Home / Ra ki Rangarajan2

Ra ki Rangarajan2


வெள்ளிக்கிழமை சண்டை வரும் ரா.கி.ரங்கராஜன்
(காலை ஆறு முப்பது. ராமாமிர்தம் பல் விளக்கி, முகத்தை டவலில் துடைத்தபடி, ஹாலில் படுத்திருக்கும் ஒவ்வொரு நபராய்த் தாண்டிக் கொண்டே வருகிறார்.)

ராமா: ஏய் விடியாமூஞ்சி, காலங்காத்தாலே எழுந்து படிடா, டீ சனியனே, பாவாடையைச் சரியா இழுத்துக் கொண்டு தூங்கேன்? யார்டா இவன்... ஓகோ... அத்தைப் பாட்டியா? சமையல் கட்டிலேயல்லவா தினம் தூங்குவாள்? இன்னிக்கென்ன வந்தது கேடு? டீ கோமதி, மாடாட்டம் தூங்கறியே? குழந்தை மூத்திரத்திலே மிதக்கிறது பார்! (கூடத்துப் பெஞ்சியில் உட்கார்ந்து கொள்கிறார். காப்பி டம்ளருடன் மனைவி சீதாலட்சுமி வருகிறாள்.)
சீதா: ஐய்யய்ய! வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் இப்படித்தான் கண்டதற்கெல்லாம் சண்டை போடுவீர்கள். இன்றைய பொழுது போகிற வரைக்கும் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருக்கக் கூடாதோ?
ராமா: (நிதானத்துக்கு வந்தவராக) இன்றைக்கு வெள்ளிக்கிழமையா? மறந்து போய் விட்டது. ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
சீதா: போன வெள்ளிக்கிழமை கறிகாய் வண்டிக்காரனோடு தகராறு அரம்பித்தீர்கள். அன்று பூரா ரகளை. அதுக்கு முந்தின வெள்ளி, டெலிபோன்லே யார் கிட்டேயோ கத்தினீர்கள். ராத்திரி வரையில் ஓயவில்லை. அதுக்கு முந்தின....
ராமா: சரி, சரி! உன்னை யாரும் லிஸ்ட் கேட்கல்லே.
சீதா: இந்த வெள்ளிக்கிழமை என்கிட்டே ஆரம்பித்து விடாதீர்கள். ( கழுத்தை நொடித்துக் கொண்டு திரும்புகிறாள்.) இன்னிக்கோ நாளைக்கோ நம்ம ஜானுவைப் பெண் பார்க்கிறதுக்காக யார் யாரோ வர்றதா சொல்லி இருக்காங்க. அதையும் மறந்திடாதீங்க. (போகிறாள்.)
ராமா: (காப்பியை உறிஞ்சியபடி) சர்க்கரையைக் கண்ணிலே காட்ட மாட்டாளே பாவி! வேப்பங்கொட்டை டிகாக்ஷன் யார்டீ அங்கே? (பக்கத்து ரூமில் படித்துக் கொண்டிருந்த இரண்டாவது பெண் பாலா கையில் புத்தகத்துடன், படித்தபடியே வருகிறாள்.) பாலா: ஏம்பா கத்தறீங்க!
ராமா: முதல்லே மேலாக்கைச் சரியா போட்டுக் கொண்டு என் எதிரிலே வான்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? உன் மேலே குத்தமில்லை. வளர்த்திருக்கிறாள் பார் ஒருத்தி! (உள்ளேயிருந்த ஜானு வருகிறாள். காலேஜில் படிக்கும் குமாரி.) ஜானு: ஏம்ப்பா இப்படிக் கோபிக்கிறீங்க? அம்மா சொல்லலே கொஞ்சம் முன்னாடி-?
ராமா: (சட்டென்று ஞாபகம் வந்தவராக) ஜானுக் கண்ணு, கொஞ்சம் சர்க்கரை கொண்டு வாம்மா காப்பிக்கு! (முனகலாக) ஹும்! அரை டிக்கெட் கிட்டேயெல்லாம் தழைஞ்சு போகணுமா இன்னைக்கு! விதி! (காப்பி குடித்தபின், பேப்பரைக் கையில் எடுக்கிறாள். மாடிப் போர்ஷன் சதாசிவம் வருகிறார்.) சதா: பேப்பர் வந்தாச்சா? அந்த ஸ்போர்ட்ஸ் பேஜ் மட்டும் சற்றுக் கொடுங்கள்.
ராமா: (எரிச்சலுடன்) ஒரு பேஜைத் தனியா கொடுக்க முடியாதுங்காணும். நாலு நாலு பேஜாத்தான் சேர்த்து அச்சுப் போடறான். சதா: சார் இன்னிக்கு ரொம்பக் கோபமா இருக்காப்பலே இருக்கு... (திரும்பிப் போகிறாள்).
ராமா: பொழுது விடிஞ்சதும் விடியாததுமாய் உபத்திரவத்துக்கு மேலே உபத்திரவமா வந்தால் நீர் குளுகுளுன்னு இருப்பீர் போல இருக்கு. (வெள்ளிக்கிழமை ஞாபகம் வரவே சட்டென தணிந்து) சட்டுப்புட்டென ஆபீசுக்குப் போய்த் தொலைஞ்சிடலாம். வீட்டிலே இருந்தால்தான் வம்புமேலே வம்பாய் வரும். (உரக்க) ஏய், நான் ஆபீஸுக்குப் போகணும். வென்னீர் ரெடியா?
சீதா: ஆபீஸா! இன்னிக்கு என்னவோ பண்டிகை, லீவுன்னு சொல்லலியோ?
ராமா: லீவா? ஆமாம்... வர்ற சோதனையெல்லாம் அனுபவிக்க வேண்டியதுதானா? (பேப்பரைச் சுருட்டிக் கையில் எடுத்துக் கொள்கிறார். ஈஸிசேரையும் இழுத்துக் கொண்டு போய்த் தெருவைப் பார்த்தாற் போலுள்ள வெராந்தாவில் போட்டுக் கொள்கிறார்.)
ராமா: இன்னிக்குப் பூராவும் பேசாமல் இங்கேயே குடியிருந்து விடலாம். ஒரு குரல்: சார்! சார்! இங்கே சிங்காரம்னு ஒருத்தர் இருக்காரா?
ராமா: சிங்காரமும் இல்லே, அலங்காரமும் இல்லே. வந்தவர்: இது வினை தீர்த்த ராமசாமிப் பிள்ளை தெரு தானே?
ராமா: ஆமாம். வந்தவர்: இது பதினொன்றாம் நம்பர்தானே?
ராமா: ஆமாம், ஆமாம். வந்தவர்: பின்னே இங்கே சிங்காரம்னு ஒருத்தர் இருக்கணுமே?
ராமா: இருக்கணுமென்றால் உமக்கு அட்ரஸ் கொடுத்த மடையனைப் போய்க் கேளும்! என்னை ஏன் கேட்கிறீர்? (வந்தவர் முனகியபடியே போக, சீதாலட்சுமி பதைத்துக் கொண்டு உள்ளேயிருந்து வருகிறாள்.)
சீதா: போறும், போறும்! ஈஸிசேரை மடக்கிக் கொண்டு உள்ளே வாருங்கள். வீட்டுக் சண்டை போறாதுன்னு தெருச் சண்டையிலே இறங்கி விட்டீங்களா?
ராமா: ஏண்டி நானாடி அவனோட வம்புக்குப்... (குரலைத் தணித்துக் கொண்டு என் வாயை கிளர்றதுக்காகவே எவனாவது வந்து சேர்கிறான். (உள்ளே போகிறார்.) (பிற்பகல். ராமாமிர்தம் தூங்கி எழுகிறார். மணி ஒன்று.)
ராமா: ஐயையோ! இன்னும் முக்கால் நாள் தாண்டனுமே! எங்கேயாவது வெளியே போய்த் தொலையறேன். (வாசலுக்குப் போகையில் மகள் ஜானு கூப்பிடுகிறாள்.) ஜானு: அப்பா, நானும் உங்களோட வரேன்.
ராமா: (சற்று யோசித்து) சரி, வா. போகிற இடத்தில் ஏதாவது வம்பு முளைச்சதுன்னா என்னை செக் பண்ணறதுக்கு உதவியா இருக்கும். (தந்தையும் மகளுமாகப் புறப்படுகிறார்கள். பஜாரில் செல்கையில்...)
ராமா: ஆஹா! அகப்பட்டான் அயோக்கியன்! ஜானு: யாரப்பா?
ராமா: அதோ எதிரில் வருகிறான் பார். மகாலிங்கம் ஆறு மாசத்துக்கு முந்தி இதோ தர்றேன்னு சொல்லி நூறு ரூபாய் வாங்கிட்டுப் போனான். ஆள் அட்ரஸே இல்லை. இதோ வகையா மாட்டினுட்டான். ஜானு: என்னப்பா நீங்க! இத்தனை நேரம் வரை சமர்த்தா இருந்துட்டீங்க. இப்பப் போய்... (பக்கத்தில் பார்க்கிறார். ஒரு சினிமாத் தியேட்டர் தெரிகிறது.)
ராமா: வா, படம் பார்க்கப் போகலாம். இவனைப் பார்த்தால் சண்டை நிச்சயம். ஜானு: அப்பா, வந்து... இந்தப் படம்...
ராமா: ரொம்ப நல்லாயிருக்கும். ஒரு மாசமா நினைச்சிட்டேயிருக்கேன், போகணும்னு. (படம் ஆரம்பமாகிறது.)
ராமா: அப்பாடா! இன்னும் கொஞ்ச நேரத்தை இங்கே கழிச்சிட்டோமேயானால்... (படத்தின் டைட்டில்களைப் பார்க்கிறார்) என்னது! 'காதல் காதல் காதல்!' படமா? 'சக்தி லீலா!'ன்னு வாசல்லே போட்டிருந்ததே? ஜானு: அது நாளை முதல் ஆரம்பம் அப்பா.
ராமா: சரி, சரி. ஏதோ ஒண்ணு. பார்த்துத் தொலைப்போம். (திரையில் ஹீரோயினை அலக்காகத் தூக்குறான்.)
ராமா: (தனக்குள்) என்னடாது கஷ்டகாலம்? வயது வந்த டாட்டரை அழைச்சிட்டு இந்தப் படத்துக்கா வந்து தொலையணும்? (ஓரக்கண்ணால் பார்க்கிறார். ஜானு படத்திலேயேலயித்திருப்பது தெரிகிறது. அவள் கவனத்தைத் திருப்ப நினைத்தவராய்) ஜானு: வந்து... உங்க பிரின்ஸிபாலுக்கு வேறே காலேஜிலே வேலை ஆயிட்டுதுன்னு சொன்னியே, போயிட்டாங்களா? ஜானு: உஸ்... கொஞ்சம் இருங்கப்பா.
ராமா: ( தனக்குள்) இந்த ஹீரோயினின் கன்னத்தோடு தன் முகத்தை இழைக்கிறான்.)
ராமா: இழைப்புளி வைச்ச மாதிரின்ன தேய்க்கிறான் (திரும்பி) ஜானு! அப்புறம் அந்த எக்ஸ்கர்ஷன் சமாச்சாரம் என்ன ஆச்சு? பணத்தைப் திருப்பிக் கொடுத்துட்டாங்களா? ஜானு: கொஞ்ச நேரம் சும்மா இருங்களேம்பா. (ஹீரோயினின் முழங்காலில் ஹீரோ கிள்ளுகிறான். அவள் சிணுங்கித் துள்ளுகிறாள். அவன் இன்னும் கொஞ்சம் மேலே கிள்ளுகிறான்.)
ராமா: (ராஸ்கல்)! எவ்வளவு தூரம் போவானோ தெரியல்லியே? (திரும்பி) ஜானு! அந்தப் போஸ்டாபீஸ் மாமிக்கு என்னவோ ஆபரேஷனாமே? உனக்குத் தெரியுமா? (பின்னாலிருந்து ஒருவர் ராமாமிர்தத்தின் தோளைத் தட்டுகிறார்) அந்த நபர் குடிச்சிட்டு வந்த மாதிரி ஆடிட்டே இருக்கீங்களே? கொஞ்சம் ஸ்டெடியாத்தான் இருங்களேன்.
ராமா: (கோபமாக) மிஸ்டர் நாக்கை அடக்கு! அந்த நபர்: நீ முதல்லே உன் தலையை அடக்கு! பின்னாலே இருக்கறவங்க படம் பார்க்க வேண்டாமா?
ராமா: ஆமாம் இந்த ஆபாசப் படத்தை ஈன்னு பார்க்கலேன்னா தலை வெடிச்சிடுமாக்கும்? அந்த நபர்: நீர் என்ன ஒழுங்கு? கதாகாலட்சேபம் கேட்கத்தான் வந்திருக்கிறீராக்கும்? (ராமாமிர்தத்துக்கு, காலையிலிருந்து அடக்கிக் கொண்டிருந்த கோபம் மொத்தமும் பீறிடுகிறது.)
ராமா: சினிமாவா இதெல்லாம்? அசிங்கம். அவமானம் நாட்டுக்கே சாபக்கேடு. இந்த மாதிரி படம் எடுக்கிறவங்களை வரிசையாய் நிக்க வச்சு சுட்டுக் தள்ளணும். (இப்போதுதான் ஜானுவின் கவனம் கலைகிறது.) ஜானு: மிஸ்டர்! என் அப்பாவுக்கு உங்களைப் போல இரண்டு மடங்கு வயசாகிறது. அதுக்கு மதிப்புக் கொடுக்க கத்துக்குங்க முதல்லே. (அந்த வாலிபனின் முகத்தில் கோபம் குறைகிறது.) வாலிபன்: அதில்லே... மிஸ்... வந்து... ஜானு: சே! வாங்கப்பா, போகலாம். (எழுந்து செல்கிறார்கள்.) (இரவு எட்டு மணி. பக்கத்துத் தெருவில் உள்ள ராமாமிர்தத்தின் சினேகிதர் சுந்தரம் வருகிறார்.)
சீதா: வாங்க, வாங்க! வீட்டிலே எல்லோரும் செளக்கியமா? பாட்டிக்கு உடம்பு எப்படி இருக்கு? சுந்த: ஏதோ இருக்காள். நான் வேறே ஒரு விஷயம் பேசத்தான் அவசரமாய் வந்தேன். (ராமாமிர்தத்தைப் பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் ராமாமிர்தம் வாயெல்லாம் பல்லாக வெளியே வருகிறார்.)
ராமா: கேட்டியா விஷயம்? நானும் ஜானுவும் மத்தியான்னம் சினிமாவுக்குப் போயிருந்தோம் இல்லையா? அங்கே ஒரு பையனோட சண்டை-
சீதா: அதுதான் இத்தனை சந்தோஷமா?
ராமா: மண்டு. ஆபாசமான படம் என்கிறதுக்காகச் சண்டை போட்டேன் அவனோட. அந்தப் பிள்ளை டெலி போனிலே வேலையாயிருக்கானாம். எண்ணூறு ரூபாய் சம்பளமாம். நம்ம ஜானுவைத் தியேட்டரில் பார்த்ததும் அப்படியே மோகிச்சுப் போயிட்டானாம். பின்னாடியே, வந்து சினேகிதர் சுந்தரம் நமக்கும் சினேகிதர் என்பதைத் தெரிந்து கொண்டு, சிபாரிசு பிடிச்சு...
சீதா: பிள்ளையோட அப்பாக்காரர்....
ராமா: அவர் ரிடையர்ட் ஜட்ஜ். அவரையும் கேட்டாச்சாம்! தியேட்டரிலே நான் எதுக்காகச் சண்டை போட்டேன்னு பையன் சொன்னதும், 'ஆஹா! அப்படிப்பட்ட சம்பந்தம் தாண்டா எனக்கு வேணும்' அப்படின்னு சொல்லிட்டாராம். ஏன்னா, அவர் 'ஆபாச சினிமா ஒழிப்பு சங்கத்திலே' தலைவராம்! சுந்தரம்: (ஜானுவைச் சுட்டிக்காட்டி) குழந்தையின் அபிப்பிராயம்... (ஜானு வெட்கத்துடன் ஓடுகிறாள்.) சுந்தரம்: பலே! அப்ப நான் போய் மற்ற ஏற்பாடுகளைச் செய்கிறேன். (போகிறார்.)
ராமா: சீதா! என்னவோ வெள்ளிக்கிழமையிலே நான் கோபிப்பேன், குடியே முழுகிடும்னு சொன்னியே! இப்ப என் கோபத்தாலேதான் கல்யாணமே முடிஞ்சது! என்ன சொல்றே?
சீதா: ஒண்ணு சொல்லட்டுமா? இன்னிக்கு ஆபீஸ் லீவானதாலே, நாள் பூரா வீட்டிலே ஏதாவது சண்டை போட்டுட்டே இருப்பீங்களேன்னு பயமாயிருந்தது. உங்களை வாயை மூடிட்டு இருக்கச் செய்யறதுக்காகத்தான் வெள்ளிக்கிழமைன்னு சொல்லி வைச்சேன். இன்னிக்கு வியாழக்கிழமைதான்.
ராமா: ஆ! நிஜம்மாவா? நீ சொன்ன பொய்யினாலே நான் எத்தனை பேர் கிட்டே தணிஞ்சு தணிஞ்சு போனேன். என்னை என்ன பச்சைக் குழந்தைன்னு நினைச்சியா? (தாம் தூமென்று குதிக்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள்.)
----------
கெட்ட ஜனங்கள் ஏன் இருக்கிறார்கள்?
ரா.கி. ரங்கராஜன்
'இன்றைக்குப் பயங்கரமான தினம்,' என்று நீண்ட பெருமூச்சுடன் சொன்னார் என் சிநேகிதர். நியூயார்க்கிலும், பென்ட்டகனிலும் பயங்கரவாதிகள் அட்டூழிய அநியாயம் செய்திருந்தது அன்றைய தினம்தான். ஆகவே, 'அதைச் சொல்கிறீர்களா?' என்று கேட்டேன்.

'அதுவும் பயங்கரம்தான். ஆனால் நான் சொல்வது, இந்தத் தண்ணீர் லாரிகள் பற்றிய பிரசினையை' என்றார் நண்பர்.

'தண்ணீர் லாரிக் கம்பெனிகளில் பலபேர் யோக்கியமானவர்கள்தான். ஆனால் ஏமாற்றுக்காரர்களும் சிலர் இருக்கிறார்கள்,' என்று குறிப்பிட்டுவிட்டு, தன்னைப் போல மற்றவர்கள் ஏமாறாதிருப்பதற்காகச் சில யோசனைகள் அவர் சொன்னார்.

1. தனியார் கம்பெனி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் 'சென்னை குடிநீர்' என்று லாரியின்மிது போட்டிருக்கிறது. இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? தங்கள் கம்பெனியின் பெயரைத் தானே போட வேண்டும்? அதைப் பற்றிக் கேளுங்கள்.

2. தண்ணீரைக் கீழ்நிலைத் தொட்டியில் ('ஸம்ப்') கொட்டுவதற்கு முன்னால் ஒரு பக்கெட் பிடித்து அது கலங்கல் இல்லாமல் இருக்கிறதா, சாக்கடை நாற்றம் வராமல் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். கொட்டிய பிறகு சொன்னால், 'நீங்கள் தொட்டியைச் சுத்தம் செய்து எத்தனை வருடமாகிறது?' என்று உங்களைத் திருப்பிக் கேட்பார்கள்.

3. உங்கள் தொட்டியின் கொள்ளளவு எவ்வளவு என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாயிரம் லிட்டர் தண்ணீர் கொட்டினால் எத்தனை உயரத்திற்கு வரவேண்டும். நாலாயிரம் லிட்டர் கொட்டினால் எத்தனை உயரம் வரும் என்பதைக் கணக்கிட்டு வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நாலாயிரம் லிட்டருக்குப் பணம் கொடுத்துவிட்டு மூவாயிரம் லிட்டர் வாங்கிக்கொண்டு நிற்பீர்கள்.

4. 'மோட்டார்' மூலம் தண்ணீரைக் கொட்டுவதாகச் சொல்கிறார்கள். இதைக் கொண்டு வரும் நபர் தன் கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். புகை கக்கிக்கொண்டு இஞ்சின் உறுமுகிறது. அந்தப் புகையைக் கண்ணிலிருந்து நீங்கள் துடைத்துக் கொண்டிருக்கும்போதே, 'முடிந்துவிட்டது சார்' என்பார்கள். 'என்ன கணக்கு?' என்று நீங்கள் கேட்டால், 'எங்கள் பம்ப் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொட்டும். நாலு நிமிடம் ஆகிவிட்டது. நாலாயிரம் லிட்டர்', என்பார்கள். நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் கொட்டுவது என்பது சரிதானா என்பதையும், அந்தக் கணக்கின்படி உங்கள் தொட்டி நிரம்பியிருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் சிநேகிதர் தன் பட்டறிவின் மூலம் கற்றதைச் சொன்னதுதான் மேலே இருக்கும் குறிப்புக்கள். மற்றப்படி, மகளே, உன் சமர்த்து.

அமெரிக்காவில் நடைபெற்ற அக்கிரமத்தைப் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டுவிட்டதால், அது குறித்து என் அனுபவத்தையும் சொல்ல நினைக்கிறேன்.

அமெரிக்காவில் என் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தி அட்லாண்டிக் சமுத்திரக் கரையில் - நியூயார்க். இன்னொருத்தி பசிபிக் பக்கம் - லாஸ் ஏஞ்சலீஸ்.

பொதுவாக நானாக இருவரையும் தொலைபேசியில் கூப்பிடுவதில்லை. அவர்களே கூப்பிடுவார்கள். அல்லது இருக்கவே இருக்கிறது ஈமெயில். சில நாட்களுக்கு முன் நானாகக் கூப்பிட வேண்டிய ஓர் அவசியம் நேர்ந்தது. 186க்கு டயல் செய்தேன். 'நீங்கள் வரிசையில் உள்ளீர்கள். தயவுசெய்து காத்திருங்கள்' என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருந்தது. பிறகு நின்றுவிட்டது. இப்படியே டஜன் கணக்கான தடவை ஏற்பட்டு விட்டதால், டெலிபோன் டைரக்டரியைப் புரட்டினேன். எஸ். 7 என்ற பக்கத்தில், 'இன்ட்டர்நேஷனல் கால்ஸ்' என்ற தலைப்பின் கீழே, '186' ம் எண் தொடர்ந்து பிஸியாகவே இருந்தால் 5367060 என்ற எண்ணைக் கூப்பிடுங்கள்' என்று போட்டிருந்தார்கள். அந்த எண்ணைக் கூப்பிட்டேன். அங்கிருந்த பெண் ஆபரேட்டர் தங்கமானவள். 'எங்களுக்கும் இன்ட்டர்நேஷனல் காலுக்கும் சம்பந்தம் கிடையாது சார்,' என்று இனிமையாகவும் பணிவாகவும் பதில் சொன்னாள்.

'டெலிபோன் டைரக்டரியில் அப்படிப் போட்டிருக்கிறதே?' என்றேன்.

'பல வருடங்களாக டைரக்டரியில் அப்படியே போட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை மாற்றும்படி பலமுறை சொல்லிவிட்டோம். ஈயடிச்சான் காப்பியாக முந்தின வருடத்து டைரக்டரியில் என்ன போட்டிருக்கிறதோ அதையே போடுகிறார்கள்,' என்றாள்.

நார்மலான நாளில் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வதே இப்படியென்றால் பயங்கர செப்டம்பர் பதினொன்றாம் தேதியன்று கேட்கவே வேண்டாம்.

டிவியில் விபத்துச் செய்தி கேட்டதும் நியூயார்க்கில் பெண்ணும் மாப்பிள்ளையும், இரண்டு குழந்தைகளும் எப்படி இருக்கிறார்களோ என்று பதை பதைத்தோம்.

186 எண்ணுக்கு நூற்று எண்பத்தாறு முறைக்கு மேலேயே முயற்சி செய்தேன். (இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்துக்கு மட்டுமாவது 186 தவிர வேறு சில பிரத்தியேக எண்களும் கொடுத்திருக்கலாம். டெலிபோன் இலாகா தூங்கிவிட்டது.) கடைசியில் ஆபரேட்டர் மங்கை கிடைத்தாள். நியூயார்க்கிற்குத் தொடர்பு கிடைக்கிறதா என்று கேட்டேன். 'சில நம்பர்கள் சில சமயம் கிடைக்கிறது. எதற்கும் நீங்கள் நம்பரைச் சொல்லுங்கள். முயற்சி செய்து பார்க்கிறேன்,' என்றாள். சொன்னேன். மூன்றாவது நிமிடம் மணியடித்தது. 'உங்கள் நம்பர் கிடைத்துவிட்டது. பேசுங்கோ, பேசுங்கோ!' என்றாள். என்னைவிட அவளுக்கு அதிக சந்தோஷம் இருப்பது குரலில் தெரிந்தது.

பெண்ணும் மாப்பிள்ளையும் குழந்தைகளும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நியூயார்க்கில், பயங்கரவாதிகள் தாக்கிய அதே உலக வர்த்தக மையக் கட்டிடத்தில், இரண்டாவது டவர் தாக்கப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்கில் என் மருமகன் இருந்திருக்கிறார். எப்படியோ ஆபீசிலிருந்து வெளியேறி உயிர் தப்பி நியூஜெர்ஸியை அடைந்து விட்டாராம். கடவுள் அருளே அருள். எப்படி வெளியே ஓடி வந்தார், எப்படி நியூஜெர்ஸிக்குப் போனார் என்ற விவரங்கள் எனக்கு இதுவரை தெரியவில்லை.

லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிற பெண்ணையும் கூப்பிட்டு, பத்திரமாக இருக்கும்படி எச்சரித்தேன்.

அவளுக்கு ஏழு வயதில் ஒரு பையன் இருக்கிறான். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து படிக்கிற குழந்தை. 'ஏம்மா உலகத்தில் இப்படிப்பட்ட கெட்ட ஜனங்கள் இருக்கிறார்கள் என்று அவன் என்னைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா அப்பா?' என்று என் பெண் கேட்டாள்.

எனக்கும் தெரியவில்லை. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் போன்ற அருளாளர்களிடம் யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

உடலிலுள்ள அசைவும் ஒரு மொழிதான்

ரா.கி. ரங்கராஜன்

 

     ''டலசைவு மொழிகள்' (Body Language) என்ற சிறிய புத்தகத்தை (கண்ணதாசன் பதிப்பக வெளியீடு) அசரியா செல்வராஜ் என்ற அன்பர் எனக்கு அனுப்பியிருக்கிறார். என்னைத் தமது ஆசான் என்று குறிப்பிட்டுக் கடிதமும் எழுதியிருக்கிறார் (எப்போது, எப்படி இவருக்கு நான் ஆசான் ஆனேன் என்று ஞாபகமில்லை)

ஹிப்னாடிஸ மேதையான பேராசிரியர் ருஷிகுமார் பாண்டியாவின் சீடரான இவர், அவர் பெயரால் சுய முன்னேற்ற முறைகளைக் கற்பிக்கும் கழகமொன்றை நடத்திவருகிறார். அது குறித்துப் பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.

'உடலசைவு மொழிகள்' என்பது உரையாடல் இல்லாமலே, உடல் அசைவுகள் பாவங்கள் சேட்டைகள் மூலம் மற்றவரின் மனசைப் புரிந்துகொள்ளும் கலையாகும். நிறைய குட்டிக் கதைகளும் உதாரணங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. ஓரிடத்தில்--

'எப்படி மற்றவர்களது அங்க அசைவுகளை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அப்படியே உங்கள் அங்க அசைவுகளையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் உள்மனதில் கசப்புணர்ச்சி வெறுப்பு, அச்சம் போன்றவை இருக்குமேயானால் உங்களை அறியாமலே உங்கள் உடல் இந்த எதிர்மறை உணர்ச்சிகளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தக்கூடும்... அச்சம், திகில், பீதி, கலக்கம் போன்ற உணர்வுகளால் ஒருவர் பாதிக்கப்படும்போது அது அவரது சருமத்தில் வெளிப்படுகிறது முகம் வெளிர்வது என்பது மிக முக்கியமான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது...' என்ற வரிகளைப் படித்தேன். இது மிகவும் உண்மை என்பதற்கு ஆதாரமாக ஒரு கதை ஞாபகம் வந்தது.

திகில் பட டைரக்ஷனில் கொடி கட்டிப் பறந்த ஆல்பிரட் ஹிட்ச்காக் திகில்தனமான கதைகள் எழுதுவதிலும் மன்னர். அத்துடன் பல எழுத்தாளர்களின் திகில் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்புக்களிலிருந்து சுவையான சிய கதைகளை நான் மொழிபெயர்த்து தினமணி கதிர், சாவி குங்குமம் முதலான பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறேன் அவற்றிலே ஒன்று இது:

ஹாலிவுட்டில் ஒரு குட்டி நடிகன். ஓட்டலில் பணியாற்றும் அழகிய இளம்பெண் ஒருத்தியை மயக்கி மணம் செய்துகொள்கிறான். அவள் அவனிடம் விசுவாசமாக, காதலாக இருக்கிறாள். ஆனால் ஒரு பணக்கார நடிகை அவனிடம் காதல் கொண்டு படங்களில் சான்ஸ் வாங்கித் தருகிறாள். அவளை மணந்துகொண்டால் பெரிய ஹீரோவாக முன்னேறலாம் என்ற பேராசை அந்தக் குட்டி நடிகனுக்கு ஏற்படுகிறது. இளம் மனைவி ஒழிந்தால்தான் அது சாத்தியம்.

ஒருநாள் இரவு, மழையும் இருட்டுமான நேரத்தில் ஒரு சினிமா பார்த்துவிட்டுத் தியேட்டரிலிருந்து வெளிவரும் அவளை அவன் காரில் அழைத்துச் செல்கிறான். பிறகு அந்தப் பெண் காணாமலே போய்விடுகிறாள்.

குட்டி நடிகன் அவளைக் கொலை செய்துவிட்டான் என்று ஒரு துப்பறியும் நிபுணன் தீவிரமாக நம்புகிறான் அந்தப் பெண்ணைக் காதலித்து மணக்க ஆசைப்பட்டவன் அவன். குட்டி நடிகன் தான் கொலை செய்திருக்கிறான் என்று நிச்சயமாய்த் தெரிந்தபோதிலும் தகுந்த ஆதாரம் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்டவளின் உடலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தன் தவிப்பை ஒரு சினேகிதரிடம் சொல்கிறான். அந்த சினேகிதர் மனோதத்துவம் தெரிந்தவர். மேஜிக் ஷோ நடத்துகிறவர். மாஸ்டர் என்று அவரை அழைப்பார்கள்.

துப்பறியும் நிபுணனிடம் அவர் 'நீ நேரே அந்த நடிகனிடம் போ. 'உன் மனைவி கொலை செய்யப்பட்டு ஓரிடத்தில்ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறாள். கொலையைக் கண்ணால்கண்ட சாட்சியும் இருக்கிறான் என்னுடன் வா,காட்டுகிறேன்' என்று சொல்லி இங்கே அழைத்து வா, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்', என்கிறார்.

''அதெப்படி'.... என்று துப்பறியும் நிபுணன் சந்தேகம் கிளப்ப 'நான் சொன்னபடி செய்' என்கிறார் மாஸ்டர்.

அன்று இரவு குட்டி நடிகனை அழைத்து வருகிறான் அவன். மாஸ்டர் தன் சின்னக் காரில் அவனை ஏறிக்கொள்ளச் சொல்கிறார். துப்பறியும் நிபுணன் காரை ஓட்டுகிறான். நடிகனுக்கு மறுபுறம் மாஸ்டர் உட்கார்ந்து கொள்கிறார். அதாவது, ஓட்டுகிறவனுக்கும் மாஸ்டருக்கும் நடுவே நடிகன் நெருக்கினாற் போல் உட்கார நேரிடுகிறது. என் மனைவி கொலை செய்யப்படவில்லை.. சும்மா சொல்கிறீர்கள்' என்று அவன் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறான்.

மாஸ்டர் தன் சிநேகிதனிடம் நேரே இப்படிப் போ அங்கே திரும்பு இந்த வழி இல்லை, ஊகூம், அந்த வழி வலப் பக்கம் ஓட்டு ,மறுபடி இப்படி வா என்று இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுக்க, அதன்படியே அவன் வெவ்வேறு சாலைகள் வழியே ஓட்டுகிறான் குட்டி நடிகன் எரிச்சலுடன் 'எதற்காக இப்படிப் பைத்தியக்காரத்தனமாக எங்கேங்கோ ஓட்டுகிறீர்கள்?' என்று ஆட்சேபித்த வண்ணம் இருக்கிறான் மாஸ்டர் அவனை லட்சியம் செய்யவில்லை.

கடைசியில் ஒரு பாழடைந்து மூடப்பட்டுக் கிடக்கும் ஸ்டூடியோ வாசலில் காரை நிறுத்தச் சொல்கிறார். 'இங்கே... ஏன்... நான் வரமாட்டேன்' என்று குட்டி நடிகன் மறுக்கிறான் அவனைக் கையால் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார் மாஸ்டர். பல இடங்களில் சுற்றுகிறார். கண்டா முண்டா சாமான்கள் போடப்பட்டுள்ள ஸ்டோர் ரூமை அடைகிறார்கள். அங்கே ஒரு பழைய சவப்பெட்டி இருக்கிறது. குட்டி நடிகன் ஓடப் பார்க்கிறான். அவனைப் பிடித்துக்கொள்கிறார் மாஸ்டர் சவப்பெட்டியைத் திறந்தால், அதற்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கிடக்கிறது. குட்டி நடிகன் தன் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.

'எப்படி இதைக் கண்டுபிடித்தீர்கள்?' என்று துப்பறியும் நிபுணன் கேட்டதற்கு மாஸ்டர் சொன்ன பதில்.

'மேஜிக் மேதை ஹெளடினி தன் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் இதைச் செய்தேன். நம் இருவருக்கும் இடையில் அவன் நெருக்கி உட்கார்ந்திருந்தான் அல்லவா? நான் சொல்கிறபடியெல்லாம் நீ கண்டபடி ஓட்டினாய். சவத்தை ஒளித்துள்ள இடத்தின் திசையில் கார் போகும் போதெல்லாம் திகிலினால் அவன் உடம்பு இறுகியது. வேறு திசையில் செல்லும் போதெல்லாம் பயம் நீங்கி உடம்பு தளர்ந்தது. அந்த அதிர்வுகளையும் அசைவுகளையும் வைத்தே காரை ஓட்டச் சொன்னேன். ஸ்டூடியோவுக்குள் அவன் கையைப் பிடித்துக் கொண்ட போதும் அதை வைத்தே இடத்தைக்கண்டுபிடித்தேன். எந்தக் கொலையிலும் கண்ணால் கண்ட காட்சி ஒருவன் இருப்பான். கொலையைச் செய்தவன்தான் அந்தச் சாட்சி', என்று விளக்குகிறார் மாஸ்டர்.





     RSS of this page