Home / ShockingShoppingMall

ShockingShoppingMall


ஷாப்பிங் மால்..! - ஷாக்கிங் ரிப்போர்ட்

நண்பர் ஒருவர் தீபாவளிக்கு துணிமணி வாங்க எப்போதும் தி.நகர் செல்வதுதான் வழக்கம். இந்த வருடம் சற்று மாறுதலாக சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் அந்த பெரிய ஷாப்பிங் மாலுக்குச் சென்று பர்ச்சேஸ் செய்ய முடிவு செய்தார். மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாலுக்குப் போனவர், போட்ட பட்ஜெட்டையும் தாண்டி கைநிறைய வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டியதாகி விட்டது! காரணம், மால்களில் பொதிந்து வைத்திருக்கும் ஷாப்பிங் டெக்னிக்குகள்தான்!

சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. துணிக் கடைகள், புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரிஸ், ஃபுட் கோர்ட், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்கு அம்சங்கள், சினிமா தியேட்டர்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால், பார்த்த மாத்திரத்திலேயே அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடுகிறது.  

சும்மா பார்க்க வருபவர் களைக்கூட சுண்டி இழுத்து வாங்க வைத்துவிடும் அளவுக்கு மால்களில் ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம் தெரியுமா? தெரிந்தால் ஷாக்காகிவிடுவீர்கள்... வர்மக் கலை தெரிந்தவர்களுக்கு ஒருவனை எந்த இடத்தில் எப்படித் தாக்கினால் அவன் வழிக்கு வருவான் என்பது நன்றாகத் தெரியும்.  கிட்டத்தட்ட அந்த வர்மக் கலைக்கு ஈடாக ஒருவரை எப்படி எங்கே அசத்தினால் வலையில் வீழ்வார் என்பதை அறிந்து, அதற்கேற்ப கடைகளை அமைக்கிறார்கள் வல்லுநர்கள்.

உலகைச் சுற்ற முருகன் மயிலில் ஏறி பறக்க, அண்ணன் கணேசனோ அம்மை அப்பனை சுற்றி ஞானப்பழத்தைப் பெற்றதைப் போல பிஸினஸ் செய்ய நினைப்பவர்கள் பலரிடம் சென்று அனுபவங்களையும் அறிவுரைகளையும் கேட்பதை விட, மாலை ஒரு சுற்று சுற்றி வந்தாலே போதும் ஒரு தெளிவு வந்துவிடும்!

துணிக் கடைகள்! 

கடைசியாக நீங்கள் சென்ற மாலில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், லைஃப் ஸ்டைல், கெஸ் போன்ற கடைகள் எங்கே இருந்தது என்று நினைவுபடுத்திப் பாருங்கள்... நிச்சயமாக அவை மால்களுக்குள் நுழைந்தவுடனேயே இருக்கும். பெரிய பிராண்ட் எல்லாம் தங்கள் கடைகளை தரைதளத்தில்தான் வைக்கிறார்கள். அதேபோல் ஆண்களுக்கான டிரஸ் கடைகளும் நிச்சயமாக கீழ்தளத்தில்தான் இருக்கும். அதுவே, பெண்களுக்கான கடைகளை நான்காவது, ஐந்தாவது மாடிகளில்கூட வைத்திருப்பார்கள்!  

இதற்கு என்ன காரணம்? ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அதிக பொறுமை இருக்காது. வந்த வேகத்தில் ஏதோ ஒரு டிரஸை எடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். மூன்றாவது தளம் ஐந்தாவது தளம் என்று அவர்களுக்கான கடைகளை வைத்தால் வந்த வேகத்தில் வெளியேறி வேறு ஏதாவது ஒரு கடையில் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அதனால்தான் அவர்களுக்கான கடைகளுக்கு தரைத்தளத்திலோ முதல் தளத்திலோ இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

பெண்கள் மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்வதாக இருந்தாலும், அசரக்கூடியவர்கள் இல்லை என்பதால் நான்காவது, ஐந்தாவது மாடிகளில்தான் அவர்களுக்கான கடைகளை வைத்திருப்பார்கள்.


காஸ்மெட்டிக் ஐயிட்டங்கள்!

விலை உயர்ந்த வாட்சுகள், பெல்ட்டுகள், லிப்ஸ்டிக் மற்றும் பெர்ஃபியூம் போன்றவற்றை முகப்பில்தான் வைத்திருப் பார்கள். உள்ளே நுழையும் நிமிடத்திலேயே அவை நம் கவனத்தை ஈர்த்துவிடும். அதேசமயம் நுழைந்த வேகத்தில் அதை யாரும் வாங்குவதில்லை. அவர்களும் வாங்கச் சொல்லி அழைப்பதில்லை. எல்லா வற்றையும் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வரும்போது, முதலில் நம் கவனத்தை ஈர்த்த இந்த ஐயிட்டங்கள் நம்மை மேற்கொண்டு செல்லவிடாமல் செய்துவிடும். அந்த தடுமாற்றம் ஒன்று போதாதா பிஸினஸ் செய்பவர்களுக்கு!

ஃபுட் கோர்ட்!

சாட் அயிட்டங்கள், காபி ஷாப், ஐஸ்கிரீம் ஷாப் போன்ற விஷயங்கள் பெரும்பாலும் மேல் தளத்தில் இருக்காது; கீழ் தளத்தில்தான் இருக்கும். விலையுயர்ந்த சாக்லேட்டுகள், பிஸ்கெட்டுகள் மேல் டிராக்கிலும், விலை குறைவான ஐயிட்டங்கள் கீழ் டிராக்கிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். விலை அதிகமான பொருட்களை மேல் டிராக்கில் வைப்பதற்குக் காரணம், அவைதான் சட்டென கண்ணில் படும். அதுமட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் பொருட் களைக் குனிந்து  எடுத்துப் பார்ப்பதைத் தவிர்க்கவே விரும்புவார்கள். அதனால் கீழ் டிராக்கில் விலை குறைவானதை அடுக்கி வைத்துவிடுவார்கள்!

எஸ்கலேட்டர் கவர்ச்சி!

நிறைய மால்களில் ஏறுவதற்கு ஒரு இடத்திலும், இறங்குவதற்கு இன்னொரு இடத்திலும் எஸ்கலேட்டர்கள் இருக்கும். ஒரு பக்கம் ஏறி அடுத்த பக்கம் இறங்கும்போதுதான் எல்லா பக்கமும் இருக்கிற கடைகளும் நம் கண்ணில் படும். இல்லா விட்டால், சில கடைகள் கண்ணில் படாமலேயே போய்விடும். இன்னொரு சுவாரஸ்யமான டெக்னிக்... படி ஏறியிறங்காமல் எஸ்கலேட்டரை உபயோகிக்கும்போது நிறைய பேர் மனதில் ஆரோக்கியம் குறித்த எண்ணம் சில நொடி யாவது எழுந்து மறையும். அந்த சமயத்தை சரியாகப் பயன்படுத்தும் விதமாக எஸ்கலேட்டர்களுக்கு அருகில் தான் உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்சி கருவிகள் போன்ற வற்றை வைத்திருப்பார்கள்!

பொழுதுபோக்கு!

குழந்தைகளுக்கான கேம்ஸ் பகுதியில் பெரும்பாலும் ஸ்மார்ட் கார்டை உபயோகிக்கும்படிதான் வைத்திருப்பார்கள். குறைந்த பட்சம் 200 ரூபாயாவது கொடுத்துதான் கார்டு வாங்க வேண்டியதிருக்கும். அந்த தொகை காலியாகிவிட்டால் அடுத்து டாப் அப் செய்ய வேண்டும். விளையாடியது போக பாக்கி பணம் மீண்டும் ரொக்கமாகக் கிடைக்காது. அடுத்த முறை வரும்போது அந்தப் பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம். இதற்காகவே அடுத்த முறை வேறு மால்களுக்குச் செல்லாமல் அதே மாலுக்கு திரும்பத் திரும்ப வருவார்கள். இதே கதைதான் ஃபுட்மாலிலும்!

அடுத்த முறை மாலுக்குள் நுழையும்போது மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு தேவையானவற்றை மட்டும் வாங்கி சந்தோஷமாக உங்கள் பட்ஜெட்டுக்குள் ஷாப்பிங் செய்யுங்கள்!

- பானுமதி அருணாசலம்
படங்கள் : பி. சரவணகுமார்



 



     RSS of this page