இந்திய சரித்திரக் களஞ்சியம்
தமிழில்
வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில்
எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு
எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும்
மிகப் பழமையானது.
வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன
பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை அவசியமாக உள்ளது. அந்த
வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று
மீள்வாசிப்புகள் முக்கியமானவை.
இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு
தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக்
களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின்
துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த
காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்,
மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து
உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும்
தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல்
வேறில்லை.
சிவனடி வரலாற்று ஆசிரியரோ, ஆய்வாளரோ இல்லை. மாறாக
தன்னுடைய குடும்ப வரலாற்றின் பத்து தலைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும்
அதன் கிளைவழிகளை வரிசைபடுத்தவும் முயற்சித்த அவருக்கு மூதாதையர்களின்
காலமும் அதன் சரித்திர பின்புலங்களின் மீதும் ஆர்வம் உண்டாகி அதிலிருந்து
இந்திய சரித்திரத்தை ஆழமாக கற்க துவங்கியிருக்கிறார்.
அதன்பிறகு இந்திய சரித்திரம் குறித்த பல நூறு முக்கியப்
புத்தகங்களைத் தேடி அலைந்து படித்து குறிப்புகளை எடுத்திருக்கிறார். தனது
தொடர்ந்த பயணத்தின் ஊடே ஆயிரக்கணக்கான சரித்திர நூல்களை சேகரித்து
கொண்டு வீட்டிலே பெரிய நூலகம் வைத்திருந்தார்.
1992ல் முன்றில் மா.அரங்கநாதன் வழியாக அவரது அறிமுகம்
கிடைத்தது. அசோக்நகரில் இருந்த அவரது வீட்டிற்கு சென்றேன். மிக அமைதியாக
பேசக்கூடியவர். வீடெங்கும் சரித்திர புத்தகங்கள். குறிப்புகள். ஒரு
ஆவணகாப்பகத்திற்குள் வந்துவிட்டது போலவே இருந்தது. வெகு ஆழமாக
சரித்திரத்தை வாசித்திருக்கிறார் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது.
சிவனடி விருதுநகரைச்சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை
படித்திருக்கிறார்.அதாவது அந்த காலத்து நாலாவது பாரம். அத்தோடு படிப்பு
நின்று போனது. இரண்டாம் உலகப்போரின் நாட்களில் இந்திய கடற்படையில்
சேர்ந்து சில ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு சென்னை
திரும்பி ஒரு பதிப்பகத்தில் பிழைத்திருத்துபவராக வேலை செய்தார். சில
காலம் ஒரு செய்தி நிறுவனத்திற்கு மொழிபெயர்ப்பாளராகவும்
பணியாற்றியிருக்கிறார்
இந்திய சரித்திர களஞ்சியத்தின் முதல்தொகுதியை வெளியிட்ட
போது அவரது வயது 60. கடற்பயண அனுபவம் அவரை நிறைய வாசிக்க வைத்திருக்கிறது.
பொதுமக்கள் எந்த கடவுள் யாருடைய பிள்ளை. என்ன அவதாரம் எடுத்தார், யாரைத்
திருமணம் செய்து கொண்டார் என்பதில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு
பங்கு கூட சரித்திரத்தை அறிந்து கொள்வதில் காட்டுவதில்லை. பல பச்சை
பொய்கள் சரித்திரம் என்ற பெயரில் உலவிக் கொண்டிருக்கிறது என விமர்சனம்
செய்த சிவனடி தனது சரித்திர ஈடுபாடு பல கால வாசிப்பு அனுபவத்தில் உருவானது
என்றார்
சிவனடியின் தனித்துவம் அவர் வரலாற்றையும்
விஞ்ஞானத்தையும் இணைக்கும் புள்ளி. விஞ்ஞானத்தின் வளர்ச்சியும்
கண்டுபிடிப்புகளும் தான் வரலாற்றினை திசைமாற்றம் செய்ததில் முக்கிய பங்கு
வகித்திருக்கின்றன. விஞ்ஞானத்தின் வரலாற்றையும் வரலாற்றின்
விஞ்ஞானத்தையும் கொண்டதாகவே தனது நூல் எழுதப்பட்டுள்ளது என்று சொன்னார்.
அது போலவே கலாச்சார சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கலை இலக்கியம்
சார்ந்த ஆளுமைகள் உருவான விதம் அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் எவ்வளவு
முக்கியமானது என்பதை சிவனடியின் பார்வைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
முப்பது தொகுதிகளாக 1700 ல் இருந்து 2000 வரையான
இந்தியாவின் வரலாற்றை எழுத வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால்1831 முதல்
1840 வரையான காலகட்டத்தினை பற்றிய பதிநான்காவது தொகுதியை வெளியிட்டதோடு
மரணம் அடைந்தார். அவரது கனவு பாதியிலே துண்டிக்கபட்டு போனது.
நோய்மையும் உடற்சிரமங்களுக்கும் இடையில் தளராது மொத்தம்
ஏழாயிரம் பக்கங்கள், பதிநான்கு தொகுதிகளாக கொண்டு வந்திருக்கிறார். 1910ல்
சிங்காரவேலு முதலியார் அபிதாம சிந்தாமணி என்ற மாபெரும் தமிழ் இலக்கியக்
களஞ்சியத்தை தனிநபராக உழைத்து 1700 பக்கங்கள் கொண்டுவந்தார் என்பது
எவ்வளவு பெரிய சாதனையோ அதை விடவும் பன்மடங்கு உயர்ந்த சாதனை சிவனடி
செய்திருப்பது. நான் அறிந்தவரை இந்திய வரலாற்றை பற்றி 7000 பக்கங்கள்
எழுதியுள்ள ஒரே தமிழ் வரலாற்று ஆசிரியர் சிவனடி என்றே கருதுகிறேன்.
இவ்வளவு முக்கியமான சரித்திர பிரதியை தமிழ் மக்களோ,
துறை சார்ந்த அறிஞர்களோ கண்டுகொள்ளவேயில்லை என்பது தான் இதன்
துரதிருஷ்டம். தன்னுடைய சொந்த பணத்தில் அழகாக அச்சிட்டு சிவனடியே இந்த
தொகுதிகளை வெளியிட்டார். ஆனால் இந்த புத்தகங்கள் கண்டு கொள்ளபடவேயில்லை.
அத்தோடு அவரது பல ஆண்டுகால உழைப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை
நான் தேடிச்சென்று பார்த்த போது என்னுடைய புத்தகம்
படித்து தேடி வந்தவர்கள் பத்து பேர் கூட இருக்கமாட்டார்கள். அதில் ஒரு
சிலரே அதன் நுட்பங்களை உண்மையில் அறிந்திருக்கிறார்கள். நீங்கள் என்னை
தேடி வந்து இத்தனை விபரங்களை பகிர்ந்து கொண்டது சந்தோஷமளிக்கிறது என்றார்
சிவனடி. எவ்வளவு துயரமான நிலை பாருங்கள்.
மாணவர்களுக்கான மலிவுபதிப்புகள், கையேடுகள் என்று
வரலாற்றை கூவிகூவி விற்று காசு சம்பாதிக்கும் பதிப்பாளர்கள், வரலாற்று
போலிகளுக்கு நடுவில் தன்னுடைய சொந்த ஆர்வத்தின் காரணமாக சரித்திரம்
தேர்ச்சி கொண்டு அதை பிரம்மாண்டமான களஞ்சியம் போல அழகாக தொகுத்து
வெளியிட்டுள்ள சிவனடியின் நூல்கள் அறிஞர்வட்டத்தில் கண்டு
கொள்ளபடவேயில்லை. ஒன்றிரண்டு புத்தக விமர்சனங்கள் வெளியானதோடு சரி.
இதில் ஒரேயொரு தொகுதி மட்டுமே மறுபதிப்பு வந்திருக்கிறது. மற்ற பதிமூன்று தொகுதிகளும் முதல்பதிப்போடு நின்று போய்விட்டது.
முப்பது
தொகுதிகளுக்குமான தனது அடிப்படை தகவல்கள் மற்றும் எழுதவேண்டிய முக்கிய
நிகழ்வுகள், சம்பவங்கள், குறிப்புகள் யாவும் அவரிடம் இருந்தன. எந்த
எதிர்வினையும் இல்லாமல் தனது உழைப்பும் அக்கறையும் வீணாக போகிறதே என்ற
ஆதங்கமும், நோய்மையும் அவரது செயல்களை முடக்கி போட்டது. ஆனாலும் விற்பனையை
பற்றி, தன் கைப்பணம் போகிறதே என்பதை பற்றிய கவலைகளை மீறி தொடர்ந்து
ஆண்டுக்கு ஒரு புத்தகம் வீதம் கொண்டு வந்தார்.
சிவனடி தமிழ் இலக்கியத்தில் தேர்ந்த வாசிப்பு அனுபவம்
கொண்டவர். குறிப்பாக சைவ சித்தாந்தம் மற்றும் மெய்யியல் சார்ந்து தீவிர
நாட்டம் கொண்டிருந்தார். தமிழ் செவ்விலக்கியங்களில் அவருக்கு இருந்த
ஈடுபாடு வரலாற்றின் நூலினை பல இடங்களில் உயர்ந்த கவித்துவ வெளிப்பாடாக
மாற்றியிருக்கிறது. இது போலவே ஆங்கில இலக்கிய புலமையும் அவரிடம் சிறப்பாக
அமைந்திருந்தது.
சிவனடியின் சரித்திரக் களஞ்சியத்தின் சிறப்பம்சம் வேறு
எந்த வரலாற்று நூலிலும் காணமுடியாத நுட்பமான, அரிதான தகவல்கள், எளிமையான
சொல்லும் முறை. எந்த பொருள் பற்றி பேச முற்படுகிறாரோ அதை பற்றிய அவரது
சுயமான பார்வை மற்றும் இடைவெட்டாக பிற துறைகளின் முக்கிய நிகழ்வுகளை
குறிப்பிடத்தக்க புத்தகங்களை பொருத்தி காட்டும் பாங்கு.குறிப்பாக
தமிழ்வாசகர்களை மனதில் கொண்டு அவர்கள் அறிந்த உதாரணங்களின் வழியே காலத்தை
சுட்டிகாட்டும் வெளிப்பாட்டு முறை.
உதாரணத்திற்கு ஒரு நூலை விளக்குகிறேன். 1831 முதல் 40
வரையான இந்திய சரித்திர காலத்தை விளக்கும் சிவனடி மெக்காலே பற்றிய
விபரங்களுடன் துவங்குகிறார். இன்னொரு பக்கம் மருத்துவ துறையில்
மயக்கமருந்து எனப்படும் குளோராபார்ம் கண்டுபிடிக்கபட்டதை குறிப்பிட்டு
சொல்கிறார்; கூடவே குணங்குடி மஸ்தானின் வாழ்வும் சூபி கருத்துகளும்
இடம்பெறுகின்றன.
ரயில்வே பணி நடைபெற்ற விபரங்களை தருகிறார்.
கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையில் ஏற்பட்ட மாற்றம், அடிமை முறையில்
அளிக்கபடும் தண்டனைகளை பட்டியலிடுகிறார். கூடவே தெலுங்கு மொழியில்
எழுதப்பட்ட சமையல்கலை நூலினையும் சுட்டிகாட்டுகிறார். திவாகரம் தமிழில்
அச்சிடப்பட்ட விபரங்களும் காணகிடைக்கிறது. இப்படி அறிவு களஞ்சியம் போல
தொடத்தொட விரிந்து கொண்டே போகிறது சிவனடியின் நூல்.
வரலாற்று ஆய்வு என்பது சாமான்யர்கள் படிப்பதற்கானது
அல்ல. அது அறிவாளிகளின் வேலை என்று பயமுறுத்தாமல் எளிய முறையில் வாசகனை
படிக்க வைக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த சரித்திர
களஞ்சியம்
இன்றுள்ள எந்த கணிப்பொறி வசதியும் பயன்படுத்தாமல்
கையால் குறிப்புகள் எழுதி பல ஆயிரம் பக்கங்கள் வைத்திருந்தார் சிவனடி.
அந்த வாசிப்பு அனுபவத்தின் திரட்சியே சரித்திர களஞ்சியமாக
வெளிப்பட்டிருக்கிறது.
சிவனடியின் மறைவிற்கு பிறகு இந்த நூல்கள் வெளிவருவது
நின்று போனதோடு அதன் விற்பனை ஆகாத பிரதிகள் விற்பனைக்கு கிடைப்பதும் கூட
முடங்கி போனது. சிவனடி உரிய முறையில் அங்கீகரிக்கபடவில்லை என்ற ஆதங்கம்
அவர் குடும்பத்திற்கு இருக்க கூடும். ஆனால் அவரது நூல்கள்
முடக்கபட்டுவிடக்கூடாது.
நாட்டுடமை ஆக்கபடும் புத்தகங்கள் குறித்து இன்று பலத்த
சர்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கவனிக்கபடாமல் முடங்கி போன சிவனடியின்
நூல்களை நாட்டுடமை ஆக்கினால் அது மிக பெரிய அங்கீகாரமாக அமையும். எதிர்கால
தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். அல்லது விருப்பமான பதிப்பாளர்கள் எவராவது
அவர்களது குடும்பத்தின் அனுமதி பெற்று புதிய பதிப்புகளாக அவற்றை
மீள்பிரசுரம் செய்து கொண்டுவரலாம்.
7000 பக்கம் எழுதிய சிவனடி தனது புகைப்படத்தை கூட
எங்கும் வெளியிட்டுக் கொண்டது கிடையாது. தன்னை எதிலும் முன்நிறுத்திக்
கொண்டதுமில்லை. சாதனையாளர்களை புறக்கணிப்பதும் அறைகுறைகளை கொண்டாடுவதும்
தான் தமிழின் தொடர்ந்த தலைவிதியா?
பெரியசாமி தூரனின் கலைக்களஞ்சியம், சிவனடியின் இந்திய
சரித்திரக்களஞ்சியம், போன்ற அரிய தமிழ் நூல்கள் முடங்கிப் போவது தமிழின்
அறிவு வளர்ச்சியை முடக்குவதேயாகும். கோடிக்கணக்கில் பணம் ஒரு நாள்
நடத்தப்படும் கேளிக்கை விழாக்களுக்கும் அரசியல் விளம்பரங்களுக்கும்
செலவிடப்படுகின்றன.
ஆனால் தமிழ் அறிவுத்துறை வளர்ச்சிக்கு காட்ட வேண்டிய அக்கறையோ மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது.
***
சிவனடியின் நூல்கள் சித்தார்த்தன் பதிப்பகம்
103, நான்காவது அவின்யூ, அசோக்நகர் சென்னை. 3 வெளியிடப்பட்டிருக்கின்றன.
தற்போது சென்னை தி. நகரில் உள்ள நியூ புக்லேண்ட் புத்தக கடையில் சில
தொகுதிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
***
புத்தகங்கள், சிபாரிசுகள்சமீபத்தில் டாப்டென் என்ற
பதிவில் சில சிபாரிசுகளை பார்த்தேன். அவர்கள் குமுதத்தில் வந்த சிலவற்றை
மீள்பதிவு செய்திருக்கிறார்கள். அவை பற்றிய கமெண்ட்கள் இங்கே.
சிறந்த பத்து தமிழ் நாவல்கள் - சா. கந்தசாமி
சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான்
எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை
கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன்.
மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.
1. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. போரடிக்கும்.
2. நாகம்மாள் - ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
3. ஒரு நாள் - க.நா. சுப்பிரமணியம் ஜெயமோகன் சொன்ன நாவல். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
4. வாசவேஸ்வரம் - கிருத்திகா கிருத்திகா சமீபத்தில் மறைந்துவிட்டாராம். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
5. 18ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtleஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் படித்ததில்லை.
7. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் படித்ததில்லை.
8. அவன் ஆனது - சா. கந்தசாமி படித்ததில்லை.
9. வானம் வசப்படும் - பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.
10. ரப்பர் - ஜெயமோகன் ஜெயமோகனின் சுமாரான நாவல்.
அவரது முதல் நாவலும் கூட. அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர்
எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏற வேண்டி இருப்பதும் தெரியும். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.
கந்தவர்னை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவரது சிபாரிசுகள்.
1. மோகமுள் - தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
2. தலைமுறைகள் - நீல. பத்மநாபன் ஒரே ஒரு நீல.
பத்மநாபன் நாவல்தான் என் நினைவில் இருக்கிறது. எனக்கு இங்கே கொஞ்சம்
குழப்பம். இதை படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.
3. சாயாவனம் - சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி, என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
4. மலரும் சருகும் - டி. செல்வராஜ் படித்ததில்லை.
5. கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
6. கடல்புரத்தில் - வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
7. கீரல்கள் - ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
8. புத்தம் வீடு - ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
9. பொய்த்தேவு - க.நா. சுப்பிரமணியம் என் பதிவு இங்கே.
10. கோவேறுக் கழுதைகள் - இமையம் படித்ததில்லை.
சி. மோகன் சிபாரிசுகள் - எனக்கு இவர் யாரென்று தெரியாது. படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.
1. இடைவெளி - எஸ். சம்பத் படித்ததில்லை.
2. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.
3. விஷ்ணுபுரம் - ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக
சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில்
விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
4. நினைவுப் பாதை - நகுலன் படித்ததில்லை.
5. நாளை மற்றுமொரு நாளே - ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக
லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு
செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை ஷாக் செய்யக் கூடியவர்.
6. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம்.
7. மோகமுள் - தி. ஜானகிராமன் முன்பு சொன்ன மாதிரி அருமை.
8. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் படித்ததில்லை
9. தண்ணீர் - அசோகமித்திரன்
இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது - என்று நினைக்கிறேன்.
ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக
வந்திருக்கும்.
10. சாயாவனம் - சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி இலக்கியத் தரம் வாய்ந்த புஸ்தகம்.
சுட்டிக்கு நன்றி!
அ) வாசவேஸ்வரம் - கிருத்திகா : காலச்சுவடு க்ளாசிக் வரிசையில் வந்திருக்கிறது. அவசியம் படிங்க!
ஆ) 18ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன் - உங்க கருத்தோடு 101% ஒத்துப்
போகிறேன். அவரின் மற்ற நாவல்கள் அளவு இது கவரவில்லை. ஹைதரபாதியாக இல்லாதது
ஒரு காரணமோ?
இ) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் : படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். படிப்பேன்னு தோணல
ஈ) புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் - கரெக்ட். இங்கும் அதே நிலை.
உ) ஆனால், நான் உங்களை மாதிரி விஷ்ணுப்ரம் முடித்தது இல்லிஅ. 75 பக்கத்தோடு முற்றுப்புள்ளி இட்டாச்சு (விஷ்ணுபுரத்திற்கு)
ஊ) ஈரம் கசிந்த நிலம் - ரவீந்திரன்: வாசித்தது உண்டா?
எ) தமிழின் முக்கியமான புனைவுகள்: ராஜமார்த்தாண்டன் சேர்க்கப்பட்டது.
இன்னும் ஒண்ணு பாக்கி. நாளை வரும்.
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
”பாடி ஷாப்பிங்”
என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? (ஆட்டோ பாடி ஷாப்பிங் இல்லை. அது
ஆக்ஸிடெண்ட் ஆன கார்களை பழுது பார்க்கும் இடம்.) நான் குறிப்பிடும் ”பாடி ஷாப்” பாடியை
(உடல்களை) வைத்து வியாபாரம் பண்ணுவது. செத்து போனவர்களின் உடல்களை
வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டிருக்கிறது. உயிருடன் இருப்பவர்களை
வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இரண்டாவது ரகம் பல
விதங்களில் நடக்கிறது. இது போன்ற வியாபாரங்கள் சிகப்பு விளக்குப்
பகுதிகளில் நடப்பது ஒரு எல்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி, ஏங்கி
தவிக்கும் இளைஞர்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி வியாபாரம் செய்வது இன்னொரு
எல்லை. வீடியோ கடையில் இருக்கும் டிவிடி, கேஸட்டுகள் போல் வாடகைக்கு
விடப்படும் இளைஞர்கள் அவதி சொல்லிமுடியாது. இது சிலருக்கு
வாழ்க்கையில் ஒரு படிக்கல். அல்வா சாப்பிடுகிற மாதிரி. ஈஸியாக இதை ஒரு
வாய்ப்பாக பயன்படுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு
முன்னேறிவிடுவார்கள். மற்றவர்களுக்கு பாகற்காய் சாப்பிடுவது மாதிரி.
இவர்களுக்கே
இந்த கதி என்றால் பிச்சைக்காரர்களுக்கு? அதுவும் சில அங்கங்கள்
இல்லாதவர்களுக்கு? அவர்கள் எங்கே போகமுடியும்? இவர்களை வைத்து எப்படி
பிஸினஸ் பண்ணுவது என்று பிஸினஸ் ஸ்கூல்களுக்கு இன்னும் தெரியாது.
தெரிந்திருந்தால் இதற்குள் Master of Business Administration in Mendicant Commerce என்று ஒரு ப்ரோக்ரம் வைத்திருப்பார்கள். (அந்த அளவிற்கு பிஸினஸ் ஸ்கூல் தாழ்ந்து விடவில்லை. இந்த “தொழிலில்”
உள்ள லாபத்தை குறிப்பிடுவதற்காக அவ்வாறு மிகைப் படுத்தினேன்).
பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அருவருப்படைந்து முகம் சுழிப்பதும்,
அவர்களை இரண்டாம் முறை பார்த்தால் வாந்தி வந்து விடும் எனறும் நினைக்கும்
நம்மில் பலருக்கு அவர்கள் மேல் ஒரு கருணையையும், இரண்டாம் முறைப்
பார்க்கத் தூண்டும் ஆர்வமும் ஏற்ப்படுத்துவது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”. நான் படித்த ஜெயமோகனின் முதல் முழு நாவல். மனிதர் சரளமாக எழுதித்தள்ளி விட்டார். ஜீரணிப்பது அவரவிரின் மனநிலையைப் பொருத்தது.
ஏழாம்
உலகம் பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. இதற்குத் தயாராகாதவர்கள்
இப்படியும் உலகத்தில் நடக்குமா? என்று ஆச்சரியப்படுவார்கள். உடனே
பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் ஒரு திருவிழா கூட்டத்திற்கோ அல்லது
கோவில் வாசலுக்கோ சென்று பிச்சைகாரகளைப் பார்த்துவிட்டு, அருகில்
இன்னொருவர் இருக்கவேண்டுமே என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, பின்னர்
சற்று மறைவாக நின்று ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து அங்கே
என்னவெல்லாம் நடக்கிறது, யார் யாரெல்லாம் வருகிறார்கள், வருபவர்கள்
பிச்சைக்காரர்களை என்ன செய்கிறார்கள், பிச்சைப்பாத்திரத்தில் விழுந்தக்
காசு எங்கெயெல்லாம் போகிறது என்று பார்க்கவேண்டும் எனறெல்லாம் ஆர்வம்
எழும். நம் மணிபர்ஸில் அந்தக் காசும் இருக்குமோ என்று சற்றே அருவருப்புடன்
நாணயங்களை பார்க்கத் தோன்றும்.
ஹீரோ
வொர்ஷிப் பண்ணும் தமிழுலகத்திற்கு போத்திவேலு பண்டாரம் என்ற
கதாபாத்திரத்தை தைரியமாக கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். வழக்கமாக வரும்
ஹீரோக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சதையும், உணர்ச்சியும் உள்ள
கதாபாத்திரம். ஒரு பக்கம் அருமையான எளிமையான குடும்பத்தலைவர், மறுபக்கம்
பழனியில் செய்யும் தகாதவைகள், மற்றுமொரு பக்கத்தில் தனது உபதொழிலை
நியாயப்படுத்தும் விதம் –
நமக்கே இது ஒருவேலை ஒரு சேவைதானோ? என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. ஆனால்
உடனே இதற்கு காரணமே இவர் தானே என்று சுதாரித்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்
ஏற்படுத்தி கதையை அற்புதமாக பிண்ணியிருக்கிறார் ஜெயமோகன்.
ஒரு
மகள் தன் தந்தையை வெறுக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவிற்கும் போகலாம்
என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையை பூசி மெழுகாமல், இரக்கமே இல்லாமல்,
அப்பட்டமாக போட்டு உடைத்துவிட்டார் ஜெயமோகன். வாசகர்களின் இரக்க
உணர்ச்சிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். ஆனால் அது தான் உண்மை என்று
தெளிவாக்கிவிட்டார்.
அப்பாவி மனைவி “நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்” என்று
சுயபட்சாதாபம் அடையும் பொழுது போ.வே.பண்டாரத்தின் குற்ற உணர்ச்சியை எப்படி
வார்த்தைகளில்லாமலே ஜெயமோகனால் சொல்லமுடிந்தது? அசத்திவிட்டார்.
முத்தம்மைக்கு நிகழும் கொடுமையின் ஒரு சுற்றின் ஆரம்பத்தில் ஆரம்பித்தக்
கதை அடுத்த சுற்றின் ஆரம்பத்திற்கு முன்னர் வந்து முடிவடைவது போல்
அருமையான கதையமைப்பு. அங்கே ஜெயமோகனின் இன்ஜெனுய்ட்டி (ingenuity) தெரிகிறது.
வட்டார
வழக்கை சரளமாக கையாண்டிருக்கிறார். அவருடைய வசிக்கும் பகுதி என்பதால்
அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும் கதாபாத்திரங்களுக்கு அவ்வழக்கு
இயற்க்கையாக இருக்குமாறு அமைத்தது பாராட்டுக்குறியது. ஆனால் பழனியில்
பிஸினஸ் பண்ணும் செட்டியார் எப்படி நாகர்கோவில் வட்டார வழக்கில்
பேசுகிறார்? அங்கே உதைக்கிற மாதிரி தோன்றுகிறது. கொஞ்சம் தெளிவு
படுத்தியிருக்கலாம். வட்டாரத்திற்கு அறிமுகமேயில்லாத வாசகர்கள் கொஞ்சம்
திணறுவார்கள். (வட்டார வழக்கு டிக்ஷ்னரி கொடுத்தது மிகவும் உதவியாக
இருக்குமென நினைக்கிறேன்). எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில், மார்க்
ட்வெயினின் ”The Adventures of Huckleberry Finn”னிற்கு
(ஜிம்மும், ஹக்கும் பேசுவது) ஈடாக வட்டார வழக்கை கையாண்டிருப்பது ஜெயமோகன்
தான். எனக்கு நாகர்கோவில் வழக்கு ஓரளவு பரிட்சயமே. அதனால் எளிதாக இருந்தது.
கதை
எனக்கு தனிப்பட்ட வகையில் அவ்வளவு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. ஜெயமோகன்
நல்ல நகைச்சுவையாக எழுதுகிறார். பொதுவாகவே நகைச்சுவை எனக்கு பிடித்தமான்
ஒன்று. ஒரு மெலன்கலிக் தீம் என்றாலும் பல இடங்களில் நகைச்சுவை என்னை
புன்னகை பூத்தவாறே பக்கங்களை வேகமாக புரட்ட வைத்தது. அவ்வளவு
கன்வின்ஸிங்காக இல்லாத் ”ஸ்லம்டாக் மில்லியனர்” முதலில் பார்த்தது தப்பாகி விட்டது என நினைக்கிறேன். ஷாக் அப்சார்பராக அதற்கு முன் ஒரு தமிழ் டி.வி சீரியலில் ”பிச்சைக்கார இண்டஸ்டிரி” பற்றி
சில காட்சிகளை பார்த்துவிட்டேன். ஆனால் ஜெயமோகன் இந்தக் கதையை 2004ல்
எழுதிவிட்டார். அவருக்குதான் நியாயமாக முதன் முதலில் இந்த சப்ஜக்டை தொட்ட
பெருமை சாரும். எல்லா வகையிலும் ”ஏழாம் உலகம்” ஒரு உன்னத படைப்பே.
(முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டேன்: ஜெயமோகனை அறிமுகப்படுத்திய ப்ளாக்கின்
கோ-ஆதர் RVக்கு நன்றி; இன்னொரு விஷயத்திற்கும் நன்றி - ஜெயமோகன்
கோபித்துக் கொள்வார் - அதனால் இங்கே சொல்லமாட்டேன்