Home / NanjilNaadan

NanjilNaadan


நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதெமி விருது

Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey

Photo: K. Ananthan 

Word power Nanjil Nadan

I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal (in Coimbatore). But I went back and spent a full 10 minutes before it after reading Nanjil Nadan's Soodiya Poo Soodarka. Clad in a dhoti and kurta with a thundu thrown over his shoulders, yesteryear trade union leader N.G. Ramasamy stands tall, amid the din of traffic. The Gandhian had refused to identify his assailants, even on his deathbed. I learn of this in Soodiya Poo Soodarka, an outstanding anthology of short stories that won Nanjil Nadan this year's Sahitya Akademi Award.

“I would have been ecstatic had I received the award 20 years ago,” smiles Nanjil Nadan. “It would have encouraged me. Now, I'm happy but not elated.”

Socially-conscious

Nanjil Nadan has six novels, 112 short-stories and two poetry collections to his credit. In recent years, the writer has shown a special interest in essays that reveal his social consciousness and thirst to do his bit for society.

Born as G. Subramaniam in the small town of Veeranarayana Mangalam in Kanyakumari district, Nanjil Nadan has been a prominent figure in Tamil literature for the past 35 years. After completing an M.Sc in Mathematics, he left for Mumbai in 1972 to work in a private company.

Mumbai presented a cultural shock to the lad from the south. Yearning for the familiar, he spent evenings at a Tamil Sangam, reading for hours on end. “I read and read — at the bus stand, at the railway station, whereever possible. I remember reading two books a day. Lonely in an alien world, my eyes used to well up at the thought of home. Every time I was nostalgic, I would head to Victoria Terminus (now Chhatrapati Shivaji Terminus) to watch passengers on Chennai-bound trains — it was the closest I could get to home.”

It was during this period that Nanjil Nadan penned his first short-story, Viradham, which was published in writer N. Parthasarathy's magazine, Deepam.

“I was thrilled to see my name in print. I bought several copies to flaunt to my friends and colleagues,” reminisces the writer.

Around the same time, Nanjil Nadan started work on his first novel, Thalaikeezh Vigithangal. Published in 1977, the novel was an instant bestseller. Years later, it was adapted in to a movie “Solla Marandha Kadhai”. Later came novels such as Enbiladanai Veyilkayum, Mamisapadaippu, Midhavai, Sadhuranga Kuthirai and Ettuthikkum Madhayaanai.

Interesting titles

Every written work of Nanjil Nadan bears a fascinating title. A few of them even draw references from Sangam literature. In fact, an M.Phil student has researched on his titles.

M. Velayutham, founder of Vijaya Pathipagam, says: “Nanjil's titles are one-of-a-kind. So are the characters in his stories. The intrepid Kumbamuni, for example, is unparalleled.”

Velayutham was instrumental in bringing about the publication of Sadhuranga Kuthirai in 1993, Nanjil Nadan's first novel since his move to Coimbatore in 1989.

Now, Nanjil uses essays as a medium to raise his voice against the injustice faced by the voiceless. His essay Idhu Pengal Pakkam, about the unsanitary conditions of toilets in all-girls schools in Tamil Nadu created quite a stir when it was published in Anandha Vikatan in 2009.

The writer's books are also part of the curriculum in schools and colleges.

His other love

“Nanjil's description of food will have your stomach grumbling,” smiles the writer's close friend Venil Krishnamoorthy of Nandhini Pathippagam. Be it a potato sabji garnished with green chillies and onions or a simple kanji served in a coconut shell, the writer can make food as appealing as possible.

“It's my way of making things interesting for the reader,” says Nanjil Nadan. “Eating is an experience I absolutely enjoy.” In fact, he is currently working on a book about the cuisine of Nanjil Nadu.

The author has also forayed into the online world — he periodically contributes essays to solvanam.com.

As a sales executive, Nanjil Nadan has travelled widely across the length and breadth of the country. The many interesting people he met during these travels have found their way into his stories. He tells me about one of them — a hungry farmer he met during a train journey in North India. “I was having lunch when this shrivelled old man walked into the compartment. Noticing the last few bits of roti in my plate, he said imploringly, ‘ Hami kaanaar! Hami kaanaar!' I was taken aback. He did not ask to be fed; he just said, ‘Let us eat.'”

Read about this encounter in Yaam Unbaem, in Soodiya Poo Soodarka.

 கோவை, டிச. 20: எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. விருது கிடைத்த மகிழ்ச்சியின் பின்னே நீண்டகால புறக்கணிப்பின் வலி உள்ளதாக அவர் கருத்து கூறியுள்ளார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதை தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 160 பக்கங்களில் 12 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுதி 2007-ல் தமிழினி பதிப்பகம் மூலம் வெளியானது. 2009-ல் மறுபதிப்பு கண்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலூகா, வீரநாராயணமங்கலத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் கணபதியா பிள்ளை - சரஸ்வதி அம்மாள். மனைவி சந்தியா. மகள் சங்கீதா மருத்துவர், மகன் கணேஷ் பொறியாளர். இருவரும் பெங்களூரில் பணிபுரிகின்றனர்.  

1977-ல் இவரது தலைகீழ் விகிதங்கள் நாவல் வெளியானது. முதல் நாவல் பரவலான கணிப்பைப் பெற்று எட்டு பதிப்புகளில் 18 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

இது தங்கர்பச்சான் இயக்கத்தில் "சொல்லமறந்த கதை' என்ற திரைப்படமாக வெளியானது. என்பிலதனை வெயில்காயும், மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை போன்றவை பிற நூல்கள்.

 சதுரங்கக் குதிரை நாவல் 1995-ல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. மும்பை தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, லில்லி தேவசிகாமணி விருது, அமுதன் அடிகள்,  கண்ணதாசன் விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர படைப்புலகில் உள்ள இவர், இதுவரை 112 சிறுகதைகள், 6 நாவல்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ளார்.

1947-ல் பிறந்த இவருடைய எழுத்துகள் சத்தியாவேசம் கொண்டவை என்று பலராலும் பாராட்டுப் பெற்றவை. இவருடைய சிறுகதைகள், ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பாடங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

காலம் கடந்த அங்கீகாரம்

விருது குறித்து நாஞ்சில்நாடன் கூறியது: சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கான மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது.

தமிழின் நவீன படைப்புலகிற்கு இந்த புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. விருது பரிசீலனைக் குழுவில் நவீன இலக்கியம் குறித்து அறிந்தவர்கள் இடம்பெற்றதன் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

காலம் கடந்த அங்கீகாரம் சகிக்க முடியாதது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு அங்கீகாரம் கிடைப்பது அவசியம். சில மணி நேரத்தில் எனக்கு வந்துள்ள நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்பின் மூலம் நவீன இலக்கியத்தின் மீது வாசகர்கள் கொண்டுள்ள ஆர்வம் புலப்படுகிறது. ஆனால் இந்த பரபரப்பு எனக்குப் புதிது. காட்சி ஊடகங்களின் தாக்கம் காரணமாக புத்தக வாசிப்பு ஒரு புறம் குறைந்துள்ளது.

வலைப் பூக்களின் மூலம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட, ஆனால் தமிழ்வழியில் படிக்காத இளைஞர்களிடம் இலக்கியம் அறிமுகம் ஆகி உள்ளதை மறுக்க முடியாது. அந்த அறிமுகம் அச்சிட்ட  புத்தகங்களைத் தேடி வாசிக்கும் அளவுக்கு இளைஞர்களை ஈர்த்துள்ளது.

புத்தக வாசிப்பின் அனுபவத்தை வேறு எந்த வடிவமும் தந்துவிட முடியாது. எனவே, பெற்றோர் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பை அறிமுகம் செய்ய வேண்டும், புத்தகம் எந்தத் தீமையையும் தராது. கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழ் படைப்புலகில் வெளியாகும் புத்தகங்கள், விற்பனை, வாசிப்பு பரவலாக அதிகரித்துள்ளது என்றார் நாஞ்சில் நாடன்.
 
 


நாஞ்சில் நாடன் - ஒரு கனிந்த தமிழ் இதயம்
வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை.

அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு.

சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக வாழ்க்கையின் புரிதலை தெளிவாக்கி விரிவாக்குகின்றன.

கலைஞன் தான் காணும் ஒளியால் நிரம்பி வழிகையிலேயே தாஸ்தாயவ்ஸ்கியும், காஃப்காவும், பாரதியும், புதுமைப் பித்தனும் கிடைக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் அவ்வழியில் வந்தவர்தான்.

dsc_5439-1வெகுசனப் பத்ரிகைகளும்,‘இஸம்’ ‘இனம்’ சார்ந்த பத்ரிகைகளும் அதிகமாயுள்ள சூழலில் ஒரு வாசகன் சாதாரணமாகக் காண்பது வெற்றுச் சந்தடி, இலட்சிய கோஷம், பொழுது போக்கு நீர்மை, காழ்ப்பு. எழுதுபவர்களிலோ பலரும் எங்கோ எதிலோ தேங்கிப் போனவர்கள். இது வசை அல்ல. இத்தகைய சூழலில் ஊற்றுக் கண்களையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி விடாத, புண்ணிய நதியாகும் நோக்கமுமற்று நமது அன்றாட வாழ்வின் அங்கமான சாமான்ய ஆறாக நாஞ்சில் நாடன் ஓடுகிறார்.

சுமைகளும், பழைய குப்பைகளும், பாசியும் அற்ற இந்த ஆறு தமிழர்களின், அதன் மூலம் மனிதர்களின் இயல்பை, முரண்பாடுகளை, பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை, கருணையின் சாயையை, தூய்மையை, சர்வ சாதாரணமாக, ‘அனுபவங்களை முயற்சி செய்து பெற்ற செயற்கைத் தகவல்கள்’ இன்றி அனாயாசமாக, ஆனால் மிகப் பெரிய வேட்கையோடு காட்டிச் செல்கிறது.

இவரோடு எழுத வந்த பலர் தீவிரமாக இயங்குவதை நிறுத்தி பல காலம் ஆகி விட்டது. இவர் இன்னமும் தன் வாசகர் வட்டமும், அவர்கள் மேல் தன் தாக்கமும் அதிகரித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் எந்தக் கொட்டகையிலும், சாதனையிலும் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து உறங்கிப் போய் விடவில்லை. வாழ்வின் சவால்களும், சண்டைகளும், தாக்குதல்களும் பேனாவைப் பிடுங்கி எறியவும் இவர் விடவில்லை. கதவு, கூரை, சன்னல்கள் அற்ற இடத்தில் உயிர்ப்புடன் இருப்பதனாலேயே இவருக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

இவர் பெரிதும் மதிக்கும் முன்னோடிகளில் ஒருவரான நகுலன் சொன்ன ‘When you hate some thing you cannot understand it’ என்கிற சொற்கள் இவர் வாழ்நாள் முழுவதும் துணை வரும் ஜீவ வாக்யங்களில் ஒன்றென்பதால் எதன் மீதும் துவேஷமற்று எதையும் புரிந்து கொள்ள இவரால் முடிகிறது. இலக்கியம் வாழ்க்கையின் புரிதலுக்கான ஒரு சாதனம் என்றாகையில் அந்த சாதனத்தின் சாதகர்களில் இதன் காரணமாகவே இவர் மிக முக்கியமானவராகிறர்.

நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ்.

காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார். தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர். நான் கூட வேடிக்கையாகக் கேட்பேன். “பெண்டிங் விழுந்த அரியர்ஸ்ஸை எல்லாம் க்ளியர் பண்ணிட்டீங்களா” என்று. “இன்னும் மூன்று புத்தகங்கள் இருக்கு. இந்த வாரம் படிச்சுடுவேன்” என்பார்.

இதற்கிடையில் சங்கத் தமிழ், அகராதிகள், கம்பன், ஆழ்வார்கள், தேவாரம், ஔவை, என்று கலந்து பழக இவருக்கு எப்படி நேரம் இருக்கிறது என்பது இவர் இலக்கிய தாகம் எத்தகையது என்பதற்கு சான்று.

இவ்வளவு படித்தும் அறிவின் சுமை இவரிடம் இல்லை. அதனால் வாசகனுக்கு அயற்சியும் இல்லை. இவர் தனிப் பேச்சில் கூட யாருக்கும் வகுப்பு எடுப்பதோ உபதேசம் செய்வதோ இல்லை. ஆறு நாவல்கள், 110 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், எண்ணற்ற பேட்டிகள், முன்னுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ள இவரிடம் ஒரு புது எழுத்தாளர் சுலபமாகத் தன் கருத்துகளைக் கூற முடியும். சில சமயம் அவர்கள் மட்டுமே கூட பேசி, இவர் கேட்டுக் கொண்டிருப்பதும் உண்டு.

அதே போல் இவரை முகஸ்துதியாக யாரும் புகழவும் முடியாது. ‘அந்தக் கதை ப்ரமாதம், எனக்கு ரொம்பப் பிடித்தது’ என்று யாராவது ஆரம்பிக்கையில், பேச்சை வேறெங்கோ மாற்றி எடுத்துச் சென்று விடுவார். அதே சமயம் அவர் கதைகளை ஆழமாக விவாதிக்கும் நல்வாய்ப்பும் என் போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது.

அனைவருக்கும் நண்பர். எல்லா கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. எனினும் தன் கருத்துகளைக் கூற அஞ்சாதவர். இவரது துவேஷமற்ற போக்கும் நேர்மையுமே இவர் பெயரை எவர் ஜாபிதாவிலும் இடம் பெற வைத்து விடுகிறது.

தன் மனதைப் புண் படுத்தியவர்களிடம் கூட இவர் சாதாரணமாக பகைமை பாராட்டுவதில்லை. ‘அவன் இப்பிடி செஞ்சுட்டான். இனி அவனுக்கு நான் எதையும் அனுப்பப் போறதில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நபர் ஃபோனில் வந்தால், ‘என்ன. . . . நல்லாருக்கீங்களா’ என்று ஆத்மார்த்தமாகக் கேட்பார்.

nanjil3

அறிவு, சாமர்த்தியமாக மாறாத எல்லையில் இருப்பவர். எதிர் கருத்துகளைக் கூறுபவர்களிடமும் பொறுமையாக இருக்கும் பக்குவம் பெற்றவர். குடும்பம், நண்பர்கள் என பேச, அன்பு செலுத்த 24 மணி நேரமும் இவருக்கு ஆட்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் வாழ்வில் காட்டும் அன்பெனும் அமுதைப் போன்றே ஆலகாலத்தையும் எழுத்தில் மட்டும் கொண்டு வருகிறார் நிதர்சன வாழ்வில் அது எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்தவர் என்பதால்.

புற உலகு, அக உலகு என்று இரண்டு இருப்பது போல் தோன்றுகிறது. அதே போல் மூளை, இதயம் என்கிற இரண்டு இயக்கங்களும் மனதில் இயங்குகிற மாதிரி தோன்றுகிறது. Subjectivity - objectivity, இடது மூளை - வலது மூளை, கலை - அறிவியல் என்றெல்லாம் இவை பிளவு பட்டு நிற்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. இவ்விரட்டைகளை புராண அன்னத்தைப் போல் பால், நீர் என்று பிரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் இயலாது.

புற உலக நிகழ்வுகளை இதயம் கொண்டு ‘சப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ, அக உலக இயக்கங்களை ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ உலக இலக்கியங்களில் அரிதில்லை. எல்லாவித ‘பர்முடேஷன் காம்பினேஷன்’களிலும் இதைப் பார்க்கலாம்.

புதுமைப் பித்தனும், மௌனியும் வேறு மாதிரி என்று தெரிந்தாலும் இருவரும் மிகுந்த தெளிவுடன் சிலவற்றை ‘இன்டலெக்ட்’ டை உபயோகித்து எழுதியவர்களே! சிலகதைகளில் வேண்டுமென்றாவது ஈரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதைப் படிக்கும் போதே உணரலாம்.

‘இதயம், இதயம்’ என்ற தம்பட்ட எழுத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. இதய நிகழ்வுகளை இதயம் மூலம் கனிவோடு அணுகியவர் தி.ஜானகிராமன். இவர் போன்றே புறப்பட்ட நகலெழுத்துகளினூடே ஆயாசமடைய வைக்கும் அபரிமித நெகிழ்ச்சிகளும் பல உண்டு.

பெருங்கலை என்பது இதயமும் மூளையும் வலது இடது பேதமின்றி ‘சப்ஜெக்டிவ்’ விஷயங்களைப் பற்றிக் கூட ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதும் போது நேர்கிறது. கலைஞன் வாழ்வின் தரிசனத்தில் லயித்து கரைந்த பின்னரே வெளிவந்து தன் அறிவால் மொழியால் அதை நம்மிடம் தொடர்பு கொண்டு கூறுகிறான். இந்த சரிவிகிதக் கலப்பில் இதயம் உணர்வதை மூளை சரியாக சொல்கையில் பெருங்கலை தோன்றி விடுகிறது.

போர்ஹே சற்று தூக்கலான இன்டலெக்டின் வெளிப்பாடு என்றால் காஃப்கா சரியான இதய மூளை கலப்பாக, அதாவது முழுமையான பார்வை, கூர்மை, வெளிப்பாடு சேர்ந்து ‘கலை’ செய்தவராகவும் தெரிகிறார். தாஸ்தாயவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் அப்படியே. லாவ்ட்சு சொல்லும் “clear heads and calm minds’. இவர்கள் மிகக் களேபரத்தில் இருக்கும் வாழ்க்கையையும் அப்படியே எழுத்தினால் ‘காம் மைண்ட்’டுடன், அதாவது திரிக்காத மனதினால் வாசகனுக்குக் கடத்துபவர்கள்.

புற உலகு பற்றிய இதயத்தின் வெளிப்பாடாக பழந்தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இருக்கிறது. மன நெகிழ்வின் உச்சமாக அதன் பின் வந்த காவியங்களும், பக்தியும். இவை அனைத்திலும் ஊறியது நாஞ்சில் நாடனின் மனம். புற உலக வாழ்க்கையை வறட்டு, தத்துவ, கோட்பாடு, தர்க்க நோக்கின்றி இதயத்தால் பார்த்துணர்ந்து எழுதியவை இவர் எழுத்துகள்.

இதயத்தில் ‘காலம் மீறி இருந்து சொதசொதத்துப் போகாமல்’ எழுதுவதே இவர் கலை வெளிப்பாடு. அதற்கு கறாரான தர்க்கத்தின் மீதமைந்த கணிதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு பெற்றவர் என்பதும் ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பழந்தமிழ், பக்தித் தமிழ், காவியத்தமிழ் மட்டுமின்றி பாரதி துவங்கி, இன்று எழுதும் எவ்வித பின்புலமோ, பிரபலமோ அற்றவரின் எழுத்துகள் வரை அயராது ஆர்வத்துடன் படிப்பது. மேலும் உலக இலக்கியங்களோடான பரிச்சயம்.

மற்றொன்று இவரது தாட்சண்யம். ஈழத் தமிழருக்காக, ஒரு பைசா பிரதியுபகாரமாகப் பெறாமல், உண்மையிலேயே துக்கமுற்றுத் துடித்தவர். முற்றிலும் எதிரிடையான கருத்துகளைச் சொல்பவரிடத்தும் முகம் சுளிக்காது கேட்பவர். தன் அபிப்பிராயங்களைக் கட்டித் தொங்காமல் இருப்பது மனிதரிடையே மிக அரிதாக காணப் படும் அருங்குணம். அதுவும் இவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.

கலை, நீதியுனர்வோடு இரண்டறக் கலந்தது. ‘வெள்ளாளர் வாழ்க்கை’யில் ‘காலம் நிகழ்த்திய மாற்றங்களை’ நூலாக எழுதிய இவரை தற்கால தமிழ் வழக்கப் படி ‘வெள்ளாளர் அடைப்புக் குறிகளு’க்குள் அடைக்க முடியாது. இவரது எழுத்துகளைப் படித்தவருக்கு இது தெரியும். லௌகீக வாழ்விலும் வெள்ளாளர்கள் அவர்கள் இனத்து அமைச்சருக்கும் சேர்த்து இவரை கௌரவிக்க அழைத்தபோது அந்த விழாவையே ‘வர முடியாது’ என்று தவிர்த்தவர்.

வெள்ளாளர், தமிழர் என்றில்லாமல் மனிதருக்குப் பொதுவான மனம் இவரது எழுதும் மனம். அதனால்தான் வட இந்தியாவிலிருந்து “காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம , ஊரை நாறடிக்க வந்திருப்பதாக” வசைபாடப்படும் க்ஷெத்ராடனம் வரும் வட இந்திய ஏழை யாத்ரீகர்களுக்காக “மேற்கில் மேலாங்கோடும், கிழக்கில் முப்பந்தலும் தாண்டியிராத, தெற்கே கன்யாகுமரி கடலையும், வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்டவே முடியாத” வெற்றுக் காழ்ப்பினருக்கு எதிராக எழுத முடிகிறது.

கலை உள்ளம் என்பது எப்போதுமே ‘anti-establishment’ டாகத்தான் இருக்கும். வெற்றி தோல்விகளிலோ, சாச்வதத்தைப் பற்றியோ அதற்குக் கவலை இல்லை. இது ஒரு மாற்றமுடியாத சூத்திரம். அவ்வுள்ளம் எழுதவோ, பிற கலைகளில் ஈடுபடவோ கூட வேண்டாம். மகாத்மா காந்தியிடமும், ராஜாஜியிடமும், பாரதியிடமும், ஜெயகாந்தனிடமும், ஜெயமோகனிடமும் இன்ன பிறரிடமும் நாம் இதைத்தான் கண்டோம்; காண்கிறோம். (அவ்வுள்ளம் சகட வாழ்க்கையினால் சின்னாப் பின்னமாக்கப் பட்டோ, சாமர்த்தியத்தாலோ எஸ்டாப்ளிஷ்மென்டுக்கு இணக்கமாகப் போனால் அதில் கலை செத்து விடும் என்பதும் கண்கூடு) அந்நியர் ஆட்சிக்கு இணங்கிப் போவதே அனுகூலம் என்ற கால கட்டத்தில் அதை எதிர்ப்பது, நாத்திகப் போர்வையில் துவேஷம் வளர்ப்பதில் உள்ள அநீதியை முழுமூச்சாக எதிர்ப்பது, அரசு கையில் இருப்பதால், அரசியல் கூட்டம் பின்னால் இருப்பதால் எல்லா புகழும் எனக்கே என்பவரின் பொய்யை எதிர்ப்பது எல்லாமே ‘anti-establishment’ உணர்வுகள்தான். தராசு அநியாயமாக தாழ்கையில் எதிர்த்தட்டில் அமர்ந்து சரி செய்பவன் கலைஞன். அதைத் தொடர்ந்து செய்து வருபவர் நாஞ்சில் நாடன்.

உயர்கலையும் இலக்கியமும் ஒரு மொழியைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு பிரதேசத்தில் உருவானாலும் அவை உலகளாவியவை. உயிர்கள் அனைத்தையும் தழுவியவை. அதனால்தான் நாஞ்சில் நாடன் கதைகளில், இரையுண்டதாலோ கர்ப்பிணியாயிருப்பதாலோ நிறைந்த வயிறோடு சாலையைக் கடந்து செல்லும் பாம்புக்காக வண்டியை நிறுத்திய பேருந்து ஓட்டுநர் “போ மோளே பெட்டென்னு’ என்று கனிவு கசிய கூறி காக்கிறார். எங்கிருந்தோ வரும் பாபுராவும், யுகங்களாய்த் தொடரும் மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரேயும் சந்திக்கும் அந்த திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அனைத்துக்கும் ஆதாரமாக ‘தயை’ சரஸ்வதியாக ஓடுகிறது. அதனால்தான் ‘யாம் உண்பேம்’ என்பது தகப்பன் சாமியின் உபதேசம் போல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல் பாபுராவின் காதில் ஒலிக்கிறது. நம் காதிலும்.

 
 


Veerendra Kumar, Nanjil Nadan among Sahitya Akademi winners
Awards in Maithili and Telugu to be declared soon
The former Union Minister, M.P. Veerendra Kumar is among the 22 who have won this year's Sahitya Akademi awards for the best works in literature. Mr. Kumar has won the award for his travelogue ‘Haimavathabhuvil' in Malayalam.

The other winners include eight poets, four novelists and three short story writers.

The winning poets are: Arun Sakhardande [Konkani], Vanita [Punjabi], Mithila Prasad Tripathi [Sanskrit], Sheen Kaaf Nizam [Urdu], Laxman Dubey [Sindhi], Mangat Badal [Rajasthani], Aurobindo Uzir [Bodo] and Gopi Narayan Pradhan [Nepali].

The novelists are Esther David [English], Bani Basu [Bengali], Dhirendra Mehta [Gujarati] and M.Borkanya [Manipuri].

Under the category of short stories, Nanjil Nadan [Tamil], Uday Prakash [Hindi] and Manoj [Dogri] have been chosen for the award.

Among others, Rahamat Tarikere [Kannada], Ashok R.Kelkar [Marathi], Basher Bashir [Kashmiri] have won the awards for best books of criticism, Pathani Pattnaik [Oriya] under the category of ‘autobiographies' and Bhogle Soren [Santali] under ‘plays.'

Secretary of the Akademi, Agrahara Krishna Murthy, said the winners in Maithili and Telugu would be declared soon.

Presented in caskets

The awards are in the form of caskets containing an engraved copper plaque, a shawl and a cheque for Rs. One lakh.

They will be presented at a function on February 15 during the festival of letters organised by the Akademi.
 

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள்.

தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா? நாஞ்சிலின் கதைகள் எனக்கு அப்படியானவற்றுள் ஒன்று. எளிமையும் நேரடித்தன்மையும் உண்மையும் மிக்கவை அவருடைய எழுத்துகள். யதார்த்தவாதக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்று இலக்கிய உலகின் ஈசான மூலையில் இருந்து எப்போதும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். கதவிடுக்குப் பல்லியின் குரல் அது. நாஞ்சிலின் கதைகள் யதார்த்தத்தின் அச்சிலிருந்து இம்மியும் பிறழாதவை. அழுத்தந்திருத்தமாக இந்த மண்ணில் கால் பதித்து கம்பீரமாக எழுந்து நிற்கும் கதைகள்.

ஒரு தினத்தந்தி வாசகன் முயற்சி செய்தால்கூட அவரது கதையுலகில் எளிதில் நுழைய முடியும். ரசிக்க முடியும். வியக்கவும் பகிரவும் அனுபவிக்கவும் முடியும். சிறந்த இலக்கியங்கள் அனைத்துக்குமான பொது இயல்பு இது. ஆனால் தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களுக்கும் சிற்றிதழ் வாசகர்களுக்கும் மட்டுமே இன்று இந்தத் தருணத்தின் அருமை புரியும்.

நாஞ்சிலின் பிழை அல்ல இது. நமது பிழை.

சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குகிறது. இதுநாள் வரை நாஞ்சில் நாடனை வாசிக்காத வாசகர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம். அவருடைய பெரும்பாலான (அனைத்து?) புத்தகங்கள் விஜயா பதிப்பக அரங்கில் கிடைக்கும். தமிழினி ஸ்டாலில் சமயத்தில் நாஞ்சிலே கிடைப்பார்!
 

”... யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்...” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..)

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு செய்யப்படிருக்கிறது. என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமான படைப்பளி. இவரின் கதைகளில் இருக்கும் வாழ்க்கை என் சொந்த வாழ்க்கையோடு சில சமயங்களில் மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளதால்.. எப்போதும் என்னால் மறக்கமுடியாதபடைப்பாளி இவர்.

தன்னுடைய முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள் வெளிவந்த அனுபவத்தை புத்தகம் பேசுகிறது மாத இதழில் அவர் பகிர்ந்துகொண்டது. இங்கே. அனேகமாக அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், 32 ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

அச்சு அசலான எழுத்தும் அவருடையது என்று அவரது நூல்களை வாசித்த எவரும் மறுக்க மாட்டார்கள். மெல்லிய நகைச்சுவைகளை அவருடைய புனைவுகளில் பார்க்கலாம். அதே சமயம் புனைவற்றவைகளில் இவருடைய நகைச்சுவையுணர்வு கரைபுரண்டு ஓடும்.

நான் முதலில் இவரது கதைகளை பேய்க்கொட்டு என்ற சிறுகதை தொகுதி வாயிலாகவே முதலில் அறிமுகமானது. அப்புறம் மும்பை போன சமயத்தில் எட்டுதிக்கும் மதயானை நாவல் படித்து கிறங்கிப்போய் இருந்த சமயத்தில் தான்,  எழுத்தாளர் அம்பை வீட்டில் இருந்து வாங்கிச்சென்ற நாவல் தான் தலைகீழ் விகிதங்கள். மும்பையில் இருந்த சமயங்களில் அம்பையிடமிருந்து நிறைய நூல்களை வாசிக்க வாங்கிச்செல்வது வழக்கமாயிருந்தது (அப்போதைய பொருளாதார சூழல் நூல்களை காசுகொடுத்து வாங்கும் நிலையில் இல்லை).

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு போகும் போது, அங்கே நாஞ்சில்நாடன், ஞான.ராஜசேகரன், கலைக்கூத்தன் போன்றோரின் செயல்பாடுகள் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வார் தமிழ்ச்சங்கத்தின் துணைச்செயலாளர் சங்கொலி பாலகிருஷ்ணன் என்பவர். இவரும் சிறுகதையாளர் தான். நானும் நண்பர் மதியும் குயில்தோப்பு சிற்றிதழை தொடங்கியபோது, இவரது முகவரியைத்தான் இதழில் தொடர்ப்பு முகவரியாக கொடுத்திருந்தோம். கம்பராமாயணத்தில் அதன் சுவைக்காக மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்திருக்கிறார் நாஞ்சில்நாடன்.

நேரடியாக இணையத்தில் நாஞ்சில்நாடன் இயங்காவிட்டாலும் இவரது வாசகர் சுல்தான் என்பவரால் இவரது எழுத்துக்கள் வலையேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வலைப்பதிவின் முகவரி:
 http://nanjilnadan.wordpress.com

ஒவ்வொரு முறையும் இவ்விருது வழங்கப்படும் போது இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை எழும். அது இம்முறை இருக்காது என்று நம்புகிறேன். இவ்விருதுக்கு சரியானநபரை இம்முறை அகாதமி தேர்வு செய்திருப்பதாக நம்புகிறேன்.

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். சிறிது நேரத்துக்கு முன் அவருக்கு தொலைபேசி வழி வாழ்த்து சொல்ல முயன்றபோது, அவரது எண் தொடர்ந்து பிசியாக இருந்துகொண்டே இருந்த்து. அப்படியும் விடாப்பிடியாக முயற்சித்து வாழ்த்துகளை சொல்லிவிட்டேன்.

நாஞ்சில்நாடன் விக்கியில் : http://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடன்
அழியாச்சுடர்கள் வலைப்பதிவில்: http://azhiyasudargal.blogspot.com/search/label/நாஞ்சில் நாடன்
கேணியில் நாஞ்சில் நாடன்: கிருஷ்ணபிரபு: http://thittivaasal.blogspot.com/2010/03/blog-post.html
பிரபாகரன் :
 http://tprabakaran.blogspot.com/2010/03/blog-post_15.html
நாஞ்சில்நாடன் பற்றி எஸ்.ரா: http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997298571472509.html
நாஞ்சில்நாடன்  நேர்காணல்கள்: தீராநதியில் : http://kadarkarai.blogspot.com/2008/04/blog-post.html
விகடனில்:
http://dhalavaisundaram.blogspot.com/2008/04/blog-post.html

நாஞ்சில் நாடன் பற்றி அடிக்கடி ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதி இருக்கிறார். அங்கே சுவையான அவருடைய அனுபவங்களும் கிடைக்கும் வாசிக்க.. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு என்ற கட்டுரைத்தொகுப்பையும் எழுதி இருக்கிறார் ஜெமோ. http://www.jeyamohan.in/?p=135
 


நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஒரு வாரம் முன்புதான் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர்
வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.

நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது.

அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று
 நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?)

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும்.

நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
 Against All Odds

நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
 
 
நேர்காணல் - நாஞ்சில் நாடன்: எழுத்தாளனின் அச்சமும் கவலையும் - தளவாய் சுந்தரம்

முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.

மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே...

"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?”

“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.

"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.

"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”

"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க?”

"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்? ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.

"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?

"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா?

"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.

"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.

"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.

"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.

"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.

"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”

"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?”

"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”

"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?”

"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.

"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”

"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?”

"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.

"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.

"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?

"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.

"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா? ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”

"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?”

"அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.

"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”

"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?”

"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)
 
 
 

சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன்
 

 ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் _ நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றோ?’’ என்று அங்கதம் பொங்க பேசும் நாஞ்சில் நாடன் தமிழன் செவ்வியல் படைப்பாளி. ‘தலைகீழ் விகிதங்கள்,’ ‘என்பிலதனை வெயில் காயும்,’ மாமிசப் படைப்பு, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை, என்ற ஆறு நாவல்களும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ ‘வாக்குப் பொறுக்கிகள்’ ‘உப்பு’ ‘பிராந்து’ ‘சூடிய பூ சுடற்க என்னும் ஐந்து சிறுகதை தொகுப்புகளும் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி இருக்கிறார். இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பம் வெளியிட்டிருக்கிறது. கூடவே இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஷயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையில் நூலை காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.
தன் வீட்டில் நேர்ந்த இரண்டு துக்க காரியங்களில் இரண்டு மாதங்கள் தள்ளிப்பான இந்த நேர் காணல் இந்த மாதம் சாத்தியமானது. கோவை சிங்காநல்லூர் ஐயர்லேஅவுட் பகுதியில் வசிக்கும் அவரை ஒரு மாலை பொழுதில் தீராநதிக்காக சந்தித்தோம்.

 தீராநதி : உங்களுடைய முதல் சிறுகதையான ‘விரதம்’ 1975 ஜூலை மாதம் ‘தீபம்’ இதழில் வெளிவந்திருக்கிறது. உடனே அந்தக் கதைக்கு ‘இலக்கிய சிந்தனை’ பரிசும் கிடைத்திருக்கிறது. அப்போது உங்களுக்கு உத்தேசமாக 28 வயதிருக்கும். அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமகால இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்டோடு அறுபது வயதை எட்டி இருக்கிறீர்கள். அன்றைக்கு உங்களுக்கு எழுத்தின் மீதாக உண்டான ஆர்வம், வாசிப்பிலிருந்து இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் ‘இடம்’ வரைக்குமான விஷயங்களை வாசகப் பதிவிற்காக ஞாபகப்படுத்தி பேசுங்களேன்?

 நாஞ்சில் நாடன் : ஆரம்பத்தில் என்னுடைய தனிமையைக் கொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். பிறமாநிலத்தில் சென்று பணி செய்யவேண்டிய கட்டாயம். பேச்சுத் துணைக்கோ, சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கோ ஒரு தமிழனோ, மலையாளியோகூட இல்லாத சமயத்தில் தன்னந்தனியனாக உணர்ந்தேன். ஒருபுறம் பிறந்து வளர்ந்த ஊரின் ஞாபகங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வடிகாலாக எழுத ஆரம்பித்தேன். ‘விரதம்’ மாதிரியான சிறுகதைகள் எழுத வந்ததன் மூலம் நான் இழந்த அல்லது தொலைத்த ஒரு உலகத்தை எனக்குள்ளாகவே மறு வெளிப்பாடு செய்து பார்த்துக்கொண்டேன். அதிலொரு சுகம் இருந்தது எனக்கு. அப்படி எழுதியபோது தொடர்ந்து இதே வழியில் போகலாம் என்று ஒரு தைரியம் கிடைத்தது.
ஆரம்பத்தில் ழிஷீstணீறீரீவீணீ வாக உருவான என் எழுத்து நாள் போகப்போக ழிஷீstணீறீரீவீணீ என்ற இடத்தோடு மட்டும் நின்று விடவில்லை. பிறந்த வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, சமூகம் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி, என்னுடைய நேரடியான அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை ஒரு பகிர்தல் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை ஏற்பட்டது. இது சிறு வயதிலேயேகூட இருந்திருக்கலாம். ஆனால் அது துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு மேலும் தீவிரமாக என்னால் எழுத முடிந்தது. இப்படித்தான் முப்பத்துநான்கு வருஷமாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வடிவங்கள், யுக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்ததோ, எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில்தான் நான் தொடர்ந்து சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும் திகைத்து நின்றதில்லை.

 தீராநதி : உங்களின் ழிஷீstணீறீரீவீணீவைக் கொல்வதற்காகவே எழுத ஆரம்பித்தீர்கள் என்பது சரி, அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னவே உங்களுக்கு கதை, நாவல்கள் வாசித்த அனுபவம் இருந்ததா?

 நாஞ்சில் நாடன் : என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். _ எனக்கெது புரிந்ததோ அதை. தொடக்கத்தில் எல்லா இளைஞர்களுக்குமே அந்தக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரக் கதைகள் மீது பெரிய ஆர்வம் இருந்தது. பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் துப்பறியும் மர்மக் கதைகள் மீதும் பெரிய ஆர்வம் இருந்தது.
இவர்கள்தான் முதலில் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்தினார்கள். எங்கள் ஊர் வீரநாராயணமங்கலத்தில் நூலகமொன்று இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாஞ்சில் நாடு என்ற பகுதியில், பழையாற்றங் கரையிலுள்ள ஒரு சின்ன, ரொம்ப அழகான விவசாய கிராமம் அது. சுற்றிலும் நெல் வயல், வாழை, தென்னை இந்த மூன்றுதான் முக்கிய பயிர்கள். அப்புறம் கன்றுகாலிகள் என்று, இவ்வாறான சூழலோடுதான் என்னுடைய வாசிப்பும் சேர்ந்து நகர்ந்தது.
எங்கள் ஊர் நூலகத்தில் கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி பின்னால் தொடர்ந்து அகிலன். அதன்பிறகு அநுத்தம்மா, மு. வரதராஜன் இப்படி தொடர்ந்து போ. ஒரு காலத்திற்குப் பிறகு மர்மக்கதைகள் வாசிப்பதற்கான ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. மர்மக்கதை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவில் நம்மிடம் இல்லை. நான்கு ஐந்து பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர்த்து சரித்திரக் கதைகள் என்பது சொல்லும்படியாக இல்லை. இப்படிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது, என்னுடைய 26, 27 வயதில் நான் பாம்பேக்கு குடிபெயர்கிறேன். அங்கு பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு உறுப்பினராக நான் சேர்ந்தேன். அந்த நூலகத்திலிருந்து வீட்டிற்கு தினமும் இரண்டு புத்தகங்கள் வாசிக்க எடுத்துக்கொண்டு போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தினமும் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஏறக்குறைய 400, 500 பக்கங்கள் தினமும் படித்தேன். அதற்கான நேரமும் சாவகாசமும் எனக்கிருந்தது. அப்போது அந்த நூலகத்தில் வே. நாகராஜன் என்ற ஒருவர் இருந்தார். ‘வேனா’ என்ற பெயரில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தொகுப்பாக எதுவும் வரவில்லை. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம். தி. ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். அவர், ‘கிருஷ்ணன் நம்பியைப் படிச்சிருக்கியா?’ ‘நீல. பத்மநாபனைப் படிச்சிருக்கியா?’ என்று கேட்டு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தார். சுந்தரராமசாமியை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அந்தப் புத்தகங்களைத் தேடி பிடிக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் அநுத்தம்மா, லக்ஷ்மி இவர்களைத் தாண்டின ஒரு விஷயம் எனக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் நம்பி அப்போது மொத்தமே இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருந்தார். அப்போதுதான் நீல.பதம்நாபன் ‘தலைமுறைகள்’ நாவலை எழுதி முடித்திருந்தார். பிறகுதான் ‘பள்ளிகொண்டபுரம்’ வந்தது. இப்படி அன்று தொடர்ந்து இன்றைக்கு வரைக்கு ஒரு தரமான வாசிப்பிற்கு என்னை நான் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இன்றைக்கு சமகாலத்தில் வெளிவந்திருக்கும் எல்லா இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

 தீராநதி : அன்றைக்கு ஆரம்பித்து இன்றைக்கு நீங்கள் வந்து நிற்கும் இடம் வரைக்கும் மன நிறைவைத் தரக் கூடிய ஓர் எல்லையை எட்டி இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?

 நாஞ்சில் நாடன் : இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று _ என்னால் செய்ய முடிந்ததை நான் செய்திருக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது ஒரு நிறைவெனக்கிருக்கிறது. இரண்டு நான் செய்தது போதுமா என்று பார்த்தால் எனக்கு இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதைச் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது. இதை நான் அகம்பாவமாகச் சொல்வதாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சில விஷயங்களை நான்தான் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. இதை தான் சொல்லவில்லையென்றால், இது தமிழ் மக்களுக்கு சொல்லப்படாமலேயே கூட போய்விடக் கூடிய ஓர் அபாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதை நீங்கள் கர்வமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு சரிதான். சாதாரணமாக ஒரு ‘விரதம்’ என்று சிறுகதையை எழுத ஆரம்பித்து நேற்றைக்கு ‘டைம்ஸ் இன்று’ வில் வெளியான ‘கோம்பை’ வரைக்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்த தீப் பந்தத்தைத் தூக்கிக் கொண்டு நான் நடந்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது என்னால் சாத்தியமாகி இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை என்ற பிரிவிலேயோ அல்லது நாவல் என்ற பிரிவிலேயோ இருக்கின்ற மொத்த தூரத்தையும் நான் கடந்து விட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் என்னால் முடிந்த தூரத்தை நான் கடந்திருக்கிறேன்.

 தீராநதி : உங்களுடைய சிறுகதையிலோ கட்டுரையிலோ அல்லது நாவல்களிலோ பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக கையாளப்பட்டிருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தும் போது அது துருத்திக் கொண்டு நிற்காமல் தன்னியல்பாக அவற்றை எடுத்துப் பிரயோகிக்கிறீர்கள். திருமந்தரம், சைவத் திருமுறைகள், திருக்குறள், சங்கப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று உங்களின் பழந்தமிழ் பற்று ஒரு கல்வியாகவே உங்கள் படைப்பிலக்கியத்தில் போதிக்க, வாசிப்பிற்கான சுவைக் கூட்ட வந்து வந்து விழுகிறது. வெள்ளாள பிள்ளைமார்கள் மரபில் பாரம்பரிய தொடர்ச்சியாகவே ஒரு பழந்தமிழ் பாண்டித்யம் சர்வசாதாரணமாகவே புழங்கும். அந்த அறிமுக அளவீட்டிற்கான அறிவு கூட உங்களின் படைப்புகளுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் கதை சொல்லத் தொடங்கி பிற்பகுதியில் ஒரு சங்கப் புலவனைப்போல உரைநடையில் கதைபாட ஆரம்பித்திருக்கிறீர்கள். நவீன செவ்வியல் மரபைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாகவே உங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கிய பரிட்சயம் விருப்பத்தின் பால் அமைந்ததா? அல்லது கல்விப் புலம் சார்ந்ததா? ஏனென்றால் நீங்களரு கணிதவியல் வகுப்பைச் சார்ந்த மாணவனென்பதால் கேட்கிறேன்?

 நாஞ்சில் நாடன் : பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி என்பது என்னுடைய குடும்பத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப சாதாரணமான அன்றாடங் காய்ச்சும் விவசாயக் குடும்பம். வெள்ளாளர் மரபில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே தேவாரம், திருவாசகம், மற்ற சமய திருமுறைகள் பற்றிய அறிமுகத்துடனிருக்கும். இது எல்லா குடும்பத்திற்குள்ளும் இருக்குமென்று சொல்ல முடியாது. நூறு குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பத்திற்குத்தான் அந்த வாய்ப்பு அதிகம். என் குடும்பம் அதற்கு தொடர்பில்லாத விவசாய குடும்பம்.
நானெப்படி பழந்தமிழ் இலக்கியத்திற்குள் வந்தேனென்றால், ஆரம்ப பள்ளியைத் தாண்டி உயர்நிலை பள்ளிக்கு வருகின்ற போதே பள்ளியில் நடக்கின்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வேன். அப்படி கலந்து கொள்கிறபோது எங்கள் ஊரில் படித்தவர்களிடம், விஷயம் தெரிந்தவர்களிடம் ‘நான் இந்தத் தலைப்பில் பேசப் போறேன் அல்லது எழுதப் போறேன். எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்வேன். ஒரு மூன்று அல்லது நான்கு பக்கங்கள் எழுதிக் கொடுப்பார்கள். நான் மனப்பாடம் செய்வேன். அவர்கள் எழுதிக் கொடுக்கும் போது அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை செறிவாக்குவதற்காக அங்கங்கே பழந்தமிழ் பாடல் வரிகளை செருகுவார்கள். பொங்கலின் சுவையைக் கூட்ட முந்தரி பருப்புகளை சேர்ந்து நாம் சுவையேற்றுவதைப் போல பழந்தமிழ் பாடல்களை சேர்த்து எழுதி தருவார்கள். அச்சுவைக்கு பழக்கப்பட்ட நான் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது தனியாகவே அந்த ‘முந்திரிப் பருப்புகளை’ தேடத் தொடங்கினேன். பள்ளி படிப்பு முடிந்த பிற்பாடு நானே என்னுடைய பேச்சுகளுக்கு, கட்டுரைகளுக்கான புத்தகங்களைத் தேடி எழுதுவதற்கான பயிற்சி எனக்கு வந்து விட்டது. திருக்குறள், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார் பாரதிதாசன் பிறகு பாடப்புத்தகத்தில் இருக்கின்ற செய்யுள்கள் என்று ஊன்றிப் படிக்க ஆரம்பித்தேன். பாடத் திட்டத்தில் மனப்பாட பாடல்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பாடல்கள் எனக்கு மனப்பாடமானதாகி விடும். செய்யுள்களில் அப்படி ஒரு ருசி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது சீவகசிந்தாமணியிலிருக்கின்ற பாடல்கள் என்னுடைய பாடபுத்தகத்தில் இருந்தது. வசந்த சேனை பந்தாடுகின்ற இரண்டு பாடல்கள். ரொம்ப சுவாரஸ்யமான சந்தமுள்ள பாடல். ரொம்ப சுவையாக இருக்கும். எனக்கென்ன அப்போது தோன்றியதென்றால் அந்த சீவகசிந்தாமணி முழுக்க இப்படித்தான் பாடல்கள் இருக்கும் போல என்று. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டுப் போனேன். தெருவில் அதை எடுத்துக் கொண்டு போகும் போது ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ‘‘எதுக்குடா இத்த தண்டி புத்தகத்தை தூக்கிட்டுப் போற தலையில வெச்சு தூங்கறதுக்கா?’’ என்று கேலி பேசினார்கள். நான் ஒரு கௌரவத்திற்காக புத்தகத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். என்னால் அதை படிக்க முடியவில்லை. எப்படி ஒரு எட்டாம் வகுப்பு மாணவனால் அதை படிக்க முடியும்? ஆக, இப்படி எந்தப் புத்தகம் கையில் கிடைத்தாலும் நான் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள், உரைநடை, கதை, கவிதை என்று பலவிதமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில்‘குகப்படலம்’ இருந்தது. சிலப்பதிகாரத்தினுடைய ‘வழக்குரைகாதை’ இருந்தது. வாசிப்பில் தேர்ச்சி வருகின்றபோது அந்த மொழி உங்களை வசீகரிக்கின்றது. 1964_ல் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது எனக்கு தமிழ் சொல்லி தந்த ஆசிரியர்கள் எல்லாம் ஈடுபாட்டோடு சொல்லித் தந்தார்கள்.
கூலிக்கு மாரடிக்கவில்லை அன்றைக்கு இருந்த தமிழாசிரியர்கள் உரைநடையை வாசிப்பதைப் போல செய்யுளை வாசிக்க மாட்டார்கள். அசை பிரித்து சொற்கள் தெளிவாக, அர்த்தம் தெளிவாக புரிகின்ற விதத்தில் பாட்டை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி இரு முறை, மூன்று முறை அவர்கள் பாட்டை சொல்லும் போது அந்தப் பாட்டெனக்கு மனப்பாடமாகி விடும். இன்றைக்குள்ள சமகால கல்வி மாணவர்கள் அந்தக் கல்வி முறையை இழந்து விட்டார்கள். இன்றைய தமிழாசிரியர் பலரும் தமிழ் சொல்லித் தரும் முறை அறியாதவர்கள்.
இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும். ஆரம்பக்காலத்தில் எனக்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடு இருந்தது. ஏ.கே. கோபாலன் காலத்தில் அதாவது 1962_ம் ஆண்டு வாக்கில் இந்தோ_சீனா யுத்தம் வந்ததில்லையா அப்போது ஒரு பொதுவுடமைவாதி எங்க ஊரில் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரியாத காலம் அது. அவர் ஒரு மலையாளி. அவருடைய மனைவிக்கு எங்கள் ஊர்தான் சொந்த ஊர். மலையாள நாளிதழ்களைதான் அவர் படிப்பார். அவர் எங்களுடன் கோட்பாடுகள் சம்மந்தமாக உரையாடுவார். அவர் மூலமாக பொதுவுடமை கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதே போல எங்கள் வீட்டிற்கு ‘திராவிட நாடு’ பத்திரிகை வரும். என் சித்தப்பா அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய முதல் இரண்டு தி.மு.க. கிளைகளில் எங்கள் ஊரும் ஒன்று. முத்தாரம், முரசொலி, தென்றல் இப்படி தி.மு.க. சார்புடைய பத்திரிகைகள் தொடர்ந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தன.
அப்புறம் அரசியல் சொற்பொழிவுக் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்தேன். அநேகமாக அன்றைய காலத்திய எல்லாத் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். ஈ.வெ.ரா. பெரியார், ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ. முருகானந்தம், கே.டி.கே. தங்கமணி, ம.பொ.சி. இப்படி எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைவர்கள் சொற்பொழிவுகளின் நடுவில் சில கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். திருக்குறளை பாரதியை மேற்கோள் காட்டுவார்கள். பாரதிதாசனை கண்டிப்பாக மேற்கோள் காட்டுவார்கள். மு. வரதராசனின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். இப்படி அரசியல் கூட்டங்களுக்கு போவதால் என்னுடைய சிந்தனை வளத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது. பின்னால் தான் இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். இதன் மூலம்தான் எனக்கு சமூகம் சார்ந்த ஒரு பார்வை கிடைத்தது. அரசியல் சார்ந்த பார்வை கிடைத்தது. இலக்கியம் சார்ந்த பார்வை கிடைத்தது.
1964_ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு பி.எஸ்.சி. படிக்க வருகிறேன். 1967 தேர்தலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி கொள்கிறது. 1962 தேர்தலிலேயே ஒன்பதாவது படிக்கும்போது நான் வாடகைக்காரில் உட்கார்ந்து ‘மைக்’ பிடித்துக் கொண்டு, வாக்காள ‘பெருமக்களே...’ என்று பேசி தி.மு.க.விற்காக ஓட்டு சேகரித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலைவரைக்கும் கிராமம் கிராமமாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பிறகு இந்த அரசியல் கட்சிகள் பற்றிய அபிப்ராயம் தலைகீழாக மாறியது. ஆகவே அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தீராநதி: என்னுடைய கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களை தனிப்பாடமாக கற்றீர்களா?
நாஞ்சில் நாடன்: தனியாகப் பாடமாக எடுத்து நான் படிக்கவில்லை. பழந்தமிழ் இலக்கிய அறிமுகம் என்பது நானே தேடிக் கொண்டது. அதற்கு என்னுடைய ஆசிரியர்களும் உதவி இருக்கிறார்கள். நான் பி.எஸ்.ஸி. படிக்கும் போது, வகுப்பு இல்லாதபோது நூலகத்தின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழே எம்.ஏ. பாடம் நடந்து கொண்டிருக்கும். நான் மேல் இருந்தே அந்தப் பாடத்தை கவனிப்பேன். ஒரு நாள் ஆசிரியர் ‘என்ன பார்க்குற?’ என்றார். ‘பாடம் கவனிக்கிறேன்’ என்றேன். ‘பாடம் கவனிப்பதாக இருந்தால் பின் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து கவனி’ என்றார். உடனே போய் உட்கார்ந்துவிட்டேன். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் எம்.ஏ. மட்டும் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எந்தக் கல்லூரியிலேயும் ‘றிநி கோர்ஸ்’ கிடையாது. டாக்டர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், டாக்டர். இ.வி.மணி, டாக்டர் அரசு ஆறுமுகம், புலவர் கே.சி.தானு தெ.ந. மகாலிங்கம் என்று எங்கள் கல்லூரியில் தமிழில் திறமை வாய்ந்த நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். பின்னால் நான் பம்பாய்க்கு போய் வாசிப்பை தொடர்ந்த காலத்தில் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் மேனேஜராக இருந்த ரா. பத்மநாபன் என்பவர் பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் கம்பன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் மாணவர். அதில் பதினேழு மாணவர்கள் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு. தொழிற்சாலையில் வேலை முடிந்தவுடன் நான் ஒழுங்காக வகுப்பிற்கு போய்விடுவேன். உரையே இல்லாமல் மர்ரே ராஜம் அய்யர் போட்டிருந்த கம்பராமாயணம் புத்தகத்தை எங்கள் கையில் கொடுத்து விட்டு, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையை கையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். இந்த பதினேழு மாணவர்கள் என்பது நாட்பட நாட்பட பதினொன்றாகி, ஒன்பதாகி, ஏழாகி, மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றாக ஆனது. அந்த ஒரே மாணவன் நான்தான். கடைசியில் அவர் என்ன சொன்னார். இந்த ஒரு மாணவனுக்காக ஏன் நான் வகுப்பிற்கு வரவேண்டும். ‘நீ வேண்டுமானால் என் வீட்டிற்கு வா’ என்றார். நான் போனேன். முகம், கை கால் அலம்பிவிட்டு வீட்டிற்கு சென்றால் அந்த அம்மா, ஆசிரியர் மனைவி, (எனக்கு மாமி தெரியாது. அம்மா தான் தெரியும்) எனக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுப்பார். என்ன வாழ்நாளில் ஙிமீst சிஷீயீயீமீமீயை அங்குதான் முதன் முதலில் குடித்தேன். என்னுடைய ஆசிரியர் தீவிர பக்தர். சைவ நெறி, கம்பன் மீது பெரிய ஈடுபாடு. அவர் ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தான் பாடம் நடத்துவார். நான் அந்த வயதில் தீவிர நாஸ்திகன். ஆனால் எங்களுக்குள் ஒரு பரஸ்பரம் மரியாதை இருந்தது. அப்படி மூன்று வருடம் பாடம் கேட்டேன். அவருடைய சிறப்பென்னவென்றால் வெறும் கம்பனோடு மட்டும் பாடத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார். மார்கழி மாதம் என்றால் திருப்பாவை திருவெம்பாவை படிப்போம் என்று அதை சொல்லிக் கொடுப்பார். இப்படி தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடலை சொல்லிக் கொடுப்பார். கிட்டதட்ட திருப்பாவை திருவெம்பாவை முழுக்க எனக்கு மனப்பாடம். அதேபோல தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பார். கம்பனில் 13 ஆயிரத்துச் சொச்சம் பாடல்களில் ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் இடைச் செருகல் என்று தள்ளிய பாடல்கள் உட்பட சேர்த்து அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். பாடம் எடுக்க உடல் நலம் இல்லை என்றால் அபிராமி அந்தாதி கோளாறு பதிகம், ஜெயதேவர் அஷ்டபதி பாடல் காசட்டுகளை போட்டு கேட்கச் சொல்லுவார். அவருக்கு திருக்குறளில் நல்ல புலமை இருந்தது. சமய இலக்கியம் மீது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் ரா. பத்மநாபன்தான். அவர்தான் ‘நாராயணீய’த்தை தமிழ் செய்தார் பின்பு.

 தீராநதி : அந்தக் காலத்தில் தி.மு.க. சார்புள்ளவனாக அரசியலில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். மிகப் பெரிய பொருளாதார மேதையான டாக்டர் ப. நடராஜன் அவர்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரச்சாரம் செய்தீர்கள். அன்றைக்கு விடலைத் தனமாக அரசியல் களத்தில் நீங்கள் எதிர்த்தவர் மிகப் பெரிய ஆளுமையானவர். இன்றைக்கு அதை யோசிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? தவறு இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மேலெழுகிறதா?
நாஞ்சில் நாடன்: அதாவது 1962_வருட தேர்தல் என்று நினைக்கிறேன். டாக்டர் பா. நடராஜன் என்பவர் எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அவர். உண்மையிலேயே மேதைதான் அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் சிறுவர்கள் தேர்தல் பிரச்சார வண்டிகளின் பின்னால் ஓடுவது, சுவரொட்டிகளை ஒட்டுவது என்று இருந்தபோது, நான் பிரச்சார வண்டியில் மைக் பிடித்திருந்தேன். அந்தத் தேர்தலில் நடராஜன்தான் ஜெயித்தார்.
ஜெயித்த பிற்பாடு அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். ஊரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் வரவேற்பு உரை ஆற்றினேன். ரொம்ப சின்ன பையன்தான் நான். அன்று பேச எனக்கு சிலர் எழுதியும் தந்தார்கள். கொஞ்சம் நானாவும் பேசினேன். நான் பேசியதை பார்த்துவிட்டு ‘பையன் நன்றாகப் பேசுகிறான்! ஆனால் கொஞ்சம் வழி தப்பி நிற்பதை போல தெரிகிறது?’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை இப்போது யோசித்து பார்க்கும் போது ரொம்ப அவமானமாகத்தான் கருதுகிறேன். எவ்வளவு பெரிய மேதை? திருமந்திரத்தை தமிழில் படித்து புரிந்து கொள்வதே எவ்வளவு சிரமமான காரியம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தமிழ் நாட்டிற்கு ‘பிலானிங் திட்டக் கமிஷன் சேர்மேனாக’ வந்தவரை நாம் இப்படி எதிர்த்து செய்திருக்கிறோமே என்று பின்னால் யோசித்து பார்க்கின்றபோது வருத்தமாகத்தான் இருக்கிறது.

 தீராநதி : ஒரு காலத்தில் தி.மு.க. கலாச்சாரம் கொண்டு வந்த மேடை நாகரீகம் என்பதற்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பும், அவசியமும் இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஈ.வெ.கி. சம்பத் என்பவர் ஒரு முக்கியமான பேச்சாளர். அவரை மறுத்து வரும் பேச்சுகளை கூட நாகரிகமாக மறுப்பவர் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லமாட்டார். ‘உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்றுதான் குறிப்பிடுவார். தன் பேசில் கூட ‘பொய்’ என்ற வார்த்தை கலக்க கூடாது என வாழ்ந்தவர். அப்படியான தி.மு.க.வின் மேடை மரபு பிற்காலத்தில் நழுவி கொச்சையாகிவிட்டதே?

 நாஞ்சில் நாடன் : அதாவது 1967 காலகட்டத்தில் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று தமிழை ஓரளவிற்கு சமூக பயன்பாட்டிற்கு முன்னெடுத்து சென்றதில் திராவிட இயக்கத்தினுடைய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அன்றைக்கு சினிமா தியேட்டருக்கு போகின்ற ஒரு கல்லூரி மாணவனின் கையில் கூட ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் கையில் எடுத்துச் செல்வதை ஒரு பெருமையாக கருத செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மேடைகளில் அவர்கள் தான் புத்தகத்தை பரிசளிக்கச் சொன்னார்கள். புத்தகத்தின் பக்கங்களை மேற்கோளிட்டார்கள். நெடுஞ்செழியன் போன்றவர்கள் இலக்கியம் பேசுகின்ற போது ஒன்றரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து கேட்க முடியும். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இல்லாவிட்டாலும் படிப்பாளிகளாக இருந்தார்கள். மேடைக் தமிழை மட்டுமல்ல எழுத்து தமிழையும் அவர்கள் தம்பங்குக்கு முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் என்ன நடந்த தென்றால் அவர்கள் அதை தாண்டி வளரவில்லை. பிறகு இது அலங்காரமாக மாறியது. ‘ஷீஸ்மீக்ஷீளீவீறீறீ’ என்று சொல்லுவோமில்லையா அப்படி மொழியை பயன்படுத்திப் பயன்படுத்தி நொந்து போகச் செய்து விட்டார்கள். அருவருக்க தக்க ஒரு மொழி நடையாக பிற்காலத்தில் அது மாறியது. தமிழ் சினிமாக்களிலேயே திராவிட கலாச்சாரத்தின் மேடை மொழி நடையை கொச்சைப்படுத்துகிற மாதிரியான காட்சிகள் இன்றைக்கு வருகின்றன. அதன் மூலம் அந்த நடையை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் குறைந்த பட்சம் பாரதிதாசனையாவது அறிமுகம் செய்தார்கள். மு.வ.வை அறிமுகப்படுத்தினார்கள். திருக்குறளைச் சொன்னார்கள். புறநானூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். அகநாநூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். குறுந்தொகையிலிருந்து சொன்னார்கள். இப்படி குறைந்த பட்ச தமிழறிவையாவது மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மரபு நின்று போய்விட்டது. இன்றைக்கு எந்தத் தலைவனுக்கும் ‘இரண்டு வரி’ சொல்ல முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியவில்லை.

 தீராநதி : தொடர்ந்து உங்களின் படைப்புகளில் உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுவும் போகிறப் போக்கில் சொல்லாமல் உணவு முறைகளில் புதைந்திருக்கும் செய்முறை, செய்நேர்த்தி, பண்பாட்டுக் கூறுகள், அது சமூகத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கலாச்சார தகவல்களையெல்லாம் பிரக்ஞை பூர்வமாக பதியவைத்திருக்கிறீர்கள். அண்மையில் நீங்கள் எழுதி இருக்கும் ‘யாம் உண்டோம்’ சிறுகதை வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது. சுந்தரராமசாமி வீட்டில் எதேட்சையாக ஒரு சந்திப்பில் ஜெயமோகனை பார்த்த போது ‘‘நீங்க குலசேகரம் பக்கம் தானே? அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடும் வழக்கம் கிடையாதே’’ என்று பேச்சை சாப்பாட்டின் பொருட்டே தொடங்குகிறீர்கள். ‘அன்னம்’ எதன் பொருட்டு உங்களின் படைப்புகளில் ‘வேள்வி’ பெறுகிறது?
நாஞ்சில் நாடன்: இது ஒரு நினைவிலின்று மனநிலையிலிருந்துதான் உருவாகிறதெ நினைக்கிறேன். அல்லது ஆழ்மனநிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களின் சௌகர்யம். இதற்கு காரணம் என்னை என்று யோசிக்கும் போது நான் இளம் பருவத்தில் தாங்கொணா வறுமையை அனுபவத்திருக்கிறேன். இதையெல்லாம் ஃபேஷனுக்காக இன்று சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அறுவடை காலத்தில் மூன்று வேளைக்கும் சோறு இருக்கும். மாதத்தில் ஓரிரு நாட்கள் தோசைக்கு போடுவார்கள். எங்கள் ஊரில் நெல்லைத் தவிர வேறு பயிர் கிடையாது. கம்மங்கூழ் எங்களுக்குத் தெரியாது. சோளம் தெரியாது. கேழ்வரகு தெரியாது. நாங்கள் அரிசியை நம்பி வாழ்கிறவர்கள். அறுவடையான நாலுமாதத்தில் நெல் காலியாகி விடும். கடனுக்கு நெல் வாங்க வேண்டும். இந்த வறுமை என்னை தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரை தாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆகவே சோற்றினுடைய அருமை என்பது எனக்குத் தெரியும். ஒருவரின் வீட்டுவாசலில் போய் நின்று குடிக்க சுடு கஞ்சி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஒரு எளிய மாணவனின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். நல்ல சாப்பாடு என்பதே கல்யாண வீட்டில்தான் கிடைக்கும். 21 கூட்டான் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். அத்தனை வகை வகையான சாப்பாடுகள் பரிமாறப்படும். கிடைக்குமோ கிடைக்காதோ என்பதற்காக முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்து பாதியிலேயே நான் எழுப்பிவிட பட்டிருக்கிறேன். பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறது. ஆக, தொடர்ந்து வறுமை என்பது என்னை தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து உணவு மீது ஒரு அபரிமிதமான காதலை, வெறியை, ஒரு விருப்பத்தை _ எந்தச் சொல்வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்_ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நான் சம்பாதிக்கிறேன். ஓரளவுக்கு சோத்துக்கவலை இன்றிதான் இருக்கிறேன். நினைப்பதை இன்று என்னால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனாலும் உணவை என்னால் வீண் செய்ய முடியாது.
அதேபோல பம்பாய் மாதிரியான வெளி மாநிலத்திற்கு சென்ற பிற்பாடு நம் கலாச்சாரம் சார்ந்த உணவுகளின் நெருக்கடி ஏற்படுகிறது. சாதாரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொத்தவரங்காயை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பம்பாய் சென்றால் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். இங்கு கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட பம்பாய்க்கு சென்றால் சாப்பிட்டே தீரவேண்டும். ஆக, இப்படியான நெருக்கடி எந்த வகையான உணவின் மீதும் ஒரு காதலை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாப்பிடுகின்ற சாப்பாடு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடக் கூடியவன் நான். என்றைக்குமே சாப்பாட்டின் முன்னால் நான் கூச்சப்படமாட்டேன். நான் விரும்பி உண்கின்றவன். கொஞ்சம் கொச்சையாக சொன்னால் நானொரு நல்ல சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் என்ற அந்த நிலையிலேயே நின்று விடாமல் மேற்கொண்டு அதை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து போய் கொண்டிருக்கிறேன். ஒரு பெங்காலி வீட்டில் எப்படி ‘தால்’ தயாரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வங்காளத்தில் தோலுடன் கூடிய உளுந்தை வேக வைத்து அதில் ‘தால்’ செய்து பொரித்த அயிலை மீனை போட்டுக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு ரசனையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை அனுபவிக்க முடியாது. வேண்டாம் என்று நீங்கள் அதை தவிர்த்தால் அந்த அனுபவத்தினை நீங்கள் தவற விடுகிறீர்கள். நான் அந்த அனுபவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதைத்தான் என் எழுத்தில் பதிவு செய்கிறேன். வெறுமனே சாப்பிட்டேன் என்று சொல்லாமல் அந்த அனுபவத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் சொல்லவேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
அப்புறம் பயிர் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காய்கறிகளை பசுமையாக பார்ப்பது எனக்கு பிடிக்கும். காய்கறிகளை வாங்குகிறேனோ இல்லையோ உழவர் சந்தைக்கு போய் காய்கறிகளை தினமும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். மலர்களை பார்ப்பதை போல கத்தரிக்காய் குவியலாக இருப்பதையும், வெண்டைக் காய் குவியலாக இருப்பதையும் பார்ப்பதென்பது எனக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் ரோஜாவையும், முல்லையையும், மல்லிகையையும் பார்த்து தான் கிளர்ச்சி அடைய வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஒரு வாசனை உண்டென்றால் இதற்கும் ஒரு வாசனை இருக்கிறது. பறித்த உடன் வெண்டைக் காயை முகர்ந்து பார்த்தால் அதற்கு ஒரு வாசனை இருக்கும். பறித்தவுடன் பால் வடிகின்ற புடலங்காய்க்கு ஒரு வாசனை இருக்கிறது. கத்தரிக்காய்களிலேயே எத்தனை ரகம் நம்மிடம் இருந்திருக்கிறது தெரியுமா? மண்ணை நேசிக்கின்றவனுக்கு, மண்ணினுடைய மக்களை நேசிக்கின்றவனுக்குத்தான் இப்படியான பார்வைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

 தீராநதி : நீங்கள் குறிப்பிடுவதைப் போல ஒவ்வொரு காய்கறியிலேயும் பல்வேறு வகைகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு ஒரு கை விரலில் அடக்கி விடுகின்ற எண்ணிக்கைகளுக்கு சுருங்கி போய்விட்டன. சிலி நாட்டிலிருந்து பச்சை மிளகாய் வந்த பிற்பாடுதான் ‘அல்சர்’ என்ற புதுவகை நோய் நம் சந்ததிகளுக்கு அறிமுகமாகிறது. பச்சைமிளகாய்க்கு முன்னால் ‘மிளகு’க்கு பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி பல்வேறு வகைகளிலிருந்து சுருங்கி ஒன்றை நோக்கி மட்டுமே விதைப்பு, உற்பத்தி, விற்பனை என்பதை நினைத்தால் உங்கள் மனசு கொதிக்கவில்லையா?

 நாஞ்சில் நாடன் : இதை பெரிய சமூக இழப்பென்று தான் நான் நினைக்கிறேன் என்றாலும் நமது அல்சருக்குக் காரணம் பச்சை மிளகாய் அல்ல. ஒவ்வொரு மண்ணிற்கும் தோதான காய்கறிகள் நம்மூர்களில் விளைகின்றது. ஆம்பூர் அல்லது ஆற்காட்டில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. தஞ்சாவூரில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. நாகர்கோவிலில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. இப்படி ருசியில் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் நிறத்தில் வித்தியாசம் இருக்கிறது. வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது. பின்னால் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் வருகின்றபோது மகசூல் மாத்திரத்தையே மனசில் வைத்துக் கொண்டு வீர்ய விதை, வீர்ய பயிர், வீர்ய சாகுபடி என்று தரப்படுத்திவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 வகையான நெல்கள் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் சொல்கிறார். எனக்கே இருபது முப்பது நெல்களின் பெயர்கள் தெரியும். கட்டிச் சம்பா என்று ஒரு ரகம். சுத்தமான சம்பா அரிசி. அது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்ற மட்டை அரிசி இல்லை. நம்முடைய மண்ணுக்கே உரிய வகையை சேர்ந்தது. நம்முடைய சீதோஷ்ணத்திற்கு, நம்முடைய காற்றிற்கு, மழைக்கு தாக்குப்பிடிக்கின்ற ஒரு பயிர் இது. இவர்கள் வேறு பயிர்களை அறிமுகம் செய்து கட்டிச் சம்பாவை அழித்து விட்டார்கள். வல்லரக்கன் என்ற ஒரு நெல் வகை. அரிசி மாவில் செய்கின்ற பலகாரங்களுக்கு பெண்கள் விரும்பி பயன்படுத்தும் அரிசி வகை. தொன்ணூ று நாட்களில் அறுவடை செய்கின்ற ‘அறுவங் கொறுவா’ என்று ஒரு பயிர். இவை எல்லாம் இன்று எங்கே?
இப்படி மண் சார்ந்த பல விஷயங்களை நாம் இன்றைக்கு இழந்தாயிற்று. ‘அரிக்கிதராதி’ என்ற நெல் இன்றைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘அறுவங்குறுவா’ கிடைக்குமா தெரியவில்லை. ‘கல்மணல்வாரி’ என்று ஒரு நெல் வகை. ‘தட்டாரை வெள்ளை’ என்ற நெல்லை எங்கள் ஊர் வடமதியில் விதைப்பார்கள். கார், பசானம் என்று சொல்வார்கள். ஒன்று பொடியில் விதைப்பது. மற்றது தொழியில் விதைப்பது. ‘வாசறுமிண்டான்’ என்ற நெல்லை ஊரில் நடுவார்கள். அந்த அரிசியை சோறு பொங்கி இலையில் போட்டால் பிச்சு வெள்ளைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று இருக்கும். அதே போல ‘காணம்’ என்ற பயிறு வகை இருந்தது. கொள்ளு என்று இதை சொல்வார்கள். இதை மலையாளத்தில் ‘முதிரை’ என்பார்கள். சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல்லிது. இதில் கருப்பு, வெள்ளை என்ற நிறத்தில் தனித்தனியாகவும் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்த நிறத்திலும் இருக்கும். இப்போது வீரிய விதை உற்பத்தி மூலம் தவிட்டு நிறத்திலானது மட்டுமே கிடைக்கிறது. சுவையும் கெட்டுப் போயிற்று.
அதேபோல் தட்டை பயிறு. இதை நாங்கள் பெரும் பயிறு என்போம். இது சிகப்பு, கருப்பு, வெள்ளை என்று மூன்று நிறங்களில் கிடைத்தது. இன்றைக்கு தவிட்டு நிறம் மட்டும்தான். அப்புறம் மொச்சை, கருத்த மொச்சை தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. கருத்த எள்ளிற்கும் வெள்ளை எள்ளிற்கும் குணங்களில் வேறு பாடு உண்டு. பாகற்காயில் மிதிபாகற்காய் என்று ஒன்று உண்டு. தரையில் படரும். சின்ன குமிழ் மாதிரிதான் இருக்கும். அதை இன்று காண்பதற்கில்லை. இப்படி பல விஷயங்களை நம்முடைய சந்ததிகள் இழந்து கொண்டிருக்கின்றன. நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்? புலம்பத்தான் முடியும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்ற மாதிரி கதை கதையாகச் சொல்வார்.

 தீராநதி : நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் விமிஞிஷி ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு விவசாய படைப்பாளியாக எப்படி சஞ்சலப்படுகிறீர்கள்? எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?

 நாஞ்சில் நாடன் : என்னுடைய படைப்புகள் மூலமாகத்தான் இந்த ஆதங்கத்தையெல்லாம் நான் வெளிப்படுத்துகிறேன். சமீபத்தில் ‘யாம் உண்பேம்’ சிறுகதையில் ஒரு விவசாயின் சோகத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுடன் பீகாரில் இருக்கின்ற ஒரு விவசாயின் நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால் அவனுடைய நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. இன்றைக்கும் குடிநீருக்காக மூன்று நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு சுக்கா ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடைக்கின்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவனால் எப்படி தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முடியும்? நான் இருபது வருடத்திற்கு முன்னால் சந்தித்த கை வண்டி இழுக்கின்ற ஒரு உ.பி.த் தொழிலாளியிடம் வறுமை குறித்து பேசியபோது ‘‘சாப்பிடுவதற்கான ரொட்டியின் மாவு அளவுக் குறைவாக இருந்தால் ‘சப்ஜி’ யில் காரத்தை ஏற்றிவிடுவோம்’’ என்றார். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்து விடுமாம். இப்படித்தான் இருக்கின்றது தொழிலாளிகளின் நிலைமை, விவசாயிகளின் நிலைமை.
பத்து வருடத்திற்கு முன்னால் விற்பனையான சோப்பின் விலை இன்றைக்கு எவ்வளவு கூடி இருக்கிறது? அன்றைக்கு அதே விவசாய பொருளின் விலை இன்றைக்கு எத்தனை மடங்கு கூடி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் சோப்பின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. விவசாய பொருளின் விலை ஒன்னரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பருவத்தில் தக்காளியின் விலை கூடுதலாக இருக்கிறது என்று தக்காளி போட்டால் விலை கிலோ எட்டு அணாவிற்கு இறங்கிவிடுகிறது. அதே போல் வெங்காயளம். முப்பத்திரண்டு ரூபாய் உயர்கிறது என்று பார்த்தால் உடனே இரண்டு ரூபாய்க்கு இறங்கி விடுகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கும் வட மாநிலங்களில் ஆட்சியையே தீர்மானிக்க கூடியதாகக் கூட இருக்கிறது. ஆக, இங்கே விவசாயத்தை புறக்கணிக்கின்ற ஒரு அரசியல் அமைப்பு தான் நம் நாட்டில் இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.

 தீராநதி : யதார்த்த வகை எழுத்து என்பது இன்றும் பலருக்கு உபப்பளிக்கக்கூடிய எழுத்தாகவே இருக்கிறது. ரியலிஸம் என்ற சொல்லே ஜெர்மானிய மொழிச் சொல்லான ‘ஸிமீணீறீ றிஷீறீவீtவீளீ’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஸிமீணீறீ’ என்பது யதார்த்தம். ‘றிஷீறீவீtவீளீ’ என்பது ஆங்கில சொல் குறிக்கும் அரசியல் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. இச் சொல்லை முதன் முதலாக ‘பிஸ்மார்க்’ என்பவர்தான் உச்சரித்தார். ஐரோப்பிய அதிகாரம் சமநிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்தச் சொல்லை உபயோகித்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான ‘பால்ஸாக்’ ரியலிஸத்தின் தந்தையென்று அறியப்பட்டவர். அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப் பெரிய மேட்டுக் குடிகளிலிருந்து திருடன், தாசி, என்று விளிம்பு நிலை மனிதர்கள் வரைக்கும் மிகத் துல்லியமாக சித்தரித்தவர். அதே போல க்யுஸ்தாவ் ஃளோபெரின் ‘மாதாம் வொவாரி’ (னீணீபீணீனீமீ ஙிஷீuணீக்ஷீஹ்) ஒரு மகத்தான ரியலிஸ நாவலாகும். தமிழில் ஜெயகாந்தன் இதையட்டி எழுதிய எழுத்தாளராக நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதே போல மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையைச் சுட்டலாம். இப்படி உயரிய அரசியல் தத்துவார்த்த பார்வையுடன் விழிப்புற்ற இந்த இஸத்தையட்டி தமிழில் எழுதும் பல சமகால எழுத்தாளர்களுக்கு (விதிவிலக்கும் உண்டு) கொஞ்சம் கூட அரசியல் பார்வையே அற்று வெறும் உரையாடலை மட்டுமே எழுதுவது யதார்த்தமான எழுத்தாக இங்க போதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஏன் கல்வி கற்கும் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது? ஒரு சமூகம் ஏன் தொடர்ந்து வறுமையின் பிடியிலேயே சிக்சிச் சீரழிகிறது? ஒருவன் எப்படி பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாகவே இருக்கிறான்? பாரதி கூட கஞ்சி ‘குடிப்பதற்கு இதன் காரணம் இதுவென்ற அறியுமிலார்’ என்கிறார். அரசியல் புரிதலோடு கூடிய பார்வையும் எழுத்தில் சேர்ந்து பதியப்பட பட வேண்டாமா?

 நாஞ்சில் நாடன் : நீங்கள் குறிப்பிடுவதை போல எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. ஒரு முருங்கை மரத்தை பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அல்லது இருந்தே எழுதுவதற்கு தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல்வாதிகளை, நிர்வாகத்தை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. எழுத்தாளனுக்கு தினமும் நல்ல செய்தித்தாள் படிக்கிற பழக்கமாவது இருக்கிறதா என்ற ஐயம் வருகிறது எனக்கு. இதை பொதுமைப்படுத்திச் சொல்லவில்லை. ஈழத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பிரச்னை இங்கில்லை. ஒரு ஜீவ மரண போராட்டத்தின் நெருக்கடிக்குள் தமிழ் நாட்டு எழுத்தாளன் இல்லை. இவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். சூழ்நிலை மாசுப்பட்டிருக்கிறது என்று. சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று. நதிகள் மாசு பட்டிருக்கிறது என்று. தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. தகுதியானவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று. இந்த அரசியலை நேருக்கு நேர் சந்திப்பதில் சமகால எழுத்தாளனுக்கு ஒரு பயம் இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளனுக்கு இருந்த பயத்தை விட சமகால எழுத்தாளனுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருக்கிறது.
இலக்கியம் என்பது ஒரு பார்வையில் பொழுது போக்கு என்றிருந்தாலும் கூட அதை தாண்டிய ஒரு பயன் நிலை அதற்கு இருக்கிறது. ஆகவே அடிப்படையான சில கேள்விகளை ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அகவய பயணியான எழுத்தாளனுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லை. சட்டம் அவனுக்கு ஒரு அச்சமல்ல. ஆனால் யதார்த்தை எழுத வருகின்றவனுக்கு பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் யதார்த்தம் மூர்க்கமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நெத்தியடியாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி நெத்தியடியாக சொல்வதெல்லாம் யதார்த்தமா என்ற உப கேள்விகளும் பின்னால் வரும். யதார்த்தமும் நமக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை தமிழ் எழுத்தாளன் பரிபூர்ணமாக பயன்படுத்திக் கொள்கிறானா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் எழுகிறது. நொய்டாவில் 52 உடல்களை தோண்டி எடுத்தார்கள். அவர்களின் கை எலும்பு கிடைக்கிறது. கால் எலும்பு கிடைக்கிறது. tஷீக்ஷீsஷீ கிடைக்கவில்லை என்றால் அதனுடைய காரணங்கள் என்ன? பத்திரிகை செய்திகள் கூறுகின்றன இதில் சிறுநீரகங்கள் கலவாடப்பட்டிருக்கின்றன என்று. அப்போது 52 நபர்களின் சிறுநீரகங்களும் 104 நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கின்றன. அப்போது அதை வாங்கியவர்கள் யார்? இதை நடத்தி வைக்கின்ற மருத்துவமனைகள் எவை? அதன் நிர்வாகிகள் யார்? அறுவை செய்த மருத்துவர்கள் யார்? உதவி செய்த செவிலியர்கள் யார்? இவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து கொடுத்தவர்கள் யார்? இப்படி விரிந்துக் கொண்டே போக வேண்டும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை. இது குறித்தெல்லாம் விசாரணை இருக்கிறது. வழக்கு இருக்கிறது. தீர்ப்புகள் வரும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இது குறித்து எழுத்தாளனின் எதிர்ப்பு என்ன? உங்களின் வாசகனுக்கு நீங்கள் சொல்லப்போவதென்ன? இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு இல்லையா? ஆக, இதன் மூலம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டியது இருக்கிறது. சமீபகால என்னுடைய கதாப்பாத்திர படைப்பான ‘கும்பமுனி’ மூலம் சமூகத்தில் இருக்கின்ற சிக்கல்கள் சம்மந்தமான என்னுடைய எதிர்வினைகளை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் நான் வெளிப்படையாகவேதான் பேசுகிறேன். சாடுகிறேன்.

 தீராநதி : ‘குடி’ என்ற பழக்கம் நம் சமகால சூழலில் ஒரு அவச் சொல்லாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்து தொடர்ந்து மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். ‘உண்ணற்க கள்ளை’ கட்டுரையே இறுதி கட்டுரை என்று நீங்கள் குறிப்பிட்டாலும் இன்னும் நீளுமென்று நான் நினைக்கிறேன். ‘கள்’ உண்பது என்பது வெப்பம் தகிக்கும் பூமத்திய ரேகை அருகாமையில் வாழ்கின்ற நமது குடிகளுக்கு பண்பாடு சம்மந்தப்பட்டது என்பதை தாண்டி உடல் நலம் சம்மந்தப்பட்டதாகிறது. கள் ஒரு அருமருந்து ‘பனை மரம்’ தான் நமது தமிழகத்தின் தேசியச் சின்னம். ஆனால் இன்று ‘கள்’ அந்நியமாக்கப்பட்டு கூடவே குற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மதுபான வகைகள் அரசு அங்கிகரிக்கும் ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியலை வெளியிடும்போது ஜெய மோகன் உங்களுக்கு முதலிடம் வழங்கி இருந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானமான குடிகாரனாக நீங்கள் இருப்பது குறித்தும் எழுதியும் இருக்கிறீர்கள். ஆண் பெண் இருபாலரையும் சேர்ந்து ஆறரை கோடிக்கு சற்று அதிகமுள்ள தமிழக மக்கள் தொகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் (பத்திரிகை தகவலின்படி) 60 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிய வருகிறது. அரசு இதன் மூலம் தனது வருவாயை அதிக அளவில் குவித்திருக்கிறது. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உங்களைப் போல ‘தரமான’ குடிகாரர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையை ஒட்டியது. பெரும்பாலான குடித்தனங்களில் ‘குடி’ கலாச்சாரம் என்பது குடும்பத்தைச் சிதைப்பதாக இருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள். மெத்தப் படித்த குடிகாரர்களின் அளவீடுகளை வைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கும் சேர்த்து நியாயம் உரைப்பது சரியா?

 நாஞ்சில் நாடன் : இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்று குடிப்பவன். இன்னொன்று குடிகாரன். இதில் நான் முதல் வகையைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் குடித்தவன். குடிகாரன் என்பனை ‘அடிக்ட்’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவன் என்பவனை குடிக்கின்ற பழக்கமுள்ளவன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குடிக்கின்றவன் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு? குடிகாரன் என்பவன் எத்தனை சதவீதம் என்று நாம் பிரித்து பார்க்கிறோம். ரோட்டில் விழுந்து கிடப்பவன், பொண்டாட்டியை அடிப்பவன், வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவன் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும்தான்.
இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடிப்பவனை எல்லாம் குடிகாரன் என்று முடிவுக்கு வந்து தீர்பெழுதலாகாது. இந்தச் சிக்கல் எல்லாவிதமான நுகர் கலாச்சாரத்திலும் இருக்கின்ற ஒன்று. குடிப்பழக்கமே இல்லாத ஒருவன் தினமும் எழுபது ரூபாய் எண்பது ரூபாய் செலவு செய்து ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகவும் செய்கிறான். இவனும் ஒரு வகையில் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவன்தான். திரும்பத் திரும்ப என்னுடைய மூன்று கட்டுரைகளிலும் நான் சொல்ல வருகின்ற விஷயம்: இதை அறம் சார்ந்த விஷயமாக பார்க்கவில்லை என்பதும் ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்கிறேன் என்பதும். இங்கு நீங்கள் குடிப்பதை தோந்தெடுக்கவில்லை என்றால் ரொம்ப நல்லது. குடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாலும் ரொம்ப நல்லதே.
‘குடி’ என்ற ஒன்றை பெரிய அளவில் நாம் நம் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தி விட்டோம். இது கடந்த 50 ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விஷயம். இனி திரும்பி போவது முடியாத காரியம். நீங்கள் விரும்பினாலும் திருப்பிப் போக முடியாது. சினிமா பார்த்து கெட்டு போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்? எங்கள் ஊரில் அல்வா வாங்கி தின்னே கெட்டு போனவர்கள் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள்? ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவனுடைய குடிப்பழக்கத்தை வைத்து அவன் நல்லவனா? கெட்டவனா என்ற நற்பத்திரத்தை வழங்காதீர்கள் என்று தான். நம்முடைய சமண நூல்களும் அதற்கு பிற்பாடு வந்த நீதி நூல்களும் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. ‘நஞ்சுண்பான் கள் உண்பானே’ என்கிறது குறள். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்’ என்றும் வள்ளுவர் பேசுகிறார். அதை நான் மறுக்கவில்லை. இதையெல்லாம் குடியை அதீதமாக கையாண்டு கெட்டுப் போய்விடாதே என்பதற்கான எச்சரிக்கைச் சொல்லாகத் தான் நாம் கொள்ள வேண்டும்.

 தீராநதி : ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற கட்டுரை நூலை எழுதி இருக்கிறீர்கள். அது ஒரு இனவரைவியல் ஆவண நூல். அவலா, தோசையா என்ற சொற்பிரயோகத்தை வைத்தே அவர்கள் மருக்கள் தாயவழியை சார்ந்தவரா மக்கள் வழி தாயத்தை சார்ந்தவரா என்பதையெல்லாம் குறிப்பில் உணர்த்தி அம்மக்கள் வாழும் பண்பாட்டினை தெளிவுற பதிவு செய்வதோடு திருமணத்திற்கு முன் மணமகனுக்கு ‘சர்வாங்க சவரம்’ செய்யப்படுவது, சோரம் போன பெண்களை வீட்டு மூலையிலேயே கொன்று புதைப்பது என்ற அதிர்ச்சியுறும் தகவல்களைக் கூட பட்டவர்த்தனமாக பேசுகிறீர்கள். இப்படி நாஞ்சில் நாட்டிற்கென்று தனி கலாச்சாரம் இருப்பதை எழுத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற இனவரைவியல் நூல் எழுதி இருக்கிறார். என்னுடைய கேள்வி: ஒரு சமூகத்தை பற்றி எழுதப்படும் இனவரைவியல் நூலென்பது அச்சமூகத்தின் உள் பார்வையாளனாக இருப்பவரால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும், அப்படி உள் பார்வையாளனாக இருந்து பதியப்படும் தகவல்களில் உயர்வு நவிற்சி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆகவே வெளி பார்வையாளன் எழுதுவதன் மூலமே இவைரைவியலின் மெய்மையை அடைய முடியும் என்ற விவாதமும் இன்றைக்கு உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் வெளிபார்வையாளன் என்பவன் பல பண்பாட்டுத் தகவல்களை பகுத்தறிவு என்ற கண்கொண்டு மட்டுமே அணுகி கலாச்சார அணுகுமுறைகளை கேலிக்குரியதாக மாற்றி தவறாக புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உள் பார்வையாளனாக நீங்கள் எழுதி அப்புத்தகத்தில் ‘எங்களுக்கே இதெல்லாம் சாத்தியம்’ என்ற உயர்வு நவிற்சி குரல் தென்படவே செய்கிறது. இந்த உள் பார்வை? வெளிப்பார்வை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 நாஞ்சில் நாடன் : இந்தத் தன்மைகள் நான் பிறந்து வளர்ந்த இனத்திற்கு மட்டும்தான் இருக்கிறதென்று ஆணித்தரமாக நான் சொல்ல வரவில்லை. இந்த இனத்திற்கு இந்தத் தன்மை இருக்கிறது. இந்த சிக்கல் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இதன் மூலம் பிற இனங்களுக்கும் இந்த மாதிரி சிக்கல்கள், தன்மைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். எதையும் மிகைப்படுத்தி நான் பேசவில்லை. ஒருவேளை புதியதாக நீங்கள் கேள்வி படுவதால் இந்தச் சந்தேகங்கள் வரலாம். மரபுகளில் இருக்கின்ற விஷயங்கள் எப்படி மாறிப்போய் இருக்கிறது. எப்படி திரிந்து போய் இருக்கிறது என்று சொல்வதுதான் என்னுடைய வேலை. மிகைப்படுத்துவதல்ல; இந்தச் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்ததினால் உள் பார்வையாளன். ஆனால் நானொரு எழுத்தாளனாக இருப்பதினால் நானொரு வெளிப்பார்வையாளன். இரண்டும் ஒரே ஆள் தான். ஆகையால் அதனுடைய பலமும் எனக்கிருக்கும். பலவீனங்களும் எனக்கிருக்கும். என்னுடைய சமூகத்தில் எனக்கொரு நாற்காலி வேண்டும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தை செய்யவில்லை.

 தீராநதி : ‘ஊதுபத்தி’ என்ற உங்களின் சிறுகதை பெருத்த எதிர்வினையை சந்தித்தது. ‘‘தனது வெள்ளாளச் சாதி வெறியை மீண்டும் நிருபிக்கிறார்’’ என்று குற்றஞ்சுமத்தப்பட்டு அதை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று துணை வேந்தருக்கும் அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தச் சாதி திமிர் குற்றச்சாட்டை இடித்துரைத்து ‘ஷிலீஷீuறீபீ ஜிலீமீ கிutஷீக்ஷீ ஙிமீ ரிவீறீறீமீபீ’ என்ற கட்டுரையைக் கூட எழுதி இருக்கிறீர்கள். அதில் புதுமைப்பித்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன் எல்லோருக்கும் இதுதான் நடந்தது என்று வருந்துகிறீர்கள். ஒரு படைப்பு சாதிய பின்புலத்தோடு வாசிக்கப்படுவதென்பது ஒரு சரியான முறையா? ஆரோக்கியமான போக்கா?

 நாஞ்சில் நாடன் : இதை ஆரோக்கியமான போக்கில்லை என்பதுதான் என்னுடைய கருத்தும். உண்மையாக நேர்மையாக எழுத வருகின்ற எவனும் முதலில் தன்னுடைய சாதியை கடந்தாக வேண்டும். சாதியை கடந்ததாக வேண்டுமென்று சொல்கிற போது அவன் தனிமனிதனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவனொரு குடும்ப மனிதனாக இருக்கின்ற போது அவனால் எல்லா சந்தர்ப்பத்திலும் சாதியை கடந்தவனாக தன்னை பீற்றிக் கொள்ள முடியாது. அதில் நெருக்கடிகள் உண்டு. என்னை பொறுத்த அளவில் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவோ பிற ஜாதியை இழிவுபடுத்துகிறானா? தன் ஜாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கி பேசுகிறானா? தன் ஜாதியே உயர்வானதென்று நினைக்கிறானா? அதன் மூலமாக வன்முறையில் ஈடுபடுகிறானா? அதன் பொருட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானா என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் தான் அது நேர்மையானக் கணிப்பாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நான் வெள்ளாள சாதியில் பிறந்திருக்கிறேன். வேளாண்மை என்பது விவசாய சம்பந்தப்பட்ட சாதி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்களில் வழங்கப்படும். ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 66 வகையான வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதில் ஒரு வகை வெள்ளாளர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த வகுப்பு சிறுபான்மை வகுப்பை சார்ந்த சாதி. எங்கள் சாதியில் ஒரு எம்.எல்.ஏ. வருவது கூட சிரமம். ஒரு காலத்தில் நிலவுடைமையாளர்களாக இவர்களில் சிலர் இருந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளாளர்களும் நிலவுடைமையாளர்கள்அல்ல. 10 சதவீதமானவர்கள் நிலவுடமையாளர்கள் என்றால் 90 சதவீதம் விவசாய கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ‘சேட்’ களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பது போல. என் மீது ‘இவன் வெள்ளாளர் சாதிக்கு எதிராக எழுதுபவன்’ என்ற குற்றச்சாட்டும் என் சாதியை சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் இவன் வெள்ளாளர் சாதிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்கிறார்கள். ஆனால் ஏதோ இதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத் தோடு என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை.

 தீராநதி : ‘நேர்காணல்’ என்ற உங்கள் சிறுகதையில் எழுத்தாளர் ‘கும்பமுனி’க்கு சாகித்ய அக்தெமி விருது கிடைக்கிறது. உடன் அவ்விருதை கும்பமுனிய மறுத்து விடுகிறார். அது பரபரப்பில் செய்தியாகி விடுகிறது. ‘எள்ளல்’ தொனிக்கு விதத்தில் கதை நீளுகிறது. ‘நேர்காணல்’ கதை வெளியானது 1998_ம் வருடம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கு விருது வழங்க முன் வந்தபோது நிஜத்தில் நீங்கள் மறுத்தீர்கள். ஆக, உங்களின் உள்மன சித்திரம்தான் கும்பமுனி மூலம் கதையாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘இயல் விருதின் மரணம்’ என்று ஜெயமோகன் ‘தமிழினி’யில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இலக்கிய வெளிக்குள் விருதுகளின் இருப்பென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 நாஞ்சில் நாடன் : தமிழ்நாட்டில் பதினொன்றோ பனிரெண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக் கழக ‘செனட்’டிற்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றி சிந்திக்கின்ற சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா? இதே சூழல்தான் பரிசு தருகின்ற நிறுவனங்களிலும் இருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த மொழியில் எந்த விருதும் கொடுக்கப்படவில்லை. ஆ. மாதவனுக்கு கொடுக்கப்படவில்லை. சுந்தரராமசாமிக்கு கொடுக்கப்படவில்லை. நகுலனுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு மொழியின் உச்ச நிலையில் செயல்படுகின்றவர்களுக்கு வழங்கப்படாமல் அதே மொழியில் தரம் குறைந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விருதுகள் இன்று கொடுக்கப்படுவன அல்ல. வாங்கப்படுவன. அதற்கு சாதிப்பலம், பணபலம், அதிகாரபலம் அதிகமாக வேண்டும்.

 தீராநதி : மிதவையில் ‘சண்முகம். சதுரங்க குதிரையில் ‘நாராயணன்’. எட்டுத்திக்கும் மதயானையில் ‘பூலிங்கம்’. தலைகீழ் விகிதங்களில் ‘சிவதாணு’. மாமிசப்படைபில் ‘கந்தையா’. என்பிலதனை வெயில் காயும் ‘சுடலையாண்டி’. அப்புறம் ‘கும்பமுனி’. இப்படி ஆண் மையப்படுத்தப்பட்ட படைப்பாகவே உங்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும் இருக்கிறதே?

 நாஞ்சில் நாடன் : நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. ஜெயமோகன் தனது விமர்சனத்தில் இதை முக்கியப்படுத்திச் சொல்கிறார். யோசித்து பார்க்கும் போது அது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படித்தான் அது அமைந்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தேன் என்று எனக்கு சொல்லமாட்டேன் ஒருவேளை என் குண அமைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

 தீராநதி : உங்களுடைய உரைநடை இலக்கியங்களை படித்து விட்டு கவிதையை படித்தால் அதில் கவிதைக்கான அம்சம் குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அது சரியா?

 நாஞ்சில் நாடன் : சரிதான் என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். என்னுடைய முதல் காதல் கவிதையின் மீதுதான். ஆனால் எந்தக் காலத்திலும் என்னை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை. நான் கவிதை எழுத முயற்சித்தாலும் அது கிட்டதட்ட ஒரு செய்யுள் வடிவத்தில்தான் வெளி வருகிறது. ஆகவேதான் தொடர்ந்து கவிதை முயற்சியில் நான் ஈடுபடவில்லை.

 தீராநதி : எழுத்தைப் போலவே இசையின் மீதும் காதல் கொண்டவர் நீங்கள். நமது இலக்கிய மரபென்பது இயல் இசை நாடகம் என்று மூன்று வகைபடுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிலிருந்து ஒன்றை தனித்து நோக்குவென்பது கடினம். சிலப்பதிகாரம் என்ற காப்பியமே ‘இசைக் குறிப்புகளால் உண்டாக்கப்பட பேரிலக்கிய இசை குறிப்பு’ என்று வீ.க.பா. சுந்தரம் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உள்ள தொடர்பு தி.ஜானகிராமன் காலம் வரைக்கும் வந்திருக்கிறது. நவீன இலக்கிய காலத்திற்கு பிறகு படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உறவு அறுந்து விட்டதைப் போல் தெரிகிறதே?

 நாஞ்சில் நாடன் : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பெரும்பாலானய நவீன இலக்கிய வாதிகள் இசைக்குத் தொடர்பற்றுப் போய் விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. இதில் திராவிட அரசியலும் குறுக்கிட்டிருக்கிறது. தமிழிசை என்பது கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அது தமிழின் இசைதான். ஆனால் ஒரு காலகட்ட அரசியல் நமக்கு இதை பார்ப்பனர்களின் இசை என்று சொல்லித் தந்திருக்கிறது. இதனால் வெகு ஜனத்தை இந்த இசையிலிருந்து விலக்கி நிறுத்தி விட்டோம். தாளம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு விஷயம். சுருதி என்பதும் அப்படிதான். இவையெல்லாம் மொழி மீறிய, பிரதேசங்களை மீறிய, ஜாதியை மீறிய ஒரு தன்மை. பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைக்கு நீங்கள் என்ன மொழி சொல்ல முடியும். திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லா பாடல்களும் பண் அடிப்படையில்தான் இருக்கிறது. எந்தப் பண் எந்தக் கர்நாடக இசையாக மாறியது என்பதெல்லாம் இசை அறிஞர் ஆய்வாளர் மம்மது போன்றவர்கள் சொல்கிறார்கள். பெரிய அறிஞர்கள் விரிவாக பேசுகிறார்கள். நாம் ஒரு காலகட்டத்தில் அரசியல் காரணத்திற்காக மரபிசையை புறக்கணித்தோம். ஆனால் சினிமா இசையை புறக்கணிக்கவில்லை. மரபிசையை புறக்கணித்ததால் சினிமா இசை பெரிய அளவுக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆக, நவீன இலக்கியவாதிகள் பலர் இந்த அரசியல், குடும்பச் சூழல் காரணமாக மரபிசைக்கு வந்து சேரவில்லை.
 

நாஞ்சில் நாடன்எஸ்.ராமகிருஷ்ணன்
 எலும்பில்லாத நாக்கு
 
மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.)
மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் இரண்டு மணிக்குக்கூட ஆவி பறக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் பொடியுமாக உணவு பரிமளித்துக்கொண்டு இருக்கும். சாப்பிட்டது போதும் என எழும்போது கூட, ‘என்னப்பூ சாப்பிடுறீக... நல்லாச் சாப்பிடுங்கÕ என்று மனதாரக் கேட்டுப் பரிமாறும் அக்காக் கடைகள் தெருவுக்கு இரண்டிருக்கின்றன.
ஓர் இரவு, ரயில் நிலையத் தின் முன்பாக ஏதாவொரு அரசியல் கூட்டம் நடக்க இருக்கிறதென்று, அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லிக்கொண்டு இருந்தார் கள். அக்காக் கடைகளில் ஒன்றில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்த நான், என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இட்லிக்கார அக்கா அதெல் லாம் காலி செய்ய முடியாது என்று மறுத்து விவாதம் செய்துகொண்டு இருந்தாள். உள்ளூர் அரசியல் தலைவர்களில் ஒருவர், ‘எதுக்குடா பேசிக்கிட்டு இருக்கிறே! இட்லி, தோசைக்கு என்ன உண்டோ, அதைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லுவியா?’ என்று திட்டினார். உடனே கரை வேட்டி ஒருவர், ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை அவளிடம் நீட்டிய படி, ‘கடையை எடுத்துக் கட்டுக்கா!’ என்றார்.

அவளுக்கு வந்த ரௌத்திரத்தில் கத்தினாள்.
‘பன்னிரண்டு மணி வரைக்கும் அக்கா கடை இருக் கும்னு நினைச்சு சாப்பிட வர்றாங்க பாரு... அவிங்களுக்கு தான் இங்ஙன கடை போட்டிருக்கேன். உன்னை மாதிரி மொள்ளமாறி பயக பேச்சைக் கேட்டுக் கடையை மூடுனா, பசியோட வந்த பிள்ளைக திரும்பிப் போற பாவமில்லே வந்து சேந்துரும். நமக்கு வேண்டாம்டா அந்தப் பணம். கிடைக்கிறது எட்டணா காசா இருந்தாலும், பத்து பேரு பசியாத்தின திருப்தியிருக்கு பாரு, அதுக்குதான் யாவாரம் பண்றேன். உன் காசைப் பொறுக்கி எடுத்துட்டு போய்ச் சேரு. இல்லே... இட்லி அடுப்பிலே வெச்சு உன்னையும் வேக வெச்சிருவேன், பாத்துக்க..!’
எத்தனை சத்தியமான வார்த்தைகள். இட்லி விற்று வாழ்கிறோம் என்பதை விடவும், பத்து பேரின் பசியாற்ற முடிகிறதே என்ற அவளது சந்தோஷம் தான் அவளது உணவுக்கு ருசியைத் தருகிறது என்று அப்போதுதான் புரிந்தது.
உணவுக்கு ருசி சேர்ப்பது உப்பிலோ புளியிலோ இல்லை. சமைப்பவரின் மனதில்தான் இருக்கிறது. சந்தோஷமோ, கவலையோ எதுவாக இருந்தாலும் அது சமையலில் தெரிந்து விடுகிறது. சாப்பாட்டில் உப்பு குறைந்தால் பிரச்னை சாப்பாட்டில் இல்லை. சமையல் செய்யும் மனைவியை, தாயை சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் அப்படி வெளிப்படுகிறது. பேச்சலர் சமையல்களுக்கென்று ஒரு தனி ருசி இருக்கிறது. அது ஒரு முழுமையடையாத உணவு. குழம்பு சிறப்பாக வந்திருந்தால் சாதம் குழைந்திருக்கும். இரண்டும் சரியாக வந்திருந்தால் போதுமான அளவு இல்லாமல் போயிருக்கும். பசியைக் கடந்து செல்வது தான் அதன் முக்கிய நோக்கம்.

எப்போதாவது அபூர்வமான ஞாயிற்றுக்கிழமை களில், நண்பர்கள் பலரும் ஒன்று கூடி வெங்காயம் நறுக்கியபடியோ, வெள்ளை பூண்டு உரித்தபடியோ இலக்கியம், சினிமா, உலக விவகாரம் பேசிக்கொண்டு சமைக்கத் துவங்கி, வியர்த்து வழிய, சூடு பறக்க, தினசரி பேப்பர்களைத் தரையில் விரித்து, சமைத்த உணவை நடுவில் வைக்கும்போது வீடெங்கும் பரவும் மணம் இருக்கிறதே, அது பிரம்மசாரிகளின் அறைகளுக்கு மட்டுமே உரித்தான நறுமணம்.
எத்தனையோ முறை எவரெவர் வீடுகளிலோ திடீர் விருந்தாளியாகச் சென்ற இரவுகளில், உடனடி உப்புமாவைச் சாப்பிட்டிருக்கிறேன். சிலரது வீட்டில் தட்டில் உப்புமா பரிமாறப்பட்ட மறு நிமிடமே, அது எத்தனை தூரம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்று அதன் ருசியிலேயே தெரிந்துவிடும். சிலரது வீடுகளில், இப்படி உப்புமா சாப்பிடுவதற்காகவே நள்ளிரவில் வந்து நிற்கக் கூடாதா என்று தோன்ற வைக்கும். இரண்டுக்கும் காரணம் உணவில்லை. செய்பவரின் மனதும் விருப்பமும்தான்.
குற்றால சீசன் நாளில், ஒரு முறை தென்காசியில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் சாப்பிடப் போயிருந்தபோது, அந்த ஓட்டலின் உரிமையாளர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு காசு வாங்க மறுப்பதைக் கண்டேன். Ôசின்ன பிள்ளை என்ன சாப்பிட்டுறப் போகுது. அரை தோசை சாப்பிடுமா... நல்லா சாப்பிடட்டும்! அதுக்குப் போயி பில் போடுறதுக்கு மனசில்லை’ என அதற்கு அவர் சொன்ன காரணம்தான், அந்தக் கடையைத் தேடி யாவரும் போவதற்கான காரணமாக இருந்தது.
பசியை நேர்கொண்டு பழகுவதும், அதன் முணுமுணுப்பை சட்டை செய்யாமல் புகையும் வயிற்றோடு விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பதும் இருபது வயதில் மட்டுமே சாத்திய மானது போலும்! அவமானங்களும் வடுக்களும் அறிமுகமாகத் துவங்கும் வயது அது.
கல்லூரி நாட்களில் எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், தன் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. அந்த வீட்டில் சாப்பிடுவதற்கே கூச்சமாகத்தான் இருக் கிறது என்பான். காரணம் கேட்டால், ‘பாதிச் சாப்பாட்டில் மறுசோறு வேண்டும் என்று கேட்டால், காது கேட்கா தது போலவே நின்று கொண்டு இருப்பார்கள். ஒவ்வொன்றையும் நாலைந்து முறை கேட்க வேண்டும். நாக்கை வெட்டி எறிந்து விடலாமா என்று அவமானமாக இருக்கும்.
அதை விடவும் கொடுமை, பசித்த நேரங்களில் நாமாகத் தட்டில் எடுத்துப் போட்டுச் சாப்பிட முடியாது. அவர்களாகச் சாப்பிடச் சொல்லும் வரை காத்துக்கொண்டே இருக்க வேண்டும். பல நாட்கள் இரவு நேரங்களில் தட்டில் சோற்றைப் போட்டு ஓரமாக வைத்துவிட்டு உறங்கிவிடுவார்கள். தனியே அந்தச் சோற்றைச் சாப்பிடும்போது இழவு வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும். இதற்காகவே நான் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்’ என்பான்.
எல்லோரது உடலிலும் பசியில் பட்ட அவமானங்கள் ஆறாத வடுக்களாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன போலும்! யாரோ சப்பிப் போட்ட மாங்கொட்டையை மண்ணிலிருந்து ஆசையாக எடுத்து மண்ணை ஊதிவிட்டு சுவைக்கும் குழந்தையின் கண்களில் ஒளிந்திருப்பது பசியைத் தவிர, வேறென்ன?
பசியின் கால்தடம் பதியாத இடமே உலகில் இல்லை. பசியின் முன்பாக தலை குனியாத மனிதனும் எவனும் இல்லை. இதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது ‘நாஞ்சில் நாட’னின் ஒரு கதை.
நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.
திருவிழா நாள் ஒன்றில் கச்சேரி கேட்பதற்காக மாணிக்கம் என்ற சிறுவனின் அப்பா புறப்படுகிறார். மாணிக்கம் தானும் வருவதாக அவரோடு சேர்ந்துகொள்கிறான். சுசீந்திரம் கோயில் பிரசித்தி பெற்றது என்பதால் அங்கே கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, ராஜரத்தினம் பிள்ளை எனப் பலரும் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். இதனால் அருகாமை கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் சங்கீத ரசனை உருவாகியிருந்தது.
மாணிக்கத்தின் அப்பா ஒன்றும் பெரிய இசை ரசிகர் இல்லை. ஆனாலும், கச்சேரி கேட்பதற்காக திருவிழாவுக்குக் கிளம்பி வந்திருந்தார். கச்சேரி கேட்க, ஊரிலிருந்து நடந்தே வந்திருந்தார்கள். கச்சேரி முடிய நள்ளிரவாகிவிட்டது.
அப்பாவும் பிள்ளையும் எதையாவது சாப்பிடுவதற்காக, ஒரு காபிக் கடைக்குள் நுழைந்து ஆளுக்கு நாலு தோசை, ரசவடை, டீ எனச் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்கள். அன்று கடையில் நல்ல கூட்டம். யாருக்கு எவ்வளவு பில் என்று கடைப் பையன் கத்திச் சொல்லிக் கொண்டு இருக்கிறான். முதலாளி பில்லை வாங்கிப் போட முடியாதபடி கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது.
மாணிக்கத்தின் அப்பா கல்லாவை நெருங்கி வந்து இரண்டு டீ மட்டும் குடித்ததாக காசை எண்ணி வைத்துவிட்டு, எதுவும் நடக்காததுபோலப் பையனை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ‘அப்பா ஏன் இப்படி ஏமாற்றினார்’ என்று மாணிக்கத்துக்குப் புரியவேயில்லை. ஒருவேளை, அப்பா இதற்காகத்தான் வருடம் தோறும் திருவிழாவுக்குத் தவறாமல் வந்துவிடுகிறாரோ என்றுகூடத் தோன்றியது. ஆனால், இனி இவரோடு திருவிழாவுக்கு வரக்கூடாது என்று மாணிக்கம் முடிவு செய்வதோடு கதை முடிகிறது.
பசியின் பெரும் போராட்டம் தான் வாழ்வை ஏதேதோ திசைகளில் கொண்டு செலுத்திக்கொண்டு இருக்கிறது நாவின் சுவை வேண்டுமானால் ஆறாக இருக்கலாம். ஆனால், வாழ்வின் சுவை எத்தனை விதமானது என்று அறுதியிட்டுக் கூற முடியுமா என்ன?

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் 1947&ல் பிறந்தவர். இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல வருடங்கள் மும்பையில் வசித்தவர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் படமாக்கியுள்ளார். மிதவை, தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், பேய்க் கொட்டு, சதுரங்கக் குதிரைகள் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். நாஞ்சில் நாடன், தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.
 

பிரபாகரன் - கேணி-நாஞ்சில் நாடன் சந்திப்பு
 
கேணி நடத்தும் பத்தாவது சந்திப்பு இது.  இதில் கலந்துகொண்ட ஆளுமைகளை  ஒப்பீட்டளவில்  நோக்கும்போது, கேணி தனது வாசகர்களுக்கு அளிக்க விரும்பும் வீச்சை புரிந்துகொள்ள முடியும்.  இலக்கிய வட்டாரத்தில் சுந்தர ராமசாமி அணி நகுலன் அணி என்ற இரண்டு அணிகளாக பல இலக்கியவாதிகள் சிலரால் பிரிக்கப்படுவதை கவனித்திருக்கிறேன்; ஒருக்கால் அது உண்மையெனின், சு.ரா. அணி மீதே எனக்கு ஒரு மயக்கம் உள்ளது.  நாஞ்சில் நாடன் கதையுலகம் மற்றும் நாவல் உலகம் பற்றிய சு.ராவின் கட்டுரையை சமீபத்தில் அவரது ஆளுமைகள் மதிப்பீடுகள் என்ற நூலில் படிக்க நேர்ந்தது.   நாஞ்சில் நாடனை பற்றிய சிறந்த பதிவுகளில் அதுவும் ஒன்றாகவே இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.  நாஞ்சிலை முழுதும் படிக்காமல் முடிவுக்கு வருவது தவறென்றே அவரது "சூடிய பூ சூடற்க" தொகுப்பின் முதல் மூன்று கதைகளை படித்தபின்பு உணர்கிறேன்.

தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரை சந்திக்கப்போகிறோம் என்கிற ஆர்வம் அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்தே இருந்தாலும், அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.  அரை மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட்டபடியால் இரண்டாவது வரிசையிலே இடம் கிடைத்தது.  சந்திப்பு சரியாக 3:40 க்கு தொடங்கியது.

      நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப்பேசிய ஞாநி கேணியின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் நாஞ்சில் நாடனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  தனது படைப்புகளுக்கு வித்தியாசமான பெயர்கள் சூட்டுவதில் ஜெயகாந்தனும் நாஞ்சில் நாடனும் தன்னை கவர்ந்தவர்கள்.  நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு படித்தது முதற்கொண்டே நாஞ்சில் நாடனை நினைக்கும் போதெல்லாம் அவரது படைப்பின் தலைப்புகளும் நினைவுக்கு வருவதை குறிப்பிட்டார்.

ஞாநியின் உரையைத்தொடர்ந்து நாஞ்சில் நாடன் தனது பேச்சை துவக்கினார்.  என் வாழ்நாளில் மொழியை இவ்வளவு லாவகமாக கையாளக்கூடிய ஒருவரை அல்லது பேச்சை கேட்டதில்லை.  நாஞ்சிலுக்கு எந்த தலைப்பும் கொடுக்கப்படவில்லை; அவராகவே மொழி பற்றிய தனது தரவுகளை "சுதந்திரமாக"  பேசினார்.  அவரது பேச்சின் சாராம்சத்தின் சிறு  பகுதியை அளிக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்கு ஊர் சுற்றுதல் என்பது அவரது எழுத்திற்கான வேர் ஆகும்.
என்னை,  ஜெயமோகனை உருவாக்கியது இந்த ஊர் சுற்றல்தான்.  பல்வேறு மனிதர்களையும், சூழல்களையும், பிரதேசங்களையும் காணும்தோறும் மனது கற்பனைகளை விவரித்துக்கொண்டே செல்கிறது.  தன் சொந்த மண்ணையும் புதிதாக காணும் நிலத்தின் கூறுபாடுகளையும் ஒரு எழுத்தாளன் தன் மனதிற்குள் பின்னிக்கொண்டே செல்கிறான்.  புதிய வெளிகள் புகுத்தப்பட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளனால் இலக்கியம் செரிவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தான் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பாம்பேயில் வாழ்ந்ததை பற்றி கூறியபின் தன் மண் மீதான பிடிப்பு எவ்வாறு உருக்கொண்டது  என்பதை பகிர்ந்துகொண்டார்.  பம்பாயில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகாபாரதத்தை முறையாக ஒரு குருவிடம் கற்றிருக்கிறார்.  இடையிடையே தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களை தனது குருவிடமிருந்து கற்றிருக்கிறார்.

எப்போதோ எழுதிய தனது கதையை எதேச்சையாக ஒரு சிறுபத்திரிக்கைக்கு அனுப்ப அது பிரசுரமானது மட்டுமின்றி அவ்வாண்டின் சிறந்த கதையாகவும்
தேர்வுபெற்றிருக்கிறது.  அதிலிருந்து தொடங்கியது நாஞ்சிலின் இலக்கிய பங்களிப்பு.  ஆரம்பக்கட்டத்தில் தீவிர திராவிட இயக்க அபிதாபியாக இருந்த நாஞ்சில் நாடன், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததன் பொருட்டு, பலவகையான மொழிகளின் கூறுபாடுகளை கூர்ந்து நோக்கி, தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழிகளுமே தனித்தனி சிறப்புகளை கொண்டவையே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  காளிதாசன் விளையாடிய ஒரு மொழியையோ, காண்டேகர் பயன்படுத்திய ஒரு மொழியையோ, பஷீர் எழுதிய ஒரு மொழியையோ தான் எவ்வாறு வெறுப்பது; அம்மொழிகளை பேசுவோரிடம் எனக்கு கருத்து மோதல்கள் உண்டு, ஆனால் மொழியுடன் எந்த பகைமையும் இல்லை என்றே கூறினார்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென கொண்டிருக்கவேண்டிய மொழிக்கட்டமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய நாஞ்சிலின் அவதானிப்பு விரிவாக அவரால் விளக்கப்பட்டது.
தான் பயன்படுத்தும் மொழி பற்றிய பிரஞ்ஞையை விரிவான விளக்கங்களுடன்
வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  பொதுத்தமிழில் அன்றாடம் பயன்படுத்தப்படும்
சுமார் 1200 வார்தைகளைத்தாண்டி எழுத்தாளன் கையாளவேண்டிய வார்த்தை பிரயோகங்களை தான் பயன்படுத்தும் மொழிகொண்டே விளக்கினார்.  வார்த்தைகள் மீதான அவரது காதலை மிக ஆழமாகவே ஒரு வாசனாக என்னால் உணரமுடிந்தது.  வையாபுரி பிள்ளை போன்றோரால் தொகுப்பட்ட ஒருலட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகளுக்கும் அதிகமான வார்த்தைகளுக்கு பொருள் கொண்ட  தமிழகராதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படாமலே நிராகரிக்கப்படுகிறது மற்றும் தான் அவைகளிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்பதுபற்றி வெகு விரிவாகவே பேசினார்.  பெருமாள் முருகன் முதலான பலரும் தொகுத்துள்ள அகராதிகள் பற்றியும் அவற்றிலுள்ள சொற்கள் எவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தற்காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது பற்றியும் அவர் கூறிய செய்திகள் ஆழமும் விரிவும் கொண்டவை.

நாஞ்சில் நாடனின் விரிவான உரைக்குப்பின்பு வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  வழக்கம்போலவே மிகமிக பொதுப்படையான ஆழமற்ற கேள்விகளே கேட்கப்பட்டன.  சில வாசகர்களின் கேள்விகள் கண்டிப்பாக சிந்திக்கத்தூண்டின.  அதில் என்னைக்கவர்ந்தது, ஒரு ஆசிரியை கேட்ட கேள்விகளே.  இன்றைய தமிழாசிரியர்கள் பலரும் தமிழில் குறைவாகவே புலமை வாய்க்கப்பெற்றவர்களே.  இதை மாற்றுவதற்கு என்ன வழிகள்?  இதற்கான நாஞ்சிலின் பதிலும் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

ஞாநி ஒரு கேள்வி கேட்டார்; ஒரு தேர்ந்த படைப்பாளியுடைய எழுத்து வீரியமாக இருந்தாலும் அவருடைய மோசமாக இருக்கிறது, ஆனால் மிகமிக சாதாரண எழுத்தைக்கொண்ட ஒருவருடைய படைப்பு பொதுமொழியில் எழுதப்பட்டபோதும் சிறப்பான கருத்தை கொண்டிருக்கிருக்கிறது, எனில் கொண்டாடப்படுவது எது?   எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத கேள்வி இது.  தேர்ந்த எழுத்துடன் மிக மோசமான புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவேண்டிய அதே நேரத்தில் மிகமிக பொதுமொழியில் எழுதும் எழுத்தும் கொண்டாடப்படவேண்டும் என்று அவசியம் இல்லை.   வாசகனுக்கு புரியவேண்டும் என்று எழுத்தாளர் பொதுமொழியில் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

கூர்ந்துகவனிக்கும் பொருட்டு, பொதுமொழியை விரும்பும் வாசகர்களின் தேர்வு மிகவும் ஜனரங்கமான படைப்புகளாகவே இருக்கும்.   மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பையே சுற்றிக்கொண்டிருந்தானனின் அது மாணவனின் தவறே தவிர  ஆசிரியரை குறைசொல்ல யாதொரு நியாயமும் இல்லை.   இருந்தாலும் என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் பொதுத்தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பும் என்னுள் எவ்வித சிலிர்ப்பையும் ஏற்ப்படுத்தியதில்லை (அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலைத்தவிர).

சு.ரா என்மீது செலுத்தும் அடங்காத ஆதிக்கமும் மயக்கமூட்டும்  அவரது மொழியால் உண்டாவதுதான்.  ஜே.ஜே. சில குறிப்புகள் தந்த சிலிர்ப்பை இதுவரை எந்த எழுத்தும் எனக்கு தந்ததில்லை.   கேணியில் கூடியிருந்த பல வாசகர்கள் கூறிய-பெரிய எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் புரியவில்லை- என்ற கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை.  அவர்களின் புரியாமைக்கு காரணமாக நான் நினைப்பது இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் இல்லை, வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பது இல்லை, அல்லது வாசிப்பில் குறைந்தபட்ச முயற்ச்சியில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வங்காளதேசம், கென்யா போன்ற மூன்றாம்தர கிரிக்கெட் நாடுகளை விரும்புவதில்லை, உண்ணும் உணவில் அழுகிய காய்கறிகளை
அனுமதிப்பதில்லை, இன்னும் பலவற்றிலும் மூன்றாம்தரத்திற்கு மதிப்பே இல்லை;  ஆனால் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் சங்கர்களும், சுஜாதாக்களும் கொண்டாடப்படுகிறார்கள்.  பொதுப்புத்தி போற்றி புகழப்படுகிறது.  பாலு மகேந்திராக்களும்,  புதுமைபித்தன்களும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

நான் பழகிய எந்த பெண்ணும் இலக்கியத்தின்பால்  ஈர்க்கப்பட்டவள் அல்ல.  அதிலும் அழகான பெண்களுக்கு நான் அறிந்தமட்டும் இலக்கியம் எட்டிக்காய்.  ஆனால் இன்றைய கூட்டத்துக்கு ஒரு அழகான பெண் வந்தாள்.  நாஞ்சில் நாடனின் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.  அவரது ஒவ்வொரு கருத்துக்கும் தலையாட்டிக்கொண்டே இருந்தாள்.  எனக்கு அது நிறைவாய் இருந்தது.

இதுவரை கேணியின் ஆறு கூட்டங்களில்  கலந்துகொண்டிருந்தாலும், நான் இதுவரை ஒரு கேள்விகூட கேட்டதில்லை; இன்றும் அப்படித்தான்.  நாஞ்சில் நாடனுக்கு சு.ராவினுடனான அனுபவங்கள் பற்றி கேட்க ஆர்வமாக இருந்தது; ஆனால் கேட்கவில்லை.   தற்போது நடக்கவிருக்கும் உலகத்தமிழ் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நிதரிசனமானவை.   அதிகாரங்களின் அராஜகங்களை எழுத முற்பட்டால் கைகள் நிர்கதியாகவும், கண்களில் இரத்தமுமே மிஞ்சும்.  ஆனால் இதைப்பற்றிய தனது தீர்க்கமான பதிவுகளை எந்த எழுத்தாளருமே தற்காலத்தில் பதிவு செய்யவே இல்லை என்றே எண்ணுகிறேன்.

என்ன எழுதுகிறார் என்பதை என்பதை விட எப்படி எழுதுகிறார் (திரைப்படத்துக்கும்
இது பொருந்தும்) என்றே கவனிக்கும் எனக்கு, நாஞ்சில் நாடன் அவரது பேச்சில்
சொற்களின் வாசனையை வாசகனையும் நுகரவைத்தமை புதிய அனுபவத்தை தந்தது.  அவரது "சூடிய பூ சூடற்க" மற்றும் "காவலன் காவான் எனின்" ஆகிய இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.  வரும் வழியில் பதிவர் கிருஷ்ணபிரபு  நடந்து சென்றுகொண்டிருந்தார்.  வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் பிரபு என்றேன்.  சிறிது தயங்கியவர், நான் நடந்தே வருகிறேனே என்று சொல்லிவிட்டார்.

வீடு வந்ததும்  என்னை முதலில் வாசிக்கத்தூண்டியது சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பு புத்தகம்தான்.  இதுவரை என்னை அலைக்கழித்த சிறுகதைகள்
மகாமசானம், மாடன் மோட்சம், ரத்னாபாயின் ஆங்கிலம், எங்கள் டீச்சர் போன்ற வெகுசில கதைகளே.  இவை அனைத்துமே கதை சொல்லல் முறையில் தன் உச்சத்தை தொட்டவை.    இந்த வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டியது நாஞ்சில் நாடனின் "யாம் உண்பேம்".  புதுமைப்பித்தனின் மகாமசானத்தின் உச்சங்களை இக்கதையும் நிகழ்த்துகிறது.  மொழியின்பால் தனக்குள்ள பிடிப்பை நாஞ்சில் நாடன் உறுதியாக நிறுவிய கதையாகவே இதை நான் பார்க்கிறேன்.
 

நாஞ்சில் நாடன் - கேணி சந்திப்பு:
 Posted by கிருஷ்ண பிரபு at 4:45 AM
 
ஞானியின் வீட்டில் நுழைந்தவுடன் நாஞ்சில் நாடன் இருக்கிறாரா என்று தேடினேன். உள் அறையில் பாரதி மணி மற்றும் ஞானியுடன் பேசிக் கொண்டிருந்தார். வெளி அறையில் அவருடைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தின் ஆதாரக் கதை என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் 'தலைகீழ் விகிதங்கள்' வாங்கிக் கொண்டு கேணிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.

3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். "சுதந்திரமாக பேசலாமா?" என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் அவர் என்ன பேசப்போகிறார் என்பது கூட எனக்குத் தெரியாது. படைப்புகளுக்கு வித்தியாசமான தலைப்புகளை பெயராக சூட்டுவதில் நாஞ்சில் நாடன் என்னை மிகவும் கவர்ந்தவர். எட்டுத் திக்கும் மதயானை, மாமிசப்படைப்பு என்று யோசிக்கும் போதெல்லாம் அவரது பெயரும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேச்சைத் துவக்கினார். தலைப்பாக எதையும் வைத்துக் கொள்ளாமல் மொழியின் கூறுகளைப் பற்றி பேசத் தொடங்கினார்

தேவை கருதியே சொற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (லெக்சிகன்) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது. இவற்றையெல்லாம் அவனப்படுத்த வேண்டாமா?

ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அதுமட்டுமே பலவிதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!

ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண பெயிட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிறமாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.

சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அதுபோலவே "அக பெருமாள், பெருமாள் முருகன், கிரா, பா சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன்" போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். "இதை யார் செய்ய வேண்டும்?". ஆராய்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள். "மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க" என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின் பொழுது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.

சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயபுத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கனும்னு நெனச்சிக்கினேன்.

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

"டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்...அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?" என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.

அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள் தானே மொழியை செம்மையாக்குகிறது. ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு 'தெரிவை' என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் 'நீலவேணி டீச்சர்' என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம் தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன். வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள் தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படிநடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக்கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் தானே இருக்கிறோம். மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள் தான் அதற்கு முன்வர வேண்டும். அதற்க்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து சில தேவையிலாத கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சூடான விவாதத்துடன் கேணி சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.

இணைய தமிழ் அகராதி -
 http://wiki.senthamil.org

கேணி சந்திப்பு பற்றி நண்பர் பிரபாகரன் எழுதிய பதிவு: (http://tprabakaran.blogspot.com)

)()()()()()()()(

பெரியவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஞானியின் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்லும் முக்குச்சந்தை கடக்கும் பொழுது "ங்கோத்தா எனக்கு குடுக்க வேண்டிய பணத்தை என் ஊட்டாண்ட வந்து இன்னிக்குள்ள குடுக்குல நடக்கறதே வேற" - என்று ஓர் ஆட்டோக்காரன், எதிரில் இருப்பவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தான். அந்த 'ங்' வார்த்தை என்னுள் ஓங்காரமாக ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு வயதில் வீட்டிற்குத் தெரியாமல் எத்தனை முறை சொல்லியிருப்பேன். வீட்டுக்குள் சென்ற பிறகு சாகடிச்சாலும் இந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது. இப்பொழுது அந்த வார்த்தை என்னுள் அடையாளமின்றி எங்கோ இருக்கிறது. அதுபோல இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ! முடிந்தால் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து மீட்டெடுக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையும் சேர்த்துத்தான்...

)()()()()()()()(

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தின் வடிவத்தைப் பற்றியோ, ஒலி வடிவத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
3. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
4. அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனும், அதையடுத்து எழுத்தாளர் பாமாவும் வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
 

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
 
1991ல் நான் பாலகோட்டு [தருமபுரி மாவட்டம்] சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை அணிந்து பவ்யமாக அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். நேர்த்தியான உடை நாஞ்சில் நாடன் பவ்யம் நாஞ்சில் நாடன் இனிய புன்னகை.... யாரவர்? மனிதர்களைப் பற்றிய என் நுண்ணுணர்வால் உடனே அவரை ஒரு எல்.ஐ.ஸி முகவர் எனப் புரிந்துகொண்டேன். இந்த வயது வரை சுந்தர ராமசாமி  காப்பீடு செய்யாமலா இருக்கிறார்?

சுந்தர ராமசாமி என்னைப் பார்த்து சிரித்து, “வாங்க. இவர்தான் நாஞ்சில் நாடன்,” என்றார். நான் திரும்பி காலை உணவுமேஜையை ஐயத்துடன் பார்க்க அவர் மேலும் புன்னகை விரிந்து, “இவர்தான்... நம்ப முடியல்லை இல்லையா?” என்றார்.

நாஞ்சில் நாட்டு விவசாயியின் பேச்சையும் எண்ணங்களையும் எழுத்தில் கொண்டுவந்த கலைஞன் என நான் அவரை மனதில் பகுத்து வைத்திருந்தேன். எந்த வகையான நவீன விஷயங்களும் அவரில் ஒட்டமறுத்தது என் மனதில். ஆனாலும், “வணக்கம் சார்” என்றேன்.

“படிச்சிருக்கேன்” என்றார் நாஞ்சில்.

அப்படி விஷமத்தனமாக சிரிக்குமளவுக்கு நான் எதையுமே எழுதவில்லையே என்ற குழப்பத்துடன் “அப்டியா?” என்றேன்.

“நல்லா எழுதறீங்க...” என்றார்.

நான் அருகே மோடாவில் அமர்ந்து கொண்டேன்.

“உங்களுக்கு குலசேகரம் பக்கமில்ல?”என்றார்

“ஆமா”

“...அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடுக வழக்கம் கெடையாது சார்...” என்று நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமியிடம் பேச்சைத் தொடர்ந்தார். “ஆனா சாம்பாரிலே சேம்பங்கிழங்கு போடுவா. கல்யாணச் சமையல்ணா சேம்பக்கெழங்கு இல்லாம சாம்பார் இல்ல. காயம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போட்டு பருப்ப ஒருமாதிரி முக்கா வேக்காட்டா விட்டு... அதும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கும். இங்க நம்ம தெரிஞ்சவங்க வீட்டு சமையலுக்கு ஒரு நாயர் திருவட்டாரிலேருந்து வந்தாரு. குறிப்படிகளைப் பார்த்ததுமே சேம்பங்கெழங்கு இல்லாம சமைக்கிறது பொண்ணு இல்லாம கல்யாணம் செய்யியது மாதிரில்லான்னு சொல்லிட்டாரு..”

கேரளத்துச் சாம்பாரை மலையாளி அல்லாத ஒருவர் பாராட்டி நான் கேட்பது அதுவே முதல் முறை. கடைசி முறையும் கூட. கேரளத்தில் பதினேழாம் நூற்றாண்டில் சாம்பார் வந்தது, படையெடுத்துவந்த மங்கம்மாளின் படைகளுடன். அந்தக் கோபம் இன்றும் மலையாளிகளுக்கு உண்டு. ‘தெய்வதிண்டே ஸ்வந்தம்’ சாம்பாரைக் கண்டடையும் முயற்சியில் நம்மூர் ரசவாதம் போல அதில் இன்றுவரை பரிசோதனைகள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அது பலவடிவங்களில் பரிணாமம் கொண்டும் வருகிறது. கேரள இட்லி இவ்வாறு பரிணாமம் செய்த பாதையில்தான் அங்கு இன்னும் பிரபலமாக இருக்கும் பலவிதமான பசைகளும் கூழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

நான் நாஞ்சில் நாடனை வாயைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பேசப் பேச சட்டை பேண்ட் எல்லாம் போய் அவர் தோளில் வடசேரி ஈரிழைத் துவர்த்தும் இடுப்பில் பலராமபுரம் புளியிலைக்கரை வேட்டியும் அணிந்து, நெற்றியில் பாதி அழிந்த திருநூறும் வாயில் வெற்றிலையுமாக ஒரு முத்தாலம்மன் கோயில் கல் திண்ணையில் அமர்ந்திருக்கும் சித்திரம் உருவாயிற்று. அதன்பின் நான் அவரை பேண்ட் சட்டையில் பார்த்ததே இல்லை.

அதன்பின் நீண்டநாள் நாஞ்சில் நாடனிடம் பழகிய பின்னர்தான் அந்த ஆச்சரியம் கரைந்தது. அவர் நானறிந்து எந்த உணவுப் பண்டத்தையும் நிராகரித்ததே இல்லை.

போன வருடம் நவம்பரில் காசியில் நானும் சுரேஷ் கண்ணனும் நடந்துகொண்டிருந்தோம். கடுகெண்ணையில் பூரி சுட்டு சாலையோரங்கள் எண்ணெய்ப் புகையால் கரித்தன. குதத்தில் இருந்தே குமட்டலெடுக்க வைக்கும் கடும் நெடி.

“இதைப்போய் எப்டி திங்கிறானுக?” என்றார் சுரேஷ்.

“...சித்தப்பா கதையிலே நாஞ்சிநாட்டு ஹீரோக்கள் பாதிநேரம் இதைத்தானே திங்கிறானுக...? அய்யோ பாவம்...கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசிப்பிடுவோம். பாவம் அவாள் வட இந்தியாவிலே புளிசேரி எரிசேரி சாப்பாட்டுக்கு எப்டி ஏங்கியிருப்பாக!”

செல்பேசியில் அழைத்து “சித்தப்பா...நல்லாருக்கேளா? நானும் நாயர்வாளும் காசியிலே நடந்திட்டிருக்கோம். இங்க ஒரே கடுகெண்ணை—”

“அய்யோ சூப்பரா இருக்குமே... நெனைச்சாலே எச்சில் ஊறுது” என்று நாஞ்சில் நாடன் பரவசக்குரல் எழுப்பினார். “... சுரேஷ் அங்க கடுகெண்ணையிலே பெரிசா நம்மூர் போண்டா சைசுக்கு ஒண்ணு போடுவான். அதைச் சூடா பச்சமிளகாயும் நல்ல மொளகாப் பொடியும் வச்சு நாட்டுபிரட் நடுவிலே வைச்சு குடுப்பான். அற்புதமா இருக்கும். வடா பாவ்பாஜின்னு பேரு... விடாதீங்க...”

சுரேஷ் பரிதாபமாக என்னைப் பார்த்தபின், “..ஆனா சித்தப்பா, அந்த வாசனை...” என ஆரம்பிக்க நாஞ்சில் நாடன் ஆவேசமாக “...அந்த வாசனைதான் அதோட ஸ்பெஷல். எப்டி இருக்கு பாத்தேளா? பானிபூரி சாப்பிட்டேளா? அந்த ஊர் ஜாங்ரியெல்லாம் ஒருமாதிரி லேசான புளிப்போட இருக்கும். அதுக்கு ஒரு தனி ருசி... இந்த அலஹாபாத் வாரணாசி பக்கமெல்லாம் பால்கோவா ரொம்ப விசேஷமாமே...”

“சித்தப்பா இங்க கங்கை கரையெல்லாம் ஒரே எருமை. பாலுக்குப் பஞ்சமேயில்ல... அதான்...”

“ஆமாமா. பாலை பெரிய கடாயிலே போட்டு நல்லா சுண்டக் காச்சிட்டே இருக்கான். அது ஒருமாதிரி பேஸ்டா ஆனதுமே சீனியை போட்டு கிண்ட ஆரம்பிச்சிடறான்....”

“முழூஉ...க்க்கையையும் விட்டு கிண்டுதானே சித்தப்பா. அக்குளிலேருந்துல்லா வழிச்சு போடுதான்?”

“அதுபின்ன சமையக்காரன் அக்குள்லா? பலதடவ வழிச்சதுக்குப்பிறவு சுத்தமாத்தான் இருக்கும். இதைச் சொல்றியோ. இங்க தோசமாவு கலக்கிறவன் என்ன செய்யுகான்?..”

“சித்தப்பா கோயிலுக்கு வந்துட்டோம். நான் நாளைக்கு கூப்பிடுதேன்...” செல்பேசியை அணைத்து “மனுஷனை நிம்மதியா சாப்பிட விடமாட்டாக...”

“என்ன சொன்னார்?”

“ஆ? பால்கோவாயையே அக்குளை வச்சுத்தான் கிண்டணும்னு சொல்லுதாரு... சும்மா வாங்க மோகன், கடுப்ப ஏத்தாம...”

ருசிதான் நாஞ்சில் நாடன். உண்மையில் அது இயற்கை மீதான ருசி. இயற்கையில் இருந்து மனிதன் தேர்வுசெய்து தொகுத்து உருவாக்குவதனால் சமையல் மீதான ருசி. நாஞ்சில் நாடன் படைப்புகளில் அந்த ஈடுபாடு ஒரு மதநம்பிக்கை போலவே தீவிரமாக வெளிப்படுகிறது. பாலக்காடு வழியாக கேரளா போய்விட்டு வந்து தொலைபேசியில் அழைத்தார்.

“மோகன் இப்பதான் வந்தேன்... கேரளா முழுக்க நல்ல மழை. வரிவரியா பெரிய மலைகள். மலையுச்சிகளிலே கரும்பாறை. மழைபெய்றப்ப என்ன ஒரு கருப்பு... மழைத்தண்ணி அதிலே அருவிகளா கொட்டுறப்ப ஆனைக்க தந்தம் தெரியற மாதிரி இருக்கு... ஒரு எள வெயில் நடுவிலே அடிச்சுது பாருங்க... அப்டியே கை கூப்பி கும்பிட்டுட்டேன். கண்ல தண்ணி வந்து கன்னத்திலே வழியுது...”

நாஞ்சில் ஆரோக்கியமானவரல்ல. சர்க்கரை வியாதி உண்டு. இதயம் ஒரு முறை சிறு மக்கர் செய்து ஆஞ்சிபிளாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் எனக்குத் தெரிந்து தமிழ் படைப்பாளிகளில் மிக அதிகமாகப் பயணம் செய்வது அவர்தான். பயணப் பையை அவர் கலைப்பதேயில்லை. வந்து இறங்கி ஆச்சியிடம் நாலு நல்ல வார்த்தை பேசி சாப்பிட்டு தூங்கினால் அடுத்த நாளே மீண்டும் பயணம்.

பயணம் மூலம் அவர் இயற்கை நடுவில் இருக்கிறார். இயற்கையில் அவருக்கு ஒரு ‘மறைஞான’ உணர்வு இருக்கிறது. அதை அவர் தத்துவப்படுத்துவதே இல்லை.

“...பெரிய மணல் வெளி... ஆளே இல்ல. கொஞ்சமா தண்ணி. ஓடுது.... காயத்திருமேனி எண்ணை வழிஞ்சு போறது மாதிரி பச்சையாட்டு... அந்தப் பக்கம் சிவன் கோயில். இந்தப் பக்கம் ஒரு சின்ன காளி கோயில்... பறவைகளோட சத்தம் மட்டும்தான்... என்னமோ பண்ணுது மோகன்” அவரது அதிகபட்ச வெளிப்பாடு என்பது இது மட்டும்தான்.

நாஞ்சில் நாட்டு இயற்கையை அவர் சொன்ன விதமே அவரை தமிழிலக்கியத்தின் முக்கியமான மையமாக ஆக்கியிருக்கிறது. யோசித்துப் பார்ப்போம், அவர் அசாதாரணமான கதாபாத்திரங்களை உருவாக்கியதில்லை. மகத்தான மனமோதல்களை படைத்ததும் இல்லை. எளிய மக்கள், எளிய சித்திரங்கள். ஆனால் அவர்கள் பேருருவம் கொண்ட ஒரு இயற்கையின் மடியில் இருக்கிறார்கள். அனைத்துக்கும் சாட்சியான தாடகை மலை. வற்றாத ஆறு. உயிர் ததும்பும் வயல்கள். ஆகவே அவ்வாழ்க்கை அழியாத பேரியற்கையின் ஒரு நிகழ்வாக ஆகிவிடுகிறது.

“சுப்ரமணியம் நல்ல வேளையா சென்னையிலே இல்லை. இருந்திருந்தா எப்டியும் ஒருதடவை கூவத்திலே குளிச்சிருப்பார்...” என்றார் சுந்தர ராமசாமி. நாஞ்சில் நாடன் ஆற்றைப் பார்த்தால் குளிக்காமல் வரமாட்டார். மீண்டும் மீண்டும் ஆற்றில் குளிக்கும் சித்திரங்களை நாம் அவரது படைப்புலகில் காண்கிறோம். அவரது கதாபாத்திரங்களுக்கும் இந்த ஈர்ப்பு உண்டு. பூலிங்கத்தின் [எட்டுத் திக்கும் மதயானை] பயணமே வீர நாராயண மங்கலம் ஆற்றில் இருந்து கிருஷ்ணா கோதாவரி என்று மாறி மாறிக் குளிப்பதாகவே இருக்கிறது. “...சும்மா கண்ட கண்ட கானல் நதிகளிலே குளிக்கிறதுக்கு, இருந்திட்டிருக்கிற நதிகளிலே குளிக்கிறது எவ்ளவோ பெட்டர்” என்று நாஞ்சில் நாடனின் யதார்த்தவாதத்தைப் பற்றிச் சொல்லும்போது சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.

யதார்த்தவாதம் நாஞ்சில் நாடன் தேர்வுசெய்துகொண்ட அழகியல் அல்ல. அவரது ஆளுமையே முற்றிலும் யதார்த்தமயமானது. பாலாஜி சக்திவேலின் பிரபலமான ‘காதல்’ படம் வந்தபோது சுரேஷ் கண்ணனும் நாஞ்சிலும் சேர்ந்து அதைப் பார்த்தார்கள். அதில் நகரவிடுதியில் அந்த இயக்குநர், “டைரக்டா ஹீரோவா?” என்று கேட்கும்போது “..ஆமா சார் அப்டியே சி.எம்” என்று சொல்லும் விரிச்சிக காந்த் என்ற பல்லவர் பிற அனைவரிலும் சிரிப்பை உருவாக்கியபோது நாஞ்சில் அனுதாபத்துடன் சொன்னார். “பாவம் சுரேஷ், யோசிச்சுப்பாருங்க. எவ்ளவு கனவோட அந்த ஆள் இருக்கான். இதுக்குன்னே ஊரிலேருந்து பஸ் ஏறி வந்து மெட்ராஸிலே அலைஞ்சு...” சுரேஷ் இதற்கு தனியாகச் சிரித்ததாகச் சொன்னார்.

வாழ்க்கையை நாஞ்சில் நாடன் ஒரு பெரிய யதார்த்த நாடகமாகவே பார்க்கிறார். இன்னும் உருவகமாகச் சொல்லப்போனால் ஒரு மாபெரும் கல்யாண விருந்தாக. இதிலே மாப்பிள்ளை வீட்டுப் பெரிய மனிதர்களுக்கு நல்ல சாப்பாடு. மெல்ல மெல்ல சாம்பாரில் கஞ்சித்தண்ணி கலக்கிறது. சோறு வேகாமலாகிறது. அப்பளம் மீண்டும் கேட்டால் கிடைப்பதில்லை. பாயசம் பரிமாறுகிறவன் ஒரே அகப்பையை ஒன்பது இலையில் தொட்டுத் தொட்டுச் செல்கிறான். [நாஞ்சிலின் சொற்கள், 'எளவு பாயசத்தாலே எலயில பொட்டு வச்சிட்டுல்லா போறான்?']. ஒன்றும் சொல்வதற்கில்லை. மனக்குமுறலுடன், “செரி, இப்ப என்ன? நம்ம வீட்டு கல்யாணம். நம்ம புள்ளைக... நல்லாருக்கட்டும்” என்று சொல்லி புன்னகைப்பதல்லாமல்.

சாப்பாடுப் பந்தி நாஞ்சிலுக்குரிய ஒரு சிறப்பான உருவகம். ஜார்ஜ் லூயி போர்ஹெவுக்கு நூலகம் போல. போர்ஹெ போல இவரும் மேலே சொர்க்கமும் ஒரு பெரிய சாப்பாட்டுப் பந்திதான் என்று அவர் உருவகித்திருக்கிறாரா தெரியவில்லை. அவரது சிறுகதைகளில் ஏராளமான கல்யாணப் பந்திக் கதைகள் இருக்கின்றன. சம்பந்தமில்லாத விஷயங்களுக்கும் இங்கே உருவகம் அகப்படும். பின் நவீனத்துவ சிந்தனைகள் வந்து அலம்பல் செய்த காலத்தில் நாஞ்சில் சொன்னார். “... பக்கத்து எலையிலேருந்து ரசம் ஓடி நம்ம எலைக்கு வாறதுல்லா அது? செரி போட்டுன்னு வக்கலாம்னா நாம சாப்பிடுகது பாயசம் பாத்துக்கிடுங்க.....”

நாஞ்சில் நாடனின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த ஒரு வடுவைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார். பள்ளியில் வகுப்பை விட்டுவிட்டு நாலுமைல் தூரம் ஓடி ஒரு கல்யாணப் பந்தியில் அமர்ந்து எளிய உடை காரணமாக கைபிடித்து தூக்கி வெளியே விடப்பட்டதன் அவமானம். தன் அறுபது வயதிலும் அது நெஞ்சைச் சுடுகிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து வளர்ந்தது அந்தப் பந்திப்பாசம். பந்திப்பாசமறுத்து உய்வடைவதே முக்தி என்றால் அதை அவரது ஒரு கதாபாத்திரம் அடைகிறது. எல்லாக் கல்யாணத்திலும் கையில் திருவாசகக் கவசத்துடன் புகுந்து சுவையறிந்து உண்ணும் அவரை சமையற்குழுவே ஆஸ்தான ‘சுவைபார்ப்புன’ராக அமர்த்திக் கொள்கிறது. அதனால் அவருக்கு பந்திச் சாப்பாட்டில் ருசி இல்லாமலாகிறது. பாசமறுத்து பதியில் ஒடுங்கிய ஒரு பசு.
 

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
 
நாஞ்சில் நாடன் ஒரு நிரந்தரப் பயணி. ந.முத்துசாமியின் ஒரு கதாபாத்திரம் தாசியை பார்க்க செம்பொனார்கோயில் போகவேண்டும். ஆனால் ஊஞ்சலில் இருந்து எழுந்திருக்க சோம்பல். ஊஞ்சலில் ஆடியபடியே ‘இந்த ஊஞ்சல் மட்டும் பின்னால் வராமல் முன்னாலேயே போயிருந்தால் இந்நேரம் செம்பொனார் கோயில் போயிருக்கும்’ என சிந்திக்கும். [செம்பொனார் கோயில் போவது எப்படி?] கிட்டத்தட்ட அதுதான் நாஞ்சில் நாடனின் பயணங்கள். பெண்டுலப்பயணம். பம்பாய்க்கும் திருப்பி வீரண மங்கலத்துக்கும்.

நாஞ்சில் நாடனின் பயணப்பையை நான் பீதியுடன் பார்ப்பதுண்டு. பொதுவாகவே எனக்கு கனகச்சிதம் என்றாலே என் அப்பா ஞாபகம் வந்து மனதைக் கலக்கும். கச்சிதமாக மடிக்கப்பட்ட துணிகள். நானெல்லாம் பையை திறந்தால் ஒரு ஜட்டியை எடுக்க எல்லா துணியையும் கலைக்க வேண்டியிருக்கும். நாஞ்சில் நாடன் எல்லாவற்றையும் தொகுப்பு தொகுப்பாக வைத்திருப்பார். பயணத்தில் போட்ட ஜட்டியையே மீண்டும் போட்டுவிட்டோமா என்ற ஐயத்தால் மேடையில் பேச்சுகூட சரியாக அமையாது போன சந்தர்ப்பம் எனக்கு உண்டு. முகர்ந்து பார்த்தாலும் விசேஷமாக எதும் கண்டுபிடிக்க முடிவதில்லை. நாஞ்சில் நாடன் போட்டதற்கும் கழற்றியதற்கும் தனித்தனியாக பாலிதீன் பைகள் வைத்திருப்பார். பற்பசை, ஷாம்பூ, பௌடர் எல்லாவற்றுக்கும் சாஷேக்கள். குறிப்பேடு, பாத்ரூம் சப்பல், கொசுவத்தி, தீப்பெட்டி.... சில ஓட்டல்களில் கொடி இருக்காது காயப்போட. ஆகவே சிறு நைலான் கயிறு. [சூட்கேஸைத் திறந்து அந்தக் கயிறைப் பார்த்திருந்தால் ஓட்டலில் ரூம் கொடுக்கமாட்டார்கள்] இத்தனைப் பொருட்களுடன் இவர் கிளம்புவதை வைத்துத்தான் முக்கால்நாள் ஊரில் இல்லாத இவருக்கு சின்னவீடு இருக்குமோ என்ற ஐயத்திலிருந்து ஆச்சி விடுபட்டிருக்கவேண்டும்.

அறைபோடும்போது பல நிபந்தனைகள் உண்டு. “...ரிசப்ஷனைப்பாத்து ஏமாந்திரப்பிடாது, மலையாளத்தான் சிரிப்பை நம்புற மாதிரியாக்கும் அது... ரூமுக்குப் போயி கக்கூஸை கதவைத் தெறந்து உள்ள பாக்கணும். மெத்தைமேல நல்ல வெள்ள விரிப்பா போட்டிருப்பான். தூக்கி பாக்கணும். உள்ள பழங்கால மெத்தை செல்லரிச்சு கெடக்கும். ராத்திரி செள்ளு கடிச்சு கொன்னிரும்... நேஷனல் ஹைவேயைப்பாக்க ரூம் போடப்பிடாது. ராத்திரி டைனோசர் சத்தம் மாதிரி லாரி கத்தும்...” அனுபவ வெள்ளம்!

அறையைக் காலிசெய்யும்போதும் அதற்கென்றே ஒரு வரிசை முறை உண்டு. முதலில் பாத்ரூம்பொருட்களை எடுத்து ஈரத்துணிகளை முறைப்படி பதமாக பாலிதீன் உறைகளில் வைப்பது. செருப்பை தனியாகச் சுருட்டி வைப்பது முதலிய சம்பிரமங்கள். கட்டிலுக்கு அடியில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பிளக் பாயிண்டுகளை விடக்கூடாது- செல் ·போன் சார்ஜரை விட்டுப்போவது கற்றுக்குட்டிகளின் வழக்கம். நான் ஐம்பது ரூபாய் சார்ஜர் ஒன்று தொலைப்பதற்கென்றே வைத்திருக்கிறேன்.

“நமக்கு பிரச்சினை இல்ல, ஜெயமோகன். வேற மாதிரி ஆளுகளானாக்க துணிக்குள்ள காஞ்ச மல்லியப்பூ தலமுடி ஏதாவது மாட்டியிருக்கான்ணு ஒரு முற பாத்துக்கிடணும்” என்றார் நாஞ்சில் புன்னகையுடன்.

“முடி மாட்டும் இல்ல சார்?” என்று ஆர்வமாக சண்முகம் கேட்டார்.

“...தலமுடீண்ணா என்னான்னு நெனைக்கிறீங்க? அது கன்மமலம் மாதிரில்லா? எளவு, பிடிச்சா சும்மா விடுமா?”

பயணத்தில் பெட்டியைக் கடாசிவிட்டு ஊரில் அலைந்து திரும்பிவந்து குளித்து சாயவேட்டி கட்டி சன்னமாக விபூதி பூசி காதைக்குடைந்தபடி மெத்தைமேல் ஏறி சப்பணம்போட்டு அமரும்போது நாஞ்சில் மெல்லமெல்ல  தியான நிலையை எட்டுவதை கண்கூடாகக் கானலாம். அதன் பின்னர் தான் மது. பிராண்ட் தீர்மானங்கள் உள்ள பிடிவாதக்காரர் அல்ல. எங்கும் எதிலும் சுவை உள்ளது என நம்புபவர். ரம், வோட்கா, ஜின். காசிருந்தால் சிக்னேச்சர் விஸ்கி.

“...இந்த மாய யதார்த்தம்னாக்க நம்ம ‘உள்நாட்டில் தயாரான அயல்நாட்டு மது’ மாதிரியாக்கும். சங்கதி எல்லாமே பொள்ளாச்சி மகாலிங்கத்துக்க காந்தியன் மொலாஸசுதான்...”.

மதுவை சும்மா எருமை கழனித்தண்ணி குடிப்பதுபோல குடிப்பதை நாஞ்சில் நாடன் ஏற்கமாட்டார். முதலில் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு தலையை தூக்கி கண்ணாடிக் கீழ்வட்டம் வழியாக அதன் மேல் அச்சிடப்பட்டுள்ள பொடி எழுத்துகளைக் கூர்ந்து படிப்பது தொடக்கம். அபூர்வமான ரகம் என்றால் மூடியை பெட்டிக்குள் போட்டு சேமிப்பது உண்டு. காதலியின் வளையல் துண்டுகள் போல அது ஒரு இனிய நினைவு.

பின்னர் பாட்டிலின் அடிப்பகுதியை உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி [இல்லாட்டி மூடி சுத்தும். பிடிச்சா பிடி சிக்காது. ஒரு மாதிரி சீண்டிரம் பிடிச்ச பொம்பிளைங்க கிட்ட பேசுகது மாதிரி ஆயிரும். மெனக்கேடு...] அதன் பின் சட்டென்று மூடியை வசமாகப் பிடித்து ஒரு சுற்று சுற்றினால் திறக்கும். அளவாக பாட்டிலில் விட்டு அதை மின் விளக்கு ஒளியில் தூக்கி அளவைப்பார்க்க வேண்டும். பின்னர் ஒரு அரை அவுன்ஸ். மீண்டும் தூக்கிப்பார்த்து மேலும் ஒரு துளி. இந்த ஒரு துளியால் என்ன நிகழ்ந்துவிடும் புரியவில்லை. அதன் பின்னர் மினரல் வட்டரை யக்ஞ நெருப்பில் நெய்விடும் புரோகிதரின் பாவனையுடன் மெல்ல வீழ்த்தி எடுத்து மீண்டும் அளவு பார்த்தபின் நிமிர்ந்தால் முகத்தில் பரவசம். கண்ணாடியை கழற்றிவிட்டு ‘அப்றம்? ‘என்பது போல ஒரு சிரிப்பு.

‘நாடன்’ என்றால் மலையாலத்தில் ‘நாட்டுச்சாராயம்’ என்று பொருள். “நாஞ்சில்- நாடன் கழிக்குமோ?” என்று மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் கேட்டார். “அது நாஞ்சில் ‘நாடன்’ எந்நால் கழிக்கும். வேறே கழிக்கில்ல” என்றேன். நாஞ்சிலுக்கு மதுவில் சாதிப்பாகுபாடு கிடையாது. ஆனால் பாரம்பரியம் பற்றிய போதம் உண்டு.

‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதிர் என்ற கதாபாத்திரம் சொல்லும் “வேளாளப்பிள்ளைக உளுந்தங்களி சாப்பிட்டாலே போதை ஏறிடுவானுக”– நாஞ்சில் நாடனுக்குப் பிடித்த சொற்றொடர் அது. ஆனால் நாஞ்சில் நாடன் எனக்குத் தெரிந்து உளுந்தங்களி சாப்பிட்ட அளவுக்கு கூட மது சாப்பிட்டு நிதானம் இழப்பதில்லை. ‘மாங்காப்பால் உண்டு மலைமேல் இருப்பவரின்’ பாவனைதான். ஆகவேதான் நான் ஒருமுறை தமிழ்நாட்டிலேயே ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியல் ஒன்றை உயிர்மையில் வெளியிட்டபோது நாஞ்சில் நாடனுக்கு முதலிடம் அளித்தேன். இரண்டாமிடம் க.மோகனரங்கன். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் தன் மது அனுபவங்கள நாலைந்து கட்டுரையாக எழுதினார். [நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று]. ·பாதர் ஜெயபதி அவர்கள் மது ஒழிப்புக்காக நாகர்கோயிலில் கூட்டிய மது அடிமைகள் மறுவாழ்வு மாநாட்டில் மது அருந்தும் கலையை விதந்தோதி பேசிய பேச்சுதான் கடைசி என நினைக்கிறேன்

நாஞ்சில் நாடனின் போதை மூன்று படிகள் கொண்டது. ஆணவம் கன்மம் மாயை போல. அல்லது பசுபதிபாசம் போல. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது மது உள்ளே போனதும் நகைச்சுவை வெளியே போய்விடும் என்பது. முற்றிலும் ‘சீரியஸான’ நாஞ்சிலை நாம் இச்சந்தர்ப்பங்களில்தான் காண முடியும். மேலும் மது என்பது அவரை ஒரு அதி தீவிர இந்தியக் குடிமகனாக ஆக்கும் தேசபக்தி பானமும் கூட. சமூக அநீதிகளுக்கு எதிராக புருவம் தூக்கும் நாஞ்சில் நாடனை நாம் அப்போது காணலாம்.

முதல் தளம் பொதுவான ஆதங்கங்கள். “பாருங்க இவன்லாம் இப்டி செய்யுதான்...” என்ற மட்டில். தமிழாசிரியர்கள் வட்டிக்கு பணம் விடுதல், சொற்பொழிவுக்குப் போன அப்பாவித்தமிழ் எழுத்தாளனுக்கு [நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்] நூறு ரூபாய் கொடுத்துவிட்டு காலி வவுச்சரில் கையெழுத்துப் பெறும் அவலங்கள், மேற்படி எழுத்தாளர் பேசிக்கொண்டிருக்கும்போது நாலாந்தர மேடைப் பேச்சாளன் வந்ததுமே மொத்த நிகழ்ச்சிக் குழுவும் பாதி பங்கேற்பாளர்களும் பாய்ந்து வெளியே ஓடும் கொடுமை. உச்சகட்டமாக அவரிடம் வந்து பேச்சைக் குறைத்து உழைப்பைப் பெருக்குமாறு கூறும் அநீதி, அந்த அவலங்களுக்கு முன்னால்கூட இனிய புன்னகையை மட்டுமே அளிக்கும்படி பழகிப்போன விற்பனைப் பிரதிநிதித்தனம் என்னும் சமூகச் சீர்கேடு.

இரண்டாம் தளம் மெல்ல சூடேறுகிறது. தேசிய அவலங்கள். “எப்டீங்க உருப்படும்? இல்ல கேக்கேன்... ” என்ற அளவில். மன்மோகன் சிங்கின் நிலை கிட்டத்தட்ட இந்தியக் கணவர்களின் நிலையாக ஆகிப்போனமை, சோனியா காந்தியின் தேசபக்தி... பின்னர் உலகச் சிக்கல்கள். பாகிஸ்தானின் ஜனநாயகம் இல்லாமை, [இங்கமட்டும் இருக்கான்னு கேக்காதீக. இருக்குன்னு சொல்லுகதுக்குண்டான உரிமை மட்டுமாவது இருக்கா இல்லியா?] ஈராக்கை அமெரிக்கா அநீதியாக ஆக்ரமித்துள்ளமை. உச்சகட்டமாக ராயல்டிக்கு பதிப்பகங்கள் ஒழுங்காக கணக்கு வைத்திருக்காததன் விளைவான பொருளாதார நெருக்கடி..

மூன்றாம் தளம் ஆன்றவிந்தடங்கிய நிலை. ” என்னா சொல்லுகது போங்க..” இந்நிலையில் “சும்மாவா பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க...”, “எல்லாத்துக்கும் அதுக்குண்டான ஒரு இது இருக்குல்லா?” போன்ற தத்துவ நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. கம்பராமாயண வரிகள் “இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?” ண்ணுல்லா சொல்லுகான்... அந்தப்பாட்டுக்க கடசீ வரி இருக்கே ‘கைவண்ணம் அங்கு கண்டேன். கால் வண்ணம் இங்கு கண்டேன்...’ கண்ணதாசன் கூட இதை வச்சு ஒரு பாட்டு எழுதிப்போட்டான்...” அப்டியே நாஞ்சில் நாடன் சமனமடைந்து இசைக்குள் செல்வார்.

நான் பிறந்ததுமே என் மாமா என்னை எடுத்து முத்தியதாக அம்மா சொல்வர். அவர் ஒரு பெருங்குடிகாரர். ஆக பிறந்ததுமே குடிகார சகவாசம். இந்த நாற்பத்தைந்து வருடங்களில் பார்த்த மதுரசிகர்களில் போதையிலும் பிறர்க்கின்னா நினையா பெருந்தகையாளனாக நாஞ்சில் நாடன் ஒருவரை மட்டுமே பார்த்திருக்கிறேன்

நாஞ்சில் நாடன் என்றுமே தீவிரமான இசை ரசிகர். சிறுவயதில் திரையிசை நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் மேல் மோகம் அதிகம். எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களும் பிடிக்கும். அவரை திரையிசையில் இருந்து துரத்தியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. “அவங்க பாடினாலே ஆயிரம் கண்ணுடையா கொப்புடையம்மன் ஜிகினாப்பாவட கட்டிகிட்டு வந்து ஆடுகது மாதிரி ஒரு நெனைப்பு வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு..” ஒரு கல்யாண அழைப்பிதழில் பெண் பெயர் ஈஸ்வரி என்று போட்டிருந்ததைக் கண்டே நாஞ்சில் நாடன் கடுப்பானதை நினைவு கூர்கிறேன்.
“பொண்ணுக்கு குரல் நல்லாருக்காதுண்ணு நெனைக்கேன். ஒரு மாதிரி பேஸ்வாய்ஸ்ல காப்பி குடிக்கேளாண்ணு நம்ம கிட்ட கேட்டாள்னா என்ன செய்யுகது?”

அப்படியே நாஞ்சில் நாடன் கர்நாடக இசைப்பக்கம் நகர்ந்தார். சிறுவயதில் அப்பாவுடன் சுசீந்திரம் திருவிழாவுக்குப்போய் பருப்புவடையும் சுக்குக் காப்பியும் குடித்து பனியில் அமர்ந்து கேட்ட சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு, மணி அய்யர் கச்சேரிகள் அவரை இசைக்குப் பதப்படுத்தியிருந்தன. அவரது அப்பா ஒரு நல்ல இசை ரசிகர். நாஞ்சில் நாடனின் ரசனை மிக நுட்பமானது. தொடர்ந்து இசை கேட்பவர். ஏராளமான இசை சேகரிப்பு உண்டு. கோவை இசைச் சங்கத்தில் தீவிர உறுப்பினர். டிசம்பரில் சென்னைக்குப்போய் கேட்பார். எல்லாரைப் பற்றியும் கறாரான கருத்துகள் உண்டு. ஆனால் இசை ரசிகர்களுக்கு இசை பற்றி வாய் ஓயாமல் பேசுவது பொதுவாகப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் வாயே திறப்பதில்லை. கேட்டால் மட்டுமே சொல்வார்

பொதுவாக அவருக்கு புதிய பாடகர்கள் மேல் அதிகப் புகார்கள் இல்லை. சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களைப் பிடிக்கும். ஆனாலும் அவரது ரசனை சம்பிரதாயமாக பாடுபவர்கள்மேல்தான். சென்னை புத்தகக் கண்காட்சியில் மதுரை டி.என்.சேஷகோபாலன் தனியாக நிற்பதைக் கண்டு பதின்பருவத்துக்கு மட்டுமே பொருத்தமான பரவசத்துடன் பாய்ந்துசென்று அவரிடம் அளவளாவினார். திரும்பும் வழியில் கரும்பு தின்ற எருமை போல ஒரு பாவனையுடன் “என்னா ஒரு பாட்டு...இல்ல? தனியா நிக்கிறார். பாருங்க ஒருத்தர் கூட கவனிக்கல்லை” என்றார்

“அவரு ஒரு சினிமால கூட நடிச்சிருக்காரே...”என்றேன்.

“ஆமா. தோடி ராகம்னு பேரு...குன்னக்குடி பட்டைநாதன்  எடுத்த படம். அந்தப் படத்தில நளினிய கட்டிப்பிடிக்கிறப்ப அவ முலை இவர் மேல படுறப்பல்லாம் இவர் முகத்தில ஒரு மரண வேதனை தெரியும் பாருங்க...கொடுமை!”

இதுவரைக்கும் நான் நாஞ்சில் நாடனுடன் பேசியதை வைத்துப் பார்த்தால் அவரது இலட்சியப் பாடகர் மதுரை சோமுதான். “பாவம்னா சோமு பாடணும். அப்டியே மறந்து போய்டுவார். என்ன ஒரு கார்வை. என்ன ஒரு வேகம். அப்டில்லாம் பாடகர்கள் சும்மா வந்திர மாட்டாங்க. நாம காத்து இருக்கணும்...”

யுவன் சந்திரசேகர் மற்றும் அவரது நிழலாக வரும் மதுரை தண்டபாணி இருவருக்கும் மதுரை மணி அய்யர்தான் உச்சம். மறுத்துப்பேசும் வழக்கம் நாஞ்சில் நாடனிடம் இல்லை. ஆனால் “நல்லாத்தான் பாடுவாரு... அவரு பாட்டில ஒரு வரி கோயில்பட்டி கடலமிட்டாய் மாதிரி பன்னிரண்டு துண்டாட்டுல்ல இருக்கும்” தமிழறிவும் கவிதை மீதான ஈடுபாடும் நாஞ்சில் நாடனை வரிகளையும் பொருளையும் சிதைத்துப் பாடுவதை ரசிக்க அனுமதிப்பதேயில்லை. அதனாலேயே அவருக்கு அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் மகாராஜபுரம் சந்தானத்தை அவர் மதித்தார்.

ஒருபோதும் இசையைப் பற்றிய மிகைச் சித்திரங்களை நாஞ்சில் நாடன் அளிப்பதில்லை. லா.சா.ரா போல கட்டைவிரலைச் சுற்றி பாம்பு பிணைந்தேறி கால்வழியாக சிரசில் படமெடுக்கும் அனுபவமெல்லாம் அவருக்கு இல்லை. அதே சமயம் ராகம் தாளம் என்ற கணக்கு வழக்கு விவகாரமும் அவரிடம் இல்லை. அருணா சாய்ராம்  கச்சேரி கேட்டுவிட்டு என்னிடம் ·போனில் சொன்னார். “நல்ல பதமான பாட்டு. சித்திரைமாசத்திலே மணல்திட்டு நடுவிலே ஓடை மாதிரி சன்னமாட்டு தண்ணி ஓடும் பாருங்க. நல்லா தெளிஞ்சு, சத்தமே இல்லாம. அடக்கமான பொண்ணு சேலை முனிதியை கையால பிடிச்சுட்டு மெல்ல நடக்கிற மாதிரி, அந்தமாதிரிப் பாட்டு...”

முழுக்க முழுக்க ஒரு பெரும் கலைஞனின் ரசனை அது. ஒரு கலையைப் பார்த்து நாக்கை சுழட்டுவதும் தோள்தட்டி ஆர்ப்பரிப்பதும் எப்படியோ அக்கலையை இழிவுபடுத்துகிறது என்பது என் எண்ணம். கலைஞர்கள் கலையுடன் தனித்திருக்கக் கற்றவர்கள். நாஞ்சில் நாடனால் கேட்கப்படுவதென்பது அந்த பாடகனின் பெரும் வரங்களில் ஒன்று– அவர்கள் அதை அறியுமளவுக்கு நம் பண்பாடு வளரவில்லை என்றாலும்.
 

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
 
நாஞ்சில் நாடன் எம்.எஸ்.ஸி படிப்பை முடித்த பிறகு வேலைதேடி பம்பாய்க்குச் சென்றார். அதற்கு முன் அவரது நகர அனுபவம் என்பது மாதுரை நகரின் ‘கிழ தாசி போன்ற’ வைகையும் தூசியும் கருமை படிந்த கோபுரங்களும் சுந்தரேஸ்பரரின் விபூதியும்தான். அவசரமாக நாகர்கோயில் ஒழுகிணசேரி தையல்காரரிடம் தைத்த, எல்லா விதமான சுப்ரமணியன்களுக்கும் பொருந்தகூடிய பாண்ட்டும் சட்டையும் அணிந்து ஒல்லியான உடல் மீது பதைக்கும் கண்கள் கொண்ட பெரிய தலையும் பவ்யமான சிரிப்புமாக பம்பாய்க்குச் செல்லும் நாஞ்சில் நாடனை இப்போதும் காணமுடிகிறது. நவீனத் தொழில் நாகரீகம் சுழித்து அலறி ஓடும் மாநகரத்தில் விக்டோரியா டெர்மினலில் நாஞ்சில் நாட்டிலிருந்து தகரப்பெட்டியுடனும் கரிமுகத்துடனும் வந்திறங்கும் ராமசாமிகள், சுப்ரமணியங்கள், கணபதியா பிள்ளைகள், அம்புரோஸ¤கள், தாவீதுகள் நடுவே அவருக்கும் ஒரு இடம் காத்திருந்திருக்கிறது. அதை எப்படியேனும் சென்றடையும் வைராக்கியம் அவரது நெஞ்சுக்குள் வறுமையால் உருவாக்கப்பட்டிருந்தது.

நாஞ்சில் நாடனுக்கு பம்பாய் என்றால் எறும்பரித்துக் கொண்டு செல்லும் புழுபோல நகரும் மாநகர் மின்ரயிலும், தெருவை அறுத்துச்செல்லும் சாக்கடையை பிரீ·ப் கேஸ¤டனும் ஷ¥க்காலுடன் தாவிக்கடக்கச்செய்யும் இடுங்கிய தெருக்களும்  கக்கூஸ் போக முறை வைத்துக் காத்திருக்கும் அறையும் இரவுத்தூக்கத்திற்கு முன் நெஞ்சில் தெளிந்து வரும் நாஞ்சில் நாட்டு நினைவுகளும்தான். தன் கதைகளில் மீண்டும் மீண்டும் அந்தச் சித்திரத்தை நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

“பம்பாய்க்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு. எங்கியும் சாப்பிடலாம். எங்கியும் தூங்கலாம் யாரும் கேக்க மாட்டாங்க. பம்பாய் மாதிரி சீப்பா சாப்பாடு கெடைக்கிற எடத்தை பாத்ததே இல்லை. பாவ்பாஜி ரெண்டு சாப்பிட்டா  ஏப்பத்தில மணமா இருக்கும். மறுநாளைக்கு கூட மணம் இருக்கும், வேற மாதிரி...” என்றார் நாஞ்சில் நாடன்.

“சப்பாத்தி நல்லா சொளவு மாதிரி குடுப்பான். தொட்டுக்கிட உப்பும் வினிகரும் போட்ட பெரியவெங்காயம் போதும்ணாக்க ஒரு பிரச்சினையும் இல்ல. ஒரு சோடா கலர் குடிக்கிற காசிலே சாப்பிட்டுடலாம். ரொம்ப குளிர் கெடையாது. டிசம்பர் ஜனவரி தவிர மத்த நாட்களில ஒரு மாதிரி சமாளிச்சுகிட்டு தூங்கிடலாம். ·பாங்க் இல்லாட்டி பட்டை அடிச்சா கொசுக்கடி தெரியாது. கொசுதான் தலைசுத்திக் கஷ்டப்பபடும்.. ஏழைகளுக்கு ஏத்த நகரம்....”

“பம்பாயில் சேட்டுகளுக்குப் பெரிய பந்தா எல்லாம் கிடையாது” என்றார் நாஞ்சில் நாடன். அவர்கள் பரம ஏழைகளையும் மனிதனாக மதித்தார்கள். காரணம் அவனும் சில்லறைக் காசு வைத்திருக்க வாய்ப்புண்டே. சேட்டு முயன்றால் அந்தப் பணம் அவரது முந்திக்கு வரக்கூடியதுதானே? நடுத்தெருவில் கண்டஸா காரை நிறுத்தி வைத்து கதவை பாதித் திறந்து தையல் இலையில் பானிபூரி பேல்பூரி சாப்பிடும் சேட்டு குதப்பும் பலூன் வாயில் சிறிய சிவந்த உதடுகளுடன்  சொந்தமாக அதட்டி மேற்கொண்டு சட்டினி வாங்கிப் போட்டுக் கொள்வார். சாப்பிடுவதற்கென்றே ஆண்டவன் படைத்த உயிரினமான சேடாணி கொடுத்த காசுக்கு கடைசித்துளி வரை சட்டினி வாங்குவதற்காக கணவனுக்கு ஊக்கம் அளிப்பாள்.”

“ஒரு மாதிரி நியாயத்துக்குக் கட்டுபட்ட ஊர். அநியாயத்த பத்தி நினைக்கணுமானா ஞாயித்துக்கிழமை நினைச்சாத்தான் உண்டு. அண்ணைக்கு தோத்தி குர்தா நனைச்சுக் காயப் போடணும். கடைக்கண்ணிக்கு போகணும். மாசந்தோறும் அளவு மாறுத பொண்டாட்டிக்கு ஜாக்கெட் தைக்க குடுக்கணும்.... எல்லா கஷ்டத்திலும் ஒரு நட்பும் உறவும் இருந்தது அங்க ஜெயமோகன். எனக்கு பம்பாயை பிடிச்சிருக்கான்னு கேட்டா பிடிச்சிருக்குண்ணு தான் சொல்லணும். ஆனா எப்பமும் அங்கேருந்து தப்பி வாறதைப்பத்தியே தான் நினைச்சிட்டிருந்தேன்.”

நேர் எதிராக அவரது ‘வீரின’மங்கலம் பாசத்தைச் சொல்லலாம். அதை அவருக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டால் பிடிக்கவில்லை. அங்குள்ள ‘குடிக்கிற தண்ணியிலே குஞ்சாமணியை விட்டு ஆழம் பார்க்கிற’ வெள்ளாளார்கள் , உளுந்தங்களியும் முந்திரிக்கொத்துமாக நகரப்பேருந்துக்கு நிற்கும் போது சர்வதேச உளவு நிறுவனங்களுக்கு உரிய கண்களுடன் ஆட்களை நோட்டம் போடும் வெள்ளாட்டிகள், வெற்றிலைப்பாக்குக் கடைகளில் தினத்தந்தியில் ‘நடிகை அசின் தொழிலதிபராமே?’ ‘ஆமாம். தொழில் விரிவாக நடப்பதாகக் கேள்வி’ போன்று குருவியார் அளிக்கும் ஞானப்பிசிறுகளை அள்ளி விழுங்கும் பிளஸ் டூ படிப்பாளிகள். பஸ்ஸை விட்டு ‘வீரின’மங்கலத்தில் இறங்கினாலே நாஞ்சில் நாடனுக்கு கசப்பும் கரிப்பும் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் வந்துகொண்டே இருக்க விரும்பும் ஊர் இது. அங்கே இன்னும் ஆறு ஓடத்தான் செய்கிறது. சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு முட்டளவு நீரில் திருப்பதியில் கொடிமரத்தடியில் சாமிகும்பிடுதல்போல விழுந்து குளித்து துவட்டிப் போகலாம். .ஆற்றங்கரை முழுக்க  சடை விரித்த ஆலமரங்கள். கல்யாணத்துக்கு பந்தல்கால் நாட்டும்போது ஆற்றங்கரையில் ஒரு ஆலமரக்கிளை நடும் வழக்கம் அவர் ஊரில் உண்டு. பல மரங்கள் இப்போது படர்ந்து பந்தலித்துவிட்டன. “பிது எங்க சித்தப்பா சித்திய கட்டுறப்ப நட்டமரம்...” கல்யாணம் ஆனவர்கள் பேரன் பேத்தி எடுத்து கனிந்து தளர்ந்துவிட்டார்கள். விழுதோடிப்பரவும் மரத்துக்கு முறித்த கிளைகளின் வடுவல்லாமல் ஒன்றும் பங்கம் இல்லை.

நாஞ்சில் நாடன் அவர் படித்த பள்ளியில் ஒரு இலஞ்சிமரம் நட்டார். “நான் நட்ட மரம் பாத்துக்கிடுங்க. இந்தா தண்டி இருக்கு. நாம போனாலும் அது அங்க நிக்குமில்லா?”என்று சொன்னபோது பெரிய கண்ணாடிச்சில்லுகளில் மரக்கிளைநிழல்கள் ஓடும் கார் வேகத்தில் பின்னகர்ந்தன. உணர்ச்சியை அவதானிக்க முடியவில்லை. “செகண்ட் ஷோ சினிமா விட்டால் அம்பது பைசா பொரிகடலையை தின்னுட்டு திருப்பதிசாரம் வழியாட்டு நடந்தே வந்திருவோம். இப்ப நெனைச்சா முகுது வலிக்குது”

அந்தக் காலத்தில் நாஞ்சில் நாடன் சரியான தீனா மூனா கானா. திமுக பதவிக்கு வந்த முதல்தேர்தலில் அம்பாசிடர் காரில் மைக் கட்டி தொண்டை உடையும்வரை செந்தமிழில் சொல்லடுக்கிப் பிரசாரம் செய்தவர். அண்ணாத்துரை இறந்தபோது மொட்டைபோட சென்னைபோகவேண்டுமென காசுக்குப் பரிதவித்து சித்தப்பாவிடம் அடிவாங்கி அமைந்தவர். இப்போது என்ன சொல்கிறார்? “அப்ப காமராஜ் சொன்னார் தமிழ்நாட்டில் விஷ விருட்சம் உள்ளே நுழைஞ்சிட்டுதுன்னு...  அது சரியான பேச்சு...இனிமே லேசிலே வெட்ட முடியாது.” பின்னர் அவரது மனம் திராவிட இயக்கத்தின் தமிழ்க் கூச்சலை ஒரு கசப்பான சிரிப்புடனல்லாது எண்ணிக் கொண்டதில்லை.

வேலை மாறி நாஞ்சில் நாடன் கோயம்புத்தூருக்குத்தான் வந்தார். அது ஒரு தமிழக பம்பாய்தான் அவருக்கு. இருபது வருடங்களாக அங்கே வாழ்ந்தும் அவர் அந்நிலத்தவராக ஆகவில்லை. முள் ஆடி ஆடி வீரநாராயண மங்கலத்திலேயே வந்து நிற்கும். ஆனால் அவருக்கு கொங்கு கவுண்டர்கள் மேல் உள்ள மோகம் அபாரமானது. “அருமையான ஆட்கள்... அன்பா நடந்துகிடுயது எப்டீண்ணு அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிடணும்...” அவருக்கு அவரது பயணங்களில் பல சிற்றூர்களில் மனமுவந்து உபசரித்து அன்னமிட்ட கவுண்டச்சிகளின் நெஞ்சை நிறையவைக்கும் நினைவுகள் உண்டு. பல உறவுகள் மிக ஆழமானவை. இப்போதும் தொடர்பவை. “மண்ணில பாடுபடுத ஜனம். அவங்களுக்கு அதுக்குண்டான ஒரு பண்பாடு இருக்கு. அது மத்தவங்களுக்கு வராது” என்பார் நாஞ்சில் நாடன்

சமீபத்தில் ஓய்வுபெற்றபின் ஊருக்கே வந்துவிடுவார் என்று வேதசகாய குமார் சொன்னார். வரமாட்டார் என்றேன். அவருக்கு சற்று தூரத்தில் நின்று வீரநாராயண மங்கலத்தைப் பார்த்தால்தான் அதை சகித்துக் கொள்ள முடியும். கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வீட்டில் இருந்துகொண்டு ‘நல்ல காலம் பொறந்து’ வீரநாராயண மங்கலம் ஏகும் பொன்னாளைக் கனவு கண்டுகொண்டிருப்பார் என்றேன். அவரால் கொங்குமண்ணை விட்டு வரவே முடியாது. அதுதான் நடந்தது.

நாஞ்சில் நாடன் அரைநாள் விடுப்பில் வீர நாராயண மங்கலம் வந்தால்கூட கிட்டத்தட்ட பத்து சொந்தக்காரர் வீட்டுக்கு போய் வருவார். தம்பி தங்கைகள், சித்தி பிள்ளைகள், மச்சினிகள். மருமக்கள், கொழுந்தியாள்கள். போகிற வழியில் நல்லதாக ஒரு கட்டு முருங்கைக்காய் வாங்கிக் கொள்வார். மலிவாகக் கிடைத்தால் பூமுள் கொண்ட வெண்டைக்காய் நாலு கிலோ. அல்லது ஊதாப் பளபளப்புடன் கத்திரிக்காய். சாளைமீன்கூட வாங்கிக் கொண்டுபோனதாக வேதசகாயகுமார் சொன்னார். மதினிகளைப் பொருத்தவரை அவர்கள் ஆத்மாவுக்குள் நுழையும் சாவிக்கொத்துடன் தேவதூதனே வந்ததுபோலத்தான். நாஞ்சில் நாடனுக்குச் சமைக்கும்போதுதான் ஒரு பெண்ணின் உச்சகட்ட திறமை வெளிப்படுமென நினைக்கிறேன்.

திரும்பி கோவை போவதும் இதே சீரில்தான். குட்டிச்சாக்கில் நாலுகிலோ பொடியரிசி. [மச்சினிச்சி குடுத்தா. கொஞ்சம் பயறு உடைச்சுபோட்டு கஞ்சிவச்சு துள்ளி நெய்யும் விட்டு பப்படமும் ஊறுகாயும் என்னமாம் ஒரு துவரனும் வச்சு குடிச்சா மனசு நெறைஞ்சிரும்] மனதை வாய் வழியாக நிரப்ப முடியும் என நான் இதுவரை உணர்ந்ததில்லை. பெரிய மதினி கொடுத்த தேங்காய்; தம்பி கொடுத்த கருப்பட்டி; அம்மா கொடுத்த ஊறுகாய்; [இதை ஒரு முறை எனக்கும் கொடுத்தார்கள். அந்த அம்மா ஒரு ஊறுகாய் மேதை] அதன் பின் நாஞ்சில் நாடனே வடசேரி சந்தைக்கு முன்னால் போய் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து வாங்கும் முரல் கருவாடு [கருவாடுன்னா அதுக்கு ராஜா முரல்தான். வாளைய வேணுமானா அமைச்சராட்டு வலப்பக்கம் இருத்தலாம்] தவறவே விடாத முந்திரிக்கொத்து, வாழைக்காய் சிப்ஸ், காராச்சேவு ஆகியவற்றை கோட்டாறு ஆஸ்பத்திரி முக்கில் நின்று வாங்கினால் பயணம் தொடங்கியாகிவிட்டது. கிட்டத்தட்ட நிலவுக்குப் போகும் ஆம்ஸ்ஸ்டிராங் போல. சமீப காலம் வரை நானும் வேதசகாய குமாரும் பஸ் வரை போய் நின்று பேசி பிரியாவிடை கொடுப்போம்..

அடுத்த நாளுக்கு அடுத்த நாளே நாஞ்சில் நாடன் மீண்டும் சுடச்சுட நாகர்கோயிலில் தென்படுவார். “கொழுந்தியா மக சடங்காயிட்டா... நாளைக்கு தண்ணி ஊத்து..” என்பார்.

“இப்பதானே வந்திட்டு போனீங்க?”

“அதுக்கென்ன செய்யியது? அவ சும்மால்ல வட்டாடிட்டு இருந்தா ஒரு க்ளூ கூட குடுக்கல்லியே”.

அதன் பின் வரிசையாக வளைக்காப்பு, பிரசவம், இருபத்தெட்டு கெட்டு, பிள்ளைகளுக்கு அவ்வையாரமன் சன்னிதியிலே காதுகுத்து, மொட்டை போடுதல்... இருக்கவே இருக்கிறது சிவலோகப் பதவியை அடைந்த மூத்தபிள்ளைவாள்களின் துட்டி விசாரணை, காடேத்து, பதினாறு அடியந்திரம். இன்னபிற. நாஞ்சிநாடன் வராமல் சொந்தத்தில் சடங்கு சம்பிரதாயம் இல்லை. “அவாள் இருக்கபப்ட்டது ஒருமாதிரி ஐஸரியம் பாத்தேளா?” என்று ஒருவர் ஒரு சடங்குவீட்டில் என்னிடம் சொன்னார்.

கல்யாணம் என்றால் அது ஒரு பலநாள் திருவிழா. பெண்பார்க்க வருவதில் தொடக்கம். பின்னர் நிச்சய தாம்பூலம், தாலிக்குப் பொன்னுருக்கு, பந்தல்கால் நாட்டல், தாலிகெட்டு, மறுவீடு, அடுக்களை பார்த்தல் எல்லாம் கழிந்து சகல கறிகளும் சென்றுசேரும் பரம்பொருளான  பழங்கறியில் ஆல்கஹால் அதிகரித்த பிறகே விடைபெற்றுச் செல்வார். நாஞ்சில் நாடன் உறவு வட்டாரங்களில் கல்யாணச் சமையலுக்கு குறிப்படி எழுதும் கௌரவம் முற்றிலும் அவருக்கே. வேறு ஆள் போட்டால் சரியாக வராது. இத்தனை கோட்டை அரிசிக்கு எத்தனை பனம்பாய், எத்தனை அகப்பை தேவை என்பதை யூக்ளிட் போல கணித்துச் சொல்லிவிடுவார் என்பார்கள். [நாஞ்சில் நாடன் கணிதம் முதுகலை] அவர் பட்டியல் போட்டார் என்றால் வழக்கமாக மண்ணாந்தைகள் தவிர்த்துவிடும் விஷயங்களை முதலிலேயே போட்டுவிடுவார்.

அவரது கல்யாணவருகைகளில் எல்லாம் எனக்கும் வேதசகாய குமாருக்கும் அழைப்பிதழ் உண்டு. நாங்கள் முந்தினநாளே ‘கறிக்கு வெட்டுக்கு’ போய் சேர்ந்துவிடுவோம். நாஞ்சில் நாடன் சட்டையைக் கழற்றி துவர்த்தை தலையில் கட்டி தகரநாற்காலியில் சப்பணமிட்டு அமர்ந்தால் மொத்தக் காய்கறியையும் அவர்தான் வெட்டப்போகிறார் என்று தோன்றும். ஆனால் ஒரு ஏழுமணி அளவில் பையை திறந்து உள்ளிருந்து போளி, மைசூர் பாகு வகையறாக்களை எடுப்பார். சர்க்கரை வியாதிக்காரரான வேத சகாய குமார் தவிர்த்துவிடுவார். அதைவிட சர்க்கரை அளவு அதிகமானவரான நாஞ்சில் நாடன் “ஒருநாளைக்கு சாப்பிடலாம்... சும்மாவா வெள்ளக்காரன் மாத்திரயக் கண்டுபிடிச்சிருக்கான்?” என்பார்.

இலக்கியச் சர்ச்சைகள்; வேடிக்கைகள்; சிரிப்பு;. சுடச்சுட கட்டன் சாயா; அதன் பின் முதலில் பொரித்த வாழைக்காய் சர்க்கரை உப்பேரி; பின்னர் சூடாகக் கொட்டாங்கச்சியில் புளிசேரி வகையறாக்கள்; பிரம்ம முகூர்த்ததில்  வெல்லக்குமிழி வெடிக்க பிரதமன்;. அதன்பின் காலைச் சிற்றுண்டிக்கு ரசவடையாக ஊறவேண்டிய பருப்புவடையும் மீண்டும் கட்டன் சாயாவும். “இப்டி ராத்திரி பூரா இருந்து இலக்கியம் பேசினா நல்லாத்தான் இருக்கு இல்ல?” காலையில் நான் அரைப்போதை நிலையில் வீட்டுக்குப் போய் கட்டிலில் குப்புறப் படுப்பேன். நாஞ்சில் நாடனுக்கு மறுநாள்தான் வேலையே. பந்தியில் சாப்பிடவேண்டும். பந்தி விசாரிக்க வேண்டும். ஒரு முந்நூறு நாநூறு புன்னகைகள், முகமன்கள். ஐம்பது அறுபது விபூதிப் பூசல்கள். சாயங்காலம் கூப்பிட்டால் “ஜெயமோகன், மிஞ்சின அடைப்பிரதமனை சூடு பண்ணி குடிக்கேன். நல்லா கெட்டியாட்டு ஆகியிருக்கு. தேங்காப்பால் போட்டு சூடு பண்ணி எளக்கினது... நல்லாருக்கு”

தன் பெரிய குடும்பத்தை கடுமையான வறுமையிலிருந்து மீட்டு கரைசேர்த்த முன்னோடி நாஞ்சில் நாடன். ஒருகட்டம் வரை அவரது உழைப்பும் தியாகமும்தான் அவர் குடும்பத்துக்கு உணவாகியிருக்கிறது. இன்று அவரது குடும்பம் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததாக உள்ளது. எல்லா தம்பிகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பொதுவாக இம்மாதிரி தியாகிகளை முற்றிலும் உதாசீனம் செய்யும் தம்பிதங்கைகளைப் பற்றித்தான் நாம் அறிந்திருக்கிறோம். நேர் மாறாக நாஞ்சில் நாடன் அவரது குடும்பத்துக்கு மதிப்பு மிக்க அரிய வரம் போல. அவரது தம்பிகளுக்கு மட்டுமல்ல, கொழுந்திகளுக்கும் கூட.

குற்றாலத்தில் பழைய குற்றாலம் செல்லும் பாதையில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் சமாதியிடத்தில் ஆழமான அமைதியில் பசுக்களின் கழுத்துமணி ஒலிக்கும் சூழலில் நினைவு விழா. அஞ்சலி நடந்துகொண்டிருக்கும்போது ஒரு ஃபோன் வந்தது நாஞ்சில் நாடனுக்கு. அவர் அனைத்தையும் மறந்து உரையாட ஆரம்பித்துவிட்டார். மறுமுனையில் அவரது தம்பியின் சிறு மகன். கொஞ்சல்கள், குலாவல்கள், வாக்குறுதிகள், நலம் விசாரிப்புகள். அந்தச் சூழலில் இருந்த அமைதியில் அவரது குரல் உரக்க ஒலிக்க நான் தர்மசங்கடமாக உணர்ந்தேன். இங்கிதத்தின் உச்சி என நான் நினைக்கும் நாஞ்சில் நாடன் அல்ல அது. சங்கடமாக இருந்தது. நாஞ்சில் உருகி வழிந்துகொண்டே இருந்தார்.

திரும்பி வரும்போது அருகே வந்த ஒரு முதியவர் சொன்னார். “கரெக்டா அவாள் அஞ்சலி நடக்கிறப்ப பிள்ளைச்சத்தம் கேட்டுது பாத்தேளா? இவரு கொஞ்சிப்பேசினது ரொம்ப நல்லா இருந்தது. அவாள் அப்டித்தான். பிள்ளைகள்னாக்க உசிரு. மீசையும் கண்ணுமா பிள்ளையளைப்பாத்து சிரிக்கிறப்ப அப்டியே சாமி மேலேருந்து வந்தது மாதிரி இருக்கும்...”என்றார்.

“நீங்க பாத்திருக்கிகளா?” என்றேன்.

“சின்னவயசுல பல தடவ திருநெல்வேலியிலே அவாள் வீட்டுக்குப்போய் பாத்திருக்கேன். பிள்ளையளைப்பாத்தா அவாளும் ஒரு பிள்ளைதான். எல்லாத்தையும் மறந்திருவார்...”

‘எல்லாவற்றையும்’ மறக்க வைக்கும்படி குழந்தைக்குரலால் ஈர்க்கபப்டுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. “பிள்ள வச்சிரு.. பெரியப்பா அப்றமா பேசுகேன்” என்று சொன்னால் அது நாஞ்சில் நாடனே அல்ல. சொந்தம் பந்தங்களில் நண்பர்கள் வீடுகளில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என்றும் பிரியவரான சுப்பிரமணியம் தாத்தா அவரது ஆகிருதிக்கு முழுக்கச்செல்வதே குழந்தைகளுடன் விளையாட, தவழ ஆரம்பிக்கும்போதுதான்.
 

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
 
December 28th, 2007
வேலையும் மனைவியும் அமைந்தவன் பாக்கியசாலி என்பார்கள். நாஞ்சில் நாடனுக்கு ஆச்சி அமைந்தது நல்லூழ் – இரண்டுபக்கமும்தான். ஆனால் அவருக்கு வேலை அமையவில்லை. ரசனையும் நகைச்சுவையும் உடையவரான நாஞ்சில் நாடன் உள்ளே செலுத்தப்பட்ட சட்டையும் பாண்ட்டும் பூட்சும் ப்ரீ·ப்கேஸ¤மாக ஊர் ஊராக அலைந்து, மில் கம்பெனிக்காரர்களைச் சந்தித்து, பச்சைப்புன்னகை பெய்து, ரெடிமேட் ஆங்கிலத்தில் பேசி ,அவர்களுடைய கடுமையான முகங்களில் மெல்லமெல்ல புன்னகையைத் தருவித்து, சரக்குக்கு ஆர்டர் எடுத்து வந்து, மேலும் எடுத்திருக்கலாமே என்று மேலதிகாரியின் ராஜதந்திரப் புன்னகை தவழும் வசைக்கு ஆளாகி, ‘தாயோளி’ என்று இனிய புன்னகைக்குள் நினைத்தபடி வீடுதிரும்பும் வாழ்க்கை கொண்டிருந்தார்.

1994 ல் மில் எந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ‘பிராடி அன் கோ’வின் கோவை விற்பனை அலுவலகத்தில்  நான் அவரைப்பார்க்க முதல்முறையாகப் போயிருந்தபோது குளிர்வசதி செய்யபப்ட்ட சிறிய அறைக்குள் யாரிடமோ “நீங்க செருப்பால அடிக்கது என் பாக்கியமுல்லா? சரி சரி... வாறேன் நேரில வந்து உங்க கால நக்குதேன்... ஓக்கே” என்று ஆங்கில மொழியில் வேறு சொற்களில் நயமாகச் சொல்லி என்னைப் பார்த்து “நாறத்தேவ்டியாப்பொழைப்பு ஜெயமோகன். நான் முடிவு எடுத்தாச்சு...” என்றார்

நான் பீதியுடன், “என்ன?” என்றேன்.

“ரிசைன் பண்ணப்போறேன். பாத்தேளா?” என்றார்.

சீராக டைப் அடிக்கப்பட்ட ராஜினாமா கடிதம். “சர் ஐ ஹியர் பை இன்கிளைண்ட் டு சே த ·பாலோயிங் ·பாக்ட்ஸ்..” என்று ஒரு கண்ணீர்க் காவியம்.

“நல்லா நாலுபக்கமும் யோசிச்சுப் பாத்தாச்சு. மனுஷனுக்கு வாயும் வயிறும் மட்டுமில்ல மானமும் ஈனமும் இருக்கில்லா? சும்மா... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு ஜெயமோகன். புழுவானாலும் போட்டு சமுட்டினாக்க எதுத்து கடிக்கும் பாத்துக்கிடுங்க... என்னான்னு நெனைக்கானுகோ?”

“அதுசரி... ஆனா இப்ப ராஜினாமா செய்யுகதுண்ணா பல பிரச்சினை இருக்கே?”

“இருக்கு. ஆனா நான் எல்லாத்தையும் தீர விசாரிச்சாச்சு...” நாஞ்சில் நாடன் ஒருசில காகிதங்களைப் பரப்பினார். அதில் விரிவான கணக்குகள். “பாத்தேளா ஷேரிலே இவ்ளவு இருக்கு. கொஞ்சம் பிஎ·ப் கிராஜூடி தருவான். மிச்சம் அங்கிண இங்கிண சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு... சங்கீதா படிப்ப முடிக்குதவரைக்கும் ஓட்டிக்கிடலாம். பின்ன அவ என்னமாம் சம்பாதிப்பாள்ல? பின்ன என்ன ஜெயமோகன், மனுஷனானா மனுஷன மாதிரி வாழணும். இது என்ன பொழைப்பு?”

“சரி.ஆனாலும்...”

‘ஒரு ஆனாலும் இல்ல.. ஊருக்குப்போயி நாலு காய்ச்சில் சேம்பு சேனைண்ணு நட்டாலும் ஒருத்தனுக்கும் தலைய குனிக்காம மனுஷனா வாழலாம்... நான் முடிவுசெய்தாச்சு...”

“யோசிக்கணும்..”

“என்னத்த யோசிக்கிறது? பாருங்க உக்காந்து நிம்மதியா ஒரு கதை எழுத முடியல்ல. ஒரு புஸ்தகத்த ஒழுங்கா வாசிச்சு முடிக்க முடியல்ல... உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன ஜெயமோகன், பாதிக்கதைகளை சும்மா பணம் குடுக்கனேன்னு அவசர அவசரமாட்டு எழுதிக்குடுக்கேன்... இனி அதெல்லாம் முடியாது. அவ்ளவுதான். எழுதியாச்சு. உள்ளதச் சொல்லப்போனா இத எழுதினம்பிறவுதான் ஒரு நிம்மதி மனசுக்கு...”

நான் அதே உச்சகட்ட அச்சத்துடன் சுந்தர ராமசாமிக்கு ·போன்செய்தேன். “சார் நீங்க நாஞ்சில் நாடன்கிட்ட பேசுங்க. ரிசைன் செய்யப்போறார்னு சொல்றார்”

“சொல்லிட்டாரா? சரிதான்”

“இல்ல சார்...”

“ஜெயமோகன், அவரு அந்த லெட்டரை எழுதி பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகும்னு நினைக்கிறேன். அதெல்லாம் அப்டி குடுத்திர மாட்டார்... பேசாம வாங்கோ... அதிலே புதிசா ஏதாவது நல்ல ஸென்டன்ஸ் இருந்தா அப்றமா சொல்லுங்கோ”

மறுநாள் நான் பிராடிக்குப் போனேன். நாஞ்சில் நாடனின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கரிய மலையாளி தாண்டிச்சென்றார்.

“ஜெயமோகன் இந்த ஆளை நல்லா பாத்துக்கிடுங்க... என்னைக்குன்னாலும் இவன் உசிரு என் கையாலதான்... நான் செயிலுக்கு போகணும்ணு ஜாதக விதி இருக்கு பாத்துக்கிடுங்க......”

எதிர்காலத்தில் கொலையாகப்போகும் சிரியன் கிறிஸ்தவர் உள்ளே ·போனில் தன் விதியைப்பற்றி அறியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

“யாரு இவரு?”

“எங்க மேனேஜர்...” நாஞ்சில் நாடன் அப்போது துணை விற்பனை மேலாளர். “என்ன அழும்பு பண்ணுகான் தெரியுமா? அயோக்கியபப்ய. ஒரு வேலையும் செய்யுகதில்ல. மில் ஓனர்மாரிட்ட ஐஸா கொழைஞ்சு பேசுவான்... மத்தவனுக அவனுக்கு மயித்துக்குச் சமானம்.... நான் என்ன சொல்லுகேண்ணா இந்த மலையாளிகளையே சேத்துவச்சுக் கொல்லணும்... என்ன நெனைக்கிறீய?”

“செய்யவேண்டியதுதான்” என்றேன்

“ஸ¤ப்ரமண்யம்!” என்று பக்கத்து கேபினில் மலையாள அழைப்பு. “சார்!” என நாஞ்சில் நாடன் பாய்ந்தோடினார்.

நான் இங்கிருந்து பார்க்கையில் அது ஒரு அலுவலக உரையாடல் போலவே தெரியவில்லை. காதல்கொண்ட இருவர் மத்தியில்தான் அப்படி ஒரு பூரிப்பும் முகமலர்ச்சியும் வெளிப்பட முடியும். சிரிப்பு முகமன் கொஞ்சல் குலாவல். நாணமும் உண்டு.

கதவைச் சாத்திக் கொண்டு வந்து ·பைலை மேஜைமேல் போட்ட நாடன் “...நிக்க வச்சு கொளுத்தணும்...” என்றார்.

கோவை ராம்நகரிலேயே அலுவலகம் இருந்ததனாலும் நாஞ்சில் நாடன் எந்த இலக்கிய நாடோடிக்கும் சாப்பாடும் வழிச்செலவும் முடிந்தால் திரவச்செலவும் அளிப்பவர் என்பதனாலும் பொதுவாக அவ்வலுவலகத்தில் இலக்கிய நடமாட்டம் அதிகம்.

நாஞ்சில் நாடனின் குணத்தில் முக்கிய அம்சம் அவரால் எவருக்கும் எதற்கும் ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொல்ல முடியாது என்பதே. “என்ன சொல்லுகேண்ணா...”, “அதாவது இப்ப இருக்கிற நிலைமையிலே”, ” உள்ளதச் சொல்லப்போனா...”, என்றெல்லாம் தான் ஆரம்பிக்க முடியும். கொஞ்சம் கட்டாயபப்டுத்தி அவருக்கு கால் லிட்டர் விளக்கெண்ணையைப் புகட்டிவிடமுடியும். சிந்தி எருமை மேலேயே கடித்து உறிஞ்சும் இலக்கிய ஒட்டுண்ணிகளுக்கு இது நல்ல மென்மையான சருமம்.

புகழ்பெற்ற கவிஞர் அடிக்கடி வருவார். அவரது வருகை கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியது. பரட்டைத்தலை. பரிதாபகரமான தாடி. பவ்யத்தின் பவ்யமான தோற்றம். “சுப்ரமணியம் சார்வாள் இருக்காரா?” நாஞ்சில் நாடன் மனமுருகி சாப்பாடு போட்டு செலவுக்காசும் கொடுத்து அனுப்புவார். போனவேகத்திலேயே பந்து திரும்பிவரும். இம்முறை அம்பிக்குள் இருந்து அன்னியன் வெளியே வந்திருக்கும். “டேய் நாஞ்சில் நாடா, வெளியே வாடா.. டேய் உனக்கு கவிதை பத்தித் தெரியுமாடா? டேய் விடிய விடியப் பேசுவோம்டா... பேசுவோமா? டேய், புதுமைப்பித்தன் போனான் நான் வந்து நிக்கிறேண்டா...டேய்...”

நாஞ்சில் நாடன் லாட்ஜில் அறைபோட்டுக் கொடுத்த கவிஞர்கள் அங்கிருந்து பெட்ஷீட் போர்வைகளை மடித்து எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார் என நாலாபக்கமும் கடன் வாங்கிவிட்டு ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பத்துவருஷம் முன்னால் வந்து நின்றுபோன சிறுபத்திரிகைக்கும் வரவே வராத சிறுபத்திரிகைக்கும் அவரிடம் ஆயுள் சந்தாவை கட்டாயபடுத்தி கண்ணீர் மல்கவைத்து வாங்கியிருக்கிறார்கள்.

சிற்றிதழ் சார்ந்த ‘ஒட்டுண்ணித் தொந்தரவு’ எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாலும் நாஞ்சில் நாடன் அளவுக்கு அதனால் துன்பமடைந்தவர்கள் குறைவு. நாஞ்சில் நாடன் மூக்குக் கண்ணாடியை ஏற்றிப்போட்டபடி “...குறிவச்சு நம்மளைத்தேடி வராங்க ஜெயமோகன்... பயம்மா இருக்கு” என்றார்.

“ஒண்ணுரெண்டு வாட்டி குடுக்கப்பிடாது, நாஞ்சில். முரட்டுத்தனமா துரத்தி விட்டிரணும்” என்றார் [தமிழினி] வசந்தகுமார், “நம்மகிட்ட எவனுமே வரதில்லியே”

“அப்டி பாக்க முடியுமா? அவனும் நம்பியில்லா வாரான்?” நாஞ்சில் நாடன் சொன்னார் “வந்து எறங்கியிருதான். கையிலே அஞ்சு பைசா இல்லாம... என்ன செய்றது? அவன் ஊரவிட்டு போனாத்தானே நமக்கு நிம்மதி...”

“இதெல்லாம் கோழைத்தனம்” வசந்தகுமார் சொன்னார். “இந்த ஒட்டுண்ணிகள் என்ன எழுதியிருக்காங்க? ஒண்ணுமே இல்ல. சரி எழுதவேண்டாம், படிப்பாங்களான்னு கேட்டா அதுவுமில்ல. அப்ப அவனுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? நாலு எழுத்தாளர்கள் அட்ரஸ் கையிலே இருந்தா இலக்கியவாதி ஆயிடலாமா? தமிழிலே நல்லா எழுதக்கூடிய பல இளைஞர்கள் கடுமையா வேலைசெய்து குடும்பத்த காப்பாத்திட்டு ஓய்வு நேரத்த சேமிச்சு எழுதிட்டிருக்காங்க. அவங்களுக்கு யாரும் ஒண்ணும் பண்றதில்ல...”

“அதுவும் சரிதான்...”, நாஞ்சில் நாடன் பெருமூச்சுவிட்டு, “அண்ணைக்கு பாருங்க ஆடிட்டிங். மேலேருந்து ஏகப்பட்டபேரு வந்திருக்காங்க. நான் மேனேஜர் ரூமிலேருந்து வந்து பாத்தா என் ரூமிலே இவரு உக்காந்திருக்கார். எனக்கு திக்குன்னு ஆகிப்போச்சு. ராத்திரி கரெண்டு போய் சிடி உள்ள சிக்கிகிட்டா ஒரு வெப்ராளம் வரும் பாருங்க... அதுமாதிரி.. நெலை கொள்ளல்ல... பாத்தேன் ஒரு முந்நூறு ரூபாய எடுத்துக் குடுத்தேன். என்னமோ சாமிப்பிரசாதத்த வாங்கிகிடுகது மாதிரி பொத்திக் கும்பிட்டு வாங்கிட்டு போறார்...”

“என்ன சிடி?” என்றேன்

“அப்றமா வந்தாரா?” என்றார் வசந்த குமார்

“அதானே நேக்கு. முந்நூறு ரூபாய்க்கு சரக்கு ஏத்திட்டாருண்ணாக்க அவரால கடைவாசலை தாண்டமுடியாது. மறுநாள் காலம்பறதான் எந்திரிப்பார்..”

“என்ன சிடி அது நாஞ்சில்?”

“இப்டி குடுத்தே ஒரு தலைமொறைய உருவாக்கிட்டீங்க நாஞ்சில். இப்ப பாருங்க அதேமாதிரி அடுத்த வரிசை ஆளுங்க உருவாகியாச்சு.... நீங்கதான் ஆபீசராச்சே. பியூன் கிட்டே சொல்லி இனிமே உள்ளவிடாதீங்கன்னு சொன்னா என்ன?”

“அதெப்டி? பிரம்மஹத்தி வாசலிலே உக்காந்திரும்ணுல்லா சாஸ்திரம்?”

“என்ன சிடி அது?”

“சும்மா இருங்க ஜெயன்... நடுவிலே பூந்துட்டு...” வசந்தகுமார் சொன்னர் “...இதெல்லாம் அனாவசியம். எந்தத் தொழிலுக்கும் அதுக்குண்டான ஒரு தர்மம் உண்டு. திருடன்கூட ஒரே வீட்டில நாலுவாட்டி நுழைய மாட்டான்”

ஒருவழியாக நாஞ்சில் நாடன் ஓய்வு பெறும் நாளை நெருங்கினார். அவரது கணிதத் திறமை உச்சத்தில் வெளிப்பட்ட நாள்கள். “எக்ஸ்டென்ஷனுக்கு வாய்ப்பிருக்காண்ணு தெரியல்ல... கம்பெனிக்கு நம்மளை தேவை இருக்கு... நைஸா பேசிப் பாப்போம்” ஒன்றும் நடக்கவில்லை. கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒருவருடம் ஒன்பதுமாதம் ஆறுமாதம்.. நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள்... இரண்டாயிரத்தி நாநூறு மணி நேரம்..

ஒரு தாளில் நிமிடக் கணக்கில் அதைப்போட்டு வைத்திருந்தார். “சார் இது ஒரு நல்ல கதையா இருக்கும் போலிருக்கே” அக்கதை ஓம் சக்தியில் வெளியாகியது. ஓய்வு பெறும்போதுள்ள செலவுகள் முதலீடுகள் வட்டிகள் வரவுக் கணக்குகள். ·போன் செய்தாலே பிலாக்காணம்தான். ‘...ஒண்ணும்புரியல்ல ஜெயமோகன். சங்கீதாவுக்கு படிப்பு முடியதுக்கு இன்னும் நாள் இருக்கு. பையன் வேற எஞ்சீனியரிங் போறான்... என்ன செய்யதுண்ணு தெரியல்ல.. தம்பிக இருக்கானுக. ஒண்ணும் பயப்படாதேண்ணு அவனுக ஆயிரம் மட்டம் சொல்லியாச்சு. இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு நாம கஷ்டப்பட்டு செய்தாத்தானே ஒரு நெறைவு...”

ஓய்வுநாள். உச்சக்கட்ட ரத்த அழுத்தம் இருந்த நாள்கள். ” ஒருவழியா ஏறக்கட்டியாச்சு... இனி அந்தப் பார எளவ தொடவேண்டாமுல்லா.... இனி ஒரு மனுஷன மாதிரி வாழணும்... நாவல் ஒண்ணு யோசிச்சிருக்கேன். எழுதணும். நம்ம பூர்வீகம் முனிஞ்சிக்கரப்பட்டி மூலக்கரைப்பட்டி. அங்கேருந்து முப்பாட்டன் காலத்திலே வந்து வீரநாராயண மங்கலத்திலே குடியேறியிருக்காங்க. எங்க அம்மைக்கு நெடுமங்காடு. மலையாளமெல்லாம் மறந்துபோச்சுண்ணாலும் மீன் கொழம்பிலே மலையாள வாசனை வீசும்... எல்லாத்தையும் பத்தி ஆற அமர உக்காந்து ஒரு நாவல் எழுதிரணும்... என்னன்னு சொல்றீக? சும்மா இதுவரை பூட்ஸ¤ம் டையும் கட்டிட்டு வாழ்ந்தாச்சு.. நெறைய படிக்கணும். புஸ்தகம் குமிஞ்சு கெடக்கு வீட்டிலே”

ஓய்வு பெற்று ஒரு இரண்டுவாரம் சட்டைபோடாமல் சாயவேட்டியும் ஈரிழைத்துவர்த்துமாக வீட்டில் இருந்தபின் வாழ்க்கையே காலியாகக் கிடந்தது. ஆகவே அதுவரை செய்துவந்த அதே ‘சீண்டிரம் பிடிச்ச’ தொழிலை தனியாகச் செய்வதென ஆரம்பித்தார். நாஞ்சில் ஏஜென்ஸீஸ் தொடக்கம். புரப்ரைட்டர்  ஆச்சிதான். சுப்ரமணியம் பிள்ளை அலுவலக உதவியாளர் கம் டிராவலிங் சேல்ஸ்மேன். கையில் பிரீ·ப் கெஸ¤ம் ஷ¥வுமாக மீண்டும் அதே மில்கள் தோறும் பயணம்.

“சும்ம இருந்தா ஒருமாதிரி வெக்ஸ் ஆயிடுது.... அதாக்கும் கெளம்பியாச்சு...” நாஞ்சில் நாடனுக்கு ஆழமான அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அலுவலகத்தில் சம்பாதித்த அதே தொகையை, சமயங்களில் அதைவிடவும் அதிகமாகக் கூட, அதேவேலையை தனியாகச் செய்து சம்பாதிக்க முடிந்தது. வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டுமே வேலை. அவரது ‘கிளையண்டு’களில் பாதிபேருக்கு அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று தெரியும். அவருக்காகத்தான் அவரது நிறுவனத்துக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

“மோசம் போயிட்டேன் ஜெயமோகன். அப்பவே வெளியே வந்து இதைச் செஞ்சிருந்தா இப்ப காரும் பங்களாவுமா எங்கியோ இருந்திருப்பேன்... இப்ப மில்தொழிலே டவுனாக கெடக்குத காலகட்டம்... இப்பவே நமக்கு இந்த ஆர்டர் வருதுண்ணா.. என்னத்த சொல்ல...”

“சார்... எண்ணையபோட்டு மணலிலே பொரண்டாலும் ஒட்டுற மணல்தானே ஒட்டும்...” நான் மேலும் பழமொழிகளுக்காக மனதுக்குள் துழாவினென். ‘காதறுந்த ஊசியும் வாராது கடைவழில்க்கே’ அது பொருத்தமாக படவில்லை. வேறு? ஒன்றும் தகையவில்லை

நாஞ்சில் நாடன் ஆழமாகப் பெருமூச்செறிந்தார். ஆத்மாவே புகைந்து கருகும் மணத்துடன் வெளியேறுவதுபோல.

“என்னமாம் எழுதினீங்களா சார்?”

“என்னத்த எழுத? நாவல் அங்கிண கெடக்கு. முடிக்கணும். நாலஞ்சு கட்டுரை எழுதினேன். கும்பமுனி சிறுகதை இருக்கு, எழுதணும். நாளைக்கு மதுரைக்குபோய்ட்டு அப்டியே ராஜபாளையம் போய் வந்து மறுநாளே பாலக்காடு போகணும். அடுத்த திங்க்கக்கிழமை நேரம் கெடைக்கும்ணு தோணுது பாப்போம். எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்குல்லா?”
 

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
 
மகிடபதியை நாஞ்சில் நாடன் வெறுப்பது இயல்பே. அவரை ஒருவகை கோமாளியாகவே அவர் கருதிவந்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கே வருவதென ஒரு வரைமுறை கிடையாது. சிவஞான போதமும் கைவல்யநவநீதமும் கற்ற முதுபெரும் சைவர் மனகாவலப்பெருமாள் பிள்ளை விஜிடபிள் பிரியாணியை விழுங்கும்போதுதான் மகிடத்தின் கனத்த குளம்படியோசை கேட்கிறது. என்ன சாஸ்திரம் படித்து என்ன புண்ணியம்? “...இல்லாட்டியும் வயசானா வீடடங்கி கெடக்கணும். கிட்டுதேண்ணுட்டு அள்ளி இப்டியா விழுங்குகது?” என்று இளைய தலைமுறைக்கு ஏகடியப்பொருளாகி புளியமரத்தில் தாழ்ந்த சாதி பேய் வந்து அருகே தொங்க தொங்கும் இழிநிலைக்கு ஆளாகிறது பிள்ளைவாளின் ஜீவாத்மா. [மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் விஜிடபிள் பிரியாணியும்]

நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து நுனியிலை பரப்பி உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது. புதிய பண்பாட்டை நாஞ்சில் நாடனின் படைப்புகளை வைத்து நாம் சுருக்கமாக ‘வெஜிடபிள்பிரியாணி·பிகேஷன்’ என்று சொல்லலாம். காலனைஸேஷன், போஸ்ட் காலைனைசேஷன், மாடர்னைசேஷன், சான்ஸ்கிரிட்டைஸேஷன் போன்ற பொருந்தாப் பதங்களுக்கு பதிலாக வீரநாராயண மங்கலத்து மண்ணின் மைந்தரால் உருவாக்கபப்ட்ட இந்தப்பதம் மேலும் பொருந்துவதாகும்.

மகிடம் உண்மையில் நாஞ்சில் நாடனைத் தேடிவரவில்லை. கொங்குநாட்டில் தெருவுக்கு நாற்பது சுப்ரமணிய[க்கவுண்டர்]கள்,  பழனிச்சாமி[க்கவுண்டர்]கள். பையன்களானால் செந்தில் இல்லாவிட்டால் கார்த்திக். வேறு பேரிட்டால் கவுண்டர் அடையாளம் இல்லாமலாகிவிடும் போல. [நடுவே ஒரு நினைவு மின்னல். வீரப்பனை என்கவுண்டர் வைத்து போட்டுத்தள்ளிய சேதி வந்தபோது தர்மபுரியில்  தொலைபேசி லைன்மேன் பழனிச்சாமிக் கவுண்டர் சொன்னது. "செரி போகுது... என்ன ஆனாலும் கொன்னவனும் நம்ம ஆளு] யாரோ ஒரு கிழக்கவுடருக்காகப் போன எருமையின் பாதஒலியை அரைத்தூக்கத்தில் கிடந்த நாஞ்சில் நாடன் கேட்டார். உடனே மகள் மேற்பார்வையில் ஆஸ்பத்திரி, ஆஞ்சியோ பிலாஸ்ட். எஸ்.வி.சுப்பையா போல நாஞ்சில் நாடன் மெய்ப்பாடுகளைக் காட்டியதாகவும் டாக்டர் கடுப்பாகி “இந்த அளவுக்கு நீங்க சீரியஸா எடுத்துக்கிட வேண்டியதில்லை... இது சும்மா ஒரு செஸ்ட் கஞ்செக்ஷன்தான். அட்டாக்கெல்லாம் இல்லை....” என்றதாகவும் செய்தி.

அதில் நாஞ்சில் நாடனுக்கு ஏமாற்றம் தான்; ஆனால் ஆஞ்சியோபிளாஸ்ட் அவருக்கு பிடித்திருந்தது. நல்ல ‘குடும்பத்தில்பிறந்த’ வார்த்தை. கேட்டாலே கம்பீரமாக இருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு பிரஷர் பிடிக்காது. அது அவரை ஒரு சைக்கிள் டியூபாக உணரவைக்கிறது. நீரிழிவு என்று சொல்பவன் வீட்டில் ஜலபானம் இல்லை. அதென்ன, பேரிலேயே இழிவு.’ ஆஞ்சியோ பிளாஸ்ட்!’  ஏதோ நல்ல வெள்ளைக்காரி போல ஒலிக்கும், சொல்லச்சொல்ல நாவிலினிக்கும் பெயர். வெள்ளைக்காரிகளை நாஞ்சில் நாடனுக்கு பிடிக்கும். “குதிரை மாதிரில்லா இருக்காளுக. அவளுக நம்மளப் பாத்தா நாமள்லா வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிடணும்...”

நான் உடனே அரசு பஸ் பிடித்து முப்பத்துமூன்று இடங்களில் முக்கி முனகி நின்று நகர்ந்து விடிகாலையில் நாஞ்சில் நாடனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ஈஸி சேரிலமர்ந்து தினமணி படித்துக் கொண்டிருந்தார். நோய் விசாரிக்க வந்ததாகச் சொல்லவில்லை. உடனே போய் படுத்துக்கொண்டு நோய் விபரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்று பயம். நான் நோயாளிகளைப் பார்க்கபோனால் பொதுவாக ஜோக் அடிப்பதே வழக்கம். எனக்கு நோய் வந்தால் அருண்மொழி கொஞ்சி மம்மு ஊட்டிவிடவேண்டுமென ஆசைப்படுவேன். கல்யாணத்துக்கு முன்னால் பாலக்கோட்டில் வைரல் காய்ச்சல் வந்து இருபதுநாள் கிடந்தபோது அறை நண்பன் குப்புசாமி மம்மு ஊட்டிவிட்டு முத்தமெல்லாம் கூட கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறான்.

ஜோக் போய்க்கொண்டே இருந்தது. வாய்விட்டுச் சிரித்தாலும் ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. சந்து தேடி பாம்பு பரிதவிக்கிறது.

பின்னர் மெதுவாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளுவது போல, ஒரு தொடக்கம் “...ரொம்பக் கஷ்டப்படுத்திப்போட்டு ஜெயமோகன்”

“கஷ்டமெல்லாம் எங்க இல்ல நாஞ்சில்... நீங்க அந்தக் கதையிலே எழுதினீங்களே... அதுபேரென்ன முள்ளெளித்தைலம். அற்புதமான கதை. இப்டித்தான் எங்க ஊருலே..”

சிரிப்பு நடுவே ஆச்சி வந்து டீ கொடுத்தார்கள்.. “கெடந்து பயப்படுகா!”

நாஞ்சில் துணிந்துவிட்டார். போனால் போகிறது. இங்கிதம் எல்லாம் பார்த்தால் மயிருக்காகாது. “பயப்படாம பின்ன என்ன? ஆஞ்சியோ பிளாஸ்ட்னாக்க சும்மாவா? இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட்னா ஒரு மாடர்ன் டெக்னிக் கேட்டேளா? என்னல்லாம் கண்டுபிடிக்கானுகோ” சகல தடைகளையும் உடைத்து வெள்ளம் பிரவாகமாகியது. ரத்தக்குழாய்க்குள் பலூனைச் செலுத்துதல். அதை தள்ளிக்கொண்டே சென்று கொழுப்பு இருக்குமிடத்தில் [வெள்ளாளர்களுக்கு வாயைச்சுற்றி அதிகம்] முட்டி உடைத்தல்.

“.. சும்மா அப்டியே தூர்வாரி குப்பக்கூளமெல்லாம் அள்ளி ஓட்டிவிட்டா தெளிஞ்சுட்டு போகும்லா? இப்ப ஒரு ·ப்ரெஷ்னெஸ் இருக்கு ஜெயமோகன். என்னைக்கேட்டா இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்றது உடம்புக்கு ரொம்ப நல்லது. அறுத்து எடுத்து இம்சை பண்ணாம பதமா செய்யுகான்லா?”

எனக்கே ஒரு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தாலென்ன என்று சபலம் தட்டிவிட்டது. பிறந்ததில் இருந்து தூர் வாரியதேயில்லை. எனக்குள் ஓடும் பலூனை கற்பனைசெய்தேன். கிச்சுகிச்சு மூண்டது. “ஜாலியா இருக்குமா சார்?”

“என்ன ஜாலி? நம்ம நெஞ்சுலயும் முதுகிலயும் தொண்டையிலயும் கண்ட கண்ட வயரையெல்லாம் செருகி எல்லாத்தையும் ஆங்கங்கே ஸ்டீல் மிஷின்களுக்கு கனெக்ஷன் குடுத்து... ஒண்ணைப்பாத்தா சும்மா கன்யாகுமாரில பவுர்ணமிக்கு அலையடிக்க மாதிரி ஓடுது. இன்னொண்ணில அனக்கமே இல்ல. எளவு, நாம செத்தாச்சா மிச்சமிருக்காண்ணும் அதைப்பாத்து சொல்லிகிட முடியாது. மூவாயிரம் நாலாயிரம்ணு ஒண்ணுல டிஜிட் ஏறிக்கிடே போகுது. இது என்னது நம்ம சிந்தனைக்க மதிப்பை காட்டுத மிசினாண்ணு ஒரு சந்தோஷம்... பின்ன ஒண்ணும் தெரியாது. அனங்காம கெடக்க வேண்டியதுதான். நாம நம்மள ஒரு எலக்டிரானிக் சர்க்யூட் மாதிரி ·பீல் பண்றப்ப என்னத்தை அனங்குகது போங்க. நான் எச்சிலைக்கூட்டி முழுங்கல்ல. ஒண்ணுமே நெனைக்கவும் இல்ல. என்னமாம் செய்யப்போய் உள்ளுக்குள்ள ஷார்ட் சர்க்யூட் ஆகிபோனா என்ன செய்ய? பிள்ள குட்டி இருக்கே?”

தமிழ்நாடு முழுக்க ஆஞ்சியோ பிளாஸ்ட் என்னும் கலையை பரப்பியதில் நாஞ்சில் நாடனுக்கு முக்கியமான பங்கு உண்டு. உற்சாகம் ஆவேசம். ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், பெற்ற பிள்ளைகளைப்போல கவனித்துக் கொண்டார்கள். கடுமையான டயட் சொல்லபப்ட்டது. நாஞ்சில் நாடன் அதை சிரமேற்கொண்டார். உண்ணும் உணவு, தின்னும் வெற்றிலை, உடுக்கும் உடை, கிடக்கும் பாய், அருந்தும் பிராந்தி அனைத்துமே டயட் நினைவில். ஆனால் பேசக்கேட்டால் அது டயட் தானா என எளிய ஆத்மாக்களுக்கு ஐயம் கிளம்பலாம்.

“அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்.... சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்...”

இதைப்போல பயத்தம் சுண்டல் [நல்லா தேங்காப்பூ துருவிபோட்டு தாளிச்சு எடுத்தா மணமாட்டு இருக்கும்] முருங்கைக்கீரை [ஊரிலே நெய் காய்ச்சினாக்க அதில முருங்கயிலையைப்போட்டு பொரிச்சு எடுப்பாங்க. அப்டி ஒரு ருசி அதுக்கு] வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ ஆகிவிடும் அபாயம் உண்டு.

“இதிலே நல்ல விஷயம் என்னான்னா அவர் வீட்டிலேயே இப்ப டாக்டர் இருக்கா. அப்டி யாராவது கூடவே இருந்து கவனிச்சுகிட்டாத்தான் அவரு ஒரு கண்டிரோலிலே இருப்பார் ஜெயன்” என்றார் வசந்தகுமார். நாலுவாரம் கழித்து ·போனில் நாஞ்சில் நாடனிடம் பேசினேன். “டயட்டெல்லாம் இப்ப ஒண்ணும் இல்ல.... நேரமே இல்ல ஜெயமோகன். அலைச்சலிலே போகுது வண்டி. பின்ன ஒரு ஆறுதல் என்னான்னா வீட்டிலேயே டாக்டர் இருக்கா. ஒண்ணு கெடக்க ஒண்ணுண்னாலும் அவ இருக்கப்பட்ட ஒரு தைரியம் இருக்கு பாருங்க”

‘சுப்ரமணிய பிள்ளை, கைமருத்துவம் — அலோப்பதி ‘ என்று போர்டு மாட்டி கோவையில் பிராக்டீஸ் செய்யுமளவுக்கு இப்போது நாஞ்சில் நாடனுக்கு மருத்துவ அறிவு விருத்தியாகியிருக்கிறது. எந்த நோயைப் பற்றி சொன்னாலும் விரிவாக அதன் ஊற்றுமுகம் ஊறடைக்கும் கல் எல்லாவற்றையும் விளக்கி அந்த நோய் நமக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையை உருவாக்கிவிடுவார். விரிவான மருந்து பெயர்கள், டாக்டர்கள் சொல்வது போலல்லாமல் சைவ மணம் கமழச் சொல்லப்படும். தீராத ஐயங்களைக் கேட்கப்போய் “உங்களுக்கு ஒண்ணும் நோய் கெடையாது. சும்மா நச்சுபண்ணாம கெடங்க” என்று சங்கீதா சொல்லிவிட்டதில் வருத்தம். “ஆஸ்பத்திரியிலே டாக்டர்கள் பெத்த பிள்ளை மாதிரி இருக்காளுக. பெத்தபிள்ளை டாக்டர் மாதிரி பேசுகா”.

இப்போது ஏறத்தாழ இரண்டுவருடங்களாக தலைமறைவாக திரிகிறார் என்று அவரே சொன்னார். இதயம், கல்லீரல், மண்ணீரல் எதையுமே பரிசோதிக்கவில்லை. “நல்ல்லாத்தான் இருக்கேன். இப்ப என்ன? ஒரு ஆறுமாசம் நல்லா டயட் இருந்து எல்லாம் சரி பண்ணின பிறவு போகலாம்னு இருக்கேன். இப்ப போனா டாக்டர் வருத்தப்படுவார். பாவம் நல்ல மனுஷன்...” டயட்டெல்லாம் சும்மா. ஆடவல்லானின் ஆட்டத்தை டயட்டை வைத்தா மானுடப் பதர்கள் நிறுத்திவிடப்போகின்றன? “ஆச்சு ஜெயமோகன்... வயசும் அறுபதாயாச்சு. எல்லாம் கூடி எண்ணிப் பாத்தா கொஞ்சம் புக்கு இருக்கு. பிள்ளையள கரையேத்தியாச்சு... இனிமேப்பின்ன என்ன?”

“அறுபது ஒரு வயசா? ”

“அது நியாயம். அதைச்சொன்னா செறுக்கிவிள்ளை கேக்க மாட்டேங்கியாளே...”

நாஞ்சில் நாடன் தலைக்கும் மீசைக்கும் சாயமடித்துக் கொள்வதில்லை. சீனிக்கடுகு கலவை. அருகே நின்றால் நான் அவருக்கு சமவயதாகத்தெரிவேன், நான் பதினைந்துவருடம் சின்னவன். என்னை இளம்பெண்கள் அங்கிள் என்றும் குழந்தைகள் தாத்தா என்றும் அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் சமவயதாளரான கல்யாணி [வண்ணதாசன்] இன்னும் முதுமையாகத் தெரிவார். வண்ணநிலவன் நாஞ்சில் நாடனுக்கு மாமாபோல. நாஞ்சில் நாடன் பூரண ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார் என்று படுகிறது. கும்பமுனி இப்போதுதான் திண்ணைக்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்.

நாஞ்சில் நாடனின் இளமையின் ரகசியம் என்ன? அத்தனை சிக்கல்கள் நடுவிலும் அவருக்கு வாழ்க்கை ஒரு பெரும் ரசனை வெளியாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் சிரித்து ரசித்து மகிழ்ந்தபடித்தான் வாழ்ந்திருக்கிறார். சாப்பாடு, கவிதை, நண்பர்கள். நாஞ்சில் நாடன் என்று நினைக்கும்போதே இந்தப் பதினைந்து வருடங்களில் பல்வேறு நகரங்களில் விடுதியறைகளில் தங்கி விடிய விடிய பேசி சிரித்து வயிறு வலிக்க குப்புறப்படுத்து உருண்டு எழுந்து சொக்கிப்போய் விடிகாலையில் டீ குடிக்க நடந்துபோன நினைவுகள்தான் எழுகின்றன.

பேசிச் சலித்ததேயில்லை. என் நோக்கில் நல்ல கலைஞர்கள் எல்லாருலமே பெரும் நகைச்சுவை விற்பன்னர்கள். சிலர் எழுத்தில் அது இருக்கும் சிலரில் அது வெளிபப்டாது. ஜெயகாந்தன் எழுத்தில் நகைச்சுவை பொதுவாக அரிது. ஆனால் அவரது அவையில் எப்போதும் சிரிப்பு முழங்கும். நாஞ்சில் நாடனின் சிரிப்பில் ஒருபோதும் பகைமையும் நக்கலும் கூடியதில்லை. ஒரு பதினைந்துவருடம் அருகேயிருந்து அறிந்தபோதிலும் மனம் குன்றும் ஒரு சொல் ஒரு முகமாற்றம் கூட அறிந்ததில்லை.

நானும் அவரும் மரபின் மைந்தன் முத்தையாவும் நண்பர்களும் குற்றாலத்தில் குளிர் ஏறும் இரவுவரை பேசிவிட்டு நள்ளிரவில் துண்டை தலைக்குக் கட்டிக் கொண்டு சிரித்துக் குலுங்கியபடி அருவியைக் காணச் சென்றோம் ஒருமுறை. தன்னந்தனிமையில் தனக்குள் ஆழ்ந்து பெய்துகொண்டிருக்கும் பேரருவியில் அவருடன் சென்று நின்றேன். அவர் அருவியில் குளிப்பது அம்மையப்பன் சன்னிதியில் கைகூப்பி நிற்பதுபோலிருக்கும். தோள்குறுக்கிக் கோர்த்த கைகளை மார்பில் அமுக்கி பரவசத்தில் சுளித்த முகத்துடன். வெடவெடவென ஆனந்த நடுங்கல் வேறு.

மீண்டு வந்து நின்றபோது இருளுக்குள் தலைகீழ் வெண்தழல்போல விழுந்த நீரையே பார்த்துவிட்டு நாஞ்சில் நாடன் சொன்னார். “போரும் ஜெயமோகன். என்னத்த தேடுகோம். எங்க பாத்தாலும் இப்டி நெரப்பி வச்சிருக்கே... பாத்து அனுபவிச்சு மாளல்லியே... ஒண்ணுலயே நின்னாக்கூட ஒரு ஆயுசு பத்தாதே... என்னத்துக்குன்னு இருக்கு... இதெல்லாம் இப்டி இருக்கிறப்ப...” கண்களில் கண்ணீரின் திரை. மேலே ஏந்திய முகம் “...எப்டி ஒரு ஆவேசம் பாத்தேளா? இந்தா நிக்கேண்டா நான்னு சொல்றாப்ல.. இது போரும், வேற ஒண்ணுமே வேண்டாம்!”

ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். நாஞ்சில் நாடனை அவன் மேலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

“நூறாண்டிரும்!” என்று நெஞ்ச நிறைவதல்லாமல் இக்கணம் வேறென்ன சொல்ல?
முற்றும்.
 கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு | ஆசிரியர் : ஜெயமோகன் | வெளியீடு : யுனைடட் ரைட்டர்ஸ். | விலை: 50.00 ரூபாய்
------------------
 புதினங்கள்: தலைகீழ் விகிதங்கள், மாமிசப்படைப்பு, என்பிலதனை வெயில்காயும், மிதவை, எட்டுதிக்கும் மதயானை,
 சிறுகதை தொகுதிகள்: தெய்வங்கள், ஆடுகள் ஓநாய்கள், வாக்குப்பொறுக்கிகள், உப்பு, பேய்க்கொட்டு, பிராந்து,
 கவிதை: மண்ணுள்ளீப்பாம்பு

கட்டுரைகள்: நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை, தீதும் நன்றும்
 
 
நாஞ்சில் நாடனின் கும்பமுனி
ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் பானர்ஜியின் பிரத்யோகத் டாக்டரில் (ஆரோக்கிய நிகேதனம்) நாம் காண்பதும் அதன் ஆசிரியர்களையே.

கதாபாத்திரங்கள் ஆசிரியனின் ஆடிப்பிம்பங்கள். உடைந்து சிதறிய, பரவிக் கிடக்கிற, வளைந்து நெளிந்த, பல வண்ணம் காட்டும் கண்ணாடித் துண்டுகள் அவை. அவற்றினூடாக அவன் ஒளிந்து விளையாடவும் தன்னைக் கண்டடையவும் ஒரே சமயம் முயல்கிறான். எழுத்தாளனுக்கும் கதாபாத்திரங்களுக்குமிடையேயான உறவு என்பது மிக மிகச் சிக்கலானதும் நுட்பமானதுமாகும்.

ருஷ்ய நாவல்களுக்குப் பிற்கால ருஷ்ய விமரிசகர்கள் எழுதிய நீண்ட முன்னுரைகளில் பெரும் நாவல்களின் மூலக் கதாபாத்திரங்கள் யார் எவன் என்ற விரிவான ஆய்வுகள் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘போரும் அமைதியும்’ (தல்ஸ்தோய்) போன்ற நாவல்களின் ஆசிரியரின் முகங்களுடன் அவரது மனைவி, மனைவியின் தங்கை, பாட்டிகள், தந்தை, தாத்தாக்கள் எனப் பலரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். படைப்பில் சமூக யதார்த்தத்தின் சித்திரத்தை இயந்திரத்தனமாகக் கண்டடைய முற்பட்ட மார்க்ஸிய ஆய்வே இவ்வாறு ‘குடும்ப யதார்த்தையும்’ கண்டடைந்தது. உண்மையில் இது அத்தனை எளியது அல்ல.

ஒரு கதாபாத்திரத்திற்குள் எழுத்தாளன் நுழைவது எப்படி? அதற்குப் பல காரணங்கள். ஒன்று, ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தை தான் நேர் வாழ்வில் பார்த்தபடியே படைப்பில் அளிக்க விரும்பும் படைப்பாளி யதார்த்தத்தைச் சித்திரிப்பவனின் கதாபாத்திரத்தில் குடியேற்றுகிறார். தன் கண்களை அவனுக்கு அளிக்கிறார். அவன் வழியாகப் பேச முற்படுகிறார். இதுவே பொதுவாகக் காணப்படும் வழிமுறையாகும். இரண்டு, தான் ஆக விரும்பும் பிம்பம் ஒன்றைத் தன் இயல்பாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைப் படைப்பாளி உருவாக்கும்போது அவன் ஆளுமை அந்தக் கதாபாத்திரம் மீது படிகிறது. மூன்று, கதைக்களத்திற்குள் ‘வாழும்’ அனுபவத்தைத் தானும் அடையும்பொருட்டு படைப்பாளி தன்னை ஏதோ ஒரு கதாபாத்திரத்திற்குள் கூடு பாயவிடுகிறான். படைப்புடன் அதன் மூலம் விளையாடுகிறான்.

நவீனக் கதைகூறல் உத்தியின் ஒரு பகுதியாக ஆசிரியனே கதைக்குள் வருவது இப்போது வழக்கம். ஒருபோதும் இந்த ஆசிரியனை நாம் அப்படைப்பாளியாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அவன் தானே திட்டமிட்டு, தன் சுயபோதத்துடன், படைப்புக்குள் தன்னைக் கொண்டுவருகிறான். இந்தத் திட்டமிடலும் சுயபோதமும் அக்கதாபாத்திரத்தைப் பெரிதும் குறுக்கி தட்டையான ஒன்றாக மாற்றிவிடுகின்றன. படைப்பில் எப்போதும் படைப்பாளியை ‘மீறி’ நிகழும் விஷயங்களுக்கே மதிப்பு. ஆசிரியன் ஆசிரியனாகவே வெளிப்படும் நாவலில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் உண்மையான ஆசிரியன் ஒளிந்திருக்கக்கூடும். சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ போன்ற நாவல்கள் இரண்டிலும் ‘பாலு’ என்ற பேரில் சுந்தர ராமசாமி தன்னைக் காட்டுகிறார். ஆனால் ஜே. ஜேயின் குணச்சித்திரத்திலும் எஸ்.ஆர்.எஸ்ஸின் குணச்சித்திரத்திலும் வெளிப்படும் சுந்தர ராமசாமியே மேலும் உண்மையானவர்.

இவ்வாறு ஒரு கதாபாத்திரத்தில் நாம் ஆசிரியனை ஏற்றிக்கொண்டபிறகு அவனுடைய கோணம், அவனுடைய மொழி நடை ஆகியவற்றின் வழியாக அவருடைய மொத்தப் படைப்புலகையும் ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாகக் கண்ணில் படாத பற்பல இலக்கிய நுட்பங்களையும் ஆழங்களையும் நாம் கண்டடைய இயலும். பல வகைப்பட்ட எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் ஒரு புனைவுலகில் வெளிப்படும் பல்வேறு கோணங்களுடனும் குரல்களுடனும் அது எப்படி முரண்படுகிறது அல்லது இணைகிறது என்பதை அவதானிக்க முடியும்.

ஆனால் இதை ஒற்றைப்படையாகச் செய்யலாகாது என்பதையும் கூறியாக வேண்டும். படைப்பாளியின் குரலாக வெளிப்படும் அக்கதாபாத்திரமே ஓர் ஆளுமையல்ல, ஒரு புனைவுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அந்தப் புனைவுக்குத் தேவையான கற்பனை ஓட்டங்கள் சமரசங்கள் தலைகீழாக்கங்கள் ஆகியவை அதில் நிகழ்ந்திருக்கும். இந்த மூன்று விஷயங்களையும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். தன்னைப் போன்ற அக்கதாபாத்திரத்தை அது வெளிப்பட்டதுமே படைப்பாளி அடையாளம் கண்டுகொண்டிருப்பான். உடனடியாக அவன் அதை முற்றிலும் கற்பனையான ஒரு சூழலில் நிறுத்துவான். அதன் தோற்றம், வயது, சூழல் அனைத்தையும் புனைந்து உருவாக்குவான்.

அது பேச ஆரம்பிக்கும்போது தன் படைப்பில் உள்ள முரண்பாடுகளை முழுக்க அக்கதாபாத்திரம் சந்திப்பதை உணரும் படைப்பாளி சமரசம் செய்ய ஆரம்பிப்பான். அக்கதாபாத்திரத்தின் குரல் ஆசிரியனின் குரலாக அதுவரை ஒலித்த அனைத்துக் குரல்களுக்கும் உரிய பொதுப்புள்ளியாக, சமரச மையமாக விளங்கும். அத்துடன் தன்னை ஒளித்துக்கொள்ள படைப்பாளி கதாபாத்திரச் சித்திரிப்பை தலைகீழாக்குவான். சிறப்பாகப் பேசத் தெரியாதவரும் நடைமுறையில் முசுடுமான சுஜாதா அவர் சாயலில் படைத்த வசந்த் வாயாடியாகவும் உற்சாகமானவனாகவும் இருக்கும் மர்மம் இதுவே. இத்தனை படைப்பு நுட்பங்களையும் கணக்கில் கொண்டே இதை நாம் ஆராய வேண்டும். இது இலக்கிய ரசனையின் ஓர் உத்தி மட்டுமே என்ற தெளிவும் நமக்கு இருக்கவேண்டும்.

நாஞ்சில்நாடனின் சிறந்த கதாபாத்திரம் ‘கும்பமுனி’தான்; சுந்தர ராமசாமிக்கு ஜே.ஜே. போல. நாஞ்சில்நாடனின் எழுத்து வாழ்வின் பிற்பகுதியில் உருவாகி வந்த இந்தக் கதாபாத்திரத்தை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. நாஞ்சில்நாடன் படைப்புகளில் மைய இடம் பெற்ற, கோபம் கொண்ட, அந்நியமான, அலைந்து திரிகிற இளைஞன் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட மறைந்த பிறகு கும்பமுனி பிறந்தார் என்பது. தலைகீழ் விகிதங்கள் (சிவதாணு) மாமிசப் படைப்பு (கந்தையா) என்பதனை வெயில் காயும் (சுடலையாண்டி) மிதவை (சண்முகம்) சதுரங்கக் குதிரை (நாராயணன்) எட்டுத் திக்கும் மதயானை (பூலிங்கம்) போன்ற நாவல்கள் அனைத்துமே பிறந்த ஊரால் துப்பி எறியப்பட்டு சென்ற இடத்தில் ஒவ்வாமல் உணர்ந்து, வந்து சென்றபடியே இருக்கும் மனிதர்களின் அனுபவங்களும் எண்ணங்களும் தொகுக்கப்பட்ட வடிவில் உள்ளன. இந்த வேகம் அடங்கி இந்தக் கதாபாத்திரங்கள் மறைந்தபின் கும்பமுனி வந்து சூரல் நாற்காலியில் அமர்ந்தார்.

கும்பமுனி நாஞ்சில்நாடனின் விருப்பப் பிம்பம். அநேகமாக அதை மறைந்த இலக்கியவாதியான நகுலனின் சாயலில் படைத்திருக்கிறார். ‘சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி’ நகுலனின் ‘மழை மரம் காற்று’ என்ற நீள்கவிதையில் இருந்தும் (அவரது வாழ்க்கையில் இருந்தும்) எடுக்கப்பட்டது. நகுலனுக்குரிய ‘நாண் அறுந்த நிலை’ கும்பமுனியிலும் உண்டு. ‘திரொளபதி அவள். வந்து போகும் அர்ச்சுனன் நான்’ என முன்வைக்கப்பட்ட (கொல்லிப்பாவை; நகுலன்) ஒரு சுசீலா, கும்பமுனிக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. நகுலன் முற்றிலும் கைவிடப்பட்டவராக உணர்பவர், ‘எனக்கு யாருமில்லை நான்கூட!’ என்று. கும்பமுனிக்கு எப்போதும் சமையற்காரர் துணை உண்டு.

உறவுகள் உண்டு. அனைத்தையும் விட முக்கியமான வேறுபாடு நகுலன் நிலமற்றவர் என்பது. அவர் வாழ்ந்த நிலத்தில் அவரது பாதம் ஊன்றவில்லை. அவர் மனம் வாழ்ந்த படைப்பிலக்கியங்களின் பக்கங்களே அவரது நிலம். மாறாக கும்பமுனி நாஞ்சில் நாட்டுக்காரர். சுத்தமான நாஞ்சில் தமிழ் பேசுபவர். காணத்துவையலும் கொடுப்பைக்கீரை கூட்டுக்கறியும் விரும்பி உண்பவர். நகுலன் ஐரோப்பிய நிழல். கும்பமுனி நாஞ்சில் நாட்டின் புராதனமான ஒரு மரம்.

நகுலன் மீது தன்னை ஏற்றும் நாஞ்சில்நாடன் திட்டவட்டமாக அதைத் தன்னிடமிருந்து மறைக்கிறார்.. கும்பமுனிக்கு வயோதிகம். நோய்கள். கண்ணும் செவியும் பிடியில் நிற்பதில்லை. ஆனால் குணாதிசயத்தில் நாஞ்சில்நாடன் அவருள் வந்து உறைகிறார். கும்பமுனி ஐரோப்பிய இலக்கியங்களுக்குள் அதிகம் முக்குளியிடுவது இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். கம்பராமாயணம், திருமந்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவையே அவரது மேற்கோள்களின் விளைநிலங்களான உள்ளன.

நகுலனில் அறவே இல்லாத ஒரு அம்சம் கும்பமுனியில் உள்ளது. அங்கதம். நகைச்சுவையின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் சாதாரணமாகச் செல்கிறது கும்பமுனியின் நாக்கு. நகுலனில் உள்ள ஒருவகை அப்பாவித்தனம் அவரிடம் இல்லை. கிழம் விஷமமானது. வாய்ப்புக் கிடைத்தால் ஊசி ஏற்றி அதையே கடப்பாரையாக மாற்றிவிடும். எல்லா வகையிலும் வாயாடியான கிழத்தை அவரது சமையற்காரர் அன்றி பிறர் சமாளித்துவிட முடியாது. கும்பமுனி நாஞ்சில்நாடனாக ஆவது இங்குதான்.

அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை போன்ற இலக்கிய மனவருத்தங்களுக்குப் புறமே நாடு போகிற போக்கைப் பார்த்து அடைந்த பொதுவான மனக் கசப்பும்தான் அவரிடம் உள்ளது. அவரைவிட அதிகமான நவீனச் சிக்கல்கள் காணத்துவையல் அரைக்கும் தவிசுப் பிள்ளையிடம் இருக்கும்போலும். கும்பமுனிக்கு உலகுமேல் ஏதும் ‘பராதிகள்’ இல்லை. அப்படி உறுதியாகவும் சொல்லிவிடமுடியாது. கிழத்தை உட்காரவைத்துக் கேட்டால் அவருக்கு பராதிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ‘போங்கலே வக்கத்தவங்களே’ என்று சொல்லிவிடுவார்.

கும்பமுனியில் இருந்து தொடங்கினால் அதற்கு நேர் எதிர் கதாபாத்திரமாக நாம் எதை உருவகிக்கலாம்? நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களிலும் வரும் அந்தக் கோபம் கொண்ட இளைஞனைத் தான். அது சிற்சில வேறுபாடு களுடன் விளங்கும் ஒரே மனம்தான். அதன் இயல்புகளை இவ்வாறு வகுத்துக் கூறலாம். அவன் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் பெரும்பாலும் வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை மட்டுமே அறிந்தவன்.

மறக்கமுடியாத சில அவமானங் களைச் சந்தித்து அவற்றின் வடுவை கடைசிவரை ஆத்மாவில் சுமந்து அலைபவன். அடிப்படையில் கோழை. ஆனால் ஓயாது முண்டி முன்னேறத் துடிக்கும் தீவிரம் உடையவன். எப்படியோ எங்கும் தன்னை நிலைநாட்டிக் கொள்பவன். வாழ்வு தேடி ஊரில் இருந்து செல்பவன், அல்லது துரத்தப்பட்டவன். சென்ற இடங்களில் அந்நியனாகவே உள்ளூர உணர்கிறான். திரும்பி வந்தால் ஊரிலும் அந்நியனாக உணர்கிறான். இரு எல்லைகள். நடுவே பயணத்தில் மட்டும்தான் அவனால் உற்சாகமே இருக்க முடிகிறது.

நாஞ்சில் நாடனின் இந்தக் கதாபாத்திரங்களின் ஓர் இயல்பை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஓயாமல் உள்ளூரப் பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் இவை. அந்தப் பேச்சு என்பது எப்போதுமே அங்கதமும் கசப்பும் கலந்த விமரிசனம்தான். இக்கதாபாத்திரங்கள் எதிர்ப்படும் ஒவ்வொன்றின் மேலும் தங்கள் விமரிசனத்தை விரித்த படியே உள்ளனர். ஆனால் வெளியே மௌனமான ஒரு புன்னகையும் உபச்சாரமொழிகளையும் வெளிப்படுத்துகின்றனர்.

மிதவையில் வரும் சண்மும் தன் ஏமாற்றங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்; சதுரங்கக் குதிரையில் வரும் நாராயணன் தன் சலிப்பை. எட்டுத் திக்கும் மதயானையில் வரும் பூலிங்கம் தன் செயல் களுக்கான நியாயப்படுத்தலாக அதே மன ஓட்டத்தை முன்வைக்கிறான். இக்கதாபாத்திரங்கள் வாய் திறந்து ஆவேசமாக சில சமயம் பேசினாலும் அங்கதமகாவும் விமரிசனமாகவும் ஒலிப்பது அனேகமாக இல்லை.

அவ்வாறு பேசாமல் விழங்கப்பட்ட அவர்களின் சொற்களைப் பேசுபவராகவே கும்பமுனி அவதாரம் செய்தருளியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கும்பமுனியில் சபைச்கூச்சம் இல்லை. கோமணம் தெரிய சாய்வு நாற்காலியில் படுக்கலாம். கும்பமுனிக்கு எந்தவித சமூகச் கூச்சமும் இல்லை, கீரைக்காரியிடம் கூட வம்படிக்கலாம். எல்லாவற்றையும் விமரிசனம் செய்யலாம். எரிந்து விழலாம். கும்பமுனியின் வழியாக நாஞ்சில் நாடன் கண்டடைந்து எதை? பேசுவதற்கான குரலை என்று சொல்லலாம். அதை விடப் பேசுவதற்கான உரிமையை அல்லது அனுமதியை என்று கூறுவதே உசிதமானது. நமது சமூகத்தில் வயது ஒரு சலுகையை அளிக்கிறது. ‘வயசானவன் சொல்றேன்’ என்பது ஒருவகை ரூபாய் நோட்டு போல எங்கும் செல்லுபடியாகக்கூடிய சொல்லாட்சி. அகம் சற்று தெளிந்து, பேச்சு சற்றுக் கலங்கி, சற்றே சாய்வான நாற்காலியில் ‘மூலக்குரு’ தொந்தரவுடன் சரிந்த பிறகுதான் பேச ஆரம்பிக்கிறது நாஞ்சில் நாடனின் அகம். அதுவே கும்பமுனி.

கும்பமுனி மிக எளிமையானவர், நேரடியானவர். அடிப்படையில் நட்பார்ந்தவர். முசுட்டுக்குணம் என்பது தாத்தாவின் ஒருவகையான பாவனைதான். மூலக்குரு உபத்திரவம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கசந்து கசந்து கரித்தாலும் பேசுவதும் தாத்தாவுக்குப் பிரியமான காரியம்தான். வருபவர்களின் அடிமடியிலேயே கையை வைத்தாலும்கூட தாத்தாவுக்கு பசங்கள் தேடிவருதில் மகிழ்ச்சிதான். தோள் வழியாகத் துவர்த்தை வழியவிட்டபடி அமர்ந்து டிவிக்கு பேட்டிகள் கொடுக்கக்கூட அவர் தயார்தான். குகையில் வாழும் தனித்த ஓநாய் கைவிரித்து அவர். பேரன் பேத்தி பிள்ளைகளுடன் ஆலமர விழுதுகள் போல கைவிரித்து நின்றுகொண்டிருப்பவர். அவருக்கு என வாரிசுகள் ஏதும் இல்லையென்றாலும் அவரது மனநிலை எப்போதுமே ஒரு பெரிய சம்சாரியுடையதாகத்தான் இருக்கிறது. கும்பமுனிக்கு சிறு பிள்ளைகளை பொதுவாகப் பிடித்திருக்கிறது.

இக் கதாபாத்திரத்திற்கு கும்பமுனி என்று பெயர் வைத்ததன் மூலம் அதன் மீது ஒரு மதிப்பீட்டை ஏற்றுகிறார் நாஞ்சில் நாடன். கும்பத்திலே பிறந்தவன். குறுமுனி. ஆனால் நதிகளையே தன் கமண்டலத்தில் அடக்கக் கூடியவன். எதிரிகளை உண்டு செரிக்கும் வயிறு முதல் நூலாசிரியன். ஏன், மொத்த வடவர் எடையையும் தானே சரிசெய்து தென்னாட்டில் ஊன்றியவன். அகத்திய முனியைப் பற்றி எழும் ‘முது மூதாதை’ என்ற மனப்பிம்பம் இக்கதாபாத்திரத்திலும் ஏறும்படிச் செய்திருக்கிறார் நாஞ்சில்நாடன். நகுலன் சாயல் உடைய ஒரு விருப்பப் பிம்பத்திற்கு இப்பெயரைச் சூட்டியதன் மூலம்தான் அவர் ஒரே தாவலில் நகுலனைக் கடந்து வந்திருக்கக்கூடும்
.
நாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணத்தை கும்பமுனி வழியாக மதிப்பிடுவது மிக எளிதானது. வாசக ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் ஆகும். கும்பமுனியை நோக்கி வந்தபடிப்படியான பயணமாக அந்த இலக்கியப் பரிமாணத்தை நாம் வரையறை செய்து கொள்ளலாம். இன்னும் விரிவான பார்வையில் அருவமாக இருந்த கும்பமுனி படிப்படியாக உருத்திரண்டு வந்த பரிணாம மாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாஞ்சில் நாடனின் பழைய ஆக்கங்களிலேயே யார் யார் வாயிலோ கும்பமுனி நின்றுபேசுவதைக் காணலாம். பின்னர் அந்தக் குரல் தனக்குரிய உடலை எடுத்துக்கொண்டது என்பதே உண்மையாகும்.

கும்பமுனி என்ற மையக்கோட்டில் இருந்து வெட்டியும் விலகியும் செல்லும் பல கோடுகள் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் உள்ளன. இவ்விரு போக்குகளும் உருவாக்கும் முரணியக்கம் மூலம் – ஊடுபாவு மூலம் – நெய்யப்படுகிறது நாஞ்சில் நாடனின் புனைவுலகம். கும்பமுனிக்கு நேர் எதிர் கோடுகளாக வெளிப்படையாகத் தெரிபவை இரண்டு. ஒன்று சூதும் கயவும் செய்து இக உலக வெற்றியடைந்து சேற்றுப் பன்றி போல அதில் புரளும் மனிதர்கள். விற்பன் கொண்டு வந்த கருப்பட்டிகளில் ஒன்றை தொடைக்கு அடியில் மறைந்து எடுத்து வைத்துக் கொள்ளும் மூத்த பிள்ளைவாள்கள், அரசியல் எத்தர்கள், வியாபாரிகள், இலக்கிய வம்பர்கள்… கும்பமுனிக்கு நேர் எதிராக இயங்கும் இன்னொரு கோடாக நாஞ்சில் நாடனின் உலகில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஓர் அதிசயம்.

நாஞ்சில் நாடனின் பெண்களில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், வண்ணதாசன் என ஓடிவரும் ஒரு மரபின் ஒளி மிக்க முகமான கவர்ந்திழுக்கும் கனவுச்சாயல் கொண்ட பெண்ணே இல்லை. மிகமிக யதார்த்தமான இயல்பான பெண்களே உள்ளனர். (அழகிகள் கூட இல்லை. அழகிகளே இல்லாத புனைவு வகை நாஞ்சில் நாடனுக்குள் உறையும் கும்பமுனி அல்லாமல் வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்?) எம்.வேதசகாய குமார் ஒருமுறை உரையாடலில் நாஞ்சில் நாடனின் பெண்கள் பகல் வேலை முடிந்து குளித்துவிட்டு வரும் மாலை நேரத்தில் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்று கூறினார். நாஞ்சில் நாடனின் பெண்களின் இந்த அப்பட்டமான யதார்த்த மனநிலை கும்பமுனியின் குசும்பையும் தத்தளிப்பையும் ‘போக்கத்த வேலையாக மட்டுமே காணும். அவர்களின் பார்வையில் இலட்சிய வாதம், அழகியல் எல்லாமே ஒருவகை போக்கத்த வேலைகள்தான். ‘துப்பு கெட்ட’ ஆண்களின் வேலை அது.

இந்த நீண்டகன்ற வரைபடத்தில் கும்பமுனியை பூமத்திய ரேகையாகப் பதிந்து ஆராயலாம். அவரை அளவையாக வைத்து பிற இடங்களை அடையாளப் படுத்தலாம். சில வருடங்களுக்கு முன் உயிர்மை இதழில் நாஞ்சில் நாடன் ஒரு கும்பமுனி கதையில் என்னை இழுத்திருந்தார். கும்பமுனிக்கு கதைத் தட்டுப்பாடு. பத்திரிகை அவசரத்துக்கு எழுத வரவில்லை. ‘நம்ம கணவதிபிள்ளை அண்ணாச்சி மகன் சுப்பிரமணியன் கிட்ட கேட்டுப்பாத்தா என்ன?’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே?’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா?’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்?” என்று கேட்டேன். “அவருக்கு என்ன; ‘இந்தப் பயக்களால எளவு சிரிச்சும் மாளல்லியே’ என்று நினைத்துக் கொள்வார்” என்றார் நாஞ்சில் நாடன்

[ நாஞ்சில் நாடனின் படைப்புலகையும் ஆளுமையையும் ஆராயும் 'கமண்டலநதி[தமிழினி வெளியீடு] நூலில் இருந்து...]
 

 
 
நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா
December 28th, 2007
இன்று நாஞ்சில் நாடனுக்கு அறுபது வயது ஆகிறது. நாளை சைதன்யாவுக்கு பதினொரு வயதாகிறது. கடந்த ஒருமாதமாகவே சைதன்யா ‘எனக்கு பர்த்டே வருதே’ என்று பாடிக் கொண்டிருந்தாள். அது ஏன் ஓர் உலகத்திருவிழாவாகக் கொண்டாடப்படவில்லை என்ற ஐயம் எப்போதும் குரலில் தொனிக்கும். என் மனதில் இரு நிகழ்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்துபோனதனால் இரு உலகநிகழ்ச்சிகள் ஒரேநாள் இடைவெளியில் நடக்கும் பதற்றத்துக்கு ஆளானேன். செய்யவேண்டியவை கடல்போலக் கிடக்கின்றன. எனக்கானால் கடைசி நிமிடத்தில் வேகவெறியுடன் செய்தேன் என்றால்தான் எதுவும் சரிவரும். ஆகவே அமைதியாக வேறு வேலைகளில் மூழ்கினேன்.

கடைசிநேரத்தில் நாஞ்சில் நாடன் பற்றி ஒரு நூல் [கமண்டலநதி] எழுத ஆரம்பித்தேன். யோசிக்கவே இல்லை. யோசித்தால் குழப்பம் வந்துவிடும் என்பது என் அனுபவம். நாஞ்சில் நாடனின் எந்த நூலையும் புரட்டிப் பார்க்கவும் இல்லை. இரண்டு முறை ஐயங்கள் வந்தன. ஒருமுறை வசந்தகுமாரிடமும் இன்னொரு முறை சுரேஷ் கண்ணனிடமும் தொலைபேசியில் பேசியே தெளிவுசெய்துகொண்டேன். நாலே நாளில் எழுதி முடித்தேன். வழக்கம்போல எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் ஒழுங்கான வடிவத்துடன் சீராக முடிந்தது. ஒருவரிகூட மாற்றி எழுத நேரவில்லை. நல்லவேளை எண்ணித் துணியும் வழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டேன். துணிந்தபின் எண்ணுவதுதான் இலக்கியத்தில் சிறந்த வழி.. உடனே அதை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்தேன்.

நடுவே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த பரம்பிக்குளம் பயணம். குடும்பத்துடன் அங்கே தங்கிவிட்டு ஈரோடுக்கு இருபத்தியாறாம் தேதி வந்து சேர்ந்தேன். இருபத்தி ஏழு அன்று நாமக்கல்லில் மைசூர் செம்மொழி உயராய்வு நிறுவனம் மற்றும் அரசு கலைக் கல்லூரி இரண்டும் இணைந்து நடத்திய பதினெண் கீழ்க்கணக்கு கருத்தரங்கில் பேசிவிட்டு இரவு கிளம்பி பேருந்தில் பயணம் செய்து காலை எட்டுமணிக்கு நாகர்கோயிலில் வந்திறங்கினேன். அன்றுதான் முதல் உலக நிகழ்ச்சி.

ஏற்கனவே எம்.கோபாலகிருஷ்ணன் [நாவலாசிரியர்], க.மோகனரங்கன் [விமரிசகர், கவிஞர்], நாஞ்சில் நாடனின் நண்பர் வேனில் [பதிப்பாளர்], ஓவியர் ஜீவா, தொழிலதிபர் ரவீந்திரன், நாஞ்சில் நாடனுக்குப் பிரியமான நண்பர் சௌந்தர் அண்ணா [ஜக்கி வாசுதேவ் அமைப்புடன் நெருக்கமான தொடர்புடையவர்], விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஆகியோர் வந்து வசந்தம் விடுதியில் தங்கியிருக்கும் தகவல் வந்தது. என்னுடன் நாமக்கல் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு திரும்பிய வேதசகாய குமார் அதற்குள் அவர்களுடன் சென்று சேர்ந்துவிட்ட தகவல் அடுத்தபடியாக வந்தது. எனக்குப் போடுவதற்கு சட்டை இல்லை. எல்லாம் அழுக்கு. ஒருவழியாக பெட்டியைத் துழாவி ஒரு சட்டையைத் தெரிவுசெய்து அதை இஸ்திரி போட்டு வைத்தபின் குளித்து உடைமாற்றிக் கொண்டேன்

அருண்மொழிக்கு விடுப்பு இல்லை. ஆகவே பிறந்தநாளுக்காக ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெ.சைதன்யாவை புத்தாடை அணியவைத்து ஆட்டோவில் கூட்டிக் கொண்டு அருண்மொழியின் தபால் நிலையத்துக்குப் போனேன்.

வழியில் சைதன்யா, “எதுக்கு நாஞ்சில் நாடன் மாமா பர்த்டேயிலே கல்யாணம் பண்ணிக்கிடுறாங்க?”என்றாள்.

“இது அறுபதாம் கல்யாணம் பாப்பா”

“எதுக்கு அவங்க அறுபது கல்யாணம் பண்ணிகிட்டாங்க?”

பத்துமணிக்கு ஜோதி பள்ளிக்குச் சென்றுசேர்ந்தபோது எதிர்பாராத பெருங் கூட்டம். அனேகமாக இவ்வட்டாரத்து இலக்கிய வாசகர்கள் அனைவருமே இருந்தார்கள். கணேஷ், சங்கீதா இருவரும் தனித்தனியாக வந்து வரவேற்றார்கள். நாஞ்சில் நாடனின் சொந்தக்காரர்கள் அவரது மனைவியின் சொந்தக்காரர்கள். நாஞ்சில் நாடனின் மூன்று தம்பிகளுக்கும் அவரது மகளுக்கும் ஒரே மாதிரியான சிரிப்பு உண்டு. அவர்களை தெருவில் பார்த்தால் தெரியாதவர்கள் கூட நாஞ்சில் நாடனை நினைவுகூர்வார்கள். நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. சிறு வெட்கத்துடன் பிள்ளையவர்கள் ஆச்சியின் கழுத்தில் தாலிகட்ட பிள்ளைகளுக்கு சிரிப்பு வந்து அடக்கிக் கொள்வதைக் கண்டேன்.

அறுபதாம் கல்யாணம் செய்துகொள்பவர்கள் ஒருநாள் எதுவுமே சாப்பிடக் கூடாது என்று ஒரு சடங்கு இருப்பதாகச் சொன்னார்கள். [இதை கடைசி நிமிடத்தில்தான் நாஞ்சில் நாடனிடம் சொல்லியிருப்பார்கள். அப்போது அவரது இரு கட்டுமஸ்தான தம்பிகளும் அவருக்கு இருபக்கமும் உறுதியாக நின்று அவரைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள்.] மூன்று வேளையும் பால்தான். ஆனாலும் அவர் உற்சாகமாகத்தான் இருந்தார்.

வெளியே இலக்கிய ஆராய்ச்சிகள். அ.கா.பெருமாள் அறுபதாம் கல்யாணம் என்பது பழங்காலத்தில் வேளாளர்களால் கொண்டாடப்படவில்லை. அடிப்படையில் அது ஒரு வைதீகச் சடங்கு, பிராமணர்களுக்கு உரியது, செட்டியார்கள் பிறகு அதைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், படிப்படியாக பரவியது என விளக்கிக் கொண்டிருந்தார்.

“உள்ள போலாமே” என்றார் சுப்ரமணியம். [இந்துக் கல்லூரி ஆங்கில பேராசிரியர் நாராயணகுரு பற்றி தமிழினி வெளியிட்ட நூல் அவரது குறிப்பிடத்தக்க மொழியாக்கம்] ‘பத்ர காளியின் புத்திரர்கள்’ நூலை எழுதிய ஜெகதீசன் உள்ளிருந்து விபூதி அணிந்து வெளியே வந்ததைக் கண்டேன். நானும் வேதசகாய குமாரும் உள்ளே சென்றோம்.

புகைமண்டிய அறைக்குள் நாஞ்சில் நாடனும் சந்தியா அம்மையாரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். அருகே விபூதிக் குடுவை. நாஞ்சில்நாடனின் தலைமயிர் மஞ்சளாக இருந்தது. நான் கால்களைத் தொட்டு வணங்கி நெற்றியில் விபூதி போட்டுவிடப் பெற்றேன்.

வேத சகாய குமாரும் வணங்கினார். “விபூதி போடலாமுல்ல?”என்றார் நாஞ்சில் நாடன்.

“பின்ன? உங்க கையால போடுததுல்லா?”என்றார் அவரது ஒருசாலை மாணாக்கனும் சமவயதினருமான வேதசகாய குமார்.

வெளியே வந்தோம். அருண்மொழி வந்து “ஜெயன் ஆசி வாங்கிட்டியா? அவங்களை கும்பிட்டப்ப எனக்கு ஒருமாதிரி கண்ணீர் வந்திட்டுது தெரியுமா?” என்றாள்.

“ஆமா. நல்லாத்தான் இருக்கு. ஆச்சி மட்டும் பக்கத்தில இல்லேண்ணா பண்டார சன்னிதின்னே சொல்லிடலாம். என்ன ஒரு தன்மய பாவம் இல்ல?” என்னைக் கொலைவெறியோடு நோக்கி அகன்றாள்.

“அப்பா இந்தக் கல்யாணத்துக்கு பாட்டிக்கு நெறைய புதூ நகை போடுவாங்களா?” சைதன்யா கேட்டாள்.

முதற்பந்தியிலேயே சாப்பிட்டபின் அருண்மொழியும் சைதன்யாவும் கிளம்பினார்கள். நான் ஆட்டோ பிடிக்கக் கிளம்பும்போது சங்கீதாவும் நாஞ்சில் நாடன் மனைவியும் வந்து வழியனுப்பினார்கள். “நாளைக்கு எங்க வீட்டு விசேஷம். தவறாம வந்திருங்க…”என்று நான் அவர்களை மறுநாள் நான் ஏற்பாடு செய்திருக்கும் ‘நாஞ்சில் 60′ விழாவுக்கு அழைத்தேன். “அதெல்லாம் அப்பவே ஃபோனிலே அருண்மொழி அக்கா முறைப்படி கூப்பிட்டாச்சு” என்று சங்கீதா சொன்னாள்.

நான் மீண்டு வந்தபோது நாஞ்சில் நாடன் பட்டுவேட்டி மஞ்சள் கறை தலையில் அட்சதை எல்லாமுமாக மங்கலகரமாக நின்றிருந்தார். சற்றே வெட்கமும் உண்டு.  நண்பர்கள் தர்மராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சாப்பிடச் சென்றேன். அசல் நாஞ்சில் நாட்டுச் சாப்பாடு. ஓலன், அன்னாசிப் பழ புளிசேரி. போளி, பால் பாயசம், பருப்பு பிரதமன், இஞ்சிக் கறி…

“நம்ம பக்கத்துச் சாப்பாடு கோயமுத்தூர்காரங்களுக்கு பழகட்டுமேன்னு அப்டியே அசலா இருக்கணும்னு சொன்னேன்” என்றார் நாஞ்சில் நாடன். ஆனால் ஓரமாக நாஞ்சில்நாடனால் மனமார வெறுக்கப்படும் காலிஃப்ளவர். ["ஒண்ணு எறைச்சிய திங்கணும். இல்லேண்ணா காயத் திங்கணும். இதென்ன ரெண்டும் கெட்டதுமாதிரி?"] வெளியே வந்தபோது நாஞ்சில் நாடன் “என்ன செய்றது. அதுவும் வேண்டியிருக்கே?” என்றார்.

‘நெய்தல்’ கிருஷ்ணன், “சார் எங்களுக்கெல்லாம் அப்டி ஒரு ஞாபகம் இல்லாம இருந்தா சோறு எறங்காது,” என்றார்.

காலச்சுவடு கண்ணன், ‘இப்பல்லாம் ஃபேக் மீட் வந்திருக்கு. சோயா பீன்ஸிலே. இனிமே அதை போட்டாத்தான் இவரை மாதிரி ஆட்களுக்கு சரிவரும்,” என்றார்

கனத்த சாப்பாட்டுக்குப்பின் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் உடனே வேதசகாய குமாரின் ஸ்கூட்டரில் ஏறி வீடு வந்துசேர்ந்தேன். மறுநாள் இரண்டு கொண்டாட்டங்கள். காலை சைதன்யாவின் பிறந்தநாள். மாலை ‘நாஞ்சில் 60′ நூல் வெளியீட்டு விழா. மீண்டும் பதற்றம். எதற்கும் முதலில் தூங்குவோம். மற்றதைப் பிறகு பார்ப்போம் என முடிவுசெய்தேன்.

வீடு திரும்பி, படுத்தபோது சற்றுநேரம் நாஞ்சில் நாடனின் அம்மாவையே எண்ணிக் கொண்டிருந்தேன். அவருக்கு எண்பது தாண்டிவிட்டது. நாஞ்சில்நாடனிடம் இருக்கும் அந்தச் சிரிப்பு அப்படியே அவர் அம்மாவிடம் இருந்து வந்தது. அந்த வயதுக்கு, தெளிவுடனும் நேர்த்தியுடனும் பேசும் நிதானம் உடையவர். நாஞ்சில் நாடனுக்கு சிலவருடம் முன்பு இதய நோய் வந்தபோது சில வேண்டுதல்கள் செய்திருக்கிறார். அதற்காக அவர்களை இருநாள்கள் முன்பு நாஞ்சில்நாடன் கோயில்களுக்குக் கூட்டிச் சென்றதாகச் சொன்னார்.

நினைத்துக் கொண்டேன், நாஞ்சில்நாடனின் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு கொண்டாட்ட நாள். அவரது அம்மாவுக்குத்தான் உண்மையான திருவிழா.
 
 
ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை
இன்று காலை எழுந்ததுமே சைதன்யாவை நோக்கிச் சென்றேன், பிறந்தநாள் முத்தம் கொடுப்பதற்காக. அதற்குள் அவள் எழுந்து பல்தேய்த்துக் கொண்டிருந்தாள். ஹேப்பி பர்த் டே சொன்னபோது பொறுப்பைச் சுமக்கும் குடும்பத் தலைவிகளுக்குரிய அலட்சியத்துடன் உதட்டைச் சுழித்து அதைப் பெற்றுக் கொண்டு, “கேக் எடுத்து வச்சிரு” என்றாள். நான் போய் அஜிதனை எழுப்பினேன். எழுந்ததுமே “…இணைக்கு பாப்புவோட பர்த்டே இல்ல?” என்றான்.

ஏழுமணிக்கு கேக் வெட்டினோம். சைதன்யா புதிய மஞ்சள் சுடிதார் அணிந்து பதினொன்று என எழுதிய மெழுகுவத்தியை ஊதி அணைத்தாள். அஜிதன் அவனுடைய உடைந்து பலசில்லுகளாக ஆன குரலில், “ஹேப்பி பர்த் டே டூ யூ..” பாடியபோது ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நிறைவு எற்பட்டது. கேக்கை வெட்டி அருண்மொழிக்கும் எனக்கும் அஜிதனுக்கும் டெட்டிக்கும் ஹீரோவுக்கும் ஊட்டியபின் பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கச் சென்றார்கள்.

ஒன்பதுமணிக்குள் நாஞ்சில்நாடன் கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னார். பிறகு வரிசையாக முக்கியஸ்தர்களின் வாழ்த்துகள். சுரேஷ் கண்ணன், ஷாஜி…. இரவு ஒன்பது மணிவரை வாழ்த்துகள் வந்தன. விஜயராகவன் என்ற வாசக நண்பர் ஈரோட்டிலிருந்து கூப்பிட்டார். அவற்றை அம்மணி பெற்றுக்கொண்ட முறை புரட்சித்தலைவியருக்கே உரியது.

ஒன்பதுமணிக்கு கிளம்பி நாகராஜா கோயில் சென்றேன். அப்போது தேவதேவன் வந்து பேருந்துநிலையத்தில் நிற்பதாக ·போன் வந்தது. வழக்கம்போல நிற்குமிடத்தை தப்பாகச் சொல்லி கவலையில்லாமல் வேடிக்கைபார்த்து நின்ற அவரை முழுப் பேருந்துநிலையத்தையும் ஆளுக்கொரு பாகமாகப் பிரித்துக் கொண்டு நானும் குழந்தைகளும் தேடிக் கண்டுபிடித்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வசந்தம் ஓட்டல் சேர்த்தோம். அங்கே தங்கியிருந்த எம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் ஆகியோர் வெளியே சிறு சுற்றுப்பயணமாகச் சென்றிருந்தார்கள். தேவதேவன் குளித்தபின் திரும்பிவந்து அவரையும் கூட்டிச்செல்வதாகச் சொன்னார்கள்.

கோயில் சென்றாக வேண்டுமென்ற சைதன்யாவின் கட்டாயத்துக்கு ஆட்பட்டு நாகராஜா கோயில் சென்றோம். அது புராதனமான சமண கோயில். பார்ஸ்வநாதர் ஆலயம். புடைப்புச் சிற்பங்களில் இப்போதும் தீர்த்தங்காரர்களைக் காணலாம். பார்ஸ்வநாதர் இப்போது அனந்தகிருஷ்ணனாக வழிபடப்படுகிறார். பக்கத்தில் ஓலைக் கூரையிடப்பட்ட புற்றுதான் நாகத்தின் கோயில் கருவறை. கோயிலைச் சுற்றிவந்து தீர்த்தங்காரரிடம் வேண்டிக் கொண்டபின் அஜிதனை அருகே இருந்த சதுப்புக்குளத்துக்கு, பறவைகளை நோக்க கூட்டிச் சென்றபின் வீடு திரும்பினேன்

மெல்ல மெல்ல பதற்றம் ஏற ஆரம்பித்தது. மாலையில் நாஞ்சில் நாடன் அறுபது நூல் வெளியீட்டுவிழா. நேற்று மாலை வீட்டு விழாவுக்குச் சென்றபின் மாலை போய் இரு மலர்மாலைகளுக்குச் சொல்லி முன்பணம் கொடுத்தேன். அப்போது அருண்மொழி கூப்பிட்டு, “பேனரை எங்கே வைத்திருக்கிறாய்?” என்றாள்.

“என்ன பேனர்?”

“ஜெயன், ஒரு மீட்டிங்னா பின்னணியில அதைப்பத்தி எழுதி வைக்கணும்ல?”

எனக்கு ஒன்றும் ஓடவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நடுத்தெருவில் நின்றேன்.

“பக்கத்திலே இருக்கிற பெரிய வினைல் போர்டை பாரு. அதிலே அட்ரஸ் நம்பர் எல்லாம் கண்டிப்பா இருக்கும். கூப்பிட்டு செஞ்சு குடுக்கமுடியுமா கேளு,” என்றாள்.

“அதுக்கு இனி எங்க நேரம்?” என்றேன்.

“வினைல் போர்டெல்லாம் ஒருமணிநேரத்திலே ரெடியாயிரும்னு சொல்றாங்க”

பக்கத்திலேயே நாலாள் உயர ஸ்டாலின் படத்துக்குக் கீழே விலாசமும் எண்ணும் இருந்தது. கூப்பிட்டுக் கேட்டபோது அரைமணி நேரத்தில் கிடைக்கும் என்றார்கள். நேராக வசந்தம் ஓட்டல் சென்று கோபாலகிருஷ்ணனையும் தர்மராஜனையும் கூட்டிக் கொண்டு அங்கே போய் பேனருக்கு எழுத்துகள் எழுதிக்கொடுத்தோம். கோபாலகிருஷ்ணன் அமர்ந்து வண்ணமும் வடிவமும் சொன்னார். அரைமணிநேரம் கழித்து வரச்சொன்னார்கள்.

ஏ.பி.என் பிளாசாவுக்கு வந்து ஹாலைப் பார்த்தோம். அங்கிருந்த வாட்ச்மேன், “சார் இண்ணைக்கு குடும்ப விழாவுக்கு எம்பிட்டுப் பேர் வந்தாக?”என்றார்.

“நூறுபேரைத்தான் எதிர்பார்த்தாங்க. முந்நூறுபேர் வந்தாங்க” என்றேன்.

“அதிலே பாதி வந்தாக்கூட இந்த ஹால் தாங்காது சார். இங்க எம்பது பேர்தான் இருக்க முடியும். ஏஸி ஹால் ஆனதனால தெறந்து போடவும் முடியாது. ஆளை வெளியே விட்டா நல்லா இருக்காது..,” என்றார்.

“என்ன செய்றது?” என்றேன்.

“பக்கத்து ஹால் கான்சலாயிட்டுது. அதை சரி செஞ்சு தாறோம். சகாயமா பாத்துசெய்யலாம்..” என்றார்

கீழே வந்து ஹாலை மாற்றச் சொல்லி கேட்டபோது மானேஜர் இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்றார். எண்ணூறு ரூபாய் அதிகம்.

“இது இலக்கியக் கூட்டம். எனக்குக் கட்டுபடியாகாது… தனியாளா செய்றோம்” என்றேன்.

“என்ன கூட்டம் சார்?’ ‘என்றார். விஷயத்தைச் சொன்னேன்.

“பெரிய ரைட்டரா சார்?”

“ஆமா,” என்றேன்.

யோசித்துவிட்டு “சரி. கடசீல மாத்தினா நீங்க என்ன செய்வீங்க? குடுக்கிறத குடுங்க”

“ஆயிரத்தி ஐநூறு குடுங்க சார்” என்றார் வாட்ச்மேன். மேனேஜர் தலையாட்டினார். மேலதிக முன்பணம் கொடுத்து உறுதிசெய்துவிட்டு மீண்டும்போய் பேனரை வாங்கிவிட்டு நள்ளிரவில் வீடுதிரும்பினேன்.

புத்தகங்கள் இருபத்தியெட்டாம் தேதிதான் தயாராகின. வசந்தகுமார் இரு வழிகளிலாக அனுப்பியிருந்தார். ‘ரதிமீனா’ பஸ்ஸில் ஒன்று. புர·பஷனல் கூரியரில் ஒன்று. பதினொரு மணிக்கு கூரியர் வரும் என்றார்கள். வரவில்லை. பன்னிரண்டுமணிக்கு ஒரு வண்டி நிறைய தபால் வந்ததில் நூல்கட்டு இல்லை. ஒரு மணிக்கு அடுத்த வண்டி. அதிலும் பொதி இல்லை என இந்துக்கல்லூரி பேராசிரியரும் ‘பத்ரகாளியின் புத்திரர்கள்’ ஆசிரியருமான ஜெகதீசன் கூப்பிட்டுச் சொன்னார். இனி வண்டி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

ரதிமீனா பஸ் இரண்டுமணிக்கு வரும். பதற்றத்துடன் வீட்டில் படுத்துக் கொண்டு ·போனில் மாறி மாறி கூப்பிட்டேன். சென்னையில் இருந்து பொதிகள் கிளம்பிவிட்டன என்றார் வசந்தகுமார். ·போனில்பேசி சலித்தபோது சுரேஷ் கண்ணனைக் கூப்பிட்டு, புலம்பினேன். இரண்டரை மணிக்கு ரதிமீனா பஸ் வந்தது. அதிலும் பொதி வந்து சேரவில்லை. ஆக புத்தகம் இல்லாமல் புத்தக வெளியீட்டுவிழா. மீண்டும் சுரேஷிடம் புலம்பல். வசந்தகுமாரை கூப்பிட்டு கோபத்துடன், “நீங்க ஒருநாள் முன்னாடி அனுப்பியிருக்கணும்” என்று திட்டினேன்.

“ஜெயன் இருபத்தி ரெண்டாம் தேதி நீங்க மேட்டர் அனுப்பி எனக்கு இருபத்தி மூணாம் தேதி கிடைச்சிருக்கு. ஒரு புக் அடிக்க நாலுநாளாவது வேண்டாமா?’ ‘என்றார்.

எனக்குப் புரியவில்லை. நாலு நாளில் எழுதிய நூலை ஏன் மூன்று நாளில் அச்சிட முடியாது? சோர்ந்து படுத்துவிட்டேன்.

அருண்மொழி போஸ்டாபீஸில் இருந்து வந்தாள்.

“சரி இப்ப என்ன? ஒரு வாழ்த்துக்கூட்டம் நடத்துவோம்… புக்ஸ் அப்றமா வரட்டும்,” என்றாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. “இது என்ன சின்ன விஷயம். இதுக்குபோயா அப்செட் ஆறது. புக் ஒண்ணும் இப்ப முக்கியமில்லை. நாஞ்சில்நாடனுக்கு நாம ஒரு மரியாதை செய்றோம்..அதான் முக்கியம்…”

அப்போது ·போன் வந்தது. புரபஷனல் கூரியரில் புத்தகம் வந்துவிட்டது. தவறுதலாக வேறு ஒரு இடத்துக்குப் போய்விட்டதை மடக்கி எடுத்திருக்கிறார்கள். கார்களும் ஆட்களுமாக வந்து கேட்டதில் பதற்றம் அடைந்த நிர்வாகி ஒரு டாக்ஸி பிடித்து, கொண்டுவந்து சேர்த்துவிட்டார். பத்து பிரதிகள். உற்சாகமடைந்து குளித்து உடைமாற்றக் கிளம்பினேன். மூளையில் இருந்து ரத்தம் வடிந்து காலியாகும் நிம்மதி. சுரேஷ¤க்கு ·போன்செய்து விஷயத்தைச் சொன்னேன்.

நானும் அஜிதனும் கடைக்குப்போய் பூமாலைகளை வாங்கிக் கொண்டு ஏபிஎன் பிளாஸாவுக்குச் சென்றோம். ஹாலை நன்றாக அமைத்திருந்தார்கள். வழக்கமாக இலக்கியக் கூட்டங்கள் மலிவாகக் கிடைக்கும் பள்ளிக்கூட அறைகளில் அல்லது பொதுக்கூடங்களில்தான் நடக்கும். அந்த தரித்திரச் சாயலே இல்லாத அழகிய இடம். அதுவே உற்சாகமாக இருந்தது. கீழே சென்று டீக்கு ஏற்பாடுசெய்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் வந்து மேஜைவிரிப்பு போட்டு அலங்காரம் செய்தார்கள்.

நண்பர்கள் வரத்தொடங்கினார்கள். நிகழ்ச்சி தொடங்கும் ஐந்தரை மணிக்கு வெறும் இருபதுபேர். ஆறுமணி வரை காத்தோம். மேலும் ஐந்துபேர். எனக்கு மீண்டும் ரத்தம் தலைக்கு ஏறியது. அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. கீழே இறங்கிவந்து நின்றேன். நிற்கவும் முடியவில்லை. மீண்டும் மாடிப்படி ஏறினேன். மீண்டும் இறங்கினேன்

ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால் ஆறரை மணிக்குள் அரங்கு நிறைந்தது. சற்றுநேரத்தில் உபரி நாற்காலிகளைப் போட்டோம். கடைசியில் அவையும் போதாமலாயின. மேலும் ஆள்வந்துவிடுமோ என்ற பதற்றம் ஆரம்பமாகியது. நிறைந்த முழு அரங்கு– நூற்றி நாற்பத்து மூன்றுபேர். நாகர்கோயிலில் அது ஒரு பெருங்கூட்டம்.

நிகழ்ச்சி முழுக்க பதற்றமாகவே இருந்தேன். அஜிதனும் சைதன்யாவும் கூட்டத்தில் ஊடுருவி டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பதைப் பார்த்து நிற்க முடியவில்லை. எதையோ கீழேபோட்டுவிடப் போகிறார்கள் என்ற ஐயம். இருபது முறையாவது நான்கு மாடிகளையும் ஏறி இறங்கியிருப்பேன். ஜேம்ஸ் ஆர். டேனியல் தாமதமாக வந்தார், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு. அவர் வருவாரா என்ற பதற்றம். வந்தபின் நூல் வெளியீடு. கடைசிவரை ரதிமீனா பொதி வருமா என்ற எதிர்பார்ப்பு. அது வரவேயில்லை

சுரேஷ¤க்கும் வசந்தகுமாருக்கும் ·போன்செய்து நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதைச் சொன்னேன். கூட்டத்தில் சென்று அமர முடியவில்லை. பக்கத்து இருளறைக்குள் போய் அமர்ந்துதான் பேச்சுகளைக் கேட்க முடிந்தது. நாலைந்து டீ குடித்தேன்.

நிகழ்ச்சி சரியாக எட்டுமணிக்கு நாஞ்சில்நாடனின் உணர்ச்சிகரமான பேருரையுடன் முடிந்தது. ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்கள். ஒன்பதுமணிவரை நாஞ்சில்நாடன், பெர்னாண்ட் சந்திரா, அ.கா.பெருமாள், வேதசகாய குமார் குடும்பங்களுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பதரை மணிக்கு அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஆட்டோவில் அனுப்பிவிட்டு தேவதேவனைப் பார்க்க அவர் தங்கியிருந்த வசந்தம் ஓட்டலுக்குப் போனேன். அவரை நலம் விசாரித்து மறுநாள் அவர் ஊருக்குச்செல்ல ஏற்பாடுசெய்துவிட்டு பதினொரு மணிக்கு நாஞ்சில்நாடனிடம் ·போனில் பேசியபடியே வீடு திரும்பினேன்.

“நல்லா நிறைவா இருக்கு ஜெயமோகன். நமக்கும் இவ்ளவு ஆளிருக்குன்னா ஒரு தெம்பா இருக்கு… இன்னும் நெறைய ஓடலாம்ணு தோணுது”

வீட்டில் அருண்மொழி, “நல்லபடியா எல்லாம் முடிஞ்சாச்சு… பிரமாதமான நிகழ்ச்சின்னு எல்லாரும் சொல்றாங்க… இனிமேலாவது டென்ஷன் இல்லாம இரு,” என்றாள்.

“அப்டியா? டென்ஷனாவா இருக்கேன்?” என்றேன். முகச்சதைகள் அந்த வெளிப்பாட்டுக்கு பழகிவிட்டிருந்தன. கண்ணாடியில் பார்த்து முகம் கழுவி புன்னகைத்து மீண்டேன்
 
 
நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா
December 29th, 2007
இன்று, 29-12-2007ல் நாஞ்சில் நாடன் அறுபது நிறைவு, நூல் வெளியீட்டுவிழா. நாகர்கோயில் ஏபிஎன் பிளாசா அரங்கில் ஆறுமணிக்குத் தொடங்கியது. தலைமை வகித்த எம்.எஸ்., “கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக எனக்கு இலக்கிய உலகோடு பரிச்சயம் உண்டு. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு பெரிய கௌரவம். அதிலும் நான் என் தம்பியைப்போல எண்ணிவரும் நாஞ்சில் நாடனுக்கு அறுபதாண்டு நிறைவு விழாவில் இந்த வாய்ப்பைப் பெறுவது நெகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார். “ஏறத்தாழ முப்பதாண்டுகளாக எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் நெருக்கமான உறவு உண்டு. நிறைய பேசியிருக்கிறோம். அவரது நாவல்களை நான் கைப்பிரதியைப் படித்து ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன். இந்தத் தருணத்தில் நிறைய நினைவுகள் வருகின்றன. அவரை மனமார வாழ்த்துகிறேன்.” என்றார்.

அறிமுக உரை நிகழ்த்திய நெய்தல் கிருஷ்ணன், “எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் முக்கியமான பொது அம்சம் உண்டு. நாங்கள் ஆற அமர ருசித்துச் சாப்பிடுபவர்கள். என் ஆகிருதியே அதற்குச் சான்று” என்றார். நாஞ்சில் நாடனின் எழுத்துகளையும் அவரது இலக்கியப் பங்களிப்¨ப்பம் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன்பின் தேவதேவன் வெளியிட நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதியை நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நாஞ்சில் நாடனுக்கு எம்.எஸ் மலர்மாலை அணிவித்து வாழ்த்தினார். திருமதி சந்தியா நாஞ்சில் நாடனுக்கு வேதசகாயகுமாரின் மனைவி வான்மதி கௌசல்யா மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “நாஞ்சில் நாடனின் முக்கியமான சிறப்பு, அவர் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் நின்றுவிட்டவரல்ல என்பது. அவர் அவருக்கு அடுத்த தலைமுறையினருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். இளம் எழுத்தாளனாக நான் இருந்தபோது என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘பிறிதொரு நதிக்கரை’யை அவர்தான் வெளியிட ஏற்பாடுசெய்தார். இந்த அம்சத்தை அவரது படைப்புலகிலும் காணலாம். அவரது சமகால படைப்பாளிகள் தங்கள் காலத்துடன் நின்றுவிட்டபோது நாஞ்சில் நாடன் இளம்படைப்பாளிகளுக்கு நிகராக அவர்களின் உலகுக்கு வந்து தன்னை முழுமையாகப் புதுப்பித்துக் கொண்டார். இன்றைய நாஞ்சிநாடன் படைப்புகளில் அவரது நடை மேலும் செறிவானதாக மாறியுள்ளது,” என்றார்.

தொடர்ந்துபேசிய விமரிசகரும் கவிஞருமான க.மோகனரங்கன், “நான் இலக்கிய உலகுக்கு வந்த காலத்தில் தமிழில் பின்நவீனத்துவம், பின்அமைப்பியல் மாய யதார்த்தம் போன்றவை பேசப்பட்டன. வடிவச் சோதனை செய்யாத படைப்புகளை பிற்பட்டவையாக அலட்சியம் செய்யும் மனநிலை இருந்தது. நானும் அவ்வகைப்பட்ட எழுத்துகளை கூர்ந்து படித்தபடி நாஞ்சில் நாடனை ‘வெறும்’ யதார்த்தவாதி என புறக்கணித்தபடி இருந்தேன். ஆனால் வாழ்க்கை முதிர அனுபவங்கள் உருவாகி வந்தபோது இலக்கியம் என்பது ஆத்மார்த்தமாக வாழ்க்கையைச் சொல்லும்போதுமட்டுமே உருவாக முடியும் என உணர்ந்துகொண்டேன். அப்போது எனக்கு நாஞ்சில் நாடன் முக்கியமானவராக ஆனார்,” என்றார்.

அதன்பின்னர் அ.கா.பெருமாள் பேசினார். நாட்டாரியலாளர்களுக்குரிய நகைச்சுவையுடன் குமரித்தமிழில் நாஞ்சில் நாடனுடனான தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். குமரி மாவட்டத்தின் தனித்தன்மையான ருசிகளையும் மொழி நுட்பங்களையும் நாஞ்சில் நாடன் எப்படி தன் ஆக்கங்களில் கொண்டுவந்திருக்கிறார் என்றார்.

நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி முதல்வரும் சுந்தர ராமசாமியின் காகங்கள் குழுவின் தீவிர உறுப்பினராக இருந்தவருமான ஜேம்ஸ் ஆர்.டேனியல், ஜெயமோகன் எழுதிய ‘கமண்டலநதி–நாஞ்சில் நாடனின் புனைவுலகம்’ என்ற நூலை வெளியிட வேத சகாய குமார் பெற்றுக் கொண்டார். ஜேம்ஸ் ஆர்.டேனியல், “நாஞ்சில் நாடனைப் பற்றி என் கல்லூரியில் இதுவரை பதினொரு மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அக்கட்டுரைகளை சமீபத்தில் எடுத்து படித்தேன். அக்கதைகள் வெளிவந்த காலத்தில் ஆர்வமும் ஆவேசமுமாக அவற்றை வாசித்ததை நினைவுகூர்ந்தேன். நாஞ்சில் நாடன் போன்ற படைப்பாளிகள் நம் மண்ணின் கலாசாரத் தூதுவர்கள். இலக்கியத்தில் குமரிமாவட்டத்துக்கு அழியாத இடத்தை உருவாக்கியளித்தவர்கள். அது குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். பலவருடங்களாக நான் நாஞ்சில் நாடனை அறிவேன். அவரது தன்னியல்பான எளிமை என்றுமே என்னை வியப்பும் நெகிழ்ச்சியும் கொள்ளச் செய்கிறது. அது மேதைகளுக்குரிய குணம். அவரது படைப்பூக்கம் மேலும் தீவிரமாக வெளிப்படட்டுமென அவரை வாழ்த்துகிறேன்,” என்றார்.

எம்.வேதசகாயகுமார் நீண்ட உரையில் நாஞ்சில் நாடனுடன் அவருக்கிருந்த நெடுங்கால உறவை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். “நாஞ்சில் நாடனின் ஆரம்பகால நாவல்கள் என்னைக் கவர்ந்தன. ஆனால் எங்கள் குருவாக அன்று விளங்கிய சுந்தர ராமசாமி அவை வடிவத்திலும் மொழியிலும் கச்சிதமான வெளிப்பட்டமைதியைக் கொண்டிருக்கவில்லை என்று எண்ணினார். இறுதிவரை அவருக்கு நாஞ்சில் நாடன் பற்றி அவ்வெண்ணமே இருந்தது. அன்று எனக்கும் அந்நாவல்கள் குறித்து அதே கருத்தே இருந்தது. அதை முன்வைத்து நான் நாஞ்சில் நாடனுடன் விரிவாக கடுமையாக விவாதிப்பேன். ஆனால் எங்கள் நட்பு அதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. நாஞ்சில் நாடன் நாகர்கோயிலில் இருந்தால் அவர் போகும்வரை நான் அவருடன் மட்டுமே இருப்பேன். பேருந்தில் ஏற்றிவிட்டபிறகே வீடு திரும்புவேன். இந்த, கால்நூற்றாண்டுகால நட்பில் ஒருமுறைகூட ஒரு சிறு பிசிறுகூட உருவானதில்லை. எத்தனையோ உவகைகளை ஆவேசத்துடன் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்… எத்தனையோ அந்தரங்கமான துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு கண்ணீர் சிந்தியிருக்கிறோம்.

…. இன்று என் பார்வைகள் மாறிவிட்டன. மொழியிலும் வடிவிலும் கச்சிதத்தை தொடுவதல்ல கலைஞனின் இலக்கு என நான் இன்று நம்புகிறேன். நல்ல இலக்கியவாதிக்கு இலக்கியம் முக்கியமே அல்ல. வாழ்க்கைதான் முக்கியம். வாழ்க்கையை அந்தரங்க சுத்தியுடன் தீவிரமாக அவன் எதிர்கொண்டாலே போதுமானது. அப்போது நடை சற்று பிசகலாம். வடிவம் கைவிட்டுப் போகலாம். சத்தியம் கைகூடினாலே போதுமானது. வாழ்க்கையின் சாரமாக நாம் உணரும் அந்த சத்தியமே இலக்கியத்தின் சாரம். எந்த தத்துவமும் அல்ல. இன்று நாஞ்சில் நாடனின் எழுத்தை நான் மேலும் நெருங்கியிருக்கிறேன். அதற்காக என் குருவிடமிருந்து வெகுவாக விலகி வந்திருக்கிறேன்…

…யோசிக்கும்போது இலக்கியம்கூட எனக்குப் பெரிதாகப்படவில்லை. எங்கள் இருவருக்குமே குழந்தைகள் பற்றி பெரிய பிரியம் உண்டு. நாளெல்லாம் எங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக் கோண்டிருப்போம். இதோ எங்கள் குழந்தைகள் அருமையானவர்களாக வளர்ந்து வந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் குழந்தைகளை எண்ணும்போது எனக்கு ஏற்படும் பரவசமும் என் குழந்தைகளுக்கு அவரை நினைக்கும்போது வரும் நெகிழ்ச்சியுமே முக்கியமானவை. எங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் எங்களைப்பற்றி எண்ணும்போது எங்கள் நட்பைப்பபற்றி நினைவுகூர்ந்தால் அதுவே போதுமானது…”

இறுதியாக தேவதேவன் பேசினார். “நெடுங்காலமாக இலக்கியவாதிகளுக்கு இருந்த புறக்கணிப்பு இப்போது விலகி வருகின்றது. அவனை பாராட்டவும் மதிக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகிவருகிறது. இது அவனை அவனது குடும்பத்தினர் கண்களில், குழந்தைகள் கண்களில் முக்கியமானவனாக ஆக்குகின்றது. இன்று நடக்கும் முக்கியமான மாற்றம் இது…” என்றார் தேவதேவன்

“நாஞ்சில் நாடன் மிகமிகப் பிரியமானவர். என் பெண் கோவையில் பொறியியல் படித்தபோது அவர்தான் உள்ளூர் காப்பாளராக இருந்தார். அவ்வகையில் அவர் அவளுக்கு தந்தையைப் போன்றவர். நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை மிகவும் யதார்த்தமானது. யதார்த்தவாதத்தில்தான் அன்பு சிறப்பாக வெளிப்படும். ஏனெனில் அன்பு கற்பனை சார்ந்த ஒன்று அல்ல, அது மிகவும் யதார்த்தமானது…”

ஏற்புரையில் நாஞ்சில் நாடன் உணர்ச்சிகரமாகப் பேசினார். ‘இந்த அவையில் என் வழிகாட்டிகள் நண்பர்கள் உறவினர்கள் இளவல்கள் அமர்ந்திருக்கிறார்கள். படைப்பில் ஒரு சிறு தகவல்கூட தவறாக அமையலாகாது என்னும் எண்ணம் கொண்டவன் நான். என் ஐயங்களை எப்போதும் அ.கா.பெருமாளிடம்தான் கேட்பேன். என் ஆன்மீக வழிகாட்டியான சௌந்தர் அண்ணா இங்கிருக்கிறார். இத்தனைபேர் என்பொருட்டு இங்கே கூடி எனக்கு வாழ்த்துரைப்பது ஒரு பெரும் ஊக்கசக்தியாக உள்ளது. நெடுந்தூரம் ஓடிக்களைத்தவனுக்கு அளிக்கப்பட்ட குளிர்மோர் போல…

…..எழுத்தாளன் தன் காலகட்டத்தின் நஞ்சை, தான் உண்பவன்; தன் தொண்டையில் அதைத் தேக்கிவைப்பவன்; தன் படைப்புக்குள் அந்த நஞ்சை வெளிப்படுத்துபவன்; ஆகவே அவனுக்கு படைப்புச்செயல் துன்பமானதாக இருக்கிறது. அவன் பொருட்டு அவன் குடும்பத்தினர் தியாகங்கள் செய்ய நேர்கிறது. ஆனாலும் அது அவன் பணி. அதற்காகவே அவன் பிறந்திருக்கிறான்.

இந்த விழா இன்னும் பதினைந்து வருடமாவது இதே வேகத்துடன் என்னால் செயல்படமுடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி”

நாஞ்சில் நாடனின் ஏற்புரையுடன் கூட்டம் முடிவடைந்தது. கூட்டம் முற்றாக பேச்சில் ஈடுபட்டு அசைவற்றிருக்கும் அபூர்வமான தருணங்களில் ஒன்றாக இருந்தது இந்நிகழ்ச்சி.

கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு புத்தகத்திலிருந்து…
 
 
புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன்
ஜெயமோகன்
ஆ.மாதவன் விருதுவிழா முடிந்து பேசிப்பேசிபேசிக் களைத்து விடிகாலையில் தூங்கி ஏழுமணிக்கு எழுந்து கோரல் அப்பார்மெண்டில் இருக்கும்போது வசந்தகுமார் செய்தியனுப்பியிருந்தார் – சூடியபூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்படுகிறது. உற்சாகமாக அவரைக்கூப்பிட்டேன். முந்தையநாள் அவரது பேச்சை நினைவுகூர்ந்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை.

‘வாங்கணுமா வேணாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு’ என்றார் நாஞ்சில். ‘வாங்கலாம் சார்…அப்றம் நல்ல ரைட்டர்ஸ் வாங்கமாட்டேங்கிறாங்க…அதான் , அப்டீன்னு ஒரு நியாயம் கெளம்பிவரும்’ என்றேன்.

மதியம் வரை அதிகாரபூர்வ செய்திக்காகக் காத்திருந்தோம். காலையில் சுரேஷ் மற்றும் நண்பர்கள் வந்தார்கள். கோவையில் தியாகு புத்தகநிலையம் என்ற வாடகைநூலகம் இருக்கிறது. இலக்கியம் பொழுதுபோக்கு எல்லாவற்றுக்கும் உரிய தமிழ் ஆங்கில நூல்களின் பெரும்தொகுப்பு. அனேகமாக இலக்கிய நூல்கள் அனைத்துமே உள்ளன. நண்பர் தியாகு நடத்துகிறார்.

தியாகு கடைக்கு நண்பர்களுடன் சென்றேன். அங்கே ஒரு இருபது நண்பர்கள் கூட பேச ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒரு இலக்கியக் கூட்டம். நான் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா கதைகளைப்பற்றி பேசினேன். பின்னர் அன்னபூர்ணா சென்று சாப்பிட்டோம். அப்போது செய்தி உறுதி என்ற தகவல் வந்தது. நேராக நாஞ்சில்நாடன் வீட்டுக்கு கிளம்பினோம்.

மூன்று கார்களிலாக சென்றிறங்கினோம். இறங்கும்போது ‘புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன் வாழ்க ‘ என்று கூவி தமிழ்மரபை நிலைநாட்டலாமே என்றேன். ’இது கொங்குநாடு சார்’ என்று சொல்லிவிட்டார்கள்.

நாஞ்சில் உற்சாகமே உருவாக இருந்தார். அவர் பொதுவாக எழுத்தாளர்கள் இருப்பதுபோல தனிமை விரும்பி அல்ல. உறவுகளும் நட்புகளும் அவருக்கு மிகமிக முக்கியம். நண்பர்கள் கூப்பிடக்கூப்பிட முகம் மலர்ந்தபடியே சென்றது. சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தார். அவரது மனைவியும் மனநிறைவுடன் இருந்தார். நாஞ்சில் நாடனுக்காக வலைப்பதிவு நடத்தும் நண்பர் சுல்தான் கூப்பிட்டார். ‘அவரை விட எனக்குத்தான் சந்தோஷம் சார்’ என்றார்.

மாலை ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். ஒவ்வொருவரும் நாஞ்சில்நாடனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடனுக்கு அவரது தம்பியின் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
 
 
இதுவரை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள ஜெயகாந்தன், அசோகமித்ரன் உள்ளிட்ட படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறும் நாஞ்சில் நாடனை, படைப்புலகம் பாராட்டி மகிழ்கிறது.

  கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கடந்த சில ஆண்டுகளாக சாகித்ய அகடமி விருது பொருத்தமற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்கிற சர்ச்சை நிலவி வந்தது. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. தன்னுடைய சிறுகதைகள், நாவல்கள் மூலம் ஆழமான மன உணர்வுகளை வெகு நுட்பமாக சித்திரித்தவர். மிக நீண்ட காலமாக, இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வரும் அவருக்கு, இந்த விருது கொடுக்கப்பட்டது எல்லா விதத்திலும் பொருத்தமானது.

  எழுத்தாளர் அசோகமித்ரன்: கடந்த 35 ஆண்டுகளாக நாஞ்சில் நாடனை நான் அறிவேன். அவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதுக்கு அவர் முழு தகுதியுள்ளவர். சாகித்ய அகடமி விருது பெறுவதற்கென்று சில சட்டதிட்டங்களை வைத்துள்ளனர்; அதன்படி விருது வழங்குகின்றனர். அரசாங்கம் கூட பல சட்ட திட்டங்களை வைத்துள்ளது; இருந்தாலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. எனக்கு 66வது வயதில் சாகித்ய அகடமி விருது கிடைத்தது. இதைக் கேட்ட பல பேர், “இவருக்கு இப்பத்தான் கொடுக்கிறார்களா?’ என்று கேட்டனர். 50 நூல்கள் எழுதி முடித்த பின், இது போன்ற விருது கொடுக்கப்பட்டால், அதன் மூலம் என்ன புதிய உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

  எழுத்தாளர் பிரபஞ்சன்: விருதுகள் என்பது படைப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு வகை சமூக அடையாளம். கடந்த காலத்தில், தகுதியுள்ள பல படைப்பாளிகள் விருது பெறாமலே மறைந்து போய்விட்டனர். தகுதியுள்ளவர்கள் பரிசு பெறாததும், தகுதியற்றவர்கள் பரிசு பெறுவதும் ஒரு சமூகத்தின் ஆன்ம வீழ்ச்சியாக கருதப்படும். அந்த வகையில், தகுதியான எழுத்தாளரான நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது.

 மேலாண்மை பொன்னுசாமி: நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகடமி விருது கிடைத்திருப்பதில், உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எழுதத் துவங்கிய காலத்திலேயே, “தலைகீழ் விகிதங்கள்’ என்ற மிகச்சிறந்த நாவலைத் தந்தவர் நாஞ்சில் நாடன். காலந்தாழ்ந்து கிடைத்தாலும், இந்த விருதுக்கு தகுதியுள்ள படைப்பாளி இவர்.

 எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்: ஒரு எழுத்தாளர் கவுரவிக்கப்படும் போது, அவரோடு அவர் எழுதிய வாழ்க்கையும், அதைச் சார்ந்த மக்களும் கவுரவிக்கப்படுவதாக நினைக்கிறேன். சிறந்த இலக்கியவாதிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. அவருக்கு என் வாழ்த்துக்கள்

 

இது தாமதமாக வந்த விருது!

“இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு எனக்கு விருதெல்லாம் தரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியாக இப்போது எனக்கு விருது கிடைத்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்தான். நான் அவர்மீது கூட விமர்சனம் வைத்தது உண்டு. ஆனால் அதையும் தாண்டிய பண்பாளர் அவர்” என்கிறார் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட 63 வயதான நாஞ்சில் நாடன், தமிழின் முக்கியமான நாவல்களையும், அதி அற்புதமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். உற்சாகத்தின் திரு உருவாக இருந்தவரிடம் பேசினோம்...

மகிழ்ச்சியா? வியப்பா?

“இந்த விருது கிடைத்ததில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியோ, கொண்டாட்டமோ எனக்கு இல்லை. என்றாலும் கூட, ஒரு தீவிர இலக்கியவாதியை கௌரவித்திருக்கிறார்கள் என்பது வாசகர்களுக்கும், நவீன படைப்பாளிகளுக்கும் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். என்னைவிடத் தகுதியானவர்கள் இந்த மொழியில் நிறைய உண்டு. என்னுடைய எழுத்துலக குருநாதர்களாக விளங்கிய சுந்தரராமசாமி, நகுலன், ஆ.மாதவன் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. விருதுகள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டும். தற்போது நாற்பது, நாற்பத்து ஐந்து வயதில் எழுதிக்கொண்டிருக்கும் தகுதியானவர்களுக்கு விருது கொடுத்தால் அவர்கள் இன்னும் உற்சாகமாக இயங்குவார்கள். ஆனால், இங்கே விருதுகள் ஊக்குவிக்கும் விதமாக இல்லாமல், ஒரு ‘ரிடையர்மெண்ட் பெனிஃபிட்’ போல ஆகிவிட்டன.”

திரும்பிப் பார்க்கிறபோது?

“தற்போது பழந்தமிழ் இலக்கியங்களைத் தீவிரமாகத் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைப் பார்க்கிறபோது, எனக்குப் பெரிதாக சாதித்துவிட்டது போன்ற உணர்வு இல்லை. தமிழ் இலக்கியம் என்ற சோற்று மலையில், என் பங்களிப்பு ஒரு சில பருக்கைகள்தான். நேரத்தை வீணடித்திராமல் முனைப்பாகச் செயல்பட்டு, தமிழ் மொழிக்கு இன்னும் சிறப்பாக ஏதாவது செய்திருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. ஆனால் இனியும் இத்தனை தீவிரத்தோடு எவ்வளவு காலம் செயல்படமுடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் சில விஷயங்களை முடித்திட வேண்டும்.

உதாரணமாக ‘நாஞ்சில் நாட்டு உணவு என்றொரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது நாஞ்சில் பகுதி மக்களின் மத்தியில்கூட புழக்கத்தில் இல்லாத ருசியான உணவு வகைளைப் பற்றிய புத்தகம். அதை நான் எழுதாவிட்டால் வேறு யார் எழுத மெனக்கெடப்போகிறார். அது என் கடமை. என் எழுத்தின் மூலமாக பணம், புகழ், பாராட்டு எல்லாவற்றையும்விட எனக்குக் கிடைக்கும் மனத்திருப்தியை நான் பெரிதாக நினைக்கிறேன்.”

சமீபகாலமாக கட்டுரைகள் எழுதுவதில்தான் தீவிரமாக இருக்கிறீர்களே! ஏன்?

“என் அனுபவங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள் அவற்றை கதை மூலமாகத்தான் நான் சொல்லிவந்தேன். ஆனால் சில விஷயங்களைச் சொல்ல, கதையைவிட கட்டுரைதான் சரியானது. கட்டுரைகளுக்காக நான் நிறைய படிக்கிறேன்; கள ஆய்வு செய்கிறேன். மொழியின் பயன்பாடு, நாட்டு நடப்பு, அரசியல், பெண்களின் பிரச்னைகள், பொது இடங்களில் இருக்கும் கழிப்பிடங்கள், சுகாதார சீர்கேடுகள், அழிந்துவரும் சுற்றுச் சூழல் போன்றவற்றைக் கட்டுரைகளாக எழுதும்போது அவை ஏற்படுத்தும் தாக்கமும், அவற்றின் வீச்சும், அதிகமாக இருக்கின்றன.”

பார்ப்பதற்கு அரசு அதிகாரிபோல நவீன தோற்றம்; ஆனால் உங்கள் எழுத்திலோ சமூக அக்கறையும், மண்வாசமும் அதீதம். எப்படி இது சாத்தியம்?

“நான் உத்யோகவாதியாக விற்பனைத் துறையில் இருப்பதால் இந்த பேண்ட், முழுக்கை சட்டை, ஷூ இன்ன பிற எல்லாம் அவசியமாகிறது. இது என் புறத்தோற்றமே தவிர, என் அகம் நம் மொழி, கலாசாரம், மண்வாசம் இவற்றில்தான் ஊறிக்கிடக்கிறது.”

காட்சி ஊடகங்களால் வாசிப்புக்கு அச்சுறுத்தலா?

“ஆமாம். டி.வி. பார்த்தபடியே சாப்பிட முடிகிறது; ஃபோனில் பேச முடிகிறது; என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய முடிகிறது; ஆனால் வாசிப்பு அப்படி இல்லை; தீவிர கவனம் அவசியம். டி.வி.யினால் நன்மை, தீமை இரண்டுமே உண்டு. ஆனால் வாசிப்பினால் யாரும் கெட்டுப்போனதில்லை. ஆனாலும்கூட அயல்நாட்டில் வாழ்பவர்கள், கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுபவர்கள் ஏராளமாகப் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.”

- எஸ். சந்திரமௌலி

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் - சாகித்ய அகாடமிக்கு அல்ல

Posted By வெங்கட் சாமிநாதன் On January 1, 2011 @ 7:51 am In இலக்கியம்

dsc_5640-1சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருடப் பரிசை நாஞ்சில்நாடனுக்கு ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்போவதாக செய்தி வந்துள்ளது. நாஞ்சில்நாடனுக்கு நம் வாழ்த்துகள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர்தான். ஆனால் அப்படிக் கருதித்தான் சாகித்ய அகாடமி வழங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

தமிழைப் பொருத்தவரையில், அகாடமியைப் பற்றி அதன் கண்விழித்த காலத்திலிருந்து எனக்குத் தெரியும். அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. அகாடமி என்று நான் சொல்லும்போது நான் அதன் தமிழ் அவதாரத்தை மாத்திரம்தான் குறிப்பிடுகிறேன். எதாக இருந்தாலும், சினிமாவோ, உருளைக்கிழங்கோ, அரசியலோ, இல்லை மொழிப்பற்றோ, ஜனநாயகமோ, இல்லை பச்சை மிளகாயோ நாம் நம் மண்ணுக்கேற்றவாறுதான் நம் ருசிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறுதான் மாற்று ரூபங்களில் வடிவமைத்துப் பயன்படுத்திக்கொள்கிறோம். அது எங்கிருந்து வந்ததோ அங்கே இருந்தபடியே அப்படியே காப்பியடித்து நாம் இங்கும் வைத்துக்கொண்டிருக்கமுடியுமா என்ன? நம்ம மண், நம்ம பண்பாடு எல்லாம் வேறே இல்லையா? நமக்கு என்று சுயசிந்தனை கிடையாதா? நாம் முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அது தானாகவே அது நம் சௌகரியத்துக்கு, அதைப் பயிர் செய்ய, கையாள வந்தவர்களால் மாற்றிக்கொள்ளும்.

ஆக தமிழ் சாஹித்ய அகாடமிக்கும் இலக்கியத்துக்கும் ஏதும் சம்பந்தம் கிடையாது. அதை மற்ற இடங்களின் செயல்பாட்டோடோ அல்லது தில்லி சாஹித்ய அகாடமியின் செயல்பாட்டோடோ, அல்லது எழுதி வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடனோ சம்பந்தப்படுத்தக்கூடாது.

அதனால்தான் 1955-ஆம் வருட முதல் சாகித்ய அகாடமி பரிசைத் தமிழ் ஆலோசனைக்குழுவின் தலைவர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கே வழங்க வேண்டி வந்தது. இந்த வினைமுற்று சரியில்லை என்றால், வழங்கியது, வழங்கிக் கொண்டார் என்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி வாசித்துக்கொள்ளலாம். தான் சமைத்த உணவை முதலில் தானே சுவைத்துப் பார்த்துவிட்டுப் பிறகுதானே மற்றவர்களுக்குப் படைப்பது வழக்கமும் முறையுமாகும்? முதல் கோணல் முற்றும் கோணல் என்று சிலர் சொல்லக்கூடும். பிள்ளையார் சுழி போட்ட முகூர்த்தமே சரியில்லை என்று இன்னம் சிலர் வேறு வார்த்தைகளில் சொல்லக்கூடும். ஆலோசனைக்குழுவில் இருப்பவர்கள் என்ன பாபம் செய்தார்கள்? அது ஒரு குற்றமா என்ன? அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?

சோவியத் லாண்ட் பரிசுத் தேர்வுக்குழுவில் இருந்து கொண்டு நான் பரிசு பெறுவது சரியல்ல என்று ஒரு சமயம் க்வாஜா அஹ்மத் அப்பாஸ் தனக்களிக்கப்பட்டதை நிராகரித்தார். சரி.அதற்காக? அது ஒரு காலம். அது வேற்று மண்ணை, பண்பாட்டைச் சேர்ந்த விவகாரம். அதை நாம் காப்பி அடிக்க முடியுமா என்ன?

நிஜமாகவே இப்படித்தான் கி.வா.ஜகன்னாதன் கேட்டார். “நாங்கள் என்ன பாபம் செய்தோம்?” என்று. ஆனாலும், தொடர்ந்து ஆலோசனைக்குழுவில் இருப்பவர்களே தமக்குள் பரிசை வழங்கிக்கொள்வது, ஏதோ கம்பெனி பங்குதாரர்கள் லாபத்தைத் தமக்குள் பகிர்ந்துகொள்வதுபோல் இல்லையா? மிக உயர்ந்த சிந்தனைதான். தாம் இருக்குமிடத்திலிருந்து நம்மை நாம் அன்னியப்படுத்திக் கொள்ளக்கூடாது. நம்முடையதைப் போலவே அதையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையா? நாம் உபசரிப்பதில்லையா, “இதை உங்க வீடு போல நினைச்சுக்கங்க.. சங்கோஜமே இல்லாமே உங்க இஷ்டம் போல இருந்துக்கலாம்” என்று? அப்படித்தான் ‘சங்கோஜமே படாமே’ இருந்திருக்கிறார்கள், ரா.பி.சேதுப்பிள்ளை தொடக்கம் முதல் இன்று வரை.

உண்மையில் ஆலோசனைக் குழு ஒரு பரிசுத் தேர்வுக்குழுவே இல்லை. ஆலோசனைக்குழு அகாடமியின் மற்ற பொறுப்புக்களுக்குத்தான் ஆலோசனை சொல்லும். பரிசு அளிப்பது அதில் இல்லை. அதற்கான சாகித்ய அகாடமியின் விதிமுறைகளைப் பார்த்தால் அங்கு ஆலோசனைக்குழுவுக்கு இடமே இல்லை. ஆனால் அப்படித்தான் ரா.பி.சேதுப்பிள்ளை காலத்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு வருகிறது. ஆலோசனைக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பரிசு கிடைத்துவிட்டது என்றால் பின் அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரப்பட்டது. இது எப்படி நிகழ்கிறது என்பதே ஒரு புதிர்தான். ஆனால் அப்படித்தான் ஒரு மாயாஜாலம் நடக்கிறது. தலையிலிருந்து தொப்பியை எடுத்தால் புறா பறக்கிறது. இல்லையா? அது எப்படி என்று நீங்கள் கேட்டால் பி.ஸி.சொர்கார் சொல்லமாட்டார். ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் சொல்லமாட்டார்கள். சொல்லிவிட்டால் மந்திரம் பலிக்காது என்று சொல்லக்கேட்டிருக்கிறோமே நாம்.

இல்லையெனில் பரிசு பெற்றவர்கள் பெரும்பாலோர் ஆலோசனைக்குழுவினராகவே இருந்தது எப்படி நிகழ்ந்தது? தனக்கு மிஞ்சித்தானே தர்மம் என்பது தமிழ் உலகம் அறிந்த பொதுவழக்கு. இதை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போனால் கூட அது செல்லாது. இந்திய குற்றவியல் சட்டமே பேசாமல் ஒத்துக்கொள்ளும் தர்மம் இது. இலக்கியம் இதில் பலவீனமான சக்தி. ஆதலால், ஆலோசனைக்குழுவினர் எல்லோருமே தமக்குள் முறைவைத்துப் பரிசைப் பகிர்ந்துகொண்டது போக, இனி பரிசு பெற பாக்கி எவரும் இல்லையென்ற கட்டம் வந்ததும், குழுவினர் தம் அடியார் கூட்டத்திற்கு பரிசு கொடுக்க எண்ணி, அப்படித்தான் ராஜாஜி, மு.வரதராசனார், அகிலனார், சிதம்பர ரகுநாதனார் என்று தம் அடியார்கள் ஒவ்வொருவருக்குமாக (எத்தனை பேரைத்தான் பட்டியலிடுவது?) பரிசுப் பிரசாதங்களை வழங்கத் தொடங்கினர். சரி, இந்தப் பட்டியலில் லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியம் போன்றோருக்கும் கிடைத்ததே என்றால், அது உறுப்பினர் சிலரின் நெஞ்சு உறுத்தலுக்கும் பக்திக்கும் அடையாளம் என்றறிக. நா.பார்த்தசாரதிக்கு, அகாடமியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த அவலம் ஒரு கட்டத்தில் சகிக்கமுடியாது போக, இதற்குக் கழுவாய் தேடி சாகித்ய அகாடமிக்கு சாப விமோசனம் பெறத் துடித்ததன் விளைவுதான் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்பிரமணியம் போன்றோர் நா.பா.வின் முயற்சியில் பரிசுக்குரியவரானார்கள். இவையும் நியாயமான, விதிகளுக்குட்பட்ட இலக்கியத்தேர்வு இல்லை. முன்னர் குழுத்தலைவர்கள் கடைப்பிடித்த தமிழ்மரபுதான். தமக்கும் தமக்கு வேண்டியவர்களுக்கும் பரிசு பெற்றுத்தரும் மரபும். ஒருமுறை நா.பா. இந்திரா பார்த்தசாரதியிடம், “உமக்கு இந்த வருஷம் பரிசு கொடுக்கலாம் என்றால், ஒருத்தர் மாத்திரம் மசியமாட்டேன் என்கிறார். நீர் அவரை ரொம்பவும் கேலி செய்திருக்கிறீராம். அவரை எப்படிச் சமாதானப்படுத்துவீரோ தெரியாது. செய்யும் அது உம் பொறுப்பு. அதைச் செய்தீரோ, பரிசு உமக்குத்தான்,” என்று அறிவுரை கூற, இ.பா.வும், அந்த மசிய மறுத்த உறுப்பினரை மசிய வைக்க ஆவன செய்ய, இ.பா.வுக்குப் பரிசு கிடைத்தது. நா.பா.வின் இந்த பாச்சாவெல்லாம் ஒரே ஒருவரிடம் பலிக்கவில்லை. “ஏதாவது புத்தகம் இந்த வருடத்துக்குள் கொண்டு வந்துவிடுங்கள். எப்படியாவது உங்களுக்குப் பரிசு கொடுத்தாகணும்,” என்று செல்லப்பாவிடம் நா.பா எவ்வளவு மன்றாடியும் செல்லப்பாவின் பிடிவாதம் தளரவில்லை. ”நீங்களாவது சொல்லிப்பாருங்களேன். நான் சொல்லி அவர் கேட்பவராயில்லை” என்று நண்பர்களிடமெல்லாம் சொல்லிப்பார்த்தார் நா. பா. ஆனால், செல்லப்பாவின் பிடிவாதம் உலகம் அறிந்தது. அவர் மறையும் வரை அந்தப் பிடிவாதத்தோடுதான் வாழ்ந்தார். 50,000 ரூபாய் பரிசுக்கு அதற்கு மேலும் செலவு செய்து லாபி செய்தவர்கள் இருக்கும் உலகில்தான் அவரும் வாழ்ந்தார்.

இதுவரை முற்போக்குகள் காலம். முற்போக்குகள் அனைவருக்கும் கொடுத்தாயிற்று போலிருக்கிறது. வேறு யாரும் கண்ணில்படவில்லையோ என்னவோ. முற்போக்குகள் அனைவருக்கும் நிறமாற்றம் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நிகழ்வதுண்டு. இது முற்போக்குச் சிகப்பா, இல்லை, கழகக்கருப்பா என்று நமக்கு நிதானிப்பது கஷ்டம். ஆனால், கருப்புகளினிடையே அது கருப்பாகும். சிகப்புகளிடையே சிகப்பாகத் தோற்றம் தரும். முற்போக்குகள் காலத்தில் அவர்கள் கவனிக்கப்பட்டார்கள். வானம்பாடிகள் ஒவ்வொருவராகக் கவனிக்கப்பட்டார்கள். அத்தோழமை தொடர்ந்தது.

ஆச்சரியமாக இருக்கும். நம்புவது கஷ்டமாக இருக்கும். இல்லையெனில், சுந்தர ராமசாமி பெயர் இடம் பெற்றிருந்த கடைசிப்பட்டியலில், அவர் எப்படி ஒதுக்கப்பட்டார்?, தி.க.சிவசங்கரனின், அவரதேயான விமர்சனக் கட்டுரைகள் எப்படி பரிசுக்குரியதாகியது? பின் எப்படி ஆலோசனைக்குழுத் தலைவர், (இவர் வானம்பாடிக்காரர்), கழக பாஷையில் “பின் என்னய்யா பாப்பானுக்கு கொடுக்கணும்கறீங்களா” என்று கேட்கமுடிந்தது? இந்தக் கேள்வி பதிலையே வேண்டாத கேள்வி. தன்னிலேயே தன் சாட்சியத்தை, நியாயத்தைக் கொண்டுள்ள கேள்வி. Self evident truth. இன்னுமொரு பொதுவான அளவுகோல் வாய் வார்த்தையாகச் சொல்லப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன். “பாப்பான் யாரும் இல்லாம பாத்துக்கங்க…” இது அரசியல் அதிகார மையங்களிலிருந்து தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றுள்ள தமிழ்நாட்டுச்சூழலில், இது சொல்லப்படவேண்டிய அவசியமே இல்லை. தாக்கீது ஏதும் தரப்படாமலேயே அனுசரிக்கப்படும் விதி இது.

முன்னரே சொன்னபடி, இது நம்பக் கஷ்டமாக சில அப்பாவிப் பிராணிகளுக்கு இருக்கக்கூடும். தற்செயலாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரருடன் ஒரு டீக்கடையில் சந்திப்பு நேர்ந்தது. இதை நானும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரும் எதிர்பார்க்கவில்லை. என்னை மிகவும் மதிப்பதாக அவர் சொன்னார். “இப்படி முற்போக்குகள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நேர் சந்திப்புகளில்தான் இதைச் சொல்கிறீர்கள். பொதுவிலோ தி.க.சிவசங்கரன்தான் உங்களுக்காகப் பேசுகிறவர்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, “இதையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்துக்கொண்டு பெரிசு படுத்தக்கூடாது” என்றார். இதுதான் சங்கடம். தனிப்பட்ட அபிப்ராயங்கள் வேறு. பொதுமேடையில் சொல்வது வேறு. சரி. விஷயத்துக்கு வருவோம்.

பரிசுக்குத் தேர்ந்தெடுப்பதன் விதி முறைகள் பற்றிச் சொல்கிறேன். அந்தந்த மொழியில் புகழ பெற்ற பண்டிதர்கள், விமர்சகர்கள் எழுத்தாளர்கள் நூறு பேரிடம் அவர்கள் பரிசுக்குத் தகுந்த நூலை சிபாரிசு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின் அவை தொகுக்கப்பட்டு அத்தொகுப்பில் ஒரே ஒரு நூலை மாத்திரம் தேர்ந்து சொல்லும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி அவர்கள் குறிப்பிடும் நூலகளின் சிபாரிசுகளின் எண்ணிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டு வேறு மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும் நூல் பரிசு பெறுகிறது. இந்த நடைமுறை அத்தனையும் ஒவ்வொரு கட்டத்திலும் ரகசியமாகவே நடக்கிறது. என்று சொல்கிறார்கள்.

இந்த விதிமுறைகள் எதனோடும் எனக்கு ஏதும் முரண் இல்லை எந்த நூல் யாரால் என்ன காரணத்தால் தேர்வு செய்யப்பட்டது என்பதன் ரகசியம் காக்கப்படுவதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. எல்லாம் சரி. ஆனால் இந்த விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டதன் விளைவாகத்தான் ஆலோசனைக்குழு உறுப்பினர்களே ஒரு கட்டத்திலும், பின் அவர்களுக்கு வேண்டியவர்கள் அடுத்த கட்டத்திலும், பரிசுக்குரியவர்களானது எப்படி? மேற்கூறிய விதி முறைகளில் ஆலோசனைக்குழு எங்கு இடம் பெறுகிறார்கள்? பின் அவர்கள் எப்படி முறை வைத்து எடுத்துக்கொண்டார்கள்? இந்த விதிமுறைகளின்படிதான் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் இன்பம்’ என்னும் புத்தகம் 1955 வரையான காலகட்டத்தில் சிறந்த நூல் என்றார்களா? நியாயமாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் அந்த வருடம் முதல் பரிசே கல்கிக்குத்தான் கிடைத்திருக்கும். அது இலக்கியத் தேர்வு என்று நான் சொல்லவில்லை. ஆனால், கல்கி அத்தகைய பிரபல, சக்தி வாய்ந்த, எல்லா மட்டத்திலும் புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் சில ஆண்டுகள் முன்பு 1954 அல்லது 1955-இல் தான் காலமாகியிருந்தார். அந்த இழப்பு வேறு தேர்வைப் பாதித்திருக்கும். ஆலோசனைக்குழுவில் இருந்த ராஜாஜி சிபாரிசு பண்ணவேண்டியிருந்திராது. அதுவும் கல்கியின் மறைவு காரணமாக பாதியில் விட்ட நாவல் அலையோசையாக இருந்திராது.

விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதிதாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப்பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம். கண்ணதாசனின் கவிதைகள், பாட்டுக்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவரது நாவலுக்கா (பெயர் மறந்துவிட்டது) பரிசு தந்திருக்கும்? தி.ஜானகிராமனின் மோகமுள்ளை ஒதுக்கிவிட்டு சக்தி வைத்தியம் புத்தகத்துக்கா தந்திருக்கும்? லா.ச.ராமாமிர்தத்தின் சிந்தாநதிக்கா தந்திருக்கும்? க.நா.சுப்ரமண்யத்தின் ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் புத்தகத்தையா தேர்ந்திருக்கும்? வைரமுத்துவின் கவிதைகளையெல்லாம் அலட்சியம் செய்து கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலையா பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும்? பாலகுமாரன் கண்ணெதிரே இருக்கும்போது அவர்கள் எழில்முதல்வனும், தி.க.சிவசங்கரனும், புவியரசும், சிற்பியும், எங்கே என்றா தேடிப்போவார்கள்?

எப்படி நேர்ந்தது. ஆலோசனைக் குழுவினர் அந்த வருஷத்துக்கான பரிசு யாருக்கு எனத் தேர்ந்தெடுத்தாயிற்று. அதற்கு உதவ, அப்போது வெளிவந்த புத்தகம் என்னவோ அதற்குக் கொடுத்தால் ஆச்சு, கதை முடிந்தது. இது சிறந்த இலக்கியத்தேர்வு இல்லை. குழு தேர்ந்தெடுத்தவருக்கு அளிக்கப்படும் கௌரவம். க.நா.சுவை, லா.ச.ராமாமிர்தத்தை, தி.ஜானகிராமனை கௌரவித்தார்கள். செய்த பாபத்திற்கு விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இடையில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். கல்கி, பாரதிதாசன், கு.அழகிரிசாமி, கண்ணதாசன், ஆதவன், சி.சு.செல்லப்பாவெல்லாம் அவர்கள் உயிரோடு இருந்தவரை அகாடமியின் கண்களுக்குத் தெரியாமலே போனார்கள். இறந்த பிறகு உடனுக்குடன் இறுதி மரியாதையாக, கிடைத்த புத்தகத்துக்குப் பரிசு கொடுத்தது அகாடமி. கொடுத்தது இலக்கியப்பரிசு அல்ல. இறுதி மரியாதை.

ஆக, இப்படி 1955-இல் பிறந்து இன்று வரை, 2009 வரை இப்படியே வளர்ந்துவிட்ட ஒன்று திடீரென இலக்கிய ஞானஒளி பெற்று நாஞ்சில்நாடனுக்கு பரிசு கொடுக்கத் தேர்ந்துள்ளது என்றால் அதை நம்பமுடிகிறா? ஆச்சரியமாக இல்லையா? விதிமுறைப்படியென்றால், நிபுணர்கள் தேடித் தேர்ந்தது என்றாலும், சரி, அல்லது வழக்கம்போல ஆலோசனைக் குழுவினர் தேர்ந்தது என்றாலும் சரி, எந்தக் கணக்குக்கும் இது ஒத்து வர மறுக்கிறது. சரி, விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்றால் (அதை நான் நம்பவில்லை), ஆலோசனைக்குழுவினர் தேர்ந்தது என்றால், அல்லது இரண்டு தரப்புமே இன்றைய அதிகாரச் சூழலின், கட்சி இலக்கியச்சூழலின் பாதிப்புக்கு உள்ளாகி, தேர்ந்தெடுத்தது என்றால், அப்போது அந்தப் பட்டியலில் இடம் பெறக்கூடியவர்கள் அனேகர். இன்றைய அரசியலில் தம்மை ஐக்கியமாக்கிக் கொண்டுள்ள கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், இளையபாரதி, என்ற வரிசையிலும், பின்னர் ரவிக்குமார், இமையம் (இமையம் எழுத்தை அவர் சார்ந்திருக்கும் கட்சியில் யாரும் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான், படித்திருந்தால் அவரையும் “நம்மாளுதான்” என்று ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.) பின், எமது காலத்தின் மூத்தத் தமிழ் எழுத்தாளர் கலைஞருக்குத் தன் நாவலைச் சமர்ப்பித்திருக்கும் தமிழ்ச்செல்வி, வாசற்படியில் நின்றுகொண்டு உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரன், அப்பா, எத்தனை பேருக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது! இதையெல்லாம் விட்டு நாஞ்சில்நாடன்தான் கண்ணில்பட்டார் என்றால்…

dsc_5581-1

நமக்கு சந்தோஷம்தான். ஆனால் நாஞ்சில்நாடன் ஒரே ஒரு கணக்கில்தான் ஒத்துவருகிறார். சொல்லாத விதிமுறைக்கேற்ப அவர் “பாப்பான் இல்லை” அது வரைக்கு சரி. ஆனால் அவர் பாப்பானீய அடிவருடி என்ற லேபிளில் அடைபடுவார் போலிருக்கிறதே!

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர், மனுஷன் அந்த ஒன்றரை இலாக்கா மண்ணை விட்டு நகர்வதில்லை. பம்பாய் போனாலும் சரி. அதைவிட்டு வந்தபிறகுதான் மிதவை என்னும் நாவலில்தான் பம்பாய்க்குப் பிழைப்பு தேடிப்போன அனுபவத்தைச் சொல்கிறார். அங்கும் சரி, பின்னர் பம்பாய் சென்ற குசப்பய பூலிங்கம் எதிர்கொண்ட வாழ்க்கையைச் சொல்ல புகுந்தபோதும் (எட்டுத் திக்கும் மதயானை) பம்பாயில் சந்திப்பது நாஞ்சில்நாட்டுக்காரர்களைத்தான். பம்பாய் போயும் கர்மம் தொலைய மறுக்கிறது. அங்கு பூலிங்கத்துக்குக் கிடைத்தது தேவர்கள் இருக்கும் சால்தான். அங்கே தேவம்மாரைத்தான் சேப்பங்களாமே. சட்டிபானை செய்யும் குசப்பயலுக்கு ஏது இடம்? ”இறைச்ச குளம் தேவம்மாருன்னு சொல்லச்” சொல்லி புத்தி சொல்லப்படுகிறது. சாதி போகவில்லை. சாதி ஒழித்து சமத்துவபுரம் கட்டி, அறுபது வருடங்களாயிற்று. நாஞ்சில்நாட்டைச் சொல்லிவிட்டுப் போகட்டும். இதையெல்லாமா எழுதுவது?

மனுஷன் கதையைச் சொல்லாமல் அரசியல் பேசத்தொடங்கினால். அதுவும் திமுக ஆட்சியின் பொற்கால மகத்துவத்தையாவது பேசியிருக்கலாம். ஆனால் நடப்பதே வேறு.

“பள்ளிக்கூடத்துக்கு முன்னால் தார் ரோடு. கக்கன் மராமத்து மந்திரியாக இருந்த காலத்தில் போட்டது. அதன் முறை நான்கு முறை தார் பாவியதாக ரெக்கார்டுகளில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் குண்டு குழிகளில்… சல்லி வாரிப்போட்டு, தார்க்குழம்பு தெளித்ததைத்தான் ரோடு அறியும்.” இந்த விவரத்தை யார் கேட்டார்கள்? எழுதுகிறார். அவர் பார்த்தது அதுதானாம். என் அனுபவத்தை எழுதுகிறேன் என்கிறார்.

“இருபத்திரண்டு ஆன சூனா மானா ஆட்சியில் எப்போதாவது நொடிகளில் இடும் சல்லியும் கலந்து ஒப்பேத்துவதோடு சரி. புதிதாய்ப் போடுவதில்லை. ஆனால் தாமரைக்குண்டு தொடங்கி, மாங்குளம் வழியாக கற்றாழைக்குடி வரை மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு தார் போட்டதாக மூன்று முறை கோப்புகளில் பதிவானதாகச் சொல்கிறார்கள்.” இது வெறும் வர்ணணை இல்லை. எதையோ சொல்வது போல் எங்கோவெல்லாம் பாய்கிறதில்லையா?

இன்னும், “ஒலி பெருக்கிகள் ஒன்றையொன்று பார்த்துக் குரைத்தன. தோற்றத்தில் இவர் ஒரு பெரிய அறிவாளி என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. இவர் எப்படி சாதிச்சேற்றில் பன்றியாகப் புரள்கிறார் என்பதில் சந்தேகம் பலருக்கும் உண்டு.”

சாதிச்சேற்றில் புரள்வது இன்று தமிழகம் முழுதுமே என்பதும் அவர்கள் தோற்றத்தில் பெரிய அறிவாளிகள் என்பதும் அதிகாரத்தில் இருக்கும் யாருக்கு உவப்பாக இருக்கமுடியும்?

நாஞ்சில்நாடன் ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், புலமையும் கொண்டவர். அது தானாகவே வெளிப்படும். அவர் பார்வையோடு. அது வெற்றுக்கேலியாக மட்டும் வெளிப்படாது. எங்கெங்கோ யாரையெல்லாமோ தாக்கும். ஒரு கதையில் ஒரு கிழவி வசைபாடும் குணத்தைப் பற்றிச் சொல்கிறார், “ நாவலர்கள், நடமாடும் பல்கலைக்கழகங்கள், சிந்தனைச்சிற்பிகள், இங்கர்சால்கள் எல்லாம் எட்டி நிற்க வேண்டும்.” இது கிழவியை மட்டும் சாடும் கேலி இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இன்னொரு இடத்தில் எழுதுகிறார்.

“அரசியல் ஆரவாரக்காரர்கள் எல்லாம் தலைசிறந்த நாடகக்காரர்களாகக் கருதப்பட்டார்கள். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, வாடா தமிழா வாளெடுத்து’ என்ற ரீதியிலோ, ‘மாட மாளிகையில் மயக்கும் மங்கையர் மடி மேல் கிடக்கும் மணவாள முதலியாரே பார்… உழைத்து, உருக்குலைந்து உதிரம் உதிர்ந்து உயிருக்குப் போராடும் உலகநாதனைப் பார்,’ என்றோ வசனங்கள் வழிநெடுக தாளித்துக் கொட்டப்பட்டிருக்கும் நாடகங்கள் அவர்களுக்கு நிறையக் கிடைத்தன.”

“அரசாங்கம் அதிகாரபூர்வமாகச் செய்யாத ஒரே தொழில் விபச்சாரம்தான். ஆனால் அரசு சம்பந்தப்பட்ட எதிலும் மக்களுக்கு போதை இல்லை போலும்.” கவனிக்கவும் “அதிகாரபூர்வமாகச் செய்யாத தொழில்.”

ஒரு பெரியவர் சொல்கிறார்: “இதிலே பொதுநியாயம் என்ன தம்பி? அதிலே இன்னும் ஒரு கசவாளித்தனம் பாத்துக்கோ. நாலு ஆட்டைக் கூட்டீட்டு வந்து, ஒண்ணைக் கறிபோட்டு தொங்கப்போட்டு வித்துக்கிட்டிருப்பான். மத்த மூணும் பாத்துக்கிட்டே இருக்கும். அதுக்கு முகத்திலே ஏதாணும் வருத்தத்தைப் பாத்திருக்கியா நீ. ஒரு புண்ணாக்கும் கிடையாது. அது மாரித்தான் நாமோ ஒத்தனுக்குக் குடலைச் சரிச்சாலும், ஒரு வருத்தம்படாமே பாத்துக்கிட்டே போவான்… அதுதான் தம்பி உலகம்,” என்று அவர் சொல்லும்போது அது இன்றைய அராஜகம் எது என்பதையும் அதையும் பார்த்துக்கொண்டு வாய் மூடி ”நம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போகும்” நம்மையும் சுட்டவில்லையா?

இதைக் குறிப்பிட்டு நான் வேறு ஒரு இடத்தில் சொன்னேன்: “இன்றைய நம் வாழ்வின் நாற்றத்தையும் அது பூசியிருக்கும் சமூக அங்கீகார சந்தனத்தையும், கைப்பற்றியிருக்கும் அதிகார குண்டாந்தடியையும் பற்றி நான் ஒரு நேரடியான குறிப்பை நான் வாசித்ததில்லை. சுற்றி வளைத்து விடுகதைகளையும், மாயாஜாலங்களையும், கனவுலக சஞ்சாரத்தையும் எழுதிவிட்டு பன்முக வாசிப்பு என்ற ஒரு பம்மாத்து நடக்கிறது. தனக்கு முதுகெலும்பு இல்லாதது தெரிந்து விடக்கூடாது என்று பகட்டு சிம்மாசங்களில் ஒட்டி அமர்ந்த தோற்றமே இது.”

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். நாஞ்சில்நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத்தான் எழுதுகிறார். அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத்தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ்நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப்போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது? புதிர்தான்.


Article printed from சொல்வனம்: http://solvanam.com

URL to article: http://solvanam.com/?p=12119









     RSS of this page