Home / Naan

Naan


ந.வினோத்குமார், படங்கள்:ஆ.முத்துகுமார்

'கலக்கப் போவது யாரு?' வின்னர், 'ஜோடி நம்பர்-1' ரன்னர். தற்போது சின்னத்திரை
திரைக்கதை ஆசிரியர். எதிர்காலக் கனவு வெள்ளித் திரை இயக்குநர். சிரிக்கச் சிரிக்கச் சிகரம் தொட்ட கதை சொல்கிறார் சிவகார்த்திகேயன்...

"கும்பகோணம்தான் எங்களுக்குப் பூர்வீகம். இசை தொடர்புடைய குடும்பம். கர்னாடக சங்கீதத்தில் முத்திரை பதிச்ச திருவீழிமலை சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கலைமாமணி கோவிந்தராஜ பிள்ளை எல்லாம் என் தாத்தாக்கள்தான். வீட்டுக்குள்ளே கலைமாமணி, பத்மஸ்ரீ விருது வாங்கினவங்க சர்வ சாதாரணமா நடமாடிட்டு இருப்பாங்க. அப்பா, காவல் துறை அதிகாரி. அதனால, வீட்டுக்குள்ளே சும்மா விட்டத்தைப் பார்த் துட்டுப் படுத்திருக்க முடியாது. ஆனாலும், சிறப்பா எந்தத் தகுதியும் வளர்த்துக்காமலே வளர்ந்துட்டேன்.

ப்ளஸ் டூ வரைக்கும் வாழ்க்கையில் எந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களும் நடக்கலை. இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன். 'கல்லூரி கல்ச்சு ரல்ஸ்ல நீ ஏதாச்சும் செய்யணும்'னு சொல்லி, பசங்க மேடை ஏத்தி விட்டுட்டாங்க. மத்தவங்கள்லாம் கிடார் வெச்சு வெஸ்டர்ன், ராப், பாப்னு அடி பின்னிட்டு இருந் தாங்க. என் முறை வந்ததும் வெறும் ஆளா மேடையில நிக்கிறேன். 'என்ன பண்ணப் போறான்'னு எல்லாரும் ஒரு நிமிஷம் அமைதியா பார்த்துட்டு இருக்காங்க. அந்த நொடி வரைக்கும் என்ன பண்றதுன்னு எனக்கும் எந்த ஐடியாவும் இல்லை. திடீர்னு பள்ளி நாட்கள்ல விளை யாட்டா பசங்களோட சேர்ந்து மிமிக்ரி பண்ணது ஞாபகத்துக்கு வந்தது. உடனே, கடகடன்னு மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சுட்டேன். முழுசா 15 நிமிடங்கள். முடிச்சுட்டு கை கால் நடுங்க நின்னா... அரங்கமே அதிர்ற அளவுக்கு அப்ளாஸ். கீழே இருந்து பசங்க ஓடி வந்து தோள்ல தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'அங்கீகாரம்'னா என்னன்னு வாழ்க்கையில் உணர்ந்த நாள் அதுதான்.

நண்பர்கள் வட்டம் பெரிசாச்சு. கூடிக் கூடிப் பேசி மிமிக்ரிக்கு ஐடியா பிடிப்போம். எல்லா கல்லூரி கல்ச்சுரல்ஸுக்கும் என்னை அனுப்பினாங்க. படிச்சு முடிக்கிறதுக்குள்ள 65 பரிசுகள் ஜெயிச்சேன். அதுலயும் கோயம்புத்தூர் சி.ஐ.டி. கல்லூரியின் ஒரே கல்ச்சுரலில் எட்டு முதல் பரிசுகள் ஜெயிச்சது ஹைலைட். இப்பவும் மனசு பாரமா இருந்தா, அந்த நாளை நினைச்சுக்குவேன். நான் எந்தத் திசையில் பயணிக்கணும்னு எனக்கு உணர்த்திய நாள் அது.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். சின்ன வயசுல இருந்து எந்தப் பெரிய துயரங்களையும் எதிர்கொள்ளாமல் இருந்த எனக்கு அது பெரிய அடி. அந்த சோகத்தில் இருந்து மீள மிமிக்ரியில் அதிகக் கவனம் செலுத்தினேன். மூவி ஸ்பூஃப், ஸ்டாண்ட்-அப் காமெடி, வெரைட்டி விருந்துன்னு மிமிக்ரியிலேயே பல பிரிவுகளில் ஐடியா பிடிச்சு நண்பர்களோடு ஷோ பண்ண ஆரம்பிச்சேன்.

அப்போ எனக்கு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைச்சது. எனக்குப் பிடிக்காததால் சேரலை. 'ஒழுங்கா ஒரு வேலைக்குப் போகாம வீணாப் போயிடு வேனோ'ன்னு அம்மாவுக்குப் பயம். அதுவும் நியாயம் தானேன்னு எம்.பி.ஏ., படிக்கிறதுக்காக நுழைவுத் தேர்வு எழுதினேன். முடிவுக்குக் காத்திருந்தப்பதான் விஜய் டி.வி. 'கலக்கப் போவது யாரு - சீஸன் 3'க்கான அறிவிப்பு வந்துச்சு. வீட்ல சாஃப்ட்வேர் கம்பெனி இன்டர்வியூக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு மதுரைக்குப் போய், ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அங்கே மட்டும் சுமார் 1,200 பேர் கலந்துக்கிட்டாங்க. முதன்முதலா கல்லூரி மேடையில பண்ணினதை அங்கே அப்படியே செஞ்சேன். நல்ல வரவேற்பு. மேடையைவிட்டுக் கீழே இறங்கினதுமே அக்ரிமென்ட் டைக் கையில கொடுத்தாங்க.

நான் முதல் சுற்று ஜெயிச்ச நிகழ்ச்சி டி.வி-யில் ஒளிபரப்பானதும் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். உடனடியா அடுத்த சந்தோஷமா எம்.பி.ஏ., படிக்க சென்னையிலேயே ஸீட் கிடைச்சது. சென்னைக்கு வந்தேன். படிச்சுக்கிட்டே போட்டியில் கலந்துக்கிட் டேன். இறுதிப் போட்டியிலும் ஜெயிச்சேன். மனோரமா ஆச்சி கையால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு. காசை வீணாக்காமல் எம்.பி.ஏ., படிப்புக்கு செலவழிச்சேன். நல்லபடியா படிச்சும் முடிச்சேன். அம்மாவைச் சந்தோஷப்படுத்தியாச்சு. அடுத்து என் சந்தோஷத்துக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, 'மீடியா'வின் சக்தி என்னைச் சுண்டி இழுத்துருச்சு!

நான் எந்தக் கல்லூரிகளில் எல்லாம் போட்டியாளரா போனேனோ, அங்கெல்லாம் நடுவராக அழைக்கப்பட் டேன். எந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சதோ, அதே நிறுவனத்தில் என்னை முக்கிய விருந்தினரா அழைச்சாங்க. மீடியாதான் நம்ம புகலிடம்னு முடிவு செஞ்சேன்.

அப்பதான் 'ஜோடி நம்பர்-1' நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, எனக்கு டான்ஸ் தெரி யாது. டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மாதிரி ஆடினேன். 11 ரவுண்ட்களிலும் தேர்வாகி, ஒரே ஒரு முறை மட்டும் எலிமினேட் ஆனேன். ஆனாலும், வைல்ட் கார்டு மூலம் நேரடியா இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இரண்டாவது இடம் பிடிச்சேன். போட்டி நடக்கும்போது, 'இவன்லாம் எப்படி ஜெயிப்பான். இன்னிக்கு இவன்தான் எலிமினேட்'னு என் காது படவே பேசுவாங்க. நான் எதுவும் பேசலை. ஆனா, எனக்குள் அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு முடிஞ்ச வரைக்கும் போராடினேன். போராடாமலேதான் தோற்கக் கூடாது. போராடித் தோற்கலாம்... தப்பு இல்லை!

மிமிக்ரி, ஆடல் - பாடல்களோடு அடுத்த கட்டம் 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' நிகழ்ச்சிக்கு இயக்குநர் வடிவில் வந்தது. இப்ப 'அது இது எது?' நிகழ்ச்சி நல்லா போயிட்டு இருக்கு. 'இவனுக்கு மிமிக்ரி மட்டும்தான் வரும்!', 'ஏதோ சுமாரா டான்ஸ் ஆடு வான்'னு என் மேல மத்தவங்க ஸ்டாம்ப் குத்துவது எனக்குப் பிடிக்காது. எது கொடுத்தாலும் முயற்சித்துப் பார்ப்பேன். இப்ப ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் சீஸன்-4 ஸ்க்ரிப்ட் ரைட்டிங் பண்ணிட்டு இருக்கேன். சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கு.

சமீபத்தில் ஒரு பாட்டி என்னைப் பார்த்ததும் பக்கத் தில் வந்து, 'தம்பி, நீதானே 'அது இது எது' பண்ற? ரொம்ப நாளா எனக்கு உடம்பு முடியலப்பா. நீ டி.வி-யில வர்றதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. நீ எது செஞ்சாலும் பிடிக்குது. இப்ப நான் நல்லா மனசுவிட்டுச் சிரிக்கிறேன். நீதான் தம்பி காரணம். நீ சந்தோஷமா இருக்கணும்!'னு கையைப் பிடிச்சுக்கிட்டாங்க. நான் மட்டும் இல்லீங்க... எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்!"


"நான் மதி... ஆனது எப்படி?"

 

எஸ்.கலீல்ராஜா,படம்:வி.செந்தில்குமார்

தி... தமிழகத்தின் முக்கியமான கார்ட்டூனிஸ்ட். தினமணி நாளிதழில் தினமும்

அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், சினிமா என எல்லாவற்றையும் மதியின் கார்ட்டூன்கள் கேள்வி கேட்கும். கேலி பேசும். குத்திக்காட்டும். தலையில் குட்டும். முதுகில் தட்டும். முதல் பக்கத்தில் வெளியாகும் 'அடேடே' பகுதி 'அட' என்று சிரிக்கவைக்கும். சிந்திக்கவைக்கும்!

" 'வருங்காலத்தில் என்ன ஆகப்போறீங்க?' என்று என் ஆசிரியர் கேட்டபோது, பல மாண வர்கள் டாக்டர், இன்ஜீனியர் என்று மாறி மாறிப் பதில் சொன்னார்கள். என் முறை வந்தபோது 'நான் பஸ் டிரைவர் ஆவேன். ஊட்டி மலைப் பாதையில் ஸ்பீடா பஸ் ஓட்டுவேன்' என்று பதில் அளித்தேன். ஆச்சர்யமாக என்னைப் பார்த்தார் ஆசிரியர். பள்ளிப் படிப்பு முடியும் காலம். அதே கேள்வி. இந்த முறை 'நான் கப்பல் படையில் சேரப்போறேன்' என்றேன். விசித்திரமாகப் பார்த்தார்கள். உண்மையில் நான் என்ன ஆவேன் என்று அப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், மற்றவர்களைப்போல டாக்டர், இன்ஜினீயர் ஆகக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஏனெனில், எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அது எனக்கும் இருக்கிறது.

கப்பல் படையில் சேர்வதற்காக ஜியாலஜி படிப்பைத் தேர்ந்தேடுத்தேன். கூடவே, நன்றாக வரையப் பழகியிருந்தேன். பல்கலைக்கழக இளையோர் விழாவில் ஓவியம் தொடர்பான நான்கு போட்டிகளில் கலந்துகொண்டேன். ஐந்தாவதாக, பொலிட்டிக்கல் கார்ட்டூன் என்கிற போட்டியில், எனக்குத் தெரியாமல் என் புரொபஸர் என் பெயரைக் கொடுத்துவிட்டார். எனக்கு பொலிட்டிக்கல் கார்ட்டூன் வரைந்து பழக்கமே கிடையாது. 'எனக்கு அரசியல் கார்ட்டூன் வரையத் தெரியாது. நான் கலந்துகொள்ள மாட் டேன்' என்று பிடிவாதமாக மறுத்தேன். 'எந்த ஒரு விஷயத்தையும் இறங்கிப்பார்க்காமல் முடிவு பண் ணாதே. எனக்காக இதில் நீ கலந்துகொள்' என்றார். பிடிக்காமலேயே போட்டியில் கலந்துகொண்டேன். ஆச்சர்யமாக, அதில் எனக்கு கோல்டு மெடல் கிடைத்தது. எனக்கு அரசியல் கார்ட்டூன் வரையத் தெரியும் என்பதே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

அடுத்ததாக, மாநில அளவிலான கார்ட்டூன் போட்டிக்குத் தேர்வு பெற்றேன். அங்கேயும் கோல்டு மெடல். போட்டிக்கு நீதிபதியாக இருந்த ஒருவர் என்னைத் தேடி வந்தார். எனக்கு அவருடைய பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். 'நீ ஒரு பிறவி கார்ட்டூனிஸ்ட். வேறு எந்த வேலையைப் பற்றியும் யோசிக்காதே. உடனே, சென்னைக்குக் கிளம்பிப் போய் ஒரு பத்திரிகையில் சேர்' என்று தட்டிக்கொடுத்தார். 'நமக்குத் தெரியாமல் இருந்த திறமையை மற்றவர்கள் அடையாளம் காட்டி இருக் கிறார்கள். இனி, இதுதான் நம் வாழ்க்கை'ன்னு உள்ளுணர்வு சொல்லுச்சு.

அப்போது நான் விகடனில் மாணவப் பத்திரி கையாளராக இருந்தேன். பிறகு, நியூஸ் டுடே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். மதியம் ஒரு மணியோடு வேலை முடிந்துவிடும். அதற்கடுத்து என்ன செய்வது என்றே தெரியாது. மறுநாள் காலை வரை சும்மாவே இருக்க வேண்டும். நாளாக நாளாகப் பைத்தியம் பிடித்து விடும்போல இருந்தது. கல்கி, சாவி, துக்ளக், இதயம் பேசுகிறது உட்பட ஏழு பத்திரிகைகளில் ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன்.


விதவிதமான மனிதர்கள், விதவிதமான எண்ணங்களைச் சந்தித்தேன். அதுவே பல கார்ட்டூன்களுக்குக் கருவாக இருந்தது. காலை 5 மணிக்கு எழுந்தால், இரவு 12 மணி வரை வேலை இருக்கும். பத்திரிகைகளுக்கு ஏற்றபடி சம்பளமும் ஏற்ற, இறக்கத்தோடு இருந்தது. ஆனால், நான் எல்லோருக்கும் ஒரே தரத்தில்தான் கார்ட்டூன்கள் வரைந்து கொடுத்தேன். நமது உழைப்பில், நமது தரத்தில் நாம் எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. சமரசம் செய்ய ஆரம்பிக்கும்போது, சறுக்க ஆரம்பித்துவிடுவோம்.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கொள்கையோடு இருந்தது. அதற்கு ஏற்ற மாதிரி விதவிதமான ஐடியாக்களோடு கார்ட்டூன்கள் வரைய வேண்டும். அது நல்ல அனுபவம். 'இதற்கு மேல் இந்த அனுபவத்தை ஒரே பத்திரிகையில் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும். அதுவே நமக்கு அடையாளமாக இருக்கும்' என்று முடிவு செய்தேன். அப்போது கிடைத்ததுதான் தினமணி வாய்ப்பு.

ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்குச் சுதந்திரம் முக்கியம். எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல், பணத்தை, புகழை நோக்கிப் பயணப்படாமல் தினம் தினம் கடுமையாக உழைத்தேன். ஒவ்வொரு கார்ட்டூனையும் 100 சதவிகித அர்ப்பணிப்போடு செய்தேன். அப்படிப் புகழ்பெற்றதுதான் மதி கார்ட்டூன். ஒருநாள் ஜெயகாந்தனை ஒரு விழாவில் சந்தித்தேன். நான் அவருடைய ரசிகன். அவரிடம் போய் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, 'நீங்கதான் மதியா? நான் உங்க கார்ட்டூனுக்கு ரசிகன்' என்றார். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது எனது கார்ட்டூன் புத்தக வெளியீட்டு விழாவுக்குஅழைத் தேன். 'மதி, நான் உங்க கார்ட்டூன்களைத் தொடர்ந்து கவனிச்சுட்டு வர்றேன். நிறைய நல்ல விஷயம் சொல் றீங்க... வாழ்த்துகள்'னு பாராட்டினார். எப்பேர்ப்பட்ட பெருமை?

அதுவரை வாழ்க்கையின் வெற்றி ஃபார்முலா என்று என்னிடத்தில் எதுவும் இல்லை. அப்போதுதான் உணர்ந்தேன். உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள். அதில் உண்மையாக, கடுமையாக, புத்திசாலித்தனமாக உழைத்துக்கொண்டே இருங்கள். நீங்கள் இருக்கும் இடம் தேடிப் பணமும் புகழும் வந்து சேரும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் இருவரின் கொள்கைகள் மேல் அலாதிப் பற்று உடையவன் நான். அவர்களுக்குக் கடவுள் உண்டு. மதம் இல்லை. அதேபோல எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை கிடையாது. நம்பிக்கை குறையும்போது இறைவனைத் துணைக்குக் கூப்பிட்டுப் பாருங்கள். யானை பலம் வந்து சேரும். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை சொன்னார், 'ஒரு கையால் இறைவனைப் பற்றிக்கொள்ளுங்கள். இன்னொரு கையால் உலகக் கடமைகளைச் செய்துகொண்டே வாருங்கள். நீங்கள் எங்கும் வழி தவறிவிட மாட்டீர்கள்.' நானும் உங்க ளுக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான்!"


"நான் சரத் கமல் ஆனது எப்படி?"

 

இர.ப்ரீத்தி

"வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான

ஒரே நியாயமான வழி!" - இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் சரத் கமல். 2010 காமன் வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற பச்சைத் தமிழன். இந்தியாவின் தேசிய நாயகன்!

"விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து டேபிள் டென்னிஸ் பார்த்து வளர்ந்த பையன் நான். அப்பா ஸ்ரீனிவாச ராவும் சித்தப்பா முரளீதர ராவும் டேபிள் டென்னிஸ் கோச்சா இருந்தாங்க. அதனால், இயல்பாவே எனக்கும் டேபிள் டென்னிஸ் மேல் ஆர்வம். என் வயசுப் பசங்க கிரிக்கெட் ஆடும்போது, நான் மட்டும் எம்பி நின்னு டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இதைப் பார்த்துட்டு அப்பாவும் சித்தப்பாவும் எனக்கு டேபிள் டென்னிஸை முறையாக் கத்துக்கொடுத்தாங்க. என்னோட 11-வது வயதிலேயே 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். அதுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. அந்த வெற்றி... வெறியா மாறுச்சு. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். நிறையத் தோல்விகளைச் சந்திச்சேன். ஆனால், என் தன்னம்பிக்கையை ஒரு நாளும் இழக்கலை. இந்த உயரம் அவ்வளவு சுலபமா எனக்குக் கிடைக்கலை. காலேஜ் கலாட்டாக்கள், அம்மாவின் சமையல், மனைவியோட அன்பான நேரங்கள்னு பல விஷயங்களை இழந்துதான் இந்த உயரத்தை அடைய முடிந்தது.

இதுவரை நான் விளையாடியதில் என்னைத் திணறடித்தது இந்தியாவில் இப்போது முடிந்த காமன் வெல்த் போட்டிகள்தான். இந்தியாவின் நம்பர் ஒன் ப்ளேயர் என்பதால், என் மேல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனாலேயே எனக்குப் பயமும் பதற்றமும் வந்துவிட்டது. விளையாடத் துவங்கும் முன், எதைப்பற்றியும் யோசிக்காமல் போட்டிக்குத் தயாரானேன். ஒரு சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே யோசித்தேன். அப்படி அமைதியான மனநிலையில் விளையாடியதால், ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வாங்க முடிந்தது. இக்கட்டான பல நேரங்களில், 'இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை' என்று நம்பிக்கை கொடுப்பது அப்துல் கலாமின் சுயசரிதைதான். என்னுடைய வாழ்வின் தலை சிறந்த ரோல் மாடல் அவர்தான்.

இதுவரை 2004 மற்றும் 2008-ல் நடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டேன். ஆனால், அங்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. ஆனால், அந்தத் தோல்விகள் நல்ல பாடமா, புது அனுபவமா அமைஞ்சது. 2012-ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கை... என் தவறுகளைத் திருத்திக்கொள்ளக் கிடைச்ச வாய்ப்பா நான் பார்க்கிறேன். ஒலிம்பிக் தங்கம்தான் என் பல வருடக் கனவு. எனக்காக இல்லாவிட்டாலும், அதை என் மனைவிக்காக வாங்க வேண்டும். அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, 'நான் தனியே சமாளித்துக்கொள்கிறேன். நீங்கள் ஐரோப்பா சென்று பயிற்சி எடுங்கள்' என்று அனுப்பிவைத்தார். இந்த தியாகத்துக்காகவாவது தங்கம் வெல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 'கடின உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைத்தே தீரும்!"



"நான் ஷைலஜா ஆனது எப்படி?"

லகின் உன்னதங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் அற்புதக் கலை... மொழிபெயர்ப்பு!

திருவண்ணாமலையில் இருந்தபடி மலையாள இலக் கியத்தின் மேன்மைகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் கே.வி.ஷைலஜா... குறிப்பிடத் தகுந்த மொழி பெயர்ப்பாளர். கணவர் பவா.செல்லதுரையுடன் இணைந்து நடத்தும் 'வம்சி புக்ஸ்' பதிப்பகம்... ஷைலஜாவின் அடையாளம்!

"அடிப்படையில் எங்கள் குடும்பத்துக்கு கேரள மாநிலம் பாலக்காடுதான் பூர்வீகம். ஆனால், என் பெற்றோர் வேலை நிமித்தமாக திருவண்ணாமலையில் தங்கிவிட்டனர். பள்ளி, கல்லூரி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது இலக்கியங்கள் மீது ஆர்வம் வந்தது. நிறைய வாசிப்பேன். எது நல்ல எழுத்து என்பது எல்லாம் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் 1992-ல் ஒரு டிசம்பர் மாதக் குளிரில் திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இரண்டு நாள் இலக்கிய மாநாடு நடந்தது. அந்த மாநாடு எனக்கு இலக்கியம், எழுத்துபற்றி நிறையக் கதவுகளைத் திறந்துவைத்தது.

பிறகு, புத்தகங்கள் வாசிப்பதும், இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பதும் ஒரு தொடர் நடவடிக்கையாகவே மாறியது. த.மு.எ.ச.வி-லும் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டேன்.

மாதம்தோறும் த.மு.எ.ச-வின் சார்பாக நடைபெறும் 'முற்றம்' என்ற இலக்கிய நிகழ்வுக்காக மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களை அழைத்திருந்தோம். திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மைதானத்தின் தரையில் அமர்ந்து, பாலச் சந்திரன் சுள்ளிக்காடு செறிவான மலையாளத்தில் ஆற்றிய உரையை, அந்த மைதானத்திலேயே விட்டு வர மனமின்றி அடைகாத்து வீட்டுக்கு எடுத்துவந்தேன். அவர் பேசப் பேச... நான் தமிழில் எடுத்த குறிப்புகளை அப்படியே எழுதி மொழியாக்கம் செய்தேன். அந்தக் கட்டுரை அந்த வாரம் தினமணி கதிரில் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது. என் முதல் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரத்தின் ருசி என்னை அடுத்தடுத்து இயங்கவைத்தது.

பாலச்சந்திரன் திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். இரண்டாவது நாள் காலை தன்னுடைய புகழ் பெற்ற 'சிதம்பர ஸ்மரணா' புத்தகத்தைக் கையில் பிடித்தபடி, 'ஷைலஜா, இதில் இருந்து ஒரு பகுதியை வாசிக்கட்டுமா?' என்று ஒரு கலைஞனுக்கான உற்சாகத்தோடு கேட்டார். மொத்தக் குடும்பமும் ஹாலில் அமர்ந்து அவர் குரலுக்கு மௌனத்தோடு காத்திருந்தோம். சிதம்பர ஸ்மரணா புத்தகத்தின் முதல் பாகத்தைத் தன் வெண்கலக் குரலில் அவர் வாசிக்க வாசிக்க, நாங்கள் கரைந்தோம். உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள மொழி ஒரு தடை இல்லை என்ற பழைய உண்மை மீண்டும் ஒருமுறை அங்கு நிரூபிக்கப்பட்டது. அந்த நூலை பாலச்சந்திரன் என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். நான் ஒரு மலையாளி என்றபோதிலும் எனக்கு தமிழ்தான் எழுதப் படிக்கத் தெரியும். மலையாளம் பேச மட்டுமே தெரியும். ஆனாலும், அந்த உயர்ந்த எழுத்தாளரின் அன்பு சவாலை ஏற்றுக்கொண்டேன்.

இரண்டாம் வகுப்பு படித்த என் அக்கா மகள் சுகானா... என் மலையாள ஆசிரியை ஆனாள். தன் மழலைக் குரலில் மலையாளம் சொல்லித்தந்தாள். கூடவே, என் அம்மா மாதவியும் உதவினார். மெள்ள மெள்ள மலையாள மொழியின் சூட்சுமங்கள் பிடிபடத் தொடங்கின. 'சிதம்பர ஸ்மரணா' என்ற மலையாள நூல், 'சிதம்பர நினைவுகள்' என்ற தலைப்புடன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக என் கையில் இருந்தது. இப்போது வரை அந்த நூல்தான் என் அடையாளம். புத்தகம் வெளிவந்த இந்த எட்டு வருடங்களில் தினம் வரும் ஏதாவது ஒரு தொலைபேசி அழைப்பும், எப்போதாவது வரும் மிக நீண்ட கடிதங்களும் எனக்கான பொக்கிஷங்கள். அந்தத் தொகுப்பில் ஸ்ரீவத்சன் என்ற கவிஞரைப்பற்றி படித்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் ஸ்ரீவத்சனுக்காக ஒரு காசோலை அனுப்பிஇருந்தார். என்ன செய்வது எனத் தெரியவில்லை. பாலச்சந்திரனிடம் சொன்னேன். அவருக்கும் ஸ்ரீவத்சனின் தற்போதைய நிலை தெரியவில்லை. அவர் மாத்ருபூமி பத்திரிகைக்குத் தகவல் கொடுக்க, மறுநாள் மாத்ருபூமியில் 'மலையாளக் கவியைத் தேடு கிறது தமிழகம்' என்று கால் பக்க அளவில் செய்தி பிரசுரமானது. அதைப் படித்துவிட்டு வந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீவத்சன், கண்ணீர் மல்க எனக்குக் கடிதம் எழுதியதை எப்போதும் மறக்க முடியாது.

இந்தத் தொகுப்பு தந்த உற்சாகம் வடியும் முன்பே இந்நூற்றாண்டின் மகத்தான படைப்பாளி என நான் கருதும் என்.எஸ்.மாதவனின் புத்தகத்தை 'பர்மிஷ்டா' என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். 'சூர்ப்பனங்கை', 'பச்சை இருளன் சகா பொந்தன் மாடன்' என்ற மேலும் இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

என்னால் எழுத முடியும் என்ற உந்துதலை எப்போதும் தந்துகொண்டு இருப்பவர் எழுத்தாளர் பிரபஞ்சன். நான் எழுதும் ஒவ்வொரு வரியை யும் உற்சாகத்தோடு பாராட்டி, எழுதத் தாள்களையும் பேனாக்களையும் பரிசளிப்பார். ஒரு படைப்பாளியாகவும், விமர்சகராகவும் கூடவே இருக்கும் பவா, சக மொழிபெயர்ப்பாளராகப் பயணிக்கும் கே.வி.ஜெயஸ்ரீ, சுகானா என்ற எனது குடும்பச் சூழல் என் மொழிபெயர்ப்பில் மேலும் நுட்பத்தைக் கூட்டுகிறது. வணிகவியல் பேராசிரியர் பணி சலிப்பான போது, மனதுக்குப் பிடித்த பதிப்பாளர் பணியை நானே விரும்பி ஏற்று 'வம்சி புக்ஸ்' துவங்கி, தினம் தினம் எழும் புதிய சவால்களைச் சந்திக் கிறேன்.

நான் பிரமித்த படைப்பாளிகளான இயக்குநர் பாலு மகேந்திரா முதல் மிஷ்கின் வரையிலான திரைத் துறை நண்பர்கள் மற்றும் பிரபஞ்சன் முதல் சந்திரா வரை யிலான இலக்கிய நண்பர்களின் உற்சாகம் இல்லை எனில், இது எதுவுமே சாத்தியம் இல்லை. இதோ, ஜனவரியில் சென்னையில் தொடங்கும் புத்தகக் கண் காட்சி, இப்போதே என்னை சதுரங்கப் பலகையின் முன் அமரக்கோருகிறது. ஒரு பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இரண்டு முனைகளில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராக, எங்கள் குடும்ப நண்பர் நடிகர் மம்மூட்டியின் 'வாழ்வின் தரிசனம்' புத்தகத்தோடும் ஒரு பதிப்பாளராக, தமிழின் மிகச் சிறந்த 30 புதிய புத்தகங் களோடும் வருகிறேன்.

மொழிபெயர்ப்பில் இருந்து கொஞ்சம் விடு பட்டு சொந்தமாக எழுத வேண்டும் என்ற பெரும் ஆர்வம் மேல் எழும் காலம்இது. ஆனால், அது ஒரு மலர் மலர்தல் போலவும், மழை கொட்டுவதுபோலவும் தானே நிகழ வேண்டும் என ஒரு சக்கரவாகப் பறவையாகக் காத்திருக் கிறேன்!"


''நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?''

பாரதி தம்பி

''நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது. எந்தவித இசையறிவும் இல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்து தலில் இசையை வாழ்வாகத் தேர்ந்தெடுத்தவன் நான்!'' - பணிவு கரைத்த குரலில் பேசுகிறார் விஜய் ஆண்டனி. நவீன தமிழ்த் திரை இசையின் துள்ளிசையும், மெல்லிசையும் கலந்த பாடல்கள் இவருடையவை!

''என் அப்பா, அரசுத் துறை ஒன்றில் கிளர்க் நிலையில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் இருந்தார். அப்புறம், நான், என் தங்கை. மிகச் சாதாரணக் குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனார். வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அம்மா மேரிபாபு தடுமாறி நின்றார். வீட்டு வாடகை, சாப்பாடு, துணி, படிப்பு எல்லாமும் சிக்கலானது. வேறு வழியின்றி என்னையும், என் தங்கையையும் அழைத்துக்கொண்டு எல்லா உறவினர் வீடுகளுக்கும் அலைந்தார். சாத்தூர் அருகே இருக்கும் சின்னக்காமன்பட்டியில் ஓர் உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கு அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தேன். ஒரு வருடத்தில் அடுத்த மாற்றம். சென்னைக்கு ஓர் உறவினர் வீட்டுக்கு வந்தோம். கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன். ஆறே மாதங்களில் மறுபடியும் மூட்டை முடிச்சுக்களுடன் எங்களை அழைத்துக்கொண்டு அம்மா நாகர்கோவிலுக்குப் போனார். அங்கும் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பின் மறுபாதியைப் படித்தேன். திரும்பவும் வாழ்க்கை விரட்டியது. இப்போது திருச்சிக்குப் போனோம். ஆறாம் வகுப்பின் பாதியை திருச்சிப் பள்ளியில் படித்தேன்.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்... இரண்டு பிள்ளைகளுடன் ஊர் ஊராக அலைந்தார் என் அம்மா. நல்லவேளை, என் அப்பா பார்த்த அரசு வேலை, கருணை அடிப்படையில் அம்மாவுக்குத் தரப்பட்டது. வேலை கிடைத்த இடம்... திருநெல்வேலி.

நெல்லை செயின்ட் சேவியர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். பாதியில் சேர்ந்தவன் என்பதால் என் நம்பர்தான் வகுப்பின் கடைசி நம்பர். நம்பரில் மட்டுமல்ல... படிப்பிலும் நான்தான் கடைசி. ப்ளஸ் டூ முடிக்கும் வரை ரொம்ப சுமாரான மாணவன் தான். இருந்தாலும், பெரிய மனதுவைத்து சேவியர் கல்லூரியிலேயே ஸீட் கொடுத்தார்கள். காலேஜுக்குப் போவேன். வருவேன். சுமாராகப் படிப்பேன். அம்மாவின் சிரமங்களை உணரும்போது 'எப்படியாவது முன்னேறணும்' என்று தோன்றும். ஆனால், என்ன செய்வதென்று தெரியாது. ஆலோசனை சொல்லவும், ஆதரவு தரவும் யாரும் இல்லை.

நண்பர்களைக் கிண்டல் செய்வதற்காக சினிமா பாடல்களை உல்டா பண்ணியும், நானே சொந்தமாகவும் எதையாவது பாடுவேன். அது பசங்க மத்தியில் ஹிட்டானது. உற்சாகமாகி புதிய புதிய பாடல்களை உருவாக்கினேன். அதை எல்லாம் தொகுத்து ஆல்பம் போடலாம் என்று யோசித்து திருச்சியில் இருக்கும் தலைக்காவேரி அமைப்பிடம் போய்க் கேட்டபோது, 'உங்களுக்கு இசை தொடர்பாக என்ன தெரியும்?' என்றார்கள். 'ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். கையில் இருந்த 2,500 ரூபாய்க்கு ஒரு கீ-போர்டு வாங்கிக்கொண்டு திருநெல்வேலிக்குப் பஸ் பிடித்தேன். சிறிய கீ-போர்டு. ஜாமென்ட்ரி பாக்ஸைவிடக் கொஞ்சம் பெரியது. ஆனால், அந்தச் சிறிய கருவி எழுப்பிய இசை எனக்குள் ஏதோ செய்தது. கல்லூரிப் பாடல்களை எல்லாம் இந்த கீ-போர்டில் வாசித்துப் பார்த்தேன். எனக்கு இசையின் மீது இருக்கும் ஈர்ப்பை எனக்குப் புரியவைத்தது அந்த குட்டி கீ-போர்டுதான்.

கல்லூரி முடிந்தது. அம்மாவிடம், 'நான் இசை அமைப்பாளர் ஆகணும். சென்னைக்குப் போறேன்' என்றேன். அம்மா சம்மதிக்கவில்லை. 'மேலே படிக்கிறேன்!' என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன். 'மேலே படிக்க முடியாது' என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால், கல்லூரியில் 30 பேப்பர்களில் 22 அரியர்ஸ். அப்புறம் எங்கே படிப்பது? ஆனாலும், என் திறமை மீது நம்பிக்கைவைத்த ஃபாதர் இன்னாசிமுத்து எனக்கு லயோலாவில் ஸீட் வாங்கித் தந்தார்.

லயோலாவில் மறுபடியும் யு.ஜி-யில் விஸ்காம் சேர்ந்தேன். ஹாஸ்டலில் தங்கி பார்ட் டைம் வேலை தேடினேன். ஸ்டார் ஸ்டுடியோ என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் என்னை ஓர் அப்ரன்டீஸாகச் சேர்த்துக்கொண்டார்கள். ஸ்பீக்கரைத் துடைப்பது, இசைக் கருவிகளைத் துடைப்பது என எப்படியாவது உள்ளே போய்விடுவேன். மெள்ள மெள்ள எமி சார், என்னை எல்லாவற்றுக்கும் அனுமதித்தார். சவுண்ட் இன்ஜினீயரிங் கற்றுக்கொண்டேன். பகுதி நேரமாக பியானோ வகுப்புகளுக்கும் போனேன்.

என் சக்திக்கு 20 கிலோதான் தூக்க முடியும் என்றால், 50 கிலோவில் இருந்து ஆரம்பிப்பதுதான் என் வழக்கம். லயோலாவில் டிகிரி முடித்ததும் அதே ஸ்டுடியோவில் மேலும் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அடுத்த வருடமே 'ஆடியோ ஃபைல்' என்ற பெயரில் நானே சொந்தமாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆரம்பித்தேன். லட்சங்களில் கடன் வாங்கித் தொடங்கிய தால், கடனை அடைக்க இரவும் பகலுமாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், இசை மீது இருந்த ஆர்வத்தால் தொழிலை நேசித்துச் செய்தேன். ஏராளமானோர் நண்பர் ஆனார்கள்.

எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு, ஒரு டி.வி. சீரியல். 'சின்னப் பாப்பா, பெரிய பாப்பா' என்ற சீரியலின் டைட்டில் ஸாங் நான் கம்போஸ் செய்ததுதான். பிறகு, நிறைய விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். இடையில் சினிமா வாய்ப்பு களையும் தேடினேன்.

ஒரு நாள் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சார், இயக்குநர் சசி சாரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு 'டிஷ்யூம்' பண்ணினேன். அதற்கு முன்பே எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடமும் வாய்ப்பு கேட்டிருந்தேன் என்பதால், அவர் 'சுக்ரன்' வாய்ப்பு கொடுத்தார். முதலில் சுக்ரனும், இரண்டாவதாக டிஷ்யூமும் ரிலீஸ் ஆகின.

இப்பவும் என் அம்மாவுக்குக் காலையில் ஸ்கூட்டரில் கிளம்பி ஆபீசுக்குப் போய், மாலையில் வீடு திரும்பி, இரவு டி.வி. பார்த்து 10 மணிக்குத் தூங்கும் மகன்தான் வேண்டும்.

வெற்றி, தோல்வி, பணம், புகழ் எல்லா வற்றையும்விட, அம்மாக்களுக்கு முக்கியம் மகனின் உடல்நலம். அம்மாக்களின் அன்பு மட்டுமே பெரியது. என் திருமணம் நடந் தது. காதல் மனைவி ஃபாத்திமா ஹனி டியூ வந்த பிறகு, வாழ்க்கை இன்னும் வண்ண மயமாகி இருக்கிறது. என்னைவிட, எனக் காக அதிகம் உழைக்கும் என் மனைவி எனக்கு இன்னொரு அம்மா.

'நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?' என்று கேட்டதால், 'இப்படித்தான் ஆனேன்' என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சத விகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு, நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!''


"நான் புகழேந்தி ஆனது எப்படி?"
ம.கா.செந்தில்குமார், படம்:பொன்.காசிராஜன்

"நவீன மருத்துவத்தின் தந்தை வில்லியம் ஆஃப்லர். இவர்தான் அலோபதி

மருத்துவத்துக்கான முதல் புத்தகத்தை உருவாக்கியவர். 'ஒரு மருத்துவர், நோயாளியின் உடல் மூலமாகத்தான் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவான அறிவைப் பெறுகிறார். அதேசமயம், நோய்பற்றியும் மருந்துகள்பற்றியும் விளக்கிக் கூறுவது அந்த நோயாளிக்கு மருத்துவர் தரும் சன்மானமோ, பிச்சையோ அல்ல. அது ஒவ்வொரு மருத்துவரின் கடமை!' என்கிறார் ஆஃப்லர். ஆனால் இன்று, 'ஏன், எதற்கு' என்று கேள்வி கேட்காமல், நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள்!" - நோயாளிகளின் மீது அன்பும், மனிதத்துக்கு எதிரானவர் கள் மீது வெறுப்புமாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி. ஆயிரங்கள், லட்சங்களில் மருத் துவக் கட்டணங்கள் கொள்ளையடிக்கப் படும் இந்தக் காலத்தில் மூன்று ரூபாய் கன்சல்டேஷன் ஃபீஸுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர். அணுக்கதிர் வீச்சு, தடுப்பூசி என ஆய்வுகளின் அடிப்படை யில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர். தான் கடந்து வந்த பயணத்தை விவரிக்கிறார்.

"நான், பிறந்து வளர்ந்தது அருப்புக்கோட்டை. அப்பா, அம்மா இருவருமே பள்ளி ஆசிரியர்கள். 'யார் எது சொன்னாலும், ஏன், எதற்கு என்று கேள்வி கேள்' என்று பழக்கப்படுத்தப்பட்ட நாத்திக வழியில் வந்த அப்பா. காந்தியவாதி அம்மா. அந்தச் சூழல்தான் எனக்குத் தெளிவை யும் எளிமையையும் பழக்கப்படுத்தியது. அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த, மதுரை மருத்துவக் கல்லூரியின் 1984-வது வருட பேட்ச் மாணவன். ஆரம்பத்தில் படிப்பில் மட்டுமே இருந்தது கவனம். ரமேஷ், செல்லபாண்டியன், நாகர்ஜுனன் போன்ற நண்பர்களின் அறிமுகம் காரணமாக, சமூகம் சார்ந்த விஷயங் களில் கவனம் திரும்பியது.

பட்டம் பெற்று வெளியே வரும்போது மருத்துவத் தொழிலைப் பணம் சம்பாதிக்கும் விஷயமாக மேற்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. நண்பர்கள் இருந்த தைரியத்தால், கல்பாக்கம் பகுதியில் கிளினிக் தொடங்கினேன். கன்சல்டேஷன் ஃபீஸாக மூன்று ரூபாய் வாங்கினேன். தேவை இல்லாமல் ஊசி போடுவது இல்லை, வீரியமிக்க ஆன்ட்டிபயாடிக் கொடுப்பது இல்லை என்பதும் எனது கொள்கை.

ஆனால், 'மருத்துவரைப் பார்த்து வந்த மறுநாளே நோய் குணமாக வேண்டும்' என்ற மனநிலையில் இருந்தவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். 'இந்த ஆளு லூசா? மூணு ரூபாய்க்கு வைத்தியம் பாக்குறாராம்!' என்று சந்தேகப்பட்டார்கள். 'நோய் ஏன் வருகிறது? அவை மீண்டும் நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்று நான் விலாவரியாக விளக்குவதையும் அவர்கள் ரசிக்கவில்லை. 'என்ன பிரச்னைன்னு கேட் டோமா... கலர் கலரா ரெண்டு மாத்திரையை எழுதிக் கொடுத்தோமான்னு இல்லாம வளவளன்னு பேசுறானே!' என்று அலுத்துக்கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் பொறுமையை மட்டுமே கடைப்பிடித்தேன்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன... இன்று என் கிளினிக்குக்கு 50 மீட்டர் தள்ளிதான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால், அங்கு செல்பவர்களைவிட என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது கன்சல்டிங் ஃபீஸை 10 ரூபாயாக உயர்த்தி இருக்கிறேன். இதுவே குறைவு என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இந்தக் கட்டணமே எனக்குப் போதுமான வருமானம் அளிக்கிறது என்றால் நம்புவீர்களா?

உதாரணமாக, மருந்துக் கடைகளில் 32 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்து, அரசு பதிவு பெற்ற மருத்துவர்களுக்கு 4 ரூபாய்க்கு வழங்கப்படும். டிரிப்ஸ் செட் 50 ரூபாய் என்றால், எங்களுக்கு 5 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த சலுகையைப் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள எப்படி மடை மாற்றுகிறார்கள் என்பது நான் விளக்கிச் சொல்லித்தான் உங்களுக்குப் புரியும் என்பது இல்லை!

அணுக்கதிர் கசிவினால் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் ஆறு பேர் அதிகபட்ச கதிர் வீச்சுக்கு உள்ளானார்கள் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் அணுக் கதிர் வீச்சின் பாதிப்புபற்றிய பிரசாரங்களைத் தொடங்குகிறோம். 'உங்களுக்கு விவரம் தெரியாது. அணுக் கதிர்கள் கசிய வாய்ப்பே இல்லை. விளம் பரத்துக்காக ஏதேனும் கலகம் செய்யாதீர்கள்!' என்று கல்பாக்கம் அணு சக்தி மையத்தில் இருந்து எங்களிடம் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அணு சக்தி நகரிய மக்களிடம் ஆய்வு நடத்தியதில், மல்டிபிள் மைலமா நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. போராட்டங்களை முன்னைக் காட்டிலும் தீவிரப்படுத்துகிறோம். மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, மாமல்லபுரம் டி.எஸ்.பி. என்று ஒருவரை இடையூறு செய்யவைக்கிறார்கள்... 'நீ யாரு? அணுசக்தி பத்தி உனக்கு என்னய்யா தெரியும்? நீ ஒரு போலி டாக்டர்னு சொல்லி அரெஸ்ட் பண்ணவா?' என்று மிரட்டுகிறார் அவர். 'உங்களுக்கும் சேர்த்துத்தாங்க நான் பேசுறேன். 2006-ல் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம், 'சிறந்த மருத்துவர்'னு விருது வாங்கின என்னை 'போலி டாக்டர்'னு அரெஸ்ட் பண்ணா, நீங்க யார் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தீங்களா?' எனக் கேட்டேன். அமைதியாகிவிட்டார்.

'உயிரியல் போர் ஆயுதம்' குறித்து, பேசியும் எழுதியும் வருகிறேன். 'எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமி... பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியல் போர் ஆயுதம்' என நான் சொன்னபோது, மருத்துவ உலகத்தில் இருந்தே பலத்த எதிர்ப்புகள். ஆனால், அது என் சொந்தக் கருத்து இல்லை. நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் சொன்னது. ஒருமுறை இயக்குநர் ஜனநாதனிடம் இது தொடர்பாகப் பேசிக்கொண்டு இருந்தேன். இந்த விவகாரம் தொடர்பாகச் சில புத்தகங்களை அவருக்குப் படிக்கக் கொடுத்தேன். அதை மையமாகவைத்து உருவான படம்தான் 'ஈ'!

எனக்குக் கல்யாணம் முடிந்து இரட்டைப் பெண் குழந்தை கள் பிறந்தனர். சென்னையின் பிரபல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்கள். நான் கூடவே கூடாது என்றேன். "என் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நான் மறுத்துவிட்டேன்'னு எழுதிக்கொடுங்க' எனக் கேட்டார்கள். 'மத நம்பிக்கையா? பெண் குழந்தைகள் என்பதால் அலட்சியமா?' என்றெல்லாம் பல விதங்களில் இம்சித்தார்கள். தடுப்பூசிகளின் ஆபத்துக்கள்பற்றி நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. குழந்தைகளுக்குப் போடும் போலியோ சொட்டு மருந்தே அவர்களுக்குப் பெரும் பிரச்னைகள் ஆகும் தீமைபற்றி அவர்களுக்கு விளக்கினேன்.

போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவிலேயே வாய் வழியாகப் போடும் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் இல்லை. அவர்கள் ஊசி வழியாகத்தான் போலியோ மருந்து செலுத்துகிறார்கள். ஆனால், சொட்டு மருந்து பழக்கத்தை இன்னமும் நாம் புழக்கத்தில் வைத்திருக்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 500 பொது மக்களுக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இங்கோ கிராமப்புறங்களில் 30 ஆயிரம் மக்களுக்குத்தான் ஒரு மருத்துவர் இருக்கிறார். அப்படி இருப்பவர்களும் 'மருத்துவர்'களாக இருக்கிறார்களா என்பதுதான் இங்கு பிரச்னையே! இந்த நிலைமை மாறும். நான் மாறி இருக்கிறேன். நீங்களும் மாறத் தயாரானால், நம்மால் மாற்ற முடியும்!"


"நான் கேசவரமணி ஆனது எப்படி?"

- இரா.மன்னர்மன்னன்


"எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். 'நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு'ங்கிற அந்த வரிகள் என்னைப் பாதிச்சது. ஏன்னா, என் வாழ்க்கையே அதுதான்!" - ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் கேசவரமணி. தடை தாண்டும் தடகளத் தமிழன். தேசிய அளவிலான இரண்டு தங்கப் பதக்கங் கள் கேசவரமணியின் முயற்சிக்கும் திறமைக்கும் சாட்சி.

"நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கன்னிக் கிராமத்துப் பையன் நான். வீட்டில் என்னையும் சேர்த்து நாலு குழந் தைங்க. என் அப்பா சாலைப் பணியாளரா வேலை பார்க்கிறார். அதில் கிடைக்கிற வருமானம் எங்க நாலு பேர் சாப்பாட்டுக்குத்தான் போதும். அப்பா பெரும்பாலும் பட்டினியாவே இருப்பார். பசி தாங்காம அப்பா எப்போவாவது ஒருவேளை சாப்பிடும்போது, நாங்க யாராவது பசியோடு இருப்போம்.

அத்லெட் ஆகணும்னு எனக்கு அப்போ கனவெல்லாம் கிடையாது. சும்மா சின்ன வயசுல தெருத்தெருவா ஓட ஆரம்பிச்சது. அண்ணனோட போட்டி போட்டு ஓடி ஜெயிச்சிருக்கேன். அஞ்சு வயசில் ஸ்கூலில் சேரும் போது, ஸ்கூலுக்குத் தினம் ஓடுவேன். அப்போ அது எனக்கு ரொம்பப் பெரிய சந்தோஷமா இருந்தது. ஸ்கூலில் வாத்தியார் அடிச்சாலும், கணக்கு வரலேன் னாலும், கையில் காசு இல்லைன்னாலும் ஓட ஆரம்பிச் சிருவேன். அதுதான் அப்போ எனக்கு ஆறுதல்.

மூணாவது வகுப்பு படிக்கும்போது வேகமா ஓடிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு பையன் குறுக்கே வந்துட்டான். மோதின வேகத்துல என் னோட பல் ஈறோடு பெயர்ந்து அவன் மண்டை ஓட்டில் பதிஞ்சிருச்சு. ரெண்டு பேருக்கும் ரத்தம் கொட்டி, மயங்கி விழுந்துட்டோம். நான் நிதா னத்துக்கு வரவே ஒரு வாரம் ஆகிருச்சு. அதோடு ஓடுறதையே நிறுத்திட்டேன்.

திரும்பவும் நான் ஓட அஞ்சு வருஷம் ஆச்சு. எட்டாம் வகுப்பு படிக்கும்போது 'ஒரு ஸ்போர்ட்ஸ் மீட் வருது. பயிற்சி எடுத்துக்கோ'ன்னு சொன் னாங்க. அதுக்கு முன்னாடி வரை ஒரு பரிசுகூட வாங்கினதில்லை. அதனால வெறியோடு பிராக் டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, நான் அந்த ஸ்கூலைவிட்டு வெளியேறும் வரை ஒரு மீட்கூட நடக்கலை.

பக்கத்தில் இருந்த கீழையூர் கவர்மென்ட் ஸ்கூல்தான் அந்த ஏரியாவில் ஸ்போர்ட்சுக்குப் பிரபலமான ஸ்கூல். அதனால அங்கே சேர்ந்தேன். பத்தாவது படிக்கும்போது பி.இ.டி வாத்தியாரா வந்தார் ரிச்சர்ட் சாலமோன். முதல்முறையா என்னை ஸ்போர்ட்ஸ் மீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார். ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் டிவிஷன் லெவலில் தேர்டு கிரேடு வாங்கினேன். அந்தப் போட்டி முடிஞ்சதும் கரெக்டா அவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சது. சோர்ந்துபோயிட்டேன். 'உன்கிட்டே ஆர்வம் இருக்கு. நீ விரும்பினா என்கூட கிளம்பி வா. உன்னைப் பெரிய ஆளாக் கிக் காட்டுறேன்'னு சொன்னார். உடனே கிளம் பிட்டேன். ரெண்டு வருஷம் கூடவே தங்கவெச்சு சோறு போட்டார். நிறைய பிராக்டீஸ் கொடுத்தார். அப்போதான் தடை தாண்டும் ஓட்டத்தை முதல் தடவையா நேரில் பார்த்தேன்.

'எதையும் வேடிக்கை பார்த்தா, காரியம் நடக்காது. துணிஞ்சு இறங்கு'ன்னு சொல்லித் தந்தவர் அவர்தான். தடை தாண்டும் ஓட்டம் பழக ஆரம்பிச்சேன். எக்கச்சக்க அடி. கால் எல்லாம் பேண்டேஜ் போட்டுட்டு போட்டியிலும் கலந்துக்கிட்டேன். ஸ்கூல் லெவலில் இரண்டாவது பரிசு கிடைச்சது. 'வட்டம், மாவட்டம் அளவிலான தடை தாண்டும் போட்டி வருது. இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்கு. கலந்துக்கிறியா?'ன்னு என் கால் கட்டைப் பார்த்துக்கிட்டே கேட்டார். சந்தோஷமா சம்மதிச்சேன். காயத்தோடே கடுமையா பயிற்சி எடுத்தேன். எல்லாத் தடைகளையும் தாண்டினப்ப மாநில அளவில் இரண்டாவது இடம். 'டேய்... பெரிய ஆளா வருவடா!'ன்னு சாலமோன் சார் சிரிச்சார். என் ஆர்வத்தைப் பார்த்து சென்னை ஏ.எம்.ஜெயின் காலேஜ்ல எனக்கு ஸீட் கொடுத்தாங்க.

நான் ஒவ்வொரு முறை போட்டியில் கலந்துகொள்ளும் போதும் பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கு. சின்ன வயசில் இருந்தே கரெக்டான பயிற்சி எடுக்கலை. என் உடம்பில் போதுமான ஊட்டச்சத்து இல்லை. ஆனா, அதைப்பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. போன வருஷம் கோயம்புத்தூரில் ஒரு ஸ்போர்ட்ஸ் மீட். முதல் நாள் இரவு செம ஜுரம். உடம்பு கொதிக்கக் கொதிக்க ஓடினேன். அதுதான் தென்னிந்திய அளவில் புதிய சாதனை.

அடுத்ததா மைசூரில் போட்டி நடந்தப்ப, கடுமையான இடுப்பு வலி. 'ஓடியாவது தோத்துப் போயிருவோம்'னு ஓடினேன். கண்ணில் பூச்சி பறக்க ஓடி முடிச்சப்ப, இந்திய அளவில் இரண் டாவது இடம் வாங்கினேன். அடுத்த 13 நாட்களில் மாநில அளவில் ஒரு போட்டி. நடக்கவே முடியாத மாதிரி பாதம் வெடிச்சுப் புண்ணாகி இருந்தது. ஒரு வாரம் ட்ரீட்மென்ட், கடைசி மூணு நாள்தான் பயிற்சி. அந்தப் போட்டியில் நான் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட்! தடை இருந்தால்தான் நம்மால ஒழுங்கா தாண்ட முடியும்போலன்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்தடுத்து நேஷனல் லெவல் போட்டிகள். காயம் குணமாகாமலேயே மூணு நேஷனல் லெவல் போட்டிகளில் கலந்துக் கிட்டேன். அதில் இரண்டில் ஜூனியர் பிரிவில் நான்தான் நம்பர் ஒன்!

காமன்வெல்த், ஒலிம்பிக்னு நிறையக் கனவுகள் இருக்கு. பசி, பட்டினி, ஸ்பான்சர்ஷிப்னு நிறை யத் தடைகளும் இருக்கு. யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்!" - ஒட்டிய மணலை உதறிவிட்டு, ஓடத் தயாராகிறார் கேசவரமணி.


''நான் பாஸ்கர்சக்தி ஆனது எப்படி?''

பாரதி தம்பி, படம்: பொன்.காசிராஜன்

ண் மணம் மாறா எழுத்து பாஸ்கர்சக்தியுடை யது. வாழ்வில் தவறவிடும் தருணங்களை எளிமையும் கிண்டலும் கலந்த மொழியில் எழுதிச் செல்பவர், சின்னத் திரையிலும், பெரிய திரையிலும் பரபரப்பான வசனகர்த்தா.

''தேனி பக்கம் வடபுதுப்பட்டி என் சொந்த ஊர். எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். படிப்பில் கெட்டிக்கார மாணவன். ஆனால், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும். வீசிங் பிரச்னை. உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் என் பிரச்னை புரிந்து கரிசனத்துடன் பார்த்துக்கொண்டனர். ஆனால், எட்டாம் வகுப்பு முடிந்ததும் வேறொரு ஊரில் ஒன்பதாம் வகுப்பு சேர வேண்டி இருந்தது. ஒரு மாதம்கூட இருக்காது. கடுமையான உடல்நல பாதிப்பு. பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டேன்.

உள்ளூரைவிட்டு தொழில் தேடி குடும்பம் வெவ்வேறு ஊர்களுக்கு மாறியது. எந்த ஊருக்குப் போனாலும் நூலகங்களைத் தேடிப்போய் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது.

அப்பா திருமலைச்சாமி, விதவிதமான தொழில்கள் செய்து விதவிதமாக நஷ்டப்பட்டவர். உற்சாகமாக ஒன்றைத் துவங்கி படுதோல்வி அடை வார். ஓரிரு நாட்களில் அசராத அதே உற்சாகத்தோடு அடுத்த தொழிலை ஆரம்பிப்பது குறித்த கனவு களுடன் பேசிக்கொண்டு இருப்பார். நான் சிரிப்பு டனும் அம்மா கடுப்புடனும் அதனைக்கேட்டுக் கொண்டு இருப்போம். தனது ஒன்பதாவது தொழிலாக அப்பா விறகுக் கடை வைத்திருந்தார். அதை ஒரு வருடம் கவனித்துக்கொண்டு இருந்தேன். அந்த சமயம் கோட்டூரில் சித்தப்பா ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்தார். மிகுந்த சந்தோஷத்துடன் தியேட்டரில் போய் டிக்கெட் கிழித்தேன். வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தால், என்னுடன் படித்த பையன்கள் எல்லோரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தனர். நன்றாகப் படித்த ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நான் தோல்வி அடைந்தவனாக உணர்ந்தேன். (என் அப்பா அப்போது சில்வர் பாத்திரங்களை வாங்கி வீட்டில்வைத்து உற்சாகமாக விற்கத் துவங்கி இருந் தார்!) தோற்றுவிடக்கூடாது என்கிற உள்ளுணர்வு உந்த, அடுத்த அக்டோபரில் நேரடியாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன். பாஸ். அடுத்த ஏப்ரலில் ப்ளஸ் டூ எழுதி அதிலும் பாஸ். பிறகு அஞ்சல் வழி பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். ஆனால், அது பிடிக்காமல் நிறுத்திட்டேன். இடையில் கிரிக் கெட், இளைஞர் மன்றம் என அந்த வாழ்க்கை ஒரு பக்கம். எல்லாவற்றுக்கும் மைய இழையாக இருந்தது இலக்கியம். தேனியில் அறிமுகமான த.மு.எ.ச.தோழர் கள் மூலமாக இடதுசாரி தத்துவமும், இலக்கியப் பரிமாற்றமும் சாத்தியமாயின. (இந்தக் காலகட்டத்தில் அப்பா செடி முருங்கைக் கன்றுகளை நாற்றுப்போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்!)

நான் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். அப்பாவோ, வேலைக்குப் போனால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். அதை மறுத்த அம்மா, 'உங்களை மாதிரி அவனும் உருப்படாமப் போறதுக்கா?' என அப்பாவை அதட்டி, என்னை கல்லூரியில் சேரச் சொன்னார். போடி சி.பி.ஏ. கல்லூரியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட் ரேச்சருக்கு விண்ணப்பித்தேன். எனது படிப்பு வழிப் பயணத்தைப் பார்த்து எனக்கு சீட் தர தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் எனக்காகப் பேசி சீட் வாங்கித் தந்தவர் பேராசிரியர் மோகனசுந்தரம். ஒரு வழியாக நானும் பி.ஏ., முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில வந்தேன். அடிமனதில் எழுத வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ரொம்ப வருடங்கள் கழித்து 95-ம் வருடம்தான் முதன்முதலில் ஒரு கதை எழுதினேன். 'சாதனம்' என்ற அந்தக் கதை இந்தியா டுடே இலக்கிய மலரில் இரண்டாவது பரிசைப் பெற்றது. இரண்டாவது கதை எழுத இன்னொரு வருடம் ஆனது. அது இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

அதைத் தொடர்ந்துதான் விகடனில் சேர்ந்தேன். (இப்போது அப்பாவுக்கு அண்ணன் ஒரு எஸ்.டீ.டி. பூத்வைத்துக் கொடுத்திருந்தார். அப்பா முன்னிலும் உற்சாகமாக இருந்தார்!) 'ரூட் பஸ்' என்ற எனது முதல் குறுந்தொடர் விகடனில் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் நிறைய கதைகளும், சில தொடர்களும் எழுதினேன். அப்படி எழுதிய ஒரு தொடர்தான் 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்'. அந்த சமயம் அப்பாவுக்கு தொண்டையில் பாதிப்பு. புற்றுநோய் என்றார்கள். அப்பாவைப் பார்த்துக் கொண்டு ஊரில் அண்ணன்வைத்திருந்த எஸ்.டீ.டி. பூத்தையும் கவனித்துக்கொண்டு தேனியிலேயே எழுத்தாளராக ஃபார்ம் ஆகிவிடலாம் என்று நினைத்து தேனிக்குப் போய்விட்டேன். கொஞ்ச நாட்களிலேயே எனது 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்' கதையை மைக்ரோ தொடராக மின் பிம்பங்கள் எடுத்தது. திருமுருகன் இயக்கினார். மருத்துவ மனையில் படுக்கையில் அப்பா. அருகில் நான். அப்பா டி.வி-யில் ஒளிபரப்பான தொடரைப் பார்த்தார். என் மீது அளவு கடந்த நம்பிக்கைவைத்திருந்த அவருக்கு 'நான்என்ன வாகப் போகிறேன்' என்பதில் மட்டும் குழப்பம் இருந்தது. அந்த டி.வி. தொடரைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவராக, 'பரவாயில்லேப்பா, உனக்கு இது நல்லா வரும் போலிருக்கு' என்றார். கடைசி வரை எந்தத் தொழில் தனக்கு வரும் என்பதைத் தேடிக்கொண்டே இருந்தவர் அவர்.

அந்த மைக்ரோ தொடர் முடிந்ததும் திருமுருகன் இயக்கத்தில் 'காவேரி' என்ற சீரியலுக்கு வசனம் எழுதினேன். முழுக்க முழுக்க மும்பையிலேயே ஷூட்டிங். சீரியல் நடக்கும்போது அப்பாவின் உடல்நிலை மோசமானது. என்னை வரவழைக்க வேண்டும் என்று அம்மாவும் அண்ணனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். படுத்திருந்த அப்பா சட்டெனக் கண் விழித்து, 'இப்பத்தான் போயிருக்கான். அதுக்குள்ள அவனைக் கூப்பிட வேணாம். நான் இன்னும் ஒரு வாரம் இருப்பேன்' என்றாராம். சரியாக அடுத்த வாரம் அப்பா இறந்து போனார். வாழ்வில் எந்தத் தோல்வியிலும் நம்பிக்கை இழக்காத அந்த மனிதரைத்தான் சோர்வு ஏற்படும்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். என் குறித்த நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் மரணத் தருவாயிலாவது அவருக்குத் தர முடிந்ததை ஒரு பாக்கி யமாகக் கருதுகிறேன். ஒரு வாரம் கழித்து மொட்டைத் தலையுடன் மும்பைக்குச் சென்று அவரது நினைவுகளுடன் வேலையைத் தொடர்ந்தேன். 'காவேரி' முடிந்ததும் அடுத்த வேலைக்கு திருமுருகன் அழைத்தார். 'மெட்டி ஒலி' ஆரம்பம். 700-க்கும் அதிகமான எபிசோடுகள். இதற்கி டையே திருச்செல்வம் 'கோலங்கள்' ஆரம்பித்தார். அதற்கும் நான்தான் வசனம். இதோ இப்போது திருமுருகனின் 'நாதஸ்வரம்' தொடருக்கும் வசனம் எழுதுகிறேன். 2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை சன் டி.வி-யில் ஏதோ ஒரு ஸ்லாட்டில் நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

திருமுருகன் என்னை சினிமாவுக்கும் அழைத்துச் சென் றார். அவரது 'எம்டன் மகன்', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு', சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடிக் குழு', அவர் தற்போது இயக்கிக்கொண்டு இருக்கும் 'நான் மகான் அல்ல' என்று திரைத் துறையிலும் வேலை தொடர்கிறது. தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்த, உடல் நலமற்று மனச்சோர்வுற்று அமர்ந்திருந்த, அந்தச் சிறுவனை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். அவனை இத்தனை தூரம் அழைத்து வந்த அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!''
"நான் முத்துகிருஷ்ணன் ஆனது எப்படி?"
பாரதிதம்பி, படம் எம்.விஜயகுமார்

'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை'த் தமிழ் மொழிக்குக் கொண்டுவரும் நவீன

எழுத்துலகில் அ.முத்துகிருஷ்ணன் குறிப்பிடத் தகுந்தவர். 'குஜராத்: இனப் படுகொலை ஆவணம்' இவரது முக்கியப் பங்களிப்பு. 'ஒளிராத இந்தியா','மலத்தில் தோய்ந்த மானுடம்' மற்றும் பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுதியிருக்கும் முத்து கிருஷ்ணனுக்கு, கல்லூரிப் படிப்பு முடியும் வரை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

"அப்பாவின் தொழில் காரணமாக, நான் பிறந்த உடனேயே மதுரையில் இருந்து வட இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தோம். கோவா, ஹைதராபாத் எனப் பல ஊர்களைச் சுற்றிவிட்டு, நவிமும்பையில் குடியேறினோம். பள்ளிப் படிப்பு முழுக்க அங்குதான். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்றாலும்கூட, இந்திதான் பிரதானம். வீட்டைவிட்டு வெளியே வந்தால் எல்லோரும் இந்திதான் பேசு வார்கள். நான் படித்த பள்ளிக்கூடத்தில் இந்தியா வின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் உண்டு. இதனால், இயல் பாகவே மொழி மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.

என் அப்பாதான் நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். அதை ஒட்டி பொங்கல் விழா, ஆண்டு விழா, சினிமா திரையிடுதல் என ஏதோ ஒரு விழா ஏற்பாடுகள் நடக்கும். இதில் நானும் பங்கேற்பேன்.

அப்பாவின் தொழில் சார்ந்து ஏற்பட்ட பின்னடைவுகளால் எனது 13-வது வயதில் நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊரான மதுரை, மங்கல் ரேவு நோக்கி வந்தோம். எங்கள் கல்வித் தேவைகளுக்காக அருகில் இருந்த மதுரையில் வசித்தோம். அப்போது வரை எனக்கு தமிழ் மொழி பேச மட்டுமே தெரியும். அதுவும் வட்டார வழக்கு அறியாத ஒருவிதத் தட்டையான மொழி மட்டுமே பேசத் தெரியும். இதனால், மதுரையுடன் ஒட்டவே முடியவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியின் மனநிலையில்தான் பல வருடங்கள் இருந்தேன். சினிமா போஸ்டர், பேருந்து செல்லும் இடம் என எதையும் வாசிக்கத் தெரியாது. இந்தியை இரண்டாவது மொழிப் பாடமாக எடுத்து மெட்ரிக்குலேஷனை ஒரு வழியாக முடித்தேன். அதன் பின், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ.

அப்போது வீட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி. ஏறக்குறைய உறவினர்கள் அனைவருமே கைவிட்ட நிலையில், மதுரையில் நான் ஓர் அகதிபோல உணர்ந்தேன். நான் விரும்பிப் படித்த அறிவியல் கல்வியைத்தொடர இயலவில்லை. பெரும் மன உளைச்சலில் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்காகக் குட்டிக் குட்டியாகப் பல்வேறு வேலைகள் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாகச் சில காலம் ரயில்வேயில் கான்ட்ராக்ட் எடுத்து சிக்னலிங் பணிகளை மேற்கொண்டேன். அது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை. இந்தியாவின் பல உள்ளடங்கிய கிராமங்களுக்கும் பயணித்து, அங்கேயே தங்கி வேலை பார்த்ததில் இந்தியக் கிராமங்களின் உண்மை நிலை முகத்தில் அறைந்தது. ராமநாதபுரம் பக்கத்துக் கிராமத்துக்கும், மத்தியப்பிரதேசக் கிராமத்துக்கும் நிலத்தைத் தவிர, எந்த வேறுபாடும் இல்லை. பொருளாதாரம், சாதி எல்லாம் அப்படியே இருந்தன. இதைப்பற்றி நண்பர்களிடம் விவாதித்தபோது 'இதை எழுது' என்றார்கள். மொழியே தெரியாதபோது எப்படி எழுதுவது? என் அம்மா தனது 35 வயதுக்குப் பிறகு, தன் சொந்த அனுபவத்தில் தையல் கலையைக் கற்றுக்கொண்டு அதை ஒரு தொழிலாகச் செய்தார். எதையும் கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொண்டேன். அம்மாவின் உதவியோடு மெள்ள தமிழ் கற்றேன். சினிமா போஸ்டர், பத்திரிகைகளின் தலைப்பு வரிகள் எனப் படிக்க ஆரம்பித்தபோது மேலும் மேலும் ஆர்வம் வந்தது. பாம்பு சட்டையை உரிப்பதுபோல அந்நிய மனநிலை உருமாற்றம் அடைந்து, நான் இந்த ஊரின் ஆளாக என்னை உணரத் தொடங்கினேன்.

பொதுவாகவே, நம் சொந்தக் கிராமங்களில் இருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ, அந்த அளவுக்குச் சாதிய உணர்வு குறைகிறது. ஆனால், பலருக்கு இன்றும் சொந்த ஊருடனான உறவு என்பது சாதியை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது. தமிழ்நாட்டில் கால் பதித்த பின்தான் என் சாதி எது என்றே எனக்குத் தெரியும். இதன் பொருள், மற்ற மாநிலங்களில் சாதி இல்லை என்பதல்ல; ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைக் காட்டிலும் வட மாநிலங்களில்தான் சாதி வெறி அதிகம். ஆனால், நான் வசித்த நவி மும்பையின் வாழ்க்கை சாதியைக் கடந்ததாக இருந்தது. ஆனால், இங்கு சிறுவர்கள்கூட வயதில் மூத்த, முதிர்ந்த தலித்துகளைப் பெயர் சொல்லி அழைப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன். கோபமும் முரண்பாடுமாக இதுபற்றி என் அம்மாவுடன் விவாதம் செய்து விடை காண முயல்வேன். ரெட்டை டம்ளர், தனி சுடுகாடு, செருப்பு அணியத் தடை, குடி தண்ணீர் எடுக்கத் தடை, மலம் அள்ளுதல் என சாதியக் கொடூரங்களின் மொத்த பரிணாமங்களும் அறிந்தபோது, இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரங்களும் வேறு திசையில் பெரும் அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை உணர்த்தியது. மறுபுறம் விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாடச் செய்தியானது. இந்தச் சூழலில் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், சொந்த வீடு, கார் என ஊர் உலகமே கச்சிதமாகச் செய்வதை நான் வெறுத்தேன். எல்லோரும் தங்களைப்பற்றியே சிந்திக்கும் இந்த பாணி வாழ்க்கைகூட ஒரு சதியே.

நானும் என் நண்பர்களும் தினமும் மதுரையில் சந்தித்துப் பேசினோம். அவர்கள் என்னை எழுதத் சொன்னார்கள். முதலில் சில மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டேன். பின்னர், கட்டுரைகள் எழுதும் நம்பிக்கை ஏற்பட்டது. அப்புறம் வரிசையாகப் பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதத் தொடங்கினேன். என் எழுத்து இந்த சமூகத்தின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. வானத்துக் குக் கீழே இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் தமிழ் நிலத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும், இந்த பூமியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதுமே எனது வாழ்நாள் பணியாக இருக்கும்!"


"நான் அக்னீஸ்வர் ஆனது எப்படி?"
எஸ்.கலீல்ராஜா,படம் : என்.விவேக்


க்னீஸ்வர்... ஆசிய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நீச்சல் தமிழன். மாநில

அளவில் 300 பதக்கங்கள், தேசிய அளவில் 80 பதக்கங்கள், சர்வதேச அளவில் 30 பதக்கங்கள், மாநில மற்றும் தேசிய அளவில் 23 புதிய சாதனைகள் என அக்னீஸ்வரின் சாதனைப் பட்டியல் எண்களால் நிறைந்தது.

"என் அப்பாவுக்குச் சும்மா இருப்பது பிடிக்காது. ஒன்று, ஏதாவது ஒரு வேலை செய்வார். அல்லது ஏதாவது புது விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்வார். அப்படியே நானும் வளர வேண்டும் என்று விரும்பினார். எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தை தண்ணீரில் விளையாடினால் திட்டுவார்கள். ஆனால், என் அப்பா என்னை நீச்சல் கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார். அப்போது எனக்கு வயது மூன்று!

எந்தக் குழந்தைக்குத்தான் தண்ணீரில் விளையாடுவது பிடிக்காது? அம்மா என்னை எழுப்பிவிடுவதற்குள் நானே முந்திக்கொண்டு எழுந்து நீச்சல் பயிற்சிக்குக் கிளம்புவேன். அப்போது அது ஜாலியான விஷயமாக இருந்தது. மூணு வருஷம் சும்மா நீச்சல் பழகிட்டே இருந்தேன். ஒருநாள் என் அப்பா கூப்பிட்டு 'நீ கத்துக்கிட்ட விஷயத்தை, செயல்படுத்திப் பார். அப்போதான் அந்தத் துறையில் எந்த இடத்தில் இருக்கிறாய் எனப் புரியும்'னு சொன்னார். அப்பாகிட்டே நல்ல பேர் வாங்கலைன்னா நீச்சலுக்கு அனுப்ப மாட்டாரோன்னு பயமா இருந்தது. கொஞ்சம் சின்சியரா பயிற்சி எடுத்துக்கிட்டு போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். மூணாவது வயதில் இருந்தே பயிற்சி எடுத்ததால், ஆறாவது வயதிலேயே மாவட்ட அளவில் பரிசுகள் வாங்க ஆரம்பிச்சிட்டேன். அப்பா முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும்தான் நிம்மதியா இருந்தது.

ஆனால், உண்மையில் அப்போ நீச்சல்பத்தி எந்தக் கனவும் எனக்கு இல்லை. கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக், கூடைப் பந்துன்னு நிறைய விளையாட்டுக்கள் பழகிட்டு இருந்தேன். அதில் ஏதாவது ஒண்ணைத் தேர்ந்தெடுத்து அதில் ப்ளேயர் ஆகணும்னு திட்டம். ஏன்னா, எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. போராட்டம், கோபம், துணிச்சல், நம்பிக்கை, பெருமிதம், வருத்தம்னு கலவையான உணர்வுகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் வேற எதிலுமே கிடைக்காது. விளையாட்டில் மட்டும்தான் கிடைக்கும்.

சில நாடுகளில் மட்டும்தான் கிரிக்கெட், பேட்மிட்டன், ஜிம்னாஸ்டிக்கை விளையாடுறாங்க. 10 பேரில் இருந்து ஒருத்தர் சாம்பியனா வர்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. 100 பேரில் இருந்து ஒருத்தன் சாம்பியனா வர்றதுதான் நிஜமான வெற்றி. கால்பந்து, நீச்சல், ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களைக் கிட்டத்தட்ட 150 நாட்டு மக்கள் விளையாடுறாங்க. பெரிய சவால் இருந்தா, வாழ்க்கை த்ரில்லிங்கா இருக்கும். சரி... உலகத்தோடு மோதுவோம்னு முடிவு பண்ணினேன். எனக்குத் தெரிஞ்ச நீச்சலை, புரொஃபஷனலா, புது லட்சியத்தோடு கத்துக்க ஆரம்பிச்சேன். அப்போ என் வயசு 12.

நீச்சல் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச் சேன். நிறைய நேரமும், உழைப்பும், முயற்சியும் தேவைப்பட்டது. ஊர் சுத்துறதை நிறுத்தினேன். 'ஜுராஸிக் பார்க்'தான் நான் கடைசியா பார்த்த படம். அதற்கடுத்து படம் பார்ப்பதையே நிறுத்திட்டேன். ஒரு கட்டத்தில், நேரம் இல்லாமல் ஸ்கூல் போறதை நிறுத்திட்டேன். ஃபாரின்ல ஹோம் ஸ்கூல்னு ஒண்ணு உண்டு. வீட்டில் இருந்தபடியே படிச்சு பரீட்சை எழுதலாம். இந்த முறையை சென்னையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான். பெங்களூரு, அமெரிக்கா போய் பயிற்சி எடுத்தேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்திருச்சு நீச்சல் அடிக்கணும். தண்ணீர் கிட்டத்தட்ட ஐஸ் மாதிரி இருக்கும். அதில் தொடர்ந்து மூணு மணி நேரம் நீந்தணும். உடம்பில் ரத்தம் உறைஞ்சுபோற மாதிரி இருக்கும். கை, கால் விறைச்சிரும்.

நீந்தவே முடியாது. அப்புறம் எங்கே வேகமா நீந்துறது? பயிற்சி எடுக்கும்போது ரொம்பக் கஷ்டப்பட்டேன். நான் சிரமப்படுறதைப் பார்த்துட்டு, 'ஒரு வெற்றி உன் அடையாளத்தை மாற்றும். எல்லாக் கஷ்டங்களையும் சோகங்களையும் துடைக்கும். அதனாலதான் அதைப் பிடிக்க அவ்வளவு பேரும் ஓடிட்டே இருக்காங்க. வெற்றியும் பிடிபடாம ஓடிட்டே இருக்கு. நீ உழைச்சுக்கிட்டே இரு. வெற்றி ஒருநாள் உன்னைத் தேடி வரும்'னு என் கோச் சொன்னார். அது எனக்கு 10 பாட்டில் டானிக் குடிச்ச மாதிரி இருந்தது. அப்புறம் குளிரோ, வெயிலோ, புயலோ, மழையோ, விடாமல் நீச்சல் பழகினேன்.

14 வயசில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அந்த வயதில் உலக சாம்பியன்ஷிப் கலந்துக்கிட்ட முதல் இந்தியன் நான்தான். 2007-ம் வருஷம் ஜகாத்தாவில் ஆசிய சாம்பியன்ஷிப். போட்டிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி பயிற்சியில் இருந்தேன். நீந்திக்கிட்டே வந்து எல்லைக்கோட்டைத் தொடும்போது விரல் ஒண்ணு உடைஞ்சிருச்சு. வலி தாங்க முடியலை. போட்டியில் இருந்து விலகிரலாம்னு முடிவு பண்ணினேன். 'சச்சின், டிராவிட்லாம் காயம்பட்ட பிறகும்கூடத் தொடர்ந்து விளையாடி செஞ்சுரி அடிக்குறாங்க. அவங்க சாதாரண மனுஷங்கதான். அவங்களோட தன்னம்பிக்கைதான் அவங்களைப் பெரிய பேட்ஸ்மேனா உருமாத்தியது. நீயும் நம்பிக்கையோடு கலந்துக்கோ. நீதான் ஆசிய சாம்பியன்'னு அப்பா ரெண்டு வரியில் அட்வைஸ் பண்ணிட்டுக் கிளம்பிட்டார். உடைஞ்ச விரலைச் சுத்தி டேப் ஒட்டிட்டு போட்டியில் கலந்துக்கிட்டேன். அந்த வலியை மனசுக்குள் கொண்டுவந்தேன். மூச்சை இழுத்துப் பிடிச்சு நீந்தினேன். எல்லைக் கோட்டைத் தொட்டு நிமிர்ந்து பார்த்தால் நான்தான் ஆசிய சாம்பியன்.

தமிழ்நாட்டில் இருந்து ஆசிய சாம்பியன் ஆன முதல் தமிழன் நான். இன்று வரை இது முறியடிக்கப்படாத ஒரு சாதனை. பல நாடுகளுக்குப் பயணம் செஞ்சு பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்சதும், எம்.பி.பி.எஸ்., ஸீட் கிடைச்சது. எப்படியும் காலேஜுக்குக் கட் அடிச்சுட்டு டிரெய்னிங் எடுக்கப் போகணும். மத்தவங்க உயிரைக் காப்பாத்துற மருத்து வப் படிப்பில் அலட்சியமா இருக்க முடியாது... இருக்க வும் கூடாது. அதனால், ஸீட் வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு இன்ஜினீயரிங் சேர்ந்துட்டேன்.

இப்போ நான் ஜூனியர் லெவலில் இருந்து சீனியர் லெவலுக்கு வந்திருக்கேன். இனிமே 25, 26 வயசு உள்ள சர்வதேச நீச்சல் வீரர்களோடு போட்டி போடணும். அதுக்கு நான் தயாராகிறதுக்கே ரெண்டு வருஷம் ஆகிரும். சவால் கூடி இருக்கிறதால பயிற்சிகளும் கூடியிருக்கும். ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுக்கக் கிளம்பிட்டு இருக்கேன். அடுத்ததா உலக சாம்பியன்தான் இலக்கு!"


"நான் சுசித்ரா ஆனது எப்படி?"
பாரதி தம்பி


காபியில் கலர்ஃபுல் ஐஸ்கிரீமைக் கலந்ததுபோல ஜில் குரல். காலையில் இவர் குரல் கேட்கக் காத்திருக்கிறார்கள் பண்பலை நேயர்கள். திரை இசையில் சுசித்ரா பாடும் ஒவ்வொரு பாட்டும் செம ஹாட். இந்த கேரளத்து சுச்சி தமிழகத்து 'மச்சி'யாக மாறிய கதை தெரியுமா?

"ஐயோ! நான் கேரளத்து சேச்சி இல்லைங்க. சொந்த ஊர், தமிழ்நாடுதான். வேலைக்காக அப்பா அங்கே போய், அப்படியே கேரளாவில் செட்டில் ஆகிட்டாங்க. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் எர்ணாகுளம். கேந்திரிய வித்யாலயா ஸ்கூலில் படிச்சேன். ஸ்கூலில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் கலந்துக்குவேன். ஆனா, முறைப்படி சங்கீதம் படிக்கலை. எங்களோடது ரொம்ப ஆச்சாரமான குடும்பம். சினிமாவுக்குப் போறது, சினிமா பாடல்கள் கேட்குறது... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எர்ணாகுளத்திலேயே காலேஜ். சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசை. காலேஜ் முடிக்கப்போற சமயத்தில் நாங்க சென்னைக்கு மாறினோம். நான் கோயம்புத்தூரில் எம்.பி.ஏ., படிக்கப் போனேன். முதல்முதலா, வீட்டைவிட்டுப் பிரிஞ்சு போனேன். அதுதான் ஆரம்பம்!

எனக்கு எப்பவும் துறுதுறுன்னு எதையாச்சும் பண்ணிட்டே இருக்கணும். பொழுதுபோக்குன்னு தனியா ஒண்ணைச் செய்றதைவிட, செய்ற வேலையையே ரசிச்சுச் செய்வதுதான் என் பழக்கம். எம்.பி.ஏ., முடிச்சு ரிசல்ட் வந்த அடுத்த நாளே, சென்னையில் ஒரு விளம்பரக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். காலையில் 8 மணிக்கு

ஆபீஸ் போனா, வீடு திரும்ப நைட் 9 மணி ஆகும். என் வயசுல எல்லோரும் ஜாலியா ஊரைச் சுத்திட்டு இருக்கும்போது, நான் பயங்கர பரபரப்பா வேலை பார்த்துட்டு இருப்பேன். அப்போதான் இன்டர்நெட் பூம். நான் 'சிஃபி'யில் வேலைக்குச் சேர்ந்தேன். எப்பவும் என் அடி மனதில் இருந்த எழுத்து ஆர்வத்துக்கு 'சிஃபி' உதவியா இருந்தது. ஆனா, அப்போ வரைக்கும் என்னோட கேரியர்பற்றி தெளிவே இல்லாமல் இருந்தேன்.

அப்போதான் 'ரேடியோ மிர்ச்சி' ஆரம்பிச்சாங்க. 'சிஃபி'யில் வேலை பார்த்து அங்கே போயிருந்த சரத் சந்திரா என்னை அழைத்தார். 'எனக்கு ரேடியோபற்றி எதுவுமே தெரியாதே'ன்னு சொன்னேன். 'உன் வாய்ஸ் ரேடியோவுக்குப் பொருத்தமா இருக்கும்'னார். அதுதான் என் வாழ்க்கையின் முதல் முக்கியத் திருப்புமுனை.

உங்களின் தனித்தன்மை என்னன்னு உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். யாராச்சும், அதைக் கண்டுபிடிச்சுச் சொல்லும்போது அதைக் கப்புனு பிடிச்சுக்குங்க. ரேடியோ மிர்ச்சியில் இரவு 11 மணிக்கு காதல் தொடர்பான ஷோ-தான் நான் முதலில் செய்த நிகழ்ச்சி. வீட்டில், நண்பர்களிடம், எப்படிப் பேசுவேனோ, அதேபோல்தான் அங்கும் பேசினேன். எதிர்பாராத திருப்பமா, அங்கே மார்னிங் ஷோ பண்ணிட்டு இருந்தவர் வேலையை விட்டுட்டார். 'நீங்களே செய்யுங்க'ன்னாங்க. அது அடுத்த பம்பர். நான்கு மணி நேர லைவ் புரொகிராம்.

எதிர்பார்க்கும் நேரத்தில் மட்டுமே வருவதற்கு, வாய்ப்பு ஒண்ணும் நம்ம வீட்டு நாய்க்குட்டி இல்லை. ஜன்னல் வழியா மின்னல் மாதிரி வரும். பிக்கப் பண்ணிக்கணும். ரேடியோவுக்கு, அதுவும் வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில், நான்கு மணி நேர லைவ் என் கைக்கு வந்தது. தினம் ஒரு தலைப்பில், நேயர்களிடமும், சினிமா, அரசியல் பிரபலங்களிடமும் பேசுவேன். நிகழ்ச்சி பெரிய ஹிட். என் குரல் மக்களுக்குப் பிடிச்சிருக்குன்னு உணரவே சில மாசங்கள் ஆச்சு. நம்பவே முடியலை... நான் ரேடியோவுக்கு வந்து எட்டு வருஷம் ஆச்சு. மிர்ச்சிக்குப் பிறகு, இப்போ ரேடியோ ஒன்!

ரேடியோவில் என் குரல் கேட்ட ஹாரிஸ் ஜெயராஜ், 'காக்க காக்க' படத்தில் 'ஓமஹ சீயா' என்ற மியூஸிக் பிட்டைப் பாடவெச்சார். அது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஹிட் ஆச்சு. அடுத்தது பரத்வாஜ் இசையில் ஜே.ஜே. படத்தில் 'மே மாசம்' பாட்டு. அதுவும் செம ஹிட். இதோ... இப்போ, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்னு 200 பாட்டுக்கும் மேல பாடிட்டேன். இதற்கு இடையில் மாளவிகா, தமன்னா, ஸ்ரேயா வரை பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுறேன்.

என் மியூஸிக் கேரியரில் பெரிய திருப்பம், இசை அமைப்பாளர் மணிசர்மாவைச் சந்திச்சது. அவர் இசை யில் நான் பாடிய முதல் பாட்டு 'டோலு டோலுதான் அடிக்கிறா'. அவர் ஸ்டுடியோதான் என் இசைப் பள்ளிக்கூடம். யுவன், விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீ பிரசாத், ஜி.வி.பிரகாஷ்னு தொடரும் இசைப் பயணத்தில் என் குரல் எப்படிப்பட்ட பாடல்களுக்குப் பொருந்தும் என்பதில் கவனமாக இருக்கேன். ஒரு நிலையை அடைஞ்ச பிறகு, அந்த வெற்றியை நிலைநிறுத்திக்க, நம்ம பலம் என்ன, பலவீனம் என்னன்னு தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கணும்.

கிளாஸிக்கல், கர்நாடிக் கிளாஸ் போயிட்டு இருக்கேன். அப்டேட் பண்ணிட்டே இருக்கணும்.

நாலு வருஷங்களுக்கு முன்பு கார்த்திக்குமாருடன் கல்யாணம். அவர் ஏற்கெனவே எங்க குடும்ப நண்பர். 'லவ் லெட்டர்ஸ்'னு ஒரு நாடகத்தில் நடிக்க என்னைக் கூப்பிட்டார். லவ் வந்தது. இப்போ, என் நண்பன், புருஷன். இசை, ரேடியோ தாண்டி எழுதுவது எனக்குப் பிடிச்ச விஷயம். நான் ஆங்கிலத்தில் எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதைகள் 'உருண்டோடிய குறுமிளகு'ன்னு தமிழிலும் வந்திருக்கு. காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற அந்தக் கதைகள் யுனிசெஃப் மூலமா ஏழு இந்திய மொழிகளில் வந்திருக்கு. 'சின்னா அண்ட் முத்து'ன்னு இன்னொரு சிறுகதைத் தொகுப்பு லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் குழந்தைகளுக்கான பாடமா இருக்கு.

இன்னிக்கு இளைஞர்கள், ஃபாஸ்ட்ஃபுட் சாப்பாடு மாதிரி வேகமான வெற்றியை எதிர்பார்க்கிறாங்க. 25 வயசுக்குள் பணம், புகழ் எல்லாம் சம்பாதிச்சுடணும்னு நினைக்கிறாங்க.

வயசுங்கிறது சும்மா நம்பர்தான். நான் காலேஜ் முடிச்சு, ரெண்டு வேலைகள் பார்த்து, அதுக்கு அப்புறம்தான் சரியான துறைக்கே வந்தேன். நிதானமான வெற்றிதான் நிக்கும் மச்சி!"


"நான் சமுத்திரக்கனி ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன், படம்:வீ.நாகமணி

சின்னத் திரையில் அழுத்த முத்திரை... 'நாடோடிகள்' படம் மூலம் வெள்ளித் திரையில்

அதிரடி முத்திரை... சமுத்திரக் கனியை சந்தியுங்கள்!

"விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் கிராமம் எனக்கு. விவசாயக் குடும்பம். எட்டாவது படிக்கும் வரை சினிமா பார்ப்பது குற்றம், அதைப் பத்திப் பேசுறது அதைவிடத் தப்பு என இருந்த சூழல். அப்ப நாங்க குரூப் ஸ்டடின்னு கிளம்புவோம். ஒரு சமயம், என்னதான் இருக்கும்னு ராத்திரி 'அலைகள் ஓய்வதில்லை' படம் பார்த்தேன். அவ்வளவுதான். அநேகமாக அடுத்து தியேட்டருக்கு வருகிற எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

15 வயதில் அப்பா பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குத் தெரியாமல், சென்னைக்கு பஸ் ஏறினேன். எங்கே இறங்கணும், எப்படிப் போகணும், யாரைப் பார்க்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை. ஒரு டைரியில் டி.ராஜேந்தர், பாக்யராஜ் முகவரிகள் மட்டும் இருந்தன. சென்னையில் தாம்பரம் நுழைந்ததும் 'எங்கே இறங்குறீங்க'ன்னு கண்டக்டர் கேட்டுக்கிட்டே இருந் தார். சென்னையில் நான் எதிர்கொண்ட முதல் கேள்விக்கே எனக்குப் பதில் தெரியலை.

மவுன்ட் ரோட்டில் கடைசி ஆளாக என்னை இறக்கிவிட்டார்கள். ஜெமினி பாலத்தின் அடியில் இருந்த நீண்ட இடைவெளியில் படுத்து உறங்கினேன். நல்ல உறக்கத்தில் போலீஸ் ஏட்டின் கைத்தடி என்னை உலுக்கியது.'சினி மாவில் நடிக்க வந்தேன். இங்கே இறக்கிவிட்டுட்டாங்க. தூங்குறேன்'னு சொன்னேன். 'இங்கேலாம் தூங்கக் கூடாது'ன்னு சொல்லி என்னை சைக்கிள்ல உக்காரவெச்சு அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனார். காவல் நிலையத்தின் தரையில்பேப் பர் விரிச்சு சென்னையில் என் முதல்நாள் இரவுத் தூக்கம் கழிந்தது.

மறுநாள் டி.ராஜேந்தர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்க்கவே முடியவில்லை. பாக்யராஜ் சார் வீட்டை நெருங்கவே முடியவில்லை. கையில் இருந்த பணம் கரைஞ்சுபோச்சு. சரி, வீட்டுக்குப் போய் காசைத் தேத்திட்டு மறுபடியும் வருவோம்னு நினைச் சுட்டு மிச்சம் இருந்த 20 ரூபாய்க்கு எதுவரை பஸ் போகும்னு கேட்டேன். விழுப்புரம் வரைன்னு சொன் னாங்க. அப்போ நான் நின்னுட்டு இருந்த இடம் எஸ்.எல்.என். ஹோட்டல். 'எனக்கு ஊருக்குப் போக இன்னும் 25 ரூபாய் வேணும். அவ்வளவு காசு சம் பாதிக்கணும். ஏதாவது வேலை கொடுங்க'ன்னு கேட்டேன். '25 ரூபா இப்பவே தர்றேன். ஊருக்குப் போ'ன்னு முதலாளி சொன்னார். ஆனா, நான் நாலு நாள் வேலை பார்த்துட்டுத்தான் காசு வாங்குவேன்னு சொல்லி வேலை பார்த்தேன்.

ஊருக்குத் திரும்பினேன். வீடு அமளிதுமளியா இருக்கு. போலீஸுக்குத் தகவல் சொல்ல, தெரிந்த வீட்டுக்கு எல்லாம் போயி அலசிக் கண் சிவந்து, அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. போனால் கட்டிப்பிடிச்சிக் கதறி அழறாங்க. கொஞ்ச காலம் அமைதியா இருந்தேன். ப்ளஸ் டூ முடிச்சேன். அப்புறம் அம்மாகிட்டேயே 1,000 ரூபாய் வாங்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு அலைஞ்சேன். ஒரு இயக்குநர், 'உங்க ஊர்ல முகம் பார்க்கிற கண்ணாடியே விக்காதா?ன்னு கேட்டார். கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டி.வி-யில் பரபரன்னு இருந்த டைரக்டர் சுந்தர் கே.விஜயனைப் பார்த்தேன். 'நீ படிப்பை முடிச்சுட்டு வா. பார்க்கலாம்'னு நம்பிக்கை கொடுத்து அனுப்பினார். ஊருக்கு வந்தேன். பி.எஸ்ஸி., கணிதம் படிச்சேன். அம்மா ஆசைக்குத் தலை வணங்கிட்டேன். இதுக்கு இடையில் என் அப்பா இறந்துட்டார்.

இனிமேல் சினிமாதான்னு திட்டவட்டமா முடிவு செய்துட்டு மறுபடி சென்னைப் படையெடுப்பு. இப்பக் கொஞ்சம் சுலபமாக இருந்தது. பக்குவம் பிடிபட்டு இருந்தது. நண்பர்கள் கிடைச்சாங்க. நகரத்தின் சாமர்த்தியம் புரிந்தது. கொஞ்சம் நகரத்தோட பழகும் வித்தை தெரிந்தது. சுந்தர் கே.விஜயன் 12 சீரியல்களுக்கு மேல் பரபரப்பாக இயங்கினார். அவருக்குத் துணையாக நான் இருந்தேன். நேரம் காலம் இல்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்தேன். 'டைரக்ஷனுக்கு வா'ன்னு சுந்தர் சார் சொன்னார். அதுவரைதள்ளி வெச்சிருந்த நடிப்பு தாகத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சேன்.

கே.பாலசந்தர் சார் கூப் பிட்டார். அவரோடு படங்களில், சீரியல்களில் இறங்கினேன். அவரோட மலைச்சுப்போகிற அனுபவம் எனக்கும் கை கொடுத்தது. அப்புறம்தான் எஸ்.பி.பி. சரண் 'உனக்குப் படம் தர்றேன் வா'ன்னு சொல்லி 'உன்னைச் சரண் அடைந்தேன்' படம் கொடுத்தார். படம் வெளியாகி நல்ல மரியாதை கிடைச்சது. அந்தப் படம் பார்த்துட்டு ஞானவேல் சார் ஒரு பெரிய தொகை கொடுத்து கதை, திரைக்கதை இருக்கு. டைரக்ஷன் பண்ணுன்னு சொன்னார். விஜயகாந்த் நடிச்ச 'நெறஞ்ச மனசு'. மனசை செலுத்தித்தான் டைரக்ஷன் பண்ணினேன். ஆனாலும் வெற்றி இல்லை. மறுபடியும் 'அண்ணி', 'செல்வி'ன்னு சின்னத்திரை வேட்டை.

கையில் 'நாடோடிகள்' திரைக்கதை இருந்தது. நான் அதைச் சொல்லாத நடிகர், தயாரிப்பாளர் கிடையாது. நாலு பேர் சப் ஜெக்ட்டான்னு நடிகர்கள் பின்வாங்கினாங்க. அவங்களைப் பார்த்துட்டு தயாரிப்பாளர்களும்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் சசிக்குமார் போன். ' 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படம். உங்களுக்கு ஒரு கேரக்டர். முடி வளர்க்க ணும். சம்மதமா?'ன்னு கேட்டார். அடடா, இத்தனை வருஷத்துக்குப் பின்னாடி என்னை நடிக்கக் கூப்பிடுறார். 'சரி நண்பா'ன்னு சொல்லி கதையே கேட்காமல், நடிச்சேன். நல்ல பெயர்.அவர்கிட்டேயே 'நாடோடிகள்' சொன்னேன். 'நிச்சயம் பண்ணலாம். ஜனங்க என்னை ஏத்துக்கிட்டா, நான் நடிக்கிறேன்... ப்ராமிஸ்'னு சொன்னார். எனக்கான கதவைத் திறந்து பெரிய வெளிச்சம் காட்டினார். படம் அபாரமான வெற்றி. இன்று அவரது இயக்கத்தில் அனல் தெறிக்கிற பெரிய கேரக்டர். கேள்விப்பட்டு மோகன்லால் அவர் படத்துக்குக் கூப்பிடுகிறார். வெற்றிமாறன் கதை சொல்லிட்டு, 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'கிறார். எல்லாம் சரி. இதற்கெல்லாம் அடிப்படை...?

நான் எப்பவும் என் நம்பிக்கையைக் கைவிட்டது இல்லை. எத்தனை தடவை ஊருக்குப் போய் வந்தாலும் என் கனவு சென்னையில்தான் இருந்தது. என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிற, இன்னும் கிராமத்தைவிட்டு விலகாத அம்மா கமலா எனக்கு ஆத்ம பலம். மாமா எப்படியும் பெரிய டைரக்டர் ஆவார்னு நம்பி எனக்குக் கழுத்தை நீட்டிய அக்கா பொண்ணு ஜெயலட்சுமி இல்லேன்னா... நான் இல்லை.

போதனை பண்ணுகிற அளவுக்கு நான் சாதிக்கலை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒண்ணும் கிடைக்கலைன்னு சொல்லிட்டு திரும்பிவிடக் கூடாது. உங்க ளுக்கான மகுடம் அடுத்த திருப்பத்திலும் காத்திருக்கலாம். ஓ.கேயா!


"நான் பானு ஆனது எப்படி?"
இர.ப்ரீத்தி

'பானு'... பெயரைக் கேட்டாலே 'சும்மா அதிரும்' அளவுக்குத் திரை உலகில் கொடி

கட்டிப் பறக்கும் மேக்கப் துறையின் முதல் பெண் சாதனையாளர். 'சிவாஜி', 'எந்திரன்' என்று ரஜினியின் கலர் மாற்றி இளமை ஏற்றியவர்.

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே சிங்காரச் சென்னைதான். ஸ்கூல் படிக்கும்போது டீச்சர், 'எதிர்காலத்தில் நீங்க என்னவாக ஆசைப்படுறீங்க?'ன்னு கேட்கும்போது, 'டாக்டர்', 'இன்ஜினீயர்'னு பலரும் என்னன்னவோ சொல்லுவாங்க. அப்போ எனக்கு மட்டும் என்ன சொல்றதுன்னே தெரியாது. அந்த அளவுக்கு, சின்ன வயதில் என் எதிர் காலத்தைப்பற்றி எந்த ஒரு கனவும் இல்லாமல் தான் இருந்தேன்.

பி.காம். படிச்சு முடிச்சு வெளியே வந்தபோது, கல்லூரி வாழ்க்கை எனக்கு நிறையக் கற்றுத் தந்திருந்தது.

சொந்த வேலையா அமெரிக்கா போகும் வாய்ப்பு. அந்தப் பயணம்தான் என் வாழ்க்கைப் பாதையையே தீர்மானிச்சது. என் தோழிகள் சிலர் மூலமா ஹாலிவுட் மேக்கப் ஜாம்பவான் பாப் கேலியின் அறிமுகம் கிடைச்சது. மேக்கப் துறையின் பல நுணுக்கங்கள் கத்துக்கிட்டு, அமெரிக்காவின் பிரபல மேடை நாடகங்களுக்கு மேக்கப் வுமனாகப் பணியாற்றினேன். தூக்கத்தில்கூட, மறு நாளுக்கான மேக்கப் சிந்தனைகள்தான் மனசுக்குள் படம் படமா ஓடும். அவ்வளவு ரசிச்சு, லயிச்சு மேக்கப் வேலையை ஒரு கலையா செஞ்சேன். கல்யாண ரிசப்ஷன் மேக்கப்புக்கும், ஒரு பார்ட்டிக்கு ஜாலியா போற மேக்கப்புக்கும், ஒரு கேரக்டரா ஒருவரை மாத்தும் மேக்கப்புக்கும் இருக்கிற வித்தியாசங்கள் புரிய ஆரம்பிச்சது. ஜாலியா ஒரு பொழுதுபோக்குக் காகக் கத்துக்கிட்ட விஷயம், எனக்குள் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி, அதையே என் வாழ்க்கையாக மாற்றியது!

மேடை நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்திய என்னை, என் உறவினரான பி.சி.ஸ்ரீராம், தமிழ்நாட்டின் விளம்பர உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். 1990-ம் வருடம் வெளிவந்த 'நிவாரன் 90'ல் வேலை பார்த்தேன். என் முதல் விளம்பரம். என்னதான் உறவுப் பெண்ணாக இருந்தாலும், வேலை சரியில்லை என்றால், கண்டபடி திட்டி விடுவார் பி.சி. முதல் ஷூட்டிங் என்பதால், லைட்டிங்குக்கு ஏத்த மேக்கப், டிரெஸ் கலர்னு அந்த சூட்சுமங்கள் பழகாததால், பலமா கிடைச்சது டோஸ். ஒருவழியா ஷூட்டிங் முடிஞ்சதும், 'போதும்டா சாமி... இந்த வேலையை விட்டுரலாம்'னு வீட்லயே உக்கார்ந் துட்டேன். ஆனா, அந்த விளம்பரம் செம ஹிட். அடுத்தடுத்து நிறைய விளம்பர வாய்ப்பு கள் வந்துச்சு. 'நமக்கு எதுக்கு வம்பு'ன்னு கண்டுக்காம இருந்தேன். பி.சி சார்தான், 'வேலையில் இதெல்லாம் சகஜம்'னு என்னைத் தேத்தி தொடர்ந்து வேலை கொடுத்தார்.

விமர்சனங்களை ஏத்துக்கப் பழகணும். அது நம் தவறுகளை நாம் திருத்திக்கக் கிடைக்கிற வாய்ப்புன்னு கத்துக்கிட்டேன். ப்ரியதர்ஷன் சார் மூலமா மலையாள சினிமாவுக்குள் நுழைந்தேன். மேக்கப்னா பலரும் நினைக்கிற மாதிரி ரோஸ் பவுடர் போடும் வேலை மட்டுமே இல்லை. ஷூட்டிங்குக்கு முன் மேக்கப் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட்னு நிறைய வேலைகள் இருக்கும். அதில் எல்லாம் நினைச்சபடி திருப்தியா அமைஞ்சாதான், படப்பிடிப்பே தொடங்கும்!

கோக், பெப்ஸி, ப்ரூ, ஹார்லிக்ஸ், கேட்பரீஸ்னு பல தேசிய அளவிலான விளம்பரங்களில் வேலை பார்க்க வாய்ப்பு வந்தது. சச்சின், ராகுல் டிராவிட்டுக்கெல்லாம் மேக்கப் பண்ணினேன். அப்போதான் ஒரு பெரிய பிரச்னை. மேக்கப் யூனியனில் பெண்கள் உறுப்பினரா சேர முடியாது. அதனால், தேசிய அளவில் வேலை பார்க்க எனக்குத் தடை விதிச்சாங்க. நியாயம் கேட்டு, டெல்லியில் உள்ள அகில இந்திய மகளிர் அமைப்புக்குச் சென்றேன். அந்த அமைப்பின் தலைவர் நிர்மலா எனக்காக சென்னை வந்து, தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் முறையிட்டார். மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரியதர்ஷன்னு எல்லோரும் எனக்காகப் போராடினாங்க. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, வெற்றிகரமாக யூனியனில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டேன். பிறகு தொடர்ந்து விளம்பரங்களில் பணி புரியும்போதுதான் இயக்குநர் ஜீவா அறிமுகமானார். அந்த நட்பில் கிடைச்சதுதான் '12 பி' பட வாய்ப்பு. இப்போ வரை என் மேக்கப் சாதனங்களை ஜோதிகாவுக்குத்தான் அதிகமாப் பயன்படுத்தி இருக்கேன்.

அதற்கடுத்து தமிழில் ஹீரோக்களின் கேரக்டருக்குப் பொருத்தமான கெட்டப்களை அமைச்சுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. விக்ரமின் 'அந்நியன்' லுக்குக்காக நான் நிறையக் கஷ்டப்பட்டேன். ஷங்கர் சார், என்னிடம் அந்த கேரக்டர்களின் முக்கியத்துவத்தையும், சூழ்நிலையையும் சொன்னார். அதை வைத்து உருவானதுதான் 'அம்பி', 'அந்நியன்', 'ரெமோ'க்கான லுக்ஸ். அது எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும், இஷ்டப்பட்டு செஞ்சேன். அதுக்குக் கிடைச்ச அவார்டுதான், 'சிவாஜி'யில் ரஜினி சாருக்கு மேக்கப் வாய்ப்பு. 'என்னை காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரி ஆக்கிட்டீங்க'ன்னு பாராட்டினார் ரஜினி சார். இப்போ 'எந்திரன்' படத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது. 'எப்படி ரஜினி சார் மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட்டுக்கு பயப்படாம வேலை செய்றே?'ன்னு நண்பர்கள் கேட்பாங்க. என்னைப் பொறுத்தவரை... வேலைன்னு வந்துட்டா, அவங்க யாரா இருந்தாலும்... என் தொழிலில் அனைவரும் சமம். அமெரிக்காவிலேயே ஆரம்பிச்ச பழக்கம் அது... நமக்குப் பிடிச்ச வேலையை, ரசிச்சு, லயிச்சு செய்ய ஆரம்பிச்சா... எல்லா உயரங்களையும் எட்டிப் பிடிக்கலாம்!"


"நான் எஸ்.ஆர்.கதிர் ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன்,படம்: கே.ராஜசேகரன்

'கற்றது தமிழ்' ஒளிப்பதிவு அளித்தது ஆச்சர்ய அறிமுகம். 'சுப்ரமணியபுரம்' கொடுத்தது

மாஸ்டர் மைண்ட் அந்தஸ்து! எஸ்.ஆர்.கதிர். வெவ்வேறு தளம் கொண்ட படங்களுக்கு ஏற்ப வித்தை வியூகம் வகுத்தவர்.

"கோவையில் தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, நான் மிமிக்ரியில் ரொம்பப் பிரபலம். எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, நம்பியார் குரல்களில் நான் பேசினால், கைதட்டல் கூரையைப் பிளக்கும். அந்தக் கைதட்டல் சத்தம் எனக்குப் பிடிச்சது. 'இன்னும் வேணும்... வேணும்'னு மனசுக்குப்பட்டது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை. படிப்பில் சூரப்புலியும் இல்லை. ஆனால், எப்படியாவது கவனம் கவரும் ஆசை மட்டும் உள்ளுக்குள் அலைஅடிச்சுட்டே இருந்தது. அதுக்கு என்ன செய்யணும்னு எனக்குப் புரியலை. மூணு அக்காக்களுக்குப் பிறகு பிறந்தவன் நான். அம்மா, அக்காக்கள் சகிதம் சனிக்கிழமை சினிமாவுக்குப் போவோம். எனக்கு எப்படியாவது சினிமா பார்த்தே ஆகணும். அது எந்த சினிமாவா இருந்தாலும் சரி. பின்னாளில் அக்காக்கள் ஒவ்வொருத்தராக வளர்ந்து வர, நான் மட்டும் சினிமாவுக்குப் போனேன். நல்ல சினிமான்னா கிளாஸ் கட் பண்ணிட்டுக்கூடப் போவேன். 'என்னடா இது, அவங்க கூட்டிட்டுப் போன சினிமாவுக்குத்தான் நானும் போறேன். இப்ப தனியாப் போனால் சண்டை பிடிக்கிறாங்க'ன்னு நினைச்சு, கிளாஸை கட் பண்ணிட்டு சினிமாவுக்குப் போறதை வீட்டுல சொல்ல மாட்டேன்.

அப்போ ஒரு எஸ்.எல்.ஆர். ஸ்டில் கேமரா எனக்குக் கிடைச்சது. விழுந்து விழுந்து படம் எடுத்தேன். அதை வெச்சுப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவேன். எனக்கு ஓரளவு நம்பிக்கை வந்த உடனே, 'சென்னைக்குப் போறேன்'னு வீட்ல சொன்னேன். 'உன் இஷ்டம். ஆனா, கையில ஒரு டிகிரி வெச்சுக்கோ'ன்னு அம்மா சொல்ல... பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அப்பா இரும்பு வியாபாரம் செய்தார். பள்ளிக்கு டூ வீலர், கல்லூரிக்கு காரில் போற அளவுக்கு வசதிதான். காலச் சக்கரத்தின் எந்தப் பற்களிலும் என் கர்ச்சீப்கூடச் சிக்கியது இல்லை.

கல்லூரி முடிச்சதும் சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். ஆனால், இரண்டு நாட் கள்கூடத் தாக்குப்பிடிக்க முடியலை. திரும்ப கோவைக்கு ஓடி வந்தேன். சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. மறுபடியும் சென்னை வந்தேன். இந்தத் தடவை பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன் ரெண்டு பேர்களில் ஒருத்தரிடம் போயிடணும்னு திட்டம். பி.சி. சாரைப் பார்க்க, அவர் ஆபீஸ் வாசலில் நிற்பேன். 'எட்டாவது அசிஸ்டென்ட்டா சேர்ந்து, நீ ஒண்ணும் செய்ய முடியாது'ன்னு திருப்பி அனுப்புவார். 'ராம்ஜிகிட்டே போய் சேர்ந்துக்கோ'ன்னு பாதையும் காட்டினார். ராம்ஜி சாருடன் எட்டுப் படங்கள். இந்தியிலும் வேலை பார்த்தேன். அப்புறம்தான் 'ஜாக்பாட்'னு ஒரு இந்திப் படம் தனியாக ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு. ஆர்வமா களம் இறங்கினேன். ரிலீஸ் தேதி அறிவிச்சு, ரெடியாகி ஏதோ பிரச்னை. படம் ரிலீஸ் ஆகலை. மனசு சோர்ந்துட்டேன். இரண்டரை வருஷம் என்ன செய்றதுன்னே தெரியாம திகைச்சு நின்ன தருணம் அது.

சென்னையில், பழைய நண்பர்களின் நட்பைப் புதுப்பிச்சேன். செய்த படத்தை யும், பண்ணின குறும்படங்களையும் சி.டி-யா ரெடி பண்ணி, 150 பேருக்காச்சும் கொடுத்து இருப்பேன். ஒருநாள், 'மௌனம் பேசியதே' பழக்கத்தில் நண்பனான சசிகுமாரைப் பார்த்தேன். அவர் 'சுப்ரமணியபுரம்' படம் தயாரிக்கத் திட்டம் போட்டிருந்தார். கேமராமேன் ராஜேஷ் யாதவ்னு முடிவு பண்ணி இருந்தார். அவர்கிட்டே என் டெமோ ரீலைக் கொடுத்து அமீரிடம் சேர்ப்பிக்கச் சொன்னேன். நான் டெமோ ரீல் கொடுக்காத ஒரே ஒருத்தர் சசிகுமார்தான். ஆனால், அவர்தான் எனக்கு வாய்ப்பு தந்தார்!

இவ்வளவு தாமதத்துக்கு வீட்டில் பேசிப் பேசியே மழுங்கடிக்க வாய்ப்பு இருக்கு. ஆனால், என் அம்மாவுக்கு, நான் மூணு வேளையும் சாப்பிடணும், நல்லபடியாத் தூங்கணும்னு மட்டும்தான் ஆசை. அதுதான் அம்மா. சென்னையில் சின்ன அறையில் வசதி குறைவா நான் தங்கிட்டு இருந்ததைப் பார்த்த அப்பாவுக்கு, கண்ணீர் வராத குறை. 'ஏன் இவ்வளவு கஷ்டம். அதான் 'உதவி ஒளிப்பதிவு'ன்னு சில படங்களில் உன் பேர் வந்துருச்சுல்ல. கிளம்பி ஊருக்கு வா!'ன்னு சொன்னார்.

எனக்கு இந்த சினிமாவில் சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தது. சசிகுமார் படம் தயாரிக்க ரெடியானபோது, 'கற்றது தமிழ்' ஆரம்பித்திருந்தார் ராம். ராம்ஜி சார் ஒரு இந்தி சினிமாவில் பிஸியானதால், நான் 'கற்றது தமிழ்' செய்ய ஆரம்பிச்சேன். ராம்ஜி சார் திரும்பும்போது, முக்கால்வாசிப் படம் முடிந்திருந்தது. 'அருமையா செய்திருக்கே. கதிரே இருக்கட்டும்'னு பெருந்தன்மையா விட்டுக்கொடுத்தார் ராம்ஜி. 'கற்றது தமிழ்' எனக்குப் பெரிய அடையாளம் தந்தது. வியாபாரரீதியா வெற்றிக் கூட்டணியில் சசிகுமாருடன் இணைஞ்சிஇருந்தேன்.

நமது நம்பிக்கை நியாயமா இருந்தா, நமக்கு ஓர் இடம் நிச்சயமா உண்டு. என் வீட்டில் என்னை யாரோடும் கம்பேர் பண் ணவே மாட்டாங்க. என் கண் முன்னால், என் நண்பர்கள் நல்ல வேலையில் சேர்ந் தாங்க. வீடு கட்டினாங்க. என் வீட்டுக்கும் வந்துபோனாங்க. ஆனா, வீட்டில் இதைவெச்சு என்னைக் குத்திக்காட்டலை. சாப்பாடு இல்லாமல், தண்ணியை மட்டும் குடிச்சிட்டு, படுத்துத் தூங்கினால்தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு எதுவும் கிடையாது. இந்தத் தொழிலுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக்கிற நேர்த்திதான் வேணும். அதில் குறை இருந்தால், உங்களை யாரும் உயரத்துக்குக் கொண்டுபோய் வைக்க முடியாது. இதோடு, வாணி என்ற பெண்ணோடு எனக்கு 10 வருஷமா காதல். இரு தரப்பிலும் எதிர்ப்பு இருந்தாலும், அவர்களின் கனிவுக்காகக் காத்திருந்தோம். கடைசியில், சம்மதிச்சாங்க. காத்திருந்தால், நியாயமாக இருந்தால், அதற்கான தகுதியை நீங்கள் பெற்றிருந்தால், உங்களுக்கான இடம் எந்த வகையிலும் நிச்சயம். அதற்கு உதாரணம் இதோ இந்த... எஸ்.ஆர்.கதிர்!"


''நான் உதயச்சந்திரன் ஆனது எப்படி?''
கி.கார்த்திகேயன், படங்கள்: கே.ராஜசேகரன்

1993-ம் வருட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய அளவில் 38-வது ரேங்க் பிடித்தபோது உதயச்சந்திரனின் வயது 23. அந்தத் தேர்வுகளில் முதல் கட்டத்தைத் தாண்டவே தமிழக மாணவர்கள் தவித்துத் திண்டாடிய வேளையில், முதல் முயற்சியிலேயே அந்த உயரம் தொட்ட உதயச்சந்திரனின் உழைப்பு அபாரமானது!

உன் இயல்பு உன்னை வடிவமைக்கும்!

''விகடன் விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க தியேட்டருக்குப் போற, தினமணி தலையங்கங்களைப்பத்தி விவாதிக்கிற மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். நாமக்கல்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவுக்கு பொதுஅறிவு ஆர்வம் ஜாஸ்தின்னா, அம்மாவுக்கு தமிழ் மொழியின் மீது காதல். ரெண்டு பேரும் பல விஷயங்களில் முரண்படுவாங்க. அந்த முரண் சுவைகளை ரசிச்சு வளர்ந்தேன். பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''

உன் தேவை, உனக்கு வழங்கப்படும்!

''மதிப்பான வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்படிப்புகள் படிக்க அலைபாயும் மத்திய தர மனப்பான்மைக்குத் தப்பாம என்னையும் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்தாங்க. ஆனா, பல தேடல்களுடன் இருந்த நான், சிவில் சர்வீஸ் படிப்பை என் இலக்கா நினைச்சேன். அப்போதெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வட இந்திய மாணவர்களின் ஆதிக்கம் அதிகம். தமிழகத்தில் இருந்து ஒருவர்கூட நேர்முகத் தேர்வை எட்டியிராத காலம். என் விடுதி அறைக் கதவில் 'ஜில்லா கலெக்டர்' என்று எழுதும் அளவுக்கு கிண்டல் கேலிகள். அவநம்பிக்கைகளுக்கு இடையே, அம்மா மட்டும்தான் என் பக்க பலமாக இருந்தார். அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதிகள் எனக்கு இருந்தன என்று நம்பிக்கை. எதிர்கொண்டேன். வெற்றிகொண்டேன். நான் கல்லூரிக் காலங்களைச் செலவிட்ட ஈரோடு ஜில்லாவுக்கே மாவட்ட ஆட்சியராகச் செல்லும் வாய்ப்பு. ஆசை ஆசையாக எனது விடுதியைத் தேடி ஓடினேன். அடுத்தடுத்த கதவுவெட்டுப் பதிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டாலும், காற்றில் அலைந்துகொண்டு இருந்த 'ஜில்லா கலெக்டர்' வரிகளை என் கண்கள் கண்டுகொண்டன. எனக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சது... 'உனக்கு எது தேவை என்று நீ முடிவு செய். அதை இந்தச் சமூகம் உனக்கு நிச்சயம் வழங்கும்!''

உன் வருத்தங்களை வரலாறு ஆக்கு!

''என் அப்பா ஒரு வணிகர். நான் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர் வியாபாரத்தில் கொஞ்சம் சிரமப்பட்ட காலம். கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்த கல்விக் கடனுக்காக வங்கியை அணுகினோம். மதிப்பெண் அல்லாத சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்த வலி இன்னமும் உள்ளுக்குள் இருக்கிறது. காலங்கள் கடந்து நான் ஈரோடு மாவட்ட ஆட்சிப் பணியில் இருந்த நேரம். மனுநீதி நாள் அன்று தன் மகனுக்கு கல்விக் கடன் வழங்கக் கோரும் விண்ணப்பத் துடன் வந்த ஒரு தாய், என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, 'ஐயா! என் மகன் நல்லா படிப்பான். ஆனா, கல்விக் கடன் கொடுக்க மாட்டேங்குறாங்க. என் மகன் வாழ்க்கை இப்போ உங்க கையிலதான்யா இருக்கு'ன்னு என் கால்ல விழுந்துட்டாங்க. அதிர்ச்சியின் உச்சத்தில் அந்த அம்மா என் காலில் விழுவதைத் தடுக்கிறேன். அந்த சங்கடச் சூழ்நிலையிலும் அந்த மகனின் உணர்ச்சி களை நான் கவனித்தேன். 'நல்லாப் படிக்கத்தான் முடியும். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற இயலாமையிலும், தன் படிப்புக்காகத் தன் தாய் இன்னொருவன் காலில் விழுவதைக் காணச் சகிக்க முடியாத வேதனையிலும் கண்ணீர் மறைத்து முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொண்டான். மறுநாள் காலை அந்த மாணவனுக்கான கல்விக் கடனைப் பெற்றுக் கொடுத்தேன். அதன் பிறகு மாவட்டம் முழுக்கத் தொடர் முகாம்கள் நடத்தி, ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடன்களை வழங்கவைத்தோம். ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் எந்தத் துயரமும் அவன் தலைமுறையைத் தாண்டக் கூடாது. அதை மாற்றியமைப்பதற்கான முயற்சி களை ஒவ்வோர் இளைஞனும் அவனுடைய பொற்காலத் தில் சாதிக்க வேண்டும்!''

உன் கல்வி உன்னைக் கண்ணியமாக்க வேண்டும்!

''சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மானுடவியல்தான் (Anthropology) எனது விருப்பப் பாடம். விமர்சனப் பார்வைகொள்ளாமல் மனித மனங்களின் மென் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொடுப்பது மானுடவியல் பாடம். எந்தப் பெரிய செயலையும் சின்னச் சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவதுதான் இன்ஜினீயரிங் படிப்பின் அடிப்படைத் தத்துவம். மதுரையில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தல் களை வெற்றிகரமாக அரங்கேற்ற உதவியது எனது கல்வி கற்றுக்கொடுத்த அந்த இரண்டு குணங்கள்தான். தேர்தல்கள் நடத்துவதற்கு எதிர்ப்பினைப் பதிவுசெய்த தரப்பினர் சார்பாக என்னைச் சந்திக்க வந்தார் செல்லக்கண்ணு. அவரி டம் எந்த விதத்திலும் சமரசத்துக்குப் பணிந்துவிடக் கூடாது என்ற உறுதியான உடல்மொழி தொனித்தது. 'வாங்க செல்லக்கண்ணு... நல்லா இருக்கீங்களா? நாலு தலைமுறைக்குப் பிறகு உங்க வீட்ல பெண் குழந்தை பிறந்திருக்காம்... பாப்பா நல்லா இருக்கா?' என்று கேட்டேன். அதைக் கொஞ்சமும் எதிர்பாராதவர், அதை மறுக்க முடியாதவர்... முன்தீர்மானிக்கப்பட்ட தன் உடல் மொழியைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவரைச் சம்மதிக்கவைப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. தொடர் நிகழ்வுகள் அந்தத் தேர்தல்களைச் சாத்தியப் படுத்தின. உணர்ந்து கற்ற கல்வி தினசரி வாழ்க்கையில் நம் கைபிடித்தே நடக்கும்!''

"நான் அந்தோணிராஜ் ஆனது எப்படி?"

எஸ்.கலீல்ராஜா, படங்கள் :கே.ராஜசேகரன்

"எழுபதுகளில் இந்தியாவே வறுமையில தவிச்சுத் திண்டாடிட்டு இருந்தப்போ, நான் பிறந்தேன். திருநெல்வேலி பக்கத்துல ஆரைக்குளம்தான் சொந்த ஊர். அப்பா லாரி டிரைவர். அம்மா இல்லத் தலைவி. நாலு தங்கச்சிங்க. அவ்வளவு வறுமையிலும் தாத்தா, அப்பான்னு எல்லாருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. எனக்கும் அந்தப் பழக்கம் அப்படியே தொத்திக்கிட்டது. பள்ளிக்கூடத்துல சுமாரான மாணவன்தான். ஆனா, எப்பவும் லைப்ரரியில்தான் இருப்பேன். நேசிச்சு வாசிச்ச ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தது.

அப்பாவின் வேலை, சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருந்ததால இடப்பெயர்தலும் பயணங்களும் பழக்கமாச்சு. அப்பாவுக்கு நான் பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசை. அவருக்காகவே ஜர்னலிஸம் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் சென்னை யிலயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சது. ஆனா, நாலு தங்கச்சிகளை இன்னும் சீக்கிரம் கரையேத்தணுமேன்னு பாம்பே கிளம்பினேன். அங்கே முன்னணி ஆங்கில நாளிதழில் கிளார்க் மாதிரி ஒரு வேலை. ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வெறுப்பா இருந்தது.ஆனால், 'அடுத்து என்ன?'ங்கிற கேள்விக்கான பதிலும் என்கிட்ட இல்லை.

பைபிளில், 'பறவைகள் விதைப்பதும் இல்லை... அறுப்பதும் இல்லை'ன்னு ஒரு வாசகம் வரும். அது மனசுக்குள்ள பலமா எதிரொலித்துக்கொண்டே இருந்ததால், ஒரு நாள் சட்டுனு வேலையை விட்டுட்டேன். பிரின்டர்ஸ் ஆர்டர் எடுத்தேன். விளம்பர ஏஜென்ஸி, ஹோட்டல், ஐஸ்கிரீம் பார்லர்னு என்ன என்னவோ பண்ணேன். எல்லாமே தரமா பண்ணேன். ஆனா, வெற்றி கைக்கு எட்டலை. அப்பப்போ ஊருக் குப் போய் அம்மாகிட்ட பணம் கேட்பேன். நான் ஜெயிப்பேனான்னு தெரியலைன்னாலும், என் மேல இருந்த நம்பிக்கைக்காக நகையைக் கழட்டிக் கொடுத் தாங்க அம்மா. 'உங்க பையன் என்ன பண்றான்?'னு யாரும் கேட்டா, 'அவன் புத்திசாலி. சீக்கிரமே பெரிய ஆளா வருவான்'னு மட்டும் சொல்வாங்க.

அம்மாவுக் காகவாவது ஜெயிக்கணும்னு வெறி வரும். ஆனா, பாம்பே போய் இறங்கினதும் அதெல்லாம் மறந்துரும். ஏதாவது புதுசா டிரை பண்ணி அது ஃப்ளாப் ஆனதும் தான் திரும்ப அம்மா ஞாபகம் வரும். அந்த இலக்கற்ற பயணம்தான் எனக்கு அனுபவங்களையும் நல்லநண்பர் களையும் கொடுத்தது.

ஒரு முறை என் குஜராத்தி நண்பர் ஒருவர் சில இயந்திரங்களை விற்க முயற்சி பண்ணார். இயந்திரங்களைப் பார்த்தவங்க எல்லாருமே, ஒரே ஒரு குறிப்பிட்ட மெஷினை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு, எல்லா மெஷினுக்கும் 85 ஆயிரம் ரூபாய் வரை விலைக்குக் கேட்டாங்க. ஏதோ யோசிச்சவர், 'விற்க விருப்பம் இல்லை'னு சொல்லிட்டார். நானே வெறுத்துப் போயி, 'வந்த விலைக்குத் தள்ளிவிட வேண்டியதுதானே'ன்னு கேட்டேன். 'அந்த ஒரு மெஷின் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஆனா, அந்த ஒரு மெஷினுக்காக மத்த எல்லா மெஷினுக்கும் நல்ல விலைகொடுக்க யாருக்கும் மனசில்லை'ன்னு சொன்னவர், அந்த ஒரு மெஷினை மட்டும் வேற ஒரு அறையில்வெச்சார். அடுத்ததா வந்த ஒருத்தர், மத்த மெஷின்களைப் பார்த்துட்டு 90 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிட்டார். பிறகு, அந்த மெஷினைக் கொண்டுவந்தார். இன்னொருத்தர் அதை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கிட்டார். தனித்தனியா வித்ததுல 30 ஆயிரம் ரூபாய் லாபம். 'எதையும் மாத்தி யோசி. அப்பதான் ஜெயிக்க முடியும்'னு சொன்னார். பளார்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்தது அந்த அட்வைஸ்.

அடுத்து, சேனலுக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். கமல் தங்கச்சி நளினியைப் பேட்டி எடுத்துட்டு இருந்தாங்க. பேட்டி எடுத்தவர் ரொம்ப சாதாரணமான கேள்விகளா கேட்டுட்டு இருந்தார். என்னால சும்மா இருக்க முடியாம... நான் படிச்ச, கேள்விப்பட்ட விஷயங்களைக் கேள்வியா மாத்தினேன். நளினி உற்சாகமா பதில் சொன்னாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் என்கிட்ட வந்த தயாரிப்பாளர், 'ஷோ நடக்கும்போது டைரக்டரை ஓவர்லுக் பண்ணக் கூடாது. ஆனா, உன் கேள்விகள் நல்லா இருந்தது. இனிமே, நீதான் இந்த ஷோவுக்கு டைரக்டர்'னு சொல்லி, அட்வான்ஸ் கொடுத்தார். வாழ்க்கையோட முதல் வெற்றி. 'தயங்கி நின்னா ஜெயிக்க முடியாது'ங்கிற உண்மை புரிஞ்சது.

உடனே சென்னைக்குக் கிளம்பி வந்தேன். 'பிசினஸ் மகாராஜாக்கள்'னு ஒரு புத்தகம் படிச்சேன். அதை அப்படியே ஒரு நிகழ்ச்சி ஆக்கலாமேன்னு தோணுச்சு. கடன் வாங்கி நாட்டுக்கோட்டை செட்டியார்கள்பத்தி ஆராய்ந்து ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் 'பேங்க் ஆஃப் பரோடா'வில் லோன் கேட்டு, அதன் ஜி.எம்மைச் சந்திச்சேன். 'இந்த புராஜெக்ட் நல்லா இருக்கு. எப்போ எடுப்பீங்க?'ன்னு அவர் கேட்டார். 'எடுக்க ஆரம்பிச்சுட்டேன்'னு சொன்னேன். அந்த ஒரு வரி பதில் அவருக்குப் பிடிச்சிருந்தது. உடனே, லோன் சாங்க்ஷன் பண்ணிட்டார். 'சொல்லிட்டு இருக்கிறதை விட செய்ய ஆரம்பிச்சிரணும்'னு புரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறம், விஜய் டி.வி-யில் 'கதையல்ல நிஜம்' டீமில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் 'கேள்விகள் ஆயிரம்'. லைவ் புரொகிராமில் இயக்குநர் பளீர்னு கேள்விகள் கேட்கலை. என்னைவிட சீனியர்கள் தயங்கி நிற்க, நான் கேள்விகள் கேட்டேன். இந்த முறையும் டைரக்ஷன் போஸ்ட் தேடி வந்தது. 'இனிமே நான் சேனலில் தவிர்க்க முடியாத ஆளா இருக்கணும்'கிற வெறி மட்டும் இருந்தது. காலையில் ஒரு நிகழ்ச்சி. சாயங்காலம் வேற நிகழ்ச்சி. ரெண்டு வருஷம் நிக்காம ஓடினேன். லோ-பிரஷரில் மயக்கம் வந்து விழுற அளவுக்கு உழைச்சேன்.

சென்னை வர்றதுக்கு இந்தியா முழுக்கச் சுத்தி யிருக்கேன். மனிதர்களையும், புத்தகங்களையும் படிச்ச அனுபவம் சென்னையில் அழகா கைகொடுத்தது. அனுப வங்களை முதலீடு ஆக்கினா அழகா ஜெயிச்சிரலாம்னு நம்பிக்கை வந்தது. மனைவியோட நகைகளை அடகு வெச்சு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன்.

'சங்கமம்', 'நீயா... நானா?', 'நடந்தது என்ன?', 'இப்படிக்கு ரோஸ்', 'ரோஜாக்கூட்டம்'னு பல நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சேன். வழக்கமான ரூட்டைவிட்டுக் கொஞ்சம் மாத்தி யோசிச்சதால் எல்லாமே ஹிட். என்கிட்ட இப்போ 130 பேர் வேலை பார்க்குறாங்க. தமிழ் போக கன்னடத்திலும் நாலு ஷோ பண்றேன். கஷ்ட காலத்தில் எனக்குச் சோறு போட்ட நண்பர்கள் என்கூடவே இருக்காங்க. எல்லா கடனையும் அடைச்சாச்சு. ஆனா, என் வெற்றியைப் பார்க்க என் அப்பா, அம்மா மட்டும் இல்லை. நல்ல நண்பர்கள் சுத்தி இருக்குற தைரியத்தில் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு நினைக் குறேன். நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல பயணங்கள்... இதுதான் என் வாழ்க்கை. நீங்க நல்ல விஷயங்களைத் தேடித் தேடிப் போகும்போது வெற்றி உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்துக்கும் பயப்படாதீங்க. ஏன்னா, எதுவும் தெரியாதவன்தான் தயங்குவான்... பயப்படுவான்!"


"நான் விமல் ஆனது எப்படி?"
எஸ்.கலீல்ராஜா, படம்:உசேன்

'இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு?' என்று 'பசங்க' படத்தில் இயல்பான குறும்பு

இளைஞனைக் கண் முன் நிறுத் திய விமல், தற்போது 'களவாணி'யாக உள்ளம் கொள்ளைகொண்ட கதை சொல் கிறார்.

"காலையில கண் முழிச்சதுல இருந்து ராத்திரி தூங்கப்போற வரைக்கும் என் அப்பா, அம்மாவுக்கு மனசுக்குள்ள ஒரே ஒரு விஷயம்தான் உறுத்திட்டே இருக்கும். 'இந்த விமல் பய உருப்படுவானா?' தினம் சினிமா, நண்பர்கள், அரட்டைன்னு ஊர் சுத்திட்டே இருக்குற பையனை எந்த அப்பா, அம்மாவுக்குத்தான் பிடிக்கும்? பத்தாவது படிக்கும்போது ஒருநாள் சினிமா பார்த்துட்டு வீட்டுக்கு லேட்டா வந்தேன். அப்பா வழியில புடிச்சு நிறுத்தி, 'நீ வாழ்க்கையில என்னதான் ஆகப் போறே?'னு கேட்டார். 'நடிகனா ஆகப் போறேன்!'னு சொன்னதும் அமைதியா இருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு, 'உறுதியா இருக்கியா?'ன்னு கேட்டார். 'ஆமா'ன்னு சொன்னதும் 'ஓ.கே. உன் இஷ்டம்!'னு விட்டுட்டார். பத்தாவது ஃபெயில். 'இனிமே படிக்கப் போகலை. நடிக்கப் போறேன்'னு சொன்னேன். அப்பா ஒரு வார்த்தைகூட என்னைத் திட்டலை. அம்மா மட்டும் அழுதாங்க. 'அவன் வாழ்க்கை... அவன்போக்குல விடு!'ன்னு சிம்பிளா அப்பா என்னை சினிமாவுக்கு அனுப்பிட்டார்.

நடிகன் ஆசை உச்சி மண்டையில ஏறி நின்னுச்சு. சினிமாவில் நடிக்க யாரைப் பார்க்கணும், என்ன செய்யணும்னு எதுவுமே தெரியலை. எல்லாப் படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துருவேன். வீட்டுக்கு வந்து அந்த கேரக்டரை அப்படியே இமிடேட் பண்ணி நடிச்சுப் பார்ப்பேன். ரெண்டு, மூணு வருஷம் இப்படியே வெட்டியா ஓடிருச்சு.

நான் சினிமாவில் பெரிய ஆளா வருவேன்னு நம்பின அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நம்பிக்கை குறைஞ்சுட்டே வந்தது. அம்மாதான் கூப்பிட்டு வெச்சுத் திட்டுவாங்க. ஒருகட்டத்தில் எனக்கும் நம்பிக்கை வத்திருச்சு. சரி அப்பா, அம்மாகிட்டயாவது நல்ல பேர் வாங்கலாம்னு அப்பா வெச்சிருந்த நாலு லாரியை கான்ட்ராக்ட்டுக்கு விட்டேன். அந்தச் சூழ்நிலையில், சினிமாவுல ஒரே பாட்டுல நாலு லாரி 400 லாரிகளாகி நான்

ஜனாதிபதி கையில 'இந்தியாவின் சிறந்த லாரி தொழிலதிபர்' அவார்டு வாங்குறதை என் அப்பா- அம்மா பார்த்து நெகிழ்கிற மாதிரியான காட்சிகள்லாம் எதிர்பார்த்தேன். ஆனா, கடைசி வரை அந்தப் பாட்டு ப்ளே ஆகலை. ஒரே வருஷத்தில் நாலு லாரி ஒரு லாரியா மாறிருச்சு. நஷ்டம். அடுத்த வருஷம் அந்த லாரியும் காலி. 'நீ தயவு செஞ்சு நடிகனாவே ஆகிக்கோ'ன்னு அம்மா ஆசி வழங்கி அனுப்பிட்டாங்க.

அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சிலரைத் தேடிப்போய் நண்பர்கள் ஆக்கிக்கிட்டேன். 'ஏதாவது நடிப்பு ஸ்கூலில் சேர்ந்து நடிக்கப் பயிற்சி எடு'ன்னு அட்வைஸ் பண்ணாங்க. கலா மாஸ்டர் இன்ஸ்டிட்யூட்ல டான்ஸ் கோர்ஸ் சேர்ந்தேன். அப்புறம் கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன். உண்மையில் நடிப்புன்னா என்னன்னு அங்கேதான் தெரிஞ்சுது. நான் நடிச்சு 10 பேர் கைதட்டும்போது பெருமையா இருக்கும். 'இதே மாதிரி சினிமாவில் நடிச்சு லட்சம் பேர்கிட்ட கைதட்டு வாங்கணும்டா மக்கா'னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

இயக்குநர் தரணி கூத்துப்பட்டறை நாடகங்கள் பார்க்க அடிக்கடி வருவார். அந்தப் பழக்கத்துல 'கில்லி'யில் விஜய்க்கு நண்பனா நடிச்சேன். பத்தோடு பதினோராவது ஆளா வர்ற கேரக்டர்தான். ஆனா, சினிமான்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதே சமயம் 'இப்படி துண்டு துக்கடா ரோல்ல சிக்கிட்டா வாழ்க்கை அப்படியே போயிரும்டா'ன்னு அப்போ உதவி இயக்குநரா இருந்த சற்குணம் சொன்னார். சரி... நல்ல வாய்ப்பு வரும்போது பார்த்துக்கலாம்னு திரும்ப நாடகம் பக்கம் திரும்பிட்டேன்.

வீட்டுல பொறுமை இழந்துட்டாங்க. 'சினிமாவுலயும் நடிக்க மாட்டேங்குற... என்னதான் பண்ணப் போற?'ன்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க திட்டும்போது மொத்தக் கனவும், நம்பிக்கையும் குறைஞ்சு போகும். உடனே, சற்குணத்தைப் பார்க்க வந்திருவேன். 'நாம ஜெயிக்கலைன்னா வேற யாரும் ஜெயிக்க முடியாதுடா. நம்பிக்கையா இரு. விடாம போராடு'ன்னு தன்னம்பிக்கை டானிக் ஏத்திட்டே இருந்தார். அஞ்சு வருஷம் முன்னாடியே சற்குணம் 'களவாணி' ஸ்க்ரிப்ட் பக்காவா தயாரிச்சுட்டார். 'எனக்குப் படம் கிடைச்சா, நீதான் ஹீரோ. ஒரு வேளை நீ ஹீரோவாகிட்டா எனக்கு கால்ஷீட் கொடு. ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிப்போம்!'னு சொல்லிட்டே இருப்பார்.

அப்போதான் பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் நடிச்சேன். சசிகுமார் தயாரிக்கிற படத்துக்குப் புதுமுக ஹீரோ வேணும்னு சொன்னாங்க. 'ஹீரோவா கூப்பிட்டா நடிப்போம். சின்ன கேரக்டர்னா திரும்ப வந்திருவோம்'னு போனேன். அதுக்கு முதல் நாள்தான் ஒரு நாடகத்துக்காகப் பெண் வேஷம் போட்டிருந்தேன். அதுக்காக மீசை, தாடி எல்லாத்தையும் மழுமழுன்னு ஷேவ் பண்ணியிருந்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்த டைரக்டர் பாண்டிராஜ், 'போய்ட்டு வாங்க'னு சொல்லிட்டார். மொபைல்ல நான் நடிச்ச பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தின் வீடியோ க்ளிப்பிங்ஸ் இருந்துச்சு. அதை அவர்கிட்டே காட்டினேன். பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகிட்டார். 'தாடி, மீசை வளர்த்துட்டு என்னை வந்து பாருங்க'ன்னு அனுப்பிவெச்சார்.

ஒரு மாசத்துல ஃபுல் தாடி, மீசையோடு போய் நின்னேன். பார்த்ததுமே, 'நாளைக்கு மறுநாள் ஷூட்டிங்... வந்திருங்க'ன்னு அட்வான்ஸ் கொடுத்துட்டார். என் வாழ்க்கையின் மிக முக்கியமான சந்தோஷத் தருணம் அது. 'பசங்க' படத்துல நல்ல பேர் கிடைச்சது. ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அப்போதான் சற்குணம், ' 'களவாணி' இயக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீதான் ஹீரோ'ன்னு சொன்னார். 'இல்லப்பா, நான் இன்னும் வளரவே இல்லை. எனக்கு மார்க்கெட் வேல்யூவும் கிடையாது. வேற பெரிய ஹீரோ வெச்சுப் படம் பண்ணுங்க. நான் வளர்ந்ததும் சேர்ந்து படம் பண்ணுவோம்'னு சொன்னேன். 'நாம இந்தப் படம் பண்ணலைன்னா வேறு யார் பண்ண முடியும்?'னு சிரிச்சவர், 'ஜெயிச்சா மார்க்கெட் வேல்யூ தன்னால வரும். அது என் கவலை. வந்து நடி'ன்னு சொன்னார். தயக்கத்தோடுதான் நடிச்சேன். படம் இப்போ நல்ல பேர் வாங்கியிருக்கு!

ஒரே விஷயம்தான். ஒரு விஷயத்தில் இறங்குறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிங்க. இறங்குனதுக்கு அப்புறம் யோசிக்கிறதை நிறுத்திடுங்க. அதில் உங்க திறமையை ஒவ்வொரு நாளும் வளர்த்துகிட்டே இருங்க. லட்சியம் நிச்சயம் நிறைவேறும். நீங்க ஜெயிக்கலைன்னா வேற யார் ஜெயிக்க முடியும்... சொல்லுங்க?"


நான் வேல்முருகன் ஆனது எப்படி?
.பாரதிதம்பி, படங்கள்: கே.ராஜசேகரன்

'மதுர குலுங்க குலுங்க... நையாண்டி பாட்டுப் பாடி' வந்த வேல்முருகன், இப்போது தமிழ்த் திரை இசையில் முன்னோக்கிப் பாயும் பின்னணிப் பாடகர்! கடுக்கன் காதும், கருத்த தேகமுமாக எளிய தமிழனின் அடையாளங்களோடு போராடி வென்ற வேல்முருகனின் கதை, முதல் தலைமுறை வெற்றியாளர் களின் முன்னுதாரணம்!

''விருத்தாசலம் பக்கம் முதனை என்ற சின்ன கிராமம் எங்களுக்கு. 'பத்தரை பஸ்'ஸின் சத்தம் கேட்டால் கொட்டகையில் இருந்து மாடுகளை அவிழ்த்து வயக்காட்டுக்கு ஓட்டிச் செல்வதும், 'மூன்றரை பஸ்' போய்த் திரும்பும்போது மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவதும் எங்களின் அன்றாட வாழ்க்கை. சனி, ஞாயிறுகளில் நண்பர்களோடு வயக்காட்டுக்கு மாடு மேய்க்கப் போவோம். மாடுகள் மேய, நாங்கள் மரக் கிளைகளில் அமர்ந்து பாட்டுக் கச்சேரி நடத்துவோம்.


'ஆடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு...

மாடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு -அந்த

ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவன் வயிறு

ஆலம் இழைபோல காஞ்சிருக்கு'னுலாம் எங்கள் போக்குக்குப் பாடுவோம். ஆல் இண்டியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் 'ஒரு படப் பாடல்களை' மனப்பாடம் செய்வதில் நண்பர்களுக்குள் போட்டியே நடக்கும். அப்பா தனசேகர் விவசாயக் கூலி. ஆனாலும், என் இசை ஆர்வம் அறிந்து என்னை உற்சாகப்படுத்துவார். விருத்தாசலத்தில் 10 ரூபாய்க்கு கிராமியப் பாட்டுக் கேசட்டுகள் விற்பார்கள். அதை வாங்கித் தருவார். டேப் ரெக்கார்டர் உள்ள வீட்டில் அதைப் போட்டுக் கேட்பேன். பாடல் ஒலிக்கும்போது நானும் கூடவே பாடுவேன். இசைக்குத் தக்க, ராகத்துடன் பாட அதுதான் எனக்குப் பயிற்சி. ஊரில் எங்கு இழவு வீடு என்றாலும் முதல் ஆளாக நான் அங்கு போய் நிற்பேன். ஒப்பாரிப் பாடல்கள் கேட்பதில் எனக்கு அத்தனை ஆர்வம். குடுகுடுப்பைக்காரர்கள் பாடும் விநோதப் பாட்டில் மயங்கி, அவர்களுடனேயே பல மைல் தூரம் போயிருக்கிறேன். 10-ம் வகுப்பு வரை உள்ளூரில் படித்துப் பின்னர் கோயம்புத்தூரில் ஐ.டி.ஐ. சேர்ந்தேன். அங்கும் என் பாடல்களுக்குப் பெரிய வரவேற்பும் மரியாதையும் கிடைத்தது.

என் அம்மா நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 14 ரூபாய் சம்பளத்துக்குக் கொத்து வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தார். அந்தப் பணத்தையும் பிடுங்கி அப்பா சாராயம் குடித்துவிட, நாங்கள் பசியாற தன் பசியைப் பொறுத்துக்கொள்வாள் அம்மா. காலைக் களை ஐந்து ரூபாய், அந்திக் களை மூன்று ரூபாய் என வயல்களுக்குக் களை எடுக்கப் போவாள். தன் வாழ்வில் உழைப்பை மட்டுமே அறிந்திருந்த என் அம்மா, நான் ஐ.டி.ஐ. முதலாம் ஆண்டு படிக்கும்போது சிறுநீரகப் பாதிப்பால் இறந்து போனாள். படிப்பு முடித்து ஊருக்குச் சென்றேன். விருத்தாசலத்தில் கம்ப்யூட்டர் கிளாஸ் போன இடத்தில் 'ரவிராஜா இன்னிசைக் குழு'வின் அறிமுகம் கிடைத்து, கிராமத்துத் திருவிழாக்களில் பாடத் தொடங்கினேன். இந்தச் சமயத்தில் நண்பர்கள் 'சென்னைக்குப் போ' என உசுப்பேற்றிவிட, 'சென்னைக்குப் போய் இசையில் சாதிக்க வேண்டும் என்றால், இசைக் கல்லூரியில் படிக்க வேண்டும். அதற்கு முதலில் ப்ளஸ் டூ முடித்திருக்க வேண்டும்' என நினைத்து, உடனே ப்ளஸ் டூ-வில் சேர்ந்தேன். இரண்டு வருட பள்ளிக்கூட வாழ்க்கையில் எந்த பாட்டுப் போட்டியையும் விட்டதில்லை. நான்கைந்து முறை மாவட்ட கலெக்டர் கையாலும், ஒரு முறை முதல்வர் கலைஞர் கையாலும் விருதுகள் வாங்கினேன். 'சோளக்கொல்லையிலே' என்ற என் முதல் கேசட் போட்டது அப்போதுதான்.

பள்ளி முடித்து சென்னைக்கு வந்து அடையார் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். தினமும் சைதாப்பேட் டையில் இருந்து கல்லூரிக்கு நடந்தே செல்வேன். சுவர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் இசை நிகழ்ச்சி தொடர் பான போஸ்டர்களைப் பார்த்து அங்கு போய் நின்றுவிடுவேன். அப்படிப் பழக்கமானார் சந்துரு என்ற போட்டோகிராபர். அவரது கேமரா பேக்கை வாங்கிக்கொண்டு அவரது உதவியாளர்போல நானும் உள்ளே போய்விடுவேன். அங்கு வரும் பிரபல பாடகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்வேன். இப்படி எஸ்.பி.பி., ஜானகி அம்மா, எம்.எஸ்.வி. என அனைத்து இசை மேதைகளுடனும் போட்டோ எடுத்து ஆல்பம் போட்டு ஊரில் கொண்டுபோய் காட்டினால் அதற்கே என்னைக் கொண்டாடுவார்கள்!

கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது அப்பா இறந்துபோனார். வாழ்வில் நான் தனி மரமாக உணர்ந்த வேளையில் எனக்காக வந்தவள்தான் கலா. அதே இசைக் கல்லூரியில் பரதநாட்டியம் படித்த கலாவுக்கு என் குரல்வளம் பிடித்துப் போக... காதல்! கலாவின் குடும்பத்தினர் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். கல்லூரி முடிந்ததும் இருவரும் ஒரு வருடம் கழித்து நெய்வேலியில் வைத்து முறைப்படியான திருமணம் நடந்தது. தாலி கட்டி முடித்ததும் நான் கிராமியப் பாடல்கள் பாட, அதற்கு கலா பரதநாட்டியம் ஆட... 'வித்தியாசத் திருமணம்' எனப் பத்திரிகைகள் எழுதின. ஆனால், சென்னைக்குத் திரும்பியதும் 1,000 ரூபாய் வாடகை கொடுக்கக்கூட எனக்குச் சிரமமாக இருந்தது. அப்போதும் எனக்குச் சினிமா ஆசை இல்லை. 'அதெல்லாம் என்னால் முடியாத ஒன்று' என்றே நினைத்திருந்தேன். ஒவ்வொரு டி.வி. அலுவலகமாகப் போய் இசை நிகழ்ச்சி செய்ய வாய்ப்புக் கேட்பதுதான் என் வேலை. அப்படித்தான் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். தப்பித் தவறி 'உங்கள் ஆர்வம் என்ன?' எனக் கேட்டு, 'நான் பாடு வது' எனச் சொல்லி, ஒரு பாட்டுப் பாடினால், அதன் மூலம் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற நப் பாசை. சரியாக அதுபோலவே நடந் தது. கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் நான் 'கடலைக் கொல்ல ஓரத்திலே' என்ற பாடலைப் பாட, அதைக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன் சார் அழைத்துக் கொடுத்த வாய்ப்புதான் 'மதுர குலுங்க குலுங்க..!'

அதன் பிறகும்கூட பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதற்கு இடையே 'குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்' படத்தில் ஓர் ஒப்பாரிப் பாடல் பாடுவதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பல நாட்டுப்புறக் கலைஞர்கள் வந்திருந்தனர். அவர்களை யுவன் சாரின் ஸ்டுடியோவுக்கு அழைத்துப் போனேன். அப்போது நானும் பாடுவேன் எனத் தெரிந்து, 'நீங்க பாடுங்களேன்' என்று வந்த வாய்ப்புதான் 'ராசாத்திக் கிளியே' பாடல். அதைத் தொடர்ந்து 'நாடோடிகள்' படத்தில் பாடிய 'ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா' பெரிய அளவில் வெளிச்சம் பாய்ச்சியது. இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடிக்கொண்டு இருக்கிறேன். நாட்டுப்புறப் பாடகனாகத் தொடங்கினாலும் இப்போது எல்லா வகைப் பாடல்களையும் பாடும் பின்னணிப் பாடகராகவே இருக்கிறேன். என் அத்தனை வெற்றிகளும் உழைப்பதை மட்டுமே மகிழ்ச்சி எனக் கருதிய என் அம்மாவுக்கும், என்னையே நம்பி வந்த என் மனைவி கலாவுக்கும் சமர்ப்பணம்!''


" நான் சங்கர் ஆனது எப்படி?"

- பாரதி தம்பி ,படங்கள் : சு.குமரேசன்

"நல்லாக்கவுண்டம்பாளையத்தில் நானும் என் தாத்தாவும் பார்க்காத, விளையாடாத தோப்பு எதுவும் இல்லை. பேரன் மீது அளவற்ற பாசம். என்னைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி ஒவ்வொரு தோப்பாக அழைத்துச் செல்வார்.என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த தாத்தா, ராகிங் குற்றத்துக்காக நான் கல்லூரியில் இருந்து ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, கலங்கிப்போனார். திறமையைவிட ஒழுக்கமே பெரிது எனப் போதித்த தாத்தா, மன உளைச்சலின் உச்சத்தில் என்னுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் தன் உயிரைப் போக்கிக்கொண்டார். வாழ்க் கையை-யும் உலகத்தையும் புரியவைக்கத் தன் உயிரைத் தந்த தாத்தா ரெங்கையா கவுண்டரின் அன்புக்கு என் அத்தனை வெற்றிகளும் சமர்ப்பணம்!''

- நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சங்கர். சென்னை-யின் முன்னணி ஐ.ஏ.எஸ்., அகாடமிகளில் சங்கரு-டையதும் ஒன்று. கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 96 பேர்களில் 36 பேர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள். வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயார் செய்து அனுப்புகிறார். திருச்செங்கோடு பக்கம் ஓர் உள்ளடங்கிய கிராமத்தில் பிறந்து, முதல் தலைமுறைக் கல்வி பெற்ற சங்கர், இப்போது ஒவ்வொரு வருடமும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்--களை உருவாக்குகிறார். ஆனால், இவர் நான்கு முறை சிவில் சர்வீஸ் எழுதி தோல்விகளைத் தழுவியவர் என்பதுதான் ஆச்சர்யம்!

"ஊத்தங்கரையில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து பாடங்களிலும் சேர்த்து நான் எடுத்த மதிப்பெண்கள் மொத்தமே 32-தான். பருத்திக் காட்டில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்த என் அப்பா, 'நீ படிக்க லாயக்கு இல்லை' என்று, நல்லாக்கவுண்டம்பாளையத்தில் இருந்த என் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அங்கு ஒரு வருடம் தறி வேலை பார்த்தேன். அடுத்த வருடம் நல்லசமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது, முதல் நாளே இங்கிலீஷ் வாத்தியார் என்னைப் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். தட்டுத் தடுமாறிப் படித்து முடித்ததும் நான் நன்றாகப் படித்ததாகச் சொல்லி, ஒரு சாக்லேட் பரிசு அளித்தார். நான் முதன்முதலாகப் பாராட்டின் சுவையைருசித்தேன்.


விளைவு... 10-ம் வகுப்பில் நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரைப்போல டைரக்டர் கனவு என்னைஆட்டிப் படைத்தது. 'இம்ப்ரூவ்மென்ட் எழுதுகிறேன்' என்ற பெயரில், தியேட்டர் தியேட்டராகச் சென்று சினிமா பார்க்கத் தொடங்கினேன். அப்புறம் பரீட்சையில் என்ன இம்ப்ரூவ்மென்ட் வரும்? ஏற்கெனவே எடுத்ததைவிடக் குறைவான மதிப் பெண்கள்தான் வந்தன.

கல்லூரியில் பி.எஸ்ஸி., அக்ரி சேர்ந்தேன். அந்த வயதின் குறும்பு, வைஷ்ணவி என்ற பெண்ணை நான் ராகிங் செய்ய, அது பெரிய பிரச்னை ஆனது. ஒரு வருட காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். என் தாத்தா இறந்தது அப்போது தான்.

என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிய தாத்தாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஒரு வருடம் கழித்து அதே கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இரண்டாம் வருடத்துக்குப் போயிருந்தனர். அப்போது என்னிடம், படிக்க வேண்டும்... எதையாவது அடைய வேண்டும் என்ற வெறி மட்டுமே மிச்சம் இருந்தது. காலத்தின்விளையாட்டில் எந்தப் பெண்ணை நான் ராகிங் செய்தேன் என்று கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டேனோ, அதே வைஷ்ணவியுடன் எனக்குக் காதல்.

கல்லூரி முடித்தபோது மறுபடியும் சினிமா ஆசை. அப்பா ஒயின் ஷாப்பில் வேலை பார்க்க... நான் ஒன்றரை வருட காலம் சினிமாக் கனவுடன் சென்னையில் சுற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்த்த உறவினர் ஒருவர், 'இப்படியே வீணாப்போகப் போறியா? ஞான ராஜசேகரன்னு ஓரு ஐ.ஏ.எஸ்., இருக்கார். இப்பவும் அவர் அரசு அதிகாரிதான். ஆனா 'மோகமுள்'னு நல்ல படம் இயக்கலையா? நீயும் படிச்சு நல்ல நிலைமைக்கு வா. அப்புறமா சினிமா பண்ணு' என்று சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன.

எம்.எஸ்ஸி., அக்ரி படிக்க என்ட்ரன்ஸ் எழுதினேன். அரசு ஃபெல்லோஷிப்புடன் ஹரியானாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை முடித்ததும் 'அப்படியே சிவில் சர்வீஸ் எழுதலாம்' என்று டெல்லிக்குக் கிளம்பினேன். வீட்டில் மிகக்கடுமையான வறுமை. 'ஆயிரம் ரூவா சம்பளத்துலயாவது ஒரு வேலைக்குச் சேர்' என்று அப்பா நெருக்கினார். 'சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க' என்று இந்தப் பக்கம் வைஷ்ணவி நெருக்கினாள். ஆனால், எதையும்விட முடியவில்லை. என் சிரமம் அறிந்த வைஷ்ணவி டெல்லிக்கு வந்து, வேலைபார்த்துக் கொண்டே என்னைப் படிக்கவைத்தாள். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி இறுதிக் கட்டம் வரை போனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் என் அப்பா தேவராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.

வாழ்வில் இதன் பிறகு நான் தோற்பதற்கு எதுவும் இல்லை. மனம் சமன்பட்டு இருந்தது. ஐ.ஏ.எஸ்., தேர்வில் மூன்றாவது, நான்காவதுமுறை யாகவும் தோல்விகள். இந்தப் பக்கம் திருமணத் துக்கான நெருக்கடி. ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில், இத்தனை வருட காலம் சிவில் சர்வீஸ் தேர்வில் கிடைத்த அனுபவத்தைவைத்து, ஓரு அகாடமி தொடங்கலாம் என்று திட்டமிட்டேன். என் அம்மா தான் சேர்த்துவைத்திருந்த 720 ரூபாய் பணத்தைத் தன் பங்காகக் கொடுத்தார். அண்ணா நகரில் 36 மாணவர்களுடன் முதல் வருடம் அகாடமி ஆரம்பித்தது. இப்போது வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். என்னைப் படிக்கவைத்த என் மனைவியை இப்போது ஐ.ஐ.டி-யில் பி.ஹெச்டி., படிக்கவைத்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னுடன் படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேர்கையில் அங்குள்ள அதிகாரிகளைப் பார்க்கும்போது, மனது லேசாகவலிக்கத்தான் செய்யும். ஆனாலும், நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். என் தோல்விகள் எனும் படிக்கட்டுகளில்தான் இத்தனை வெற்றியாளர்கள்!'' - அனுபவத்தின் வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கிறார் சங்கர்!


"நான் நா.முத்துக்குமார் ஆனது எப்படி?"

கவிஞர் நா.முத்துக்குமார், 35 திரைப்படப் பாடலாசிரியர்

தீயோடு தோன்றுக!

1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

ஆழம் அறி!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

கோபம் கற்றுணர்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

உன் திசை உற்றுணர்!

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

எரிக்க எரிக்க எழுந்து வா!

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!


"நான் சந்தானம் ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன், படம்:வீ.நாகமணி

லை காட்டும்போதெல்லாம் தியேட்டரில் காமெடி பட்டாசு கொளுத்தும் சந்தானத்தின்

பசுமை நிறைந்த நினைவுகள் இங்கே...

"வீட்டுக்கு நான் ஒரே பையன். ரொம்பவும் சராசரியான குடும்பம். சின்ன வயசுல படிப்புதான் முக்கியம்னு உணர்ந்தும், எனக்கு அவ்வளவா படிப்பு ஏறலை. சுருக்கமா... மக்கு!

அப்போ சூர்யா மிஸ்னு ஒருத்தவங்க என் மேல ரொம்ப அக்கறை எடுத்துப்பாங்க. அவங்க என்னை எப்படியாவது படிப்புல நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திரணும்னு பார்த்தாங்க. அவங்க நினைச்சாலும், கடவுள் நினைக்கணும் இல்லையா... அவர் நினைக்கலை!

அப்புறம் எங்க ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டு இருந்தது ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணை என்னோடு சேர்த்து கம்பைண்ட் ஸ்டடி பண்ணவெச்சாங்க. ரெண்டு மாசம் அந்த பார்ட்னர்ஷிப் ஓடுச்சு. அதுக்கு அப்புறம் நடந்த பரீட்சையில பயங்கர அதிரடித் திருப்பமா அந்தப் பொண்ணு ஃபெயில். சூர்யா மிஸ்கிட்ட இருந்த சொச்ச மிச்ச நம்பிக்கையும் வறண்டுபோச்சு.

படிப்புதான் தகராறுன்னாலும், ஸ்கூல்ல நாடகத்துல பின்னிருவேன். நான் தருமி வேஷம் போட்டு, நண்பனை சிவன் வேஷம் போடவெச்சுக் கலாய்ப்போம். கை தட்டித் தட்டி ரசிப்பாங்க. 'பிரிக்க முடியாதது எது'ன்னு சிவன் கேட்க, 'டேய், சொல்லியாச்சுல்ல... பிரிக்க முடியாதுன்னு! அப்புறம் என்ன கேள்வி?'ன்னு மடக்கி மடக்கிப் பேசுவோம்.

அப்புறம் தட்டுத்தடுமாறி எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிச்சேன். கல்சுரல்ஸ் அழைப்பு வந்தா, ஸ்பாட்டுக்குப் போய்ச் சேர்றதுக்கு மட்டும் காசு சேர்த்துக்கிட்டுப் போவோம். அங்கே போட்டிகள்ல ஜெயிச்சு பரிசுத் தொகை கிடைக்கும். அதை வெச்சுட்டு வீட்டுக்கு வந்திரலாம்கிற அளவுக்கு அபார நம்பிக்கை. அப்படியேதான் கல்லூரி வாழ்க்கை முழுக்க ஆட்டம் பாட்டம்னு உற்சாகமாக் கழிஞ்சுது. டான்ஸ் ஆடுவேன், மிமிக்ரி பண்ணுவேன். இதனால படிப்பு இல்லைன்னாலும், ஏதோ சில விஷயங்கள் தெரியும்னு சொல்ல முடிஞ்சது.

அப்புறம் சன் டி.வி. பாலாஜி, 'சூப்பர் டென் பண்ணு'ன்னு சொன்னார். அப்புறம் விண் டிவி-யில், 'வெட்டி மன்றம்'னு நிகழ்ச்சி நடத்தினேன். ஜெயா டிவி-யில், 'பிச்சாதிபதி'. அப்படியே சினிமாவிலும் தலை காட்டிட்டு ஓடி வந்துரலாம்னு ஓர் ஆசை. ஆனா, யாரும் வாழ்த்தி வரவேற்று பளிச்சுனு ரோல் எதுவும் தரலை.

சிம்பு ஹீரோவா அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் சில நிமிஷம் தலை காட்டினேன். தலைன்னா... நிஜமாவே தலை மட்டும்தான். கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுத் தேடினாக் கண்டுபிடிக்கிற மாதிரி 'வாம்மா மின்னல்' கணக்கா வந்துட்டுப் போவேன். அப்புறம்தான் விஜய் டி.வி. 'லொள்ளு சபா'. அது பெரிய அங்கீகாரமும் அடையாளமும் கொடுத்தது. அப்புறம் சின்னி ஜெயந்த்தோடு சகலை ஸ்s. ரகளை செய்தேன்.

ஒருநாள் சிம்புவைப் பார்த்தப்போ, 'நல்லாப் பண்றீங்க'ன்னு விஷ் பண்ணினார். 'விஷ் பண்ணினாப் பத்தாது. வாய்ப்பு கொடுங்க!'ன்னு சொன்னேன். 'மன்மதன்' படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். ஆனா, என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு, அதை டெவலப் பண்ணி, பெரிய ரோலா மாத்தினார். சினிமாவில் முதன்முதலா எனக்குப் பெரிய ரோல் கொடுத்து அங்கீகரிச்சது சிம்புதான். அப்புறம், 'சச்சின்', 'சம்திங் சம்திங்', 'பொல்லாதவன்', 'சிவா மனசுல சக்தி'ன்னு பயணிச்சு, இப்போ சூப்பர் ஸ்டாரோடு 'எந்திரன்' வரை வந்துட்டேன். இன்னும் கமல், விக்ரம் மட்டும்தான் பாக்கி. சீக்கிரமே அந்த ஆசையும் பூர்த்தியாகணும்.

என்னைப் பொறுத்தவரை, எந்தச் சூழ்நிலையிலும், எந்த உயரத்தில் இருந்தாலும், நம்ம தகுதிகளை நாம வளர்த்துக்கிட்டே இருக்கணும். நமக்கு என்ன திறமை இருக்குன்னு எடுத்துச் சொல்லும் ஒருத்தர் நம்ம பக்கத் துல இருந்தா, அது வரம். என் அப்பாகூட, 'என்னடா நீ, உருப்படியாகிற வழி தெரியலையே'ன்னு சந்தேகப் பட்டார். அம்மா, எங்கே போனாலும் காசு கொடுத்து அனுப்புவாங்க. நமக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதுல, நாம எப்பவும் மிலிட்டரி ஆளு மாதிரி இருக்கணும். அதான் சண்டை எதுவும் நடக்கலையேன்னு உடற்பயிற்சியை மறந்துட்டு, சாப்பிட்டு, தூங்கிட்டு இருந்தா, சண்டை வரும்போது இரண்டு அடிகூட முன்னாடி எடுத்துவைக்க முடியாது. நான் பேசின பேச்சு, நடிச்ச நாடகம், பழகின நடனம்னு எப்பவும் வெடிக்கிற மாதிரி ரெடியாக இருந்தேன். அப்படி இருந்துதான் வாய்ப்பு கிடைச்சப்ப சினிமாவில் வெடிச்சேன். என்னிக்கோ நடக்கிற யுத்தம்னு இருந்தால், நாம் ஓடவே முடியாது. எந்த நேரமும் ரெடியா இருக்கணும்!

எனக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். சிவன் மேலே அலாதிப் பிரியம். என் முன்னேற்றத்தில் அவருக்கும் ஒரு பங்கு இருக்குன்னு நம்புவேன். நான் எப்படியும் வி.ஐ.பி. லிஸ்ட்ல வந்துடுவேன்னு நினைச்சேன். இந்தப் பேட்டிகூட சில மாற்றங்களோடு 15 வருடங்களுக்கு முன்னாடியே யோசித்துவெச்ச பேட்டிதான். 'ஆனந்த விகடன்ல இருந்து வருவாங்க... இந்தப் பேட்டி தர வேண்டியிருக்கும்'னு நினைச்சு, அப்பவே ஹின்ட்ஸ் எடுத்த பேட்டி இது. பார்த்தீங்களா... ரொம்ப யோசிக்காம பத்தே நிமிஷத்துல படபடன்னு முடிஞ்சிருச்சு.

எங்க சூர்யா மிஸ் இதைப் பார்த்தா, சந்தோஷப்படுவாங்க. 'அடடா! சந்தானம் பய மாறவே இல்லையே'ன்னு சொல்வாங்க. சூர்யா மிஸ்... நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?"


''நான் ராஜூ ஆனது எப்படி?"

ப.திருமாவேலன், படங்கள் : கே.கார்த்திகேயன்

பிரச்னைகள் வெடிக்கும் இடத்தில் பூக்கும் மனிதராக இருக்கிறார் ராஜு. எங்கு அடக்குமுறை கள் அதிகமாக இருக்கிறதோ, எங்கு உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கு இந்த இளைஞரின் குரலைக் கேட்கலாம்!

''சாப்பாட்டுக்குப் போதுமான அளவுக்கு மட்டுமே சம்பளம் வாங்கி வந்த ரயில்வே போலீஸ்காரரின் மகன் நான். வேலையின் பொருட்டு அவரை எங்கெல்லாம் மாற்றுகிறார்களோ, அங்கெல்லாம் எனது படிப்பும் பறந்துகொண்டே போனது. பிறந்து வளர்ந்த பெரியபாளையம் கிராமம், ஜெயங்கொண்டத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. கோவை, விருத்தாசலம், விழுப்புரம் எனப் பள்ளிக்கூடங்கள் மாறி ப்ளஸ் டூவை கடலூரில் முடித்தேன். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கப் போனபோதுதான் குடும்ப வாழ்க்கையின் யதார்த்தம் என்னைச் சுட்டது.

மாதச் சம்பளத்தை முழுதாகக் கையில் வாங்க முடியாமல் முன்னதாகவே கடன்களை வாங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்கும் மத்தியதர வர்க்கத்துக் கஷ்டத்தைக் கல்லூரிக் காலத்தில்தானே நாம் உணர முடியும்? உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் நாங்கள். நம்மால் முடிந்த அளவு ஏதாவது ஒரு வேலையைப் பார்த்து குடும்பச் சுமையைத் தவிர்க்க உதவலாமே என்று நானும் என்அண்ணன் சேகரும் யோசித்தோம். மணிலா கொட்டையை அரைத்து எண்ணெய் எடுக்கும் அரவை ஆலைகள் இருக்கும் பகுதி விருத்தாசலம். ஒரு ஷிஃப்ட் வேலை பார்த்தால் 12 ரூபாய் சம்பளம். கல்லூரி விடுமுறை நாட்களில் அந்த வேலைக்குப் போய் விடுவேன். கல்லூரிக்காலத்தில் அதிகாலையில் வீடு வீடாகப் போய்செய்தித்தாள் போடும் வேலையையும் பார்த்தோம்.

அந்தக் காலத்தில் சிறு அச்சகங்கள் எல்லாஊர் களிலும் இருக்கும். டிரெடில் பிரஸ் என்பார்கள்.அச்சு வேலைக்கு ஆளும் கிடைக்காது.வேலைக்குச் சேர்ந்தால் சம்பளமும் கிடைக்காது. அந்த அளவுக்கு நலிந்த தொழில் அது. அச்சக முதலாளிகளே கூலிகள் மாதிரி அச்சுக் கோத்துக் கொண்டு இருப்பார்கள். 'எனக்கு நீங்கள் சம்பளம் தர வேண்டாம். வேலை தந்தால் போதும். நான் கற்றுக்கொள்கிறேன்' என்ற நிபந்தனையுடன் சேர்ந்தேன். நான் வேலைக்குச் சேர்ந்த நேரம் கடனில் இயந்திரம் வாங்கி நடத்திக்கொண்டு இருந்தவரால் வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு... விற்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருந்தார். உடனே, நானும் எனது அண்ணனும் போய் வங்கியில் பேசினோம். 'படிச்ச பையங்களா இருந்து கேட்கிறீங்க. உங்க ஆர்வத்தைப் பார்த்துக் கொடுக்கிறேன்' என்று கடனை எங்கள் பேரில் மாற்றித் தந்தார். அது வரை இருந்த வட்டிப் பணத்தை அதிக வட்டிக்கு நாங்கள் வாங்கி அடைத்து, அச்சுத் தொழிலை ஆரம்பித்தோம். விருத்தாசலத்தில் ஓசை அச்சகம் அப்படித்தான் ஆரம்பித்தது.

ஆதிமனிதனின் முதல் தொடர்பே ஓசைதானே. எங்களுக்கான தொடர்பும் ஓசைதான். எல்லோ ரும் எங்களிடம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கக் கொடுப்பார்கள். யார் எதைக் கொடுத்தாலும் அச்சடித்துக் கொடுப்போம். அப்படித்தான் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் தோழர்கள் கொடுத்த பிரசுரங்களையும் அச்சடித்தோம். இப்படி அச்சடிப்பவர்கள் அச்சகத்தின் பெயரைப் போட மாட்டார்கள். ஆனால், நாங்கள் துணிச்சலாகப் போட்டோம்.

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிற நிலத்தை அபகரித்து இறால் பண்ணைகள் அமைப்பதால், அந்த நிலத்தின் தன்மையும்கெட்டு மக்களையும் துயரக் கடலில் தள்ளும் நிலையைக் கண்டித்து ஒரு பிரசுரமும், அதன் முடிவில் இறால் பண்ணைகளை அழிக்கப்போவதாக ஓர் அறிவிப்பும் இருந்தது. இதைப் பார்த்துவிட்டு ஜெயகாந்த சிங் என்ற தோழரைத் தேடிபோலீஸ் வந்துவிட்டது. என்னைக் கேட்டார்கள். அவர் எங்கு இருப்பார் என்று தெரியாது என்றேன். அப்படியா! என்று என்னை வேனில் ஏற்றிக்கொண்டார்கள். எங்கெங்கோ சுற்றி கடைசியில் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள். 'ஜெயகாந்த சிங் மற்றும் சிலர் தபால் நிலையம் அருகே சதித் திட்டம் தீட்டிக்கொண்டு இருப்பது தெரிந்து நாங்கள் அங்கு போனோம். அனைவரும் ஓடிவிட்டார்கள். ராஜுவை மட்டும் கைது செய்தோம்' என்று வழக்குப் பதிவு செய்ததைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறு அஞ்சல் வழியில் படிக்கும் மாணவன். 10 நாட்கள் கடலூர் சிறையில் இருந்து வெளியே வரும்போதுதான், 'நான் யார்... எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறேன்... யாரால் எனது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது' போன்ற விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. 'பணம் தேவைதான். அதற்காக, சமூகத்துக்குப் பயன்படாத வேலைகளில் சேரக் கூடாது' என்று நானும் அண்ணனும் முடிவுஎடுத்தோம். சமூகத்துக்கு உழைக்க வழக்கறிஞர் தொழில் நல்லவழிமுறையாக இருக்கும் என்று நினைத்து, சட்டம் படித்தோம்.

வழக்கறிஞர் தொழிலை, பணம் சம்பாதிப்பதற்கான வழியாகப் பார்க்காமல், மனித உரிமைகளுக்காகப் போராடும் வாய்ப்பாகக் கருதினேன். பொதுவாழ்க்கை என்பதுஅரசியல் கட்சிகளில் பெரிய பதவிகளை அலங்கரிப்பதல்ல; மக்களுக்காகப் போராடுவது. மக்களோடு ஒருவனாக நிற்பது. பல்லாயிரம் பேர் எங்களைச் சுற்றித் திரளாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் 10 பேர், பல்லாயிரம் பேருக்குச் சமமானவர்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து வக்கீலா, நீதிபதியா என்று பார்க்காமல் போலீஸ் நடத்திய வெறியாட்டத்துக்கு இன்று வரை தீர்வு இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எங்கள் வளாகத்துக்குள் வந்த முதல்வர் கருணாநிதிக்கு கறுப்புக் கொடி காட்டிய வக்கீல் கள் ஆறு பேர்தான். ஆனால், அதற்குப் பதிலளித்து நாளிதழ்களில் ஒரு பக்கத்துக்கு முதல்வர் பேசினார். ஆறு பேருக்காக ஏன் அவர் பேச வேண்டும்? அவருக்குத் தெரியும். கறுப்புக் கொடி காட்டியவர்கள் ஆறு இளைஞர்கள் என்றாலும், எண்ணிக்கையைவிட அவர்களது நோக்கம் வலிமையானது என்பதை உணர்ந்ததால்தான் முதல்வர் அப்படிப் பேசினார். நோக்கத்தில் தீர்க்கம் இருந்தால் எத்தகைய அதிகார அமைப்பையும் அசைத்துப்பார்க்கலாம்.

அதிகார அமைப்பை மட்டுமல்ல; ஆண்டவனின் சந்நி தானத்தையும் அசைக்கலாம் என்று தனி மனிதனாக நின்று வென்று காட்டியவர் பெரியவர் ஆறுமுகச்சாமி. 10 ஆண்டுகளாக ஒற்றை ஆளாக சிதம்பரம் வீதியில் அலைந்து, தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டினார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை கொண்டுசென்றது எங்கள் அமைப்புதான். இன்றைய இளைஞர்கள் அந்தக் கிழவனிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சமூக அநீதியை எதிர்த்துப் போராடுவதில்தான் இன்பம் இருக்கிறது. கலாசார அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு, மக்களைப் படிக்க ஆரம்பியுங்கள். 'மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுக்குக் கற்றுக் கொடு' என்கிறார் மாவோ!''

நான் மனோஜ் ஆனது எப்படி?
கி.கார்த்திகேயன்

''சினிமான்னா... கோடம்பாக்கம். ஆனா, எனக்குப் பிறந்ததில் இருந்தே கோடம்பாக்கம்தான் அட்ரஸ். நான் பிறந்த ஹாஸ்பிட்டல், இருக்கிற வீடு, என் ஆபீஸ் எல்லாமே எனக்கு கோடம்பாக்கம்தான். நான் எப்பவுமே கேர் ஆஃப் கோடம்பாக்கம்!'' - கல்லூரி மாணவர்போல இருக்கிறார் மனோஜ் பரமஹம்சா. 'ஈரம்' படத்தில் த்ரில் ப்ளஸ் திகில் ஊட்டிய... 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் ஃபீல் குட் காதல் காட்டிய ஒளிப்பதிவாளர்.

''என் அப்பா யூ.வி.பாபுவும் சினிமா ஆள்தான். தயாரிப்பு, இயக்கம்னு கிட்டத்தட்ட சினிமாவின் அத்தனை வேலைகளையும் பார்த்தவர். வீட்ல சினிமா சூழல் இருந்ததால், இயல்பாவே எனக்கும் சினிமா மேல் ஆர்வம். ஆனா, சினிமாவில் என்னவா இருப்பேன்னு எந்த ஐடியாவும் இல்லை. அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பாட் போகும்போது, ஓவர் மேக்கப் ஹீரோ, டென்ஷன் டைரக்டர், வியர்க்க விறுவிறுக்கத் திரியும் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்... இவங்கள்லாம் என்னை ஈர்க்கவே இல்லை. ஆனா, அந்த கேமரா... அதைச் சுத்தி ஏதோ ஒரு காந்தம். ஒரு மர்மமான கவர்ச்சி. 'ஆக்ஷன்'னு சொன்னதும் எல்லோரோட கவனமும் கேமராவைச் சுத்தியே இருக்கும். அந்தக் கறுப்பு மெஷினுக்குள் என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அந்த ஆர்வம் வெறியாக உருமாறி, 'கேமராமேன்தான் நம்ம இலக்கு'ன்னு நிலைகொண்டது, நம்புவீங்களோ இல்லையோ... நான் ஆறாவது படிக்கும்போது.

ஆனா, ஸ்கூல் முடிச்சு, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்ததும் குழப்பம். அங்கே படிப்பு முடிச்ச பலர் சினிமா சான்ஸ் கிடைக்காம, டி.வி. பக்கம் ஒதுங்கிட்டு இருந்தாங்க. 'உனக்கும் அதுதான். சினிமா சினிமான்னு வெட்டியா இருக்காம, தெளிவாப் பொழைச்சுக்கோ'ன்னு சீனியர்களோட அட்வைஸ். ரொம்பவே குழம்பிட்டேன். 'புனே, சென்னை, இரண்டே இடங்களில்தான் இந்த கேமராமேன் கோர்ஸ் இருக்கு. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மொத்தமே 22 ஸீட்தான். அதில் ஒரு இடம் பிடிச்சுப் படிக்கிறது டி.வி-யில் வேலை பார்க்கவா?'ன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். 'இல்லை'ன்னு பதில் வந்துச்சு. அப்புறம் யோசிக்கவே இல்லை. முழுமூச்சா கோர்ஸ் முடிச்சேன்.

கோர்ஸ் முடிச்சதும் அப்பா மூலமா சில கேமராமேன்கள்கிட்ட சேர வாய்ப்பு வந்தது. ஆனா, மணிரத்னம், கமல், ஷங்கர்னு ஒரு கனவுல திரிஞ்ச நாட்கள். சினிமா ஆசை இருந்தாலும், எல்லா தமிழ்ப் படங்களும் பார்க்காம செலெக்டிவ்வாதான் படங்கள் பார்ப்பேன். அப்பதான் கேமராமேன் சரவணன் சாரிடம் சேர வாய்ப்பு கிடைச்சது. 'யார் அவரு... அவர் பண்ண படம்லாம் நாம பார்த்தது இல்லையே?'ன்னு தயக்கம். ஆனா, கமல் சாரின் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத் தில் வேலை பார்க்கக் கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும், உடனே ஓடிப் போய்ச் சேர்ந்தேன். முதல் நாள் ஒரு பார்வை பார்த்ததோடு சரி, என்கிட்ட எதுவும் பெருசாப் பேசலை சரவணன் சார்.

ஒருநாள் அப்போலோ ஹாஸ்பிட்டல்ல கமல் சாரை ஸ்ட்ரெச்சர்ல வெச்சு உருட்டிட்டு வர்ற மாதிரி ஸீன். ரொம்பக் குறுகலான வராண்டா. மத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்காம சீக்கிரமா ஷூட் பண்ணணும். ஆனா, லைட்டிங் பத்தலை. எக்ஸ்ட்ரா விளக்குகள் வைக்க அது சினிமா செட் கிடையாது. நோயாளிகள் வந்துட்டுப் போயிட்டு இருக்கும் ஹாஸ்பிட்டல். கமல் சார் வர்ற நேரம்... என்ன செய்றதுன்னு தெரியாம எல்லோரும் குழப்பத்தோடு டென்ஷனா நின்னுட்டு இருக்காங்க. சட்டுனு எனக்குள்ள ஒரு யோசனை. 'ரெண்டு ஸ்ட்ரெச்சரை ஒண்ணா கட்டி அதிலேயே கேமராவையும் எக்ஸ்ட்ரா லைட்டையும் மாட்டி ஷூட் பண்ணிரலாம்'னு சொன்னேன். ஐடியா வொர்க்- அவுட் ஆச்சு. மனசுல தோணுறதை சரியோ, தப்போ பளிச்சுனு சொல்லணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் என் மேல நம்பிக்கைவெச்சு என்னைச் சுதந்திரமா இயங்க அனுமதிச்சார் சரவணன் சார். 'அரசாட்சி', 'ப்ரியமான தோழி', 'திருப்பாச்சி'ன்னு பல படங்கள் அவரோடு வேலை பார்த்தேன்.

இடையில் அறிவழகன், மணிகண்டன்னு நண்பர்கள் சினிமா வட்டத்தில் நெருக்கமானாங்க. சரவணன் சார் சிம்புவைவெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டு இருந்தார். நான் சும்மாதான் இருந்தேன். திடீர்னு ஒருநாள், கௌதம் மேனன் ஆபீஸ்ல இருந்து போன். போய் நின்னா, 'சென்னையில் ஒரு மழைக் காலம்' படத்துக்கு புது கேமராமேன் வேணும். ஒருநாள் டெஸ்ட் ஷூட் பண்ணுங்க. ஓ.கே-ன்னா தொடர்ந்து வேலை பார்க்கலாம்'னு சொன்னார் கௌதம் சார். அவரிடம் அசிஸ்டென்ட்டா இருந்த என் ஃப்ரெண்ட் மணிகண்டன் என்னைப்பத்திச் சொல்லியிருக்கான். என்னோட கிளாஸிக் லிஸ்ட்ல இருந்த டைரக்டரிடம் வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்ச சந்தோஷம். ஆனா, அந்த ஒருநாள்ல நாம அவரை இம்ப்ரெஸ் பண்ண முடியலைன்னா என்ன ஆகும்னு பயம். ஒரு மழை நாள்ல ஃப்ரெண்ட்ஸ் ஜாலியா அரட்டை அடிச்சுட்டே நடந்து போற மாதிரி ஸீன். அபாரத் திறமை காட்டி அசத்த ஸ்கோப் இல்லாத ஸீன்தான். ஆனா, ஏதாவது பண்ணணும்னு துடிப்பு. என் அதிர்ஷ்டத்துக்கு முந்தின நாள்தான் மழை பெய்ஞ்சு தரையெல்லாம் ஈரம். பசங்க பேசிட்டு நடக்கும்போது, டக்குனு கேமராவை டில்ட் பண்ணி ஈரச் சுவடுகளோட அவங்க ஷூ கால்கள் நடந்து போறதைக் காமிச்சேன். கௌதம் சார் இம்ப்ரெஸ் ஆயிட்டாரு. 'குட்! நாம வொர்க் பண்ணலாம்'னு ஒரு வரி மட்டும் சொன்னார்.

அந்த ஒரு ஷாட் அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவெச்சிருக்கு. ஆனால், பல காரணங்களால் முதல்ல, 'விண்ணைத் தாண்டி வருவாயா' பண்ணிட்டு இருந்தோம்.

அப்ப ஒருநாள் என் நண்பன் அறிவழகன் என்கிட்ட ஒரு கதை சொன்னான். 'ஈரம்' படத்தோட கதை. 'நீதான் கேமராமேன். ஷங்கர் சார்ட்ட சொல்லிட்டேன். வந்து வொர்க் பண்ணிக் கொடு'ன்னு உரிமையா அதட்டுறான். 'இல்லடா, எனக்கும் ஆசைதான். ஆனா, கௌதம் சார் புராஜெக்ட்டை விட்டுட்டு வர முடியாதே'ன்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம, இழுத்துட்டுப் போயி ஷங்கர் சார் முன்னாடி நிப்பாட்டிட்டான்.

அவர் படத்தைப்பத்தி எதுவும் பேசாம என்னைப்பத்தி விசாரிச்சு, கலாய்ச்சு காமெடி பண்ணிட்டு இருந்தார். கிளம்பும்போது, 'மனோஜ், எப்பவும் ஏதோ ஒரு பிரச்னை இருந்துட்டே இருக்கும். ஆனா, எல்லா பிரச்னைக்கும் ஏதோ ஒரு தீர்வும் நிச்சயம் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வுன்னு யோசிங்க'ன்னு சொல்லி அனுப்பினார். எனக்கு ஏதோ புரிஞ்சுது. கௌதம் சார்கிட்ட விஷயம் சொல்லி, ராத்திரியும் பகலுமா ரெண்டு படத்துக்கும் வேலை பார்த்தேன். எனக்குள் இவ்வளவு எனர்ஜியான்னு ஆச்சர்யப்படுத்திய நாட்கள் அவை. முதல்ல 'ஈரம்' ரிலீஸ். அடுத்து 'விண்ணைத் தாண்டி வருவாயா'. இப்போ கௌதம் சாரின் அடுத்த படத்திலும் வேலை பார்க்கிறேன்.

வாழ்க்கையில் ஒண்ணே ஒண்ணுதாங்க... எல்லாப் பிரச்னைக்கும் ஏதோ ஒரு தீர்வும் இருக்கும்!''


"நான் சுசீந்திரன் ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன், படங்கள்:கே.ராஜசேகரன்

'வெண்ணிலா கபடிக் குழு'வில் அறிமுகம். 'நான் மகான் அல்ல' படத்தில் ஆக்ஷன்

முகம். இரண்டே படங்களில் கவனம் ஈர்த்திருக்கும் இளம் தலைமுறை இயக்குநர்... சுசீந்திரன். அடுத்த படைப்பான 'அழகர்சாமியின் குதிரை'க்காக தேனிப் பக்கம் திரிபவரின் வெற்றிக் கதை...

"பழநிக்குப் பக்கத்தில் இருக்கும் அமரபூண்டியில் நான் பிறந்தேன். நான், அப்பா செல்லம். என்னைத் தன் தோளிலேயே தூக்கிக்கொண்டு திரிவார். எல்லோருக்கும் 50 பைசா கொடுத்தால், எனக்கு 5 ரூபாய் கொடுப்பார். அப்பாவின் இந்த ஸ்பெஷல் பாசத்துக்குக் காரணம், பின்னால்தான் தெரிந்தது. 'நான் ஏழரை வயசு வரைக்கும் தான் உயிரோடு இருப்பேன்' என ஒரு ஜோசியர் நாள் குறித்துவிட்டாராம். இருக்கிற வரைக்கும் பையனை சந்தோஷமா வெச்சிருப்போம்னு அப்பா நினைச்சிருக்கார். ஜோசியத்தைப் பொய்யாக்கிட்டு, எட்டு வயசிலேயே எழுந்து நின்னுட்டேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது புத்தி சினிமாவில் சுத்த ஆரம்பிச்சிடுச்சு. எங்க ஊரில் 'பாவேந்தர் திரையரங்கம்'னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு. அங்கே சினிமாக்கள் பார்த்துட்டே இருப்பேன். ப்ளஸ் டூ முடிச்சதும் சென்னைக்குக் கிளம்பி வந்தேன். அப்பா தடுப்பார்னு நினைச்சேன். ஆனா... தடுக்கலை.

'அடையாத பொருள் எப்பவும் மனசுக் குள்ளே உறுத்திக்கிட்டே இருக்கும். அதனால, சினிமாவுக்குப் போய்ட்டு வா. மூணு வருஷம் தாக்குப்பிடிச்சுப் பாரு. வாய்ப்பு கிடைக்க லைன்னா, கிளம்பி வந்துடு. முயற்சி செஞ்சோம்கிற ஆறுதலாச்சும் கிடைக்கும். அடுத்த வேலையைப் பார்க்கலாம்'னு வழி அனுப்பிவெச்சார்.

நிறையப் பேர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர முயற்சி செஞ்சேன். எந்தக் கதவும் திறக்கலை. ஒன்பது வருஷம் ஓடிப்போச்சு. யார்கிட்டயும் சேர முடியாம, சினிமா வெறும் கனவா மட்டுமே இருந்தது. ஊருக்கும் திரும்பிப் போக மனசு வரலை. வேற வழியும் தெரியலை. மனசு உறுத்த ஆரம்பிச்சது.

'உனக்காக யாரும் பாதை போட்டு வெச்சிருக்க மாட்டாங்க. நீதான் உனக்கான பாதையை உருவாக் கணும்'னு நண்பர் திட்டினார். திரும்ப வெறியோடு முயற்சி செஞ்சேன். வசனகர்த்தா பிரசன்னகுமார் மூலமா டைரக்டர் எஸ்.டி.சபாவிடம் சேர்ந்தேன். அவர்கிட்டேயும் அடுத்ததா இயக்குநர் எழில்கிட்டேயும் நல்ல சினிமாவைக் கத்துக்கிட்டேன்.

'முதல் கதை என்ன?'ன்னு மனசுக்குள் கேள்வி ஓடிட்டே இருந்தது. என் அப்பா, ஒரு கபடி வீரர். அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங் களைச் சொல்லி இருந்தார். அதைக் கதையாக்கி, காட்சிகள் அமைச்சேன். நண்பர்கள்கிட்ட கடன் வாங்கி, மாடல் ஷூட்டிங் நடத்தினேன். ஸ்க்ரிப்ட், டேட்ஸ், லொகேஷன், பட்ஜெட் எல்லாம் ரெடி. தயாரிப்பாளர் மட்டும் தேவை. ஆனந்த் சக்ரவர்த்தின்னு ஒரு தயாரிப்பாளர். ஏற்கெனவே ஒரு படம் தயாரித்து, சரியாகப்போகாமல் நொந்துபோய் இருந்தார். அவரிடம் கதை சொன்னேன். 'கதையோடு சேர்த்து மத்த விஷயங்களையும் இவ்வளவு டீடெய்லா வொர்க் பண்ணியிருக்கீங்களே'ன்னு பாராட்டிட்டு, தயாரிக்கச் சம்மதிச்சார்.

'வெண்ணிலா கபடிக் குழு' ஹிட் ஆனதும் அடுத்துஅடுத்து வாய்ப்புகள் வந்தன. இப்போது என் சினிமாவை நான் தீர்மானிக்கிறேன். ஒரு இயக்குநராக, இதுதான் என் கனவு.

எந்தத் துறையில் இருக்கிறீர்களோ, அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு உண்மையாக இருங்கள். எனக்கு சினிமாவைத் தவிர, வேறு அவுட்லெட் கிடையாது. எந்தத் துறையாக இருந்தாலும், வந்த வேகத்தில் இருந்த உற்சாகம், வயது ஏற ஏறக் குறைந்துகொண்டே போகும். அப்படிக் குறையவிடாமல் பார்த்துக்கொள்வதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. அதுதான் வெற்றியின் சூட்சுமமும்!

எப்போதும் எனர்ஜியுடன் இருப்பதுதான் அவசியம். நிறையப் படிப்பது, எழுதுவது என ஒவ்வொரு நாளும் என்னை வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். உங்கள் துறைக்கு, உங்கள் வளர்ச்சிக்கு என்ன தேவையோ... அதைச் சிறிய அளவிலாவது செய்து கொண்டே இருங்கள் தினந்தோறும்.

என் வெற்றிக்குக் காரணம்... தினமும் ஒரு மாணவனைப்போலக் கற்றுக்கொண்டே இருப்பது. காரணம், எளிமையானதுதான். ஆனால்... உண்மையானது!"


"நான் பிரபு சாலமன் ஆனது எப்படி?"
நா.கதிர்வேலன், படம்:கே.ராஜசேகரன்

'டூப்' நடிகராக இருந்து அசல் இயக்கு நராக மாறியவர் பிரபு சாலமன். கடலினும்

பெரிய பொறுமையுடன் காத்திருந்து வெற்றிக் கனி பறித்தவரின் கதை இது!

"நெய்வேலி, எனக்குச் சொந்த ஊர். குடும்பத்துல யாருக்கும் சினிமா பரிச்சயம் கிடையாது. சின்ன வயசு நினைவுகளில்முத்து காமிக்ஸ் மட்டும்தான் பளிச்சுனு ஞாபகத்தில் இருக்கு. இரும்புக் கை மாயாவியின் அட்ட காசங்கள், வீர தீர சாகசங்கள், திக் திகீர் திருப்பங்கள் எல்லாமே என்னை வேற ஓர் உலகத்தில் உலவச் செய்யும். உதிரித் துண்டு ஃபிலிம்களைச் சேகரித்து, அதிலேயே ஒரு கதை கோத்துத் திரையிடுவேன். அதற்காக அப்பாவின் பழைய வேட்டிகள் 'டார் டார்'னு கிழிக்கப்படும். அப்பாவுக்கு ஆரம்பத்துல இருந்தே என்னோட இந்த நடவடிக்கைகள் கவலையை உண்டாக்கின. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எங்க ஊர் அமராவதி தியேட்டர்ல புதுப் படம் போடுவாங்க.எந்தப் படம் போட்டாலும், முதல் ஆளா டிக்கெட் வாங்கிடுவேன்!

ப்ளஸ் டூ முடிச்சதும், ஒரு வேகத்துல சினிமா ஒளிப்பதிவாளர் படிப்புக்கு திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பிச்சேன். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தும், அம்மா அதை மறைச்சுவெச்சுட்டாங்க. தேதி எல்லாம் முடிஞ்ச பிறகுதான் என் கண்ணுல காமிச்சாங்க. அப்புறம் ஆங்கில இலக்கியம் படிச்சேன். அப்படியே சென்னைக்குக் கிளம்பிட்டேன்.

நடுநடுவே இயக்குநர்கள் விக்ரமன், பார்த்திபன்கிட்ட சேர முயற்சிகள். எதுவும் பலன் அளிக்கலை. சென்னையின் அதிர்ச்சி கரமான பக்கங்கள் அப்போதான் எனக்கு அறிமுகம் ஆனது. முதன்முதலா நான் வந்த நோக்கம் தவறி, 'நம்ம அண்ணாச்சி' படத்துல சரத்குமாருக்கு 'டூப்'பாகத் தோன்றி னேன். சரத்துக்கு மூணு வேஷம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவருக்கு இணையாக, ஆனால், முதுகு மட்டும் தெரியுற மாதிரி நிப்பேன். அந்தப் படத்தில் சுந்தர்.சி அசோசியேட் டைரக்டர். அப்ப தினமும் 15 ரூபாய் பேட்டா. மாசம் 400 ரூபாய்சம்பளம். எந்த ஒரு நிலையையும் அடையறதுக்கு முன்னாடி, கல்யாணம் செய்துட்டேன். என் மனைவி புனிதா, நான் எப்படியும் முன்னுக்கு வருவேன். பெரிய வெளிச்சம் கிடைக்கும்னு நம்பின பொண்ணு. என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கரிச்சுக் கொட்டி இருந்தா, என்னால் எதுவும் சாதித்து இருக்க முடியாது. வீடுதான் முதல் நிம்மதி!

அதற்குப் பின்னாடி சுந்தர்.சி, அகத்தியன் சார்கிட்ட உதவி டைரக்டரா இருந்தேன். சினிமாவின் பல விஷயங்கள் பிடிபட்ட மாதிரி தெரிந்தது. முதல் படம் 'கண்ணோடு காண்பதெல்லாம்' சரியாப் போகலை. முதல் படம் தோல்வி அடைஞ்சவங்க சினிமாவில் எழுந்தி ருக்கிறது ரொம்ப கஷ்டம். கண்ணு முழி பிதுங் கும். ஆனாலும் மனசு மட்டும் தளரவே இல்லை. ஒண்டுக் குடித்தனம். புன்சிரிப்பு மாறாமல் புனிதா. எழுந்திரிச்சு உட்கார்ந்து டலாம்னு தோணுச்சு. அப்புறம் 'கிங்', 'கொக்கி', 'லீ', 'லாடம்'னு அடுத்தடுத்து பண்ணினேன். 'கொக்கி' பல்லைக் கடிச்சுக்கிட்டு சிக்கனத்தின் உச்சியில் எடுத்த படம். தினச் செலவு ஐயாயிரத்தைத் தாண்டாது. அந்தப் படம் திரும்பிப் பார்க்கவைத்தது.

என் பிரார்த்தனைகள் வீணாகலை. தேவா லயம் எங்கும் என் பிரார்த்தனைகள் இறைஞ்சு கிடந்ததை ஆண்டவன் பார்த்திருக்கலாம். என் வேண்டுதலைக் கேட்டு இருக்கலாம். அப்படி ஒரு சமயத்தில் மனசுக்குள் வந்த கதைதான் 'மைனா'. வெற்றியைப் பார்த்த பிறகு பொறுப்பு உணர்ச்சி வருது. கூடவே, இன்னும் கவனமா இருக்கணும்னு எச்சரிக்கையும் வருது.

ஏதோ ஒரு படம் எடுத்து, யாரோ ஒரு நடிகரைச் சந்தோஷப்படுத்துவதைவிட, இப்படி ரசிகர்களைச் சம்பாதிக்கலாம்னு தோணுது. 'மைனா' படம் பார்த்துட்டு வெளியே வந்தரஜினி சார் ஆரத் தழுவிக்கிட்டு, 'இந்தப் படத்தில் நான் ஒரு சின்ன கேரக்டர் செய்திருந்தால் எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும்'னு சொன்னார்.

கமல் சார் 'எனக்கு இன்னிக்கு தூக்கம் நல்லா வரும். ஏன்னா, நல்ல படம் பார்த்ததால் வருகிற நிம்மதி அது'ன்னு சொன்னார். கரை கொள்ளாத சந்தோஷம். அவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்தும் இப்படி வார்த்தைகள் வருவதற்கு எவ்வளவு கொடுத்துவெச்சிருக் கணும் பாருங்க!

எனக்கென்னவோ எந்த வெற்றிக்கும் அதிர்ஷ்டம் காரணம் இல்லைன்னு தோணுது. உழைப்பு, சுய சிந்தனை, உழைச்சுக்கிட்டே இருக்கிற மனசு எல்லாமே இருக்கணும். சினிமாவில் இருந்தும் குடிக்கிறது, சிகரெட் புகைக்கிறதுன்னு எதுவும் இல்லாமல் இருக்கேன். இறைவனுக்கு முன்னாடி பொய் சொல்லக் கூடாது. பொறுமையா இருங்கன்னு சொல்ல லாம்னு படுது. இசையாகவும் பிம்பமாகவும் சொல்ல வேண்டிய கதையை எப்படிச் சொல்லி படம் ஆக்கப்போறோம்னு நினைச்சு நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பிச்சதுதான் ஷாலோம் ஸ்டுடியோ. பொறுத்தார் பூமி ஆள்வார். மூணே மூணு வார்த்தை தான். ஆனால், உண்மையும் இதுதான்!"


''நான் முத்துமாரி ஆனது எப்படி?''
- பாரதி தம்பி படம்: வீ.நாகமணி

புழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்!

முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக் கும் கரிசல் மண் பெண்!

வாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை!

''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் படிக்கணும்.' அது மட்டும்தான் தெரியும். அதனால, டீச்சர் என்ன படிச்சுக் குடுத்தாலும் உடனே படிச்சிருவேன். பத்தாங்கிளாஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.

கள்ளிக்குடி பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகுதான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை வந்து வெறியோடு படிச்சேன். எப்பமும் படிப்புதான். ப்ளஸ் டூ-ல 1026 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துல இரண்டாவதா வந்தேன். எங்க ஊருக்கு அதெல்லாம் பெரிய மார்க். ஆனா, ஒண்ணுத்துக்கும் பயன்படலை. இன்ஜி னீயரிங் காலேஜ்ல பேமென்ட் ஸீட்டுதான் கிடைச்சது. அதுக்கு லட்சக்கணக்குல பணம் கட்டச் சொன்னாங்க. எங்க வீட்டுல முடியலை. அதுக்காக என்ன செய்ய?

பிறகு, விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்ரி சேர்ந்தேன். 'நல்லாப் படிக்கிற பிள்ளையை இப்படி ஹிஸ்ட்ரில சேர்த்துவிட்டிருக்குறதப் பாரு'ன்னு ஊரெல்லாம் எங்க அம்மா, அப்பாவைக் கேலி பண்ணாங்க. 'வரலாறு படிச்சா அரசாங்க வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும். இப்பல்லாம் அரசாங்கத்துல ஹிஸ்ட்ரி வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்குறது இல்லை' அப்படி, இப்படின்னு ஆளாளுக்கு சொன்னாங்க. அதைக் கேட்டு எங்க வீட்டுக்கும் வருத்தம். நானும் அழுவேன். மெள்ள மெள்ளத் தேறி, 'சரி எதுவா இருந்தா என்ன? படிக்கிறதை ஒழுங்காப் படிப்போம்'னு படிக்க ஆரம்பிச்சேன். டிகிரி ரிசல்ட் வந்தப்போ பி.ஏ.ஹிஸ்ட்ரியில நான்தான் யுனிவர்சிட்டி கோல்டு மெடல்.

அடுத்தது என்ன பண்றதுன்னும் தெரியலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே படிக்காததுனால விவரம் சொல்ல யாரும் இல்லை. நாங்களா உக்காந்து பேசி 'டீச்சருக்குப் படிச்சா என்னிக்கு இருந்தாலும் வேலை கிடைச்சிரும்'னு முடிவு பண்ணினோம். சேலம் சாரதா பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., சேர்ந்தேன். ஒரு வருஷம் ஹாஸ்டல். அரசாங்க ஸீட்டுங்கிறதால பெருசாச் செலவு இல்லை. படிச்சு முடிக்கும்போது என்கூட காலேஜ்ல படிச்ச புஷ்பராணியைப் பார்த்தேன். அவங்க மதுரையில தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தாங்க. 'நானும் ஐ.ஏ.எஸ்., எழுதணும். என்ன பண்ணணும்?'னு கேட்டதுக்கு, 'தினமும் பேப்பரைப் படி. அதுல வர்ற அறிவிப்புகளைப் பார்த்துக்கிட்டே இரு'ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் வீட்டுல தினமும் பேப்பர் போடச் சொல்லி படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் ஒருநாள் 'சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை' சார்பா சென்னையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி கொடுக்கிற தகவல் தெரிஞ்சது. அங்கே போனேன். சின்ன தேர்வுவெச்சு சேர்த்துக்கிட்டாங்க. அதுவரைக்கும் சென்னைக்கு நான் வந்ததே இல்லை. ஆனா, அந்தப் பயமே தெரியாம அத்தனை அன்போடு அக்கறையோடு கவனிச்சுக்கிட்டார் துரைசாமி சார். இந்த ரெண்டு வருஷத்துல நான் சாப்பிட்ட சாப்பாடு, துணிமணி எல்லாம் அவர் தந்ததுதான். நானெல்லாம் சென்னைக்கு வந்து படிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்.

2008-ல் நான் இந்த ஐ.ஏ.எஸ்., அகாடமியில் வந்து சேர்ந்தேன். சிவில் சர்வீஸ் எழுதுறதுதான் நோக்கம். ஆனா, 2009 ஆரம்பத்தில் குரூப்-1 எக்ஸாம் வந்தப்போ, எங்க குடும்ப நிலைமையை மனசுலவெச்சு அதை எழுதலாம்னு நினைச்சேன். அகாடமியில் சொன்னப்போ, 'தாராளமா எழுதுங்க'ன்னு சொல்லி அதுக்குரிய புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்தாங்க. ராத்திரி பகலா எனக்குப் படிக்கிறதுக்கு எல்லாரும் உதவி பண்ணாங்க. ஆரம்பக் கட்டத் தேர்வு, பிறகு எழுத்துத் தேர்வு, அப்புறம் நேர்முகத் தேர்வு எல்லாம் வரிசையா முடிஞ்சு போன மாசம்தான் தேர்வு முடிவு வந்துச்சு. முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வுல ஜெயிச்சுட்டேன். இப்போ நான் டெபுடி கலெக்டர்!'' என்கிறார் முத்துமாரி கம்பீரமாக.

''இனி என் நோக்கம் ஐ.ஏ.எஸ்-தான். தொடர்ந்து சிவில் சர்வீஸ் எழுதுவேன். சத்திரரெட்டியப்பட்டியின் முதல் ஐ.ஏ.எஸ்., நானாக இருப்பேன்!''

வாழ்த்துக்கள் முத்துமாரி!


''நான் சீமான் ஆனது எப்படி?''

பாரதிதம்பி, படங்கள்: கே.ராஜசேகரன்

சீமான்... கோபத் தமிழன்!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

''சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. எங்கள் ஊரைச் சுற்றி பல்வேறு கிராமிய நாடகங்களும் கூத்துக்களும் நடக்கும். அதைப் பார்த்துவிட்டு வந்து அதேபோல வீட்டில்நடித்துக் காட்டுவேன். அது படிப்படியாக வளர்ந்து, கலை வடிவங்கள் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இளையான்குடியில் பள்ளிப் படிப்புக்குப்போன போதும் கலை ஆர்வம் தொடர்ந்தது.

எல்லாவிதச் சாதிய அடக்குமுறைகளும் உயிர்ப்புடன் இருந்த கிராமத்தில், ஊரின் நடவடிக்கைகள் எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கின. கண்மாய்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எங்கள் ஊரில், அதே கண்மாயில்தான் குளிப்பார்கள். கண்மாயின் ஓர் இடத்தில் ஒரு கல் போடப்பட்டு இருக்கும். அங்கு ஒரு சாதியினர் குளிப்பார்கள். கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் இன்னொரு கல். அங்கு வேறொரு சாதியினர் குளிக்க வேண்டும். இப்படி, சாதிக்கு ஒரு கல் போட்டுக் குளித்த கண்மாய், சாதியின் கொடூரத்தை எனக்குப் போதித்தது.

இன்னொரு பக்கம், ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் கொஞ்சம் பேர் இரவில் காவல் காப்பார்கள். 'மக்களைக் காக்க வேண்டிய காவல் தெய்வத்தையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என்றால், அப்புறம் என்ன அது காவல் தெய்வம்?' என்று இயல்பாகவே கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விகள் என்னை பெரியாரிடம் கொண்டுசேர்த்தன.

இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தேன். அங்கு அறிமுகமான கார்ல்மார்க்ஸ், வர்க்க அடிப்படையில் இந்தச் சமூகத்தைப் பார்க்கக் கற்றுத்தந்தார். கல்லூரி முடித்ததும் 'சினிமாவுக்குப் போகிறேன்' எனக் கிளம்ப, இரண்டு மூட்டை மிளகாய் விற்ற பணத்தைக் கைச்செலவுக்குத் தந்து என்னைப் பேருந்து ஏற்றிவிட்டார்கள் அப்பாவும் அம்மாவும். சென்னைக்கு வந்து உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடல்களில் பலகட்டத் தோல்வி அடைந்த நிலையில், 'என்றும் அன்புடன்' இயக்குநர் பாக்கியநாதனைச் சந்தித்தேன். அப்போது அவரும் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார். தங்குவதற்கு இடம் இல்லாத நிலை யில், பகல் எல்லாம் வாய்ப்புத் தேடிவிட்டு, இரவில் ஏவி.எம். அருகே ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொள்வோம். இதைப் படிக்கும் தம்பிகள், வாழ்வில் வெற்றி என்பது இவ்வளவு துயரமானதா என எண்ணிவிடக் கூடாது. அது இஷ்டப்பட்டு ஏற்ற கஷ்டம். இலக்கை அடையும்வரை தின வாழ்வின் சுமைகளை ஒருபொருட்டாகக் கருதாதது என் இயல்பு.


பிறகுதான் அப்பா மணிவண்ணனின் தொடர்பு கிடைத்து, அவரிடம் 'அமைதிப் படை', 'தோழர் பாண்டியன்' படங்களில் பணிபுரிந்தேன். 'ராசா மகன்' படத்துக்குக் கதை வசனம் எழுதும்போது, அப்பா பாரதிராஜாவின் தொடர்பு கிடைத்தது. அதன் மூலமாக, 'பசும்பொன்' படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். அப்போது, அண்ணன் பிரபுவைச் சந்தித்ததுதான் என் திரை வாழ்வின் திருப்புமுனை. அவர் கொடுத்ததுதான் 'பாஞ்சாலங்குறிச்சி' வாய்ப்பு. அதன் மூலம் இயக்குநர் ஆனாலும், என்னால் அடுத்தடுத்து வெற்றிகளைத் தர முடியவில்லை. 'இனியவளே', 'வீரநடை' இரண்டும் தோல்விப் படங்கள் ஆயின. ஆனாலும், மனம் தளராமல் புத்தகங்கள் படித்துக்கொண்டும், உடற்பயிற்சி செய்துகொண்டும் ஏழு வருடங்கள் தன்னம்பிக்கையோடு இருந்தேன். இறுதியாக வந்தது 'தம்பி' திரைப்பட வாய்ப்பு. அது மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தக் காலகட்டத்தில் எல்லாம் நான் பெரியார் திராவிடர் கழக மேடைகள், மார்க்சிய மேடைகளில் அடக்கப்படும் தமிழர் உரிமைகள் தொடர்பாகவும், தமிழ் இன நலன் சார்ந்தும் பேசத் தொடங்கி இருந்தேன். இலங்கையில் அழிக்கப்படும் தமிழ்ச் சொந்தங்களின் குரலை, உலகம் முழுக்கக் கொண்டுசேர்ப்பது என் கடமை எனக் கருதினேன். இந்தச் சூழ்நிலையில்தான் 'வாழ்த்துக்கள்' படம் முடிந்திருந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது. என் அரசியல் வாழ்வின் திருப்புமுனைத் தலைவனைச் சந்தித்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. குழந்தையின் சிரிப்பும், போராளியின் கம்பீரமும், தலைவனின் கனிவும் நிரம்பிய மனிதர் தலைவர் பிரபாகரன். அப்போது என் 'வாழ்த்துக்கள்' படம் வெளிவந்து தோல்வி அடைந்திருந்தது. 'நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதை எல்லாம். அடிக்கணும். திரையிலும் அடிக்கணும், தரையிலும் அடிக்கணும்' என்றார் தலைவர் வெடிச் சிரிப்போடு.

தன் நலம் கருதாத தலைவனைக்கொண்ட ஈழத் தமிழினத்தை, சிங்கள இனவெறியர்களும் இந்திய வல்லாதிக்கமும் சேர்ந்து அழித்தபோது, தமிழர்கள் பதைபதைத்தனர். அப்போது, தமிழ்த் திரை உலகினர் ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தில் நான் பேசிய பேச்சு, என்னை உலகம் முழுக்கக் கொண்டுசேர்த்தது. அதற்கு முக்கியக் காரணம், சன் தொலைக்காட்சி, என் 20 நிமிடப் பேச்சை நேரலை செய்ததுதான். பிறகு, எங்கெல்லாமோ கூட்டம் போட்டோம், அழிக்கப்படும் தமிழனைக் காக்க. ஆனால், ஆண்டாண்டு காலமாக ஆண்ட தமிழ்ப் பரம்பரையை நந்திக் கடலோரம் கொத்துக் குண்டுகள் வீசிக் கொன்றார்கள். கேட்க நாதி இல்லை. கேட்ட என்னைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். சீமான் பேசினால், அது தங்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அச்சப்பட்ட அரசு, என்னை நான்கு முறை கைது செய்து சிறையில் அடைத்தது.

எதிர்ப்பு என்பது தனி நபரிடம் இருந்து வருகிறபோது அது எழும் இடத்திலேயே அடக்கப்படுகிறது. அதை ஒரு கூட்டு நடவடிக்கையாக, இயக் கமாகச் செய்கிறபோது, எதிர்ப்பின் அடர்த்தி இன்னும் கூடுகிறது. அதனால்தான் பறிக்கப்பட்ட தமிழர் நலன்களை மீட்டெடுக்கத் தமிழ் இளைஞர்களின் எழுச்சி இயக்கமாக வரும் மே 18-ம் தேதி மதுரையில் உதயமாகிறது 'நாம் தமிழர்' அரசியல் இயக்கம்.

ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலே இங்கு வெற்றிடமாக இருக்கிறது. இந்த அரசியல் வெற்றிடத்தைக் கற்றவர்கள் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், கயவர்கள் நிரப்பிவிடுவார்கள். அதற்கான இயக்கம்தான் 'நாம் தமிழர்'. இது மற்றுமோர் அரசியல் கட்சி இல்லை. மாற்று அரசியல் புரட்சி. எந்த நாளில் நாங்கள் வீழ்ந்தோம் என நினைத்தீர்களோ, அதே நாளில் நாங்கள் எழுகிறோம். வென்றாக வேண்டும் தமிழ். ஒன்றாக வேண்டும் தமிழர். நாம் தமிழர்!''
"நான் சுவி ஆனது எப்படி?"
ம.கா.செந்தில்குமார்

"என் பெயர் சுவேதா சுரேஷ். 'சுவேதா'ன்னா பழகின வார்த்தையா இருக்கேனு,

ஸ்டைலா 'சுவே'னு சுருக்கமா வெச்சுக்க விரும்பினேன். 'குருவி' படத்தில் ஒரு ராப் பாடினேன். பட டைட்டில் கார்டில் என் பேரைத் தவறுதலா 'சுவி'ன்னு போட்டுட்டாங்க. ஓ.கே. சுவியும் சூப்பரா இருக்குன்னு அந்தப் பெயரிலேயே இருக்கிறேன்!" - பாடுவதுபோன்றே இனிமையாகப் பேசுகிறார் சுவி. வளர்ந்து வரும் பின்னணிப் பாடகி. பாடிக்கொண்டே ஆடி மேடைகளை கலர்ஃபுல் ஆக்குவது சுவி ஸ்டைல்.

"மலையாளக் குடும்பம். பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில். கார்மென்ட் பிசினஸ் செய்யும் அப்பா, ஹோம் மேக்கர் அம்மா, 10-வது படிக்கும் தங்கை என அளவான குடும்பம். ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் படித்தேன். அட்வான்ஸ் ஜுவாலஜி பயோடெக்னாலஜிதான் என் டிகிரி படிப்பு. எங்கள் குடும்பம் இசைப் பாரம்பரியத்தில் வந்தது கிடையாது. எனக்கு மட்டும் சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம். சினிமாப் பாடல்களைவிட, ஆங்கிலப் பாடல்கள் மீது ஈர்ப்பு.

கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது எஸ்.எஸ். மியூஸிக் சேனலில் இந்திய அளவில் குரல் தேர்வுக்கான ரியாலிட்டி ஷோ ஒன்று நடந்தது. 6,000 போட்டியாளர்களில் இருந்து என்னையும் சேர்த்து ஐந்து பேரை மட்டும் தேர்வு செய்தனர். பென்னி தயாள், அனைத்தா நாயர், பார்கவி பிள்ளை, அர்ஜுன் சகி ஆகிய நால்வரும் தேர்வான மற்றவர்கள். மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று.

அதன் பின்னர், ஒரு வருட ஒப்பந்தத்தில் நாங்கள் ஐந்து பேரும் சோனி மியூஸிக்குக்காகப் பணியாற்றினோம். அப்போது பிரவீன் மணியின் கம்போஸிங்கில் 'இசை' என்ற ஆல்பம் தயாரித்தோம். அதில் நான் பாடிய 'மலரே' என்ற பாடல் பிரபலமானது. அமெரிக்கா சென்று ஃபாரன்ஸிக் சயின்ஸ் எம்.எஸ். படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். இன்னொரு பக்கம், என் பாடல்களைப் பதிவுசெய்த டெமோ சி.டி-க்களை வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்னு பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்திருந்தேன்.

அமெரிக்கா கிளம்ப முடிவு செய்திருந்த சமயத்தில், 'சரோஜா' படத்தில் பாட யுவனிடம் இருந்து அழைப்பு வந்தது. 'கோடான கோடி' பாடலைப் பாடும் வாய்ப்பு தந்தார். 'உங்க வாய்ஸ் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கு. அந்த டைப் பாடல்களையே கேட்டு வளர்ந்ததால், அப்படி இருக்கும்னு நினைக்கிறேன்' என்றார். வீட்ல எல்லாரும் மலையாளம்தான் பேசணும் என்பதில் அப்பா ரொம்ப கண்டிப்பா இருப்பார். ஸ்கூல், காலேஜ்னு வெளியில் இங்கிலீஷ்லதான் பேசுவேன். அதனால், மலையாளம், ஆங்கிலம் கலந்த என் தமிழ் ரொம்ப காமெடியா இருக்கும்.

இனிமே நம்ம பொழுதுபோக்கு, பிழைப்பு, எதிர்காலம் எல்லாமே பாட்டுதான்னு முடிவுக்கு வந்ததும், தமிழைத் தவறு இல்லாமல் பேசவும் பாடவும் கத்துக்கிட்டேன். 'ஏகன்', 'சர்வம்', 'வாமனன்' எனத் தொடர்ந்து படங்களில் பாட வாய்ப்பு வந்தது. இதற்கிடையில் சங்கீதத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ளும் ஆசையில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் வகுப்புகள்.

கனவுலகில் மிதப்பவள் நான். சிறு வயதில் இருந்தே என் அறையை மேடையாகவும், கையில் கிடைக்கும் பொருளை மைக்காகவும் நினைத்து டான்ஸ் ஆடியபடி பாடிக்கொண்டே இருப்பேன். உலகமே என்னைக் கொண்டாடுவதுபோல் ஒரு கனவில் திரிவேன். அந்தப் பழக்கம் தந்த பயிற்சியினால், பார்வையாளர்களை வசப்படுத்தும் ஸ்டேஜ் அட்ராக்ஷன் கை கூடி, எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. 'மாசிலாமணி'யில் வரும் 'ஓடி ஓடி விளையாடு' பாட்டுதான் சென்னையைத் தாண்டி என்னைச் சென்றடையவைத்தது. 'ஆதவன்' படத்தில் நயன்தாரா அறிமுகமாகும் 'தேக்கோ... தேக்கோ' பாடலைப் பாடும்போது படபடப்பில் வாயில் இருந்த சூயிங் கம்முடன் பாடிவிட்டேன். பாதி பாடல் பாடிய பிறகுதான் வாயில் சூயிங் கம் இருப்பதை உணர்ந்தேன். 'பரவாயில்லை... இதுவும் புதுசாத்தான் இருக்கு. சூயிங் கம்மை எடுக்காமல் அப்படியே தொடர்ந்து பாடு'ன்னார் ஹாரிஸ் ஜெயராஜ். ரஹ்மான் சார் இசையில் 'ராவணன்' 'கெடாக் கறி' பாட்டு என் லேட்டஸ்ட் ஹிட்.

நான்கைந்து பேர் சேர்ந்து கிதார், டிரம்ஸ் சகிதம் லைவ் பேண்ட் ஒண்ணு வெச்சிருக்கோம். ஆங்கிலப் பாடல்களை விரும்பும் மக்களுக்காக நிகழ்ச்சிகளை நடத்துவோம். பிரவீன் மணி சார் இசையில் 'டெலிரியஸ்' என்ற ஆல்பம் தயாரிச்சுட்டு இருக்கேன். இதில் நானே பாடல்களை எழுதிப் பாடுறேன்.

ஒருத்தருக்கு எவ்வளவு கவலை, கஷ்டம் இருந்தாலும் நான் பாடுற பாட்டைக் கேக்கும் அந்த சில நிமிஷங்கள் அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கு என்ன பண்ணலாம்? சந்தோஷம்கிறது கரன்ட் மாதிரிதானே. தொடத் தொட எல்லோருக்கும் பரவும். நான் எப்பவும் சந்தோஷமா இருந்தா, என் குரலிலும் அது வெளிப்படும். அதைக் கேக்குறவங்களும் சந் தோஷமா இருப்பாங்க. சரிதானே!"


"நான் ஜானகி ஆனது எப்படி?"
பாரதி தம்பி

தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து இந்தியத் தலைநகரில் இயங்கும்

தேசிய நாடகப் பள்ளியில் (National School of Drama) சேர்ந்திருக்கும் முதல் தமிழ்ப் பெண் ஜானகி. வாய்ப்பும் பின்னணியும் உள்ளவர்கள் மட்டுமே அறிந்து இருக்கும் 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் இவர் நுழைந்தது எப்படி?

"கன்னியாகுமாரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பக்கம் தேவசகாய மவுன்ட் என்கிற கிராமம் எனக்கு. அப்பா விவசாயக் கூலி. இப்போ வயசாயிட்டதால ஆடு மேய்க்கிறாரு. அம்மா சத்துணவு ஆயா வேலை பார்த்தாங்க. அவங்களுக்கும் வயசானதால இப்போ கூலி வேலைதான் பார்க்குறாங்க. நாங்க அஞ்சு பிள்ளைங்க. மூணு அக்கா, ஒரு அண்ணன். நான்தான் கடைசி. வறுமையான குடும்பம். இப்பமும் அன்னன்னிக்கு கூலி வேலை செஞ்சுதான் சாப்பிட்டாகணும். அதனால வறுமை எல்லாம் பெருசா தெரியலை, பழகிப்போச்சு!

'களியல்'னு ஒரு நாட்டுப்புறக் கலை இருக்கு. ரெண்டு கையிலயும் சின்னதா ரெண்டு கம்பு வெச்சுக்கிட்டு, வீரமா சுத்திச் சுத்தி ஆடணும். எங்க அம்மாவோட அப்பா களியல் ஆடுறதுல பெரிய ஆளு. அதைப்பார்த்து வளர்ந்த எங்க அம்மா, நாங்க சின்னப் பிள்ளையா இருக்கும் போது பள்ளிக்கூடத்துல ஏதாச்சும் போட்டின்னா களியல் ஆடச் சொல்லுவாங்க. இவ்வளவுதான், கலைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. என் அண்ணன், அக்கா எல்லாரும் ஏழு, எட்டு படிச்சுட்டு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச் சுட்டாங்க. நான் மட்டும்தான் ப்ளஸ் டூ படிச்சேன். அதுக்கு மேல படிக்க வீட்ல வசதி இல்லை. ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போகணும். நான் 'களரி மக்கள் பண்பாட்டு மையம்' அமைப்புல வேலைக்குப் போனேன். ஊர் ஊராப் போய் வீதி நாடகம் போடுறது, விழிப்பு உணர்வுப் பாடல்கள் பாடுறதுதான் வேலை. புத்தகம் வாசிக்கிறது, அதைப்பற்றி விவாதிக் கிறது, கஷ்டப்படுற மக்களோட வாழ்க்கையைக் கலை வடிவத்துக்குள்ள கொண்டுவர்றதுன்னு புதுசா நிறையத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும், 'மேற்கொண்டு படிக்க முடியலை யே'ங்குற ஆதங்கம் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

நாகர்கோவில் பக்கத்தில் அறிஞர் அண்ணா கல்லூரியில் சேர விண்ணப்பிச்சேன். நான் பள்ளிக்கூடம் முடிச்சு ஒரு வருஷம் சும்மா இருந்ததால் சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. 'குடும்ப வறுமையாலதான் சார் வர முடியலை. இனிமேட்டு ஒழுங்கா வர்றேன்'னு தினமும் போய் அந்த பிரின்சிபல் முன்னாடி நிற்பேன். 20 நாளாச்சும் தொடர்ந்து போய் இருப்பேன். கடைசியில், 'சொன்னா புரியாதா... வெளியே போம்மா'ன்னு விரட்டி விட்டுட்டாங்க. கொஞ்ச நாள் அழுதேன். அப்புறம் 'சரி... அழுது என்ன ஆகப் போகுது?'ன்னு அஞ்சல்வழியில் பி.ஏ., தமிழ் படிச்சேன்.

மூணு வருஷம் கழிச்சு நாகர்கோவிலில் இயங்கும் முரசு கலைக் குழுவில் சேர்ந்தேன். அது முழுக்க முழுக்க கலை ஆர்வம் உள்ள நண்பர்கள் சேர்ந்து நடத்துறது. எப்பவும் நாடகம், நடிப்பு, பாடல்கள், நிகழ்ச்சின்னு போகும். என்னோட இந்த அடையாளத்துக்குக் காரணம் அவங்கதான். 2007-ம் வருஷம் காலச்சுவடு பத்திரிகையும் தேசிய நாடகப் பள்ளியும் சேர்ந்து, நாகர்கோவிலில் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தினாங்க. கலைக் குழுவில் இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு என்னை அதில் சேர்த்துவிட்டாங்க. அதுக்குப் பிறகு, முழுமையா தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து படிக்கணும்னு எனக்கும் ஆசை வந்துச்சு.

2008-ம் வருஷம் பெங்களூரில் இன்டர் வியூ. இந்தியில் ஒரு கவிதை குடுப்பாங்க. அதை அப்படியே பாவனையோடு நடிச்சுக் காட்டணும். அப்புறம் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லணும். இந்தி, இங்கிலீஷ் ரெண்டும்தான் மொழி. எனக்கு ரெண்டுமே தெரியாது. இந்த விஷயம் ஏற்கெனவே தெரியும் என்பதால், முரசு கலைக் குழுவில் இருந்து மூணு மாசம் இந்தி வகுப்புக்கு அனுப்பி வெச்சாங்க. நானும் வாத்தியார்கிட்ட இந்தி படிச்சுட்டு தான் இன்டர்வியூவுக்குப் போனேன். அவங்க கேக்குறது புரியுது. ஆனால், பதில் சொல்ற அளவுக்கு இந்தி, இங்கிலீஷில் பேச முடியலை. அங்கே இருந்த ஒரு சார்கிட்ட 'எனக்கு விடை எல்லாம் தெரியுது. நான் தமிழ்ல சொல்றேன். அப்படியே அதை அவங்களுக்கு இங்கிலீஷ்ல சொல்றீங்களா?'ன்னு கேட்டு, தமிழில் பதில் சொன்னேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு அடுத்த கட்டத்துக்குத் தேர்ந்தெடுத்தாங்க. டெல்லி வொர்க்ஷாப் போனேன். மறுபடியும் அங்கே மொழிப் பிரச்னை. திருப்பி அனுப்பிட்டாங்க.

மறுபடியும் நாகர்கோவில் வந்து, கலைக் குழு நிகழ்ச்சிகள் போக, மத்த நேரம் முழுக்க இந்தியும் இங்கிலீஷ§ம் படிச்சேன். ஒரு வருஷம் கழிச்சு, மறுபடியும் பெங்களூரு இன்டர்வியூ, டெல்லி வொர்க் ஷாப் எல்லாம் முடிச்சு என்.எஸ்.டி-யில் சேர்ந்துட்டேன். இந்தியா முழுக்கவும் நாடகக் கலையில் முன்னணியில் உள்ள எல்லா கலைஞர் களும் இங்கே வந்துட்டே இருப்பாங்க. தினம் தினம் புதுப்புது பயிற்சிகள், அனுபவங்கள் கிடைக்குது.

இப்பவும் என்னால் இந்தியும் இங்கிலீஷ§ம் நல்லாப் பேச முடியாது. தெரிஞ்சதைப் பேசுறேன், தெரியாததைக் கத்துக்குறேன். வகுப்பு நடக்கும்போது எனக்கு எதுவும் வார்த்தை புரியலைன்னா நிறுத்திருவேன். அதுக்கு விளக்கம் கேட்டுட்டுதான் அடுத்து நடத்தவிடுவேன். என் செட்ல ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒரு பழங்குடிப் பையன் இருக் கான். அவனும் நானும்தான் சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவங்க. மத்த எல்லாருமே ரொம்பப் பணக்காரங்க!

எனக்கு இதில் படிச்சு பெருசா எதையாச்சும் பண்ணணும்னு எல்லாம் ஆசை இல்லை. இதே துறையில் கடைசி வரை இருக்கணும். ஆரம்பத்துல நான் நாடகத்துல நடிக்க வந்தப்போ 'உன் மொவ ஆடப் போயிருக்காளா?'ன்னு எங்க அம்மா, அப்பாவை ஊர்ல உள்ளவங்க கேட்பாங்க. இப்பதான் அவங்களும் என்னைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

என் அப்பா தேவசகாயம், அம்மா விரிசித்தாள், அப்புறம் முரசு கலைக் குழு எல்லாருக்கும் ரொம்ப நன்றி!"


''நான் செந்தில்வேலன் ஆனது எப்படி?"

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்



செந்தில்வேலன்... தஞ்சை மக்களின் மதிப்பிற்குரிய காவல் துறைக் கண்காணிப்பாளர். இளம் வயதிலேயே சிக்கல்கள் கடந்து சிகரம் தொட்ட மிஸ்டர் நம்பிக்கை. மிடுக்கான தோற்றம், துடிப்பான வேகத்தோடு டெல்டா பூமியில் ரவுடியிசத்தைக் களை எடுத்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தஞ்சை மக்களுக்குக் காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடி எஃப்.ஐ.ஆர். வழங்கப்படுகிறது. ஆச்சர்யமாக அதன் மீது துரித நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மருத்துவம் படித்தவர் என்பதால், அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை, உடல் நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார். ''எனக்குச் சொந்த ஊர் மதுரை. என் அப்பா, தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியா இருந்தார். அம்மா... ஆசிரியை. மூணு அக்கா. நான்தான் கடைசிப் பையன். என் தாத்தாவோட அப்பா 'பிரிட்டிஷ் இந்தியா' காலத்தில் போலீஸா இருந்தவர். என் தாத்தாவும் போலீஸ்தான். அதனால், சின்ன வயசுல இருந்தே போலீஸ் ஆகணும்னு எனக்கும் ஆசை. ஆனா, என் அப்பா நான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார். சின்னதாக் குழப்பம். 'முதல்ல அப்பா ஆசையை நிறைவேத்துவோம். அப்புறம் போலீஸ் ஆகலாம்'னு முடிவு பண்ணினேன். அப்பாவுக்காக மருத்துவம் சேர்ந்தேன். நல்லாப் படிச்சேன். ஆனா, அப்பா என்னை ஏமாத்திட்டார். நான் மூணாவது வருஷம் படிச்சுட்டு இருக்கும்போதே எங்களைத் தவிக்கவிட்டுட்டு இறந்துட்டார். மொத்தக் குடும்பப் பொறுப்பும் என் தோளில். 'ஒவ்வொரு பின்னடைவும் மாறுவேடத்தில் உள்ள வாய்ப்புதான்'னு சொல்வாங்க. அதனால், எல்லாத்தையும் பாசிட்டிவ்வாகப் பார்க்க ஆரம்பிச்சேன். மருத்துவம் முடிச்சுட்டு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தேன்.

எனக்குள் இருந்த போலீஸ் கனவோடு எப்பவும் நான் சமரசம் செஞ்சுக்கவே இல்லை. வேலை பார்த்துக்கிட்டே படிக்க ஆரம்பிச்சேன். சில சமயம் டபுள் டியூட்டி பார்க்க வேண்டிஇருக்கும். பல நாட்கள் தூங்க முடியாது. நோயாளிகள் வந்துட்டே இருப்பாங்க. ஒரு டாக்டரா அவங்களை 100 சதவிகிதம் கவனிச்சுக்க வேண்டியது என் கடமை. அதனால், டியூட்டி டைமில் படிக்கவே முடியாது. வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பிச்சேன். பஸ்ல போகும்போதும் படிப்பு. டீ குடிக்கும்போதும் படிப்பு. சாப்பிடும்போதும் படிப்பு. ரெண்டு நிமிஷ நேரம் கிடைச்சாலும் படிக்க ஆரம்பிச்சிடுவேன். ஒரு வருஷம் தூக்கம், பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. வேலை, படிப்புன்னு ஓடிட்டே இருந்தேன். தேர்வு எழுத வேண்டிய நேரம் வந்தது.

முழுசாத் தயாராகிட்டோமான்னு எனக்கே சந்தேகம். இருந்தாலும் நம்பிக்கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். எதிர்பார்க்காத ஆச்சர்யம். இந்திய அளவில் 86-வது ரேங்க். ஐ.ஏ.எஸ். ஆகவே வாய்ப்பு கிடைச்சது. ஆனால், ஐ.பி.எஸ்தான் என் சாய்ஸ்னு உறுதியா இருந்தேன். ஐ.பி.எஸ். ஆனேன். ஐம்மு-காஷ்மீரில் கடுமையான ராணுவப் பயிற்சி. ஆளை மறைக்கும் பனிப் படலத்துக்கு நடுவில் கடும் குளிரில் அதிகாலையில் உயரமான பாறைகள் மேல் ஏறணும். திடீர்னு பாறை உடைஞ்சு உருண்டு வரும். எந்நேரமும் கவனமா இருக்கணும். இதுதான் போலீசுக்கான பால பாடம். ராஜஸ்தானில் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பல நாட்கள் கிடந்தோம். எதுவுமே கஷ்டமாத் தெரியலை. ஏன்னா, சந்தோஷத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யப்படுகிற ஒவ்வொரு வேலையும் ஓர் அழகான அனுபவம். தொடர் பயிற்சியால் உடம்பு உறுதி ஆச்சு. மனசு பக்குவம் ஆச்சு.

முதல் முறையா ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஏ.எஸ்.பி பொறுப்பு. ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா. எப்பவும் சாதிக் கலவரம் பத்தியெரியக் கூடிய அசாதாரணச் சூழல். 'நெருக்கடிமிக்க சூழல்தான் அதிக அனுபவத்தையும், அதிக அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்'னு சொல்வாங்க. அது உண்மை. அடுத்ததா சிதம்பரத்தில் ஒரு வருஷம் ஏ.எஸ்-பியா இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல கோஷ்டிகளா இருந்தாங்க. கல்லூரிப் பருவத்துகே உரிய துணிச்சலும், கோபமும் அடிக்கடி மோதல் சூழலை உருவாக்கிட்டு இருந்தது. அதே சமயத்தில்தான் நடராஜர் கோயில் பிரச்னைகள். சக காவல் துறை நண்பர்களின் உதவியோடு எல்லா பிரச்னைகளையும் சுமுகமா முடிச்சேன். என்ன பிரச்னை வெடிச்சுக் கிளம்பினாலும், 'இந்தப் பிரச்னையை எப்படித் தீர்த்துவைக்கப் போறப்பா?'ன்னு எனக்குள் ஒரு செந்தில்வேலன் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுவான். அவன்கிட்ட கைதட்டு வாங்கணுமேன்னு வேகமா, முக்கியமா விவேகமாச் செயல் படுவேன். போன மாசம் தஞ்சாவூருக்கு இடமாற்றலாகி வந்தேன். இங்கே தாதாயிசம் அதிகம். திருட்டு வழக்குகளும் அதிகம். வந்ததும் ரவுடிகள் பட்டியல் எடுத்து ஒவ்வொருத்தரையும் தீவிரமாக் கண்காணிக்க ஆரம்பிச்சோம். ராத்திரி ரோந்து, கண்காணிப்புக் குழுக்கள்னு பல விஷயங்கள் அமல்படுத்தியதும் ரவுடிகள் சேட்டையைக் குறைச்சுட் டாங்க. இது ஒரு நல்ல துவக்கம். இன்னும் நிறைய தூரம் போகணும் தான். ஆனா, நல்ல துவக்கம் பாதி வெற்றிக்குச் சமம்னு சொல்வாங்க.

மக்களுக்கு எதிரா, சட்டத்துக்கு விரோதமா உள்ள எல்லா விஷயங்களையும் முடக்கணும். நல்லவங்க மட்டும்தான் ரோட்டில் தைரியமா நடமாடணும். அப்படி ஒரு சூழல் வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை!'' விறைப்பாகக் கை கொடுக்கிறார் செந்தில்வேலன்.


"நான் கோவன் ஆனது எப்படி?"
பாரதி தம்பி, படங்கள்:'ப்ரீத்தி' கார்த்திக்

கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று

உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். 'கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு... நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என் னடா பார்லிமென்ட்டு' என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். 'மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்த வர்கள் அனைவருக்கும் அறிமுகம்!
"கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப் பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். 'நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா... நித்தம் ஒரு சண்டையாகும்'னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசை யையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.

ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, 'நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே... காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க' என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.

இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. 'நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்'னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள... மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், 'போராளிகளின் முதல் தேவை துணிவு'ன்னு புரிஞ்சது.

கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். 'சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்'கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட் டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின்வாழ்க் கைபற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.

நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல் லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் 'நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்'னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் 'இன்னிக்கு சாப்பாடும், தங்குற இட மும் நீங்கதான் தரணும்'னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசு வோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.

எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை. அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு... புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, 'புரட்சி... புரட்சி' என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.

இந்து மத வெறி, தாமிரபரணி நதி... கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிரா கப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாத புரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!"

நான் ஷிகான் ஹுசைனி ஆனது எப்படி?
பாரதி தம்பி, ந.வினோத்குமார்

 

 

ஷிகான் ஹ§சைனி... கராத்தே, வில் வித்தை, இசை, நடனம், சங்கீதம், சிற்பம், ஓவியம், சமையல், நடிப்பு எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். பெசன்ட் நகர் வீடு முழுக்க விதவிதமான கலைப் பொருட்கள், சிற்பங்கள்.

''மதுரையில் பிறந்தேன். என் அப்பா, சரித்திரப் பேராசிரியர். அப்பாவுக்கு கொல்கத்தாவுக்குப் பணி மாறுதல் வந்தது. ஆறு வயது வரை அங்குதான். அப்பா என்னை ஜூடோ வகுப்புகளில் சேர்த்தார். அறிந்தும் அறியாத வயதில் உடம்பையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கும் அந்தக் கலையின் மீது ஈர்ப்பு வந்தது.

 

அப்பா மறுபடியும் மதுரைக்கே அழைத்து வந்தார். புனித மேரி பள்ளியில் சேர்ந்தேன். அப்போது ஆங்கிலத்தின் மீது எக்கச்சக்கக் காதல். ஆங்கில ஆசிரியர் ஸ்டீஃபன் ஊக்குவிக்க, சின்ன வயதிலேயே மேடைகளில் ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அளவுக்கு மொழி வளம் வளர்ந்தது. அதே பள்ளியின் ஃபாதர் ஃபிலிக்ஸ் ஜோசப், எனக்குள் ஒரு நடிகனைக் கண்டுபிடித்தார். நாடகங்களில் வார்த்தெடுத்தார். இஷ்டத்துக்கும் வரைந்து தள்ளுவேன். அந்தக் கிறுக்கல்களைக்கண்டு என்னை ஓவியனாக்கியவர் மாணிக்கம் சார். ஜெயராமன் மாஸ்டரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். இப்படி பள்ளிப் பருவத்திலேயே எல்லாக் கலைகள் மீதும் ஆர்வம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வெறி.

 

ஆனால், என் பள்ளிப் படிப்பு முடிவதற்கு முன்பே அப்பா இறந்துபோனார். நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என் அம்மா பொருளாதாரரீதியில் தடுமாறி நின்ற£ர். 300 ரூபாய் வாடகைகூட தர முடியாத சிரமம். ஆனால், அந்த வயதில் வறுமை என்பது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

 

9-ம் வகுப்பு படிக்கும்போது விலங்குகளின் மீது பெரிய ஆர்வம். எலிகளைப் பிடித்து அறுத்து, ஓர் இதயத்தை எடுத்து, இன்னொன்றுக்குவைத்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வேன். அவை செத்துப்போகும். அப்போது டாக்டர் மைக்கேல் டிபெகே என்பவர் உலக அளவில் இதய மாற்று

 

அறுவை சிகிச்சைக்குப் பிரபலம். அவரைப்பற்றிய விவரங்களைப் பத்திரிகைகளில் படித்து அவருக்குக் கடிதம் எழுதினேன். என் ஆர்வத்தைப் பார்த்து, என் பள்ளிப் படிப்பு முடியும் வரை ஒவ்வொரு மாதமும் 14 டாலர்கள் மணியார்டர் அனுப்பினார். மறக்க முடியாத மனிதர்.

 

அப்போதுதான், மதுரையில் கராத்தே வகுப்பு கள் ஆரம்பிக்கப்பட்டன. எனக்கு ஆசை. ஆனால், யூனிஃபார்ம் வாங்கக்கூட காசு இல்லை. உடனே, நானே கராத்தே வகுப்புகள் நடத்துவதாக விளம்பரம் செய்தேன். வந்தவர்களிடம் முன்பணம் வாங்கி இன்னொரு கராத்தே வகுப்பில் சேர்ந்தேன். அங்கு கற்றுக்கொண்டதை அடுத்த நாள் என் வகுப்பில் கற்றுக்கொடுத்தேன். கொஞ்ச நாட்களில் என் வகுப்புகள் பிக்-அப் ஆகி, நான் கற்றுக்கொண்ட இடத்தைவிட என்னிடம் மாணவர்கள் அதிகமான அதிசயம் நடந்தது. கல்லூரி படிக்கும்போது, மதுரையில் என் கராத்தே வகுப்புகளுக்கு 32 கிளைகள் இருந்தன.

 

அமெரிக்கன் கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளில் எந்தப் போட்டியையும் தவறவிட்டது இல்லை. நான்கு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் 147 முதல் பரிசுகள் வாங்கினேன். இதற்காகவே கல்லூரியில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள்.

 

பிறகு, எம்.ஏ., சோஷியல் வொர்க் படித்தபோது, மிகாவாத்தே, இஷின்ரியூ என்ற பூர்வீக ஜப்பானிய கராத்தே கலைகளைக் கற்றுகொள்ள 13 முறை ஜப்பான் போய் வந்தேன். அந்தச் சமயத்தில் நம் ஊரில் கராத்தேயில் பிளாக்பெல்ட் என்பதே பெரிய விஷயம். ஆனால், அதைத் தாண்டி பல கட்டங்களைக் கடந்து 'ஷிகான்' என்ற பட்டம் கராத்தேயில் எனக்கு வழங்கப்பட்டது. இன்னொரு பக்கம், மதுரையில் 'ராக் மியூஸிக் என்றால் ஹ§சைனி' என்னும் அளவுக்குப் பல இசை நிகழ்ச்சிகளைச் செய்தேன்.

 

பிறகு, நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். பாரதிராஜாவின் ஹீரோயின்களும், பாலசந்தரின் ஹீரோக்களும் ஹிட்டாகிய சீஸன். நான் கவிதாலயாவுக்குப் போனேன். ஆனால், பாலசந்தரைப் பார்க்க முடியவில்லை. வெளியே வந்து கவிதாலயாவுக்குப் போன் போட்டு, 'நான் ஒரு சிற்பி. இயக்குநரைச் சிலையாக வடிக்க விருப்பம்' என்றேன். உடனே அழைப்பு வந்தது. 'தினமும் காலையில் நான் பேப்பர் படிக்கும் 15 நிமிடங்களை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க' என்றார் கே.பி. சார். எனக்குப் பயங்கரப் பதற்றம். ஏனெனில், அந்த நிமிடம் வரை சிற்பம் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது. உடனே, முன்பு அறிமுகம் ஆகியிருந்த தனபால் சாரைத் தேடி ஓடினேன். 'இன்னிக்குள்ளே சிற்பக் கலை கத்துக்கணும்' என்றதும், 'முதல்ல வெளியில் போ' என்றார். அவரைக் கெஞ்சிக் கூத்தாடி, மேலோட்டமாகச் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு கவிதாலயாவுக்குப் போனேன். தினமும் போய் கே.பி. சாரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிலையாக வடித்தேன். இறுதியில் எனக்கு சிற்பக் கலை கைகூடி வந்ததே தவிர, சினிமா வாய்ப்பு வரவில்லை.

 

கடைசியில், 'என்னை மன்னிச்சிடுங்க. உண்மையில் நான் சிற்பி இல்லை. இது ஒரு நடிப்புதான். இந்த நடிப்புப் பிடிச்சிருந்தா நடிக்க வாய்ப்புக் கொடுங்க' என்று வீடியோவில் பேசி, கவிதா லயாவில் கொடுத்துவிட்டு வந்தேன். உடனே அழைத்து, 'புன்னகை மன்னன்' வாய்ப்பு தந்தார். கடைசியாக 'பத்ரி' வரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். இதோ, இந்த வருடம் ஒரு படம் இயக்கப்போகிறேன். இடையில் 'ஹை புரொஃபைல்' என்ற செக்யூரிட்டி ஏஜென்ஸியை ஐந்து வருடங்கள் நடத்தினேன். 1,300 பேர் என்னிடம் வேலை பார்த்தார்கள்.

 

சமீபத்தில் நான் செய்த வீரன் அழகுமுத்துக்கோன் சிலையைப் பார்த்துவிட்டு, யாதவர் சங்கத்தில் இருந்து 25 கோடியில் 1,000 சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். அந்தப் பணிகள் ஒரு பக்கம். கராத்தேயில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வாங்கி, 69 உலக சாம்பியன்களையும், 1,331 பிளாக்பெல்ட்டுகளையும் உருவாக்கி இருக்கிறேன். இந்தியாவில் என் கராத்தே பள்ளிகளின் நேரடிக் கிளைகள் மட்டும் 554 இருக்கின்றன.

 

ஆனாலும், என்னைச் சுற்றி எத்த னையோ சர்ச்சைகள். ஒரு முறை திகார் சிறையில் கைதுசெய்து அடைக்கப்பட்டேன். பழிகளைக் கடந்த வலி இருந்தாலும், வாழ்க்கை புதிய வழிகளைத் திறந்தது.

 

எப்போதும் எதையோ ஒன்றைச் செய்துகொண்டு இருக்கவே என் மனம் துடிக்கிறது. ஆசைப்பட்ட துறைகளில் எல்லாம் ஆர்வம் காட்டும் மனசு. ஆனால், அதில் நிபுணத்துவம் பெற உதவுவது கடும் உழைப்பும் கற்பனாசக்தியும்தான். நினைப்பதைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்தான் வாழ்வின் மிகப் பெரிய சொத்து.

 

அதன் வெளிச்சத்தில் அடுத்தடுத்த பயணங்கள் இன்னும் இனிமையானதாக மாறும்.

 

ஓடும் நதியில் பாசி படியாது என்பார்கள். நான் ஓடும் நதி!''


"நான் ஷோபா சக்தி ஆனது எப்படி?"

ஷோபாசக்தி-தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர். தற்சமயம்

பாரிஸில் வசிக்கும் இவரது எழுத்துக்கள், ஈழத்து வாழ்வின் ரத்தமும் சதையுமான சாட்சி!

"நான் யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள வேலணைத் தீவில் அல்லைப்பிட்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தேன். அது வறுமையிலும் கல்வியின்மையிலும் மூழ்கிக்கிடந்த கிராமம். 1990-ல் ஏராளமான மக்களைக் கொன்று இலங்கை ராணுவத்தினர் அந்தக் கிராமத்தைக் கைப்பற்றினார்கள். இன்று வரை அந்தக் கிராமம் ராணுவத்தின் பிடியில் செத்து சவமாய்க்கிடக்கிறது.

10 வயதிலேயே கிராமத்தின் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டு இருந்தபோதும், நாடகம் மீதுதான் எனது கவனம். எனது அன்பான ஆசிரியை மிஸ் தர்மலிங்கம் டீச்சர் என்னைத் தனது மகனைப்போல அரவணைத்து நாடகத்தில் ஊக்குவித்தார். அரசியல் மீதான ஆர்வமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தெருவில் ஒரு சுவரைக் கண்டால், அதன் மீது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தைக் கிறுக்காமல் அங்கே இருந்து நகர மாட்டேன்.

பத்தாம் வகுப்பு படிக்கையில், 1983 ஜூலையில் நாடு தழுவிய முறையில் தமிழர்கள் மீது இலங்கை அரசால் இனப் படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 2,000-க்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். வெலிகடைச் சிறையில், குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 அரசியல் கைதிகள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களுக்கு எதிர்வினையாக தமிழீழ விடுதலை இயக்கங்களின் எழுச்சிக் காலம் ஆரம்பமாகியது.

படிப்பைத் தொடர்ந்தபடியே, வீட்டில் இருந்தே இயக்கத்துக்கு வேலை செய்தேன். பிறகு, 1984 மார்ச்சில் வீட்டில் இருந்து வெளியேறி, முழுவதுமாக இயக்கத்துக்குப் போய்விட்டேன். 1986 நவம்பரில் இயக்கத்தில் இருந்து வெளியேறிய பின்புதான் வீட்டுக்குத் திரும்ப வந்தேன்.

எனது நம்பிக்கைகள் எல்லாம் என் கண் முன்னே தகர்ந்த சோர்வு என்னை அழுத்தியது. இந்திய அமைதிப் படையினருக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து, அமைதிப் படையினரும் அவர்களோடு இணைந்திருந்த தமிழ் இயக்கங்களும் செய்த அட்டூழியங்கள் பெருகிப்போயின. தமிழர்களின் எந்த ஒரு நிலப்பரப்பிலும் இளைஞர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை. நானோ பழைய இயக்கக்காரன் வேறு. எந்த நேரமும் எனக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நிலையில், 1988 நடுப் பகுதியில் கொழும்புக்குத் தப்பி ஓடினேன்.

1990-ல் புலிகளுக்கும் அரசுக்கும் சண்டை துவங்கியதும், போலீஸ் என்னைக் கைதுசெய்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. ஒரு நண்பியினதும், லஞ்சப் பணத்தினதும் உதவியால், சிறையில் இருந்து விடுதலையானதும் தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றேன். அங்கு இருக்கும் அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகம் சென்று, என்னை அகதியாக ஏற்குமாறு கேட்டு விண்ணப்பம் எழுதிக்கொடுத்தேன். 'முடிவு எடுக்க ஆறு மாதங்கள் ஆகலாம்' என்றார்கள். அந்த அலுவலகத்தில் வைத்தே கத்தியால் எனது கையைக் கிழித்தேன். 'தற்கொலை செய்வேன்' என்று சும்மா மிரட்டினேன். உடனடியாக என் விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்கப்பட்டு, அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். தாய்லாந்தில் இருந்தபோதுதான் குடிப் பழக்கம் ஆரம்பித்தது. நண்பர்களின் தொடர்புகளால் சண்டைக் குழு ஒன்றில் சேர்ந்து வாழ்க்கை சீரழிந்தது. ஒரு தடவை எதிர்பாராதவிதமாக இரண்டு பகைக் குழுக்கள் பாங்காக் நகரின் தெரு ஒன்றில் சந்தித்துக்கொண்டோம். அந்தச் சண்டையின் முடிவில் என் வயிற்றில் இருந்து குடல் வெளியே சரிந்தது. சாவின் எல்லைக்குப் போய்த் திரும்பினேன்.

1993 மார்ச் மாதம் ஃபிரான்ஸ் வந்தேன். ஃபிரான்ஸில் அகதியாக ஏற்றுக்கொண்டார்கள். ஃபிரான்ஸ் வந்து சில நாட்களிலேயே 'புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்' என்ற ட்ராட்ஸ்கிய இயக்கத் தோழர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த நான்கு வருடங்களுக்குள்தான் உங்களோடு இப்போது பேசிக்கொண்டு இருக்கும் ஷோபாசக்தி உருவாகத் தொடங்கினான்.

1997-ல் கட்சித் தோழர்களோடு முரண்பாடுகள் ஏற்படலாயின. அதற்கு முழுக் காரணம், நிறப்பிரிகை இதழில் எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகள். அவை, எனது சிந்தனையை வேறு திசைக்கு மாற்றின. தலித்தியம், பெரியாரியம், பின்நவீனத்துவம் ஆகிய சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டேன். அந்த நேரத்தில் எனது குடும்பத்தினர், ஈழத்தில் இருந்து அகதிகளாக மண்டபம் முகாமுக்கு வந்து இறங்கினார்கள். அவர்களைப் பார்க்க தமிழகம் வந்த நான், தஞ்சாவூருக்குப் போய் நிறப்பிரிகை அ.மார்க்ஸைச் சந்தித்தேன். இன்று வரை அவரது உயிர்ப்பான சிந்தனைகள் என்னை வழிநடத்துகின்றன.

புகலிடத்தில் என்னை சிறுபத்திரிகைத் தளத்தில் எழுத அழைத்து வந்தவர் மனோ. என்னுடைய உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் சுகன். இலக்கியத்தில் இணையவெளியும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கத் தொடங்கிய காலத்தில், என்னை இணைய உலகுக்கு அழைத்து வந்தவர் தியோ ரூபன். ஒரு தங்கத் திறவுகோல் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் என்பார்கள். அவ்வாறான ஒரு தங்கத் திறவுகோலாக எனக்குக் கிடைத்தவர் அனுசூயா. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில இலக்கியப் பேராசிரியையாக இருக்கும் அவராலேயே எனது எழுத்துக்கள் ஆங்கில வாசகர்களைச் சென்றடைந்தன.

ஃபிரான்ஸ் வந்து 18 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும், நான் இன்னும் அல்லைப்பிட்டியானாகவே இருக்கிறேன். கலைக்கும் இலக்கியத்துக்கும் பிரபலமான பாரிஸ் நகரத்தோடு என்னால் ஒட்டவே முடியவில்லை. ஒருவேளை, இந்த பாரிஸ் நகரம் கலை இலக்கியத்துக்கு முன்னமே, எனக்கு வெள்ளைத் திமிரையும், இன ஒதுக்குதலையும் அறிமுகப்படுத்தியதால்தான் என்னால் ஒட்ட முடியவில்லை என நினைக்கிறேன்.

ஒருமுறையாவது அல்லைப்பிட்டிக்குப் போய் வர மனது ஏங்கிக்கிடக்கிறது. கொரில்லா, ம், தேசத் துரோகி, எம்.ஜி.ஆர். கொலை வழக்கு, வேலைக்காரிகளின் புத்தகம் என கொடிய போரின் முகங்களை இலக்கியத்தில் நான் ஒரு சிறு துளிதான் பதிவு செய்துள்ளேன். இன்னும் சொல்லப்படாமலேயே இருக்கும் எங்களது துயரங்களையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சொல்லிவிட வேண்டும் என்ற வெறி மனதில் கனன்றுகொண்டே இருக்கிறது. ஆனால், இந்த வெறி என்னிடம் இருக்கும் வரை என்னால் அல்லைப்பிட்டிக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதுதான் கசப்பான உண்மை!"


"நான் ஜி.வெங்கட்ராம் ஆனது எப்படி?"
-பாரதி தம்பி

காலத்தை உறையவைக்கும் கலை... புகைப்படம். எத்தனையோ நவீனங்களுக்கு

மத்தியிலும் புகைப்படத்தின் வசீகரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஜி.வெங்கட்ராம் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஓர் அழகுக் குறிப்பு. தமிழ் சினிமாவில் 'போட்டோ ஷூட்' என்ற புதிய கலாசாரத்தைத் தொடங்கிவைத்த வெங்கட்ராம், இன்று தென்னிந்திய சினிமாவிலும் விளம்பரத் துறையிலும் முன்னணி கேமரா கவிஞர்!

"இப்படி வருவேன்னு நான் கனவுகூடக் கண்டது இல்லை. இங்கேதான் சென்னையில் ஜார்ஜ் டவுனில் பிறந்தேன். என் தாத்தா ஒரு டாக்டர், அப்பா... இன்ஜினீயர். நானும் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். கல்லூரி இருக்கும் இடம் பிரமாதமான மலைப் பிரதேசம். சுத்தியும் கரும்புக் காடுகள். சூழலே மனசுக்கு இதமா இருக்கும். படிப்பில் மனசே போகலை. சும்மா ஒருநாள் கேமராவை எடுத்து போட்டோ எடுக்க ஆரம்பிச்சதும், என் ஆர்வம் எதில் இருக்குன்னு புரிஞ்சது. மனசு முழுக்க ஒளிப்பதிவாளர் ஆகணும்னு கனவு. மல்லுக்கட்டி ரெண்டு வருஷம் படிச்சேன். அதுக்கு மேலே முடியலை. 'இன்ஜினீயரிங் சேர்ந்துட்டோமேன்னு படிச்சா, இன்னும் ரெண்டு வருஷம் வீணாப்போறதுதான் மிச்சம்'னு புரிஞ்சது. உடனே, சென்னைக்குக் கிளம்பி வந்துட் டேன்.

வீட்ல, ஏதேதோ சொல்லி சமாளிச்சேன். அந்தக் காலத்தில்... கல்யாணம், மேடை விழாக்கள், ஸ்டுடியோ போட்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கிறது... இவ்வளவுதான் போட்டோகிராஃபி. இதைத் தாண்டி அதை வாழ்க்கை முழுக்கச் செய்ய முடியும்னு சொல்றதுக்கு, முன் உதாரணங்கள் இல்லை. அதனால், வீட்டுக்காக கரஸ்பாண்டென்ஸ்ல சும்மா ஒரு பி.எஸ்சி., பிசிக்ஸ் போட்டுவெச்சேன். ரவி யாதவ் அப்போ பெரிய கேமராமேன். அவர்கிட்ட வேலை பார்த்தேன். அப்போ யார் யார்லாம் ஃபீல்டில்ல இருந்தாங்களோ... அவங்க பல பேரிடம் வேலை பார்த்தேன். சினிமாவோ, விளம்பரப் படமோ... எந்த ஷூட்டிங்கா இருந்தாலும் போய் நிப்பேன். ஒவ்வொண்ணும் ஏதாவது கத்துக் கொடுத்தது.

அப்போதான் 89-ல் லயோலாவில் முதல்முறையா விஸ்காம் படிப்பு கொண்டுவந்தாங்க. ஆசை ஆசையாப் போய்ச் சேர்ந்தேன். அப்போ என்கூட ஸ்கூல்ல படிச்சவங்கள்லாம்... காலேஜ் முடிச்சுட்டு வெளியே வந்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் கலக்கமா இருந்தாலும், தைரியமா விஸ்காம் சேர்ந்தேன். படிச்சுட்டே போட்டோகிராஃபர் சரத் ஹக்சர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். காலேஜ் நேரம் போக, மீதி நேரம் எல்லாம் ஷூட்டிங்... ஷூட்டிங்தான். ஒன்றரை வருஷம் அவருடன் வேலை பார்த்துட்டு, தனியா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

அரைப் பக்க கோ-ஆப்டெக்ஸ் விளம்பரம் தான் என் முதல் புராஜெக்ட். அப்புறம் போத்தீஸ், நல்லி சில்க்ஸ்னு பண்ண ஆரம்பிச் சேன்.

இப்போ நினைச்சதும்... எல்லாம் கிடைக்குது. நல்ல லேப், பிரமாதமான கேமரா, திறமையான டெக்னீஷியன்ஸ் எல்லோரும் இருக்காங்க. அப்போ எதுவும் சுலபமாக் கிடைக்காது. போட்டோகிராஃபி ஒரு பொழுதுபோக்கா மட்டுமே இருந்த சமயத்தில், அதை ஒரு தொழிலா எடுத்துப் பண்ணும்போது அதுக்கே உரிய சவால்கள் வந்தன. அனுபவத்தில்தான் எல்லாம் சமாளிச்சேன். அந்தக் காலத்தில் விளம்பர போட்டோகிராஃபி என்பது வெறுமனே பொருட்களை மையப்படுத்தித்தான் இருக்கும். ஃப்ரிஜ் விளம்பரம்னா... அதன் சிறப்புகளை மட்டும் சொல்லுவாங்க. நான் உயிரற்ற பொருட்களுடன் மாடலிங் பெண்களையும் இணைத்து போட்டோகிராஃபியின் கலரை மாத்தினேன். அது அந்தச் சமயத்தில் ரொம்பவே புதுசு.

அப்போதான் மணிரத்னம் சார் கூப்பிட்டார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்காக ஒரு போட்டோ ஷூட் பண்ணணும். வழக்கமான சினிமாவுக்கான ஸ்டில் போட்டோகிராஃபி வேற. இது வேற. ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சும்மா ஒன் லைன் மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு லொகேஷன் பார்த்து நடிகர்களைவெச்சு போட்டோ ஷூட் பண்ணணும். 'பாய்ஸ்' படத்துக்கு போட்டோ ஷூட் பண்ணும் வாய்ப்பை ஷங்கர் சார் கொடுத்தார். இரண்டும் ஒரே நேரத்தில் பண்ணினேன். அது என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட எல்லோருமே போட்டோ ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தனிப்பட்ட வகையில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால்னு ஆரம்பிச்சு, இன்னிக்கு முன்னணியில் இருக் கும் எல்லா நட்சத்திரங்களுக்கும் போட்டோ ஷூட் பண்ணி இருக்கேன்.

'அடுத்து என்ன?'ன்னு நிறையப் பேர் கேக்கிறாங்க. காலேஜ் படிக்கும்போது ஒளிப்பதிவு ஆசை இருந்தது. ஆனா, போட்டோகிராஃபிதான் வாழ்க்கைன்னு வந்த பிறகு, அந்த ஆசையை விட்டுட்டேன். இதில் செய்ய வேண்டியதே நிறைய இருக்கு. ஒரு சைக்கிள் வீரரால் அந்தத் துறையில்தான் சாதனை படைக்க முடியும். அவர் மோட்டார் பைக் ரேஸில் பங்குபெற முடியாது. சினிமா, விளம்பரப்படங்கள் தவிர... என்னோட சொந்த ஆர்வத்தின் அடிப்படையில், தனிப்பட்ட புகைப்படக் கண்காட்சியும் நடத்துறேன். இரண்டு வருஷங்கள் செலவழிச்சு, சோழ மண்டலங்களின் கோயில்களை முழுக்கவே கறுப்பு-வெள்ளையில் ஒரு போட்டோ ஷூட் பண்ணேன். பல கல்லூரிகளின் விஸ்காம் மாணவர்களுக்கு என் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறதுக்காகப் போயிட்டு வர்றேன். இது, மேலும் மேலும் உற்சாகத்தைத் தருது.

வாழ்க்கையில் நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான்... வாய்ப்பை யாரும் தங்கத் தட்டில்வெச்சு நமக்குத் தர மாட்டாங்க. அது எங்கேயோ ஒரு மூலையில் கிடக்கும். நாமதான் தேடி எடுத்துத் திறந்து பார்க்கணும். அப்படிக் கண்டுபிடிச்ச பிறகு, அதில் முழு ஈடுபாட்டோடு உழைச்சாலே போதும். அதுவே உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டுப் போகும். 'நம்மால் முடியும்' என்பது வேற. இப்படிப்பட்ட போலி தைரியத்தோடு நிறைய பேர் வர்றாங்க. ஆனா, தைரியத்தைத் தாண்டி ஈடுபாடும் பொறுப்பும் வேணும். நான் 1995-ல் என் கேரியரை ஆரம்பிச்சேன். இந்த இடத்தை வந்தடைய இத்தனை வருடங்கள் தேவைப்பட்டன. வளர்ச்சி என்பது படிப்படியா இருந்தால்தான்... அதன் சுவை புரியும்!"


"நான் மா.சுப்ரமணியன் ஆனது எப்படி?"
பாரதி தம்பி, படங்கள்: சு.குமரேசன்

னக்கான உதவிகளையே என்னால் செஞ்சுக்க முடியாத சாதாரண நிலையில் இருந்து வந்தவன் நான். இப்போ லட்சக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யும் பொறுப்பு என் கையில் இருக்கு. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது என் உரிமை, கடமை. கேட்க சினிமா வசனம்போல இருந்தாலும், நான் அப்படித்தான் நினைக்கிறேன், அப்படித்தான் செயல்படுறேன்" - தீர்க்கமாகப் பேசுகிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணி யன். அறையில் அமர்ந்து ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகார சக்தியாக மட்டும் இல்லா மல், நேரடியாகக் களத்தில் இறங்கி, மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துபவர்.

"வாணியம்பாடி பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம் எங்களோடது. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே அம்மா இறந்துட்டாங்க.

அப்பாவுக்கு ஏரி, குளங்களில் மீன் பிடிக்கிற வேலை. வருமானம் இல்லாமல் பல நாட்கள் சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருக்கும். அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் ஊர்ல

படிச்சேன். அதுக்குப் பிறகு சென்னையில் இருந்த அக்கா வீட்டில் கொண்டுவந்து விட்டார் அப்பா. சென்னைக்கு வந்தது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். ஆறாம் வகுப்பில் இருந்து சைதாப்பேட்டை பள்ளிக்கூடம் ஒன்றில் படிச்சேன். அப்பா மீன் பிடிக்கிற பணத்தில் எனக்கும் கொஞ்சம் செலவுக்கு அனுப்பி

வைப்பார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம்... அரசியல் ஆர்வம் மறுபக்கம். தி.மு.க-வில் உறுப்பினராகி, சைதாப்பேட்டையில் கலைஞர் நற்பணி மன்றம் ஆரம்பிச்சேன். நான்தான் தலைவர். தி.மு.க-வின் டாப் பேச்சாளர்கள் எல்லோரையும் அழைச்சுட்டு வந்து கூட்டம் போடுவேன். கையில காசே இருக்காது. ஆனா, அங்கே இங்கே வாங்கி கூட்டம் மட்டும் நடந்துடும்.

வருமானத்துக்காக பாலு கார்மென்ட்ஸ்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பேக்கிங் சூப்பர்வைசரா சேர்ந்தேன். சம்பளம் வந்தா, உடனே அதைவெச்சு ஒரு கட்சிக் கூட்டம். அந்த வயதில் அது பெரிய உற்சாகமா இருந்தது. அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்த காஞ்சனா மேல் காதல். சாதி மறுப்புத் திருமணமாவும், சுய மரியாதைத் திருமணமாவும் எங்க கல்யாணம் நடந்துச்சு.

1980-ல் தி.மு.க. இளைஞர் அணி ஆரம்பிக்கப்பட்டபோது, நான் சைதை தொகுதிச் செயலாளரா நியமிக்கப்பட்டேன். கட்சிப் பொறுப்பு எல்லாம் கௌரவம்தான். ஆனா, வருமானத்துக்கு வழி இல்லை. ஏதேதோ தொழில்கள் பண்ணினேன். 'மா.சு.மணியன் மிதிவண்டி நிலையம்' அப்படின்னு வாடகை சைக்கிள் கடை போட்டேன். கடையைத் திறந்துவெச்சுட்டு கட்சிக் கூட்டம்னு அலைஞ்சா, அப்புறம் எங்கே இருந்து கடை நடக்கும்? நஷ்டம், சைக்கிள் கடை பஞ்சர் ஆயிடுச்சு. அசராம 'காவேரி சோடா ஃபேக்டரி' ஆரம்பிச்சேன். அதையும் கொஞ்ச நாள்லயே மூடியாச்சு. பிறகு, 'காமதேனு பால் நிலையம்'. வழக்கம்போல ஒரு வருஷம்கூடத் தாங்கலை. 'சைதாப்பேட்டைதான் சரியா வரலை. ஏரியாவை மாத்துவோம்'னு கிண்டியில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து 'வெல்கம் ஹோட்டல்' ஆரம்பிச்சேன். அது சுமாராப் போச்சு. இப்படி, மாத்தி மாத்திப் பல தொழில்கள் செஞ்சாலும், வசதிவாய்ப்பு ஒண்ணும் வரலை. வர்ற வருமானம் குடும்பத்தைக் காப்பாத்தவும், கட்சிச் செலவுகளுக்குமே சரியா இருந்துச்சு.

சொந்த வாழ்க்கையில் தொடர் தோல்விகள் வந்தாலும், அரசியல் வாழ்க்கையில் என் உழைப்பினால் படிப்படியாக முன்னேறினேன். சைதைத் தொகுதிச் செயலாளர், தென் சென்னை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், இப்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். 2006-ல் மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தபோது, என்னை மேயராக்கி அழகு பார்த்தார் தளபதி. ஆனால், 'இது முறைகேடான வெற்றி' என நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பு எதுவும் வராத நிலையிலும், நாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தோம். மறுபடியும் நடந்த தேர்தலிலும் தி.மு.க-தான் பெரும்பான்மை. 'ஒருவரே இரண்டாவது முறை மேயராக முடியாது' என்று முந்தைய ஆட்சியில் தளபதியை மனதில்வைத்து அ.தி.மு.க. சட்டம் இயற்றி இருந்தது. ஆனால், என் இரண்டு மாத மேயர் பணிகளைப் பார்த்து, எனக்காக ஒரு சட்டத் திருத்தமே செய்து, என்னை மறுபடியும் மேயர் ஆக்கியது தி.மு.க. அரசு. என் அரசியல் வாழ்க்கையில் தலைவரும் தளபதியும் எனக்கு அளித்த மிகப் பெரிய வாய்ப்பு அது.

சென்னை மாநகராட்சி மயானங்களில் 183 மயானத் தொழிலாளர்கள் இருந்தனர். அரசுச் சம்பளம் ஏதும் இல்லாத நிலையில், எரிப்பதற்குப் பிணம் வந்தால்தான் அவர்களுக்கு வருமானம். முதலில் அவர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி மாத ஊதியம் கொடுத்தோம். 'மயான உதவியாளர்' என்ற பெயரில் பணி ஆணையும் வழங்கினோம். இன்று சென்னைக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தால் குறைந்தது எட்டாயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு நடுத்தரக் குடும்பம் இந்த திடீர்ச் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. மங்களக் காரியம் இல்லை என்பதாலோ என்னவோ, யாரும் கவனம் செலுத்தாமல் இருந்த இதைக் கவனத்தில்கொண்டோம். இன்று சென்னைக்குள் எந்த மரணம் என்றாலும் ஃப்ரீஸர் பாக்ஸ், வாகனம் அனைத்தும் இலவசம். புதைக்க 400 ரூபாய், எரிக்க 600 ரூபாய் என்ற கட்டணத்தையும் நீக்கிவிட்டோம்.

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பெயரில் மரம் நடும் திட்டம் பல நாடுகளில் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப் பட்டு இருக்கிறது. மனநலம் குன்றித் திரிந்த 152 பேரை அழைத்து வந்து முறையான உணவும், மருத்துவமும் கொடுத்து விளம்பரப் படுத்தியதில் அவர்களில் 12 பேர் உறவினர்களுடன் சேர்ந்துள்ளனர். பல முக்கியச் சாலைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரைந்து, தலைநகரத்தின் முகத்தை அழகாக்கி இருக்கிறோம். நான் பதவிக்கு வந்த மூன்று வருடங்களில் மாநகராட்சிக்குச் சொந்தமான 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்புச் சொத்துக்களை மீட்டு இருக்கிறோம். அப்படி மீட்டதில் ஒன்றுதான் இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே நீங்கள் பார்க்கும் பூங்கா.

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரலாம். ஆனால், தொடர்ந்து செயல்படுவது ஒன்றுதான் எல்லா வற்றையும் எதிர்கொள்வதற்கான வழி. தொடர்ச்சியான செயல் என்பது அனுபவங்களையும், பிரச்னைகளைக் கையாள சில யுக்திகளையும் கற்றுத்தருகிறது. பேச்சைவிடச் செயலே சிறந்தது!"


"நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி?"
பாரதிதம்பி, படம்: எம்:விஜயகுமார்

"நிலம் என்பது சொத்து அல்ல; அது சுயமரியாதை. மண்ணுக்கும் மனிதனுக்குமான

தொப்புள் கொடி. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு சொந்த ஊரில் அகதி களாக மக்களைத் திரியவிடுவதைக் காட்டிலும் இந்த உலகில் பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.

காலம் காலமாக நம் நாட்டின் பழங்குடி மக்களிடம் இருந்து அவர் களின் நிலமும், வனமும் வன்முறை யாகப் பிடுங்கப்படுகிறது. காட்டுக்குள் ஒரு பறவையைப்போல, தாவரத்தைப்போல வாழ்ந்திருக்கும் பழங்குடிகள், அதிகாரத்தாலும் அரசாங்கத்தாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர்" - உறுதியான குரலில் பேசுகிறார் ச.பாலமுருகன். பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸின் அடக்குமுறைக்கு ஆளான பழங்குடி மக்களின் துயரத்தை 'சோளகர் தொட்டி' என்ற பெயரில் இவர் எழுதிய நாவல் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வுகளைஉண்டு பண்ணியது!

"ஈரோடு மாவட்டத்தில் பவானி என் ஊர். அப்பா, சிகை அழகுக் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு பள்ளிப் பருவம்தான் மாற்றத்துக்கான களமாக இருந்தது. பவானி அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும்போது பள்ளியின் நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்து மாணவர்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தினேன். ஒரு மாதம் பள்ளியை மூடும் அளவுக்கு நிலைமை போனது. என்னைப் பள்ளியில் இருந்து நீக்கினார்கள்.


பள்ளிப் பருவத்தில் நடந்த அந்தப் போராட்ட அனுபவம் எனக்கு மிகப் பெரிய உத்வேகத்தைத் தந்தது. கோவை சட்டக் கல்லூரியில் படித்தபோது இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு, புரட்சிக்கர அமைப்புகளுடன் ஏற்பட்ட பழக்கம், மக்களையும் போராட்டங் களையும் நேசிக்கவைத்தது. அப்போது அரூரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீஸ், மாநாட்டுக்குத் தடைபோட்டது. ஆனால், எப்படியாவது அதில் பங்கெடுக்க வேண்டும் எனத் தோழர்கள் முடிவு செய்தனர். சுமார் 200 பேர் ரயிலில் கிளம்பினோம். அரூர் அருகே ஒரு கிராமத்தில் இறங்கினோம். திடீரென 200 பேர் இறங்கி கோஷம் போட்டுக்கொண்டு ஊருக்குள் வர, அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது. போலீஸ் கைது செய்து அடி பின்னியது. வேலூர் சிறையில் 25 நாட்கள் வைக்கப்பட்டோம்.

சிறை நாட்கள்தான் மனித உரிமைகளின் பக்கம் என்னை முழுவதுமாகத் திருப்பியது. சிறையில் இருப் பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல; அப்ப டியே குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. ஆனால், உள்ளுக்குள் இருந்த நிலைமை முற்றிலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதாக இருந்தது. சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். உடனே, எங்களை தனிமைச் சிறையில் வைத்தார்கள்.

93-ல் வழக்கறிஞராகத் தொழில் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைதீவிர மாக நடந்துகொண்டு இருந்தது. தேடுதல் வேட்டையின் பெயரால் அப்பாவிப் பழங்குடி மக்கள் மிகக் கொடூர மாகத் துன்புறுத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்துடன் இணைந்து அந்தப் பகுதிகளுக்குப் போனபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண் கேட்ட கேள்வியை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. தன் தாலியைக் கையில் பிடித்தபடி 'என் புருஷனை போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போயி எட்டு மாசம் ஆகுது. இருக்காரா, செத்தாரான்னு தெரியலை. இந்தத் தாலியை நான் கட்டிக்கிறதா, வேண் டாமா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, போதும்' என்றார் அந்தப் பெண்.

எங்கள் ஒட்டுமொத்தப் போராட்டங்களுக்கும் அந்தப் பெண்ணே தூண்டுகோல். பல்வேறு இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பாகச் சேர்ந்தோம். வீரப் பன் தேடுதல் வேட்டையின் பெயரால், தமிழ்நாடு - கர்நாடக கூட்டு அதிரடிப் படைகள், பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான வன்முறைகளை அம்பலப்படுத்தினோம். அந்தக் காலகட்டத்தில் இதைப் பற்றிப் பேசினாலே, அது 'வீரப்பன் ஆதரவாக' மட்டுமே பார்க்கப்பட்டது. ஒரு பக்கம் அரச வன்முறை, மறு பக்கம் வீரப்பனின் வன்முறை. இரண்டுக்கும் இடையே சிக்கித் தவித்த அப்பாவிப் பழங்குடிகளின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் அதைத் துணிந்து பேசினோம். ஏழு வருடப் போராட்டங்களின் விளைவாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது.

1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளான வர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது. புத்தகம் விற்றது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவித சட்டமும் இல்லாத ஒரே மாநிலம், தமிழ்நாடு தான். தண்டகாரண்யா காடுகளில் தங்கள் நிலம் பிடுங் கப்படுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடிகளுக்கு உள்ள எல்லா நியாயங்களும் மாதேஸ்வரன் மலைப் பழங்குடிகளுக்கும் இருக்கிறது. அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மன உறுதி இருக்கிறது. எவ்வளவோ சித்ரவதைகளுக்கு ஆளான பின்னும் அந்த மண்ணைவிட்டு விலக அவர்கள் தயார் இல்லை. காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.

பழங்குடிகளிடம் இருக்கும் மன உறுதியை வேறு யாரிடமும் நீங்கள் காண முடியாது. எந்தப் பழங்குடி யாவது தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் உண்டா? கிடையாது. இத்தகைய ஒடுக்கப்படும் மக்க ளுக்காகப் போராடும் எங்களைப் போன்ற மனித உரிமையாளர்கள் தொடர்ந்து அரசால் முத்திரை குத்தப் படுகிறோம்.

'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்!"


''நான் வசந்தபாலன் ஆனது எப்படி?''
கி.கார்த்திகேயன், படம்: கே.ராஜசேகரன்

''என் அப்பா மின்சார வாரியத்தில் அக்கவுன்டன்ட். என் ப்ளஸ் டூ மார்க்ஷீட்டைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'என்னப்பா, அக்கவுன்டன்ட் பையன் பியூன் வேலைக்குக் கூடத் தேற மாட்டான்போல!'ன்னு கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டார். நிச்சயம் நான் பியூன் வேலைக்கு லாயக்கில்லாதவன்னு எனக்கும் அப்பவே தெரியும். ஆனா, அதை வாய்விட்டு அப்பாகிட்ட சொல்ல முடியலை. காத்துட்டு இருந்தேன்... எனக்கான காலம் வரும்னு காத்துட்டு இருந்தேன்!'' - கண்கள் பார்க்கிறார் வசந்தபாலன். 'அங்காடித் தெரு' வின் வெயில் ஆல்பம் புரட்டிய இயக்குநர். சின்சியர் சினிமா என்பதில் தீவிரம் காட்டும் படைப்பாளி!

''விருதுநகர்ல பாலமுருகனாப் பிறந்து வளர்ந்தேன். பள்ளிக்கூடப் பருவத்துல இருந்தே சிவப்புச் சித்தாந்தங்கள் மேல ஆர்வம். கம்யூனிஸம், மீட்டிங் மேடை, காரக் கடலை, கார்ல்மார்க்ஸ், மூலதனம், டி.ஒய்.எஃப்.ஐ., லெனின், இரவு நேர வாழ்க்கைன்னு வெறியோடு திரிஞ்ச நாட்கள் நிறைய. நாலு பேர் முன்னாடி கூச்சம் பார்க்காமப் பேசுற தால, பேச்சுப் போட்டிகள்ல மேடையேறிப் பழக்கம். இலக்கியச் சோலைன்னு ஒரு அமைப்பு, சுனைன்னு ஒரு பத்திரிகை, சமூக சேவைகள்னு பம்பரமாத் திரிஞ்சேன். காலேஜ்ல நல்லாப் படிக்கிற பையன் அப்பப்போ சினிமாவுக்குப் போற மாதிரி, அப்பப்போ காலேஜ் கிளாஸ் ரூம் பக்கம் ஒதுங்கி பி.எஸ்சி., பாட்டனி முடிச்சேன். நான் எம்.ஏ., இங்கிலீஷ் படிக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. 'ஆனா, என் ஆசை அது இல்லையே'ன்னு சென்னைக்குக் கிளம்பிட்டேன். இங்கே கால்வெச்ச பிறகு தான் தெரிஞ்சது... சென்னை எவ்வளவு பிரமாண்டம்னு. ஓர் அப்பாவியை சென்னையின் ஒவ்வொரு தினமும் வெறிகொண்டு துரத்தும். என்னையும் துரத்துச்சு!

வளசரவாக்கத்துல சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ் வீட்ல தஞ்சமடைஞ்சேன். சின்னச் சின்ன வேலைகள். அடுத்து எடிட்டர் லெனின், வி.டி.விஜயன்கிட்ட சேர்ந்து 35 படங்கள் வேலை பார்த்தேன். அப்பதான் 'ஜென்டில்மேன்' பட வேலைகள் ஆரம்பிச்சது. ஷங்கர் சார்கிட்ட சேர்ந்துட்டேன். 'முதல்வன்' டிஸ்கஷன் சமயம் வரை அவர்கூடவே இருந்தேன்.

நாலு வருஷம் நாயாப் பேயா அலைஞ்சு திரிஞ்ச பிறகு, முதல் பட வாய்ப்பு கிடைச்சது. 2002-ல் 'ஆல்பம்' ரிலீஸ். கிட்டத்தட்ட என் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருந்தேன். அந்தப் படைப்புல இருக்குற உண்மை நிச்சயம் அதை ஜெயிக்கவைக்கும்னு எனக்கு நம்பிக்கை. ஆனா, படம் ஃப்ளாப். அந்த உண்மை சுட்டுச்சு. இண்டஸ்ட்ரியில ஷங்கர் சார் அசிஸ்டென்ட்னா கழுத்துல எக்ஸ்ட்ரா காலர் முளைச்ச உணர்வு இருக்கும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனா, 'ஆல்பம்' படம் பண்ணப்போ, என்னைச் சுத்தி அவ்வளவு நெருக்கடி. அதுவரை எங்க அப்பாவைத் தவிர, என்னை யாரும் கட்டுப் படுத்த முயற்சித்தது இல்லை. ஆனா, அந்தச் சமயம் ஆளாளுக்கு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தாங்க. 'ஓ.கே. நம்மளைவிட அனுபவம் ஜாஸ்தி அவங்களுக்கு. நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்கபோல'ன்னு நினைச்சு, எல்லாத்துக்கும் 'சரி சரி' சொன்னேன். நான் நினைச்ச சினிமாவை எடுக்க முடியலை. ரெண்டு விஷயம் புரிஞ்சது. என்னதான் யதார்த்தமான படம் எடுக்க ஆசைப்பட்டாலும், அதுல மினிமம் சினிமா எலிமென்ட்ஸ் அவசியம். உலகமே உன்னைக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த நினைச்சாலும், உனக்குச் சரின்னு தோணுற விஷயத்தை, நீ ஆசைப்பட்ட விஷயத்தைச் செய்யத் தயங்காதே! ஆனா, இந்த விஷயங்கள் எனக்குப் புரிஞ்சுருச்சுன்னு யாருக்கும் புரியலை. அடுத்து படம் கிடைக்கலை.

இன்னொரு நாலு வருடம். துன்பங்களும் துயரங்களும் மட்டுமே துரத்தியடிச்ச காலம். முதல் படத்தைவிட, முதல் படம் சரியாப் போகாதவனுக்கு கிடைக்கிற ரெண்டாவது வாய்ப்பு குதிரைக் கொம்பு. என்ன பண்ணேன், ஏன் பண்ணேன்னு இப்பவும் ஆச்சர்யப்படுத்துற பல வேலைகளைப் பண்ணிட்டுத் திரிஞ்சேன். 'காதல்' படம் ரிலீஸாகி ஹிட். மனசுக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சு பட்டுப்போய்க்கிடந்த நம்பிக்கைச் செடி சின்னதாத் துளிர்த்தது. ஷங்கர் சார்கிட்டயே தஞ்சமடைஞ்சேன். 'வெயில்' அடிச்சது. 'பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை'ன்னு கமென்ட் அடிச்ச பக்கத்து வீட்டுக்காரர்ல இருந்து பலருக்குப் பதில் சொல்லிட்ட திருப்தி. அடுத்த படம் பத்தி யோசிச்சப்ப, நிறைய ஹீரோக்கள்கிட்ட இருந்து அழைப்பு. ஆனா, எனக்குக் கிடைச்ச ஸ்பேஸை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. 'அங்காடித் தெரு' புராஜெக்ட் ஆரம்பிச்சேன். 'அதான் உனக்கு சினிமா தெரியும்னு நிரூபிச்சுட்டல்ல! சூப்பர் ஹீரோ, நல்ல பேனர்னு படம் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதானே?'ன்னு எல்லார்கிட்ட இருந்தும் அட்வைஸ். 'சரி சரி'ன்னு கேட்டுக்கிட்டேன். ஆனா, என் முடிவில் தீர்க்கமா இருந்தேன்.

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை. அதுல எப்படி வாழ்ந்தோம்கிறதைவிட என்ன பண்ணோம்கிறதுதானே முக்கியம். 'உதிரிப் பூக்கள்', '16 வயதினிலே' படங்கள் ரிலீஸ் ஆனப்ப கூடவே நிச்சயம் வேறு பல படங்களும் ரிலீஸ் ஆகியிருக்கும்தானே. அந்தப் படங்கள் பேர் என்னன்னுகூட இப்ப யாருக்கும் தெரியாதே. 'நாயகன்', 'மனிதன்' ரெண்டு படங்களும் ஒண்ணாத்தானே ரிலீஸ் ஆச்சு. இப்பவரை எந்தப் படத்தை நாம சிலாகிச்சுட்டு இருக்கோம்? யதார்த்தமோ, கமர்ஷியல் சினிமாவோ எல்லாத்துக்கும் வலியும் வேதனையும் நிறைஞ்ச உழைப்பைத்தான் கொடுக்கிறோம். அதுல எது காலம் கடந்து நிக்கும்னு கொஞ்சம் யோசிச் சேன்!

என்னோட வளர்ச்சிக்கு அதிகாரபூர்வமா சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ், லெனின், வி.டி.விஜயன், ஷங்கர் சாருக்கெல்லாம் நன்றிகள் ஆயிரம். ஆனா, இத்தனை தூரம் என்னை அடைகாத்து, அடையாளப்படுத்தியதில் என் இரண்டு நண்பர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒண்ணாம் வகுப்பில் இருந்து இப்போ வரை நான் திரும்புறப்பலாம் என் தோளுக்குப் பக்கத்தில் இருக்கும் முருகன். சிலேட்டுல 'அ' போடுறதுல ஆரம்பிச்சு, வயசுக் காலத்துல ஆட்டம் போடுற வரை எப்பவும் கூடவே இருந்தவன். இப்போ நியூஜெர்ஸியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கான். இப்பவும் நான் பெருசா சம்பாதிச்சுடலை. ஆனா, எப்பவும் சம்பாதிக்காம இருந்த காலத்துல அவன் இல்லைன்னா... ஒண்ணு நான் தற்கொலை பண்ணிட்டு இருந்திருப்பேன். இல்லைன்னா ஏதாவது ஒரு கம்பெனியில கணக்கு எழுதி மேஜையைத் தேய்ச்சுட்டு இருப்பேன். எப்ப கேட்டாலும் டாலர்களில் பணம் அனுப்புவான். அந்த 'முருகன் டாலர்'தான் எனக்கு ஆதரவா இருந்துச்சு. 'எனக்குத் தெரியும்டா... உன்னால முடியும். நீ ஜெயிப்பேடா'ன்னு எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காம ஆறுதலும் தேறுதலும் சொல்லி என்னை அணைச்சுக் கொண்டுவந்தவன். எத்தனை தயக்கத்தோடு எப்போ உதவி கேட்டா லும், 'எவ்வளவு வேணும்?'னு மட்டும்தான் கேள்வி கேட்பான். லட்சங்களில் நீண்ட அவனோட நிதியுதவியைக் காட்டிலும், என் மேல அவன் வெச்சிருந்த நம்பிக்கை பல கோடி களுக்குச் சமம்.

இன்னொரு நண்பன் வரதராஜன். 'ஆல்பம்' பட சமயத்துல பழக்கமானவன். நிழல் மாதிரி கூடவே இருந்து நான் உடைஞ்சு விழாமப் பார்த்துக்கிட்டவன். கொஞ்சம் அப்பிடி இப்படி நான் தடம் மாறுறப்போ, என்னைத் திரும்ப உள்ளே இழுத்துப் போடுறவன். அந்த ரெண்டு நட்பும் இல்லைன்னா, நிச்சயம் இந்த வசந்தபாலன் இல்லை!''


''நான் கல்கி ஆனது எப்படி?''

- பாரதி தம்பி படங்கள்: என்.விவேக்

''நாங்கள் தேவதைகள் இல்லை. பிசாசுகளும் இல்லை. உங்கள் எல்லோரையும்போல இதயமும் இரைப்பையும் உள்ள மனிதர்கள். பசி, தூக்கம், கனவு, காதல், காமம், திறமை, தேடல், உழைப்பு, கருணை, காயம், கோபம், துக்கம், பெருமிதம் எல்லாம் எங்களுக்கும் உண்டு. நாங்களும் ஓர் அம்மாவின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம், உங்களைப்போலவே!'' - செறிவான சொற்களில், திருத்தமான தமிழில் பேசுகிறார் கல்கி.

இந்தியத் திருநங்கைகளின் வாழ்க்கை மிகத் துயரமானது. அவமானங்களையும், ஏளனங்களையும், புறக்கணிப்புகளையுமே எதிர்கொள்ளும் திருநங்கைகள் சமூகத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிச் செயல்படும் ஒருவர்... கல்கி.

''நான் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். சர்வதேச உறவுகள் படிப்பில் இன்னொரு முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கிறேன். மேற்கொண்டும் படிப்பேன். இவை அனைத்தும் இவ்வுலகில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் திருநங்கைகள் மற்றும் ஒருபால் ஈர்ப்புக்கொண்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவே.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்றல் வீசும் அழகான பொள்ளாச்சி,நான் பிறந்த ஊர். வசதியான குடும்பத்தில் பிறந்ததால் கான்வென்ட் படிப்பு. அப்பா, தி.மு.க-வில் தீவிரமாக இருந்ததால் தமிழ் மீதான பற்று அதிகம். கலைஞர் எங்கள் ஊருக்குப் பேச வரும்போது அப்பா என்னையும் மேடையில் ஏற்றிவிடுவார். ஏழு வயதிலேயே தி.மு.க-வின் பிரசார ஜீப்களில் அப்பாவோடு சுற்றியிருக்கிறேன். போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். அறிந்தோ, அறியாமலோ போராட்டம் என்பது சிறு வயதில் இருந்தே பழகி விட்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் மார்க் நானே. இதெல்லாம் படிப்பு சார்ந் தவை. இதனால் எல்லாம் என் உடல் மாற்றங்களை மறைக்க முடியவில்லை. நானே குழம்பி நின்ற வேளையில்தான் சக மாணவர்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டேன். பள்ளியில் கிண்டலாக இருந்தது, கல்லூரியில் சீண்டலாக மாறியது. துன்பங்களையும் துயரங்களையுமே நண்பர்கள் பரிசளிக்க, நான் புத்தகங்களின் மடிக்குள் பதுங்கிக்கொண்டேன். பெரியார், அண்ணா, லெனின், பகுத்தறிவு, ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கை என மேலும் மேலும் படித்தேன். புத்தகங்கள் மட்டுமே அனைத்துக்குமான வடிகாலாக இருந்தன.

என் தாய் - தந்தை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். என் தாய் நிறையத் துன்பங்களைச் சந்தித்தார். சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தாலும் துன்பங்களை எதிர்த்துப்போராட அவர் தயங்கியது இல்லை. என் அம்மாதான் எனக்கு ரோல் மாடல். நான் ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் ஆதரவோடு அரவணைத்துக்கொண்டவர் அம்மா. ஆனால், என்னைச் சுற்றிய மற்ற திருநங்கைகளின் வாழ்வு அவலத்திலும் அவலமாக இருப்பதைக் கண்டேன். வெளிச்சத்தில் கேலி கிண்டல், இருட்டில் பாலியல் கொடுமைகள். இவற்றை எதிர்த்துப் போராட இயலாத அளவுக்கு வறுமையும், கல்வியறிவு இல்லாமையும் அவர்களை வாட்டியது. 'பொருளாதாரப் பிரச்னைகள் இல்லாத, குடும்பத்தின் ஆதரவுக்குள் வாழும் நாம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்' என நினைத்து முழுக்க முழுக்க திருநங்கைகளுக்காகவே 'சகோதரி' என்ற இதழைத் தொடங்கினேன்.

படித்துக்கொண்டே ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்து எனது சுய சம்பாத்தியத்தில் முதல் பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். ஓயாத தேடல் என்னை ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு இடம் பெயரவைத்தது. அபூர்வ இசைக் கருவிகள் தயாரிக்கும் கிராமத்து இளைஞர்கள் எட்டுப் பேருடன் சேர்ந்து காடுகள், மலைகள் என இசை ஆராய்ச்சிக்காக எங்கெல்லாமோ சுற்றினேன். என்னை ஓர் இனிய தோழியாக நடத்திய அவர்களின் இசை அறிவை உலகம் அறிந்துகொள்ள, ஓர் இணையதளம் தொடங்கினேன். இன்று அவர்கள் வெற்றியாளர்கள். அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது மனநிறைவைத் தருகிறது. திருநங்கைகளின் வாழ்வுரிமைபற்றிப் பேசப் பல மாநிலங்களுக்குச் சுற்றியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். திருநங்கைகள் மட்டுமின்றி, மாற்றுப்பாலின அடையாளம்கொண்டவர்கள், தன்பால் விழைவுகொண்டவர்களின் உரிமைக்காகவும் பேசுகிறேன். இதுகுறித்து ஊடகங்களுக்கான கருத்தரங்குகள், ஆவணப் படங்கள் எனத் தொடரும் பயணத்தில் என் சக திருநங்கைகள் பலர் என்னுடன் கைகோத்துள்ளனர்.

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யவும், பிச்சை எடுக்கவும் பிரதான காரணம் வறுமைதான். பெற்றோர்கள் கைவிடுகிறார்கள், ஊர் கிண்டல் செய்கிறது, சமூகம் வேலை தருவது இல்லை. பிறகு, அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி? பொருளாதார முன்னேற்றம்தான் மாற்றத்தின் முதல்படி. அதனால்தான் 'பட்டாம் பூச்சிகள் திட்டம்' என்ற பெயரில் அழகு ஆபரண நகைகள் தயாரிக்கும் சுயதொழில் திட்டத்தைத் திருநங்கைகளுக்குப் பயிற்றுவித்தோம். தமிழக அரசு 1.5 லட்ச ரூபாய் மானியம் வழங்கியது. திருநங்கைகள் அபரிமிதமான கலை ஆற்றல் மிக்கவர்கள். அதை உலகறியச் செய்வதற்காக 'விடுதலை கலைக் குழு' என்ற குழுவைத் தொடங்கிஇருக்கிறேன். ஆர்வமும் உழைப்பும்மிக்க 25 திருநங்கைகளுக்கு தமிழ்நாட்டு நடனம், ஆப்பிரிக்க, தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் இசையையும் கற்பிக்கிறோம். வெகு விரைவில் தனித்துவம் மிக்க இசைக் கலைஞர்களாக அவர்கள் பரிணமிப் பார்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது www.thirunangai.net என நான் தொடங்கிய இணையதளம். பாலியல் சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் திருநங்கைகளை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஆண்களைக் கண்டறிவதே இதன் நோக்கம். திருநங்கைகளுக்கான உலகின் முதல் மேட்ரிமோனியல் வெப்சைட்டும்கூட. ஆறு திருநங்கைகளின் வரன்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப்சைட்டைப் பார்த்து, இப்போது உலகம் முழுவதும் இருந்து 600-க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 'உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது' என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

விரைவில், இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கப்போகிறது. இதில் திருநங்கைகளின் எண்ணிக்கை தனியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இடப்பங்கீடு, தேர்தலில் போட்டியிடும் உரிமை, சொத்துரிமை, திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு உரிமை போன்றவை வழங்கப்பட வேண்டும். என் நோக்கமும் செயல்பாடும் இப்போது இதை நோக்கித்தான் இருக்கிறது!''

"நான் காயத்ரி ஆனது எப்படி?"

"ஓட்டப்பந்தயங்களில் ஒரே ஒரு பொண்ணு என்னைத் தொடர்ந்து தோற் கடிச்சுட்டே இருந்தாள். எப்பவும் எனக்கு ஏனோ இரண்டாவது இடம்தான். அன்னிக்கு ஒரு போட்டி. அதுலயும் அந்தப் பொண்ணுதான் ஃபர்ஸ்ட். நான் அந்தப் பெண்ணோட அப்பாகிட்டே போய், 'அங்கிள் உங்க பொண்ணு பயிற்சி எடுத்துக்குற அகா டமியில் நானும் சேர முடியுமா?'ன்னு கேட்டேன். அவர் சிரிச்சார். 'அங்கே பணக்கார வீட்டுப் பசங்கதான் பயிற்சி எடுக்க முடியும். நிறைய செலவாகும். உன்னையெல்லாம் சேர்த்துக்க மாட் டாங்க!'ன்னு கிண்டலாச் சொன்னார். எனக்கு அவமானமா இருந்தது. ஆனா, நான் அழலை. வாழ்க்கை ஒரு வட்டம்தானே...

முடிவெடுத்தேன். முன்னைக் காட்டிலும் அதிக வெறியோடு பிராக்டீஸ் எடுத்தேன். ரெண்டு மாசத்துலயே இன்னொரு போட்டி. 'இதுல நான் ஜெயிக்கலைன்னா, இனிமே வாழ்க்கையில் ஓடவே மாட்டேன்!'னு வெறியோடு ஓடினேன். அந்தப் போட்டியில் நான்தான் ஃபர்ஸ்ட். என் வேகம் அடங்கவே இல்லை. அடுத்தடுத்த எல்லாப்போட்டி களிலும் அந்தப் பெண்ணைத் தோற் கடிச்சுட்டே இருந்தேன். ஒருநாள் அந்த அங்கிளும் அந்தப் பொண்ணும் நான் கோச்சிங் எடுத்துட்டு இருந்த நாகராஜ் சார் அகாடமிக்கு வந்தாங்க. 'என் பொண்ணை உங்க அகாடமியில் சேர்த்துக்கோங்க!'ன்னு என்னைப் பார்த்துட்டே சொன்னார் அந்த அங்கிள். அப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா!'' என்று கண்கள் பார்த்துச் சிரிக்கிறார் காயத்ரி.

தடை தாண்டும் ஓட்டப் பந்தயங்களில் (ஜூனியர் ஹர்டில்) இந்தியாவின் தங்கத் தாரகை, நம்ம காயத்ரி!

"நான் அரியலூர் இலந்தங்குழி கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்து, சென்னையில் வறுமையான சூழலில் வளர்ந்த பொண்ணு. நாலு லாரி வெச்சிருந்தார் அப்பா. என் ரெண்டு வயசுல லாரி திருடுபோச்சு. மரண அடி. மொத்த கான்ட்ராக்ட்டும் கேன்சல் ஆகி, கடன்கள் அதிகமாகி, எல்லாத்தையும் இழந்த அப்பா, துபாய்க்குக் கூலி வேலைக்குப் போயிட்டார். அப்போ எனக்கு ரெண்டு வயசு, நாலு வயசு அக்கா, கைக்குழந்தையா ஒரு தங்கச்சின்னு மூணு பெண் குழந்தைகளோடு அம்மா தினம் தினம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அப்பாவோட சம்பாத்தியம் கடன்களை அடைக்கவே சரியாப்போச்சு. கேப்பைக் கூழ், கம்மங் கஞ்சிதான் வீட்ல இருக்கும்.

பஸ்ல போகக்கூட காசு இல்லாம தினம் நாலஞ்சு கி.மீ. நடந்தே ஸ்கூலுக்குப் போவேன். அப்போ ரொம்ப யதார்த்தமாதான் என்னை அத்லெட் டீமில் சேர்த்துக்கிட்டாங்க. சும்மா கூட்டத்தோடு நானும் ஓடுவேன். 'பத்தோடு பதினொண்ணா ஓட நீ எதுக்கு?'ன்னு எங்க பி.டி. பிரேமா மிஸ் திட்டுனாங்க. அப்புறம்தான் ஓட்டத்தில் வேகம் கூட்டினேன். ஆனாலும், என்னால் எந்தப் போட்டியிலும் முதல் இடத்தைப் பிடிக்க முடியலை. எங்கேயோ ஏதோ ஒரு போட்டியில் நான் ஓடுறதைப் பார்த்த நாகராஜ் சார், 'உங்க பொண்ணுக்கு நல்ல எனர்ஜி இருக்கு. அவளுக்கு நல்ல பயிற்சி கொடுத்தா, சாம்பியனா வருவா'ன்னு எங்க அப்பாகிட்டே பேசினார். 'செலவு பண்ண முடியாதே'ன்னு அப்பா பயப்பட்டார். 'நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லி, என்னை அவரோட பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்த்துக்கிட்டார் நாகராஜ் சார்.

அப்ப பிராக்டீஸுக்கு பிராட்வேயில் இருந்து எம்.எம்.சி கிரவுண்டுக்குப் போகணும். அப்படியே ஸ்கூலுக்குப் போகணும். நடந்து போனா, லேட் ஆகிடும்னு ஓட ஆரம்பிச்சேன். கிரவுண்டுக்கு ஓட்டம், கிரவுண்டில் ஓட்டம், ஸ்கூலுக்கு ஓட்டம்!

நல்ல ஷுவாங்க முடியலை. பிஞ்ச ஷுவை ஒட்டுப் போட்டு ஒட்டுப்போட்டு ஓடுவேன். ஓடுறப்போ யாரும் காலைக் கவனிக்க மாட்டாங்க. ஆனா, பரிசு வாங்க மேடை ஏறும்போது எல்லாருக்கும் ஷு'பளிச்'னு தெரியும். அதனால, எப்பவும் ஷுவைக் கழட்டிவெச்சுட்டுத்தான் மேடை ஏறுவேன். ஒருநாள் அதைப் பார்த்த என் அம்மா அழுதுட்டாங்க. அலைஞ்சு திரிஞ்சு ஒரு ஜோடி ஷுவாங்கிக் கொடுத்தாங்க. அடுத்து நான் எந்தப் போட்டியிலும் தோக்கவே இல்லை. எங்க அம்மா வாங்கிக் கொடுத்த ஷு!

இத்தனை வருஷத்தில் எனக்குச் சவாலா இருந்தவங்க அனுராதா பிஸ்வாஸ். ஹர்டில் பந்தயங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் பிளேயர். அனுராதாவுக்கு 20 வருஷ அனுபவம். அக்டோபர் மாசம் நடந்த தேசியப் போட்டியில் அனுராதாவுக்கும் எனக்கும்தான் நேரடிப் போட்டி. 110 மீட்டரில் 70 மீட்டர் வரை அவங்கதான் லீடிங். இன்னும் 40 மீட்டர்தான் இருக்கு. அதுக்குள்ள நான் ஏதாவது பண்ணியாகணும். மூச்சை இழுத்துப் பிடிச்சு உயிரைத் திரட்டி ஓடினேன். 110 மீட்டரைத் தாண்டி நிமிர்ந்து பார்த்தா... நான்தான் இந்தியா நம்பர் ஒன்!

அதே உற்சாகத்தோடு சீனாவில் நடந்த சீனியர் லெவல் ரிலே ரேஸ் போட்டிகளில் கலந்துக்கிட்டேன். இந்தியா டீம்ல நான்தான் ஜூனியர். ரிலே ரேஸ்ல மூணாவது பரிசு நமக்கு. அந்த வெற்றிகள் தந்த தைரியமும், தன்னம்பிக்கையும் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோயிருச்சு.

ஒலிம்பிக் பதக்கம்தான் என் கனவு. 2016-க்காகக் காத்திருக்கேன். உலகத்தின் முதல் இடத்தைப் பிடிக்க இந்த நிமிஷத்துல இருந்தே தயாராகிட்டு இருக்கேன். சர்வதேசச் சாதனைகளுக்கு மனதளவிலும் உடலளவிலும் இன்னும் இன்னும் நான் தயாராகணும். ஒரே ஒரு ஆசைதான்... ஒலிம்பிக்குக்குக் கிளம்பும்போது எனக்கு புது ஷுவாங்கித் தருவியா அம்மா?''

எஸ்.கலீல்ராஜா படங்கள் :'ப்ரீத்தி' கார்த்திக்


"நான் ஏங்கெல்ஸ் ராஜா ஆனது எப்படி?"

- பாரதி தம்பி
படங்கள்:வீ.சிவக்குமார்

தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!

"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!

"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.

வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.

முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!

தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"


நான் யுகபாரதி ஆனது எப்படி?
யுகபாரதி- வயது 32, திரைப்படப் பாடலாசிரியர்

ப்போது நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பூக்காரத் தெரு எட்டுக்கட்டு வீட்டின் முகப்பில் கார்ல்மார்க்ஸ், லெனின் இருவருடைய நிழற்படங்களும் இருந்தன. அவற்றின் மீது தூசி படிந்தாலே, அப்பாவுக்குப் பொறுக்காது. உடனே, தன் தோளில் கிடக்கும் சிவப்புத் துண்டால் அதனைச் சுத்தம் செய்யத் தொடங்கிவிடுவார். அவரைப் பொறுத்தவரை அவை வெறும் நிழற்படங்கள் அல்ல. நிகழப்போகும் விடுதலைக்கான நினைவுச் சின்னங்கள். அந்த நிழற்படங்களைப்பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களை அப்பா போற்றியவிதத்தால் நாளடைவில் அவர்கள் மீது எனக்கும் மரியாதை வரத் தொடங்கியது. வீட்டு முற்றத்தில் நிறைந்திருக்கும் அப்பாவின் தோழர்கள் எப்போதும் அனல் பறக்கும் அரசியல் விவாதங்களை நிகழ்த்தியபடி இருப்பார்கள். சிறுவனான நானும் அவர்களின் பேச்சில் பங்குகொள்ள விரும்பி வாசிக்கத் துவங்கினேன். மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலே நான் வாசித்த முதல் நூல். அந்த நூல் வாசிக்கும் ஆவலை அதிகப்படுத்த, ஒரு கட்டத்தில் நான் நூல்களின் காதலனாக மாறிப்போனேன். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் கவிதையின் மூல விதை எனக்குள் முளைவிட்டிருக்க வேண்டும்.

l எனக்குத் தமிழ்ப் பாடம் எடுத்த ராஜேஸ்வரி அம்மா. வகுப்பில் எனக்காகவே சில விசேஷக் கவிதைக் குறிப்புகளைத் தந்து, தன் வீட்டில் இருந்த பல புகழ்பெற்ற கவிதை நூல்களைக் கொடுத்து புதுக்கவிதையின் செல்நெறியை அறிமுகப்படுத்திவைத்தார்கள். அவர்கள் மாற்றலாகிப் போனபோது நான்குஐந்து நாட்கள் அழுதுகொண்டே இருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அவர்களுக்குப் பின் அந்த இடத்துக்கு வந்தவர் புலவர் செல்லகணேசன். முறையாக தமிழைக் கற்பிக்கத் தினந்தோறும் மாலை வேளைகளில் அவர் வீட்டுக்கு அழைத்துப்போவார். நிலா கரையும் அவர் வீட்டு பின்வாசலில் அமர்ந்து, சங்க இலக்கியத்தின் சாறு முழுக்க குடித்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஒரு போருக்குத் தயாரிப்பதைப்போல அவர் என்னைத் தயாரித்தார். ஒருநாள் பாடம் கேட்கத் தவறிவிட்டால், அவரே தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார். ஏன் என்னைச் சூழ்ந்தவர்கள் அத்தனை பேரும் என் மீது அதீத அக்கறைகொண்டு இருந்தார்கள் என்று இந்த நொடி வரை யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

l எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ், அவரே என் வாழ்வின் மிக உன்னதத் தருணங்களை வடிவமைத்தவர். காலத்தைப் பொருட்படுத்தாமல் பிறருடைய கேள்விகளுக்காகவே தன் முழு வாழ்வையும் செலவழித்தவர். தாடியை நீவிக்கொண்டே அவர் பேசும் இலக்கிய உரையாடல் ஓஷோவின் பிரசங்கம் போலிருக்கும். தஞ்சை சோழன் சிலை அருகே நடைபாதையில் அமர்ந்துகொண்டு அவர் பேசிய இலக்கியம் உள்ளத்தைச் சிலிர்க்கவைத்தது. சிற்றிதழ்களே தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் என்பார். 'நீ ஏன் சினிமாவுக்கு பாட்டெழுதப் போகக் கூடாது?' என்றும் கேட்டிருக்கிறார். அவரைக் காண்பதற்காகவே வரும் இலக்கியவாதிகளிடம் என்னை அறிமுகப்படுத்துவார். நான் எழுதிய கவிதைகளின் புகழத்தக்க வரிகளை அவர்களுக்கு ஒப்பிப்பார். வாஞ்சையும் வழிகாட்டலும் ஒருசேர அவரிடம் இருக்கும். அவர் இப்போது இல்லை என்பதும் அவருக்கு என் வளர்ச்சியைச் சமர்ப்பிக்க இயலாமல் போனதும் பெரிய துக்கம்.

l சென்னைக்கு வந்து ராஜரிஷி பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானைச் சந்தித்தேன். வீடே நூலகமாக... நூல்களே வாழ்வாகக்கொண்ட ஒருவரை நான் சந்தித்த அந்தத் தருணம் ஏனோ என் கைகள் நடுங்கின. 'நீதான் யுகபாரதியாப்பா?' என்ற அந்த கணீர்க் குரல் இன்னமும் இதயத்தை மிரட்டிக்கொண்டே இருக்கிறது. 'இந்த இதழில் நீ எழுதியிருக்கும் கவிதை அபாரம்ப்பா' என்றார். அந்த ஒற்றைப் பாராட்டு ஓடி வந்த என் கால்களுக்கு ஒத்தடமாயின. வேர்த்து நின்ற தேகத்துக்கு விசிறி வீசின. அப்போது எல்லாம் என்னை வறுமை பீடித்திருந்தது. நண்பர்கள், அறைக்கு வாடகை தர இயலாத என்னை வெளியேறச் சொன்னார்கள். 'பொறியியல் படித்த நீ ஏன் தேவையில்லாமல் கவிதையைக் கட்டிக்கொண்டு அழுகிறாய்?' என்றார்கள். ஒரு கோடை மாதத்து நள்ளிரவில் கோடம்பாக்கக் குறுக்குச் சந்தில் பரதேசிகளில் ஒருவனாகப் படுக்க நேர்ந்தது. அப்போது அறிமுகமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பழனியாப்பிள்ளையும் பாலாவும் தங்கள் விடுதிக்கு அழைத்துப் போய் அடைக்கலம் கொடுத்தார்கள். அந்த மழை இரவை நான் மறப்பதற்கு இல்லை.

பத்திரிகை நின்றுபோனது. பிளாஸ்டிக் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். உடம்பு நோக சக்கர மிஷினைச் சுற்றும் வேலை. அப்போதுதான் ராஜரிஷியில் ஆசிரியராக இருந்த துரை, 'உன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போடேன்' என்றார். சோற்றுக்கே வழிஇல்லாதவன் எங்கிருந்து புத்தகம் போடுவது? அவரே என் கவிதைகளை சீர்படுத்தி 'மனப்பத்தாயம்' என்ற என் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடவே, கணையாழி பத்திரிகையில் வேலையும். கணையாழிக்கு மதிப்புரைக்கு வரும் நூல்களை ஒன்றுவிடாமல் வாசிப்பேன். வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள் கிடைத்தார்கள். இலக்கிய ஆளுமைகளுடன் நேரடி பரிச்சயம் ஏற்பட்டது.

l என் மனப்பத்தாயம், பஞ்சாரம் கவிதைத் தொகுப்புகளைப் படித்துவிட்டு, என்னைப் பாடலாசிரியனாக ஆக்க விரும்பியவர்கள் வாசுவும், தியாகுவும்தான். இவர்களுக்கு முன்பே இணை இயக்குநர் செழியனும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் குறிப்பிடத்தக்கவர்கள். ஜேம்ஸ் வசந்தன் அப்போது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். எனினும், அவருள் கனன்றுகொண்டு இருந்த இசை ஜுவாலையை நானறிவேன். 'வாசனை' என்றொரு இசை ஆல்பத்துக்காக ஐந்து பாடல்களை எழுதவைத்து சின்னதாக எனக்குள் பாடல் பயிற்சியை மேற்கொண்டார். தியாகு நல்ல கவிதை ரசனை உள்ளவர். அவரே இயக்குநர் லிங்குசாமியிடம் என்னை அறிமுகப்படுத்தி, திரை வாய்ப்பை ஏற்படுத்தினார். முன்பின் அறிமுகம் இல்லாமல் வெறும் கவிதையாலேயே ஒருவனை அடையாளம் கண்டு அவனுக்கு வாய்ப்பை ஏற்படுத்த எத்தனை தியாகுகள் நம்மில் முன் வருவார்கள்? 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்' என்ற ஒரு பாடல் என் இலக்கிய, லௌகீக முகங்களை எல்லாம் மாற்றி ஜனரஞ்சக அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. யுகபாரதி என்கிற பெயர் மணிக்கு ஒரு தரமாவது பண்பலை வானொலிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் வேறு எங்கோ போவதற்கான வழி மட்டுமே!

''நான் ஜோதி ஆனது எப்படி?''

- பாரதி தம்பி படங்கள் : உசேன்


''அமராவதி ஆற்றங்கரையின் ஒரு கிராமத்துல பிறந்த நான், தேசிய அரசியலை எட்டிப்பிடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இன்னிக்கு நான் இந்தியத் தலைநகர் டெல்லியில் இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளராக இயங்குகிறேன். ஆனால், அதைவிட என் சொந்தக் கிராமத்துல 15 வருஷமா குடிக்கத் தண்ணி இல்லாம தவிச்ச தலித் மக்களுக்காகப் போராடி, குடிதண்ணீர் வாங்கித் தந்ததுதான் என் மனசுக்கு நிறைவளிக்கும் விஷயம்!''- படபடவெனப் பேசுகிறார் ஜோதிமணி.

இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்களில் ஒருவர். அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பும் இத் தலைமுறை இளைஞர்களைப்போல் அல்லாமல், நேரடி அரசியலில் இயங்கும் ஜோதி, ஓர் எழுத்தாளர். தனது கிராமத்தில் நடத்திய தண்ணீர் போராட்டத்தை 'நீர் பிறக்கும் முன்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

''கரூர் மாவட்டம் பெரிய திருமங்களம்தான் நான் பிறந்த கிராமம். அப்பா விவசாயி. பொருளாதாரரீதியாக கஷ்டம் இல்லாத குடும்பம்தான். படிப்பில் ஆர்வம் உண்டு. எப்பவும் நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் தான். உடுமலைப்பேட்டை கல்லூரியில் படிக்கும்போது போட்டியே இல்லாமல் கல்லூரித் தேர்தலில் ஸ்டூடன்ட் செகரெட்டரி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்.எஸ்.எஸ். கேம்ப்புக்காகப் போனப்ப சாதாரண மக்களோடு தங்கி, அவங்ககூடவே சாப்பிட்டு, வேலை பார்த்துக் கழித்த சில நாட்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அடுத்த முறை எங்க ஊருக்கு வந்தப்போ, ஊரே எனக்குப் புதுசாத் தெரிஞ்சது.

எங்க கிராமத்தோட தலித் மக்கள் 15 வருஷமா அவங்க காலனிக்குக் குடிதண்ணீர் குழாய் கொண்டுவரணும்னு போராடிட்டு இருந்தாங்க. ஒரே ஒரு குழாய்கூட இல்லாம பல கி.மீ. நடந்து போய் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை. அவங்களுக்கு பைப் கனெக்ஷன் கொடுப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனாலும், யாருக்கும் தண்ணீர் கொடுக்க மனசு வரலை. 'சரி, நம்மால் என்ன பண்ண முடியும்?'னு யோசிச்சப்பதான் 'இந்தப் பிரச்னையைத் தீர்க்க கையில் அதிகாரம் அவசியம்'னு புரிஞ்சது. அந்த வயசுக்கு 'அதிகாரம் கையில வந்தா, நாமளும் ஒரு எம்.ஜி.ஆர். மாதிரி ஆயிடலாம்'ங்கிற அளவுக்குக் கற்பனை.
'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போறேன்'னு சொன்னதும், வீட்ல பயங்கர எதிர்ப்பு. சொந்தக்காரங்க எல்லாம் ஷிஃப்ட் போட்டு அறிவுரை சொன்னாங்க. 'நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு அரசியல் எதுக்கு?'கிற கேள்வியை ஒரு நாளைக்கு 100 தடவை என் காதால் கேட்டேன். ஆனாலும், என் முடிவில் கடைசி வரைக்கும் உறுதியா இருந்தேன். 5,000 ஓட்டுக்கள்கொண்ட ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் பண்ணேன். மக்களிடம் பேசினால், 'நீ இல்ல, உங்க ஊர்லேர்ந்து எவன் நின்னாலும் ஓட்டு போட மாட்டோம்'னு கறாராச் சொன்னாங்க. தினம் தினம் மக்களோடு பேசுவேன். தீர்வு அப்புறம், அவங்களோட பிரச்னையைக் கேட்கவே ஆள் இல்லைங்கிற உண்மை புரிஞ்சது. கடைசியில வீடு, சொந்தக்காரங்க எல்லாரும் எனக்காகத் தேர்தல் வேலை பார்க்க முன் வந்தாங்க. 'நான் அஞ்சு ஆயிரம்தான் செலவு பண்ணுவேன். சாராயம் வாங்கித் தர்றது, பணம் தர்றது எல்லாம் பண்ண மாட்டேன்'னு சொல்லிட்டேன். தேர்தல் முடிஞ்சு முடிவு வந்தது. நான் ஜெயிச்சேன்.

ஆனா, ஜெயிச்சு எட்டு மாசம் வரைக்கும் என்னால் எதுவுமே பண்ண முடியலை. தாசில்தார் ஆபீஸ்ல என்கிட்ட எதாவது பொய் சொல்லி ஏமாத்துவாங்க. உள்ளூர் தலித் மக்கள், 'என்னமோ தண்ணீர் கொண்டுவர்றேன்னா... ஒண்ணுத்தையும் காணோம்'னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிகாரம் மட்டுமே எதையும் சாதிக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் தாசில்தார் ஆபீஸ் போய் சண்டை போட்டு, போராட்டம் நடத்தி, மனு போட்டு, பல ஊழல்களைக் கடந்து பைப் லைன் கொண்டுவர மூன்றரை வருஷமாச்சு. தண்ணீர் வந்த முதல் நாள் அழுகையும் மகிழ்ச்சியுமா ஒரு சினிமாபோல இருந்தது. அதுக்குப் பிறகு என்னோட ஒன்றியக் கவுன்சிலுக்கு உட்பட்ட மத்த கிராமங்களின் தலித் குடியிருப்புகளுக்கும் குடி தண்ணீர் பைப்லைன் போட்டாங்க.

அடுத்த தடவையும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சேன். அந்தச் சமயத்தில் அமராவதி ஆற்றில் அரசாங்கம் மணல் அள்ளத் திட்டம் போட்டுச்சு. 'அரசு எடுத்தாலும், தனியார் எடுத்தாலும் ஆத்துல மணல் எடுக்குறது எங்க விவசாயத்தைப் பாதிக்கும்'னு சொல்லி, மக்களைத் திரட்டிப் போராடி, அந்த பொக்லைன் இயந்திரத் தைத் தடுத்தோம். பிறகு, நானே கோர்ட்டில் கேஸ் போட்டு, அமராவதி ஆற்றில் மணல் அள்ள நிரந்தரத் தடை ஆணை வாங்கினேன். இப்போ வரை எங்க ஊர் ஆத்துல யாரும் மணல் அள்ளுறதில்லை.

ஆரம்பம் முதலே எனக்கு காந்தியக் கொள்கைகள் மேல ஈர்ப்பு உண்டு. நான் முதல் தடவை தேர்தலில் போட்டியிடும்போதே தமிழ் மாநில காங்கிரஸோட வேட்பாளர்தான். அடுத்த தடவையும் த.மா.கா-வில் நின்னுதான் ஜெயிச்சேன். மூன்றாவது முறையா போட்டியிட்டப்போ, மணல் கொள்ளை நடத்தினவங்க உள்பட சகலரும் எனக்கு எதிரா ஒண்ணு சேர்ந்துட்டாங்க. நான் தேர்தலில் தோற்றேன். ஆனா, நான் எந்தக் காலத்திலும் பதவிதான் அரசியல்னு நினைச்சது இல்லை.

நான் த.மா.கா-வில் இருந்த சமயத்திலேயே எனக்கு ப.சிதம்பரத்தைத் தெரியும். 'சின்னப் பொண்ணு'தானேன்னு நினைக்காம, நான் சொல்ற விஷயங்களையும் காது கொடுத்துக் கேட்பார். அவர் வழிகாட்டுதல் இல்லைன்னா, நான் என்னிக்கோ அரசியலில் இருந்து வெளியேறி இருப்பேன். 2001-ல் அவர் த.மா.கா-வில் இருந்து வெளியேறி 'காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை'யை ஆரம்பிச்சப்போ என்னை கரூர் மாவட்டச் செயலாளரா நியமிச்சார். 25 வயசுல ஒரு கட்சிக்கு மாவட்டச் செயலாளரா இருந்ததை இன்னிக்கு நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு.

2006-ல் இளைஞர் காங்கிரசுக்குள்ள வந்தேன். இரண்டு வருஷம் பரபரப்பான இளைஞர் காங்கிரஸ் பணிகள். மாநிலத் துணைத் தலைவரா இருந்தேன். அப்போதான் ராகுல்ஜி இந்திய யூத் காங்கிரஸின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஹைதராபாத்தில் ஒரு மீட்டிங். ஆந்திராவின் தலித் குடியிருப்புகளில் சில நாட்கள் தங்கி அந்த அனுபவங்களைப் பேசணும். இதற்காக நாடு முழுக்க 1,800 பேர் அழைக்கப்பட்டு இருந்தாங்க. ராகுல்ஜி முன்னிலையில் நடந்த அந்த மாநாட்டில் பேசிய 17 பேரில் நானும் ஒரு ஆள்.

அதன் பிறகு, ஐந்து எம்.பி-க்கள்கொண்ட குழு நாடு முழுவதும் இருந்த யூத் காங்கிரஸ் பொறுப் பாளர்களிடம் டேலன்ட் டெஸ்ட் நடத்தியது. என் முறை வந்தபோது 'ஜோதிக்கு டெஸ்ட் வேண்டாம். அவங்க டேலன்ட்தான் நமக்குத் தெரியுமே' என்று நேரடியாக என்னைத்தேர்ந் தெடுத்தார் ராகுல். அப்படித் தேர்ந்தெடுக் கப்பட்ட 22 பேரை இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்கள் ஆக்கினார்கள். இந்த 22 பேர் கமிட்டிதான் இளைஞர் காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை நிர்வாக அமைப்பு. அதில் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நான்.

எங்கள் கிராமத்தில் சதாசிவம் என்றொரு எம்.எல்.ஏ. இருந்தார். மூன்று முறை எல்.எல்.ஏ-வாக இருந்த அவர், வாழும் காலம் வரை ஊழல் இல்லாமலும் எளிமையாகவும் வாழ்ந்தார். அவர்தான் எனக்கான அரசியல் முன்னோடி. 'நான் ஜோதி ஆனது எப்படி?' என்ற கேள்விக்கு 'சதாசிவம் ஐயா' என்ற ஒரு வார்த்தை பதில்தான் மிகப் பொருத்தம். அரசியலை இன்றைய இளைய தலைமுறை வெறுக்கிறது. ஆர்வம் காட்ட மறுக்கிறது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வீட்டைச் சுத்தப்படுத்துவதும், வீதியைச் சுத்தப்படுத்துவதும், நாட்டைச் சுத்தப்படுத்துவதும் நம் கடமை. நான் என் வீடு தாண்டி வீதியையும் சுத்தப்படுத்த விரும்பினேன். விருப்பம் இருந்தால் வாருங்கள், ஊழல் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்குவோம்!''
"நான் இளங்கோ ஆனது எப்படி?"
ம.கா.செந்தில்குமார், படங்கள்:கே.கார்த்திகேயன்

"நான் முதல் தலைமுறை பட்டதாரி. என் அம்மா தன் தாய்மாமாவையே மணந்தார்.

நெருங்கிய உறவுக்குள் நடந்த திருமணத்தின் பாதிப்பால் எனக்குப் பிறக்கும்போதே பார்வை இல்லை. 10-ம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்த நான், ப்ளஸ் 1 முதல் பொதுப் பள்ளியில் சேர்ந்து மற்ற மாணவர்களுடன் போட்டி போடத் தொடங்கினேன். லயோலாவில் பி.ஏ., ஆங்கிலத்தில் கோல்டு மெடல். எம்.ஏ-வில் ஒலியியல் பாடத்தில் மீண்டும் தங்கம். மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எவ்வாறு கற்றுத் தருவது என்று ஆசிரியர்களுக்கு உணர்த்தும் வகையில் நான்செய்த ஆராய்ச்சிக் கட்டுரை இன்றும் பேசப்படுகிறது. பாராட்டு... பாராட்டு... இதுவே வாழ்வில் என்னைத் தாங்கிப் பிடிக்கும் தாரக மந்திரம்!"- பிறவியிலேயே பார்வை சவால் உள்ளவராகப் பிறந்த இளங்கோ, இன்று இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிக£ட்டி!

"கல்லூரி விரிவுரையாளருக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தனியார் கல்லூரி ஒன்றின் ஆங்கி லத் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளர் பணி. 'எஃபெக்டிவ் கம்யூனிகேஷன்' என்ற தலைப்பிலான ஆங்கிலப் பாடத்துக்குவார இறுதி நாட்களில் சென்று வகுப்பு எடுப் பேன். மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்த துணைவேந்தர், அந்தப் பாடத்தை எம்.ஏ-வில் முதன்மைப் பாடமாகச் சேர்த்தார். இன்றும் அந்தப் பாடம் நடந்து வருவதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சி. பல நிறுவனங்களில் இருந்தும் பணிபுரிய அழைப்பு வந்தது. கொஞ்சம் யோசித்து நானே 'ஏஸ் பனேசியா சாஃப்ட் ஸ்கில்ஸ்' என்று ஒரு நிறுவனம் தொடங்கி னேன். வாழ்வியல் திறன்களை மேம்படுத் துதல், இலக்கை நிர்ணயித்தல், ஆளுமைத் திறன் வளர்த்தல் போன்ற துறைகளில் தமிழகம் தாண்டியும் பல்வேறு நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

இதில் முக்கியமானது ஆங்கிலம் கற்றுத் தருதல். உலகிலேயே மிக எளிமையாக கற்றுக்கொள்ளக்கூடிய மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. 'ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி' என்ற பெயரில், இன்று வணிக நோக்கோடு செயல்படும் பல நிறுவனங்கள் மாணவர்களின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல்இயங்கு கின்றன. 'ஓவர் நைட்டில் ஒபாமாவிடம் பேசலாம்!', 'காலையில் சேர்த்தால் மாலையே பில்கேட்ஸுடன் டின்னர் சாப்பிடலாம்' என உசுப்பேற்றும் விளம்பரங்களை நான் நம்புவது இல்லை. இலக்கணம் என்ற பெயரில்மாண வர்களை மிரள வைக்கக் கூடாது என்பது என் பாலிசி. தவறோ, சரியோ முதலில் அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்வேன். தவறாகவே இருந்தாலும் பேசுங்கள். பேசப்பேசத்தான் தெளிவு வரும். என் தன்னம்பிக்கையும், நன்னம்பிக்கை அணுகுமுறையும் அவர்களிடமும்தொற்றிக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களில் என்னையும் அவர் களுக்குப் பிடித்துப் போகும். இவை எல்லாவற்றையும் விட, நான் தயாரித்த ஆங்கிலப் பாடத்திட்டம் அவர் களுக்கு ரொம்பவே பிடித்துவிடும்.

சின்ன வயதில்'நல்லா பாடுறியேடா' என்று நான் பாடுவதை நண்பர்கள் பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டுதான் இன்று என்னைப் பாடகனாக்கி இருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா உட்பட பலருடன் மேடைக் கச்சேரிகள் செய்துள்ளேன். 'எங்க அப்பா பாடலை எஸ்.பி.பி. அங்கிளுக்கு அடுத்து அருமையா பாடுறது நீங்கதான்' என்பார் யுவன். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறேன். எனக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான பாடல்களின் பின்னணி இசையை மட்டும் என் செல்போனில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பின்னணி இசையை ஒலிக்கவிட்டபடி நான் பாடும் பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 'பூவே செம்பூவே உன் வாசம் வரும்' என்று பாடிக்கொண்டே இசை மட்டும் ஒலிக்கும் இடங்களில், 'இந்தப் பாடலை எழுதியவர், பாடல் கம்போஸிங் போது நடந்த சம்பவங்கள்' எனத் தகவல்களைப் பரிமாறுவேன். சரியாக இசை முடியும் இடத்தில் 'நிழல்போல நானும்' என்று பாடலின் அடுத்த வரியை நான் பாடும்போது கைதட்டல்கள் அள்ளும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல... அடுத்தநாள் கொடுக்கவேண்டிய லெக்சர், கம்பெனியின் வரவு- செலவு விவரங்கள் என அனைத்தையும் நான் செல்போனில்தான் இயக்குகிறேன். கணிப்பொறியைக் கச்சிதமாக இயக்குவேன். விலகி நின்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆனால், உள்ளே குதித்துவிட்டால் 'இவ்வளவுதானா' என்றாகிவிடும். அடுத்து விளம் பரங்கள், டாகுமென்ட்டரி ஃபிலிம்கள் என பல வீடியோ, ஆடியோ ஆல்பங்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து வருகிறேன். கணபதி சில்க்ஸ், பிரின்ஸ் ஜுவல்லரி என நீங்கள் கேட்கும் பல விளம்பரங்களின் 'பேஸ் வாய்ஸ்' என்னுடையதுதான்.

நான் கடவுள் மறுப்பாளன். பெரியாரின் மானசீக மாணவன். இங்கு மனிதர்களும், மனிதமும் மட்டுமே உண்மை. ஒருமுறை ஒரு பிரபல தனியார் சேனல் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்களுடன் என்னையும் நடுவராக அழைத்தது. 'நீங்கள் வந்து உட்கார்ந்திருங் கள். பாடலின் முடிவில் பாட்டு எப்படி இருந்தது என்று நாங்கள் எழுதித்தருவதை மட்டும் சொல்லுங்கள் போதும்' என்றார்கள். 'அதற்கு நான் எதற்கு?' என்று வந்துவிட்டேன். இந்த தன்மான உணர்வும் தன்னம்பிக்கையும் பெரியார் தந்தது. அதுதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.

டி.வி-யில் ஒளிபரப்பான என் பேட்டியைப் பார்த்துவிட்டு, திருவண்ணாமலையில் இருந்து ஒரு அம்மா என்னைத் தொடர்புகொண் டார். 'எங்க குடும்பத்தைத் தற்கொலையில் இருந்து காப்பாத்தி இருக்கீங்க' என்று அழுதார். என் நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் ஆட்டோகிராஃப் வாங்குகின்றனர். அதற்கு நான் தகுதியானவனா, இல்லையா என்பதல்ல பிரச்னை. அந்தப் பாராட்டுகளும், அங்கீகாரமுமே என்னை மேலும் மேலும் முன்னோக்கித் தள்ளுகின்றன. பார்வை சவால் உள்ள என்னாலேயே இவ்வளவு முடிகிறது என்றால், உங்களால் முடியாதா என்ன?"


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




     RSS of this page