. குற்றத்தின் அளவு என்ன என்று இனிமேல்தானே கண்டுபிடித்து, குற்றவாளியை தண்டிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரையில், நான் செஷன்ஸ் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு போடப்போகிறேன். அதில், ஆ.ராசாவை குற்றவாளியாகச் சுட்டிக்காட்டப் போகிறேன். வேறு யார் யார் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்கிற பட்டியலையும் தயா ரித்து வருகிறேன். இந்த ஊழல் தொடர்பாக என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் உள் ளன. 'சத்தியம்... ஸ்பெக்ட்ரம்... சுந்தரம்!' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையில் இதைப்பற்றி முன்னோட் மாக எழுதி இருக்கிறேன்.  1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கான கணக்கு விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறேன். பல்வேறு கம்பெனிகள் கொடுத்த பணம் யார் வசம் இருக்கிறது, யாருக்கெல்லாம் அன்பளிப்பாகத் தரப்பட்டுள்ளது, என்னென்ன சொத்துகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு நான் கோர்ட்டில் வாதாடுவேன். அங்கே வந்து பாருங்கள்... அசந்து போவீர்கள்!

அரசாங்க கஜானாவுக்கு போக வேண்டிய எத்தனை கோடி ரூபாய்களை சில தனிமனிதர்கள் தங்களது ஆஸ்தியாக மாற்றிக் கொண்டார்கள் என்ற கதை இந்தியாவையே மலைக்க வைக்கும்!''

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகச் சொல்கிறார்களே.. அப்படியிருக்க, இந்தியாவில் மட்டும் விசாரணை நடத்தினால் போதுமா?''

''நிச்சயமாகப் போதாது! குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பாதிப் பேர் பதுக்குவதெல்லாம் வெளிநாட்டில் தான். அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனால்தான், 'இந்த விவகாரத்தில் பாதிக் கிணறைத்தான் தாண்டி இருக்கிறோம். மீதியையும் தாண்டினால்தான், ஊழலின் முழுப் பரிமாணமும் அம்பலமாகும்' என்று நான் சொல்கிறேன். சமீபத்தில் அமெரிக்கா போயிருந்தேன். அந்த அரசாங்கத்தில் எனது நண்பர்களும் இருக்கிறார்கள். பெரிய பெரிய தொகைகள் வங்கிகள் மூலம் பரிமாற்றம் நடக்கும்போது, அதன் சிக்னல்களை இடைமறித்துக் கேட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்கிற சிஸ்டம் அங்கே நடைமுறையில் உள்ளது. ரகசியக் குறியீடுகளையும்கூட 'டீ-கோட்' பண்ணும் டெக்னிக்குகளை அவர்கள் அறிந்துவைக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வெளிநாட்டு 'லிங்க்'குகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை நம் அரசாங்கம் கேட்டால், அதற்கு அவர்கள் கட்டாயம் உதவுவார்கள். இந்தியாவின் நன்மைக்காக இந்த விஷயத்தில் தொடர்புப் பாலமாகச் செயல்பட நான் ரெடி!''

''மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு  1.76 லட்சம் கோடிகள் என்கிறார்கள். இந்த அளவு தொகை இழப்பு நடந்திருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

''அதாவது மிகச் சரியாக அலைவரிசை டெண்டரை விட்டிருந்தால்  1.76 லட்சம் கோடி வரைக்கும் கூடுதல் லாபம் பார்த்திருக்கலாம். அதைத்தான் இப்படிச் சொல்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் 60 ஆயிரம் கோடிகள் இதில் கைக்குக் கை புழங்கியுள்ளது என்று சந்தேகப்படுகிறேன். இது தொடர்பான கணக்குகளை நான் நீதிமன்றத்தில்தான் விரிவாகச் சொல்ல முடியும்!''

''ஆ.ராசா பதவியில் இருந்த காலகட்டத்திலேயே, இந்த ஊழல் தொடர்பாகப் பிரச்னையைக் கிளப்ப ஆரம்பித்தீர்கள். இதுபற்றி ஆ.ராசா தரப்பிலிருந்து யாராவது உங்களிடம் பேச முயன்றது உண்டா?''

''நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நான் பலரையும் சந்தித்து வணக்கம் சொல்வேன், - சோனியா காந்தியை தவிர! காரணம், என்னைப் பார்த்தால் அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார். அவரது கணவர் ராஜீவ் கொலை விவகாரத்தில் சில விஷயங்களை நான் எடுத்துச் சொன்னதில் இருந்து சோனியாவுக்கு என்னைப் பிடிப்பதில்லை. அது போகட்டும்...

இதே மைய மண்டபத்தில் ஒரு முறை ஆ.ராசா என்னை சந்தித்தார். இந்த வழக்கு விஷயமாக அவர் என்னிடம் பேசவில்லை. பேசியிருந்தால்கூட, நான் கேட்க மாட்டேன் என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அவரது தலைவரைப் போலவே சுத்தி வளைத்துப் பேசினார். 'உங்கள் மீது மிகுந்த அன்புவைத்து இருக்கிறேன். நீங்களும் தமிழன். நானும் தமிழன்...' என்று ஆ.ராசா என்னிடம் சொன்னார். 'எல்லாத் தமிழனும்தான் என் மீது அன்புவைத்து இருக்கிறார்கள். ஆனால், கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தவன் என்று என்னைப் பற்றி சிலர் சொல்கிறார்களே!' என்று சொல்லி நானும் சிரித்தேன். அவரும் கிளம்பிப் போய்விட்டார். நானும் வந்துவிட்டேன்.

பதவியை இழந்துவிட்ட ஆ.ராசாவுக்கு இப்போது நான் ஒரு விஷயம் சொல்கிறேன்... யாருக்கெல்லாம் பணம் போனது என்று சொல்லிவிட்டால் அவர் கொஞ்சமாவது தப்பிக்க முடியும்!''

''ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக திடீரென்று புது குண்டு வீசி இருக்கிறீர்களே...?''

''கணவரின் மரணத்துக்கு துணை போனவர்கள், பெற்ற தாயிடமே செயினை பறித்துக்கொண்டு ஓடி வந்தவர்கள் என்றெல் லாம் பார்த்ததுதான் இந்திய அரசியல்! ஸ்பெக்ட்ரம் ஊழலை அக்குவேறு ஆணி வேறாக அறிந்தவர் ஆ.ராசா மட்டும்தான். அவர் சொல்லிவிட்டால் மொத்தப் பணமும் எங்கே இருக்கிறது என்று தெரிந்து போகும். எனவே, பணம் வாங்கியவர்கள் ஆ.ராசாவை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போதைய சூழ்நிலையில், அவர் வெளியே சுதந்திரமாக நடமாடினால் யாரேனும் அவருக்குத் தீங்கு விளைவிக்க முயலக்கூடும் என்று நினைக்கிறேன். இதுகுறித்த எச்சரிக்கையை வெளிநாட்டில் இருந்தும் சிலர் எனக்குச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு ஆ.ராசாவுக்குப் பாதுகாப்பானது சிறைச்சாலை ஒன்றுதான். அது வீட்டுச் சிறையாகவும் இருக்கலாம். அவரை ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கிறது அவருக்குதான் நல்லது!''

 




     RSS of this page