Home / EndCongress

EndCongress


காங்கிரஸுக்கு ‘ஜன கண கன’!? - ஆனந்த விகடன் - 2014-04-23

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

பிரதமர் வீட்டு வாசலை இரண்டு கைகளாலும் மூடிவிட்டார் மன்மோகன் சிங். அதை, ராகுல் இடித்துத் திறப்பாரா என்பதே இந்தத் தேர்தலில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு!

''நான் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டதைத்  தொடர்ந்து, நேற்றிரவு நீங்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். ஆனால், என் அம்மா நேற்றிரவு எனது அறைக்கு வந்தார். என்னுடன் அமர்ந்து திடீரெனக் கதறி அழத் தொடங்கிவிட்டார். எதனால் அவர் அழுதார்? பலரும் விரும்பும் அதிகாரம் என்பது 'ஒருவகை நஞ்சு’ என்பதால்தான் அவர் அழுதார். அதிகாரம் என்பது ஒருவரைச் சுற்றி உள்ளவர்களையும், அதனை விரும்புகிறவர்களையும் என்ன செய்யும் என்பதை அவர் நன்றாக அறிவார். இந்த நஞ்சுக்கு உள்ள ஒரே மாற்று மருந்து, அதிகாரம் என்ற விஷத்தின் மீது பற்றுகொள்ளாமல் இருப்பதுதான். இதுதான் எனது தாயாரின் வாழ்நாள் அனுபவம். எட்டு ஆண்டு காலமாக நான் கற்றுக்கொண்ட அனுபவமும் இதுதான்!'' - இது ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அரங்கில் காங்கிரஸின் துணைத் தலைவராக மகுடம் சூடப்பட்ட ராகுல் காந்தி பேசியது. எட்டாத பழத்தைக் காட்டி 'அது புளிக்கும்’ என்கிற தந்திரப் பேச்சு இது.

சுதந்திர இந்தியாவில் மொத்தம் உள்ள 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகளில் இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சியை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எந்தக் கட்சியுமே கூட்டு சேர்க்காமல், தீண்டாத கட்சியாக ஆக்கிய அவலம் சோனியா தலைமையில்தான் நடந்தது. ராகுல் காலத்திலும் அது தொடரப்போகிறதா எனத் தெரியவில்லை.

'ஏக இந்தியாவுக்கும் தாங்கள்தான் பிரதிநிதி’ என்று மார்தட்டிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இன்று எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்தாமல் (வர்த்தகத் தரப்பு உள்பட) 'செத்தவன் கையில் வெற்றிலைபாக்குக் கொடுத்ததைப் போல’ இயங்கியதன் விளைவே இன்று அவமானத்தின் உச்சத்தில் தொக்கிக்கொண்டு நிற்கிறது.

16-வது நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன?

1. காங்கிரஸின் பெருமை!

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்ற மகுடம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. 'இந்திய சுதந்திரம்’ என்ற பதமும், 'இந்திய தேசிய காங்கிரஸ்’ என்ற வார்த்தையும் உச்சரிக்கும்போதே ரத்தச் சூட்டைக் கிளப்புபவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இன்று இருப்பது இந்திரா காங்கிரஸ்தானே தவிர, இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல. ஆனாலும் 'இந்திய தேசிய காங்கிரஸின்’ தொடர்ச்சியாகவே இன்றைய காங்கிரஸும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் தியாகம் செய்த கட்சி, தியாகிகள் நிறைந்த கட்சி என்ற பிம்பம் இன்றும் காங்கிரஸுக்கு இருக்கிறது.

தேசிய அளவில் எதிர் அணிகளை அமைத்துள்ள பா.ஜ.க., கம்யூனிஸ்ட்கள் இரண்டுமே சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்ற அமைப்புகளாகவும் இல்லை. இவர்களின் விடுதலைப் போராட்டக் கால வரலாறு, இன்று வரை சர்ச்சைக்குரிய சமாசாரங்கள் கொண்டது.

ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது நிச்சயம் பெரிய சாதனைதான். ஆனால், அது ஒன்றே போதும் என்று காங்கிரஸ் நினைத்ததும், வாங்கித் தந்த விடுதலையை விற்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நினைத்ததும்தான் சிக்கல்!

2. நேரு முகம், தெரிந்த முகம்!

நேரு குடும்பத்துக்கு அறிமுகம் தேவை இல்லை. நேரு, இந்திரா, ராஜீவ் படத்தைப் பார்த்தாலே யார் என்று சின்னக் குழந்தையும் சொல்லும். அதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து சோனியா, ராகுல் முகத்தைப் பிரபலப்படுத்தத் தேவை இல்லை. இவர்கள் யார் என்று அறிமுகப்படுத்த பி.ஆர். ஏஜென்சி அவசியம் இல்லை. இன்னமுமே நாம் 'ஆனந்த பவனத்தின் அடிமைகள்’ என்ற நினைப்பு சராசரி இந்தியனின் அடிமனதில் வேரோடிக்கிடக்கிறது. மவுன்ட் பேட்டன், இந்திய அதிகாரத்தை நேருவிடம் கை மாற்றிக் கொடுத்துவிட்டுப் போனதாகத்தான் நம்புகிறார்கள். டெல்லிக்குத் தேர்தல் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பதை வாக்காளன் வழக்கமாக வைத்திருப்பது இதனால்தான்!

3. இந்தியா முழுமைக்கும்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் பரந்து விரிந்த இந்தப் பூமிப்பரப்பு முழுமைக்கும் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. எதிரில் நிற்கிற பாரதிய ஜனதாவுக்கு பல மாநிலங்களில் அக்கவுன்ட் இன்னும் திறக்கப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்கு சில மாநிலங்களிலேதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 1967-ல் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. ஆட்சிக்கே வர முடியாது என்பதே இன்றைய நிலைமை. ஆனாலும், 30 மாவட்டங்களிலும் கட்சி இருக்கிறது. 6 முதல் 11 சதவிகிதம் வரை வாக்கும் இருக்கிறது என்றால் அங்கிங்கெனாதபடி காங்கிரஸின் தேசிய வேர்கள், நிலத்துக்குள் புதைந்துகிடக்கின்றன. முறையான சரியான, மக்கள் நலன் சார்ந்த தலைமை உருவானால் இந்த மண்ணைப் பண்படுத்தி விளைச்சலை எடுக்க முடியும் என்பதே யதார்த்தம்.

4. வீழ்ச்சிக்கு முதல் காரணம்!

ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்ந்தால், பொருளாதார வீழ்ச்சியே அதற்கான முழு முதல் காரணமாக இருக்கும்.

இந்தியாவின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு மிக முக்கியமான அடிப்படை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. இது கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போனது. இதன் மூலமாக இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் சரிந்தது. 2004-ல் 112.6 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டுக் கடன், இப்போது நான்கு மடங்காக அதிகரித்து மிரட்டுகிறது. வர்த்தகக் கடன்கள் 4 பில்லியன் டாலரில் இருந்து 22 மடங்கு உயர்ந்து 87 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கட்டுப்பாடற்ற மூலதனப்பொருள் இறக்குமதியில் கொண்டுவிட்டதும் காங்கிரஸின் சாதனை.

10 கோடி பேருக்கு வேலை என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறது. ஆனால், 2004-2010 காலத்தில் வெறும் 2.7 மில்லியன் வேலைவாய்ப்புகளை மட்டுமே காங்கிரஸ் அரசால் உருவாக்க முடிந்தது. தனியார்மயப்படுத்தலைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத பொருளாதார மேதைகளால் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாது!

5. ஊழலின் ஊற்றுக்கண்!

இந்தியா முழுக்க ஊழல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தக் காரணம் ஆனது ராஜீவ் காலத்து போஃபர்ஸ் விவகாரம். இந்தியாவில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதை உலகுக்கு அம்பலப்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம். இரண்டுமே காங்கிரஸ் ஆட்சியின் கயமைக்கு உதாரணங்கள்.

ஊழல், இன்று நேற்று ஆரம்பமானது அல்ல. இதற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. ஆனால், அது மறைமுகமாக இருந்தது. இப்போது பகிரங்கமாக, 'எங்களைக் கேட்க யார் இருக்கிறார்கள்?’ என்ற தைரியத்தோடு நடக்கிறது. 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஓர் இழப்புகூட இல்லை’ என்று கூறிய கபில்சிபல், பிறகு ஏன் ஒப்பந்தம் பெற்ற கம்பெனிகளின் லைசென்ஸை ரத்து செய்தார்? 'இப்படியெல்லாம் கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்தால், இனி இந்தியாவுக்கு யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள்’ என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் பச்சையாகப் பண வசூலை நியாயப்படுத்தினார். 'போஃபர்ஸ் ஊழலை மறந்த மாதிரி இதையும் மறந்து விடுவார்கள்’ என்று அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பல்லைக் காட்டினார். 'பிரதமருக்கும் ப.சிதம்பரத்துக்கும் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை’ என்று ஆ.ராசா சொன்னதற்கு இதுவரை பதில் இல்லை. 'இவ்வளவு பெரிய விஷயத்தை அமைச்சர் ஆ.ராசா மட்டுமே செய்திருக்க முடியுமா?’ என்று கருணாநிதி, கூட்டணியைக் காட்டிக்கொடுத்தார். இவ்வளவு அப்பட்டமாக ஓர் ஊழல் நடக்கவும் முடியாது. அதனை இப்படி பகிரங்கமாக யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. நிலக்கரி ஊழலில் 'கோப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறோம்’ என்றார்கள்; 'காணோம்’ என்றார்கள். அதுவும் புதைக்குழிக்குள் போய்விட்டது.

'கறை நல்லது’ என்று காங்கிரஸ் நினைக்க, 'காங்கிரஸ் கெட்டது’ என்று பெருவாரியான மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

6. விலைவாசி வில்லன்!

மத்திய தர வர்க்கம் மாதம்தோறும் செலவு செய்யும் பொருள்களின் விலை நான்கு மடங்கு அதிகமாகி இருக்கிறது. உற்பத்திப் பெருக்கத்துக்கான எந்த முயற்சிகளும் இல்லாமல், எதையுமே இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த விலைவாசி உயர்வு. 'இந்தியா ஒரு விவசாய நாடு’ என்று சொல்லிக்கொடுத்து வளர்த்தோம். 'விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுங்கள். தேவைக்கு அதிகமான தொழிலாளர்கள் நிலத்தை நம்பி இருப்பது தவறு’ என்று சொல்லக்கூடிய பிரதமரை இப்போதுதான் பார்த்தோம். பருத்தியை நம்பி குடும்பத்தை வளர்த்த பழனியப்பன் குடும்பத்து ப.சிதம்பரம், பருத்திக்கும் நெல்லுக்கும் வரி போடத் தலையாட்டிய காட்சியும் இங்குதான் அரங்கேறியது. அரிசியை மூடி இருக்கும் உமி நீக்கப்படுகிறதே தவிர ரசாயன மாற்றம் செய்யப்படுவது இல்லை என்பதுகூடத் தெரியாமலா இத்தனை ஆண்டுகள் தட்டு முன் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்?

உற்பத்தியைப் பற்றியோ, உழைக்கும் மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்களைக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை நடத்தியது தான் இந்த அத்தனை துயரங்களுக்கும் காரணம்!

7. மமதை!

காங்கிரஸ் கட்சிக்கு, மாற்று இல்லை என்ற மமதை எப்போதும் உண்டு. விடுதலைக்குப் பின் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை. கம்யூனிஸ்ட்களேகூட நேருவில் லெனின் முகத்தைத் தேடிக்கொண்டு இருந்த காலம் அது. இந்திரா கொண்டுவந்த எமர்ஜென்சியை, இந்தியக் கம்யூனிஸ்ட்களில் ஒரு பிரிவு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆதரித்தது. காங்கிரஸ் தயவில் மத்தியில் கம்யூனிஸ்ட்களே மந்திரிகளாகவும் இருந்தார்கள். காங்கிரஸ் ஆதரவுடன் ஜோதிபாசு பிரதமர் ஆவதை கோஷ்டிப் பூசல்தான் தடுத்ததே தவிர, கொள்கை தடுக்கவில்லை. 2004-2009 காலகட்டத்து மன்மோகன் சிங் ஆட்சியைக் காப்பாற்றியவர்களும் கம்யூனிஸ்ட்கள். நாளையே மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க, காங்கிரஸை ஆதரிக்கத் தயங்காதவர்களும் அதே கம்யூனிஸ்ட்கள். இது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். எனவே, எந்தக் காலத்திலும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் நாற்காலிகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தி விடுவார்கள் என்ற பயம் காங்கிரஸுக்கு இருந்தது இல்லை. பாரதிய ஜனதா வந்துதான் பதற்றம் ஏற்படுத்தியது!

பா.ஜ.க. ஏக இந்தியப் பிரதிநிதியாக ஆக முடியாது என்ற நினைப்பு காங்கிரஸுக்கு இருந்தது. எவ்வளவு வளர்ந்தாலும் அந்தக் கட்சியை பாபர் மசூதி பள்ளத்துக்கு இழுத்துவிடும் என்றும் காங்கிரஸ் நினைத்தது. அதனால்தான், அதுபற்றி பேசாமல் 'வளர்ச்சி’ என்ற பொதுவான வார்த்தையை பா.ஜ.க. எடுத்து வந்தது. இது காங்கிரஸ் எதிர்பாராதது. பொதுவாக, தேசியத் தலைவர்களிடம் கவர்ச்சி இருப்பது இல்லை. ஆனால், நரேந்திர மோடியின் நாடகத்தன்மைக்கு ஓர் ஈர்ப்பு கிடைத்தது. காங்கிரஸுக்கு அகில இந்திய அளவிலான மாற்றுக் கட்சியை அடையாளம் காட்டும் தேர்தல் இது!

8. ஈழ நெருப்பு!

ஈழ நெருப்பு இன்னும் எரிகிறது. இதில் 1983-ம் ஆண்டு முதல் 2013 வரை (30 ஆண்டுகள்) காங்கிரஸ் கட்சி செய்தது மொத்தமும் தப்பு. 'அங்கே நடப்பது இனப்படுகொலை’ என்று இந்திரா சொன்னாலும் அது தமிழர்கள் மீதான பாசத்தால் அல்ல. இலங்கையை தென் ஆசியப் பிராந்தியத்தில் அடக்கி வைப்பதற்காகத்தான். தனி ஈழம் கேட்டு கையில் கிடைத்த ஆயுதங்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த போராளிக் குழுக்களுக்குப் பெரிய ஆயுதங்களையும், தமிழகத்தில் பயிற்சியும் கொடுத்தார் இந்திரா. அவர்களை இந்தியாவின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி இலங்கையைப் பணியவைக்க முயற்சித்தார் ராஜீவ். இதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன்படவில்லை. 'ஆஃப்ட்ரால் டூ தவுஸண்ட் பாய்ஸ்’ என்று ராஜீவால் ஏளனமாகப் பேசப்பட்ட புலிகளோடு இரண்டரை ஆண்டுகள் இந்திய அமைதிப் படை சண்டை போட்டும் வெற்றி பெற முடியவில்லை. அன்று அமைப்பில் இருந்த 2,000 பேரில் 1,000 பேர் கொல்லப்பட்டார்கள். 6,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய ராணுவ வீரர்களில் 1,200 பேர் இறந்துபோனார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் படுகொலையான சம்பவம் 1987-ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்தது.

அதன் பிறகுதான் ராஜீவ் படுகொலை. 2004-ல் ராஜபக்ஷே ஆட்சி தலையெடுத்தது முதல், அவர்களுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் காங்கிரஸ் அரசு செய்தது. உலகப் பேரழிவான முள்ளிவாய்க்கால் படுகொலை, சுமார் இரண்டரை லட்சம் தமிழர்களை மண்ணுக்குள் புதைத்தது. 'இந்தியாவின் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்’ என்று ராஜபக்ஷேவின் தம்பி சொன்னார். 'இரண்டு தரப்பிலும் மூவர் கொண்ட குழுவை அமைத்தோம்’ என்று ராணுவத் தளபதி சொன்னார். புலிகளை பயங்கரவாத இயக்கமாக மட்டுமே பார்க்க வேண்டுமானால், அதனைப் பகிரங்கமாகச் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டியதுதானே. மயிலாப்பூருக்குள் ஒரு தீவிரவாதி போய்ப் பதுங்கிக்கொண்டால், அவனைக் கொலை செய்ய மயிலாப்பூரையே அழித்துவிடுவார்களா? ஈழத்தில் நடந்தது அதுதானே. இவர்களுக்குப் புலிகளைக் கொல்ல வேண்டும், அவர்களுக்கு இனத்தை வேரறுக்க வேண்டும். இந்த ரத்தக் கூட்டணிக்கு மன்னிப்பு ஏது?

9. கொள்கை என்ன?

காங்கிரஸ் வடக்கே போகுமா... கிழக்கே போகுமா... என்று யாருக்குமே தெரியாது. 'சோஷலிச சமுதாயம்’ என்றார் நேரு. அதனை வார்த்தையிலாவது சொன்னார் இந்திரா. 'நவீன இந்தியா’ என்று டெக்னாலஜி மகுடி வாசித்தார் ராஜீவ். மன்மோகன் சிங் எதையுமே சொல்லவில்லை. ராகுலுக்கு, சோனியா எதையுமே சொல்லித் தரவில்லை. 'கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதியாக பா.ஜ.க. மாறிவிட்டது’ என்று சொன்னால், காங்கிரஸ் யாருடைய ஊதுகுழலாக இதுவரை இருந்தது? 'ஒடிசாவில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க நவீன் பட்நாயக் அரசு உதவி செய்கிறது’ என்றால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் அதுதானே நடக்கிறது. இந்துத்வா கொள்கையை பா.ஜ.க. கையில் எடுக்கிறது என்றால், வெறுமனே மதச்சார்பின்மை என்று பேசுவதால் மட்டும் அதனை எதிர்கொள்ள முடியாது. இந்துத்வாவின் வேரை அம்பலப்படுத்த வேண்டும். அந்தப் பக்கமே காங்கிரஸ் செல்வது இல்லை. இந்து ஓட்டு போய்விட்டால் என்ன ஆவது? எனவே, மதச்சார்பின்மை பேசுவதே சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர்வதற்கு மட்டும்தான். ஊழலுக்கு எதிராக உணர்ச்சி பொங்க ராகுல் பேசுகிறார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டு கால ஊழல்கள் எதற்கும் பரிகாரம் காணவில்லை.

ஊழல், மதச்சார்பின்மை, பொருளாதாரம்... இந்த மூன்றிலும் எந்தத் தெளிவான கொள்கையும் காங்கிரஸுக்கு இல்லை!

10. ரா... ரா... ராகுல்!

ராகுல்... மரணப்படுக்கையில் கிடக்கும் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வந்திருக்கும் கடைசி மருத்துவர். காங்கிரஸின் கடைசிக் கையிருப்பு. அதையும் களத்தில் இறக்கிவிட்டார் சோனியா. வென்றால், நேருவைப் போல நீண்ட காலத்துக்குப் பிரதமராக இருக்கும் வாய்ப்புகூட ராகுலுக்கு இருக்கலாம். ஏனென்றால், மோடி பிராண்ட் அடுத்த தேர்தல் வரைக்கும் நீடிக்காது. இப்படி இன்னொரு பிராண்ட் பா.ஜ.க-வுக்கும் வாய்க்காது. தோற்றால் இனி வரப்போகும் இரண்டு தேர்தல்கள் காங்கிரஸுக்கு இல்லை. எனவே 16-வது தேர்தல், காங்கிரஸுக்கு வாழ்வா... சாவா... பந்தயம்!

ஆனால், ராகுல் இன்னும் அரசியல்வாதி யாகவே இல்லை. கட்சி பி.ஆர்.ஓ. பிரஸ்மீட் நடத்திக்கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைந்து பேசினார் ராகுல். 'இமேஜ் பற்றி கவலைப்படாதவர்’ என்று யாரும் சொல்லவில்லை. 'விளையாட்டுத்தனமாக இருக்கிறாரே’ என்றார்கள். சினிமாக்களில் பிசினஸ் அப்பாக்கள் பார்ட்டி நடத்திக்கொண்டு இருக்கும்போது மகன் வந்து கலாட்டா செய்வது போல அது பார்க்கப்பட்டது. ரசிக்கப்படவில்லை. இந்தியா என்பதே கம்ப்யூட்டருக்குள்தான் இருக்கிறது என்று அவரது ஹைடெக் நண்பர்கள் கற்றுக்கொடுத்ததை நம்பும் மனிதராக இருக்கிறார் ராகுல்.

பழம் தின்று கொட்டைப் போட்ட மனிதர்கள், காரியக் கமிட்டி குஷன் திண்டுகளில் கும்மாளம் அடிக்க... பாதுகாவலர்களின் அனுமதி பெற்ற பிறகே மூச்சுவிட இவரும் பழகிவிட... பாவம் ராகுலால் என்ன செய்ய முடியும்?

ஜன கண மன! 



     RSS of this page