Home / GeniusMadhan

GeniusMadhan


ஜீனியஸ்

மதன்

வாசல்..

அகண்ட வெளியிலிருந்தோ, மேலுலகத்திலிருந்தோ ஜிவ்வென்று கீழே பூமிக்கு இறங்கி வரும் அமானுஷ்யமான, ஆச்சரியமான, அரூபமான ஒரு சக்தி, குறிப்பிட்ட மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் புகுந்துகொண்டு, அவர்களைப் பிரமிப்பூட்டும் வகையில் சாதனைகள் புரியவைக் கிறது. பன்னெடுங்காலமாக மனிதர்கள் அந்த

சக்தியை 'ஜீனியஸ்' என்று

பெயரிட்டு அழைத்தார்கள். அலாவுதீன், அற்புத விளக்கைத் தேய்த்த உடனே வெளிப்படும் பூதம் மாதிரிதான்! அந்த பூதத்துக்குக்கூட ஜீனி (Geni) என்றுதான் பெயர். எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும் என்பதால்தான் அதற்கு அப்படி ஒரு பெயர்!

 

எவ்வளவு திறமையானவர் களாக இருந்தாலும் மனிதர்களின் சாதனைகளுக்கு எல்லை உண்டு. மனிதப் பிறவியால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்கிற 'லாஜிக்'கலான

எல்லை அது. 'ஜீனியஸ்' என்று அழைக் கப்படும் மனிதர்கள் அந்த எல்லைக்

கோட்டைத் தாண்டுகிறார்கள்! இன்றைக்கும் விஞ்ஞானிகள் 'ஜீனியஸ்' என்கிற வார்த்தையை மிக அரிதாகத்தான் பயன்படுத்துகிறார்கள். சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும் கேளுங்கள்-- ஒவ்வொருவரும் நாலைந்து பேரைத் தான் 'ஜீனியஸ்' என்று குறிப்பிடு வார்கள். அதுவே சாமான்யர்களாகிய நாம் சர்வ சாதாரணமாக 'கோடிவீட்டு கோதண்டம் பெரிய ஜீனியஸ், தெரியுமில்ல?!' என்கிறோம் - அதன் நிஜ அர்த்தம் புரியாமல்!

ஜீனியஸ் என்கிற சக்தி நல்லதா, கெட்டதா? இந்தக் கேள்வியை எழுப்பினால் - 'இரண்டுமே!' என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஹிட்லரை நாம் ' Evil genius' என்று அழைக்கிறோம் இல்லையா? மதம் (Religion) என்று எடுத்துக் கொண்டால் சாத்தான்கூட ஏசுபிரானையே மயக்கி ஆளமுயன்ற தீமை மிகுந்த ஜீனியஸ்தான். 'நகர்ந்து போ' என்றார் ஏசு உறுதியாக.

ஜீனியஸ் என்கிற அந்த சக்திக்கு பாரபட்சம் கிடையாது. அது எங்கே, எப்போது, யாருக்குள் புகுந்துகொள்ளும் என்று யாராலும் சொல்ல முடியாது. (மனிதர்களை மிஞ்சிய ஒரு சக்தியைப் பற்றி 'யாராலும் சொல்ல முடியாது' என்று குறிப்பிடுவதே அபத்தமாக இருக்கிறது!) அசாதாரணமான திறமை என்று பார்த்தால், அதற்கு பூகோள எல்லைகளும் கிடையாது. செல்வச் செழிப்பில் வாழ்ந்த 'ஜீனியஸ்'கள் உண்டு. ஏழ்மையில் மிகப் பரிதாபமாக வாடிய 'ஜீனியஸ்'களும் உண்டு.

காரணம், ஜீனியஸ் என்கிற சக்தி வறுமையைப் பற்றி, ஏன் எதைப்பற்றியுமே கவலைப்படுவதில்லை! சாக்ரடீஸ் போன்ற தத்துவ மேதைகளும், விஞ்ஞானத்தில் மாமேதைகளான ஃபாரடே, லூயி பாஸ்ட்யூர் போன்றவர்களும், வான்கோ போன்ற ஓவிய மேதைகளும், எழுத்துலக மேதை ஃப்ரான்ஸ் காஃப்க, மகாகவி பாரதி, கணித மேதை ராமானுஜம் போன்றவர்களும் மிகச் சாமான்யமான குடும்பங்களில் பிறந்து வறுமை

யில் வாடியவர்களே (பாரதியைக் கடைசி வரை வறுமையில் வாட வைத்தது சமுதாயம்). மைக்

கேல் ஏஞ்சலோ, டாவின்சி, கத்தே, கார்ல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (நான்கு வயதில் தாய், தந்தை இருவரையும் இழந்ததால் தாத்தா வீட்டில் வளர நேரிட்டாலும் பிரபுக்கள் பரம்பரையைச் சேர்ந்தவர் ரஸ்ஸல்!), மாவீரர் அலெக்ஸாந்தர், ஏன், நம்ம சக்கரவர்த்தி அசோகர் போன்றவர்கள் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களே.தாமஸ் ஆல்வா எடிசனையே மிரள வைத்த ஜீனியஸ் விஞ்ஞானி நிகோலா டெஸ்லா வசதியாக வாழ்ந்து கடைசி காலத்தில் வறுமையில் வாடினார் (அவரைப் பற்றி பிற்பாடு எழுதுவோம்!).

பல அறிஞர்களும், மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களும் 'ஜீனியஸ்' பற்றி இன்றளவும் விதவிதமான ஆராய்ச்சிகள் செய்து விவரிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவோ எந்த சட்டதிட்டத்துக்கும் உட்பட மாட்டேன் என்கிறது. ஜீனியஸ்களில் குள்ளமானவர்கள் அதிகமா, உயரமானவர்கள் அதிகமா? (அரிஸ்டாடில், ஆர்க்கிமெடிஸ், ஓவியர் வில்லியம் ப்ளேக்.. போன்ற பலரின் உயரம் ஐந்தடிக்கும் குறைவு.) ஜீனியஸ்களில் திருமணத்தைத் தவிர்த்தவர்கள் எத்தனை பேர்? (டாவின்சி, நியூட்டன், பீத்தோவன், கலீலியோ, ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று ஏராளமானவர்கள் இல்லறத்தின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.) ஜீனியஸ்கள் பற்றி முடிவுக்கு வந்த கருத்துக்களும் உண்டு. உதாரணமாக, பெரும்பாலான ஜீனியஸ்கள் பிறக்கும்போது அவர்களுடைய அப்பா வயது 36ஐத் தாண்டிவிட்டது என்கிறது புள்ளிவிவரம்.

இப்படியாக, ஜீனியஸ்களைப் பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்களே ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் 'ஜீனியஸ் உலகம்' என்கிற சிக்கலான, நுணுக்கமான, களேபரமான வலைகளுக்குள் நுழைந்து சிக்கிக்கொள்ளப் போவதில்லை! உலகத்தின் விதியை மாற்றியமைத்த அசாதாரணமான திறமைசாலிகளை மட்டுமே நான் இந்தத் தொடருக்காக எடுத்துக்கொள்ளப் போகிறேன்.

விஞ்ஞானமெல்லாம் காத்திருக்கட்டும். முதலில் வீரத்தை எடுத்துக்கொள்வோம்.

மாவீரர்களில் எத்தனை மனிதர்களை 'ஜீனியஸ்' என்று வரலாறு சொல்கிறது என்று பார்த்தால் அலெக்ஸாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், செங்கிஸ்கான் என்று அதற்காகவே தனிப் பட்டியல் இருக்கிறது (ஆமாம்! செங்கிஸ்கான் கொடூரமானவன்தான். ஆனால் யுத்த களத்தில் அவன் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் பெரும் வரலாற்று ஆசிரியர்களையே பிரமிக்க வைத்திருக்கிறது. அச்சப்பட வைக்கும் அசாதாரணமான மாவீரன் செங்கிஸ்கான்!).

யாராவது ஒருவரிடமிருந்துதான் துவங்கியாக வேண்டும். நாற்காலி நுனியில் உட்காரவைக்கும் பிரமாண்டமான 'ஆக்ஷன் மூவி' போல அமைந்திருப்பதால் முதலில், இத்தாலியில், மாஸிடோனியா நாட்டில் பிறந்த - 'தி க்ரேட்' என்று அத்தனை வரலாற்று ஆய்வாளர்களாலும் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரின் பிரமிப்பூட்டும் வாழ்க்கையிலிருந்தே துவங்குவோம். ஆம்! அந்த மாவீரனின் பிறப்பே அதிசயமாக அமைந்தது...

அலெக்ஸாந்தர்...

சாதாரணமாக, சாதனையாளர்கள் தங்களுக்கென்று உலகில் ஒரு மேடை அமைத்துக் கொள்வார்கள். அதன்மீது நின்று அவர்கள் செய்து காட்டுகிற சாதனைகள் உலகைப் பிரமிக்க வைக்கும். மாஸிடோனியா நாட்டிலிருந்து புயலாகக் கிளம்பிய அலெக்ஸாந்தர் உலகத்தையே ஒரு மேடையாக்கிக் கொண்டார்! உலக வரலாற்றில் 'அலெக்ஸாந்தர்' என்று பெரிதாக (அவராலேயே) செதுக்கப்பட்ட பெயர் இன்றளவும் ஜொலிக்கிறது. பிற்பாடு ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போன்ற வல்லமை மிகுந்த தலைவர்கள் கூட அலெக்ஸாந்தரை ஒரு 'ரோல் மாட'லாக எடுத்துக்கொண்டு ஏங்கினார்கள். அதாவது, அவரளவு வெற்றிகளை நம்மால் அள்ளிக் குவிக்க முடியுமா என்கிற ஏக்கம்!

கிரேக்க நாட்டின் எல்லையிலிருந்த மாஸிடோனியா என்கிற சுதந்திர நாட்டை ஆண்ட சர்வாதிகாரி பிலிப் என்கிற மன்னரின் (கி.மு. 359-336) மகனாக பிறந்தார் அலெக்ஸாந்தர். இளவரசராக வாழ்ந்தாலும் அப்பாவுக்கும் மகனுக்கும் எப்போதுமே ஒத்துப்போனதில்லை. வாக்குவாதங்கள்தான் அதிகம். பிலிப் மன்னரின் ராணுவம் அதிரடியானது. அண்டைப்புற நாடுகளையெல்லாம் அவருடைய பெரும் படை வென்று திரும்பியது என்றாலும், அது மகனுக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலுடன் நண்பர்களிடம் 'நானும் ஜெயிப்பதற்காக ஏதாவது நாடுகளை அப்பா விட்டு வைக்கப் போகிறாரா இல்லையா?' என்று பத்து வயதிலேயே அலெக்ஸாந்தர் கேட்டதுண்டு!

அலெக்ஸாந்தரின் அம்மா, ஒலிம்பியா விபரீதமான பெண்மணி. சூது, வாது அதிகம் கொண்டவர். திடீர் திடீரென்று வன்முறையில் இறங்கும் முன்கோபக்காரி. மந்திர தந்திரங்கள் வேறு தெரியும் என்று ஆட்சியில்

 

பலரும் அவளைப்பற்றி ரகசியமாகப் பேசிக்கொண்டதால், எல்லோருக்கும் (கணவர் பிலிப் உட்பட!) அவளிடம் சற்று பயமுண்டு! மகனைப் பார்த்தாலே சிடுசிடுத்தாலும் அப்பா பிலிப் ஒரே ஒரு ரொம்ப நல்ல காரியம் செய்தார். அது - தத்துவ மேதை அரிஸ்டாடிலை அலெக்ஸாந்தருக்கு ஆசிரியராக நியமித்தது!

ஆசிரியரைப் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அரிஸ்டாடில் புகழ்பெற்ற தத்துவஞானி ப்ளேட்டோவின் பிரதான சீடர். ப்ளேட்டோவின் குருவான சாக்ரடீஸ் உடனும் அரிஸ்டாடிலுக்கு ('டீன் ஏஜி'ல்) ஓரளவுக்கு பரிச்சயம் உண்டு. ஆசிரியர் உயரமானவர் இல்லை. வழுக்கைத்தலை, மெல்லிய கால்கள், குறுகலான கண்கள், லேசாக திக்குவாயும் உண்டு. (அவரை நேரில் பார்த்து சிற்பி செதுக்கிய ஒரு சிலை இன்றும் வியன்னா மியூசியத்தில் உண்டு. தன் உடல் சம்பந்தப்பட்ட குறைகளை மறைக்க, கலர்ஃபுல்லாக, வித்தியாசமாக, பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும்படி ஆடைகளை அமைத்துக் கொள்வது அரிஸ்டாடிலின் வழக்கம். ஆனால், நிஜமாகவே அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா என்பதில் மாற்றுக் கருத்து அன்றும், இன்றும் கூட இருந்ததில்லை.

மகன் பவ்யமாக அமர்ந்து கல்வி கற்க அரிஸ்டாடில் ஆசிரியராக இருந்தால்தான் முடியும் என்று பிலிப் கருதியிருக்க வாய்ப்புண்டு. ஆனால், உலகப் புகழ்பெறப்போகும் தன் மாணவனைப் பற்றி ஆசிரியர் எதையுமே எழுதிவிட்டுப் போகவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் இன்று வருத்தப்படுகிறார்கள். காரணம் தெரியவில்லை என்றாலும் பிற்பாடு அலெக்ஸாந்தர் மாஸிடோனிய சக்ரவர்த்தி ஆனபிறகு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே பழைய நெருக்கம் நீடிக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது. ஆனால், நல்லவேளையாக, அலெக்ஸாந்தரிடம் சிறுவயதிலிருந்தே, மிகக் கவனமாக 'டைரிக் குறிப்புகள்' எழுதும் பழக்கம் இருந்தது. போர்களுக்குச் சென்றபோதெல்லாம் அலெக்ஸாந்தருடன், அரிஸ்டாடிலின் ஒன்றுவிட்ட சகோதரரான இளைஞர் காலிஸ்தெனீஸ் போன்ற எழுத்தாற்றல் மிகுந்த ஏராளமானவர்கள் கூடவே சென்று, போர்க்களத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அவற்றில் பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன என்றாலும் அலெக்ஸாந்தர் பற்றிய மிச்ச தகவல்களே ஏராளமாக இருப்பது நம் அதிர்ஷ்டம்.

பிலிப் மன்னருக்கும், ராணி ஒலிம்பியாவுக்கும் அரண்மனையில் அற்புதமான படுக்கையறையில் முதலிரவு. மன்னர் மனைவியை அணைத்து படுக்கையில் அமர்த்திய சமயத்தில்.. பேரிடியுடன் பளீரென்று ஒரு மின்னல் உப்பரிகை வழியே உள்ளே பாய்ந்து, மறைந்தது. தம்பதி சரேலென்று நகர வேண்டியிருந்தது! ஒலிம்பியா கர்ப்பமடைந்தார். அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து பிலிப்புக்கு ஒரு கனவு. படுத்திருந்த மனைவியின் மார்பில் படிந்திருந்த சேலையை அவர் சற்றே விலக்குகிறார்... வயிற்றின் மீது முத்திரை போன்ற ஓர் உருவம்.. சிங்கம்! மன்னர் இதுபற்றி நெருங்கிய ஆலோசர்களிடம் விவரிக்க, சிலர் 'உங்கள் மனைவி மந்திரவாதியோ....?!' என்று அச்சத்துடன் சொல்ல, அரிஸ்டாண்டர் என்னும் நெருங்கிய ஆலோசகர் மட்டும் 'சிம்பிள்! சிங்கம் போன்ற மகன் உங்களுக்குப் பிறக்கப் போகிறான்!' என்று நம்பிக்கையோடு ஆரூடம் சொன்னார். இருப்பினும், மனதில் ஏதோ சந்தேகம் நிழலாகிக்கொண்டிருந்ததால் ஓரிரவு, படுக்கை அறை கதவின் சாவித்துவாரம் வழியாக, ரகசியமாக உள்ளே பார்த்தார் மன்னர். அவர் கண்ணில் பயங்கரமான காட்சி தென்பட்டது. படுக்கையில் ராணி உறக்கத்திலிருக்க, ஒரு பெரிய நாகப்பாம்பு எந்தவித தீங்கும் இழைக்காமல், தன் வாலினால் அவரை மென்மையாக அணைத்துக் கொண்டு படுத்திருந்தது! மாவீரர்தான் என்றாலும் சற்றுப் பதறிப் போனார் மன்னர். மனைவியிடம் சற்று கவலையோடு மன்னர் பழக ஆரம்பித்தது அதிலிருந்துதான். ராணியோடு நெருங்கி இருப்பதைக்கூட சந்தேகத்தோடு தவிர்த்தார் பிலிப். போர்க்களமாக இருந்தால் வேறு விஷயம். இது, படுக்கையில் மர்மம்!

பிற்பாடு, புகழ்பெற்ற டெல்ஃபி ஆலயத்துக்குச் சென்று வழிபட்ட பிலிப், அங்கே அசரீரியிடம் 'பாம்பு விஷயத்தை'ச் சொல்லி விளக்கம் கேட்டார். அதற்கு நேரடி பதில் வரவில்லையென்றாலும் அசரீரியின் குரல் ஆலயத்தின் உள்ளேயிருந்து முழங்கியது - 'மன்னா! நீ சாவித்துவாரம் வழியே ரகசியமாகப் பார்த்தது தவறு. உள்ளே பார்த்த உன்னுடைய கண்ணை விரைவில் இழப்பாய்!' அதைத் தொடர்ந்து ஒரு

போரில் அம்பு பிலிப் கண்ணில் பாய்ந்து, அந்தக் கண்ணில் பார்வை போய்விட்டது (இன்றும் பண்டைய ஓவியங்களிலும், அலெக்ஸாந்தர் பற்றிய திரைப்படங்களிலும் கூட, பிலிப் ஒரு கண் இல்லாமல்தான் தோன்றுவார்!).

பிலிப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்த நாள் ஒன்று வந்தது. அந்த ஒரே நாளில் மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன. இலிரியா என்கிற முக்கியமான ஒரு நாட்டுடன் நடந்த ஒரு போரில் மன்னரின் படை பெரும் வெற்றி பெற்ற செய்தியை ஒரு தூதர் கொண்டு வந்தார். இன்னொரு தூதர் ஓடி வந்து 'ஒலிம்பிக்ஸ் போட்டியில், குதிரை ரேஸில் தங்கள் குதிரை முதலாவதாக வந்து வெற்றி பெற்றிருக்கிறது!' என்றார். மன்னர் 'பலே' என்று முழங்குவதற்குள் அந்தப்புரத்திலிருந்து ஒரு தாதி ஓட்டமாக வந்து 'அரசே! தங்களுக்கு மகா அழகுடன் ஒரு மகன் பிறந்திருக்கிறான்!' என்றாள்!

(தொடருவோம்)

அலெக்ஸாந்தரின் சிலைகள், ஓவியங்கள் நிறையவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. என்றாலும் அந்தச் சிலைகளைப் போலத்தான் அவருடைய தோற்றம் இருந்ததா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. லிஸிபஸ் என்கிற பிரபல சிற்பி அலெக்ஸாந்தரை நேரில் பார்த்துச் செதுக்கிய சிற்பம் ஒன்று உண்டு. அதன்படி அலெக்ஸாந்தர் சராசரி உயரம்தான் (99 சதவிகித ஜீனியஸ்கள் குள்ளம், அல்லது சராசரி உயரம்தான் என்பது விசித்திரமான ஒரு உண்மை!). சுருள் முடி. நல்ல சிவப்பு. தலையை லேசாக இடதுபுறமாகச் சாய்த்தவண்ணம் நடப்பார் அலெக்ஸாந்தர். வேகமான, ஆனால் தெளிவான, சாதுர்யமான பேச்சு. ஒரு வியப்பான விஷயம் - அலெக்ஸாந்தரின் உடலிலிருந்து எப்போதும் ஒரு மென்மையான நறுமணம் வீசியதாக பல வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் உட்பட) குறிப்பிடுகிறார்கள். மன்னரின் நண்பர்கள் அலெக்ஸாந்தர் இல்லாத சமயங்களில் அவரது உடைகளை அவ்வப்போது முகர்ந்து பார்த்து 'வாவ்!' என்று சொல்வார்களாம்!

அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. எழுந்தவுடன் 'ஜிம்'முக்கு போகும் விருப்பமெல்லாம் கிடையாது. மல்யுத்தம் மட்டுமே பிடிக்கும். தூங்கி எழுந்தவுடன் செய்கிற ஒரு முக்கிய வேலை - ஹோமரின் காவியங்களைக் கொஞ்ச நேரம் படிப்பது! அதிலிருந்து பக்கம் பக்கமாக, மனப்பாடமாக அலெக்ஸாந்தரால் ஒப்பிக்க முடியும்! அளவோடு சாப்பிடுவார் அவர். எப்போதாவது திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் வந்தால் விருந்து விஷயத்தில் புகுந்து விளையாடுவது உண்டு. கொண்டாட்டங்களின்போது மட்டும் ஒயின் (தண்ணீர் கலக்காமல் 'ரா'வாக) பல லார்ஜுகள் அடிப்பார்.

 

மற்ற நாட்களில் மிகவும் மிதமாகவே அலெக்ஸாந்தர் மது அருந்துவதுண்டு. 'நினைவு தவறக்கூடாது. தவறுகள் நிகழும்!' என்று அதற்கு காரணம் சொல்வார்.

வீரம், விவேகம் இரண்டுமே அலெக்ஸாந்தரிடம் சரியான விகிதத்தில் கலந்திருந்தது. வீரம் என்றால் மகாவீரம்! பலமுறை வேட்டைக்கு காட்டுக்குள் சென்றபோது சிங்கம் எதிர்பட்டதுண்டு. மிகவும் குஷியாகி, குதிரையிலிருந்து குதித்து நேரடியாக அதோடு அலெக்ஸாந்தர் சண்டையிட்டதுண்டு! அழகாக உடையணிந்து கொள்வது அவருக்குப் பிடிக்கும். தானே 'டிஸைன்' செய்த, சிங்க இலச்சினை பொறித்த 'ஹெல்மெட்' எப்போதும் அவர் தலை மீது இருக்கும்!

எந்த நாட்டுக்குப் படையெடுத்தாலும், அங்கே உள்ள வித்தியாசமான கலைப்பொருட்களை சேகரித்து, அவற்றை உடனே அரிஸ்டாடிலுக்கு அனுப்பச் சொல்வார் அலெக்ஸாந்தர். (அரிஸ்டாடில் சர்வதேச கலைச்சின்னங்கள் அடங்கிய ஒரு மியூஸியத்தை அப்போது உருவாக்கிக் கொண்டிருந்தார்). மற்றபடி வைரம், தங்கம் போன்ற விஷயங்களையெல்லாம் தன் தளபதிகளுக்கும், சாதனைகள் படைத்த வீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவதை அவர் பின்பற்றினார். 'உங்களுக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளவில்லையா....?' என்று ஒருமுறை பிரதான தளபதி கேட்டதற்கு 'வைத்துக் கொண்டிருக்கிறேனே.. என் தன்னம்பிக்கை!' என்று புன்னகையுடன் அலெக்ஸாந்தரிடமிருந்து பதில் வந்தது!

ஒருமுறை பாரசீகத்திலிருந்து தூதுவர்கள் மன்னர் பிலிப்பின் அரசவைக்கு வருகை தந்தார்கள். தந்தை பிலிப் ஊரில் இல்லாததால் அவர்களை மகன் (அப்போது பதினெட்டு வயது) சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்களிடம் பாரசீகம் பற்றியும், ஆசிய நாடுகள் பற்றியும் அலெக்ஸாந்தர் கேட்ட நுணுக்கமான கேள்விகள் அவர்களைத் திணற அடித்தன. அப்போதே உலக நாடுகளைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் அந்த இளைஞரின் மனதில் அலைபாய்ந்திருக்க வேண்டும்!

இன்னொரு சமயம் நண்பர்களோடு விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது, படுவேகமாக ஓடிக் காண்பித்தார் அலெக்ஸாந்தர். ஒரு நண்பர் 'ஒலிம்பிஸ் ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக் கூடாது?' என்று கேட்டார். சற்று தர்மசங் கடமான கேள்வி. 'கலந்து கொண்டால் போச்சு!' என்றுதான் சாதாரணமாக எவரும் பதில் சொல்லியிருப்பார்கள். அலெக்ஸாந்தரின் பதில் வித்தியாசமாக, சாதுர்யமாக இருந்தது. 'நான் மாஸிடோனியாவின் மன்னன்! உலகில் உள்ள அரசர்களுக்காக ஒரு ஒலிம்பிக்ஸ் பந்தயம் நடக்கட்டும். நானும் அதில் ஓடுகிறேன்!' என்றார் அவர்.

அலெக்ஸாந்தருக்கு பதினாறு வயதிருக்கும்போது ஒரு ஆச்சர்யமான நிகழ்ச்சி நடந்தது. பிலிப்ஸ் மன்னருக்காக, அண்டை நாட்டிலிருந்து ப்யூஸிபாலஸ் என்னும் ஒரு கம்பீரமான குதிரையை விற்பனைக்காகக் கொண்டு வந்தார்கள். மைதானத்தில் அதை 'ட்ரையல்' பார்த்தபோது, யாராலும் குதிரையை அடக்கி, அதன் மீதேறி அமர முடியவில்லை. கடுப்பான பிலிப் 'அதைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்' என்றார். மன்னருக்கு பின்னால் நின்றிருந்த அலெக்ஸாந்தர் 'அடக்க முடியவில்லை என்பதற்காக அற்புதமான குதிரையை கோட்டைவிடுகிறார்கள்!' என்று முணுமுணுக்க, அப்பாவின் காதில் அது விழுந்துவிட்டது. திரும்பி மகனைப் பார்த்த பிலிம் 'அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக்கூடாது. அவர்களெல்லாம் உன்னைவிட அனுபவம் வாய்ந்த வீரர்கள். ஏன்? நீ போய் அடக்கலாமே?!' என்று இறுக்கமாகச் சொல்ல, 'என்னால் முடியும்!' என்றார் அலெக்ஸாந்தர். பிலிம்பின் புருவங்கள் உயர, முகம் லேசாகச் சிவந்தது. மகனைக் கையமர்த்தி 'முடியாவிட்டால்?' என்றார் தந்தை. 'குதிரையின் விலையை தங்களுக்குத் தந்து மண்டியிடுகிறேன்!' என்று பதில் வந்தது.

மன்னர் அனுமதி தந்தவுடன் மைதானத்தில் குதித்த அலெக்ஸாந்தர் குதிரை மீது உடனே ஏற முயற்சிக்க வில்லை. அதன் கூடவே ஓடி, தட்டிக் கொடுத்து, லகானைப் பிடித்து, மெள்ள அதன் முகத்தை சூரியன் பக்கம் திருப்பி, (கண் கூசியதால் தன் வேகத்தை குதிரை கட்டுப்படுத்தும்போது) மென்மையாக அதன் மீது ஏறி அமர்ந்து, நாசூக்காக அது போகிற போக்கில் விட்டு.. கடைசியில் ப்யூஸி பாலஸ் என்கிற அந்தக் குதிரை அலெக்ஸாந்தரிடம் அடியோடு அடிமையாகி அவர் சொன்னபடியெல்லாம் கேட்டது! ஒரே ஆரவாரம்! பிலிப்புக்கு பெருமை தாங்கவில்லை. அருகில் வந்து வணங்கிய மகனை அணைத்துக்கொண்டு 'இந்த ராஜ்ஜியம் உனக்கு ரொம்பச் சின்னது அலெக்ஸாந்தர்!' என்றார் பிலிப்.

இதற்குப் பிறகு அப்பாவுக்கு மகன் பேரில் நிரம்பவும் நம்பிக்கை பிறந்தது. பைஸாண்டைன் நாட்டைக் கைப்பற்ற பிலிப் படையோடு கிளம்பியபோது, மகனை அழைத்து 'மாஸிடோனியாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உன்னுடையது!' என்றார். ஆனால் தந்தை வெளிநாட்டிலிருந்தபோது கேளிக்கைகளில் ஈடுபடவில்லை அலெக்ஸாந்தர். ஆட்சியை எதிர்த்து குட்டிப் புரட்சிகளில் ஈடுபட்ட அண்டை நாடுகளுக்கு படையோடு புயலைப்போலப் புகுந்து அவற்றின் கொட்டத்தை அடக்கி நாட்டு நிலவரத்தை மேலும் கட்டுக்கோப்பாக ஆக்கினார். திரும்பி வந்த பிலிப் பிரமிப்பில் ஆழ்ந்தார். எனினும், போகப்போக தந்தைக்கும் மகனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மனைவி ஒலிம்பியாவிடம் தயக்கத்தோடு பிலிப் இல்வாழ்க்கை நடத்தியது பற்றி முன்பே குறிப்பிட்டோம் இல்லையா? க்ளியோபாட்ரா என்கிற (உலகப் புகழ் க்ளியோ அல்ல!) பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளைத் திருமணம் செய்து கொண்டார் பிலிப். இது அலெக்ஸாந்தரிடம் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தத் திருமணத்தைத் தொடர்ந்து நடந்த விருந்தில் மணப்பெண்ணின் மாமன் அட்டாலஸ் மதுவை ஏந்தி மன்னருக்கு 'சியர்ஸ்' சொல்லிவிட்டுக் கூடவே 'மன்னரின் வாரிசாக தலைசிறந்த ஒரு மகன் பிறக்க வேண்டும்!' என்று வாழ்த்த, விருந்தில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அலெக்ஸாந்தர் கோபத்துடன் எழுந்து நின்று ஒரு கோப்பையை அட்டாலஸ் மீது வீசி 'அப்படியென்றால் நான் என்ன தே... மகனா?' என்று கர்ஜிக்க, அவமானத்தோடு எழுந்த பிலிப் ஆவேசத்துடன் வாளை உருவியவாறு அலெக்ஸாந்தரை நோக்கி முன்னேற ... நாற்காலி தடுக்கவே (மது மயக்கம் வேறு!) சற்று இடறி விழ, பக்கத்தில் இருந்தவர்கள் மன்னரைத் தாங்கிப் பிடித்தனர். அலெக்ஸாந்தரின் கோபம் தணியவில்லை 'மலைகளையெல்லாம் தாண்டி ஆசியாவைக் கைப்பற்றப்போவதாக அலட்டிக்கொண்டிருக்கும் மன்னரால் நாற்காலியையே தாண்ட முடியவில்லை!' என்று இகழ்ச்சியாக கிண்டலடிக்க, விசுவாசிகள் பலர் மட்டும் இடையே புகுந்து தடுக்காமலிருந்திருந்தால் தந்தைக்கும் மகனுக்குமிடையே அன்று துவந்த யுத்தமே ஏற்பட்டிருக்கும்! அதற்குப் பிறகு அலெக்ஸாந்தரும் அம்மா ஒலிம்பியாவும் வேறொரு அரண்மனையில் தனியாக வசிக்க ஆரம்பித்தனர்!

ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். முதல் மனைவி ஒலிம்பியாவின் சதி என்று கிசுகிசு சற்றுப்பரவி ஓய்ந்தது (அரசியலில் எப்போதுமே இதெல்லாம் சகஜம்!).

ஒரு பக்கம் அலெக்ஸாந்தரிடம் முன்கோபம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஏராளமான கனிவும், தாராள மனமும் இருந்தது ஒரு வியப்பான விஷயம்!...

கிரேக்க தத்துவ மேதை டயோஜினீஸ் ஒரு நாள் பாலைவன மணலில், கோவணம் மட்டும் அணிந்துகொண்டு படுத்திருக்க, அந்தப் பக்கமாக மாஸிடோனியாவின் மன்னராகிவிட்ட அலெக்ஸாந்தரின் பரிவாரம் செல்ல நேர்ந்தது. 'அங்கு படுத்திருப்பது யார்?' என்று அலெக்ஸாந்தர் வினவ, 'டயோஜினீஸ்.. மன்னா!' என்று தளபதி எடுத்துச் சொல்ல, உடனே குதிரையிலிருந்து கீழே குதித்து தத்துவ மேதையின் அருகில் விரைந்த மன்னர் 'தங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?' என்று பணிவோடு கேட்டார். டயோஜினீஸ் எல்லாவற்றையும் கடந்த, பழுத்த தத்துவஞானி. மன்னரை ஏறிட்டுப் பார்த்து தலையசைத்த அவர் 'எனக்கும் சூரியனுக்கும் இடையில் நிற்காமலிருந்தால் நன்றாக இருக்கும்!' என்று சாவதானமாகச் சொல்ல, அலெக்ஸாந்தரின் மெய்க்காவலர்கள் ஏக காலத்தில் கோபத்துடன் வாளை உருவினார்கள். 'வாளை உரையில் போடுங்கள்!' என்று ஆணையிட்ட மன்னர் திரும்பிச் சென்று குதிரையில் ஏறும்போது தன் தளபதியிடம் 'அடேங்கப்பா! நான் மட்டும் அலெக்ஸாந்தராக இல்லையென்றால் டயோஜினீஸாக இருக்கவே ஆசைப்படுவேன்!' என்றார் புன்னகையுடன்.

அநேகமாக மூட நம்பிக்கைகளைத் தவிர்த்தார் அலெக்ஸாந்தர். 'சகுனம் சரியில்லை' என்று ஜோசியர்கள் சொன்னபோதும் 'ஆனால் போருக்கான பருவ நிலை ஜோராக இருக்கிறதே!' என்று சொல்லிவிட்டு யுத்தத்துக்கு அவர் கிளம்பிய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு!

ஓர் உதாரணம் - ஃபிர்ஜியா என்னும் நாட்டை வெற்றி கொண்ட அலெக்ஸாந்தர் அதன் தலைநகரான கார்டியம் என்கிற ஊரின் எல்லைக்குச் சென்றபோது குறுக்கே ஒரு கலவரமான முடிச்சோடு கூடிய ஒரு தடிமனான கயிறு இருந்தது. (இப்போதும் Gordian Knot என்றால் சிக்கலான இடைஞ்சல் என்று அர்த்தம்! ஊர்ப் பெரியவர்கள் 'மன்னா! இந்த முடிச்சு ரொம்பப் புனிதமானது. இதை அவிழ்த்துவிட்டு உள்ளே நுழைவதே இங்கு சம்பிரதாயம். முடிச்சை அவிழ்ப்பவர்கள் பிற்பாடு உலகத்துக்கே சக்கரவர்த்தியாவார்கள் என்பது ஐதீகம்!' என்றார்கள். சற்று நேரம் அந்த சிக்கலான முடிச்சை சோதித்த அலெக்ஸாந்தர் தன் வாளை உருவி 'முடிச்சுக்களை நான் அவிழ்ப்பது இப்படித்தான்!' என்று சொல்லி அந்தக் கயிறை வெட்டித் தள்ளிவிட்டு ஊருக்குள் நுழைந்தார்!

(மேலும் தொடர்வோம்...)

ஜீனியஸ்

மதன்

 

உலக வரலாற்றில் மாவீரர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியல் உண்டு. ஆனால் அலெக்ஸாந்தர் அவர்களையெல்லாம் பலவிதங்களில் மிஞ்சினார். 'அலெக்ஸாந்தர்' என்னும் பெயரை இன்றளவும் - 2400 ஆண்டுகள் கழிந்தும் - நினைவுகூர்ந்து பிரமிக்கிறோம்! அசாத்திய வீரத்தோடு நிற்காமல் சாதுர்யம், விவேகம், அறிவாற்றல் எல்லாமே அவரிடம் கொப்பளித்துக் கொண்டிருந்ததுதான் காரணம். தவிர, நினைத்ததை அடைவதில் அவர் காட்டிய அவேசமான விடாமுயற்சியை வேறு யாருமே காட்டியதில்லை. நினைவிருக்கட்டும், அலெக்ஸாந்தர் 32 வயது வரைதான் வாழ்ந்தார். அதில் பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யுத்த களத்தில்தான் வாழ்க்கை. யுத்தங்களை மேற்கொள்ள அவர் பயணித்தது இருபதினாயிரம் மைல்கள்!

 

 

குதிரைகள் சுலபமாகச் செல்ல முடியாத கரடு முரடான பாதை, அடர்த்தியான காடுகள், பாலைவனம், மலைகள்... இப்படிப் பல இடங்களில், நடந்தே சென்றார் அலெக்ஸாந்தர்! உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும், வெல்ல வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு அளவுக்கு அதிகமாக இருந்தது. குரு அரிஸ்டாட்டிலிடம் அவர் ரொம்பக் கவனமாகக் கற்றுக் கொண்டது உலக வரைபடங்களை ஆராய்வதுதான். (விணீஜீ ஸிமீணீபீவீஸீரீ!) அந்த வரைபடங்களில் இருந்த உலக நாடுகள் அவர் கண்களை அகல விரிக்க வைத்து ஆர்வப் பெருமூச்சை எழுப்பியது. கூடவே 'எந்த நாட்டையும் என்னால் வெல்ல முடியும்' என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. அதற்கான போர்த் தந்திரங்கள் அவருக்கு அத்துப்படி! பிற்காலத்தில் ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்கள் பலமுறை போரில் கையாண்ட அணுகுமுறையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அலெக்ஸாந்தர்தான். அதாவது, எதிர்பாராத சமயத்தில் தாக்குவது! இதைத்தான் பிற்பாடு ஹிட்லர் ஆண்ட காலத்தில் ஜெர்மானிய மொழியில் ஙிறீவீtக்ஷ் ரிக்ஷீவீமீரீ என்று அழைத்தார்கள். ரொம்ப சாதுர்யமான மன்னர்கள் கூட அலெக்ஸாந்தர் தங்களைத் தாக்கத் தேர்ந்தெடுத்த நேரத்தையும், மேற்கொண்ட அணுகுமுறையையும் பார்த்து திகைத்துப்போய் மருண்டார்கள்!

அலெக்ஸாந்தர் சொன்னபடி அவருடைய போர் வீரர்கள் கேட்டார்கள். அவர்களுடைய ஒரே லட்சியம் - மன்னர் 'பலே' என்று பாராட்ட வேண்டும். அந்த அளவுக்கு அலெக்ஸாந்தர் அவர்களை மயக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு வீரரின் பெயரும் ஜாதகமும் அவருக்குத் தெரியும். பல காலம் தொடர்ந்து தாய்நாட்டையும், குடும்பத்தையும் பிரிந்து யுத்தம்

 

என்றே வாழ்ந்த காரணத்தால் சில சமயங்களில் தளபதிகளுக்கு அலுப்பு ஏற்பட்டதுண்டு. அப்படி ஒரு தருணம் வந்தது. அப்போது அலெக்ஸாந்தர் பிறந்த மேனியோடு அவர்கள் முன் வந்து நின்றார். எல்லோரும் திகைக்க அலெக்ஸாந்தர் தன் உடலில் போரினால் ஏற்பட்ட தழும்புகளைச் சுட்டிக்காட்டி 'எத்தனை காயங்கள் பாருங்கள்! இதெல்லாம் எதற்காக? உங்கள் வெற்றிக்காக. மாஸிடோனியாவின் புகழுக்காக!' என்று உணர்ச்சிகரமாக உரையாற்ற, தளபதிகள் உருகிக் கரைந்து போனார்கள். உண்மையும் அதுதான். ஒன்பது முறை, தளபதிகள் கவலைப்படும் அளவுக்கு - வாளினால், ஈட்டியால், அம்பினால் காயம் பட்டவர் அலெக்ஸாந்தர். (பிற்பாடு பல மன்னர்கள் இதைக் காப்பியடித்து 'ஷர்ட்'டைக் கழற்றி தழும்புகளைக் காட்டியதுண்டு!)

அலெக்ஸாந்தரின் புயல்வேக முன்னேற்றத்துக்கு ஓரளவு தடைக்கல்லாக அமைந்தவர் இன்னொரு மாவீரரான பாரசீக மன்னர் டேரியஸ். அலெக்ஸாந்தரைப் பொறுத்தவரையில், அரியணையில் அமர்வதற்கு முன்பிருந்தே பாரசீகத்தை வெற்றிகொள்வது அவருடைய கனவாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும். விஸ்தாரமான கோட்டைச்சுவர்கள், லட்சக்கணக்கான வீரர்களுடன் கம்பீரமாக ஆட்சிபுரிந்த டேரியஸ் 'அலெக்ஸாந்தர் வரட்டும். ஒரு கை பார்ப்போம்!' என்று சொல்லி மாஸிடோனியப்படையோடு மோதத் தயாரானார்.

மாஸிடோனியா - பாரசீக யுத்தம் சுலபத்தில் முடிவுக்கு வராமல் உத்வேகத்துடன் தீவிரமாக நிகழ்ந்தது. அலெக்ஸாந்தர் நேரடியாக, முன்னணியில் பாய்ந்து அதீத வேகத்துடன் போர் புரிந்தார். அவரது வாள் சுழன்ற வேகத்தில் ஏராளமான பாரசீகத் தலைகள் பறந்ததைத்தான் பார்க்க முடிந்தது. முதல் மோதலில் மாஸிடோனியப் படை வென்றாலும் டேரியஸை வளைத்துப் பிடிக்க முடியவில்லை. தன்னை எதிர்த்து நிற்கும் மன்னரை கைப்பற்றுவது அலெக்ஸாந்தருக்கு விருப்பமான விஷயம். ஆனால் டேரியஸின் தாயும், மனைவியும் சகோதரியும் கைது செய்யப்பட்டார்கள். பாரசீக மகாராணி அப்போது பிரசவ கால இறுதியில் இருந்தார். ஏதோ சிக்கலாகி கைதியாக இருந்தபோது இறந்துபோனார் அவர். ராணியின் கூடவே இருந்த, விசுவாசமான மெய்காவலரான, டைரீயஸ் என்னும் அலி ஒருவர் தப்பிச் சென்று காட்டில் ஒளிந்து கொண்டிருந்த டேரியஸிடம் இந்தச் சோகத் தகவலைச் சொல்ல, பாரசீக மன்னர் இடிந்து போனார். தலையில் அடித்துக் கொண்டு 'என் மனைவி பாரசீகத்தின் மகாராணி. எதிரியின் கைதியாக, அனாதரவாக இவ்வளவு கேவலமாக இறந்துபோக வேண்டுமா?!' என்று அழுதார் டேரியஸ். தகவலைச் சொன்ன அலி 'சக்ரவர்த்தி! அந்தக் கவலை மட்டும் தங்களுக்கு வேண்டாம். மகாராணியை மிகுந்த மரியாதையோடு நடத்தினார் மாஸிடோனிய மன்னர். அவர் இறந்த பிறகு சகலவிதமான ராஜாங்க மரியாதைகளுடன் அவரது உடல் புதைக்கப்பட்டது. அலெக்ஸாந்தர் கண்களில் நீர் துளிர்க்க தலைகுனிந்து கடைசிவரை நின்று அஞ்சலி செலுத்தியதுதான் ஆச்சர்யம்!' என்று விளக்க, வியந்துபோன டேரியஸ் முகம் மீண்டும் சந்தேகத்துடன் மாறியது. அதைக் கவனித்த டைரீயஸ் குரலைத் தாழ்த்தி 'சந்தேகப்படாதீர்கள் அரசே! மகாராணியார் அருகில் கூட நெருங்கவில்லை அலெக்ஸாந்தர்! வேற்று நாட்டு மன்னரின் மகாராணி என்கிற முழு மரியாதையுடன் அவரிடம், அதுவும் சில வார்த்தைகள் பேசியிருந்தால் அதிகம்!' என்று சொல்ல, டேரியஸ் நெகிழ்ச்சியடைந்து, அருகில் நின்றிருந்த பிரதம சேனாபதியிடம் 'நான் தோற்று, போரில் இறந்தாலும், பாரசீக அரியணையில் அமரக்கூடிய தகுதி அலெக்ஸாந்தருக்கு மட்டுமே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!' என்றார்!

அதுமட்டுமல்ல. போரில் வென்றவுடன் அலெக்ஸாந்தரின் கூடரத்துக்குள், கைப்பற்றப்பட்ட பல அழகுப் பெண்களை வரிசையாகக் கொண்டு நிறுத்தினார்கள். மன்னர் அவர்களை சில விநாடிகள் பார்த்துவிட்டு 'பாரசீக அழகு கண்களை கூசச் செய்கிறது. அவர்களை இங்கேயிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொன்னதாகவும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் குறிப்பிடுகிறார்!

ஒரு நாள் ஓய்வெடுத்துக்கொண்ட பிறகு, கம்பீரமாக எழுந்து நின்ற அலெக்ஸாந்தரிடமிருந்து பிறந்தது ஆணை! - 'டேரியஸை தப்பவிடக் கூடாது. அவரை நாம் உயிரோடு கைப்பற்றியாக வேண்டும்!'

இந்த வேலையை அவ்வளவு சுலபமாகச் செய்துவிட முடியவில்லை. மாஸிடோனியப்படை தொடர்ந்து அலைந்து தேடியும் டேரியஸ் அகப்படவில்லை. பதினோறு நாட்கள், சுமார் ஐந்நூறு மைல்கள் பயணம்! நடுவில் பாலைவனத்தைக் கடக்க வேண்டி வந்தது. அலெக்ஸாந்தரின் வீரர்கள் சோர்ந்து போனார்கள். மன்னர் உட்பட எல்லா வீரர்களும் தாகத்தில் தவித்தார்கள். 'என்ன பாலைவனம் இது? நாக்கு வறண்டு போய்விட்டது' என்று சொன்ன அலெக்ஸாந்தர் ஒரு புதருக்குப் பக்கத்தில் சரிந்து உட்கார நேர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஒரு கிராமவாசி பானையில் தண்ணீருடன் அந்தப் பக்கம் வந்தார். அங்கே, தள்ளாடி நிற்பது அலெக்ஸாந்தரின் வீரர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஓடிவந்து மன்னரிடம் பானையை பவ்யமாக நீட்டினார். ஆர்வத்துடன் அதைக் கையில் வாங்கிய மன்னர் 'இந்தத் தண்ணீரை யாருக்காக எடுத்துச் செல்கிறீர்கள்?' என்று கேட்க கிராமவாசி 'என் குழந்தைகளுக்கு!' என்று பதிலளிக்க தண்ணீரைப் பருகாமல் பானையைத் திருப்பித் தந்த அலெக்ஸாந்தர் 'உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, இதோ என் குழந்தைகளும் தாகத்தால் தவிக்கும்போது நான் மட்டும் நீர் அருந்துவது நியாயமல்ல!' என்று சொல்லிவிட்டு சுற்றிலும் நின்ற வீரர்களைச் சுட்டிக் காட்டினார்.. வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஒருபுதிய உத்வேகத்துடன் அந்தப் படை டேரியஸைத் தேடிக் கிளம்பியது.

முதல் கட்டப்போரில் அலெக்ஸாந்தரின் தொடையில் ஆழமாக அம்பு ஒன்று பாய்ந்து எலும்பை லேசாகச் சிதைத்திருந்தது. ஏராளமான வலி. அம்பை உடைத்து எடுத்தார்கள். தவிர, கல் ஒன்று அலெக்ஸாந்தரின் கழுத்தில் விழுந்து சில மணி நேரங்களுக்கு பார்வை தெரியாமல் சிரமப்பட்டார் மன்னர். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு குதிரை மீது பாய்ந்து ஏறி முன்னணியில் அவர் சென்று நின்றது கண்டு படை பிரமிப்போடு வீர முழக்கம் செய்தது.

இதற்குள் ஒரு காட்டில் ஒளிந்து தங்கியிருந்தது டேரியஸின் மிச்சமிருந்த படை. ஏராளமான அம்புகளும், ஈட்டிகளும் உடலில் பாய்ந்து படுகாயமுற்றிருந்தார் டேரியஸ். உயிர் பிழைப்பது சந்தேகம் என்கிற நிலைமை. டேரியஸின் நண்பனாக இருந்த பெஸ்ஸஸ் என்கிற சிற்றரசன் அவருடைய உதவிக்கு வராமல், அலெக்ஸாந்தரிடம் பாரசீக மன்னர் மாட்டிக்கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தது டேரியஸுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 'இப்படிப்பட்டவர்களை விட எதிரியாக நின்ற அலெக்ஸாந்தர் மேல்! அவர் என் குடும்பத்தை மரியாதையுடன் நடத்தி பண்பு காத்தார். இப்படிப்பட்ட மாவீரருடன் போரிட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அலெக்ஸாந்தர் இங்கு வந்தால்.. என் பாராட்டுதல்களை தெரிவியுங்கள்!' என்று நெகிழ்ச்சியோடு சொல்ல, ஒரு குவளையில் வந்த நீரைச் சற்று அருந்தினார் டேரியஸ். அவர் தலை சாய்ந்துவிட்டது. சில மணி நேரத்துக்குள் அலெக்ஸாந்தரின் படை பாரசீக வீரர்களைச் சூழ்ந்துகொண்டது.

டேரியஸ் இறந்த தகவல் தெரிந்தவுடன் அலெக்ஸாந்தர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கலங்கினார். குதிரையிலிருந்து இறங்கி வந்து தன் மேலாடையை கழற்றி டேரியஸ் உடல் மீது போர்த்தி மரியாதை செலுத்திய பிறகு, 'மன்னரின் உடலை சகல மரியாதைகளுடன் அவருடைய குடும்பத்தினரிடம் சேர்ப்பியுங்கள். மிகப்பெரிய சக்ரவர்த்திக்கு உரிய அளவில் ஈமச்சடங்குகள் நடக்க வேண்டும்!' என்று ஆணை பிறப்பித்தார். டேரியஸின் குடும்பத்தினருக்கு விடுதலையும் தந்து, மன்னரின் சகோதரரை தன் நண்பனாக அங்கீகரித்தார் அலெக்ஸாந்தர்!

பாரசீக வெற்றியைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளைச் சூறாவளியெனத் தாக்கிக் கைப்பற்றியது மாஸிடோனியப் படை. நாட்கள் சில கழிந்தன. கூடாரத்தில் அமர்ந்திருந்த அலெக்ஸாந்தரிடம் 'அடுத்த திட்டம் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்டார்கள் தளபதிகள். 'இந்தியா!' என்று மன்னரிடமிருந்து பதில் வந்தது. கூடவே 'அந்த பெரிய நாட்டின் செல்வச் செழிப்பைப் பற்றி எத்தனை பேரிடம் கேட்டிருப்பேன்!' என்ற அலெக்ஸாந்தர் கூடாரத்திலிருந்து ஹெல்மெட், கவசங்களை அணிந்து கொண்டு நம்பிக்கைக்குப் பாத்திரமான ப்யூஸிபாலஸ் குதிரை மீது தாவி ஏறிய மறுநிமிடம் வெற்றி முழக்கங்களுடன் மாஸிடோனியப் படை இந்திய நாட்டை நோக்கிக் கிளம்பியது!

(மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

மதன்

 

 

வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் - கிரேக்க மற்றும் ரோம் நாட்டை ஆண்ட மன்னர்களையும், தலைவர்களையும் ஒப்பிட்டு 'லிமிக்ஷிணிஷி' என்கிற, மூன்று வால்யூம்கள் கொண்ட பெரும் புத்தகத்தை எழுதினார். அதில் அலெக்ஸாந்தரையும், ஜூலியஸ் சீசரைப் பற்றியும் எழுதத் துவங்கும்போது 'இவர்களைப் பற்றி நுணுக்கமாக எழுத ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும். ஆனால் நான் எழுத முனைவது வரலாறும் அல்ல, முழுமையான வாழ்க்கையும் அல்ல. இந்த மனிதர்களின் முக்கியமான குணநலன்களையும், சம்பவங்களையும் மட்டுமே எழுதுகிறேன். அந்த மாபெரும் வீரர்களைப் பற்றிய ஒரு வர்ணனையே இது!' என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும், அலெக்ஸாந்தரைப் பற்றி ப்ளூடார்க் எழுதியிருப்பதே நீண்ட, விவரமான ஒன்று. பல போர்களில் மாஸிடோனிய மன்னர் கடைப்பிடித்த யுத்த தந்திரங்கள் பற்றி ப்ளூடார்க் விலாவாரியாகவே விவரிக்கிறார். நம்மைப் பொறுத்தவரை, பாரசீக சக்ரவர்த்தி டேரியஸ், இந்திய மன்னர் போரஸ் - இவர்களோடு அலெக்ஸாந்தர் மேற்கொண்ட போர்களை மட்டுமே எடுத்துக் கொள்வோம். காரணம், இது அலெக்ஸாந்தரைப் பற்றி மட்டும் எழுதப்படும் தொடர் அல்ல!

எகிப்து நாட்டை அலெக்ஸாந்தர் வென்றபோது, அவருடைய வாழ்க்கையில் (மனநிலையில் என்றும் சொல்லலாம்!) விதி சற்று விளையாடியது. அங்கே ஒரு ஆலயத்துக்கு வருகை தந்த அலெக்ஸாந்தரிடம் 'இங்கே நீங்கள் குறி கேட்கலாம்!' என்றார்கள் பூசாரிகள் பவ்யமாக. சந்நிதி முன் நின்ற அலெக்ஸாந்தர் 'வெற்றிகொள்ள மேலும் பல நாடுகள் மிச்சமிருக்கின்றன. அதற்கான கடவுளின் ஆசி எனக்கு இருக்கிறதா?' என்று கேட்க, விதி அசரீரியின் குரலில் புகுந்துகொண்டு 'ஆசி எதற்கு? நீங்களே கடவுளின் அவதாரம்தான்!' என்று முழங்க.. அதிலிருந்து அலெக்ஸாந்தரிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. புகழின் உச்சியில் இருப்பவர்கள் அடக்க உணர்வையும், விவேகத்தையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு மன்னரிடமிருந்து சற்று அகல ஆரம்பித்தது....!

அலெக்ஸாந்தரின் உடைகளில் கூட சில மாறுதல்கள் ஏற்பட்டன. மாலைகள் அணிய ஆரம்பித்தார். 'ஹெல்மெட்'டுக்கு மேலே புதிய இறகுகள் முளைத்தன! 'நான் கடவுளின் அவதாரம்தான் என்று தோன்றுகிறது...!' என்று நண்பர்களிடம் உரையாடும்போது குறிப்பிடுவது அதிகரித்தது. முன்பெல்லாம் நண்பர்கள் அவரிடம் இயல்பாகப் பேசி, தமாஷாக டபாய்ப்பது உண்டு. பதிலுக்கு அலெக்ஸாந்தரும் சிரித்து ரசிப்பதுண்டு. அது நின்றுபோனது!

ஒருமுறை, சக்ரவர்த்தியின் முன்னால் மண்டியிட்டு வணங்குவது எப்படி என்று விளக்கிய மன்னர், அதற்கான 'ரிகர்சல்'களில் இறங்கினார். பலர் பலவிதமாக மண்டியிட்டார்கள்! நெருக்கமாக இருந்த சில மாஸிடோனிய தளபதிகள் இதைக் கண்டு சற்று திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் அதுவரை கம்பீரமாக அரசர் அருகில் வந்து லேசாகத் தலைவணங்கிவிட்டு நேருக்கு நேர் பார்த்து உரையாடியவர்கள்! ஒருமுறை, அலெக்ஸாந்த ருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது க்ளைடஸ் என்கிற தளபதி வெளிப்படையாகவே இதுபற்றி தட்டிக்கேட்க, மன்னரின் முகம் லேசாகச் சிவந்தது. க்ளைடஸ், விடாமல் 'வழியில் நாம் கைப்பற்றினோமே.. அந்தக் காட்டுமிராண்டி நாடுகளில்தான் இப்படியெல்லாம் தவழ்ந்து வந்து வணங்குவார்கள்!' என்றார்.

'சக்ரவர்த்தி முன்னால் நின்று இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக பேசினால்... தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க மாட்டாயா?' என்று அலெக்ஸாந்தர் உறும... 'அதான் மண்டியிட்டு வணங்கினோமே.. அதுவே தண்டனைதான்!' என்று க்ளைடஸ் பதில் சொல்ல, அலெக்ஸாந்தரின் கோபம் அதிகமானது. சரேலென்று எழுந்து தன் வாளைத் தேடினார் மன்னர். அவருடைய மெய்க்காவலர் இதையெல்லாம் எதிர்பார்த்து வாளை ஒளித்து வைத்துவிட்டு நடுங்கியவாறு நிற்க, அவருடைய முகத்தில் ஓங்கிக் குத்தினார் சக்ரவர்த்தி. இதற்குள் பதட்டப்பட்டுப்போன

 

 

மற்றவர்கள் க்ளைடஸை கூடாரத்துக்கு வெளியே கொண்டு விட்டார்கள். திரும்பவும் ஏதோ தோத்திரப் பாடலைக் கிண்டலாகப் பாடிக்கொண்டே க்ளைடஸ் நுழைய, அலெக்ஸாந்தரின் ஆத்திரம் எல்லை மீறியது. அருகில் இருந்த ஈட்டியை எடுத்து படுவேகமாக எறிய, ஈட்டி க்ளைடஸின் மார்புக்குள் பாய்ந்து முதுகுப்பக்கம் எட்டிப்பார்க்க, இறந்து விழுந்தார் தளபதி!

அதிர்ச்சியான மௌனம் அங்கே நிலவியது. நிகழ்ச்சிகள் மேலும் விபரீதமாகப் போனது. திடுக்கிட்டுப்போன அலெக்ஸாந்தர் கதறியவாறு ஓடிச்சென்று க்ளைடஸ் உடலிலிருந்து ஈட்டியை உருவி எடுத்து, தன் கழுத்தில் குத்திக்கொள்ள முனைய, மற்றவர்கள் ஓடி வந்து ஈட்டியைப் பறித்து தூக்கி எறிந்தார்கள். அன்று, நாள் முழுவதும் உணவு அருந்தாமல் தனிமையில் சென்று, என் நண்பனைக் கொன்றுவிட்டேன்..! என்று அலெக்ஸாந்தர் அழுதது வெளியே கேட்டது.

இப்படிப்பட்ட முன்கோப நிகழ்ச்சிகள் மீண்டும் சிலமுறை நடந்தது என்று அதுவரை அப்பழுக்கில்லாமல் வாழ்ந்த அலெக்ஸாந்தரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் வருத்தமாகக் குறிப்பிடுகிறார்கள்.

சில நாட்கள் கழிந்தன. படையின் வெற்றிப் பயணம் கடமையுணர்வுடன் தொடர்ந்தாக வேண்டுமே! மாஸிடோனியப் படை இந்தியாவை நோக்கிக் கிளம்பியது. ஆனால் வீரர்களால் விரைந்து செல்ல முடியாதது கண்டு அலெக்ஸாந்தர் எரிச்சலடைந்தார். காரணம் உடனே அவருக்குப் புரிந்துவிட்டது. விஷயம் ஒன்றுமில்லை. அதுவரை வென்ற நாடுகளில் கைப்பற்றிய பொருட்கள் ஏராளமாகச் சேர்ந்துவிட்டது. அந்த நூற்றுக்கணக்கான மூட்டை முடிச்சுகளைச் சுமந்து கொண்டு எப்படி வேகமாகச் செல்வது?! அலெக்ஸாந்தர் குதிரையிலிருந்து இறங்கி தனக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட மூட்டைகளைப் பிரிக்கச் சொன்னார். அதிலிருந்து விலை உயர்ந்த ஆபரணங்களை மட்டும் தனியே எடுத்து வைத்த மன்னர், அமைதியாக மிச்ச மூட்டைகளுக்கு தானே தீயிட்டுக் கொளுத்தினார். உடனே அத்தனை வீரர்களும் அவரைப் பின்பற்றி தங்களுக்கான பொருட்களுக்கும் தீ வைத்தனர். 'மெத்தனத்துக்குக் காரணம் சுமைதான்! இப்போது கிளம்புங்கள்!' என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறினார் அலெக்ஸாந்தர். முன்பு 'கார்டியன் முடிச்சை' அவிழ்த்த அதே அணுகுமுறைதான்!

பஞ்சாப் நாட்டை ஆண்டுவந்த இந்திய மன்னர் போரஸ் உடன் நிகழ்ந்த போரைப் பற்றி அலெக்ஸாந்தரே விவரமான குறிப்புகள் எழுதி வைத்ததால், அந்த யுத்தத்தைப் பற்றி நம்மால் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது...!

'எங்கள் இருவருடைய படைகளுக்கும் நடுவே ஹைடாஸ்பெஸ் என்கிற நதி ஓடியது!' என்கிறார் அலெக்ஸாந்தர். அதை சிந்து நதியின் கிளை நதிகளில் ஒன்றான ஜீலம் என்கிறார்கள். 'அக்கரையில் போரஸ் ஒரு 'கோட்டைச்சுவரை' எழுப்பியிருந்தார். நூற்றுக்கணக்கான யானைகளால் ஆன சுவர்! இந்திய மன்னர்களின் படைகளில் யானைகள் முக்கிய பங்கு வகிப்பது பற்றி முன்பே நான் கேள்விப்பட்டிருந்ததால் ... இது நான் எதிர்பார்த்ததுதான்!' என்கிறது அலெக்ஸாந்தரின் குறிப்பு!

தளபதிகளை அருகில் அழைத்து தன் திட்டத்தை விளக்கினார் அலெக்ஸாந்தர். அதன்படி, முதல் கட்டமாக படை வீரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கே நைசாக நீந்தி நதியைக் கடந்து அக்கரைக்குப் போய்விட வேண்டும்! எல்லோரும் குதிரைகள் மீதேற முனைய அலெக்ஸாந்தார் 'வேண்டாம்! குதிரைகளை நடத்தி சாவதானமாகச் செல்லுங்கள். பாய்ச்சலாகச் சென்று எதிரிகளின் கவனத்தைக் கவரவேண்டாம்!' என்றார்!

இந்தியாவாச்சே! எதிர்பாராமல் இடி, மின்னல், புயல் காற்றுடன் பயங்கர மழை! அரை மணி நேரத்தில் ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு! 'பரவாயில்லை, நீந்துவோம்!' என்றார் மன்னர். இத்தனையும் இரவில் நிகழ்ந்தது...

அலெக்ஸாந்தருக்கு பிரமாதமாக நீந்த மட்டும் வராது என்பது ஆச்சரியமாக இருக்கும். சிரமப்பட்டு, நதியின் வெறியோட்டத்துடன் போராடி, அக்கரை சேர்ந்த மன்னர் கரையில் எழுந்து நின்றவுடன் அண்ணாந்து பார்த்து 'இத்தாலிய மக்களே! உங்களிடம் பாராட்டுதல்களைப் பெற இங்கே என்னவெல்லாம் சோதனைகளை நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது!' என்றார் சற்று உரக்க! நிஜமாகவே இப்படிச் சொன்னார் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்!

யானைகளைத் தாண்டி திடீரென உட்புகுந்த மாஸிடோனிய வீரர்களை நேர்கொள்ள, தன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைப் படை வீரர்களை பக்கவாட்டில் போரஸ் திருப்பவேண்டி வந்தது. அதற்குள் மின்னலெனப் புகுந்த அலெக்ஸாந்தரின் படையினர் நானூறுக்கும் மேற்பட்ட இந்திய குதிரை வீரர்களை வெட்டி வீழ்த்திவிட்டார்கள். அதற்குள் வேறு திசையிலிருந்து இன்னொரு மாஸிடோனியப் படைப்பிரிவு பாய்ந்தது.

பொதுவாக, இந்திய மன்னர்களின் யானைப் படையைப் பார்த்த மாத்திரத்தில் பதறிப்போய் ஓட்டமெடுத்த பல அந்நிய மன்னர்கள் உண்டு! அசுர பலம் இருந்தாலும், குதிரைகளுக்கு இணையான லாகவம் யானைகளுக்குக் கிடையாது என்பது பற்றி முன்கூட்டியே 'ஹோம் ஒர்க்' செய்து வைத்த வீரர்கள் - அலெக்ஸாந்தர், பிற்பாடு இந்தியா மீது படையெடுத்த தைமுர் என்கிற இருவர்தான்!

தேர்ந்தெடுக்கப்பட்ட மாஸிடோனிய வீரர்கள் ஆணிகள் பொருத்தப்பட்ட, உருண்டையாக்கப்பட்ட முட்புதர்களை யானைகள் வந்த பாதைகளில் உருட்டிப் போட்டார்கள். யானைகளின் மர்மஸ்தானங்களில் ஈட்டிகளை குறிபார்த்து எறிந்தார்கள். மிரண்டு போன யானைகள் வலியால் பிளிறியவாறு அங்குமிங்கும் அலைபாய, அலெக்ஸாந்தரின் பிரத்யேக குதிரைப்படை போரஸை நோக்கிப் படுவேகமாக முன்னேறியது. 'எதிரிப்படையினரை தன்னம்பிக்கை இழக்க வைத்து தளரச் செய்ய வேண்டுமென்றால் முதலில் படையின் 'தலை'யை (அதாவது எதிரிகளுக்கு தலைமைதாங்கி வரும் மன்னரின் தலையை!) கிள்ளியெறிய வேண்டும்!' என்பார் அலெக்ஸாந்தர். அந்த வேலையைத் தானே மேற்கொள்வதும் அவரது வழக்கம்!

ஆனால்.. திடீரென்று போரஸ் எதிர்ப்பட்டவுடன் அலெக்ஸாந்தர் சற்று திகைத்துப்போனது உண்மை. 'என்ன ஆஜானுபாகுவான, கம்பீரமான மனிதர்! ஈஸியாக ஆறரை அடிக்கு மேல் ஒரு சாண் உயரம் இருந்தார். அந்த மன்னர் யானை மீது அமர்ந்திருந்தாலும், ஏதோ குதிரை மீது அமர்ந்து வந்ததைப்போலத்தான் தோன்றியது!' என்று வியக்கிறார் அலெக்ஸாந்தர்.

'பாரசீக மன்னர் டேரியஸே தோற்றுப்போகிற சூழ்நிலை ஏற்பட்டவுடன் தப்பிக்க முயன்றார். ஆனால் போரஸ் கலங்காமல் தொடர்ந்து, நேருக்கு நேர் நின்று என்னோடு மோதினார். குதிரைகளைப் பழக்குவது சுலபம். போரஸின் யானை ஓர் அதிசயம். தன் எஜமானனைச் சுமப்பதோடு நிற்காமல் அதுவும் ஒரு போர் வீரனைப் போல சுழன்று போரிட்டது! அருகில் நெருங்கிய பல குதிரை வீரர்களைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. இப்படி வீரத்துடன் போரிடும் யானையை நான் எதிர்பார்க்கவில்லை!' என்று பாராட்டும் அலெக்ஸாந்தர் எட்டு மணி நேரம் போராட வேண்டியிருந்தது. கடைசியில் யானை மீதிருந்து போரஸ் சரிந்து விழ, அப்போதும் அந்த யானை மண்டியிட்டு தன் தலைவன் மீது பாய்ந்திருந்த அம்புகளை மென்மையாக வெளியே எடுத்துப் போட்டது!

இந்தியப் படை தோல்வியடைந்தது. போரஸை மாஸிடோனிய வீரர்கள் சூழ்ந்துகொண்டு சிறைப்பிடித்தார்கள்!

(மேலும் தொடர்வோம்)

அலெக்ஸாந்தரின் முடிவு...

மதன்

கைதியாக தன் முன் நின்ற போரஸ் மன்னரைக் கூர்ந்து பார்த்த அலெக்ஸாந்தர் 'உங்களை நான் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார்.

இந்திய மன்னரிடமிருந்து உடனே பதில் வந்தது - 'ஒரு அரசனாக (As a king!)'

அலெக்ஸாந்தார் மீண்டும் ஒருமுறை அதே கேள்வியைக் கேட்க பதிலுக்கு போரஸ், 'நான் ஒரு அரசன். ஒரு அரசனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்துங்கள்' என்றார் தலைநிமிர்ந்து! எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் கம்பீரமாக மாஸிடோனிய சக்ரவர்த்தியை நேருக்கு நேர் பார்த்து போரஸ் இப்படிப் பதிலளித்தது அலெக்ஸாந்தரை மிகவும் கவர்ந்தது. இந்த உரையாடல் உண்மையில் நடந்தது என்று எல்லா வரலாற்று ஆசிரியர்களும் உறுதி செய்கின்றனர்.

உடனே அலெக்ஸாந்தர் இருக்கையிலிருந்து எழுந்து சென்று 'மிகுந்த வீரத்துடன் என்னுடன் போர் புரிந்தீர்கள்!' என்று சொல்லி அவரை அணைத்துக்கொண்டு தன்னருகில் அமரச் செய்தார். கூடவே போரஸை விடுதலை செய்வதாக அறிவித்து, அவருடைய ராஜ்யத்தை மட்டுமல்லாது, கூடவே (தான் வென்ற) பதினைந்து சிற்றரசுகளையும், ஐயாயிரம் ஊர்களையும் பரிசாகத் தந்தார். இப்படி எதிரிகளை வெளிப்படையாக வியந்து பாராட்டிய மன்னர்கள் வரலாற்றில் ஓரிருவரே உண்டு!

இந்த யுத்தம் நிகழ்ந்த பிறகு, ஜீலம் நதிக்கரையில் முகாமிட்டிருந்த அலெக்ஸாந்தருக்கு சோகமான தகவலொன்று வந்தது. கொஞ்ச நாட்களாகவே சற்று அசதியாக, நிலைகொள்ளாமல் இருந்துவந்த அவரது அருமைக் குதிரை (முதன் முதல் அவர் அடக்கியது!) ப்யூஸிபாலஸ் திடீரென்று இறந்துவிட்டதாக, வந்து சொன்னார்கள். 'போரில் ஏற்பட்ட சில காயங்களினால்' என்றனர் சிலர். அதற்கு வயதாகிவிட்டதே காரணம் என்றனர் சிலர். ஒரு குதிரைக்கு முப்பது என்பது சற்று முதுமையான வயதுதான். ஏதோ தன் நெருக்கமான நண்பனின் மரணச்செய்தியைக் கேட்டதற்கு இணையாக, ஓடிச் சென்று படுத்துக் கிடந்த ப்யூஸிபாலஸின் உடலை அணைத்துக்கொண்டு கலங்கிக் கதறினார் அலெக்ஸாந்தர்.

ஜீலம் நதிக்கரையில் ப்யூஸிபாலஸ் புதைக்கப்பட்டது. கல்லறையெழுப்பி, ப்யூஸிபாலியா என்கிற பெயருடன் ஒரு சிறு நகரத்தையே அங்கே நிர்மாணித்தார் மன்னர். (இன்றும் ஜீலம் நதிக்கரையில் தொல்பொருள் ஆய்வு நிகழ்த்தினால் ஊரின் தடயங்களும், அந்த குதிரையின் எலும்புகளும் கிடைக்கக் கூடும்!)

போரஸுடன் நடந்த யுத்தத்தைத் தொடர்ந்து மாஸிடோனிய வீரர்கள் சற்று ஆடிப்போனார்கள்தான்! இருபதினாயிரம் வீரர்கள் அடங்கிய காலாட்படை, இரண்டாயிரம் குதிரை வீரர்கள், சில நூறு யானைகளுடன் போரஸ் என்கிற ஒரே ஒரு இந்திய மன்னர் இந்த அளவுக்கு 'தண்ணி' காட்டியது, மாஸிடோனிய தளபதிகளுக்குச் சற்று கவலையேற்படுத்தியது உண்மை. அந்தச் சமயம் பார்த்து அலெக்ஸாந்தர் கம்பீரமாக 'அடுத்ததாக நாம் கங்கை நதியைக் கடப்போம்!' என்று முழங்க, அங்கே அசாதாரணமான அமைதிதான் நிலவியது! சில தளபதிகள் மென்மையாக 'அரசே! கங்கை நதி என்பது சாதாரணமானது அல்ல. அதன் அகலமே நாலு மைல்கள் என்று தகவல்! அதைக் கடந்தாலும் இந்தியாவை சுலபத்தில் கைப்பற்றிவிட முடியாது. கங்கையில் துவங்கி இந்தியாவின் தென் எல்லை வரை பயணிக்கவே பல மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். தவிர, வழியெங்கும் இந்தியாவின் தென் எல்லை வரை ஆயிரக்கணக்கான ராஜ்ஜியங்களும், தனித்தனி மன்னர்களும் படைகளுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள். அச்சமில்லாத, அகம்பாவம் பிடித்த மன்னர்கள்தான் முக்கால்வாசி! சிலரிடம் இரண்டு லட்சம் வீரர்கள், எண்பதினாயிரம் குதிரைகள், பத்தாயிரம் யானைகளெல்லாம் உண்டு. ஒவ்வொரு மன்னரும் ஒரு கோட்டைச்சுவர் போல! நம்மைப் பொறுத்தவரையில் இந்திய எல்லைக்குள் கால் வைத்து வெற்றிக் கொடி நாட்டிவிட்டோம். இதோடு ஊருக்குத் திரும்புவோம். நம் வீரர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வந்து பல காலம் வேறு ஆகிவிட்டது!' என்று விளக்கமாகவே எடுத்துச் சொன்னார்கள்.

அலெக்ஸாந்தர் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். கோபத்துடன் கூடாரத்துக்குள்ளே சென்று தரையில் புரண்டு 'கங்கையைக் கடக்காவிட்டால் இதுவரை நீங்கள் எனக்குப் பெற்றுத் தந்த வெற்றிகளையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!' என்று மிகவும் அடம் பிடித்ததாக வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் குறிப்பிடுகிறார்.

வீம்பு பிடிக்கும் ஒரு குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல 'தாய்நாட்டில் சில மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் நேரடியாக இந்தியாவுக்குப் படையெடுத்து வந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம்!' என்று மூத்த தளபதிகள் விடாமல் வற்புறுத்திய பிறகு அலெக்ஸாந்தர் வேண்டாவெறுப்புடன் தாய்நாடு திரும்பிச் செல்ல ஒப்புக்கொண்டார்! (ஆனால் தளபதிகள் இந்திய மன்னர்களைப் பற்றிச் சொன்னது உண்மைதான். பிற்பாடு சந்திரகுப்த மௌரியர் அரியணையில் அமர்ந்து கோலோச்சிய காலத்தில், அலெக்ஸாந்தரின் பிரதம தளபதிகளில் ஒருவரான ஸெல்யூகஸ் பாடலிபுரத்துக்கு விஜயம் செய்தபோது அவருடன் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, கையோடு ஸெல்யூகஸுக்கு சந்திரகுப்தர் 'ஜஸ்ட் லைக் தட்' ஐநூறு யானைகளைப் பரிசாகத் தந்து அசர வைத்தது வரலாற்றில் பதிவான உண்மை!).

அலெக்ஸாந்தரின் ஒப்புதலைத் தொடர்ந்து மாஸிடோனியப் படை உடனடியாக காட்டில் அடர்ந்திருந்த மரங்களை வெட்டி மின்னல் வேகத்தில் கப்பல்களைத் தயாரித்தனர் (கப்பல் கட்டும் கலையில் சோழர்களைப் போலவே கிரேக்கர்களும் சாமர்த்தியசாலிகள்). சிந்து நதி வழியே அலெக்ஸாந்தரின் படை பயணம் மேற்கொண்டது. ஆங்காங்கே கப்பல்களை நிறுத்தி கரையோரமாக இருந்த பல ராஜ்ஜியங்களை ஏதோ விளையாட்டைப் போல மாஸிடோனியர்கள் கைப்பற்றினார்கள். ஆனால் திடீரென்று விளையாட்டு வினையானது. சிந்து நதிக்கரையில் மல்லியர்கள் (இவர்கள் யார் என்று தெரியவில்லை!) என்பவர்கள் ஆண்டு வந்த ராஜ்ஜியம் ஒன்றிருந்தது. சிறிய நாடுதான். ஆனால் அதை வெற்றி கொள்வதற்குள் அலெக்ஸாந்தரின் 'பெண்டு' கழன்றுவிட்டது. மல்லியர்களை கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் 'இந்தியாவிலேயே அசாத்தியமான வீரமும் துணிச்சலும் கொண்ட மக்கள்' என்று வர்ணிக்கிறார்கள்! மல்லியர்களின் எதிர்த்தாக்குதலை மீறி கோட்டைச் சுவரை நெருங்குவதற்கே படாதபாடு பட்டார்கள் மாஸிடோனிய வீரர்கள்.

அலெக்ஸாந்தர் பொறுமையிழந்தார். விரைவாக முன்னேறிச் சென்ற அவர் ஏணி ஒன்றைச் சுவர் மீது சாய்த்து அதில் ஏறிச்செல்ல முனைந்தபோது ஏணி உடைந்துபோக, கீழே விழுந்தார் மன்னர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான அம்புகளும், ஈட்டிகளை அவர்மீது மழையெனப் பொழிய, கேடயத்தால் தற்காத்துக் கொண்டு பல எதிரிகளை வாளால் வெட்டி வீழ்த்தினார் அலெக்ஸாந்தர். ஒரு மல்லிய வீரனும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை! அப்போது ஒருவன் எய்த அம்பு அலெக்ஸாந்தரின் மார்புக்குக் கீழே பாய்ந்து நுழைந்துவிட, மன்னர் தடுமாறி மண்டியிட்டு அமர நேர்ந்தது. கூடவே ஒரு மல்லிய வீரன் வீசிய, மரத்தினால் ஆன குண்டாந்தடி (நீறீuதீ) அலெக்ஸாந்தரின் பின்னங் கழுத்தைத் தாக்க, மாஸிடோனிய சக்ரவர்த்தியின் கண்கள் இருள ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு எதிரி கோடரியை ஓங்கியவாறு மன்னர் அருகே பாய்ந்து வர, ஏற்கெனவே காயப்பட்டுக் கிடந்த ப்யூஸெஸ்டீஸ் என்கிற, அலெக்ஸாந்தரின் மெய்க்காவலர் தன் சக்தியைத் திரட்டி ஈட்டியை உயர்த்தி வீசினார். பாய்ந்து வந்த மல்லிய வீரன் அந்தரத்திலேயே இறந்து வீழ்ந்தான். நிலைமை புரிந்த மாஸிடோனிய வீரர்கள் அலெக்ஸாந்தரைச் சூழ்ந்து கொண்டு அலாக்காக தூக்கி வந்து காப்பாற்றினார்கள். கடைசியில் அலெக்ஸாந்தரின் படை ஒருவழியாக வெற்றியடைந்தாலும் 'மறக்க முடியாத மல்லியர்கள்' என்று தலைப்பிட்டு மாஸிடோனியர்கள் தனி அத்தியாயம் எழுதும் அளவுக்கு நிகழ்ந்த திடீர் யுத்தம் அது!

அலெக்ஸாந்தரின் உடலில் பாய்ந்த மர அம்பு பிரச்னையேற்படுத்தியது. அம்பின் முனை மூன்று விரல் அகலம் என்கிறார்கள். ரம்பத்தால் அதை அறுத்து உடலிலிருந்து அகற்றினார்கள். தாங்க முடியாத வலி இருந்திருக்க வேண்டும். மன்னர் வலியைக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் திடீர் திடீரென்று மயக்கமடைந்தார். மறுநாள் அலெக்ஸாந்தர் மரணத்தருவாயிலிருப்பதாக வதந்திகள் கிளம்பின. கூடாரத்துக்கு வெளியே வீரர்கள் கூடிப் புலம்ப ஆரம்பித்தனர். கூச்சலைக் கேட்ட மன்னர் மெள்ள எழுந்து வெளியே வந்து வாளை உயர்த்திக் காட்சி தர வேண்டி வந்தது. வீரர்கள் ஆரவாரம் செய்ய, சில நாட்களுக்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது.

வழியில், காட்டில் வசித்த பத்து துறவிகளை கைது செய்து கொண்டு வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். அலெக்ஸாந்தர் அவர்களிடம் தத்துவ விசாரணையில் இறங்கினார். பல கேள்விகள் கேட்டார். சாம்பிளுக்கு இரண்டு! -

கேள்வி: 'அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'

பதில் - 'அவன் சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும். ஆனால் அவனைப் பார்த்து மக்கள் பயப்படக் கூடாது!'

கேள்வி: 'மனிதன் கடவுளாக முடியுமா?'

பதில்: 'மனிதனால் செய்ய முடியாத செயலை அவன் செய்துகாட்டினால் முடியும்!'

- அலெக்ஸாந்தரைப் பொறுத்தமட்டில் இந்தக் கேள்வி-பதில் சந்திப்பு அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை! கிரேக்கர்கள் இதுபோன்ற கேள்வி-பதில் விஷயத்தில் (உபயம்-சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில்!) தேர்ந்தவர்கள். காட்டில் இவர்கள் பிடித்தது 'தேமே'யென்று தவம் செய்து கொண்டிருந்த இந்தியத் துறவிகளை! அவர்களிடம் வாக்குச் சாதுர்யத்தை எதிர்பார்த்தது அலெக்ஸாந்தரின் தப்பு!

துறவிகளுக்கு மன்னர் பரிசுகள் அளிக்க முனைய, அவர்கள் மறுத்துவிட்டுக் கிளம்பினார்கள். பிறகு நதியிலும், நிலத்திலும் பயணித்த அலெக்ஸாந்தரின் படை அறுபது நாட்கள் கழித்து பாபிலோனியாவை அடைந்தது. வழியில் ரோக்ஸானா என்னும் பாக்டீரிய நாட்டின் (இன்றைய தென் ரஷ்யப் பகுதி) இளவரசியையும் பாரசிக சக்ரவர்த்தி டேரியஸின் மகளான ஸ்டாடிரா என்பவளையும் அலெக்ஸாந்தர் மணந்து கொண்டார். (அலெக்ஸாந்தருக்கு ஆண், பெண் என்று இருதரப்பிலும் காதலர்கள் உண்டு என்று தகவல்!)

பாபிலோனியாவில் (இன்றைய இராக்), யூப்ரைடீஸ் நதியில் பயணித்தபோது, இரவில் சில கெட்ட கனவுகள் அவரை அலைக்கழித்தன.

மறுநாள் இரவு, அடைந்த வெற்றிகளைக் கொண்டாடும் வகையிலும், யுத்தத்தில் வீரச் செயல்கள் புரிந்தவர்களைப் பாராட்டும் வகையிலும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றிரவு நண்பர்களுடன் அமர்ந்து அதிகாலை வரையில் மது அருந்தினார் அலெக்ஸாந்தர். பிறகு சில மணி நேரம் தூக்கம். துயில் விழித்தபோது அவருடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் குளித்துவிட்டு தளபதிகளுடன் மந்திராலோசனை நிகழ்த்தினார் மன்னர். சில நாட்கள் கழித்தும் ஜுரம் அகலவில்லை. படுக்கையிலிருந்து எழ முடியவில்லை. பதினெட்டாம் நாள் மாஸிடோனிய வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர் தங்கியிருந்த கூடாரத்தைச் சூழ்ந்துகொண்டு குரலெழுப்பினார்கள். அவர்களை வரிசையாக உள்ளே விடச் சொல்லி சைகை செய்தார் சக்ரவர்த்தி.

ஜுரம் வந்த இருபத்து எட்டாம் நாள், 33வது வயதில் திடீரென்று அலெக்ஸாந்தரின் உயிர் பிரிந்தது. அதற்கு முந்தைய நாள், தனக்குப் பிறகு யார் யார் தலைமைப் பொறுப்பில் இருந்து படையை நிர்வகிக்க வேண்டும் என்று விரிவான ஆணைகள் பிறப்பிக்க மறக்கவில்லை சக்ரவர்த்தி.

உணவில் அல்லது ஒயினில் விஷம் கலந்திருந்தது என்றும் அந்தச் சதித் திட்டத்தின் பின்னால் அலெக்ஸாந்தரின் அம்மாவே செயல்பட்டதாகவும் சில கிசுகிசுக்கள் கிளம்பின. அதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. ஏதோ விஷக்காய்ச்சல் (டைபாய்டு?) என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்க்ள்.

அலெக்ஸாந்தரின் உடலை எங்கு, எப்படிப் புதைப்பது என்பது பற்றிய விவாதங்கள் சில நாட்கள் நடந்ததால் ஒரு வாரத்துக்கு மேல் அவருடைய உடல் கூடாரத்தின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டிருந்தது. ஆச்சர்யம்! புதைக்கப்படும் வரையில் அவர் உடல் அழுகாமல் 'ஃப்ரெஷ்'ஷாக இருந்தாக பலர் உறுதியாகக் கூறுகிறார்கள்.

ஆனால், போர் தந்திரங்களை கரைத்துக் குடித்துத் தேர்ந்து அதைச் செயல்படுத்தி, யுத்த களத்தில் ஒரு 'உலக சாம்பியனா'க திகழ்ந்து, கடைசிவரை தோல்வியே அறியாத இந்த மாஸிடோனிய மாவீரரின் உடல் புதைக்கப்பட்ட இடம் பற்றி இன்றுவரை தகவல் ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தை பிலிப் மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதைப் போல மகன் நிரந்தரத் துயில் கொண்டிருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க - இன்று வரை - முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. திடீரென அந்த தலைப்புச் செய்தி என்றாவது வரக்கூடும்!

அடுத்த 'ஜீனியஸ்' யார்...?!

(மேலும் தொடர்வோம்)

'எளிமையான' ஒரு சிறுவன்!

மதன்

 

 

உலக வரலாற்றில் விசுவரூபம் எடுத்த மாவீரர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கலைஞர்களும் ஏராளமாக உண்டு. அவர்களில் எத்தனை பேர் 'ஜீனியஸ்' என்கிற தலைப்பின்கீழ் இடம்பெறுவார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மாபெரும் சாதனைகளைத் தாண்டி தனித்துவம் பெற்று நிற்கிற விஷயம் - ஜீனியஸ்! உதாரணமாக, எத்தனையோ மன்னர்கள் வரலாற்றுப் பக்கங்களை அலங்கரித்தாலும் 'மாபெரும்' - அதாவது ஜிலீமீ நிக்ஷீமீணீt என்கிற அடைமொழியைப் பெற்ற அரசர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் சராசரி மன்னர்கள் வகுத்த எல்லைகளையெல்லாம் தாண்டியவர்கள்! ஆகவேதான் அலெக்ஸாந்தரையும் அசோக சக்ரவர்த்தியையும் 'தி கிரேட்' என்று அழைக்கும் வரலாறு, ஆனானப்பட்ட ஜூலியஸ் சீசரையோ, நெப்போலியனையோ அப்படி ஒரு அடைமொழியுடன் அழைப்பதில்லை! அதே போலத்தான் 'ஜீனியஸ்' என்று ஒருவரை அழைப்பதற்கு - அவர் அதுவரை மற்றவர்கள் செய்திராத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டும்!

 

 

 

இந்த ரீதியில் பார்க்கும்போது அலெக்ஸாந்தரைத் தொடர்ந்து, இந்திய மண்ணில் புதிய சாதனைகளைப் படைத்த ஒரு மன்னரை ஜீனியஸ் என்று தாராளமாக அழைக்கலாம். அவர் இந்தியாவில் முதல் சாம்ராஜ்யத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியர்!

'தி கிரேட்' என்று அழைக்கப்பட்டாலும் அசோகர் வழி நடந்த பாதை, அவருடைய பாட்டனாரான சந்திரகுப்தர் அமைத்துத் தந்த பாதைதான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். வெறும் அஸ்திவாரம் என்றில்லாமல் ஒரு கட்டிடத்தையும் சந்திரகுப்தர் எழுப்பி வைத்துவிட்டுப்போக, அதில் அமர்ந்துதான் புதிய சாதனைகளைப் படைத்து உலகப் புகழ் பெற்றார் அவருடைய பேரன் அசோகர்!

சந்திரகுப்தரை 'ஜீனியஸ்' என்று அழைப்பதற்கான காரணங்கள் வலுவாக உள்ளன. பிற்காலத்தில் பிரிட்டிஷ் இந்தியா ஆண்ட இந்திய நிலப்பரப்பை விட பெரியதொரு சாம்ராஜ்யத்தை - அதுவும் இந்திய வரலாற்றில் முதன்முதலாக - நிர்மாணித்து ஆண்டவர் சந்திரகுப்த மௌரியர். அவரது ராஜ்ஜியத்தின் எல்லை பாரசீகத்தைத் தொட்டு ஊடுருவியது. தெற்கே விந்திய மலைத்தொடரைத் தாண்டி வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் ஒருங்கிணைத்தவர் அவரே. அலெக்ஸாந்தரின் படையெடுப்பைத் தொடர்ந்து வடமேற்கு இந்தியாவில் கிளர்ந்தெழுந்து நீடித்த கிரேக்க அந்நிய ஆட்சியை படைபலத்தால் முழுமையாக வெற்றி கொண்டு அந்நிய ஆதிக்கத்தை அடியோடு அகற்றிய முதல் மன்னர் சந்திரகுப்தரே!

அலெக்ஸாந்தரின் படையெடுப்பில் துவங்கி கிரேக்கர்கள் இந்தியாவுக்குள் கால் பதித்து மூன்றாண்டு காலம் நிலைத்து நின்று கோட்டைகளைக்கூட கட்டி வசித்தார்கள்! அநேகமாக, வட இந்தியா கிரேக்க காலனியாக மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. சந்திரகுப்தர் அரியணையில் அமர்ந்த ஓராண்டு காலத்துக்குள் கிரேக்க ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட்டது. மிக ஏராளமான, தனித்தனி ராஜ்ஜியங்கள் கொண்டிருப்பினும் மொத்தமாக 'இது இந்தியா. இங்கே அந்நியர்கள் அத்துமீறி கால் வைக்கக்கூடாது!' என்கிற திட்ட்வட்டமான உணர்வை முதன்முதலில் ஏற்படுத்தியவர் சந்திரகுப்த மௌரியர்தான். அதுவரையில் யார் வேண்டுமானாலும் இந்திய எல்லைக்குள் படையெடுத்து இஷ்டப்படி ராஜ்ஜியங்களை கைப்பற்றுகிற கதை நடந்து கொண்டிருந்தது! தனித்தனி ராஜ்ஜியங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம்தான் இந்தியா என்கிற - அதுவரை பழக்கத்திலிருந்த சிந்தனைதான் அதற்குக் காரணம்!

ஆகவேதான், இந்தியாவை ஒரு தனிப் பெரும் நாடாக கற்பனை செய்து அதை செயல்படுத்திய முதல் மன்னர் சந்திரகுப்தர் என்பதை யோசித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்! சந்திரகுப்த மௌரியர் ஆண்ட காலம் இருபத்து நான்கு ஆண்டுகள்தான் (அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மகன் பிந்துசாரர் 27 அல்லது 28 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். பிந்துசாரரின் மகன் அசோகர் ஆட்சிக்காலம் நாற்பது ஆண்டுகள்!)

வரலாறு என்பது கணிதத்தைப் போல கட்டுப்பாடான ஒன்றல்ல! அதுவும் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாட்டின் வரலாறும், தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களைப் பொறுத்து, அவர்கள் வசதிக்கேற்ப, மாறிக் கொண்டே இருக்கும்! ஆகவே, இன்றளவில் ஒரு பண்டைய வரலாற்றை - உண்மைகளை மட்டும் அடிப்படையாக வைத்து - பதிவு செய்வது சற்றுச் சிக்கலான வேலை! நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் இந்தப் பணியைத்தான் மெனக்கெட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். சந்திரகுப்த மௌரியர் பற்றியும் அப்படிப் பல கதைகள் உண்டு என்றாலும் ஆய்வாளர்கள் அவர் சம்பந்தப்பட்ட சரடுகளையெல்லாம் துளித்துளியாக அகற்றி அநேகமாக உண்மை வரலாற்றை நம்மிடம் கொண்டு சேர்த்திருப்பதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்!

சந்திரகுப்தரின் பிறப்பைப் பற்றியே மாறுபட்ட கருத்துக்களும், சரடுகளும் உண்டு. 'மௌரியர்' என்கிற பெயரே எப்படி வந்தது என்கிற விவாதங்கள் இன்று வரை நீடிக்கின்றன. 'சந்திரகுப்தரின் தந்தையான சர்வார்த சித்தி என்பவர் ஒரு க்ஷத்திரியர்தான். அவர் மூரா என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைக் காதலித்தார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் சந்திரகுப்தர். 'மூரா'விலிருந்துதான் மூரியா - மௌரியா வந்தது...' என்பது ஒரு கருத்து! இதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

 

அதுவே, தொல்பொருள் ஆராய்ச்சிகள் மற்றும் புத்த புராணங்களில் குறிப்பிட்டபடி 'மயூரா'விலிருந்து வந்ததுதான் 'மௌரிய' என்பதை பல அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அதாவது புத்த பெருமானின் வம்சமான சாக்கியர்களில் ஒரு பிரிவினர், கோசல (கொடுங்கோல்) மன்னர் விதுத்வரின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஏராளமான மயில்கள் குடிகொண்டிருந்த இமயமலைச் சாரலின் ஒரு பகுதிக்கு தப்பி ஓடி குடிபுகுந்தனர். 'மயூரா' என்றால் மயில்! மயில் தோகையின் வர்ண ஜாலங்களில் மயங்கிய அவர்கள் அதேபோல விதவிதமான வண்ணங்கள் பூசப்பட்ட செங்கற்களைக் கொண்டு ஒரு நகரத்தை அங்கே உருவாக்கி அதற்கு மோரிய அல்லது மௌரிய நகரம் என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது!

''மௌரிய' என்கிற பெயருக்கு அடிப்படை மயில் என்பதை உண்மை என்றுதான் கருதவேண்டியிருக்கிறது!' என்று சொல்லும் ஆய்வாளர்கள் அதற்கு ஆதாரமாக மௌரிய சக்ரவர்த்தி அசோகர் எழுப்பிய தூண்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அநேகமாக எல்லா தூண்களிலும் (ஸ்தூபிகள்) மயில் சின்னங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன!

சாஞ்சியில் உள்ள புத்த ஸ்தூபிகளிலும், வளைவுகளிலும் மயில்தான் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால், மௌரியர்கள் ஆட்சி என்று ஒன்று அமோகமாக வடக்கே அமைந்திருந்தது என்பதை

சுட்டிக் காட்டி வரலாற்று ஆய்வாளர்களை தட்டியெழுப்பிய பெருமை தமிழுக்கும் உண்டு! ஆரம்ப சங்க காலப் பாடல்களில் மௌரியர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன! அதுமட்டுமல்லாமல் சாணக்கியருக்கும் தமிழ்த்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது! பண்டைய இலக்கிய மேதையான ஹேமசந்திரர் தன் 'அபிதான சிந்தாமணி'யில் சாணக்கியரை 'த்ரமிளர் (Dramila)' என்று குறிப்பிடுகிறார். அதாவது - தமிழர் (தமிழ்நாட்டிலிருந்து வடக்கே பயணித்து நந்தர்கள் ஆட்சியில் அமைச்சர்களில் ஒருவராகப் பணிபுரிந்த சாணக்கியர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணர் என்று ஒரு வரலாற்றுத் தகவல் உண்டு என்றாலும் இது முழுமையாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.)

ஆனால் சந்திரகுப்தர் 'எளிமையான' சூழ்நிலையில் பிறந்தவர் என்று ஜஸ்டின் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள். 'எளிமையான' என்கிற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சந்திரகுப்தரும் (நந்தர்களைப் போல) தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர்தான் என்று சிலர் கூறுகின்றனர். அதிலிருந்துதான் 'சந்திரகுப்தரின் தாய் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்' என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.

மன்னர்கள் என்றால் அவர்கள் க்ஷத்ரியர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை பிடிவாதமாக இருந்த காலம் அது!

கிரேக்க வரலாற்றைப் போலவே புத்தமத புராணங்களிலும் சந்திரகுப்தர் 'எளிமையான' குடும்பத்தில் பிறந்தவர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்ன இது? திரும்பத் திரும்ப இந்த 'எளிமையான' என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? புத்த புராணமான மஹாவம்சம் சொல்வது இதுதான்! - சந்திரகுப்தரின் தந்தை க்ஷத்ரிய வம்சத்தைச் சேர்ந்தவர்தான். அவர் ஒரு யுத்தத்தில் கொல்லப்படுகிறார்.

விதவையான அவரது மனைவிக்கு அப்போது கர்ப்ப காலம். புஷ்பபுரம் (பாடலிபுரம்) என்கிற ஊருக்கு தப்பித்துச் சென்ற கையோடு அவருக்கு குழந்தை (சந்திரகுப்தர்) பிறக்கிறது. அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்ப்பவர் இடைக்குலத்தைச் சேர்ந்தவர். அவர் வேட்டையாடுகிற தொழில் புரிந்து வந்த வேறொருவரிடம் (A Hunter) குழந்தையை விற்க, சிறுவனாக ஆனபிறகு கிராமத்தில் மாடு மேய்க்கும் பணி சந்திரகுப்தருக்குத் தரப்படுகிறது. இதுதான் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் 'எளிமையான' வாழ்க்கை!

சரி, அதைத் தொடர்ந்து சந்திரகுப்தர் என்கிற அந்தச் சிறுவனை சாணக்கியர் சந்தித்தது எப்போது? அதுதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்த வியப்பான, சுவையான திருப்பம்...!

(மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

மதன்

 

சந்திரகுப்தர் - சாணக்கியர் கூட்டணி என்பது இந்திய வரலாற்றில் முதன்முறையாக உருவான முக்கியமானதொரு நிகழ்ச்சி என்றாலும் அந்தக் கூட்டணிக்கான அவசியம் எதனால் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள நாம் நந்தர்கள் ஆட்சியின் பக்கம் திரும்ப வேண்டியிருக்கிறது...

இஷ்வாகு வம்சம், மௌரிய வம்சம் என்பதைப் போல -'நந்த' என்கிற பெயர் ஒரு வம்சத்தைக் குறிக்கிறதா என்று கேட்டால் வரலாற்று ஆசிரியர்கள் 'இல்லை' என்கிறார்கள். சாணக்கியரின் 'அர்த்த சாஸ்திர'த்தில்தான் முதன்முதலாக நந்தர்கள் என்கிற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதலில் பாடலிபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி அரியணையில் அமர்ந்த மன்னரின் பெயர் மகாபத்ம நந்தர். புத்த மதத்தினர் எழுதிய வரலாற்றின்படி அந்த மன்னருக்கு உக்கிரசேனர் என்கிற பெயரும் உண்டு. ஜைன வரலாற்று நூல்களில் மகாபத்ம நந்தரைப் பற்றி கூடுதலான தகவல்கள் இருக்கின்றன. அதன்படி, பாடலிபுரத்தை ஆண்ட க்ஷத்ரிய மன்னரான காகவர்ணர் அல்லது காலசோகரின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு நாட்டியக்காரிக்கும், அரண்மனைக்கு ரெகுலராக வந்துபோன ஒரு நாவிதருக்கும் பிறந்தவர்தான் முதல் நந்த மன்னர் என்பது சிலரின் கருத்து. ஆனால், மகாபத்மரின் தாய் நாட்டியக்காரி இல்லை என்றும், உண்மையில் நாவிதரிடம் மயங்கியவர் மகாராணிதான் என்றும் பரவலாக வரலாற்று ஆசிரியர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்!

கட்டுமஸ்தான, கவர்ச்சிமிகுந்த நாவிதருக்கும் மகாராணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாவிதரின் செல்வாக்கு அரண்மனையில் அதிகரித்தது. ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே பயணித்த மன்னரோடு ஒட்டிக்கொண்ட நாவிதர் வஞ்சகமாக அவருடைய நெஞ்சில் குறுவாளைச் செலுத்திக் கொலை செய்தார். பிற்பாடு அரசரின் குழந்தைகளுக்கு 'கார்டியன்' என்கிற ரீதியில் மகாராணியுடனே அரண்மனையில் தங்க ஆரம்பித்தார். ஓரிரு வருடங்களுக்குப் பிறகு மன்னரின் ஒன்பது அல்லது பத்து குழந்தைகளையும் கொலை செய்த பிறகு, 'ஏகராத்' (தனியொரு மன்னர்) என்று தன்னையே அறிவித்துக் கொண்டார். அந்த நாவிதருக்கும், மகாராணிக்கும் பிறந்த மகன்தான் முதல் நந்த வம்சத்தின் மன்னர். மகாபத்மன் (அல்லது உக்கிரசேனன்) என்று 'ஹர்ஷ சரித்ரா' என்கிற நூலில் சற்றே விவரமாகத் தகவல் இருக்கிறது!

இப்படி அதர்ம வழியில் அரியணையில் அமர்ந்த - அதுவும் 'தாழ்த்தப்பட்ட இன'த்தைச் சேர்ந்த - நந்தர்களின் ஆட்சியை க்ஷத்ரிய மற்றும் பிராமண இனத்தினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை! ஆனால் மன்னர் மகாபத்ம நந்தர் இந்த எதிர்ப்புகளையெல்லாம் கண்டு அசராமல் ஒரு புதிய, வலிமையான சாம்ராஜ்யம் அமைப்பதில் முனைந்து, அதில் வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னரின் அந்தக் கனவைச் செயல்படுத்தக் கிளம்பிய நந்தர்களின் பெரும்படை வீரியத்துடன் வாட்களை உயர்த்தி கங்கை நதிக்கரையோர ராஜ்யங்கள் அனைத்தையும் மகாபத்ம நந்தரின் குடையின் கீழ் கொண்டு வந்து சேர்த்தது. எடுத்த எடுப்பிலேயே முப்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய காலாட்படை, இரண்டாயிரம் குதிரை வீரர்கள், நான்கு குதிரைகள் பூட்டிய இரண்டாயிரம் ரதங்கள், மூவாயிரம் யானைகள், - இப்படி அட்டகாசமாக அமைக்கப்பட்ட நந்தர் படை போகப்போக மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து க்ஷத்ரிய மன்னர்கள் தன்னைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசிவருவது கண்டு மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த நந்த மன்னர் (பரசுராமரின் சபதத்தைப் போல) 'க்ஷத்ரிய அரச குலத்தை பூண்டோடு அழிப்பேன்' என்று முழங்கினார். அதைத் தொடர்ந்து நந்தர் படையின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இஷ்வாகு, பாஞ்சாலம், கேகய, கலிங்க, குரு, மிதிலா மன்னர்கள் அத்தனைபேரும் போரில் மண்ணைக் கவ்வினர். (மிதிலை நாடு ராமாயண சீதை பிறந்த ஊர்!).

தான் கருவியதைப் போல க்ஷத்ரிய மன்னர்களை பூண்டோடு அழிக்க முடியவில்லை என்றாலும் மகாபத்மரின் ஆட்சி பல வட மாநிலங்களில் பரவி ஒரு சாம்ராஜ்யமாக உருவானது உண்மை. அது சர்வாதிகார ஆட்சியாக அமைந்தாலும் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகம் நாடெங்கும் நிலவியது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். இருப்பினும், மக்களுக்கு ஆட்சியாளர்களிடம் அச்சம் இருந்ததே தவிர, மனதளவில் ('இனம்' காரணமாகவும், ஆட்சியை அவர்கள் கைப்பற்றிய வழிமுறையை ஏற்றுக்கொள்ளாததாலும்) வெறுப்புடனேயே இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

முதல் நந்த மன்னர் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். ஆச்சர்யமாக, அவரைத் தொடர்ந்து அரியணையில் அமர்ந்த எட்டு மன்னர்களும் மொத்தமாக பன்னிரெண்டு ஆண்டுகள்தான் ஆண்டார்கள்! (முதல் அரசரான மகாபத்ம நந்தர் ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு கி.மு. 367 அல்லது 366 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.) மொத்தமாக நந்தர்களின் ஆட்சி நாற்பதாண்டு காலம் நீடித்ததாக வரலாறு கூறுகிறது.

நந்த மன்னர்களில், கடைசியாக ஆட்சிபுரிந்தவரின் பெயர் தனநந்தர். நந்தர்கள் ஆட்சியில் ஆரம்பமும், முடிவும் சரியாக அமையவில்லை! நடுவில் வந்தவர்கள் பற்றியோ பெரிதாகக் குறிப்புகள் எதுவும் இல்லை!

கடைசி மன்னரான தனநந்தர் மோசமான மன்னராக அமைந்தார். அலெக்ஸாந்தர் இந்தியாவுக்குப் படையெடுத்தபோது பாடலிபுரத்தில் அமர்ந்து கோலோச்சியவர் அவரே. எல்லாவற்றையும் விட, பணத்தாசை அந்த மன்னரைப் பிடித்து ஆட்டியது! தான் அடாவடியாகச் சேகரித்த ஐம்பது கோடிக்கும் மேற்பட்ட தங்க, வைர, வைடூரியப் பொருட்களை மூட்டை மூட்டையாகக் கட்டி 'எப்போதாவது தேவைப்படும்!' என்கிற எண்ணத்துடன் அரண்மனை என்றில்லாமல், கங்கை நதிக்கரையில் பல இடங்களில் தனநந்தர் ரகசியமாகப் புதைத்து வைத்திருந்ததாகக் குறிப்புகள் உண்டு. அப்படியொரு செல்வத்தைச் சேகரிப்பதற்காக மக்களைத் துன்புறுத்தி வாட்டியெடுத்து வரிகள் வசூலித்தார் தனநந்தர். சங்ககால தமிழ்ப் பாடல்களில் 'கங்கை நதியோரம் நந்த மன்னரால் ரகசியமாகப் புதைக்கப்பட்ட பெருஞ்செல்வம்' பற்றி வர்ணனைகள் உண்டு என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் குறிப்பிடுகிறார்!

ஒருவழியாக, செய்த பாவங்களை நினைத்து (காரணம் தெரியவில்லை!) திருந்த முற்பட்ட தனநந்தர் பிற்பாடு தர்மங்கள் செய்ய ஆரம்பித்ததாகக் கேள்வி! அச்சமயத்தில்தான் கௌடில்யர் என்கிற அறிவுத்திறன் கொண்ட பிராமணர் நந்த மன்னரிடம் பணிக்கு சேர்ந்தார். தட்சசீலத்திலிருந்து (அல்லது தமிழகத்திலிருந்து?) பயணித்து, அப்போதைக்கு இந்திய துணைக்கண்டத்திலேயே செல்வாக்கு மிகுந்து விளங்கிய தனநந்தரின் அரசவைக்குச் சென்றார் கௌடில்யர். அவருடன் சில நிமிடங்களே பேசிய மன்னர், கௌடில்யரின் அறிவாற்றலால் கவரப்பட்டு, நிரந்தரமாகத் தன்னோடு தங்கி பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். மன்னர் செய்த தர்மங்களை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட தலைமை தனசாலையின் பொறுப்பு கௌடில்யரிடம் தரப்பட்டது. கூடவே ஒரு கோடி (தங்க நாணயங்கள்?) வரை உச்சவரம்பு வைத்து, அதைச் செலவிடக்கூடிய உரிமையும் கௌடில்யருக்கு வழங்கப்பட்டது!

ஆனால் சமீபகாலமாக மட்டுமே திருந்தியிருந்ததாலோ என்னவோ, திடீரென்று 'வேதாளம்' மீண்டும் மரத்தில் ஏறியது! தனநந்தர் கௌடில்யரை நடத்திய விதத்தில் மாற்றம் ஏற்பட்டது. கௌடில்யரின் நேரிடையான பேச்சும், கர்வமான நடவடிக்கையும் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். அரசவையில், எல்லோருடைய முன்னிலையிலும் ஒருமுறை அரசர் கௌடில்யரை சற்று ஏளனமாகப் பேசியதால் அவமானம் அடைந்த கௌடில்யர் பதிலுக்கு அரசரை எதிர்த்து சில வார்த்தைகள் சொல்ல, அதனால் அவர் சிறைக்குள் அடைக்கப்படும் அளவுக்கு நிலைமை விபரீதமானது! ஆனால், மழித்த தலை, முகத்தோடு இருந்த கௌடில்யர், சடாமுடி, தாடியோடு மாறுவேடமணிந்து பாடலிபுரத்திலிருந்து தப்பி வெளியேறினார். அத்தோடு விடாமல் பாடலிபுர எல்லையில் கண்கள் சிவக்க நின்று 'நந்தர்களின் வம்சத்தை அடியோடு அழிப்பேன்!' என்று சபதமும் செய்தார். ('அதுவரை அவிழ்த்த குடுமியை முடிய மாட்டேன்!' என்றெல்லாம் அவர் சொன்னது நம் கற்பனையே!).

ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த - பிற்பாடு சாணக்கியர் என்ற பெயருடன் தேசிய அளவில் புகழ்பெற்ற - கௌடில்யர், ஒரு கிராமத்தை வந்தடைந்து, மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் யாரோ சிறுவர்களின் கூச்சல் அவரது கவனத்தைக் கவர, சற்று எரிச்சலோடு எழுந்து நின்று எட்டிப் பார்க்க..

அவரது விழிகள் வியப்போடு விரிந்தன...!

(மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

 

 

 

சின்னஞ்சிறுவனாக ஏதோ கிராமத்தில், ஒரு குடிசையில் சந்திரகுப்தர் வசித்த காலகட்டத்தில் இந்தியாவின் வடக்கேயும், வடமேற்கிலும் நிலவிய அரசியல் சூழ்நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டியது சற்று அவசியம்!

 

எல்லா உலக நாடுகளிலும் பெரும் மாற்றங்களும், புரட்சிகளும் ஏற்படுவதற்கு பொதுமக்களின் அரசியல்-சமூக எண்ண ஓட்டங்கள்தான் காரணமாகவும், சாதகமாகவும் இருந்து வருகிறது. அதுபோன்ற காலகட்டங்களில்தான் மக்களை ஒட்டுமொத்தமாக வழிநடத்திச் செல்வதற்கு 'கரெக்ட்'டாக பெரும் தலைவர்கள் தோன்றுகிறார்கள்!

 

அலெக்ஸாந்தரின் மாபெரும் அதிரடிப் படை இந்திய நாட்டின் வடமேற்கு எல்லை ராஜ்யங்களை வெற்றி கொண்டது உண்மையென்றாலும் அதெல்லாம் தற்காலிக வெற்றியாகத்தான் அமைந்தது என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அலெக்ஸாந்தரின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட ஒரு இந்தியத் துறவி மாஸிடோனிய மன்னரை நேருக்கு நேர் பார்த்து ஒரு எச்சரிக்கை விடுத்தது நிஜமாகிப் போனது! அவர் சொன்னது இதுவே - 'மன்னா! இந்திய நாடு ஒரு வித்தியாசமான விரிப்பு (சிணீக்ஷீஜீமீt). அது தரையில் மொத்தமாக சீராகப் பதியாத ஒன்று! அதில் ஒரு இடத்தில் நீங்கள் ஏறிக் குதித்தால் இன்னொரு இடத்தில் தூக்கிக் கொள்ளும். அந்த இடத்தில் கால் வைத்து அழுத்தினால் வேறொரு இடத்தில் தூக்கிக் கொள்ளும். இந்த விசித்திரமான விரிப்பை மொத்தமாக யாராலும் 'படுக்க' வைக்க முடியாது!'

 

 

அதாவது, இந்தியாவை அடியோடு அடிபணிய வைக்க முடியாது என்பதைத்தான் துறவி நாசூக்காக எடுத்துச் சொன்னார். இதை அலெக்ஸாந்தர், 'இந்தியர்கள்தான் என்னமாக அலட்டிக் கொள்கிறார்கள்!' என்று அலட்சியமாகவே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்!

 

அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானும் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அங்கேயும், பஞ்சாப் பகுதியிலும் நிறைய தனித்தனி ராஜ்யங்கள் இருந்தன. தவிர, மலைப் பிரதேசங் களிலும், நூற்றுக் கணக்கான கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு என்று ஒரு அரசன் இல்லாமல் இருந்தாலும், வீரியத்துடனும், சுதந்திர மனப்பான்மை யுடனும் காட்டுக் குதிரைகளைப் போல யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாந்தரின் படை வரிசையாக அந்தக் குட்டி ராஜ்யங்களை முரட்டுத்தனமாக அடக்கி வழிக்குக் கொண்டு வந்தாலும், நிரந்தரமாக அவரால் அவர்களை ஆளமுடியவில்லை. அதிகபட்சமாக ஒன்றைத்தான் அவரால் செய்ய முடிந்தது. அதன்படி சிந்து நதியின் மேற்குப் பக்கத்தை மூன்று ராஜ்யங்களாகவும் (காலனிக்கள்!) கிழக்குப் பகுதியை மூன்று ராஜ்யங்களாகவும் பிரித்து காலனி ஆதிக்கத்துக்கு ஏற்பாடு செய்தார் அலெக்ஸாந்தர். மேற்கே இருந்த ராஜ்யங்களை ஆள கிரேக்க கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். கிழக்குப் பகுதியை ஆள (தான் நண்பர்களாக்கிக் கொண்ட போரஸ் போன்ற) இந்திய மன்னர்களைப் பிரதிநிதிகளாக நியமித்தார். ஆனால் அந்தத் திட்டம் எடுபடவில்லை! அலெக்ஸாந்தர் இந்தியாவிலிருந்து கிளம்பிய கையோடு மாறி மாறிப் பல ராஜ்யங்களில் கிளர்ச்சிகள் வெடித்தன. அரசர்கள் என்று யாரும் இல்லாத கிராமத்து மக்கள் கூட்டமாகச் சென்று மறைவிடத்திலிருந்து பாய்ந்து கிரேக்க கவர்னர்களையும், அதிகாரிகளையும் தாக்கி அல்லாட வைத்தார்கள்.

 

 

அலெக்ஸாந்தரிடம் பணிந்து போய், 'நண்பர்களாக' இருந்த இந்திய மன்னர்களும் விசுவாசத்தை தொடர்ந்து காட்டாமல், நேரடி கிரேக்க நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதிகளில் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். சில கிரேக்க கவர்னர்கள் மக்களின் திடீர்த் தாக்குதலில் கொல்லப்பட்டதும் நடந்தது.

 

இந்தியாவில் தங்க வைக்கப்பட்ட மாஸிடோனியப் படை வீரர்களுக்கு அலெக்ஸாந்தரோடு தாங்களும் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போக முடியவில்லையே என்கிற ஆதங்கம் ஏற்பட்டிருந்ததால், அது ஏற்படுத்திய

 

மன அழுத்தம் காரணமாக, திடீர் கிளர்ச்சிகளை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனிடையே, தட்சசீலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட, அலெக்ஸாந்தருக்கு நெருக்கமான நண்பர் பிலிப் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். நிலைமை களேபரமாக மாற, 'இந்திய மக்களை சமாளிக்க முடியவில்லை. நிலைமை விபரீதமாக இருக்கிறது!' என்று அவசரத் தகவல் (தந்தியைப் போல) அலெக்ஸாந்தருக்குப் போக இந்தியாவை விட்டுக் கிளம்பிவிட்ட மாஸிடோனிய மன்னர் தலையிலடித்துக் கொண்டதாகக் கேள்வி! (பத்திரிகைகள் மட்டும் அப்போது இருந்திருந்தால் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாமலிருந்திருக்கும்!)

 

அலெக்ஸாந்தரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்பே நந்த மன்னர் - சாணக்கியர் மோதல் நிகழ்ந்துவிட்டது. நந்த மன்னரின் சிறையிலிருந்து தப்பி வெளியேறிய சாணக்கியர் பல கிராமங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்டு கடைசியில் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்து மரத்தடியில் உறங்க நினைக்க, சிறுவர்களின் கூச்சல் அவரை எழுப்பி எட்டிப் பார்க்க வைத்தது! ஆங்காங்கே கலவரங்கள் வெடித்த காரணத்தாலும், எந்த ஆட்சியாளராலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததாலும் கிராமத்து சிறுவர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டதோ என்னவோ, அந்தச் சிறுவர்களுக்குக்கூட 'நம்மாலேயே நாட்டை நன்றாக ஆள முடியும் போலிருக்கிறதே!' என்கிற கிண்டலான எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்! மைதானத்தில் அச்சிறுவர்கள் 'ராஜா-மந்திரி' விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். ஒரு நீண்ட குச்சியை வாளாக பாவித்து, ராஜாவாக அங்கே நடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்தான் குறிப்பாக சாணக்கியரின் கவனத்தைக் கவர்ந்தான். கைதியாக நடித்த ஒரு சிறுவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு 'ராஜா' வழங்கிய தீர்ப்பும், அதைத் தொடர்ந்து 'மந்திரி பிரதானிகளுக்கு' அவன் இட்ட கட்டளைகளும், அந்த குச்சி 'வாளை' அவன் சுழற்றிய ஸ்டைலும், கூடவே அவனின் வசீகரமான முகமும், சாணக்கியருக்கு வியப்பேற்படுத்தியது. அவருடைய மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது!

 

சிறுவனிடம் சென்று அவர் பேச்சுக் கொடுக்க, அவன் பதில் சொன்ன விதம் பளிச்சென்று இருந்தது. தனிமையாக, அலைந்து கொண்டிருந்த அந்த அந்தணர் எடுத்தது வேகமான ஒரு முடிவு! அந்தச் சிறுவன் ஒரு வளர்ப்புப் பிள்ளைதான் என்று அறிந்துகொண்ட அவருக்கு நம்பிக்கை மேலும் அதிகமானது. அவனுடைய வளர்ப்புப் பெற்றோரிடம் சென்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் அவர். 'இந்தச் சிறுவனை நான் வளர்த்து ஆளாக்குகிறேன். படிக்க வைக்கிறேன். அவன் பெரிய ஆளாக வருவான். கவலைப்படாதீர்கள், என்னோடு அவனை அனுப்புங்கள். அவனை பொறுப்போடு பார்த்துக் கொள்கிறேன்!' என்றார் கனிவோடு.

 

அவர்கள் சற்றுப் புரியாமல் விழித்தபோது, சாணக்கியர்

 

'பன்ச் லைனாக', 'இவனை இதுவரை வளர்த்ததற்கு நான் தரும் இந்தக் காணிக்கையை நீங்கள் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!' என்று சொல்லி ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு நாணயங்களை அவர்களுக்கு நீட்ட.. அந்தச் சிறுவன் கடைசியாக ஒருமுறை கைமாறினான்!

 

சாணக்கியர் தன் வாக்கைக் காப்பாற்றினார். சந்திரகுப்தன் என்கிற அந்தச் சிறுவனை தன்னோடு தட்சசீலத்துக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கே ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு கல்வி அறிவை புகட்டினார். தகுதியான ஆசிரியர்களை நியமித்து குதிரையேற்றம், வாள் சண்டை, உடற்பயிற்சி போன்ற பல விஷயங்களும் சந்திரகுப்தனுக்குக் கற்றுத் தர ஏற்பாடு செய்தார்.

 

அறிவாற்றல் மிகுந்த சாணக்கியருக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையே ஒரு ஆச்சர்யமான உறவு மலர்ந்தது. நல்லாசிரியராகவும், நல்லதோர் நண்பராகவும் இருந்த அவரிடம் கற்பூரத்தைப் போல வேகமாக ராஜாங்க விஷயங்களைக்கூட அந்தச் சிறு வயதிலேயே கற்றுத் தேர்ந்த சந்திரகுப்தனிடம் 'உனக்கு நாடாளும் திறமை இருக்கிறது' என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்பிக்கையூட்டினார் சாணக்கியர். (இந்தியா மீது அலெக்ஸாந்தர் படையெடுப்பு நிகழ்ந்தது அப்போதுதான். தட்சசீலத்தில் அவர் தலைமையில் மாஸிடோனியப் படை வெற்றி ஊர்வலம் போனபோது சந்திரகுப்தன் என்கிற அந்தச் சிறுவன் ஒரு சுவர் மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்தது பற்றி சில வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு!)

 

சாணக்கியர் இரண்டாவதாக மேற்கொண்ட வேலை - சற்று புத்திசாலியான, சுதந்திர உணர்வு மிகுந்த விசுவாசமான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியோடு, சிதறிக் கிடந்த கிராம மக்களை ஒன்று திரட்டியதுதான். இந்தியாவில் முதன்முதலாக 'கெரில்லா' படையை அமைத்தவர் அவரே! தலைவன் இல்லாமல் தறிகெட்டு அலைந்து கொண்டிருந்த இளைஞர்கள் சந்திரகுப்தனின் தலைமையின் கீழ் 'அப்பாடா!' என்கிற உணர்வோடு ஓரணியாகத் திரண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு தலைவனும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி!

 

இதைத் தொடர்ந்து எல்லைப்புற இந்திய மன்னர்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய ஆதரவையும் பெற்றார் சாணக்கியர். சந்திரகுப்தனின் பின்னே ஒரு படையே தயாராக நின்றிருப்பதைப் புரிந்துகொண்ட அந்த மன்னர்கள் 'தங்கள் மீது பாயாமல் இருந்தாலே போதும்' என்று கருதியிருக்கலாம்!

 

ஒரு மனிதனிடம் அறிவாற்றலும், திட்டங்கள் தீட்டும் புத்திசாலித்தனமும் இருந்தால் மட்டும் போதாது, பொறுமையும் தேவை! ஆனால் நந்த மன்னன் குறித்து உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த கோபம் சாணக்கியரை சற்று அவசரப்பட வைத்துவிட்டது! சந்திரகுப்தன் தலைமையில் திரட்டப் பட்ட கெரில்லாப் படை உடனடியாக

 

நந்த மன்னனுக்குப் பாடம் கற்பிக்கக் கிளம்பிச் சென்று நேரடியாக பாடலிபுரத்தை முற்றுகையிட, ஏராளமான போர்ப் பயிற்சி பெற்று, பல யுத்தங்களில் வெற்றி கண்ட நந்த மன்னனின் மாபெரும் படை அவர்களை துவம்சம் செய்துவிட்டது. பின்வாங்கிய படையோடு, உயிர்தப்பிய சந்திரகுப்தனும் சாணக்கியரும் ஒரு கிராமத்துக்குள் ஒளிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

 

இரவு நேரம்.. ஒரு குடிசையின் வாசலில், திண்ணையில் அமர்ந்தனர் குருவும் சிஷ்யனும். குடிசைக்குள்ளே ஒரு சிறுவனுக்கு, அவனுடைய தாய் இலை போட்டு, தோசை வார்த்துத் தந்து கொண்டிருந்தாள். திடீரென்று வீறிட்டு அலறினான் சிறுவன். திடுக்கிட்டுப்போன சாணக்கியரும், சந்திரகுப்தனும் உள்ளே எட்டிப் பார்த்தனர். அந்தத் தாய் மகனைக் கடிந்து கொண்டிருந்தாள் - 'தோசையின் நடுவில் அதிகமாகச் சுடும் என்பது தெரியாதா? ஏன் அங்கே கைவைத்தாய்? ஓரத்திலிருந்து பிய்த்துச் சாப்பிடு, சுடாது!' என்று அவள் சொன்னதைக் கேட்ட சாணக்கியரின் கண்கள் அகல விரிந்தன...!

 

அந்தத் தோசையிலிருந்து கிளம்பிய தத்துவம் சாணக்கியருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. மலர்ந்த முகத்துடன் அவர் குரலைத் தாழ்த்தி சொன்னார்- 'சந்திரகுப்தா! இனி நீ வெற்றிகளை மட்டுமே குவிக்கப்போகிறாய்!'

 

(மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

வறுமை என் காதலி

மதன்

ஒரு மனிதனிடம் இருக்கக் கூடிய மிகச் சிறந்த குணம் - மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது. மற்றவர்கள் என்றால் பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் மற்ற அனைத்து உயிர்களிடமும், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது தாராளமாகவும் ஏராளமாகவும் அன்பு செலுத்துவது! உச்சக்கட்டமாக, சக மனிதர்கள் மட்டுமல்லாமல் மற்ற எல்லாவிதமான உயிரினங்கள் மீதும் அதே மாதிரியான அன்பைச் செலுத்துவதற்கு இணை வேறு எதுவுமே கிடையாது. ஆனால் இது சாத்தியமா?! இந்தியாவில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அன்பின் மறு உருவமாக இருந்த மகான்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஆச்சர்யமான சாதனைகளை (Miracles) செய்யக்கூடிய வரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். தவிர, அவர்களுக்கு கூடவே பல்வேறு விதமான பணிகளும் இருந்தன. ஆனால், மற்ற எந்தவிதமான சாதனைகளிலும் நேரத்தை செலவிடாமல் ‘அன்பு காட்டுவது ஒன்றே வாழ்க்கை’ என்று வாழ்நாள் முழுவதும் அதில் தன்னை அர்ப்பணித்த மனிதர் உலக வரலாற்றில் இருக்க முடியுமா? உண்மையிலேயே அப்படி ஒருவர் உலகில் வாழ்ந்தார்! அவருடைய அந்த வாழ்க்கை சராசரி மனிதர்களாகிய நம்மை வியப்பின் எல்லைக்கே எடுத்துச் செல்கிறது! அவர் பெயர் ஜியோவனி பெர்னார்டோனே. இந்தப் பெயர் பலருக்குப் புரியாமல் போகலாம். அதுவே ‘செயிண்ட் (புனித) பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸி’ என்றால் புரியும்! ஜியோவனியின் டீன் ஏஜ் வாழ்க்கை கொஞ்சம் நம்ம பட்டினத்தார் மாதிரிதான் அமைந்தது. நண்பர்களோடு உல்லாசம், ஆடம்பரமான உடை, மது, கும்மாளமான வாழ்க்கை! அப்பா பியட்ரோ பெர்னார்டோனே வசதியான துணி வியாபாரி. 1181 அல்லது -82ல், இத்தாலியின் மையத்தில் இருக்கும் ஆஸிஸி என்னும் ஊரில் பிறந்தார் ஜியோவனி. தாராளமாகச் செலவழிக்க கையில் தினமும் அம்மா பணம் கொடுத்ததால் மாலை நேரப் ‘பார்ட்டி’களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நண்பர்களுக்காக வாரி வாரி செலவழித்தார் ஜியோவனி. அப்பாவுக்குச் சற்று கடுப்புதான். ‘பகல் நேரத்தில் வியாபாரத்தைக் கவனி. நாளை நீ செல்வந்தனாக வாழ வேண்டும் என்பது எப்போதும் மனதிலிருக்கட்டும்’ என்று எச்சரித்தார் தந்தை. ஜியோவனி, பிரான்ஸிஸ் ஆனது எப்படி? ஒருமுறை மகனுடன் தந்தை வியாபார விஷயமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கே அப்பாவுக்கு ஏக லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சியில் மூழ்கிய அவர் ‘இனி பிரான்ஸ் நாட்டின் நினைவாக உன் பெயர் பிரான்ஸிஸ்!’ என்று அறிவித்தார். வீட்டில் எல்லோரும் அப்படித்தான் ஜியோவனியை அழைக்க வேண்டும் என்பது உத்தரவு! ஒரு நாள், சொந்த ஊரில், கடையில் அமர்ந்திருந்தபோது பிச்சைக்காரர் ஒருவர் வந்து தானம் கேட்க, அவரை விரட்டியடித்தார் பிரான்ஸிஸ் (இனி அப்படியே அழைப்போம்!). மறுவிநாடி அவருக்கு ஏதோ பொறி தட்டியதைப்போல இருந்தது. கடையை விட்டு இறங்கி, தெருக்கோடியில் போய்க்கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரரிடம் ஓடிச் சென்று ‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!’ என்று மன்றாடி, கையிலிருந்த அத்தனை பணத்தையும் அவரிடம் தந்துவிட்டுத் திரும்பி வந்தார் பிரான்ஸிஸ். தெருவில் சென்றவர்கள் வியப்போடு அந்தக் காட்சியைப் பார்க்க, நண்பர்கள் கவலைப்பட, விஷயம் தந்தைக்குச் சென்று, செம டோஸ் விழுந்தது! ஆண்டு 1203ல், அண்டை மாநிலத்துடன் யுத்தம் வர, பிரான்ஸிஸின் நண்பர்கள் ராணுவத்தில் சேர்ந்தார்கள். இளைஞர் பிரான்ஸிஸும் அவர்களோடு போருக்குப் போனார். யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிரி நாட்டு வீரர்கள் அவரைச் சிறைப்படுத்தினார்கள். ஓராண்டு சிறை! விடுதலையான கையோடு காய்ச்சல் அவரைத் தாக்கியது. அதில் மிகவும் ‘வீக்’காகிப் போன பிரான்ஸிஸ் குணமடைந்து சுதாரித்துக் கொண்ட பிறகு, இலக்கு எதுவுமில்லாமல் அலைய ஆரம்பித்து, ஊருக்கு வெளியே இருந்த , ஒரு காலத்தில் இடுகாடாக இருந்த மலை மீது ஏறிச் சென்று, அங்கே சற்று நேரம் இளைப்பாறியபோது... திடீரென பிரான்ஸிஸ் கண்களிலிருந்து நீர் வழிந்தது. ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வு அவரிடம் ஊடுருவ, மண்டியிட்டு அமர்ந்த அந்த இளைஞர் வாயிலிருந்து ‘இறைவா!’ என்கிற பரவசமான வார்த்தை வெளிப்பட்டது. பிரான்ஸிஸ் அங்கே மலை மீது அனுபவித்தது என்ன, நிகழ்ந்தது என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவர் அந்த விநாடியிலிருந்து அடி யோடு மாறிப்போனது உண்மை! பிறகு வீட்டில் யாரிடமும் அதிகம் பேசவில்லை பிரான்ஸிஸ். சில நாட்கள் கழித்து, குதிரையிலேறி புறநகர் பகுதி வழியாகச் சென்றுகொண் டிருந்தபோது, ஊருக்குள் அனுமதிக்கப்படாமல், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர் தன்னந்தனியே நின்று கொண்டிருந்தது பிரான்ஸிஸ் பார்வையில் பட்டது. சில விநாடிகள் அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்ட அவரிடம் மீண்டும் ஏதோ ஒரு உணர்வு பரவியது! உடனே குதிரையிலிருந்து குதித்தார் பிரான்ஸிஸ். ஓடோடிச் சென்று அந்த பெருநோய்க்காரரை ஆரத்தழுவிக் கொண்டு ‘நானிருக்கிறேன். இனி நான் உனக்கு நண்பன்!’ என்று கலங்கிச் சொன்னார் பிரான்ஸிஸ். கையிலிருந்த அத்தனை பணத்தையும் பிச்சைக்காரருக்கு வழங்கினார்! இதெல்லாம் நடந்து முடிந்த பிறகும் நண்பர்கள் பிரான்ஸிஸைச் சந்திக்க வந்து போகாமலில்லை. ஆனால் பழைய குதூகலம் அவரிடமிருந்து அகன்றுவிட்டது. எப்போதும் புதியதொரு பரவச உணர்வில் இருந்தார் பிரான்ஸிஸ். பார்ட்டி, கொண்டாட்டங்கள் போய்விட்டன. நிறையச் செலவழிக்கற நண்பன் இப்படி மாறியது நண்பர்களுக்குக் கவலை ஏற்படுத்தியது. ‘என்ன, எப்போதும் யோசனை? திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?’ என்கிற நண்பர்களின் கேள்விக்கு மெல்லப் பதில் சொன்னார் பிரான்ஸிஸ்: ஆமாம்! ‘ஏழ்மை என்கிற - உங்கள் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு பேரழகியை நான் மணந்து கொள்ளப்போகிறேன்!’ வசதியான நண்பனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிப்பட்டது கண்டு திடுக்கிட்டார்கள் மற்றவர்கள்! அதற்குப்பிறகு, நண்பர்களையெல்லாம் சந்திக்கவில்லை பிரான்ஸிஸ். ஏழைகளுடனும். தொழுநோயாளிகளுடனும்தான் வாழ்க்கை. வீட்டில் இதுகண்டு கலங்கிப் போனார்கள். தந்தையிடம் அடிகூட வாங்கினார் பிரான்ஸிஸ். ஆனால் ஒவ்வொரு நாளும் தனியே சென்று, ஆஸிஸி ஊரின் மிக ஏழ்மையான பகுதிகளில் வசித்தவர்களுக்குப் பணிவிடை செய்யத் துவங்கினார் அவர். மற்றபடி எந்த ஆதரவும் இல்லாமல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோய்க்காரர்களுக்கு தொண்டு செய்வதில் நேரத்தை செலவிட்டார். ஒவ்வொரு தேவாலயத்துக்கும் சென்று தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடம் கேட்டு மண்டியிட்டு பிரான்ஸிஸ் மன்றாடியது தந்தையின் காதுகளுக்குப் போனது. தந்தையின் கோபம் தலைக்கேறியது.. மறுநாள் ஊரின் ஒதுக்குப்புறமாக நோயாளிகளுடன் இருந்த பிரான்ஸிஸை நோக்கி தந்தை அனுப்பிய ஆட்கள் குதிரைகளில் வந்தனர். அப்பா வரச்சொன்னதைத் தெரிவித்தனர். அஸிஸியின் மையத்தில் இருந்த ‘சர்ச்’சில் ஊர்ப் பெரியவர்கள், பாதிரியார் எல்லோருடனும் காத்திருந்த தந்தை மகனைப் பார்த்துப் புலம்பித் தீர்த்தார். ‘இனி நீ எனக்கு மகன் இல்லை!’ - கோபத்தில் வார்த்தைகள் வெடித்தன. பிரான்ஸிஸ் முகம் சலனமில்லாமல் இருந்தது. சுருக்கமாக தந்தையைப் பார்த்து மகன் சொன்னது இதுதான் - ‘பாதிரியார் எதிரில் நாம் சட்டப்படி பிரிந்துவிடலாம். தந்தை என்பவர் எனக்கு எப்போதும் உண்டு! தங்களிடம் எனக்கு கோபம் துளியும் இல்லை!’ தந்தையின் சொத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அப்போதே எழுதிக்கொடுத்த பிரான்ஸிஸ் செய்த அடுத்த செயல் எல்லோரையும் திகைக்க வைத்தது. தன் உடைகளையும் கழற்றி தந்தையின் காலடியில் வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த அந்த இளைஞர், வழியில் கிடந்த ஒரு கிழிசல் துணியை துண்டாக அணிந்துகொண்டு, அமைதியான முகத்துடன் கால் போன போக்கில் நடந்தார்! புத்தபகவானைப் போல, சொந்த பந்தங்கள், செல்வம் எல்லாமே அந்தக் கணத்தில் அற்று வீழ்ந்தது! கடை வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கே ‘பணம், பணம்’ என்று முகத்தில் பேராசையுடன் மனிதர்கள் அலைந்து கொண்டிருந்தது கண்டு பரிதாபம் மேலோங்கி பிரான்ஸிஸின் கண்களில் நீர் வழிந்தது. ஊருக்கு வெளியே, சிதிலமாகிக் கிடந்த ஸான் டாமியானோ என்கிற சிறு ‘சர்ச்’சுக்குள் நுழைந்து மண்டியிட்டபோது, காதுக்குள் ஒரு இனிமையான, கம்பீரமான குரல் கேட்டது & ‘என் தேவாலயத்தை புதிப்பிப்பாயாக!’ என்று! அந்த ஆணைக்கு என்ன அர்த்தம் என்று இன்றுவரை சற்று குழப்பம் நிலவுகிறது. ‘இந்த ஓர் தேவாலயத்தை...’ என்று அர்த்தமா? அல்லது ‘கிறித்துவ மதத்தையே புதிப்பிப்பாய்’ என்று அர்த்தமா?! பிரான்ஸிஸ் எளிமையாகவே அர்த்தம் புரிந்து கொண்டார். தேடி அலைந்து, பலரிடம் கையேந்தி, கற்களைச் சுமந்து கொண்டு வந்தார் அவர். ஒவ்வொரு வீடாகச் சென்று ‘ஒரே ஒரு செங்கல் இருக்குமா?’ என்று பிச்சை கேட்பது பிரான்ஸிஸின் பணியாகிப் போனது. மெள்ள மெள்ள, சிதிலமாகிக் கிடந்த அந்த சர்ச் புத்துயிர் பெற்று முழுமையாக நிமிர்ந்து நின்றது! பிரான்ஸிஸ் வாழ்க்கையைக் கண்டு பிரமித்துப் போன ஆஸிஸியின் பிரபல வழக்கறிஞர் பெர்னார்டோ டி குவின்டாவாலி தன் செல்வம் அனைத்தையும் துறந்துவிட்டு, ஒரு கம்பளித் துண்டை அணிந்து கொண்டு பிரான்ஸிஸுடன் சேர்ந்து கொண்டார். இப்படியாக அவரிடம் வந்து இணைந்தவர்கள் பலர் செல்வந்தர்களே! அவர்கள் அனைவரும் பிரான்ஸிஸ் குறிப்பிட்டபடி ‘பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு பழைய கிழிசலான போர்வையைத்தான் அணிய வேண்டும். கையில் கம்பு, காலணி கூட இருக்கக்கூடாது!’ என்ற வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டார்கள். பிரான்ஸிஸ் குழு பதினோறு பேராக உயர்ந்தது. தொழுநோயாளிகளுக்கு பணிவிடை செய்வது, சிதிலமடைந்த தேவாலயங்களை கற்களைச் சுமந்து சென்று புதிப்பிப்பது, இறைவன் கருணையை உரக்கப் பாடுவது & இவைதான் அவர்கள் மேற்கொண்ட பணி! ஆண்டு 1209ல் பிரான்ஸிஸ் ரோம் சென்று போப்பாண்டவரை (மூன்றாவது போப் இன்னஸண்ட்) சந்தித்து தங்களுடைய குழுவுக்கு அங்கீகாரம் கேட்டார். இவர்களைப்பற்றி தீவிரமாக விசாரித்த பிறகு, பிரமித்துப்போன போப்பாண்டவர் பிரான்ஸிஸுக்குத் தன் ஆசிகளை வழங்கினார். உடனடியாக ‘பிரான்ஸிஸ்கன்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்தக் குழு தங்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு முழுமையான துறவிகளாக அங்கீகாரம் பெற்றனர். பிரான்ஸிஸ் பாதிரியாராகக் கடைசிவரை பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவாலயத்தில் மேடை மீது ஏறி நின்றும் (Pulpit) பிரச்சாரம் செய்ததில்லை. தன்னை ஃப்ரையர் (Friar) - அதாவது சகோதரர் என்றே அழைக்கவேண்டும் என்று எல்லோருக்கும் வேண்டுகோள் விடுத்தார் அவர். பிரான்ஸிஸ் குழுவினரில் தலைவர் கிடையாது. இன்றும் அவர்கள் Friars - அதுவும் -‘ஏழைச் சகோதரர்கள்’ என்றே உலகெங்கும் அழைக்கப்படுகின்றனர்! ஃப்ரையர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்தத் துறவிகள் சலனமில்லாத முகத்தோடு, இறைவனைப்பற்றியே சிந்தித்தவண்ணம், மௌனமாக செல்கிறவர்கள் அல்ல.. பிற்பாடு தோன்றிய கிருஷ்ண பக்தர்களைப்போல, இஸ்லாமிய மதத்தில் பிறந்த சுஃபி ஞானிகளைப்போல இறைவனின் பெருமைகள் குறித்து குதூகலமாகப் பாடி, ஆடியவாறு சென்றார்கள். பலர் இவர்களை சந்தேகத்துடன் பார்த்ததுண்டு. போதாததற்கு, திடீர் திடீரென நண்பர்களிடம் பிரான்ஸிஸ் உரையாடும்போது ‘சகோதரர் முயல்.. குயில் சகோதரி...’ என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசியது, ஆரம்பத்தில் சில நண்பர்களுக்குக் கூட ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில், சக மனிதர்கள் என்றில்லாமல் பிராணிகள், செடி கொடிகளிடமும் ஏராளமான அன்பு காட்ட ஆரம்பித்தார் பிரான்ஸிஸ்! ஒருமுறை காட்டுக்குள் நடந்து சென்றபோது பல்வேறுவிதமான பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டு அவரை சூழ்ந்து கொண்டன. முகத்தில் அன்பு பொங்கி வழிய பிரான்ஸிஸ் ‘பறவைச் சகோதரிகளே...! இறைவனிடம் நன்றியோடு இருங்கள்! நீங்கள் வசிக்க எத்தனைவிதமான மரங்களை அவன் படைத்திருக்கிறான்! எவ்வளவு விதவிதமான பழங்களை உருவாக்கியிருக்கிறான்!... உங்களை இறைவன் மிக விசேஷமாக நேசிக்கிறான்!...’ என்று ஆரம்பித்து ‘நூற்கத் தெரியாத உங்களுக்கு எத்தனை வண்ணங்களில் உடை அணிவித்திருக்கிறான்...’ என்றெல்லாம் உணர்ச்சி மயமாகப் பேசப்பேச ஒரு பறவைகூட பறந்து செல்லாமல் அவருடைய பேச்சை உன்னிப்பாக கவனிக்க, நண்பர்கள் பிரமித்துப் போனார்கள். ஒரு மலரையோ, செடியையோ தாண்டி நடக்கும்போதுகூட அன்போடு அதைத் தடவிக் கொடுத்து ‘நன்றி!’ என்பார் பிரான்ஸிஸ்! காடுகளும், இயற்கை வளமும், உயிரினங்களும் மனிதனின் பேராசையால் அழிந்துகொண்டு வரும் இன்றைய காலகட்டத்தில், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் பற்றி மனம் துடித்து கனிவு காட்டிய பிரான்ஸிஸை நாம் நினைக்கும்போது அவர் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசியாக விளங்கினார் என்று புரிந்து மெய்சிலிர்க்கிறோம்! ஒரு இரவு, பழமையான சர்ச் ஒன்றில் நண்பர்களோடு பிரான்ஸிஸ் அமர்ந்திருந்தபோது ஏதோ சலசலப்புக் கேட்க, எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். தொலைவில் காட்டினூடே ஒரு தீப்ப்பந்தம் வேகமாக தங்களை நெருங்கி வருவது பிரான்ஸிஸ் பார்வையில் பட்டது. அந்த தீப்பந்தத்தை கையிலேந்தியவாறு ஓடி வந்துகொண்டிருந்தாள் ஒரு பெண். முகத்தில் விவரிக்க முடியாத உணர்வுகளை வெளிக்காட்டியவாறு ஓடிவந்த அந்தப் பெண்ணைப் பார்த்து நண்பர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க, சாவதானமாக நடந்து சென்று அவளை எதிர்கொண்டார் பிரான்ஸிஸ். அங்கே ஓர் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது...! (மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

சுல்தானைச் சூழ்ந்த அன்பு

வறுமை - என் காதலி

மதன்

உள்ளம் முழுவதிலும் அன்பு நிரம்பி வழியும்போது எதற்குமே பயப்படத் தேவையில்லை. எதிரியைக் கூட நிராயுதபாணியாக்கும் வல்லமை அன்புக்கு உண்டு. புத்த பகவானிலிருந்து காந்திஜி வரை அன்பின் சக்தியை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தினார்கள். ‘அன்பு காட்டுவது’ என்பது பிறப்பிலேயே வந்துவிடுவதில்லை. ஆனால் அதை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு அன்பு நம்மை வளர்க்கும்! இந்த விஷயத்தில் பிரான்ஸிஸ் பற்றிச் சொல்லத் தேவையில்லை! அபரிமிதமாக அன்பு அவரிடம் பொங்கிக் கொண்டிருந்ததால், காட்டின் வழியே தீப்பந்தத்துடன் ஓடிவந்த பெண்ணைப் பார்த்து மற்றவர்கள் திடுக்கிட்டாலும் பிரான்ஸிஸ் சற்றும் துணுக்குறவில்லை. ஆதரவோடு தன் நேசக்கரங்களை நீட்டுவதற்காக இறைவன் இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறார் என்பதே அவருடைய பரவசமான நம்பிக்கை! ஓடிவந்த அந்தப் பதினெட்டு வயதுப் பெண் பிரான்ஸிஸ் காலடியில் வீழ்ந்தாள். அவள் பெயர் க்ளார். அஸிஸி நகரில் வசித்த ஒரு செல்வந்தரின் மகளான அவளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள். க்ளாருக்கு அதில் விருப்பமில்லை. ஆண்டாளைப் போல, மீராவைப் போல இறைவனுக்கு தொண்டாற்றவே அவள் விரும்பினாள். ‘என்னை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்!’ என்று பிரான்ஸிஸை ஏறிட்டுப் பார்த்துக் கதறினாள் அந்தப் பெண்! தர்மசங்கடமான நிலைமை! கிறித்துவத் துறவிகள் ஒரு பெண்ணைத் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஊரில் வதந்திகள் பரவி பெரும் பிரச்னைகள் ஏற்படலாம். தவிர, க்ளார் பணக்கார வீட்டுப் பெண். மற்ற ஃப்ரையர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் பிரான்ஸிஸ் கண்களுக்கு ஒன்று மட்டுமே தெரிந்தது. அது க்ளார் முகத்தில் ஜொலித்த பக்தி! ‘வா, குழந்தாய்!’ என்று சொல்லி அவள் கரங்களைப் பற்றித் தூக்கிவிட்ட பிரான்ஸிஸ், தானே க்ளாரின் தலைமுடியை மழித்து அவளைத் துறவியாக ஏற்றுக்கொண்டார். அதற்கான அதிகாரத்தை போப்பாண்டவர் அவருக்கு ஏற்கெனவே தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணைத் துறவியாக ஏற்றுக்கொள்வது குறித்து பிரான்ஸிஸ் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை. (செயிண்ட் பெனிடிக்ட் துவக்கிய) பெனிடிக்டின்ஸ் துறவிகள் உதவியோடு, ப்ரத்யேகமாக சிறு கன்னிமாடம் ஒன்றை நிறுவி, அங்கே அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக இருத்தி வைத்தார் பிரான்ஸிஸ். இன்றளவும் கிறித்துவ மதத்தில் பல்லாயிரக் கணக்கில் கன்னிமார்கள் பணிபுரிய ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். க்ளார்தான் இதற்கு முன்னோடி! இன்று, ‘ஏழை க்ளார் சகோதரிகள்’ என்கிற புதிய பெரும் ‘ஆர்டர்’ (இயக்கம்) இறைவனுக்கு சேவை புரிகிறதென்றால் அதை துவக்கி வைத்த மகான் பிரான்ஸிஸ்தான். திடீரென, ஐந்தாவது புனிதப் போர் (Crusade) துவங்கியது. ஆஸ்திரியா, ஹங்கேரி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் ஒன்றுசேர்ந்து எகிப்து மீது படையெடுத்தன. இந்தப் போரில் வெனிஸ் நகர வியாபாரிகள், போர் வீரர்கள், மதப் பிரசாரகர்கள் என்று பலர் கலந்து கொண்டனர். போப்பாண்டவர் ஆணையின் கீழ் அவருடைய பிரதிநிதி தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். பல நாட்டுப் போர் வீரர்கள் இதுகுறித்து சிடுசிடுத்தார்கள். ஆனால் புனிதப் போரின் முக்கிய நோக்கமே, கிறித்துவர்களுக்கு புனிதமான ஜெருசலத்தைக் கைப்பற்றி, தங்கள் மதத்தை பரப்புவதுதான் - ஆகவேதான் போப்பாண்டவரின் பிரதிநிதிக்கு தலைமைப் பொறுப்பு! பெரும் படை புறப்பட்டது. கிறீச்சிட்ட ஒலியோடு வாட்கள் உருவப்பட்டன. இல்லங்களையும் பொருட்களையும் அபகரிப்பது, சூறையாடுவது... போன்றவைகளுக்கு வீரர்கள் தந்த முக்கியத்துவம் பிரான்ஸிஸை துயரத்தில் ஆழ்த்தியது.. அப்போது எகிப்து மற்றும் சிரியா நாட்டை ஆண்டது சுல்தான் மாலிக்&அல்&கமால். ‘சுல்தானின் கோபமும், போர் வெறியும் ஐம்பது ஓநாய்களுக்கு சமமானது’ என்கிற தகவல் கிறித்துவப் படை வீரர்களிடையே பரவியிருந்தது. இந்த போர்ப் பயணத்தில் கலந்துகொண்ட பிரான்ஸிஸ், கிறித்துவத் தலைமைத் தளபதியிடம் ‘வன்முறை வேண்டாம். தன்மையாக உரையாடி சுல்தானுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வோம். கிறித்துவர்கள் இடையூறு எதுவும் இல்லாமல் ஜெருசலத்துக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதியை சுல்தானி டம் வாங்க முடியும்!’ என்று மன்றாடினார். அவர் வேண்டுகோள் எடுபடவில்லை. ‘விளையாட்டா இது?’ என்று சொல்லிக் கர்ஜித்த தலைமைத் தளபதி ஆணையிட 1219-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ல் கிறித்துவப் படை எகிப்தை தாக்கியது. ஆனால்... நடந்ததோ வேறு! போரில் பெரும் வெற்றியடைந்தது சுல்தானின் படையே! முற்றுகையிட்டவர்கள் துவண்டுபோக, பிரான்ஸிஸ் ‘அமைதியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதுதான் நல்லது என்று நான் சொன்னேன்! சரி, நான் போய் சுல்தானைச் சந்திக்கிறேன்!’ என்றார் பணிவாக. மற்றவர்கள் கலக்கத்துடன் ‘உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார் சுல்தான்!’ என்று தடுத்தும் கேளாமல், ஒரு சில சகோதரத் துறவிகளுடன் சுல்தானின் அரண்மனை நோக்கி நடந்தார் பிரான்ஸிஸ். வழியில் அவரை கம்புகளாலும், கற்களாலும் சில தீயவர்கள் தாக்கி னார்கள். எதையும் பொருட்படுத்தாமல், இறைவன் பெயரை இசையோடு உச்சரித்தவண்ணம் இந்தத் துறவி தொடர்ந்து நடந்து சென்றதைக் கண்டு எகிப்திய போர் வீரர்கள் திகைத்தனர். இதுபற்றி கேள்விப்பட்ட சுல்தான் ‘யார் அந்த பிரான்ஸிஸ்? அவரை பத்திரமாக அழைத்து வாருங்கள்!’ என்று ஆணையிட்டார். வெற்றிக்களிப்போடு, கம்பீரமாக சிங்காதனத்தில் அமர்ந்திருந்த மாலிக்&அல்&கமால் எதிரில் கொண்டு நிறுத்தப்பட்ட பிரான்ஸிஸ் சுல்தானைப் பார்த்து மென்மையாகப் பேச ஆரம் பித்தார். துவக்கத்தில் சற்று எகத்தாளத்துடன் குறுக்கிட்டு மிரட்டிய சுல்தான், பிரான்ஸிஸ் பேசப்பேச அமைதியானார். பிரான்ஸிஸிடமிருந்து வெளிப்பட்ட அன்பு காற்றில் கலந்து சுல்தானை மென்மையாக சூழ்ந்துகொள்ள, ஆர்ப்பாட்டமான மாலிக்-அல்-கமால் அமைதியின் மறு உருவமாக மாறிய ஆச்சர்யம் அங்கே நிகழ்ந்தது! பிரான்ஸிஸ் எடுத்துச் சொன்னதின் விளை வாக, ஜெருசலத்துக்கும், இயேசு அவதரித்த பெத்லெஹெம்முக்கும் இயேசு வாழ்ந்த நாஸெரெத் கிராமத்துக்கும் பாதுகாப்புடன் பிரான்ஸிஸை அனுப்பி வைத்தார் சுல்தான். இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, ஜெருசலத்துக்கு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்ட ஒரே மனிதர் பிரான்ஸிஸ் மட்டுமே! ஊர் திரும்பிய பிறகும், இயேசு பிறந்த இடத்தின் சூழ்நிலையை பிரான்ஸிஸால் மறக்க முடியவில்லை. 1223-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தபோது, ஒரு ஆர்ட் டைரக்டர் போல, மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசு அவதரித்த ‘நேட்டிவிட்டி’ என்கிற அந்தக் காட்சியை, மனிதர்களைக் கொண்டு மீண்டும் உருவாக்கினார் பிரான்ஸிஸ்! அதற்குப் பிறகே எல்லோர் இல்லங்களிலும், பொம்மைகளைக் கொண்டு ‘இயேசு பிறப்பு’ உருவாக்கப்படும் வழக்கம் துவங்கியது. தெய்வத்துக்கு இணையான குழந்தை மனம் கொண்ட பிரான்ஸிஸ் ஆரம்பித்து வைத்த இனிமையான சம்பிரதாயம் அது! போகப்போக, பிரான்ஸிஸ் துவக்கிய ஃப்ரையர்ஸ் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் சேர்ந்தார்கள். ‘இனி ஊர் ஊராக நாடோடிகள் போல பாடிக்கொண்டு செல்ல முடியாது. சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும், இடவசதிகளும் நம் இயக்கத்துக்குத் தேவை. இல்லையெனில் தவறான மனிதர்கள் கூட நம்மோடு இணைந்து களங்கம் ஏற்படுத்தும் நிலை வரக்கூடும்!’ என்று மற்றவர்கள் பிரான்ஸிஸுக்கு எடுத்துச் சொன்னார்கள். பிரான்ஸிஸ் நிலைமையைப் புரிந்து கொண்டாலும் ‘செய்யுங்கள்! ஆனால் நான் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன். அதற்கான ஆரோக்கியமும் என்னிடமிருந்து அகன்று வருகிறது!’ என்று மறுத்தார். அவரோடு இணை பிரியாமல் பணியாற்றிய பிரதர் பியட்ரோவுக்கு அந்தப் பொறுப்பு தரப்பட்டது. பிரான்ஸிஸ் மெள்ள மெள்ள நோய்வாய்ப்பட்டார். திடீரென ஒருநாள் அவரது இரு உள்ளங்கைகளிலும், பாதங் களிலும் ஆணி அடித்ததுபோல காயங்கள் ஏற்பட்டு, இயேசுவுக்கு சிலுவையில் நிகழ்ந்தது போலவே குருதி வழிந்தது (இதை ‘ஸ்டிக்மாட்டா’ என்கிறார்கள்). தன் கடைசி நாட்களிலும், இறைவனைப் பற்றி அற்புதமான பக்திப் பாடல்களை இயற்றியவண்ணம் மணித்துளிகளைக் கழித்தார் பிரான்ஸிஸ். அவர் குறிப்பாக இயற்றிய Hymn to Creation உலகப் புகழ் பெற்றது. (புகழ்பெற்ற கவிஞர் மாத்யூ ஆர்னால்டு ஆங்கிலத்தில் இதைப் பிறகு மொழிபெயர்த்தார்). இறைவனின் அற்புதமான படைப்புகள் பற்றியும், சூரியனைப் பற்றியும், காற்று, நீர், நிலம், மரங்கள் பற்றியும் பரவசமாகவும், நன்றியுணர்வோடும் விவரிக்கும் அந்தப் பாடல் இந்துக்களின் ‘காயத்ரி மந்திரத்தை’ அப்படியே ஒட்டியிருப்பது சிலிர்ப்பான ஆச்சர்யம்! 1226-ம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதியன்று, கயிற்றுக் கட்டிலில் அமைதியாக படுத்திருந்த பிரான்ஸிஸ் முகத்தில் ஒளி வீசி யது. மெள்ளக் கையசைத்து, தான் வளர்த்த கழுதையை அழைத்து வரச் சொன்னர் அந்த மகான். கழுதையை அழைத்து வந்தார்கள். அதன் முகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தார் பிரான்ஸிஸ். ‘என்னோடு இணைபிரியாமல் இருந்து, என்னைப் பல இடங் களுக்கு சுமந்து சென்ற உனக்கு என் நன்றி!’ என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டபோதும், சில விநாடிகளுக்குக்ப் பிறகு பிரான்ஸிஸ் உயிர் பிரிந்தபோதும் அந்தக் கழுதையின் கண்களில் நீர் வழிந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு! உயிர் பிரியும் நிலையில் பிரான்ஸிஸின் உதடுகள் முணுமுணுத்த பாடல் Psalm 141. ஜூலை 16, 1228-ல் போப்பாண்டவர் ஒன்பதாவது க்ரிகெரி தலைமையில் கூடிய சபையில், ஜியோவனி பெர்னார்டோனே என்கிற பெயரோடுவாழ்க்கையைத் துவக்கிய அந்த எளிமையான மாமனிதர் இனி ‘புனித பிரான்ஸிஸ்’ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இன்று அஸிஸி ஊருக்குச் சென்றால் அவருடைய உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் அழகிய, அமைதியான சூழ்நிலையில் அதன்மீது கட்டப்பட்டுள்ள தேவாலயத்தையும் (Basilica) கண்டு, மண்டியிட்டு வணங்கலாம்... (மேலும் தொடருவோம்)

காதரீன் - ‘தி கிரேட்”!
அறிவுஜீவியின் உருப்படாத கணவன்!
மதன்
உலக வரலாற்றில், ஆச்சர்யமான பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்த மிகச் சாதாரண நிகழ்ச்சிகள் உண்டு! சின்னதொரு விஷயமாக இருக்கலாம். ஆனால் அது ஏற்படுத்தும் தொடர் விளைவுகளால் மிகப்பெரிய புரட்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத்தான் ‘டாமினோ எஃபெக்ட்’ என்கிறார்கள்! நம் நாட்டில் கூட அப்படி நடந்ததுண்டு. இத்தாலி நாட்டில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த யாரோ ஒரு பெண், விமான ‘பைலட்’ ஆகப் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் காதலித்து மணந்துகொண்ட நிகழ்ச்சி & சாதாரணமானதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த, எதிர்பாராத திருப்பங்களைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். சோனியா என்கிற அந்தப் பெண் தன் எதிர்காலத்தைப் பற்றி யாரிடமாவது, ‘இப்படி ஒரு கனவு எனக்கு வந்தது!’ என்று சொல்லியிருந்தால்கூட, மற்றவர்கள் யாரேனும் நம்பியிருப்பார்களா?!

ஜெர்மனி. ஆண்டு 1774. ஆவேசமாக வீசும் குளிர்காற்றில், ஐஸ் மழையினால் வெண்மையாக உறைந்துபோன தெருவில், முன்னும் பின்னுமாக குதிரை வீரர்கள் பாதுகாப்பாகப் பாய்ந்து செல்ல, அந்த வியூகத்தின் நடுவே காட்டின் ஊடே விரைந்து கொண்டிருந்தது, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு கோச். உள்ளே அமர்ந்திருந்தது ஒரு தாயும், மகளும். நல்லபடியாக ஊர் போய்ச் சேரவேண்டுமே என்கிற கவலையால், இருவரும் உரையாடாமலேயே, மௌனமாகப் பயணித்தார்கள். கோச் ஜெர்மனியின் எல்லையைக் கடந்து ரஷ்ய நாட்டுப் பகுதிக்குள் நுழைந்தபோது, அங்கே காத்திருந்த ரஷ்ய குதிரை வீரர்கள் இவர்களோடு சேர்ந்து கொண்டு வழிகாட்டினார்கள். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை (பிற்பாடு லெனின்க்ராட்) அடைந்து, அரை நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் ‘கோச்’சில் தாயும் மகளும் ஏறி உட்கார, வண்டி மாஸ்கோ நோக்கி விரைந்தது. உள்ளே அமர்ந்திருந்தது பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்த ஓர் ஜெர்மானியப் பெண். பெயர் ஸோபியா அகஸ்டோ ப்ரெட்ரிகா. வயது 14. கூடவே, அவளுடைய தாய்.

ரஷ்ய மகாராணி எலிஸபெத், தன் மாமன் மகன் பீட்டருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். ஸோபியாவைப் பற்றி மகாராணிக்கு யாரோ சொல்ல, ‘பெண்ணை நான் பார்க்க வேண்டும். மாஸ்கோவுக்கு வரமுடியுமா?’ என்று ஸோபியாவின் பெற்றோருக்கு கடிதம் போனது. ரஷ்ய ராஜ குடும்பத்தோடு சம்பந்தம்! கசக்கிறதா?! அதற்காகத்தான் இந்த நீண்ட கோச் பயணம்...

ஸோபியாவின் அப்பா, செல்வந்தராக இருந்தாலும் சற்று அசடு! அம்மாவோ நிறைய யோசிக்கிற புத்திசாலி! ஆகவேதான் நல்ல ‘வரன்’ வந்தால் மகளை கட்டிக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார் அம்மா. இதோ, உடனே மகளைக் கையோடு அழைத்துக் கொண்டு மாஸ்கோவுக்கே வந்துவிட்டார் தாய்!

மாஸ்கோவில், அரண்மனையில் வசதியாக இருவரும் தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் மகாராணி எலிஸபெத்தோடு காலை உணவு. ஸோபியாவைப் பார்த்தமட்டில் எலிஸபெத்துக்குப் பிடித்துப் போய்விட்டது. உரையாடியபிறகு, ‘இவள்தான் மருமகள்’ என்று முடிவே செய்துவிட்டார் மகாராணி.

மருமகப்பிள்ளை பீட்டர்தான் பிரச்னை! துடிப்பான, கலாசார அறிவுடன் கூடிய இளைஞராக மாப்பிள்ளை இருப்பார் என்று எதிர்பார்த்தால்.. நேர் எதிரிடை! கிறுக்குத்தனம், அல்பம், திமிர், ‘வீக்’கான உடம்பு, குடிப்பழக்கம், வேசிகளுடன் சகவாசம் - இத்தனையும் பொருந்தியிருந்த இளவரசர் - பீட்டர்! எடுத்த எடுப்பில் இத்தனையும் தெரிந்துகொள்வதற்க்கான வாய்ப்பு ஸோபியாவுக்கு இல்லையென்றாலும், கொஞ்ச நேரம் உரையாடியதிலிருந்தே தனக்கு வரப்போகிற கணவன் வெறும் ‘உதார்கேஸ்’ என்பதைப் புரிந்து கொண்டாள் அந்தப் பெண். இருப்பினும் அம்மா ‘இப்படி ஒரு இடம் கிடைக்குமா?’ என்று வற்புறுத்த, ஸோபியா - பீட்டர் திருமணம் 17 ஆகஸ்ட் 1745-ல் நடந்தது. பீட்டருக்கு வயது அப்போது 17.

முதலிரவிலேயே பீட்டர், மனைவியிடம் அசட்டுத்தனமான பெருமையுடன் ‘ஏதோ, திருமணத்துக்கு சம்மதித்துவிட்டேன். ஆனால் என் அத்தையின் (எலிஸபெத் ராணி) தோழி ஒருத்தி இருக்கிறாள். நான் அவளைக் காதலிக்கிறேன்!’ என்றான். ஸோபியா மௌனமாக, இளக்காரமாக கணவனை ஏறிட்டுப் பார்த்ததோடு சரி!

ஸோபியா நிறைய புத்தகம் படிக்கும் மகா கெட்டிக்காரப் பெண். ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தாலும் பிரெஞ்சு வரலாறு, கலாசாரம் பற்றியெல்லாம் விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவள். உரையாடுதலை ஒரு கலையாகக் கற்றவள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கும் ‘ஏடாகூடமான’, குறைந்த கல்வியறிவுடன் நடமாடிய இளவரசருக்கும் கொஞ்சம்கூட ஒத்துப்போக வாய்ப்பில்லை என்றாலும்... பல தம்பதிகள் அப்படி வாழ்கிறார்களே!

இன்னொரு பக்கம் மகாராணி எலிஸபெத்தின் உருட்டலும் மிரட்டலும் அதிகமாகவே இருந்தது. ஆனால் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் மாஸ்கோ அரண்மனையில் தனக்கென ஒரு உலகத்தை அந்த சிறுமி அமைத்துக் கொண்டது ஆச்சர்யம்! ஒரே ஆண்டுக்குள் ரஷ்ய மொழியைக் கற்றுத் தேர்ந்து, ரஷ்ய வரலாறு பற்றியும் ஸோபியா படித்து முடித்தாள். அதுபற்றியெல்லாம் அறிவுஜீவித்தன்மையோடு உரையாட - அரண்மனையாக இருந்தாலும் - ஆட்கள் இல்லாமல் இருப்பார்களா! அதோடு, ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ‘கிரேக்க சர்ச்’ கிறித்துவப் பிரிவுக்கு தான் மாற விரும்புவதாக ஸோபியா தெரிவிக்க, மகாராணிக்கு மகா சந்தோஷம்! அதற்கான சடங்குகள் நடந்து முடிந்து, ஸோபியாவின் பெயர் காதரீன் அலெக்ஸோவ்னா என மாற்றப்பட்டது. அதாவது ரஷ்யப் பெண்ணாகவே மாறினாள் ஸோபியா. இதுகுறித்து தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் கூட நிகழ்ந்தது. ‘இது அவசியம்தானா?’ என்று கோபப்பட்ட அம்மா அந்த உணர்வோடேயே ஊர் திரும்பினார். அதற்குப்பிறகு காதரீன் தன் பெற்றோரைச் சந்திக்கவில்லை. ரஷ்ய ராஜ குடும்பத்தோடு ஒன்றிப்போனாள் காதரீன்.

இல்லற வாழ்க்கையை துவங்கிய காதரீனுக்கு ஒரு திகைப்பு காத்துக் கொண்டிருந்தது. அவளது கணவன் பீட்டர் அபத்தமானதொரு வாய்ச்சொல் வீரனாக இருந்தானே தவிர, ‘பெரிய’ ஆண் மகனாக அவன் செயல்படவில்லை. வேசிகளின் வீடுகளுக்குச் சென்று கட்டிப்புரளுவதோடு சரி. வீட்டில், படுக்கையறையில் அவனால் எந்தப் பிரயோசனமும் இல்லை! தாம்பத்தியத்துக்காக ஏங்கிய காதரீனுக்கு இது அதிர்ச்சியை அளித்தது.

ஆனால், அரண்மனையில் வசீகரமான, ஆண்மை மிகுந்த இளம் பிரபுக்கள் ஏராளமாகவே இருந்தனர். காதரீனுக்குக் காதலர்கள் அமைய ஆரம்பித்தது அதிலிருந்துதான்! உலக வரலாற்றில் பிரிட்டிஷ் மகாராணி முதலாம் எலிஸபெத் வெர்ஜின் க்வீன் (கன்னி மகாராணி) என்று அழைக்கப்படுகிறாள். இந்த விஷயத்தில் காதரீன் நேர் எதிரிடையாக இருந்தார். உருப்படாத கணவன் போரடித்த அரண்மனை வாழ்க்கை... இதற்கிடையே காதலர்கள் மட்டுமே காதரீனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து ‘காதரீன் காதல்கள்’ துவங்கி மிகுந்த விறுவிறுப்புடன் நீண்ட காலம் தொடர்ந்தது!

ஆண்டு 1754-ல் காதரீனுக்கு ஒரு மகனும் 1758-ல் ஒரு மகளும் பிறந்தார்கள். இருவருமே கணவன் பீட்டருக்குப் பிறந்தவர்கள் அல்ல என்பது அரசவையில் பலருக்கும் தெரியும்!

1762-ல் எலிஸபெத் மகாராணி காலமானார். காதரீனின் கணவர் மூன்றாம் பீட்டர் - ஜார் மன்னராக அரியணையில் அமர்ந்தார். அதனால் காதரீனுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை.

பீட்டர் அரசராக ஆனவுடன், அகம்பாவமும் அதிகரித்தது. முன்னொரு சமயம், அவர் காதரீனிடம் ‘அத்தை எலிஸபெத்தின் தோழி என் காதலி!’ என்று சொன்னது உண்மைதான். அந்தக் காதல் இன்னமும் தொடர்ந்தது. இப்போது ‘நான் அவளை ஏன் ராணியாக்கக் கூடாது?’ என்று ஆரம்பித்தார் மகாராஜா. காதரீனுக்கு லேசான திகில் கிளம்பியது. தன்னைத் தீர்த்துக் கட்டிவிட்டால்?!

பீட்டருக்கு மனைவி காதரீனைப் பிடிக்கவில்லை. அவளுடைய அறிவுஜீவித்தனத்தையும், பிரெஞ்சு கலாசாரத்தைப் பற்றி அவ்வப்போது அவள் விரிவுரை நிகழ்த்தியதையும் மன்னர் வெறுத்தார். அதற்கு இன்னொரு காரணம், பீட்டருக்கு ஜெர்மானிய விஷயங்கள் பிடிக்கும். ஜெர்மனியின் மாமன்னரான ப்ரெட்ரிக் மீது அவருக்கு அதீதமான ஈடுபாடு இருந்தது. அடிவருடி என்றுகூடச் சொல்லலாம். போதாததற்கு ஜெர்மானிய சம்பிரதாயங்களைப் பின்பற்ற ஆரம்பித்தார் அவர். உடை விஷயத்தில்கூட!

ரஷ்ய மக்களுக்கு ஜெர்மனியின் மீது வெறுப்பு இருந்தது. ஆகவே தங்கள் மன்னர் ஜெர்மனிக்கு ஜால்ரா போடுவதைக் கண்டு அவர்கள் கடுப்படைந்தார்கள். அதுவே பிரெஞ்சு கலாசாரத்தை ரஷ்ய மக்கள் பாராட்டினார்கள். காதரீன் ‘பிரெஞ்சு பக்கம்’ என்பதால் மகாராணியை மக்கள் மிகுதியாக மதித்தார்கள். இந்தச் சூழ்நிலை காதரீனுக்கு வாகாகவே அமைந்தது. சற்று யோசித்துப் பாருங்கள்! ரஷ்ய ராணியாகிவிட்ட ஜெர்மானியப் பெண்ணை ஏற்றுக்கொண்ட மக்கள் ஜெர்மனியின் தொண்டராக வாழ்ந்த ரஷ்ய மன்னரை வெறுத்தது விசித்திரமான சூழ்நிலைதான்!

ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், ‘நானே மன்னர்’ என்கிற இறுமாப்பில் இருந்த பீட்டர், காதரீனை இகழ்ச்சியாக நடத்தினார். (மனசுக்குள் ‘நான் ஒன்றுமே செய்யாமலிருந்தபோது மனைவிக்கு எப்படி இரு குழந்தைகள் பிறந்தன?’ என்கிற கோபமும் இருந்திருக்கும்!) ‘உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன்!’ என்று அவ்வப்போது பீட்டர் உறுமியது காதரீன் கடுப்பை அதிகரித்தது. மனைவியின் கண்ணெதிரிலேயே காதலியை வரவழைத்து அவளிடம் ‘நாம் பிக்னிக் போகலாம், வா!’ என்றார் பீட்டர். பீட்டரும், காதலியும் இன்னொரு ஊரில் உள்ள சொகுசு அரண்மனைக்கு ‘ஜாலி ட்ரிப்’ அடித்தார்கள். வெளிப்படையாகவே தன்னை இப்படி அவமதித்தது கண்டு காதரீன் கோபம் அதிகரித்தது. வெறும் கோபத்தினால் எதையுமே சாதிக்க முடியாது, சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம்தான் வரலாறுகளை மாற்றி அமைக்கிறது என்பது காதரீனுக்கு தெரிந்திருந்தது!

காதரீன் காதலர்களில் முக்கியமானவர் ஓர்லோஃப் பிரபு. அவரையும், அவருடைய இரு சகோதரர்களையும் வரவழைத்த காதரீன் அவசர ஆலோசனை நடத்தினார். ஓர்லோஃப் ராணுவ தளபதிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த, அனைத்து கமாண்டர்களும் ‘நாங்கள் காதரீன் பக்கம்’ என்று உறுதியாக அறிவித்தார்கள். ஒருநாள் மக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட, அத்தனை கமாண்டர்களும் அணிவகுக்க, தலைமைத் தளபதிக்கான யூனிஃபார்ம் அணிந்துகொண்டு காதரீன் குதிரை மீது ஏறி, அரண்மனையிலிருந்து ராஜகம்பீரமாக வெளிப்பட்டார். ‘மகாராணி காதரீன் வாழ்க!’ என்கிற மக்கள் ஆரவாரம் மேகங்களைத் தொட்டது!

பிக்னிக் போன இடத்தில், பீட்டர் தன் காதலியை அணைத்துக்கொண்டு மெய்மறந்திருந்தபோது ரஷ்ய ராணுவ வீரர்கள் அவரைச் சுற்றி வளைத்தார்கள். பீட்டர் வெறும் வாய்ச்சவடால் பேர்வழி என்பது தெரிந்ததே! நடுங்கிப்போய் மன்னர் அழ ஆரம்பித்ததாகக் கேள்வி. கைது செய்யப்பட்ட அவரையும், காதலியையும் சிறையில் தள்ளினார்கள். சில மாதங்கள் கழித்து சிறையில் மாண்டுபோனார் பீட்டர். நோய்வாய்ப்பட்டதாக அரசு அறிக்கை கூறியது. எப்படிச் செத்தார், இதில் காதரீன் பங்கு என்ன என்பதெல்லாம் கடைசிவரை தெரியவில்லை. மக்களும் அதுபற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை!

ரஷ்யா விழாக்கோலம் பூண்டது. மக்கள்வெள்ளம் அரண்மனைக்கு வெளியே அலைபாய்ந்தது. அற்புதமாக அலங்காரம் செய்யப்பட்ட அரசவையில், ராணுவம் அணிவகுத்து நிற்க, உதட்டோரத்தில் மெலிதான புன்னகையுடன் கம்பீரமாக நடந்து சென்று, சர்வவல்லமை பொருந்திய மகாராணியாக அமர்ந்து முடிசூட்டிக் கொண்டார் காதரீன்.

காதரீன் - ‘தி கிரேட்’ ஆனது எப்படி? அதற்கு அவர் இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது...! (மேலும் தொடர்வோம்)


காதலி

மதன்

ஸீ மோன் பொலீவர்

தாய்நாடு என்றில்லாமல் ஒரு கண்டத்துக்கே விடுதலை வாங்கித் தந்த ஸீமோன் பொலீவருக்கு இணையான இன்னொரு சுதந்திர வீரர் வரலாற்றில் இருந்ததில்லை என்பது உண்மை! அதுமட்டுமல்லாமல், தென் அமெரிக்கா முழுவதுமே ஒரு மாபெரும் நாடாக இயங்க வேண்டும் என்கிற, நினைத்துப் பார்க்க முடியாத கனவு அவருக்கு இருந்தது! ‘நடைமுறையில் செயல்படுத்த முடியாத அதீதமான ஆசை இது’ என்று பொலீவரின் நெருங்கிய நண்பர்கள் கவலையோடு எடுத்துச் சொன்னார்கள். ‘முடியும்’ என்று அடித்துச் சொன்ன பொலீவர் அதற்கான அரசியல் சட்டத்தை ராப்பகலாக அமர்ந்து தயாரிக்கத் துவங்கினார். அந்த அமைப்புக்கு ‘கிராண்ட் கொலம்பியா’ என்கிற பெயரைக்கூட தயாரித்தார் பொலீவர்!

ஏராளமான படிப்பறிவு இருந்ததால் பொலீவருக்கு அமெரிக்க சுதந்திரப் போராட்டம் மற்றும் ப்ரெஞ்சுப் புரட்சி பற்றி அத்தனை நுணுக்கமான தகவல்களும் நன்கு தெரிந்திருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளிலிருந்து மிகச்சிறந்த விஷயங்களைத் தேர்ந்தெடுத்து மொத்த தென் அமெரிக்காவுக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க முடியும் என்று அவர் நம்பினார். (உதாரணமாக, அமெரிக்க ஆட்சியில் அடிமைகளை வைத்துக் கொள்வது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டதை அவர் அடியோடு வெறுத்தார்).

சிறு சிறு தனி சுதந்திர நாடுகளாக தென் அமெரிக்கா பிரிவது ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பினார் பொலீவர். ‘நம்மக்கள் பல ஆண்டுகள் அடிமைத்தனமான வாழ்க்கையில் உழன்றவர்கள். அவர்களை முழுமையான ஜனநாயகம் என்கிற ஒளிவீசும் சூரியன் முன் சென்று திடீரென்று நிறுத்தினால், அவர்கள் கண் கூசும்! ஆகவே, அவர்களை படிப்படியாகப் பழக்க வேண்டும்!’ என்றார் அவர். இப்போதும் பல முதிர்ச்சியடையாத நாடுகள் சுதந்திரம் என்கிற பொக்கிஷத்தை போகிற போக்கில் பெற்றுவிட்டுப் பிறகு சீரழிவதைப் பார்க்கும்போது பொலீவர் சொன்னதில் உண்மை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது!

சில சமயங்களில் உலகப் பெரும் போராளிகளுக்கு அதீதமான சில லட்சியங்களும், கனவுகளும் இருந்து தொலைக்கின்றன! வரலாற்றையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட அவர்கள் அவசரத்துடன் முனைகிறார்கள். தங்கள் கொள்கைகளின் மீது இருக்கும் பிடிவாதத்தினால், விட்டுக் கொடுத்தலை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அரசியலில் ‘விட்டுக் கொடுத்தல் (Compromise)’ முக்கியமானதொரு அங்கம் வகிக்கிறது. லட்சியக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பொலீவரின் கனவு செயல்வடிவம் பெறக்கூடிய ஒன்றுதான். ஆனால்... சுதந்திரப் போராட்டத்தில் பொலீவர் என்னும் தனி மனிதருடன் இணைந்து நின்ற எல்லோருடைய கனவுகளும் அவருக்கு இணையாக விசுவரூபம் எடுத்திருந்தால், அவர் விரும்பியது நடந்திருக்கக்கூடும்!.

மொத்தத்தில், அவர் விடுதலை வாங்கித்தந்த அத்தனை பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் தனிநாடுகள் வேண்டும் என்று சுயநலத்துடன் ஆசைப்பட்டார்கள். அதாவது, சுதந்திரம் அடைந்துவிட்டதால் எல்லோருமே தலைவராக ஆசைப்பட்டார்கள்! அவர் பின்னால் கட்டுப்பாடோடு வந்த பரிகள் எல்லாம் மெள்ள மெள்ள நரிகளாக மாறத்துவங்கின. ஆங்காங்கே பொலீவருக்கு எதிராகவே போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. அப்படியும் நம்பிக்கையிழக் காமல் தென் அமெரிக்காவை ஒன்றுபட வைக்க வேண்டி பல மாநாடுகளும், பேச்சுவார்த்தைகளும் நடத்தினார் பொலீவர். எல்லாமே தோல்வியில்தான் முடிந்தன.

இதுகுறித்து, தென் அமெரிக்காவின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பொலீவர். அவருக்கு மக்கள் தந்த வரவேற்பையும் எழுப்பிய ஆரவாரத்தையும் கண்டு குள்ள நரிகள் கவலைப் பட்டன...

செப்டம்பர் 25ம் தேதி, 1828ல் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த அவரை கொல்வதற்கான முயற்சியில் சிறுமதி படைத்த ஒரு கூட்டம் முயற்சித்தது. அப்போது அவரைக் காப்பாற்றியவர் - காதலி மான்யூவேலா ஸீன்ஸ்! வீறிட்டு அலறி, மெய்க்காவலர்களை வரவழைத்து, சதிகாரர்களின் கவனத்தைத் திருப்பி, பொலீவரை குதிரை மேலேற்றி தப்ப வைத்தார் ஸீன்ஸ். பிற்பாடு நெகிழ்ச்சியுடன் பொலீவர் சொன்னார் - ‘அவள் விடுதலை வீரனைக் காப்பாற்றிய விடுதலை வீராங்கனை (The Liberator of the Liberator!)’.

இருப்பினும், இதற்குப் பிறகு நம்பிக்கையிழக்க ஆரம்பித்தார் பொலீவர். ‘குறுகலான மனப்பான்மை யுடன் சுருக்கமான வெற்றிகளுக்கு இவர்கள் பேராசைப்படுகிறார்கள். ஒரு நாட்டின் திட்டமிடப் பட்ட பிரமாண்டம்தான் வல்லமை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. இத்தனை காலம் கடல் நீரிலா நான் உழுது கொண்டிருந்தேன்?! (Have I ploughed in the sea?!)’ என்று வருந்தினார் பொலீவர்.

எல்லா சோதனைகளுக்கு நடுவிலும் அவர் மனதை லேசாக ஆக்கி முகத்தில் புன்னகையை ஏற்படுத்திய ஒரே சக்தி - அவரது காதலி மான்யூவேலா ஸீன்ஸ்!

ஸீன்ஸ் ஏற்கெனவே திருமணமானவர். அவரது தந்தை ஸீன்ஸை விட இருமடங்கு வயதான ஒரு பணக்கார, பிரிட்டிஷ் வியாபாரிக்கு மகளை மணம் செய்வித்தார். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைய வில்லை. பொலீவரின் சுதந்திரப் போராட்டத்தினால் கவரப்பட்டு அவருடைய புரட்சிக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, பெண்களைப் புரட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தபோதுதான், பொலீவரை முதன்முறையாக ஒரு வெற்றி ஊர்வலத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. பொலீவர் மீது மலர்க்கொத்தை தூக்கியெறிந்தபோது, கூடவே தன் இதயத்தையும் அவரிடம் இழந்தார் ஸீன்ஸ். பிறகு கணவரை விட்டுப் பிரிந்து பொலீவருக்கு துணையாக நின்று முழுநேரத்தையும் நாட்டின் விடுதலைக்கான போராட்டத்திற்காக செலவிட ஆரம்பித்தார் அவர். பொலீவர்-ஸீன்ஸ் காதல் ‘உலக ரொமான்டிக் வரலாற்றில்’ முக்கியமானது. பொலீவர் எந்த மூலை முடுக்கில் போர்க்களம் அமைத்தாலும் அங்கு சென்று அவருக்கு பணிவிடைகள் செய்தார் ஸீன்ஸ். அப்படியொரு சமயத்தில்தான் பொலீவரை கொலைக்கூட்டத்திலிருந்து அவர் காப்பாற்ற நேர்ந்தது!

பொலீவர் நினைத்திருந்தால், அவரது புகழ் உச்சத்திலிருந்தபோது தன்னை அத்தனை தென் அமெரிக்க நாடுகளுக்கும் சர்வாதிகாரியாக நியமித்துக் கொண்டிருக்க முடியும். பெரு, கொலம்பியா, வெனிஜூவேலா நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் நாட்டுக்கு அதிபராக பதவியேற்க பொலீவரை வற்புறுத்தி அழைத்தனர். ‘உங்கள் ஒருவரின் தலைமையின் கீழேதான் தென் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டு இணைவார்கள். மக்களின் எதிர்கால நன்மைக்காக சர்வாதிகாரியாக பதவியில் அமருங்கள்!’ என்று ஆலோசகர்களும், நண்பர்களும் பொலீவரிடம் வற்புறுத்தினார்கள். ‘என்னை விடுதலைப் போராளியாக உலகமே கருதுகிறது. இந்தப் பட்டத்துக்கு மிஞ்சியது எதுவுமேயில்லை. இப்போது நான் சர்வாதிகாரியாக ஆனால் அந்தப் பட்டப் பெயரில்தான் வரலாறு என்னை பிற்பாடு அழைக்கும். அப்படிச் செய்து உன்னதமான நிலையிலிருந்து என்னை நான் தாழ்த்திக் கொள்ள மாட்டேன்!’ என்று மறுத்துவிட்டார் பொலீவர்.

சர்வாதிகாரம் தற்காலிகமானது. நிரந்தரமான அரசியலமைப்புச் சட்டத்தினால்தான் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்த முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால், நிலைமை தன் கட்டுக்குள் இல்லையென்பது பொலீவருக்குப் புரிந்துபோனது. ‘என்னுடைய பணி முடிந்துவிட்டது என்று இறைவன் என் காதில் சொல்வது போல நான் உணர்கிறேன். ஒருவேளை என்னை அழைக்கிறானோ என்னவோ...!’ என்று பொலீவர் சொன்னது கேட்டு நண்பர்கள் கலங்கினார்கள். திடீரென்று ஒருநாள் ‘நான் தென் அமெரிக்காவிலிருந்து வெளியேறி ப்ரான்சு நாட்டில் என் கடைசி காலத்தைக் கழிக்கப் போகிறேன்...’ என்றார் பொலீவர் முடிவாக. எல்லோரும் திகைத்தனர். பொலீவர் இப்படிச் சொல்வது மக்களுக்குத் தெரிந்தால் என்னவாகுமோ என்ற கலக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது.

உலக வரலாற்றில், எழுதி எழுதிக் குவித்த தலைவர்கள் மிகச் சிலரே. அவர்களில் பொலீவரும் ஒருவர். அவர் எழுதிய வரலாற்றுக் கருத்துக்கள், சட்டங்கள், டயரிகள், கடிதங்கள், காதலியிடமிருந்து வந்த கடிதங்கள்... இவற்றை அடுக்கி வைக்க நூற்றுக்கணக்கான பெரிய பெட்டிகள் தேவைப்பட்டன. அவற்றை முதலில் பிரான்சு நாட்டுக்கு கப்பலில் அனுப்பினார் பொலீவர். இனி அவரது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்று அவரது சகாக்கள் புரிந்து கொண்டார்கள். ஏப்ரல் 27, 1830. ‘சகலவிதமான பதவிகளிலிருந்தும் தான் விலகுவதாக’ அறிக்கையொன்றை தயாரித்துத் தந்துவிட்டு துறைமுகத்தை நோக்கி, இறுதியாக, அவர் குதிரையில் சென்றபோது, மக்கள் கூட்டம் அவர் பின்னால் ஓடிக் கதறியது. சலனமில்லாமல், கடைசிமுறையாக மக்களைத் திரும்பிப் பார்த்து கையசைத்துவிட்டு கப்பல் மீது ஏறினார் பொலீவர். அவர் கால்கள் சற்றுத் தடுமாறின.

கொஞ்ச காலமாகவே பொலீவரின் உடல்நிலை சரியில்லை. மருத்துவர்கள் காச நோய் என்று தெரிவித் தார்கள். காசநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் அது. ஆட்கொல்லி நோயாக இருந்தது அது. பயணத்தில் பாதி வழியில் திடீரென்று பொலீவரின் உடல்நிலை மோசமானது. கப்பலை கொலம்பியா பக்கம் திருப்பினார்கள். அவசர அவசரமாக அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். மருத்துவர்கள் அவருடைய சட்டையை அகற்றிப் பார்த்தபோது எலும்புகள் துருத்திக் கொண்டு இளைத்துப் போயிருந்தார் அந்த மாவீரர். விபரீதமாக மூச்சு வாங்கியது.

மருத்துவர்களுக்கு கொடுக்க பணமில்லை பொலீவரிடம். சற்றும் பணமில்லாமல் கப்பலேறியிருந்தார் அந்த உலக மகா போராளி. ‘றிமீஸீஸீவீறீமீss’ என்கிறது வரலாறு! டிசம்பர் 17, 1830. மருத்துவமனையில், நெருங்கிய நண்பர்கள் சூழ, பொலீவரின் கண்கள் நிரந்தரமாக மூடிக்கொண்டபோது அவ ருடைய வயது 47.

இறப்பதற்கு முன்பு தன்னுடைய பிரதம மெய்க்காப் பாளராக இருந்த ஜெனரல் டேனியல் ஓ’லியரியை அருகில் அழைத்து ‘நான் எழுதிய அத்தனை விஷயங்களையும், டயரிகள், கடிதங்கள் உட்பட... எரித்துவிடுங்கள்!’ என்றார் அவர். சற்று மௌனத்துக்குப் பிறகு மென்மையாக ‘அவளை... பார்த் துக் கொள்ளுங்கள்!’ என்றார் பொலீவர். தலையசைத்த ஓ’லியரி நல்லகாலமாக, அவருடைய பிரதிகளை எரிக்கவில்லை. பொலீவர் பற்றிய ஏராளமான (நூற்றுக்கணக்கான) புத்தகங்கள் பிற்பாடு எழுதப்பட அவையெல் லாம்தான் ஆதாரமாக அமைந்து உதவின. வரலாறு ஜெனரல் ஓ’லியரிக்கு நன்றி சொல்ல வேண்டும்!

முன்னொரு சமயம், பொலீவர் பிறந்து வளர்ந்த காராக்காஸ் ஊரின் நகராட்சி அவருடைய சிலையை ஊர் மையத்தில் நிறுவ வேண்டி மசோதா ஒன்றை நிறைவேற்றி, அதோடு அவரை வந்து சந்தித்தார்கள். பொலீவர் அந்த மசோதாவை கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சொன்னார் - ‘யாராக இருந்தாலும் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சிலை வைக்காதீர்கள். சிலை வைத்த பிறகு அந்த மனிதர் சீரழியலாம் இல்லையா? இறந்த பிறகுதான் ஒருவருக்கு சிலை வைக்கும் தகுதி இருக்கிறதா என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்!’ என்று சொல்லி திருப்பியனுப்பினார்.

அவர் இறந்த பிறகு போட்டி போட்டுக் கொண்டு, தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் அவர் சிலையை தலைநகரங்களில் வைத்தன. அந்த மாவீரரின் சாதனைகளைக் கண்டு பிரமித்துப் போயிருந்த மற்ற உலக நாடுகள் அதை வழிமொழிந்து பொலீவர் சிலையை தங்களுடைய முக்கிய நகர மையங்களில் எழுப்பிப் பெருமிதம் அடைந்தன. இன்று, யு.எஸ்., பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, எகிப்து, கனடா.. (ஸாரி, ரொம்பப் பெரிய லிஸ்ட் இது!) என்று ஏராளமான நாடுகளில் கம்பீரமான, விதவிதமான தோற்றங்களில் பொலீவரின் சிலைகளை நாம் பார்க்கலாம்! அநேகமாக எல்லாமே அந்தந்த நாட்டின் பிரபல சிற்பிகள் வடித்த அற்புதச் சிலைகள்!

கொலம்பியாவில் புதைக்கப் பட்ட பொலீவரின் உடல், வெனிஜூவேலா மக்கள் வேண்டுகோளுக்கிணங்கி, 12 ஆண்டுகள் கழித்து, தோண்டியெடுக்கப்பட்டு அவர் பிறந்த காராக்காஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தாய் மண்ணில் புதைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்க, கப்பலில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் வெனிஜூவேலாவில் நுழைந்தபோது, உலக நாடுகளின் தலைவர்கள் அங்கே வருகை தந்து, அணிவகுத்து நின்று மெய்சிலிர்க்க ‘சல்யூட்’ அடித்தனர்.

பின்குறிப்பு -

பொலீவரின் உயிருக்குயிரான, அவருக்குக் கடைசி வரை பணிவிடை செய்து பெருமைப்பட்ட காதலி மான்யூவேலா ஸீன்ஸ் என்ன ஆனார்?

சுயநலத்துக்காக, ஒரு அடையாளச் சின்னமாக பொலீவரைப் பயன்படுத்துவது வேறு. அவருடைய காதலியை மரியாதையாக நடத்துவது வேறு! அந்தப் பெண்ணை யாருமே பாதுகாக்கவில்லை. பொலீவர் சுதந்திரம் வாங்கித் தந்த எந்த இலத்தீன் நாட்டு தலைவர்களும் அந்தப் பெண் தங்கள் நாட்டில், பொலீவரை நினைவு படுத்தியவாறு தங்கியிருப்பதை விரும்பவில்லை. கடைசியில் பெரு நாட்டில், கடற்கரையோரமாக உள்ள பாய்ட்டா என்கிற சிற்றூரில் அவர் சுருட்டுகள் விற்றும், அங்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தும் வறுமையில் வாடிக் காலம் தள்ளினார்.

1847ல் அவருடைய முதல் கணவர் இறக்க, அதற்கான பென்ஷன் தொகைகூட அவருக்குத் தராமல் ஏமாற்றினார்கள். ஒரு நாள் மாடிப்படியிலிருந்து தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டு, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் விந்தியவாறு நடந்தார் ஸீன்ஸ்.

கடைசி வரை ஆதரவின்றி, 1856ல் காலமானார் ஸீன்ஸ். அவர் எழுதி வைத்த உயிலின்படி பொலீவர் அவருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தும் பொலீவரின் மியூஸியத்துக்காக தரப்பட்டன. அந்தக் கடிதங்களைப் படித்துவிட்டு இலத்தீன் அமெரிக்க அறிஞர்களும், இலக்கியவாதிகளும் பொதுமக்களும் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார்கள். மான்யூவேலா ஸீன்ஸின் உடல் வெனிஜூவேலா நாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்கிற முழக்கத்துடன் மாபெரும் பேரணி ஒன்று நிகழ்ந்தது.

ஒருவழியாக அந்தக் காதலியின் உடல் தாய் மண்ணுக்குக் கொண்டுவரப்பட்டது எப்போது தெரியுமா வாசகர்களே! இதோ இந்த 2010ம் ஆண்டு, ஜூலை 5ம் தேதி!

பொதுவானதொரு இடுகாட்டில், ஏதோ மூலையில் புதைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, வெனிஜூவேலாவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு.. பொலீவரின் உடலுக்கு அருகே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில், அரசாங்க மரியாதையுடன் புதைக்கப்பட்டது...! (மேலும் தொடர்வோம்)

ஜீனியஸ்

வானில் ஓர் மாபெரும் சக்தி...!

டெஸ்லா!

மதன்

டெஸ்லா! எடிசனை விட்டுப் பிரிந்ததைத் தொடர்ந்து, நிகோலா டெஸ்லா அமெரிக்காவில் ‘டெஸ்லா எலக்ட்ரிக் லைட் கம்பெனி’ என்கிற நிறுவனத்தைத் துவக்கினார். உடனே அவர் கைகள் பரபரத்தன. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முதலில் அவர் அங்கே கண்டுபிடித்து உருவாக்கியது ‘ஆர்க் லைட்’ (இப்போதும் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுகிறது!).

ஆனால் மேனேஜ்மெண்ட் சாதுர்யம் இல்லா ததால் அவரை நைஸாக, முதலீடு செய்தவர்கள் கழற்றிவிட்டு ‘ஆர்க் லேம்ப்’ பிஸினஸை கையகப்படுத்திக் கொண்டார்கள். பைத்தியக்காரர்கள்! டெஸ்லா ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதை அவர்கள் உணரவில்லை!

மீண்டும் சுறுசுறுப்போடு முனைந்து புதிய நிறுவனம் ஒன்றைத் துவக்கினார் டெஸ்லா. அங்கேதான் அவருக்கு ஏ.சி. மின் அலைகளின் (A.C current) உபயோகங்கள் மூளைக்குள் உதயமாயின. யாருமே அதுவரை கற்பனை செய்திராத A.C மின்சாரத்தை பயன்படுத்தும் மோட்டர்கள் போன்ற ஏராளமான உபகரணங்களை அவர் கண்டுபிடித்து, உருவாக்கியது ஒரு உலகப் புரட்சி என்று கூறலாம்.

1891ல் ஜார்ஜ் வெஸ்டிங் ஹவுஸ் என்கிற பெரும் செல்வந்தர் டெஸ்லாவின் ‘ப்ளான்’களை அறுபதினாயிரம் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கி, மாதா மாதம் 2000 டாலர் சம்பளமும் தந்து, அவருக்கு சகல உதவிகளையும் செய்து தந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் அதுவரை பயன்படுத்தியது ‘D.C கரண்ட்’டைத்தான். “அது பிரயோசனமில்லை. A.C தான் உலகை ஆளப்போகிறது!” என்று முழங்கினார் டெஸ்லா. இதனால் இருவருக்கும் மோதல் அதிகரித்தது. ‘A.C.ஆபத்தானது!’ என்று அறிக்கை வெளியிட்ட எடிசன், டெஸ்லாவை இந்த விஷயத்தில் தோற்கடிக்க சில தகாத வழிகளைப் பின்பற்றினார். நிறைய சிறுவர்களுக்கு பணம் தந்து அணில்களையும், எலிகளையும் பிடித்துவரச் செய்து அவைகளுக்கு ‘ஷாக்’ தந்து கொன்று ஊரெங்கும் அவற்றின் உடல்களை வீசி ‘இதற்கெல்லாம் காரணம் ஏ.சி. மின்சக்திதான்!’ என்று வதந்தியைப் பரப்பினார் எடிசன். இதற்குக் காரணம் உண்டு. அப்போது யு.எஸ். நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை ‘மின்சார நாற்காலி’யில் அமர வைத்துக் கொன்றார்கள். அதற்காக ‘டி.சி. கரண்ட்’டை பயன்படுத்தலாமா, ஏ.சி.யா? என்கிற வாதங்கள் ஏற்பட்டிருந்தன. ‘டி.சி.தான் பெஸ்ட்’ என்ற எடிசன் அதற்காகவே ஒரு மின்சார நாற்காலியைத் தயாரித்தார். நிஜமாகவே மரண தண்டனைக் கைதி ஒருவரை நாற்காலியில் அமர்த்தினார்கள். எடிசனின் என்ஜினியர்கள் செய்த கோளாறினாலும், வீக்காக மின்சாரம் பாய்ந்ததாலும், கைதி கால்மணி நேரத்துக்கு மேல் வறுத்தெடுக்கப்பட்டு, துடித்து - பிறகு பலமுறை மின்சாரத்தைப் பாய்ச்சி அவரைக் கொல்ல வேண்டி வந்தது! இந்தக் கண்றாவியை பார்த்துக் கொண்டிருந்த காவலதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் நடுங்கிப் போனார்கள். பிற்பாடு, ஏ.சி. கரண்ட்டை பயன்படுத்தியபோது ஜம்மென்று(!) சீக்கிரமாக கைதிகள் செத்துப்போனார்கள். மெள்ள A.C. current கொடி மேலே பறக்க ஆரம்பித்தது. இன்றுவரை உலகை டெஸ்லாவின் கண்டுபிடிப்பான ஏ.சி.தான் ஆள்கிறது! (டெஸ்லாவின் மற்ற அத்தனை கண்டுபிடிப்புகளைப் பற்றி இங்கே விவரமாக விவரிக்க முடியாது. அதற்கு பெரும் ‘வால்யூம்’கள் தேவைப்படும்!)

1893ல் அமெரிக்கா முழுவதும் டெஸ்லாவின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. ஆடம்பரமாக வாழ்ந்தார் அவர். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தார். ஆனால் நகை அவருக்குப் பிடிக்காது. வாட்ச் கூட அணிய மாட்டார். அவரைப் பார்க்க வரும் பெண்கள் நகைகளைக் கழற்றி வெளியில் வைத்துவிட்டுத்தான் உள்ளே நுழைய முடியும்! ரொம்பப் பருமனாக இருப்பவர்களைக் கண்டால் நடுங்கும் ஃபோபியாவும் அவருக்கு இருந்தது. அவரிடம் செகரெட்டரியாக பணிபுரிய வேண்டி, அறைக்குள் நுழைந்த பருமனான பெண்மணியைப் பார்த்து திகிலடைந்து ஓடிச் சென்று மேஜைக்கடியில் ஒளிந்து கொண்டு ‘வெளியே போ!’ என்று டெஸ்லா வீறிட்டு அலறியதுண்டு!

ஐஸக் நியூட்டன், மைக்கேல் ஏஞ்சலோ போன்ற பல ஜீனியஸ்களைப் போல டெஸ்லாவும் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. “யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் & கண்டுபிடிப்பு விஞ்ஞானியைத் தவிர(Inventor). மிகவும் ஆழ்ந்து உழைக்க வேண்டிய வேலை இது. அருகே ஒருவரது நிழலாடினால் கூட கவனம் சிதறும். இல்லறத்தில் அதையெல்லாம் தவிர்க்க முடியாது!” என்றார் டெஸ்லா ஒருமுறை திட்டவட்டமாக!

டெஸ்லாவின் பல ‘கண்டுபிடிப்பு அறிவிப்புகள்’ மற்ற விஞ்ஞானிகளை திகைக்க வைத்தது. வானவெளியில் மின் அலைகளைச் செலுத்தி, காற்று மண்டலத்தை (Atmosphere) ஒளிவீசச் செய்து (Gas light போல!) இரவைப் பகலாக்க முடியும் என்றார் டெஸ்லா!

இன்னொரு முறை, செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான உயிரினங்கள் இருப்பதாகவும் அவற்றோடு (அல்லது அவர்களோடு!) தொடர்புகொள்வதற்கான சோதனைகளில் தான் அநேகமாக வெற்றி கண்டுவிட்டதாகவும் அறிவித்தார் அவர். அதற்கான வரைபடங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

போகப்போக மிகவும் விசித்திரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார் டெஸ்லா. நாளின் பெரும்பகுதியை கும்மிருட்டில் செலவழிக்க ஆரம்பித்தார். (இதற்கு Scotophillia என்று பெயர்!) ஒரு விளக்கைப் போட்டால் கூட அலறல்! இது தவிர, அவருக்கு pathophobiaவும் வந்து சேர்ந்தது. அதாவது எங்கு பார்த்தாலும் கிருமிகள் இருப்பதாக அச்சம்!

டெஸ்லாவின் கடைசி காலத்தில், Columbiphilic ஆக ஆனார். (மிரளாதீர்கள். அப்படியென்றால் புறாக்களின் மீது பாசம் என்று பொருள்!)

வீட்டில், அவருடைய அறையில் நூற்றுக் கணக்கில் புறாக்களிருந்தன. ஒரு முறை நண்பரொருவர் வந்தபோது நாற்காலி முழுவதும் நூற்றுக்கணக்கான புறாக்கள் அப்பிக்கொண்டும், சிறகடித்துக் கொண்டுமிருந்தன. அவற்றையெல்லாம் விலக்கிப் பார்த்த நண்பர் திகைத்துப் போனார். உள்ளே டெஸ்லா & மெய்மறந்த நிலையில்! ஏதாவது ஒரு புறாவுக்கு சிறிய காயம் என்றால் கூட அதை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடுவார் டெஸ்லா. “புறாவை தன் அம்மாவாகக் கருதினார் டெஸ்லா!” என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்!

மார்பகங்களும் அவரை பயமுறுத்தி நிலைகுலைய வைத்தன. “அம்மாவின் மார்பகங்கள் நினைவுக்கு வந்ததால்தான் இப்படி!” என்பது மனோதத்துவவாதிகளின் கருத்து. போகப்போக, உருண்டையாக இருக்கும் எதைப் பார்த்தாலும் நடுங்க ஆரம்பித்தார் டெஸ்லா!

இன்று, மின்சக்தி, ரேடியோ, காந்த சக்தி, ஒலி&ஒளி அலைகள் & இவற்றையெல்லாம் மனிதன் கையகப்படுத்திவிட்டான். இதையெல்லாம் மிஞ்சிய ஒரு மாபெரும் சக்தி அகண்ட கண்டத்தில் இருப்பதாகவும், அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் டெஸ்லா நம்பினார். அதற்கான ஆராய்ச்சிகளில் தன் கடைசி காலத்தை செலவிட்டார் அவர். அந்த சக்தியை மட்டும் வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் வேற்றுக் கிரகவாசிகளுடன் நாம் நேரடித் தொடர்பு கொள்ள முடியும் என்றார் அவர். டெஸ்லாவுக்கு இந்து & புத்த மதங்களின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இந்துக்களின் வேதங்களில், மறைமுகமாக, பல ஆச்சர்யமான விஞ்ஞானத் தகவல்கள் உண்டு என்றார் டெஸ்லா. அவர் குறிப்பிட்ட அந்த மாபெரும் சக்தியைத்தான் நாம் ‘பிரும்மம்’ என்று குறிப்பிடுகிறோமோ!

இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மின்சக்தியால் இயங்கும் ஆச்சர்யமான, மகாசக்தி பொருந்திய ஒரு ஆயுதத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார் டெஸ்லா. அதற்கு அவர் இட்ட பெயர் -Death ray! அதற்கான நிதி உதவியை யு.எஸ். தர மறுத்துவிட்டது. மின்னல் வேகத்தில் (மின்னலைப் போலவே!) சென்று 250 மைல் தொலைவில் வரும் போர் விமானங்களை, சத்தம் துளியும் எழுப்பாமல், பொசுக்கி அழிக்கும் கருவிதான் Death ray! ஆனால், அதற்குள் டெஸ்லாவை ‘மனநிலை பாதிக்கப்பட்ட விசித்திரமான மனிதராக’ அமெரிக்கா பார்க்க ஆரம்பித்துவிட்டதால், அவருடைய அறிவிப்புகளை அரசாங்கமோ, விஞ்ஞானிகளோ சட்டை செய்யவில்லை...!

சரியான முறையில் பணத்தை முதலீடு செய்யாததாலும், பல உபகரணங்களுக்கு காப்புரிமை பெறாததாலும், கிறுக்குத்தனமான வாழ்க்கையை மேற்கொண்டதாலும் டெஸ்லா தன் இறுதி ஆண்டுகளை வறுமையில் கழிக்க வேண்டியிருந்தது. ஜனவரி, 7, 1943ல் டெஸ்லா தன் 86வது வயதில் ஒரு லாட்ஜில், மூலையில் இருந்த அறையில், மாரடைப்பால் இறந்து போனார். அவர் விரும்பியபடி இந்துமத வழக்கப்படி அவர் உடல் எரிக்கப்பட்டது. டெஸ்லாவின் சாம்பலை இன்றும் செர்பியாவில், மியூசியத்தில் காணலாம்!

அறைக்கு வெளியே, கதவில், ‘DO NOT DISTURB’ என்கிற அறிவிப்பு அட்டையை தொங்கவிட்டிருந்ததாலும், அவரைச் சந்திக்க யாருமே பயந்து வராமலிருந்ததாலும், சில நாட்கள் கழித்தே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போன ஓட்டல் நிர்வாகிகள் எலும்பும் தோலுமான அவர் உடலைப் பார்த்தார்கள்.

ஆபத்தான கண்டுபிடிப்புகளுக்கான வரைபடங்கள் அவரிடம் இருக்கக்கூடும், அது தீயசக்திகளின் கைகளுக்கு கிடைக்கக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை காரணமாக, அமெரிக்க துப்பறியும் பிரிவு (F.B.I) அவரது உடைமைகளை, பெட்டி பெட்டியாக, சீல் செய்து கொண்டு சென்றுவிட்டனர். இன்றுவரை டெஸ்லாவின் மற்ற கண்டுபிடிப்புகள் என்னவென்பது உலகுக்கு தெரியப்படுத்தப் படவில்லை!

1957ல் - திடீரென்று உலகின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாக பலர் கலவரத்துடன் அறிவித்தார்கள். டெஸ்லாவின் விசுவாசமான சில விஞ்ஞானிகள் அவரது உபகரணங்களைப் பயன்படுத்தி வேற்றுக் கிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டதால்தான் பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்து நோட்டம் பார்க்கின்றன என்று சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. அமெரிக்க விஞ்ஞானிகள் உடனே டெஸ்லாவின் பெட்டிகளைத் திறந்து அவரது ஆராய்ச்சித் தாள்களை சோதித்தார்கள். பிறகு, பெட்டியை மீண்டும் மூடி சீல் வைத்துவிட்டார்கள். ‘அப்படி ஒன்றுமில்லை. The case is closed’ என்கிற ஒரு வரி அறிக்கை மட்டும் யு.எஸ். அரசால் வெளியிடப்பட்டது...!

பின் குறிப்பு:

‘ஜீனியஸ்’ என்கிற வார்த்தையை நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். திறமையானவர்களை (ஜிலீமீ ஜிணீறீமீஸீtமீபீ)க்கூட ‘ஜீனியஸ்’ என்று அழைக்கிறோம். அது தவறு! திறமை என்பதை கடந்த ஒரு மாபெரும் சக்திதான் ‘ஜீனியஸ்’. ‘ஜீனி’ என்கிற வார்த்தைக்கே ‘பூதம்’ என்கிற அர்த்தம் உண்டு! அலாவுதீனின் அற்புத விளக்கிலிருந்து வெளிப்பட்டது ‘ஜீனி’யே! உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இவர்களில் அசாத்திய திறமையுள்ளவர்கள் உலகுக்கு தந்துவிட்டுச் சென்ற அற்புதங்கள் எத்தனையோ! அவர்களை மிஞ்சி உலக (சமுதாய, விஞ்ஞான, கலை) வரலாற்றையே மாற்றியமைத்த ஜீனியஸ்களும் நிறையவே உண்டு. டெஸ்லாவைப்பற்றி நான் கடைசியாக எழுதியதற்குக் காரணம் - ‘ஜீனியஸ்’ என்பது எவ்வளவு சிக்கலானது, விபரீதமானது, பிரமிப்பானது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்!

ஒரே துறையிலே கூட நிறைய ‘ஜீனியஸ்’கள் இருந்திருக்கிறார்கள். ஓவிய, சிற்பத்துறை என்று குறிப்பாக எடுத்துக் கொண்டாலே, அதில் மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்ச்சி, வான் கோ, ரோடான், ரென்வார், .... என்று பெரிய லிஸ்ட் போட முடியும்!

நான் ‘சூரிய கதிரி’ல் எழுதியது சிறிய அளவிலான அறிமுகக் கட்டுரைகள் என்றே வாசகர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் வாசகர்களை சந்திக்கும் வரையில (ஓய்வெடுப்போம்!)





     RSS of this page