Books List 6

படித்தேன் ரசித்தேன் -1

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்

மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது.

ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல. எல்லா அத்தியாயங்களுக்குள்ளும் இழையாக ஒரு தொடர்பு இருக்கிற போதும் இது நாவலும் அல்ல. இது சுயசரிதை. எல்லோருக்குமே பிறந்து, வளர்ந்து, சாதித்து, தவறி வீழ்ந்து, எழுந்து என்று எத்தனையோ அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நாற்பத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட சுயசரிதை என்று தெரிந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒருபோதும் ஞாபகத்தில் தங்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பமும் அதன் பிறகு திருப்பங்களும் ஒரு எதிர்பார்க்காத முடிவும் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

சூடானில் ஒரு இரவு விருந்துக்குப் போய் வந்ததை எழுதியிருக்கிறார்.

ஒரு சோறு பதம்போல அதை இங்கே பார்ப்போம்.

"இடம் சூடான். வருடம் 1989. மாதம் ஞாபகமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 7.58." முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.

சம்பவம் நடந்த இடம் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். அதிலும் ஒரு நாட்டில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவமென்பதால் அதில் பிசகு இருக்காது. ஆண்டும் அப்படித்தான். இவர் அங்கு பதவி ஏற்ற ஆண்டு அது. மாதம் ஞாபகமில்லை ஆனால் கிழமை ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் ஒரு வார இறுதி நாளின்போதுதான் அந்த விருந்து நடைபெற்றது. இரவு என்பதும் ஓ.கே. நேரம் 7.58..? அவருக்கு முன்னால் கடிகாரம் ஒளிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். எவ்வளவு நம்பகத்தன்மையோடும் நுட்பமாகவும் இருக்கிறது பாருங்கள்.

புதிதாக குடிவந்த நாட்டில் வழக்கம் போல அவருடைய மனைவிதான் இந்தப் புதிய நட்பை உருவாக்கக் காரணமாக இருக்கிறார்.

ஒரு பெரிய பிளேட்டில் உணவு அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப்பிடப் போவதை மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன என்கிறார். ஒன்று அவருடன் வந்த அவருடைய மனைவியினுடையது. இரண்டாவது விருந்துக்கு அழைத்த எலேனாவின் கண்கள். மூன்றாவது கண்களுக்குச் சொந்தக்காரர் யாரென்று அவர் சொல்லவில்லை.

எலேனா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதையும் சொல்லிச் செல்கிறார். நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பது தெரிந்துவிடும் என்கிறார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை அவருக்கு ஞாபகம் வருகிறார். அவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனை. "209 வாரங்களுக்கு டென்னிஸ் உலகத்தில் பெண்களுக்கான முதலாம் இடத்தைக் கைப்பற்றியவர் அவர். அவரைப் போலவே தோற்றம் எலேனாவுக்கும்' என்கிறார்.

எலேனாவின் கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ள ஒரு என்ஜினியர். இவர்கள் விருந்துக்குப் போன போதும் அவர் ஏதோ நாட்டுக்குப் போயிருக்கிறார்.

இரண்டு முறை எலேனா இவர்கள் வீட்டிக்கு விருந்துக்கு வந்திருக்கிறார். இது இவர்கள் முறை. மரக்கறிக்குப் பழகியிருந்த முத்துலிங்கம் புதுப்புதுவிதமான கற்பனைகளை ஜோடித்து விருந்துகளில் இருந்து தப்பித்து வருகிறார். ஆனால் எலேனா பிடிவாதக்காரியாக இருக்கிறார். இவருடைய வீட்டுக்குத் தொலைபேசி வருகிறது. இவருக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்று இவருடைய மனைவியிடம் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர் பியர் குடிப்பாரா என்பது அதில் ஒரு கேள்வி. பதில் ஆம் என்று தெரிவிக்கப்படுகிறது.

விருந்துக்குக் கிளம்புகிறார்கள். ஒம்டுர்மான் நகரத்தில் நைல்நதிக் காற்றி வீசும் தூரத்தில் எலேனாவின் வீடு இருக்கிறது. எலேனா வாசல் வரை வந்து வரவேற்கிறார். அவருடைய புஜங்கள் வசீகரமானவை. ஆனால் அன்று அவர் அணிந்திருந்த பட்டு ஆடை, புஜங்களை மறைத்ததோடு அல்லாமல் அவருடைய அழகிய பாதங்களையும் மறைத்து தரையில் தவழ்ந்து கிடக்கிறது. அவர் கடந்து போன சில வினாடிகள் கழித்து அவர் அணிந்திருந்த ஆடையின் கடைசி நுனி கடந்து போகிறது.

முகமன் கூறும் முன்னரே பாதையில் அவர்கள் பார்த்த வயலட் பூ கன்றுகள் பற்றி பேச்சு ஆரம்பமாகிவிடுகிறது. உலகத்தில் காணப்படும் அத்தனை வண்ணங்களிலும் அவரிடம் பூச்செடிகள் இருப்பதாகக் கூறுகிறார் எலேனா.

இப்போது மூன்றாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தக்காரர் அறிமுகமாகிறார். அவர் பீட்டர். அந்த வீட்டின் வேலைக்காரன். கென்யா நாட்டைச் சேர்ந்தவன். யாரோ பொருத்திவிட்டது போல தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி எல்லா வேலைகளையும் செய்கிறான். பூப்பபோட்ட சட்டையும் கண்களைக் கூச வைக்கும் நீலநிற பேண்டும் சாலையோரத்தில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு அங்குதான் வியாபாரம். எத்தனையோ விருந்தினருக்குப் பணிவிடை செய்த அனுபவம் அவனிடமிருக்கிறது. எலேனாவின் உபசாரம் சற்றே சுணங்கும் இடங்களில் அதை நிவர்த்தி செய்பவனாக இருக்கிறான்.

தான் உணவு தயாரிக்க எடுத்த முயற்சியை விவரிக்கிறார் எலேனா. சுவிஸ் உணவில் பியர், முட்டை, தக்காளி, காளான் போன்ற கூட்டுப் பொருள்கள் கலக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதன் இறுதி வடிவம், பதம் தப்பிப் போன உளுத்தம் களி போல தென்படுகிறது.

அப்போது அங்கு சாதிக் அல் மாஹ்டியின் ஆட்சி நடக்கிறது. மது வாங்க, விற்க, குடிக்க தடை. சுவிஸ் உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில் எங்கிருந்தோ இருபது மடங்கு விலை கொடுத்து பியர் வாங்கி அதைத் தயாரித்திருக்கிறார். முதல் துண்டை வாயில் போட்டதும் அம்மா மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றிய ஆமணக்கு எண்ணெய்யின் மணம் ஞாபகம் வருகிறது. உணவை உண்ணும் கஷ்டத்தோடு வாயில் புன்னகையைத் தவழவிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது அவருக்கு. மனைவியைக் கடைக்கண்ணால் பார்க்கிறார். அவர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட உணவு திரும்பி வருவதற்கு விருப்பம் காட்டுகிறது. நல்ல சிந்தனைகளையும் நல்ல வாசனைகளையும் நினைத்து அதைக் கட்டுப்படுத்துகிறார். தக்காளி கிச்சப்பையும் கோக்கையும் குடித்து சமாளிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. குமட்டல் அபாயகரமான கட்டத்தைத் தாண்டுகிறது. தன்னுடைய நாட்டவர், மூதாதையர், வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் எல்லோருடைய கௌரவமும் வாயின் நுனியில் அந்தக் கணம் நிற்கிறது. இனி எழுந்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் பீட்டர் தோன்றுகிறான். சொர்க்கத்தின் கதவின் சாவியை யேசுவிடம் பெறுவதற்கு ஓடியவரின் வேகத்தோடு ஓடிவந்து மீதி உணவையும் முத்துலிங்கத்தின் தட்டில் பிரியத்தோடு பரிமாறுகிறான். எலேனாவின் உபசாரம் சுணங்கிய தருணங்களில் பீட்டர் அதை இட்டு நிரப்புவான் என்றாரே, அதுதான் இது.

தாம் ஆசையாகச் சாப்பிட்ட உணவை பார்சலும் செய்து தருகிறார் எலேனா. பியர் ஊற்றி தயாரிக்கப்பட்ட அந்த உணவு புளிக்கப் புளிக்க சுவை கூடும் என்கிறார். அதை ஒரு கையிலும் ஆப்ரிக்க வயலட் செடிக் கன்று மறுகையிலுமாக காரை நோக்கி நடக்கிறார். கார் சாவி அவருடைய வாயிலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அன்றைய விருந்தில் அவருடைய வாயின் உச்சபட்ச பயன்பாடு அதுதான்.... இப்படி முடிகிறது அந்த அத்தியாயம்.

இதிலே நாம் கவனிக்க வேண்டியது அவருடைய நகைச்சுவை உணர்வு. அதை அவர் பிரத்யேகமான ஒரு நடையில் சொல்வது அடுத்தது. மூன்றாவது நைல் நதிக்காற்று வீசும் வீடு போன்ற நுணுக்கமான கவனிப்பு.

இது மூன்றும் இவருடைய மிகப் பெரிய பலம். அவருடைய நண்பர் ஒருவரை டொராண்டோவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வைத்தியம் பார்க்கக் கொண்டு செல்கிறார்கள். அற்பக் காரியத்துக்காகவும் வேறு ஒருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலைமை. கண்கள் மட்டுமே இப்படியும் அப்படியும் அசைகின்றன. அங்கே சென்று வைத்தியம் பார்த்த பிறகும் இறந்து போகிறார். டொரான்டோவுக்கும் கலிபோர்னியாவுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். அன்றைக்கு அவர் சாதித்ததெல்லாம் ஒரே நாளில் மூன்று மணிநேரம் அதிகமாக வாழ்ந்ததுதான் என்கிறார்.

ஆப்ரிக்காவில் இவர் தலைமையில் நடந்த பஞ்சாயத்து வேடிக்கையானது. ஆழ்ந்து யோசித்தால் அது நம் கற்பு பற்றிய கற்பிதங்களைத் தூள் தூள் ஆக்குகிறது.

முயலைப் பார்க்க வரும் பெண்ணை ஒரு ஆப்ரிக்கன் விரட்டி அடிக்கிறான். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவள் தாய்மை அடைந்ததற்கு விரட்டி அடித்த ஆப்ரிக்கன்தான் காரணம்.

எப்போது அவளை நீ கர்ப்பமாக்கினாய் என்று விசாரிக்கிறார் முத்துலிங்கம். அவனோ அவளை விரட்டும் போது அவள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் அப்படிச் செய்தேன் என்கிறான். போததற்கு அவளாகவே சில நேரம் சிக்கிக் கொண்டதாகவும் சொல்கிறான்.

எங்கே உறவு வைத்துக் கொண்டாய்? என்று கேட்கிறார். ஆனால் இது அவசியமற்ற கேள்வி என்பது அ.மு.வுக்குத் தெரிகிறது. அங்கேதான் நிற்கிறார் முத்துலிங்கம். அவருடைய ஆப்ரிக்க அனுபவங்கள் வேறெங்கும் படித்திருக்க முடியாதவை. ஏரோப்ளேனில் துண்டு போட்டு சீட்டு பிடிக்க முடியுமா? நடக்கிறது. பாஸ் போர்ட்டை ஒருத்தனிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதாக ஏதோ தினசரியின் ஒரு துண்டு மூலையில் பெற்றுக் கொண்டு திண்டாடுவது, மலேரியா காய்ச்சல் என்று ஆப்ரிக்கா அனுபவங்கள் அனைத்தும் படிக்கத் திகட்டாதவை.

தஸ்தயேவஸ்கியின் சூதாடி நாவலில் வரும் கதாநாயகன் பற்றிய குறிப்பு, சினுவா ஆச்சுபியின் சிதைவுகள் நாவலில் வரும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு என அனைத்து விதத்திலும் ஆச்சர்யம் தருகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, கனடா என அவருடைய அனுபவப் பரப்பு விரிந்து கொண்டே போயிருப்பது அனைவருக்கும் கிடைக்க முடியாத சிறப்பம்சம்.

மனிதர்களையும் சம்பவங்களையும் ஒரு விடியோ ஆல்பம் போல மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற இவர், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நூல்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

உயிர்மை வெளியீடு,
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராம புரம்,
சென்னை- 18.
விலை: 170

இலைகளை வியக்கும் மரம் - புத்தக விமர்சனம்

Ilaikalai எல்லா எழுத்தாளர்களிடமும் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தே படிக்கிறேன். அது கிடைக்காத போது அந்த புத்தகத்தையே தொட மாட்டேன். பல சமயம் தொலைத்தும் விடுவேன். அப்படி தொலைத்த ஒன்றுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் `இலைகளை வியக்கும் மரம்`. இது எஸ்.ராவின் எத்தனையவது கட்டுரை புத்தகம் என்பது அவருக்கே மறந்திருக்கும். இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பா என நினைத்து படிக்காமல் தள்ளிப்போட்டேன். இரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த புத்தகத்தை வாங்க வேண்டிய நிலை. அவர் எழுதிக்கொண்டிருக்கும் இணைய கட்டுரைகள், அரவோன் நாடகம், இந்த புத்தகத்திற்குப் பிறகு வெளியான மேலும் சில கட்டுரைத் தொகுப்புகளை படித்தபோதும், இந்த புத்தகம் நல்ல படிப்ப அனுபவத்தை தந்தது.

காணும் மனிதர்களிடமும், பயணங்களின் கதைகளுமே இந்த தொகுப்பு. கதாவிலாசம் தெரிந்தவர்களுக்கு எஸ்.ராவின் பயண அனுபவங்கள் புதிதல்ல. கிட்டத்தட்ட ஒரு யாத்ரிகன் போல பல ஊர்களுக்கும் சென்று அதன் அனுபவங்களை நம் ஞாபகத்திலுள்ள அனுபவமாக மாற்றக்கூடிய எழுத்து.நகுலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதினால், அவர் வார்த்தைகளிலேயே புத்தக தலைப்பாக்கப்பட்டது.

என்னிலடங்கா கதைகளை உடைய சாமானியன். அவன் தரித்த வேஷங்கள், அதன் துக்க அனுஷ்டானங்கள் போன்றவை எஸ்.ராவின் பேட்டை. சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் வாக்கியம் சரேலென சர்ரியலிஸ்டிக்காக பெறும் வடிவம் எஸ்.ராவின் டச். இந்த இரு காரணத்திற்காகவே இவர் எழுத்துக்களை கூர்ந்து வாசிக்கப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.

இந்த சர்ரியலிஸ்டிக் நகர்வு கதையையோ/கட்டுரையையோ எந்த விதத்திலும் குறைப்படுத்தாது பார்த்துக்கொள்ள சில கட்டமைப்புகளை முதலிலேயே நிறுவவேண்டும். கோணங்கி எழுத்தில் இது அப்பட்டமாகத் தெரியும். எஸ்.ராவோ ராவாகச் சொல்லாமல் , மெல்ல மெல்ல அதை நுழைப்பவர்.

எஸ்.ரா புனைவில் உருவாக்கும் கோலத்திற்கு வித்தாக அமைவது அவருடைய பயணமென்னும் புள்ளிகளே.

உதாரணங்கள்:

உலகின் எல்லாப் பாதைகளும் எனது வீட்டு வாசற்படியோடே இணைக்கட்டிருக்கின்றன என்பதை நான் ஒவ்வொரு முறையும் திட்டமில்லாத பயணத்தைத் துவங்கும்போது நினைத்துக்கொள்கிறேன்.

இந்த இரவிற்குப் படுக்கையைத் தந்து உதவிய பெருங்கருணைக்கு நன்றி சொல்லியபடி நட்சத்திரங்களை எண்ணத் துவங்கினேன். நகரம் என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டது.

கதைகள் காலத்தினுள் அலைந்து கொண்டிருக்கும்போது அதன் நாவு காலத்தைவிட்டு வெளிதூரம் நீண்டு யாவையும் தீண்டிக் கொண்டிருக்கிறது.

நூறு சிறந்த சிறுகதைகள்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்

கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை.  மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.

என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள்  தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.

இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன.  இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.

நூறு சிறந்த சிறுகதைகள்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

சொல் வளம் - தமிழ் நார்மன் லூயிஸ்

தமிழின் Word Power Made Easy புத்தகம் தேவநேயப்பாவாணர் எழுதிய 'சொல்வளம்'. இந்நூலில் பல அறிய கலை சொற்களை , பழந்தமிழ் இலக்க்கியத்திலிருந்தும், அந்த கால சொற்பிரயோகங்களிலிருந்தும் எடுத்தாய்ந்து அற்புதமான 150 பக்கங்களில் தொகுத்துள்ளார். ஒவ்வொரு சொற்களின் வேர், அதன் பிரயோகம் என உதிரி செய்திகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

கலை சொற்களின் தொடர்புகள், வேர்களை வைத்தே எழுதப்பட்ட நூல் ஜெயமோகனின் கொற்றவை. அதிலும் குறிப்பாக முதல் பாகத்தில் வரும் சொற்களின் வேர்களும், அவற்றின் தன்மைகளும் மிகப் பொருத்தமாகவே இருக்கும்.

தேவ.பாவாணர் எழுதிய நூலில் என்னைக் கவர்ந்த இன்றும் புழக்கத்திலிருக்கும் சில சொற்கள்

பேட்டை - சந்தை கூடும் ஊர்.

சம்பளம் - சம்பு + அளம். (சம்பா + உப்பு= உப்பையே ஊதியமாகக் கொடுத்தது.)

இடாகினி - இடுபிணந்தின்னும் பெண் பேய்.

இடங்கர் - Crocodile (இது முதலை கிடையாது. எப்படி??)

பனுவல் - பிரபந்த நூல் வகை. (தேவாரம் = திவ்யப்பனுவல் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்)

அதுக்குதல் - சூடான பொருளை வாயின் இருபுறமும் மாறி மாறி ஒதுக்குதல்.

மாந்துதல் - பெருமடக்காய் குடித்தல்.

குண்டுணி - பலர் கூடி் ஒருவரை நகையாடுதல் ( நம்ம தமிழ் ப்ளாக்கர்ள நடப்பவை!)

இரண்டு மணி நேரத்தில் படிக்கக்கூடிய முக்கியமான நூல் இது. சில கலை சொற்களை மீட்டெடுத்தால் இரண்டுமணி நேரத்திற்கு சம்பாகும்.

தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள்

தமிழில் சரித்திர நாவல்களை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் நான் சிபாரிசு செய்யும் நாவல்கள் எவை என்று தெளிவாக குறிப்பிடவில்லை. என் லிஸ்ட் ரொம்ப சின்னது.

என் கணக்கில் மூன்றே மூன்று பேர்தான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள் – கல்கி, சாண்டில்யன், சுஜாதா.

ராங்க் படி என் சிபாரிசுகளை வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. யவன ராணி
4. கடல் புறா
5. பார்த்திபன் கனவு
6. ராஜ முத்திரை
7. மலை வாசல்
8. ரத்தம் ஒரே நிறம்

கொஞ்சம் பெரிய லிஸ்ட் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக – ஜெயமோகன் தனது சிபாரிசுகள் லிஸ்டில் historical romances என்று ஒரு பகுதி எழுதி இருந்தது ஞாபகம் வந்தது. சவுகரியத்துக்காக அதை இங்கே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.

வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள்
1) பொன்னியின் செல்வன் — கல்கி.
2) சிவகாமியின் சபதம் — கல்கி.
3) மன்னன் மகள் — சாண்டில்யன்.
4) யவன ராணி — சாண்டில்யன்.
5) கடல் புறா — சாண்டில்யன்.
6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்.
7) ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்.
8) திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்.
9) வேங்கையின் மைந்தன் — அகிலன்.
10) மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி.

வரலாற்று மிகு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியல்
1) பார்த்திபன் கனவு — கல்கி.
2) ஜல தீபம் — சாண்டில்யன்.
3) கன்னி மாடம் — சாண்டில்யன்.
4) மூங்கில் கோட்டை — சாண்டில்யன்.
5) ராஜ முத்திரை — சாண்டில்யன்.
6) கயல்விழி — அகிலன்.
7) வெற்றித் திருநகர் — அகிலன்.
8) ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா.
9) கோபுர கலசம் — எஸ்.எஸ். தென்னரசு.
10) ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி.
11) ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி.
12) தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி.
13) பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்.
14) நந்திபுரத்து நாயகி — விக்ரமன்.
15) திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்.



புத்தக விமர்சனம் எழுத்து :
அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் - பக்கம் 112 - விலை ரூ.60 - வெளியீடு - அகரம், தஞ்சாவூர்

கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு.
பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்.

கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு கவிஞனும் வாங்கிப் படிக்க வேண்டும்.

கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்கு வார்த்தை விளையாட்டு என்று கவிஞர் பிரமிள் பதில் அளித்ததாக விக்ரமாதித்யன் கூறுகிறார். அப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை செல்வராஜ் ஜெகதீசன் நிறையாவே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

ஒன்றன்றி.... என்ற கவிதை

ஒன்றில்லை

ஒன்றுமில்லை

ஒன்றன்றி

ஒன்றுமே இல்லை

மற்றொரு கவிதை


இன்றென்ன

கிழித்துவிட்டோம்.

நாளை மீது

நம்பிக்கை வைக்க.


இவையெல்லாம் சொற்சிலம்பம்தான். ஜெர்மனியில் Concrete Poetry என்ற ஒரு இயக்கம் 1960 களில் செயல்பட்டது. அது வார்த்தை விளையாட்டை இயக்கமாகவே நடத்திக் காட்டியது. Concrete கட்டிடங்கள் போல வார்த்தைகள் அடுக்கப்படும்.


நல்ல கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகளை விக்கிரமாதித்யன் பாராட்டுகிறார். ஆனால் எழுத்தில் நல்ல எழுத்து மோசமான எழுத்துகள் உண்டு. நல்ல எழுத்தை கெட்ட எழுத்து கிடையாது என்பார் ஆஸ்கர் வைல்ட்.
எத்தனை நாட்கள் என்ற கவிதை


சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள் என்று முடிகிறது.


சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது. பிரியமான என் வேட்டைக்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் பன்னிரண்டு வரிகளில் பன்னிரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் ஒளிமயமாய் குடும்பம் நடத்துகிறார்கள். நமது நாயகியோ நாற்பதைக் கடந்து பெண்மானாக வலம் வருகிறாள். பிரியமான வேட்டைக்காரன் தன்னைக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையுடன்.

விக்கிரமாதித்யன் தன் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலிய பெண்ணிய கவிஞர்கள் இந்த வரிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?

சாஸ்வதம் என்ற கவிதையில் கலைகள் கால விரயம் என்று கூறும் ஆசிரியர், அடுத்த கவிதையான 'கவன ஈர்ப்பு' என்ற கவிதையில்,
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம்
என்வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை என்கிறார்.
சுயம் என்ற கவிதையில்,
உண்மையில் எனக்கு நான் யார்?
என்ற கேள்வியுடன் கவிதையை முடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்கிறது ஆதி சங்கரரின் அத்வைதம். நான் கடவுள் என்கிறார் திரைப்பட இயக்குநர் பாலா.
பக்கம் 91-ல் கவியெழுதி பிழைத்தல் கடினம் என்கிறார். இந்த கவிதைகள் படிக்க சுலபமாகத்தானிருக்கின்றன. ஆனால் வார்த்தைகளின் ஊடான மெளனம்தான் கவிதை என்ற பிரெஞ்சு கவிஞர் Paul Valery ஐ செல்வராஜ் ஜெகதீசன் அவசியம் படிக்க வேண்டும்.


http://snapjudge.com/2009/05/12/புத்தக-லிஸ்ட்/

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) -  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி - Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் - Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் - Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் - Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா - Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் - Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் - Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் - Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் - Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா - Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் - Rs.275.00; உயிர்மை - பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் - Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் - உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி - உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி - உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் - உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு:  ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு - (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை - யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40
S. Krishnamoorthy // மே 14, 2009 இல் 3:08 மு.பகல் | பதில்

 

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.
திருலோக சீதாராம் எழுதிய “இலக்கியப் படகு”. சீரிய சிந்தனை, பொருள் பொதிந்த சொற்கள், குங்குமச் சிமிழுக்குள் பொதிந்த இலக்கியப் பெட்டகம்.
வெறும் கோஷதாரிகளுக்கு மத்தியில்
ஓசைப்படாமல் மேலோங்கி நிற்கும்
சிந்தனை விருந்து.
நான் அன்று வாங்கியது கவிஞன் பதிப்பகத்தில். இன்று கிடைக்கிறதா இல்லயா என்பது தெரியவில்லை.
தீபனின் “அரும்பிய முல்லை”யையும் விட்டுவிடாதீர்கள்.

RV // மே 15, 2009 இல் 9:02 பிற்பகல் | பதில்

உங்கள் லிஸ்டில் அம்மன் நெசவு, பொய்த்தேவு, சாயாவனம், ஏழாம் உலகம் ஆகியவற்றை சிபாரிசு செய்கிறேன்.
பொய்த்தேவு – http://koottanchoru.wordpress.com/2008/09/14/பொய்த்தேவு/
ஏழாம் உலகம் – http://koottanchoru.wordpress.com/2009/02/18/ஏழாம்-உலகம்-ஜெயமோகன்/

நீங்கள் படித்திராவிட்டால் இவற்றை சிபாரிசு செய்கிறேன் – ஆழி சூழ் உலகு (ஜோ டி குருஸ்), மானசரோவர், கரைந்த நிழல்கள், தண்ணீர் (அசோகமித்திரன்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), உல்லாச வேளை (எஸ்.வி.வி), துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன் (தேவன்), சாத்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, முகம்மத் பின் துக்ளக் (சோ), பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா), மகாகவி பாரதியார் (வ.ரா.), முத்துலிங்கம் கதைகள், என் பெயர் ராமசேஷன் (ஆதவன்), சித்திரப் பாவை (அகிலன்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் (அம்பை), வன்மம் (பாமா), நாளை மற்றொரு நாளே (ஜி. நாகராஜன்), சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் (ஜெயகாந்தன்), விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு (ஜெயமோகன்), புத்ர, பாற்கடல் (லா.ச.ரா.), எம்.வி. வெங்கட்ராம் கதைகள், காலவெளி (விட்டல் ராவ்), ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்), நிழல் முற்றம் (பெருமாள் முருகன்), புதுமைப்பித்தன் கதைகள் (அ. இரா. வெங்கடாசலபதி தொகுத்தது), உப பாண்டவம், நெடுங்குருதி (எஸ். ராமகிருஷ்ணன்), வாடிவாசல் (சி.சு. செல்லப்பா), ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், சுந்தர ராமசாமி கதைகள் (சுந்தர ராமசாமி), இந்த நூற்றாண்டு சிறுகதைகள் ஆறு பகுதிகள் (விட்டல் ராவ், அழகிய சிங்கர் தொகுத்தது), புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்), புலி நகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்), வெக்கை (பூமணி)

பெரிய லிஸ்ட் கொடுத்துவிட்டேன்!

SnapJudge // மே 15, 2009 இல் 9:46 பிற்பகல்

 

ஆர்வி, தங்கள் லிஸ்ட் தூள்!
நிறைய முழுக்கவே வாசித்திருக்கிறேன். சிலதை புரட்டியாவது இருக்கிறேன்.

புத்ர, பாற்கடல் (லா.ச.ரா.) மற்றும் விஷ்ணுபுரம் – அணுக முடியுமா என்னும் அச்சம். வி.பு இப்போதைக்கு எடுத்து வாசிக்கும் திட்டமில்லை. லாசரா – எடுக்கிறேன்.

விடுபட்டதால் சேர்த்துக் கொண்டவை கீழே:
1. உல்லாச வேளை (எஸ்.வி.வி)

2. பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா)

3. வெக்கை (பூமணி)

4. காலவெளி (விட்டல் ராவ்),

5. ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்)

6. புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்)

நன்றி

இன்னொரு லிஸ்ட் வரப்போவுது

RV // மே 16, 2009 இல் 2:33 மு.பகல் | பதில்

இவை எல்லாம் நான் படித்தவை. ஞாபகம் வந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். :-) ) பொன்னியின் செல்வனை மறந்துவிட்டேன். :-) இவர்களைத் தவிர கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் (கோபல்ல கிராமம், பல சிறுகதைகள்), கு.ப.ரா. ஆகியவையும் இப்போது ஞாபகம் வருகின்றன. இந்திரா பார்த்தசாரதி எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை – ஆனால் கிருஷ்ணா கிருஷ்ணா என்ற நாடகம் நன்றாக இருந்தது. புத்ர, பாற்கடல் இரண்டும் படிக்க சுலபமானவை. எனக்கே புரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் வாங்கி நாலைந்து வருஷம் கழித்துத்தான் படிக்க தைரியம் வந்தது. ஆனால் மிகவும் நன்றாக இருந்தன. பின் தொடரும் நிழலின் குரல்தான் எனக்கு மிகவும் பிடித்த ஜெயமோகன் நாவல்.

பர்வா, தாண்டு இரண்டும் கன்னடத்தில் எழுத்தப்பட்டவை. பாவண்ணன் பர்வாவை மொழிபெயர்த்திருக்கிறார்.

உங்கள் லிஸ்டில் எனக்கும் படிக்க நிறைய இருக்கின்றன. அஞ்சலை, கூளமாதாரி, சுந்தர ராமசாமி: நினைவின் நதியில், கிருஷ்ணப் பருந்து, பல நேரங்களில் பல மனிதர்கள், ஏறுவெயில், பள்ளிகொண்டபுரம், சாய்வு நாற்காலி, வேள்வித்தீ, புனலும் மணலும் மாதிரி. பல நான் கேள்விப்பட்டதே இல்லை. ரப்பர் எனக்கு சுமார்தான். கடலோர கிராமத்தின் கதை நன்றாக இருந்தது, ஆனால் சூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

படித்துவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா என்று மறக்காமல் எழுதுங்கள்!


கு.ப.ரா. , கு. அழகிரிசாமி வாசித்தது இல்லை. எனக்கு இந்திரா பார்த்தசாரதி மிகவும் பிடிக்கும். அவரின் பெரும்பான்மையான நாவல்களை என்னுடைய நடுத்தர வர்க்க தடுமாற்றங்களுடன் ஒத்துப் போகும்.

பின் தொடரும் நிழலின் குரல் & காடு – இரண்டுமே என்னைக் கவர்ந்த நடை + கரு.

—படித்துவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா—

பிடிக்காவிட்டால் நிச்சயம் புலம்பிவிடுவேன் :)

சமீபத்தில் முடித்தது — யுவன் சந்திரசேகர்: குள்ளச்சித்தன் சரித்திரம்: வாசகனை அன்னியமாக்கும் மேதாவிலாசம் வெளிப்படுகிறது; உவமைக் கவிஞரின் மேலோட்டமான சிறுகதை தொகுப்பு.

சாப்பாட்டு புராணம்.
தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமையற்கலை குறித்த புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவை மிக நுட்பமாக எழுதப்படுபவை. வாசனை, நிறம், பொறுமை, ருசி என்று நம் புலன்களை அறியச் செய்பவை.

மனித இருப்பின் ஆதாரம் பசி. மனித நாக்கு எதை எதையோ ருசித்திருக்கிறது. நாம் இன்னமும் எழுதப்படாதது நாக்கின் சரித்திரமே. நாக்கு எதை எங்கே ருசித்தது என்ற வரலாறு மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமானது. உணவு நம் பண்பாட்டோடு சம்பந்தமுடையது. இன்றைக்கும் திருமண வீடுகளில் விருந்துசாப்பாடு பற்றிய பேச்சு வரும் போது எந்த ஊரில் எந்த சமையல்காரர்களின் உணவு மிக பிரமாதமாக இருக்கும் என்று விலாவாரியாக பேசுவார்கள். அன்றைக்கு தான் திருமண விருந்தின் பின்னே இத்தனை கலைஞர்கள் ஒளிந்திருக்கிறார்களா என்று தோன்றும்.

நான் உணவின் பின்னால் அலைந்து திரிந்தவன் இல்லை. பசித்த நேரத்தில் கிடைத்த இடத்தில்  கிடைத்த உணவோடு பசியை கடந்து போகின்றவன். ஆகவே எனக்கு சிறப்பு உணவுகள், மற்றும் ஒவ்வொரு ஊரின் சிறப்பு ருசியில் ஆர்வம் இருந்ததில்லை. சில நேரம் பயணத்தில் நண்பர்கள் தங்கள் ஊரின் சிறந்த உணவகங்களுக்கு அழைத்து சென்று அறிமுகம் செய்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் சாலையோர கடைகளில் கிடைக்கும் எளிய உணவின் பின்னால் முகம்தெரியாத சமையல்கலைஞர்களின் கைமணமும் ருசியும் இருப்பதை அறிந்திருக்கிறேன்.

சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின்உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்கு காரணமாக இருந்தவர்களின் செய்முறை நுட்பங்களையும் பதிவு செய்திருக்கிறார். சாப்பாடும் சங்கீதம் போல தான், ரசனை உள்ளவன் தான் அதன் நுட்பங்களை அறிந்து கொள்வான் என்பார்கள். அதுவும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள சங்கீத ரசிகர்கள் தேர்ந்த ரசனைக்காரர்கள். சாப்பாட்டிலும் அப்படியே. சமஸ் இந்த நூலில் தஞ்சை பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் என்ன உணவு சிறப்பானது. எதனால் அந்த சிறப்பு வந்தது. எங்கிருந்து அந்த உணவு வந்தது என்று ஆதியோடு அந்தமாக  சுவைபட கூறுகிறார். அதை அவர் ரசித்து எழுதும் வாகு அற்புதமானது. படிக்கையில் நாமே அதை நாவிலிட்டு ருசிப்பது போன்று எச்சில் ஊற வைக்கிறது. சில சிற்றுண்டிகளை பற்றி அவர் எழுதும் போது அவரது நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியது. தினமணி இதழில் ஈட்டிங் கார்னர் என்ற பத்தி மூலம் அவர் எழுதிய கட்டுரைகள் இவை. சாப்பாட்டு புகழ்பெற்ற இந்த ஸ்தலங்களின் பட்டியல் மிக முக்கியமானது.

டிகிரி காபிக்கு பிரசித்தி பெயர் தஞ்சாவூர் காபி பேலஸ், திருவையாறு தெற்குவீதியில் கிடைக்கும் அசோகா, நீடாமங்கலம் மேலராஜவீதியில் கிடைக்கும் பால் திரட்டு. கூத்தாநல்லூர் மௌலான பேக்கரி தம்ரூட், மன்னார்குடி டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மயிலாடுதுறை விடுதிபொங்கல் திருச்சி ஆதிகுடிகாபிகிளப்பில் கிடைக்குடம் ரவா பொங்கல்,. பட்டணம் பக்கோடா, கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ் பூரிபாசந்தி, மன்னார்குடி மிலிட்டரிபரோட்டா. திருவானைக்கா  பார்த்தசாரதி விலாஸ் ஒரு ஜோடி நெய்தோசை, திருவாரூர் எஸ்.ஆர்.ஆர். கபே கட்டுசோறு, திருச்சி நியூ மதுரா ஹோட்டல் தலைவாழை இலை சாப்பாடு.மதுரை கோனார்மெஸ் கறிதோசை. மேலசித்திரைவீதி  கோபி ஐயங்கார் கடை வெள்ளை அப்பம். விருத்தாசலம் ருசி இனிப்பக தவலை வடை, சிதம்பரம் உடுப்பி கிருஷ்ணவிலாஸ் கொத்சு, நெல்லை இருட்டுகடை அல்வா. பாளையங்கோட்டை தேங்கால்பால் முறுக்கு. இந்த பட்டியல் போல ருசியறிந்த பலரும் தங்கள் விருப்ப பட்டியல் ஒன்றினை நிச்சயம் வைத்திருப்பார்கள்.

உணவிற்கு ருசி சேர்க்க கூடியது தண்ணீரும் அடுப்பும் என்பார்கள். இரண்டையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் மண்பானைகளில் சமைப்பதில் உள்ள தனித்த ருசிக்கு காரணம் பானையும் அந்த ஊர் தண்ணீருமே.. சமஸ் தான் கட்டுரை எழுதிய உணவுவகைகளை தேடித்தேடிச்சென்று சாப்பிட்டு அந்த ருசி மயக்கத்தை படிப்பவர்களும் உணரும்படியாக எழுதியிருக்கிறார். திருவையாறு அசோகா பற்றி எழுதும் போது  அசோகாவின் விசேசம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை. நாக்கில் பட்டாலே போதும். காற்றில் இசை கரைந்துவிடுவது போல அசோகா கரைந்துவிடும் என்று எழுதுகிறார் சமஸ்.
மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா பற்றி குறிப்பிடும் போது முதல்கடிக்கு மொறுமொறுப்பு அடுத்த கடிக்கு பதம். மூன்றாம் கடிக்கு கரைசல். அப்படியொரு பக்கோடா என்று பக்கோடாவிற்கான இலக்கணத்தை சமஸ் வரையறை செய்திருக்கிறார். ரவா பொங்கலை பற்றி எழுதும் போது அது பொங்கலுக்கு சின்னம்மா உப்புமாவுக்கு பெரியம்மா என்று என சுட்டிகாட்டுவது இயல்பான நகைச்சுவை. ருசியான உணவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், தமிழக உணவு கலாச்சாரச் கூறுகளை  விரும்புவர்களும் அவசியம் இதை வாசிக்க வேண்டும். தான் பிரசுரம் திருச்சி இந்த நூலை வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு.
சமஸ். 94427 07988. விலை. ரூ.60.

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

  மீன்மலர்
நூல் அறிமுகம்
வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்
வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

*வாசித்து நேசித்த புத்தகங்கள்*

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம் என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல் போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில் நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில் 10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

*சிறுகதை தொகுப்புகள்:*

*உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
*[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த கதைகள்

*மண்பூதம் - வாமு.கோமு*[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர் வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை
மனிதன்" கதை மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

*மரப்பாச்சி - உமா மகேஸ்வரி*

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

*புனைவின் நிழலில் - மனோஜ்* [உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை.
படித்துப்பாருங்கள். படிக்கும்போது உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

*சைக்கிள் முனி - இரா.முருகன்* [கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும். அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

*பிராந்து - நாஞ்சில் நாடன்*

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும் அதனை உணரலாம்.

*பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்* [உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின் வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில் மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

*பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன் *[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

*அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி* [வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம். வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

*விசும்பு-ஜெயமோகன்* [உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள் சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

*வெய்யில் உலர்த்திய வீடு -  எஸ்.செந்தில்குமார்* [உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில் தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

*புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்* - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்) நான் வாசித்தவை.சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும்
பல ஜாம்பவான்களின் கதைகளை படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களில் நான் வாசித்து நேசித்தவை தொடர்ந்து இந்த இழையில் இடுகிறேன்.தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/
English Poems: http://nilaenglishpoems.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/