| | | |
Uploading ....
எண்ணும் மனிதன் இந்த
ஆண்டு புத்தக
கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான்
எழுதிய
எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை
பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம்
செய்யப்பட்டிருக்க
வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை
சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல்
வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை. பின் அட்டை
குறிப்பும் மிக
பொதுவாக எழுதப்பட்டிருந்தது.
இணைய தளம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்ட இந்த
காலத்தில் கூட இப்படி
எந்தக் குறிப்பும் இல்லாமல் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவருவது தமிழில்
மட்டுமே
சாத்தியம் போலும். சரி மொழிபெயர்ப்பாளர் யார். அவரைப் பற்றி ஏதாவது
குறிப்பு உள்ளதா
என்றால் அதுவுமில்லை. இந்த குளறுபடிகளின் காரணமாகவே அதை படிப்பதை தள்ளி
வைத்துக்
கொண்டிருந்தேன்.
ஒரு நாள் தற்செயலாக எண்ணும் மனிதனைப் புரட்டி படித்த
போது அது ஆயிரத்தோரு அராபிய
இரவுக்கதை படிப்பதை போன்ற வசீகரத்துடன் இருந்தது. வாசிப்பின் வேகத்தில்
அன்றிரவுக்குள்ளாக அதை முழுவதுமாக படித்து முடித்திருந்தேன்.
பலநூற்றாண்டுகளுக்கு முந்திய பாக்தாத்தின் வீதிகளில்
அலைந்து திரும்பியது போன்ற
சந்தோஷம் மற்றும் ஒட்டுதல் உருவானது. இரவெல்லாம் மனதில் பெரமீஸ் சமீர் என்ற
கதையின்
நாயகன் குறித்த எண்ணங்களே நீண்டு கொண்டிருந்தன.
கணிதத்தை இவ்வளவு ருசியான கதையாக மாற்ற முடிவது பெரிய
அதிசயம். இந்த நூலைப்
படித்து முடித்த ஒவ்வொருவரும் கணிதம் மீது நிச்சயம் ஆர்வம் கொள்வார்கள்.
கணிதத்தை
புரிந்து கொள்வார்கள். கணிதம் என்பது வெறும் எண்கள் மட்டுமில்லை என்பதை
ஆழமாக
உணர்ந்து கொள்வார்கள்.
சமீப காலங்களில் நான் படித்த மிக சிறந்த புத்தகம்
இதுவே என்று உடனே மனதில்
பட்டது. அன்றிலிருந்து இப்போது வரையான நான்கு மாத காலத்தில் இந்த
புத்தகத்தை
பதினைந்து தடவைகள் படித்திருக்கிறேன். எங்கே பயணம் போனாலும் கூடவே எடுத்து
கொண்டுப்
போகிறேன். சில வேளைகளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்து
முப்பது
நாற்பது பக்கங்கள் படிக்கிறேன். அதன் பிறகு யார் மல்பா தஹான் என்று தேடி
அவரது
பிறநூல்களை வாசிக்க ஆர்வம் கொண்டேன்.
மூலப்புத்தகத்தின் பெயர் தெரியாத குழப்பத்தால் சற்று
சிரமமாக இருந்த போதும்
ஒரு சில நாட்களில் மல்பா தஹான் யார் என்று கண்டுபிடித்துவிட்டேன்.
மல்பா தஹான் என்ற புனைபெயரில் எழுதியவர் பிரேசில்
நாட்டின் ஜீலியோ சீசர் என்ற
எழுத்தாளர். இவரது முழுப்பெயர் ஜீலியோ சீசர் டி மெலோ ஈ சௌசா. (J�lio
C�sar
de Mello e Souza ) பிரேசிலின் புகழ்பெற்ற கணிதப்பேராசியராக
இருந்தவர்.
கணிதம் குறித்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். கதைகளின்
வழியே கணிதத்தின் மீதான ஈர்ப்பை உருவாக்குவதில் தனித்திறன் பெற்றவர்.
இவரது
புகழ்பெற்ற நாவலான The
Man Who Counted
- Malba
Tahan. தான் தமிழில் எண்ணும் மனிதனாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது .
இந்த நாவல் அராபிய கதைகள் போன்ற வடிவத்திலே
எழுதப்பட்டுள்ளது. உலக அளவில் 13
மொழிகளில் வெளியாகி பதினோறு லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நூல் இதுவரை 54
பதிப்புகள் கண்டிருக்கிறது. கணிதத் துறையில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக
இவர்
பெயரால் மல்பா தஹான் கணித ஆய்வு மையம் ஒன்று பிரேசிலில் செயல்பட்டு
வருகிறது.
ஆலீஸின் அற்புத உலகம் எழுதிய லூயி கரோலை கணித மேதை
என்பார்கள். அவரது நாவல்
குழந்தைகளுக்கானது என்றாலும் அது கணிதத்தின் சூட்சுமங்களும் வியப்பும்
நிரம்பியது
என்பார்கள். அது போன்றதே எண்ணும் மனிதன் நாவல்.
பிரேசில் மொழியில் 1949ம் ஆண்டு வெளியான இந்த நாவல் அதீத
கணித திறன் படைத்த
பெரமிஸ் சமீர் என்பவனின் சாதனைகளையும் பயணத்தையும் விவரிக்கிறது. தனது
கணித
நுட்பத்தால் பெரமிஸ் தீர்த்து வைத்த சிக்கல்கள், அவனது அவதானிப்பின்
தனித்துவம்.
எண்களின் பயன்பாடு மற்றும் சரித்திரம், கணிதம் உண்டான வரலாறு, கணித
மேதைகளின் சொந்த
வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், புதிர்கள், அதில் வெளிப்படும் சாதுர்யம்
என்று மிக
அழகாக விவரிக்கபட்டிருக்கிறது 218 பக்கங்கள் உள்ள இந்த நாவலை கணிதப்
புதிர்களின்
கதை தொகுதி என்றே சொல்ல வேண்டும்.
இந்த நூலை முதன்முறையாக வாசிக்கும் போது இதாலோ
கால்வினோவின் Invisible
Cities நினைவிற்கு வந்தது. புனைவின் மீதான புனைவை
உருவாக்குவதில்
கால்வினோவிற்கு நிகரானவர் மல்பா தஹான். போர்ஹே, கால்வினோவிற்கு நிகரான
எழுத்துமானமும் நுட்பமும் கொண்ட ஒரு எழுத்தாளரை வாசித்து கொண்டிருக்கிறோம்
என்று
ஒவ்வொரு நாவல் முழுவதும் உணர்ந்தேன்.
ஆயிரத்தோரு அராபிய இரவுகள் எண்ணிக்கையற்ற கதைகளும்
கிளைக்கதைகளும் கொண்டது. அது
அராபு உலகின் புரதான நினைவு தொகுப்பு என்றே சொல்வேன். பாக்தாத் நகரம் அந்த
கதைகளின்
வழியே தான் உலக மக்களின் நினைவில் உருக்கொண்டது.
யுத்தம் இன்று அந்த நகரை சிதைவுற செய்த போதும் அதன்
பழமையும் பெருமையும்
ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்ற நூலின் வழியே புத்துரு மங்காமல் அப்படியே
வாசிக்க
கிடைக்கிறது. ஒரு நகரை அதிகாரயுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால் அதன்
நினைவுகளை ஒரு
போதும் அழிக்க முடியவே முடியாது. அதிலும் அது இலக்கியத்தில் பதிவாகிவிடும்
போது அது
நித்யத்துவம் அடைந்துவிடுகிறது. அப்படியான நகரமே பாக்தாத்
மல்பா தஹானின் நாவலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் உள்ள
பாக்தாத் நகரை பற்றியும்
அதன் கலீபாக்கள் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களையும் பின்புலமாக
விவரிக்கிறது. நாவலை துவக்கி கதையை சொல்பவர் ஹனாக். அவர் தனது
வழிப்பயணத்தில் கண்ட
ஒரு விசித்திரமான மனிதனை பற்றி எடுத்து சொல்கிறார்.
அந்த மனிதன் டைகிரிஸ் ஆற்றங்கரையில் ஒய்வு எடுத்தபடியே
எதையோ எண்ணிக்
கொண்டிருந்தான். இருபத்திமூன்று லட்சத்து இருபத்தோராயிரத்து எண்ணூற்று
அறுபத்தாறு
என்ற எண்ணிக்கை ஹனாக் காதில் விழுந்தது. எதை இந்த மனிதன் எண்ணிக்
கொண்டிருக்கிறான்
என்று கேட்கிறான். அதற்கு அந்த மனிதன் தன் கதையை சொல்ல துவங்குவதாக நாவல்
ஆரம்பமாகிறது.
பாரசீகத்தில் அராரத் மலையின் அருகாமையில் உள்ள கோய்
என்று சிறு நகரில் பிறந்தவன்
பெரமிஸ் சமீர். காமாட் என்பவரிடம் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். ஆடுகளை
மேய்ச்சலுக்கு ஒட்டி கொண்டு போய் திரும்பி வருகையில் அது தப்பி போய்விடுமோ
என்ற
பயம் அவனை ஆட்டுவித்தது. அப்படி ஒரு ஆடு குறைந்து போனாலும் அவனது எஜமானர்
அவனை
கடுமையாக தண்டிப்பார். ஆகவே ஆடுகளை கவனமாக எண்ணுவதற்கு அதிக பயிற்சிகள்
எடுத்து
கொண்டான்.
இதன் காரணமாக அவன் எண்களின் மீது அதிக ஈடுபாடு கொள்ள
ஆரம்பித்தான். தனது
கண்பார்வையில் மொத்த ஆடுகளையும் எண்ணுவதில் அவனுக்கு தனித திறன் உருவானது.
அவன்
ஆடுகளை தனித்தனியாக எண்ணுவதில்லை. அதன் காதுகளை எண்ணி அதை இரண்டால்
வகுத்தால் உடனே
விடை வந்துவிடும் என்ற சூட்சுமம் அறிந்திருந்தான். இப்படியாக அவனது கணித
திறன்
காரணமாக அவன் ஆடு மேய்ப்பதில் இருந்து பதவி உயர்வு பெறுகிறான்.
எண்ணுதல் என்பது வெறும் கணித விளையாட்டு அன்று. அது உலகை
அறிந்து கொள்வதற்கான
சூட்சுமம். அது ஒரு மெய்யியல் என்று அவன் ஆழமாக அறிந்து கொள்ள
துவங்குகிறான்.
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள், தேனிக்கூட்டில் உள்ள
தேனீ. பறந்து
கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சி. வானில் ஒரு நாளில் பறந்து செல்லும்
பறவைகள்,
மரங்களில் உள்ள இலைகளின் எண்ணிக்கை என்று அவனது மனம் தொடர்ந்து உலகை
எண்ணியபடியே
இருந்தது. அதில் மிகுந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் கொண்டான்.
இதனால் பேரிச்சம்பழம் விற்பனை செய்வதை கணக்கிடும்
பொறுப்பு அவனுக்கு வந்தது.
அதில் எளிதாக விற்பன்னராக உயர்ந்தான். அவன் ஒரு அவதானியாக தன்னை வளர்த்து
கொண்டான்.
கண் பார்வையில் உலகம் அவனுக்குள் பூரணமாக பதிவு கொண்டது. எதையும் சுலபமாக
நினைவு
கொள்ளும் திறன் அவனுக்கு இருந்தது.
அவன் கணிதம் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளிலும்
இருப்பதை கண்டான். அதை முறையாக
அறிந்து கொள்ளவும் வளர்த்து கொள்ளவும் முயன்றான். அதில் வெற்றியும்
கண்டான்.அவனால்
நிறைய பணம் சம்பாதித்த எஜமானர் அவனை சொந்த ஊருக்கு போய்வரும்படி விடுமுறை
தந்து
அனுப்பி வைத்தார். அந்த பயணத்தில் தான் அவன் ஹனாக்கை காண்கிறான்.
பெரமிஸின் திறமையை கண்ட ஹனாக் அவனால் மிக பெரிய பதவிகள்
பெற முடியும். கணிதத்தை
வைத்து நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்கிறான். அதை சமீரால் நம்ப
முடியவில்லை.
இருவரும் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். வழியில் பெரமீஸ் ஒட்டங்களை பிரித்து
கொள்வதில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றை தீர்த்து வைக்கிறான். எண்களின் மகத்துவம்
பற்றி
பேசுகிறான். அவன் சந்திக்கும் நிகழ்வுகளின் வழியே எண்களின் தனித்துவமும்
அதன்
சூட்சும தளங்களும் விவரிக்கபடுகிறது.
உதாரணத்திற்கு 4 என்ற எண்ணை பற்றி
அவனது விளக்கம் அற்புதமானது.
அதாவது 4444 என்ற எண்ணை உபயோகித்து நமக்கு என்ன எண்
வேண்டுமோ அதை
பெறலாம் என்கிறான். எப்படி என்று கேட்டவுடன் 44 ல்
44 ஐ வகுத்தால் விடை ஒன்று வரும் இப்படி 2, 3, 4
முதல் எந்த எண்ணையும் இந்த நான்குகளின் வழியே நாம் பெற முடியும் என்று
விளக்குகிறான். இவை வெறும் கணிதமாக விளக்கபடுவதை விட கதையொன்றின் முக்கிய
புதிர்
போல உருமாறி விளக்கபடுவதே இதன் சிறப்பு.
ஐசிட் என்ற வணிகரின் வீட்டில் விதவிதமான பறவைகள்
கூண்டில் வளர்க்கபடுகின்றன.
அந்த பறவைகளை எண்ணி சொல்ல வேண்டும் என்று பெரமிஸ் அழைத்து போக படுகிறான்.
அவன் அந்த
கூண்டில் இருந்த பறவைகளில் இருந்து 3 பறவைகளை உடனே வெளியே விடும்படி
சொல்கிறான்.
அதன்படி கூண்டில் இருந்து 3 பறவைகள்விடுவிக்கபடுகின்றன. இப்போது கூண்டில்
496
பறவைகள் இருக்கின்றன என்று விடை சொல்கிறான்.
அது ஏன் 499 பறவைகள் இருக்கிறது என்று முன்பே
சொல்லியிருக்கலாமே மூன்றை ஏன்
குறைத்தீர்கள் என்று வணிகர் கேட்கிறார். அதற்கு பெரமிஸ் 499 ஐ விட 496
அற்புதமான
எண். முழுமைபெற்றது. ஒரு எண் அந்த எண்ணை தவிர மற்ற எண்களால் அதிகமாக
வகுக்கபட்டால்
அது முழுமை பெற்ற எண் ஆகிறது. அந்த வகையில் 496 ஒரு அற்புதமான எண் என்று
விளக்கி
சொல்கிறான்.
அதே நேரம் மூன்று பறவைகள் விடுதலை அடைந்த சந்தோஷத்தின்
முன்பாக எனது கணித திறமை
வெறும் நினைவுஜாலம் மட்டுமே என்று தன்னடக்கமும் கொள்கிறான். அத்துடன்
இங்கிருக்கும்
எல்லா பறவைகளும் நீங்கள் கூண்டிலிருந்து திறந்துவிட்டால் அது 1488
நற்செயல்கள் செய்ததற்கு சமம் என்கிறான். உடனே கூண்டின் கதவு
திறக்கபட்டு
பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்கவிடப்படுகின்றன.
அப்போது பெரமீஸ் பறவைகள் பற்றி குறிப்பிடுகிறான்.
கவித்து உச்சநிலை என்றே இதை
சொல்வேன்
ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் அதனுடைய
பக்கங்கள் திறந்திருக்கும்
சொர்க்கம் . கடவுளின் இந்த நூலகத்தை திருடவோ, அல்லது அழிக்கவோ முயற்சிப்பது
மிக
அசிங்கமான குற்றம் என்கிறான்.
பறவை ஒரு புத்தகம் என்ற அவனது படிமம் மனதில்
ரீங்கரித்தபடியே உள்ளது. எவ்வளவு
பெரிய உண்மை. எவ்வளவு எளிதாக சொல்லிப்போகிறார் என்று மனது சந்தோஷம்
கொள்கிறது.
விடுதலையான பறவைகளின் பாடல் ஒலி வானில் கேட்கிறது. அது மகத்தான ஆனந்தம்
என்று
பெரமீஸ் சொல்லும் போது அவனது கணித அறிவின் உச்சம் சக உயிர்களின் மீதான
அன்பு என்று
தெளிவாக உணர்த்தப்படுகிறது
பெரமீஸ தன் மகளுக்கு கணித பாடம் நடத்தும்படியாக ஐசிட்
என்ற வணிகம் கேட்டுக்
கொள்கிறார். ஒரு மூடுதிரைக்கு அப்பால் இருந்து ஜசிட்டின் மகள் கணிதம்
கற்றுக்
கொள்கிறாள். அவளுக்கு சொல்லித்தரும் பாடத்தின் வழியே கணிதத்தின் கடந்த கால
சரித்திரம் அதன் சாதனையாளர்கள் விவரிக்கபடுகிறார்கள்.
நாவலில் இந்திய கணித மேதைகள் குறித்தும் அவர்களின்
பங்களிப்பு பற்றியும் அதிகமாக
புகழ்ந்து பாராட்டப்படுகிறது. குறிப்பாக கணிதமேதை பாஸ்கராவின் லீலாவதி என்ற
கணித
நூலை பற்றி விவரிக்கும் பெரமிஸ் அந்த நூல் பாஸ்கர ஆச்சாரியாவின் மகள்
லீலாவதியின்
பெயரால் எழுதப்பட்டிருக்கிறது. அது லீலாவதிக்கும் அவரது அப்பா
பாஸ்கராவிற்குமான
ஆழமான அன்பின் அடையாளம்.
திருமணம் தடைப்பட்டு போய் தனிமையில் வாழ்ந்த தனது மகளை
ஆறுதல்படுத்தவே பாஸ்கரா
தனது கணித நூலிற்கு அவள் பெயரை சூட்டியதாகவும் அந்த கணித நூலின் வழியே அவள்
காலம்
காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அறிவார்ந்த
நெருக்கம் இந்த நூலில் காணப்படுகிறது என்று வியந்து சொல்கிறான் பெரமீஸ்..
கணிதம் குறித்த கேள்விகளை லீலாவதி கேட்பது போன்றும்
அவருக்கு பதில் சொல்வது
போன்று பாஸ்கரா கணிதபுதிர்களை விளக்குவதாகவும் லீலாவதி நூல் உள்ளது. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே வானவியல் புவியியல் என்று கணிதத்தை பயன்படுத்தி
இந்தியர்கள்
கண்டறிந்த உண்மைகளே இன்று உலகிற்கு வழிகாட்டுகின்றன.
சதுரங்க விளையாட்டு இந்தியாவில் எப்படி உருவானது என்று
இந்த நாவலில் விரிவாக
விளக்கபடுகிறது. அது போலவே நாவலின் முடிவு பெரமீ�ஸ ஏழு அறிஞர்கள் சோதனை
செய்து
பார்ப்பது போல உள்ளது. அந்த ஏழு நபர்களும் ஏழு அறிவுதுறையை சேர்ந்தவர்கள்.
கணிதம்
அத்தனை துறைகளிலும் உயர்வானது என்பதை பெரமீஸ் நிருபணம் செய்கிறான். அதற்கு
பரிசாக
என்ன வேண்டும் என்று கலீபா கேட்கவே தான் ஐவிட்டின் மகளை திருமணம் செய்து
கொள்ள
வேண்டும் என்கிறான்.அதற்கும் ஒரு போட்டி வைக்கபடுகிறது. அதிலும் வென்று
அவன்
மிகப்பெரிய பதவியோடு அறிஞனாக வாழ்கிறான் என்பதோடு நாவல் நிறைவு பெறுகிறது
கவித்துவமான உருவங்கள், படிமங்கள், சிறு சிறு கதைகள்,
வியப்பூட்டும் கணிதங்கள்,
யாவையும் விட பெரமீஸின் அளவிட முடியாத அன்பு அத்தனையும் ஒன்று சேர்ந்து
இந்த நாவலை
தனிச்சிறப்புடையதாக்குகின்றன. பிரேசிலில் வசித்த ஜிலியோ சீசர் ஒரு முறை
கூட
அராபிய நாடுகளில் எதிலும் பயணம் செய்யாதவர். பாலைவனத்தை கண்ணால் கூட
கண்டதில்லை
என்று கூறும் இவர் ஆயிரத்தோரு அராபிய இரவுகளை முழுமையாக வாசித்து அதன்
பாதிப்பிலிருந்தே தனது நாவலை எழுதியதாக சொல்கிறார். புனைவின் சாத்தியம்
எவ்வளவு
பெரியது என்பதற்கு இதுவே அடையாளம் .
அதுபோல தனது சொந்த பெயரில் எழுதாமல் மல்பா தஹான் என்று
பெர்சிய மரபு பெயரில்
தான் எழுதியதற்கும் காரணம் கணிதம் என்கிறார். அதாவது இந்தியா மற்றும் அரபு
நாடுகளில் இருந்தே கணிதம் வளர்ந்து வந்தது அதன் அடையாளமாகவே தனது புனைபெயரை
மல்பா
தஹான் என மாற்றிக் கொண்டதாக கூறுகிறார்
ஜீலியோவின் கணித அறிவு அற்புதமானது. அவர் கணித
சரித்திரம் தத்துவம் மெய்யியல்
கவிதை, கதை சொல்லுதல், புதிர்கள், அவதானம் என்று அறிவின் அத்தனை
பிரிவுகளிலும்
ஆழ்ந்த புலமையும் வெளிப்படுத்தும் திறனும் கொண்டிருக்கிறார். எங்கோ அராபிய
பாலைவனம
ஒன்றில் இரவில் தங்கிக் கொண்டு நட்சத்திர ஒளியில் கதை கேட்பது போன்ற
சொல்லும்
முறையே நாவல் எங்கும் உள்ளது. இந்தியாவை பற்றிய மல்பா தஹானின் பிரமிப்பும்
இந்திய
கணிதம் குறித்த தகவல்களும் வியப்பூட்டுகின்றன. அதன் காரணமாகவே இந்த நாவல்
திரும்ப
படிக்க தூண்டுகிறது.
பள்ளிப் பிள்ளைகள் அவசியம் இதை வாசிக்க வேண்டும்.
பெரியவர்கள் இதை
வாசித்தாவது கணிதம் குறித்த பிரக்ஞையை ருசியை அடைய வேண்டும்.
நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெகுசிறப்பாக உள்ளது. இதன்
ஆங்கில வடிவத்தை
சமீபத்தில் வாங்கி படித்து பார்த்தேன். அதை விட தமிழில் வாசிப்பது அதிக
நெருக்கம்
தருவதாகவே உள்ளது. குறிப்பாக கணித சொற்றொடர்கள். வாக்கிய அமைப்புகள் யாவும்
சிறப்பாக பயன்படுத்தபட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் கயல்விழி நிறைய
பயன்படுத்தாமல் போன நல்ல தமிழ் சொற்களை தனது மொழியாக்கத்தில்
பயன்படுத்தியிருக்கிறார். கதை சொல்லும் சுவாரஸ்யம் குறைந்துபோகாமல்
மொழியாக்கம்
செய்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
ஒரு தேசம் வளரச்சி அடைய வேண்டும் என்றால் மக்கள் உயர்ந்த
கணித திறன் பெற்றிருக்க
வேண்டும், கணித திறனை வளர்த்து கொள்ளவேண்டும் என்று நாவலில் ஒரு நிகழ்வு
விவரிக்கபடுகிறது. நேர்மை என்பதை புரிந்து கொள்ளாதவன் நேர்கோடு என்பதை
புரிந்து
கொள்ள முடியாது என்றும் ஒரு வரியும் நாவலில் வருகிறது. இப்படியான மனஎழுச்சி
தரும்
உரைநடைக்காகவே இதை மறுபடி மறுபடி படிக்கலாம்.
எண்ணும் மனிதன். அகல் வெளியீடு. 342
டிடிகே.சாலை
ராயப்பேட்டை சென்னை.600014. தொலை. 28115584. பக்கம். 224
விலை.ரூ,120.
நண்பா, வணக்கம்..
காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி
உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு
வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு
இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா
பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய்
விலை இன்னும் ஏறுமா, இந்தப் பொருளாதார மந்தநிலை என்ன ஆகப்போகிறது, ஒரு
ரூபாய் அரிசி ஐம்பது காசுக்குக் கிடைக்குமா, ஐபிஎல் ஊழல்கள் முழுதாக
அம்பலமாகுமா – மூச்!
இதெல்லாம் வேண்டாம். எப்போதும் இருக்கிற தலைவலிகளைக் கொஞ்சம்
ஒதுக்கிவைத்துவிட்டு, கொஞ்சம் வேறு மாதிரி கதை பேசுவோமா? கால் நீட்டி
உட்கார்ந்து கதை பேசிப் பார்ப்பதுதான் எத்தனை சுகமானது. பொதுவில் அதற்கு
அதிகம் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. அதுவும் இந்தக் கதை மிகவும்
சுவாரசியமானது. நல்ல வக்கணையாக நீட்டி முழக்கிச் சொல்லிப் பார்த்தால்
இன்னுமே சுவை கூடும். கண்டிப்பாக உனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தது
போலவே.
ஆரம்பிப்போமா? ஆனால் ஒன்று. காவியத்துக்குப் பாயிரம் மாதிரி இந்தக்
கதைக்கு ஒரு முன்கதை இருக்கிறது. அதிலிருந்து ஆரம்பிப்பதுதான் சரியாக
இருக்கும். ஒழுங்காகப் புரியும். வாழ்நாளெல்லாம் முதல் வரியில் மேட்டரைத்
தொடங்கி என்னத்தைச் சாதித்துவிட்டோம்? இந்த முறை கடைசி வரியில் இருந்து
ஆரம்பிப்போம். ஒன்றும் குடிமுழுகிப் போகாது. ஆ, அந்த முன்கதை.
எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதன் ஒருத்தன் இருக்கிறான். நல்லவன்.
சமத்து. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றி, வையக மாந்தரெல்லாம் கண்ணு
போடுகிற விதமாகத் தின்று கொழுத்தவன். ஒரு பெயர் கொடுத்துவிடுவோமே.
பாராகவன்? நன்று. பிரச்னை இல்லாத பெயர்.
இயேசுநாதருக்கு ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபது வருடங்கள் ஜூனியரான
அவனுக்கு, இன்னும் முப்பத்தி எட்டு வருடங்கள் கழித்து திடீரென்று ஒருநாள்
தனது எடை ரொம்ப அதிகம் என்று ஒரு கவலை வந்துவிட்டது. இதென்ன, உருளையாக,
கர்லாக்கட்டைக்குக் கால்கள் முளைத்த மாதிரி ஒரு தோற்றம்! ஒரு கம்பீரமான
ஆணழகனாக உருமாறி விடமுடிந்தால் எத்தனை அருமையாக இருக்கும்!
பிறந்ததிலிருந்து வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு வளர்த்து வந்த
திருமேனி அது. அப்படி இப்படி உடம்பை அசைத்து கலோரி இழக்காமல் சேர்த்துவைத்த
பெரிய சொத்து. பெரிய பூசனிக்காய் மீது ஒரு குட்டி பூசனிக்காயை வைத்த
மாதிரி அழகான தொப்பையும் உண்டு. குனிந்து ஒருமுறை தரையைத் தொடச் சொன்னால்,
அவனுக்கு முன்னால் பூமி தன்னைத்தானே கால் வாசி சுற்றி முடித்து இஸ்தான்புல்
வரைக்கும் இருட்டாகியிருக்கும். இது பற்றிய குற்ற உணர்ச்சி மிகுந்த
போதுதான், ஒரு மிகப்பெரிய தியாகம் செய்து தனது எடையைக் கணிசமாக இழந்தே
தீருவது என்று அவன் முடிவு செய்தான்.
என்ன செய்வது? ஒரு பதினெட்டு, இருபது, இருபத்தைந்து வயதுகளில் அந்த
எண்ணம் வந்திருக்கலாம். உலக அழகிகளை ஒருவேளை கவர்ந்து இழுத்திருக்க
முடியும். நாலு எட்டில் நாய்க்குணம் வந்துவிடப் போகிற வயதில் அப்படியொரு
ஆசை வந்தது அவனுக்கு. விதியை யாரால் என்ன செய்ய முடியும்?
பாராகவனாகப்பட்டவன் உடனே ஒரு டாக்டரைப் போய்ப் பார்த்தான். டாக்டர்,
டாக்டர், எனக்கு வயசு முப்பத்தி எட்டு. என் உயரம் ஐந்தடி நான்கு அங்குலம்.
நான் என்ன எடை இருக்கலாம்?
மேலும் கீழும் அளந்து பார்த்த டாக்டர், ‘இருக்கலாம் இல்லை, இழக்கலாம்’
என்று சொன்னார். அந்த உயரத்துக்கு அறுபத்தைந்து கிலோவுக்கு மேல்
இருக்கக்கூடாதாம். காலக்ரமத்தில் கொலஸ்டிரால், ரத்தக் கொதிப்பு தொடங்கி
மாரடைப்புவரை என்ன வேண்டுமானாலும் எப்போதும் வரலாம். அடக்கடவுளே,
வஞ்சனையற்ற பாராகவன் தொண்ணூற்று இரண்டு கிலோ அல்லவா?
ஒன்றும் கவலை வேண்டாம். ஒரு டயட் சார்ட் போட்டுத் தருகிறேன், அதன்படி
சாப்பிடுங்கள், தினசரி நீச்சல் பழகுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றார்
டாக்டர்.
அந்த உத்தம டாக்டர் கொடுத்த சார்ட்டை வீட்டுக்கு வந்து பொறுமையாகப்
படித்துப் பார்த்தான் பாராகவன். டாக்டர் அவனை நிறைய ஓட்ஸ் சாப்பிடச்
சொல்லியிருந்தார். அப்புறம் அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிக் கீரை,
முருங்கைக் கீரை, முசுமுசுக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, வெங்காயக் கீரை,
வெள்ளைப்பூண்டுக் கீரை என்று உலகிலுள்ள அத்தனை கீரைகளின் பெயரையும், இலை
தழைகளின் பெயரையும் எழுதி அனைத்தையும் ஆடு மாதிரி அசைபோட்டுச் சாப்பிடச்
சொல்லியிருந்தார். ஐயோ, கீரை மட்டும்தானா என்று கலவரமடைந்த பாராகவன்
சார்ட்டை வேகமாகப் புரட்ட, பெரிய மனம் படைத்த டாக்டர் அதில் வேறு சில
ஐட்டங்களையும் சேர்த்திருந்தார். முட்டை கோஸ், முள்ளங்கி, பச்சை பீன்ஸ்,
நூக்கோல், பீர்க்கங்காய், பூசனிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய்,
பாகற்காய், வாழைத்தண்டு என்று ஒரு பட்டியல் இருந்தது.
அடக்கடவுளே, என் உள்ளம் கவர்ந்த உருளைக்கிழங்கு எங்கே? வண்டி
வண்டியாய்ச் சமைத்து வைத்தாலும் வாரித் தின்னச் சொல்லும் வாழைக்காய் எங்கே?
எண்ணமெல்லாம் ருசிக்கும் எண்ணெய்க் கத்திரிக்காய் எங்கே, எங்கே? கொலைகாரப்
பாவி கோபி 65 கூடாது என்று சொல்லிவிட்டாரே! பார் புகழும் பர்கருக்குத்
தடை. இத்தாலி மண்ணில் அவதரித்து 10, ஜன்பத் வழியே தருமமிகு சென்னைக்கு
வந்து சேர்ந்த பீட்ஸாவுக்குத் தடை. ஆசை ஆசையாக அள்ளி விழுங்கிய ஐஸ்
க்ரீமுக்குத் தடை. காப்பிக்குத் தடை. ஆவின் பால், ஆரோக்யா பால்,
ஆட்டுப்பால், கழுதைப் பால் எதுவும் கூடாது. பாலுக்கு இன்னொரு பெயர் விஷம்.
தெரியுமா? தொட்டுவிடாதே, தள்ளிப்போ. என்னத்தையாவது குடித்தே
தீரவேண்டுமென்றால் சீனத் தயாரிப்பு பச்சைத் தேநீர் குடி. அதிலும் பால்
கலக்காதே.
எல்லாம் சரி, சோறு?
அடப்பாவி, அதற்கு பதிலாகத்தானே இதெல்லாம் என்றார் டாக்டர்.
பாவப்பட்ட பாராகவன் வேறு வழியில்லாமல், நரகத்தில் எழுதப்பட்ட அந்த
சார்ட்டைப் பின்பற்றத் தொடங்கினான். எண்ணெய் இல்லாமல், நெய் இல்லாமல், பால்
இல்லாமல், அதிகம் உப்பு இல்லாமல், காரம் இல்லாமல், மசாலா சேர்க்காமல்,
இனிப்பு தொடாமல் – கேவலம், ஒரு வாழைப்பழத்துக்குக் கூட வக்கில்லாமல் என்ன
ஒரு வாழ்க்கை! ஆனாலும் தமிழகம் புதிதாக ஒரு ஸ்லிம் ப்யூட்டியை உலகுக்குத்
தரவிருக்கிறது அல்லவா? அதற்காக இந்தத் தியாகங்கள் அவசியமாகிவிடுகின்றன.
ஆச்சா? பாதி வெந்த, பரிசுத்த, சைவக் கறிகாய்களுடனான தனது துவந்த
யுத்தத்தை அவன் தொடங்கிய சூட்டிலேயே இன்னொரு காரியமும் செய்தான். எனை ஆளும்
உணவே, உனக்கொரு கும்பிடு. யார் நீ? எது உன் நிசமான தோற்றம்? நேற்று
வரைக்கும் என்னைக் கொழுக்கவைத்து உருட்டி விளையாடிய நீ இனி இளைக்க வைத்து
இன்பம் சேர்ப்பாயாமே, எப்படி? யார் உன்னைக் கண்டுபிடித்தது? என்னவெல்லாம்
ஜாலம் செய்வாய்? என் அப்பன், பாட்டன், முப்பாட்டன் சரி. அவனுக்கு முன்னால்
முன்னூறு தலைமுறைகள் மூத்த பெருந்தாத்தனுக்கு யார் இப்படியொரு டயட் சார்ட்
போட்டுக்கொடுத்திருப்பார்கள்? அவன் கிடைத்ததைத் தின்று ஜீவித்திருந்தான்
அல்லவா? பைபிளில் வருகிற தாத்தாக்களெல்லாம் என்ன டயட்
கடைப்பிடித்திருப்பார்கள்? எப்படி 800, 900, 1000 வருடங்களெல்லாம்
வாழ்ந்திருக்க முடியும்? ஆதி மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததில்லை என்று ஒரு
தியரி சொல்கிறார்களே, மானுடவியல் அறிஞர்கள்? அப்ப, அது என்ன லாஜிக்?
எல்லாம் சரி, சைவ உணவு முதலில் வந்ததா? அசைவம்தான் முதலா? முதல் முதலில்
மசாலா அரைத்த பெண்மணி என்ன பாட்டு பாடிக்கொண்டிருந்திருப்பாள்? அதுசரி,
பெண் தான் அரைத்தாளா? நெருப்பு கண்டுபிடிப்பதற்கு முன்னால் சூரியனுக்கு
அடியில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவார்களாமே? அதில்கூட மேலே, வெந்த
பகுதியை ஆணும், கீழே வேகாததைப் பெண்ணும் சாப்பிடுவார்களாமே? என்ன கொடுமை
சரவணன்! சாப்பிட வேண்டும் என்பது உணர்வு. எதைச் சாப்பிடுவது என்பதை மனிதன்
முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்?
உணவு கிடக்கட்டும். இந்த சாராயம்? உலகின் முதல் கடா மார்க் எங்கே
உற்பத்தி ஆனது? நாலாயிரம் வருடங்களுக்கு முன்னால் குதிரை ஏறி இந்தியாவுக்கு
வந்த ஆரியர்கள் என்னவோ பானம் காய்ச்சி இந்திரனுக்கு குவார்ட்டர்
கொடுத்துவிட்டு மிச்சத்தைக் குடித்துக் குதூகலிப்பார்களாமே? அது என்ன?
கி.மு. 10000லேயே பீர் மாதிரி ஏதோ பானம் இருந்ததாமே? என்றால், தண்ணீருக்கு
அடுத்தபடியே தண்ணிதானா?
பாராகவன் கச்சாமுச்சாவென்று உணவைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
அவனது இம்சைகள் பொறுக்காமல் தேட ஆரம்பித்துத்தான் இந்தக் கதையைப்
பிடித்தேன்.
எந்த ஒரு நேர்க்கோட்டு வரையறைக்குள்ளும் பொருந்தாத இந்த வரலாறைத்
தொடராக வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டருக்கு என் மனமார்ந்த நன்றி.
நிச்சயமாக இது ஒரு முழுமையான வரலாறல்ல. அப்படி இருக்க முடியாது.
சாத்தியமும் இல்லை. எல்லார் வீட்டு மீந்த உணவும் சங்கமிக்கும் ஒரு
ராப்பிச்சைக்காரனின் பாத்திரத்தை இதன் கட்டமைப்புக்கு முன்மாதிரியாகக்
கொண்டேன். ருசி பெரிதா? பசி பெரிதா? பசி அடங்கும்வரை அதுதான் பெரிது.
அடங்கியபிறகு ருசியைத் தேடிச் செல்வதற்கான ஓர் உந்துசக்தியாக இது
அமையுமானால் அதுவே போதுமென்று கருதினேன்.
இந்தத் தொடர் அதன் இறுதி அத்தியாயங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்த
தருணத்தில், சற்றும் எதிர்பாராத சில உள்நாட்டு அரசியல் குழப்பங்களால்
குமுதம் ரிப்போர்ட்டரில் இது திடீரென நிறுத்தப்பட்டது. பெரிய நஷ்டம்
ஒன்றுமில்லை. எந்த இடத்திலும் நிறுத்தி, மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய
சாத்தியங்களைக் கொண்ட இயல் அல்லவா இது? எனவே, இன்னும் கொஞ்சம் பக்கங்களை
இப்போது எழுதிச் சேர்த்து இருக்கிறேன்.
ரிப்போர்ட்டரில், இதழ்தோறும் இதனை ரசித்துப் பாராட்டி வந்த
வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் என் முதல் நன்றி. நான் எழுதிய அரசியல்
வரலாறுகளையெல்லாம் விடவும் இதற்கான வரவேற்பு அதிகமிருந்ததைச் சொல்ல
விரும்புகிறேன்.
ஒவ்வோர் அத்தியாயத்தை எழுதி முடித்ததும் என் அலுவலக சகாக்கள் சிலருக்கு
வாசிக்க அனுப்புவேன். அனுப்பிய கையோடு Prodigy ஆசிரியர் திருமதி
சுஜாதாவின் அருகே சென்று உட்காருவது என் வழக்கம். ஒரு திருவிழா பரவசத்துடன்
அவர் அத்தியாயங்களை ஆர்வமுடன் வாசிப்பதைக் காண்பது எனக்கொரு திருவிழா.
அவர் எங்கெங்கே சிரிக்கிறார், எதையெதையெல்லாம் ரசிக்கிறார், எதற்குத்
துணுக்குறுகிறார், எங்கே கோபம் கொள்கிறார் என்பதை கணத்துக்குக் கணம் மாறும்
அவரது முகபாவத்தில் படிப்பது ஒரு ரசமான அனுபவம். இந்த நூலைப் பொருத்த
அளவில், எழுதுவது என்னும் ‘பணி’யை எனக்கு ஒரு குதூகலமான அனுபவமாக மாற்றியது
சுஜாதாவின் ஆர்வமும் உடனடி விமரிசனங்களுமே.
எழுதிக்கொண்டிருந்த தினங்களில் எனக்கு எப்போதும் தேவைப்பட்ட உதவிகளைப்
புத்தகங்களாகவும் தகவல்களாகவும் ஆலோசனைகளாகவும் தந்துதவியவர்கள், நண்பர்கள்
என். சொக்கன், இலவசக் கொத்தனார், டைனோபாய், அறிவழகன், விக்னேஷ்,
தமிழ்ச்செல்வன், ஆதிமூலம், இனாயத்துல்லா, சிந்து, காயத்ரி பாலகிருஷ்ணன்
ஆகியோர்.
அனைத்துக்கும், அனைவருக்கும் மேலாகத் தன் அன்பாலும் கண்டிப்பாலும்
எப்போதும் என்னை வழிநடத்தும் என் ஆசிரியர் [குமுதம் ரிப்போர்ட்டரின்
ஆசிரியரும்கூட] செ. இளங்கோவன் -
இவர்களுக்கெல்லாம் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. நன்றியைத் தவிர.
பா. ராகவன்
26 ஏப்ரல் 2010
[விரைவில் வெளிவரவிருக்கும் ‘உ’ - உணவின் வரலாறு நூலுக்கு எழுதிய
முன்னுரை]
நியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை
செய்கிறார் மால்கம் கிளாட்வெல்.
அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு
புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers.
இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ
யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.
எந்தக்
கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து... பெரும்பாலானவர்களால்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது? எந்தக் கட்டத்தில், எத்தனாவது வைக்கோல்
வைக்கப்படும்போது வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய்கிறது? அந்தக்
கணம் எது? அதுதான் tipping point புத்தகம் எடுத்துக்கொண்ட கருத்து.
யோசித்துப் பாருங்கள்... சல்வார் கமீஸ் என்ற உடை இந்தியாவில் எத்தனையோ
ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால் எந்தக் கட்டத்தில் தமிழகத்தில் அது
ubiquitous உடையாக, மற்ற அனைத்தையும் நசுக்குத் தள்ளி, தனியொரு உடையாக ஆனது
என்று உங்களால் சொல்லமுடியுமா? புடைவை, தாவணி எல்லாம் இன்று அம்பேல். பிற
நவீன உடைகள் எல்லாம் உள்ளன; ஆனால் சல்வாருக்கு நான்கடிகள் பின்னேதான்.
ஒரு
நொடியில், கண் இமைக்கும் நேரத்தில், உங்கள் மூளை என்னவெல்லாம்
யோசிக்கிறது? படுவேகமாக மூளை எப்படியெல்லாம் முடிவெடுக்கிறது? அந்த
முடிவுகள் நல்லவையா, கெட்டவையா? மிக மோசமான ஒரு பிரச்னையில்
சிக்கிக்கொண்டிருக்கும்போது அடுத்து என்ன செய்வது என்பதை நம் மூளை எப்படித்
தீர்மானிக்கிறது? ஒரு போர்க்களத்தில்? ஆபரேஷன் தியேட்டரில்? விபத்தில்
சிக்க உள்ள விமானத்தை இயக்கும்போது அல்லது காரின் ஸ்டியரிங் வீலைப்
பிடித்திருக்கும்போது? இவற்றை blink ஆராய்கிறது.
***
Outliers கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. யார்
வெற்றி பெறுகிறார்கள்? வெற்றி பெற என்னவெல்லாம் தேவை?
மால்கம்
கிளாட்வெல் அழகாகக் கதை சொல்கிறார். அவசரமே படுவதில்லை. மெதுவாக, மிக
மெதுவாக உங்களை வழிநடத்திச் செல்கிறார். அவரது சிந்தனை தெளிவாக உள்ளது.
தனித்
திறமை இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பதை முழுதும்
ஏற்றுக்கொள்கிறார் கிளாட்வெல். ஆனால் அந்தத் திறமை மட்டும் இருந்தால்
போதாது என்பதற்கு அழகான உதாரணங்கள் பலவற்றைக் காட்டுகிறார். வேறு என்னதான்
வேண்டும்?
கடின உழைப்பு.
கடின உழைப்பு இல்லாமல் யாராலும்
வெற்றி பெற முடியாது. மொஸார்ட் ஒரு குழந்தை மேதை என்பதை ஆதாரங்களுடன்
மறுக்கும் கிளாட்வெல், அவரது சிறப்பான இசை ஆக்கங்கள் அனைத்துமே அவரது 20-ம்
வயதுக்குப் பிறகுதான் உருவாயின என்கிறார். பில் கேட்ஸ், பில் ஜாய்,
பீட்டில்ஸ் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 மணி நேரங்கள்
கடுமையாக உழைத்தபின்னரே அவர்களால் சாதிக்க முடிந்துள்ளது என்பதைக்
காட்டுகிறார்.
அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய விளையாட்டு வீரர்களை
எடுத்துக்கொண்டு, எப்படி அவர்கள் பிறந்த தேதி அவர்களுக்கு சிறப்பான
வாய்ப்புகளைத் தருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். அவர்களது பிறந்த
தேதி அவர்களுக்குத் தருவது நிறைய பயிற்சியை. அந்தப் பயிற்சி அவர்களை
சிறப்பான வீரர்கள் ஆக்குகிறது.
திறமை, கடின உழைப்பு. வேறு என்ன
வேண்டும்?
அதிர்ஷ்டம் என்பதைவிட வாய்ப்புகள் என்பது அடுத்து.
வாய்ப்பை இறுகப் பற்றிக்கொள்ள திறமையும் உழைப்பும் வேண்டும். ஆனால்
வாய்ப்புகளே கிடைக்காவிட்டால், இல்லாவிட்டால், எது இருந்தும் பயனில்லை.
எப்படி திறமையும் உழைப்பும் உள்ள பலரும் அமெரிக்காவில் Great Depression
காலத்தில் அழிந்துபோனார்கள் என்பதை விளக்கும் கிளாட்வெல், அதே நேரம்
கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்ட திறமையும் உழைப்பும் கொண்டவர்கள்
எப்படி முன்னேறினார்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்குகிறார்.
அதில்
உள்ள பல சுவாரசியமான கதைகளில் ஒன்று மால்கம் கிளாட்வெல்லின் தாய் எப்படி
ஜமாய்க்காவில் இருந்து பிரிட்டன் வந்தார் என்பது பற்றிய கதை.
வாய்ப்புகள்
பற்றிப் பேசும்போது, எப்படி குடும்ப, கலாசார, இன, தேசியச் சூழல்
வாய்ப்புகளை புதிய தலைமுறைக்குத் தருகிறது என்பதைப் பற்றிய அலசலும் உள்ளது.
பெற்றோர்கள்
பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டே இரண்டு விதங்கள்தான் உள்ளன என்கிறார்
கிளாட்வெல். வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் தம் பிள்ளைகளை கவனமாக
வளர்க்கிறார்கள். Concerted Cultivation என்கிறார் கிளாட்வெல். தம்
பிள்ளைகளின் ஆர்வங்கள், விருப்பங்கள், திறன்கள் ஆகியவற்றை அலசும் இந்தவகைப்
பெற்றோர்கள், அந்தத் துறைகளில் தம் பிள்ளைகள் மிளிர என்னவெல்லாம்
செய்யலாமோ அனைத்தையும் செய்து தருகிறார்கள்.
மாறாக, அதிகம்
படிக்காத, கையில் பணம் இல்லாத பெற்றோர்கள், தம் பிள்ளைகளை அவர்கள் வழியே
செல்ல விட்டுவிடுகிறார்கள். இதனால் இப்படிப்பட்ட பிள்ளைகள் சாதிப்பது
குறைவாகவே உள்ளது.
இந்தவகைப் பிள்ளைகளையும் அந்தவகைப்
பிள்ளைகளையும் ஒப்பிட்டு நாம் எதையும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்களின்
கவனிப்பு இருந்தும் உருப்படாதவர்களாக எத்தனையோ பிள்ளைகள் உண்டு.
பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமலேயே சாதித்த எத்தனையோ பிள்ளைகள் உண்டு.
கிளாட்வெல்லின் விவாதம் அதுவல்ல. பெற்றோர்களின் கவனிப்பு இருக்கும்
பட்சத்தில் ஒரு பிள்ளையால் அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதே. *** கிளாட்வெல்
சொல்வது அனைத்துமே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள நீதி போதனைகள்தானே? திறமையை
வளர்! கடினமாக உழை! வாய்ப்பு கிடைத்தால் பற்றிக்கொள்! பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்! ஒரு சமுதாயமே தன் புதிய
தலைமுறைக்கு வளமான வாய்ப்புகளைச் செய்து தரவேண்டும்! இப்படி, இதில் வேறு
என்ன புதிதாக உள்ளது? தெரியவில்லை. எதுவுமே புதிதல்ல என்றும்
தோன்றுகிறது. எல்லாமே புதிதாகவும் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக,
அவரது கதை சொல்லும் திறனும், எளிமையான, ஆழமான எழுத்தும் வசீகரிக்கிறது. நான்
சமீபத்தில் விரும்பிப் படித்து, ரசித்த புத்தகங்களில் Outliers-ம் ஒன்று. *** நியூ
யார்க்கரில் மால்கம் கிளாட்வெல் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பு
உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி
1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு
பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின்
இதுவரையிலும் இருக்கவில்லை.
காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு
பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில்
வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம் நாட்டைச் சீரழித்தவர்கள்தானே இவர்கள் என்ற
விரக்தி ஒரு பக்கம். எப்படி, எங்கோ ஒரு தேசத்திலிருந்து இங்கு வியாபாரம்
செய்ய வந்து, கைவினைத் திறனிலும் செல்வத்திலும் பின்தங்கிய நிலையில்
இருந்தும், தம் மதிநுட்பத்தாலும், ஆயுத பலத்தாலும் இந்தியா என்ற மாபெரும்
நிலப்பரப்பை பிரிட்டன் என்ற தம் சிறு தீவின் காலனியாக ஆக்கினார்கள் என்ற
வியப்பு மறுபக்கம்.
நியால்
ஃபெர்குசன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆய்வாளர். தற்போது
அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அதே நேரம்
பண்டிதத் தன்மையோடு எழுதாமல் பாமரர்களும் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய
வகையில் வரலாற்றை எழுதுவதில் வல்லவர். அவர் எழுதியுள்ள மிக முக்கியமான
புத்தகம் ‘Empire: How Britain Made the Modern World’ என்பது.
பிரிட்டன்
என்பது சற்றே குழப்பம் தரக்கூடிய அரச அமைப்பு. அந்த அமைப்பே நான்கு
நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள ஒருவிதமான கூட்டாட்சி அமைப்பு.
மன்னராட்சி என்பது பெயரளவுக்கு இருந்தாலும் மக்களாட்சிதான் அந்த அமைப்பை
முன்னெடுத்துச் செல்வது. ஆனால் 1800-களின் இறுதி வரை மன்னர் பரம்பரைக்கு
அதிகச் செல்வாக்கு இருந்தது. கிரேட் பிரிட்டன் எனப்படும் அமைப்பில் இன்று
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள்
உள்ளன.
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டவர்கள்
வியாபாரக் காரணங்களுக்காக முகலாயர்கள் ஆண்டு வந்த இந்தியாவின் பகுதிக்கு
வந்தனர். அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து நாட்டவர்கள் அவர்களது தீவுக்கு
அருகில் இருந்த அயர்லாந்து என்ற தீவுக்குச் சென்று அங்குள்ள மக்களைப்
பெயர்த்துத் தள்ளி, தங்களது காலனியை நிலை நாட்டினர்.
இங்கிலாந்தாக
இருந்து பிரிட்டனாக உருவெடுத்த ஒரு நாடு உலகை வெல்ல அடிபோட்டது 17-ம்
நூற்றாண்டில்தான். ஆரம்பத்தில் அவர்கள் உலகை வென்று ஒரு குடையின்கீழ்
கொண்டுவரவெல்லாம் எண்ணவில்லை. அவர்களுக்குத் தேவையாக இருந்தது மிளகும்
ஜாதிக்காயும். பின்னர் துணிகள். அவற்றை இந்தியாவிலிருந்தும்
இந்தோசீனாவிலிருந்தும் பெறுவதற்காகக் கடல் வழியை நாடிய அவர்கள் கொஞ்சம்
கொஞ்சமாக உலகைச் சுற்றிவர ஆரம்பித்தார்கள்.
ஆனால் உலகைச்
சுற்றிவருவது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்கவில்லை. 16-ம்
நூற்றாண்டில் உலகின் கடல்வழி வாணிபத்தில் உச்சத்தில் இருந்தது ஸ்பெயின்,
போர்ச்சுகல் நாட்டவர்கள். அவர்களிடம்தான் தரமான உலக வரைபடம் இருந்தது.
மிகப் பெரிய கப்பல்கள் இருந்தன. இங்கிலாந்தவர்கள் அந்தக் கட்டத்தில் வெறும்
கடல்கொள்ளையில் மட்டுமே ஈடுபட்டனர். உலகெங்கும் சென்று செல்வம் ஈட்டிவந்த
ஸ்பெயின், போர்ச்சுகல் கப்பல்களைக் கொள்ளையடித்துப் பணம் பெறும்
செயலைத்தான் அவர்கள் புரிந்துவந்தனர்.
பின்னர் இங்கிலாந்தவர்கள்
வரைபடங்களைத் திருடி, காப்பியடித்து, ஓரளவுக்குத் திறமையான கப்பல்களைக்
கட்டி உலகின் பல பாகங்களுக்கும் சென்று காலனிகளை உருவாக்க ஆரம்பித்தனர்.
மெக்சிகோவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஸ்பெயின் நாட்டவர்
முன்னதாகவே சென்று வலுவான காலனிகளை அமைத்திருந்தனர். எனவே இங்கிலாந்தவர்
சில மத்திய அமெரிக்கத் தீவுகள் (ஜமாய்க்கா போன்றவை), வட அமெரிக்கா (இன்றைய
அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா) ஆகிய இடங்களைச் சென்றடைந்தனர்.
மற்றொரு
பக்கம், இந்தியாவுக்குச் சென்று வியாபாரம் செய்ய அப்போதைய இங்கிலாந்து
ராணி, 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்ற
ஓர் அமைப்புக்கு ஏகபோக உரிமை ஒன்றை அளித்தார். அதாவது இங்கிலாந்து
நாட்டைச் சேர்ந்த வேறு எந்த அமைப்போ தனி மனிதர்களோ இந்தியாவிலிருந்து
பொருட்களை வாங்கி இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு விற்கமுடியாது. ஆங்கிலேய
கிழக்கிந்திய கம்பெனி மட்டும்தான் இதனைச் செய்யமுடியும்.
ஆனால்
இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்தவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு ஏமாற்றம்
மட்டுமே மிஞ்சியது. முகலாயர்கள் வலுவாக இருந்த காலத்தில் - ஔரங்கசீப்
ஆட்சி முடியும்வரையில், அதாவது 17-ம் நூற்றாண்டு முடியும் வரையில் -
ஆங்கிலேயர்களால் வலுவாக வேர் ஊன்ற முடியவில்லை. இந்தியாவின் கடல் ஓரங்களில்
சில ‘தொழிற்சாலைக’ளை அமைத்தனர். தெற்கில் முகலாயர்களின் கை நீளாத
இடத்தில் சென்னை என்ற நகரத்தை நிர்மாணிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களது
ஆரம்ப காலச் சண்டையெல்லாம் எப்படி தமக்கு முன் வந்திருந்த
போர்ச்சுக்கீசிய, டச்சு வணிகர்களை விடச் சிறப்பாக வியாபாரம் செய்வது
என்பதில்தான் இருந்தது.
ஆனால் முகலாய சாம்ராஜ்யம் அழியத் தொடங்கிய
18-ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்குத் தானாகவே வாய்ப்பு கிட்டியது.
அதற்குள்ளாக பிரெஞ்சு வணிகர்களும் இந்தியாவில் கால் ஊன்றத்
தொடங்கியிருந்தனர். பிரித்தானிய வியாபாரிகளுக்கு இப்போது
பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர்
ஒருபக்கம்; இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அரசர்கள்,
பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் எனப் பலரையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம்.
ஒரு நூற்றாண்டுக்குள் பிரித்தானியர்கள் அனைத்தையும் சாதித்தனர். 19-ம்
நூற்றாண்டு ஆரம்பம் ஆகும்போது, இந்தியாவின் பல பகுதிகளிலும்
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிரதானமாக இருந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள்,
திப்பு சுல்தான், சீக்கியர்கள் எனப் பலரையும் அழித்தாயிற்று. எஞ்சியவர்கள்
பிரித்தானியர்களை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டனர்.
இத்தனையையும்
சாதிக்க ஆங்கிலேயர்கள் பெரும் படைகளை நம்பி இருக்கவில்லை. நன்கு பயிற்சி
கொடுக்கப்பட்ட குறைவான சிலர் மட்டுமே இருந்தனர். மீதமெல்லாம் இந்தியப்
போர்வீரர்கள்தான்.
கொள்ளைக்காரர்களாலும் குடியேறிகளாலும்
அமெரிக்கக் கண்டம் ஆங்கிலேயர் வசம் என்றால், வியாபாரிகளால் இந்தியா. ஆனால்
ஆப்பிரிக்காவைக் கைப்பற்றப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது கிறிஸ்தவ
மதத்தைப் பரப்ப விரும்பிய எவாஞ்செலிகல் குழுவினர். ஆப்பிரிக்காவில் 16-ம்
நூற்றாண்டு முதலே அடிமை வியாபாரம் தழைத்து வளர்ந்தது. பிரெஞ்சு,
பிரித்தானிய, டச்சு, ஸ்பானிய என்று ஒருவர் விடாமல் அடிமைகளைப் பிடித்து
அமெரிக்காமுதல் உலகின் பல பாகங்களுக்கும் விற்பனை செய்துவந்தனர். ஆனால்
அடிமை முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தது
பிரிட்டனின் கிறிஸ்தவ தேவாலயங்களே. 18-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 19-ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் அடிமை முறை முற்றிலுமாக
ஒழிக்கப்படுவதற்கு பிரிட்டன்தான் காரணமாக இருந்தது.
ஆனால் அதே
நேரம், ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் மத்தியில் ‘நாகரிகம்’, ‘நல்ல மதம்’
ஆகியவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்கள்,
அதனை ஆயுத பலம் கொண்டே சாதித்தனர். மேக்ஸிம் என்ற தானியங்கி குண்டுவீசி
ஆயுதங்களுடன் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளைப் பிடித்து, எக்கச்சக்கமான
பழங்குடிக் குழுவினரை சில நாடுகளாக மாற்றியமைத்தனர்.
தவிர
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளுக்குச் சென்ற பிரித்தானியர்கள்
அங்குள்ள பழங்குடியினரை முற்றிலுமாக அழித்து அந்த நாடுகளை முழுமையாகத் தம்
வசப்படுத்தினர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் உலகப்
போர் ஆரம்பிக்க இருந்த நேரத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் அனைத்து
கண்டங்களிலும் காலனிகளை அமைத்திருந்தது. உலகின் மாபெரும் கப்பல்படையை
வைத்திருந்தது. தான் ஆண்ட பகுதிகளில் ஆங்கில மொழியைப் பரப்பியிருந்தது.
தெளிவான சட்டங்கள் இல்லாத இடங்களில் இங்கிலாந்தீன் சட்ட முறையப் பின்பற்றி
சட்டங்களை வகுத்து, சட்டங்களை நிலைநாட்ட நீதிமன்றங்கள், காவல்துறை
ஆகியவற்றை நிலநாட்டியிருந்தது. பணக் கொள்கையைப் புகுத்தியிருந்தது.
பொதுவாக மக்கள் அமைதியாக வாழ அனைத்துச் செயல்களையும் செய்திருந்தது.
ஆனால்,
அதே நேரம் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சுயாட்சியை நோக்கிச்
செலுத்திய போராட்டங்களை வன்முறையுடன் அடக்கியது.
முதலாம்
உலகப்போரில் தன் காலனிகளின் வளங்களை தன் போருக்காகப் பயன்படுத்தியது
பிரிட்டன். வெற்றிகரமான போருக்குப் பின்னரும் தன் காலனி நாடுகளின்
சுயாட்சி உரிமைகளைப் பற்றி பிரிட்டன் கவலைப்படவில்லை.
18-ம்
நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்கா என்ற தேசம், பிரிட்டனுடன் போரிட்டு,
சுயாட்சி அதிகாரம் பெற்றது. முதலாம் உலகப்போருக்குப் பின் அயர்லாந்து
பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி தேசமாக ஆனது. ஆனால் இரண்டாம் உலகப்போர் பல
மாற்றங்களைக் கொண்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கியமாக இந்தியாவில்
சுதந்தரப் போராட்டம் கடுமையாக இருந்தது. போரின்போது பிரிட்டன் அடைந்த
கடுமையான கடன் சுமை, பிரிட்டனில் நிலவிய லிபரல் மனப்பான்மை ஆகிய
காரணங்களால் இந்தியாவுக்கு விடுதலை தர பிரிட்டன் முடிவெடுத்தது. அடுத்த
பத்தாண்டுகளுக்குள் பெரும்பான்மையான காலனிகளுக்கு பிரிட்டன் சுதந்தரம்
அளித்துவிட்டது.
நியால் ஃபெர்குசன், பிரிட்டன் எப்படி உலகின் ஒரு
பெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது என்பதை மிக அழகாகப் படம்
பிடித்துக்காட்டுகிறார். அந்த சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி அமைத்தது
பெரும்பாலும் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இங்கிலாந்து, ஸ்காட்லாந்து
இளைஞர்கள்! மிகக் குறைவான ராணுவ வீரர்கள், மிக உறுதியான, ஊழலற்ற சிவில்
சர்வீஸ் அமைப்பு, பொதுவான நியாயத்தை வழங்கும் சட்டங்கள், நாடாளுமன்ற
ஜனநாயகம், ஆங்கில மொழி என்று பலவற்றை உலகின் பல பகுதிகளுக்கும் வழங்கியது
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடை என்று நிறுவுகிறார் ஃபெர்குசன்.
அதே
நேரம், எங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிமுறையில் தவறுகள் இழைக்கப்பட்டன
என்பதை எடுத்துக்காட்டவும் ஃபெர்குசன் தவறவில்லை. ஆனால் அதே நேரம் இந்தத்
தவறுகள் நிகழும்போதெல்லாம் பிரிட்டனுக்கு உள்ளிருந்தே எதிர்க்குரல்கள்
எழுப்பப்பட்டன என்றும் தெளிவாக்குகிறார் ஃபெர்குசன். அடிமை முறைக்கு
எதிராகக் குரல் எழும்பியது பிரிட்டனில்தான். காலனிகளின் சுதந்தரப்
போராட்டங்களுக்கான ஆதரவும் பெரும்பாலும் பிரிட்டனிலிருந்தே கிளம்பின. தவறு
செய்த கிழக்கிந்திய கம்பெனி கவர்னர்களை இங்கிலாந்துக்கு அழைத்து
இம்பீச்மெண்ட் செய்த பெருமையும் அந்நாட்டு மக்களுக்கே இருந்தது.
பிரிட்டனுக்கு
பதில் வேறெந்த நாடாவது - பிரான்ஸ், ஜெர்மனி... - இதே அளவுக்கு காலனி
நாடுகளைக் கொண்டிருந்தால் அவர்கள் பிரிட்டன் அளவுக்கு நாகரிகமாக
நடந்திருக்க மாட்டார்கள்; அவர்களது ஆட்சியில் இந்த காலனி நாடுகளின்
மக்களும் வளர்ந்திருக்கமாட்டார்கள் என்பது ஃபெர்குசனின் கோட்பாடு.
இதை
நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
Empire: How Britain
Made the Modern World, Niall Ferguson, Penguin (First published in
2003)
ரிச்சர்ட்
டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட்
பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச்
சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை
வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள்
படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக்
கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில்
நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர
களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர்.
ஆனால் மிகவும்
சர்ச்சைக்குரிய மனிதர்!
இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது?
ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ்
டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக்
கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்கு கடவுள் என்ற
கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸும் மற்ற பலரும் இந்தக்
கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ
மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல்
துறைமீது பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற
புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.
இதைப்பற்றி இந்தியாவில்
இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில்
கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40%
மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக்
கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது
என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான
எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின்
கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும்
பெற்றுள்ளனர்.
எவொல்யூஷன்
எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா? அதற்கு என்ன
சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில்
சுருக்கமாக பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர்
வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக்
கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களில் ஏற்படும்
மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை
ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில்
அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள்
அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து
அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக் கிளை உருவாகி,
நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.
இப்படித்தான்
ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர்.
மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான
பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கு பொதுவான
ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால்
எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஒரு உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.
இந்தக்
கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள்,
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில்
ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது
மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில்
உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை,
மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும்
உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி
உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன.
அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள்தான்
ஆகியுள்ளன.
ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம்
மாற்றங்கள் நிகழ்கின்றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய,
இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி
பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.
பரிணாம வளர்ச்சியை ஏற்காத
படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின்
புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும்
எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும்
புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
டாக்கின்ஸ்
படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார்.
முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில்
வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை? இதற்குக் காரணம்,
பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை
பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே
என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம்.
எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே.
டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும்
கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத்
தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின்
தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
டார்வின் தன்னைச் சுற்றிலும்
நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு
நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன்
செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை
உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன்
நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய
கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.
ஆனால் இந்த இயற்கைத் தேர்வு
நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின்மூலம்
மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம்
வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைபடிவ நிரூபணங்கள்
நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை
எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு
காலத்தில் வாழ்ந்துள்ள என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
அடுத்து
டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற
முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின்,
மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு
அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத்
தெளிவாக்குகிறார்.
பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று
சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து
ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை
உதாரணங்களாகத் தருகிறார்.
குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள
இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில்
வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல்
கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில்
போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில்
என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள
பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும்
ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து
சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில்,
அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர
இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக
வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37
ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின்
கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.
இதேபோல்
நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார்
ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை
விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை என்று சில உயிரினங்களில்
காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட
பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது
இருக்கும்.
பொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே
கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள்
இன்னமும் ஏன் உள்ளன?’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப்
புரிந்துகொள்ளாததான் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள்
அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக்
கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து
மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன்
இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப்
பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன.
தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.
எப்படி இயற்கையில்
விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ்.
ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான
வடிவத்தைப் பெறுகின்றன? தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது,
புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா? தாள் ஒன்றில் இங்கைத்
தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப்
பார்க்கும்போது அந்தத் தாளில் ஒரு அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள்.
அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன.
அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள்
மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன
என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக்காண்பிக்கிறார்.
உயிர்கள் மிகவும்
சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த
‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற
வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற
கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும்
தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை
செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக,
ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்கு
தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம்
தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும்
மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.
இந்தப் புத்தகத்தில்
டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அத இறுதி அத்தியாயம்.
அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற
புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு
வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப்
புத்தகத்தைப் படிக்கலாம்!
உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம்
என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு
ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று
தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல்
விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.
அவசியம்
படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.
The Greatest Show on
Earth: The Evidence for Evolution, Richard Dawkins, Bantam Press (A unit
of Transworld Publishers, A Random House Group Company)
Posted by
Badri
at
17:48
Tags: ஓவியம், கமல், சுந்தரபுத்தன், நூல், வண்ணங்களின் வாழ்க்கை
வண்ணங்களின் வாழ்க்கை :
சுந்தரபுத்தன்
ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பார்கள். ஓவியங்கள் இல்லாத
வாழ்க்கை நினைவுகளின் ஏழ்கடல் தாண்டியது. இயற்கை அனைத்தையுமே தூரிகையாகவும்
வண்ணங்களாகவும் பாவிக்கிறது. வானத்தின் மேலும், பூமியின் கீழும் கூட
ஓவியங்கள் நிரம்பி வழிகின்றன.
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஓவியங்களுக்கென எப்போதுமே சிறப்பு இடம்
ஒன்று உண்டு. மேற்குலகில் கோலோச்சிய ஓவியர்களில் சட்டென ரபேல், டிசியன்,
ரூபன்ஸ், லியானார்டோ போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். வான்கோவை மறக்க
முடியுமா ? எனினும் எல்லா ஓவியர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில்
நிராகரிக்கப்பட்டிருந்தவர்கள் எனும் வரலாறு வலியூட்டுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஓவியர்கள் வீர சந்தானம், புகழேந்தி, கதவு
சந்தானம், விஸ்வம், வித்யாசங்கர், ஜெயராமன், மனோகர் என சமகாலப் பட்டியல்
நீள்கிறது. பலருக்கும் தமிழக ஓவியர்கள் பற்றிய சரியான அறிமுகம் இல்லை.
காரணம், காலம் காலமாக ஓவியம் என்பது பிற இலக்கியங்களைத் தாங்கிப் பிடிக்கத்
தான் தமிழில் பயன்படுகிறதே தவிர, பிற இலக்கியங்கள் ஓவியத்தைத் தாங்கிப்
பிடிப்பது குதிரைக் கொம்பு.
சுந்தரபுத்தன் அவர்களுடைய
“வண்ணங்களின் வாழ்க்கை” நூல் ஓவியர்களைக் கௌரவப் படுத்த தமிழில்
வந்திருக்கும் ஒரு அத்தி பூத்த நிகழ்ச்சி. இந்த அத்தி சட்டென பூத்து
விடவில்லை. அவர் புதிய பார்வையில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில்
ஒவ்வோர் இதழிலிலும் ஒவ்வோர் பூவாகப் பூத்தது. வீர சந்தானம் முதல், மார்கு
ரத்தினராஜ் வரையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட ஓவியர்களை இவர் சந்தித்து உரையாடி
அவர்களுடைய அனுபவ செழுமைகளையும், ஓவியப் பார்வைகளையும்
இலக்கியமாக்கியிருக்கிறார்.
ஓவியர்களின் வாழ்க்கை, அவர்களுடைய ஆனந்தத்தின் துலாக்கோல், வண்ணங்களின்
ஸ்பரிசங்களால் அவர்கள் அடையும் பரவசம், ஓவியத்தின் உள்முக தரிசனம் என
அவர்களுடைய் பார்வைகள் கவிதைகளாய் நீள்கின்றன.
தோழமை பூபதி இதை ஒரு முழு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். பூபதி
அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்திருப்பதற்கு இன்னொரு காரணம், அவருக்கும்
ஓவியத்துக்கும் இருக்கும் ஆத்மார்த்த பிணைப்பு. இன்னும் விளக்க, ஓவியர் புகழேந்தியின் தம்பி தான்
இவர் எனும் சுருக்க அறிமுகம் தரலாம்.
அமெரிக்காவில் பணியிடங்களில் தங்கள் குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை
அதிகபட்ச அன்போது சுவரில் தொங்கவிட்டு அழகுபார்க்கும் பெற்றோர்கள் அதிகம்.
ஓவியத்தின் மீதான ஈடுபாடு அல்ல அதன் காரணம். ஓவியர்களின் மீதான அபரிமிதமான
பாசமே. அத்தகைய ஒரு பாசமும், கரிசனையும், அங்கீகாரமும் நமது
ஓவியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனும் ஒரு சிந்தனை கீற்றை இந்த
வண்ணங்களின் வாழ்க்கை நூல் பற்ற வைக்கிறது
தோழமை வெளியீடு, 94443-02967
விலை : 150/-
அகமறியும் ஒளிபார்வை
என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது
இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி
இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின்
கூர்மையையும் நிதானத்தையும் நம்பியே உள்ளது. பார்வையிழந்த ஒருவருடைய உலகம்
நுண்ணியதகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது.
பிறவியிலேயே பார்வையிழந்த ஒருவர் ஒருபோதும் இந்த வேறுபாட்டை அறிய
முடியாது. ஆனால் பார்வை இருந்து பின் அதை இழந்து பலவருடங்கள் வாழ்ந்து
மீண்டும் பார்வையை அடைந்த ஒருவர் ஒளியில்லா உலகையும் ஒளியுல/கையும் ஒருங்கே
அறிந்தவர். இங்கிருந்து அங்கே சென்றால் அவருக்கு என்ன ஆகிறது?
கொஞ்சநாளுக்கு மட்டும் ஓர் எளிய தடுமாற்றம், அவ்வளவுதான். உள்ளே இருப்பவர்
ஒலியை நோக்கி திரும்பிக்கொள்கிறார். அவர் மீண்டும் ஒளிக்கு வரும்போது?
அதேபோன்ற ஒரு திசை திருப்பம். அத்துடன் சரி.
அந்த அனுபவத்தின் நுட்பங்களுக்குள் செல்லும் நூல் தேனி சீருடையான்
எழுதிய ‘நிறங்களின் உலகம்’. இது ஒரு சுயசரிதை நாவல். தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான தேனி
சீருடையான் கடை என்ற நாவல் மூலம் கவனிக்கப்பட்டவர். உழைப்பாளராக வாழ்ந்து
எழுதுபவர் தேனி சீருடையான். தேனி பேருந்துநிலையம் முன்பு தள்ளுவண்டியில்
பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். இப்போது கடை வைத்திருக்கிறார்.
தேனியில் ஒரு சிறுவணிக குடும்பத்தில் பிறந்தவர் கருப்பையா. அப்பா ஒரு
வறுகடலை விற்பனை நிலயத்தில் வேலை பார்க்கிறார். ஐம்பதுகளில் தமிழகம்
கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது.
நடுத்தரக்குடும்பங்களே உணவுக்கும் உடைக்கும் அல்லாடிய காலகட்டத்தில்
பொரிகடலை வறுத்து கூலியாக கொஞ்சம் சில்லறை மட்டுமே ஈட்டும் குடும்பத்தின்
நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாவலின் ஆரம்பகட்ட அத்தியாயங்களில்
வரும் உக்கிரமான வறுமைச்சித்தரிப்பு சமீபத்தில் எந்தத் தமிழ்நாவலிலும்
வந்ததில்லை.
பெரும்பாலான நாட்களில் கம்பு கேழ்வரகு கூழ்தான். என்றோ ஒருநாள் அரிசிச்
சமையல். அன்றைக்கு எங்களுக்கு இரண்டு கொண்டாட்டம் என்கிறான் கருப்பையா.
அரிசி கொதித்ததும் மணக்க மணக்க கஞ்சித்தண்ணி உப்பு போட்டு குடிப்பது.
அதன்பின் சோற்றில் புளிக்கரைசல் விட்டு சாப்பிடுவது. அரிசிச்சோற்றுக்கு
எந்த தொடுகறியும் தேவையில்லை. சும்மாவே சாப்பிட்டுவிடலாம். அரிசி
கொதிக்கும் மணம் எழும்போது தெருவே பொறாமையாக பார்ப்பதுபோல பெருமிதமாக
இருக்கும் என்கிறான்.
சாப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. வயிறு நிறைய எதையாவது
உண்பது மட்டுமே பெரும் கனவு. இந்நூலின் வறுமைச்சித்திரங்களில் உள்ள
இன்னொரு குறிப்பிடத்தக்க பிரச்சினை இடம் தொடர்பானது. புனைகதையில்
எப்போதும் வந்திராத இச்சிக்கல் உண்மையான வாழ்வனுபவம் மூலம் மட்டுமே
பதிவாவது. எல்லா ஏழைப்பிள்ளைகளுக்கு பாலுறவைப்பற்றி தெரிந்திருக்கிறது.
மிகச்சிறிய ஓரறை வீடுகளில் சேர்ந்து தூங்கும்போது அவர்கள் அனைவருமே
அப்பாவும் அம்மாவும் உடலுறவு கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். நாளெல்லாம்
இல்லாமையின் எரிச்சலில் மோதிக்கொண்டே இருக்கும் கருப்பையாவின் அப்பாவும்
அம்மாவும் இரவில் உறவுகொள்வது அவனுக்கு பிடித்திருக்கிறது.
இலவசக்கல்வி இருப்பதனால் ஆரம்பப்பள்ளிக்குச் செல்கிறான் கருப்பையா.
ஆனால் திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக கண்தெரியாமலாகிறது. ஆரம்பத்தில்
எவருக்குமே அது புரியவில்லை. பள்ளியில் தான் எழுதுவதை தப்பாக கிறுக்கி
வைத்ததற்காக ஆசிரியர் அடிக்கிறார். சாலையில் எங்கே சென்றாலும் பல
இடங்களில் முட்டிக்கொண்டே இருக்கிறான்.
எண்ணைவாங்கிவிட்டு திரும்பும்போது இட்லி விற்கும் பக்கத்துவீட்டுக்காரி
பொன்னம்மக்கா மீது மோதி இட்டிலிமாவு சிந்திவிடுகிறது. அவள் மூர்க்கமாக
அடிக்கிறாள். அந்த அடியை வாங்கிக்கொண்டு கீழே சிதறிய எண்ணைப்புட்டியை
பொறுக்குவதிலேயே குறியாக இருக்கிறான் அவன். கதறியபடி வீடு திரும்புகிறான்.
பக்கத்துவீட்டுக்காரி வந்து நஷ்ட ஈடுக்காக சத்தம்போடும்போது அம்மாவும்
அடிக்கிறாள். அப்போதுதான் தனக்கு சுத்தமாகக் கண்ணே தெரியவில்லை என்பதை
கருப்பையா சொல்கிறான்.
அம்மா அதிர்ச்சி அடைந்து போகிறாள். பொன்னம்மக்கா கூட கழிவிரக்கத்துடன்
ஐயோ என் புள்ளைய அடிச்சிட்டேனே என்று கட்டிக்கொள்கிறாள். மகனை
மார்போடணைத்து அம்மா அழுகிறாள். உள்ளூர் வைத்தியரிடம் காட்டி சில
மருந்துகள் விட்டுப்பார்க்கிறார்கள். அதற்குமேல் சிகிழ்ச்சை செய்ய
வசதியுமில்லை, நேரமும் இல்லை. பூசாரியிடம் கொண்டு சென்று காட்டி
குறிகேட்கிறார்கள். நாலுவார விரதம் சொல்கிறார். நாலுவாரமாகியும்
கண்திறக்கவில்லை. உன் பக்கத்துவீட்டுக்காரி சுத்தமில்லாம குறுக்கே வந்து
சாமியை தடுத்துட்டா என்கிறார் பூசாரி.
கருப்பையாவின் படிப்பு நிற்கிறது. வீட்டிலேயே கிடைப்பதைத் தின்றுவிட்டு
உட்கார்ந்திருக்கிறான். உடன்படித்த மாணவர்களைச் சந்திக்கும்போது என்ன
சொல்லித்தந்தார்கள் என்று ஏக்கத்துடன் கேட்டுக்கொள்கிறான். அம்மா
அப்பாவிடம் காசு வாங்கிவருவதற்கு அனுப்புகிறாள். திரும்பும் வழியில்
கால்தடுக்கி சில்லறைகள் சிதறிவிழுகின்றன. தரையெல்லாம் துழாவி
சில்லறைகளைப்பொறுக்குகிறான். ஒரு காசு தவறி விடுகிறது. ‘அந்த மனுஷன் தீயில
வெந்து சம்பாரிச்சா நீ தொலைச்சுட்டா வாரே’ என்று அடிவிழுகிறது.
கண்தெரியாமைக்காக ஒரு சிறு சலுகையைக்கூட கொடுக்க முடியாத வறுமை.
வறுமையின் சித்திரங்கள் இந்த நூலின் பக்கங்களை அதிரச்செய்கின்றன. வறுமை
தாங்கமுடியாமல் மனிதர்கள் மூர்க்கம் கொண்டு கூண்டில் அடைபட்ட பசித்த
மிருகங்கள் போல ஒருவரை ஒருவர் கடித்துக் கிழித்துக்கொள்கிறார்கள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கு தீராத சண்டை. வெறிகொண்ட அப்பா நல்லுசெட்டி
விறகு கம்பால் அம்மாவை கொலைவெறியுடன் அடித்து போடுகிறார். பிறிதொருமுறை
வறுமை தாளாமல் அம்மா தன் அண்ணாவிடம் உதவிகேட்க அவரது ஊருக்குச்
செல்கிறாள். எதிரே கிழிசலாடையுடன் வரும் அண்ணி அவள் ஏன் வந்தாள் என்பதை
ஊகித்துக்கொண்டு துடைப்பத்தால் அடித்து துரத்துகிறாள்.
அப்பாவின் தங்கையின் வீட்டு விசேஷத்துக்கு எதுவுமே கொடுப்பதற்கில்லாமல்
வீட்டில் கழனித்தண்ணி வைத்திருக்கும் பழையபாத்திரத்தை நன்றாக துலக்கி
மாமன்சீராக கொண்டுசென்று கொடுத்துவிட்டு வந்து விடுகிறார்கள். அவள்
இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு மொய் எழுதியவள். பழையபாத்திரத்தை கண்டு
வெறிகொண்ட அத்தை அதை கொண்டுவந்து இவர்கள் வீட்டுமுன்னால் சாணியைக் கரைத்து
வைத்து வசைபாடிவிட்டுச் செல்கிறாள்.
சுமைநிறைந்த வாழ்க்கையின் ஒருகட்டத்தில் நல்லுசெட்டி காணாமல் போகிறார்.
அவருக்கு அது ஓர் இளைப்பாறல்.ஆனால் கண்தெரியாத குழந்தைகளுடன் அம்மா
நடுத்தெருவில் நிற்கிறாள். கருப்பையாவின் தங்கைக்கும் கண்தெரியாமல் ஆக
ஆரம்பித்திருக்கிறது. பசியுடன் போராடும்போது பக்க்கத்துவீட்டு வள்ளியக்கா
வந்து இருட்டோடு இருட்டாக ஏதோ ரகசியம் பேசுகிறாள் ”அய்யய்யோ எனக்கு
வேணாந்தாயீ..அடுத்தவனுக்கு முந்தாணி விரிச்சு வகுறு வளக்குறத விட பட்டினி
கெடந்துசெத்துப்போறது மேலு” என்கிறாள் அம்மா.
அந்தநிலையில்தான் தூரத்து உறவான சுப்புமாமா வருகிறார். அரசாங்கத்தில்
கண்தெரியாத குழந்தைகளை எடுத்து படிக்க வைக்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது
என்று சொல்கிறார். அம்மா தொலைதூரமான திருச்சி வரை குழந்தையை தனியே அனுப்ப
சம்மதிக்கவில்லை. சுப்புமாமா பேசிப்பேசி
சம்மதிக்கவைக்கிறார்.கருப்பையாவின் வாழ்க்கையில் ஓரு புதிய ஏடு புரள்கிறது.
விழியிழந்தவர்களுக்கான அந்த விடுதியில் மெல்லமெல்ல சூழலுடன் கருப்பையா
இணைகிறான். அங்கே சுவையில்லாத உணவுதான் என்றாலும் வயிறுநிறைய
சோறுகொடுக்கிறார்கள். ஊரில் அம்மாவும் தங்கையும் பட்டினி கிடப்பார்கள்
என்பதுதான் கருப்பையாவை உள்ள்ளூரக் கண்ணீர்விடவைக்கிறது. கல்வி
அறிமுகமாகிறது. பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கவும் எழுதவும்
கற்றுக்கொள்கிறான். இலக்கியங்களில் அறிமுகம் ஏற்படுகிறது
பள்ளி இறுதிவரை விழியிழந்தவனாக பிரெய்லி முறைப்படி கற்று தேர்ச்சி
அடைகிறான் கருப்பையா.ஐநூறுக்கு நாநூற்று இருபத்தொரு மதிப்பெண்.
அக்காலத்தில் அது ஒரு சாதனை. மாநிலத்திலேயே பார்வையற்றவர்களில் அவன்தான்
முதலிடம். பள்ளிமுதல்வர் அவனை கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால்
பணமில்லை. ஆசிரியர் பயிற்சிக்குச் சேர அன்று சட்ட அனுமதி இல்லை
மனம் உடைந்த கருப்பையா தற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ணத்தை
அடைகிறான். ஆனால் மறுகணமே ஏன் சாகவேண்டும் என்ற வீராப்பு எழுகிறது.
சாவதில் அர்த்தமே இல்லை, வாழ்க்கை கண்முன்னால் நிற்கிறது. நான் ஏன்
சாகணும் என்ற கேள்வி நீலநிற சுவாலையாய் பிரக்ஞையில் எரிகிறது. ஒன்றுக்கும்
முடியாவிட்டால் அப்பா வறுக்கும் கடலையை தெருவில் கூவி விற்பது என்று
முடிவெடுத்து தன்னம்பிக்கையுடன் எழும் கருப்பையாவில் நாவல் முழுமை
கொள்கிறது
கருப்பையாவின் கதை ச.தமிழ்ச்செல்வன் தேனி சீருடையானை எடுத்த
பேட்டி-உரையாடல் வழியாக மேலும் விரிகிறது. 1970 ஊர்திரும்பி தேனியில்
இருக்கிறான் கருப்பையா. இலக்கிய ஆர்வமும் தமிழார்வமும்
உருவாகிவிட்டிருக்கின்றன. அப்போது நாடார் பள்ளியில் இலவச கண்சிகிழ்ச்சை
முகாம் நடக்கிறது என்று அறிவிப்பு சொல்லி ஒரு வண்டி செல்கிறது. அங்கே
செல்கிறான். மிக எளிமையான ஓர் அறுவைசிகிழ்ச்சை மூலம் பார்வை
திரும்பக்கிடைக்கிறது. ஆனால் தங்கைக்கு பார்வை திரும்பவில்லை. அவள்
கண்களில் விட்ட நாட்டுமருந்துகள் பார்வையை அழித்துவிட்டிருக்கின்றன.
கருப்பையாவின் வாழ்க்கையின் உச்சகட்ட அபத்தம் அங்கே நிகழ்கிறது அவன்
விழிதெரியாதவனாக இருந்திருந்தால் அவனுக்கு ஊனமுற்றோர் தகுதியில் அரசு
வேலையோ உதவியோ கிடைத்திருக்கும். ஆனால் அவன் பார்வையுள்ளவன்.
பார்வையற்றோர்பள்ளி அளித்த பள்ளிச்சான்றிதழை சாதாரண வேலைவாய்ப்பகத்தில்
பதிவுசெய்ய முடியாது என்று மறுத்து சென்னை பார்வையற்றோர்
வேலைவாய்ப்பகத்துக்குப் போ என்கிறார்கள். அங்கே போனால் ‘உனக்குத்தான்
பார்வை இருக்கிறதே இங்கே பதிவுசெய்யமாட்டோம்’ என்கிறார்கள். அவனுடைய
பதினொருவருடக் கல்வி, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எல்லாமே அரசு
விதிகளின்படி பயனற்று போகின்றன
சான்றிதழ்களை தூக்கி வீசிவிட்டு கருப்பையா தேனி பேருந்து நிலையத்தில்
கடலை விற்கச் செல்கிறான். பேருந்துநிலயம் முன்னால் ஒரு குடையை குச்சியில்
கட்டி வைத்து நட்டு அமர்ந்துகொண்டு பழங்கள் விற்கிறான். அந்தச்
சூழலையும் தன்னுடைய நம்பிக்கை ஒன்றினாலேயே எதிர்கொள்கிறான் கருப்பையா.
மெல்லமெல்ல குடும்பத்தில் பட்டினி மறைந்தது. சிறுவணிகனாக ஆரம்பித்து
எழுத்தாளனாக எழுகிறான்.
கருப்பையாவின் வாழ்க்கையின் கடைசி அபத்தம் அவரது அம்மாவின் மரணம்.
அவரது அப்பாவுக்கு 1986ல் தாடையில் புற்றுநோய் கண்டது. மதுரை
ஆஸ்பத்திரியில் அவரை சோதித்துவிட்டு ஆறுமாதமே தாங்குவார் என்று
சொல்லிவிட்டார்கள். அதைக்கேட்டு மனமுடைந்த அம்மா தற்கொலை
செய்துகொள்கிறாள். ஆனால் அப்பா அறுவை சிகிழ்ச்சை மூலம் தாடையையே
எடுத்துவிட்டு 16 வருடம் நலமாக வாழ்ந்தார். வாழ்நாளெல்லாம் பசியால்
பரிதவித்த அம்மா மகன் மூன்றுவேளை சோறு போடும் நிலைக்கு வருவதைப்
பார்க்காமல் இறந்தார்.
கருப்பையாவின் கண்ணில்லா உலகின் நுண்ணிய சித்திரங்களே இந்நாவலை
முக்கியமானதாக ஆக்குகின்றன. அவன் கால்கள் தரையை வருடிக்கொண்டே
இருக்கின்றன. செல்லுமிடம் முழுக்க கால்களால் தொட்டறியப்படுகிறது.
கால்களின் தொடுகை நுட்பமாக ஒவ்வொரு இடத்தையும் அவனுக்குக்
காட்டிக்கொடுக்கிறது. செவிகளால் அவன் உலகை கவனித்துக்கொண்டே இருக்கிறான்.
ஆர்வமூட்டும் இன்னொரு விஷயம் நிறங்களை கருப்பையா உணரும் விதம்.
கருப்பையாவின் பார்வைநரம்புகளும் விழித்திரையும் நன்றாகவே இருக்கின்றன.
விழி ஆடியில்தான் சிறிய சிக்கல். ஆகவே அவனால் வெளியெ உள்ள ஒளியசைவுகளை உணர
முடியும். அத்துடன் அவன் நினைவில் நிறங்கள் இருக்கின்றன. அவன் அகப்புலன்
அறியும் அதிர்வுகளை அவன் நிறங்களாக உணர்கிறான். குரல்கள் மஞ்சளாகவும்
பச்சையாகவும் ஒலிக்கின்றன. சிலநினைவுகள் சிவப்பாக இருக்கின்றன.
பேருந்துகள் நீலமாக ஒலிவிட்டுச்செல்கின்றன. ஏன், வாசனைக்குக் கூட சிலசமயம்
நிறமிருக்கிறது.
விழியிழந்தோர் பள்ளியில் குழந்தைகள் ஒருவரை ஒருவர் தொட்டும் வருடியும்
அறிகின்றன. பார்வையுள்ளவர்களின் உலகில் உடற்தீண்டல்
விலக்கப்பட்டிருப்பதனால் இருக்கும் தடைகள் இங்கே இல்லை. மிக எளிதாக
குழந்தைகள் காமம் நோக்கிச் செல்கின்றன. ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும்
மாறி மாறி பாலுறுப்புகளை வருடி மகிழ்கின்றன. அதனூடாக ஆழமான உடல்தொடர்பை
அடைகின்றன. இன்னும் நுட்பமான ஒரு இடம் அக்குழந்தைகளுக்குச் சிரங்கு
வருவது. அந்த நோயை அது வருடவும் சொறியவும் வாய்ப்பளிக்கிறது என்பதனாலேயே
அவை ஆனந்தமாக அனுபவிக்கின்றனவா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தேனி சீருடையானின் இந்நாவலை ஒரு கலைப்படைப்பு என்று சொல்லிவிட
முடியாது.சீரான நுட்பமான தகவல்களை அளிப்பதில் ஆசிரியரின் நடை
வெற்றிபெறவில்லை. உணர்ச்சி மீதூறும்போது செயற்கையான மேடைப்பேச்சு நடை
வந்துவிடுகிறது. இந்நூலை இன்னமும் கச்சிதமாக சுருக்கியிருக்கலாம்.
குணச்சித்திரங்களை இன்னமும் தெளிவாக்கியிருக்கலாம். ஆனாலும் உண்மையின்
உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது.
[ நிறங்களின் உலகம், தேனி சீருடையான், அகரம் வெளியீடு மனை எண்1, நிர்மலா நகர் தஞ்சாவூர் 613007 ]
http://www.muthukamalam.com/muthukamalam_adaiyalam3.htm
December 14, 2009 – 12:06 am
யாராவது
அரசியல் என்றாலே ஒருமாதிரி நமைச்சல் கொடுக்கிற இடத்துக்கு நம்மைக்
கோடுவந்துசேர்த்துவிட்டிருக்கிறார்கள். புரட்சிக்கும் கலகத்திற்கும்
அடுத்தபடியாக சீரழிக்கப்பட்ட சொல் அது. அதைச்சொன்னாலே கட்சிகட்டி
சண்டைபோடுவது, எதையும் புரிந்துகொள்ள மறுத்து ஒரேப்பிடிவாதமாக நிற்பது,
எதைப்பேசினாலும் ஒரேபுள்ளியில் கொண்டுசென்று சேர்ப்பது என்றெல்லாம்தான்
நம் அறிவுச்சூழலில் பொருள்.
அத்துடன் சிற்றிதழாளர்கள் எதற்கெடுத்தாலும் அந்தச் சொல்லை
பயன்படுத்துவார்கள். ‘நீங்க சொல்றதுலே அரசியல் இருக்குங்க’, ‘இந்த கதையோட
அரசியல் என்னன்னா..’ ‘அவனுக்கும் எனக்கும் நடுவிலே அரசியலுங்க’
என்றெல்லாம். என்ன சொல்லவருகிறார்கள் என்றே புரியவில்லை. ஒருநாள் ஓர் இளம்
அரிவுஜீவி ”மாஸ்டர், நல்ல அரசியலா ஒரு டீய போடுங்க” என்றார். வாய்தவறி
சொல்லியிருக்கமாட்டார் என நம்புகிறேன்.
ஆகவேதான் எழுத்தாளர்கள் அரசியல் என்றாலே உதறுகிறார்கள். எனக்கும் அந்த
உதறல் உண்டு. நூற்றுக்கு தொண்ணூறு அரசியல் விஷயங்களில் வாயை திறக்க
மாட்டேன். இந்தக் குறிப்புகளையும் கட்டுரைகளையும் எனது இணையதள கொடுத்த
கட்டாயத்தால்தான் எழுதினேன்.
என்னுடைய அரசியலென்பது எழுத்தாளனின் அரசியல். எந்த மொழியுணர்ச்சியால்,
வரலாற்றுணர்ச்சியால், மனிதமனங்களை அறியும் உணர்ச்சியால் நாவல்களை
எழுதுகிறேனோ அதே நுண்ணுணர்ச்சிகளால் அரசியலை புரிந்துகொள்ளவும்
எதிர்வினையாற்றவும் விவாதிக்கவும் முடியுமா என்று பார்க்கிறேன். ஆகவே
அவ்வப்போதுள்ள உணர்ச்சிகள் சார்ந்து இவை வெளிப்பாடு கொள்கின்றன.
அவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். தெளிவின்மையும் இருக்கலாம்.
எழுத்தாளனிடம் தருக்கத்தை ரொம்பவும் எதிர்பார்க்கக்கூடாது.
உலகம் முழுக்க எழுத்தாளர்கள் அரசியலில்
எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். தங்கள் அகத்தை எவை பாதிக்கின்றனவோ
அவற்றுக்கு மட்டும். இவையும் அத்தகையவை மட்டுமே. என்னுடைய
ஆதர்சமுன்னோடிகள் ஓ.வி.விஜயன், ஆனந்த் போன்ற மலையாள எழுத்தாளர்கள்.
படைப்பிலக்கியத்தையும் அரசியலையும் சேர்த்தே எழுதியவர்கள்.
’நாய் சந்தைக்குப் போனதுபோல’ என்பார்கள் எங்களூரில், எல்லாவற்றையும்
மோந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவது. கிட்டத்தட்ட அரசியலில் என்
ஈடுபாடு அப்படித்தான். சரி, சும்மா திரும்ப வேண்டாமே என காலைத்தூக்கி
வருகைப்பதிவுசெய்த தடங்கள் இவை.
தமிழில் நான் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள முடியாத தரப்பை முன்வைப்பவர்
ஞாநி. அரசியல் கருத்துக்களில் ஒரு வகையான படபடப்பும் அவசரமும்
அவரிடமுள்ளன, வரலாற்று விரிவில் வைத்து பார்க்கும் நோக்கு குறைவு என்பது
என் மதிப்பீடு. ஆனால் அவரது நேர்மையும் துணிச்சலும் என்னை எப்போதுமே
கவர்பவை. அவர் ஒரு தனிநபர் இயக்கம்.
அவர் குமுதம் இதழில் நாடகம் குறித்து எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே..’
என்ற கட்டுரையை என் பன்னிரண்டு வயதில் நான் வாசித்தேன். அந்த
இதழ்பக்கமும் அவரது புகைப்படமும்கூட இன்னமும் நினைவில் இருக்கின்றன.
அன்றுமுதல் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக அவரை தொடர்ந்து கூர்ந்து
வாசித்து வருகிறேன். நான் அவரது ஆராதகன் என்றி சொல்ல தயக்கமில்லை.
ஞாநிக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். வாசித்துவிட்டு அவர் எதிர்க்க நிறைய இருக்கிறது இதில்
தமிழில்
திரைப்படங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகவும் குறைவுதான். இரண்டு விதமான
காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. சினிமா புத்தகங்கள் விற்பனையில் பெரிதாக
ஒன்றும் சாதித்துவிடவில்லை. மற்றொன்று, சினிமாவைத் தெரிந்துகொள்ள
புத்தகம் தேவையில்லை.
இரண்டும் உண்மையாக இருக்கலாம். ஆனால்,
எப்போதாவது சில நல்ல புத்தககங்கள் வருவதுண்டு. திரைப்பட ஒளிப்பதிவாளர்
செழியன் எழுதிய ‘பேசும் படம்’ அந்த வகையில் ஒன்று. இதன் தலைப்பின் கீழ்
இன்னொரு விளக்கம், ‘கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்’.
திரைக்கதை - சில குறிப்புகள் என்றுதான் தொடங்குகிறது முதல் கட்டுரை. ‘ஒரு
மோசமான திரைக்கதையை, நல்ல இயக்குனரால்கூட சிறந்த திரைப்படமாக எடுக்க
முடியாது.’ என்ற அகிரா குரோசாவாவின் சொல்லோடு ஆரம்பித்து, தமிழ்த்
திரைப்படங்கள் பெரும்பாலும் எப்படி கதை சொல்கிறது? எந்த விதமான உத்தியைக்
கையாள்கின்றன? வெற்றிப்பட இயக்குனர்கள் திரைக்கதையை எப்படி
அமைக்கிறார்கள்? என்று வெற்றி பெற்ற படங்கள் முதல் தோல்வியடைந்த படங்கள்
வரை பல உதாரணங்களோடு சினிமாவின் விஸ்தீரணங்களைத் தொட்டுச் செல்கிறது
கட்டுரை.
சென்ஸாரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிலர் இது ஏ,
இது யு என்று திரைப்படங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். ஆனால்,
பெரியவர்களுக்கான திரைப்படங்களைத்தான் குழந்தைகளும் பார்க்க
வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்கான ஆரோக்கியமான சூழல்
நம்மிடையே இல்லையே. கவர்ச்சிப் பாடல் தொலைக்காட்சியில் வந்ததும் குழந்தை
இடுப்பை வளைத்து வளைத்து ஆட ஆரம்பித்துவிடுகிறது. இதை விடுத்தால்
விளையாடுவதற்கு பொம்மைத் துப்பாக்கிகளும், துரத்தி மோதுவதற்கு கார்களும்
என்று வன்முறையோடுதான் வளர்க்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும்
கவலையும் அடுத்த தலைமுறையின் மீதான அக்கறையைப் பேசுகிறது ஒரு கட்டுரை.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிதாமகன்’, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ மற்றும் ‘காதல்’ படங்களின் விமர்சனங்கள். நான்கும் வெவ்வேறு வகை.
நல்ல
வேளையாக இந்த நான்கு படத்தையும் நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். இப்போது
விமர்சனமாகப் படிக்கும்போது முதல் காட்சியிலிருந்து கடைசி வரை முழுப்
படத்தையும் பார்த்தது போல் ஒரு திருப்தி வருகிறது. கன்னத்தில்
முத்தமிட்டால் காட்சிகளைச் சொல்லும்போதே விமர்சனத்தையும் முன்வைக்கிறார்
செழியன். கதையின் நாயகன் ஒரு கதாசிரியன் எனும் விஷயம் திரைப்படத்தின்
கதைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதில் தொடங்கி வசனகர்த்தாவின்
அபத்தங்கள், அத்துமீறல்கள், இயல்பான இடங்களில் கூட அபஸ்வரமாக ஒலிக்கும்
பின்னணி இசை, கடைசிக் காட்சியில் மிக இயல்பாக இல்லாமல் தன் தாயைச்
சந்திக்கும் காட்சியில் வளர்ப்புத் தாயின் செயற்கைத்தனம், அந்த நேரத்தில்
இருபது கேள்விகள் தேவையா? என்று விமர்சனம் வளர்ந்து கொண்டே போகிறது.
‘சில்ட்ரன்
ஆஃப் ஹெவன்’ எழுதப்பட்ட விதம் வேறு வகை. முதலில் கதை. ‘நல்ல திரைப்படம்
முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறது’ என்று மீண்டும்
திரைப்படத்தை ஒரு தேர்ந்த ரசிகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. வசனங்கள்
இல்லாத காட்சிகளின் உணர்வுகளை வார்த்தைகளில் நிரப்பித் தருகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதில் ஒரு சில வரிகளை இங்கே சொல்லலாம்.
‘இயக்குனரின்
மேதைமையும், படத்தொகுப்பாளரின் ஆளுமையும் வெளிப்படும் இடங்களென
ஓட்டப்பந்தயத்தைச் சொல்லலாம். பந்தயம் துவங்கியதிலிருந்து முடியும்
வரையிலான கேமராவின் இயக்கத்தை, ஒலியை, படத் தொகுப்பை, சலிப்படையவிடாமல்
அதே நிலையில் வெகு நேரம் விறுவிறுப்புக் குறையாமல் தொகுக்க வேண்டிய
கட்டாயத்திலும், அதன் வெற்றியைக் காணமுடியும். படத்தின் இயல்பு நிலைக்கு
மாறாக மெதுவியக்கம் (slow motion) கொண்டு அலி ஓடத் துவங்குகிற போதும்
காட்சியின் வேகத்திற்கு எதிரான நுட்பத்தைக் கையாள்கிற, அந்நேரத்தில்
மூச்சிரைக்கிற சப்தத்தைப் பிரதானப்படுத்துவதன் மூலம் காட்சியின் நுட்பத்தை
மேன்மைப்படுத்துகிற விதமும் கவனிக்கத் தகுந்தது.’
‘காதல்’ திரைப்பட
விமர்சனம் இன்னொரு வகை. நம்முடைய திரைப்படங்களின் பலம் என்ன? பலவீனம்
என்ன? என்பதைப் பல்வேறு காட்சிகள் மூலம் சொல்கிறார் செழியன்.
இப்படி
காட்சிகளையும் அதன் பின்னணியையும் துல்லியமாக விவரிப்பதன் மூலமும் சாதாரண
திரைப்பட ரசிகன் கவனிக்கத் தவறும் பல விஷயங்களை நுணுக்கமாக ரசிக்க வேண்டிய
விஷயங்களையும் மிகவும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது இந்தப்
புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான கட்டுரை
‘இளையராஜா: அங்கீகரிப்பதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட கலைஞன்’.
இசையமைப்பாளராக எல்லோரும் ரசித்திருந்தாலும் செழியன் நம் முன் வைக்கும்
கேள்வி நியாயமானது.
‘மார்கழிக் குளிரில் குளிர்பதன வசதி
செய்யப்பட்ட அரங்குகளில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை.
ராகம், தாளம், முதலான அனைத்துச் சங்கதிகளும் தீர்மானிக்கப்பட்டவை.
காலங்காலமாகப் பிரதியெடுக்கும் வேலைதான் இங்கே நடக்கிறது. இப்படிப்
பிரதியெடுக்கும் சங்கீதப் பாடகனின் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும்
சிலாகிக்கிற இசை விமர்சகர்கள், உண்மையான இசை முயற்சிகளை திரைப்படத்தில்
நிகழ்த்தும் இளையராஜாவை ஏன் கண்டு கொள்வதில்லை. ஏன் விமர்சனம்
செய்வதில்லை?
இந்த இடத்தில் ழான் பால் சார்த்தர் சொன்னதைக் குறிப்பிடுகிறார் செழியன்.
‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக் கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகிற கொலைத் தண்டனை.’
ஆக,
வெறுமனே சில வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுப் போவதல்ல இந்தக் கட்டுரையின்
நோக்கம் என்பதுபோல, அடுத்தடுத்து வருகிறது இளையராஜாவின் மேதைமையைப்
பற்றிய விமர்சனங்கள். செழியன் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. இளையராஜா பாடல்களுக்கு அமைக்கும் இசையைப் பற்றியும்,
எந்தக் காட்சிக்கு எந்த வகையான வாத்தியக் கருவிகள் உபயோகிக்கிறார் என்று
தொடங்கி, பின்னணி இசையின் முக்கியத்துவம் என்று இசையாகப் பாவும் இந்தக்
கட்டுரை முடியும்போது ஒரு வாசகம், ‘தமிழ் சினிமாவின் ஒப்பனை
முகங்களுக்குப் பின்னால், ஓர் அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல்
போவது எத்தனை துரதிர்ஷ்டவசமானது!’
இசை பற்றிய விமர்சனத்துக்குச்
சற்றும் குறையாத இன்னொரு கட்டுரை, ‘ஓர் உதவி ஒளிப்பதிவாளரின்
குறிப்புகளிலிருந்து’. செழியன் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோது அவர்
கற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்து சிலவற்றை நமக்கும் சொல்கிறார். ஒரு
பாடல் காட்சி எடுப்பதற்குள் எத்தனை எத்தனை விஷயங்கள் கவனிக்க
வேண்டியிருக்கிறது!
‘அலைபாயுதே’ படத்தில் ‘ஸ்னேகிதனே...’ என்ற
பாடல் பதிவான முறையையும், அதே படத்தில் ‘யாரோ யாரோடி’ என்ற இன்னொரு
பாடலையும் பதிவாக்கப்பட்ட அனுபவங்கள். இரண்டு பாடலை எடுத்து
முடிப்பதற்குள் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்குமான கருத்து
வேறுபாடுகள், படமாக்கும்போது வானில் மேகங்கள் சூரியனை மறைக்கிறதா என்று
கவனித்துக் கொண்டிருந்தது.
தியேட்டரில் படம் பார்த்துவிட்டு
படம் எடுத்தவனை கிழிகிழியென்று கிழிக்கும் ஒருவனுக்காக ஒவ்வொரு
காட்சிக்காகவும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம்:
‘ஸ்னேகிதனே;
பாடல் காட்சி. மேகம் சூரியனை மறைக்கிறதா என்று செழியன் பார்த்துக்
கொண்டிருக்கிறார். தொலைவில் வந்து கொண்டிருந்த மேகம் சூரியனைக் கடக்கப்
போகிறது. காட்சி கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட
ஒத்திகைக்குப் பின் எடுக்கப்படும் காட்சி. செழியன், தன் தவறினால் காட்சிப்
பதிவு தடைபடுமோ என்று கவலைப்படுகிறார். அவர் நினைத்தது போலவே மேகம்
சூரியனை மறைக்கிறது. மேகத்தின் நிழல் காட்சியை மறைக்கிறது. ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம் உதவியாளர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல்
பூக்கிறார். ‘மேகம் மூடியது எனக்குத் தெரியும். அந்தப் பாடலின் கடைசி
வரியில் ‘கர்வம் அழிந்ததடி’ என்று வரும். மேகத்தின் நிழல் காட்சியை
மறைப்பதும் அந்தக் கர்வம் அழிவதுமான வார்த்தையும் அர்த்தமும் இயைந்து
போகிற அழகை உணர்ந்தேன்’ என்கிறார். மீண்டும் அந்தக் காட்சிக்காக மேகம்
சூரியனை மூட வேண்டுமே என அனைவரும் காத்திருக்கிறார்கள் வானத்தைப்
பார்த்துக் கொண்டு.
திரைப்படங்களில் ஒளிந்து கிடக்கும் கலை
நுணுக்கங்களை சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்லும் இந்தப்
புத்தகத்தில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் இன்னொரு
கட்டுரையும் உண்டு. செய்தியாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு
மத்தியில் சில செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு வக்கிரமாகவும்,
ஒரு சில எவ்வளவு நாசூக்காகவும் செய்தியைப் புரிய வைக்கின்றன என்பதை ஓர்
ஒளிப்பதிவாளராக நின்று விமர்சனம் செய்கிறார் செழியன்.
திரை
நட்சத்திரங்களுக்காகப் படம் எடுக்க வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டதைப்
பற்றிய வருத்தங்களையும் பதிவு செய்கிறார் செழியன். திரைப்படத்தின் எல்லா
விஷயங்களைப் பற்றியும் கவலையோடும் அக்கறையோடும் அணுகும் கட்டுரைகள்.
ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’ எழுதிய செழியனின் மிக முக்கியமான இன்னொரு
புத்தகம், ‘பேசும் படம்’.
பேசும் படம் (கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்) - செழியன் - காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ.135
1980-கள் இறுதியில் இணையத்தில் Usenet Newsgroups என்று ஒன்று கொடிகட்டிப்
பறக்கத் தொடங்கியது. அப்போது soc.culture.indian என்ற குழு மிகவும்
பிரபலமானது. இப்போது இணையத்தில், வலைப்பதிவுகளில் காணப்படும் அத்தனை
சண்டைகளும் அதில் அப்போதே நடந்தன. இன்று வலைப்பதிவுகளில் தென்படும்
அருமையான, அற்புதமான எழுத்துகளும் அபூர்வமாகத் தென்பட்டன.
அப்படி எழுதக்கூடிய ஒருவராக ரமேஷ் மஹாதேவன்
இருந்தார். இன்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகத் தேடிப்பார்த்தால் அவர்
எழுதியது உங்களுக்குக் கிடைக்கும். அவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாகவும்
இணையத்தில் சில இடங்களில் கிடைக்கலாம். அஜய் பால்வாயண்டீஸ்வரன் என்று அவர்
உருவாக்கிய பாத்திரம், பத்திரிகைகளில் மட்டும் கதைகளாக வந்திருந்தால்,
துப்பறியும் சாம்பு பாத்திரத்துக்கு இணையாகப் பிரபலமாகியிருக்கும்.
சென்னைக்கு திரும்பிய அவர், இப்போது SSN பொறியியல் கல்லூரியில்
பேராசிரியராக வேலை செய்கிறார். கர்நாடக இசை பற்றிய ஓர் அறிமுகப் புத்தகத்தை, A gentle introduction to Carnatic Music
என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். எளிமையாக, ராகம், தாளம், மேற்கத்திய
செவ்வியல் இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றுமே
தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில்,
எழுதப்பட்டுள்ளது. 100 பக்கத்துக்கு உள்ளாக இருக்கும் இந்தப் புத்தகம்,
Oxygen Books பதிப்பாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 100/- சென்னை இசைக் கச்சேரி சீசன் ஆரம்பமாகும் நிலையில் இதை வாங்கிப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். அடுத்து...
இந்தப் புத்தகத்தை விரைவாகத் தமிழில் கொண்டுவர விரும்புகிறோம். கர்நாடக
இசை தெரிந்த, நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தால் நல்லது.
நீங்கள் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்பு
கொள்ளுங்கள்.
Thinnai
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60701251&format=html
கு. அழகிரிசாமி
வெங்கட் சாமிநாதன்
கு.அழகிரிசாமி (1923-1970) | | |
கு.அழகிரிசாமி (1923-1970) என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார்.
அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி
நம்மில் சிலருக்கு நினைவு இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி
கூட பட்டிருக்க மாட்டார்கள். 1950 களின் ஆரம்ப வருடங்களில் நான் ஒரிஸ்ஸா
மாநிலத்தின் புர்லா என்ற அணைகட்டு முகாமில் இருந்த போது இரண்டு
புத்தகங்கள் சக்தி காரியாலயத்தார் வெளியிட்டவை, அந்தக் காலத்துக்கு மிக
அழகாக, ஆசையுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள் வெளிவந்தன. ரகுநாதன்
கதைகள், அழகிரிசாமி கதைகள் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். அப்போது
அழகிரிசாமி அப்படி ஒன்றும் பிரபலமான எழுத்தாளர் இல்லை தான். முப்பது
வயதில் அதிகம் எழுதாத, அதிகம் தெரியவராத ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு
சிறப்பான வரவேற்பு நம் வெளியீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது பற்றி
இன்று யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
தான். அவ்வளவு அழகாக செய்நேர்த்தியுடன் அக்காலத்தில் சாதாரணமாக யாருக்கும்
பிரசுரம் கிடைத்ததில்லை என்று தான் நினைக்கிறேன். அதற்கு சில
வருடங்களுக்குள் கு. அழகிரிசாமி பற்றி க.நா.சு. பேச ஆரம்பித்து விட்டார்.
அழகிரிசாமியின் 'திரிவேணி', 'ராஜா வந்தான்' கதைகளைப் பற்றி அவர்
சிறப்பித்துப் பேசியிருக்கிறார். அதிகம் அறியப்படாத, பேசப்படாதவர்களைப்
பற்றிப் பேசி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாவது சிறப்பாக எழுதுகிறவர்கள்
என்று தாம் கருதுகிறவர்களைப் பற்றி கவனத்தைத் திருப்பச் செய்திருக்கிறார்.
ஆனால், க.நா.சு வேகூட யார் என்று நினைவூட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. தான் மறந்துவிட்ட மறைந்த பெரியவர்களுக்கு சிலை எழுப்பி ஆண்டுக்கு
ஒரு முறை மாலை சார்த்தி சொற்பொழிவாற்றி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில்
கொட்டை எழுத்துத் தலைப்பை உறுதிப் படுத்திக்கொள்ளும் தர்மத்தின் வழி என்று
சொல்லத்தான் தோன்றுகிறது. ஆனாலும், சாகித்திய அகாடமியின் பதிப்புகள்,
கு.அழகிரிசாமி கதைத் தொகுப்பு ஒன்றும் இந்திய இலக்கியச் சிற்பிகள்
வரிசையில் கு.அழகிரிசாமி பற்றி ஒரு சிறிய புத்தகமும் வெளிவந்துள்ளது,
அவரது இளமைக்கால நண்பர் கி.ராஜநாராயணன் சாகித்திய அகாடமியின் ஆலோசனைக்
குழுவில் அங்கம் வகித்த காரணத்தாலும் இருக்கலாம். எத்தனையோ பேர்
என்னென்னவோ தமக்குச் செய்து கொள்கிறார்கள். ராஜநாராயணண் தம் நண்பரை நினைவு
கொண்டு செய்த காரியம் நட்புக்கும் இலக்கியத்திற்கும் செய்த சேவை என்று
சொல்லவேண்டும். கு.அழகிரிசாமி சிறு கதை எழுதியவராகவே அறியப்பட்டார். மலேயாவுக்கு
அவர் சென்று தமிழ் முரசு ஆசிரியராக பணிபுரிந்த காலம் அவர் அங்கு
அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதும் சிறு கதைக் காரராகத்தான்.
கு.அழகிரிசாமிக்கு இடைக்கால பிரபந்தங்களிலும் கம்பனிலும் இருந்த ஈடுபாடு
க.நா.சு வுக்கு தெரியும் அந்த ஈடுபாட்டுக்கும் க.நா.சு.விடம் நிறைந்த
மரியாதை இருந்தது. அது பற்றி அவர் எழுதியுமிருக்கிறார். க.நா.சு. பெயரையே
நான் திரும்பத் திரும்பச் சொல்லக் காரணம், கு.அழகிரிசாமி பெயரை அவரைத்
தவிர அவர் அளவுக்குப் பிரஸ்தாபித்து பேசியவர் வேறு யாரும் எனக்குத்
தெரியவில்லை. கு.அழகிரிசாமி பற்றி சாகித்ய அகாடமி பிரசுரத்திற்காக
எழுதியிருப்பவர் வெளி. ரங்கராஜன். நாடகங்களில் அதிக ஈர்ப்புக் கொண்டவர்.
வெளி என்ற ஒரு பத்திரிகையை நாடகத்திற்கென்றே நடத்தியவர். சாகித்திய
அகாடமியிடமிருந்து இம்மாதிரியான வாய்ப்புக்களைப் பெற்று எழுதியுள்ளவர்கள்
புத்தகங்களைப் பார்க்கும் போது பொதுப் பணித்துறையிடமிருந்து சாலை போடும்
குத்தகை பெற்றது போன்ற சமாசாரமாகத் தான் இதையும் பார்க்கத் தோன்றும்.
அப்படி நினைபெழுந்தால் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், ரங்கராஜனின்
இப்புத்தகம் விதி விலக்கானது. தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம்
செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட விதி
விலக்குகள் தான் நடைமுறைக்கு சாட்சியம் சொல்கின்றன. பெரும்பாலும் அக்காலத்தில் கூட சிறு கதைக்காராக மட்டுமே தெரிய
வந்த கு.அழகிரிசாமியின் மற்ற பரிமாணங்களைப் பற்றியும் ரங்க ராஜன் நிறைந்த
ஈடுபாட்டுடன் எழுதியிருக்கிறார். அழகிரிசாமியின் ஆளுமையின் முழுமை நம்மை
அழகிரிசாமியை வியப்புடன் எத்தகைய உயர்ந்த மனிதர் தன் குறுக்கிய கால
வாழ்க்கையை எவ்வளவு இடர்பாடுகளிடையேயும் எவ்வளவு அழகும் அன்பும் துலங்க
வாழ்ந்துள்ளார் என்று நினைக்க வைத்து விடுகிறது. இலக்கிய உலகில் உறவு
கொண்டவர்களோடும், நண்பர்களோடும், இவற்றுக்கெல்லாம் வெளியே எதிர்ப்பட்ட
எதிர்படாது தம் வழிச் சென்றவர்களோடும் சரி எத்துணை ஆதரவோடும்
அன்புணர்ச்சியோடும் நெருங்கு உணர்ந்து வாழ்ந்துள்ளார் என்பது சாதாரணமாக
எழுத்தாளர் கலைஞர் பட்டயம் சுற்றிக்கொண்டு நம்மைச் சுற்றியுள்ளோரிடம்
இன்று நாம் காணமுடியாத குணங்கள். இவையெல்லாம் அழகிரிசாமியின் தனித்வ
குணங்கள் என்ற நிச்சயத்தோடு அன்றைய கால கட்ட சூழலையும் ஒரு வேளை நாம்
காரணம் காட்டலாம். ஒரு வேளை தான். அவர் எழுதும் கதைகளும் அப்படி ஒன்றும் லக்ஷக்கணக்கில் இல்லை,
ஆயிரக் கணக்கில் கூட வாசக கூட்டத்தைச் சொக்கி மயங்க வைக்கும் குணம்
எதுவும் கொண்டதில்லை. வெகு சாதாரணம் என்று வாசகர்கள் சொல்லக்கூடும் கதைகள்
தான். ஏது சம்பவங்கள், உணர்ச்சி மிகும் கட்டங்கள், அலங்கார நடைகள்,
கவர்ச்சிமிக்க வர்ணணைகள் இப்படியான மசாலா எதுவும் அற்றது. அவர் சொன்ன
கதையைத் திருபச் சொல்வது கூட கஷ்டம். மொத்தத்தில் உப்புச் சப்பற்ற என்று
தான் சொல்லக் கூடும். எம்.டி. ராம நாதனின் அடித் தொண்டை கரகரப்பை அவர்
குரலின் மலைப்பாம்பு ஊர்தலைக் கேட்க எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
இப்படியெல்லாம் பட்டாசு வெடிகளோ, பட்டாடை பளபளப்புகளோ, அவரிடம்
இருந்ததில்லை. வெகு சாதாரண மனச் சலங்களை, சத்தம் எழுப்பாது, வெகு சாதாரண
வார்த்தைகளில் எழுப்பி மனத்தில் லேசான அதிர்வுகளை எழுப்பி விடுவார்.
அதிர்வுகள் நம் மனத்தில் தான் மெல்ல மெல்ல எழும்பித் தளும்புமே தவிர அவர்
எழுத்தில் அவை மெல்லிய அலைகளாகத்தான் இருக்கும். எப்படித் தான் எழுதினாரோ
என்று இருக்கும். மற்றவர் கைகளில் சப்பென்று போய்விடக்கூடியவை அவர்
எழுத்தில் வாசிப்பவர் மனதில் கரைசலைக் கிளப்பிவிடும். கதைகள் என அவர் அதிகம் எழுதியவருமில்லை. எழுதும் வாய்ப்புக்களும்
மன நிலையும் அவருக்கு இருந்ததில்லை. பத்திரிகையில் துணை ஆசிரியராக
இருந்தால் என்ன நடக்கும்? என்ன சாத்திய மாகும்? சக்தி, பிரசண்ட விகடன்
போன்ற பத்திரிகைகளில் இருந்த போது கட்டுரைகள் எழுதியது தான் அதிகம்.
நிறையவே எழுதியிருக்கிறார் என்று இப்போது தெரிகிறது. அவை
கவனிக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது. அதிலும் அழகிரிசாமி தன் ஆளுமையை
நன்கு பதித்துள்ளார் என்பதும் தெரிகிறது. அவற்றிலிருந்து மாதிரிக்கு ஒன்றை
சற்று விரிவாகவே தரவேண்டும். சென்னையில் காலை நேரத்தில் கேட்கு இரண்டு குரல்களைப் பற்றி
எழுதுகிறார். ஒன்று மொக்கு மாவு விற்கும் ஒரு பெண். இரண்டு முள்ளங்கி
விற்கும் இரண்டு சிறுவர்கள்: அவரே சொல்லட்டும். "ஏக காலத்தில் 'முள்ளங்கி, முள்ளங்கி' என்று கூவுவது காலைக்
காற்றில் கலந்து சிறிது தூரம் பிரயாணம் செய்து, நான் குடியிருந்த வீட்டின்
மாடியில் ஏறி, ஜன்னல் வழியாக ஏதோ தெய்வ சுரங்களை மிழற்றிக்கொண்டும் என்
அறைக்கு வரும். மற்றொரு குரல் தெய்வக் குரலே தான். ..இந்தப் பெண் மொக்கு
மாவு என்று கூவும்போது அந்தச் சொல்லில் ஒரு எழுத்துக்கும் மற்றொரு
எழுத்துக்கும் இடையில் எத்தனையோ அழகான இனிய அசைவுகள். விம்மியும்
மெலிந்தும் ஒலி வெளிப்படும்போது எத்தனையோ நெளிவுகள், அதை விவரித்து புரிய
வைக்கமுடியாது. எந்த சங்கீத வித்வானாலும் அது போல கூவிக் காட்ட
முடியாது........ஏதோ ஒரு பறவை தன் மழலை முற்றாத குரலில் தாயைப் பார்த்துக்
கூவுவது போல இவள் குரல் கேட்கும்......இவளை வெகு நாட்கள் வரை நான்
பார்க்கவில்லை. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து இவள் வருகைக்காக நான்
தெருவோரத்தில் வந்து நின்றுகொண்டேன். ...அவளும் வழக்கம் போல வந்தாள்.
சுமார் 25 வயதுடைய பெண். அழுக்கு புடவை. சிக்கு விழுந்த கூந்தல். மொக்கு
மாவைத் துளாவியதால் வெள்ளைப் பொடி அப்பிய விரல்கள். குரலுக்கேற்ற அழகியல்ல
அவள். அத்துடன் அருகில் நின்று கேட்கும்போது, அந்த குரலில் இருந்த சுகம்
முக்கால் வாசி மறைந்தும் விட்டது. அந்தக் குரல் காற்றோடு கலந்து, காற்றோடு
அசைந்து, எங்கெங்கோ முட்டி, எத்தனையோ கரகரப்புகளை உதறிவிட்டு, அனேக
எதிரொலிகளைப் பின்னணி இசைகளாக ஏற்றுக் கொண்டு என் அறையில் புகும்போது தான்
இனிமையாக இருந்தது. காற்றில் கலந்த ஒலியின் மகிமை இது. இப்படி நீள்கிறது அந்தக் கட்டுரை. ஓசைகளையும் சங்கீதம் பற்றியும்
கவிதை பற்றியும் எழுதும் போது, வார்த்தைகள் குழைந்து குழைந்து வடிந்தோடி
வருகிறது அவர் பேனாவிலிருந்து என்று தான் தோன்றுகிறது. மேலே நான்
முழுவதையும் கொடுக்கவில்லை. முன்னும் பின்னும் மட்டுமல்ல, இடையிலும்
வெட்டியிருக்கிறேன். அழகிரிசாமியின் கட்டுரைகள் அத்தனையும் நமக்குக்
கிடைக்கச் செய்யவேண்டும்.
சங்கீதம் பற்றிய அவர் உணர்வுகள் அவராகவே கேட்டுக் கேட்டு
தன்க்குள் பக்குவப் படுத்திக்கொண்டவை. அது அவரதே. இதில் அவருக்கேற்ற சகா
ராஜநாராயணன். இன்னொன்று சகாயம் பக்கத்திலேயே விளாத்திகுளம் சுவாமிகளின்
காருகுருச்சி அருணாசலத்தின் ஸ்பிரசன்னங்கள். ஒரு இடத்தில் அவர் மிக
காரசாரமாக சங்கீத பண்டித உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருப்பதை
மறுக்கிறார். மேளகர்த்தா ராகங்கள் 32 தான். அதற்கான தன் வாதங்களையும்
வைக்கிறார். "காந்தாரத்துக்கு சதுஸ்ருதி ரிஷபத்தையும், நிஷாதத்துக்கு
சதுஸ்ருதி தைவதத்தையும் சேர்த்துக்கொண்டு கனகாங்கி என்று ஒரு ராகத்தை
உண்டாக்கினார். ரிஷபம் எப்படி காந்தாரம் ஆகும்?" என்று கேட்கிறார்.
மற்றவர்களைப் போல இதில் ஜாதி புகுவதில்லை. புகுவது வாதம். இப்படி தான் ரசனையும், தன் அனுபவமும் தான் வழிகாட்டலாகக் கொண்டு
பல கேள்விகளை, சமூகம் ஏற்றுக் கொள்ளாத கேள்விகளைக் கேட்கிறார். காரைக்கால்
அம்மையாரையும் திருவாசகத்தையும் கவிதையாக ஏற்றுக்கொள்ளும் அவர் பெரிய
புராணத்தையும் திருவிளையாடற்புராணத்தையும் ஏற்பதில்லை. கம்ப ராமாயணத்தை
கவிதையாக ஏற்கும் அவர் மனதுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் கவிதையாகப்
படுவதில்லை. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்கு முறையான பதிப்பு
கொணர்வதில் மனம் செல்கிறது அவருக்கு. தனிப்பாடல்களில் அவருக்குப்
பிடித்தவற்றைத் தொகுக்கிறார். அழிந்து வரும் பதங்களைத் தேடி அலைகிறார்.
தஞ்சையைச் சேர்ந்த தாசி ஒருவரிடமிருந்து பழம் பரதப் பதங்களைச் சேர்த்து
புதுமைப் பித்தனுக்கு அனுப்புகிறார். கீர்த்தனங்களை விட பதங்களில்
ராகத்தின் பாவங்கள் தோய்ந்திருக்கப் பார்க்க முடிகிறது என்கிறார். இப்படி
அவர் தனக்கு எனச் சேர்த்துக்கொண்ட ரசனையும் பார்வையும் அவரதே. அவற்றில்
அனேகம் வழமைக்கு மாறானவை. Unorthodox and unconventional. ராஜநாரயணனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அவர் எழுதிய கடிதங்கள்
பிரசுரமாயுள்ளன. எதிர்கால பிரசுரம் கருதி எழுதும் முன்னதாகவே மனத்துக்குள்
வெட்டி, பட்டி வைத்து தைத்து ஜாக்கிரதையாக தயாரிக்கப் பட்ட அலங்காரங்கள்
அல்ல அவை. தான் விரும்பும் தோற்றத்தை தரவல்லதாக அல்ல, உண்மையான
அழகிரிசாமியின் மனக்குரலைப் பதிவு செய்தவை அவை. அவர் தன் வாழ்க்கையில்
சந்திக்கும் ஏமாற்றங்களையும், போராட்டங்களையும் பற்றி நாம் அறிவது அவர்
தம் நண்பர்களுக்கு முக்கியமாக ராஜநாராயணனுக்கு எழுதியுள்ள
கடிதங்களிலிருந்து தான். வேறு எங்கும் அவர் சொல்லிக்கொள்வதில்லை. அவரை
அறிந்தவர்கள் அவர் கஷ்டங்களை அறிந்தவர்கள் இல்லை. அவர் கதைகள், கட்டுரைகள்
அதைச் சொன்னதில்லை. எவ்வளவுதான் கஷ்டங்கள் அவரை வருத்தினாலும்,
மகிழ்ச்சியாகவே, அவர் தன்னைக் காட்டிக் கொண்டார். அவ்வளவுக்கிடையிலும்
அவர் தன் ரசனைக்கேற்ப வாழ்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவரது ரசனைக்கு
"தூங்கு மூஞ்சி மாமா" என்று எழுப்பும் குழந்தைகள் இருந்தால் போதும்.
"மொக்கு மாவு" என்று கூவும் அழகே இல்லாத ஒரு அழுக்குப் புடைவைப் பெண்ணின்
தெருக் கூவல் முட்டி மோதி அவர் அறைக்கு வரும்போது அது உதய கன்னியின்
கீதமாக மாறிவிடும். கிட்டப்பாவின் எவரனி ஆயிரம் தடவை கேட்டாலும்
அலுப்பதில்லை. பன்னிரண்டு மைல் நடந்து விடிய விடிய ராஜரத்தினத்தின்
தோடியும், திருவீழி மிழலையின் 'ஸ்வர ராக ஸ¤தா" கேட்க இருக்கும் போது
எத்தனை வருத்தும் வாழ்க்கையும் இனிமையாகி விடுகிறது. கொஞ்சம் சம்பளம்
கிடைத்தாலும் போதும், தேவியும் டி.கே.சி. யும் இருக்கும் போது அவர்கள்
கவிதை பற்றி அளவளாவ இருக்கும் போது என்று எண்ணத் தோன்றுகிறது.
முக்கூடற்பள்ளு வைத் தேர்ந்தெடுப்பவருக்கும் விறலிவிடு தூதுவும்
விலக்கல்ல. ஆனந்த குமாரசுவாமியும் அன்னி பெஸண்ட் அம்மையாரும் விலக்கல்ல. ரசனையும் இன்பமும் வசதிகளினால் வருவதல்ல. அவரது கதைகள்,
கட்டுரைகள், கடிதங்கள், அவர் தேர்வு செய்து கொண்ட இடைக்கால பிரபந்த
இலக்கியங்கள், சங்கீதம் எல்லாம் சேர்ந்து தான் அழகிரிசாமி. எளிமையிலும்
வாழ்வை ரசித்து மகிழும் ஆளுமை அவரது.
கு. அழகிரிசாமி (வெளி. ரங்கராஜன்) சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, சென்னை-18:123 பக்கங்கள் விலை ரூ 25.
பதினைந்து
ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால்
வாய்த் தகராறில் ஆரம்பித்து அது கைத்தகராறில் முடிவதைப்
பார்த்திருக்கிறேன். அவர் இசையமைக்கிற எல்லா பாடல்களுமே தேவகானமாக
இருந்தது. இப்பவும் இருக்கிறதுதான்.ஒரு சபையில் மிகவும் துணிவான
ஆசாமிகள்தான் அவரைத் தாக்கிப் பேச முடிந்தது. கொஞ்சம் இளப்பமான ஆசாமியாக
இருந்தால் சுற்றியிருப்பவர்கள் அவரை அடித்தே போட்டுவிடுவார்கள். நேற்று
என் மகனைத் தேடி வந்திருந்த அவனுடைய நண்பர்கள் சம்பாஷணையின் போது,
"இளையராஜாகிட்ட புதுசா ரிசர்ச்சே இல்லடா.. அதே டண்டணக்குத்தான்...'' என்று
பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர்களுக்கு இளையராஜாவை மட்டம்
தட்ட வேண்டும் என்ற நோக்கமோ ஆர்வமோ இல்லை. மிகவும் இயல்பான விமர்சனமாக
இருந்தது. இளையராஜா வந்த போது விஸ்வநாதனை அப்படிச் சொல்வதைக்
கேட்டிருந்ததால் இப்போது ரஹ்மான் வந்துவிட்ட பின்பு இளையராஜாவைச்
சொல்வதையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டேன்.
இந்த மாதிரி காலம் தோறும் தலைமுறைகளுக்கிடையை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. வால்காவில் இருந்து கங்கை வரை நூலில், ஆதிநாளில் ஒருவன் ஏர் ஓட்டி உழவு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலையைப் பற்றி எழுதியிருப்பார். "நிலத்தைக் கீறுவது மாபெரும் பாவம். தானாக உற்பத்தியாகும் உணவை மட்டுமே புசிக்க வேண்டும். நாமாக பயிர் செய்ய நினைப்பது இறைவனுக்கு எதிரான செயல்'' என்பதாகப் பேசுவார் ஒரு பெரியவர்.எல்லா காலத்திலும் மாற்றத்துக்குத் தடையும் எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது.
இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயரும் இந்தத் தலைமுறை இடைவெளியை உணர்த்தும் உன்னதமான நாவல்.தன் மகன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. மகன் அர்க்காதி தன் நண்பன் பஸாரவ் -வுடன் வந்து இறங்குகிறான். சென்ற தலைமுறை ஆசாமிக்கும் பஸாரவ்வுக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் பட்டு வராமல் போவது ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் வனத்தில் ஓடும் ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை ரசிக்கும் வினோதமான ஆர்வங்கள் பஸாரவ்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.அவனுடைய சட்டை, தலைமுடி, பேச்சு எதையுமே அர்க்காதியின் பெரியப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்குமான வேற்றுமை நாவல் முழுவதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
யாருக்கு சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அர்க்காதியின் பெரியப்பா முதலில் சுடுகிறார். அவருடைய குறி தவறிவிடுகிறது. அடுத்தது பஸாரவ். மிகச் சரியாகச் சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான். இப்போது பஸாரவ்வை எதிர்க்கொள்வதற்கு அர்க்காதியின் பெரியப்பாவுக்குச் சங்கடமாக இருக்கிறது.
இதனிடையே பஸாரவ் மீது காதல் கொள்ளும் பெண் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸôரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.அதுதான் பஸாரவ். "இந்த நாவலின் பஸாரவ் பாத்திரத்தை உருவாக்குவதற்காக நான் என்னிடம் இருந்த அத்தனை வண்ணங்களையும் இழந்துவிட்டேன்' என்று இவான் துர்கனேவ் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இயந்திர யுகம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலை கொள்ளாத அலைபாயும் மனத் தன்மை நாவலின் பின்னணிக் களமாக இருப்பதை உணர முடியும். அன்றைய இளைஞர்களுக்குள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த இஸங்களின் ஆதிக்கத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. அதன் காரணமாகவே நாவல் ஒரு நூற்றாண்டின் மனச்சித்திரத்தை உருவாக்கும் தரத்தோடும் மிளிர்கிறது. பூ. சோமசுந்தரத்தின் மிக நேர்த்தியான மொழி பெயர்ப்பு நம்மை நாவலோடு கட்டிப் போட்டுவிடுகிறது.தலைமுறைகள் கடந்தும் தலைமுறை இடைவெளியை அலசும் இந்த நாவல் சிலாகிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதன் ரகசியமும் அந்தத் தலைமுறை இடைவெளியில்தான் ஒளிந்திருக்கிறது. தந்தையரும் தனயரும் | இவான் துர்கனேவ் | சந்தியா பதிப்பகம், | 57, 53-வது தெரு,9-வது அவென்யூ, | அசோக் நகர், | சென்னை- ௮௩ | ரூ. 100
சாதாரணமாக
அலுவலகங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கலாம். இரண்டு பேருக்கு
மனஸ்தாபம் என்றால் அதை எரியவிட்டுக் குளிர் காய்ந்து ஆதாயம் தேடும்
மனிதர்கள் இருப்பார்கள். இரண்டு கிராமங்களுக்கு, இரண்டு மனித இனங்களுக்கு,
இரண்டு நாடுகளுக்கு என்று இதை வளர்த்துக் கொண்டே போகலாம். பிரச்சினை
ஏற்படும் தளத்துக்கு ஏற்ப ஆதாயமும் பிரச்சினையை எரியவிடும் போக்கும்
பிரம்மாண்டமாக இருக்கிறது.
உதாரணத்துக்கு
ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு சீக்கியர்களுக்கும் இந்திரா காந்திக்கும்
ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இந்திராகாந்தி கொல்லப்படுகிறார்.
சீக்கியர்கள் எண்ணிறந்த பாதிப்புகளுக்கும் விசாரணை என்ற பெயரில்
சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள்.
சிங்களர்களின்
கொடுமைகளுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் அமைதி ஏற்படுத்த விரைந்த இந்திய
ராணுவமே இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகளானார்கள். ராஜீவ் காந்தி
படுகொலையில் வந்து முடிகிறது. இப்போது ஒரு லட்சம் தமிழர்கள் வரை
பலியாகியிருக்கிறார்கள். இதெல்லாம் நேரடியான ஒற்றைப்படையான நமது
பார்வைகள். இந்தப் பிரச்சினைகளை எரியவிட்டுக் குளிர் காய்கிறவர்கள் யார்
என்பது அதிர்ச்சியூட்டும் திகில் கதைக்கு ஒப்பானதாக இருக்கிறது.ஜான்
பெர்கின்ஸ் எழுதியுள்ள "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"
என்ற நூல் நாம் மேற்படி விஷயங்களை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்று
அறிவுறுத்துகிறது. ஒரு நாட்டின் அதிபர் திடீரென்று மரணம் அடைவதில் பொதுவாக
ஆதிக்க நாடுகளுக்கு ஏற்படும் எண்ணிறந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது. ஒரு நாடு தன் நிலைத்தன்மையை, தன்னிறைவை இழக்கும்
தருணம்தான் ஆதிக்க நாடுகளுக்கு வரப்பிரசாதம். அவர்களின் கரங்களை
சுரண்டுவதற்காக நீட்டுவதற்கான அரிய சந்தர்ப்பம் அது.
பொதுவான
லத்தின் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஈகுவாடாரில், இந்தோனேஷியாவில்,
சவுதி அரேபியாவில் என அமெரிக்கக் கைகூலிகள் எப்படி செயல் பட்டார்கள்
என்பதை விவரிக்கிறது இந்த நூல். (கூலிகள் என்பதால் ரயில்வேகூலியை,
விவசாயக்கூலியையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. இவர்கள் உலகின் மிக உயர்ந்த
பி.எம்.டபிள்யு காரில் கோட் சூட் அணிந்து பிரயாணிப்பவர்கள்). ஜான்
பெர்கின்ஸ் "மெய்ன்' என்ற நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர் வேலைக்குச்
சேருகிறார். இவருடைய திடமான மனமும் உடற்கட்டும் இவருக்கு நிறைய சலுகைகளை
வாரி வழங்குகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுகள். ஒரு பெண்மணி வந்து
சந்திக்கிறார். அவருடைய முதல் பேச்சே ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது
என்கிறது. அவர்கள் சொல்லும் நாட்டுக்கு உடனடியாக பயணிக்க வேண்டும். அங்கே
நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை வேகமாக உள்வாங்கிக் கொள்ள
வேண்டும். என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, யாருக்கு செல்வாக்கு அதிகம்?,
எந்த மாதிரியான ஆவேசமான சூழல் நிலவுகிறது? எந்த விஷயத்தைத் தொட்டால்
மனிதர்கள் செண்டிமென்ட்டாக பாதிக்கப்படுவார்கள்? என்றெல்லாம் தகவல் தர
வேண்டும். இது முதல் கட்டம். (இரண்டாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும்.
உதாரணத்துக்கு விநாயகர் ஊர்வலம் போனால் மக்கள் கலவரத்துக்குத் தயாராக
இருப்பார்கள் என்றால் அங்கு கலவரத்தை வெடிக்க வைக்க வேண்டும்..
சீக்கியர்களை உசுப்பிவிட்டு இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டும்) . அமெரிக்க
உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நேரடியாக இன்னொரு நாட்டில் தனது ஆட்களை இறக்குமதி
செய்து பணத்தை அனுப்பிக் காரியம் சாதிக்க முடியாது என்பதால் மெய்ன் போல
பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக வேறு நாடுகளுக்குள் இறங்குகின்றன. அது
கட்டடம் கட்டும் நிறுவனமாக இருக்கலாம். செல் போன் நிறுவனமாக இருக்கலாம்.
மெயின் நிறுவனத்தின் மெய்ன் பிஸினஸ் நாட்டைச் சுரண்டுவது... பிரச்சினை
ஏற்படுத்துவது... சைடு பிசினஸ்தான் கட்டடம் கட்டுவது. ஜான் பெர்கின்ஸுக்கு
இந்த வேலை மிகவும் பிடிக்கிறது. வேகமாக காரியங்களைச் சாதிக்கிறார். பதவி
உயர்வுகள்.. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் டைரக்டருக்கு நிகரான
சம்பளமே அவருக்கு வழங்கத் தயாராகிறது. ஈகுவடாரிஸ் அணைகள் கட்டி, எண்ணெய்
வளத்தைச் சுரண்டி, அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின்
வாழ்க்கைத் தரத்தையே பாழாக்கி, இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியை
சின்னா பின்னமாக்கி, அந் நாட்டு அதிபரைக் கொன்று.. என இவர் விவரித்துக்
கொண்டே போகிறார். நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. பக்கத்தில் "டயம்"
என்ன என்று கேட்டால் கூட ஏதாவது அதில் உள் நோக்கம் இருக்குமா?' என்று அஞ்ச
வேண்டியதாக இருக்கிறது. 2001 செப்டம்பர் பதினோரம் தேதி இரட்டைக் கோபுரமும்
பென்டகன் நிறுவனமும் தாக்கப்பட்டன. அத்தனை பாதுகாப்புகள் நிறைந்த
அமெரிக்காவிலேயே பின்லேடன் உள்ளே நுழைந்துவிட்டானே என்று ஆச்சர்யப்படுவது
மேலே குறிப்பிட்டபடி இந்த விஷயத்தை நேரடியாக அணுகுவது. பெர்கின்ஸ் தரும்
குறிப்புகளைப் பாருங்கள்.. "ஜார்ஜ்
எச். டபிள்யூ புஷ் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக 1971 லிருந்து 1977 வரை
பணியாற்றிய காலத்திலும் 76 முதல் 77 வரை சி.ஐ.ஏ.வின் தலைவராகவும்
பணியாற்றிய போதும் பின்லேடன் குடும்பத்தினருக்கும் புஷ்
குடும்பத்தினருக்கும் உறவுகள் வேர்விட்டு வளர்ந்தன. கடந்த 20 ஆண்டுகளாக
வணிக, அரசியல் உறவாக அது நீடித்து வருகிறது. செப்டம்பர் பதினொன்றாம் தேதி
தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் மற்றும் பணம் படைத்த
சவுதி அரேபியர்கள் அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த விமானங்களைப் பறக்க அனுமதித்து யார் என்று இதுவரை
தெரியவில்லை.''இப்படி உலகத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப்
பின்னணியில் பதுங்கியிருக்கும் மற்றொரு அதிர்ச்சியை நூல் முழுக்கச்
சொல்லிக் கொண்டே போகிறார் பெர்கின்ஸ்.
தான்
செய்யும் தொழில் மீது அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. எப்படி ஒரு
பெண்ணின் மூலம் இந்தத் தொழிலில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தேனோ அதே
போல் இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் இந்த இழி செயலைப் புரிந்து கொண்டேன்
என்கிறார். எந்த கணத்தில் அவர் அதை உணர்ந்தாரோ அப்போது முதலே அவருடைய
நிறுவனத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பும் ஆபத்தும் வரும் என்பது
புரிந்து போகிறது. தனது உயிருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும் என்று
தெரிந்து கொள்கிறார். நிறுவனமோ அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது.
"நீங்கள் நமது நிறுவனத்துக்கு எதிரான கருத்துத் தொனிக்கும் கட்டுரையை
எழுதியிருப்பதாக அறிகிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு
இன்னும் சலுகைகளும், பதவிகளும் காத்திருக்கின்றன'' என்று எலிக்கு மசால்
வடை காட்டி அழைத்துப் பார்க்கிறார்கள். அதிலே மிரட்டலும்
ஒளிந்திருக்கிறது. மறுத்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள் என்று
தெரிந்து போகிறது. சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வருகிறார். அவருக்குத்
தான் செய்யும் தொழில் விபசாரத்துக்கு ஒப்பான தொழிலாக கேவலமாகப்படுகிறது.
ஆனாலும் வேறுவழியில்லை.
ஆப்ரிக்காவில் தம் செயலால் சுரண்டப்பட்ட பகுதிகளைப் பார்க்கிறார்.அவருடைய நடையிலேயே அப்படியே தருகிறேன்...
"கடலிலிருந்து
ஒரு கணம் பார்வையைத் திருப்பியபோது ஆப்ரிக்க இல்லங்களிலிருந்து
பிய்த்தெடுக்கப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட சுவர்கள் கண்ணில் பட்டன. அதைக்
காணச் சகிக்காமல் அப்பால் திரும்பியபோது தரையில் கிடந்த ஒரு பருமனான
தடியைக் கண்டேன். பாய்ந்து அதை எடுத்துக் கொண்டு கல் சுவர்களை அதனால்
விளாசத் தொடங்கினேன். உடலில் உள்ள சக்தியெல்லாம் வற்றிப் போகும் வரை
சுவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தேன். பின்பு புல்லில் விழுந்து
உயரத்தில் மேகங்கள் நகர்வதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்ன செய்ய
வேண்டுமென்று எனக்குப் புரிந்துவிட்டது. இனி பழைய வாழ்க்கைக்குத்
திரும்பிச் சென்றால் அவ்வளவுதான். ஒழிந்தே போக வேண்டியதுதான். சம்பள
உயர்வுகளும், சலுகைகளும் லாபங்களும் கட்டிப் போட்டுவிடும். பணியில்
நீடிக்க, நீடிக்க வெளியேறுவது மென்மேலும் கடினமாகிவிடும்.
அடிமையாகிவிடுவேன். தப்பி ஓடிவிட வேண்டும்... இரண்டு நாள் கழித்து பாஸ்டன்
திரும்பினேன். 1980 ஏப்ரல் 1 அன்று பால் பிரிட்டியின் அலுவலகத்துக்குச்
சென்று வேலையை ராஜினாமா செய்தேன்.''ராஜினாமா செய்த பிறகு
பெர்கின்ஸஸுக்குத் தொடர்ந்த மிரட்டல்களும் அதன் பின்பு இந்த நூல்
பதிப்பிக்கப்பட்டு வெளியானதும் துப்பறியும் நாவலுக்குரிய இன்னொரு
பாகம்.இரா. முருகவேள் சுவாரஸ்யமான காவிய நடையில் இதை மொழி
பெயர்த்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் சக்கை போடு
போட்டுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பெயர்ப்பு நூல்.நாமிருக்கும் உலகம்
எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒப்பற்ற நூல்.
பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ் தமிழில்:இரா. முருகவேள்: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளி பாளையம் (வடக்கு), கோயமுத்தூர்- 641 015. sivavitiyal@yahoo.co.inphone: 0422 - 25776772
கீரனூர் ஜாகிர்ராஜவின் மூன்றாவது நாவலான ’துருக்கித் தொப்பி’ ஒரு அச்சு அசலான கிராமத்துத் தமிழ் முஸ்லீம் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. தனது முந்தைய நாவல்களான மீன்காரத் தெரு, கருத்த லெப்பை இரண்டிலும் தன் சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்கள், முரண்கள் இவற்றை ஒருவித உக்கிரத்துடன் பதிவு செய்த ஜாகிர்ராஜா இந்த நாவலில் சற்று விசாலமாக ’எட்டுக்கல் பதிச்ச வீடு’ என்னும் பாரம்பரியப் பெருமைமிக்க முஸ்லீம் குடும்பத்தையும் அதன் படிப்படியான வீழ்ச்சியையும் கதை நிகழும் அந்த காலகட்டத்தின் அரசியல் பின்புலம் சார்ந்து, படிப்பவர்கள் மனதில் ஒரு ஈரானியப் படத்தை பார்த்த அனுபவத்தைத் தருகிறார்.
கலை உணர்வும், கேளிக்கை நாட்டமும் கொண்ட கே.பி.ஷே, ஆளுமைமிக்க அவர் மனைவி பட்டம்மாள், அரசியல் ஆர்வத்தோடு அலையும் மகன் அத்தாவுல்லா, ஆசாபாசங்களை மறைக்கத் தெரியாத மருமகள் நூர்ஜஹான், சுதந்திர மனப்பான்மையுள்ள பேரன் ரஹமத்துல்லா, சம்பந்தி குட்டிலெவை என்று நாவல் நெடுகிலும் வித்தியாசமான பாத்திரங்கள்.
நூர்ஜகானுக்கும் பட்டம்மாளுக்கும் நடக்கிற போராட்டம் காலங்காலமாக குடும்ப அமைப்புகளுக்குள் நடைபெறும் மாமியார் மருமகள் அரசியலை மட்டுமல்ல, பெண் சுதந்திரத்தின் வெறொரு பரிமாணத்திற்குள்ளும் நம்மைக் கொண்டு செல்கிறது. ரஹமத்துல்லாவின் மன உலகம் விசித்திரமானது. அல்லாவைத் தொழும் மரபில் வந்தவன் அநாயசமாக ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் நுழைந்து இயேசு கிறிஸ்துவுடன் உரையாடுவது கவித்துவமான இடமாக இருக்கிறது. அத்தை மகளின் மரணத்தின்போது அவனுள் பொங்கி எழும் நெகிழ்வான மனநிலைகள், உடன் பிறந்த சகோதரன் மீது காட்டுகின்ற வன்மம், பெற்றோரின் அடக்குமுறைகளை எதிர்கொள்கிற துணிச்சல், அன்புக்கு எங்கி அலையும் தருணங்கள் என்று பல நிலைகளை இந்த நாவல் படிப்பவர்களின் கவனக் குவிப்புள்ளாக்கி இருக்கிறது.
இஸ்லாமியர் என்றாலே தொழுகை, பிரியாணி, வெளிநாட்டு சம்பாத்தியம், தீவிரவாத ஒத்துழைப்பு என்பதாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தியில் உறைந்துபோன படிமத்தை, ஜாகிர்ராஜா இந்த நாவலில் உடைத்தெறிகிறார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களுக்கும் இந்து சமூகத்திற்கும் இறைவழிபாட்டில் மட்டுமே வேற்றுமை உள்ளதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நாவலாசிரியரின் இயல்பான நடையும், தான் சார்ந்த சமூகத்தை விமர்சிக்கையில் அவருடைய பாரபட்சமற்ற கறாரான போக்கும், நாஞ்சில் நாடன் இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ’’மிகவும் சுதந்திர வேட்கை கொண்ட எதார்த்தமான கட்டுதிட்டமான எழுத்து’’ என்னும் கருத்தை மெய்ப்பிக்கிறது.
தன் முந்தைய நாவல்களுக்கு த.மு.எ.ச. மாநில விருதுகளையும், ஏலாதி இலக்கிய விருதையும், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருதையும் பெற்றிருக்கும் ஜாகிர்ராஜா, இந்த துருக்கித் தொப்பி நாவலுக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருதையும் பெற்றிருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களமும், காட்சிகளை விஷுவல் படுத்துவதற்கான வாய்ப்புகளையும் கொண்ட இந்த நாவல், தமிழில் திரைப்படமாக எடுப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. வேற்று தேசத்து வீடியோக்களில் கதை தேடிஅலையும் இளம் இயக்குனர்கள் படிக்க வேண்டிய உள் நாட்டுச் சரக்குமிக்க நாவல்களில் இதுவும் ஒன்று. ------------------------------------------------------------------------------------------------- துருக்கித் தொப்பி (நாவல்) பக்கம்: 228, விலை: ரூ125/- வெளியீடு: ’அகல்’, 342, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை-14
|
|
|
| | | |
|