Home / Ra ki Rangarajan1

Ra ki Rangarajan1ரா.கி.ர

நாற்பத்தைந்து வயதாகியிருந்தபோது ஒரு முறை திருப்பதிக்குப் போனேன் (நாற்பத்தைந்து வயது என்று சும்மா ஒரு மாறுதலுக்காகத்தான் சொல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, நாற்பது வருடங்களுக்கு முன்பு, பற்பல வருடங்களுக்கு முன்பு என்று சொல்லி சொல்லி எனக்கும் போரடித்துவிட்டது. உங்களுக்கும் போரடித்து விட்டிருக்கும்.)

சென்னையிலிருந்து கீழ்த்திருப்பதிக்குப் போக பஸ்ஸோ, ரயிலோ இருந்தது. கீழேயிருந்து மலைக்குப் போகும் பஸ்களுக்குத்தான் நெருக்கடி அப்போதெல்லாம். எப்படியோ ஒரு வழியாக மலையை அடைந்து, ஒரு தேவஸ்தான சத்திரத்தில் படுத்துத் தூங்கிவிட்டு காலை ஏழு மணி சுமாருக்குக் கோவிலை அடைந்தால்--

கூட்டமே கிடையாது. கியூவும் இல்லை. பிரதான வாயில் வழியாக நேரே உள்ளே போய் வெங்கடேசப் பெருமாளைக் கண்குளிர தரிசித்தேன். ரொம்பக் குறைவாகவே பக்தர் கூட்டம் இருந்தது. ஆகவே ஜரகண்டி ஜரகண்டி என்று யாரும் பிடித்துத் தள்ளவில்லை. முடிக் காணிக்கை செலுத்திய ஆந்திர கிராமவாசிகள் 'ஏழு கொண்டலவாடா, கோவிந்தா!' என்று விண்ணதிரக் கூவினார்கள். (இப்போதெல்லாம் நாகரிகம் அதிகரித்து விட்டது. 'கோவிந்தா! கோவிந்தா!' கோஷமிடுவதற்குக் கூச்சப்படுகிறார்கள்.)

தரிசனம் முடிந்தபின் மறுபடி வெளியே வந்தேன். வாசலில் கூட்டம் இல்லை. எனவே மறுபடியும் ஒருமுறை பிரதான வாசல் வழியாகவே நேரே போய் மறுபடியும் தரிசனம் செய்தேன். இப்படி மூன்று முறை உள்ளே போய் விட்டுத் திரும்பினேன்.

இந்த சம்பவத்துக்கு முன்பும் பின்புமாகப் பல முறைகள் திருப்பதி போயிருக்கிறேன். வருடத்திற்கு மூன்று முறை போய் வருவது சாதாரண விஷயமாக இருந்தது.

தரிசனம் மட்டுமல்ல, திருப்பதி லட்டு வாங்கி வருவதிலும் எந்தக் கஷ்டமும் ஏற்பட்டதில்லை. இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று விலை மட்டும் உயர்ந்துகொண்டு போயிற்று. ஆனால் அன்றைய லட்டு பத்துநாள்கூடக் கெடாமலே இருக்கும். திராட்சை, ஏலம், முந்திரி, கிராம்பு எக்கச்சக்கம். அதே தரம் இன்று இருக்கிறது என்று சொல்ல முடியாது.

பக்தர்களின் கூட்டம் ஏற ஏற லட்டுக்கு கிராக்கியும் அதிகமாகிவிட்டது. கோவிலுக்கு எதிரில் இருந்த ஒரு பாங்கில் விற்பனை செய்தார்கள். பிறகு தனித் தனியாகக் கவுண்ட்டர்கள் வைத்தார்கள். நடுவில் ஒருமுறை, தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்கிற மாதிரி, ஒருவர், 'இப்படி வாங்க, நான் வாங்கித் தருகிறேன்' என்று என்னை ஒரு கடைப்பக்கம் அழைத்துச் சென்று பத்து லட்டுகள் கொடுத்தார். அவ்வளவும் போலி! ஒரே நாளில் நாற்றம் எடுத்துவிட்டது. இப்படி ஒரு போட்டித் தொழிற்சாலை நடைபெறுவதை தேவஸ்தானத்தில் கண்டுபிடித்து, வெகு விரைவில் ஒழித்துவிட்டார்கள்.

சமீபத்தில் திருப்பதிக்குப் போயிருந்த போது, கோவிலுக்கு வெளியே மகா நீளமான க்யூ நின்றிருப்பதைக் கண்டேன். லட்டு வாங்குவதற்காகக் காத்திருந்த க்யூ அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தது. பெருமாள் படம் போட்ட பாலிதீன் பையில் டஜன் கணக்கில் லட்டு வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனந்தம்! பரமானந்தம்! கோட்டையைப் பிடித்துவிட்ட மாதிரி ஒரு வெற்றிப் பெருமிதம்! சுவாமி தரிசனத்தை விட லட்டு தரிசனமே பெரிது போலும்!

யோசித்துப் பார்த்தேன்.

இந்த லட்டு சமாச்சாரம் திருப்பதிப் பெருமாளுக்கு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. பழனி பஞ்சாமிர்தம் என்றால் புரிகிறது. பழனி முருகனுக்கு (எல்லா முருகனுக்குமே) பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கு அப்படி எதுவும் பண்ணுவதில்லையே? எங்கிருந்து வந்தது லட்டு?

வைணவப் பெரியவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டுமென்று நினைத்தபோது திருவஹீந்திரபுரம் உருப்பட்டூர் ஸெளந்தரராஜன் என்ற அன்பர் அறிமுகமானார். (அகப்பட்டுக்கொண்டார் என்றும் சொல்லலாம்) மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தாராபுரம் கூட்டுறவு நூற்பு ஆலையில் மானேஜிங் டைரக்டராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். ஸ்ரீ வேதாந்த தேசிக ரிஸர்ச் ஸென்டரின் போஷகர்களில் ஒருவரான இவர் 'ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம்--சில முக்கிய விஷயங்கள்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். லேட்டஸ்டாக, 'ஏன்--என்ன--எதற்கு?' என்ற புத்தகத்தை இயற்றி, எனக்கு அனுப்பி, என் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வைஷ்ணவர்களுக்கு மட்டுமே உரித்தான விஷயங்களைக் குறித்து, வைஷ்ணவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய நடையில் கேள்விகளும் பதில்களுமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. வைஷ்ணவர் அல்லாதார்க்கும் பயன்படக்கூடியதாகச் சில பொதுவான கருத்துக்களையும் அதில் கூறியிருக்கிறார். ஓரிடத்தில், 'ஒருவன் மரிக்கும் போது அவன் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவனிடம் பகைவர்களாக நடந்து கொண்டவர்களைச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ஏற்கெனவே செய்துள்ள பாவமூட்டைகளின் கனம் தாங்காமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், மேலும் பாவத்தைச் சம்பாதிக்காமல் தவிர்ப்பதற்காக நம்மிடம் பகைமை பாராட்டுவோரிடம் பாசத்துடன் பழகுவது நல்லது' என்று கூறியிருக்கிறார். இன்னோரிடத்தில், சின்ன வயதிலேயே கோவிலுக்குப் போகும் பழக்கம் ஏற்பட்டால்தான் பெரியவர்களான பிறகு எந்த ஊரில், எந்தக் கண்டத்தில் இருந்தாலும் அங்கே கோவில் இருக்கிறதா என்று விசாரித்து அறிந்துகொண்டு போக வேண்டும் என்று மனம் தூண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அரை வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு நீர் அருந்தி, மீதி கால் வயிற்றைக் காலியாக விட வேண்டும் என்றும், சாப்பிடும் போது பேசக்கூடாது என்றும், சாப்பிடும் சாப்பாட்டை நிந்திக்கக்கூடாது என்றும்--இதுபோல எல்லா மனிதர்களுக்கும் பொதுவான குறிப்புகள் பல தந்திருக்கிறார் ஸெளந்தரராஜன். (போன் எண்: 484 3986).

திருப்பதி லட்டு எப்போது எப்படி ஆரம்பித்தது என்று கேட்பதற்கு இவரே தகுந்த நபர் என்று தோன்றியதால் கேட்டேன்.

'இன்று நேற்றல்ல, திருப்பதி கோவில் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து இது இருந்து வருகிறது. திருப்பதி க்ஷத்திரத்தின் முக்கிய அம்சமே ஸ்ரீனிவாசர்--பத்மாவதி திருமணம்தான். கல்யாணமென்றால் கட்டாயம் லட்டு இருக்க வேண்டும். லட்டு இல்லாமல் கல்யாணம் இல்லை. வெங்கடாசலபதி--பத்மாவதித் தாயார் விவாகத்தின் போது ஆரம்பமான லட்டு, காலம் செல்லச் செல்ல ரொம்ப முக்கியத்துவம் பெற்று வருகிறது' என்றார் ஸெளந்தரராஜன்.

உண்மைதான். முக்கியத்துவம் என்றால் முக்கியத்துவம், உங்க வீட்டு முக்கியத்துவம் எங்க வீட்டு முக்கியத்துவம் இல்லை. திருப்பதிக்குப் போவதற்கு முன்னால் யாரிடமேனும் சொல்லிக்கொண்டால், 'வரும்போது லட்டு வாங்கி வா' என்கிறார்கள். வந்தபிறகு சொன்னால், 'லட்டு வாங்கி வந்தாயா?' என்று கேட்கிறார்கள்.

'நன்றாய்ப் பெருமாளை சேவித்தாயா?' என்று யாரும் கேட்பது கிடையாது.

(அண்ணாநகர் டைம்ஸில் ரா.கி.ர எழுதியது.)

நவம்பர் மாதம் அக்கறைக் கூட்டம்
கங்காசுதன்

 

மரர் அறிவு ஜீவி லா.ச.ரா. அவர்களுக்கு அஞ்சலி செய்த பிறகு தொடங்கியது நவம்பர் மாதக் கூட்டம். எழுத்துலகப்பிதாமகரின் மறைவுக்கு அன்பர்கள் அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியுள்ள ஜெயகாந்தன் நலம் பெற அக்கறை பிரார்த்தித்தது.. அவ்வாறே ஓவியர் தாமரை,(வாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்) நலம்பெற அக்கறை அன்பர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

ராணி மைந்தன் மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் சிலவற்றைச் செய்தபோது "கண் அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம்தேறி வந்திருக்கும் ராணி மைந்தனே, கூட்டத்தில் பங்கேற்பதற்குப் பாராட்டுக்கள்," என்றார் ஓர் அன்பர்.

அறிவிப்புகள்:-

வழக்கறிஞர் ராஜ நாராயணனின் வைணவம் பற்றிய உரையாடல் ஜெயா தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.

கெளசல்யா சிவகுமாருக்கு சரிகமபதநி அமைப்பு ''ஞான ஸ்ரீ'' என்ற பட்டம் வழங்குகிறது.

அன்பர் தருமராஜன் நடத்தும் ''புதுகைத் தென்றல்'' பத்திரிகை சிறுகதைப் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்குகிறது.

ஆனந்த விகடன், கல்கி அமுதசுரபி, போன்ற தீபாவளி மலர்களில் ஜ.ரா.சு., ஜே.எஸ்.ராகவன், காந்தலஷ்மி சந்திரமெளலி ஆகியோர் படைப்புகள் வெளியாகிப் பாராட்டுப் பெற்றிருக்கின்றன.

ஷ்யூமர் கிளப் லட்சுமணனின் 73வது பிறந்த நாள் விழாவை நகைச்சுவை மன்றம் கொண்டாடுகிறது.

னைவருக்கும் அக்கறையின் சார்பாகப் பாராட்டுகளை ராணி மைந்தன் தெரிவித்தார்.

லைவர் பாக்கியம் ராமசாமியின் 'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்' - (காத்தாடி ராமமூர்த்தி - மீரா கிருஷ்ணன் ஜோடி நடித்தது) ஸி.டி. (C.D.) டிசம்பரில் வெளியாகிறது.

''ஒவ்வொருவருக்கும் தனியாக அழைப்பிதழ் அனுப்ப இயலாது. ஆகவே டிசம்பர் 4ஆம் தேதி எல்லோரும் வாருங்கள்'' என்றார் பா.ரா.

க்கறையின் இந்த மாதம் புதிதாகக் கலந்துகொண்ட சேகர், திருநாவுக்கரசு மற்றும் கணேசன் (பார்வை இல்லாதவர்) ஆகியோரை அறிமுகம் செய்தார் ராணி மைந்தன். கணேசனை சிரமம் பார்க்காமல் அழைத்து வந்தவர் சரவெடி ஸ்ரீதர்.

லைவர் ஜராசு பேசுகையில் சமீபத்தில் ரா.கி ரங்கராஜன் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியதைக் குறிப்பிட்டார். அந்தப் பெரியவரின் கதைகளையும், மொழிபெயர்ப்பு நேர்த்தியையும் பாராட்டினார். ரா.கி. ரங்கராஜனின் ஆறு புத்தகங்களை ஒரே சமயத்தில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிடும் பெருமையைச் சுட்டிக்காட்டினார்.

ரா.கி.ர. தகப்பனார் மகா மகோ பாத்தியாய விருதுப்பெற்ற பேரறிஞர் வடமொழிப் பண்டிதர். திருவாரூரில் சமஸ்கிருதப் பண்டிதராக இருந்த அவர் கள்ளிக்கோட்டை சாமரின் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குள் அந்தப் பதவிக்கு வேறு யாரோ நியமிக்கப்பட்டுவிட்டார்கள். 'மலையாள பண்டிதர் போஸ்ட்தான் காலியாக உள்ளது' என்றனர். மலையாளம் தெரியாவிட்டாலும் பதவியை ஒப்புக் கொண்டுவிட்டார் ரா.கி.ர.வின் தந்தை.

இரண்டே மாதத்தில் மலையாளம் கற்று மாணவர்களுக்குப் போதித்த அறிஞர். மகா மகோ பாத்யாய கிருஷ்ணமாச்சாரியார். அப்படிப்பட்டவரின் புதல்வர் எப்படி இருப்பார்? வியக்கவே வேண்டாம்! நேரம் கடந்ததால் ராணி மைந்தன் மணி அடிக்க மைக் ராகவன் கைக்குப் போனது.

மிகச் சிறந்த ஓவியர்களுக்கு STROKE எனப்படும் நோய் வருவதன் காரணம் என்ன? கோபுலு சொன்னதுபோல ஓவியர்கள் கோடுகள் STROKE போடுவதால் இருக்குமா? இதய நோயால் பாதித்த ஓவியர்கள் செல்லம், நடனம் போன்று ஓவியர் தாமரையும் இப்போது நரம்புத் தளர்ச்சியால் வாடி இருக்கிறார். ஓவியர்களுக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்களை யாராவது ஆய்வு செய்தால் தேவலை என்றார் ஜே.எஸ் ராகவன்.

அன்பர் ஞானப் பிரகாசம் வானொலி நிலையத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் இனி எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடக் கூடும்.

ங்காசுதன் பேசுகையில் சில விஷயங்களைச் சற்று மாற்றி அமைத்தால் சுவை கூடுகிறது என்றார். கருத்தைக் கவர்கிறது, பிரமிக்க வைக்கிறது என்றார்.

குமுதம் இதழ் ஒன்றில் 'சிவாஜி கணேசனின் இதயம் நிமிஷத்திற்கு 72 முறை துடிக்கிறது, எம்.ஜி.ஆர் உடலில் 206 எலும்புகள் உள்ளன' என்று நடுப்பக்கப் படங்கள் பிரமிக்க வைத்தன. மனிதர்கள் எல்லாருக்குமே அதே நிலைதான்! அவர் சொன்ன மற்றொரு தகவல். கம்யூனிஸ்டுகள் இனி DAS CAPITAL படிக்காமல் DAS PRIVATE CAPITAL படிப்பார்கள் போல இருக்கிறது என்பதை வங்காள நந்திகிராமம் நிகழ்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ராஜநாராயணன் ஜெயா தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி கனடாவில் வானொலியில் ஒலிபரப்பினார்கள் என்பதை அவர் அங்குள்ள சகோதரி மூலம் தெரிந்து கொண்டேன் என்றார் மகிழ்ச்சியுடன்.

ழைப்பிதழ்களில் அதிகாரிகளின் பதவியைப் பிரசுரிப்பது ஏன் என்று கேட்டார் கடுகு. உதாரணம் திலகவதி IPS!

பூமியில் இருந்து பிரிந்து சென்ற கிரகம் செவ்வாய். இதற்கு ஜோதிடத்தில் குஜன் என்று பெயர். இதற்குப் பிள்ளை என்று பொருள். செவ்வாய்க்கு அதிபதி முருகன். அந்தக் கிரகத்தில் குன்றுகள் உள்ளன. குன்று உருவாய் வந்த சூரனை சம்ஹாரம் செய்தவன் தேவசேனாதிபதி முருகன். இத்தகைய புராணம் கிரேக்க நாட்டிலும் உண்டு. இப்போதைய வானவெளி ஆராய்ச்சிகள் நமது புராண நிகழ்வுகளை நிஜம் என்று விளக்குகின்றன என்றார் பாலு என்னும் நகுபோலியன்.

வேலைக்காரி ஜோக்ஸ் என்ற பெயரில் வெளிவரும் ஹாஸ்யங்கள் ரசனைக் குறைவாக உள்ளன என்று வருந்தினார் பாலர்மலர் புகழ் வெங்கடராமன்.

முதாய வானொலிகள் சில நஷ்டத்தில் நடந்தாலும் தொடர்கின்றன என்றார் ஜெய சக்திவேல். சீனப் பெண்கள் தமிழ் கற்றுக் கொண்டு சீன மொழியைத் தமிழ் மூலம் இலவசமாகக் கற்றுத் தர முன் வந்திருக்கிறார்கள். தேவையானவர்கள் சீன வானொலியை அணுகலாம் என்றார் அவர்.

எஸ்.வி. சேகர் நாடகக் குழுவில் நடித்த டி.வி. நாராயணன் சீன மொழியில் எழுத்துக்கள் அதிகம். ஆதலால் கற்பது சிரமம் என்றார். 'நெல்லையில் மேட்டுத் திடல் என்ற இடத்திற்கு டிக்கெட் கேட்டால் அது புரியாத கண்டக்டருக்கு High Ground என்று விளக்க வேண்டி வந்தது. தமிழர்கள் நிலை இன்று இவ்வாறு இருக்கிறதே' என்று விசனப்பட்டார் அவர்.

பாலித்தீவு, மலேசியா போன்ற வெளிநாட்டிற்குச் சென்ற தேவி நாராயணி மகிழ்ச்சியுடன் தெரிவித்த சேதிகள்:-

அயல் நாட்டினரை அங்கு விமான நிலையத்தில் மாலை மரியாதை செய்து வரவேற்கிறார்கள்.

நல்ல சைவ உணவு கிடைக்கிறது.

குடும்பம், கோவில், கலாச்சாரம் போன்றவை நம் நாட்டைப் போன்று இருக்கின்றன.

சிவன், ராமன், கிருஷ்ணன், பிள்ளையார் கோவில்கள் உள்ளன.

மகாபாரத, ராமாயண நாடகங்கள் நடக்கின்றன.

சிற்பங்கள் சிறப்பாக உள்ளன.

மதுபானம் குடிப்பவர்கள் மிகக் குறைவு.

நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தால் பலவகை மீன்கள், எட்டுக் கால் ஜந்துவான் ஆக்டோபஸ், நான்கு விரல் மீன்கள், பவளப் பாறைகள் போன்றவற்றைக் காணலாம்.

சூரிய நமஸ்காரம் செய்பவர்களைக் காணமுடிகிறது.

செட்டியார் குடும்பங்களுக்கு நில நஷ்டஈடு தருகிறார்கள். மலேசியாவில் இருந்த மூதாதையர்கள் நிலம் அந்த நாடுகளில் இருந்தால் செட்டியார் குலச் சந்ததிகள் உரிமை கோரலாம்

ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் துரித உணவுக்குப் பதிலாக மெதுவாகக் கடித்து ஆற அமரச் சாப்பிடும் பழக்கம் வந்துள்ளது. FAST FOOD கலாச்சாரம் மங்கி வருகிறது. வாழ்க்கையையும் நிதானமாக மெதுவாக அனுபவிக்கும் நிலை வளர்கிறது என்றார் ஜி.எஸ்.எஸ்.

'ஸெபி' என்னும் கம்பெனிகள் நிர்வாக அமைப்பு இப்போது பலம்பெற்று வருகிறது. பங்குச் சந்தைகளில் சினிமாத்துறைப் பங்குகள் விலை குறைகின்றன. அவைகளை வாங்கலாம் என்று ஆலோசனை கூறினார் கிருஷ்ணமூர்த்தி.

'ஹோசூரில் உள்ள அனாதைப் பெண்கள் ஆசிரமத்திற்கு தன்னை அழைத்துச் சென்றார் சியாமளா' என்று தெரிவித்தார் காந்தலட்சுமி சந்திமெளலி. நேர்முகச் சிந்தனை, உடல்நலம் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார் நிர்வாகி கெளதமன். இங்குள்ள ஒரு பெண்ணை ஓர் ஆட்டோ டிரைவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.. என்றும் குறிப்பிட்டார்.

நல்ல காரியம் செய்தால் மற்றவர்கள் தானாகவே வந்து உதவி செய்கிறார்கள் என்று மகிழ்ந்தவர் சியாமளா தன்னைப் பற்றிப் பத்திரிகைகளில் காந்தலட்சுமி சந்திரமெளலி எழுதுவதைப் பற்றி நன்றி கூறினார். பா.ஜ.க தலைவர் இல.கணேசன் நான்கு பெண்கள் பராமரிப்புக்கு ஆகும் செலவை ஏற்கிறார். ஒரு நபர் வீட்டுக்கு வந்து 50,000 ரூபாய் செக் கொடுத்துவிட்டுச் சென்றார். பெண்கள் டிரஸ்டுக்கு உதவி செய்ய மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சேவை செய்யக் காத்திருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் பெருமைப்பட்டார் அவர்.

ளைய தலைமுறைக்கு நமது கலாச்சாரம் தெரியவே இல்லை என்று வருந்தினார் ஆசிரியை நாகலட்சுமி. சைவ நெறி என்றால் வெஜிடேரியன் என்கிறார்கள் மாணவர்கள். கடன் அன்பை முறிக்கும் என்றால் எனக்குத் தேவை பணம். அன்பு

முறிந்தால் கவலை இல்லை என்கிறான் ஒரு சிறுவன்.

 

கர்ப்பிணியான பசுமாட்டைக் கொதிக்கும் வெந்நீரில் இறக்கி அதைக் கொன்று கன்றுக் குட்டியைக் கத்தியால் வெட்டி எடுத்த தோலில் காலணி செய்து அநியாய விலைக்கு விற்கிறார்கள். இத்தகைய காலணிகள் தேவையா? என்று ஆத்திரப்பட்டார் நேமத்து ஞானம்.

எஸ்.வி. சேகர் தனது தொலைக் காட்சி நாடகத்தில் நடித்திருக்கிறார் என்றால் பாலா விஸ்வநாதன். இவரது 'மீரா-மீரா' என்ற நாடகம் டெல்லித் தொலைக்காட்சியில் சப்-டைட்டில்களுடன் வெளிவந்திருக்கிறது. பாக்கியம் ராமசாமியின் கதைகள் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டால்தான் இன்னும் புகழ் கிடைக்கும் என்றார்.

சிதம்பரம் இரு அன்பர்களை அறிமுகம் செய்தார்:-

முதன்முறையாக வருகை தரும் சேகர் ஒரு தச்சுத் தொழிலாளி. சாப்பாட்டு நேரத்தில்கூட இவர் எழுதிக் கொண்டிருப்பார். வீட்டுக்கார அம்மாள் கொடுத்த தேநீரைப் பற்றிக் கவிதை எழுதி உள்ளார்.

அதேபோல திருநாவுக்கரசர் என்ற அன்பர் தனது தந்தை அவரைக் கணிப்பொறியாளராக ஆக்கவேண்டும் என்று விரும்பினாலும்கூட தமிழ் முதுகலைப் பட்டம் பெற்று இப்போது சட்டக் கல்லூரியில் சேந்திருக்கிறார். கவிதை புனைகிறார்.

டுக்குமாடி வீடுகளில் பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு சுத்தம், உடல் நலம், யோகா போன்றவைகளைக் கற்றுக் கொடுத்து மதியம் உணவும் அளிப்பதாக உஷா ராமகிருஷ்ணன் தெரிவித்தார். வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற பிளாட்டுகளிலும் இத்தகைய நிகழ்ச்சி நடத்தத் தயார் என்றார் அவர். அவரது புத்தகம் 'பெண்ணால் மட்டுமே முடியும்?' வெளியிடப்பட உள்ளது.

சேகர் தான் எழுதிய ''சாக்கடைத் தொழிலாளியைப் போற்றி ஒரு கவிதையை வாசித்தார்.

ப்பானிய மொழியின் உதவியுடன் தான் சீன மொழியை எழுத முடியும். ஜப்பான் மாமி தெரிவித்த கருத்து இது. 'மாமி' என்றால் அந்த அம்மணியின் பெயர்தான்! கல்லூரி மாணர்களே சில ஆயிரம் எழுத்துக்களே கற்கும் சீன மொழியில் மொத்தம் 4 லட்சம் எழுத்துக்கள் உள்ளனவாம்! இதைத் தெரிவித்தவர் புதுகை தர்மராஜன்.

ஹிந்து மிஷன் மருத்துவமனையில் பணிபுரியும் கணேசன் சென்னைக்கு அருகில் உள்ள அன்னபாபா மந்திர் குன்றைச் சுற்றி மூன்று பெளர்ணமிகள் கிரிவலம் வந்தால் பல பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது என்றார்.

நாடகங்களில் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களுக்கு எஸ்.வி. சேகரின் பதில் என்ன என்று விளக்கம் கேட்டார் ராணி மைந்தன்.

எஸ்.வி. சேகர் பேசுகையில் ''இரட்டை அர்த்தம் எப்போதுமே இருக்கிறது. அதை இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறாீர்கள். எது ஆபாசம்! எது லஞ்சம்? இது காலப் போக்கில் மாறி வருகிறது. மொழி கற்றுக்கொள்வது நல்லதுதான். இந்தி மொழி கற்காததால் தமிழ் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இப்போது சமஸ்கிருத பாஷையைக் கூட 10 நாளில் கற்றுத் தருகிறார்கள்.'' என்றார்.

நகைச்சுவை உணர்வு உடையவர்கள் வாழ்க்கை சோகமாக இருக்கும் என்று பயமுறுத்தாதீர்கள். எல்லோர் வாழ்க்கையும் மனநிலைப்படியே அமைகிறது. இப்போது ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இளைய தளத்திலும் உலகம் முழுவதும்

பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

S.Ve. சேகர் தன்னுடைய நாடகத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை நோயாளிகள் பராமரிப்பு, ஏழை மாணவர் கல்வி, அனாதைச் சடலங்களை பெற்று அவைகளுக்கு இறுதி மரியாதை செய்வது போன்றவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறார். நாம் எல்லோருமே சிறு தொகையை நற்பணிகளுக்கு அற்பணிக்கலாம் என்றார். சியாமளாவின் நற்பணிக்கு உதவி செய்வதாகவும் முடிந்தால் நாடகம் நடத்தவும் தயார் என்றார்.

முன்பு ஆடம்பரமாக இருந்த பல பொருள்கள், வசதிகள் இப்போது தேவையாக மாறிவிட்டன. ஆகவேதான் ஊழியர்கள் சம்பளத்திற்கு மேல் லஞ்சம் வாங்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அவர் சொன்ன கருத்து சிந்திக்க வைக்கிறது.

மக்கள் தங்கள் குறைகளை தன்னுடைய இ-மெயில் விலாசத்திற்கும் அனுப்பி வைக்கலாம், குறை தீருகிறதோ இல்லையோ அந்தக் குறைபாடுகள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று உறுதியளித்தார் சேகர்.

நேரமின்மை காரணமாக சிலர் தங்கள் கருத்துக்களைக் கூறமுடியாதபோது ஒரு புறம் சங்கடம். ஆனால் அக்கறை வட்டம் வளர்ந்து பலர் கூடி தங்கள் கருத்துக்களை வெளியிடவும் ஒரு நல்ல மன்றம் அமைந்திருக்கிறது என்ற பெருமிதமும் மகிழ்ச்சியும் மறுபுறம் மேலோங்க அடுத்த மாதக் கூட்டத்தை எதிர்பார்த்து அன்பர்கள் கலைந்தனர்.

விழுந்து விழுந்து எழுந்த குழந்தை


ழெட்டு நாட்கள் முன்பு சாயந்தரம் ஐந்து மணி வாக்கில் 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தேன். ('ஜாகிங்'கை விட மெதுவாகப் போனால் 'வாக்கிங்'. வாக்கிங்கைவிட மெதுவாகப் போனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. Inching என்று சொல்லலாமோ?) இன்ன இடத்துக்குப் போவதென்கிற இலக்கு ஏதும் இல்லாமல் நடந்துகொண்டிருந்தபோது, "கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?" என்ற வரிகளை நினைத்துக் கொண்டு (இது கண்ணதாசன் தானே?) நிமிர்ந்து பார்த்தபோது டவர் பார்க்கை அடைந்திருப்பதை உணர்ந்தேன்.

இந்தப் பார்க் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சில வாரங்களுக்கு முன் ஹிந்துவில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று உள்ளே போக எண்ணினேன். வாசலில் பசும்பச்சை வெள்ளரிப் பிஞ்சுகளை வண்டியில் குன்றாகக் குவித்து வைத்துக் கொண்டு மிளகாய்ப் பொடியும் சேர்த்து விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். வெள்ளரிப் பிஞ்சென்றால் எனக்கு உயிர். இருபது பிஞ்சுகளை ஒரே மூச்சில் சாப்பிடுவேன். ஆனால் உயிரான விஷயங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று டாக்டர் எச்சரித்திருந்ததால், ஐஸ்கிரீம் வண்டியை நோக்கிக் கை நீட்டும் குழந்தையைத் தாயார்க்காரி தரதரவென்று அப்பால் இழுத்துக் கொண்டு போகிற மாதிரி, ஆசையை நெட்டித் தள்ளிவிட்டு நடந்தேன்.

உள்ளே நுழைவதற்கு சுழல் கதவு. அதைக் கண்டால் எப்பவுமே எனக்கு பயம் - நடுவில் சிக்கிக் கொண்டு 'நாலு பேர்' சிரிக்கிற மாதிரி செய்து கொண்டு விடுவோம் என்று. (எஸ்கலேட்டர் என்றாலும் அப்படித்தான். அதுவும் அந்த கடைசிப்படி! ஆனால் ஒவ்வொருவர் எத்தனை லாகவமாய் அதைக் கடக்கிறார்கள்!)

 

 


 

சுழல் கதவை வேறு யாராவது தள்ளிக் கொண்டு போனால், அடுத்த வளைவுக்குள் புகுந்துகொண்டு உள்ளே போய் விடலாம் என்றெண்ணி இரண்டு நிமிடங்கள் நின்றேன். யாரும் வரவில்லை. ஆனால் பார்க்கின் உள்ளேயிருந்து வெளியே போக ஒரு சுடிதார் மங்கை வந்தாள். அவள் அந்தப் பக்கம் தள்ளட்டும், நாம் இந்தப் பக்கம் புகுந்துவிடலாம் என்று தோன்றியது. மேலும் ஒரு நிமிடம் நின்றேன். அந்தச் சுடிதாரிணி, பெரியவர் முதலில் உள்ளே வரட்டும் என்று நினைத்தவள் போல அங்கேயே நின்றாள். என்னடா இது வம்பு என்று திகைத்தேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தப் பெண் சுழல்
கதவின் குழாய்களைத் தொடாமல், அதற்கும் சுவருக்கும் இருந்த இடைவெளி வழியாகவே வெளியே வந்து விட்டாள் - கடவுள் அவளுக்கு அவ்வளவு மெல்லிய தேகத்தைக் கொடுத்திருந்ததால்.

எப்படியோ உள்ளே நுழைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்க் சுத்தமாகத்தான் இருந்தது. குப்பை கூளம் கண்ணில் படவில்லை. ஆனால் பாதைகளில் தரை காய்ந்து கெட்டியாகி, லேசான செம்மண் நிறத்துடன் கரடுமுரடாக இருந்தது. பசும் புல்வெளிகள் அதிகமில்லை. செடிகளைக் காட்டிலும் மரங்களே அதிகம். உள்ளத்தில் குதூகலம் ஏற்படுத்துகிற நீரூற்றுகள் இல்லை. அது ஒரு செவ்வாயோ, புதனோ, எனவே அதிகமான நடமாட்டம் இல்லை. ஒரு மரத்தின் கீழே இருந்து வட்ட மேடையின் ஓரமாக உட்கார்ந்து தலைக்கு மேலே காக்கை எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கொஞ்சம் தள்ளி ஒரு தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், பொத்தான் போடாத ஷர்ட்டுடன் ஒரு நரைத் தலையரும் உட்கார்ந்திருந்தார்கள். அது சிறிய புல்தரை. எவர் சில்வர் தூக்கில் கொண்டு வந்திருந்ததை உண்டுவிட்டு, பாட்டிலிலிருந்து நீர் குடித்தார்கள். வயதான பெண்மணி வெற்றிலை பாக்கை மென்றுவிட்டுப் புளிச்சென்று துப்பினாள்.அவர்கள் போன பிறகு அங்கே வந்து உட்காரக்கூடிய நபரை நினைத்துப் பரிதாபம் ஏற்பட்டது.

சில தெரு நாய்கள் மகா பயங்கர வேகத்துடன் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடின. கடித்தால் என்னாவது என்று குலை நடுங்கி, காலைத் தூக்கி வைத்துக் கொண்டேன்.

எதிரில் வண்ண வண்ணமான உடைகளுடன் டவரில் ஜனங்கள் ஏறுவதும், இறங்குவதும் ஓர் அழகான காட்சியாக இருந்தது.

ஆறு மணிக்குப் பிறகு டவரின் மேலே போக அனுமதி கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ஆறரை, ஆறே முக்காலுக்குக் கூட ஜனங்கள் அங்கே போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.

இடுப்பில் ஒயர்ப் பையும், கையில் கோலாட்ட சைஸில் குச்சியுமாகச் சில பெண்கள் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குறி சொல்கிறவர்கள். ஆசையாயிருந்தது, குறி கேட்கலாமா என்று, ஆனால் அவர்களில் யாரும் என் பக்கம் வரவில்லை. ஓர் இளம் ஜோடியை நோக்கிப் போய்விட்டாள் ஒருத்தி.

'சுண்டலேய்!' என்று கூவிய வண்ணம் ஒரு சிறுவன் அலுமினியத் தூக்குடன் சென்றான். கூடவே ஒரு தோழன். "வீட்லே கேட்டாங்கன்னா கை தவறிக் கொட்டிடிச்சுன்னு சொல்லிடுவேன்" என்று சுண்டல் பையன் ஒரு பொய் நாடகத்துக்கு வசன ஒத்திகை பார்த்துக் கொண்டு போனான்.

முப்பது வயதில் ஒரு கணவனும், இருபத்தைந்து வயதில் ஒரு மனைவியும், தங்களுடைய மூன்று வயதுக் குழந்தையுடன் போனார்கள். குழந்தையின் ஒரு கையை இவனும் மறு கையை அவளும் பிடித்து நடத்தினார்கள். ஆனால் அது தரையில் கால் பதிக்காமல் எம்பி எம்பி ஊஞ்சலாடியது.

கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்கள் நிறைய வர ஆரம்பித்தார்கள். பல வகையான வயது, பல வகையான நிறம், பல வகையான தோற்றம். ஆனால் என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான முகங்களில் உல்லாசமோ சிரிப்போ தென்படவில்லை. இறுக்கமாக இருந்தன. இன்றைய சமூகத்தின் அழுத்தும் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஒரு வேளை என் மனத்தினுள் இருந்த இறுக்கத்தை அவர்கள் முகத்தில் கற்பனை செய்து கொண்டேனோ என்னவோ. கவலை நிறைந்த முகங்கள். கவலையைப் பகிர்ந்து கொள்ளும் முகங்கள். கவலையே இல்லாததுபோல் பாசாங்கு செய்யும் முகங்கள்...

எழுந்து கொண்டேன். வந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் இழந்துவிட்ட மாதிரி இருந்தது. அப்போது ஒரு காட்சி :

மிகச் சிறிய வழுக்கு மரம். மூன்று வயதுக் குழந்தைகள் மட்டுமே ஏறி விளையாடக் கூடியது. ஏறும் படிகளும் மூன்றேதான். அதில் மேலே ஏறி, பலகையில் வழுக்கி மறுபுறம் இறங்க வேண்டும். ஒரு தந்தை தன் குழந்தையை ஏணியினருகே அழைத்துப் போனார். அது ஏணி வழியே ஏறாமல் முன்புறமாக ஓடிவந்து, சறுக்க வேண்டிய பலகையில் ஏற முயன்றது. முழு உயரம் கூட ஏற முடியவில்லை. வழுக்கி வழுக்கி விழுந்தது. "அப்படியில்லை. இங்கே வா, இப்படி ஏறி அங்கே உட்கார்ந்து வழுக்கணும்" என்று அதன் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அது, மறுபடி வழுக்கும் இடத்துக்கே திரும்பி, இரு புறத்தையும் பிடித்துக் கொண்டு ஏறவே முயன்று கொண்டிருந்தது. எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்று மனித உள்ளத்துக்குள் இருக்கும் விடா முயற்சியையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி. அந்தக் குழந்தை வெற்றி பெற்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உள்ளம் லேசாகி உதட்டில் புன்னகையுடன் வீட்டுக்கு நடந்தேன்.


நகைச்சுவைக் கட்டுரை (கதை) எழுதுவது எப்படி?

பாக்கியம் ராமசாமி

குமுதம் காரியாலயத்தில் நான் உதவி ஆசிரியராகச் சேர்ந்து கொஞ்ச நாளிலே இந்த ரகசியம் எனக்கு என் அரிய நண்பர் ரா.கி. ரங்கராஜன் அவர்களால் கூறப்பட்டது.

அந்த ரகசியம் அவருக்கு லட்சுமணன் என்னும் உதவி மானேஜரால் கூறப்பட்டது.

கீதையில் பகவான் சொன்னார். யோகத்தை முதலில் அவர் விவஸ்வானுக்கும் (சூரியன்), விவஸ்வான் மனுவுக்கும், மனு இட்சுவாகுவுக்கும், இட்சுவாகு வேறு ரிஷிகளுக்கும் பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது என்றும் பல கைகள் (வாய்கள்) மாறியதால் யோகமானது நஷ்டமாகிவிட்டது. அதை உன்னிடம் நானே மறுபடி சொல்வதற்குக் காரணம் மேற்படி யோகம் சரிவரப் புரிந்து
கொள்ளப்படாமல் மறைந்து வருவதால்தான் என்றார்.

நகைச்சுவையும் பரம்பரையாக ஒருத்தர் இன்னொருத்தருக்குச் சொல்லி (அல்லது அன்னாரது எழுத்துக்களைப் படித்து) வந்த வித்தை என்று ஓரளவு கூறலாம்.

ரா.கி.ர. அவர்கள் குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது உதவி மானேஜர் அவரிடம், ஓர் அறையைக் காட்டி, "அந்த ரூமுக்குள் போய் விடாதீர்" என்று எச்சரித்தாராம்.

"அப்படிப்பட்ட பயங்கரமான விஷயம் அந்த ரூமில் என்ன இருக்கிறது?" என்ற ரா.கி.ர. கேட்டதற்கு உதவி மானேஜர், "அங்கே உதவி ஆசிரியர் நாராயணன் உட்கார்ந்து ஜோக் எழுதிக் கொண்டிருக்கிறார். சிண்டைப் பிய்ச்சிக்கிட்டு எழுதிக்கிட்டிருப்பார். போனால் வள்ளுனு விழுவார், அடித்தாலும் அடித்து விடுவார்" என்று விளக்கினாராம்.

நாராயணன் என்பவர் ரியரின் நெருங்கிய வக்கீல் நண்பர். ஜோக் எழுதுவது என்பது அத்தனை கஷ்டப் பிரசவமாக இருந்திருக்கிறது - அதாவது ஒரு சிலருக்கு.. இதிலுள்ள பெருங்கஷ்டம் என்னவென்றால் அந்த ஜோக்குக்கு முதலில் ஆசிரியர் சிரித்தாக வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு புன்னகைக் கீற்றாவது அவர் உதடுகளில் தோன்றினால்தான் அது பிரசுரமாகும். இல்லாவிட்டால் நாராயணன் மறுபடி சிண்டைப பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

நகைச்சுவை என்பது சர்க்கஸில் வரும் குள்ளக் கோமாளிகளின் கூத்து அல்ல. அதற்கு அரசியல் அந்தஸ்து உண்டு என்பதும் அது நுட்பமான அறிவு சம்பந்தப்பட்டது என்பதும் பேராசிரியர் கல்கி அவர்களின் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் படித்தவர்களுக்குப்புரியும். சமூகத்தை - மனிதர்களை - மனம் நோகாமல் கிண்டலடித்துத் திருத்தக் கூடிய சுவையான மருந்து அது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலக் கண்டனங்களையும் கல்கி தெரிவிக்கும் அழகே அழகு.

நடு ராத்திரியில் கல்கி ஏன் கதவைத் தட்டினார்?

நகைச்சுவைச் சக்ரவர்த்தியான கல்கி ஒரு தினம் நட்ட நடு ராத்திரியில் திருவண்ணாமலைக்கு உதவியாளருடன் போய் ஒருத்தர் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பெரியவர், "என்ன விஷயமோ? இரண்டு மூணு பேர் நடுராத்திரியில் காரைப் போட்டுக் கொண்டு வந்து கதவைத் தட்டுகிறார்களே," என்று திகைத்து "என்ன விஷயம்" என்று விசாரித்தார்.

கல்கி அவர்கள், "அகாலத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். உங்களைப் பார்க்கணும்னுதான் மெட்ராஸ் ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வர்ரோம். நான் அதன் ஆசிரியர் கல்கி. நீஙகள் எங்கள் மலருக்கு ஒரு நகைச்சுவைக் கதையோ, கட்டுரையோ தமிழில் எழுதித் தர வேண்டும். இங்கிலீஷில் நீங்கள் எழுதிய கட்டுரையை படித்துப் பரவசப்படுவேன். எப்படியாவது நீங்கள் தமிழிலும் எழுத வேண்டும்," என்றார்.

அந்தப் பெரியவர் சந்தோஷப்பட்டாலும், "அதுக்குன்னு நடு ராத்திரியில் வந்து கதவைத் தட்டிக் கேட்கணுமா?" என்றார். கல்கி அவர்கள், "நீங்க மட்டும் உங்கள் கட்டுரைகள் மூலம் என்னை எத்தனை நடுராத்திரிகளில் சிரிக்க வைத்திருக்கிறீர்கள். அது பரவாயில்லையா?" என்றாராம்.

அந்தப் பெரியவர் பெயர் எஸ்.வி.வி.

நாராயணன் ஜோக் எழுதியதையும், கல்கி கதவைத் தட்டியதையும் ஏன் கூறினேன் என்றால் நகைச்சுவை எழுதுவது கடினம், நல்ல நகைச்சுவை இருந்தால் கதவைத் தட்டியாவது கேட்டு வாங்கிப் போடுவார்கள் என்பதற்காகத்தான்.

ஆகவே 'சிரிசிரி' இதழுக்காக சிண்டை பிடித்து கொண்டு சிரிப்புகள் எழுதி அனுப்புங்கள்.

உங்கள் சிரிப்பு தரமானதாக இருக்குமானால் உங்கள் வீட்டு கதவை நடுராத்திரியில் தட்டி வாங்கிப் போகவும் 'சிரிசிரி' தயங்காது. அது சரி, நகைச்சுவை, கட்டுரை, கதை எழுதுவது எப்படி என்று விளக்கவில்லையே என்று வாசகர்கள் கேட்கக் கூடும்.

'சிரிசிரி'யை தொடர்ந்து படித்து வந்தால் அந்த வித்தை ஒருத்தருக்கு தானாக வந்து விடும்!

மாதம் இருமுறை சந்திப்போம்.
நன்றி

ஆசிரியர்

ஆபீசில் நடந்தது

ஆசிரியர்(திடுக்கிட்டு) : என்னய்யா துணை ஆசிரியரே ஆசிரியருன்னு போட்டு கமல் படத்தை போட்டிருக்கிறீரே.

துணை ஆசிரியர் : பதறாதீங்க! உங்க மூஞ்சி அம்சமா யில்லைன்னு கமல் படத்தை போட்டிருக்கிறேன். க்ளிக் பண்ணீங்கன்னா உங்க படம் தெரியும்.

உங்கள் சிரிப்புகள் வந்து சேர வேண்டிய முகவரி :
22/2, Harrington Road, Chetpet, Chennai - 31, India.

'ஒண்டர்ஃபுல் நியூஸ்'

 

  'கல்கண்டு' இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் என்பால் மிகுந்த பிரியம் வைத்திருந்த நண்பர்களில் ஒருவர். அவர் காலமானபோது நான் விழுந்து புரண்டு கதறியதைப் பார்த்து எல்லாருக்கும் அதிர்ச்சி. 'சும்மா நடிக்கிறேன்' என்று கூட சிலர் நினைத்திருப்பார்கள். உண்மையில், குமுதம் காரியாலயத்தில் சேர்வதற்கு நாலைந்து வருடங்களுக்கு முன்பே நானும் அவரும் 'சக்தி' மாத இதழில் இணைந்து பணியாற்றியிருந்தோம். வாடா போடா அளவுக்கு இல்லாவிட்டாலும் வாப்பா போப்பா அளவுக்கு சினேகிதம். நான் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் கல்கண்டு இதழில் என்னை எழுத வைத்து இருபது ரூபாய் முப்பது ரூபாய் என்று அன்பளிப்பு வாங்கித் தந்ததை மறக்க முடியாது.

சிறிது காலம் கல்கண்டில் நான் அவருக்கு உதவியாளராக இருந்த போது. ஏதாவது 'ஒண்டர்ஃபுல் நியூல் இருந்தால் கொடப்பா' என்பார். அவருக்கு இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே அதிசயமான, விசித்திரமான செய்திகள், துணுக்குகள் முதலியவற்றைத் திரட்டித் தரும் வேலையை என்னிடம் தருவார். பத்திரிகையில் துண்டு விழும் இடங்களில் அவற்றைப் பிரகரித்து சரி செய்வார். 'ஒண்டர்ஃபுல் நியூஸ்' என்று அவர் குறிப்பிடுவது அத்தகைய துணுக்குகளைத்தான்.

சமீபத்தில் அப்படிப்பட்ட சிலவற்றைப் படித்த போது அருமை நண்பர் தமிழ்வாணனைப் பற்றியும், அவருடைய அட்டகாசமான சிரிப்பைப் பற்றியும் தொப்பி, கறுப்புக் கண்ணாடியைப் பற்றியும் ஞாபகம் வந்தது. இந்தத் துணுக்குகளைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்! பரவாயில்லை. சொர்க்கத்தில் இருந்தபடி படித்து சந்தோஷப்படட்டும் என்று இங்கே தருகிறேன்.

இந்தக காலத்து அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் காப்பி இடைவேளை இருப்பது போல அந்த நாளில் 'மது இடைவேளை' இருந்தது. எகிப்தில் பிரமிட் கட்டிய தொழிலாளிகளுக்கு தினசரி மூன்று மது இடை வேளைகள். ஐந்து வகையான பீர்களும் நான்கு வகையான ஒயினும் வழங்கப்பட்டன.

ரஷ்யாவில் முதலாவது காதரைன் மகாராணியின் ஆட்சியில் பெண்கள் மது அருந்துவது தடை செய்யப்பட்டது. . விருந்துகளின்போது பெண்கள் அளவுக்கு மீறி மது அருந்தி ஒழுக்கம் கெட்டுப் போகிறார்கள் என்பதாலேயே இந்தத் தடை.

காதரைனின் கணவரான பீட்டர், தன் காதலிகளில் ஒருத்தி இன்னொரு வாலிபனிடம் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அவனை சிரச்சேதம் செய்தான். வெட்டப்பட்ட தலையை ஜாடி மதுவில் ஊறப் போட்டுத் தன் படுக்கையருகே வைத்திருந்தான்.

அலெக்ஸாண்டர் தன் படைவீரர்கள் தாடி வளர்க்கக் கூடாதென்று சட்டம் போட்டான். போரின் போது எதிரிகள் இவர்களது தாடியைப் பிடித்து மடக்கி விடுகிறார்கள் என்பதாலேயே இந்தத் தடை. அலெக்ஸாண்டரைப் பற்றிய இன்னொரு தகவல்: . 'பெரிடாஸ்' என்ற தனது நாயின் மீது மட்டற்ற செல்லம் கொண்டவனாக, புதிதாகக் கட்டப்பட்ட ஒரு நகரத்துக்குப் பெரிடாஸ் என்று பெயர் சூட்டினான். இந்த நாய் பயங்கரமான 'வம்ச'த்தில் பிறந்தது. இது ஒரு சிங்கத்தையும் யானையையுைம் சண்டையில் வீழ்த்தியதாம்.

குழந்தைகளுக்கான தேவதைக் கதைகள் எழுதிப் புகழ் பெற்ற ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், பெற்றோருக்குத் திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிறந்தவர். ( அதாவது, கல்யாணமான போது அவருடைய' தாய் எட்டு மாத கர்ப்பிணி.) ஆண்டர்ஸன் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. தன் காதலியின் கடித மொன்றை ஒரு சுருக்குப் பையில் வைத்துக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தார் இறக்கும் வரையிலும். நெருப்பென்றால் பயப்படுகிறவர். ஓட்டல்களில் தங்கும்போது ஒரு கயிற்று சுருள் வைத்திருப்பார் தீ விபத்து ஏற்பட்டால் தப்ப வேண்டும் என்பதற்காக.

பல் வலிக்காரர்களின் இஷ்ட தெய்வம் ஸெயின்ட் அபோலியா. கி.பி. 249ம் ஆண்டில் ரோமானியர்கள் இவரைக் கொலை செய்த போது, பற்களை உடைத்து சித்திரவதை செய்ததால் இப்படி ஏற்பட்டது. இவரது பற்கள் என்று சொல்லி ஐரோப்பா முழுவதும் ஏராளமான போலிப் பற்கள் விற்பனை செய்யப்பட்டன. 16'ம் நூற்றாண்டில் அரசாண்ட நாலாவது ஹென்றி, இநத மோசடிக் காரர்களின் குட்டை உடைப்பதற்காக, போலிப் பற்களையெல்லாம் திரட்டிக் கண்காட்சியில் வைத்தான். டன் கணக்கில் அவை குவிந்திருப்பதைக் கண்ட பின்னரே மக்களின் மூட நம்பிக்கை மறைந்தது.

ஆப்பிளில் ஏழாயிரம் வகைகள் உள்ளன. ஐசக் நியூட்டனின் தலையில் விழுந்து ஈர்ப்பு சக்தியை அவர் கண்டு பிடிப்பதற்குக் காரணமாக இருந்த ஆப்பிள் பச்சை நிறம் கொண்டது. 'கென்ட்மலர்' என்பது இதன் பெயர்.

அர்ஜென்ட்டினா நாட்டில் மிக மிக விசித்திரமான மாநாடுகள் நடைபெறுவது வழக்கம். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'உலக சோம்பேறிகள் மாநாடு' நடைபெற்றது. மே முதலாவது தேதியை உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது போல மே இரண்டாம் தேதியை 'உலக சோம்பேறிகள் தினம்' என்று அறிவிக்க வேண்டுமென இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'சர்வதேசக் குடும்பத் தலைவிகள் மாநாடு' முதன் முறையாக அர்ஜென்ட்டினாவில் கூடியது.

இங்கிலாந்தில் புகழ் பெற்ற ஆஸ்கட் குதிரைப் பந்தயங்கள் நடைபெறும் இடத்தில் அரச குடும்பத்தாருக்காகப் பிரத்தியேக 'மண்டபம்' இருக்கிறது. அங்கே யாரும் புகை பிடிக்கக் கூடாது. அரசியார் உணவு அருந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் வேறு யாரும் சாப்பிடக் கூடாது. வெற்றுக் காலுடன் அங்கே எவரும் வரக் கூடாது என்று தடை இருந்தது. அதை முதலில் உடைத்தவர் இளவரசி டயானா.

1732'ம் வருடம் மார்கன் என்ற ஓட்டப் பந்தய வீரர் 53 நிமிஷங்களில் 12 மைல்களைக் கடந்தார். அந்த சாதனைக்காக அவருக்கு 100 சவரன் பரிசளிக்கப்பட்டது. அப்போது அவரைப் பாராட்டி ஒருவர் அவர் முதுகில் ஒரு 'ஷொட்டு'க் கொடுத்தார். அதனால் கீழே விழுந்தார் மார்கன். பிறகு எழுந்திருக்கவேயில்லை மரித்தார்.

'ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனிதன் பிறக்கிறான். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனிதன் இறக்கிறான்' என்று கவிஞர் டென்னிஸன் ஒரு கவிதையில் எழுதியிருந்தார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பாபேஜ் என்ற கணித மேதை இந்த வரி தப்பானது என்று டென்னிஸனுக்கு எழுதினார். டென்னிஸனின் கூற்றுப்படி பார்த்தால் 'உலகத்தின் ஜனத்தொகை எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமே?' என்பது அவருடைய கேள்வி. 'ஒரு நிமிஷமும் அதற்கு மேல் பதினாறில் ஒரு பங்கு நிமிஷமும் ஒரு மனிதன் இறக்கிறான்' என்பதே சரி என்றார் பாபேஜ்.

சின்னச் சின்ன ஆசை  தமிழ்ப் பத்திரிகைகளுக்கு திடீர் திடீரென்று ஒரு பைத்தியம பிடிப்பதுண்டு. என்ன பைத்தியம் என்றால்-

ஊரிலே வழக்கத்துக்கு விரோதமாக ஏதோ ஒரு மாறுதல் நடக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது புதுமையான காரியமொன்றை எவரேனும் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உடனே, அதைப்பற்றிப் பொதுமக்களிடமும். பிரபல மனிதர்களிடமும் அபிப்பிராயம் கேட்டுப் போட்டோவுடன் பிரசுரிப்பார்கள். உதாரணமாக-

தனக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்லித் தரவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சும்மா இருக்கிற நேரத்தில் இரண்டு காசு பார்ப்போமே என்ற நோக்கத்துடனோ எங்காவது ஒரு பெண் ஓர் 'அழகு நிலையம்' ஆரம்பித்திருப்பாள். உடனே 'அழகு நிலையங்கள் அவசியம்தானா?' என்று கருத்துக் கேட்பார்கள்.

எங்கேயோ ஒரு மருத்துவமனையில் ஓர் ஆபரேஷன் தவறாக நடந்துவிட்டதென்றால், 'இன்றைய டாக்டர்கள் அன்றை டாக்டர்கள் அளவுக்கு திறமைசாலிகளா?' என்று பேட்டிகள் வெளியிடுவார்கள்.

திருமணத்தில் தாலி கட்டும் தினத்தன்றுதான் புது தம்பதிகளைப் பக்கத்தில் பக்கத்தில் மணையில் உட்கார வைப்பது முன்னொரு காலத்தில் வழக்கமாக இருந்தது. ஜானுவாசம் என்றால் மாப்பிள்ளை மட்டும்தான் இருப்பார். கல்யாணம் முடிந்தபிறகுதான் ரிசப்ஷன் வைத்தார்கள். செலவையும், செளகரியங்களையும் முன்னிட்டு, சென்ற சில வருடங்களாகத் திருமணத்துக்கு முந்தின தினமே ரிசப்ஷன் வைத்துவிடுகிறார்கள். இது சாஸ்திர விரோதமில்லையோ என்று பேட்டிகள் வெளிவந்தன.

நெற்றிக்கு ஒட்டு பொட்டு வைத்துக்கொள்ளும் வழக்கம் வந்தபோதும் இப்படித்தான். 'குங்குமப் பொட்டு வைத்துக்கொள்வதுதான் அழகு. ஒட்டுப் பொட்டு வைத்துக்கொள்வது பண்பாட்டுக்கு விரோதம்' என்று கருத்துக்களைக் கேட்டு வாங்கிப் பத்திரிகைகளில் பிரசுரித்தார்கள். (ஒரு சுமங்கலிப் பெண். தான் வைத்துக்கொண்ட ஒட்டுப் பொட்டு உதிர்ந்து விழுந்து விட்டதை அறியாமல் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல, அங்கே இருந்த பலரும் அவளை விதவை என்று பரிதாபத்துடன் பார்த்தார்களாம்! அப்படி ஒரு சிறுகதை கூட வெளி வந்தது ஒரு வார இதழில்!)

கணவனுக்கு மனைவியை அடிப்பதற்குச் சட்டப்படி உரிமை உண்டா. வயதான அப்பாவை வைத்துக் கொள்ளும்படி பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தலாமா, குழந்தைகளை டீச்சர் பெஞ்சுமேல் ஏறி நிற்கும்படி சொல்வது நியாயமா-இவ்வாறு பல பேட்டிகள், இதைத்தான் பத்திரிகைகளின் பைத்தியம் என்று நான் குறிப்பிட்டேன்.

இப்படிச் சொல்கிறேனே தவிர, சில பேட்டிகளைப் படிக்கும்போது. 'அடடா! என்னைக் கேட்டிருந்தால் அருமையாகச் சொல்லியிருப்பேனே!' என்று நானும் ஏங்குவது உண்டு.

'ரோஜா' படம் வந்த புதிதில், 'சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை' என்ற பாட்டு பட்டிதொட்டியெல்லாம் முழங்கிப் பிரபலமாகியிருந்தது. உடனே எல்லாப் பத்திரிகைகளுக்கும் குஷி கிளம்பிவிட்டது. டாக்டர்கள், இஞ்சினியர்கள், அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், மடத் தலைவர்கள் முதலான எல்லாத துறையிலும் உள்ள பிரபலஸ்தர்களைப் பிடித்தார்கள். 'உங்களுடைய சின்னச் சின்ன ஆசைகள் என்ன?' என்று கேள்விக் கணை தொடுத்தாரகள். பதில்களில் சில நிஜம். சில கற்பனை. சில நகைப்புக்கிடம். ஒரு அம்மையார் தனக்குக் கன்னத்தில் குழி விழ வேண்டும் என்பது தனது ஆசை என்று சொல்லியிருந்தார். அவருடைய வயதையும் படத்தையும் பார்த்தபோது சில வருடங்களில் அந்த ஆசை நிறைவேறிவிடும் என்று தோன்றியது. ஆனால் அதை அழகுக் குழி என்று சொல்லமாட்டார்கள். டொக்கு என்று சொல்வார்கள்.

என்னையும் ஒரு நிருபர் வந்து கேட்பார் என்று ஆவலுடன் காத்திருந்தேன். எவரும் வரக் காணோம். பத்திரிகை நிருபர்கள் சிலருடன் எனக்குச் சண்டை என்பது காரணமாக இருக்கலாம். அல்லது நானொன்றும் பிரபலமானவனல்ல என்று பத்திரிகை ஆசிரியர்கள் கருதிவிட்டார்களோ என்னவோ.

இருந்தாலும், என்னை வந்து கேட்டால் சின்னச் சின்ன ஆசைகள் என்று எதெதைச் சொல்லவேண்டும் என்று மனசுக்குள் பட்டியல் போட்டு வைத்திருந்தேன். குறைந்தபட்சம் அரை டஜன் சின்னச் சின்ன ஆசைகள் இருந்தன. ஆனால் எல்லாப் பத்திரிகைகளும் கொஞ்ச நாளில் சின்னச் சின்ன ஆசை பேட்டிகளை விட்டு விட்டார்கள். 'திருநெல்வேலி அல்வா உடம்புக்கு நல்லதா?' என்பது போன்ற தேசத்துக்கு அத்தியவசியமான வேறு பிரசினைகள் குறித்து வேறு பிரபலங்களைப் பேட்டி காணப் போய்விட்டார்கள்.

என் கைவசம் இருந்த பட்டியலும் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மறைந்துவிட்டது. திடீரென்று சென்ற மாதத்தில் ஒருநாள், காளஹஸ்திக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அந்தச் சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்று ஞாபகம் வந்தது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல். குறுக்குப் பாதையில் ஒரு பதினைந்து இருபது கிலோ மீட்டர் போனால் பெரியபாளையத்தம்மனையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று காரில் இருந்தவர்கள் சொல்லவே அந்தப் பாதையில் திரும்பினோம்.

அன்று அம்மனுக்கு ஒரு விசேடமான தினம் என்பது தெரியாமல் போய்விட்டது. சாலையெங்கும் எக்கச்சக்கமான கூட்டம். அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடிந்தது. அக்கம்பக்கத்திலிருந்து கிராம மக்கள் வந்திருந்த நூற்றுக்கணக்கான கூண்டு வண்டிகள் சாலையை அடைத்திருந்தன. இரட்டை மாடு பூட்டியவை. நீள வடிவம். உள்ளே உட்கார்ந்து பலர் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். வண்டிக்குள் ஒரு குச்சியைச் செருகி அதில் ரேடியோவைக் கட்டித் தொங்கவிட்டுப் பாட்டு கேட்டபடி படுத்திருந்தார்கள் சிலர். சில வண்டிகளின் உட்புறம் தூளி கட்டிக் குழந்தையைத் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியொரு கூண்டு வண்டிக்குள் குடும்பத்தோடு பிரயாணம் செய்ய வேண்டும் என்பது என் சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்று. குழந்தைப் பிராயத்தில், காவேரிக் கரையோரமாக இருந்த ஒரு சாலையில் பாட்டியும் அத்தையும் இப்படியொரு கூண்டு வண்டியில் என்னை அழத்துச் சென்றதும், புளியோதரையை உருட்டி உருட்டி எனக்குத் தந்ததும் கனவுபோல நினைவிலே பதிந்திருந்ததால், மறுபடியும் அப்படியொரு அனுபவம் நேராதா என்று ஆசையுடன் காத்திருந்தேன். நேரவேயில்லை.

என்ன கேட்கிறீர்கள்? அம்மனை தரிசித்தீர்களா என்றா? சரிதான். அந்த மக்கள் வெள்ளத்துக்குள் இறங்கி மாட்டிக்கொண்டால் காளஹஸ்தியை மறந்துவிட வேண்டியதுதான் என்று தெரிந்ததால் கோவிலை நோக்கிக் கும்பிடு போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

-----

ஏன் இப்படி? ஏன் அப்படி?
நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தூள் தூளாக்கப்பட்ட தினத்தன்று, அமெரிக்காவில் வசிக்கும் என் பேரக்குழந்தை தன் அம்மாவிடம், 'உலகத்தில் ஏன் கெட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்?' என்று கேட்டதாயும் அதற்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றும் சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

பல சினேகிதர்கள் எனக்கு போன் செய்து ஒவ்வொரு விதமாய் பதில் சொன்னார்கள். அண்ணா நகர் பழைய ஒய் பிளாக், 'சங்கீத ஆலயம்' இல்லத்திலிருந்து எச். கிருஷ்ணமூர்த்தி என்ற அன்பர், இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை ஆன்றோர்களின் நூல்களிலிருந்துதான் பெற முடியும் என்று தெரிவித்து, விவேகானந்த சுவாமிகளின் உபதேசங்களில் சில பகுதிகளை எழுதி அனுப்பியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து அவர் செய்துள்ள மொழி பெயர்ப்பு இயல்பான நடையில் இருப்பதால் அந்த வரிகளை இங்கே தருகிறேன்.

1. நல்ல சிந்தனைகளும், தீய சிந்தனைகளும் மகத்தான சக்தி வாய்ந்தவை. அவை இந்தப் பிரபஞ்சத்தை நிரப்புகின்றன. செயல்களாக மாறும் வரையில் அவை சிந்தனை வடிவிலேயே இருக்கின்றன. நாம் தூயவர்களாக இருந்தால், நல்ல சிந்தனைகள் நமக்குள்ளே பாயும். ஒரு நல்ல ஆத்மா தீய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளாது.

2. உலகின் துன்பங்களுக்குக் காரணம் வேறு யாரும் இல்லை. நாமேதான். பிறருக்கு முற்பகலில் செய்த தீமைகள், பிற்பகலில் தாமாகவே நம்மிடம் திரும்பி வருகின்றன. மனிதனே தீவைகளுக்குக் காரணம். தெய்வம் அல்ல.

3. நாம் ஓரிடத்தில் சந்தோஷத்தைச் சிருஷ்டி பண்ணும்போது, இன்னோரிடத்தில் துக்கம் பிறக்கிறது. இது இயற்கையின் நியதி. சமுத்திர வெள்ளத்தில், ஓரிடத்தில ஒரு பள்ளத்தை ஏற்படுத்தாமல், வேறொரு இடத்தில் உயரமான அலையை எழுப்ப முடியாது. மனிதனின் தேவைக்கும், பேராசைக்கும் ஏற்ப உலகத்தில் நல்ல விஷயங்களின் மொத்த அளவு எல்லாக் காரியங்களிலும் ஒரே அளவாகவே இருந்திருக்கிறது. அதைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

4. நாம் எப்போதும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறோம். ஆனால், சந்தோஷம் என்று உலகத்தில் தனியாக எதுவுமே இல்லை. நாம் சந்தோஷம் என்று நினைக்கிற எல்லா விஷயங்களிலும், துக்கமும் உள்ளடங்கியே உள்ளது, நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. அதிலிருந்து ஒன்றை விரும்பி ஏற்போமானால் மற்றதும் கூடவே வரும். அதை ஏற்கும் மனப் பக்குவம் நமக்கு வேண்டும். இரண்டும் மாறி மாறி வரும். எதுவுமே நிரந்தரம் இல்லை.

மேற்கண்ட விளக்கத்துக்காகக் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி கூறுவதோடு, சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்ட சமயம் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். ஒருவர், அரசியல் துறையில் பிரவேசித்து, பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த அப்துஸ் ஸமது, (இவர் பெயரை அப்துல் ஸமது என்று பலர் அச்சிட்டு வந்தார்கள். ஒருநாள் இவர் எனக்கு போன் செய்து தமது பெயரை அப்துஸ் ஸமது என்று குறிப்பிடுவதே சரியானது என்று தெரிவித்தார்.) இனிய இயல்புகள் நிறைந்த இந்த நண்பரைச் சில வருடம் முன்பு இழந்துவிட்டேன்.

ஹாஜி மெளலானா எம். அப்துல் வஷ்ஹாப் இன்னோர் எழுத்தாளர். 'பிறை' என்ற மாத இதழை நடத்தி வருகிறார். இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் சொற்பொழிவுகளுக்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பவர். நேரில் சந்திக்க நேரும்போது மார்போடு அணைத்துக் கொண்டு நலம் விசாரிப்பார். என் கதையில் எங்காவது இஸ்லாமியப் பழக்க வழக்கங்கள் பற்றிய சந்தேகம் ஏற்பட்டால் இவரைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறுவேன்.

நண்பர் வஷ்ஹாப்பிடம் பேசியபோது, 'இறைவனின் செயல்களை ஏன் அப்படி ஏன் இப்படி என்று ஆராய்வதே தவறு. மரத்திலிருந்து விழும் ஒவ்வோர் இலையும் ஆண்டவன் அறியாமல கீழே விழுவதில்லை என்று திருக்குரான் சொல்லியிருக்கிறது. உலகத்தில் எத்தனை கோடானு கோடி மரங்களிலிருந்து தினம் எத்தனை கோடானு கோடி இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன! அப்படியானால் ஆண்டவனின் அறிவு எவ்வளவு பரந்தது! நினைத்துப் பாருங்கள்!' என்றார். கூடவே, இப்படி ஆராய்ச்சிகள் செய்த ஒருவரைப் பற்றிய பழங்கதையையும் சொன்னார்.

சாலமன் என்ற மன்னர் சிறந்த விவேகி. தத்துவஞானி. கி.மு. 970'ம் ஆண்டு வாக்கில் இஸ்ரேலை ஆண்ட மூன்றாவது மன்னர். அரசாட்சியைக் காட்டிலும் ஆன்மிகத்தில் அதிகப் பற்று- அளவுக்கு அதிகமான பற்று- கொண்டிருந்தார். குடிமக்களை கவனிப்பதை விட்டுவிட்டு, 'ஆண்டவன் ஏன் உலகத்தை இப்படிப் படைத்தான்?- நன்மை தீமை என்று எதற்காக ஏற்படுத்தினான்? நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரண்டு வகையினரை ஏன் சிருஷ்டித்தான்?' என்பது போன்ற சிந்தனைகளில் சதா சர்வதா மூழ்கியிருந்தார். நாட்டை ஆளவேண்டிய ஒரு மன்னர் இப்படி இருக்கலாமா என்று இறைவனுக்குக் கவலை உண்டாயிற்று. அவர் போக்கைத் திருத்த வேண்டுமென்று ஒரு தேவதூதனை அனுப்பினார்.

அன்று சாலமன் மன்னர் கடற்கரையில் சிம்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்து, வழக்கம்போல கடவுள் ஏன் அப்படிச் செய்தார், ஏன் இப்படிச் செய்தார் என்றெல்லாம் சிந்தனை செய்த வண்ணமிருந்தார். தேவதூதர் ஒரு சிறுவனாக வடிவமெடுத்தார். ஒரு சுரைக் குடுக்கையை - அதுவும் ஓட்டை உள்ளது - எடுத்து, கடலில் நீர் மொண்டு அதைக் கரையில் கொண்டு வந்து கொட்டுவதும், மறுபடி கடலுக்குப் போய்த் தண்ணீரை எடுத்து வந்து மறுபடி கரையில் கொட்டுவதுமாக இருந்தான் அந்தச் சிறுவன்.

சாலமன் அவனைக் கூப்பிட்டு, 'தம்பி, என்ன செய்கிறாய் நீ?' என்று கேட்டார்.

'தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள், அரசே. இன்று பொழுது சாய்வதற்குள் இந்தக் கடல் தண்ணீர் மொத்தத்தையும் மொண்டு வந்து கரையிலே கொட்டிக் கடலை வற்றடிக்கப் போகிறேன்' என்றான் சிறுவன்.

'பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே நீ செய்வது? எங்காவது ஓட்டைக் குடுக்கையில் தண்ணீர் மொண்டு வந்து கொட்டி இவ்வளவு பெரிய கடலை வற்றடிக்க முடியுமா?' என்று சிரித்தார் சாலமன்.

'ஏன் முடியாது, அரசே! அளக்க முடியாத அறிவு படைத்தவன் ஆண்டவன். இது சரியா, அது ஏன் இப்படி, ஏன் அப்படி என்று இறைவனின் செயல்களைத் தங்களது சிறிய மூளையைக் கொண்டு ஆராய்கிறார்களே சிலர், அதைக் காட்டிலுமா என் செய்கை பைத்தியக்காரத்தனம்?' என்று பதிலளித்தான் பையன்.

மன்னர் சாலமன் தன் ஆராய்ச்சிகளை அன்றோடு மூட்டை கட்டி வைத்துவிட்டு நாட்டைச் சரிவர ஆளும் பணியில் இறங்கினாராம்.

உனக்கு நியமிக்கப்பட்டது எதுவோ அதை சிரத்தையுடன் செய், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொன்னதன் பொருளும் இங்கே புரிகிறது.

பல்லக்கில் பவனி வந்த கதை
பாக்கியம் ராமசாமி

'வர வர பத்திரிகைகளில் சிறுகதைகளே வருவதில்லை. சகலமும் கட்டுரை மயம்' என்று நண்பன் நாராயணன் அங்கலாய்த்தான். அவன் அப்படி ஒன்றும் சிறுகதை ரசிகன் அல்ல. செய்திப் பத்திரிகைதான் படிப்பான். எப்போதாவது வாரப் பத்திரிகைகளைப் புரட்டுபவன். அப்படியே ஒன்றிரண்டு கதை படித்தாலும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்வான்.

அதனால்தானோ என்னவோ பல பத்திரிகைகள் சிறுகதைகளை அதிகமாக வெளியிடுவதில்லை. போனால் போகிறது என்று ஒன்றிரண்டு போட்டு வைக்கிறார்கள். அதுவும் ஒரு பக்கக் கதை, அரைப் பக்கக் கதை, தபால் கார்டு கதை, ஸ்டாம்ப் கதை இப்படியாக.

'உணர்ச்சிகள் பழசாக இருக்கலாம். ஆனால் ஊற்றித் தருகிற பானை புதுசா ஸ்டைலாக இருக்க வேண்டும்' என்கிறார்கள்.

ஓட்டல் பலகாரங்களில்கூட புரட்சி வேகமாகப் பரவுகிறது... பூரியை எடுத்துக்குங்க... ஆதி காலத்தில் பூரியோட உடன்பிறப்பு கிழங்குதான். இட்லின்னா சட்னி சாம்பார்தான், மிளகாய்ப் பொடிதான்.

ஆனால் இப்போ பூரியைத் தயிரிலே போட்டு ததி பூரிங்கறாங்க. இட்லியை ரசத்திலேபோட்டு ரசஇட்லின்றான். அது ஒரு ரசானுபவம்.

எழுத்திலேயும், கருத்திலேயும் ஆரோக்கியமான பழைமை இருக்கவேண்டும். அவற்றைப் புது வகைகளிலே வாசகர்களுக்குக் கொண்டு செல்லவேண்டும்.

வெகு ஜனப் பத்திரிகைகள் எனப்படும் பாபுலர் பத்திரிகைகளுக்கு எழுதுவதை கெளவரக் குறைவாக இலக்கியத் தரமாக எழுதும் எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். வெகு ஜனப் பத்திரிகை ஆசிரியர்களும் பட்டாசுக்கு நெருப்பு வைக்கும் பயத்தோடுதான் அத்தகைய எழுத்தாளர்களை அணுகுகிறார்கள். எதற்கு வம்பு, நாம் கதை கேட்க போய் அவர் எதையாவது எழுதிவிடப் போகிறார். திருப்பி அனுப்பவும் முடியாது பிரசுரிக்கவும் முடியாது என்று நினைக்கிறார்கள்.

தார்த்தத்தைப் படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று சில இலக்கியவாதிகள் பச்சையாக எழுதுகிறார்கள்.

முன்னெல்லாம் லெஸ்பியன் என்ற வார்த்தையே பலருக்குத் தெரியாது.

இப்போ சின்னப் பயலைக் கேட்டால்கூட விளக்கித் தள்ளிவிடுவான். இத்தனைக்கும் ஸெக்ஸ் கல்வி இன்னும் புகுத்தப்படவில்லை.

அந்த நாளில் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டி ஒன்று அறிவித்தது. அதற்கு நான் ஒரு கதை எழுதியிருந்தேன்.

'இரக்கம் ஒரு விலங்கு' என்ற அந்தக் கதையின் ஓர் இடத்தில் 'அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது உள் பாவாடையின் லேஸ் சற்றே தெரிந்தது' என்று எழுதியிருந்தேன். அதற்கு ஏகப்பட்ட கண்டனங்கள்.

திரு.ரா.கி.ரங்கராஜன் 'பல்லக்கு' என்ற சிறந்த கதை எழுதி அதே போட்டியில் முதல் பரிசு பெற்றார். அது மனித நேயத்தை மேம்படுத்தும் கருத்துக்கொண்ட அருமையான கதை.

ஒரு தலித்துக்கு உடம்பு சரியில்லை என்றதால் கோவில் பட்டாசார்யார் சுவாமி பல்லக்கில் அந்த தலித்தை ஏற்றி மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார். அர்ச்சகரின் செய்கைக்கு கோவில் நிர்வாகம் கடும் கண்டனம் எழுப்பியது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. அர்ச்சகர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அந்தக் காரியத்தைச் செய்தார் என்பது கதை.

நான் எழுதிய கதை அந்த மாதிரி உயர்ந்த கதை அல்ல. அடாலஸென்ஸ் எனப்படும் டீன் ஏஜ் உணர்ச்சியை மையப்படுத்திய கதை. பதின்மூன்று வயசு அனாதைப் பையனை, அவனது இள வயது மாமி ஆதரவு தந்து வீட்டிலிருக்க அனுமதிக்கிறாள். எடுபிடி மாதிரி இருக்கிறான். ஆனால் உறவுக்காரனென்றதால் வீட்டில் எல்லா இடத்துக்கும் வருவான் போவான். அழகான மாமி மத்தியானம் தூங்குகிறபோது உள் பாவாடையின் லேஸ் லேசாகத் தெரிந்ததை அவன் ரசித்துப் பார்த்ததை அவனது மாமா பார்த்துவிட்டார்... அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார். அவன் அழுது புலம்புகிறான். மாமி அவன் மேல் இரக்கப்பட்டு, 'ஐயோ பாவம், குழந்தை சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ,' என்று தவிக்கிறாள். ஆனால் 'இரக்கம் ஒரு விலங்கு' என்பதாகக் கணவன் அந்தப் பையனை ஒரு வழியாகத் துரத்தி விடுகிறான்.

இந்தக் கதை யதார்த்தமாக இருந்தாலும் ஆபாசம் என்று கருதப்பட்டு பலத்த கண்டனத்துக்கு ஆளாயிற்று. இருப்பினும் அதனுடைய யதார்த்த தன்மைக்காக அது இரண்டாம் பரிசு தரப் பெற்றது. இதிலிருந்து ஒரு முடிவுக்கு நாம் வரலாம்.

பல்லக்கிலும் மனிதாபிமானம், யதார்த்தமாக இருந்தது. அதை ரா.கி.ர தன் கற்பனையால் ஹை லைட் செய்து, தெய்வப் பல்லக்கில் தலித் நோயாளியை ஏற்றி அர்ச்சகரைச் சிறப்புச் செய்து முதல் பரிசைத் தட்டிச் சென்றுவிட்டார். இதனால் என்ன தெரிகிறது. கதையில் 'நோபிள் தீம்' இருக்கவேண்டும், வளமான கற்பனையை அதில் புகுத்த வேண்டும். ஒரு நாலு பேருக்காவது அதைப் படித்தால் நல்ல எண்ணம் தோன்ற வேண்டும்...

என்னைப் பொறுத்தவரை அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளில் நகைச்சுவையே பிரதானமாதலால் வாசகர்களின் மனசைக் கெடுக்கிற சமாசாரமாக நான் அதில் எதுவும் எழுதுவதில்லை. சிரிக்க வைக்கிற மாதிரி இருந்தால் அதுவே ஒரு சேவை என்று நினைத்துக் கொள்கிறேன்.

நரி வலம் போனால் நல்லதா, இடம் போனால் நல்லதா? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் நல்லது என்ற மாதிரி, ரேஷன் அரிசி கறுப்பா இருக்கலாமா, வெளுப்பா இருக்கலாமா என்றால்... கல்லில்லாமல் இருந்தாப் போதும்கற மாதிரி, கதைகள் மனிதனைப் பண்பாடு உள்ளவனாக உயர்த்துகிறதா, உயர்த்தவில்லையா என்னும் கேள்வி இருக்கட்டும். அவனை மேலும் மிருகமாக்காமல் இருந்தால் சரி.

"அவள் கீழே இறங்கி நடக்கணும்!"
ஜ.ரா. சுந்தரேசன்


ல்யாணத்துக்கு முன் என்பதை க.மு. என்றும் கல்யாணத்துக்கப் பின் என்பதை க.பி. என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

கபி என்றால் குரங்கு என்று ஓர் அர்த்தம் உண்டல்லவா?

குரங்குக்கு குரங்காட்டி மாதிரி கல்யாணமானவனுக்கு அவன் மனைவி என்று சிலர் சொல்கிறார்கள்.

ஆகவே கட்டுப்படாத நிலை - அதாவது சுதந்திரம் - ஒருத்தனுக்கு பிரம்மசரியத்திலதான் கிடைக்கிறது.

நான் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். அயனாவரத்தில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் சிறிய குடிசை போட்டு அதில்தான் வாசம். (வீட்டுக்கு வெளியேயும் சுற்றிலுமுள்ள குப்பைகூள வாசம் தனி.) கீழே ஒரு குடித்தனம். மேலே என் குடிசை.

எட்டடிக்கு எட்டடி குச்சு - மைனஸ் ஏழெட்டு ஓலைக் கீற்றுகள்.

மேலே தளமுள்ள கட்டிடத்திலிருப்பதை விட குடிசையிலிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. (வாடகைப் பிரசினையும் மாதம் இருபது ரூபாயோடு தீர்ந்தது).

கெல்லீஸில் குமுதம் ஆபீசிலிருந்து இரவு பத்து மணிக்குப் புறப்பட்டு நடந்தே அயனாவரம் போவது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். அதுவும் மழை பெய்யும்போது சொட்டக் சொட்ட வேட்டி சட்டை, தொப்பமாக நனைய நடப்பது படு ஆனந்தம். வைப்பர் இல்லாத கார் மாதிரி முன் நெற்றியில் கிராப்பிலிருந்து கொட்டும் நீர், கண், மூக்கு, வாய், கழுத்து, மார்பு என்று அருவியாக இறங்கி ஓடுவதும், அவ்வப்பொழுது வாயில் வந்து அடிக்கும் சாரல் நீரைப் பருகிக் கொள்வதுமாக ஆனந்தம்.

கையில் குடை இருந்தாலும் விரிப்பது கிடையாது. அதை மடித்த நிலையில் தரதரவென்று தார் ரோடில் இழுத்துக் கொண்டு செல்லும்போது குடையின் இரும்புக் காம்பு, தார் ரோடில் 'டர்ர்ர்' என்று சத்தமிட்டவாறு என்னைப் பின் தொடரும்.

அப்படி இழுத்த இழுப்பில் அந்த இரும்புக்கம்பி தேய்ந்து விடப் போகிறதே என்று கொஞ்சம் கூடக் கவலையே கிடையாது.

எவ்வளவு தூரம் அது நன்றாகத் தேய்ந்திருக்கிறது என்று அறைக்குப் போய்த் தொட்டுப் பார்த்து சந்தோஷமடைவேன்.

மழை என்பது கடவுளின் பிரசாதம்.அது பொழிகிறபோது குடையைப் பிடித்துக் கொண்டு செல்வது அவன் அருளை அவமதிப்பதாகும் என்பது போல குறுக்குச் சால் ஓட்டும் சிந்தனை அப்போது.

அடே, மாடா! உன்னைக் கொல்லுவேன்!


புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் இருந்தபோது பிரம்மச்சரியப் பிரக்ஞை தீவிரமாக இருந்தது. பாரதி, விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சிவானந்தா ஆகியோரின் இன்ஃப்ளூயென்ஸ் மிக அதிகமாக என்னை ஆட்கொண்டிருந்தது.

பாரதியின் கவிதைகளில்! 'கையைச் சக்தி தனக்கே அடிமையாக்கு, கண்ணைச் சக்தி தனக்கே அடிமையாக்கு' என்பது போல ஒரு கவிதை இருக்கும்.

அதைப் படித்ததும் நாடி நரம்புகளிலெல்லாம் சக்தியே வியாபித்திருப்பதாகவும் அதை சக்திக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தோன்றும்.

கையைச் சக்திக்கு அடிமையாக்குவதாக வீரமாக நினைத்துக் கொண்டு, மேஜையை ஓங்கி (கராத்தே பாணியில்) குத்திப் பார்ப்பேன். வலித்தாலும் வலிக்கவில்லை மாதிரி எண்ணிக் கொள்வது வழக்கம்.

யாரிடமும் பயம் கிடையாது. நான் பராசக்தியின் அடிமை என்ற மகாதிமிரான மனப்பான்மை.

ஒரு தினம் விடியற்காலை நான்கு மணிக்கு, தெருவில் ஒரு பால்காரன் தனது மாட்டை, அது சரியாகக் கறக்க உடன்பட மாட்டேனென்கிறது என்று அதைக் கெட்ட வார்த்தையில் (மனித வார்த்தையில்) திட்டியவாறு பொதேல் பொதேல் என்று அடித்து, குத்தி உதைத்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்ச்சியின் ஒளி வடிவம் எனக்குத் தெரியாத தூரமாயினும் குரூர ஒலியும் திட்டும் அதை அடிக்கிற சத்தமும் நிசப்தமான விடிகாலையில் என் காதில் விழுந்தது.

என் உடம்பு பூராவும் சக்திக் கனல் பரவ, அறையை விட்டு வீரமாக வெளியேறித் தெருவில் நடந்து சற்றுத் தூரத்தில் ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டி பசுவை இம்சித்துக் கொண்டிருந்த பால்காரனிடம் வேகமாகச் சென்றேன்.

மாட்டைத் தன் பால் போணியால் மடார் மடாரென்று முதுகில் குத்திக் கொண்டிருந்தவன் யாரோ வேகமாக வருகிறார்களே என்று செய்கையை நிறுத்திவிட்டு, "என்ன..." என்றான் குழப்பமாக.

ஹஹஹ! நான் சக்திக் கனலாக நிற்கிறேன் என்பது அவனுக்குத் தெரியாது.

நான் சொன்னது இதுதான் : "டேய்! இன்னும் ஒரு அடி நீ மாட்டை அடிச்சியானா உன்னைக் கொன்னு கிழிச்சிடுவேன்! படவா நாயி! என்னடா நினைச்சிகிட்டு நீ மாட்டை அடிக்கிறே! கழுதே!"

இதை உச்சக் குரலில் நான் கத்தினேன்.

அவன் வெலவெலத்துப் போய்விட்டான். பல வீட்டு விளக்குகள் அங்கங்கே எரிந்தன. தலைகள் தெரிந்தன. இத்தனைக்கும் அவனொரு முரட்டுப் பால்காரன்.

ஆனால் நான் போட்ட சத்தம், பார்த்த பார்வை உடம்பின் மிடுக்கு.. இதெல்லாம் அவனை நடுங்க வைத்துவிட்டது (என்னடாது திடீர்னு ஒரு பைத்தியம் வந்து இப்படி மாட்டுதே என்று நினைத்துக்கூட அடங்கியிருப்பான்) அதற்கப்புறம் அவன் மாட்டை அடிக்கும் சத்தம் கேட்கவில்லை! ஒரு அதர்மத்தை வென்ற அகங்காரத்தோடு பாரதியைப் படிக்கத் தொடங்கினேன்.

ஜெபத்தால் பெண்களை...


பெண்களைக் கண்டாலே வெறுப்பு என்ற நிலை என் பிரம்மசரியத்தின் ஒரு காலகட்டத்தில் உச்சத்திலிருந்தது.

சாலையிலுள்ள பிளாட்பாரத்தில் நான் நடக்கும்போது எதிரே எந்தப் பெண்ணும் வரக் கூடாது என்பது என் கொள்கை. யாராவது பெண்கள் வந்தால் தூரத்திலிருந்தே 'அவள் கீழே இறங்கி நடக்கணும்' என்று மனசுக்குள் தீவிரமாக ஜெபம் செய்வேன். சில சமயம் என் ஜெபம் பலித்திருக்கிறது. நான் இடித்துவிடுவேனோ என்றுகூட அவர்கள் கீழே இறங்கி நடந்திருக்கலாம். ஆனால் நான் என் மனோவலிமையால் அவர்களைக் கீழே இறக்கிவிட்டேன் என்று கர்வப்பட்டுக் கொள்வேன், இனிமையான இறுமாப்பு.

தெனாவட்டான ஒரு குட்டிச் சுட்டி

புரசைவாக்கம் வெள்ளாளத் தெரு வீட்டில் எனக்கு ஒரு சின்னச் சுட்டி அறிமுகமானாள். ஏழு வயசிருக்கும். கன்னம் இரண்டிலும் இரண்டு பன். முட்டைக் கண்கள். அதற்குப் பின்னணியாக கருப்பு மை தீட்டப்பட்டு, நெற்றியிலே பொட்டு, கன்னத்திலே திருஷ்டிப் பொட்டு - ஒல்லியான கொத்தவரங்காய் சரீரம். ஒரு கவுன்.. சிணுங்கலுடன் பூனைக் குட்டி உரசலுடன் நான் எழுதும்போது 'என்ன பண்றே! ஏன் எழுதறே? அது என்ன புக்? எனக்கு வேணும்... இது என்ன, அது என்னா' என்று ஏகப்பட்ட கேள்விகள்.

'நீ நீன்னு என்னைச் சொல்லக்கூடாது. மாமான்னு கூப்பிடு இல்லாட்டா அன்க்கிள்னு சொல்லணும்' என்று பல தடவை சொன்னாலும் அந்தச் சிட்டு 'நீ' தான் போடும். தாத்தாவின் பண வசதியும் பாட்டியின் அதீத செல்லமும், கான்வென்ட் படிப்புக் கர்வமும் அதனிடம் அந்தப் பயமற்ற தன்மையை ஏற்படுத்தியிருந்தன.

அதிகமாகத் தொந்தரவு செய்யும்போது அதனுடைய கன்னத்தைப் பிடித்து அழுத்திக் கிள்ளிவிடுவேன். அது ஒரு டெக்னிக்... 'அப்படியெல்லாம் செய்யக் கூடாதுடா கண்ணா'ன்னு கொஞ்சுகிற மாதிரி - ஆனால் அழுத்திக் கிள்ளி விடுவேன்.

வலியில் துடித்து, 'ஆ! ஊ! என்னை ஏன் கிள்ளினே... அம்மாகிட்டே சொல்றேன். தாத்தாகிட்டே சொல்றேன்' என்பாள். ஆனால் அவள் அப்படிச் சொன்னதே இல்லை.

மறுநாள் கொஞ்சம் பயப்படற மாதிரி அறைக் கதவுகிட்டே நின்னு, 'நேக்கு ஏதானும் புஸ்தகம் தரியா?' என்று கேட்பாள். 'பாவம், இதைப் போய்ப் பயமுறுத்திவிட்டோமே, கிள்ளிட்டோமேன்னு தோணும். ஏதாவது சித்திரக் கதைப் புத்தகம் கொடுத்து அனுப்புவேன்... ஆனால் கடைசி வரை அந்தக் கொடுக்கு என்னை 'நீங்க போட்டுக் கூப்பிட்டதே இல்லை. அந்தக் குட்டிதான் இன்றைய பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன்.

அடியே, எழுத்தாளர்டி!

வெள்ளாளத் தெரு வீட்டிலுள்ள போது காலை வேளையில் அந்த ஸ்டோர்ஸில் உள்ள பெண்கள் (இளசு, பெரிசு எல்லாமுமாக) உள்ளும் வெளியுமாகப் போய்க் கொண்டிருப்பார்கள்.

வாசலின் பரந்த இரும்பு கேட்டுக்கு அருகே சுவரை ஒட்டி ஒரு சிறு இடைவெளி இருக்கும்.

அதுதான் எனக்கு உட்கார்ந்து எழுத விருப்பமான இடம்.

கல்கண்டுக்கு வாராவாரம் வேடிக்கையான நாடகம் எழுதுவேன். நான் தரையில் பேப்பரை வைத்துக் குனிந்து சரிந்து எழுதிக் கொண்டிருக்கும்போது, 'எழுத்தாளர் எழுதிகிண்டிருக்கிறார், சத்தம் போடாதே!', என்று நக்கலாக சில பெண் ஜென்மங்கள் கூறிக் கொண்டு என்னைத் தாண்டிச் செல்லும்... 'நம்மையும் எழுத்தாளர் என்று மதிக்கிறார்களே என்று உள்ளுக்குள்ளே ஒரு புளகாங்கிதம் ஏற்படும்... ஆனால் தலை நிமிர்ந்து யார் அப்படிச் சொன்னது' என்று பார்க்காமல் கெத்தாக எழுதிக் கொண்டிருக்கும் பாவ்லா தொடரும். இதெல்லாம் பிரம்மச்சாரிகளுக்கே உரிய கிளுகிளுப்பு சமாசாரம்.

காணாமல் போன சட்டை

சுவாமி சின்மயானந்தாவின் பிரசங்கத்தினால் கவரப்பட்டு அவருடைய சிஷ்யர்களில் ஒருவனானேன். குமுதம் ஆசிரியர், பிரசுரகர்த்தர் ரா.கி.ர, புனிதன் என்று கூண்டோடு கைலாசமாக சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டோம்.

நான்தான் அந்தக் கும்பலில் பிரம்மச்சாரி. ஆகவே எனக்கு அவர் மீது மிகமிக ஈடுபாடு. குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களுக்குள் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் சின்மயா.

சின்மயாவின் அறிவுரைப்படி சத்சங்கம், பஜன் ஆன்மீக யாத்திரை என்று நடத்தி வந்தோம். பிரசுரகர்த்தர் திரு. பி.வி. பார்த்தசாரதி அவர்களின் வீட்டிலும் சில சமயம் ஆசிரியரின் பங்களாவிலும் வகுப்பு நடைபெறும். பிரதி திங்கள், வியாழன் நடக்கும். ஆபீஸ் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கு புறப்பட்டால் ஆறாவது மணிக்கு மயிலாப்பூரில் பிரசுரகர்த்தர் வீட்டில் வகுப்பு ஏழரை மணிவரை நடக்கும்.

ரு தினம் பங்களாவில் லிக் ஜெப வகுப்பு நடந்தது. அவரவருக்கு விருப்பமான இறைவனது நாமத்தை மெளனமாக ஒரு மணி நேரம் எழுத வேண்டும்.

எழுதிக் கொண்டிருந்தோம்.

டெலிபோன் அடித்தது. பிரசுரகர்த்தர் எடுத்துக் கேட்டார். பின்பு, "ஸேப்! (S.A.P. என்பதை அவர் அப்படிக் கூப்பிடுவார். நகமும் சதையுமான நண்பர்களல்லவா) தேவன் போயிட்டாராம்."

வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர் எழுந்து கொண்டார். "போயிட்டு வந்துடறேன்" என்று பேனாவையும், நோட்டையும் கீழே வைத்துவிட்டுப் புறப்பட்டு விட்டார். பிரசுரகர்த்தரும் அவருடன் சென்றார்.

மீதி நாலைந்து பேர் ஜெபம் எழுதிக் கொண்டிருந்தோம். பேசத்தான் கூடாதே.

நான் 'ஓம் முருகா', 'ஓம் முருகா' என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

மனசு எழுதுவதில் செல்லவில்லை. பிரபல எழுத்தளார் தேவன் இறந்துவிட்டார். தேவனே இறந்து விட்டார். எப்பேர்ப்பட்ட நகைச்சுவை மேதை. கடைசியில் எல்லாருக்கும் மரணம்தான் போலிருக்கு. அப்படியானால் இங்கே உட்கார்ந்து ஜபம் எழுதுறது, கதை எழுதறது எல்லாத்துக்கும் முடிவு இருக்கு. ஆனால் முடிவே இல்லாத வேறொண்ணும் இருக்கு. அதை இப்படி ரூமில் உட்கார்ந்துகொண்டோ, ஆபீசில் கதை எழுதிக் கொண்டோ கண்டு பிடிக்க முடியாது.

நம் மரணத்துக்குள் அந்த நிலையைக் கண்டு பிடித்துவிட வேண்டும். அதற்கே முழு நேரமும் செலவழிக்க வேண்டும். மனசில் உறுதி இறுகியது. முருகா, முருகா, முருகா என்று எழுதிக் கொண்டிருந்தவன், 'இளமை அநித்யம், வாழ்வு மாயம், மரணமே நிச்சயம்' என்று பத்து இருபது தடவை எழுதினேன்.

உள்ளே ஒரு உந்தல் - உண்மையைக் கண்டு பிடிக்கக் காலதாமதமாகிறது. நீ உட்கார்ந்திருப்பது வேஸ்ட். புறப்படு, புறப்படு!

பேனாவையும் நோட்டையும் கீழே வைத்துவிட்டுப் புன் முறுவலோடு எழுந்து கொண்டேன்.

'நீங்களும் எங்கே புறப்பட்டுட்டீங்க?' என்பது போல மீதமிருந்தவர்கள் கையால் சாடை காட்டிக் கேட்டனர். பேசத்தான் கூடாதே. நானும் மெளனமாக ஒரு விஷமப்புன்னகை பண்ணிவிட்டு, மாடிப்படி வழியாக கிடுகிடுவென்று கீழே இறங்கினேன்.

அட! அட! இறங்கும்போது அந்த சுதந்திர உணர்வு - விடுபட்டோம் உலகத் தளையிலிருந்து என்ற உணர்வு. வசித்த ரூம் பற்றியோ, ஆபீஸ் பற்றியோ, உறவினர் பற்றியோ, நண்பர் பற்றியோ எதையும் எண்ணாமல் நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் போய் ஏதோ ஒரு கெளன்ட்டரின் க்யூவில் நின்றேன். சகலத்திலும் சுதந்திரம். இன்ன இடத்துக்குப் போக வேண்டும் என்பதை நிர்ணயிக்க நான் யார்? ஏதோ ஒரு கியூவில் நின்றேன்.

டிக்கெட் க்யூ நகர்ந்தது. எனக்கு முன்னாலிருந்தவர் 'ஷோரனூர்' என்று டிக்கெட் கேட்டார்.

நானும் 'ஷோரனூர்' என்றேன். ஷோரனூரில் இறங்கியதும் ஸ்டேஷன் வாசலில் குருவாயூருக்குச் செல்ல அங்கு ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. சிலர் ஏறினர் - நானும் ஏறி குருவாயூரை அடைந்தேன். (சுவாமி சின்மயானந்தா ஒரு தரம் தனது பக்தர்களை யக்ஞம் முடிந்ததும் குருவாயூர் கூட்டிச் சென்றார். ஆகா.. அதே குருவாயூர்.)

ஒரு கடையில் அலுமினியப் போனி ஒன்றும், இன்னொரு கடையில் சாயத் தூளும் வாங்கிக் கொண்டு கோயில் குளத்துக்குச் சென்றேன்.

காவிப் பவுடரை அலுமினிய போனியில் நீர் எடுத்துக் கரைத்தேன். வேட்டியையும் சட்டையையும் நனைத்தேன். குளத்துப் படிக்கட்டில் உலரப் போட்டேன்.

நின்ற கொண்டிருந்தேன் - இல்லை. அவை உலர்வதற்காகக் காத்திருந்தேன்.

மனசு இடி இடியெனச் சிரித்தது. 'அட முட்டாளே! நீயா சன்னியாசியாக முடியும்? உன் வேட்டிக்கும் சட்டைக்கும் காவல் காத்து நிற்கிறாயே! உனக்கு உடைமைப் பற்றே போகவில்லை. உலகப் பற்றையா விடப் போகிறாய்!' என்று உரக்க அது சிரித்தது.

'பரவாயில்லை' என்று குளத்தில் முழுகி எழுந்தேன். பூணூலை அறுத்துப் போட்டேன்.

வெய்யிலில் உலர்ந்த காவிக்குள் புகுந்து ஊரைச் சுற்றிவிட்டு கோயிலுக்குள் நுழைந்து குருவாயூரப்பன் சன்னிதிக்கு எதிரிலிருந்த மண்டபத்தில் தியானத்துக்கு உட்கார்ந்து 'இது பிராம்மண மண்டபம்', போய்க்கோ அந்தண்டை! என்று நம்பூதிரியால் விரட்டப்பட்டு, பின் வெளியேறி காட்டு வெளியில் தியானித்துக் கொண்டிருக்கையில் - நான் உட்கார்ந்த இடம் ஒரு பிணம் புதைத்த இடமென்றும், என்னை ஒரு சூனியக்காரன் என நினைத்து அந்தக் காட்டுக்காரன் (வாயும் மூக்கும் ஒரே பொந்தாக இருந்தவன்) விரட்ட நான் பயந்து விலகி ஆறடிப் பாம்பு ஒன்றைத் தாண்டிக் கொண்டு, மதிய உணவுக்காக கோவில் பாக சாலைக்குள் நுழைய, பூணூல் இல்லாததால் சோறு மறுக்கப்பட்டு. (பிராமணனுக்கு மட்டும்தான் சாப்பாடாம்) வெறும் கிழங்குகளை இரண்டு நாள் தின்று கொண்டு, மூன்றாம் நாள் சூலம் வைத்துக் கொண்டிருந்த ஒரு வடக்கத்தி பைராகியால் நிழல் போல் தொடரப்பட்டு, இரவு பெரு நோயாளியான பிச்சைக்காரர்கள் படுத்திருந்த இடத்தில், கும்பலோடு கோவிந்தாவாக உறங்க முயன்று, அவர்கள் நோயாளிகள் என்று அறிந்து விலகி ஓடி, ஒரு பாங்கி வாசலில் உறங்க, திருட்டுக்கு வந்தவனோ என போலீசால் விரட்டப்பட்டு, குளத்துப் படிக்கட்டில் அலுமினியப் போனியைத் தலைக்கு வைத்துச் சிறிது படுத்திருந்துவிட்டு இரவெல்லாம் தோய்க்கும் சத்தமும், குளிக்கும் சத்தமும் இம்சை செய்ய காலையில் எழுந்ததும், நாம் சன்னியாசத்துக்கு லாயக்கில்லை என்று ஊருக்கு என் டாக்டர் அண்ணா கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு கடிதம் -

'நான் வேண்டுமானால், என்னை ஷோரனூர் ரயில் நிலைய வாசலில் நாளை சந்திக்கவும்' என்று கடிதம் எழுதிப் போட்டுக் காத்திருந்து - அண்ணா வந்ததும் வாய் பேசாது பூனைக் குட்டியாக அவனைத் தொடர்ந்து என் இரண்டு நாள் சன்னியாசத்தை முடித்துக் கொண்டு, ஆபீஸ் வந்து சேர்வதற்குள் இங்கே ஆபீசில் அனைவரும் பட்டாளமாக நான் போன இடத்தைத் தேடி நாலாப் பக்கமும் அலைந்து, பெங்களூரில் கீதை ஞான யக்ஞம் நடத்திக் கொண்டிருந்த சுவாமி சின்மயாவுக்கு போன் மூலம் கேட்டு அங்கும் நான் இல்லை என்றதும், யாரோ சைக்கிள் பின்னால் கட்டிச் சென்ற கசாப்பு மூட்டை என் உடலோ என்று ரா.கி. ரங்கராஜன் அத்தனை இடுக்கண்ணிலும் ஆசிரியரிடம் ஜோக் அடித்தவாறு பட்டணம் பூராத் தேடிக் களைத்திருந்த நிலையில் நான் மீண்டும் காரியாலயம் வந்து சேர்ந்த போது ஆசிரியர் மூன்று நாள் பேசாமலிருந்தார். 'கடமையைச் செய்யாமல் ஓடுவது யோகமோ சன்னியாசமோ ஆகாது' என்றார். அந்தச் சமயம் நான் ஒரு கதை எழுதித் தர வேண்டியிருந்தது.

வழக்கமான எங்கள் கீதை வகுப்பில் எங்களுக்கு உபநிஷத், கீதை, பஜன் கற்பித்த திரு. நடராஜன் என்ற நண்பர் மட்டும் (தற்போது அருள் திரு. தயானந்த சரஸ்வதி சுவாமிஜி) 'The call has come. அவருக்கு தெய்வீக அழைப்பு வந்து விட்டது' என்று பெருமையுடன் என்னைப் பற்றிக் கூறியதை ஆசிரியரும் ஏற்று, நான் சொல்லாமல் கொள்ளாமல் ஓடினதை மன்னித்து என்னைத் திரும்பவும் வேலையில் சேர்த்துக் கொண்டு உடனடியாகப் ஹிந்து பேப்பரில் ஒரு திருமண விளம்பரம் கொடுத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார். ('அப்போதுதான் உங்களுக்கு இங்கு வேலை!' என்று ஒரு கவுன்சிலாகக் கூடி மிரட்டல்).

எனக்குச் சன்னியாசக் கொடுப்பினை இல்லை என்பதை அறிந்து நானும் ஒரு சம்சாரியாகவே ஜாலியான அப்புசாமியாக மாறி விட்டேன்! சில நாள் கழித்து சென்னைக்கு கீதை யக்ஞம் செய்ய விஜயம் செய்திருந்த சுவாமி சின்மயானந்தாவின் கால்களில் விழுந்து வணங்கிய போது, 'ஹேய் குருவாயூரப்பா!' என்று சிரித்துவிட்டு 'ஒரு மாச சம்பளப் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள உன்னிடம் கட்டுப்பாடு இல்லை. எப்படி உன்னால் சன்னியாச வாழ்க்கைக்குக் கட்டுப்பட முடியும்!" என்று சிரித்தார்.

'சட்டைப் பையில் சம்பளம் இருந்ததால்தானே டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓடினாய்?' என்ற அர்த்தத்தில்!

ரி. என் பிரம்மச்சரிய வாழ்க்கை பூரா இப்படியே ஆன்மிகமாகப் போய் விட்டதோ என்று யாரும் நினைத்து அனுதாபப் பட வேண்டாம். அவர்களுக்காக ஒரு சிறு சம்பவம்.

நான் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப் பழகிக் கொண்டிருந்தபோது காலை ஆறாவது மணிக்குத் தொடங்கும் முதல் குரூப்பில் எனக்கு இடம். அந்த இனிமையான அமைதியான காலை நேரத்தில் ஆறு அல்லது ஏழு பேர்தான் வந்து பழகுவார்கள். அவர்களில் ஒல்லியாக அழகாக ஒரு ஆங்கிலோ இந்திய சிம்ரன் இருந்தாள்.

சட்டைக்காரிகளுக்கே உரிய கவுனும், பாப் தலையுமாக துலுக்க சாமந்தி நிறத்தில் இருப்பாள். இனிமையான முகம் - காலையில் 'குட்மார்னிங்' என்று அவள் யாரையும் வாய் திறந்து விஷ் பண்ண மாட்டாள். ஆனால் அவள் முகப் பொலிவு அறையின் காலை இருட்டைப் போக்கி வெளிச்சமாக்கக் கூடியது.

ஒரு தினம் அவள் வழக்கமான கவுனுக்குப் பதில் சேலை அணிந்து வந்திருந்தாள்.

கவுனை விட சேலையே அவளுக்கு மேலும் அழகாக இருந்தது.

நான் டைப் முடித்துக் கீழே சற்று முன்னதாக வெளிவந்தபோது அவளுடைய லேடீஸ் சைக்கிள் வெளியே ஸ்டாண்டில் இருந்தது.

அவள் பெயர் எனக்குத் தெரியாது. அவளுக்குத் தமிழ் தெரியுமா என்றும் தெரியாது.

ஆனாலும் ஒரு துண்டுப் பேப்பரில் 'நீ புடவையில் தான் மிக அழகாக இருக்கிறாய்!' என்று எழுதி, ஹாண்டில் பார் பக்கம் அவள் கட்டி வைத்திருந்த கூடையில் அந்தத் துண்டுக் காகிதத்தைப் போட்டு விட்டு விரைவாகப் போய் விட்டேன்.

அவள் அதைப் பார்த்தாளா, படித்தாளா, தூக்கி எறிந்தாளா தெரியவில்லை.

ஆனால் மறுநாள் அவள் வழக்கமான கவுன் அணிந்துதான் டைப் அடிக்க வந்தாள்.

'சீ! சரியான முண்டம்' என்று நினைத்துக் கொண்டேன்.

நகைச்சுவைக் கட்டுரை எழதுவது எப்படி? - பாக்கியம் ராமசாமி (சென்ற இதழ் தொடர்ச்சி)


சிந்திப்பதற்கு வீட்டில் தனிமை கிடைக்கவில்லை என்றால் வெளியே சென்று (விடியற்காலை நேரம் உகந்தது) நடந்து கொண்டே யோசிக்கலாம். அல்லது பூங்காக்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

சிறுவயதிலிருந்தே குறும்பும், குசும்பும், அரட்டையும், கும்மாளமுமாக இருக்கிறவர்களுள் பெரும்பான்மையினர் தமது நகைச்சுவையை வாயளவோடு நிறுத்திக் கொள்கின்றனர். அத்தகையவர்கள் எழுத முயன்றால் வெற்றி அவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கும்.

பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் நகைச்சுவை உணர்வைக் குங்குமப்பூ மாதிரி துளியளவு கிள்ளிப் போட்டு விட்டுத் திருப்தி அடைந்துவிடுவார்கள். பத்திரிக்கைகளில் நிறைய எழுத மாட்டார்கள். அதுதான் அவர்களுக்குக் கெளரவம் என்று நினைத்து மிகப்பெரிய இலக்கிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

அந்த நாள்களில் தீபாவளி மலர்களில் மட்டுமே மஹாலிங்க சாஸ்திரிகள், விஜயராகவச்சாரியார், I.C.S. போன்றவர்கள் நகைச்சுவையாகத் தமது அனுபவங்களை விசேஷக் கட்டுரைகளில் தெரியப்படுத்துவார்கள். அவர்கள் எல்லோரும் "தீவிளிக்குத் தீவிளி" ரகம்!

எஸ்.வி.வி. போன்ற பெரியவர்கள் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய நிறைய எழுதியது வாசகர்களின் பாக்கியம்.

மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்' தொடங்கி. எஸ்.வி.வி, கல்கி, புதுமைப் பித்தன், துமிலன், பரதன், நாடோடி, தேவன், தூன், குத்தூசி குருசாமி, அண்ணா, பெரியார், சாவி ஆகியோரது எழுத்துகளில் அர்த்தமுள்ள நகைச்சுவையை நாம் காண முடிகிறது.

நகைச்சுவையாக எழுத விரும்புகிறவர்கள், முன் சொன்ன ஆசிரியர்களின் எழுத்துக்களோடு பரிச்சயம் வைத்துக் கொள்வது பயனுள்ளதாயிருக்கும். திரும்ப திரும்பப் படிப்பது அவசியம்.

தற்போதுள்ள எழுத்தாளர்கள் சோ, சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், கி. ராஜேந்திரன், கடுகு, சத்யா ஆகியோரின் எழுத்துகளில் நகைச்சுவை இழையோடுவதைக் காணலாம்.

ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களுள் பி.ஜி. வோடவுஸ், காலத்தில் அழிக்க முடியாத நகைச்சுவையைக் கொடுத்திருப்பவர். மேம்போக்காகப் பொழுது போக்குக்கு மட்டும் படிக்காமல், நகைச்சுவைச் சம்பவங்கள் எப்படி ஒன்றன் விளைவினால் மற்றது எவ்வாறு மாறக்கூடும் என்ற வளமான அவரது கற்பனையை நுணுகி ஆராய வேண்டும். உரையாடல்களும் கவனமாக ஆராயத் தக்கவை.

பெர்னர்ட் ஷாவின் நாடகங்களில் சமுகப் பிரக்ஞையும் துணிவான விமரிசனங்களும் வித்தியாசமான கருத்துக் கோணங்களும், உரையாடலும் நகைச்சுவையாக எழுத முயல்பவர்களுக்குச் சிறந்த கல்லூரி படிப்பாகும்.

கற்பனை விசாலங்களுக்கு Alice in Wonder Land. Gulliver's Travels போன்றவற்றை இரசிக்கலாம்.

திரைப்படங்களில் பாத்திரங்கள் இன்னென்ன செய்தால் பார்க்கிறவர்களின் கண்களில் நீர் பெருகும் என்னும் உத்தி கையாளப்படுவதைப் போல. எழுத்தாளர்களும் இப்படி இப்படி எழுதினால் சிரிப்பு வரும் என்பதை அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டும். வெற்றிகரமான கண்டுபிடிப்புகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதில் தவறில்லை.

நகைச்சுவையாக எழுதச் சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதலில் உங்கள் அனுபவங்களை சீரியஸாக எழுதிப் பாருங்கள். அதையே பிறகு வேடிக்கையாகவும் எழுதிப் பாருங்கள்.

காலையில் எழுந்ததும் பெரிய சோதனை!. வாஷிங் மிஷின் ரிப்பேர். தண்ணி, பிரளயமாக வீடு முழுவதும் வந்துவிட்டது. ரிப்பேர் செய்ய வரும்படி போன் செய்யலாமென்றால் நம்பர் கிடைக்கவில்லை. இதுதான் விஷயம்.

இதை வேடிக்கையாக எழுதிப் பார்க்கலாம்.

இருபத்து ஐயாயிரம் ரூபாய் வாஷிங் மிஷின் குட்டி கடோத்கஜன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. மிஷினின் தலையிலே மூளை இருப்பதற்கு பதில் காரண்டி கார்டுதான் இருக்கிறது. அதனால் இப்பொழுது என்ன பிரயோஜனம்? அது பற்றி போன் செய்ய நம்பர் கிடைத்தால்தானே?

போன் என்னவோ பேசுகிறது.

'நீங்கள் டயல் செய்யும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை' என்கிறது ஒரு தடவை. இன்னொரு தரம் 'தடத்திலுள்ள எண்களெல்லாம் உபயோகத்தில உள்ளன. சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்' என்கிறது.

அந்தச் சிறிது நேரம் என்பது எத்தனை யுகம்? பிரம்மாவின் ஒரு வருடமா?

இப்படி. வேலை செய்யாத வாஷிங் மிஷினால் நாம் பட்ட துயரத்தை வேடிக்கைப் படலமாகவும் எழுதிப் பார்க்கலாம்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் (ஏன். தைரியமிருந்தால் மனைவி) ஆகியோரது குணாதிசயங்களை. அவர்கள் பேசுவது. நடந்து கொள்வது. சாமர்த்தியமான அவர்களது நழுவல்கள். மீசையில் மண்படாத தோல்விகள். மொட்டை அதிகாரங்கள் ஆகியவற்றை நையாண்டி செய்து எழுதிப் பாருங்கள்.

ஒருகால். பத்திரிகைகளில் வெளியாகி, குறிப்பிட்ட நபர்கள் படிக்க நேர்ந்தால்கூட அது தங்களைப் பற்றியதுதான் என்று நினைத்துக்கொள்ள மாட்டார்கள். பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் மட்டுமல்ல. பொதுவாகத் தங்களைக் குறையுள்ளவர்களாக நினைப்பதில்லை.

மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகள் பலவற்றை எழுதிப் பழகலாம்.

எழுதியவற்றை நண்பர்களிடம் காட்டுங்கள். உங்கள் நகைச்சுவை எடை உங்களுக்கே தெரியும்.

எளிதில் கண்டவற்றிற்கெல்லாம் சிரிப்பவர்கள் சரியான விமரிசகர்கள் ஆகமாட்டார்கள். தேர்ந்த இரசிகராகப் பார்த்துப் படிக்கச் சொல்வது அவசியம்.

அனுபவங்கள் இரண்டு ரகம். தாமாக நம்மைத் தேடி வருபவை, நாமாக தேடுபவை.

பஸ்ஸில் தினமும் ஆபிஸ் போவான், வருவான். சாயந்திரம் வந்ததும் ரெஸ்ட். இரவு சாப்பிடுவான், தூங்குவான். காலையில் ஆபீஸ்.

பஸ் ஸ்டாப்பில் நிற்பது. ஏறுவது பயணம் செய்வது, இறங்குவது, ஆகியவற்றில் அவன் புதுமை காண முடியாது.

பஸ் பிரேக் டவுன், கண்டக்டர் - பயணி மோதல். ஆபீஸில் ஒரே மாதிரி சூழ்நிலை ஆகிய இந்த மாமூலான வாழ்க்கையில் நகைச்சுவைச் சம்வங்கள் ஓரளவே கிடைக்கும். கிடைத்தாலும் அவற்றை ஏற்கனவே யாராவது எழுதியிருப்பார்கள்.

ஆகவே, வித்தியாசமான சூழ்நிலை, சம்பவங்கள் ஆகியவற்றை நீங்கள் தேடித்தான் செல்ல வேண்டும். மேலை நாட்டு எழுத்தாளர்கள் போல் நாடு நாடாகச் சென்று, செலவு செய்து, அனுபவங்கள் பெற முடியாவிட்டாலும் நம் நாட்டுக்கு அங்கிருந்து வரும் நிகழ்ச்சிகள், அதிசயங்கள் ஆகியவற்றை கூடுமானவரை நேரில் சென்று பார்க்க முயற்சி செய்ய வேண்டும்.

உதாரணமாக, உலக நீச்சல் விளையாட்டுக்காரர்கள் நம் ஊர் நீச்சல் குளத்தில் கும்மாளமிட்டதை நேரில் சென்று பார்க்க முடியாதா என்ன?

சிலோன்காரர்களும் இந்தியர்களும் தமது நீச்சல் வீரர்களை ஊக்கப்படுத்திப் போடுகிற கோஷத்தையும், அவரவர் கொடிகளை ஆட்டிக்கொண்டு கத்துகிற கத்தலையும் டி.வி.யில் சில நிமிஷம் காட்சிகளாகப் பார்ப்பதில் நிச்சயம் உங்களால் உணர முடியாது.

எழுத்தாளனுக்கு - குறிப்பாக, நகைச்சுவை எழுத்தாளனுக்கு - அனுபவமே முதலீடு.

துப்பறியும் நாவலாசிரியர்கள், வித்தியாசமான பின்னணிகளுக்கும், மர்மமான வழக்குகளுக்கும், டெக்னிக்கல் விஷயங்களுக்கும் உரிய அறிஞர்களையும், பிரிவுகளையும் அணுகி விஷயம் சேகரிப்பது போல், நகைச்சுவைக் கட்டுரை, கதை ஆசிரியர்களும், அந்தச் சிரமங்களைப் பட்டால்தான் சோபிக்க முடியும்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது, நடை. புதிய உவமானங்களைச் சொல்லுவது சுவையை மேம்படுத்தும். உதாரணமாக, 'பழைய கள், புதிய மொந்தை' என்பதை 'பழைய தலையணை, புதிய உறை' என்றோ, 'பழைய அரசியல்வாதி, புதிய கட்சி' என்றோ, 'பழைய காதல், புதிய பெண்' என்றோ மாற்றிச் சொல்லலாம்.

'இந்துப் பத்திரிகையின் ஞாயிறு இதழ்களில் அவ்வப்போது வெளியாகும் 'கங்காதர்' கட்டுரை, ஆர்.கே. நாராயணன், குஷ்வந்த் சிங் ஆகியோரின் கட்டுரைகள் டச்சுடன் ரசிக்கத் தக்கனவாய் உள்ளன. படிக்க, எழுத முயலுங்கள்.

நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதுடன் சில நல்ல நகைச்சுவையாளர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். கட்டுரை, கதை ஆகியவற்றை எழுதும் ஆசிரியர்களைவிட அவர்களது பெயர்கள் அடிக்கடியும் நிறைய இடங்களிலும் பத்திரிகைகளில் பிரசுரமானாலும். முழுமையான ஒரு நகைக்சுவைக் கதையினையோ, கட்டுரையினையோ எழுதக்கூடிய அளவுக்குத் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்னும் அவப்பெயர் அவர்களுக்கு வந்துவிடலாகாது. தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை அவர்கள் விரிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அமரர் மகரம் தொகுத்த பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட 'கதை எழுதுவது எப்படி?' என்ற நூலிலிருந்து.யோசனை கேட்க வராதீர்கள்!

ரா.கி. ரங்கராஜன்

     எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே போசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.

உண்மையில் 'முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.

''தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி'' என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா! எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்!' என்று தப்பாக பிரமிப்பார்கள்.

நான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.

ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள்?

கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது! எல்லோரும் எழுந்திருங்கள்!' என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறத் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.

எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெருமூ எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.

ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிரல்ா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.

இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடதத்தில்.

இது எப்படி இருக்கு!

மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

எனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப்த படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.

ஏதோ உங்களாலானது...
ரா.கி. ரங்கராஜன்காலை மணி பத்து இருக்கும். அதற்குள்ளேயே வெப்பமும் புழுக்கமும் ஆளை அழுத்திக் கொண்டிருந்தன. முன் பக்கத்து ஸிட் அவுட்டில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

டங் டங்கென்று ஒரு சத்தம்.

நிமிர்ந்து பார்த்தால், சட்டை வேட்டி மூக்குக் கண்ணாடியுடன் ஒரு ஆள், பலமான நீளமான உருட்டுக் கட்டையால் கேட்டின் இரும்புச் சட்டத்தைத் தட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

வயதான ஆள்தான். ஆனால் அப்படியொன்றும் தள்ளாமையில் கீழே விழுந்து விடுகிற மாதிரி இல்லை. அழுக்கு முகமும் அழுக்கு உடையுமாக இருந்ததால் பிச்சைக்காரன் என்று நன்றாகத் தெரிந்தது.

(பிச்சைக்காரன் என்கிற வார்த்தையைச் சொல்லவே என்னவோ போலிருக்கிறது. கழகத் தமிழ் அகராதியைப் பார்த்தேன். 'இரவலர்' என்றுபோட்டிருக்கிறது. ஆனால் அது என்னவோ புலவர், கல்விமான், அறிவாளி என்று ரொம்ப கெளரவம் கொடுக்கிற சொல்லாகத் தோன்றுகிறது.)

இந்த ஆள் முன்பே இரண்டொரு முறை வந்திருக்கிறார். ('ன்' என்று சொல்லவும் என்னவோ போலிருக்கிறது) வாயைத் திறந்து, ஐயா, பசிக்கிறது என்றோ, தர்மம் போடுங்க சாமி என்றோ எதுவும் கேட்கமாட்டார். டங் டங் என்று தட்டிவிட்டு நிற்பார். எதாவது சில்லறை போட்டு அனுப்பிவிடுவேன்.

இந்தத் தடவை பேசாமல் இருந்தேன். மறுபடியும் டங் டங் என்று தட்டினர். 'அப்புறமா வாங்க' என்றேன். காதுதான் கேட்கவில்லையோ, அல்லது கேட்காத மாதிரிப் பாசாங்கோ, நேரே என்னைப் பார்த்தபடி மறுபடியும் டங் டங் என்று கேட்டில் தட்டினார். கண் நன்றாகத் தெரிகிறது என்று ஊகித்து, கையால் சைகை காட்டி 'அப்புறமா வாங்க' என்று மீண்டும் சொன்னேன்.

மேலும் நாலைந்து டங் டங். பிறகு என்னை முறைத்துப் பார்த்தார் - 'நீயும் ஒரு மனுஷனா!' என்று சொல்வது போல. பிறகு நகர்ந்து விட்டார்.

அண்டை அயல் வீடுகளிலும் இரும்பு கேட் இருக்கிறது. அங்கே எங்கேயும் கைத்தடியால் டங் டங்கென்று தட்டும் சத்தம் கேட்கவில்லை.

'வாயைத் திறந்து நான் யாசகம் கேட்கமாட்டேன். ஆனால் நான் வந்து எதிரே நின்றதுமே தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டியது உன் கடமை' என்று இந்த ஆளைப்போல சொல்லாமல் சொல்கிற பலர் இருக்கிறார்கள்.

மயிலாப்பூரில் இரண்டு ஆசாரமான வைதீகர்களைப் பார்த்திருக்கிறேன். நீட்டாக, சோல்ஜர்கள் மாதிரி வந்து நிற்பார்கள். கடகடவென்று 'வேதம்' ஓதுவார்கள். அது வேதம்தானா, அப்படியே வேதமாயிருந்தாலும் சரியாகத்தான் சொல்கிறார்களா என்பது கண்டுபிடிக்க முடியாது. ('தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேல் குலத்தான் என்று கூவு' என்று பாரதியார் ரொம்பக் கடுமையாக எழுதியிருக்கிறார்.)

ஐந்து நிமிடம் வேதம் (!) சொல்லி முடித்ததும் இருவரும் பேசாமலே நிற்பார்கள். 'உன்னைவிட நான் உயர்ந்தவன் என்று தெரிகிறதல்லவா? மரியாதையாக சன்மானம் கொடுத்து அனுப்பு' என்று மெளனமாய் உணர்த்துகிற தன்மானக்காரர்கள் இவர்கள்.

சாபம் கீபம் இட்டுத் தொலைப்பார்களோ என்ற பயத்தில் நானும் ஏதாவது கொடுத்தனுப்பி விடுவேன்.

ஏழை எளிய உறவினர்கள் பல சமயங்களில் உதவி தேவை என்று வெளிப்படையாகவே கேட்பதுண்டு. என்னால் இயன்றதைச் செய்வேன். வேறு வகையான சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் தமையனாரிடம் ஒரு நாள் 'ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்கிறே, எனக்கு அஞ்சோ பத்தோ கொடுத்தால் குறைஞ்சா போயிடுவே?' என்று கேட்டுவிட்டார்.

அவ்வளவுதான். என் அண்ணாவுக்குக் கடும் கோபம் வந்து விட்டது. 'என்ன இது, அதிகாரப் பிச்சையாக இருக்கிறது? ஒரு பைசா தரமாட்டேன்!' என்று சொல்லி விரட்டிவிட்டார்.

(''அதிகாரப் பிச்சை!'' எத்தனை பொருட்செறிவுள்ள அழகான தமிழ்ச் சொல்! இதைக் கண்டுபிடித்தவர் யாராயிருந்தாலும் வாழ்க!)

இன்றைய தமிழ் நகைச்சுவை எழுத்தாளர்கள் அனைவருக்கும் பிதாமகர் ஒருவர் உண்டு. அவர் பெயர் எஸ்.வி.வி. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய பல அற்புதமான கட்டுரைகள் சமீபகாலமாகத்தான் புத்தக வடிவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.

வாசலில் பிச்சை கேட்டு ஒரு கிழவி நச்சரித்துக் கொண்டேயிருந்தாளாம். இவர் ஏதோ அவசர வேலையில் மூழ்கியிருந்ததால், போ, போ என்று விரட்டிக் கொண்டிருந்தார். அவள் போகவில்லை. அருகில் கிடந்த ஒரு சின்ன குச்சியை எடுத்து, 'போன்னா போகமாட்டே?' என்று ஓங்கியிருக்கிறார். அது நிஜமாகவே அந்தக் கிழவி மேல் பட்டதோ, அல்லது அதுதான் சாக்கு என்று அவன் பிடித்துக் கொண்டாளோ -

குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக் கொண்டு தெருவில் விழுந்துவிட்டாள். எஸ்.வி.வி.க்குச் சங்கடமாகி விட்டது. 'இந்தாம்மா, சத்தம் போடாதே. எழுந்து போய்த் தொலை. காசு கொடுக்கிறேன்', என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தெருவில் கூட்டம் சேர்ந்துவிட்டது.

ஆளாளுக்கு அந்தக் கிழவியைச் சூழ்ந்துகொண்டு, 'என்னம்மா, அடி பட்டுடுத்தா? யார் அடிச்சாங்க?' என்று கேட்க, அவள் மேலும் மேலும் கூவ, எஸ்.வி.வி. மேலும் மேலும் விளக்கம் சொல்ல, படா ரகளையாகிவிட்டது.

'ஏன் சார், பாவம் கிழவி. ஏதோ பிச்சை கேட்டாள். இஷ்டமானா கொடுங்க. இல்லாட்டி, போன்னு சொன்னா போயிடறாள்! அடிச்சு விரட்டலாமா?' என்று பல பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

(நான் மேலே எழுதியிருப்பது அந்தக் கட்டுரையின் சாரமே தவிர, அதே வாக்கியங்கள் அல்ல. ஞாபகத்தில் இருப்பதைச் சொன்னேன்.)

எஸ்.வி.வி.யைத் திட்டியவர்கள் அதன்பின் தங்கள் பாட்டுக்குக் கலைந்து போயிருப்பார்களே தவிர, அந்தக் கிழவிக்கு ஒரு பைசா கொடுத்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தர்மம் பண்ணுவதிலே யாருக்கும் சந்தோஷம் கிடையாது. தர்மம் பண்ணாதவனைத் திட்டுவதென்றால் மட்டும் எல்லாருக்கும் சந்தோஷம்.

ஷேக்ஸ்பியரின் 'கிங் ஜான்', நாடகத்தில்.

'நான் பிச்சைக்காரனாக இருக்கும் வரையில், பணம் வைத்திருப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன். நான் பணக்காரனாக ஆனதும் பிச்சை எடுப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன்', என்று ஒரு வரி வருகிறது.

ஐயாமாருங்களே, அம்மாமாருங்களே, இதாங்க உலகம்.

திருவொற்றியூரில் ஒரு மகான்

 நாயைப் பற்றி அடிக்கடி எழுதுவது நாயமல்ல என்று தீர்மானித்து, அந்தப் பிரசினையை எப்போதோ விட்டுவிட்டேன். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வழக்கத்துக்கு நாம் அடிமைப்பட்டோமானால் நமக்கு ஒரு பட்டப்பெயர் ஏற்பட்டுவிடுகிறது.

முன்னொரு காலத்தில், நான் ஆபீசிலிருந்து பகல் உணவுக்காக வீடு திரும்பும்போது தெருமுனையில் இருந்த மாம்பழ வண்டிக்காரனிடம் இரண்டு பழங்கள் வாங்கி இரண்டு கையிலும் எடுத்துப் போவதை வழக்கமாய்க் கொண்டிருந்தேன். ஒருநாள் என் மனைவியிடம் ஒரு மாமி, ''தினம் இரண்டு மாம்பழம் வாங்கிக் கையில் எடுத்துக் கொண்டு போவாரே, அந்த மாமாதான் உங்க ஆத்துக்காரரா?'' என்று கேட்டாராம். ''சே! எல்லாம் கிடக்க, 'மாம்பழ மாமா' என்றா நமக்குப் பெயர் வரவேண்டும்?'' என்று மனம் வெறுத்துப் போனேன்.

எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பத்து வயதுப் பையன் இருந்தான். அவனுடைய அம்மா யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் அவனுக்கு ஏதாவது தேவைப்படும். வந்து கேட்பான். அம்மா பொருட்படுத்தமாட்டாள். அவன் விடமாட்டான். தாயின் மோவாயைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து, ''அம்மா, இதோ பாரேன், இதோ பாரேன்'' என்ற வார்த்தையை முழுசாக, தெளிவாகச் சொல்லமாட்டான். 'தோ பாரேன், தோ பாரேன்' என்பான். நாளடைவில் அது மேலும் சுருங்கி, 'தப்பாரேன்' என்றாகிவிட்டது. அவனைப் பற்றிப் பேச்சு வரும்போது, 'தப்பாரேன் தப்பாரேன் என்று சொல்வானே, அந்தப் பையன்' என்று நாங்கள் குறிப்பிடத் தொடங்கினோம். பிறகு 'தப்பாரேன்' மேலும் சிதிலமடைந்து, 'தப்பாரே' என்பதே அவன் பெயர் என்றாகிவிட்டது.

இன்னொரு சம்பவமும் ஞாபமும் வருகிறது.

செங்கல்பட்டிலிருந்து ஒரு எழுத்தாளர் 'சோமு' என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் படிக்கும் போதே கதை சரியில்லை என்று தெரிந்துவிடும். ஒதுக்கி விடுவோம். அதற்குமேல் படிக்கமாட்டோம். வாரம் தவறாமல் கதைகள் அனுப்பிக்கொண்டிருந்த அவர் ஒருநாள் நேரில் வந்தார். ''பத்துக் கதைகள் அனுப்பினேன். ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. பிரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை. திருப்பியாவது அனுப்பலாமில்லையா?'' என்றார்.

''திருப்பி அனுப்புவதற்கு நீங்கள் கதையுடன் தபால் தலை வைக்கவில்லையே?'' என்றோம்.

''இல்லையே, ஒவ்வொரு கதையிலும் வைக்கிறேனே?'' என்று அவர் பிடிவாதமாகச் சொல்லவே, கதைக் கட்டுக்களிலிருந்து அவருடைய கதைகள் ஐந்தாறு கண்டுபிடித்து எடுத்து வந்து அவரிடம் காட்டினோம்.

'பார்த்தீர்களா? நீங்கள் தபால் தலை வைக்கவில்லை!'' என்று பெரிய பாயின்ட் கண்டுபிடித்துவிட்ட மாதிரி சொன்னோம்.

அவர் இன்னும் பெரிய பாயின்ட் வைத்திருந்தார். கதைத் தாள்களைப் புரட்டினார். காட்டினார். என்ன அதிர்ச்சி! ஒவ்வொரு கதையிலும் நாலாவது பக்கத்தில் தபால் தலை வைத்திருந்தார்! திருப்பி அனுப்புவதற்கான தபால் தலையை எல்லாரும் முதல் பக்கத்தில்தான் வைப்பார்கள். இவர் நாலாவது பக்கத்தில் வைத்திருந்தார். ''மன்னியுங்கள்'' என்று சொல்லி, கதைகளைத் திருப்பித் தந்தோம். அவரும் ஊருக்குப் போய்விட்டார்.

ஆனால் அன்று முதல் அவருக்கு 'நாலாம் பக்க சோமு' என்று பெயர் சூட்டிவிட்டோம். ''நாலாம் பக்க சோமுவிடமிருந்து இன்று கதை வந்திருக்கிறது'' என்று நாங்கள் பேசிக்கொள்வது சகஜமாகவிட்டது.

இதுபோல எனக்கும் ஒரு 'பெயர்' ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் என் பயம். ரங்கராஜன் என்ற பெயரில் பலர் இருக்கிறார்கள். அந்தப் பெயர் பேச்சில் வந்தால், ''யார்? சும்மா சும்மா நாயைப் பற்றி எழுதிக் கொண்டேயிருப்பாரே, அந்த ரங்கராஜனா?'' என்று சொல்வார்கள் என்று பயந்தேன்.

அதனால்தான் கொஞ்ச நாட்களாக நாயைப் பற்றிக் குரைக்காமல் இருந்தேன்.

இத்தனைக்கும், நாயைப் பற்றி எழுதுவதற்கு ஒரு சுவையான விஷயம் இருந்தது.

சென்ற டிசம்பர் மாதம், வீட்டில் கொல்லைப் புறத்தில் சிமென்ட் மேடைக்குக் கீழே இருந்த இடுக்கில் ஒரு தெரு நாய் வந்து நான்கு செல்வங்களை ஈன்றெடுத்ததையும்; நாங்கள் யாரேனும் அந்தப் பக்கம் போனால் அது சிம்ம கர்ஜனை செய்ததையும்; இரண்டு வார காலம் பொறுத்துப் பார்த்து, தாயும் சேய்களும் வெளியேறாததால் கார்ப்பரேஷனில் நாய் பிடிக்கும் பிரிவுக்குத் தெரிவித்ததையும்; அவர்கள் வந்து தாயையும் குட்டிகளையும் பிடித்து வண்டியில் ஏற்றிச் சென்றதையும்; இளகிய மனமுடைய என் நண்பர், ''இதுகளை எங்காவது கொண்டு போய் விட்டுடுப்பா. கொன்றுவிடாதே'' என்று சொன்னதையும்; அந்தக் கார்ப்பரேஷன் சிப்பந்தி கபகபவென்று சிரித்து, ''கொல்றதா? மேனகா அம்மா ஆர்டர் போட்டிருக்காங்க சார். வந்து பாருங்க. ஏஸி ஹாலில் நூத்துக்கணக்கான நாய்களை ராஜா மாதிரி வச்சிருக்கிறோம். மனுஷங்களுக்குக்கூட அந்த மாதிரி வசதி கிடையாது'' என்று சொன்னதையும்-

எழுதாமல் இத்தனை நாளும் விரதம் கடைப் பிடித்தேன். இப்போது எழுத நேர்ந்துள்ளது.

பற்பல வாரங்களுக்கு முன்னால் நான் நாய்களைப் பற்றி எழுதிய கட்டுரையை இப்போதுதான் படித்தாராம் டி.கே.எஸ். சர்மா என்ற அன்பர். தியாகராய நகரில் சிவாஜி தெருவில் வசிப்பவர்.

பிரியமாயும் அதேசமயம் கோபமாயும் நேற்று ஒரு கடிதம் எனக்கு எழுதியிருக்கிறார். ''நாய் ஒரு கண்ணியமான ஜந்து. அது தெரு நாயாக இருந்தாலும் குறிப்பிட்ட பாணியில் சேவை செய்கிறது. உதாரணமாக, எங்கள் தெருவில் உள்ள சில நாய்கள்தான் இரவில் திருடர்களுக்குத் தடையாக உள்ளன. இன்னொரு சுவையான விஷயம். அது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்கூட. அறுபது வருஷங்களுக்கு முன் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் பாடகசேரி சுவாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். வருஷம்தோறும் விசேஷ நாட்களில் அவர் 'பைரவ சந்தர்ப்பணை' ஒன்றை நாய்களுக்காக நடத்தி வந்தார். பந்தி வரிசையாக இலை போட்டு, பாயசம், லட்டு, வடையுடன் சாப்பாடு பரிமாறப்படுமாம். தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் எங்கிருந்தோ வந்து இலைகளை அடுத்து உட்காருமாம். அவர், ''ஊம், சாப்பிடு'' என்று சொன்ன பிறகு ஒழுங்காகச் சாப்பிட்டுவிட்டுப் போகுமாம். குரலே கேட்காதாம்.'' என்று எழுதியவர், கடிதத்தின் முடிவில், ''என் ஆதங்கம் என்னவெனில், அந்த அற்புத ஜீவனைப் பற்றி நல்லதாக ஒரு வார்த்தைகூட எழுத உங்கள் பொல்லாத பேனா மறுத்துவிட்டதே என்பதுதான்'' என்று எழுதியிருக்கிறார்.

என் துரதிருஷ்டத்தைப் பாருங்கள். எந்தப் பட்டமும் வாங்கக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் 'பொல்லாத பேனா' என்ற பட்டம் வந்துவிட்டது.

---

 ரா.கி. ரங்கராஜன்

'ஒண்டர்ஃபுல் நியூஸ்'

 

'கல்கண்டு' இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் என்பால் மிகுந்த பிரியம் வைத்திருந்த நண்பர்களில் ஒருவர். அவர் காலமானபோது நான் விழுந்து புரண்டு கதறியதைப் பார்த்து எல்லாருக்கும் அதிர்ச்சி. 'சும்மா நடிக்கிறேன்' என்று கூட சிலர் நினைத்திருப்பார்கள். உண்மையில், குமுதம் காரியாலயத்தில் சேர்வதற்கு நாலைந்து வருடங்களுக்கு முன்பே நானும் அவரும் 'சக்தி' மாத இதழில் இணைந்து பணியாற்றியிருந்தோம். வாடா போடா அளவுக்கு இல்லாவிட்டாலும் வாப்பா போப்பா அளவுக்கு சினேகிதம். நான் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் கல்கண்டு இதழில் என்னை எழுத வைத்து இருபது ரூபாய் முப்பது ரூபாய் என்று அன்பளிப்பு வாங்கித் தந்ததை மறக்க முடியாது.

சிறிது காலம் கல்கண்டில் நான் அவருக்கு உதவியாளராக இருந்த போது. ஏதாவது 'ஒண்டர்ஃபுல் நியூல் இருந்தால் கொடப்பா' என்பார். அவருக்கு இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே அதிசயமான, விசித்திரமான செய்திகள், துணுக்குகள் முதலியவற்றைத் திரட்டித் தரும் வேலையை என்னிடம் தருவார். பத்திரிகையில் துண்டு விழும் இடங்களில் அவற்றைப் பிரகரித்து சரி செய்வார். 'ஒண்டர்ஃபுல் நியூஸ்' என்று அவர் குறிப்பிடுவது அத்தகைய துணுக்குகளைத்தான்.

சமீபத்தில் அப்படிப்பட்ட சிலவற்றைப் படித்த போது அருமை நண்பர் தமிழ்வாணனைப் பற்றியும், அவருடைய அட்டகாசமான சிரிப்பைப் பற்றியும் தொப்பி, கறுப்புக் கண்ணாடியைப் பற்றியும் ஞாபகம் வந்தது. இந்தத் துணுக்குகளைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்! பரவாயில்லை. சொர்க்கத்தில் இருந்தபடி படித்து சந்தோஷப்படட்டும் என்று இங்கே தருகிறேன்.

இந்தக காலத்து அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் காப்பி இடைவேளை இருப்பது போல அந்த நாளில் 'மது இடைவேளை' இருந்தது. எகிப்தில் பிரமிட் கட்டிய தொழிலாளிகளுக்கு தினசரி மூன்று மது இடை வேளைகள். ஐந்து வகையான பீர்களும் நான்கு வகையான ஒயினும் வழங்கப்பட்டன.

ரஷ்யாவில் முதலாவது காதரைன் மகாராணியின் ஆட்சியில் பெண்கள் மது அருந்துவது தடை செய்யப்பட்டது. . விருந்துகளின்போது பெண்கள் அளவுக்கு மீறி மது அருந்தி ஒழுக்கம் கெட்டுப் போகிறார்கள் என்பதாலேயே இந்தத் தடை.

காதரைனின் கணவரான பீட்டர், தன் காதலிகளில் ஒருத்தி இன்னொரு வாலிபனிடம் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அவனை சிரச்சேதம் செய்தான். வெட்டப்பட்ட தலையை ஜாடி மதுவில் ஊறப் போட்டுத் தன் படுக்கையருகே வைத்திருந்தான்.

அலெக்ஸாண்டர் தன் படைவீரர்கள் தாடி வளர்க்கக் கூடாதென்று சட்டம் போட்டான். போரின் போது எதிரிகள் இவர்களது தாடியைப் பிடித்து மடக்கி விடுகிறார்கள் என்பதாலேயே இந்தத் தடை. அலெக்ஸாண்டரைப் பற்றிய இன்னொரு தகவல்: . 'பெரிடாஸ்' என்ற தனது நாயின் மீது மட்டற்ற செல்லம் கொண்டவனாக, புதிதாகக் கட்டப்பட்ட ஒரு நகரத்துக்குப் பெரிடாஸ் என்று பெயர் சூட்டினான். இந்த நாய் பயங்கரமான 'வம்ச'த்தில் பிறந்தது. இது ஒரு சிங்கத்தையும் யானையை யும் சண்டையில் வீழ்த்தியதாம்.

குழந்தைகளுக்கான தேவதைக் கதைகள் எழுதிப் புகழ் பெற்ற ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், பெற்றோருக்குத் திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிறந்தவர். ( அதாவது, கல்யாணமான போது அவருடைய' தாய் எட்டு மாத கர்ப்பிணி.) ஆண்டர்ஸன் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. தன் காதலியின் கடித மொன்றை ஒரு சுருக்குப் பையில் வைத்துக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தார் இறக்கும் வரையிலும். நெருப்பென்றால் பயப்படுகிறவர். ஓட்டல்களில் தங்கும்போது ஒரு கயிற்று சுருள் வைத்திருப்பார் தீ விபத்து ஏற்பட்டால் தப்ப வேண்டும் என்பதற்காக.

பல் வலிக்காரர்களின் இஷ்ட தெய்வம் ஸெயின்ட் அபோலியா. கி.பி. 249ம் ஆண்டில் ரோமானியர்கள் இவரைக் கொலை செய்த போது, பற்களை உடைத்து சித்திரவதை செய்ததால் இப்படி ஏற்பட்டது. இவரது பற்கள் என்று சொல்லி ஐரோப்பா முழுவதும் ஏராளமான போலிப் பற்கள் விற்பனை செய்யப்பட்டன. 16'ம் நூற்றாண்டில் அரசாண்ட நாலாவது ஹென்றி, இநத மோசடிக் காரர்களின் குட்டை உடைப்பதற்காக, போலிப் பற்களையெல்லாம் திரட்டிக் கண்காட்சியில் வைத்தான். டன் கணக்கில் அவை குவிந்திருப்பதைக் கண்ட பின்னரே மக்களின் மூட நம்பிக்கை மறைந்தது.

ஆப்பிளில் ஏழாயிரம் வகைகள் உள்ளன. ஐசக் நியூட்டனின் தலையில் விழுந்து ஈர்ப்பு சக்தியை அவர் கண்டு பிடிப்பதற்குக் காரணமாக இருந்த ஆப்பிள் பச்சை நிறம் கொண்டது. 'கென்ட்மலர்' என்பது இதன் பெயர்.

அர்ஜென்ட்டினா நாட்டில் மிக மிக விசித்திரமான மாநாடுகள் நடைபெறுவது வழக்கம். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'உலக சோம்பேறிகள் மாநாடு' நடைபெற்றது. மே முதலாவது தேதியை உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது போல மே இரண்டாம் தேதியை 'உலக சோம்பேறிகள் தினம்' என்று அறிவிக்க வேண்டுமென இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'சர்வதேசக் குடும்பத் தலைவிகள் மாநாடு' முதன் முறையாக அர்ஜென்ட்டினாவில் கூடியது.

இங்கிலாந்தில் புகழ் பெற்ற ஆஸ்கட் குதிரைப் பந்தயங்கள் நடைபெறும் இடத்தில் அரச குடும்பத்தாருக்காகப் பிரத்தியேக 'மண்டபம்' இருக்கிறது. அங்கே யாரும் புகை பிடிக்கக் கூடாது. அரசியார் உணவு அருந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் வேறு யாரும் சாப்பிடக் கூடாது. வெற்றுக் காலுடன் அங்கே எவரும் வரக் கூடாது என்று தடை இருந்தது. அதை முதலில் உடைத்தவர் இளவரசி டயானா.

1732'ம் வருடம் மார்கன் என்ற ஓட்டப் பந்தய வீரர் 53 நிமிஷங்களில் 12 மைல்களைக் கடந்தார். அந்த சாதனைக்காக அவருக்கு 100 சவரன் பரிசளிக்கப்பட்டது. அப்போது அவரைப் பாராட்டி ஒருவர் அவர் முதுகில் ஒரு 'ஷொட்டு'க் கொடுத்தார். அதனால் கீழே விழுந்தார் மார்கன். பிறகு எழுந்திருக்கவேயில்லை மரித்தார்.

'ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனிதன் பிறக்கிறான். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனிதன் இறக்கிறான்' என்று கவிஞர் டென்னிஸன் ஒரு கவிதையில் எழுதியிருந்தார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பாபேஜ் என்ற கணித மேதை இந்த வரி தப்பானது என்று டென்னிஸனுக்கு எழுதினார். டென்னிஸனின் கூற்றுப்படி பார்த்தால் 'உலகத்தின் ஜனத்தொகை எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமே?' என்பது அவருடைய கேள்வி. 'ஒரு நிமிஷமும் அதற்கு மேல் பதினாறில் ஒரு பங்கு நிமிஷமும் ஒரு மனிதன் இறக்கிறான்' என்பதே சரி என்றார் பாபேஜ்.
     RSS of this page