Home / Muthulingam

Muthulingam


 

விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள் - ஆனந்த விகடன் - 2014-01-29

வாசகர் கேள்விகள்...

 கபிலன், திருத்துறைப்பூண்டி.

'' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி?''

''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா?!

ரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார்.

அவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும் எடுத்து வெளியே வைத்தார். பதக்கம் சங்கிலியா, முத்துமாலையா, மணியாரமா அல்லது நீலக்கல் அட்டிகையா என்று நீண்ட விவாதம் நடந்தது. பொற்சரிகை வைத்த நீலப் பட்டாடையா அல்லது சிவப்பா அல்லது ஊதா கலரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

சேலையை எடுத்து இரண்டு கைகளாலும் பிடித்துப் பாதி முகத்தை மனைவிக்குக் காட்டினார். எனக்குக் காட்டி, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டார். பின்னர், தான் நினைத்ததை அணிந்துகொண்டார். இரண்டு கைகளிலும் வளையல்களை முழங்கை வரை நிரப்பிவிட்டு, அவற்றைத் திரும்பத் திரும்ப எண்ணியபடியே இருந்தார். பத்மினி, நல்லவர்; பெருமை இல்லாதவர்; கருணையானவர். விடைபெற்றபோது கண்கலங்கினார்.

மீண்டும் ஒருமுறை அவரை நியூயோர்க்கில் சந்தித்தேன். சுதா ரகுநாதன்,

'பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மீதே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா’ 
என்று பாட, பத்மினி அபிநயம் பிடித்தார். இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். அதுவே அவர் ஆடிய கடைசி நடனம். அவருக்கு 72 வயது. விடைபெறும்போது முத்தம் தந்தார் கனவுக்கன்னி. சில மாதங்களில் இறந்துபோனார்.

இப்போதும் பத்மினியைப் பற்றி நினைக்கும்போது 'மணமகள்’ பத்மினியோ, 'தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியோ நினைவுக்கு வருவது இல்லை. பழைய கால நாடகத்தில் ராஜா மேடைக்கு வரும்போது திரையினால் பாதி முகத்தை மூடியபடி ஆடிக்கொண்டே வருவதுபோல பத்மினி சேலையைக் குறுக்காகப் பிடித்து பாதி முகத்தை மறைத்துக்கொண்டு, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டதுதான் மனக்கண் முன் வருகிறது!''

அ.ஜெயராஜ், திருமுக்காடு.

''பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள். அப்படியான சந்திப்பில் உங்களை ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் யார்?''

''ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் என்றால்,  அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியராக இருக்கும் கார்ல் இயெக்மென்னா! அவர் ஒரு சிறுகதை ஆசிரியர். ஆனால், அங்கே உள்ள மாணவர்களுக்கோ பேராசிரியர்களுக்கோ, அவர் எழுத்தாளர் என்பது தெரியாது.

முன்பின் வேறு எழுத்தாளர்கள் கையாண்டிருக்க முடியாத கருவை எடுத்து, அற்புதமான முறையில் விருத்திசெய்து சிறுகதையாக்குவார். ஒவ்வொரு வசனமும் பெரும் கவனத்தோடு செதுக்கப்பட்டு கூராக இருக்கும். அதனால் படிக்கும்போது பல வசனங்களை அதன் அழகுக்காகத் திரும்பத் திரும்பப் படிப்பேன். அவரைப்போல இலகுவாக எழுதிவிட முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது எத்தனை கடினமானது என்பது அவரைச் சந்தித்தபோதுதான் புரிந்தது.

கார்ல் இயெக்மென்னாவின் மேசையில் பல கதைகள் பூர்த்திசெய்யப்படாமல் பாதிப் பாதியாகக் கிடந்தன. ஒரு சிறுகதை எழுதுவதற்கு மூன்று மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை எடுப்பதாகக் கூறினார். முழுத் திருப்தி கிடைக்கும் வரை செம்மைப்படுத்துவார். 'எழுதுவது ஒரு தவம். நாவல் எழுதுவது, மாரத்தான் ஓட்டம் போல. சிறுகதை 100 மீட்டர் ஓட்டம்போல. உன்னிடம் இருக்கும் அத்தனையையும் கொடுத்து சிறுகதை எழுதவேண்டும்’ என்று சொன்னார். எந்திரனை உருவாக்கும் அதீதக் கவனத்துடன் சிறுகதைகளைப் புனைகிறார் அந்தப் பேராசிரியர்!''

யூ.ஏ.ஜோசப் ராஜ், பயமறியானேந்தல்.

''சங்க இலக்கியப் பாடல்களில் நீங்கள் ஆச்சரியப்பட்ட பாடல் எது?''

''புறநானூறு (187) ஒளவையாருடைய 'நாடா கொன்றோ; காடா கொன்றோ...’ எனத் தொடங்கும் பாடலைத்தான் என் இணையதளத்தின் (amuttu.net) முகப்புப் பாடாலாக வைத்திருக்கிறேன். கருத்து, மிக எளிமையானது. ஒரு நாட்டின் சிறப்பை அதன் காடுகளோ, சமதரைகளோ, மலைகளோ, பள்ளத்தாக்குகளோ தீர்மானிப்பது இல்லை. அந்த நாட்டு மக்களே அதன் சிறப்புக்குக் காரணம்!

ஆனால், உங்கள் கேள்வியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது புறநானூற்றில் காணப்படும் ஒரு கதைதான். பெண் கேட்டு வந்த அரசன் கோபத்தில் நெற்றி வியர்வையை வேல் கம்பினால் வழித்தபடி நிற்கிறான். பெண்ணின் தந்தை பணியவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை; சாந்தமாக மறுக்கிறார். இதுதான் முடிவு என்றால், கூரிய பற்களும், ஈரமான கண்களும் கொண்ட இந்த அழகியப் பெண், சிறு நெருப்பு பெருங்காட்டை அழிப்பதுபோல தான் பிறந்த ஊரையே அழித்துவிடுவாள்!

புறநானூறு-349.

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

'நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்துமொழி யலனே;
இதுஇவர் படிவம்; ஆயின் வைஎயிற்று 
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே..’

பெண்கேட்டு வந்த அரசன் கோபத்துடன் இருக்கிறான். வேல் நுனியினால் நெற்றி வியர்வையை வழிக்கிறான். முதல் வரியிலேயே கிடைக்கும் படிமம் பாடலின் வெற்றியை நிச்சயமாக்கிவிடுகிறது. செக்கோவின் சிறுகதை போல ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. இதுதான் சங்கப்பாடல்!''

ஆத்தியப்பன், திருக்கோவிலூர்.

''தங்களால் மறக்க முடியாத பயணம்..?''

''அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்துக்கு சமீபத்தில் சென்று வந்தது சுவாரஸ்யமாகப்பட்டது. உலகத்திலேயே ஆதித் திருட்டு, மாட்டுத் திருட்டுதான். 3,000 வருடங்களுக்கு முந்தைய ரிக் வேதம்கூட மாட்டுத் திருட்டு பற்றிச் சொல்கிறது.

புறநானூற்றில் உலோச்சனார் 'காரைப்பழ மது உண்டு, மாமிசம் தின்று தன்னுடைய எச்சில் கையை வில்லிலே துடைப்பவன் மறுபடியும் புறப்படுகிறான். தான் கவர்ந்த ஆநிரைகளை ஊருக்கெல்லாம் தந்துவிடுவான்’ என்கிறார். எதிரி நாட்டின் மாடுகளைக் கவர்ந்து தன்னுடைய குடிமக்களுக்குக் கொடுக்கும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலும்.

அமெரிக்காவில், ஒருகாலத்தில் மாட்டுக் காவலர்களின் (cowboys) ஆட்சிதான் நடந்தது. அவர்கள் மாடுகளைக் காவல் காப்பதும், திருடர்கள் திருடுவதும், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதும் திருடர்களைப் பிடித்துத் தூக்கில் தொங்கவிடுவதும் சகஜம். அந்தக் காலம் முடிந்துவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், இன்றும் திறந்தவெளி மாட்டுப் பண்ணைகள் பல முன்னர் போல இயங்கியதை மொன்ரானாவில் பார்க்க முடிந்தது.

அங்கே வேலை செய்த மாட்டுக்காவலர், விளிம்பு தொப்பியும், நீண்ட பூட்ஸும், இடையில் துப்பாக்கியும் அணிந்து இருந்ததைக் கண்டேன். அவர் சொன்னார், 'சில நாட்கள் முன்னர் திருடர்கள் இரவு பெரிய ட்ரக் வண்டியில் வந்து 50 மாடுகளைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்’ என்று. 250,000 டொலர் நட்டம். திருட்டு நிற்கவில்லை; திருடும் முறைதான் மாறி இருக்கிறது!''

கிருத்திகா, திருமழபாடி.

''நீங்கள் பிறந்து வளர்ந்த இலங்கையின் 'கொக்குவில்’ குறித்த உங்கள் பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''ஆகச் சிறுவயது ஞாபகம் என்று ஒன்றைச் சொல்லலாம்.

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டு இருந்தது. எங்கள் கிராமத்தில் உணவுத் தட்டுப்பாடு. பல குடும்பங்களில் ஒரு நேரச் சாப்பாடுதான். எங்கள் குடும்பத்தில் 10 பேர். ஐயாவுக்குக் கவலை, எங்கேயிருந்து தினமும் உணவு கொண்டுவருவது என்பது. அம்மாவின் யோசனை, அன்று என்ன சமைப்பது... எப்படிப் பசி ஆற்றுவது?

ஒரு நாள், ஐயா எப்படியோ ஒரு மூட்டை நெல் சம்பாதித்து வந்து அதைக் குப்பைமேட்டின் அடியில் புதைத்துவைத்தார். தேவைக்கு அதிகமான உணவு வைத்திருக்கக் கூடாது என்பது சட்டம். அடுத்த நாள் அதிகாலை பொலீஸ் வாகனம் வந்தது. ஐந்தாறு பொலீஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் டப்புடப்பென்று குதித்து வீட்டைச் சோதனை போட்டு, ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினார்கள். அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்ற என் கண்களைப் பார்த்திருந்தால், அவர்கள் இலகுவாக வெற்றி கண்டிருக்கலாம். நான் குப்பை மேட்டைவிட்டு கண்களை எடுக்கவில்லை. அந்தக் கிராமத்தில் 50, 100 என்று நெல் மூட்டைகள் பதுக்கிவைத்திருந்த வியாபாரிகள் இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு எங்கள் வீட்டைச் சோதனை செய்ததுதான் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயம்.

அந்த வயதில் வாசிப்புக்காக ஏங்கி அலைந்தது இன்னொரு ஞாபகம். கிராமம் கிராமமாகத் திரிந்து புத்தகங்கள் இரவல் வாங்கினேன். கொஞ்சம் பெரியவனானதும் யாழ் நூலகம் சென்று படித்தேன். கல்கியின் 'மகுடபதி’யை ஒரு முழு நாள் வாசித்தது அங்கேதான். 100,000 புத்தகங்கள் கொண்ட அந்த நூலகத்தைத்தான் சிங்கள அரசு 1981-ம் ஆண்டு மே 31 - அன்று இரவு எரித்தது. சமீபத்தில் அங்கு போன நேஷனல் ஜியோகிராபி புகைப்படக்காரர், புத்தகம் படிக்கும் ஒரு பெண்ணைப் படம்பிடித்து எனக்கு அனுப்பினார். அவர் படிப்பது நான் எழுதிய புத்தகம்தான். திகடசக்கரம்!''

- அடுத்த வாரம்...


''இன்னும் 100 ஆண்டுகளில் இன்று இருக்கும் 1,000 மொழிகள் வரை அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே... தமிழின் எதிர்காலம் என்ன?''

'நேஷனல் ஜியோகிராபி நிறுவனத்தில் உங்கள் மூதாதையர் பற்றிய மரபு தொடர்ச்சியைத் தேடினீர்களே... அதன் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

''தமிழகச் சூழலில் எழுத்தாளர்கள் சாதிக்க முடியும்... சம்பாதிக்க முடியுமா?''



“1,60,000 வருடங்களுக்கு முந்தைய ஆதித் தாய்!” - ஆனந்த விகடன் - 2014-02-05

கு.ஜெயசீலன், சுங்குவார்சத்திரம்.

''இன்னும் 100 ஆண்டுகளில் இன்று இருக்கும் 1,000 மொழிகள் வரை அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே... தமிழின் எதிர்காலம் என்ன?''

''1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ’ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது’ என்று பத்திரிகைகள் எழுதின. 100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல்’ என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள். நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார்.

தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒருவர் ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

'அறிவகம்’ என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத் திட்டத்தின் கீழ், 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்குக் கிடையாது. ஆர்வம்தான் காரணம்.

வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய்வார்கள் என்பது ஊகம்தான்!''

மகிமைராஜன், துவாக்குடி.

''நேஷனல் ஜியோகிராபி நிறுவனத்தில் உங்கள் மூதாதையர் பற்றிய மரபுத் தொடர்ச்சியைத் தேடினீர்களே... அதன் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!''

''சில வருடங்களுக்கு முன்னர் National Geographic ïìˆFò The Genographic project-ல் பங்குபெற விரும்பி, நான் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.  நான் கேட்டது தாய் வழித் தேடல். உங்கள் தாயில் ஆரம்பித்து, உங்கள் தாயின் தாய், அவரின் தாய் அப்படி ஊற்றுக்கண்ணைத் தேடிக்கொண்டே போய் முதல் தாயாரைக் கண்டுபிடிப்பார்கள். 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஓர் ஆதித் தாயில் இருந்து இன்று உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது? இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி எங்கேயோ அறுபட்டுவிட, ஒரேயரு தாய் மட்டும் எஞ்சினார். விஞ்ஞானிகள் எப்படி அந்தத் தாயைக் கண்டுபிடித்தார்கள்?

நாலாம் வகுப்பில் சோதனை எழுதிய ஒரு மாணவன் 'சைபீரியா’ என்று எழுதுவதற்குப் பதிலாக 'கைபீரியா’ என்று எழுதிவிட்டான். அவனைப் பார்த்து காப்பியடித்த இன்னொரு மாணவனும் 'கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படி எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் செய்தது என்பதைக் கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு, வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது எல்லா வழிகளும் 1,60,000 வருடங்களுக்கு முந்தைய ஒரு தாயில் போய் முடிந்தது.

இந்த ஆதித் தாயில் இருந்து பல குழுக்கள் பிரிந்து ஆப்பிரிக்காவின் சகல பகுதிகளுக்கும் பரவின. 60,000 வருடங்களுக்கு முன்னர் இரண்டு குழுக்கள் உண்டாகி,  ஒன்று  வடக்குப் பக்கமாக நகர்ந்து ஐரோப்பாவுக்கும், அடுத்த குழு கடல் கடந்து அரேபியாவைத் தாண்டி ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பர்மா, மலேயா, ஆஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கும் பரவியது. என்னுடைய மூதாதையர், இந்தக் குழு வைச் சார்ந்தவர்கள்தான். ஆராய்ச்சி முடிவு எனக்குக் கிடைத்த அன்று 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் என் சந்ததியைத் தொடங்கி வைத்த ஆதித் தாயை மானசீகமாக நினைத்து வணங்கிக்கொண்டேன்!''

சி.கணேசமூர்த்தி, திருப்பூந்துருத்தி.

''பணி நிமித்தமாக உலகம் முழுக்கச் சுற்றி வந்தவர் நீங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுங்கள். எந்த நாடு வாழச் சிறந்தது... ஏன்?''

''உலகத்தில் உள்ள 196 நாடுகளில், நான் எந்த நாட்டிலும் பிறந்திருக்கலாம். இலங்கையில்  பிறந்தது தற்செயல். இதை மாற்ற முடியாது. ஆனால், 196 நாடுகளில் நான் கனடாவைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். 'பிறப்பினால் எல்லோரும் சமம்’ என்பது கனடாவின் அடிப்படைக் கொள்கை. அப்படியானால் ஏன் படித்தவர்களும் படிக்காதவர்களும் இருக்கிறார்கள்? ஏன் ஏழைகளும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்? காரணம், இங்கு வாய்ப்புகள் எல்லோருக்கும் சமம். வறிய ஆதிக் குடியில் பிறந்த ஒருவர் கனடியப் பிரதமர் ஆகலாம். ஐந்து வயதில் அகதியாக ஈழத்தில் இருந்து கனடா வந்த ராதிகா சிற்சபைஈசன் (32), இன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர். இவரே கனடா நாடாளுமன்றம் சென்ற முதல் தமிழர்.

கனடாவில் மருத்துவ வசதியும் அனைவருக்கும் சமம்; அத்துடன் இலவசம். மாற்றுச் சிறுநீரகத்துக்குக் காத்திருக்கும் வரிசையில் தினக்கூலிக்காரர் முன்னாலும் மந்திரி பின்னாலும் நிற்பது சர்வசாதாரணம். ஒரே பிரச்னை அதிபயங்கரக் குளிர். இதை நான் எழுதும்போது வெளியே பனி கொட்டுகிறது. இந்த வருடம் நயாகரா அருவி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. முன் எப்போதும் இல்லாதமாதிரி மரங்களில் ஐஸ்கட்டிகள் குலக்குக் குலக்காகத் தொங்கியது கண்கொள்ளாக் காட்சி!''

உமா, சென்னை.

 ''வழக்கமான கேள்விதான். இருந்தாலும் சொல்லுங்கள் எழுதத் தொடங்கும் கத்துக்குட்டிகளுக்கு நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் என்ன?''

''20 வயது வரை கையில் கிடைத்ததை எல்லாம் படியுங்கள் முக்கியமாக ஆயிரக்கணக்கான தகவல்களைத் தரும் இணையதளங்களை. 20 முதல் 40 வரை தேர்ந்தெடுத்த இலக்கியங்களை, அறிவுநூல்களைப் படியுங்கள். 40-க்குப் பிறகு படிப்பதைக் குறைத்து சுயமாகச் சிந்திப்பதற்கு அவகாசம் கொடுங்கள். வாழ்நாள் முழுக்கப் பிறர் எழுது வதையே படித்தால், உங்கள் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும்!''

ஹோ சி மின், ஆப்பிரிக்கா.

''உங்களைத் தூங்கவிடாமல் செய்த மூன்று படைப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''நான் படித்த இலக்கியங்களில், பல சிறந்த இலக்கியங்கள் உள்ளன. ஆனால், நீங்கள் கேட்டது, என்னைத் தூங்கவிடாமல் மனதை உளையவைத்தவை.

1. சினுவா ஆச்சிபி என்கிற நைஜீரிய எழுத்தாளர் எழுதிய 'Things Fall Apart’. தமிழில் என்.கே.மகாலிங்கம் மொழிபெயர்ப்பில் 'சிதைவுகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இரண்டையுமே படித்தேன். ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாலோ என்னவோ, இந்த நூல் என்னை அமைதியிழக்கச் செய்தது. சிறந்த இலக்கியம் ஒன்றை இவ்வளவு எளிமையாகப் படைக்கலாம் என்று இது கற்றுத்தந்தது. ஆங்கில மொழியமைப்பில் புகை படிந்ததுபோல ஒட்டியிருக்கும் ஆப்பிரிக்கக் கலாசாரம் வாசிப்பு அனுபவத்தைப் புதுமையாக்கியது.

2. ரஷ்ய எழுத்தாளர் ஃபிடோர் டோஸ்ரொவ்ஸ்கியின் 'The House of the Dead’. இது 'மரண வீட்டின் குறிப்புகள்’ என தமிழில் வி.எஸ்.வெங்கடேசன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் நாடகமாகவும் இதை எழுதியிருக்கிறார். நாலு வருடங்கள்  சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த ஆசிரியர் தன் அனுபவங்களைக் கற்பனையுடன்  கலந்து எழுதிய நாவல். ஒவ்வொரு வரியும் வலியை எழுப்பும். நீங்களே சிறையில் இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கும்.

3. ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’. புது உலகத்தை இந்த நாவல் தரிசிக்கவைத்தது. படித்து முடிந்த பின்னர் மூன்று நாட்கள் தூங்காமல் அலையவைத்தது!''

ஜெ.வி.பிரவீன்குமார், தேவகோட்டை.

''இணைய எழுத்தாளர்களின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''எதிர்காலத்தில் இணைய எழுத்தாளர்களிடம் இருந்து, நல்ல இலக்கியங்கள் பிறக்கும். ஏற்கெனவே சில எழுத்தாளர்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இணையத்தில்  உடனுக்குடன் எதிர்வினைகள் கிடைப்பதால், தாமதம் இன்றி எழுத்தைத் திருத்தி மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. பத்திரிகையில் எழுதுபவருடைய ஐந்து வருட வளர்ச்சியை, இணையத்தில் ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம். ஆனால், பிரச்னையே தரமற்றவையும் இணையத்தில் உலவுகின்றன என்ற முறைப்பாடுதான். அதனால் ஒரு பாதகமும் கிடையாது. 100 படைப்புகளில் 10 நிச்சயம் தேறும். வலியது வாழும். நான் தொடர்ந்து இணையதள எழுத்துகளைப் படிக்கிறேன். அவற்றின் எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது!''    

எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.

''புலம்பெயர்ந்து வாழ விதிக்கப்பட்ட வாழ்வின் பிரதிபலிப்பாக, 'என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம்..?’ என்று வினா எழுப்புகிறது வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை. புலம்பெயர்ந்த மனிதர்களின் வாழ்வுக்கான பரிதவிப்பை நெஞ்சில் அறைந்து சொல்பவை உங்கள் கதைகள்... நீங்கள் வைக்கும் பழத் தோட்டமாக எதைச் சொல்வீர்கள்?''

''ஒரு காலத்தில் தான்சேனியா நாட்டு அதிபர் ஜூலியஸ் நைரெரே சொன்னார். 'இந்தப் பூமியை நாங்கள் மூதாதையரிடம் இருந்து பெறவில்லை. எதிர்வரும் தலைமுறையினரிடம் இருந்து கடன் வாங்கியிருக்கிறோம். எங்கள் கடமை, பூமியையும், கலையையும், செல்வங்களையும், இலக்கியங்களையும் எதிர்வரும் சந்ததியினருக்குக் கடத்துவது. ஏனென்றால், இவை அவர்களுக்குச் சொந்தமானவை. அவற்றைப் பாதுகாத்துக் கொடுப்பது எங்கள் கடமை. மோனாலிசா ஓவியத்தைப் பார்க்கும்போது, லியனார்டோ டாவின்சியை நினைக்கிறோம். நல்ல இசையைக் கேட்கும்போது, அதை இயற்றியவர் நினைவுக்கு வருகிறார். எங்கள் நினைவுகளை இலக்கியமாக்கி, எங்கள் சந்ததியினருக்கு விட்டுச்செல்வது முக்கியம்.

வரலாற்றைப் படிப்பது என்பது கடினமான செயல். வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இலகுவான வழி, நவீனங்களைப் படிப்பது. அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றி தெரிந்துகொள்ள, Gone With the Wind படிக்கலாம். நைஜீரியாவின் பயஃப்ரா போர் ஏற்படுத்திய அழிவு பற்றி அறிய, சிமமண்டா எழுதிய Half of a Yellow Sun படித்தால் போதும். இலங்கையில் அவலமான போர் முடிவுக்கு வந்திருக்கிறது. எழுத்தாளர்கள் அதைப் பதிவு செய்யவேண்டியது கடமை. அவைதான் நாம் எங்கள் சந்ததிக்கு விட்டுச்செல்லும் சொத்து. எழுத்தாளரைத்  தாண்டி எழுத்து வாழும். நான் ஒரு பழமரம் வைப்பேன். மற்றவர்களும் வைக்கவேண்டும். ஒரு பழமரத் தோட்டத்தையே எம் சந்ததிக்கு விடுவோம்!''  

- அடுத்த வாரம்...


''ஓர் அதீதக் கற்பனைதான்... ஆனாலும் பதில் சொல்லுங்களேன்! தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை 'பாரத ரத்னா’ விருதுக்கு சிபாரிசு செய்யலாம் என்றால், உங்கள் பரிந்துரை யார்?''

''உங்கள் கதைகளில் உணவு வகைகளை சுவையுற வர்ணிப்பீர்கள். தமிழகத்தில் இட்லி, தோசை போல கனடாவில் புழக்கத்தில் இருக்கும் உணவு என்ன? கனடா உணவுக் கலாசாரத்தைப் பற்றியும் சொல்லுங்களேன்..!''

 ''உலக நியதிகளைக் கவனத்தில் கொண்டு சொல்லுங்கள்... தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது அதீத மரியாதையா... அவமானப் புறக்கணிப்புகளா?''


ஒரு செய்தி ஒரு சிறுகதை! - ஆனந்த விகடன் - 2014-02-12

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

''ஓர் அதீதக் கற்பனைதான்... ஆனாலும் பதில் சொல்லுங்களேன்! தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை 'பாரத ரத்னா’ விருதுக்கு சிபாரிசு செய்யலாம் என்றால், உங்கள் பரிந்துரை யார்?''

''அதீதக் கற்பனை இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன், அதற்கு முற்றிலும் தகுதியானவர்!''

க.முருகானந்தம், வீரமரசன்பேட்டை.

''உங்கள் கதைகளில் உணவு வகைகளைச் சுவையுற வர்ணிப்பீர்கள். கனடா வாழ் தமிழர்களின் உணவுக் கலாசாரம் பற்றி சொல்லுங்களேன்?''

''ஈழத் தமிழர்களிடையே இட்லி, தோசைக்கு இடம் கிடையாது. எங்கள் உணவு புட்டு, இடியப்பம், அப்பம், சோறு, கறி. சாம்பார், ரசம்கூட வீடுகளில் வருடத்துக்கு இரண்டு முறைதான். இந்திய எழுத்தாளர்கள் யாராவது கனடாவில் எங்கள் வீடுகளுக்கு வந்தால், அவர்களுக்கு விருந்தளிக்க நாங்கள் திணறிவிடுவோம்.

கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். 100 உணவகங்கள் ஈழத்து உணவு வகைகளை, முறுக்கு, அரியாரம், மோதகம், வடை, வாய்ப்பன், பனங்காய் பணியாரம் என்று செய்து தள்ளுகின்றன. ஆனால், உலகில் வேறு எங்கேயும் கிடைக்காத ஓர் அரிய உணவு இங்கே பிரபல மாகி வருகிறது. இதன் செய்முறை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

இளம் ஆட்டு இறைச்சி, ஒமேகா-3 மீன் எண்ணெய் முட்டை, கூனிறால், வெள்ளைப் பூண்டு, லீக்ஸ் என்று பலவிதமான  கூட்டுப்பொருள்கள் தேவை. ஒலிவ் எண்ணெயில் பொரிக்கப்பட்டு பொன் நிறத்தில் இது கிடைக்கும். ஒருமுறை சாப்பிட்டவர் மீண்டும் கேட்பார். இன்னொரு முறை சாப்பிட்டவர் வாழ்நாள் முழுக்கச் சாப்பிடுவார். சுவையின் உச்சம்.

இன்னொரு விசேஷம், இந்த உணவு, ஈழத்து யுத்தகால அவல நினைவுகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்தும். யூதர்கள் 3,400 வருடங்களுக்கு முன்னர் எகிப்தைவிட்டு துரத்தப்பட்ட நாளை இன்றும் புளிக்காத அப்பம் உண்டு, விரதம் காப்பதுபோல, இதுவும் எங்கள் எதிர்கால விரத உணவாக மாறலாம். இந்த உணவின் பெயர் 'மிதிவெடி’ (landmine). அதே வடிவத்தில் கிடைக்கும்!''

பிரவீன்குமார், செம்பறை.

''உலக நியதிகளைக் கவனத்தில்கொண்டு சொல்லுங்கள்... தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது அதீத மரியாதையா... அவமானப் புறக்கணிப்புகளா?''

''இப்போதுதான் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களை மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல காரியம். வருடாவருடம் இலக்கியத் துக்கு எத்தனையோ விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதீத மரியாதை என்று சொல்ல முடியாது; புறக்கணிப்பும் இல்லை. புத்தகச் சந்தையில் புத்தகங்களை வாங்கிவிட்டு ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்றதாக நண்பர் ஒருவர் சொன்னார். 20 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு காட்சியைக் கற்பனை செய்ய முடியுமா? வரவேற்கவேண்டிய மாற்றம்!''

சு.கலியபெருமாள், தொண்டராயன்பாடி.

''எழுத்தாளர்களின் வெற்றிக்குப் பின்னணியில் அவர்களுடைய மனைவியின் பங்கும் இருக்கிறதுதானே?''

 ''நிச்சயமாக. என்னை ஒழுங்குசெய்வது என் மனைவிதானே! ஒருநாள் என் மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தைப் பார்வையிட வந்த ஜெனரல் போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள், பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்ப்யூட்டரில் நான் வேகமாகத் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். 'இதுவெல்லாம் குப்பையாகக் கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கிவைக்க ஏலாதா? அதன் பின்னர் எழுதினால் என்ன?’ நான் சொன்னேன், 'நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்’. மனைவி ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கத் தொடங்கினார். இது முக்கியமானது. நான் அவர் எங்கே வைக்கிறார் என்று பார்த்தால்தான் மறுபடியும் இழுத்து எடுத்து வேலையைத் தொடரலாம். ஆகவே, நானும் சேர்ந்துகொண்டேன். அன்றைய எழுத்து, முடிவுக்கு வந்தது அப்படித்தான்.

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஜூன் 1815. வாட்டர்லூ போர் நடக்கிறது. இங்கிலாந்து கோமகன் வெலிங்டனின் படைக்கும், பேரரசன் நெப்போலியனின் ஃபிரெஞ்சுப் படைக்கும் இடையில் பெரும் போர். ஒவ்வொரு விநாடியும் 'வாழ்வா... சாவா?’ என்பது போன்ற நிலை. லண்ட னில் இருந்து கணக்காளர்கள் ஓயாது வெலிங்டனுக்கு போர்க்களத்துக் கணக்கு விவரங்களை உடனுக்குடன் எழுதி அனுப்பும்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். பொறுக்க முடியாமல் கோமகன் வெலிங்டன், லண்டனுக்கு இன்றைக்கும் பேசப்படும் புகழ்பெற்ற கடிதம் ஒன்று எழுதினார். 'இன்றைய கணக்கு விவரங்கள். ஒரு ஷில்லிங் ஒன்பது பென்ஸ் கணக்கில் இடிக்கிறது. ராஸ்ப்பெர்ரி ஜாம் போத்தல் ஒன்றைக் காணவில்லை. மேன்மைதாங்கிய அரசரின் சேவகர்களுக்கு லண்டனில் என்ன வேண்டும்? ஜாம் போத்தலைக் கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது நான் நெப்போலியனை அடித்துத் துரத்த வேண்டுமா?’

இப்போது நான் கேட்கிறேன்... நான் என்ன செய்யவேண்டும்? யாராவது சொல்லுங்கள். அறையைத் துப்புரவாக்க வேண்டுமா? அல்லது எழுதவேண்டுமா?''

க.எழிலரசன், சோழமாதேவி.

''தமிழில் இப்போது 800 பக்கங்கள், 1,000 பக்கங்கள் என்ற அளவில் நாவல்கள் வருகின்றன. இந்தத் திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இது வரவேற்கத்தக்கதா?''

 ''அதிகப் பக்கங்கள் கொண்ட நாவல்கள் வருவதற்குக் காரணம் கணினிதான். ஆதியில் எழுதுவதற்கே சிரமப்பட்டார்கள். ஓலையில் எழுத் தாணியால் எழுதினார்கள். பிறகு தொட்டு எழுதும் பேனா, அதைத் தொடர்ந்து பால்பாயின்ட். பின்னர் தட்டச்சு மெசின், இப்போது கணினி. முன்பு அமெரிக்க நூலகங்களில் தட்டச்சு மெசின் இருக்கும் ஒரு துளையில் 10 சென்ட் போட்டால், அரை மணி நேரம் தட்டச்சு செய்யலாம். ரே பிராட்பெர்ரி என்கிற எழுத்தாளர் 10 சென்ட் காயினைப் போட்டுவிட்டு அசுர வேகத்தில் அடிப்பார். அடுத்த நாளும் அப்படியே செய்வார். இப்படி 10 டொலர் செலவழித்து தட்டச்சு செய்து பலநாட்கள் எழுதிய நாவல்தான் 'Fahrenheit 451’. இது 192 பக்கங்கள் மட்டுமே கொண்டது. ஆனால், 100 லட்சம் பிரதிகள் விற்றுத் தள்ளியது.

கணினி வந்த பின்னர், எழுதுவது இலகுவாகிவிட்டது. அடிக்க அடிக்க வார்த்தைகள் வந்துகொண்டே இருந்தன. எதற்கு வீணாக்குவேன் என்று வசனமாக்கினார்கள். அது நாவலாகியது.

சமீபத்தில் வரும் அநேகமான நாவல்கள், சொன்னதையே திரும்பச் சொல்கின்றன. நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'கிழவனும் கடலும்’ நாவல் 127 பக்கங்கள்தான். 'யசுனாரி கவபாட்டா’ எனும் ஜப்பானிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவர்தான். புகழ்பெற்ற அவருடைய நாவலான 'தூங்கும் அழகிகள் இல்லம்’ 148 பக்கங்கள் மட்டுமே. நீண்ட நாவல்கள் எழுதுவதில் குறையொன்றும் இல்லை. குறைந்த பக்கங்களில் சொல்ல வந்த விசயத்தை நறுக்கென்று சொல்லிவிடக்கூடிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்!''

ச.தேவராஜன், பெருந்துறை.

''சிறுகதைகளுக்கான கருவை எங்கிருந்து எடுப்பீர்கள்?''

''எதில் இருந்தும் கிடைக்கும். ஒரு துண்டு செய்தியில் இருந்துகூட..! சமீபத்தில் நான் வாசித்த செய்தி இது.

என்னுடைய மகன் வசிக்கும் மாநிலத்தின் பெயர் மொன்ரானா. அமெரிக்காவில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலம் இது. இந்த மாநிலப் போலீஸாருக்கு, வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய் ஒன்று தேவைப்பட்டது. பயிற்சி கொடுத்த நல்ல நாய் ஒன்றின் விலை 20,000 டொலர்கள். ஆனால், இஸ்ரேல் நாடு, உபயோகத்தன்மை முடிந்துவிட்ட ஒரு நாயை இலவசமாகத் தருவதாகச் சொன்னது. போலீஸாரும் அதை வாங்கிவிட்டார்கள். ஆனால், அதை வாங்கிய பின்னர்தான் ஒரு பிரச்னை ஆரம்பித்தது. அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியாது. ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்தால்தான் செய்யும். ஒரு போலீஸ்காரர் மெனக்கெட்டு ஹீப்ரு வார்த்தைகளைப் பாடமாக்கி ஆணை கொடுத்துப் பார்த்தார். அப்போதும் நாய் திரும்பிப் பார்க்கவில்லை.

மொன்ரானாவில் யூதர்கள் மிக மிகக் குறைவு. ஹீப்ரு மொழி பேசும் ஒருவரை அங்கே அபூர்வமாகவே காண முடியும். அதிர்ஷ்டவசமாக யூத பாதிரியார் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்ததும், வெடிகுண்டு நாய் துள்ளித் துள்ளி அவர் கட்டளைகளை நிறைவேற்றியது. போலீஸாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு போலீஸ்காரர் பாதிரியாரிடம் சென்று ஹீப்ரு வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை படித்துக்கொண்டார். மூன்று மாதங்களில் நாய் போலீஸ்காரரின் ஹீப்ரு கட்டளைகளை பட்பட்டென்று நிறைவேற்றியது.

மொன்ரானா மக்களுக்கு தங்கள் மாநிலத்துக்கு ஒரு வெடிகுண்டு நாய் கிடைத்ததில் மிகவும் சந்தோசம். போலீஸ்காரருக்குக் கட்டளைகள் கொடுப்பதில் சந்தோசம். நாய்க்குக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சந்தோசம்.

இந்த விவகாரத்தில் ஆகச் சந்தோசப்பட்டது யூத பாதிரியார்தான். அந்தப் பெரிய மாநிலத்தில் இவ்வளவு நாளும் பாதிரியாருக்கு ஹீப்ரு பேசுவதற்கு ஒரு நாயும் இருக்கவில்லை. இப்போது இருந்தது!

இது ஒரு கச்சிதமான சிறுகதைக்கான கரு அல்லவா!''

- இன்னும் கதைக்கலாம்...


''விமர்சனங்கள், ஓர் எழுத்தாளனை எப்படிப் பாதிக்கிறது?''

''இலக்கியவாதிகள் ஏன் அரசியல் பேசுவதில்லை?''

'' 'நெருக்கடிகள்தான் கலைகளை உருவாக்குகின்றன என்றால், நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாம்’ என்று சொல்லியிருப்பார் சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங் கள்... இவைதான் கலையின் ஊற்றுக்கண்களா?''

அடுத்த வாரம்...


பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு! - ஆனந்த விகடன் - 2014-02-19

குணசீலன், திருப்பூர்.

''விமர்சனங்கள், ஓர் எழுத்தாளனை எப்படிப் பாதிக்கிறது?''

''விமர்சனங்கள் முக்கியமானவை. வாசகர்கள் ஒரு புத்தகத்தை 'ஆஹா’ என்று புகழும்போது... விமர்சகர், ஆசிரியர் தலையில் சின்னத் தட்டுத் தட்டி உண்மையைச் சொல்கிறார். இது தேவையான பணிதான். ஆனால், சில விமர்சகர்கள் ஒரு நூலைப் படிக்கும் முன்னரே அதன் ஆசிரியரைப் பற்றி முன்முடிவு எடுத்து விமர்சனம் எழுதிவிடுகிறார்கள்.

ஒருமுறை பிரபல எழுத்தாளர் நோர்மன் மெய்லருடைய புத்தகத்தை 'டைம்’ பத்திரிகை நிருபர், விமர்சனம் என்ற பெயரில் மோசமாகத் தாக்கியிருந்தார். நோர்மன் மெய்லர், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

'ஐயா, நீங்கள் எழுதிய அதே பத்திரிகையின் பின்பக்கத்தைப் பாருங்கள். அங்கே ஆகஅதிக விற்பனைப் பட்டியலில் முதலில் ஒரு புத்தகம் இருக்கிறது. அதை எழுதியது நான்தான். என்னுடைய பெயர் நோர்மன் மெய்லர்.’

எழுத்தாளர்கள், விமர்சனம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளக் கூடாது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், 'முன்னுக்கு ஓடும் நாய்தான் பின்பக்கம் கடி வாங்கும்’ என்று. இன்னொன்றையும் நினைவில் வைக்கவேண்டும். எழுத்தாளர்களுக்கு சிலை வைப்பார்கள். விமர்சகர்களுக்கு எந்த நாட்டிலும் சிலை கிடையாது!''

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

 ''சமீபமாக இலக்கியவாதிகள் ஏன் அரசியல் பேசுவது இல்லை?''

''தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் இலக்கியத்தையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாமல் இருந்தது. அறிஞர் அண்ணா, கண்ணதாசன், ஜெயகாந்தன், ராஜாஜி எல்லோருமே இரண்டு தளங்களிலும் தீவிரமாக இயங்கினார்கள். இப்போதெல்லாம் ஓர் எழுத்தாளர் தன்னை ஒரு கட்சியோடு அடையாளப்படுத்தத் தயங்குகிறார். காரணத்தை நானே ஓர் எழுத்தாளரிடம் கேட்டேன். அவர், 'ஒரு நாவல் எழுதினால் அது எத்தனை திறமான நாவலாக இருந்தாலும், எதிர் அணி அந்த நாவலைத் தாக்கிப் புத்தக விற்பனையைக் கெடுத்துவிடும்’ என்றார். உலக அளவில் பார்த்தால் உயர் இலக்கியம் படைத்தவர்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள். அரசியலில் இருந்து இலக்கியம் படைத்தவர்களும் உண்டு. மா சே துங் கவிதைகளை உலகத்து எந்த நாட்டுக் கவிதைகளுடனும் ஒப்பிடலாமே. சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் டைரி’ இன்று உலக இலக்கியமாகிவிட்டது. வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்!''  

ரா.பிரசன்னா, மதுரை.

'' 'நெருக்கடிகள்தான் கலைகளை உருவாக்கு கின்றன என்றால், நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாம்’ என்று சொல்லியிருந்தார் சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங்கள்... இவைதான் கலையின் ஊற்றுக்கண்களா?''

''நெருக்கடிகள்தான் கலையின் ஊற்றுக்கண்கள் என்றால், இன்று உலகை நிறைத்து பேரிலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் ஏழைப் புலவர்கள் ஊர் ஊராகப் போய் பாடி யாசிப்பார்கள். ஒளவையாரின் 'வாயிலோயே... வாயிலோயே...’ என்ற பரிதாபமான பாடல் சான்று. அவர்கள் ஏழ்மையின் நெருக்கடியில் படைத்தார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அரசர்களும் பாடியிருக்கிறார்களே! பாரதியும் புதுமைப்பித்தனும் பல நெருக்கடிகளிலும் அருமையான படைப்புகளைத் தந்தார்கள். அவர்களுக்கு வசதி வந்திருந்தால் படைப்பதை நிறுத்தியிருப்பார்களா?

ரவீந்திரநாத் தாகூர் செல்வந்தர் வீட்டில் பிறந்து, சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர். அவர், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறவில்லையா? உலக இலக்கியத்தின் உச்சியில் இன்றும் போற்றப்படும் தோல்ஸ்தோய், பிரபு குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய கடைசிக் காலத்தைத் தவிர, அவருக்கு நெருக்கடிகளே கிடையாது என்று சொல்லலாம். அவர் படைத்த இலக்கியம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

உண்மையான எழுத்தாளருக்கு நெருக்கடிகள் ஆயுதமாகின்றன. அவர் அதைத் தாண்டி எழுதுகிறார். சார்லஸ் டிக்கென்ஸ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வாழும்போதே எழுத்து ஊதியத்தினால் அதி செல்வந்தர் ஆனவர் இவர் ஒருவர்தான். வசதி வந்த பின்னர் அவருடைய எழுத்து கூர்மைப்பட்டதே ஒழிய, தரம் குறையவே இல்லை!''

மணிமாறன், திருவாடானை.

 ''பிரபாகரன் குறித்து?''

''என்னுடைய மேசையில் உலக வரைபடம் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது. இது 60 வருடங்களுக்கு முந்தைய உலகப்படம். இந்த வரைபடத்துக்கும் இன்றைய உலகத்துக்கும் சம்பந்தம் கிடையாது. படத்தில் காணப்படும் நாடுகள் பல இப்போது கிடையாது. இன்றைய நாடுகள் பல அப்போது இல்லை. உதாரணமாக, கொசோவோ, சேர்பியா, கிழக்கு திமோர், எரித்திரியா, தெற்கு சூடான் ஆகிய எல்லாமே புதிய நாடுகள். இன்னொரு நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடானவை.

1995-ம் ஆண்டு கனடாவின் மாகாணமான கியூபெக்கில் நடந்த வாக்கெடுப்பைப் பார்த்து நான் அதிசயித்தது உண்டு. 'கியூபெக், தொடர்ந்து கனடாவில் அங்கமாக இருக்க வேண்டுமா அல்லது பிரிந்துபோக வேண்டுமா?’ இதுதான் கேள்வி. 50.58 சதவிகிதம் மக்கள் 'பிரியக் கூடாது’ என்று வாக்களித்தார்கள். 49.42 சதவிகிதம் பேர் 'பிரியவேண்டும்’ எனும் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். இந்தத் தீர்ப்பின் பிரகாரம், கியூபெக் மாகாணம் இன்றும் கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் கியூபெக் பிரிந்துபோக முடியவில்லை.

இப்படி ஒரு நாட்டிலிருந்து பிரிவதற்கு வழி, பொது வாக்கெடுப்பு. இரண்டாவது, சமாதானப் பேச்சுவார்த்தை. மூன்றாவது... போர்.     30 ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் அடக்குமுறையை எதிர்த்துப் போர் நடந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டியது. அதற்குப் பாடுபட்ட ஜோன் ஹியூம் என்பவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத், பாலஸ்தீனத்தை மீட்பதற்காகப் போராடினார். 1993-ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு இவர் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1994-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலாவை எடுப்போம். இவர் வெள்ளையர் அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடினார். சிறையில் அடைத்தார்கள். தன் வழியை மாற்றி அகிம்சைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் விடுதலையாகி தென் ஆப்பிரிக்காவின் தலைவர் ஆனார். அவருக்கு 1993-ல் சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒரு புது நாடு, பேச்சுவார்த்தை மூலம் உண்டாகலாம். கனடாவில் செய்ததுபோல பொது வாக்கெடுப்பதும் ஒரு வழி.

இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. உலக நாடுகள் பெரிதும் அக்கறை காட்டாததால், சமாதானம் தள்ளிப்போனது. அதில் வெற்றி கிட்டியிருந்தால், இன்று அமைதி நிலவியிருக்கும். பிரபாகரனுக்கு நோபல் சமாதானப் பரிசு சாத்தியமாகியிருக்கும். ஒரு புது நாடும் கிடைத்திருக்கும்! ஹும்ம்.. என்ன செய்வது!?''

குமரேசன், சென்னை.

 ''நான் உணர்ந்த வரை உங்கள் கட்டுரைகளின் சிறப்பம்சம், மிக மிக சுவாரஸ்யமான உதாரணங்கள்/உவமைகள். சொல்ல வந்த விஷயத்தை லகுவாக்கும். அந்த உவமைகள் பெரும்பாலும் சம்பவங்களாக இருக்கின்றன. வரலாறு, அரசியல், சமகாலம் என்று பலவாரியாக இருக்கும் அந்த உவமைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?'' 

''சங்க இலக்கியங்களில் இருந்துதான். என்னுடைய நண்பர் பேராசிரியர் சொல்வார், 'சங்க இலக்கியங்களில் இல்லாத உவமைகளை வேறு எங்கேயும் காண முடியாது’ என்று. புறநானூறு 193 'சேற்றில் அகப்பட்ட மான்போல தப்ப முடியாத வாழ்க்கை...’ என்று சொல்லும். இன்னொரு பாடல் 'ஈசல்போல ஒருநாள் வாழ்வு...’ என்று உவமை காட்டும். குறுந்தொகை 'அணில் பல் போல முட்கள்...’ என்று அழகான உவமை தரும். 'முல்லைப் பற்களைக் காட்டிச் சிரித்தாள்...’ என்று பழைய இலக்கியம் வர்ணிக்கும். ஆனால், அதை அப்படியே சமகாலத்தில் எழுத முடியாது. காலத்துக்கு ஏற்ப மாற்றம் வேண்டும். 'உறையிலிருந்து உருவிய குறுந்தகடுபோல பளீரென்று சிரித்தாள்’ என்று சொல்லலாம்!''

சித்திரவேலு, கருப்பம்புலம்.

 ''உங்கள் குடும்பத்தினர் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்!''

''என் குடும்பத்தைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. அம்மா அப்பாவுக்கு நாங்கள் ஏழு பிள்ளைகள். ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள். நான் ஐந்தாவது. அம்மாவுக்கு இதிகாசங்களில் பரிச்சயம் உண்டு. அவர்தான் சிறுவயதில் எனக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டியவர். நான் மணமுடித்த பெண்ணின் பெயர் கமல ரஞ்சனி. காதல் திருமணம். என் மனைவி, ஆரம்பத்திலிருந்தே என் எழுத்து வேலைக்கு உறுதுணையாக இருக்கிறார். மகன் பெயர் சஞ்சயன். சூழலியல் விஞ்ஞானி. பி.பி.சி., டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பி.பி.எஸ். போன்றவற்றுடன் இணைந்து சூழலியல் ஆவணத் திரைப்படங்கள் பலவற்றில் பங்காற்றியவர். மகள் வைதேகி. சொந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருடைய மகள் அப்ஸரா. இவ்வளவுதான் என் இனிமையான குடும்பம்!''

சண்முகப்பாண்டியன், சின்ன சேலம்.

 ''நீங்கள் நாவல் பக்கம் கவனம் செலுத்துவதே இல்லையே! வருங்காலத்தில் ஏதேனும் நாவல் எழுதும் உத்தேசம் உண்டா?''

 ''சிறுகதை எழுதுவது என்றால் ஒரு மாதம் போதும். நாவலுக்கு குறைந்தது இரண்டு வருடங்களை ஒதுக்கவேண்டும். இதுதான் நாவல் எழுதுவதில் உள்ள பிரச்னை. டேவிட் ஜேம்ஸ் டங்கன் என்கிற நாவலாசிரியரைச் சந்தித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு நாவல் எழுதுகிறார். இந்த ஐந்து வருடமும் அவருக்கு வருமானம் இல்லையென்று சொன்னார். கட்டுரை, கதைகள் எழுதினால் அவ்வப்போது பணம் கிடைக்கும். பலர் நாவல் எழுதாததற்கு இதுதான் காரணம்!

முன்னர் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நாவல் எழுதியிருக்கிறேன். இப்போது 'கடவுள் தொடங்கிய இடம்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதி வருகிறேன். 200 பக்கங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இலங்கையில் இருந்து அகதியாகப் புறப்பட்ட ஒருவனின் கதை. ஏற்கெனவே பலர் எழுதிய பின்புலம்தான். ஆனால், இது கதையிலும் சொல்முறையிலும் வித்தியாசப்படும்!''

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

 ''அன்று கலைக் கல்லூரியில் படித்த எங்கள் கையில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன்.. எழுதிய புத்தகங்கள் இருக்கும். ஆனால், இன்று பாடப் புத்தகத்தைத் தவிர இளைஞர்கள் கையில் எந்தப் புத்தகமும் இல்லையே?! ஏன் இந்த நிலை?''

''இப்போதைய இளைஞர்கள் கைகளில் செல்பேசிகள் உள்ளனவே, கவனிக்கவில்லையா? அவற்றில் உலகத்தையே தரவிறக்கம் செய்யலாம். இணையதளங்களில் அறிவியல் கட்டுரைகளும் இலக்கியமும் நிறைய கிடைக்கின்றன. மின்நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துவிட்டன.

வெளியே புறப்படும்போது என் செல்பேசியில் குறைந்தது இரண்டு ஆங்கில நூல்களும் இரண்டு தமிழ் நூல்களும் இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல இலக்கியம் படிக்கும் தமிழ் வாசகர்கள் அருகிவிடவில்லை. உலகமெங்கும் நிறைந்திருக்கும் அவர்களின் அளவும் தரமும் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இது எனக்கு எப்படித் தெரியும்? அவர்களிடமிருந்து வரும் கேள்விகளை வைத்து ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

நான் வசிக்கும் ஒன்ராறியோ மாகாணத்தின் அடையாள மலர் ரில்லியம். அதைப் பறிக்கக் கூடாது என்பது சட்டம். எப்படித் தெரியும்? செல்பேசியில் வந்த செய்திதான்.

தன் நிழலைக் கண்டு பயந்தோடும் விநோதமான பிராணி கனடாவில் உண்டு. அதன் பெயர் நிலப்பன்றி. இதுவும் செல்பேசித் தகவல்தான். ஆகவே, கையிலே கதைப் புத்தகத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு அலைந்த காலம் எப்பவோ மறைந்துவிட்டது!''

- இன்னும் கதைக்கலாம்...


''சிறுகதைகளுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கிறதா?''

''ஓரினச்சேர்க்கை சார்ந்த உலக இலக்கியங்கள் இருக்கிறதா?''

''சினிமாவில் எழுத் தாளர்கள் மீது நாயகிகள் மையல்கொள்வது போல காட்சிகள் வருகின்றன. நிஜத்தில் அதுபோல உங்களுக்கு ஏதேனும் நடந்திருக்கிறதா?''


மீனாட்சி, வேப்பம்பாளையம்.

''சிறுகதைகளுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கிறதா?''

''இந்தக் கேள்வியை நீங்கள் இப்போது கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. 2013-ம் ஆண்டு நோபல் பரிசு, கனடாவின் அலிஸ் மன்றோவுக்குக் கிடைத்தது. இவர் தன் வாழ்நாளில் சிறுகதைகள் மட்டுமே எழுதியவர். பத்திரிகைகள், 'முதல்முறையாக சிறுகதைக்குக் கிடைத்த நோபல் பரிசு’ என்று எழுதிப் பாராட்டின. அப்போது அலிஸ் மன்றோ இப்படிச் சொன்னார், 'இந்தப் பரிசு கிடைப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சிதான். ஆனால், என்னுடைய புத்தகம்தான் சிறந்தது என்று நினைக்கும் மாயை என்னிடம் இல்லை.’ -இது என்ன பெருந்தன்மை!

100 மீட்டர் தூரம் ஓடும் ஒருவர் வெற்றிபெற, முழுமூச்சைச் செலுத்தி தன்னிடம் இருக்கும் அத்தனையையும் கொடுக்க வேண்டும். சிறுகதை எழுதுவதும் அப்படித்தான். சில நாவலாசிரியர்கள் சிறுகதை எழுதுவதற்கு நடுங்குவார்கள். ஏனெனில், அது அத்தனை சவாலானது!''

விஷ்ணு, பெங்களூரு.

''ஓரினச்சேர்க்கை சார்ந்த உலக இலக்கியங்கள் இருக்கின்றனவா?''

''ஆங்கிலத்தில் ஆஸ்கார் வைல்டின் எழுத்துகளையும் அவருடைய சரிதையையும் படிக்கலாம். அன்னி புரூலிக்ஸின் அருமையான, மனதை உருக்கும் கதை ஒன்று உண்டு. பெயர், Broke-back Mountain. அது திரைப்படமாகவும் வந்தது. ஆகப் பழமையான கதை என்றால், பைபிளில் ஆதியாகமத்தில் காணப்படும் லோத்தின் கதையைப் படித்துப் பார்க்கலாம்.

தற்சமயம் டேவிட் செடாரிஸ் என்கிற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிக்கொண்டிருக்கிறார். இவருடைய புத்தகங்களை ஆரம்ப காலங்களில் படித்துத் திகைப்பு அடைந்திருக்கிறேன். அத்தனை வெளிப்படையாக எழுதுவார். பின்னர்தான் இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரிய வந்தது. இவருடைய புத்தகங்கள், நியூயார்க் டைம்ஸ் அதிக விற்பனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கும்«பாது, திடீரென்று சிரிப்பு வந்து உரக்கச் சிரிக்க நேரிடும். இவரை நேர்காணல் செய்து எழுதியிருக்கிறேன்.

இன்னோர் எழுத்தாளர் பெயர், ஷ்யாம் செல்வதுரை. இலங்கையின் இனக்கலவரத்துக்குப் பின்னர் அங்கேயிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். இவர் எழுதிய முதல் நாவலின் பெயர் 'Funny Boy’. சுயசரிதைத்தன்மையான ஓரினச்சேர்க்கையை மையமாகக்கொண்ட நாவல். பல விருதுகளைப் பெற்றது!''

கிஷோர், மயிலாடுதுறை.

''சினிமாவில் எழுத்தாளர்கள் மீது நாயகிகள் மையல்கொள்வது போல காட்சிகள் வருகின்றன. நிஜத்தில் அதுபோல உங்களுக்கு ஏதேனும் நடந்திருக்கிறதா?''

''இப்போதெல்லாம் எப்படியென்று தெரியாது. எழுத ஆரம்பித்த காலத்தில், 'நான் எழுத்தாளன்’ என்பதையே இளம் பெண்களிடம் இருந்து மறைப் பதில் தீவிரமாக இருந்தேன். எழுத்தாளன் என்றால், ஒரு பெண்கூட திரும்பிப் பார்க்க மாட்டார். அது எனக்கும் தெரியும்; பெண்களுக்கும் தெரியும்.

நான், கனடா வந்த பின்னர் ஒரு சம்பவம் நடந்தது. நன்றிகூறல் நாள் விருந்தின்போது ஓர் இளைஞன் என்னை நெருங்கி, 'உங்களை ஒரு பெண் சந்திக்க விரும்புகிறார். உங்களுடைய நீண்டநாள் வாசகி’ என்றான். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கனடாவில் ஒரு தமிழ் வாசகியா?! ஆவலுடன் இளைஞனைப் பின்தொடர்ந்தேன். என்னிலும் பார்க்க 10 வயது மூத்த பெண்மணியைச் சுட்டிக்காட்டினான். அவர் மேசையில் உட்கார்ந்து உருளைக்கிழங்கைத் திணித்துப் பதமாகச் சுட்ட வான்கோழியைப் பிய்த்துப் பிய்த்து தின்றுகொண்டு இருந்தார். 'உங்கள் புத்தகம் எல்லாம் படித்திருக்கிறேன்’ என்றார். 'என்ன புத்தகம்?’ என்றேன். 'எல்லாம் மறந்துபோச்சுது’!'' என்றார்.

கே.கிருத்திகா, மாரனேரி.

''காதலர் தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டனவா?''

''ஓ பேஷாக..! தினமும் அன்பையும் பிரியத்தையும் நாம் பரிமாறிக்கொண்டு இருப்பதால், ஒவ்வொரு நாளும் நமக்குக் காதலர் தினம்தானே!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அனோ நுவோ (Ano Nuevo) என்று ஓர் இடம் இருக்கிறது. 2000-ம் ஆண்டு பிறந்த பின்னர் வந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அனோ நுவோ கடற்கரைக்குப் போனேன். சும்மா போக முடியாது. நுழைவுச் சீட்டு எடுக்கவேண்டும். ஏனெனில், அது முக்கியமான நாள். யானைச் சீல்களை (Elephant Seals) பார்ப்பதற்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

ஜனவரி தொடக்கத்திலே ஆண் சீல்கள், 4,000 மைல் தூரத்தில் இருக்கும் அலாஸ்காவில் இருந்து நீந்தி அனோ நுவோ கடற்கரைக்கு வரும். பெண் சீல்கள் எதிர் திசையில் 3,000 மைல் தொலைவில் இருக்கும்  ஹவாய் தீவில் இருந்து புறப்பட்டு அனோ நுவோ வரும். பெண் சீல்களை தம் வசமாக்க ஆண் சீல்கள் பயங்கரமாகச் சண்டை போடும். நினைத்துப் பார்க்க முடியாத மூர்க்கத்தோடு ஒன்றையொன்று தாக்கும். அதிபலம் கொண்ட ஆண் சீல்கள் தமக்கென பல பெண் சீல்களை வளைத்து வைத்துக்கொள்ளும். அந்தக் காலத்து அரசர்கள் அந்தப்புரத்தில் பெண்களைச் சிறைபிடித்துப் பாதுகாப்பது போலத்தான்.

சில நோஞ்சான் ஆண் சீல்களுக்கு பெண் சீல்கள் கிடைக்காமலே போய்விடும். ஆண்-பெண் சீல்களுக்கு இடையே காதல் உச்சகட்டம் அடைவது பிப்ரவரி 14 அன்றுதான். பிறகு, தாய் சீல்கள் பிறந்த குட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு ஹவாய்க்குத் திரும்ப, ஆண் சீல்களும் அலாஸ்கா போய்விடும். மறுபடியும் சந்திப்பு அடுத்த வருடம் நிகழும். காதலர் தினமாக பிப்ரவரி 14 அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், இந்தத் தேதியில் வருடா வருடம் நடக்கும் சீல்களின் சங்கமம்தான் என்று 'அனோ நுவோ’வாசிகள் கூச்சம் இல்லாமல் அடித்துச் சொல்வார்கள்!''

கே.குமாரவேல், மண்ணச்சநல்லூர்.

'' 'இப்படியும்கூட நடக்குமா?’ என்று நீங்கள் ஆச்சரியப்பட்ட சம்பவம் எது?''

''1995-ம் ஆண்டு, ஜூலை மாதம். பாகிஸ்தானில் ஓர் ஞாயிறு இரவு விருந்துக்குப் போயிருந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த ஆசனம் நிரப்பப்படாமல் இருந்தது. விருந்து தொடங்கி ஒரு மணி நேரம் கழிந்த பின்னர், ஒருவர் அந்த இருக்கையை நோக்கி வந்தார். மடிப்புக் கலையாத தூய வெள்ளை சூட் அணிந்திருந்தார். கால்களை எட்டவைத்து நடந்துவந்து கழுத்தை அரை அங்குலம் அசைத்து புன்முறுவல் போன்ற ஒன்றைச் செய்துவிட்டு, அந்த ஆசனத்தில் அமர்ந்த£ர். 'அவர் யார்?’ என்று நான் பார்த்தேன். கதிர்காமர். இலங்கை வெளிவிவகாரத் துறை மந்திரி.

நான் அதிர்ச்சியடைந்தேன். காரணம், அன்று முக்கியமான விசயம் ஒன்றை பி.பி.சி. பல முறை  ஒலிபரப்பியது. இலங்கை ராணுவத்தின் மூன்றாவது படைப் பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் அங்கமானா மட்டக்களப்பில் கண்ணிவெடியில் பலியானார். அவருடன் சேர்ந்து வேறு மூன்று அதிகாரிகளும் இறந்துபோனார்கள் என்ற செய்தியே அது! நான் கதிர்காமர் பக்கம் திரும்பி, 'பி.பி.சி. செய்தி கேட்டீர்களா?’ என்றேன். அவர் 'என்ன... என்ன?’ என்று பதற்றமானார். செய்தியைச் சொன்னேன். இரண்டு எட்டுவைத்துப் பாய்ந்துபோய் மறைந்தார். கதிர்காமர், இளைஞராக இருந்தபோது, இந்தியாவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தடைதாண்டும் போட்டியில் சாம்பியனாக இருந்தவர் என்பது ஞாபகத்துக்கு வந்தது. விருந்து முடிவுக்கு வரும் வரை பக்கத்து ஆசனம் நிரப்பப்படவில்லை. ஒரு வெளிவிவகாரத் துறை மந்திரிக்கு, அவருடைய நாட்டில் நடந்த முக்கியமான ஒரு சம்பவம் தெரியவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

அன்று அவருக்கு நான் அதைச் சொல்லியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? அடுத்த நாள் காலை கோப்பி அருந்தியபடி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காலை உணவு சாப்பிடும்போது அவர் தினசரி பேப்பரைப் படித்திருப்பார். அப்போது தெரிந்திருக்கும். என்ன அவசரம்?''

சு.நடராஜன், புள்ளம்பாடி.

''சினிமாவைச் சிலாகிப்பவர் நீங்கள். உங்கள் மனதில் ஆழப் பதிந்த சினிமா காட்சி எது?''

''ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த 'ஒளவையார்’ படத்தின் இறுதியில் ஒரு காட்சி வரும். மாடு மேய்க்கும் சிறுவன் மரத்தில் இருந்தபடி ஒளவையாரிடம் கேட்பான், 'சுட்ட பழம் வேணுமா... சுடாத பழம் வேணுமா?’ என்று. சிறுவன் கனிந்த பழத்தை மண்ணில் எறிய ஒளவையார் அதை எடுத்து ஊதுவார். பையன் 'பாட்டி... பழம் மெத்தச் சுடுகிறதோ?’ என்று கேட்பான். ஒளவையார் திகைத்துப்போய் நிற்பார். எத்தனையோ புலவர்களை வாதத்தில் வென்றவர், படிப்பறிவற்ற மாடு மேய்க்கும் பையனிடம் தோற்றுப்போவார். அவருடைய கர்வம் ஒழிந்ததாகக் காட்சி நீளும். இது எனக்குள் ஓர் அதிர்வை உண்டாக்கிய ஒரு காட்சி!

ஒளவையார் எதிர்கொண்ட மாதிரியான ஒரு சம்பவம் கிரேக்க கவி ஹோமர் வாழ்க்கையிலும் நடந்தது. சிறுவன் ஒருவன் அவரிடம் விடுகதை ஒன்று கேட்டான். 'நீ பிடித்தால் கொல்வாய். பிடிக்காவிட்டால் உன்னுடன் கொண்டுபோவாய்’ என்று. விடுகதையை அசட்டையாகக் கேட்ட ஹோமரால் விடை சொல்ல முடியவில்லை. சிறுவன் விடை 'பேன்’ என்றான். ஹோமர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்தார் என்று ஒரு கதை உண்டு.

பெரிய பெரிய மேதைகளுக்கும் படிப்பாளிகளுக்கும் இப்படிச் சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படுவது உண்டு. ஷேக்ஸ்பியருடைய ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் காஸியஸ் 'மணி அடித்துவிட்டது’ என்று சொன்னது இன்னொன்று. ஜூலியஸ் சீஸர் காலத்தில் மணிக்கூண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஷேக்ஸ்பியர் இன்று உயிரோடு இல்லாததால், அவர் அவமானத்தில் இருந்து தப்பினார்!''

தி.அம்பிகாபதி, விண்ணமங்கலம்.

''சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி..! இந்த வரி உணர்த்துவது என்ன?''

''சமீபத்தில் சகல தமிழ் பத்திரிகைகளிலும் காணப்பட்ட ஒரு சொற்றொடர், 'வார்த்தைகள் போதாது’ என்பதுதான். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெற்றபோது, 'என் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று சொன்னார். அவர் விளையாட்டு வீரர். அவரிடம் போதிய வார்த்தைகள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் எழுத்தாளர்கள், கவிஞர்கள்கூட ஒன்றை வர்ணிக்க ஆரம்பித்து இடையில், 'வார்த்தைகள் போதாது’ என்றோ 'சரியான வார்த்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்றோ சொல்லி நழுவிவிடுகிறார்கள்.

சீன அறிஞர் கொன்பூசியஸ்கூட பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 'எல்லா வார்த்தைகளும் சேர்ந்தாலும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ஒன்றை விவரிப்பதற்கு ஒரு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைகள் போதாது. குறைந்தது 10 மொழிகளாவது தெரிந்திருக்கவேண்டும். 'சாந்தி முகூர்த்தம்’ என்ற பதத்துக்கு ஆங்கில வார்த்தை இல்லை. 'இடது கால் செருப்பு’க்கு மட்டும் ஆப்பிரிக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் கிடையாது. ஆகவே, பல மொழிகள் தெரிந்தால்தான் அது சாத்தியமாகும். செவ்விலக்கியத்தின் வரைவிலக்கணம் என்னவென்றால், அது எதைச் சொல்லப் புறப்பட்டதோ அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே அது முடிந்துவிடும் என்பது. பிரச்னை என்னவென்றால், மனிதன் முதலில் சிந்தித்தான். பின்னர்தான் வார்த்தை பிறந்தது. எப்போதும் சிந்தனை கொஞ்சம் முன்னுக்கும் வார்த்தை ஓரடி பின்னுக்கும்தான் இருக்கும். 'சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி’ என்பது அதுதான். நெஞ்சில் கிடப்பது முழுவதும் சொல்லில் வெளிப்படுவது கிடையாது. வாத்து முன்னே போக குஞ்சுகள் பின்னே தொடரும். சிந்தனையை வார்த்தைகள் தொடரும், முந்த முடியாது!''

- நிறைந்தது


கடவுள் தொடங்கிய இடம் - 1 - ஆனந்த விகடன் - 2014-06-18
த்ரில் திகில் நாவல்

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

மாஸ்கோ வந்தது

வனை இனிமேல் என்ன செய்வது என்று வீட்டில் கூட்டம் போட்டு விவாதித் தார்கள். அந்தக் கூட்டத்தில் அப்பாவும், அம்மாவும், மாமாவும், பாட்டியும் இருந் தார்கள். அவனுடைய தங்கச்சிகூட இருந்திருக்கிறாள். ஆனால், அவனுக்குத் தெரியாமல் ரகசியமாகக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதுதான் அவனுக்கு ஆத்திரம்!

இதற்கு எல்லாம் காரணம், அவனுடைய தங்கச்சிதான். இயக்கப் பொடியன் ஒருவன் வந்து, அவனுடன் அடிக்கடி பேசினான். அவனுடன் படித்தவன். அவனும் இயக்கத்தில் சேரத் தயாராகி வருகிறான் என்பதை தங்கச்சி எப்படியோ ஊகித்துவிட்டாள். இந்த அவசரப் பொதுக்கூட்டத் துக்கு அதுதான் காரணம். அம்மா, தன்னுடைய காணியை விற்று ஏஜென்ட்டுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு பண்ணினார். மாமாவின் சொந்தக்காரர் ஒருவர், ஜெர்மனியில் இருந்தார். அப்பா அவருடன் தொடர்புகொண்டு பேசினார். அவரும் ஏதோ சொல்லியிருக்கிறார். அப்படித்தான் காரியங்கள் வேகமாக நடந்தேறின.

'யாழ்ப்பாணத்தில் இனி ஒரு நிமிடம்கூட நிற்க ஏலாது. நீ கொழும்பிலே போய் மாமாவுடன் நில். புறப்படும் தேதி சரியானவுடன் ஏஜென்ட் உன்னைத் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்’ என்றெல்லாம் சொல்லி, அவனை அனுப்பிவைத்தார்கள்.

ஜென்ட், ஆறு மாதங்கள் எடுக்கும் என்று சொன்னதாலே சும்மா இருக்க வேண்டாம் என்று, தமிழ் உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் நண்பன் தயவினால் கிடைத்த அந்த வேலை, கணக்கு எழுதுவது. ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பதை எழுதி வைக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் வேலையும் அவனுக்குத்தான். அநேகமான கடிதங்கள் அரசு அலுவலகங்களுக்குத்தான். 'மகா கனம் பொருந்திய ஐயா...’ என்று ஆரம்பித்து, 'தங்கள் கீழ்ப்படிந்த ஊழியன்’ என்று முடிக்க வேண்டும்.

ஒடுக்கமான ஓர் அறையை அவனுக்குத் தந்திருந்தார்கள். அதிலும் ஒடுக்கமான நாலு கால் மேசை. அதை அங்கே வைத்தவுடன் அறை நிறைந்துவிடும். அவனுடைய கணினி, மேசையின் மேல் எல்லைகளைத் தொட்டுக்கொண்டு நின்றது. முழங்கைகள் இடுப்புடன் ஒட்டிக்கொண்டிருக்க, தட்டச்சு செய்வான். முழங்கைகளை விரிக்க முடியாது. அப்படி விரித்தால் அவை அறைக்கு வெளியே போய்விடும். அத்துடன் P,L,O,K,M போன்ற எழுத்துகளை அடிக்கும்போது மேசையின் வலது கால் ஆடும்.

இது போதாது என்று காசாளர், அறை வாசலுக்கு வெளியே வந்து நின்று 'முடிந்துவிட்டதா... முடிந்துவிட்டதா?’ என்று கேட்பார். அவனுக்கு, காசாளரைப் பார்த்த உடனேயே பிடிக்கவில்லை. அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  

'இந்தக் கடை முதலாளியின் பெயர் ஜம்பர்’ என்று நண்பன் சொன்னான். அது என்ன பெயர்? தமிழா... சிங்களமா? ஒன்றுமே தெரியவில்லை. அவருக்கு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்றும் சரளமாக வரும். ஆகவே, அவர் தமிழரா... சிங்களவரா? என்பதை ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'அவருக்கு ஏன் ஜம்பர் என்று பெயர் வந்தது என்றால், அவர் மேல் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளில் இருந்து அவர் எப்படியும் தப்பிவிடுவார்; அதாவது பாய்ந்துவிடுவார்... அதுதான் அந்தப் பெயர்’ என்று நண்பன் விளக்கம் சொன்னான். அவர் அடிக்கடி வெளிநாடு போவார். மாதத்தில் ஓரிரு நாட்கள் உணவகத்துக்கு வருவார். காசாளர்தான் மானேஜர் போல எல்லாவற்றையும் கவனித்தார். இரண்டு வாரம் ஒரு மாதிரி ஓடிப்போனது.

மூன்றாவது வாரம் ஓரளவுக்கு வேலை பிடிபட்டபோது பிரச்னையும் ஆரம்பித்தது.

அவன் கணக்கு எழுதிக்கொண்டிருந்தபோது, காசாளர் அழைத்தார். நாலாம் நம்பர் மேசை பிளேட்டை எடுத்துப்போய் உள்ளே வைக்கச் சொன்னார். அன்று ஒரு பரிசாரகன் வரவில்லை. இவன் அவரைப் பார்த்துச் சொன்னான், 'பிளேட் எடுத்துவைக்க நான் இங்கே வேலைக்கு வரவில்லை. நீர் வேணுமெண்டால் எடுத்துவையும். பக்கத்திலேதான் இருக்கு.’ - யாரும் அவரை எதிர்த்துப் பேசுவது இல்லை. 'நீர் என்னையே எதிர்த்துப் பேசுறீரா? உமக்கு இருக்குது பாடம்’ என்றார். விசயம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

அடுத்த நாள், ஆறடி உயரத்துடன் அகலமான முகத்தில் மேலும் அகலமான மீசையுடன் ஒருவர் வந்தார். நண்பன் அவனை இடித்து, 'ஜம்பர்... ஜம்பர்...’ என்றான். கைவைத்த மஞ்சள் கலர் டிஷர்ட். கீழே சாரம். அதற்கு மேல் அகலமான கறுப்பு பெல்ட். கொழும்பிலே சண்டியர்கள் சாரத்தை முன்னுக்குத் தூக்கிக்கொண்டு நடப்பார்கள். மகா சண்டியர்கள் சாரத்தைப் பின்னுக்குத் தூக்கியபடி நடப்பார்கள். இவர் மகா சண்டியர். காசாளர், முதலாளியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் கையை நீட்டி அவனைக் காட்டி ஏதோ சொன்னார். விசயம் முடிந்தது என நினைத்த தறுவாயில், காசாளர் விரலை வளைத்து அவனை வரச்சொன்னார். இவன் போனான்.

ஜம்பர், இவனை ஏதோ விலைக்கு வாங்குவதற்குப் பார்ப்பது போல பார்த்தார். 'நீதானா நிஷாந் ***யா?’ என்றார். இவன் நிதானமாக 'என்னுடைய முதல் பெயர் நிஷாந். மற்றது உங்கள் பெயராக இருக்கலாம்’ என்றான். ஜம்பர் முகத்தில் ஒருவித மாற்றமும் இல்லை. 'எனக்கு இன்றைக்குக் கொலை செய்ய நேரம் இல்லை. வேறு வேலை இருக்கிறது.

நீ வீட்டுக்குப் போகலாம். உன்னை இன்னொரு நாள் கவனிக்கிறேன்’ என்றார். மூன்று வாரச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் நிஷாந்.

ருநாள், பயணத்துக்குத் தயாராக இருக்கும்படி தொலைபேசியில் தகவல் வந்தது. அப்பாவும், அம்மாவும், தங்கச்சியும் கொழும்புக்கு வழியனுப்ப வந்துவிட்டார்கள். அப்பா, அவர் மணமுடிக்க முன்னர் பாவித்த சூட்கேஸைக் கொண்டுவந்து அவனுக்குத் தந்தார். அதைத் திறந்தபோது அப்பாவின் மணம் வந்தது. கடையிலே போய் தடித்த இரண்டு ஸ்வெட்டர் எடுத்து வந்தார். ரஷ்யாவின் குளிருக்கு இது போதும் என்று அவர் நினைத்திருக்கலாம். மாமா, பெட்டா சந்தைக்குப் போய், பழைய ஓவர்கோட் ஒன்றை வாங்கி வந்தார். சந்தையில் ஒருவர் வாங்கும் பழைய ஓவர்கோட் எப்படி இருக்க வேண்டுமோ, அது அப்படி இருந்தது. இதற்கு முன்னர் அதை ஒரு பயில்வான் அணிந்திருக்கலாம். அதைப் போட்டுப் பார்த்தபோது அவனுக்கு முதுகும் தோள்பட்டைகளும் நொந்தன. அதற்குள் இன்னொருவருக்கும் இடம் இருந்தது. அவன் உருவம் முற்றிலுமாக மாறி, 'டாக்டர் ஷிவாகோ’ என்ற படத்தில் வரும் பிச்சைக்காரனைப் பார்ப்பது போல இருந்தது. தங்கச்சியைப் பார்த்தான். அவள், சிரிப்பை அடக்கிக்கொண்டு சிரித்தாள். அதற்கு என்ன பொருள் என்பது புரியவில்லை.

மாமா வீட்டில் ஒரு நாய் இருந்தது. உருண்டையாக இருக்கும். அவனைக் கண்டதும் பாய்ந்து பாய்ந்து நக்கும். அதற்கு என்னவோ, அவன்தான் எஜமானன் என்ற நினைப்பு. அவன், அதற்கு ஒன்றுமே செய்தது இல்லை. அவன் எங்கேயாவது வெளியே போய்விட்டுத் திரும்பினால், ஓடிவந்து நிலத்திலே உருண்டு புரண்டு மகிழ்ச்சியைக் காட்டும். கால்கள் நடுநடுங்க எழுந்து நிற்கும். ஒரு சொட்டு சிறுநீரை அவ்வப்போது வெளியே விடும். இவனுக்கு, தன்னிடம் அன்பு காட்டும் ஒரு நாய்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. அதனுடைய பெயர் மொஸே. அவன் அதை உச்சரித்ததும் அவன் மேல் பாயும். அதனுடைய முடிவில்லா மகிழ்ச்சி ஒரு முடிவுக்கு வர சிறிது நேரம் எடுக்கும்.

அன்று அவன் ஓவர்கோட்டைப் போட்டுக்கொண்டு கண்ணாடியைப் பார்த்து நின்றபோது, அந்த நாய் அவன் பின்னால் ஓடிவந்து காலில் கடித்துவிட்டது. அம்மா உடனே சத்தம் வைக்க ஆரம்பித்தார். 'சகுனம் சரியில்லை. அவனுடைய பயணத்தை உடனே நிற்பாட்டு’ என்ற பாட்டாக இருந்தது. மாமா அவனை அவசரமாகக் கூட்டிப்போய் ஓர் ஊசி போட்டுவித்தார். டொக்ரர் 'அது வீட்டு நாய். பயப்படத் தேவை இல்லை’ என்றார்.

ஏஜென்ட், இது பிரச்னையே இல்லை என்பது போல கதைத்தார். விமான நிலையத்துக்கு, சரியான நேரத்துக்கு வரச் சொன்னார். அவனுடன் சேர்த்து எட்டுப் பேரை அன்று ஏஜென்ட் அனுப்பிவைக்கத் திட்டமிட்டு இருந்தார். அவர் விமான நிலையம் வருவார். ஆனால், அவர்களுடன் பயணம் செய்ய மாட்டார். அத்துடன் அவர் ஒருவருக்குத்தான் அந்த எட்டுப் பேரும் யார் யார் என்பது தெரியும். இவர்களுக்குத் தெரியாது; அதைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்யக் கூடாது. ரஷ்யா போனவுடன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாவார்கள். 'புறப்படும் தேதி, 3 ஆகஸ்ட் 1992’ என்றார் ஏஜென்ட். அவர்கள் ரஷ்ய விமானமான ஏரோ ஃப்ளட்டில் பயணிப்பார்கள். அது பாகிஸ்தானுக்குப் போய் அங்கே இருந்து மாஸ்கோ போகும். ரஷ்யாவுக்குப் போக அவனிடம் மாணவ விசா இருந்தது.

கொழும்பு குடிவரவு அதிகாரி ஒரே ஒரு கேள்வி கேட்டார். அவன் பதில் தயாரிக்காத கேள்வி. ஏஜென்ட்டும் சொல்லித்தரவில்லை. 'ரஷ்யாவில் என்ன படிக்கப்போகிறீர்?’. அவன் எங்கே படிக்கப்போகிறான்? அவனுடைய பயணம், ரஷ்ய எல்லையைக் கடந்து ஜெர்மனிக்குள் நுழைவது. அப்போது மூளையில் உதித்த 'கட்டடக்கலை’ என்ற படிப்பைச் சொன்னான். வெள்ளை உடை அதிகாரியும் நம்பிவிட்டார். கைகளை நெஞ்சு மட்டும் உயர்த்தி, அவனுடைய கடவுச்சீட்டில் சத்தம் கேட்க முத்திரையைப் பதித்தார். அவனிடம் கடவுச்சீட்டைத் திருப்பித் தந்தபோது அவன் மனதுக்குள் நினைத்தான், 'என்னுடைய கடவுச்சீட்டில் குத்தப்படும் கடைசி முத்திரை இது. இனிமேல் இந்த பாஸ்போர்ட்டுக்கு இலங்கை அரசு சொந்தம் கொண்டாட முடியாது’!

காத்திருக்கும் அறையில் இருக்கும் ஓர் ஆசனத்தில் அமர்ந்து, சுற்றிவர உட்கார்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்து மற்ற ஏழு பேரும் யாராக இருக்கும் என்று ஊகிக்கும் விளையாட்டை மனதுக்குள் ஆரம்பித்தான். ஒன்றிரண்டு பேரை உடனே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. சிங்களம் பேசுபவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். சிலர், கராச்சியில் இறங்கிவிடுவார்கள். பெண்கள் குறைவு. எல்லோரும் தொழில் சம்பந்தமான பயணிகளாகத் தெரிந்தார்கள். ஓர் இளைஞன், பதுங்குகுழிக்குள் இருப்பதுபோல ஆசனத்துக்குள் அமிழ்ந்துபோய் தன்னை மறைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது 19 அல்லது 20 இருக்கும். அவன் ஓர் ஆளாக இருக்கலாம். நடுத்தர வயதில் ஒரு தமிழ் ஆள். இரண்டு கைப்பைகள் வைத்திருந்தான். குளிர் அங்கியும் கிடையாது. அவராகவும் இருக்கலாம். இன்னொருத்தர் வயது 35 இருக்கும். நன்கு படித்தவர் போல காணப்பட்டார். பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கலாம். அவரைப் பார்த்துச் சிரிக்கலாமோ என நினைத்தான். அத்தனை வசீகரமாக இருந்தார்.

அப்போது ஒரு பெண் டக்டக்கென நடந்து வந்தாள். டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல எல்லாக் கண்களும் ஒரே நேரத்தில் அவள் பக்கம் திரும்பின. ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்திருந்தாள். குளிர் அங்கி இல்லை. பாகிஸ்தானில் அவள் இறங்கிவிடக்கூடும். படித்த தமிழ்ப் பெண் போல இருந்தாள். வயது 20-க்குள்தான் இருக்கும். கையிலே இலங்கை கடவுச்சீட்டையும், சில படிவங்களையும் பிடித்திருந்தாள். கைப்பை இல்லை. ஆனால், தோள் மூட்டிலே அழகான பெரிய கறுப்புப் பை ஒன்றைக் கொழுவியிருந்தாள். தலையில் தரித்திருக்கும் கிரீடம் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதுபோல நடந்தாள். கடவையைக் கடக்கும்போது கைப்பை இடிக்காமல் தோள் மூட்டை ஒரு பக்கம் திருப்பி லாகவமாகக் காலை வைத்தாள். பின்னர் ஏற்கெனவே எங்கே அமர வேண்டும் என்று முன்பே தீர்மானித்தவள் போல கால்களை எட்டிவைத்து, அவனுடைய இருக்கையில் இருந்து ஆகக்கூடிய தூரமாக இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து, ஒரு காலைத் தூக்கி மற்ற காலுக்கு மேல் போட்டாள்.

பயணிகள் இன்னும் வந்தபடியே இருந்தனர். விமானம் புறப்படவேண்டிய நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் ஓர் அறிவிப்பு இல்லை. யாரோ அதை உணர்ந்துவிட்டது போல திடீரென்று அறிவிப்பு வந்தது. 'விமானம் ஒரு மணி நேரம் பிந்தி புறப்படும்’. அதைத் தொடர்ந்து இன்னோர் அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்டது. ஒரு பெயரைச் சொல்லி, திருப்பித் திருப்பி வரவேற்பு மேசைக்கு வரச் சொன்னது. ஆனால், யாருமே எழுந்து செல்லவில்லை. இரண்டு அதிகாரிகள் வேகமாக அந்தப் பெண்ணிடம் வந்து ஏதோ பேசினார்கள். பின்னர் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். அவளுடைய அகலமான கறுப்புக் கைப்பை ஆசனத்திலேயே கிடந்தது. அவள் 'நான் இல்லை... நான் இல்லை...’ என்று கதறியது, அந்தக் காத்திருப்பு அறையில் வெகுநேரம் எதிரொலித்தது. அவர்கள் போய் பல நிமிடங்கள் ஆகியும் அந்த வார்த்தை அந்த இடத்திலேயே நின்றது.

இந்தச் சம்பவம், பல பயணிகளை உலுக்கியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்தார்கள். பலர் தரையில் எதையோ உன்னிப்பாகத் தேடியபடி ஆசுவாசமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டார்கள். எப்படியும் விமானம் புறப்பட் டால் போதும் என்று அவர்கள் மனத்தில் எண்ணம் ஓடியிருக்கும். இறுதியில், விமானம் புறப்படப்போவதாக ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். வாசலிலே சிங்களப் பெண் ஒருத்தி அழகாக உடை உடுத்தி நின்று, ஒவ்வொரு பயணியையும் உள்ளே அனுப்பினாள். அவள் தலையிலே ஒரு கொத்து மயிர் அப்படியே கவிழ்ந்து அவள் கண்களை மறைத்தன. ஒவ்வொரு கடவுச்சீட்டுப் படத்தையும் பயணியின் முகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அனுமதி அட்டையையும் கடவுச்சீட்டையும் நீட்டினாள். அவன் முறை வந்தபோது எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னர், 'பயணம் நன்றாக அமையட்டும்’ என வாழ்த்தினாள். 'உங்கள் நாட்டை நீங்களே வைத்திருங்கள். எனக்கு வேறு நாடு கிடைத்துவிட்டது’ என்று மனதுக்குள் சொல்லிச் சிரித்துக்கொண்டான்.

அவனைக் கண்டதும் ஓடிவந்து நக்கும் மொஸே, அன்று அவனைக் கடித்தது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மேல்கோட்டு அப்படி அவனை மாற்றிவிட்டது. ஒருவேளை அம்மா பயந்ததுபோல ஒரு துர்சகுனமாகவும் இருக்கலாம். 'ஆசிரியர்’ என அவன் ஊகித்த வசீகரமான மனிதர், அவன் பார்க்கக்கூடிய தூரத்தில் அமர்ந்து நிதானமாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு விமானப் பயணம் பழக்கமானதாக இருக்க வேண்டும். அவன் மனது, எதற்காகவோ அமைதி இழந்து தவித்தது. என்ன காரணம் என்று தொட முடியவில்லை. அந்த ஜீன்ஸ் பெண் நினைவுக்கு வந்தாள். அவள் 'நான் இல்லை... நான் இல்லை...’ என்று கதறி அழ, அதிகாரிகள் இழுத்துப்போனதை நினைத்துப் பார்த்தான். அத்தனை நாகரிகமாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டவள், கண நேரத்தில் படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பெண் போல கெஞ்சியது பரிதாபமாக இருந்தது. அவள் என்ன குற்றம் புரிந்தாள்? கள்ள பாஸ்போர்ட்டா? போராளியா? அவள் கண்களில் எவ்வளவு நம்பிக்கை தெரிந்தது. அவள் தோள்மூட்டைச் சரித்து நடந்த காட்சி நினைவுக்கு வந்தது. கராச்சியில் இறங்கிய விமானம் கிளம்பியதும் இரண்டு கிளாஸ் வைன் குடித்தான். சாப்பிட்டதும் நினைவு இல்லை. அப்படியே தூங்கிவிட்டான். அவன் விழித்தபோது மாஸ்கோ வந்துவிட்டது. இந்து மகா சமுத்திரத்தின் மேல் தூக்கத்தை ஆரம்பித்து மாஸ்கோவில் முடித்ததை நினைத்தபோது ஆச்சர்யமாக இருந்தது!

- கடவுள் கதைப்பார்...


கடவுள் தொடங்கிய இடம் - 2 - ஆனந்த விகடன் - 2014-06-25

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

புதிய பொறுப்பாளர்

மெலிந்து வற்றலாகி இருந்த ஒருவர்தான் அவர்களைச் சந்திக்க வந்தவர். மாஸ்கோ விமான நிலையத்தின் பெயர் ஸ்ரேமெட்யேவோ. முதல் ரஷ்யப் பெயரே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே என்று, மூன்று தரம் சொல்லிச் சரிபார்த்தான். எட்டுப் பேரையும், விமான நிலையத்தில் கண்டுபிடித்து ஒன்றாக்கினார் பொறுப்பாளர். அவன் ஊகித்தவர்களில் சில பேர் அந்தக் குழுவில் இருந்தனர். வசீகரமான அந்த மனிதர், உண்மையில் ஓர் ஆசிரியர்தான். அவரைப் பார்த்ததும் அவனை அறியாமல் ஒரு மதிப்பு வந்தது. இவன் தன் பெயரை 'நிஷாந்’ என்று அவருக்குச் சொன்னான். அவர் 'அம்பிகாபதி’ என்றார். இது என்ன பெயர் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அவர் உருவத்துடன் அந்தப் பெயர் பொருந்தவே இல்லை. அவனால் ஊகிக்க முடியாத 50-55 வயது மதிக்கக்கூடிய ஒரு மனுஷிக்கு, 'சந்திரா மாமி’ என்று பெயர் சொன்னார்கள். மற்றவர்கள் எல்லோருமே இளவயதுக்காரர்கள். ரொஹான் என்ற பெயரில் சிங்களப் பையன் ஒருவனும் அவர்கள் குழுவில் இருந்ததுதான் ஆச்சர்யம். ஏஜென்ட், எல்லோரையும் ஒரு வாகனத்தில் அடைத்து ஏற்றிப்போய், மலிவான விடுதி அறை ஒன்றில் அடைத்தார். அடுத்த சில நாட்களில் உக்ரைனுக்கு ரயில் வண்டியில் போக வேண்டும். மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் போன்ற அவனது ஆசைகள் நிறைவேறவில்லை.

ரஷ்யாவை அவன் பார்த்தது, விடுதி யன்னல் வழியாகத்தான். ரஷ்யா என்றால் இப்போதும் அவனுக்கு நினைவுக்கு வருவது அவன் கண்ட முதல் காட்சிதான். அதை, அவனால் என்றைக்குமே மறக்க முடியாது.

இரவு 8 மணி இருக்கும். பார்க்கும் காட்சி எல்லாமே புதினமாக இருந்தன. அங்கே ஓடும் வாகனங்கள், நடைபாதையில் காணப்படும் மரங்கள் எல்லாமே விசித்திரமாக இருந்தன. பட்சிகள்கூட அவன் முன்னர் எப்போதும் பார்த்திராதவை. மனிதர்கள் எதையோ பிடிக்க ஓடுவதுபோல அவசரமாக நடந்து போனார்கள். குளிர் ஆரம்பித்துவிட்டதால், எல்லோரும் மேலங்கி அணிந்திருந்தார்கள். வீதி விளக்குக்குப் பக்கத்தில் மனிதர்கள் போனதும், அவர்கள் உருவத்தில் வெளிச்சம் பட்டு துலக்கமாகத் தெரியும். சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் நிழலாக மாறிவிடுவார்கள்.

50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி, கறுப்பு  நிற மேலங்கி, தொப்பி, கையுறை ஆகியவற்றை அணிந்துகொண்டு சாலையைக் கடந்ததை அவன் பார்த்தான். திடீரென்று ஒரு கார் குறுக்காக வந்து அந்தப் பெண்ணை இடித்ததும், அவள் அந்தரத்திலே சில விநாடிகள் பறந்து, பொத்தென்று சாலையிலேயே விழுந்தாள். பக்கத்திலே நின்ற சந்திரா மாமி, 'ஐயோ’ என்று கத்தினார். அந்தக் காட்சி, ராட்சதப் பறவை ஒன்று செட்டை விரித்து எழுந்து பறந்ததுபோல இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து சில விநாடிகள் அவனால் மீள முடியவில்லை. மூளை நின்றுவிட்டது. சனங்கள் சுற்றிலும் சூழ்ந்துவிட்டதால் ஒன்றும் தெரியவில்லை.

அடுத்து நடந்ததுதான் இன்னும் ஆச்சர்யமானது. இரண்டே நிமிடங்களில் பெரும் ஒலி எழுப்பியபடி அவசரச் சிகிச்சை வண்டி வந்து, அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு பறந்தது. சாலை, பழையபடி ஆனது. சனங்கள் தங்கள் பாட்டுக்கு போனார்கள். ஒரு விபத்து அங்கே நடந்தது என்பதற்கான தடயமே கிடையாது. அதன் பின்னர் வந்த பல வருடங்கள், மாஸ்கோ பற்றி நினைக்கும்போது நிஷாந்துக்கு அந்தக் காட்சியே வந்துபோகும்.

ஆரவாரம் முடிந்து அடங்கிய பின்னர் அம்பிகாபதி மாஸ்ரர் சொன்னார், ''ஓர் அரசாங்கம் நன்றாகச் செயல்படுகிறதா... இல்லையா என்பதை அறிய, பேப்பர் படிக்கத் தேவை இல்லை; ரேடியோவும் டி.வி-யும்கூட அவசியம் இல்லை. இப்படியான ஒரு காட்சி போதும்.''

ஆறு நாட்கள் சிறையில் வைப்பதுபோல வைத்திருந்தார்கள். ஏழாவது நாள் நான்கு பேரை மட்டும் உக்ரைனுக்கு ரயிலில் அனுப்பினார்கள். மாஸ்ரர், அவன், சந்திரா மாமி, ரொஹான். அங்கே இன்னொரு ஏஜென்ட் அவர்களைச் சந்திப்பார். அந்த ஏஜென்ட் ரஷ்ய மொழி பேசுவார் என்று சொன்னார்கள். அம்பிகாபதி மாஸ்ரர், பிரான்ஸுக்குப் போகிறார். எல்லோரும் கனடாவுக்குப் போக, அவர் மட்டும் பிரான்ஸ் போவதில் உறுதியாக இருந்தார். நிஷாந், குதிகாலுக்கு மருந்து கட்டும்போது பார்த்துவிட்டு, ''அது வீட்டு நாய்தான். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உக்ரைன் போவதற்கு இடையில் காயம் ஆறிவிடும்'' என்றார் மாஸ்ரர். அப்படியே அவர் சொன்னதுபோல உக்ரைனுக்குப் புறப்பட்ட அன்று, காயம் ஆறிவிட்டது.

''மாஸ்ரர்... உங்களால் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது?'' என்றான் நிஷாந்.

''இதை நான் என்னுடைய மாணவர்களிடம் இருந்து கற்றேன். இரண்டு மாணவர்கள் இப்போது பாரீஸில் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் போகிறேன். ஆறு மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக இயக்கத்தில் சேர்ந்தார்கள். இதற்குக் காரணம் நான்தான் என்று, சிங்கள ராணுவம் என்னைத் தேடி வந்ததில், நான் நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது.

பகீரதன் என்கிற ஒரு மாணவன், 'நான் சாவுக்கு அஞ்சுவது இல்லை’ என்று அடிக்கடி சொல்வான். 'அது உண்மையாக இருந்தால், பரிணாம வளர்ச்சி என்பது பொய்’ என்று நான் சொல்வேன்.

உயிர்களுக்கு எல்லாம் ஆதி உணர்வு மூன்று. பசி, பயம், பாலுணர்வு. அவன் சொல்வான், 'சாவு என்பது ஒரு வாசல்படி தாண்டுவதுபோல’ என்று. அப்படி எண்ணிய பலர் இருந்திருக்கிறார்கள். பகத்சிங்கைத் தூக்கிலிட்ட அன்று, அவர் லெனின் பற்றிய ஒரு புத்தகத்தை அவசரமாகப் படித்துக்கொண்டிருந்தார். முதலாவது அத்தியாயத்தை முடிக்கும் முன்னரே அவரைத் தூக்கில் போட்டுவிட்டார்கள். சாவைப் பற்றி அவர் பொருட்டாக நினைக்கவே இல்லை. அவருடைய ஒரே கவலை, புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லையே என்பதுதான்.

ஒருமுறை போரின்போது, பகீரதனின் நண்பன் குண்டடிபட்டு ராணுவ எல்லைக்குள் விழுந்து இறந்துவிட்டான். பகீரதன், ஊர்ந்து ஊர்ந்து போய் நண்பன் உடலை மீட்டு வந்தான். சுற்றிவர குண்டுகள் பறந்தபோது தனக்கு மரணபயம் ஏற்படவே இல்லை என்றான். மனதுக்கு 'சரி’ எனப் பட்டதைச் செய்யும்போது, சாவு பயம் வராது என்பது அவனுடைய நம்பிக்கை. நண்பனுக்கு முறையான அடக்கம் செய்த பிறகுதான், அவனுக்கு அமைதி கிடைத்தது என்று சொன்னான்.

அவன் சொன்னதிலும் பெரிய உண்மை இருந்தது. சோபோக்கிளிஸ் எழுதிய 'அன்டிகன்’ நாடகத்திலும் இப்படி ஒரு சம்பவம் வரும். அன்டிகனின் சகோதரன் போரில் இறந்துவிடுவான். அவனுடைய உடலை முறைப்படி அடக்கம் செய்யக் கூடாது என்பது அரசனின் கட்டளை. ஆனால் அன்டிகன், தனது சகோதரனான பொலினீசியஸின் உடலை ரகசியமாக அடக்கம் செய்கிறாள். காவலாளிகளிடம் பிடிபட்டு அரசனுக்கு முன் நிறுத்தியதும், அரசனின் சட்டத்திலும் பார்க்க கடவுளின் சட்டம் உயர்ந்தது என்று வாதிடுகிறாள். அரசன், அவளுக்குத் தண்டனை விதித்தபோதும் அவள் மரணத்துக்கு அஞ்சவில்லை. உண்மையின் பக்கம் நிற்கும்போது மரண பயம் இராது.

நாங்கள், சாவு உலகத்துக்குப் பயணப்படவில்லை; ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம் அவ்வளவுதான். பதற்றப்படுவதால் ஒன்றுமே ஆகாது. அமைதியாக இருந்தபோதுதான் புத்தர் ஞானம் பெற்றார். ஆத்திரப்பட்டுப் பிரயோசனம் இல்லை. அமைதியாக இருக்க எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

உக்ரைன் பொறுப்பாளர் விஜயநாயகத்தைப் பார்த்தால் பெரிய நம்பிக்கை வராது. ஆனால், அவர் விஷயம் தெரிந்தவர் என்று சொன்னார்கள். எட்டாவது மாடியில் வீடு. ஒரு பாத்ரூம், ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை. அவ்வளவுதான் வீடு முடிந்துவிட்டது. அங்கே ஏற்கெனவே நான்கு பேர் தங்கி இருந்தார்கள். ஆகவே, மறுபடியும் கூட்டுத்தொகை எட்டுப் பேர்.

அந்த நான்கு பேரில் ஒருவன் பெயர் பத்மராசன். இவன் பெயர் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக அடிபட்டது. வங்கிக் கொள்ளை ஒன்றில் சம்பந்தப்பட்டவன் என்று பேசிக்கொண்டார்கள். அவன் அதை மறுத்துரைக்கவில்லை. எப்படியோ தப்பி இங்கே வந்துவிட்டான். ரொஹான் என்ற சிங்களப் பெடியனைப் பற்றி விசாரித்ததில், அவன் பெயர் கொழும்பில் இன்னும் பிரபலமாகியிருந்தது. விசாகா பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளி மாணவியை, இவன் பலாத்காரம் செய்த இடத்தில் பிடிபட்டுவிட்டான். ஆனால், எப்படியோ தப்பிப் புறப்பட்டுவிட்டான். இது தெரியாமல் போலீஸ் அவனை அங்கே இன்னமும் தேடுகிறது என்று சொன்னார்கள்.

கடந்த ஆறு நாட்களாக மாஸ்கோவில் அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடையாது. அவர்களின் உடல்நிலையைப் பார்த்து விஜயநாயகத்துக்கு இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். வெளியே போய் நான்கு றாத்தல் பாணும், இரண்டு டசன் முட்டையும், பாலும் வாங்கிக்கொண்டு வந்தார். ரஷ்ய மொழியில் பாணை 'ஹ்லேப்’ என்று சொன்னார். அதுதான் அவன் கற்ற இரண்டாவது ரஷ்ய வார்த்தை. மூன்றாவது வார்த்தை 'மொலோகோ’. அதன் பொருள் பால். பொறுப்பாளர் கொண்டுவந்த முட்டை, ஊர் முட்டையிலும் பார்க்க இரண்டு மடங்கு பெரிய சைஸில் இருந்தது. பாண், துண்டு துண்டாக வெட்டுப்படாமல் முழுதாக இருந்தது. கத்தியால் வெட்ட வெட்ட பாண் வெட்டுப்படாமல் நசிந்து கொடுத்தது. ஒருவாறு எட்டுப் பேரும் சரிசமமாக பாணை பங்கு போட்டுக்கொண்டார்கள்.

அங்கே, வாயு அடுப்பு ஒன்று இருந்தது. ஒரு தாச்சி. சமையல் நுட்பம் தெரிந்த ஒரு பெண்மணி சந்திரா மாமிதான். அவர், ஆளுக்கு இரண்டு இரண்டு முட்டைகளாகப் பொரித்தார். மற்றவர்கள் வரிசையாக வந்து, தங்கள் தங்கள் பிளேட்டுகளில் முட்டைப் பொரியலையும் பாணையும் ஏந்திவைத்து நின்றபடியே சாப்பிட்டார்கள். அத்தனை வேகமாக, பசித்த மிருகங்கள்தான் தின்னும். ஒருவராவது ஒரு சொட்டு மிச்சம் விடவில்லை. பின்னர் உக்ரைன் தண்ணீரைக் குடித்தார்கள். தங்கள் வாழ்க்கையில் சாப்பிட்ட அதிஉன்னதமான சாப்பாடு என்று, ஒருவர் விடாமல் எல்லோரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

அந்த வீட்டில் ஒரு டெலிபோன் இருந்தது. அதை பாத்ரூமில் மாட்டியிருந்தார்கள். அதுதான் பொது இடம் என்பதால், அந்த முடிவு எடுத்திருந்தார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து சொந்தக்காரர்களும், ஏஜென்ட்களும், நண்பர்களும் அழைப்பார்கள். அநேகமாக முறைப்பாடுகளாக இருக்கும். சிலவேளை நம்பிக்கையூட்டும் தகவல்களும் கிடைக்கும். ரஷ்யர்கள் யாராவது தொலைபேசியில் அழைத்தால், ஏஜென்ட் அழகான ரஷ்ய மொழியில் ஏற்ற இறக்கங்களோடு பதில் சொல்வார். பேசும்போது சிலவேளை ரஷ்யச் சிரிப்பும் சிரித்திருக்கிறார். ரஷ்ய மொழி தெரிந்திருந்ததால், தன்னுடைய ஆட்களை விரைவாக அனுப்பிக்கொண்டிருந்தார் என்று பேசிக்கொண்டார்கள். காலையில் ஒருமுறை வருவார். பின்னர் மாலை வருவார். கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார். நிறையக் கேள்விகள் மட்டும் கேட்பார்.

அவர்கள் வரும் முன்னர் நடந்த சம்பவத்தை சம்பந்தன் சொன்னான். சம்பந்தன், அங்கே மூன்று மாதங்களாக இருக்கிறான். அவனுக்கு இன்னும் பாதை திறக்கவில்லை. அவனுடன் தங்கியிருந்த இரண்டு பெடியன்களை, ஒருநாள் காலை ஏஜென்ட் அழைத்துச் சென்றார். அவர்கள் இயக்கப் பெடியன்களாக இருக்க வேண்டும். 17, 18 வயது மதிக்கலாம். புஜங்கள் உருண்டுபோய் இருக்கும். ஆங்கிலம், ஒரு வார்த்தைகூடத் தெரியாது. இருவரும் ஒன்றாகவே திரிவார்கள். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னாவின் கொலையில் இவர்களுக்குப் பங்கு உண்டு என்று ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கழுத்தில் நச்சுக் குப்பி கட்டியபடி இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 'ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?’ என்று அடிக்கடி சொல்வார்கள். இரண்டு நாட்கள் கழித்து பாத்ரூமுக்குள் இருந்த டெலிபோன் ஒலித்தது. கனடாவில் இருந்து இரண்டு பெடியன்களும் பேசினார்கள். ஏதோ மந்திர சக்தி இந்த ஏஜென்ட்டிடம் இருந்தது. இவர் தங்களையும் இப்படிக் கரை சேர்த்துவிடுவார் என்று எல்லோரும் நம்பினார்கள்.

அன்று இரவு, இதற்கு முன்னர் 100 பேர் படுத்துத் தூங்கியிருக்கக்கூடிய ப்ளாஸ்டிக் பாய்களில் படுத்தார்கள். நீட்டுச் சாரத் துணியால் தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்ட வங்கிக் கொள்ளைக்காரனுக்கும், 13 வயதுப் பெண்ணைக் கற்பழித்த சிங்களப் பெடியனுக்கும் நடுவில் நிஷாந் படுத்துக்கொண்டான். அவர்கள் விடும் சுவாசம் அவனுக்குக் கேட்டது. இருவருடைய வாயிலும் நீர் ஒழுகியது. வெளியே சத்தம் வேறு மாதிரி இருந்தது. இரவுப் பறவைகளின் ஓசை ஏதோ அவலக்குரல் மாதிரி ஒலித்தது. சந்திரா மாமி, அந்தப் பறவைக்கு ஏதோ பேர் சொன்னது நினைவுக்கு வந்தது. காற்றும் வித்தியாசமாக மணந்தது. இனிவரும் காலங்களில், அவன் இங்கிலாந்திலோ, ஜெர்மனியிலோ, கனடாவிலோ நிரந்தரவாசியாகி, ஒரு புது கருநீல கடவுச்சீட்டுக்குச் சொந்தக்காரன் ஆவான் என நினைத்துக் கொண்டான். ரோல்ஸ்ரோய், செக்கோவ், துர்கனேவ், லெனின், ஸ்டாலின், கோபர்சேவ்... போன்றவர்கள் சுவாசித்த காற்றை அவன் சுவாசிக்கிறான். எதிர்காலம் மாறக்கூடியது. அவனுடைய சாவு இன்னொரு நாட்டில்தான். அவன் பிறந்த ஊர், குப்பிளான். அவன் பிறக்கும்போது, அவனுடைய எடை 6 றாத்தல். பிறந்த தேதி 16. நட்சத்திரம் ரோகிணி. இவற்றை எல்லாம் எவரும் மாற்ற முடியாது. சர்வ வல்லமை பொருந்திய இலங்கை ராணுவம்கூட அவற்றை மாற்ற முடியாது.

தூங்கும் முன்னர், அவன் கடைசியாக நினைத்தது அவனுடைய காதலி திவ்யா பற்றித்தான். இரண்டு வருடங்களாகக் காதலித்தாள். யாராவது அவளைத் தொடர்ந்து காப்பாற்றுவது அவளுக்குப் பிடிக்கும். பிறகு அவனை விட்டுவிட்டு இயக்கப் பெடியன் ஒருவன் பின்னால் போய்விட்டாள். இயக்கப் பெடியனின் பெயர் சுரேஷ். வரியுடுப்பு அணிந்து K-56 சீனத்துவக்கை காவினால் அவன் சிறந்த காதலனாகிவிடுவானா?

அடுத்த நாள் காலை, உக்ரைன் சூரியன் வெளியே வந்து மூன்று மணி நேரம் ஆனப் பின்னர்தான் அவன் எழும்புவான். அவனை வங்கிக் கொள்ளைக்காரனோ, 13 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்தவனோ, வேறு எவனோ எழுப்பப்போவது இல்லை. அம்மா, கோப்பி போட்டுக்கொண்டு முன்னே நின்று 'மகனே’ என்று அழைக்க மாட்டார். தங்கை போகிறபோக்கில் காலால் தட்டிவிட்டுப் போக மாட்டாள். ரஷ்ய மொழி தெரிந்த ஏஜென்ட்டில் அவன் பெரிய நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால், அவர் அவனைச் சீக்கிரத்தில் விற்கப்போகிறார். அது பற்றி அவனுக்குத் தெரியாது. அன்று இரவு நிம்மதியான நீண்ட தூக்கம் அவனுக்குக் காத்திருந்தது!


கடவுள் தொடங்கிய இடம் - 3 - ஆனந்த விகடன் - 2014-07-02

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

மைக்ரோ ராப்டர்

க்ரைன் நாட்டில், முதல் நாள் காலை விடிவதை அவன் பார்க்கவில்லை. சூரியன், மேகத்தை முற்றிலுமாகக் கைப்பற்றிய பின்னர்தான் அவன் எழுந்திருந்தான். காற்றின் மணமும் ஓசையும் கண் மூடியிருக்கும்போதே வித்தியாசமாகத் தெரிந்தது. கண் விழித்தபோது, மற்றவர்கள் பாத்ரூம் விவகாரங்களை ஒருவர் பின் ஒருவர் முடித்துவிட்டுக் காத்திருந்தார்கள். அவரவர்க்கு அவரவர் கவலை. மாஸ்ரர், எதையோ படித்துக்கொண்டி ருந்தார். மாமி, பிரார்த்தனையை வாயில் முணுமுணுத்தார். அகதி என்றால் அதன் மறுபெயர் காத்திருப்பது என்று விஜயநாயகம் ஏஜென்ட் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஏதோ அன்று பிரதானமாக நடக்கப்போகிறது என்பதுபோல காத்திருந்தார்கள். ஆனால், ஒரு மாதமாக ஒன்றுமே அங்கே நடக்கப்போவது இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. சிறையே மேல் என்று அவர்களைச் சீக்கிரத்தில் நினைக்கவைக்கும்.

ஒருநாள் இரவு. வீட்டிலே ஆறு பேர் மட்டுமே  தங்கியிருந்தார்கள். ஏஜென்ட் எல்லோரையும் கூப்பிட்டு தரையில் அமரச் சொன்னார். அவர் சொன்னார், ''சந்திரா மாமியும் நிஷாந்தும் மாஸ்ரரும் இங்கேயே இருப்பார்கள். அவர்களை இன்னொரு ஏஜென்ட் பாரம் எடுப்பார். மீதி மூன்று பேரும் அடுத்த நாள் காலை புறப்படத் தயாராக இருக்க வேண்டும்'' என்று. நிஷாந்துக்குத் திக்கென்றது. அவன் திரும்பி சந்திரா மாமியைப் பார்த்தான். அவர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, யன்னல் வழியாகத் தெரிந்த மரத்தை யும் குருவிகளையும் உன்னிப்பாகப்  பார்த்துக்கொண்டு இருந்தார். மாஸ்ரருக்கும் அது ஒன்றும் அதிர்ச்சியைத் தரவில்லை.

''மாஸ்ரர்... இது சரியில்லை. நாங்களும் அதே அளவு பணம் கட்டியிருக்கிறோம். அம்மா காணி விற்ற பணம். இப்படியெல்லாம் கண்டபாட்டுக்கு எங்களை நடத்த முடியாது. இந்த அநியாயத்தைக் கேட்பார் இல்லையா?'' என்றான் நிஷாந்.

ன்றிரவு மாஸ்ரர் ஆறுதல் சொன்னார். ''இவர்கள் என்ன விதமாக ஓபரேட் பண்ணுகிறார்களோ தெரியாது. ஆனால், எப்படியும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்கள். யோசிக்காதேயும்...'' என்றார்.

''இல்லை *அண்ணை. இவர்கள், சாமான் விற்பதுபோல எங்களை விற்கிறார்கள். நாளைக்கு புதிய ஏஜென்ட் வராவிட்டால், நாங்கள் ரோட்டிலே பிச்சைதான் எடுக்க வேண்டும்'' என்றான்.

''உமக்கு அப்படி நேராது. அவர்கள் ஒருநாள் முந்திப் போறதாலே ஏதோ பெரிசா சாதிக்கப்போறது இல்லை. ஏற்கெனவே எழுதிவைத்த ஓர் ஒழுங்குடன்தான் எல்லாம் நடக்கும். இப்போது புரியாது. பின்னர் ஒருநாள் புரியும்.''

டுத்த நாள் காலை, ஏஜென்ட்டுடன் மூன்று பேர் போனார்கள். ''இன்று மாலைக்குள் புது ஏஜென்ட் வருவார். என்னிலும் பார்க்க அனுபவம் வாய்ந்தவர். கவலைப்பட வேண்டாம்'' என்றார் ஏஜென்ட்.

பழக்கம் இல்லாத நாடு, புரியாத மொழி. இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டார்களே என்று நினைக்க நினைக்க, நிஷாந்துக்கு ஆத்திரமாக வந்தது. உடனே மாஸ்ரர் சொன்னதை நினைத்து மனதை ஆற்றிக்கொண்டான்.

ரவு கதவு மணி அடித்தவுடன், மனம் ஒரு கணம் துள்ளிக் குதித்தது. எப்படியான ஓர் அதிர்ச்சி கதவுக்கு அந்தப் பக்கம் நின்றது என்பது, அவனுக்குத் தெரியாது. அவனால் கற்பனைக்கூட செய்திருக்க முடியாது. புது ஏஜென்ட், ஐந்து பேருடன் நின்றார். ஓவர்கோட்டும் தொப்பியுமாக நின்ற அவரை அடையாளம் காண முடியவில்லை. உள்ளே வந்து அவர் கோட்டைக் கழற்றி தொப்பியையும் அகற்றினார். வெளிச்சத்தில் பார்த்தபோது அவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நாய் கடித்தவுடன், 'சகுனம் சரியில்லை போக வேண்டாம்... போக வேண்டாம்’ என்று அம்மா அழுதது, அவன் நினைவுக்கு வந்தது. கடவுள், இன்னும் எத்தனை எத்தனைவிதமாக தன்னைச் சோதிக்கப்போகிறாரோ என்று நினைத்தபோது, அவனுக்கு மயக்கம் வரும்போல இருந்தது.

அந்த ஏஜென்ட், வேறு யாரும் இல்லை...  நிஷாந், முன்னர் வேலை செய்த உணவகத்தில் அவனைப் பார்த்து, 'இன்றைக்கு எனக்கு கொலை செய்ய நேரம் இல்லை’ என்று சொன்ன ஜம்பர்தான். இவன் எப்படி ஏஜென்ட் ஆனான் என்பது பெரும் மர்மம். தன்னுடைய கதை முடிந்தது என்று நிஷாந் நினைத்தான். ஆனால், ஜம்பர் எல்லாவற்றையும் மறந்ததுபோல காணப்பட்டார். தன்னுடன் வந்தவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பித்தார். அந்தத் தோரணையும் அவர் பேசிய விதமும் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது.

ஐந்து பேரும் ஒவ்வொரு மாதிரி இருந்தனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருத்தர், திடகாத்திரமான தேகத்தோடு இருந்தார். அவர் பல் வைத்தியர் என்று சொன்னார்கள். கலுவெல்ல என்ற இளம் வயது சிங்களவர். 60 வயது கிழவர். அத்துடன் பதின்ம வயதில் இருந்த மோகன். அறையின் வெளிச்சத்தைக் கூட்டிய பெண் ஒருத்தி. பெயர் லாவண்யா என்று சொன்னார்கள். இவனைப் பார்த்து முதலில் சிரித்தது அவள்தான். குளிருக்கு இன்னும் பழகவில்லை. இரண்டு தோள்மூட்டுகளை மட்டும் காட்டும் உடை அணிந்திருந்தாள். பின்னர் அதே தோள்மூட்டுகளை கைகளினால் மூடிக்கொண்டு நடுங்கியபடி காட்சியளித்தாள். தலைமயிரை விரித்துப்போட்டிருந்ததால், சில கற்றைகள் கண்ணிலே விழுந்து மறைத்தன. கைவிரல்களால் அவற்றை நிமிடத்துக்கு ஒரு தடவை அகற்றியபடி இருந்தாள். வேம்படி பள்ளிக்கூடத்தில் படித்தவள். இப்போது பாரீஸ் போவதற்குக் காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

'அங்கே என்ன செய்யப்போகி றாள்?’ என்று ஒருநாள் அவளிடம் கேட்டான். அவள், 'உடை நாகரிகம்’ என்று சொன்ன«பாது, 'அப்படியும் ஒரு படிப்பு இருக்கிறதா?!’ என நினைந்து வியந்தான்.

அன்று ஜம்பர் அவசரமாக வந்தபோது, இவள் *சொண்டுக்குள் சொன்னாள், 'வில்லங்கம் வருகிறது’ என்று. ஆனால், அவர் நல்ல செய்திதான் கொண்டுவந்தார். மாஸ்ரருக்கு ஒரு பாதை கண்டுபிடித்துவிட்டார். இதுதான் இங்கே பிரச்னை. அகதிகளைக் கூட்டி ஒரே இடத்தில் நெடுநாள் வைத்திருக்கக் கூடாது. அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு உண்டாகிவிடும். விட்டுப் பிரியவே தயங்குவார்கள். நிஷாந்துக்கு அந்தச் செய்தி இடிபோலவே இருந்தது. ஆனாலும் மாஸ்ரருக்காகச் சந்தோஷப்பட்டான். ''உங்களை விட்டுட்டு எப்படி இருப்பன்?'' என்று அவரிடமே நிஷாந் சொன்னான்.

மாஸ்ரர் சொன்னார், ''என்னை நம்பியா புறப்பட்டனீர்? இந்த நட்பு தற்காலிகமானது. நீர் உம்மை நம்ப வேண்டும். அவர்கள் உக்ரைனுக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்கள் திட்டமிட்டுத்தான் அனுப்ப முடியும். அகதிக்கு முதல் தேவை, பொறுமை. சூடான தண்ணீர் எப்படியும் ஆறத்தானே வேண்டும். பறவை எத்தனை உயரம் பறந்தாலும், இறுதியில் நிலத்தை வந்து சேரும். காத்திருக்கப் பழக வேண்டும்''.

''மாஸ்ரர், அதற்குச் சொல்லவில்லை. வீரகேசரி பேப்பரில் 5-ம் பக்கம் வருக, 8-ம் பக்கம் வருக, 11-ம் பக்கம் வருக என்று வாசகர்களை அலைக்கழிப்பதுபோல, இவர்கள் அந்த ஏஜென்ட், இந்த ஏஜென்ட் என்று மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் முந்திப்போய்ச் சேர்ந்துவிடுவீர்கள். நாங்கள் எப்போ புறப்படுவது, எப்போ போய்ச் சேர்வது?'' என்றான் நிஷாந்.

''தம்பி... முந்தி பிந்தி என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. ஒருகாலத்திலே நாலு *செட்டைப் பறவை ஒன்று இருந்தது. பெயர் மைக்ரோ ராப்டர். வலிமையானது. இது கதையல்ல,

விஞ்ஞான உண்மை. 130 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த பறவை அது. இதன் உணவு, இரண்டு செட்டைப் பறவைகள். இவை இரண்டு செட்டைப் பறவைகளை வேட்டையாடி உண்டுவிடும். உயிர் வாழ்வதற்கு, இரண்டு செட்டைப் பறவைகள் இன்னும் வேகமாகப் பறக்க வேண்டும் என்பதால், அதிவேகமாகப் பறக்கத் தொடங்கின. நாலு செட்டைப் பறவைகளால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. பட்டினிகிடந்து அழிந்துபோயின. முந்தியது பிந்தியது என்று இல்லை; திறமையும் மதியூகமும் தேவை. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்கத் தெரியவேண்டும். இதைத்தான் டார்வின் சொன் னார். வலியது வாழும். புதிய நாட்டைத் தேடும் அகதிக்கு, இது முக்கியமாகத் தெரியவேண்டும்.''

மாமிக்கு அடுத்தபடியாக கவலை இல்லாதவன் மோகன். பார்த்தவுடன் ஏமாளி என்பது தெரிந்துவிடும். மூன்று வரிசைப் பல் அவனுக்கு. லாவண்யாவிடம் தயக்கம் இல்லாமல் 'அக்கா... அக்கா...’ என்று பேசுவான். அவளும் பேசுவாள். ஒருநாள் அவள் நிஷாந்திடம் பேசும்போது, ''உன்னுடைய முகம் எனக்குப் பிடிச்சிருக்கு'' என்றாள். இவள் என்ன சொல்கிறாள். இவனுக்குப் புரியவில்லை. அன்றிரவு முழுக்க யோசித்தான். பாரீஸுக்குப் போய், நாகரிக உடையலங்காரம் கற்கப்போகும் பெண்ணுக்கு இவன் முகம் பிடிச்சிருக்கு. இவனுடைய முழங்கை பிடிச்சிருக்கா? பாதங்கள் பிடிச்சிருக்குமா? இவள் உடம்பின் ஒவ்வொரு பாகமாக விரும்பிக்கொண்டு வருவாளா?

ஏஜென்ட் திடீர் திடீரென்று முடிவெடுப்பார். இவர் யாரோடு பேசுகிறார், எப்படி முடிவெடுக்கிறார் என்பதெல்லாம் புரியாத புதிர். ஒருநாள் அதிகாலை வந்து மாஸ்ரரைப் பார்த்து, ''புறப்படு... புறப்படு...'' என்றார்.

''இப்பவேயா?'' என்றார் மாஸ்ரர்.

ஏஜென்ட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. ''நீர் என்ன சுற்றுலாப் பயணியா? ஓர் அகதியின் நேரம் அவனுடைய ஏஜென்ட் கையில். எந்தப் பாதைக்கு எது சரியான நேரம் என்று திட்டம்போட்டு அவன் ஒரு முடிவெடுப்பது உங்களுக்காகத்தான். கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.''

ஒரு முதுகுப் பையை எடுத்து அவசியமான சாமான்களை எல்லாம் அடைத்துக்கொண்டு மாஸ்ரர் புறப்பட்டார். மற்றவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அத்துடன் அவருக்காக மகிழ்ச்சியாகவும் சற்று துக்கமாகவும் இருந்தது. அவர்கள் ஏன் நிஷாந்தையோ, லாவண்யாவையோ, மோகனையோ தெரிவு செய்யவில்லை என்பது புதிராகவும் இருந்தது. ஏஜென்ட் அதற்கு ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறார். 'யாருக்கு எந்தப் பாதை பொருந்தும் என்பது அவருக்குத் தெரியும். அது தெரியாமலா, இந்த வேலையை அவர் பார்க்கிறார்.’

மாஸ்ரர், எல்லோரிடமும் விடைபெற்றார். ''நான் எங்கே போகிறேன் என்பது எனக்கே தெரியாது. இவர்கள் சொற்படி ஆடத்தானே வேண்டும். கடலில் பிடித்துத் தள்ளினாலும் ஒருவரும் ஒன்றும் கேட்க முடியாது. ஏதோ ஒரு நாடு கிடைத்து போய்ச் சேர்ந்ததும் கடிதம் போடுவேன். அல்லது அந்தக் கடிதம், மொழி தெரியாத ஒரு நாட்டின் சிறைக்கூடத்தில் இருந்துகூட வரலாம். ஆனால், கடிதம் வரும். அது வருமுன் நீ வேறு நாட்டுக்குப் போய்விடாதே'' என்று சொல்லி நிஷாந்தைக் கட்டிப்பிடித்து விடைபெற்றார்!

அப்படி அவசரமாகப் புறப்பட்டுப் போனவர்தான், ஒரு வாரமாக ஒரு செய்தியும் இல்லை. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆனால், டெலிபோனைப் பார்த்தபடியே நாட்களைக் கழித்தார்கள். டெலிபோன் அடிக்கும்போது எல்லோரும் அதை நோக்கி ஓடினார்கள். கடைசியில் டெலிபோன் மணி அடித்தபோது அதை எடுத்தவர் ஏஜென்ட்தான். சிரித்துக்கொண்டே சொன்னார், ''மாஸ்ரர், கனடா போய்ச் சேர்ந்துவிட்டார்.''

ஒரு மாதம் கழிந்தது. பெரிய கொம்புகள் வைத்த மூஸ் மானின் படம்போட்ட தபால்தலை ஒட்டியபடி ஒரு கடிதம், நிஷாந்துக்கு கனடாவின் ஆல்பேர்ட்டா மாகாணத்தில் இருந்து வந்தது. தான் கனடாவுக்குப் போய்ச் சேர்ந்த கதையை, மாஸ்ரர் எழுதியிருந்தார். அதை எல்லோருக்கும் படிக்கக் கொடுத்தான் நிஷாந்.

'ஏஜென்டை சாதாரணமாக நினைக்காதே. கடலிலே வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு வேகங்களில் பயணிக்கும் இரண்டு கப்பல்கள் எங்கே, எப்போது சந்திக்கும் என்று உன்னைக் கேட்டால், நீ கணித மூளையைப் பாவித்து விடை கண்டுபிடித்துத் தருவாய். என்னிடம் யாராவது 'ஜாக் லண்டன் எழுதிய முதல் கதை என்ன?’ என்றால், நான் தயங்காமல் 'ஆயிரம் சாவுகள்’ என்று கூறி அந்தக் கதையையும் சொல்வேன். ஆனால், இந்த அறிவு எல்லாம் ஏஜென்டுக்குப் பயன்படாது. அவருடைய மூளையில், உலகத்துக்குத் தேவையான அடிப்படை ஞானம் நிறைய இருக்கிறது. நான் வந்து சேர்ந்த கதையைச் சொல்கிறேன்... கேள். நம்ப மாட்டாய்.

'ஏஜென்ட் என்னை, நான் எப்பவுமே நினைத்திராத ஒரு நாட்டுக்கு அனுப்பினார். ஒருவராலும் ஊகிக்க முடியாது. அந்த நாடு... கியூபா. முதலில் துருக்கியைத் தொட்டு, பின்னர் அங்கிருந்து பிரேசிலுக்குப் பறந்து போய், பின்னர்தான் கியூபா வந்தடைந்தேன். எதற்காக கியூபா என்று கேட்டால், அந்த நாட்டுக்கு விசா தேவை இல்லை என்றார்கள். இரண்டு நாட்கள் அங்கே மலிவான ஒரு விடுதியில் தங்கினேன். ஒருகாலத்தில், எர்னெஸ்ட் ஹெமிங்வே இந்த நாட்டில் வசித்தார். இவர், மிக அதிக விபத்துக்களைச் சந்தித்த ஒரே எழுத்தாளர். இவர் வந்த பிளேன், விபத்தில் தீப்பிடித்ததில் இறந்துவிட்டார் என்று வந்த மரணச்செய்தியை இவரே படித்தவர். கியூபாவில் இருந்துதான் இவர் 'கடலும் கிழவனும்’ நாவலை எழுதி, நோபல் பரிசு பெற்றார். அவர் உட்கார்ந்து எழுதிய வீடு, அங்கே கிட்டத்தான் இருந்தது. ஆனால், என்னை வெளியே போக வேண்டாம் என்று கட்டளையிட்டுவிட்டார்கள். நான் அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்கவே இல்லை. அங்கே இருந்து, கௌதமாலாவுக்கு டிக்கெட் கிடைத்தது. டெலிபோனில் ஏஜென்டின் ஆள் அழைத்து, இந்த நாள்... இன்ன நேரம் விமானத்தில் புறப்படச் சொல்லி உத்தரவிட்டார். எனக்கு ஒன்றுமே விசயம் தெரியாது. கௌதமாலாவுக்கும் விசா தேவை இல்லை. ஆகவே, டிக்கெட்டைக் கொடுத்து விமானக்கூடத்துக்குள் நுழைந்து, கையிலே போர்டிங் அட்டையை வைத்துக்கொண்டு என்னுடைய விமானத்துக்குக் காத்திருந்தேன்.

அப்போது அதிசயமாக தமிழ்ப் பையன் ஒருவன், 17-18 வயது இருக்கும். என்னிடம் நேராக வந்து, 'அண்ணை, கேள்வி ஒன்றும் கேட்க வேண்டாம். உங்களுடைய போர்டிங் அட்டையைத் தாருங்கள். என்னுடையதை நீங்கள் எடுத்துக்கொண்டு கனடா விமானத்தில் ஏறுங்கள். அங்கே போய் அகதி கோரிக்கை வைத்தால், அவர்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.’ நான் கேட்டேன், 'தம்பி... நீங்கள் என்ன செய்வீர்கள்?’ 'எனக்கு என்ன பிரச்னை? என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருக்கிறது. நான் கௌதமாலா போய், அங்கிருந்து கனடாவுக்கு வந்துவிடுவேன்’ என்றுவிட்டு கௌதமாலா விமானத்தை நோக்கிப் போனான். ஒரு பிரச்னையும் இல்லாமல் நான் கனடா வந்து சேர்ந்தேன். சிரிப்பு என்னவென்றால், கனடா அதிகாரி நல்வரவு என்று கூறி என்னை வரவேற்றதுதான். ஆகவே, யோசிக்காமல் ஏஜென்ட் சொல்வதைக் கேளும். அவர் எப்படியும் உங்களுக்கு ஒரு நாடு பிடித்துத் தருவார்.’

மாம், மாஸ்ரர் கனடா போய்ச் சேர்ந்துவிட்டார். ஆனால், அவர் பாரீஸ் போக வேண்டும் என்றல்லவா சொன்னார். நிஷாந்தால் நம்ப முடியவில்லை!

* அண்ணை - அண்ணன்

 * சொண்டு - உதடு

* செட்டை - இறக்கை

- கடவுள் கதைப்பார்...





     RSS of this page