‘நான் எழுத்தாளனாக்கும்’ என்று திரியும் என்னை ஒருபக்கம்
கோபிகிருஷ்ணன் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்க... இரண்டொருநாள் முன்பு
பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் படைப்புகளை வாங்கி, ஆத்மாநாமிடமும்
அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன்.
குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.
பதில் என்ற கவிதை இப்படி இருக்க....
எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
என்று துவங்கும் எழுதுங்கள் என்ற கவிதை எனக்கு டானிக் போல இப்படி முடிகிறது..
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்.
வெறும் 33 வருடமே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஆத்மாநாம் என்பது துரதிருஷ்டமான ஒன்று!
*ஆத்மாநாம் படைப்புகள்
*தொகுப்பாசிரியர்: பிரம்மராஜன்
*காலச்சுவடு பதிப்பகம்
*ரூ.200
(கணிதத்தின் கதை புத்தக விமர்சனம் )
பாம்பேவுக்கு டிக்கெட் ஃபேர் எவ்வளவு?
உங்க செல் நம்பர் சொல்லுங்க?
ஆறாவது வரிசையில மூணாவது நம்பர்..
உங்க பின் நம்பர் எண்ட்ரி பண்ணுங்க..
உங்க சிஸ்டம் எத்தனை ரேம்?
முன்னூறு கிலோ மீட்டர், அஞ்சு மணி நேரத்தில ரீச் பண்ணிட்டேன்
பொண்ணு எத்தனையாவது படிக்கிறா?
நூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா?
நானூறு பக்க நாவல்பா எப்படி ஒரு நாள்ல படிக்க முடியும்?
ஒரு லிட்டர் பெட்ரோல் அஞ்சு ரூபா குறைச்சிருக்கான்..
-இப்படி ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லாமல் நம்மால் ஒரு நாளையாவது கடந்துவிடமுடியுமா? முடியவே முடியாது. அப்படி இருக்க
வேண்டுமானால் கோமாவிலோ, வாய் பேசமுடியாமலோ இருந்தால்தான் சாத்தியம்.
பிரபஞ்சத்தை கணிதத்தால் விவரிப்பதுதான் சிறப்பானதும் நேர்மையானதுமாக இருக்கிறது. ஏனென்றால் கணிதத்தால் மட்டுமே
அதை எதிர் கொள்ள முடிவதாக இருக்கிறது. எண்ணிலடங்கா தத்துவங்களால் பிரபஞ்சத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால் அந்த
எல்லா தத்துவங்களுக்கும் அடிநாதமாக பிரமிப்பும் மிரட்சியும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் இத்தனை சுமார் பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. மனித மூளையில் சுமார் இரண்டு லட்சம் செல்கள் உள்ளன... என்று
கணிதப் புள்ளிவரங்கள் சொல்லுவதில் உள்ள இயல்பான உண்மையைக் கண்டு விதம்விதமாக பிரமித்ததின் விளைவே விதம்விதமான
தத்துவங்களுக்கு அடிப்படை. கணிதம்தான் ஆரம்ப படியாகவும் அதே சமயத்தில் நிலையானதாகவும் இருக்கிறது. நீள் வட்டம்,
வட்டம், சதுரம், கோணம், மின் கட்டணம், வங்கிக் கணக்கு, வட்டிக் கணக்கு, பத்திரிகையின் பிரிண்ட் ஆர்டர், ஓர் ஒளியாண்டின் தூரம்,
மேட்டூர் அணையில் நீர் மட்டம் எல்லா இடத்திலும் முதல் விஷயமாகக் கணிதத்தின் தேவையும் பிறகு பிற விஞ்ஞான, இலக்கிய,
வரலாற்று, அரசியல் அறிவும் தேவைக்கு ஏற்ப பங்கு பெறுகிறது. உதாரணத்துக்கு மேட்டூர் நீர் மட்டம் குறைந்து போனால்
கர்நாடகாவை பழிக்க வேண்டும் என்றோ பத்து யூனிட் மின்சார பயன்பாட்டு ஆயிரம் ரூபாய் பில் போட்டவனை கோர்ட்டுக்கு
இழுப்பதோ நடக்கிறது.
பிரபஞ்சத்தின், வாழ்வின் மிக அடிப்படை கணிதம். அதை ஒரு கதை போல சொல்லுவதில் இரா. நடராசன் எடுத்துக் கொண்ட முயற்சி
நல்ல பலனைத் தந்திருக்கிறது. கணிதத்தை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். கணித நூலை மொழி பெயர்க்கி
றவரோ, கணிதத்தைப் பாடமாக நடத்துபவரோ இதைச் சாதித்க முடியாது.
ஆதி மனிதனுக்கு கணிதத்தின் தேவை தன்னிடம் ஐந்து ஆடு இருப்பதை அடையாளம் வைத்துக் கொள்கிற சிறு சிறு கோடுகள் என்ற
அளவில்தான் இருந்திருக்கும். இந்திய, கிரேக்க, அரேபிய, பாபிலோனிய ஆரம்பகட்ட அறிஞர்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கி
றார்கள். உதாரணத்துக்கு ஓர் அரைவட்டத்தில் வரையப்படும் எல்லா கோணங்களும் 90 டிகிரியாகவே இருக்கும் என்று 2650
ஆண்டுகளுக்கு முன் தாலமி சொல்லியிருப்பது இன்றைக்கும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. அதே காலத்தைச் சேர்ந்த பிதாகரஸின் பு
கழ்பெற்ற தேற்றமான முக்கோணத்தின் இரு பக்கங்களில் வரையப்படும் சதுரங்கள் மூன்றாவது பக்கத்தின் மடங்குக்கு சமமாக
இருக்கும் என்ற உண்மையையும் அதைக் கண்டுபிடித்த ஆண்டையும் கவனியுங்கள்.
அதன் பிறகு எத்தனையோ கணித மேதைகள் இயற் கணிதத்துக்கும் திரிகோணமிதிக்கும் நுண்கணிதத்துக்கும் தொகை
கணிதத்துக்கும் வடிவ கணிதத்துக்கும் நிகழ்தகவு கணிதங்களுக்கும் வழிவகுத்தார்கள். அவர்கள் அத்தனை பேரின் பின்னணியையும்
அந்தக் கணித முறைகணித முறைகளுக்கான தேவையையும் மிகச் சுருக்கமமாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறார் நடராசன். கணித
வகுப்புகளில் இந்தக் கணிதத் தேவைகளைச் சொல்லி பாடம் நடத்தினால் கணிதப் பாடத்தில் பூஜ்ஜியம் வாங்கும் நிலை குறையும்.
மொட்டையாக "அல்ஜீப்ரா நோட்டை எடுங்க'' என்று சொல்லும் ஆசிரியர் இயற்கணிதம் பிறந்த கதையைச் சொல்லி அதற்கான
தேவை என்ன என்பதையும் வாழ்வில் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றும் சொன்னால் தேர்வில் நூற்றுக்கு நூறு
வாங்குவதை மாணவனே பார்த்துக் கொள்வான்.
சிறுவயதில் நான் படித்த ஒரு கணிதப் புதிர் இது:
ஜான் தன் நண்பன் டேவிட்டை பார்க்க சைக்கிளில் கிளம்புகிறான். ஜான் கிளம்பிய அதே நேரத்தில் டேவிட்டும் ஜான் வீட்டுக்குக் கி
ளம்புகிறான். இருவரின் சைக்கிளும் ஒரே வேகத்தில் பிரயாணிக்கின்றன. அதாவது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகம். இருவரின் வீடும்
20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இருவரும் இடையில் 10 வது கிலோ மீட்டரில் சந்திப்பார்கள்.
ஜான் சைக்கிளில் கிளம்பியபோது அவனுடனே சேர்ந்து அவனுடைய கிளியும் பறக்கிறது. சைக்கிள் செல்லும் பாதையிலேயே செல்கி
றது. அவன் டேவிட் வீட்டுக்குத்தான் செல்கிறான் என்று அதற்குத் தெரியும். அது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதால்
சைக்கிளுக்கு முன்னே செல்கிறது. வழியில் டேவிட்டைப் பார்த்து அவன் சைக்கிளைத் தொட்டுவிட்டு மீண்டும் ஜானிடம் வருகிறது.
ஜானைத் தொட்டுவிட்டு மீண்டும் டேவிட்டை நோக்கிச் செல்கிறது. நண்பர்கள் இருவரும் சந்திக்கும்போது கிளி எத்தனை கிலோ மீட்டர்
தூரம் பறந்திருக்கும்? -இதுதான் புதிர்.
இரண்டு நண்பர்களும் சைக்கிளில் நகர்ந்து கொண்டே இருப்பதால் கிளி ஒவ்வொரு முறையும் எத்தனை கிலோ மீட்டர் பறந்த பிறகு
நண்பர்களை அடைந்தது என்பதைக் கணக்கிடுவது கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து அது எத்தனை முறை நண்பர்களுக்கு இடையே
பறந்தது என்று கணக்கிடுவதில் மண்டைக் காய்ந்து போய் தோல்வியை ஒப்புக் கொண்டேன்.
உண்மையில் புதிருக்கான விடை அந்தக் கேள்வியிலேயே இருந்தது.
நண்பர்கள் இருவரும் பத்து கிலோ மீட்டர் தூரம் பிரயாணித்தனர் என்றால் அவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தார்கள் என்று
அர்த்தம். ஏனென்றால் அவர்கள் பிரயாண வேகம் மணிக்கு பத்து கிலோ மீட்டர்.
அதே போல் கிளியும் ஒரு மணி நேரம்தான் பிரயாணித்ததும் ஒரு மணி நேரம்தான். அதனுடைய வேகம்தான் கேள்வியிலேயே இருக்
கிறதே?
இதைப் பற்றி ஒரு கிளைக் கதையும் உண்டு. இந்த நூற்றாண்டின் அமெரிக்க கணித மேதை ஜான் வான் நியுமன் என்பவரிடம் இந்தப்
புதிரைச் சொன்னபோது அவர், சிறிது நேரம் கண்ணை மூடிச் சிந்தித்துவிட்டு உடனடியாக பதிலைச் சொன்னார். புதிரைச் சொன்னவர்
"புதிரின் கேள்வியிலேயே விடை இருப்பது தெரியாமல் நிறைய பேர் வீணாகக் கணக்குப் போட்டு தோல்வியைத் தழுவுகிறார்கள்''
என்றாராம்.
நியுமன் "புதிரிலேயே விடையா? நான் கணக்குப் போட்டுத்தான் சொன்னேன்'' என்றாராம்.
நியுமன் ஒரு நாற்பது பக்க நோட்டு முழுக்க கணக்குப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விடையை ஒருசில வினாடியில்
கண்டுபிடித்துவிடக் கூடியவராக இருந்தார் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.
ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட் என்ற சுவையான கதையைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ரொம்ப டயம் ஆகிவிட்டது என்று முயல்
ஒன்று ஓடும். ஆலிஸýக்கு ஆச்சர்ய மேற்படுத்தும் அந்த உலகைச் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். அதை எழுதிய லூயிஸ் காரல் ஒரு
கணித மேதை. லாஜிக் கணிதத்தில் விற்பன்னர். கதையிலும் அப்படி நிறைய லாஜிக் விவாதம் வரும். ஒரு உதாரணம் தந்திருக்கிறார்
இரா. நடராசன். அதில் வரும் சூனியக்காரன், ஆலிஸிடம் "நான் உனக்கு ஒரு கவிதைத் தருகிறேன். அதைப் படித்தால் உனக்குக் கண்
ணீர் வரும், அல்லது..'' என்கிறான்.
"அல்லது?'' என்கிறாள் ஆலிஸ்.
"வராது'' என்கிறான்.
இரண்டு வாய்ப்புகளை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.
புத்தகத்தை முடித்ததும் நடராசன் எனக்கு கணக்கு வாத்தியாராக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. அல்லது இந்தப் பு
த்தகத்தையாவது அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது.
கணிதத்தின் கதை
இரா.நடராசன்
ரூ. 50
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாமம்பேட்டை,
சென்னை-18
-தமிழ்மகன்
'கார்ட்டூனில்
ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை
நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது,
என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என்
தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும்
மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.
சமீபத்தில் 'மருதா
' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 'மயில்வாகனன் ' மற்றும் கதைகள் என்ற
சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே
தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள
இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும்.
தொனியும், 'மாஜிக்கல் ரியலிஸம் ' என்று வகைப்படுத்தப்படும் பாணியில்
அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல்
போக்குகளை சுட்டுவதாகவும். 'நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ்
வண்டியின் கடைசிப் பெட்டி '. 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு '.
'டினோசர் - 94 '. 'ஒரு வரலாற்றுக் கதை '. 'பூப்போட்ட ஜட்டியணிந்த
குழந்தைகள் '. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம்
தருகின்றன,
'துரோகத்தின் நிழல் '. 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ' முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,
நிலவும்
தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு
அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த
படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து
வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில 'இலக்கிய
அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான
அமைப்புகளில் ஒன்றான 'வெளி 'யின் சார்பில் சமீபத்தில் 'அஜயன்பாலாவின் '
கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன்.
சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. 'மருதா '
பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே
அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம்
கூட எடுக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது,
'வெளி '
இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'வெளி ரங்கராஜன் ' நூலிலுள்ள கதைகளைப் பற்றிய
தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக்
காட்டிலும் 'ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத்
தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக்
குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே 'வெளி
'யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன
இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு
தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. 'மாய யதார்த்தம் ' வகையான கதைகளை
எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும்
இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு 'ஆன்மா '
உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் 'வெற்று வார்த்தை ஜாலமாகப்
போய்விடும் அபாயமுண்டு ' என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க
இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன்
தொடர்பாக அவர் கூறிய 'குட்டி டினோசார் ' கதை எல்லோர் கவனத்தையும்
கவர்ந்தது, அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால்
அஜயன்பாலாவின் 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ' போன்ற கதைகளை
கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை
கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும்
அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை
வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட
எழுத்தாளர் 'பால்நிலவன் ' அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து
ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார்,
கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள்
உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற
நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில்
'திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி
இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ', இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது
கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற
படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது
தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம்
முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு
உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்,
செல்வேந்திரன் இரண்டொரு நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.....
"வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்.
அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். " என்று சொல்லியிருந்தார்.
செல்வா... பிடியுங்கள் பாராட்டை!
அந்த நண்பருக்கு ஊக்கமளித்தமைக்காக மட்டுமல்ல... எங்களையும் இரண்டொரு நாள் பழைய நினைவுகளைப் புரட்டிப் போட வைத்தமைக்கு!
மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன்.
இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக் குறிப்பிட நினைத்தேன். பலபேர் படிக்கச் சொல்வதால். ஆனால் நான் இன்னும் படிக்காததால் குறிப்பிடவில்லை.
வாழ்க்கை, ஆன்மீகம், கவிதை, கட்டுரைகள், சினிமா என்று வாசிப்புத்தளம் விரிவடைய எல்லாத் துறைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கிறேன்.
இனி.. பட்டியல்....
1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்
ஆன்மிகம் என்பது ஒரு நெடிய பயணம். முடிவிலி. அந்தப் பயணத்தில் உங்களுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு இதில் பல கோணங்களில் விடையிருக்கும்... நிச்சயமாக. அதுவும் இடைவெளி விட்டு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறாக உங்களுக்குள் கதவு திறக்கும்!
2. எல்லார்க்கும் அன்புடன் – கல்யாண்ஜி
வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!
3. வனவாசம்,மனவாசம் – கவியரசு.கண்ணதாசனின் சுயசரிதை
கண்ணதாசனின் சுயசரிதை, வாலியின் சுயசரிதை (நானும் இந்த நூற்றாண்டும்) இரண்டுக்கும் நடந்த ரேஸில் சந்தேகத்துக்கிடமின்றி கவியரசர் வென்றுவிட்டார். காரணம் தமிழக அரசியல் குறித்தும், திரைப்படத் துறை குறித்தும் நீங்கள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள இது உதவும். இரண்டு பாகங்களையும் ஒன்றென குறிப்பிட்டு விட்டேன்!
4. கோணல் பக்கங்கள் 1,2,3 – சாருநிவேதிதா.
சாருவைப் பிடிக்காது என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் நிச்சயமாக படித்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத எழுத்து சாருவுடையது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்தக் கோணல்பக்கங்கள். இதிலிருப்பது இப்போதைய சாரு அல்ல. அப்போது அவரது எழுத்தில் இருந்த குறும்பும், கோபமும் இப்போது வேறு வடிவம் கொண்டதன் விளைவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்! (நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)
5. சத்தியசோதனை – மகாத்மா காந்தி
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பதை எழுதுவதை விட நீங்களாகப் படித்துத் தெரிந்து கொள்வது நலம். காரணம் நிச்சயம் நீங்கள் நூலகம் எல்லாம் வைத்து ஒரு வாசிப்பாளனாகக் காட்டிக் கொள்ளும்போது பல விவாதங்களில் காந்தி அடிபடுவார். (என்ன முரண்! அகிம்சைக்காரர் அடிபடுகிறார்!) படித்து விட்டு விமர்சித்தால் உங்களுக்கு சௌகரியம்... காந்திக்கும்!
6. கதாவிலாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்
முக்கியமாக எஸ்.ரா-வின் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடக் காரணம், இது ஒன்றைப் படித்தால் இன்னும் 50 புத்தகங்கள் வாங்க அவரைத் தூண்டும். தமிழில் தவிர்க்கவே முடியாத ஆளுமை கொண்ட 50 எழுத்தாளர்களைக் குறித்து அதில் அவர் எழுதியிருக்கிறார். 50 இல்லையெனினும் 20 எழுத்தாளர்களைத் தேடி ஓடுவது உறுதி.
7. பொன்னியின் செல்வன் – கல்கி
வரலாற்று எழுத்து அதிலும் ஒரு க்ரைம் நாவலுக்குரிய ஸ்பீடு, சஸ்பென்ஸ், பாத்திரப் படைப்புகள்...! பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு, சிவகாமியின் சபதத்தை தேடிப் போகாமலா இருப்பீர்கள்?!?
8. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியன்
ரொம்ப போரடிக்கிற எழுத்து. ஆனால் நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை நாகரிகங்களில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன என அறிய இதிலுள்ள 20 கதைகள் உதவும்.
9. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி.ரங்கராஜன்
அற்புதமான ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். அலுவலகத்தில், வீட்டில், சமூகத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டால் முன்னுக்கு வரலாம் என்பது ரொம்பப் பிராக்டிகலாக எழுதப்பட்டிருக்கும். படித்தால் நிச்சயம் ‘ஓ.. அவன் முன்னேறினது இதே மாதிரிதான்ல’ என்று யாரையாவது ஒப்பிட்டுக் கொள்வீர்கள்.
10. உலகசினிமா 1,2 – செழியன்
வாசிப்பு என்று தளம் விரிவடையும்போது சினிமா குறித்த அறிவு தவிர்க்க முடியாதது. அதற்கு உலகசினிமாக்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகத்தைப் படித்து இவற்றிலுள்ளவற்றில் 30% படங்களைப் பார்த்தாலே ஓரளவு சினிமாவை ரசிக்க... அதாவது எப்படி ரசிக்க என்பதை அறிந்து கொள்வீர்கள்.
****
மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.
மிக முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்...
நிச்சயமாக ‘அட.. இத விட்டுட்டோமே’ என்று நினைக்கத்தான் போகிறேன்.. ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து. அதேபோல இதிலுள்ள எல்லாமே உங்கள் எல்லாருக்குமே பிடித்ததாய் இருக்காது. ஆனால் எல்லாருக்குமே பத்தில் ஏதோ ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்குமென்று நம்புகிறேன். நீங்கள் நினைக்கும் புத்தகம் வேறெதுவும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
இதைப் பதிவாக எழுதக் காரணம் எனக்கும் ஒன்றிரண்டு நண்பர்கள் ‘புதிதாகப் படிப்பதென்றால் என்ன புத்தகங்கள் வாங்க?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ‘நானெல்லாம் அதைச் சொல்வதா’ என்ற காரணத்தால் பதிலளிக்காமலே இருந்திருக்கிறேன். என்னமோ நானெழுதுவதையும் எழுத்தென்று படிக்கும் சிலர் மீண்டும் மீண்டும் கேட்கும்போது சுட்டி கொடுக்க இந்தப் பதிவு எனக்கு உதவும். அதுவுமில்லாமல் செல்வேந்திரன் சார்பாக எங்கள் ஊர்க்காரர் ஈரவெங்காயம் சிங்கப்பூர் விமான டிக்கெட் பரிசு தருகிறேனென்றிருக்கிறார். போய்த்தான் பார்ப்போமே....!
மண்ணைக் கொத்தி
பாத்தி கட்டி
கம்பி வேலி இழுத்துக் கட்டி
ஆசைக் கனவோடு
நட்டுவைத்தேன்
விதவிதமாய்ப் பூஞ்செடிகள்
நட்டு வைத்த பூஞ்செடிகளெல்லாம்
வாடி நிற்க
பார்த்தறியாச் செடியெல்லாம்
பளிச்சென ஒருநாள்
பூத்துக் குலுங்கின
வேலிக்கு வெளியே
இந்தக்
கவிதையையும் கொண்டு, ’மழை வரும் பாதையில்..’ என்னும் கவிதைத் தொகுப்பு
வெளியாகி இருக்கிறது. எழுதியவர் கிருஷி என அழைக்கப்படும்
திரு.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கோணங்கி
போன்றவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இலக்கியப் பரிச்சயமும், எழுத்துக்கள்
அறிமுகமும் செய்தவருமான, அறுபதைத் தாண்டிய இளமைத் துடிப்போடு கூடிய
கிருஷி. மிக இயல்பான நட்பும், நுட்பமான உறவும் கொண்டாடுகிற மனிதர்.
மார்ச்
10ம் தேதி அவரது ‘மழை வரும் பாதையில்..’, திருநெல்வேலி ஜானகிராம் ஓட்டலில்
வைத்து நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில்
வெளியிடப்பட்டது. இலக்கிய விமர்சகர் திரு. தி.க.சி அவர்கள் வெளியிட,
எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் உதயசங்கர்,
தோப்பில் முகமது மீரான், பேராசிரியர்.தொ.பரமசிவம், டி.தருமராஜன் மற்றும்
நான் வாழ்த்திப் பேசினோம். கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய
எழுத்தாளர் வண்ணதாசன் வந்து பார்வையாளர்களோடு உட்கார்ந்து ரசித்தார்.
கடல்
அலையாய், கடலுக்குள் யுகம் யுகமாய் தவமிருக்கும் ஒற்றை பாறையாய், பயணி போல
வந்து செல்லும் ஒளியாய் கிருஷி இந்தக் கவிதைகளுக்குள் காட்சியளிக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலானது அன்பும் எளிமையும் என்பதை திரும்பத் திரும்ப
அவர் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். இயற்கையோடு இயைந்த வெளியில்
சஞ்சரிப்பதில் அவருக்கு அலாதியான சுகம் இருக்கிறது. கவிதை தொகுப்பு இன்றைய
உலகில் அமைதியை தேடும் ஒரு மனிதனின் குரலில் இறங்குகிறது நமக்குள்.
நிறைசூலியாய் நிற்கும்
வேம்பின் வாசத்தில்
வயல்வெளிக்கு மேல்
கைவீசி வரும்
நிலவைப் பார்த்தபடி
குத்த வைத்திருக்க வேண்டும்
கொஞ்ச நேரம்
முதுகைச் சாய்த்தபடி
மண் சுவற்றில்
000
எவ்வளவு காலப் பழக்கம்
நமக்குள்
ஏதேனும் ஒரு புள்ளியில் கூட
சந்திக்க முடிவதில்லையே
இப்போதெல்லாம்
நண்பனே
000
குழந்தைக்கும் தெரிகிறது
தாய்க்கும் தெரிகிறது
நிலவின் மொழி
000
வேற்றுச் சூரியக் குடும்பத்தின்
பார்த்தறியாச் சகாக்களோடு
இணைய தளத்தில்
சதுரங்கம் ஆடலாம்
நாளைய நூறாண்டில்
இருக்கட்டும்
இன்று என்ன செய்யப் போகிறோம்
000
மேலெல்லாம் வழிய வழிய
அள்ளி அள்ளிப்
பருகினேன் ஆவலோடு
தண்ணீரை
“நான்” கரையக் கரைய
நதியானேன்.
000
அற்புதமானக்
கவிதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு காதல் கவிதை கூட இல்லாதது முக்கியமான
விஷயமாக இருக்கிறது. கிருஷியிடம் கேட்டேன். ஆமாம் என்று சிரித்துக்
கொண்டார். அவரைப் பற்றி முன்னுரையில் வண்ணதாசன் மிக உண்மையாகச்
சொல்கிறார்.
"அவருக்கு எல்லோரும் சார்வாள் அல்லது சாரே!. அது எப்படி ஒரு ஆளின் கையையோ,
தோளையோ தொடாமல், வெறும் குரலாலும், அழைப்பாலும் எல்லோரிடமும் ஒரு
நெருக்கத்தை உர்வாக்கிவிட முடிகிறது இவருக்கு. இந்த முப்பது,
முப்பத்தைந்து வருடப் பழக்கத்தில் அவருடைய தாடி எவ்வளவு அழகாக
நரைத்திருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சிந்து
பூந்துறைக்கு, த.மு.எ.ச விலிருந்து தம்மபதம் வரை, ஹோட்டல் ஜானகிராம் காஃபி
மாஸ்டர் பண்டாரத்திலிருந்து இயறகை வேளாண்மை நம்மாழ்வார், ஒவியர் சந்ரு,
எடிட்டர் லெனின், திலகவதி ஐ.பி.எஸ், பேராசிரியர் ஞானசம்பந்தன், இயக்குனர்
ராஜேஸ்வர், டாக்டர் ஏக்னஸ் என்று எல்லைகளை விரித்துக்க்கொண்டே போகிற மனது
அவருடையது. தச்சை ராஜா கையும், இசக்கி அண்ணாச்சி கையும், கிராஜுவேட் காபி
பாரில் வேலை பார்க்கிற வ.உ.சி கையும் அவருக்கு ஒன்றுதான்.”
அவரது கவிதை வரிகள் குறித்து கல்யாண்ஜி சொல்கிறார்....
தன்னைத்தானே
ஏந்திக்கொண்டு ராமகிருஷ்ணன் அவருடைய கவிதைகளில் வருகிறார்.எந்த ஒரு
வரியின் மேலும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சுப்
பட்டுப்பூச்சி போல, நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து
விட்டுப் போகிறார். புதுத் தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப்
பிறகு, மருந்துப் பெட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது
போல ஒரு வரி. அரசு பொது மருத்துவமனை பக்கத்து வேப்ப மர நிழலின் கீழ்
கவலையோடு உட்காந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு
வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற வெயில் மாதிரி
சில வரிகள்.
கவிதைத் தொகுப்பின் மீதான கல்யாண்ஜியின் பார்வை...
இன்றைய
பூமி, இன்றைய இயற்கை, இன்றைய மனிதர், இன்றின் வாழ்வு குறித்து மட்டுமே
கவனம். அந்த கவனமே கவிதை. இன்றைய நவீன கவிதை அல்லது கவிதை எந்த இடத்தில்
நிறகிறது, தான் எந்த இடத்துகுச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப்
பற்றியெல்லாம் யோசனையற்ற இயல்பான சிறகடிப்பு. நமக்குத்தான் இது மைனா, இது
சிட்டுக்குருவி, இது பருந்து. வானத்துக்கு எல்லாம் பறவைகள்தாம்.
முடிந்தால் வாங்கிப் படியுங்கள்.
வெளியீடு:
வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை
விலை.ரூ.60/-
ரிச்சர்ட் பெயின்மென
அறிவியலில்
உயர் ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். சேர்ந்து
காபி குடிக்க சென்றோம். வழியில் பேசிக் கொண்டிருந்த போது ரிச்சர்டு
பெயின்மெனை (Richard P. Feynman )எனக்கு பிடிக்கும். அவரை விரும்பி படித்திருக்கிறேன் என்று சொன்னேன்.
அவரால் நம்ப முடியவில்லை. வியப்புடன் நீங்கள்
பெயின்மெனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள். எழுத்தாளர்களுக்கும்
விஞ்ஞானத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்று தான்
நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும் அந்த இடைவெளி அப்படியே
தானிருக்கிறது. எனக்கும் பெயின்மேனின் இயற்பியல் உயர்தத்துவங்கள் பற்றி
எதுவும் தெரியாது.
நான் வாசித்திருப்பது அவரது கட்டுரைகளை. அதுவும் சுயசரிதைக் கட்டுரைகளை , குறிப்பாக . Surely You're Joking, Mr. Feynman! What Do You Care What Other People Think?: என்ற
புத்தகங்களை பலமுறை வாசித்திருக்கிறேன். மிக அற்புதமான எழுத்து அவருடையது.
படிக்க சுவாரஸ்யமும் உள்ளார்ந்த கேலியும் கொண்டிருக்கும். நண்பரின் மானசீக
குரு பெயின்மென் தான் என்பது அவர் பேசப்பேச புரிந்தது.
அவரே சொன்னார் நான் மட்டுமில்லை. ஐஐடி மற்றும் ஐஐஎஸ்
வட்டாரத்தில் பெயின்மென் மீது ஆதர்சம் கொள்ளாதவர்கள் குறைவு. அவர் ஒரு
மேதை , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்று புகழ்ந்து கொண்டேயிருந்தார்.
1965ம்
ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட்
பெயின்மென். அமெரிக்காவின் அணுஆய்வு சோதனையில் முக்கிய பங்கு
வகித்திருக்கிறார். இயற்பியல் ஆய்வுகள் குறித்து நிறைய உரைகள்
நிகழ்த்தியிருக்கிறார்.
நான் பெயின்மென் பற்றிய எவ்விதமான அறிமுகம் இன்றி
அவரது புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலும் குறிப்பாக யூ ஆர்
ஜோக்கிங் மிஸ்டர் பெயின்மெனை படித்த போது அவரது இயற்பியல் சாதனைகள்
எதையும் அறிந்திருக்கவில்லை.
அந்தப் புத்தகம் விஞ்ஞானி ஒருவர் சொந்த வாழ்வில் மேற்கொண்ட சாகசங்கள், சண்டைகள், ஆர்வங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் பற்றியது.
குறிப்பாக பெயின்மெனுக்கு பூட்டை திறப்பது என்றால்
ரொம்பவும் பிடிக்கும். எந்த பூட்டையும் அவர் கண்ணில் பார்த்த
மாத்திரத்தில் அது என்னவகையான பூட்டு அதை எப்படி திறப்பது என்று யோசிக்க
ஆரம்பித்துவிடுவார். எவ்வளவு சிக்கலாக வடிவமைக்கபட்ட பூட்டையும் அவரால்
திறந்துவிட முடியும்.
அப்படியொரு முறை அவர் அமெரிக்க அணுஆய்வு திட்டத்தில்
பணியாற்றிய போது அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றிய முக்கிய ஆவணங்களை
ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு
சென்றிருந்தார்கள். பெயின்மென் அந்த பூட்டை திறந்து அதிலிந்த தகவல்களை தன்
விட்டிற்கு எடுத்துபோய் படிக்க ஆரம்பித்தார். எங்கே அவர்கள் தேடுவார்களோ
என்று நினைத்து அதே பாதுகாப்பு பெட்டகத்தில் தனது அடையாள அட்டையை
வைத்துவிட்டு வந்துவிட்டார். இதை அவர் விவரிக்கும் அழகிருக்கிறதே அத்தனை
நகைக்சுவை.
இது போலவே பெயின்மென் ஒரு மதுவிடுதிக்கு போகிறார்.
அங்கே துருதுருவென ஏதாவது செய்ய வேண்டும் போலிருக்கிறது. மிதமான போதையை
ஏற்றிக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு ஆளின் முன்னால் போய்
நின்று அந்த ஆளின் முகத்தில் ஒங்கி ஒரு குத்து குத்திவிட்டு வருகிறார்.
அந்த ஆள் நிலைகுலைந்து போகிறான்.
சில நிமிசங்களில் பணியாளர் ஒடி வந்து எதற்காக அந்த ஆளை
அடித்தீர்கள் அவன் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி
வந்திருக்கிறான் என்று சொல்ல பயந்து போன பெயின்மேன் ஏதாவது சொல்லி சமாளி
என்று ஒரு ஐம்பது டாலரை அவனிடம் தருகிறார்.
உடனே பணியாளரும் நீ கதவை நோக்கி நடந்து போகும் போது
திரும்பி திரும்பி பார்த்தபடியே போ. மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்
என்கிறான். பெயின்மென் அப்படியே செய்கிறார்
அந்த ரௌடியின் அருகில் போய் உன்னை அடித்தவன் இப்போது
தான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்திருக்கிறான். வேறு ஒருவன் என்ற
நினைத்து அடித்துவிட்டான் என்று காசை தந்து சமாளிக்கிறான். பெயின்மென்
அங்கிருந்து தப்பியோடுகிறார். அதன் பிறகு பல ஆண்டுகாலம் அந்த பார் பக்கம்
போகவேயில்லை.
இன்னொரு சமயம் பிக்பாக்கெட் அடிப்பது மீது ஆசை அதிகமாகி
அதை கற்றுக் கொள்வது என்று முடிவு செய்து பிக்பாக்கெட்காரனிடம் உதவியாளராக
சேர்ந்து தொழிலை கற்றுக் கொள்கிறார். பேண்ட் வாசிப்பதில் ஆர்வமாகி
ஒருஇசைக்குகுழுவில் சேர்ந்து பேண்ட் வாசிக்கிறார். ஒவியம்
கற்றுக்கொள்வதில் ஆர்வம் உண்டாகி தொடர்ந்து பயிற்சி செய்து நவீன
ஒவியராகிறார்.
ஒரு நாள் பெண்களை எப்படி வசீகரிப்பது என்று ஒரு
மாணவனிடம் கேட்டதும் அவன் மாலையில் பாருக்கு வாருங்கள் கற்று தருகிறேன்
என்கிறான். அவரும் போகிறார். அவன் முதலில் இப்படி டிரஸ் பண்ணினால் எந்த
பெண்ணும் உங்களை பார்க்கமாட்டாள் என்று அவரது உடையை கலைத்துவிடுகிறான்.
பிறகு எந்த பொண்ணை பார்த்தாலும் ஹாய் என்று சொல்லுங்கள்.
அதிலேயே பிக்அப் ஆகிவிடும். இல்லாவிட்டாலும்
கையசைத்தபடியே இருங்கள். யாராவது பதிலுக்கு சிரிப்பார்கள். உடனே அருகில்
போய் என்னோடு குடிக்க விருப்பமா என்று கேளுங்கள். வந்துவிடுவார்கள்.
அப்படியே உங்கள் விசிட்டிங்கார்டை தந்து விரும்பும் போது அறைக்கு வரலாம்
தனியாக தான் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் ,பெண்கள் தானே
மயங்கிவிடுவார்கள் என்று ஆலோசனை தருகிறான்.
அது போலவே பாரில் ஒரு பெண்ணை பார்த்து ஹாய்
என்கிறார்.அவளும் ஹாய் என்கிறார். உடனே அவர் குடிக்க அழைக்கிறார்.
விசிட்டிங்கார்டு தருகிறார். அவளும் வருவதாக ஒத்துக் கொள்கிறார்.
மாணவனுக்கு நன்றி சொல்ல போகையில் அவன் கோபப்பட்டு நீ பழகுவதற்கு என்னுடைய
தங்கை தான் கிடைத்தாளா என்று கத்துகிறான்.
இப்படி அவரது வாழ்வில் உள்ள சுவாரஸ்யங்களை மிக அழகாக எழுதியிருக்கிறார்.
பொதுவாக விஞ்ஞானிகள் என்றாலே யாரோடும் பேசாதவர்கள்.
அறிவுஜீவிகள் என்ற தோற்றமிருக்கிறது. குறிப்பாக அவர்களுக்கும் இசை,
இலக்கியம், கலை போன்ற துறைகளுக்கும் எந்த தொடர்புமிருக்காது என்றே பிம்பம்
உள்ளது.
நான் அறிந்தவரை அது பொய்யானது. விஞ்ஞானிகளை போல ஆழமாக இசையை, இலக்கியத்தை ரசித்தவர்களை கலைஉலகில் கூட கண்டதில்லை.
ஐன்ஸ்டீன் தீவிரமான புத்தகவாசிப்பு அனுபவம் கொண்டவர். நல்ல இசை ரசிகர். செவ்வியல் இசை குறித்த அவரது கட்டுரைகள் அற்புதமானவை.
குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவரது பார்வை மிக சிறப்பானது. அவரே குறிப்பிடுவது போல Dostoevsky gives me more than any scientist, more than Gauss." ."
விஞ்ஞானத்தின்முன்னோடி கருத்துகள் இலக்கியத்தில் பதிவாகி உள்ளன.
இந்தியாவை
சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சுப்ரமணியம் சந்திரசேகர் பீதோவன்,
நியூட்டன் மற்றும் ஷேக்ஸ்பியர் மூவரையும் ஒப்பிட்டு அவர்களின் படைப்பு
ஆளுமையை Truth and Beauty: Aesthetics and Motivations in Science நூலில் விவரிக்கிறார். மிக சுவாரஸ்யமான புத்தகமது.
இது போலவே கார்ல் சாகன் என்ற வானவியல் விஞ்ஞானி
எழுதிய பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் வானவியல் விஞ்ஞானத்தின் வரலாறு
போன்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அற்புதமான எழுத்து முறை கொண்டவர்.
இருபதிற்கும் மேலான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் கான்டாக்ட் என்ற
நாவல் குறிப்பிடத்தக்கது. அதை ஹாலிவுட்டில் ராபர்ட் ஜமைக்காஸ்
படமாக்கியிருக்கிறார்.
தற்போதுள்ள விஞ்ஞானிகளில் ரிச்சர்டு டௌகின்ஸ் என்ற பிரிட்டானிய விலங்கியல் விஞ்ஞானி எழுதிய The Selfish Gene, The Blind Watchmaker, போன்ற புத்தகங்கள் வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் எளியது. அத்துடன் ஆழமான கருத்துகளையும் நவபார்வையும் கொண்டதாகும்.
மற்றொருவர் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகின்ஸ். அவர் எழுதிய A Brief History of Time
புத்தகம் காலத்தின் சரித்திரத்தை கூறுகிறது. இதை முழுமையாக ஒருவர்
புரிந்து கொண்டுவிட்டால் அவர் டாக்டர் பட்டதற்கு சமமாகிவிடுவார்
என்கிறார்கள். அவ்வளவு சிக்கலான விஷயத்தை ஹாகின்ஸ் குழந்தைக்கு சொல்வது
போல அத்தனை எளிதாக எழுதியிருக்கிறார்.
அதிலும் விஞ்ஞானிகளின் புத்தகங்களை ஆக்ஸ்போர்ட்
கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் போது இவர் ரயில்நிலையங்களில்
கூட கிடைக்க கூடிய காமிக்ஸ், மற்றும் ஜனரஞ்சக புத்தகம் வெளியிடும் பாண்டம்
பதிப்பகத்தில் தன்னுடைய விஞ்ஞான நூலை வெளியிட்டிருக்கிறார். ஒரு கோடி
பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகி உள்ளது இந்த புத்தகம். காலம் மற்றும்
கருந்துளை குறித்த விரிவான ஆய்விலிருந்து வெளியானதே இந்த நூல்.
பெயின்மெனின் புத்தகம் அவர் சொல்லி Ralph Leighton
எழுதியது. ஐந்து லட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள இந்த புத்தகம்
பதினாறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இவை தவிர அவரது முக்கிய புத்தகங்களாக The Pleasure of Finding Things Out , The Feynman Lectures on Physics.. இரண்டையும் குறிப்பிடலாம்.
பெயின்மெனின் மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார். அதன்
பிறகு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். தனது மகள் மற்றும் வளர்ப்பு
மகளுடன் ஊர் சுற்றி மனம் விரும்படியாக வாழ்க்கையை செலவிட்டார் .
கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அப்பா மகன் இருவரும் கணினி உலகில்
நுழைந்து ஆய்வுமேற்கொண்டார்கள். சலிக்காத பயணங்கள் , நடைமுறை வாழ்வில்
சாசகம் செய்வது இதுவே அவரது இயல்பு. அவரை டான்குவிகாத்தே என்று நண்பர்கள்
கேலி செய்திருக்கிறார்கள்.
அவரையும் புற்றுநோய் தாக்கியது. அறுவை சிகிட்சை
செய்து கொண்டார். ஆனாலு அவரது உடல்நலம் முழுமையாக தேறவில்லை. 1988
பிப்ரவரியில் இறந்து போனார். பெயின்மேன் வாழ்க்கையை வேடிக்கையான
விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். விஞ்ஞானத்தை பயமுறுத்தும் விஷயமாக
இல்லாமல் மக்கள் வாழ்வோடு கலந்த ஒன்றாகவே கருதினார்.
ஒரு நாள் பெயின்மென் நண்பர் ஒருவர் வீட்டில் தேநீர்
அருந்தும் போது அவரது மனைவி தேநீரில் பால் கலக்கவா அல்லது எலுமிச்சைபழமா
என்று கேட்டார். ஏதோ யோசனையில் இரண்டும் என்று பெயின்மேன் பதில்
சொல்லியிருக்கிறார். பாலில் எலுமிச்சை கலந்தால் திரிந்து போய்விடும்
என்பதை மறந்து அவர் சொன்னதை கேட்டு வியப்படைந்த பெண் சொன்னது தான் Surely You're Joking, Mr. Feynman! . அதுவே அவரது புத்தகத்தின் தலைப்பாகியது.
ஒரு முறை அவர் வழக்கமாக குடிக்கும் பார் இரவில்
நெடுநேரம் திறந்து வைக்கபட்டிருக்கிறது. அங்கே சட்டஒழுங்கு
பராமரிக்கபடவில்லை என்று மூடுவதற்கு கோர்ட் ஆணையிட்டது.
கோர்டில் ஒரு குடிகாரன் என்ற முறையில் பெயின்மென்
ஆஜராகி மதுவிடுதிகள் எளிய மக்களின் சந்திப்பு வெளி. அங்கே பேராசிரியர்,
லோக்கல் ஆள், படித்தவன் படிக்காதவன் அனைவரும் சமம். குடிப்பவர்கள் ஒருவர்
சந்தோஷத்தை மற்றவருக்கு பகிர்ந்து தருகிறார்கள். ஆகவே அதை தடை செய்ய
கூடாது. குடிப்பதற்கு நேரம் காலம் எதற்கு என்று வாதாடினார். முடிவில் அந்த
கேஸ் வெற்றி பெற்று பார் மீண்டும் திறக்கபட்டது
இப்படி பெயின்மேன் என்ற விஞ்ஞானி தான் நோபல் பரிசு
பெற்றவன். மற்றவர்களை விட பெரிய புத்திசாலி என்பதை தூக்கி வைத்துவிட்டு
வாழ்க்கையை கொண்டாடியிருக்கிறார். இதற்காகவே அவரை தேடித்தேடி வாசிக்கிறேன்
என்று சொன்னேன்
விடைபெறும் போது நண்பர் ரிச்சர்டு பெயின்மேன் வாழ்வினை பற்றி Infinity என்றொரு படம் வந்திருக்கிறது. அனுப்பி வைக்கிறேன். பாருங்கள் என்று சொல்லி போனார்.
பெயின்மேனின் படத்தை காண்பதற்காக காத்துக்
கொண்டிருக்கிறேன். இன்னொரு முறை பெயின்மேன் புத்தகத்தையும் படிக்க ஆர்வமாக
இருந்தது. புத்தக குவியல்களுக்குள் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டும்.
தேடும்போது தான் அதை யார் எடுத்து போயிருக்கிறார்கள்.
எங்கே என்ற விபரங்கள் நினைவிற்கு வரும் . உலகில் மிக சிரமமானது
புத்தகங்களை காப்பாற்றி வைப்பது தான். ஆனாலும் புத்தகத்தின் விதியே அது
இடம்மாறி போய்க்கொண்டேயிருப்பது தானே.
Richard Templer
Rules of Work
Rules of Management
Rules of Life
Rules of Wealth
Rules of Money
Rules of Parenting
-----------------
எதுவும் செய்யலாம், தவறில்லை
உலகம்
உன்னை நேசிக்கவேண்டும். உன்னைக் கண்டு பயப்படவேண்டும். இந்த இரண்டும்
கைகூடிவிட்டால் உன்னை அடித்துக்கொள்ள யாரும் இல்லை. நேசிப்பரைக் கண்டு
எப்படிப் பயப்படமுடியும்? யாரைப் பார்த்து பயப்படுகிறோமோ அவரை எப்படி
நேசிக்கமுடியும்? இந்த சந்தேகம் உனக்கு வந்தால், இரண்டில் ஒன்றை மட்டும்
தேர்ந்தெடுத்துக்கொள். உன்னைக் கண்டு உலகம் பயப்பட்டால் போதுமானது.
நேசிப்பு அநாவசியம்.
மாக்யவல்லியின் அரசியல் சித்தாந்தத்தை
இப்போது வாசிக்கும்போது, அதிகம் அதிர்ச்சியடையமுடியவில்லை. ஐயோ
இப்படியெல்லாமா பட்டவர்த்தனமாக அறிவுறுத்துவார்கள் என்று நம் நெஞ்சம்
பதைபதைப்பதில்லை. பழகிவிட்டது. மாபெரும் யுத்தங்களை, மாபெரும் அழிவுகளை,
மாபெரும் வீழ்ச்சிகளை நாம் சந்தித்துவிட்டோம். மாக்யவல்லி எவற்றை கனவு
கண்டாரோ அவற்றை நம் அரசியல் தலைவர்கள் செயல்படுத்திவிட்டார்கள். இன்னமும்
செயல்படுத்திக்கொண்டார்கள்.
முழுப்பெயர் நிகோலோ மாக்யவல்லி
(Niccolo Machiavelli). இத்தாலியர். தத்துவஞானி. நாடகங்கள், கவிதைகள்
எழுதியிருக்கிறார். இத்தாலிய அரசாங்கத்தில் உயர் பதவி. வரலாறு, ராணுவம்,
அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் அதிகம். மாக்யவல்லியின் படைப்புகளில்
அதிகப் பிரசித்தி பெற்றது தி பிரின்ஸ் (The Prince). எழுதி முடித்ததும்,
தனிச்சுற்றுக்கு சில பிரதிகள் எடுத்து நண்பர்களிடம் மட்டும் நூலைக்
காட்டியிருக்கிறார். முழுமையான முதல் பதிப்பு முதலில் அவரது மரணத்துக்குப்
பிறகே வெளிவந்தது. 1530ம் ஆண்டில்.
அதிகாரத்தை எப்படி
கைப்பற்றுவது? எப்படித் தக்கவைத்துக்கொள்வது? அதிகாரத்தால் என்ன பயன்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் தி பிரின்ஸை
அமைத்திருக்கிறார் மாக்யவல்லி. இளவரசர்களுக்காக எழுதப்பட்ட அரசியல்
சாசனம். சரி, அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவதாம்? மாக்யவல்லியின் அறிவுரை
இது. இலக்கை நிர்ணயித்துக்கொள். வழிமுறைகளைப் பற்றி கவலைப்படாதே. தவறு,
சரி என்று எதுவும் இல்லை. அநாவசியமாக உன்னைக் குழப்பிக்கொள்ளாதே. உன்
லட்சியம் இலக்கை அடைவது. அதில் மட்டும்தான் நீ கவனம் செலுத்தவேண்டும்.
சட்டப்படி
நடக்கவேண்டும், நியாயப்படி இருக்கவேண்டும் போன்ற வெண்டைக்காய் கொள்கைகளை
முதலில் உன் மனத்தில் இருந்து துடைத்து அழி. நீதி, நேர்மை, சட்டம்,
ஒழுங்கு போன்றவை தடைகற்கள். உன்னை கீழே பிடித்து இழுக்கும் தீயசக்தியின்
மாய உருவங்கள். கலங்காதே. உன் பயணம் நீ உத்தேசித்த பாதையில் தொடரட்டும்.
உன் பாதை தவறானதாகவே இருந்தாலும் மாற்றிக்கொள்ளாதே. ஆன்றோர், சான்றோர்
அறிவுரைகளுக்குப் பலியாகிவிடாதே. யார் வளைக்க முயன்றாலும் தோற்காதே.
ஐயோ
இவன் தவறிழைப்பவன், தீங்கானவன் என்று பிறர் தூற்றுவார்களே என்று
அச்சப்படாதே. ஆரம்பத்தில் தூற்றுபவர்கள்கூட பின்னால் பயப்பட
ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் மனத்தில் வெற்றிகரமாகப் பயத்தை முதலீடு
செய்துவிட்டால் பெரும் லாபம் ஈட்டிவிடலாம். அவர்களை சுலபமாக
ஏமாற்றிவிடலாம். அதிகாரம் உன் கைக்கு வரட்டும். அதற்குப் பிறகு நீ
வைப்பதுதான் சட்டம். நீ உச்சரிக்கும் விதிகளைத்தான் மக்கள் ஏற்றுக்கொண்டு
பின்பற்றியாகவேண்டும். உனக்கு அடிபணிந்து போவதைத் தவிர வேறு மார்க்கம்
அவர்களுக்கு இருக்காது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். தவறான
வழியில் சென்றாலும் சரி, நேர்மையான வழியில் சென்றாலும் சரி. அதிகாரம்
ஒன்றேதான். தேவைப்படும் சமயங்களில் பலாத்காரத்தைப் பயன்படுத்த தயங்காதே.
ஆட்சி
உன் கைக்கு வந்ததும், நீ செய்யவேண்டிய முதல் காரியம் ராணுவத்தைப்
பலப்படுத்துவதுதான். ஏகப்பட்ட எதிரிகள் முளைப்பார்கள். எச்சரிக்கையுடன்
இரு. உன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை எப்போதும்
கண்காணித்துக்கொண்டிரு. யாரையும் சுலபத்தில் நம்பிவிடாதே. இது போதும்
என்னும் மனநிலை ஆபத்தானது. அதிகாரம் கிடைத்துவிட்டதே என்று சும்மா
இருப்பதில் பிரயோஜனமில்லை. அதிகாரம் பெருகிக்கொண்டே போகவேண்டும்.
அடுத்த பிரதேசத்தின் மீது போர் தொடுத்து உனதாக்கிக்கொள். அதிகாரத்தை
வலுப்படுத்து. ராணுவத்தைப் பயன்படுத்து. அச்சுறுத்து. உன் சக்தியை, ஆற்றலை
உயர்த்திக்கொள். அதற்காக எதையும் விலைகொடுக்கத் தயங்காதே.
மன்னர்
என்பவர் சாந்தமாக இருக்கவேண்டும், அன்புமயமாக இருக்கவேண்டும், மக்களை
நேசிப்பவராக, அவர்கள் பிரச்னைகளைப் புரிந்துகொள்பவராக, தீர்த்துவைப்பராக
இருக்கவேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அப்படியா என்று கேட்டுக்கொள்.
நிச்சயம் நானும் அப்படிப்பட்ட ஒரு மன்னன்தான் என்று சொல்லிக்கொள்.
அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தைக்கூட ஏற்படுத்திக்கொள். ஆனால், நீ
மாறிவிடாதே. சாந்தம், அமைதி, மனிதத்தன்மை போன்ற வெண்டைக்காய்
சமாசாரங்களால் உன் மூளையை மழுங்கடித்துவிடாதே. உனக்குத் தேவை அமைதியும்
நல்ல பெயரும் அல்ல. அதிகாரம். மேலும் அதிகாரம். அதைவிட உயர்ந்த அதிகாரம்.
ஹிட்லர்களும்
முஸோலினிகளும் இந்தப் புத்தகத்தில் இருந்து உருவானவர்களே. மாக்யவல்லி
அவர்களுக்காகவே சில விஷங்களைச் சொல்லியிருக்கிறார். இரக்கம் காட்டுவது
உன் பலவீனத்தைத்தான் காட்டும். முடிந்தவரை மிருகத்தனத்தைப் பிரயோகம்
செய். குரூரமாக இருப்பதும்கூட சரியானதே. உன் மேல் அதீத அச்சம்
உருவாகும்போது உன்னை வழிபட ஆரம்பித்துவிடுவார்கள். உன்னை எதிர்க்கும்
திராணி ஒருவருக்கும் இருக்காது.
தி பிரின்ஸை இன்றைய
அரசியல்வாதிகள் வாசித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால்
கடைபிடிக்கிறார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும் என்னும் அவசியம்
இல்லை. உனக்கு விருப்பமில்லை என்றால், நிராகரித்துவிடலாம். பொய்
சொல்லலாம். தவறில்லை. கொலை தவறில்லை. குற்றம் தவறில்லை. துரோகம்
தவறில்லை. நீ மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவன். நீ சட்டத்தைவிட
உயர்ந்தவன். நீ அரசன். தலைவன்.
(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)
|
வாழ்வின் கோலங்கள்
|
பாவண்ணன் |
சிங்கப்பூரில் வாழும் பெண் எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இத்தொகுப்பில்
இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பட்டம்பெற்று சிங்கப்பூரில்
குடியேறியவர்கள், சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டவர்கள் என இப்படைப்பாளிகளை இரு
பிரிவினராகக் காணலாம்.
வேறொரு மனவெளி சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்
பாலு மணிமறன்
பக். : 240 விலை: ரூ. 150
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
தங்கமீன் பதிப்பகம்
சி-54, முதல் தளம். அண்ணா நகர் பிளாசா,
அண்ணா நகர்,
சென்னை-40. |
இத்தொகுப்பில் சூரிய ரத்னாவின் முகமூடி சிறுகதையையும் ரம்யா நாகேஸ்வரனின் முகவரிப்
புத்தகம் சிறுகதையையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். ஒருவருக்கொருவர்
ஒளிவுமறைவின்றி உரையாடுவதையும் பழகுவதையும் பண்பாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த
கல்லூரி மாணவி ஒருத்தியின் பார்வையில் சிறுகதை விரிகிறது. வகுப்பு இல்லாததால் தன்
தோழியோடு திரைப்படத்துக்குச் செல்வதாகத் தாயிடம் சொல்லிவிட்டுப் புறப்படும் மாணவி,
அதே திரையரங்கில் முன் வரிசையில் தன் தந்தை வேறொரு இளம் பெண்ணோடு நெருக்கமான
நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள். இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே
தெரிந்ததுதானென்றும் ஒரு போதும் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசி முறையிட்டுப்
பிரச்சினையைப் பெரிதாக்கிவிடக் கூடாது என்றும் சொல்லிவிட்டுக் கண்கலங்கும் தாயின்
சொற்கள் அவளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. மகளும் கணவனும் வீட்டில் இல்லாத
நேரம் பார்த்துத் தன் காதலனை ரகசியமாகத் தொலைபேசியில் அழைத்துத் தம் உறவை யார்
கண்ணும்பட்டுவிடாமல் கவனமுடன் பேண வேண்டும் என எச்சரிக்கிற உரையாடல் வாசகனின்
அதிர்ச்சியை இன்னும் பல மடங்காக மாற்றுகிறது. ஒளிவுமறைவு இன்றிப் பேசவும் பழகவும்
மகளுக்குப் பயிற்றுவிக்கும் தாயும் தந்தையும் தனித்தனி மறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.
இச்சையின் வலிமையையும் மானுடர்களின் இயலாமையையும் முன்வைக்கும் இந்த முரண்
இச்சிறுகதைக்கு அழகு சேர்க்கிறது.
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் முகவரிப் புத்தகத்தில் உள்ள எல்லா
முகவரிகளையும் புதிய புத்தகத்தில் மாற்றி எழுத உட்காரும் ஒரு பெரியவரின்
சித்திரத்தைக் காட்டுகிறது முகவரிப் புத்தகம் சிறுகதை. சுவடியில் உள்ள பெயர்கள்
பெரியவருடைய நெஞ்சில் பல முகங்களையும் அவர்களோடு தொடர்புள்ள பல நிகழ்ச்சிகளையும்
மலரவைக்கின்றன. மரணம் அழைத்துச் சென்றுவிட்டதால் சில முகவரிகள் தேவைப்படாமல்
போகின்றன. நெருக்கமும் பழக்கமும் குறைந்து அருக மேலும் சில முகவரிகளும்
தேவைப்படாமல் போகின்றன. இறுதியில் புதிய புத்தகத்தில் ஒரு சில முகவரிகள் மட்டுமே
இடம்பெறுகின்றன. வாசிக்கும் போக்கில் நம் மனம் வாழ்க்கையின் நிரந்தரமின்மையை ஒரு
கணம் உணர்ந்து மௌனமாகிறது. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுக் கடந்துபோய்க்கொண்டே
இருக்கிறது வாழ்க்கை.
பிதாமகன், பொழப்பு ஆகிய இரண்டு சிறுகதைகளும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க
வாய்ப்புள்ள சிறுகதைகள். பிதாமகன் சிறுகதையில் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்ட
தந்தை எதிர்பாராதவிதமாக மரணடைந்துவிடும் சம்பவமும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளும்
தொகுக்கப்பட்டுள்ளன. மரணம் தர வேண்டிய ஆழ்ந்த துக்கத்தையும் வேதனையையும்
வெளிப்படுத்துவதற்கு மாறாக, அந்த நடவடிக்கைகள் மனிதர்கள் தத்தம் ஆதங்கங்களை
வெளிப்படுத்த ஒரு வடிகாலாக மாறிவிடும் அபத்தத்தைச் சித்தரிக்கின்றது. இரண்டாம்
தாரமாக வாழ்க்கைப்பட்டு வந்த கணம்முதல் மரணத்தைத் தழுவுவதுவரை ஒருமுறைகூடத் தன்
பெயரைச் சொல்லி அவர் அழைத்ததேயில்லை என்று சொல்லும் தாயாரின் வார்த்தைகள்
அதிர்ச்சியளிக்கின்றன. முதல் மனைவியின் பெயரைச் சொல்லி இரண்டாம் மனைவியை அழைக்க
விரும்பிய அவர் விருப்பத்தையும் அதைச் சகித்துக்கொள்ள இயலாமல் ஒருநாள் தடுத்தபிறகு
பெயர்சொல்லி அழைப்பதே இல்லை என்று வெளிப்படும் மனக்குமுறல் முக்கியமான ஒரு பதிவு.
இத்திசையில் சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனக் குடும்பம் மற்றும்
சமூக உறுப்பினர்களின் குரல்களையும் ஒருசேர தொகுத்தபடி நகர வேண்டிய சிறுகதை, மரணச்
சடங்குகளை வேகவேகமாகச் செய்வதில் ஈடுபாடின்றி அவர்கள் காட்டும் அவசரத்தைப்
படம்பிடிக்கும் திசையில் இறங்கிவிடுகிறது.
பொழப்பு சிறுகதையில் ஒரு வைர வியாபாரியின் வீட்டில் பணிப்பெண்களாகக் குடியேறும்
இரண்டு பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் குரலாகவே கதை ஒலிப்பதால்
இன்னொரு பெண்ணின் சித்திரத்தை அவள் வழியாகவே நாம் அறிய வேண்டியிருக்கிறது.
அக்குடும்பத்தலைவனைத் தன் ஆசை வலையில் விழவைத்துத் தன் தங்கும் இடத்தை உறுதிசெய்து
கொள்ள விழையும் பெண் சில நாட்களில் பழிசுமத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறாள். ஓயாமல்
உழைப்பவள் என்றாலும் எந்தப் புகாரும் இல்லையென்றாலும் குடும்ப உண்மையை
அறிந்துகொண்டவள் என்கிற ஒரே காரணத்துக்காகவே மற்றொருத்தியும் வெளியேற்றப்படுகிறாள்.
வாழ்வின் அபத்தத்தை முன்வைக்க விழையும் இச் சிறுகதை கச்சிதமின்மையின் காரணமாகச்
சற்றே சிதைந்த கோலத்தை அடைந்து விடுகிறது. மற்ற சிறுகதைகள் பார்வையின் காரணமாகவும்
கதையமைப்பின் காரணமாகவும் மனத்தில் பதிய மறுக்கின்றன.
தொகுப்பாசிரியரான பாலு மணி மாறன், “இந்தத் தொகுப்பின் கதைகள் தரத்தின்
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிங்கப்பூரில் இருக்கிற அத்தனை பெண்
எழுத்தாளர்களையும் அடையாளப்படுத்துகிற, ஆவணப்படுத்துகிற ஒரு தொகுப்பாகத்தான் இது
செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லும் கூற்று (பக்கம்-227) முக்கியமான ஒன்று. இந்த
அளவுகோல் இத்தொகுப்பை இருவிதங்களில் பாதித் திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு புறம்
மிகச்சிறந்த தொகுப்பாக இது மலர முடியாமல் போவதற்கான தடையாக இந்தப் பார்வையே
அமைந்துவிட்டது. இன்னொருபுறம், “சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் – ஒரு வரலாற்றுப்
பார்வை” என்ற தலைப்பில் தொகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டிருக்கும் முனைவர்
எம்.எஸ்.லஷ்மியின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெண் எழுத்தாளர்களின்
படைப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் மிகச்சிறந்த ஆவணமாகவும் மலர முடியாத குறை
நேரவும் வழிவகுத்துவிட்டன.
e-mail: paavannan@hotmail.com |
க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்
March 6, 2009 – 12:03 am
சிற்றிதழ்க்
கவிதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவம் இருக்கும்.
கவிதைப்பக்கங்களில் கவிஞர்களின் பெயர்கள் பக்கவடிவமைப்பின் இயல்பால் உடனே
கண்ணில் படாதபடி அச்சிடப்பட்டிருக்குமென்றால் எந்தக் கவிதை எவர் ஆக்கியது
என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம் ஒருவர் கவிதையை இன்னொருவர்
கவிதையாக எண்ணி விடுவோம். காரணம், எல்லா கவிதைகளும் மொழியிலும்
அமைப்பிலும் கூறுமுறையிலும் ஒன்றே போலிருக்கின்றன.
நவீனத்தமிழ்க்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே இருக்கிறது என்பது என்
எண்ணம். தனிமனித அவ மன ஓட்டங்களை தத்துவார்த்தமான நிலையில் இறுக்கமான
மொழியில் படிமங்களை பயன்படுத்திச் சொல்லும் கவிதைகளையே நாம் மீண்டும்
மீண்டும் கண்டுகொண்டிருக்கிறோம். இதனாலேயே இன்று நம்மால் வசித்த கவிதைகளை
நினைவில் நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. எவருடைய கவிதை எது என்று கூற
முடிவதில்லை.
நவீனத் தமிழ் புனைகதை நவீனத்துவ இறுக்கங்களைத்தாண்டி வெகுதூரம் நடந்து
வந்தபின்பும் கவிதை தன் இடத்திலேயே தத்துவக்குழப்பங்களை சொல்லடுக்குகளும்
படிமங்களுமாக சமைக்கும் ஓயாத ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஓர்
அங்கதத்தையோ நுண்சித்தரிப்பையோ நம் கவிதைகளில் காண்பதே அரிதாக இருக்கிறது.
இச்சூழலில் புத்தம்புதிய கவிமொழியுடன் வந்த முகுந்த் நாகராஜன் தமிழில்
எப்போதும் பரவலாக விரும்பப்படும் இளம்கவிஞர். நவீனத்துத்துக்குப் பிந்தைய
கவிதை என்று சொல்லத்தக்கவை அவரது கவிதைகள். தத்துவச் சுமையோ,
படிமத்தொழில்நுட்பமோ, தனிமனித மன அவசமோ, அதீத மொழி இறுக்கமோ இல்லாத
எளிமையான நேரடியான கவிதைகள் அவை.
இன்று உலகமெங்கும் நவீனக் கவிதையின் முக்கியமான கூறாக மாறியிருக்கும்
‘நுண்சித்தரிப்பு’ தான் அவரது கவிதைகளின் சிறப்பு. முகுந்த் நாகராஜன்
சகமனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு துளியை தன் கவித்துவச்
சட்டகத்துக்குள் பிடித்துவிடுகிறார். பெரும்பாலும் குழந்தைகளின் உலகம்.
அந்த நுண்சித்தரிப்பு தன் ஆழ்பிரதி வழியாக வாழ்க்கையின் நுட்பமான தளங்களை,
வாழ்க்கை வழியாக ஓடிச்செல்லும் ஆழ்ந்த அர்த்தங்களை நமக்குக் காட்டுவதாக
உள்ளது.
இத்தகைய கவிதை ஒரு குறிப்பிட்ட வகையான மொழி-வடிவப் பயிற்சியால்
அடையப்படுவது அல்ல. வாழ்க்கையின் கரையில் கூர்ந்த நுண்ணுணர்வுடன் சதா
காத்திருத்தல் ஒன்றையே கவிஞன் செய்ய வேண்டியிருக்கிறது. எதிராபாராத
கணத்தில் ஒரு தருணம் திறந்துகொண்டு கவிதையைக் காட்டிக் கொடுக்கிறது,
அவ்வளவுதான்.
முகுந்த் நாகராஜனின் பிரகாசமான உலகம் பிரியங்களின் மர்மங்களும்
உறவுகளின் புதிரான ஆழங்களும் வாழ்க்கை என்னும் தற்செயல்பிரவாகத்தின்
பேரர்த்தங்களும் நிரம்பியது. குறிப்பாக சிறுமிகள் மேல் அவரது தந்தைமை
நிரம்பிய மனம் கவியும் விதம் தமிழ்க் கவிதையின் அழகிய நிகழ்வுகளில் ஒன்று
நீர் தெளித்து விளையாடுதல்
முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவுவிடுதியில்
சாப்ப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்
முகுந்த் நாகராஜன் வலைப்பூ
http://veenaapponavan.blogspot.com/
கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு
கேள்வி பதில் - 72 [கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா]
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?
கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்
1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது
'கோடுகளும்
வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில்
வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள்
தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப்
படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர்
வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக
இணைத்துள்ளார்கள்.
காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\
எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற
ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.
தமிழர்களுக்கு
மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில்
தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும்
கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக
மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட
வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.
அந்த
வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட,
மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய
கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய
பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே
இருந்தது..... \\
2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்
பெரம்பலூரைச்
சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற
முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல
பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி
எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து
வருகின்றன.
- வைகறை
'அந்தக் கேள்விக்கு வயது
98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப்
பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான
குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று
நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும்
உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப்
பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன்
வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச்
சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்
25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...
பாரதியைக்
காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.
வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில்
பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத்
தொடங்குகிறார்.
“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.
“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது
பாரதி கேட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”
இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.
“இன்னும்
எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப்
போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும்
இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?
3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி
அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....
தலித்
இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின்
சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான
கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம்,
பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின்
நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா
ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக
நினைவில் வந்து போகின்றன....
.... இத்தனை நீண்டகால எழுத்து
பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில்
என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான்.
அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை
ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு
மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும்,
இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.
இக்கதைகள் நேரடி
கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த
பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு..
வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091
தமிழில்
திரைப்படங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகவும் குறைவுதான். இரண்டு விதமான
காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. சினிமா புத்தகங்கள் விற்பனையில் பெரிதாக
ஒன்றும் சாதித்துவிடவில்லை. மற்றொன்று, சினிமாவைத் தெரிந்துகொள்ள
புத்தகம் தேவையில்லை.
இரண்டும் உண்மையாக இருக்கலாம். ஆனால்,
எப்போதாவது சில நல்ல புத்தககங்கள் வருவதுண்டு. திரைப்பட ஒளிப்பதிவாளர்
செழியன் எழுதிய ‘பேசும் படம்’ அந்த வகையில் ஒன்று. இதன் தலைப்பின் கீழ்
இன்னொரு விளக்கம், ‘கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்’.
திரைக்கதை - சில குறிப்புகள் என்றுதான் தொடங்குகிறது முதல் கட்டுரை.
‘ஒரு
மோசமான திரைக்கதையை, நல்ல இயக்குனரால்கூட சிறந்த திரைப்படமாக எடுக்க
முடியாது.’ என்ற அகிரா குரோசாவாவின் சொல்லோடு ஆரம்பித்து, தமிழ்த்
திரைப்படங்கள் பெரும்பாலும் எப்படி கதை சொல்கிறது? எந்த விதமான உத்தியைக்
கையாள்கின்றன? வெற்றிப்பட இயக்குனர்கள் திரைக்கதையை எப்படி
அமைக்கிறார்கள்? என்று வெற்றி பெற்ற படங்கள் முதல் தோல்வியடைந்த படங்கள்
வரை பல உதாரணங்களோடு சினிமாவின் விஸ்தீரணங்களைத் தொட்டுச் செல்கிறது
கட்டுரை.
சென்ஸாரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிலர் இது ஏ,
இது யு என்று திரைப்படங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். ஆனால்,
பெரியவர்களுக்கான திரைப்படங்களைத்தான் குழந்தைகளும் பார்க்க
வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்கான ஆரோக்கியமான சூழல்
நம்மிடையே இல்லையே. கவர்ச்சிப் பாடல் தொலைக்காட்சியில் வந்ததும் குழந்தை
இடுப்பை வளைத்து வளைத்து ஆட ஆரம்பித்துவிடுகிறது. இதை விடுத்தால்
விளையாடுவதற்கு பொம்மைத் துப்பாக்கிகளும், துரத்தி மோதுவதற்கு கார்களும்
என்று வன்முறையோடுதான் வளர்க்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும்
கவலையும் அடுத்த தலைமுறையின் மீதான அக்கறையைப் பேசுகிறது ஒரு கட்டுரை.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிதாமகன்’,
‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ மற்றும் ‘காதல்’ படங்களின் விமர்சனங்கள். நான்கும் வெவ்வேறு வகை.
நல்ல
வேளையாக இந்த நான்கு படத்தையும் நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். இப்போது
விமர்சனமாகப் படிக்கும்போது முதல் காட்சியிலிருந்து கடைசி வரை முழுப்
படத்தையும் பார்த்தது போல் ஒரு திருப்தி வருகிறது. கன்னத்தில்
முத்தமிட்டால் காட்சிகளைச் சொல்லும்போதே விமர்சனத்தையும் முன்வைக்கிறார்
செழியன். கதையின் நாயகன் ஒரு கதாசிரியன் எனும் விஷயம் திரைப்படத்தின்
கதைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதில் தொடங்கி வசனகர்த்தாவின்
அபத்தங்கள், அத்துமீறல்கள், இயல்பான இடங்களில் கூட அபஸ்வரமாக ஒலிக்கும்
பின்னணி இசை, கடைசிக் காட்சியில் மிக இயல்பாக இல்லாமல் தன் தாயைச்
சந்திக்கும் காட்சியில் வளர்ப்புத் தாயின் செயற்கைத்தனம், அந்த நேரத்தில்
இருபது கேள்விகள் தேவையா? என்று விமர்சனம் வளர்ந்து கொண்டே போகிறது.
‘சில்ட்ரன்
ஆஃப் ஹெவன்’ எழுதப்பட்ட விதம் வேறு வகை. முதலில் கதை. ‘நல்ல திரைப்படம்
முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறது’ என்று மீண்டும்
திரைப்படத்தை ஒரு தேர்ந்த ரசிகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. வசனங்கள்
இல்லாத காட்சிகளின் உணர்வுகளை வார்த்தைகளில் நிரப்பித் தருகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதில் ஒரு சில வரிகளை இங்கே சொல்லலாம்.
‘இயக்குனரின்
மேதைமையும், படத்தொகுப்பாளரின் ஆளுமையும் வெளிப்படும் இடங்களென
ஓட்டப்பந்தயத்தைச் சொல்லலாம். பந்தயம் துவங்கியதிலிருந்து முடியும்
வரையிலான கேமராவின் இயக்கத்தை, ஒலியை, படத் தொகுப்பை, சலிப்படையவிடாமல்
அதே நிலையில் வெகு நேரம் விறுவிறுப்புக் குறையாமல் தொகுக்க வேண்டிய
கட்டாயத்திலும், அதன் வெற்றியைக் காணமுடியும். படத்தின் இயல்பு நிலைக்கு
மாறாக மெதுவியக்கம் (slow motion) கொண்டு அலி ஓடத் துவங்குகிற போதும்
காட்சியின் வேகத்திற்கு எதிரான நுட்பத்தைக் கையாள்கிற, அந்நேரத்தில்
மூச்சிரைக்கிற சப்தத்தைப் பிரதானப்படுத்துவதன் மூலம் காட்சியின் நுட்பத்தை
மேன்மைப்படுத்துகிற விதமும் கவனிக்கத் தகுந்தது.’
‘காதல்’ திரைப்பட
விமர்சனம் இன்னொரு வகை. நம்முடைய திரைப்படங்களின் பலம் என்ன? பலவீனம்
என்ன? என்பதைப் பல்வேறு காட்சிகள் மூலம் சொல்கிறார் செழியன்.
இப்படி
காட்சிகளையும் அதன் பின்னணியையும் துல்லியமாக விவரிப்பதன் மூலமும் சாதாரண
திரைப்பட ரசிகன் கவனிக்கத் தவறும் பல விஷயங்களை நுணுக்கமாக ரசிக்க வேண்டிய
விஷயங்களையும் மிகவும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது இந்தப்
புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான கட்டுரை
‘இளையராஜா: அங்கீகரிப்பதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட கலைஞன்’.
இசையமைப்பாளராக எல்லோரும் ரசித்திருந்தாலும் செழியன் நம் முன் வைக்கும்
கேள்வி நியாயமானது.
‘மார்கழிக் குளிரில் குளிர்பதன வசதி
செய்யப்பட்ட அரங்குகளில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை.
ராகம், தாளம், முதலான அனைத்துச் சங்கதிகளும் தீர்மானிக்கப்பட்டவை.
காலங்காலமாகப் பிரதியெடுக்கும் வேலைதான் இங்கே நடக்கிறது. இப்படிப்
பிரதியெடுக்கும் சங்கீதப் பாடகனின் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும்
சிலாகிக்கிற இசை விமர்சகர்கள், உண்மையான இசை முயற்சிகளை திரைப்படத்தில்
நிகழ்த்தும் இளையராஜாவை ஏன் கண்டு கொள்வதில்லை. ஏன் விமர்சனம்
செய்வதில்லை?
இந்த இடத்தில் ழான் பால் சார்த்தர் சொன்னதைக் குறிப்பிடுகிறார் செழியன்.
‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக் கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகிற கொலைத் தண்டனை.’
ஆக,
வெறுமனே சில வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுப் போவதல்ல இந்தக் கட்டுரையின்
நோக்கம் என்பதுபோல, அடுத்தடுத்து வருகிறது இளையராஜாவின் மேதைமையைப்
பற்றிய விமர்சனங்கள். செழியன் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. இளையராஜா பாடல்களுக்கு அமைக்கும் இசையைப் பற்றியும்,
எந்தக் காட்சிக்கு எந்த வகையான வாத்தியக் கருவிகள் உபயோகிக்கிறார் என்று
தொடங்கி, பின்னணி இசையின் முக்கியத்துவம் என்று இசையாகப் பாவும் இந்தக்
கட்டுரை முடியும்போது ஒரு வாசகம், ‘தமிழ் சினிமாவின் ஒப்பனை
முகங்களுக்குப் பின்னால், ஓர் அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல்
போவது எத்தனை துரதிர்ஷ்டவசமானது!’
இசை பற்றிய விமர்சனத்துக்குச்
சற்றும் குறையாத இன்னொரு கட்டுரை, ‘ஓர் உதவி ஒளிப்பதிவாளரின்
குறிப்புகளிலிருந்து’. செழியன் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோது அவர்
கற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்து சிலவற்றை நமக்கும் சொல்கிறார். ஒரு
பாடல் காட்சி எடுப்பதற்குள் எத்தனை எத்தனை விஷயங்கள் கவனிக்க
வேண்டியிருக்கிறது!
‘அலைபாயுதே’ படத்தில் ‘ஸ்னேகிதனே...’ என்ற
பாடல் பதிவான முறையையும், அதே படத்தில் ‘யாரோ யாரோடி’ என்ற இன்னொரு
பாடலையும் பதிவாக்கப்பட்ட அனுபவங்கள். இரண்டு பாடலை எடுத்து
முடிப்பதற்குள் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்குமான கருத்து
வேறுபாடுகள், படமாக்கும்போது வானில் மேகங்கள் சூரியனை மறைக்கிறதா என்று
கவனித்துக் கொண்டிருந்தது.
தியேட்டரில் படம் பார்த்துவிட்டு
படம் எடுத்தவனை கிழிகிழியென்று கிழிக்கும் ஒருவனுக்காக ஒவ்வொரு
காட்சிக்காகவும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம்:
‘ஸ்னேகிதனே;
பாடல் காட்சி. மேகம் சூரியனை மறைக்கிறதா என்று செழியன் பார்த்துக்
கொண்டிருக்கிறார். தொலைவில் வந்து கொண்டிருந்த மேகம் சூரியனைக் கடக்கப்
போகிறது. காட்சி கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட
ஒத்திகைக்குப் பின் எடுக்கப்படும் காட்சி. செழியன், தன் தவறினால் காட்சிப்
பதிவு தடைபடுமோ என்று கவலைப்படுகிறார். அவர் நினைத்தது போலவே மேகம்
சூரியனை மறைக்கிறது. மேகத்தின் நிழல் காட்சியை மறைக்கிறது. ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம் உதவியாளர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல்
பூக்கிறார். ‘மேகம் மூடியது எனக்குத் தெரியும். அந்தப் பாடலின் கடைசி
வரியில் ‘கர்வம் அழிந்ததடி’ என்று வரும். மேகத்தின் நிழல் காட்சியை
மறைப்பதும் அந்தக் கர்வம் அழிவதுமான வார்த்தையும் அர்த்தமும் இயைந்து
போகிற அழகை உணர்ந்தேன்’ என்கிறார். மீண்டும் அந்தக் காட்சிக்காக மேகம்
சூரியனை மூட வேண்டுமே என அனைவரும் காத்திருக்கிறார்கள் வானத்தைப்
பார்த்துக் கொண்டு.
திரைப்படங்களில் ஒளிந்து கிடக்கும் கலை
நுணுக்கங்களை சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்லும் இந்தப்
புத்தகத்தில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் இன்னொரு
கட்டுரையும் உண்டு. செய்தியாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு
மத்தியில் சில செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு வக்கிரமாகவும்,
ஒரு சில எவ்வளவு நாசூக்காகவும் செய்தியைப் புரிய வைக்கின்றன என்பதை ஓர்
ஒளிப்பதிவாளராக நின்று விமர்சனம் செய்கிறார் செழியன்.
திரை
நட்சத்திரங்களுக்காகப் படம் எடுக்க வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டதைப்
பற்றிய வருத்தங்களையும் பதிவு செய்கிறார் செழியன். திரைப்படத்தின் எல்லா
விஷயங்களைப் பற்றியும் கவலையோடும் அக்கறையோடும் அணுகும் கட்டுரைகள்.
ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’ எழுதிய செழியனின் மிக முக்கியமான இன்னொரு
புத்தகம், ‘பேசும் படம்’.
பேசும் படம் (கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்) - செழியன் - காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ.135