Home / MedhaPatkarKoodankulam

MedhaPatkarKoodankulam



ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: ஜெ.வேங்கடராஜ்

செல்லும் வழியில் ஒரு பாட்டியிடம் கொஞ்சம் மோர் வாங்கிக் குடிக்கிறார். இடையில் இரண்டு பிஸ்கட்கள். குப்பத்து மக்களிடம் பேசிக்கொண்டே தெருக் குழாய்க்கு அருகில் இருந்த குடத்தைக் கவிழ்த்துத் தண்ணீர் அருந்துகிறார். மதிய உணவாகக் கொஞ்சம் குஸ்கா. திங்கட்கிழமை கொல்கத்தா, செவ்வாய்க்கிழமை மும்பை, புதன்கிழமை சென்னை... 58 வயதில் மூட்டு, இடுப்பு வலிகளுக்கு இடையிலும் ஓயாமல் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறார் மேதா பட்கர். ''பொதுவாக, வட மாநிலங்களில்தான் சாதிக் கலவரங்கள் அதிகம். தமிழ்நாட்டில் தேர்தல் சமயம்தான் சாதிச் சண்டைகள் நடக்கும். இப்போ எப்பவுமே நடக்குற அளவுக்கு அதுவும் நார்மல் ஆகிடுச்சுல்ல!'' - மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டுக்கொண்டே என்னிடம் பேசினார் மேதா பட்கர்.

''ராமதாஸ் போன்றவர்கள் சாதியை அடிப்படையாக வைத்துப் பேசவும் சண்டை போடவும் முக்கியக் காரணம் தலித்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இங்கே கொஞ்சம்கூட ஆதரவு இல்லை. இத்தனைக்கும் இது பெரியார் மண். பெரியாரிஸத்தை வருடம் முழுக்கப் பேசிப் பேசி விவாதிக்கும் மாநிலம். தமிழகத்தை மாறி மாறி ஆளும் தி.மு.க-வும் சரி, அ.தி.மு.க-வும் சரி... திராவிடர்கள் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள், உழைப்பவர்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட கட்சிகள். ஆனால், சாதிக் கொடுமைகள் தொடர்ச்சியாக நடந்தும் மாற்றத்துக்கென அவர்கள் எதுவும் செய்வதாக இல்லை!''

''தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆதரவாக இல்லையே?''

''இப்போதெல்லாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு  பிரச்னையே இல்லை. நர்மதா அணை பிரச்னையாகட்டும், போபால் பிரச்னையாகட்டும்... சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகும் நாங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். மக்கள் போராட்டம்தான் எப்போதும் வெல்லும். தூத்துக்குடியில் சுவாசிப்பதற்குக்கூட சுத்தமான காற்றே இல்லாத அளவுக்கு நச்சாக்கிவிட்டனர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று யாரும் இதுவரை உறுதியாகச் சொல்லவே இல்லை. ஆக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை வைத்துக்கொண்டு போராட்டங்களின் திசையைத் தீர்மானிக்கக் கூடாது. இடிந்தகரை மக்களின் போராட்டம் பிரமிக்கத்தக்க ஒன்று. இந்தியா முழுக்கவே 30 முதல் 40 சதவிகித மின்சாரம் கம்பி வழிப் பயணத்தின்போதே வீணாகிறது. அதைச் சேமிக்க இவர்களுக்கு வழி கண்டுபிடிக்கத் தெரியவில்லை. பயோ மாஸ், சூரிய சக்தி, காற்றாலை, கடலலை என எவ்வளவோ இருந்தும், எளிய மக்களின் வாழ்வா தாரத்தை அழித்தேதான் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமா? எத்தனையோ விஷயங்களுக்காகத் தினம் தினம் போராடுகிறோம். அதில் சில வெற்றிபெறுகின்றன, பல தோல்வி அடைந்து அதிகார வர்க்கம் வெற்றிபெறுகிறது. ஆனால், அதற்காகத் துவண்டு நின்றால், எந்த வேலையும் நடக்காது. தோல்விதான் எங்களுக்கு இன்னும் அதிக உந்து சக்தியை அளிக்கிறது. இன்னும் இன்னும் போராடுவோம். வெற்றிபெறுவோம் என்பதே எங்கள் தாரக மந்திரம்!''

 ''இணைந்த கரங்களே வலு சேர்க்கும் என்பதைச் செல்லும் இடங்களில் வற்புறுத்துகிறீர்கள். ஆனால், உங்களுக்கும் சக போராளிகளான அருந்ததி ராய், ஜானு ஆகியோரிடையே ஒற்றுமை இருக்கிறதா?''

 ''பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், அவர்களைப் பார்ப்பேன். பேசுவோம். இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அமையவில்லை. தேவையும் இல்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் போராடுகிறோம். அப்படியே பயணிப்போம். வெற்றி எங்களை ஒன்றிணைக்கும்!''

 ''ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், சரியான தலைமையோ நோக்கமோ இல்லாத பா.ஜ.க. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்?''

 ''தேர்தலுக்கு முந்தைய சில மாதங்கள்தான் முடிவைத் தீர்மானிக்கும். அப்போது 'கொஞ்சம் நல்லவன்’போல் யார் நடந்துகொள்கிறார்களோ, அவர்களுக்கே நம் மக்கள் வாக்களிப்பார்கள். தனக்கு முன் நடக்கும் அநீதியைத் தட்டிக்கேட்டுக் கேள்வி கேட்கும் சமூகம் எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் தெளிவான ஆட்சி அமையும்!''

''அனுதின அலைச்சல்களுக்கு இடையில் உடல்நலத்தில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறீர்கள்?''

''உடல்நிலை..?! ''சமீபமாக மிகக் கடுமையான இடுப்பு வலி. (இடுப்பைச் சுற்றி பெல்ட் அணிந்திருக்கிறார்). மூட்டு வலியும் அவஸ்தைப்படுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாதிலும் கேரளாவிலும் சிகிச்சை எடுத்தேன். இப்போது இயங்குகிறேன். உடம்புக்கு ஏதேனும் பெரிய ஆபத்து நிகழும் வரை போராடுவோம்!''



     RSS of this page