Home / Enrum Inbam Gautam

Enrum Inbam Gautam


என்றும் இன்பம்
Posted In: அனுபவம் , சிறுகதை . By gautam

துளசிராம் எழுந்திருக்கும் பொழுது நான் புகைபிடித்துக் கொண்டிருந்தேன். முழுவதும் போர்த்தியிருந்த கம்பளியிலிருத்து தலையை மட்டும் வெளியே நீட்டி, 'சிகரெட் இருக்காடா?' என்றான்.ஒரு சிகரெட்டை அவனிடத்தில் எறிந்து விட்டுக் காப்பி கலக்கச் சென்றேன்.Good Friday வை முன்னிட்டு இன்று விடுமுறை.சனி, ஞாயிறுடன் சேர்த்தால் மூன்று நாள் விடுமுறை.என்ன செய்வதென்ற திட்டம் எதுவுமில்லை.யோசித்தவாறே காப்பியும் சிகரெட்டும் குடித்து முடித்தேன். பெரும்பாலான விடுமுறைகள் இரண்டு சினிமா, கொஞ்சம் புத்தகம், சில இரவுகளில் மதுவுடனும் வெகு சாதரணமாகவே கழிந்துவிடும். எப்படி இருந்தாலும் முதல்நாளின் முதல் பாதியை, விடுமுறையை மிகவும் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று திட்டம் தீட்டுவதிலேயேக் கழிப்பது வழக்கம்.

'மூணு நாளு என்னடா பண்றது?' என்றான்.அவனுக்கும் அதே கவலை. பல திட்டங்களைத் தீட்டி, பதினேழு சிகரெட், ஏழு காப்பி செலவழித்தப் பின்னும் , எதுவும் உருப்படியாகத் தோன்றவில்லை. பின் திடீரென்று 'பாண்டிச்சேரி போவோமா' என்றான்.பாண்டிச்சேரி என்னை முதலில் ஈர்க்கவில்லை.ஆனால் வேறு நல்ல ஐடியாவுமில்லாததால் சம்மதித்து விட்டேன்.

நாங்களிருவரும் ஒன்றாகப் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறோம். பெரும்பாலானவை அவனுடைய மாமாவின் காரில்.அவன் காரோட்டும் பொழுது, தொடர்ந்து பேச்சுக் கொடுக்கவில்லையெனில் சற்றுத் தூங்கிவிடுவான் என்பதைத் தவிர வேறு எந்தப் புகாரும் எனக்கில்லை. அதனால் பாண்டிச்சேரி செல்ல நானும் சம்மதித்துவிட்டேன்.ஆனால் கடந்த முறை, கேரளவிலிருந்துத் திரும்பி வருகையில் ஒரு சிறு விபத்து நிகழ்ந்துவிட்டது. போதையில் ஒரு மாட்டு வண்டியின் மீது மோதிவிட்டான். இருவரும் நான்கு நாட்களை ஆஸ்பத்திரியில் கழிக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு,அவன் மாமா எங்களுக்குக் காரைத் தருவதில்லை.இந்த முறை பஸ்ஸில்தான் போகவேண்டும்.

'பஸ்ல போனா எப்படியும் ரெண்டு ரெண்டர மணிநேரம் ஆவும்'
'பஸ்ல ஏன் போறோம்? கார்லதான போறோம்', சிரித்தபடியே சொன்னான்.
'உங்க மாமாதான் உறுதியாச் சொல்லிருக்கார்ல??'
'மாமா ஊர்ல இல்ல..அத்தைகிட்டக் கேட்டு எடுத்துட்டு வரேன்'

அத்தையா? மாமாவாவது நான்கைந்து மணி நேரம் அடம்பிடித்தால் கொடுத்துவிடுவார். ஆனால் அத்தை, நாங்கள் கார் வேண்டுமென்றுக் கேட்ட மறுநொடியே, எங்கள் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துவிடுவார். அத்தோடு நில்லாமல், அவரை மீறி எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்று கார் சாவியை வீட்டுக் கிணற்றில் போட்டுவிடுமளவுக்கு மிக உறுதியான உள்ளம் படைத்தவர். எனக்கு சற்றும் நம்பிக்கையில்லை. ஆனால் துளசிராம் தீவிரமாகச் சிந்தித்து அதற்கொரு திட்டம் தீட்டியிருந்தான்.வேறொரு நண்பனை வைத்து, சர்வீஸ் ஸ்டேஷன் ஆசாமி மாதிரி பேசச் செய்தான்.அந்த நண்பனும் தேர்ந்த நடிகரைப் போலவேப் பேசி, கார் சர்வீஸ் செய்த போது, லீஃப் ஸ்ப்ரிங்-இல் இருந்த விரிசலை கவனிக்காமல் விட்டு விட்டதற்காக வருந்தினான்.உடனேக் காரை அனுப்பி வைத்தால் இலவசமாகவே மாற்றித் தருவதாகவும் வாக்குறுதி தந்தான்.அதோடு இலவச ஸர்வீஸ் ஒன்றும் செய்து, இரண்டு நாட்களில் திருப்பியனுப்புவதாகவும் சத்தியம் செய்தான்.நண்பன் பேசியபொழுது நீங்கள் பார்த்திருக்கவேண்டும். முகத்தில் அப்படியொருப் பொலிவு. பொதுவாக எந்த உதவியும் செய்யத் தயாராகயில்லாத நண்பர்கள் கூட இது மாதிரி சமயங்களில் உத்வேகத்துடன் செயல்படுவதைப் பல இடங்களில் கண்டிருக்கின்றேன். உதாரணமாக வீட்டுக்குத் தெரியாமல் நண்பனுக்குக் காதல் திருமணம் செய்துவிப்பது. ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் சாகச விருப்பமும், சமூகம் கட்டமைத்திருக்கும் வாழ்வியல் முறைகளை மீறுவதற்கான இயலாமையும், தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தோதான இளவயதுமே இந்த மாதிரி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தூண்டுமெனக் கருதுகிறேன்.

இலவசம் என்ற வார்த்தை அத்தையைப் பெரிதும் மயக்கியிருக்க வேண்டும்.அதனால் இரண்டே மணிநேரத்தில் காரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். அத்தை குடும்பத்தில் மாமாவைத் தவிர, இரண்டே பேர்தான் காரோட்டத் தெரிந்தவர்கள். அத்தையின் மகனும், துளசிராமும். +2 படிக்கும் அத்தை மகன், பாடப்புத்தகங்களில் இருக்கும் நுணுக்கமான விஷயங்கள் எதுவும் அவனது சிற்றறிவுக்கு எட்டாததால், கல்வியறிவின் மேல் நம்பிக்கை
இழந்திருந்தான்.உண்மையான அறிவு வெளி உலகில் இருப்பதாகப் பெரிதும் நம்பினான்.அவனிடம் காரைத் தந்தால், அதை விற்றுவிட்டு, தேசாந்திரம் சென்றுவிடும்
வாய்ப்பு பலமாக இருந்தபடியால், நாங்கள் எதிர்பார்த்தது போலவே, அடுத்த அரைமணிநேரத்தில் ,அத்தை துளசிராமை செல்லில் அழைத்தார்.பின்பு இருவரும்
சென்று, இரண்டு நாளில் திருப்பி எடுத்து வந்துவிடுவதாக நம்பிக்கையளித்து, காரைக் கிளப்பிக் கொண்டுவந்தோம்.அவன்தான் காரை ஓட்டினான். முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை.

'எப்படியோ புத்திசாலித்தனமா எடுத்துட்டு வந்துட்டன்ல'

இது மாதிரி புத்திசாலித்தனமாக காரை எடுத்து வரும் செயல்களைத்தான், 'கார் நூதனத் திருட்டு' என்று தலைப்பிட்டு தினத்தந்தியில் விவரிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். சொன்னால் கோபித்துக் கொள்வான்.

பாண்டிச்சேரி வந்து சேரும்போது மணி இரவு ஏழரை.ஊர் எங்களுக்குப் புதிதில்லை. பலமுறை வந்திருக்கின்றோம். மலிவான விலையில் கிடைக்கும் உயர்தர சரக்குகாகத்தான் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.அரவிந்தர் ஆசிரமம், அழகான சிறிய கடற்கரை, ப்ரெஞ்சு பாணிக் கட்டிடங்கள் போன்றவற்றிற்காக அடிக்கடி வந்திருக்கின்றோம். இங்கேக் கிடைக்கும் வெளிதேசத் திரைப்படங்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை.இன்னும் சில முறை காரணமெதுவுமின்றி வந்திருக்கின்றோம்.ஒவ்வொரு முறையும் அவசியம் காரணம் வேண்டுமாயென்ன? இந்த முறை ஓரிரவு ஏதாவது லாட்ஜில் தங்கி, இரவு முழுவதும்
தண்ணியடிப்பதாக உத்தேசம்.எனக்கு எப்பொழுதும் பாரில் தண்ணியடிப்பது விருப்பமானதாகயிருந்ததில்லை. அரையிருட்டு கலவிக்கும் படம் பார்ப்பதற்கும் மட்டுமே
பயன்படும் என்பது துளசிராமின் கருத்து. இதைவிட 'வெய்ட்டர்கள்' காட்டும் போலி நாகரீகமும் பவ்யமும் மிகுந்த எரிச்சலூட்டும். வறுத்தக் கோழியை ஃபோர்க்கில் சாப்பிடும் கலை மூன்றாவது ரவுண்டிற்குப் பிறகு வசப்பட்டதேயில்லை.ரகசியமாய் வேறு பேசவேண்டும். எப்படி களை கட்டும்??

ஒரு சுமாரான லாட்ஜில் ரூம் எடுத்து, சரக்கு வாங்க உடனேக் கிளம்பி வெளியே வந்தோம்.கடையைத் தேடி நடக்க ஆரம்பித்தோம். எந்த மதுக்கடையும் உடனடியாகத் தட்டுப்படவில்லை. பேசிக்கொண்டேச் சுற்றியதில், காந்தி சிலையருகே வந்துவிட்டோம். குறைந்தது இரண்டு கிலோமீட்டராவது நடந்திருப்போம்.ஒரு கடையையும் காணவில்லை. ஒருவேளை பாண்டிச்சேரியில் மதுவிலக்கு மாதிரி ஏதாவது அமலில் இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை. இருவருக்கும் பெரும் குழப்பம். பக்கத்திலிருந்த சுண்டல் கடைக்காரரிடம் விசாரித்ததில், 'இன்னிக்கு எல்லாக் கடையும் லீவு' என்னும் நற்செய்தியை அறிவித்தார். அதிர்ச்சி விலகாமல் 'எதுக்குண்ணே லீவு?' என்றதற்கு பதிலில்லை. வேறு வழியின்றி, பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கியப்பின், தோழமையுடன் விவரிக்க ஆரம்பித்தார்.

'அதான் தம்பி குட் ஃப்ரைடே ல..அதுக்குத்தான் இன்னிக்கு எல்லாக் கடையும் லீவு'
'குட் ஃப்ரைடேக்கா?? இல்லயே..அதுக்கெல்லாம் லீவு விட மாடாங்களே..' என்று யோசனையாகச் சொன்னான் துளசிராம். என்னவோ எல்லாவருட குட் ஃப்ரைடேவையும் பாண்டிச்சேரியில் தண்ணியடித்துக் கழித்தவன் போல ஆணித்தரமாக சொன்னது எனக்குக் கடுப்பைக் கிளப்பியது.

'அட..அது மட்டுமில்ல தம்பீ..நேத்து மிலாடி நபி..இன்னிக்கும் ஏதோ முஸ்லீம் பண்டிகையாம்..நாளைக்கு ஹோலி ன்னு மூணு மதத்துக்காரவுங்கப் பண்டிகைங்றதுனால லீவு விட்டுட்டானுங்க..'

சரிதான். மூன்று மதக் கடவுளரும் நமக்கெதிராகச் செயல்படும்போது நாம் என்ன செய்யமுடியும்?காலம் கடந்துவிட்டது என்று சொல்லிக்கேட்டிருக்கிறோம். ஆனால் மும்மத விசேஷங்களையும் ஏக காலத்தில் அமைத்து, அதே சமயத்தில் தண்ணீர் தாகத்துடன் நாங்கள் வெகுதூரம் வந்திருக்கும் நிகழ்வை காலமே அண்டவெளியிலிருந்து கடத்திவிட்டதென்பதா, இல்லை இன்றைய ட்ரெண்டிற்கேற்ப கயோஸ் தியரி என்பதா என்று தீவிர சிந்தனையிலிருந்தபோது துளசிராமைக் காணவில்லை என்றுணர்ந்தேன்.

சற்றுத் தள்ளி ஒரு ஆட்டோக்காரரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.நிச்சயம் ஏதாவது ஒரு வழியிருக்க வேண்டும்.இறுதியாக ஆட்டோக்காரர் ஏதேனும் நட்சத்திரவிடுதி பாரில் சரக்கு கிடைக்ககூடுமெனச் சொன்னார். ப்ச். இன்றைய மது இரவு பாழ் என நினைத்தேன். ஆனால், துளசிராம் என்னை பார்க்காமலே ,
'இவனுக்கு பார்ல குடிக்கப் புடிக்காது..வேற எதாவுது சொல்லுங்க' என்றான்.

ஆட்டோவிலேயே இடங்களைத் தேடியலைந்தோம். ஒரு வழியாக, தியேட்டரருகே இருக்கும் பழவண்டிக்காரரிடம் கேட்டால் கிடைக்கும் என்னும் செய்தியை சேகரித்துவிட்டோம். ஆட்டோவை அனுப்பிவிட்டு, பழவண்டிக்காரரிடம் மெதுவாய் ஆரம்பித்தேன்.

'அண்ணே, சரக்கு கெடைக்குமாண்ணே?' அரை வினாடி எங்களை ஆராய்ந்தார்.
'யாரு சொன்னா?'
'ஆட்டோ ஸ்டேண்ட்ல சொன்னாங்க'
'தியேட்டராண்டப் போயி நில்லு..பையன அனுப்புரன்'நின்றோம்.பத்து வயது சிறுவனொருவன் வந்தான். பரட்டைத்தலையும், கைக்கால்களில் அழுக்கு அப்பி, கிழிந்த சட்டையுமாய் ஒருவனை எதிர்பார்த்து ஏமாந்தேன். எண்ணெய் போட்டுத் தலை சீவி, சுமாரான ஆடைகள் அணிந்திருந்தான்.அந்த இரவிலும் முகத்தில் பவுடர் தீற்றலும், மெலிதான திரிநீறுமாய் தெளிவாய் இருந்தான்.முகம் நல்ல லட்சணம்.ஆனாலும், ஏழ்மை தெரிந்தது. அவனிடம் போய் எப்படி இதைப் பேசுவது என்றத் தயக்கத்தில் ஒன்றுமே பேசவில்லை. அவனே ஆரம்பித்தான்.

'குவார்ட்டரா? ஆஃபா?..ஃபுல்லில்ல..எது வோணும்?'
'எவ்ளோ?'
'குவார்ட்டர் ஒரிஜினல் ரேட்டு அம்பத்தஞ்சு ரூவா..இப்ப எம்பத்தஞ்சு'
'கொஞ்சம் விலையதிகமா வேணுமேப்பா'
'செரி இரு..கேட்டுனு வரன்' மறுபடி பழவண்டியிடம் ஓடினான்.எங்களுக்கு மட்டமான சரக்கு அடிப்பதில் ஒரு சின்ன சிக்கலிருந்தது.மறுநாள் தலைவலி பின்னிவிடும்..முழுநாளும் அறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும்.பையன் திரும்பி ஓடி வந்தான்.

'ஒரே ஒரு காஸ்ட்லி பாட்டிலிருக்கு..ஆஃபு..வாங்கிக்கறயா?'
'எவ்ளோ?'
'எரநூத்துஅம்பது'

சரியென பாட்டிலை பார்த்தால், ஏதோவொரு பெயர் போட்டு, சரக்குக் கிட்டத்தட்ட சிவப்புக் கலரிலிருந்தது. லேபிளை மேலும் ஆராய்ந்ததில், தயாரித்த நாடு 'FORTCHUKKAL' என்றுப் போட்டிருந்தது. பொடியெழுத்துக்களில் நிறைய வரிகள் ஆங்கிலத்திலிருந்தன.'குடித்துவிட்டு உடனடியாகச் சென்று சவக்குழியில் படுத்துக்கொள்ளவும்' என்று எங்கேயாவது எழுதியிருக்கிறதாயெனத் தேடினேன். நல்ல வேளை, இல்லை. எனினும் அதைக் குடிக்க விருப்பமில்லை.

'இது வேணாம்பா'
'ஏன் சார்? வாங்கிக்க சார்'நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான்.அவனைத் தவிர்க்கயெண்ணி,'எங்களுக்கு கொஞ்சம் காஸ்ட்லியா வேணும்பா' என்றேன்.
'எவ்ளோ ரூவால சார்?'
'ஒரு ஆயிரம் ரூபால'
'ஆயிரம் ரூவாலயா?' என்று மலைத்தான்.

அவன் முகத்தில் தெரிந்த அந்த ஒரு வினாடி ஏக்கம்,'டேய், ஆயிரம் ரூவால சரக்காடா?என்கிட்ட இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டிட்டு, அம்மாக்கு மருந்து வாங்கிட்டு, வீட்டுக்கு அரிசி...' வகைக் கதை இருப்பதை உணர்த்தியது.குற்றவுணர்ச்சியில் தவித்தேன். சமுதாயத்தின் ஒரு பிரிவு மக்கள், அடிப்படைத் தேவைகளுக்கே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அடகு வைத்துக்கொண்டிருக்கும்போது, நான் சில மணிநேர மகிழ்ச்சிக்காக ஆயிரங்களைச் செலவிடுவது கொடூரமில்லையா? சே குவேரா விரும்பிய Socio-Economic விளைவுகளை நிகழவிடாமல் தடுக்கும் சக்திகள் எது? இந்த நாட்டின் அரசிய.......ப்ச்..எனக்கு இதற்கு இப்போது நேரமில்லை..நான் அவ்வளவு நல்லவனுமில்லை.

மீண்டும் சரக்குத் தேடும் படலத்தைத் தொடர்ந்தோம்.ஒரு வழியாக,சுமாரான பிராந்தியும், மூன்று பீரும் பிராந்திக்கடையின் பின்கதவு வழியே வாங்கிவிட்டோம்.வாழ்க ஜனநாயகம். சைடு டிஷ்,சிகரெட்,டிபன் கூட பார்சல் பண்ணியாகிவிட்டது.ஆட்டோ பிடித்து ஓட்டலை அடைந்தோம்.இரண்டு மணிநேர அலைச்சல் எங்கள் தோற்றத்தை பரிதாபப்படுத்தியிருந்தது.எங்களைப் பார்த்த ரூம்பாய் என்னவோ கேட்க விரும்பித் தயங்குவது அவன் முகத்தில் தெரிந்தது.'குட்டி வேணுமா சார்?' என்றுக்கேட்டு விடுவானோ என்று பயந்தவாறே, அவனுக்குச் சந்தர்ப்பமளிக்காமல் ரூம் வந்தடைந்தோம்.இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்.

எப்பொழுதும் போல் அன்றிரவும் வெகு சாதரணமாகத்தான் சரக்கடிக்க ஆரம்பித்திருந்தோம். பிரளயத்துக்கு முன்பான அமைதி போலத்தான் இதுவும் என்பது,அவனுடன் கழித்திருந்த இரு வருடம் எனக்களித்திருந்தப் பாடம். குடிப்பதற்கு முன்னே அவன் செய்யும் முன்னேற்பாடுகள் சுவாரஸ்யமானது. அவற்றில் ஒன்று, பாட்டில் வாங்கிய கறுப்புக் கவரை, தன் சட்டையின் இரண்டாம் பொத்தானோடுக் கோத்துக் கொள்வது. உடல் ஒத்துழைக்காமல் பல சமயங்களில் வாந்தி எடுக்க வேண்டியிருக்கும்.அவ்வாறான சோதனை மிகுந்தத் தருணங்களில், கழுத்துடனிருக்கும் கவரிலேயே எடுத்துவிடுவது உசிதமல்லவா? மேலும் துளசிராம் வாந்தி வருவதும்,தகுதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதும் ஒன்றே என்று மிக உறுதியாகக் கருதினான். எப்பொழுது வரும், எப்படி வருமென்பதைக் கணிக்க இயலாமையே இந்த கருத்துக்கான ஆரம்பப் புள்ளி.

இரண்டுப் பெக்குகளுக்கு பிறகு சட்டென்று எழுந்தான்.பெரும் போதை.

'வோட்காவயும் தாத்தாவிஸ்கியயும் குடுத்த ரஷ்யாவுக்கு என்னோட சல்யூட் டா' என்றான். வோட்கா தெரியும், தாத்தா விஸ்கின்னா என்னது? அவன் தாத்தா அவனுக்கு குடுத்த விஸ்கியா? அப்படியே குடுதிருந்தாலும் இவன் எதுக்கு ரஷ்யாவுக்கு சல்யூட் அடிக்கரான்? தாத்தாவுக்ல அடிசிருக்கணும்?- இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வருகிறதல்லவா? ஆனால் எனக்குக் குழப்பமில்லை.அவன் தாத்தாவிஸ்கி என்று குறிப்பிட்டது ரஷ்ய மேதை தஸ்தாயெவ்ஸ்கியைத்தான். நாங்கள் குடித்துக் கொண்டிருந்ததும் வோட்கா இல்லை பிராந்திதான் என்பதை இப்பொழுது பொருட்படுத்த தேவையில்லை.அவ்வாறு சொல்லிவிட்டு ஒரு சிறு அமைதி. போதையினால் சொருகிய கண்களும் உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்புமாக என் முகத்தையேப் பார்த்தான். அவனுடைய உலக இலக்கிய அறிவையெண்ணி நான் அடையப் போகும் ஆச்சர்யத்தையும் அதைத் தொடரும் குழப்பத்தையும் காண்பதற்காகவே இந்த சிறு அமைதி. யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்லிவிட்டதாக நினைக்கும் பொழுது அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது மனித இயல்புதான். ஆனால் துளசிராமிடம் என்ன பிரச்சினையென்றால் எதிராளியின் சிற்றறிவுக்கு அந்த விஷயம் தெரியுமா இல்லையா என்பதை யோசிக்க மறுப்பதுதான்.முன்பொருமுறை இப்படித்தான், நாய் தன் காலைத் தூக்கித்தான் சிறுநீர் கழிக்கும் என்றப் பேருண்மையை சொல்லியதற்காக நான் அவனை அங்கீகரிக்கவில்லை என்று கோபித்திருக்கிறான்.

நான் முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமர்ந்திருந்தேன். விஷயம் இதுதான். ஒரு பிரபல எழுத்தாளர் போதை மிகுந்த ஒரு இரவில் இதே மாதிரி கூறியதாக அவருடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை காலையில்தான் இருவரும் பேசியிருந்தோம்.இப்போது அதை தன் கருத்தாகச் சொல்கிறான். அந்த சிறு அமைதி சற்று நீண்டு ஏழு நிமிடங்களை கடந்திருந்தது.இனியும் தாமதித்தால் அவன் வாந்தியெடுத்துவிடும் அபாயமிருப்பதை உணர்ந்து,

'அப்டீங்கறே??' என்றேன், பலவீனமாக.

ஏதோ ஒரு வகையில் அவன் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லையென்பதை உணர்ந்து கொள்ள ஏழு நிமிடங்கள் அவனுக்குப் போதுமானதாக இருந்திருக்கவேண்டும்.

'ஆமாண்டா' என்றவாறு க்ளாஸிள் மீதமிருந்த பிராந்தியை 'மடக்'கென்று ஒரே மூச்சில் குடித்தான். பொறுப்பாக அடுத்த ரவுண்டுக்காக சரக்கை இருவருக்கும் கலந்து வைத்து, காது வரையில் சிரித்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து என் முகத்தில் ஊதினான். பின்பு எதற்கோ அண்ணாந்துப் பார்த்தான். அவன் செய்கைகள் ஒன்றுகொன்று தொடர்பில்லாமல் இருந்தன. நானும் பாதி மயக்கத்தில் இருந்ததால் கண்டுக் கொள்ளவில்லை.போன வருடம் புதிதாக வந்த ஒரு அறை நண்பன், மது மயக்கிய ஒரு பொழுதில், இவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்து தனக்குள் கேலியாக சிரிப்பதை துளசிராம் பார்த்துவிட்டான். நாங்கள் மூவரும் சேர்ந்து குடிக்கும் முதல் முறையாதலால், துளசிராமின் அணுகுமுறை சற்று மிதமாகவே இருந்தது.

'எதுக்கு நண்பா சிரிச்சீங்க?' - இது துளசி.
'ஹி..ஹி.. ஒண்ணுமில்ல..சும்மாதான்..ஹி ..ஹி..' - இது அறை நண்பன்.
'அட சும்ம சொல்லுங்க பாஸூ'
'இல்ல..நீங்க பண்றத பார்த்தா ரொம்ப தமாஸா இருந்தது..அதான்..சரி விடுங்க..வேறப் பேசுவோம்'துளசிராமோ விடா முயற்சி வேந்தன். மேலும், அழுத்திக் கேட்டதில் அவன் சொல்ல ஆரம்பித்தான்.
'பின்ன என்னங்க பாஸூ..இதுக்கே இவ்வளவு அலம்பலு பண்றீங்களே?? நான்லாம் ஒரு ஃபுல்லு முழுசா அடிச்சாக் கூட அப்படியே இருப்பேன்..வித்யாசமே தெரியாது' என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்..
'அப்புறம் என்ன மயித்துக்கடா குடிக்குறீங்க?' என்று அவன் மேல் பாய்ந்துப் புரட்டியெடுத்துவிட்டான். இது வேறுத் தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்ததால் அவனை அவன் போக்கில் விட்டுவிட்டேன்.தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று க்ளாஸை கையிலெடுத்துக்கொண்டு என்னையும் குடிக்குமாறு சைகை செய்தான்.புரிந்துவிட்டது. மேலும் பேசுவதற்கான ஏதோ ஒன்றை முடிவு செய்துவிட்டு, அதை கேட்பதற்காக என்னையும் தயார் செய்கிறான். நான் பிராந்தி ஒரு மிடறு விழுங்கிவிட்டு, வெட்டக் காத்துக் கொண்டிருக்கும் பலியாடுப் போல் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

'மாப்ள, வைத்தீஸ்வரன் கோயிலப் பத்தி நீயென்ன நினைக்குற?'
'நான் ஒண்ணும் நினைக்கலியேடா' என்றேன் பரிதாபமாக.

பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல பயங்கரமாகச் சிரித்தான்.கண்ணில் நீர் வரச் சிரித்தான். இது ஒன்றும் என் நகையுணர்வுக்கானப் பரிசு இல்லையென்பது எனக்குத் தெரியும். இது ஒரு தந்திரம்.இதன் பிறகு அவன் சொல்லும் ஏதாவதொரு பதிலுக்கு நானும் இப்படி சிரிக்கவேண்டுமென்பதற்கான சிறு அச்சாரம்.அப்படி இல்லாத பட்சத்தில் நான் நன்றி மறந்தவனாகிறேன். என் இறையாண்மைக்கு வந்தப் பெருஞ்சோதனை.ஆங்கிலப்படங்களில், தண்ணீருக்கடியில் உயிர் விடும் காட்சியில், இறப்பவனின் இறுதி மூச்சு இரண்டு மூன்று நீர்க்குமிழிகளாக மேலெழுந்து வருவதைப்போல, அவ்வபோது மெலிதான சிரிப்பு அவனிடத்தில் பொங்கி வழிந்தவாறு இருந்தது. எங்கே சிரிப்பைப் போலவே, அவன் குடித்த பிராந்தியும் பொங்கி வழிந்துவிடுமோ என்றஞ்சி ,என் விழிப்புணர்வின் ஒரு பகுதியை எப்பொழுதும் தயார்நிலையிலேயே வைத்திருந்தேன்.

'சொல்றா..நீ என்ன நினைக்குற??' சிரிப்புனூடேக் கேட்டான்.

வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு எடுத்துப் பார்த்து முக்காலத்தையும் சொல்வது நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே.எனக்கும் தெரியும்தான். ஆனால் அவ்வாறு தெரியுமென்றுக் கூறி, மேதைமையைப் பறைசாற்றுவதெலாம் அறிவீனர் செயலாகும். அதற்கானக் காரணம் 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்கிற அமரத்தத்துவம்தான் என்றெல்லாம் கதை விடமாட்டேன். எனக்கு இது பற்றி தெரியுமென்று அவனுக்குத் தெரிந்துவிட்டால், பின்பு இன்னும் கடினமான விஷயத்தை பற்றி ஆரம்பித்து விடுவான். ஆறு மாதங்களுக்கு முன்பு இதேக் காரணத்துக்காக, ஸ்பானிஷ் நாடோடிப் பாட்டுக்களைப் பற்றி நான்கு மணிநேரம் என்னிடம் பேசினான் என்றால் நீங்களேப் புரிந்து கொள்ளுங்கள்.ஸ்பானிஷ் பாடல்களை ராகத்தோடுப் பாடி வேறுக் காட்டினான் என்னும் போது, அதே தவறை மீண்டும் செய்ய முற்படுவேனா?

'வைத்தீஸ்வரன் கோயிலா? சாமியிருக்கும்டா..ஹி..ஹி..' என்றுப் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.அவன் என் பதிலில் கிஞ்சித்தும் திருப்தியடையவில்லை என்பது அவன் விழியில் காட்டிய உக்கிரத்திலேயேப் புரிந்தது. ஆனால் துளசிராம் இதற்கெல்லாம் அஞ்சுபவனில்லை.

'அங்கப் போகணும்டா..ஏடு எடுத்துப் பாத்தா நம்ம ஹிஸ்ட்ரி தெரிஞ்சுக்கலாம்டா..நீ என்ன சொல்ற?'

நான் எதுவும் சொல்வதற்கு முன்னே, அவன் வைத்தீஸ்வரன் கோவில் செல்லவேண்டியதன் அவசியத்தையும் காரணங்களையும் விளக்க ஆரம்பித்துவிட்டான். அதை அடுத்த அரைமணி நேரம் தொடர்ந்தான்.நானும் அவ்வப்பொழுது என் மாற்றுக் கருத்துக்களை அவனிடத்தில் பதிவுச் செய்யத்தவறவில்லை.எனினும் அவை அவனைச் சென்றடைந்ததா என்பதுக் கேள்விக்குரியதே. பயல் வெளி உலகத் தொல்லைகளில்லா ஏகாந்த நிலையை எட்டியிருந்தான். அத்தகையதொரு நிலையில், எதிராளியின் பதில் என்ன, பூகம்பமே நிகழ்ந்தாலும் அவன் பேச்சை நிறுத்த போவதில்லை. 'பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்..' என்கிற செய்யுளின் புதிரை அவிழ்க்குமாறு கேட்டான்.கேட்டுவிட்டு அவனே அவிழ்ப்பதாக மேலும் தொடர்ந்தான்.நிறுத்துவதாய்த் தெரியவில்லை.

நண்பர்கள் கூடி தண்ணியடிக்கும் பொழுதுகளில், எவனாவது ஒருவன் நிலை கொள்ளாப் போதையில் சொற்பொழிவு நிகழ்த்துவது வாடிக்கையானதே. அதை மற்றவர்கள் ஆமோதித்துக் கேட்குமாறு எதிர்பார்த்து வற்புறுத்தப்படுவதுக் கருணையற்றதாகும். அதற்குப் பேசாமல் எழுந்து சென்றுவிடுவது உத்தமமான செயல்.ஆனால் சரக்கு வாங்கித் தந்தவனே, இவ்வாறு சொற்பொழிவாற்றி நம்மை துன்ப நதியில் தள்ளும் சமயங்களில், கடவுள் செயல்படும் விந்தையான வழிகளையெண்ணி வியப்பிலாழ்வதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், இது மாதிரியான 'Catch 22' சூழ்னிலைகளில் இரண்டு வழிகளைப் பின்பற்றி வந்திருக்கின்றேன்.

முதலாவது,'ஆமாண்டா மச்சான்','கரெக்ட்டுடா','நானும் அதயேதான் நெனைக்குறென்,'நாம வேற என்னப் பண்ண முடியும்னு நெனைக்குற?' போன்ற Fillersகளை,சீரான இடைவெளியில் சொல்லி வருவதாகும். இது நாம் சொற்பொழிவாளனின் பேச்சை ஊன்றி கவனிப்பதுப் போன்றதொரு மாயையை அவனுக்குத் தருவதால், மேலும் தொந்தரவு செய்யாமல், அவன் பாட்டுக்குத் தொடர்ந்துக் கொண்டிருப்பான்.அதிலும் 'நாம வேற என்னப் பண்ண முடியும்னு நெனைக்குற?' என்னும் கேள்வி, சொற்பொழிவாளன் பேசும் எந்தவொருத் தலைப்புக்கும் பொருந்துவதோடு, அவனின் எண்ணச் சுடரையும் தூண்டிவிடுவதால், அவன் பெருமகிழ்ச்சியடைவான். இருந்த போதிலும், இந்த வழியைப் பின்பற்றுவதைச் சில காலத்துக்கு முன்பிருந்து நிறுத்தி விட்டேன்.காரணம் மிகவும் ரகசியமானது என்ற போதிலும் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்.

ஒரு முறை,நான் மதுவின் கருணையால், உற்சாகத்தில் மிதந்து, இன்ப ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கையில்,என்னிடம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சகப் பயணியொருவன், என்னை திடீரென்று அறைந்துவிட்டான். அதை உணரும் நிலையிலும் நானில்லை.ஆனால் மேற்கொண்டு அவன் என்னைக் கொல்ல எத்தனிகையில்,என் நண்பர்கள் காப்பாற்றி விட்டனர். மறுநாள்தான் எனக்கு விஷயம் விளங்கியது. தன்னுடைய மேலதிகாரி, வேசிமகன் என்று ஆங்கிலத்தில் திட்டியதை, ஆதங்கத்துடனும், கண்களில் கண்ணீருடனும் என்னிடம் அவன் புலம்பியப்போது, 'நானும் அதயேதாங்க நெனைக்குறென்' என்று நான் கூறியதே அந்தக் கொலை முயற்சிக்கானக் காரணம். காலம் கலைத்து உருட்டும் பகடைகளின் நிலையே, நிகழும் செயல்களின் தன்மையைத் தீர்மானிக்கும். அன்றிரவு எங்களிருவருக்குமானப் பகடைகள் மோசமானதொருக் கட்டத்திலே விழுந்திருக்க வேண்டும். Life is a game of uncertainity இல்லையா?? அன்றிலிருந்து Fillers களைப் புறக்கணித்து விட்டேன்.

இரண்டாவது வழி எதிராளிக்கு சற்றுக் கடினமானது என்றாலும் உயிர் பயம் இல்லையாதலால், இவ்வழியையே உபயோகிக்கிறேன். சொற்பொழிவாளன் எந்நிலையில்
பேசிக்கொண்டிருந்தாலும், சற்றும் யோசிக்காது அவன் பேச்சை முடிக்க வேண்டும். 'சரி சரி விடுடா...தூங்கலாம்' இல்லை 'போதும் விடேன்டா..ஏன் இப்படி பேசியேக் கொல்ற??' என்றோ சொல்லிவிட்டு அவனை படுக்க வைப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கி விடுவேன். இது அவன் பேச்சை மதியாத செயலாய் இருப்பினும், அவன் மீதான நம் அக்கறையைக் காட்டுவதாகத் தவறாகயெண்ணி, சமயங்களில் எதிராளி அழவும் கூடும்.அவ்வாறு அழுவானெனில், அவனைத்தேற்ற விழைவது கற்றோர் செய்யத் துணியாக் காரியமாகும். ஏன் கூறுகிறேனென்றால், இவ்வாறு உணர்ச்சி மிகுதியால், போதையில் அழுபவரை தேற்றவே முடியாது.மீறி முயன்றால், பல மணிநேரங்கள் செலவிட வேண்டியிருக்கும். ஒரு முறை, விடிந்தே விட்டது. இது நான் அனுபவத்தில் கண்டுணர்ந்தப் பாடம். எது எப்படியிருப்பினும் அதன் பிறகு எதிராளியால் பழைய வேகத்தில் பேசமுடியாதென்பது மட்டும் திண்ணம்.

'சரி சரி விட்றா..தூங்கு..' என்றேன் சம்பந்தமில்லாமல். அது வரையில் தான் பேசியது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதிருப்பினும், அத்தகையதொருப் பதிலை நான் சொன்னதற்காக முறைத்தான்.

'என்ன வெளாடுறியா?? வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போலாம்டா..' என்றான்.
'சரி போலாம்..காலைல போலாம்... இந்நேரத்துக்கு பஸ்ஸிருக்காது' கடுப்பில் சொன்னேன்.
'என்னப் போதைல உளறேன்னு நெனைக்குறியா?? காலைல நாம கண்டிப்பா போறோம்' என்று அறிவித்தான்.

நான் இதற்குள் படுத்துத் தூங்க ஆரம்பித்தேன். துளசிராம் பேசுவது நெடுந்தொலைவில் மெலிதாகக் கேட்டது தாலாட்டு பாடுவதுப் போலிருந்தது. தூங்கி விட்டேன்.மறுநாள், எழுந்துப் பார்க்கையில் அறையின் நிலைமை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அறையெங்கும் சிதறிக் கிடந்தப் பாலிதீன் பைகள், பாட்டில், உணவுப்பொட்டலங்கள்,சிகரெட் துண்டுகள், தீக்குச்சிகள் எதையும் காணவில்லை. அறை மிகவும் சுத்தமாக இருந்தது. இது என் தினப்படி வாழ்கையில் நான் சந்தித்திராத ஒன்று. நான் தூங்கியப் பிறகு, தான் செய்த ரகளையினால் ஏற்பட்ட குற்றவுணர்வின் மிகுதியால், அறையை சுத்தம் செய்துவிட்டே துளசிராம் தூங்கி இருக்கவேண்டும்.இன்னும் அவன் எழுந்திருக்கவில்லை. புகைப் பிடித்தவாறு பால்கனியில் நின்றிருந்தேன்.எழுந்து வந்தவன், இருவருக்கும் காப்பி ஆர்டர் செய்தான்.என்னைப் பார்த்ததும் நேற்றிரவு செய்த சலம்பல்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒருமாதிரி நெளிந்தான்.காப்பிக் குடித்து முடித்தவுடன் கேட்டேன்,

'என்னடா, வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவோமா?'
ஒரு சிறுத்தயக்கத்துக்குப் பின்,'போலாமே' என்று ஈனஸ்வரத்தில் முனகினான்.இருவரும் சட்டென்று அடக்கமுடியாமல் சிரித்தோம்.

என்றும் இன்பம்.




     RSS of this page