Home / Books List 7

Books List 7


அப்பா தந்த அதிர்ச்சி!!



இளம்பிராயத்தைக் கிராமத்தில் கழித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படிச் சொல்வது கொஞ்சம் பழமையான உதாரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சொர்க்க வாழ்க்கையை விவரிப்பதற்கு வேறு வார்த்தையில்லை.
பிரேம் சந்த் சிறுகதைகள் என்ற இந்த சாகித்ய அகாதமி வெளியீட்டில் 8 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய மிகச் சிறந்த கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அவருடைய பிரபலமான சிறுகதைகள் பட்டியலில் இதில் உள்ள மூன்று கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமம் ஒன்றில் பிறந்த இவர் இந்தியிலும் உருதிலும் சேர்த்து சுமார் 300 சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.இந்த 8 கதைகளில் அடிநாதமாக ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக எல்லாக் கதையிலும் கிராமம் இருக்கிறது. அதில் ஒரு சிறுவன் இருக்கிறான்.
உண்மையும், இரக்க குணமும், விளையாட்டு குணமும் கொண்ட அவர்களில் பிரேம் சந்த் ஒளிந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்தச் சிறுவர்கள் மூலமாக அவர் தன் கடந்து போன ஞாபகங்களை மறு பிரதி எடுப்பது நன்றாகத் தெரிகிறது. அதை தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறது.. ஏனென்றால் முழு கற்பனாவாதக் கதைக்கும் பழம் நினைவுகளைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வதற்கும் தெளிவான வித்தியாசம் இருக்கிறது.


பிரேம்சந்த் கிட்டிப்புள் மீது பைத்தியமாக இருந்திருக்க வேண்டும். இந்த எல்லா கதைகளிலும் ஒரு எசிறுவன் கிட்டிப்புள் விளையாடுகிறான். போதாததற்குக் கிட்டிப்புள் என்றே ஒரு சிறுகதையும் இதில் இருக்கிறது.சிறுவயதில் மிகப் பிரமாதமாகக் கிட்டிப்புள் ஆடுகிறான் இவரைவிட வயதில் மூத்த இவருடைய கிட்டிப்புள் தோழன். அந்த விளையாட்டில் புள்ளை அடிப்பதில்தான் சுவாரஸ்யம். எதிரில் நின்று அதைப் பிடிப்பதில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. பிடிப்பது அத்தனை எளிதானதும் இல்லை. ஆனால் பிரேம் சந்துக்கு கிட்டிப்புள் அடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிராளி தோற்பதாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் பிரேம் சந்த் தன்னை வீட்டில் திட்டுவார்கள் கிளம்புறேன்.. என்று நழுவப் பார்க்கிறார். எதிராளி விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் அழ ஆரம்பிக்கிறார்.விளையாட்டில் போட்டி போட முடியாமல் அழுவது கேவலமான விஷயம்தான். ஆனால் பிரேம் சந்த்துக்கு வேறு வழி தெரியவில்லை. அழுது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.


அப்பாவின் வேலை நிமித்தம் ஊரை விட்டுச் சென்று விடும் அவர், பின்னாளில் பெரும் பதவியோடு அந்த ஊருக்கு வருகிறார். அன்று தன்னை விளையாட்டில்அழ வைத்த அந்தத் தோழனை அழைத்து இப்போது கிட்டிப்புள் ஆட ச் சொல்கிறார். காலம் அவனை வயதால் மூத்தவனாகவே வைத்திருக்கிறதே தவிர வறுமையால் இறக்கி வைத்திருக்கிறது. ஐயா அப்போது ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான் அவன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தவிர்க்கிறான். கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் ஆட்டம் தொடங்குகிறது. புள், கிட்டியில் பட்டாலும் "இல்லை அது ஏதோ கல்லில் பட்டு சப்தம் கேட்கிறது' என்பது போல அவனாகவே தோற்றுப் போகிறான். அவன் வேண்டுமென்றே தோற்றது தெரிந்ததும் பிரேம் சந்த் மிகவும் வருந்துகிறார். அவன் தோற்றதன் மூலம் தன்னை வெற்றி கொண்டு விட்டான் என்று முடிகிறது கதை.


கிட்டிப்புள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லா கதைகளிலும் தெரிகிறது. அண்ணாச்சி என்ற அவருடைய புகழ் பெற்ற கதை இதில் இடம் பெற்றிருக்கிறது. அண்ணன், தம்பி இருவரும் ஒரு அறை எடுத்துத் தங்கிப் படிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணன் தினமும் தம்பிக்கு அறிவுரை சொன்னபடியே இருக்கிறான். படிப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை. வரலாற்றில் ஒரே மாதிரி பெயர்கள் பல இருக்கும். பல அரசர்களுக்குப் பெயர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ ஹென்றி ஓன்று, ஹென்றி இரண்டு என்றெல்லாம் பெயர் வைத்திருப்பார்கள் .. கணக்கு அத்தனை சுலபமானதல்ல... எந்த நாடு எங்கே இருக்கிறது என்பதை மனப்பாடம் செய்வது கஷ்டமானது ... இப்படியெல்லாம் சொல்கிறான். ஆனால் அந்த ஆண்டு அண்ணன் பெயில் ஆகிறான். தம்பி பாஸ்.ஒரு தடவை பாஸ் ஆகிவிடுவது சுலபம். இதை வைத்துக் கொண்டு மனப்பால் குடிக்காதே.. எப்போது பார்த்தாலும் கிட்டிப்புள் ஆடுவதை நிறுத்து என்று அறிவுரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அடுத்த ஆண்டும் அண்ணன் தேர்ச்சி பெற முடியவில்லை. விளையாட்டுத் தம்பி பாஸ் ஆகிறான். இப்போதும் அண்ணன் அறிவுரை சொல்கிறான். நான் அறிவுரை சொல்வது உனக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் அப்பா நமக்காக பணம் அனுப்பிப் படிக்கவைக்கிறார். நாம் பொறுப்பில்லாமல் இருப்பது சரியா என்கிறான். அண்ணன் தொனி மாறுகிறது. அண்ணன் மீண்டும் பின் தங்குகிறான். இறுதியில் பள்ளிப் படிப்பை விட அனுபவப் படிப்புதான் முக்கியம் என்கிறான் அண்ணன். மிக அருமையான உரையாடல் மூலம் நகர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கதையின் முரண் முடிச்சு.. வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை என நாம் நினைப்பது கவிழ்த்து விடுவதும் அலட்சியமாக இருந்தவன் முன்னேறிச் செல்வதும் மட்டுமல்ல. சறுக்கல்கள் மூலமாக அறிவுரையின் தொனியில் ஏற்படும் மாற்றமும்தான்.


வீட்டு நாய்கள் எஜமானர்கள் முன்னால் எடுத்துக் கொள்ளும் உரிமையும் தைரியமும் அவர்களை விட்டுப் பிரிந்து விட்டபோது பலவீனமாகிவிடுவதை, ஒரு விசுவாசமான ஊழியனின் மனப்பாங்குக்கு ஒப்பிடுகிற கஜாகி சிறுகதை மனதைத் தொடுகிறது.


ராம லீலா சிறுகதை... அந்தக் காலத்திலும் ஊழலுக்கான அம்சங்கள் இருந்ததைச் சொல்லும் ஒரு ஆவணம். ஊரே பல் இளிக்கும் கணிகையிடம் தன் தந்தை கம்பீரமாக நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கும் சிறுவனின் தலையில் இடி விழும் அந்தக் காட்சி சிறுவனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி வேதனையானது. போலீஸ் வேலை பார்க்கும் சிறுவனின் தந்தை எந்த விஷயத்தையும் மிடுக்குடன் எதிர் கொள்பவர். ஆனால் அந்தக் கணிகை, திருவிழாவில் அவரை வருடிச் செல்லும் போது அசட்டுத்தனமாக சிரிப்பது அந்தச் சிறுவனுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. வறிய பிச்சைக்காரர்களுக்குக் காசு தருவதற்கு கண்டிப்பு காட்டும் அவர், அந்தப் பெண்ணுக்குப் பளிச்சென்று 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்... இதில் உள்ள எல்லா கதைகளும் சிறுவர்களின் பார்வையில் இருந்து எழுதப்பட்டிருப்பது வியப்பான ஒற்றுமை. கதையின் எளிமையும், அது தரும் மன அதிர்வுகளும் எதிர்ப்பார்க்க முடியாத இரண்டு துருவங்களாக இருக்கின்றன.


பிரேம்சந்த்தின் சிறந்த கதைகள்,

முதல் தொகுதி சாகத்திய அகாதமி வெளியீடு

தமிழில் : என். ஸ்ரீதரன்,சி.ஐ.டி. வளாகம்,

தரமணி,

சென்னை-

விலை: 50

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்

வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

புத்தகம் பேசுது மார்ச் 2009

நிறம்மாறும் மனம்

எனது மின்மலர் சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் பாவண்ணன்...

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழிலக்கிய உலகில் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர் தமிழ்மகன். விறுவிறுப்பான கதைகூறல்முறையும் தடையற்ற தமிழ்நடையும் இவருடைய வலிமை.
21 சிறுகதைகள் அடங்கிய மீன்மலர் தொகுப்பு, அவர் வலிமைக்குச் சான்றாக வெளிவந்திருக்கிறது. கதைகளில் அவர் கையாளும் வெவ்வேறு விதமான உத்திகள் நல்ல வாசகஅனுபவத்தை வழங்குகின்றன.

தொகுப்பில் மிகச்சிறந்த கதையாக "அம்மை" அமைந்திருக்கிறது. இக்கதையில் அசைபோடும் உத்தியை வெற்றிகரமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் தமிழ்மகன். பத்தாவது வகுப்பு தேர்வெழுதுவதற்கு முன்பாக அம்மைபோட்டு படுத்த படுக்கையானதால் பள்ளியைவிட்டு நின்றுபோன மாணவனொருவன் கல்வியை இழந்தாலும் பிற்காலத்தில் சமூகம் மதிக்கிற ஓர் கட்டட ஒப்பந்தக்காரராக வளர்ந்து நிற்கிறான். தான் படித்த அதே பள்ளியின் குடிநீர்த்தேக்கத் தொட்டியைப் பழுதுபார்க்கும் வேலை அவனைத் தேடிவருகிறது. காசோலையைத் தருவதற்கு முன்பாக ஒரு பேச்சுக்காக தலைமையாசிரியர் "நீங்களும் இங்கதான் படிச்சிங்களாமே?" என்று தொடங்குகிற உரையாடல் அவனை பழைய இளமைநாட்களைநோக்கி இழுத்துச் செல்கிறது. கதை இந்தப் புள்ளியில் ஆரம்பமாகிறது. அம்மையும் தழும்பும் பள்ளியைவிட்டு நிற்பதற்கான புறக்காரணம் மட்டுமே என்பதையும் அவன் நெஞ்சில் ஆறாத தழும்பாக நின்றுவிட்ட சம்பவமொன்றே உண்மையான காரணமென்பதையும் படிக்கப்படிக்க புரிந்துகொள்கிறோம். அவன் உள்ளூர ஆசைப்பட்ட ஒரு மாணவியையும் அவன் வகுப்பாசிரியரையும் பார்க்கக்கூடாத கோலத்தில் இணைத்துப் பார்த்ததால் உருவான தழும்பைச் சுமந்துகொண்டு அந்தப் பள்ளிக்குள் நுழைய அவன் மனம் இடம்தரவில்லை. அவன் உடலைத் தாக்கிய அம்மையைவிட அவன் மனத்தைத் தாக்கிய அம்மையின் உக்கிரம் அதிகமானது. ஆசை வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிற தன் வயசுப்பையனைவிட, தனக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியரின்மீது பிறந்த ஈடுபாடு புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர். தன் அலங்கோலத்தைப் பார்த்துவிட்ட மாணவன்மீது சட்டென ஒரு குற்றத்தைச் சுமத்தி அடிஅடியென்று அடித்து, பள்ளியைவிட்டு விரட்டுகிற ஆசிரியரின் தந்திரம் இன்னொரு புதிர். கதையின் உள்ளடக்கத்திலிருந்து எதிர்பாராத கணத்தில் மனத்தின் விசித்திரத்தன்மையைநோக்கி வாசகனைச் செலுத்துகிறது சிறுகதை.

மனத்தின் விசித்திரத்தன்மையைச் சித்திரப்படுத்துகிற இன்னொரு சிறுகதை "பழையன புகுதலும்". வீடு விற்றுத் தருகிற, கட்டித் தருகிற ஒரு தரகருக்கும் கதைசொல்லும் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்த அனுபவம் இக்கதையில் இடம்பெறுகிறது. திருமணச் செலவுக்காக பூர்வீக வீட்டை விற்கவேண்டியிருக்கிறது. வீட்டை விற்றுத் தரும் முயற்சியில் உதவுவதற்கு முன்வரும் தரகர் தானாகவே இன்னொரு திட்டத்தையும் முன்வைக்கிறார். கல்யாணச் செலவுபோக மிச்சமிருக்கும் பணத்தில் புறநகரில் வீட்டுமனையொன்றை குறைந்தவிலையில் வாங்கி புதுசாக வீடொன்றைக் கட்டி விற்றால் ஒன்றுக்கு இரண்டாக லாபம் கிடைக்குமென ஆசை காட்டுகிறார். லாபத்தை நினைத்து மனத்திலெழும் சபலம் தரகர் வார்த்தைகளை சத்தியமென்று நம்புகிறது. வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு அதில் உடன்பாடில்லை. வீட்டை விற்றுத் தந்தால் போதும், பணத்தை முதலீடு செய்யும் திட்டமெதுவும் வேண்டாம் என்று கறாராக அறிவித்துவிடுகிறது. தன் திட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்ற அளவில் தரகர் மனம் நிறம் மாறிவிடுகிறது. வீட்டை வாங்கவிருந்த நபரிடம் ஏதேதோ பொய்க்காரணங்கள் சொல்லி வரவிடாமல் தடுத்துவிட்டு, ஒன்றுமறியாத முகபாவனையோடு, முன்பணத்தோடு அவர் வரக்கூடும் என்று காத்திருக்கிற வீட்டு உறுப்பினர்களோடு தானும் இணைந்து காத்திருக்கிறார். உண்மை அம்பலமாகிற கணத்தில் கொட்டினாத்தான் தேளு, இல்லன்னா புள்ளப்பூச்சிதான் என்று சொல்லிவிட்டு செல்கிறார். உள்ளூர மனம்நிறைய நஞ்சோடும் வாய்நிறைய புன்னகைச்சொற்களோடும் இணைந்து உலவும் மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத புதிர்களாக இருக்கிறார்கள்.

மனம்நிறைய நஞ்சைச் சுமந்திருக்கும் மனிதனை அடையாளம் காட்டுகிற இன்னொரு கதை "வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி". அசாமில் சிங்கத்தைத் தேடி வருகிற குழுவைச் சேர்ந்த ஒருவன் பள்ளத்தாக்கில் தடுமாறி மயக்கநிலையில் சிங்கத்தின் குகைவாசலிலேயே விழுந்துவிடுகிறான். சிங்கம் அவனைக் காப்பாற்றுகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. உணவுக்கு ஏற்பாடு செய்கிறது. அதன் சகோதரச் சிங்கங்களும் குட்டிச் சிங்கங்களும் அவனோடு நன்கு உறாவடுகின்றன. காட்டுக்குள் வாழ்ந்த ஸ்டீபன் வழங்கிய பயிற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற சிங்கங்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கேட்டு மனிதன் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறான். சில நாட்கள் தங்கியிருந்ததில் காட்டுவிலங்குகளின் பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்கிறான் மனிதன். தான் புரிந்துகொண்டதை, உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக எடுத்துரைக்கப்போவதாக வாக்குறுதியும் அளிக்கிறான். ஆனால் வெளியேறிய மறுகணமே அவன் பேராசைமனம் விழிப்படைந்துவிடுகிறது. அடுத்த நாளே அந்தச் சிங்கங்களை வேட்டையாடி இழுத்துச் செல்ல நண்பர்களின் கூட்டத்தோடு அதே குகைவாசலைத் தேடி ஓடிவருகிறான். அவன் பேராசையை நுட்பமாக முன்னதாகவே அறிந்துகொண்ட சிங்கங்கள் குகையைவிட்டு வெளியேறிவிடுகின்றன. நெகிழ்ச்சியின் உச்சத்தில் வாக்குறுதி தருகிற மனிதன் மறுகணமே நஞ்சுள்ளவனாக மாறுவது பெரிய புதிர். வாழ்வில் ஏதோ ஒரு கணம் பண்புள்ள மனிதனை கொடிய விலங்காகவும் கொடிய விலங்கை பண்புள்ள மனிதனாகவும் தளம்மாற்றி நிறுத்திக் காட்டுகிறது. "சம்பா", "சோறியம்" ஆகிய சிறுகதைகளையும் மனிதமனத்தில் நிறைந்துள்ள நஞ்சை ஓரளவு அடையாளம் காட்டும் நல்ல கதைகளாகக் குறிப்பிடலாம்.

மனத்தின் ஆழத்தையும் அதில் நிறைந்துள்ள பலவிதமான நிறங்களையும் கண்டறிந்து பகிர்ந்துகொள்ள விழையும் தமிழ்மகனின் முனைப்பு அவருடைய மாபெரும் பலம். இந்த பலம்தான் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருக்குரிய இடத்தை வரையறுப்பதில் உதவியாக உள்ளது. பல விதமான களங்களைக் கையாள்கிற கதைகளில் ஒரேவிதமான மொழிநடையையே தமிழ்மகன் பயன்படுத்துவது ஒரு சின்ன பலவீனம். புதுமைக்காக முன்வைக்கப்படுகிற ஒரு விவாதம் அதன் இறுதிபபுள்ளிவரை நகராமல், வேறொரு மெலிதான திருப்பத்fதோடு முடிவடைந்துவிடுவது இன்னொரு பலவீனம். ( வீடு, கடவுள்தொகை). அடுத்தடுத்த தொகுப்புகளில் தமிழ்மகன் இதைத் தவிர்க்கக்கூடும் என்று நம்பலாம்.

( மீன்மலர். சிறுகதைத்தொகுப்பு. தமிழ்மகன். உயிர்மை வெளியீடு. 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம். சென்னை-18. விலை.ரூ.85)
நன்றி: தீராநதி - ஜூலை 09

 

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009
புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....

புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

பொருளடக்கம்
தனி மனிதப் பதிப்புகள்

  • ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி
  • சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்
  • தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்
  • வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்
  • தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்
  • வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்
  • வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்
  • மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்
  • தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்
  • உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்
  • பொதுக் கட்டுரைகள்
  • பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்
  • ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்
  • சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி
  • மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு
  • தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா
  • ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி
  • தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு
  • 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்
  • இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்
  • நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா
  • நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்
  • தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா
  • காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்
  • நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்
  • மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்
  • கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்
  • பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்
  • வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )
  • கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்
  • கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்
  • பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி
  • தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்
  • தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்
  • கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்
  • நிறுவனம் சார்ந்த பதிப்புகள்
  • எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்
  • பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி
  • தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்
  • சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


  • தற்போது விற்பனையில்....

    விலை : ரூ 95.00
    பக்கங்கள் : 320
    வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

    தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924
    e-mail : thamizhbooks@gmail.com

    வெந்து தணிந்த காடுகள் – இந்திரா பார்த்தசாரதி

        “…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்.  அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”

    நகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது.  ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது.  சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள்.  சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத நிலையில் தானாக மாற்றம் நிகழும் என்று குமைந்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.  மாறுதல்கள் தானாகவோ வலிந்தோ நிகழும்போது தேடியது கிடைத்துவிட்டதாய் சுகிக்கும் மனது.  எனினும் இதே சட்டத்திற்குள் நின்று விடாமல் ஒரு இடைவெளிக்கு பின் மீண்டும் சலிப்பு….தேடல் எனத் தொடரும் வாழ்வில் சிக்கித் தவிக்கும் மனங்களை பேசுகிறது இந்நாவல்.   

        “கலை ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒருவருக்கு வாழ்கையில் பொறுக்கமுடியாத சலிப்பு ஏற்படவேண்டும் .”

         “உங்களுக்கு நிஜமாகவே ஆற்றல் இருந்து அது இன்னும் ‘எக்ஸ்பிரஸ்’ ஆகலேன்னா அதுக்கு காரணம் உங்களோட இப்பொழுதைய வாழ்க்கை போதுமான அளவுக்கும் இன்னும் உங்களுக்கு ‘போர்’ அடிக்கலேன்னு தான் அர்த்தம் – இ.பா”

     
    இன்று நிறைவைக்காணும் மனது நாளையும் இதே கோட்டிலேயே இருந்துவிடும் என்று எந்த நிச்சயமுமில்லை எனினும் மனதின் போக்கிலேயே பின் தொடர்ந்துக்கொண்டிருக்க முடியாது இல்லையா.   தனக்கான தேவை, தனக்கான சிந்தனை, தனக்கான வாழ்வு, தன் சந்தோஷங்களே பிரதானம் என்று தீர்மானிக்கும் போது அவற்றின் விளைவுகளை சுட்டுகிறது இக்கதை.  சலிப்பை உணர்ந்த மனம் என்றுமே எந்த ஒன்றிலுமே நிறைந்துவிடாது.  மீண்டும் மீண்டும் சலிப்பே மிஞ்சும்.  மலர்தல் உதிர்தல் காய்தல் மலர்தல் என்ற சுழற்சியில் எதுவுமே சாஸ்வதமில்லை இல்லையா.  

         venthu thanintha kaadukal
        “வாழ்க்கையில் சில அடிப்படையான நியதிகள் இருக்கின்றன.  அவை எந்தக்காலத்துக்கும் பொருந்திய உண்மைகள்.  தொன்று தொட்டு இருந்து வருகின்றன என்ற காரணத்தால் அவற்றைக் பின்பற்றுவது பத்தாம் பசலிப் போக்காக ஆகிவிடாது.  எப்பொழுது நாம் குடும்பம், சமூகம் என்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோமோ அப்பொழுதே நம் சுதந்திர உணர்வுக்கும் வரையறை ஏற்பட்டு விடுகிறது.  சிந்தனை செல்லும் வழியெல்லாம் வாழ முயல்வது, நம் உடம்பின் இரத்தம் உஷ்ணமாயிருக்கும் வரையில்தான்.  ஒவ்வொரு காலகட்டத்திலும், நம் வாழ்க்கையின் நோக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காலம் நமக்குச் செய்யும் கொடுமை.  குடும்ப வாழ்க்கையின் அடிப்படை நியதிகளை ஏற்றுக்கொண்டு, சமூக வேலிக்குள் வாழ்கின்றவர்களுடைய கற்பனையற்ற சராசரித்தனம் – ஒரு கால கட்டத்தில் ஒரு மன நிலையில் நமக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை….ஆனால் இதுதான் சௌகர்யமான வாழ்க்கை என்று புரிந்து கொள்வதுதான் விவேகம். – இ.பா“

    நாவல் : வெந்து தணிந்த காடுகள்
    ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
    பக்கங்கள் : 160
    முதற்பதிப்பு : 1983

    தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

    தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம்.

    1. திருக்குறள் - மு.வ. உரை
    2. பட்டினத்தார் பாடல்கள்
    3. பாரதியார் கவிதைகள்
    4. பாரதிதாசன் கவிதைகள்
    5. கண்ணதாசன் கவிதைகள்
    6. வைரமுத்து கவிதைகள்
    7. சுந்தர ராமசாமி கவிதைகள்
    8. கலாப்ரியா கவிதைகள்
    9. கல்யாண்ஜி கவிதைகள்
    10. அசோகமித்திரன் கட்டுரைகள்
    11. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
    12. லா.ச.ரா. சிறுகதைகள்
    13. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
    14. ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
    15. அ.முத்துலிங்கம் கதைகள்
    16. ஜெயமோகன் சிறுகதைகள்
    17. அம்பை சிறுகதைகள்
    18. ஆதவன் சிறுகதைகள்
    19. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
    20. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
    21. ஜெயமோகன் குறுநாவல்கள்
    22. சுஜாதாவின் நாடகங்கள்
    23. சுஜாதாவின் மர்மக்கதைகள்
    24. நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன்
    25. விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா
    26. ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா
    27. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா
    28. பீக்கதைகள் - பெருமாள்முருகன்
    29. விசும்பு - ஜெயமோகன்
    30. என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
    31. சித்தன் போக்கு - பிரபஞ்சன்
    32. பொன்னியின் செல்வன் - கல்கி
    33. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
    34. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
    35. பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
    36. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
    37. ஏழாவது உல‌கம் - ஜெயமோகன்
    38. ராஸ‌லீலா - சாரு நிவேதிதா
    39. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
    40. புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
    41. சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ்கெளதமன்
    42. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
    43. கங்கணம் - பெருமாள்முருகன்
    44. தேரோடும் வீதி - நீல.பத்மநாபன்
    45. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
    46. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
    47. மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
    48. உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்
    49. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
    50. ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன்
    51. காக்டெய்ல் - சுதேசமித்திரன்
    52. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - எம்.ஜி.சுரேஷ்
    53. இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
    54. ஆதலினாற் காதல் செய்வீர் - சுஜாதா
    55. இனியெல்லாம் சுகமே - பாலகுமாரன்
    56. கண்மணி கமலாவிற்கு... - புதுமைப்பித்தன்
    57. சிந்தாநதி / பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்
    58. ஆளுமைகள் விமர்சன‌ங்கள் - சுந்தர ராமசாமி
    59. இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
    60. நினைவோடை - சுந்தர ராமசாமி
    61. அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்
    62. கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
    63. இலக்கிய முன்னோடிகள் வரிசை - ஜெயமோகன்
    64. சு.ரா. நினைவின் நதியில் - ஜெயமோகன்
    65. சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
    66. துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
    67. கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
    68. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
    69. கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
    70. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
    71. கற்றதும் பெற்றதும் - சுஜாதா
    72. ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா
    73. திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா
    74. யாருக்கு யார் எழுதுவது? - இளையராஜா
    75. ஓ பக்கங்கள் - ஞானி
    76. தெருவோரக் குறிப்புகள் - பாமரன்
    77. குமரி நில நீட்சி - சு.கி.ஜெயகரன்
    78. சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் சுவாமிநாதன் & இளையபாரதி
    79. கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 1அ, 2)
    80. கவிதை மழை - கலைஞ‌ர் மு.கருணாநிதி
    81. அவதார புருஷன் - வாலி
    82. பாண்டவர் பூமி - வாலி
    83. கிருஷ்ண விஜயம் - வாலி
    84. காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
    85. தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - விக்ரமாதித்யன்
    86. அகி - முகுந்த் நாகராஜன்
    87. பித்தன் - அப்துல் ரகுமான்
    88. கருவறை வாசனை - கனிமொழி
    89. துப்பறியும் சாம்பு - தேவன்
    90. வால்கள் - ராஜேந்திர குமார்
    91. பாலகாண்டம் - நா.முத்துக்குமார்
    92. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
    93. உயிர் - டாக்டர். நாராயணமூர்த்தி
    94. உறவுகள் - டாக்டர் ருத்ரன்
    95. பிரம்ம ரகசியம் - ர.சு. நல்லபெருமாள்
    96. சத்திய சோதனை - மகாத்மா காந்தி
    97. வாரணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்
    98. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப்பிள்ளை
    99. நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
    100. நூறு பேர் - மணவை முஸ்த‌ஃபா
    பின்குறிப்புகள்:
    1. இது முழுக்க முழுக்க கறாரான, என் சொந்த ரசனை சார்ந்த பட்டியல்.
    2. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அதன் தர வரிசைக்கிரமத்தைக் குறிப்பதல்ல.
    3. இது முழுமையான அல்லது இறுதியான ஒரு பட்டியல் அல்ல. என்னிடம் இருந்தும், இன்னும் படிக்கப்படாமல் - ஆனால் இந்தப்பட்டியலில் சேரத் தகுதியுள்ளவையாய் நான் நம்பும் - சில புத்தகங்கள் உள்ளன (உதா: மெளனி சிறுகதைகள், பிரமிள் கவிதைகள், மு.தளையசிங்கம் படைப்புகள், புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம், ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா). என்னிடம் இல்லாமல், நான் படிக்காமலும் போன சில நல்ல புத்தகங்களும் உண்டு (உதா: ந.பிச்சமூர்த்தி கவிதைகள், ஆத்மநாம் கவிதைகள், இந்திரா பார்த்தசாரதி நாடக‌ங்கள், இரா.முருகன் சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்). மேலும் சில புத்தகங்கள், நான் படித்தும், என்னிடம் இல்லாததால், ஞாபகமறதியால் இதில் விடுபட்டிருக்கலாம். இந்தப் புத்தகக்காட்சிக்கு புதிதாய் வரும் புத்தகங்கள் சிலவும் இப்பட்டியலை மாற்றக்கூடும். எல்லாவற்றையும் விட, நூறு என்ற எண்ணிக்கை ஒருவகையில் too small; இன்னொரு வகையில் too big.
     சினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம்

     


    சனிக்கிழமை மத்தியான வெயிலுக்கு நியூ புக் லேண்ட்ஸ் சென்றிருந்தேன். அங்கு தான் ஓசியில் மோர் கொடுப்பார்கள். மோர் மட்டும் குடித்துவிட்டு வந்தால் நல்லா இருக்காது அதனால் குடித்த மோருக்கு சின்ன புத்தகம் ஒன்றை சும்மா புரட்டி பார்த்தேன்.

    சாண்டில்யனின் - சினிமா வளர்ந்த கதை, 96 பக்கம்.
    விஜயா பப்ளிகேஷன்ஸ் ( விஜயா - வாஹினியின் சார்பு நிறுவனம் )
    விலை ரூ80/=

    முத்தா.V.சீனிவாசன் முன்னுரை இப்படி எழுதியிருந்தார்.

    "திரு சாண்டில்யன் அவர்கள் எழுதிய சினிமா வளர்ந்த கதை நூலுக்கு முகவுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டார்கள். திரு சாண்டல்யன் அவர்களின் விசிறி நான். அவரது நூல்கள் பெரும் பாலானவைகளை நான் படித்துள்ளேன். சில நூல்களை நான் இரண்டு முறை கூட படித்துண்டு. அவ்வளவு உயர்ந்த நடை - கதை நகர்த்திச் செல்லும் பாணி அற்புதம். ஆனால் -
    இந்த நூலில் அவர் சொல்கிற கருத்துக்கள், எனக்கு கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. நூலின் தொடக்கம் முதல் இறுதிவரை தமிழ் சினிமாவை முழுவதுமாக அவர் தூற்றியிருப்பதை, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பிழைத்த என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
    .... என்று எழுதியதை படித்தவுடன், புத்தகத்தை வாங்கிவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இது. சாண்டில்யன் பதினாலு வருட சினிமா அனுபவங்கள் 'பொம்மை' பத்திரிக்கையில் தொடராக வந்தது.. இதை எழுதியது 1985ல் - 25 வருடத்துக்கு முன்பு!. தற்போது புத்தக வடிவில்

    "நான் பத்து வயதிலிருந்து சினிமா பார்த்து வருகிறேன். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கில சீரியல் படங்களை விரும்பி பார்ப்பேன். இந்த வாரம் சனிக்கிழமை படத்தின் இந்த வாரம் சனிக்கிழமை படத்தின் முதல் பகுதி... அடுத்த வாரம் இரண்டாம் பகுதி.. இப்படி எட்டு வாரங்கள் காத்திருந்து எட்டு பகுதிகளாக ஒரு சீரியல் படத்தை பார்த்திருக்கிறேன்.பழைய காலத்தில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதில்லை. சினிமா எடுப்பது ஒரு கூட்டுறவு முயற்சி என்கிறார். எ.நாராயணன் ஊமை படம் இருந்த காலத்திலிருந்து டைரக்டராக இருந்தவர் அவர் "எனக்கு டைரக்ஷன் தவிர எதுவும் தெரியாது" என்றும் கே.ராம்நாத் காமிராமேனாக இருந்து, டைரக்ஷனிலும் பெரும் பங்கு கொண்ட போதிலும் தனக்கும் டைரக்ஷனுக்கும் எந்த வித சம்பந்தமில்லாதது போலவே காட்டிக் கொண்டார் என்று இரு உதாரணங்களை சொல்லுகிறார்.

    தமிழ் பட வரலாற்றுடன் தான் பார்த்த ஆங்கில பட அனுபவங்களையும் எழுதியிருப்பது படிப்பவர்களுக்கு போனஸ் !
    அந்த காலத்தில் சினிமா எடுக்க எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறார்கள்.
    "அந்தக் கால கண்ணகி படத்தில், கடைசிக் காட்சியில் நடிகை கண்ணம்மா, காமிராவுக்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு நாள் பூராவும் விவாதம் நடந்தது"
    போன்ற தகவல்களும்...

    "அப்போதெல்லாம் கதையை எழுத குறைந்தது ஆறு மாதமாகும். கதையை எழுதினால் மட்டும் போதாது. ஷூட்டிங் ஸ்கிரிப்ட் தயார் பண்ண வேண்டும்.. அதில் காமிரா வைக்க வேண்டிய இடம் ஆர்டிஸ்ட் எத்தனை அடி நடக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும் இந்த ஸ்க்ரிப்டை கையில் கொண்டு 'லைட்மேன்; கூட டைரக்ட் செய்யலாம்"

    இப்படி இவர் சொல்லும் சினிமா 85க்கு முன்னால் இப்படி என்றால் தற்போது கேட்கவே வேண்டாம்.
    'சினிமா வளர்ந்த கதை' என்ற தலைப்பு ஏன் என்று ஆரம்பித்து 'சினிமா தளர்ந்த கதை'யை சொல்ல ஆரம்பிக்கிறார். முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் நக்கலும் நையாண்டியும் 96 பக்கத்தில் தான் முடிவடைகிறது. கடல் புறா, யவன ராணி, கடல் ராணி, ஜலமோகினி என்று நமக்கு தெரிந்த சாண்டில்யனா இது ?
    தமிழ் சினிமா 96% ஏன் தோல்வி அடைகிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஏன் மக்கள் வேறு மொழி படங்களுக்கு போகிறார்கள்?
        "....அது மட்டுமல்ல தாய் மொழியை அவமானப்படுத்தவும் செய்கிறார்கள்(மக்கள்). தமிழ்ப்படம் ஓடும் தியேட்டர் வந்ததுமே வேகமாக ( அங்கு மக்கள் கிராஸிங் இடமில்லாதிருந்தாலும் கூட) எதிர்ப்பக்கமாக ஓடி, மலையாளப்படம் தெலுங்குப்படம், இந்திப் படம் - இவையிருக்கும் தியேட்டர்களில் நுழைந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் கண்களை மூன்று மணி நேரம் ராவிக்கொள்ள இஷ்டப்படாதுதான்..."

    படங்கள் ஏன் தோல்வி அடைகிறது என்று கேள்விக்கு சிலர் சொல்லும் காரணம் - மக்கள் ரசனை வளரவில்லை, சர்கார் போடும் வரி.." என்று சொல்லும் முன் "எண்டர் தி டிராகன்" என்ற படத்தை வரியையும், வெய்யிலை லட்சியம் செய்யாமலும் க்யூவில் நின்று வருஷக்கணக்கில் பார்த்தார்கள் என்பது ஏன் என்று கேள்வியை முன்வைக்கிறார். அதே போல் திருநீலகண்டர் படம் மீண்டும் சென்னை தியேட்டரில் திரையிடப்பட்டபோது அதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆக மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று படம் எடுப்பவர்கள் புரிந்துக்கொள்ள் வேண்டும்.

    படங்கள் தோல்வியுறுவதற்கு சில காரணங்கள் முன்வைக்கிறார். இந்த காரணம் இன்றும் உண்மையாக இருக்கிறது.

    1. கதை எப்படி இருந்தாலும் பாதகம் இல்லை என்ற நினைப்பு
    2. எந்த நடிகர்களை அமர்த்தினால் உடனடியாக விநியோகஸ்தர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வருவார்களோ, அவர்களை அமர்த்தி படத்தை சரிக்கட்டி விடலாம் என்ற தீர்மானம்.
    3. படபிடிப்பில் யாருமே எதையும் செய்துவிடலாம் என்ற துணிவு.
    4. அதிகப்படியான் துணிவு - எல்லாவற்றையும் ஒருவரே செய்துவிடலாம் என்ற அசட்டு தைரியம்.


    எழுத்தாளர்களுக்கு எதற்கு அசிஸ்டெண்ட் ?
    //அசிஸ்டெண்டாயிருப்பவர் எப்படி எழுத்தில் அசிஸ்ட் செய்ய முடியும் ? என்று கேட்காதீர்கள். அவர் நமக்கு எத்தனையோ உபயோகமாக மாயிருக்கலாம். அவரும் எழுதத்தான் வேண்டும் என்று அவசியமில்லை. நாம் பத்து படங்களை ஒப்புக்கொண்டால் பத்து ஷூட்டிங்கிலும் ஏக காலத்தில் காட்சியளிக்க நாம் கிருஷ்ணனாயிருக்க முடியாத காரணத்தால், அஸிஸ்டெண்ட் தேவைப்படுவார். பத்து படங்களுக்கு கதை எழுதவோ, டைரக்ட் செய்யவோ ஒருவரால் முடியுமா என்பது இன்றைய சினிமாவில் அர்த்தமற்ற கேள்வி, "நானிருக்க பயமேன்?" என்று அஸிஸ்டெண்ட் நமது வேலைகளைப் பூர்த்தி செய்வார்.//

    எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக பெரிய கவி ஒருவர் எப்படி தன் அஸிஸ்டெண்டுடன் கூத்தடித்த்தார் என்று விவரிக்கிறார். அதற்கு எப்படி பலர் ஜால்ரா போட்டார்கள் என்றும் விவரிக்கிறார். அவர்கள் பாஷையிலேயே எழுதியிருப்பது சுவை.

    1930ல் ஆங்கில படங்களுக்கு சப்டைட்டில் இருந்தது என்று படித்து ஆச்சரியப்பட்டேன்!. சப் டைட்டில் புரியாத கிராமவாசிகள் ? எப்படி என்று இதை படித்துப்பாருங்கள்

    //எல்மோலிங்கன், எட்டிபோலோ, ஜாக் டாக்கர்டி ஆகிய இந்தப் பிரதான நடிகர்களில் ஒவ்வொருவரும் திறமையான நடிகர். பேச முடியாத சினிமாவில் கண்களாலும், நடிப்பினாலுமே பேசினார்கள். இந்த சினிமாத் தொடர்கதைகள் சிலவற்றில் அதாவது படங்களில் 'சப் டைட்டில்' கள் இருப்பதும் உண்டு. அதைப் புரிந்துக்கொள்ளாத கிராம மக்களுக்கு புரிய வைக்க கதை சொல்பவர்களும் அந்த காலத்தில் உண்டு. வெளியூர் கொட்டகைத் தியேட்டர்களில் இத்தகைய படங்கள் ஓடும்போது ஒருவர் இரைந்து படத்துடன் கதையும் சொல்லிக் கொண்டு போவார். "அதோ எட்டி போலோ கிளம்பிவிட்டார். எதிரிகளைப் பிடிக்க மோட்டார் சைக்கிள் பறக்கிறது. நெருங்கி விட்டார் எதிரிகளை. அதோ குதிக்கிறார் மோட்டார் சைக்கிளிலிருந்து, பத்து எதிரிகள், ஆனால் எட்டிப் போலோவுக்கு அவர்கள் எம்மாத்திரம். அதோ குத்துகிறார். 'டும்' அதோ இன்னொருவர் கிழே விழுகிறார் ஐயையோ எல்லோரும் ஓடிவிட்டார்கள்!" இப்படி கதாநாயகனின் வீரப் பிராதாபங்களை பாத்திரத்தின் நிகழ்ச்சிகளை ஒட்டி கூறிக் கொண்டே போவார். இப்படி தொண்டை கிழியக் கத்துபவருக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம். உணவு இலவசம்"//

    ரன்னிங் கமெண்டரி இங்கே தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். இதே போல ரன்னிங் கமெண்டரியை ரஜினி படத்துக்கு யோசித்துப்பாருங்கள் சிரிப்பு தான் வரும்.

    //தமிழ் மக்களின் பெருமையை இப்படி சொல்லுகிறார். தமிழ்மக்களை போல் அப்பாவிகள் உலகத்தில் யாருமில்லை, அவரகளை போல் கெட்டிகாரர்களும் யாரும் கிடையாது. அப்பாவி எப்படி கெட்டிக்காரனாக முடியும் ? என்று நீங்கள் வியப்படையலாம். சினிமாவில் அது சாத்தியம். "எதையும் தமிழ் மக்கள் தலையில் கட்டி விடலாம் என்று தமிழ்ப் பட முதலாளிகள் நினைப்பதால், அவர்கள் கண்களில் தமிழ் மக்கள் அப்பாவிகள்!. படம் ஏதாவது ஓடா விட்டால் 'நமது படம் ஹைக்ளாஸ் அதனால் தான் ஓடவில்லை' என்று முதலாளிகள் சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். //
    லட்சியபடங்கள் ஏன் ஓடவில்லை என்று காரணங்களை அடுக்கிக்கொண்டு போகும் சாண்டில்யன் சொல்லும் ஒரு காரணம் சிந்திக்க வைக்கிறது.
    //"ஒரு பெரிய பக்தன் கதையை எடுக்கும் போது, மக்கள் பக்தியைக் கண்டு பயப்படுவார்கள் என்று நினைத்து, ஒரு பார்ப்பான் தலையில் பூவைச் சுற்றி அவனைத் தேவடியாள் வீட்டுக்குச் செல்வது போலும் உதை படுவது போலும் காட்சிகளை அமைத்து பக்தியையும் லட்சியத்தையும் சிதைத்தால், தமிழ் படங்கள் மண்ணைக் கவ்வின. லட்சிய படங்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்.//

    தமிழ் படங்களில் புரட்சி என்றால் கற்பழிப்பு நிச்சயம் இருக்க வேண்டுமா என்ன என்று கேள்வியும் கேட்கிறார்.
    (அடுத்த பகுதியில் முடிக்க பார்க்கிறேன்)
     
    எக்ஸலன்ட்- பா.ரா. தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.!

    சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட துவக்கத்தில் பாரா போட்டிருந்த ஒரு பதிவின்போதே எக்ஸலண்ட் பற்றி குறித்துவைத்துக்கொண்டேன். 6 மாதங்கள் கழித்து சென்றவாரத்தில் ஸ்ரீரங்கம் யானைகட்டிச் சத்திரத்தில்தான் விமோசனம் ஆனது.

    சுயமுன்னேறமா! என்று முகம் சுளிப்பீராயின் கவலைப்படேல். தனித்தனியாக வெவ்வேறு பெர்ஸனாலிட்டிகளைப்பற்றிய சுவாரசியமான புத்தகமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். பாராவின் குடும்ப டாக்டராகட்டும் இசைஞானி இளையராஜாவாகட்டும்,அவர்களிடத்திலிருந்த எந்த திறன் அவர்களை இந்த உயரத்திற்கு இட்டுச்சென்றிருக்கும் என்று ஆசிரியர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

    இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்கள். பாராவின் குடும்ப டாக்டர்கள். இருவருமே நகரின் நல்ல மருத்துவர்கள். ஒருவர் மிக கனிவானவர். மற்றொருவர் சற்றே சிடுமூஞ்சி. ஆனால் பாராவின் 5 வயது மகளுக்கு சிடுமூஞ்சி டாக்டரைதான் மிகவும் பிடித்திருக்கிறது. ஏன்? அங்கேதான் உன்னதத்தின் சூட்சுமம் ஒளிந்துகிடக்கிறது என்கிறார் ஆசிரியர்.

     இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல. உன்னதமான இசையமைப்பாளர் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஒன்றைக்கொடுக்கிறார். அது உதாரணம் மட்டுமல்ல அந்த நிகழ்வு இல்லாது அந்த புத்தகமே முழுமையடையாது என்றும் எண்ணுகிறார். அது அப்படியே உண்மை. ஹேராம் திரைப்படம் தொடர்பான அந்த வெகு சுவாரசியமான நிகழ்வு என்ன என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அது உங்கள் சுயத்தினை முன்னேற்றுமா என்பதில் கவலை கொள்ளேல். அது சுயத்தை மகிழ்வுபடுத்தும். கட்டாயம் உத்வேகம் கொடுக்கும். அது போதும்.

    கல்கி.கி.ராஜேந்திரன் அவர்களின் சித்திரகுப்தன் பேரேடு, விஸ்வநாதன் ஆனந்த்தின் தன் தவறுகளையும், மாற்றான் தவறுகளையும் மட்டுமே குறிப்பெடுத்துக்கொள்ளும் விர்சுவல் டேட்டாபேஸ், யானியின் லிட்டரலி தன்னையே உருக்கி இசை செதுக்கும் ஜாலம், எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் அவர்களின் செய்நேர்த்தி, ஜி.வி.ஐயர் என்கிற டைரக்டரின் குணாதிசியங்கள், பின்லேடனின் கர்மயோகம், காந்தி என்கிற உன்னதத்தின் உச்ச நட்சத்திரம் ஆகியவற்றோடு பாரா என்கிற என்ஜினியரிங் மாணவன் தேங்காய் உரிக்கும் மெஷின் கண்டுபிடிக்க முயற்சித்த கதையும் உண்டு.

    நான் ஏற்கனவே சொன்னதுபோல இதனை சுயமுன்னேற்றப்புத்தகம் என்று கருதி வாங்காமல் இருக்கும் அன்பர்கள், தைரியமாக அந்த அஸ்பெக்ட்ஸ் தவிர்த்து மற்ற சுவாரசியமான விஷயங்களை பாராவின் எளிய அருவி போலோடும் தமிழில் படிக்க ஒரு அருமையான வாய்ப்பு

    சுயமுன்னேற்றப்புத்தகம் என்றும் பார்த்துப் படிப்பவர்களுக்கு இது உண்மையான பொக்கிஷம். என் சுயத்தை மிகவும் மகிழ்வித்த புத்தகம்.

    புத்தகம் : எக்ஸலன்ட்  ஆசிரியர் : பா.ராகவன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 70 ரூபாய்





       RSS of this page