இங்கே அம்மா திணறுகிறாள். பிறகு அழுகை குமுறி வெடிக்கச் சொல்கிறாள்: 'எனக்குப் பாட்டியப் புடிக்காதுடா!'
அம்மாவும் மகனும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். மனதைத் தொட்ட காட்சி. இதற்குத்தான் சீரியல் பார்ப்பது.
நீங்கள் பல விஷயங்களைக் குறித்து அழகாக எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் பல படைப்புகளில் காணப்படும் ஆணாதிக்க உணர்வு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. உங்கள் மீதிருந்த மரியாதையை இழந்துவிட்டேன். இனிமேலாவது உங்களை மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
உங்கள் கடிதம் உருக்கமாக இருந்தது. என்னைப் போன்ற படித்த எழுத்தாளர்களிடம்கூட இப்படி ஆணாதிக்கப் போக்கு நிலவுவது வருத்தமளிக்கிறது. குறிப்பாக என்னைப் போன்றவர்கள் பெண் ஆதரவு நிலை எடுப்பதுபோல் வேடமணிந்து சொந்த வாழ்க்கையில் பெண்களைக் கிள்ளுக் கீரையாக நடத்துகிறார்கள். பெண்களை இழிவுபடுத்திக் கதை எழுதுகிறார்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். இந்த நிலை மாறும். அது உங்களைப் போன்ற அழகிய இளம் கல்லூரி மாணவிகளிடம்தான் உள்ளது. பார்த்துச் செய்யுங் கள்.
பெனாயில் மணக்கும் சம்பவ வீட்டிற்குள் கான்ஸ்டபிள் 114 உடன் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. வீடு கழுவப்பட்டிருந்தது. பதற்றமான நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் இன்ஸ்பெக்டரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார். 4க்கு4 பாத்ரூமில் அந்தப் பெரியவர் சடலமாகக் கிடந்தார். காலடியில் ஒரு குளியல் சோப்.
'காலைலேந்து இப்பிடித்தாங்க கெடக்கறாரு. கூப்டா பதிலே இல்ல'- பெரியவரின் மனைவி விம்மினார்.
'மிஸஸ் மேடம், உங்க கணவர் கொல்லப்பட்டிருக்காரு' என்றார் குமார்.
மனைவி ஒரு கணம் அதிர்ந்து பின் கதறி அழுதார். 'அவரை யாருங்க கொல்லப்போறாங்க?'
'இவருக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?' என்றார் குமார், கீழே கிடந்தவரை லத்தியால் சுட்டிக்காட்டி.
'இல்லீங்க, இவர் யார் வம்புக்கும் போக மாட்டாரு' என்றார் மனைவி அழுதபடி.
குமார் குனிந்து பிணத்தின் பாதங்களைப் பார்த்தார். பிறகு முகத்தை நெருங்கிப் பார்த்தார்.
'பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறப்ப ஏன் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ல?' என்றார் இன்ஸ்பெக்டர்.
'சண்டை இல்லைங்க. ரசத்தை வாயில வெக்க முடியலன் னாரு. அதுக்காகத் திட்டுனேன்.'
'மிச்சத்தை நான் சொல்றேன். அவர் மேல இருக்குற கோவத்துல அந்த ரசத்தைக் குடுத்தே அவரைக் கொன்னுட் டீங்க. அப்புறம் அவரை பாத்ரூமுக்கு இழுத்துட்டு வந்து காலடில சோப்பை வச்சீங்க. கைலேந்து சோப்பு வாசனை போக வீட்டைக் கழுவுற சாக்குல பெனாயிலைப் போட்டு கையைக் கழுவிருக்கீங்க. ஆம் ஐ ரைட்?'
அந்தப் பெண்மணி ஓடப்பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரைத் தடுத்து நிறுத்தித் தொடர்ந்தார்.
'ஆனா, பேஷன்ட்டோட ரெண்டு கால்லயும் சோப்பு வாசனை வர்ல, பிசுபிசுப்பு இல்ல. வாயை நல்லாத் துடைச்சு விட்டிருக்கீங்க. பட், ரசத்தோட வாசனை உங்களைக் காட்டிக் குடுத்திருச்சு. அரெஸ்ட் ஹெர்!'
வணக்கம் சார்.
உங்கள் கட்டுரை ஒன்றில் புதுதில்லியில் ஆக்ரா இருப்பதாக எழுதியுள்ளீர்கள். இது தவறு. ஆக்ரா தனியாக வேறொரு இடத்தில் இருக்கிறது. எழுதும்போது தகவல்களைச் சரிபார்த்து எழுதுங்கள். இல்லாவிடில் உங்களைத் தொடர்ந்து படிக்கும் என்போன்ற வாசகர்கள் பிழைகளை நம்பிவிடுவோம்.
குமார் துப்பறிகிறார் தானாக ஒரு திருட்டு!
இன்ஸ்பெக்டர் குமாரின் போலீஸ் கார் சைரன் அலற அந்த இரண்டு மாடி நகைக் கடை முன்பு கிறீச்சிட்டு நின்றது. கதவைத் திறந்து வேகமாக இறங்கிய குமார், அதே வேகத்தில் தடதடவெனப் பத்துப் படிகள் ஏறிப் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தார். ஆனால், மூன்று படிகள்தான் இருந்தன. பிறகு, சமாளித்து ஒரே தாண்டில் மூன்று படிகளையும் ஏறி கடைக்குச் சென்றார்.
'முன்னாலால் சேட் ஜுவல்லர்ஸ்' என்று சொன்னது பெயர்ப் பலகை. குமார் அதை ஏறிட்டுப் பார்த்து ஆமோதித்துவிட்டுக் கடைக்குள் நுழைய, கான்ஸ்டபிள் 114 அவரைப் பின்தொடர்ந்தார். நடுத்தர வயதுக் கடைக்காரர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றார்.
'முதல்லேந்து சொல்லுங்க சேட்ஜி சார்' என்றார் குமார்.
'காலைல கடையத் தொறந்து பாத்தா, இந்தக் கண்ணாடிய ஒடச்சிருக்காங்க சார். ரெண்டு லட்ச ருவா மதிப்புள்ள வைரம் காணாமப் போயிடுச்சு. இந்த ஆல்பத்துல பாருங்க...'
வைரத்தை எல்லாக் கோணங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்பெக்டர் அசுவாரஸ்யமாக மேய்ந்தார்.
'உங்க வைரத்துக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?'
'வைரத்துக்கா?'
'ஐ மீன், உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?'
'இல்ல சார். சி.சி. கேமரா ரெக்கார்டிங்லகூட எதுவும் பதிவாகல.'
'நான் ஒரு வாட்டி பாக்கறேனே.'
இன்ஸ்பெக்டர் குமாரும் குழாமும் சி.சி.டி.வி. டி.வி.டி-யைப் பார்த்தனர். அந்தச் சிறிய தொலைக்காட்சித் திரையில் தெரிந்ததோ ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பற்றிய முழு ஆவணப்படம். டி.வி.டி-யை மாற்றியிருந்தார்கள். எங்குமே கைரேகைகள் இல்லை. டி.வி.டி-யின் முகத்தை விரலால் ஆங்காங்கே லேசாகத் தொட்டுப் பார்த்தார் குமார். ஒரு இடத்தில் லேசாக ஒட்டியது. திருப்பிப் பார்த்தார். பின் பக்கம் பிரதிபலித்த அவர் முகத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறையக் கீறல்கள். குமார் புன்னகை அரும்பினார்.
'வைரத்தைத் திருடுனவன் யாருன்னு இப்ப தெரிஞ்சிரும். நீங்க ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க.'
இன்ஸ்பெக்டரின் கார் மிடுக்காகக் கிளம்பி, அந்தப் பகுதியில் ஒவ்வொரு தெருவாக வட்ட மிட்டது. பிறகு, அது மெள்ள நின்ற இடம், 'கணேஷ் வீடியோ ரென்டல்ஸ்’ என்ற டி.வி.டி. வாடகைக் கடை. அடுத்த சில நொடிகளில் குமார் கடைக்குள் இருந்தார். சின்ன கடையாக இருந்தாலும் சி.சி.டி.வி. வைத்திருந்தார்கள்.
'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பத்தின டி.வி.டி- யைப் பாக்கணும்'' என்றார் குமார் டி.வி.டி. நூலகரிடம்.
'எடுத்துத் தர்றேன் சார்' என்று ஓட்டமாக ஓடிய நூலகர், ஐந்து நிமிடங்களில் வெறுங்கையோடு திரும்பி வந்தார். 'சாரி சார், அதை மட்டும் காணோம். மேரி க்யூரி பாக்குறீங்களா?'
'வேணாம். அந்த டி.வி.டி-யை யாரு இரவல் வாங்குனாங்க?'
'எங்க ரெக்கார்ட்ஸ்படி அதை யாரும் எடுக்கல சார்.'
'சரி, உங்க கடையோட சி.சி.டி.வி. ரெக்கார்ட் பண்ண டி.வி.டி. போட்டுக் காமிங்க.'
'இதோ சார். எதுனா பிராப்ளமா சார்?' என்று நூலகர் டி.வி.டி-யை எடுத்துவந்தார். அது வழக்கமான 20 ரூபாய் டி.வி.டி. 32 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடியது ஒரு திருடல் படலம். நகைக் கடைத் திருட்டு. குமார் அரும்பிய புன்னகையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
'உங்க கடை ஓனர் யாரு?'
'முன்னாலால் சேட் சார். பக்கத்துல நகைக் கடை...'
'ஐ நோ. உங்க நைட்டிங்கேல் டி.வி.டி. திருடு போயிருக்கு. கம்ப்ளெயின்ட் குடுத்து ஸ்டேஷன்ல வாங்கிக்குங்க' என்று சொல்லிவிட்டு நகைக் கடைக்கு விரைந்தார் இன்ஸ்பெக்டர்.
கடையில் இருந்தவர்கள் எல்லோரும் பதற்றமாகப் பார்க்க... இன்ஸ்பெக்டர் அமர்த்தலாக ஒரு நாற்காலியில் அமர்ந்து சரேலெனச் சுழல யத்தனித்தார். ஆனால், அது பிளாஸ்டிக் நாற்காலி.
'சேட்டு, நீ சமீபத்துல ரெண்டு லட்ச ரூவாய்க்கு இன்ஷ்யூர் பண்ணி காணாமப்போன உன் வைரம் கிடைச்சிருச்சு. ஆனா, ஒரு பிராப்ளம்...' என்றார் குமார். கடைக்காரர் நெற்றியில் வியர்வை கிளம்பி வர... எச்சில் விழுங்கி எழுந்து நின்றார்.
'நீ திருடுன நைட்டிங்கேல் டி.வி.டி-ல இருந்த கடை ஸ்டிக்கரைக் காணோம். அதை ஸ்டிக்கர் இல்லாம ரிட்டன் பண்ணா, உனக்கு அஞ்சு ருவா ஃபைன்.'
பேயறைந்தாற்போல் தெரிந்த சேட்ஜி, 'அதுவும் என் கடை தான்' என்றார்.
'நாட் எனி மோர்' என்றார் குமார், அவர் கையில் விலங்கை மாட்டி.
நாக சர்ப்பம்
அடர்வனம் ஒன்றில்
உரு மறைத்த
பசும்புற்களை உரசி
வளைந்து நெளிந்து
மரக் கிளைகளிடைக்
காலை வெயிலில்
பளபளத்து ஊர்ந்தது
நாக சர்ப்பம்.
பொத்தல் பல விழுந்த
நுண்மலையாய்க்
கூம்பித் துருத்திய
புற்றின் வாயன்றுள்
தலை முதலாய்
நுழைந்தது சர்ப்பம்.
எலியைக் கிலியைத்
தின்றுறங்கினால்
துரையை இனி
மதியம்தான்
பார்க்க முடியும்!
சுயமொழிகள்
எதற்குமே பயப்படாதவன் எதையும் சாதிப்பான். ஆனால், சீக்கிரம் செத்துப்போய்விடுவான்.
நாம் காதலிக்கும் பெண்ணும் நம்மைக் காதலிக்கும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள் என்று நிச்சயம் அல்ல.
காதலைவிடப் பெரிய விஜயங்கள் இருக்கின்றன. ஆனால், உடலுறவுடன் கூட்டணி இருப்பதால் காதலுக்குத்தான் மரியாதை.
குண்டான எதிரியைக் குறைத்து எடை போடாதே.
மழை இலவசமாகப் பெய்தாலும் குடையைக் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.
மனதில் உறுதி வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்.
கவிதைகள்
தொடர்பில் இல்லாத உறவினர்
அடிக்கடி கனவில் வருகிறார்
கனவில் கடனா கேட்க முடியும்?
கோவிலை விட்டு
வெளியே வந்தால்
செருப்பைக் காணோம்
திருடியவன் கண்ணை
சாமி குத்தட்டும்.
டி.வி-யில் பார்த்த
கார்ட்டூன் கதையை
குட்டிப் பையன்
அழகாய்த்தான்
சொல்கிறான்
ஆனால், எனக்கு
வேலை இருக்கிறது.
நம்முடைய முள் கிரீடம்
அடுத்தவனுக்குப் பறவைக் கூடு.
யாரோ செத்ததாகக்
கேள்விப்பட்டேன்
வருந்துவதற்கில்லை
யார் மனங்களிலாவது
வாழ்ந்துகொண்டிருப்பார்.
மைக்ரோ நாவல்
ஒற்றன் 'ஃ’
அத்தியாயம்-1
கொள்ளிடத்தைக் கதிரவனின் கிரகணங்கள் தீண்டிய அந்தி வேளையில் நாகப்பட்டினத்திலிருந்து உறையூர் செல்லும் நீண்ட புரவியன்றில் ஒரு வீரன் அமர்ந்திருந்தான். அவன் வேறு யாருமல்லன், 'ஃ’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்ட பிரசித்தி பெற்ற சோழ ஒற்றன். ரகசியத் துறை அமைச்சர் மர்மவர்மனின் மனைவியிடம் சேர்ப்பிக்க வேண்டிய செய்தி ஒற்றன் ஃஇடம் இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த ஒற்றனிடம் ஒப்படைக்குமளவு அப்படி என்ன செய்தி என்று அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம். பார்ப்போமா?
அத்தியாயம்-2
காவிரிப்பட்டினத்தில் ஒரு சத்திரம். அமைச்சரின் இலச்சினை பதித்த அரக்குத் தாழ்ப்பாளை உடைத்து ஒவ்வொரு கருந்திராட்சையாகப் புசித்தபடி, ஓலையை விளக்கொளியில் வாசித்தான் ஒற்றன் ஃ. மர்மவர்மனின் ஓலையில் இருந்தது சுவிசேஷ நற்செய்தியன்று. கடாரம் சென்ற அமைச்சர் அங்கு தீவிர நோய்வாய்ப்பட்டு வைத்திய பைத்தியங்கள் ஏதும் பலனளிக்காது உயிர் நீத்தார். ஒற்றன் சுமந்த ஓலை, மரணம் முற்றுகையிட்ட தறுவாயில் அவர் மனைவிக்கு எழுதியமை. ஏன், அதுவே ஒரு மரண ஓலைதான்...
அத்தியாயம்-3
ஒற்றன் ஃஇன் சாந்தக் கண்கள் மர்மவர்மனின் ஓலையைப் படித்தன. 'அன்பினி, எனக்கு வயிறு சரியில்லை. ஒற்றன் ஃ சாளுக்கியர்களுக்கு ஊழியம் புரிகிறான். அவன் என் உணவில் நஞ்சு கலந்துவிட்டான் எனச் சந்தேகிக்கிறேன். இதை நீ படிக்கிறாயானால் நான் இறந்துவிட்டேன் என்று அறிவாயாக. இவ்வோலையைக் கொண்டுவருபவனே ஒற்றன் ஃ. இத்துரோகியை உடனே சிறைபிடி. ஈசன் அருள் போற்றி. நின்றன் மர்மவர்மன்' என்றது ஓலை. ஒற்றன் ஃ அதனைத் தீயில் பொசுக்கிவிட்டுப் புதிய ஓலை எழுதினான். அதை மூடி அரக்கிட்டுத் தனது சுருக்குப் பையிலிருந்து அமைச்சரின் இலச்சினையை எடுத்து அதில் பதித்தான். அப்போது...
அத்தியாயம்-4
சோழத் தலைமாநகராம் உறையூரில் அமைச்சர் மாளிகை யில் மர்மவர்மனின் மனைவி அன்பினியாள் கையில் இருந்தது மரண ஓலை... 'அன்பினி, எனக்கு வயிறு சரியில்லை. இதை நீ படிக்கிறாயானால் நான் இறந்துவிட்டேன் என்று அறிவாயாக. ஈசன் அருள் போற்றி. நின்றன் மர்மவர்மன்.' படித்து முடித்த அன்பினி யாளின் வதனம் சிற்பமாய் இறுகியது. ஒற்றன் ஃஐப் பார்த்தாள். 'இங்கேயே நில்' என்று கட்டளையிட்டுச் சென்றாள் மந்திரிதர்மிணி. ஒரு பணிப்பெண் வந்து மோர் கொடுத்துப் பிரிந்தாள். 'கணவன் மாண்டது கேட்டுத் துடிக்காத கல் மனம் படைத்தவளா அமைச்சனின் மனைவி?’ எனச் சிந்தித்தபடி அதைப் பருகினான் ஃ.
அத்தியாயம்-5
'கல் மனம் படைத்தவள் அவள் அல்லள். நீதான்' எனும் குரல் கேட்டு நிமிர்ந்தான் ஒற்றன் ஃ. சாவின் சுவடுகளற்று அவன் எதிரில் ஆரோக்கியமாக நின்றிருந்தது மர்மவர்மன்தான். கடகடவென நகைத்தார் அமைச்சர். 'என்ன பார்க்கிறாய்? நான் எப்படிப் பிழைத்தேன் என்றா? உன் மேல் எனக்கு ஐயம் இருந்தது. அதனால்தான் நீ கொடுத்த மோரை நான் குடிக்கவில்லை. என் ஓலையை மாற்றி எழுதி மாட்டிக்கொண்டாய். நீ இப்போது குடித்தது உன்னுடைய மோர்தான்...' மோர் புளித்த காரணத்தை ஒற்றன் உணர்ந்து முடிக்கவும் அவனது ஆவி பிரியவும் சரியாக இருந்தது.
- முற்றும்
என் அபிமான வாசகி
சமீபத்தில் அழகான ஒரு வாசகியைப் பார்த்தேன். மற்ற பெரிய எழுத்தாளர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. என் வாசகிகள் அழகாக இருப்பது பேரபூர்வம். என்னவோ என்னை வாசிப்பதே தந்திரம் செய்து அவர்கள் அழகைப் பறித்துவிடுவதுபோல. வாசகிக்கு வருவோம். நடிகை அஞ்சலியைத் தவிர்த்து வேறு யாரும் நடிகை அஞ்சலிபோல் இருக்க முடியும் என்று நம்பி அனுபவப்பட்டிராத எனக்கு, இது ஒரு நல்ல பாடம். சாதாரண வாசகிகளைப் போல் நான் இவருக்கு என் கவிதைகள் மூலமாக அறிமுகம் ஆகவில்லை. இவர் முதலில் படித்தது அவள் விகடனில் நான் எழுதிய 'ஐம்பெரும் தோசைகள்’ என்ற சமையல்ரீதியான கட்டுரை. அதில் வெள்ளரிக்காய் தோசையை 'மாவில் செதுக்கிய சந்திரன்’ என வர்ணித்திருப்பேன். இந்த அதிர்ஷ்டக்காரக் கட்டுரையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு 'அஞ்சலி’ என்னைத் தொடர்புகொண்டார். இதன் விளைவாக அஞ்சலிக்கு என் பிற படைப்புகளும் பரிச்சயமாயின. மனைவி, சக எழுத்தாளர்கள், பிற வாசகர்கள் என யாருக்கும் தெரியாமல் இவரைப் பாதுகாத்துவருகிறேன். ஆனால், இந்தப் பெண்ணுக்கு விவரமே போதவில்லை. 'உங்களைப் பாக்க வரலாமா சார்?' என்று கேட்கும்போது கூடவே, 'உங்க வீட்டுக்கு வரவா? உங்க மிஸஸை நான் இன்னும் பாக்கல' என்பாள். 'வேணாம்மா, வீடு ரொம்பப் பூட்டிருக்கும்' என்று சொல்லிச் சமாளித்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை நாளுக்கோ!
- புரட்டுவோம்...
பட்டாம்பூச்சி
மடி மீது பூங்காவில்
நோட்டுப் புத்தகத்துடன்
எழுத அமர்ந்திருக்கையில்
தோளில் வந்தமர்கிறது
ஒரு பட்டாம்பூச்சி.
என்னிடமிருந்தான
ஒரு சிறு அசைவுக்கும்
அது சலசலத்துப் பறந்துவிடும்.
நானும் கல்லாயிருக்கிறேன்
வெகு நேரமாய்
ஒரு தும்மலை அடக்கி
ஒரு நண்பனைப் பிரிவதற்கின்றி.
நிழல் தந்த மரத்திலிருந்து
சருகொன்று மிதந்து வந்து
என் தோள் மீது வீழ
பறந்துபோனது பூச்சி
அந்தத் தும்மலையும்
எடுத்துக்கொண்டு
நிரந்தரமாய்.
குழந்தைப் பாடல்கள்
(உங்கள் குழந்தைகளின் தமிழறிவை வளர்த்திட...)
மாமரம்
மாமரமாம் மாமரம்
கிளைகள் நிறைந்த மாமரம்
மரம் முழுதும் இலைகளாம்
பட்டுப்போனால் உதிருமாம்
உதிர்ந்துபோனால் என்ன இப்போ,
திரும்பத் திரும்ப முளைக்குமே!
மூட்டை
மூட்டை நல்ல மூட்டை
சுமக்க உப்பு மூட்டை
உள்ளே நிறைய புத்தகம்
படித்து சென்டம் வாங்கணும்
அப்பா அம்மா தூக்கினால்
விழுந்து வாருவார்களே
நான் மட்டுமே தூக்குவேன்
சோட்டா பீம் போல் பலசாலி!
ஆன்ட்டி
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ஆன்ட்டியாம்
தினமும் அவள் கல்லூரிக்கு
ஸ்கூட்டியிலே போவாளாம்
அப்பா ஒரு நாள் பார்த்தாராம்
இனிக்கப் பேசி வழிந்தாராம்
அம்மா ஒரு நாள் பார்த்தாளாம்
அப்பா முதுகில் வைத்தாளாம்!
நூடுல்ஸ்
அம்மா செய்த நூடுல்ஸ்
புழுப்புழுவாய் இருக்குமே
கையிலிருந்து வழுக்குமே
வாயில் இட்டால் சுவைக்குமே
பாட்டிக்குத்தான் பிடிக்காது
'ஆண்டவனுக்கே அடுக்காது'
'இட்லி, தோசை செய்யவே
நேரம் எங்கே இருக்குது?'
நீயும் ஒண்ணு வாங்கிக்கோ
டாட்டூகூடக் கிடைக்குது!
எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ-வாம் எம்.எல்.ஏ.
எங்க தொகுதி எம்.எல்.ஏ.
ஓட்டு கேக்க வருவாராம்
நிறைய காசு கொடுப்பாராம்
எனக்குக் கிடைக்கும் லட்டு
அம்மாவுக்கு வெறும் மூக்குத்தி!
கனவு டீச்சர்
கனவில் டீச்சர் வருவாரே
தினமும் சாக்லேட் தருவாரே
லேட்டாய் நாமும் வந்திட்டால்
பெஞ்சில் ஏறி நிற்பாரே
ஹோம்வொர்க்கை நாம் மறந்திட்டால்
பிரம்பால் அடித்துக்கொள்வாரே
வகுப்பின்போது பேசினால்
வெரி குட் என்றே சொல்வாரே
கனவில் கலக்கும் என் டீச்சர்
நிஜத்தில் ஏன்தான் அரை லூஸோ?
சுயமொழிகள்
தர்க்கம் பார்க்கின் சொர்க்கம் இல்லை.
அழகு இருக்கும் இடத்தில்தான் திருமணத்திற்குப் பிறகு ஆபத்து இருக்கும்.
சீறும் பாம்பையும் சிரிக்கும் பெண்ணையும் நம்புபவன் காட்டுமிராண்டி.
வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடே போகிறோம். சட்டை பாக்கெட்தான் எவ்வளவு சௌகரியம்!
நல்ல பேரை 'வாங்க’ வேண்டும் பிள்ளைகளே...
தலையங்கம்
உலகின்
பல இடங்களில் இயற்கைச் சீரழிவு கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய
நாடு களில் வன்முறை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். வர்க்க பேதம் பார்க்காமல்
மனிதனை மனிதன் சுரண்டுகிறான். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக்கூட
வேட்டையாடி யாகம் செய்கிறார்கள். தேசத் தலைவர்கள் வெளிநாட்டிற்குப் போய்
இருதய அறுவைசிகிச்சை செய்துகொண்டு தாங்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள்.
கேள்வி எழுப்பினால் மழுப்புகிறார்கள். எதையும் இரு மடங்கு விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது. லஞ்சத் தொகை களும் விலைவாசிக்கேற்ப அதிகரிக்
கின்றன. ஏழைகள் இன்னும் ஏழை களாகவே இருக்கிறார்கள். என் புத்தகங்களை இரவல்
வாங்கித்தான் படிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்.
எல்லோரையும் பிடித்துச் சிறையில் போட வேண்டும். அப்போதுதான் உலகம்
உருப்படும்.
நானே கேள்வி, நானே பதில்
'நானே கேள்வி, நானே பதில்’ பகுதிக் குக் கொஞ்சம் பங்களிக்கலாம் என்று தோன்றியது...
எப்போதும் உங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே?
நமக்குத் தெரிந்ததைத்தானே எழுத முடியும்.
நோபல் பரிசு பெற்ற பின் என்ன செய்யத் திட்டம்?
உள்ளூர் விருதுகளைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானம் செய்யப்போகிறேன்.
உங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத சம்பவம் எது?
கடின உழைப்பு.
தற்போது நிலவும் பல சமூகப் பிரச்னைகளைப் பற்றி?
சமூகப் பிரச்னைகள் எல்லா வற்றையும் மசோதா இயற்றித் தடை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பிரச்னை இருக்காது.
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?
இதென்ன மடத்தனமான கேள்வி? எனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று எனக்குத் தெரியாதா?
உங்களையும் ஒரு நடிகையையும் இணைத்து ஒரு கிசுகிசு...
என் எதிரிகள் என்னைப் பற்றிக் கிளப்பும் வதந்திகளை நான் நம்ப மாட்டேன்.
இரு வியாபாரிகள்
ஒரு
வியாபாரி காசுக்காக ஜென் தத்துவங்களைப் போதித் துக்கொண்டு இருந்தான். அவனி
டம் ஜென் கற்க ஒரு ஏழை மது வியாபாரி வந்தான். ஜென் வியாபாரி முன்பணம்
கேட்டான். அதற்கு ஏழை வியாபாரி தன்னி டம் பணம் இல்லை என்றும், அதற்குப்
பதிலாக மதுவைத் தருவதாகவும் கூறினான். 'சரி, உன்னிடம் உள்ள மதுவில் பாதி
யைக் கொண்டுவா' என்றான் ஜென் வியாபாரி. மது வியாபாரி யும் அவ்வண்ணமே
செய்தான். மதுவை வாங்கிக்கொண்ட ஜென் வியாபாரி, நாளை முதல் வகுப்பு
தொடங்கும் என்று சொன்னான். ஏழை வியாபாரி மறு நாள் பாடம் படிக்க வந்தான்.
ஜென் வியாபாரி அப்போது நிறைய மது அருந்தி முழு போதையில் இருந்தான்.
'குருவே, ஜென் என்றால் என்ன?' என்றான் மது வியாபாரி.
அதற்கு
குரு சொன்னான்: 'எது இருக்கிறதோ அது இல்லா மலும் எது இல்லையோ அது
இருந்துகொண்டும் இல்லாதிருக் கிற நிலை மாறாமலும் மாறிக் கொண்டும்
இருக்கின்றபோது மலரும் பூவின் மீதமரும் வண்டின் பறத்தல்தான் ஜென்.'
குருவின் போதையைப் புரிந்துகொண்ட மது வியாபாரி, 'குருவே, இதைச் சொல்வது நீங்களா, மதுவா?' என்றான்.
'நான் வேறு, மது வேறா?' என்றான் குரு. ஏழை வியாபாரிக்கு அக்கணமே ஞானம் பிறந்தது.
- புரட்டுவோம்...
தாண்டவமும் மோகினியாட்டமும்
மூத்த தளபதி விக்ரம் நடித்த 'தாண்டவம்’ வசூலை அள்ளுவதாக சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள். மக்கள் கிரிக்கெட் மேட்ச் போல் பக்கத்து வீட்டு மொட்டை மாடிகள், மரக் கிளைகளிலிருந்து எல்லாம் படத்தைப் பார்க்கிறார்களாம். நான் திரையரங்கிற்குள் சென்று 'தாண்டவ’த்தைப் பார்த்தேன். அதன் அமோக வெற்றிக்கான காரணம் உடனே புரிந்தது. படம் சென்னையைவிட பிற மாவட்டங்களில் நன்றாக ஓடுகிறது. மற்ற மாவட்டத்தினரின் வாழ்க்கையில் மின் வெட்டு தாண்டவமாடுவதால் (ஒப்பீட்டளவில் சென்னையில் வெறும் மோகினியாட்டம்தான்) பார்வையாளர்கள் தங்களை விக்ரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பார்வையற்ற விக்ரம் கதாபாத்திரம் ஒரு சூப்பர் ஹீரோ. இங்கே நாம் இருட்டில் கண் தெரியாமல் தண்ணீருக்குப் பதிலாக அமிலத்தைக் குடித்துக்கொண்டிருக்கிறோம். விக்ரம் 'எக்கோலொகேஷன்’ என்ற உத்தியைப் பயன்படுத்தி ஒலிகளை எழுப்பியே எல்லா வேலைகளையும் செய்கிறார். இன்றைய சூழ்நிலையில் இரவு நேரங்களில் நமக்கும் விரைவில் எக்கோலொகேஷன் தேவைப்படும். ஒரே ஒரு ஆறுதல், தெரு விளக்குஒளியில் படித்து முன்னேறிப் பல விஞ்ஞானிகள் உற்பத்தியாவார்கள். மின் வெட்டிற்கு ஒரு தீர்வை அவர்கள் கண்டுபிடிக்கலாம். அது வரை எக்கோலொகேஷனுக்காகத் தாண்டவத்தை இன்னொரு முறை பார்க்கப்போகிறேன்.
காதல் கவிதைகள்
என்னைக் காதலிப்பதாய்
சொல்லிவிடாதே
ஒரு புன்னகை பூ*
(*வினைச்சொல்)
மற்றதை நானே
ஊகித்துக்கொள்கிறேன்.
காதல் கவிதைகள்
* * *
கடைசியில் நாம்
பிரிந்துவிட்டோம்
கடற்கரைப் படகுகளின்
மண்ணான நிழலிருட்டு
நம் கதைகளைச்
சொல்கிறது
ஏனைய ஜோடிகளுக்கு.
* * *
நாம் ஓடிப் பிடித்து
விளையாட
வயதும் இல்லை
இடமும் இல்லை
எல்லாம் இந்த
செல்பேசிக்குள்தான்.
* * *
உனக்கு அனுப்பிய கடிதம்
தவறான கைகளுக்குச்
சென்றுவிட்டது
முழுவதும் படித்த பின்
தவறான கைக்காரி
திருப்பி அனுப்பினாள்
இன்னும் நன்றாக
எழுதியிருக்கலாமோ?
வீரம் பயிலும் மண்
ஒருவழியாக 20/20 உலகக் கோப்பை இலங்கை அணியின் தோல்வியில் முடிந்தது. அணியில் மானாவாரியாக இனிஷியல்களைக்கொண்ட சிங்களர்கள் மட்டும் உள்ள இலங்கைக்கு இது பெரிய அவமானம். பந்தை முதுகுக்குப் பின்னால் அடிக்கும் தில்ஷனும் பக்க வீச்சாளர் மலிங்காவும் மாயாவி மெண்டிசும் அணியைக் காப்பாற்ற முடியவில்லை. அடுத்து என்ன? பல தலைகள் உருளலாம். இலங்கை வீரர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கலாம். இந்தியாவில் பயிற்சி தர உதவி கோரி இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதலாம். இலங்கை கிரிக்கெட்டின் பந்துவீச்சுப் படை, மட்டைவீச்சுப் படை, ஆல்ரவுண்டுப் படை மூன்றிற்கும் இந்தியா பயிற்சி தரலாம். இனப் படுகொலை அது இது என்று யாராவது பிரச்னை செய்தால், முன்பே இங்கு பயிற்சி பெற்றுவரும் இலங்கை ராணுவத்தினரையே பாதுகாப்பு கொடுக்கச் சொல்லலாம்... எல்லாம் ஒரு ஊகம்தான்.
ராபர்ட் வதேரா பொய் சொல்கிறாரா?
தினமும் செய்திகள் வாசிக்கும் பழக்கம் உள்ள எனக்கு ராபர்ட் வதேரா பற்றி வந்த ஒரு செய்தி கருத்தைக் கவர்ந்தது. தலைப்பு: 'கேஜ்ரிவால் கட்சிக்கு விளம்பரம் தேட என்னை அவதூறு செய்கிறார்கள்! வாய் திறக்கும் வதேரா’. ஒரு குஞ்சா லாடு உள்ளே போகும் அளவு வாய் திறந்த கோலத்தில் வதேராவின் புகைப்படத்தைப் போட்டிருந்தார்கள். ஐ.பி.எல். புகழ் டி.எல்.எஃப். நிறுவனம் நிலம் கொள்முதல் செய்ய வதேரா உதவியதாக, அண்ணா ஹஜாரே புகழ் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு. அதற்கு எசப்பாட்டாக வதேரா இப்படிச் சொல்லியிருக்கிறார்: 'அர்விந்த் கேஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷணும் என் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கிறது.’ எனக்கு வதேரா மீதுதான் தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. 'குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கின்றன’ என்று சொல்லியிருந்தால், வதேரா பேச்சை நம்பலாம். 'பறவைகள் பறக்கிறது’ என்று சொன்னால் அது உண்மையாக இருக்குமா? 'பறவைகள் பறக்கின்றன’ தானே சரி? வதேரா பொய் சொல்கிறார். எனவே, அவர் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளால் வருத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, மகிழ்ச்சியடைகிறார் என்றே தோன்றுகிறது. அந்த மகிழ்ச்சியை மறைக் கவே வருத்தப்படுவதாகப் பொய் சொல்லியிருக்கிறார். ஆனால், தான் குற்றம்சாட்டப்படுவதற்கு அவர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்? யோசிக்க வேண்டிய விஷயம்.
- புரட்டுவோம்...
இன்ஸ்பெக்டர் குமார் துப்பறிகிறார்
மரணக் கிணறு
'வெல்,
வெல், வெல்!' என்றார் இன்ஸ்பெக்டர் குமார் கிணறுகளை எண்ணியபடி. மூன்று
வீடுகளுக்குப் பின்னே மூன்று கிணறுகள். ஈரம் சொட்ட இரண்டு பிணங்கள்.
மூன்றாவது ஆள் மட்டும் பிழைத்துவிட்டான். ஒரு பிணத்தின் திறந்த வாயில்
இன்னும் இருந்த கிணற்று நீரில் இரண்டு தலைப்பிரட்டைகள்
விளையாடிக்கொண்டிருந்தன. இரு பிணங்களும் மிகையான அட்டென்ஷனில்
படுத்திருப்பது போல்இருந்தது. ஏனென்றால், விண்வெளி வீரர்களின் பிராண வாயு
போல் முதுகில் கனமான செவ்வகப் பாறை கட்டப்பட்டிருந்தது. இருவருக்கும் 30
வயதுக்கு மேல் இருக்காது. பிழைத்தவனை உடை மாற்றி உட்காரவைத்திருந்தார்கள்.
சம்பவக்
கிணறுகளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. தொலைக்காட்சி
ஒளிப்பதிவில் விழ எட்டிப்பார்ப்பது போல் பல தலைகள் பிணங்களைப் பார்க்க
எம்பின.
குமார்
எரிச்சலடைந்தார். 'ஃபர்ஸ்ட் ரோ பாத்துட்டீங்கன்னா நகருங்க, மத்தவங்களுக்கு
வழி விடுங்க' என்று அதட்டினார். முதல் வரிசைக்காரர்கள் முணுமுணுத்தபடி
விலகிச் செல்ல... பின்னாலிருந்தவர்கள் முன்னே வந்தனர். மூன்று
கிணறுகளையும் எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
'யாரு
முதல்ல பாத்தது?' என்று குமார் கேட்டதும் எங்கோ மூலையிலிருந்து ஒரு
இளைஞன், 'நான்தான் சார்!' என்று கைதூக்கிக் கத்தினான். எல்லோரும் அவனுக்கு
வழிவிட்டார்கள்.
'என்ன நடந்துது சொல்லு?'
'என்
பேரு கணேஷ் சார். அங்க படுத்திருக்காருல்ல சார் மாணிக்கம் (முதல் பிணம்),
அவரப் பாக்க வந்தேன் சார். தொப்புனு சத்தம் கேட்டுச்சு. இவரு (பிழைத்தவன்)
கெணத்துலருந்து ஏற ட்ரை பண்ணிட்டிருந்தாரு. நான் ஒரு கயிறப் போட்டு மேல
ஏத்துனேன். பக்கத்துக் கிணத்துலயும் ஆள் விழுந்திருக்குன்னு இவர்
சொன்னாருன்னு உள்ள பாத்தா, ஒரு ஆள் கெடந்தாரு. பாடிய வெளிய எடுத்தோம்.
அதுக்கப்புறம் என் ஃப்ரெண்டப் பாக்கப்போனா, அவர் வீட்ல இல்ல. சரி,
கெணத்துல இருப்பாரானு பாத்தேன். அங்கதான் சார்பொணமாக் கெடக்கு றாரு!'
என்று முடிக்கும்போது குரல் கம்மியது அந்த இளைஞனுக்கு.
இன்ஸ்பெக்டர் மாற்று ஆடை அணிந்த மூன்றா மவனை ஏற இறங்கப் பார்த்தார்.
'என்னய்யா, கல்லு சரியா கட்டலியா?' என்றார்.
'ஆமா சார், பொழச்சிட்டன் சார்' என்று குழைந்தான் அந்த வாலிபன்.
'உம் பேரு என்ன? உம் பேருக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?'
'எம்
பேரு சீனிவாசன்ங்க சார். இந்தப் பக்கமாப் போயிட்டிருந்தப்ப பெருசா ஏதோ
சத்தம் கேட்டுச்சுன்னு வந்து பாத்தேங்க. ஒருத்தர் கெணத்துல
மூழ்கிட்டுஇருந்தாரு. யாருன்னு பாக்கச் சொல்லோ பின்னாலேந்து மண்டைல யாரோ
ஓங்கி அடிச்சாங்க சார். நெக்ஸ்ட் முளிச்சுப் பாத்தா, கெணத்துல
கெடக்குறேன். எனக்கு நீச்சல்கூடத் தெரியாதுங் சார். இவர்தான்
காப்பாத்துனாரு. அப்புறம் இவரு சொன்ன மாதிரி ரெண்டு பாடிய வெளிய
எடுத்தோம்' என்று சொன்னவனின் பின் மண்டையை குமார் தடவிப் பார்த்தார்.
வீங்கித்தான் இருந்தது.
'எங்க, சட்டையக் கழட்டு பாப்போம்' என்றார் இன்ஸ்பெக்டர்.
சீனிவாசன்
உடலுறவு அவசரத்தில் கழற்றுவதுபோல் பரபரவென்று சட்டையைக் கழற்றினான்.
உடலின் முன் பகுதியில் சில இடங்களில் நேர்த்தியான கீறல்கள். தடயவியல்
நிபுணர் அவன் கிணற்றில் விழுந்தபோது அணிந்திருந்த ஈர ஆடைகளையும் அவற்றில்
இருந்த பொருட்களையும் குமாரிடம் காட்டினார். அதில் குமாரைக் கவர்ந்தது ஒரு
பேனாக் கத்தி. அவர் அதை எடுத்துக் கூர்மையைச் சோதித்தார், பிறகு முகர்ந்து
பார்த்தார்.
'இப்ப
நான் ஒரு கதை சொல்லட்டுமா? நீயும் கணேஷ§ம் மாணிக்கத்த பிளான் போட்டுக்
கொலை பண்றீங்க. அத நடு வீட்டுக்காரரு பாத்துடுறாரு. அவரையும் அதே மாதிரி
கல்லக் கட்டி கெணத்துல போட்டுத் தள்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலயும் பழி
விழக் கூடாதுன்றதுக்காக நீயும் விழுந்த மாதிரி காட்டிக்க ஒரு கல்லக்
கெணத்துல போடுறதா பிளான் பண்றீங்க. ஆனா, கணேஷ§ உன்னைத் தீத்துக்கட்ட
பிளான் போட்ருக்கான். உன்னை அடிச்சுப் போட்டு கல்லக் கட்டி கெணத்துல
தள்றான். உனக்கு கணேஷ§ மேல முன்னாடியே நம்பிக்கை இல்ல. தற்காப் புக்காக
பாக்கெட்ல பேனாக் கத்தி வச்சிருக்க. கணேஷ§ பய டென்சன்ல கல்ல கொஞ்சம்
லூசாக் கட்டிட்டான். நீ கத்தியால கயித்தை அறுக்குறப்ப உடம்புல காயம்
பட்டிருக்கு. நீ வெளிய வர்றதுக்குள்ளாற ஜனம் சேந்துருச்சு. மாட்டிக்காம
இருக்க நீங்க திருப்பியும் தோஸ்தாயிட்டீங்க. ரைட்டா?'
கணேஷ§ம்
சீனிவாசனும் இன்ஸ்பெக்டரின் கதை சொல்லலில் வெகுநேரமாய்
கட்டுண்டிருந்தார்கள். தப்பிக்க வழி தேடி இருவரின் கண்களும் அலை பாய்ந்தன.
ஆனால் 114 லத்தியை உயர்த்தித் தயாராக இருந்தார். தடயவியல் நிபுணரும் பேனா
கத்தியை அது இருந்த பாலிதீன் பையுடன் சேர்த்துக் காட்டி மிரட்டினார்.
இன்ஸ்பெக்டர் சூழலை ரசித்துப் புன்னகைத்தபடி இருவரையும் கேட்டார், 'எதுக்குடா கொன்னீங்க?'
சிநேக் பார் சிநேகிதர்
'தம்பி,
எனக்கு ஒரே ஒரு டீ குடுப்பா. சரியா?' என்றேன் டீ மாஸ்டரிடம். 'ரைட்டு
சார்' என்றார் மாஸ்டர். டீக்கடைக்குள் இரண்டு பேர் மௌனமாக தேநீர்
கிளாஸுக்குள் ஊதிக்கொண்டிருந்தார்கள். எனக்கு முன்பு ஒருவருக்கு 'எஸ்.பி.
டீ’ தயாராகி வந்தது. மாஸ்டர் இஞ்சியை இடித்துக்கொண்டு இருந்தார். பொழுதை
ஓட்ட நான் கடை உரிமை யாளரிடம் பேச ஆரம்பித்தேன்.
'தெனமும் இவ்ளோ பேருக்கு டீ போட்டுத் தர்றீங்களே, யாருமே காசு குடுக்காட்டி உங்க கடை நொடிச்சுப்போயிரும்ல?'
துண்டுச்
சீட்டில் பொடி எண்களில் கணக்கு எழுதிக்கொண்டிருந்த உரிமையாளர், நான் பேசி
முடிக்கும்போது திடுக்கென நிமிர்ந்தார். சிறிது நேரம் என்னைப் பார்த்தார்.
'கண்டிப்பா சார். என் குடும்பமே நடுத் தெருவுக்கு வந்திரும்'' என்றார் அமைதியாக.
'அது ரொம்பக் கஷ்டமாச்சே! செலவுகள சமாளிக்க முடியாது பாத்துக்குங்க' என்றேன்.
'ஆமா சார். கஷ்டமாத்தான் இருக்கும்.'
'ஸ்கூல்
ஃபீஸ் கட்ட முடியாது. குழந்தைங் கள வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. புள்ளைங்க
படிக்காட்டி வேல கெடைக்காது. நம்ம கடைசிக் காலத்துல நம்மளோட அவங்களும்
சேந்துல்ல கஷ்டப்படுவாங்க?'
'ஆமா சார், நாம நிம்மதியாத் தனியாக் கஷ்டப்பட முடியாது.'
'சரியா
பாயின்ட்டைப் புடிச்சீங்க சார். அதுக்காகத்தான் சொல்றேன், ஒவ்வொரு காசும்
முக்கியம். இன்னெக்கி அஞ்சு காசுக்கு வேல்யூ இல்லாம இருக்கலாம். ஆனா,
எல்லாக் காசும் சேந்தா அதோட வேல்யூ நமக்கு யூஸ் ஆகும். பிசினஸ்ல மறக்கக்
கூடாத விசயம் இதுதான். இல்லன்னா தாலி அந்துரும்.'
'ஆமா சார்.'
இன்னும்
எவ்வளவு நேரம் இவருடன் பேச வேண்டியிருக்குமோ என்று யோசிக்கையில் எனக்கான
தேநீர் கைக்கு வந்தது. ஆனால், அதீத சூடு. 'ஆத்திக் குடுப்பா' என்று
மாஸ்டரிடம் நீட்டினேன். ஆற்றிக் கொடுத்தார். 'கொஞ்சம் சக்கரை...'
தேநீர்
தீர்ந்ததும் கிளாஸை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு உரிமையாளரிடம் காசு
கொடுத்து 'வரட்டுமா?' என்று கிளம்பினேன். இரண்டடி எடுத்துவைத்த பின் இரு
காதுகளையும் அழுத்தமாகப் பொத்திக்கொண்டே நடந்தேன். அப்போதுதான் 'போறாம்
பாரு சாவுகிராக்கி' என்று டீக்கடை உரிமையாளர் சொல்வது என் காதில் விழாது.
மென்கவிதைகள்
குறிப்பு: வேர்களில்
சாஃப்ட்வேர், ஹார்டுவேர் என இரு வகைகள் இருப்பதுபோல, கவிதையில் மென்கவிதை,
வன்கவிதை என இரண்டுண்டு. மென்கவிதை என்பது குழந்தை, கனவு, மழை, மேகம்,
மௌனம், நிசப்தம், துளிர், வானவில், பூக்கள் போன்ற வார்த்தைகளைச் சுற்றிப்
பின்னியிருக்கும். யார் வேண்டுமானாலும் எழுதலாம். படிக்க நன்றாக
இருக்காது. நான் எழுதிய சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒரு குழந்தையின்
கனவுக்குள்
உலாப் போகிறேன்
ஒன்றுமே புரியவில்லை.
மழைத்து அலுத்த மேகம் ஒன்று
இளைப்பாறியது சிறிது நேரம்
மற்ற மேகங்கள் இடித்து நெருக்க
மேகம் கக்கியது மழையை மீண்டும்.
இலையுதிர் காலத்துப் பேருந்து
கூரையெங்கும் இலைகளைச்
சுமந்து செல்கிறது கீரைக்காரியாய்.
காற்று உன் கூந்தலை
அலைக்கழிக்கிறது
உன் கூந்தல் என்னை.
மௌனத்தால் புன்னகைக்கிறாய்
புன்னகையால் மௌனிக்கிறாய்.
உருண்டையாக இருக்கும் நீ,
சதுரமாயிருந்தால் ரூபிக் புதிர்.
பற்றி எரியும் பிரச்னை
என்னதான்
இருந்தாலும் இராமன் ஊர் வம்புக்குப் பயந்து சீதையை நெருப்பில் இறங்கச்
சொல்லியிருக்க வேண்டாம். தனக்கு மனைவி மேல் நம்பிக்கை இருப்பதைத் தண்டோரா
போட்டு உப்பரிகையில் நின்று அயோத்திக்கு அறிவிக்காத ஒரு கணவன், மகா
புருஷனா? உலகம் யதார்த்தமாக இருந்து தொலைத்து, சீதை கற்புக்கரசியாக
இருப்பதை மீறி நெருப்பில் சாம்பலாகியிருந்தால், இராமன் என்ன
செய்திருப்பான்? மனைவியை வீணாக மீட்க இராவணனுடன் தொடுத்த யுத்தத்தில்
பலியான லட்சக்கணக்கான பேரின் குடும்பத்தாருக்கு அவன் என்ன பதில்
சொல்லிஇருப்பான்? தன் பேச்சைக் கேட்டு மாரீச மானுக்குப் பின்னே சென்ற
கணவன் குறித்துக் கவலை ஏற்பட்டு, மைத்துனன் இலக்குவனிடம் இராமனைத் தேடச்
சொல்லும் சீதை, 'இராமன் கெட்டிக்காரன், அவனுக்கு ஒன்றும் ஆகாது,
அண்ணியுன்னைக் காப்பதே எனக்கு இராமனிட்ட கடமை’ என்று இலக்குவன்
கூறுகையில், அவனது நோக்கத்தைச் சந்தேகித்து அவனைப் புண்படுத்தினாலும்,
பின்னாளில் அவளுக்கு அக்கினிப் பரீட்சை வைப்பது கொடுமையான தண்டனை அல்லவா?
உடன்கட்டை ஏறல் விதிகள் என்ன சொல்கின்றன? கணவன் நெருப்பில் இல்லாதபோது
மனைவி அதில் இறங்கலாமா? இராமன் கம்பனின் காவிய நாயகனாக, பொறுப்பாகச்
செயல்பட்டிருக்க வேண்டும்.
லோக்கல் குளம்
மழை
நின்று நான்கு நாளாகிவிட்டது. என் வீட்டு வாசலுக்கு முன்பான குளம் மட்டும்
இன்னும் வற்றக் காணோம். 'மாநகராட்சியே, இந்தத் தெருவைக் கொஞ்சம் கவனி’
என்று தேங்கிய நீரில் பெர்மனன்ட் மார்க்கரால் எழுதிவைத்ததுபோல் பெய்தது
பெய்தபடி கிடக்கிறது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் வரை கால்கள்
வாட்டர்புரூஃப். வெளியே சென்று பார்க்க விரும்பிக் கிளம்பினால், இந்தக்
குளத்தை அரை வட்டம் சுற்றித்தான் நடையைக் கட்ட வேண்டும். கொசுக்கள், கடல்
புறாக்களாய் நீரை வட்டமிடுகின்றன. கப்பல்விடும் குழந்தைகளைக்
கடித்துவைக்கின்றன. இந்தப் பத்து சதுர அடிப் பகுதியில் அவை நிரந்தரமாகக்
குடியேறிவிட்டதுபோல் தெரிகிறது. மாநகராட்சிக்கு அன்பானதொரு வேண்டுகோள்:
தேங்கிய தண்ணீரைக்கூட நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அது எங்கள்
தெருவின் பயனற்ற இயற்கை வளமாக இருந்துவிட்டுப் போகட்டும். தேர்தல்
வரும்போது சாலைகளைச் சீர்செய்வீர்கள் அல்லவா, அது வரை தாங்கும்படி சாதாரண
நாட்டு சிமென்டில் சிறியதொரு மேம்பாலம் கட்டித் தந்துவிடுங்கள். பிறகு
மறக்காமல் 'இங்கு குளிக்கக் கூடாது’ என்று ஒரு பலகை மாட்டிவையுங்கள்.
குளம் கொஞ்சம் ஆழமாக இருந்தால் நாலு அல்லியாவது வளர்க்கலாம்...
சுய புராண இலக்கியம்
புத்தகங்களிலே
எனக்குப் பிடிக்காத வகை ஒன்று உண்டென்றால் (உண்டு) அது சுயபுராணங்கள்தாம்.
சமீபத்தில் நான் படித்த பல புத்தகங்கள் இந்த வகையறாவில் வரும். ஆதவன்
எழுதிய 'என் பெயர் ராமசேஷன்’ - தலைப்பிலேயே கதை கந்தல். உள்ளே முழுக்க
முழுக்க சொந்தக் கதை. நான் யார், எனக்கு என்ன ஆயிற்று, எனக்கு என்ன
தோன்றுகிறது, இத்யாதி. அதே போல சுஜாதாவின் 'நைலான் கயிறு’ - அண்ணன், தங்கை
என்று இரண்டு பேர் மாறிமாறி ஓயாமல் சொந்தக் கதை பாடுகிறார்கள். நேற்று ஏதோ
பத்திரிகையில் படித்த ஒரு சிறுகதையில்கூட நான், நான், நான்தான். ஏனய்யா
எழுத்தாளர்களா, உங்கள் கதையை யாரய்யா கேட்டார்கள்? இன்னவனுக்கு இன்னபடி
இன்னது நடந்தது என்கிற மாதிரி எழுதினால் குறைந்தாபோவீர்கள்? அதென்ன
எப்போது பார்த்தாலும் நான், எனக்கு என்று ஒரே சுயநலமாக இல்லை?
சமூகப் பிரச்னைகள்
இந்த
சமூகத்தையும் அதன் பிரச்னைகளையும் நினைத்தால், என்னமோபோல் இருக்கிறது. சில
சமயம் பீதியாகவும் சில சமயம் கூச்சமாகவும் இருக்கிறது. கடவுள் - அப்படி
ஒருவர் இருந்தால் - சமூகத்தை அப்படித் தான் படைத்திருக்கிறார் போலும்.
மொத்தப் பிரச்னைகளையும் அகர வரிசைப்படி பட்டியலிட்டுப் பார்த்தால்
ஆம்புலன்ஸ் விளக்காகத் தலை சுற்றுமோ? பொருளாதாரம், வன்முறை, யுத்தம்,
பஞ்சம், மாற்றான், தாண்டவம் என்று நாம்தான் பிரச்னைகளுக்கு வெவ்வேறு பெயர்
சூட்டி அழகு பார்க்கிறோம். உண்மையில் சமூகம் என்பது வேறொன்றுமில்லை,
விதிதான். இல்லை என்றால் அதை மாற்றிவிடலாம்.
குறுங்கவிதைகள்
மழையை அறிவிக்கக்
கிளம்பிய தும்பி
என் வீட்டில் சிறை.
விழுந்து பல முறை ஆனது
அறியாமல் சரியாக
இயங்குகிறது ரிமோட்.
படிக்கத் தெரியாத ஈ
புத்தகத்தைக் காலால்
தொட்டுப் பார்க்கிறது.
நடுத்தெருவில் ஏழு மாடுகள்
எண்ணி முடிப்பதற்குள்
கடந்த வண்டிகள் மூன்று.
காற்றும் இல்லை
வெளிச்சமும் இல்லை
பியூரிட் வழியே சலசலக்கும் நீர்.
இரவா லட்டும்
தொட்டால் உதிரும்.
சமையலறை இல்லாத வீடு
'இதுதான் ஹால். இங்கேதான் டி.வி. பார்ப்போம். அந்தப் பக்கம் இரண்டு படுக்கையறைகள் இருக்கின்றன. ஆனால், இரண்டிலும் படுக்கை இல்லை. தரையில் மெத்தை போட்டுத்தான் படுத்துக்கொள்வோம்... இது குளியலறை, கழிப்பறை தனித்தனியாக... இந்த அறை என்னுடையது. புத்தகங்களைப் பார்த்தாலே தெரியுமே. அந்த மேஜை, அந்தக் கணினிதான் என் வாழ்க்கை. இந்தப் புத்தகங்கள்கூடவும்... இதோ, இந்த அறை என் மகனுடையது. எவ்வளவு அலங்கோலமாகக் கிடக்கிறது பாருங்கள். எத்தனை வாட்டிகள் சொல்வது. இது... இது சமையலறை கிடையாது. என் சம்சாரத்தின் அறை. உண்மையில் எங்கள் வீட்டில் சமையலறையே கிடையாது. என் மிசஸ் வேண்டாம் என்றுவிட்டார்கள். சமைப்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் பெர்சனலானது என்று அவர் நம்புகிறார். தன் அறையிலேயே ஒரு மேடை அமைத்து அதற்கடியில் சிலிண்டர், அருகில் சிங்க் எல்லாம் வைத்துக் கொடுக்கச் சொன்னார். அவர் ஆசைப்படியே செய்துவிட்டேன். அலமாரிகளில் இருக்கும் டப்பாக்கள், பாத்திரங்கள் அனைத்தும் அவருடைய 'பெர்சனல் எஃபெக்ட்ஸ்’. சுவரெல்லாம் சாமி படம் பாருங்கள். மிகுந்த பக்தியுடையவர். இந்தப் பாத்திரம் கவிழ்க்கும் மேடையில் சின்னதாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வைத்துக்கொள்ளச் சொன்னேன். வேண்டாம் என்றுவிட்டார். எக்ஸாஸ்ட் ஃபேன், வால் மவுன்ட் ஃபேன்... வீட்டிலேயே காற்றோட்டமான அறை இதுதான்...'
காய்கறிப் பஞ்சாயத்து
உனக்கு அவரைக்காய் பிடிக்கும்
ஆனால் முத்தல் என ஒதுக்கிவிடுவாய்
கத்தரிக்காய் உனக்குப் பிடிக்கும்
ஆனால் பழைய சுவை இல்லை என மறுப்பாய்
எனக்குப் பாவக்காய் உயிரென்றாலும்
உனக்கது பிடிக்காதென
நானதைச் சமைப்பதேயில்லை
சிப்ஸாக இல்லாத வாழைக்காய்
பொரியலாகிப் பயனில்லை என்பாய்
எனக்கு உருளைக்கிழங்கை வேகவைக்க
வரவில்லை என்பது உன் எண்ணம்
கரும்பலகையை அழிக்கத்தான்
கோவைக்காய் லாயக்கு என்கிறாய்
வெண்டைக்காயை வற்றலைப் போல்
ஆக்கிவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறாய்
மென்மையாக்கினாலோ, இப்படி ரோஜாப்பூ
போல் உதிரக் கூடாது என நிராகரிக்கிறாய்
பீன்ஸ், காராமணி குடும்பத்துடன் ஜென்மப் பகை
பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் ஆகாது.
வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ் உனக்கு இனிப்பு
கீரை தின்கிறாயென தினமுமா கீரை செய்ய முடியும்?
மார்க்கெட்டில் இருப்பது இவ்வளவுதான்
உனக்குப் பிடித்தாற்போல் காய்கறிகள் வேண்டுமென்றால்
நீயே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக்கொள்.
சந்தேகம்
என் அன்பின் மீதுனக்கு
சந்தேகம் வந்துவிட்டது
எனக்குத்தான்
உன் சந்தேகம் மீதின்னும்
அன்பு வரவில்லை.
அதிகாரம் படும் பாடு!
அதிகார பலம் உள்ளவர்கள் ட்விட்டரில் படும் பாட்டைப் பார்த்தால் இதயம் துடிக்கிறது. இவர்களது பிரத்தியேகக் கருத்துச் சுதந்திரம், சாலை விதிகளைப் போல் சர்வசாதாரணமாக மீறப்படுகிறது. ஆட்கள் கைதாகி இவர்களுக்குக் கெட்ட பேரைச் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். இது அதிகாரத்தின் மீதான தாக்குதலன்றி வேறில்லை. ஆச்சரியக்குறி ஆக வேண்டிய இரு பெரிய மனிதர்களின் அரசியல், சினிமா வாழ்க்கைகள் இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளன. ட்விட்டர்வாசிகளுக்கு இந்த அநீதி தேவையா? இனிமேலாவது ட்விட்டர் பயனர்கள் தமது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இனி, யார் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாதீர்கள். கண்ணியம் காறுங்கள். ரகசியப் பட்டப்பெயர் ஏதாவது வைத்துக்கொள்ளுங்கள். 'காவன்னா சீனா’ அல்லது வெறும் 'சீனா’ என்பதுபோல் சுருக்கி எழுதுங்கள். முக்கியமாக, இதில் சீனா இருப்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். ஏனென்றால், சில்லறைத் திருட்டுக்குக் கையை வெட்டும் புராதனத் தண்டனை இங்கேயும் வரப்போகிறதாம்.
வாசகர் கடிதம்
அன்புள்ள பேயோன் ஐயா அவர்களுக்கு,
நான் ஒரு புதிய வாசகன். விகடனில் நீங்கள் எழுதுவதைத் தொடர்ந்து உங்கள் பிற படைப்புகளை யும் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை குறித்த என் பார்வையை உங்கள் எழுத்து அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. உங்கள் மொழியில் நான் மயங்கிக்கிடக்கிறேன் ஓரமாக. நீங்கள் எழுதியிருக் கும் புத்தகங்கள் அடக்க விலையில் கிடைப்பதால் வாங்கியிருக்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள்தான் ஐயா வழிகாட்டி. நிறைய எழுதுங்கள். நன்றி.
இப்படிக்கு
பேயோன்
அன்பின் பேயோன்,
எனது படைப்புகளுக்கு அறிமுகம் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தேடித் தேடிப் படிப்பது குறித்து மேலும் மிக்க மகிழ்ச்சி. மகத்தான எழுத்து என்பது நம் வாழ்க்கைப் பார்வையை அடியோடு மாற்றத்தான் செய்யும். அதில் பயப்பட ஒன்றும் இல்லை. என் மொழியில் மயங்குவதையும் நீங்கள் பாதுகாப்பாகவே செய்கிறீர்கள். நீங்கள் யாரும் சொல்லாமலே நான் நிறைய எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் மாற்ற முடியாது. உங்கள் கருத்துகள் அனைத்தும் எனக்கு உவப்பானவை. ஆனால், கடைசியில் ஒரு பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது. வாசகர் பெயருக்குப் பதிலாக உன் பெயரையே எழுதிக்கொண்டுவிட்டாய். இனிமேல் ஜாக்கிரதையாக இரு!
அன்புடன்
பேயோன்
-புரட்டுவோம்
சிறுகதை - ஆறுதல்
காலையில்
வெறும் வயிற்றில் ஃபேஸ்புக் பார்க்காதீர்கள். எழுத்துலகவாதியும் குறிப்பாக
இலக்கியவாதியுமான இஷ்டமித்திரனுக்கு (புனைபெயர்) ரத்த அழுத்தம் தொடர்பாக
மருத்துவரின் அறிவுரை. அவர் மருத்துவர். அப்படித்தான் சொல்வார்.
செய்தித்தாளைக் கையிலெடுத்தால், நாடாளுமன்ற அமளி, சட்டமன்ற வெளிநடப்பு,
கொலை, திருட்டு, 'கற்பழிப்பு’, செயின் பறிப்பு, வேலைவாய்ப்பு மோசடிக்காரர்
பிடிபாடு, பெட்ரோல் விலை உயர்வு, சாக்கடை நீர் தேக்கத்தை எதிர்த்து
காலனிக்காரர்கள் தர்ணா, புதிய ஏ.டி.எம். திறப்பு விழா, அரசு அதிகாரிகள்
மாற்றல், ஹாலிவுட் நடிகையின் மில்லியன் டாலர் கிரகப் பிரவேசம்,
ஹங்கேரியிடம் ஹாக்கியில் தோல்வி என்று எல்லாம் அரை மணி நேரத்தில் முடிந்து
விடுகிறது. குளிக்கப்போவதற்கு முன்பு ஃபேஸ் புக்கில்தானே கொள்ளை போகிறது.
ரத்த அழுத்தத்திற்கு மருந்தைத் தின்றால் போயிற்று.
'இ.மி-யின்
(இஷ்டமித்திரன்) அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி புனைவுகள்
20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தாயிற்று என யாராவது இவருக்குச்
சொல்லுங்களேன்!' இது இ.மி-யின் சிறுகதை ஒன்றை ஃபேஸ்புக்கில்
பகிர்ந்துகொண்ட ஒரு நண்பருக்கு 'நெகிழ்நன் கவிஞா’ என்ற இளம் எழுத்தாளர்
எழுதிய பின் னூட்டம். நெகிழ்நன் கவிஞா, கவிதை, சிறுகதை, மதிப்புரை,
எழுதுபவர். சமகாலப் பின்னூட்ட எழுத்தாளர்களில் அதிகம் காணக்கிடைப்பவர்.
இஷ்டமித்திரனின் சமீபத்திய தலைவலிகளில் ஒருவர். மொழி ரசத்தில் தொப்பலாக
நனைந்த தமது உருவகச் சிறுகதைகளுக்கு யார் ஃபேஸ்புக்கில் சுட்டி
கொடுத்தாலும் நெகிழ்நன் அங்கு வந்து அதை ஒரு எத்து எத்திவிட்டுப் போகத்
தவறுவதில்லை என்பதை இஷ்டமித்திரன் கவனித்தார். சொல்லப்போனால் நெகிழ்நன்
இந்தச் சேவையை இன்னும் சிலருக் கும் செய்துவந்தார். ஆனால்,
இஷ்டமித்திரனுக்கு அது பற்றிக் கவலையில்லை. வாய்க்கால் தகராறு இல்லாமல்
ஒருவன் வந்து இம்சிப்பதுதான் அவருக்கு எரிச்சலேற்படுத்தியது. இவனுக்கு
எங்கே அரிக்கிறது? இவன் எதிர்க்கும் விஷயங்களைத்தானே நாமும்
எதிர்க்கிறோம்? (என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.) பதிலடி
கொடுத்தால் சண்டையாக வளரும் என்று கை மூடி மௌனியாக இருந்தார் இ.மி. போலி
அடையாளம் தயாரிக்கக் கை துறுதுறுத் தது. ஆனால், இஷ்டமித்திர பந்துக்கள்
எனப் படும் தமது ரசிகர்கள் அதைச் செய்யட்டும் என விட்டுவிட்டார்.
அவ்வகைப்
பின்னூட்டங்களுக்குப் பின்பு நெகிழ்நனை ஓரிரு முறை இலக்கிய நிகழ்வுகளில்
பார்த்தார் இஷ்டமித்திரன். ஒரு விழாவில் ஓர் அறிவுக்கொழுந்து ரொம்ப
முக்கியமாக நெகிழ்நனை அறிமுகப்படுத்தினார். இஷ்டமித்திரன் தம்மை யாரோ
கூப்பிட்டாற்போல் திரும்பிப் பார்த்து அங்கிருந்து விலகினார். நெகிழ்நன்
வீடு திரும்பியதும் முதல் வேலையாக அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு
போட்டார். 'விடுங்கள் தலை, இந்தப் பெரிய மனிதர்களே இப்படித்தான்' ரக
பின்னூட்டங்கள் குவிந்தன. இஷ்டமித்திரன் அதையும் விடாமல் தேடிப்
படித்தார். நிலைமை இப்படி இருக்க, இன்னொன்றும் நடந்தது.
இஷ்டமித்திரன்
அடிப்படையில் ஒரு பிரபலம் என்பதால், மக்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில்
சுட்டிகளைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போனார்கள். அப்படிப் போடப்பட்ட
சுட்டிகளை அவர் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு மின்னிதழ் இணைப்பு
கண்ணில்பட்டது. அவர் மிகவும் விரும்பிப் படிக்காத 'விசை’ இணைய இதழில் இந்த
மாதம் யார் எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலும் அதில் இருந்தது.
'பொத்தான்’ என்று நெகிழ்நன் கவிஞா ஒரு சிறுகதையைப் படைத்திருந்தார். இந்த
ஆள் என்ன எழுதுகிறான் பார்ப்போம் என இஷ்டமித்திரன் மின்னிதழ் சுட்டியை
க்ளிக் செய்து தமக்கு வேண்டிய சிறுகதையைச் சென்றடைந்தார்.
சிறுகதை
இப்படி ஆரம்பித்தது: 'என்னவோ தெரியவில்லை, தினேசனுக்குச் சற்று காலமாக
எல்லோரது நெற்றியிலும் குங்குமப் பொட்டு போல ஒரு பொத்தான் தெரிந்தது. அவன்
தன்னைக் கண்ணாடியில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.
நல்ல வேளையாக அவனது நெற்றியில் பொத்தான் எதுவும் இல்லை. பொத்தான்கள்
இருக்க வேண்டிய இடம் சட்டையேஅன்றி நெற்றியல்ல என்று அவன் ஒருவாறாக நம்பத்
தொடங்கி சில காலம் ஆகிவிட்டிருந்தது.'
தொடர்ந்து
படித்த இஷ்டமித்திரனின் இதழ்களில் அரும்பிய புன்னகை, அவரது சகல பற்களின்
இருப்பையும் உலகிற்கு அறிவித்த இளிப்பாக விரிந்தது. 'பூ! இவ்வளவுதானா
இவன்! இந்தப் பத்தோடு பதினொன்றா என்னைப் பற்றிப் பெரிய வார்த்தைகளில்
வசைகிறான்!’ என்று நினைத்துக்கொண்டார் இஷ்டமித்திரன். இப்போது அவருக்குக்
கவிஞா மீது கிட்டத்தட்ட ஏமாற்றமே வந்துவிட்டது. நெகிழ்நன் இன்னும்
என்னென்ன எழுதியிருந்தாரோ அவற்றையெல்லாம் தேடிப் படித்துப் புளகித்தார்
அவர். 'இவனெல்லாம் இப்படித்தான் எழுத வேண்டும்!' என்று சொல்லிக்கொண்டார்.
இலக்கியக்
கூட்டங்களுக்கு ஏது பஞ்சம்? இன்னொரு புத்தக வெளியீட்டு விழா வந்தது.
வெளியான ஆறு புத்தகங்களில் ஒன்று நெகிழ் நனுடையது. இஷ்டமித்திரன் இன்னொரு
புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்று அது பற்றிப் பேச
அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் இருந்த சிம்மாசன மாடல் நாற்காலிகளில்
ஒன்றில் அமர்ந்திருந்த நெகிழ்நனின் அருகில் அமர்ந்தார் இஷ்டமித் திரன்.
'என்ன நெகிழ்நன்! அருமை யாக எழுதுகிறீர்கள். இதே மாதிரி எழுதுங்கள்'
என்றார்.
நடுத்தெருவில் பூகம்பம்
ஒரு
பிரச்னையாகிவிட்டது. மனைவி, மகனுடன் பழகிய தெரு வழியே சென்று
கொண்டிருந்தபோது 'சார்! சார்!' என்று யாரோ கூப்பிட்டார்கள். மூவரும்
திரும்பிப் பார்த்தால், எனக்குத் தெரிந்த ஒரு வாட்ச்மேன். முன்பு ஒரு
வங்கி ஏ.டி.எம்-மில் காவல் காத்தார். இப்போது அவர் அமர்ந்திருந்தது ஒரு
மகளிர் விடுதியின் வாசலில் ஸ்டூல் போட்டு. 'கண்டுக்காமப் போறீங்களே சார்!
இப்பல்லாம் ஆளையே பாக்க முடியிறதில்லியே?' என்றார். நின்று பேச
நேரமின்றிப் புன்னகைத்துவிட்டு, நடையைத் தொடர்ந்தேன். 'லேடீஸ் ஹாஸ்டலுக்கு
அடிக்கடி போவீங்களோ?' சொன்னது என் மனைவி என்று ஊகிக்க முடியாதவர்களுக்குத்
திருமணம் ஆகியிருக்காது; குறைந்தபட்சம் என் மனைவியுடன். எனக்கு உடனே
தொடைகள் நடுங்கத் தொடங்கின. நான் விளக்குவதற்குள் 'இப்ப ஏன் உங்களைப்
பாக்க முடியிறதில்லியாம்? அடிகிடி வாங்குனீங்களா?' என்று மேலும்
கேள்விகள். குரல் வேறு கைக்குப் பதிலாக ஓங்கிக்கொண்டிருந்தது. 'ஆட்டோ!'
என்று ஒரு காலி ஆட்டோவை வழி மறித்து 'போயிக்கிட்டேரு... போயிக் கிட்டேரு'
என்று சாலையில் வழுக்கிச் சென்றுவிட்டேன்.
காலப் பயணி
ஒரு
பிரபல இயக்குநரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'ஒரு டிஸ்கஷன்
இருக்கு. அரை அவர்ல வீட்டுக்கு வரீங்களா?' எனக் கேட்டார். வந்த லட்சுமியை
விடுவேனா? டாணென்று 4.00 மணிக்கே அவர் வீட்டில் இருந்தேன். பிரச்னை
என்னவென்றால், என்னை அழைக்கும் யோசனையே அவருக்கு 5.55-க்குத்தான்
தோன்றியிருக்கிறதுபோல. 5.55 ஆகும் வரை அவர் வீட்டிற்கு வெளியே
காத்திருந்தேன். வேறென்ன செய்ய?
சுயமொழி
நட்புத் துரோகிகளுக்கும் நண்பர்கள் உண்டு.
நீ சிரித்தால் உலகமும் உன்னுடன் சிரிக்கும். நீ அழுதால் அவனவனுக்கு ஆயிரம் பிரச்னைகள்.
தமிழன் என்று சொல்லடா! இன்னொரு முறை சொல்லடா!
'நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கண்ண
தாசன். 'கண்ணதாசன் காரைக்குடி, பேர சொல்லி ஊத்திக் குடி' - தமிழ் சினிமா.
- புரட்டுவோம்...
தேடி வந்த பாலாஜி
ஒரு இளம் வாசகன் என்னிடம் கையெழுத்து வாங்க வீடு தேடி வந்தான். உட்காரக்கூட இல்லை, அவ்வளவு மரியாதை. என் புத்தகத்தை நீட்டியவனிடம் பெயரைக் கேட்டேன்.
''பாலாஜி சார்.''
புத்தகத்தில் 'அன்பினிய’ என்று எழுதத் தொடங்கிய என் கை சடாரென்று நின்றது.
''பாலாஜியா?'' என்றேன் ஏமாற்றத்துடன். எனக்குப் பிடிக்காத பழம்பஞ்சாங்கப் பெயர். எனக்கு ஆகவே ஆகாத பலரின் பெயர் அதுதான்.
''ஆமா சார்.''
''என்னப்பா நீ, இவ்ளோ தூரம் வந்துட்டு பேரக் கேட்டா பாலாஜிங்கிறியே!''
வாசகன் துணுக்கிட்டான். ''அதான் சார் எம் பேரு!''
''ஏம்பா, இதெல்லாம் ஒரு பேரா? வேற ஏதாவது பேர் சொல்லேன். வீட்ல ரெண்டு பேர் வெச்சிருப்பாங்களே?''
''இல்ல சார். எனக்கு ஒரு பேர்தான். கொஞ்சம் சைன் பண்ணிக் குடுத்தா நல்லா இருக்கும்.''
''சைன் பண்றதுல பிரச்னை இல்ல. எல்லா பக்கத்துலயும் வேணா சைன் பண்ணித் தரேன். பக்கத்துக்கு ரெண்டு ருவா. பாலாஜிதான் பிரச்னை. உனக்கென்ன வயசு?''
''இருபத்தாறு சார்.'' பல்டி அடிக்கும் வயதில் 'பாலாஜி’.
''வயசு முப்பதுகூட ஆகல, அதுக்குள்ள பாலாஜியா? பேர் போடாம சைன் பண்ணவா?''
''சார், சைன் போடுங்க சார்! ஒரு பாலாஜில ஒண்ணும் குடி முழுகிடாது சார்.'' திடீரென என்னைப் போல் பேச ஆரம்பித்துவிட்டிருந்தான்.
எனக்கு 'டைலாமோ’ ஆகிப்போனது. இவன் பள்ளிக்கரணை என்ற ஊரிலிருந்து வந்திருந்தான். அது வரைபடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இவன் திரும்பிப் போய்ச் சேருவானா என்பது சந்தேகமே.
''சரிப்பா'' என்றேன் சரணடைகிறாற்போல. பெயர்க்காரன் ஆர்வமாக நெருங்கி வந்து பார்த்தான்.
''அட! பாக்கக் கூடாது!'' என்றேன் கண்டிப்புடன். வாசகன் மெர்சலடைந்து விலகினான்.
நான் ஆட்டோகிராஃப் இட்டேன். ஆனால், 'பாலாஜி’யை லேசாக மாற்றி 'பயாலஜி’ ஆக்கியிருந்தேன். ஆள் பெயர் மாதிரி இல்லை என்றாலும் பயாலஜிக்கு எப்போதுமே கிராக்கி உண்டு.
புத்தகத்தைக் கையோடு எடுத்துச் சென்று கிஃப்ட் ராப்பரைத் தேடி எடுத்துச் சுற்றிக் கொடுத்தேன்.
''இதெல்லாம் எதுக்கு சார்?'' என்றான் வாசகன் குழைந்து.
''இருக்கட்டும், வீட்டுக்குப் போய் பிரிச்சிக்கோ'' என்றேன். போய்விட்டான்.
சுமார் மூன்று மணி நேரம் கழித்து செல்பேசி யில் அழைப்பு வந்தது. வேறு யார், பயாலஜிதான். நான் எடுக்கவில்லை.
ஜென்கதை புதிய ஜின்செங்
புகழ்பெற்ற சீன ஜென் துறவி யான்ஷூ, தமது பூர்வாசிரமத்தில் ஒரு வியாபாரியிடம் கணிசமாகக் கடன் வாங்கியிருந்தார். துறவறம் பெற திடீரென்று ஒரு நாள் ஊரைவிட்டுச் சென்ற யான்ஷூவை அந்த வியாபாரி நீண்ட காலம் தேடிப் பார்த்துவிட்டு முயற்சியைக் கைவிட்டான். பல ஆண்டுகளுக்குப் பின்பு யான்ஷூ தமது சொந்த ஊரில் இருந்த மடாலயத்திற்கு வருகை தந்தார். புகழ்பெற்ற யான்ஷூ வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட வியாபாரி, அவரைத் தரிசிக்கச் சென்றான். தன்னிடம் கடன் வாங்கிய ஆள் ஒரு மேடையில் பூனைபோல் உட்கார்ந்துஇருந்ததைப் பார்த்தான். ''அட, நீ பழைய ஜின்செங் அல்லவா? எங்கே என் பணம்?'' என்று யான்ஷூவிடம் கைநீட்டினான். யான்ஷூ அமைதியாக அவனிடம் ஒரு ஊதுபத்தியைக் கொடுத்தார். ''இந்தா, நீயும் சாமி கும்பிடு.''
காதலின் தீபங்கள்
உன் அப்பாவுடன் பேசும்போது
ரகசியமாக உன்னைப் பார்த்து
நான் கண்ணடிக்க,
நீ முகம் சிவக்கிறாய்
அழகாய்த்தானிருக்கிறது
இருந்தாலும் உனக்கு
வேறு எதுவுமே வராதா?
தான் உரசாவிட்டாலும்
தன் துப்பட்டா உரசும்
கடந்து செல்கையில்.
உன்னைத் தெரியுமுன்பே
உன் அழகைத் தெரியுமெனக்கு
கொஞ்சம் மௌனித்திருந்து
உன் அழகுடன் பேசவிடு.
நீ வீட்டுக்குள் இருந்தால்
வெயிலின் வெளிச்ச மழை
ரோட்டுக்கு வந்தாலோ
பெங்களூர் கிளைமேட்.
எஸ்.பி.பி. செய்தது சரியா?
ஒரு திரைப்படத் துறை நண்பருக்கு ஃபோன் செய்தால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரிடமிருந்து ஃபோனைப் பிடுங்கி 'ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ?’ என்று கேட்கிறார். நான் பதில் சொல்லலாம் என்றால் என்னைப் பேசவே விடாமல் சம்பந்தமின்றி அவர் பாட்டுக்குத் தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டேயிருந்தார். கூடவே அவர் பேச்சுக்குப் பின்னணி இசை போல் பக்கவாத்தியங்கள் வேறு. பொறுமை கெட்டு ஃபோனை வைத்துவிட்டேன்.
இன்ஸ்பெக்டர் குமார் துப்பறிகிறார்
பாடி ஸ்ப்ரே
'பட்டப்பகலில்
வங்கியில் புகுந்து முகமூடித் திருடர்கள் துணிகரக் கொள்ளை!’ என்று மறுநாள்
தலைப்புச் செய்திகள் வருவதற்கு முந்தைய நாள், திருட்டு நடந்த பேங்க் ஆஃப்
ஜார்க்கண்ட் தலைமைக் கிளையில் போலீஸ் டீம் ஆஜராகியிருந்தது. இன்ஸ்பெக்டர்
குமார் வந்தபோது 'கிரைம் சீனை’த் தொந்தரவு செய்யக் கூடாது என்று காவல்
குழுவினர் ஒதுங்கி நின்றார்கள்.
''என்னய்யா ஒரே பாடிஸ்ப்ரேயா
இருக்கு?'' என்றார் குமார். உண்மையில் அந்த இடம் அப்படித்தான் இருந்தது.
தரையில் சுமார் 15 பேர் விபத்துக் கோலத் தில் சிதறிக்கிடந்தார்கள். ஆறு
ஊழியர்கள் தத்தம் இருக்கைகளில் விசைப்பலகைகளின் மேல் எச்சில் ஒழுகக்
கவிழ்ந்து இருந்தார்கள். ''சார், இவுங்க தூங்கிட்டு இருக்காங்க சார்!''
என்றார் கான்ஸ்டபிள் 114 பதறி.
''தூங்கிக்கிட்டா?
சார், எந்திரிங்க'' என்று மேனேஜர் போல் தெரிந்த ஒருவரை குமார் பூட்ஸ்
காலால் எத்தினார். மேனேஜர் சாயலாளி புரண்டு படுத்தார். ''அட ஆமா,
தூங்குறான்'' என்றார் குமார்.
ஸ்தலத்தைப்
பார்வையிட்ட குமாருக்கு ஸ்தலபுராணத்தைச் சொன்னார் கான்ஸ்டபிள். 12
மணிக்குக் கொள்ளை. முகமூடி அணிந்த நான்கைந்து பேர் வங்கிக்குள் நுழைந்து
எல்லோர் மீதும் குளோரோஃபார்ம் அடித்து மயங்கி விழவைத்திருக்கிறார்கள்.
ரூ.40 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்கள். வெளியே
போய்விட்டுத் திரும்பி வந்த இரு வங்கி ஊழியர்கள் களேபரத்தைப் பார்த்துக்
காவல் துறைக்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள். வாட்ச்மேன் கோமா நிலையில்
மருத்துவமனையில் இருக்கிறார்.
சம்பவ
நேரத்தில் வங்கியில் இருந்தவர்கள் யாரும் இன்னும் விழித்தெழவில்லை. சோபா
மெத்தை ஒன்றை மேனேஜருக்குத் தலையணையாக வைத்துஇருந்தார்கள். ஆனால், போர்வை
கிடைக்கவில்லை. எங்கேயும் கைரேகைகள் இல்லை. அலாரம், சி.சி. கேமராக்கள்
உடைந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால், எந்தத் தடயமும் இல்லை. இந்தக்
குழப்பம் போதாது என்று வங்கியிலிருந்து முகமூடி ஆட்கள் வெளியேறியதை யாரும்
பார்க்கவில்லை.
கடைசி
விவரத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் சுறுசுறுப்பானார். ''ஒன் ஃபோர்ட்டீன்,
எல்லாரையும் எழுப்பு'' என்றார். கான்ஸ்டபிள் குழு, படுத்திருந்தவர்களை
உலுக்கியும் உருட்டியும் எழுப்ப முயன்றது. முறைவாசல் பெண்மணியை அழைத்து
சிலர் மேல் தண்ணீர் தெளிக்கச் சொல்லப்பட்டது. மெதுவாக, ஒவ்வொருவராக
எழுந்துகொள்ள, அவர்கள் அப்படியே தரையில் அமரவைக்கப் பட்டார்கள்.
இதற்கிடையில்,
குமார் தனியாக ஒரு ரெய்டு நடத்தத் தொடங்கினார். மூலையில் இருந்த ஒரு
பூந்தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பூங்கொத்தை எடுத்து வெளியே வைத்துத்
தொட்டிக்குள் கை விட்டுப் பார்த்தார். ஒரு தீப்பெட்டியும் தண்ணீர்
பாக்கெட்டும் கையோடு வந்தன. மற்ற மூலைகளிலிருந்து இன்னும் மூன்று
தொட்டிகளைக் கவிழ்த்தார். சில ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் விழுந்தன.
குப்பைத் தொட்டிகள் எல்லாவற்றையும் கவிழ்த்தார். அவற்றிலும் நோட்டுக்
கட்டுகள். மொத்தம் ரூ.40 லட்சம் இருந்தது போல் தெரிந்தது. அதோடு, இரண்டு
பாடிஸ்ப்ரே புட்டிகள், நான்கு ஜோடிக் கைஉறைகள். குமார் புன்னகைத்தார்.
''இந்தாய்யா ஃபாரன்சிக்கு, இதெல்லாத்தையும் எடுத்துக்க. பணத்தைத் தனியா
வை. பசங்க உள்ளதான் இருக்காங்க.''
அடுத்து,
மலங்க மலங்க உட்கார்ந்திருந்தவர்களை குமார் பல விதமாகத் திருப்பியும்
புரட்டியும் பார்த்தார். கீழே விழுந்ததில் சிராய்ப்புகள், பல் இழப்புகள்,
ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஒருவருக்குத் தலை உப்பிஇருந்தது.
கட்டை குட்டையாக இருந்த ஒரு இளைஞனைப் பார்த்து குமார் கேட்டார்: ''நீங்க எங்கேந்து சார் வரீங்க? டெபாசிட் பண்ண வந்தீங்களா?''
''ஆவடிலேந்து வரேன் சார். டெபாசிட் பண்ணத்தான் வந்தேன்'' என்றான் அவன்.
''உங்ககூட எத்தன பேர் வந்தாங்க?''
''நான் ஒருத்தன்தான் சார்.''
''எப்படி வந்தீங்க?''
''ஆட்டோல சார்.''
''எவ்ளோ ஆச்சு?''
''நூத்தம்பது ரூபா சார்.''
''தூங்கி
எழுந்து ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க. அதெப்படி சார் உங்களுக்கும் உங்க
ஃப்ரெண்ட்ஸ் மூணு பேருக்கும் விழுந்த காயமே இல்ல? நாங்க வர்றோம்னு தெரிஞ்ச
தும் சட்டுனு படுத்துக்கிட்டீங்களா?'' என்றார் குமார். பேயறைந்தது போல்
தெரிந்த இளைஞன் பதற்றமாகத் தனது நண்பர் களைப் பார்த்தான். அதற்காகவே
காத்திருந்த 114-ம் மற்ற கான்ஸ் டபிள்களும் அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.
''ஆவடிலேந்து மவுன்ட்ரோடுக்கு 300 ரூபா ஆகும்டா புண்ணாக்கு! அங்கதான் தப்பு பண்ணிட்டே!'' என்றார் இன்ஸ்பெக்டர்.
சமீபத்தில்
தெருவில் இறங்கிச் சென்றுகொண்டு இருந்தபோது, மனைவியின் சித்தப்பா மகன்
எதிரில், நகைக் கடையில் வேலை பார்க்கிறான். இவன் கலகலப்பாகப் பேசுபவன்
என்று மனைவி எச்சரித்திருக்கிறார். புன்னகையோடு கடந்துவிடலாம் என
எண்ணுகையில், 'மச்சான், எப்பிடி இருக்கீங்க? கண்டுக்காமப் போயிரலாம்னு
பாத்தீங்களா?' என்றான் ஒன்றுவிட்ட மைத்துனன்.
'சேச்சே, நான் தங்கமான ஆளுப்பா. கண்டுக்காமப் போவேனா?' என்றேன்.
'நீங்க
தங்கம்னா, நாங்க என்ன கல்யாணி கவரிங்கா?' என்று சிரித்துவிட்டுக்
கிளம்பிவிட்டான். வீடு திரும்பியதும் அவனைப் பார்த்ததை மனைவியிடம்
சொன்னேன். ஆனால், அவன் கூறிய கடையின் பெயர் மறந்துவிட்டிருந்தது.
'என்ன சொன்னான்?' என்றார் மனைவி.
'பெருசா
ஒண்ணுமில்ல. கண்டுக்காமப் போறீங்களானு கேட்டான். நான் அப்படிப்பட்டவன்
இல்ல, தங்கமான ஆளுன்னேன். அதுக்கு அவன் ஏதோ கடை பேரு சொன்னான்,
மறந்துருச்சு.'
'என்ன கடை?'
'ஏதோ நகைக் கடை.'
'நீங்க
தங்கம்னதும் அவனுக்கு ஏதாச்சும் டிஸ்கவுன்ட் ஞாபகம் வந்திருக்கும்.
இப்புடிக் கடை பேர மறந்துட்டு வந்து நிக்கிறீங்களே! மொதல்ல அவனுக்கு போன்
பண்ணி கடை பேரக் கேட்டுச் சொல்லுங்க.'
போன்
'சொல்லுங்க மச்சான்.'
'பிஸியா... ஹெஹ்ஹெஹ்ஹெ.'
'இல்ல மச்சான், சொல்லுங்க.'
'ரோட்ல பாத்தப்ப எதோ கடை பேர் சொன்னியேப்பா, என்ன கடை அது?'
'கடையா? நான் எதுவும் சொன்ன மாதிரி ஞாபகம் இல்லியே.'
'இந்தா, உங்கக்காட்ட பேசு.'
'சொல்லுப்பா,
நல்லாருக்கியா? எம் புருஷன் உங்கிட்ட என்ன பேசுனாரு? ம்... ம்...
அப்படியா... இவுருதான் சொன்னாரு... அப்படியா... சரிப்பா, வெச்சிடு.'
மனைவி
ஒரு செவ்வாய்க் கிரகப் பூச்சியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்து...
'அவன் ஏதோ ஜோக்கடிச்சிருக்கான். அதப் புரிஞ்சிக்காம என்னையும் கொழப்பி...'
என்று கடிந்து கொண்டார். இதற்குப் பதில் சொன்னால் வளர்ந்து பெரிதாகி,
எங்கள் திருமணத்தன்று மண்டபத்தில் யார் என்ன பேசினார்கள் என்பது வரை
பின்னோக்கிவிடும் என்பதால், அப்படியே விட்டுவிட்டேன்.
ஆனால்,
மனம் விடுவதாக இல்லை. நான் ஒரு ஆளிடம் 'நான் தங்கமானவன்’ என்கிறேன்.
அதற்கு அந்த ஆள் 'நீ தங்கம் என்றால் நான் தங்க முலாம் பூசியவனா?’ என்று
எதிர்க் கேள்வி கேட்கிறான். இதில் நகைச்சுவை எங்கிருந்து வந்தது?
'உங்களைப் போல நானும் நல்லவன்தான்’ என்று சொல்லிவிட்டுப் போக
வேண்டியதுதானே? விளக்கெண்ணெய்கள்!
-புரட்டுவோம்!
குழாயைச் சரியாக மூடுவதில்லை
கணேசுவின்
சித்தியும் சித்தப்பாவும் ஊரிலிருந்து அவன் வீட்டிற்கு
வந்திறங்கியிருந்தார்கள். பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தவர்கள்
வந்தேவிடுவார்கள் என கணேசு எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம் தங்கி சென்னை
கோவில்களுக்கும் கடற்கரைக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள்.
கணேசுவின் மகள்கள் சித்ராவுக்கும் அமுதாவுக்கும் பட்டுப் பாவாடை வாங்கி
வந்திருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு சமையலைப் புகழ்ந்தார்கள். வாஞ்சை யாக
இருந்தார்கள்.
முதல்
மூன்று நாட்கள் விருந்தாளிகளால் களை கட்டின. ஊர்க் கதை, உறவுக் கதைகள்
பேசியதில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்கள் நிறைவாகக் கழிந்தன. பெரியவர்கள்
இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தங்கள் பிள்ளைகளின் அருமை
பெருமைகளையே அதிகம் பேசினார்கள். கிடைத்த இடைவெளிகளில் காயத்ரி தன்
மகள்களைப் பற்றிப் பாமாலை பாடினாள்.
நான்காம்
நாள் காயத்ரி ஒன்றைக் கவனித்தாள். பாத்ரூம் (குளியலறை) குழாயை யாரோ
மூடாமல் விட்டிருந்தார்கள். தண்ணீர்த் துப்பாக்கியிலிருந்து வருமளவு
கொஞ்சமாக ஆனாலும், டைல்ஸ் தரையில் கொட்டிக்கொண்டிருந்தது. கணேசு இறுக்க
மூடுவான். சித்ராவும் பாரதியும் இதில் அப்பாவை உரித்து வைத்திருந்தார்கள்.
சித்தி எதையும் பார்த்துப் பார்த்துச் செய்பவராகத் தெரிந்தார். ஆகையால்
சித்தப்பாதான் சரியாக மூடாமல் போயிருக்க வேண்டும் என்று காயத்ரி கணக்
கிட்டாள். இது இன்னும் சில முறை நடந்தது. பேத்திகளுக்குப் பட்டுப் பாவாடை
வாங்கிக் கொடுத்ததற்காக, குழாயை மூடாமல் விட்டு விட முடியுமா?
'உங்கள்
சித்தப்பா பாத்ரூம் குழாயைச் சரியாக மூடுவதேயில்லை. நீங்கள் அவரிடம்
சொல்கிறீர்களா?' என்று கணேசுவுக்கு காயத்ரி அன்புக் கட்டளையிட்டாள்.
கணேசுவுக்குத் தர்மசங்கடமாகிப்போனது. சித்தப்பாவுடன் கணேசுவிற்கு அவ்வளவு
பழக்கம் இல்லை. சுட்டிக்காட்டினால் குத்திக்காட்டுவதாக அவர்
எடுத்துக்கொள்ளக்கூடும். 'நீதான் வாழைப்பழத்தில் ஊசி கோர்ப்பதுபோல்
பேசுவாயே, அதுபோல் நீயே சொல்லிவிடேன்' என்றான் கணேசு. 'இதைக்கூடவா செய்யத்
துப்பில்லை?’ என்பதுபோல் அவனை முறைத்துவிட்டு விலகி னாள் காயத்ரி.
அன்றிரவு
சாப்பிட்ட பின் எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.
அப்போது காயத்ரி தண்ணீர்ப் பிரச்னை பற்றிப் பேச்சைத் தொடங்கினாள்.
'இப்போதெல்லாம் நிலத்தடி நீர் முன்புபோல் பம்ப்பில் ஏறி வருவதில்லை.
தண்ணீரைத் தண்ணீர்போல் செலவழிக்க முடிவதில்லை. அதனால்தான் நாங்கள்
குழாய்களை இறுக்க மூடிவிடுகிறோம். இல்லைஎன்றால் தண்ணீர் வீணாகிறது.
மீண்டும் மோட்டாரை இயக்க வேண்டியிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்குத்தான்
பொறுப்பே இல்லை. பாத்ரூம் குழாயைச் சரியாக மூடாமல் விட்டுச்
சென்றுவிடுகின்றன' என்றாள் காயத்ரி. 'ஆமாமாம்'' என கணேசு பலமாகத்
தலையாட்டினான்.
'டைல்ஸில்
தண்ணீர் கொட்டினால், அது காயாது. அதனால் பாத்ரூம் எப்போதும் ஈரமாகவே
இருக்கும்'' என்று தானே கண்டுபிடித்ததுபோல் சொன்னார் சித்தப்பா. 'எங்கள்
வீட்டிலெல்லாம் பாத்ரூமுக்கும் சிமென்ட் தரைதான். தண்ணீர் சீக்கிரம்
காய்ந்துவிடும். தரை சொரசொரப்பாக இருப்பதால் வழுக்காது' என்றார் அவர்.
'இவர் என்னவோ சொல்கிறார். ஆனால், டைல்ஸ் போட்டால்தான் வீடு லட்சணமாக
இருக்கும்'' என்றார் சித்தி. காயத்ரி, கணேசுவைப் பார்த்தாள். பிறகு பேச்சு
ரியல் எஸ்டேட், வேலைவாய்ப்பு, நவீன வசதிகள் என்று மாறிவிட்டது.
ஐந்தாம்
நாள் காலை ஐந்து மணிக்கு காயத்ரி தோளில் ஆடைகள், துவாலையுடன் குளிக்கக்
கிளம்பினாள். பாத்ரூம் விளக்கைப் போட்டதும் குழாயிலிருந்து நீர்
கொட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டாள். எழுந்தவுடன் முதல் வேலையாகக்
குளித்துவிட்டு அதற்குப் பின்பே பல் தேய்க்கும் வழக்கமுள்ள கணேசு, வாஷ்
பேசினில் பல் தேய்த்துக்கொண்டிருந்தான். 'அந்தக் குழாயைச் சரியாக மூடாதது
உங்கள் வேலைதானா?' என்று பொரிந்தாள் காயத்ரி. அவன் பல் தேய்த்து
முடிக்கும் வரை பதிலுக்குக் காத்திருந்தாள். கணேசு வழக்கத்தைவிட அதிக
நிதானத்தோடு எல்லாவற்றையும் செய்துவிட்டு, 'காலையிலேயே ஆரம்பிக்காதே'
என்று சொல்லி நகர்ந்தான். சித்தி, சித்தப்பா நன்றாகத்
தூங்கிக்கொண்டிருந்தார்கள். காயத்ரிக்கு அவர்களைப் பார்க்கப் பாதி
ஏமாற்றமும் பாதி அனுதாபமுமாக இருந்தது. இன்னும் இரண்டு நாள் என்று
சொல்லிக்கொண்டாள்!
- புரட்டுவோம்...
கவிதைகள்
என்னைப் பார்த்தமட்டில்
மழை கண்ட குடை போல்
அகல விரிகிறது
உன் வலது கண்
இடது கண்ணும்தான்.
உன்னை எவ்வளவு
காதலிக்கிறேன் என்று
சொல்லவா?
உன்னிடம் மட்டும்தான்
இன்னும் கடன் வாங்கவில்லை.
தொலைவிலேயே நாம்
பார்த்துக்கொண்டுவிட்டோம்.
அருகில் வரும்போதுதான்
புன்னகைக்க முடியும்.
காத்திருந்து காத்திருந்து
அருகில் வந்ததும் பாய்ந்து
மோதிக்கொள்கின்றன
நம் புன்னகைகள்.
உன்னை அருகில் வைத்து
என்னிடம் நிறைய
பேசிக்கொண்டிருக்கிறார்
உன் தந்தை.
கேட்கத்தான் ஆளில்லை.
ஒரு பழைய கதை
பொதுவாக, நான் படப்பிடிப்புகளுக்குப் போவது இல்லை. இணையத்தில் 'பீட்டர் ஸ்பீல்பெர்க்’ என்ற பட்டப் பெயரால் அறியப்படும் கௌதம் வாசுதேவ் மேனன் (ஒரே ஆள்) இளையராஜாவுடன் கைகோத்த அதிசயத்தைப் பார்க்க மட்டும் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று 'நீதானே என் பொன் வசந்தம்’ படப்பிடிப்பைக் காணப் போனேன். 'நீங்க சும்மா பேசிக்கிட்டிருங்க, டயலாக்ஸை போஸ்ட் ப்ரொடக்ஷன்ல சேத்துக்குவோம்’ என்று ஜீவா, சமந்தாவிடம் கௌதம் மேனன் சொன்னதைப் பார்த்தேன். 'எனக்கு ஒண்ணுமே தோணல, நீ ஏதாவது சொல்லேன்!’ என்பதுபோல் ஜீவா பேச, அதற்கு 'ஐ லவ் சென்னை’ என்கிறரீதியில் சமந்தா பதில் அளிக்க, கேமரா அதை மும்முரமாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தது. நான் சமந்தாவை மட்டும் சிறிது நேரம் பார்த்துவிட்டு, கௌதமிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். நான் ஸ்டுடியோ கதவை மூடுகையில், 'இண்டியாவோட கேப்பிடல் என்ன?’ என்று ஜீவா கேட்டுக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
டாட்டா!
நினைத்தபோது இருபது பேருக்கு எழுதிக்கொண்டிருந்த என்னை ஆனந்த விகடனில் எழுதவைத்தது ஆனந்த விகடன். ஒரே சமயத்தில் இத்தனை வாசகர்களுக்கு எழுதுவது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. எவ்வளவு பெரிய சவால் என்பது 'பேயோன் பக்க’ங்களைப் படித்தாலே தெரியும்.
இது எனது கடைசி விகடன் பத்தி. எனவே, 'பேயோன் பக்கம்’பற்றிய சில தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் வாசகர் கடிதங்கள். ஒரு வாசகர்கூடக் கடிதம் அனுப்பவில்லை. நானேதான் அவர்கள் பெயரையும் ஊரையும் ஊகித்து, அவர்களின் எழுத்துநடையை அனுமானித்துக் கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. மற்றபடி, அந்தக் கடிதங்களில் இருப்பவை அனைத்தும் அவர்களுடைய கருத்துகள்தாம். அதிலொன்றும் மாற்றம் இல்லை. இன்ஸ்பெக்டர் குமார் துப்பறியும் கதைகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டவை. ஒரே வித்தியாசம், நிஜத்தில் அவர் தமிழ்நாடு காவல் துறை இன்ஸ்பெக்டராக அல்ல, சி.ஐ.ஏ.வி-ல் கான்ஸ்டபிளாக இருக்கிறார். சொந்தக் கதைகளில் வரும் என் மனைவியும் மகனும் என் நிஜ வாழ்க்கையிலும் முறையே என் மனைவி, மகனாக இருக்கிறார்கள். சுயமொழிகள் பல்லாண்டு அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகள் எழுதிய முறை சுவையானது. காகிதத்தில் வார்த்தைகளை எழுதிக் கத்தரித்துக் குலுக்கிப் போட்டு அவற்றை அருகருகே வைத்து ஒட்டிக் கவிதைகளைத் தயாரித்தேன்.
விகடன் மூலம் என் படைப்புகள் எனக்குத் தெரியாத பலரையும் சென்றடைந்ததில் மகிழ்ச்சி. நான் பார்த்த வரை 'பேயோன் பக்கம்’ சிலரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பலரைக் குழப்பியது. சிலர் பேயோன் பக்கத்திற்குப் பேயோன் பக்கத்தாலேயே கொடும்பாவி செய்து கொளுத்தினார்கள். பலர் போகிப் பண்டிகைக்காகக் காத்திருக்கிறார்கள். எனது விகடன் பத்தி முடிவதை சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதுடன் ஒப்பிடுவோரும் உண்டு. ஆனால், அவர் ஐந்து நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடத்தான் போகிறார். அதுபோல, உங்களிடமிருந்து விடைபிரிந்தாலும் இணையவெளியில் ஒரு ஓரமாய் எனது கொடி பறந்துகொண்டுதான் இருக்கும்.
விடைபெறுமுன் ஆக்கபூர்வமான செய்தி ஒன்று சொல்லிக்கொள்கிறேன்: சவ ஊர்வலம் கடந்த சாலைபோல் பூக்கள் நிறைந்ததல்ல வாழ்க்கைப் பாதை. அது பல்லாயிரம் கடிகாரங்களுக்கு இணையான முட்களைக் கொண்டது. பாரதியார் என்ன சொன்னார்? 'பூக்களை ரசித்துவிடு பாப்பா, ஆயின் முட்களை மிதித்துவிடு பாப்பா!’ நன்றி, வணக்கம்.