Books List 9

ஜெயமோகனின் அனல் காற்று.

பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ.மோ நினைத்ததன் விளைவு இப்படியொரு அருமையான கதை. பாலுமகேந்திரா படமென்றாலே ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதைதான். ரெட்டைவால் குருவி, மறுபடியும், வண்ண, வண்ண பூக்கள் இப்படி.. அதே வரிசையில் அனல்காற்றும் ஆகியிருக்க வேண்டியது.. படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பட்டையைக் கிளப்பியிருக்கும். அவ்வளவு அருமையான கதை. குறிப்பாய் ஜெயமோகனின் நடிகர்களுக்கு எழுதையிருக்கும் வசனங்கள்.
அனல்காற்று அவரது வலைமனையில் தொடராய் வந்துகொண்டிருக்கும்போதே ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்..
// உங்களது அனல்காற்று மீண்டும் ஒரு அழகான உணர்ச்சிக்காவியம்.
மனித மனங்களின் போராட்டங்களும், சிக்கல்களும், உறவுகளுடனான வரைமுறை குறித்த கோடுகள் தாண்டப்பட்டுள்ளது உங்களது தொடரில். சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாயிருக்கும். இங்கு கத்தரில் பதினோரு மணிவாக்கில் உங்கள் அனல்காற்று தொடரை படித்த பின்பே நானும், என் மனைவியும் உறங்கசெல்வோம். அத்தனை அருமையாக இருந்தது.//

இன்று புத்தக வடிவில் படிக்கும்போதும் அதே உணர்ச்சியை பெற முடிகிறது.

அருன் என்பவனின் ஃபிளாஷ்பேக்கில் தொடங்குகிறது, கதை.
மொத்தக் கதையும் சந்திரா - அருண் - அருணின் அம்மா - சுசி இவர்களை மட்டுமே சுற்றி வருகிறது. மற்றவர்களெல்லாம் அப்படியே வந்து கதையில் வந்து போகிறார்கள் அல்லது கதை மாந்தர்களின் குணாதிசயங்களைக் காட்ட இதர உதிரி கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அருண் - சந்திரா - சுசி இந்த மூவருக்குள்ளும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், அருணை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் சந்திராவும்,
சந்திராவிடமிருந்து பிரிந்து தன்னை மட்டுமே மனைவியாய் ஏற்றுக்கொள்ளும்படிக் கெஞ்சும் அருணைக்காதலிக்கும் சுசியும்
கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் மகன் அருணுக்காக மட்டுமே தனது வாழ்க்கையைக்கடத்திய அருணின் அம்மா ஜி.எஸ் ஸும்...
தனது மகனிடம் ச்ந்திரா கள்ள உறவு வைத்திருப்பதை அறிந்தும் அதை நம்ப விரும்பாத ஜி.எஸ்ஸுக்கும், சந்திராவுக்குமான மனப்போராட்டங்களும்....

எத்தனை பேர் தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருப்பார்கள், அல்லது நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது இப்படிச் சிக்கி சீரழிந்திருப்பதைப் பார்த்திருந்தால் இந்தக் கதை நம்மை மிக நெருக்கமாய்த் தொடக்கூடும்.

ஆந்திராவில் ஒரிசா எல்லையை ஒட்டி ஸ்டெர்லிங் கம்பினிக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது (இப்போது ஊத்திமூடப்பட்டு விட்டது) இதுபோன்ற சூழ்நிலையில் இருந்த ஒரு நண்பன் எனக்கிருந்தான். ஸ்ரீநிவாஸ் எனப்பெயர். வீட்டில் கல்யாணத்திற்காக அவனை கடப்பாறையால் அவனது பெற்றோர்கள் நெம்பிக் கொண்டிருக்க, இங்கு இவன் தனி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான். குழந்தையும், கணவனும் இருக்கும் ஒரு உணவகம் நடத்தும் பெண்ணிடம். ஊருக்குச் செல்வதுகூட அவனது காதலியைக் கேட்காமல் செய்யமாட்டான். அவ்வளவுதூரம் அதில் மூழ்கி இருந்தான். இந்தக் கதையில் வருவதுபோல மேகமெல்லாம் விலகி நிர்மலமான வானமாக அவனது வாழ்க்கை அமைந்திருக்கும் என இப்போது நான் எண்ணிக்கொள்கிறேன். அதை நேரடியாகப் பார்த்ததுமுதல் அங்கு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். அவனும் குற்ற உணர்ச்சியினால் என்னிடமிருந்து விலகிவிட்டான்.

கதையின் ஆரம்பம் முதல், இறுதிவரை வரும் கொஞ்சம் கூட குறையாத டெம்போ இந்த புத்தகத்தை மிகச்சிறிய புத்தகத்தைப் படித்ததைப் போன்ற உணர்வளிக்கிறது. அவ்வளவு வேகமாகப் படித்துவிடுவோம். மேலும் மிக, மிகக் கூர்மையான வசனங்கள், உரையாடல்கள், மூவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சிகள், எல்லாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்திருந்து, அதைக் கதை வடிவில் படித்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர வைக்கிறது.

எப்படி இப்படி ஒரு கதைக் கருவை ஜெயமோகன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு ஆச்சரியம். தத்துவமும், நாட்டை குறித்த சிந்தனையும், இந்திய ஞான மரபும், இலக்கியமுமாக தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இந்தக் கதையை எழுதினார் என்பதும், இத்தனை தீவிரமாக எழுதினார் என்பதும் ஆச்சரியமே. அவரது பலமே இதுதான் என நினைக்கிறேன். ஆகக் கடினமான தத்துவங்களை எழுதிக்கொண்டே நகைச்சுவைக் கட்டுரையையும் அதே வாரத்தில், இல்லையெனில் அதே நாளில் எழுதும் திறன் இவருக்கு மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கெல்லாம் சாமி உள்ளேவந்து எழுதினால்தான் தத்துவமோ, அல்லது நாலுபேர் பரவாயில்லைனு சொல்ற மாதிரி கட்டுரைகள் மற்றும் பத்திகளை எழுத முடியும்போது, இவருக்கு இப்படி ஒரு திறன் இருப்பது அவருக்குக் கிடைத்த வரமே.

கதை முழுக்க அருன் - சந்திரா வரும் கட்டங்களும், பேசும் வசனங்களும், சூழ்நிலையும் நமக்கு ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பையும், உண்டாக்குகிறன. ஒருவேளை மனதளவில் நான் இன்னும் சின்னப்பையந்தானோ என்னவோ?

சந்திரா - வளர்ந்த மகன் இருக்கும்போது தன்னிடம் படிக்கும் மாணவனிடம் கொண்டிருக்கும் கள்ள உறவு, படிக்கும்போது சற்று அதீதமாய்த் தோன்றினாலும், இன்றைய செய்தித்தாள்களை தினமும் படிப்போருக்கு இந்த உறவுநிலை மிகச் சாதாரனமாய்த் தோன்றும்.

அருணின் தகப்பனாரின் கள்ள உறவு அதனால் உருவாகும் இன்னொரு குடும்பம். நமது தொலைக்காட்சி சீரியல்களுக்கு இந்தக் கதை கிடைத்தால் ஒரு மூன்று ஆண்டுகள் ஓடும் தொடர் எடுத்து விடுவார்கள்.

அனல்காற்று மூலம் உறவுகளின் அதிகபட்ச எல்லையை தொட்டு வந்திருக்கிறார் ஜெயமோகன்.

நல்ல வசனங்களுக்காககவும், ஜெயமோகன் கதை முழுக்க பொதுவாகவும் பெண்கள் குறித்தும்,சொல்லிச் செல்லும் தற்குறிப்பேற்றத்திற்காகவும், மிக வேகமான கதையோட்டத்திற்காகவும் இந்த நாவலை அவசியம் படிக்க சிபாரிசு செய்வேன். படித்து முடித்த பின்பு கிடைக்கப்போகும் ”எல்லாம் சுபம்” என்ற ஆசுவாசத்திற்காகவும் இதனைப் படிக்கலாம்.

சாப்பாட்டு புராணம்.

தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது,


சமையற்கலை குறித்த புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவை மிக நுட்பமாக எழுதப்படுபவை. வாசனை, நிறம், பொறுமை, ருசி என்று நம் புலன்களை அறியச் செய்பவை.

 மனித இருப்பின் ஆதாரம் பசி. மனித நாக்கு எதை எதையோ ருசித்திருக்கிறது. நாம் இன்னமும் எழுதப்படாதது நாக்கின் சரித்திரமே. நாக்கு எதை எங்கே ருசித்தது என்ற வரலாறு மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமானது.

உணவு நம் பண்பாட்டோடு சம்பந்தமுடையது. இன்றைக்கும் திருமண வீடுகளில் விருந்துசாப்பாடு பற்றிய பேச்சு வரும் போது எந்த ஊரில் எந்த சமையல்காரர்களின் உணவு மிக பிரமாதமாக இருக்கும் என்று விலாவாரியாக பேசுவார்கள். அன்றைக்கு தான் திருமண விருந்தின் பின்னே இத்தனை கலைஞர்கள் ஒளிந்திருக்கிறார்களா என்று தோன்றும்.

நான் உணவின் பின்னால் அலைந்து திரிந்தவன் இல்லை. பசித்த நேரத்தில் கிடைத்த இடத்தில்  கிடைத்த உணவோடு பசியை கடந்து போகின்றவன். ஆகவே எனக்கு சிறப்பு உணவுகள், மற்றும் ஒவ்வொரு ஊரின் சிறப்பு ருசியில் ஆர்வம் இருந்ததில்லை.

 சில நேரம் பயணத்தில் நண்பர்கள் தங்கள் ஊரின் சிறந்த உணவகங்களுக்கு அழைத்து சென்று அறிமுகம் செய்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் சாலையோர கடைகளில் கிடைக்கும் எளிய உணவின் பின்னால் முகம்தெரியாத சமையல்கலைஞர்களின் கைமணமும் ருசியும் இருப்பதை அறிந்திருக்கிறேன். 

சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின்உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்கு காரணமாக இருந்தவர்களின் செய்முறை நுட்பங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

சாப்பாடும் சங்கீதம் போல தான், ரசனை உள்ளவன் தான் அதன் நுட்பங்களை அறிந்து கொள்வான் என்பார்கள். அதுவும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள சங்கீத ரசிகர்கள் தேர்ந்த ரசனைக்காரர்கள். சாப்பாட்டிலும் அப்படியே.

சமஸ் இந்த நூலில் தஞ்சை பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் என்ன உணவு சிறப்பானது. எதனால் அந்த சிறப்பு வந்தது. எங்கிருந்து அந்த உணவு வந்தது என்று ஆதியோடு அந்தமாக  சுவைபட கூறுகிறார்.

அதை அவர் ரசித்து எழுதும் வாகு அற்புதமானது. படிக்கையில் நாமே அதை நாவிலிட்டு ருசிப்பது போன்று எச்சில் ஊற வைக்கிறது.

சில சிற்றுண்டிகளை பற்றி அவர் எழுதும் போது அவரது நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியது. தினமணி இதழில் ஈட்டிங் கார்னர் என்ற பத்தி மூலம் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.

சாப்பாட்டு புகழ்பெற்ற இந்த ஸ்தலங்களின் பட்டியல் மிக முக்கியமானது.

டிகிரி காபிக்கு பிரசித்தி பெயர் தஞ்சாவூர் காபி பேலஸ், திருவையாறு தெற்குவீதியில் கிடைக்கும் அசோகா, நீடாமங்கலம் மேலராஜவீதியில் கிடைக்கும் பால் திரட்டு. கூத்தாநல்லூர் மௌலான பேக்கரி தம்ரூட், மன்னார்குடி டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மயிலாடுதுறை விடுதிபொங்கல்

திருச்சி ஆதிகுடிகாபிகிளப்பில் கிடைக்குடம் ரவா பொங்கல்,. பட்டணம் பக்கோடா, கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ் பூரிபாசந்தி, மன்னார்குடி மிலிட்டரிபரோட்டா. திருவானைக்கா  பார்த்தசாரதி விலாஸ் ஒரு ஜோடி நெய்தோசை,

திருவாரூர் எஸ்.ஆர்.ஆர். கபே கட்டுசோறு, திருச்சி நியூ மதுரா ஹோட்டல் தலைவாழை இலை சாப்பாடு.மதுரை கோனார்மெஸ் கறிதோசை. மேலசித்திரைவீதி  கோபி ஐயங்கார் கடை வெள்ளை அப்பம். விருத்தாசலம் ருசி இனிப்பக தவலை வடை, சிதம்பரம் உடுப்பி கிருஷ்ணவிலாஸ் கொத்சு, நெல்லை இருட்டுகடை அல்வா. பாளையங்கோட்டை தேங்கால்பால் முறுக்கு.

இந்த பட்டியல் போல ருசியறிந்த பலரும் தங்கள் விருப்ப பட்டியல் ஒன்றினை நிச்சயம் வைத்திருப்பார்கள்.

உணவிற்கு ருசி சேர்க்க கூடியது தண்ணீரும் அடுப்பும் என்பார்கள். இரண்டையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் மண்பானைகளில் சமைப்பதில் உள்ள தனித்த ருசிக்கு காரணம் பானையும் அந்த ஊர் தண்ணீருமே..

சமஸ் தான் கட்டுரை எழுதிய உணவுவகைகளை தேடித்தேடிச்சென்று சாப்பிட்டு அந்த ருசி மயக்கத்தை படிப்பவர்களும் உணரும்படியாக எழுதியிருக்கிறார்.

திருவையாறு அசோகா பற்றி எழுதும் போது  அசோகாவின் விசேசம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை. நாக்கில் பட்டாலே போதும். காற்றில் இசை கரைந்துவிடுவது போல அசோகா கரைந்துவிடும் என்று எழுதுகிறார் சமஸ்.

மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா பற்றி குறிப்பிடும் போது முதல்கடிக்கு மொறுமொறுப்பு அடுத்த கடிக்கு பதம். மூன்றாம் கடிக்கு கரைசல். அப்படியொரு பக்கோடா என்று பக்கோடாவிற்கான இலக்கணத்தை சமஸ் வரையறை செய்திருக்கிறார்.

ரவா பொங்கலை பற்றி எழுதும் போது அது பொங்கலுக்கு சின்னம்மா உப்புமாவுக்கு பெரியம்மா என்று என சுட்டிகாட்டுவது இயல்பான நகைச்சுவை.

ருசியான உணவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், தமிழக உணவு கலாச்சாரச் கூறுகளை  விரும்புவர்களும் அவசியம் இதை வாசிக்க வேண்டும்.

தான் பிரசுரம் திருச்சி இந்த நூலை வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு.

சமஸ். 94427 07988. விலை. ரூ.60.

 

பார்த்ததில் ஈர்த்தது (ஸ்கூப் புத்தகத்திலிருந்து)

 

குல்தீப் நய்யாரின் ‘ஸ்கூப்’ (மதுரை பிரஸ் வெளியீடு - காலச்சுவடு விற்பனை உரிமை) படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து சில வரிகள், நான் ரசித்தவை அல்லது என்னை யோசிக்க வைத்தவை அல்லது நான் புதியதாகப் படித்தவை - இங்கே. (இதைப் படித்துவிட்டு அனைவரும் மதுரை பிரஸ் வெளியிட்டிருக்கும் ‘ஸ்கூப்’ புத்தகத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :>) தொடர்ச்சி இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
தமிழ்ப் பதிப்பிற்கான முன்னுரையிலிருந்து சில வரிகள்:

நெருக்கடி நிலை காலகட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலையானதும் காமராஜரைச் சந்தித்தேன். தான் இந்திரா காந்தியைத் தவறாகக் கணித்துவிட்டதாக மிகவும் வருந்தினார் காமராஜர். சென்னையில் அவரது வீட்டிற்கு வெளியில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்திருந்தார் காமராஜர். நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் நடந்த அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அதனால் அதைப் பற்றித் தொடர்ந்து பேச அவர் விரும்பவில்லை. இந்திரா காந்தியை பிரதமராக்கிய குற்ற உணர்வில் இருந்தார் காமராஜர்.
ஒருவகையில் பார்த்தால் நீங்களும்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பொறுப்பாளி என்று அவரிடம் சொன்னபோது எதுவும் பேசாமல் மூன்று, நான்கு முறை தலையில் அடித்துக் கொண்டார். அவரது மனப்போராட்டமும் நிராசையும் அதில் வெளிப்பட்டன.

 
மௌண்ட்பேட்டனுடனான சந்திப்பு குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.
பிரிவினையால் ஏற்பட்ட விளைவுகளை அவர் (மௌண்ட்பேட்டன்) மறுக்கவில்லை. என்னால் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் பிரிவினையைத் துரிதப்படுத்தியாக வேண்டியிருந்தது என்றார் அவர். நான் இறந்துபோய் கடவுளிடம் செல்லும்போது இப்படிச் சொல்வேன்:
''இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரிலிருந்து கடற்படைக்கு தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது உணவுக் கப்பல்களை வங்காளத்திற்கு அனுப்பி இரண்டரை மில்லியன் பேரைக் காப்பாற்றியிருக்கிறேன். இத்தனைக்கும் அப்படிச் செய்ய வேண்டாம் என்று சர்ச்சில் சொன்னார். அதனால், என் கணக்கில் இன்னம் ஒன்றரை மில்லியன் பாக்கியிருக்கிறது என்று அவரிடம் வாதாடுவேன்'' என்று சொன்னார் மெளன்ட்பேட்டன்.
உங்களது பாகிஸ்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் துண்டுதுண்டாகிவிடும் என்று ஜின்னாவிடம் சொன்னேன் என்று நினைவு கூர்ந்தார் மெளன்ட்பேட்டன். ''என்னுடைய கணிப்பு சரியாகிவிட்டதென்று ராஜாஜி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.'' எனக்கு என் வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறதென்று அவருக்கு நான் பதிலெழுதினேன் என்று திரும்பவும் அழுத்திச் சொன்னார் மெளன்ட்பேட்டன்.எல்லாம் நடந்த பிறகுதான் இவருக்கு இது தோன்றியது என யாரும் குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற கவனம் அந்த வார்த்தைகளில் இருந்தது. பிரிவினைத் திட்டத்தில் பங்குவகித்த பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் எச்.வி. ஹட்சனிடமும் கேம்பெல் ஜான்சனிடமும் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்துவிடும் என்று மெளன்ட்பேட்டன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா என்று கேட்டேன். இப்படி ஒரு விஷயத்தையே தாங்கள் இப்போதுதான் கேள்விப்படுவதாக சொன்னார்கள் அவர்கள்.

ரெட்க்ளிஃப் குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள். இந்தியப் பிரிவினையின்போது இந்திய, பாகிஸ்தான் எல்லையை வகுத்து, எந்த நாடுகள் எதனுடன் சேரவேண்டும் என்னும் பொறுப்பை நிறைவேற்றியவர் ரெட்க்ளிப்.
''நீங்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பாகிஸ்தானிலிருக்கும் முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்'' என்று ரெட்க்ளிப்பிடம் சொன்னேன். அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் ரெட்க்ளிஃப். ''இந்தியாவுக்குச் செல்லவேண்டிய லாகூரை நான் பாகிஸ்தானுக்கு அளித்தேன். அப்படியில்லாவிட்டாலும்கூட, இந்துக்களை விட முஸ்லிம்களுக்குத்தான் நான் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறேன்'' என்றார் ரெட்க்ளிஃப்.
''காஷ்மீரைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. நான் லண்டனுக்கு திரும்பி வெகுநாட்களுக்குப் பிறகுதான் அதைப் பற்றியே கேள்விப்பட்டேன்'' என்று சொன்னார் ரெட்க்ளிஃப்.''உங்களுடைய உளுத்துப்போன பாகிஸ்தான் இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் இருக்காது என்று ஜின்னாவைத் தான் எச்சரித்ததாக மெளன்ட்பேட்டன் சொன்னார். அது உண்மைதானா'' என்று ரெட்க்ளிஃபிடம் கேட்டேன். ''நான் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, நீங்கள்தான் முதன்முறையாக இதைப் பற்றிச் சொல்கிறீர்கள்'' என்றார் ரெட்க்ளிஃப்.
ரெட்கிளிஃப் காஷ்மீரையே கேள்விப்பட்டதில்லையாம். நல்ல நபர் நாட்டைப் பிரிக்க. லாகூரை பாகிஸ்தானுக்குக் கொடுத்தேன் என்கிறார். தேங்காயை பக்கத்து வீட்டு மாமிக்குக் கொடுத்தேன் என்ற ரேஞ்சுக்குப் பேசுகிறார். ஒரு நாட்டைப் பிரிப்பதில் என்ன அவசரம் பாருங்கள். நேரு பக்கவாதம் வந்து படுத்துக் கிடந்தார், குளியறையில் கால் வழுக்கிக் கீழே விழுந்து இறந்தார் என்பது போன்ற செய்திகளெல்லாம் ஒவ்வொரு வரியில் வந்து போனாலும், அப்படியே மனதில் தங்கி, பெரும் எண்ண அலையையே ஏற்படுத்திவிடுகின்றன.

சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

வெங்கட் சாமிநாதன் |

01ஜெயந்தி சங்கரை எனக்கு கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் தெரியும். இது அவர் குற்றமில்லை. என்னுடையதுதான். இரண்டு மூன்று வருடங்களாகவே அவர் புத்தகங்கள் சில என்னிடம் இருந்த போதிலும், அவை முழுதையும் விடாமல் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமலேயே போய்க்கொண்டிருந்தது. அவர் புத்தகங்களிலேயே பார்த்ததும் எனனை மிகவும் கவர்ந்தவை இரண்டு. சீனக் கவிதைகளை அறிமுகம் செய்து அவற்றைக் கால வாரியாக தொகுத்துக் கொடுத்திருந்த புத்தகமும் சீனப் பெண்களைப் பற்றி வரலாற்று நோக்கில் எழுதியிருந்த புத்தகமும்தான். ஜெயந்தி சங்கரின் புத்தகம் வருவதற்கு முன்னாலேயே எனக்கு சீன, ஜப்பானிய கவிதைகளில் பெரும் கவர்ச்சி இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதைப் படிக்க எடுப்பதும், சில பக்கங்கள் படிப்பதும், உடனே இடையில் வேறு அவசர வேலைகளும் நிர்ப்பந்தங்களும் முன்னிற்க, அது பின் தள்ளப்பட்டுவிடும். இன்னுமொரு காரணம், இரண்டு புத்தகங்களுமே பல நூற்றாண்டுகள் விரிந்த வரலாற்றை தம்முள் அடக்கியவை. ஆக, இப்படியே பல முறை நிகழ்ந்துள்ள்து. தொடர்ந்து நிகழ்ந்தும் வருகிறது.. இது ஜெயந்தி சங்கருக்கோ, அவருடைய எழுத்துக்கோ, சீனக் கவிதைகளுக்குமோ நியாயம் செய்யும் காரியமில்லை. இதை ஒப்புக்கொண்டு என் தவறுகளை பொதுவில் இப்படிப் பதிவு செய்வதுதான் என்னால் இப்போது ஆகக் கூடிய காரியம். இந்த வார்த்தைகள், ஜெயந்தி சங்கருக்கு மாத்திரம் இல்லை, இன்னம் பலருக்கும் சொல்லப்படும் வார்த்தைகள்தான். ஜெயந்தி சங்கரை மாத்திரம் தனிமைப் படுத்தி இழைக்கப்படும் அநியாயம் இல்லை அவரோடு பங்கு கொள்ள பலர் இருக்கின்றனர். அதில் பெண்களும் உள்ளனர். பெண்பாவம் பொல்லாது என்பார்களே. அதுவும் பயமுறுத்துகிறது.

ஜெயந்தி சங்கர் கடந்த இருபது வருடங்களாகத்தான் சிங்கப்பூரில் வாழ்பவர். இந்தியாவில் பல வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிப்படிப்பின் காலத்திலிருந்து வாழ்ந்த பரிச்சயம் கொண்டவர். கல்லூரிப் படிப்பு தமிழ் நாட்டில், திருச்சியில். ஆக, தமிழக வாழ்க்கையோ, தமிழோ எதுவும் அன்னியமில்லை. படிப்பில் கொண்ட தீவிர ஈடுபாடு தானும் எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியதாகச் சொல்கிறார், ஜெயந்தி சங்கர். இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், இது காறும் அவர் படிப்பைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிகவும், தான் என்ற முனைப்பற்ற, தன் இயல்பில் தான் சொல்லிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் வருகிறார் என்பதைச் சொல்லத்தான்.

 

 

 

 

 

 

 

jayanthi_sankar_naaleekaaldolar1நியாயமாக, இதுகாறும் வெளிவந்துள்ள எழுத்து முழுதையும் ஒருங்கே வைத்துக்கொண்டுதான் ஒரு முழுமையுடன் அவர் பற்றிச் சொல்லவேண்டும். இருப்பினும் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழைய, புதிய சந்தர்ப்பங்களினிடையில் அது சாத்தியமில்லை. இப்போது கையிலிருப்பது ‘நாலே கால் டாலர்’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு. தான் அறிந்த வாழ்வையும் அனுபவத்தையுமே எழுதும் இயல்பில், இருபது வருட காலமாக வாழ்ந்து வரும் சிங்கப்பூர் வாழ்வே அவரது எழுத்துக்களில் விரிகிறது. ஒரு பெரிய நகரத்தை மாத்திரமே தன்னுள் கொண்ட ஒரு சின்ன தீவு. அதுவே பல்வேறு இனமக்கள் நெருங்கி வாழும் அடங்கிய சிறு நாடும் ஆகிறது.

அந்தச் சிறு நாடாகிவிட்ட பெரு நகரம் ஆசிய கண்டத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும் பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இந்த பூதாகார வளர்ச்சி அனேகமாக முப்பது நாற்பது வருட காலத்துக்குள் தான் சாத்தியமாகியுள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு சிங்கப்பூர் என்றாலே எழும் பிம்பங்கள் ஒரு குட்டி ந்யூயார்க் மாதிரித்தான். அதை பயங்கரமாக சிதைத்தது சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவரான இளங்கண்ணனின் நாவல்கள். அவரது நாவலில் வரும் ஒரு சித்திரம் சிஙக்ப்ப்பூரில் மாடுகள் வளர்த்துக் கொண்டு பால் வியாபாரம் செய்பவனைப் பற்றியது. எனக்கு பயங்கர அதிர்ச்சி. நான் தில்லி சென்றபோது இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கிடையே காலியாகவிருக்கும் மனைகளில் காணும் எருமை மாடுகள் கட்டிக்கிடக்கும் தொழுவங்களும் பால்காரர் குடிசைகளும். சிஙகப்பூரிலும் ஆங்காங்கே மாட்டுத் தொழுவங்களும் தார்ச்சாலைகளில் எருமைச் சாணிப் பத்தைகளும் கிடக்குமோ, தில்லி கரோல் பாக் போல, மாமபலம் போல? இரண்டுமே சிங்கப்பூரின் வாழ்வுண்மைகள்தான்.

அதோடு ஒரு நகரத்துக்குள் வாழ்வதால், தமிழர்களைவிட பெரும்பான்மையில் வாழும் சீனர்களுடனும், மலாய் மக்களுடனும் நெருங்கி வாழும் அவர்களுடன் பலவற்றையும் பகிர்ந்து வாழும் வாய்ப்புகளோ, நிர்ப்பந்தங்களோ கூட வாழ்வுண்மைகள்தான். இன்னமும் ஒரு தலைமுறை காலத்துக்குள்ளோ அல்லது கூடவோ நிகழ்ந்துள்ள பொருளாதார மாற்றங்கள், சட்டத்தின் கெடுபிடிகள் அன்றாடம் சந்திக்கும் நிலையும் கூட வாழ்வுண்மைகள்தான். அதை மனித மனம் எவ்வாறெல்லாம் எதிர்கொள்ளும் என்பதுதான் ஒரு எழுத்தாளனுக்கும் நமக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயங்கள்.

இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாம். தீபாவளி நெருக்கடியில் மாலையில் குழந்தை அர்ச்சனா கேட்ட ‘பாலக் பன்னீர்’ செய்வதற்கு கீரையும் பன்னீரும் வாங்கக் கடைத்தெருவுக்குப் போன பவித்ரா ஒரு இடத்தில் மீதி சில்லரை வாங்க மறந்துவிடுகிறாள். கடைக்காரர் கூப்பிட்டு, ”மறந்துட்டீங்களே அம்மா!” என்று சில்லரையைக் கொடுக்கிறார். அந்த மறதி இடம் மாறிவிட்டால், விபரீதமாகிப் போகிறது. நிறைய சாமான்களை வாங்கிக்கொண்டு சிரமத்தோடு தூக்கிச் செல்லும்போது, தீபாவளி வாழ்த்துக்கார்டு நான்கு வாங்கியதற்குக் காசு கொடுக்க மறந்து போனது திருட்டுக் குற்றமாக உருவெடுத்து விடுகிறது. “மறந்துட்டீங்களேம்மா” என்று யாரும் சொல்ல வில்லை. ஒரு கண்ணியமான் பவித்ரா ராஜ், ஒரு டிராமா ஸ்க்ரிப்ட் ரைட்டர், கடைநிலை குற்றவாளிகளோடு சிறையில் அறைக்கப்படுகிறாள். ஒரு சாதாரண மறதி, அடுத்த நிமிடமே சரிசெய்யப்படக்கூடிய மறதி, சிறைத் தண்டனைக்குரிய குற்ற மாககும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது சட்டம். அதைச் சாத்தியமாக்குவது சட்டத்தை நிர்வகிக்க வந்த மனிதர்கள். சட்டம் மனிதர்களிடையே தாரதம்மியம் பார்ப்பதில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். அதன் எதிர்கோடி முனையில், சட்டத்தின் கெடுபிடிகளை மனிதாபிமானத்தோடு பார்ப்பவர், ‘சரி இனிமேல் கவனமாக இருங்கள்” என்று சொல்லும் சாத்தியங்களைக் கொண்ட நம் சமூகத்தில், ரூ 60,000 கோடிகளை திட்டமிட்டு விழுங்கியவனையும், அதன் பங்குதாரர்களையும் ‘கண்டுக்காமல் விட்டு விட’ வழிவகுத்து விடுகிறது. சட்டத்தின், மனித மனத்தின், சமூக குணங்களின் விசித்திரங்கள்.

singaporefineஈரம் என்ற கதையும் இம்மாதிரியான விடம்பனங்களைத்தான் முன் வைக்கிறது. சிங்கப்பூர் வாழ்க்கைக்கும் தமிழ்நாட்டின் கிராமம் கருப்பூருக்கும் இடையே எத்தனை தூரம்! “என்ன சட்டம், என்ன ஒழுங்கு” என்று மலைத்து வியந்த கண்கள் ஒரு நாள் கடைத்தெருவுக்குப் போய் திரும்பும் வழியில் மழையில் நனைந்து, ‘வீடு திரும்ப, இடையில் பழுதான ‘லிஃப்டில்’ மாட்டிக்கொண்டு தவித்த அந்த நாள், வாழ்க்கையிலேயெ கறை படிந்த நாள்தான். லிப்டிலிருந்து மீள்வோமா என்று பீதியில் உறைந்து கிடந்ததுதான் தெரியும். பிறகு லிப்ட் சரியாக வெளிவந்த போது, “லிப்ட் ஈரமாகிக் கிடப்பதைப் பார்த்து, லிப்டில் தான் மூத்திரம் பெய்துவிட்டதாக, ஒரு சீன சூபர்வைஸர் சந்தேகிக்க, பரிசோதனைக்கு மூத்திர சாம்பிள் கொடுக்கவேண்டி வருகிறது. பரிசோதனை தனக்கு எதிராக சாட்சிய்ம் சொல்லவே, லிஃப்டில் மூத்திரம் பெய்த குற்றம், பின்னர் அதை மறுத்த குற்றம் அதைவிட பெரிய குற்றம். 700 வெள்ளி அபராதம், கட்டத் தவறினால் சிறைவாசம். ‘இந்த ஊரைப் போல உண்டா, என்ன சட்டம், என்ன ஒழுங்கு! என்று வியந்த சிங்கப்பூர் இனி வேண்டாம், தமிழ்க கருப்பூர் தான் தன்க்கு லாயக்கு’ என்று உடனே ஊர் திரும்பிய கதைதான் ஈரம். இது சிங்கப்பூரை தமிழ் நாட்டு கருப்பூர் கிராமத்தோடு ஒப்பிட்டு கருப்பூரைத் தேர்ந்தெடுக்கும் காரியம் இல்லை. இரண்டிலும் சட்டத்தை தன் இஷடத்துக்கு நிராகரிக்கும் அல்லது வளைத்துக் கொடுமை செய்யும் மனிதர்களைச் சுட்டும் காரியம்.

ஒரு வேலை வாய்ப்பு தரும் பொறுப்பில் இருக்கும் கணவன், வேலையில்லாதிருக்கும் தன் தம்பிக்கு அந்த வாய்ப்பைத் தராது, யாரோ ஒரு சீனனின் குடும்பத்தேவை அதிகம் என்று சொல்லி, அந்த சீனனை வேலைக்கு எடுத்துக்கொண்ட கணவனிடம் கொண்ட கோபம் அதிக நாள் நீடிப்பதில்லை. காரணம், அந்த வேலை வாய்ப்பின் பக்க விளைவு. அந்த சீனனின் மனைவிதான் தன் பெண் அனுவுக்கு டீச்சர். இப்போது அந்த டீச்சர் முன்னைப் போல எரிச்சல் படுவதில்லை. சிரித்த முகமாக இருக்கிறாள். இப்படிக் கதை சொன்னால் அது ஒன்றும் அப்படிப் பிரமாதமாகத் தோன்றாது. இது போன்ற இன்னும் பல கதைகள் சிங்கப்பூரில் தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் தருக்கின்றன. வந்து போகும் மனிதர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள், சீனர்களோடும் மலாய்களோடும் இணைந்த வாழ்க்கை, ஜெயந்தியின் அல்ட்டிக்கொள்ளாத, பந்தா இல்லாத கதை சொல்லும் பாணி எல்லாம் சுவாரஸ்யமானவை

தன்க்கு இயல்பானவற்றை, தன் பரிச்சயத்திலும் அனுபவத்திலும் உள்ளவற்றைத் தான் எழுதுகிறார் என்று சொன்னேன். இங்கு சொல்லாமல் சொல்லப்படுவது, பெண்ணீயம் என்று அடையாளப் படுத்தாமல், அந்த அடையாளத்திற்கான மசாலாக்கள் சேர்க்காமல், வாழ்க்கை பெண்ணின் பார்வையிலேயே இயல்பாக வந்து விழுந்து விடுகிறது என்பதுதான். சாதாரண சித்தரிப்பிலேயே, வாழ்க்கையே பெண்ணியம் பேசிவிடுகிறது. சுரமாகக் கிடக்கும் போது கூட, கணவனுக்கு ஒரு ரசமும் சாதமுமாவது பண்ணிப் போட வேண்டியிருக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும். ஆனால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத்தான். மகள் கூட உதவ மாட்டாள். அவளுக்கு வேறு க்ளாஸ் இருக்கிறது. போக வேண்டும். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. “நீயே போய்க்குவே இல்லையா?” என்ற கேள்வி பதிலோடு தன் கணவனின் கனிவு முடிந்து விடுகிறது. “கறி கூட வேண்டாம். ஒரு ரசம், சாதம் போதும். அவசரமாக நான் போக வேண்டும். நிறைய் வேலை” ஜூரமாகக் கிடக்கும் மனைவியிடம் காட்டும் பரிவு அத்தோடு முடிகிறது. ஜூரமாகக் கிடக்கும் போது தான் வேலையும் அதிகமாவது போலத் தோன்றுகிறது. கணவனிடம் தன் கஷ்டத்தைச் சொன்னால், “எனக்கு சுரம் வந்தால் ஒரே வலி. ஒரு வேலை செய்ய முடிவதில்லை. எழுந்தால் மயக்கமா வருகிறது. அதனால் தான் நான் படுத்துக்கொண்டே இருக்கிறேன். நீயாவது சுரத்தில் கூட எப்படியோ எல்லா வேலையையும் செய்து விடமுடிகிறது” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நகரும் கணவன். இப்படி வெகு சாதாரணமாக, தன் சுரமே படுக்கையில் கிடந்து மயக்கத்தைத் தவிர்க்க ஒய்வெடுக்க வேண்டிய சுரம், தன் மனைவியின் சுரம் பொருட்படுத்த வேண்டாத ஒன்று, ஏனெனில் அவளால் எப்படியோ எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது, என்று தன் மனைவியின் வேதனையை பொருட்படுத்த வேண்டாத அலட்சியத்துடன் உதறித் தள்ளுவதுதான் ஆண் என்னும் அகங்காரம். சாதாரண அன்றாடம் புழங்கும் வார்த்தைகள் போதும், அன்றாட நிகழ்ச்சிகள் போதும், சாதாரண என்றும் பார்க்கும் ஆண்களும், பெண்களும் குடும்பங்களும் போதும், பெண்ணியம் பேச. வாழ்க்கையின் மனிதர்களின் குணத்தைச் சொல்ல. சமூக மதிப்புகளைச் சொல்ல. விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உடல் மொழி தேவையில்லை பெண்ணியம் பேச. வெகு அல்ட்சியமாக, வெகு சாதாரணமாக, தன் மனைவியின் வேதனையை உதறித் தள்ளும் காட்சியோ மொழியோ தேடி உருவாக்கவேண்டிய அவசியத்தில் இல்லை.

அடிக்கடி நோய்வாய்ப்படும் ஜமுனா. பல முறை மரணப் படுக்கையிலிருந்து பிழைத்து எழுந்தவள். விவாகரத்துப் பெற்ற தந்தையோடு ஜோஹோரில் வாழும் மகன் அவளை யாரோ ஒரு ஆண்ட்டியாகத் தான் பார்க்கிறான். தன் புது மம்மியோடு ஒட்டிக்கொண்டுவிட்டானாம். தனிக்கட்டையாகி விட்டவளுக்கு ஆதரவு தந்த திலீபனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, மறுபடியும் கருவுற்றால் தன் உயிருக்கு ஆப்த்தாகுமாதலால் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தக்கூடாது, என்ற நிபந்தனையோடு திலீபனை மணம் செய்து கொள்கிறாள். ஆனால் திலீபனின் மனம் மாறி குழந்தை வேண்டும் என்று வற்புறுத்த அதிக காலம் தேவையாயிருக்கவில்லை. அவள் மறுபடியும் கருத்தரித்தால் அவள் உயிரிழப்பாளே என்ற எண்ணமே திலீபனுக்குத் தோன்றுவதில்லை.

தன் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு இதோ வந்து விடுகிறேன் என்று கடைக்குப் போவது போலச் சொல்லி வெளியேறி, இன்னொரு பெண்ணைக் கட்டிக்கொண்டவனுக்கு, தன் முதல் மனைவியும் குழந்தைகளும் நினைவுக்கு வருவது, தன் சிறுநீரக நோய்க்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முதல் மனைவியின் மகன் முன்வரும்போதுதான். திரும்பி வருகிறான் தன் முதல் மனைவியின் சம்மதம் கேட்க. முதலில் மறுத்தவள், பின் மகனின் சொல்லுக்குப் பணிகிறாள்.

வகுப்பில் மிகவும் திறமைசாலி, என்று பெயர் வாங்கிய பையனை ஐலண்ட் நியூஸ் பேப்பரிலிருந்து பேட்டி எடுக்க பத்திரிகை ஆசிரியர் வருகிறார் என்ற செய்தி குமணனுக்கு மாத்திரமல்ல, அவன் தாய், பள்ளி ஆசிரியர், அவன் நண்பர்கள் எல்லோருக்கும் தலைகால் புரியாத பரவசம். கடைசியில் பத்திரிகையிலிருந்து வந்த சீன நிருபர் குமணனைக் கூப்பிட அவன் தன் கைகூப்பி மரியாதையுடன் வணக்கம் சொல்லும் புகைப்படம், ‘உன்னைக் கைது செய்வேன் தெரியுமா? என்று அவர் மிரட்டுவதாகவும், குமணன் “ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சுவதாகவும் வாசகங்களோடு பத்திரிகையில் பிரசுர்மாகிறது. ஒரு சிறு பையனை மாத்திரமல்ல, அவன் குடும்பத்தை, பள்ளியை எல்லோரையும் நயவஞ்சகமாக ஏமாற்றிய பத்திரிகையின் ஆசிரியர் பின் என்ன மன்னிப்பைப் பிரசுரித்து என்னவாகப் போகிறது. சிறுவனின் நெஞ்சைக் கீறிய ரணம் சுலபத்தில் சீக்கிரத்தில் ஆறப்போவதில்லை.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.

ஜெயந்தி சங்கருடனான நீண்ட பேட்டி ஒன்றை பதிவுகள் என்னும் இணைய இதழில் படித்தேன். அந்த சின்ன இடத்தில் கூட, அவர் தனித்து விடப்பட்டவரோ, அவரை ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கள் உண்டோ போன்ற சந்தேகங்கள் எழச் செய்தது அந்தப் பேட்டி. நாலே கால் டாலர் சிறு கதைத் தொகுப்பு சிங்கப்பூர் தமிழ் வாக்கையையும் சொல்கிறது. ஜெயந்தி சங்கரையும் நமக்குச் சொல்கிறது.

நாலே கால் டாலர்: ஜெயந்தி சங்கர்: (சிறுகதைகள்) மதி நிலையம், தணிகாசலம் ரோட், தியாகராய நகர், சென்னை-17

ஜெயந்தி சங்கர் சொல்வனத்துக்காகச் செய்திருக்கும் சீன மொழிபெயர்ப்புக் கவிதைகள் இதே இதழில் இடம்பெற்றிருக்கின்றன: “சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்”


அந்தக்காலம்.. சொர்க்கமா?

Nostalgia விற்கு நனவிடைத் தோய்தல் என்ற அழகான தமிழ்ப்பெயர் வைத்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
நாம் அவ்வப்போது நனவிடைத் தோய்ந்தாலும், மற்றவர்களின் அந்தக்கால நினைவுகளைக் கேட்க நம்மில் பெரும்பாலோருக்கு பொறுமை இல்லை.
எனக்கு முதலில் இந்த "அந்தக்காலம்" என்பதை எப்படி வரையறை செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.
பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திர பல்லவனும் மாமல்லபுரக் கடற்கரையில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், தாத்தா மலையமான் கூத்துக்கேட்டுவிட்டு தாமதமாக வருகிறார். நண்பர்கள் உரையாடல் இப்படிப்போகிறது:

"எப்படித்தான் அவருக்கு உடம்பு தாங்குகிறதோ?"
"என்ன இருந்தாலும் அந்தக்கால உடம்பல்லவா"

இதைப்படித்து எனக்கு சிரிப்பு அடங்க பல நிமிடங்களாயின. ஆதித்த கரிகாலனே ஆயிரம் ஆண்டுக்கும் முன் வாழ்ந்தவன்.. அவனுக்கும் "அந்தக்கால உடம்பு" மேல் பொறாமை இருப்பது, இது நாம், இன்று மட்டும் சந்திக்கும் சூழல் இல்லை என உணர்த்தியது.

காலம் மாற மாற, அந்தக்காலமும், அது கொடுத்த நல்ல விஷயங்களும் மட்டுமே ஞாபகம் இருந்து, அந்தக்காலத்தின் தீமைகள் வசதியாக மறந்து போகின்றன. இளமைத் துள்ளலோடு படம் எடுக்கும் 60+ இயக்குநர்களின் படங்களில், நிஜமான இளைஞர்களின் படத்தைக்காட்டிலும் ஆபாசம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். பஸ்ஸில் ஏறும் பெண்கள் இளைஞர்களை விட முன்னாள் இளைஞர்களுக்கே அதிகம் பயப்ப்டுவார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
என் "அந்தக்காலம்" என்பது 1950 - 70 எனக்கொண்டால், அதைப்பற்றிய இனிப்பு தடவிய நினைவுகளே எனக்குப் புகட்டப்பட்டிருக்கிறது.
துக்ளக்கில் வெளிவரும் துர்வாசரின் புதிய தொடர் "அதனால என்ன பரவாயில்லை" - யாராவது படிக்கிறீர்களா?.

ரைட் ஹானரபிள் வாத்தியார்களும், பிரசவத்துக்குப் பத்தியம் பார்த்த மாமியார்களும், கண்டிப்பான மேலதிகாரிகளும் உலாவரும் தொடரில் அந்தக்காலத்தில் இருந்த சுத்தபத்தமான வாழ்க்கை முறை, மனிதநேயம், உயர்வான விழுமியங்கள் எதுவும் இந்தக்காலத்தில் இல்லாமல் போனது, அவசர உலகத்தின் பணத்துரத்தல்களில் பலியான நுன்னுணர்வுகள் எனப் பலவாறாகவும் கதை அடிக்கிறார். வாராவாரம் வெறுப்பேற்றுகிறார்..

அன்று அவ்வளவு அருமையாக இருந்த சமூகத்தை இன்று கெடுத்து வைத்திருப்பதில் என் பங்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் இருந்தாலும், அப்படிப்பட்ட நல்ல உலகத்தில் வாழ்ந்த நீங்கள், எங்களுக்கு ஏன் மோசமான உலகத்தை விட்டுச்சென்றீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழும், வயதிற்கு மரியாதையால் தடை செய்யப்பட்டு வெளிவராமல் போகும்.

அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் ரத்தமும் சதையும் ஆன மனிதர்கள்தானா? அல்லது கொள்கைக்காக கோபதாபங்களைத் துறந்து, எந்நேரமும் பெரியவர்கள் பேச்சைக்கேட்டு வாழ்ந்த முனிவர்களா? என்றெல்லாமும் சில நேரங்களில் கேள்வி எழும். எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் இவர்கள் என்று அறிய ஆசைப்பட்டாலும், தெளிவாய் அறிய வழிகள் ஊடகங்கள் குறைவு காரணமாய் மிகக்குறைவே.

இயல்பாக அந்தக்கால வாழ்க்கையை, அதன் சுகதுக்கங்களோடு, உயர்வு தாழ்வுகளோடு பதிவு செய்த புத்தகங்களில் நான் படித்தவை மிகக்குறைவே.
அந்த வகையில் ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"உம், "காகித மலர்கள்"உம் முக்கியமானவையாகத் தோன்றுகிறது.

எஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழையும் காஸனோவாவை முக்கியக்கதாபாத்திரமாகக்கொண்ட "என் பெயர் ராமசேஷன்", தன்னிலை ஒருமையிலேயே நகர்கிறது. மாதம் நூறு ரூபாய் கையில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக எஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொண்ட ராமசேஷன், ராவுடன் அறையைப்பகிர்ந்துகொள்கிறான். ராவின் குடும்பம் ராமசேஷனின் ஆர்வங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் அளவுக்கு விசித்திரமானது.- "எதைப்பற்றியும் கவலைப்படாத" தங்கை, "கலை" ஆர்வம் கொண்ட தாய், பணம் கொட்டும் தந்தை, ஏறத்தாழ அடிமைபோல ஒரு தோழன்.. தன் குடும்பத்தில் உள்ள சம்பிரதாயமான போலித் தனங்களை உணர்ந்திருக்கும் ராமசேஷனுக்கு, இந்த அமைப்பு, புதிய போலித்தனங்களை அறிமுகப்படுத்துகிறது - புதிய அனுபவங்களையும் அவமானங்களையும் அளிக்கிறது. வேறு வேறு வட்டங்களில் சுழன்றாலும், கடைசியில் வரையறுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்புகிறான்.

"காகித மலர்கள்" இன்னும் அதிகமான கதாபாத்திரங்கள், முரண்பாடுகள் - ஸ்டெனோகிராபராக இருந்து சாம தான பேத தண்டங்களைப் பிரயோகித்து முன்னேறிய உணவுத்துறை செயலாளர், அவருடைய "நவீனயுக" மனைவி, விஸ்கான்சின் பல்கலையில் Ecology ஆராய்ச்சி செய்யும் ஒரு மகன், எல்லாக்கட்டுகளையும் உடைக்கத்துடிக்கும் இன்னொரு மகன், தன்னம்பிக்கை குறைவான மூன்றாம் மகன், அவர்கள் காதலிகள், நண்பர்கள் -- எல்லோரின் வாழ்க்கையிலும் சில சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது.

இரண்டு புத்தகங்களுக்குமே இந்தச் சுருக்கம் அநியாயமானதுதான். ஆனால், முழுக்கப்படித்தால்தான் ரசித்து அனுபவிக்க முடியும் என்பதால், எந்தச் சுருக்கமும் அநியாயமாகத்தான் முடியும்.

நான் கொஞ்சம் வேகமாகக் கதை படிப்பவன். உரையாடல்களே மூன்று பக்கத்துக்கு இல்லாமல் கதை நகர்ந்தால், அந்த மூன்று பக்கத்தையும் விட்டுவிட்டு நான்காவது பக்கத்துக்கு நேரடியாகத் திருப்பிவிடுவேன். இந்தக்கதையை அப்படிப்படித்திருந்தால் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வாசித்திருக்க முடியாது. என் போன்ற பொறுமையற்ற வாசகனையே முழுமையாகப்படிக்க வைக்கும் அளவிற்கு இயல்பான எழுத்துநடை ஆதவனுடையது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அப்போதைய சிந்தனையை முழுமையாகப் பதிவு செய்வதில் வெற்றி அடைந்திருக்கிறார் ஆதவன். . எல்லா கதாபாத்திரங்களின் உண்மை எண்ணங்களையும் போட்டுக்கொள்ளும் முகமூடிகளையும், அணியும் வேஷங்களையும், split-personalityகளையும் அபாரமாக எழுத்தில் வடித்திருக்கிறார். ஒரு தொண்டைக் கனைப்புக்குப் பின்னால் கூட "நான் ஒரு பெரிய விஷயம் சொல்லப்போகிறேன், கேட்கத் தயாராகுங்கள்" என்ற குறியீடு அடங்கியிருப்பதாகச் சொல்லும் அளவிற்கு சில இடங்களில் அதீதமாய்ப் போனாலும், சுவாரஸ்யம் குறைவதில்லை.

பெரும்பாலும் ஆதவன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை எனச் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அந்தக்காலத்தை" தாண்டி விட்டதாலோ என்னவோ எனக்கு எந்த அதிர்ச்சியையும் இந்தப்பாத்திரங்களும் கதையும் அளித்துவிடவில்லை. வெளிவந்த நேரத்தில் இருந்த சமூகத்துக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். தங்கள் குறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் வாசகர்களும் இந்தக்கதைகளில் தங்களை அடையாளம் கண்டுகொள்வதாலும், அவை வெளிப்படுதல் விரும்பாத காரணத்தாலும் இக்கதைகள் வெகுஜன அங்கீகரத்தை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
என்ன சொன்னாலும், நான் படித்த புத்தகங்களில் சிறந்தவையாக இந்த இரண்டையும் வகைப்படுத்துவதிலும், பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

வெட்டுப்புலி!

இந்நாவல் மாதிரியாக என்னை அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய, கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால் படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக் கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
 
So called திராவிடப் பாரம்பரிய குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல் மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும், நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.

சிறுத்தையை வெட்டிய தாத்தாவின் கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.

முப்பதில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார். முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம். அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம். தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும் உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.

லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன் போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும் நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.

இன்றும் கூட திராவிட இயக்கத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில் சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம் இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள். சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள். நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில் சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன் என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து, சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.

வெட்டுப்புலி போதிப்பது இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக / தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில் இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது. குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு சோறு பதம்.

தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி மடிகிறான்.

பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும், அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில் கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும் வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான் என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.

வர்க்க அடிப்படையில் பின் தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? ‘சோபோன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடுஎன்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில் பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கக்கூடும்.

பார்ப்பன மேலாதிக்க விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின் அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல, நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர் காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருக்கணும்..
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன் சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.. இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான் திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான் பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.
முன்பாகவே ஒரு கதாபாத்திரம் சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள். அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும் பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில் அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.

அண்ணாசாலை கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு படக்குறிப்பு எழுதியிருந்தார். ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க! இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.

1991 ராஜீவ்காந்தி கொலை, 1998 திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில் படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர் கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார். பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார். “இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?

பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு, ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில் நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். வைகோ பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.

வெட்டுப்புலி – சமகால தமிழ் சமூகத்தின் கண்ணாடி! நூல் : வெட்டுப்புலி | ஆசிரியர் : தமிழ்மகன் | விலை : ரூ.220/- | பக்கங்கள் : 376 |வெளியீடு : உயிர்மை பதிப்பகம், | 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், | சென்னை - 600 018. போன் : 24993448 | uyirmmai@gmail.com இணையத்தில் நூலினை வாங்க : http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262

 வெட்டுபுலி நாவல் முன்னுரை
from தமிழ்மகன்

நாவலுக்குள்...

இப்போதுதான் இந்த நாவலை இன்னொரு தரமும் படித்துவிட்டு வெளியே வந்தேன். எனக்கு நெருக்கமான ஒருவரின் டைரியைப் படித்தது மாதிரி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனதில் வெவ்வேறு வடிவம் கொண்டு இப்போது தாளில் இறக்கி வைத்துவிட்டபின்பு கைவிட்டுப் போனதுபோல இருக்கிறது. அதன் காரணமாகவே ஏற்படும் அன்னியத்தன்மையும் சேர்ந்து கொள்கிறது. ஒரு சுதந்திரமும் சோகமும் ஆயாசமுமாக இருக்கிறது.

எனக்கு நன்கு பரிச்சையமான பலரும் இந்த நாவலில் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நானே வருவது போலவும் பிரமைதட்டுகிறது. ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதா பாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் சேர்ந்து பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் நிறைய யோசனையும் தயக்கமும் ஏற்படத் தொடங்கியது.
ஒரு கூட்டுக் குடும்பப் பெரியவர் மண்டையைப் போடும் தருணத்தில் குடும்பத்தில் இருக்கும் நாற்பது ஐம்பது உறுப்பினர்களுக்கும் பாகம் பிரிக்கும் போது ஏற்படும் மனக்கசப்புகளைப் போன்றது அது. ஒருவரோ பெரியவர் போய்ச் சேரட்டும் அப்புறம் நம் பிரிவினைகளைப் பார்ப்போம் என்றார். மற்றொருவரோ பெரியவர் இருக்கும்போதே பிரித்துக் கொள்ளலாம் என்கிறார். வெள்ளைக்காரனைக் குடும்பத்தலைவர் என்று உவமித்ததை அப்படியே ரேடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உதாரணங்கள் நூறு சதவீதம் பொருத்தமானவையாக இருப்பதில்லை.

மராட்டியத்தில் ஜோதிராவ் புலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானது.. பிரிட்டாஷார் மட்டும் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியாவுக்கு சாபவிமோசனமே ஏற்பட்டிருக்காது. அவர்கள் இந்தியாவுக்குக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று கூறியிருக்கிறார். பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை அடைவதுதான் முதல் கடமை என்பது அவருடைய வாழ்நாள் பிரசாரமாகக் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ ஜஸ்டிஸ் பார்ட்டிக்கும் அதே போன்ற நோக்கம்தான். ஜஸ்டிஸ் பார்ட்டி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயல்பட ஆரம்பித்தது.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது போல திராவிட நாடு என்று பிரித்துக் கொள்வதற்கும் சிலர் ஆசைப்பட்டனர். பாகிஸ்தான் பிரிந்து போனது போலவே அதுவும் மோசமான முடிவாக மாறியிருக்கக்கூடும். ஆனால் அந்த யோசனையை தகுந்த நியாயங்களோடு பிரிவதற்கு ஆசைப்பட்டவர்கள் முன் மொழிந்தனர். வழி நடத்த சிலர் நிஜமாகவே ஆசைப்பட்டனர். பலர் சத்தியாவசத்தோடு தியாகம் செய்தனர்.

வேறு மதத்தவன் நம்மை ஆளுவதா என்ற கோபம் சிலருக்கு. வேறு நாட்டவன் நம்மை ஆளுவதா என்பது இன்னும் சிலருக்கு. பார்ப்பனர்கள் வேறு நாட்டினர் என்றும், இந்தியாவில் குடியேறிய வேறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்கள் என்றும் வலியுறுத்தியவர்களுக்கு முதல் விடுதலை ஆரியர்களிடமிருந்து தேவைப்பட்டது. கிருஸ்தவர்கள் வந்தார்கள், அதற்கு முன்னர் இஸ்லாமியர் வந்தார்கள், அதற்கும் முன்னர் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வந்தார்கள்.... எங்களுக்கு முதல்விடுதலை ஆரியர்களிடமிருந்து... என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

வரலாற்று உண்மைகள்.. அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது.

``ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவனைஇவ்வளவு தாமதமாக எதிர்ப்பது ஏன்?'' என்ற கேள்வி எழுந்தது..

``இல்லை, புத்தரே பிராமண கருத்துகளுக்கு எதிராக எழுந்தவர்தான் என்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் புத்த தத்துவத்தைத் தழுவியர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது...''

ஆனாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லையா என்ற இயல்பான இன்னொரு கேள்வி..

சங்கரரும் ராமாநுஜரும் மீண்டும் இந்து தத்துவங்களைத் தழைக்கச் செய்துவிட்டனர்.

அட இந்தியா முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த ராஜாங்கத்தை இவர்கள் எப்படி அழிக்க முடியும்..?

சிந்து சமவெளி நாகரீகமே ஆரியர் படையெடுப்பால்தானே அழிந்தது? மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் வசித்தவர்களை தென்னிந்தியா நோக்கி விரட்டி அடித்தவர்கள் அவர்கள்தானே? ஆயிரம் ஆண்டுகளில் எல்லாம் அவர்களை அழித்துவிட முடியாது. அவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்..

அவ்வளவு எதிர்ப்பு சக்தி கொண்டவர்களா அவர்கள்..?

ஆலகால விஷங்கள்... அழிக்கவே முடியாதவர்கள்...

இந்திய ஒற்றுமையைக் குலைக்க காலனி ஆதிக்கத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட சதிகள் இவை யாவும். இந்தியா வேதங்களின் நாடு, உலகத் தத்துவங்களுக்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடு. இதன் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கலாமா? அரசியல் ஆதாயத்துக்காக அபாண்டமான கருத்துகளைச் சொல்லும் இந்தப் பாவிகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும்?

வானியல் சூத்திரங்கள், கணிதக் கோட்பாடுகள், ஆழ்ந்த இதிகாசங்கள்... அடடா இதையெல்லாம் இடக்கையால் புறம்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு வால் பிடிக்கும் அக்கிரமக்காரர்களை வருங்காலம் மன்னிக்காது..


நீ சூத்திரனாகப் பிறந்ததற்கு உன் விதிதான் காரணம்... எல்லாம் அவன் செயல்... என்கிற பிற்போக்குச் சிந்தனைகள்தான் வேதங்கள். ஒவ்வொருத்தனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் வைத்திருக்கும் மடத்தனம்தான் இதிகாசங்கள். காட்டு மிராண்டியாக இருந்த மனிதர்களுக்குச் சொன்ன கதைகளைக் கண்டு மலைக்காதே... அவை காலத்துக்கு ஒப்பாதவை...

இந்தியத் தத்துவ தரிசனங்களை அறியாத மூடர்கள் ஒட்டு மொத்தமாக இப்படிஒதுக்கித் தள்ளுகிறார்கள். இப்படி வேறு மதத்தின் தத்துவங்களை இவர்களால் விமர்சிக்க முடியுமா? கொன்றுவிடுவார்கள். இந்திய மதங்கள் சகிப்புத் தன்மை மிக்கவை...

அயோத்தியில் மசூதியை இடித்தபோதும் குஜராத்தில் உயிரோடு கொளுத்தியபோதும் தெரிந்துவிட்டதே இவர்களின் சகிப்புத்தன்மை...

மாற்று மதத்தினர் இந்து மதத்தை அழிக்க ஆண்டுக்கு எத்தனை கோடிகள் செலவிடுகிறார்கள் என்று தெரியுமா?

........கருத்து மோதல்கள்.. அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப சத்தியாவேசங்கள்...

இது போன்ற சில சத்தியாவேசங்களுக்குத் தடையாக இருந்ததாகக் கருதப்பட்டதால் மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்கள் இன்னுயிரை பலி கொடுக்க நேரிட்டது.



கிராமராஜ்ஜியம், ராட்டை, கிராமங்களின் தன்னிறைவு என்று மகாத்மா காந்தி கனவு கண்டு கொண்டிருந்தபோது, டெஸ்ட் ட்யூப் பேபி, ஒரு குடியிருப்புப் பகுதிக்கு ஒரே ஒரு சமையலறை என்று பரவலானஎல்லைகளைத் தொட்டார் பெரியார் ஈ.வே.ரா.


நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்திரம் என்றார் காந்தி. பெண்கள் நகைகள் அணியாமல் அலங்காரம் செய்யாமல் ஆண்கள் போல் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார் ஈ.வே.ரா. மகாத்மா இங்கிலாந்து அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். பெரியார் இந்தியர்களால் ஆளப்பட்ட அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். காந்திக்கும் பெரியாருக்குமான முக்கியப் புள்ளி இது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேவையில்லாமல் காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுவவதாகவே தோன்றும். தென்துருவத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் வட துருவம் என்ற ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. காந்தத் துண்டு ஒன்றுதான். ஒரு துருவம் இல்லாமல் இன்னொரு துருவம் இல்லை.

காந்தியை ஹீரோ என்பவர்களுக்குப் பெரியார் வில்லன். பெரியாரை ஹீரோ என்பவர்களுக்கு காந்தி வில்லன். சரியாகப் புரிந்து கொண்டால் இருவருமே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோக்கள் என்பது புரியும்.
சுந்திரத்துக்காகப் போராடிய காந்தி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரத்தை வரவேற்கவில்லை. சுதந்திரத்துக்கு இப்போது அவசரமில்லை என்று அவர் கருதினார். பெரியார் அதையே கொஞ்சம் முன்னாடி சொன்னார்.
காந்திக்கு எல்லா மதமும் ஒற்றுமையாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. பெரியாருக்கு எல்லா சாதியும் சமமாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.


இப்படியாக ஒரு மாற்று அரசியல் சிந்தனை இந்தியா முழுக்க இருந்தது போலவே சென்னை, செங்கல்பட்டு பிராந்தியத்தையும் தழுவிக் கொண்டிருந்தது. திராவிட பின்னணியில் சில குடும்பங்கள் செயல்பட்டன. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது. திராவிட கட்சிகளின் அரசாட்சியும் சேர்ந்து கொள்ள அவர்களில் தீவிரமான சிலர் எந்தவித பலனுமின்றியே அந்த இயக்கங்களுக்கு வேராக இருந்து மடிந்தனர். வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதை இந்தக் கதையைப் பின்னிச் செல்லும் அடிச்சரடு. முடிந்த அளவுக்கு அது ஒரு உண்மைக்கதைதான். தீப்பெட்டியின் மேல் இருக்கும் படம்... கடந்த முக்கால் நூற்றாண்டு திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மவுன சாட்சியாக இருக்கிறது. இந்த மூன்றையுமே தொடர்புபடுத்த முடிந்திருப்பது இதை ஒரு படைப்பிலக்கியமாக்க உதவியிருக்கிறது.

பூண்டி அணைக்கட்டுக்குப் போய் சிறுத்தையை வெட்டியவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுவரலாமா என்று கேட்டதும் "சரி வா'' என்று அடுத்த நொடி என்னை அழைத்துச் சென்ற என் மைத்துனர் விவேகானந்தன்.. அவர் உதவி இல்லையென்றால் இந்த நாவலை நான் இப்படித் தொடங்கியிருக்கமுடியாது.

நிகழ்கால சரித்திரக்கதையாக இருப்பதால் முடிந்த அளவு ஜாக்கிரதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது. முதல் வாசகராக இருந்து அபிப்ராயங்கள் சொன்ன கே.ரகுநாதனுக்கு என் முக்கியமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல தயக்கங்களுக்கு அவர் விடையாக இருந்தார்.

நண்பர்கள் கடற்கரய், ரெங்கையா முருகன், த.அரவிந்தன், மரக்காணம் பாலா போன்றவர்கள் வெட்டுப்புலி பின்னணியை வெகுவாக உற்சாகப்படுத்தியவர்கள்.

நாவலின் காலகட்டத்தைத் தவறில்லாமல் சித்திரிக்க "தினத்தந்தி' ஐ.சண்முகநாதன், "ராணி' அ.மா.சாமி, அண்ணாவோடு நெருங்கிப் பழகிய ஜே.வி.கண்ணன், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர், தினமணி சிவகுமார், வரலாற்றறிஞர் பெ.சு.மணி, நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆகியோரிடம் பேசும்போது கிடைத்த பல தகவல்களைப் பயன்படுத்திக் கொண்டேன். நாவலில் ஒரு வரியாகவோ, ஒரு சம்பவமாகவோ அவை உருமாறியிருக்கின்றன. அவர்களுக்கு என் நன்றிகள். என் மனைவி திலகவதி நாவலில் இடம் பெறும் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பேசும் வழக்கு மொழியும் நாவலுக்கு மிகவும் பயன்பட்டது. ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையாக இருந்தது. இன்னொரு பத்தாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

இங்கிருந்து இந்த இடத்துக்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர். என்ன உடை உடுத்தினர். எதற்காகச் சென்றனர். என்னவிதமான பொருளீட்டினர்? எப்படி சேமித்தனர். என்ன நாணயம் இருந்தது. என்ன பேச்சு இருந்தது? யார் ஆண்டனர், எப்படி வரி வசூலித்தனர், யார் மூலமாக வசூலித்தனர். சினிமா இருந்ததா, பேப்பர் இருந்ததா, என்ன முறையில் அச்சடித்தனர், எப்படி பேசினர், யாரை எதிர்த்துப் பேசினர், யார் யார் பேச்சைக் கேட்டனர், என்ன உண்டனர், எப்படி உழைத்தனர், என்ன சிகிச்சை, கிராமம் எப்படி இருந்தது, நகரம் எப்படி இருந்தது... என்ன கோயிலில் என்ன சாமி.. எப்படி வழிபட்டனர்.. குடுமி வைத்திருந்தவர் எத்தனை சதவீதம், யாரெல்லாம் ஓட்டு போட்டனர், எப்படியெல்லாம் வீடு கட்டினர்.. எதற்கெல்லாம் கோபப்பட்டனர், எதற்கெல்லாம் சந்தோஷப்பட்டனர், அந்த சந்தோஷம் எந்த மாதிரியானது?

போன தலைமுறை சந்தோஷங்களும் துக்கங்களும் வேறு மாதிரி இருந்தன. ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. கிராமத்தில் குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது. பத்து இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் அப்படி எங்கு தொலைந்துவிட முடியும்? நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை. கொசஸ்தலை ஆற்றில் இறங்கி விளையாடப் போயிருக்கலாம் என்று சந்தேகித்தனர். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. எல்லோரும் பதறிக் கொண்டிருக்க, வீட்டின் பெரியவர் சொன்னார்: "நரி சாப்பிட்டுட்டு இருக்கும்மா... பெசாம படுங்க... காலைல பாத்துக்கலாம்''


குழந்தையைக் கொஞ்சுவதிலெல்லாம் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பார். திடீரென்று இல்லாமல் போய்விட்டால் தாங்கிக் கொள்வீர்களா? என்பார். குழந்தைகள் சிறிய சீக்கு வந்தாலும் இறந்துவிடக் கூடியவை என்பது அவர் நம்பிக்கை. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக பிரியம் வைப்பதே அவருக்கு வியப்பாக இருந்தது. அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசம் வெளியில் தெரியாத ரகசியமாக இருந்ததை நான் அறிவேன். என் மகனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த நேரத்தில் அவர் சொன்னார்: "இன்னும் நாலு வருஷம் சமாளிச்சு வளத்துட்டியனா பையன் தருப்தி ஆயுடுவான்''


(தருப்தி ஆயுடுவான் என்பதின் பொருள் உலகின் ஒரு நபராக கணக்கில் வந்துவிடுவான் என்பது. அவருடைய உலக மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கணக்கில் வருவார்கள்.)

டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் கொஞ்சிக் கொள்வது புதிதாக கற்பித்த உணர்வாக இருக்கிறது. டி.வி.மூலமாக புதுவிதமான பாசத்தைக் கற்றுக் கொண்டு வருவது தெரிகிறது. கணவனும் மனைவியும் கூலிவேலைக்குச் சென்றுவிட இரண்டு வயதுகூட நிரம்பாத குழந்தை தனியாக வீட்டில் கிடக்கும். பசி எடுக்கும்வேளையில் கூழ் பானையில் கையைவிட்டு எடுத்து உடம்பெல்லாம் பூசிச் சாப்பிட்டுக் கொள்ளும். மாட்டுக்கு வைத்த தண்ணீரைக் குடித்துக் கொள்ளும். முப்பது ஆண்டுகளில் அதே கிராமம் மாறிப் போய்விட்டது. மம்மி சொல்லு, மம்மி சொல்லு என்று கொஞ்சுகிறார்கள். கான்வென்ட் வேனில் ஏற்றிவிட்டு "இன்னும் ஒழுங்கா டை கட்ட தெரியலை..'' என்று இரண்டாம் கிளாஸ் பையனை நொந்தபடி செல்கிறார் தாய்.
தி.மு.க.வுக்கு முன் தி.மு.க.வுக்குப் பின்.. சினிமாவுக்கு முன் சினிமாவுக்குப் பின்.. சன் டி.வி.க்கு முன்.. சன் டி.வி.க்குப் பின் என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சிலர் நினைவுகூரும் சம்பவங்கள் இதில் இருந்தாலும் முப்பதுகளில் இருந்துதான் கதை நகர ஆரம்பிக்கிறது. பெரியார், அண்ணா, எஸ்.எம். உமர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பலர் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். எம்.ஆர்.ராதா, கலைஞர், பெரியார்தாசன், சுப.வீ., டி.வி., சன் டி.வி., தமிழ்நாடு மின்சார வாரியம், ஏவி.எம். ஸ்டூடியோ போன்ற பல விஷயங்கள் இந் நாவலின் சரித்திர முக்கியத்துவத்துக்கு உதவும். செங்கல்பட்டை காசி வரை இணைத்த சாலை எங்கோ மறைந்து போய் அருகிலேயே புதிய தங்க நாற்கர சாலை உருவானதும் பத்தடி ஆழத்தில் கவளை ஓட்டி நீர் இறைத்துக் கொண்டிருந்த கிணறு இப்போது நூற்றி ஐம்பது அடி ஆழ ஆழ்துளை கிணறாக மாறிப்போய்விட்டதும் சமூக மாற்றத்தின் நீள ஆழத்தைச் சொல்லும் முக்கிய காரணிகள். சமூக, அரசியல் நிலைகளை சார்புத்தன்மை இல்லாமல் பார்க்க முடிவதில்லை. காந்தியையும் சோனியா காந்தியையும் காங்கிரஸ்வாதி என்பதும் பெரியாரையும் ஜெயலலிதாவையும் திராவிட இயக்கத்தினர் என்பதும் ஒரு சுவையான முரண்பாடு.

என்னுடைய சிறுவயதில் ஒருவரை இப்போதும் நடுக்கத்தோடு நினைத்துப் பார்க்க முடிகிறது. அவர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குடித்துவிட்டு, தெருவில் கலைஞர் வாழ்க என்று சாக்பீஸôல் எழுதுவார். பக்கத்தில் இருக்கும் அதிமுக மன்றத்திற்கு அருகே போய் நின்று கொண்டு கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க என்று உயிர் போகிற வரை கத்துவார். கோபத்தில் அந்த மன்றத்து ஆள்கள் அவரை அடித்து நொறுக்குவார்கள். இன்று மாலைக்குள் அவர் இறந்துவிடுவார் என்று பதறுவேன். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் அப்படித்தான் கத்திக் கத்தி உதைபட்டுக் கொண்டிருந்தார்.

அரசியலில் எல்லாம் சகஜமாகிவிட்டது. காங்கிரஸýம் திமுகவும் கூட்டணி வைத்தபோது அதிர்ச்சி அடைந்த திமுக தொண்டன், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்தபோது அரசியலில் எல்லாம் சகஜம் என்பதன் பொருள்புரியாமல் விழித்தான்.



இதுதான் கதை நடக்கும் காலகட்டம். படைப்பின் தர்மத்தை மீறாமல் இந்தக் கதையை நான் சொல்லியிருக்கிறேன்.


நாவலோடு தொடர்புடைய ஒரே ஒரு விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன். இது கொஞ்சம் புனைவு கலந்த குறிப்புதான்...

சிறுத்தையால் தாக்கப்பட்ட சின்னா ரெட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கே மருத்துவ உதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் மருத்துவமனையின் வாசலில் இருந்த ஒரு கல் திண்டில் படுத்துக் கொண்டு தானே தனக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
எந்த மருத்துவ முறையை பிறருக்குச் சொன்னால் பலிக்காது என்று அவர் கருதினாரோ அதை அவர் ஒரு சிறிய சபலத்துக்காக மீற வேண்டியதாகிவிட்டது. பக்கத்தில் சென்ரல் சினிமா தியேட்டரில் சினிமா படம் ஓடுவதாக ஒரு முஸ்லிம் பெரியவர் தகவல் சொன்னார். ஏற்கெனவே ஆறுமுக முதலி சினிமா எடுப்பதற்கு மூங்கில் கேட்டுவிட்டுப் போனசம்பவம் சின்னா ரெட்டிக்கு நினைவு வந்தது. தம் மகன் வருகிற வரை பொறுத்திருக்க அவருக்கு முடியவில்லை. ஓர் அணா இருந்தால் படம் பார்த்துவிட முடியும் என்ற நிலையில் தம் ரண சிகிச்சை மருத்துவத்துக்கான மூலிகை இதுவென்று அந்த பாயிடம் சொல்லி இரண்டணா பெற்றுக் கொண்டார். அவருடனேயே சென்று படம் பார்த்தார். சினிமா உற்சாகம் வேறு சில மருத்துவ உத்திகளையும் அவரிடம் சொல்லுவதற்குக் காரணமாகிவிட்டது. அணையில் ஏற்பட்ட சிறுவெடிப்பு இத்தனை நாள் பாதுகாக்கப்பட்ட மொத்த நீரையும் வெளியேற்றுவதற்குக் காரணமாக இருந்துவிடுவதில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது.

அதன் பிறகு சின்னா ரெட்டிக்கு தம் மருத்துவத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. இனி அது பலிக்காது என்று நம்ப ஆரம்பித்தார். சிறுத்தை அடித்துப் பிழைத்தவர் சிறிய வண்டு கடித்து இறந்து போனதற்கும் அவருடைய பிடிமானம் கைநழுவிவிட்டதுதான் காரணம். அந்த முஸ்லிம்தான் பின்னாளில் மஞ்சள் காமாலைக்கும் எலும்பு முறிவுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை செய்பவராக மாறி, ஏராளமான பணம் சம்பாதித்து மும்பையில் குடியேறிவிட்டவர்.

நாவலில் இந்தப் பகுதியை எங்கே சேர்ப்பதென்று எனக்குப் புலப்படவில்லை. நாவலுக்கு இது அத்தனை முக்கியமா என்பதும் தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இது நாவலை முடித்து அச்சுக்குக் கொடுத்த பின்புதான் நினைவுக்கு வந்தது. இதை எங்காவது புகுத்தப் போய் ஏடாகூடமாய் தொக்கி நிற்குமோ என்றுவிட்டுவிட்டேன். வாசகர்கள் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் பொருத்தமான இடத்தில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வாசித்துக் கொள்ளலாம்.

மற்றபடி,

ஒன்றுமில்லை.