| | | |
Uploading ....
சீனாவில் கிடைக்குது தமிழ் சாப்பாடு! ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து ‘ஒரு கப் காபி கொடு’ என்பார். அவ்வளவுதான்.. சண்டை முடிந்துவிடும். அவருக்கு மறதி ஜாஸ்தி. நோட் பேடில் எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார். அது அவர் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணாமல் அவரை சரியாகச் செய்ய வைத்தது. சின்ன வயசிலேயே சமையலில் நான் எக்ஸ்பர்ட். அந்த காலத்தில் ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் கிடையாது. தினமும் காய்கறி ஃப்ரெஷ்ஷா வாங்கி சமைப்போம். சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி மிளகாய் பொடி எல்லாம் உரலில் இடித்து உபயோகிப்போம். ‘அரோமோ’ மாறாம நல்ல வாசனையா இருக்கும். அவர் தன் பாட்டிகிட்டதான் ரொம்ப வருஷம் வளர்ந்தார். பாட்டி சுவையா சமைச்சு போட்டதால அந்த டேஸ்டையே எதிர்பார்த்தார். கீரை, சுட்ட அப்பளம். வெந்தய குழம்பு, சீரக ரசம், மோர் மிளகாய் இப்படிப்பட்ட அயிட்டங்கள்தான் அவருக்கு பிடிக்கும்.. அதனால என் கிச்சன் வேலை ரொம்ப ஈஸியா போச்சு. அவருக்கு சாப்பாட்டை விட புத்தகங்களும், எழுதுவதும்தான் உலகம்.. நண்பர்களுடன் அரட்டை, சீட்டு கச்சேரி அதெல்லாம் கிடையாது. வீட்டு நிர்வாகத்தில் தலையிடவே மாட்டார். புடவை வேணுமா, நகை வேணுமா, சினிமா, டிராமா போகணுமா ஹோட்டலுக்கு போகலாமா என்றெல்லாம் கேட்கவே மாட்டார்.. என் போக்கில் விட்டுவிடுவார். என் மீது இருக்கிற அன்பை அதிகம் வெளிக்காட்ட மாட்டார். அவர் புனைபெயரே என் பெயர்தானே! எனக்கு ஒரு சமயம் கடுமையான ஜுரம். அவர் தன் ஏராளமான வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வேளாவேளைக்கு எனக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து அக்கறையாக பார்த்துக் கொண்டார். அதேசமயம் அவருடைய விஷயங்களில் என் குறுக்கீடு கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இப்பவெல்லாம் நாம் ரெண்டு கிலோ தூக்கிக்கொண்டு நடக்க சிரமப்படுகிறோம். நாற்பது வருஷத்துக்கு முன்பெல்லாம் அப்படி கிடையாது. எங்கள் வீட்டுக்கு தினமும் ஒரு காய்கறிக்காரி வருவா. ஒல்லியான உடல்வாகு.. ஆனா ஐம்பது கிலோ, அறுபது கிலோ காய்களை தலைச்சுமையா தூக்கிட்டு அவள் நடந்து வருவது ஆச்சர்யமா இருக்கும்.. எப்படி தங்கம்மா இவ்வளவு கனம் சுமக்க முடியுதுன்னு கேட்டேன்.. ‘குடும்ப பாரத்தையே சுமக்கும்போது இதெல்லாம் பெரிசே கிடையாது’ என்றாள் தத்துவமாக! அது இன்னிக்கும் நெஞ்சிலே இருப்பதால கஷ்டமெல்லாம் பெரிய விஷயமா தோன்றதில்லை. சொல்லப்போனா பெங்களூருவில் நான் இருக்கறச்சே இவர் ஆபீஸ் போனதும், பசங்களை ஸ்கூல் அனுப்பிட்டு எம்.ஏ., சைக்காலஜி ஈவினிங் காலேஜுக்கு அரக்கப் பரக்க ரெண்டு பஸ் பிடித்து ஓடுவேன். அஞ்சு மணிக்கு திரும்பி வந்து கிச்சன்… எனக்கு அடுத்த செட் ஜெயலலிதா எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் எழுதினாங்க. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் வேலூரில்தான். வேலூர் கிளைமேட் மகா கொடுமை. இருந்தாலும் பழகிவிட்டது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, இப்ப சென்னைன்னு அவர் பணியில் இருந்த நிறைய ஊர்களில் இருந்திருக்கேன்.. எனக்கு பிடிச்ச ஊர் பெங்களூருதான். ஊரே ஏசி போட்டாற்போல் நல்லா சில்லுன்னு இருக்கும். அவர் கூட ஒரு நாவல்ல ‘பெங்-குளிரு’ என்று எழுதியிருக்கார்னு நினைக்கிறேன். கார்டன் சிட்டி பெங்களூரு மாதிரி சென்னையும் மாறணும்னு ஆசை.. ஆனா இங்கே மரங்களை வெட்டிகிட்டே இருக்காங்க.. அடிக்கடி பேப்பர்லயும் போட்டோவோடு நியூஸ் வரும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. நான் பல வெளிநாடுகளுக்கு என் கணவரோடு போயிருக்கேன். அங்கேயெல்லாம் இவருடைய நண்பர்கள் தமிழுக்காக ரொம்ப மெனக்கெடுவாங்க.. கலிபோர்னியால ஒருத்தர் அவருடைய ஃப்ரெண்ட்… அமெரிக்காவிலேயே பிறந்து படித்து சிவில் இன்ஜினீயரிங் டாக்டரேட் வாங்கியவர். தன் கிறித்துவ பெயரை ‘தமிழ்மணி’ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.. தன் பணி முடிந்ததும் இந்திய குழந்தைகளை தேடிப்போய் தமிழ் பேச, எழுத கற்றுக் கொடுக்கிறார்.. என் பேரக் குழந்தைகளுக்கும் அவர்தான் தமிழ் டீச்சர். இலவச சேவை.. ஆனால், மதப் பிரச்சாரம் எதுவும் செய்வதில்லை. பொதுவா வெளிநாட்டுப் பெண்கள் ரொம்ப கம்பீரம். அவரவர் வேலையைப் பார்த்து போயிட்டேயிருக்காங்க.. ஊர்வம்பு பேசிக் கொள்வதில்லை.. இந்தியாவிலும் பெண்கள் அப்படியிருந்தா நல்லாயிருக்கும். முன்பெல்லாம் ஃபாரின்ல இந்திய உணவுகளுக்கு வழியில்லாம இருந்தது.. இப்ப எல்லா நாடுகளிலும் இந்தியன் ரெஸ்டாரண்ட்கள் திறந்துட்டாங்க.. சமீபத்தில் சீனா டூர் போயிருந்தேன்.. ‘சீனாவா? பாம்புக்கறிதான் கிடைக்கும்…’ என்று நிறையபேர் பயமுறுத்தினார்கள்.. ஆனால், அங்கே தமிழ்நாட்டு ரெஸ்டாரண்ட்கள் இருந்தன. சாம்பார், ரசம், கூட்டு, அப்பளம், பொரியல்னு சூப்பரா சாப்பாடு கிடைக்கிறது.. உலக அதிசயமான சீனப் பெருஞ்சுவரை பார்த்தேன்.. எப்படி இவ்வளவு பிரமாண்டமா கட்டியிருக்காங்கன்னு மலைப்பா இருந்தது.. சீனாவில் மக்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பு.. கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறதால குழந்தையை அக்கம்பக்கம் இருக்கிற வயசானவங்களிடம் விட்டுட்டு போறாங்க.. வயசானவங்களுக்கும் உட்கார்ந்த இடத்தில் வருமானம். சீனாவில் டி.வி. சேனல்கள், பத்திரிகைகள் அதிகமா கிடையாதாம். மீடியா சுதந்திரம் ஒரு லிமிட்தான். இங்க மீடியா சுதந்திரம்னு ஒரு சிலர் தனிப்பட்டவர்களை கொச்சைப்படுத்துவது அதிகமாகிட்டு வர்றது.. இது கவலை அளிக்கக்கூடிய ஒன்று. ஆனா மீடியா சுதந்திரத்தால நல்ல விஷயங்களும் நடக்கிறது. அது…
திருமதி சுஜாதா ‘‘போன வாரம் மீடியா பத்தி பேசிட்டு இருந்தேன் இல்லயா? எப்பவுமே வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்துதான் வரும். அதுல நாம நல்ல விஷயத்த மட்டும் எடுத்துக்கணும். அடுத்தவங்க வாழ்க்கை எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டணும்ன்னு நினைச்சா ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் டிப்ரஷன்லதான் முடியும். எனக்குக் கூட அந்த அனுபவம் நடந்திருக்கு. எனக்கு அழகா கோர்வையா பேச வராது. மனசுல பட்டத அப்டியே சொல்லிடுவேன். ஒரு பத்திரிகை பேட்டியில நான் சொன்ன ஒரு கருத்தை, அவங்க வேற மாதிரி போட்டுட்டாங்க! அவங்களுக்கு 100 காப்பி அதிகமா விக்கணும்ன்னு அடுத்தவங்கள கஷ்டபடுத்தறது ரொம்ப தப்பு! என் கணவர்கிட்ட இருக்கற நல்ல விஷயம் என்னன்னா, அவருக்கு படிக்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம். ஒரு சின்ன பேப்பரக் கூட படிச்சிட்டுதான் கீழ போடுவார். தமிழ் பற்றும் ரொம்ப ஜாஸ்தி. நேரத்தை வீணடிக்கவே மாட்டார். இருபத்திநாலு மணிநேரத்தையும் பயனுள்ளதா உபயோகிக்கணும்னு நினைப்பார். ஆனா அலுவலக நேரத்துல வேற எதுவும் எழுத மாட்டார். அலுவலகம் முடிஞ்சு வீட்டுக்கு வருவார். கொஞ்ச நேரம் ரெஸ்ட். வெளில வாக்கிங் போய்ட்டு நண்பர்கள பாத்துட்டு வந்து ஏதாச்சும் எழுதுவார். நிறைய படிப்பார். ரொம்ப வேகமா எழுதுவார்! டி.வி. பார்க்கறது ரொம்ப அபூர்வம். ஏதாச்சும் நல்ல ப்ரோகிராம்னா கொஞ்ச நேரம் பார்ப்பார். ஒரு பத்து பத்தரைக்கெல்லாம் தூங்கப் போய்டுவார். ரிட்டயர்டு ஆனதுக்கப்புறம் நாங்க மெட்ராஸ் வந்துட்டோம். ஒரு பத்திரிகையில அவர் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். மத்தியானம் வந்ததும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ராத்திரி கொஞ்ச நேரம் எழுதுவார். ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு எழுதற பழக்கம்லாம் அவருக்கு கிடையாது. அதே மாதிரி சாப்பிடற விஷயத்துலயும் இது வேணும்னு கேட்க மாட்டார். எது சமைச்சாலும் சாப்பிடுவார். நீல கலர் ட்ரெஸ்னா பிடிக்கும். பெரும்பாலும் நீல கலர்தான் போடுவார். எழுத்தாளர் சுஜாதா டி.வி.தான் ரொம்ப பார்க்கமாட்டாரே தவிர, அவருக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும். அப்போ அவங்க வீடு தி.நகரில் தணிகாசலம் தெருகிட்ட இருந்துச்சு. திருமணம் முடிஞ்சு அங்க பக்கத்துல இருக்கற ராஜகுமாரி தியேட்டர்ல ஒரு இங்கிலீஷ் படத்துக்கு கூட்டிட்டுப் போனார்! நாங்க டெல்லில இருக்கும்போது சனிக்கிழமை செகண்ட்&ஷோவெல்லாம் போவோம். பசங்க வந்ததுக்கப்புறம் மூணு வருஷம் நான் போகலை. அப்புறம் அவங்களையும் கூட்டிட்டு போக ஆரம்பிச்சிட்டோம். எங்க வீட்ல ஒரு பழக்கம் உண்டு. அதாவது நாங்க பிறந்தநாள், திருமணநாள்னு எதையும் கொண்டாட மாட்டோம். ஆனா அவர், அவரோட பிறந்தநாள் அன்னைக்கு காலையில திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு போய்டுவார். அதே மாதிரி வருஷத்துக்கு ஒரு தடவை ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் போவார். எப்படி ஒரு எழுத்தாளர புரிஞ்சிட்டு அவரோட இருக்கீங்கன்னு கேப்பாங்க. அதுக்கு என்னோட பதில் ‘அதுக்குப்பேர் புரிஞ்சுக்கிறது இல்லீங்க.. அட்ஜஸ்ட்மெண்ட்டுன்னு சொல்லுவேன். ஒரு குடும்பம்னா ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணனும் இல்லயா? அவரோட தனிமைய நான் தொந்தரவு பண்ணினா, அவரால எழுத முடியுமா? நான் அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். அதே மாதிரி அவரும் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்குவார். அவரோட பர்ஸனல் விஷயத்தை நான் நோண்டவே மாட்டேன். அவரோட கம்ப்யூட்டர தொடறது, அவர் எழுதி வச்சிருக்கிறத எடுத்து படிக்கிறதுன்னு எதையும் நான் தொடவே மாட்டேன். அவரோட பாஸ்புக்குல எவ்ளோ பணம் இருக்குன்னு கேட்க மாட்டேன். எனக்கு அவர் பணம் தருவார் வீட்டு செலவுக்கு. என்ன செலவுன்னு கூட அவர் கேட்க மாட்டார். ஆனா, நானே சொல்லிடுவேன். அதனால் அவர் எங்கிட்ட கோவப்படறதுலாம் ரொம்ப கம்மி. நீங்க சுஜாதா சாரோட மனைவியா? அது நீங்கதானான்னு எல்லோரும் ஆச்சரியமா கேட்பாங்க. பக்கத்துல இருக்கும்போது எவ்ளோ பெரிய விஷயமானாலும் அதோட அருமை தெரியாது இல்லையா? அந்த மாதிரிதான் எனக்கு என் கணவரும். அவர் கடைசிவரைக்கும் என்னோட கணவராத்தான் தெரிஞ்சார். நான் எல்லா எழுத்தாளர்களோட கதைகளும் படிப்பேன். இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், இந்துமதி, சிவசங்கரின்னு நிறைய படிப்பேன். அப்படித்தான் என் கணவர் எழுதுனதையும் படிப்பேன். நாங்க பெங்களூர்ல இருக்கும்போதெல்லாம் நிறைய ரசிகர்கள் வருவாங்க. ராத்திரி பத்து மணிக்குமேல வந்து அவர பார்த்துட்டு இனிமே பஸ் கிடையாதுன்னு சொல்லுவாங்க. நாங்க ராத்திரி அவங்களை தங்க வச்சி காலையில காப்பி போட்டு குடுத்து அனுப்புவோம். அந்த மாதிரி நிறைய நடக்கும். பெங்களூர்ன்னதும் ஞாபகம் வருது. நான் அவர் எழுதின ஸ்கிரிப்ட்டுக்கு நடிச்சிருக்கேன் தெரியுமா? அதப்பத்தி அடுத்த வாரம் சொல்றேன்….
சட்டம் தன் கடமையைச் செய்யும்! எனக்கு அப்போ 40 வயசு இருக்கும். பெங்களூர்ல இருக்கற பி.இ.எல். தமிழ்ச் சங்கத்துல நாடகங்கள்ளாம் நிறைய நடக்கும். அதுக்கு என் கணவர் வசனம் எழுதித் தருவார். அப்போ, அங்க இருக்கறவங்க எல்லாம் என்னை மாமி வேஷத்துல நடிங்கன்னு சொன்னாங்க. எனக்கு அதுலல்லாம் ஆர்வம் இல்லை. என் மாமனார், மாமியார் இருக்கறவரைக்கும் வெளியே போனதே இல்லை. அதனால வெளியே போறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதேன்னு நானும் நடிக்கப் போயிட்டேன். பெங்களூர்ல நாங்க நடிச்சு ஒத்திகை பார்த்த நாடகங்களைத்தான் சென்னையில பூர்ணம் விஸ்வநாதன் குழு போடுவாங்க. ஒரு மூணு, நாலு நாடகம் நடிச்சிருப்பேன். ‘அடிமைகள்’, ‘ஒரு ரயில் பிரயாணம்’னு சிலது மட்டும் தலைப்பு ஞாபகம் இருக்கு. அப்புறம்தான் நாங்க சென்னை வந்துட்டோமே. அதுக்கப்புறம் நாங்க ரொம்ப வெளில போனது இல்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாததுனால நானும் அவர் கூடவேதான் இருப்பேன். அவர் இறந்தபிறகு என் பையன், என் தங்கையெல்லாம் அமெரிக்கால இருக்காங்க. அப்பப்போ போயிட்டு வருவேன்.
இப்பல்லாம் பல வீடுகள்ள கணவன் மனைவிக்குள்ள நிறைய ஈகோ பிரச்னை வருதே? கவனிச்சீங்களா.. இங்கதான் ரெண்டுபேரும் வேலைக்குப்போனா வீட்டுக்கு ஒரு வேலைக்காரி வைச்சுக்குறாங்க. அதுவும் நாம வேலைக்காரங்கள நம்பி வீட்ட ஒப்படைக்கவும் பயமா இருக்கு. என் வீட்டயே எடுத்துக்கோங்களேன். வீட்டை கூட்டி குப்பைய அள்ள மாட்டாங்க. அதை கொஞ்சம் அள்ளுங்கன்னு சொன்னாதான் செய்வாங்க. வேலைக்காரி இல்லாத வீட்ல மனைவிதான் எல்லாம் செய்யவேண்டி இருக்கு. இங்க கணவன்மார்களோட பங்கு ரொம்பக் கம்மின்னுதான் சொல்லுவேன். ஆனா அமெரிக்கால அப்படி இல்ல. என் தங்கையும், அவரது கணவரும் மருத்துவர்கள். அவங்க வீட்ல ஒரு பெண் வேலை செய்யறாங்க. இவங்க வீட்டை பூட்டிட்டு வேலைக்குப் போய்ட்டா, அந்தப் பொண்ணு ஒரு சாவி வச்சுருக்கா. வந்து ஃபிரிட்ஜுல என்ன இருக்கோ, அத எடுத்து சாப்பிடுவா.. முட்டை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிடுவா. நாம ஏன்னு கேட்கக்கூடாது. ஆனா இன்னமும் பல வீடுகள்ல வேலை செய்யறவங்களை ஒதுக்கியில்ல வச்சுருக்காங்க. அவங்க என்ன வேலை செய்யணும்னு எழுதி வச்சிட்டுப் போயிட்டா, அதுல ஒண்ணுவிடாம சுத்தமா செஞ்சிட்டு போயிடறாங்க. இதுல என்ன ஆச்சர்யம்னா, ஒரு குண்டூசியக்கூட தேவையில்லாம அவங்க தொடமாட்டாங்க. மோதிரம், செயின் எல்லாம் அந்தந்த இடத்துல அப்படியே இருக்கும். அதேமாதிரி ஆறு மணி நேரம் வேலைன்னா அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாங்க. அவங்க ஏதாச்சும் பொருளை எடுத்தா அவ்ளோதான். லைசன்ஸ கட் பண்ணிடுவாங்களாம். சாகறவரைக்கும் அவங்க அங்க வேலை செய்ய முடியாதாம்! அவ்ளோ கடுமையா அங்க சட்டங்கள் இருக்கறதனாலதான் இதெல்லாம் சாத்தியம்.
ஆனா, நம்ம ஊர் மாதிரி அங்க எல்லோராலயும் வேலைக்கு ஆள் வெச்சுக்க முடியாது. அவ்ளோ காஸ்ட்லி. வேறவழி? அங்க கணவன் மனைவிதான் வீட்டு வேலை எல்லாத்தையும் பிரிச்சு செய்யறாங்க. ஒரு வாரம் கணவன் வீட்டைக் க்ளீன் பண்ணினா அடுத்த வாரம் மனைவி. அந்த மாதிரி ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் இங்க வேலைக்குப் போற தம்பதியினர் வீட்ல வந்துட்டா, சண்டை குறைஞ்சிடும். விவாகரத்துன்னு போய் கோர்ட்லயும் நிக்க வேணாம். இதுல ஒரு சூட்சுமமும் இருக்கு. வீட்டு வேலையை பிரிச்சு செய்யச் செய்ய அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துடும். விட்டுக் கொடுத்தல் இருக்கும். அன்யோன்யமும் அதிகமாகும். வீட்டு வேலை மாதிரியே நம்ம வாழ்க்கையில வர்ற எல்லா விஷயங்களையும் நாம பகிர்ந்துதான் செய்யணும்னு அவங்க மனசுல பட்டுச்சுன்னா வாழ்க்கை சந்தோஷம்தானே! அதே மாதிரி சின்ன வயசுலேர்ந்து குப்பையைக்கூட எந்தக் குப்பத்தொட்டியில போடணும்னு சொல்லித் தர்றாங்க. நம்ம ஊர்லயும் ரெண்டு வகை குப்பத் தொட்டி இருக்கு. ஆனா நாம அதை பிரிச்சுப் போடறதில்லை. இங்க இருக்கற இதே மனுஷங்கதான அங்கபோய் சரியா செய்யறாங்க. ஏன்? அங்க ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். குப்பையை அந்த தொட்டியில போடலைன்னா குப்பை எடுக்கறவன் ஒரு ஸ்லிப் எழுதி, குப்பையை எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டு போயிடுவான். வேறவழி? அப்போ குப்பையை கரெக்டா போட்டுதானே ஆகணும்.
அதேமாதிரி, அங்க வீட்டுக்கு வெளியே கார் எல்லாம் நிறுத்தவே கூடாது. போலீஸ் வந்துடும். இதோ இங்க நம்ம மயிலாப்பூர் ரவுண்டானால எவ்ளோ ட்ராபிக் ஜாம் ஆகுது பாருங்க. எல்லோரும் வீட்டுக்கு மூணு கார் வச்சிட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கார்ல போனா ட்ராபிக் ஜாம் ஆகாம என்ன ஆகும்? அந்த நாட்ல ஒரு வீட்ல மூணு கார் வைக்கதான் பார்க்கிங் இருக்கு. சந்துல ஒரு ரெண்டு கார் வைக்கலாம். நாம ஊர்ல நவராத்திரி, சுமங்கலி விரதம், காரடையான் நோன்புன்னு வந்தா வீட்டுக்கு நாலுபேர கூப்பிடுவோம் இல்லையா? அதேமாதிரி அங்கேயும் அடிக்கடி பார்ட்டின்னு நண்பர்களையெல்லாம் கூப்பிடுவாங்க. இத்தனைக்கும் அங்க நம்ம ஊரைவிட பெட்ரோல் ரொம்பக் கம்மி விலைதான். ஆனா அங்க வீட்டு வாசல்ல காரை நிறுத்த முடியாது. அப்போ அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? அடுத்த வாரம் சொல்றேன்… -சந்திப்பு, படம் -ராஜவிபீஷிகா-
போன வாரம் அமெரிக்கால, வீட்டு வேலை செய்யறவங்கள பத்தி பேசிட்டு இருந்தேன் இல்லயா? அதப்பத்தி ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லணும்னு நினைச்சேன். அங்க வேலைக்காரி வச்சுகிட்டா பணம் நிறைய ஆகுதுன்னு ஒரு தமிழ் குடும்பம் என்ன செஞ்சாங்க தெரியுமா…? எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி இருக்கா. அவாளுக்கு வயசு எழுபத்தைஞ்சுக்கு மேல இருக்கும். இவங்களோட தூரத்து சொந்தம் போல.. அவா என்ன பண்ணிருக்கா… இந்த மாமி வீட்ல போய் கொஞ்சம் பணம் குடுத்துட்டு,‘அமெரிக்கால எங்க வீட்ட பாத்துக்க ஆள் இல்ல. நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க. அதனால மாமிய எங்ககூட அனுப்பினீங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும். வேலை எதுவும் இருக்காது. மூணு வேளை சமையல் செஞ்சா போதும். மாசா மாசம் பணத்த உங்க அக்கவுண்ட்ல போட்டுடறோம்’ன்னு கேட்டிருக்காங்க. அவங்களும் பணம் வருதேன்னு பாவம் வயசான காலத்துல அந்தப் பாட்டிய அனுப்பி வைச்சிருக்காங்க. அங்க போய் ஒரு மூணு நாலு மாசம் வரைக்கும் அந்த மாமி வீட்டு வேலை மட்டும் பாத்துட்டு இருந்துருக்கா. அவங்க ஒரு ஹோட்டலும் வெச்சிருக்காங்க போல. அந்த மாமிகிட்ட வீட்ல சும்மாதான மாமி இருக்கீங்க.. கொஞ்சம் எங்க சமையல்காரங்களுக்கு நம்ம ஊர் சமையல கொஞ்சம் சொல்லித்தாங்களேன்னு சொல்லி ஹோட்டலுக்கு அனுப்பிட்டாங்க. மாமியும் அவா சமையல எல்லாரும் புகழறதப் பாத்து மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சிருக்கா! பாவம் அந்த மாமி. இந்த வயசுல எவ்ளோ வேலையைதான் செய்ய முடியும்? ஒரு கட்டத்துல அவங்காளல முடியல. வீட்டு வேலைய மட்டும் பாத்துட்டு இருக்கேன்னு சொல்லியிருக்கா. அதெல்லாம் முடியாது. எல்லா வேலையும் செய்யணும்ன்னு சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்காங்க. இந்த மாமிக்கு எப்படியோ போலீஸ் போன் நம்பர் கிடைச்சு.. வீட்டு போன்லேர்ந்து போன் பண்ணி போலீஸ்கிட்ட சொல்ல.. வீட்டுக்கு போலீஸ் வந்துடுச்சு. அவங்களும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்தக் குடும்பத்தை இல்ல. அரெஸ்ட் பண்ணினது அந்த மாமியை!
மாமியோட விசா முடிஞ்சு ரொம்ப நாளாச்சாம். அதனால மாமிய அரெஸ்ட் பண்ணி பத்து நாள் உள்ள வச்சுட்டா. அப்புறம் அந்தக் குடும்பத்தை விசாரணை செய்ய.. அந்தக் குடும்பம் மாமிகிட்ட போய் கேஸை வாபஸ் வாங்குங்க. அப்பதான் நாங்க உங்கள இந்தியாவுக்கு அனுப்புவோம்ன்னு சொன்னதும் உயிர் பிழைச்சா போதும்னு அந்த மாமி கேஸை வாபஸ் வாங்க.. அவங்களும் இனிமே மாமியை இங்க வச்சிருந்தா பிரச்னைன்னு விசா எடுத்து இந்தியா அனுப்பிட்டாங்க. ஆனா பாவம் அந்த மாமி. வந்து ஒரு வருஷம் கூட உயிரோட இல்லை. பணத்துக்காக எப்படியெல்லாம் கொடுமை பண்றாங்க பாருங்க. வயசானாலே வீட்டுக்கு தேவையில்லாத பொருளாக்கிடறாங்க. அமெரிக்கால வீட்டுக்கு முன்ன கார் நிறுத்தறதப் பத்தியும் பேசிட்டு இருந்தோம் இல்லயா? நம்மள மாதிரி அங்க தெருவ அடைச்சிகிட்டு அடுத்தவங்களை தொந்தரவு கொடுக்க முடியாது. என் தங்கை வீட்ல நாங்க ஒரு ஃபங்ஷன் வெச்சு நிறைய நண்பர்களை கூப்பிட்டிருந்தோம். அவ வீட்ல மூணு கார்தான் வைக்க முடியும். அதனால முதல்லயே யார் யாரெல்லாம் வராங்கன்னு அவங்களுக்குள்ள பேசி வச்சுக்கறாங்க. அப்புறமா ஒரு கார்ல எவ்வளவு பேர் வர முடியுமோ, அத்தனை பேரையும் கார் வச்சிருக்கிறவர் வர்ற வழியில இருக்கறவங்களை கூட்டிட்டு வந்துபோகும்போது அந்தந்த வழியில விட்டுட்டு போயிடறார். அதேமாதிரி நம்ம ஊர்ல ஃபாலோ பண்ணினா எவ்ளோ நல்லா இருக்கும்? ஆனா இங்கே அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஒருத்தர் கார்ல இன்னொருத்தர்கூட வரமாட்டேன்னு வம்பு பண்ணுவா. எங்ககிட்ட கார் இல்லையா? நம்ம எதுக்கு கண்டவங்க கார்ல போகணும்னு சண்டையே நடக்கும். ஒரு வீட்லயே அண்ணனோட காரை தம்பி எடுக்கக்கூடாது. அப்பாவோட காரை பையன் தொடவே மாட்டான். இப்படி இருந்தா அரசாங்கத்தை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம். நாமளே ஒழுங்கா இல்லையே? அங்கே குப்பைத் தொட்டியில குப்பையை மாத்தி போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. ஒருத்தர் மாத்தி போட்டுட்டதனால குப்பையை எடுக்க மாட்டான்னு சொன்னனே. ஆனா அதே சட்டம் இங்க இருந்தா… ஒருத்தர் வீட்லயும் சரியா குப்பையை கொட்றது இல்லை. நம்ம அரசாங்கம் அவங்களை மாதிரி தண்டனை குடுத்தா அவ்ளோதான்! ஊரே குப்பையாதான் கிடக்கும். என் கணவர்கூட ஒரு படத்துல வசனம் எழுதியிருந்தார், ‘மத்த நாடுகள்ல கடமைய மீறதுக்கு லஞ்சம் வாங்குவாங்க. நம்ம ஊர்லதான் கடமைய செய்யறதுக்கே லஞ்சம் கேக்கறீங்க’னு. அரசாங்கமும் தனி மனுஷங்களால ஆனதுதானே! ஒவ்வொரு தனி மனுஷனும் ஒழுங்கா இருந்தாலே நாடும் நல்லா இருக்கும், நாட்டு மக்களும் நல்லா இருப்பாங்க. -அடுத்த வாரம் சொல்றேன்
டி.வி.சீரியலும் சில குடும்பங்களும்! புது வருஷம் வந்தாச்சு. கொஞ்ச வருஷமாத்தான் இந்த நியூ இயர் கொண்டாட்டம் எல்லாம். பெங்களூர்ல இருக்கறப்ப நியூ இயர் பார்ட்டின்னு அவரை கூப்பிடுவாங்க. சாயங்காலம் போயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவோம். நான்தான் பன்னிரெண்டு மணி வரைக்கும் டி.வி. பார்த்துட்டு இருப்பேன். என் கணவர் சீக்கிரமே தூங்கப் போயிடுவார். சென்னை வந்து கொஞ்ச வருஷம் கமல் சார் மாதிரி சில வி.ஐ.பி.க்கள் கூப்பிடுவாங்க. அதுவும் அவருக்கு உடம்பு சரியில்லாமப் போனதுக்கு அப்புறமா எங்கயும் போறது இல்ல. அதெல்லாம் அவர் விரும்பவும் மாட்டார். நான் தமிழ் புத்தாண்டு அன்னைக்குதான் பூஜையெல்லாம் பண்ணுவேன். ஆனா என் கணவருக்கு அதுகூட எதுவும் கிடையாது. ஏன் அவருக்கு வீட்ல பூஜை அறைகூட எங்க இருக்குன்னு தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன். ஆனா கோவிலுக்கு அப்பப்போ போயிட்டு வருவார். ஏன்னா பல நூறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் நடமாடிய தெய்வீகமான இடம் அதுன்னு சொல்லுவார். ஆனா இதுவரைக்கும் அவரோட முன்னோர்களுக்கோ அம்மா அப்பாவுக்கோ அவர் திவசம் எல்லாம் செஞ்சதே கிடையாது. உயிரோட இருக்கறவங்கள அவமதிச்சு, கடைசி காலத்துல நல்லா பாத்துக்காம இறந்ததுக்கப்புறமா பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்னு கேட்பார். அவர் சொன்னமாதிரி கடைசி வரைக்கும் வாழ்ந்தும் காண்பிச்சார். அவருக்கு பெரியவங்களை மதிக்கலைன்னா சுத்தமா பிடிக்காது. அவங்க அப்பா, அம்மா என்ன சொல்றாங்களோ அதான் கேட்பார். அப்போ எனக்கு டெலிவரி டைம். நான் ஊருக்கு வந்துட்டேன். நான் வர்றவரைக்கும் அவங்க அம்மாவும், அப்பாவும் ஸ்ரீரங்கத்துலேர்ந்து அவரைப் பார்த்துக்க டெல்லி போயிருந்தாங்க. அப்போ அவர் அவங்களை காசி, பத்ரிநாத், ஹரித்வார்ன்னு எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும் கூட்டிட்டு போனார். அவங்களுக்கும் அவருன்னா ரொம்பப் பிரியம். கடைசிவரைக்கும் என் மாமனார் அவரோட பென்ஷன்லதான் வாழ்ந்தார். ரெண்டுபேருமே அது வேணும், இது வேணும்னு கேட்கவே மாட்டாங்க. என் கணவரா ஏதாச்சும் வாங்கிக் குடுத்தாதான் உண்டு. பெத்து, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைச்சு, தன்னோட வாழ்கையையே பசங்களுக்காக அர்ப்பணிச்சவங்களை கடைசி காலத்துல கஷ்டப்படுத்தறது எவ்ளோ கொடுமையான விஷயம். அதுவும் இப்பல்லாம் ஓல்ட் ஏஜ் ஹோம் ஏகப்பட்டது வந்துடுச்சு. கைவிடப்பட்ட பெரியவங்களை ஹோம்ல பார்த்துக்கறது நல்ல விஷயம்தான். ஆனா, பெத்தவங்களை பிள்ளைங்களே கொண்டுபோய் விடறது மகா பாவம். தங்களோட பேரன் பேத்திகளுக்கு அவங்களவிட ஒரு நல்ல வழிகாட்டி இருக்க முடியுமா? இல்லை.. அந்த வயசானவங்களுக்கும் இந்தக் குழந்தைகளைவிட வேற சந்தோஷம் இருக்க முடியுமா? முன்னாடி மாதிரியெல்லாம் மாமியாருங்க எல்லாரும் போய் மருமகள்கிட்ட சண்டை போடறது இல்லையே..? இப்பல்லாம் எல்லோரும் படிச்சிருக்காங்க. தவிர, மருமகள்கிட்ட சண்டை போட்டு அவங்க என்னத்தை சாதிக்கப் போறாங்க சொல்லுங்க? பணத்துக்காக அவங்களோட சொத்தைப் பிரிச்சு, கடைசி காலத்துல அவங்களை கஷ்டப்படுத்தி அப்புறம் அவங்க இறந்தபிறகு தர்ப்பணமும் திவசமும் எதுக்கு? ஒரு சில பெரியவங்க கொஞ்சம் அடமண்ட்டா நடந்துப்பாங்கதான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்படி யோசிச்சுப் பாருங்களேன். அந்த வீட்டு மாட்டுப்பொண்ணோட அம்மாவோ அப்பாவோ இந்தமாதிரி அடமண்ட்டா இருந்தா அந்தப் பொண்ணு பொறுத்துதானே போவா. அதேமாதிரி தன்னோட கணவரை பெத்தவங்க, நாமதான் அவங்களுக்கு ஆதரவுன்னு யோசிச்சு அவங்களை கவனிச்சிகிட்டா அவளோட சந்ததி அத்தனையும் நல்லா இருக்கும். இப்ப இந்த சீரியல் வந்தபிறகு வீடுகள்ள கொஞ்சம் கொஞ்சமா விஷம் கலந்தமாதிரி இருக்கு. எந்த சீரியலைப் பார்த்தாலும் அடுத்தவங்க குடும்பத்தை எப்படி கெடுக்கறது, அதுவும் கூட்டுக் குடும்பங்களா வாழ்ந்த நம்ப வீடுகள்ல சொந்த அண்ணனை எப்படி கெடுக்கறது, எப்படி அண்ணியை பிரிச்சு வெளியில அனுப்பறது, பக்கத்து வீட்டுல என்ன பண்ணுனா அவங்க நாசமா போவாங்கன்னுதான் காமிக்கறாங்க. அதைப்பார்த்து பார்த்து என்ன ஆகும்? எல்லார் வீட்லயும் இதுதான் நடக்குதுபோல, நாம மட்டும் ஏன் மாமியார் மாமனாரை வச்சிகிட்டு கஷ்டப்படணும்னு நினைப்பு வந்துடும். ஏன் நீங்க சீரியல் பார்க்கறீங்க? அவன் டி.ஆர்.பி.யை ஏத்தறதுக்கு கண்டதைப் போடறான். அப்பதான் அவன் பொழைப்பு ஓடும். அவங்கவங்க வேலையை ஒழுங்கா பார்த்துட்டு இருந்தா இந்த நினைப்புல்லாம் ஏன் வருது? டி.வி.யில வேற ப்ரோகிராமே இல்லையா? எவ்வளவோ நல்ல விஷயங்களையும் டி.வி.யில போடறானே? அனிமல் பிளானட் பாருங்க. டிஸ்கவரி தமிழ் பாருங்களேன். டிராவலர் டி.வி. பாருங்க. சமையல் பிடிக்கும்னா அந்த ப்ரோகிராமை பாருங்க. பொதுவா பயணம் போக ஆரம்பிச்சாலே பல நல்ல விஷயங்களை கத்துக்கலாம்ங்கறது என்னோட நம்பிக்கை. ஒரு ஊருக்கோ நாட்டுக்கோ போனா அங்க மக்கள் எப்படி வாழறாங்க; வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்; அவங்களோட பழக்க வழக்கம்; காடுகள்ள ட்ராவல் பண்றவங்க.. இதையெல்லாம் பாத்தா… சே.. நாம எவ்ளோ சின்னதா யோசிக்கிறோம்? உலகத்துல எவ்ளோ விஷயங்கள் இருக்கு. அதை விட்டுட்டு சின்ன சின்ன விஷயத்துக்குப் போய் அடுத்தவங்ககிட்ட சண்டைக்கு போறோமேன்னு உங்களுக்கு கண்டிப்பா தோணும். அதனாலதான் சொல்றேன் வெளியூர் போக முடியாதவங்க கூட இப்படி டிராவலர் டி.வி.களை பாக்கும்போது உங்களுக்குள்ள நிறைய மாற்றம் வரும். புதுப் புது விஷயத்தை தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டுவீங்க. அதுவும் இல்லாம நாம எப்பவும் நல்ல விஷயத்தையே பேசி, நல்ல விஷயங்களை செஞ்சு, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கிட்டா… எல்லாமே நல்லதாதானே நடக்கும்? வாழ்க்கையை சந்தோஷமாக ஆக்க இன்னும் ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா? சந்திப்பு: ராஜவிபீஷிகா
-அடுத்த வாரம் சொல்றேன்.
எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்- 7 திருமதி சுஜாதா
இதுதான் சந்தோஷத்துக்கான சீக்ரெட் பத்துநாள்
முன்னாடி என் பையனோட வியட்நாம் போயிருந்தேன். அந்த நாட்டைப் பத்தி நிறைய
நல்ல விஷயங்களை உங்களோட பகிர்ந்தே ஆகணும்னு தோணுச்சு. ஆயிரம் வருஷத்துக்கு
முன்னாடி வரைக்கும் சீனாவின் கன்ட்ரோல்லதான் இருந்திருக்கு இந்த நாடு.
அதுக்கப்புறமா விடுதலை அடைஞ்சு நிறைய ராஜாக்கள் வியட்நாமை ஆட்சி செஞ்சு
நல்ல வளமையா ஆக்கியிருக்காங்க.
கிளைமேட் டெல்லி குளிர் மாதிரி இருக்கு. பொருளாதார பிரச்னை காரணமா ரெண்டு
குழந்தைங்களுக்கு மேல பெத்துக்கக்கூடாதுன்னு சட்டமாம். ஊரப்பார்த்தா நம்ம
ஊர் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அப்படி இருக்கு.
சிட்டியில கூட காருங்க ரொம்ப கம்மி. பைக்தான் ஜாஸ்தி. சில பேர்தான்
செல்போன் யூஸ் பண்றாங்க. அவங்களோட முக்கிய தொழில் டூரிஸம்தானாம். அப்புறம்
அங்கே விலைவாசி ரொம்ப கம்மி. அங்க இருக்கற ஸ்கூல்ல இங்கிலீஷ்லாம் சொல்லித்
தர்றது இல்ல. அவங்க பேச்சு வழக்குல இருக்கற மொழியைத்தான் கத்துக்
குடுக்கறாங்க. இங்கிலீஷ் படிக்கணும்னா அதுக்குன்னு பிரைவேட் ஸ்கூல்
உண்டாம். ஆனா அங்கெல்லாம் பணக்காரங்கதான் படிக்க முடியுமாம்.
அங்க என்ன ரொம்ப நல்ல
விஷயம்னா நான் ஒருத்தரைக் கூட குண்டா பார்க்கவே இல்லை. எல்லாரும் குச்சி
குச்சியா இருக்காங்க. ஆண்கள், பெண்கள் ரெண்டுபேரும் வேலைக்குப் போறாங்க.
அங்க போர் நடந்துச்சு இல்லையா.. அதனால 50, 60 வயசுக்காரங்க ரொம்பக்
கம்மியாதான் இருக்காங்க. 20, 30 வயசுக்காரங்களும் 70, 80 வயசுக்காரங்களும்,
குழந்தைகளும்தான் நிறைய இருக்காங்க. அதனால பெண்கள் கூட்டம் ஜாஸ்தியா
இருக்கு. பல வேலைகள் பெண்கள் செய்யறாங்க. பெண்கள் வேலைக்குப் போனதும்
வீட்டு வேலைகளை அந்த வீட்டு பாட்டிங்க செய்யறாங்க. யாரும் தெருவுல ஒரு
நிமிஷம்கூட வெட்டியா பேசி நான் பார்க்கவே இல்லை. அப்புறம் நம்மளைவிட
எல்லாவிதத்துலயும் அவங்க பின்தங்கி இருக்காங்க. ஆனா ட்ராஃபிக் ரூல்ஸை
ஸ்டிரிக்டா ஃபாலோ பண்றாங்க. தெருவுல ஒரு குப்பைகூட இல்லை. குழந்தைங்க கூட
குப்பைத் தொட்டியிலதான் குப்பையை போடறது.பெரும்பாலும் வீட்டு வேலையையும், குழந்தைகளையும் அந்த வீட்டு
பெரியவங்கதான் பாத்துக்கறாங்க. வெளியில
வேலைக்குப் போயிட்டு வந்ததும் பெண்கள் எம்ப்ராய்டரி செய்யறாங்க. எல்லா
வீடும் குடிசை மாதிரிதான் இருக்கு. ஆனா உள்ளே போய் பார்த்தா பண்டில்
பண்டிலா நூல் கண்டுகளா அடுக்கி வச்சிருக்காங்க. அவங்க செய்யற
எம்ப்ராய்டரிகளையெல்லாம் டூரிஸ்ட் நிறைய பேர் வாங்கிட்டு போறாங்க. அவங்க
அரசாங்கத்துல இலவசப் பொருட்கள் ஒண்ணுமே கிடையாதாம். கல்வியை மட்டும்தான்
இலவசமா சொல்லித் தர்றாங்க. அங்க வயசானவங்க நிறைய நாள் உயிர் வாழறதனால
அரசாங்கம் அவங்களுக்கு மட்டும் பென்ஷன் மாதிரி கொஞ்சம் பணம் தருது. என்ன
ஆச்சரியம்னா அங்க இருக்கற வயசானவங்களும் பணம் வருதேன்னு வீட்ல சும்மா
உட்கார்ந்து இருக்கறது இல்ல. ஆதரவு இல்லாத முதியோர்களெல்லாம் வேலைக்குப்
போய்தான் சம்பாதிக்கறாங்க.
அங்க ஒரு ஏரியில நிறைய மலைகளா இருக்கு. அந்த மலைகளுக்கு நடுவுல குகைகள்
இருக்கு. நம்மளை ஒரு படகுல உட்கார வைச்சுகிட்டு அந்த குகை வழியா கூட்டிட்டு
போறாங்க. ரொம்ப நல்லா இருக்கு. நீங்க நம்பமாட்டீங்க… என்னயும் என் கூட
வந்தவங்களையும் அறுபத்தஞ்சு வயசு பாட்டிதான் படகுல கூட்டிட்டுப் போனாங்க.
அவங்களுக்கும் பென்ஷன் வருமாம். ஆனாலும் அவங்க படகு ஓட்றாங்க. இத்தனைக்கும்
அது ரொம்ப ஏழ்மையான நாடா இருக்கு. நாங்க படகு ஓட்டின அம்மாவுக்கு கொடுத்த
சொற்ப காசுக்கே அந்த அம்மா முகத்துல ஆயிரம் ரூபா கிடைச்ச மாதிரி சந்தோஷம்.
அவங்களோட உணவு முறையும் வித்தியாசமா இருக்கு. வியட்நாம்ல காய்கறிகளும்
பழங்களும் ஃப்ரெஷ்ஷா கிடைக்குது. அதனால, காலையில காய்கறி சூப் குடிச்சிட்டு
வேலைக்குப் போறாங்க. அப்புறம் மத்தியானம் கொஞ்சமா சாதம். நிறைய வேகவைத்த
காய்கறிகள்னு ரொம்ப சத்தான உணவுகள் சாப்பிடறாங்க. முக்கியமா பீட்ஸா, பர்கர்
கடைகள் எல்லாம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அங்கல்லாம் டூரிஸ்ட்டுங்க
கூட்டம்தான். அங்கங்க சின்ன சின்ன தள்ளுவண்டியில காய்கறி சூப் செஞ்சு
விக்கிறாங்க. அதைத்தான் மக்கள் வாங்கி சாப்பிட்டு போறாங்க.
எனக்கு என்ன ஆச்சரியம்னா
வேலைக்குப் போயிட்டு மருமக வந்ததும் எம்ப்ராய்டரி போட உட்கார்ந்துடுறா.
அவளோட வயசான மாமியார்தான் சமைச்சு, வீட்ட பெருக்கி, குழந்தைகளையும்
பார்த்துக்கறாங்க. இதுவே நம்ம ஊரா இருக்கட்டும், என்ன நடக்குன்னு யோசிங்க.
கண்டிப்பா ஈகோ பிரச்னை வந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை
வரும். ஆனா அங்க யார் யாருக்கு என்ன வேலைன்னு பிரிச்சு, புரிஞ்சு
செய்யறாங்க. பெண்கள் தங்களோட ஓய்வு நேரத்தை சீரியல் பார்த்தோ… பக்கத்து
வீட்டுல புரளி பேசியோ… செலவழிக்கறது இல்ல. ஏன்னா அதுக்கு அவங்களுக்கு நேரமே
இல்ல.
போன வாரம் கட்டுரையை
முடிக்கறப்போ வாழ்க்கைய சந்தோஷமா வச்சுக்க ஒரு சீக்ரெட் சொல்றேன்னு
சொன்னனே…! அது இதுதான். வாழ்க்கைய சந்தோஷமா ஆக்கறதுக்கான ஒரு சின்ன டிப்ஸ்.
உங்களுக்கு உங்க வேலை செய்யறதுக்கே நேரம் கரெக்டா இருந்தா நீங்க ஏன்
அடுத்தவங்களப் பத்தி யோசிக்கப் போறீங்க. ஏன் அடுத்தவங்கள பத்தி
இன்னொருத்தங்ககிட்ட புரளி பேசப் போறீங்க. வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு
சும்மா இருந்தீங்கன்னா உங்களுக்குன்னு ஒரு ஹாபி இருக்கும் இல்லயா? அத
வளர்த்துக்கோங்க. கோலம் நல்லா போடுவீங்கன்னா அதுல இன்னும் எப்படி பெரிசா
சாதிக்கணும்னு பாருங்க. நல்லா எழுதுவீங்கன்ன ஒரு எழுத்தாளரா ஆகறதுக்கு என்ன
செய்யணும்னு பாருங்க. இல்ல நல்லா சமைப்பீங்கன்னா அந்த துறையில எப்படிப்
பெரிய ஆளா வர்றதுன்னு பாருங்க. நமக்கான வாய்ப்பை நாமதான் தேடிக்கணுமே தவிர
அதுவா எதுவும் வராது.
என் கணவரையே
எடுத்துக்கோங்களேன். அவர் யார்கிட்டயும் தேவையில்லாம பேசவே மாட்டார்.
வேலைக்குப் போற நேரம் தவிர நல்லா படிப்பார். நல்லா எழுதுவார். எப்படி
தன்னோட ஒரு நாளை உபயோகமா ஆக்கறதுன்னு அவருக்கு தெரியும். வேலையில இருந்து
ரிட்டயர்ட் ஆனதும் சும்மா இல்லயே…! எழுத்தை முழுநேரமாக்குனார். பத்திரிகை
ஆசிரியரா இருந்தார். படத்துக்கு வசனம் எழுதினார். எல்லாமே ஹாபியா
ஆரம்பிச்சதுதானே…! அதான் சொல்றேன் நாம மனசு வச்சா நம்ம வாழ்க்கையில எதுவேணா
நடக்கும். -அடுத்த வாரம் சொல்றேன் வீட்டுல எத்தனை டஸ்ட்பின் இருக்கு? கொஞ்ச நாள் முன்னாடி என் பழைய தோழி ஒருத்திய சந்திச்சேன். அப்போ தன்னோட பையனுக்கு ரொம்ப வருஷமா பெண் தேடுறதாகவும், பெண் வீட்டார் ரொம்ப கண்டிஷன் போடுறதாகவும் கவலைப்பட்டா. அப்படி பெண் பார்க்கப் போனப்ப ஒரு பெண்ணோட அப்பா கேட்டாராம், ‘உங்க வீட்ல எத்தனை டஸ்ட்பின் இருக்கு?’னு. அவளுக்கு ஒண்ணும் புரியல. பொண்ணோட அப்பா டஸ்ட்பின்னு சொன்னது அந்த வீட்ல எத்தன வயசானவங்க இருக்காங்கங்கறதைத்தான். என் தோழி மனசு உடைஞ்சு போயிட்டா. இன்னொரு சம்பவம் இதைவிட அதிர்ச்சியா இருந்தது! வீட்ல பொண்ணு பார்த்து, முறையா மண்டபத்துல கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல கல்யாணப் பொண்ணு, ‘அப்பா என் கிளாஸ்மேட் விஷம் குடிச்சு ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம். நான் போய் பார்த்துட்டு வர்றேன்’னு சொல்லிட்டு போனவதான். திரும்பி வரவே இல்லையாம். அப்புறமா அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி, ‘என்னை மன்னிச்சிடுங்கப்பா, நான் லவ் பண்ணின பையன் எனக்கு கல்யாணம்னு விஷம் குடிச்சு உயிருக்குப் போராடிகிட்டு இருக்கான். உங்க வற்புறுத்தலாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் விஷயம் குடிச்சவனை விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாளாம். இதுக்கெல்லாம் காரணம் பொண்ண பெத்தவங்கதான். பொண்ண செல்லமா வளர்க்கறாங்க, ஆனா மத்தவங்ககிட்ட எப்படி அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்ங்கறதை சொல்லிக் கொடுக்கறதில்லை. நல்லா படிக்க வெச்சதும் அவங்க ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்கறாங்க. வெளி உலகம் தெரிஞ்சுக்கிறாங்க. ‘நாங்க ஏன் உன் அம்மா, அப்பாவை வெச்சுகிட்டு கஷ்டப்படணும்?’னு கேட்கறாங்க. ‘நீங்க உங்க மாமியார்கிட்ட கஷ்டப்பட்டீங்கன்னா அது உங்க தலையெழுத்து. நீங்க வீட்டோட இருந்தீங்க. நாங்க வேலைக்குப் போறோம்’னு சொல்றாங்க. அவங்க மேல தப்பு சொல்ல முடியாது. படிச்ச பொண்ணுங்கன்னா அப்டித்தான் இருப்பாங்க. ஆனா அதுக்கப்புறமும் நான் சொல்ற மாப்பிளையைதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா.. அதைவிட முட்டாள்தனம் இருக்கா? உங்களுக்கே தெரியும். உங்க பொண்ணு உங்க பேச்சை கேட்கமாட்டான்னு. அதனால பையன் வீட்ல ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறீங்க. பொண்ணு தனிக்குடித்தனம் தான் இருக்கும். அடிக்கடி வீட்டுக்கு யாரும் வந்துபோகக்கூடாது. பையனும் சமைக்கணும்னெல்லாம் சொல்றீங்க. எதுக்கு இந்த பிடிவாதம்? உங்க பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியாதா? அவளோட மென்ட்டாலிட்டிக்கு எந்த பையன் சரியானவன்னு அவளே முடிவு பண்ணிக்கட்டுமே. பொண்ணை அட்ஜஸ்ட் பண்ணற மாதிரியும் வளர்க்க மாட்டேங்கறீங்க. ஆனா அவளுக்கு புடிச்ச வாழ்க்கையையும் அமைச்சு தரமாட்டேங்கறீங்க. அப்புறம் அவளால எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? அதே மாதிரி பையனுக்கு புடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சா அவங்க வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கும். ஏற்கெனவே 80&கள்ல ஸ்கேன் பண்ணி வயித்துல இருக்கறது பொண்ணுன்னா உடனே அபார்ஷன் செஞ்சுதான் இப்போ பொண்ணுங்களுக்கே தட்டுப்பாடா இருக்கு. அப்பல்லாம் பணக்கார வீடுகள்ல கூட பொண்ணுன்னு தெரிஞ்சா, சொத்து கைவிட்டுப் போயிடும்னு சர்வ சாதாரணமா அபார்ஷன் பண்ணிடுவாங்க. இதுல நீங்க பையனுக்கு புடிச்ச பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிட்டு நீங்களே ஜாதகம் பார்த்து, உங்களுக்கு புடிச்ச பொண்ணாதான் கல்யாணம் செய்வேன்னு சொன்னா ரொம்ப கஷ்டம். ஆனா இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்பல்லாம் வரதட்சணை கேட்கறது குறைஞ்சிருக்கு. வரதட்சணை நிறைய கேட்டா பொண்ணே போயிட்டு வாங்கன்னு சொல்லிடுறாங்க. அம்பது அறுபது வருஷதுக்கு முன்னாடில்லாம் மாப்பிளை வீட்ல பரிசம் போட்டு பொண்ணுக்கு சீர் செஞ்சுதான் கூட்டிட்டு போவாங்க. அதுக்கப்புறம் பொண்ணுங்க வரதட்சனை குடுத்து கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல திரும்பவும் பசங்க வரதட்சனை குடுத்துதான் கல்யாணம் செஞ்சுக்கணும் போல. இன்னமும் பாரம்பரியம் கலாச்சாரம்ன்னு பேசிக்கிட்டு இருக்குறது சரியா படல. ஏன்னா இப்போ மேலைநாட்டு கலாச்சாரம் நம்ம நாட்டுல பரவிக்கிட்டு இருக்கு. அவங்க கலாச்சாரத்துக்கு முழுசா மாறவும் முடியாம.. நம்ம கலாச்சாரத்தை காப்பத்தவும் முடியாம ரெண்டுங்கெட்டான் தலைமுறையா நாம நிக்கறோம். இப்பதான் மேலைநாடுகள்ல கெட்டு சீரழிஞ்சு, பாரம்பரியத்த வளர்க்கணும். திரும்பவும் கூட்டுக் குடும்பங்களா வாழணும்னு சொல்லி நம்மள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. நாம இப்போ இதுலாம் பழைய விஷயங்கள்னு அவங்களை ஃபாலோ பண்ண தொடங்கியிருக்கோம். இது ஒரு சுழற்சிமுறை. நாம தடுத்தாலும் முடியாது. திரும்பவும் எல்லாம் போனதுக்கப்புறாமா நம்ம கலாச்சாரம்தான் பெஸ்ட்டுன்னு திரும்பி வருவாங்க. அடுத்த தலைமுறையை நினைச்சாதான் கவலையா இருக்கு. அதைப்பத்தி…! அடுத்த வாரம் சொல்றேன் sss 8-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதாஇதன் முந்தைய பகுதி… வளர்ந்துவரும் மேலைநாட்டு கலாச்சாரத்தை நாம தடுக்க முடியாதுன்னாலும் அதனால கெட்டு சீரழியும் அடுத்த தலைமுறையினரைப் பார்த்தா கவலைப்படாம இருக்க முடியல. அதுக்கு முக்கிய காரணம் வெளியில இருக்கற விஷயங்கள் இல்லை. அவங்களைப் பெத்தவங்கதான். முதல்ல இந்தக் காலத்து குழந்தைங்க ஆரோக்கியமா இல்லைங்கறதை நாம ஒப்புக்கணும். அவங்கள்ல யாருமே ஆரோக்கியமா இல்லைங்கறது ரொம்ப வருத்தமான விஷயம். அவங்களோட அம்மா ஆரோக்கியமா இருந்தாதானே குழந்தை ஆரோக்கியமா இருக்கும். எங்களோட உணவு முறையை எடுத்துக்கிட்டீங்கன்னா, வருஷத்துக்கு ஒருமுறை தீபாவளிக்குதான் பட்சணம். நடுவுல நொறுக்குத் தீனி எல்லாம் இல்லவே இல்ல. படிப்போம். வீட்டு வேலை செய்வோம். எம்பிராய்டரி பண்ணுவோம். ஓய்வு நேரங்கள்ல உறவினர் வீடுகளுக்கு போவோம். அங்கேயும் ஏதாவது வேலை இருக்கும். கதை, நாவல்களைப் படிப்போம். அதான் எங்களுடைய பொழுதுபோக்கு. அப்போலாம் உணவுமுறையில ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனா இப்போ…? தெருவுக்குத் தெரு பட்சணக் கடைகள், ஜங்க் ஃபுட்ஸ், டி.வி. பார்த்துக்கிட்டே சாப்பிட நொறுக்குத் தீனிங்க.. அதுக்கும் மேல ஞாயித்துக் கிழமைன்னாலே வெளியே ஏதாவது ஒரு மாலுக்கு போயே ஆகணும்னு ஒத்தைக்கால்ல நிக்கிறாங்க. போனா அங்க ஃபுல்லா ஃபாஸ்ட் ஃபுட்ஸ்தான். அவங்களால வீட்டு வேலைகளை செய்ய முடியுதா? முடியாது. ஏன்னா உடம்புல வலிமை சுத்தமா இல்லை. அவங்களுக்கு பொறக்கும் குழந்தை எப்படி ஆரோக்கியமா இருக்கும் சொல்லுங்க? ஒரு குழந்தை நல்ல பையனாவோ, பொண்ணாவோ சமுதாயத்துல வளரணும்னா அவங்களோட முதல் ரோல் மாடல் அவங்க பெற்றோர்கள்தானே! ஒரு வீட்ல ரெண்டு பேரும் கண்டிச்சு வளர்த்தாலும் அந்தக் குழந்தை நல்லா வளராது. ரெண்டுபேரும் கண்டுக்காம விட்டாலும் அந்தக் குழந்தை நல்லா வளராது இல்லையா? அப்படி இருக்கும்போது அப்பா கண்டிச்சா அம்மா என்ன பண்ணனும்? ‘அப்பா சொல்றாங்கள்ல இது வேணாம். நான் வேற வாங்கித்தரேன்’னு பிள்ளைய சமாதானம்தானே பண்ணனும். ஆனா இப்போ என்ன நடக்கிறது? ‘பிள்ளை கேட்டா வாங்கித்தர வேண்டியதுதானே. நீ கஷ்டப்பட்டேன்னு என் பிள்ளையும் எதையும் அனுபவிக்காம இருக்கணுமா’ன்னு அம்மா, அப்பாகிட்ட சண்டை போடறாங்க. இந்தக் குழந்தைகளுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. வளர்ந்ததுக்கப்புறம் தன்னோட துணைக்கிட்ட இதேமாதிரி சண்டை போடறாங்க. இப்போலாம் எட்டு வயதுக் குழந்தைகூட மாடிப்படில நடக்கமாட்டேங்கறது. போய் லிஃப்ட் பட்டனைத்தான் அமுக்கறது. அவங்க அப்பா, அம்மாவே, ‘நாமதான் காசு குடுக்கறோமே வா லிஃப்ட்ல போலாம்’ன்னு சொல்றாங்க. முன்னாடி தனியா மாலுக்கு போனாங்க. இப்போ குழந்தைகளையும் அழைச்சுட்டு வாரா வாராம் போறாங்க. குழந்தை எது கேட்குதோ அதை வாங்கித் தர்றாங்க. அதனால் அவங்களுக்கு காசோட அருமையே தெரியறது இல்லை. ஒரு மாசத்துக்கு 20 படம் ரிலீஸாகுதுன்னா அத்தனையும் பார்க்கணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் யாரால வந்தது? பெற்றோர்களால்தானே? எங்க காலத்துல குடிகாரங்கன்னா என்னன்னே தெரியாது. குடிச்சுட்டு கீழே விழுந்து கிடப்பாங்கன்னுலாம் தெரியாது. ஆனா இப்போ இருக்கற பசங்க டி.வி.ய பார்த்து எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறாங்க. இதனால அஞ்சு வயசுப் பையன் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படீஷன்ல குடிகாரன் மாதிரி அப்படியே நடிக்கிறான். ஆசிரியர்களும் ஒண்ணும் சொல்லாம கைதட்றாங்க. என்னா இப்போ குடிக்கறதோ.. சிகரட் பிடிக்கறதோ ஒரு கெட்ட விஷயமாவே தெரியறதில்லை. ஏன் மேல்தட்டு பெண்களே குடிக்கிறாங்களே! அதனால அந்தக் குழந்தைகள் பெரியவனானா குடிக்கறது ஒரு அத்தியாவசியமான விஷயம்னு நினைச்சுக்கிறான். அப்படியே குடிக்கு அடிமையும் ஆகிடுறான். கொஞ்சம் பணக்காரனா இருந்தா குடும்பத்துல நிம்மதி போயிடும். அதுவே அவன் கொஞ்சம் ஏழையா இருந்தா குடும்பமே நடுத்தெருவுலதான் நிக்கும். வெளிநாட்டுக்காரன் குடிக்கறான்னா, அங்க அவனுக்கு இருக்குற குளிருக்கு கத்திரிக்கா, வெண்டைக்கால்லாம் விளையாது. அதனால மாமிசம்தான் சாப்பிட்டாகணும். மாமிசம் சாப்பிட்டா செரிக்கறதுக்கு அந்தக் குளிருக்கு அவன் ஒயின் குடிக்கிறான். அவனப் பார்த்து நாமளும் குடிச்சா எப்படி? இந்தக் காலத்து குழந்தைகளுக்கு பணத்தோட அருமை தெரியல. நேரத்தோட அருமை தெரியல. பெரியவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல. வெளிய ஆயிரம் கெட்ட விஷயங்கள் இருக்கட்டுமே, நம்ம குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை நாம விதைச்சா, அவங்க மத்தவங்களுக்கு சொல்லிக் குடுப்பாங்க இல்லையா? -அடுத்த வாரம் சொல்றேன்… தொகுப்பு: ராஜவிபீஷிகா
|
|
|
| | | |
|