| | | |
Home /
Nadaipayanam AsokaMithran
Uploading ....
நடைவெளிப் பயணம் அசோகமித்திரன்தி.க.சியின் தங்கத்தாமரை நாட்கள் ‘‘தி.க.சி போய்விட்டாரே... நீங்கள் ஒன்றும் இரங்கல் எழுதவில்லையா’’ என்று இரு மூத்த நண்பர்கள் விசாரித்தார்கள். தமிழ் இடதுசாரி இலக்கிய விமர்சகர் - திருநெல்வேலி சுடலைமாடன் தெரு தி.க.சிவசங்கரனுக்கு நான் இரங்கல் எழுதாமல் யார் எழுத முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். நானும்தான் இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை இரங்கல்கள் எழுதிவிட்டேன்! அதே போல, முன்னுரைகள். ஒரு பெண் எழுத்தாளர் அவருடைய நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு என்று இவ்வளவு நூல்களுக்கு என்னை முன்னுரை எழுத வைத்து, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் மதிப்புரையும் எழுத வைத்தார்! ‘ஏன் எழுதினீர்கள்’ என்று கேட்கலாம். நிர்ப்பந்தம். நான் ‘இல்லை, முடியாது’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளவில்லை. நான் ஒருமுறை ஒரு சித்தர் பற்றிச் சொன்னபோது நான்கு பேர் மத்தியில் தி.க.சி கேலியாக உரத்துச் சிரித்தார். பின்னர் அவருடைய நிர்ப்பந்தம் அறிந்து கொண்டேன். ஒரு காலகட்டத்தில் நான் அவரை தினமும் ஒருமுறையாவது சந்தித்து விடுவேன். தி.நகர் உஸ்மான் சாலையில் டி.செல்வராஜுடன் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டு, சோவியத் செய்தி நிறுவனத்தில் சோவியத் அரசுப் பணியாளராக இருந்து வந்தார். அங்கு தமிழ்ப் பிரிவில் மட்டும் வடிகட்டிய தோழர்கள். கன்னடப் பிரிவில் இருந்தவர், அங்கிருந்து நேரே அமெரிக்கச் செய்தி நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்! தமிழ்ப் பிரிவில் முக்கியத்துவம் வரிசையில் விஜயபாஸ்கரன், தொ.மு.சி.ரகுநாதன், கவிஞர் கே.எம்.அருணாசலம், திகசி. காலை எட்டிலிருந்து மாலை ஐந்து மணி வரை மூச்சு விடாமல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு, செய்திகள், கருத்துகள் என வாரம் மூன்று நாட்களுக்கு. வாரம் இருமுறை சிறப்புக் கட்டுரைகள். புத்தக வடிவில் சோவியத் பலகணி வாரம் ஒரு முறை வரும். என் பக்கத்து வீட்டுக்காரர், ‘‘உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்’’ என்று கேட்டார். நான் அவரிடம் ‘சோவியத் பலகணி’ சில இதழ்கள் கொடுத்தேன். அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார். ஒரு நாள் அருணாசலத்திடம் உற்சாகமாக, ‘‘உங்கள் கருத்துகள், செய்திகள் மிகவும் நன்றாக இருக்கின்றன’’ என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, ‘‘இதெல்லாம் உக்காந்துண்டு நீங்க படிக்கிறீங்களா?’’ என்று கேட்டார். ஆனால் தாஸ்தாயெவஸ்கி பற்றி சிறப்புக் கட்டுரை ஒன்று வந்தபோது அதை ‘கசடதபற’ பத்திரிகைக்குக் கொடுத்தேன். பயன்படுத்திக் கொண்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தாமரை’ பத்திரிகையை ஒரு நல்ல புனைகதைப் பத்திரிகையாக தி.க.சி மாற்றினார். ப.ஜீவா னந்தம் ஆசிரியராக இருந்தபோதே என் கதை ஒன்று அதில் பிரசுரமாயிற்று. தி.க.சி ஆசிரியப் பொறுப்பேற்றதும் எல்லா சிறப்பிதழ்களிலும் என் கதைகள் இடம் பெற்றன. அப்போது தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருந்த ‘கரைந்த நிழல்கள்’ நாவலை மிகுந்த ஆர்வத்துடன் அவர் படித்தார். ஒரு கட்டம் வரை நாவலில், ‘அதன் காலம் எது’ என்று அறிய முடியாதபடியே எழுதியிருந்தேன். ஆனால் கடைசி அத்தியாயத்துக்கு முந்தையதில் ஒரு சிறு தகவல், காலத்தைக் காட்டிவிடும். அதைக் கவனித்தவர் எனக்குத் தெரிந்து தி.க.சி.தான். ‘அது நாவலின் தரத்தைக் குறைத்து விடுகிறது’ என்றார்! எனக்கு ஆச்சரியம். எவ்வளவு நுண்ணிய பார்வை! அவர் ஒரு காலத்தில் புதுமைப்பித்தனுக்கு வீர வணக்கம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். நான் ஒரு முறை புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றிக் குறிப்பட்டபோது என் தகப்பனாருக்கும் திட்டு விழுந்தது. ஒரு கூட்டம் விடாது நாங்கள் சென்று விடுவோம். நாங்கள் இருவரும் முதலில் சேர்ந்து மேடையேறியது சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில். அது சுந்தர ராமசாமி சிறுகதைகள் பற்றிய விமர்சனக் கூட்டம். ராமசாமிக்கு அப்போது இரு தொகுப்புகள்தான் வந்திருந்தன. (‘அக்கரைச் சீமையிலே’, ‘பிரசாதம்’.) எனக்கு அப்போதைய தமிழ் இலக்கிய அரசியல் அவ்வளவாகத் தெரியாது. நான் ‘பிரசாதம்’ தொகுப்பைப் பாராட்டிப் பேசினேன். தி.க.சி.க்குத் தாங்க முடியவில்லை. ‘‘கொள்கைப் பிடிப்பைக் கைவிட்டுவிட்டு ‘பிரசாதம்’ போன்ற படைப்புகளைப் படைப்பவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள், அழிக்கப்பட்டு விடுவார்கள்’’ என்று ஆவேசமாகப் பேசினார். எனக்குப் புரியவில்லை. தி.க.சி.யின் ஆவேசத்தைப் பார்த்து நான் அவருடன் பேசவே பயந்தேன். சுந்தர ராமசாமியை முதன்முறையாகப் பார்த்தபோது இது பற்றிக் கேட்டேன். அவர், ‘‘தி.க.சி.யா?’’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். அப்புறம், ‘‘தி.க.சி. பாவம், அவருக்கு ஒண்ணும் தெரியாது’’ என்று சொன்னார். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்தான் தி.க.சி. கட்டுரைகளை முதலில் தொகுத்து வெளியிட்டது என்று நினைக்கிறேன். ராமசாமி சொன்னது புரிந்தது. அவருடைய எதிரிகள் என்று அவர் நினைப்போரைக் காரிய, காரணம் இல்லாமல் தாக்குவார். ஜெயகாந்தன் ஒரு முறை ‘‘தி.க.சி. தன் மூக்கைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொன்னதும், அவர் படைப்புகள் அவர் கண்ணில் படவில்லை. கைலாசபதியும் அப்படித்தான். அவர்கள் தாக்குபவர்கள் பொதுவாக ‘ஸாஃப்ட் டார்கெட்ஸ்’. அதாவது அதிகார பலமற்றவர்கள். திருப்பித் தாக்க முடியாதவர்கள். எனக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. அதன் பிறகு அதிகத் தொடர்பில்லை. அவரும் ஓய்வு பெற்று திருநெல்வேலி சென்று விட்டார். சோவியத்தும் போயிற்று, தி.க.சி. பணிபுரிந்த பிரிவும் போயிற்று. ஒரு ‘தோழர்’ என்றாலும், தி.க.சி. ஒரு பரிபூரண சம்பிரதாயவாதியாக நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தார். அவருடைய இதய சிகிச்சைக்குப் பிறகு ஒரு முறை பார்த்தேன். அவருடைய பஞ்சசீலம் பற்றிப் பேசினார். வண்ணதாசன் போன்ற மகன்கள் இருந்தபோது கடவுள் எதற்கு? அவருடைய ஆயுதம், தபால் அட்டை. அவரும் சரி, வல்லிக்கண்ணனும் சரி... கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். ‘மிக்க அன்புடன்’ என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்துதான் கற்றேன். நான் முதலில் இரங்கல் குறிப்பு எழுதியது கு.அழகிரிசாமிக்காக. அவர் வீட்டிற்கும் தி.ஜானகிராமன் வீட்டிற்கும் எவ்வளவு முறை அலைந்திருக்கிறேன்! கடைசி வரை ஜானகிராமன் கதை தரவில்லை. அழகிரிசாமி தந்தார். இல்லாமையும் போதாமையும் வாட்டி வதைத்த அழகிரிசாமிக்கு வேலை கிடைத்த இரண்டே வாரங்களில் கடும் நோய் கண்டுவிட்டது. கடைசி நோய். அன்றிலிருந்து யார் இறந்தாலும் நான் இரங்கல் எழுதுவது வழக்கமாயிற்று. இரங்கலோடு சாதனைகளையும்தான் பதிவு செய்யவேண்டும். அப்போது செய்யாவிட்டால் பின் எப்போது? (பாதை நீளும்...)
தி.க.சியின் ஆயுதம், தபால் அட்டை. அவரும் சரி, வல்லிக்கண்ணனும் சரி... கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். ‘மிக்க அன்புடன்’ என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்துதான் கற்றேன். படிக்க... பெரிய நூலகங்களில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் உயரமான மேஜை போட்டு அதன் மீது அகராதியை வைத்திருப்பார்கள். மேஜை நல்ல உயரமாக இருக்கும். அகராதியை எளிதில் தூக்க முடியாது. ஆனால் எளிதாகப் பார்க்கும்படியாக இருக்க வேண்டும். இன்று அந்த மாதிரியான பளுவான, தடிமனான புனைகதை நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. ‘நூறு சிறந்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து, சென்னை, மேற்கு கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் தமிழின் சிறந்த கதைகளை ஒரே நூலாக வெளியிட்டிருக்கிறது. நல்ல தொகுப்புதான். நூறு என்றால்கூட சிலருக்கு விடுபட்டவை என சில தோன்றும். ஆங்கில மொழிபெயர்ப்பில் க.நா.சு. எனக்குத் தெரிந்து மூன்று நூல்கள் கொண்டு வந்திருக்கிறார். அம்பை சென்னையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வந்தார். திலீப்குமார் ஒரு தொகுப்பு வெளிக்கொண்டு வந்துவிட்டார். இப்பொது இன்னும் விசாலமாக நூறு கதைகள் கொண்ட தொகுப்பைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.
ஜனதா அடுப்புசில நாட்களுக்கு முன்பு தூர்தர்ஷன் அலைவரிசைச் செய்திகளில் ஒரு தகவல் ஒரேயொரு முறை சொல்லப்பட்டது. புது டெல்லி நகர எல்லைகளுக்குள் மண்ணெண்ணெய் பயன்பாடு முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டு விட்டது. அந்த நகரத்தில் உள்ள எல்லா அடுப்புகளிலும் இனி எரிவாயு மட்டும்தான் பயன்படுத்தப்படும்! எனக்கு உடனே பார்லிமென்ட் தெருவோர நடைபாதைகளில் இயங்கிய டீக்கடைகள் மனதில் தோன்றின. நான் சொல்வது இருபது, முப்பது வருடத்துக் கதை. நான்கு டிகிரி குளிரிலும், நாற்பத்தைந்து டிகிரி வெயிலிலும் இக்கடைகள் காலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை செயல்படும். பிடி வைத்த ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் டீ பொங்கி வந்த வண்ணம் இருக்கும். ஒரு கலைஞனுக்குரிய தீர்மானத்துடன், டீ போடுபவர் அவ்வப்போது டீத்தூள் ஒரு சிறு பிடி போடுவார். அவருடைய சிறு பெண்ணும் பையனும் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை எடுத்துத் தருவார்கள். அவர் பாத்திரத்தில் பொங்கப் பொங்க இருக்கும் டீயை கிளாஸ் தம்ளர்களில் விட்ட வண்ணம் இருப்பார். அக்கம் பக்கம் அலுவலகங்களிலிருந்து ஆள் வந்தால், மொத்தமாக மூன்று டீ, நான்கு டீ போய்விடும். முன்னால் நிற்கும் நபர்களுக்கு வரிசைக் கிரமமாக டீ தரப்படும். நடுநடுவில் அவருடைய ‘பிரைமஸ்’ கெரஸின் ஸ்டவ்வை ‘பம்ப்’ செய்வார். உத்தேசமாக ஒரு நாளைக்கு ஆயிரம் தம்ளர் டீ விற்பனையாகும். அவருடைய குடும்பம் அவர் கடைக்குப் பின்னால் உள்ள சிறு துணி மறைவில் வாழும். அவருடைய சொந்த வாழ்க்கைத் தேவை ஐந்து. கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், சிறிது உப்பு, பச்சை மிளகாய். அந்த நாளில் வீட்டில் விறகு, கட்டைக்கரி, தவிர மண்ணெண்ணெய் அடுப்புகளும் பயன்படுத்துவார்கள். இந்த மண்ணெண்ணெய் அடுப்புகளில் நாற்றம் தவிர இன்னொரு பெரிய பிரச்னை, அடுப்புக்குத் திரி போடுவது! இமாலய மலையை ஏறுவது போல சாகசம். பத்துத் திரிகள். அவற்றை பர்னரின் பத்து மெல்லிய குழாய்களில் நுழைக்க வேண்டும். அவை பர்னர் மேல்புறத்தில் சரிசமமான உயரத்தில் இருக்க வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டிருக்கும் அடிப்பாகம் அடிக்கடி துருப்பிடித்துக் கொள்ளும். நான் ஒரு சமயம் நாகர்கோவில் போயிருந்த சமயத்தில் ஒரு கடையில் அலுமினிய அடிப்பாகம் கொண்ட ஸ்டவ் பார்த்தேன். உடனே வாங்கி விட்டேன். ‘‘இதெல்லாம் சென்னையில் கிடைக்காதா’’ என்று சுந்தர ராமசாமி கேட்டார். ‘‘கிடைக்கலாம். ஆனால் தேடிக் கொண்டு போக வேண்டும். ஒழுகுகிற ஸ்டவ்கள் ஏராளம் எங்கள் வீட்டில் ஒரு மூலையை அடைத்துக் கொண்டிருக்கின்றன’’ என்றேன். தகர ஸ்டவ்கள் ஓட்டையாகி விடுவதன் காரணம், கலப்பட மண்ணெண்ணெய். அதை எங்கெங்கோ ஓடியாடி இடித்துப் புகுந்து வாங்கி வர வேண்டும். (அன்று மிக எளிய வாழ்க்கை வாழக்கூட மக்கள் அனைவரும் எவ்வளவு பாடு பட வேண்டியிருந்தது என்பது இன்றைய தலைமுறையினரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விஷயம்!) அந்த நாளில்தான் ‘டெல்லியில் ஜனதா ஸ்டவ் என்று புதிதாக வந்திருக்கிறது, சமையல் பாதி நேரத்தில் முடிந்து விடுகிறது’ என்ற செய்தி வந்தது. ஜனதா ஸ்டவ்வுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையில் அப்போது ஜனதாவும் கிடையாது, ஆம் ஆத்மியும் கிடையாது. டெல்லி எழுத்தாளர் ஆதவன் ஒரு வாரம் சென்னை வருவதாக எழுதியிருந்தார். நான் அவரை ஒரு ஜனதா ஸ்டவ் வாங்கி வரச் சொன்னேன். அவருக்குச் சிரமம் கொடுக்கக்கூடாது என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போனேன். வண்டி மூன்று மணி நேரம் தாமதம். அதைவிட வருத்தம், ஆதவன் அடுப்பு வாங்கி வரவில்லை! ஆட்டோ ஏற்பாடு செய்து கொண்டோம். அந்த நாளில் மீட்டர் போடுவார்கள்... ஆனால் ஒரு பை இருந்தால் கூட லக்கேஜ் என்று அதிகப்படி வாங்கிக் கொள்வார்கள். வண்டி வேறெங்கோ திரும்பியது. ‘‘பெட்ரோல் போடணுங்க’’ என்று வண்டி ஒரு இண்டியன் ஆயில் பெட்ரோல் நிலையத்துக்குப் போய் நின்றது. அங்கு ஒரு மூலையில் ஜனதா அடுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! டெல்லி விலையைவிட பத்து ரூபாய் அதிகம். ஜனதா அடுப்பில் ஒரு கூடுதல் பாகம். ஸ்டவ் திரிகளைச் சுற்றி உள்ள பர்னருக்கு வெளிப்புறத்தில் சூடு வீணாகாதபடி வட்டமான ஒரு கூடு. இன்று யாராவது பார்த்தால், ‘‘இது என்ன பெரிய விஷயம்’’ என்று கேட்கக் கூடும். ஆனால் முழுக்க முழுக்க மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியவர்களுக்குச் சமையல் நேரம் பத்து நிமிடம் குறைந்தாலும் மிகப் பெரிய உதவி. அதன் பின்னர் நானே டெல்லி செல்ல வேண்டியிருந்தது. மூன்று ஜனதா ஸ்டவ்கள் வாங்கி வந்தேன். என் உறவினர்களுக்குப் பல, ஆனால் மிகச் சிறிய தேவைகள். டெல்லி கூடையும் அதில் உண்டு. இது ரயில் பயணத்தின்போது உணவு எடுத்துச் செல்ல மிகவும் வசதியானது. அப்புறம் டெல்லி கட்டில். அதே மாதிரி சென்னையிலும் கிடைக்கலாம். ஆனால் நூறு ரூபாய்க்குக் கிடைக்குமா? ஆனால் என்னதான் சாமர்த்தியமாக வாங்கினாலும் போர்ட்டர் செலவு இரு மடங்கு. இதைச் சொன்னால், ‘‘நீங்கள் எப்படியும்தான் போர்ட்டர் வைக்கப் போகிறீர்கள்’’ என்பார்கள். இவர்கள் மூலம் எனக்கு டெல்லி பற்றி நிறையத் தெரிய வந்தது. புது டெல்லி ஸ்டேஷன் அருகேயே பஹாட்கஞ்ச் என்று ஒரு பகுதி. அங்கே ஒரு தெரு முழுக்க இரும்புப் பொருள்கள் விற்பார்கள். ஒவ்வொரு கடையும் ஒரு மாதிரி கட்டிலைத் தயாரிக்கும். அதே போல நாற்காலிகள். நான் என் நான்கு டெல்லிப் பயணங்களில் ஏழெட்டு ஜனதா ஸ்டவ்கள், அரை டஜன் கட்டில்கள், முப்பது மோடாக்கள், இருபது நாற்காலிகள் வாங்கி வந்திருப்பேன். எல்லாம் உறவினர்களுக்குத்தான். தீர்மானமாக ‘‘முடியாது’’ என்று சொல்லத் தெரியாததால் போர்ட்டரிடம் திட்டு வாங்கி, சக பயணிகளிடம் சண்டை போட்டு அவதிப்படுவேன். ரயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு குறைந்தது முப்பது மணி நேரப் பயணம். முப்பது மணி நேரம் குறைந்தது எட்டு பயணிகளின் குரோதக் கண்களில் பட்டபடி பயணம் செய்வது எளிதல்ல. இன்னும் ஒரு பயணியாவது என் மாதிரி ஒரு நாற்காலி வாங்கி வந்தால் என் பயணம் சிறிது ஆறுதல் தரும். ‘‘அவரும்தான் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்’’ என்று எனக்குத் துணை சேர்த்துக் கொள்ள முடியும். ஒருமுறை கூட இல்லை. ஆரம்பத்தில் எரிவாயு அடுப்புகளுக்கு ஏதேதோ எதிர்ப்புகள். அதை வாங்கிய பிறகும் ஜனதா ஸ்டவ் இருந்தது. இன்றும் அதைப் பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள். (பாதை நீளும்...) அன்று மிக எளிய வாழ்க்கை வாழக்கூட மக்கள் அனைவரும் எவ்வளவு பாடு பட வேண்டியிருந்தது என்பது இன்றைய தலைமுறையினரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விஷயம்! இரு பத்திரிகைகள்* காட்சிப் பிழை: இரண்டு ஆண்டுகளாக வெளிவருகிறது. திரைப்படம் பற்றித் தீவிரமாக விவாதிக்கும் மாதப் பத்திரிகை. பேராசிரியர்கள் பொது மக்களை ரசிகர்களாக அணுகாமல், அவர்களையும் ஆசிரியர்களாக அணுகும் முயற்சி. சில இடங்களில் பொக்கிஷம், மர்மம் போன்ற சொற்கள் சற்று செய்திப் பத்திரிகை தளத்திற்கு எடுத்துச் சென்றாலும், தகவல்கள், விவாதங்கள் தீவிரமான வாசகன் யோசிக்க வழி செய்யும். உதாரணத்திற்கு, செல்லம் என்ற நடிகை பற்றிய கட்டுரை. அவருக்கு நடிப்பு இயல்பானதாக அமைந்தாலும், அவர் உள்ளூர எவ்வளவு வேதனையை மூடி மறைத்து அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார் என்று எளிதில் தெரிந்து கொள்ளமுடியாது. காட்சிப்பிழை, 28, அசோக் நகர் பிரதான சாலை, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை600024. * தளம்: இதுவும் ஒரு தீவிரமான காலாண்டிதழ். இதன் முக்கிய அக்கறைகள் தற்கால இலக்கியம், நாடகம். ஆசிரியர் பாரவி. நானறிந்து இவர் எழுதிய ஒரு நல்ல, சிறிய நாடகம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. ‘தளம்’ மிக எளிய வசதிகளுடன் இவ்வளவு வித்தியாசமாக இதழ் தயாரிக்க முடியுமா என்று வியப்பளிக்கிறது. சமீபத்திய இதழில் கேபிரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி இரு நல்ல கட்டுரைகள் உள்ளன. தளம் காலாண்டிதழ், 46/248, பீட்டர்ஸ் சாலை, சென்னை600014. அசோகமித்திரன்
அசோகமித்திரன்
நல்லதன்றிப் பிறிதொன்றும்... ‘நல்லதன்றிப் பிறிதொன்றும் கூறேல் நீத்தார் பற்றி’. இதென்ன பழமொழி போல இருக்கிறதே என்று தோன்றலாம். சுமார் ஐந்நூறு ஆண்டுகள் பழையதாக இருக்கலாம். மூலம் ஆங்கிலப் பழமொழி. ‘Of the dead, nothing but good’. சுருக்கமாகவும், நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது! ஆனால் இதுவே இன்னொரு மொழியிலிருந்து சுவீகரிக்கப்பட்டது! அது லத்தீன் மொழி. ‘De mortuis nil nisi bonum’. இதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொற்சுருக்கம் இல்லை. ஆனால் லத்தீன் மொழியில் ஒரு வரலாறே மூன்று சொற்களில் அடங்கி விடுகிறது. ‘Veni vidi vici’. வந்தேன், கண்டேன், வென்றேன். ஜூலியஸ் சீஸரின் இங்கிலாந்துப் படையெடுப்பின்போது இது கூறப்பட்டதாகச் சிலர் சொல்வார்கள். ‘இல்லை, கிளியோபாட்ராவைப் பார்த்த பின் சொன்னது’ என்று சிலர் பக்கத்திலிருந்து கேட்டது போலச் சொல்வார்கள். ஆனால் வரலாற்றில் அவர் ஒரு துருக்கிய நகரை மிக எளிதாகக் கைப்பற்றியபோது கூறினார் என்றிருக்கிறது. ஒருவர் மாலை நான்கு மணிக்கு இறந்திருப்பார். அடுத்த நாள் காலைப் பத்திரிகையில் அவருடைய மறைவுச் செய்தியும், வாழ்க்கை வரலாறும், ஓர் இரங்கல் கட்டுரையும், இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும் படங்களாக ஒரு பக்கம் முழுவதும் இருக்கும். நான் நினைத்துக்கொள்வேன், இந்தப் பத்திரிகைக்காரர்கள்தான் எவ்வளவு சுறு சுறுப்பு! பின்னர் தெரிந்தது... மரணச் செய்தியும், இரங்கல் கட்டுரையும் தவிர மற்றவை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டவை. வயதான ஒரு பிரமுகர் இரு முறை இருமினால், பத்திரிகைகள் எல்லோரையும் முந்திக்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ‘இது இரக்கமற்ற போக்கு அல்லவா’ என்று தோன்றலாம். கடந்த ஏப்ரல் பதினேழாம் தேதி மறைந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அவர்களுக்கு அடுத்த நாளே ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் முழுப்பக்க அஞ்சலி! அவருடைய கோட்டோவியம் மிகச் சிறந்த முறையில் முக்கால் பக்கம் வந்திருந்தது. ஆனால் அவர் பத்து ஆண்டு களாகவே நோய் வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன், அவருடைய பரம எதிரி காஸ்ட்ரோ இருவருக்கும் மார்க்கேஸ் ஒரே காலத்தில் நண்பராக இருந்திருக்கிறார்! எழுத்தாளர் கு.அழகிரிசாமி சென்னையிலும் ஒரு பத்திரிகையில் சில நாட்கள் வேலை பார்த்தார். அவர் கூறுவார். ‘‘ ‘எட்டு காலம் தலைப்புச் செய்தி ஒன்றும் இல்லையே?’ என்று பத்திரிகைக்காரர்கள் பகலெல்லாம் சோர்ந்து இருப்பார்கள். எங்கோ சரக்கு ரயில் தடம் புரண்டது என்று செய்தி வந்தவுடன் அனைவருக்கும் அசாத்திய உற்சாகம்!’’ எட்டு ‘காலம்’ என்பது பக்கத்தின் இடது கோடியிலிருந்து வலது வரை. கொட்டை எழுத்தில் ரயில் தடம் புரண்டதை, ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்தது போலச் செய்து விடுவார்கள்! நான் அழகிரிசாமி அவ்வளவு சீக்கிரம் போய் விடுவார் என்று நினைக்கவில்லை. அவரை மருத்துவமனையில் பார்த்தபோது கூட, ‘நான்கு நாட்களில் வீடு வந்து விடுவார்’ என்றுதான் நினைத்தேன். நான் அப்போது பங்கு பெற்ற பத்திரிகை ஐந்நூறு வாசகர்களைக் கூட எட்டாது. ஆனால் நிர்கதியாக நின்ற அவர் குடும்பத்துக்கு உதவ சிலர் முன்வந்தார்கள். அதில் சென்னை ‘இலக்கியச் சிந்தனை’ ப.லெட்சுமணன் மிக முக்கியமானவர். பணம் சிறிது சேர்ந்தது. அதை எப்படி என்று யாரிடம் ஒப்படைப்பது? தொ.மு.சி.ரகுநாதன் முயற்சியில்தான் அழகிரிசாமிக்கு சோவியத் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அவர் எங்களைவிட அந்தக் குடும்பத்துடன் அதிகப் பரிச்சயம் கொண்டிருந்தார். அவரிடம் பணத்தைச் சேர்ப்பித்தோம். இரங்கல் கட்டுரை எழுதுவது மிகுந்த மன வருத்தம் தருவது. ஆனால் தருணத்தே அதைச் செய்தேயாக வேண்டும். என்னதான் வருத்தம் இருந்தாலும், தெரிந்த தகவல்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் வரை, அமெரிக்கர்களுடையது. எவ்வளவு விதவிதமான, மிகவும் சிறப்பான வெளிப்பாடுகள்! பலர் ஒன்றிரண்டு படைப்புகளுக்கு மேல் எழுதவில்லை. சிலர் அற்பாயுளில் இறந்து விட்டார்கள். இரங்கல்கள் எழுதாது போனாலும், துக்கத்தில் இருக்கும் பெண் வாசகர்களுக்கு ஆறுதல் கூறுபவராக ஓர் உதவி ஆசிரியர் பொறுப்பேற்கிறார். நாவலின் பெயரே ‘மிஸ் லோன்லி ஹார்ட்ஸ்’. ஒரு கட்டத்திற்கு மேல் வாசகர்கள் தெரிவிக்கும் மனவேதனை அவரைத் தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடுகிறது. சில நிமிடங்கள் பார்த்துத் தூரப் போட்டு விடுவதானாலும், அப்பத்திரிகையைப் படிப்பவர்கள் எங்கோ, யாருக் கோ, நேர்ந்த விபத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ராஜீவ் காந்தி சிதறி விழுந்து கிடக்கும் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி உலகப் பத்திரிகை ஆசிரியர்களிடையே உயர்மட்ட விவாதம் நடந்தது. ஒரு சில மணி நேரத்திற்குள் அமெரிக்க, ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒரு முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ராஜீவ் காந்தியின் சிதறுண்டு கிடந்த உடலின் புகைப்படத்தை வெளியிடவில்லை. மாறாக இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன. உலக அனுதாபத்தைப் பெறக் கூடிய வகையில் 2001 செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதலை, ஆயிரக்கணக்கான உடல்கள் சிதறிக் கிடப்பதாக வெளியிட்டிருக்கலாம். மாறாக, அந்த இரு மாபெரும் கட்டிடங்கள் விழுவதைத்தான் நாம் படங்களில் பார்க்க முடிந்தது. அதே போல ஒசாமா பின் லேடன் உடலைப் புகைப்படமாகக் காட்டவில்லை. ஒசாமா கடைசியாக இருந்த இடத்தின் வெளிப்புறத்தை மட்டும் காட்டினார்கள். இரங்கல் செய்திகளில் புகைப்படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில உலகப் பிரமுகர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களின் வயோதிகத்தைப் புகைப்படமாகக் காட்ட வேண்டியதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சர்ச்சில் இங்கிலாந்துக்குத் தலைமை தாங்கி யுத்தத்தை வென்றார். யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகுதான் அவருடைய மரணம் நேர்ந்தது. ஆனால் இன்றும் சர்ச்சிலின் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் 1945ல் ஜோஸப் கார்ஷ் எடுத்த படத்தைத்தான் பயன் படுத்துகிறார்கள். நொந்து நொடிந்து போன தொண்ணூறு வயது முதியவரையல்ல! புகைப்படங்களைப் பயன் படுத்துவதில் நாம் நன்கு யோசித்துத் தேர்வு செய்யவேண்டும் என்று நான் நீண்ட நாட்களாகவே எனக்கு வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் எல்லாம் கூறி வருகிறேன். நல்லதன்றிப் பிறிதொன்றும் கூறாது இருத்தலில் புகைப்படமும் பங்கு வகிக்கிறது. ஒசாமா பின் லேடன் இறந்ததும், அந்த உடலைப் புகைப்படமாகக் காட்டவில்லை. ஒசாமா கடைசியாக இருந்த இடத்தின் வெளிப்புறத்தை மட்டும் காட்டினார்கள். படிக்க... காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் என்றால் திரும்பத் திரும்ப அனைவரும் அவருடைய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலையே கூறி அவரை ‘ஒரே நூல் அதிசய’மாக மாற்றி விடுகிறார்கள். அவர் வேறு பல நூல்களும் எழுதியிருக்கிறார். ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ இப்போது தமிழிலும் கிடைக்கிறது. ஆனால் நாவல் கட்டுக்கோப்புக்கு அவருடைய ‘முன்பே கூறப்பட்ட சாவின் வரலாறு’ என்ற சிறு நாவல் சிறந்த எடுத்துக்காட்டு. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். தென் அமெரிக்காவின் ஒரு சிறப்பு... அதிலுள்ள பல நாடுகளில் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர்கள் இருக்கிறார்கள், அல்லது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக லத்தீன் அமெரிக்கா என்று கூறினாலும், அங்கு இரு வேறு மொழிகள்... ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ். உலகம் அவர்களை அறிவதெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில்தான். இந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் குரு, அர்ஜென்டினாவைத் தாயகமாகக் கொண்ட ஜார்ஜ் லூயி போர்ஹே. (லத்தீன் அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினன் ‘போர்கெஸ்... போர்கெஸ்...’ என்று கத்துகிறான்.) ஜார்ஜ் எழுதியதெல்லாம் இரண்டாயிரம் பக்கங்களுக்குள் அடங்கி விடும். ஆனால் இவர்தான் தென் அமெரிக்காவின் அசல் மாந்திரீக இலக்கியவாதி. (பாதை நீளும்...)
மறைந்தவர்கள் மத்தியில்
வருடம் முடியப் போகும் நேரத்தில் பல கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாக, இறந்தவர்கள் பற்றி! அப்போது நம் செயல்களின் குறைபாடுகள் வருத்துகின்றன. உயிரோடு இருக்கும் நாளில் அந்த மனிதரைப் பார்க்கவில்லையே? ‘மழை பெய்து கொண்டிருக்கிறது, நாளை பார்க்கலாம்’ என்று ஒத்திப்போட்டது வருத்தத்தைத் தருகிறது. வெகு எளிதாகச் சொல்லிவிடலாம், இப்போது வருந்தி என்ன பயன். ஆனால் நம் நினைவுகள் எல்லாம் பயனுக்காகத்தான் செயல்படுகின்றனவா? நோய்வாய்ப்பட்டிருந்த தி.ஜானகிராமனைப் பார்க்க நானும் ராஜரங்கன் என்ற எழுத்தாளரும் ஒருநாள் கிளம்பினோம். உண்மையில் நாங்கள் தனித்தனியாகப் பார்த்திருக்கலாம். ஆனால் ராஜரங்கன் ‘இருவரும் சேர்ந்து போய்ப் பார்க்கலாம்’ என்று உறுதியாகச் சொல்லியிருந்ததால் நான் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் ஜானகிராமனுக்கு என்னை விட அந்தரங்கமானவர். ஜானகிராமனின் நில விற்பனைக்கு அவர்தான் பொறுப்பேற்றிருந்தார். ராஜரங்கன் அப்போது லயோலா கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு நில விற்பனை போன்ற விஷயங்களில் பெரிய கெட்டிக்காரத்தனம் இருந்ததாக நான் நினைக்க வில்லை. ஆனால் ஜானகிராமன் நினைத்திருந்தார். அவர் ‘சேர்ந்து போகலாம்’ என்று கூறியிருந்ததால் நான் ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. என் வீட்டிலிருந்து பேருந்து பிடிக்க அதிக தூரம் நடக்கவேண்டியதில்லை. ஆனால் ஜானகிராமனைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரிக்கு நான் அதுவரை போனதில்லை. அதற்கு நேராகப் பேருந்து கிடைக்காது, நிறைய நடக்கவேண்டும் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன். அன்று ராஜரங்கன் பகல் ஒரு மணிக்கு வந்தார். நான் உடனே கிளம்பத் தயாராக இருந்தேன். அவர் என் மனைவி, மகனுடன் பேச ஆரம்பித்தார். அப்புறம் டீ. நாங்கள் கிளம்பும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி. 5பி பேருந்து உடனே கிடைத்து விட்டது. ஐ.ஐ.டி நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அன்று கடுமையான வெயில். நாங்கள் போகும் சாலை கிழக்கு - மேற்கு. ஆதலால் வெயில் முழுதையும் நாங்கள் கட்டாயம் தாங்கியாக வேண்டும். எனக்குக் கண் கூசியது. ராஜரங்கன் என்னைவிடப் பெரியவர். உடலும் பெரிது. அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்த நாளில் ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றாது. ஆனால் ராஜரங்கனுக்குத் தோன்றியிருக்கலாம்.அவர் திடீரென்று, ‘‘நாளை பார்த்துக்கொள்வோமே’’ என்றார். ‘‘உங்களுக்கு கிளாஸ் இல்லையா?’’ ‘‘அரை நாள் லீவு போட்டு வரலாம்.’’ அந்த நாளில் லயோலா கல்லூரியில் அப்படியெல்லாம் லீவு போட முடியாது. சென்னைக் கல்லூரிகளில் மிகவும் கண்டிப்பு (Slaves of Loyola) என்பார்கள். கல்லூரி ஆசிரியர்கள் பலருக்கும் வசிப்பதற்காக கல்லூரியே வீடுகள் கொடுத்திருந்தது. ராஜரங்கனுக்கு விசேஷமான வீடு. ஊரெல்லாம் சொட்டுத் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தபோது, லயோலா வீடுகளில் இருந்தவர்கள் தினம் வீட்டைக் கழுவி விடுவார்கள். தோட்டம் வைத்திருப்பார்கள். கார் இருந்தால் அதையும் தினம் தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டி விடுவார்கள். அந்தச் சூழ்நிலையில் ராஜரங்கன் போன்றவர்கள் அவ்வளவு எளிதாக விடுப்பு எடுக்க முடியுமா? இரண்டு மூன்று தினங்கள் காத்திருந்துவிட்டு நானே அந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன். ‘‘சீக்கிரம் அவர் வீட்டுக்குப் போங்கள். உடலையாவது பார்க்கலாம்’’ என்றார்கள். வீட்டு வசதி வாரியம் ஜானகிராமனுக்கு திருவான்மியூரில் வீடு கொடுத்திருந்தது என்று மட்டும் தெரியும். ஆனால் எந்த மாதிரி வீடு, எங்கே இருக்கும் என்று தெரியாது. அன்று கைபேசிகள் கிடையாது. ராஜரங்கன் வீட்டில் தொலைபேசி உண்டு என்று தெரியும், ஆனால் எண் தெரியாது. நான் பேருந்தில் திருவான்மியூர் சென்று விசாரித்தேன். பயனில்லை. ஒரு தகவல் ஞாபகத்துக்கு வந்தது. ‘‘எழுத்தாளர் என்றாலும் அவர் ஆல் இண்டியா ரேடியோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’’ என்று விசாரித்தேன். ஒருவர், ‘‘நீங்கள் அந்த வீட்டு மாடியில் போய் விசாரியுங்கள்’’ என்றார். அதுதான் ஜானகிராமன் வீடு.எனக்கு அப்போது ‘ஃபிளாட்’ பற்றி அதிகம் பரிச்சயம் கிடையாது. ஜானகிராமனின் உடலைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது குளிர்சாதனப் பிரேதப்பெட்டி கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை உருகித் தரையெல்லாம் ஈரப்படுத்திவிடும். எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அங்கே யாரையாவது துக்கம் விசாரிக்கக்கூட நகர முடியாமல் நெரிசல். நான்கைந்து பேர் கூட நிற்க இடமில்லை. தரையெல்லாம் தண்ணீர். அவர் மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் இருந்தபோது நான் நூறு முறை அவர் வீட்டுக்குப் போயிருப்பேன். அவர் டெல்லி சென்ற பிறகு ஐந்தாறு முறை அவர் வீட்டுக்குப் போயிருப்பேன். விசாலமாக இருக்கும். இப்போது அவருடைய சொந்த வீட்டில் அவரை நான்கு பேர் சரியாக முகம் பார்க்க முடியாத நிலை. பிறகு அவருடைய நண்பரும் நலம் விரும்பியுமான சிட்டி அவர்களைப் பார்த்தேன். கடைசி நாட்களில் ஜானகிராமன் சற்று அதிகப்படியாகவே சிரமப்பட்டிருக்கிறார். அவருடைய பெண் அவருடைய சம்மதமில்லாமல் மணம்புரிந்து கொண்டாள் என்று அவர் மிகவும் அதிர்ந்து போயிருந்தார். இது பல குடும்பங்களில் நடப்பதுதான். அவருடைய மனைவி யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருந்தார். ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள் எழுதிய மனிதனுக்கு அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. ராஜரங்கன் ஜானகிராமனை உயிரோடு இருக்கும்போது பார்த்தாரா என்று தெரியவில்லை. லயோலா பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டோ, இரண்டு ஆண்டுகளோ அவர் பிரிட்டிஷ் கயானாவுக்கு கலாசாரத் தூதராகப் போனார். திரும்பி வந்தவுடன் அவர் அந்த ஊரைப் பற்றி விவரித்தபோது சிரிப்பாகவும் இருந்தது, பயமாகவும் இருந்தது. பகல் இரண்டு மணிக்கு மேல் வெளியே தலையைக் காட்ட முடியாது. ஊர் அவ்வளவு பாதுகாப்பானது. இன்று ராஜரங்கனும் போய் விட்டார். அவர் ஒரு குரு மாதிரி கருதிய தி.ஜ.ரங்கநாதனும் போய் விட்டார். நான் பல விஷயங்களுக்கு ராஜரங்கனுக்குக் கடமைப்பட்டவன். பள்ளிப்படிப்பு அதிகமில்லாவிட்டாலும் தி.ஜ.ர. ஓர் உயர் கணிதமேதை என்று எனக்குத் தெரியாது போயிருக்கும். சதுரங்க ஆட்டத்திலும் அவர் ஒரு மேதை. சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் உலகப்புகழ் பெற்றிருப்பார். ராஜரங்கனும் பரீக்ஷா குழுவில் ஓர் அங்கத்தினர். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘போர்வை போர்த்திய உடல்கள்’ நாடகத்தில் அவர் ஒரு உடல். அவரை நானும் இன்னொருவரும் அகற்ற வேண்டும். சிரமப்பட்டு விட்டேன். ராஜரங்கன் பற்றி எனக்குப் பல மகிழ்ச்சி கரமான நினைவுகள் உண்டு. ஆனால் ஜானகிராமன் விஷயத்தில் மட்டும் ஆறாத வருத்தம்.இவ்வளவு எழுதியதற்குக் காரணம், சுவரில் தொங்கும் ஒரு நாட்காட்டி. அதில் பதினைந்து எழுத்தாளர்கள் - ஜானகிராமன் உட்பட - இருக்கிறார்கள். பதினைந்தில் பதின்மூன்று பேர் எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள். காலம் தாழ்த்தாமல் நான் அவர்கள் பற்றி எழுதிவிட வேண்டும். ஜானகிராமனின் உடலைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது குளிர்சாதனப் பிரேதப்பெட்டி கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை உருகித் தரையெல்லாம் ஈரப்படுத்தி விடும். படிக்கஒரு காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் அது வங்காளப் படைப்பாகவே இருக்கும். இந்தியிலிருந்து ப்ரேம்சந்த் மட்டும். இன்று நிறுவன வாய்ப்புகள் பெருகியிருப்பதால் நிறைய மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. குறிஞ்சிவேலன் ‘திசை எட்டும்’ என்று மொழிபெயர்ப்புகளே கொண்ட பத்திரிகை நடத்தி வருகிறார். இந்தியாவின் இருபத்தோரு மொழிகளில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை மொழிபெயர்த்து (அநேகமாக அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) ‘சல்வடார் டாலி’ என்றொரு சிறுகதைத் தொகுப்பை அம்ருதா பதிப்பகம் சார்பில் திலகவதி வெளிக்கொணர்ந்திருக்கிறார். மிகச் சிறந்த தேர்வு. பல கதாசிரியர்கள் உலகப்புகழ் பெற்றவர்கள். எழுத்தாளர் திலகவதிக்குப் பெருமை சேர்க்கும் நூல். (சல்வடார் டாலி, விலை: ரூ.120/-, வெளியீடு: அம்ருதா பதிப்பகம், 1, கோவிந்த ராயல் நெஸ்ட், 12, மூன்றாவது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் கிழக்கு, நந்தனம், சென்னை-600035. பேச: 94440 70000). (பாதை நீளும்...) அசோகமித்திரன்
கைலாசம்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கைலாசம் காலமானார். வயது 53. யார் கைலாசம் என்ற கேள்விக்குப் பதில், அவர் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மகன். இது சட்டென்று தமிழ் வாசகர்களுக்குப் புரியக் கூடிய அடையாளம். ஆனால் கைலாசம் என் நண்பனும் நலம் விரும்பியுமாகும். நான் 197374ம் ஆண்டில் அயோவா என்னும் அமெரிக்கச் சிற்றூருக்குச் சென்றிருந்தேன். அன்று அந்த இடம் படைப்பிலக்கியப் பயிற்சிக்கும் மருத்துவப் படிப்புக்கும் பெயர் போனது. ஆனால் அது படைப்பிலக்கியப் பிரிவில் திரைப்படம் எடுப்பதையும் சேர்த்திருந்தது என்று எனக்குத் தெரியாது. ஏற்கனவே பொறியியலில் பட்டம் பெற்றிருந்த கைலாசம், அந்தத் திரைப்பட வகுப்பில் சேர இருந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. முதலில் பாலசந்தர் அவர்களுக்குக் கைலாசம் என்றொரு மகன் உண்டு என்றும் தெரியாது. டிசம்பர் 1977ல் நானும் கன்னட எழுத்தாளரும் அரசியல்வாதியுமான அனந்தமூர்த்தியும் அயோவா பற்றி உரையாட வேண்டும்; அதை நான் எழுதித் தர வேண்டும் என்று ஒரு பத்திரிகையிலிருந்து வேண்டுகோள் வந்தது. அதற்காக நான் மைசூர் சென்றேன். அப்போது திருமதி இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை, கர்நாடகாவில் சிறிது தீவிரமாக இருந்தது. கர்நாடக அரசு ஏராளமானோரை சிறையில் அடைத்திருந்தது. அந்த அவசர நிலை காலத்தில் ‘சோஷலிஸ்ட்’ என்ற அடையாளம் கொண்டவர்கள் அரசுக்கு அபாய கரமானவர்கள். அந்த ‘அபாயகரமானவர்கள்’ பலரும் சிறையில் இருந்தார்கள். மைசூரில் நிகழ்ந்த சந்திப்பின்போது அனந்தமூர்த்தி என்னிடம் கைலாசம் பற்றிச் சொன்னார். கைலாசம் அயோவாவில் திரைப்படத் தொழில்நுட்பத் துறை தொடர்பாக பயிற்சி பெற்று வருவதாகவும், படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவுடன் என்னை வந்து சந்திப்பார் என்றும் அனந்தமூர்த்தி கூறினார். இதெல்லாம் முடிந்து சுமார் ஓராண்டு கழித்துத்தான் நான் கைலாசத்தைச் சந்தித்தேன். அந்த நேரத்தில் ஒலிப்பதிவு, மறு ஒலிப்பதிவு, படத்தொகுப்புக்கு பயன்படக்கூடிய மிக நவீன சாதனங்களை அவர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தார். புகழ்பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி மீது அவருக்கு அபார பக்தி. கணபதி ஸ்தபதி பற்றி சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப் படம் ஒன்றை கைலாசம் எடுத்தார். ஸ்தபதி விக்ரஹங்கள் செய்பவர் என்று மட்டுமே நான் அதுவரை தெரிந்து வைத்திருந்தேன். கைலாசத்தின் ஆவணப் படம் மூலம் அவர் சிற்ப சாஸ்திரத்துக்கு அடிப்படையாக வேத சாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்பது தெரிந்தது. அவருடைய ஞானம் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் கைலாசம் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஸ்தபதி அவர்களின் படிப்பும் பயிற்சியும் யாரையும் வியக்க வைக்கும். பல்லவர் காலத்திலும், பின்னர் சோழர் காலத்திலும் சிற்பக்கலை ஞானம் இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று தோன்றியது. அந்தப் படத்துடன் கைலாசம் ஒரு விளம்பரப் படமும் எடுத்திருந்தார். அது பொதுமக்களுக்கு அல்ல; வங்கி ஊழியர்களுக்கு. அதில் நான் பார்வை பாதிக்கப்பட்ட வயோதிகனாக நடித்தேன். முதலில் படப்பிடிப்பு முடிந்தது. அதன் பிறகு டப்பிங். இது சுமார் இரு வாரங்கள் கழித்து நடந்தது. அந்த நாளில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரும், விலை அதிகமான இதழ்களை ஒருவர் மட்டுமே படிக்கக் கூடிய விதத்தில் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அந்த அலுவலகத்துக்கு என்று ஒரு ‘ரீடிங் கிளப்’ இருக்கும். எல்லா இதழ்களையும் மொத்தமாக வாங்கி, தினம் ஒருவர் எடுத்துப் போய் பகிர்ந்து படிப்பார்கள். படத்தில் ஒரு அதிகாரி அந்த ரீடிங் கிளப்காரரிடம், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து வைப்பா’’ என்று கூறுவார். இது அவருக்கான ஐந்து வார்த்தை வசனம். டப்பிங் தினத்தன்று அந்த அதிகாரி உவகை தெரிய வந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவர் வேலை முடியவில்லை. ஐந்தே சொற்கள். அதை எப்படியெல்லாம் உளறிக் கொட்டலாமோ, அதெல்லாம் செய்துவிட்டார். அங்கே ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கில் பணம் போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதரால், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து வைப்பா’’ என்பதைச் சரியாகச் சொல்ல முடிய வில்லை. அந்த மனிதருக்குக் குளிர் சாதன அறையிலும் தொப்பலாக வியர்த்தது. அன்று என் டப்பிங் முடியவில்லை. என் டப்பிங் இல்லாமலே கைலாசம் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். அன்று ‘முந்தானை முடிச்சு’ அத்தனை தியேட்டர்களிலும் ஓடு ஓடென்று ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் இந்த அபார வெற்றிக்கு மூன்று காரணங்கள் சொன்னார்கள். அதில் ஒன்று, ஊர்வசி வசனம் பேசும் விதம். உண்மையில் அந்தப் படத்தில் ஊர்வசி பேசவில்லை. முழுக்க டப்பிங். அந்த டப்பிங் கலைஞர் பெயர் துர்கா. அந்தக் கலைஞர் அவ்வளவு எளிதாக வேலையை முடித்து விட்டார்! ஆனால், சாதாரண ஐந்து வார்த்தை வசனம், எவ்வளவு பாடு படுத்தியது அந்த வங்கி அதிகாரியை? கைலாசத்தின் ஆவணப் படம் தேசிய விருது பெற்றது. அது தவிர அவர் வேறு பல படங்கள் எடுத்திருக்கிறார். எதிலும் அவர் கைநேர்த்தி தெரியும். அவர் இன்னொரு மகத்தான முயற்சிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அது கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவலை இருபத்தாறு பாகங்களாகத் தொலைக்காட்சித் தொடர் எடுப்பது. அதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த மத்திய அரசு யார் நிர்வாகத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை. அப்போது தனியார் அலை வரிசைகள் வரவில்லை. கல்கி எழுதிய சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதுமான அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர் ‘பொன்னியின் செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு விட்டார்கள். ‘பார்த்திபன் கனவு’ நிறையப் பணச் செலவில் எடுக்கப்பட்டாலும், சிறப்பான நடிகர்கள் இருந்தாலும், திருப்தி அளிக்கவில்லை. அந்த நாவலின் உயிர் நாடியே சிவனடியார் யார் என்ற மர்மத்தில் இருந்தது. அது எழுத்தில் சாத்தியமாயிற்று. ஆனால் திரையில் அபத்தமாக இருந்தது. ‘சிவகாமியின் சபதம்’, சரித்திர நாவல்களில் ஓர் காவியத்துக்குரிய சோக அம்சம் கொண்டிருந்தது. இருபத்தாறு பாகங்கள் எது எது என்று நிர்ணயித்தாயிற்று. முதல் பாகத்தை அன்று விசேஷத் தொடர்களுக்குக் கட்டாயம் என்று நியமித்திருந்தபடி இந்தியில் மொழிபெயர்த்தாகி விட்டது. தெற்கிலிருந்து ஒரு மகத்தான தொலைக் காட்சித் தொடர் வரும், வந்தே விடும் என்றிருந்த வேளையில் மீண்டும் மத்தியில் யார் தலைமை என்ற குழப்பம் வந்தது. ‘சிவகாமியின் சபதம்’ அச்சிலேயே மேலும் தொடரச் சபிக்கப்பட்டது. ஆனால் கைலாசம் மனம் தளரவில்லை. தொடர்ந்து நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையை திட்டமிட்டு இந்தியாவிலேயே மிகச் சிறந்த அலைவரிசையாக உருவாக்குவதில் கடைசி ஆண்டுகள் உழைத்தார். அவர்களும் சினிமா சார்ந்த அலைவரிசைக்கு அடியெடுத்து வைத்தபோது அவர் விலகி விட்டார். காரணம், அவர் சினிமாக்காரரே அல்ல. மகத்தான இலக்கு, மகத்தான அறிவு, மகத்தான பயிற்சி ஒரு சுதந்திர தினத்தன்று மறைந்து விட்டது. (பாதை நீளும்...)கல்கி எழுதிய சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதுமான அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர் ‘பொன்னி யின் செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு விட்டார்கள். படிக்க... கன்னட இலக்கிய உலகில் அனந்தமூர்த்திக்கும் எஸ்.எல்.பைரப்பாவுக்குமான மோதல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த ஒன்று. சமீபத்தில் மறையும் வரைகூட, ‘பைரப்பாவுக்கு நாவலே எழுதத் தெரியாது’ என்று விமர்சனம் செய்து வந்தார் அனந்தமூர்த்தி. அவருடைய கோஷ்டியினரும் நாற்பது ஆண்டுகளாக பைரப்பாவை தாக்கி வருகிறார்கள். அந்த பைரப்பாவின் சுயசரிதை ‘பிட்டி’ என்னிடம் வந்து சேர்ந்தது. பைரப்பாவின் வாழ்க்கை எவரையும் உலுக்கி விடும். வாரச் சாப்பாடு உண்டு பள்ளியில் படிக்கும்போது பதினைந்து வயது முடிவதற்குள் டிக்கெட் இல்லாமல் பம்பாய் ஓடிப் போய், இரண்டாண்டுகள் சுமை கூலியாக உழைத்து, நடைபாதையில் படுத்துக் காலம் தள்ளினார். அதன் பின் மீண்டும் கர்நாடகா திரும்பிப் படிப்பைத் தொடர்ந்தார். ‘பிட்டி’ என்றால் சுவர். அவருடைய இலக்கிய வாழ்க்கை விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘‘பைரப்பா இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்’’ என்று அர்விந்த் அடிகா கூறுகிறார். (பிட்டி(BHITTI), Prism Books Pvt. Ltd, 1865, 32nd Cross, 10th Main, BSK II Stage,Bangalore 560070; Ph: 08026714108,) அசோகமித்திரன்
யதார்த்தமும் புதிய யதார்த்தமும்
இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபிறகு, ஓரிரண்டு விதிவிலக்குகள் தவிர ஐரோப்பிய நாடுகள் 95 சதவீதம் பாழடைந்து கிடந்தன. அந்தப் பாழ்நிலத்திலிருந்து ஒரு புதிய புனைவைத் திரையில் காட்ட முயற்சி செய்தவர்கள், யதார்த்தத்தை மீறிய சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மனிதனையும் பின்னணியில் உலகையும் காட்ட வேண்டி வந்தது. யுத்தக் காட்சிகள், படையெடுப்பின்போது பாழடைந்த கட்டிடங்களையும் தாறுமாறாகக் கிடக்கும் பிணங்களையும் கவனியாமல் உயிருக்குத் தப்பியோடுதல், மாபெரும் கட்டிடங்களும் பாலங்களும் சிதறி விழுதல் போன்ற காட்சிகளை நடிப்பில் கொண்டு வராமல் இருப்பதை அப்படியே காட்டுதல்... இதெல்லாம் புதிய யதார்த்தமாகின. அந்த இயக்கத்தில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் ராபெர்டோ ரோசிலினியின் பெயர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பத்திரிகைகளில் அடிபட்டது. அந்த விஷயத்தில் ஓர் இந்தியப் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தாள். அவள் பெயர் சோனாலி தாஸ்குப்தா. ராபெர்டோ ரோசிலினி புதுப்பாதை காட்டிய திரைப்படக் கலைஞராக இருக்கலாம். அவரது படமான, ‘பாதுகாப்பற்ற ரோம் நகரம்’ (Rome Open City) அந்த நாளில் ஒரு தேவதையாகக் கருதப்பட்ட இங்கிரிட் பெர்க்மனை நிலை தடுமாறச் செய்தது. அவருடைய கணவனையும் ஒரு குழந்தையையும் விட்டு ரோசிலினியோடு ‘ஓடிப் போகச்’ செய்தது. இருவருடைய சினிமாப் பார்வையும் மிகவும் மாறுபட்டவை. பல வருடங்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு நடிகையான பெர்க்மனுடன் தெருவில் போகும்போது எதிரே வருபவனை நிறுத்தி, அவனை பெர்க்மனோடு ரோசிலினி நடிக்க வைப்பார். ஒரு குழந்தை, நான்கைந்து படங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். அப்போதுதான் நேருவின் விருப்பப்படி ரோசிலினி இந்தியா பற்றி ஓர் ஆவணப் படம் எடுக்க அழைக்கப்பட்டார். இந்தியப் பங்குக்கு ஹரிதாஸ் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டார். ஹரிதாஸ் குப்தாவின் மனைவி சோனாலி. சமீபத்தில் மறைந்த இவருடைய இரங்கல் பற்றிய பல பதிவுகள், ரோசிலினியுடன் இவர் ‘ஓடி’ப் போக நேரு உதவியது போல இருந்தன. ரோசிலினி வந்த வேலையை முடிக்காமல், ஹரிதாஸ் குப்தாவின் மனைவியான சோனாலியோடு ‘ஓடி’ப் போய் விட்டார். பெர்க்மன் போல சோனாலி ஒரு குழந்தையை கணவனுடன் விட்டு, ஒரு வயதுகூட முடியாத இரண்டாவது குழந்தையுடன் இத்தாலி சென்று விட்டாள். பெர்க்மன் ஓர் சர்வதேச நட்சத்திரம். ஆனால் சோனாலிக்கு அப்படி ஏதும் சொல்லக்கூடிய தகுதி இல்லை. ஒரு குழந்தைக்குப் பிறகு ரோசிலினியும் அவளும் பிரிந்துவிட்டார்கள். சோனாலி இத்தாலியிலேயே தங்கி இந்த ஜூன் மாத ஆரம்பத்தில் இறந்து விட்டாள். கணவன் - மனைவியாக கடைசிவரை வாழா விட்டாலும் பெர்க்மனுக்கு ரோசிலினி மீது அக்கறை குறையவில்லை. ரோசிலினியின் ‘துரோக’த்துக்காக, அவர் எடுத்த திரைப்படச் சுருள்களை இந்திய அரசு பறிமுதல் செய்து விட்டது. ஒரு முறை நேரு லண்டன் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க பெர்க்மன் அனுமதி கேட்டாள். ஒரு பிற்பகல் விருந்து. விருந்தின்போது பெர்க்மன் நேருவிடம் சொன்னாள்... ‘‘உண்மை. நீங்கள் கொடுத்த வேலையை ரோசிலினி செய்யவில்லை. அதை மன்னிக்கக் கேட்கவில்லை. ஆனால் சினிமாதான் அவன் உயிர், ஜீவன் எல்லாம். அவன் எடுத்த சுருள்களை உங்கள் அரசு முடக்கி வைத்திருக்கிறது. அதை அவனிடம் திருப்பிக் கொடுக்கக்கூடாதா? அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்?’’ அடுத்த நாளே நேரு உத்தரவுப்படி, ரோசிலினி இந்தியாவில் எடுத்த சுருள்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது நடந்தபோது பெர்க்மனும் ரோசிலினியும் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதே போல ரோசிலினியின் ஒரு பிறந்த நாளை அவள் வீட்டில் விருந்து கொடுத்துக் கொண்டாடினாள். அப்போது உதவியாளன் போல இருந்த ஒரு பையன் பரிமாறினான். பெர்க்மன் சிரித்துக்கொண்டே கேட்டாள்: ‘‘இந்தப் பையனை அடையாளம் தெரியவில்லையா? இவன் உன் மகன் ராபெர்டோ!’’ ரோசிலினி இறந்தபோது பெர்க்மன்தான் முன்முயற்சி எடுத்து அவருடைய முதல் மனைவி, சோனாலி மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினாள். ரோசிலினியிடம் சில அபூர்வமான குணங்கள் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெர்க்மன் போன்ற ஒரு நட்சத்திரம் இவ்வளவுதூரம் இறங்கிவந்து அக்கறை எடுக்க வாய்ப்பில்லை. சோனாலி இத்தாலியிலேயே தங்கி விட்டதற்கு இந்தியச் சமூகம் ஒரு காரணமாக இருக்க வேண்டும். என்ன சமாதானங்கள் கூறினாலும், அவள் ஓர் அயலானை இழுத்துக் கொண்டு ஓடியவள். இக்கட்டுரையைப் படிக்கும் பெரும்பாலானோருக்கு 1937 தொடங்கி 1980 வரை பெர்க்மனின் செல்வாக்கின் தரத்தையும் அளவையும் புரிந்து கொள்வது கடினம். அநேகமாக அனைத்து அமெரிக்கர்களாலும் ஐரோப்பியர்களாலும் உண்மையிலேயே ஓர் லட்சியப் பெண்ணாக நினைக்கப்பட்டவள் பெர்க்மன். அவளுடைய முதல் கணவர் டாக்டர் லிண்ட்ஸ்டார்ம் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஒரு குழந்தை. நாஜிகள் பெர்க்மனை எப்படியாவது ஜெர்மனியிலேயே வசிக்க வைத்துப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட தேவ கன்னிகை, மனித மதிப்பீடுகளில் குறை காணப்படும் ஓர் இத்தாலியனோடு எப்படி ‘ஓடி’ப் போக முடியும்? யார் மன்னித்தாலும் அமெரிக்கா மன்னிக்கத் தயாராக இல்லை. ரோசிலினியுடன் போனவுடன் பெர்க்மனுடைய இரு முக்கிய படங்கள் வெளியாகின. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் எடுத்த ‘அண்டர் காப்ரிகார்ன்’. பெர்க்மனே பொருளாதார அக்கறை கொண்டு எடுத்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ இரண்டும் படு தோல்வி அடைந்தன. பெர்க்மன் திரையில் தோன்றும்போது பார்வையாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டார்கள். ‘ஜோன் ஆஃப் ஆர்க்’, பெருமதிப்பு வாய்ந்த நாடகாசிரியர் மாக்ஸ்வெல் ஆண்டர்ஸன் எழுதியது. அதில் வந்த காட்சிகள் பல இந்தியப் படங்களில் பிரதியெடுக்கப்பட்டன. (இதில் ‘மொகல் ஏ அஜ’மும் அடங்கும்.) இலக்கியம், திரைப்படம் ஆகிய சாதனங்களில் நிரந்தரமாக உள்ளவை அடிப்படை மனித காருண்யம், தியாகம், வீரம் ஆகிய மிகச் சிலவே. வடிவம் மாற்றங்களுக்கு உட்பட்டது. ரோசிலியின் எல்லாப் படங்களையும் பார்த்த நிபுணர்கள் ஒருமித்த கருத்து கூறுவதில்லை. இது ‘சைக்கிள் திருடர்கள்’ எடுத்த விட்டொரியா டிசிகாவுக்கும் பொருந்தும். திரும்பத் திரும்ப அவர்களுடைய பழைய படங்களில் ஒன்றிரண்டைத்தான் விவாதிப்பார்கள். ஹாலிவுட் படங்களை ‘தொழிற்சாலை’ படங்கள் என்று ஏளனமாகக் கூறுவார்கள். ஆனால் ஒரு ஹாலிவுட் திரைப்பட டைரக்டருக்கு பத்து படங்கள் இருபது வருட இடைவெளியில் வருவது பெரிய விஷயம். ஹிட்ச்காக் எடுத்த ‘அண்டர் காப்ரிகார்ன்’ படத்தை அவருடைய மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கூறுகிறார்கள். நான் அப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பெர்க்மன் நடிப்பு மிகவும் உருக்கமானதாக இருக்கும். பெர்க்மன் போன்ற அகில உலக நட்சத்திரங்கள் புனர்ஜென்மம் எடுக்க முடியும். ரோசிலினி விபத்துக்குப் பிறகு அவர் இருமுறை ஆஸ்கர் பரிசு பெற்றார். அவளுடைய ஒரு லட்சியம், இங்மார் பெர்மனின் படம் ஒன்றில் நடிப்பது. அதுவும் அவர் இறப்பதற்கு முன்பு நிறைவேறியது. ‘ஆடம் சொனாட்டா’. ஆனால், சோனாலி தாஸ்குப்தா? இந்த யதார்த்தத்தை எதனுடன் சேர்ப்பது? இப்படிப்பட்ட தேவ கன்னிகை, மனித மதிப்பீடுகளில் குறை காணப்படும் ஓர் இத்தாலியனோடு எப்படி ‘ஓடி’ப் போக முடியும்? யார் மன்னித்தாலும் அமெரிக்கா மன்னிக்கத் தயாராக இல்லை. படிக்க...கிடைக்காத புத்தகத்தை சிபாரிசு செய்து என்ன பயன்? இங்க்ரிட் பெர்க்மன் ஒரு நல்ல எழுத்தாளருடன் இணைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயசரிதை எழுதியிருக்கிறார். அது இன்று கிடைக்க வழியில்லை. அதன் (விரிவான) சுருக்கம் நான் எழுதிய ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’, நூலில் உள்ளது. (பக்.320; ரூ.240; நற்றிணை பதிப்பகம், சென்னை-5. தொ.பேசி: 044-43587070.) என் நண்பர் மு.ஸ்ரீனிவாசன் ‘தமிழகத்திற்கு வெளியே உள்ள திருத்தலங்கள்’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். பழங்காலத்தில் மார்க்கோ போலோ, ஃபாஹியான் என்ற பயணிகளைப் பற்றிக் கூறுவார்கள். ஸ்ரீனிவாஸன் இருமுறை கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோயிலைப் பார்த்திருக்கிறார். அலெக்ஸாண்டர் டூமாவின் ‘கவுண்ட் ஆஃப் மாண்டி கிரிஸ்டோ’ நாவலில் வரும் தீவுக் கோட்டையைப் பார்க்க பிரான்ஸ் சென்றிருக்கிறார். இந்த நூல் அவருடைய இதர நூல்களைப் போலவே பல வியக்கத்தக்க அதிசயங்கள் கொண்டது. (தமிழகத்திற்கு வெளியே உள்ள திருத்தலங்கள், அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை -600078; தொ.பேசிகள்: 9789072478; 044-65383000)
தற்கொலைக் கலைஞன்
ஒவ்வொருவருக்கும் துக்கங்கள் உண்டு. ஏழ்மை, இயல்பான வாழ்க்கை நடத்த முடியாத வெற்றிடம், இழப்புகள், நோய், அபவாதம், ஆதரவுக்குத் துணை கிடைக்காது போதல் என நூற்றுக்கணக்கில் உள்ளன. காலப்போக்கில் இவற்றின் வலி குறைந்து விடுகிறது. சிலவற்றை நாம் முழுக்கவே மறந்து விடுகிறோம். ஆனால் நமக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத ஏதோ நபரின் துயரமும் சிதைவும் நம் மனதின் ஒரு மூலையில் தொடர்கிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போனாலும், ‘ஐயோ... பாவம்’ என்றாவது பெருமூச்சு விடுவோம். அப்படி ஒரு சிதைவு, நடிகர் சந்திரபாபு. நான் சில ஆண்டுகள் பணி புரிந்த ஜெமினி ஸ்டூடியோவில் எப்பாடுபட்டாலும் மாதத்தின் கடைசி தேதியன்று சம்பளம் கொடுத்து விடுவார்கள். வேறு சில சலுகைகள் உண்டு. ஒன்று, கடன். இதைப் பத்து மாதத் தவணைகளில் பிடித்துக் கொள்வார்கள். அன்று எங்கள் ஸ்டூடியோவில் கடன் வாங்காத பணியாளர்களே இருக்க மாட்டார்கள். இப்படி வட்டியில்லாக் கடன் வாங்கி, அதைச் சிலர் வட்டிக்கு விடுவார்கள் என்றும் சொல்வார்கள். மிகவும் சிக்கல் பிடித்த வேலை. இன்னொரு சலுகை, சம்பள அட்வான்ஸ். இது சிறிய தொகை. அந்த மாதத்துச் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும். ஒரு நண்பர் ஒரு கடன் முடிந்த அந்த மாதத்திலேயே இன்னொரு கடனுக்கு விண்ணப்பம் போடுவார். பல தடவை கொடுத்து விட்டார்கள். ஒரு முறை முடியாது என்று கூறப்பட்டது கடன் தராவிட்டால் தற்கொலைதான் என்று முதலாளிக்கு அவர் எழுதினார். முதலாளி அந்த நபரைக் கூப்பிட்டார். ‘‘இதோ பார். நான் இந்தக் கடிதத்தை போலீசுக்கு அனுப்பப் போகிறேன். நீ அவர்களிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார். அவ்வளவுதான், அந்தப் பணியாளருக்கு ‘உடும்பு வேண்டாம்... கையை விட்டால் போதும்’ என்றாகி விட்டது. ஆதலால், ‘விஷம் குடிப்பேன்’ என்று பயமுறுத்திச் சந்திரபாபு ஜெமினியில் வேஷம் பெற்றார் என்பதை நம்ப முடியவில்லை. இது அவருடைய பல வாழ்க்கை வரலாற்று நூல்களில் இருக்கிறது. ஜெமினி முதலாளி முன்பே சந்திரபாபுவுக்கு ஒரு வேஷம் தீர்மானித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து சந்திரபாபு ஒரே ஒரு ஜெமினி படத்தில்தான் நடித்திருக்கிறார். அது ‘மூன்று பிள்ளைகள்’. ‘மூன்று பிள்ளைகள்’ நல்ல படம். அதன் தோல்வியை விளக்க முடியாது. ஆனால் அதற்காக அதை முதலாளி ஒரேயடியாகப் பெட்டியில் போட்டிருக்க வேண்டியதில்லை. அதே போல ‘ஞானசௌந்தரி’ என்ற படம். அதையும் ஒரேயடியாகப் புதைத்திருக்க வேண்டியதில்லை. ‘மூன்று பிள்ளைக’ளில் தகப்பனார் புரிந்த திருட்டுக் குற்றத்தைத் தான் ஏற்று மூன்றாவது மகன் சிறைக்குச் செல்கிறான். தகப்பனார் தூக்கில் தொங்குகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் அம்மாவை நடுத்தெருவில் விடுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்து மூன்றாவது மகன் வெளியில் வந்து அம்மாவையும், கூடவே ஒரு வேலையையும் தேடுகிறான். ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கதாநாயகனாக! படம், ‘ராமாயணம்’. படத்திற்கு இசை அமைக்க இசை அமைப்பாளர் வருகிறார். யார்? சந்திரபாபு! மேற்கத்திய பாணியில் ஒரு சோக டியூன் பாடுகிறார். அங்கே கூடியுள்ளவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். ‘‘இவ்வளவு சோகம் கூடாது. நான் பாடுகிறேன்’’ என்று படத் தயாரிப்பாளர் பாடுகிறார். அது நாராயண ராவ் என்கிற அற்புதக் கலைஞன். ‘அப்பா மாண்டாயோ, ஓ பாலகா’ என்று சங்கதி போட்டுப் பாடுவார். ஹார்மோனியக்காரர் நாடகக் கம்பெனிக்காரர். இரண்டு பேரும் சேர்ந்து ஒரே ரகளை. சந்திரபாபு மயக்கம் போட்டு விழுந்து விடுவார்! இந்த ஒரு காட்சியே மிகவும் நன்றாக இருக்கும். இப்போது படத்தின் ஒரு பிரதியாவது இருக்குமா என்பது சந்தேகமே. சந்திரபாபு ‘மூன்று பிள்ளைகள்’ நாட்களில் மிகவும் ஒல்லியாக இருப்பார். நடந்து போய்க்கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒருமுறை வண்டியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார். வண்டி, வாடகை வண்டி. ஜெமினி படத்திற்குப் பின்தான் ‘மாமன் மகள்’, ‘குலேபகாவலி’, ‘புதையல்’ முதலிய படங்கள் அவருக்குப் புகழ் கொணர்ந்தன. ‘சபாஷ் மீனா’ அவரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. எனக்கு அவரோடு அதிகம் தொடர்பு இல்லை. திடீரென்று ஒரு நாள் நான் அவரை மீண்டும் சந்திக்க வேண்டி வந்தது. அது ஒரு சாமியார் வீடு. அந்த இடத்தின் பயிற்சி முறையில் முதல் படி... யாருக்கும் எதையும் அந்தரங்கமாக இருக்க விடாமல் செய்து விடுவது. எப்போதும் கூட்டம். சந்திரபாபுவை நாகபூஷணம் என்பவர் அழைத்து வந்தார். அந்தக் கூட்டத்தின் நடுவில் சாமியார் - சந்திரபாபு சந்திப்பு! அந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோருக்கு சந்திரபாபுவை ஒரு பெரிய சினிமா நட்சத்திரம் என்று தெரியாது. சாமியாரிடம் வரும் நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என்றுதான் நினைத்தார்கள். இது சந்திரபாபுவுக்கு பெரும் ஆறுதல். ‘‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் பிறந்ததிலிருந்து எல்லாரும் என்னைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்’’ என்று அவர் சொன் னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது ஓர் அடிப்படைத் தத்துவக் கேள்வி. தெய்வ நம்பிக்கை உடையோர் அனைவரும் கடவுளை வேண்டுவது அபயத்துக்குத்தான். எல்லா விக்கிரகங்களும் வலது கையை ‘பயப்படாதே’ என்று காட்டுவதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். சாயிபாபாவின் புகழ்பெற்ற செய்தி - ஒரே செய்தி... ‘யாமிருக்க பயமேன்’. சந்திரபாபுவின் பிரச்னை ஒரு பதிலில், ஒரு சந்திப்பில் முடியக் கூடியது அல்ல. ஆனால் அவர் அதன் பிறகு அந்த சாமியார் வீட்டுக்கு வரவில்லை. அவருடைய சொந்த வாழ்க்கையில் என்ன விசேஷப் பிரச்னை என்றும் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. என்னுடைய ஒரே யூகம், அவருக்கு நண்பர் என்று யாரும் இல்லாது போயிருக்கலாம். நடிக்க வந்து அவர் போல நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் இன்று யாரும் வயதான காலத்தில் வறுமையில் வாடுவதில்லை. அவர் வீடு கட்டத் தொடங்கினார். எப்படி? காரிலிருந்து நேராக முதல் மாடிக்குப் போகிற மாதிரி! அதில் என்ன பெரிய சௌகரியம்? வீடு பாதியிலேயே நின்றது. அவரும் இறந்து விட்டார். எனக்கு நிஜமாகவே பெரிய வியப்பு. நாம் எல்லா நேரத்திலும் பயத்தில்தான் இயங்குகிறோம். இதை ஒரு தனிப் பயிற்சியும் இல்லாமல் சந்திரபாபு கூறிவிட்டார்! சந்திரபாபுவுக்கு எங்கோ ஓரிடத்தில், ஒரு கணம் ஒளி கிடைத்திருக்கிறது. இன்று யோசித்துப் பார்த்தால் அவர் விஷமே உண்ண வேண்டியதில்லை. அவருடைய பயமே அவரை ஓர் அகால முடிவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ‘‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் பிறந்ததிலிருந்து எல்லாரும் என்னைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்’’ என்று சந்திரபாபு சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படிக்க நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா.கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் ‘சிறந்த ஓவிய விமர்சகர்’ என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம்... மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்துக்காக எடுத்த ‘லிபி’ என்ற படத்தைப் பார்த்தேன். எவ்வளவு ஆற்றல், எவ்வளவு உழைப்பு! அவருடைய நூல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு சமீபத்திய நூல் ‘புதையல் புத்தகம்’. இதை புதையல்கள் புத்தகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டில் வந்த முதல் தமிழ் அச்சு நூலாகிய ‘தம்புரான் வணக்கம்’ தொடங்கி லா.ச.ராவின் ‘சிந்தா நதி’ வரை மொத்தம் 47 நூல்களின் விவரிப்பு. தகவல் களஞ்சியம் தகவல்கள் தரும். ஆனால் கந்தசாமி யின் கட்டுரைகள் அந்த நூல்களின் முக்கியத்துவத்தை விளக்குபவை. இன்று தேடினாலும் எளிதில் கிடைக்காத மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் எழுதிய புதினம் பற்றிய கட்டுரையுடன், ‘புதையல் புத்தக’த்தில் ஒரு பேரகராதி பற்றியும் கட்டுரை இருக்கிறது. (புதையல் புத்தகம் - சா.கந்தசாமி, விலை: ரூ.150/- வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென் னை-600017. தொடர்புக்கு: 044-24322177) http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7150&id1=6&issue=20140609
நடைவெளிப் பயணம்ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தேர்தல் சார்லஸ் ஃபாஸ்டர் கேன் ஓர் இளம் செய்திப் பத்திரிகை முதலாளி. அவன் ஒரு செனட்டர் மகளைக் காதலித்து மணந்து கொள்கிறான். (அமெரிக்காவில் செனட்டர் என்பவர், நம்மூர் ராஜ்யசபா எம்.பி போல!) செனட்டருக்கு நிறைய செல்வாக்கு இருப்பது போலவே அங்கே மாகாண கவர்னருக்கும் நிறைய செல் வாக்கு இருக்கும். (அங்கிருக்கும் மாக £ண கவர்னர், நம்மூர் முதலமைச்சர் போல!) அவன் கவர்னர் தேர்தலில் நிற்கிறான். அவனுடைய உண்மையான, நீண்ட கால எழுத்தாள நண்பனிடம் ஒரு சுவரொட்டியைக் காண்பிக்கிறான். ‘கேன் அமோக வெற்றி!’ என்றிருக்கிறது. ‘‘இன்னும் தேர்தலே நடக்கவில்லை, அதற்குள் இந்த மாதிரிச் சுவரொட்டியா?’’ ‘‘சூட்டோடு சூடாகச் செய்தி.’’ ‘‘நீ தோற்று விட்டால்?’’ கேன் சுவரொட்டியைத் திருப்புகிறான். அங்கு உள்ள வாசகம்: வாக்கெடுப்பில் ஊழல்! ஆங்கிலத்தில் அவன் பயன்படுத்திய வாசகம்: திக்ஷீணீuபீ ணீt றிஷீறீறீs! (இன்றும் எங்கும் இப்படித்த £னே சொல்லப்படுகிறது? வென்றால், மக்கள் தீர்ப்பு. தோற்றால், பணம் விளையாடியது!) இது ஓர் அமெரிக்கத் திரைப்படத்தில், இன்றைக்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த காட்சி. 'Citizen Kane' என்ற அந்தத் திரைப்படம் முதலும் முழுக்கவும் ஆர்ஸன் வெல்ஸ் என்ற இருபதைந்து வயது இளைஞரின் படைப்பு. இதுவே அவருக்கு முதல் திரைப்படம். ஆனால் இதை சினிமா அதிபர்கள் வெளியிடத் தயங்கினார்கள். இடைஞ்சல் செய்தார்கள். காரணம், படத்தின் கதாநாயகன் சார்லஸ் ஃபாஸ்டர் கேன் போலவே ஒரு மகா பத்திரிகைக்காரர் அப்போது அங்கு இருந்தார். அவரை விரோதித்துக் கொள்ள முடியுமா? அந்த நிஜப் பத்திரிகையாளர் பற்றி பல கதைகள் உண்டு. ஒரு நாள் அவருடைய பத்திரிகைப் புகைப்படக்காரரைக் கூப்பிட்டு, ‘‘நீ உடனே மெக்ஸிகோ சென்று யுத்தக்காட்சிகளைப் படம் எடுத்து அனுப்பு’’ என்றார். ‘‘மெக்ஸிகோவா? அங்கே யுத்தம் ஒன்றும் இல்லையே?’’‘‘நீ புகைப்படங்கள் அனுப்பு. நான் யுத்தத்தை அனுப்புகிறேன்.’’ (‘‘You send me the pictures. I will send you the war.’’) அவருடைய செல்வாக்கின் மீது என்ன அசாத்திய நம்பிக்கை! இன்று யோசித்துப் பார்த்தால் இத்தகைய நிலைமை பல நபர்களுக்கும் பொருந்துமல்லவா. இன்று அந்த முதலாளியின் பெயர் நிலைக்கவில்லை. ஆனால் ஆர்ஸன் வெல்ஸ் என்ற அந்தத் திரைப்படக்காரரின் பெயர் இன்னும் பல தலைமுறைகளுக்காவது இருந்தே தீரும் என்று தே £ன்றுகிறது. அந்த மகாமேதை ஒரு ஷேக்ஸ்பியர் பக்தன். ‘சிட்டிஸன் கேன்’ படத்துக்கு முன்னரே ஒரு நாடகக்குழு அமைத்து ‘மாக்பெத்’ நாடகத்தைத் தயாரித்தார். அதை இருபத்து மூன்றே நாட்களில் திரைப்படமாகவும் எடுத்தார். மிகக் குறைந்த செலவில் அந்தக் கதைக்கான மனப்போக்கு மிகவும் சிறப்பாக வெளிப்படும்படி அமைத்திருந்தார். பத்திரிகைத் துறையில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் போலப் பல மடங்கு திரைப்படத்துறையில் உண்டு... மாக்பெத் வரலாற்றில் கொல்லப்பட்டது போல அந்தப் படமும் கொல்லப்பட்டது. ஆர்ஸன் வெல்ஸ் தன்னை ஒரு தீவிர ஜனநாயகவாதி என்று அறிவித்துக்கொள்ளவில்லை. அவர் பாணியில் திரைப்படம் எடுக்க விரும்பினார். அமெரிக்கா அவருக்கு மன நிறைவைத் தரவில்லை. அந்த நாட்டை விட்டு ஐரோப்பா போனார். ஏகப்பட்ட படங்களில் நடித்தார். ஒரு காட்சி, அரைக் காட்சி... ‘எ மேன் ஃபார் ஆல் சீஸன்ஸ்’ என்ற படத்தில் படுத்தபடியே ஒரே ஒரு வரி: ‘‘நான் என் அரசனுக்கு ஊழியம் செய்த ஆர்வத்தோடு என் நேரத்தைக் கடவுள்மீது செலுத்தியிருந்தால் எனக்கு இது கிடைத்திருக்காது’’. ‘இது’ என்பது முதுமையில் சிறைவாசம்... கூறியவர் தாமஸ் வுல்ஸி என்ற தலைமைப் பாதிரி. இங்கிலாந்து அரசன் எட்டாவது ஹென்றிக்கு நீண்ட நாள் விசுவாசமாக உழைத்துப் பல தர்மங்களை மீறி அரசனின் வலதுகரமாக விளங்கிய அவர் சிறையில் அடை க்கப்பட்டார். ஆர்ஸன் வெல்ஸ் ஒரே வரியோடு ஒரு திரைப்படத்தில் தன் பங்கை ஆற்றி விட்டார்! ஆர்ஸன் வெல்ஸ் மிகுந்த சிரமங்களுக்கிடையில் ‘ஒதெல்லோ’ நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரித்தார். சிறப்பாக இருந்தது. அவருடைய மேதைமைக்குப் பொருத்தமான வெற்றிகள் கிடைக்கவில்லை. அவர் ஒருபோதும் உலகைக் குறை கூறவில்லை. சில காலம் ரீடா ஹேவொர்த் என்ற புகழ்பெற்ற நடிகை அவருடைய மனைவியாக இருந்தாள். விவாகரத்துக்குப் பிறகு அவள் கூறினாள்: ‘‘ஒரு மேதையோடு குடித்தனம் நடத்துவது மிகவும் கடினம்!’’ ‘சிடிஸன் கேன்’ படம் பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எப்படி ஓர் இருபத்தைந்து வயது இளைஞன் தன் முதல் படத்திலேயே இவ்வளவு விசேஷ அம்சங்களைப் புகுத்த முடிந்தது? நிஜப் பத்திரிகையாளரை ஒரு கட்டத்தில் அவருடைய மனைவி ஒரு தூசு போல நடத்துகிறாள். அதைத் திரையில் ஒரே காட்சியில் ஆர்ஸன் வெல்ஸ் காண்பித்தார். பத்து நொடிகள். காலை உணவுக்குக் கணவனும் மனைவியும் மேஜையில் உட்காருகிறார்கள். அப்போதுதான் செய்திப் பத்திரிகையை இருவரும் பார்ப்பது. கேன் அவனுடைய பத்திரிகையைப் பிரிக்கிறான். அவன் மனைவி போட்டிப் பத்திரிகையைப் பிரிக்கிறாள். இந்த மாதிரி கணவன் - மனைவி உறவு இருந்தால் அடுத்த கட்டம் என்ன? கேன் எதேச்சையாக ஒரு துணை நடிகையைச் சந்திக்கிறான். அவளை ஒரு பெரிய நட்சத்திரமாக்க விரும்புகிறான். அவளுக்காக ஒரு பெரிய இசை நாடகம் - ஆபரா - ஏற்பாடு செய்கிறான். அவள் மீது தவறில்லை. ஆனால் ஒரு பெரிய ஆபரா பாடகியாகக்கூடிய ஆற்றல் அவளிடமில்லை. கேனுடைய எழுத்தாள நண்பன்தான் மதிப்புரை எழுத வேண்டும். பொய் எழுத மனதில்லை. குடி மயக்கத்தில் தட்டச்சு அருகில் விழுந்து கிடக்கிறான். அவன் பாதி எழுதிய மதிப்புரையை கேன் படிக்கிறான். மீதியை அவன் எழுதி முடித்து அச்சுக்குக் கொடுத்து விடுகிறான். அவன் பத்திரிகையிலேயே அவனது ஆசை நாயகி பற்றி எதிர்மறை விமர்சனம் வருகிறது! ‘சிடிஸன் கேன்’ படம் இப்போது தேர்தல் நடக்கும்போது நினைவுக்கு வந்தது. உலகில் சில நிகழ்ச்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. சர்வாதிகாரியாகி உலகைப் பன்னிரண்டு ஆண் டுகளில் நிர்மூலமாக்கிய ஹிட்லர், தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் ஓர் தற்செயல் நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு சர்வாதிகாரியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான். இன்றைக்கு நாற்பது ஆண் டுகளுக்கு முன்பு சிலி நாட்டில் தேர்தல் நடந்தது. அதையொட்டி ஒரு புரட்சி நடந்தது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலண்டே கொல்லப்பட்டார். லாரிக்காரர்கள் புரட்சி என்று சொல்லப்பட்டது. உண்மையில் அது லாரி முதலாளிகள் நடத்திய கொலை. ஜனநாயகம், குடியாட்சி என உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் காலம் தள்ளிவிட்டது. ஆனால் புலவர்கள், ‘வள்ளல்கள்’ என அரசனையே பாடி விட்டுப் போயிருக்கிறார்கள். இன்று பத்திரிகைகள் கவிதை பாட முடியாது. கவிதையில் செய்ய விரும்புவதைச் செல்வாக்கு உள்ளவர்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகளில் செய்து காட்டி விடுகிறார்கள். ‘‘நீ உடனே மெக்ஸிகோ சென்று யுத்தக்காட்சிகளைப் படம் எடுத்து அனுப்பு.’’ ‘‘மெக்ஸிகோவா? அங்கே யுத்தம் ஒன்றும் இல்லையே?’’ ‘‘நீ புகைப்படங்கள் அனுப்பு. நான் யுத்தத்தை அனுப்புகிறேன்.’’ படிக்க... தற்செயலாகக் காணக் கிடைத்த நூல் ‘மனமே, நலமா?’ என்னை மீண்டும் மீண்டும் அந்த நூலைப் படிக்க வைத்தது. இதை எழுதிய டாக்டர் சிவ.நம்பி சென்னையில் மனநல மருத்துவராகப் பணியாற்றுகிறார். எழுதப் படிக்கத் தெரிந்த அனைத்து தமிழர்களும் பயன்பெறக்கூடிய முறையில் மனநோய், அதன் ஆரம்ப அறிகுறிகள், ஓரளவு சுயமாக அந்த நோயை எதிர்கொள்வது எப்படி ஆகிய விஷயங்கள் பற்றி எளியநடையில் - ஆனால் விஞ்ஞானபூர்வமாக - எழுதியிருக்கிறார். சிறிய புத்தகமானாலும் தலைப்பின் பரிமாணங்கள் பலவற்றை படிப்போருக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் சைக்காலஜி என்ற சொல்லை எது எதற்கோ பயன்படுத்தினாலும் மனநல மருத்துவம் ‘சை க்கியாட்ரி’ இன்றைய சமூகத்தில் ஒரு நுண்ணிய, அவசியமான துறை. மூச்சு விடுதலைப் பயன்படுத்துவது பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள், அவருடைய பரந்த பார்வையைக் காட்டுகிறது. ரூ.90 விலையுள்ள இந்நூலின் பிரதிகள் கிடைக்குமிடம்: வள்ளுவர் பண்ணை, 10/31, இரண்டாம் மெயின் சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை- 600035.
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8002&id1=6&issue=20141208
நடைவெளிப் பயணம்ருத்ரையா
இன்று பலர் கூறுவது போல ருத்ரையா எனக்கும் நண்பர். எனக்கு அவரை முதலில் சந்தித்தது எப்போது, எப்படி என்று சரியாக நினைவில்லை. ஆனால் 1973 அக்டோபரில் என்னை ஊருக்கு அனுப்ப வந்த குழுவில் அவர் இருந்தார். அதன் பின் நடுநடுவில் பார்த்திருக்கலாம். ஒரு புகழ்பெற்ற சோழ மன்னன் பெயர் கொண்ட நண்பர் மூலம் பல சினிமாத் துறைக்காரர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் சற்றுக் கடுமையாகக் கூட பேசியிருக்கிறேன்: ‘‘வெறுமனே ‘நினைத்திருக்கிறேன்’, ‘திட்டம் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு காலை ஏழு மணிக்கும் இரவு தூங்கப்போகும் நேரத்திலும் யாரையும் அழைத்து வராதீர்கள். (அவர் ஒருமுறை சசிகுமாரை இரவு ஒன்பது மணிக்கு அழைத்து வந்தார்!) ஒழுங்காக வேலையைத் தொடங்கிய பின் தகவல் தாரும். நான் உங்கள் வெற்றிக்கு மனமார வாழ்த்துவேன்’’ என்று சொன்னேன். அப்புறம் அவரே ஒரு படம் தயாரித்து டைரக்டும் செய்தார். பணப் பற்றாக்குறை அப்படத்தில் கண்கூடாகத் தெரிந்தாலும், அது ஒரு நல்ல முயற்சி. இன்று ‘நில அபகரிப்பு’ என்ற சொல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரை சென்றிருக்கிறது. என் நண்பரின் படம் அதை மையமாகக் கொண்டது. அவரும் ஒரு காரணம், ருத்ரையா என் நண்பரானதற்கு. ‘அவள் அப்படித்தான்’ படம் வெளியானபோதே, ஒரு வித்தியாசமான, கூர்ந்து கவனிக்க வேண்டிய படம் என்ற எண்ணத்தைப் படம் பார்த்தவர்களிடம் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அப் படத்தில் சில முக்கியமான பாத்திரங்கள் முரண்பாடுகள் கொண்டவை. கதாநாயகி மட்டும் அல்ல. அவளை உதவியாளராக அமர்த்தி இருந்த முதலாளியும் முரண்பாடுகள் கொண்டவன். அப்பாத்திரத்தில் நடித்தவர் ரஜினிகாந்த். அவர் எல்லாக் காட்சிகளிலும் விபூதி தரித்தவராக வருவார். ஆனால் ஒரு முறையும் ஒழுங்காகத் தரித்திருக்க மாட்டார். அவர் தளைகளை உடைத்தவராக இருக்கலாம். ஆனால் நெற்றியில் விபூதி வேண்டும். அதை ஏன் ஒரு முறை கூட ஒழுங்காகப் பூசியிருக்கவில்லை? உண்மையில் பார்த்தால் படத்தை ‘அவள் அப்படித்தான்’ என்பதோடு, ‘அவன் அப்படித்தான்’ என்றும் அழைக்கலாம். அப்போது ருத்ரையா இளைஞர். சில கலாசார அம்சங்களில் அவருக்கு அதிகப் பரிச்சயம் இல்லாது போயிருக்கலாம். ருத்ரையா மறைந்தபோது அவருக்கு வந்த இரங்கல் கட்டுரைகள் போல சினிமாத் துறையில் ராஜ்கபூருக்கு வரவில்லை. நாகைய்யாவுக்கு வரவில்லை. ஒரு நண்பர் சொன்னார், ‘‘இப்படி அழுது புலம்புவதற்கு அவர் என்ன செய்தார்? அந்த ஒரே படத்தைத் தவிர!’’ என் பதில், ‘‘ருத்ரையாவின் ‘கிராமத்து அத்தியாயம்’, முதல் படத்தை விட இன்னும் சிறப்பாக இருந்தது.’’ அவர் ஒத்துக்கொள்ளவில்லை. படம் வெளியாகி, தோல்வி என்று அறிந்தபின் ருத்ரையாவே படத்தில் நிறைய குற்றங்களைக் கண்டுபிடித்தார். அவர் என்னிடம் சொன்ன பல ‘குற்றங்கள்’, உண்மையில் குற்றங்களல்ல. நான் அவருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று தான் அவர் நினைத்தார். திரைப்படங்கள் இந்த வெற்றி - தோல்வி தர்க்கத்திலிருந்து நழுவிப்போகிற பொருள். எனக்குச் சட்டென்று சொல்லத் தோன்றுவது, பாரமவுண்ட் நிறுவனம் எடுத்த ‘வார் அண்ட் பீஸ்’ (டால்ஸ்டாய் எழுதிய மகா நாவல்). ஒரு வடிவமற்ற கதையிலிருந்து, டைரக்டர் கிங்க் விடார் கிட்டத்தட்ட நூறு முக்கிய பாத்திரங்களுக்கும் உயிரும் சதையும் கொடுத்து படத்தையும் சிறப்பான வடிவம் கொண்டதாக அமைத்திருந்தார். கதாநாயகனான பியருடைய போக்கிரி முதல் மனைவியின் அயோக்கிய சகோதரன், பியர் மிகுந்த மதிப்பு வைத்திருந்த நடாஷாவை மயக்கி அழைத்துச் செல்லும்போது துரத்திச் சென்று அச்சிறு பெண்ணை பெரிய விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். இவ்வளவுக்கும் அவன் ஒரு திட மனமில்லாதவன், ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற பெயரைப் பெற்றவன். அயோக்கிய அண்ணன் - தங்கையாக வந்தவர்கள் நட்சத்திரங்கள். அனிடா எக்பெர்க் அன்று மர்லின் மன்ரோவுக்குப் போட்டியாகக் கருதப்பட்டவர். விட்டோரியோ காஸ்மன் அன்று இத்தாலி திரைப்படத் துறையில் ஒரு நட்சத்திரம்.எனக்கும் சாதனையாளர்கள் பற்றிப் பெருமையும் பரிதாபமும் உண்டு. ஆனால் கழிவிரக்கம் ஒரு ஆட்கொல்லி. ருத்ரையா உயிருடன் இருந்தபோது எவ்வளவு பேர் அவரைக் கவனித்து விட்டார்கள்? கமல்ஹாசன் - ரஜினி சேர்ந்து நடித்த படங்கள் என்று பல முறை பட்டியல்களும், மறுபரிசீலனைகளும் வந்திருக்கின்றன. பலருக்கு ‘அவள் அப்படித்தான்’ நினைவில் இருந்ததில்லை. இன்று நாம் ருத்ரையாவின் படத்தைப் புகழ்ந்தாலும் அது மறக்கப்படுவதை தற்செயல் நிகழ்ச்சி என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. நீளக்கட்டுப்பாடு உள்ள காலத்தில் சுருக்கமான படத்தை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து எடுத்து, அனைவருக்கும் கவனம் கிடைத்த தமிழ்ப் படங்களில் ‘ஹரிதாஸ்’ ஒரு சாதனை. அந்த டைரக்டர் பெயர் எவ்வளவு பேருக்கு நினைவில் இருக்கிறது? அன்று விருதுகள், பரிசுகள் கிடையாது. மக்கள் பாராட்டு, நீண்ட நாள் ஓடுதல்... இவைதான் பரிசும் விருதும். எவ்வளவோ பணச்செலவில் தயாரிக்கப்பட்டு, நிறைய பத்திரிகை, தொலைக்காட்சி கவனத்துடன் வெளியிடப்பட்டாலும், திரைப்படங்கள் மறக்கப்படுபவை. பெரிய நட்சத்திரங்களுக்கு நிறைய தோல்விப் படங்களும் உண்டு. ‘மாபெரும் நாடாகிய ரஷ்யாவின் ஆன்மாவைப் பிரதிபலித்தவர்கள்’ என்று டால்ஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும் கொண்டாடப்படும் அளவுக்கு, ‘ஆன்மாவே இல்லாது எழுதப்பட்டவை’ என்று கூறக்கூடிய, சிறு சிறு நூல்கள் சிலவே எழுதிய ஆல்பெர் காம்யூவும் காஃப்காவும் நீண்ட காலம் கொண்டாடப்படுவார்கள். சினிமாவில் அந்த அளவுக்குக் கொண்டாடக்கூடிய நபர் ஒரே ஒருவர். அவர், சார்லி சாப்ளின். சர்க்கஸை வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! இந்தியாவில் ராஜ்கபூர் தொடங்கி ஹாலிவுட்டில் செசில் பி.டிமில்லி வரை பெரிய பெரிய படங்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக எடுக்கப்பட்ட ‘சர்க்கஸ்’ என்ற சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர இயலவில்லை. ருத்ரையா முதல் படத்தில் நிறைய நம்பிக்கை தந்தார். ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு சிறிது சிறிதாக மறக்கத் தொடங்கினார்கள். ருத்ரையாவின் நலம்விரும்பியான நான் அவர் பற்றிய எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொண்டேன். என் நண்பர் ஒருவரின் உறவினர் என் நண்பர் பற்றியே ஒரு கருத்துத் தெரிவித்தார். ‘‘நீ ஆறு மாதங்களுக்குள் ஒரு வேலையில் அமராவிட்டால் நீ என்றுமே வேலை செய்யும் திறமையிழந்தவனாகி விடுவாய்.’’ ஆங்கிலத்தில் இன்னும் சுருக்கமாகச் சொல்லலாம். If you are unemployed for six months, you will become unemployable forever. சர்க்கஸை வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக எடுக்கப்பட்ட சார்லி சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர இயலவில்லை. படிக்கஇம்முறை இரு வரலாற்று நூல்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தென் இந்திய வரலாறு’. முதலில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில மூலத்தின் தமிழாக்கத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். கே.கே.பிள்ளை வரலாற்றுத் துறையில் உலகப் புகழ்பெற்ற ஆசான். (தென் இந்திய வரலாறு - முதல் பாகம்: ரூ.84/-, இரண்டாம் பாகம்: ரூ.115/-, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், புதிய எண்.25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச: 044-43408010) இரண்டாவது, கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘முகலாயர்கள்’. இதை எழுதியவர் முகில். இவர் நிறைய வாழ்க்கை வரலாறுகளும் எழுதியிருப்பவர். சுமார் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட ‘முகலாயர்கள்’ மிக சுவாரசியமான நூல். வரலாற்று நூல்களில் கால அட்டவணை, பெயர் - பொருள் அகராதி மிகவும் முக்கியம். முகில் மிகச் சிறப்பாக, விரிவாக கால வரிசை தந்திருக்கிறார். அத்துடன் இந்த நூலை எழுத உதவிய நூல்கள், இணைய தளக் குறிப்புகளும் தந்திருக்கிறார். தமிழ் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். (முகலாயர்கள் - விலை: ரூ.350/-, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச: 9445901234)
அசோகமித்திரன்
ஒளியும் ஒலியும்
தமிழகத்துக்கு 1975ல் தொலைக்காட்சி வந்தது. எவ்வளவோ படித்தவர்கள், அயல் நாட்டிற்குச் சென்றவர்களுக்குக் கூட சொந்த நாட்டில் அந்த சாதனம் பற்றிப் புரிய நிறைய நாட்கள் வேண்டியிருந்தது. ஒளிபரப்பு முதலில் காலை சிறிது நேரம், மாலை சிறிது நேரம் என்றிருந்தது. இதில் பாதி டில்லி ஒளிபரப்பு. நாட்டில் அந்த சாதனம் ஆரம்ப நிலையில் இருந்தது. இந்தி திணிப்பு என்று எங்கெங்கோ ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்தன. அரசியல்வாதிகள் மட்டுமில்லை... கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் போனார். அதன் பிறகு எத்தனையோ ஊர்வலங்கள் நடத்தி விட்டார். இன்று நாள் முழுக்க தமிழ்தான். ஆனால் எவ்வளவு பேர் ஆதி அலைவரிசையாகிய தூர்தர்ஷனைப் பார்க்கிறார்கள்? ஒவ்வொரு முறை அனந்தமூர்த்தி ஊர்வலம் போனபோதும், அடுத்த நாளே என்னை ஒரு பேரணி ஆர்வலர் உசுப்பிவிட்டு, ‘‘நீங்களும் ஊர்வலம் போக வேண்டும்’’ என்பார். அவர் எல்லாக் கட்சி அரசுகளிலும் உயர் உத்தியோகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் அனுபவித்து, பென்ஷன் வாங்க ஆரம்பித்தவுடன் ஓர் இலக்கியத் தலைவர் ஆகி விட்டார்! அனந்த மூர்த்தி ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் அளவுக்கு உயர்ந்து விட்டார். கர்நாடக அரசு அவருக்குப் பெங்களூருவில் வீடே கொடுத்திருக்கிறது என்பார்கள். நான் எலும்பு முறிந்து நடக்க முடியாது வெறும் எழுத்தாளனாகத் திண்டாடும்போது, எனக்குச் சம்பந்தமே இல்லாததற்கு கொடியேந்தி ஊர்வலம் ஏன் போகவேண்டும்! எங்கள் குடும்பம் வரை தொலைக்காட்சி 1980க்கு மேல்தான் பரிச்சயம் ஆயிற்று. அது குட்டி (நிuபீபீவீ) தயவால். குட்டி ஏதோ ராணியல்ல. இரண்டு வயதுக் குழந்தை. அப்போது கடும் தண்ணீர்ப் பஞ்சம். குட்டியின் அம்மா எப்போதும் ஒரு குடத்தைத் தூக்கிக்கொண்டு தண்ணீருக்கு அலைவாள். அந்த வீடு மிகவும் சிறியது. பத்துக்குப் பத்து அடியில் ஓர் அறை. ஒரு குட்டிச் சமையலறை. குட்டியின் அப்பா ஒரு வட இந்திய வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருந்தார். அதிகாலையிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் போய் விடுவார். ஒரு கூடை வெற்றிலை பெற்றுக்கொண்டு தி.நகர் பாண்டி பஜாரில் அவருடைய கடைக்குச் சென்று விடுவார். வீட்டில் என்ன சமையல், அதற்கு வேண்டிய பாத்திரங்கள் உண்டா... எதுவும் தெரியாது. எப்படியோ எங்கள் தெருவில் அவர் வீட்டில்தான் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்து சேர்ந்தது. அது அவர் வாங்காமல் ஏதோ நடிகர் வெற்றிலை பாக்கு பாக்கிக்காகக் கொடுத்திருக்கலாம். ஒரு காலத்தில் பாண்டி பஜார் சினிமாக்காரர்கள் கடன் வாங்குவது, கொடுப்பதற்குப் பெயர் பெற்றது. குட்டி வீட்டினது ஒரு சிறிய பெட்டி என்றாலும், ஏதோ நிழலாக நகரும் உருவங்கள் தெரியும். அந்த மனிதனோ அவன் மனைவியோ ஒரு நாள் கூட ஏதாவது நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் அந்தச் சிறிய அறையில் நாங்கள் நாற்பது பேர் முண்டியடித்துக் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், புதன் மாலை ஐந்து மணிக்கு உட்கார்ந்து விடுவோம். (வெள்ளி, திங்கள், புதன் - ஒளியும் ஒலியும். சனி, ஞாயிறு - திரைப்படம்.) எட்டு மணிக்குச் செய்திகள் என்ற அறிவிப்பு வந்த உடனே அறை காலியாகி விடும். எட்டு மணி வரை அந்த வீடு குட்டி குடும்பத்தினுடையது அல்ல. ஒரு முறை ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது குட்டியின் அப்பா வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ‘‘உங்களுக்கு இடமில்லை. வேறு இடம் போங்கள்’’ என்றிருக்கிறார். எனக்கே குட்டியின் அப்பாவை அடையாளம் தெரியாது. இன்னொரு ‘ஒளியும் ஒலியும்’ இருக்கிறது. அதில் தொழில்நுட்பத்துடன் மனித ஆற்றலும் தேவைப்படுவது. நான் தஞ்சாவூர், மதுரை சென்று பார்த்ததில்லை. ஆனால் ஐதராபாத் ஒரு முறை சென்றபோது கோல்கொண்டா கோட்டையில் ‘ஒளியும் ஒலியும்’ காட்சி கண்டேன். அப்போது தான் வரலாற்று அறிவோடு கூட, அதை ஒரு கதையாகவும் சொல்லத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனக்குப் பள்ளிக்கூடத்தில் கிடைத்த வரலாற்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் சிறந்தவர்கள். அதில் சௌந்தரராஜன் என்ற ஆசிரியர், வகுப்பில் தூங்குவார். அவர் முகம் சிவந்திருக்குமாதலால் நாங்கள் அவருக்கு ‘சோல்ஜர்’ என்று பெயரிட்டோம். அது இரண்டாம் உலகப் போர்க் காலம். ஞாயிறு, புதன்களில் ராணுவ வீரர்கள் நிறையவே கண்ணில் படுவார்கள். நான் பள்ளிக்குப் போகும் வழியில் ‘மேஃபேர்’ என்ற பெயர்ப்பலகை இருக்கும். வெளி கேட்கள்தான் தெரியும். அது வெள்ளைக்காரர்கள் பொழுது போக்குமிடம் என்பார்கள். வெள்ளைக்காரர்கள் பொழுதுபோக்குமிடம் என்றால் குடி இல்லாமல் இருக்குமா? எங்கள் வரலாறு வகுப்பு சோல்ஜர் அங்கு போய்விட்டு வருபவர் என்பார்கள். இன்றும் தூங்குவார் என்று நினைத்த நாளில் அவர் அரை மணி ஓர் உரை நிகழ்த்துவார். வரலாறு நூலில் நூறு பக்கங்கள் முடிந்து விடும். நாங்கள் வரலாறு புத்தகத்தையே தொட மாட்டோம். சோல்ஜர் நடத்திய உரைகளே போதும். ஏனோ என் வகுப்புக்கு பிரிட்டிஷ் பிரிவு நடக்கவே இல்லை. இது நடந்திருந்தால் கல்கத்தா விக்டோரியா மண்டப ‘ஒளியும் ஒலியும்’ இன்னமும் தீவிர அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் கோல்கொண்டா ‘ஒளியும் ஒலியும்’ காட்சி மிகவும் விசேஷமாக இருந்தது. கோல்கொண்டா எனக்குப் பரிச்சயமானது என்பதுடன், இன்னொரு முக்கிய காரணம் அமிதாப் பச்சனின் குரலில் வர்ணனை. பச்சனின் குரல் அவருடைய நாபியிலிருந்து வருகிறது என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். தமிழ் நாட்டில் எனக்குத் தெரிந்து இந்த நாபி பழக்கமில்லை. இதை யோகம் சாத்தியமாக்கும் என்றாலும், எல்லா யோகாசிரியர்களுக்கும் இது சித்திப்பதில்லை. உதாரணத்திற்கு, பாபா ராம்தேவ். அவர் எல்லா ஆசனங்களையும் சிறப்பாகச் செய்கிறார். ஆனால் குரல் மிகவும் பலவீனமானது. ஏதோவொரு சமயத்தில் ரஜினியிடம் வெளிப்பட்டாலும், அது போதவே போதாது. எங்கள் சோல்ஜர் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உரை நிகழ்த்தியதை, அமிதாப் பச்சனின் ‘ஒளியும் ஒலியும்’ வர்ணனை நினைவுபடுத்தியது. வரலாறு என்று நாம் அறிவதெல்லாம் உண்மையல்ல என்ற நினைப்பும் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். வரலாறு என்பதே பெரும்பாலோர் நம்பும் கட்டுக்கதை. கோல்கொண்டா வர்ணனை ஔரங்கசீப் ஏமாற்றுக்காரன் என்ற எண்ணத்தை உண்டு பண்ணும். அவனுடைய கொடூர நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த பிறகும் கோல்கொண்டா சுல்தானை சிறையில் அடைத்து அவன் வம்சத்தையே அழித்தான். ஆனால் இதே ஔரங்கசீப்பிடம்தான் நிறைய இந்து தளபதிகள் இருந்தார்கள். நிறைய நிலச்சுவான்தார்கள் இருந்தார்கள்! அரசன் என்று பார்த்தால் எல்லா அரசர்களும் ஏதாவது சில அல்லது பல தருணங்களில் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சோல்ஜர் மாதிரி ஆசிரியர்கள் தேவை. வரலாறு என்று எதையோ அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், சிந்திக்கவும் வைப்பவர்கள் வரலாற்றை விட முக்கியமானவர்கள். வரலாறு என்று நாம் அறிவதெல்லாம் உண்மையல்ல என்ற நினைப்பும் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். வரலாறு என்பதே பெரும்பாலோர் நம்பும் கட்டுக்கதை. படிக்க... தடித்தடி புத்தகங்கள் களைப்பூட்டுகின்றன. ஆனால் அவற்றின் சாராம்சத்தைச் சிறு நூல்களில் தந்து விட முடியும். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள். முதல் நூல் ஆழி பதிப்பகம் வெளியிட்ட ‘எமிலிக்காக ரோஜா’. சிறு பத்திரிகைகள் நன்கறிந்த சா.தேவதாஸ் இதைத் தொகுத்திருக்கிறார். ஆண்டன் செகாவ், வில்லியம் ஃபாக்னெர், ரேமண்ட் கார்வர் என மிகச் சிறந்த படைப்பாளிகளின் தொகுப்பு. ஆசிரியர்கள் பற்றித் தகவல்களும் உள்ளன. தொகுப்பு நூல் என்றால் நான்கைந்து கதைகளை ஒரு மூட்டையாகத் தரையில் போடாமல், அக்கறையுடன் வெளியிடப்பட்ட நூல். இரண்டாவது, நிழல் வெளியீடாக வந்திருக்கும், ‘இந்த நகரத்தில் திருடர்களே இல்லை’. ராஜகோபால் மொழிபெயர்த்துத் தொகுத்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள். தேர்வும் மொழிபெயர்ப்பும் சிறந்த இலக்கிய ரசனையைக் காட்டுகின்றன. அனைத்திலும் விசேஷமானது இறுதியில் உள்ள கட்டுரை. கேபிரியேல் கார்ஷியா மார்க்வெஸ் எழுதிய ‘பாரிஸில் ஹெமிங்வேயைச் சந்தித்தேன்.’ http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7245&id1=6&issue=20140630
நடைவெளிப் பயணம்ஒரு வாணிபக் கலைஞனின் வியக்கத்தக்க ரசனை
நான் பள்ளியில் கண்ட ஒரே ஓவியர், தாஸ் என்ற டிராயிங் மாஸ்டர். அவரே எங்களுக்குத் தமிழ் வாத்தியார். டிரில் வாத்தியார். கடுகடுவென்று இருப்பார். அடிப்பார். நான் அவரிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஓவியம் என்றில்லாவிட்டாலும் நிறைய டயாகிரம்கள் வரைய வேண்டியிருந்தது. ராஜா தீன் தயாள், ஐதராபாத் நிஜாமின் அரசவை நிழற்படக்காரர். அவர் எடுத்த படங்களைக் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்றிருக்கும். அவர் எடுத்ததில் தொண்ணூற்றொன்பது சதவீதம் போர்ட்ரெயிட்கள். நிஜாம் இல்லத்து விசேஷ நிகழ்ச்சிகளின்போது குரூப் படங்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு முறை ஒரு பழங்காலப் பெரிய, திறந்த மோட்டார் வண்டியில் நிஜாமின் மூத்த மகன், அவருடைய மனைவி, இதர பரிவாரங்கள் சுமார் ஐம்பது பேர் நுழைவாயில் படிகளில் நிற்க... தீன் தயாள் புகைப்படம் எடுத்திருப்பார். அந்த ஐம்பது, அறுபது நபர்களில் யாரும், ‘என் முகம் சரியாக இல்லை, தெரியவில்லை’ என்று கூற முடியாது. நிஜாமின் மருமகள்கள் (அவர்களில் ஒருவர், நிலோஃபர்) அன்று உலகிலேயே பேரழகிகள் என்று புகழ் பெற்றவர்கள். தீன் தயாளுடைய மகனின் மகனும், மகளின் மகனும் எனக்கு நண்பர்கள். ஆனால் நான் அவர்களைத் தேடி அங்கு செல்வதின் முக்கிய காரணம், அவர்கள் தாத்தா எடுத்த புகைப்படங்களைப் பார்க்கத்தான் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த மாதிரிப் புகைப்படங்கள் எடுப்பது சாத்தியமான பிறகு, ஓவியத்துக்கு என்ன தேவை என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.நான் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்குச் சேர்ந்த பிறகு ‘ஆர்ட்’ இலாகாவின் நான்கு ஓவியர்களும் எனக்குப் பரிச்சயமானார்கள். சையத் அஹமத், ஏ.எஸ்.மேனன், கேட்டை என்ற சுவாமிநாதன், கவில் கோபால். இவர்களைத் தவிர அங்கு இன்னும் பத்து பேர் இருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் எடுக்கும் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ‘ஆர்ட்’ இலாகா! அதில் கேட்டை, ஜோசியம் தெரிந்தவர். அவர் இருபது அடி ஏணியில் ஏறி விளம்பர பேனர் வரையும்போது, கேட்டையின் கிரகங்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்று எவருக்கும் தோன்றும். சையத் அஹமத், மேனன், கேட்டை ஆகியோர் வரையும் ஓவியங்கள் ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலர்களில் வரும்.நினைத்தது நடந்தது. ஒருநாள் அந்த இலாகா முற்றிலுமாக மூடப்பட்டது. மேனன், கலீலி மேன்ஷன்ஸில் ஓர் அறை எடுத்துக்கொண்டு விளம்பர டிஸைன்கள் செய்து வந்தார். உண்மையில் அவர் சுதந்திர மனிதன் ஆன பிறகு அவருடைய உற்சாக சம்பாஷணைக்காகவே நான் அவரைச் சந்திக்க மவுண்ட் ரோடில் இருந்த அவருடைய அறைக்குச் செல்வேன். (இன்று கலீலி மேன்ஷன்ஸ் ‘அகர்சந்த் மேன்ஷன்ஸ்’ என்று மாறி விட்டது. அதே போல மவுண்ட் ரோடு, அண்ணா சாலையாகி விட்டது!)மேனன் ஓவியம் மட்டுமல்ல, இதர கலைகளையும் அவற்றின் உன்னதமான மேதைகளையும் அறிந்திருந்தார். அன்று பாராளுமன்றத்தில் தீவிரமான எதிர்க்கட்சிக்காரர்கள் இருந்தாலும், விவாதங்களின்போது இலக்கிய எடுத்துக்காட்டுகளும் மேற்கோள்களும் இருக்கும். புபேஷ் குப்தா கம்யூனிஸ்ட். ஆனால் அவர் பேச்சில் இலக்கிய நயம் நிறைய இருக்கும். அவர் மட்டும் அல்ல, பல எம்.பிக்கள் இலக்கிய அறிஞர்கள். பாராளுமன்றத்தில் தாகூரும், பிரேம்சந்தும் வால்மீகியும் பாரதியும் சர்வ சகஜமாக மேற்கோள் காட்டப்படுவார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இந்தச் சுவையைக் காண முடிவதேயில்லை.ஓவியர் மேனன் மிக எளிதான தோற்றம் கொண்டவர். எப்போதும் வெள்ளை பேன்ட் - சட்டை அணிந்திருப்பார். படம் வரைந்து கொண்டே சம்பாஷணை நடத்துவார். ஒரு முறை காதுக்குப் பின்னால் தலை முடி நரைக்கத் தொடங்குவது பற்றிப் பேச்சு வந்தது. அவர் ஒரு மலையாளக் கவியின் ஸ்லோகம் கூறினார். கௌரவர்கள் கர்ணன் பின்னால் பாதுகாப்பு கொள்வது போல, நரைமுடி கர்ணன் பின்னால் மறைகிறது. வட மொழியிலும் அநேக இந்திய மொழிகளிலும் ‘கர்ண’ என்ற சொல் காதுக்கும் பயன்படுத்தப்படும். கர்ண பரம்பரை என்பது காது வழியாக வந்தது. அதாவது வாய் வழி ஆதாரம்.அவர் இன்னொன்று சொன்னார்... அது ஓவியர்கள் பற்றியது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் பிரான்ஸ் நாட்டில் எல்லாரும் ஓவியர்கள் ஆகி விட்டார்கள். ஓவியன் என்றால் அவனுக்கு வேறு ஒழுங்கான வேலையில்லை என்று அர்த்தம். நாட்டின் தெருவோரமாக ஓவியர்கள் அவர்களுடைய அமரப் படைப்புகளை ஒரு ரூபாய்க்கும் அரை ரூபாய்க்கும் விற்கத் தயாராக இருந்தார்கள். இதனால் உண்மையான ஓவியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் சகட்டு மேனிக்கு விமர்சகர்கள் இவர்களையும் கிண்டல் செய்தார்கள். ஓவியர்கள் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விட்டார்கள். ஓவியர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மகா ஓவியம் வரைவார்கள். அதில் நாற்பத்தேழு குட்டிக் குட்டி தவறுகளை வேண்டுமென்றே செய்திருப்பார்கள். அவற்றை விமர்சகர்கள் சரியாகச் சுட்டிக் காட்டி விட்டால் ஓவியர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சவால் விட்டார்கள்.மகா ஓவியம் தயாராக ஒரு மாதம் ஆயிற்று. ஒவ்வொரு ஓவியனும் அதை நன்கு பரிசீலித்து, நாற்பத்தேழு தவறுகளைப் பட்டியலிட்டு, கையெழுத்திட்டு, உறையை சீல் செய்து ஓர் முதிய அறிஞரிடம் ஒப்படைத்தார்கள். விமர்சகர்களுக்கு ஒரு வாரம் தவணை. ஓவியத்தைப் பார்த்து விட்டு விமர்சகர்கள் ஒரு பட்டியல் கொணர்ந்தார்கள். நாற்பத்தேழு தவறுகளும் இருந்தன. அது தவிர மேலும் நூறு தவறுகள் இருந்தன! மேனன் கோட்டோவியங்கள்தான் வரைவார். அவருக்கு வர்ணங்கள் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கிறேன். அந்த நாளில் மாதவன், பாலு பிரதர்ஸ் போன்றவர்கள் ‘தத்ரூபமாக’ வரைவார்கள் என்று பெயர். இது என்ன எல்லாரையும் மொழுக்கு மொழுக்கு என்று போட்டிருக்கிறார்களே என்று கூறுவோரையும் சந்தித்து இருக்கிறேன். மேனன் ஓவியங்கள் கோடுகளாலானதுதான். ஒருநாள் வழக்கம் போல அவர் அறைக்குப் போகிறேன்; அது இடிக்கப்பட்டிருந்தது.அந்தப் பகுதியை இடித்துப் புதுப்பிக்க இருந்தார்கள். மேனன் எங்கே போனார்? நான் விசாரித்தேன். கலீலி மேன்ஷன்ஸ் ஒரு தனி உலகம். சென்னைவாசிகள் ஒருமுறை உள்ளே போய்ப் பார்த்தால், இது இவ்வளவு பெரிய இடமா என்று வியப்பார்கள். நான் மேனனைப் பற்றி யார் யாரிடமோ விசாரித்தேன். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஒரு கோடாக இருந்தவர், அந்தக் கோடும் தெரியாதபடி மறைந்து விட்டார்.அன்று தொலைபேசிகள் லேசில் கிடைக்காது. இப்போதுள்ள கைபேசிகள் யாருக்கும் கனவில் கூட வந்திருக்காது. ஆனால் அப்போதும் கலைஞர்கள் இயங்கினார்கள், வாணிபம் நடந்தது, சில ஏழைகள் பணக்காரர்கள் ஆவதும் சில பணக்காரர்கள் ஓட்டாண்டியாகி அலைவதும் காணக் கிடைத்தது. மேனனை இழந்துவிட்டேன் என்றறிந்தபோது, நான் ஏன் அவர் வீட்டு முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை என்று நொந்து கொண்டேன். இந்த மாதிரிப் புகைப்படங்கள் எடுப்பது சாத்தியமான பிறகு, ஓவியத்துக்கு என்ன தேவை என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.படிக்க...இந்தியாவின் மூன்று மகா அதிசயங்கள் யாவை?கோபால கிருஷ்ண காந்தி கூறுகிறார்: தாஜ்மகால், மகாத்மா காந்தி, இந்தியத் தேர்தல் ஜனநாயகம். பல ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்று ஒன்றிருக்கிறது என்பது சேஷன் ஒரு முறை ஒரு தேர்தலை ரத்து செய்தபோதுதான் மக்களுக்குத் தெரிய வந்தது. ‘ஆவணப்படுத்தாத அதிசயம்’ என்று முன்னாள் முதன்மைத் தேர்தல் அதிகாரி டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி ஓர் அற்புதமான நூலை கோபால கிருஷ்ண காந்தியிடம் முன்னுரை பெற்று எழுதியிருக்கிறார். குரேஷி 2006 முதல் 2012 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்திருக்கிறார். இந்தியத் தேர்தல் விழாவின் பல நிகழ்ச்சிகள், ஊழலைத் தடுக்க எடுத்த உத்திகள், வெவ்வேறு தேர்தல் அதிகாரிகளின் அணுகுமுறை, விளைவுகள் ஆகியவற்றை சிந்தனைத் தெளிவோடு, உயர்ந்த நகைச்சுவையோடு குரேஷி கூறுகிறார். பாயடியில் புகுந்தால் கட்சிகள் கோலத்தடியில் புகுந்து விடுகின்றன. பிரமாண்டமான தன் சிலையோடு ஒரு முதலமைச்சர் அவருடைய சின்னமாகிய மிருகத்தின் சிலைகளையும் கருங்கல்லில் வடித்து வைத்து விட்டார்! சிறந்த முன்னோக்குதான். ஆனால் தேர்தலின்போது அவ்வளவு சிலைகளையும் உறையிட வேண்டியிருந்தது. ‘ஓட்டுக்குப் பணம் தரும்’ அராஜகத்தை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி முதலிலிருந்தே ஆணையம் பல வழிகளையும் முயன்று பார்த்திருக்கிறது. குரேஷி எழுதிய An Undocumented Wonder நூலை Rupa Publications, Ansari Road, New Delhi110001 வெளியிட்டிருக்கிறது. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7375&id1=6&issue=20140728
நடைவெளிப் பயணம்அடையாறு ஆலமரம்
அந்தக் காலத்தில் சென்னைக்கு சுற்றுலா வந்து போனவர்களை ‘‘காலேஜ் பார்த்தாயா?’’ என்று கேட்பார்கள். செத்த காலேஜ், உயிர் காலேஜ், மூர் மார்க்கெட் ஆகியவற்றுடன் அடையாறு ஆலமரமும் சென்னையில் பார்க்க வேண்டிய காட்சியாக இருந்தது. அன்று சென்னை போகிறவர்கள் இந்த இடங்களைப் பார்த்தால்தான், அவர்கள் பயணம் முழுமையடைந்ததாக நினைக்கப்படும். இந்த நான்கு இடங்களில் மூன்று பெரும் மாற்றம் அடைந்து விட்டன. உயிர் காலேஜ் எனப்பட்ட விலங்குகள் காப்பகம், இன்று உயிரியல் பூங்காவாக சென்னைக்கு வெளியே வண்டலூர் சென்று விட்டது. ஆலமரம் என்பது அடையாறில் பிரம்ம ஞான சபையின் மிகப்பெரிய பரப்பில் ஓர் விளிம்பில் இருந்தது. இதன் வயது பற்றி விவாதம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புயலில் இது சாய்ந்து விட்டது. இதன் ஏராளமான விழுதுகள் தரையில் ஊன்றி, அவை தனி மரங்களுக்குரிய அளவை அடைந்து விட்டன. அன்று சாய்ந்த தாய் மரத்தை எப்படி நிறுத்தி வைப்பது என்று பல பொறியியல் நிபுணர்கள் யோசனை கூறினார்கள். ஏதேதோ செய்யப்பட்டது. ஆனால் தாய் மரத்தைக் காப்பாற்ற முடியவில்லை. உலகின் மிகப் பழைய, மிகப் பெரிய ஆலமரங்களில் ஒன்றைக் கொண்டது என்ற பெருமையை அப்போது சென்னை இழந்தது. பிரம்ம ஞான சபை அடையாறில் 1882ம் ஆண்டு நிறுவப்பட்டபோது அந்த இடம் காடும், புதரும், நரி போன்ற மிருகங்களும் நிறைந்ததாக இருந்திருக்கும். கடற்கரையோரமாக மீனவக் குடியிருப்புகள். இன்று போனால் கூட, முதல் பத்து நிமிடங்களுக்கு அவர்கள் பேசுவது புரியாது. அவர்களுடைய சொல்லாட்சியும் உச்சரிப்பும் சிறிது பழகிய பிறகுதான், அவர்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று புரியும். ஒருமுறை நான் அந்தப் பக்கம் என் சைக்கிளில் சென்றிருந்தேன். அந்த நாளில் அங்கிருந்து ஆறின் வடக்குக் கரைக்கு ஒரு பலகைப் பாலம் இருந்தது. கைப்பிடிக்கு ஒன்றும் கிடையாது. அடி ஆழத்தில் கடலோடு கலக்கும் ஆற்றின் மீது அந்த இரண்டடிப் பலகைப் பாலத்தைப் பலர் பயன்படுத்திய வண்ணம் இருந்தார்கள். ஒரு அம்மாளிடம் பேசியபடி நான் அங்கு போனேன். என்னை அங்கே போக வேண்டாம் என்று அந்த அம்மாள் கூறியிருக்கிறாள் போல! அது புரியாது நான் அந்தப் பலகைப் பாலத்தில் சைக்கிளை தள்ளிக் கொண்டு போகத் தொடங்கினேன். பத்தடி போய் விட்டேன். அப்போதுதான் அது மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் என்று விளங்கியது. திரும்பவும் முடியவில்லை. காற்று பலமாக அடிக்கிறது. கீழே தண்ணீர் ஆழம் தெரியாதபடி கடற்பக்கம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் சைக்கிளைக் கடலில் போட்டு விட்டு உயிர் தப்புவோமா என்றும் தோன்றியது. இன்று அந்தப் பாலம் இல்லை. அடையாறு பரபரப்பும் நெரிசலும் நிறைந்த இடமாகி விட்டது. பிரம்ம ஞான சபையுள்ளே போக முடியாதபடி வாசல் கேட் அருகே ஏராளமான கடைகள். ‘பிரம்ம ஞான சபை’ என்று ‘தியசாபிகல் சொசைட்டி’க்குப் பெயர் வைத்ததே சங்கடத்துக்கு இடமளிப்பது. பிரம்ம ஞானம் அத்வைத தத்துவத்தின் இறுதி. தியசாபிகல் சொசைட்டி எம்மதமும் சம்மதம் என்று அடிப்படை கொண்டது. அதோடு, ‘உண்மை தவிர உயரிய மதம் எதுவும் இல்லை’ என்றும் கூறுகிறது. இந்த சொசைட்டியை நிறுவினவர்கள் பிளவாட்ஸ்கி என்ற ரஷ்ய சீமாட்டியும் கர்னல் ஆல்காட் என்ற அமெரிக்கரும். ஒருவர், அவர் உணர்ந்த பிரமாணங்களை வலியுறுத்துபவர். இன்னொருவர், அமெரிக்க ‘பிராக்மாடிஸம்’ எனப்படும் யதார்த்தத்துக்கு விசுவாசி. அடையாறில் நிறுவனத்தின் அகில உலக மையத்தை அமைத்த பிறகு இருவரும் இலங்கை சென்றனர். எம்மதமும் சம்மதம் அல்லவா? இவர்கள் கரையிறங்கிய உடனே ‘பான்சில்’ வழங்கப்பட்டது. அதாவது அவர்கள் பௌத்தர்களாக ஏற்கப்பட்டார்கள். விசேஷச் சலுகையாக இவர்களுக்குக் கண்டியில் உள்ள பெரிய கோயிலில் உள்ள புத்த சின்னம் காட்டப்பட்டது. அது அசோகரின் மகன் மகேந்திரனே இலங்கைக்கு அளித்த புத்தரின் ஒரு பல். இரு வெள்ளைக்காரர்களுக்கு காட்டப்பட்டது என்பதனால், பத்திரிகைகாரர்கள் இவர்களை, ‘‘பல் எப்படியிருந்தது? நீங்கள்தான் ஆவியுலகை அறிந்தவர்களாயிற்றே? அது உண்மையாகவே கௌதம புத்தரின் பல்தானா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். பிளவாட்ஸ்கி பதில் தந்தார். ‘‘அது புத்தரின் பல் என்பதில் சந்தேகமே வேண்டாம்.’’ சிறிது பொறுத்துச் சொன்னார், ‘‘அது அந்தப் புண்ணிய மனிதனின் ஒரு முந்தைய பிறவியின் சின்னம்.’’‘‘முந்தைய பிறவி என்றால்?’’‘‘அவர் முதலையாக அவதாரமெடுத்தபோது...’’ அடையாறே ஐம்பது ஆண்டுகள் முன்பு எல்லா நேரங்களிலும் ஆவிகள் உலவுவது போன்ற சூழலில் இருக்கும். பிரம்ம ஞான சபை அங்கத்தினர்கள் வயதில் முதியவர்கள். இளம் வயதில் ஓடியாடி சம்பாதித்த பிறகுதான் இம்மாதிரி சபையில் சேர இயலும். இந்த முதியவர்கள் அந்நாளில் சைக்கிள் விடக்கூடிய இடமாக இருந்த அடையாறில் சைக்கிள் விடா விட்டால் உலகில் வேறெங்கு விட முடியும்? இந்த சைக்கிள்காரர்கள் எந்நேரமும் புன்னகை புரிந்த வண்ணம் இருப்பார்கள். இன்றும் இந்த சபையில் அயல் நாட்டினர் நிரந்தரப் புன்னகையோடு இருப்பார்கள். பயமாக இருக்கும். இந்தியர்கள் சுபாவமாக இருப்பார்கள். அடையாறு மரம் பிரம்ம ஞான சபை கூடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆன்மிக குருக்களில் ஒருவராகக் கருதப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி இம்மரத்தடியில் உரை நிகழ்த்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். நானும் அவருடைய மரத்தடி உரைகளை நிறையக் கேட்டிருக்கிறேன். அது வேறு மரத்தடி. உரை தொடங்குவதற்கு முன்பு கூடியுள்ளோர் ரகசியம் பேசிக்கொள்வது போலத் தணிந்த குரலில், ‘கால் வலி எப்படி இருக்கிறது’, ‘நல்ல இதய ஸ்பெஷலிஸ்ட் எங்கு கிடைப்பார்?’ போன்ற இம்மைக்குரிய, லௌகீக தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள். உரை முடிந்த பிறகு நிசப்தமாகக் கலைவார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் கேட்ட பிறகு காலென்ன இதயமென்ன என்ற நிலையில் இருப்பார்கள். அதாவது, அவர் உரை கேட்டபிறகு எல்லாருமே அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் கலைவார்கள். இதில் ஒரு சங்கடமான விஷயம், சிலர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை விளக்கத் தொடங்கி விடுவார்கள். ருக்மணி தேவியின் கலாக்ஷேத்திரம் பிரம்ம ஞான சபையின் ஓர் அங்கமாக இயங்கியபோது, பாட்டு, நடன வகுப்புகள் ஆல மரத்தடியில் நடக்கும் என்று கூறுவார்கள். உலகின் மிகப் பெரிய மரங்கள், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரெட்வுட் மரங்கள்தான் என்கிறார்கள். மிகுந்த அகலமும் உயரமும் கொண்ட இவை தேசியப் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. அந்த மாநிலத்தில் புயல், சூறாவளி ஆபத்துகள் குறைவு. வேறு பல மாநிலங்களில் வீசும் புயலும் காற்றும் முழு வீடுகளைப் பெயர்த்து எங்கோ தள்ளி விடும். ‘தி விஸார்ட் ஆஃப் ஓஜ்’ என்ற புகழ்பெற்ற கதையும் திரைப்படமும் இம்மாதிரிப் புயற்காற்றின் விளைவுகளாக உருவானவை. தாய் மரத்தைக் காப்பாற்ற முடியவில்லை. உலகின் மிகப் பழைய, மிகப் பெரிய ஆலமரங்களில் ஒன்றைக் கொண்டது என்ற பெருமையை அப்போது சென்னை இழந்தது. படிக்கசாதத் ஹசன் மண்ட்டோ பம்பாய் திரைப்படத்துறையில் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர். ஆனால் இந்தியப் பிரிவினையின்போது ஒரு ஸ்டூடியோ எரிக்கப்பட்டதைக் கண்டு அவர் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார். அன்று பம்பாய் திரைப்படத்துறையில் பெரும்பான்மை நடிகைகள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் முஸ்லிம்கள். இங்கேயே தங்கினவர்களில் பலர், பெரும் புகழ் பெற்றார்கள். மஜ்ரு சுல்தான்புரி ‘பால்கே’ விருது பெற்றார். பாகிஸ்தான் சென்ற மண்ட்டோ முழு வீச்சோடு இயங்க முடியவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அவருடைய சில கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்தன. பின்னர் பல இந்திய மொழிகளிலும் வந்தன. அவருடைய கதைகளின் அடிநாதம் துயரம், வேதனை. அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கட்டுரைகள் சில, பேராசிரியர் ராமானுஜம் மொழிபெயர்ப்பில் ‘மண்ட்டோ படைப்புகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இப்போது இரண்டாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய அந்தரங்கமான உணர்வுகளைத் தரும் நூல். (மண்ட்டோ படைப்புகள் - சாதத் ஹசன் மண்ட்டோ, மொழிபெயர்ப்பு: ராமானுஜம், விலை: ரூ.375/-; நிழல் பதிப்பகம், 31/48, ராணி அண்ணா நகர், கே.கே. நகர், சென்னை-600078.) http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7348&id1=6&issue=20140721
நடைவெளிப் பயணம்எழுதியதில் பிழை எழுத்துப் பிழை சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் ஒரு பிழைத்திருத்தம் செய்தார். நடிகர் சந்திரபாபு ஒன்றல்ல, இரண்டு ஜெமினி படங்களில் நடித்திருக்கிறார்! ஒன்று, ‘மூன்று பிள்ளைகள்’. இரண்டாவது, ‘ராஜி என் கண்மணி’. குத்துச் சண்டை பார்க்கும் வரிசைகளில் இருப்பார். ஒரு குத்துச்சண்டை வீரர் இன்னொருவரை வீழ்த்த... சந்திரபாபு மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்! சந்திரபாபு அப்படி நெடுஞ்சாண் கிடையாகப் பல படங்களில் விழுந்திருக்கிறார். நான் கவலைப்பட்டிருக்கிறேன். நிச்சயம் பலமுறை அவருக்கு அடிபட்டிருக்கும். தி.க.சி. இரங்கலில் நான் ஒரு கவிஞரைக் குறிப்பட்டிருப்பேன். அது கே.சி.எஸ்.அருணாசலம். இவருக்கு ‘ஸ்டாலின் பரிசு’ கொடுத்த நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பரிசு பெற்ற நூலின் பெயர் ‘கவிதை என் கைவாள்’. உள்ளூர்க் கலவரங்களுக்கு வாள் சரியாக இருக்கலாம், ஆனால் நிஜப் போர்களுக்கு? ஸ்டாலினே ஜெர்மனியோடு வாளேந்தி சண்டை போட்டிருப்பாரா? கவிஞர்களுக்கு வாள் சரியாக இருக்கலாம், ஆனால் அவர்களை வீழ்த்த அச்சுப்பிழை போதும். ‘‘கவிஞனால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும், அச்சுப்பிழையைத் தவிர’’ என்று ஆங்கிலக் கவிஞர் பைரன் கூறினார். ஆனால் அவருடைய படைப்புகள் அச்சில் வரும்போது அச்சுப்பிழையைப் பொறுத்துக் கொண்டேயாக வேண்டியிருந்தது இந்த அச்சுப்பிழைகள் பைரன் போன்றோருக்கு மட்டும் தானம் செய்யப்படவில்லை. மேடம் பிளாவாட்ஸ்கி போன்ற ஆன்மிகவாதிகளுக்கும் அருளப்பட்டது. மேடம் பிளாவாட்ஸ்கி ஓர் ரஷ்யப் பெண்மணி. அவளுக்கு வசதி இருந்திருக்கிறது என்று தெரிகிறது. கர்னல் ஆல்காட் என்ற அமெரிக்கருடன் சேர்ந்து தியாசாஃபிகல் சொசைட்டி என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தினார். அதன் தலைமைச் செயலகம் சென்னை அடையாரில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பியக் கண்டத்திலும் ஆன்மிகம் என்ற பெயரில் பல குழுக்கள் தோன்றின; பல போதகர்கள் தோன்றினார்கள். ‘இந்தியாவில்தான் பகவான்களும் சுவாமிகளுமா? இங்கேயும் உண்டு’ என்பது போலப் பல இயக்கங்கள் தோன்றின. அந்த நாளில் தோன்றிய இலக்கியங்கள், தலைவர்கள், சமூக நிலை போன்ற எல்லாவற்றையும் இவை பாதித்தன. எமெர்சன் தன்னையும் அவருடன் நெருங்கிப் பழகிய தோரோ, ஹாத்தார்ன் போன்றோரையும் பரம்பொருள்வாதிகளாகக் கருதினார். அவர்கள் ‘பாஸ்டன் பிராமின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்கள். மிஸஸ் பேகர் எட்டி என்பவர் விவிலியத்துக்கு ஒரு புது விளக்கவுரை எழுதி, இந்திய வேதாந்தத்தில் ‘பூர்ணம்’ (முழுமையானது) என்பது உள்ளது போல மனிதன் பூர்ணமானவன் என்றும், முழு ஆரோக்கியத்துடன் இருப்பவன் என்றும் அறிவித்தார். கிறிஸ்துபிரான் பலரைக் குணப்படுத்தியதாக அவருடைய நான்கு வரலாறுகளிலும் உள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு மருத்துவக் கோட்பாடு அமைத்தார். ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ ஓர் மருத்துவ முறையாகவே கருதப்பட்டது. முதல் உலகப் போரில் காயமுற்ற அமெரிக்கத் துருப்புகளில் வேண்டுவோருக்கு ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ மருத்துவர்கள், தாதியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை அடையாரில் இயங்கிய ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ குழுவில் சேர்ந்தேன். ‘நம்பு, விசுவாசமாக இரு...’ ஆனால் அந்த நூல்களில் உள்ள அச்சுப்பிழைகளுக்கு நடுவில் ‘வாழ்வா, சாவா’ என்பதில் எதை நம்புவது? பிளாவாட்ஸ்கி அம்மையாரின் ஆதார நூலாகிய ‘ஐஸிஸ் அன்வீல்ட்’ என்ற பெரிய நூலின் ஒரு திருத்தப் பதிப்பு வெளி வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். இருபத்தொன்றாவது நூற்றாண்டு பிறந்தவுடன் மேலையப் பிரசுர அமைப்புகள் கூடி ‘இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நூல் எது’ என்று ஒரு தேர்வு நடத்தினார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த நூல்... ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற எழுத்தாளர் படைத்த ‘உலிஸிஸ்.’ ஆனால் ‘உலிஸிஸ்’ வெளியான கதை, எழுத்தாளர்களின் உற்சாகத்தைப் போக்கி விடும். ‘நமக்கு நல்லது உண்டாகும்’ என்று ஒருவர் பெரிய பணியொன்று புரிகிறார். ஆனால் அவருக்கு நம் தேவை, எதிர்பார்ப்புகள் சரியாகத் தெரியாது. நல்லெண்ணத்தின் பெயரில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி என்று பாரிஸ் நகரத்தில் எழுத்தாளர்களுக்கென்றே ஒரு புத்தகக் கடையை ஸில்வியா பீச் என்றோர் அம்மாள் நடத்தி வந்தாள். அவர்தான் இதை வெளியிட்டார். ஜேம்ஸ் ஜாய்ஸுடைய நாவல் அமெரிக்காவில் ஒரு சிறு பத்திரிகையில் வெளி வந்தது. இன்றும் ஜாய்ஸ் என்ன எண்ணி அந்த நாவலை எழுதினார் என்று ஹேஷ்யங்கள்தான் நிலவுகின்றன. ஐசக் ஸிங்கர் போன்ற மகத்தான எழுத்தாளர்கள் ‘‘அந்த நாவல் ஒரு ஏமாற்று வேலை’’ என்றார்கள். அதை விளக்குவதாகப் பேராசிரியர்கள் உரை மேல் உரை எழுத... ‘‘ஒரு தொழிற்சாலையை ஜாய்ஸ் ஆரம்பித்து விட்டார்’’ என்று உறுதியாகக் கூறினார்கள். இது போதாது என்று அமெரிக்காவில் அது ஆபாச எழுத்து என்று தடையே செய்யப்பட்டது. ஜாய்ஸ் அதை ஆரம்பத்தில் நூலாக்க முயன்றபோது, ஷேக்ஸ்பியர் அண்டு கம்பெனியின் ஸில்வியா பீச், முழு நாவலையும் வெளியிடுவதாக உறுதியளித்து, அதுபோலவே வெளியிடவும் செய்து விட்டாள். ஆனால் அந்த நூல் வெளியானபோது ஜாய்ஸ் தவித்துக் கொண்டிருந்தார். நான்கு பகுதிகளில் அவர் அறிந்து நாற்பது பிழைகள். ஜாய்ஸுக்குச் சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை. அந்த நாவலை அவர் வாழ்நாளில் பிழை திருத்த முடியவில்லை. அவருடைய கடைசி வருடங்களில் பார்வை போய் விட்டது என்றார்கள். பிழை திருத்தியே போயிருக்கலாம். அவர் இறந்து பல ஆண்டுகள் பல பேராசிரியர்கள் கூடி விவாதித்து, ‘இதுவே சரியான பிரதி’ என்று ஒரு பிரதியைத் தயாரித்தார்கள். இரண்டரை லட்சம் சொற்களுக்கும் மேலாக உள்ள ‘உலிஸிஸ்’ நாவலை அதன்பின் முழுமையான பதிப்பு என வெளியிட்டார்கள். ஆவி உலகம் என்று இருந்து அங்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் இருந்தால் அவர் என்ன எண்ணியிருப்பார்? மீண்டும் ஆபாசம் என்று தடை. ஆனால் இம்முறை அந்த ஜட்ஜுக்கு யதார்த்தம் நன்கு தெரிந்திருக்கிறது. அவர் கூறினார்: ‘‘கிளர்ச்சிக்கு என்று ஒருவனால் இந்த நூலைப் படிக்க முடிந்தால், உண்மையில் அவனுக்குப் பரிசு தர வேண்டும்’’. தணிக்கைத் தடை நீங்கியது. ஆனால் நூலைப் படிக்க வேண்டுமே? பொதுவாகப் பெரிய பத்திரிகைகள் எனப்படும் வெகு ஜனப் பத்திரிகைகளில் அச்சுப்பிழைகள் வருவதில்லை; வருவதேயில்லை என்று கூடக் கூறலாம். ஆனால் சில ஆண்டுகள் வரை சிறு பத்திரிகைகளுக்கு அச்சுப்பிழை தவிர்க்க முடியாத அடையாளம் என்று எண்ணப்பட்டது. அசலே பிழையுடன் இருந்தால்? எழுத்தாளர்கள் சிலர் அவர்களுடைய பிரதியை வேறொருவரிடம் கொடுத்துச் சரிபார்த்து அதன் பின்னரே அச்சுக்குத் தருவார்கள். ‘நல்லாபிள்ளை பாரதம்’ என்றொரு நூல். ஆயிரம் பக்கங்கள் கொண்டது. குட்டிக் குட்டி எழுத்துக்கள். தமிழில் இதுவே வியாச பாரதத்தின் முழுமையான தமிழ்ப் பிரதி என்கிறார்கள். முதல் பதிப்பில் கொட்டை எழுத்தில் பிழை திருத்தியவர் பெயர் இருந்தது. சமீபத்தில் இந்த நூலின் புதிய பதிப்பு வந்திருக்கிறது. இதையும் பிழை திருத்தியவர் அவரே. ஒருவேளை சாகாவரம் பெற்றுவிட்டாரோ! ஆச்சரியமாகி விசாரித்தேன். நூல் மீண்டும் அச்சுக் கோர்க்கப்படவில்லை. பழைய பக்கங்களையே புகைப்படம் எடுத்துப் புதிதாக அச்சிட்டுவிட்டார்கள்! ஜட்ஜுக்கு யதார்த்தம் நன்கு தெரிந்திருக்கிறது. அவர் கூறினார்: ‘‘கிளர்ச்சிக்கு என்று ஒருவனால் இந்த நூலைப் படிக்க முடிந்தால், உண்மையில் அவனுக்குப் பரிசு தர வேண்டும்.’’ படிக்க... அச்சில் வந்த என் புத்தகங்களைப் பார்க்க எனக்குத் தயக்கம். பயம் என்று கூட கூறலாம். காரணம், அச்சுப்பிழைகள். ஒருமுறை என் பதிப்பாளரிடம் ‘‘பிழை திருத்தம் போடலாமா?’’ என்று கேட்டேன். ‘‘புத்தகம் வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்’’ என்று கூறினார் அவர். இந்த அனுபவத்திற்குப் பிறகு நான் என் நூல்களைப் படித்துப் பார்ப்பது அரிதாகி விட்டது. ஆனால் தேர்ந்தெடுத்த குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று சமீபத்தில் வந்தது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு என் குறுநாவல் ஒன்றை நான் மீண்டும் படித்தேன். பின்னர் அந்த நூல் முழுதும் படித்தேன். நிறைவாக இருந்தது. ‘விழா’ என்ற குறுநாவலை நானே கால்வாசி வெட்ட வேண்டியிருந்தது. ‘தீபம்’ பார்த்தசாரதி ஒருமுறை வெளியூர் சென்றிருந்தார். அந்த ஒரு இதழை நான் முடிக்க வேண்டியிருந்தது. இருபது பக்கத்துக்கும் மேலாக வரும் குறுநாவலை பதினோரு பக்கங்களில் குறுக்க வேண்டியிருந்தது. எங்கெல்லாம் வெட்டினேன் என்று எனக்கே உறுதியாகக் கூற முடியவில்லை. (இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - தேர்ந்தெடுத்தகுறுநாவல்கள், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் -629001. தொலைபேசி: 04652-278525. விலை: ரூ.185/-) http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7024&id1=6&issue=20140512
நடைவெளிப் பயணம்சைக்கிள் பந்தயம்
இன்று பணியிடத்திற்கோ, பள்ளி, கல்லூரிக்கோ சைக்கிளில் போகவே முடியாது என்றாகி விட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நடப்பவர்கள் கூட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. சென்னை என்று மட்டுமில்லை... இதர நகரங்களிலும் இந்த நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. பணிபுரிகிறவர்கள் என்று பார்த்தால், வீடுகளுக்குப் பத்திரிகை போடுகிறவர்கள், தபால்காரர்கள், சில மளிகைக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வீட்டு டெலிவரி என்று அனுப்பும் இளைஞர்கள்... இவர்கள்தான் சைக்கிளைச் சில மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் சிறிய எல்லைக்குள்! தூரத்தில் பெரிய சாலையைத் தாண்டிச் செல்ல வேண்டிய வீடுகள் என்றால் முதலிலேயே முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களைக் குற்றம் கூறமுடியாது. இந்த ‘சைக்கிள்’ என்ற சொல்லையே இன்று யோசித்துப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான் படிக்கும் காலத்தில் - அதாவது சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு - சைக்கிள் என்றால் காலால் மிதித்துப் போகும் வண்டி தான். ஆனால் அப்போதே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மோட்டார் சைக்கிளைத்தான் ‘சைக்கிள்’ என்று அழைத்தார்கள், இப்போதும் அழைத்து வருகிறார்கள். நாம் ‘சைக்கிள்’ என்று சொல்வது அங்கே ‘பைசைக்கிள்’. சற்று முதிய வாசகர்களுக்கு ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ என்ற புகழ்பெற்ற இத்தாலியப் படம் நினைவிருக்கலாம். அது இரண்டாம் உலக யுத்தம் முடிந்த கையோடு, 1948ல் எடுக்கப்பட்டது. இன்றும் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கு அதையே சிறந்த உதாரணமாகச் சொல்கிறார்கள். கதாநாயகனுக்குச் சொந்தமாக மிதிவண்டி இல்லாது போனால் அவனுக்கு வேலையில்லை. அதென்ன கலெக்டர் வேலை? சுவர்களில் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டும் வேலை! அப்போது பிரான்ஸிலும் பல புது சினிமா டைரக்டர்கள் தோன்றினார்கள். அவர்களின் படங்களிலும் மிதிவண்டிகள் முக்கிய இடம் வகித்தன. இந்தியப் படங்களிலும் சைக்கிள்கள். ‘நாம் இருவர்’ படத்தின் துவக்கக் காட்சியிலேயே கதாநாயகன் - கதாநாயகி பாடியபடி சைக்கிள் ஓட்டி வருவார்கள். பெண்கள் சைக்கிள் ஓட்டுவது துணிச்சல், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அடையாளமாகக் கருதப்பட்டது. இந்தியாவில் யுத்தம் முடியும் வரை மிதிவண்டிகள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பிலிப்ஸ், அப்போலோ, ராலே. அந்தக் காலத்தில் ராலே மிதிவண்டி வைத்திருப்பவர்கள் சட்டையின் காலரைத் தூக்கியபடிதான் சைக்கிள் ஓட்டுவார்கள். ராலே அவ்வளவு ஒஸ்தி! என் அப்பா 1944வாக்கில் எங்கள் ஊரில் சைக்கிள் இறக்குமதி செய்ய லைசென்ஸ் பெற்ற கடையில், ஒரு ராலே சைக்கிளுக்குப் பதிவு செய்தார். அதே நேரத்தில் நிஜாம் ரயில்வேயின் ஜெனரல் மானேஜரும் அவருடைய மகளுக்கு ராலே சைக்கிள் பதிவு செய்திருந்தார். இரு ஆண்டுகள் கழித்து, அதாவது 1948ல் அந்தக் கடைக்கு பன்னிரண்டு சைக்கிள்கள் வந்து சேர்ந்தன. இரண்டு ராலே... ஒன்று எனக்கு, இன்னொன்று ஜி.எம். மகளுக்கு. அந்தப் பெண்ணுக்கு அபார முந்நோக்கு இருந்திருக்க வேண்டும். அவளுக்கு சாதா ராலே போதும் என்று சொல்லிவிட்டாள். எனக்கு கியர் வைத்த சைக்கிள். விலை, கியருடன் ரூ.260! ஒரு துக்க காலத்தை அடைந்துவிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த கியரை சைக்கிளை மிதிக்காதபோதுதான் மாற்ற வேண்டும். நான் எவ்வளவோ கவனமாக இருக்கலாம். ஆனால் சைக்கிளைக் கடன் வாங்குகிறவர்கள்? உலகத்தில் அன்று மிக அதிகமாகக் கடன் வாங்கப்பட்ட பொருள், சைக்கிளாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் ஓட்ட ஆரம்பித்து பத்து அடிக்குள் சைக்கிள் நின்று விடும். ‘‘வண்டி ஓடலையே?’’ என்று அந்த இடத்திலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். நான் பையன். கையில் காசு கிடையாது. சைக்கிளைத் தூக்கிக்கொண்டு சுமார் இரண்டு மைல் தூரத்தில் உள்ள பெரிய கடைக்குப் போக வேண்டும். ஒரு மாதம் திண்டாடினேன். அப்புறம் அப்பா கியரை எடுத்துவிடலாம் என முடிவு செய்து, ஒரு டாங்கா வைத்து, சைக்கிளை பெரிய கடைக்குக் கொண்டு போனார். அந்தக் கடைக்காரருக்கு கியரை ஒரேயடியாக எடுத்து விட மனதில்லை. அதை நிரந்தரமாக மூன்றாவது கியரில் ஓட வைத்து விட்டார். மூன்றாவது கியர் உயரத்தில் ஏறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் காலை மிக வேகமாகச் சுற்றுவீர்கள். வண்டி மிக மெதுவாகப் போகும். கிட்டத்தட்ட நடக்கும் வேகத்தில் போகும். தெருவில் எல்லாருக்கும் காணக் கிடைக்காத கோமாளி ஆட்டம். ஆறு மாதங்கள் கழித்து கியரையே எடுத்துவிட்டோம். ஏதோ மத்திய காலச் சித்திரவதையிலிருந்து மீண்ட உணர்வு கிடைத்தது. இன்று சாலையில் சைக்கிளே விடமுடியாத நிலையில் எவ்வளவு விதவிதமான சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன! ஐந்தாயிரம், ஏழாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமில்லை... பத்து லட்ச ரூபாயில்கூட சைக்கிள் வந்துவிட்டது. எல்லாம் கியர் வைத்தவை! சிறு சிறு பையன்கள் குட்டிக்குட்டித் தெருக்களில் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். ஒரு சில மாதங்கள்தான். அப்புறம் அவர்கள் மோட்டார் சைக்கிள் பழக ஆரம்பித்து விடுகிறார்கள்! எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்புதான் படித்துக் கொண்டிருப்பார்கள். அதற்குள் மோட்டார் சைக்கிள்! இவர்களை நம்பி இவர்கள் பெற்றோர்கள், அண்ணன்மார்களின் வண்டியைக் கொடுத்து விடலாம். ஆனால் தெருவைப் பயன்படுத்தும் இதர மனிதர்கள் கதி என்னாவது? என் நண்பரின் மனைவியை இப்படித்தான் ஒரு பையன் மோட்டார் சைக்கிள் கொண்டு இடித்து விட்டுப் போய்விட்டான். அந்த அம்மாள் கீழே விழுந்து நினைவிழந்த நிலையில் கிடந்திருக்கிறாள். வீட்டில் கொண்டு வந்து போடுவதற்கே ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. ஓரளவு உடல் தேற ஒரு மாதம் ஆயிற்று. ஆனால் அந்த அதிர்ச்சி ஆயுள் உள்ளவரை போகாது. வெளியில் காலை வைக்கவே தயக்கமாக இருக்கும். நான் 1948ல் வாங்கின ராலே சைக்கிள் 2008 வரை எங்கள் வீட்டில் இருந்தது. ஒரு சமயத்தில் எங்கள் வீட்டில் மூன்று சைக்கிள்கள் இருந்தன. தினமும் ஓட்டுவதால் அடிக்கடி ரிப்பேர் பார்க்க வேண்டிவரும். பலவித ஸ்பானர்கள், பங்க்சர் ஒட்டும் பசை, வால்வ் டியூப்... மிக முக்கியமாகக் காற்றடிக்கும் பம்ப். இதெல்லாம் ஒவ்வொன்றாக வாங்கி பல ஆண்டுகளாகச் சேகரித்தவை. எல்லாம் பழைய பேப்பர்காரர்களிடம் போட்டாயிற்று. நாம் மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்த பொருளை அவர்கள் அநாயாசமாக ஒதுக்கி விடுவார்கள்... ‘‘இது போகாதுங்க!’’ பஸ்மாசுரனுக்கு பரமசிவன் வரம் கொடுத்து விடுகிறார். யார் தலை மீது அவன் கையை வைத்தாலும், அந்த நபர் பஸ்பம். எரிந்து சாம்பலாகிவிடுவார். மோகினி உருவத்தில் மகாவிஷ்ணு அவனைத் தந்திரமாக, அவன் தலை மீதே அவன் கையை வைக்க வைத்து விடுகிறார். அவன் சாம்பலாகி விடுகிறான். அதே போல யாருக்கோ தீர்மானித்த சைக்கிளை அடைந்த நான், அதே சைக்கிளிலிருந்து கீழே விழுந்து இடுப்பை உடைத்துக் கொண்டு விட்டேன். இன்று நடப்பதே கடினமாக இருக்கிறது. இந்த நாளில் சைக்கிள்கள் எல்லாம் குட்டையானவை. காலை எளிதில் தரையில் ஊன்றிக்கொண்டு விடலாம். என் ராலே சைக்கிளில் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்! படிக்க... எந்தக் கலாசாரத்தில் இதிகாசங்கள், புராணங்கள் உள்ளதோ... அக் கலாசாரம் ஏராளமான பரிமாணங்கள் கொண்டிருக்கும். இலக்கியமும் விரிந்து பரந்து இருக்கும். ராமாயணம் எப்போது முதலில் படைக்கப்பட்டது என்று தீர்மானமாகக் கூறமுடியவில்லை. ஆனால் அந்த ஒரு படைப்பு கோடானு கோடி மக்களுக்குப் பொதுவாக உள்ளது. எவ்வளவு நூற்றாண்டுகளாக இதைத் தகர்க்கப் பார்த்திருக்கிறார்கள்! ஆனால் ராமனும் சீதையும் பரதனும் கும்பகர்ணனும் வாழும் கருத்துருவங்கள். ராமாயணத்தை முதலில் படைத்தவர் என்று நம்பப்படுபவர் வால்மீகி. கொலை, வழிப்பறிக் கொள்ளையை வாழ்க்கைச் சாதனமாகக் கொண்டவர். அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அவர் ஆதிகவியாகி விட்டார்.சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒருவர் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். குட்டிக்குட்டி எழுத்துகள்... ஒரு அச்சுப் பிழை இருக்காது. ராஜாஜி எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ திரும்பத் திரும்ப வெளிவந்தவண்ணம் இருக்கிறது. இன்று அழகர் நம்பி என்பவரின் முயற்சியில் இன்னொரு வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பு. (விலை: ரூ.200/- கவிதா பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு: 044-24322177) மிக எளிய தமிழில் வந்திருக்கிறது இது.
கணினியும் செல்போனும் சரிப்படவில்லை
இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடி என்றால் இந்தியாவில் இன்று 95 கோடி செல்போன்கள் இருக்கின்றன. மக்கள்தொகையில் கால்வாசிக்கு மேல் குழந்தைகளாக இருக்கலாம். கைகளைப் பயன்படுத்த முடியாத மனிதர்கள் இருக்கலாம். அதன் பிறகு பரம ஏழைகள். அப்படி யிருந்தும் 95 கோடி மொபைல் போன்கள் இருக்கின்றன. இது தமிழ் வாழ்க்கையோடு கலந்து விட்டது என்பதற்கு அடையாளமாக மொபைல் போன்களைக் ‘கைபேசி’ என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். முதலில் இது எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக் கூடியது என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும் பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று. அதன் பிறகு ‘அவ்வப்போது நியமிக்கப்பட்ட இடங்களில் கட்டணம் செலுத்திப் பயன்பாட்டை நீட்டிக்க வேண்டும்’ என்று புரிந்து கொள்வதற்கு இன்னும் நாட்களாயிற்று. ஒரு முக்கிய காரணம்... எனக்குக் கணினியும், அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பமும், இந்தியர் வாழ்க்கையில் அந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிடிக்கவில்லை. என் அயல்நாட்டு நண்பர்களை தொடர்ந்து தபால் எழுத வைத்தேன். அவர்கள் ‘‘இதென்ன பைத்தியக்காரத்தனம்?’’ என்று கேட்பார்கள். இன்டர்நெட் வசதி பெற்று ஈமெயி லில் அனுப்புவது கிட்டத்தட்ட இலவசம் என்பதோடு, உடனுக்குடன் போய்ச் சேர்ந்து விடும். ஆனால் ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணம், வீட்டில் கட்டுக்கட்டாகக் கையெழுத்துப் பிரதிகள். ஒரு முறை ஒரு நண்பர் நான் எழுதிய ஒரு தாள் கேட்டார். நான் ஒரு கட்டையே கொடுத்துவிட்டேன். பழைய காகிதம் வாங்கிப் போகிறவரிடம் போட்டேன். ‘‘இதெல்லாம் போவாதுங்க...’’ என்றார் தயக்கமாக! நானும் ஓரளவு கணினியைப் பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொண்டபோது பிரதியை ஒருவாறு தயாரித்து விடுவேன். எனக்கே தெரியாமல் அது சில இடங்களில் கொட்டை எழுத்துக்களாகவும் சில இடங்களில் குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் இருக்கும். இன்னும் மோசம், நான் ஈமெயில் அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள். எனக்குச் சொல்லப்பட்டது ‘கன்ட்ரோல்’ என்ற கட்டத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘ஏ’, ‘சி’ என்று டைப் செய்துவிட்டு மீண்டும் இன்டர்னெட் பகுதிக்குச் சென்று கன்ட்ரோல் ‘வி’ அழுத்த வேண்டும். நான் அவ்வாறே செய்தேன். ஒரு பக்க விஷயம் திரும்பத் திரும்ப அதில் வந்து கொண்டே இருந்தது. என்னிடம் அந்த ஆங்கிலப் பத்திரிகை கேட்டது ஒரு பக்கம். அவர்களுக்கு இருபது பக்கம் அனுப்பினால்? நான் அந்தக் குறிப்பிட்ட துணை ஆசிரியருக்குத் தொலைபேசி (சாதாரண தொலைபேசியில்தான்) தொடர்பு கொண்டு, ‘‘என் கம்ப்யூட்டரில் என்ன தவறு என்று தெரியவில்லை. நீங்கள் கேட்ட கட்டுரை சுமார் இருபது பிரதிகளாக வந்து விட்டது’’ என்றேன். அவர், ‘‘கவலைப்படாதீர்கள். நாங்கள் சரி செய்து விடுவோம்’’ என்றார். நான் தீர்க்கவே முடியாத தவறைச் செய்துவிட்டேன் என்று நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அந்த மனிதர் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் ஒரு முறை என்னை நேரில் சந்திக்க வந்தபோது அவர் சொன்னார்: ‘‘முன்பெல்லாம் எவ்வளவு அழகாகத் தட்டச்சு செய்து தபாலில் அனுப்புவீர்கள். செவ்வாய்க்கிழமை தவறாமல் தபாலில் வந்து விடும். நான் அச்சுக்குத் தயார் செய்வேன். எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் தெரியுமா?’’ அதாவது, கையெழுத்துப் பிரதி கொடுத்த அனுபவம் கணினியில் அவருக்குக் கிடைக்கவில்லை. தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், காய்கறி விற்பவர்கள் என மிக விரிவாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் நான் என் மகனிடம் சொல்லி ஒரு கைபேசியைக் கையில் பிடித்தேன். மிகவும் சிறியதாக இருப்பதாகத் தோன்றியது. இதற்குள் ‘கணினியில் இதெல்லாம் சாத்தியமா’ என்று வியக்கும் அளவுக்குத் தவறுகள் செய்தேன். ஒரு முறை சுமார் 5000 சொற்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை அப்படியே மறைந்து விட்டது. எப்படி மீட்பது எனத் தெரியவில்லை. அப்படி ஏதாவது மாற்றம் நேர்ந்தால் அதைச் சரி செய்ய ஒரு வழி உண்டு என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த முறை என் மகனின் மகளிடம் உதவி கேட்டேன். அவளுக்குக் கோபம் வந்தது. ‘‘நீ எதையாவது தப்பான கட்டத்தை அழுத்தியிருப்பாய்’’ என்றாள். அவள் ஏதேதோ செய்து பார்த்தாள். போனது போனதுதான். நான் மீண்டும் கணினி அருகே போகவில்லை. என் தட்டச்சு இயந்திரத்தை வைத்துக் கொண்டு கட்டுரையை மீண்டும் அடிக்கத் தொடங்கினேன். தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்திப் பல மாதங்கள் ஆகியிருந்ததால் முதலில் ரிப்பன் மாற்ற வேண்டியிருந்தது. உள்ளூர் பகுதியில் அந்த இயந்திரத்துக்கான ரிப்பன் கிடைக்கவில்லை. திண்டாடிப் போய்விட்டேன். கட்டுரை தாகூர் பற்றியது. பலர் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கணினியில் என் கட்டுரை மிகவும் நன்றாக அமைந்திருந்தது. நினைவில் இருந்த வரிகளை எழுதி ஒரு மாதிரி சமாளித்தேன். கட்டுரை ஆங்கிலத்தில் தேவைப்பட்டது. ஆனால் கணினியில் எங்கோ போய் ஒளிந்துகொண்ட கட்டுரை மாதிரி மீண்டும் உருவாக்க முடியவில்லை. தொகுப்பும் வெளிவந்துவிட்டது. அதன்பின் ஒருநாள் கணினி முன் உட்கார்ந்து எதையோ தட்டினேன். கட்டுரையின் ஒரு பகுதி திரையில் வந்தது. உ.வே.சாமிநாதய்யர் சேலம் ராமஸ்வாமி முதலியாரிடம் தான் படித்த பாடங்களைச் சொன்னபோது முதலியார் சொன்னார், ‘‘என்ன பிரயோசனம்?’’ ‘சீவக சிந்தாமணி’ என்றொரு காப்பியம் உண்டென்பதை அப்போதுதான் அய்யர் அறிந்தார். அதன் பிறகு நேர்ந்ததெல்லாம் வரலாறு. எனக்கு வரலாறு படைத்த பெயர் கிடைக்காது. ‘முட்டாள்’ பட்டம்தான் கிடைக்கும். கைபேசியில் ஒருவர் என்னோடு பேச அழைத்தால் எதை அழுத்த வேண்டும் என்பது புரியவும் மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போதும் தவறான பொத்தானை அழுத்தி, அவர் கோவித்துக்கொண்டு, பிறகு நானாக அவரிடம் பேச முயற்சி செய்யும்போது ‘ஏன்தான் பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிறேன்’ என்று தோன்றும். ஒரு விபரீதம். புதிதாகக் கட்டி முடித்த ஒரு கோயிலுக்குப் போனபோது ஒரு சாமியார் என்னிடம் வந்து, ‘‘செல்போன் இருந்தால் அதை மௌனமாக்குங்கள்’’ என்றார். ‘‘எப்படி?’’அவர் செய்து தந்தார். ஆனால் யார் யாரோ அந்தக் கோயிலே உகந்த இடம் என்று போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள், அந்த சாமியார் உட்பட. அதன் பிறகு நாட்கணக்கில் எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. நான் ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் போனைப் பார்த்து, ‘‘நீங்கள் சைலன்ட் மோடில் வைத்திருக்கிறீர்கள்’’ என்றார். ‘‘அதை எப்படிச் சரி செய்வது?’’‘‘முதலில் செய்தபடிதான்.’’ அந்த ஒரு வாரத்தில் பத்து நபர்கள் போன் செய்திருக்கிறார்கள்! இதெல்லாம் எல்லாருக்கும் நேரக்கூடியதுதான் என்று சொல்லக்கூடும். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்கிறார்களா? இது எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக் கூடியது என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும் பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று. படிக்கஉலகின் முதல் காவியம் எது? ஆராய்ச்சியாளர்கள் ‘அது கில்கமேஷ் காவியமே’ என்று நம்புகிறார்கள். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதப்பட்டதாகவும், சுமேரிய அரசுக்குப் பின் அக்காடியர்களால் அக்காடிய மொழியில் மீண்டும் களிமண் வில்லைகளில் எழுதி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முழு காவியம் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததிலிருந்து ஒருவாறு எழுதப்பட்டிருக்கிறது. இது சாகசங்கள் நிறைந்த கதை. ‘மகாபாரதம்’ போல இதற்கு தத்துவப் பின்னணியோ, வரலாற்று முக்கியத்துவமோ கிடையாது. ஆனால் இதில் கூறப்படும் இடங்கள் இன்றும் உள்ளன. கிடைத்த தகவல்களைத் திரட்டி லண்டன் எஸ்.தியாகராஜா தமிழில் ரசமிக்க நூலாகத் தந்திருக்கிறார். பல சுமேரியப் படங்களும் வண்ண அட்டைப்படமும் கொண்ட இந்த நூலின் விலை நாற்பது ரூபாய் மட்டுமே!(கில்கமேஷ் காவியம் - டாக்டர் எஸ்.தியாகராஜா, வெளியீடு: இராமநாதன் பதிப்பகம், 1481, கார்டன் அவென்யூ, முகப்பேர், சென்னை-600 050. பேச: 044-26562346) (பாதை நீளும்...)
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7181&id1=6&issue=20140616
நடைவெளிப் பயணம்ஏழு நாட்கள்வருடம் 1977. நவம்பர் 24. சென்னையிலும் தமிழ்நாடு முழுக்கவும் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காலை ஏழரை மணியளவில் நாங்கள் ஆறு பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருவருக்கொருவர் காத்திருந்து ஒன்று கூடினோம். கல்கத்தா கொரமண்டல் விரைவு வண்டி மூன்றாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. எஸ் மூன்றோ, நான்கோ எங்கள் பெட்டி; ஏறி உட்கார்ந்து கொண்டோம். நல்ல மழையில் சரியாக எட்டு மணிக்கு ரயில் புறப்பட்டது. கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை சென்னை சிறப்பு அழைப்பினர்களோடு கொண்டாடத் தீர்மானித்திருந்தார்கள். ‘தீபம்’ நா.பார்த்தசாரதி தலைவர். அவரிடம்தான் தேர்வு விடப்பட்டிருந்தது. இதர ஐந்து பேர்: ஞானக்கூத்தன், மு.மேத்தா, கோவை சேவற்கொடியோன், வல்லிக்கண்ணன், நான். நான் கல்கத்தாவுக்கு 1960ல் ஒரு முறை போயிருக்கிறேன். கயாவிலிருந்து காலை கல்கத்தா போய்ச் சேர்ந்து, பிற்பகல் மூன்று மணிக்கு சென்னை ரயில் பிடித்தேன். எந்தவிதமான முன்பதிவும் கிடையாது. கல்கத்தா ரயில் நிலையம் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து மூன்று மைல்தான் என்றாலும், பஸ்ஸில் அந்த மூன்று மைல் தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் பிடித்தது. ஒரு ஊர்வலம். நத்தையாக ஊர்ந்து அதைக் கடந்தால் இன்னொன்று. அதையும் கடந்தால் மற்றொன்று! இவ்வளவுக்கும் அது புதன் கிழமை. வேலை நாள். யாரும் வாயைத் திறக்கவில்லை. கல்கத்தாவாசிகளுக்கு அசாதாரணப் பொறுமை. நான் ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஹௌரா பாலத்தை நோக்கி ஓடினேன். என் வண்டி இன்னும் கால் மணி நேரத்தில் கிளம்பி விடும் என்கிற பதைபதைப்பு. இந்த முறை ஒரு கவலையும் இல்லை. என்னை விடத் தேர்ந்தவர்கள் ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வார்கள். சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குப் பகல் வண்டியில் போவது தனி சுகம். ஆந்திரா எல்லையைத் தாண்டும் வரை இயற்கையின் அற்புதம், மனிதனின் ஆற்றல் இரண்டும் சிறப்பாகப் பிரகாசிக்கும்! வழி நெடுக வயல்கள், சிறிய அழகிய ரயில் நிலையங்கள். ஒவ்வொரு நிலையத்திலும் ருசியான உணவுகள், வகைவகையான தின்பண்டங்கள் கிடைக்கும். இரண்டு பிரமாண்டமான ஆறுகள், அவற்றின் மீது ரயில் ஊர்ந்து செல்லும். ‘முடிவே கிடையாதோ’ என்று நினைக்க வைக்கும் பாலங்கள். (மூன்றாவதாக ஒரு பாலமும் உண்டு. அப்போது நள்ளிரவாக இருக்கும்!) நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து வழியோரக் காட்சிகளைப் பார்த்தவண்ணமே இருந்தேன். ‘உலகம் இவ்வளவு அழகாக இருக்குமா’ என்ற வியப்பிலேயே லயித்து உட்கார்ந்திருந்தேன். நாங்கள் கல்கத்தாவுக்கு அடுத்த நாள் பகலில் போய்ச் சேர்ந்தோம் அங்கு அந்தச் சங்கத்தின் அங்கத்தினர்களே அவர்களது இல்லங்களிலேயே எங்களைத் தங்க வைத்துக் கொண்டார்கள். தினமும் மாலையில் கூட்டம். பத்து, பதினைந்து பேர் வந்தார்கள். ஒரு நாள் வங்காளி எழுத்தாளர்கள், விமர்சகர்களுடன் ஆங்கிலத்தில் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தின் எல்லாப் பிரிவுகள் பற்றியும் கூறி விட்டு, ‘‘இன்றும் நாடகங்களுக்குத் தேவை இருக்கிறது. சென்னையில் எல்லா சனி, ஞாயிறுகளிலும் மேடை நாடகம் நடக்கிறது’’ என்று கூறி விட்டேன். ஒரு கல்கத்தா தமிழருக்குக் கோபம். அவர் தமிழில் நாடக இயக்கமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர். கல்கத்தா தமிழர்களுக்கு விஷயம் தெரியாமல் ஒரு நாள் ஓர் அமைச்சரைக் கூப்பிட்டு விட்டார்கள். அவர் சரியாக ஐந்து மணிக்கு வந்து விட்டார். அவர் முன்னிலையில் நாங்கள் கோணலும் மாணலுமாக ஜமக்காளம், பாய் விரித்து உட்கார... மூன்று பேருடன் கூட்டம் தொடங்கியது. அமைச்சர் கோபமே கொள்ளாமல் மிகச் சிறந்த உரை அளித்தார். நாங்கள் கல்கத்தாவில் தங்கிய நாட்களில் ஒரு ஆங்கில செய்தித்தாளும் பார்க்கவில்லை. நான் தங்கியிருந்த வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. இந்தியாவில் அன்று தொலைக்காட்சி இப்போது மாதிரி போதையாக இருந்ததில்லை. ஐந்து நாட்கள் எங்கள் சக்திக்கு இயன்றவரை அந்தச் சங்கத்தின் ஆண்டு விழாவை முடித்துக் கொடுத்தோம். ஆறாம் நாள் பகல் மூன்று மணிக்கு சென்னைக்கு ரயில் ஏறினோம். அந்த நாளில் எஸ்.டி.டி. என்று கிடையாது. டிரங்க் கால் என்று ஓர் அமைப்பு உண்டு. அதன் மூலம் தொடர்பு கொள்ள அந்த இன்னொருவருக்குத் தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும். அந்த எண்ணைக் கொடுத்துவிட்டு, இணைப்பைக் கொடுத்துவிட்டுக் கூப்பிடும்வரை தொலைபேசி அருகிலேயே காத்திருக்க வேண்டும். சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருப்பு நீண்டு விடும். இப்படிப் பல்வேறு காரணங்களால் ஒரு வாரம் தமிழகத்திலிருந்து ஒரு தகவலும் பெறாமல் இருந்து விட்டோம். நாங்களும் ஒரு தபால் அட்டை கூட எழுதிப் போடவில்லை. ஊருக்குத் திரும்ப ரயிலில் ஏறியவுடன் குற்ற உணர்ச்சி. அது தவிர வேறு ஏதோ எங்களை இனம் புரியாதபடி வருத்தியது. வல்லிக்கண்ணன் பற்றிச் சொல்ல முடியாது. ஆனால் எங்கள் கண்கள் உற்சாகமில்லாமல் இருந்தன ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுகூட ஒரு சொல், இரண்டு சொற்களில் முடிந்தது. பொழுது விடிந்தது. ரயில் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. இரு புறமும் பிரளயம் வந்து அழிந்தது போலப் பாழ்க் காட்சிகள். மரங்கள் முறிந்து கிடந்தன; வீடுகள் கூரைகளை இழந்திருக்க, பயிர்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. ஆந்திரா பகுதியில் ரயில் நிலையங்களில் உள்ள போர்டுகள் சாய்ந்திருந்தன; ஓட்டுக்கூரைகள் காணாமல் போயிருந்தன. விஜயவாடா தாண்டி தெனாலி வந்தபோது அந்த ரயில் நிலையத்தையே காணோம். அது மட்டுமல்ல, வரிசையாகப் பல சிறு நிலையங்கள் இருந்த இடம் தெரியாதபடி எங்கோ வீசி எறியப்பட்டிருந்தன. அதாவது, நாங்கள் இலக்கியம் என்று நினைத்ததைப் பற்றி ஏழு பேருக்கும் எட்டு பேருக்கும் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகள் இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, விளக்கு இல்லாமல், சோறு தண்ணீர் இல்லாமல் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள். விஜயவாடாவுக்குத் தெற்கே ஆற்றின் நுழைவாயிலில் கடலே உள்புகுந்திருக்கிறது. விபரீதங்களுக்கே உரிய வகையில் இது நள்ளிரவில் நடந்திருக்கிறது. எங்கே கிராமம் இருந்திருக்கிறது, எவ்வளவு மனிதர்கள் அடித்துப் போகப்பட்டிருக்கிறார்கள், கால்நடை சேதம் எவ்வளவு என்று அளவிட முடியவில்லை. ஆனால் ரயில் பாதையைச் சீரமைத்து விட்டார்கள். சிறு ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஐந்தாறு சிப்பந்திகளுக்கு, அந்த நிலையத்தின் பின்புறத்தில் சிறு சிறு வீடுகள் இருக்கும். நிலையத்திற்கு மின் இணைப்பு இருக்கும்; ஆனால் அந்த வீடுகளுக்கு இருக்காது. இப்போது நிலைமை மாறியிருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து அன்று அந்த வீடுகளுக்குக் கிடையாது. அப்படியிருந்தும் நிலையம் இருந்த இடம் என்று ஊகிக்கக்கூடிய பகுதிகளில் ஒரு மனித ஆத்மா நின்று பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருந்தது! ரயில் ஊழியம் அவ்வளவு கடமையுணர்ச்சிக்குரியதாக இருந்தது. அந்தப் புயலில் அடையாளமே தெரியாதபடி நூற்றுக்கணக்கில் விவசாயத் தொழிலாளர்கள் இறந்து போயிருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை சாத்தியமே இல்லை. ஆடு, மாடுகள் கழுத்தில் கட்டிய சங்கிலியோடு விறைத்துக் கிடந்தன. அழுகும் பிணங்களைப் புதைக்கக் காவல்துறைக்காரர்கள் மட்டும் போதவில்லை. ஆதலால் ஆயுட்கைதிகளின் உதவியும் தேவைப்பட்டிருக்கிறது. ஓர் அபத்த நாடகம் போல இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, ஆறு பேர் ஏழு நாட்கள் ‘உலகத்தின் எதிர்காலம் கதையா, கவிதையா’ என விவாதித்துக்கொண்டிருந்தார்கள். (பாதை நீளும்...)
படிக்க...இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ‘ராமாயணம்’, தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச ‘மகாபாரதம்’, இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து அமோகமான வரவேற்பு பெற்றிருக்கிறது. (முதற்கனல் - ஜெயமோகன், விலை ரூ.290/-, வெளியீடு: நற்றிணைப் பதிப்பகம், எண்.243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005. தொடர்புக்கு: 044-28442855) இந்த இரண்டு காவியங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், ‘ராமாயணம்’ ஓர் உன்னத மனிதனைப் பற்றியது; இதுவே கம்பனில் ஓர் அவதாரம்! ‘மகாபாரதம்’ தொடர்ச்சியாகப் பல்வேறு மனிதர்களின் தர்மசங்கடங்களை விவரிப்பது. நாங்கள் இலக்கியம் என்று நினைத்ததைப் பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் உற்றார் உறவினர்களை இழந்து, சோறு தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
பெர்முடா அட்லாண்டிக்
பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு கொத்துத் தீவுகள்
'பெர்முடா’ என்ற பெயர் கொண்டவை. அது எப்படி ஓர் உடைக்குப் பெயரானது என்று
தெரியவில்லை. ஒரு பெண் கவிஞர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அன்று அவர்
அணிந்திருந்த அது எனக்குப் புதிதாக இருந்தது. ‘‘ஏன் கால் சட்டை இவ்வளவு
குட்டையாக இருக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘இது பெர்முடா...’’‘‘அப்படியா? அது ஒரு தீவுக்குப் பெயர் இல்லை?’’“இல்லை. இந்த
மாதிரி உடைக்கு பெர்முடா என்றுதான் பெயர்’’. எங்கள் உரையாடல் ஒரு நகுலன்
கவிதை போல இருந்தது.இளம் வயதில் நாங்கள் படித்த பள்ளியில் சீருடை கிடையாது.
அநேகமாக சட்டை - அரை டிராயர் போட்டுக் கொண்டு போவோம். ஓடியாடி
சுவர் மீது குதித்து, பெஞ்ச் மீது தாண்டி, பாரலெல் பாரில் பூனை எலி ஆட்டம்
ஆட... அரை டிராயர்தான் சௌகரியமாக இருந்தது. எங்கள் பி.டி. மாஸ்டர் ஒரு
குஸ்தி பயில்வான். ஆதலால் வாரத்தில் ஒரு நாள் எல்லாரும் குஸ்தி போட
வேண்டும். இரண்டு குஸ்திப் பள்ளங்கள் இருந்தன. நிறைய மணல் போட்டு
இருக்கும். பயன்படுத்த வேண்டாமா? கல்லூரியில் கால் தெரியக்கூடாது.
பைஜாமா அல்லது பேன்ட். கட்டாயம் கோட் அணிய வேண்டும். பைஜாமா
போட்டுக்கொள்பவர்கள் மட்டும் சட்டையை வெளியில் விட்டுக்கொண்டு அதன் மீது
கோட் போட்டுக் கொள்ள வேண்டும். மசூத் அலிகான் போன்றவர்கள் கழுத்திலிருந்து
முழங்கால் வரை ஷெர்வானி போட்டுக் கொள்வார்கள். இந்த ஷெர்வானிதான்
எவ்வளவு சௌகரியம்! சட்டை இல்லாமலேயே ஷெர்வானியைப் போட்டுக்கொண்டு விடலாம்.
நிறைய பைகள். வீட்டில் பாதி சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம்.
ஆனால் அப்போதே அது தைக்கப் பதினைந்து ரூபாய் கூலி! துணியும் வேறு நிறைய
வேண்டும். எங்கள் ஊர் பைஜாமா, நாடா வைத்ததாக இருக்காது. பேன்ட்
மாதிரியே பைகளுடன், பொத்தான்களுடன் தைக்கப் பட்டிருக்கும். கால்
அடிப்பாகத்தில் எவ்வளவு தொள தொளவென்று இருக்க வேண்டும்? இருபத்து நான்கு
அங்குலங்கள் சராசரி. கீழ் மடிப்பு? மூன்று அங்குலமாவது இருக்க வேண்டும்.
நான் பல நாட்கள் காலுக்குச் செருப்பு, ஷூ இல்லாமல் போயிருக்கிறேன். ஆனால்
கோட் இல்லாமல் போனதில்லை. இன்று உடைகள் விஷயத்தில் மிகப் பெரிய
புரட்சி நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள்
விஷயத்தில் சல்வார் கமீஸ். அது சௌகரியமாக இருக்க வேண்டும். பெண்களின்
உடைகள் விஷயத்தில் வீட்டுப் பெரியவர்கள் கேட்பது, ‘‘ஏண்டி
இப்படி வந்து நிக்கறே?’’ இதில் ஒரு விஷயம், எதிர்க்கும் யாருக்கும் எதைக்
குறை சொல்வது என்று தெளிவாகச் சொல்ல முடியாது. அவர்களுக்குப் பழக்கப்பட்ட
உடை இல்லை, அதனால் எதிர்க்க வேண்டும். ஆனால் விரைவிலேயே ஒத்துக்கொண்டு
விடுகிறார்கள். எங்கள் பைஜாமா நடந்து போகும்போது பெரிய சங்கடமில்லை.
ஆனால் சைக்கிளில் போகும்போது? அந்த நாளில் ‘செயின் கார்ட்’ என்பது
சைக்கிளோடு வராது. நாம்தான் தனியாக வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
சைக்கிள் அயல்நாட்டில் செய்யப்பட்டது. அயல்நாட்டில் தொளதொளவென்று பேன்ட்
அல்லது டிரௌசர் போட்டுக்கொள்ள மாட்டார்களா? உண்டு. அவர்கள் கால் கிளிப்
தயக்கமில்லாமல் போட்டுக் கொள்வார்கள். எனக்கு இந்த கால் க்ளிப்
போட்டுக்கொள்வது உலகத்தில் மிகக் கடினமான காரியங்களில் ஒன்று. டிரௌசரின்
மடிப்பைக் கலைத்துவிடும். தொலைந்து போய் விடும். துருப் பிடித்து விடும்.
உண்மையில் க்ளிப் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அது இல்லாமல் சைக்கிளில்
அரை நிமிடம் போக முடியாது. பைஜாமா பல் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு, அந்தக்
கறை என்ன சவுக்காரம் போட்டாலும் போகாது. இப்போது தொளதொளவெனப் பெண்கள்
பைஜாமா போட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் சைக்கிளில் போகாது இருப்பது
நல்லது. என்னைப் பார்க்க வந்த கவிஞர் சைக்கிளில் வந்தாரோ? பெர்முடா அணிந்து
கொண்டு துணி சைக்கிள் சங்கிலியில் மாட்டிக் கொள்ளுமே என்று அஞ்ச
வேண்டியதில்லை. ஆனால் அவர் சைக்கிளில் வரவில்லை. இப்பொது ஆண்கள் பெர்முடா
அணிகிறார்கள். ஒரு படி கீழே போய் அரை டிராயர் போட்டுக் கொள்கிறார்கள்.
எங்கள் தெருவில் குறைந்தது இருபது ஆண்கள் இருப்பார்கள். இதில் பாதி
நபர்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தைரியமாக வெளியே வருகிறார்கள். இவர்கள்
பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் பணியில் இருந்த நாட்களில் அரை
டிராயர் போட்டுக்கொண்டு அலுவலகம் போயிருப்பார்களா? இதில் ஐந்தாறு பேருக்கு
தினம் பொது மக்களை சந்திக்க வேண்டிய வேலை. அப்போது அரை டிராயர் பொருத்தமாக
இருந்திருக்குமா? ஒரு முறை ஒரு லுங்கி தயாரிப்பாளர் ஒரு விளம்பர
வீடியோ தயாரித்திருந்தார். வாய்ப்பு கிடைத்தால் காவல்துறைக்காரர்கள் லுங்கி
அணிவார்கள். வக்கீல்கள் நீதிமன்றத்துக்கு லுங்கி கட்டிக் கொண்டு ஆஜர்
ஆவார்கள். அதே போல டாக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், என அவர் லுங்கியின்
சாத்தியத்தை சற்று விரிவாகவே கற்பனை செய்திருந்தார். அந்தக் கற்பனையே பயமாக இருந்தது. என்
உறவுப் பையன் இந்தியாவின் மிகப் பெரிய, மிகச் சிறப்பான தொழிற்சாலையில்
ஊழியம் செய்து கொண்டிருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பெண் வீட்டில்
அரை சவரன் மோதிரம் போட்டிருந்தார்கள். அதைப் போட்டுக்கொண்டு அவன்
வேலைக்குப் போயிருக்கிறான். மேலதிகாரி மோதிரத்தைப் பார்த்திருக்கிறார். அரை
மணி நேரத்தில் அந்தப் பையனுக்கு வேலை நீக்க உத்தரவு
கொடுக்கப்பட்டுவிட்டது. அவனும் என்னென்னவோ விளக்கங்கள் கூறிப்
பார்த்திருக்கிறான். அவன் தந்தை தன் பங்குக்கு அந்த அலுவலகம் சென்று
மன்றாடினார். ஒன்றும்
நடக்கவில்லை. வேலை போனது போனதுதான். லேத், பாண்ட் ரம்பம், துளை போடுவது
போன்ற வேலைகளில் இருப்பவர்கள் மட்டும் இல்லை, கார் சக்கரத்துக்குக் காற்று
அடிப்பவர்கள், டிரைவர்கள் கூட அந்தக் கம்பெனியில் நகை என்று கைகளில்
அணிந்து கொள்ளமுடியாது. விபத்து எப்படியும் நடக்கும். ஆனால் தொழிலாளி சில
விதிமுறைகளை மீறவே கூடாது. அதே போல உடை, சீருடைதான். அதை எப்படி
அணிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் அந்தக்
கம்பெனி நிவாரணம் தரக்கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. ஒரு தொழிலாளிக்கு
நிறைய செலவிட்டு பயிற்சி தந்து, விபத்து மூலம் இழக்க வேண்டியிருக்கிறது.
வக்கீல்களுக்கு ஒரு மாதிரியான உடை, போலீஸ்காரர்களுக்கு ஒரு மாதிரியான உடை
எல்லாம் அவர்கள் என்ன பணி புரிபவர்கள் என்று பொதுமக்கள் சட்டென்று கண்டு
கொள்வதற்குத்தான். இந்த ஷெர்வானிதான் எவ்வளவு சௌகரியம்! சட்டை
இல்லாமலேயே ஷெர்வானியைப் போட்டுக்கொண்டு விடலாம். நிறைய பைகள். வீட்டில்
பாதி சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். படிக்க... ‘கால்
முளைத்த மனம்’, ‘திசைகாட்டி’, ‘ஃபிரேக்ரன்ஸ் ஆஃப் ரெயின்’... இவையெல்லாம்
கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியவை. அவர் குறிப்பாகக் கவிஞர் என்று
அறியப்பட்டாலும், சிறுகதைகள், கட்டுரைகள், கடந்த காலக் குறிப்புகள் என
நிறையவே எழுதியிருக்கிறார். தற்கால
இலக்கியக் கணக்காயர் கே.ஏ.சச்சி தானந்தன் சொற்களில் கூற வேண்டுமானால்,
வைத்தீஸ்வரனைப் படித்தால் நேரத்தை வீணாக்கின எண்ணம் வராது. பல
பதிப்பாளர்கள் அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிற படியால் அவர்
முகவரியிலேயே பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம். அவர் முகவரி: எஸ்.வைத்தீஸ்வரன்,
6, பாலாஜி தெரு, சென்னை 600024. தொலைபேசி: 99401 26407. வைத்தீஸ்வரனைச்
சொல்பவர்கள் கூடவே ஞானக்கூத்தனையும் கூறுவார்கள். இவர் தமிழ்
வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய ‘மோசிகீரா’ கவிதை ஓர் இலக்கியப்
புரட்சியையே நிகழ்த்தியது. அதுவரை புதுக்கவிதையைக் கேலி செய்த பலரும்,
வாயை மூடிக் கொண்டு அந்த வடிவத்தைக் கையாளத் தொடங்கினார்கள். ஞானக்கூத்தன்
நூல்கள் கிடைக்குமிடம்: நவீன விருட்சம், அழகிய சிங்கர், 7, ராகவன் காலனி,
மேற்கு மாம்பலம், சென்னை-600033. இவர் படைப்புகளும் ஏமாற்றாது. (பாதை நீளும்...) அசோகமித்திரன்
அமெரிக்கக் கனவு
நாங்கள்
பள்ளியில் படிக்கும்போது சாபு மீது அசாத்திய மதிப்பு. ஓர் இந்தியனாக
இருந்து, திடீரென அவன் ஹாலிவுட் நட்சத்திரமாகி விட்டான்! சாபு தஸ்தகீர்
மைசூர் சமஸ்தானத்தில் யானையைப் பார்த்துக் கொள்பவர்கள் குடும்பத்தில்
பிறந்தவன். அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்களா என்பது
சந்தேகமே. அவனுக்கு
பத்து, பன்னிரண்டு வயது இருக்கும்போது அந்த விஷயம் நிகழ்ந்தது. ஆங்கில
நாவலாசிரியர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய நாவலைப் படம் பிடிக்க இந்தியா
வந்த ராபர்ட் ஃபிளஹர்டி கண்ணில் பட்டான். ஃபிளஹர்டியை ‘ஆவணப்
படங்களின் அகத்தியர்’ என்று கூறுவார்கள். அவர் 1921ம் ஆண்டிலேயே ‘நனூக்
ஆஃப் தி நார்த்’ என்ற மௌனப் படம் மூலம் உலகப் பிரசித்தம் ஆனார். ஆர்க்டிக்
பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் பற்றிய படம் அது. எஸ்கிமோக்களுடன்
சுமார் ஓராண்டு வாழ்ந்து, அதன்பின் ராபர்ட் அப்படத்தை எடுத்ததாகத் தகவல்.
அந்த நாளில் கேமரா சாதனங்கள் அவ்வளவு முன்னேற்றம் அடையவில்லை. அப்படிப்பட்ட
சூழலில் அந்த மனிதர், தண்ணீர் உறையும் குளிரில் ஓராண்டு வாழ்ந்து ஒரு முழு
நீளப் படத்தை எடுத்திருக்கிறார்! நான் பார்த்ததில்லை. ஆனால் ‘யு டியூப்’
வசதியுள்ளவர்கள் இப் படத்தை இன்று பார்க்கலாம். எனக்கும்
அவருக்கும் உள்ள உறவு டி.எம்.யூ.பதி என்பவர் மூலமாகக் கிடைத்தது. யார்
எடுத்தது என்று அறியாமல் நான் ‘பொன்னி ஆறு’ என்றொரு ஆவணப் படத்தைப்
பார்த்தேன். இவ்வளவு தேர்ச்சியாகவும் கலைநயத்துடனும் ஓர் ஆவணப்படம் எடுக்க
முடியுமா என்று வியந்தேன். இன்னும் வியப்பைத் தந்தது அவருடைய இன்னொரு
குறும்படம். ஆங்கிலத்
தலைப்பு ‘பொக்கிஷ மரம்’. (Tree of Wealth ) எது பொக்கிஷ மரம்?
தென்னைதான். இரண்டு படங்களும் பதி அவராகவே எடுத்தது. அவரைச் சந்திக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்தடிதான் உயரம். ஒல்லி உருவம். சதா
சிகரெட். அவர் படங்கள் எனக்கு அளித்த பரவசத்தைச் சொன்னேன். ‘‘நான் பணி
செய்த என் குருவின் வேலைப்பாட்டைப் பார்த்தால் உன்னால் தரையில் நிற்க
முடியாது’’ என்றார். ‘‘யார்
உங்கள் குரு?’’‘‘ராபர்ட் ஃபிளஹர்டி.’’சாபுவை நடிகனாக்கியது ஹாலிவுட் அல்ல.
பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் விரைவிலேயே தங்கள் தவறை உணர்ந்தார்கள். சாபு
மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஃபிளஹர்டி நாவலைப் படம் பிடிப்பதற்குப்
பதிலாக யானைகளைக் கொண்டு ஓர் ஆவணப்படத்திற்கு திட்டமிட்டிருந்தார்! அவருடைய
எஜமானர்களுக்கு விஷயம் தெரிந்தவுடன் அவரை நீக்கி விட்டு வேறொருவரைக்
கொண்டு படத்தை முடித்தார்கள். அப்போது பேசும் படங்கள் வந்து விட்டன. ‘எலிஃபன்ட்
பாய்’ (யானைப் பையன்) நன்றாக ஓடியது. சாபு பெரும் கவனம் பெற்றான். ஆனால்
அவனை இதர வெள்ளைக்கார நடிகர்கள் போல ஹாலிவுட் அல்லது பிரிட்டிஷ் படங்களில்
பயன்படுத்த முடியாது. உலகில் ஆங்கிலப் படம் பார்ப்பவர்களில் எவ்வளவு பேர்
திரும்பத் திரும்ப இந்தியக் கதைகளைப் பார்ப்பார்கள்? ஆனால் சாபு
தொடர்ந்து ஒரு நட்சத்திரமாக இருக்கத் தேவையான அளவு படங்கள் வந்தன.
இரண்டாவதில் அவனுக்கு மிக வலுவான, சுவாரசியமான பாத்திரம். அதுவும்
ருட்யார்ட் கிப்ளிங் எழுதியது. ‘ஜங்கிள் புக்’. அப்புறம் முழுக்க முழுக்கக்
கற்பனையில் உருவாக்கப்பட்ட ‘தீஃப் ஆஃப் பாக்தாத்.’ (பாக்தாத் திருடன்.)
நான் ‘ஜங்கிள் புக்’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன்.
என் பிரமிப்பைச் சொல்லி முடியாது. இரண்டும் பல அபத்தங்களைக் கொண்டாலும்
திரைப்படமாக மிகவும் ரசிக்கத்தக்கவை. இதுவரை சாபு பிரிட்டிஷார் வசம்
இருந்தார். அதன் பிறகுதான் ஹாலிவுட் சென்றார். அங்கே அப்போது மத்திய
கிழக்குப் பகுதி பற்றி ஒரு மயக்கம் இருந்தது. அதன் விளைவாக அநேக பாலைவனப்
படங்கள் எடுக்கப்பட்டன. எல்லாவற்றிலும்
சாபுவுக்கு இடம் இருந்தது. மௌனப்படங்கள் காலத்தில் ருடால்ஃப் வாலெண்டினோ
என்பவர் அமெரிக்க சினிமாப் பார்வையாளர்களுக்கு ஆண்மையின் சின்னமாக
இருந்தார். சாபு ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. அவர் பெரிய கதாநாயகனாக விளங்காது
போனாலும், அவர் பெயர் பார்த்து அத்திரைப் படத்தைப் பார்க்க ரசிகர்கள்
இருந்தார்கள். சாபு தோன்றிய படங்களில் மிகவும் தீவிரமாக இருந்தது
‘பிளாக் நார்சிஸஸ்’ என்ற தலைப்புடையது. இமாலய மலைச்சாரலில் ஒரு கன்னி
மாடம். கன்னி விரதம் எடுத்துக்கொண்ட ஒருத்தியால் அந்த நிலை தாங்க முடியாத
துன்பமாகப் போய்விடுகிறது. அவளால் கன்னி மாடத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு
விடுகிறது. சாபு அமெரிக்கப் பிரஜையாகி, மெரிலீன் கூப்பர் என்ற
அமெரிக்க நடிகையை மணந்து கொண்டார். அவருக்குப் பொருத்தமாக வேடங்கள்
கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் சுமார் இருபது படங்களில்
பங்கேற்றுவிட்டார். இதற்கிடையில் அவர் மீது ஒரு பெண் குழந்தை சார்பில்,
அதன் அம்மாவான பிரிட்டிஷ் நடிகை வழக்குத் தொடுத்தாள். ‘தனக்கு அப்பா
சாபுதான்’ என உரிமை கொண்டாடிய வழக்கு அது. அதற்குப்
பன்னிரண்டு பேர் ஜூரிகள். ஒன்பதிற்கு மூன்று என்று சாபுவுக்குச் சாதகமாகத்
தீர்ப்பு கிடைத்தது. 39 வயதில் சாபு மாரடைப்பால் இறந்தார். இறப்பதற்கு
இரண்டு நாட்களுக்கு முன்பாக டாக்டரிடம் போனபோது சாபுவிடம் டாக்டர்
சொன்னாராம்... ‘‘என்னிடம் வரும் எல்லோருமே உங்களைப் போல ஆரோக்கியமாக
இருந்தால், நான் தொழிலுக்கே முழுக்குபோட வேண்டியதிருக்கும்!’’ ‘அமெரிக்கக்
கனவு’ என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள். சாபுவாக அக்கனவைத் துரத்திப்
போகவில்லை. ஃபிளஹர்டி மூலமாக அது அவரைத் துரத்தி வந்து, சுமார்
இருபத்தைந்து ஆண்டுகள் அவருக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் கொடுத்தது.
கொடுத்தது போலத் திரும்பப் பிடுங்கிக் கொண்டது. இந்த அமெரிக்கக் கனவு
ஐரோப்பியர்களையும் இங்கிலாந்துக்காரர்களையும் சபலப்பட வைத்திருக்கிறது.
சிலர் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனித்துத்
தெரிவார்கள். ஐரோப்பியர்களாக இருந்தும் பல டைரக்டர்கள் ஹாலிவுட்டில்
பெரும் வெற்றி பெற்றார்கள். அதே போல இசை அமைப்பவர்கள். ஒரு காலத்தில்
ஹாலிவுட்டில் ‘பாட்டு படம்’ என்றே ஒரு ரகம் இருந்தது. இசைக்குத் தனிப்
பாரம்பரியம் தேவைப்பட்டது. அமெரிக்க
இசை என்றும் இருக்கிறது. ப்ளூஸ், ராக் அண்ட் ரோல் ஆகியவை அயனான அமெரிக்க
சிருஷ்டிகள். ஆனால் முதல் ரக ஐரோப்பிய இசை மற்றும் நடனக் கலைஞர்கள் இன்றும்
திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக ஏற்றுக்கொள்வதில்லை. சாபு விஷயத்தில்
ஹாலிவுட்டுக்குப் பெருத்த ஏமாற்றம் இல்லை. ஆனால் ஒமர் ஷரீஃப் என்ற நடிகர்
உன்னத இடம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்குப் பல படங்களில்
முதலிடம் கொடுக்கப்பட்டது. அவரும்
நன்றாகவே பணியாற்றினார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்
தொலைக்காட்சிக்குத் தள்ளப்பட்டு, இன்று எவர் நினைவிலும் இருக்க முடியாது
என்று தோன்றுகிறது. சாபு திரும்ப இந்தியா வந்து அவருடைய உற்றார், உறவினரைச்
சந்தித்தாகத் தகவல் இல்லை. ஃபிளஹர்டி ஒருவேளை அவரைப் பார்க்காமல்
இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை அவருக்கும் அவரைச் சார்ந்தாருக்கும்
மனநிறைவு கொடுத்திருக்கும். மைசூரிலேயே ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஓர்
இயல்பான வாழ்க்கை வாழ்ந்திருப்பார். அவராகக் கோராத அமெரிக்கக் கனவு கானல்
நீராகிவிட்டது. சாபு அமெரிக்கக் கனவைத் துரத்திப் போகவில்லை. அது அவரைத்
துரத்தி வந்து, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் அவருக்கு ஏராளமான
எதிர்பார்ப்புகள் கொடுத்தது. கொடுத்தது போலத் திரும்பப் பிடுங்கிக்
கொண்டது. படிக்க மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு
செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக் கூடியது. பாரதி, தான் வாழ்ந்த
சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது
எழுதியதை ‘பாரதியின் பார்வையில்’ என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத்
தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம்
விரல் நுனியில் இருக்கிறது எனலாம். ஆனால்
எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை விளக்கப்படவில்லை என்றால் பயனற்றுப் போய்
விடும். ஸ்ரீனிவாசன் இந்தியாவையும் உலகத்தையும் பலமுறை பயணம் செய்து, அவர்
சொல்வதனைத்தையும் கண்ணால் கண்டவர். இந்த நூல் பல உன்னத மனிதர்களையும் பல
வரலாற்று நிகழ்ச்சிகளையும் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த நூல்
ஸ்ரீனிவாசன் படைத்த எண்ணற்ற நூல்களில் மிகவும்
குறிப்பிடத்தக்கது.‘பாரதியின் பார்வையில்...’ - மு.ஸ்ரீனிவாசன், விகடன்
பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600002. விலை ரூ.60/- (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
சீட்டி சீட்டி
என்றால் என்ன? இன்றுள்ள துணிக்கடைகளில் யாருக்கும் தெரியவில்லை. சீட்டி
என்றால் உதடுகளைக் குவித்து ஒலி எழுப்புவதுதான் தெரிந்திருக்கிறது; நாங்கள்
சிறுவர்களாக இருந்தபோது பாவாடை, ஜாக்கெட், ஜன்னல் படுதா, தலையணை உறை
போன்றவை சீட்டித் துணியில்தான் இருக்கும். படுக்கை விரிப்புக்குக்கூட
சீட்டித் துணி பயன்படுத்துவோம். கிரியா
தற்காலத் தமிழ் (2008) அகராதியில் பார்த்தேன். லிப்கோ (1968) அகராதியையும்
பார்த்தேன். ‘அச்சடித்த துணி’ என்று இருந்தது. அதாவது, மலிவு ரக
வெள்ளைத்துணியில் பூக்கள், அலங்கார சித்திரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
இன்று இப்பெயரே மறைந்து விட்டது. சீட்டித் துணி விலை குறைவாக இருக்கும்.
அது புழக்கத்தில் இல்லாமலே போய் விட்டது; அப்படியானால் இன்று மலிவுத் துணி
வாங்குபவர்கள் இல்லை. உண்மையாகவா? நாங்கள் குழந்தைகளாக இருந்து
வளர்ந்த ஆண்டுகள், இரண்டாம் உலகப் போர் நடந்த காலம். யுத்த கால
நடவடிக்கைகள் ஐதராபாத் நிஜாம் அரசில் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன. ஒரு
விளைவு, சாதாரண மனிதர்கள் நல்ல துணிமணி உடுக்கமுடியாது. நிஜாம்
குடும்பத்தினருக்கு பெரும் பங்கு சொந்தமான ஓர் ஆலையிலிருந்து வரும் துணி
ஒன்றுதான் தாராளமாகக் கிடைக்கும். அதை ஆங்கிலத்தில் ‘கோர்ஸ் கிளாத்’
என்பார்கள். அதில்தான் இந்த சீட்டி வரும். இந்த சீட்டியை வாங்க எங்களுக்கு
என்று ஒரு துணிக்கடையை நியமித்திருந்தார்கள். (இப்போது இங்கே இருக்கும்
ரேஷன் கடை போல!) இந்தக் கடை செகண்ட் பஜார் என்ற இடத்தில் இருந்தது. ‘விலை
குறைவான இந்தச் சீட்டித் துணியை வாங்காமல் விட்டு விட்டால் என்ன’ என்று
கேட்கலாம். ஐம்பது ரூபாய்க்கு இந்த மட்ட ரகத் துணிகளை வாங்கினால்தான் பத்து
ரூபாய்க்கு உயர் ரகத் துணி வாங்கலாம். எங்கள் ஊர்த் துணி வியாபாரிகள்
‘சூப்பர் ஃபைன்’ துணிக்கடை என்று அமைத்திருந்தார்கள். அங்கே சிறிது நல்ல
ரகத் துணி கிடைக்கும். மட்டத் துணி வாங்கிய ரசீதுகள் மூன்று மாதங்கள்தான்
செல்லும். அதாவது
நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிஜாம் ஆலையில் தயாரான சீட்டியையும்,
இன்னொரு வகை மட்டத்துணியையும் வாங்கித்தான் ஆக வேண்டும். அந்த இன்னொரு
வகைத் துணி கைதிகள் சீருடை போலக் கோடு போட்டிருக்கும். நிஜாம் நினைத்தால்
எளிதாக உயர் ரகத் துணிகளைத் தயாரிக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு
சொன்னதைத்தான் நிஜாம் செய்ய முடியும். அதைத் தாண்டி யாரும் யோசிக்கவில்லை. அந்தக்
காலத்தில் மைசூரிலும் இப்படி ஒரு ராஜாதான். அங்கு மட்டும் எப்படி பட்டுத்
துணி, சந்தன சோப் செய்ய முடிந்தது? இரண்டு பெரிய அணைகள்? நிறைய மின்
உற்பத்தி? காரணம், மைசூரில் இருந்த திவான்களும் பொறியியலாளர்களும். தங்கள்
அரசும் ராஜ்ஜியமும் எல்லாத் துறைகளிலும் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக
இருக்க வேண்டும் என்று கொண்டிருந்த ஆர்வம். ஐதராபாத்தில் நாங்கள்
கைதிச் சீருடைகளும் நுண்மையில்லாது அச்சடிக்கப்பட்ட சீட்டித் துணியும்
அணிந்து பள்ளிகளுக்குப் போனோம். சூப்பர் ஃபைன் கடையில் பத்து ரூபாய்க்கு
எவ்வளவு துணி வாங்க முடியும்? ஆதலால் மாறி மாறி வாங்கிக் கொள்வோம்.
எனக்குக் கைதி உடை பிடித்துப் போய்விட்டது! ஆனால் என் சகோதரிகள் கண்ணை
உறுத்தும் சீட்டித் துணியில்தான் பாவா டை ஜாக்கெட் போட்டுக் கொண்டு
பள்ளிக்குப் போவார்கள். சீட்டித்
துணிக்கு இன்னொரு சிறப்பு. தினம் தோய்த்தாக வேண்டும். ஒவ்வொரு நாளும்
சிறிது சிறிதாகச் சாயம் போகும். அவற்றோடு தோய்க்கப்பட்ட என் கைதிச் சட்டையை
எப்படி எப்படியோ இந்த வண்ணங்கள் உரு மாற்றி விடும். ஒரு கூச்சமும்
இல்லாமல் நாங்கள் இந்த உடைகளை அணிந்து சுமார் பத்தாண்டுகள் காலம்
கழித்தோம். எனக்கு எப்படியாவது எம்.எஸ்.55 என்ற துணியில் ஒரே ஒரு
பைஜாமாவாவது தைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை. அதென்ன எம்.எஸ். 55?
மேட்டூர் மில்களில் தயாராகும் ‘லாங்க் கிளாத்.’ இந்த லாங்க் கிளாத்தும்
இன்று நிறையப் பேருக்குத் தெரியவில்லை. எனக்கும் அந்தப் பெயரை எதற்கு ஒரு
துணிக்கு வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் துணி வழவழப்பாக வெள்ளை
வெளேரென்று இருக்கும். எனக்கு ஹரிகோபால் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன்
எப்படியோ அந்தத் துணியைச் சம்பாதித்து ஒரு பைஜாமா தைத்துக் கொண்டு
விட்டான். ‘‘இதைப் போட்டா, எல்லாரும் என்னையே பாக்கிறாங்க’’ என்பான்
பெருமிதத்தோடு! அவன் வாயில் நல்ல வார்த்தையே வராது. ‘‘நீ ஃபெயில் ஆகப்
போறே. உன்னை ஸ்கூலிலிருந்து தூக்கி விடுவார்கள். நீ அவனோட சேர்றே.
போலீஸ்காரனோடு உனக்கு என்ன வேலை?’’ என்று அடுக்கிக்கொண்டே போவான்.
அப்படியிருந்தும் நான் தினமும் அவன் வீட்டுக்குப் போவேன். நான்
கடைசிவரை எம்.எஸ். 55 அணிந்து கொள்ளவே இல்லை. சென்னை தி.நகர் உஸ்மான்
சாலையில் ஒருவர் ஆறு ரூபாய்க்கு ஒரு ஷர்ட், ஆறு ரூபாய்க்கு ஒரு வெள்ளை
பேன்ட் என்று தைத்துக் கொடுப்பார். அந்த நாளில் வெள்ளையில்தான் ஆபீஸுக்குப்
போக முடியும். வண்ணத் துணி பெண்களின் உரிமை. அதுவும் அடக்கமாக இருக்க
வேண்டும். இன்று பெண்களை விட ஆண்கள்தான் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடை
அணிகிறார்கள். சட்டையிலும்
பேன்ட்டிலும் எவ்வளவு பைகள்! முழங்காலுக்கு அடியில் ஒரு பை இருந்தால்,
அதில் என்ன வைக்க முடியும்? எப்படி வைக்க முடியும்? எனக்குப் புரியவில்லை!
கண்ணுக்குத் தெரியும் பக்கவாட்டுப் பைகளிலிருந்தே நான் நான்கு முறை என்
பர்ஸைத் தொலைத்திருக்கிறேன். என் மகன்கள் பர்ஸுடன் மொபைல் தொலை பேசிகளையும்
தொலைத்திருக்கிறார்கள். யுத்தம் எங்கள் அன்றாட வாழ்க்கையை ஒவ்வொரு
அம்சத்திலும் பாதித்தது. நல்ல காக்கித் துணி என்றால் பின்னி மில் துணிதான்.
ஆனால் அவர்கள் மொத்தமாக அவர்கள் தயாரிப்பு அனைத்தையும் ராணுவத்துக்குக்
கொடுத்து விட வேண்டும். நான் சாரணர் படையில் இருந்தேன். காக்கிச் சட்டை,
காக்கி நிக்கர். அதென்ன நிக்கர்? அன்று அரை டிராயர் என்று சொல்ல
மாட்டார்கள். நிக்கர்தான். சாரணர் படைக்கு சட்டையில் இரண்டு பைகள் இருக்க
வேண்டும். அவற்றுக்கு
‘ஃபிளாப்’ வைத்துப் பொத்தான் வைத்திருக்க வேண்டும். தோள் பட்டையில் இரு
புறமும் மீண்டும் ‘ஃபிளாப்’ வைத்திருக்க வேண்டும். என் சாரணர் நாட்கள்
மட்டக் காக்கித் துணியில் தைக்கப்பட்ட சட்டை நிக்கரோடு கடந்தது. கஞ்சி
போட்டு இஸ்திரி போடு என்பார்கள். என் வரை அது வெற்றிகரமாக நடந்ததில்லை.
சட்டையை எவ்வளவு நன்றாகத் தைத்திருந்தால் என்ன... துணி மோசமாக
இருக்கும்போது? யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நல்ல
துணி சாதாரண மக்களுக்குக் கிடைக்காது. ஆனால் நல்ல உடை உடுத்துபவர்கள்
இருந்தார்கள். பெரிய துணிக் கடைகள் இருந்தன. போதாததற்கு பர்மா அகதிகள்
தெருத் தெருவாக அவர்கள் கொண்டு வந்த சட்டைகளை விற்பார்கள். ஒரு
முறைதான் அணியலாம். தண்ணீரில் நனைத்தால் பாதி அளவுக்கு சுருங்கி விடும்.
‘எந்தத் துணித் தயாரிப்பாளர் இந்த அதிசயத் துணியை எப்படித் தயாரித்தார்?’
என எரிச்சல் கலந்த பிரமிப்பு ஏற்படும்.ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட
ரசாயன இழை வந்தது. இதுதான் சீட்டியை அகராதிகளுக்கு விரட்டி விட்டதோ? பெட்டி இன்னும்
நான்கு மாதங்களில் 2014 முடிந்து 2015 பிறந்து விடும். சில நாட்களுக்காவது
பலர் நாட் குறிப்பு எழுதுவார்கள். முன்பு ஹோ அண்ட் கம்பெனி டைரி
பிரபலமானது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும். இப்போது
நர்மதா பதிப்பகம் சில ஆண்டுகளாக மிக விசேஷமான முறையில், நோட்டுப் புத்தகம்
அளவில் நாட்குறிப்பு வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச்
சிறப்புடைய இடங்களின் படங்கள் வெளியிடும். தமிழ் பக்தி இலக்கியத்தின்
பகுதிகள் எல்லாப் பக்கங்களிலும் இடம் பெறும். அச்சே பளிச்சென்று
வித்தியாசமாகத் தெரியும். முகவரி: நர்மதா பதிப்பகம், 10 நாநா தெரு,
தியாகராய நகர், சென்னை 600017. தொ.பே: 044-24336313 (பாதை நீளும்...) அசோகமித்திரன்
கைலாசம்
இந்த
ஆண்டு சுதந்திர தினத்தன்று கைலாசம் காலமானார். வயது 53. யார் கைலாசம் என்ற
கேள்விக்குப் பதில், அவர் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மகன். இது
சட்டென்று தமிழ் வாசகர்களுக்குப் புரியக் கூடிய அடையாளம். ஆனால் கைலாசம்
என் நண்பனும் நலம் விரும்பியுமாகும். நான் 197374ம் ஆண்டில் அயோவா என்னும்
அமெரிக்கச் சிற்றூருக்குச் சென்றிருந்தேன். அன்று
அந்த இடம் படைப்பிலக்கியப் பயிற்சிக்கும் மருத்துவப் படிப்புக்கும் பெயர்
போனது. ஆனால் அது படைப்பிலக்கியப் பிரிவில் திரைப்படம் எடுப்பதையும்
சேர்த்திருந்தது என்று எனக்குத் தெரியாது. ஏற்கனவே பொறியியலில் பட்டம்
பெற்றிருந்த கைலாசம், அந்தத் திரைப்பட வகுப்பில் சேர இருந்தார் என்பதும்
எனக்குத் தெரியாது. முதலில் பாலசந்தர் அவர்களுக்குக் கைலாசம் என்றொரு மகன்
உண்டு என்றும் தெரியாது. டிசம்பர் 1977ல் நானும் கன்னட எழுத்தாளரும்
அரசியல்வாதியுமான அனந்தமூர்த்தியும் அயோவா பற்றி உரையாட வேண்டும்; அதை
நான் எழுதித் தர வேண்டும் என்று ஒரு பத்திரிகையிலிருந்து வேண்டுகோள்
வந்தது. அதற்காக நான் மைசூர் சென்றேன். அப்போது திருமதி இந்திரா காந்தி
அமல்படுத்திய நெருக்கடி நிலை, கர்நாடகாவில் சிறிது தீவிரமாக இருந்தது. கர்நாடக
அரசு ஏராளமானோரை சிறையில் அடைத்திருந்தது. அந்த அவசர நிலை காலத்தில்
‘சோஷலிஸ்ட்’ என்ற அடையாளம் கொண்டவர்கள் அரசுக்கு அபாய கரமானவர்கள். அந்த
‘அபாயகரமானவர்கள்’ பலரும் சிறையில் இருந்தார்கள். மைசூரில் நிகழ்ந்த
சந்திப்பின்போது அனந்தமூர்த்தி என்னிடம் கைலாசம் பற்றிச் சொன்னார்.
கைலாசம் அயோவாவில் திரைப்படத் தொழில்நுட்பத் துறை தொடர்பாக பயிற்சி பெற்று
வருவதாகவும், படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவுடன் என்னை வந்து
சந்திப்பார் என்றும் அனந்தமூர்த்தி கூறினார். இதெல்லாம் முடிந்து
சுமார் ஓராண்டு கழித்துத்தான் நான் கைலாசத்தைச் சந்தித்தேன். அந்த
நேரத்தில் ஒலிப்பதிவு, மறு ஒலிப்பதிவு, படத்தொகுப்புக்கு பயன்படக்கூடிய மிக
நவீன சாதனங்களை அவர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தார். புகழ்பெற்ற
சிற்பி கணபதி ஸ்தபதி மீது அவருக்கு அபார பக்தி. கணபதி ஸ்தபதி பற்றி சுமார்
ஒரு மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப் படம் ஒன்றை கைலாசம் எடுத்தார். ஸ்தபதி
விக்ரஹங்கள் செய்பவர் என்று மட்டுமே நான் அதுவரை தெரிந்து வைத்திருந்தேன்.
கைலாசத்தின் ஆவணப் படம் மூலம் அவர் சிற்ப சாஸ்திரத்துக்கு அடிப்படையாக வேத
சாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்பது தெரிந்தது. அவருடைய
ஞானம் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் கைலாசம் மிகுந்த
அக்கறை கொண்டிருந்தார். ஸ்தபதி அவர்களின் படிப்பும் பயிற்சியும் யாரையும்
வியக்க வைக்கும். பல்லவர் காலத்திலும், பின்னர் சோழர் காலத்திலும்
சிற்பக்கலை ஞானம் இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று தோன்றியது. அந்தப்
படத்துடன் கைலாசம் ஒரு விளம்பரப் படமும் எடுத்திருந்தார். அது
பொதுமக்களுக்கு அல்ல; வங்கி ஊழியர்களுக்கு. அதில் நான் பார்வை
பாதிக்கப்பட்ட வயோதிகனாக நடித்தேன். முதலில் படப்பிடிப்பு முடிந்தது. அதன்
பிறகு டப்பிங். இது சுமார் இரு வாரங்கள் கழித்து நடந்தது. அந்த நாளில்
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரும், விலை அதிகமான இதழ்களை ஒருவர் மட்டுமே
படிக்கக் கூடிய விதத்தில் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அந்த
அலுவலகத்துக்கு என்று ஒரு ‘ரீடிங் கிளப்’ இருக்கும். எல்லா இதழ்களையும்
மொத்தமாக வாங்கி, தினம் ஒருவர் எடுத்துப் போய் பகிர்ந்து படிப்பார்கள். படத்தில்
ஒரு அதிகாரி அந்த ரீடிங் கிளப்காரரிடம், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து
வைப்பா’’ என்று கூறுவார். இது அவருக்கான ஐந்து வார்த்தை வசனம். டப்பிங்
தினத்தன்று அந்த அதிகாரி உவகை தெரிய வந்தார். ஒரு மணி நேரத்திற்குப்
பிறகும் அவர் வேலை முடியவில்லை. ஐந்தே சொற்கள். அதை
எப்படியெல்லாம் உளறிக் கொட்டலாமோ, அதெல்லாம் செய்துவிட்டார். அங்கே
ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கில் பணம் போய்க் கொண்டிருந்தது. அந்த
மனிதரால், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து வைப்பா’’ என்பதைச் சரியாகச் சொல்ல
முடிய வில்லை. அந்த மனிதருக்குக் குளிர் சாதன அறையிலும் தொப்பலாக
வியர்த்தது. அன்று என் டப்பிங் முடியவில்லை. என்
டப்பிங் இல்லாமலே கைலாசம் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். அன்று
‘முந்தானை முடிச்சு’ அத்தனை தியேட்டர்களிலும் ஓடு ஓடென்று
ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் இந்த அபார வெற்றிக்கு மூன்று காரணங்கள்
சொன்னார்கள். அதில்
ஒன்று, ஊர்வசி வசனம் பேசும் விதம். உண்மையில் அந்தப் படத்தில் ஊர்வசி
பேசவில்லை. முழுக்க டப்பிங். அந்த டப்பிங் கலைஞர் பெயர் துர்கா. அந்தக்
கலைஞர் அவ்வளவு எளிதாக வேலையை முடித்து விட்டார்! ஆனால், சாதாரண ஐந்து
வார்த்தை வசனம், எவ்வளவு பாடு படுத்தியது அந்த வங்கி அதிகாரியை? கைலாசத்தின்
ஆவணப் படம் தேசிய விருது பெற்றது. அது தவிர அவர் வேறு பல படங்கள்
எடுத்திருக்கிறார். எதிலும் அவர் கைநேர்த்தி தெரியும். அவர் இன்னொரு
மகத்தான முயற்சிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அது
கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவலை இருபத்தாறு பாகங்களாகத்
தொலைக்காட்சித் தொடர் எடுப்பது. அதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க
வேண்டும். அந்த மத்திய அரசு யார் நிர்வாகத்தில் இருக்கிறது என்று சொல்ல
முடியாத நிலை. அப்போது தனியார் அலை வரிசைகள் வரவில்லை. கல்கி எழுதிய
சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதுமான
அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர் ‘பொன்னியின்
செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு விட்டார்கள். ‘பார்த்திபன்
கனவு’ நிறையப் பணச் செலவில் எடுக்கப்பட்டாலும், சிறப்பான நடிகர்கள்
இருந்தாலும், திருப்தி அளிக்கவில்லை. அந்த நாவலின் உயிர் நாடியே சிவனடியார்
யார் என்ற மர்மத்தில் இருந்தது. அது எழுத்தில் சாத்தியமாயிற்று. ஆனால்
திரையில் அபத்தமாக இருந்தது. ‘சிவகாமியின்
சபதம்’, சரித்திர நாவல்களில் ஓர் காவியத்துக்குரிய சோக அம்சம்
கொண்டிருந்தது. இருபத்தாறு பாகங்கள் எது எது என்று நிர்ணயித்தாயிற்று.
முதல் பாகத்தை அன்று விசேஷத் தொடர்களுக்குக் கட்டாயம் என்று
நியமித்திருந்தபடி இந்தியில் மொழிபெயர்த்தாகி விட்டது. தெற்கிலிருந்து
ஒரு மகத்தான தொலைக் காட்சித் தொடர் வரும், வந்தே விடும் என்றிருந்த
வேளையில் மீண்டும் மத்தியில் யார் தலைமை என்ற குழப்பம் வந்தது.
‘சிவகாமியின் சபதம்’ அச்சிலேயே மேலும் தொடரச் சபிக்கப்பட்டது. ஆனால்
கைலாசம் மனம் தளரவில்லை. தொடர்ந்து நிகழ்ச்சிகள் தயாரித்துக்
கொண்டிருந்தார். ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையை திட்டமிட்டு
இந்தியாவிலேயே மிகச் சிறந்த அலைவரிசையாக உருவாக்குவதில் கடைசி ஆண்டுகள்
உழைத்தார். அவர்களும் சினிமா சார்ந்த அலைவரிசைக்கு அடியெடுத்து வைத்தபோது அவர் விலகி விட்டார். காரணம், அவர் சினிமாக்காரரே அல்ல. மகத்தான இலக்கு, மகத்தான அறிவு, மகத்தான பயிற்சி ஒரு சுதந்திர தினத்தன்று மறைந்து விட்டது. (பாதை நீளும்...) கல்கி
எழுதிய சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச்
செல்வதுமான அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர்
‘பொன்னி யின் செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு
விட்டார்கள். படிக்க... கன்னட
இலக்கிய உலகில் அனந்தமூர்த்திக்கும் எஸ்.எல்.பைரப்பாவுக்குமான மோதல்
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த ஒன்று. சமீபத்தில் மறையும் வரைகூட,
‘பைரப்பாவுக்கு நாவலே எழுதத் தெரியாது’ என்று விமர்சனம் செய்து வந்தார்
அனந்தமூர்த்தி. அவருடைய கோஷ்டியினரும் நாற்பது ஆண்டுகளாக பைரப்பாவை தாக்கி
வருகிறார்கள். அந்த பைரப்பாவின் சுயசரிதை ‘பிட்டி’ என்னிடம் வந்து
சேர்ந்தது. பைரப்பாவின்
வாழ்க்கை எவரையும் உலுக்கி விடும். வாரச் சாப்பாடு உண்டு பள்ளியில்
படிக்கும்போது பதினைந்து வயது முடிவதற்குள் டிக்கெட் இல்லாமல் பம்பாய்
ஓடிப் போய், இரண்டாண்டுகள் சுமை கூலியாக உழைத்து, நடைபாதையில் படுத்துக்
காலம் தள்ளினார். அதன் பின் மீண்டும் கர்நாடகா திரும்பிப் படிப்பைத்
தொடர்ந்தார். ‘பிட்டி’
என்றால் சுவர். அவருடைய இலக்கிய வாழ்க்கை விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
‘‘பைரப்பா இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்’’ என்று அர்விந்த் அடிகா
கூறுகிறார். (பிட்டி(BHITTI), Prism Books Pvt. Ltd, 1865, 32nd Cross,
10th Main, BSK II Stage,Bangalore 560070; Ph: 08026714108,) அசோகமித்திரன்
33 நிபுணர்கள் எனக்குத்
தெரிந்து எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் இருக்கிறது.
மிகச் சாதாரணமான ஒரு விஷயம், காய்கறி நறுக்குவது. நான் பெரிய
விருந்துகளுக்கு அமர்த்தப்பட்டவர்களைச் சொல்லவில்லை. மிக எளிதாக, ஒரே
அறையில் காலம் தள்ளும் மிகச் சாமானியர்கள். என் தகப்பனாரின் ஒரு சகோதரி
இப்படித்தான் ஒரே அறையில் காலம் தள்ளினாள். பல அளவுகளில் வரும் காய்கறிகள்
அவள் கையில் ஒரு சீராகத் துண்டாகும். இதை யாருடனாவது பேசிக்கொண்டே
செய்வாள். மிகச்
சாதாரணமான இன்னொரு விஷயம், பாத்திரங்கள் துலக்குவது. எனக்கு ஒன்று விட்ட
சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒரே குடும்பத்து மருமகன்கள் ஆனார்கள்.
அவர்கள் வீட்டில் முப்பதாண்டுப் பழைய எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம்
புதிய வெள்ளிப் பாத்திரங்கள் போல மின்னும். மிகப் பழைய மேஜை நாற்காலிகள்...
நூறாண்டுப் பழையதாகக் கூட இருக்கும். ஆனால்
அவை தினமும் நன்கு துடைக்கப்பட்டு மிக நேர்த்தியாக இருக்கும். இது யாருடைய
வேலை என்று தெரியாதபடி அவர்கள் எப்போதும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது
போலக் காணப்படும். ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்றொரு பழமொழி உண்டு. அது
என் சகோதரர்களைப் பார்த்து உண்டான பழமொழியோ எனத் தோன்றும். இன்று இருவரும்
இல்லை. இதையெல்லாம் யாரும் நிபுணத்துவம் என்று கூறுவதில்லை. சமூகம்
சிலரையே நிபுணர்களாகக் கருதுகிறது. அந்த நிபுணர்கள் வெகுஜனப்
பத்திரிகைகளில் ஆலோசனை கூறும்போது எனக்குக் கவலையே தோன்றுகிறது. மிக எளிய
மருத்துவக் குறிப்புகள் கூட அச்சம் தருகின்றன. நான் பன்னிரண்டு
வயதிலிருந்து இன்றைய 83வது வயது வரை ஒரு பூஞ்சையாகக் காலம் தள்ளிவிட்டேன்.
எவ்வளவு மருத்துவர்களைப் பார்த்து விட்டேன்; வைத்திய முறைகளில் எவ்வளவு
மாற்றங்களைப் பார்த்து விட்டேன்! நான் சிறுவனாக இருந்தபோது ‘த்ரோட்
பெயின்ட்’ என்று உண்டு. ஜுரம் வந்தால் தொண்டை சரியில்லாமல் போகும். தொண்டை
சரியில்லை என்றால் இந்த த்ரோட் பெயின்ட் மருந்து கொண்டு தொண்டையில் பூசி
விடுவார்கள். அதில் உடல் சரியாக வில்லையென்றால்தான் வேறு மருந்துகள்
தருவார்கள். என் உடலைக் கீறியது, அம்மை குத்துவதற்குத்தான். இன்று பலருக்கு
இந்தத் தொண்டை பூச்சு பற்றித் தெரியாது. அதே போல டிங்க்சர்
அயோடின். ரத்தக் காயம் என்றால் இதைப் பூசுவார்கள். தாங்க முடியாதபடி புண்
பற்றி எரிவது போல இருக்கும் ஒரு நிமிடம். காயம் நூற்றுக்குத் தொண்ணூறு
சதவீதம் ஒரே நாளில் ஆறிவிடும். ஆனால் இன்று இந்த வைத்தியம் புழக்கத்தில்
இல்லை. சிறு சிறு உபாதைகளுக்கு ஒருவேளை இந்த வெகுஜனப் பத்திரிகை மருத்துவக்
குறிப்புகள் பொருந்தலாம். ஆனால்
சில வைத்தியர்கள் மிகச் சிக்கலான நோய்களுக்குக் கூட ஆலோசனைகள் தந்து
விடுகிறார்கள். அதைப் படித்தால் வைத்தியர் கூறும் அவ்வளவு நோய்களும்
உங்களுக்கு இருப்பது போலத் தோன்றும். (இந்த உணர்வும் ஒரு நோய். அதற்கும்
ஒரு மருத்துவப் பெயர் இருக்கிறது!) மருத்துவம் போல இன்னொரு
கவலைக்குரிய விஷயம், ஆன்மிகம். அதிலும் சில யோகச் சக்கரங்களைப் போட்டு அவை
ஏதோ எளிதில் அடையக் கூடியது போல விளக்கம் இருக்கும். உலகில் ஆன்மிகத்தில்
முன்னேற்றம் அடைந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். அவர்கள் யாரும் அதைப்
பிரகடனப்படுத்த மாட்டார்கள். ஒருவருக்கு உண்மையிலேயே ஆன்மிகத்தில்
நாட்டம் இருந்தால்? நாட்டம் என்பது என்ன? விளையாட்டுகளில் நாட்டம்,
ஆட்டத்தில் முன்னேற்றம், இதெல்லாம் வெளிப்படையாகத் தெரியும். ஆனால்
ஆன்மிகம் நமக்குள்ளே இயங்குவது. இதில் கூட என் கண்களுக்கு எல்லாருமே
வெவ்வேறு அளவுகளில் ஆன்மிகம் உடையவர்களாகத் தோன்றுகிறார்கள். இதில்
ஓரளவு நமக்கு உதவக் கூடியது, சிலரின் வாழ்க்கை வரலாறுகள். ஆன்மிகத்
தலைவர்கள் பற்றிய பல வரலாறுகளை மிகைகூறல் என்னும் அம்சத்தினால் ஒதுக்கித்
தள்ள வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளில் தவறாது
தோன்றும் ஒரு சாமியார் ஆசிரமத்திலிருந்து ஒரு நூல் என்னிடம் வந்து
சேர்ந்தது. தொழில்நுட்பம் மற்றும் நூல் தயாரிப்புக்கு இந்த வெளியீடு ஒரு
சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் இது உட்கொண்டிருக்கும் செய்தி அவ்வளவு
எளிதல்ல. எழுதப்பட்ட தாலேயே அது அர்த்தப்படுத்திக் கொள்வதாகி விடுகிறது. இதை
எப்படி இரண்டு தனித்தனி நபர்களால் ஒரே மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்ள
முடியும்? இதனால்தான் வரலாற்றில் பதிந்துள்ள பெரிய ஆன்மிகத் தலைவர்கள்
எதையும் எழுதி வைக்கவில்லையோ? இதனால்தான் புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள்
எனத் தொடர்ந்து 19ம் நூற்றாண்டு ராமகிருஷ்ணர் வரை எவரும் எதையும் எழுதி
வைக்கவில்லையோ? ரமணர் குகைவாசியாக இருந்த நாட்களில்
திருவண்ணாமலைக்கு நியமிக்கப்பட்ட ஓர் ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டார்.
அந்தக் கனவுப்படி அவர் ஒரு குகைவாசியைச் சந்திக்க வேண்டும். அவருடைய இந்திய
உதவியாளர்களிடம் விசாரித்திருக்கிறார். ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் அந்த அதிகாரி திரும்பத் திரும்பக் கேட்க... ‘‘நீங்கள் கூறுவதுபோல
ஒருவர் இருக்கிறார்’’ என்று ஒரு நபர் கூறியிருக்கிறார். அந்த நபர் அந்த
அதிகாரியை ரமணரிடம் அழைத்துச் சென்றார். ரமணர்
பதினைந்து வயதில் வீட்டை விட்டு வந்து திருவண்ணாமலையில் இருப்பவர். அதிகம்
ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அது அந்த ஆங்கில அதிகாரியும் ரமணரும்
மீண்டும் மீண்டும் சந்திக்கத் தடையாக இல்லை. ஒரு
கட்டத்தில் அந்த ஆங்கில அதிகாரிக்கு சில சக்திகள் வந்து விட்டன. ரமணரின்
ஆலோசனைப்படி அதில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார். நாம் நினைப்போம்,
அவர் ஓர் இந்துவாக மாறுவார் என்று! இல்லை, அவர் வேலையைத் துறந்து
இங்கிலாந்து திரும்பி ஒரு பாதிரியாராகி விட்டார்! ஆன்மிகம் ஒரு
குருமுகமாகப் பழக வேண்டும் என்பார்கள். யார் அந்த குரு? அதை நாமாகத்
தேர்ந்தெடுக்கக்கூடாது. நம் தேர்வில் சுயசார்பு இருக்கும். ஆதலால் குருதான்
சீடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்! இவ்வளவு
சிக்கல்கள் நிறைந்ததை ஒரு பத்திரிகை மூலம் சொல்லித் தர முடியுமா? எழுத்தே
குறைபாடுகள் கொண்டது. புனைகதைகள் இந்தக் குறைபாட்டைக் கொண்டு தான்
வளர்ந்திருக்கின்றன. மகாபாரதக் கதைகள் எவ்வளவு பட்டிமன்றங்களுக்குப்
பொருளாக இருந்திருக்கின்றன? ராமாயணம் எவ்வளவு விரிவுரைகளுக்குக் காரணமாக
இருந்திருக்கிறது? வாலியை
நேருக்கு நேர் சந்தித்துப் போரிட முடியாது. அவன் கண்ணில் விழுந்த அக்கணமே
எதிரியின் ஆற்றலில் பாதி வாலியைச் சென்றடைந்து விடும். ஆனால் வாலி சுயமாகவே
மிகுந்த பலசாலி. ராவணனைப் பிடித்து அங்கதன் தொட்டில் மேல் ‘பத்து தலைப்
பூச்சி’ என்று விளையாட்டுப் பொருளாகத் தொங்க விடக் கூடியவன். அவனை
வதம் செய்தேயாக வேண்டும் என்றால் நேருக்கு நேர் யுத்தம் சாத்தியமில்லை.
எவ்வளவு சிக்கலான சூழ்நிலை? பாரதத்தில் பீஷ்மர் வதமும் அப்படித்தான்.
சிகண்டி பீஷ்மரைக் கொல்லவில்லை என்றால் அம்பையின் தவம் வீணானதாகி விடும்.
ஓர் இதிகாசத்தைப் புரிந்து கொள்வதிலேயே இவ்வளவு சிக்கல்கள் என்றால்
முக்தித் தத்துவம் எவ்வளவு கடினமானது? சமூகம் சிலரையே நிபுணர்களாகக்
கருதுகிறது. அந்த நிபுணர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் ஆலோசனை கூறும்போது
எனக்குக் கவலையே தோன்றுகிறது. மிக எளிய மருத்துவக் குறிப்புகள் கூட அச்சம்
தருகின்றன. படிக்க... இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய
நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச்
சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள். நம்பகத்தன்மை என்று ஒன்று
இருக்கிறது. நான் மட்டுமே பாராட்டினால் போதுமா? வெறும் புகழ்ச்சி
நம்பகத்தன்மை இல்லாதது.அறுபது ஆண்டுகள் முன்பு தற்கொலை செய்துகொண்டு
இறந்தவர், ‘‘என்னை ஏன் இன்னும் அதிகம் புகழவில்லை?’’ என்று கேட்க மாட்டார். அவர்
எர்னெஸ்ட் ஹெமிங்வே. பிரசுரம் ஆவதற்கும், தான் எப்போதும் பத்திரிகைச்
செய்தியாக இருப்பதற்கும் அவர் நிறையவே தந்திரங்கள் செய்திருக்கிறார். ஆனால்
அவர் படைப்புகளில் ஒரு துளியளவு சமரசமும் கிடையாது. அவருடைய ‘தி ஸன் ஆல்ஸோ
ரைசஸ்’ (கதிரவனும் உதிக்கிறான்) நாவல் இருநூறு பக்கங்கள்தான் இருக்கும்.
அதற்குள் எவ்வளவு விஷயங்களைப் புலப்படுத்தி விட்டிருக்கிறார்? இந்தச் சொற்
சிக்கனத்தை நானறிந்து வேறு எந்தப் படைப்பாளியிடமும் கண்டதில்லை. (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
அன்புள்ள அனந்தமூர்த்தி
ஆகஸ்ட்
22ம் தேதி யூ.ஆர்.அனந்தமூர்த்தி காலமானார் என்று அறிந்த போது, நாற்பது
ஆண்டு ஞாபகங்கள் நொடியில் தோன்றின. நான் அவரை முதலில் சந்தித்தது 1973
ஜனவரியில் என்றாலும், நான் அதற்குப் பல ஆண்டுகள் முன்னரே அவர் பெயரையும்
அவருடைய புகழ் பெற்ற நாவலாகிய ‘ஸம்ஸ்காரா’வையும் அறிந்திருந்தேன். அந்த
நாளில் தி.க.சிவசங்கரன் அவர்களைப் பார்க்க சோவியத் செய்தி
நிறுவனத்திற்குச் செல்வேன். அங்கு திவாகர் என்றோர் இளம் கன்னட எழுத்தாளர்
என்னிடம் பேச வருவார். நான் ஒரு பூங்காவிற்குச் சென்று எழுதுவதை அறிந்த
அவர், வெளியிடத்தில் மேஜை இல்லாமல் எழுத வசதியாக ஒரு ‘ஃபைல்’ கொடுத்தார். (அது
இன்றும் பத்திரமாக இருக்கிறது.) அவர் கன்னட முன்னணி எழுத்தாளர்கள் பற்றி
விவரமாகவே சொல்வார். ‘ஸம்ஸ்காரா’ பற்றிச் சொன்னாலும், ‘‘அனந்தமூர்த்தி
கோஷ்டியினர் ‘பிற்போக்காளன்’ என்று கேலி செய்யும் எஸ்.எல்.பைரப்பாதான்
திடமான எழுத்தாளர்’’ என்றும் கூறுவார். திவாகரும் செயல்முறைப்
‘பிற்போக்காள’னாக மாறி அமெரிக்கச் செய்தி நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்! அப்போது
அநேகமாக ஒவ்வொரு ஆண்டும் ஏ.கே.ராமானுஜன் சென்னையில் வந்து இரு மாதங்கள்
தங்குவார். ஏ.கே.ராமானுஜன் மைசூர் சமஸ்தானத்தில் பிறந்த தமிழர்.
கன்னடம்தான் அவர் பிறந்ததிலிருந்தே கேட்டு, பேசி, எழுதிய மொழி. ஆனால் அவர்
தமிழில் பட்டமேற்படிப்பு படித்து, திருவனந்தபுரம் மற்றும் மதுரையில்
ஆசிரியராக இருந்து விட்டு, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்கு
ஆசியப் பிரிவில் சேர்ந்து கொண்டார். அற்பாயுளில் போய் விட்டார். அதற்குள்
‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘வசனா’ என்றழைக்கப்படும் கன்னட தலித் கவிதைகள்,
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலிய பண்டைய பொக்கிஷங்களை எளிய
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய
மொழிபெயர்ப்பு பற்றித் தமிழ் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டிரா
விட்டாலும், அவருடைய மொழிபெயர்ப்பு தான் கீழ்த்திசைக் கலாசாரங்கள் பற்றி
அக்கறை கொண்ட ஆங்கில அறிஞர்கள் மத்தியில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு
வருகிறது. அவை அச்சேறும் முன்பே அவர் என்னிடம் காட்டியிருக்கிறார். அவரே
ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். ஒரு முறை ஒரு நாவல்
மொழிபெயர்ப்பைக் காட்டினார். அது ‘ஸம்ஸ்காரா’வின் முதல் அத்தியாயம். பாராட்டும்படியாக
இல்லை. அவரிடத்தில் சொல்லா விட்டாலும், அவர் என் அபிப்பிராயத்தைப்
புரிந்து கொண்டார். பின்னர் அனந்தமூர்த்தியை 1973ல் சந்தித்தபோது எனக்கு
ஒரு சந்தேகம் வந்தது. குடும்பம் வரை ராமானுஜன், அனந்தமூர்த்தி இருவரும் ஒரே
நிலையில் இருந்தார்கள். அன்றே கலப்புத் திருமணம் சகஜமானது. ஆனால்
எழுத்தாளர்களுக்கு அதை நியாயப்படுத்த வேண்டும். அதன் பிறகு நானும்
அனந்தமூர்த்தியும் பல்வேறு கருத்தரங்கங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும்
சந்தித்திருக்கிறோம். (எங்கள் கலந்துரையாடல் டிசம்பர் 1976ல் நடந்தது.)
ஒருமுறை அவர் சென்னை ‘இலக்கியச் சிந்தனை’ தமிழ்ப் புத்தாண்டு தின
விழாவுக்கு வந்திருந்தார். அன்று என்னால் போக முடியவில்லை. நான் ஏன்
வரவில்லை என்று விசாரித்திருக்கிறார். ஆனால் அவர் மகன் ஷரத் திருமண
விருந்துக்குப் போனேன். அவன் மணந்தது ஒரு வேற்று மதத்துப் பெண்ணை. ஆனால்
அன்று காலை அவர் அவனுக்கு உபநயனம் நடத்தியிருக்கிறார்! பல எதிர்ப்புகளை
மீறி நடந்த அந்தத் திருமணம் துரதிர்ஷ்டவசமாக நீடிக்கவில்லை. சென்னை பார்க்
ஷெராடன் ஹோட்டலில் விருந்து. பெண் வீட்டார் வந்தார்கள். யாரிடமும் பேசாமல்
தனியாக ஒரு குழுவாக உட்கார்ந்திருந்தார்கள்; போய்விட்டார்கள். மனதிற்கு
மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘ஸம்ஸ்காரா’ வெளியுலகுக்கு அனந்தமூர்த்தி
பற்றி ஒரு தோற்றம் அளித்தாலும், உண்மையில் அவர் ஒரு பாரம்பரியவாதி. அது
தவறே இல்லை. பாரம்பரியமே காலத்துக்குக் காலம் இயல்பாகவே மாறிக் கொள்கிறது.
என் மிக நெருங்கிய உறவினர்கள் குடும்பங்களில் ஜாதி மாறி, மதம் மாறித்
திருமணங்கள் நடந்திருக்கின்றன. அது பிரச்னையாகவே இருந்ததில்லை. அனந்தமூர்த்தி
இங்கிலாந்தில் முனைவர் பட்டத்திற்குப் படிக்கையில் அதே நேரத்தில்
இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும் விமர்சகருமான கைலாசபதியும் அவருடைய
ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இருவருக்கும் நீண்ட விவாதங்கள்
நடந்திருக்க வேண்டும். அனந்தமூர்த்திக்குக் கைலாசபதி மீது மிகுந்த மரியாதை
இருந்தது. கைலாசபதி அயோவா செல்ல என்னை சிபாரிசு செய்யச் சொன்னார். நான்
செய்தேன். கைலாசபதி அயோவா சென்று அங்கிருந்து சீனா சென்றார். அவரும்
அற்பாயுளில் மறைந்தவர். அனந்தமூர்த்தியை ஒரு ‘ரொமான்டிக்’ என்று
சொல்வதும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அவருடைய குருநாதரும் நலம்
விரும்பியுமான சி.டி.நரசிம்மய்யா அதற்கு நேர் எதிர். ஒரு சொல் மிகை
உணர்ச்சியாகவோ ரொமான்டிக்காகவோ இருந்தால் அவர் ஒதுக்கி விடுவார். இதில் ஒரு
வினோதம்... அவர் ‘உலக மில்டன் சங்க’த்துக்குத் தலைவர்! அவருக்கு
‘ஸம்ஸ்காரா’ பற்றிப் பெரிய அபிப்பிராயம் இல்லை. ‘‘என்னப்பா இது? ஒரே இரவில்
இவ்வளவா!’’ என்பார். ஆனால் அனந்தமூர்த்தி மீது மிகுந்த அன்பு கொண்டவர். நரசிம்மய்யா
மைசூர் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமனம் பெற வேண்டும். ஆனால்
ஒரு பேராசிரியர் குறுக்கே புகுந்து, ‘நரசிம்மய்யா அயலான், முனைவர் பட்டம்
பெறாதவர்’ என்ற காரணங்கள் காட்டி அதை நடக்க விடாமல் செய்து விட்டார்.
கடைசியில் அந்த பேராசிரியருக்கும் கிடைக்க வில்லை. விந்தையாக நரசிம்மய்யா
என்ற பெயர் கொண்ட இன்னொரு அதிகாரி நியமனம் பெற்றார்! நரசிம்மய்யாவை
எதிர்த்த அதே பேராசிரியர், அனந்தமூர்த்தி மீதும் சில கடுமையான
குற்றச்சாட்டுகள் கொணர்ந்தார். அனந்தமூர்த்திக்கு அப்போதே அரசியல்வாதி
மனப்போக்கு இருந்தது. அவர் நேராக அந்தப் பேராசிரியரின் வீட்டு வாசலில் போய்
உட்கார்ந்து தர்ணா செய்தார். அவர் இன்னொரு முறை இப்படி தர்ணா செய்த அடுத்த
நாள் நான் பெங்களூரு சென்றிருந்தேன். அனந்தமூர்த்தியிடம் சொன்னேன்,
‘‘நீங்கள் தாராளமாக தர்ணா செய்யுங்கள். உங்கள்
மனைவியையும் ஏன் தர்ணா செய்ய வைக்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘உனக்கு
எப்படித் தெரியும்?’’ என்று கேட்டார். நான் அன்றைய பத்திரிகையைக்
காட்டினேன். ‘‘ஆமாம், சரியல்லதான்’’ என்றார். ஆனால் அவர் மனைவி தானாகவே
அனந்தமூர்த்தி கூடப் போயிருக்க வேண்டும். அவருக்கு அப்போதே உடல்நிலை
சரியில்லை. நாங்கள் இருவரும் கடைசியாகப் பங்கேற்றது ம்யூனிக்
இலக்கிய விழாவில். அங்கு ‘விமோசனம்’ என்ற என் நீண்ட சிறுகதை ஜெர்மனில்
மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்பட்டது. அனந்தமூர்த்திக்கு மீண்டும்
‘ஸம்ஸ்காரா’. ‘‘இது உங்களை விடாது போலிருக்கிறது’’ என்றேன். அங்கும் அவர்
மனைவி அவரை மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார். சிலருக்கு
யாராவது நிரந்தர எதிரியாக இருக்கவேண்டும். பைரப்பா என்ற பெயரைக் கேட்டாலே
அனந்தமூர்த்திக்குக் கோபம் வந்துவிடும். ஆனால் பைரப்பாவுக்கு வலுவான
இலக்கியத் தளம் இருந்தது. உலகம் அதுவாகச் சில பங்கீடுகள் செய்கிறது. அதை
உணர்ந்து விட்டால் தேவையற்ற ஒப்பீட்டையும் மனவேதனையையும் தவிர்த்து
விடலாம்.உலகம் அதுவாகச் சில பங்கீடுகள் செய்கிறது. அதை உணர்ந்து விட்டால்
தேவையற்றஒப்பீட்டையும் மனவேதனையையும் தவிர்த்து விடலாம். படிக்க கவிஞரும்
சிறுகதை ஆசிரியருமான, ஓய்வுபெற்ற சென்னை பிரசிடென்சி கல்லூரிப்
பேராசிரியர் ராஜகோபாலின் மகன் திருமணத்தில் ‘நவீன விருட்சம்’ ஆசிரியர்
அழகியசிங்கர் (எஸ்.சந்திரமௌலி) அவர்களைச் சந்தித்தேன். அநேக இளம்
எழுத்தாளர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்த அச்சிறு பத்திரிகை ஆகஸ்ட்
மாதம் அதன் 95வது இதழைக் கொணர்ந்திருக்கிறது. (இதழைப் பெற: அழகியசிங்கர்,
புது எண் 16, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600033.) அந்தப்
பத்திரிகையில் பஞ்சாட்சரம் செல்வராஜ், ஐராவதம் போன்ற எழுத்தாளர்களும்
நிறைய எழுதியிருக்கிறார்கள். இன்று அவர்கள் இருவரும் நம்மிடையே இல்லை.
தர்மு சிவராமு, ஸ்டெல்லா ப்ரூஸ் போன்றவர்களுக்கு அழகியசிங்கர் நிறைய
உதவியிருக்கிறார். மாதம் ஒரு முறை சென்னை தி.நகரில் பாண்டி பஜார் அருகில்
உள்ள அலமேலு மங்கைத் தாயார் கல்யாண மண்டபத்தில் இலக்கியக் கூட்டமும்
நடத்துகிறார். (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
ஒரு குழு நடனப் பெண்ணின் கதை
நடனக்
குழுக்கள் என்பதை அறுபது, எழுபது ஆண்டு காலமாக எல்லோரும் ஏதாவது ஒரு
சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்பார்கள். கலாக்ஷேத்ரா ருக்மணி தேவியே
1936 அளவில் ஒரு நாட்டிய நாடகம் அமைத்து, அதில் அவரும் பங்கு பெற்றார்
என்று ஞாபகம். அதற்குப் பல ஆண்டுகள் கழித்து கலாக்ஷேத்ரா இளம் கலைஞர்களைக்
கொண்டு ‘சீதா சுயம்வரம்’ என்ற நாட்டிய நாடகம் நடத்தினார். உண்மையில் அது
எளிதில் விவரிக்க முடியாத நயம் கொண்டிருந்தது.
அதன்
பிறகு பல நாட்டிய நாடகங்கள் கலாக்ஷேத்ராவிலிருந்து காணக் கிடைத்தன.
‘சதிரைத்தான் அவர் மெருகுபடுத்தினார்’ என்று யாருக்கும் புரியாத நடன
நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தவர் சார்பில் ஒருவர், திரும்பத் திரும்ப
கலாக்ஷேத்ரா நிகழ்ச்சிகளை உதறித் தள்ளிக்கொண்டிருந்தார். ருக்மணி தேவிக்கு
அடுத்து வந்த ராதா ஸ்ரீராமும் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். நான்
பார்த்ததில்லை.
ஆனால்
என் அம்மா ராதா ஸ்ரீராம் நடனத்தைப் பார்த்து ‘பம்பரம் போல ஆடுகிறாள்’
என்று சொன்னார். சதிர், சிருங்கார ரசத்தை முன்னிறுத்தி ஆடப்படும் வெகுஜன
நிகழ்ச்சி. நான் இருமுறை கேஸ் விளக்கில் தென்னாட்டில் இரு ஊர்களில் நடந்த
சதிர் கச்சேரியைப் பார்த்தேன். சுவாமி ஊர்வலம் வரும்போது இது நடந்தது.
அங்கு சுற்றியிருந்த கூட்டத்தின் பிரதிபலிப்பு சிறுவனான எனக்கே சற்றுக்
கூச்சமாக இருந்தது.
நாட்டிய
நாடகங்களை ருக்மணி தேவிக்குப் பிறகு பலர் நடத்தியிருக்கிறார்கள். குமாரி
கமலா பல நடன நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றவர். அவரும் ‘நௌக
சரித்திரம்’ என்றொரு நாட்டிய நாடகம் நடத்தியிருக்கிறார். லலிதா - பத்மினி
சகோதரிகள் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தாலும் அவர்கள் நடத்திய, ‘ராமாயணம்’
நாட்டிய நாடகத்தைத்தான் பெருமைக்
குரியதாகக் கருதினார்கள்.
நடராஜ்
- சகுந்தலா நாட்டிய நாடக நிகழ்ச்சிகளும் மிகவும் விசேஷமாக இருக்கும்.
எனக்கு அதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. நடராஜ், ‘ஔவையார்’ படத்தில்
‘ஏலங்குழலி’ நடன நிகழ்ச்சிக்கு வடிவம் கொடுத்து, அவரே போலி சாமியார் வேடம்
தரித்து நடித்தார். மொத்தப் படத்தின் புகழில், இந்தத் தனி நிகழ்ச்சி அதிகம்
பேசப்படாமல் போய் விட்டது. ஆனால், அந்தப் பத்து நிமிடங்கள் மகத்தானவை.
வைஜயந்திமாலா ‘ஆண்டாள்’ நாட்டிய நாடகம் நடத்தினார். இந்தப் பெரிய சினிமா
நட்சத்திரங்கள், அரங்கத்தில் மக்கள் எதிரில் ஆடிப் பாராட்டு பெறுவதை
முக்கியமாகக் கருதினார்கள்.ரஷ்ய நடன மேதை அன்னா பவ்லோவா குழுவில் பங்கு
பெற்றவர் உதயஷங்கர்.
ஆனாலும்,
இந்திய மரபு நடனம் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று
‘கல்பனா’ என்ற திரைப்படத்தை எடுத்தார். அது காலத்துக்கு முந்தி வந்த
முயற்சி. ஜெமினி ஸ்டூடியோவில் கேமரா மேதை ராம்நாத், அந்தப் படத்தை பிரமிக்க
வைக்கும் முயற்சியாக அமைத்தார். பலருக்கு வியப்பாக இருக்கும். உள்ளூர்
நடனப் பெண்களில் உதயஷங்கர் தேர்ந்தெடுத்தவர்கள் லலிதா - பத்மினி. இன்னொரு
வியப்பு, ‘பியாஸா’, ‘காகஜ் கே பூல்’ தயாரித்த குரு தத், ‘கல்பனா’ படத்தில்
நாட்டியமாடி இருக்கிறார். ‘சந்திரலேகா’ படத்தில் உச்சக் கட்டமாக வரும்
முரசு ஆட்டம், உதயஷங்கர் உருவாக்கிய ‘கல்பனா’வின் விளைவு.
உதயஷங்கர்
இன்னொரு நாட்டிய நாடகப் பரிசோதனையும் செய்தார். சென்னையில் அன்று மிகப்
பிரபலமாக இருந்த காமராஜ் திறந்தவெளி அரங்கத்தில் ‘புத்த சரித்திர’த்தை
நிழல் நாடகமாக ஒரு மாதம் நிகழ்த்தினார். அதுவும் காலத்துக்கு முந்திய
முயற்சி. உதயஷங்கருக்கு அவருடைய சகோதரர் ரவிஷங்கருக்கு இருந்த அதிர்ஷ்டம்
இல்லை என்றுதான் கூற வேண்டும். இங்கு பத்மா சுப்பிரமணியத்தையும் குறிப்பிட
வேண்டும். நாட்டிய நாடகத்துக்கு இப்படித் தொடர்ச்சி இருந்து
கொண்டிருக்கிறது.
ஆனால்,
இக்கட்டுரை இப்படிப் பேரும் புகழும் பெறுபவர்கள் பற்றி அல்ல. நான் பல
ஆண்டுகள் பணிபுரிந்த ஜெமினி ஸ்டூடியோவில் ஏழெட்டு பெண்கள் ‘க்ரூப்
டான்ஸர்ஸ்’ என்றிருந்தார்கள். ஜெமினி ஸ்டூடியோ வருடத்திற்கு ஒரு படம்
எடுத்தால் அதிகம். அதில் கதாநாயகி ஒரு காட்சியிலாவது ஐந்தாறு பெண்களுடன்
விளையாடுவதோ, நடனம் ஆடுவதோ இருக்கும். அந்தப் பெண்கள் இந்த ‘க்ரூப்
டான்சர்கள்’. அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். இவர்கள் கூட்டத்தில்
கோவிந்தாவும் போட வேண்டும்; நாட்டியமும் ஆட வேண்டும். அப்படியே மறைந்து விட
வேண்டும். ஒரு ‘குளோஸப்’ காட்சி கூட இருக்காது.
இவர்கள்
மாதச் சம்பளத்திற்கு இருப்பவர்கள். ஆதலால் வேறு படங்களில் பங்கு பெற
முடியாது. இவர்களைத் தவிர ‘ஃபிரீலான்சர்கள்’ அன்று நிறைய இருந்தார்கள்.
அவர்கள் பல படங்களில் தோன்றுவார்கள். ஓரளவு சம்பாத்தியமும் கிடைக்கும்;
திரையிலும் அவர்கள் பல முறை பார்க்கப்படுவார்கள். ‘யாரடி நீ மோஹினி’ என்று
சிவாஜி கணேசன் பாடி ஆட, அவருடன் ஆட பக்கத்துக்கு ஐந்தாறு பெண்கள். தனி
நபராக இந்திப் பட நடிகை ஹெலன் ஆடினாலும், இப்படிக் குழுவாக ஆடினால்தான்
அந்தப் புத்திரனை அயோக்கியப் புத்திரனாகக் காட்சிப்படுத்த முடியும். ‘உத்தம
புத்திரன்’ நடனக் காட்சி மட்டும் ஜெமினியில் எடுக்கப்பட்டது.
அப்போது
சீனப் பிரதமர் சூ என் லாய் சென்னை வந்தார். வந்தவர், ஜெமினி ஸ்டூடியோவைப்
பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஸ்டூடியோதான் ஜெமினி.
எடுக்கப்படும் திரைப்படம் யாருடையதோ! வீனஸ் பிக்சர்ஸின் ‘உத்தம புத்திரன்’
பாடல் காட்சி ஷூட்டிங்கைத்தான் அவர் பார்த்தார். அடுத்து பதினைந்து நாட்கள்
கழித்து வந்த தலாய் லாமாவும் ஜெமினி ஸ்டூடியோவைப் பார்க்கவேண்டும் என்று
பிரியப்பட்டார். அவரும் இந்த ‘மோஹினி கண்மணி’தான் பார்த்துவிட்டுப் போனார்.
அப்போது
திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை. சூ என் லாய்க்கு ‘உத்தம
புத்திரன்’ கதையும் பிடிக்கவில்லை; ‘கண்மணி மோஹினி’யும் பிடிக்கவில்லை.
ஆனால், தலாய் லாமா ரசித்தார். அதன் பலன்தான் போலிருக்கிறது, திபெத் அவரை
அகதியாக்கி விட்டது.சென்னை தேனாம்பேட்டையில் நானறிந்தவரை ஏழைகள், பரம
ஏழைகள் வசித்தார்கள். அங்கு ஒரு வீட்டில் சாய் பஜன் நடக்கும். அதற்குப்
போய்க்கொண்டிருந்தேன். ‘அண்ணா... அண்ணா...’ என்றொரு பெண் குரல் கேட்டது.
ஒரு பழைய வீட்டின் மாடிப்படியிலிருந்து ஜெமினி குழு நடனப்பெண் ஒருத்திதான்
கூப்பிட்டிருக்கிறாள். நான் மாடிப்படி ஏறி அவள் வீட்டிற்குச் சென்றேன். அது
மிகச் சிறு அறை.
தரையில்
ஒரு குழந்தை. ‘‘டீ சாப்டுட்டுப் போங்க’’ என்றாள். யாரையோ வாங்கி வரச்
சொன்னாள். ஜெமினி குழுவில் அவள் ஒருத்தி தான் சிரித்த முகமாக இருப்பாள்.
குழந்தை? ஒரு பிரபல வில்லன் நடிகர், அவளுக்குக் கொடுத்த பரிசு. ‘‘குழந்தையை
வச்சுண்டு நீ எப்படி தினம் வர்றே?’’ என்று கேட்டேன். ‘‘கீழ்
வீட்டுக்காரங்க பாத்துப்பாங்க’’ என்றாள். சுவரில் ஒரு ஆணியில் ஒரு ஷர்ட்
தொங்கிக் கொண்டிருந்தது.
‘‘யார்,
சுந்தரமா?’’ என்று கேட்டேன். ஆமாம் என்று தலையை அசைத்தாள். இவ்வளவு
சிக்கலான சூழ்நிலையில், அவளுக்கு எனக்கு டீ வாங்கித் தரத்
தோன்றியிருக்கிறது. அந்த இல்லாமையிலும் அது எவ்வளவு கம்பீரம்!இன்னும் ஓரிரு
ஆண்டுகளில் இந்த மாதச் சம்பளம் போய் விடும். அது அவளுக்கும் தெரியும்.
படிக்க
ஓர்
ஆங்கில நாளேட்டில், வரலாற்றில் அதிகம் வாங்கிப் படிக்கப்பட்ட புனைகதைகள்
பட்டியலிடப்பட்டிருந்தன. முதலிடம் சார்லஸ் டிக்கென்ஸின் ‘இரு நகரங்களின்
கதை’. நானும்தான் அதை எவ்வளவு முறை படித்திருப்பேன்! சார்லஸ் டிக்கென்ஸ்
பெரிய கோட்பாடு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.
விறுவிறுவென்று
எழுதிப் போவார். உள்ளத்தில் தயையும் பரிவும் இருந்தால், எழுத்து
வெளிப்பாடும் அதைக் கொண்டிருக்கும். ஒரு முறை ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி
பிரஸ் மலிவு விலை அமரப் படைப்புகள் வரிசையில் நூறு ரூபாய்க்கு இதையும்
சேர்த்துப் பல நூல்களை வெளியிட்டது. இன்னும் பிரதிகள் இருக்குமா?டிக்கென்ஸ்
கடினமான எழுத்தாளர் அல்ல. ஒரு கெட்டிக்காரத்தனமும் இருக்காது. ஆனால், நல்ல
இதயம் இருக்கும்.
சூ
என் லாய்க்கு ‘உத்தம புத்திரன்’ கதையும் பிடிக்கவில்லை; ‘கண்மணி
மோஹினி’யும் பிடிக்கவில்லை. ஆனால், தலாய் லாமா ரசித்தார். அதன் பலன்தான்
போலிருக்கிறது, திபெத் அவரை அகதியாக்கி விட்டது.
(பாதை நீளும்...) அசோகமித்திரன்
எம்டன் முதல்
உலகப் போர் காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் முடியும் வரை - அதாவது
சுமார் முப்பது ஆண்டுகள் - தென்னாட்டில் தமிழர், மலையாளிகள் மற்றும்
தெலுங்கர் மத்தியில் ‘எம்டன்’ என்ற சொல்லுக்கு ஒரு விசேஷ கௌரவம் உண்டு.
ஒருவரைப் பார்த்து, ‘‘நீ எம்டன்டா’’ என்று சொன்னால் அவருக்கு உச்சி
குளிர்ந்து விடும். எம்டன் என்பது பெரிய செயல் வீரரைக் குறிக்கும்
சொல்லாகிவிட்டது. அந்த எம்டனின் நூற்றாண்டாக இந்த ஆண்டு செப்டம்பர் 22ம்
தேதியை சிலரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்தது. எம்டன்
ஒருவருடைய பெயர் அல்ல. அது ஒரு ஜெர்மன் கப்பலின் பெயர். அந்த வகையை
‘டெஸ்ட்ராயர்’ என்கிறார்கள். இது தவிர யுத்தக் கப்பல், விமானம் தாங்கிக்
கப்பல், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் கப்பல்கள் என்று பல வகைக்
கப்பல்கள் உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது என் உறவினர் ஒருவர்
கப்பற்படையில் பணி புரிந்தார். அவர்களுடைய சீருடை வெள்ளை வெளேரென்று
இருக்கும். கழுத்துப்
பட்டி அல்லது காலர் இல்லாமல் ‘ப’ வடிவத்தில் இருக்கும். வெள்ளை அரை
டிராயர். அகலமான இடுப்புப் பட்டி. கால் மிகவும் குட்டை. தனித்துக் கட்டும்
உடையாக இருக்க வேண்டும். அதாவது உடை எந்த நேரத்திலும் கை, கால்களின்
இயக்கத்தைத் தடுப்பதாக இருக்கக்கூடாது. முதல் உலகப் போர் 1914ம்
ஆண்டில் தொடங்கியவுடன் எங்கெங்கோ இருந்த ஜெர்மன் கப்பல்கள் எல்லாம் தங்கள்
நாட்டருகே இருக்கக் கிளம்பின. இந்த ‘எம்டன்’ கப்பலின் தலைவர் வான் முல்லர்
மட்டும் கடலில் சற்று ‘விளையாடி விட்டு’ ஜெர்மனி வரத் தீர்மானித்தார். அவர்
பிரிட்டிஷ் அரசை மிகவும் வெறுத்தாலும், பிரிட்டிஷ்காரர்களை கண்ணியமாக
நடத்தியதாகத் தெரிகிறது. இதில் ஆச்சரியமில்லை. பிரிட்டிஷ்
மன்னரான ஜார்ஜ் வம்சமே ஜெர்மானியக் குடும்பம். முதலாம் ஜார்ஜுக்கு
ஆங்கிலமே தெரியாது. இரண்டாம் உலகப் போர் முடிகிற காலத்தில் ஹிட்லர்
பிரிட்டிஷ்காரர்களிடம் சரண் அடைய முன்வந்தான். ஆனால், சோவியத் ரஷ்யாவுடன்
யுத்தம் தொடர விரும்பினான். பிரிட்டன் பிரதமர் சர்ச்சில், ‘நிபந்தனையற்ற
சரணாகதிதான் ஒரே வழி’ என்றார். எம்டன் கப்பலுக்கு முல்லர் சில
இலக்குகளை வைத்திருந்தார். முதலில் இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கு
இருக்கும் செல்வாக்கு மீது கறை படிய வைக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
அப்போது அவர் கப்பல் பசிபிக் பெருங்கடலில் இருந்தது. அவர் அங்கிருந்து
வங்காள விரிகுடாவுக்கு வந்தார். பிரிட்டனின் அகம்பாவத்தைத் தட்டிக் கேட்க
அவர் தேர்ந்தெடுத்த துறைமுக நகரம், அன்று மதராஸாக இருந்த சென்னைப்
பட்டினம். எம்டன் கப்பலில் செண்பகராமன் இருந்ததாகத் தெரிகிறது. கப்பலின்
பீரங்கிகளைச் சென்னையைக் குறிபார்த்து வைத்து முல்லர் சுட ஆரம்பித்தார்.
அவர் குறி தவறவில்லை. முதல் குண்டே பிரிட்டிஷாரின் தண்டையார்பேட்டை பர்மா
ஷெல் எண்ணெய்க் கிடங்குகள் மீது விழுந்தது. அவை பற்றி எரிய ஆரம்பித்தன.
அதன் பிறகு சுமார் அரை மணி நேரம்... நிமிடத்திற்கு நான்கு குண்டுகள் என்ற
வீதத்தில் கப்பலின் பீரங்கிகள் பொழிந்தன. என்
அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்... எம்டன் அரை மணி நேரம் குண்டு மழை
பொழிந்தும் அதை எதிர்க்கச் சென்னையில் வழியில்லை. முதல் உலகப் போரை இயக்கிய
முக்கிய தேசமாக பிரிட்டன் இருந்தாலும், இந்திய மண்ணுக்குப் போர் வராது என
நம்பிக் கொண்டிருந்தார்கள். பர்மா ஷெல் கிடங்குகள் சுமார் ஆறு மாதங்கள்
எரிந்து கொண்டிருந்தன. அந்தத் தாக்குதலில் தென்னாடு
வெலவெலத்துவிட்டது. அப்போது என் அப்பாவுக்குப் பதினைந்து வயது. அவருடைய
அப்பா போய் விட்டார். அந்த நாட்களில் ஐம்பது ஆண்டுகள் ஓர் ஆண் உயிர்
வாழ்ந்தால் வியப்படைவார்கள். என் அப்பாவுடைய இரு சித்தப்பாக்களும்
சாவுக்குத் தயார் என்ற நிலையில் இருந்தார்கள். என்
அப்பா பத்தாவது முடிக்கவே மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிகிறது. சொற்ப
கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல் போக, அவருடைய அப்பா பணிபுரிந்த பள்ளியிலேயே
அவரை விலக்கி விட்டார்கள். யார் யாரிடமோ ஒன்று, அரை என்று கடன் பெற்று
சீர்காழியில் சிரமப்பட்டு பத்தாம் வகுப்பு முடித்தார். யுத்தம்
தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுமார் பத்து லட்சம் இந்தியர்கள் பிரான்ஸ்
நாட்டிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் சிப்பாய்களாக இருந்து போர்
புரிந்தார்கள். (முதல் உலகப் போரில் கலந்து கொண்ட இந்தியர்கள் இத்தனை பெரிய
எண்ணிக்கை என்றாலும், இந்த யுத்தம் தமிழ் சினிமாவிலோ, படைப்பிலக்கியத்திலோ
அதிகம் பிரதிபலிக்கவில்லை. இல்லவே இல்லை என்று கூடச் சொல்லலாம்!)
இதற்கிடையில் என் அப்பாவின் இரு சித்தப்பாக்களும் சிறு சிறு குழந்தைகளை
விட்டு விட்டு இறந்து விட்டார்கள். அன்று
பரம தரித்திரத்திலும் யாரும் குடும்பப் பொறுப்பைத் தவறவிட மாட்டார்கள்.
இப்போது என் அப்பாவின் முதல் பொறுப்பு, இரு தம்பிகளை ஏதாவது வேலைக்குத்
தயாராகும் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும். என் அப்பா விட்டுச் சென்ற
நூல்களைப் பார்த்தால், அவருக்கு ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் நிறைய
ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம்
இருக்கு மாடு மேய்க்க’ என இயலாமையை வெளிப்படுத்த சொல்வார்கள். அப்பா
தனது ஒரு தம்பியை மின் வேலைகள் கற்க வைத்தார். அப்போது யுத்தம் முடியும்
தறுவாயில் இருந்தது. யார் சொன்னார்கள், யார் தகவல் கொடுத்தார்கள் என்று
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் அப்பா ஒரு நாள் செகந்தராபாத் போய்
விட்டார். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் யாரும் செகந்தராபாத் என்ற ஊரின்
பெயரைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள். செகந்தராபாத் சென்ற ஆறாவது
மாதத்தில் ஐந்து ரூபாய் அனுப்பி முதல் தம்பியை அவரிடம் அழைத்துக் கொண்டார்.
இன்னும் ஆறு மாதங்கள் ஆவதற்குள் இரண்டாம் தம்பியையும் அழைத்துக் கொண்டார்.
அவர் குடும்பம் வரை அவர் எம்டனாக இருந்து விட்டார். சென்னையைத்
தாக்கியபிறகு எம்டனில் சின்னதாக ஏதோ ஒரு பிரச்னை. நடுக்கடலில் கப்பலை
நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருக்க, முல்லர் மட்டும்
தனியாகக் கிளம்பி சென்னை நகருக்குள் வந்தார். அங்கே ஒரு குதிரையை
அமர்த்திக் கொண்டு ஒரு ஜெர்மன் குடும்பத்தைச் சந்தித்தார். அந்தக்
குடும்பம் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. அதன்பின் முல்லர் கப்பலுக்குத்
திரும்பி, கோலாலம்பூர் சென்றிருக்கிறார். ஆகஸ்ட் 1914 தொடங்கி மூன்று
மாதங்களுக்குள் மொத்தம் முப்பது கப்பல்களை மூழ்கடித்திருக்கிறார். முதலில்
சில நாட்கள் பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளுக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை. ஒரே ஒரு கப்பல் இவ்வளவு அட்டகாசங்கள் புரியக் கூடுமா? அப்போது
சர்ச்சில்தான் பிரிட்டிஷ் கடற்படைக்குத் தலைவர். அவருடைய உத்தரவின் பேரில்
பதினைந்து கப்பல்கள் ‘எம்ட’னைச் சூழ்ந்து ஆஸ்திரேலியா அருகே அதை
மூழ்கடித்தன. கப்பலில் உயிரோடு இருந்த மாலுமிகள் கைது செய்யப்பட்டனர்.
அங்கும் பெருமை இல்லை.அந்தக் கைதிகளில் ஐம்பது பேர் சிறையிலிருந்து
தப்பித்துக் கொண்டு ஜெர்மனிக்கே போய் விட்டனர். அவர்களது நீண்ட பயணம்,
கற்பனைகளுக்கும் சாத்தியமாகாத ஒரு சாகச வரலாறு! ஆகஸ்ட்
1914 தொடங்கி மூன்று மாதங்களுக்குள் மொத்தம் முப்பது கப்பல்களை
மூழ்கடித்திருக்கிறார். முதலில் சில நாட்கள் பிரிட்டன், ஆஸ்திரேலிய
நாடுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு கப்பல் இவ்வளவு
அட்டகாசங்கள் புரியக் கூடுமா? படிக்க சி.மோகன் அவர்களின்
விசேஷ இலக்கிய அறிவையும் உணர்வையும் தமிழ்ப் பிரசுர உலகில் இருப்பவர்கள்
நன்கு அறிவார்கள். என்னுடைய நெடுங்கதையாகிய ‘தண்ணீர்’, அவருடைய
திருத்தங்களால் மெருகு பெற்றது. அவருடன் நான் ஒரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு
தயாரிப்பதில் பங்கு பெற்றேன். அவருடைய மொழிபெயர்ப்பில் புகழ்பெற்ற ஒரு சீன
நாவல் தமிழில் வெளிவந்திருக்கிறது. ‘ஓநாய் குலச்சின்னம்’ சீன
மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் லட்சக்கணக்கான வாசகர்களை
மகிழ்வித்திருக்கிறது. நவீனப் படைப்பிலக்கியத்தில் இது சற்றுத் தீவிரமான
நூல். ஜியாங் ரோங் என்பவர் எழுதிய இந்த நூலைச் சென்னை அதிர்வு பிரசுரம்
வெளியிட்டிருக்கிறது. பிரதிகள் எளிதில் கிடைக்கக்கூடிய இடம் டிஸ்கவரி புக்
பேலஸ், எண்.6, முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர், சென்னை-600078. பேச:
9940446650 (பாதை நீளும்...) அசோகமித்திரன்
பேட்டி
எழுபத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு தலைவரையோ பிரமுகரையோ ஒரு பத்திரிகைக்காரர்
கண்டு கேள்விகள் கேட்டு பதில்களைப் பிரசுரித்தால் அதைப் ‘பேட்டி’ என்றே
அனைவரும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். இன்று சில பத்திரிகைகளில் இத்தகைய
நிகழ்ச்சிகளை நேர்காணல்கள் என்று அழைக்கிறார்கள். காணல் என்பது
பேசப்படுவதற்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் நேருக்கு நேர்
பார்த்தால் பேசாமல் இருப்பார்களா என்றும் கேட்கலாம். என் வரையில்,
பேசுபவர்கள் மிகக் குறைவு. ஒன்று
தவறாமல் நேர்ந்து விடுகிறது. எந்த அரசியல் பிரமுகரும் பேட்டி வெளியான
பிறகு ‘‘நான் சொன்னதைத் தவறாக வெளியிட்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லாமல்
இருப்பதில்லை. நான் வியந்ததுண்டு. தவறு ஒரு முறை நடக்கும், இரு முறை
நடக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாக நடக்க முடியுமா? ‘பல
சந்தர்ப்பங்களில் பிரமுகர் உளறிக் கொட்டிவிட்டு தவறைப் பத்திரிகையாளன் மீது
போடுகிறார்’ என்பதே இன்றும் என் எண்ணம். ஆனால் சில பத்திரிகைகள்
வேண்டுமென்றே திருத்திப் போடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. நானறிந்து
காந்தி பத்திரிகைக்காரர்கள் மீது தவறு என்று சொன்னதில்லை. ராஜாஜி
சொன்னதில்லை. ஆனால் இன்று இது சர்வ சகஜமாகிவிட்டது. எனக்குத்
தெரிந்து நேர்காணல் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ‘சுபமங்களா’
பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள். அந்தப்
பத்திரிகையின் தலையங்கம் போன்ற பல விஷயங்கள் தீவிர இடதுசாரி போல
இருந்தாலும், அதன் ஆசிரியர் ஓர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக
அறியப்படுவதையே விரும்பினார். அப்பத்திரிகையின் பேட்டிகள் - அதாவது
நேர்காணல்கள் - எழுத்தாளர்கள் சந்திப்பாகவே இருந்தன. அந்த
நேர்காணல்களின் தொகுப்பை ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்ற தலைப்பில்
அப்பத்திரிகையின் இணை ஆசிரியர்களில் ஒருவர் (இளையபாரதி) கொணர்ந்தார்.
ஆச்சரியகரமாக அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நூலின் வெற்றியோடு
நேர்காணல் என்ற சொல்லும் தமிழ்ப் பத்திரிகைகளின் அகராதியில் இடம்
பிடித்துவிட்டது. நேர்காணல்கள் எல்லா நேரங்களிலும் பேட்டி
காணப்படுபவரைப் பெருமைப்படுத்துவதற்காக என்று நினைக்கக்கூடாது. பல
சந்தர்ப்பங்களில் அதன் அடிநாதம் விஷமமாக இருக்கும். அறியாமல் சிக்கிக்
கொள்கிறவர்கள் நிறைய! என்னுடைய நீண்ட வாழ்க்கையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரு மொழிகளிலும் இந்த விஷமத்தனத்திற்கு ஆளாகி இருக்கிறேன். ஒருவரை
என் நண்பனாக நினைத்துப் பேசியதைப் பேட்டியாக மாற்றி, சம்பந்தா சம்பந்தம்
இல்லாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறேன். இதில் உள்நாடு,
வெளிநாடு என்ற பாகுபாடு இல்லை. இன்னும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். என்
படைப்புகள் நிறையவே இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஏதாவது சொன்னால் நியாயம்.
ஆனால் தாக்குகிறவர்களுக்குப் படிக்க நேரம் இருக்காது. இலக்கியப்
பேட்டிகளை ஒரு விசேஷ கலையாகச் செய்தவர் கள் ‘பாரிஸ் ரிவ்யூ’ என்ற சிறு
பத்திரிகையின் ஆசிரியர்கள். பெயர்தான் பாரிஸ். பத்திரிகை முழுக்க முழுக்க
ஆங்கிலம். அவர்களுக்குப் பெரிய எழுத்தாளர்களின் படைப்புளை வெளியிட வேண்டும்
என்று ஆவல். ஆனால் பெரிய எழுத்தாளர்களுக்குரிய சன்மானம் தர இயலாது. இந்தச்
சூழ்நிலையில் ஒரு உதவி ஆசிரியருக்கு, ‘எழுத்தாளர்களின் பேட்டி
வெளியிடலாம்’ என்ற யோசனை தோன்றியது. அதன்படி
ஓர் எழுத்தாளரின் எல்லாப் படைப்புகளையும் பேட்டி காண்பவர் நன்கு படித்து
விடுவது. பேட்டியின் முக்கிய பாகம், அவரது படைப்புகள் பற்றி இருக்கும்.
பின்குறிப்பாக எழுத்தாளர் எப்படி எழுதுகிறார் என்பது பற்றிக் கேள்விகள்
இடம்பெறும். முதலில் யாருக்கும் அந்த பேட்டிகளுக்குப் பெரிய வரவேற்பு
இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அந்த பேட்டிகள் வரத்
தொடங்கியதிலிருந்து வாசகர்கள் நூல்களைத் தேடித் தேடி வாங்கிப்
படித்தார்கள். பேட்டி காண்பவர்கள் அந்த ஆசிரியரின் படைப்புகளை
எல்லாம் படித்து இருந்தபடியால், பேட்டி இருபது, முப்பது, ஐம்பது பக்கங்கள்
கூட நீண்டன. இவை படிப்போருக்கு நிறைய தகவல்கள் தந்ததோடு, எழுதத்
தொடங்குவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஆங்கில, அமெரிக்க
எழுத்தாளர்களுக்குப் பிறகு அவர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் பேட்டி
கண்டார்கள். இதன் மூலம் மொழிபெயர்ப்புகள் பெருகின. இரண்டாம்
உலக யுத்தம் முடிந்தபிறகு பல ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளில் ஒருவித வெறுமை
நிலவியது. இளைஞர்கள் வாழ்வதற்குரிய உற்சாகம், காரணம் கிடைக்காமல் திசையற்று
உலவிக்கொண்டிருந்த வேளையில், இலக்கியம் ஒரு புதிய அர்த்தம் கொடுத்தது.
எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர்கள், திரைப்பட
இயக்குனர்களுக்கும் அழிவிலும் இடிபாடுகள் மத்தியிலும் ஒரு புதிய பாதை
வகுக்க முடிந்தது. யுத்தம்
ஒன்று ஆறு ஆண்டுகள் நடந்து, பல நாடுகளை 95 சதவீதம் அழித்திராவிட்டால்,
கோதார்த், டி சிகா, துரூஃபா போன்ற கலைஞர்கள் உருவாகியிருப்பார்களா என்பது
ஒரு கேள்வி. அந்தத் தலைமுறைக்காரர்களுக்கு அமெரிக்கப் போர் வீரர்கள் தின்று
போட்ட சாக்லெட் காகிதத்தைப் பொறுக்கியெடுத்து உண்பது அசாதாரணமல்ல. நாஜிகள்
ஐரோப்பாவை நிர்மூலமாக்கியபோது அவர்களையும் அழித்துக் கொண்டார்கள். னக்கு
அந்தத் தலைமுறையினரையும் பார்த்துப் பழக வாய்ப்புக் கிடைத்தது. என்னை
ஏதேதோ காரணங்களுக்குப் பேட்டி கண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று, இந்தி மொழி
பற்றியது. நான் முதலில் படித்தது ஒரு கிறிஸ்தவ, தெலுங்குப் பள்ளி. ஆனால்
மூன்றாம் வகுப்பில் வரலாறு, உலகியல் ஆங்கிலத்தில். விவிலிய வகுப்பு
தெலுங்கில்! அந்தப் பள்ளியை விட்டு மாறியபோது எனக்குப் பெரிய விடுதலை என்று
நினைத்தேன். ஆனால் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க
வேண்டியிருந்தது. வட இந்தியாவில் பெரிய பதவிகளுக்கு மாற்றலாகிப்
போகிறவர்கள் அதிகம் சிரமப்படுவதில்லை. ஆனால் எழுத்தர், உதவியாளராகப்
போகிறவர்கள் வேற்று மொழியில் அவதிப்படுகிறார்கள். ஆறு
மாத காலத்தில், அவர்கள் வாழ்க்கையை அதிகம் சங்கடப்படாமல் வைத்திருக்கும்
அளவுக்குப் புது மொழியைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஆதலால் மொழி
தேவையையும் சார்ந்திருக்கிறது. நான் ஏராளமான பேட்டிகளை
எதிர்கொண்டிருக்கிறேன். ‘‘போதும்... போதும்...’’ என்றபோதும்
மீண்டும் ஒரு பேட்டி. பல தவறுகள் அதில் இருந்தன. நான் யோசித்தேன். என் இடது
காது கேட்கும் ஆற்றலை இழந்துவிட்டது. அது காரணமோ?! ‘கேள்விகளை எழுதித்
தாருங்கள், பதில்களை எழுதித் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். யாருக்கும்
சங்கடமில்லை. ஆனால் கேள்விகள் எழுத உழைப்பு தேவைப்படுகிறது. பேட்டிகளில்
வரும் செய்திகள் எல்லாமே உண்மையென்று நம்பி விடக்கூடாது. பல பேட்டிகள் ஏதோ
நீதிமன்றக் குறுக்கு விசாரணை போல அமைந்து விடுகின்றன. பல நிருபர்கள்
ஒலிப்பதிவு இயந்திரங்களை முடுக்கிவிட்டு, அதுவே எல்லாப் பொறுப்பு களையும்
ஏற்றுக்கொண்டு விடும் என்று நம்புகிறார்கள். நாம் பல சந்தர்ப்பங்களில்
அன்புடன் கண்டிப்பதையோ அல்லது நம் தொனியையோ பேட்டி எழுத்து பிரதிபலிக்க
முடியாது. புனைகதையில் இது சாத்தியம். நேர்காணல்கள் எல்லா
நேரங்களிலும் பேட்டி காணப்படுபவரைப் பெருமைப்படுத்துவதற்காக என்று
நினைக்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில் அதன் அடிநாதம் விஷமமாக இருக்கும். படிக்க... மா
என்கிற பத்மா அவர்கள் படிப்பு முடித்ததிலிருந்து, அதிக வசதியற்ற பெண்கள்,
குழந்தைகள் ஆகியவர்களின் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும்
பாடுபடுகிறவர். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநராகப்
பணியாற்றியவர். சுய முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு பல நூல்கள்
எழுதியவர். அவருடைய சமீபத்திய நூல், ‘கேள்வி கேள்! பதில் தேடு!’ நான்
சிறுவனாக இருந்த நாட்களில் இத்தகைய நூல்கள் கிடையாது. சிறுவர்களுக்காக
எழுதிய வரலாற்று வீரர்கள் கதைகளையும், புராண இதிகாசங்களையும் எங்களுக்குத்
தோன்றிய வகையில் அர்த்தப்படுத்திக் கொண்டு நாங்களாகச் சில மதிப்பீடுகளை
ஏற்படுத்திக்கொண்டோம். ‘கேள்வி கேள்! பதில் தேடு!’ நூலுக்கு தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் பொருள்
பொதிந்த அணிந்துரை தந்திருக்கிறார். நூலை வெளியிட்டவர்கள், எஸ்.ஆர்.வி.
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி-621112. சென்னையில்
பிரதிகள் கிடைக்குமிடம்: மாயா படைப்பகம், 39, அழகிரிசாமி சாலை, கே.கே.நகர்,
சென்னை-600078. தொ.பேசி: 94440 02725. (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
மாற்று உறுப்பு தாட்சண்யம்,
பச்சாத்தாபம் ஆகியவை பொறுத்துக் கொள்ளக்கூடியவை என்றாலும், சில
தருணங்களில் மிகுந்த வேதனைக்கு இடமளித்து விடுகின்றன. கடந்த இரண்டு
மாதங்களில் என்னால் இன்னொருவருக்கு அவப்பெயர் வந்து விடுகிறதே என்று நான்
பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணம் தாட்சண்யம், நான் முடியாது என்று
சொன்னால் யாரும் தவறு காண முடியாது. ஆனால் முடியாது என்று சொல்லத் தெரிய
வில்லை. இந்த அழகில் ஓர் அறுவை சிகிச்சை வேறு. இரு
மாதங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே என் காலத்தைத் தள்ளி
விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு பொது டாக்டரிடம் சொல்லி விட்டேன்.
அவர் உடனே ஒரு விசேஷ டாக்டரைப் பார்த்தே ஆக வேண்டும் என்றார். விசேஷ
டாக்டர் எடுத்த எடுப்பிலேயே என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார், ஏன்
இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று! ‘‘போங்கள், இந்த மூன்று பரிசோதனைகளைச்
செய்து வாருங்கள்’’ என்றார். மூன்று பரிசோதனைகளுக்குப் பிறகு இன்னும்
மூன்று, அப்புறம் நான்கு. மொத்தம் பதிமூன்று பரிசோதனைகள். அதில்
ஒன்று, என் இதயத்தின் செயல்பாடு பற்றி. நான் பிறந்ததிலிருந்து உதிரத்தை
உள்வாங்கி வெளியே தள்ளிக் கொண்டிருந்த இதயத்தின் ‘லப்டப்’பை காதால்
கேட்டேன். இறுதியாக அந்த விசேஷ டாக்டரை இப்பரிசோதனை முடிவுகளுடன்
பார்த்தேன். அடுத்த நாளே அறுவை சிகிச்சை. என் அரை மயக்க நிலையில் ஆபரேஷன்
மேஜையில் இருந்தபடியே அந்த டாக்டரை, ‘‘நீங்கள் ஏன் எப்போதும் டி-ஷர்ட்
போட்டுக்கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவர் சிறிதும்
கோபித்துக்கொள்ளாமல், ‘‘ஆபரேஷன் தியேட்டரில் முழுக்கைச் சட்டை
போட்டுக்கொள்ள முடியாதல்லவா?’’ என்றார். பரிசோதனைகள்
கழுத்திலிருந்து அடி வரை. இதயம் மிகவும் நன்றாக இருந்தது. நுரையீரல்கள்
அப்படியே. நான் ஐம்பது ஆண்டு ஆஸ்துமாக்காரன் என்பதற்கு அடையாளம் இல்லை.
கல்லீரலும் அப்படியே. நான் குழந்தையாக இருந்தபோது வயிற்றில் கட்டி விழுந்து
ஜம்மியின் பத்து ரூபாய் மருந்து சாப்பிட்டவன். அப்புறம் சிறுநீரகங்கள்.
கடைசியாக, பான்க்ரியாஸ். இது ஒழுங்காக வேலை செய்யாததால் நீரிழிவு நோய்
வந்து விடுகிறது. எனக்கு
உடனே தோன்றியது, ‘இரு உறுப்புகளை உடனே தேவைப்பட்டோருக்குக் கொடுத்து
விடலாமே’! கல்லீரலில் பாதி, சிறுநீரகங்களில் ஒன்று கொடுத்து விடலாம்.
எனக்கோ வயது 83. எஞ்சியிருக்கும் நாட்களுக்கு மிஞ்சியதோடு இருந்துவிட்டு
இறந்த பிறகு மற்ற உறுப்புகளைக் கொடுத்து விடலாம். இதை டாக்டரிடம் சொன்னேன்.
என் முகத்தைப் பார்த்துவிட்டுப் பதிலேதும் சொல்லவில்லை. இப்படித்தான்
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் என் தம்பிக்கு மாற்றுச் சிறுநீரகம் வேண்டும்
என்று சொன்னபோது, ‘‘என் சிறுநீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றேன்.
யாரும் ஒரு பதிலும் சொல்லவில்லை. என் தம்பி மத்திய அரசு ஊழியன். அவன் ஒரு
தனியார் மருத்துவமனையில் இருந்தவரையில் உடல்நிலை யில் முன்னேற்றம்
இருந்தது. ஆனால் அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எந்த
சலுகையும் கொடுக்காது என்று ஓர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தான். ஒரு
வாரம் வரை ஒரு சிகிச்சையும் தரவில்லை. சென்னைப் பொது மருத்துவமனை முன்னாள்
டீனின் மனைவி ஒரு மொழிபெயர்ப்பாளர். அவரிடம் சொன்னேன். அடுத்த
நாளே என் தம்பிக்கு ‘பெரிடோனியல் டயாலிஸிஸ்’. உடலில் எங்கெங்கெல்லாமோ
குத்திக் குழாய்கள் இணைத்து எங்கெங்கோ திரவம் போய்க்கொண்டிருந்தது. ஆனால்
காலம் கடந்து விட்டது. அடுத்த நாள் அத்தனை குழாய்களுடன் என் தம்பி உயிர்
பிரிந்தது.அரசு மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்துச் செல்வது அவ்வளவு
எளிதல்ல. எனக்குத் தெரிந்த ஓர் உயர் காவல்துறை அதிகாரியிடம் சொன்னேன்.
அப்போது மொபைல் போன்கள் கிடையாது. ஒவ்வொரு முறையும் வெளியே வந்து ஒரு
கடையிலிருந்து போன் செய்ய வேண்டும். கடைசியாக அவர் கிடைத்தார். உடனே ஒரு
போலீஸ் வண்டியில் வந்தார். அன்று வார்டில் இறந்தாலும் உடலைச்
சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து எடுத்துச் செல்லவேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் பேரம். காவல் அதிகாரியின் உதவியால் நாங்கள்
வார்டிலிருந்து எடுத்துப் போலீஸ் வண்டியில் வைத்தோம். அவர் ஓர் ஆம்புலன்ஸ்
ஏற்பாடு செய்தார். அப்போது மருத்துவமனையின் சவக்கிடங்குக்காரர்களுக்கும்
வார்ட்காரர்களுக்கும் பெரிய சண்டை. ‘பிணத்தை எப்படி சவக்கிடங்குக்குக்
கொண்டு வராமல் வெளியே எடுத்துப் போக முடியும்?’ காவல் உயர் அதிகாரி
இருக்கும்போதே இந்தச் சண்டை. இதில்
எனக்கு ஒன்று புரியவில்லை. ‘‘நான் சிறுநீரகம் தருகிறேன்’’ என்று சொன்னேன்.
ஏன் யாரும் காதில் போட்டுக்கொள்ள வில்லை? இப்போதும் நான் உறுப்பு தானம்
தருகிறேன் என்றபோதும் யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மருந்து,
மருத்துவம், மருத்துவர் ஆகிய மூன்றில் இளம் வயதினருக்குக் கூடத் தனி
அபிப்பிராயம் இருக்கிறது. நான் தன்வந்தரி என்று நினைக்கும் டாக்டரின்
பெயரைச் சொன்னவுடனேயே, ‘‘ஓ, அவரா?’’ என்று அலட்சியமாகச்
சொல்லிவிடுகிறார்கள். ஒருமுறை நானும் என் தம்பியும் (அவன் உயிரை
விட்ட) ஆஸ்பத்திரியின்) புற நோயாளிகள் பகுதியில் பகல் இரண்டு மணியள வில்
நோயாளிகள் காத்திருக்கப் போடப்பட்டிருந்த பென்ச்சில் உட்கார்ந்திருந்தோம்.
எங்களுடன் இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர். ஒருவர் சர்வ சகஜமாக உள்ளே
சென்று, நோயாளிகளின் தகவல் அட்டைகளை எடுத்து வந்து, ஒரு வரிசைப்படி
வைத்தார். ‘‘நீங்கள் மருத்துவமனை உதவியாளரா’’ என்று கேட்டேன். ‘‘இல்லை.
மருந்து வாங்க வந்தேன்’’ என்றார். நாங்கள்
மேற்கொண்டு பேசினோம். அவருக்கு அவர் மனைவி ஒரு சிறுநீரகம் தானமாகக்
கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க
வேண்டும். அந்த அரசு ஆஸ்பத்திரி யில் அவர் இனாமாக மருந்து வாங்கிக் கொள்ள
வழியுண்டு. அதுதான் அவரை அந்த ஆஸ்பத்திரியின் ஓர் ஊழியன் போலப் பணியாற்ற
வைத்தது. திடீரென்று அவர் ஆவேசம் வந்தது போலக் கத்த ஆரம்பித்தார்.
‘‘வேண்டாம், சார். உங்க தம்பிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யாதீங்க. அப்படி உயிர்
வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வேண்டாங்க. அவனும் என் மாதிரி வாரா வாரம் இந்த
பென்ச்சுல ஒக்காந்து அந்த அயோக்கியன் கிட்டே பிச்சை மாதிரி மருந்து
வாங்கிக்கணும். இது என்ன பொழைப்புங்க? வேண்டாங்க. இருக்கிற வரைக்கும்
நிம்மதியா இருந்துட்டுப் போகச் சொல்லுங்க’’ என்று கத்தினார். பெரிய கும்பல்
கூடிவிட்டது. நானும் என் தம்பியும் பிரமித்து உட்கார்ந்திருந்தோம். அவர்
சொன்ன காரணத்துடன் ஏராளமான செலவு செய்து மாற்று உறுப்பு பொருத்திக்
கொள்கிறோம், சாலை விபத்தில் இறந்த இளைஞனின் இதயம், சிறுநீரகம் இளமையுடன்
இருக்கும். நான் வயோதிகன்தானே.இன்னொரு காரணமும் இருக்கலாம். நாங்கள்
பார்க்கக் காத்திருந்த டாக்டர், என் தம்பிக்கு வைத்தியமே புரியாமல் உயிர்
விட வைத்தவர்தான்! உங்க தம்பிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யாதீங்க.
அப்படி உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வேண்டாங்க. அவனும் என் மாதிரி வாரா
வாரம் இந்த பென்ச்சுல ஒக்காந்து அந்த அயோக்கியன் கிட்டே பிச்சை மாதிரி
மருந்து வாங்கிக்கணும். இது என்ன பொழைப்புங்க? படிக்க மா.அரங்கநாதன்
தேர்ந்த வாசகர்களிடையே பெரு மதிப்பு பெற்றவர். ஐம்பது ஆண்டுகளாக
எழுதிவந்தாலும் 1985 அளவில்தான் நிஜ கவனம் பெற்றார். அவருடைய ஒரு நூலுக்கு
நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். (இப்போது என்னால் பத்து வரி
சேர்ந்தாற்போல் படிக்க முடியவில்லை.) அரங்கநாதனின் புகைப்படங்களுடன் ஒரு
நூல் வெளியாகியிருக்கிறது. ராஜாஜி ‘மணிக்கொடி’ பத்திரிகை அலுவலகத்திற்குச்
சென்று சந்தா கட்டிப் படித்தவர். அதில் ஒரு கதையைப் படித்துவிட்டு,
‘‘எழுதியவர் சு.ம.வா?’’ என்று கேட்டிருக்கிறார். அரங்கநாதனின்
ஆவணப்படத்தைக் கவிஞர் ரவி சுப்பிரமணியன் எடுத்திருக்கிறார். அதன்
வெளியீட்டு விழாவிலும் நான் பங்கு பெற்றிருக்கிறேன். (வெளியீடு:
ஆம்பல் அறக்கட்டளை, அஞ்சல் பேழை 696, சென்னை-600014. பேச:
9940045557.)காவ்யா பதிப்பித்த இந்த எண்பது கதைகள் எப்போது எழுதப்பட்டன
என்று அறிய முடியாது. ஆனால் கதைகள் வித்தியாசமானவை, விசேஷமானவை.
முத்துக்கறுப்பன் எண்பது, மா.அரங்கநாதனின் மாற்றுருவம். (முத்துக்கறுப்பன்
எண்பது, காவ்யா, 16, 2வது குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-600024.
பேச: 044-23726882. விலை ரூ.400/-) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
இறந்தவர் உடல் யாருக்குச் சொந்தம்?
இந்த
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 90 வயதில் காலமான தமிழ் எழுத்தாளர்
ராஜம் கிருஷ்ணன், தன் உடலை மருத்துவப் பயன்பாட்டுக்காக அவர் சில காலம்
தங்கியிருந்த மருத்துவமனைக்குக் கொடுத்து விட்டார்.திருமதி ராஜம் கிருஷ்ணன்
மருத்துவமனையிலேயே இருந்து வந்ததாலும், அவருடைய
உறவினர்கள் யாரும் மத ரீதியாக அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட
வேண்டும் என்று வற்புறுத்தாததாலும், அவரது உடலை மருத்துவப்
பயன்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் பிரச்னை ஏதும் இருந்திருக்க
வழியில்லை. ஆனால் கண் மாற்றுச் சிகிச்சையைக் கூட சில மணி நேரங்களுக்குள்
செய்தாக வேண்டும் என்கிறார்கள். திரைப்படங்களில்
மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வார், கதாநாயகனுக்கோ, கதாநாயகிக்கோ இரண்டு
கண்களும் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருவரின் இரு விழிகளை
எடுத்து இருவருக்குப் பொருத்துவார்கள். பார்வையே போனவருக்கு ஒரு கண்ணே
வரப்பிரசாதம்!கண் தானம் சில நிமிடங்களில் முடிந்து விடும். இறந்தவர்
வீட்டுக்கு வந்து விழிகளை எடுத்துப் போவார்கள். ஆனால் உள்ளுடல்
உறுப்புகள் எல்லாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் தீவிரமான
பாதுகாப்புகளுடன் அகற்றி வேறொருவர் உடலில் பொருத்தப்படும். இப்படி
உறுப்புகளை அகற்றி விட்டால்கூட மிகுதி உடலுக்கு அந்திமக்கிரியை
நிகழ்த்தப்படும். அந்தந்த மத, ஜாதி வழக்கப்படி எரிக்கவோ, புதைக்கவோ
செய்வார்கள். கடந்த
ஆகஸ்ட் மாதத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி என்ற புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரின்
மரணம் நேர்ந்தது. அவருடைய படைப்புகள் அவர் பிறந்த இனத்தைத் தாக்குவதாக
இருக்கும். ஆனால் அவர் இறந்தபோது அவர் பிறந்த இன வழக்கத்தின்படி
எரியூட்டப்பட்டார் என்று செய்திகள் வந்தன. வைதீக இந்துக்கள் புனிதமாகக்
கருதும் கங்கா நீர் கடைசி நேரத்தில் அவர் வாயில் விடப்பட்டது என்றும் தெரிய
வந்திருக்கிறது. அப்படியெல்லாம் செய்வதுதான் அவர் விட்டுச்
சென்றவர்களுக்கு முறையாகத் தோன்றியிருக்கிறது. இங்கே
ஒரு கேள்வி எழுகிறது. அவர் உடல் யாருக்கு உரியதாகிறது? நமக்கு இயல்பாகத்
தோன்றுவது, உடல் சந்ததியாருக்கு; அவருடைய மனைவிக்கு. ஆனால் அவர் மனைவியின்
மதத்தில் அடக்கம்தான். அதாவது, உடல் மண்ணுக்கு.எனக்கு ஓர் ஐயம். அந்த
எழுத்தாளருக்கே அவருடைய இறுதி நாட்களில் அவருடைய ஜாதி நம்பிக்கைகள்
முக்கியம் என்று தோன்றியிருக்குமோ? அக்கிரகாரத்து
அதிசய மனிதர் என்று அறியப்பட்ட திரு வ.ரா (ராமசாமி ஐயங்கார்) அவர்கள்
கூடத் தன் இறுதி ஆண்டுகளில் பூணூல் அணிந்து கொண்டு ஆசாரமாக இருந்தார் என்று
சில தகவல்கள் உண்டு. ‘நாம் இறந்த பின் நமக்கு என்ன காத்திருக்கிறது’ என்ற
அச்சம் பலருக்கு வந்துவிடுவது புதிதல்ல. மரணத்தை இயல்பாக
ஏற்றுக்கொள்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு
செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, சாகிற காலத்தில் சங்கரா என்பவர்கள்
அல்ல. வ.ரா.வை நாம் அப்படி நினைக்க முடியாது. அவர் நிதானத்துக்கும்
மனிதாபிமானத்துக்கும் பகுத்தறிவுக்கும் எண்ணற்றவர்களுக்கு ஆதர்சமாக
இருந்திருக்கிறார். ஏராளமான எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஓர்
உந்துசக்தியாக இருந்திருக்கிறார். அவருடைய படைப்புகள் - முக்கியமாக அவர்
எழுதிய வாழ்க்கை வரலாறுகள் - ஒருவரின் குறை, நிறைகளை எடுத்துக்
கூறுவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன. நவீன
உரைநடைக்கு அவர் ஓர் ஆசான்.திடீரென்று மரணம் அடைபவர்கள் இந்த விதத்தில்
‘கொடுத்து வைத்தவர்கள்’. மனசாட்சித் தொந்தரவு இல்லை. ஆனால் உத்தமமான
மரணத்துக்குச் சில இலக்கணங்களை இந்தியப் பிரமாணங்கள் வகுத்திருக்கின்றன.
உற்றார், உறவினர்கள் சூழ்ந்திருக்க வேண்டும். பகலில், முழு நினைவோடு
உயிர் பிரிய வேண்டும். மஹாபாரதத்தில் ஒரு முக்கிய பாத்திரமான பீஷ்மருக்கு
அது நேர்ந்திருக்கிறது. அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்களுக்கு அவர்
சொல்ல வேண்டிய அறிவுரைகளை நிறையக் கூற முடிந்தது. அவர் உயிர் பிரிய வேண்டிய
நேரத்தை அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அமெரிக்காவின் லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரத்தில் பல ஏக்கர்கள் (மைல்களாகவும் இருக்கலாம்)
நிலப்பரப்புக்கு ஒரு செல்வந்தரின் கல்லறை இருக்கிறது. பெயர், ஃபாரெஸ்ட்
லான்ஸ். புகழ் பெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி வருடா வருடம் அந்த
நகரத்தில்தான் நடைபெறுகிறது. கல்லறையில்
மிகுந்த செலவில் மிகுந்த வேலைப்பாடுகள் அமைந்த நினைவுச் சின்னங்கள் உண்டு.
அங்கே அடக்கம் செய்து கொள்ள முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவேண்டும்.
வெறும் ஆறடி இடத்திற்கு ஒரு கட்டணம். அங்கே கல்லறைக்கல்லுடன் புதைக்கப்பட
வேண்டுமானால் அதற்கு அதிகக் கட்டணம். உங்கள் கல்லறையைச் சுற்றிச் சின்னத்
தோட்டம் வேண்டுமானால் இன்னும் அதிகக் கட்டணம். நீங்கள்
கோடீஸ்வரரானாலும் உடல் அடக்கத்துக்குக் கோடிகள் செலவழிக்க முடியாது
என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஒரு பெரிய செவ்வக வடிவத்தில் ஒரு
கட்டிடம். அதில் மேஜை ‘டிராயர்கள்’ போலப் பல ‘டிராயர்கள்’. நீங்கள்
ஒரு டிராயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் இறந்த பிறகு உங்களை அந்த
டிராயரில் வைத்து உள்ளே தள்ளி, திறக்க முடியாதபடி ‘சீல்’ செய்து
விடுவார்கள். வருடா வருடம் உங்களை நேசித்தவர்கள் அந்த டிராயர் பலகைக்கு
மலர் சூட்டுவார்கள். இது ஒரு விதத்தில் உங்களை எகிப்திய பிரமிடுகளில்
பெட்டகங்களில் பாதுகாக்கப்பட்ட பாரோ மன்னர்களுக்கு இணையாக்கி விடுகிறது! இக்கல்லறைச்
சூழல் அழகாக இருக்க வேண்டும் என்று சில உலகப் புகழ்பெற்ற சிற்பங்களின்
நகல்களை அங்கங்கு வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று மைக்கேல் ஆஞ்ஜெலோவின்
பதினைந்து அடி உயரம் உள்ள டேவிட் சிலை. உண்மையிலேயே வியக்கத்தக்க சிற்பம்.
மைக்கேல் ஆஞ்ஜெலோ, டேவிட்டின் சிலையை பிறந்த மேனிக்கு வடித்திருந்தார்.
பதினைந்தாவது நூற்றாண்டிலிருந்து அச்சிலை அப்படியேதான் இருக்கிறது. ஃபாரெஸ்ட்
லான்ஸ் கல்லறையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால் அங்கொன்று
இங்கொன்றாக விமர்சனம் வந்திருக்கிறது. என்னதான் உலகப்புகழ் பெற்றது
என்றாலும் அதைக் கல்லறையிலா வைப்பது? நிர்வாகிகள் கலங்கி விட்டார்கள்.
இப்போது டேவிட்டின் ஒரு பாகம் ஒரு பெரிய இலையால் மூடப்பட்டிருக்கிறது. உத்தமமான
மரணத்துக்குச் சில இலக்கணங்களை இந்தியப் பிரமாணங்கள் வகுத்திருக்கின்றன.
உற்றார், உறவினர்கள் சூழ்ந்திருக்க வேண்டும். பகலில், முழு நினைவோடு உயிர்
பிரிய வேண்டும். படிக்க 1 ‘கடைசிக் கோடு’ என்றொரு நல்ல நூலை
ரமணன் அவர்கள் மிகுந்த உழைப்புக்குப் பின் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில்
இதை ‘கார்டோகிராஃபி’ என்பார்கள். இதைப் படிக்கத் தொடங்கியபோது, எனக்கு
2500 ஆண்டுகள் முன்பு இருந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரொடோடஸ் நினைவுக்கு
வந்தார். உலக வரைபடம் என்று அன்று அவரறிந்த மத்தியதரைக்கடல் பகுதிக்கு
அவர் ஓர் வரைபடம் வரைந்திருக்கிறார். ரமணனின்
நூல், இந்திய நாட்டின் வரைபடம் எழுதப்பட்ட வரலாறு. சுருக்கமாக இருந்தாலும்
முக்கியத் தகவல்களைத் தருகிறது. இன்றைய இந்திய வரைபடம் உருவாக இருநூறு
ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. நாம் சுதந்திரம் பெற்றோம். அத்துடன் வரைபட
சர்ச்சையையும் சேர்த்துப் பெற்றோம். (கடைசிக் கோடு - ரமணன், வெளியீடு:
கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர்,
சென்னை-600017. பேச: 044-24364243. விலை: ரூ.80/-) 2 தமிழ்நாட்டில்
பிறந்து வளர்ந்து சிங்கப்பூரில் குடியேறிய சித்ரா ரமேஷ், அவர் குடியேறிய
ஊரின் வரலாற்றைப் பல நல்ல புகைப்படங்களுடன் எழுதி இருக்கிறார். ‘நகரத்தின்
கதை’ என்ற இந்த நூலில் வரலாறும் இருக்கிறது, தமிழருக்கென பல அரிய
தகவல்களும் உள்ளன. நூல் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சித்ரா
ரமேஷ் அவர்கள் சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய அமைப்புகளில் ஆர்வத்துடன்
பங்காற்றுபவர். (நகரத்தின் கதை - சித்ரா ரமேஷ், வெளியீடு: தமிழ்வனம், தி4,
சாகஸ் ஐஸ்வர்யா அடுக்ககம், திருமங்கலம் சாலை, சென்னை-600049. விலை:
ரூ.250/-) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
புதிய சன்மார்க்க சபை
மூன்று
நான்கு வருடங்களுக்கு முன்பு என் முகவரியைச் சரியாக எழுதி ஒரு கடிதம்
வந்தது. அன்றிலிருந்து நான் பிராணி நல அமைப்பு ஒன்றில் அங்கத்தினனாக இருக்க
வேண்டியதாயிற்று. இந்தக்
குழுவுக்கு முறையான வங்கிக் கணக்கு இருக்கிறது. செலவு பாராது ரசீது
அனுப்பி விடுகிறார்கள். மிகச் சிறப்பான முறையில் சுற்றறிக்கை தயார் செய்து
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்புகிறார்கள். ஒவ்வொரு
முறையும் ஓர் உயிரினத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு மனிதன் இழைக்கும்
கொடுமையையும் அநீதியையும் பற்றிச் சிறிது விளக்கம்; ஆனால் மனதை பிளப்பது
புகைப்படங்கள். இந்தக் குழுவின் தலைவர்கள் சமண மதத்தினராக இருக்கலாம்.
ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குப் பொருத்தமானவர்கள். தப்பித்
தவறிக் கூட அவர்கள் செய்திக்கு மதத்தையோ மதத்தலைவரையோ துணை கோருவதில்லை.
இந்தியாவில் இவ்வளவு ‘சரியான அரசியல்’ (Politically correct) குழுக்களை
எளிதில் காண முடியாது. ஓரிடத்தில் கூட மனிதனின் குரூரத்தைத் தவிர ஏதும்
கூறுவதில்லை. ஒரு முறை நான் என் வழக்கமான சிறு தொகையை அனுப்பவில்லை.
‘எங்களை விட்டுப் போய் விடாதீர்கள்’ என்று கடிதம் வந்தது. ‘அஹிம்ஸா
பரமோ தர்ம’ என்று அகிம்சைக்கு தர்மங்களில் முதலிடம் கொடுத்து
விடுகிறார்கள். ஆனால் நம் மரபுசார் வாழ்க்கையில் மிருகங்களை எவ்வளவு
உடல்வலிக்கு உட்படுத்திவிடுகிறோம்? நான் எங்கு படித்தேன் என்று நினைவில்லை.
வி.எஸ்.நைபால் ஓர் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தைக் கிண்டல் செய்திருப்பார்.
அந்த நிறுவனம் இயங்கும் இடம் பரோடாவில் இருந்தது. (இப்போது ‘பரோடா’
என்ற பெயரை ‘வதோதரா’ என மாற்றி விட்டார்கள்.) அந்த நிறுவனம் ஏராளமான
முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டது. அது என்ன? கட்டை
வண்டியின் அச்சில் மோட்டார் கார் அல்லது சைக்கிள் போல ‘பால் பேரிங்’
பூட்டுவது. இதைத்தான்
நைபால் கிண்டல் செய்திருப்பார். ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு மிருகங்களைப்
பாரமிழுக்கச் செய்வீர்கள்? பால் பேரிங் போட்டு இன்னும் அதிக
சுமையேற்றுவீர்கள்? இது என்ன கண்டுபிடிப்பு?’ அவர் பிராணி நல அமைப்பின்
அங்கத்தினர் அல்ல. நம்மைச் சுற்றிப் பார்த்தால் நிறைய விலங்குகள் உள்ளன.
பறவையினங்கள் சிறிது அதிர்ஷ்டம் செய்தனவோ எனத் தோன்றும். அதுவும் இல்லை. காகங்கள்,
பருந்து வகைப் பறவைகள் தவிர மற்றதெல்லாம் மனிதனுக்கு உணவு. தி.நகரில்
ராஜகுமாரி சினிமா அருகே ஒரு நடிகர் விசேஷ உணவு விடுதி நடத்தி வந்தார்.
அங்கு ஒரு பட்டியல். அதில் உலகத்தில் உள்ள பறவைகள் எல்லாம் இருக்கும்.
நீங்கள் விரும்பும் பறவையை சமைத்து வழங்குவார். இப்போது
அது இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் செல்லப்பிராணி போல இப்போது செல்லப்
பறவைகளும் ‘பெட்’ கடைகளில் விற்கப்படுகின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன.
அவை சுதந்திரமாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை
செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு
முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால், நிலையம் முன்பு
நிறைய ஜட்காக்களும் ரிக்ஷாக்களும்தான் நிற்கும். பனகல் பூங்காவுக்கு
கட்டணம் பேசிக்கொண்டு ஒரு ஜட்காக்காரர் பெட்டி, படுக்கைகளை ஏற்றுவார். அந்த
நாளில் ‘ஹோல்ட் ஆல்’ என்று ஒன்று உண்டு. அது படுக்கைக்கு என்று ஏற்பட்டது.
எங்கள் ஹோல்ட் ஆலில் படுக்கையும் இருக்கும். நிறைய சிறு சிறு மூட்டைகளாகப்
பருப்பு வகைகளும் இருக்கும். நாங்கள்
உறவினர் வீடுகளுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போகிறோம். அது யுத்த காலம்.
எல்லாவற்றுக்கும் ரேஷன் இருந்தது. திடீரென உறவுகள் வந்தால் திண்டாடியல்லவா
போவார்கள்! நாங்கள் அரிசி, கோதுமை போன்றவற்றை எடுத்து வர முடியாது.
அதனால்தான் பருப்புகளை படுக்கையில் தலையணை போல எடுத்து வருவோம். ஒவ்வொரு
வீட்டுக்கும் ஒரு மூட்டை. அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். மீண்டும்
ஜட்காவுக்கு வருவோம். எங்கள் எட்டு சாமான்களில் ஆறுதான் வண்டிக்குள்
இருக்கும். இன்னும் இரண்டு எங்கே என்று தேடுவோம். அவற்றை இன்னொரு
ஜட்காக்காரர் அவருடைய வண்டியில் வைத்திருப்பார். நான்தான் கண்டு பிடித்துத்
தூக்கி வருவேன். அந்த நாளில் எங்கள் ஊரில் ஜட்கா கிடையாது. ஆனந்தமாகக்
காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம் என்று
நினைத்திருந்த என்னை ஜட்காக்காரர் அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஆறு
அங்குல இடத்தில் உட்கார வைத்து விடுவார். அங்கு காலைத் தொங்க விட்டு
வர முடியாது. ஜட்காக்காரருக்கும் ஒரு காலை ஜட்கா பட்டையில் வைத்துக் கொள்ள
வேண்டும். நான் ஐயப்ப சுவாமி போல முழங்காலைக் கட்டிக் கொண்டு சென்னை
சென்ட்ரலிலிருந்து பனகல் பார்க் வரை ஜட்காவின் முன் பக்கத்தில் உட்கார்ந்து
உறவினர் வீடு அடைய வேண்டும். வண்டிக்காரர் பக்கத்திலேயே
உட்காருவதனால் அவரிடம் பேசலாம் என்று, ‘‘ஏன் குதிரை எலும்பும் தோலுமாக
இருக்கிறது?’’ எனக் கேட்டேன். ‘‘இவ்வளவு சாமானையும் உன்னையும் வண்டீலே
கொண்டு வர்ணும்லே? நிறையத் தீனி போட்டா வண்டி இழுக்குமா?’’ என்று
திருப்பிக் கேட்டார். ஆனால் சினிமாவில் குதிரைகள் தளதளவென்று இருக்கின்றன.
வேகமாக ஓடுவதற்கே வளர்க்கப்படும் பந்தயக் குதிரைகள் பளபளவென்று ஆரோக்கியமாக
இருக்கின்றன. நான் இன்னும் ஒருமுறைகூட ஜட்காவில் பின்புறம்
உட்கார்ந்து, காலைத் தொங்கப் போட்டுப் பயணம் செய்ததில்லை.இப்போதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜட்கா இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த ஜட்கா
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எதிரே, பழைய ஜெயில் மேம்பாலம் ஏறி இறங்கும்போது
பின்கனம் அதிகமாகி, வண்டியோடு குதிரை அந்தரத்தில் ஒரு கணம் மிதக்கும். நான்
மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். இந்த ஜட்காக்களுக்கு
பம்பாய்க் குதிரை வண்டிகள் எவ்வளவோ மேல். அங்கு அந்த வண்டிகளை
விக்டோரியா என்று அழைக்கிறார்கள். இது மறைமுகமாகப் பிரிட்டிஷ் அரசைக் கேலி
செய்வதாக இருக்கலாம். விக்டோரியா ராணி காலத்திலேயே இந்த வண்டிகள்
இருந்திருக்க வேண்டும். விக்டோரியாவுக்கு நான்கு சக்கரங்கள். முன்கனம்
பின்கனம் என்றில்லாமல் உட்காரலாம். வேண்டுமென்றால் ஓட்டுபவர் பக்கத்தில்
உட்காரலாம். காலைத் தொங்கப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வண்டியில்
இருப்பவர்களுக்கு ஏதோ கல்யாண ஊர்வலம் போவது போலிருக்கும். சென்னை
ஜட்காக்களுக்கு அந்த நாளில் தனி ‘ஸ்டாண்ட்’ இருந்தது. சென்னை கெயிட்டி
சினிமா அருகே ஒரு ‘ஸ்டாண்ட்’ இருந்தது. அங்கு மஸ்தான் என்றொரு ஜட்காக்காரர்
இருந்தார். யாரோ அவர்தான் மோடி மஸ்தான் என்ற புரளியைக் கிளப்பி
விட்டார்கள். வண்டியை சவாரிக்கு அமர்த்தாமல், வந்தவர்கள் ‘மந்திரம்
சொல்லிக் கொடு... மாயம் சொல்லிக் கொடு...’ என்றால் அவர் என்ன செய்வார்?
வைவார். ஒருவர் அவர் வைத ‘உல்லு’, ‘உல்லு கா பச்சே’, ‘பேவகூஃப்’ போன்ற
சொற்களை எல்லாம் மந்திரங்கள் என்று நினைத்தார். மஸ்தானின் குதிரையும்
எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் குதிரை எலும்பும் தோலுமாக
இருக்கிறது?’’ எனக் கேட்டேன். சினிமா வில் குதிரைகள் தளதளவென்று
இருக்கின்றன. வேகமாக ஓடுவதற்கே வளர்க்கப்படும் பந்தயக் குதிரைகள்
பளபளவென்று ஆரோக்கியமாக இருக்கின்றன. படிக்க உலகத்தில் ஏதேதோ
விஷயங்கள் எல்லாம் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் வானொலிப் பாட்டு,
பேச்சு, நாடகம் அப்படி இல்லை, தமிழ் வரை! பல ஆண்டுகள் முன்பே ஓர் அறிஞரின்
வானொலி உரைகளுக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்ததாகச் சொல்வார்கள். ஒரு
காரணம், அவரது உரைகள் கவனமாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தன. இப்போது
அப்படி இன்னொரு தொகுப்பு வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர் திலகவதி
அவர்கள் நாற்பது தலைப்புகளில் ஆற்றிய வானொலி உரைகள் ‘காலந்தோறும் அறம்’
என்ற நூலாக வந்துள்ளது. சென்னை அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
விலை: ரூ.60/- (அம்ருதா மாத ஏடு, பதிப்பகம் ஆகியவற்றின் புது முகவரி: 1,
கோவிந்த ராயல் நெஸ்ட், 12, மூன்றாவது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் கிழக்கு,
நந்தனம், சென்னை-600035. பேச: 94440 70000). (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
நான் வரலாறு படித்த வரலாறு
நான்
இரு கறுப்பு-வெளுப்பு ‘உத்தம புத்திரன்’களைப் பார்த்திருக்கிறேன்... இரு
முறையும் படத்தின் ஆரம்பம் புரியவில்லை. ஒரு ராஜாவுக்கு இரட்டைக்
குழந்தைகள் பிறக்கின்றன. சந்தோஷப்பட வேண்டியவன் ஏன் கலக்கமடைகிறான்? என்
வரலாற்றறிவு போதாது.முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இளைஞன்
வேலைக்கு முயற்சி செய்தால் ‘அவன் பத்தாவதாவது முடித்திருக்கிறானா’ என்று
கேட்பார்கள். இந்தப்
பத்து ஆண்டுகள் ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை என்று மூன்று பிரிவுகள்.
இதை ஆங்கிலத்தில் ‘பிரைமரி, மிடில், ஹைஸ்கூல்’ என்பார்கள். மொத்தம் பத்து
ஆண்டுகள். இப்போது இந்த ஏற்பாடு சில மாற்றங்கள் அடைந்திருக்கிறது. ஆனால்
இன்றும் பலர், ‘அவன் பத்தாவது முடித்தால் நன்றாக இருக்கும்’ என்றுதான்
கூறுகிறார்கள். நான் படித்த ஆரம்பப் பள்ளி ஒரு கிறிஸ்தவப் பள்ளி.
அதோடு அது ஒரு தெலுங்குப் பள்ளி. எனக்கு மூன்றாவது, நான்காவது
வகுப்புகளுக்கு ஒரே வாத்தியார். அவர் பாடம் கற்பிப்பது புரியாது. எங்கள்
வீட்டிற்கு அதுதான் நெருக்கமாக ஒரு மைல் தூரத்தில் இருந்தது. காலை
பள்ளிக்குக் கிளம்பும்போது என் முகம் கறுத்திருக்கும். தாஸ்
- அது எங்கள் ஆசிரியர் பெயர் - சொல்வது ஒன்றும் புரியாது போனாலும், அவர்
அடிக்கடி ‘புரிகிறதா’ என்று கேட்டபடி வகுப்பை நடத்துவார். கதைகளாகச்
சொல்லிக் கொடுக்கப்பட்ட விவிலியம் தவிர இதர பாடங்களில் நான் மிகுந்த
குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத்தான் தேர்வு பெற்றேன். பிறகு நான்
ஐந்தாம் வகுப்பு சேர்ந்தது ஒரு முதலியார் பள்ளி. எங்கள் ஊரிலேயே அதுதான்
மிகப் பெரிய பள்ளிக்கூடம். தீர்க்கதரிசனத்துடன் அப்போதே அதை மெஹ்பூப்
காலேஜ் என்று நிறுவனர் சோமசுந்தரம் முதலியார் பெயரிட்டிருந்தார். இன்று அது
நிஜமாகவே ஒரு கல்லூரி!இங்கும் விடுதலை கிடைக்கவில்லை. உண்மையாக
எட்டாவதிலிருந்துதான் எனக்கு பள்ளிக் கல்வி ஒருவாறு பிடிபட்டது. அது
பிரிட்டிஷ் அரசு காலம். அவர்கள் இந்திய வரலாற்றை மூன்றாகப்
பிரித்திருந்தார்கள்- ஹிந்து காலம், முஸ்லிம் காலம், பிரிட்டிஷ் காலம். ஒரு
வருடத்திற்கு ஒரு காலம். ஏதோ சதி போல எனக்கு முஸ்லிம் காலமே நான்கு
ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. எனக்கு இன்றும் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ்
பற்றியெல்லாம் ஏதோ நிழல் போலத்தான் தெரியும்.முஸ்லிம் காலம் பற்றி நான்
திரும்பத் திரும்பப் படித்ததால் அந்த ஆண்டுகள் இன்றும் நினைவில்
இருக்கின்றன. வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லாத நிகழ்ச்சி ஒன்று தமிழ்ப்
பாட நூலில் இருந்தது. அது தகப்பன் - மகன் உறவு பற்றி என்று வைத்துக்
கொள்ளலாம்; அல்லது பிரார்த்தனையின் வலிமை என்றும் வைத்துக் கொள்ளலாம். முதல்
முகலாய மன்னன் பாபரின் மகன் ஹுமாயூனுக்கு உடல்நிலை சரியில்லை. அன்று
பாபருக்குக் கிடைத்த வைத்தியர்கள், ‘‘பையன் பிழைக்க மாட்டான்’’ என்று கூறி
விடுகின்றனர். அப்போது பாபர் இறைவனை வேண்டிக் கொள்கிறார். இறைவன் அவர்
உயிரை எடுத்துக் கொண்டு, மகன் ஹுமாயூன் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
அன்றிலிருந்து ஹுமாயூன் குணமடையத் தொடங்குகிறான். பாபர் நோயாளியாகிறார்.
அவர் உயிரை விட்ட நாளன்று ஹுமாயூன் முழு குணமடைந்து விடுகிறான்! இது
பாபரின் வரலாறாகிய ‘பாபர் நாமா’வில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்
அதில் உள்ளது முற்றிலும் வேறொரு வரலாறு. பாபருக்கு நோய் கண்டு விடுகிறது.
அவருக்கே நம்பிக்கை போய் விடுகிறது. அப்போது அவருடைய மூத்த மகனாகிய
ஹுமாயூனிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொள்கிறார். பாபருடைய மறைவுக்குப்
பிறகு, ஹுமாயூன் அவனுடைய தம்பிகளைக் கொன்று விடக் கூடாது. ஹுமாயூன்
சுபாவத்திலேயே நல்லவன். அவனுடைய தம்பிகளுக்கு பாபர் சாம்ராஜ்யத்தைப்
பிரித்துக் கொடுத்து அவன் ஒரு பாகம் மட்டும் வைத்துக் கொள்கிறான்.
கடைசியில் அதற்கு ஆபத்து வந்து விடுகிறது. அவன்
நம்பிய அதிகாரியான ஷெர்ஷா ஆட்சியை அபகரிக்க, அரியணையைப் பறிகொடுத்து அவன்
அகதியாக தம்பிகளிடம் போகிறான். ஆனால் தம்பிகள் இருவரும் துரத்தி
விடுகிறார்கள். ஹுமாயூன் பதினைந்து ஆண்டுகள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து,
கடைசியில் தன் முயற்சியில் ஒரு படையைத் திரட்டி டில்லியைப் பிடிக்கிறான்.
ஆனால் அவன் அதிர்ஷ்டம், ஆறே மாதத்தில் ஒரு சிறிய விபத்து நேர்ந்து உயிரை
விடுகிறான். எனக்கு இந்தக் கட்டத்தில் ‘உத்தம புத்திரன்’ புரிய
ஆரம்பித்தது.ஹுமாயூனுக்கு ஒரே மகன். ஆதலால் பல மகன்களைப் பெற்றெடுத்த
அரசனுக்கு உள்ள கவலைகள் இல்லை. ஹுமாயூன் மகன் அக்பருக்கும் ஒரே மகன். அதுவும்
தவம் கிடந்து பிறந்த மகன். சலீம் என்ற பெயர், சலீம் சிஷ்டி என்ற சூஃபி
யோகியுடைய பெயர். இந்திய விடுதலைப் போர் (1857) நடந்து பல ஆண்டுகள்
கேட்பாரற்றுக் கிடந்த ஃபதேபுர் சிக்ரியில் ஒரே ஒரு இடம் மட்டும்
இன்றைக்கும் புதுக்கருக்கு போகாத நிலையில் இருக்கும். அது சலீம்
சிஷ்டியின் தர்கா. ஃபதேபுர் சிக்ரி சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது. ஆனால்
தர்கா பளிங்குக் கற்களில் கட்டப்பட்டது. மிகவும் அழகாக இருக்கும். மத
வேறுபாடு இல்லாமல் எல்லாரும் வணங்கக் கூடிய இடம். சுமார் அறுநூறு ஆண்டுகள்
வரலாறு உடைய தர்கா.அக்பருக்குப் பின் அரியணை ஏறிய சலீம், ‘ஜஹாங்கீர்’ என்று
பெயர் வைத்துக் கொள்கிறான். அவனுக்கு நூர்ஜஹான் மூலம் ஒரு மகன். ஓர்
ராஜபுத்திரப் பெண்ணின் மூலம் ஒரு மகன். ஜஹாங்கீர் இறந்ததும் போட்டி. இதில்
ஒரு வினோதம்... எந்தப் பெண்ணுக்காக அவன் ஏழாண்டு காத்திருந்து மணந்தானோ,
அந்தப் பெண்ணின் மகனுக்கு மகுடம் கிடைக்கவில்லை. குர்ரம் என்ற அரை இந்து,
அரை முஸ்லிம் மகனுக்குக் கிடைத்தது. அவன்தான் பின்னர் ஷாஜஹான். நூர்ஜஹானின்
மகன் ஷாரியருக்கு? கேட்க வேண்டியதில்லை. மரணம். ஷாஜஹானின்
மகன்களில் இளையவன், ஔரங்கசீப்! அவனுக்கே ஷாஜஹானை சிறைப் பிடித்து காவலில்
வைத்து அரியணை ஏறும்போது வயது நாற்பது. அவன் துரத்தித் துரத்தி மூன்று
சகோதரர்களையும் குருடாக்கி, கை, கால்களை வெட்டிய பிறகுதான் கொன்றான்.
இப்போது ‘உத்தம புத்திரன்’ தொடக்கம் முழுமையாகப் புரிந்தது. ‘கார்சிகன்
சகோதரர்கள்’ என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மகன் எழுதினார். அவர் பெயரும்
அலெக்ஸாண்டர் டூமா. அவர் எழுதியதில் இது ஒன்றுதான் தொடர்ந்து வாசகர்,
திரைப்படத் தயாரிப்பாளர் கவனத்தில் இருந்து வருகிறது. பெரியவரும்
இப்படி இரட்டை இளவரசர்கள் கதை எழுதியிருக்கிறார். அது ‘மேன் இன் தி அயன்
மாஸ்க்’. அதுதான் ‘உத்தம புத்திரன்’. இரு கதைகளுக்கும் சில சரித்திரச்
சான்றுகள் இருக்கின்றன. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஜெமினி ஸ்டூடியோ
எடுத்த ‘அபூர்வ சகோதரர்கள்’, டூமாவின் மகன் எழுதியதைத் தழுவி
எடுக்கப்பட்டது. இரு இந்திய இதிகாசங்களும் யாருக்கு அரியணை என்பது
பற்றித்தான். அரச வம்சத்தில் பிறப்பதுதான் எவ்வளவு அபாயங்கள் கொண்டது!
இந்திய விடுதலைப் போர் (1857) நடந்து பல ஆண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த
ஃபதேபுர் சிக்ரியில் ஒரே ஒரு இடம் மட்டும் இன்றைக்கும் புதுக்கருக்கு போகாத
நிலையில் இருக்கும். அது சலீம் சிஷ்டியின் தர்கா. படிக்க பைரப்பாவின்
‘ஆவரணா’ (2007) என்ற நாவல் தமிழில் ‘திரை’ என்ற தலைப்பில் விஜயபாரதம்
பதிப்பகத்தி லிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான்
ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக்
கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட
நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக
இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள்
வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதியில் சரியாகத்
திருத்தங்கள் செய்திருக்கலாம். (திரை - கன்னட மூலம் எஸ்.எல்.பைரப்பா,
தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், வெளியீடு: விஜயபாரதம் பதிப்பகம், 12,
எம்.வி.நாயுடு தெரு, சேத்துப் பட்டு, சென்னை-600031. விலை: ரூ.300/-) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
மரணபயம்
‘முன்னே
பின்னே செத்தால்தானே சுடுகாட்டைப் பற்றித் தெரியும்’ என்று சொல்வார்கள்.
சுடுகாடு சிலருக்குக் கல்விக் கூடமாக இருக்கலாம். ஆனால் சுடுகாட்டுக்கு
வெளியே வாழும்போது தான் இந்த மரண பயம் இயங்குகிறது. உயிருள்ள எல்லாப்
படைப்புகளும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒரு கணம் அசாத்தியத்
துடிப்புடன் நடந்து கொள்வது இந்த பயத்தால்தான். உலகில்
மரணமடையக் கூடிய எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதன் உச்ச நிலையை
அடைந்து, பிறகு சரியத் தொடங்குகிறது. சரியத் தொடங்கிய பின் மரண பயம்
அதிகரிக்கிறது. மனிதர்களுக்கு வயதும் இயலாமையும் அதிகரிக்க அதிகரிக்க...
அவர்களின் தற்காப்பு உணர்ச்சியும் அதிகரிக்கிறது. போர் வீரர்கள்
பற்றி கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் ஏராளமான ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யுத்த களத்தில் திறமையாகப் போரிட்டவர்கள்
பலரும், அடிப்படையில் மரண பயம் மிகுந்தவர்கள். இது யுத்த களத்தில்
போரிட்டவர்களுக்குத்தான் பொருந்தும். ஆங்கிலத்தில் ஒரு வரி அடிக்கடி
சொல்லப்படும். ‘போர்
வீரர்கள் யுத்தங்களை வெல்கிறார்கள், தளபதிகள் பதக்கங்களைத் தட்டிச்
செல்கிறார்கள்’.பயமே இல்லாதவர்கள் உண்டா? இந்து கோயில்களின் விக்கிரகங்கள்
பலவும் வலது கரத்தை ‘பயப்படாதே’ என்று கூறுவது போல உயர்த்தியபடி
அமைக்கப்பட்டிருக்கும். வரம் அருள்வதைக் காட்டிலும், ‘பயம் வேண்டாம்’ என்ற
செய்தி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பயம் அறியாதவர்கள் என்று
வரலாற்றில் சிலரைக் குறிப்பிடுகிறார்கள். அவர்களிடம் நன்கு பயிற்சி
அளிக்கப்பட்ட படை இருந்திருக்கிறது. சரத் சந்திரர் ‘ஸ்ரீகண்டன்’ என்றொரு
நாவல் எழுதியிருக்கிறார். சிலர் அதை அவரின் சுயசரிதை என்றும் கூறுவார்கள்.
அதில் ஸ்ரீகண்டனின் சிறு வயது நண்பன் பாம்புகளைப் பிடித்து வீசி எறிவான்.
நடுநிசியில் ஆற்றைக் கடப்பான். காட்டினுள் எந்தத் தயக்கமுமின்றிப் போவான்.
அங்கே ஒரு பாம்புப்பிடாரனின் மனைவிக்கு உதவுவான். வரலாற்றில்
பார்த்தால், பல ராஜபுத்திர ராஜாக்கள் முகலாயர்களோடு சமாதானமாக இருக்கச்
சம்மதித்து விடுகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அந்த முகலாய
அரசனுக்கு மணம் செய்தும் தந்திருக்கிறார்கள். முகலாய மன்னன் ஜஹாங்கீர், ஒரு
ராஜபுத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஷாஜஹானும் அப்படியே;
ஔரங்கசீப் கூட. ஆனால் ராஜபுத்திரர்களில் ராணா பிரதாப் சிங் மட்டும் போரிட்ட
வண்ணமே இருக்கிறான். ஒருமுறை அவன் கோட்டை பறிபோய்விடும் போலிருக்கிறது.
அங்கிருந்த ராஜபுத்திரப் பெண்கள் சுமார் பதினைந்தாயிரம் பேர் தீயில்
குதித்துத் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். பிரதாப் கடைசி வரை பணியாமல்
காடு, மலைகளில் வசித்து உயிரை விடுகிறான். இரண்டாம் உலக
யுத்தத்தின்போது ஜப்பானியப் போர் வீரர்கள் தங்களுடைய குரூரத்தினால் பாதி
ஆசியாவை அடக்கி வைத்துக் கொள்ள முடிந்தது. அவர்களுக்கு வெள்ளைக்காரர்கள்,
ஆசியர்கள் என்ற பாகுபாடு கிடையாது. எந்த
நாட்டை ஆக்கிரமித்தாலும், அந்நாட்டுப் பெண்கள் அனைவரையும் திரட்டி
ஜப்பானியப் படைகள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி விடுவார்கள். போர்
வீரர்களின் வசதிக்காக ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை
அனுபவித்த பல கொரிய பெண்களிடம் இன்றுவரை ஜப்பான் ஆட்சியாளர்கள் மன்னிப்பு
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்த காலத்தில் சிறுவர்களாக
இருந்தபோது ஒரு கொரிய நாட்டு இளைஞன், ஒரு சீனர் ஆகியோரிடம் பல மாதங்கள் பழக
வாய்ப்புக் கிடைத்தது. ‘ஜப்பான்’ என்ற பெயரைக் கேட்டாலே அவர்கள் பொங்கி
எழுவார்கள். விம்மி விம்மி அழுவார்கள். வரலாறே பல பிரச்னைகளை உட்கொண்டது.
சமகாலத்தில் சுமுகமாக வாழ வேண்டும், வரலாறையும் மறக்கக் கூடாது என்பது
சிரமமான விஷயம்தான். ஐ.என்.ஏ. என்று நேதாஜி ஓர் அமைப்பு தொடங்கி
அதில் சிங்கப்பூர், மலேயா, பர்மா ஆகிய நாடுகளில் இந்தியர்களைச் சேர
வைக்காமல் இருந்திருந்தால் கொரியா, சீனா நாட்டவருக்கு நடந்தது
இந்தியர்களுக்கும் நடந்திருக்கும். ‘மரண
ரயில்’ என்றழைக்கப்பட்ட ரயில் பாதையின் கதையை அவ்வளவு எளிதாக
மறக்கமுடியாது. பர்மாவுக்கும் தாய்லாந்துக்குமாக அமைக்கப்பட்ட பாதை.
பொறியியல் வல்லுநர்கள் அந்த ரயில் பாதையை அமைக்க ஆறு ஆண்டுகள் ஆகும் என்று
திட்டமிட்டனர். யுத்தக் கைதிகளை விரட்டி வேலை வாங்கி ஒரே ஆண்டில் ஜப்பான்
முடித்தது. அந்தப் பாதையின் ஒரு ஸ்லீப்பர் - அதாவது ஒரு குறுக்குக்
கட்டைக்கு - ஒரு கைதி இறந்திருக்கிறான் என்று இன்று கணக்கிடுகிறார்கள். ‘தி
பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய்’ என்ற திரைப்படத்தில் தணிக்கையாளர்கள் கருதி
நிஜத்தில் நிகழ்ந்த குரூரம் குறைவாகவே காட்டப்பட்டது. உண்மையில் அந்தப்
பதினைந்து, பதினாறு மாதங்கள் அந்தப் பிரதேசம் பல மைல்கள் கொண்ட திறந்தவெளி
சித்திரவதைக் கூடமாகவும் இடுகாடாகவும் இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில்
ஆங்கிலேய, சீனக் கைதிகள் மடிந்து விழுந்திருக்கிறார்கள். இரண்டாம்
உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் பல நாடுகள் - குறிப்பாக ஜெர்மனியும்
போலந்தும் - திறந்தவெளிச் சித்திரவதைக் கூடங்களாகவும் கொலைத்
தொழிற்சாலைகளுமாக இருந்திருக்கின்றன. ஹிட்லர் பதவிக்கு வந்தவுடனேயே போட்ட
முதல் உத்தரவு, ‘எல்லா யூதர்களும் அவர்கள் யூதர்கள் என்று தெரியும்படியாக
உடையில் அடையாளமிட்டுக் கொள்ள வேண்டும்’ என்பதுதான். அதற்கடுத்தபடியாக
அவர்களுடைய வீடுகள், கடைகள் யூதன் என்ற தனி அடையாளம் கொண்டிருக்க வேண்டும்
என்றான். அடுத்த
கட்டமாக அவர்கள் தனி முகாமில் அடைக்கப்பட்டனர். அதற்கடுத்த கட்டம், மரண
முகாம். மலை மலையாகக் குவியும் யூதப் பிணங்களுக்கு யூதர்களே குழி தோண்ட
வேண்டும். இது இன்று பல கோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்
புதிராக இருக்கிறது. ‘தாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்’ என்று தெரிந்தும்
ஏன் ஓரிடத்தில்கூட அவர்கள் எதிர்த்துப் புரட்சி செய்யவில்லை? யூதர்களுக்கு
மாறாக போலந்து, பிரான்ஸ், இத்தாலி, ஹாலந்து, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய
நாடுகளில் நாஜிக்களுக்கு எதிராகப் பல புரட்சிக் குழுக்கள்
இயங்கியிருக்கின்றன. மாட்டிக்கொண்டால் குரூரமான சித்திரவதைக்குப் பின்
மரணம் நிகழும் என்பதை உணர்ந்தே இயங்கினார்கள். உண்மையில் இந்தப்
புரட்சியாளர்களால் நாஜிக்களின் பல யுத்த முயற்சிகள் பாதிக்கப்பட்டன. ஆனால்
அறுபது லட்சம் யூதர்கள் அவர்களுக்கே குழி தோண்டினார்கள்! எப்படியும் சாவு.
எதிர்ப்பு காட்டியிருக்கலாம் அல்லவா? இருத்தலியல்
(‘எக்சிஸ்டென்ஷியலிஸம்’) தத்துவத்தின் முக்கிய குருவாகக் கருதப்படும்
சார்த்தர், ‘மரண பயத்தை விட சித்திரவதை எதிர்பார்ப்பு இன்னும் கடுமையானது’
என்று கருதினார். அவர் ஒரு நாஜி எதிர்ப்புக் குழுவில் இயங்கினார்.
‘சித்திரவதையும் தொடங்கிய பின்னர் அநேக மனிதர்கள் ஜடங்களாகி
உணர்ச்சியற்றுப் போய் விடுகிறார்கள்’ என்று அவர் கருதினார். இதை விளக்குவது
போல அவர் ‘சுவர்’ என்றொரு கதையை எழுதியிருக்கிறார். ஜெர்மனியின்
ஆக்கிரமிப்பில் பிரெஞ்சு காவல் துறை நாஜிக்களுக்குப் பணிந்துதான் இயங்க
வேண்டியிருக்கிறது. அப்போது ஓர் எதிர்ப்புக் குழுக்காரன் வகையாகக்
காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறான். குழுத் தலைவன் எங்கிருக்கிறான் என்று
அவனிடம் விசாரிக்கிறார்கள். அவனுக்குத் தெரியும். ஆனால் சித்திரவதை,
அதற்குப்பின் சுடப்படுவதைத் தாமதப்படுத்த வேண்டுமென்றே ஒரு தவறான இடத்தைக்
குறிப்பிடுகிறான். காவல்துறையினர் அவனை எச்சரிக்கை செய்கிறார்கள்... ‘நீ
பொய் சொல்லியிருந்தால் விளைவு இன்னும் குரூரமாக இருக்கும்’. அடுத்தடுத்த
நிமிடங்களில் இவன் சித்திரவதையை எதிர்பார்த்துத் தவிக்கிறான். ஒரு மணி
நேரம் பொறுத்து அவனை ஒரு துரும்பு போலப் பார்த்து, ‘‘நீ போகலாம்’’
என்கிறார்கள். துரோகியை விரோதி கூட மதிப்பதில்லை. அவன் தவறு என்று எண்ணி
பொய்யாகச் சொன்ன இடத்தில்தான் உண்மையில் அவன் தலைவன் இருந்திருக்கிறான்! யுத்த
களத்தில் திறமையாகப் போரிட்டவர்கள் பலரும், அடிப்படை யில் மரண பயம்
மிகுந்தவர்கள். ஆங்கிலத்தில் ஒரு வரி அடிக்கடி சொல்லப்படும். ‘போர்
வீரர்கள் யுத்தங்களை வெல்கிறார்கள், தளபதிகள் பதக்கங்களைத் தட்டிச்
செல்கிறார்கள்’. படிக்க பிரேம்சந்த், தாகூர், பகவதி சரண்
வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள்.
மணி மணியான 12 கதைகள். ‘லாகூர் எவ்வளவு தொலைவு?’ என்ற பஞ்சாபிக் கதை,
லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியிருந்த இந்தியர்கள்
இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது.
நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி.நய்யார் வசித்த வீடு எனப் பல
தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இதேபோலப்
பல முதிய பாகிஸ்தானியர்களும் இந்தியாவில் உள்ள இடங்களுக்காக ஏக்கம்
கொண்டிருக்க வேண்டும். மிக நல்ல தேர்வு, மிக நல்ல மொழிபெயர்ப்பு. (வேலி
மேல் வாச மலர் - பிற மொழிக் கதைகள் -தமிழாக்கம்: வீ.விஜயராகவன், தளம்
வெளியீடு, 46/248 பீட்டர்ஸ் சாலை, சென்னை-600014. விலை: ரூ.120/-) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
நாடக மேடையில்
அது
1950ம் ஆண்டு. 'வாழ்க்கை’ என்றொரு படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்
ஓடு ஓடென்று ஓடியதோடு, ஓர் அகில இந்திய திரை நட்சத்திரத்தையும் சிருஷ்டி
செய்தது. அதற்கு முன்பு தெற்கில் தயாரிக்கப்பட்ட சில படங்கள் வடக்கிலும்
நன்றாக ஓடியிருக்கின்றன. ஆனால் ஒரு நட்சத்திர நடிகையை அளித்ததில்லை. அந்த
நட்சத்திரம், வைஜயந்திமாலா. தமிழ் ‘வாழ்க்கை’ படத்தில் ஒரு காட்சி. கெட்டவன்
ஒருவன், ஒரு கிராமத்துப் பெண்ணை ஏமாற்றி விட்டுச் சென்னைக்குத் திரும்பி
வந்து கதாநாயகியையும் மணக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்தக்
கிராமத்துப் பெண் இல்லாத கஷ்டம் அனுபவித்து, கடைசியில் கையில் குழந்தையுடன்
கயவன் வீட்டைக் கண்டுபிடித்து வந்து அவன் முன் நிற்கிறாள். அவன்
பதறிப் போய் விடுகிறான். அந்தப் பதற்றத்தில் சிகரெட் டப்பாவை எடுக்கிறான்.
அந்த நாளில் ஐம்பது சிகரெட்கள் கொண்ட தகர டப்பாக்கள் கிடைக்கும். அவன்
பதற்றத்தில் ஒரு சிகரெட்டை எடுக்க, டப்பா கை தவறிக் கீழே விழுந்து அவ்வளவு
சிகரெட்களும் தரையில் சிதறி விழும். அந்த ஒரு காட்சி பார்ப்போரின் மூச்சை
ஒரு கணம் நிறுத்தி விடும். அந்தக் காட்சியில் கயமையின் மொத்த உருவமாகத்
தோன்றியவர் நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம். சென்னை வந்த 1952 இறுதி யில்
ஒரு நாடக விமர்சனம் படித்தேன். புதுமையாக இருந்தது. ரவீந்திரநாத் தாகூரின்
ஒரு சிறுகதையைத் தமிழ் நாடகமாக்கி இருந்தார்கள். அதில் சஹஸ்ரநாமம் நடித்து,
டைரக்டும் செய்திருப்பார். அந்த நாட்களில் சென்னையில் நாடகம் என்றால்
மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் போடுவார்கள். ஒன்று அல்லது இரண்டு
முறைதான் நாடகம் நடத்தப்படும். என்னால் ‘கண்கள்’ நாடகத்தைப் பார்க்க
முடியவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே இன்னொரு நாடகத்தை அதே குழு போட்டது.
இதை நான் முதல் நாளிலேயே பார்த்தேன். ‘சேவா ஸ்டேஜ்’ என்ற அந்தக் குழுவின்
இரண்டாவது நாடகத்தின் பெயர், ‘இருளும் ஒளியும்’. எனக்கு
இன்னொரு வியப்பும் காத்திருந்தது. எஸ்.வி.சஹஸ்ர நாமத்தின் சகோதரி மகன்
நான் பணி புரிந்த திரைப்பட ஸ்டூடியோவில் பணி புரிந்து வந்தார்! எப்போதும்
வெள்ளை வெளேரென்ற ஷர்ட்டும் பேன்ட்டும் போட்டுக்கொண்டு வருவார். அமைதியின்
உருவமாக இருப்பார். எஸ்.வி.எஸ் பல சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நண்பர்.
என்னுடன் பணி புரிந்து வந்த என்.வி.ராமநரசு என்கிற ராஜாமணி, வ.ரா.வின்
சிஷ்யர். வ.ரா. போலவே தலையை வாரிக் கொள்வார். அலுவலகம் தவிர இதர நேரங்களில்
வ.ரா. மாதிரியே உடை உடுத்துவார். ‘இருளும் ஒளியும்’ நாடகத்திற்குப் பிறகு
நான் அவருடைய சீடனாக என்னை எண்ணிக் கொண்டேன். ராமநரசுதான் என்னை
எழுத வைத்தவர். அந்த நேரத்தில்தான் புல்லாங்குழல் ஸ்ரீனிவாசன் நண்பனானான்.
அகில இந்திய வானொலி ஒரு முழு நீள நாடகப் போட்டி நடத்தியது. அதே நேரத்தில்
மத்திய அரசின் குடும்ப நல அமைச்சரகம் ஆங்கிலத்தில் நாடகப் போட்டி
நடத்தியது. இரண்டிற்கும் நான் நாடகங்கள் அனுப்பினேன். இதெல்லாம் ‘இருளும்
ஒளியும்’ நாடகத்தைப் பார்த்து நான் பெற்ற உற்சாகம். என் எதிர்காலம்
நாடகத்தில்தான் இருப்பதாக அப்போது எண்ணினேன். எனக்கு மொழி ஒரு பொருட்டாகத்
தோன்றவில்லை. அப்போது சென்னைக்கு எம்.ஆர்.ஏ. என்றொரு சர்வதேசக் குழு
வந்தது. அக்குழு இரு நாடகங்களைச் சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடத்தியது.
அவர்கள் ஒரு புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரங்கிலேயே சந்திர ஒளி,
சூரியோதயம் இரண்டையும் வியக்கத்தக்க வகையில் பின்னணி இசையோடு நடத்திக்
காட்டினார்கள். இதை ஓரளவு சேவா ஸ்டேஜ் ‘இருளும் ஒளியும்’ நாடகத்தில்
பயன்படுத்தினார்கள். இரு நாடகங்களையும் ராமநரசுதான் எழுதியிருந்தார். ‘கண்கள்’
நாடகத்தை பிறகு எஸ்விஎஸ் திரைப்படமாகவும் உருவாக்கினார். சிவாஜி கணேசன்,
சந்திரபாபு, பண்டரி பாய் போன்றோர் பங்கு பெற்றும் படம் பெரிய வெற்றி
அடையவில்லை. ராமநரசின் அடுத்த நாடகம் ‘வானவில்’. இதில் சஹஸ்ரநாமம்,
சிவாஜி கணேசனுடன், எம்.என்.ராஜமும் நடித்தார். நாடகம் வித்தியாசமாக
இருந்தது. ஆனால் வெற்றி என்று கூற முடியாது. பிற்காலத்தில் இதே நாடகத்தை
பி.எஸ்.ராமையா சரி செய்யப் பார்த்தார். பெரிய மாறுதல் இல்லை. ஓரிரண்டு
முறை ‘வானவில்’ நாடகத்தில் நடித்த எம்.என்.ராஜம் அவர்களுக்குத் திரைப்பட
வாய்ப்புகள் வரத் தொடங்கின. அவர் மேற்கொண்டு பங்கு பெற முடியாமல் போகவே
புதிய கதாநாயகியைத் தேட வேண்டியதாயிற்று. அப்போதுதான் பிரமிளா என்ற பெண்
வந்தார். அவர் தெலுங்குப் பெண். ஆயினும் அவரை நம்பி அண்ணாமலை மன்றத்தில்
‘வானவில்’ நாடகம் போடப்பட்டது. பிரமிளா ‘தொழிலாளி’ என்ற படத்தில் தேவிகா
என்ற பெயருடன் நடித்துப் புகழ்பெற்றார். இதன் பிறகு நாடகக்குழுவுடன்
என் உறவு சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிந்தே போயிற்று. ராமநரசு சென்னையை
விட்டு புனா சென்றுவிட்டார். நான் நாடகம் எழுதும் முயற்சியைக் கைவிட்டு
விட்டேன்.ஆனால் நாடகம் என்னை விடவில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு
ஞாநி தன்னுடைய பரீக்ஷாவின் முதல் நாடகமாக ‘நாற்காலிக்காரன்’ என்ற ஓரங்க
நாடகத்தை சென்னை மியூஸியம் தியேட்டரில் மேடையேற்றினார். அதில்
நாற்காலிக்காரன் யார்? நான்தான்! நான் மக்கள் முன் தோன்ற என்றுமே
தயங்கியதில்லை. நாற்காலிக்காரனாக நடித்தபிறகு இந்திரா பார்த்தசாரதி எழுதிய
‘போர்வை போர்த்திய உடல்கள்’ நாடகத்தில் ஒரு வேஷம். இதில் ஒரு விசேஷம்... எனக்கும்
‘குடிசை’ டைரக்டர் ஜெயபாரதிக்கும் ஒரு போட்டி. அவர் வெற்றி பெற்று
விடுவார்; நான் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விடுவேன்.ஞாநி தன்
குழுவில் பாலாசிங் போன்ற பல நல்ல நடிகர்களை மேடையேற்றினார். ஆனால் என்னைக்
கைவிட மனதில்லை. அவருக்காக மேடையோடு மட்டுமின்றி, அவரது தொலைக்காட்சித்
தொடர்களுக்காக வீடியோ கேமரா முன்பும் தோன்றியிருக்கிறேன். அவர் ஒரு முறை
எனக்குப் பணம் கூடக் கொடுத்தார்! அறுபது வருடங்கள் கடந்து விட்டன.
இன்னும் ஒரு சின்ன குறை. ஒருமுறை இங்கிலாந்தி லிருந்து ஒரு நாடக டைரக்டர்
சென்னையில் ஒரு மாதம் தங்கி சென்னை மியூசியம் தியேட்டரில் ஷேக்ஸ்பியரின்
‘ஒதெல்லோ’ நாடகத்தை சென்னை இளைஞர்களைக் கொண்டு நடத்தினார். நான் மிகவும்
ஒல்லியாக இருந்தேன். கதாநாயகன் வேஷம் கிடையாது. ஆனால் இயாகோ வேஷத்திற்குப்
பயன்படுத்துவதாக இருந்தார். அந்த நேரம் எனக்குக் கடும் ஜுரம் வந்துவிட்டது. நானில்லாமலே
‘ஒத்தெல்லோ’ நடந்தது. ‘ஏழை படும் பாடு’ புகழ் வி.கோபாலகிருஷ்ணன் இயாகோ
வேடம் தரித்தார். நன்றாகவே நடித்தார். ஆனால் அவர் நானில்லையே! ‘ஒத்தெல்லோ’
நாடகத்திலிருந்து மெட்ராஸ் பிளேயர்ஸ் பிறந்தது.அந்த நாளில் ஐம்பது
சிகரெட்கள் கொண்ட தகர டப்பாக்கள் கிடைக்கும். அவன் பதற்றத்தில் ஒரு
சிகரெட்டை எடுக்க, டப்பா கை தவறிக் கீழே விழுந்து அவ்வளவு சிகரெட்களும்
தரையில் சிதறி விழும். மு.ஸ்ரீனிவாஸன் என்ற நண்பர் அபூர்வமான
மனிதர். இருமுறை அங்கோர் வாட் சென்றிருக்கிறார். அலெக்ஸாண்டர் டூமாவின்
புகழ்பெற்ற ‘கவுன்ட் ஆஃப் மாண்டி கிரிஸ்டோ’ நாவலில் வரும் ஷாடியு டி இஃப்
தீவுச் சிறைச்சாலையைப் பார்த்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ‘கலை
இலக்கிய வரலாற்று மஞ்சரி’ என்ற நூல், மஹாபாரதத்தில் ஆரம்பித்து
பி.எஸ்.ராமையா வரை மிகத் துல்லியமாகவும் சுருக்கமாகவும் விவரிக்கிறது.
இதில் உள்ள பல புகைப்படங்கள் அவர் எடுத்ததாக இருக்கக் கூடும். இந்த
மகத்தான நூலை அவருடைய 84வது வயதில் திரட்டி உருவாக்கியிருக்கிறார்!(கலை
இலக்கிய வரலாற்று மஞ்சரி - மு.ஸ்ரீனிவாஸன், பக்கங்கள்: 440, விலை:
ரூ.350/-, வெளியீடு: சேகர் பதிப்பகம், 60, பெரியார் சாலை, கே.கே.நகர்,
சென்னை-600078. பேச: 044-65383000) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
ருத்ரையா
இன்று
பலர் கூறுவது போல ருத்ரையா எனக்கும் நண்பர். எனக்கு அவரை முதலில்
சந்தித்தது எப்போது, எப்படி என்று சரியாக நினைவில்லை. ஆனால் 1973
அக்டோபரில் என்னை ஊருக்கு அனுப்ப வந்த குழுவில் அவர் இருந்தார். அதன்
பின் நடுநடுவில் பார்த்திருக்கலாம். ஒரு புகழ்பெற்ற சோழ மன்னன் பெயர்
கொண்ட நண்பர் மூலம் பல சினிமாத் துறைக்காரர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒரு
முறை அவரிடம் சற்றுக் கடுமையாகக் கூட பேசியிருக்கிறேன்: ‘‘வெறுமனே
‘நினைத்திருக்கிறேன்’, ‘திட்டம் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு
காலை ஏழு மணிக்கும் இரவு தூங்கப்போகும் நேரத்திலும் யாரையும் அழைத்து
வராதீர்கள். (அவர்
ஒருமுறை சசிகுமாரை இரவு ஒன்பது மணிக்கு அழைத்து வந்தார்!) ஒழுங்காக
வேலையைத் தொடங்கிய பின் தகவல் தாரும். நான் உங்கள் வெற்றிக்கு மனமார
வாழ்த்துவேன்’’ என்று சொன்னேன். அப்புறம் அவரே ஒரு படம் தயாரித்து
டைரக்டும் செய்தார். பணப் பற்றாக்குறை அப்படத்தில் கண்கூடாகத்
தெரிந்தாலும், அது ஒரு நல்ல முயற்சி. இன்று ‘நில அபகரிப்பு’ என்ற சொல்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரை சென்றிருக்கிறது. என் நண்பரின் படம் அதை
மையமாகக் கொண்டது. அவரும் ஒரு காரணம், ருத்ரையா என் நண்பரானதற்கு. ‘அவள்
அப்படித்தான்’ படம் வெளியானபோதே, ஒரு வித்தியாசமான, கூர்ந்து கவனிக்க
வேண்டிய படம் என்ற எண்ணத்தைப் படம் பார்த்தவர்களிடம் ஏற்படுத்தியது. அதே
நேரத்தில் அப் படத்தில் சில முக்கியமான பாத்திரங்கள் முரண்பாடுகள்
கொண்டவை. கதாநாயகி மட்டும் அல்ல. அவளை உதவியாளராக அமர்த்தி இருந்த
முதலாளியும் முரண்பாடுகள் கொண்டவன். அப்பாத்திரத்தில் நடித்தவர்
ரஜினிகாந்த். அவர் எல்லாக் காட்சிகளிலும் விபூதி தரித்தவராக வருவார். ஆனால்
ஒரு முறையும் ஒழுங்காகத் தரித்திருக்க மாட்டார். அவர் தளைகளை உடைத்தவராக
இருக்கலாம். ஆனால் நெற்றியில் விபூதி வேண்டும். அதை ஏன் ஒரு முறை கூட
ஒழுங்காகப் பூசியிருக்கவில்லை? உண்மையில் பார்த்தால் படத்தை ‘அவள்
அப்படித்தான்’ என்பதோடு, ‘அவன் அப்படித்தான்’ என்றும் அழைக்கலாம். அப்போது
ருத்ரையா இளைஞர். சில கலாசார அம்சங்களில் அவருக்கு அதிகப் பரிச்சயம்
இல்லாது போயிருக்கலாம். ருத்ரையா மறைந்தபோது அவருக்கு வந்த இரங்கல்
கட்டுரைகள் போல சினிமாத் துறையில் ராஜ்கபூருக்கு வரவில்லை. நாகைய்யாவுக்கு
வரவில்லை. ஒரு நண்பர் சொன்னார், ‘‘இப்படி அழுது புலம்புவதற்கு அவர் என்ன
செய்தார்? அந்த ஒரே படத்தைத் தவிர!’’ என் பதில், ‘‘ருத்ரையாவின் ‘கிராமத்து
அத்தியாயம்’, முதல் படத்தை விட இன்னும் சிறப்பாக இருந்தது.’’ அவர்
ஒத்துக்கொள்ளவில்லை. படம் வெளியாகி, தோல்வி என்று அறிந்தபின் ருத்ரையாவே
படத்தில் நிறைய குற்றங்களைக் கண்டுபிடித்தார். அவர் என்னிடம் சொன்ன பல
‘குற்றங்கள்’, உண்மையில் குற்றங்களல்ல. நான் அவருக்கு ஆறுதல் கூறுகிறேன்
என்று தான் அவர் நினைத்தார். திரைப்படங்கள் இந்த வெற்றி - தோல்வி
தர்க்கத்திலிருந்து நழுவிப்போகிற பொருள். எனக்குச்
சட்டென்று சொல்லத் தோன்றுவது, பாரமவுண்ட் நிறுவனம் எடுத்த ‘வார் அண்ட்
பீஸ்’ (டால்ஸ்டாய் எழுதிய மகா நாவல்). ஒரு வடிவமற்ற கதையிலிருந்து,
டைரக்டர் கிங்க் விடார் கிட்டத்தட்ட நூறு முக்கிய பாத்திரங்களுக்கும்
உயிரும் சதையும் கொடுத்து படத்தையும் சிறப்பான வடிவம் கொண்டதாக
அமைத்திருந்தார். கதாநாயகனான
பியருடைய போக்கிரி முதல் மனைவியின் அயோக்கிய சகோதரன், பியர் மிகுந்த
மதிப்பு வைத்திருந்த நடாஷாவை மயக்கி அழைத்துச் செல்லும்போது துரத்திச்
சென்று அச்சிறு பெண்ணை பெரிய விபத்திலிருந்து காப்பாற்றுகிறான்.
இவ்வளவுக்கும் அவன் ஒரு திட மனமில்லாதவன், ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற
பெயரைப் பெற்றவன். அயோக்கிய அண்ணன் - தங்கையாக வந்தவர்கள் நட்சத்திரங்கள். அனிடா
எக்பெர்க் அன்று மர்லின் மன்ரோவுக்குப் போட்டியாகக் கருதப்பட்டவர்.
விட்டோரியோ காஸ்மன் அன்று இத்தாலி திரைப்படத் துறையில் ஒரு
நட்சத்திரம்.எனக்கும் சாதனையாளர்கள் பற்றிப் பெருமையும் பரிதாபமும் உண்டு.
ஆனால் கழிவிரக்கம் ஒரு ஆட்கொல்லி. ருத்ரையா உயிருடன் இருந்தபோது எவ்வளவு
பேர் அவரைக் கவனித்து விட்டார்கள்? கமல்ஹாசன் - ரஜினி சேர்ந்து நடித்த
படங்கள் என்று பல முறை பட்டியல்களும், மறுபரிசீலனைகளும் வந்திருக்கின்றன.
பலருக்கு ‘அவள் அப்படித்தான்’ நினைவில் இருந்ததில்லை. இன்று
நாம் ருத்ரையாவின் படத்தைப் புகழ்ந்தாலும் அது மறக்கப்படுவதை தற்செயல்
நிகழ்ச்சி என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. நீளக்கட்டுப்பாடு உள்ள காலத்தில்
சுருக்கமான படத்தை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து எடுத்து, அனைவருக்கும்
கவனம் கிடைத்த தமிழ்ப் படங்களில் ‘ஹரிதாஸ்’ ஒரு சாதனை. அந்த டைரக்டர் பெயர்
எவ்வளவு பேருக்கு நினைவில் இருக்கிறது? அன்று விருதுகள், பரிசுகள்
கிடையாது. மக்கள் பாராட்டு, நீண்ட நாள் ஓடுதல்... இவைதான் பரிசும்
விருதும். எவ்வளவோ
பணச்செலவில் தயாரிக்கப்பட்டு, நிறைய பத்திரிகை, தொலைக்காட்சி கவனத்துடன்
வெளியிடப்பட்டாலும், திரைப்படங்கள் மறக்கப்படுபவை. பெரிய
நட்சத்திரங்களுக்கு நிறைய தோல்விப் படங்களும் உண்டு. ‘மாபெரும் நாடாகிய
ரஷ்யாவின் ஆன்மாவைப் பிரதிபலித்தவர்கள்’ என்று டால்ஸ்டாயும்
தாஸ்தாவெஸ்கியும் கொண்டாடப்படும் அளவுக்கு, ‘ஆன்மாவே இல்லாது எழுதப்பட்டவை’
என்று கூறக்கூடிய, சிறு சிறு நூல்கள் சிலவே எழுதிய ஆல்பெர் காம்யூவும்
காஃப்காவும் நீண்ட காலம் கொண்டாடப்படுவார்கள். சினிமாவில் அந்த
அளவுக்குக் கொண்டாடக்கூடிய நபர் ஒரே ஒருவர். அவர், சார்லி சாப்ளின்.
சர்க்கஸை வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! இந்தியாவில் ராஜ்கபூர்
தொடங்கி ஹாலிவுட்டில் செசில் பி.டிமில்லி வரை பெரிய பெரிய படங்கள். ஆனால்
நூறாண்டுகளுக்கு முன்பு மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக
எடுக்கப்பட்ட ‘சர்க்கஸ்’ என்ற சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும்
கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர
இயலவில்லை. ருத்ரையா முதல் படத்தில் நிறைய நம்பிக்கை தந்தார்.
ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு சிறிது சிறிதாக
மறக்கத் தொடங்கினார்கள். ருத்ரையாவின் நலம்விரும்பியான நான் அவர் பற்றிய
எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொண்டேன். என் நண்பர் ஒருவரின் உறவினர் என்
நண்பர் பற்றியே ஒரு கருத்துத் தெரிவித்தார். ‘‘நீ ஆறு மாதங்களுக்குள் ஒரு
வேலையில் அமராவிட்டால் நீ என்றுமே வேலை செய்யும் திறமையிழந்தவனாகி
விடுவாய்.’’ ஆங்கிலத்தில் இன்னும் சுருக்கமாகச் சொல்லலாம். If you are
unemployed for six months, you will become unemployable forever. சர்க்கஸை
வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு
மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக எடுக்கப்பட்ட சார்லி
சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும்
மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர இயலவில்லை. படிக்க இம்முறை
இரு வரலாற்று நூல்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப்
பேராசிரியர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தென் இந்திய வரலாறு’. முதலில் நேஷனல்
புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில மூலத்தின் தமிழாக்கத்தை பழனியப்பா பிரதர்ஸ்
வெளியிட்டிருக்கிறார்கள். கே.கே.பிள்ளை
வரலாற்றுத் துறையில் உலகப் புகழ்பெற்ற ஆசான். (தென் இந்திய வரலாறு - முதல்
பாகம்: ரூ.84/-, இரண்டாம் பாகம்: ரூ.115/-, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்,
புதிய எண்.25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச:
044-43408010) இரண்டாவது,
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘முகலாயர்கள்’. இதை எழுதியவர் முகில். இவர்
நிறைய வாழ்க்கை வரலாறுகளும் எழுதியிருப்பவர். சுமார் ஐந்நூறு பக்கங்கள்
கொண்ட ‘முகலாயர்கள்’ மிக சுவாரசியமான நூல். வரலாற்று நூல்களில் கால
அட்டவணை, பெயர் - பொருள் அகராதி மிகவும் முக்கியம். முகில் மிகச் சிறப்பாக,
விரிவாக கால வரிசை தந்திருக்கிறார். அத்துடன்
இந்த நூலை எழுத உதவிய நூல்கள், இணைய தளக் குறிப்புகளும் தந்திருக்கிறார்.
தமிழ் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். (முகலாயர்கள் - விலை:
ரூ.350/-, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச: 9445901234) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
கணினியும் செல்போனும் சரிப்படவில்லை
இந்தியாவின்
மக்கள்தொகை 100 கோடி என்றால் இந்தியாவில் இன்று 95 கோடி செல்போன்கள்
இருக்கின்றன. மக்கள்தொகையில் கால்வாசிக்கு மேல் குழந்தைகளாக இருக்கலாம்.
கைகளைப் பயன்படுத்த முடியாத மனிதர்கள் இருக்கலாம். அதன் பிறகு பரம ஏழைகள்.
அப்படி யிருந்தும் 95 கோடி மொபைல் போன்கள் இருக்கின்றன. இது தமிழ்
வாழ்க்கையோடு கலந்து விட்டது என்பதற்கு அடையாளமாக மொபைல் போன்களைக்
‘கைபேசி’ என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். முதலில்
இது எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக்
கூடியது என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும்
பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று. அதன் பிறகு
‘அவ்வப்போது நியமிக்கப்பட்ட இடங்களில் கட்டணம் செலுத்திப் பயன்பாட்டை
நீட்டிக்க வேண்டும்’ என்று புரிந்து கொள்வதற்கு இன்னும் நாட்களாயிற்று. ஒரு
முக்கிய காரணம்... எனக்குக்
கணினியும், அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பமும், இந்தியர் வாழ்க்கையில்
அந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிடிக்கவில்லை.
என் அயல்நாட்டு நண்பர்களை தொடர்ந்து தபால் எழுத வைத்தேன். அவர்கள்
‘‘இதென்ன பைத்தியக்காரத்தனம்?’’ என்று கேட்பார்கள். இன்டர்நெட் வசதி பெற்று
ஈமெயி லில் அனுப்புவது கிட்டத்தட்ட இலவசம் என்பதோடு, உடனுக்குடன் போய்ச்
சேர்ந்து விடும். ஆனால் ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணம்,
வீட்டில் கட்டுக்கட்டாகக் கையெழுத்துப் பிரதிகள். ஒரு
முறை ஒரு நண்பர் நான் எழுதிய ஒரு தாள் கேட்டார். நான் ஒரு கட்டையே
கொடுத்துவிட்டேன். பழைய காகிதம் வாங்கிப் போகிறவரிடம் போட்டேன்.
‘‘இதெல்லாம் போவாதுங்க...’’ என்றார் தயக்கமாக! நானும் ஓரளவு கணினியைப்
பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொண்டபோது பிரதியை ஒருவாறு தயாரித்து
விடுவேன். எனக்கே
தெரியாமல் அது சில இடங்களில் கொட்டை எழுத்துக்களாகவும் சில இடங்களில்
குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் இருக்கும். இன்னும் மோசம், நான் ஈமெயில்
அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள். எனக்குச் சொல்லப்பட்டது
‘கன்ட்ரோல்’ என்ற கட்டத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘ஏ’, ‘சி’ என்று
டைப் செய்துவிட்டு மீண்டும் இன்டர்னெட் பகுதிக்குச் சென்று கன்ட்ரோல் ‘வி’
அழுத்த வேண்டும். நான் அவ்வாறே செய்தேன். ஒரு பக்க விஷயம் திரும்பத்
திரும்ப அதில் வந்து கொண்டே இருந்தது. என்னிடம்
அந்த ஆங்கிலப் பத்திரிகை கேட்டது ஒரு பக்கம். அவர்களுக்கு இருபது பக்கம்
அனுப்பினால்? நான் அந்தக் குறிப்பிட்ட துணை ஆசிரியருக்குத் தொலைபேசி
(சாதாரண தொலைபேசியில்தான்) தொடர்பு கொண்டு, ‘‘என் கம்ப்யூட்டரில் என்ன தவறு
என்று தெரியவில்லை. நீங்கள் கேட்ட கட்டுரை சுமார் இருபது பிரதிகளாக வந்து
விட்டது’’ என்றேன். அவர், ‘‘கவலைப்படாதீர்கள். நாங்கள் சரி செய்து
விடுவோம்’’ என்றார். நான்
தீர்க்கவே முடியாத தவறைச் செய்துவிட்டேன் என்று நடுநடுங்கிக்
கொண்டிருந்தேன். அந்த மனிதர் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் ஒரு
முறை என்னை நேரில் சந்திக்க வந்தபோது அவர் சொன்னார்: ‘‘முன்பெல்லாம்
எவ்வளவு அழகாகத் தட்டச்சு செய்து தபாலில் அனுப்புவீர்கள். செவ்வாய்க்கிழமை
தவறாமல் தபாலில் வந்து விடும். நான் அச்சுக்குத் தயார் செய்வேன். எவ்வளவு
ஆனந்தமாக இருக்கும் தெரியுமா?’’ அதாவது, கையெழுத்துப் பிரதி கொடுத்த
அனுபவம் கணினியில் அவருக்குக் கிடைக்கவில்லை. தச்சு வேலை செய்பவர்,
எலெக்ட்ரீஷியன், பிளம்பர், காய்கறி விற்பவர்கள் என மிக விரிவாகப்
பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் நான் என் மகனிடம் சொல்லி ஒரு கைபேசியைக்
கையில் பிடித்தேன். மிகவும் சிறியதாக இருப்பதாகத் தோன்றியது. இதற்குள்
‘கணினியில் இதெல்லாம் சாத்தியமா’ என்று வியக்கும் அளவுக்குத் தவறுகள்
செய்தேன். ஒரு முறை சுமார் 5000 சொற்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை அப்படியே
மறைந்து விட்டது. எப்படி மீட்பது எனத் தெரியவில்லை. அப்படி
ஏதாவது மாற்றம் நேர்ந்தால் அதைச் சரி செய்ய ஒரு வழி உண்டு என்று சொல்லிக்
கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த முறை என் மகனின் மகளிடம் உதவி கேட்டேன்.
அவளுக்குக் கோபம் வந்தது. ‘‘நீ எதையாவது தப்பான கட்டத்தை
அழுத்தியிருப்பாய்’’ என்றாள். அவள் ஏதேதோ செய்து பார்த்தாள். போனது
போனதுதான். நான் மீண்டும் கணினி அருகே போகவில்லை. என் தட்டச்சு இயந்திரத்தை
வைத்துக் கொண்டு கட்டுரையை மீண்டும் அடிக்கத் தொடங்கினேன். தட்டச்சு
இயந்திரத்தைப் பயன்படுத்திப் பல மாதங்கள் ஆகியிருந்ததால் முதலில் ரிப்பன்
மாற்ற வேண்டியிருந்தது. உள்ளூர் பகுதியில் அந்த இயந்திரத்துக்கான ரிப்பன்
கிடைக்கவில்லை. திண்டாடிப் போய்விட்டேன். கட்டுரை தாகூர் பற்றியது. பலர்
கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் பொறுப்பு
அளிக்கப்பட்டிருந்தது. கணினியில் என் கட்டுரை மிகவும் நன்றாக
அமைந்திருந்தது. நினைவில் இருந்த வரிகளை எழுதி ஒரு மாதிரி சமாளித்தேன்.
கட்டுரை ஆங்கிலத்தில் தேவைப்பட்டது. ஆனால் கணினியில் எங்கோ போய்
ஒளிந்துகொண்ட கட்டுரை மாதிரி மீண்டும் உருவாக்க முடியவில்லை. தொகுப்பும்
வெளிவந்துவிட்டது. அதன்பின்
ஒருநாள் கணினி முன் உட்கார்ந்து எதையோ தட்டினேன். கட்டுரையின் ஒரு பகுதி
திரையில் வந்தது. உ.வே.சாமிநாதய்யர் சேலம் ராமஸ்வாமி முதலியாரிடம் தான்
படித்த பாடங்களைச் சொன்னபோது முதலியார் சொன்னார், ‘‘என்ன பிரயோசனம்?’’
‘சீவக சிந்தாமணி’ என்றொரு காப்பியம் உண்டென்பதை அப்போதுதான் அய்யர்
அறிந்தார். அதன் பிறகு நேர்ந்ததெல்லாம் வரலாறு. எனக்கு வரலாறு படைத்த பெயர்
கிடைக்காது. ‘முட்டாள்’ பட்டம்தான் கிடைக்கும். கைபேசியில்
ஒருவர் என்னோடு பேச அழைத்தால் எதை அழுத்த வேண்டும் என்பது புரியவும்
மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போதும் தவறான பொத்தானை அழுத்தி, அவர்
கோவித்துக்கொண்டு, பிறகு நானாக அவரிடம் பேச முயற்சி செய்யும்போது ‘ஏன்தான்
பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிறேன்’ என்று
தோன்றும். ஒரு விபரீதம். புதிதாகக் கட்டி முடித்த ஒரு கோயிலுக்குப் போனபோது
ஒரு சாமியார் என்னிடம் வந்து, ‘‘செல்போன் இருந்தால் அதை மௌனமாக்குங்கள்’’
என்றார். ‘‘எப்படி?’’அவர் செய்து தந்தார். ஆனால் யார் யாரோ அந்தக்
கோயிலே உகந்த இடம் என்று போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள், அந்த சாமியார்
உட்பட. அதன் பிறகு நாட்கணக்கில் எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. நான் ஒரு
நண்பரிடம் கேட்டேன். அவர் போனைப் பார்த்து, ‘‘நீங்கள் சைலன்ட் மோடில்
வைத்திருக்கிறீர்கள்’’ என்றார். ‘‘அதை எப்படிச் சரி செய்வது?’’‘‘முதலில்
செய்தபடிதான்.’’ அந்த ஒரு வாரத்தில் பத்து நபர்கள் போன்
செய்திருக்கிறார்கள்! இதெல்லாம் எல்லாருக்கும் நேரக்கூடியதுதான் என்று
சொல்லக்கூடும். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்கிறார்களா? இது
எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக் கூடியது
என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும்
பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று. படிக்க உலகின்
முதல் காவியம் எது? ஆராய்ச்சியாளர்கள் ‘அது கில்கமேஷ் காவியமே’ என்று
நம்புகிறார்கள். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரிய மொழியில்
களிமண் வில்லைகளில் எழுதப்பட்டதாகவும், சுமேரிய அரசுக்குப் பின்
அக்காடியர்களால் அக்காடிய மொழியில் மீண்டும் களிமண் வில்லைகளில் எழுதி
வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முழு காவியம் கிடைக்காவிட்டாலும்
கிடைத்ததிலிருந்து ஒருவாறு எழுதப்பட்டிருக்கிறது. இது
சாகசங்கள் நிறைந்த கதை. ‘மகாபாரதம்’ போல இதற்கு தத்துவப் பின்னணியோ,
வரலாற்று முக்கியத்துவமோ கிடையாது. ஆனால் இதில் கூறப்படும் இடங்கள் இன்றும்
உள்ளன. கிடைத்த தகவல்களைத் திரட்டி லண்டன் எஸ்.தியாகராஜா தமிழில் ரசமிக்க
நூலாகத் தந்திருக்கிறார். பல
சுமேரியப் படங்களும் வண்ண அட்டைப்படமும் கொண்ட இந்த நூலின் விலை நாற்பது
ரூபாய் மட்டுமே!(கில்கமேஷ் காவியம் - டாக்டர் எஸ்.தியாகராஜா, வெளியீடு:
இராமநாதன் பதிப்பகம், 1481, கார்டன் அவென்யூ, முகப்பேர், சென்னை-600 050.
பேச: 044-26562346) (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
அல்வாவுக்கு கடுகு தாளிப்பது
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு சகோதரர் உண்டு. என்.எஸ்.திரவியம். அவர்
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தார்.
‘நீதிபதி’. அந்த நாளில் தமிழ் சினிமாக்களில் நிறைய நீதிபதிகள் வருவார்கள். அந்த
நாளில் நீதித்துறை அவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதன் ஓர் அடையாளமாக இதை
வைத்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்து 1940களிலிருந்தே சமூகப் படங்கள்
என்றால் நிச்சயம் ஒரு கோர்ட் சீன் வரும். அதென்ன சமூகப் படம் என்று சிலர்
கேட்கக் கூடும்! சமகாலத்தைப் பிரதிபலிப்பதாகத் தயாரிப்பாளர் கருதும் படம்.
நீதிபதி இல்லாத கோர்ட் ஒரு கோர்ட்டா? இது ஒருபுறமிருக்க,
என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் எடுத்த படத்திலும் ஒரு நீதிபதி வருவார்.
மீண்டும் எஸ்.வி.சஹஸ்ரநாமம். ‘பராசக்தி’ படத்தில் அவர்தானே தம்பிக்கும்
தங்கைக்கும் கொலை, கொலை முயற்சிக் குற்றங்களுக்காக நீதி கூறும்படி
நேர்கிறது? ‘பராசக்தி’ ஓடின ஓட்டத்தில் பாதியாவது இந்தப் படம்
ஓடக்கூடாதா?ஆனால் ‘நீதிபதி’ விசேஷமாக ஓடவில்லை. மிக
நீளமான படம். ஜெமினி கணேசனும் கே.ஆர்.ராமசாமியும் சேர்ந்து நடித்த படம்
அது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். ஆனால் படம் ஓடாததற்கு அது காரணம் அல்ல.
நான் பார்த்தேன். ஆனால் இன்னொரு தகவல் ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்தை
இந்தியில் எடுக்கப் போட்டா போட்டி நடந்தது. இப்படிப் போட்டி வந்தால்
இறுதியில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுவார். ஜெமினியில்
‘அபூர்வ சகோதரர்கள்’ என்றொரு படத்தை எடுத்தார்கள். இதை பம்பாயில்
ஏ.ஆர்.கர்தார் என்பவர் 1947 அளவிலேயே எடுக்கத் திட்டமிட்டு
இருந்திருக்கிறார். ஆனால் போட்டா போட்டி காரணமாக அதைக் கைவிட
வேண்டியிருந்தது. அதன் பிறகு ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ என்ற படத்தை எடுக்கத்
திட்டமிட்டார். அதே படத்தைத் தெற்கில் ஒருவர் பானுமதியைக் கதாநாயகியாக
வைத்துத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துக்
கொண்டிருப்பதாக விளம்பரம் செய்தார். இம்முறை கர்தார் விட்டுக்
கொடுக்கவில்லை. ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ படத்துக்கு அமெரிக்காவிலேயே பெரிய
வெற்றி கிட்டவில்லை. ஆனால் இந்தியாவில் போட்டா போட்டி! இங்கு ஒரு
தமிழ்ப் படத்தை இந்தியில் எடுக்கப் போட்டி. ஒருவரும்
விட்டுக்கொடுக்கவில்லை. அன்று காப்புரிமைச் சட்டங்கள் பற்றிப் பரவலாகத்
தெரியாது. ஐ.எஸ்.ஜோஹர் என்பவர் எந்த ஹாலிவுட் படம் நன்றாக ஓடினாலும், அதை
அப்படியே தழுவி உடனே ஓர் இந்திப் படத்துக்குத் திரைக்கதை எழுதிவிடுவார். இப்படித்தான்
ஒரு முறை ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் எடுத்த ‘நாக் ஆன் வுட்’
என்ற படத்தைத் தழுவி ஜோஹர் ஒரு திரைக்கதை எழுதி, அதை ஒருவர் இந்திப் படமாக
எடுத்தார். ஃபாக்ஸ்காரர்கள் வழக்குத் தொடர்ந்து தீர்ப்பில் கடுமையான நஷ்ட
ஈட்டைப் பெற்றனர். அன்றி லிருந்து ஜோஹருக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. என்.எஸ்.திரவியம்
இரு முறை பணம் பெற்றாரா என்று தெரியாது. ஆனால் ‘நீதிபதி’ திரைப்படத்தைத்
தழுவி இரு இந்திப் படங்கள் வெளியாகின. இரு தயாரிப்பாளர்களும் மிகவும்
திண்டாடியிருப்பார்கள். காரணம், இரு படங்களுக்கும் ஒரே நடிகர்தான்
கதாநாயகன்! கிஷோர் குமார். ஒரு படத்தில் கதாநாயகன் பாடும் ஒரு பாட்டில்
‘நீலக் குடைக்காரன் பெரிய சி.ஐ.டி’ என்று வரும். நீலக் குடைக்காரன்தான்
கடவுள். கடவுளை நீலக்
குடைக்காரன் என்று சொல்லும் வர்ணனை ஒரு இந்திப் பழமொழி யில் வருகிறது.
‘படாயி சி.ஐ.டி. ஹை நீலிச் சத்திரிவாலா’. இன்னொரு பழமொழி, ‘ஒவ்வொரு
தானியத்தின் மீதும் அதை உண்ணப் போகிறவன் பெயர் எழுதி யிருக்கிறது’. அது,
‘தானே தானே பே லிக்கா கானே வாலேக்கா நாம்’. இன்றைய தமிழ்ப்படங்களில்
பழமொழிகளுக்கு இடம் இல்லை என்று நினைக்கிறேன்; இந்திப் படங்களிலும் இல்லை.
இலக்கியச் சுவை தேவைப்படும் திரைப்பாடல்கள் நம் தயாரிப்பாளர்கள் எடுக்கும்
‘சமகால’ப் படங்களில் அல்வாவுக்குக் கடுகு தாளித்துப் போடுவது போல. ஆனால்
ஆண்டுதோறும் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் பல முறை தமிழ்ப்
பாடலாசிரியர்கள் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு
தங்கப் பதக்கத்திலும் அதைப் பெறுபவர் பெயர் எழுதி யிருக்கும்இன்று காலம்
மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை விடும் தங்கை, அம்மாவுக்காகக்
காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா செய்த குற்றத்துக்காகச் சிறை
செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு தலைமுறையைச் சார்ந்தவை. ஆதலால்
தத்துவப் பாடல்கள் இன்று காண, கேட்க முடியாது. முன்பு அது ஒரு ‘ஸ்டண்ட்’
சினிமாவாக இருந்தால் கூட ஒரு தத்துவப் பாட்டு இருக்கும். ‘தேவதாஸ்’
படமானால் காதலை விட உலகம், வாழ்க்கை, துணிந்த மனம், துணியாத மனம் என வண்டி
யளவு தத்துவம் சூறாவளிப் புயலாகப் பொழியும். இந்தத் தத்துவப்
பாட்டுகள் சூரியகுமாரி நடித்த படங்கள் (1937) காலத்திலிருந்து இருக்கின்றன.
அப்புறம் பிச்சைக்காரர் பாட்டு. ராண்டார் கை என்ற எழுத்தாளர் ‘‘ ‘ஐயா சிறு
பெண் ஏழை என்பால் மனமிரங்காதா’ என்ற பாட்டை நிஜ வாழ்க்கையில் பாடாத
பிச்சைக்காரனே கிடையாது’’ என்று எழுதியிருப்பார். கதாநாயகியோ,
கதாநாயகனோ, மிகுந்த துக்கத்துடன் ரயிலில் போய்க் கொண்டிருக்க, அவர்கள்
மனநிலைக்கேற்ப ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் ஒரு சிறுமி வழிகாட்ட...
ரயிலில் பாடியபடியே வருவான். எம்.எம்.மாரியப்பா என்பவர் இந்தத் தத்துவப்
பாட்டுகளுக்குப் பெயர் போனவர். நாகையா ஒரு படத்தில் மேடையிலேயே ‘விதியின்
விளையாடல்’ என்று பாடுவார். இந்திப்
படங்களில் சைகல், பங்கஜ் மல்லிக், கே.சி.டே போன்றவர்கள் தத்துவப்
பாடல்களுக்குப் பெயர் போனவர்கள். (மன்னா டே என்ற புகழ்பெற்ற வட இந்திய
சினிமாப் பாடகர், கே.சி.டேயின் மகன்.) பக்திப் பாடல்களுக்கும் தத்துவப்
பாடல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. நான் ‘சிந்தாமணி’ என்ற படத்தைப்
பார்த்தபோது எட்டு வயது இருக்கும். அதில் ‘பஜனை செய்வோம் கண்ணன் நாமம்’,
பக்திப் பாட்டு. ‘ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே’ தத்துவம்.
இரண்டையும் தியாகராஜ பாகவதர் பாடுவார். நிஜ வாழ்க்கையில் அவருடைய கடைசி
நாட்களில் இப்படிப் பாடிய படியே இறந்தார். தமிழில் தத்துவப்
பாடல் எழுதும் பாடலாசிரியர் யாரும் பாட்டை எழுதி, அவரே பாடுவேன் என்ற
நிபந்தனை விதித்ததில்லை. இந்தியில் பிரதீப் என்ற பாடலாசிரியர் அவரே
பாடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பார். ஒன்று சொல்ல வேண்டும். அவர் பாடல்கள்
மிகவும் பிரபலமடைந்தன. ‘மனிதன் மாறி விட்டான்’ என்ற தமிழ்ப் பாட்டின்
ஒரிஜினல், பிரதீப் பாடிய ஒரு இந்திப் பாடல். அவர் மாறவே இல்லை, கடைசி
வரையில். இன்று காலம் மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை
விடும் தங்கை, அம்மாவுக்காகக் காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா
செய்த குற்றத்துக்காகச் சிறை செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு
தலைமுறையைச் சார்ந்தவை. படிக்க என் இரு நூல்களைச் சிபாரிசு
செய்கிறேன். இவை விரைவில் வெளியாகிவிடும். ஒன்று, சென்னை நற்றிணைப்
பதிப்பகம் வெளியிடும் சிறு நாவல்: ‘இந்தியா 48’. பெயரில் நாடும் ஆண்டும்
இருந்தாலும் இது தனி நபர்களின் கதை. இரண்டாவது, நாகர்கோவில் காலச்சுவடு
பதிப்பகம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு, ‘இரண்டு விரல் தட்டச்சு’.
இக்கதைகள், நாவல் யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை. (பாதை நீளும்...)
அசோகமித்திரன்
மறைந்தவர்கள் மத்தியில்
வருடம்
முடியப் போகும் நேரத்தில் பல கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவுக்கு
வருகின்றன. முக்கியமாக, இறந்தவர்கள் பற்றி! அப்போது நம் செயல்களின்
குறைபாடுகள் வருத்துகின்றன. உயிரோடு
இருக்கும் நாளில் அந்த மனிதரைப் பார்க்கவில்லையே? ‘மழை பெய்து
கொண்டிருக்கிறது, நாளை பார்க்கலாம்’ என்று ஒத்திப்போட்டது வருத்தத்தைத்
தருகிறது. வெகு எளிதாகச் சொல்லிவிடலாம், இப்போது வருந்தி என்ன பயன். ஆனால்
நம் நினைவுகள் எல்லாம் பயனுக்காகத்தான் செயல்படுகின்றனவா? நோய்வாய்ப்பட்டிருந்த
தி.ஜானகிராமனைப் பார்க்க நானும் ராஜரங்கன் என்ற எழுத்தாளரும் ஒருநாள்
கிளம்பினோம். உண்மையில் நாங்கள் தனித்தனியாகப் பார்த்திருக்கலாம். ஆனால்
ராஜரங்கன் ‘இருவரும் சேர்ந்து போய்ப் பார்க்கலாம்’ என்று உறுதியாகச்
சொல்லியிருந்ததால் நான் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் ஜானகிராமனுக்கு
என்னை விட அந்தரங்கமானவர். ஜானகிராமனின் நில விற்பனைக்கு அவர்தான்
பொறுப்பேற்றிருந்தார். ராஜரங்கன் அப்போது லயோலா கல்லூரியில் கணிதப்
பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு நில விற்பனை
போன்ற விஷயங்களில் பெரிய கெட்டிக்காரத்தனம் இருந்ததாக நான் நினைக்க வில்லை.
ஆனால் ஜானகிராமன் நினைத்திருந்தார். அவர் ‘சேர்ந்து போகலாம்’ என்று
கூறியிருந்ததால் நான் ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
என் வீட்டிலிருந்து பேருந்து பிடிக்க அதிக தூரம் நடக்கவேண்டியதில்லை.
ஆனால் ஜானகிராமனைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரிக்கு நான் அதுவரை போனதில்லை.
அதற்கு நேராகப் பேருந்து கிடைக்காது, நிறைய நடக்கவேண்டும் என்று மட்டும்
தெரிந்து வைத்திருந்தேன். அன்று ராஜரங்கன் பகல் ஒரு மணிக்கு
வந்தார். நான் உடனே கிளம்பத் தயாராக இருந்தேன். அவர் என் மனைவி, மகனுடன்
பேச ஆரம்பித்தார். அப்புறம் டீ. நாங்கள் கிளம்பும்போது கிட்டத்தட்ட இரண்டு
மணி. 5பி பேருந்து உடனே கிடைத்து விட்டது. ஐ.ஐ.டி நிறுத்தத்தில் இறங்கி
நடக்க ஆரம்பித்தோம். அன்று கடுமையான வெயில். நாங்கள்
போகும் சாலை கிழக்கு - மேற்கு. ஆதலால் வெயில் முழுதையும் நாங்கள் கட்டாயம்
தாங்கியாக வேண்டும். எனக்குக் கண் கூசியது. ராஜரங்கன் என்னைவிடப்
பெரியவர். உடலும் பெரிது. அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்த நாளில் ஆட்டோ
அமர்த்திக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றாது. ஆனால் ராஜரங்கனுக்குத்
தோன்றியிருக்கலாம்.அவர் திடீரென்று, ‘‘நாளை பார்த்துக்கொள்வோமே’’ என்றார். ‘‘உங்களுக்கு கிளாஸ் இல்லையா?’’ ‘‘அரை நாள் லீவு போட்டு வரலாம்.’’ அந்த
நாளில் லயோலா கல்லூரியில் அப்படியெல்லாம் லீவு போட முடியாது. சென்னைக்
கல்லூரிகளில் மிகவும் கண்டிப்பு (Slaves of Loyola) என்பார்கள். கல்லூரி
ஆசிரியர்கள் பலருக்கும் வசிப்பதற்காக கல்லூரியே வீடுகள் கொடுத்திருந்தது.
ராஜரங்கனுக்கு விசேஷமான வீடு. ஊரெல்லாம் சொட்டுத் தண்ணீருக்குத் தவித்துக்
கொண்டிருந்தபோது, லயோலா வீடுகளில் இருந்தவர்கள் தினம் வீட்டைக் கழுவி
விடுவார்கள். தோட்டம் வைத்திருப்பார்கள். கார் இருந்தால் அதையும் தினம்
தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டி விடுவார்கள். அந்தச் சூழ்நிலையில் ராஜரங்கன்
போன்றவர்கள் அவ்வளவு எளிதாக விடுப்பு எடுக்க முடியுமா? இரண்டு
மூன்று தினங்கள் காத்திருந்துவிட்டு நானே அந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன்.
‘‘சீக்கிரம் அவர் வீட்டுக்குப் போங்கள். உடலையாவது பார்க்கலாம்’’
என்றார்கள். வீட்டு வசதி வாரியம் ஜானகிராமனுக்கு திருவான்மியூரில் வீடு
கொடுத்திருந்தது என்று மட்டும் தெரியும். ஆனால் எந்த மாதிரி வீடு, எங்கே
இருக்கும் என்று தெரியாது. அன்று கைபேசிகள் கிடையாது. ராஜரங்கன்
வீட்டில் தொலைபேசி உண்டு என்று தெரியும், ஆனால் எண் தெரியாது. நான்
பேருந்தில் திருவான்மியூர் சென்று விசாரித்தேன். பயனில்லை. ஒரு தகவல்
ஞாபகத்துக்கு வந்தது. ‘‘எழுத்தாளர் என்றாலும் அவர் ஆல் இண்டியா ரேடியோவில்
பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’’ என்று விசாரித்தேன். ஒருவர்,
‘‘நீங்கள் அந்த வீட்டு மாடியில் போய் விசாரியுங்கள்’’ என்றார். அதுதான்
ஜானகிராமன் வீடு.எனக்கு அப்போது ‘ஃபிளாட்’ பற்றி அதிகம் பரிச்சயம்
கிடையாது. ஜானகிராமனின் உடலைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது
குளிர்சாதனப் பிரேதப்பெட்டி கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை
உருகித் தரையெல்லாம் ஈரப்படுத்திவிடும். எனக்கு மிகவும் துக்கமாக
இருந்தது. அங்கே யாரையாவது துக்கம் விசாரிக்கக்கூட நகர முடியாமல் நெரிசல்.
நான்கைந்து பேர் கூட நிற்க இடமில்லை. தரையெல்லாம் தண்ணீர். அவர்
மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் இருந்தபோது நான் நூறு முறை அவர்
வீட்டுக்குப் போயிருப்பேன். அவர் டெல்லி சென்ற பிறகு ஐந்தாறு முறை அவர்
வீட்டுக்குப் போயிருப்பேன். விசாலமாக இருக்கும். இப்போது அவருடைய சொந்த
வீட்டில் அவரை நான்கு பேர் சரியாக முகம் பார்க்க முடியாத நிலை. பிறகு
அவருடைய நண்பரும் நலம் விரும்பியுமான சிட்டி அவர்களைப் பார்த்தேன். கடைசி
நாட்களில் ஜானகிராமன் சற்று அதிகப்படியாகவே சிரமப்பட்டிருக்கிறார். அவருடைய
பெண் அவருடைய சம்மதமில்லாமல் மணம்புரிந்து கொண்டாள் என்று அவர் மிகவும்
அதிர்ந்து போயிருந்தார். இது பல குடும்பங்களில் நடப்பதுதான். அவருடைய மனைவி
யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருந்தார். ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள்
எழுதிய மனிதனுக்கு அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. ராஜரங்கன்
ஜானகிராமனை உயிரோடு இருக்கும்போது பார்த்தாரா என்று தெரியவில்லை. லயோலா
பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டோ, இரண்டு ஆண்டுகளோ அவர் பிரிட்டிஷ்
கயானாவுக்கு கலாசாரத் தூதராகப் போனார். திரும்பி வந்தவுடன் அவர் அந்த ஊரைப்
பற்றி விவரித்தபோது சிரிப்பாகவும் இருந்தது, பயமாகவும் இருந்தது. பகல்
இரண்டு மணிக்கு மேல் வெளியே தலையைக் காட்ட முடியாது. ஊர் அவ்வளவு
பாதுகாப்பானது. இன்று ராஜரங்கனும் போய் விட்டார். அவர் ஒரு குரு
மாதிரி கருதிய தி.ஜ.ரங்கநாதனும் போய் விட்டார். நான் பல விஷயங்களுக்கு
ராஜரங்கனுக்குக் கடமைப்பட்டவன். பள்ளிப்படிப்பு அதிகமில்லாவிட்டாலும்
தி.ஜ.ர. ஓர் உயர் கணிதமேதை என்று எனக்குத் தெரியாது போயிருக்கும். சதுரங்க
ஆட்டத்திலும் அவர் ஒரு மேதை. சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால்
உலகப்புகழ் பெற்றிருப்பார். ராஜரங்கனும் பரீக்ஷா குழுவில் ஓர்
அங்கத்தினர். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘போர்வை போர்த்திய உடல்கள்’
நாடகத்தில் அவர் ஒரு உடல். அவரை நானும் இன்னொருவரும் அகற்ற வேண்டும்.
சிரமப்பட்டு விட்டேன். ராஜரங்கன் பற்றி எனக்குப் பல மகிழ்ச்சி கரமான
நினைவுகள் உண்டு. ஆனால் ஜானகிராமன் விஷயத்தில் மட்டும் ஆறாத
வருத்தம்.இவ்வளவு எழுதியதற்குக் காரணம், சுவரில் தொங்கும் ஒரு நாட்காட்டி. அதில்
பதினைந்து எழுத்தாளர்கள் - ஜானகிராமன் உட்பட - இருக்கிறார்கள்.
பதினைந்தில் பதின்மூன்று பேர் எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள். காலம்
தாழ்த்தாமல் நான் அவர்கள் பற்றி எழுதிவிட வேண்டும். ஜானகிராமனின் உடலைத்
தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது குளிர்சாதனப் பிரேதப்பெட்டி
கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை உருகித் தரையெல்லாம்
ஈரப்படுத்தி விடும். படிக்க ஒரு காலத்தில் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது என்றால் அது வங்காளப் படைப்பாகவே இருக்கும்.
இந்தியிலிருந்து ப்ரேம்சந்த் மட்டும். இன்று நிறுவன வாய்ப்புகள்
பெருகியிருப்பதால் நிறைய மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. குறிஞ்சிவேலன்
‘திசை எட்டும்’ என்று மொழிபெயர்ப்புகளே கொண்ட பத்திரிகை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் இருபத்தோரு மொழிகளில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை
மொழிபெயர்த்து (அநேகமாக அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) ‘சல்வடார்
டாலி’ என்றொரு சிறுகதைத் தொகுப்பை அம்ருதா பதிப்பகம் சார்பில் திலகவதி
வெளிக்கொணர்ந்திருக்கிறார். மிகச்
சிறந்த தேர்வு. பல கதாசிரியர்கள் உலகப்புகழ் பெற்றவர்கள். எழுத்தாளர்
திலகவதிக்குப் பெருமை சேர்க்கும் நூல். (சல்வடார் டாலி, விலை: ரூ.120/-,
வெளியீடு: அம்ருதா பதிப்பகம், 1, கோவிந்த ராயல் நெஸ்ட், 12, மூன்றாவது
பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் கிழக்கு, நந்தனம், சென்னை-600035. பேச: 94440
70000). (பாதை நீளும்...) அசோகமித்திரன்
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7441&id1=6&issue=20140811
நடைவெளிப் பயணம்புண் உமிழ் குருதி பாண்டியன் உத்தரவால் கோவலன் கொலைக்களம் எடுத்துச் செல்லப்பட்டு, வெட்டப்படுகிறான். அவன் உடல் வெட்டப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஒரு குட்டி நகரம். எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கும் நடந்தே சென்று விடலாம். அப்படி ஒரு முறை நான் பழங்கானத்தம் சென்றபோது ஓரிடத்தைக் காட்டி, ‘‘இதுதான் கோவலன் கொலையுண்ட இடம்’’ என்றார்கள். மிக மிகச் சின்ன கோயில். அதன் முன் ஒரு சூலம். நான் சுற்றிச் சுற்றி வந்தேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் அங்கு கோவலன் குருதி தேங்கி இருப்பது போலத் தோன்றியது. கோவலன் கொலையுண்ட இடம் சரி... பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவை எங்கே இருந்தது? பாண்டியனின் அரண்மனை எங்கே இருந்திருக்கும்? எனக்கு பதில் கிடைக்கவில்லை. நான் பிறந்ததிலிருந்து மதுரைக்குப் போய் வருகிறேன். யாரும் பாண்டியன் அரண்மனை இருந்திருக்கக் கூடிய இடம் இதுதான் என்று பேச்சுவாக்கில்கூடச் சொன்னதில்லை. சிலர் மட்டும் சொன்னார்கள்... ‘‘இது ஆதி மீனாட்சி கோவில் இல்லை. அது வேறிடத்தில் இருக்கிறது. அதுதான் உண்மையான மதுரையம்மன் கோவில்.’’ இப்போது நான் சொல்லப் போகும் கதையில் நான்தான் கோவலன். இன்றைக்குச் சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிஞர் ‘பரிசோதனை’ என்றொரு மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பேற்றார். முதல் இதழ் வந்தது. இரண்டாவது இதழும் வந்தவுடன் என் வீட்டுக்கு வந்து, நான் உடனே ஒரு கதை எழுதித் தரவேண்டும் என்றார். எல்லோரும் நல்லவரே... பத்திரிகை ஆசிரியராக உருவெடுக்கும் வரை! ஒரு வாரம் ராப்பகலாக முனைந்து ஒரு கதை எழுதினேன். அதுதான் ‘புண் உமிழ் குருதி’. அந்த நாளில் ஜெராக்ஸ் கிடையாது. கார்பன் பிரதி எடுக்கக் கூடிய பேனாவும் கிடையாது. ஆதலால் என்ன மகா காவியமாக இருந்தாலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே சாத்தியம்! என் கதையைப் பிரசுரமும் செய்யாமல், திருப்பியும் அனுப்பாமல், வாட்டி வதைத்த பத்திரிகைகளில் நமது கவிஞரின் பத்திரிகையும் ஒன்று. மூன்றாவது இதழ் வெளிவரவில்லை. இதற்கிடையில் நான் வெளியூர் சென்று ஓராண்டுக்குப் பின் வந்தேன். கவிஞரைத் தேடினேன், பத்திரிகை அலுவலகத்தைத் தேடினேன். சினிமா என்றால் இன்னும் பல நெடில்கள் போட்டுத் தலையை விரித்துப் போட்டுக் கொள்ளலாம். வெளிவந்த இரு இதழ்களில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அச்சகம் ஒன்றின் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நாளில் தொலைபேசி நினைவே வராது. காரணம், அன்றாட வாழ்க்கையில் தொலை பேசிகள் பெரிய இடம் வகிக்கவில்லை. நகரத்தில் மிகக் குறைந்த தொலைபேசிகளே இருந்தன. எனக்கு ஓரளவு அந்தப் பேட்டையைத் தெரியும். நிறைய அச்சகங்கள். அவர்கள் 60 பக்கம், 70 பக்கத்தில் ஒருவரைக் கதை எழுதச் சொல்லி அந்தப் பிரதிகளை அண்ணா சாலையில் தர்காவிலிருந்து தபாலாபீஸ் வரை நடை பாதையில் விற்பார்கள். சில பிரதிகள் வெற்றிலை பாக்குக் கடைகளிலும் தொங்கும். பேட்டையில் நுழைந்து தேடி, கடைசியில் அந்த அச்சகத்தைக் கண்டுபிடித்து விட்டேன். அது ஒரு நபர் அச்சகம். அநேகமாக அவரே அந்த நூல்களை எழுதுபவராகவும் இருக்கக் கூடும். என்னைப் பார்த்ததும், அவர் வெளியிட நான் ஒரு கதை எழுதி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டார் போல. ‘‘நூறு ரூபாய்’’ என்றார். ‘‘எனக்கு நூறு ரூபாய் வேண்டாம். என் கதை வேண்டும்.’’‘‘என்ன கதை?’’நான் ‘‘பரிசோதனை...’’ என்ற ஆரம்பித்தவுடன் அவர் சிம்மமாக மாறினார். அந்த மாதிரி அச்சகங்களில் கடன் என்று ஒரு வாரம் பொறுத்திருக்க முடியும். ‘பரிசோதனை’ நடத்தியவர் பணமே தரவில்லை போலிருக்கிறது. கதையைத் தேடிப் போன நான் மாட்டிக் கொண்டேன். ‘‘கொண்டு வா மூவாயிரம்’’ என்றார். அவருக்கிருந்த கோபத்தில், என்னை எதையுமே விளக்க விடவில்லை. கோபம் அடங்கிய கொஞ்ச நேரத்தில், ஒரு மாதிரி விஷயத்தைச் சொன்னேன். ‘‘அந்த மனுஷன் காயிதக்கட்டு ஒண்ணு இருக்கு. மூவாயிரம் கொடுத்து வாங்கிப் போகச் சொல்லு. வட்டின்னு போட்டா இன்னும் ஆயிரம் ஆகும்.’’நான் என் கதையை மட்டும் தரச் சொல்லிக் கிட்டத்தட்ட கெஞ்சினேன். ‘‘அடுத்த வாரம் வா, பாக்கலாம்’’ என்றார். நான் அடுத்த வாரம் வரை தூங்கவேயில்லை. போனேன். மீண்டும் ‘‘அடுத்த வாரம்’’ என்றார். நான் மீண்டும் போனேன். ‘‘அந்தக் காயிதமெல்லாம் இல்லே. யாரோ மிஷின் துடைக்க எடுத்துண்டாங்க’’ என்றார். என் மனப் புண்கள் குருதி உமிழவில்லை. பீய்ச்சி அடித்தன. ஒரு முறை எழுதி முடித்த கதையை மீண்டும் எழுதுவது எளிதில்லை. அப்படி எழுதிய வரலாறு இருக்கிறது. ஆனால் எல்லா நயங்களும் கிடைக்குமா என்பது சந்தேகம். கதை நல்ல கதை. பேருந்தில் பயணித்தபோது நான் கவனித்த ஒரு பெயின்டர் இளைஞனுக்கு என் பாராட்டாக அதை எழுதினேன். வீட்டுக்கு வந்து என்னை எழுது என்று சொல்லிவிட்டுச் சென்ற அந்த மனிதன், அவர் நடத்திய பத்திரிகை, என் கதை எல்லாம் போயிற்று. ஐந்தாறு வருடங்கள் வேறு கடந்து விட்டன. எனக்குக் கதையை இழக்க மனதில்லை. மீண்டும் எழுதத் தொடங்கினேன். ஒருவாறு எழுதி முடித்தேன். நன்றாகத்தான் உருவாகி இருக்கிறது. ஆனால் முதலில் எழுதியபடி இருக்கமுடியாது. நான் யாரையும் சபிக்கவில்லை. டிமோஸ்தினிஸ் என்ற கிரேக்க அறிஞர் கூறியிருக்கிறார், ‘உன்னிடம் வாதம் ஏதும் இல்லை என்றால் வாதியைத் திட்டு.’ என்னிடம் நிறைய வாதங்கள் இருந்தன. ஆனால் என்ன பிரயோசனம்? நான் அந்தக் கவிஞரை முழுக்க இழக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றில் அவருக்கு அரசுப் பணி கிடைத்தது. ஒரு பத்திரிகை, அவரும் நானும் உரையாடுவதை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டது. பொருத்தம் இருந்ததோ, இல்லையோ... பலமுறை ‘பரிசோதனை’ என்ற சொல்லை என் உரையாடலில் பயன்படுத்தினேன். சென்னையில் ஓரிடம் என்றவுடனே ‘சிந்தாதிரிப்பேட்டை’ என்றேன். எனக்கு அவரை அதிகம் சங்கடப்படுத்த விருப்பமில்லை. அவர் நல்லவர் என்பதே என் கணிப்பு. அரசியல் சார்பு இருந்தும் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர். அவருடைய அரசுப் பணி எந்நேரமும் பறிபோய் விடும் என்று எனக்குத் தெரியும்; அவருக்கும் தெரியும். ஓரிரண்டு வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவர் காவிய காலப் பட்டங்களைத் தானாக வைத்துக் கொள்ளவில்லை. இரு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டார். அதே அச்சகத்தில் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் அச்சிடப்பட்டது. இந்த அச்சகம் வேறொரு பேட்டை - ராயப்பேட்டை. அச்சக உரிமையாளர் நடைபாதை நூல்களை வெளியிடுபவர் அல்ல. என் எழுத்துலக வாழ்க்கையில் ‘புண் உமிழ் குருதி’ கதைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. சிந்தாதிரிப்பேட்டைக்கும்தான்! மிக மிகச் சின்ன கோயில். அதன் முன் ஒரு சூலம். நான் சுற்றிச் சுற்றி வந்தேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் அங்கு கோவலன் குருதி தேங்கி இருப்பது போலத் தோன்றியது. படிக்க...பிரம்ம ஞான சபை பற்றித்தான் நான் எவ்வளவு எழுதி விட்டேன்! அந்த சபையின் முதல் தலைவர் கர்னல் ஆல்காட் பற்றி ஒரு குறும்படத்துக்காக நான் அடையாறு நூலகத்தில் ஆறு மாதங்கள் தகவல் சேகரித்தேன். ஓரிடத்துக்கு ஆறு மாதம் தினம் சென்றால் எவ்வளவோ விஷயங்கள் தெரிய வரும். தெரியும். நான் அந்த சபைக்காரன் இல்லை. ஆனால் அதன் தீவிர பிரசாரகராக ஒரு வக்கீல் சென்னையில் இருக்கிறார். பெயர் மோகன் சுந்தர பாண்டியன். அவரது உரைகள் தொகுக்கப்பட்டு ‘லெக்சர்ஸ் ஆன் தியாசபி’ என்று வெளிவந்திருக்கிறது. அவர் இல்லத்திலிருந்து பிரதிகள் பெற்றுக் கொள்ளலாம். முகவரி: மோகன் சுந்தர பாண்டியன், பெசன்ட் ஹவுஸ், 11, பாண்டியன் தெரு, சென்னை-600042. அவர் இல்லம் ஒரு ஆயுதக் கிடங்கு. மிகப்பழைய துப்பாக்கிகளை அங்கு காணலாம். நூறாண்டு முன்பு தமிழ்நாட்டில் ஜம்புலிங்கம் என்றொரு கொள்ளைக்காரன் இருந்திருக்கிறார். அவர் புலித்தோல் பூண்ட புலி. அவருடைய கைத்துப்பாக்கியை ஒரு கண்காட்சியில் பார்த்தேன். அது பாண்டியனிடம் இல்லை. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8064&id1=6&issue=20141222
நடைவெளிப் பயணம்அல்வாவுக்கு கடுகு தாளிப்பது
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு சகோதரர் உண்டு. என்.எஸ்.திரவியம். அவர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தார். ‘நீதிபதி’. அந்த நாளில் தமிழ் சினிமாக்களில் நிறைய நீதிபதிகள் வருவார்கள். அந்த நாளில் நீதித்துறை அவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதன் ஓர் அடையாளமாக இதை வைத்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்து 1940களிலிருந்தே சமூகப் படங்கள் என்றால் நிச்சயம் ஒரு கோர்ட் சீன் வரும். அதென்ன சமூகப் படம் என்று சிலர் கேட்கக் கூடும்! சமகாலத்தைப் பிரதிபலிப்பதாகத் தயாரிப்பாளர் கருதும் படம். நீதிபதி இல்லாத கோர்ட் ஒரு கோர்ட்டா? இது ஒருபுறமிருக்க, என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் எடுத்த படத்திலும் ஒரு நீதிபதி வருவார். மீண்டும் எஸ்.வி.சஹஸ்ரநாமம். ‘பராசக்தி’ படத்தில் அவர்தானே தம்பிக்கும் தங்கைக்கும் கொலை, கொலை முயற்சிக் குற்றங்களுக்காக நீதி கூறும்படி நேர்கிறது? ‘பராசக்தி’ ஓடின ஓட்டத்தில் பாதியாவது இந்தப் படம் ஓடக்கூடாதா?ஆனால் ‘நீதிபதி’ விசேஷமாக ஓடவில்லை. மிக நீளமான படம். ஜெமினி கணேசனும் கே.ஆர்.ராமசாமியும் சேர்ந்து நடித்த படம் அது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். ஆனால் படம் ஓடாததற்கு அது காரணம் அல்ல. நான் பார்த்தேன். ஆனால் இன்னொரு தகவல் ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கப் போட்டா போட்டி நடந்தது. இப்படிப் போட்டி வந்தால் இறுதியில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுவார். ஜெமினியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்றொரு படத்தை எடுத்தார்கள். இதை பம்பாயில் ஏ.ஆர்.கர்தார் என்பவர் 1947 அளவிலேயே எடுக்கத் திட்டமிட்டு இருந்திருக்கிறார். ஆனால் போட்டா போட்டி காரணமாக அதைக் கைவிட வேண்டியிருந்தது. அதன் பிறகு ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அதே படத்தைத் தெற்கில் ஒருவர் பானுமதியைக் கதாநாயகியாக வைத்துத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துக் கொண்டிருப்பதாக விளம்பரம் செய்தார். இம்முறை கர்தார் விட்டுக் கொடுக்கவில்லை. ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ படத்துக்கு அமெரிக்காவிலேயே பெரிய வெற்றி கிட்டவில்லை. ஆனால் இந்தியாவில் போட்டா போட்டி! இங்கு ஒரு தமிழ்ப் படத்தை இந்தியில் எடுக்கப் போட்டி. ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லை. அன்று காப்புரிமைச் சட்டங்கள் பற்றிப் பரவலாகத் தெரியாது. ஐ.எஸ்.ஜோஹர் என்பவர் எந்த ஹாலிவுட் படம் நன்றாக ஓடினாலும், அதை அப்படியே தழுவி உடனே ஓர் இந்திப் படத்துக்குத் திரைக்கதை எழுதிவிடுவார். இப்படித்தான் ஒரு முறை ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் எடுத்த ‘நாக் ஆன் வுட்’ என்ற படத்தைத் தழுவி ஜோஹர் ஒரு திரைக்கதை எழுதி, அதை ஒருவர் இந்திப் படமாக எடுத்தார். ஃபாக்ஸ்காரர்கள் வழக்குத் தொடர்ந்து தீர்ப்பில் கடுமையான நஷ்ட ஈட்டைப் பெற்றனர். அன்றி லிருந்து ஜோஹருக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. என்.எஸ்.திரவியம் இரு முறை பணம் பெற்றாரா என்று தெரியாது. ஆனால் ‘நீதிபதி’ திரைப்படத்தைத் தழுவி இரு இந்திப் படங்கள் வெளியாகின. இரு தயாரிப்பாளர்களும் மிகவும் திண்டாடியிருப்பார்கள். காரணம், இரு படங்களுக்கும் ஒரே நடிகர்தான் கதாநாயகன்! கிஷோர் குமார். ஒரு படத்தில் கதாநாயகன் பாடும் ஒரு பாட்டில் ‘நீலக் குடைக்காரன் பெரிய சி.ஐ.டி’ என்று வரும். நீலக் குடைக்காரன்தான் கடவுள். கடவுளை நீலக் குடைக்காரன் என்று சொல்லும் வர்ணனை ஒரு இந்திப் பழமொழி யில் வருகிறது. ‘படாயி சி.ஐ.டி. ஹை நீலிச் சத்திரிவாலா’. இன்னொரு பழமொழி, ‘ஒவ்வொரு தானியத்தின் மீதும் அதை உண்ணப் போகிறவன் பெயர் எழுதி யிருக்கிறது’. அது, ‘தானே தானே பே லிக்கா கானே வாலேக்கா நாம்’. இன்றைய தமிழ்ப்படங்களில் பழமொழிகளுக்கு இடம் இல்லை என்று நினைக்கிறேன்; இந்திப் படங்களிலும் இல்லை. இலக்கியச் சுவை தேவைப்படும் திரைப்பாடல்கள் நம் தயாரிப்பாளர்கள் எடுக்கும் ‘சமகால’ப் படங்களில் அல்வாவுக்குக் கடுகு தாளித்துப் போடுவது போல. ஆனால் ஆண்டுதோறும் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் பல முறை தமிழ்ப் பாடலாசிரியர்கள் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு தங்கப் பதக்கத்திலும் அதைப் பெறுபவர் பெயர் எழுதி யிருக்கும்இன்று காலம் மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை விடும் தங்கை, அம்மாவுக்காகக் காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா செய்த குற்றத்துக்காகச் சிறை செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு தலைமுறையைச் சார்ந்தவை. ஆதலால் தத்துவப் பாடல்கள் இன்று காண, கேட்க முடியாது. முன்பு அது ஒரு ‘ஸ்டண்ட்’ சினிமாவாக இருந்தால் கூட ஒரு தத்துவப் பாட்டு இருக்கும். ‘தேவதாஸ்’ படமானால் காதலை விட உலகம், வாழ்க்கை, துணிந்த மனம், துணியாத மனம் என வண்டி யளவு தத்துவம் சூறாவளிப் புயலாகப் பொழியும். இந்தத் தத்துவப் பாட்டுகள் சூரியகுமாரி நடித்த படங்கள் (1937) காலத்திலிருந்து இருக்கின்றன. அப்புறம் பிச்சைக்காரர் பாட்டு. ராண்டார் கை என்ற எழுத்தாளர் ‘‘ ‘ஐயா சிறு பெண் ஏழை என்பால் மனமிரங்காதா’ என்ற பாட்டை நிஜ வாழ்க்கையில் பாடாத பிச்சைக்காரனே கிடையாது’’ என்று எழுதியிருப்பார். கதாநாயகியோ, கதாநாயகனோ, மிகுந்த துக்கத்துடன் ரயிலில் போய்க் கொண்டிருக்க, அவர்கள் மனநிலைக்கேற்ப ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் ஒரு சிறுமி வழிகாட்ட... ரயிலில் பாடியபடியே வருவான். எம்.எம்.மாரியப்பா என்பவர் இந்தத் தத்துவப் பாட்டுகளுக்குப் பெயர் போனவர். நாகையா ஒரு படத்தில் மேடையிலேயே ‘விதியின் விளையாடல்’ என்று பாடுவார். இந்திப் படங்களில் சைகல், பங்கஜ் மல்லிக், கே.சி.டே போன்றவர்கள் தத்துவப் பாடல்களுக்குப் பெயர் போனவர்கள். (மன்னா டே என்ற புகழ்பெற்ற வட இந்திய சினிமாப் பாடகர், கே.சி.டேயின் மகன்.) பக்திப் பாடல்களுக்கும் தத்துவப் பாடல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. நான் ‘சிந்தாமணி’ என்ற படத்தைப் பார்த்தபோது எட்டு வயது இருக்கும். அதில் ‘பஜனை செய்வோம் கண்ணன் நாமம்’, பக்திப் பாட்டு. ‘ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே’ தத்துவம். இரண்டையும் தியாகராஜ பாகவதர் பாடுவார். நிஜ வாழ்க்கையில் அவருடைய கடைசி நாட்களில் இப்படிப் பாடிய படியே இறந்தார். தமிழில் தத்துவப் பாடல் எழுதும் பாடலாசிரியர் யாரும் பாட்டை எழுதி, அவரே பாடுவேன் என்ற நிபந்தனை விதித்ததில்லை. இந்தியில் பிரதீப் என்ற பாடலாசிரியர் அவரே பாடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பார். ஒன்று சொல்ல வேண்டும். அவர் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. ‘மனிதன் மாறி விட்டான்’ என்ற தமிழ்ப் பாட்டின் ஒரிஜினல், பிரதீப் பாடிய ஒரு இந்திப் பாடல். அவர் மாறவே இல்லை, கடைசி வரையில். இன்று காலம் மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை விடும் தங்கை, அம்மாவுக்காகக் காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா செய்த குற்றத்துக்காகச் சிறை செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு தலைமுறையைச் சார்ந்தவை. படிக்கஎன் இரு நூல்களைச் சிபாரிசு செய்கிறேன். இவை விரைவில் வெளியாகிவிடும். ஒன்று, சென்னை நற்றிணைப் பதிப்பகம் வெளியிடும் சிறு நாவல்: ‘இந்தியா 48’. பெயரில் நாடும் ஆண்டும் இருந்தாலும் இது தனி நபர்களின் கதை. இரண்டாவது, நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு, ‘இரண்டு விரல் தட்டச்சு’. இக்கதைகள், நாவல் யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7213&id1=6&issue=20140623
நடைவெளிப் பயணம்குழலுடன் சில நாட்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு புல்லாங்குழல் மாலியின் இரு சீடர்கள் எனக்கு அறிமுக மானார்கள். ஒருவர், ரமணி. அவர் சாதனை வாழ்க்கையை நான் சொல்லி உலகம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இரண்டாம் சீடர், ஸ்ரீனிவாசன். அதிகம் பிரபலமாகாதபோதிலும் அவருடைய ஆர்வம் அசாத்தியமானது. புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் ஆகிய வாத்தியங்களை நன்கு வாசிக்கத் தெரிந்ததோடு அவருக்கு நாடகத்தின் மீதும் ஆர்வம் உண்டு. நாங்கள் எங்களை உலகக் கலைஞர்கள் என்றுதான் நினைத்து இயங்கினோம். அவர் தூண்டுதலில் நான் நான்கு நாடகங்கள் எழுதினேன். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் அன்று எனக்கு மிகவும் பிடித்தது ‘ஜூலியஸ் சீஸர்’. அதில் சீஸரின் மனைவி ஒரு காட்சியில் வருவாள். அதை விடப் பரவலாக அறியப்பட்டது ஒரு பழமொழி: ‘சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடாது’ (Caesar‘s wife must be above suspicion). நான் அந்த சீஸரின் மனைவியைப் பிரதானமாக வைத்து ஒரு நாடகம் எழுதினேன். ஷேக்ஸ்பியருக்கு சவால்! டபுள்யூ.டபுள்யூ.ஜேக்கப்ஸ் என்பவர் விஷீஸீளீமீஹ்'s றிணீஷ் என்றொரு சிறுகதை எழுதியிருந்தார். அதை நாடகமாக எழுதினேன். பின்னர் தெரிந்தது கதாசிரியரே அதை ஒரு நாடகமாகவும் எழுதியிருக்கிறார் என்று! நானும் ஸ்ரீனிவாசனும் இன்னும் ஏதேதோ திட்டங்கள் வகுத்தோம். அப்போதுதான் டேப் ரெக்கார்டர்கள் வரத் தொடங்கியிருந்தன. எனக்கு ரா.அ.பத்மநாபனைத் தெரியும். அன்று அவர் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் மூலம் அங்கு இருக்கக்கூடிய டேப் ரெக்கார்டர்களைக் கடன் வாங்கத் தீர்மானித்தோம். ஆனால் அவர் அலுவலகத்தில் அன்று ஒரே ஒரு ரெக்கார்டர்தான் இருக்கிறது என்பது, நாங்கள் கேட்டபிறகுதான் அவருக்கே தெரிந்தது. சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் ஸ்ரீனிவாசன் காணாமல் போய் விட்டார். ‘பகல் கனவு போதும்’ என்று ஐதராபாத் வானொலியில் நிலைய குழல் வித்வானாக வேலைக்குச் சேர்ந்து விட்டார்! நான் ஷேக்ஸ்பியருடனும் இப்ஸனுடனும் போட்டி போட நினைத்ததைக் கைவிட வேண்டியிருந்தது. ஓர் இசைக் கட்டுரையில் ஸ்ரீனிவாசன் பற்றிச் சற்று விரிவாக எழுதினேன். அவர் இனிஷியல் நினைவில் இல்லை. பின்னர் அவர் இறந்தும் விட்டார் என்று கேள்விப்பட்டேன். திடீரென்று ஒரு சனிக்கிழமை மாலை எட்டு மணிக்கு ஒரு தம்பதியர் வீட்டுக்கு வந்தனர். தான் மாலி சிஷ்யப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று அந்த கணவர் கூறியதும், அவரை நான் முதலில் கேட்ட கேள்வி ‘ஸ்ரீனிவாசனின் இனிஷியல்’! வந்தவரும் சென்னை வானொலியில் குழல் வித்வானாகப் பணி புரிபவர். என் நண்பரின் முழுப் பெயர் பென்னத்தூர் என்.ஸ்ரீனிவாசன். ஆம், சென்னை மயிலாப்பூரில் இருக்கும் பி.எஸ். ஹைஸ்கூல் நிறுவனரின் பேரன். என்னைப் பார்க்க வந்த ஸ்ரீதரன், புல்லாங்குழல் வித்வான் மட்டுமல்ல. ஓர் எழுத்தாளரும்கூட. நவரஞ்சனி ஸ்ரீதர் என்ற பெயரில் அவர் எழுதிச் சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட நூல் ‘குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்வது எப்படி?’ தலைப்பே அந்த நூல் எதைப் பற்றி என்று தெரிவித்து விடுகிறது. ஒரு நல்ல மனிதரின் நல்லெண்ணம் நூல் முழுதும் ஒலிக்கிறது. பெரிய மதத் தலைவர்கள், மகான்கள், யோகிகள் தவிர வேறு பலரும் உலகத்தார் - குறிப்பாக இளைஞர்கள் - குறித்துக் கவலை கொண்டு நூல்கள் இயற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் இதற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. ஔவையார் பற்றிய கதைகளை அகற்றி விட்டால் அவர் ஓர் அற்புதமான ஆசிரியர். நாலடியார் யார் எழுதினார் (எழுதினார்கள்?) என்று நமக்குத் தெரியாதபோதிலும் அவர்கள் சிறந்த ஆசிரியர்கள். ஆங்கில மொழியில் ஹாரி பாட்டர் நூல்கள் ஒரு சிறு புரட்சியை நிகழ்த்திவிட்டன. அதற்குச் சில ஆண்டுகள் முன்பு ‘மில்ஸ் அண்ட் பூன்’ நாவல்கள். இவை பொழுதுபோக்குப் படைப்புகள்; திறமையாக விளம்பரம் செய்து விற்கப்பட்டவை என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? நான் சிறுவனாக இருந்தபோது சாமுவேல் ஸ்மைல்ஸ் என்பவர் எழுதிய தடி தடி புத்தகங்கள் வெளிவரும். தலைப்புகளே அவை என்ன கட்டுரைகளைக் கொண்டவை என்று தெரிவித்து விடும். ‘சுய உதவி’, ‘தைரியம்’, ‘பிறர்க்கு உதவுதல்’, ‘சிக்கனம்’... இப்படி ஒன்பது நூல்கள். இவை அப்போதெல்லாம் கடைக்கு வந்த ஓரிரு நாட்களில் விற்றுப் போய்விடும். இந்த நூல்களின் முக்கிய அம்சம், அவை ஏராளமான உதாரணங்களை நிஜ வாழ்க்கையிலிருந்து கூறுவதுதான்! ஒரு நூல் படித்தால் சுமார் ஐந்நூறு உதாரணங்கள்; அதாவது, ஐந்நூறு விசேஷ மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த நூல்கள் இன்று நூலகங்களில் கூடக் கிடைப்பதில்லை. இன்றும் பலருக்கு ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ நினைவிருக்கும். இதுவும் நல்லெண்ணங்கள் கொண்ட நூல். சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் இந்த நூலைப் படிக்காதவர்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். ‘நாம் சாதனை புரிய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்பது அந்த நூலின் மறைமுகச் செய்தி. பரபரப்பான நூல்கள்தான் படிக்கப்படும், விற்கும் என்ற விதிக்கு விலக்காக ஒவ்வொரு காலத்திலும் நன்னடத்தை பற்றியே கூறும் சில நூல்கள் ஏராளமாக விற்கின்றன. ‘சாமுவேல் ஸ்மைல்ஸ் நூல்களில் நிறையச் சிறு சிறு கதைகள் இருந்தன, அதனால் விற்றன’ என்று ஒரு பலவீனமான காரணத்தைக் கூறலாம். ஸீகல், ஹாரி பாட்டர் விஷயத்தில் அப்படிக் கூற முடியாது. ஹாரி பாட்டர் கதைகளை பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் எழுதியிருந்தால் ஐரோப்பாவில் அந்த ஆசிரியரை நாற்சந்தியில் நிறுத்தி, சூனியக்காரி என்று குற்றம் சாட்டி தீக்கிரையாக்கி இருப்பார்கள். எந்த மதத்திலும் மாய மந்திரம் உலக நன்மைக்கு ஏற்றது அல்ல என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. சமணர்-சம்பந்தர் வாதத்தில் சமணர்கள் மந்திர சக்தியை நம்பியிருந்தாகக் கூறப்படுகிறது. கடுமையான வாழ்க்கை நெறியை வலியுறுத்துவது சமணம். அதில் எப்படி மாயம், மந்திரம் புகுந்தது? அதே போல பௌத்தத்தில். புத்தர் மறு உலகம், புற உலகம் என்று ஒரு சொல் கூறவில்லை. அந்த மதத்தில் எப்படி மாய மந்திரம் வந்தது? நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதியிருக்கும் நூலில் ஓரிடம் என்னைப் பல பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. சாப்பாட்டுத் தட்டை கணவன் விட்டெறிவதைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மனைவியை இது எவ்வளவு புண்படுத்தும்? இது இன்றும் பல குடும்பங்களில் நடக்கிறது. ஒரு மணிக்கொடி எழுத்தாளர் வீட்டில் இதைக் கண்டு நான் மூச்சடைத்து நின்றேன். ‘பாரதியார்... பாரதியார்...’ என்று ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கூறியவர்களுக்கு பாரதியார் துன்பத்திலும் தரித்திரத்திலும் மனைவியை எப்படிப் போற்றி வாழ்ந்தார் என்பது தெரியாமல் போய் விட்டது. சாப்பாட்டுத் தட்டை கணவன் விட்டெறிவதைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மனைவியை இது எவ்வளவு புண்படுத்தும்? இது இன்றும் பல குடும்பங்களில் நடக்கிறது. படிக்க...கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்திய இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் அன்றைய காலகட்டத்தின் சமூகநிலைமையும் உணர்ந்து சில நூல்கள் வந்திருக்கின்றன. அதில் ‘தேவதாசியும் மகானும்’ (ஜிலீமீ ஞிமீஸ்ணீபீணீsவீ ணீஸீபீ tலீமீ ஷிணீவீஸீt) மிகவும் குறிப்பிடத்தக்கது. சங்கீத வித்வான்கள் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள், ஆராதனை புரிகிறார்கள், ஆனால் அந்த சங்கீத மகான் வசித்த குடிலையோ அடக்கம் செய்யப்பட்ட சமாதியையோ கவனிக்காமல் விட்டிருந்தார்கள். பெங்களூரு நாகரத்னம்மா தன் சொத்தையெல்லாம் செலவழித்து தியாகய்யாவின் சமாதியை ஒழுங்குபடுத்தி, ஆராதனைக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாகரத்னம்மாவின் தொண்டுக்கு அஞ்சலி செலுத்துவதாக திரு வி.ஸ்ரீராம் நூல் எழுதியிருக்கிறார். ஸ்ரீராம் பல துறைகளில் சாதனை புரிந்திருந்தாலும் தென்னிந்திய இசைக்கலைஞர்கள் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் தனித்துக் குறிப்பிடத்தக்கவை. இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. (தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும் காலமும் - வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், விலை ரூ:175/-, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001. தொலைபேசி: 04652-278525.
மறைந்தவர்கள் மத்தியில் 2
நாங்கள் செகந்தராபாத்தில் போயிகுடா என்னும் இடத்தில் குடியிருந்தபோது, ஒரு சிறு இடைவெளி விட்டு எதிரில் இருந்த இரு தெருக்களையும் ‘சேரி’ என்றுதான் சொல்லுவார்கள். செகந்தராபாத் ஒரு கன்டோன்மென்ட்டாக பிரிட்டிஷ் காலத்தில் இருந்தது. நிறைய வெள்ளைக்கார அதிகாரிகள். இவர்களுக்குச் சமைத்துப் போட ஆட்கள் தேவைப்பட்டது. இந்த சமையல்காரர்கள் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி இரண்டையும் சமைப்பவர்களாக இருக்க வேண்டும். செகந்தராபாத்தின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சமாக இருந்தபோது இந்த சமையல்காரர்கள் இரு குடியிருப்பில் சேர்ந்து இருந்தார்கள். ஒன்று, பழைய போயிகுடா. இரண்டு, ரெஜிமென்ட்டல் பஜாரில் ஒரு பகுதி. இவர்களாகவே இக்குடியிருப்புகளை ‘குசினி சேரி’ என்று அழைத்துக் கொண்டார்கள். (‘க்யூஸின்’ என்பது ‘சமையல்’ என்று பொருள்படும் பிரெஞ்சு சொல்.) அநேகமாக அனைவரும் கிறிஸ்தவர்கள். பழைய போயிகுடா, ரெஜிமென்ட்டல் பஜார் இரண்டிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். அதிலும் ரெஜிமென்ட்டல் பஜாரில் இருந்த நண்பன் ஃப்ரான்சிஸ் சேவியர் மிக நன்றாக சிதார் வாசிப்பான். நானும் அவனும் எப்படியாவது முப்பது, நாற்பது ரூபாய் சேர்த்து வைத்துக் கொண்டு கல்கத்தா சென்று பங்கஜ் மல்லிக்கை சந்திக்க திட்டமிட்டோம். பல நிறைவேறாத திட்டங்களில் அதுவும் ஒன்று. ஃப்ரான்சிஸ் சேவியர் என்னோடு கல்கத்தா செல்வதைக் காட்டிலும் அவன் பேட்டையில் வசித்த ஒரு பெண்ணோடு ஓடிப் போவது முக்கியம் என்று கருதினான். நிறைய அடி உதையோடு பதினைந்து நாட்கள் ஜெயிலில் போட்டு விட்டார்கள். இவ்வளவு சொல்வதற்குக் காரணம், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று புகைப்படங்களாவது மாட்டியிருப்பார்கள். தாத்தா, பாட்டி, அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் இருப்பார்கள். என் அப்பாவுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குடும்ப போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். காரணம், இப்படங்கள் இறந்த என் சகோதர, சகோதரிகளை நினைவுபடுத்தின. நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக இருக்கும். செகந்தராபாத்தில் நான்கைந்து புகைப்படக்காரர்கள். யார் மிகச் சிறந்த படங்களை எடுக்கிறார்கள் என்பதில் போட்டி. போட்டியே போட முடியாதவர் ராஜா தீன் தயாள். அவர் நிஜாம் அரசுப் புகைப்படக்காரர். அன்று (அதாவது 1920 அளவில்) உலகத்தில் மிக அழகான பெண் என்பவள், துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் அவளையும் அவள் சகோதரியையும் தன் மருமகள்கள் ஆக்கிக் கொண்டார். இந்த இரட்டைத் திருமணத்துக்கு நிஜாம் போகவில்லை. திருமணம் பாரிஸில் நடந்தது. மணமக்கள் ஹைதராபாத் திரும்பியவுடன் பெரிய விருந்து, புகைப்படங்கள். அப்படங்களில் நிலோஃபரும் அவள் சகோதரியும் இருப்பார்கள். அப்பெண்கள் உலக அழகிகள் என்பதற்காக நிஜாம் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அன்று துருக்கி அரசன்தான் காலிஃப். இந்த உறவால் தன் மகன்களில் ஒருவன் காலிஃப் ஆகலாம் என்று நிஜாம் நினைத்தார். ஆனால் துருக்கியில் புரட்சி நடந்து, காலிஃப் பதவியே போய் விட்டது. நிஜாமின் இரு மகன்களும், உலக அழகிகள் மனைவியாகக் கிடைத்தாலும் நடத்தை கெட்டு இருந்தார்கள். காலிஃப் பதவி வாய்ப்பு போய், அந்த இரு மகன்களும் தன் வாரிசே இல்லை என்று நிஜாம் அறிவித்தார். இரு மகன்களும் அற்பாயுளில் இறந்தும் விட்டார்கள். ஆனால் அந்த உலக அழகிகள் இன்றும் தீன் தயாள் இல்ல முன்னறையில் புகைப்படமாக அலங்கரிக்கிறார்கள். எல்லாருடைய வீட்டுச் சுவர்களையும் உலக அழகிகள் அலங்கரிக்க முடியுமா? தகப்பனார், தாய், தாத்தா, பாட்டி என்றிருக்கும். எங்கள் வீட்டில் இருந்த புகைப்படங்களில் யார் யார் என்று தெரியாது. இப்படி இறந்து போனவர்களின் படங்கள் மத்தியில் இருப்போர் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நாளில் ‘கேண்டிட்’ (candid) புகைப்படங்கள் மிகவும் குறைவு. இல்லவே இல்லை என்றுகூடக் கூறலாம். காரணம், புகைப்படங்கள் எல்லாம் புகைப்படக்காரரின் கடையில் எடுக்கப்பட்டவை. நாம் இயல்பாக இருந்தாலும் புகைப்படக்காரரே நம்மைக் கழுத்து டை கட்ட வைத்து, தலையில் தலைப்பாகை அல்லது தொப்பி வைத்துத்தான் எடுப்பார். ‘‘இருபது வருஷமானாலும் இதை நீங்க மறக்கக் கூடாதுங்க’’ என்பார். எனக்குக் கூசும். என் தகப்பனார் தலைப்பாகை கட்டியதில்லை. ஆபீஸுக்குப் போகும்போது மட்டும் தொப்பி போட்டுக் கொள்வார். ஆனால் அவர் புகைப்படத்தில் பெரிய தலைப்பாகை. அன்று சாரணர் படையில் தலைவர், தலைப்பாகைதான் அணிய வேண்டும். சிலருக்கு இது பொருந்திப் போகும். நான் கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரைச் சந்தித்திருக்கிறேன். ஐந்தடிதான் உயரம். தலையில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட தலைப்பாகை. கன்னடக்காரர்களுக்குத் தலைப்பாகை அவர்கள் உடையில் மிக அவசியமான அம்சம். சீக்கியர்களுக்கு அது மதம் சம்பந்தப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் ‘போர்ட்ரைட்’ எனக் கூறப்படும் ஓவியங்கள் ஏராளம். உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த ஓவியம் ‘மோனாலிஸா’ கூட ஒரு போர்ட்ரைட்தான். அதில் இருக்கும் முகம் யாருடையது என்று ஐந்நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். டா வின்சி படங்கள் எல்லாமே ஏதோ ரகசியச் செய்தி கொண்டிருப்பவை என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானமாகச் சொல்கிறார்கள். பல மேற்கத்திய போர்ட்ரைட்களில் அந்த மனிதர் அல்லது மாதின் முக்கால் முகம் தெரிவதாக இருக்கும். பலர் ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பார்கள். நாம் நம் மூதாதையர் படம் பார்த்திருக்கிறோமோ இல்லையோ, ஷேக்ஸ்பியர் படத்தைப் பார்த்திருப்போம். அந்த மனிதர் ஓரக்கண்ணால் பார்க்கும்போது ‘என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என்று கெஞ்சுவது போல இருக்கும். அவரும் ஒரு மர்மம். நாலாங்கிளாஸ் சரியாகப் படிக்காத ஓர் இளைஞன், 15000 சொற்கள் பயன்படுத்தி நாடகங்களும் கவிதைகளும் எழுத முடியுமா? ஆங்கில இலக்கிய வரலாற்றில் இவ்வளவு பெரிய சொல்வளம் யாருக்கும் கிடையாது. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மில்டன். அவருடைய சொல்வளம் 8000தான். இப்போது ஷேக்ஸ்பியர் பார்வை அர்த்தம் பொருந்தியதாகி விடுகிறது. முதல் இந்திய ஓவியங்கள் சுவர்ச் சித்திரங்களாக இருந்தது நன்மையா? குகை ஓவியங்கள் வெயிலால் பாதிக்கப்படாவிட்டாலும் காற்றின் ஈரம், வண்ணங்களை மங்கச் செய்து விட்டது. ஓவியங்களில் சம்பிரதாயம் தவறக்கூடாது. புத்தர் ஆறடி இருந்தால் அவருடைய மனைவியும் மகனும் மூன்றடி உயரம்தான். இன்றைய இந்திய சிற்பங்கள் அன்று பதவியில் இருப்பவர் மனதைப் பொறுத்தது. சென்னைக் கடற்கரையில் வரிசையாகப் பண்டைய தமிழ்க் கவிஞர்கள் சிலையாக நிற்கிறார்கள். பாரதி, பாரதிதாசன் தவிர இதர அறிஞர்கள் உருவங்களுக்கு ஒப்பிட முன்மாதிரி கிடையாது. படிக்கஇருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து ‘அஸைட்’ என்றொரு மாதப் பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தது. மிகச் சிறப்பாக இருந்தாலும் கட்டி வரவில்லை. அதன் ஆசிரியர் ஆபிரஹாம் எராலி வரலாற்றுப் பேராசிரியர். அவருடைய ‘ஜெம் இன் த லோட்டஸ்’, பண்டைய இந்திய வரலாறு இவ்வளவு திருப்பங்கள் கொண்டதா, இவ்வளவு இருளில் மூழ்கிக் கிடந்ததா என்ற வியப்பைத் தரும். அசோகனின் கல்வெட்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் வரை ஏதோ கல்வெட்டுகள் என்றுதான் இருந்தன. எந்த அரசனும் தன்னை தேவர்களுக்குப் பிரியமானவன் என்று சொல்லிக் கொள்ளலாம். அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற பல அரிய தகவல்களை எராலியின் நூல் ஆதாரபூர்வமாகத் தருகிறது. (‘ஜெம் இன் தி லோட்டஸ்’ (Gem in the Lotus), பெங்குயின் புக்ஸ் இந்தியா, விலை ரூ.525/-) என் அப்பாவுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குடும்ப போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். காரணம், இப்படங்கள் இறந்த என் சகோதர, சகோதரிகளை நினைவுபடுத்தின. (பயணம் நிறைந்தது)
அசோகமித்திரன்
|
|
|
| | | |
|