Home / SorgamNaduvile

SorgamNaduvile


சொர்க்கம் நடுவிலே

''ஜெய வீஜயீ பவ.

என் பெயர் கேசவன் நாராயணன். சோழநாட்டின் உபதளபதி. நான் அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன்.

நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது பூமியிலுமில்லாமல் பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது, மறைவது என்று எதுவுமே இல்லை. எந்நேரமும் மங்கலமான ஒரு வெளிச்சம் மட்டுமே உள்ளது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமா? பனி படர்ந்த நேரத்து விடியற்காலை வெளிச்சம் போல மிகப் பிரம்மாண்டமான வெளி. அதில் தனியே இருப்பது போன்ற ஒரு உணர்வு. பூமியில், பார்ப்பதும் கேட்பதும் உடல் வழியே நடைபெறுகிறது அல்லவா? அது இங்கே சாத்தியமில்லை. எல்லாமே உணர்வுதான்.

நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? என்ன செய்வது, இவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குள் ஏதாவது கற்பனை செய்துகொள்ளுங்கள். 'இதுபோல' என்று எதையாவது உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமா? அப்படியானால் நீங்கள் இறந்துபோக வேண்டும். அப்போதுதான் இந்த இடத்தினுடைய அமைதி புரியும். இதனுடைய நிச்சலனம், இதனுடைய குளுமை தெரியும்.

மரணம் ஒருவகை அமைதி. பூமிதான் கொந்தளிப்பான இடம். ஏன் தெரியுமா? பூமி துவந்தமயமானது. அதாவது இடது-வலது, மேல்-கீழ், இருட்டு-வெளிச்சம், உண்மை-பொய், சரி-தவறு, உயர்வு-தாழ்வு என்று இரண்டாக பிரிந்திருக்கிறது. இவையெல்லாம் பூமியில் வாழும்போது கொந்தளிக்க கொந்தளிக்க, அந்த அனுபவத்தினுடைய மிச்சங்கள்தான் நினைவுகளாக இங்கே எழுகிறது. உடம்பு இல்லையென்றாலும், இருப்பதுபோல் ஒரு பிரமையில் வாழவேண்டி இருக்கிறது.

ஆனால், ஒரு சௌகர்யம். எந்த வயதில் இறந்தோமோ அந்த வயது உடம்பு நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அதுவும் நினைவாக மட்டுமே இருக்கும். உடம்பே இல்லாமல் நினைவாக வாழ்வது எப்படி என்கிறீர்களா? ஒன்றும் கடினமில்லை. நீங்கள் உறங்கும்போது கனவு காண்கிறீர்கள். நடக்கிறீர்கள், நிற்கிறீர்கள், ஓடுகிறீர்கள். சண்டை போடுகிறீர்கள். காதல் செய்கிறீர்கள். இதையெல்லாம் உடம்பாகத்தானே செய்கிறீர்கள். உடம்பாகத்தானே உணர்கிறீர்கள். ஆனால் அங்கு உடம்பு இருக்கிறதா? இல்லையே. உடம்பு பற்றிய நினைவுதானே இருக்கிறது. இதுதான் மரணத்திற்குப் பிறகும் ஏற்படுகிறது.

தூக்கம் என்பதும் தூக்கத்தில் கனவு என்பதும் மரணம்போல் ஒரு அமைதி. 'மரணத்திற்குப் பிறகு மனிதர் நிலை எப்படி இருக்கும்?' என்று யோசிக்க ஆசைப்படுபவர்கள், கனவு நேரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கனவு வரும்போதே, 'என்ன இது' என்று விசாரிக்கத் துவங்குங்கள். அல்லது கனவு வரும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்கச் செல்லுங்கள். அப்படிச் செய்தால், கனவு வரும்போது கனவைப் பற்றிய ஒரு கேள்வியோடு நீங்கள் கனவு காண்பீர்கள்.

அடடா. இப்படி ஒரு கனவா? இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்? என்று கனவின்போதே கனவு பற்றிய கேள்வி உங்களைப் பின்தொடரும். இப்படியாகக் கனவைப் பற்றி கவனமாக நீங்கள் ஆராய்ந்துவிட்டால், 'மரணத்துக்குப் பிறகு என்ன?' என்பது கொஞ்சம் புரியக்கூடும். ஆயினும், நேரே பார்த்து அனுபவிப்பது முற்றிலும் வேறானது. அது அடர்த்தியானது. திடமானது. அந்த அனுபவத்தை வேறு எப்படியும் பெறமுடியாது.

நான் கேசவன் நாராயணன். சோழநாட்டின் உபதளபதி. பல கொலைகளை செய்திருக்கிறேன். அதை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மெல்ல இப்போது களைந்து கொண்டிருக்கிறேன். என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லையா? இது பூமிக்கு உண்டான தத்துவம்தான். எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. சுவரை நோக்கி ஒரு பந்தை எறிந்தால், எறிந்த வேகத்திலேயே திரும்பி வருமே... அப்படி. பூமியில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்பதற்கான எதிர்வினைதான் மரணத்திற்குப் பிறகான மனிதர் நிலை. ஏதோ ஒரு வினையின் காரணமாகத்தான் நீங்கள் பூமியில் பிறந்தீர்கள். அங்கு செய்த வினையின் காரணமாக மேலேயும் போகாமல் பூமியிலும் இல்லாமல் நடுவே ஒரு இடத்தில் நிற்கப் போகிறீர்கள். பிரபஞ்சம் அப்படித்தான் இயங்குகிறது. இதன் மூல சக்தி ஒரு அசைவு அசைய, அதற்கு எதிராய் இன்னொரு அசைவு நிகழ்கிறது. கிரகங்கள் சுழலுகின்றன. சுடர்கள் அசைகின்றன. ஒளி நகர்ந்து கொண்டிருக்கிறது. காற்று வீசுகிறது. பூமி சுழலுகிறது. இவை அனைத்தும் ஒரு

அசைவின் விளைவுகளே.

கீழே பூமியில் தென் தமிழ்நாட்டில் சுசீந்திரம் என்று ஒரு கோவில். அதன் கோபுர வாசலில் ஒரு அழகான புடைப்புச் சிற்பம். ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. ஊஞ்சலில் சிவனின் மனைவி உட்கார்ந்திருக்கிறார். சிவன் அந்த மரத்தின் உயரத்துக்கு பிரம்மாண்டமாய் நின்று, அந்த மரத்தைத் தன் இடது கையால் ஒரு அசைப்பு அசைக்கிறார். ஊஞ்சல் முன்னே ஆடுகிறது. பின்னே போகிறது. பின்னே போனதால் முன்னே போகிறது. முன்னே போனதால் பின்னே போகிறது. அந்த மரத்தைச் சுற்றி காமம் என்கிற பாம்பு இருக்கிறது. சந்தோஷம் என்ற பழங்கள் இருக்கின்றன. வளர்ச்சி என்கிற பசுமையான கொடி இருக்கிறது. இதுதான் பிரபஞ்சம் இயங்குவதின் சிற்ப விளக்கம். இதுவே பிரபஞ்ச ரகசியம்.

பூமியில் இருக்கும்போது இது எனக்குப் புரியவில்லை. ஒருமுறை பாண்டிய வீரர்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றார்கள். நான் அந்த சுசீந்திரம் சிற்பத்தில் இடது கை வைத்து, வலது கையில் வாள் ஏந்தி அவர்களைத் தடுத்து நிறுத்தினேன். 'சிரம் கொய்ய வேண்டும்' என்கிற ஆவல் அப்போது எனக்கு மிகுதியாக இருந்தது. மிகக் கவனமாக எதிரி ஒருவனின் வாளைத் தட்டி விட்டு வயிற்றில் எட்டி உதைத்தேன். அவன் வலி தாங்காமல் குனிந்தபோது வாகாய் நகர்ந்து, வாளை வேகமாய்ப் பாய்ச்சினேன். தலை துண்டாகிக் கீழே விழுந்தது. கழுத்திலிருந்து ரத்தம் எரிமலையாய்ப் பொங்கியது. அவன் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு, உருண்ட தலையைக் கைகளால் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அதை மறுபடியும் பொருத்திக் கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவனுக்கு. விளைவுகளை யாரால் நிறுத்த முடியும்? அவன் மரணமடைந்தான். துண்டாகிச் சற்று தூரத்தில் விழுந்த தன் தலையை, தானே பிடித்துக் கொண்டு கிடக்கின்ற ஒரு சடலத்தை நீங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன். பசுமரத்தாணிபோல் இந்த விஷயம் எனக்குள் பதிந்து விட்டது. என்னுடைய மரணத்தின் போதும் இவனுடைய மரணம்தான் நினைவுக்கு வந்தது. இறந்த பிறகும்கூட இந்த நிகழ்வை என்னால் களைய முடியவில்லை.

இங்கே அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு முறை அவனைப் பார்க்க நேர்ந்தது. என்ன நினைத்தானோ, ஓடிவிட்டான். அவன் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. மேலும் அல்லாது கீழும் அல்லாத இடத்தில்தான் அவனும் அலைந்து கொண்டிருக்கிறான். எங்களைப்போல் கோடிக்கணக்கானபேர் இங்கே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

பூமி என்பது மனிதர்களும், உடம்புடன் கூடிய உயிர்கள் மட்டுமே வாழ்கின்ற இடம் இல்லை. பூமியிலிருந்து சற்று மேலே உடம்பே இல்லாத உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவையும் இந்த பூமியைச் சார்ந்தவைதான். 'அதெப்படி' என்று நீங்கள் கேட்கலாம். ஒரு மரம் இருக்கிறது. மரத்தில் பூக்கள் இருக்கின்றன. பூவிலிருந்த நறுமணம் மரத்தைச் சுற்றி பரவியிருக்கிறது. ஆனால், அந்த நறுமணம் மரத்திலிருந்து அந்நியப்பட்டுத்தானே இருக்கிறது. அப்படித்தான் உடம்பில்லாத உயிர்களும். அவை பூமியில் இருந்து சற்றே அந்நியப்பட்டு நிற்கின்றன. 'மரமில்லாமல் நறுமணம் என்பது இல்லை' என்பதுபோல், நாங்கள் இல்லாமல் இந்த பூமி இல்லை. நாங்கள் பூமிக்கு அப்பால் அதன் வெளிச்சத்தோடு ஒன்றாமல், மேலே மங்கலான இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

'இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமே' என்று அச்சப்படுகிறீர்களா? நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும். இதிலிருந்து தப்பிக்க முடியாது. எங்கும் ஒளிய முடியாது. இது மிகச் சரியாய் உங்கள் மீது விழுந்தே தீரும். இன்றைக்கு இல்லாவிட்டால், என் றாவது ஒரு நாள் நீங்கள் மரணமடையத்தான் போகிறீர்கள். எங்கள் இடத்திற்கு வரத்தான் போகிறீர்கள். இந்த அனுபவத்தைப் பெறத்தான் போகிறீர்கள். ஒரு விஷயம் சொல்லவா? 'இது ஒரு நல்ல அனுபவம்' என்று சொல்லத்தான் உங்களுடன் பேசிக்கொண்டிருக் கிறேன். இங்கே வரப் போகிறவர்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறேன். இது கற்பனையல்ல, விஞ்ஞானம்.

ஒரு வினைக்கு எதிர் வினை உண்டு என்றால், நீங்கள் வாழ்ந்ததற்கான எதிர்வினை என்னாவது? நீங்கள் கோபப்பட்டது வெறுமே கரைந்துவிடுமோ. நீங்கள் யாருக்கும் தெரியாமல் காமவயப்பட்டது, எவருக்கும் சொல்லாமல் திருடியது எல்லாம் மறைந்துவிடுமா. இல்லவே இல்லை. அவை நிச்சயம் உங்களைப் பின்தொடரும்.

'எப்படி...? எப்படி...?' என்று பதறாதீர்கள். சொல்கிறேன்.

ஜெய விஜயீ பவ.

நான் கேசவன் நாராயணன். சோழர் படையின் உபதளபதி. அந்தணன். ஆயினும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களாயிற்று. இன்னும் பிறக்கவில்லை. உடலில்லாத உலகத்துக்கு வருபவர்களுக்காக நன்மைகள் செய்ய உத்தேசித்து நான் பேசத் துவங்குகிறேன்...

கீழே தொண்டை நாட்டின் ஒரு பகுதியான திருவான்மியூருக்கும், மயிலாப்பூருக்கும் நடுவேயான ஒரு இடத்தில் ஒரூ பெண் நடந்து கொண்டிருக்கிறாள். இரண்டு இரும்புக் கட்டைகளின் மீது இரும்புச் சக்கரம் பொருத்திய தொடர் வண்டி ஒன்று விரைவாக வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு அதுபற்றிய நினைவு எதுவும் இல்லை. மனம் முழுவதும் வேறு எங்கோ ஒருவரிடம் வைத்து, கையில் உள்ள கருவியின் மூலம் உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கிறாள். நான் பிறந்தபோது இருந்த உபகரணங்களுக்கும், இப்போது உள்ள உபகரணங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எங்களோடு இருந்த நித்த விநோத பெருந்தச்சன், வில்வைத்த தேர் வண்டி செய்தபோது சோழ தேசமே சூழ்ந்து நின்று அவனைப் பாராட்டியது. இரண்டு குதிரைகள் பூட்டிய மெல்லிய சக்கரங்கள். சக்கரங்களுக்கு அருகே வில். அதன் மீது தேர் என்று அவன் செய்த வண்டிக்கு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வண்டிகள் விதம் விதமாக மாறத் தொடங்கின. நான் இடையறாது வியப்போடு மனித குலத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தப் பெண் விரைவு வண்டியின் வருகையைக் கவனிக்காமல் கையில் உள்ள கருவியில் உரத்த குரலில் கத்துகிறாள். ''ஏன் கல்யாணத்துக்கு அலையற? ஏன் கண்டபடி கண்டிஷனுக்கு ஒத்துக்கற? அந்த மாதிரி பண்ணாத. நான் கல்யாணத்துக்கு அலையறேனா? கல்யாணம் வேண்டாம்னு நான் இருக்கேன்ல. அந்த மாதிரி நீ இருக்கக்கூடாதா? என்னது, இருக்க முடியாதா? அவன் ஏதோ சொல்வானாம். இவ தலைய ஆட்டிக்கிட்டு கேப்பாளாம். நானா இருந்தா கால்ல இருக்கறத கழட்டி முகத்துலயே அடிச்சிருப்பேன்'' என்று உரத்த குரலில் உடம்பு பதற பேசிக்கொண்டு போகிறாள்.

பெண்களின் வாழ்க்கை முறை மாறிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பெண் எங்கேயோ வேலைக்கு போகிறாள். சோழ தேசத்திலும் வேலைக்குப் போகிற பெண்கள் உண்டு. அவர்களுக்கு அதிகாரிச்சிகள் என்று பெயர். ஆனால் இன்றைய பெண்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள். தெளிவாகவும் திறமையாகவும் இருக்கிறார்கள். இது அவர்களின் பேச்சிலிருந்தே தெரிகிறது.

''போறும்டி. காலா காலத்துக்கும் கல்யாணம் கல்யாணம்னு போய், எவனோ ஒரு துப்பில்லாதவனுக்கு அடிமைப்பட்டு வாழறது போதும். தனியா இருக்கணும். எந்தத் தொந்தரவும் இல்லாம இருக்கணும். அந்த மாதிரி பார்த்துக்கோ. நாற்பது சவரன் போட்டாதான் கல்யாணம்னு சொல்றானா. அசிங்கமா கெட்டவார்த்தை சொல்லிட்டு வந்துரு. அவன் ஆபீஸுக்கு போய் நில்லு. 'நீ ஆம்பளையாடா. உனக்கெதுக்கு மீசை?'ன்னு கேளு. 'உனக்கு எதுக்குடா கல்யாணம்? காசு கொடுத்துட்டு தேவடியா வீட்டுக்குப் போ.' அப்படீன்னு பேசு'' என்று யாரோ ஒருத்திக்கு மூச்சிரைக்க உபதேசம் செய்து கொண்டிருந்தாள். பின்னால் வெகு தொலை வில் அந்த இரும்புச்சக்கர தொடர் வண்டி வந்து கொண்டிருந்தது.

அவள் அந்த சப்தத்தை உணர்ந்தாள். கையில் இருந்த கருவியிலிருந்துதான் வருகிறது என்று தவறாக நினைத்தாள். ''எங்கேயிருந்து பேசற? பின்னாடி ஒரே

சத்தம் கேக்கறதே?'' என்று வினவினாள். எதிர்பக்கம் ஏதோ பதில் வந்தது. அவளுக்குக் காதில் விழவில்லை. திடீரென்று அவளைச் சுற்றி ஒரு வெற்றிடம் உருவானது. இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு மனிதர்களைச் சுற்றி இப்படி ஒரு வெற்றிடம் உண்டாகும். அந்த வெற்றிடம் உடம்புக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தியை உறிஞ்சி வெளியே இழுத்துப்போடும். அப்படி வெளியே இழுத்துப் போடுவதற்கு சுற்றிலும் இருக்கின்ற சக்திகள் உதவி செய்யும். அப்படித்தான் இந்தப் பெண்ணைச் சுற்றியும் வெற்றிடம் உண்டாகியது. அவள் உயிரை உறிஞ்சுவதற்கு வெளியே இருக்கிற சக்திகளும் தயாராக இருந்தன.

அவள் தொடர்ந்து உரத்த குரலில் பேசினாள். 'என்ன இவ்ளோ சத்தம்' என்று திரும்பினாள். திரும்பிய மூன்றாவது வினாடிக்குள் அது நடந்தது. 'ச்சப்'பென இரும்புச் சக்கர வண்டி அவள் முகத்தில் மோதி தூக்கி எறிந்தது. பறந்துபோய் அவள் இரும்புக் கட்டைகளின் மீது விழுந்தாள். வண்டி அவள் மீது 'கர்க்'கென ஏறி நகர்ந்து மறைந்தது. அவள் பல துண்டுகளாக இரும்புக் கட்டைகளின் மீது கிடந்தாள். அவளுடைய கையும் காலும் வெவ்வேறு திசைகளில் கடந்தன. முகம் உருத்தெரியாமல் சிதைந்திருந்தது. அவளுக்கு மரணத்தின் வலி சில விநாடிகளே நீடித்திருக்கும். அதற்குள்ளாகவே வலியின் உச்சத்தில் மயக்கமாகிவிட்டாள். உடம்பு மரத்துக் கிடந்தது. எனவே, உயிர் வெகுவேகமாக, வெகு எளிதாக உடம்பிலிருந்து பிரிந்து மேலேறியது. உயிர்ச் சக்தியால் இழுக் கப்பட்டு, பிறகு தனித்து விடப்பட்டது. உயிர் பிரிவதின் மிக மோசமான நேரம் இதுதான்.

மரணபயம் என்பதும் இதுதான். வாழ்கை முழுவதும் மனிதர்களோடும் மிருகங்களோடும் பறவைகளோடும் தாவரங்களோடும் வாழ்ந்துவிட்டு, பிறகு இவை எதுவுமில்லாத ஒரு இடத்தில் தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலைதான் மரணபயம். இந்தத் தனிமைதான் மிகப்பெரிய அவஸ்தை. இந்தத் தனிமைதான் மிகப்பெரிய நடுக்கம்.

- தொடரும்

சொர்க்கம் நடுவிலே

பாலகுமாரன்

 

ஜெய விஜயீ பவ.

நான் கேசவன் நாராயணன். சோழநாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர் தொழில் புரிபவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களாயிற்று. பூமியிலுமில்லாமல், வெளிச்சமான மேலோகத்திலும் இல்லாமல் இடைப்பட்ட இடத்தில் மவுனமாக வாழ்ந்து வருகிறேன். இங்கிருந்தபடியே மரணத்தின் சூட்சுமங்களை மெல்ல மெல்ல கிரகித்து வருகிறேன். இறந்து போகிறவர்களை உற்றுக் கவனித்து, அவர்கள் அனுபவங்களிலிருந்து பாடங்கள் படிக்கிறேன். வந்தவர்களை ஆசுவாசப்படுத்துகிறேன்.

தொடர் வண்டியில் அடிபட்டு இறந்துபோனாளே, அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். இங்கு வந்ததின் அவஸ்தை குறைவதற்கு மவுனம் போன்ற இந்த தூக்கம் மிக மிக அவசியம். தூக்கம் என்பது மரணத்தின் சாயல். உடம்பு இருக்கும்போதே மரணத்தை ருசி பார்க்கிற ஒரு நல்ல விஷயம். சொடுக்கு நேரத்தில் ஏற்பட்ட இந்த மரண அனுபவத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தப் பெண்மணி திகைத்து அலறி, இப்போது சுருண்டு கிடக்கிறாள்.

இதோ, பூமியில் இறக்கப் போகிறவன் தொண்டை நாட்டின் விளிம்பில் உள்ள சோழ தேசத்தின் நல்ல நகரங்களில் ஒன்றான எண்ணாயிரம் பக்கம் வாழ்ந்துக் கொண்டிருந்தவன். புஜபலமே வெற்றி என எண்ணிக் கொண்டிருந்தவன். அதுவே உயர்வு என்று வாழ்ந்து கொண்டிருந்தவன். அவனைச் சுற்றி இப்போது பல்வேறு ஆயுதங்களுடன் ஆட்கள் சூழத் துவங்கிவிட்டார்கள். அனைவரும் இவனைக் காட்டிலும் வலுவு குறைந்தவர்கள். ஆனால், அவர்களிடம் கொல்லும் வெறி இருந்தது. ஓடுகின்ற இவன் வலுவு மிகுந்தவனாக இருந்தாலும் இவனுக்குள் மிகப்பெரிய பயம் இருந்தது. பயத்தினால்தான் இவன் மரணமடையப் போகிறான். இவனைச் சூழ்ந்திருந்தவர்களும், 'இவன் ஆயுதம் வைத்திருப்பான்' என்ற பயத்தோடு இருந்தார்கள். அந்தப் பயத்தை இவன் புரிந்து கொண்டான். ஆயுதம் இருப்பதுபோல் நடித்தான். அவர்கள் ஒருவரையொருவர் சின்ன அசைவுகளோடு வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அந்தப் நேரம்தான் இவன் வாழ்க்கையின் கொடுமையான நேரம். இவனைப் பிரபஞ்ச சக்தியினுடைய வெறுமை சூழ்ந்து கொண்டது. உயிரை உறிஞ்சுவதற்கு தயாராய் நின்றது. தன் வாழ்வின் மொத்தப் பகுதியையும் இவன் யோசித்துப் பார்த்தான்.

பதினைந்து வயதில் அப்பாவை வெட்டியது, அம்மாவின் காதை அறுத்து நகைகளைத் திருடியது, தங்கையின் மைத்துனனைக் கொன்றது என வரிசையாக ஞாபகத்துக்கு வந்தன. பிறகு மிகப்பெரிய சண்டியர் என்று தீர்மானிக்கப்பட்டதும், காசுக்காகவும், சந்தோஷத்திற்காகவும், பயத்தினாலும் கொலைகள் செய்ததும் என விரும்பத்தகாத நினைவுகள் தொடர்ந்தன. இவன் செய்த விஷயங்களே இவனுக்கு எதிராக நிற்பதின் தருணம் இது. இவன் எப்படி மடக்கி அடித்தானோ, அதேபோல இவனை அடிப்பதற்கு ஆட்கள் தயாராக நின்றார்கள். ஒரு கணம், ஒரு மெல்லிய கணம் போதும் என்று தோன்றியது.

''இந்த நேரம் என்னை விட்டுவிட்டால் நான் எல்லாவற்றிலிருந்தும் விலகி, எங்கேனும் வடக்கே வெளியூருக்குப் போய் கூலி வேலை செய்துப் பிழைத்துக் கொள்வேன். தயவுசெய்து விட்டுவிடுங்களேன்டா'' --உள்ளுக்குள்ளே எண்ணம் தோன்றியது.

ஆனால், வெளியே இருந்தவர்களுக்கு இவனை வெட்டிப்போட பலமான காரணங்கள் இருந்தன. இந்த நேரம் இவனை விட்டுவிட்டால், வெகு நிச்சயமாக நம்மை வெட்டிவிடுவான் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். 'தாங்கள் உயிர்வாழ இவன் இறந்தேயாக வேண்டும்' என்று திடமாக நம்பினார்கள். பாதிக்கப்பட்ட ஒருவன் மிகுந்த ஆத்திரத்தோடு இருந்தான். இடுப்பில் கத்தி வைத்திருந்தான். கையிலிருந்த கட்டையை மிக வேகமாக ஓங்கி எறிந்தான். கட்டை இவன் மண்டையை நோக்கி வந்தது.

ஆனால், சட்டென குனிந்து கொண்டான். குனிந்தபோது, 'கும்பிட்டு தப்பிவிடலாமோ' என்றொரு எண்ணம் தோன்றியது. இது தவறு. அங்குள்ள எவரும் இவனை மன்னிக்கத் தயாராய் இல்லை. ஆனால், 'மன்னிப்பு கேட்டால் தப்பிவிடலாம்' என்று இவன் தவறாக கணக்குப் போட்டான். சட்டென்று நீள நெடுக விழுந்து கும்பிட்டான். ''என்னை தயவு செஞ்சு விட்ருங்க'' என்று தலைதூக்கி அலறினான். அவர்கள் துணிவானவர்கள். 'அவனிடம் ஆயுதம் இல்லை' என்று தெளிவானார்கள். கட்டையை வீசியவன் அவனை நோக்கி மெதுவாக முன்னேறினான். 'அவன் முன்னேறுவதற்கு முன்னால் தான் முந்திக் கொள்ள வேண்டும்' என்று வேறு ஒருவன் வீரச் செயல் செய்ய ஆசைப்பட்டான். ஓடிப்போய், கிட்டத்தட்ட படுத்துக்கிடந்தவன் தலையில் ஓங்கி அடித்தான். ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. இவன் பலமுறை அடி வாங்கியவன். உயிர் போகும் வலியிலும் சுதாரித்து எழுந்து கொண்டான். 'நிச்சயம் கொல்லப்போகிறார்கள். எனவே, எதிர்த்துத் தாக்கவேண்டும்' என்று எண்ணினான். 'மன்னிப்புக் கேட்டிருக்கக்கூடாது. தவறு செய்து விட்டோம்' என்று வருந்தினான். வேகமாகச் சுழன்று கைகளை வீசி அவர்களைத் தாக்க முற்பட்டான்.

முதலில் கட்டையை வீசியவன், இடுப்பிலிருந்த கத்தியை உருவி அருகே வந்து அவன் கையை வெட்டினான். கையிலிருந்து ரத்தம் கொப்பளித்துத் தெறித்தது. தலையில் அடித்தவன், எகிறி நெஞ்சில் மிதித்தான். கத்தியை வைத்திருந்தவன், கழுத்தில் குத்தினான். இரண்டு பேரையும் விலக்கிக் கொண்டு மூன்றாமவன் வந்து கையிலிருந்த நீண்ட அரிவாளால் அவன் தோளை வெட்டினான். இப்படி முப்பது வினாடிகளுக்குள் பதினேழு வெட்டுகள் உடம்பில் விழுந்தன. ஒவ்வொரு வெட்டுக்கும் கொஞ்சங் கொஞ்சமாய் உயிர் வெளியேறிக் கொண்டிருந்தது. வலியும், பயமும் அவனைக் கதற அடித்தன. என்ன செய்வதென்று தெரியாமல், வானத்தை நோக்கிக் கை கூப்பினான். 'ஐயோ...' என்று குரலெழுப்பினான். அவன் கண்களுக்கு நான் தெரிந்தேன்.

ஜெய விஜயீ பவ.

என் பெயர் கேசவன் நாராயணன். நான் அவன் மரணத்தை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். வெறுமை அவனைச் சூழ்ந்து இறுக்கியது. அவன் உயிரில் மெல்ல கை வைத்தது. உயிர் பிரியும் முன்பு அவன் உண்மையாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டான். அடுத்த பிறவியில் இப்படி செய்யக்கூடாது, இப்படிச் வாழக்கூடாது என்று அவஸ்தைப்பட்டான். அழுதான். அவன் அழுகை பயத்தினால் ஏற்பட்டது. அது வலியினால் ஏற்பட்டது என்று சுற்றியுள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவன், தான் வாழ்ந்த வாழ்க்கைக்காக வெட்கப்பட்டு உள்ளுக்குள்ளேயே கதறி வருந்தினான். அவனுடைய உயிர் உறிஞ்சப்பட்டது. வெளியே உள்ள சக்தியோடு கலந்து கொண்டது. அதேநேரம், அவனுடைய உடம்பு சற்றுத் தள்ளாடியது. வலியில் தவித்தது. அவன் மண்டியிட்டான். மெல்ல மல்லாந்து விழுந்தான். அவன் போவதை அவனே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்னை நோக்கி வருவதை நான் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அருகே வந்து என்னைப் பார்த்தான். ''நான் இறந்து விட்டேனா?'' என்று கேட்டான்.

நான், ''ஆம்'' என்று பதில் சென்னேன்.

''இப்பொழுது என்ன?'' என்று விசாரித்தான்.

''எதுவுமில்லை. மௌனமாக இருக்க வேண்டியதுதான்'' என்றேன்.

''இங்கேயேவா, எவ்வளவு நாள்?''.

''இங்கு நாள் கணக்கில்லை. இது வேறு கணக்கு''.

''என்ன கணக்கு?'' அவன் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினான்.

இறந்தது பற்றிய பயம் அவனிடமிருந்து நகர்ந்து விட்டிருந்தது. அது ஆரோக்கியமான விஷயமாக இருந்தது.

''இப்போது இங்கே என்ன செய்வார்கள்'' என்று மீண்டும் ஆவலாகக் கேட்டான் அவன்.

''எதுவும் செய்ய மாட்டார்கள்''.

''ஏன்? நான் கீழே அநியாயங்கள் பல செய்திருக்கிறேன். அவைகளுக்கு விசாரணை செய்யமாட்டார்களா?''.

''விசாரணை என்று வேறு எவரும் செய்யமாட்டார்கள்''.

''பிறகு?''.

''நீங்களே செய்து கொள்ள வேண்டியது தான்''.

''நானா... யாரை?''.

''உங்களை'' நான் பதில் சொன்னேன்.

''என்னை நானே விசாரணை செய்து கொள்ள வேண்டுமா?''

''ஆமாம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஓர் இடத்திலிருந்து யோசனை செய்யுங்கள். அப்படி நீங்கள் யோசனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடம் மங்கலான வெளிச்சத்தோடு தனிமை மிகுந்து காணப்படுகிறது. தனிமை உங்களுக்கு யோசனை செய்ய மிகவும் உதவும். புரிந்ததுபோல தலையசைத்தான். மெல்ல என்னருகே வந்து நின்று கொண்டான்.

''மிக்க நன்றி'' என்றான்.

நான் சிரித்தேன். இரும்புச் சக்கர வண்டியில் அடிபட்டப் பெண்மணி இன்னும் தூக்கம் கலையாமல் இருந்தாள். இவனோ தூக்கத்திற்குள் போகாமல் இருந்தான். பயத்தினால் ஏற்படும் அலறலை சமப்படுத்தத்தான் தூக்கம். பயம் இல்லாதபோது இதை அழகாக எதிர்கொள்ள முடியும்.

''செய்த அநியாயங்களை எப்படி நினைவுக்குக் கொண்டு வருவது?'' என்றான் யோசைனையுடன்.

''சற்று அமைதியாக இருங்கள். உங்கள் வாழ்வின் பன்னிரெண்டாவது வயதிலிருந்து உங்களுடைய செயல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும்''.

''ஏன் அதற்கு முன்னால் ஒன்றும் ஞாபகத்திற்கு வராதா? அப்போதும் நான் அயோக்கியத்தனம் செய்திருக்கேனே.''

''அது பிள்ளைப் பிராயம். அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அவை நீங்கள் அறியாமல் செய்த பிழைகள். அறிந்து செய்த பிழைகள் பன்னிரெண்டு வயதுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். ஆகவே, பன்னிரெண்டாம் வயதிலிருந்து உங்கள் பிழைகளை நினைவுகூருங்கள்'' என்றேன்.

''உங்கள் அம்மாவின் அவஸ்தையை நீங்கள் உணர்ந்து பாருங்கள்'' நான் உதவி செய்தேன்.

அவன் அமைதியானான். அவஸ்தையைத் தான் பெறுவதற்கு மெல்லியதாய் தவித்துக் கொண்டிருந்தான்.

நான், ''உங்களுக்கு இப்போது உடம்பில்லை. எனவே நீங்கள் நடுநிலையாய் இருக்க முடியும். உடலோடுகூடிய மனதுக்கு எதிராளி அல்பமென்று தோன்றும். நீங்கள் உடம்போடு இருந்தால்தான் சுயம். சுயம் இருந்தால்தான் சுயநலம். எனவே, இப்போது நீங்கள் நடுநிலையோடு இருக்கிறீர்கள். நீங்கள் செய்த வினைகளை இப்போது யோசித்துப் பாருங்கள். இப்படி யோசிக்க முற்படும் தன்மைக்கு 'தர்மராஜ நிலை' என்று பெயர். இங்கே எமன் என்று எவருமில்லை. எமன் என்று அழைக்கப்படுகிற தர்மராஜன் நீங்கள்தான். உங்களுக்குள் இரண்டான பிரிவு இங்கே இல்லை. நீங்கள்ஆன்மாவாகவும் இந்த விஷயத்தைப் பார்க்க முடியும். நீங்களாக செய்த விஷயத்தை மற்றவர் பார்வையிலிருந்தும் உணரமுடியும். இது மிகவும் அற்புதமானப் பார்வை. இந்தப் பார்வையைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று சொன்னேன்.

அவன் காதுகளைப் பொத்திக் கொண்டு அழுதான். ''எப்படி வலிக்கிறது. உயிர் துடிக்க அல்லவா அறுத்தேன். அம்மா என்பவள் நான் வெட்டமாட்டேன் என்கிற நம்பிக்கையில் இருந்தாள். ஆனால், அவள் நம்பிக்கையை ஒரே வீச்சில் சிதறடித்தேன். எனக்கு அந்தத் தோடுகள்தான் முக்கியமாக இருந்தன. தோடுகளால் ஏற்படும் சுகம் முக்கியமாக இருந்தது. ஐயோ, என்ன கொடுமை? எத்தனை வேதனை? எத்தனை வலி?. என் அம்மா அவமானத்திலும் வலியிலும் அழுதிருக்கிறாள். பலபேர் கேலி செய்ய தாங்கிக் குமைந்திருக்கிறாள். நான் செய்தது தவறு. மிகப்பெரிய தவறு'' என்று அலறினான்.

மரணத்தை எதிர்கொண்டு, மௌனமாக ஏற்றவன், வாழும்போது செய்த தவறுக்காக விக்கி விக்கி அழத்துவங்கினான். அலறி நெஞ்சில் அடித்துக் கொண்டு அலைந்தான். நான் அவனை அலையவிட்டேன்.

அந்தப் பெண்மணி தூக்கம் கலைந்து எழுந்தாள். அவளுக்கு பூமியைச் சுட்டிக் காட்டினேன். அவளுக்கு அங்கே சமஸ்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. அவளுக்காக, அவள் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு நீர் வார்த்துக் கொண்டிருந்தார்கள். உப்பில்லாமல் உணவு படைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் தம்பியானவன் கட்டைவிரல் வழியாக கையைத் திருப்பி வார்த்த நீரை அவள் பருகினான். தாகம் தீர்த்தாள். அவளுக்கென்று பலியிடப்பட்ட உணவுகளை சிறிது புசித்தாள். அமைதியானாள். ''மிக்க நன்றி'' என்று சொன்னாள். அவள் பெயரைச் சொல்லி யாருக்கோ மணி தானம் கொடுக்க, அந்த இனிய ஒலியில் அவள் மயங்கினான். அவள் பெயரைச் சொல்லி ஒரு வறியவருக்குச் சால்வை பரிசளிக்க, அந்த சால்வையின் கதகதப்பு அவளைத் தழுவியது. அவள் கைகூப்பி நன்றி சொன்னாள். ஐம்பது குழந்தைகளை வரிசையை£க உட்கார வைத்து அள்ளி அள்ளி தயிர்ச் சோறு வைக்க, அவளிடமிருந்து நிறைவு பொங்கி நனைந்தது.

''எனக்கு பரமசந்தோஷம். மிகுந்த திருப்தி. நான் இறந்தது நிம்மதியாகவே இருக்கிறது. நான் நிறைய பேருக்கு நல்லது செய்திருக்கிறேன். ஆகவே நான் இறந்த பிறகும் எனக்கு நல்லது செய்கிறார்கள் இல்லையா?'' என்று கேட்டாள்.

நான், ''ஆம்'' என்று பதில் சொன்னேன்.

இது பெரிய சூட்சுமம். இதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கை என்பது இருக்கும்போதும் இறந்த பிறகும் நன்றாக இருக்கும். ஆனால், நிறைய மனிதர்கள் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வாழ்க்கை என்பது வாழ்வதோடு முடிந்து விடுவதில்லை. எப்போது ஒரு வினை இருக்கிறதோ, அப்போது அந்த வினைக்கு எதிராக இன்னொரு வினை இருக்கிறது. நீங்கள் வாழ்வது ஒரு வினை எனில், அதற்கு ஒரு எதிர்வினை இங்கு நிச்சயம் உண்டு. உங்கள் எதிர்வினைக்காக நீங்கள் இங்கு வந்துதான் ஆகவேண்டும். இங்கு வந்து அந்த எதிர்வினையை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

இந்தப் பெண்ணுக்கு மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு தானம் கொடுத்தார்கள். 'இவனுக்கு என்ன செய்வார்கள்?' நான் திரும்பிப் பார்த்தேன். பூமியில் அவனை எரிப்பதற்கு சில நாட்களாயிற்று. அவன் மிகுந்த வருத்தத்தோடு தன் உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தான். ''சீக்கிரம் எரித்துவிடுங்கள் ஐயா'' என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இருபத்தியேழு நாட்களுக்குப் பிறகுதான் அவன் உடம்பு தகனமாயிற்று. தகனமாகும்போது அவனை வெட்டியவர்கள் வந்து கை கட்டி நின்றார்கள். அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

அவன் அருகாமை அவர்களுக்கு உள்ளே ஒரு இனம் புரியாத பயத்தை மட்டும் ஏற்படுத்தியது. ஒருவனுக்கு வயிறு கலங்கிற்று. புதரோரமாகப் போய் விழித்துக் கொண்டு உட்கார்ந்தான். இவனுக்குப் பெரும் சிரிப்பு ஏற்பட்டது. உட்கார்ந்தவன் தலையைப் பிடித்து உலுக்க முயற்சி செய்தான். முடியவில்லை.

அப்படியொரு முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று நான் பார்வையால் தடுத்தேன். அவன் மெல்ல என் அருகே வந்து நின்று கொண்டான். அந்தப் பெண்மணியை ஏறிட்டுப் பார்த்தான்.

''எப்போது?'' என்று அக்கறையுடன் கேட்டான்.

''நீ இறந்த சில நிமிடங்களுக்கு முன்பு இவள் இறந்தாள்'' என்றேன். அவன் அவளை மரியாதையுடன் பார்த்தான். அவளும் பயமின்றி அவனைப் பார்த்தாள். கீழே இருக்கும்போது எந்த ஆனைக் கண்டாலும் அவளுக்கு அருவருப்பாகவும் அச்சமாகவும் இருக்கும். இங்கே ஆண் என்கிற நினைப்பே இல்லாமல், ஒரு சக உயிரைப் பார்ப்பதுபோல கண்குளிர அவனைப் பார்த்தாள்.

அவனும் பார்த்தான். அவர்களுக்கு இடையே ஒரு நட்பு தோன்றியது. உடம்பு இருக்கும்போது எழுகின்ற காம விகாரங்கள் இல்லாமல், உடம்பு இருக்கும்போது எழுகின்ற ஆளுமை இல்லாமல், உடம்பு இருக்கும்போது ஏற்படுகிற அதிகாரம் இல்லாமல், வெறும் அன்பு மட்டுமே அவர்களிடம் இருந்தது. வெறும் அன்பு எப்படி இருக்கும்? அதை உடம்பு இருக்கும்வரை அறிந்து கொள்ள முடியாது. வெறும் அன்பை ஒருவர் அனுபவிக்க வேண்டுமெனில், அவர்கள் இறந்தாக வேண்டும். நிச்சயம் இங்கே வந்தாக வேண்டும்.

ஜெய விஜயீ பவ. நான் கேசவன் நாராயணன். சோழநாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாயிற்று. நான் இவர்கள் இரண்டு பேரோடும் மூன்றாவதாக ஒருவரின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

இதோ, மெல்ல பூமியினுடைய சக்தி சுழன்று ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது.

'யாரது?' நான் பூமியை உற்று நோக்கினேன்.

- தொடரும்

சொர்கம் நடுவிலே

பாலகுமாரன்

 

ஜெய விஜயீ பவ.

 

என் பெயர் கேசவ நாராயணன். சோழ தேசத்து உபதளபதி. அந்தணன். ஆயினும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களாயிற்று.

பூமியிலுள்ள சக்தி சுழன்று ஒரு வெற்றிடம் ஏற்படுத்தி, அங்கே இருக்கின்ற ஒரு உயிரைப் பிடுங்கிக் கொண்டு போக ஆயத்தமாக இருந்தது. பூமியின் பரப்பில் பல்வேறு இடங்களில், பல்வேறு உயிர்களை நோக்கி இந்த உறிஞ்சுதல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய எட்டுக்கால் கடல் சிலந்தியைப்போல், பூமியின் சக்தியானது பல்வேறு இடங்களில் தன் கரங்களைப் பரப்பி உயிர்களை உறிஞ்சி மேலே அனுப்பிக்கொண்டிருந்தது. உயிர்களை மேலே அனுப்புவதுபோல் பூமிக்குள் உமிழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது. இது ஒரு வினோதமான காட்சி. இதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், இறந்த பிறகுதான் முடியும். அதாவது உணர முடியும்.

பூமியில் அந்த சுழற்சிக்கு நடுவே மிக உன்னதமான ஒரு நிலையில், மரணத்திற்குத் தயாராய் அவர் காத்திருந்தார். சம்மணமிட்டு புன்சிரிப்போடு மரணத்தின் வருகைக்காக உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி அவரை வழிபடும் ஒரு பெருங்கூட்டம் காத்திருந்தது. அவர் போகக் கூடாது, இந்த பூமியை விட்டு நகரக் கூடாது என்று உரிமையோடும் அன்போடும் அக்கூட்டம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது.

ஆனால், இந்தப் பெருங்கூட்டத்தை அவர் அதிகம் கொண்டாடவில்லை. என் வேலை முடிந்துவிட்டது. உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அவற்றைச் சொல்லிவிட்டேன். இப்போது நான் பயணப்படப் போகிறேன். நான் சொன்னதைப் புரிந்து கொண்டவர்கள் மற்றவருக்குச் சொல்லுங்கள். உலகம் அப்படித்தான் இயங்குகிறது. ஒருவர் சொல்லி, இன்னொருவர் கேட்டு, மறுபடி ஒருவர் சொல்லி, வேறொருவர் கேட்டு என இப்படியாக உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, என் வேலை முடிந்தது, நான் வருகிறேன் என்று கை கூப்பலுடன் அவர் அமர்ந்திருந்தார். அவர் கைகள் துவண்டுபோய் இருந்தன. ஆனால், மனசுக்குள்ளே இருக்கிற மனதின் கைகள் கூப்பியபடியே இருந்தன. அவர் முகம் நோயினால் வாடி இருந்தது. ஆனால், உள் முகம் மலர்ந்திருந்தது. அவருடைய கண்கள் சிரமப்பட்டு பாதி வெறித்த நிலையில் சுற்றியுள்ளவர்களை எந்தவித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், உள்ளுக்குள்ளே கண்கள் பெரிதாகத் திறந்து, நான் என்ன பார்க்கப் போகிறேன்? எதைப் பார்க்கப் போகிறேன்? எதை நோக்கிப் போகிறேன்? என்று ஆர்வத்தோடு இருந்தன. அவர் இறப்பதற்குத் தயாராக இருந்தார். மரணத்தை முழு மனதோடு வரவேற்றார்.

மரணம் பற்றி எனக்கு முன்பே தெரியும். ஒரு நாள் இது நேரும் என்று தெரியும். எனவே, எப்போதும் இந்த மாற்றலுக்குத் தயாராக இருக்கிறேன் என்றபடி திடத்தோடு இருந்தார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அவரைப் போக வேண்டாம் என்று கெஞ்சிக் கூத்தாடினார்கள்.

இந்தக் கெஞ்சுதல் மூலமாக உருவான மனதின் சக்தி, அந்த மகானைச் சுற்றிக்கொண்டு அவரைச் சூழ்ந்திருந்த வெற்றிடத்தை நகர்த்த வேண்டுமென்று ஆசைப்பட்டது. வெற்றிடமோ, பலநூறு மனிதர்களின் வேண்டுதல்களைப் பார்த்து திகைத்து நின்றது. ஆனாலும் உறுதியாக உறிஞ்சிக் கொள்ளத் தயாராக இருந்தது. அவரும் உடம்பை விட்டு நகர்ந்து போக ஆவலாக இருந்தார். அவருடைய உயிரின் அசைவு வெளியே நகர்வதற்கு ஆயத்தமாக இருந்தது. சுற்றி இருந்தவர்களின் மனங்கள் கதற, அந்த மனங்களின் கதறல் காதுக்குள் புகுந்து, நினைவுக்குள் தங்கி உடம்புக்குள் படர்ந்தது. அவர் உடம்பும் அந்த உயிரைப் போகவேண்டாம் என்று தடுத்தது.

நான் கேசவன் நாராயணன். சோழ தேசத்தின் உப தளபதி. இதை நான் ஆவலோடு கவனித்தேன். இது புதுவிதமான

 

மரணமாக இருக்கிறதே என்று அவருக்கு அருகே நின்று வேடிக்கை பார்த்தேன்.

அவர் கூர்மையாக என்னைப் பார்த்தார். உன்னை சந்தித்ததில்லையே என்பதுபோல் அவர் பார்வை இருந்தது. நான் அவரிடம் அச்சமடைய வேண்டாம் என்று ஆறுதலாக உணர்த்தினேன். அந்த ஆறுதலை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், உயிர் வெளியேறுவதை நினைத்து அவர் உடம்பு அச்சமடைந்தது. உடம்பு வேறு, உயிர் வேறு என்ற உன்னதமான நிலையை அவர் உணர்ந்தார். உயிரின் பக்கமா, உடம்பின் பக்கமா? எந்த பக்கம் மனம் இருப்பது? என்று அலைபாய்ந்தார். உடம்பு வலிக்கத் துவங்கியது. மிக மோசமான வலியை அவருக்குக் கொடுத்தது. ஆயிரம் தேள்கள் ஒருசேரக் கொட்டியதுபோல் உடம்பு முழுவதும் வலி படர்ந்தது. அத்தனை நாடி நரம்புகளும் உயிரின் அசைவைக் கண்டு பயந்தன. போகாதே என்பதுபோல் முறுக்கிக் கொண்டிருந்தன. மீறிப் போனால், மிகப்பெரிய வலி ஏற்படும் என்பதாக வலியின் மூலமாக உயிரை நிறுத்திக் கொள்ள முயற்சித்தது. ஆனால், அவர் மனம் உயிரின் பக்கம் இருந்தது. உடம்பின் வலியை அவர் சகித்துக் கொண்டார். முனகினார். கண்களிலிருந்து நீர் வழிந்தது. வலியில் துடித்தார். அவர் முகம் வேதனைப்பட்டது. ஆனால், உள்ளுக்குள் இருந்த முகம் வேறு ஒரு தேசத்துக்குக் கிளம்பத் தயாரானவர்போல் காட்சியளித்தது. உள்ளுக்குள் ஒருவராகவும் வெளியே ஒருவராகவும் அவர் இரண்டாக இருந்தார்.

இதுவரை உடம்பைச் சார்ந்திருந்த அவர் மனம், இப்போது சட்டென்று மனம் சார்ந்ததாக ஆயிற்று. உடம்போடு இருக்க முடியாது என்று தெரிந்ததும், அது உயிருக்கு அருகே இருக்க விரும்பியது. உடம்பை உதற ஆயத்தமாகியது. உயிரைச் சுற்றி ஒரு குமிழிபோல நின்று கொண்டது மனம். ஒரு சிறிய சுடர். எந்தத் திரியும் இல்லாத, எந்த வெப்பமும் இல்லாத ஒரு வெளிச்சச் சுடர். அந்தச் சுடரைச் சுற்றி மனம் என்கிற நினைவு, மனம் என்கிற ஞாபகசக்தி, மனம் என்கிற ஒரு அனுபவக் குமிழி அந்த உயிரைச் சுற்றி நின்றது. அவர் உயிர் மெல்ல நகர்ந்தது. உடம்பின் எந்தப் பகுதியிலிருந்து வெளியேறலாம் என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், உயிரைப் போகவிடாது உடம்பின் எல்லா பகுதிகளும் தடுத்தன. கண்கள் வலியால் பிய்ந்துவிடுவதைப்போல் இருந்தன. சுவாசம் திணறியது. இதயம் துடித்தது. நுரையீரல்கள் முறுக்கித் திமிறின. மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். நுரையீரல் இயக்கத்தைப் பற்றிக் கவலைப்படாது, பிராணவாயுவை வேகமாக உள்ளுக்குள் செலுத்தினார்கள். நுரையீரல் விரிந்து சுருங்கியது. நுரையீரலின் அசைவினால் இதயத் துடிப்பும் அதிகமாயிற்று.

இப்போது உயிர் எப்படித் தப்புவது என்று தெரியாமல் தவித்தது. மனமும் உயிரும் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டிருந்தன. மனதையும் உயிரையும் உடம்பு சிறைபிடித்து வைத்திருந்தது. சிறையின் எந்தப் பகுதியை உடைக்கலாம் என்று மனம் யோசனை செய்யத் துவங்கியது. உயிர், மனதின் வழிகாட்டுதலுக்காக காத்திருந்தது.

மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டார்கள். அவருடைய எல்லா அவயங்களும் உற்சாகமாக வேலை செய்ய மருந்துகளைச் செலுத்தினார்கள். அவருடைய அவயங்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. உயிருக்கு வழிவிட மறுத்தன. இந்தக் கட்டுப்பாட்டைத் தாண்டி உயிர் போக முடியவில்லை. இதயம் சீராக இயங்கி, ரத்த ஓட்டத்தை சரிசெய்ததால் எல்லா பகுதிகளும் அதன் வேலைகளில் மும்முரமாக இருந்தன. ஆசன வாய் இறுக்கமாக இருந்தது. கபாலம் திறக்க முடியவில்லை. சிறுநீர்பை உறுதியாக நின்றது. அவர், தொப்புளுக்கு அருகே முட்டி முட்டி வெளியே போக முயற்சி செய்தார். ஆனால் திறக்க முடியவில்லை. எப்படிப் போவது என்று தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார். உடம்பில் மிகப்பெரிய வேதனை ஏற்பட்டது. அவர் மனம் சோர்வுற்றது. அவர் வெளியே போகவேண்டும் என்று வெளியே இருக்கிற சக்தியை நோக்கி வேண்டினார். என்னை இழுத்துக்கொள், என்னை இழுத்துக்கொள், வேதனை போதும் எனக்கு என்று தவித்தார்.

வெளியே உள்ள அந்த சுழற்சி, அந்த வெற்றிடம் மேலும் உறுதியாகியது. அவரை உறிஞ்சுவதற்காக இன்னும் அதிகமாக பிரயாசை எடுத்துக் கொண்டது.

உயிர் மரணப் போராட்டம் என்பது இதுவே. மனம் உயிரோடு வெளியே கிளம்ப, உடம்பு, உயிர் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட, இந்த துவந்த யுத்தம் உலகில் பல பேருக்கு மரணத்தின்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பூ உதிர்வது போன்ற மரணம் எல்லோருக்கும் வருவதில்லை. வாழ்வில் பல நல்ல செய்கைகள் செய்தவர் இந்த மகான். நல்லபடி வாழ்ந்தவர். சத்திய சொரூபமாக இருந்தவர். எல்லோருக்கும் உதவி செய்தவர். இவர் ஆசீர்வதித்து பல பேரைக் குணப்படுத்தியிருக்கிறார். பலரின் வேதனைகளைத் தான் ஏற்று அவர்களை விடுவித்திருக்கிறார். எந்தப் பிரதி உதவியும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் உதவி செய்து வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் இவர் மரணம் அவஸ்தையாகத்தான் இருந்தது.

அவரைச் சூழ்ந்திருக்கும் வெற்றிடத்தைத் தாண்டி உடம்பை விட்டு உயிர் பிரிய அவருக்கு உதவி தேவைப்பட்டது. உள்ளுக்குள்ளே உதவி வேண்டும் என்று கதறினார். மனதின் கைகளை நீட்டி வெளியே துழாவினார். யாரேனும் பற்றி இழுக்க மாட்டார்களா என்று வேண்டினார்.

அவர் உடம்பு சௌக்யமாக இருந்தது. மனம் விடுதலை பெற தவித்தது. வெற்றிடத்தின் இழுப்பை உடம்பு தாங்கிக் கொண்டு அவஸ்தைகளை அனுபவித்தது. அதே நேரம், அவரது உதவிக்காக மேலேயிருந்து ஒரு சக்தி கீழேயிறங்கியது.

இந்த மனிதன் மிகப் புண்ணியவான். மனோபலம் மிக்கவர். வாழ்வு காலத்திலேயே மிகச் சரியான முறைகளைப் பின்பற்றி உறுதியான ஒரு மன நிலையில் இருப்பதை, ஒரு புள்ளியில் வாழ்வதை இயல்பாகக் கொண்டவர். எனவே உடம்பு படுகிற அத்தனை அவஸ்தைகளையும் உதறிவிட்டு மேலே போவதில் அவர் தெளிவாக இருந்தார். அந்தத் தெளிவு காரணமாக அவரால் கைகளை நீட்டி பிரபஞ்சத்தை நோக்கி உதவிக்கு அழைக்க முடிந்தது. பிரபஞ்சத்திலிருந்து ஒரு அற்புதமான சக்தியின் உதவியும் கிடைத்தது. அந்த சக்தி அவர் முகத்தைத் தடவியது. மிக அழகாக அவர் சிரித்தார். அவருக்கு அருகே உள்ளவர்கள் மிக வேகமாய் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

''பாரேன், எழுந்து ஜம்முன்னு உட்கார்ந்துடுத்து, எமன்'' என்று சிலாகித்தார்கள்.

''இன்னும் தீர்க்கமா பண்ணுங்கோ. தானா எழுந்து நடமாடுவார். கலியுகத்துல நம்ம ஜபம்தான். அதற்கு மிஞ்சி எதுவுமில்லை'' எல்லாம் தெரிந்ததுபோல் ஒருவர் பேசினார்.

ஆனால், அந்த ஞானியின் கருணைதான் அவரைப் போகவிடாமல் தடுத்தது. சுற்றியுள்ளவர்களை உற்றுப்பார்க்க, அவர்களின் பலவீனங்கள் அவருக்குப் புரிந்தது. தன் வலி, தன் ஆசை இரண்டையும் உதறிவிட்டுத் தன்னை மறந்து சுற்றியுள்ளோரை நேசத்துடன் பார்த்தார். அவர்களின் குறைகளை எப்படிக் களைவது என்று யோசித்தார்.

அவர் மனம் பூமியை நோக்கி திரும்ப, வாழ்வு நோக்கித் திரும்ப, மரணம் தள்ளிப்போயிற்று. ஆனால் மரணமடையத்தானே வேண்டும். நீண்ட பெருமூச்சு அவரிட மிருந்து கிளம்பியது. மறுபடியும் உடம்பு சோர்வாயிற்று.

அவர்கள் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தார்கள். போகாதீர்கள் என்று மன்றாடினார்கள்.

இவர்கள் கவனம் ஒன்றரை நிமிடங்கள் வேறுபக்கம் திரும்பினால் போதும். தப்பித்துவிடலாம். எல்லோரும் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்துவிட்டு திசை மாறினால் உடம்பைவிட்டு நகர்ந்துவிடலாம்.

அவர் காத்திருந்தார்.

வெளியே பலவிதமான கார்கள் வேகமாய் வந்து நின்றன. திருமணக் கோலத்தில் ஒரு இளம் தம்பதியர் இறங்கி உள்ளே ஞானியைப் பார்க்க ஓடி வந்தார்கள்.

''ஐயோ.... கல்யாணத்திலேர்ந்து ஓடி வந்துட்டாங்க பாரு'' என்று சுற்றியிருந்தவர்கள் கூவினார்கள். அது வந்தவர்களுக்கும் பிடித்திருந்தது.

முகம் முழுவதும் சந்தனமும் குங்குமமுமாய் அவரை நோக்கி தம்பதியர் வந்தார்கள். உள்ளுக்குள் நுழைந்ததும் அவர்கள் வாய்விட்டு அலறினார்கள். வழக்கமாக வருகிறவர்கள்தான். இவர்கள் இரண்டு பேரும் இங்கு சந்தித்து, இங்கேயே பரஸ்பரம் மனம் பரிமாறி, பிறகு பெரியவர்களிடம் பேசி, பெரியவர்கள் ஞானியிடம் பேசி திருமணம் நடந்தது. இவர் தலைமையில் நடத்த வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டார்கள். பிறகு, இவர் உடல்நிலையைப் பார்த்து கைவிட்டார்கள்.

திருமணம் முடிந்து நேரே ஓடி வந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லை. இவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டம் பஸ்ஸில் வந்து இறங்கியது. பலர் அதில் பட்டுப்புடவையும் நிறைய நகைகளும் அணிந்திருந்தார்கள். உள்ளுக்குள்ளே, அப்படி நுழைய வெட்கப்பட்டார்கள்.

''அவர் இப்படி கிடக்கிறபோது இங்க பட்டும் நகையுமா எப்படி வர்றது. எனக்கு பயமா இருக்கு'' என்று ஒருத்தி சொல்ல, ''அதெல்லாம் ஒண்ணுமில்லை. இங்கயும் பட்டுப்புடவை கட்டிட்டு நிறைய பேர் இருக்கா. புடவைக்கென்ன. ஏதோ ஒரு புடவை. அவரைப் பார்த்துட்டு வாங்க'' என்று ஒரு பெண்மணி சொல்ல, அவள் பயம் தெளிந்தவளாய் உள்ளே வந்தாள். வேறு சிலரும் நல்ல உடைகளோடும், வாசனையோடும் கையிலும் கழுத்திலும் சந்தனத்தோடு உள்ளே நுழைந்தார்கள். அந்த இடம் திசை மாறியது. வந்தவர்களின் உடை, நகை அலங்காரங்களை சுற்றியிருந்தவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டார்கள். ''எப்படி இருக்கே சௌக்கியமா?'' என்று கையைப் பிடித்துக் கொண்டு குசலம் விசாரித்தார்கள்.

''நன்னா இருக்குடி இந்தப் புடவை'' ஒரு பெண்மணி இன்னொரு பெண்மணியிடம் முகம் மலரச் சொன்னாள்.

''அவர் ஏன் இந்தமாதிரி அவஸ்தைப்படறார்?'' என்று ஒருவர் கேட்டார்.

 

''தெரியலை. ஏதோ அவஸ்தைப்படணும்னு சங்கல்பம் பண்ணிண்ட மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் நன்னா இருக்கார். திடீர்னு சிரமப்படறார்'' என்று விவரிக்கப்பட்டது.

விசாரித்தவர் பசி தாங்காமல் உட்கார்ந்தார். ''சாப்பிட்டுட்டு வந்திருக்கலாமோ. பாக்கறதுக்கு தெளிவாத்தானே இருக்கார்'' என்று சொல்ல அங்கு பேச்சு வேறுமாதிரி போயிற்று. எல்லோரும் மணப்பெண்ணை விசாரித்தார்கள். கை குலுக்கினார்கள்.

''நீ வந்தது ரொம்ப அழகு'' என்று சொன்னார்கள். ''இவ்வளவு பக்தியா?'' என்று வியந்தார்கள். எல்லோருக்கும் நடுவே அவள் தலை குனிந்து ஞானிக்கு நன்றி சொல்லி உட்கார்ந்திருந்தாள்.

எல்லோர் கவனமும் வந்தவர்கள் பக்கம் திரும்பியது. அங்குள்ள சகலரும் ஒரு ஒன்றரை நிமிடங்கள் புடவை பற்றியும், திருமணம் பற்றியும், விருந்து பற்றியும் பேசிக்கொண்டிருக்க... எல்லோர் கவனமும் அவர் மீதிருந்து சிதறி வெவ்வேறு பக்கங்கள் அலைந்தன.

அவரிடமிருந்து அங்குள்ளோர் பிடி விலகியது. மெல்ல மேலெழுந்தார். எந்த வலியுமில்லாமல், எந்த வேதனையுமில்லாமல் ஒரு புன்சிரிப்போடேயே இருந்தார். அவர் இறந்துவிட்டார் என்று தெரிவதற்கு சில நிமிடங்கள் ஆயின.

அவர் கண்மூடி மலர்ந்திருந்ததைக் கண்டு ஒருவர் மெல்ல அசைத்துப் பார்த்தார். அவர் லேசாக வலப்பக்கம் சரிந்தார். அசைத்துப் பார்த்தவர் பெருங்குரலெடுத்து அழ, அந்தக் கூட்டம் விக்கித்து திரும்பியது.

''ஏங்க இது கபால மோட்சமா'' ஒருவர் இன்னொருவரைக் கேள்வி கேட்டார்.

''தெரியலை.''

''போன மாசம் போனாரே, அவரு கபால மோட்சம் தானே?''

''யாரது?''

'அந்த ஊர்ல இருந்தாரே, பெரிய ஞானி. அவரு கபால மோட்சம்னு சொல்லுவாங்க.''

''எனக்கு அவரைப் பத்தியும் தெரியாது''

''இன்னிக்கு நாள் நல்லா இருக்கா?''

''எதுக்காக கேட்கறீங்க''

''இந்த நாள்ல செத்தா நல்லதுன்னு ஒண்ணு உண்டுங்களே. அந்த மாதிரி இது நல்ல நாளான்னு கேட்டேன்.''

''எனக்குத் தெரியலீங்க''

''குழி வெட்டிப் புதைப்பாங்களா. இல்லை எரிப்பாங்களா?''

''தெரியாதுங்க''

அவரைப் பிரிந்ததற்காக சிலபேர் அழுதார்கள். 'இனி யார் உதவி செய்வார்' என்று சிலபேர் புலம்பினார்கள். இந்த மாதிரி வேறு ஒரு குரு எங்கே இருப்பார்? என்று சிலர் பெருமூச்சு விட்டார்கள். இவர் குருவாக இருந்தால், ஏன் இத்தனை அவஸ்தைப்பட்டு இறந்துபோனார்? என்று இன்னும் சிலர் பேசினார்கள்.

உலகம் துவந்தமயமானது. உலகம் இரண்டானது. உலகம் உண்மையை உற்றுக் கவனிப்பதே இல்லை.

அந்தக் கட்டிடத்திலுள்ள புறாக்கள் எழுந்து அடங்கின. ஒரு மேகம் சடசடவென்று அந்த இடத்தில் மழையைத் தெளித்தது. தென்றல் காற்று வேகமாய் அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தது. பட்டாம்பூச்சிகள் அதிகமாக அங்கே சுற்றத் தொடங்கின. அந்த இடத்திலிருந்த, கயிறு கட்டி வளர்க்கப்படாத நாய்கள் வேலியோரம் நின்று கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தன. பிறகு

 

துக்கம்போல படுத்துக் கொண்டன. அங்கே இருந்த இரண்டு பசுக்களும் மெல்லக் கண்ணீர் விட்டன. அந்த இடத்திலிருந்து வெகுதொலைவில், கொல்லையில் இருந்த வாழைமரம் மெல்லச் சரிந்து உயிர்விட்டது.

செய்தி கேட்டு பதட்டமாய் விசாரிக்க ஓடி வருபவர்களைப்போல சருகுகள் உள்ளுக்குள் ஓடி வந்தன. கவலையோடு உட்கார்ந்திருந்த மூன்று நான்கு வயசாளிகள், சுவரில் தலை சாய்த்து கண்மூடிக்கொண்டார்கள்.

ஒருவர் எழுந்து கைகூப்பி, ''போயிட்டு வாங்கோ'' என்று வானம் நோக்கிச் சொன்னார். அடுத்தவர் எழுந்தார். வெறுமே தரையில் விழுந்து நமஸ்கரித்தார். மூன்றாமவர் எந்த அசைவும் காட்டவில்லை.

''இப்படியா போவே. இரு நானும் வர்றேன்'' என்று உதடு மடித்து அழுத்தமாக்கி கொஞ்சம் கோபமாகப் பேசினார். அவர்கள் எல்லோரிடமும் அன்பும் பக்தியும் ததும்பி இருந்தன. அவர் மெல்ல மங்கலான வெளிச்சத்துக்குள் நுழைந்தார். நான் காத்திருந்தேன். மேலேயிருந்து வந்த உதவி அவருக்காகக் காத்திருந்தது. அவர் கைகூப்பி மறுத்தார். உதவி பின்வாங்கியது.

- தொடரும்

சொர்க்கம் நடுவிலே!

பாலகுமாரன்

 

ஜெய விஜயீ பவ

என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டு உபதளபதி. அந்தணன். ஆயினும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாயிற்று.

மங்கலான வெளிச்சத்துக்குள் நுழைந்த அவரைப் பார்த்து, நான் வணங்கினேன். அவர், என்னிலும் வேகமாக என்னை நமஸ்கரித்தார். முகம் முழுவதும் புன்சிரிப்பாக வெகு நாள் நண்பரைப்போல நெருங்கி வந்தார். என்னருகே நின்று கொண்டார். அவர் என்ன யோசிக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.

உதவிக்கு வந்த வெளிச்சம் பற்றி அவருக்கு அக்கறையே இல்லை. அவர் நினைப்பெல்லாம் கீழேயிருந்த ஜனங்களின் மீது இருந்தது. அவருக்குத் தன்னைப் பற்றிய எண்ணம் இல்லை. எப்பொழுதும் மற்றவர்களின் அசைவை, அவஸ்தையைக் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் நினைப்பெல்லாம் பிறரை சுகப்படுத்துவதிலேயே இருந்தது. அவர் எண்ணமெல்லாம் மற்றவர்களைக் கரையேற்றுவதிலேயே இருந்தது.

அவர் அழுதுகொண்டே இருந்த ஒரு குண்டுப் பெண்ணைப் பார்த்து கனிவோடு நிற்பது எனக்குப் புரிந்தது. நானும் கவனித்தேன்.

''சுபஸ்ரீ, உனக்கு நிறைய நகை, நிறைய புடவை வாங்கணுமா? உன் புருஷன் கார் வாங்கணுமா? இதுக்கா என்னைத் தேடிண்டு வந்தே?'' அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் துக்கம் இருந்தது. அவர் இப்பூவுலகை விட்டு விலகியபோதும் உலகாயத கோரிக்கைகளோடு இருக்கிற மனிதர்களைப் பார்த்து நானும் வியந்தேன்.

அவர் மெல்ல என் பக்கம் திரும்பினார்.

''புடவை, நகையெல் லாம் கிடைச்சுட்டா திருப்தியாயிடுமா?'' கேட்டேன்.

''வேணுங்கற புடவை, நகை, கார் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கும். கிடைத்தால்தான் போறும்னு ஒரு நிலைமை வரும். அந்த நிலைமையில் என்ன யோசிக்கணுமோ அதை இவர்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.''

நான் சரியென்று தலையாட்டினேன்.

அவர் ஒவ்வொருவராக நகர்ந்தார்.

'உனக்கு வீடு கிடைக்கும்.

நீ எங்கு போகணும்னு நினைக்கறியோ அந்த உயர்ந்த இடத்துக்கு உன் குழந்தைகள் போவார்கள்.

உன் மனைவிக்குப் பத்து நாளில் உடம்பு சரியாயிடும்.

உன் கம்பெனி பிரமாதமாக நடக்கும்.

உனக்கென்ன வேணும். ஞானியாகணுமா? அது எந்தக் கடையிலும் விக்கலையே. சர்வ சாதாரணமாகக் கேட்கறியே. ஆனாலும் உனக்கும் அந்த யோக்யதை உண்டு. ஒரு ஆற்றில் கால் சறுக்கி பத்தடி தூரம் இழுத்துக் கொண்டு போகும்போது அந்த பத்தடி தூரத்துக்குள் மரண பயம் ஏற்பட்டு உனக்கு வாழ்க்கை பற்றிய சலிப்பு ஏற்பட்டுவிடும்.

நிறைய புடவை, நிறைய நகை என்று திருப்தியாலும் ஞானம் கிடைக்கும். மரண பயம் கொடுத்து, வாழ்க்கை பற்றிய சலிப்பாலும் ஞானம் கிடைக்கும்.'

அவர் சகலரையும் நிதானமாக வாழ்த்தினார். பிறகு மெல்ல என்னருகே நின்று கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்தார்.

''இந்த இடம் இப்படித்தானா?'' என்றார்.

''ஆம்'' என்றேன்.

''அந்த அம்மையார் உறங்குகிறாரா?''

''ஆமாம்'' என்றேன்.

''நினைவுகளைக் கழுவ இருக்கிறாரா?''

''நீங்கள் சொல்வது சரி'' என்று சொன்னேன்.

''கத்திக்குத்துப்பட்ட அந்த மனிதரையும் உறங்க வைத்திருக்கிறீர்களோ?'' அவர் அவர்களையும் கருணையோடு நோக்கினார்.

அவர்கள் இன்னும் ஆழ்ந்து உள்ளே உறங்கினார்கள்.

''உங்களுக்கு மறுபடியும் மேலிருந்து உதவிக்கான சக்தி வரும்'' என்று சொன்னேன்.

''சரி'' என்று சாதாரணமாக ஏற்றுக்கொண்டார்.

''உங்களுக்கு அந்த சக்தி வரவில்லையா?'' என்று என்னிடம் ஆதரவாகக் கேட்டார்.

''இல்லை. வருமளவுக்கு எனக்குத் தகுதியில்லை.''

''நீங்கள் மறுபடியும் பிறப்பதற்குப் போகவில்லையா?''

''இல்லை. அந்த இடத்துக்குப் போக எனக்கு விருப்பமில்லை''

''இங்கேயே இருந்துவிடப் போகிறீர்களா.''

''எனக்கு வேறு எங்கேயும் போக்கிடமில்லை''

அவர் கருணையுடன் என்னைப் பார்த்தார்.

''ஆனால் நீங்கள் இங்கே அற்புதம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இல்லையெனில் இவர்களெல்லாம் உறங்கமுடியுமா?'' என்று ஞானி என்னை ஆதரவோடு அணைத்துக் கொண்டார். இப்படி இந்த இடத்தில் உதவி செய்ய ஒருவர் தேவைதானே... உங்களை நல்ல விஷயத்துக்கு, நல்ல இடத்துக்கு கடவுள் படைத்திருக்கிறார்'' அவர் குதூகலமான குழந்தை போல பேசினார்.

நான் வணங்கினேன்.

அவர் கீழிருக்கும்போதும், இங்கு வந்த பிறகும் சுயநலமில்லாமல் இருப்பது எனக்குப் புரிந்தது. எனக்கும் அந்தத் தன்மை பெற ஆசை வந்தது.

அவர் புரிந்துகொண்டதுபோல என்னைப் பார்த்துச் சிரித்தார்.

எனக்குள் மெல்லியதாய் மாறுதல்கள் ஏற்பட்டன. நான் இன்னும் தீவிரமாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துக்கு ஆட்பட்டேன்.

அவர் எனக்கருகே எந்தச் சலனமுமில்லாமல், உறக்கமுமில்லாமல், விழிப்புமில்லாமல் ஒரு மோன நிலையில் அமர்ந்து கொண்டார்.

கீழே பிரபஞ்ச சக்தி சுழலாகி ஒரு உயிரை உறிஞ்சுவதற்குத் தயாராக இருந்தது. நான் எட்டிப் பார்த்தேன்.

ஒரு பெண்மணி படி ஏறிக்கொண்டிருந்தாள். ''நான் செத்துப்போகிறேன். எனக்குத் தேவையில்லை'' மூன்றாவது மாடியிலிருந்து நான்காவது மாடிக்கு இன்னும் வேகமாக ஏறினாள்.

எனக்கு அவளைப் பார்த்து மெல்லிய கவலை வந்தது.

நான்காவது மாடி மொட்டை மாடியாக இருந்தது. அந்த இடத்தில் முன்னும் பின்னுமாய் அலைந்தாள். வானத்தைப் பார்த்தாள். கீழே தரையைப் பார்த்தாள். தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

''செத்துத் தொலையேன். இன்னும் எதுக்கு உசிரோட இருக்க? உசிரோட இருக்கறதாலதானே உன்னைக் கேவலமா பேசறா. அசிங்கமா பேசறால்ல. நீ இவனை லவ் பண்ற. அவனை லவ் பண்ற. இப்படி பார்க்கற. அப்படிப் பார்க்கறன்னு எவ்வளவு கேவலமா பேசினா. என்னத்துக்கு உசிரோட இருக்கணும். பெத்த அப்பனே கேவலமா பேசறபோது என்னத்துக்கு உயிரோட இருக்க.'' அவள் சட்டென்று கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்றாள். கைகூப்பினாள்.

''என்னை அசிங்கமா பேசினவங்களையெல்லாம் கடவுளே என் சாவு மூலமா நீ அவங்களைத் தண்டிக்கணும். நான் செத்துப் போப்போறேன். என்னால இனிமே இருக்க முடியாது. என்னால இருக்கவே முடியாது.'' அவள் உடம்பு முழுவதும் பதறியது.

அவளைச் சுற்றி அந்த உயிர்ச்சுருள் வெற்றிடம் ஏற்படுத்தியது.

அவள் காலை உதைத்து வெகுவேகமாகத் தரையை நோக்கிப் பாய்ந்தாள். அவள் புடவைகள் மேலே சுருட்டிக் கொண்டன. சட்டென்று கை நீட்டி புடவையை சரி செய்து கொண்டாள். நான்காம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்குள் சரிசெய்துவிட்டு மூன்றாம் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்கு வரும்போது அவளுக்கு பயம் ஏற்பட்டது. இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு வரும்போது ''ஐயோ நான் சாகக்கூடாது. என்னைக் காப்பாத்துங்கோ'' அவள் கத்தினாள். தரையில் விழுந்தாள். சிதறினாள். இறந்து போனாள்.

அவளுக்கு அவள் மரணமடைந்தது பிடிக்க வில்லை. வலி அவளை வேகமாகத் தாக்கியது. இறந்த பிறகும் அவள் வலியோடு அலறினாள். வலி என்பது அவள் உடம்பிலிருந்து மனம் பற்றி, மனம் மூலமாக அவள் பின்னே தொடர்ந்தது. வலியை உதற அவள் முயற்சி செய்தும் முடியவில்லை. இறந்து போனதற்கான காரணங்களை நினைக்கும்போது இன்னும் வேதனைப்பட்டாள். இறக்க வேண்டாம் என்று நினைத்தாள். இறக்காமல் இருந்தால் என்ன என்று யோசித்தாள். அலறினாள். அழுதாள். முன்னும் பின்னும் அலைந்தாள். சிதறிக் கிடந்த உடம்பை அசைத்துப் பார்த்தாள்.

நான் அவளுக்கு உதவி செய்ய முடியாதவனாக இருந்தேன். அவளைச் சுற்றி வேறு சில சக்திகள் தோன்றின. அவளைப் போலவே தற்கொலை செய்துகொண்டவர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவள் பயந்தாள். அவர்கள் விளையாட்டாகத் துரத்தினார்கள். அவளை இம்சைப்படுத்தினார்கள். அவளை விதம்விதமாக பயமுறுத்தினார்கள். அவள் இடையறாது, இடையறாது அலறினாள்.

அவளைச் சூழ்ந்துகொண்டு பூமியின் சில மோசமான இடங்களுக்கு அவளை நகர்த்தினார்கள். மலக்கழிவுகள் ஒன்றாகக் கலக்கும் கடற்கரையோரம் அவளைத் திணித்தார்கள். பாழும் கிணற்றில் தள்ளினார்கள். பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துப்போய் பயமுறுத்தினார்கள். கொத்துக் கொத்தாய் கிடந்த முள் செடிகளூடே அவளை இழுத்துக்கொண்டு நடந்தார்கள். கொத்துக் கொத்தாய் இருந்த செடிகளில் எந்தச் செடியில் துணிகள் அதிகம் சிக்கிக் கொண்டிருந்ததோ அங்கே அவளை அழுத்தித் தங்க வைத்தார்கள்.

அவள் விருப்பமில்லாமல் அவர்களோடு அலைந்தாள். ஆனால் வேறு எந்தப் பக்கமும் போவதற்கு அவளுக்கு அனுமதி இல்லாமலிருந்தது. தொடர் வண்டியில் அடிபட்டவள் உட்கார்ந்தது போல, கத்திக்குத்துப் பட்டவன் உட்கார்ந்தது போல அவளால் அமைதியாக உட்கார முடியவில்லை. மறுபடியும் பிறக்க வேண்டும் என்று முழு முயற்சி, மறுபடியும் அதேவிதமான தேகம் எடுக்க வேண்டும் என்கிற பெரும் ஆத்திரம், மறுபடியும் அந்த தேகத்தில் புகுந்து, அதே வடிவெடுத்து, யார் இந்த மரணத்திற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களைப் பழிவாங்குகிற ஆத்திரம், வலி கொடுத்த வேதனை, மரணத்தை நோக்கி அவளை இழுத்துச் சென்ற இம்சைகள், அவளை நினைத்து நினைத்துக் கதற வைத்தன. வலியும், வேதனையும், மோசமான நினைவுகளும் அவளை இடையறாது புலம்ப வைத்தன.

அதே நேரம் அவளைச் சுற்றியிருந்த, தற்கொலை செய்துகொண்ட சக்திகள் அவளை வேறுவிதமான அல்லல்களுக்கு ஆளாக்கின. எந்நேரமும் அவள் அலறிக்கொண்டேயிருந்தாள்.

ஞானி மெல்ல என்னைப் பார்த்தார்.

நான் அவரைப் பார்த்தேன்.

''எத்தனை காலம் இத்தனை வேதனை?'' என்று கவலையோடு கேட்டார்.

''அவள் ஆத்திரங்கள் முடியும்வரை. அவள் அல்லல்கள் குறையும்வரை. அவள் பூமியிலுள்ள விஷயத்திற்கு கோபப்படாமல் மௌனமாக நடந்தது நடந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்ளும்வரை இப்படித்தான் இருக்க முடியும். அவள் கோபம் குறைந்தால், இந்த நிலை நோக்கி நகர்த்தியவர்கள் பற்றிய நினைவு மறந்தால் அவள் நிதானமாகிவிடுவாள். நிதானமாகிவிட்டால் அவளைச் சுற்றியுள்ளவர்கள் விலகிவிடுவார்கள்.

 

 

 

பிறகு வெறுமே இங்கு அலைந்து கொண்டிருந்துவிட்டு உட்கார முயற்சி செய்வாள். உங்களைப் போன்றவர்கள் யாரேனும் உதவி செய்து அவளை உட்காரவும் வைத்துவிடலாம். இப்போதைக்கு அவள் உட்காரப் போவதில்லை''.

''கீழே உள்ளவர்களை அவள் கோபத்தோடு தொடர்பு கொள்வாளோ?''

''முயற்சிப்பாள்''.

''அவர்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்படுமோ?''

''சிற்சில மெல்லிய வேதனைகள் ஏற்படும்.''

''எதுபோல''

''தடுக்கி விழுவதுபோல, கதவிடுக்கில் கை சிக்கிக்கொள்வது போல, சூடாக எதுவும் காலில் கொட்டிக்கொள்வது போல, உச்சந்தலையில் இடித்துக் கொள்வதைப் போல.''

''அதெல்லாம் இவளால் நடைபெறுகிறதா?''

''ஆம். இவள் கோபத்தின் வேகம் அவர்களைத் தாக்கும். துர் சொப்பனங்கள் ஏற்படும். திடுக்கிட்டு எழுந்திருப்பார்கள். வயிறு கலங்கும். உடல் பலஹீனமாகும். மூத்திர வாசனை ஏற்படும்.''

''அப்படியானால் இவள் தப்பித்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது என்று சொல்'' என்று ஞானி என்னைப் பார்த்தார்.

நான் வியப்போடு அவரைப் பார்த்தேன்.

''அவர்களில் எவரேனும் ஒருவர் இவளைப் பற்றி வருத்தப்பட்டால் இவள் சமாதானமாகிவிடுவாள் அல்லவா?''

''ஆம். நீங்கள் சொல்வது நல்லதாக இருக்கிறது.''

''அப்படியானால் இவள் நிலை குறித்து நாம் அங்குள்ளவர்களைக் கவனித்தாலென்ன? இவளை யார் அதிகம் துன்புறுத்தினார்களோ அவர்களை இவளுக்காக வருத்தப்பட வைத்தாலென்ன. அவர்கள் உள்ளுக்குள்ளே குமைந்து இவளுக்காக அழுதாலென்ன?'' என்று கேள்வி கேட்டார்.

நான் அவரை வணங்கினேன்.

அவர் மனம் முழுவதும் திருப்பி கீழே அவள் உறவினர்களைத் தேடினார். அவள் உறவினர்கள் யாரும் அவள் மரணத்திற்கு வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

''எத்தனை கேவலமான பொம்மனாட்டி. இவளால நமக்கு எத்தனை வேதனை. எங்கே போய் நின்னாலும் இவளைப் பற்றி கேள்வி கேட்டு அவமானமாகி ஒரு நல்ல காரியமும் இந்தக் குடும்பத்தில் பண்ண ஒட்டாத, எதுக்குப் போய் நின்னாலும் இவ பேர் அங்க முன்ன போய் நின்னு நம்மளை எத்தனை அசிங்கப்படுத்தியிருக்கு? நல்ல வேளை. செத்தா. இருந்திருந்தா நாம இன்னும் நாறியிருப்போம். நாம செத்துப்போயிருப்போம்.''

ஒரேவிதமாக பல்வேறு மனிதர்கள் பேசினார்கள்.

''பத்தோ பதினொன்னோ இவளுக்குப் பண்ணணுமா?'' யாரோ கேட்டார்கள்.

''ஒண்ணும் வேணாம் விடு. தற்கொலை கேசு, அது இதுன்னு அலைஞ்சு இருக்கற காசும் பிடுங்கிண்டு போயிடுச்சு. இப்ப இதுக்குவேற துட்டு செலவு பண்ணணும்னா? எங்கிட்ட இல்லை'' என்று சொல்ல, அவள் இறந்த நாளிலிருந்து பத்தாவது நாள் அவளுக்கு எந்தவிதமான மரியாதையும், ஆசுவாசமும் கிடைக்கவில்லை. அவள் அழுகை பெரிதாக இருந்தது.

ஞானி மறுபடியும் அந்தக் குடும்பத்துக்குள் வலம் வந்தார்.

''அவ கழுத்துல போட்டிருந்த நகை. தப்பா சம்பாதிச்ச காசு, இதெல்லாம் யாருக்குப் போய் சேரணும்? நீங்க சொல்லுங்க'' யாரோ யாரையோ விசாரிக்க

''பொண்ணுக்குத்தான் போய் சேரணும்'' என்றவுடன் ஞானி இடம் மாறினார்.

யார் பெண் என்று தேடினார்.

பிறந்து ஏழு ஆண்டுகளான அந்தப் பெண் குழந்தை படுக்கையில் படுத்துக்கொண்டு கனவுக்குள் அழுதது. அம்மா... அம்மா என்று கூப்பிட்டது. அம்மாவின் மடியில் முகம் புதைத்துக்கொண்டது. நீ ரொம்ப சமத்து அம்மா. உன்னை எல்லாரும் கோச்சுக்கறா. உன்னை எல்லாரும் அடிக்க வர்றா. எனக்கு பயம்மா இருக்கும்மா. உன்னையும் என்னையும் அசிங்கமா பேசறா. நீயும் அம்மா மாதிரி ஆயிடாதேங்கறா. நீ எனக்கு நல்ல அம்மாதானே. நான் உன்னை மாதிரி ஆகக்கூடாதா? உன்னை மாதிரி நான் நல்லவளா ஆனா தப்பா? மகா கேவலம், படு பாதகி அப்படின்னு உன்னைச் சொல்றாம்மா. நீ யாருக்கும் கெடுதல் பண்ணலையேம்மா. நல்லதுதானே பண்ணினே'' என்று பேசி உள்ளுக்குள் விசும்ப, ஞானி அவள் அன்பை அதிகப்படுத்தினார்.

அந்த அன்பு இன்னும் பெருகி அந்தக் குழந்தையை இன்னும் பெரிதாய் மலர வைத்தது. அவள் முகம் பிரகாசமாக இருந்தது.

அவளுக்கு அருகே போய் தற்கொலை செய்துகொண்ட பெண்மணி உட்கார்ந்து கொண்டாள். அவள் அலையல் நின்றது. அழுகை அதிகரித்தது. அந்தக் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள்.

''சாவுக்கு நிறைய செலவு பண்ணிருக்கியே. இவ செயினை வேணா நீ எடுத்துக்கறீயா?'' என்று யாரோ கேட்க, அவன் ஒரு நிமிடம் யோசித்தான். எடுத்துக்கலாம்தான் என்று கை நீட்டினான். மேஜையிலிருந்த காபி டம்ளர் சட்டென்று எதிலோ இடிபட்டு, சரிந்து, சூடாக அவன் தொடையில் கொட்டியது.

அவன் 'ஆ' என்று அலறினான். வேட்டியை அவிழ்த்துப்போட்டு வெறும் ஜட்டியும் பனியனுமாக நின்றான்.

பல பெண்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள். அவனுக்குள் அந்த நகை வேண்டாம் என்று தோன்றியது.

அந்தக் குழந்தைக்கு ஆதரவாக இறந்தவளின் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தாள். குழந்தையை அவளோடு அனுப்ப அங்குள்ளவர்கள் சம்மதித்தார்கள்.

ஞானி அதற்குரிய மனமாற்றங்களைத் துரிதமாகச் செய்தார். அந்தக் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து விடைபெற்று பக்கத்து வீட்டினரிடமிருந்து விடைபெற்று வீட்டிலுள்ளவர்களிடமிருந்து விடைபெற்று பாட்டியோடு சந்தோஷமாகப் போயிற்று. அந்தக் குழந்தை பேருந்தில் ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்து ஓடுகின்ற மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மரத்திலிருந்து ஒரு கொத்துப் பூ பளிச்சென்று கிள்ளியெறியப்பட்டு வேகமாகக் காற்றில் பறந்து வந்து அவளுடைய மடியில் விழுந்தது. காட்டுத் தீ என்கிற சிவப்பு மலர்களை சந்தோஷத்துடன் பார்த்தாள். அம்மாவுடைய உதடுகள் அவளுக்கு ஞாபகம் வந்தன.

தற்கொலை செய்து கொண்டவள் மெல்ல நிதானமாக அந்த இடத்தில் அலைந்தாள். ஞானியைப் பார்த்தாள். வணங்கினாள். என்னைப் பார்த்தாள். கும்பிட்டாள்.

நான் அவளுக்கு ஒரு இடம் காட்டினேன். அந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள். உள்ளுக்குள் பார்க்கத் துவங்கினாள். மொத்த வாழ்க்கையையும் அலச ஆரம்பித்தாள். அவளுடைய உடம்பு பற்றிய சிந்தனை அதிகரித்தது. எப்படி பிறந்தோம், எப்படி வளர்ந்தோம் படிப்படியாக அவள் யோசிக்கத் துவங்கினாள்.

மங்கலான அந்த வெளிச்சத்தில் அமைதியாக பலபேர் அரைத் தூக்கமும், முக்கால் தூக்கமும் முழுதூக்கமுமாக இருந்தார்கள். அந்த இடம் இரவுமற்று பகலுமற்று கனமான அமைதியுடன் இருந்தது.

பூமியில் தியானம் செய்வது மிகக் கடினம். மனதை ஒருமைப்படுத்துவது மிகவும் சிரமம். இந்த இடத்தில் வெகு எளிதாக மனதை ஒருமைப்படுத்திவிடலாம். இந்த இடத்தில் உடம்பில்லை. உடம்பு பற்றிய நினைப்புதான் இருக்கிறது. உடம்பைப் பற்றிய நினைவை மெல்ல ஆசுவாசப்படுத்திவிட்டு மனம் மட்டுமே உடம்பு என்பதாக பார்த்துக் கொள்ளலாம். மனம் மட்டுமே பார்க்க ஆரம்பிக்கிறபோது உள்ளுக்குள் பேரமைதி வந்துவிடும். அந்தப் பேரமைதி பொங்கப் பொங்க உடம்பு பற்றிய நினைப்பு முற்றிலுமாய் அகன்றுவிடும். வெறும் மனமாக அந்த உயிர் இருக்கும்.

மனமாக இருக்கிற உயிர், மனதை மெல்ல மெல்ல நகர்த்த ஆரம்பிக்க, உதிர்க்க ஆரம்பிக்க வெறும் உயிர் மட்டுமே மிஞ்சும். அந்த உயிர் இப்போது மிகச் சிறிய ஞாபக சக்தியுடன் வேறு ஒரு உடம்புக்குள் புக தயாராக இருக்கும். மனதின் நினைப்பைக் கரைப்பதுதான் இந்த இடம். மனதின் நினைவை முற்றிலும் அகற்றுவதுதான் இந்த இடம்.

நான் திரும்பி ஞானியைப் பார்த்தேன்.

ஞானி அமைதியாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டிருந்தார்.

''மறுபடியும் உதவிக்கரம் வரும். அப்போது போகலாமே'' என்றேன்.

''இல்லை. நான் மனதைக் கரைக்க முயற்சிக்கிறேன்'' என்றார்.

''உங்களுக்கு என்ன? நீங்கள் கீழேயே மனதை கரைத்துவிட்டீர்களே..''

''இல்லை. இன்னும் இந்த நண்பர்களிடம் பிரியமாக இருக்கிறேன். இந்த நண்பர்களுக்காகக் கவலைப்படுகிறேன். இந்த மாதிரியான பக்தர்களுக்காக நான் முயற்சிகள் மேற்கொள்கிறேன். எனவே என் மனம் கரைவதற்குத் தாமதமாகும்'' என்றார்.

நான் அவரைக் கவலையுடனும், பிரியத்துடனும் பார்த்தேன்.

அவர் சிரித்தார்.

-தொடரும்.

சொர்க்கம் நடுவிலே

பாலகுமாரன்

 

இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். இப்படி இறப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லை. ஆனால் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்துபோனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும். வெட்டத்தான் வேண்டும். வெட்டுப்பட்டுத்தானாக ஆகவேண்டும். இதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் இந்த வேலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். மரணத்தை நோக்கி எப்போதும் தயாராகக் காத்திருக்கிறோம். நான் எண்பத்தி மூன்று வயதில் மரணமடைந்தேன். பாவம் இவன் இளைஞன். முப்பத்தியாறு வயதில் மரணமடைந்துவிட்டான். அவனை நான் மெல்ல அணைத்துக் கொண்டேன்.

அவன் கவலையோடு கீழே உள்ள தன் மனைவியைப் பார்த்தான்.

ஜனங்கள், அவன் உடம்பைத் தூக்கிக்கொண்டு பெரிய மைதானத்துக்குக் கிளம்பினார்கள். அவன் மீது கொடி போர்த்தினார்கள். மலர் வளையம் வைத்தார்கள். போர் வீரர்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டார்கள். அணிவகுத்து மரியாதை செய்தார்கள். சில வீரர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அந்த தேசத்தின் மரியாதை அவனுக்கு இடையறாது கிடைத்துக் கொண்டிருந்தது. பெரிய தலைவர்கள் எல்லாம் வந்து கைகூப்பி வணங்கினார்கள். மேலேயிருந்து அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

-''இவர்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே'' என்றான் என்னிடம். பிறகு சிரித்தான். அந்தச் சிரிப்பில் சோகம் இருந்தது.

குழந்தைகள் இன்னும் தன் அருகில் வரவில்லையே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்ட அடுத்த கணம் அதற்குண்டான வழி பிறந்தது. யாரோ ஒரு பெரிய அதிகாரி அவன் மனைவியையும் குழந்தைகளையும் மரியாதையுடன் அழைத்து வந்து முக்காலி போட்டு உட்கார வைத்தார். பெரிய தலைவர்கள் எல்லாம் இவன் மனைவியுடன் ஆதரவாய்ப் பேசினார்கள். குழந்தைகளைக் கட்டியணைத்துக் கொண்டார்கள். நெற்றியில் முத்தமிட்டார்கள்.

''அவன் நிறைவாய் சிரித்தான். வேறு எதற்கு செத்துப்போவது. இதற்குத்தானே'' என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.

நான் அவனைக் கவலையோடு பார்த்தேன். 'மிகவும் வேதனைப்படுகிறானோ' என்று நினைத்தேன். ஞானி அவன் முதுகு தடவினார்.

இப்போது அவன் ஞானியைப் பார்த்து வணங்கினான். ஞானி அவனிடம் கீழே சுட்டிக் காட்டினார்.

பொதுஜனம் அவனைப் பார்க்க வேண்டும் என்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

''எங்களிடமிருந்து அவனை மறைக்கப் பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற, தன் உயிரைத் தந்தவன்'' என்று கத்தினார்கள்.

ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜனங்கள் சீரான வரிசையில் நிற்க வைக்கப்பட்டார்கள். சிலர் பெரிய பெரிய பூக்கூடைகளை கொண்டு வந்து அங்கே வைத்தார்கள். ஜனங்கள் பூக்களை அள்ளிக் கொண்டார்கள். அவன் மீது தூவினார்கள். கை கூப்பினார்கள். பலபேர் அழுதார்கள். வயதான பெண்மணிகள் அவன் மீது மலர் தூவி ''என் மகனே, என் மகனே'' என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.

அவன் மெல்ல உதடு கடித்தான். ''வயதான எல்லா பெண்மணியும் தாய்தான் அல்லவா?'' அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

''ஆமாம்''

இளைஞர்கள் பலர் அவனுக்கு அஞ்சலி செலுத்தும்போது, ''பழி வாங்குவோம்'' என்று கை உயர்த்திச் சீறினார்கள்.

அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.

கோழைத்தனமும், வீரமும் ஜலதோஷம்போல. ஒட்டுவாரொட்டி. சட்டென்று தொற்றிக் கொள்ளும். இப்போது வீரம் தொற்றிக் கொண்டது. அவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

நானும் சிரித்தேன்.

இப்போது அந்த காட்சிப் பெட்டியில் ஒருவர், ''உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்'' என்று உரத்த குரலில் சொன்னார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டார்கள். ஜனங்களின் மனம் அவரை நோக்கித் திரும்பியதால், இவன் மனமும் அவரை நோக்கித் திரும்பிற்று. 'என்ன?' என்று ஆவலோடு

 

 

 

பார்த்தான்.

அவர், ''இறந்தவரின் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு ஒரு அகல்விளக்கோ, ஒரு மெழுகுவர்த்தியோ அல்லது ஒரு தீப்பந்தமோ, தயவுசெய்து ஏற்றி வையுங்கள். உங்கள் ஊர் கோயில் கோபுரங்களில் ஆலயங்களில் விளக்கேற்றி வையுங்கள். வாசனையான புகையை எழுப்புங்கள். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று உறுதிபடச் சொன்னார்.

அங்கே பெரிய மாறுதல் நடந்தது. அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோயில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல் விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில் ஒன்றுகூடி கடவுள் பெயரைச் சொன்னார்கள்.

அவன் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.

அவன் கைகூப்பி நெகிழ்ந்து அவர்களை வணங்கினான். ''நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லையே. எதற்காக இத்தனை?'' என்று என்னை நோக்கி மெல்ல கேட்டான்.

கீழே ஒரு குரல் தெளிவாகக் கேட்டது. ''நான் செத்திருப்பேன்பா. நான் செத்திருப்பேன். என்னைக் காப்பாத்திட்டான். இவன் செத்துப்போய் என்னைக் காப்பாத்திட்டான். இவன் அங்க வரலைன்னா நாங்க எல்லாரும் செத்திருப்போம்.'' அந்தத் தங்கும் விடுதியில் வேலை செய்யும் பெண்மணி உரத்த குரலில் அழுதாள். கட்டுப்பாடுகளைத் தாண்டி அவனை நோக்கி ஓடினாள். அவன் முகத்தைத் தடவினாள். ''சகோதரனே, சகோதரனே'' என்று கதறினாள்.

இதெல்லாம் காட்சிப் பெட்டியில் காட்டப்பட்டது. அவன் மனைவியை நோக்கி அந்தப் பெண் ஓடினாள். கட்டிக் கொண்டாள். குழந்தைகளை இழுத்து அணைத்துக் கொண்டு அழுதாள்.

''நான் செத்துப் போயிருக்க வேண்டியது. என் தலைக்கு மேலே பல குண்டுகள் பாய்ந்தது. நான், என்ன செய்வது? என்று ஒடுங்கிக் கிடந்தேன். இவர் வந்த பிறகுதான் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. இவர் செத்தது எங்களுக்காக. நான் சாகும்வரை இவரை மறக்க மாட்டேன். உங்களுக்கு நான் என்ன செய்யட்டும். உங்கள் வீட்டு வேலைக்காரியாக வரட்டுமா? உங்களுக்கு நான் பணிவிடை செய்கிறேன்'' என்று அவள் கதறினாள்.

அவளை சமாதானப்படுத்தி மெல்ல அழைத்துப் போனார்கள்.

அவன் அழுவதுபோல என்னைப் பார்த்தான்.

நான் அவனை அணைத்துக் கொண்டேன்.

ஜனங்கள் என் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார்கள். என்னைவிட என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் பிரியமாக இருக்கிறார்கள். எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது. நான் உத்தமமான காரியம்தான் செய்திருக்கிறேன் இல்லையா?'' என்று கேட்டான்.

ஞானி மறுபடி அவன் முதுகு தடவினார்.

வேறு ஒரு இடம் சுட்டிக் காட்டினார்.

அந்த இடத்தில் அவன் உருவப்படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். கடவுள் பெயரால் பாடல்கள் பாடினார்கள். தூப தீபங்கள் காட்டினார்கள். அந்த வாசனை இங்கு வந்து வீசியது. அந்த ஒளி இங்கே சுற்றியது.

ஞானி அவனுக்கு வேறு ஒரு இடம் சுட்டிகாடினார்.

அப்போது பூமியில் லேசாய் வெளிச்சம் பரவி இருந்தது. அங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

''டேய். மனசு என்னமோ கஷ்டமா இருக்குடா. அவனுக்கு நாம ஏதாவது பண்ணியாகணும்டா'' என்று பேசிக்கொண்டார்கள்.

''என்னடா பண்ணலாம்'' என்று இன்னொருவன் கேட்க, அவன் இருவரையும் ஆவலாகப் பார்த்தான்.

''நான் அவனுக்குத் தர்ப்பணம் பண்ணப்போறேன்டா'' என்று சொல்ல அவர்கள் இரண்டு பேரும் ஆற்றங்கரைக்குப் போனார்கள். முங்கிக் குளித்தார்கள். கரையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் குத்திட்டு உட்கார, மற்றவர்கள் அவர்களிருவரையும், ''என்ன செய்கிறீர்கள்?'' என்று விசாரித்தார்கள்.

''அந்த வீரனுக்குத் தர்ப்பணம் பண்ணப்போறோம். வர்றீங்களா?'' என்று இவர்கள் கேட்க, மளமளவென்று அங்கே ஒரு கூட்டம் சேர்ந்தது. எல்லோரும் வரிசையாய் நின்றார்கள். பிறகு உட்கார்ந்து கொண்டார்கள். ஒருவர் உரத்த குரலில் தர்ப்பண மந்திரம் சொல்ல, எல்லோரும் கையிலுள்ள நீரை கட்டை விரல் வழியாகத் தரையில் விட்டார்கள். அந்த நீர் அவனைக் குளுமைப்படுத்தியது. இப்படி நீர் விடத் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்கி கையளவு நீரெடுத்து கிழக்கு நோக்கி ஆற்றிலேயே நீர் விட்டார்கள். அந்த நீரும் அவனைக் குளுமைப்படுத்தியது. தொண்டையை ஈரப்படுத்தியது. அவன் முகத்தில் குளுமை பரவியது. உடம்பு முழுவதும் குளுமை பரவி சில்லிடச் செய்தது.

அவன் மெல்ல கனம் குறைந்தான். யாரோ அவன் பெயர் சொல்லி பலபேருக்கு உணவிட்டார்கள். அவன் வயிறு நிறைந்தான். அவனுடைய உடம்பை, ஊர்வலமாக அழைத்துப் போய் குழியில் இறக்கி கரும்பலகை போட்டு மூடி அதன் மீது மண் கொட்டி அவனைப் பற்றிய விவரத்தை செதுக்கிய ஒரு கருங்கல்லை நட்டார்கள். அதற்கு மாலையிட்டார்கள்.

அவன் அதற்கு வணக்கம் சொன்னான்.

''போதும். முடிந்தது. என் வேலை முடிந்தது'' என்று சொன்னான். தன் மனசினுள் புகுந்து தன்னுடைய புண்ணியங்களைத் திரட்டி மனைவியின் மீது சொறிந்தான். மறுபடியும் மீதமிருந்த புண்ணியங்களைத் திரட்டி மகள் மீதும் மகன் மீதும் தூவினான்.

அவர்கள் உறுதியானார்கள்.

அவன் மனைவி தெளிவானாள். ஒரு நடிகரின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் பெண் குழந்தை நின்றது. அவர் ஏதோ சொல்ல புன்னகை செய்தது.

''இதுக்குத்தான் நடிகர்கள் வேணும்ன்றது. குழந்தையை சிரிக்க வச்சுட்டாங்க பாரு. இனி எல்லாம் சரியாயிடும்.'' பக்கத்தில் இருந்தவர் சொன்னார்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு மகனும் மகளும் நடந்து போவது காட்டப்பட்டது.

பல பெரியவர்கள் அவர்கள் மூவரையும் ஆசிர்வதித்தார்கள்.

முகம் துடைத்து தலைவாரி தெளிவான அந்தப் பெண்மணியின் முகத்தைக் காட்சிப்பெட்டி காட்டியது. அவள் பேசினாள். ''நான் அழுது முடித்துவிட்டேன். இனிமேல் அழப்போவதில்லை. அவர் மகத்தான காரியத்திற்காக இறந்திருக்கிறார். பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். அவர் இறப்பை தங்கள் வீட்டு

 

நபருடைய இறப்பாகக் கருதி எங்களுக்கு ஆறுதல் சொன்ன அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி. எங்களுக்கு உதவி செய்ய பலபேர் வருகிறார்கள். ஆனால் இந்த அரசு செய்யும் உதவி போதுமானது. அவருடைய அன்பான மனைவி என்கிற நினைப்பில் என் வாழ்நாளைக் கழிப்பேன். என் குழந்தைகளை நல்லபடி உருவாக்குவேன். குறிப்பாக என் மகனை நான் போர்ப்படையில் சேர்ப்பேன். மிக உன்னதமான இடத்திற்கு அவனைக் கொண்டு வரச் செய்வேன். அவர் தந்தை அவரைப் போர்ப்படை வீரனாக மாற்றினார். நானும் என் மகனைப் போர் வீரனாக மாற்றுவேன். அவர் மகன் இன்னும் மகத்தான காரியங்களைச் செய்வான். இது உறுதி. நாங்கள் தேசம் காக்கப் பிறந்திருக்கிறோம்'' என்று சொல்ல பலபேர் கண்ணீர் விட்டு அழுதார்கள். அந்தக் கண்ணீர் அவனை இன்னும் மெல்லியனாக்கியது.

அவன் எந்த கனமும் அற்று மனம் மொத்தமும் கழன்று கீழே விழுந்து எந்தவிதப் பிறப்புமில்லாமல் எல்லாம் முடிந்தவனாக, எல்லாம் அழித்தவனாக, எல்லாம் களைந்தவனாக, எல்லாம் தெரிந்தவனாக, மிக சிறப்பான முறையில் அவன் இருப்பதை நாங்கள் அத்தனை பேரும் உணர்ந்தோம். ஞானி அவனை நோக்கி கைகூப்பினார். அவனும் ஞானியை நோக்கி கைகூப்பினான். எனக்கு அருகே வந்து நின்றான். என்னால் அவனைத் தழுவிக் கொள்ள முடியவில்லை. அவன் மெல்ல என் நெற்றியில் முத்தமிட்டான். எனக்கு வணக்கம் சொன்னான். நான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தேன்.

''பூமி ஒரு அழகான இடம். பூமி ஒரு சுபிட்சமான இடம். ஆனால் மனிதர்கள்தான் இந்த பூமியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்ன செய்வது? கடவுளுடைய விருப்பம் அதுவாக இருக்கிறது'' என்று சொன்னான். பூமியைக் காதலுடன் நோக்கினான். பிறகு மெல்ல வானத்தைப் பார்த்தான். வானத்தில் வெளிச்சம் ஒன்று அதிகரித்தது. அந்த வெளிச்சக் கதிர் மெல்ல கீழிறங்கியது. அவனைச் சுற்றிப் பொங்கி பாய்ந்து வந்தது. அவனை முற்றிலும் சூழ்ந்து கொண்டது. உறிஞ்சியது. தூக்கியது. சட்டென்று அவன் காணாமல் போனான். வெளிச்சத்தோடு வெளிச்சமானான். நீரோடு நீர் கலந்ததுபோல காற்றோடு காற்று கலந்ததுபோல வாசனையோடு வாசனை கலந்ததுபோல அவன் வெளிச்சத்தோடு முற்றிலுமாய் கலந்து போனான். அவனுக்கு இனி பிறவி இல்லை. அவன் வீர சொர்க்கம் அடைந்துவிட்டான். அவன் எப்போதும் வெளிச்சமாக, எப்போதும் ஒளியாக எப்போதும் நிரந்தரமான ஒரு அமைதியில் இருப்பான். அவனுக்கு பூமியோடு இனி எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பூமியில் அவனைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். வெகு காலம் அவனைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள். அவன் பெயரால் பல நல்ல விஷயங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது ஒரு உன்னதமான மரணம்.

நான் கவலையோடு பூமியைப் பார்த்தேன். ஞானி எனக்கு அருகே வந்து உட்கார்ந்து கொண்டார்.

''அவனும் போர் வீரன். வந்தான். பார்த்தான். போய்விட்டான். நீ ஆயிரம் வருடங்களுக்கு மேல் இங்கிருப்பதாகச் சொல்கிறாய். நீ ஏன் போகவில்லை. உனக்கேன் வெளிச்சம் வரவில்லை. உன்னை ஏன் அவர்கள் அழைக்கவில்லை. இங்கு அற்புதமான வேலை செய்து கொண்டிருக்கிறாய். அப்போதும் அங்கு உனக்கு வரவேற்பில்லையே. ஏன்?'' என்று கேட்டார்.

நான் தலை குனிந்தேன்.

''ஏதேனும் தவறா?'' மெல்ல வினவினார்.

நான் ''ஆம்'' என்றேன்.

''என்ன?'' ஞானி பிரியத்துடன் கேட்டார்.

அவரிடம் சொன்னால் என்னுடைய நினைவுகள் இன்னும் வேகமாகக் கரையும். என் மனம் இன்னும் வேகமாகக் கரையும் என்று தோன்றியது. நான் என்னைப் பற்றி சொல்லத் துவங்கினேன்.

நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாகிறது. நான் பிறந்தது காவிரிக்கரை. அழகிய கிராமம். என் கிராமத்தில் எனக்கு உபநயனம் செய்வித்தார்கள். உபநயனம் செய்வித்த அன்று மத்தியானம் கையில் ஈர்க்குச்சியைக் கத்தியாக நினைத்து கன்றுக்குட்டியை குதிரையாக நினைத்து அதைக் கையில் பிடித்து கன்றுக்குட்டியின் துள்ளலை அடக்கிக் கொண்டிருந்தேன்.

என் வீடு சிரித்தது. என் வீடு அந்தணன் வீடு. ஆனாலும் என் வீட்டிலுள்ள பல அந்தணர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக, தளபதிகளாக, போர் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள். என் வாழ்க்கை அவர்களுக்கு நடுவே உற்சாகமாக ஆரம்பித்தது.--

நான் என் வாழ்க்கையை யோசிக்கத் துவங்கினேன். அப்போது கீழே சக்தி திரண்டு மிக மிருதுவாக இறங்கி காத்திருந்தது.

என்ன ஆச்சர்யம்? சட்டென்று உறியும் செயலை செய்யக்கூடிய சக்தி, இப்போது காத்துக்கொண்டிருப்பது மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது.

- தொடரும்

சொர்க்கம் நடுவிலே

பாலகுமாரன்

 

ஜெய விஜயீ பவ.

நான் கேசவன் நாராயணன். அந்தணன். ஆயினும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாயிற்று.

இறந்து போய் மேலே வருகிறவர்களை ஆசுவாசப்படுத்துவது எனக்குப் பிடித்தமான வேலையாக இருக்கிறது. விதவிதமான மனிதர்கள், விதவிதமான வேதனைகளோடு இங்கு வருகிறார்கள். இது மங்கலான வெளிச்சமான இடம். அமைதியாக இருப்பதற்கு வசதியான இடம். இந்த வசதியைப் பலர் புரிந்துகொண்டு அனுபவிக்கிறார்கள். தங்களுடைய நினைவுகளை மெல்ல களைந்துவிட்டு கீழே போகிறார்கள். அல்லது மேலே அழைக்கப்படுகிறார்கள். இது நடுவில் இருக்கும் ஒரு சொர்க்கம். எந்தவித வேதனைகளும் இல்லாத ஒரு இடம். ஆனால் கீழே அனுபவித்த வேதனைகளை நினைவுக்குக் கொண்டு வந்து அலறுகிறவர்களும், அழுகிறவர்களும் இங்கு உண்டு.

மரணமடையப் போகிறார்கள் என்று தெரிந்ததும் அந்த உயிரை உறிஞ்ச பூமியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு வெற்றிடம் உண்டாகும். சுற்றியுள்ள அணுத் திரள்கள் ஒரு வரிசையாக நிற்கும். அந்த சக்தியை உறிஞ்சுவதற்கு சுற்றிலுமுள்ள சக்திகள் உதவி செய்யும்.

ஞானியும் நானும் கீழே பார்த்தபோது கீழே சுழல் வேகமாக இருந்தது. ஆனால் கூர்மையாக இல்லை. உடனடியாக

உறிஞ்சப் போவது இல்லை என்பது போல அது செயல்பட்டது. நான் கீழே உள்ளவர்களை உற்றுப் பார்த்தேன். அந்த இடத்திற்குப் போக வேண்டும் என்பதுபோல் ஒரு உந்துதல் எனக்குள் ஏற்பட்டது.

நான் மெல்ல ஞானியைக் கவனித்துவிட்டு கீழே நகர்ந்தேன். ஒரு கிழவருக்கு அருகே போய் நின்றுகொண்டேன். அவர் கண்மூடி படுத்திருந்தார். ஆனால் மனம் விழித்திருந்தது. அவர் உடம்பு தொய்வாக அதிக அசைவுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் மனம் இடதும் வலதுமாக பல்வேறு விஷயங்களுக்கு அலைந்து கொண்டிருந்தது. அவர் இறந்துவிடுவார் என்று வைத்தியர் சொன்னதை இரண்டு பேர் பேசி அவர் கேட்டுவிட்டார்.

'இவருடைய இதயம் நொய்மையாக இருக்கிறது. இவர் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம்' என்று வைத்தியர் சொல்ல, அதை இவருடைய சொந்தக்காரப் பெண்கள் இரண்டு பேர், இவர் உறங்குகிறார் என்கிற நினைப்பில் இவருக்கு அருகே நின்று அதைப்பற்றிப் பேசினர். அவர் அதைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டார்.

பெண்கள் நகர்ந்ததும் மெல்ல அழுதார். பிறகு மனம் தேறினார். இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருப்பது? வேறு புது இடத்துக்குப் போக வேண்டும் என்ற ஆவல் உள்ளவராய் தனக்குள் தன்னைப் பார்க்க ஆரம்பித்தார். அவர் படுத்துக் கிடந்த இடம் வசதியாக இருந்தது. தனக்குள் அவரால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கலைந்து சுற்றிலும் தன் மனதை அலைய விட்டார்.

அவருடைய அறை விசாலமாக குளிர்சாதனம் பொருத்தப்பட்டு மிகச் சுத்தமாக இருந்தது. அவருக்குத் தரவேண்டிய மருந்துகள், உபகரணங்கள் மிகச் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு தாதியர்கள் எந்நேரமும் அவரை முழுமையாகக் கவனித்துக் கொண்டர்கள். அவர்கள் உறங்குவதற்கு ஏற்ப மாற்று

 

ஏற்பாடாக இன்னும் இரண்டு தாதியர்கள் அவரைக் கவனிக்க வந்துவிடுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்க முயற்சி செய்தார்கள்.

தொண்ணூற்றியிரண்டு வயது என்பதால், இளம் வயதில் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர் என்பதால் ஆட்டம், பாட்டங்கள் அதிகம் என்பதால் இதயம் நொய்மை அடைந்திருந்தது.

கட்டிலை நிமிர்த்த வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து யோசிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்தக் கட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அதில் சிறிய குமிழிகள் இருந்தன. அந்தக் குமிழிகளைத் தடவினால் கட்டில் நிமிர்ந்தது. திரும்பியது. முன்னும் பின்னும் நகர்ந்தது. தாழ்ந்தது. உயர்ந்தது. பல்வேறு விஷயங்களை அந்தக் கட்டில் தானே செய்து கொண்டது. அதில் ஒரு அபாய மணி கூட இருந்தது. அழைப்பு மணியும் இருந்தது.

அவர் அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே மருந்துகளை அடுக்கிக் கொண்டிருந்த தாதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவரை நோக்கி வேகமாக வந்தாள். என்ன என்று தோள் பிடித்துக் கேட்டாள். அவர் கண் திறக்கவில்லை.

''ஸ்வாமிஜி வந்தா எனக்குச் சொல்லு.'' நிதானமாகப் பேசினார்.

அவள் சரியென்று சொன்னாள்.

''முடிஞ்சா நான் ஸ்வாமிஜிகிட்ட பேசணும்னு சொல்லு.'' இரண்டாம் முறையாகவும் அவர் நிதானமாகப் பேசினார்.

அவள் நகர முற்பட்டபோது மறுபடியும் குரல் கொடுத்தார். ''நிச்சயம் ஸ்வாமிஜியைப் பார்க்கணும்னு சொல்லு'' என்றார். அவள் அவரையே உற்றுப் பார்த்தாள். ''ஏதாச்சும் தொந்தரவு இருக்கா'' என்று கேட்டாள்.

''உடம்புல எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனா ஸ்வாமிஜிகிட்ட பேசணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்.''

அவள் இதை வேறொரு நபரிடம் தெரிவிக்க, அந்த நபர் இன்னொருவருக்குத் தெரிவிக்க, அது பல்வேறு நபர்களைத் தாண்டி ஸ்வாமிஜி என்று சொல்லப்படுகிற ஒரு மத்திம வயதுக்காரரிடம் போயிற்று.

அவர் விறைப்பானார். கண்கள் மூடிக்கொண்டார். ''சரி மற்ற வேலைகளை நிறுத்திவிடுவோம்.'' சொல்லிவிட்டு கிளம்பினார்.

''இன்னும் அரை மணியில் பாராளுமன்றத்திலிருந்து இரண்டு முக்கிய நபர்கள் வருகிறார்கள்'' என்று ஸ்வாமிஜியிடம் சொல்லப்பட,

''தயவுசெய்து சந்திப்பதற்கில்லை என்பதை இப்போதே சொல்லிவிடு. எந்த உயரதிகாரிகளுடைய சந்திப்பும் இன்று வேண்டாம். நான் வேறு ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல். எந்த விஷயம் என்பதைச் சொல்ல வேண்டாம்.''

''என்ன விஷயம் என்று எங்களுக்கே தெரியாதே ஸ்வாமிஜி.''

''உங்களுக்கும் இப்போது தெரிய வேண்டாம். மிக மிக முக்கியமான விஷயம்'' என்று சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்து பல படிகள் தாண்டி இறங்கி நடந்தார்.

மிகப் பெரிய தோட்டத்தின் நடுவே மாளிகை போலிருந்த அந்த இடத்திலிருந்து அவர் வெளிப்பட, தோட்டத்தில் அங்கங்கே இருந்தவர்கள் பரபரப்பானார்கள்.

ஸ்வாமிஜி என்று சொல்லப்படுகிற அந்த ஐம்பது வயது இளைஞர் மிக வேகமாகத் தன்னுடைய உயர்ந்த கட்டிடத்தை விட்டு இரண்டு பக்கமும் பூச்செடிகள் பூத்த பாதையில் வேகமாக நடந்து வர அவரைப் பின்தொடர்ந்து ஆறேழு நபர்கள் ஓட்டமும் நடையுமாக வந்தார்கள்.

''வேறெதுவும் முக்கிய உத்தரவு உண்டா?'' என்று அவர் முகத்தைப் பார்த்தார்கள்.

அவர் பதில் சொல்லாமல் பார்த்தார். காவி உடையில் கறுப்பு வர்ணம் பூசிய கேசமும், தாடியும், மீசையுமாய் மிக அழகாக இருந்தார். அவர் உடம்பிலிருந்து நறுமணம் வீசிற்று. வேகமாக நடந்து போகும்போது யாரும் மடக்கிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு இளைஞர்கள் காவலர்கள் போல முன்னால் நடந்து போனார்கள். செடிகளுக்கப்பால் புல்வெளியில் இருந்தவர்களைத் தள்ளியே நிற்கும்படி உத்தரவிட்டார்கள். வழக்கமாகப் புன்சிரிப்புடனும் கேள்விகளோடும், ஆச்சரியத்தோடும் போகின்ற ஸ்வாமிஜி, அன்று யார் பார்வையையும் சந்திக்காமல் நடந்து போனார். அவருடைய தோட்டத்தின் கடைசிப் பக்கம் இருக்கின்ற அந்த பங்களாவுக்குள் நுழைந்தார்.

அந்தக் கிழவர் இருக்கிற அறைக்கதவை மெல்ல தட்டினார். தாதிகள் திறக்க தன்னுடைய கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொண்டு வெள்ளைத் துணியால் துடைத்துக் கொண்டு அந்தக் கிழவரை நோக்கி நகர்ந்தார். தாதிகள் அருகே வர, உதவியாளர்கள் நெருக்கமாக இருக்க ஒரு பார்வையில் எல்லோரையும் வெளியே இருக்கச் சொன்னார். சகலரும் வெளியே போக, அவருக்கு நெருங்கிய உதவியாளர்போல ஒரு பெண்மணி மட்டும் அருகே இருந்தாள். அந்தப் பெண்மணியையும் சுட்டிக்காட்டி, சற்று தொலைவே நிற்கும்படி சொன்னார். மெல்ல கைகளை மறுபடியும் துடைத்துக் கொண்டார். அந்தக் கிழவரின் தலையில் கை வைத்து தடவினார். கன்னத்தை வருடிக் கொடுத்தார்.

''அப்பா, கூப்பிட்டீங்களா?'' என்று மிருதுவாகப் பேசினார்.

கிழவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. ஆனாலும் கிழவர் கண் திறக்கவில்லை. ஸ்வாமிஜியின் வருகையை அங்கீகரிப்பது போல, அதில் சந்தோஷப்படுவதுபோல, அந்தப் புன்னகை இருந்தது.

கண் திறந்தால் அழுகை வந்துவிடுமோ? அல்லது வேறு ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டுவிடுமோ? என்பதால் அமைதியாக இருந்தார்.

''எதுக்குப்பா கூப்பிட்டீங்க.''

மறுபடியும் ஸ்வாமிஜி மிருதுவாய் அவர் கழுத்தைத் தடவியபடி கேட்டார்.

''அநேகமா இன்னிக்கு செத்துப் போயிடுவேன்னு நினைக்கிறேன்.''

கிழவர் சொல்வது ஸ்வாமிஜிக்கு மட்டும் கேட்டது.

ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்வாமிஜியின் கண்கள் தடுமாறின. சட்டென்று உறுதியாயின.

''அதைப் பத்தி என்ன கவலை? அது நம்ம வேலை இல்லையே'' மிருதுவாக ஸ்வாமிஜி சொன்னார்.

''சாயந்தரமா ஆறு மணிக்கு பிராணன் போயிடும்னு தோண்றது. உன்னால, கூட இருக்க முடியுமோ.'' அவர் நிதானமாக வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட்டு கேட்க, ஸ்வாமிஜி திரும்பி தன் பெண் உதவியாளரைப் பார்த்தார்.

அவளுக்குப் புரிந்தது.

''நிச்சயமா முடியும். உங்களண்ட இருக்கறதைவிட எதுவும் முக்கியமில்லை'' என்று சொன்னார்.

''நின்னுண்டேதான் இருப்பியா'' இந்த முறை குரல் உயர்ந்திருந்தது.

பெண் உதவியாளரை நோக்கி ஸ்வாமிஜி இடது உள்ளங்கையை அகல விரித்து வலது உள்ளங்கையால் மொத்தமும் செதுக்கி எடுக்கும்படியான ஒரு சைகை செய்தார்.

இன்று எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துவிடு என்பதாக அந்த செய்கை இருந்தது.

பெண் உதவியாளர் சட்டென்று வெளியே போனார்.

 

ஸ்வாமிஜி கட்டிலில் உட்கார்ந்து கொண்டார்.

''வேணும்னா அவசர வேலைகளை முடிச்சுட்டு வந்துடேன்'' கிழவர் பேச,

''ஒரு வேலையும் இல்லை எனக்கு. உங்களோட இருக்கறதுதான் வேலை. எதுபற்றியும் கவலைப்படாம இருங்கோ. என்ன நடக்கணுமோ, அது தானா நடக்கும்''

''அப்படி தானா நடக்கும்னு விடமுடியுமா?''

''என்ன பண்ண முடியும்?''

''இல்லை... என்ன நடக்கும், எப்படி நடக்கும்னு ஒரு கேள்வி வரும். அதை உன்கிட்ட கேட்டுக்கலாமே... அப்படீன்னுதான் ஆசைப்படறேன்.''

''என்ன கேள்வி?''

''என்ன நடக்கும்?''

''புரியும்படியா கேளுங்களேன் அப்பா''

''மரணம் எப்படி நடக்கும். என்ன விதமா நடக்கும். அது வலிக்குமா?''

''விதவிதமான மரணம் உண்டு. விதவிதமான வேதனைகள் உண்டு. வலித்த மரணம், வலிக்காத மரணம். வலித்த க்ஷணமே காணாமல் போய்விடுகிற மரணம், வெகுநாள் வலிக்கின்ற மரணம் என்று பல்வேறு வேதனைகள் உண்டு. அவரவர் கர்மாவுக்கு ஏற்றபடி இது கிடைக்கிறது.''

''எனக்கு எப்படி கிடைக்கும்?''

''நீங்கள் எப்படி ஆசைப்படுகிறீர்களோ அப்படிக் கிடைக்கும்.''

''அவ்வளவு சக்தி என்னிடம் இருக்கிறதா?''

''எனக்கு நீங்கள் தந்தை இல்லையா. அதனால் உங்களுக்கு அம்மாதிரி நேரும்.''

''உன்னால் எனக்கு விடுதலை கொடுக்க முடியும் என்கிறாயா?''

''இது விடுதலை என்று நாம் ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும். நாம் என்ன சிறைப்பட்டா இருக்கிறோம். நம்மை என்ன தண்டனைக்கா ஆட்படுத்தியிருக்கிறார்கள்? இந்த அறையிலிருந்து இன்னொரு அறைக்கு. இந்த பங்களாவிலிருந்து இன்னொரு பங்களாவுக்கு. அவ்வளவுதானே தவிர வேறு எந்தவித மாற்றமும் இல்லை.''

''வைதரணி நதி என்று சொல்கிறார்களே அது என்ன?''

''அப்படியா. இதுபற்றி எங்கு கேள்விப்பட்டீர்கள்?''

''படித்திருக்கிறேன். ஒரு புத்தகத்தில், 'மரணத்திற்கு பிறகு வைதரணி நதியைக் கடக்க வேண்டும்' என்று போட்டிருந்தார்கள். அது வெந்நீர் ஆறாமே. வெந்நீர் ஆற்றை எப்படிக் கடப்பது?''

ஸ்வாமிஜி மெல்ல சிரித்தார். அப்பாவின் நெஞ்சைத் தடவிக் கொடுத்தார்.

''வெந்நீர் ஆறு என்பது ஒரு உபமானம். அவளுடைய கூந்தல் மேகம்போல இருந்தது என்று சொல்வதுபோல் ஒரு உபமானம். பெண் கூந்தல் மேகம்போல இருந்தால் அது நகர்ந்து கொண்டே இருக்குமா? அல்லது புசு புசு என்று கைவைத்தால் காணாமல் போகுமா? அப்படியில்லை. கருமை நிறத்துக்கு ஒப்பிட்டு அப்படிச் சொல்வது வழக்கம். அதுபோல ஒரு விஷயத்துக்கு வைதரணி நதி என்று பெயரிட்டு அதை வெந்நீர் ஆறு என்று சொல்கிறார்கள். உபமானம்தான். அது ஆறு அல்ல. அது நீர் சம்பந்தப்பட்ட விஷயம். இதை ஏன் நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இன்னும் சில நாள்...''

கிழவர் கண்திறந்தார்.

''இல்லை. இன்று மாலை நான் நகர்ந்துவிடுவேன். நன்றாகத் தெரிகிறது. அதற்காக எனக்குள்ளேயே சில ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது மட்டும் என்ன என்று புரியவில்லை. பதில் சொல். தெரிந்துகொள்ளக் கூடாது என்றால் வேண்டாம்.'' கிழவர் ஒரு முரட்டுப் பையன்போல் வேகமாகப் பேச, மறுபடியும் ஸ்வாமிஜி நெகிழ்ந்து அவரைக் கட்டிக் கொண்டார். முகம் முழுவதும் தடவினார்.

''இது வெளி என்னும் விஷயத்தில் ஏற்படும் பிரச்னை'' -ஸ்வாமிஜி அதைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

-தொடரும்

சொர்க்கம் நடுவிலே

பாலகுமாரன்

 

ஜெய விஜயீ பவ.

 

 

நான் கேசவன் நாராயணன். அந்தணன். ஆயினும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாயிற்று.

 

எனக்கு அருகே இருக்கின்ற ஞானி, பூமியில் இருக்கும்போது மட்டுமல்ல இப்போதும் இங்குள்ளவர்களை தன் இருப்பினால் ஆசுவாசப்படுத்துகிறார். நான் முன்னிலும் பூமியை நோக்கி கூர்மையாக இருப்பதற்கு இவருடைய ஆன்மாவே காரணம். கீழே, ஸ்வாமிஜியின் தந்தைக்கு இன்னும் சில நிமிடங்களில் உயிர் பிரியப்போகிறது. எனவே, அவருக்கு மரணம் குறித்தும் வைதரணி நதி குறித்தும் பலத்த சந்தேகங்கள் எழுந்தது. ஸ்வாமிஜி ஒவ்வொன்றாக அது குறித்து தந்தைக்கு விளக்க ஆரம்பித்தார்.

 

''வைதரணி நதி என்பது வெந்நீர் ஊற்று அல்ல. இது வெளி என்னும் விஷயத்தில் ஏற்படும் பிரச்னை. இந்த பூமி ஒரு வெப்பத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலே வேறொரு வெப்பமும் இருக்கிறது. அந்த வெப்பத்திற்கு அப்பால் வேறு ஒரு விதமான இடம். தட்பவெப்பம், சூழ்நிலை இருக்கிறது. பூமியோடு தொடர்புள்ள வெப்பத்தையும், பூமிக்கு மேல் உள்ள அதிக வெப்பத்தையும் உயிர் என்கிற பிராணன் கடந்தாக வேண்டும். இதைத் தாண்டித்தான் அந்த அமைதியான இடத்திற்குப் போகவேண்டும். உயிர் உடம்பை விட்டு போகிறபோது எந்தவித பிரக்ஜையும் அற்றுப் போவதில்லை. உயிராக இருக்கிறபோது என்ன பிரக்ஜை இருந்ததோ, என்ன புத்தி இருந்ததோ, என்ன அனுபவப் பதிவு இருந்ததோ, அதையும் எடுத்துக் கொண்டு போகிறது.

 

அந்த அனுபவப் பதிவுக்கு, குறைவான சூடு, அதிகமான சூடு என்பது தெரியும். அந்த உயிர் நடக்கிறபோது சூடு பற்றிய அனுபவம் அந்த உயிரோடு போகிறது. அது பூமியை விட்டு விலகியதும் பூமியின் வெப்பம் மறைந்துபோய் பூமிக்கு மேல் உள்ள வெப்பம் மிக முக்கியமாகப்படுகிறது. அந்த வெப்பத்தை, உடம்பு இருப்பதுபோல் தோற்றம் உள்ள அந்த மனம், உயிரைச் சுற்றி உள்ள நினைவு அனுபவித்துக் கடக்கிறது.

 

அந்த வெப்பத்தைத் தாண்டியபிறகு, அதே வெப்பம் அந்த நினைவுகளில் பலவற்றைக் கிழித்துவிடுகிறது. பல நினைவுகள் பொசுங்கிவிடுகின்றன. அந்த வெப்பம் தாண்டுதல் பயம் கூடியதாகவும் பதட்டம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால், தாண்டியாக வேண்டிய அவசியம் இருக்கிறது. தாண்டிய பிறகு ஒரு விடுதலை ஏற்படுகிறது. நினைவில் இருந்த பல்வேறு விஷயங்கள் காணாமல் போகின்றன.

 

குறிப்பாய் மரணம் பற்றிய பயம், மரணம் பற்றிய பதட்டம் குறைகிறது. ஆனால், இந்த வைதரணி நதியைத் தாண்டிய பிறகும் சிலருக்கு மரணம் பற்றிய பயம் போகாமல் இருக்கும். தீராமல் இருக்கும். பொசுக்கி எடுக்கப்படாமல் இருக்கும். ஏனெனில், அந்த பயம் மிக தடிமனாக ஆழ்ந்து பதிந்த விஷயமாக இருக்கும். அப்படி இல்லாமல் இருப்பதற்குத்தான் மரணத்தைப் பற்றி பல்வேறு விதமாக போதித்திருக்கிறார்கள். இறைவனடி சேர்தல், சொர்க்கம் அடைதல், வைகுந்த பதவி என்றெல்லாம் சொல்லி அதை நல்ல விஷயமாகக் காட்டுகிறார்கள். அப்படி வரவேற்கத்தக்க விஷயமாக ஏற்றுக்கொண்டுவிட்டால், சுலபமாக வைதரணி நதியைத் தாண்டிவிடலாம்.

 

முடியாது. பூமியை விட்டுப் போக முடியாது என்கிறபோது அது வைதரணி நதியோடு போராடுகின்ற இடமாகப் போய்விடுகிறது. இது மனம் போடும் கூத்து. இறந்த பிறகும் மனம் அழியாமல் உயிரைச் சுற்றி ஆடுகின்ற ஆட்டம். பூமியில் உள்ள எல்லா உயிர்களும் அந்த வெப்ப மண்டலத்தைத் தாண்டித்தான் போகவேண்டும். பூமியிலுள்ள உடம்பு என்கிற விஷயத்தின் உணர்வோடுதான் போகவேண்டும். உண்மையில் அது நதி அல்ல. வெந்நீர் ஆறு அல்ல. ஒரு வெப்ப மண்டலம்.''

 

''உடம்பின் நினைவை இங்கு விட்டுவிட்டுப் போக முடியாதா?'' கிழவர் கேட்டார்.

 

''அநேகமாக முடியாது. உடம்பு பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாழ்வோருக்கு அது நடக்கக்கூடும். ஆனால் உடம்பு பற்றிய பிரக்ஞையோடு வாழ்கிறபோது நான் உடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் உண்கிறேன். நான் உறங்குகிறேன், நான் உறங்காமல் இருக்கிறேன் என்று எண்ணங்கள் இருக்கிறபோது, நமக்கு பெயர் இட்டுக் கொண்டிருக்கிறபோது, நம் பெயர் கேட்டால் திரும்பிப் பார்க்கிறபோது, நாம் உடம்பாக இருக்கிறோம். நம் பெயர் கேட்டு திரும்பிப் பார்த்தால் நாம் உடம்பு. உடம்பாக இருக்கிறபோது ஏற்படுகிற அந்த அனுபவத்தை, உடம்பு விட்டுப் போகிறபோதும் எடுத்துக் கொண்டு போகிறோம். இதை முற்றிலும் தவிர்க்க உடம்பு பற்றிய பிரக்ஞை அறவே அழிந்திருக்க வேண்டும். அவருக்கு சித்த புருஷர், ஞானி என்றே பெயர். அவர்களிலும் சிலர் உடம்பின் நினைவோடுதான் நகர்வார்கள். மேலே போய் அந்த நினைவை உதிர்த்துக் கொள்வார்கள்.''

 

''வெந்நீர் ஆறு என்பது வலிக்குமா?'' கிழவரின் கேள்வி தொடர்ந்தது.

 

''வலியைப்போல ஒரு தோற்றம் இருக்கும். ஆனால் அதை இப்போதே விட்டுவிட முடியும்.''

 

''எதை?''

 

''அந்த பயத்தை.''

 

''எப்படி?''

 

'' 'தயாராக இருக்கிறேன்' என்கிற நினைப்பை பலப்படுத்திக் கொள்வதன் மூலம்.''

 

''மரணத்திற்கு நான் தயாராக இருந்தால் பயம் போய்விடுமா?''

 

''போக வேண்டும். உண்மையாகத் தயாரானால் பயம் நிச்சயம் போகும். அது வேறு எவரும் உதவி செய்து கிடைக்காது. நீங்களே அதை உன்னிப்பாகக் கவனித்து உதற வேண்டும். இதைத்தான் பெரியவர்கள், 'நீ போட்ட முடிச்சை நீதான் அவிழ்க்க வேண்டும்' என்பார்கள். இது நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட பயம். உங்களுக்குள் உறைந்து தங்கிப்போன ஒரு விஷயம். அது என்ன என்று ஆராய்ந்து அந்த முடிச்சை அவிழ்த்துவிடுங்கள். அந்த பயத்தைத் தூக்கி விடுங்கள். அந்த பயத்தை எடுப்பதற்கு மரணத்திற்கு முற்றிலுமாய் தயாராகுங்கள். 'இறந்து போகப் போகிறேன்' என்று சந்தோஷப்படுங்கள்.''

 

''அடுத்த அறைக்குப் போவதற்கு பயம் இருக்கிறதா? இல்லையே... அங்கு தயக்கம் இருக்கிறதா? இல்லையே. இந்த பங்களாவிலிருந்து என்னுடைய பங்களாவுக்கு நடந்து வரவேண்டுமென்றால் நான் பயப்படுவேனா? இல்லை அல்லவா? சர்வசாதாரணமாக நடந்து இரண்டு பக்கமும் வழியைப் பார்த்து வணக்கம் சொல்லி என் பங்களாவுக்குள் புகுந்து கொள்வதைப்போல இந்த உடம்பிலிருந்து வேறு ஒரு ஸ்திதிக்கு நீங்கள் போகக்கூடாதா?''

 

''நீ சொல்வது நன்றாக இருக்கிறது. எதனால் அந்த பயம் எனக்குள் ஏற்பட்டிருக்கக்கூடும்?''

 

''பிறர் சொல்லி. உங்கள் கற்பனை, உங்களுடைய ஆசை. இந்த பூமியின் மீது, உடம்பின் மீது, உணவின் மீது, உடையின் மீது, உறைவிடத்தின் மீது உங்களுக்குள்ள ஆசை. இவையெல்லாம் உங்களுக்குப் பிற்பாடு கிடைக்காதோ என்கிற முட்டாள்தனமான கவலை. உடம்பில்லாதபோது உணவு எங்கே? உடை எதற்கு? ஆனாலும் மனம் இறந்துபோனால் என் சொத்துக்கள், என் மனைவி என்னுடைய மக்கள், என்னுடைய உறவினர்கள், என்னுடைய உணவு, என்னுடைய உடை என்றெல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள். சகலத்தையும் ஒரு வீச்சில் உதறினால் இந்த பயம் ஓடிவிடும். ஆனால், ஒரே வீச்சில் உதற வேண்டும்.''

 

''இன்னும் கொஞ்சம் புரியும்படியாகச் சொல்.''

 

''இங்கே ஆசைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இப்போது எதன் மீது உங்களுக்குப் பற்று இருக்கிறது? யோசனை செய்யுங்கள். எதைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? யோசனை செய்யுங்கள். இந்த இடத்தையா? இந்தக் கட்டிலையா? இந்த மருந்துகளையா? என்னையா? யோசனை செய்யுங்கள். இவையனைத்தும் நமக்கு அப்பாற்பட்டவை. இவை ஒருபோதும் உங்களை தடுத்து நிறுத்தாது. நீங்கள் மரணமடைய நேரம் வந்துவிட்டால் இவற்றை நிச்சயம் உதறிவிட வேண்டும். உடம்பாக நீங்கள் இருப்பதை முக்கியமாக நினைத்துக் கொண்டால், மருந்துகளும் இருப்பிடமும், உதவி செய்ய வருவோரும், மருத்துவரும் முக்கியமாகிவிடுவார்கள். உடம்பே இல்லை. நீங்கள் யார்? பின் வேறு என்ன? என்று உற்றுப் பார்த்தால் உதறிவிட முடியும்.''

 

''உடம்பு இல்லையெனில் நான் என்ன?''

 

''உற்றுப் பாருங்கள். எங்கே, எது நீங்கள்? என்று உற்றுப் பாருங்கள். நான் என்பது எங்கு இருக்கிறது. நீங்கள் தேடுங்கள். கட்டை விரலிலா, கால் தொடையிலா, அடி வயிற்றிலா, மேல் வயிற்றிலா, கழுத்திலா, நெற்றியிலா, மண்டையின்

 

உச்சியிலா? வலது கையிலா, இடது கையிலா? எங்கும் இல்லை. ஏதோ ஒரு இடத்திலிருக்கிறது. எந்த இடத்தில் என்று நான் சொல்வதைவிட நீங்களாகவே தேடுங்கள். மூளையில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு தேடிப் பாருங்கள். எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு இடமாகத் தேடிப் பாருங்கள். உங்களால் ஒரு இடத்துக்கு வந்துவிட முடியும். மற்றவர்கள் சொல்வதைவிட உங்கள் இருப்பிடத்தை நீங்களே கண்டுபிடிக்க முடியும். அப்போது ஒரு இடம் தெரியும். அந்த இடத்திலேயே மையம் கொண்டிருங்கள். அந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருங்கள். அப்போது உடம்பின் ஞாபகம் நகர்ந்தாலும் நகரும். இந்த உற்றுப் பார்ப்பது என்பதை உங்களுக்காக யாரும் செய்ய முடியாது. உங்களுக்காக வேறு எவரும் தள்ள முடியாது. அது உங்களுடைய முயற்சி. ஒரு முயற்சியாய் உங்களுடைய மனதால் எந்த இடத்தில் வாழ்கிறீர்களென்று உற்றுப் பாருங்கள். உங்கள் பெயரை கூவிப் பாருங்கள். உள்ளுக்குள்ளே இருப்பவரை உங்கள் பெயரைச் சொல்லி அழையுங்கள். அந்தத் தோற்றம் உங்களுக்குத் தெரிந்தால் உங்கள் பெயர் உங்களுக்கு மறந்து போகும். அந்த இடம் உங்களுக்குத் தெரிந்தால் உங்கள் இடம் உங்களுக்கு மறந்து போகும். அதை நோக்கி உங்கள் மனம் முற்றிலுமாய் பற்றிக் கொண்டால், சுற்றிக் கொண்டால், உங்களால் வெளியேறவும் முடியும். உள்ளிருக்கவும் முடியும்.''

 

''அப்படியா? நான் எங்கிருக்கிறேன், நான் எங்கிருக்கிறேன்?'' கிழவர் தேடினார்.

 

ஸ்வாமிஜிக்குக் கவலை வந்தது. தகப்பனின் தலையை மெல்ல தடவிக் கொடுத்தார். அடர்த்தியான கேசம். பத்து நாள் தாடி. பஞ்சடைந்த கண்கள். ஆனால், தேடுகையில் முகத்தில் பிரகாசம் கூடியது. ஸ்வாமிஜி அவர் தலையை நிதானமாகத் தடவினார். புஜங்களை வருடிக் கொடுத்தார்.

 

கதவு மெல்ல திறந்தது. பெண் உதவியாளர் வந்தார். ''சகலமும் நகர்த்திவிட்டேன்'' என்று சொன்னார். இந்த செய்கை ஸ்வாமிஜிக்கு நிம்மதி கொடுத்தது. இன்னும் பிரியமாகத் தன் தகப்பனைப் பார்த்தார். கட்டிலில் அவருக்கு இன்னும் நெருக்கமாய் உட்கார்ந்து கொண்டார்.

 

அந்த நெருக்கம் கிழவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. பிள்ளையின்மீது புத்தி போய், மறுபடியும் தான் யார் என்ற தேடலை நோக்கி ஓடி வந்தது. உடம்பு முழுவதும் தேடியது. ஏதோ ஒரு புள்ளியில் நின்றது. அங்கே உரக்க அவர் பெயரைக் கூவினார். இன்னும் உரக்கக் கூவினார். உள்ளுக் குள்ளேயே அதை நோக்கி உரக்கக் கூவியபடி நகர்ந்தார். வெளியே அவர் உடம்பு அசைவில்லாமல் இருந்தது. ஆனால் உள்ளே அவரை நோக்கி அவர் வேகமாக ஓடினார். எது, எது, எது...? எங்கே, எது, எது? என்று ஆவேசப்பட்டார். அதை நெருங்கினார். இன்னும் இறுக நெருங்கினார். அந்த முயற்சி, சொல்லுக்கு அப்பாலான விளக்க முடியாத வேகமாக இருந்தது. அப்படியே ஏதோ ஒரு புள்ளியில் சட்டென்று நின்றார்.

 

ஸ்வாமிஜிக்கு முகம் மலர்ந்தது. தன் வலது கையைத் தகப்பனின் உச்சந்தலையில் வைத்தார். இடது கையை தகப்பனின் நெஞ்சில் வைத்தார். தலைக்குள்ளே ஸ்வாமிஜியின் கை ஸ்பரிஸத்தால் ஒரு அதிரடியான வேகம் கிழவருக்குள் இறங்கியது. நெஞ்சில் கை வைத்தபோது அங்குள்ள ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்பட்டது. மேலிருந்த நினைவுகள் அத்தனையும் ஒன்று திரண்டு நெஞ்சுக்குள் நிற்கின்ற அந்த மையத்தை நோக்கி நகர்ந்தன. புத்தியின் வலு மொத்தமும் இப்போது நெஞ்சை நோக்கி இறுகிக் கிடந்தன.

 

ஸ்வாமிஜி கண் மூடினார். எந்த இடத்தை நோக்கி தன் தகப்பன் நகர்ந்தாரோ, அங்கே இன்னும் இறுக்கமாக வைப்பதற்குத் தன் மனோபலத்தை செலுத்தினார். கிழவர் அந்த இடத்தைச் சுற்றிக் கொண்டார். இன்னும் ஆழ்ந்து சுற்றிக்கொண்டார். இன்னும் தீவிரமாக செயல்பட்டார். அந்த மையமான இடத்தில் அழுந்த உட்கார்ந்து கொள்ள, அவருடைய சுவாசம் மெல்லியதாயிற்று. ஒரு காற்று வெளியேறிற்று. அந்தக் காற்று வெளியேறியதும் அடிவயிற்றிலிருந்த காற்று நகர்ந்தது. பிறகு குடலுக்குள் இருந்த காற்றும் வெளியேறியது. காற்று நகர்ந்ததால் இதயத்தின் துடிப்பு நிதானமாயிற்று. நுரையீரல்கள் மிகச் சிறிய அளவே அசைய ஆரம்பித்தன. இதயத் துடிப்பின் சப்தத்தில் இடைவெளி அதிகமாயிற்று.

 

ஸ்வாமிஜி இன்னும் ஆழ்ந்து அவர் உடம்பின் மையத்தை உற்றுக் கவனிக்க, தகப்பனின் கவனமும் அங்கேயே இருந்தது. நுரையீரல் அசைவு நிற்கப்போவதை உணர்த்தியது. வலி கொடுத்தது. இதயம் தடுமாறியது. அழுத்தம் கொடுத்தது. நுரையீரல் அசைவின் தடுமாற்றம், விலாப்பக்கம் வலி கொடுத்தது. இதயத்தின் தடுமாற்றம், நெஞ்சில் பாறாங்கல் வைத்ததுபோல் ஒரு வேதனையைக் கொடுத்தது. ரத்த ஓட்டக் குறைவினால் நெற்றிப்பொட்டு மிக மோசமாக வலித்தது. கண்கள் உள்ளுக்குள் இழுக்கப்பட்டன. நாக்கினுடைய அடிப்பகுதியில் ஒரு திருகல் வலி ஏற்பட்டது. மேலண்ணத்தில் வலி பரவியது. கீழ் தாடை முறுக்கி இழுத்தது.

 

ஸ்வாமிஜி தன் இடது கையை இன்னும் அழுத்தி கிழவரின் நெஞ்சு மீது வைத்துக் கொண்டார். தலையில் வைத்திருந்த கையில் ஒரு அழுத்தம் கொடுத்தார். இப்போது புத்தியில் அதிகம் அதிர்வுகள் ஏற்பட்டு, அது எல்லா இடங்களுக்கும் பரவியது. உடம்பு வலி மரத்துப் போனதுபோல் மாறி, மனம் உடம்பை விட்டு நகர்ந்தது. உடம்பில் வலி அதிகரித்தாலும் அதுபற்றி அவருக்குப் புரியவில்லை. அதில் லட்சியமில்லை. அவர் மனதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தார். அவருடைய மனம் உடம்பு வலியில் இல்லாது எங்கு உயிர் இருக்கிறதோ அந்த இடத்திலேயே ஆழ்ந்து நின்றது.

 

ஸ்வாமிஜி தன் தகப்பனை உற்றுப் பார்த்தார்.

 

''இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். அந்த முடிச்சை அவிழ்த்து விடுங்கள்'' என்று உற்று நோக்கினார்.

 

அந்த மனம் உயிர் கூட்டை இறுக்கிக் கொண்டது. பல்வேறு தளைகள் விடுபட்டன. பல்வேறு கயிறுகள் அறுந்தன. உடம்போடு ஏற்பட்ட பந்தத்தை அந்த மனம் உதறிக் கொண்டது. ஹ்ஹ.. என்ற ஒரு அலட்சியத்தோடு அது உள்ளுக்குள் நகரத் துவங்கியது. உடம்பின் வலிகள் அதிகரித்தன. உடம்பின் உள்ளே அழுத்தம் ஏற்படுவதை உணர்ந்து அப்படிச் செய்ய வேண்டாம் என்பதுபோல் மறுதலித்தது. இறந்துபோக முடியாது என்று உடல் பிடிவாதம் பிடித்தது. தசைகளெல்லாம் முறுக்கி விரைத்து அசைய ஆரம்பித்தன. ரத்த ஓட்டம் குறைந்து வலி அதிகரித்தது. மனம் அதை வேடிக்கை பார்த்தது.

 

ஸ்வாமிஜி தன் இடதுகையை இன்னும் அழுத்தமாக வைத்தார். வலது கையால் வேகமாகத் தலையைத் தடவினார். கூர்ந்து தன் தகப்பனைப் பார்த்தார். தகப்பனுடைய கண்கள் மெல்லத் திறந்தன. அழகான புன்னகை வந்தது.

 

''பார்த்துவிட்டேன்'' என்று ஒற்றை வார்த்தையில் பேசினார்.

 

ஸ்வாமிஜி, 'நீங்கள் பார்த்தது எனக்குத் தெரியும்' என்பதுபோல் தலையசைத்தார்.

 

'போய் வருகிறேன்' என்பது போல் கிழவர் பார்த்தார்.

 

ஸ்வாமிஜி, 'நல்லது' என்பதுபோல் அவருக்கு விடை கொடுத்தார். கிழவர் சிரித்தார். ஸ்வாமிஜியும் சிரித்தார். கிழவர் கண்கள் மூடிக்கொண்டார். ஸ்வாமிஜியும் கண்கள் மூடிக்கொண்டார்.

 

கிழவர் கண் திறந்தார். கண் மூடியிருக்கும் ஸ்வாமிஜியைப் பார்த்தார். அவருக்குள் மிகப்பெரிய அன்பு அலை பொங்கியது. ஸ்வாமிஜியின் மீது படர்ந்தது. அவரை அவர் மனம் தழுவிக் கொண்டது. தழுவிக் கொண்ட நேரத்திலேயே உயிர் அசைந்து ஒரு வெளிச்சம் ஒரு வெள்ளைத் துணியைத் தாண்டி எப்படிப் பீறிட்டுப் போகுமோ, எவ்வளவு எளிதாகப் போகுமோ அவ்வளவு எளிதாக அவருடைய கண்களிலிருந்து வெளியேறிற்று. அவர் கண்கள் நிலைகுத்தி நின்றன. இருதயம் கடைசி அசைவை நிறுத்திக் கொண்டது. நுரையீரல் மட்டும் முயற்சி செய்து கொண்டிருந்தது. குடலில் வாயு என்ன செய்வது என்று தெரியாமல் முன்னும் பின்னும் அலைந்தது. நெஞ்சுக்கு அடியில் தேங்கியிருந்த வாயு சின்ன சப்தத்துடன் வாயிலிருந்து வெளியேறியது. வாய் சற்று திறந்திருந்தது.

 

ஸ்வாமிஜி அவர் வெளியேறிவிட்டதை உணர்ந்தார். மெல்ல கண் திறந்து பார்த்தார்.

 

நிலைகுத்திய கண்கள் கண்டு மெல்ல வேதனைப்பட்டார். கண்களை மூடினார். முகவாயை அழுத்தி வாயை மூடினார். முகவாயையும், தலையையும் அழுத்தி இறுக்கினார். நெஞ்சு தடவிவிட்டார். இறங்கினார். தொலைதூரம்போய் தன் தகப்பனைப் பார்த்தார். கைகூப்பினார். ''போய் வாருங்கள்'' என்றார். மெல்ல நடந்து தன் உதவியாளருக்கு அருகேபோய் நின்றார். உதவியாளர் அழத்துவங்கினாள். ஸ்வாமிஜி அவளைப் பார்த்தார். திரும்பி, இறந்துபோன தகப்பனைப் பார்த்தார். வணங்கினார். மெல்ல கதவு திறந்தார். வெளியே வந்தார்.

 

ஸ்வாமிஜியைப் பின்தொடர்ந்து பெண் உதவியாளர் அழுதபடி வர, அடுத்த அறையிலிருந்த பலர் பதறி எழுந்தார்கள். மெல்ல அவரைச் சூழ்ந்து கொண்டர்கள்.

 

ஸ்வாமிஜி தன் உதவியாளரைப் பார்த்து, ''சொல்'' என்று சொன்னார்.

 

''ஸ்வாமிஜியின் அப்பா ஸித்தியாயிட்டார். நாலு மணி இருபத்தஞ்சு நிமிஷம்.''

 

யாரோ அதைக் குறித்துக் கொண்டார்கள். ஸ்வாமிஜி வெளியே வந்தார். அவருடைய நிர்வாக அதிகாரி அருகே ஓடி வர, ''இன்று, நாளை, நாளை மறுநாள் எந்த வேலையும் இல்லை. இந்த ஒரு வேலைதான்.''

 

''தகனத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமா?''

 

''இல்லை.''

 

இல்லை என்கிற சொல் அங்கிருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏன்?

 

-தொடரும்

சொர்க்கம் நடுவிலே

அத்தியாயம் 16

பாலகுமாரன்

கேசவன் நாராயணன் கதை ஜெய விஜயீ பவ. நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாயிற்று. ஒருவர் இறந்த பின்பு போகவேண்டிய உன்னதமான ஒளியிடத்திற்குப் போகாமல், பூமியில் வாழ்ந்த இடங்களைத் தடவித் தடவி அலையாமல், இவை இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு வெளியில் இருந்தபடி நான் பூமியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகளுக்குப் பூமியில் பதில் தேடாது, இந்த இடத்திலிருந்து பூமியினுடைய தன்மை, உடம்பெடுப்பதின் சூட்சுமம், உள்ளே இருப்பதைப் பற்றிய இருப்பு அறியாத மயக்கம், கீழே மறுபடியும் திரும்பி வராத ஒரு வெளிச்ச இடத்திற்குப் போக வேண்டியதன் அவசியம் போன்றவற்றை இங்கிருந்தபடி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். பூமியிலிருப்பதை விட இங்கு இதை விசாரிப்பது எளிதாக இருக்கிறது. பூமியில் உடம்பாக இருப்பதால் அங்கே செயல்கள் மிக முக்கியமாக இருக்கின்றன. இடையறாது எதிலாவது ஈடுபட்டிருக்க வேண்டியிருக்கிறது. தன்னை முற்றிலும் சுருக்கிக் கொண்டு அடர்ந்த தனிமையில் தனக்குள்ளே தன்னை கவனித்தபடி கிடப்பது இங்கே எளிதாக இருக்கிறது. தவம் செய்ய முனிவர்கள் வனாந்திரங்களுக்கும், மலையிலுள்ள குகைகளுக்கும் போவார்களாம். இதுவும் ஒரு வனம்தான். ஆனால், மரமே இல்லாத வனம். இது ஒரு குகை. மலையே இல்லாத குகை. அமைதி ததும்பி நிற்கும்போது மனம் உள்ளுக்குள் அடங்கும் என்கிற விதிமுறைக்கேற்ப இங்கு சுற்றிலும் அமைதி ததும்பி இருக்கிறது. ஆனால், இந்த இடத்திலும் ஆட்டம் போடுகிறவர்கள் உண்டு. அதிகம் அலைகிறவர்கள் உண்டு. அமைதியானவர்களை இந்த ஆட்டம் ஒன்றும் கெடுக்காது. இந்த இடத்தின் அமைப்பு அப்படி. இங்கே மனதை மூடிக் கொள்ள முடியும். பூமியினுடைய தன்மை, மனம் வெளியே அலைவது. இந்த இடத்தின் தன்மை, மனம் உள்ளே இருப்பது. இதற்கும் மேலே ஒரு இடம் இருக்கிறது. அங்கு மனமே காணாமல் போகும். அதுதான் உண்மையான சொர்க்கம். இது நடுவிலே இருக்கிற சொர்க்கம். பூமியை சொர்க்கமாக்கிக் கொள்வது மனிதர்களுடைய கையில் இருக்கிறது. மனிதனுடைய வேலை அது. நான் பூமியிலிருந்தபோது மனதையும் கவனித்து வெளி வேலைகளிலும் ஆர்வம் காட்டி வந்தேன். அதனாலோ என்னவோ இங்கு வந்தும் நான் வேலைகளை உற்பத்தி செய்து கொள்கிறேன். வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறேன். என்னால் வெறுமே இருக்க முடியவில்லை. அதே நேரம் என் மனம் போடுகின்ற கூச்சலையும், எதிரே இருப்பவரது மனம் போடும் கூச்சலையும் அருகே இருக்கின்ற ஞானியின் அமைதியையும் என்னால் உணர முடிகிறது.அதாவது, பூமியிலிருக்கும்பொழுது நான் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டு முழுவதுமாய் ஈடுபட்டுக் கொண்டு என் மனதையும் ஆழ்ந்து பார்த்து வந்தேன். மனதை கவனிக்காமல் வேலைகளில் ஈடுபட்டதில்லை. எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் மனதை கவனிக்கவில்லை. நடுவிலிருந்தேன். இடைப்பட்ட இடத்திலிருந்தேன். இறந்த பிறகும் எனக்கு இடைப்பட்ட இடம்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இது ஒரு சொர்க்கம். இது ஒரு தபஸ். கிழே எதிரிகள் இருந்தார்கள். நண்பர்கள் இருந்தார்கள். பிடித்தவர்கள் இருந்தார்கள். பிடிக்காதவர்கள் இருந்தார்கள். உயர்ந்தவர்கள் இருந்தார்கள். தாழ்ந்தவர்கள் இருந்தார்கள். இங்கே அப்படி எதுவுமில்லை. எல்லோர் மீதும் ஒரு இதமான நட்பு பரவியிருக்கிறது. உடமைகள் என்று எதுவுமில்லாததால் சண்டைகள் என்று எதுவுமில்லை. இறந்துபோய் மேலே வந்துவிட்டாயா? வா. வந்து ஏதேனும் ஒரு மூலையில் கிட. நீ ஒரு மூலையில், நான் ஒரு மூலையில். வெறுமே கிடக்க வேண்டியதுதான். வேறு ஏதோ ஒரு சக்தி தீர்மானம் செய்து நம்மை மேலோ, கீழோ அனுப்பும்வரை அமைதியாகக் காத்திருக்க வேண்டியதுதான். அமைதி என்ற வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு இந்த நடுவாந்திர இடம் மிகச் சரியான இடம். பூமியில் அமைதியைப் பற்றிய தேடல் உள்ளவர்கள் இங்கே வந்து அமைதியை அனுபவிக்க உட்கார்ந்துவிடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், பூமியிலேயே அமைதியை முழுவதுமாய் அனுபவித்த ஞானிகூட என் அருகே உட்கார்ந்து அமைதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவர் மிகப் பெரிய ஞானி என்பதில் நெல்முனை அளவும் சந்தேகமில்லை. ‘உன்னைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்’ என்று அவர் மறுபடி மறுபடிக் கேட்பது என்னைப் பற்றி அறிவதற்கு அல்ல. என்னை அமைதிப்படுத்துவதற்கு. என் வாயால் என் வாழ்க்கையை நான் விளக்கிச் சொல்லும்போது எனக்குள் ஏற்படும் மாற்றங்களை கவனித்து இன்னும் பதப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் என் வாயைக் கிளறுகிறார். நான் கொஞ்சம் பிடிவாதக்காரன். பூமியிலும் என் மனதை நான் வெளிப்படுத்தியதில்லை. தந்திரமே அந்தணர்களின் பெரும் செல்வமாக இருந்த காலத்தில், தந்திரத்தோடு போர்ப் பயிற்சியும் என்னிடம் இருந்தது. தந்திரமான வாழ்க்கையின் முக்கியமான பகுதி அதிகம் பேசாதிருப்பது. அப்படி பேச முயன்றால் மிகவும் திட்டமிட்டுப் பேசுவது. சுதந்திரமாக மனம் இருந்ததே இல்லை. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது விளையாட்டாய் எதுவும் பேசியதில்லை. வேடிக்கை விநோதங்களில் மனம் லயித்ததில்லை. அதைச் செய்வதுமில்லை. யாராவது மனமுருகப் பாடினால், நான் எழுந்து நகர்ந்து வந்துவிடுவேன். எதையும் கைகொட்டிச் சிரித்து கோமாளித்தனங்கள் பண்ணும் இடத்தில் என்னால் இருக்க முடியும். வேதம் சொல்லுகிற இடத்தில் இருக்க விருப்பம். ஆனால், கலந்துகொள்ள விருப்பமில்லை. கோயில்கள், பூஜைகள், ஹோமங்கள் என்று எது நடந்தாலும் கூட்டத்தை வகைப்படுத்த உதவி செய்வேனே தவிர, பளுவான விஷயங்களுக்குத் தோள் கொடுப்பேனே தவிர, அந்த தெய்வம் என்னைக் காப்பாற்றும் என்று நம்பியதேயில்லை. அதே நேரம் தெய்வங்கள் இல்லை என்ற வாதங்களையும் நான் புறக்கணித்துவிடுவேன். ஏனெனில், தெய்வம் இருக்கிறது என்று எப்படி தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட முடியவில்லையோ, அதேபோல இல்லை என்பதும் நிரூபிக்கப்படாத விஷயமாகத்தான் இருக்கிறது. என்னுடைய இளம் வயதிலேயே இது புரிந்துபோயிற்று. இது குறித்த பேச்சும், சண்டையும் வீண் என்று என் தந்தையார் எனக்குப் பலமுறை சொல்லியிருக்கிறார். மனிதனால் அறியப்பட முடியாத ரகசியமாக இந்த விஷயம் இருக்கிறது. முயன்று முயன்று அறிய முடிந்தாலும் பரிமாறிக் கொள்ள முடியாத தன்மையோடுதான் அது இருக்கிறது. சனாதன தர்மத்தின் வேதம் கடவுள் என்பது சொல்லுக்கடங்காத விஷயம். எல்லையில்லாதது. பெரும் பொருள். ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியாத விஷயம். அதுவாக புரிந்து கொள்ள முடியுமே தவிர, வரட்டுப் பேச்சால் விளக்க முற்படுவதில் எந்தப் பயனுமில்லை. எனவே பேசாதிருத்தல் நன்று. அதேபோல எங்கள் வீட்டு ஆண்கள் யாரும் கடவுள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுகுறித்து வேகமாக முனைவதுமில்லை. முரண்படுவதுமில்லை. என்னுடைய தாய்க்கும், தாயினுடைய வீட்டைச் சார்ந்தவருக்கும் இப்படித்தான் எண்ணமிருந்தது. செவ்வகமாக செதுக்கப்பட்ட ஒரு உறுதியான மரத்தைக் கொண்டு வந்து, ‘இதுவே சிவன். இதுவே சிவலிங்கம்’ என்று என் தாய் ஒரு நாள் சொன்னாள். அதற்கு முழுவதும் மஞ்சள் தடவி அதன் எதிரே திருநீறு வைத்திருப்பாள். அந்த அறை சுண்ணம் பூசப்பட்டு மேலே உள்ள ஒட்டுக் கூரைகளில் நீர் வராதவாறு பிளவு செய்யப்பட்டு இருக்கும். சூடான அறைக்காற்று வெளியே போவதால் அந்த இடம் குளுமையாக இருக்கும். வெளிச்சமாகவும் இருக்கும். குளித்து சமைத்த உணவை, அம்மா அந்த மரக்கட்டைக்கு எதிரே வைத்துவிட்டு எங்களுக்குப் பரிமாறுவார். இதுதான் பூஜை. ஆனால், எங்கள் வீட்டிலிருக்கின்ற இருபுற திண்ணைகளும் அந்தணர்களால் நிரம்பி வழியும். புராணக் கதைகள், கிரஹங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், தத்துவ விசாரணைகள், பிறப்பு, இறப்பு பற்றிய கேள்வி பதில்கள், மனிதனின் ஒழுக்கங்கள், வீட்டு வசதிகள், தேசத்தின் நலன்கள், படைகளின் பலங்கள், படைக்கலங்களின் திறமை, படைக்கலங்கள் பெருக்க வேண்டியதன் அவசியம், நவீன கண்டுபிடிப்புகள் என்று பலதும் எங்கள் வீட்டுத் திண்ணையில் அரங்கேறும். என் வீடு தெற்கு பார்த்த வீடு. வடக்கிலிருந்து வாடைக் காற்று வரக்கூடாது என்பதற்காக எட்டுக்கட்டுத் தாண்டி கொல்லைப்புரமும், கொல்லைப்புரத்திற்குப் பின்னே மிக உயர்ந்த மதில்சுவரும் கட்டியிருப்பர். கருங்கல்லால் ஆன அந்த மதில்சுவரைத் தாண்டி வாடைக்காற்று வராது. அதே சமயம் குளுமைக்கும் குறைவிருக்காது. என் அப்பாவின் பக்கம் ஆயுதப் பயிற்சி உள்ளவர்கள் இல்லை. என் அம்மாவின் பக்கம் மிகத் திறமையான போர் வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் உடும்பைப் பிடித்து ஏறுவதில் வல்லவர். ஏறுவதற்காகவே உணவைக் குறைத்து உடம்பை மெல்லியதாக வைத்திருப்பார். உடும்பை வளர்க்கிறவர் வேறு. உடும்பை வீசுகிறவர் வேறு. உடும்பைப் பிடித்து ஏறுகிறவர் வேறு. மூன்று விதமாக செயல்படுவர். வளர்ப்பவர் உடும்பை மிகவும் கொழுக்க வைக்க மாட்டார். மிகவும் கொழுத்த உடும்பை மேலே வீசியெறிவது கஷ்டம். உடும்பை மேலே வீசியெறிய வேண்டுமென்றால் மிகுந்த புஜ வலிமை வேண்டும். அன்று பிறந்த கன்றுக்குட்டியின் பாதி எடை ஒரு உடும்பு இருக்கும். நல்ல உயரத்தில் வீசினால்தான் உடும்பு பிடித்து ஏறுபவருக்கு உதவியாக இருக்கும். பலம் பொருந்திய நபர் வீசிவிட்டு நகர்ந்து கொள்ள இழுத்து இழுத்து ஏறுகிறவர் உடும்புப் பிடியை இறுக்கமாக்கி உச்சியில் எங்கே கைவைத்து நிற்க முடியும் என்பதைத் தடம் பார்த்து மிக விரைவாக கண் இமைக்கும் நேரத்தில் ஏறிவிடுவார். ஏறிய பிறகுதான் இருக்கிறது உண்மையான சோதனை. உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்று சொல்லவும், ஆட்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சொல்லவும், உள்ளே வரலாமா வரக்கூடாதா என்று சொல்லவும், சங்கேத மொழிகள் உள்ளன. அவை பறவை கூக்குரல் போல இருக்கும். உடும்பு பிடித்து ஏறுவதில் வல்லவரான என் தாய்மாமன், ஓடுவதிலும் வல்லவர். இரவோடு இரவாக எதிரிப் படைகளின் ஊடே போய் தக்க நேரத்தில் தான் வேறு ஆள் என்பதைக் காட்டி, அவர்கள் விரட்டிப் பிடிக்க, அவர்கள் கையில் சிக்காமல் ஓடி வருவார். நான்கு திசைக்கும் மான்போலத் துள்ளிப் பாய்ந்து ஓடுவார். எதிரிப் படையின் திசை அவரால் கலைக்கப்பட, இந்தப் பக்கம் உள்ள சோழப்படை பல்வேறு விஷயங்களை வேகமாக சாதித்துக் கொள்ளும். மெல்லியதாக இருப்பதால் மூங்கில் மீதும் வாழை மட்டைகள் மீதும் நின்றபடி ஆற்றைக் கடப்பார். அது, நீர் மேல் நடப்பதைப்போல ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு கோட்டையை முற்றுகையிடுகிறபோது இவர் முன்கூட்டியே போய் கோட்டைக்குள்ளே போகின்ற மாட்டு வண்டிகளுக்கு அடியிலே ஒட்டிப் படுத்துக் கொள்வார். பிறகு இருளில் இறங்கி, பதுங்கி இருந்து, எந்தப் பக்கம் தாக்கப் போகிறோமோ அதற்கு எதிர்ப்பக்கம் தீ மூட்டி, ஆட்களின் கவனத்தைத் திருப்பி, கோட்டைக்குள்ளே இருக்கின்ற யானைகளைக் கலவரப்படுத்தி, குதிரைகளை வால் முறுக்கி விரட்டி, கலவரங்களுக்கு நடுவே கோட்டைக் கதவை திறந்துவிடவும் செய்திருக்கிறார். இன்னொரு தாய்மாமன் வில்லாளி. இன்னொரு தாய்மாமனின் மைத்துனன் மல்யுத்தர். இன்னொரு ஒன்றுவிட்ட தாய்மாமன் அருண்மொழிபட்டன், மாதாண்டநாயக்கர் இராஜேந்திர சோழனின் தளபதி. மாமன்னன் இராஜராஜருக்கு உறுதுணையாகவும் சேனாபதியாகவும் இருந்த கிருஷ்ணன்ராமனான பிரம்மராயருக்குப் பிறந்தவர். பிரம்மராயரின் வழிகாட்டலில்தான் பல அந்தணர்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள். இன்னும் சில பேர் நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். வேதம் சொல்வதைத் தவிர எனக்கு எந்த வேலையுமில்லை என்று சுருங்கின அந்தணர்களை, பிரம்மராயர் கிருஷ்ணன்ராமன் கைகூப்பி நமஸ்கரித்து நகர்த்தி விடுவார். அது மிக முக்கியம் என்று ஆதரித்துப் பேசுவார். இந்த வேதங்கள்தான் பரத கண்டத்தின் நாகரிகம். இந்த செவிவழியான மறைதான் நம்மைக் காப்பாற்றும் என்றெல்லாம் புகழ்ந்து சொல்வார். அந்த மாதிரியான அந்தணர்கள் போன பிறகு மற்றவர்களோடு அமைதியாக அமர்ந்திருப்பார். இம்மாதிரியான வேதத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில், இந்த மாதிரியான நாகரிகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமெனில், நம்முள் சில பேர் நிர்வாகத்தைக் கைகொள்ள வேண்டும். இன்னும் சிலர் படைகளை நடத்தப் பழக வேண்டும். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத ஒரு அந்தணராக வாழ்தல் சிறப்புதான். ஆனால், வருங்காலம் எளிதாக இல்லை. அந்நியர்கள் படையெடுப்பு வடக்கேயிருந்து வெகுவேகமாக உள்ளுக்குள் வந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர தேசத்திற்கு அருகே இருக்கின்ற கோயில்களெல்லாம் யவனர்களால் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேதத்தைக் காப்பாற்றினால் வேதம் நம்மைக் காப்பாற்றும் என்பது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், எப்படி என்ற கேள்வி வருகிறது. அரசாட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நான் அந்தணர்களை ஊக்கப்படுத்தவில்லை. அரசருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றுதான் ஊக்கப்படுத்துகிறேன். அரசராக இருப்பதைவிட அமைச்சராக இருப்பதுதான் மிகக் கடினமான காரியம். நாம் அரண்மனைக்குள் இருக்கலாம். அரச வாழ்க்கைக்குள் இருக்கக் கூடாது. இப்போது போர் செய்யவோ, நிர்வாகத்திற்கோ வர மறுத்தோமென்றால் இன்னும் நூறு வருடங்களில் நம்முடைய சோழ தேசம் பாழடிக்கப்படும். சோழ தேசம் மட்டுமல்ல. பாண்டியர்கள், சேரர்கள் எல்லோருமே அந்நியர்களின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். யவனர்களின் பிடியில் சிக்கித் தவிப்பார்கள். யவனர்கள் நாடு பிடிக்க வரவில்லை. மதம் பரப்ப வருகிறார்கள். சிதறிச் சின்னாபின்னமாக இருக்கின்ற பரத கண்டம் இந்த எதிர்ப்பை, ஊடுருவலை எப்படித் தாங்குமென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் வாள் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போதுதான் எது அழியாமல் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ, அது அழியாதிருக்கும். கவலை பலருக்கும் தொற்றி, பலரும் இதுபற்றிப் பேசி, அந்தணர்கள் பல பேர் வாள் பிடிக்கக் கற்றுக் கொண்டார்கள். மதுவும், மாமிசமும்தான் மறவனின் குணம் என்று நினைப்பது தவறு. காட்டு வழியில் உண்ண உணவு எதுவுமில்லையெனில் மாமிசம்தான் உணவாக இருக்கும். உடம்பின் இரத்த ஓட்டத்திற்கு அளவான மது உபயோகமாக இருக்கும். குளுமையான புத்தி, கோபத்தில் கெட்டுப் போகாத குணம், ஆபத்துக் காலத்திலும் அமைதியாக இருக்கின்ற தன்மை போன்றவைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இனி படையெடுப்பது என்பது இலட்சோபலட்ச வீரர்களைக் கொண்டு போய் எதிரியின் தேசத்தில் குவிப்பதல்ல. எதையோ தின்று எப்படியாவது அங்கு வந்து சேர் என்று கட்டளையிட, ஒன்று நூறாகி வருகின்றவன் படை வீரன் அல்ல. படையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஆயுதப் பயிற்சி அவசியம். எல்லோருக்கும் ஒரேவிதமான உணவு என்பது முக்கியம். மன்னரோ, தளபதியோ, உபதளபதியோ, சேவகரோ, குதிரை வீரரோ, காலாட்படையோ, மாடுகள் பராமரிக்கிறவரோ யாராக இருப்பினும் ஒரே விதமான உணவு முக்கியம். ஏனெனில் எல்லோருக்கும் ஒரே விதமான உயிர்தான் இருக்கிறது. மரணம் நோக்கிப் போகையில் உயர்வு, தாழ்ச்சி பார்த்தல் அபத்தம். எந்தப் பிரிவினையுமற்று படையெடுத்துப் போகிறபோது வெற்றி நிச்சயம் நம் பக்கம் இருக்கிறது. நம்முள்ளேயே சலசலப்புகள் இருப்பின் ஜெயித்தல் மிகக் கடினம். அந்தணர் என்ற கம்பீரம் காட்டி ஒரு கோல் தொலைவில் பேசு என்று சொல்வதெல்லாம் பிற்காலத்தில் சிதறிப் போகும். வேறு யாரேனும் வந்து சிதறடிப்பதற்குப் பதிலாக நாமே நெருங்கி மற்றவரை அணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அந்தணர்கள் இதுகுறித்து வருடக்கணக்கில் பேசினார்கள். பரசுராமரை உதாரணம் காட்டி னார்கள். துரோணரைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். விருப் பம் உள்ளவர்கள் படையில் சேர்ந்து கொள்ளலாம். எந்தவிதக் கட்டாயமுமில்லை என்று சொன்னார்கள். மிகக் குறைந்த அந்தணர்களே படையெடுப்பில் கலந்து கொண்டார்கள். படையெடுப்பில் கலந்து கொண்டு மூச்சுத் திணறி, மறவர்களால் கேலி செய்யப்பட்டு ஊருக்குத் திரும்பி, ‘இது நமக்குச் சரியான வேலை அல்ல’ என்று உரக்கக் கூறினார்கள். அடிப்படைப் பயிற்சியின்றி போனது பற்றி மறந்தார்கள். எனக்கு பதினான்கு வயதானபோது காந்தளூர் சாலைக்கு அனுப்பப்பட்டேன். காந்தளூர்சாலை கடிகை மிகப்பெரிய படைக்கலன் பயிற்சி தருகின்ற இடம். சேர தேசத்து அந்தணர்கள், ஒரு குன்றின் உச்சியில் மிகச் சிறப்பாக சகல தேசத்தவருக்கும் படைக்கலப் பயிற்சி கொடுத்து வந்தார்கள். அங்கு பயிலும் வரையில் காந்தளூர்சாலை கடிகைக்குட்பட்ட மாணவனுக்கு, குருவே சகலமும். காந்தளூர்சாலையின் கேயூரம் வாங்கி, புஜத்தில் அணிந்து வெளியே வந்த பிறகு, அவனுக்கு சொந்த ஊர் எதுவோ அங்கு போகலாம். அந்தப் படையில் கலந்து கொள்ளலாம். அதுவரை காந்தளூர்சாலைக் கடிகையின் தலைவர் என்ன கட்டளையிடுகிறாரோ, அதைத்தான் உறுதியாகப் பின்பற்றி நடக்க வேண்டும். ஐந்து வருடப் படிப்பு அது. நான் ஆறு வருடம் படித்தேன். ஒரு வருடம் நாவாய்கள் பற்றித் தெரிந்து கொள்ள என்னை மேற்குப் பகுதிக்கு அனுப்பினார்கள். நான் பயிற்சியாகவும், படையெடுப்பாகவும் முந்நீராயிரம் பழந்தீவுகள் பயணப்பட்டேன். மூன்று மாதம் கடலிலேயே வாழ்ந்தேன். எனது இடது கையில் ஐந்து வருடப் படிப்பிற்கான கேயூரம் இருக்க, வலது கையில் படகு பொறித்த இன்னொரு கேயூரமும் அணிவிக்கப்பட்டது. செம்பட்டையான மிக நீண்ட முடியுடன், கூரிய மீசையுடன், உயரமாய், அகலமாய், துடுப்புப் போட்டு திரண்ட புஜமுமாய், நரம்பு புடைத்து விழிகள் சிவக்க வீட்டிற்கு வந்த என்னைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள். அம்மாவுக்கு என் முகம் மிரட்சியாக இருந்தது. அப்பாவுக்கு சந்தோஷமாக இருந்தது. உறவினர்கள் பெருமை பொங்க சுற்றி வந்து என் உடம்பைத் தொட்டுப் பார்த்தார்கள். ‘‘ரிக் வேதம் நாலாவது சாகை ஞாபகம் இருக்கா? சொல்லு பார்ப்போம்’’ நான் இன்னும் அந்தணனாக இருக்கிறேனா என்று சோதித்துப் பார்த்தார்கள். நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்கள். சேர தேசத்தில் கற்ற மருத்துவரீதியான ஸ்லோகங்களை நான் சொல்லத் துவங்கியதும் இன்னும் வியந்து போனார்கள். மேலும் பல விஷயங்கள் கேட்க ஆசைப்பட்டார்கள். நான் அனுமதிக்கவில்லை. இவர்களைப் பற்றித் தெரியும். வெறும் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் போதும். ‘ஒரு நாளைக்கு மூணு பொண்ணாம். ஒரு நாள் இருந்தவ மறுநாளைக்கு இல்லையாம்’ என்று பெரிதாகப் பொய் பேசுவார்கள். அப்பாவும், வேறு சில அந்தணர்களும் சேர தேசத்து அரசியல் பற்றியும், காட்டு வழியில் இருக்கின்ற கொள் ளைக்காரர்கள் பற்றியும் கேள்வி கேட்டார்கள். உள்நாட்டு அரசியலை விவரித்தார்கள். மன்னர் இராஜராஜர் கோயில் கட்டத் திட்டமிட்டிருப்பதையும் இராஜேந்திர சோழர் இலங்கை சென்று படையெடுத்து மீண்டதையும் பெரிதாகப் பேசினார்கள். ஒரு நாள் விடிந்து, வெயில் பரவத் துவங்கிய நேரத்தில் கருப்புத் தலைப்பாகையோடு கூடிய மெய்க்காவல் படை வந்தது. இராஜேந்திர சோழரின் மெய்க்காவல் என்று சொல்லிக் கொண்டது. முத்திரை மோதிரம் காட்டியது. தகப்பனாருக்கும், ஊர்த் தலைவருக்கும் வணக்கம் சொல்லியது. என்னை அழைத்துப் போக விரும்புவதாக விவரம் கூறிற்று. ‘‘தஞ்சை வெகு அருகில்தான். போய்விட்டு வந்துவிடுகிறேன்’’ என்று துள்ளினேன். ‘‘வேறு எங்கேனும் பயணப்படும் முன்பு, நீ இந்த ஊருக்கு வந்துவிட்டுத்தான் போகவேண்டும். எங்களைப் பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும். இது ஆணை.’’ அவர்கள் எதிரே அப்பா சற்று கோபமாக என்னைப் பார்த்துச் சீறினார். நான் சரியென்று தலையசைத்தேன். ஒரு நாள் முழுவதும் இராஜேந்திரருக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனே வருவாரென்று சொல்லப்பட்டது. பிறகு, பிற்பகல் என்று சொல்லப் பட்டது. பிறகு மாலையில் பார்ப்பார் என்று சொல்லப் பட்டது. அயரலாம் என்று கால் நீட்டி மாளிகையின் திண்ணைப் பக்கம் படுத்துக் கொண்டிருந்தபோது அதிக சத்தமில்லாமல் ஒரு புரவி எழுந்து வந்தது. சட்டென்று நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் படுத்துக் கொண்டிருந்தார்கள். புரவியிலிருந்து கீழே குதித்து எனக்கு அருகே வருவதற்குள் பத்து, பதினைந்து புரவிகள் வந்துவிட்டன. சத்தம் கேட்டு இரண்டு பேர் விழித்தார்கள். நல்ல உறக்கத்தில் இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். சட்டென்று மூன்று பேரையும் தீப்பந்தம் வரவழைத்து, எங்கள் முகத்தை மாதாண்டநாயக்கர் இராஜேந்திர சோழர் ஆராய்ந்தார். ‘‘நாளைக் காலை இவர்களை அரண்மனைக்கு அழைத்து வா’’ என்று சொல்லிவிட்டு குதிரையிலேறி அமர்ந்தார். படுத்திருந்தவர்களைக் கேலியாகப் பார்த்தார். வந்த வழியே புரவி திரும்பி ஓடிற்று. ( தொடரும் )

அத்தியாயம் 21

பாலகுமாரன்

ஜெய விஜயீபவ

நான் கேசவன் நாராயணன்.

சோழ தேசத்தின் உபதளபதி. என் திருமணம் என் வீட்டைவிட தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வெறுமே அணைத்துக் கிடந்தபோது நடுநிசியில் உடம்பு உசுப்பேறி அன்று இரவு மிக மூர்க்கமான காமத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஈடுபட்டோம். அது உயிர் தரிப்பு வேளை. அதை நப்பின்னை உணர்ந்தாள்.

‘‘ஏதோ நடந்துவிட்டது’’ என்று முனகினாள். எனக்கும் அப்படியொரு எண்ணம் ஏற்பட்டது.

பனிக்காலத்தில் படைவீரர்களுக்குக் கடுமையானப் பயிற்சிகள் தடைப்பட்டன. நப்பின்னை சூலுற்றது தெரிந்தது. வீட்டிற்குப் போக மறுத்துவிட்டாள். உதவிக்கு அவள் தாயும், தோழியும் வந்திருந்தார்கள். பதி னைந்து நாட்கள் தங்கியிருந்தார்கள்.

‘‘நீ ஊருக்குப் போ யேன். நான் இருந்து உன் புருஷனைப் பார்த்துக் கொள்கிறேன். வேகமாக தோழி சொல்ல, ‘‘நான் ஊருக்கும் போக மாட் டேன். உன்னையும் தங்க விட மாட்டேன். கிளம்புங்கள் இரண்டு பேரும்’’, நப்பின்னை விரட்டி விட்டாள்.

சுற்றியிருந்த படைவீரர் களின் வீட்டுப் பெண்கள் உதவி செய்ய நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அவள் கரு வளர்ந்தது.

சூலுற்ற மனைவி யோடு வாழ்வது ஒரு சுகம். இனிய கலை. எல்லாப் பெண்களையும் மரியாதையாகப் பார்க் கின்ற ஓர் தன்மை எனக்குள் அதிகரித்தது.

படை வீரர் பெண் மணிகள் என்னைக் கொண்டாடினார்கள். அதனால் படைவீரர்கள் கொண்டாடினார்கள். பிள்ளைப்பேறுக்கு முன்கூட்டியே மருத்துவச்சிகளிடம் சொல்லியிருக்க வீடு எல்லா நேரமும் பர பரப்பாக இருந்தது. என்னை விட படைவீரர்கள் அதிகம் தவிப்பாக இருந்தார்கள்.

இராஜேந்திர சோழர் சொன்ன உத்தரவுகளை ஓலைநாயகம் எழுத அதை நான் சரிபார்த்து கையெழுத்திடும் போது செய்தி வந்தது. ஆண் குழந்தை. சுகப் பிரசவம். உத்திரட்டாதி நட்சத்திரம்.

உள்ளே கனத்த நிம்மதி பரவியது. குலதெய்வத்தை, மூத்தோர்களைத் தொழுதேன். இராஜேந்திரர் இன்னொரு உத்தரவுக்காக சட்டென்று நுழைய, செய்தி கேட்டார். அணைத்துக் கொண்டார்.

பதினோரு பொற்காசுகளைப் பெட்டியில் இட்டு, ‘‘குழந்தைக்கு நகை செய்து போடு’’ என்று கொடுத்தார்.

முதல் பரிசே குழந்தைக்கு அரசருடைய பரிசு என்று எல்லோரும் வியந்தார்கள்.

ஒரு மாதம் கழித்து நப்பின்னை குழந்தையோடு தாய் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

நான் மகனைத் தழுவி முத்தமிட்டேன்.

குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும் வரை கிராமத்திலிருப்பதாகவும், குழந்தைக்குப் போஷாக்கான உணவளித்து தானும் தன் உடம்பைத் தேற்றிக் கொண்டு நிதானமாக வருவதாகவும் கூறினாள். குழந்தையோடு அவள் பயணம் செய்து வருவது கடினம் என்பதால் என்னை வரச் சொன்னாள். குத்துமதிப்பாக இரண்டு மாதத்திற்கொரு முறை வருவேன் என்று நான் உறுதி அளித்தேன்.

தழுவிக் கொண்டு உதடுகளில் முத்தமிட்டாள்.

‘‘உயிரையே பிரிவது போலிருக்கிறது’’ இன்னும் இறுக்கிக் கொண்டாள். இரண்டு பேரும் தழுவிக் கொண்டே தொட்டிலிலுள்ள குழந்தையை உற்றுப் பார்த்தோம். குழந்தை சிரித்தது. கிளம்பும் நேரத்தில் விடைபெற நப்பின்னையின் தாய் வந்தாள்.

‘‘ஒரு வருடத்திற்கும் மேல் ருசியாக வீட்டு சமையல் சாப்பிட்டுவிட்டு இப்போது வேறு எங்கெங்கோ சாப்பிட வேண்டுமென்றால் சிரமமாக இருக்கும். அதனால் மிகவும் யோசித்து அவளுடைய தோழியை இங்கே விட்டுவிட்டுப் போவதாகவும், அவளும் வைத்தியம் கற்றுக் கொள்ள மிகப் பெரிய ஆவலோடு இருப்பதாகவும் சொன்னாள். நான் வியப்போடு அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். பேசித் தயார்செய்து அந்த தோழியைக் கூட்டி வந்திருப்பாளோ என்ற எண்ணம் ஏற்பட்டது. நப்பின்னை எந்தவித முகபாவமும் மாற்றாமல் அமைதியாக இருந்தாள்.

‘‘நான் ஒரு போர் வீரன். உபதளபதி. எல்லா இடத்திலும் சமைத்த உணவுதான் சாப்பிட வேண்டும் என்ற கொள்கை வைத்துக் கொண்டால் என்னால் வாழவே முடியாது. எந்தவித உணவுக்கும் எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். உணவு ருசியிலும், வாழ்வு ருசியிலும் நான் அகப்படவே இல்லை. அவள் வைத்தியம் கற்றுக் கொள்ள காந்தளூர் சாலை போவது நல்லது. செய்வன திருந்தச் செய். சாலையில் அடிப்படை விஷயத்திலிருந்து சொல்லித் தருவார்கள். காந்தளூர் வரை போக முடியாவிட்டால் நாகையிலுள்ள கடிகையில் வைத்தியம் கற்றுக் கொள்ளலாம். நான் ஓலை தருகிறேன்’’ என்று சொன்னேன்.

அந்தப் பெண் உற்சாகமாகத் தலை யாட்டியது. அவளுக்கு எப்பாடுபட்டேனும் வைத்தியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்த தலையசைப்பில் தெரிந்தது. நப்பின்னையின் தாய் சோர்வுற்றாள். நப்பின்னை என் அருகே வந்து கைகோர்த்துக் கொண்டாள்.

‘‘உம்முடைய கட்டுடலில், கள்ளமற்ற பேச்சில் எனக்கு காதல் இருந்தது. இப்போது வெறும் காதல் மட்டுமில்லை. உம்மீது மிகப்பெரிய மதிப்பு வந்துவிட்டது. எந்த அளவு என்னை நேசிக்கிறீர் என்பதை இந்த செய்கை மூலம் தெரிந்து கொண்டேன். என் சொந்தமே உமக்கு தவறான வழிகாட்டினாலும் திடமாக நின்று என்னை நேசிக்கிறீர். உம்மை பதிலுக்கு அவ்விதமாகவே நேசிப்பேன்’’ என்று சொல்லி நமஸ்கரித்துவிட்டுப் போனாள்.

தெளிவான பிரிவு என்பதால் ஒரு நாள்தான் சிரமமாக இருந்தது. ஒரு இரவுதான் தூக்கமில்லாமல் இருந்தது. பிறகு வேலைகளில் மூழ்குகின்ற வேகம் வந்துவிட்டது. அங்கே மூன்று நாட்களுக்கு ஒருமுறை கோட்டை காவலர்களுக்கு நடுவேயும், யானைக் கொட்டடியிலும், குதிரைத் தொழுவத்திலும், பாடிக்காவல் இடத்திலும், மூன்று நாட்கள் நகர்வலமாகவும், என்னுடைய முறையை மாற்றிக் கொண்டேன்.

உபதளபதி கேசவன் நாராயணன் எங்கும் இருப்பார்; எப்போதும் இருப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டதால் காவல் மிகச் சுத்தமாக இருந்தது. இரவு ரகசியப் பயணம் மேற்கொண்ட அருண்மொழிப்பட்டரை வேல்முனையில் நிறுத்திவிட்டார்கள். அனுமதி இல்லாமல் அரண்மனைக்குள் வர முடியாது என்று கிருஷ்ணன் ராமனை தடுத்துவிட்டார்கள்.

கிருஷ்ணன் ராமன் தன் முகத்தைக் காட்டி யாருடைய அனுமதி என்றார். காவல் கூட்டம் ஒரு கணம் திகைத்தது. பிறகு உபதளபதி கேசவன் நாராயணன் அனுமதியில்லாமல் இராஜேந்திர சோழரே இந்த இடம் தாண்ட முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது.

‘‘இப்போது நான் கேசவன் நாராயணனுக்கு எங்கே போக’’ என்று கேட்க, அவரை பல்லக்கிலிருந்து இறக்கி ஆசனத்தில் உட்கார வைத்துவிட்டு எனக்கு ஆள் அனுப்பினார்கள். கால் நாழிகை ஆசனத்தில் உட்கார்ந்தபடியே தூங்கினார். போய் காலில் விழுந்து நமஸ்கரித்தேன். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை.

‘‘மாதாண்டநாயகர் இராஜேந்திர சோழனையே நிறுத்த முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இது கொஞ்சம் அதிகமாக இல்லை’’ அவர் கோபமாகக் கேட்டார்.

இரவு நேர காவலில் கெடுபிடிகள் அதிகரித்ததை சொன்னேன். அவர் சமாதானமானார். ஒருமுறை பின்னிரவில் பயணப்பட்ட குந்தவை நாச்சியாரை அனுமதித்துவிட்டார்கள். ஆனால் தந்திரமாக ஒரு காரியம் செய்துவிட்டார்கள். பல்லக்கில் பின்பக்கம் இருந்த இரண்டு பேரை நீக்கி ஒற்றர்கள் சேர்ந்துகொண்டார்கள். முன்பக்கம் குந்தவையின் ஆட்கள். பின்பக்கம் கோட்டை ஒற்றர்கள் என்று பயணம் போயிற்று. அவர் இராஜராஜரை ரகசியமாக சந்திக்கப் போனது விடியல் நேரத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. நான் அருண்மொழி பட்டருக்கு சேதி அனுப்பிவிட்டேன். பல்லக்கு சுமந்த என் ஆட்கள் திரும்பிவிட்டார்கள். நான் பின்பக்க பல்லக்கு ஆட்களை விடுதலை செய்து அனுப்பினேன்.

அவர்கள் போய் சேர, குந்தவைக்கு விவரங்கள் தெரிய, மாமன்னர் இராஜராஜர் அதிகம் கோபப்பட்டார் என்ற செய்தி வந்தது.

‘‘யாரவன் கேசவன் நாராயணன்’’ என்று வாள் உருவி எழுந்ததாகச் செய்தி வந்தது. குந்தவைபிராட்டி இருந்த தைரியத்தில் நான் போய் நின்றேன். மன்னிப்புக் கேட்டேன்.

‘‘அக்கன். கவனித்தீரா. என்னைச் சுற்றியுள்ள ஆட்கள் என்னைப் போலவே அமைதியானவர்கள். இராஜேந்திர சோழனை சுற்றி யுள்ள ஆட்கள் இராஜேந்திர சோழனைப் போலவே ஆரவாரமாக இருக்கிறார்கள்’’ என்று சப்தமிட்டார்.

‘‘என்ன பதில்’’ அக்கன் வினவினார். ‘‘வேறு வழியில்லை. வாழ்க்கை அப்படியாகிவிட்டது. மாமன்னர் இராஜராஜரால், அவர் படையெடுப்பால் நாலாபுறமும், எதிரிகள் கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். இராஜேந்திர சோழரை கவன மாகப் பார்க்க வேண்டிய கட்டாயம், சோழ தேசத்தின் எல்லைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வெற்றி அதிகமாக எதிரிகள் அதிகமாவார்கள். எதிரிகள் அதிகமாக போர் அதிகமாகும். போர் அதிகமானால் வெற்றி நமக்கே ஏற்படும். வெற்றி அதிகமாக எதிரிகள்...’’ நான் பேச, இராஜராஜர் கையை உயர்த்தி ‘‘அமைதி’’ என்றார்.

அருகில் வந்து நெஞ்சில் குத்தினார். ‘‘இது உண்மை. சகிக்க முடியாத உண்மை. இந்த இளைஞனுக்குப் பகல் உணவு தந்து அனுப்பு அக்கன்’’ என்று சொல்லிவிட்டு கோவிலை நோக்கிப் போய்விட்டார்.

வருத்தமாகிவிட்டாரோ என்ற வேதனை எனக்குள் ஏற்பட்டது. குந்தவை பிராட்டியார் சிறிய பணமுடிப்பை என் கையில் திணித்தார். ‘‘நீ பேசியது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். இராஜேந்திர சோழனை கவனமாகப் பார்த்துக் கொள்’’ என்று புன்னகை செய்தார். அவரும் அரசரைப் பின்தொடர்ந்தார்.

நூறு பொற்காசுகள் நிரம்பிய துணிப் பையோடு நான் மாதாண்ட நாயகர் இராஜேந்திர சோழர் இருக்குமிடத்திற்கு வந்தேன். அங்குள்ள அருண்மொழிபட்டரிடம் அந்தப் பொற்கிழியை சமர்ப்பித்தேன்.

‘‘பேசியது அத்தனையும் இங்கு வந்துவிட்டது. இராஜேந்திர சோழருக்குப் பரமானந்தம். உன்னை அரண்மனைக்குள்ளேயே தங்க வைக்கவேண்டும் என்கிறாள். கோட்டைக் கதவு திறந்ததும் யானை முற்றம் இருக்கும். யானை முற்றம் தாண்டியதும் மிகப்பெரிய வெளி இருக்கும். அந்த வெளியின் ஈசான்ய மூலையில் கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் குடியிருப்பு இருக்கிறது. அதை உனக்குத் தரச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘அப்போது ஐயனுக்கு இடம்?’’ நான் திகைப்பாகக் கேட்டேன்.

‘‘ஐயன் ஓய்வு பெறுகிறார். பெருவுடையார் கோயிலுக்கு அருகே உள்ள குடியிருப்புக்கு நகருகிறார். ஆனால் இதுவும் உனக்குத் தற்காலிகம்தான்.’’

‘‘ஏன்?’’

‘‘நாம் இன்னும் வடக்கே நகருகிறோம்’’

‘‘புதிய கோட்டை கட்டுகிறோமா?’’

‘‘ஆமாம்’’

‘‘அடுத்த மாதம் வேலை துவங்கும். உனக்கும் அழைப்பு வரும். கோவில் கட்டுவதை விடவும் மிகக் கவனமான, மிகக் கடினமான வேலை கோட்டை எழுப்புவது. கோட்டைக்குள்ளே நகரம் ஸ்தாபிப்பது.’’

அயராது நான் எங்கேனும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஆயி னும் இரண்டு மாதத்திற்கொரு முறை நப்பின்னையை போய் சந்தித்துவிட்டு வந்தேன். குழந்தையை கொஞ்சிவிட்டு வந்தேன். சோழமண்டலத்தில் நான் மட்டுமே கெட்டிக்காரன் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அது பலமுறை தகர்ந்தது.

மிகுந்த சாமர்த்தியசாலிகளாய் சிற்பி களும் தச்சர்களும், ஒற்றர்களும், மந்திரிகளும், வியா பாரிகளும், படைத்தளபதிகளும் என்னைத் திகைக்க வைத்தார்கள்.

மாமன்னர் இராஜராஜரின் தமக்கையார் குந்தவை நாச்சியார் ஒரு குத்துவிளக்கு. இராஜராஜர் மாதேவியார் வானதியார் கோவில் விளக்கு. மன்னரின் பஞ்சவன் மாதேவியார் அகல்விளக்கு. அதே நேரம் மாதண்டநாயகர் இராஜேந்திர சோழருடைய அணுக்கியார் பரவை நாச்சியார் சுடர்மிகு தீப்பந்தம். ஓடுகிற குதிரையிலிருந்தபடி ஈட்டி எறிவதையும், கத்தி வீசுவதையும், அம்பு தொடுத்து குறி பார்த்து அடிப்பதையும் வியந்து வியந்து பார்ப்பேன். ஓவியம் வரைவதையும் ஜுரத்திற்கு மருந்து கலப்பதையும், உணவிற்கு காய்கள் நறுக்குவதையும் கண்டு வியந்தேன்.

எனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று ஒரு பெண்மணி நெஞ்சு நிமிர்த்தி பேச முடியுமா. அவ ரால் முடியும். நான் அவரைப்பற்றி வியந்து வியந்து நப்பின்னையிடம் பேசினேன். நப்பின்னை திரும்பத் திரும்ப கேள்வி கேட்டு அவரைப் பற்றி புரிந்து கொண்டாள்.

நடுவே, தொண்டை நாடு திருவொற்றியூர் வரை பயணப்பட்டேன். கடற்கரை ஓரமாக உப்புக்காற்றில் நனைந்தபடி பயணப்படுவது சந்தோஷமாக இருந்தது. இங்கெல்லாம் நப்பின்னையை அழைத்துவர வேண்டும் என்று தோன்றியது.

குழந்தை ஓடத் துவங்கினான். பேசத் துவங்கினான். தாய்ப்பாலை விட்டுவிட்டு பசும்பாலுக்குத் தாவினான். தயிர்சோறு விரும்பினான்.

‘‘இவன் வைதீகனாம். அப்பா ஜாதகக் கட்டம் எழுதிவிட்டு தெள்ளத் தெளிவாக சொல்கிறார். வேறு இரண்டு மூன்று பேரும் இதை உறுதிப்படுத்தினார்கள்.’’

‘‘அதனாலென்ன’’ நான் பதில் சொன்னேன்.

‘‘அதனால் இவனை தஞ்சைக்கு அழைத்துக் கொண்டு போய் வேதனைப்படுத்துவானேன். ஒரு வைதீகன் வளருகின்ற இடம் எங்கள் கிராமம்தான். எனவே குழந்தையை என் அப்பாவிடமே விட்டுவிட்டு வரலாமென்றிருக்கின்றேன். என் அப்பா மட்டுமில்லை. உங்களுடைய தகப்பனாரும் அவன் மீது கொள்ளைப் பிரியமாக இருக்கிறார். உங்களுடைய தமையனாரும் அவனைக் கண்டால் உருகுகிறார். என்னுடைய தமையன்களும் அவனுடைய துடுக்கைப் பார்த்து அவன் பின்னால் சுற்றுகிறார்கள். மொத்த கிராமமுமே நம் மகனின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது’’ என்று பல விஷயங்கள் சொன்னாள். நானும் அதைக் கண்கூடாகப் பார்த்தேன்.

திடுமென்று ரிக்வேதம் சொல்லி, ஒரு வீட்டு வாசலில் பவதி பிக்ஷாந்தேஹி என்று கூவுகிறான். எதோ தருகிறார்கள். வாங்கி நண்பர்களுக்கு தந்து விடுகிறான். ஏனடா என்றால், யாராவது நெல்லிக்கனி பிக்ஷையாக எனக்குத் தரக்கூடாதா என்று அலுத்துக் கொள்கிறான். கிராமம் திகைக்கிறது. அப்படி தந்தால் அவன் வேதம் சொல்லி செல்வம் தருவானாம்.

‘‘நப்பின்னை இங்கிருந்து தஞ்சைக்கு அழைத்துப் போனால் இவன் சிரமப்படுவானோ?’’

‘‘நிச்சயம்’’

ஒன்றரை வருடம் கழித்து ஒரு நல்ல நாளில் அவள் குழந்தையை தன் தகப்பனிடமும், என் தகப்பனிடமும் கொடுத்துவிட்டு என்னோடு குதிரையேறினாள். மகனைப் பிரிகிறோமே என்ற சிறிய கவலை கூட இல்லாமல் தஞ்சைக்கு வந்து சேர்ந்தாள்.

குழந்தையை விட்டுவிட்டு வந்தவளைப் பார்த்து அருண்மொழிபட்டர் திகைத்துப் போனார்.

மாதாண்டநாயகர் இராஜேந்திர சோழரின் அனுக் கியார் பரவை நாச்சியாருக்கு அது பிடித்திருந்தது.

‘‘நாம் வெறும் தாயார்களல்ல. தாதிகளல்ல. நீ உபதளபதியின் உபதளபதி’’ என்று கட்டிக் கொண்டாள்.

‘‘நாம் மற்ற பெண்டிரைப் போல் வாழ முடியாது’’ நப்பின்னையின் செய்கையை உறுதி செய்தாள்.

நப்பின்னையால் பரவை நாச்சியார் நெருக்கமாக பரவை நாச்சியாரால் என்னுடைய செய்கையைப் பற்றி மாதாண்டநாயகர் இராஜேந்திர சோழருக்கு அதிகம் தெரிந்தது.

குதிரை ஓட்டுவது எளிது. ஆனால் தேர்கள் ஓட்டுவது கடினம். மெல்லிய சக்கரங்களும் வளைந்த விற்களும் கொண்ட இரண்டு பேர் போகும் தேரில் பரவையாரும், நப்பின்னையும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.

மீன்சுருட்டிக்கு அருகே கோட்டை வளர வளர பல தளபதிகள் குடந்தைக்கு அருகே போய் குடியேறினார்கள்.

ஒரு நாள் விடியற்காலையில் அருண்மொழிபட்டர் கதவைத் தட்டினார். வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தோம்.

‘‘இன்றைக்கே போய் உன் மகனைப் பார்த்துவிட்டு வா. நாம் தொலைதூரம் போக வேண்டியிருக்கிறது. உன் மனைவியும் நம்மோடு வர வேண்டுமென்று பரவை நாச்சியார் விரும்புகிறார்கள்.’’

‘‘அப்படியா. எவ்வளவு தொலைவு?’’ நான் கேட்டேன்.

அருண்மொழிபட்டர் தயங்கினார்.

‘‘மேலைச்சாளுக்கியம் கல்யாணியை நோக்கி நாம் படையெடுத்துப் போகிறோம். இதுபற்றி வாய் திறக்காதே. உடனடியாக புருஷனும், மனைவியும் போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வாருங்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதங்கள் ஆகலாம் திரும்பு வதற்கு.’’ அவருடைய குரலில் கவலை இருந்தது.

என் கிராமம் வியப்பில் மூழ்கியது.

‘‘திடீரென்று இரண்டு பேரும் வந்திருக்கிறீர்கள். பிள்ளைப் பாசம் விரட்டுகிறதா?’’ என்று கேலி செய்தார்கள்.

ஆனால் பிள்ளை எங்களருகே வருவதற்கே விருப்பமில்லாமல் ஓடி ஒளிந்து கொண்டான். தாய்மாமனிடமும், சித்தப்பனிடமும் தாவி கட்டிக் கொண்டான். சிற்றப்பனின் மனைவியிடம் போய் ஒட்டிக் கொண்டான்.

அவன் தரையில் ஸ்ரீசக்கரம் வரைந்த அழகை செய்து காட்ட சொன்னார்கள். பூஜை செய்யும் அழகை உட்கார்ந்து பார்க்கச் சொன்னார்கள். வலுக்கட்டாயமாக இழுத்துக் கொஞ்சியபோது என்னை விலக்கி ‘‘நீ யார்?’’ என்று கேட்டான்.

எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. நப்பின்னை அவனை வாங்கி நெற்றியில் முத்தமிட்டு இறக்கி ஓடவிட்டாள்.

‘‘இவரைப் பற்றி உங்களுக்கு யாருக்கு தெரியும். இவருடைய கம்பீரம், கௌரவம், செல்வாக்கு, செயல்திறன் இதுபற்றி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு படி தயிர்சாதம் என் புருஷன் சாப்பிடுவார் என்ற கம்பீரத்தைத்தான் இந்தக் கிராமத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். அருண்மொழிபட்டரும், கிருஷ்ணன் ராமனும், குந்தவைபிராட்டியும், மாமன்னர் இராஜராஜனும், மாதாண்டநாயகர் இராஜேந்திர சோழரும், அவருடைய அனுக்கியார் பரவை நாச்சியாரும், மற்றுமுள்ள தளபதிகளும் இவர் மீது அளவற்ற மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார்கள்.

நீங்களெல்லாம் தெருவோரம் நின்று துணியை மேலே விசிறி வாழ்க வாழ்கவென்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இவர் மாதாண்ட நாயகருக் கருகே தோள் கொடுத்தபடி நடந்து வருகிறார்.

உள்ளங்கை நிறைய பொற்காசுகள் பார்த்திருப் பீர்கள். முழங்கால் உயரத்திற்கு இரண்டு மூட்டை தங்க நாணயங்கள் பார்த்திருக்கிறீர்களா. எங்கள் வீட்டில் இருக்கிறது. வந்து கொடுத்திருக்கிறார்கள். கோட்டை கட்டும் கணக்கு ஒப்படைத்து காசு வாங்கிப் போகிறார்கள். நூறு வீரர்களுக்கு தலைவராக இருந்தவர் இப்போது ஆயிரம் வீரர்களுக்குத் தலைவராக இருக்கிறார். நீங்கள் மட்டுமல்ல எங்கள் குழந்தையும் எங்களைப் புரிந்து கொள்வான்’’ அவள் கொஞ்சம் கோபத்தோடும் அலுப்போடும் சொல்லி முடித்தாள். யாரோ சமாதானம் செய்ய முன் வந்தார்கள். அவள் உதறினாள். வாசலுக்கு வந்தாள். இரண்டு பேரும் கிளம்பி கிராமங்கள் தாண்டி தஞ்சைக்குள் புகுந்தோம்.

மாதாண்டநாயகர் இராஜேந்திர சோழர் பரவை நாச்சியாருடன் வடக்கு நோக்கி அருண்மொழி பட்டருடன் மேலைச்சளுக்கியம் நோக்கி நகர்ந்து விட்டதாக செய்தி வந்தது. பின்தொடர்ந்து வந்து சேர்ந்து கொள்ளும்படி உத்தரவு இருந்தது.

வீட்டிலுள்ள முக்கியமான ஓலைகளையும் பொற்காசுகளையும் முதன்மந்திரி கிருஷ்ணன் ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ஆயிரம் வீரர்களோடு நாங்களும் வடக்கு நோக்கிக் கிளம்பினோம். கிளம்பிய நேரம் நல்ல நேரமா தெரியவில்லை. அதுபற்றி எங்களுக்கு அக்கறை இல்லை.

மாமல்லபுரத்திலிருந்து திருவான்மியூர் போய், திருவான்மியூரிலிருந்து மயிலை சென்றடைந்து மயிலையிலிருந்து திருவொற்றியூர் போய் அங்கிருந்து கீழைச்சாளுக்கியம் நகர்ந்து கீழைச் சாளுக்கியத்தில் முக்கியமான சாலை பிடித்து மேலைச் சாளுக்கியம் நோக்கி விரைவாக நகர வேண்டும் என்பது திட்டமாக இருந்தது.

திருவொற்றியூரில் இராஜேந்திரர் தங்கியிருந்த போது அங்கு போய் சேர்ந்துகொண்டோம். கோவில் மண்டபத்தில் அவரைச் சந்தித்தோம். தாக்குதல் திடுமென்று இருக்க வேண்டுமென்பதால் பல்வேறு திக்கிலிருந்து படைவீரர்களைப் பிரித்து மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் ஒன்று சேர வேண்டுமென்று மாதாண்டநாயகர் திட்டமிட்டிருந்தார்.

அருண்மொழிபட்டர் முன்னே போக, மாதாண்ட நாயகரும், பரவைநாச்சியாரும் பின்தங்க அவரோடு நானும், நப்பின்னையும் சேர்ந்திருந்தோம்.

இது மிகப்பெரிய பேறு என்று எனக்குத் தோன்றியது. விடியலில் எழுந்து படுக்கையில் அமர்ந்தபடியே, தொலைதூரம் பார்த்தபடியே சிந்தித்துக் கொண்டிருப்பது மாதாண்ட நாயகரின் பழக்கம் என்பது புரிந்தது. அவரின் பல அசைவுகள் எனக்குத் தெளிவாயின. ஆனால் என் வாழ்வு ஒரு பெரிய மரண சம்பவத்தை அனுபவிக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

(தொடரும்)





     RSS of this page