Home / How to write Tamil writers

How to write Tamil writers


சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

சிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.

கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகாரத்தின் உரையாடலைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி ஊதித் தள்ளிவிடும் என்பது கார்க்கி மேல் சத்தியமாதலால் ('பேட்டி என்பது பலகாரத்தைத் தின்று கொண்டே உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் அர்ஜூனனின் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?), சில கண்ணிகள் ::

ஜெயமோகன் சொல்கிறார் ::

சிறுகதையில் என்ன நடக்கிறது?
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

யெஸ்.பாலபாரதி சொல்வது ::

ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி
அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்
படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி
'கதைச்சொல்லி'யும், கதையும் - கே. ராமப்ரசாத்.
சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் - எஸ்.ஷங்கரநாராயணன்
கதை சொல்லுதல் என்னும் உத்தி - தேவமைந்தன்

வே.சபாநாயகம் ஒரு 40 பேரின் குறிப்புகளைத் திண்ணையில் தொகுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்கள் கீழ் வருபவர்கள்..?

தேவன்
தி.ஜானகிராமன்
சுஜாதா
லா.ச.ராமாமிர்தம்
கி.சந்திரசேகரன்

அகிலன்
தி.ஜ.ரங்கநாதன்
கு.ப.ராஜகோபாலன்
இந்திரா பார்த்தசாரதி
த.ஜெயகாந்தன்

சி.சு.செல்லப்பா
க.நா.சுப்ரமண்யம்
புதுமைப் பித்தன்
அ.ச.ஞானசம்பந்தன்
ஜெயமோகன்

தொ.மு.சி.ரகுநாதன்
வி.ஆர்.எம்.செட்டியார்.
வாசந்தி
அசோகமித்திரன்
கி.ராஜநாராயணன்

மகாகவி பாரதியார்
எம்.டி.வாசுதேவன் நாயர்
அகஸ்தியன்
ந.பிச்சமூர்த்தி.
ந.சிதம்பரசுப்பிரமண்யம்

ரா.ஸ்ரீ.தேசிகன்
லியோ டால்ஸ்டாய்
மாப்பசான்
பி.எஸ்.ராமையா
விந்தன்

பேராசிரியர் கல்கி
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
அனுராதா ரமணன்
பிரபஞ்சன்
தாலமி

ச.து.சு.யோகி
கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
மாக்சிம் கார்க்கி
ராஜாஜி
சாலை இளந்திரையன்

இவர்களையெல்லாம் படிக்காமலும் அற்புதமான சிறுகதைகள் வருகின்றன. முடிந்த அளவிற்கு படித்துப் பார்க்கலாம்.


எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.
பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது இலக்கியம்.

2. இலக்கியம் தோன்றுவதற்கு எந்த அளவு கற்பனை தேவையோ அந்த அளவு வாழ்வும் தேவைப்படும். உலகத்தில், வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் இலக்கிய கர்த்தரின் மனது பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இப் பதிவுகளைத்தான் கற்பனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுகிறது. தள்ளுவதைத் தள்ளி வேண்டியவற்றைச் சேர்த்து, இலக்கிய சிருஷ்டியை உருவாக்குகிறது. அதனால்தான் வாழ்வுக்குப் போட்டியான உலகமாக அது அமைகிறது - திரிசங்குவின் உலகத்தைப் போல.

3. இலக்கியமென்பது ஒரு சிலருக்காக அல்ல. எல்லோருக்கும்தான் என்னும் அடிப்படை
ஒப்புக் கொள்ளப்படுமானால் இலக்கிய நடையைப்பற்றி அதிக விவாதத்துக்கு இடமில்லை. சாதாரன ஜனங்களுக்கு இலக்கியத்தின் மூலம், இன்பத்தையும் புது திருஷ்டியையும் உண்டாக்க விரும்பும் இலக்கியகர்த்தன் நடைமுறை பாஷையைப் புறக்கணிக்க முடியாத். புறக்கணித்தால் தன் நோக்கத்தில் வெற்றிகாண இயலாது.

4. பாம்பு அடிக்கடிசட்டை உரித்துக் கொள்வதுபோல எழுத்தாளன் - தன்னைப் புதிசுபடுத்திக் கொள்ள வேண்டும்.

5. எனக்கு எப்போதும் உனர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாம் இடந்தான்.

6. தன்னை அறியப் பல வழியுண்டு. எழுத்தும் ஒரு வழி.

7. எழுத்தின் மூலமாக வாழ்க்கையைப் போட்டோ பிடிப்பது முடியாத காரியம். எழுத்தாளனுடைய மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாய் மாறிவிடும்.

8. இலக்கியத்தைப் பிரசாரம் ஆக்க முயண்றாலும், பிரசாரத்தை இலக்கியமாக்க முயன்றாலும், 'விதைக்கும் ஆகாமல் கறிக்கும் உதாமல் போவது' என்பார்களே, அதைப் போன்ற நிலையைத்தான் தமிழ் இலக்கியம் அடையும்.....வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் இலக்கியத்துக்கு - மறுக்கும் சிருஷ்டித்திறனுக்கு அமரத்துவம் கிட்டுவது சந்தேகமே....

.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)

1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.

2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.

3. எழுதுவது என்பது மிக எளிய விஷயம். ஆனால் எழுதத் தொடங்குமுன் நிறைய மனத்தில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறைய யோசனை செய்து மனத்திலேயே கதையை உருவாக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

4. கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையைவிட அதிகம் என்றுகூடச் சொல்லலாம் - முக்கியமானது நடை, கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், சம்பாஷணைகளைச் சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் - எல்லாம் முக்கியமானவை.

5. நகைச்சுவை எழுதும்போது, சிலேடைகளைப் பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைச் சேர்க்க முடியும். அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

6. அதீதமும் நகைச்சுவையில் ஒரு முக்கிய அம்சம். இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

7. நகைச்சுவைக் கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, வக்கிரமான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம். எப்படி இருப்பினும், அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும்.

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22 . எம்.டி.வாசுதேவன் நாயர்.

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.

2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு நாம் எழுத ஆரம்பிக்கும்போது, நாம் எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுவோம். அப்போது நமக்கு நம்பிக்கை ஏற்படும். தொடக்கத்தில் எழுதத் துவங்கும்போது மழை வெள்ளம் இழுத்துச் செல்லும் காகித ஓடம் போல் சில முன்னோக்கிப் போகும். பல மூழ்கும். நம்மால் எழுத முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நாம் எழுதப் போகும் விஷயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

3. 'எதைப்பற்றி எழுதவேண்டும்?' என, முதலில் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை முழுக்கக் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. வாழ்க்கை என்றாலே க¨தைகள்தானே! நாம் அடிக்கடி சொல்வோமே 'அவனுடைய கதை இதைவிட ரொம்பக் கஷ்டம்' என.

4. வாழ்க்கைப் பரப்பினூடே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்குரிய அம்சங்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. இவற்றுள் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்றுதான்.

5. இலக்கிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் இளம் இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய புதிய புதிய எழுத்து முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விடாமுயற்சி ஒன்றின் மூலமாக மட்டுமே இதை ஒருவரால் சாதிக்க இயலும். 'நாம் எழுதியது சரியல்ல' எனத் தோன்றுமானால் உடனே அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

6. இலக்கியப் படைப்பின்பொது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மொழியாகும். சாதாரண மனிதர்களுக்குப் புரியும்படியான மொழியிலேயே நாம் ஒரு படைப்பைப் படைக்க வேண்டும். ஒரு படைப்பாளி படைக்கும் படைப்பை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. அவர்களை வாசிக்குமாறு தூண்டிவிடவேண்டியது இலக்கியவாதி களின் கடமையகும். இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லத் தக்கதாக இருக்கவேண்டும் இலக்கிய வாதிகள் பயன்படுத்தும் மொழி. வாசகர்களின் இதயத்துக்குள் நுழைந்து, புதியதொரு சிந்தனையைக் கிளறிவிடும் தன்மையும் வலிமையும் அதற்கு இருக்க வேண்டும்.

7. நாம் எழுதிய கதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஏதாவது 'கைடு' களைத் தேடிப் போகும்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது. காரணம், அம்மாதிரி கதைகளை வாசகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எழுதி எழுதி அவற்றை நாமே கிழித்துப் போட வேண்டும். பிறகு அவற்றிலிருந்து சிறந்த உள்ளடக்கம் கொண்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த மொழியில் எழுதுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒரேஒரு வழி இது ஒன்றுதான். அதாவது, சோர்வடையாமல் திரும்பத் திரும்ப எழுதுவது.

8. இலக்கியப் படைப்பில் 'உருவம்' ஒரு மேல் சட்டை போன்றதல்ல. ஒரு தோல் போன்றது.
ஒரு படைப்பிற்கு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய எளிய சொற்களாலான மொழிதான் மிக வலிமையினையும் அழகினையும் அளிக்கிறது. எளிமையான மொழிக்குரிய சிறப்பும் இதுதான். வார்த்தைகளுக்கு இடையே காணப்படும் இடைவெளிகளுக்குக்கூட அநேக அர்த்தங்கள் இருக்கிறது. உலகில் எத்தனை ஊடகங்கள் வந்தாலும் சரி, இலக்கியம் நிலைத்து நிற்பது உறுதி. காரணம் மொழிக்கு அவ்வளவு வலிமை உண்டு.


9. படைப்பின்போது அதற்குத் தோதுவான வார்த்தைகள் கிடைக்காமல் தேடித் திரிவது பண்டைக்காலம் தொட்டே உள்ள சிக்கல்தான். வார்த்தைகள்தான் பணிபுரிவதற்குரிய ஆயுதமும் தரத்தை நிச்சயிப்பதுமாகும். வார்த்தைகளோடு இழுபறி ஏற்பட்டால் ஒரு படைப்பு நன்றாக அமையும்.

10. இனி ஒரு முக்கிய விஷயம். நாம் ஒவொருவரும் புத்தகங்களைக் காதலிக்க வேண்டும். எனக்கு எழுதுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த வாசிப்புத


எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21 - மகாகவி பாரதியார்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.

2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,
வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

4. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று.

5. உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

6. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.

7. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்தில் தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ்நடை எழுத

Saturday, May 03, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 20 - அசோகமித்திரன்

1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'

2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு
மிகவும் அவசியம்.

3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.

4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.

5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான படைப்பாற்றலுக்கு அடையாளம்.

6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை.
அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது

Wednesday, April 09, 2008

எழுத்து க்கலை பற்றி இவர்கள்...........18 - வாசந்தி

1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது - நீங்கள் சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் - உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். - அவர்களிடையே இத்தகைய பாதிப்பை உங்கள் கதை ஏற்படுத்தவில்லையானால், தவறு உங்கள் அனுபவத்தில் இல்லை - அதை நீங்கள் சொன்ன விதத்தில்.

2. வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின் பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும் நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள் கிடையா.

3. கதையைச் சொல்லும் பாணி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சொல்லப் போகிற விஷயத்துக்குத் தகுந்தமாதிரி மாறுபடும். கதையை ஆரம்பிக்கும் விதமே வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கிரமப்படுத்தி எழுத முற்பட்டீர்களானால், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டைப் போல் ஆகிவிடும் - start with bang - எடுத்த எடுப்பிலேயே வாசகரின் பார்வையைக் கட்டிப் போட வேண்டும். நேராக விஷயத்துக்கு வந்து கதையைப் பின்னுங்கள்.

4. அனாவசிய, சுவாரஸ்யமற்ற சம்பாஷணைகள் அலுப்புத் தட்டுவதுபோல். சம்பஷணையே இல்லாத கதை ஓட்டமும் அலுப்புத் தட்டும்.

5. உங்களுடைய கருத்துக்களை, (தீர்மானமான கொள்கைகளைக் கூட) மண்டையில் அடிக்கிற மாதிரி 'ஆகையால் வாசகர்களே' என்று உபதேசிக்கிற தினுசில் புகுத்தாதீர்கள். அதை அப்படியே ஏற்கும் பாமரத்தனம் இப்போது எந்த வாசகருக்கும் இல்லை. உங்களுடைய நல்ல எண்ணங்கள் கதையில் ஒரு சுகந்தம்போல் வரவேண்டும்.
அதைக் கதாபாத்திரங்கள் மூலம் அல்லது சம்பவங்கள் மூலம் நாசூக்காகத் தெரிவிக்கலாம். அநேகம் சிறுகதைகள் சப்பென்று போவதற்கும், லேசாக எரிச்சலூட்டுவதற்கும், இந்த நாசூக்குத் தெரியாமல், எழுத்தாளர்கள் தங்களைக் கதைகளுக்குள் 'ப்ரொஜெக்ட்' செய்வதுதான் காரணம்.

6. கதையில் ஒருஆச்சரியம் காத்திருக்க வேண்டும். நம்பும்படியான ஆச்சரியம் - அது அதிர்ச்சி தரலாம் அல்லது சிரிக்க வைக்கலாம் - எதுவாக இருந்தாலும் 'பூ, இவ்வளவுதானா!' என்று வாசகர் அலுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

7. என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் கடைசி பாராதான் மிகக் கடினமானது. அதிகம் கவனம் கொடுக்கப்பட வேண்டியது. ஏனென்றால் நமது நோக்கம் வாசகரின் பார்வையை ஈர்ப்பது மட்டுமல்லை - அவருடைய நினைவுப் பெட்டகத்தில் இடத்தைப் பிடிப்பதும்கூட - நமது கடைசிப் பாராவைப் பொறுத்திருக்கிறது, நமது கதையின் ஆயுள

Tuesday, April 01, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள் - (17 ) வி.ஆர்.எம்.செட்டியார்.

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள்,
சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில்
சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.

2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின் நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது.

3. சிறுகதையை எப்படி எழுதுவது என்று தயங்குவதில் யாது பயன்? வாழ்க்கையை நன்றாய்க் கவனிக்க வேண்டும். மனித இயல்பு எப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மின்சார வேகத்துடன் புரட்சியடைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; மனித குணமும் விதியின் குணமும் எப்படிப்
போரிடுகின்றன என்பதையும் நன்கு ஆராயவேண்டும்; உலகத்தின் சூழ்ச்சிகள் எப்படி
உலகத்தையே யுத்த அரங்கமாக்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்; எழுதும்
நடைக்கும் பேசும் நடைக்கும் உள்ள வித்தியாசங்களை நுட்பமாக அறிய வேண்டும்; கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி உயிர்ப் பாத்திரங்களாக, மெய்யுருவங்களாக அமைய வேண்டு மென்பதையும் ஆராய வேண்டும்.இவைகளே நல்ல சிறுகதையின் லட்சணங்களாகும்.

4. சிறுகதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சிறு நிகழ்ச்சிகளைச் சற்று
ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதிலிருந்து குறைந்தது இருபது சிறுகதைகளை எழுதிவிடலாம். நல்ல ஞாபகத்துடன், நிறைந்த நுட்பத்துடன் ஞாபக டைரியைப் புரட்ட வேண்டும். பல நண்பர்களு
டைய சுயசரிதையினின்றும், நியூஸ்பேப்பரில் கண்ட நிகழ்ச்சிகளிலிருந்தும், கடைத்தெருவிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், துறைமுகத்திலும், டிராமாக் கொட்டகைகளினின்றும், குடும்பங்களில் நிகழும் குறிப்புகளிலிருந்தும் மிகமிக அருமையான சுவைமிகுந்த சிறுகதைகள் எழுப்பலாம். ஒரு சிறுகுழந்தை அம்புலிக்கு அழுவது முதல், வறுமையால் வாடித்துடிக்கும் பிச்சைக்காரன் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மடிவதுவரை எதுவும் சிறுகதைச் சரக்குதான்; எம்.ஏ படித்துவிட்டு
வேலைக்கு அலைந்து கதறுவது முதல் தன் சர்டிபிகேட்டை நெருப்பில் போடுவதுவரை எதுவும்
சிறுகதையின் சீற்றம்தான். எல்லாம் எழுதும் சொல்வன்மையிலே சிறுகதைச் சித்திரம் இன்பமாய் வளர வேண்டும்.

5. கதையின் நடை விறுவிறுப்புடன் பாய வேண்டும். சிறுசொற்கள் காவிய வேகத்துடன் மனநிலையைச் சித்தரிக்க வேண்டும். இயற்கையின் சௌந்திரியத்தையும் மொழியின் இதயத்தில்
எழுப்ப வேண்டும். சொற்கள் கதிர்களாகவும், வர்ணங்களாகம்,அழகு கூட்டங்களாகவும் மின்ன வேண்டும். இதய ஒலியும், இதய ஒளியும், உள் இயற்கையும், வெளி இயற்கையும் மொழியின் மர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

(V.R.M Chettiar B.A ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் பிரபலமாய் இருந்த அறிஞர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியவர்; சிறந்த விமர்சகர்; 'My Shelly', 'Oscar Wilde's de profundis - An Appreciation','Lyric festoons', 'Tagore and Arabindo', 'Lucid Moments', 'Gems from Montaigne' ஆகிய நூல்களை எழுதியவர்.
திருச்சிக்காரர். நிறைய தமிழ் நூல்களும் எழுதி தானே வெளியிட்டவர்.)

Wednesday, February 20, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 15.-ஜெயமோகன்.

1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே.

2. நாவல் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டக் கூடிய காமிரா ஷாட்.

3. சிறுகதைக்கு கட்டுக் கோப்பு இருக்க வேண்டும் என்பது அதன் செவ்வியல் விதி. அதை மாற்ற முயன்று எழுதப்பட்ட சிறுகதைகளில் கலைவெற்றிகள் பல உண்டு ஆனால் அவை மெல்ல மெல்ல சிறுகதையின் வடிவத்தை இல்லாமல் ஆக்கி விட்டன.

3. சிறுகதையின் மௌனம் அது முடிந்த பிறகு உள்ளது.

4. நாவலின் மௌனம் அது விடும் இடைவெளிகளில் உண்டு. நிகழ்வுகள், சித்தரிப்புகள் நடுவே இடைவெளி.

5. கவிதையின் மௌனம் அதன் சொற்களுக்கும் படிமங்களுக்கும் இடையே ஆன இடைவெளியில் உள்ளது. இடைவெளி என்பது வாசகன் தன் கற்பனை மூலம் நிரப்பிக்கி கொள்ள வேண்டிய ஒன்று.

6. நாவல் ஒருமை கொள்ள முடியாது. ஏனென்றால் அது தன் பேசு பொருளை 'முழுமையாக' சொல்லிவிட வேண்டு மன்று முனைகிறது. அந்த எண்ணத்தை நம்மில் ஏற்படுத்துகிறது.

7. இலக்கண ரீதியாக நோக்கினால் ஒரு நாவலுக்கு சிறுகதையின் கூர்மை வந்துவிட்டதென்றாலே அது குறுநாவல் தான்.

8 .நாவலுக்கு உச்ச கட்டம் இருக்கலாம். ஆனால் இறுதி முடிச்சு இருக்குமென்றால் அதற்காகவே அதன் உடல் முழுக்க உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உடலுக்குள் வாசக இடைவெளி நிகழ முடியாது. ஆகவே முடிவில் திருப்பங் கொள்ளும் நாவல்கள் சிறப்பாக அமைவதில்லை

Monday, February 18, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்............14- அ.ச.ஞானசம்பந்தன்.

1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.

3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.

5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் 'கருமமே கண்ணாயினார்' என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.

7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.

8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.

Monday, February 04, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள்..........12- க.நா.சுப்ரமண்யம்

1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி.

2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல. இரண்டாம் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல புது அம்சங்கள் கண்ணில் படவேண்டும். கருத்தில் உறைக்க வேண்டும். அப்படிப் புதிதாக எதுவும் உறைக்கா விட்டால் அது தரமான நூல் அல்ல என்பது என் இலக்கிய அபிப்பிராயங்களில் ஒன்றாகும்.

3. ஒரு அனுபவத்தை விவரிக்கிற நல்ல கவியின் வார்த்தைகள் நமது ( அதாவது வாசகனின்) உள்ளத்தில் மறைவாகக் கிடக்கிற அனுபவங்களில் எதோ ஒன்றைப் பாதாளக் கரண்டி போலப் பற்றி இழுக்கிறது. எதொ புரிகிறமாதிரி தெரிகிறது. உடனடியாகவே இந்த அனுபவ எதிரொலிப்பு நிகழ்கிறபடியால் நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய செயல்., சிந்திப்பு எதுவும் இல்லாமலே, தானாகவே, ஒரு அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தை தட்டி எழுப்புகிற மாதிரி இருக்கிறது. அப்படித் தட்டி எழுப்பாது போனால், ஒரு அனுபவத்தைச் சித்தரிக்கிற வார்த்தைகள் படிப்பவன் உள்ளத்தில் எதிரொலியை எழுப்பாது போனால் அதை நல்ல கலை என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

4. கலை எனபது என்ன என்று யோசிக்கையில் அது சற்று சிரமமான விஷயந்தான். கடவுளை எடுத்துக் கொண்டு அதைச் சொல்லலாம் அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்¨, பிரம்மவாதத்தை எடுத்துக் கொண்டு அதை நாம் தெளிவாக்கலாம். எந்த தெய்வத்தையுமே, எந்த நிர்க்குண பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ண்¢ப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட என்கிற நிர்குண பிரmமத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும்.

5. ஒருவகை மொழிகடந்த பொருள்தான் இலக்கியம். எனவே இலக்கியத்தை பூனை காலால் தூரத்தில் தொட்டுப் பார்ப்பது போல் தான் செய்ய முடியும்.

6.கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் ஒரு மயிரிழைதான் வித்தியாசம் இருக்கிறது.

7. இலக்கியம் ஒன்றும் (ஒன்றையும்) சொல்லாமலும் இருக்கலாம்.

8. எழுத்தாளன் அவனுடைய அரசியல், பொருளாதார, சமூகப் பின்னணியைப் பிரதிபலித்தே ஆக வேண்டும் என்பதில்லை. இந்த அம்சங்களோடு ஒத்துப் போகலாம். அல்லது எதிர்த்துக் கலகம் செய்யலாம். அது ஒரு பிரக்ஞா பூர்வமான செயல்.

Saturday, January 19, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள்.........(11 ) சி.சு.செல்லப்பா

1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப் பார்வை இருந்து ஏதாவது அதில் ஒரு நோக்கம் ஏற்ற முடியுமானால்தான் பேனாவைக் கையில் பிடிக்க வேண்டும்.

2. புதுமை, தன் தனிப்பார்வை, தொனிக்காக எழுத்துக்கு இடம் கிடைக்காது பிற்கால மதிப்பீட்டில். இன்று சூடாக விலை போவதை எண்ணி மகிழ்ந்து திருப்திப் பட்டுக் கொண்டுவிடக் கூடாது இளம் படைப்பாளி.

3. ஒரு நல்ல கலைப் படைப்பில், சிந்தனை, படிமம், உணர்ச்சி இவைகள் நெருங்கிக் கலந்து ஒரு முழுமை பெற்ற உருவம் அமைய ஏதுவாக இருக்கும்.

4. சிறுகதை ஆரம்பம் திடுதிப்பென 'காலப்' எடுத்த மாதிரியும் நாவல் ஆரம்பம் மெதுவாக முதல் எட்டு நகர்த்த ஆரம்பித்த மாதிரியும் நம் மனதில் படும். நாவல் களுக்கு ஆரம்பம் முடிவு சம்பந்தமாக சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் இன்றைய நாவல்கள் ஆரம்பமும் சிறுகதைக்கு ஏற்பட்டது போல புதிய சம்பிரதாயங்கள் பெற்று இருக்கின்றன. சிறுகதைகள் போலவே ஆரமப வரிகள் திடுதிப்பெனவும் ஆரம்பித்து இருக்கும். ஆனால் ஆரம்ப தொனி பொதுவாக சற்று சாவகாசமாகவேஇருக்கும். மந்தகதியிலே தகவல்கள் ஏறும். ஆகவே இந்த தொனியை வைத்துத்தான் வித்தியாசம்.

இன்னொரு விஷயமும் கூட. ஆரம்பம் சம்பந்தமாக வேறு சில குணங்களும் வேண்டி இருக்கிறது. சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களைக் கொடுப்பது ரொம்ப முக்கியமானது. நாவல் போல களம் விஸ்தீரணமாக இல்லை சிறுகதையில். காலம், இடம், நிகழ்ச்சி சம்பந்தமாக கதையம்சம் தாராளமாக யாத்திரை செய்ய அவகாசமும் இல்லை. ஒரே தொடர்ச்சியானாலும் நடுநடுவே தகவல்களுக்கு இடம் நாவல்களில் இருப்பது போல இல்லை. ஒரே தம், ஒரே மூச்சுப் பிடித்தல்தான். பலீன் சடுகுடுவில் ஒரே மூச்சில் போய் மறிப்பை எதிர்த்து காரியத்தை முடித்து விட்டு வரவேண்டும். கிளித்தட்டுக்குத் தங்கல்கள் உண்டு. கூட்டம் கூட்டமாகத் தங்கி மறிப்பைச் சமாளித்து ஒரு முடிவை எட்டலாம். ஆகவே சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களை எடுத்த எடுப்பிலேயே கொடுத்து உணரச் செய்ய வேண்டும். அறாத ஓட்டம், தொடர்பு இருக்கிற பிரமை ஏற்படச் செய்ய வேண்டும்.
ஆரம்பத்துக்கு முன் ஏதேதோ நிகழ்ந்திருப்பதை எல்லாம் ஆரம்ப, தொடர்கிறவர் களில் சாயல் விழச் செய்ய வேண்டும். அப்போது நமக்கு நல்ல பகைப்புலம் உருவாகி நிற்கும்.

5. ஆசிரியர் கூற்றாகக் கதை சொல்வதில் தவறு இல்லை. அதுவும் ஒரு உக்திதான். ஆனால் ஆசிரியன் கதாபாத்திரங்கள் தங்கள் உயிர்த்துடிப்பைக் காட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். நாவல்கள் போல பெரும் அளவுக்கு முடியாவிட்டாலும் குணச் சித்திரத்துக்கு சிறுகதையில் இடமுண்டு. நுணுக்கமாக முழு விவரமடங்கிய விவரிப்புக்கு இடமில்லாவிட்டாலும் உள்ளதாக எண்ணவும் இட்டு நினைக்கவும் ஏதுவாக பாவனையாக எழுதப் படத்தான் வேண்டும்.
'ஸீன் ஓ பயோலின்' சொல்வதுபோல் சவிஸ்தாரமான அதாவது முழுவிவரம் அடங்கியதாக செய்து விட்டால் பொம்மலாட்டப் பொம்மைகள் மாதிரி ஆகிவிடும். ஒரு வைக்கப்பட்ட நிலை, சம்பாஷணை, காட்டுகிற சமிக்ஞை, அவர்களது நினைப்போட்டம் இவைகளிலிருந்து அவர்களது குண விசேஷங்களை நாம் அறியலாம். கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும். தானே விளக்கிச் சொல்லிக்கொண்டே போக வாய்ப்பு இல்லை. அதுக்கு அவகாசமும் இல்லை.

Sunday, January 06, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...........(10)த.ஜெயகாந்தன்

1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ் ஸெல்·ப்பீலிங்) இல்லை என்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அவனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெறவேண்டும். உருவம், உத்தி முதலிய நுணுக்கங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுத்தாயத்தின் வாழ்க்கைமுறையினால், ஏற்றத்தாழ்வுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன்.

2. சும்மாவானும் 'கிளி 'கீகீ' என்று கத்தியது, நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்று மந்தஹாசமாக வீசிக் கொண்டிருந்தது' என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட, எங்கெங்கே இதயங்கள் எப்படி எப்படியெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்கவேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.

3. வாழ்க்கை என்பது காதல் மட்டுமே அல்ல; ஏனென்றால் இங்கு நம்மில் பலர் வாழவே இல்லை. காதலென்பது நமது இளைஞர்களைப் பொறுத்தவரை வெறும் மனப் பிரமைதான். சமூகத்தில் 'வாழாதவர்களி'ன் வாழ்வுக்கு இலக்கியத்தில்கூட இடமே இல்லை. காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்க முடியாதவனைப் பற்றி யார் எழுதுவது? பூர்ண சந்திரனைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் அமாவாசை இருளில் அக்கம்பக்கத்தாருக்குத் தெரியாமல் சோரம்போகும் கைம்பெண்களைப் பற்றி யார் எழுதுவது?

4. கவிமனம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கவிதை தென்படும். அதுபோலவே, நீண்ட நெடிய இவ்வாழ்க்கைக்காதை சிறுகதை மனம் கொண்டவனுக்கு கதைகதைகளாய்ப் பூத்துச் சொரியும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.

5. ஓர் ஒலி, ஒரு சொல், யாரோ யாரிடமோ எதற்கோ சொன்ன அசரீரி போன்றதொரு வாக்கு, வேகமாய்ப் போகிற ஒரு வாகனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற போது, ஒரு நொடியில் கண்ணில் பட்டு மறைந்த காட்சி இவையாவும் ஒரு கவியின் உள்ளத்தில் பட்டுப் பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒரு வடிவமே நவீனகாலச் சிறுகதை ஆயிற்று; ஆகிவிடமுடியும்.

6. ஒரு நல்ல நோக்கமில்லாமல் எந்த நல்ல கலை வடிவமும் வர முடியாது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசையினால் எழுதப்படுவது சிறுகதை ஆகாது. வடிவ அமைப்பில் அது சிறுகதை என்று என்னதான் எழுதுபவனாலும், பத்திரிக்காரனாலும் நிறுவப்படினும், அது திரும்பவும் படிக்கத்தக்க சிறப்புடைய சிறுகதை ஆகாது. ஏன்? அதில் ஒரு நன்னோக்கமில்லை. அதன் நோக்கமே அது அதுவாக இருப்பது என்று அமைந்துவிட்டால், அது செயல் திறனற்ற சிறுகதையின் சிதைந்த வடிவமாகவே எஞ்சி நிற்கும்.

7. 'காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு' சேர்க்கும் சாத்திரம் சிறுகதை ஆகும்.இதில் கற்பனைக்கு இடமே இல்லை.

Friday, December 28, 2007

எழுத்துக்கலைபற்றி இவர்கள்.........(9) இந்திராபார்த்தசாரதி.

1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு 'யூரிடைன்யனாவ்' என்ற ரஷ்ய எழுத்தாளர் 'கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்' என்று யோசனை சொல்கிறார். மாப்பசானின் சிறுகதைகள் காகிதப் பற்றாக்குறை காலத்தில் எழுதப் பட்ட காரணத்தால்தான் சிறப்பாக இருக்கின்றன என்று ஒரு விமர்சகர் சொல்கிறார்.

2. ஒருவன் வாசகன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே சமுதாயத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தானானால் அது இலக்கியமன்று.

3.செயலூக்கத்துக்கு உதவி செய்யாமல் வெறும் ஏமாற்றத்தை மட்டும் சொல்லிச் செல்லும் கதைகள் எனக்கு உடன்பாடன்று. சமூகச் சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை விளைவிக்க முற்படாத ஏமாற்றங்கள் இலக்கியமாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அக்கதையைப் படித்து முடித்த பிறகு
அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக் கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தாம் இந்த ஆற்றல் உண்டு. பிரச்சினையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிப்பத்திரிகைகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையா கிய அழகுணர்ச்சியோடு பிரச்சினையைச் சொல்வதுதான் ஒரு சிறந்த படைப்பாளி யின் திறமை.

5. ஒரு கதை தன் உள்ளடக்க வலுவிலேயே ஒரு பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த வேண்டுமே தவிர, அக்கதையை எழுதுகிறவனுடைய இலக்கியப் புறம்பான கட்சி அல்லது குழுச்சார்பினால் விளைகின்ற உரத்த குரலினால் அல்ல. உரத்த குரல் இடைச்செருகலாய் ஒலித்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்விமனப்பான்மையையும் இலக்கியமாக்கி விடக்கூடாது.

6. ஒரு எழுத்தாளன் எழுத முனையும் போது தன்னை நேரடியாகப் பாதித்த விஷயங்க¨ளை எழுதுகிறான். அவன் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவனது கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டுச்சூழல், மனப்பரிமாணம் ஆகியவைகளே முடிவு செய்கின்றன. அவன் எப்படி உருவாகி இருக்கிறானோ அந்த அளவிலிருந்து பிரதிபலிப்பு செய்கிறான். தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.
வெளிப்படுத்திக் கொள்கிறபோது அது பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது. பகிர்ந்துகொள்ளல் வருகிறபோதே வடிவம் வந்து விடுகிறது. உரையாடல் தேவையாகிறது. அது தனிமொழியாக இருக்க முடியாது.

7. புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ளமுடியாது. ''பத்து பேருக்கு மேல் புரிந்து கொண்டால் அது எழுத்தே இல்லை'' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 'ஆயிரம் பேருக்கு மேல் தனது பத்திரிகையை படித்தால் நிறுத்தி விடுவேன்' என்று யாரோ சொன்னாராம். ஒரு கஷ்டமான விஷயத்தைச் சுலபமாகச் சொல்ல முடியாதா? பெட்ரண்ட் ரஸ்ஸலைப் படித்தால் சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளலாம். அறிவிலே தெளிவு உள்ளவர்கள் எந்த விஷயத்தையும் எளிமையாகச் சொல்ல முடியும். அது இல்லாதவர்கள் குழப்புகிறார்கள்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழைய காலச் சிந்தனை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter parter ஆரம்பித்தான் Art for art sake என்று. தூய இலக்கியம் என்ற ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச் செயலாகிவிடுகிறது.

Wednesday, December 12, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்.......(7) தி.ஜ.ரங்கநாதன்

1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா
என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.

2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த
கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?

3. ஒரு கதையில் உள்ள ஓர் அம்சம் அதற்குப் பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்கச் சோதனை அதைப் படிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தின் அளவுதான்.

4. கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்.; மற்றது அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்யக் கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்க¨ளைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோவுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் அவற்றில் 'மண்' வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், போட்டோப் படங்கள ¢ல் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு - தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோப் படங்களிலும் ஒருவிதக் கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும், முழுவதுமோ அல்லது பெரும் பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

5. கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

6. கலையிலே பிரச்சாரம் இருக்கலாமா கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம்! இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது மாத்திரம் அவசியம்.

7. நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும்; அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப் படாததால்தான், அநேகம் கதைகளை, ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியமாகும். மற்ற லட்சணங்கள் எல்லாம், அதற்கு உதவுபவையே ஆகும்.

8. கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு ஒவ்வொர் அமைப்பும் , ஒவ்வொரு சொல்லும், கதையிந் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பின், 'பூ! இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?' என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

Friday, December 07, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்..........6. அகிலன்.

அகிலன்.
=======

1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில் ஐயமில்லை.

2. வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தின் ஒரே ஒரு சுழிப்பு,
உணர்ச்சிப் பெருக்கின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஒன்று போதும் சிறுகதைக்கு.

3. கற்பனை வித்துக்கள் தாமாகவே வரும் என்று காத்திருக்காமல், எப்போதும் அவற்றை வரவேற்பதற்காகப் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒரு மனப்பழக்கமாகும். கதைக் கலைஞன் என்ற சுய உணர்வோடு நாம் இருந்தால் போதும். விழிப்போடிருக்கும் கலைஞனைத் தேடி கற்பனை ரகசியங்கள் தாமே வரத் தொடங்கி விடுகின்றன.கற்பனை உணர்ச்சி இல்லாதவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும் காட்சி, பேச்சு, அனுபவம் இவற்றிலெல்லாம் நாம் ஏதாயினும் ஒரு புதுமையைக் கண்டுவிட முடியும்.

4. ஒருவர் கதை எழுதத் தொடங்கும் ஆரம்ப காலத்தில் உணர்ச்சி மின்னல்கள் தாமாக ஏற்படத் தொடங்குவதுண்டு. கதாசிரியரின் சுய உணர்வு இன்றியே சிலகாட்சிகளோ, அனுபவங்களோ அவருடைய கற்பனையை வேகமாக இயக்குவதுண்டு. இவற்றை அவர் புரிந்து கொண்டாரானால் அவர் அந்த வித்துக்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

5. கண்களால் காணும் காட்சிகளால் மட்டும் கதை பிறப்பதில்லை. செவி வழியே வரும் சொற்களாலும், பிற புலன்களின் அனுபவங்களாலும், அவ்வனுபவங்கள் எழுப்பும் உணர்ச்சிகளாலும் கதைகள் பிறக்கின்றன. உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகளிலிருந்து கதைக் கருக்கள் வெளிப்படுகிறன. காற்றில் மிதப்பது போன்ற அந்த நுண்பொருளைத் தேடிப் பெற முடியும்; சேகரிக்க முடியும். பிறகு அவசியம் வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

6. உலகில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் கதைக் கரு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதை எழுத விரும்பும் கலைஞர்கள் கருப்பொருளைத் தேடி அதிகமாகக் கஷ்டப்பட வேண்டுமென்பதில்லை. அவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வற்கு அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் வந்து விட்டால் பிறகு கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை.

7. கதைக் கலைக்கு வேண்டிய முதல் தகுதி ரசிகத்தன்மை. அதாவது கலையைப் படைப்பவன் சிறந்த ரசிகனாக இருக்க வேண்டும். வாழ்க்கையைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாதவனிடமிருந்து சுவையான கலைப்படைப்புகள் தோன்றமாட்டா.

8. பிறவகை இலக்கியப் படைப்பைப் போலவே சிறுகதையும் உயிர்த்துடிப்புள்ளது. எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னே உள்ள கதாசிரியரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாக் கூறும் செய்தி, இவ்வளவும் இலக்கண வரம்புகளைவிடவும் மிகமிக முக்கியமானவை.

9. உள்ளடக்கம், உருவம், உத்தி போன்ற பொதுப்படையான இலக்கணங்கநளைத் தெரிந்து கொண்டு, பிறகு அவசியமானால் அவற்றை மீறலாம். சிறந்த எழுத்தாளர்களின் கதைத் தொகுதிகளைப் படித்தால், அவர்கள் எவ்வாறு இந்த வரம்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் -அல்லது மீறி இருக்கிறார்கள் - என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

10. கதைக்கலையை எந்தக் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற முடியும் என்று நான் நம்பவில்லை. சைக்கிள் விட விரும்புவோர்கூடப் பலமுறை விழுந்த பிறகுதான் அதைச் சரியாக விடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். பத்திரிகை அலுவலகங்களி லிருந்து திரும்பி வரும் கதைகளை சைக்கிள் பயிற்சியாளர்கள் கீழே விழும் அனுபவங்களுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பத்திரிகை ஆசிரியர்கள் காரணம் கூற மாட்டார்கள். நாமே சொந்த அனுபவத்திலு இடைவிடாப் பயிற்சியிலும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். திரும்பி வரும் கதைகளை சில நாட்கள் சென்று படித்துப் பார்த்தால் நமக்கே சில குறைகள் தென்படும்.

Sunday, December 02, 2007

எழுத்துக்கலை பற்றி இவர்கள்..........(5) கி.சந்திரசேகரன்

1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும்.

2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். இதன் விளைவு உள்ளத்தைக் கிளர்ச்சி செய்யும் எழுத்து வருகிறதே தவிர உள்ளத்தை உருக்கும் இலக்கியம் வருவதில்லை.

3. எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாகச் சொல்லித்தான் உண்மை தெரிய வேண்டும் என்பதில்லை. எதற்கும் ஒரு கோடி காண்பித்து வாசகனின் கற்பனைச் சிந்தனையைத் தூண்டுவதில்தான் அழகான இலக்கியம் இருக்கிறது.

4. 'வாழ்க்கையில் கீழ்த்தரமானவை இல்லையா? நான் இருப்பதை அப்படியே எழுதுகிறேன்' என்று ஒரு கரட்டு வாதம் செய்கிறார்கள். இலக்கியம் ஒரு சத்தியத்தைக் கூறுவதுதான்; வாழ்க்கையைப் பிரதி பலிப்பதுதான். ஆனால் வாழ்க்கையில் காண்பதைத் திறனோடு பொறுக்கி எடுப்பதுதான் இலக்கியம். Literature is selction of life.

5. இலக்கியம் என்பது - கீழ்ப்பட்டது, தாழ்ந்திருப்பது என்பதிலும் ஓர் உன்னத அம்சத்தைக் கண்டெடுப்பது.

6. சிறுகதைகள் பலவிதம். இன்ன மாதிரிதான் சிறுகதைகள் உருவாகவேண்டும் என்று வரையறை செய்வது எளிதல்ல; அவசியமும் அல்ல. ஏனெனில் சிறுகதையின் லட்சணம் எதுவாகிலும் எல்லா இலக்கியப் பிறப்பிலும் உள்ள சிருஷ்டித் தத்துவம் அதற்கும் பொதுவானதுதான். முதலில் இதை உணர்ந்தால் இலக்கியத்துக்கும் இலக்கியம் அல்லாததற்கும் உள்ள வேறுபாடு புரியும். உண்மையில் கலைஞனிடம் இலக்கியமாவது அவனுடைய திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷம் என்றாலும் தவறில்லை. கலை பிறப்பது கருத்தின் செழுமையும் தெளிவும் பூரணமான நிலையை எய்தும்பொழுதுதான். ஓரளவு அவனுடைய எழுத்துத் திறமை கூட அப்பியாசத்தின் விளைவு என்று கருதுவதும் நியாயம்.

Wednesday, November 28, 2007

எழுத்துக்கலை பற்றி இவர்கள்( 4 ) லா.ச.ராமாமிர்தம்

1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது.

2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற சொல்செட்டு, அதே சமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜ.ர வின் பேனாவிலிருந்து புறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்குச் சாட்சி.

3. எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அதோடு இணைந்து, அதே சமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு, discipline அவன் பாஷைக்கு அத்யாவசியம்.

4. கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து, தட்டித்தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.

5. சில சமயங்களில் மனதில் ஒரு எண்ணம் எழுந்ததும் சமயமும் சந்தர்ப்பமும் அற்று அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.

6. கதையம்சம் என்று தனியாக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.எந்தக் காட்சியில், எந்த ஓசையில், ஒரு அற்புத அம்சத்தில் கண், செவி, மனம் இதயம் என்று காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.

7. நெருப்புண்ணா வாய் சுடணும். அப்படி வார்த்தையைச் சுண்டக்காய்ச்சி எழுதணும்.

8. நிறையப் படிக்கணும். தமிழ் மட்டுமல்ல, தெரிஞ்ச மொழி எல்லாத்துலேயும் நிறைய புக்ஸ் படிச்ச பிறகு எழுத ஆரம்பிக்கணும். இப்போ வாசகர் கடிதம் எழுதறவன் கூட எழுத்தாளன்னு சொல்லிக்கிறான். அவனுக்குக்கூட கடிதத்துக்கு இவ்வளவுனு பரிசு எல்லாம் தர்றா. அதனால எழுத்தாளன் ஆகிறது இப்போ ரொம்ப சுலபம்.....

9. யாருமே எழுத்தாளனாய்த்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வழியில் அழகைப் பேணுபவர்தான். ஆனால் அழகை எங்கேயும் கண்டு கொள்ள மனம் பழக வேண்டும். மாலையின் செவ்வானம் அவள் ஜ்வாலா முகத்தை நினைவூட்ட வேண்டும். வாழைமரத்தில் ஆடும் வாழை இலைப் பச்சையில் அவளுடைய தட்டாமாலையில் சுற்றும் பச்சைப் பாவாடை மனதில் தோன்ற வேண்டும். அப்பொதுதான் தரிசனம் நிகழும். எழுத்தாளனுக்கு, அவன் எழுத்து காட்டும் முகங்கள் தான் தரிசனங்கள். To cmprehend in the known factor, the unknown - that is mytsic experience.

10.எல்லாவற்றுக்கும் கடைசியாக; முதலும் அதுதான். சிறுகதையோ, நெடுங்கதையோ எழுத ஆரம்பித்து விடு. விஷயம் பிறகு தன் வெளியீட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக் கொள்ளும். தண்ணீரில் முதலில் விழுந்தால்தான், குளிப்பதோ, மூழ்கிப் போவதோ, நீச்சல் அடிப்பதோ. எழுதப் போகிறேன், அதற்கு ஹோட்டல் ஓஷியானிக்கில் அறை வாடகைக்கு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரியாதே. இதோ, திண்ணையில் உட்கார்ந்து, அட்டையைத் துடைமீது வைத்துக் கொண்டு ஆரம்பி. ஆரம்பித்துவிடு.

Tuesday, November 27, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள்..........(3) சுஜாதா.

1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம்பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது 'Memory shaped by art' என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை?அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? - இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.

2. பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை
எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம

3. The image that fiction producesis purged of the distractions, confusions, and accidents of ordinarylife என்றதுபோல தினவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.

4. எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது
ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக்கருனணயே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். 'நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.உனக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.

5. எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போலஉணர்வீர்கள். நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்களை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.

6. உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன்.டெண்டர் நோட்டீக்சுகுக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பதுஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.

7. எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எலோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த
அத்தனையையும் எழுத வேண்டுமென்பதில்லை.எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் - முக்கியமாக மானுடம் வேண்டும்.

8. எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா? நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும்.எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது.எதைப்பற்றித் தெலிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

Saturday, November 24, 2007

எழுத்துக் கலை பற்றி இவர்கள்.......(2). தி.ஜானகிராமன்

1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

2. எழுதுவதற்கு அடிப்படையானது ஒரு உத்வேகந்தான். எழுதுபவன், படைக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டியதுதான் அடிப்படைத் வேவை. மரபு வழிப்படி இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. "இண்டென்ஸ் பீலிங்" எனும்படியான சிரத்தை தேவை. குறையற்ற ஆழமான உணர்ச்சித் திளைப்பில் தான் படைப்பிலக்கியத்தின் கரு உதிக்கிறது எனலாம்.

3. பலசமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும்போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலை கொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப் பந்தயமல்ல. நூறு கஜ ஓட்டப் பந்தயத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ, வேகத்தை மாற்றிக் கொள்ளவொ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக அவசியம். வளவளப்பு என்றால் அதிகச் சுமை. ஓடுவது கஷ்டம்.

4. சிறுகதை எழுத உக்திகளைச் சொல்லித் தரலாம். உணர்வில் தொய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும், முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. செக்காவின் உக்திக்கு ஒரு அச்சு தயார் செய்து கொண்டு, அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும் தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஒரு உருவம் கிடைக்கும்.

5. தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்தி பெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.

6. எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடியவேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையை கடந்தால் ஒருமைக் கோப்புக்கும் ஊறு விளையத்தான் செய்யும்.

7. செக்காவ், மாப்பசான், போ, மாம், தாகூர், கு.ப.ரா, புதுமைப் பித்தன், லா.ச..ரா, ஸீன்ஓகாளி, ஜாய்ஸ், ஸ்டீஃபன்கிரேன், ஹென்ரிஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறுசிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்யக்கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்யம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் என்பதும் இந்தக் கதைகநளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத் தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற்போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம்: பூசினாற்போலவும் விழலாம். அது விளகின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத்தைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத் தன்மை பெறும்பொது உருவமும் தானாக ஒருமைப் பாட்டுடன் அமைந்து விடுகிறது.

8. உணர்ச்சியின் தீவிரத்தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதற்கில்லை. அது ஒவ்வோர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும் தன்மை. எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்கிறார்கள். எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழகிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

(இன்னும் வரும்)

Friday, November 23, 2007

'எழுத்துக் கலை' பற்றி இவர்கள்....(1)'தேவன்'

1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று
ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில்
கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக் காகிதத்தில்
ஓட்டுவது தேர் இழுக்கிறமாதிரி இருக்கும். படிக்கிற பேருக்கு உலுக்கு மரம்
போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்,
அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது. வாசகனுக்கும் சுகம்.

2. எழுதுவது என்றால் ஒரு ஆவேசம் வேண்டி இருகிறதே! அப்படி வந்தால் தான்
எழுத்து ஜீவனுடன் இருக்கிறது.

3. எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயொகம் சுபாவமாக வரும்
உங்களிடம் எழுத்துக்கலைக்கு வேண்டிய விஷயம் இருக்கிறது. அதை
சரியானபடி பயன் படுத்த வேண்டும். பேனாவுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

4 எழுதி எழுதித்தான் கை பண்பட வேண்டும். மனதில் அற்புதமான 'ஐடியா'
உருவாகும். அதையே எழுத்தில் பார்க்கும்போது ஜீவன் இல்லாமல் போய்விடும்..
மூளையும் கையும் ஒத்துழைக்க வேண்டும். பாஷை அனுகுணமாக வேலை
செய்ய வேண்டும். மூன்றும் ஒத்துக் கொண்டால்தான் 'மார்க்' வாங்கலாம்.
எழுத்து என்பது சாமான்யம் இல்லை.

5. எழுதுவத் மிகவும் சிரமமான, சங்கடமான தொழில். ''அழகாக வார்த்தைகளைக்
கோத்துக் கொடுத்து விட்டேனே!'' என்றால் பிரயோசனமில்லை. எத்தனையோ
பொறுமை, எத்தனையொ உழைப்பு, வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து ஏற்பட்ட
பக்குவம், பொது ஜனங்கள் எதை விரும்புவார்கள் என்ற சரியான ஊகம், எப்படி
எழுதினால் சிறப்பாக அமையும் என்று கண்டு கொள்கிற ஞானம் - இத்தனையும்
ஒரே ஆசாமியிடம் வேண்டும். இது ஒரு நாளில் வருகிற வித்தை இல்லை. பல
வருஷங்கள் உழைத்தே இந்தத் தேர்ச்சியை அடைய முடியும்.

6. மனித சுபாவங்களில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப்
பெரும்பாலானவை ஒரே திசையை நோக்குபவை. ஒரு சின்னக் காரியம் செய்து
விட்டுப் பெரும் புகழைப்பெற விரும்புகிறவர்கள், அதைப்பற்றி அடிக்கடிப்
பேசுகிறவர்கள், ஒரு சில இடங்களில் தலையைக் காட்டிவிட்டுப் புகைப்
படத்திலும் புகுந்து கொள்பவர்கள், தன் அருமையை இன்னும் உலகம் கண்டு
கௌரவிக்கவில்லை என்று நிரந்தரமாகக் குறைசொல்பவர்கள் - இந்த மாதிரி
ரகங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மைக் கட்சியை அலங்கரிப்பவர்கள்.
ஹாஸ்யமாக எழுதுவதற்கு இவர்கள் தருகிற விஷயம் வேறு யாருமே கொடுக்க
மாட்டார்கள்.

7. எழுதுகிற கதை தமிழ்நாட்டுக் கதையாக இருக்க வேண்டும். கதைப் பாத்திரங்
களைப் படிக்கும் போது ''எங்கேயோ பார்த்திருக்கிறோமே'' என்று பிரமை
தட்ட வேண்டும். அதுதான் எழுத்திலே காட்டும் ஜாலம்.

8. ஒரு மனிதனைக் கவனித்து, குணாதிசயங்களை உணர்ந்து, பேனா முனையில்
அதைக் கொணர்ந்து பிறர் அந்த மனிதரை மனக்கண் முன் பார்க்கும்படி
செய்வது எத்தனை கடினமான காரியம்! அதற்கு எத்தனையோ சாமர்த்தியம்
வேண்டும். வார்த்தைக்கட்டு வேண்டும்.

9. எழுத்தாளன் கண்ணால் ஒன்றைக் கண்டுவிட்டு சும்மா இருந்து விடுவானா?
தான் கண்ட அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லாவிட்டால் அப்புறம் என்ன
எழுத்தாளன் என்று பெயர்?

10. வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களுக்கு யாரிடத்திலும் மனதில்
எள்ளளவும் துவேஷம் கிடையாது. நன்றாக இருகிறதை உடனே தயங்காமல்
குறைக்காமல் சொல்லுவார்கள். அதில் நம்பிக்கை யுடன் எழுதிவிட்டால்
யாரும் அசைக்க முடியாது.

( இன்னும் வரும் )

 



     RSS of this page