Home / FlyingElephants

FlyingElephants


நீங்கள், நீங்களாக மாறவேண்டுமா?! - அவள் விகடன் - 2014-09-09

''பெண்கள் தங்களுடைய முகத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள காட்டும் அக்கறையில் பாதியளவுகூட, தங்களின் மனதை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வதில் காட்டுவதில்லை'' என்று வருத்தம் பொங்கச் சொல்கிறார்... திறன் மேம்பாட்டு பயிற்சி (Mind Fresh Training) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீர்த்தன்யா. இவர், இத்தகைய பயிற்சிகளை கார்ப்பரேட் கம்பெனிகள், கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்து தரப்பினருக்கும் தந்துகொண்டிருக்கிறார்!

''பொதுவாக, பெண்கள்தான் தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளை மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டு, அதிலிருந்து விடுபடவும் வழி தெரியாமல், வேறு வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ளவும் முடியாமல், மனஅழுத்தத்துக்கு தங்களை உள்ளாக்கிக்கொள்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களில் பலரும்... வீடு, வேலை என்கிற இரட்டைக் குதிரை சவாரியை கையாள்வதால் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களில் பலரும் குடும்பம் மட்டுமே தங்களுடைய அடையாளம் எனக் கொண்டு, அதற்கே தன்னை அடிமையாக்கிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் இந்தப் பெண்கள் பெறும் பரிசு... மனஅழுத்தங்களே!'' என்றவர்,

''இன்று எண்ணிலடங்கா வாய்ப்புகள்... முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத வசதிகள்... முன்னேற்றங்கள் எல்லாம் வந்துவிட்டன. சொல்லப்போனால், அந்தக் கால ராஜாக்கள், மகாராஜாக்களையெல்லாம்விட நாம் வசதியாகத்தான் இருக்கிறோம். கணினி, இணையம் என தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் உலகமே விரல்நுனிக்கு வந்துவிட்டாலும், இந்த வாய்ப்புகளை நம்மில் எத்தனை பேர் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்? இந்தக் கேள்விக்குப் பதிலாக, 'பறக்கும் யானைகள்' (Flying Elephants) எனும் பயிற்சி பாடத்தை உருவாக்கி, பலருக்கும் பயிற்றுவித்து வருகிறேன். பெண்களுக்கு, தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சி வகுப்புகளும்  (leadership qualities workshop) நடத்துகிறேன். பொதுவாக, நமக்கே நமது திறமைகள் மீது முழு நம்பிக்கை இருப்பதில்லை. இதையெல்லாம் தாண்டி சாதிக்க வழிகாட்டும் பயிற்சி வகுப்புகளைத்தான் நான் வழங்குகிறேன்'' எனும் கீர்த்தன்யா, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பஞ்சட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்.

''சென்னை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் கிளினிக் கல் சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு, தொலைதூரப் படிப்பு மூலமாக அதை முடித்து, சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆந்திராவில் களப்பணியில் இருந்தபோது, அங்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், 'உங்களின் பேச்சுத் திறனும், ஊக்குவிக்கும் திறனும் அபாரம். நீங்கள் ஏன் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது?’ என்று கேட்டார். பிறகுதான், சின்னச் சின்ன குழுக்களை ஒருங்கிணைத்து, பல்வேறுவிதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் என பலருக்கும் பயிற்சிகள் வழங்கி வருகிறேன்.

நண்பர்கள் சிலர் இணைந்து, சொந்தமாக திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் தொடங்கினோம். பிறகு அதிலிருந்து வெளியேறி, சொந்த நிறுவனத்தை நிறுவினேன். கிராமப்புறத்தினருக்கு இலவசமாகவும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்திலும் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்'' என்று சொல்லும் கீர்த்தன்யா, இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

''என் பயிற்சியால் நான்கு பேர் வாழ்க்கையில் முன்னேறும் உத்வேகம் பெறுவதைக் கண்கூடாகப் பார்ப்பதே, இதுவரை நான் வாழ்வில் சந்தித்த பெரிய சந்தோஷம், திருப்தி, நிறைவு!'' என்கிறார் புன்னகையோடு!

 



     RSS of this page