Home / StillsRavi

StillsRavi


 

தமிழ் சினிமா... ஒரு க்ளிக் உலா! - ஆனந்த விகடன் - 2013-10-30

ஸ்டில்ஸ் ரவி... அன்றைய 'காமதேனு’ தொடங்கி இன்றைய 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ வரை 500 திரைப்படங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்’ புகைப்படக் கலைஞர். 'அன்னக்கிளி’ இளையராஜா அறிமுகம், மகேந்திரனின் 'ஜானி’ மேக்கிங், கோடம்பாக்கத்தின் அவுட்டோர் படப்பிடிப்புகள் என தமிழ் சினிமாவின் வரலாற்றோடு நெருக்கமாகப் பயணித்துவரும் இவர், தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

 

ப்போதுதான் புதிதாக வந்த மினி கீ போர்டு ஒன்றை சுஹாசினி, வாணி கணபதியிடம் இசைத்துக் காட்டுகிறார் கமல். எனக்கு கமல் எப்பவும் ஆச்சர்யம். கோல்டு ஸ்பாட் குளிர்பானம் குடிக்கும் குரங்கு, நேபாளத்தில் வரிசையாக நிற்கவைத்து ஆடுகளின் தலையை வெட்டும் நேர்த்திக்கடன் என, தான் பொழுது போக்காக எடுத்த படங்களைக் காட்டுவார். 'ஹாபியா எடுக்கும் மனுஷனே இவ்வளவு நேர்த்தியா எடுக்கும்போது, அதையே தொழிலா பண்ற நாம எப்படி எடுக்கணும்’னு எனக்குள் வெறி ஏறும். தமிழ் சினிமாவில் முதல் டிஜிட்டல் கேமரா வாங்கியவர் கமல். இரண்டாவதுதான் நான். ஆல் இன் ஆல் அழகுராஜான்னா, அது கமல்தான்!


'துடிக்கும் கரங்கள்’ படப்பிடிப்புத் தளத்தில், ரஜினியின் பிறந்த நாளைகொண்டாடுகிறார் லதா. 'பைரவி’ படப்பிடிப்பு சமயத்தில் ஸ்ரீகாந்த்-ஸ்ரீப்ரியா ஜோடி ரொம்பவே பாப்புலர். அப்போ, ரஜினி வளர்ந்துவரும் நடிகர். அதுவும் அந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம். படப்பிடிப்பு தளத்தில் ஷாட் ப்ரேக்கில் மற்ற நடிகர்-நடிகைகள் அரட்டையில் இருக்கும்போது, ரஜினி மட்டும் சாட்டைச் சுற்றுவது, வசனத்தைப் பேசிப் பார்ப்பதுனு அடுத்த காட்சிக்கான பயிற்சியில் இருப்பார். 'என்னய்யா இந்த ஆளு இப்படித் திரியுறாரு?’னு அப்போ பலர் கமென்ட் அடிச்சாங்க. ஆனா, அந்த ஹோம்வொர்க்தான் பின்னாடி ரஜினிக்கு 'ஸ்டைல் மன்னன்’ அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தது!


டி.ராஜேந்தர் இயக்கும் படங்களின் படப்பிடிப்புத் தளம் ரகளையா இருக்கும். ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு சீனையும் கடைசிவரை மெருகேத்திட்டே இருப்பார். ஷாட் ப்ரேக்கில் படத்துக்குச் சம்பந்தமில்லாத சில விஷயங்களை நான் க்ளிக் பண்ணிட்டு இருப்பேன். உடனே அவர் தன் கேமராமேன்கிட்ட, 'அங்கே பாரு, ரவி எதையோ எடுக்கிறான். நல்லா இருந்தா, அந்த மாதிரி நீயும் எடு’னு விரட்டுவார். 24x7 அலெர்ட்டாவே இருக்கும் நபர் டி.ஆர்.!



டற்கரையில் உட்கார்ந்து இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் பாடுற மாதிரியும் பொதுமக்கள் அதைக் கேட்டு காசு போட்டுட்டு போற மாதிரி படங்கள் எடுத்திருக்கேன். அந்தளவுக்கு ராஜா சகோதரர்கள் என்னை நம்பி தங்களைக் கொடுப்பாங்க. 'அன்னக்கிளி’யில் கமிட் ஆனதும் எடுத்த முதல் ஸ்டில் தொடங்கி, ராஜாவை ஏகப்பட்ட படங்கள் எடுத்திருக்கேன். அவர் ரொம்ப நாளா நான் எடுத்த போட்டோவைத்தான் லோகோ மாதிரி கேசட் ப்ளேயர்களிலும் போஸ்டர்களிலும் பயன்படுத்தினார்.


து 'பாட்டுக்கு ஒரு தலைவன்’ பட பாடல் காட்சியின்போது க்ளிக்கியது. க்ரேனில் ஷோபனா. இவரை வெளியில் இருந்து பார்ப்பவர்கள், 'கொஞ்சம் திமிரானப் பெண்ணோ’ என எண்ணத் தோணும். ஆனால், பார்த்தவுடன் அன்பாகப் புன்னகைப்பார். வெரைட்டியான போஸ்களுடன் தடதடவென க்ளிக்குகளைக் கடந்துசெல்லும் இவரின் க்ரியேட்டிவிட்டியைப் பார்த்து வியந்திருக்கிறேன்.


பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து... அப்போ இவங்க இருக்கிற இடம் களைகட்டும். கம்போஸிங் பண்ண வந்துட்டு அதைத் தவிர மத்த எல்லா விஷயங்களையும் அரட்டை அடிச்சிட்டு கிளம்பிப் போவாங்க. சும்மா ஜாலியா இருக்கலாம்னு போன இடத்துல, பாட்டும் ட்யூனும் சிக்கி அசத்தல் கம்போஸிங்கோட திரும்பி வருவாங்க. இவங்க மூணு பேரும் ஈகோ இல்லாம இருந்திருந்தா, இன்னும் பல க்ளாஸிக் படைப்புகள் கிடைச்சிருக்கும் நமக்கு. 'அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்காக அர்ச்சனா உள்பட ஏகப்பட்ட பேரை டெஸ்ட் ஷூட் எடுத்தோம். அதில் கடைசியில் க்ளிக் ஆனது ராதா. அப்புறம் ராதாவுக்கு ஏத்த மாதிரி அந்தப் படத்துக்கான பாடல்களை கம்போஸ் பண்ணாங்க!


'ஜானி’ படத்துக்காக போட்டோ செஷன் பண்ணப்போ, ரஜினி வெற்று உடம்புடன் கோடரியால் விறகு வெட்டுவது மாதிரி சில படங்கள் எடுத்தேன். அந்தப் படங்களை போஸ்டரில் பயன்படுத்தினார்கள். அதைப் பார்த்தால், 'ஏதோ பயங்கரமான ஆக்ஷன் படம் போல’னு ரசிகர்கள் மனசுல ஓர் எண்ணம் வரும். ஆனா, ஜானியோ மென்மையான காதல் கதை. ஒரு ஸ்டில் போட்டோகூட ரசிகர்கள் மனதில் படத்தைப் பத்தி பெரிய தாக்கத்தை உண்டாக்கும். நாம எடுக்கும் படம் கதையின் இயல்பைப் பிரதிபலிப்பதாக இருக்கணும்னு நான் புரிஞ்சுக்கிட்ட படம் அது.  


சுஹாசினி, அன்று ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் அசிஸ்டென்ட். 'ஜானி’ படப்பிடிப்பில் துறுதுறுவென வலம்வந்த அவரிடம் தன் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடிக்க அழைத்தார் மகேந்திரன் சார். ஆனால், முதலில் சுஹாசினி மறுத்துவிட்டார். 'ஜானி’ படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு கடையின் சுவர் முழுக்க கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அதில் சுஹாசினி தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார். என்னவோ தோண, 'சார், சுஹாசினிக்கு நடிக்கிற ஐடியா இருக்கு. திரும்பப் பேசிப் பாருங்க. க்ளிக் ஆகும்’ என்றேன். க்ளிக் ஆனது!  


தான் நடிக்கும் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் மேல் அவ்வளவு அக்கறை காட்டுவார் சிரஞ்சீவி. அப்போ ஒவ்வொரு கோடையிலும் தன் பட ஷூட்டிங் காஷ்மீரில் இருக்கிற மாதிரி பார்த்துப்பார். ஒவ்வொரு படத்துக்கும் 15 நாட்கள்னு, ஒரு மாசத்துல ரெண்டு படத்தின் ஷ§ட்டிங்குகளை  காஷ்மீரில் வெச்சி முடிச்சிடுவார். அதே யூனிட் ஆட்கள் தான். தயாரிப்பாளர், ஹீரோயின் சில நடிகர்கள் மட்டும் மாறுவாங்க. இப்படித்தான் ஒருதடவை நான் அவர் படத்துக்காக காஷ்மீர் போயிருந்தேன். அங்கே எல்லாரும் அவங்கவங்க மனைவியோட வந்திருந்தாங்க. 'நீ உன் மனைவியைக் கூட்டிட்டு வரலையாப்பா..? இது ஹாலிடே கம் ஷூட்டிங்காச்சே’னு கேட்டப்போ, நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன்!


சோக் குமார்... எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்தப் படத்தில் அவருக்கு முத்தம் கொடுப்பவர்கள் ராதிகாவும் அவரோட அசிஸ்டென்ட் விஜயலட்சுமியும். என் சர்வீஸ்ல ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு லைட்டிங்கில் பண்ணின கேமராமேன் இவர் மட்டும்தான். அவரும் நானும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருவோம். அப்போ மத்தவங்க யாரும் தயாராகலைன்னா, 'ரவி... வாட் எ நைஸ் லைட். ஆனா, லைட்டிங் போகுதுய்யா. எங்க இன்னும் யாரும் வரலை’னு மனுஷன் கெடந்து துடிப்பார். சினிமா வெறியர். ரொம்பவே வெகுளி. ஈகோ இல்லாதவர். 'ஜானி’ படத்துல ரெண்டு ரஜினி சேர்ந்து நடிச்ச அந்த ட்ரிக் ஷாட், ஒரு லைட்மேன் சொன்ன யோசனை. ஒரு லைட்மேன் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தன்மையானவர்.


சுஜாதா, எம்.ஜி.வல்லபனின் நண்பர். அவரோட இயக்கத்தில் ராதிகா-சக்கரவர்த்தி நடித்த படத்தில் நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் சுஜாதா. 'எப்படியும் நான் நல்லா நடிச்சிருக்க மாட்டேன். எடிட்டிங் டேபிள்ல சரிபண்ணிக்கங்க’னு சொல்லிட்டே இருந்தார். நம்ம என்ன பேசினாலும் காது கொடுத்துக் கேட்பார் சுஜாதா. சில வாரங்கள் கழிச்சுப் பார்த்தா, ஏதாவது ஒரு கதையில நம்மகிட்ட கேட்ட டெக்னிக்கல் விஷயங்களை அழகான செய்தியா வாசகர்களிடம் சேர்த்திருப்பார்.    


சினிமாவில் பலரைப் போல எனக்கும் பாலசந்தர் சார்தான் மானசீகக் குரு. இவர் இயக்கிய 'அக்னி சாட்சி’ படத்தில் வயல்வெளி லொகேஷன். அங்கே வழக்கமாக ஆர்ட்டிஸ்டை வயலுக்கு நடுவில் நிக்கவெச்சிதான் படம் எடுப்பாங்க. நான் சரிதாவை வயலின் ஒரு மூலையில் நிக்கவெச்சி ஃப்ரேம் முழுக்க பச்சைப் பசேல்னு முழு வயலும் தெரிவது மாதிரி போட்டோ எடுத்தேன். அதை ராத்திரி பார்த்துட்டு, 11 மணிக்கு மேல போன் பண்ணி, 'ரவி சூப்பர்யா... சூப்பர். நல்ல ஃப்ரேம்யா’னு பாராட்டிட்டே இருந்தார். நேரம் கிடைக்கிறப்பலாம் அவர் வீட்டுக்குப் போயிருவேன். அப்படி நான் போன சமயம் கமல் வந்திருந்தார். அப்போ கே.பி.சாரின் மனைவி எங்களுக்குக் கொடுத்த உபசரிப்புக்கு 'காபி சாட்சி’தான் அந்தப் படம்!


'ஜோதி’, மணிவண்ணன் இயக்கிய ரெண்டாவது படம். ஆரம்பத்துல அவருக்கும் எனக்கும் செட் ஆகலை. ஆனா, தொடர்ந்து நான் எடுத்த புகைப்படங்களை பார்த்துட்டு வந்தவர், அப்புறம் எல்லாப் படங்களுக்கும் என்னையே கூப்பிட்டார். அப்போ மோகனுக்கு இருந்த புகழ் வெளிச்சத்தை இப்போகூட எந்த ஹீரோக்களும் அனுபவிச்சிருக்க மாட்டாங்க. ஆனா, அது எதையும் அவர் மனசுல ஏத்திக்கிட்டதே இல்லை. கார்ல வந்து இறங்கி ரோட்டு டீக்கடைல நின்னு என்தோள் மேல கைபோட்டுப் பேசிட்டு இருப்பார்.


 

து, 'மற்றவை நேரில்’ படப்பிடிப்பு. பி.சி.ஸ்ரீராமின் முதல் படம். மௌலி இயக்கம். ஜெயதேவி தயாரிப்பாளர். திறமையான ஆட்களைப் பரிந்துரை செய்து முன்னுக்கு கொண்டுவருவதில் ஜெயதேவி கிரேட். முதல் படத்திலேயே பி.சி-யின் சில ஃப்ரேம்களைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். ஆனா, 'நான் பார்த்து மிரண்ட ஆட்கள்’னு என் பெயரை பி.சி. சொல்லியிருக்கார். அது என் தொழிலில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம். தேங்க்ஸ் பி.சி. சார்!

***********





     RSS of this page