Home / LenaTamilvanan

LenaTamilvanan


உறவுகள் உயர்வுகள்
''குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்கித் தர முடியாதவர்கள் தரமான நேரம் தந்து குடும்பத்திற்கு மன நிறைவு தரமுடியும்.மனநிறைவு என்ன மகிழ்ச்சியே கூடத் தர முடியும்.தரமான நேரத்திற்கு என்று சில இலக்கணங்கள் உண்டு.’’
‘‘என்னாது அது இலக்கணம்?" என்றார் நண்பர், வடிவேலு பாணியில் இழுத்தபடி.
‘‘வேறு எந்தச் சொந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது. தொழில் நேரத்தில் எப்படித் தொழிலிலே குறியோ அப்படி குடும்பமே குறி. சிறு பிள்ளையா உங்களுக்கு?உங்கள் நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பதவிகளையெல்லாம்சூட்,கோட்டைக் கழற்றுவதுபோல் கழற்றி வைத்துவிட்டு,அந்தக் குழந்தையை உப்பு மூட்டை தூக்க வேண்டும். சறுக்கு மரத்தில் வைத்து சறுக்கி வரும்போது கையைப் பிடித்துக் கொள்ளவேண்டும். வளர்ந்த குழந்தையா? இரு கைகளுக்கு நடுவில் குழந்தையைப் படுக்க வைத்து நீச்சலடிக்கிறபோது தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். வளர்ந்த பையனா? அவனுக்குப் பந்து வீச வேண்டும்.அவனைக் கொண்டுபோய் விளையாட்டுப் பயிற்சி மைதானத்தில் இறக்கிவிட்டுக் காத்திருக்க வேண்டும்."
‘‘கிழிஞ்சுது போங்க!’’
‘‘இதையெல்லாம் செய்யாமல் போனாலும் நீங்க சொன்னதுதான் நடக்கும் தெரியும்ல?மனைவியின் சின்னச் சின்ன விருப்பங்களைக் கேட்டறிய வேண்டும்.வீட்டில் இருக்கும் நேரம் அவர்களோடு அவர்களுக்காகச் செலவிடப்படவேண்டும்.பிசினஸ் போன் வருதா? ‘அப்புறம் கூப்பிடுறேன்'னு வச்சுடணும். சின்னச் சின்ன உதவிகளைச் செய்யணும்.மேலை நாடுகளில் வாழும் நம்ம ஊர் ஜோடிகளைப் பார்த்திருக்கேன். நம்மாளுங்க, ஆம்பிளைங்கதான் பாத்திரம் கழுவிக் கொடுக்கிறாங்க, காய்கறி நறுக்கிக் கொடுக்குறாங்க, பிள்ளைங்களுக்கு டிரெஸ் மாத்துறாங்க, வீட்டு வாசல்ல புல் வெட்டுறாங்க. என்னமாப் புரிந்துணர்வோட நடந்துக்குறாங்க தெரியுமா? எத்தனையோ வருஷம் குடும்பம் நடத்தியும் மனைவிக்கு என்னென்ன பிடிக்கும்னு கணவனுக்குத் தெரியலை. என்னது! உனக்கு நிமிழி (ஜின்)னு முடியுற எந்த மாத்திரையும் ஒத்துக்காதா?எனக்குத் தெரியவே தெரியாதேங்கிறான் ஒரு புருஷன் பத்து வருஷம் அவளோட குடும்பம் நடத்திட்டு. ஒரு மனைவியையாவது, இப்படிப்பட்ட குறை உடையவங்க இவங்க;கணவனைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? அதே நேரத்தில் தன்னோட பிறந்த நாளை, தன் கணவன் எப்படியாவது மறந்துடணும் என்றுதான் பெரும்பாலான மனைவிகள் எதிர்பார்க்கிறார்கள்; மறுநாள் ஒரு பிடி பிடிக்கலாம் என்று. கணவர்களும் இதற்கு நிறைய வாய்ப்புக் கொடுத்து விடுகிறார்கள்.’’
‘‘குவாலிட்டி டைம் செலவழிச்சா இந்தத் தப்பு நடக்காதுங்கிறீங்க."
‘‘நிச்சயமா நடக்காது. அதே நேரத்தில் இன்னொரு நன்மையும் நடக்கும்.’’
‘‘என்னாது அது?"
‘‘சொல்கிறேன்.".
(தொடரும்)
------------------------
குடும்ப உறுப்பினர்களோடு இருக்கிறேன் பேர்வழி என்று கதையடிக்காமல் அவர்களுக்காகத் தரமான நேரம் (QualityTime)ஒதுக்குவதில் கிடைக்கக்கூடிய கூடுதல் நன்மை என்ன தெரியுமா?’’
‘‘சொல்லுங்க!’’ என்றார் அந்த நண்பர்.
‘‘மனைவிக்குக் கணவனிடம் இருக்குற எதிர்பார்ப்புகளைச் சொன்னேன் அல்லவா? கணவனுக்குக் குறைவான எதிர்பார்ப்புகள்தாம்.’’
‘‘ஆமாமா. மனுஷன நிம்மதியாத் தொழிலைக் கவனிக்க விட்டால் போதும்.’’
‘‘சரிதான். நீங்க சொன்னதோட இன்னொன்றையும் சேர்த்துக்கணும்.’’
‘‘சொல்லுங்க’’ - நண்பர்.
‘‘குடும்பப் பிரச்னைகளை அதிகம் காதில் போடாம மனைவியே கூடியவரை சமாளிக்கணும். ஒரு நல்ல மனைவியோட இலக்கணம்னு கணவர்கள் இதைத்தான் எதிர்பார்க்குறாங்க. தொழில்லேயும் பிரச்னை. வீட்லேயும் பிரச்னைன்னா பல கணவர்கள் தேறி வரமாட்டாங்க. இதை மனைவிமார்கள் புரிஞ்சுக்கணும். குவாலிட்டி டைமை வீட்டினருக்கு ஒதுக்கினால்தான் இந்தக் கூடுதல் நன்மை சாத்தியம்’’ - நான்.
‘‘ஓ! நீங்க அப்படி வாரீங்களா?’’
‘‘பின்னே? குடும்பத்தினரிடம் ஒரு வழி எதிர்பார்ப்பு என்பது நியாயமில்லையே! மனைவிமார்களோட இயல்பு என்ன தெரியுமா? நீங்க அவங்கமேல அனாவசியமாக் குற்றம் சாட்டினா, ‘நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்காக்கும்?உங்க குறைகளையெல்லாம் பட்டியலிடுறேன். கேட்டுக்குங்க’என்று ஆரம்பித்து ஆதியோடந்தமாகப் பெரிய பட்டியலையே நினைவாக - கோர்வையாக சொல்லுவாங்க. ‘இதெல்லாமா இன்னும் ஞாபகம் வச்சிருக்கே?’ என்கிற அளவிற்குப் பட்டியல் நீளும் நேரத்தில அவங்களை அக்கறையோட கவனிக்க ஆரம்பிச்சிங்கன்னா,‘சரி சரி உங்களுக்கு என்ன பிரச்னை சொல்லுங்க நான் அதைக் குறைக்க முடியுமா பார்க்கிறேன்’னு முன் வருவாங்க.குவாலிட்டி டைம்ல கிடைக்கிற மிகப் பெரிய நன்மை இது.’’
(தொடரும்)
--------------
குடும்ப உறவுகளிலும் சரி, தொழிற்சூழலிலும் சரி, வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் உரியவர்களை அங்கீகரித்து விடவேண்டும்.
ஒரு கணவனுக்குத் தான் அங்கீகரிக்கப்படவில்லை என்கிற ஏமாற்றம் அதிகம் இராது. ஆனால் மனைவிக்கு அப்படி அல்ல. ‘‘மாடா(?) உழைக்கிறேன்! ஓடாத் (!) தேயுறேன்.  ஆனா நல்லா நாலு வார்த்தை சொல்லிடமாட்டாரு.இந்த விஷயத்தில் அவரோட அம்மாவைப் (அது சரி!) போலத்தான் அவரும்’’ என்று அங்கலாய்த்துக் கொள்கிற இல்லத்தரசிகள் கொஞ்சநஞ்சமல்ல.
‘‘இப்படித்தான் - போனவாரம் - கேளுங்க, எங்க வீட்டுக்கு இவரோட படிச்ச நண்பராம். ரொம்ப நாள் வெளிநாட்டுல இருந்தவரு. இவர் சொன்னாரேன்னு குடும்பத்தோட  வரவழைச்சு விருந்து வச்சோம். என் சமையல் பிரமாதம்னு ஆய்ஊய்னு இவரோட நண்பர் குடும்பம் பாராட்ட,‘என்னவோ இன்னைக்கு கொஞ்சம் சுமாரா சமைச்சிட்டா. இவளோட சமையலைச் சாப்பிட்டுட்டு நான் படுற அவதி எனக்குல்ல தெரியும்’னு எல்லாரையும் வச்சுக்கிட்டு சொல்லிட்டாரு.ரொம்ப வெறுத்துப் போச்சு தெரியுமா? எப்படியிருக்கும் கஷ்டப்பட்டு சமைச்சவளுக்கு?’’ தன் உயிர்த்தோழியிடம் ஓர் இல்லத்தரசி புலம்பிய புலம்பல் இது.சபையை சிரிக்க வைக்கிறோம் பேர்வழி என்று இப்படிச்  சில கணவர்கள் தத்து பித்து என்று உளறி வைக்கிறார்கள்.
ஒரு புத்திசாலிக் கணவன் இந்த சந்தர்ப்பத்தை என்னமாய்ப் பயன்படுத்திக்கொள்வான் தெரியுமா?
‘‘வாழ்க்கையில எனக்கு எவ்வளவோ கொடுப்பினைகள். அதுல இது ஒண்ணு. பிரமாதமா சமைப்பா. அதுவும் விருந்துன்னா வெளுத்துக் கட்டிடுவா. சலிச்சுக்கவே மாட்டா  தெரியுமா?’’ (யோவ்! போதும்யா! இன்னும் இரண்டு விருந்துகளுக்குத் தாங்கும்யா!)
இதுதான் ஒரு மனைவிக்குத் தரப்படும் சரியான அங்கீகாரம். ஆனால் கணவன்மார்களே!இதை சிறு நமட்டுச் சிரிப்புக்கூட இல்லாமல் சொல்லவேண்டும்.
சிரிச்சிக்கிட்டே சொன்னீங்க... அது, சரியான கிண்டல் இரகத்தில் சேர்ந்துவிடும்.
(தொடரும்)
----------------------
மனைவியை அங்கீகரிக்க வலியக் கிடைத்த வாய்ப்புகளைக்கூடக் கோட்டைவிட்டவர்கள்,ஒரு சிறந்த பேட்ஸ்மேன் கொடுத்த கேட்சைத் தவறவிட்ட பீல்டரைவிட மோசம்  என்பேன்.
மேலைநாடுகளில் தம்பதிகள் உறவை அறுத்துக்கொள்ளத்தான் குறைந்த அவகாசம் எடுத்துக்கொள்கிறார்களே தவிர,சேர்ந்து வாழும் காலத்தில் ஒரே ஹனியும் டார்லிங்கும்தான்.மேலை நாட்டவர்களிடமிருந்து மணமுறிவைக் கற்றுக்கொண்டிருக்கிற அளவிற்கு ‘டார்லிங்’குகளையும் ‘ஹனி’களையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை.  இதையெல்லாம் படு செயற்கை என்றும், அசிங்கம் என்றும் நினைக்கிறோம். வளர்ந்துவிட்ட பிள்ளைகள் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
நான் கேட்கிறேன், ஆணோ பெண்ணோ உங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு புதுச் சொல்லால் அழைக்க நீங்கள் தயாரா?மாட்டீர்கள். பெரும்பாலும் மாட்டீர்கள். இது  படு செயற்கையாக இருக்கிறது என்று நிராகரிப்பீர்கள்.
என் நண்பரின் மனைவி தன் கணவரை ‘ஜீ’ என்றே அழைக்கிறார். அசந்துபோனேன்.(என் வீட்டில் இது நடக்காதா என்று ஏக்கமே வந்துவிட்டது!) ஒரு சிலர் தங்கள்  கணவர்களை ‘அத்தான்’ என்று அழைக்கிறார்கள். இப்படி அழைக்கப்படுகிறவன் செத்தான். (சேச்சே! நல்ல அர்த்தத்தில்தான்) அதாவது மெஸ்மெரிசத்தில் கட்டுண்ட  கதைதான் என்பேன். ஒரு கணவன் தன் மனைவியை ‘செல்லம்!’ என்றும் ‘ராசாத்தி’ என்றும் அல்லது ஒரு செல்லப் பெயர் (ஜீமீt ஸீணீனீமீ) சூட்டி அழைத்துப் பார்க்க ட்டும். அவர்களுக்குள் இருந்த பிரச்னை மூட்டங்கள் சற்றேனும் குறைகின்றனவா இல்லையா என்று பாருங்கள்.
விண்வெளியின் அளவிடமுடியா நீளம் போன்றது கணவன்-மனைவியின் அன்பும் புரிந்துணர்வும்... இதோ முடிந்துவிட்டது எல்லை என்றும், நாங்கள் அதை எட்டிவி ட்டோம் என்றும் எந்தத் தம்பதியும் சொல்லிவிட முடியாது.
ஒரு மனைவியின் மனத்திற்குள் எப்போதுமே ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி அல்லது குற்றச்சாட்டு இவர் முன்புபோல் நம்மிடத்தில் பிரியமாக இல்லையோ என்பது.  இரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ளவர்கள் அடிக்கடி இவற்றைச் சோதித்துப் பார்த்துக் கொள்வார்களே, இதைவிட அதிகமான சோதனை ஒரு கணவன் மீது நடத்தப்படுகிறது.
(தொடரும்)
-----------------------
வாழ்நாள் முழுவதும் இந்த மனைவிமார்கள் நடத்திக்கொண்டே இருக்கும் அமிலச் சோதனைகளில் என் நேசம், பாசம் உன்மீது குறையவே இல்லை என்று அன்பு மீட்டர் தெறிக்கிற அளவிற்கு உச்சபட்ச நிலையை பா(தர)சமாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் இந்தக் கணவன்மார்கள்! இல்லாவிட்டால் விவகாரம்தான்!
இந்த விஷயத்தில் ஆண்களுக்குக் கெட்டிக்காரத்தனம் போதவே போதாது என்பேன்.ஆண்களின் ஒவ்வொரு செயலிலும் ஓர் உள்ளர்த்தம் கண்டுபிடிக்கிற ஆற்றல் பெண்களுக்கு உண்டு.
அக்காளுடனும் மனைவியுடனும் ஒருவர் கோயிலுக்குப் போனார். (போச்சு! பிரச்னை ஆரம்பம்!)
அக்காவுக்கு வயது சற்று அதிகம். கார் கதவைத் திறந்துவிட்டார் இந்தத் தம்பி.காரிலும் அக்காவுடன் பழைய சம்பவங்களைப் பேசுவதில் சிலாகித்தார். அக்காவுக்கு அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொடுத்தார். தரிசன வரிசையில் அக்காவை முன்னே நிற்கச் சொன்னார்.புறப்படும்முன் கோயிலின் உள்ளே இருந்த கடையில் பலகாரங்களை ஒன்றிற்கு இரண்டாக வாங்கிக் கொடுத்தார்.அக்காவை அவர் வீட்டில் இறக்கிவிட்டார்.
கணவனும் மனைவியும் வீடு திரும்பினார்கள்.அவ்வளவுதான் வீட்டில் அர்ச்சனையை ஆரம்பித்தார் மனைவி.
‘‘ஆகாகா! அக்காவுக்கு என்னமா கவனிப்பு. எனக்கு ஒரு முறையாவது கதவைத் திறந்து விட்டிருக்கீங்களா? அர்ச்சனைத் தட்டை அவுங்களுக்கு வாங்கிக்கத் தெரியாதாக்கும்? உங்க அக்காவுக்கு தம்பியைக் கண்டுட்டாப் போதும். வழியெல்லாம் வாய்மூடாம பேசிக்கிட்டே வர்றீங்க. என்னோட வந்தா ஒரு வார்த்தையாவது பேசுவீங்களா? ஏதாவது கேட்டாக்கூட ஒரு வார்த்தையில்தான் பதில் வரும். சமயங்கள்ள அதுவும் இல்லை. அற்பக் காசுல அர்ச்சனை சீட்டு வாங்கலாம். அதுக்குக்கூட மனசு வரலை! ரொம்ப ஏழை பாருங்க! தரிசன வரிசையில அவ்வளவு பெரிய உருவம் சாமியை மறைச்சுக்கிட்டு நின்னா எப்படி?’’
நாங்க தரிசனம் பண்ண வேண்டாமா? அவுங்களுக்குக் கோயில் பிரசாதம் வாங்கிக்கத் தெரியாதாக்கும்?என்னை ஒரு முறையாவது கேட்டிருப்பீங்களா? வீட்டுக்குப் பலகாரம் வாங்கவான்னு. அக்கான்னா பாசம் பொத்துக்கிட்டு வருமே?நான் வந்தா கூடவே வர்றாளான்னு திரும்பிக்கூடப் பார்க்கமாட்டீங்க! அக்கா வந்தா மகாராணிக்கு நடக்கிற கவனிப்பெல்லாம் பிச்சை வாங்கணும்!ஏங்க இப்படி?நானும் பொம்பளைதாங்க!’’
ஐயோ!எப்பவாவது உடன் வருகிற அக்காவை நல்லா கவனிக்கணுமேன்னு பார்த்தா நம்மோட ஒவ்வொரு செயலுக்கும் இப்படியும் உள்ளர்த்தங்களா? திகைப்பில் மலைத்துப் பேச்சற்றுப் போனார் கணவர்!
சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த் எப்படி காய் நகர்த்துவார் என்று கூடக் கணித்துவிடலாம்!ஆனால் இந்த மனைவிமார்களின் காய் நகர்த்தல்களைக் கணிக்க எவ்வளவு கணவர்களால் முடியும்?
(தொடரும்)
--------------------------------
பாவம் இந்த ஆண்கள்! அவர்களுக்கு ஒன்றா இரண்டா? ஏகப்பட்ட சிந்தனைகள்.குடும்பத்தைப் பொருளாதாரத் தூண்களால் தாங்கிப் பிடிக்கவேண்டும்.
தாங்கிப் பிடித்துவிட்டால் அடுத்தகட்டமாக உயர்த்திப் பிடிக்கவேண்டும். ஆசைப்படாத மனைவிகள்கூட இருக்கலாம்.ஆனால் ஆசைப்படாத பிள்ளைகள் உண்டா? அதுவும் இந்தக் காலத்தில்? நம் சக்தி என்ன என்று உணராமல் அதற்கு அடுத்தகட்டமாக உள்ள எட்டாக் கனிகளை எப்படியும் அடையவேண்டும் என்றுதான் அவர்களது வயதிற்கு ஏற்ப ஆசைப்படுகிறார்கள்.
‘‘பள்ளியில் தந்த சைக்கிள் அதற்குள் காயலான் கடைக்குப் போட வேண்டிய நிலைமைக்கு ஆகிவிட்டது. எனக்கு 3000 ரூபாய் சைக்கிள் வேண்டும்’’ என்கிறான் பள்ளியில் படிக்கும் மகன். கலைநிகழ்ச்சியில் பங்கு பெறவேண்டும். அதற்குச் சிறப்பு உடை தைக்கவேண்டும்; வடக்கே டூர் போறாங்க பணம் கட்டணும் என்கிறாள் மகள். குருவி தானியம் சேர்க்கிற கதையாய் சேர்த்த பணத்திற்குப் பகீர் செலவுகள் வைக்கின்றன பிள்ளைகள்.
வளர்ந்த மகனோ மகளோ, நினைத்துப் பார்க்க முடியாத, தரத்தில் உயர்ந்த முதல் பத்து கல்லூரிகளுள் ஒன்றில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு குறிப்பிட்ட பிரிவுப் படிப்பைப் படிக்க ஆசைப்படுகிறார்கள்.அண்டா குண்டாவை அடகு வைத்துக் கொடுக்கக்கூடிய தொகைகளா இவை?பிள்ளைகளுக்குச் சம்பாதிக் கிறவர்களின் கஷ்டம் பெரும்பாலும் புரிவது இல்லை.‘‘என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது.வேற கல்லூரியோ கோர்ஸோ எனக்கு வேணாம்!’’என்று பிடிவாதம் பிடிக்குதுகள்.இவர்களுடன் அம்மாக்காரியின் கூட்டணி வேறு!
சாத்தியமே இல்லாத விஷயத்தை சாத்தியப்படுத்தவேண்டிய சவாலில் பல அப்பாக்கள் சிக்கித் திணறிப் போகிறார்கள். எமனின் பாசக் கயிறு உடனே ஆளைக் கொண்டு போய்விடுமாம். இந்தக் குட்டி எமன்களோ மெல்லக் கொல்லும் பாசக் கயிறுகளால் படுத்தி எடுக்கின்றனவே என அப்பாமார்கள் உள்ளத்திற்குள் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.
ஓர் ஆண் குடும்பத்திற்காக ஒவ்வொரு கட்டத்திலும் சக்திக்கு மீறிய சவால்களை எதிர்கொள்ளும்போது ஒன்று,அவன் தவறு செய்ய நிர்ப்பந்திக் கப்படுகிறான்.அல்லது வாழ்க்கையையே பணயம் வைக்குமளவிற்குச் சில முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது.
இந்த நிலையில் வழக்கமான குற்றச்சாட்டும் சேர்ந்துகொள்கிறது.
அது -
‘‘என்கிட்ட, பிள்ளைங்ககிட்ட கொஞ்சமாவது பாசமா, இருக்கீங்களா?’’ என்பது! நெஞ்சப் பரப்பில் பாகல் விதைகளைத் தூவிவிட்டு பேரீச்சம்பழம் கேட்கிறார்கள்? ரொம்பப் பாவம் இந்த ஆண்கள்!
--------------------------------------
'‘என்ன நீங்கள் ஆண்களுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள்? இவ்வளவு நாள் எங்களுக்கு வக்காலத்து வாங்கினீர்கள்! யாருடைய கட்சி நீங்கள்? எங்களுக்காக இவ்வளவு பரிந்து பேசுகிறீர்களே, அதுவும் ஓர் ஆணாக இருந்து கொண்டு என்று மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இப்படித் தடாலடியாக,‘ஆண்கள் ரொம்பப் பாவம்’என்று ஆரம்பித்து விட்டீர்களே’’என்றார் என் உறவினர் பெண் ஒருவர்.‘‘அந்தந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளை,வெளியில் சொல்லத் தயக்கப்படுகிற உள்ளக் கிடக்கைகளை, வெட்ட வெளிச்சமாக்கிப் போட்டு உடைக்கிறேன், வேறு என்ன?’’ என்றேன்.
ஒரு திருமணமாகாத இளைஞன் கை நிறையச் சம்பளம் வாங்கியதும் (இப்பத்தான் கொடுக்கின் றனவே உலக நிறுவனங்கள் கைக் கொள்ளாமல்!) தான் இதுவரை வாங்க முடியாத விஷயங்களையெல்லாம் வாங்குகிறான். நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத சௌகரியங்களைச் செய்துகொள்கிறான். இன்னும் சில பேர் ‘ஆட்டம்’ போட்டுத் தீர்க்கிறார்கள்.
இவனுக்கே திருமணம் என்றதும், சம்பளம் வாங்கியதும், ‘‘உனக்கு என்ன வேண்டும்? உனக்கு வாங்கியது போகத்தான் எனக்கு!’’ என்று புது மயக்கத்தில் நிதானம் இன்றிப் பேசுகிறான். அவள் அதிகம் ஆசைப் படாதவளாக அமைந்துவிட்டால் இவன் தப்பித்தான்.இல்லாவிட்டால் அடுத்த மாதச் சம்பளத்திற்கும் சேர்த்து இவள் வேட்டு வைத் துவிடுவாள். நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த இவன் இப்போது தேதிகளை எண்ண வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறான்.
பிள்ளை பிறக்கிறது (அட! படுவேகமாகச் சம்பவங்கள் நகர்கின்றனவே!) இருவருமாகச் சேர்ந்து கிடைக்கிற சம்பளத்தைப் பிள்ளையின் சௌகரியத்திற்குச் செலவழிக்க எ ண்ணுகிறார்கள். பிராண்டட் உடைகளை வாங்கி அணிந்த இவன் ‘699 ரூபாய்க்கு மூன்று’ வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற கதையாய், மனைவிக்கும் பிள்ளைக்கும் வீட்டிற்கும் என பட்ஜெட் போட்டு கடைசியில் தன் சௌ கரியங்களைத்தான் அவன் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.
அவனுடைய வாகனக் கனவுகளில் டயர்கள் நான்கும் கழன்று உருண்டு ஓடிவிட்ட நிலை. ‘எப்படி இருந்த நான்’ என்று விவேக் பேசிய வசனத்தை இவன் பேச வேண்டிய நிலை. தம் சுகங்களையெல்லாம் அபகரித்துக்கொண்ட இந்த இனிய எதிரிகளிடம் முகம் காட்டாமல் பாசமும் காட்ட வேண்டும்.இதுவும் அவனால் முடியும் சிறு அங்கீகாரமாவது அளிக்கப்பட்டால். பெண்களின் தியாகங்கள் போற்றப்படும் அளவுக்கு,அங்கீகரிக்கப்படும் அளவிற்கு ஆண்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படுவதாகவா நினைக்கிறீர்கள்?. (தொடரும்)
--------------------------------------------------------
தியாக தீபங்கள் பெண்கள்தாம்.இந்த விஷயத்தில் பட்டிமன்றம் நடத்தவெல்லாம் நான் வரமாட்டேன். ஆனால், ஆண்களின் தியாகங்கள் ஏன் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்பது இந்த சமூகத்தில் புரியாத புதிர்.
பணக்கார ஆண்களின் சம்பாத்தியம் சுளைசுளையாய் - லட்டு லட்டாய். ‘86 லட்சத்திற்கு வாங்கினேன்.நல்ல ஆஃபர் வந்தது.1.40க்கு வித்துட்டேன்’ என்றார்,நிலத்தில் ஒரு மெனக்கெடலும் செய்யாமல் 54 இலட்சம் இலாபம் பார்த்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.குடும்பத்திற்கு என இவர் என்ன தியாகம் செய்தார்? ஒரு ‘மண்’ணும் இல்லை.
ஆனால் நடுத்தர குடும்பத் தலைவர்களும்,ஏழைக் குடும்பத் தலைவர்களும் அன்றாடங் காய்ச்சிக் குடும்பத் தலைவர்களும் செய்யவேண்டிய தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
கோபமாகவே சொல்கிறேன் -கோவணம் மிஞ்சினாலே பெரிய விஷயம் பலர் கதையில்.
மில்லில் வேலை பார்த்து வந்த ஓர் அப்பா, எனக்குத் தெரிந்து வேலையை இராஜினாமா செய்து, கிடைத்த எல்லாப் பணத்தையும் வழித்துத் துடைத்து மகளின் திருமணத்தை நடத்தி முடித்தார்.சேமிப்பும் போச்சு,மாத வருமானமும் அடைபட்டுவிட்டது. ஓர் ஆணின் வாழ்நாள் சம்பாத்தியமும் சேமிப்பும் ஒரே திருமணத்தில் காலி. மகள் பாடு நிம்மதியாகக் குடும்பம் நடத்துகிறாள். அவ்வப்போது அப்பாவைப் பார்க்கையில், வசனத்திற்கு தேசிய விருது வாங்கிய பாண்டிராஜெல்லாம் மலைக்குமளவு இவள் வசனம் பேசிவிட்டுப் புகுந்த வீடு போய் விடுவாள்.வெயிலில் காயும் உப்புக் கணத்தின் நிலைதான் தந்தைக்கு.
மூன்று பெண்களைப் பெற்ற கொத்தனார் ஒருவரின் கதை மட்டும் என்ன சாதாரணமா? மனைவி, பெண்கள் என நான்கு பேரின் அல்லி ராஜ்ஜியத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் அப்பாதான் தியாகி. சனிக்கிழமை கூலி வாங்கி டாஸ்மாக் கடைக்குப் போகிறவனைப் பற்றித்தான் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன.தன் மாளிகைத் தேவதைகளின் தேவைகளையும் மளிகைத் தேவைகளையும் நோட்டுக்களைத் தேய்த்துத் தேய்த்துக் கொடுத்து வாங்கிவிட்டுத் தனக்கு ஆறு நாள் டீக் காசாவது மிஞ்சுமா என்று கணக்குப் போட்டபடி கண்களை மோட்டுவளையை பார்த்துப் பொருத்துகிற பரிதாப ஆண்களின் கதைகளை எந்த ஊடகம் வெளிச்சம் போட்டிருக்கிறது?
ராத்திரியில் சோறு பரிமாறுகையில் ‘உங்களுக்காகத்தாண்டி அப்பா மாடா உழைச்சு ஓடாத் தேஞ்சு போறாரு’என்று ஒரு வசனத்தை மட்டும் செயற்கையாய் உதிர்க்கிறபோது,‘‘ஆமாம்மா பாவம் இல்லம்மா அப்பா’’ என்கிற மகள்களின் கோரஸ் அந்த இரவோடு சரி.மறுநாளே,அப்பாவின் பொத்தல் பனியனையும் மறுபடியும் நூலாக மாறிக்கொண்டிருக்கிற சட்டையையும்  பற்றிக் கவலைப்படாமல் ‘நேத்து ஒரு சல்வார் பாத்தம்பா நானூத்தைம்பது ரூபாதாம்பா’என்கிறாள் ஒரு மகள்!சீலிங் பூசுகிறபோது கண்களில் கலவை விழுந்து,சிவந்து, உறுத்தலாகி, கண் டாக்டரிடம் காட்ட, வருகிற வாரக் கூலியிலாவது ஏதாச்சும் மிச்சம் பிடிக்கலாம் என்கிற கனவில் விழுந்தது மண்!
-----------------
கண் டாக்டர்கிட்ட காட்டத்தாம்மா பணம் வச்சிருக்கேன்.அடுத்த வாரம் கூலி வாங்கி அந்த சல்வாரை வாங்கித் தர்றேன்மா.’’
‘‘அடுத்த வாரம் அந்த சல்வார் இருக்குமோ என்னவோ! வித்துப் போச்சுன்னா அப்புறம் கிடைக்காதுப்பா.எனக்கு ரொம்பப் புடிச்சிருக்குப்பா. அருமையான டிசைன்பா.’’
பொண்ணு இப்படிப் பேசிட்டா நமக்குத்தான் கஷ்டம். பேசாமல் வாங்கிக் கொடுத்துவிடுவது நல்லது. கண்ணை அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவிற்கு வருகிறார்.
தன் கண்களைவிடக் கண்ணுக்குள் வைத்து வளர்க்கிற பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவது முக்கியம் என நினைக்கிறார் இந்தத் தந்தை.
கடந்த வார கட்டுரையைப் படித்துவிட்டு தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிற அழகுப் பெண்மணி ஒருவர் பற்களை நறநறக்காத குறைதான்.
தாயே! என்னோடு சண்டைக்கு வராதீங்க. என் கட்டுரையின் முதல் இரு வாக்கியங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.டோட்டல் சரண்டர்.
அதன்பிறகும் இதயத்தின் ஒரு மூலையில்கூட உங்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு இடம் தர முடியவில்லையா என்று கேட்டேன்.
‘‘ஒரு பொறுப்பற்ற தந்தை ஒரு குடும்பத்தில் அமையும் போதுதான் Bread-winner இன் (சம்பாதித்துக் கொட்டுகிறவரின்) அருமை என்ன என்பது அதன் உறுப்பினர்களுக்குப் புரியவரும் என்றதற்கு, 
‘‘பிரட் வின்னர்கள் இல்லாத எத்தனையோ குடும்பங்களில் பெண்கள் என்னமாய்ச் சமாளித்திருக்கிறார்கள் தெரியுமா?’’ என்றார்.
இடஒதுக்கீட்டு விஷயத்தில் பெண்களுக்கு விட்டுக் கொடுக்காத கோபமா இது? எல்லாமே நீங்கதான். தியாகத்தின் மறுவடிவம் நீங்களே.
ஆனால் இந்த விஷயத்தில் ஆண்களுக்கும் கொஞ்சம் பெருமை சேர்ப்பியுங்கள் என்றால், ஊஹும்!
(தொடரும்)  
----------------- 
கௌரவக் கொலைகளைப் பற்றி இப்போதெல்லாம் நிறையக் கேள்விப்படுகிறோம்.
ஓடிப்போனால் அகௌரவம் என்றால், ஓடிப் போனவர்களைக் கொலை செய்வது கௌரவம் சேர்க்கும் செயலாகிவிடுமா?

கௌரவக் கொலைகளின் தன்மைகளை ஆராய்ந்து பார்த்தால் பையன்களின் அப்பாக்கள் கொலைகள் செய்வது குறைவாகவும் ஓடிப்போன பெண்ணைப் பெற்றவர்களின் அப்பாக்களே இத்தகைய செயலில் அதிகம் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
ஓடிப்போன ஒரு பெண்ணைப் பெற்றவரின் அப்பா, ‘‘பிடிச்சிட்டு வாங்கடா அவளை (மகளை)! என் கையாலே கண்டந்துண்டமா வெட்டிப் போடுறேன்’’ என  உத்தரவிட்டபோது, பெண்ணின் பெரியப்பா  இப்படிச் சொன்னாராம், ‘‘உனக்கு மானம், கௌரவம் போகுதுன்னா நீ குத்திக்கிட்டு சாவுடா! ஏண்டா சின்னஞ் சிறுசுகளை வாழவிடாமப் பண்ணுறே?"

இன்னொரு பெண்ணின் கதையில் அப்பா இந்த விஷயத்தை அணுகியது நேர் மாறானது.
பெண் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது உடன் வேலை பார்த்த கேரளத்துப் பையன் ஒருவனின் வசீகரப் புன்னகையிலும் அவனது ஆங்கிலத்திலும் (அட!) கிரங்கிப்போய் மயங்கியே விட்டாள். ஆச்சரியமாய் இவள்தான் முதலில் கேட்டாள், ‘‘என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று.

பெண்ணின் அப்பாவுக்கும் உள்ளூர ஆசைதான், இந்த மலையாள மாப்பிள்ளையை அடைய. ஆனால், அண்ணன்காரன் இருக்கிறாரே, நம் குடும்ப கௌரவம் என்னாவது அது இது என்று அரிவாள்களோடு ஆளனுப்பி, தம்பி மகளை வெட்டியே போட்டுவிடுவார்.
இதிலிருந்து தன் மகளைத் தப்பிக்க வைக்க ஒரு பிரமாதமான யோசனையோடு களம் இறங்கினார் பெண்ணின் அப்பா!
(தொடரும்) 
---------------------------------------------
காதலில் ஈடுபட்ட மகளை, குடும்பப் பெரியவரான தன் அண்ணன் ஏதும் செய்துவிடப் போகிறார் என்பதற்காக சாட்சியில் நுழைந்த அப்பாக்காரர் செய்த பிரமாதமான செயல் என்ன தெரியுமா?
அண்ணனை ஒரு விடிகாலையில் தொலைபேசியில் அழைத்தார்.
நாம மோசம் போயிட்டோம்ணே.இந்தச் சிறுக்கியைப் படிக்க வைச்சு வேலையில சேர்த்து விட்ட பாவத்துக்கு நல்ல பரிசா வாங்கிக் குடுத்துட்டாண்ணே! வெட்டணும்ணே அவளை! நானே வெட்டுறேண்ணே! காதலிக்கிறாளாம் காதல். கூடவே வேலை பார்க்குற பையனாம்ணே.

கேரளாவாம். ஏண்ணே! நம்ம சாதியில மணிமணியாப் பயலுக இல்லை? இந்தச் சிறுக்கி மவ எதுக்குண்ணே சிவப்புத் தோலைப் பார்த்து மயங்கணும்? பெத்து வளர்த்து ஆளாக்கினோமேண்ணே... மனசெல்லாம் திகுதிகுன்னு வருதுண்ணே, நானே என் கையால வெட்டிப் போடுறேண்ணே அவளை.நம் குலத்தோட மானத்தைக் கெடுக்க வந்த இவ நமக்குத் தேவையாண்ணே?’’
‘‘தம்பி சும்மா இரு! பதட்டப் படாதே: நான் இருக்கேன்ல!"
‘‘நீங்க சும்மா இருங்கண்ணே! இந்த விஷயத்தில உங்களை நான் சம்பந்தப்படுத்துறதாவோ,(அட்ரா சக்கை!)உங்க பேச்சை இந்த விஷயத்துல கேக்குறதாவோ இல்லை."
‘‘டேய் தம்பி! சும்மா இரு! அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுப்புடாதே!"
‘‘இல்லண்ணே... என்னை மன்னிச்சுடுங்கண்ணே. எல்லா விஷயத்துலயும் இந்தத் தம்பி உங்க பேச்சை இதுவரை மீறினது இல்லே.இந்த விஷயத்துல உங்க பேச்சுக்கு நான் கட்டுப்படுறதா இல்லை. இதை நீங்க தப்பா எடுத்துக்குனாலும் பரவாயில்லை (அண்ணே!என் மகள் விஷயத்துல ஒதுங்கிக்குங்க நீங்க!)ண்ணே என்று, அண்ணன் விஷயத்தைக் கேள்விப்பட்டு அரிவாளைத் தூக்குமுன் இவர் சாதுரியத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
பெரியவர் தன் மனைவியிடம் இப்படிச் சொன்னார்.

‘‘ஏண்டி! உன் கொழுந்தன் என்னடி இந்தக் குதி குதிக்கிறான். என்னை மீறி ஒரு வார்த்தை பேச மாட்டான்.இப்ப என்னையே ஒதுங்கிக்கிங்கண் ணேங்குறான்.பரமசாதுன்னு நினைச்சுட்டிருந்தேன்.வெட்டுறேன் குத்துறேன்னு எனக்கு மேலதவ்வுறாண்டி.சாது மிரண்டாக் காடு கொள்ளாதும் பாங்க.சரியாத்தாண்டி இருக்கு.நான் போய் சமாதானப்படுத்திட்டு வர்றேன்."
‘‘என்னன்னு சொல்லி சமாதானம் பண்ணப்போறீங்க?
‘‘அட சின்னஞ் சிறுசுங்க எப்படியோ கண்ணு மறைவா எங்கேயோ வாழ்ந்துட்டுப் போகுதுங்க.இதுக்கு நீ ஏண்டா கொலைகாரப் பட்டம் சுமக்கப்போறேன்னுதான்!'’
(தொடரும்)
-------------------------------------
-----------
ஒர் உணர்ச்சிபூர்வமான அண்ணனிடமிருந்து தன் மகளைக் காப்பாற்ற தம்பி கையாண்ட சாதுரியத்தைப் பார்த்தீர்களா? மனிதர் இதில் வென்றும் விட்டார்.

என் மகள் எங்கேயோ கண்காணாத இடத்தில் நன்றாக வாழ்ந்து விட்டுப் போகட்டும்; நீ ஒன்றும் அவள் கதையை முடிக்க வேண்டியதில்லை; அவள் தேர்ந்தெடுத்துக்  கொண்ட வாழ்க்கையை அவள் வாழ்ந்து பார்க்கட்டும்; இது நெருப்பாறு; அதில் நீ நீந்தப் பார்க்காதே! வீணாகிவிடுவாய். இது அதல பாதாளம். அதில் காலை வைத்தால்  உருத்தெரியாமல் போய்விடுவாய் என்றெல்லாம் நான் ஆயிரம் சொல்லலாம். எவையுமே அவள் காதில் விழப்போவது இல்லை.

அவளைக் கவர்ந்த ஆடவனின் ஆண்மைமிகு தோற்றமும் அவனது உடை உடுத்தும் தோரணையும் அவனது நகைச்சுவை உணர்வும், துணிவும் தன்னம்பிக்கையும், தான்  சாய்வதற்குரிய தோள்கள் இவைதாம் என்பதை அவளுக்கு மறைமுகமாக வழிகாட்டிவிட்டன. இனி நல்லதோ கெட்டதோ நீ அனுபவி. இது மகளின் கட்டவிழ்ந்த காதலுக்கு  தந்தை தந்த மறைமுக அனுமதி.

இனி மகளின் உள்ளுணர்வு பேசுகிறது. பருவமடைந்தது பன்னிரெண்டில் என்றால் அதற்குப் பிறகு இதற்கு இணையான வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு  மாதமும் இயற்கை அவளுக்கு நீ தாயாகத் தகுதியாகிவிட்டாய் என்று சொல்லியபடியே இருக்கிறது.

பிறந்தது முதல் இருபது ஆண்டுகளும் இதைவிடச் சற்றுக் கூடுதலாக வாழ்வது உங்களுடன் (பெற்றோருடன்) என்றால், இதைப் போல் இரு மடங்குக் காலம்  வாழப்போவது எனது வாழ்க்கைத் துணையுடன்.

எனக்கானவன் இவன்தான் என்று என் உள் உணர்வு சொல்கிறது. இவனை விடச் சிறந்தவனை நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துவிட முடியும் என்று தோன்றவி ல்லை. என்னை என் போக்கில் விடுங்கள்.

உள்ளத்திற்குள் இப்படி அவளுக்கு வண்டிவண்டியாய்க் கனவுகள்; ஆசைகள். இதில் ‘‘பெத்து வளத்து ஆளாக்கின எங்களை உதாசீனப்படுத்திட்டு, நேத்து வந்தவன்  முக்கியம்னு போயிட்டியேடி!’’ என்கிற அம்மாவின் சென்டிமென்ட் வசனம் அடிபட்டுப் போகாமல் என்ன
செய்யும்?

(தொடரும்)
----------------
கௌரவம் படத்தில் நடிகர் சிவாஜி பேசுவதாக ஒரு வசனம் வரும்.‘‘கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து,ஆத்தைவிட்டுப் பறந்து போயிடுத்து!’’

‘கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து’ என்று அந்தக் கிளியைச் சுற்றியிருப்பவர்கள் உணராமல் போவதன் காரணம் என்ன? வாழ்க்கையில் நம்மைச் சார்ந்து இருப்பவர்களின் உணர்வுத் தேவைகளையும் உள்ளத் தேவைகளையும் உன்னிப்பாகக் கவனிக்காமல், இதைவிட முக்கியமாகப் பொருளாதாரத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதுதான்.

அதெப்படி உள்ளத்திற்குள் புகுந்து ஒன்றைக் கண்டுபிடிப்பது?

நீண்ட உரையாடல்,அதாவது மனம் விட்டுப் பேசவல்ல உரையாடல் மூலம் இது சாத்தியம்.குவளைக்குள் கற்களைப் போட்டு நிரப்பி காகம் நீர் எடுத்ததுபோல்,தகுந்த சொற்களைப் போட்டு உள்ளத்திற்குள் புதைந்து கிடக்கும் உணர்வுகளைக் கொண்டு வர முடியும்.

இந்தக் காலத்துப் பெற்றோர் பலர் எங்கே மனம் விட்டு உரையாடுகிறார்கள்? ராணுவ கமாண்டுகளை அல்லவா பிள்ளைகளிடம் வழங்குகிறார்கள்? அல்லது, பேசினால் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லிவிடுவான்/ள் என்று அலறுகிறார்கள். பிள்ளைகளிடம் மனம்விட்டு நல்லபடியாகப் பேசுவது அவர்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்றே பயப்படுகிறார்கள். (அல்ல இது உங்களுக்குத்தான் சாதகமாக முடியும்.)

என் உறவினர் குழந்தை ஒன்று அடிக்கடி மண்ணைத் தின்றுகொண்டே இருந்தது.இது ஏன் என்று எவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. மண்ணைத் தோண்டிய விரல்களில் துணிகளைச் சுற்றிப் பார்த்தார்கள். வேப்பெண்ணெயை அதில் ஊற்றிப் பார்த்தார்கள். குழந்தையா அது? வானரம்! இவற்றை மீறி மண் தின்றுகொண்டே இருந்தது. ‘மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். தீர்வு சொல்வார்’ என்றேன். நம்பிக்கையின்றி அழைத்துப் போனார்கள். டாக்டர் பிரமாதப்படுத்தினார்.

இதற்கு பைக்கா என்று பெயர். இரத்த சோகையாக இருக்கலாம். இது ஒரு வகை டெபிஷியன்சி. பெண்கள் மாங்காய், சாம்பல் தேடுகிறார்களே அதுபோலத்தான் இதுவும். ‘இந்த மருந்தைக் கொடுங்கள். குழந்தை மண் சாப்பிடுவதை நிறுத்திவிடும்.’  அவர் சொன்னது அப்படியே நடந்தது.

இந்தக் காலத்து இளசுகளுக்கு வீட்டில் அபெக்ஷன் டெபிஷியன்சி! (பாசப்பற்றாக்குறை) எனவே, இதை ஈடுகட்ட சின்னஞ்சிறுசுகள் வெளியில் தேட,பெரிசுகள் இது புரியாமல் இவர்களைக் கடிந்து கொண்டும் கௌரவப் போர் புரிந்துகொண்டும் இருக்கிறார்கள்..

(தொடரும்)
‘‘எனக்கெல்லாம் அம்மா அப்பா பார்த்து வைக்கிற மாப்பிள்ளைதான். இந்தா!இவனுக்குக் கழுத்தை நீட்டு என்று யாரைச் சொல்கிறார்களோ அவர்களுக்குக் கழுத்தை நீட்டுவேன். மறுவார்த்தை பேசமாட்டேன்’’ என்று அந்தக் காலத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் காலத்துப் பெண்களுள் எத்தனை சதவிகிதம் பேர் இந்த வாக்கியத்தை எக்ஸ் பாணியில் சொல்வார்கள் என்கிறீர்கள்? பெற்றோர் சுட்டுவிரல் காட்டியதற்குக் கழுத்தை நீட்டியவர்களுள் எத்துணைப் பேரின் வாழ்க்கை வீணாகிப் போனது என்கிறீர்கள்?

இந்த விகிதாசாரத்தைவிட, இவர்களாக (இளசுகள்) தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைத் துணைகள் விஷயத்தில் நடந்த தவறுகளின் சதவிகிதம் அதிகமல்லவா?

ஆனால் இன்றைய பெற்றோர் எப்படி? கடமைகளைக் கடனே என்று செய்து முடிக்கிற குணாதிசயமே அதிகம் தலைதூக்கி நிற்கிறது. காரணம், வாழ்வின் முக்கியத்துவங்கள் (priorities) இன்று மாறிப் போய் விட்டன.

‘‘எவனையாவது காதலிச்சுத் தொலைடீன்னாலும் கேக்கமாட்டேங்குறா!’’ என்று என்னிடம் ஒரு தந்தை சொன்னபோது, தந்தைகள் பல இரகம்; இவர் எதிலும் அடங்காத புது இரகம் என்று எனக்குத் தோன்றியது. இத்தனைக்கும் இவர் காதல் திருமணம் செய்து கொண்டு,தன் இனத்திலும் பையன் கிடைக்காமல் மனைவி இனத்திலும் பையன் தரமுடியாது என்று மறுக்கப்பட்டவரா என்று பார்த்தால்,அதுவும் இல்லை.

‘‘ஏன் சார் இப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தீர்கள்?’’ என்று இவரிடம் கேட்டதற்கு,

‘‘எந்த வரனைக் கையில் கொடுத்தாலும் இது சொத்தை, இது சொள்ளை என்கிறாள். எனக்குச் ‘சே’ன்னு போச்சு. பின்னே என்ன சார்? மாப்பிள்ளைன்னு பார்த்தா தேவலோகத்திலேர்ந்தா இறக்குமதி பண்ண முடியும்? ஒன்றிரண்டு குறைகள் இருக்கத்தானே செய்யும்?’’ (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சற்றே தாழ்ந்த குரலில்) எனக்கு வந்து பொறந்த ஏழரை நாட்டுச் சனி சார் இவ! மனுஷனை உயிரோட கொல்றா சார்! எவனைவேணும்னாலும் இழுத்துக்கிட்டு ஓடட்டும் சார்! தாங்க முடியலை சார் இவளோட டார்ச்சர்!’’ என்றாரே பார்க்கலாம்! இப்படி உதறிவிட்டுப் பேசுகிற ஒரு தந்தையை ஒரு தலைமுறைக்கு முன் பார்த்திருக்க முடியுமா? என்னதான் இவர் காதல் திருமணம் செய்து கொண்டு பெற்ற பிள்ளையென்றாலும் இப்படிப் பேசியிருப்பாரா?

இப்போதெல்லாம் பாசம் என்பது எல்லையோடுதான். மிச்சமெல்லாம் பாசாங்குதான்!

(தொடரும்)
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் பாசம் பாசாங்குப் பாசமே. மேலை நாடுகளிலி ருந்து நாம் உடைகளையும் டாலர் களையும் பவுண்டுகளையும் யூரோக்களையும் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை.  அவர்களின் போலியான கலாசாரங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தலைமுறைக்கு முந்தைய பெற்றோர், தாத்தாபாட்டிமார்கள் தங்கள் வாரிசுகளுக்காகவே வாழ்ந்தார்கள்.அவர்களுக்காக எத்தகைய தியாகங்களையும் செய்ய முன்வந்தார்கள்.இன்று அப்படி எதிர்பார்க்க முடியாது. இன்னும் ஒரு தலைமுறை சென்றால் பிள்ளைக்குச் சிறுநீரக தானம் தரவேண்டிய சூழ்நிலை வந்தால்,மறுப்பைத் தவிர மற்றதை எதிர்பார்க்க இயலுமா என்பது சந்தேகம்தான்.

மேலைநாட்டுப் போலித்தனம்கூட ஒரு வகையில் நல்லதோ என்று தோன்றுகிறது.உதாரணமாக பெத்துப் போட்டால் அத்துப் போட்டுவிடும் இயல்பு உள்ள இவர்களுள் சிலர்கூட,உள்ளுக்குள் கண்டிப்பையும் கடுமையையும் வைத்துக்கொண்டு வெளியில் அன்பு காட்டுகிறார்கள்.

சீமீs னீஹ் லீஷீஸீமீஹ்; ளிளீ னீஹ் லீஷீஸீமீஹ் என்கிறார்கள். எதற்கெடுத்தாலும் நோ என்பதைச் சொல்ல நேர்ந்தாலும் அதைக்கூட அழகாகச் சொல்கிறார்கள்.அடிப்பது என்பது பெரும்பாலும் இல்லை. அடித்தால், பிள்ளைகள் காவல் நிலையத்திற்குப் பேசிப் புகார் செய்துவிட வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் சொல்ல வேண்டும் என்பதுகூட இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் செய்தால் கூடப் போதும்;பெற்றோரைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

மேலை நாடுகளில் சில பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிரி நாட்டவர் களைப் போல. பக்கத்து வீட்டில் பிள்ளை அடிக்கடி அழுதுகொண்டே இருக்கிறது என்று தொலைபேசியில் சொன்னால் போதும் பத்தாவது நிமிடம் காவல்துறை வாகனம் ஆஜர்!இதனால்தானோ என்னவோ மேலை நாடுகளில் பிள்ளைகள் மீது கையை வைப்பதே இல்லை. ஆனால் நாமோ உண்மையான அன்பைக்கூட அடி கொடுத்தே வெளிப்படுத்துகிறோம்.

அன்பு ஏன் அடியாக மாறுகிறது. அடுத்த வாரம்...
-------------------------------------
அன்பை நல்லபடியாகவும்,கோபத்தை எதிர்மறை உணர்ச்சியோடும் வெளிப்படுத்துவதுதானே உலக இயல்பு?
இந்தியத் தாய்கள் அன்பைக்கூட முரட்டுத்தனமாகவே வெளிப்படுத்துவார்கள். வெளியில் சொல்ல என்ன வெட்கம்? நானே என் தாயிடம் பழுக்கக் காய்ச்சப்பட்ட கரண்டியால் சூடு போடப்பட்டிருக்கிறேன். இத்தனைக்கும் என் தாய்க்கு என்மீது அளவு கடந்த பாசம்.‘‘சின்னப் பிள்ளையா இருந்தபோது ஏம்மா எனக்கு சூடு போட்டே?’’ என்று ஒரு முறை கேட்டபோது, ‘‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீ நல்லா வரணுமேங்கிற அக்கறை!’’ என்றார்கள்.
தன் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு தாய் ஒரு சாலையில் நடந்து செல்ல,திடீரென அந்தப் பிள்ளை கையை விடுவித்துக்கொண்டு சாலையின் குறுக்கே ஓடுகிறது. அப்படி ஓடும்போது சாலையில் வந்த ஒரு வேன்காரர் இதை எதிர்பார்க்காதவராய் சடன் பிரேக் போடுகிறார்.வண்டி கிறீச்சிட்டு நிற்கிறது.சாலையில் டயர் தேய்ந்த நாற்றமும், அதனுடன் சூட்டில் எழுந்த புகையும் கிளம்ப,அந்தத் தாயைப் பார்த்து வேன் டிரைவர் கத்துகிறார்.
இந்தச் சூழலில் ஒரு சென்னை வேன் டிரைவராக இருந்தால் அன்பாகவா பேசுவார்?

‘‘அறிவு இருக்கா உனக்கு? புள்ளையைப் பொறுப்பா ரோட்ல கூட்டிக்கிட்டு போற இலட்சணமா இது? புள்ளையும் செத்து நானும் ஜெயிலுக்குப் போயிருப்பேன். உம் புள்ளை சாகுறதுக்கு (?!) என் வண்டிதானா கிடைச்சுது?’’ என்று ஆரம்பித்து இன்னும் என்னென்னவோ பேசியிருப்பார். ‘‘ஏம்மா புள்ளையைப் பார்த்துக் கூட்டிக்கிட்டுப் போறதில்ல?’’ என்று ஒரு பெரியம்மா வேறு தன் பங்கிற்கு பக்க வாத்தியம் வாசிக்க - தன் மீது பாய்ந்த அமில வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அந்தத் தாய்,
‘‘ஏன் கண்ணு கையைப் பிரிச்சுக்கிட்டு ஓடுறே?’’ என்று அந்தக் குழந்தையைப் பார்த்துக் கேட்பாளாக்கும்?

கோபம் பொங்க,அவமானம் பிடுங்கித் தின்ன அந்தக் குழந்தையை நான்கு சாத்து சாத்துகிறாள். இந்த அடிகள் அன்பின் - அக்கறையின்- பாசத்தின் வெளிப்பாடுகள் என்பதை மறுக்கமுடியுமா? 
(தொடரும்)
---------------------------
அன்பை அன்பாக வெளிப்படுத்தாமல் கோபமாக மாற்றி வெளிப்படுத்துவதன் உளவியல் பின்னணி என்ன என்று என் அறிவுச் சக்திக்கு உட்பட்டுச் சிந்தித்தேன்.
தங்கத்தைப் பெறவேண்டிய தகுதி உள்ளவருக்கு அது மறுக்கப்படுவானேன்? தங்கத்தை இரும்பாக மாற்றிக் கொடுக்கும் இந்த இரசவாதத்தின் பின்னணி என்ன? இது பிடிபட எனக்கு வெகு நேரம் ஆயிற்று.தோன்றிய விடையுமேகூட முழுமையான விடை என்றோ தீர்ந்த முடிவென்றோ நான் சொல்ல மாட்டேன்.

உளவியல் படித்த மேதாவிகளிடமும் அனுபவஸ்தர்களிடமும் இதை விட்டு விடுவோம்.
என் தாய் சொன்ன, ‘‘உன் மீது எனக்கு அதிக பாசம். அதனால்தான் உனக்கு சூடு’’ என்கிற செய்தி வட்டத்தை விட்டு வெளியே வந்தால், உன் மீது எனக்கு முழு அதிகாரமும் கட்டுப்பாடும் உள்ளது தெரியுமா? என்று இவர்கள் சொல்லாமல் சொல்லுகிற செய்திதான் அதற்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அன்புத் தங்கம் கோப இரும்பாக மாற்றித் தரப்படும்போது அதை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறபோது என்ன செய்கிறார்கள்?அதை அலுமினியமாக்கித் தருவார்கள்.
ஒரு புகழ்மிக்க சம்பவம் தெரியுமல்லவா உங்களுக்கு? தன் மகனால் மிக மோசமாக நடத்தப்பட்ட ஒரு பெரியவர் இறந்து போனாராம். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த மகாமோசமான நிலையிலிருந்த தட்டை அந்த மகன் தூக்கிப் போனானாம். அப்போது அந்தப் பெரியவரின் பேரன் சொன்னானாம். ‘‘அப்பா! தாத்தாவுக்கான தட்டைத் தூக்கிப் போட்டுடாதே! என்கிட்ட குடுத்து வை. உன்னோட கடைசிக் காலத்துல உனக்குப் பயன்படும்ல?’’

புலிக்குப் பல் ஒன்றுதான். அது இரையைக் கௌவவும், தன் குட்டிகளை இடம் மாற்றவும் அதே பல்லைத்தான் பயன்படுத்துகிறது. இந்தக் கலை பல பெற்றோருக்குத் தெரியாததால்தான் அவதியே! மகன்மீது ஆதிக்கக் குணத்தோடு நடந்துகொண்ட ஒரு தந்தை, பின்னர் படாதபாடு பட்டார்.அந்தச் சம்பவத்தை உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும்.
---------------------------
Tuக்ஷீஸீவீஸீரீ tலீமீ tணீதீறீமீ என்கிற வாக்கியத்திற்கு ஆங்கில அகராதியில் இருப்பது என்னவோ சாதாரணப் பொருள்தான்.
ஆனால் மனித உறவைப் பொறுத்தவரை இதற்கு மிக ஆழமான அர்த்தம் உண்டு. அதிலும் நல்ல தொனியில் சொன்னால் நல்ல பொருள். இதற்கு வேறு ஒரு கடுமையான உட்பொருளும் உண்டு.இதை அப்படியே உடைத்துச் சொல்வது என்றால் பழிவாங்குவது.கடந்த இதழில் நான் உங்களுக்குச் சொல்வதாகக் குறிப்பிட்ட சம்பவம் இந்த இரகத்தைச் சேர்ந்ததுதான்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் சொத்துக்காக மகனைக் கொன்ற செய்தியை ஒரு தமிழகச் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. என்ன கொடுமை இது! நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.முதுமையை இளமை பழிவாங்குவதுதான் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இதுவும் எல்லை கடந்து விதிவிலக்காக ஆகவேண்டும் என்று முதுமையே முயற்சி செய்துகொண்டிருக்கிறது. உறவுச் சீர்கேடுகளுக்கு இதைவிட வேறு ஓர் உதாரணம் வேண்டுமா? இதற்குத் தமிழகமா வழிகாட்ட வேண்டும்!
நான் குறிப்பிடும் அப்பா மகனைக் கண்டித்து வளர்க்கவேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.அன்பு காட்டி நடத்திச் செல்லவேண்டும் என்கிற கோணத்தில் நம்பிக்கையற்றவர்.
60களில், அப்பாக்கள் ஏதும் சொன்னால் பிள்ளைகள் எவரும் மறுவார்த்தை பேசமுடியாது. அப்பாக்கள் அடிக்கிற அடியில், பிள்ளைகள் பெறுகிற வீக்கங்களுக்கும் இரணங்களுக்கும் ஒத்தடம் கொடுக்கிற வேலைதான் அந்தக் காலத்து அம்மாக்களுக்கு. ‘‘ஏங்க பிள்ளையைப் போட்டு இப்படி ஆடுமாடு மாதிரி அடிக்கிறீங்க?’’ என்று 80களில் கேட்க ஆரம்பித்த தாய்களைப்போல் இல்லை அவர்கள்.60களில் அம்மாக்க-ளெல்லாம் வாயில்லாப் பூச்சிகள்தாம். தடுத்தால் இவர்களுக்கும் சேர்த்து அடிவிழும்.
‘‘அப்பா குணம் தெரிஞ்சதுதானே? அப்புறம் ஏண்டா இப்படி அடி வாங்கிச் சாகுறே?’’ என்பவைதாம் அம்மாவின் சமதான மொழிகள்.
இப்படிப்பட்ட அப்பாவிற்கு மகனாக வாய்த்தவர்தான் என் பள்ளி நண்பர்.
(தொடரும்)
------------------------------
என் பள்ளி நண்பரின் அந்தக் காலத்து அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

மாலையில் வீட்டிற்குப் போகும்போது கால்கள் சுத்தமாக இருக்கவேண்டும். பள்ளியிலோ தண்ணீர் வசதி கிடையாது. அப்படியே குழாயில் தண்ணீர் வந்தாலும்,  எவனாவது ஒரு குறும்புப் பயல், வகுப்பு நடக்கிற நேரம் ஒற்றை விரலைக் காட்டி வெளியேறி வந்து, குழாயைத் திறந்து பயன்படுத்திவிட்டு, அதை வேண்டு மென்றே அடைக்காமல் விட்டுவிட்டுப் போய் விடுவான். பள்ளி முடிந்து வெளியேறுகிற பையன்களுக்குச் சொட்டுத் தண்ணீர் இருக்காது.

இதனால் அழுக்குக் கால்களோடு வீடு சேர்வான் என் நண்பன். இதற்கு வாங்குவான் பாருங்கள், உங்கள் அடி, எங்கள் அடி இல்லை!
இந்த நண்பனைப் பார்க்கப்போன பாவத்திற்கு எனக்கும் திட்டு உண்டு. ‘‘இவனுக்கு நீதான் கூட்டாளியாக்கும்? காலிப் பயலே! உன்னோட சேர்ந்துதாண்டா என்  மகன் இப்படி வீணா(?) போனான். வர்றேன். உங்கப்பாகிட்டே வந்து சொல்றேன்’’ என்று அடிவயிற்றில் நெருப்புப் பந்தை வைப்பார் அந்த நண்பனின் அப்பா.
பள்ளி இடைவேளை நேரத்தில் தன் பொல்லாத தந்தையைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வான் நண்பன். ஒரு முறை மதிப்பெண் பட்டியலில் இவனே  கையெழுத்துப் போட்டுக் கொடுத்து (திஷீக்ஷீரீமீக்ஷீஹ் எந்த வயதில் ஆரம்பிக்கிறது பாருங்கள்!) மாட்டிக்கொண்டதற்கு இவனது அப்பா கொடுத்த தண்டனை  வித்தியாசமானது.

வெல்லத்தைக் கரைத்து நண்பனின் உடம்பெல்லாம் தடவி அவனது கையையும் காலையும் கட்டி வீட்டிற்கு வெளியே உருட்டிவிட்டு விடுவார். கட்டெறும்பும்  சிற்றெறும்பும் கடித்துக் கடித்து உடம்பெல்லாம் கண்டு கண்டாய் வீங்கிவிடும் இவனுக்கு. என்னிடம் வந்து உடம்பைக் காட்டி அழுவான்.
‘‘என்னடா! சித்தி சொல்லி நடக்கிற கொடுமையாடா?’’ என்று கேட்டால், ‘‘எனக்கு அம்மாதான். சித்தி கொடுமையெல்லாம் இல்லே. அம்மா வாயே திறக்கமாட் டாங்க. திறந்தா அவுங்களுக்கும் பூசைதான்.’’ காலங்கள் உருண்டோட, தலைகீழாக ஆன அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள்? வேறு என்ன tit for tatதான்!
(தொடரும்)
--------
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும் என்பார்களே, அது என் நண்பனுக்கு வந்தது.
அப்பாவை விதவிதமாகத் துன்புறுத்திப் பார்த்தான்.முதலில் க்ஷிமீக்ஷீதீணீறீ tஷீக்ஷீtuக்ஷீமீ. எல்லோரும் இருக்கிற சபையில் நன்கு காலை வாருவான்.
தந்தை இதில் காயப்படவில்லை என்று புரிய ஆரம்பித்ததும் நண்பனின் பேச்சில் வீரியம் அதிகமானது.
நண்பனின் தந்தை இதையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்கிற பின்னணியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

ஓட்டல் தொழில் செய்து கொண்டிருந்த இவருக்கு,அதில் நடந்த சில நம்பிக்கைத் துரோகங்களால் ஏகப்பட்ட நஷ்டம். வாழ்ந்த வீட்டை விற்றுக் கடனை அடைக்கவேண்டிய நிர்ப்பந்தம். இதற்கிடையில் நண்பன் செய்த தொழில் நன்கு சூடு பிடிக்க ஆரம்பித்து விடவே,இவன் கையை உயர்த்திவிட்டான்.‘‘பேசாம வீட்ல இருங்க. வீட்டை வித்துக் கடனை அடைக்கிறேன்னு எனக்கு ஒண்ணுமே இல்லாமப் பண்ணிட்டீங்க.மிச்சம் இருக்கிற பணத்தையாவது குடுங்க. எனக்கு வேணும்.’’
‘‘வேணாம். கடைசிக் காலத்துல உன் கையை எதிர்பார்த்து வாழற நிலைமை வந்துடும். எங்கேயாச்சும் வட்டிக்குக் குடுத்து வாங்கிக்கிறேன். எனக்குப் பிறகு எடுத்துக்கோ!’’

Do not put all your eggs in the same basket' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.இதை அப்படியே மொழிபெயர்ப்பது பொருத்த-மில்லை.‘உன் எல்லாப் பணத்தையும் ஓரிடத்தில் முடக்காதே’ என்று இதை அர்த்தப்படுத்தலாம். நண்பரின் அப்பா இந்தப் பழமொழியை அறிந்திருக்கவில்லை.உயிர் நண்பர் கேட்டார் என்று கையிலிருந்த எல்லாத் தொகையையும் அவரிடம் கொடுத்தார். 100 சதவிகிதத்திற்கும் வேட்டு வைத்தார் அந்த நண்பர். வலையில் சிக்கும் சில உயிரினங்கள் வலையை மேலும் தானாகக் கண்டபடி பின்னிக்கொள்ளுமே அந்த நிலை இந்தத் தந்தைக்கு. மகனுக்கு இது பெரிய வாய்ப்பாகிப் போனது.
(தொடரும்)

நண்பனின் தந்தை, தம் பெயரில் இருந்த ஒரே கடைசி சொத்தையும் காலி செய்து தனக்கும் சரி, தலைமுறைக்கும் சரி ஒன்றுமே பாக்கி வைக்காமல்  நிர்மூலமாக்கியதால் நண்பனின் கொட்டம் அதிகமாகிப்போனது. எல்லாம் நன்றாக இருந்தாலே இந்தக் காலத்து வாலிபங்கள் பெற்றோர் பேச்சைக் கேட்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நண் பனின் தந்தை வழித்துத் துடைத்து எல்லாவற்றையும் எடுத்திருந்தால் கேட்கவும் வேண்டுமா?

இப்போதெல்லாம் நல்ல நிலைமையிலேயே தந்தை - மகன் உறவு கிட்டத்தட்ட ஒரு வழிப் பாதைக் கதைதான். எனக்குத் தெரிந்த ஒருவர், நல்ல சுய மு ன்னேற்றப் பேச்சாளர். பல நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் அழைப்பின் பேரில் போவார்.  ஒரு நாள் பேச்சு; மூன்று நாள் பேச்சு என்று என்ன பொறுப்பைக் கொடுத்தாலும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டுத்தான் வெளியேறுவார். இவரது வகுப்பில் அசந்து போனவர்கள், இவர் எண்ணை வாங்கிக் கொண்டு, ‘‘சார்! எனக்கும் என் மனைவிக்கும் எப்பப் பார்த்தாலும் சண்டை! எங்க ரெண்டு  பேருக்கும் கௌன்சிலிங் கொடுக்க முடியுமா? குறிப்பா, அவளுக்கு நீங்க நிறைய (அப்படிப் போடுங்க!) எடுத்துச் சொல்லணும்’’ இன்று இவருக்குப் பேசினால்,

‘‘வாங்க சரி பண்ணிடுவோம்’’ என்பார்.
என்னவோ ஏதோ சொல்லி, கொஞ்ச நாள் வண்டி சரியா ஓடும்படி செய்துவிடுவார். ஏற்றிய மருந்தின் வீரியம் இறங்கியபிறகு பழைய குருடி கதவைத் திறடி  கதைதான்.
படிக்காத பிள்ளைகளைப் படிக்க வைப்பார். படிக்கும்போது காதலிக்கிற இளசுகளைப் பிரித்து வைப்பார். பெரும்பாலும் சாதிப்பார்.
ஆனால் இவர் ஒரு முறை என்னிடம் ஒப்புக் கொண்ட விஷயம் ஆச்சரியமானது. ‘‘என் மகளோ, மகனோ நான் சொன்னா கேட்கவே மாட்டாங்க!’’

இவர் கொடுக்கிற மருந்து வெளியாருக்கு நன்கு வேலை செய்கிறது. ஆனால் சொந்த வீட்டில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. ஏன் இப்படி?
‘‘இந்த அப்பனுங்களுக்கும் அம்மாக்களுக்கும் வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும் அட்வைஸ் பண்றதே வேலை!
அதைப் பண்ணாதே; இதைப் பண்ணாதே! உன் இலட்சணம் எனக்குத் தெரியாதாக்கும். கிழிச்சே போ! வீட்டுக்கு உபயோகமா ஏதாச்சும் பண்றியா? காசு அரு மை கொஞ்சமாவது தெரியுதா உனக்கு? சம்பாதிச்சு செலவு பண்ணு! யார் உன்னை வேண்டாங்குறா? வேலை விஷயமா அவரைப் போய் பார்க்கச்  சொன்னேனே! ஏன் பார்க்கலை? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?’’ என்று தொடர்ந்து ஏதாவது தார்க்குச்சி கணக்கில் குத்திக் கொண்டே இரு ப்பதால், இவர்களுக்கு எல்லாமே மரத்துப் போய் விட்டன!

அதனால் என்ன சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார்கள். நடுவில் இருக்கிற இதயத்திற்கு அதைக் கொண்டு செல்வதே இல்லை..
(தொடரும்)
-----------
விலகிப்போனால் விரும்பி வருகிற; விரும்பிப் போனால் விலகிப் போகிற தலைமுறையாக இன்றைய இளைய தலைமுறை இருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும். நமக்கும் லண்டனுக்கும் 5.30 மணி நேர வித்தியாசம். லண்டனில் இரவு பத்து மணி என்றால் நம்மூரில் விடிகாலை 3.30. அங்கு காலை  7.00 என்றால் நம்மூரில் 12.30. என்ன கிண்டலா? இந்தக் கணக்கு எங்களுக்குத் தெரியாதாக்கும் என்கிறீர்களா? நான் சொல்ல வந்ததே வேறு. நம் இளைய  தலைமுறையினர் பலர் லண்டனில் வசிக்கிற மாதிரி கற்பனை செய்துகொண்டு விடிகாலைதான் படுக்கப் போகிறார்கள். நண்பகல்தான் எழுந்திருக்கிறார்கள். இங்குள்ள  ஏதேனும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இப்படி நடந்துகொண்டால்கூட ‘ஐயோ பாவம் புள்ளை நாலு காசு (?) சம்பாதிக்க என்ன பாடுபடுது  தெரியுமா? சரியான தூக்கமில்லை; சாப்பாடு சரியா இல்ல. ரொம்பக் கஷ்டமா இருக்கு மனசுக்கு’ தாய் மனசு கிடந்து அடித்துக்கொள்ளும்.

நான் அக்கறைப்படுவது சம்பாதிக்காத நிலையிலும் இப்படி நடந்துகொள்வதைப் பற்றி. பையன்கள் இப்படி நடந்துகொண்டால்கூட அதற்கு ஏதோ தக்க கழிவு தரலாம். சில  இளம்பெண்களே இப்படி நடந்துகொள்ளும்போது மனசு தாங்கலை.

கோவையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து அறையில் ஏதோ சத்தம். யாரோ பேசுகிற மாதிரியும் இருந்தது. தலைமாட்டில் இருந்த செல்போனை அழுத்தி  நேரத்தைப் பார்த்தால் மணி இரவு 2.30. இந்த நேரத்தில் பேச்சுக் குரலா?

என் அறைக்கு எதிர் அறைதான் அந்த அறை. நண்பர் வீடு. நமக்கென்ன என்று இருந்திருக்கலாம் நான். மனது கேட்கவில்லை. ஏதும் விபரீதமாக இருந்தால் நடந்ததை  அறிந்துமா திரும்பிப் படுத்துக்கொண்டாய் என்று கேள்வி வருமா, வராதா?

வெளியேறி வந்தபோது ஒலி இன்னும் கூடுதலானது. நிச்சயம் இது ஒரு பெண்ணின் பேச்சுக்குரல். அநேகமாய் என் நண்பரின் மகள் குரல். காலை 2.30 மணிக்கு  இவளுக்கு யாருடன் பேச்சு வேண்டிக்கிடக்கிறது?

எதிர் உரையாடல் இல்லை. இது ஒரு தரப்பு உரையாடல். அநேகமாய் இது ஒரு செல்போன் உரையாடல். உரையாடல்  தெளிவாகக் கேட்கவில்லையே தவிர, இது ஒரு அனுமதிக்க முடியாத உரையாடல்.

காலையில், ‘‘யாருடன்மா அந்த நேரத்தில் பேச்சு?’’ என்று அவளிடமே கேட்டுவிடுவதா? இல்லை, பெற்றோருடன் போட்டுக் கொடுப்பதா? நடந்ததை மறைத்தால், அது நான்  என் நண்பனுக்கு இழைத்த அநீதி. அமைதியாக இருந்துவிட்டால் இந்த நியாயமற்ற செயலுக்குத் துணை போனதாக அர்த்தம்.

இந்த மனப் போராட்டத்தில் என் உறக்கம் பறிபோனதுதான் மிச்சம்.



     RSS of this page