26.10.11 இலக்கியச் சிறப்பிதழ்
இன்றைய
தேதியில் உலகில் அதிகம் வாசிக்கப்படுவது எது? கவிதையா, நாவலா,
கட்டுரையா, சுயமுன்னேற்ற நூல்களா? நாவலாசிரியர்களே அதிகம்
வாசிக்கவும் கொண் டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம்.
ஹாரிபாட்டர் 450 மில்லியன் விற்பனையாகி யிருக்கிறது. டாவின்சி கோடு 80
மில்லியன் பிரதிகள்; ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல்
13 மில்லியன்; இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல்
விற்பனையானது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன. சார்லஸ்
டிக்கன்ஸீன் நாவல்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்கப்படுகின்ற
பட்டியலில் எப்போதுமிருக்கின்றது.
இன்று ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால் அந்த எழுத்தாளர்
அடையும் குறைந்தபட்ச பணம் பத்துக்கோடி. திரைப்பட உரிமை, பிறமொழி உரிமை
என்று எளிதாக அவர் ஐநூறு கோடி வரை சம்பாதித்துவிட முடியும்.
அதைவிட நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது என்று
பதிப்பகங்கள் ஏலம் வி டுகின்றன. எவர் அதிக பணத்திற்கு ஏலம்
எடுக்கிறார்களோ அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமையை எழுத்தாளர்
தருகிறார்.
ஆனால், தமிழ்நாட்டின் சூழல் இதற்கு நேர் எதிரான ஒன்று. இங்கே சமகால
நாவல்களில் அதிக விற்பனை ஐந்தாயிர மாகத்தான் இருக்கும்; தமிழின் பெஸ்ட்
செல்லர் ‘பொன்னியின் செல்வன்’ இதுவரை மொத்தமாக பத்து லட்சம்
பிரதி விற்றிருக்குமா என்பது சந்தேகமே.
ஒவ்வொரு பத்து வருசத்திலும் உலக இலக்கியத்தின் கவனம் ஏதாவது ஒரு
தேசத்தின் மீது குவிகிறது. அப்படித்தான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள்
புகழ்பெற்றன, ஆப்பிரிக்க நாவல்கள் கொண்டாடப்பட்டன. அந்த
வரிசையில் இன்று உலகின் கவனம் ஆசியாவின் மீது குவிந்துள்ளது. அதிலும்,
குறிப்பாக இந்தியா மற்றும் சீன இலக்கியங்களே உலக இலக்கியப்
பரப்பில் இன்று அதிகம் பேசப்படுகின்றன. புக்கர், புலிட்சர் உள்ளிட்ட பல
முக்கிய இலக்கியப் பரிசுகளை இந்தியர்கள் வென்று வருவது இதன்
அடையாளமே. சித்தார்த்த முகர்ஜி எழுதிய ‘தி எம்பரர் ஆஃப் ஆல் மாலடீஸ்: எ
பயாகிரஃபி ஆஃப் கேன்சர்’ (The Emperor of All Maladies: A Biography of
Cancer) என்ற புற்றுநோய் பற்றிய ஆய்வு நூலுக்கு புலிட்சர் விருது
கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து மிக வும்
உணர்ச்சிபூர்வமாகவும் நுண்மையாகவும் எழுதப்பட்ட புத்தகமிது.
காமென்வெல்த் இலக்கியப் பரிசை வென்றுள்ள ரானாதாஸ் குப்தாவின் சோலோ
(Rana Dasgupta, Solo) நாவல் சமகால நாவல்களில் அதிகம் பேசப்ப ட்ட
ஒன்று. யதார்த்தமும் மாயமும் ஒன்றுகலந்து எழுதப்பட்ட இந்த நாவலின் கதை
சொல்லும் முறை வசீகரமானது.
இப்படி நீண்டுகொண்டே போகிறது இந்தியர்களின் எழுத்திற்கான அங்கீகாரம்.
ஆனால், இவை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய எழுத்திற்கே கிடைக்கின்றன.
பிராந்திய மொழி எழுத்துகள் இவர்களை விட தரமானதாக இருந்தாலும் உலக
அளவில் அங்கீகாரம் கிடைக்காமலே இருக்கிறது.
சமகால உலக கவிதையுலகில் கவிதையை ஒரு போர்வாளாக மாற்றியவர் என்று
புகழாராம் சூட்டப்படுபவர் மஹ்முத் தர்வீஸ். இவர் ஒரு பாலஸ்தீன கவிஞர்.
அரசியல் நம்பிக்கைளுக்காக இஸ்ரேலிய ராணுவத்தால் பலமுறை கைது
செய்யப்பட்டவர். ‘நிலத்தையும் மொழியையும் மீட்டெடுக்கப் போராடும் ஒரு
அகதி நான்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் தர்வீஸ்.
தமிழில் மஹ்முத் தர்வீஸ் கவிதைகள் தொகுப்பு உயிர்மை பதிப்பக வெளியீடாக
வந்துள்ளது
சிறுகதையில் இன்று சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றிருப்பவர் ஹருகி
முராகமி. ஜப்பானிய எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பெருநகரங்களின்
அபத்தமான வாழ்க்கையை பகடி செய்யக்கூடியவை. விசித்திரமான
நிகழ்வுகளும் மாயமும் யதார்த்தமான விவரிப்பும் கொண்டவை இவரது கதைகள்.
இவரது The Elephant Vanishes சிறுகதைத் தொகுப்பு முப்பது லட்சம்
பிரதிகள் விற்றிருக்கின்றன என்கிறார்கள்.
உலக அரங்கில் இன்று மூன்று பேர் முக்கியமான நாவலாசிரியர்களாக
கொண்டாடப்படுகிறார்கள். ஒருவர் ஒரான் பாமுக். நோபல் பரிசு பெற்றுள்ள
துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது My Name is Red என்ற
நாவல் ‘என் பெயர் சிவப்பு’ எனத் தமிழில் வெளியாகி உள்ளது.
மற்றவர் கார் லோஸ் ருயுஸ் ஜெபான். இவரது The Shadow of the Wind நாவல்
2001- ம் ஆண்டு வெளியானது. புத்தகங்களின் குரலாக ஒலிக்கும் இந்த
நாவல் உலகை புத்தகங்களே மேம்படுத்துகின்றன என்பதைச்
சுட்டிக்காட்டுகிறது.
மூன்றாவது நாவலாசிரியர் கனடாவைச் சேர்ந்த யான் மார்டில். இவரது Life of
Pi நாவல் பாண்டிச்சேரியை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது.
விலங்குகளை ஏற்றிக்கொண்டு போகும் ஒரு கப்பலில் நடைபெறும்
சம்பவங்களே கதையின் பிரதான களம்.
சர்வதேச இலக்கிய அரங்கில் எடுவர்டோ கலியானோவின் (Eduardo Galeano)
கட்டுரைகளுக்கு முக்கியமான இடமிருக்கிறது. இவர் வரலாற்றையும்
இலக்கியத்தையும் லத்தீன் அமெரிக்க அரசியலையும் பற்றி அதிகம் எழுதியவர்.
இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர் என்பது கூடுதல் செய்தி.
இவரைப் போலவே வில்லியம் டேல்ரிம்பிள் (William Dalrymple) வரலாற்றையும்
பயணத்தையும் பற்றி கட்டுரை நூல்களை எழுதும் தனித்துவமான எழுத்
தாளர். கடைசி மொகலாய அரசரான பகதூர் ஷா பற்றி இவர் எழுதிய The Last
Mughal, The Fall of a Dynasty, Delhi 1857 நூல் விரிவான ஆய்வின்
அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று. தஞ்சை பெரிய கோவில் வரலாறு உள்ளிட்ட பல
முக்கிய கட்டுரைகளை எழுதிய இவர் சில காலம் டெல்லியில் வசித்தவர்.
சமீபத்தில் என்னை உலுக்கிய புத்தகம் அருண் ஷோரி எழுதிய Does He Know A
Mother’s Heart. அரசியல்வாதி, பத்திரிகையாளர், முன்னாள் மத்திய
அமைச்சர் என்று பன்முகம் கொண்டுள்ள அருண்ஷோரியின் இந்தப் புத்தகம்
அவரது மனவளர்ச்சி குன்றிய மகனைப் பற்றியது. அவனது பிறப்பில் துவங்கி
இன்றுவரை அவனுக்காக அருண்ஷோரியும் அவரது குடும்பமும் எவ்வளவு வலிகளைத்
தாங்கிக் கொண்டார்கள், அந்த சிறுவனை எப்படி பாசமாக வளர்த்து
வருகிறார்கள் என்பதைப்பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக
எழுதியிருக்கிறார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான தனியுலகில் வாழ்கிறது. அதன் மீது
பரிவு கொள்ளவும் பாசம் காட்டவும் பெற்றவர்கள் எவ்வளவு பாடுபட
வேண்டியிருக்கிறது. சமூகம் அந்த பெற்றோரை எந்த அளவு பரிகாசம்
செய்கிறது என்பதை கண்ணீர்வர எழுதியிருக்கிறார்.
உண்மை சுடும் என்பார்கள். அதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்..
சமீப
காலத்தில் பெண்கள் அதிக அளவில் எழுத வந்திருக் கிறார்கள்.
தமிழிலக்கிய உலகில் சாதகமான அம்சம் இது. ஆனால்,
இவர்களால் ஒரே குடையின் கீழ் அமைப்பாக சேர்ந்து செயல்பட
முடிவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. த. மு.
எ. க. ச., கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற
பண்பாட்டு அமைப்புகளிலும் கூட தலைமைப் பொறுப்பில்
பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. என்ன காரணம்? அலசினார்கள் சிலர்.
“குறிப்பிட்ட ஒரு கட்சியின் அங்கமாக உண்டாக்கப்படும்
பண்பாட்டு அமைப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கேற்க வைப்பது என்பது
எளிது. கட்சியில் உள்ள பெண்களை அப்படியே அதில் பங்கேற்க
வைத்துவிடுவார்கள். அதிலுள்ள அத்தனைப் பெண்களும் எழுத்தாளர் களாக
இருக்க வேண்டும் என்பதில் எவ்வித கட் டாயமும் இருப்பதில்லை. ஆனால்,
பெண் படைப்பாளிகள் அப்படியில்லை. கருத்தியல் ரீதியாகவும்
அரசியல்ரீதியாகவும் வேறு வேறு தளங்களைக் கொண்டு செயல்படு கிறவர்கள்,
படைப்பாளிகளையும் ஒரு கட்சியின் பிரதிநிதி களையும் ஒரே மட்டத்தில்
வைத்துப் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.
எங்களால் ஒற்றுமையாக செயல்பட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவசியம் ஏற் படும் போதெல்லாம் மையமான பிரச்னைக்கு பெண்
படைப்பாளிகள் ஒன்றுகூடவே செய்கிறோம். அது ஈழ விடுதலை
பிரச்னையாகட்டும் மூன்று பேர் தூக்கு தண்டனை பிரச்னையாகட்டும், சாதிய
ஒடுக்கு முறையாகட்டும் பெண்களின் சங்கமிப்பு சாத்தியப் பட்டே
இருக்கிறது.
ஆண்களுக்கு கலை இலக்கிய மட்டத்தில் பங்களிப்புச் செய்ய என்ன தகுதி
இருக்கிறதோ அதே தகுதி பெண்களுக்கும் இருக்கிறது. அதை உண்டாக்க
வேண்டும். ஆண் கள் உணர வேண்டும்’’ என்கிறார் கவிஞர் சுகிர்தராணி.
குட்டிரேவதி இன்னும் அடுத்த படிக்குப் போய் பேசினார்.
“முற்காலங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக அதிக அளவில்
இருந்திருக்கிறது. ஆனால், துரதிரு ஷ்டவசமாக அவர்களைப் பற்றிய
வரலாற்றுப் பதிவுகளோ ஆவணக் குறிப்புகளோ பரவலான முறையில்
பதியப்படவேயில்லை. இது ஒரு முக்கிய குறைபாடு.
ஒரு மேடையில் ஆண் தலைவர்களை உட்கார வைத்து புகழ்ந்து பேசிப் பழகிய
சமூகம், ஒரு பெண் தலைவரை உட்கார வைத்துப் புகழ்வதை தரக் குறைவான
மனநிலையிலேயே பார்க்கிறது. இதையெல்லாம் மீறி கட்டமைக்கப்படுகின்ற
இயக்கங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களாக உள்ளன.
ஆனால், இந்த சாதியரீதியான தலைமையை ஏற்க பலர் முன்வருவதில்லை.
இதையே பிரதான காரணமாக நான் நினைக்கிறேன்.
நான் சிவகாமியின் பெண்கள் அமைப்பில் சேர்ந்து பணியாற்றிய போது, அதில்
சாதி என்பது மிக நுட்பமாகச் செயல்படுவதை உணர்ந்திருக்கிறேன். இதைத்
தவறாகச் சொல்லவில்லை. அதில் இருக்கும் நுண்ணிய போதாமைகளை நாம்
சுய பரிசீலனைக்கு - விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும்’’ என்கிறார்
கவிஞர் குட்டிரேவதி.
கவிஞர் சல்மாவோ ஓபன் ஹார்ட்டாக பேசுகிறார். “ஆண் எழுத்தாளர்கள்
ஏன் ஒன்றுகூடிப் போராடுவதில்லை? - இப்படியொரு கேள்வியை நாம்
என்றைக்காவது எழு ப்பி இருக்கிறோமா? மாட்டோம். ஆனால், பெண்களின்
ஒற்றுமை மட்டும் ஏன் எழவில்லை என்று எதிர்க்கேள்வியை எழுப்புகிறோம்.
இது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்றார்.
பத்திரிகையாளர் கவிஞர் கவிதா முரளிதரன் சொல்லும் கருத்து
இப்படி இருக்கிறது:
“ஒட்டுமொத்தமாக பெண்களின் தலைமை இல்லவேயில்லை எனச்
சொல்லிவிட முடியாது. மேதாபட்கர், மஹாஸ்வேதா தேவி, சுகுத
குமாரி போன்றவர்கள் பெண்கள் அமைப்புகளில் தலைமை இடத்தை
ஏற்று மிகத் திறமையாகவே செயல் பட்டிருக்கிறார்கள். இவர்களின் மூலம்
முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. இதை
முழுக்க பூசி மெழுகிவிட்டு ஒன்றுகூடவே இல்லை என்பது அநியாயம். ஆக,
பெண்கள் ஒன்றுகூடுவது - தலைமைப் பொறுப்பில் வருவது என்பதெல்லாம்
தொடர்ந்து நடக்க வேண்டிய பிராசஸ். அது உடனே நடந்துவிடாது’’ என்கிறார்
கவிதா.
சரி, கவிஞர் மாலதி மைத்ரி இதற்கு என்ன சொல்லப் போகிறார்? “இங்கே
இருக்கின்ற அறிவுஜீவிகளாகட்டும் அறிஞர்களாகட்டும் ஒரே தலைமையின் கீழ்
வந்து இது வரை செயல்பட்டிருக்கிறார்களா? இல்லையே. இங்குள்ள
பண்பாட்டமைப்புகளில் சாதி என்பது வலுவாக இயங்குகிறது. அதை மீறி உள்ளே
பெண்கள் இயங்குவது மிகச்சிரமம். முற்போக்கு அமைப்புகளில்
ஆண்களுக்கு ஆண்களே சமமாக பாவிக்கப்படுவதில்லை. கீழ் சாதியைச் சார்ந்த
ஆணை உயர் சாதியைச் சார்ந்த ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்
என்பதற்கு நிறைய சான்றுகளைத் தர முடியும். நிலைமை இப்படி உள்ள போது
சமூக அடுக்கில் கடைசி மட்டத்திலுள்ள பெண்னை இந்த அமைப்புகள்
எப்படி மேலே தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவார்கள், சொல்லுங்கள்.
அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதே அறியாமை அல்லது அபத்தம்
என்பேன் நான்’’ என்கிறார் மாலதி.
நியாயம்தானே?
தொகுப்பு: கடற்கரய்
படங்கள்: ஆர்.சண்முகம்
தரைதொடத் தாழ்ந்த அழிஞ்சிமரத்தின் நுனி
இலைகளைக் கடக்கும்
காற்று சொல்லிவிட்டுப் போகிறது
நீ அமர்ந்துள்ள பேருந்துப் பயணத்தின்
வேகம்
சிறு குருவிகளின் ஊமச்சிக் குரல்களைக்
கை நிறைய
வாங்கிக்கொண்டு போய்
மாஞ்செடிக் கூட்டில் ஊற்றிவிட்டுத்
திரும்புகையில்
ஆரஞ்சுச் சூரியனுக்கு நடுவில்
உந்தி
மேலெழும்பும்
மூங்கில்
குருத்தின்
உச்சித் தளிரில் செருகப்பட்டிருக்கிறது
உன்
பிரிவின்
நாட்குறிப்பு
ஒற்றைக் காகம் பற்றவைத்த
சுழன்று எகிறிய நெருப்பில்
மிரண்டு
சட்டென விழுந்த
ஓணான் கண்களில் தெரிகிறேன்
நீயற்ற
நான்
அறுத்துக் குவித்து மூடிவைத்த
எள்ளுச் செடிகளுக்குள்
அவிந்து
பெருகும்
புழுக்கத்திற்கு மிக நெருங்கிய
இடைவெளியில்தான்
வாய்த்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
தூரம்.
சக்திவேலின் புதிய தோழி சப்தாவாம்
தினம் தினம் சப்தாவைப் பற்றிய செய்திகளுடனே
பள்ளியிலிருந்து திரும்புகிறான்
சப்தாவின் குறும்புகள்
சப்தாவின் ஓவிய உலகம்
சப்தா வீட்டு கார்டூன் அலை வரிசையின் தெளிவின்மை
சப்தா அம்மாச்சியின் காட்டன் சேலை
நிறமிழந்து போனது
சப்தா விளையாடிய அம்மா அப்பா விளையாட்டில்
புதிதாய் தோன்றி இருக்கும் சங்கரன்
சங்கரனுக்கு சமைக்க சப்தா படும்பாடுகள்
எல்லாவற்றையும்
பகிர்ந்து கொள்கிறான்
சப்தாவைப் பார்க்க ஆசை என்றபோது
சிரித்து லேசாக என்னைக் கிள்ளி
அவள் இன்னும் பிறக்கவில்லையே என்கிறான்
மகன் குட்டிக்கவிஞனாய் மாறும்
தருணங்களை இப்போதெல்லாம்
பார்க்க முடிகிறது
சப்தாவாவது வளராமல் இருக்கவேண்டும்.
நீ போனபிறகு
வந்த வாசனை
ஒரு புல்வெளியை விரித்தது
அதன் இடுக்குகளில்
மெல்ல நகர்ந்தது காற்று
உன் மெல்லிய ரோமங்களில்
என் சுவாசம்போல
நீ எனக்காக ஏந்தி நின்ற
ஒரு தீபத்தின் சுடர்
மரங்களை
நட்சத்திரங்களால் அலங்கரித்தது
நான் உனக்காக
பறித்த மலர்
பிரபஞ்சத்தை
உனது வாசனையால் நிரப்பியது
காற்று இசையாகித்
தொடும் நேரம்...
நான் மீண்டும் உன்
புல்லாங்குழல் நதிக்குத் திரும்புகிறேன்
மீன்கள் தெறிக்கும்
அலைகளின் உடல் நடனத்தில்
இரவை இசைத்துக்கொண்டிருக்கிறது
நிலா.
ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல
என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்
பாணனாய்த் திரிகிறபோதெல்லாம்
என் பாதங்களின் அசைவுக்குச்
சுழல்கிறதே உலகம் என்னதாய்.
கிடைத்த கள்ளும் கூழும்
சந்தித்த தோழ தோழியருமாய்
குந்திய மர நிழல்களில் எல்லாம்
சூழுதே சுவர்க்கம்
காதலும் வீரமுமாய்.
வாழ்வு தருணங்களின் விலையல்ல
தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்
புயலில் அறுந்த பட்டமாகிறேன்.
காலமும் இடமும் மயங்க.
தருணங்களின் சந்தையான உலகிலோ
தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு
இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு
கட்டைவிரல் இல்லை.
எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட
இந்த சென்னைச் சுவர்க்காட்டில்
சுருதி கூடிய வீணையாய்
காத்திருக்கிறேன்
வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.
இலக்கிய
வாதிகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மதிப்புமிக்க
விருதாகக் கருதப்படுவது, ஞானபீட விருதே. இந்த வருடம் தமிழுக்கு
ஞானபீட விருது கிடைக்கும் என கிசுகிசுக்கப்பட்டது.
நமது பக்கத்து மாநிலங்களான கன்னடம் எட்டு முறையும், மலையாளம் ஐந்து
முறையும் ஞானபீட விருது பெற்றுள்ளன. ஆனால், தமிழுக்கு இரண்டு முறைதான்.
இந்தக் குறையை இந்த வருடம் கொஞ்சம் சரி செய்யலாம் என ஆவலோடு
காத்திருந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி. இந்த முறையும்
நமக்கு விருதில்லை. ஏன் இந்தப் புறக்கணிப்பு? பேராசிரியர்
அ.ராமசாமியிடம் கேட்டோம்.
”இந்த வருடம் ஞானபீட விருது தமிழுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என
ஒரு கருத்து நிலவியது உண்மைதான். நானே அந்தச் செய்தியை ஏற்று
நம்பிக்கையோடு எழுதவும் செய்தேன். ஆனால், இந்த முறையும்
தமிழுக்குக் கிடைக்கவில்ல. இரண்டு வாரங்களுக்கு முன் ஞானபீட விருது
அறிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டுக்கான விருதை இந்தி
எழுத்தாளர்கள் அமர்காந்தும் ஸ்ரீலால் சுக்லாவும் கூட்டாகப் பெற்றுக்
கொண்டுள்ளார்கள். 2010க்கான விருதை கன்னட எழுத்தாளர் சந்திரசேகர
கம்பார் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமி போன்ற இந்திய அரசின் நேரடி அமைப்புகள் வழியாக ஞானபீட
விருதுக்குரியவர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. தன்னிச்சையான தேர்வுக்
குழு அந்தந்த மொழியின் மதிப்புமிக்க ஆளுமைகளை ஞானபீடத்திற்காகத்
தேர்வு செய்கிறது. அவர்களில் இந்திய அறிவின் பரிமாணங்களையும் சமகால
இந்திய வாழ்க்கையின் மாற்றங்களையும் தங்களது எழுத்துக்களில்
பதிவு செய்த படைப்பாளிகள் ஞானபீட விருதுக்குத் தெரிவு
செய்யப்படுகிறார்கள். தமிழுக்கு முதன்முதலில் ஞானபீடம் பெற்றுத்
தந்தவர் அகிலன் (1977). அதன்பிறகு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயகாந்தன்
(2000) பெற்றார். அவருக்குப் பின் மூன்றாவது ஞானபீட விருதுக்காகத்
தமிழ் பத்து ஆ ண்டுகளுக்கும் மேலாகக் காத்துக் கொண்டிருக்கிறது.
மலையாளமும் கன்னடமும் போல மராத்தி, வங்காளம், இந்தி ஆகியவையும்
கூடுதலாக விருதைப் பெற்றுள்ளன. அதேநேரத்தில், சமஸ்கிருதத்திற்கு
இணையான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட தமிழுக்கு மட்டும் இரண்டே
இரண்டுதான். சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீட விருதைப் பெறும்
தகுதியில்லையா?
நிச்சயம் உண்டு என்பது தான் பலரின் பதில். இதுவரை ஞானபீட விருதைப்
பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு இணையான சாதனைகளைப் படைத்த தமிழ்ப்
படைப்பாளிக ளாக குறைந்தது பத்துப் பேரையாவது சுட்டிக்காட்ட முடியும்.
பிறகு ஏன் தமிழை ஞானபீடம் புறக்கணிக்கிறது?
விருதுக்கு ஆசைப்படும் நாம் அதற்காக செய்ய வேண்டிய வேலையை செய்யாமல்
விட்டுவிட்டோமோ என்றும் தோன்றுகிறது. ஞானபீடம் விருது தமிழுக்குக்
கிடைக்க வேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது
பரிந்துரைக்கத்தக்க எழுத்தாளர் யார் என்பதை முடிவு செய்து, அவரைப்
பற்றி ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய
வேண்டும். தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய அளவிலோ, உலக அளவிலோ
விருதுகள் கிடைக்கிறது என்றால், அதில் அவருக்கு மட்டும்
பெருமையில்லை; தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மக்களுக்கும்
கிடைக்கும் பெருமை என நாம் நினைக்க வேண்டும்.
20 வருடங்களுக்கு முன்னாள் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் நானும்
பேசிக்கொண்டது நினைவுக்கு வருகிறது. “பொருத்தமான தமிழ்
எழுத்தாளர் ஒருவரைச் சரியான அறிமுகத்துடன் பரிந்துரை செய்தால்
இந்த ஆண்டிலேயே தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று
அவர் சொன்னார். சொன்னவர் அத்தோடு நிறுத்தாமல், ”தமிழில் ஞானபீட
விருது கொடுத்தால் யாருக்குக் கொடுக்கலாம்? நீங்கள்
பரிந்துரைக்கக்கூடிய மூன்று பெயர்களைச் சொல்லுங்களேன்?’’ என்றும்
கேட்டார். சற்றும் தயங்காமல், ”ஜெயகாந்தன் தான் எனது முதல்
விருப்பம்’’ என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த வரிசையில் கி.ராஜநாராயணன்,
சுந்தர ராமசாமி ஆகியோர் இ ருக்கிறார்கள் என்றேன். இந்த மூன்று
பெயர்களுக்குப் பின்னால் தான் எனது பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள்
என்று இந்திரா பார்த்தசாரதியிடம் சொன்னபோது சிரித்துக் கொண்டார்.
அவரிடம் சொன்னது மட்டுமல்லாமல் அந்த வருடம் வாசகர் விருப்பத்திற்காக
அனுப்பப்பட்டிருந்த பரிந்துரைப் படிவத்திலும் ஜெயகாந்தன் பெயரைத்தான் எ
ழுதி அனுப்பினேன். ஆனால் அந்த வருடம் தமிழின் பக்கத்திலேயே ஞானபீடம்
திரும்பிப் பார்க்கவில்லை. பிறகு, ஜெயகாந்தன் வாங்கிவிட்டார்.
மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்.
சு.ரா. இப்போது இல்லை; இருப்பது கி.ரா.வும் இ.பா.வும்தான்.
இவ்விருவரோடு இப்போது ஜெயமோகனையும் சேர்க்கலாம்.
கி.ராஜநாராயணன், சமகாலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு போக்கின்
முன்னோடி. தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அவரது பங்களிப்பின்
தன்மை பல பரிமாணங்கள் கொண்டது. வட்டார வழக்குச் சொல்லகராதி
என்றொரு முன்னத்தி ஏரை கரிசல் காட்டில் ஓட்டிக் காட்டியவர்; கிராமியக்
கதைகளைத் திரட்டிக் காட்டி தொல் மனங்களை அறியச் செய்ததும் அவர்
தான். இந்திரா பார்த்தசாரதி, சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்,
கட்டுரைகள், அங்கதத் தொடர்கள் என உரைநடையின் அனைத்துப்
பரிமாணங்களிலும் தனித்தன்மையைக் காட்டியவர். மரபான இந்திய
கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்கால அரசியலைப் பேசும் ஔரங்கசீப், நந்தன்
கதை, கொங்கைத்தீ, ராமானுஜர் போன்ற நாடகங்களை
எழுதிக்காட்டியதன் மூலம் இந்திய நாடக அரங்கில் தனக்கான இடத்தை உறுதி
செய்த தமிழ் ஆளுமை.
ஒரு வகையில் இந்த வருடம் ஞானபீட விருது பெற்றுள்ளவர்களைவிட சிறந்த
படைப்பாளிகள் இந்த இருவரும்.
தமிழுக்கு மூன்றாவது ஞானபீடம் கிடைத்தது என்ற செய்தி அடுத்த ஆண்டாவது
கிடைத்தால் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சி அடையலாம்.’’.
நான்
படித்த அவருடைய சிறுகதையின் பெயர் ‘மைசூர் ராசா.’ அதுதான் அவர்
எழுதிய முதல் சிறுகதையோ தெரியாது. ஆனால், நான் முதலில் படித்தது
அதைத்தான். பத்து வருடத்திற்கு முன்னர் என்று நினைக்கிறேன்.
அசிரத்தையாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதை எழுதியவரின் பெயரை
நான் வேறு எங்கேயும் கண்டதில்லை.
ஒரு காலத்தில் இலங்கையில் பருப்பு தட்டுப்பாடு இருந்தது. செல்வந்தர்
வீட்டில் மட்டுமே அது அகப்படும். பள்ளிக்கூடத்திலே ஒரு பையன், தான்
முதல்நாள் இரவு வீட் டிலே மைசூர் பருப்பு சாப்பிட்டதை வர்ணித்தான்.
அதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு மாணவன்
மெதுவாகக் கேட்டான்: ‘அது பாணை விட அபூர்வமானதா?’ என்று. இந்த
வரி வந்ததும் மீண்டும் எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். ஷோபா சக்தி.
ஈழத்து எழுத்தாளர். உடனேயே காலத்தை முந்திய எழுத்தாளர் இவர்
என்று எனக்குப் பட்டது.
அதன் பின்னர் அவருடைய பெயரில் வந்த கதைகளை அவ்வப்போது படித்து
வந்தேன். ஒரு கதை, கள்ள பாஸ்போட் தயாரிப்பது பற்றி. அதில் இப்படி
வரும். ‘வலு பக்குவமாய் அயன் பொக்ஸ் தேய்ச்சு புகைப்படத்துக்கு
மேல் இருக்கும் மின்னிப் பேப்பரை கழற்ற வேணும். வாய்ச்சாலும்
வாய்க்கும் தேய்ச்சாலும் தேய்க்கும்.’ இதைப் படித்து நான்
அசந்துவிட்டேன். எப்படியாவது இவரை சந்திக்கவேணும் என்று
தீர்மானித்தேன். ஆனால், நான் தீர்மானித்தால் போதுமா? அவர் பாரிஸில்
இருந்தார். நான் ரொறொன்ரோவில் இருந்தேன்.
2003-ம் வருடம் நான் நடிகை பத்மினியை சந்தித்தது பற்றி
எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு பாரிஸிலிருந்து தொலைபேசி
எடுத்து ஷோபா சக்தி என்னுடன் பேசினார். அப்பொழுது அவருக்கு
தமிழ் சினிமாவின் மேல் இருந்த மோகம் தெரிந்தது. எம்.ஜி.ஆர். ரசிகர்
அவர். சினிமா பற்றிய விவரங்கள் அவர் கைவிரல் நுனியில் இருந்தன.
‘நீங்கள் அபூர்வமாக எங்களுக்குக் கிடைத்த எழுத்தாளர். தொடர்ந்து
எழுதுங்கள்’ என்றேன். உடனேயே குரல் மாறியது. அவர் சொன்னது எனக்கு
அதிர்ச்சி தந்தது. ‘நான் மீண்டும் உங்களுடன் பேசுவேனோ
தெரியாது. என்னைக் கொல்வதற்கு ஒரு கும்பல் காத்திருக்கிறது’ என்று
சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இப்படி அறிமுகமான ஷோபா சக்தி சமீபத்தில் மொன்றியல் திரைப்பட
விழாவிற்கு ’செங்கடல்’ படத்தைத் திரையிடுவதற்காக அதை இயக்கியவரும்
கதாசிரியருமான லீனா மணிமேகலையுடன் கனடா வந்திருந்தார். இவர்களை
ரொறொன்ரோவில் ஓர் உணவகத்தில் சந்தித்தேன்.
‘புதிரானவராக இருக்கிறீர்களே. எப்படி எழுத்துத் துறைக்கு
வந்தீர்கள்?’ என்றேன். ‘நான் பத்து வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன்.
சுவரிலே வாசகங்கள் எழுதியது தான் என் முதல் எழுத்து. எல்லாம் அரசியல்
சுலோகங்கள். இரண்டாவதாக எழுதியது அரசியல் துண்டறிக்கைகள்.
கு.அழகிரிசாமி என்னுடைய முதல் ஆதர்சம். என் னுடைய 13, 14 வயதிலேயே
நான் அவரால் முற்றாகக் கவரப்பட்டுவிட்டேன். மொழிபெயர்ப்பில்
பிடித்தது மாக்சிம் கார்க்கி. ஏன் என்றால் இவர்கள் தங்கள்
எழுத்துக்களால் சமுதாயப் புரட்சி கொண்டுவர முயன்றார்கள்.
நான் 19 வயதில் இலங்கையைவிட்டு புறப்பட்டு தாய்லாந்தில் நாலு வருடம்
முடங்கிக் கிடந்தேன். நான் கையில் எடுத்துக் கொண்டுபோனது பாரதியின்
கவிதைகளும் பைபிளும்தான். இவை இரண்டையுமே திருப்பித் திருப்பி
படித்தேன். என் தமிழ் நடை அப்படித்தான் உருவானது. அரசியல்தான் என்
மூச்சு. புனைகதை இரண்டாம் பட் சம்தான். என் மூளை நிறைய எழுதுவதற்கு
விசயங்கள் இருக்கின்றன.’’
‘ஒரு நாவல் எழுத வேணும். யாழ்ப்பாணம் சென்று மூன்று மாதம் என்
மண்மேல் தங்கி எழுதுவதாக திட்டம். நாவலின் உட்பொருள் உருவம் எல்லாம்
தீர்மானமாகிவி ட்டது. எஞ்சி இருப்பது உடல் உழைப்புதான்.
கம்ப்யூட்டரில் பதிவுசெய்ய வேணும்’ என்றார். ‘நீங்கள் என்ன
செய்கிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டார். சில வரு டங்களுக்கு முன்னர்
ஷோபா சக்தி என்னை வைத்து ’மூடுலிங்க’ என்று ஒரு சிறுகதை
புனைந்திருந்தார். அவர் அப்படி எழுதியது எனக்குத் தெரியாது.
நண்பர்கள் சொல்லிய பின்னர்தான் படித்தேன். நான் அவரை வைத்து
‘ஷோபு’ என்று ஒரு சிறுகதை எழுதுவதை அவருக்குச் சொல்லவில்லை. ஒரு
பாதைக்கு இரண்டு திசைகள் இருக்கின்றன அல்லவா? வரும்போது
படித்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன்.
விடை பெறும் நேரம் வந்தது. எனக்கு ஒரு தம்பி இருந்தார். அவர்
இப்பொழுது இல்லை. அவரை நினைத்தேன். கட்டிப் பிடித்து விடை
கொடுத்தேன். அவர் சென்ற பிறகு அவர் கையெழுத்திட்டுத் தந்த
புத்தகத்தை திறந்து பார்த்தேன். உருண்டையான அழகான கையெழுத்து. ‘மிக்க
அன்புடன் ஷோபா’ என்று எழுதி 30 செப்டம்பர் 2011 தேதியை
போட்டிருந்தார். வரலாற்றாசிரியர்கள் இந்தத் தேதியைத்தான் நாங்கள்
சந்தித்த தேதி என்று குறிப்பிடப் போகிறார்கள்.
தொகுப்பு: கடற்கரய்
நம் மண்ணின் வாழ்வியல்
வேர்களை ஈரத்தோடும் வட்டார வழக்கோடும் பதிவு செய்வதில் சமகாலத்தில்
குறிப்பிடத்தக்கவர் மேலாண்மை பொன்னுசாமி.
இவரது புதிய படைப்பான ‘உயிர்நிலம்’ நாவலுக்கு எட்டுத் திக்கும்
பாராட்டுகள். விவசாயிகளின் தற்கொலையை மாத்திரம் பேசாமல், இயற்கை
வேளாண்மையின் அவசிய த்தையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக
அக்கறையாளர் என வாசகர்களின் பாராட்டுகளுக்கிடையே நம்மிடம் பேசுகிறார்
மேலாண்மை பொன்னுசாமி.
தொடர்ந்து 39 வருடங்களுக்கு மேலாக கிராமங்களைப் பற்றி எழுதுகிறீர்களே?
‘‘உண்மைதான். கிராமத்தைப் பற்றி எழுத ஆட்கள் வரவில்லை. கிராமத்தில்
பிறக்கிறாங்க... படிக்கிறாங்க. ஆனால், நகரம் சார்ந்த வாழ்க்கையை
எழுதுறாங்க.
விவசாயிகளின் தற்கொலை பற்றி எழுத யாரும் வரலை. அரசியல்வாதிகள்,
ஆளுங்கட்சிக்காரர்கள், அதிகார வர்க்கங்கள், விஞ்ஞானிகள் மட்டும்
கிராமத்தை புறக்கணிக்கவில்லை. மனிதநேய மனம் கொண்ட
எழுத்தாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டிருக்கு.
சினிமாவிலும் கிராமத்து காதல் கதைதான் வருது. விவசாயிகளின் துயரம்
இலக்கியத்திலும் சினிமாவிலும் பாடு பொருளாக இல்லை. எனக்குப்பின் எழுதத்
துவங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கிராமத்து விவசாயிகளின்
பிரச்னையை எழுதாமல் இருக்கிற வெறுமையை இட்டு நிரப்ப தொடர்ந்து எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
அமெரிக்கா ஆயுதப் பொருளாதார நாடு. இந்தியா விவசாயப் பொருளாதார நாடு.
விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டிலே விவசாயத்தைப்
பற்றி சிறுகதைகள் வரவில்லை என்பது மிகப் பெரிய அவலம்.
விவசாயத்தின் பிரச்னையும் விவசாயிகளின் நெருக்கடிகளும் கலை
இலக்கியத்தின் தேவை. இதை கலை இலக்கியவாதிகள் உணரவேண்டும்.
எனக்குக் கிடைத்த சாகித்ய அகாடமி விருதுகூட பின்தங்கிய கிராம வாழ்க்கையையும் நெருக்கடிகளையும் எழுதியதால்தான்
தந்தாங்க. கிராமப்புற விவசாயிகளுக்கும் பேச்சு மொழிக்கும்
கிடைத்த வெற்றி.’’
தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும்போதெல்லாம்
சர்ச்சைகள் கிளம்புகிறதே?
‘‘இது அரசு சார்ந்த மிகக் கௌரவமான மரியாதைக்குரிய விருது. இந்த
விருதைப் பெற எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அது
ஜனநாயகத் தன்மை உடையது.
சாகித்ய அகாடமி விருது கிடைத்தால் அந்த நூல் இந்தியாவில் உள்ள அனைத்து
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். பிரமாண்ட கௌரவம் எழுத்தாளனுக்கு
கிட்டு கிறது. ஆகவே, சாகித்ய விருது எனக்கு கிடைக்கவில்லை என
சண்டைகளும் சச்சரவுகளும் கடந்த காலத்தில் எழுந்தன. அதேசமயம், ஞானபீட
விருதுகள் மலையாள த்திற்கும் கன்னடத்திற்கும் இந்தி மொழிக்கும்
கிடைக்கிற அளவிற்கு தமிழ் மொழி இலக்கியத்திற்கு கிடைப்பதில்லை.
அகிலன், ஜெயகாந்தன் தவிர மற்ற எந்த இலக்கியவாதியும் விருதைப்
பெறவில்லை. ஞானபீட விருதுக்குத் தகுதியுள்ள படைப்புகள் தமிழ்ப்
படைப்புலகில் ஏராளம் இருக்கிறது.பிறமொழிகளிலிருந்து பல நாவல்களும்
சிறுகதைகளும் தமிழில் மொழி பெயர்த்து வந்துகொண்டே இருக்கின்றன.
தமிழ்மொழிப் படைப்பு இலக்கியங்கள் பெரிய அளவில்
மொழிபெயர்க்கப்படவில்லை. அதனால் தமிழ் மொழி இலக்கியம் மிகப் பெரிய
அநீதிக்கு ஆளாகி இருக்கிறது.தமிழ்ப் படைப்புகளை பிறமொழிக்குக்
கொண்டு செல்வதற்கான அரசு சார்ந்த ஏற்பாடு எதுவுமில்லை.
வங்க மொழியில் எழுதப்பட்ட தாகூரின் கவிதைகள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்ததால் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மகாகவி பாரதியின்
கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக
நோபல் பரிசு சாத்தியப்பட்டிருக்கும்’’ என முடிக்கிறார் மேலாண்மை
பொன்னுசாமி.
- இரா.கார்த்திகேயன்
தரமான எழுத்துக்குச்
சொந்தக்காரர்களான மூத்த எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி...
தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில்
எழுதிவருபவர். இயற்பெயர்: தியாகராஜன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு
முன் 1931ல் செகந்திராபாத்தில் பிறந்த இவர், பிறகு
சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கணையாழி உள்ளிட்ட பல இதழ்களில்
இன்றைக்கும் இடைவிடாமல் சீராக எழுதிக் குவிக்கும் அ.மி.க்கு இப்போது
80வயது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் முதன்முதலாக
அறிமுகப்படுத்திய முன்னோடி. பதினெட்டாவது அட்சக்கோடு, ஒற்றன்,
மானசரோவர், கரைந்த நிழல்கள் மூலம் இந்திய இலக்கியத்தை ஒருபடி
முன்னுக்கு நகர்த்திய அசோகமித்திரனுக்கு சாகித்திய அகாதமி உள்பட பல
விருதுகள் கிடைத்துள்ளன. கொஞ்சமும் அங்கதம் குறைவில்லாத எள் ளல்
நடையின் சொந்தக்காரரான இவரது எழுத்தின் அடிநாதம் மதநல்லிணக்கம்.
தமிழ் முற்போக்கு வகை இலக்கியத்தின் முன்னோடி இவர்.
நாகர்கோவில் பக்கம் மணிகட்டிபொட்டல்தான் இவரின் சொந்த
ஊர். இவரின் தாய் அழகியநாயகியும் மிகச்சிறந்த படைப்பாளி.
ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன் என்பது இவரது இயற்பெயர். இன்னொரு
பெயர்:சபாபதி. நா.வானமாமலையின் நெருங்கிய சிநேகிதரான பொன் னீலனை
1976-ல் வெளியான அவரது ‘கரிசல்’ நாவல் தான் முதலில் கவனப்படுத்தியது.
இவரது சமீபத்திய வரலாற்றுப் புதினம் ‘மறுபக்கம்’ தோள்சீலை
போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பொன்னீலனின்
‘உறவுகள்’ சிறுகதை பூட்டாத பூட்டுகள் எனும் பெயரில் மகேந்திரனால்
திரைப்படமானது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நீண்ட
கால ஆளுமைகளில் இவரும் ஒருவர். சாகித்திய அகாதமி விருதும்
பெற்றுள்ளார்.
வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டிதான் எப்போதும்
பிரபஞ்சனின் வசீகரமான தோற்றம். கூடவே நெற்றியில் ஒட்டி
நிற்கும் செஞ்சிகப்புத் திலகம். அதிரப் பேசாமல் எதிராளியை
குசும்பில் குத்துவது இவரது தனி ஸ்டைல். நல்ல பேச்சாளர்.
இயற்பெயர்: சாரங்கபாணி. சமகால தமிழிலக்கியத்தில் இவரோ தனி பாணி.
பாண்டிச்சேரி கள்ளுக்கடையில் இருந்து சென்னை புத்தக்கடைக்கு
குடிபெயர்ந்தவர். அப்பாவின் அந்தத் தொழில் இவரை அப்புறப்படுத்தி
தமிழுக்குக் கொடுத்தது மிகப் பெரிய கொடை! ‘வானம் வசப்படும்’
மூலம் சாகித்திய அகாதமி விருதை வசப்படுத்திய இவரின் படைப்புகள்
இந்திய மொழிகள் தவிர்த்து ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம்,
சுவீடிய மொழிகளில் சென்று சேர்ந்திருக்கின்றன. ‘ஒரு ஊரில்
இரண்டு மனிதர்கள்’ என சொன்ன பிரபஞ்சன் அவரது அறையில் ஒரே மனிதராக
ஜாகை நடத்தி வருகிறார்.
இஸ்லாமிய கலாசாரத்தை தமிழ் புனைவிலக்கியத்திற்குள்
கொண்டுவந்து சேர்த்தவர். கன்னியாகுமரி தேங்காப்பட்டினத்து வாசி.
இதுவரை 5 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள்
தமிழுக்கு இவர் வழங்கியுள்ள பங்களிப்பு. 1944-ல் பிறந்த
தோப்பிலுக்கு 97-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. தரமான
படைப்பாளி. ‘சாய்வு நாற்காலி’ நாவல் மூலம் இலக்கிய உலகில்
தனக்கென ஒரு நாற்காலியைப் போட்டவர். ‘கடலோரக் கிராமத்தின் கதை’ பேசிய
மீரான் ‘துறைமுகம்’ வாயிலாக கடல் வாழ்க்கைக்கு இலக்கிய முகம்
கொடுத்தவர். மிளகாய் வத்தல் வியாபாரியான இவருக்கு மலையாளம் நல்ல
அத்துப்படி. மலையாள மொழியின் மூலம் தமிழ் எழுத்துக்குள்
புகுந்தவர்.
குமரி மாவட்டம் வீரநாராயண மங்கலம் இவரின்
பூர்வீகமானாலும் தொழில்ரீதியாக மும்பையில் பல காலம்
வசித்தவர். நாஞ்சில் நாட்டு சம்சாரி - இலக்கிய உலக கர்த்தா.
இயற்பெயர்: சுப்ரமணியன். கோபம் கொப்பளிக்கும் அறவுணர்வுக்குச்
சொந்தக்காரர். தன் யதார்த்த எழுத்துக் கலப்பையை இலக்கியத்தில் ஆழ
அழுத்தியவர். மரபார்ந்த இலக்கியத்தில் பிடிப்புள்ள நல்ல
படைப்பாளி. இவரின் தமிழ்க் கட்டுரை நடை தமிழுக்குக் கிடைத்த புதிய
போக்கு. எழுத்தில் வட்டாரம் வகுத்த இவரின் ஒட் டாரம் தனித்த
அடையாளம். ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தங்கர் பச்சான் கை வண்ணத்தில்
‘சொல்ல மறந்த கதை’யாக திரையில் உயிர்பெற்றது. கடந்த வருடம்
சாகித்திய அகாதமி விருது பெற்றார் நாஞ்சில்.
நண்பர்கள் அனைவராலும் சா.க. என்று அன்பாக
அழைக்கப்படும் கந்தசாமி ஜெயகாந்தனின் இலக்கிய
வட்டாரத்தைச் சேர்ந்தவர். 1940-ல் மயிலாடுதுறையில்
பிறந்த காவேரி ஆற்றுப் படைப்பாளி. இவரின் ‘சாயாவனம்’
நாவல் இவரை உச்சத்திற்கு கொண்டுபோன படைப்பு. உ.வே.சா.,
வெ.சாமிநாதசர்மா, நேரு படைப்புகள் மூலம் இலக்கிய வாசனையை
வளர்த்துக்கொண்ட கந்தசாமிக்கு அவரின் ‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக
98-ல் சாகித்திய அகாதமி வழங்கப்பட்டது. சமகால இலக்கியச்
சூழலில் தவிர்க்க முடியாத சில விவாதங்களை பொது அரங்கிற்கு எடுத்துச்
சென்றவர் இவர். தென்னிந்திய ‘சுட்ட மண் சிலைகள்’ பற்றி இவர்
மேற்கொண்ட விரிவான ஆய்வு குறிப்பிடத் தகுந்த பணி எனலாம்.
மலையாளக் கரையான திருவனந்தபுரத்தில் வசிப்பவர். வட்டார
இலக்கியத்தின் முன்சால். பார்த்தது பொறியாளர் பணி. முதியோர்
இல்லத்தைக் கதைக்களனாகக் கொண்டு பத்மநாபன் எழுதிய ‘இலை உதிர்
காலம்‘ நாவல் கவனிக்கத்தக்க படைப்பு. இவரின் ‘தலைமுறைகள்’ நாவல்
மகிழ்ச்சி என்ற திரைப்படமாக வ.கௌதமன் இயக்க த்தில் வெளிவந்தது.
‘பள்ளிகொண்டபுரம்’, ‘மின் உலகம்’ என்று இதுவரை 9 நாவல்கள், 7
சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் என எழுதித் தள்ளி இ
ருக்கிறார். 1938ல் பிறந்த பத்மநாபனுக்கு 2007-ம் ஆண்டு சாகித்திய
அகாதமி பரிசு கிடைத்தது. இதுதவிர பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்று மூன்று மொழிகளில் பயணித்து
வருகிறார். அதிகம் அலட்டல் இல்லாமல் தானுண்டு தன் எழுத்துண்டு என
வாழும் வம்பு தும்பு இல்லாத படைப்பாளி..
தொகுப்பு: கடற்கரய்
நான் ஐந்து வருடமாகத்தான்
தமிழ் இலக்கியமல்ல &தமிழே படிக்கிறேன். இதைச் சொல்லிக்கொள்ள நான்
வெட்கப்படுகிற«ன்’’ என்று அனாவசிய பாசாங்கு இல்லாமல்
யதார்த்தமாகப் பேசுகிறார் கர்நாடக சங்கீத முன்னணிப் பாடகர் சஞ்சய்
சுப்ரமணியம். சங்கீத மேடையிலிருந்து இலக்கிய வீதியை எட்டிப்
பார்க்கும் மாறுபட்ட கலைஞர். இங்கே சமீபகாலமாக தான் சந்தித்த
இலக்கியவாதிகளைப் பற்றியும்,தனது இலக்கிய வாசிப்பு அனுபவங்களைப்
பற்றியும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். குறுகிய காலத்தில்
அவர் வளர்த்துக் கொண்டுள்ள அந்த ரசனை, அவரது காம்போதி, கல்யாணி
ஆலாபனைகளை கேட்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துவது நிஜம்!
‘‘மதுரையில் என் கச்சேரி ஒன்றின்போது அறிமுகமானவர் சுரேஷ்குமார்
இந்திரஜித். ‘காலச்சுவட்டில்’ அவரது ஒரு பேட்டியை படித்துவிட்டு
அதைப்பற்றி நண்பர் ஒரு வரிடம் சிலாகித்துச் சொன்னேன். அந்த நண்பர்,
அவரிடம் நான் பேசியவற்றைச் சொல்ல... அப்படி வந்த அறிமுகம். ஒவ்வொரு
தடவையும் மதுரை போகிறபோது கச்சேரி முடிந்தவுடன் இரவு டின்னருக்கு
ஒன்றாகப் போவோம். சுரேஷுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ஆர்வமுண்டு.
சிறந்த ரசிகர். ‘அது என்ன ராகம்... இது யாருடைய கீர்த் தனை’
என்றெல்லாம் சொல்வார். அவர் கேட்ட சி.டி.க்களைப் பற்றிய விஷயங்களை
பகிர்ந்துகொள்வார். சில தரமான சினிமாப் பாட்டுகளை கர்நாடக இசையில்
பாடவே ண்டும் என்பார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பழைய பாடலை ஏன்
வேறு ராகத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடக்கூடாது என்று என்னிடம்
கேட்பார். பழைய இலக்கியம் பற்றி நிறையப் பேசுவார். அவரது ஆழ்ந்த
இலக்கிய ஞானம் என்னை மேலும் மேலும் சுவாரஸ்யப்படுத்தும்.’’
சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டுக்கான சாகித்ய அகாதமி
விருது பெற்ற நாஞ்சில் நாடனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
படிக்க தனது புத்தகம் ஒன்றைத் தந்தார். அப்புறம் கோவை
போயிருந்தபோது இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் தொடர்பு கொண்டு
மதியச் சாப்பாட்டு மேஜையில் ஒன்றாக அமர்ந்தோம். அவர் பேட்டி
ஒன்றை இந்த சந்திப்பிற்கு முன்பு படித்திருக்கிறேன். அவரது
கருத்துக்கள் ரொம்ப ஆழமாக, அழுத்தமாக இருந்ததை உணர்ந்தேன். எங்கள்
‘லஞ்ச்’ உரையாடலின் போதும் அந்த உணர்வு எனக்கு மீண்டும் வந்தது.
நாஞ்சில் நாடன் பேச்சில் பெரிய புத்திசாலித்தனம் தெரிந்தது! அதேசமயம்
வார்த்தைகளில் அசாத்திய மென்மை! வயிறும் மனதும் நிறைந்த மறக்க
முடியாத மத்தியானம் அது!
யுவன் சந்திரசேகர் பெரிய ஹிந்துஸ்தானி சங்கீத ரசிகர்.பூனா ஹிந்துஸ்தானி
உற்சவத்திற்குப் போயிருக்கிறார்.தனது இசை அனுபவத்தை வைத்துக்கொண்டு
எழுதிய ‘கானல் நதி’ எனக்குப் பிடித்தமானது. அதைப் படிப்பதற்கு
முன்பே ‘காலச்சுவடு’ பத்திரிகைக்காக ஆர்.வி.ரமணி, பிரசன்னா ராமசாமி,
யுவன் ஆகிய மூவரும் என்னிடம் பேட்டி எடுத்தது இதமான
அனுபவம்.சென்னை குரோம்பேட்டையிலிருக்கும் அவரது வீட்டுக்குப்
போயிருக்கிறேன். அவரும் என் வீட்டுக்கு வந்துள்ளார். எதைப்
படிக்கலாம் என்று நிறையப் புத்தகங்கள் பற்றி ஆலோசனை கூறியிருக்கிறார்.
படிக்க நிறையப் புத்தகங்கள் தருவார். ஹிந்துஸ்தானி இசை விழாக்களுக்கு
போய்விட்டு வந் தால் மறக்காமல் என்னிடம் அதுபற்றிப் பேசுவார்.
புத்தகங்களைப் பொறுத்தவரை எனக்குக் கதைகளைவிட, வரலாற்றுப் புதினங்கள்,
ஆய்வுக்கட்டுரைகள் மீது விருப்பம் அதிகம். ஜெயகாந்தனின் ‘ஒரு
இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ புத்தகத்தை மிகவும்
ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'
ஜெ.கே.யின் படைப்புகளில் என் மனதைத் தொட்ட மற்றொன்று.
கா.நா.சு.வின் ‘பொய்த் தேவு' கதையில் சோமு பண்டாரம் கேரக்டர் ஓர்
அற்புதம். கும்பகோணம் மக்களின் வாழ்க்கை முறையை, சாத்தனூர் கிராமத்தை
தத்ரூபமாக நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார். எம்.வி.
வெங்கட்ராமனின் ‘வேள்வித் தீ'யில் சௌராஷ்டிரா சமுதாயத்தினரின் நெசவுத்
தொழிலைப் பற்றி ரொம்ப நுணுக்கமாக, ஆடை நெய்வதைப் போல
நெய்திருப்பார்.
சோ. தர்மனின் ‘கூகை' பிரமாதமான தலித் இலக்கியம். ஃபேன்டஸியும்
யதார்த்தமும் கலந்திருக்கும்.
மற்றவர்கள் அரைமணிநேரம் சொல்ல வருவதை நச்சென்று குறைந்த வரிகளில்
விஷயத்தின் சாரத்தை மட்டும் சொல்லும் கு.ப.ரா.வின் லாகவமான பேனாவிற்கு
நான் ரசிகன். சங்கீதத்திலும் அப்படி ஒரு ராகத்தை நீளமாக ஆலாபனை
செய்யாமல் எஸன்ஸை மட்டும் பிழிந்து தந்த மகாவித்வான்கள் உண்டு. டி.எஸ்.
ராமையாவின் ‘மணிக் கொடி காலம்', உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்',
நாமக்கல் கவிஞரின் ‘என் கவிதை', தி.ஜானகிராமனின் ‘மரப்பசு',
‘சிலிர்ப்பு', சா. கந்தசாமியின் ‘சாயாவனம்,’ சுந்தர ராமசாமியின்
‘ஜெ.ஜெ. சில குறிப்புகள்' என்று நான் படித்து என்னை மறந்து அந்தப்
பாத்திரங்களின் தோளில் கை போட்டு நடந்த மதிய வேளைகள் பல உண்டு.
அப்புறம் அசோகமித்ரனின் ‘18-வது அட்சக்கோட்டை’யும் ‘ஒற்றனை’யும் எப்படி
மறக்க முடியும்?
அதான் முதலிலேயே சொல்லிவிட்டேனே, தமிழ் இலக்கியத்தைப் படிக்கப் படிக்க
‘இவ்வளவு அற்புதங்களைப் படிக்காமல் விட்டு விட்டோமே’ என்று மனது
அலை பாய்கிறது. அதனாலேயே இப்போதெல்லாம் நிறையப் படிக்கிறேன்.''.
- வி. சந்திரசேகரன்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
தமிழ்நாட்டில் இத்தனை
வருடங்களில் கிடைத்திருக்கும் கல்வெட்டு ஆதாரங்களில் மிகப் பழைமையான
கல்வெட்டுக் குறிப்புகளை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்
கவிஞர் பழனிவேள்.
திருவண்ணாமலைப் பக்கமுள்ள தொண்டமனூர் கிராமத்தில்
கிடைத்திருக்கும் இந்த ‘குறியீட்டு எழுத்துக்கள்' ஏறக்குறைய 35 ஆயிரம்
ஆண்டுகள் முதுமை கொண்டவை எனக் கணித்திருக்கிறார்கள். இதில்
சிறப்பு என்னவென்றால் இந்தப் பாறை எழுத்துக்கள் ஆற்றுவழி நாகரிகத்தை
ஒட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதுதான். இந்தப் பண்பாட்டுப் பெருமை
குறித்து பழனிவேளிடம் பேசினோம்.
‘‘ஏழாண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்து
கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னாலான தேடுதலில் பலவிதமான தாழிகள்
கிடைத்திருக்கின்றன. அந்தத் தாழிகள் குறித்த தேடுதலில் இருக்கும்
சமயத்தில்தான் இந்தப் பாறை எழுத்துக்கள் தற்செயலாக கானி ஆத்தா கோயில்
பக்கம் என் கண்களில் அகப்பட்டன. இந்த மாதிரியான குறியீட்டு
எழுத்துக்கள் இதற்கு முன்னால் மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையான எழுத்து வடிவம் இலங்கை
ஆணைக்கோட்டையில் கிடைத்திருப்பதாக அறிந்தேன். இந்த எழுத்துக்களின்
ஆராய்ச்சி இதற்கு சுமார் 50 முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வயதிருக்கலாம்
என கணிக்கிறது" என்று புதிய தகவல்களைத் தந்த பழனிவேள் மேலும்
தொடர்ந்து பேசினார்.
தென்பெண்ணை ஆற்றின் நாகரிகம் எவ்வளவு பழைமையானது என்பதை இந்தக் கல்
‘குறி’ எழுத்துகள் மூலம் தெரிந்துகொண்ட பழனிவேளின் இந்தக்
கண்டுபிடிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வந்த பின்பும் கூட
அரசு சார்பில் எந்தவித பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையாம்.
கிடைத்த அரிய ஆவணத்தை அலட்சியம் செய்யாமல் காக்குமா நம் தமிழக
அரசு?
சந்திப்பு : கடற்கரய்
1990 ம் ஆண்டின் ஒரு
நாள். திடீரென்று அவரது கைகால் உட்பட வலது பக்க உடல் முழுவதுமாக
செயல் இழந்துவிட்டது. கூடவே அவருக்குப் பேச்சு சுத்தமாகவே
வரவில்லை. ‘இனி அவ்வளவுதான். அவரால் எதுவும் செய்யமுடியாது. எழுத
முடியாது. இலக்கியம் பற்றி பேசமுடியாது. இருக்கும் காலத்தை பேசாமல்
படுக்கையில் முடங்கியே கடத்த வேண்டியதுதான்’. இப்படித்தான்
எல்லோரும் ஏளனம் செய்தார்கள்.
ஆனால் அவர் சிந்தித்தார். இன்னும் கூடுதலாக எழுதினார்.
கவிதைகள் வந்து கொட்டின. அவரது மனஉறுதியைக் கண்டு நாடே வியந்தது.
2004-ல் அவர் எழுதி வெளியிட்ட, ‘The great Enigma’ என்ற கவிதைத்
தொகுப்பைக் கண்டு உலகமே எழுந்து நின்று அவருக்கு சல்யூட்
அடித்தது. மனிதர்களின் ஆழ்மனத்தில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக
வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்கு இன்று நோபல் பரிசு
கிடைத்திருக்கிறது. பெயர் தாமஸ் ட்ரான்ஸ் ரோமர்.
தாமஸ் 1931 ஏப்ரல் 15-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்தவர்.
தந்தை பத்திரிகையாளர். தாய் ஆசிரியை. வழக்கமான மேற்கத்திய கலாச்சார
பிரச்னை. தாயும் தந்தையும் விவாகரத்து பெறுகிறார்கள். சிறுவன்
தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார்.
அந்த பாதிப்பில் சிறுவயதிலேயே தன் சோகங்களை கவிதைகளாக வடிக்க
ஆரம்பித்தார். 23-ம் வயதில் ‘17 Poems’ என்ற அவரது முதல் கவிதைத்
தொகுப்பு வெளிவந்தது. ஸ்டாக்ஹோம் பல்கலையில் சைக்காலஜி படித்து,
ஒரு சைக்காலஜிஸ்ட்டாகவே பணிபுரிந்தார். இதுதான் மற்ற வர்களின் உள்
உலகத் தைக் கண்டுபிடித்து, யதார்த்தமான கவிதைகளாக வெளியில்
கொண்டு வர உதவியது.
1966-ல் அவர் வெளியிட்ட ‘விண்டோஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற தொகுப்பு
உலகப்புகழ் பெற்றது. 1954 முதல் 2004-ம் ஆண்டு வரையான அவரது
படைப்புகளை ‘போனியர்ஸ்’ என்ற பதிப்பகம் அவரது 80ஆவது பிறந்தநாளை
முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்தான் வெளியிட்டது. இந்தத்
தொகுப்புகள்தான் அவருக்குப் பிறந்தநாள் பரிசாக நோபல் பரிசையே
பெற்றுத் தந்து விட்டன.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் ஸ்வீடனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்
தாமஸ். ‘‘என் நண்பர்களின் மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் நோபல்பரிசு
எனக்குக் கிடைத்தி ருக்க சாத்தியமில்லை’’ என்று எழுதிக் காட்டினாராம்
தாமஸ். உண்மை தான் அமெரிக்கக் கவிஞரான ராபர்ட் பிளே, ராபின் ஃபஸ்டன்,
ராபின் ராபர்ட்ஸன் போன்ற கவிதை நண்பர்கள் இவரது கவிதைகளை
மொழிபெயர்த்து உலக அரங்கிற்கு எடுத்துச் சென் றிருக்கிறார்கள்.
தாமஸ், 1984-ல் போபால் விஷவாயுக் கசிவின்போது, இந்தியா வந்து, அந்த
துயரச் சம்பவத்தை கவிதையாக வடித்தவர் என்பது கூடுதல் செய்தி. அப்போது
இன்றைக்கு நோபல் பரிசை நழுவ விட்டதாகப் பேசப்பட்ட மலை யாளக்
கவிஞர் கே.சச்சிதானந்தனும் உடன் இருந்திருக்கிறார்..
- இரா.மணிகண்டன்.
2010 இலக்கியச் சிறப்பிதழ்
வீட்டில் ஒருத்தர் எழுத்தாளராக இருந்தாலே கருத்து
முரண்பாடு கதவைத் தட்டும்...வீட்டில் இருக்கின்ற அத்தனை ஆட்களும்
எழுத்தாளராக இருந்தால்? ‘‘ஒண்ணும் ஆகாது, சந்தோஷம் வந்து நெஞ்சை
முட்டும்’’ என்கிறார் பவா செல்லதுரை.
இவரது வீட்டில் எந்த மூலையில் திரும்பினாலும் ஓர் எழுத்தாளர்
உட்கார்ந்து கொண்டிருப்பார்.அப்படி எழுத்தாளர் இல்லை என்றால்
பாலுமகேந்திராவில் தொடங்கி மிஷ்கின் வரை சம்மணம் போட்டு
உட்கார்ந்து உலக சினிமா பேசிக் கொண்டிருப்பார்கள்.
‘‘பவா செல்லதுரையின் வீடு ஒரு திறந்த மடம். அதற்கு சரியான
பொருத்தமாக அது திருவண்ணாமலையில் அமைந்திருப்பது.
பவாவின் மனைவி ஷைலஜா ஒரு மொழி பெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து
இவர் மொழி பெயர்த்த ‘சிதம்பர நினைவுகள்’விற்பனையில் இன்றுவரை
சக்கைப்போடு போடும் புத்தகம்.
‘‘வீட்ல மாமா பாரதம் படிப்பாங்க. அம்மாவோட அம்மாவுக்கு படிக்கத்
தெரியலன்னாலும் பரதத்த பகுத்து பகுத்து தெரிஞ்சு வெச்சிருந்தாங்க.
அவங்ககிட்ட இருந்து எங்க அம்மா மாதவிக்கு வாசிக்கிற பழக்கம்
வந்தது. எங்க எல்லாத்துக்கும் மூல வித்து அம்மா மாதவிதான்’’ என்று
சொல்லும் ஷைலஜாவின் அக்கா ஜெயஸ்ரீயும் ஒரு மொழி பெயர்ப்பாளர்.
மலையாள ஸ்டார் ரைட்டரான பால்சக்கரியாவின் படைப்புகளையும்
ஏ.அய்யப்பனின் மலையாளக் கவிதைகளையும் தமிழுக்குக் கொண்டு வந்தவர்.
இவரின் மகள் சுகானாதான் வீட்டில் எல்லோருக்கும் மலையாள டீச்சர்.
இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஷியாமளா பெரிய எழுத்தாளர்
இல்லை. அவள் மூன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்து தன்
எட்டாம் வகுப்பு வரை எழுதிய மலையாளக் கதைகளைத்தான் சுகானா தன் 19
வயதில் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். இவரது தம்பி வம்சி ஒரு
ஓவியர்.ஷியாமளாவின் புத்தகம் தமிழுக்கு வந்தபோது அந்தக் கதைகளுக்கு
எல்லாம் படம் போட்ட சித்திர மொழிக்காரன் இவன்.
வம்சி, பவா செல்லதுரை - ஷைலஜா தம்பதியின் புதல்வன். வம்சியின்
குட்டித் தங்கை மானசி ஒரு கதை சொல்லி. வாயைத் திறந்தால் குட்டிக்
குட்டி கதைகளை கொட்டிக்கொண்டே இருப்பாள். இவளுக்கு ‘கதைகளின்
இளவரசி’ என்று பாராட்டுப் பெயரும் கிடைத்திருக்கிறது.
பிறந்ததிலிருந்து சுகானா கேரளாவில் தங்கிப் படித்தவள் என்பதால்
இவருக்கு மலையாளம் அட்சர சுத்தமாக தெரியும்.இவளிடம் மலையாளக்
கதைகளைப் படிக்க வைத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஷைலஜா தன்னையும்
அறியாமல் ஒரு கட்டத்தில் மலையாளம் கற்றுக்கொண்டு மொழி பெயர்க்கும்
அளவுக்கு உயர்ந்திருக்கிறார். சின்னம்மாவிற்கே பாடம் சொன்ன பிள்ளை
சுகானா.
சுகானாவின் அப்பா உத்ராவும் இலக்கியவாதி. இவர்
தஸ்தாவெஸ்கியின் நூல்களை மொழிபெயர்த்தவர். ஜெயஸ்ரீயின் கணவர்தான்
இந்த உத்ரா.
‘‘பாலகுமாரன், லக்ஷ்மி என்று இருந்த எங்கள் வாசிப்பை தீவிர
இலக்கியத்தின் பக்கம் திருப்பிவிட்டவர் பவாதான். ‘ஜே.ஜே. சில
குறிப்புகள்’ படித்த பிறகுதான் இலக்கியம் பற்றிய பார்வை
எங்களுக்குள் தீவிரப்பட்டது’’ என்று சொல்லும் ஜெயஸ்ரீ டீச்சராக
வேலை செய்கிறார்.
‘இப்படி ஒரே குடும்பமாக இருக்கும் உங்களின் ப்ளஸ் என்ன ‘பவா’?
என்றோம்.
‘‘இன்றைய மாடர்ன் உலகில் தனிமை என்பது பெரும் துயரமாக
இருக்கிறது.ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ள முடியாமல்
திண்டாடுகிறார்கள். எங்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. ஒரு
‘கம்பைன்’ லைஃபை நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதில் பெரிய மகிழ்ச்சி
இருக்கிறது. எழுத்தாளர் என்றால் சோற்றுக்கு கஷ்டப்படுவார். சரியாக
லௌகீக வாழ்க்கையில் ஈடுபட மாட்டார். பெண் பிள்ளைகளை சரிவர
காப்பாற்றமாட்டார் என்ற வாதம் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது’’
என்கிறார் பவா..
-
கடற்கரய்
படங்கள் : ஆர்.சண்முகம்
இலக்கியவாதிகளுக்கு
சினிமா சரிப்பட்டு வரும்,சரிப்பட்டு வராது என்று இரண்டு
கருத்துக்கள். எது சரி? இரு துறையினருக்கும் அப்படி ஒரு ஏழாம்
பொருத்தம்.எலியும்பூனையுமாக சண்டைபோடும் இரு துருவங்கள்.சீரியஸ்
இலக்கிய பத்திரிகை ‘காலச்சுவடு’வின் பொறுப்பாசிரியர் தேவி
பாரதியும், சீரியல் டயலாக், சினிமா ஸ்கிரிப்ட் என்று எழுதிக்
குவிக்கும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் விவாதிக்கிறார்கள்.
‘‘எழுதிக் கொண்டிருந்த எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தபோது
பயன்படுத்திக்கிட்டேன். எனக்கு சினிமாவில் இலக்கியவாதிகள் சொல்ற
மாதிரி எந்த சங்கடமும் நேரவில்லை.ரொம்ப கௌரவமாகவும் மரியாதையாகவுமே
நடத்தப்படுகிறேன்.தேவிபாரதி எனக்கு முன்னாலேயே சினிமாவுக்குள்
போனவர்!அவரோட அனுபவம் மாறுபடலாம்.’’
பாஸ்கர் சக்தி முடிப்பதற்கு முன்னாலேயே தொடர ஆரம்பித்தார் தேவிபாரதி.
இவர் ‘கனவே கலையாதே’ படத்தின் கதையாசிரியர். ‘மஜ்னு’ மாதிரியான
படங்களில் கதை விவாதங்கள் அளவில் பங்கேற்றவர்.
‘‘என்னோட சினிமா ஆசை, உலக சினிமாவின் பாதிப்பால் உண்டானது.
‘கனவே கலையாதே’ படத்தோட முழுக்கதையையும் நான் சிவசக்தி பாண்டியனிடம்
சொன்னேன். அந்தக் கதை அதற்குப் பிற்பாடு 12 பேரால் கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்பட்டது. படக்கதையில் 10 சதவீதக் கதை கூட என்னோட கதை இல்லை.
இது ஒரு கசப்பான அனுபவம்.
அவர்கள் வணிகத்திற்கான ஒரு சூத்திரத்தை வைத்திருக்கிறார்கள்.அந்த
சூத்திரம் கொஞ்சம் கூட மாற்றம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
சூத்திரத்திற்கு ஏற்றமாதிரி கதையை எவ்வளவு வேண்டுமானாலும்
மாற்றலாம். ஆனால் ஃபார்முலா மாறக்கூடாது. சினிமா கதையாசிரியன்
என்பவனுக்கு பெரிய அளவில் சம்பளமும் கிடையாது.அவனுடைய
மதிப்பு,அடையாளம் எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் அவன் அங்கே வேலை
செய்யும் சூழல் இப்போதும் இருக்கிறது.ஒரு கிரியேட்டிவான ஆளுக்கு
அங்கே எந்த அவசியமும் இருப்பதாக எனக்குப் படவில்லை.’’
‘‘உள்ளே போனால்தான் மாற்றம் என்பதை கொண்டு வரமுடியும். வெளியே
இருந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்கிறேன்
நான். ஆனால் இன்றைக்கு நிலமை மாறி இருக்கிறது.நல்ல சினிமாவை
உருவாக்க பல இயக்குநர்கள் கதைகளைத் தேடி அலைய
ஆரம்பித்திருக்கிறார்கள்.உலக சினிமா என்பது பரவலாக்
கப்பட்டிருக்கிறது. டி.வி.டி. என்பது இந்த நூற்றாண்டின்
பெரும்புரட்சி.
தேவிபாரதியின் சினிமா அனுபவம் உலகமயமாக்கலுக்கு முன்னால்
நிகழ்ந்தது.இன்றைக்கு நிலைமை நிறையவே மாறிவிட்டது என்கிறேன்.’’
‘‘டி.வி.டி. கலாச்சாரம் என்பது சினிமாவை வளர்ப்பதாக எனக்குப்
படவில்லை.வெளிநாட்டுப் படத்தை பார்த்துவிட்டு அந்தப் பாதிப்போடு நம்ம
ஊர் படத்தை ஏன் இயக்க வேண்டும்.காட்சிக்குக் காட்சி அப்படியே திருடி
படம் பண்ணக் கூடாது .‘சினிமா பாரடைஸோ’வை பார்த்து ‘வெயில்’வந்தால்
அது தமிழ் சினிமா அல்ல; பாரதிராஜா ‘பதினாறு வயதினிலே’ எடுத்தார்.
அதுதான் தமிழ் சினிமா. பாஸ்கர் சொல்வது போல நிலைமை மாறி
இருக்கிறது.நிறைய பேர் திருடி படங்களை எடுக்கிறார்கள். அதில் தமிழ்ப்
பண்பாடு இல்லை. வாழ்க்கை இல்லை.
அப்படிப் பார்த்தால் பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜாவில்
இருந்து தமிழ் சினிமா இன்று பின்னால் போய்க் கொண்டிருக்கிறது.தமிழ்
நாவல்களை வைத்து படங்கள் வரவேண்டும்.’’
‘‘நாவல் என்பது வேறு வடிவம். சினிமாவின் காட்சி வடிவம் என்பது
வேறு.ஒரு நாவலை அப்பட்டமாக அப்படியே படமாக்க முடியாது.
அவ்வாறு செய்தால் அதில் சினிமாவும் இருக்காது. உண்மையைச்
சொன்னால் பல இலக்கியவாதிகளுக்கு சினிமாவின் மொழி
பிடிபடவில்லை.’’
‘‘வெகுஜன ஊடகங்களில் எழுதி வளர்ந்த சுஜாதா, பாலகுமாரன் போன்ற
எழுத்தாளர்கள் ஓரளவுக்கு நல்ல வசன கர்த்தாவாக உருவாகி
இருக்கிறார்கள். ஆனால் ஜெயமோகனின் ‘நான் கடவுள்’ஒரு மோசமான
படம்.வெகு காலமாக தமிழ் சினிமா கட்டிக் காப்பாற்றும் தீய சக்திக்கும்
நல்ல சக்திக்கும் உள்ள இலக்கணத்தை இந்தப்படம் அப்படியே தூக்கி
நிறுத்துகிறது. ஒரு நாவலை அப்படியே படமாக்க முடியாது என்பது
எனக்குத் தெரியும். ஆனால் நாவல், நல்ல படத்திற்கான மூலமாக இருக்க
முடியும்.’’
‘‘என்னுடைய ‘அழகர்சாமியின் குதிரை’ நாவல் ஒரு வெகுஜன ஊடகத்தில்
எழுதப்பட்ட இயல்பான நாவல்.ஆனால் இன்று அது சினிமாவின் மூலம் வேறு
மட்டத்தை எட்டி இருக்கிறது. தேர்வு என்பது நம் கையில்தானே
இருக்கிறது.அதை வைத்து நாம் நினைக்கும் படத்தில் மட்டும்
பணிபுரியலாமே? உள்ளேயே போகமாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம்.’’
‘‘அந்தத் தேர்வில் பாஸ்கர் சக்தி ஓரளவுக்கு வெற்றியும்
பெற்றிருக்கிறார். அதற்கு என் வாழ்த்துகள்!''
தொகுப்பு: கடற்கரய்
படங்கள்: ஆர்.சண்முகம்
கலைஞரைப்
பற்றிய கவியரங்கம் என்றாலும் சரி,இளையராஜாவின் இசையரங்கம் என்றாலும்
சரி கவிஞர் மு. மேத்தாவிற்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும்.
இலக்கியம், திரைப்படப் பாடல்கள் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்து
கொண்டே தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிய மேத்தாவை எஸ்.எஸ்.ஜெயின்
கல்லூரி மாணவிகள் சந்தித்து உரையாடுகிறார்கள்.
விஷ்ணுபிரியா: உங்கள் கவிதைகளில்
பண்டிதத் தன்மையை குறைத்து எளிமைப் படுத்தி எல்லோரையும் எழுத
வைத்தீர்கள்.இன்று குவிந்து கிடக்கும் ஏராளமான கவிதைகளில் குப்பையும்
குவிந்து இருக்கிறது. இது உங்களுக்கு வருத்தமா? மகிழ்ச்சியா?
மேத்தா:நிறையப் பேரை எழுத வைத்தது என்பது
எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.அதே சமயம் நிறைவான கவிதைகள் வரவில்லை
என்கிறபோது நான் கவலைப்படுகிறேன். ‘போதுமய்யா... போதும் இனி
புதுக்கவிதை எழுதாதீர்'என்று நானே ஒருமுறை குரல் கொடுக்க
வேண்டியதாயிற்று. இதுபற்றி வாத விவாதங்கள் நடந்தன. இப்போது தகுதியான
படைப்புகள் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளட்டும் என்று புதிய
படைப்புகளை ஊக்குவிக்கிறேன்.
திவ்யா: இது கொஞ்சம் ப்ளாஷ் பேக்தான்.
உங்கள் கவிதைகளைப் படித்தும் தாங்களே எழுதியதாக கொடுத்தும் நிறைய
காதலர்கள் உருவானதுண்டு. இதை எழுதிய உங்களுக்கு காதலி கிடைத்தாரா?
மேத்தா:ஏராளமான காதலர்கள் என்னிடம்
‘உங்கள் கவிதைகளை நான் எழுதிய கவிதையாகக் காண்பித்தேன்' என்று
சொன்னதுண்டு. இது அந்த கவிதை மீது அவர்களுக்குள்ள காதலைக்
காட்டுகிறது.எனக்கு காதலி கிடைத்தாரா என்று கேட்கிறீர்கள் பொதுவாக
பிறரைப் பற்றி புறம் பேசக் கூடாது. அதிலும் அகம் பேசுதல் ஆகாது.
பத்மா:பொதுவாக தமிழாசிரியர்கள் என்றாலே
மாணவர்களின் வெறுப்புக்கு அதிகம் ஆளாகிறவர்களாக இருப்பார்கள்.
கல்லூரிப் பேராசிரியராக இருந்த நீங்கள் வகுப்பையும் மாணவர்களையும்
எப்படி சமாளித்தீர்கள்?
மேத்தா:நீங்கள் சொல்வது
தவறு. தமிழாசிரியர்கள் தான் இன்றும் இளைஞர்களின் இதயம்
கவர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.என்னைப் பொருத்தவரை என் மாணவர்கள்
என்னைத் தோளில் தூக்கிச் சுமந்தார்கள்.
நான் அவர்களை இதயத்தில் ஏற்றி வைத்துக் கொண்டேன்.
விஜி:உங்கள் திரைப் பாடல்களில்
வார்த்தைகள் மெட்டுக்கு கட்டுப்படாதபோது சமரசம் செய்து கொண்ட
அனுபவம்...
மேத்தா:‘காசி படத்தில் என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே'என்ற பாடலின் ட்யூனை இளையராஜா
எனக்குத் தந்தார். கண் தெரியாத ஒருவன் பாடும் பாடலில் ஒரு வரி வரும்.
‘வாழ்க்கையெனும் மேடை தனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன்
பார்வையின்றி' என்ற வரி அன்றைய என் சூழலை பிரதிபலிப்பதாக
இருந்தது.ஆனால் ட்யூனுக்குள் அடங்க மறுத்தது.
எனக்கு அதை மாற்றவும் மனமில்லை. உடனே ‘இசைஞானியிடம் இந்த வரி
ட்யூனுக்குள் அடங்க மறுக்கிறது அண்ணா என்றேன்.‘கவலை விடுங்கள் ரெண்டு
தட்டுத் தட்டி அடக்கி விடலாம்’என்ற இளையராஜா தன் ட்யூனுக்குள் அதே
வரிகளைக் கொண்டு வந்து விட்டார்.
சங்கீதா:நீங்கள் திரைப்பட இயக்குனர்களோடு
பாடல் எழுதும் விஷயத்தில் ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு
உள்ளதே?
மேத்தா: நான் எப்போதுமே என்
கொள்கைக்கு உடன்பட்ட கருத்தோடுதான் இணைந்து செல்வேன்.அதற்காக
இயக்குனர்களோடு ஒத்துழைப்பதில்லை என்பது தவறு. ஒருமுறை இந்தியத் தலைவர்
ஒருவரை படுகொலை செய்தவரைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் அந்த நபர்
புகழ் பாடும் பாடலை எழுதும்படி இயக்குநர் என்னிடம் வேண்டினார்.நான்
மறுத்து விட்டேன் அவ்வளவுதான்.
தொகுப்பு : தேனிகண்ணன், படம் : சித்ராமணி.
நோபல் பரிசு பெற்ற தாகூருக்குப் பாராட்டு விழா இன்றைய
ரீகல் தியேட்டர் என்று அழைக்கப்படும் விக்டோரியா ஹாலில்
நடைபெற்றது.அப்போது அரங்கில் இருந்த பாரதி எழுந்து,‘அதைவிடச்
சிறந்த கவிதைகளை என்னால் படைக்க முடியும்.இதே மேடையில் என்னுடன்
தாகூர் பாடட்டும்! நானும் பாடுகிறேன். மக்கள் தீர்ப்பு
வழங்கட்டும்!’என்று கூறினார். அங்கிருந்தவர்கள், என்ன இருந்தாலும்
நம் விருந்தினரை நாம் அவமரியாதையாக நடத்துவோமா? என்று
சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் பாரதி - பண்பு கருதி அமைதியானார்.
இன்று அதேபோல் நோபல் பரிசு பெற்ற தாகூரின் ஒரு கவிதைக்கு இளையராஜா
ஒவ்வொரு கருத்திற்கும் பதிலாக தன் கருத்தைச் சொல்கிறார்.
‘‘இது தாகூரை மறுப்பதல்ல! தாகூரின் கருத்துக்கு என்னுடைய
எதிர்க்கருத்தை முன்வைப்பதாக ஆகும்!’’ என்கிறார் இளையராஜா.
விழித்தெழுக என் தேசம் தாகூர்.
தாகூர் : இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ.
இளையராஜா : (இதயத்தின் சுபாவம் அச்சமல்ல - எனவே அது தலையை
நிமிர்த்தியே இருக்கிறது)
தாகூர் :சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண
விடுதலை உள்ளதோ
ராஜா :(அறிவை சிறைப்படுத்த எப் பொருளும்
இல்லை -எனவே விடுதலை என்ற பேச்சு அறிவுக்கு அர்த்தமற்றது)
தாகூர் : குடும்பத்தின் குறுகிய தடைப் பாடுகளால்
வெளிஉலகின் ஒருமைப் பாடு எங்கே உடைபட்டுத் துண்டு களாய்ப்
போய்விடவில்லையோ.
ராஜா :(குடும்பத்தின் தடை உலகின் ஒருமையை உடைத்துவிட
குடும்பம் உலகைவிட்டுத் தனித்தா இருக்கிறது?)
தாகூர் : வாய்ச் சொற்கள் எங்கே மெய் நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ
ராஜா : (வெளிப்படையாய் காண்ப தனைத்தும் வாய்ச்சொற்கள்,
மெய்யின் பூரணத்தை உணர்த்த இயலாது)
தாகூர் :விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி பூரணத்துவம்
நோக்கித்தனது கரங்களை நீட்டுகிறதோ.
ராஜா : (விடாமுயற்சியும் தளர்ச்சியும் மனதின் கற்பனையே
அன்றி வேறில்லை. ஆனால் அதுவும் பூரணத்துள் உள்ளதுதான். அதை நோக்கி
கரத்தை நீட்ட அது தனிப்பொருள் இல்லை)
தாகூர் : அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில்
வழிதவறிப் போய்விடவில்லையோ,
ராஜா : (அறிவுக்குப் பாழடைந்த பழக்கம் என்ற பாகுபாடு
கிடையாது. அறிவு பயணம் போவதும் இல்லை. வழிதவறுதலும் இல்லை.)
தாகூர் : நோக்கம் விரியவும் ஆக்கவினை புரியவும் இதயத்தை
எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ
ராஜா : (நோக்கம் என்பதே குறுகியது. நோக்கு சுற்றுப்போவதே
விரிந்த நிலை)
தாகூர் : அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன்
பிதாவே. விழித்தெழுக என் தேசம்!
ராஜா : (ஆவதிலும் அழிவதிலும் இயற்கை நிலைதான் நிற்கிறதே
தவிர எதனுடைய தனிவினைக்கும் அங்கு வேலை இல்லை விடுதலை என்பது
பூமியில் இல்லை - விழித்தால் இவை ஒன்றும் இல்லை)
கருத்து எதுவானாலும் அது இளைஞர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்வதாக
இருக்கவேண்டும்.உண்மை உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் இருக்கவேண்டும்
என்ற அடிப்படையில்தான் இளையராஜா இதை எழுதியிருப்பார் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.
தொகுப்பு: -தேனி கண்ணன்
குயில்களின்
குரலொலி,முகம் தெரியும் சுத்தமான குளம்,பச்சைப் பசேலென்று பட்டுக்
கம்பளம் விரித்தது போன்ற புல்தரை.
இப்படியொரு சூழல் கிடைத்தால் எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு எத்தனை
உற்சாகமாயிருக்கும்!அப்படியொரு இடத்தை,சூழலை எழுத்தாளர்களுக்காகவே
அமைத்திருக்கிறார்கள் கேரளாவில்.
கேரள மாநிலம் திரூரையடுத்துள்ள ‘துஞ்சன்பரம்பு, மலையாள மொழியின் தந்தை
என்று கேரள மக்களால் அன்போடு அழைக்கப்படும் ‘துஞ்சத்து ராமானுஜ
எழுத்தச்சன்' பிறந்த இடமாகும்.
இங்குதான் எழுத்தச்சன் மலையாள மொழியை எளிமைப்படுத்தி அதை எல்லோருக்கும்
பாடங்களாய் சொல்லித் தந்தது.ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மலையாள
மொழியில் படைத்த எழுத்தச்சன் குழந்தைகளுக்காகவும் ‘கிளிப்பாட்டு'என்ற
அற்புதமான படைப்பைப் படைத்தார்.
இந்த துஞ்சன்பரம்பை எழுத்தாளர்களின் சொர்க்க பூமியாக மாற்ற
வேண்டுமென்பது பல எழுத்தார்வலர்களின் விருப்பம். அது இப்போது
முழுமையாக நிறைவேறியுள்ளது.
பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் துஞ்சன் பரம்பு எழுத்தாளர்
பூங்கா எழுத்தாளர்களுக்கான எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்களுக்கென்று ஓய்வறைகள்,அவர்கள் ஒன்று கூடி கலந்தாலோசிக்க
மண்டபங்கள், உணவறை, தங்குமிடங்கள் என உள்ளே வந்தால் எல்லாம் கிடைக்கும்
என்ற சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு அமைதியான சூழ்நிலையில் தங்கள் படைப்புக்களைப் படைக்க வரும்
இலக்கியவாதிகள் கைகளில் பேனாவோடும், பேப்பர்களோடும் தங்கள் கற்பனைக்
குதிரையைத் தட்டிவிட்டபடி மரங்களின் கீழ் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
இங்கு தங்கி எழுத, எழுத்தாளர்களுக்கு அறைகள் இலவசம். தங்கும்
அறைகளுக்கு முன்பதிவு செய்யவேண்டும்.
இங்கு உள்ள ‘எழுத்து கண்காட்சியகம்'அனைவராலும் விரும்பப்படும்
இடம்.இங்குதான் எழுத்தச்சனின் பழைமையான ஓலைச் சுவடிகளும், அவரது
எழுத்தாணியும் உள்ளது. பல அரிய பழைமையான புத்தகங்களும் இங்கே
உள்ளன.
இங்கு நடைபெறும் இலக்கியவாதிகள் விழாவிற்கு இந்தியா
முழுவதிலுமிருந்து வருகை புரிந்துள்ளனர்.தமிழகத்திலிருந்து ஜெயகாந்தன்,
சிவசங்கரி, கனிமொழி, சல்மா, அசோகமித்ரன், சிற்பி பாலசுப்பிரமணியன்
போன்றவர்கள் இங்கு வந்து தங்கி இந்த சூழலை உணர்ந்துள்ளார்கள்.
‘தமிழகத்திலும் இதுபோன்று ஒரு இடத்தை
உருவாக்குவோம்’என்று இங்கு வந்தபோது கனிமொழி சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னதுபோல் தமிழகத்திலும் அமைந்தால் எழுத்தாளர்கள்
உற்சாகமடைவார்கள்.
பார்ப்பது
எல்லாம் அழகாய்த் தோன்றும்.எல்லோரிடமும் வலியப் போய் பேசலாம்
போலிருக்கும். நெடுநாள் பகைவர் ஆயினும், தொலைபேசியில் அழைத்து நலம்
விசாரிக்கத் தோன்றும். காதலைப் போல, வெற்றியைப் போல ஒரு நல்ல
புத்தகமும் நம்மில் இத்தனை மாயாஜாலங்களைச் செய்யும். பிரபலங்களின்
அனுபவங்கள் எப்படி?
பாரதி பாஸ்கர் (பட்டிமன்றப் பேச்சாளர்)
இன்றைய காந்தி
‘‘ஜெயமோகன் எழுதிய ‘இன்றைய காந்தி’ புத்தகத்தை சமீபத்துல
படிச்சேன்.காந்தி மேல நாம் வைக்குற பல விமர்சனங்களை இந்தப் புத்தகம்
அடிச்சு நொறுக்கிடுது.காந்திஜியின் எளிமையை விமர்சிக்
குறவங்க,‘காந்திஜியின் எளிமைக்கு நாங்க எவ்வளவு விலை கொடுக்க
வேண்டியிருந்தது தெரியுமா?’ன்னு சரோஜினி நாயுடு அடிச்ச ஒரு கமெண்ட்டை
மேற்கோள் காட்டுவாங்க.சரோஜினி கவர்னரா இருக்குறப்போ, ரயிலில் முதல்
வகுப்புல பயணம் பண்றார்.
செய்தியாளர்கள் காந்திஜியின் எளிமையை ஒப்பிட்டு, இவரைக் கேள்வி
கேட்குறாங்க.அப்போ சரோஜினி தன்னைக் காப்பாத்திக்குறதுக்காக
காந்திஜியின் எளிமையை இப்படி கிண்டல் பண்றார்.இதுபோல பல
விஷயங்களுக்கு ‘இன்றைய காந்தி’யில் தெளிவான விளக்கங்கள் இருக்கு.’’
பார்த்திபன் (நடிகர், இயக்குநர்)
பாவப்பட்ட ஜீவன்கள்
”ஜெயந்தன் எழுதிய குறுநாவலான ‘பாவப்பட்ட ஜீவன்கள்’ படிச்சுப் பல
வருஷங்கள் ஆனாலும் அதை மறக்க முடியலை.ரெண்டு மனைவிகளோடு வாழ்ற ஒரு
டெய்லர்தான் கதையின் நாயகன். அவனோட அப்பா முதல்
மருமகளுக்குத்தான் ஆதரவா இருப்பார்.ஒரு நாள் அவன் ரெண்டாவது
மனைவியின் வீட்டுல இருக்குறப்போ,இவர் நியாயம் கேட்கப்போவார்.
பேச்சு முற்றி,பையன் அப்பாவின் கழுத்தைப் பிடிச்சு வெளியே
தள்ளிடுவான்.பல நாட்களுக்குப் பிறகு அவன் குடிச்சுட்டு கலாட்டா
பண்ணதுக்காக போலீஸ் கைது செஞ்சுட்டதா தகவல் வரும்.அப்போ டெய்லரின்
அப்பா சொல்லுவார்,“அன்னைக்கு என் கழுத்தைப் பிடிச்சு
தள்ளுனானே,அந்தப் பாவத்துக்குத்தான் இப்போ அனுபவிக்குறான்’னு.
அப்பாவை விட,அவமானப்படுத்தப்பட்ட ஒரு மனுஷன்தான் அங்கே
வெளிப்படுவான்.மனித உணர்வுகள் பற்றிய நம்மோட வழக்கமான
எதிர்பார்ப்புகளையெல்லாம் ஜெயந்தன் கலைச்சுப்போட்டுடுறார்.’’
உதயசந்திரன் (ஐ.ஏ.எஸ்.)
அனிமல் ஃபார்ம்
“கல்லூரியில் படிக்குறப்போ விளையாட்டுத்தனமா படிச்ச நாவல் ‘அனிமல்
ஃபார்ம்.’ சீரியஸா உட்கார்ந்து எத்தனையோ புத்தகங்கள்
படிச்சிருக்கேன்.என்னை மிகவும் பாதிச்ச படைப்பு எதுன்னு கேட்டா,
இப்போ ‘அனிமல் ஃபார்ம்’தான் ஞாபகத்துக்கு வருது.அதில் அரசியலையும்
நாட்டு நடப்புகளையும் ஜார்ஜ் ஆர்வெல் செஞ்சுருக்குற விமர்சனம் ஒரு
தீர்க்க தரிசனம் மாதிரி இருக்கு.நாவலில் வர்ற விஷயங்கள் எந்த
நாட்டுக்கும் எந்த அரசியல் சூழலுக்கும் பொருந்துறது பெரும்
ஆச்சரியம்.
சோர்வு ஏற்படுறபோதெல்லாம் நான் படிக்கிற புத்தகம் ‘ஆகட்டும்
பார்க்கலாம்.’ இது காமராஜர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின்
தொகுப்பு.காமராஜரின் உதவியாளர்களிடமும் அவரோடு நெருங்கிப்
பழகியவர்களிடமும் கேட்டு வீரபாண்டியன் எழுதியிருக்கார்.பள்ளி
மாணவர்கள் கூட புரிஞ்சுக்குற மிக எளிமையான நடை இந்தப் புத்தகத்தின்
சிறப்பம்சம்.’’
திருச்சி சிவா (ராஜ்ய சபா தி.மு.க. எம்.பி.)
ஒரே ஒரு புரட்சி
“ஏதோ ஒரு விழாவில் ‘ஒரே ஒரு புரட்சி’ நூலை எனக்குக்
கொடுத்தாங்க. இது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சில சொற் பொழிவுகளைத்
தொகுத்து எழுதப்பட்ட புத்தகம்.ஜே.கே.யை சிலர் ஆன்மிகவாதி என்றும்
சிலர் தத்துவஞானி என்றும் சொல்றாங்க.புத்தகத்தைப் படிச்சு
முடிச்சப்போ, ஜே.கே ஒரு பகுத்தறிவுவாதியா எனக்குத் தோன்றுகிறார்.
அதில் கடவுள், பிரம்மம்,துறவறம் போன்ற பல விஷயங்களுக்கு ஜே.கே மரபான
சிந்தனையிலிருந்து வேறுபட்டு புதுமையான வரையறை கொடுக்குறார்.
மனிதனுக்கு இருக்கும் கடமையும் பொறுப்பும்தான் ஜே.கே.க்கு முக்கியம்.
‘யாருக்கும் நான் ஆசான் இல்லை. எவரும் எனக்கு சீடர்கள் இல்லை’ங்கிற
அவரது கருத்தும் எங்கள் இயக்கத்தின் ஐந்து முழக்கங்களில் ஒன்றான
‘ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்’ங்கிற கொள்கையும் கிட்டத்தட்ட
ஒன்றுதான். ‘ஒரே ஒரு புரட்சி’ எனக்கு நல்லதொரு அனுபவம்.’’
-ஆனந்த் செல்லையா
03.11.10 கவிதை
சாதீ!
அரசு
மருத்துவமனை
பிரசவ வார்டில்
அருகருகே பிறந்த
உள்ளூர்வாசிகள்
இறந்தபின்பு
அடக்கம்
செய்யப்பட்டனர்
வெவ்வேறு இடங்களில்!
என்.மதியழகன்
கூடு பேறு
மரத்தைத் தேடிப் பார்த்து
கூடு கட்டியது பறவை
செல்போன் டவரில்!
பா.ஜெயராமன்
கதைகள்
பசி மறக்க குழந்தைக்கு
தேவதைக் கதை சொல்லி
தூங்க வைத்த
தாயின் பசி போக்க
யார் வந்து சொல்லக்கூடும்
அவள் கேட்டறியாத ஒரு
தேவதைக் கதையை!
தஞ்சை கமருதீன்.
மனசு
பக்கத்து ஓட்டலில்
மட்டன் பிரியாணி
வாசனை!...
நுகரும் மூக்கிற்கும்
எச்சில் ஊறும்
நாவிற்கும் தெரியவில்லை
புரட்டாசி மாதம்
விரதமென்று!
கு.வைரச்சந்திரன்
கையெழுத்து
நானும் படிச்சிருக்கேன் என்பதை
நாலு பேருக்கு முன்னால
புரியாத ஆங்கிலத்தில்
ஸ்டைலாக கையெழுத்துப் போட்டுக்
காட்டினாலும்
யாருக்கும் தெரியாமல்
பொண்டாட்டி தாலியை வைத்துப்
போடும் கையெழுத்தில்
குறுகித்தான் போகிறது
என் பெயரும்
அடகுக்கடை சீட்டில்!
சசிஅய்யனார்
மீசை
முகத்துக்கான
முகவரியாய்
இருக்கிறது
இழப்பதும்
முளைப்பதுமாய்.
மூச்சுக்காற்றில்
தலையசைக்கும்
கருப்புத்தாவரம்
என் மீசை
அரும்பும்போது
அணில் பிள்ளையாய்
வருடியதுண்டு.
சிறுவயதில்
மையில் மீசை வரைந்தவர்
இப்பொழுது
மையே
மீசையாய்...
மீசை -
ஆண்மை குறித்ததல்ல
என்று உணர்ந்தும்
அய்யனார் மீசை
வீரத்தையும்
இட்லர் மீசை
அச்சத்தையும் தருகிறது.
குழந்தைக்கு
முத்தமிடும்போது
வன்முறையும்
மனைவிக்கு
இன்முறையாகவும்
இருக்கிறது.
படுக்க வைத்த அறுவாபோல்
சில மீசைகள் பயமுறுத்தும்
போலி சாமியாரின் மீசை
பொம்பளையின்
கூந்தலாகவே தெரிகிறது.
எல்லா மீசையும்
ஒன்றாகவே இருப்பதில்லை
அவர் -
முகத்தைப்போல
இதுவரை
திருப்பதியில்
தொலைந்துபோகாத
என் மீசை
அம்மா
இழப்பில்
முதல்முறையாக..
பத்துக் காணி
கரும்பு போட்டேன்...
அஞ்சு காணி
மஞ்ச போட்டேன்...
தொழுவம் முழுக்க
ஏருமாடு...
தொழிலாளி
ஆறு பேரு...
மூச்சு வாங்கும்
தூரம் வரை
கடலக் காடும்
எள்ளுக் காடும்...
மூச்செறைக்க
தூக்கம் போட
இருக்கு மூணு தென்னந்தோப்பு...
பொங்கலுக்குப் பொங்கலு
ஏவ்வீட்டுத் திண்ணையில
ஏழூரு கூடியிருக்கும்...
எனாமா பழங்கரும்ப
ஈ எறும்பும் இழுத்துப்போகும்...
கொப்பறையில்
வச்ச பொங்கல்
கொட்டிக் கொட்டி கொடுத்தாலும்
பத்து நாளு பாக்கியிருக்கும்.
இப்படி நான் வாழ்ந்ததெல்லாம்
ஏழெட்டு வருசமாச்சு...
மழதண்ணி இல்லாம
மாடு கன்னு செத்துப் போச்சு...
ஊரவிட்டு பாவிமக்க
பொழப்பு தேடி ஓடுனாங்க...
என்ன செய்ய நான் மட்டும்
கண்ணச் சுத்தி கருவட்டம்...
பக்கத்தூரு ராமசாமி
பட்டணத்தில் இருப்பதாக
படம் போட்டுக் கொடுத்தாக...
உண்டியலு காசோட
ஊரவிட்டுக் கௌம்புனேங்க...
ராமசாமி புண்ணியத்தில்
அஞ்சு மாடிக் கட்டிடத்தில்
காவ வேல கொடுத்தாக...
வேர்வ சிந்தி ஒழச்சகட்ட
வெறுமனே இருந்ததுல
சோம்பேறியா மாறிப்போச்சு...
எழுந்து நின்னு
வணக்கம் சொல்லி
கை எளச்சுப் போனதுங்க...
இங்கிலீசு பேச்சுக்கூட
இப்ப கொஞ்சம் புரியுதுங்க...
இங்கேயும் பொங்கலுண்டு
ரெண்டு முழக் கரும்போட
டி.வி. பெட்டி பாத்துக்கிட்டே
குக்கருல வச்ச பொங்கல்
பொங்கறது தெரியலங்க...
ஒரே ஒரு எண்ணுக்குக் கூட
அழைக்க முடியாதபடி
பணம் வற்றிவிட்டிருந்த கைபேசியில்
ஒரு தவற விடப்பட்ட அழைப்பு
எண்கள் சொல்வதில்லை
எத்தகைய கைபேசியிலிருந்து வந்தனவென்று
செழிப்பு மிகுந்த கனவானின்
தொடுதிரைக் கைபேசியிலிருந்து வந்த
ஆணையாக இருக்கலாம்
ஆயிரத்துக்கு மூன்று விற்றதில் ஒன்றிலிருந்து
அவசரக் கடன் கேட்டு வந்திருக்கலாம்
தீயணைப்பு நிலையத்தின்
எண் விசாரித்து
எரியும் தழலருகில் யாரேனும் அழுத்தியிருக்கலாம்
குரல் மட்டும் அழகாயிருக்கும்
வங்கிக் கடன் தரும் பெண்ணாயிருக்கலாம்
தனக்குக் குழந்தை பிறந்ததை
முதலில் சொல்லி மகிழ அழைத்த
நண்பனாய் இருக்கலாம்
முளிதயிர் பிசைந்த கையோடிருந்த
மனைவிக்கு முத்தமிட்டு வந்தேனே
பதில் முத்தம் வந்திருக்கலாம்
ராணித்தலை நோட்டு வெளிநாட்டு நண்பனின்
நட்சத்திர மதுபானவிடுதி அழைப்பாகயிருக்கலாம்
ஒரு மரணமாயிருக்கலாம்
ஒரு அறிமுகமாயிருக்கலாம்
தவறுதலாக வந்த அழைப்பாகவுமிருக்கலாம்
பேசிவிட்ட அழைப்புகளைத் தாண்டி அர்த்தமுள்ளது
தவறிய அழைப்புகள்
தவறவிடப்பட்ட அழைப்புகளை
உதாசீனம் செய்வது
தொலைந்தழும் குழந்தையொன்றின்
கதறலைக் கேட்டுக் காது பொத்திக்கொண்டு போவது போல
அணைத்து வைக்கப்பட்ட கைப்பேசிக்கு
அனுப்பிய குறுஞ்செய்தியாய்
காற்றில் தேங்கிக் கிடக்கும் ஒரு வேண்டுகோள் அது
அந்த இடத்திற்குப்
போயிருந்தேன்
நம்முடைய சந்திப்பைத்
தொடர்ச்சியாக்கிய இடம்.
எதிரே நூலகமும்
இடதுபுறத்தில் புல்வெளியும்
அப்படியே தானிருக்கின்றன.
மரங்கள் முன்பைவிடவும்
கொஞ்சம் வளர்ந்திருக்கின்றன
நம்முடைய நேசத்தைப் போல்
எனலாமா
அந்த இடத்தை மறக்க முடியாது
தாயின் முலைபோல
காமம் சுரந்த இடமது
நீயறியாமல் உன்னை அல்லது
நீயறிந்து நான் மோகிக்க முயன்ற
முதல் முற்றமது.
நான்குமுறை சரிசெய்தும் விலகாமல்
முந்தியைக் காற்று தொந்தரவுபடுத்திய
அந்த இடத்தை நீயும்
மறந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த இடத்தைப் பற்றிச்
சொல்வதற்குக் காரணமிருக்கிறது.
இப்போதும் அங்கே
இரண்டுபேர் அமர்ந்திருக்கிறார்கள்
வெறும் நட்புதானென்று
வெளியே சொல்லிக்கொண்டு....
செய்
தொழில் வேறாக இருந்தாலும் கவிதையில் தங்களைப் பதிவு செய்த ஒரு
மலையாள கவிதாயி னியைப் பற்றியும் தமிழ்க்கவிஞரைப் பற்றியும் இங்கு
காண்போம்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாலினி தேவதாஸ் கணவருடன் சேர்ந்து
ஹோட்டல் நடத்தி வந்தார்.சில நாட்களில் கணவருக்கு அரசு வேலை கிடைக்கவே
முழுநேரமும் ஹோட்டல் பிசினஸில் கவனம் செலுத்தியவருக்கு கிடைக்கும்
இடைவெளியில் சிறு வயதிலேயே விட்டுப்போன கவிதை எழுதும்பழக்கத்தை
தொடர்ந்திருக்கிறார்.
இன்று மலையாள இலக்கிய இதழ்கள் கேட்டு வாங்கி இவரது கவிதைகளை
பிரசுரிக்கின்றன.கடந்த மாதம் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்
ஷாலினி. ‘‘வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவில் ஏதாவது
எழுதினாதான் எனக்கு அன்றைய வாழ்க்கை திருப்தியானமாதிரி இருக்கும்’’
என்கிறார். அடுத்த கவிதைப் புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளாராம்.
அபயம்
எனக்கு அபயம்
எனது மனசாட்சி
எல்லோரும்
குற்றம் சாட்டும்போதும்
தண்டனை வழங்க
துணை போகாத
எனது மனசாட்சி
தண்டனை வழங்குவதைப் பார்க்க
கூட்டம் கூட்டுபவர்க்கு முன்பு
சந்தர்ப்ப சூழ்நிலையை யொட்டி
எனக்கு சாதகமாய்
ஒவ்வொரு முறையும்
விதி மாற்றி வைக்கும்
ஒன்று மட்டும் நிச்சயம்
எனக்கு தண்டனை இல்லை
காரணம்
என்னை முழுமையாக
தெரிந்த
என் மனசாட்சி.
- ஷாலினி
நாகர்கோவிலைச்சேர்ந்த
தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ என்ற
கவிதைப்புத்தகம் இலக்கிய வட்டாரத்தில் இன்று எல்லோராலும் பேசக்கூடிய
ஒரு இடத்தைப்பெற்றுள்ளது.இதற்குக் காரணம், கவிதை களில்
பொதிந்திருக்கும் கருத்து. இந்தக் கவிதைகளை எழுதிய தாணுபிச்சையா ஒரு
பொற்கொல்லர்.
”நான் வாழும் சமுதாய வாழ்க்கைதான் எனக்குத் தெரியும். அவற்றை
கவிதையில் வடிக்க வேண்டுமென்ற ஒரு உந்துதலில் எழுதுகிறேன்.
இப்போது தங்க நகைத் தொழி லாளர்களின் வாழ்விய லைப் பதிவு செய்யும்
‘அக்கசாலை’நாவல் எழுதி வருகிறேன்!’’என்கிறார் தாணுபிச்சையா.
அம்மாவின் அட்டிகை
அக்காவின்
கல்யாணத்திற்காய்
விற்றவீடு
அம்மாவின் அட்டிகையில்
வாங்கியது
அம்மாவின்
அம்மாவும் புலம்புகிறாள்
தனது பூர்வீக வீட்டை விற்று
எங்கள் தாத்தாவும்
அந்த அட்டிகையை
செய்து போட்டாரென்று
அட்டிகையை
செய்து செய்தே
குறுடாகிவிட்ட அத்தானின்
கவுரவத்தை மீட்க
அக்காவின்
அட்டிகையும் அடைந்தது
மீட்க முடியாத
ஒரு துயரத்தின் வெற்றிடத்தை..
-
தாணுபிச்சையா.
2009 இலக்கியச் சிறப்பிதழ்
மறைந்த
மனைவியின் நினைவாக இலக்கிய அரங்கம் அமைத்து கடந்த பதினெட்டு
வருடங்களாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இலக்கியக் கூட்டங்களை
நடத்தி வருகிறார் தமிழ் ஆர்வலர் க.இராசவேலு செண்பகவல்லி. எழுபத்து
நான்கு வயதாகிறது.
``ஸ்ரீரங்கம் காந்தி சாலையிலிருக்கும் இந்த வீடு தான் என் துணைவியார்
செண்பகவல்லி வாழ்ந்த இடம். 1989-ல் அவர் இறந்துவிட்டார். என்
மனைவியின் நினைவாக இந்த இலக்கிய அரங்கத்தை உருவாக்கியுள்ளேன்'' என்று
அரங்கத்துக்கு பின் இருக்கும் உருக்கமான நினைவைச் சொல்கிறார் இராசவேலு.
``மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வாழ்வியல், அறிவியல்,
ஆன்மிகம், பகுத்தறிவு என பலதரப்பட்ட விஷயங்களை முழுக்க முழுக்க பொழிவாக
அதாவது செறிவான சொற்பொழிவுகளை அரங்கத்தில் பேசுகிறோம்.
தமிழ் இலக்கியத்தை விட சிறப்பான சுவையான உலக இலக்கியம் வேறென்ன
சொல்லுங்க? தாய்மொழி தமிழுக்குத் தான் முதன்மையான இடம். அதே நேரத்தில்
பிறமொழி இலக்கியங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பன்முக
முனைப்போடு தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, ஒரியா, மராத்தி, வங்காளி போன்ற
பல மொழி பேசும் அறிஞர்களை அழைத்தும் பேச வைக்கிறோம். தொல்காப்பியம்
தொடங்கி ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா. நாடகங்கள் வரை அலசுகிறோம். இதற்கு
காரணம் நல்ல விஷயங்கள் எங்கெங்கு இருக்கோ, அவை அனைத்தையும்
தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம்தான்.
செண்பகத் தமிழ் அரங்கில் ஓங்கி ஒலித்த குரல்கள் பல இன்று உலகளவில் வலம்
வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியர்
பேச்சாளர்களை மட்டும் அழைத்து வந்து பேச வைக்காமல் பேச நினைக்கிற
ஆர்வமுள்ள அனைவருக்கும் வாய்ப்பும் தருகிறோம். அவர்களும் தொடர்
பேச்சால் நல்லதொரு பேச்சாளராக ஜொலிக்கிறார்கள். இப்படி இங்கு பேசிய
பலர் இன்று சின்னத் திரைகளிலும், பல வெளிநாட்டு வானொலிகளிலும் தமிழ்
நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கின்றனர்.
இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தை ரசித்துப் படித்ததால்.... பேசியதால்....
கிடைத்த வெற்றி தான் என மகிழ்கிறார் இராசவேலு.
தானைத் தலைவர்கள்தான் என்றில்லாமல் சாதாரணத் தமிழர்களும் தமிழை
வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்..
-இரா. கார்த்திகேயன்
படங்கள் : சுதாகர்
கனடாவில்
என்னை யாராவது விருந்துக்கு அழைத்தால் எனக்கு பயம் பிடித்துவிடும்.
ஆறு மணிக்கு அழைத்தால் எட்டு மணிக்கு சாப்பாடு தருவார்கள். எட்டு
மணிக்கு அழைத்தால் பத்து மணிக்கு கிடைக்கும். ஆனால், பத்து மணிக்கு
அழைத்தால் இரவில் எத்தனை மணிக்கு சாப்பிடுவது? நடுச்சாமம் தாண்டும்
என்று தோன்றியது. விருந்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட பேர்
வந்திருந்தார்கள். நேரம் நடுநிசியை நெருங்கியது. பசி கொழுந்துவிட்டு
எரிந்துகொண்டிருந்தது. ஒருவரோடு ஒருவர் பேசக்கூட இல்லை. பசிதான்
பேசியது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரின் முகத்தை ஆரோ
குறுக்காக வாளால் வெட்டியதுபோல அவருக்கு பெரிய வாய். அவர்
வாயைத் திறந்து கொட்டாவி விட்டபோது அவர் முகமே மறைந்துபோனது.
`எதற்காக இவ்வளவு லேட்?' என்று அவரிடம் கேட்டேன். அவர் வயிற்று
வலிக்கு வயிற்றைப் பிடிப்பதுபோல அமுக்கிக்கொண்டு `இன்னும்
அப்பக்காரர் வரவில்லை' என்றார்.
மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது சிவபெருமான் தன் பூதகணமான
குண்டோதரன் வயிற்றில் அக்னியை ஏவிவிட்டார். அவன் பசி தாங்கமுடியாமல்
மணவீட்டில் மீதமாயிருந்த அத்தனை உணவையும் கபளீகரம் செய்தான். பசி
அடங்காமல் வைகை நதியில் வாயை வைத்து உறிஞ்சிக் குடித்தான். அப்படியும்
அவனுடைய வயிற்றுத் தீ அணையவில்லை என்று கூறுகிறது புராணக் கதை. அது
மாதிரியான தீ அங்கே கண்ணுக்குத் தெரியாமல் பரவியிருந்த நேரம்
அப்பக்காரர்கள் முழங்கைகளால் வழிசெய்துகொண்டு வந்தார்கள். மூன்று
சமையல்காரர்கள். அடுப்பைப் பற்றவைக்க ஒரு நெருப்புப் பெட்டி வேண்டும்
என்றார் மூத்த சமையல்காரர். அங்கே கூடியிருந்த அத்தனை பேரில்
ஒருவரிடம்கூட நெருப்புப் பெட்டி இல்லை.
`ஒரு நெருப்புப் பெட்டி, ஒரு நெருப்புப் பெட்டி' என்று அவர் கூவினார்.
மூன்றாம் ரிச்சார்டு மன்னன் `ஒரு குதிரை, ஒரு குதிரை, ஒரு குதிரைக்கு
ஒரு சாம்ராஜ்ஜியம்' என்று கத்தியது போல ஒரு நெருப்புப் பெட்டியைத் தேடி
அலைந்தார். பின்னர் சமையல்காரர் தன் வாகனத்துக்கு போய் அதிலுள்ள
சிகரெட் லைட்டரில் நெருப்பு உண்டாக்கி, அதனால் அடுப்பு மூட்டி அப்பம்
சுட்டு விருந்தினரின் பசியை ஆற்றினார்.
நான் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பத்து வருடங்களில் எங்கள்
வீட்டில் நெருப்புப் பெட்டி என்ற பொருளுக்கு வேலையே இல்லை.
வீட்டில் அது கிடையாது. சமையல் மின்சாரத்தில் இயங்கியது.
வீடு மின்சாரத்தால் சூடாக்கப்பட்டது. நுண்ணலை அடுப்பு மின்சாரத்தில்
வேலை செய்தது. ஒரு காலத்தில் வாழ்வாதாரமாக இருந்த நெருப்பு இன்று
வீடுகளில் அந்நியமாகிவிட்டது.
நான் சிறுவனாய் இருந்தபோது காலையில் ஐந்து மணிக்கே அம்மா எழும்பி முதல்
வேலையாக அடுப்பைப் பற்றவைப்பார். அப்படி மூட்டிய அடுப்பு இரவு நாங்கள்
படுக்கப் போகும்வரைக்கும் அணைவதேயில்லை. அடுப்பிலே எப்பவும் தணல்
கனன்றபடி இருக்கும். படுக்கும்போது அது தண்ணீர் தெளித்து
அவிக்கப்படும்.
எங்கள் கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பு
கடன் வாங்கிப் போவது சர்வசாதாரணம்.
எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தது செல்லம்மாக்கா குடும்பம்.
அவர்கள் வீட்டில் நெருப்புப்பெட்டி என்ற பொருள் கிடையாது. எப்போது
நெருப்பு தேவையென்றாலும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்னம் வந்து
நெருப்பை எடுத்துப்போவாள். எட்டு வயது அவளுக்கு. ஆனால் அவள்
மாலையில்தான் வருவதுண்டு. அவர்கள் வீட்டில் ஒரு நேரம்தான் சமையல். மாலை
சாப்பிட்டு படுத்தால் மறுபடியும் உணவு அடுத்தநாள் மாலைதான்.
ஆதியிலே நெருப்பு பெரிய செல்வமாக இருந்திருக்க வேண்டும்.
நெருப்பை வளர்த்து பாதுகாத்தவர்கள் அதை ரகசியமாக வைத்துக்கொண்டார்கள்.
நெருப்புக்குச் சொந்தக்காரன் சமுதாயத்தில் மதிப்புள்ளவனாகக்
கருதப்பட்டான். சமீபத்தில் நமிபியாவுக்குச் சென்ற என் நண்பர் அங்கே
இருந்து நெருப்புத் தடிகளைக் கொண்டுவந்தார். அதிலே ஒரு தடி தட்டையாக
சிறுகுழி விழுந்து இருந்தது. நகத்தினால் கீறினால் அந்த அடையாளம்
விழும், அவ்வளவு மெத்தென்ற மரத்தின் பட்டை அது. நேரான குச்சியை
குழியிலே வைத்து நண்பர் கடைந்த போது ஒரு நிமிடத்துக்கும் குறைவான
நேரத்தில் புகை வந்து, அதிலே பஞ்சை பிடித்ததும் தீ பற்றிக்கொண்டது.
நமிபியாவில் இன்றைக்கும் சில ஆதிவாசிகள் நெருப்புத் தடிகளை
உபயோகிக்கிறார்கள். அங்கே ஓர் ஆணுக்கு பல மனைவிகள் உண்டு. அதிலே மூத்த
மனைவியின் கடமை நெருப்பைப் பாதுகாப்பது. அவர் படுக்கைக்கு அருகில் தீ
வளர்த்து அதை இரவும் பகலும் அணையாமல் பார்த்துக்கொள்வாராம்.
பசி என்றால் நெருப்பு என்பதை நான் என் சின்ன வயதிலேயே
உணர்ந்துகொண்டேன். சூரியன் மறையும் நேரம் நெருங்கியும்
அன்னத்தைக் காணவில்லை. எனக்கு பதற்றம் பிடித்தது. அம்மா விளக்கு
ஏற்றினார் என்றால் நெருப்பு கடன் கொடுக்கவே மாட்டார்.
`ஏன் அம்மா இருட்டுப்பட்ட பிறகு நெருப்பு கொடுக்கக்கூடாது?'
`லட்சுமியடா, லட்சுமி. விளக்கு வைத்த பிறகு அவர்கள் நெருப்பைக்
கொண்டுபோனால் எங்கள் வீட்டு லட்சுமி அவர்களுடன் போய்விடும்.'
அன்னத்துக்கு இது தெரியும். அவள் தினம் தினம் வந்து மாலை நேரம்
நெருப்பு வாங்கிக்கொண்டு போவாள். சிலசமயம் எங்கள் வீட்டில்
விளக்கு வைத்த பிறகு அவள் வந்ததுண்டு. அப்போதெல்லாம் அம்மா நெருப்பு
கொடுக்காமல் அவளை விரட்டிவிடுவார்.
பக்கத்து வீட்டில் இருப்பது மூன்றே மூன்று பேர்தான். அன்னத்தின் அப்பா,
அம்மா, அன்னம். அவள் எனக்கு ஒரு வகுப்பு கீழே படித்தாள். எங்கள்
வீட்டுக்கு வந்து நெருப்பு வாங்கித்தான் அன்றைய சமையலுக்கு அன்னம்
வீட்டில் அடுப்பு மூட்டுவார்கள். அதற்குப் பிறகுதான் இரவுச்
சமையல்.
`சரி, இருட்டிப்போட்டுது, கைவிளக்கை எடுத்துக் கொளுத்து' என்றார்
அம்மா.
வழக்கமாக இந்த நேரம் அன்னம் ஒரு தேங்காய்ப் பொச்சை எடுத்துக்கொண்டு
நிழல் வருவதுபோல சத்தம் கேட்காமல் நடந்து வந்து அடுக்களை கதவடியில்
நிற்பாள். நான் சட்டென்று கதவைத் திறந்து பார்த்தேன். அன்னம் இல்லை.
இருட்டுப்படப் போகுது, இவளைக் காணவில்லையே என்ற கவலை பிடித்தது.
`ஏன் அம்மா, நெருப்பை நானே கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாறேனே.'
குனிந்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த அம்மா தலையை நிமிர்த்தி
என்னைப் பார்த்தார்.
`இது என்ன புதுப் பழக்கம். ஒவ்வொரு நாளும் கொண்டுபோய் கொடுப்பியா?'
`இல்லை அம்மா, இன்றைக்கு மட்டும். நெருப்பு இல்லாமல் சமைக்க முடியாது.
அவர்கள் பட்டினி கிடப்பார்கள். பாவம், அன்னம்' என்றேன்.
`சரி சரி. கொண்டுபோய்க் கொடுத்திட்டு வா. இன்றைக்கு மாத்திரம்' என்று
கூறி கழுத்தை நீட்டி அடுப்பைக் காட்டினார்.
நான் ஒரு தென்னம் பொச்சில் தணலை வைத்து ஊதி ஊதி எடுத்துக்கொண்டு அன்னம்
வீட்டுக்குப் போனேன். அங்கே பார்த்த கா
ட்சிக்கு நான் தயாராயிருக்கவில்லை. இரண்டு நாய்கள்
ஒன்றையொன்று துரத்தி விளையாடின. அன்னம் வெளிக்குந்தில் இருந்து சதுர
ரூல் கொப்பி ஒன்றில் இருட்டுப்படுவதற்குள் வீட்டுக் கணக்கை
எழுதிக்கொண்டிருந்தாள். அன்னத்தின் தாய், வற்றிய ஆறுபோன்ற கால்களை
நீட்டி, தலையை விரித்துப்போட்டு, ஈர் வாங்கியால் ஈர்
எடுத்துக்கொண்டிருந்தார். அன்னத்தின் தகப்பன் சுவரில் சாய்ந்துபோய்,
தலை முழங்கால்களுக்கு கீழே தொங்க, ஒட்டகத்தின் உதடுபோல
பெருத்துக்கிடந்த கீழ் சொண்டிலிருந்து நீர் வடிய, வேறு உலகத்தில்
இருந்தார். அவர் கண்கள் திறந்திருந்தாலும் அவை உலகத்தைப்
பார்க்கவில்லை.
அங்கே சமையலுக்கான ஓர் ஆயத்தம்கூட எனக்குத் தெரியவில்லை.
செல்லம்மாக்கா சட்டென்று எழும்பி நின்றதும் முழங்கால் எலும்புகள்
முறிந்து சத்தமெழுப்பின. இரண்டு கைகளையும் மெதுவாகத் தூக்கி தலையை
முடிந்து கட்டினார். `நெருப்பு கொண்டு வந்தாயோ, என்ரை ராசா. அங்க பார்,
என்ரை புருசனை. நல்லாய் குடிச்சுப்போட்டு வந்து கிடக்கிறதை. இன்றைக்கு
சமையல் இல்லை. நான் இவளைச் சாப்பிடுவேன். இவள் என்னைச் சாப்பிடுவாள்'
என்று கத்தினார். அவர் வார்த்தைகள் முடிந்தபிறகும் கோபம் அங்கே
நின்றது. நான் தீயை கையில் ஏந்திக்கொண்டு என்ன செய்வதென்று
தெரியாமல் மெல்லிய துணிபோல புகை ஆடிக்கொண்டு மேலே எழும்புவதைப்
பார்த்தபடி நின்றேன். என் இருதயம் பெரிதாகி விலா எலும்பை முட்டியது.
அன்னம் எழும்பி பானையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
மீண்டும் ஒரு போணி அள்ளி என்னையே பார்த்துக்கொண்டு குடித்து
முடித்தாள். அவள் கண்களை எடுக்கவில்லை. குண்டோதரன் வயிற்றை ஆக்கிரமித்த
அக்னி அவள் வயிற்றிலும் எப்படியோ புகுந்திருக்க வேண்டும்.
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அவள் வயிற்றுக் கனலை அன்று
அணைத்திருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை..
அழைப்பு
மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஓர் மனிதக்குரங்கு
நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை; தோளில் ஒரு லெதர்
பேக்; மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி.; ஒட்ட வெட்டப்பட்ட தலை; அகலமான
கைகள்; காலில் நைக் ஷூ; உள்ளடங்கிய புன்னகை; சற்றே குழப்பமான
நிலையில், "என்ன வேண்டும்'' என்று கேட்டேன்.
அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டது. தான் ஓரு விற்பனைப் பிரதிநிதி என்றும், கொரியத் தயாரிப்பான
அதிநவீன செல்போன் விற்பதற்காக தான் வந்துள்ளதாகவும் சொல்லி, தயாராக
கையில் வைத்திருந்த விளம்பர அறிக்கை ஒன்றை என் முன் நீட்டியது. நான்
வியப்புடன் மனிதக் குரங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க
உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் மிக நளினமாக அது தன் விற்பனைப்
பொருளின் மேன்மைகளைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.
என் மனதிலே அது மனிதக் குரங்கு, மனிதக் குரங்கு என்ற ஒரு ஒற்றைக்குரல்
ஓயாமல் எதிரொலித்தபடியே இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்து கொண்டது
போல மெல்லிய வெட்கத்துடன், "இதன் முன்பு என்னைப் போன்ற பிரதிநிதிகளை
நீங்கள் கண்டதில்லையா'' என்று ஆங்கிலத்தில் கேட்டது.
இல்லை என்று தடுமாறியபடியே சொன்னேன். "விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த
கட்டத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக்
கொள்வீர்கள் என்று நம்புகிறேன். செயற்கை அறிவு கொண்ட ரோபோக்களை விடவும்
எங்களைப் பார்த்துதான் அதிகம் பேர் வியப்படைகிறார்கள். அது ஏன் என்றே
புரியவில்லை'' என்றது.
``அப்படியெல்லாம் இல்லை. இது என்னுடைய தவறுதான்'' என்று தயங்கியபடியே
சொன்னேன்.
தான் ஹோமேசெபியன் வகை குரங்கு என்றும், தனது மூதாதையர்களான
நியான்டர்தால், குரோமகனான் பற்றி நிச்சயம் நான் அறிந்திருப்பேன்
என்றபடியே, தனது குடும்பம் முப்பது வருஷங்களுக்கு முன்பாகவே
அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரம் நோக்கி
வந்துவிட்டதாகவும் தான் முறையாக பள்ளிக் கல்வி கற்று, நான்கு மொழிகளில்
பயிற்சி பெற்றுள்ளதோடு, டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்த விற்பனை
யுத்திகள் குறித்த சான்றிதழ் பட்டயமும் பெற்றிருப்பதாக சொல்லியது.
நான் தயக்கத்துடன், இப்படி ஒருவரை நான் முன்பு சந்தித்ததேயில்லை என்று
சொன்னேன். அது தலையசைத்தபடியே இந்த நகரில் என்னைப் போன்றவர்கள்
அதிகமில்லை. ஆனால், என் நண்பர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கிய
பொறுப்புகளை வகிக்கிறார்கள். பேராசிரியர்களாக, விமானியாக, ஏன் ஊடக
விற்பன்னர்களாகக் கூட பணியாற்றுகிறார்கள். அங்கே அவர்களை எவரும் பேதமாக
நடத்துவதில்லை, கேலி செய்வதில்லை என்றது.
அது சரிதான் என்றபடியே அதன் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அகலமான
கைகள். விரல் நகங்கள் கவனமாக வெட்டப்பட்டிருந்தன. மனிதக் குரங்கு என்
வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டபடியே,
"உங்கள் ஃப்ரிட்ஜில் முட்டையொன்று உடைந்து போயிருக்கிறது'' என்றது.
அவசரமாக குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்து பார்த்தேன். நிஜம்.
ஒரு முட்டை உடைந்து வழிந்து போயிருந்தது, அதை எடுத்து வெளியே
வைத்தபடியே எப்படி அதற்குத் தெரிந்தது என்று கேட்டேன.
மனிதக் குரங்கு சிரித்தபடியே, "தலைமுறை தலைமுறையாக காட்டில்தான்
வாழ்ந்தோம். வாசனையை எங்கிருந்து கசிந்தாலும் அறிந்துவிட முடியும்''
என்றது. "என்னால் சமையலறையில் இருந்து வரும் வாசனையைக் கூட எது
என்னவென்று பிரித்து அறிய முடியவில்லை'' என்றேன். குரங்கு
சிரித்தபடியே, "வாசனை, சிறு சப்தம், பயம் யாவும் அடிமனதில்
அப்படியேதானிருக்கிறது. இன்னும் மறையவில்லை'' என்றபடியே, ``உங்கள் வீடு
இருக்குமிடம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது என்றும் அதில்
எண்ணிக்கையற்ற வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தது என்றும்
வாசித்திருக்கிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு எரியின் மீது உறங்குவதைப்
போல உணர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டது
அந்த மனிதக் குரங்கு சொல்வது உண்மை. இந்த இடத்தில் நாற்பது
வருசங்களுக்கு முன்பு வரை பெரிய ஏரியிருந்தது. அதை மூடி அந்த
இடத்தில்தான் புதிய கட்டடங்கள் கட்டினார்கள். இன்றைக்கும் இதன்
நிலப்பதிவுகளில் அந்த ஏரியின் பெயர் குறிப்பிடப்படுகிறது என்று
சுட்டிக்காட்டினேன்.
மனிதக்குரங்கு சிரித்தபடியே, "மனிதர்களால் ஆகாசத்தையும் மேகங்களையும்
மட்டும்தான் விலைக்கு வாங்க முடியவில்லை. நகரங்கள் அலுப்பூட்டுகின்றன.
இங்கே இலைகள் உதிரும் ஓசை கேட்பதில்லை. வண்டின் சிறகொலியோ, பறவைகளின்
ரெக்கையடிப்போ, தவளைகளின் புலம்பல்களோ கேட்பதேயில்லை. ஒரே வாகன
இரைச்சல். உலகிலே தண்ணீரை விலைக்கு வாங்கும் ஒரே உயிரினம்
மனிதர்கள்தான்'' என்றபடியே தனது பையில் இருந்த மாதிரி செல்போன் ஒன்றை
எடுத்து பிரித்தது.
அதற்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டேன். குரங்கு சிரித்தபடியே தன்னை
காதலிக்க இளம் பெண்கள் எவருக்கும் விருப்பமில்லை என்பதால் உறவினர்களிலே
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகச் சொல்லி தனது பர்ஸை
திறந்து அதிலிருந்த பெண்குரங்கு ஒன்றின் புகைப்படத்தைக் காட்டியது.
எனக்கு அந்தப் புகைப்படத்தை விடவும் பர்ஸில் வைத்திருந்த இரண்டு
கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரபலமான கிளப் ஒன்றின் உறுப்பினர் கார்டு,
வாகன ஓட்டுநருக்கான லைசன்ஸ் யாவும் கண்ணில் பட்டது.
நான் அந்தத் திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலே, ஏன் அது விற்பனைப்
பிரதிநிதி வேலையைத் தேர்வு செய்தது என்று கேட்டேன். "அதுதான் சவாலாக
இருக்கிறது; ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எதிர்பாரமல் இருக்க வேண்டும்.
புதிய மனிதர்கள், புதிய சவால்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட
என்னால் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் அலுப்பூட்டும் வேலைகளில்
தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அது
என்னால் ஒரு போதும் இயலாது. அந்தந்த நிமிடத்தில் வாழ வேண்டும். அப்படி
நம்மால் இயலாமல் போவதற்குக் காரணம் நம் நினைவுகள்தான் என்கிறார் ஜே.
கிருஷ்ணமூர்த்தி. அது சரியென்றே தோன்றுகிறது'' என்றது.
நான் திகைப்போடு ஜே.கிருஷ்ணமூர்த்தியை படித்திருக்கிறாயா என்று
கேட்டேன். தனக்கு கிருஷ்ணமூர்த்தியைப் பிடிக்கும் என்றதோடு டேவிட் போம்
என்ற இயற்பியல் அறிஞருடன் ஜேகே., காலத்தின் முடிவின்மை பற்றி
நிகழ்த்திய உரையாடல் அற்புதமானது என்று சொல்லி வியந்தபடியே
தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று மிக அன்புடன்
கேட்டது.
நான் ஃபிரிட்ஜில் இருந்த குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து தந்த போது,
உதட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே சிந்திவிடாமல் அது கவனமாக
குடித்துவிட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற
கைக்குட்டையை எடுத்து உதட்டை துடைத்துக் கொண்டது. பிறகு தன்னியல்பாக
புதியரக செல்போன்களின் சாத்தியப்பாடுகளை விளக்கிச் சொல்ல துவங்கியது.
அரை மணிநேர பேச்சிற்குப் பிறகு நான் அதனிடமிருந்து ஒரு புதிய போனை
வாங்கிக் கொள்வது என்று முடிவானது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த
லெதர் பையை எடுத்து அதிலிருந்த பில் புத்தகத்தில் என் பெயர்,விலாசம்
மற்றும் சுயவிவரக் குறிப்புகளை எழுதிக்
கொண்டிருந்தது.நான் அந்தத் தோள்பையினுள் பார்த்துக்
கொண்டிருந்தேன். ஒரு புத்தகம், இசை கேட்பதற்கான சிறிய ஐபேடு. ஒரு
பிஸ்கட் பாக்கெட் மற்றும் சிறிய வாசனை திரவியப்புட்டி காணப்பட்டது.
அழகான கையெழுத்துடன் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த
குரங்கு, பையிலிருந்த புத்தகத்தை நான் கவனிப்பதை அறிந்து அதை எடுத்து
என்னிடம் நீட்டியபடியே, இது நீட்சே.. மிக முக்கியமான சிந்தனாவாதி.
சோர்வுறும் போது அடிக்கடி இதை வாசிப்பேன் என்று சொல்லி
சிரித்தபடியே படிவத்தில் என்னிடம் கையெழுத்து கேட்டது.
நான் கையொப்பமிட்டபடியே காசோலை ஒன்றினைத் தந்தேன். மிகுந்த அன்புடன்
நன்றி தெரிவித்துவிட்டு தங்கள் கம்பெனி எனக்குரிய புதிய செல்போனை
தபாலில் அனுப்பி வைக்கும் என்றபடியே என்னிடமிருந்து விடைபெற்றுப்
போனது.
மனிதர்களிடம் கூட காணமுடியாத ஒழுங்கும் அன்பும் மிருதுவான பேச்சும்
கொண்டிருந்த அந்தக் குரங்கை வியந்தபடியே இருந்தேன்.
மின்சாரம் தடைபட்டு இருந்ததால் ஐபேட் வேலை செய்யவில்லை
போலும்.எரிச்சலும் அலுப்புமாக மனிதக்குரங்கு ஐபேடின் பொத்தான்களை
அமுக்கியபடியே நின்றிருப்பது தெரிந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்துக்
கொண்டிருந்தேன். மனிதக் குரங்கு ஐபேடை வெறித்துப் பார்த்தபடியே
ஆத்திரத்துடன் முணுமுணுத்தது.
"மசிரானுங்க.... இவங்க ஒவ்வொருத்தரையும் உருவி உருவி செல்போன்
விற்கிறதுக்குள்ளே நாக்குத் தள்ளி போயிருது. இதுல கரண்ட் மசிரு வேற
வேலை செய்யலை'' என்று ஆத்திரத்துடன் சொல்லியபடியே ஐபேடிலிருந்து விலகி
நடந்து அங்குமிங்கும் பார்த்தது.
எவரும் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த மறுநிமிசம் எனது வீடிருந்த
பன்னிரண்டாவது தளத்திலிருந்து ஒரே தாவாக வெளியில் தாவி, பூமியை நோக்கி
குதித்து எதுவும் நடக்காதது போல தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையை
நோக்கிப் போய்க் கொண்டிருந்தது..
காலம்
கடந்து நிற்கும் எழுத்துக் கலைஞனோடு சில மணி நேரங்கள் உரையாடுவது
என்பதே தனி அனுபவம். அவரின் சுவாரஸ்யமான பக்கங்களை ஒன்றரை மணிநேரம்
ஓடும் ஆவணப் படமாக (டாக்குமெண்டரியாக) பதிவு செய்திருக்கிறார் ரவி
சுப்ரமணியம். `ஒரு எழுத்துப் போராளிக்கு என்னுடைய காணிக்கை' என்று
இசைஞானி இளையராஜாவே இதற்கான அனைத்துப்
பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு படத்திற்குச் செலவு செய்தார்.
ஜெயகாந்தனின் ரசிகர்களும், இலக்கியவாதிகளும்கூட எப்போது வெளிவரும்
என்று கண் கொட்டாமல் காத்திருக்கின்றனர்.
படத்தில் நிறைய ஜே.கே. பஞ்ச் டயலாக்குகள் :
``எல்லா எழுத்தாளர்களை விடவும் நீங்க ரொம்ப ஈகோ பார்க்கறீங்களே?''
ஜெயகாந்தனைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட
ரவிசுப்ரமணியத்திற்கு,``எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்க-வேண்டியது.
இல்லாட்டி நான் என்ன பண்றது'' என்று கூலாகியிருக்கிறார் ஜே.கே.
இப்படி ஜே.கே.யின் பல்வேறு பக்கங்களைப் புரட்டிக் காட்டுகிறது
`எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்' என்னும் ஆவணப் படம்.
இசைஞானி இளையராஜா சென்னைக்கு வந்த புதிதில் நேரே போய் நின்றது
ஜெயகாந்தனின் வீட்டு வாசலில்தான். அவரையே ஆதர்ஷமாக நினைத்து வந்த
பாரதிராஜா, இளையராஜா இருவருமே ``சினிமாவில் சேரணும். உங்களை
நம்பித்தான் வந்திருக்கோம்'' என்றதற்கு ``என்னை நம்பி ஏன்
வந்தீங்க. உங்களை நம்பியில்ல வந்திருக்கணும்'' என்று வெளிச்சம்
காட்டியிருக்கிறார் ஜே.கே.
அவர் மீது அன்று வைத்திருந்த அதே பாசத்தோடு ஜே.கே. பற்றிய
ஆவணப் படத்தைத் தயாரித்துவிட்டார் ராஜா.
படத்தில் ஜே.கே.வைப் பற்றிய விமர்சனத்திற்கு ஜே.கே.வே
பதிலளித்திருப்பதுதான் ஹைலைட்.
ஒரு இடத்தில் ``கோபம் வந்தால் நீங்கள் கெட்டவார்த்தைகளைப்
பயன்படுத்துகிறீர்ளே'' என்ற ரவியின் கேள்விக்கு,
``தலையினும் இழிந்த மயிர்'' என்று வள்ளுவன் எழுதியிருக்கிறானே அது
கெட்ட வார்த்தையா'' என்று கனல் தெறிக்கிறார் ஜே.கே.
இப்படி பயணிக்கும் படத்தில் ராஜா, ஜே.கே.விற்குப் பிடித்தமான வசந்தா
ராகத்தில் `எங்கனம் சென்றிருந்தீர்' என்ற பாரதி பாடலை நெக்குருக
பாடியிருக்கிறார். இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்று எல்லோரது
எதிர்பார்ப்பையும் தூண்டியிருக்கும் ஜே.கே.வின் இந்தப்
படம் எப்போது வெளிவரும் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது
எல்லா விஷயங்களையும் மக்களுக்கே சொந்தம் என்ற பொதுவுடைமை
சித்தாந்தத்தில் மூழ்கிப்போன ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப் படம்
பொதுமக்களின் பார்வைக்கு வருமா?
ஜே.கே. சொன்னதுபோல் தன்னை நம்பி வாழ்ந்து சாதித்துக்காட்டிய ராஜா,
`இப்பவும் உங்களை நம்பிதான் இருக்கிறோம்' என்பதுபோல் இந்த ஆவணப் படத்தை
ஜெயகாந்தனுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார். இது பார்வைக்கு வர
இசைஞானிதான் மனது வைக்கவேண்டும்.
பொங்கலுக்காவது வெளியிடுவீங்களா ராஜா சார்!.
- தேனி.கண்ணன்
மர்மயோகியை
`சற்றே இளைப்பாறும் பிள்ளாய்' என்று ஈசான்ய மூலைக்கு நகர்த்திய
நேரம். அந்தப் படத்துக்காக முழு மூச்சாக உழைத்து, நேர்த்தியாக அதன்
திரைக்கதையைச் செதுக்கிய பிறகு அப்படியே பின்னால் நகர்த்தி விட்டு,
அடுத்த வேலையைக் கவனிக்க அதே தீவிரத்துடன் கமல் ஈடுபட்டிருந்தார்.
என் மனம் மட்டும் யோகியைத் தான் சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருந்தது. "`வெட்னஸ்டே' படத்தைத் தமிழ்லே எடுக்கப் போறோம்.
வசனம் எழுத சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிக்குங்க உங்க சிஸ்டத்திலே''
என்று கமல் சொன்னார்.
கமலோடு பழகிப் பழகி வசனம் என்பது
திரைக்கதையின் ஒரு சின்னப் பகுதிதான் என்ற எண்ணம் எனக்குள் பலமடைய
ஆரம்பித்திருந்தது. ஆனாலும், என் திரை இன்னிங்க்ஸை வசனத்தில்
ஆரம்பிக்க விசனம் இல்லை. திரைக்கதை?
"நீரஜ் பாண்டே `வெட்னஸ்டே' யிலே சொன்ன திரைக்கதையை தேவையான அளவு
வச்சுக்குவோம். `லெட் அஸ் நாட் ட்ரை டு ஃபிக்ஸ் சம்திங்க் ஒர்க்கிங்
ஆல்ரைட்''.
ஆனாலும், திரைக்கதையை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தியதாகக் கொண்டு வர
நிறையவே மெனக்கெட வேண்டி வந்தது. இடைவிடாமல் தொடர்ந்த அந்த
மாறுதல்களோடு வசனமும் மாறிக்கொண்டே போனது. முதல் டிராப்டில்
கிட்டத்தட்ட 220 பக்கம் வந்த திரைக்கதையும் உரையாடலும் இறுதிப்
பிரதியில் அதில் பாதியாகக் குறைந்துவிட்டது.
"இன்னும் குறைச்சுடலாமே'' என்றார் கமல்.
வசனம் பூர்த்தியான பிறகு தமிழை மலையாள எழுத்தாக்கி, லால்
படப்பிடிப்புக்கு ஹைதராபாத் வரும் முன்பு அனுப்பியாகிவிட்டது. அந்த
ஃபைலைக் கவனமாகப் படித்துக் கொண்டிருந்த கோலத்தில் தான் முதலில்
மோகன்லாலைப் பார்த்தேன்.
"இரிஞ்ஞாலக்குட போயிருக் கீங்களா?''
என்னைத் தமிழில் விசாரித்தார் லால். அவர் மேஜையில் இரிஞ்ஞாலக்குட
கோவிந்தன் ராகவன் மாரார் என்று நீளமாக பெயர்ப்பலகை. ஐ.ஜி.
ஆர்.மாரார்.
"ராமாயணத்தில் வரும் பரதனுக்கு கோயில் இரிஞ்ஞாலக் குடையிலே இருக்கு''
என்று லால் சொன்னார்.
அடுத்த முறை அம்பலப்புழை போகும்போது இரிஞ்ஞாலக்குட போக வேண்டும். பரதன்
லால் சாயலில் இருப்பார் என்று ஏனோ தோன்றுகிறது. அடுத்த சில நிமிடங்கள்
அவர் சூழ்நிலையை முற்றிலுமாக மறந்து காட்சியில் ஆழ்ந்துவிட்டார். லால்
காணாமல் போக கமிஷனர் மாரார் வந்துவிட்டார்.
"வெளியே கார்லே கமல் சார் இருக்கார். நீங்க வந்தாச்சான்னு கேட்டார்.''
யாரோ சேதி சொன்னார்கள். வேகமாக வெளியேறினேன்.
"படிக்கிறீங்களா?'' கேட்டபடி காரை அதிவேகமாக ஓட்ட ஆரம்பித்தார் கமல்.
வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மடியில் லாப்டாப்போடு நான்
படித்தேன்.
"இந்த சிற்பத்தைக் கவனிச்சீங்களா?''
சட்டென்று அவர் குரல் என்னை நிமிர வைத்தது. ஜன்னல் வழியே தெரிந்த அந்த
சிலைகளை எத்தனை தடவையோ பார்த்திருக்கிறேன்.
ஆனாலும், கமல் சொன்னபோது அவை புரியவேண்டிய விதத்தில்
புரிந்தன. ராமோஜிராவ் சினிமா நகரின் பல பகுதிகள் அவர் ஆலோசனைப்படி
உருவானவை. சுலபமாக அவரிடமிருந்து வெளியே வராத தகவல். தூண்டித் துருவிக்
கேட்டு வாங்கியது
பழைய கதை, சினிமா, அரசியல் என்று சுவாரசியமாக பேசிக்
கொண்டேயிருக்கும்போது, சட்டென்று திரைக்கதையில் விட்ட இடத்துக்கு
மறுபடி போய்த் துல்லியமாக நின்று விட்டார் கமல். ஒரு காட்சியில் சில
மாற்றங்களை யோசித்தபடி இருந்தார். எனக்கு திடீரென்று நினைவு வந்தது.
மோகன்லாலோடு பேசிக் கொண் டிருந்தபோது, ஷூட் செய்யப்பட வேண்டிய அடுத்த
காட்சி அது என்று சொன்னது நினைவு வந்தது.
"சார், இந்த சீன் இந்நேரம் எடுத்து முடிஞ்சிருக்கும்.''
"எப்படி முடியும்?'' கார் வேகம் கூட்ட லாப்டாப் மடி நழுவாமல் பற்றியபடி
நான்.
டைரக்டர் சக்ரியிடம் முறையாக ஒப்புதல் வாங்கிக் கொண்டு செட்டில் கமல்
நுழைந்தபோது, தன் படம் என்றாலும் கடைப்பிடிக்கிற மரியாதை, சமூக
நாகரிகம் குறித்த வழக்கங்களை கவனமாக மனதில் குறிப்பெடுத்துக் கொண்டேன்.
சக்ரி அவர் பார்க்க வளர்ந்த குண்டுப் பையன். இன்று, தலை முழுக்க
மூளையுள்ள `பூசினாற்போல சதை போட்ட' டைரக்டர். கமல் தயாரித்து நடத்திப்
போகும் படப்பிடிப்பு என்றாலும் ஷூட்டிங் நடக்கிற இடத்தில் டைரக்டர்
தான் சூத்திரதாரி.
மோகன்லால், கமலைப் பார்த்ததும் உடனே எழுந்து, அக்கறையாகக் கேட்டார்.
"அதுக்கென்னா ரீடேக் எடுத்துடலாமா?'' என்று சக்ரியைப் பார்த்தார்.
தாடியைத் தடவியபடி நன்றி சொன்ன காமன்மேன் கமல் வெளியே நடக்க, கூடவே
நான்.
மதிய உணவு இடைவேளை அறிவித்திருந்தார் சக்ரி. கமல் அடுத்த நாள்
ஷூட்டிங் நடத்த பஞ்சாரா ஹில் பக்கம் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷனைப்
பார்க்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.
காரவானுக்குள் போய் உட்கார்ந்து கம்ப்யூட்டரைப் பிரித்தேன். க்ளைமாக்ஸ்
வசனத்தை இன்னும் சுருக்க வேண்டியிருந்தது. "நானும் உள்ளே வரட்டா?''
களைப்போடு கேட்ட குரல். ஒப்பனைக் கலைஞர் சாரு குரானா. அந்த பஞ்சாபிப்
பெண் ஹைதராபாத் வெயில் வறுத்தெடுத்த கொப்பரைத் தேங்காய் போல் உலர்ந்து
கிட்டத்தட்ட டிஹைட்ரேட் ஆகியிருந்தார். கமல் தொடங்கி, கூட்டத்தில்
கடைசியாக நிற்கிற கான்ஸ்டபிள் வேஷ நடிகர் வரைக்கும் மேக்கப் போட,
டச்சப் செய்ய, ஏன், பாத்திரத்துக்குத் தகுந்தபடி முடி வெட்டிவிட
ஏற்பாடு செய்ய என்று வெயிலே வாழ்க்கையாக அலைந்து கொண்டிருப்பவர்.
"இப்படி ஒரு ஓரமா கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கட்டா ரைட்டர் சார்?''
ரைட்டர் `சார்' சரி என்று சொல்ல வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால்
அந்தப் பெண் படப்பிடிப்பு நடக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்து விடக்
கூடும்.
சாருவின் தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல், நான் தணிந்த குரலில்
வசனங்களை கையில் மொபைல் தொலைபேசியில் விநாடி துல்லியமாக நேரம் கணக்குப்
பண்ணிக் கொண்டு சொல்லிப் பார்த்து, எடிட் செய்து கொண்டிருந்தேன்.
மேக்கப் சாரு ஒரு குட்டித் தூக்கம் போட, கமிஷனர் ஆபீஸ் செட்டில் நானும்
நுழைந்தேன்.
"சார் மோகன்லால் டயலாக் டெலிவரி கேட்கணுமா?'' நண்பர் ஆனந்த் கேட்டார்.
`அஞ்சலி'யிலும் `சதிலீலாவதி'யிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து
இன்னும் ஒரு சதவிகிதம் குழந்தைத்தனம் அந்த முகத்தில் ஒட்டிக்
கொண்டிருந்தது. அவசரமாக வளர்த்த குறுந்தாடியை மீறிய வசீகரம் அது.
லண்டனில் ஒலிப்பதிவு படித்ததோடு பி.பி.சி.யில் உதவியாளராகப் பணியாற்றிய
அனுபவமும் இந்த சின்னப் பையனுக்கு உண்டு. கூடவே இங்கிலீஷ்
ஹிஸ்டரியில் சிறப்பு வகுப்பு எடுத்திருக்கிறார். பிரசாத்
திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளர். அரங்கேற்றம்
கமலின் கைக்கடக்கமான பிரதி. ஆனந்த் இந்தப் படத்தின் ஒலிப்பதிவாளர்.
ஹெட்போனை வாங்கி என் காதில் மாட்டினார் ஆனந்த். "படப்பிடிப்பு
இருக்கும்போது நான் எதுக்குப்பா?'' நான் டைரக்டர் சக்ரியை பார்த்தபடி
சொன்னேன். கமல் மாதிரி அவர் அனுமதி வாங்கி செட் உள்ளே நுழைகிற
`நயத்தக்க நாகரிகம்' எல்லாம் பழகாமல் தடதடவென்று உள்ளே நுழைகிறவன்
நான். சுதந்திரமான எழுத்தாளன்.
"ஆனந்த், அந்த கம்ப்யூட்டர் கீக் இளைஞன் பாத்திரமும் நீங்க தானே?''
"ஆமா சார், அதுக்குத்தான் இந்த டீ ஷர்ட்டை டிசைன் பண்ணினேன். நெகட்டிவ்
பவர் கண்ணாடி, அதை ஈடுகட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்திசையிலே பவர்,
தலைக்கு ஜெல் எல்லாம் ரெடி..''
"வார் ரூம் கம்ப்யூட்டர்களை நிலாவிலே நடக்கிறது போல மெதுவா மூன் வாக்
செய்தபடி நீங்க பார்க்கிற சீன் இருக்கா? கமல்சார் கூட ரசிச்சாரே.''
"இல்லை சார். நேரம் அதிக மாகும்னு கட் பண்ணியாச்சு.''
"ஆனந்த், அடுத்த ஷாட் போகலாமா?''
சக்ரி என்னைப் பார்த்தார். "நீங்க எதுக்கு இங்கே? காரவான்லே
உட்கார்ந்து மீதி டிஸ்கஷனை கமல் சாரோடு நடத்திக்கிட்டு இருக்க
வேண்டியது தானே?'' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஆள் கூடியதற்காக அவருடைய
விசனத்துக்காக சிரித்தபடி வெளியே வந்தேன். தமிழறியும் பெரு மான்கள்
உள்ளே ரொம்பக் கொஞ்ச அளவில் இருந்தாலும் காட்சி சரியாக வந்துவிடும்
என்று நம்பிக்கை.
நான் காரவானில் திரும்ப ஏறும்போது நமீதா மேலிருந்து இறங்கி வந்து,
இடமிருந்து வலமாகக் கடந்து போனதைப் பற்றி எழுதப் போவதில்லை..
தொகுப்பு: தளவாய்சுந்தரம்
நல்லவேளை
எனக்கு தமிழ் மட்டும் தெரிந்ததால் நீங்கள் கடன்காரர்களாக மட்டுமே
இருக்கிறீர்கள். ஆங்கிலமும் தெரிந்திருந்தால் -
ஆங்கிலப்புத்தகங் களையும் வாங்கிக் குவித்து உங்களை நடுத்தெருவில்
நிறுத்தியிருப்பேன் என்று அப்பா அடிக்கடி சொல்வார்'' என்று தந்தையின்
நினைவுகளோடு புத்தகங்களைப் பற்றி் பேசத்துவங்கினார் கவிஞர்
நா.முத்துக்குமார்.
``புத்தகங்கள் மீதான காதலை எனக்கு ஏற்படுத்தியது எங்க
அப்பாதான். தமிழாசிரியரான அவர் தன் ஆசிரியர் பணிக்கிடையே புத்தகங்களைத்
தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்தார். எங்கே போனாலும் புத்தகம்தான்
வாங்குவார். அப்படி சேகரித்த ஒரு லட்சம் புத்தகங்களை வைத்து
`அன்னை நூலகம்' என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் ஒரு நூலகத்தையே
ஏற்படுத்தினார். என்னுடைய நான்கு வயதிலே அம்மா இறந்து
போனதால் என் தனிமை பள்ளத்தாக்கை பூக்களால் நிரப்பியது
புத்தகங்கள்தான்'' என்று சொல்லும் முத்துக்குமாருக்கும் புத்தகங்களை
சேகரிக்கும் பழக்கம் இருக்கிறது.
``வீட்டில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள்தான். அதையெல்லாம்
படிக்கும்போது நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆசை வந்தது. இரண்டாம்
வகுப்பிலே கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காலகட்டத்திலும்
ஒவ்வொரு மாதிரியான புத்தகங்கள் படிக்கத் தோன்றும். என் படைப்பு
மொழியைச் செதுக்கியது, வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான
புத்தகங்கள். ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் அப்பா மாக்ஸிம்
கார்க்கியின் தாய் நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ஐந்து
நாட்களில் படித்து முடித்தேன். அதில் நான் பார்க்காத வறுமை, போராட்டம்
என்று வேறு உலகத்தில் என்னைத் தூக்கிப் போட்டது. அதிலிருந்து வெளிவர
ஒரு மாதம் பிடித்தது. அப்புறம் ராபின்சன் குருஸோ எழுதிய
தீவுக்குள் மாட்டிக்கொண்டதை பற்றின நாவல், உலகை உலுக்கிய 10 நாட்கள்,
பெரியார் களஞ்சியம் என்று பார்த்து, பார்த்து புத்தகங்களை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தார் அப்பா.
ஒரு புத்தகம் என்னை கவர்ந்து விட்டால் அந்த எழுத்தாளருடைய புத்தகங்களை
தேடித்தேடி படிப்பேன்.பத்தாம் வகுப்பு படிப்பதற்குள்ளாகவே தமிழில் உள்ள
எல்லா எழுத்தாளர் களுமே அறிமுகமாகி விட்டார்கள்.
எங்க நூலகம் மட்டு மில்லாமல் செங்கல்பட்டு சுற்றியுள்ள
முப்பத்தைந்து கிளை நூலகங்களில் உறுப்பினர்களாக இருந்தார் அப்பா.
என்னையும் அத்தனை நூலகத்திலும் உறுப்பினராக்கி விட்டார். இதனால் சனி,
ஞாயிறுகளில் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நூலகமாகப் போய்
புத்தகங்களை தேடிப் படித்தேன்.
தி. ஜானகிராமனிடம் மனிதர்களைப் பார்ப்பது, அசோகமித்ரனிடம் நுண்ணிய
பார்வை, வண்ண நிலவனிடம் வாழ்க்கையின் உக்கிரம், சுந்தரராமசாமியிடம்
மொழியின் ஆளுமை, வண்ணதாசனிடம் அதீத அன்பு என எழுத்துக்கள்தான் எனக்கு
வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன'' என்ற முத்துக்குமார் சைக்கிள்
பயணத்தில் நம்மையும் கேரியரில் உட்கார வைத்து பயணப்பட்டார்.
``புத்தகங்கள் கண்ணாடி மாதிரி. உங்களையே நீங்கள் அதில் பார்க்கலாம்.
பார்க்கப் பார்க்க மோகம் குறையாத கண்ணாடி போல தான் புத்தகமும். உங்களை
அழ வைக்கும், சிரிக்க வைக்கும், அழகாகக் காட்டும். இப்படி வாழ்க்கையின்
வழிநெடுகிலும் புத்தகங்கள்தான் என்னை வழி நடத்தின.
உதவி இயக்குனராக இருந்த கால கட்டத்தில் பணமில்லாத நிலை. ஆனால் புத்தகக்
கடையில் நின்று கொண்டே மார்க்கோஸ் புத்தகத்தை வாசித்து முடித்தேன்.
`ஒரு நூற்றாண்டு தனிமை' என்கிற புத்தகம் அது.
சமீப காலத்திய தமிழில் அ.முத்துலிங்கம் எனக்குப் பிடித்தவர். `உண்மை
கலந்த நாட்குறிப்பு', `மகராஜாவின் ரயில்வண்டி' போன்ற புத்தகங்கள்
குறிப்பிடத்தக்கவை கோணங்கியின் `பொம்மைகள் உடைபடும் நேரம்',
எஸ்.ராமகிருஷ்ணனின் `தாவரங் களின் உரையாடல்' இவையெல்லாம் எனக்கு
புதுப்பார்வையைத் தந்தன.
சினிமாவிற்கும் எழுத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது டிஸ்கஷன் என்று போனால்
அவர் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதும், நாங்கள் படித்த புத்தகங்கள்
பற்றி பேசுவதும்தான் சினிமா டிஸ்கஷனாக இருக்கும். அதேபோல சுஜாதா சார்
எப்போதும் புத்தகங்கள் பற்றித்தான் பேசுவார்'' என்று புத்தக வாசிப்பை
பற்றி மனமகிழ்ந்து சொல்கிறார் முத்துக்குமார்.
``ஒரு விஷயம், பட்டை உரித்தால்தான் மரம், சட்டை உரித்தால்தான் பாம்பு,
படித்துக் கொண்டிருந்தால்தான் மனிதன்'' என்ற பஞ்ச் வரிகளுடன்
முடிக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார்..
சந்திப்பு: தேனி கண்ணன்
படம்: சித்ராமணி
பாட்டி
வடை சுட்ட கதையை அப்பாக்கள் சொல்லும்போது கொட்டாவி
விடுகிற குழந்தைகள் அதையே `கதை சொல்லி'கள் சொன்னால், கண்களை அகல
விரித்துக் கேட்கிறார்கள். அதுதான் `கதை சொல்லி'களின் சாதனை.
சென்னையில் நடக்கிற பள்ளி விழாக்களில் விருப்பத்துடன்
தேடப்படுகிற நபர் ஜீவா ரகுநாத். ஜீவாவின் கதைகளுக்கு குட்டீஸ்
ஏரியாவில் எக்கச்சக்க வரவேற்பு. தற்செயலாக ஒரு விழாவில் கதை சொன்னபோது
எல்லோருக்கும் பிடித்துப்போக இப்போது, முழுநேர கதை
சொல்லியாகிவிட்டார்.
``இந்தியர்களின் பாரம்பர்யமே கதை சொல்றதும் கேட்பதும்தான். ஆனா இப்போ
நம்மாட்கள் கதைகளிலிருந்து சற்று விலகிப்போயிட்டாங்க. வீடுகள்ல
குழந்தைகளுக்கு கதை சொல்ற பழக்கமே இல்லாம போயிடுச்சு. `ஸ்டோரி
டெல்லர்'னு எங்கேயாவது நான் போனா, `அட, புதுசா இருக்கே. உங்க வேலை
என்ன?'னு ஆச்சர்யமா சிலர் கேட்பாங்க. ஒரு முறை
சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நாதன்
வந்திருந்தார். என்னோட கதைகள் அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.
நிகழ்ச்சி முடிஞ்சதும் போட்டோ எடுத்துக்க எங்களைக் கூப்பிட்டார்.
``எங்க ஊர்ல ஜனாதிபதியைப் பார்க்கக் கூட முடியாது''னு சந்தோஷத்துல நான்
திணறுனேன். அதற்கு அவர் சிரிச்சுக்கிட்டே, ``நீங்க ஜனாதிபதி ஆக
முடியும். ஆனா நான் உங்களைப் போல `கதை சொல்லி' ஆக முடியாது''னு
சொன்னார்.'' என்று நெகிழ்கிறார் ஜீவா. இவர் நமது புராணக் கதைகளை நடனம்,
பாட்டு என கலந்து சொல்கிறார். குழந்தைகள் ஆர்வமாய் கேட்கின்றன.
இயற்கையின் மதிப்பை குழந்தைகளுக்கு புரிய வைக்கிற கதைகளில்
விஷ்ணுப்ரியா ஸ்பெஷலிஸ்ட். இவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. ``கதை சொல்றது
நாலைஞ்சு வயசிலேயே என் பாட்டி மூலமா எனக்கு வந்த ஈடுபாடு. எம்.பி.ஏ.
படிச்சிருந்தாலும், ஏதாவது ஒரு ஆஃபீசில் ஏசி ரூம்ல சிஸ்டம் முன்னால
உட்கார்ந்துகிட்டு வேலை பார்க்கத் தோணலை. குழந்தைகளுக்கு அழகா கதை
சொல்லி, ஒரு புது விஷயத்தை புரிய வைக்கிற த்ரில் எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு'' என்று சொல்கிற விஷ்ணுப்ரியாவுக்கு இந்தத் துறையில்
இது பதிமூன்றாவது வருடம்.
கதை சொல்வதை மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காகவே கருதுகிற விஷ்ணுப்ரியா
எப்போதும் நினைத்துப் பெருமிதம் கொள்ளும் அனுபவம் இது: ``சமீபத்தில
எங்கிட்ட கதை கேட்க ஒரு மூணு வயசுப் பொண்ணு வந்தா. `வீட்டுல
யார்கிட்டயும் இவ பேசறதே இல்லை'னு அவளோட
அம்மா கவலையோட சொல்லிட்டுப் போனாங்க. எப்பவும் நான்
வச்சிருக்குற குரங்கு பொம்மையைக் காட்டி அவளுக்காகக் கதை சொன்னேன்.
தினமும் என்னோட குரலில் குரங்கு மத்த குழந்தைகளுக்கு `ஹாய்' சொல்லும்.
தட்டுத் தடுமாறி பேசும். தயக்கத்தோட விளையாட கூப்பிடும். கடைசியில்,
கூச்சத்தை விட்டுட்டு குரங்கு சகஜமா பேச ஆரம்பிச்சுடுச்சுனு கதை
முடியும். `குரங்கால் பேச முடியும்னா, நம்மால் பேச முடியாதா'ங்கிற
லாஜிக் நான் எதிர்பார்த்தது மாதிரியே வொர்க் அவுட் ஆச்சு. ரெண்டே
வாரத்துல அந்தப் பொண்ணு பேசுனா. அவளோட அம்மா கடைசியா சொன்ன விஷயம்தான்
எனக்கு அதிர்ச்சியா இருந்தது. அந்தக் குழந்தை தத்து எடுக்கப்பட்ட
குழந்தையாம். புது இடத்துக்கு மாறுனதால் ஏற்பட்ட அந்தப் பொண்ணோட
தடுமாற்றத்தைப் போக்குறதுக்கு என்னோட கதைகளும் உதவியதுல எனக்கு ரொம்ப
சந்தோஷம்'' என்று மன நிறைவுடன் சொல்கிறார் விஷ்ணுப்ரியா.
கதைகள் ஏதோ குழந்தைகளுக்கு மட்டுமே தேவையானவை என்று நினைப்பவர்களுக்கு
ஒரு கூடுதல் தகவல், இப்போது சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்தும் தனியார்
மருத்துவமனைகளிலிருந்தும்கூட பெரியவர்களுக்கு கதை சொல்ல
இவர்களுக்கு அழைப்புகள் வருகிறதாம்..
ஆனந்த் செல்லையா
படங்கள் : ஆர்.சண்முகம்