Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 28, 2009
- In: Books| India| Reading| Reviews| Sri Lanka| Tamil| Translation| Uncategorized
- Comment!
இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.
தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.
விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.
’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
அரசனின் மகன்கள் மறுபேச்சு இல்லாமல் அந்தச் சாப்பாட்டை உண்டு முடிக்கிறார்கள். அடுத்து, இரண்டாவது தட்டைக் காண்பிக்கிறான் அரசன்.
‘அண்ணன், தம்பி நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கக்கூடாது, ஒண்ணா ஒற்றுமையா வாழணும், அந்த உறுதியோட இந்த ரெண்டாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
மறுபடியும், அரசனின் மகன்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். அரசன் கடைசியாக மிச்சம் உள்ள மூன்றாவது தட்டைக் காண்பித்துச் சொல்கிறான்:
‘நம்ம ஊர்ல உள்ள தமிழர்களோட நீங்க எப்பவும் சண்டை போடக்கூடாது, அதுக்காக இந்த மூணாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
இப்போது, அந்த இளவரசர்களின் முகம் மாறுகிறது. தட்டைத் தள்ளிவிடுகிறார்கள், சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.
ஒருபக்கம், பத்து, பன்னிரண்டு வயதுச் சின்னப் பையன்களுக்குச் சக மனிதர்கள்மீது இத்தனை வெறுப்பா, பகைமை உணர்ச்சியா என்கிற கேள்வி. இன்னொருபக்கம், இன்றைய இலங்கையில் நடைபெறும் படுகொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை யோசித்துப் பார்க்கும்போது, நிஜமாகவே அதிர்ச்சியாகதான் இருக்கிறது.
இந்தக் கதை இடம்பெற்றிருக்கும் நூல், மகா வம்சம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இலங்கையின் பூர்வ சரித்திரமாக மதிக்கப்படுகிறது.
நிஜமாகவே மகா வம்சம் சரித்திரம்தானா? அல்லது, முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மிகை உணர்ச்சிகளின் தொகுப்பா? உண்மை இந்த இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கலாம்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் ஏதோ ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கான ஒரு தகவலைத் தேடி மகா வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அதில் ஆங்காங்கே தென்பட்ட ‘மேஜிக்கல்’ அம்சங்கள் வியப்பூட்டின. பின்நவீனத்துவ பாணியில் ஓர் இதிகாசத்தை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்பதுபோல் அரைகுறையாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் அதை மறந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் மகா வம்சம் தமிழில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்திருப்பவர், ஆர். பி. சாரதி. (கிழக்கு பதிப்பக வெளியீடு - ஜனவரி 2007 - 238 பக்கங்கள் - விலை: ரூ 130/-)
இந்த நூலின் பின்னட்டையிலிருந்து ஒரு வாசகம்:
சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் இலங்கையில் கொழுத்து விட்டெரியும் இனப் பிரச்னையின் வேர், மகாவம்சத்தில் இருந்துதான் உதிக்கிறது. அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாக மகா வம்சம் கருதப்படுகிறது
மகா வம்சத்தைத் தமிழர்கள் ஏற்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ, சிங்களவர்கள் இதனை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். மூன்றாவது தட்டுச் சோற்றைச் சாப்பிட மறுத்த இளவரசர்களைப்போல, அவர்கள் முரட்டுத்தனமாகத் தமிழர்கள்மீது இன்னும் பகைமை கொண்டிருப்பதன் ஆதி காரணம் இதுவாக இருக்கலாம்.
அப்படி என்னதான் சொல்கிறது மகா வம்சம்?
நம் ஊர் ராமாயணம், மகா பாரதம்போல் மகா வம்சத்தில் சுவாரஸ்யமான ஒரு கதைத் தொடர்ச்சி இல்லை. வரிசையாக இலங்கையை ஆண்ட அரசர்களின் வாழ்க்கைக் கதைதான். ஏதோ ஓர் அரசர், அவருடைய புத்த மதப் பிரியம், பிட்சுக்கள்மீது அவர் செலுத்திய மரியாதை, கட்டிய கோவில்கள், நிகழ்த்திய மதமாற்றங்கள், அப்புறம் அடுத்த அரசர் என்று கோடு போட்டதுபோல் நீண்டு செல்லும் பதிவுகள்.
மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ படித்தவர்களுக்கு மகா வம்சம் செம போர் அடிக்கும். காரணம், முகலாய ஆட்சியின் மிகச் சுவாரஸ்யமான சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்துச் சுவையான கதைப் பின்னணியில் விவரித்திருந்தார் மதன். அதற்கு நேரெதிராக, மகா வம்சத்தில் ஒரே கதையைப் பல அத்தியாயங்களாகக் காபி - பேஸ்ட் செய்து படிப்பதுபோல் இருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம், முகலாய சரித்திரம், மகா வம்சம் நான்கையும் ஒரே புள்ளியில் வைத்து ஒப்பிடுவது சரியில்லைதான். ஆனாலும், மகா வம்சம்மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கத் தொடங்கியவர்களுக்கு அது ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்பு கொண்ட பிரதியாகத் தோன்றுவது சாத்தியமே.
நல்லவேளையாக, ஆர். பி. சாரதி அவர்களின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கச் சுகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே தென்படும் மாந்த்ரீக எதார்த்த (Magical Realism) அம்சங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. உதாரணத்துக்குச் சிலது:
- ஓர் இளவரசி, யாத்திரை போகிறாள். அவள் போன கோஷ்டியை ஒரு சிங்கம் தாக்குகிறது. ஆனால், அவளைப் பார்த்ததும் காதல் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டு, காதுகளைப் பின்னே தள்ளிக்கொண்டு பக்கத்தில் வருகிறது. அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். சிங்க வடிவத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். (இங்கிருந்துதான் ‘சிங்கள’ இனம் தொடங்குகிறது)
- இன்னோர் இடத்தில், ஏரியிலிருந்து கிளிகள் தொண்ணூறாயிரம் வண்டிச் சுமை நெல்லைக் கொண்டுவருகின்றன. அதைச் சுண்டெலிகள் அரிசி முனை முறியாமல், உமி, தவிடு இல்லாமல் கைக்குத்தல் அரிசியாகச் சுத்தமாக்குகின்றன
- பாலி என்ற இளவரசி, சாப்பாட்டுக்காகத் தட்டு வேண்டி ஆல மர இலைகளைப் பறிக்கிறாள். உடனே அவை தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன
- போதி மரத்தை வெட்டக்கூடாது. அதுவே விடுபட்டுக் கீழே விழுந்தால்தான் உண்டு. அதற்காக ஒரு ரசாயன(?)ப் பேனா இருக்கிறது. தங்கப் பிடி வைத்த அந்தப் பேனாவால் போதி மரக் கிளையில் ஒரு கோடு போட்டுவிட்டு வணங்கினால், மரம் தானே துண்டாகிக் கீழே விழுந்து நிற்கிறது
இப்படித் தொடங்கும் புத்தகம், கொஞ்சம் கொஞ்சமாக மாயங்கள் குறைந்து, அற்புதங்கள் என்று சொல்லத் தகுந்த விஷயங்கள் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் கதைகள்மட்டும் வருகின்றன. பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு தத்துவம் தவறாமல் தென்படுகிறது. இப்படி:
புனிதர்கள் மிகச் சிறந்த ஆசிகளைப் பெற, சிறப்பான தூய பணிகளைச் செய்வார்கள். அவ்வாறு சிறந்த தூய பலரைத் தொண்டர்களாகப் பெறுவதற்காக, அவர்களையும் தூய மனத்துடன் பணியாற்றச் செய்வார்கள்
மகா வம்சம் இலங்கையின் சரித்திரமாகச் சொல்லப்பட்டாலும், ஆங்காங்கே இந்திய வாசனையும் அடிக்கிறது. சில சமயங்களில் நாம் நன்கு கேட்டிருக்கக்கூடிய உள்ளூர்க் கதைகளுக்கு வெளிநாட்டுச் சாயம் பூசியதுபோல் தோன்றுகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, எலரா என்ற தமிழ் அரசனின் கதை.
எலராவுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு வருகிறவர்கள் எந்நேரமும் அதை அடிக்கலாம்.
ஒருநாள், எலராவின் மகன் தேரில் போகும்போது தெரியாமல் ஒரு கன்றுக் குட்டியைக் கொன்றுவிடுகிறான். வேதனையில் அந்தப் பசு எலராவுடைய மணியை அடிக்க, அவன் அதே தேர்ச் சக்கரத்தின் அடியின் தன் மகனைக் கிடத்திக் கொன்று தண்டனை கொடுக்கிறான்.
நம் ஊர் மனு நீதிச் சோழன் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் எலராவின் கதையில் இன்னொரு சம்பவம் கூடுதலாக இருக்கிறது.
இன்னொரு நாள், எல்ரா வீதியில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனுடைய வாகனத்தின் முனை புத்த ஸ்தூபியின்மீது இடித்துவிடுகிறது. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அது தவறுதான் என்பதை உணர்ந்த அரசன் எல்ரா, வீதியில் படுத்துக்கொண்டு, தன்மீது தேரை ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். புத்த பிட்சுக்கள் அவனை மன்னித்து ஆசி வழங்குகிறார்கள்.
இன்னோர் அரசனுக்கு, பத்து மகன்கள், ஒரு மகள். அந்தப் பெண் பிறந்ததும், ‘இவளுடைய மகன், தன்னுடைய மாமன்களை, அதாவது அந்தப் பெண்ணின் அண்ணன்களைக் கொல்லப்போகிறான்’ என்று ஜோதிடம் சொல்கிறது.
பதறிப்போன அண்ணன்கள், கம்சனைப்போல் ரொம்ப நாள் காத்திருக்காமல், உடனே தங்களுடைய தங்கையைக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். அவர்களுடைய அப்பா தலையிட்டுத் தடுத்து நிறுத்துகிறார்.
பிறகு, அவர்கள் அந்தத் தங்கையைச் சிறை வைக்கிறார்கள். அப்படியும் அவள் ஒருவனைக் காதலித்து, கல்யாணம் செய்து, குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கை மாறி இன்னோர் இடத்தில் வளர்கிறது.
இதைக் கேள்விப்பட்ட மாமன்கள், அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளையெல்லாம் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியும் அந்தக் குழந்தைமட்டும் என்னென்னவோ மாயங்களைச் செய்து வளர்கிறது, அதுவும் இடையனாக.
இப்படிப் பல இடங்களில் மகா வம்சமும் இந்தியாவில் நாம் கேட்டிருக்கக்கூடிய இதிகாச, புராண, செவி வழிச் செய்திகள், குழந்தைக் கதைகளும் கலந்து வருகின்றன - சம்பவங்களில்மட்டுமில்லை, சில வர்ணனைகளில்கூட இதுபோன்ற ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.
கடைசியாக, புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குட்டிக் கதைகளைச் சொல்லவேண்டும்.
தேவனாம் பிரியதிசா என்ற ஓர் அரசன். அவனைச் சந்திக்கும் துறவிகள் அரசனைப் பரிசோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.
‘அரசே, இந்த மரத்தின் பெயர் என்ன?’
‘மாமரம்’
‘இதன் பக்கத்தில் மேலும் ஒரு மாமரம் இருக்கிறதா?’
‘பல மாமரங்கள் இருக்கின்றன’
‘மாமரங்களையடுத்து வேறு மரங்கள் இருக்கின்றனவா?’
‘மாமரம் தவிரவும் பல வேறு மரங்கள் இருக்கின்றன’
‘இவற்றைத் தவிர வேறு ஏதாவது மரம் இருக்கிறதா?’
‘இதோ, இந்த மாமரம்தான் இருக்கிறதே?’
கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியை நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்:
’அரசே, உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?’
‘பலர் இருக்கிறார்கள் ஐயா’
‘உறவினர்கள் அல்லாத பலரும்கூட இருக்கிறார்கள் அல்லவா?’
‘உறவினர்களை விட அதிகமான அளவில் இருக்கிறார்கள்’
‘நீ கூறிய உறவினர்கள், உறவினரல்லாத பிறரைத் தவிரவும் இன்னும் யாராவது இருக்கிறார்களா?’
‘நான் இருக்கிறேனே ஐயா’
‘அரசே, நீ புத்திசாலிதான்’
நேர்முகத் தேர்வில் அடுத்தடுத்து ஒரேமாதிரி இரண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்கிற நவீன மனித வளத் தத்துவம் அந்தத் துறவிக்குத் தெரியவில்லைபோல, அரசனின் புத்திசாலித்தனத்தை தாராளமாகப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.
இந்த அரசன் புத்திசாலி என்றால், இன்னோர் அரசன் வீண் குறும்புத்தனத்தால் அழிகிறான். அவன் கதை இப்படி:
ஒரு காவலன் அரசனைப்போலவே தோற்றம் கொண்டிருந்தான். வேடிக்கைக்காக, அவனை அரசனைப்போலவே அலங்கரித்து, சிம்மாசனத்திலும் அமரவைப்பான். அரசன் காவல்காரனுடைய உடை, தலைப்பாகைகளை அணிவான். கையில் கோலுடன் காவல் பணி மேற்கொள்வான்.
ஒருநாள், இவ்வாறு வேடமிட்ட காவல்கார அரசனைப் பார்த்து, காவல்கார வேடத்தில் இருந்த உண்மையான அரசன் பலமாகச் சிரித்தான்.
‘என் முன்னே காவல்காரன் சிரிப்பதா?’ என்று அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டுவிட்டான் காவல்கார அரசன்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, ஒருவர் இலங்கை அரியணையில் அமர்ந்தாலே, இதுபோன்ற கிறுக்குத்தனங்களும், இரக்கமில்லாத மனமும் தானாக வந்துவிடும்போலிருக்கிறது!
நூல் அறிமுகம்
எதிர்பாராமல் பெய்த மழை
தமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை மூன்றிலிருந்து எட்டாம் வகுப்புப் படிக்கிற காலத்துக்குள் எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை ‘எதிர்பாராமல் பெய்த மழை’ என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சுகானாவும் சிறுமிதான். திருவண்ணாமலை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார். ஆனால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே இந்நூலை மொழிபெயர்த்துவிட்டார் சுகானா.
குழந்தைகள் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகத்தில் ஓவியங்கள் இல்லாமலா? இதிலும் ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் வரைந்தவர் பிரபல ஓவியர் இல்லை. இரண்டாம் வகுப்புப் படிக்கும் வம்சி என்கிற சிறுவன்.
ஆச்சரியங்களுக்குக் குறைவில்லாத இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கும் சுகானாவின் அம்மா கே.வி. ஜெயஸ்ரீயும் அப்பா உத்திரகுமாரனும் மொழிபெயர்ப்பாளர்கள்.
சரி! சுகானாவுக்கு மலையாள மொழி எப்படித் தெரியும்? ஜெயஸ்ரீ சொல்கிறார்: ‘சுகானா அஞ்சாவது வரைக்கும் கேரளாவுலதான் படிச்சா. அப்போ நாங்க அடிமாலியில இருந்தோம். ஒரு நாள் என் கணவர் உத்திரா இரண்டு மலையாளப் புத்தகங்கள் வாங்கிட்டு வந்தார். அதுல ஒண்ணு ‘மறையும் தீரம்.’ ரெண்டு புத்தகத்தையுமே சுகானா படிச்சா. ஒரு நாள் அம்மா இந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்கறேம்மான்னு சொன்னா. சரி முயற்சி பண்ணுன்னு விட்டுட்டேன். ஒரே வாரத்துல எல்லாக் கதைகளையும் அழகா மொழிபெயர்த்துட்டா.’
‘என் சகோதரி ஷைலஜாவோட மகன்தான் வம்சி. அப்போ அவன் ரெண்டாவது படிச்சுக்கிட்டு இருந்தான். ஒரு நாள் சுகானாகிட்ட ‘அக்கா! உன் கதைக்கு நான் படம் போடவா’ன்னு கேட்டான். அவளும் சரின்னு சொன்னா. ஒரு படம் போட்டதுமே எல்லாக் கதைகளுக்கும் அவன் ஓவியம் வரையறதுதான் சரியா இருக்கும்னு தோணிச்சு. அவனையே வரையச் சொல்லி வீட்டுல இருக்கற எல்லாரும் சொன்னோம். அழகா வரைஞ்சுட்டான்.’
‘பொதுவாவே வாசிப்பும் எழுத்துமா இருக்கற குடும்பம் எங்க குடும்பம். என் சகோதரியின் கணவர் பவா செல்லத்துரை ஒரு எழுத்தாளர். அவரைப் பார்க்க பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க. அதுனால எழுத்துங்கறது எப்பவுமே புழங்கிக்கிட்டு இருக்கற ஒண்ணா எங்க வீட்ல ஆயிடுச்சு. நானும் என் சகோதரி ஷைலஜாவும் அப்பப்போ எதையாவது மலையாளத்துலருந்து தமிழ்ல மொழிபெயர்த்துக்கிட்டு இருப்போம். சில சமயங்கள்ல ஒரு வார்த்தைக்கு என்ன தமிழ்வார்த்தைன்னு தெரியாம தடுமாறிக்கிட்டு இருப்போம். அப்போல்லாம் சுகானா என்னம்மான்னு கேப்பா. நாங்க அந்த வார்த்தையைச் சொன்னதும் போற போக்குல சரியான தமிழ் வார்த்தையைச் சொல்லிட்டுப் போயிடுவா.’
உற்சாகத்தோடு பேசுகிறார் ஜெயஸ்ரீ. அடுத்து என்ன செய்யப் போகிறார் சுகானா. ‘அம்மா எனக்கு உலகின் சிறந்த சிறுகதைகள்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ‘சின்ட்ரல்லா’ மாதிரியான கதைகள்தான். அதை எப்படித் தமிழ்ல புதுசாச் சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லாக் கதைகளையும் பண்ணாம, பதினைந்து கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணலாம்ங்கிற யோசனையும் இருக்கு.’ சந்தோஷம் கண்களில் மின்னச் சொல்கிறார் சுகானா.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் கிருஷி இப்படிச் சொல்கிறார்: ‘எப்பொழுது பார்த்தாலும் பெரியவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம்! பேச்சுகளால் மண்டிக்கிடக்கிறது வீடும் வெளியும். குழந்தைகள் உலகைத் தொலைத்துவிட்டோம். கல்வி சிறை ஆகிவிட்டது. இந்த இறுக்கத்தில் மின்னற்கொடிபோல் வந்திருக்கிறது ‘எதிர்பாராமல் பெய்த மழை.’
0
(பெண்ணே நீ - மாத இதழில் வெளியானது)
பிரபாகரன் - ஒரு வாழ்க்கை : புத்தகப் பார்வை
நூல் திறனாய்வு செய்வது என்பது கொஞ்சம் சிக்கலான பணியாகவே தெரிகிறது. வாசித்துவிட்டு "தேறும்","தேறாது" என்பதில் ஒன்றைச் சொல்லிவிடுவது அல்லது கொஞ்சமாக அதைப் பற்றி பேசி நிறுத்திக் கொள்வது சற்று எளிது அல்லது உசிதம் கூட.செல்லமுத்து குப்புசாமி எழுதியிருக்கும் 'பிரபாகரன் - ஒரு வாழ்க்கை'(வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)யை ஈழம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் வாசிக்க நேர்ந்தது. புத்தகத்தைப் பற்றி நண்பர்களோடு பேசுவதோடு மட்டுமில்லாமல் எனக்கு 'பட்டதை' எழுதிவிடுவதும் சரி என்று தோன்றுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையை மிக எளிமையான, சார்பில்லாத நடையில் ஆவணப்படுத்தியிருக்கும் செல்லமுத்து குப்புசாமியின் முயற்சி இன்றைய தேதியில் மிக முக்கியமான முயற்சியாக உணர்கிறேன்.
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் செய்தியும், அது பற்றியதான அலசலும் படைப்பாளியின் ஆளுமையிலோ அல்லது அவரோடான தனிப்பட்ட நட்பின் காரணமாகவோ அடங்கிக் போவது நூல் விமர்சனத்தின் அடிப்படை பலவீனம் என்பதால் இனி இந்தப் பத்தியில் குப்புசாமி பற்றி எழுதப் போவதில்லை.
தமிழக மக்களின் ஆழ்மனதில் அடி மட்டத்தில் ஈழம் குறித்தான கிளர்ச்சியான சிந்தனை உருவெடுக்கக் காரணமாக, சிங்கள அரசின் கொள்கை விளக்க அணியாக இந்திய அரசியல் கட்சிகள் செயல்படும் இந்த நேரத்தில், வெளி வந்திருக்கும் இந்த புத்தகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்று பதிவு.
காதலர் தினத்தை ஒட்டி வெளியான சில இதழ்களில் கூட பிரபாகரன் - மதிவதனி காதல் பிரதானமாகச் சித்தரிக்கபடுகிறது. சில வார இதழ்கள் புலிகளையும், பிரபாகரனையும் இதுவரை இல்லாத அளவில் தங்கள் பக்கங்களில் நிரப்புகின்றன. இது வியாபார குயுக்தியா என்பது போன்ற விவாதங்கள் இந்த நேரத்தில் தேவையில்லை.
இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கைப் பின்னணி குறித்த புதிரை விடுவித்து அந்தத் தனி நபரின் வாழ்வு குறித்து மட்டுமல்லாமல் அவர் அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான புறச் சூழலையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்யும் காரியம் அவசியம். அந்தப் பணியை இந்த நூல் செய்திருக்கிறது.
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்கக் கூடாது என்று காந்தி கண்ணதாசன் முயற்சியால் முட்டுக்கட்டை போடப்பட்ட நூல் இது.
இன்றைய சூழலில் விடுதலைப் புலிகளின் கடந்த காலத் தவறுகளைக் குறித்துப் பேசுவதற்குப் போதிய அவகாசம் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சிங்கள இனத்தின் ஆதிகத்தைப் பறைசாற்றும் இலங்கையின் 'தேசியக் கொடி' இன்றைக்கு வலுக்கட்டாயமாக அனைத்து தமிழர் வீடுகள் முன்பாகவும் சிங்கள இராணுவத்தினரால் ஊன்றப்படுகிறது.
அதை எதிர்க்கும் திராணியுள்ள கூட்டத்தையும், அந்தக் கூட்டத்திற்கான கொடியையும் வடிவமைத்த மனிதனைப் பற்றிய வாழ்க்கையை தொகுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். சராசரி இந்தியத் தமிழர்களை நோக்கி, அவர்களுக்கு பிரபாகரனின் போராட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருபதாகவே படுகிறது.
1991 க்குப் பிறகு இலங்கைத் தமிழர் என்றாலே தேசத் துரோகியாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதால் அந்தத் தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவும் இனப் பிரச்சினையின் பின்னணி பற்றி நமக்குத் தெரிந்திராத, மறைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தான புரிதலை இந்த நூல் உண்டாக்குகிறது.
உண்மையில் பிரபாகரன் எப்படிக் குளிப்பார், எப்படி தேகப் பயிற்சி செய்வார் முதலிய பர்சனல் விவரங்களைத் தேடி இதை வாசித்தால் ஏமாந்து போக வாய்ப்புண்டு. 'பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை' எனக் கூறும் புத்தகத்தின் பின் அட்டை வரிகள் நூறு விழுக்காடு மெய்யானது.
ஒரு அரசுப் பணியாளரின் வருமானத்தில் வாழும், கடவுள் நம்பிக்கை மிகுந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த செல்லப் பையன் உலகின் ஆகப் பெரிய கட்டுப்பாடான கொரில்லா இராணுவத்தைக் கட்டமைத்த கதை இது. கோயில் பூசாரியை சிங்களர்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தைத் தன் தந்தையும், அவரது நண்பர்களும் விசனத்தோடு பேசக் கேட்டு, "அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?" என எதிர் வினாத் தொடுத்த நிகழ்வோடு துவங்குகிற நூலின் முதல் அத்தியாயம் பின் நவீனத்துவ நாவலைப் போல முன்னும் பின்னுமாகப் பயணப்படுகிறது.
பல அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம்,தொய்வில்லாமல் நகர்கிறது.
- பிழைக்கப் போன இடத்தில் எதற்காக தனி நாடு கேட்கிறார்கள்?
அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லை. நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வந்திறங்கிய விஜயன் என்ற இளவரசன் உருவாக்கிய சிங்கள இனம் இலங்கைத் தீவின் தென் பகுதியில் உருவாகும் முன்பே அங்கு வசித்த பூர்வ குடிகள்.
- அப்படியானால் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்போர் யார்?
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் காலங்க் காலமாக வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களைத் தவிர்த்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அன்றைய சிலோன் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு கண்டி மலையக் பகுதியில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிவினரே இந்திய வம்சாவழித் தமிழர். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடுதலாக மிகப் பெரிய சிறுபான்மையினராக இலங்கை மண்ணில் விளங்கிய அவர்களது குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது வேறு கதை.
- அதனால் மட்டும் தனி நாடு கேட்டுப் போராடுவது நியாயமா?
தனி ஈழக் கோரிக்கை என்பது மலையகத் தமிழர்களையும், மலையகத்தையும் உள்ளடக்கியதல்ல. காந்தியவாதி தந்தை செல்வநாயகம் 1949 முதல் 1976 வரை ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்கள மக்களைப் போலத் தாங்களும் சம அந்தஸ்துடையயவர்களாக நடத்தப்பட வேண்டும் என்று போராடியதும், அப்படி அவர்களை நடத்துவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் அந்த உடன்படிக்கையை பகிரங்கமாகக் கிழித்துப் போட்ட கதையெல்லாம் உண்டு. இறுதியாக ஸ்ரீலங்காவாக மாறிய சிலோன் ஒரு பவுத்த சிங்கள தேசமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து தனி நாடு தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைக்கு அந்த மனிதர் தள்ளப்பட்டார்.
- அதற்காக ஆயுதம் தாங்கிப் போராடுவது சரியா?
- ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களை அழித்தது பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கு மட்டுமா? அல்லது சகோதரச் சண்டைக்கு வேறு சில காரணங்கள் உண்டா?
- பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை அதன் பிறகு சிதைந்து போய், சகோதர இயக்கங்களை அழிக்கும் நிலை உருவானதற்கு தமிழக அரசியல் சூழலும், இந்திய உளவுத் துறையும் காரணமாக விளங்கினவா?
- ஆண்களுக்கு நிகராக பெண்களும் துப்பாக்கி தூக்கிப் போராடும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை பிரபாகரன் எப்படி மாற்றினார்?
- பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் இடையேயான காதலுக்கும், உமா மகேஸ்வரன் மற்றும் ஊர்மிளா இயையேயான தகாத உறவுக்குமான வேறுபாடு ஈழத் தமிழ் விடுதலைப் போராடத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தியது?
- ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்தப் பின்னணியில் உருவானது?
- சிங்கள இராணுவத்தின் அடக்குமுறையில் இருந்து தமிழர்களைக் காப்பதற்கு இலங்கை சென்றதும், ஈழத் தமிழர்கள் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றதுமான இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடத் தூண்டிய காரணங்கள் யாவை?
- பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட புலிப் போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்காமல் அவர்களை அமைதிப் படை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமா?
- பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சொல்லி ஜெயவர்த்தனாவை நிர்ப்பந்திக்குமாறு இந்தியாவை நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் உண்மையிலேயே இந்தியாவின் அகிம்சை முகமூடியைக் கிழித்தாரா அல்லது பிரபாகரன் உற்பத்தி செய்த இன்னுமொரு தற்கொலைப் போராளிதானா அந்த கண்ணாடி அணிந்த இளைஞன்?
- அமைதிப் படையை அனுப்பி வைத்தும் அது எவ்வாறு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது?
ராஜீவைப் பழி வாங்குவதற்காகக் கொன்றார்களா அல்லது இனி மேல் ஆட்சிக்கு வந்தால் அவர் ஏற்படுத்தப் போகும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக இல்லாமல் செய்தார்களா?
- இராஜீவ் காந்தி கொலை விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதா அல்லது சாதமாக அமைந்ததா?
- விடுதலைப் புலிகள் மீதான தடை அவர்களை உண்மையிலேயே பாதித்துள்ளதா? அப்படிப் பாதித்துள்ள பட்சத்தில் பாதிப்பு அரசியல் ரீதியாக இருந்ததா அல்லது இராணுவ ரீதியாகவா?
- உண்மையில் பிரபாகரன் பயங்கரவாதியா அல்லது விடுதலைப் போராளியா?
இந்தக் கேள்விகளை அறிவார்த்தமாகவும், வரலாற்று நோக்கிலும் அணுக இந்நூல் உதவும்.
"பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் கணக்கில் கொள்ளாமல் இலங்கையின் இனப் போராட்ட வரலாறையும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியாது. உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல், வரலாற்று நோக்கில் பிரபாகரனை அணுகுகிறது இந்நூல்," என்ற வாசகத்தை முன் அட்டையில் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகம் 'இந்திய இறையாண்மைக்குக் குந்தகம்' விளைவிக்காமல் ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் சவாலான காரியத்தைச் செய்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் பலவற்றை நியாயப்படுத்தாமல் சம்பவங்களை மட்டும் பதிவு பண்ணுகிறது இந்தப் புத்தகம். புலிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் கூட, இந்திய அரசின் அல்லது உளவுத் துறையின் பல சித்து வேலைகளைச் சொல்லாமல் விட்டிருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை பல மர்மங்கள் நிறைந்ததாகவே இன்று வரை தொடர்கிறது என்று குறிப்பிட்டு விட்டு நகர்கிறார். நிச்சயமாக அந்த மர்மங்களும், புதிர்களும் அவருக்குத் தெரியாததாக இருந்திருக்காது. சுப்பலட்சுமி ஜெகதீசன் முதல் சந்திராசுவாமி வரை இராஜீவ் கொலைச் சமயத்தில் ஊடகத்தில் அலசப்பட்ட பலரைப் பற்றிக் குறிப்பிடாமல் நகர்கிறது புத்தகம்.
அதே போல புலிகளையும், ஏனைய போராளிக் குழுக்களையும் வைத்து எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் நடுவே தமிழகத்தில் நடந்த அரசியல் குறித்து எந்தக் குறிப்பும் தென்படவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை, அங்கு நிலவும் பேதத்தை மென்மேலும் சிக்கலாக்கியதில் இந்திய அரசின் பங்கு குறித்தி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல் சாமர்த்தியமாக விடப்பட்டிருக்கிறது.
அதே நேரம் பிரபாகரனை வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை நூல் செய்யவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் அடக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராடத்தில் பிரபாகரனின் பங்கு குறித்தும், போராடத்தின் போக்கையும் அதன் வீரியத்தையும் அவர் மாற்றியமைத்ததைப் பற்றியும் விவரிக்கிறது.
மிக முக்கியமானது மட்டுமல்லாமல், மிகச் சாமர்த்தியமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது என்பதற்கான பல காரணங்களில் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். அது மறைந்த பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி பற்றியது. பிரபாகரனைப் பற்றி என்ன எழுதினாலும், பேசினாலும் அதில் நிச்சயமாக ராஜீவின் பெயர் இடம் பெறும். ஒன்று பிரபாகரனை வில்லனாகவும், இராஜீவை கதாநாயகனாகவும் வர்ணிப்பார்கள். இல்லாவிடில் பிரபாகரனை நாயகனாகவும், இராஜீவை வில்லனாகவும் சித்தரிப்பார்கள்.
உண்மையில் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த வரை இராஜீவ் காந்தி வில்லனும் அல்ல, கதாநாயகனும் அல்ல. அவர் ஒரு அபிமன்யு. அப்படியான பிம்பத்தையே இந்தப் புத்தகம் உருவாக்கும். அதுதான் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
புத்தகத்தின் கதாநாயகன் பெயர் பிரபாகரன். வில்லன்மார்களின் பெயர்கள் - கொழும்பு ஆட்சி பீடத்தின் சிம்மாசனத்தை அலங்கரிப்பவர்களாக - மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. புனைவுகள் இல்லாமல், மிகுதியான அலங்கார வார்த்தைகள் இல்லாமல், வரலாற்று நோக்கில், சம்பவங்களின் கோர்வையாகத் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரபாகரன் முக்கியான காலப் பதிவாக அமையும்.
நன்றி: அம்ருதா
அரசூர் வம்சம்
”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.
அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?
பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.
கேட்டு விட்டு எழுதுகிறேன்.”
படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.
மேலும் படிக்க...
ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.
காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.
அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.
ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.
மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.
பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..
உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.
இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.
ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.
போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.
நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...
இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.
குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.
பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.
அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.
அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.
உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.
இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.
கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?
நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)
அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..
இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.
புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்
--------
அரசூர் வம்சம்
இரா. முருகன்
464 பக்கங்கள்
ரூ.175
கிழக்கு பதிப்பகம்
குழந்தைகள் எதிர்காலம் - நூல் அறிமுகம்
கோப்பு வகை: Article, Children, Kids, கட்டுரை, குழந்தைகள் — vizhiyan @ 5:56 மு.பகல்
குழந்தைகள் எதிர்காலம் - ஷ. அமனாஷ்வீலி: நூல் அறிமுகம் - கு. செந்தமிழ்ச்செல்வன்
ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ, என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ. அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு அலச வேண்டிய பொருளாக்கியது. நம் கண் முன்னே ‘குழந்தை வளர்ப்பு’ எதிர் திசை பயணத்தில் செல்வதை உணர்ந்து கவலை கொள்ளச் செய்தது. அதோடு விடவில்லை, சென்னையில் நாங்கள் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியிலேயே பெற்றோர்கள் சந்திபை நடத்த வைத்தது.
ஷ. அமனஷ்வீலியின் ‘குழந்தைகள் எதிர்காலம்’ வாசிக்கும் எந்தப் பெற்றோரையும், ஆசிரியரையும், சமூக ஆர்வலர்களையும் குழந்தை வளர்ப்பைப் பற்றிய மறுபார்வையை உருவாக்கும். அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியரல்ல உண்மையில், இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, குழந்தைகள் மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தரும் முறைகளும், வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன. சொவியத் யூனியனில் பள்ளிச் சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது இந்நூலில் குறிப்பிட்டுள்ள வழி முறைகள் பயன் படுத்தப் பட்டது.
‘குழந்தை வளர்ப்பை’ பற்றிய புரிதல்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சிரத்தைக் கொள்ளச் செய்கிறது. பெற்றோர்களை நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களை நல்ல பெற்றோர்களாக்கவும் முயற்சிக்கிறது.
புத்தகம் முழுவதும் சிந்தனைச் சிதறல்கள். அவரவர் தேவைக் கேற்ப, சேகரித்துக் கொள்ளலாம். சில சேகரிப்புகள் இதோ.
Ø குழந்தைகளின் உண்மையான வாழ்க்கை என்பது, அவர்களது மகிழ்ச்சி, அதிர்ப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தனி நபர் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களின் தனித் தன்மை இழக்காமல் வளர்க்க வேண்டும்
Ø கற்பிக்கும் முறைகள், விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கை முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் படிப்பதின் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அதில் பள்ளி வாழ்வை ஒழுங்கு படுத்தும் பொது அணுகுமுறை வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் பலமுறை வாசித்து பயன் பெற வேண்டிய புத்தகம். திருமணத்தின் போது, பெற்றோராகப் போகும் புதுமண தம்பதியினருக்கு பரிசளிப் பதற்கான அற்புதமான புத்தகம். டாக்டர். இரா. பாஸ்கரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ள இப்புத்தகத்தை அறிவுப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் விலை ரூ 150/-. புதியக் கல்வியாண்டில் குழந்தைகளை சந்திக்கப் போகும் ஆசிரியர்களுக்கான மனோ நிலையையும் குறிப்பிடுகிறது.
* சிறுவர், சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வமும், எதிர் பார்ப்பும் ஆசிரியர்களின் நெஞ்சங்களின் நிறைந்திருக்க வேண்டும்.
* புதிய போதனை முறைத்திட்டைங்களும், புதிய நம்பிக்கைகளும் அவர்களிடம் உருவாகியிருக்க வேண்டும்.
* கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம் தோன்ற வேண்டும்.
* குழந்தைகளின் சத்தத்தை இன்னிசைக் குழுவின் வாத்தியைங்கள் சுருதிக் கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளை போல கேட்கும் காதுகளை ஆசிரியர்கள் பெற வேண்டும்.
குறும்புக்கார குழந்தைகளைப் பற்றி கவலை கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்களுக்கு அக்குழந்தைகளைப் பற்றி சரியான புரிதலை உருவாக்குகிறது.
குறும்புக் கார குழந்தைகள், நன்கு பழகக் கூடியவர்கள். செயல் முனைப்பான கற்பனையாளர்கள். சுற்றுயுள்ளவற்றை சுயமாகக் கற்கவும், மாற்றியமைக்கவும் விழைபவர்கள். இவர்கள் தான், உண்மையான குழந்தைகள், ஆசிரியர்களின் சிந்தனை, ஆராய்ச்சிப் பொருள்.
இவர்களை, அச்சுறுத்தல் இல்லாமல், அடக்கி ஒடுக்காமல் மாற்றியமைக்கும் வழிமுறைகளை சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளிடம் என்னவகைக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும்.
ஆசிரியர்களின் கேள்விகள் தான் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஜீவ அணுவாகும்.
குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளி வளர்ப்புத் தன்மைகள் எதிராக இருக்கக் கூடாது. கல்வி, குழந்தை வளர்ப்பில் பள்ளி தான் மையம். குடும்பத்திலும் மாற்ற பள்ளிக்கு உரிமை உண்டு.
குழந்தைகளை நல்லவராக வளர்க்க வேண்டும் எனத் தான் எல்லா பெற்றோர்களும் விழைகிறார்கள். ஆனால் உண்மையாக வளர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்களா என்பது தான் கேள்வி. வளர்ப்புப் பணி எளிதானதல்ல. உயர்வான மானுட கோட்பாடுகள் அடிப்படையில் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தான் நமது வளர்ப்புப் பணிகளை வழி நடத்த வேண்டும்.
குழந்தைகள் உணர்ச்சிகரமான ஜீவன்கள். அவர்கள் இன்றைய மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் வாழ்கிறார்கள். அவர்கள் மீது நமது எதிர்காலக் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் திணிக்கூடாது.
குழந்தைகள் மீது மனிதாபிமானம் வேண்டும்.
ü மாற்றியமைக்கும் சக்தி வேண்டும்.
ü உள்ளாற்றல்களை நம்ப வேண்டும்.
ü பொறுமை வேண்டும்.
ü இரக்கம் காட்ட வேண்டும்.
ü ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ü நமது கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும்.
வளமான, உட்பொருள் மிக்க, பன்முக எதிர்கால சமூகவாழ்விற்கு அவர்களை உட்படுத்த பக்குமாக தயார் படுத்த வேண்டும்.
நிர்பந்திக்காமல், ஆர்வம் ஏற்படுத்துவது கடினமானது தான். இதில் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுமையும், கற்பனை சக்தியும் வேண்டும்.
கற்பிப்பது - - எளிதானதுல்ல
- - கடினமானதாகக் கருதப்பட வேண்டும்
- - நிர்பந்திக்காமல் ஆர்வம் ஏற்படுத்த கடினமானது.
ஒரு ஆசிரியரின் பத்து “மூதுரமொழிகள்”
1. மனிதாபிமான அடிப்படையில் வளர்ப்பு பணி இருக்க வேண்டும்.
- குழந்தை தானாக நம் உதவியாளாராக செய்ய வேண்டும்.
2. கலந்து பழகி
- கூட்டாக தெரிந்து கொள்வது.
3. எந்த லட்சியத்தில் வளர்க்க நினைக்கின்றேமோ
- அதை நாம் வாழ்ந்து, முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
4. ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், மனிதர்கள், மற்றும் தன் மீதான சுய நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்க வேண்டும்.
5. சமமான, பரஸ்பர உணர்வுகளையும், நண்பர்கள், உறவினர்கள் மீது அக்கறை கொள்ள உணர்வுகளை வளர்க்க வேண்டும்
6. சமூதாயத்தின் ஒரு பங்காக உணர வேண்டும்.
7. நம்மைப் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு கடினம். நாம் தான் குழந்தைகளை புரிஎது கொண்டு, அவர்களின் மனதினைக் கேற்க நடத்த வேண்டும்.
8. வளர்ச்சி பணி, நீண்ட, நெடிய போக்கு,அறிவு கூர்மை, தொடர்ச்சி, பொறுமை வேண்டும்.
9. இரக்கம், அன்பு, பாசம், மென்மை, திறந்த மனது, பிறருக்கு உதவுவது பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வது. நாம் பின்பற்ற வேண்டும். நாம் கண்டிப்புடன், பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்.
10. தான் தோன்றித்தனம், அதிகாரம் செய்வது, கத்துவது, திட்டுவது, தன் மனதை புண்படுத்துவது, கிண்டல் செய்வது, முரட்டுதனமாக நடப்பது, அச்சுறுத்துவது, நிர்பந்திப்பது போன்றவற்றை கைவிட வேண்டும்.
ü குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப் படுத்தி, வளர்க்க வல்ல கல்வி போதிக்கும் முறை. செயல் முனைப்போடு எவ்வளவுக் கெவ்வளவு புதுப்பிக்கப் படுகிறதோ அவ்வளக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால் நம்பிக்கை உள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.
ü பாட வேளைகளின் போது தர்பார் நடத்த கூடாது. படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்க கூடாது. அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.
ü தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசியர் அல்ல. தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர் காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால லட்சியங்களை நிலை நாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து ‘வந்தவர் தான்’ உண்மையான நவீன ஆசிரியர்.
ü ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது.
(குழந்தைகள் – ஆசிரியர்களின் ஆசான்கள்)
ü எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் வேண்டுமெனில் நாளய தினத்தை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். தெள்ள தெளிவாக செயல் முனைப்போடு தயாராக வேண்டும்.
ü பள்ள்களில் நுழையும் குழந்தைகளின் ஞானம் புஜ்ஜியம் அல்ல.
ü குடும்பம், வானொலி,தொலைக்காட்சி,நர்சரி பள்ளிகள்,பத்திரிக்கைகள்,திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள்,நமது நவீன வாழ்கை, எல்லாமே குழந்தைகளை ஞானம் கொள்ளச் செய்கின்றது.
ü ‘ஞானம்’ எப்படிப்பட்டதாயிருந்தாலும், அவர்கள் குழந்தைகைத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டு தான் வாழ்வின் “உட்பொருள்”.
ü குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதும் விருப்பத் தோடு செல்லட்டும். சந்திப்பதில் மகிழ்ச்சி அடையட்டும். அப்போது தான் குழந்தைகள் விருப்பத்தோடு பள்ளி வருவார்கள். ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.
ü இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி தேவையா?
ü குழந்தைகள் புதியன கற்றலில் மகிழ்ச்சி கொள்வார்கள்.
ü வகுப்பறையில் சிரிப்பை அனுமதிப்பது. குழந்தைகளின் சிரிப்பு ஆசிரியர்களின் முக்கிய பிரச்சனையாகும்? சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிபடுத்தவும், நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும்.
ü வாழ்க்கையின் மகிழ்ச்சி
புதியவற்றை அறியும் மகிழ்ச்சி
கலந்து பழகும் மகிழ்ச்சி
வளர்ந்து பெரியவர்களாகும் மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு கிட்ட வேண்டும்.
ü வளர்ப்புப் பணிக்கு,
ஆரம்பமோ,
முடிவோ
இடைவேளைகளோ…….இல்லை
- கு.செந்தமிழ் செல்வன்.
ஜனகணமன- நூல் விமர்சனம்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு.
எடுத்துக் கொண்ட வேலை புத்தக விமர்சனம். ஆனால் அதற்கு மேலே சொன்ன வியாஜ்ஜியம் புறம்பாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் ஜனகணமன என்ற நாமகரணம் கொண்ட இந்த குறுநாவல் மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன பொலிடிக்கல் Fiction என்ற வருணனையோடும், மாலனின் வீட்டார் டைனிங்க் டேபிளில் காந்தியைப் பற்றி செய்த விமர்சனம் கலந்த உரையாடலுமான Preamble போன்றதான முஸ்தீபுகளும் நாமும் கொஞ்சம் அது மாதிரி பீடிகைகளோடு தான் இந்த விமர்சனத்தை தொடங்க வேண்டும் என்ற ஐடியாவை தந்ததையும் நேர்மையாக இங்கே சொல்லி விட வேண்டுமல்லவா அது தான்.
மாலன் தன் மகன் சுகனுக்குச் சொன்ன இந்த பொலிடிக்கல் ஸ்டோரியை மீண்டும் ஒரு கடிதத்துடனே நிறைவு செய்கிறார். ஆனால் தன் மகனுக்கு மட்டுமல்ல. இந்த புத்தகத்தைப் படிக்கும் எல்லோருக்குமே ஒரு தப்பான தகவலைச் சொல்கிறார். அது கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள். மாலன் தெளிவாக நவம்பர் பதினான்காம் தேதி என்று ஸ்பஷ்டமாக எழுதிருக்கார். ஆனால் கோட்சேயும் நாரயண ஆப்தே என்ற இன்னொரு குற்றவாளியும் தூக்கிலிடப்பட்ட்து நவம்பர் 15 1949.
கதை இப்படித் தொடங்குகிறது
ரமணன் என்கிற போலிஸ் அதிகாரி ஒரு கனவு காண்கிறார். காந்தி கொல்லப்படுவதாக. தூக்கி வாரிப் போட்டு எழுந்து கொள்கிறார். சோம்பேறித்தனமாக இந்தப் புத்தகத்தை கையில் எடுக்கும் என் போன்ற ஆசாமிகளை டக்கென்று கதைக்குள்ளே தள்ளி வேக வேகமாக நகர்த்தி முற்றும் போட்டு நல்லா இருக்கே நடை என்ற திருப்தியுடன் புத்தகத்தை மூட வைக்கிறார் மாலன் கதை சொல்லும் சம்பிரதாயங்களில் தியேட்டர் டெக்னிக்கினைக் கையாண்டு கதை பல கோணங்களில் சொல்ல்படுகிறது. இழை துண்டாகமல் ஒட்ட வைத்திருக்கும் லாவகம் பிரமாதம். அவருடனே அத்தியாயம் அத்தியாயமாகப் பயணப்படலாம்
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நடந்த கலவரங்கள். பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாஉ இந்தியா தரவெண்டும் அதை முன்னிறுத்தி காந்தியின் உண்ணாவிரதம் இவற்றை சொல்லும் முதல் அத்தியாயம். காந்திக்கு 75 வயதாகிறது என்கிறார் மாலன். காந்திக்கு அப்போது வயது 79. காந்தியை ஒரு நாலு வயசு கம்மியாகப் பார்க்க மாலனுக்கு ஆசை.
இந்த 55 கோடி விவகாரத்தைப் பற்றிய சர்ச்சைகள் நிறைய உண்டு. கதை வடிவத்தில் இருப்பதால் அந்த சர்சைகளுக்கு மாலன் இடம் தராமல் கதையை நகர்த்திக் கொண்டு போவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் வரலாறு அல்லவா. ஜனவரி 13-1948 தேதியிட்ட இரண்டு அணா விலையிருந்த அன்றைய ”தி டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் தலைப்புச் செய்தி
MAHATMA GANDHI STARTING FAST FROM TODAY
ஜனவரி 12 ம் தேதி மாலை காந்தியின் மாலை நேர வழிபாட்டு கூட்டத்தில் அவர் பேசியதை மேற்கோள்காட்டும் டைம்ஸ் அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவே உண்ணாவிரதம் மேற்கொள்வதாகச் சொல்கிறது
காந்தியக் கொல்ல கோட்சே முடிவெடுக்கும் தருணத்தை சுருக்கமாகவும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சொல்லும் இரண்டாம் அத்தியாயம்.
நதுராம் கோட்சே, நாரயண ஆப்தே, மதன்லால், விஷ்ணு கர்க்காரே ஆகியோரைப் பற்றிய சுருக்கமான வரிகளில் சில நறுக் இருக்கவே செய்கிறது. ஆப்தேயைப் பெண் பித்தன் எனசொல்லி விட்டு வேகமாக மதன்லால் பாவா பக்கம் தாவுகிறார் மாலன். மதன்லாலின் பூர்விகத்தைப் பற்றிய சில வரிகளிலேயே இவன் ரொம்பவே தீவிரமான ஆசாமி என புரியவைக்கிறார் மாலன்
விஷ்ணு கர்க்காரே பற்றி ஹோட்டலுக்கு சொந்தக்காரன் என்று நிறுத்திக் கொள்கிறார். இந்த நாலு பேரும் இன்னொரு முக்கியமான ஆசாமியைச் சந்திக்கும் தருணமும் இந்த அத்தியாயத்தில்.
திகம்பர் ராமசந்திர பாட்கே.
“வித்தைக்காரனைப் போல வெளித் தோற்றமும் வேடிக்கைப் பேச்சுமாய் “ பாட்கேவுக்கு பொறுத்தமான வருணனை.
இந்த அத்தியாத்தின் ஹைலைட் நதுராம் கோட்சே காந்தியைக் கொல்ல ஜனவரி 20 1948 என நாள் குறித்துக் கொண்டு அதற்கான பயண ஏற்பாடாகா 17-ஜனவரி 1948 பம்பாயிலிருந்து டெல்லிக்குப் பயணிக்க ஏர் இந்தியாவில் தனக்க்கும் நாரயண ஆப்தேவுக்கும் விமான டிக்கெட் வாங்கும் சம்பவத்துடன் இந்த அத்தியாயம் முடிகிறது . நல்ல விறுவிறுப்பு
விமானப் பயணக் கட்டணம் (இரண்டு டிக்கெட் அன்றைக்கு 308 ரூபாய்) வரை மிகச் சரியாக சொன்ன மாலன், கோட்சே தனக்கு S.MARATHE என்றும் நாராயண ஆப்தேவுக்கு DN KARMAKAR என்றும் போலி பெயர் கொடுத்து டிக்கெட் வாங்கியதையும் சொல்லியிருக்கலாம். அந்த டிக்கெட்களின் படம் இங்கே
பம்பாயிலிருந்து டெல்லிக்குப் புறப்படும் முன்பு நடந்த சில ஆயத்தங்களைச் சொல்லும் மூன்றாம் அத்தியாயம். இங்கேயும் மாலன் சில ஆதாரங்களில் கவனம் செலுத்தவில்லை எனச் சொல்லலாம்.
நாராயண ஆப்தேவும் நதுராம் கோட்சேயும் ஹோட்டல் கிரீன் பேலஸில் ரூம் நம்பர் 212 ல் தங்கியிருந்ததாகச் சொல்கிறார் மாலன். ஆனால் அவர்கள் தங்கியிருந்தது SEA GREEN HOTEL ; அறை எண் 6. அந்த ஹோட்டலின் படம் இங்கே
ஹோட்டலில் நாரயண ஆப்தே தனது கேர்ள் பிரெண்ட் ரேணுவை தருவித்து அவளுடன் சல்லாபித்திருப்பதாக மாலன் சொல்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை பம்பாய் போலிஸ் இலாகாவில் சர்ஜனாகப் பணி புரிந்த டாக்டர் ஒருவரின் பெண் என்கிற அளவுக்கு விவரம் சேகரித்த மாலன் அந்தப் பெண்ணின் பெயர் MANORAMA SALVI என்பதை எப்படி கவனிக்கத் தவறினார் எனப் புரியவில்லை. பின்னர் நடந்த விசாரணயில் அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இங்கே தந்துள்ளேன்.
ஆப்தே அந்தப் பெண்ணுடன் சல்லாபித்திருந்த தருணத்தில் கோட்சே ஓரியண்டல் லைஃப் இன்ஷூய்ரன்ஸ் கம்பெனியில் தனக்கிருந்த இன்ஷ்யுரன்ஸ் பாலிசிகளுக்கு வாரிசுகளை நியமித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார் மாலன். கோட்சே அப்படி நாமினேட் செய்தது ஜனவரி 13-1948.(Reference No:1) அவனும் ஆப்தேயும் சீ கிரின் ஹோட்டலில் தங்கியிருந்தது ஜனவரி 14 முதல் 17 வரை. இங்கேயும் தேதியில் மாலன் கவனம் செலுத்தவில்லை
அத்தியாயம் நான்கு- அத்துனை சுவாரசியமான அத்தியாயமாக இல்லை. கொலையாளிகள் காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்கு வருவதில் முடியும் அத்தியாயம் இறுதி வரியில் திகம்பர பாட்கே அங்கே ஒரு ஒற்றைக் கண் மனிதனைப் பார்க்கும் ஒரு திகிலில் முடிச்சிட்டு நிற்கிறது. கோட்சேயும் அவனது நண்பர்களும் காந்தி மீது 20-ஜனவரி-1948 நடத்திய முதல் கொலைத் தாக்குதலை மிகச் சுருக்கமாக அதே சமயம் விறுவிறுப்பாகவும் மாலன் விவரிக்கும் ஐந்தாம் அத்தியாயம். ஒரு ஜன்னல் கொலையாளிகள் கணக்கிட்டதை விட ஜாஸ்தி உயரத்தில் இருப்பதை கணக்கு வாத்தியார் ஆப்தே போட்ட திட்டத்தின் ஆரம்பமே சைபர் என்ற வார்த்தை சிக்கனத்தில் மாலன் சூழ்நிலையினைக் கண்முன்னே கொண்டு வருகிறார்.
கைக் குண்டு வீசி காந்தியைக் கொல்ல நடந்த அந்த முயற்சி, மாற்று ஏற்பாடுகளியும் நிறைவேற்ற இயலாத கொலையாளிகளின் ஏமாற்றம், மதன்லால் பாவா போலிசிடம் சிக்கியது; மற்றவர்கள் தப்பி ஓடியது என்று விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சாப்டரை நகர்த்தும் மாலன், மாட்டிக் கொண்ட மதன்லால் பாவா மூலம் தங்களையும் போலிஸ் பிடித்து விடும் என கோட்சேயும் ஆப்தேவும் பயப்படும் ஒரு திகில் முடிச்சுடன் கொஞ்சம் மூச்சு விட நமக்கு சந்தர்ப்பம் தருகிறார்.
மாட்டிக் கொண்ட மதன்லால் பாவாவை போலிசார் விசாரிக்கும் சம்பவங்கள் ஆறாம் அத்தியாயம்.
இங்கே மதன்லால் பாவாவின் பேச்சு மூலம் அன்று நிலவி வந்த சூழலை மாலன் தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்.
மதன்லால் பாகிஸ்தானியனா என்ற போலிசின் சந்தேகத்திற்கு அவன் பதில், “ காந்தியைக் கொல்கிற அளவுக்கு பாகிஸ்தானிகள் பைத்தியக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே அவர்தானே”
இந்தக் குற்றச் செயலில் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்பதை போலிஸ் யூகிக்கும் விதம் மாலனின் லாவகம்
“அரசியல் ? காந்தியைக் நீ கொல்ல விரும்பிய்தற்கு காரணம் அது தானா”
“ஆயிரக்கணக்கான பேர்களின் வயிற்றெறிச்சலை கொட்டிக் கொள்ளும் அவரின் செயல்கள் அரசியல் என்ற பெயருக்கு தகுதியுடைவைஎன்பது உங்கள் அபிப்ராயமானால், அப்படியே வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அவற்றை அந்த வார்த்தையால் அங்கீகரிக்கவில்லை”
“நீங்கள்?”
வாய்ச் சவடால் பேசப் போய், வார்த்தை தவறிவிட்டதை மதன்லால் உணர்ந்தான். இதோ ஒரு முக்கியமான தகவல் உதிர்ந்துவிட்டது. சே !
மதன்லாலைக் குடைந்த போலிசார், அவன் சகாக்கள் பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் ரூம் நம்பர் 40ல் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டு அங்கே விரைந்து போவதற்குள் கொலையாளிகள் திசைக்கொருவராயப் பறந்து விட்டனர் என்ற ஏமாற்றமும் சஸ்பென்சும் கலந்து ஒரு செகண்ட் நிற்கிறது இந்த அத்தியாயம். ஆனால் உடனே ஒரு குதிரை வேகத்தில் தொடர்கிறது. அறை எண் 40 காலி செய்து விட்டனர் கோட்சேயும் ஆப்தேயும். ஆனால் அந்த அறையில் போலிசுக்கு புதிய தடயம் கிடைக்கிறது. மாலனின் வார்த்தைகள் அந்த தடயத்தை நறுக்கென்று சொல்கின்றன. “ பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கச் சொன்ன காந்தியைக் கிழி கிழி என்று கிழித்திருந்த ஹிந்து மஹா சபையின் டைப் செய்த அறிக்கை. கையெழுத்துப் போட்டிருந்தவர் ஆசு தோஷ்லாகிரி. அதிலிருந்து லீட் கிடைத்து போலிசுக்கு ஒரு பத்திரிக்கையின் பெயரும் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களின் பெயர்கள் கிடைக்கிறது. பத்திரிக்கை இந்து ராஷடிரா; அதன் ஆசிரியர் நதுராம் கோட்சே; பப்ளிஷர் ஆப்தே. போலிசுக்கு கோட்சேயும் ஆப்தேவும் வெறும் பெயர்களாக ஒரு புகை மூட்டம் போலத் தெரியவரும் இந்த இடத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் மாட்டிக் கொண்ட மதன்லாலை கூட்டிக் கொண்டு டில்லி போலிசார் புலனாய்வில் இறங்கியதை இரண்டு நீளமான பாராக்களின் மூலம் சொல்லி கொஞ்சம் தொய்வு உண்டாக்குகிறார் மாலன்
இந்த அத்தியாயத்திலும் மாலன், தகவல் சேகரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
பழைய டெல்லி மெரினா ஹோட்டலில் கோட்சேயும் ஆப்தேயும் எம். தேஷ்பாண்டே மற்றும் எம். தேஷ்பாண்டே என போலி பெயரின் அறை எடுத்திருந்ததையும் சொல்லி இருக்கலாம். அதே போல அந்த ஹோட்டலின் மானேஜர் பசேகோ (Reference No:2) இதை விசாரணையில் சொன்னதை சொல்லி இருக்கலாம். அவர்கள் அறை எடுத்த ஹோட்டல் பில் இங்கே படமாக
சுதந்திரம் வாங்கி சில மாதங்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் ஆபிசர்களின் மனநிலையினை சிக்கனமான வார்த்தைகளில் மாலன் ,” வெள்ளைக்காரனுக்கு விழுந்து விழுந்து சலாம் வைத்தவர்கள் சுதந்திர இந்தியனுக்கு பதில் சொல்ல சோம்பல்படுகிறார்கள்”
கொலையாளிகளின் பூர்விகம் மராட்டிய மாநிலம் என்பதை போலிசார் மோப்பம் பிடித்தபின் புலனாய்வின் ஒரு பகுதி பம்பாய்க்கு தாவும் சுவாரசியத்துடன் இங்கே நிறுத்துகிறார் மாலன்
எட்டாம் அத்தியாயம்
காந்தி மீது 20-ஜனவரி-1948 நடந்த் கொலை முயற்சியின் பூர்விகம் மராட்டிய மண்ணில். அங்கே உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய். அவர் இந்த விசாரணையை ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட ஜேடி நகர்வாலா என்ற பம்பாயின் டெபுடி கமிஷ்னர் ஆஃப் போலிஸ் வசம் ஒப்படைப்பது வரை சரியாக விசாரித்து எழுதியிருக்கிறார் மாலன். ஆனால் இங்கேயும் இரண்டு தகவல்களில் சின்ன சறுக்கல்.
மொரார்ஜி 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அந்த அதிகாரியிடம் இது பற்றி தனது அலுவலக்த்தில் விவாதித்தது போல் சொல்லியிருக்கிறார் மாலன். ஆனால் மொரார்ஜிக்கு தகவல் பேராசிரியர் ஜெயின் என்பவர் மூலம் தெரியவருகிறது. ஜெயின் மொரார்ஜியைச் சந்தித்து விட்டு கிளம்பியது மாலை 5 மணி. உடனே மொரார்ஜி ஜேடி நகர்வாலாவை அழைத்தார். ஆனால் ஜிம்மி என்ற செல்லப் பெயர் கொண்ட அந்த ஆபிசர் அப்போது பிசி. மொரார்ஜிக்கோ இரவு 8.30 மணிக்கு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் குஜாராத் எக்ஸ்பிரசை பிடிக்க வேண்டும். எனவே அவர் ஜாம்ஷெட் டோரப் நகர்வாலா என்ற நீளமான பெயர் கொண்ட ஜேடி நகர்வாலாவை பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார். மொரார்ஜி , ஜேடி நகர்வாலா சந்திப்பு பம்பாய் செண்ட்ரல் ஸ்டேஷனில் தான் 21-ஜனவரி-1948 நடந்தது. (Reference No 3)
எட்டாம் அத்தியாயம் விஷ்ணு கர்க்காரே டெல்லிக்கு வந்தும் தனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லையே என அங்கலாய்க்கும் வரிகளுடனும் அதற்கு குவாலியர் பக்கம் தானே போய் வாங்கி வரலாம் என்ற சமாதனத்துடனும் முடிகிறது. இங்கேயும் தகவல்களில் முரண்பாடு. இரண்டாவது கொலை முயற்சிக்கு டெல்லிக்கு வரும் ஆப்தேயும் கோட்சேவும் தான் குவாலியர் போகின்றனர் 27-ஜனவரி-1948. அது அவர்களது திட்டத்தில் ஏற்கனவே முடிவான ஒன்று. ஆக இங்கே மாலன் சொல்லும் விஷ்ணு கர்க்காரேயின் புலம்பல் மாலனின் கற்பனனையாகத் தான் இருக்கவேண்டும். எப்படி என்று அத்தியாயம் பத்திற்கான விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன்
ஒன்பதாம் அத்தியாயம் போலிசாரின் வலைவிரிப்பு நடவடிக்கைகள் பற்றி அத்துனை சுவாரசியமில்லாமல் நகர்ந்து டக்கென்று முடிகிறது
பத்தாம் அத்தியாயம் கோட்சே பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் தூக்கத்திலிருந்து தூக்கிவாரி போட்டு எழுந்திருப்பது போல ஆரம்பிக்கிறார் மாலன்
கோட்சேயும் ஆப்தேயும் ஏர் இந்தியா விமானம் மூலம் 27—ஜனவரி-1948 என். விநாயக் ராவ், டி.நாராயண் ராவ் என்ற போலி பெயர்களில் பயணித்ததை சொல்லி இருக்கலாம். அவர்கள் பயணித்த டிக்கெட் படம் இங்கே.
அவர்கள் இப்படி போலி பெயரில் பயணித்தனர் என்பதை பின்னர் நடந்த விசாரணையில் 27-ஜனவரி-1948 அந்த விமானத்தில் ஏர்ஹோஸ்டசாக இருந்த லோர்னா வுட்பிரிட்ஜ் என்ற மாதுவை பிப்ரவரி 1948 விசாரித்து போலிசார் ஊர்ஜிதப்படுத்தியதைச் சொல்லியிருக்கலாம்.( Reference No 4)
கோட்சேயும் ஆப்தேவும் தான் 27-ஜனவரி-1948 டெல்லிக்கு விமானத்தில் வந்த உடன் குவாலியருக்கு ட்ரெயின் மூலம் போய் தத்தாத்ரேய பர்சுரே என்பவரிடம் பெரட்டா என்ற இத்தாலிய மாடல் துப்பாக்கியை வாங்கி வந்தனர். இந்த பர்சுரே பெயர் கொலை வழக்கின் தீர்ப்பில் இருக்கிறது
கோட்சே பழைய டெல்லி ரயில் நிலைய ரிடயரிங் ரூமில் நாரயண ராவ் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியதாகச் சொல்கிறார் மாலன் ஆனால் கோட்சே விநாயக் ராவ் என்ற பெயரில் அறை எடுத்திருந்தான். (Reference No 5)
அத்தியாயம் 11, 12, 13, 14, 15 என வேகமாக தன் நடை வேகத்தால் கதையினை மிக லாவகாமாகக் கையாண்டிருக்கிறார் மாலன்.
காந்தியின் கொலை தவிர்த்திருக்கப்பட்டிருக்கலாம் என்ற போலிஸ் அதிகாரி ரமணனின் வருத்தத்துடன் கதை முடிகிறது. அது ரமணனின் வருத்தம் மட்டுமல்ல. மாலனின் வருத்தம் மட்டுமல்ல. மொத்த இந்தியாவின் வருத்தம்.
கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்ம் சரண் தீர்ப்பில் போலிசாரின் மெத்தனத்தை குறிப்பிட்டிருக்கிறார்
I may bring to the notice of the Central Government the slackness of the Police in the investigation of the case during the period between 20-Jan-1948 and 30-Jan-1948. The Delhi Police had obtained a detailed statement from Madanlal Phawa soon after his arrest on 20-Jan-1948. The Bombay Police had also been reported the statement of Dr. Jain that he had made to Hon’ble Morarji Desai on 21-Jan-1948. The Delhi Police and Bombay Police had contacted each other soon after these two statements had been made. Yet the Police miserably failed to derive any advantage from these two statements. Had the slightest keenness been shown in the investigation of the case at that stage the tragedy probably could have been averted
காந்தியின் கொலை மிக சமீபத்திய சரித்திரமே. இதற்கான ஆதரங்களை சேகரிப்பதில் மாலன் அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கதை சொல்வதில், கதை சொல்லும் யுத்தியில் செலுத்திய கவனம் கதைக்கான ஆதரங்களை சேகரிப்பதிலும் அதை சரிபார்ப்பதிலும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.
ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னரே தகவல்க்ள் பயன்படுத்தப்பட்டன என்ற மாலன் அவர்களின் க்ளெய்ம் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தேதிகளில் முரண்பாடு, பெயர்களில் முரண்பாடு என நிறைய சறுக்கல்கள். திகம்பர பாட்கேவின் வேலையாள் சங்கர் கிஸ்தயா என்ற ஆளைப் பற்றி மாலன் கதையில் எங்கேயும் சொல்லவில்லை. இந்த ஆசாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்ற உண்மை மாலனின் சிரமமான தேடலில் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமே
”ஒரே ஒரு இடம் நெருடுகிறது” என இதற்கு முன்னுரை எழுதியிருக்கும் பெருமதிப்பிற்குரிய கல்கி இராஜேந்திரன் அவர்களுக்கு இந்த விமர்சனம் மூலம் நான் சொல்லும் செய்தி: “ நிறைய இடஙகளில் இடறுகிறது சார்”
இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.
நல்ல காகிதம். படிக்க ஏதுவான் நேர்த்தியானஃபாண்ட். அளவான லைன் ஸ்பேசிங்க. பதிப்பகத்தாருக்கு எனது வாழ்த்துகள்.
நான் ஜனகணமனவுக்கு விமர்சனம் எழுதப் போகிறேன் எனச் சொன்னவுடன் இந்தப் புத்தகத்தை உடனே எனக்கு அனுப்பிய என் சகோதரர் கார்த்திக் சுப்பிரமணியனுக்கு நான் வெறுமனே நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது
Reference No1: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 123
Reference No 2: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 190-191
Reference No 3: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 198
Reference No 4: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 217
Reference No 5: THE MEN WHO KILLED GANDHI PAGE NO: 233
திரும்பிப் பார்க்கிறேன்
இயக்குநர் ஸ்ரீதர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற நூலை அவரது செமி-பயாகிராபி எனலாம். கல்கியில் தொடராக வந்து பின் தொகுக்கப்பட்டதாக முன்னுரை சொல்கிறது. வாரமலரில் வாசிக்கக் கிடைப்பது போன்ற லெளசியான மொழி நடை தான் என்றாலும் சம்பவங்களால் சுவாரசியப்படுகிறது. இளம்வயதில் நாடகங்களில் பணியாற்றத் துவங்கியது, சினிமாவில் கதாசிரியராக நுழைந்து இயக்குனரானது, இந்தி படவுலகில் கால் பதித்தது, சித்ராலயா துவக்கம், வெற்றி தோல்விகள், சிவாஜி, எம்.ஜி.ஆர்-ஐ இயக்கியது என அவரது திரையனுபவங்களை சிறுசிறு பத்திகளாக விரித்து செல்கிறது புத்தகம்.
மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான ட்ரிவியா புத்தகம் போல தோன்றினாலும், ஸ்ரீதர் இதில் சொல்லாமல் சொல்லியிருக்கும் சங்கதிகள் பல. உதாரணாமாக, அந்நாளில் திரையுலகில் நிலவிய அரசியலை அவரின் அனுபவங்களின் ஊடாக ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. தனக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்வதில் ஸ்ரீதரின் நேர்மை தெரிகிறது. தனக்குக் கீழிருந்த நடிகர்களிடம் " நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்பது போன்ற மனோபாவத்த்தில் நடந்துகொண்டதும் அதையே எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் இவருக்கு செய்ததையும் வரிகளுக்கு இடையே இருந்து அறிந்துகொள்ளலாம். ஒரு படத்துக்காக ராஜசுலோச்சனாவை ஒப்பந்தம் செய்யப் போனபோது, அவர் தான் ஒரு ஒப்பந்த படிவம் வைத்திருப்பதாகவும் இயக்குனர் அதில் கையெழுத்திட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அதனை அவமதிப்பாக நினைத்து அவருக்கு பதிலாக விஜயகுமாரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தபடம் கல்யாண பரிசு. பின்னாளில் விஜயகுமாரியை வேறு ஒரு படத்திற்கு நடிக்கக் கேட்க, அவரோ தன் கணவர் எஸ்.எஸ்.ஆர் தான் தனக்கு கதை கேட்பார் என சொல்லியிருக்கிறார். உன் கணவருக்கெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று சொல்லி, அப்போது படங்களில் இராண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த தேவிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தப் படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. எம்.ஜி.ஆரை வைத்து துவங்கிய 'அன்று சிந்திய ரத்தம்' படத்துக்கான பத்திரிக்கை விளம்பரத்தில் "கலர் படம்" என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார். அதே பத்திரிக்கையில் வந்திருந்த அவருடைய 'காதலிக்க நேரமில்லை' படத்துக்கு கலர் படம் என்ற விளம்பரமிருந்தது. இதனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட் குழப்படிகள் செய்து படத்தை நிறுத்திவிட்டார். 'யாருக்காக அழுதான்' படத்தில் சிவாஜியின் சிகைஅலங்காரம் நன்றாக இல்லை என்று சொல்லப்போக, சிவாஜி அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஆக 2 + 2= 4.
ஸ்ரீதர் படங்களில் வரும் பாடல்கள் காலத்தைவென்று மக்கள் மனதில் நிலைத்திருக்கக் காரணம் அவரது உழைப்பும் சமரசம் செய்துகொள்ளாத
உறுதியும்தான். ஒரு குறிப்பிட்ட படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்துமுடிக்கப்பட்ட பின்னரும், அப்படத்தின் முக்கியமான பாடல் அமையவே இல்லை. ஏதாவது ஒரு பாடலை வைத்துப் படத்தை முடித்துவிடுங்கள் என தயாரிப்பாளர் நச்சரித்தும் ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி நூற்றுக்கணக்கான ட்யூன்கள் போட்டுக் காட்டியும் அவருக்கு எதிலும் திருப்தியே ஏற்படவில்லை. இறுதியாக சிலமாதங்கள் கழித்து தன் மனதிற்குப் பிடித்த பாடல் அமைந்தபின் தான் படத்தை தொடர்ந்து இயக்கி இருக்கிறார். அந்தப் பாடல் "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை".இப்படத்தின் பெயரைச் சொன்னால் முதலில் மனது இந்தப் பாடலைத்தான் முணுமுணுக்கும். அக்காலத்திலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய பரந்த அறிவும், தொழில் நுட்ப ஞானமும் அவரை மற்ற இயக்குனர்களிலிருந்து தனித்துக் காட்டியதோடு புதுமை இயக்குனர் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தன.
பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டோடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார்.
சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?
http://www.anyindian.com/product_info.php?products_id=18318&osCsid=c59f33d9be691a2a0282d24a1e087d49
http://ecoscipsy.wordpress.com/
& http://ecoscipsy.wordpress.comஇது நூல் விமர்சனமோ மதிப்புரையோ அல்ல. படித்ததை பகிர்தல். அவ்வளவுதான்.
இந்த தலைமுறையின் மிக முக்கிய எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும்
அறியப்படுபவர் ஜெயமோகன். அண்மையில் அவர் பல இலக்கிய கூடுதல்களில்,
கல்லூரிகளில் ஆற்றிய உந
ரகளின் தொகுப்பினை ‘தனிக்குரல்’ எனும் தலைப்பில் உயிர்மை வெளியிட்டுள்ளது.
முற்றுப்புள்ளியுடன் விவாதத்துக்கு இடமில்லாத முடிவுகளை தரும் உரைகளல்ல
இவை. அத்தகைய
முடிவு தரும் உரைகளை தான் சார்ந்த நிலைப்பாட்டை கொள்கை பிரகடனமாகவோ அல்லது
போர்முழக்கமாகவோ கேட்டே பழகிவிட்ட தமிழ் வாசகமனதுக்கு இந்த
தொகுப்பிலிருக்கும் உரைகள் ஒரு மனிதன் தொடர்ந்து தன் வாசிப்பின் மூலம்
தனக்குள் உரையாடலை நிகழ்த்தி வளர்ந்து செல்லவேண்டியதன் அவசியத்தை
சுட்டிக்காட்டுகின்றன. இத்தொகுப்பில் எதையாவது அவரது முடிவாக
சொல்லுகிறார் என்றால் அது அவர் அறத்தின் மீது வைத்துள்ள ஆழ்ந்த
உணர்தலைதான். அந்த அறம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ பண்பாட்டையோ
மதநம்பிக்கையையோ சார்ந்த அறம் அல்ல. இந்திய மண்ணில் அந்த அறத்தின்
வெளிப்பாடு கண்டடையப்பட்டு இன்றளவும் அது ஜீவித்து வருகிறது. மானுடத்தின்
ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து பிரபஞ்சமனைத்தையும் தழுவிக்கொள்ளும் ஒரு
மகத்தான பிரவாகம் அது. இந்தியப்பண்பாட்டின் சாராம்சமாக இந்தியாவின்
பேரிலக்கியங்களின் அடிப்படையாக அது அமைந்துள்ளது. சிங்கப்பூரில் அவர்
நிகழ்த்திய உரையில் கூறுகிறார்:
ஆனாலும் இந்தியா இன்றும் பேரறம் வாழும் மண்தான். இந்தியாவிற்குச் சுற்றும் உள்ள நாடுகளுடன் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது அது நம் முன் துலங்கிவருகிறது. இன்னும் உயிர்ப்புள்ள மக்களாட்சி வாழும் மண் இது.
இன்றும் எளிய குடிமகன் அடிப்படை நியாய உணர்வை இழக்காத மண் இது. …இன்று என் நாடு சுரண்டப்பட்டு கிடக்கலாம். அச்சமும் கீழ்மையும் அங்கு நிலவலாம். ஆயினும் ஆத்மாவில் உறையும் அறம் என்றும் தோற்காது என்றே எண்ணுகிறேன்.”
இந்த மண்ணுறங்கும் அறத்தின் மீது விழும் மழையாக இந்திய இலக்கியத்தை
உருவகிக்கிறார் ஜெயமோகன். இந்த உருவகத்திலிருந்து நீட்சியாகவே பிற உரைகள்
அமைவதான தோற்றம் படிக்கும் போது ஏற்படுகிறது. அறத்தின் மூர்த்தியாக கம்பன்
காட்டும் ராமனின் சித்திரத்தில் கண்கள் க
லங்கும் பேராசிரியர் ஜேசுதாசனை தன் குருக்களில் ஒருவராக காண்கிறார்
ஜெயமோகன். நாஞ்சில் நாடனின் கதைகளில் அந்த அறவுணர்வு அனைத்துயிர்களையும்
அணைத்து விரியும்
பெரும் விகசிப்பாக படர்ந்தெழுகிறது என காட்டுகிறார். புற்று நோயால்
இளவயதில் மறைந்த கேரளாவின் பெண்ணிய இலக்கியவாதியான கீதா ஹிரண்யன் குறித்த
அவரது உரை
ஒரு முக்கியமான பார்வையை நம் முன் வைக்கிறது. ஒரு ஆண் இலக்கியவாதி எந்த
அளவுக்கு பெண்ணிய எழுத்துக்களின் பின்னால் இயங்கும் உளவியல் சக்திகளையும்
அவை எந்த
வரலாற்று-சமுதாய சட்டகத்துடன் எதிர்த்தோ இயைந்தோ வினையாற்றுகின்றனவோ
அவற்றுடனான அவற்றின் உறவுகளையும் அறிந்து கொள்ள முடியும்? ஓர் ஆண் இலக்கிய
வாசகன் பெண்ணிய உடலிலக்கிய வெளிப்பாடுகளை மட்டுமே பார்க்கிறான் ஆனால்
அவற்றினை உருவாக்கும் சக்திகளை புலங்களை அவனால் அறிந்து கொள்ள முடியாது.
தான் அறிந்ததாக
தன்னில் ஒரு பகுதியாக கருதப்பட்ட மானுடம் முழுக்க முழுக்க ஒரு விந்தையும்
அச்சமும் வெளிப்படக் கூடிய ஒரு முகத்தை காட்டும் போது அவனால் என்ன
செய்யமுடியும்? நேர்மையாக அவன் மிகுந்த தன்னடக்கதுடனும் அச்சத்துடனும்
வினாக்கள் உள்ளெழும்ப வியக்க மட்டுமே இயலும்.
“தன்னைப் போர்த்தப்பட்டவளாக, புதைக்கப்பட்டவளாக, மூடப்பட்டவளாக, உணரும் பெண்மனம் தன்னிலையை இழக்கும் போது இயல்பாகவே விடுதலையை நாடுகிறது. படைப்பில் நிகழ்வதும் அதுதானா? புரியவில்லை.”
ஒரு சேரி சிறுவன் அங்கு வரும் வெளிநாட்டு சமூகசேவகர் ஒருவரிடம் நடந்து கொள்ளும் விதத்தை அந்த சமூகசேவகர் ஒலிப்பதிவு செய்து பின்னர் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொருமுறையும் கெட்டவார்த்தைகளால் திட்டும் அந்த சிறுவன், இறுதியில் பொட்டி தெரித்து அழுகிறான். இந்த அழுகை குறித்து சைதன்ய யதி கூறுவதை “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன” எனும் கேள்விக்கு ஜெயமோகன் இந்திய பண்பாட்டின் ஒட்டுமொத்த சாரமாக மாணவர்கள் முன் வைக்கிறார்.
ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் பெரும் வல்லமையுடன் இயற்கையை வெள்ளவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறும் ஒரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான். நித்யா தொடர்ந்தார், “இந்த அழுமை மானுடனைப் பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்து வருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரிந்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது….இங்கு நோயும் மரணமும் உள்ளன. இங்கு கொடுமையும் சீரழிவும் உள்ளன. ஆயினும் இதன் சாரம் அளவிலா கருணையும் ஆனந்தமும்தான். மானுட மனமெங்கும் காமகுரோத மோகங்களே கொந்தளிக்கின்றன. ஆயினும் சாராம்சத்தில் உறைவது உண்மையும் நன்மையும் அழகுமே. அதை நான் ‘சத்யம்-சிவம்-சுந்தரம்’ என்பேன்.”
இருத்தலியத்தின் பிதாமகர்கள் அதன் உச்சத்தில் அடைந்த வெறுமையை -சார்த்தரின் சுவர் சிறுகதையில் ஒரு கணத்தில் தான் செய்த தியாகங்கள் தான் பட்ட பாடுகள் அனைத்தும் ஒரு கணத்தில் பொருளிழந்து தான் வரலாற்றில் துரோகியாக பதிவுசெய்யப்படும் தருணத்தில் புரட்சியாளன் ஒருவனின் பொருளற்ற சிரிப்பாக வெளிப்படும் வெறுமையை- இந்திய நவீனத்துவ இலக்கிய பயணம் சென்றடையாமையை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நூலின்
பகுதி-இரண்டு குறித்த ஒரு சுவாரசியமான தனி அனுபவம் எனக்கு உண்டு. கட்டாய
மதமாற்ற தடைச்சட்டம் இயற்றப்பட்டிருந்த காலகட்டம் அது. ஜெயமோகன் அதற்கு
எதிரானவர் என்பது தெரிந்த போது அந்த ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’
குறித்து அவரிடம் விவாதித்தேன். அவர் இறுதியாக தொலைபேசியை வைப்பதற்கு
முன்னதாக கூறிய வார்த்தைகளை இப்போது நினைவு கூர்கிறேன்.
எனக்கு புள்ளியல் தரவுகளை வைத்துக் கொண்டு வாதாடுவதில் இஷ்டமில்லை. எனது உள்ளுணர்வு - ஒரு இலக்கியவாதி- என்கிற முறையில் இந்த சட்டத்தால் பயனில்லை என்றும் இதனால் பாரதத்துக்கு தீமைகளே அதிகம் என்றும் சொல்கிறது. இந்த தொகுப்பில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக ஜெயமோகன் பேசிய உரை பதிவாகியுள்ளது. இக்கட்டுரையில் எல்லா கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உணர்ச்சி வசப்படும் இந்துத்துவர்களுக்கு ஒரு நல்ல எதிர்மருந்தாக இக்கட்டுரையை நான் இன்றைக்கு கருதுகிறேன். இக்கட்டுரை எழுப்பும் வினாக்களுக்கு ஒவ்வொரு இந்துத்துவரும் பதில் அளிக்க முயலவேண்டும். என்னுடைய பதில்களை இங்கே முன்வைக்கிறேன்.கிறிஸ்தவம் கருணையையும் இஸ்லாம் சமத்துவத்தையும் முன்வைப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். கருணையையும் சமத்துவத்தையும் தன் எந்த நிலைப்பாட்டுக்கும் ஒரு முன்நிலையாக வைத்து விவாதித்தே ஒரு சமுதாயம் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனால் மத-மேலாதிக்க நோக்கத்துடன் செயல்படும் இருமதங்கள் அவற்றின் பின்னணியில் செயல்படும் ஆக்கிரமிப்பு சக்திகள், அவற்றுடன் சாதியத்தை அரசியலாக்கி வைத்துள்ள நம் சுயநல அரசியல், நம்முடைய பெரும் சமுதாய தேக்கத்தினுள்ளிருந்து எழும் தடைகற்கள் இத்தனைக்கும் அப்பால் ஒரு சிறு விவேகமான ஆனால் எவ்வித அரசியல் மற்றும் பொருளாதார சக்தி அற்ற இந்து சமுதாயக் குழு - எப்படி இந்த உரையாடல் ஒரு சமத்தன்மை கொண்ட தளத்தில் நடக்க இயலும்? ஒரு எளிய வழியை ஜெயமோகன் சொல்கிறார்: கிறிஸ்தவத்தை விட கருணை வாய்ந்ததாக இஸ்லாத்தை விட சமத்துவம் உடையதாக இந்து சமுதாயம் மாறிவிட்டால் போதுமே! மிக மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இது அப்படி எளிமையான விஷயம் அல்ல. இன்று பிரச்சாரம் செய்யப்படும் இஸ்லாத்தின் சமத்துவம் இருபதாம் நூற்றாண்டு பிரச்சார உருவாக்கமே தவிர வரலாற்று யதார்த்தமல்ல. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தை தொடங்கிய சையது அகமது கானின் எழுத்துக்களில் அப்பட்டமான சமத்துவமின்மையை தரிசிக்க முடியும். குலக்குழுக்களின் மேலாதிக்கம் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை பெரும் சமூக பொருளாதார சுரண்டல் முறையாகவே அரேபியா முழுமைக்கும் இருந்தது. இன்றைக்கும் இஸ்லாமிய சமத்துவத்தை பெரும் பிரச்சாரம் செய்யும் வகாபியிசத்தின் பூலோக சுவன பூமியான சவூதி அரேபியாவில் குலக்குழு அடக்குமுறை படுமோசமான வன்முறையாக படர்ந்தொளிருகிறது. கிறிஸ்தவத்தின் கருணையும் காலனிய மேலாதிக்கம் இழைத்த மானுட அழிவுகளின் உபரியிலிருந்து பெறப்பட்ட சிறு துளியே. இன்று நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க சமுதாயங்களின் பிறப்படிப்படையிலான வேற்றுமைகள் அற்ற சமுதாயத்துக்கு உலகம் கொடுத்துள்ள அழிவு விலை கற்பனை செய்யப்படமுடியாத கொடூரம் கொண்டது. இந்த இரத்தத்தால் கெட்டியாக்கப்பட்ட அஸ்திவாரத்தின் வலிமையின் மீது ஏறி நின்று கருணையையும் சமத்துவத்தையும் பிரச்சார கவர்ச்சியாக பயன்படுத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்த தேசத்தை எதில் கொண்டுவிடும்? ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும், பிலிப்பைன்ஸும், லத்தீன் அமெரிக்க நாடுகளும், இந்தியாவின் வடகிழக்கும் சான்று பகர்கின்றன.
“மதமாற்றம் இந்தியப் பண்பாட்டை அழித்துவிடுமா?” எனும் கேள்விக்கு ஜெயமோகன் தயக்கமே இல்லாமல் ஆம் என்கிறார். அந்த அழிவினை அவர் ஒன்றும் ஒதுங்கியிருந்து காணவில்லை. அது தன்னுடைய அழிவும் கூட என்பதனையும் கூறுகிறார். இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு கருத்தியல் அளவில் நெருக்கமாக சென்ற ஒரு தருணமாக இக்கட்டுரையின் தொனி தென்படுகிறது.
தேங்கி நாறி சடங்குக்குட்டையாக இந்துமதம் இந்த தேசத்தில் இருப்பதைவிட அது அழிந்து கிறிஸ்தவ நாடாகவோ இஸ்லாமிய நாடாகவோ ஆவதே மேல்.ஏனெனில் இந்த உரையில் அவர் கவனத்தில் வராதது அந்த வெற்றிடத்தில் இங்கே கொலுவேறப்போகும் சமயங்கள் சமத்துவத்தையும் கருணையையும் அடிப்படையாக கொண்டவையாக இருக்குமா? 90 விழுக்காடு கிறிஸ்தவமான மிசோக்களால் அடித்து விரட்டப்பட்டு இன்று அகதிகள் முகாம்களில் கடந்த பத்தாண்டுகளாக தம் சமூகக்குழுவின் அழிவை கண்கூடாக தரிசித்து வரும் சக்மா-ரியாங்க் வனவாசிகள் அதனை ஏற்பார்கள் என தோன்றவில்லை. இன்று இஸ்லாத்தின் முழு பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சமத்துவத்துக்கான வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவானவை. இது ஒரு பக்கம் மறுபக்கம் ஜெயமோகன் கூறுவது போல சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியுமா என்பதுதான். ஒரு மிகவும் நேர்மையான பதில் “இல்லை” என்பதுதான் என நான் உணர்கிறேன். ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதைப் போல மதமாற்றம் என்பது ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய பொருளாதார காரணங்களுக்காகவோ நடக்கும் போது அது குறித்த நியாயங்கள் ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. உதாரணமாக மதம் மாறினால் கல்லூரி பேராசிரியர் அல்லது பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவர்களை எனக்கு தெரியும். திருமணத்துக்காக மதம் மாறியவர்களை தெரியும். இவர்களில் எவரைக் கேட்டாலும் இவர்கள் தாங்கள் ஆசிரியர் வேலை கிடைப்பதன் நிர்ப்பந்தத்துக்காகவோ அல்லது கொழுத்த வரதட்சணைக்காகவோ மதம் மாறியதாக கூறப்போவதில்லை. அடுத்த இரண்டு தலைமுறைகளில் இவர்கள் மதமாற்றம் ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய நீதிக்காகவோ நடந்தததாக கற்பிதம் உருவாகிவிடும். இந்நிலையில் சட்டம் என்ன செய்ய முடியும்? உண்மையில் சட்டம்-அரசு நிர்வாகம் ஆகியவை சமுதாயத்தை ஆரோக்கியமானதாக மாற்றினால், வெறுப்பியல் பிரச்சாரங்களை தடுத்தால் அதுவே மதமாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சனையாகாமல் தடுத்துவிடும். உதாரணமாக நாகர்கோவிலின் பிரதான வீதி ஒன்றில் அனைவரும் காணும்படியாக “ஏசு மட்டுமே உயிருள்ள கடவுள்” என எழுதி போட்டிருக்கிறார்கள். அப்போது அல்லா? பன்மை சமுதாயத்தில் மதமாற்ற நோக்குடைய மதப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதற்கு சில குறைந்தபட்ச நாகரிக விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டாலே பல பிரச்சனைகள் குறைந்துவிடும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் ஒரு கண் துடைப்புதான். உருவாக்கியிருக்கலாம் என அஇஅதிமுக தலைமை எதிர்பார்த்த ஒரு இந்து ஓட்டுவங்கியை கவர செய்யப்பட்ட அரசியல் தந்திரம் மட்டுமே அது. “கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் ஒருவரையாவது கைது செய்திருக்கிறோமா?” என அன்றைய அஇஅதிமுக அமைச்சர் கிறிஸ்தவ மதப்பீடத்திடம் தேர்தலின் போது கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போது ஜெயமோகன் எழுதியதன் உண்மை எனக்கு உரைத்தது.
ஜெயமோகன் எனும் இலக்கியவாதியின் அகப்பரிணாம வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது. 2002 இல் பின் 2007 இல் நித்திய சைதன்ய யதியை குறித்த அவரது உரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இது 2002 இல்.
மாபெரும் இலக்கியங்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் வாழ்க்கையை தொகுத்து காட்டுதல்தான். … ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் சேர்ந்து மனிதனின் புற உலகை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறிவிடலாமா என்ன? அகமனதின் விரிவாக்கம், வெளிவிளக்கம்தானே புற உலகம்? அப்படிப்பார்த்தால் ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் இணைந்து மனிதனின் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நித்யாவின் புகழ்பெற்ற உவமையையே சொல்லவேண்டும்…நண்பர்களே தேன் தான் தேனீயை உருவாக்கியது என்று கூறினால் அது ஒரு உயர்ந்த விவேகமே ஆகும்.
இது 2007 இல்.
கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றோ தர்மம் என்றோ எண்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என வைத்துக்கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒருதுளி என அவர் உணரவில்லை. தன்னைச் சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரைக் கூன் விழ வைத்தது. கார்க்கியின் கடைசி நாட்கள். எத்தனை பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய நரகத்திலிருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும். …நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும் போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம்.
இந்த இரண்டு உரைகளும் உண்மையில் முரண்படவில்லை. வியக்கதகு விதத்தில் மாறுபட்ட கோணத்தில் ஒரே விஷயத்தை அவை கூறுகின்றன. ஒரு எழுத்தாளன் சிருஷ்டிக்கிறான். அவனே அதே நேரத்தில் சிருஷ்டியின் கருவியாகவும் இருக்கிறான். இந்த இருநிலைகளையும் இசைவித்து உணரும் கணமே பேரிலக்கியங்கள் பிறக்கும் தருணம். பிரபஞ்சமெங்கும் நிறைந்து பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் ஒரு மாபெரும் சத்தியத்தின் பலகணியாக தன்னை மாற்றுகிறான் இலக்கியம் படைப்பவன். இதற்காக தன்னகங்காரத்தை அவன் அழித்தாகவேண்டும். இதன் மூலம் பிறக்கும் இலக்கியமே ஒரு பெரும் சிருஷ்டியாகிறது. ஐந்து வருட இடைவெளிகளில் அதே இடத்தில் ஏற்படும் தொடர் உரையாடலை நாம் கேட்க முடிகிறது.ஜெயமோகனுக்கு நன்றி.
“வேதாந்த மரபும் இலக்கிய போக்குகளும்” எனும் கட்டுரை மிக முக்கியமானது. இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் வேதாந்தம் எத்தகைய இயங்கு சக்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதனை ஜெயமோகன் விவரிக்கிறார். அவரது முடிவு:
பாரதிக்குப் பிறகு தமிழில் பொதுவாக மாயாவாதம், பிரக்ஞை மையநோக்கு என்ற தளங்களில் மட்டுமே வேதாந்தம் வெளிப்பட்டுள்ளது. பாரதி வேதாந்தத்தை சமபாவனைக்கான ஒருமை தரிசனத்துக்கான தத்துவக் கருவியாக கையாண்டவர். அவ்வாறாக அதை ஒரு போராட்ட ஆயுதமாகவும் மெய்ஞானத்துக்கான வழிகாட்டியாகவும் உணர்ந்தவர். அந்நோக்கு பிற்பாடு தமிழில் இல்லை. பிற்பாடு அது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பார்வையாகவே நின்றுவிட்டது.தனிக்குரல் - ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம் வெளியீடு
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600 018
விலை ரூ 110