டி.எம்.எஸ்.!
தமிழக மக்களைத் தனது கம்பீரக் குரலால் நாலு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு
வைத்திருந்த ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு, தெள்ளத்
தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன். பாடல் வரிகளில் உணர்ச்சியைக்
குழைத்து, உயிரூட்டிய இசை பிரம்மா. தமிழ் மக்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்,
சிவாஜி ரசிகர்கள் என இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில், இரு தரப்பினரின்
மனதிலும் தன் கந்தர்வக் குரலால் எம்.ஜி.ஆராகவும் சிவாஜியாகவும்
அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்
சங்கீத சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய திரை இசைச் சக்கரவர்த்தி.
மார்ச்
25-ஆம் தேதியன்று அவரின் பிறந்த நாள். அதற்காக, முதல் நாள் இரவே ஒரு
கட்டுரையை கம்போஸ் செய்து முடித்தேன். முடிக்கும்போது விடியற்காலை மணி 3.
எனவே, பிளாகில் ஏற்றவில்லை. மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று
விட்டுவிட்டேன்.
மறுநாள், காலை 8 மணிக்கு மேல்தான் விழிப்பு வந்தது. அவசர அவசரமாகக் குளித்து ஆபீஸ் செல்லவே நேரம் சரியாக இருந்தது.
அலுவலகம்
சென்றதும், அங்கே என் அருமை நண்பர் பி.என்.பரசுராமன் இருந்தார். சிறந்த
ஆன்மிக மற்றும் இலக்கியவாதி. விகடன் டெலிவிஸ்டாஸுக்காக, சன்
தொலைக்காட்சியில் 'சக்தி கொடு' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குபவர்.
அவரும் நானும் சந்திக்கும்போதெல்லாம் டி.எம்.எஸ். புகழ் பாடிக்கொண்டு
இருப்போம்.
அவர் என்னைப் பார்த்ததும், "தெரியுமில்லையா, இன்றைக்கு
டி.எம்.எஸ். பிறந்த நாள். வழக்கமாக அவர் பிறந்த நாளன்று அவரைப் போய்ப்
பார்த்து, ஆசி வாங்கி வருவது என் வழக்கம். இன்றைக்கும் செல்லவிருக்கிறேன்.
வருகிறீர்களா?" என்றார். 'ஐயோ!' என்றிருந்தது. அங்கே இங்கே நகர
முடியாதபடி, அலுவலக வேலைகள் குவிந்திருந்தன. என் நிலைமையைச் சொன்னேன்.
கூடவே, டி.எம்.எஸ்ஸைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற என் 40 ஆண்டுக் கால
தவிப்பையும் சொன்னேன்.
புன்சிரித்துவிட்டு, "சரி, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்" என்று கிளம்பிவிட்டார் பரசுராமன்.
அவர்
கிளம்பிப் போய் இரண்டு மணி நேரத்தில் அவரிடமிருந்து போன். "ரவிபிரகாஷ்!
இப்போ டி.எம்.எஸ். வீட்டுலதான் இருக்கேன். பேச்சுக்கு நடுவுல உங்களைப்
பத்திச் சொன்னேன். உடனே உங்களோடு பேசணும்கிறாரு! பேசறீங்களா?" என்றார்.
ஜிலீரென்றது. என்னது..! நான் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று தவம் கிடந்த என் பாட்டுத் தலைவன் என்னோடு பேச வேண்டும் என்கிறாரா!
"ஐயா! உடனே போனை அவர்கிட்டே கொடுங்கய்யா!" என்றேன்.
"ரவிபிரகாஷ்!
நான் டி.எம்.எஸ். பேசறேன்" என்ற அவரது கம்பீரக் குரல் என் காதில்
விழுந்ததுதான் தெரியும்... நெகிழ்ந்து, நெக்குருகி, உணர்ச்சிவசப்பட்டு
என்னென்னவோ பேச ஆரம்பித்துவிட்டேன். முந்தின நாள் ஒரு கட்டுரையை ரெடி
செய்தேன் என்று சொன்னேனே, அதில் உள்ளது அத்தனையும் அவரிடம்
கொட்டிவிட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். அவரும் தன் மகிழ்ச்சிகளை
என்னோடு பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியிருப்போம்.
முடிவில், "வாங்கய்யா ஒரு நாள் நம்ம வீட்டுக்கு, நிதானமா பேசலாம்!" என்று அழைப்பு விடுத்தார்.
அந்த இனிய நாள் ஏப்ரல் 9-ம் தேதியன்று எனக்கு வாய்த்தது.
** ** **
'இமயத்துடன்...'
என்கிற தலைப்பில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை டி.வி. சீரியலாகத்
தயாரித்துக்கொண்டு இருக்கிறார் இயக்குநர் விஜய்ராஜ். அதற்காக, டி.எம்.எஸ்.
பழைய நடிகர் ஸ்ரீகாந்த்தைச் சந்தித்துப் பேசப் போயிருந்தார். அதை
முடித்துக்கொண்டு மதியம் 12 மணிக்கு டி.எம்.எஸ். வீட்டுக்கு வருவார்,
அப்போது சந்திக்கலாம் என்று ஏற்பாடானது.
அதன்படியே, ஸ்ரீகாந்த்
வீட்டில் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்ராஜ் பரசுராமனுக்குப் போன் செய்ய,
உடனே நாங்கள் கிளம்பினோம். பரசுராமனுக்குப் பழக்கமான ஒரு ஆட்டோவில்
மயிலாப்பூர் போய், டி.எம்.எஸ். வீட்டு வாசலில் இறங்கினோம். வெளியே
வரவேற்பறையிலேயே காத்திருந்தார். (அது அவரின் மகன் பால்ராஜ் வீடு.
பக்கத்து வீடுதான் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் வீடு! நேர் எதிரே நாலு
மாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. டி.எம்.எஸ்ஸுக்குச் சொந்தமான அதில், முதல்
மாடியில் குடியிருக்கிறார் டி.எம்.எஸ். மற்ற மூன்றையும் வாடகைக்கு
விட்டிருக்கிறார்.)
எங்களைக் கண்டதும், "வாங்கய்யா..! நல்லா
இருக்கீங்களா?" எனக் கனிவோடு, மாறாத அதே பழைய கம்பீரக் குரலில் வரவேற்று
உபசரித்தார். இவருக்கு வயது எண்பத்தாறா? நம்பவே முடியவில்லை.
அவருக்காக நான் வாங்கிக்கொண்டு போயிருந்த போர்ன்விடா பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு சிறிய பார்சலையும் கொடுத்தேன்.
"என்னது இது... அல்வாவா?" என்று ஒரு சிரிப்புடன் கேட்டார். (டி.எம்.எஸ்ஸுக்கு டயபடீஸ் பிராப்ளம் உண்டு!)
"இல்லை
சார்! ஓர் அழகான முருகன் சிலை!" என்றேன். அப்புறம், பிளாகில் ஏற்றுவதற்காக
நான் ரெடி செய்து வைத்திருந்த கட்டுரையைச் சற்றே வாக்கிய மாற்றங்கள்
செய்து, அவருக்கான கடிதமாக மாற்றி ஒரு பிரின்ட்-அவுட் எடுத்து
வைத்திருந்தேன். அதை ஒரு கவரில் போட்டு அவர் கையில் கொடுத்தேன்.
அதற்குப்
பிறகு பேசத் தொடங்கினோம். இல்லையில்லை... சரளமாகப் பேசத் தொடங்கினார்
டி.எம்.எஸ். நான் வியப்புடன், பிரமிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
எண்பத்து ஆறு ஆண்டுச் சரித்திரத்தையே புரட்டிப் பார்க்கிற உணர்வு எழுந்தது
அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது! பலப்பல விஷயங்கள் பற்றிப்
பேசினார். எம்.ஜி.ஆர்., பற்றி, சிவாஜி பற்றி, அன்றைய கால கட்டத்தில்
பாடகர்களின் நிலை பற்றி, தான் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தது பற்றி என மடை
திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டே இருந்தார்.
இடையிடையே அவர் மகன்
பால்ராஜ் மெதுவாகக் குறுக்கிட்டு, "அப்பா! டயமாச்சு. சாப்பிட வரீங்களா?"
என்று கேட்டுக்கொண்டு இருந்தார். "ம்... இதோ வரேன்!" என்று சொல்லிவிட்டு,
மறுபடியும் எங்களோடு உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிடுவார் டி.எம்.எஸ்.
லண்டனில்
பாராட்டு விழா, மலேசியாவில் பாராட்டு விழா, கோவையில் பாராட்டு விழா,
நடுவில் கலைஞர் தொலைக்காட்சிக்காகத் தயாராகி வரும் அவரது இசைப் பயணத்
தொடருக்கான ஒலி-ஒளிப்பதிவு என இத்தனை வயதிலும் ஓர் இளைஞனுக்கே உரிய
துடிப்போடு பரபரப்பாக, பம்பரமாகச் சுழன்றுகொண்டு இருக்கிற டி.எம்.எஸ்.,
அந்த அனுபவங்களையெல்லாம் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
"சமீபத்துல
மலேசியாவுல எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினாங்க. கூட்டமான கூட்டம். நான்
மேடை ஏறினப்போ, பூக்களை மழையாகத் தூவி, 'மாபெரும் சபைதனில் நீ நடந்தால்,
உனக்கு மாலைகள் விழவேண்டும்'னு என் பாட்டை ஒலிக்கவிட்டு, எனக்கு ஆளுயர
மாலை போட்டு, ரொம்பப் பெருமைப்படுத்தினாங்க. அங்கே உள்ள இளைஞர்கள்
இன்னமும் என் பாட்டை ரசிச்சுக் கேக்கறாங்கய்யா!" என்று ஒரு குழந்தையின்
ஆர்வத்தோடு சொல்லிப் பெருமைப்பட்டார்.
"கிருஷ்ண விஜயம் என்கிற
படத்துலதான் நான் முதன்முதல்ல பாடினேன். 'ராதே நீ என்னை விட்டு
ஓடாதேடி...' என்கிற அந்தப் பாடலுக்கு இப்போ வயசு 62" என்று கண்கள்
சுருக்கிச் சிரித்தார்.
"மதுரையிலதான் நான் பிறந்தேன். அங்கே உள்ள
சௌந்தரராஜப் பெருமாளுக்கு எங்க அப்பா முப்பது வருஷம் சேவை
பண்ணியிருக்கார். அவர் மேல உள்ள பக்தியினாலதான் எனக்கு சௌந்தரராஜன்னு பேர்
வெச்சார். அந்தக் கோயில்லயே ஒரு ஓரமா பெஞ்ச்சுகள் போட்டுப் பசங்களுக்கு
இந்திப் பாடம் நடத்துவேன். மத்த நேரங்கள்ல சாதகம் பண்ணுவேன். மேஜை மேல
கவிழ்ந்து படுத்துக்கிட்டுப் பாடுவேன். என் குரல் மேஜையில பட்டுத்
திரும்பி எனக்கே கேட்கும். அதை வெச்சு என் குரலை ட்யூன் பண்ணிப் பாடப்
பயிற்சி எடுத்துக்கிட்டேன்.
ஆரம்பத்துல எம்.கே.டி. பாகவதர் மாதிரி
பாடிக்கிட்டிருந்தேன். ஆனா சீக்கிரமே, 'இப்படியே பாடிட்டிருந்தா
வேலைக்காகாது. நமக்குன்னு ஒரு ஸ்டைலைப் பிடிக்கணும்'னு முடிவு பண்ணி குரலை
ஏத்தி இறக்கி சில மேஜிக்குகள் பண்ணினேன். எம்.ஜி.ஆர்., சிவாஜின்னு அந்தந்த
நடிகர்களுக்கு ஏத்த மாதிரி பாடி, மக்கள் மனசுல இடம் பிடிச்சேன்" என்று
சொன்னவர், சற்று இடைவெளி விட்டு,
"இன்னிக்கும் நான் எங்கே போனாலும்
எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்க ரெண்டு பேருக்கும் பாடினதால்தான்யா இவ்வளவு
பேரும் புகழுமா இருக்கேன்னு அவங்களை ரொம்பப் பெருமைப்படுத்திதான்
சொல்லுவேன். ஆனா அன்னிக்கு, சினிமாத் துறையில பாடகன் ஒரு பொருட்டே
இல்லீங்க. கிள்ளுக்கீரைதான். 'பாவ மன்னிப்பு' படத்தின் வெற்றி விழா.
மேடையில அதுல நடிச்ச நடிகர்கள், நடிகைகள்னு ஒவ்வொருவரையா கூப்பிட்டு
கௌரவிச்சுக்கிட்டு இருக்காங்க. நானும் மேடையில ஒரு மூலையில
உட்கார்ந்திருக்கேன். என் பேரைக் கூப்பிடுவாங்களான்னு என் காதுகள் ஆவலா
காத்துக்கிட்டு இருக்கு. யார் யாரையோ கூப்பிடறாங்க. பாராட்டுப் பத்திரம்
வாசிக்கிறாங்க. என் பேரை ம்ஹூம்... கடைசி வரைக்கும் கூப்பிடவே இல்லியே?
ஏன்யா, தெரியாமதான் கேக்கறேன்... மத்தவங்களுக்கு எல்லாம் பத்து ரூபா
விருது கொடுத்து கௌரவிச்சீங்களே... அந்தப் படத்துல அஞ்சு பாட்டு
பாடியிருக்கேனே, அதுக்காகவாவது எனக்கு ஒரு ஒண்ணரையணா விருது
கொடுக்கக்கூடாதா? கொடுக்கலையே சார்! நானும் அடிபட்டு அடிபட்டு, 'போங்கடா,
நீங்களும் உங்க விருதும்'னு விட்டுட்டேன். மக்கள் தங்கள் மனசுல எனக்கு ஒரு
இடம் கொடுத்திருக்காங்கய்யா... அதுதான் எனக்குப் பெரிய விருது!" என்றார்.
அவரது
ஆதங்கம் எனக்குப் புரிந்தது. உண்மைதான்! உண்மையான கலைஞர்களை அவர்கள்
வாழும் காலத்தில் நாம் எங்கே மதித்திருக்கிறோம்...
கௌரவப்படுத்தியிருக்கிறோம்?!
ஆனால், தமிழ் மக்கள் மிக
மேன்மையானவர்கள். இன்னார் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறார், இவர்
வாங்கவில்லை என்றெல்லாம் பார்த்து அவர்கள் ஒருவருக்குத் தங்கள் மனதில்
இடம் கொடுப்பதில்லை. ஒருவரின் உண்மையான திறமைக்குத் தலைவணங்குகிறார்கள்;
போற்றுகிறார்கள்; கொண்டாடுகிறார்கள்.
கலைஞர்களுக்கு விருது
கொடுப்பதில்தான் வடக்கா, தெற்கா, கிழக்கா, மேற்கா என்று பாலிடிக்ஸ்
நடக்கிறது. அப்படியே நம் ஊர் ஆளுக்குத் தப்பித் தவறி ஒரு விருது
கிடைக்கும்போலிருந்தாலும், பொறாமைக் காய்ச்சலில் அதை நம்மவர்களே புகுந்து
கெடுத்துவிடுவார்களே!
போதாக்குறைக்கு ஜேசுதாஸ் பற்றி, இளையராஜா
பற்றி, எஸ்.பி.பி., டி.ராஜேந்தர் பற்றியெல்லாம் டி.எம்.எஸ். அடிக்கடி
ஏதாவது விமர்சனம் செய்து, அவை பத்திரிகைகளில் பிரசுரமாகி அவருக்குக் கெட்ட
பெயரைச் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. நானும் அப்படியான செய்திகளைப்
படித்திருக்கிறேன். நேரில் பார்த்துப் பேசும்போதும் டி.எம்.எஸ். அதே
போலத்தான் விமர்சனம் செய்து பேசினார். ஆனால், பத்திரிகைகளில் அவற்றைப்
படித்ததற்கும், நேரில் பேசிக் கேட்டதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்...
பத்திரிகைகளில் டி.எம்.எஸ்ஸின் மற்றவர் மீதான விமர்சனங்களைப் படித்தபோது
(அவற்றில் எனக்கும் உடன்பாடு என்றாலும்), 'இவர் ஏன் வாயை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க மாட்டேனென்கிறார்! ஏதாவது சொல்லிக் கெட்ட பெயர் வாங்கிக்
கொள்கிறாரே!' என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். ஆனால், நேரில் அவர்
அதையே பேசிக் கேட்டபோது, 'இவ்வளவு குழந்தையாக இருக்கிறாரே! ஒரு
பத்திரிகைக்காரன் வந்திருக்கிறேன். (ஆனால், நான் என்னவோ அவரின்
ரசிகனாகத்தான் போயிருந்தேன். பத்திரிகைக்காரனாக அல்ல!) என்னிடம் என்ன
பேசலாம், என்ன பேசக்கூடாது என்று தெரியாமல் எதை எதையோ பேசுகிறாரே!
இதையெல்லாம் அப்படியே பத்திரிகையில் போட்டால் என்னத்துக்காகிறது!' என்று
தோன்றியது.
உண்மையில் டி.எம்.எஸ். ஒரு கர்வியாகவோ, அகந்தை
பிடித்தவராகவோ, மண்டைக்கனம் கொண்டவராகவோ எனக்குத் தோன்றவில்லை. கள்ளங்கபடு
இல்லாத ஒரு குழந்தை போலத்தான் தோன்றினார். ஒரு குழந்தை, பெரிய மீசை
வைத்துக்கொண்டு இருக்கும் ஒருவரைப் பார்த்து, 'ஐயே! நீ நல்லாவே இல்லே.
பூச்சாண்டி!' என்று சொன்னாலோ, 'உன் படம் ஆய்! என் படம்தான் பட்டு!' என்று
சொன்னாலோ, நமக்கு அந்தக் குழந்தை மீது கோபம் வருமா? அப்படித்தான்
டி.எம்.எஸ்ஸும்! யாரிடம் என்ன பேசவேண்டும் என்று தெரியாமல், தன் மனதில்
படுவதை மறைக்கத் தெரியாமல் எல்லாரிடமும் பளிச் பளிச்சென்று
கொட்டிவிடுகிறார். உண்மையில் அவருக்கு தான் என்கிற அகம்பாவமோ, மற்றவர்களை
மட்டம் தட்டும் புத்தியோ நிச்சயமாக இல்லை. பரபரப்பாகச் செய்தி போடவேண்டும்
என்கிற ஆசையில், அவர் சொல்வதைப் பத்திரிகைகள் அப்படியப்படியே
வெளியிட்டுவிட்டதில், மற்றவர்களின் கண்களுக்கு அவர் கர்வியாகிவிட்டார்.
அவரே
பேச்சின் நடுவே சொன்னார்... "நான் ஒரு குழந்தைய்யா! யாருகிட்டே என்ன
பேசணும்னு எனக்குத் தெரியமாட்டேங்குது. எதையாவது சொல்லிடறேன். அவங்களும்
அதை அப்படியே டி.எம்.எஸ். இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார்னு கொட்டை
எழுத்துல போட்டுடறாங்க. ரெண்டு பக்கத்துலயும் மனக் கசப்பு வளர்ந்துடுது!"
உண்மைதான். டி..எம்.எஸ். 86 வயதுக் குழந்தை!
"நான்
பாட வந்த காலத்துல எனக்கு மாச சம்பளம் அம்பது ரூபா! 'அடிமைப் பெண்' படம்
வரைக்கும் நான் ஒரு பாட்டுக்கு வாங்கின தொகை 500 ரூபாய்தான்னா
நம்புவீங்களா? அப்பெல்லாம் பின்னணிக் குரல், இசைக் கருவிகள்னு எல்லாம் ஒரே
டிராக்குல பதிவாகும். இப்போ மாதிரி தனித்தனியா எடுத்துக் கோத்துக்க
முடியாது. மூச்சைப் புடிச்சுக்கிட்டுப் பாடுவேன். பாட்டு முடியிற
சமயத்துல, கூடப் பாடுறவங்களோ, இசைக்கருவி வாசிக்கிறவங்கள்ல யாராவதோ தப்பு
பண்ணிட்டா போச்சு..! மறுபடியும் முதல்லேர்ந்து பாடியாகணும். இது மாதிரி
ஏழெட்டு தடவை பாட வேண்டியிருக்கும். ஒரு பாட்டுப் பாடத்தானே 500 ரூபா?
நான் ஒழுங்காத்தானே பாடினேன்? நீங்க பண்ணின தப்புனாலதானே ஏழு தடவை
பாடினேன்? அப்ப எனக்கு ஏழு 500 ரூபாய் தரணுமா, இல்லையா? கேக்கத்
தெரியலேய்யா அப்ப எனக்கு. கொடுத்ததை வாங்கிட்டுப் போய்ப் பாடிக்
கொடுப்பேன்!" என்கிற உதடு பிதுக்கிக் குழந்தை போல் முறையிடும்
டி.எம்.எஸ்ஸுக்கு அடிமனதில் உள்ளூர இன்னமும் அந்த ஆதங்கம் இருப்பதில்
வியப்பில்லை... 'என்னதான் உயிரைக் கொடுத்துப் பாடினாலும், கதாநாயக
நடிகர்களோ திரையுலகமோ தன்னைச் சரியாகக் கௌரவிக்கவில்லையே!'
அதற்கு
ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இதுவரை எந்தப் பாடகருக்கும்
இப்படி ஒரு கௌரவம் கிடைத்ததில்லை என்கிற விதமாக, டி.எம்.எஸ்ஸின்
வாழ்க்கைச் சரிதத்தை 'இமயத்துடன்...' என்கிற தலைப்பில் டி.வி. சீரியலாக
எடுத்துக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் விஜய்ராஜ். டி.எம்.எஸ்ஸின் பரம
ரசிகரான இவர் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளையெல்லாம் உதறிவிட்டு,
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் முழு மூச்சாக
இறங்கியிருக்கிறார்.
"டி.எம்.எஸ். ஐயா 'பெண்ணரசி'ங்கிற படத்துல
முதன்முறையா ஒரு சின்ன வேஷத்துல தலைகாட்டியிருக்கார்னு கேள்விப்பட்டேன்.
தாடியும் மீசையுமா பிச்சைக்காரன் போல பாட்டுப் பாடிட்டு நடந்து வருவார்.
அந்த நெகடிவ் இங்கே எங்கே தேடியும் கிடைக்கவே இல்லே. ரொம்ப முயற்சி
பண்ணினதுல மலேசியாவுல ஒரு இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுது. உடனே ஓடினேன்.
அரும்பாடுபாட்டு அந்த க்ளிப்பிங்ஸைக் கொண்டு வந்தேன்.
வெறுமே
ஐயாவைப் பேச வெச்சு, 'அன்னிக்கு இன்னாருக்காக இப்படிப் பாடினேன், இப்படி
ஒரு கேரக்டர்ல நடிச்சேன்'னு சொல்ல வெச்சு எடுத்துடலாம்தான். ஆனா, அது
சுவாரஸ்யமா இருக்குமா? 'பெண்ணரசி'யில நடிச்சிருக்கார்னு சொன்னா, அந்தப்
படத்தை ஜனங்களுக்குக் காண்பிச்சாதானே வெயிட்டா இருக்கும்! இப்படி
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மூலையிலே இருக்க, ஓடி ஓடிச் சேகரிச்சதுல வருஷங்கள்
ஓடிப்போச்சு! மாடர்ன் தியேட்டர்ஸ், பட்சிராஜா பிலிம்ஸ்னு அந்தந்த
இடங்களுக்கே ஐயாவை அழைச்சுச்கிட்டுப் போய்ப் படமாக்கியிருக்கோம்.
பட்சிராஜா பிலிம்ஸ் இருந்த இடமெல்லாம் அப்போ லீஸுக்கு எடுத்திருந்த
இடங்கள்தான். இப்போ அதன் உள்ளே யாருமே போகமுடியாது. வெறுமே வெளியே
இருக்கிற போர்டைத்தான் பார்க்கமுடியும். அப்படியான இடங்கள்ல கூடக்
கஷ்டப்பட்டுப் போராடி அனுமதி வாங்கிப் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். என்
மனசுக்குத் தொண்ணூறு சதவிகிதம் திருப்தியா வந்திருக்கு" என்றார் விஜய்ராஜ்.
"ஒரு
சரித்திரத்தைப் பதிவு செய்கிற அருமையான காரியம் இது! ஒரு சகாப்தத்தைப்
பதிவு செய்கிற பெரிய வேலை! பெரிய விஷயம். கோடிக்கணக்கான டி.எம்.எஸ்.
ரசிகர்கள் சார்பில், உங்கள் முயற்சி பெரு வெற்றி அடையணும்னு வாழ்த்தறேன்"
என்றேன்.
கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி டி.எம்.எஸ்ஸின்
தீவிர ரசிகர். விஜய்ராஜ் இப்படி ஒரு முயற்சியில் இருப்பதை அறிந்ததும் உடனே
கூப்பிட்டு, 'நல்ல காரியம்! பிரமாதமா எடுங்க. கலைஞர் டி.வி-யில் போட
ஏற்பாடு பண்றேன்'னு உற்சாகம் கொடுத்திருக்கிறாராம். டி.எம்.எஸ்ஸின் பரம
ரசிகன் என்கிற முறையில் அழகிரிக்கு என் நன்றிகளை மானசிகமாகத் தெரிவித்துக்
கொண்டேன்.
'சாப்பாட்டு நேரமாக இருக்கிறது. பார்த்துவிட்டு,
மரியாதைக்குச் சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிடலாம்' என்றுதான்
நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், 12 மணிக்கு ஆரம்பித்த உரையாடல், இரண்டரை
மணிக்குதான் முடிந்தது. சற்றும் சளைக்கவில்லை டி.எம்.எஸ்.! விட்டால்
இன்னும் இரண்டு மணி நேரம் கூட உற்சாகமாகப் பேசுவார் போல
இருந்தது. எனக்குமே ஆசைதான்! ஆனால், ஒரு பெரியவரை பசி வேளையில் சாப்பிட
விடாமல் பேசிக்கொண்டு இருக்க, மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.
"மதுரையில
எனக்குப் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்போறதா சொல்லியிருக்கார் அழகிரி.
அதுக்கப்புறம் இந்த சீரியல், கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பாகும். ஆண்டவன்
என் சவுண்ட் பாக்ஸை இப்பவும் ஆரோக்கியமா வெச்சிருக்கான். அதான், இன்னும்
பாடிக்கிட்டிருக்கேன். அதைக் கேட்டு என் ரசிகர்கள் சந்தோஷமா
வாழ்த்துறாங்க. அந்த வாழ்த்துதான்யா என்னை நோய் நொடியில்லாம
காப்பாத்திக்கிட்டு வருது!" என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி வழியனுப்பி
வைத்தார் டி.எம்.எஸ்.
பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம்.
- ரவிபிரகாஷ்.
பின்குறிப்பு:
டி.எம்.எஸ்
அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்ததற்கு (அது ஒரு புதன்கிழமை)
மறுநாளிலிருந்து, ஒரு அவசர வேலை காரணமாக ஒரு வார காலத்துக்கு நான்
விடுமுறையில் இருந்தேன்.
இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை
காலையிலிருந்து என் மொபைல் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் இரண்டு
மூன்று தடவை, பிற்பகலில் இரண்டு மூன்று தடவை, மாலையில் இரண்டு மூன்று தடவை
என ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து போன் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பொதுவாக,
என்னோடு அவசர அவசியமாகத் தொடர்புகொள்ள வேண்டியவர்கள் அனைவரின் எண்களையும்
என் மொபைலில் ஸ்டோர் பண்ணி வைத்திருப்பேன். அப்படியான எண்கள் ஒலித்தால்
மட்டுமே மொபைலை எடுத்துப் பேசுவேன். இதர எண்கள் வந்தால், பேசமாட்டேன்.
விடுமுறையில் இருந்தால், இதுதான் என் வழக்கம்.
அன்றும் அப்படித்தான், எடுக்காமல் இருந்துவிட்டேன்.
சாயந்திரம்
ஆறு மணி வாக்கில் டைரக்டர் விஜய்ராஜ் பேசினார். "சார், டி.எம்.எஸ். ஐயா
அவங்க காலைலேர்ந்து உங்களோடு பேசணும்னு உங்க மொபைலுக்குத் தொடர்பு
கொண்டாராம். 'ரிங் போகுது, எடுக்கவே இல்லையே?'னு இப்போ என் கிட்டே
கேட்டார். அவரோட நம்பர் தரேன், பேசறீங்களா?" என்று டி.எம்.எஸ். அவர்களின்
மொபைல் எண்ணைக் கொடுத்தார்.
அவசரமாக வாங்கி, கால் ரெஜிஸ்டரில் பதிவாகியிருந்த மிஸ்டு கால் எண்ணோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டும் ஒன்று!
எனக்குச்
சொரேல் என்றது. 'ஐயோ! என் அபிமான டி.எம்.எஸ். அவர்கள் என்னோடு பேச
விரும்பி, நான் எடுக்காமல் இருந்துவிட்டேனே!' என்று என் புத்தியை நானே
நொந்துகொண்டு, உடனடியாக டி.எம்.எஸ்ஸுக்குப் போன் போட்டேன்... எதற்காக
என்னோடு பேச விரும்பியிருப்பார் என்று யோசித்தபடியே! ஒருவேளை, 'வழக்கம்போல
மனம் திறந்து எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன். எக்குத்தப்பாக பத்திரிகையில்
எதுவும் போட்டுடாதேய்யா!' என்று கேட்பதற்காக இருக்குமோ?
எதிர்முனையில்
ரிங் போய் எடுக்கப்பட்ட மறுகணம், நான் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே,
"ரவிபிரகாஷய்யா... வணக்கமய்யா!" என்று டி.எம்.எஸ். முந்திக்கொண்டார்.
"ஐயா! எப்படி நான்தான் பேசறேன்னு..." என்றேன்.
"உங்க நம்பரைத்தான் என் மொபைல்ல ஸேவ் பண்ணி வெச்சிருக்கேன்ல! நீங்களும் இப்போ நமக்கு வேண்டியவராயிட்டீங்கள்ல?" என்றார். தொடர்ந்து...
"ஒண்ணுமில்லே!
நீங்க எழுதுன லெட்டரைப் படிச்சேன். என் பாடல்களைப் பத்தி சிலாகிச்சு,
என்னமா எழுதியிருக்கீங்க! என் பாடல்களை எவ்வளவு அனுபவிச்சுக்
கேட்டிருந்தா, இவ்வளவு பெரிய லெட்டரை எழுதியிருப்பீங்க! நீங்க
போட்டிருக்கிற லிஸ்ட்ல இருக்கிற அதே பாடல்கள்தான் எனக்கும் பிடிக்கும்.
அதைச் சரியா வரிசைப்படுத்தி எழுதியிருக்கீங்க. என் மேல எவ்வளவு அன்பும்
அபிமானமும் வெச்சிருக்கீங்க! உங்களை மாதிரியான ரசிகர்களை அடைஞ்சதுதான்யா
இந்தப் பிறவியிலே நான் செஞ்ச பாக்கியம்! அதுக்கு நன்றி சொல்லத்தான்யா போன்
பண்ணினேன்!" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.
இவரா கர்வி? இவரா அகம்பாவி? மதுரை சௌந்தரராஜப் பெருமாள் மீது சத்தியமாகச் சொல்லுவேன், 'நிச்சயமாக இல்லை!'