சில்லிட
வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வரு வதுபோல்
இருக்கும்.ஜென்சியின் குரல்.
`தம்தன தம்தன...
தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு
பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' என்று
இதயச்சுவர் முழுவதும் எப்போதும் எதிரொலித்துக்கொண் டிருக்கும் ஜென்ஸியின்
கந்தர்வக் குரல்.
மயங்க வைத்த
அந்தக் குரலை திடீரென்று காணோம். எங்கே ஜென்சி என்ற கேள்விக்கு யாரிடமும்
பதிலில்லை. அவர் கேரளா சென்று எர்ணாகுளத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
``இப்போதும்
என்னை நலம் விசாரித்து ஏகப்பட்ட போன் கால்கள். பாசத்தைக் கொட்டிப்
பேசும்
தமிழ் ரசிகர்களை மறக்கவே முடியாது. இந்தப் பெருமை எல்லாம் இளையராஜா
சாருக்குத்தான் சேரும்.'' மலையாளம் கலந்த மழலைத் தமிழில் சிலிர்க்கிறார்
ஜென்சி.
``எட்டு
வயசிலேயே பாட ஆரம்பிச்சிட்டேன். அண்ணன் கிடார் வாசிக்க, நான் பாடினால்
அக்கம் பக்கம் உள்ளவங்க அப்படியே சொக்கிப் போயிடுவாங்க. ஸ்கூல்
படிக்கிறப்ப பாட்டுப் போட்டியில நான்தான் ஃபர்ஸ்ட். அப்பவே ஜானகி அம்மா
கையில பரிசு வாங்கினேன். '' என்று சொல்லும்போது ஜென்சியின் கண்களில்
பரவசம் படருகிறது.
``இது எப்படி
அமைஞ்சதுன்னே தெரியல. ராஜா சார் பாடல்களை செலக்டிவா எனக்குக் கொடுத்தார்.
முதன்முதலா சினிமா பாடலா `வேளம்பல்' என்கிற மலையாள படம்.
எம்.கே.அர்ஜுன்தான் மியூசிக். மகாகவி வயலார் எழுதிய பாட்டுதான் நான்
பாடினேன். எங்கேயோ என் குரலைக் கேட்டு ஜேசுதாஸ் அண்ணா என்னை ராஜா சார்
முன்னால கொண்டு போய் நிறுத்தினார். ``இந்தப் பொண்ணு குரலைக்
கேட்டுப்பாரு''ன்னு சொன்னார். `உனக்குப் பிடிச்ச பாட்டை பாடும்மா'ன்னு
ராஜா சார் சொல்ல, `அன்னக்கிளி உன்னைத்
தேடுதே'ன்னு நான் பாடி முடிக்கிறதுக்குள்ள `நாளைக்கு ரெக்கார்டிங்...
வந்து பாடிட்டுப் போம்மா'ன்னு சொல்லிட்டார். எனக்கு கால் தரையில
படல.''
என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பாடலாகப் பாட ஆரம்பிக்கிறார்.
``காதல்
ஓவியம்... பாடும் காவியம்... ராஜா சாரோடு சேர்ந்து பாடினது. அப்றம் ஒரு
இனிய மனது இசையை அழைத்துச் செல்லும், இதயம் போகுதே... கீதா... சங்கீதா,
மீன் கொடி தேரில்... எல்லாப் பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சாங்ஸ்.
அப்ப டெக்னாலஜி இல்லாததால சின்ன தப்பு பண்ணினாலும் முதலிலிருந்தே பாடணும்.
பாடி முடிச்சதும் ராஜா சார் எப்போ வெரிகுட் சொல்வார்னு மனசு கிடந்து
அடிச்சுக்கும். ஆனா சொல்லமாட்டார். `நீ பாடியதை நீயே கேட்டு சரி பண்ணு'னு
சொல்லிட்டுப் போயிடுவார். இதுதான் அடுத்தடுத்து என்னை வளர்த்துக்க
உதவுச்சு'' என்கிறார். இன்னும் அதே மயக்கும் குரல்.
``சரி,
திடீரென்று ... போய்விட்டீர்களே என்ன ஆயிற்று?''
``ஆமாம்.
குடும்பச் சூழ்நிலை தான். கேரளாவிலேயே இருக்க வேண்டியதாயிற்று திருமணம்
நடந்ததால் பொறுப்புகளும் கூடிவிட்டது. அதனால் பாடல் உலகத்தைவிட்டு விலகி
விட்டேன்.''
மீண்டும்
சினிமாவில் பாடணும்னு ஆசை வரலையா?'
``வந்துச்சு.
ராஜா சாரை சந்திச்சு மறுபடியும் பாட ஆசைப்படுறேன்னேன். பிரசாத்
தியேட்டருக்கு காலை 8 மணிக்கு வந்திடுன்னார். இரவெல்லாம் மறுபடியும்
பாடப்போற சந்தோஷம். ஆனா என் மகன் நிதினுக்கு திடீரென்று குளிர் ஜுரம்
வந்துடுச்சு. விடிந்ததும் விஜயா ஹாஸ்பிட லுக்குத்
தூக்கிட்டுப் போனோம்.
அதுல எல்லாம் மறந்துபோச்சு. பத்து மணிக்குதான் ஞாபகம் வந்து, டாக்ஸி
பிடிச்சு பிரசாத் ஸ்டுடியோ போனேன். ஆனா ஏற்கெனவே அந்தப் பாடலை ஜானகி அம்மா
பாடிட்டு வெளியே வந்தாங்க. நான் ஸ்டுடியோ ஹால்லயே நின்னுட்டிருந்தேன்.
ராஜா வெளியே வந்து, ``இப்பதான் வந்தியா'' என்று கேட்டுவிட்டு உள்ளே
போய்விட்டார். நான் எதையும் சொல்ல முடியாம அப்படியே திரும்பிட்டேன்.
இது நடந்து 15
வருஷமாயிடுச்சு.
எப்பவாவது
பாட கூப்பிடுவார்னு ப்ராக்டீஸ் செய்துகிட்டேயிருக்கேன். இப்போ மலையாள
ஆல்பங்களில் பாடிட்டிருக்கேன். என்
கணவர் தாமஸ் டெல்லியில பிஸினஸ் பண்றார். நுபியான்னு ஒரு பொண்ணு, மகன்
மரைன் என்ஜினீயர். எல்லாருமே என் பாடலை ரசிக்கிறாங்க. சந்தோசமா
போகுது
வாழ்க்கை.''
இப்போ
வாய்ப்புக்கேட்கலையா?
``எண்பதுகளில்
நான் பாடிய பல பாடல்களுக்கு கீ போர்டு வாசிச்ச பையன்தான் ஏ.ஆர்.ரகுமான்.
பெரிய ஆளாயிட்டார். அவர் இசையில பாடணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான்
யார்கிட்டேயும் போய் சான்ஸ் கேட்பது என் குழந்தைகளுக்குப் பிடிக்கல. அதனால
இங்கேயே இருந்துட்டேன்'' என்று சொல்லிவிட்டு, பாட ஆரம்பிக்கிறார்.
``மயிலே...
மயிலே... உன் தோகை எங்கே...''
அதே மலைச்சாரலில்
பனிக் காற்றில் பயணிக்கத் தொடங்குகிறது மனது!.