‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

1. மத அடிப்படைவாதம்
2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்
3. கோமேனி
4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை
5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்

சரியா?

இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.

1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா?’ என்று ஆச்சரியப் படுவீர்களே? ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே?) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

மர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.

ஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.

இந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.

இரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.

அகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும்? கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.

மதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.

மர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.

இப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா? வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.

ஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.

இப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.

ஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.

மர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

நூல்கள் :

1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)
2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)

நூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி

தமிழில் : எஸ்.பாலச்சந்திரன்

விலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772

நிழல்முற்றம் – கொட்டகையின் இருள்

நிழல் முற்றம்,
பெருமாள் முருகன்,
காலச்சுவடு பதிப்பகம்,
விலை ரூ. 70
பக்கம் 135.
Dial For Books: 94459 01234 |  9445 97 97 97

கரண்ட் கட்!  யாரோ புண்ணியவான் திரையை விலக்கியதில் வேப்பமரத்தை தாண்டி வெளிச்சம் உள்ளே ஊடுருவியது. திரும்பிப் பார்த்தேன். ராஜ்குமார் ஏதோ யோசனையில் இருந்தான். முன்பக்க வரிசையிலிருந்து விசிலும், வசவு வார்த்தைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. விரலை மடித்து வைத்து ஒரு விசிலுக்கு முயற்சி செய்தேன். முடியவில்லை.  எங்கிருந்தோ வந்த சுருட்டு வாசனை மூச்சை முட்டியது. கூடவே வேப்பமரத்தை அடுத்து இருந்த கக்கூஸிலிருந்து வரும் மூத்திர வாசனை.

ராஜ்குமார் திடீரென எழுந்தான்.  எவன்டா அவன் இருட்டுல சவுண்டு விடறது, தில்லு இருந்தா இங்கே வாங்கடா?  அவனது முகம் உக்கிரமாக இருந்தது. படுசாதுவாக அறியப்பட்ட ராஜ்குமாருக்கு ஏது இப்படியொரு தைரியம்?  நான் கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே பட்டென்று பதில் வந்தது. உங்க அப்பாவை எவனாவது திட்டினா நீ சும்மா இருப்பியா?   அப்பா, ஆபரேட்டராக இருப்பதில் உள்ள வாழ்வியல் சிக்கல் பொட்டில் அடித்தாற்போல் புரிந்துபோனது.

பதின்ம வயதில் ஏனோ ராஜ்குமாரின் சோகத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.  இன்று வெறும் குட்டிச்சுவராக நிற்கும் சுந்தரம் தியேட்டரும்,  ராஜ்குமார் அப்பாவும் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.  சினிமா, இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. அதைச் சார்ந்து நின்ற சில்லரை தொழிலாளர்கள் வழக்கொழிந்துவிட்டார்கள்,  கால்ரூபா காசுபோல்.

சினிமா தரும் சுவராசியம் சினிமா தியேட்டர்களில் இல்லை. என்றைக்காவது படம் முடிந்து எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து, நிதானமாக தியேட்டரை விட்டு வெளியேறியதுண்டா?  இல்லை. நம்மால் செய்ய முடியாது. உண்மையில் தியேட்டரின் வெறுமை நம்மை பயமுறுத்துகிறது. அதிகாலை கனவுகள் சகிதம் அசந்து போய் தூங்கும் நேரத்தில் தட்டி எழுப்பியது போல கனவுலகத்திலிருந்து சட்டென்று நிஜத்திற்கு திரும்பும்போது எங்கேயோ வலிக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகவே தியேட்டரை விட்டு வேகவேகமாக நடக்கிறோம். அதுதான் உண்மை.

சினிமா வேண்டும்; தியேட்டர் வேண்டாம்.  சாமி வேண்டும்; கோயில் வேண்டாம்.   இந்தியாவில் கோயில்களுக்கு நிகரான இடத்தில் இருந்தவை இப்போதும் இருப்பவை தியேட்டர்கள் மட்டுமே. இங்கே அனைவரும் சரிநிகர் சமானம்.  சினிமாவின் அபத்தங்களை காட்டும் ஆயிரம் நாவல்கள் தமிழில் உண்டு.   சினிமா என்னும் கனவுலத்தின் பின்புலத்தைக் காட்டி அதை மாயை என்று வார்த்தைகளில் விவரிக்கும் கதைகளும் இங்கு உண்டு. ஆனால் சினிமாவே அன்றாட வாழ்க்கையாக,  சினிமா தியேட்டரே  உறைவிடமாக,  அதைச் சார்ந்த மனிதர்களின் இயக்கமே சம்பவங்களாகக் கொண்டிருப்பது  நிழல் முற்றம்.

நிழல் முற்றத்தில் கதை என்று எதுவுமில்லை.  டூரிங் டாக்கீசும் அதைச் சார்ந்த மனிதர்களும்தான்  கதைக்களம்.  தூக்கமும் மயக்கமுமாக இருக்கிறது தியேட்டர் வாழ்க்கை. பசி, மன உளைச்சல், போதை வஸ்துகள், நட்பின் இறுக்கம் தூங்கத்திற்கு ஏதோ ஒன்று காரணமாக அமைந்துவிடுகிறது. நாவல் முழுக்க யாராவது ஒருவர் தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் இங்கே வெளிச்சம் பிடிப்பதில்லை. கும்மிருட்டில், குப்பைகளுக்கு நடுவே பிரக்ஞை இன்றி படுத்துக்கிடக்கிறார்கள்.  ஒவ்வொரு காலையும் மதியநேரத்தில்தான் இங்கே விடிகிறது.

ஓடாத சீலிங் பேன்,  சிவப்புக்கலர் தீச்சட்டி, பீடி வாசனை, சிகரெட் அட்டைகள், சுண்ணாம்பு கீற்றல்கள், மூத்திர வாசனை,  இன்றே கடைசி துண்டுச் சீட்டு,   ஈஸ்ட்மேன் கலர் போஸ்டர்கள்,  செங்கல்லை இடைவெளி விட்டு அடுக்கி வைத்தது போல் டிக்கெட் கவுண்டர்கள் என டூரிங் தியேட்டருக்கு உரிய சகல லட்சணங்களுடன் இருக்கிறது திருச்செங்கோட்டு ஸ்ரீவிஜயா தியேட்டர்.

தமிழ்ச் சமூகத்தில் இன்னும் டூரிங் டாக்கீஸ் மறைந்துவிடவில்லை.  தாம்பரம் தாண்டி பெருங்களுத்தூர் உள்ளே ஒரு டூரிங் டாக்கீஸில் ஜெய்சங்கர் படம் ஓடுகிறது. மாயவரம் கிருஷ்ணாபேலஸ், வைத்தீஸ்வரன்கோயில் சண்முகா,  சீர்காழி ராஜா, கொல்லுமாங்குடி மாஸ்,  கீழ்ப்பெரும்பள்ளம் லட்சுமி என பல தியேட்டர்கள் இன்றும் தாக்குப்பிடிக்கின்றன.  மேட்னி, பார்ஸ்ட் ஷோ, நைட் ஷோ என் மூன்று காட்சிகள். குலேபகாவலி முதல் நினைத்தாலே இனிக்கும் வரை ஏதாவது பட போஸ்டர் கண்ணில் தட்டுப்படுகின்றன.

டூரிங் டாக்கீஸ் ஏதோவொரு வீம்பில் ஆரம்பிக்கப்பட்டதாகவே  இருக்க வேண்டும்.   லட்சாதிபதிகள் டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்ததுண்டு. ஆனால் டூரிங் டாக்கீஸால் லட்சாதிபதியானவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  திருச்செங்கோட்டு பூசாரியப்ப முதலியார் போல் தொகுதிக்கு ஒருவரையாவது நம்மிடையே காண முடிகிறது.  மூத்த மருமகளிடம் விதண்டாவாதத்தில் இறங்கி,  கிருஷ்ணா டாக்கீஸ் போல் சினிமாக் கொட்டகை ஆரம்பிக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு  நெல்லு குடோனை டெண்ட் கொட்டகையாக்கி ஸ்ரீவிஜயாவை ஆரம்பித்து சூடுபட்டுக்கொண்ட பூர்வ கதையை வாட்ச் மேன் தாத்ததா விவரிப்பது சுவராசியம்.

நிழல் முற்றத்தில் காட்சிகள் ஒன்றோடென்று தொடர்பின்றி விரிகின்றன. தமிழ் சினிமா போல் அடுத்த வரும் சம்பவங்களை எளிதாக ஊகிக்க முடிகிறது.  தலைநிறைய மல்லிகையோட கருவாச்சி வந்து கடைசி சீட்டில் இடம் பிடிக்கிறாள். எதிர்பார்த்துபோல் சக்திவேலிடம் பரிவோடு நடந்துகொண்டு இதழோடு இதழ் பதிக்கிறாள்.

யாரும் இங்கே நேர்மையாக இருப்பதில்லை. நேர்மை என்பதை சூழல்தான் தீர்மானிக்கிறது. எப்போதும் அடுத்தவரை குறைசொல்லும் சோடக்கார்ர், வியாபாரம் சூடுபிடிக்கவேண்டும் என்பதற்காக தண்ணீர் தொட்டியில் தண்ணீரே இருக்கக்கூடாது என்கிறார். கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டி, விரட்டி வேலை வாங்கும் கண்டிப்பான ஆசாமியான மானேஜர், இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆறு படம் என்றதும் ஓடாத படங்களை வாங்கி குவிக்கிறார்.

படக்காரன் போன்ற காரெக்டரை சினிமாவுலகம் சந்திக்கப்போவதில்லை. படப்பெட்டியை குத்தகைக் விட்டு வசூலில் வரும் கமிஷன்தான் ஜீவனம். டிக்கெட் கிழிக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே நின்று வசூலை கவனித்து குறித்துக்கொள்ளவேண்டும். படப்பெட்டியோடு சேர்ந்து இவனும் ஊர் ஊராக ஊர்வலம் போகிறான். வருமானத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாக வருத்தப்படுகிறான்.  அதே ஆதங்கத்தில் கழிவிரக்கத்தோடு  அவன் மேற்கொள்ளும் பாலினக்கொடுமை படிப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை என்பது இங்கே முக்கியமான விஷயம்.

நாவல் முழுக்க யார்  பேசினாலும் வசவு வார்த்தைகள் சரளமாக விழுகிறது.  சூழலுக்குத் தேவையான கொச்சையான மொழி பிரயோகம் யதார்த்தத்திற்கு வலு சேர்க்கிறது.  போகிற போக்கில் நடிகர்கள் பற்றிய நக்கலும் உண்டு. தொப்பையன் என்றும் சாம்பார் என்றும் கிண்டலடிக்கிறார்கள்.

வெளிச்சத்தில் இருந்து தியேட்டருக்குள் வரும்போது கண்கள் மயமயத்துப்போவது,  சைக்கிஸ் ஸ்டாண்ட்காரன் எப்போது வருவான், அதுவரை டிக்கெட் இருக்குமா என்கிற பதைதைப்பு,  திரையில் தலைவரைப் பார்த்ததும் வரும் விறுவிறுப்பு, விசில் சகிதம் வரும் உற்சாகக் குரல்கள் என எண்பதுகளின் டூரிங் டாக்கீஸ் சமாச்சாரங்களை நாவலாசிரியர் ஞாபகப்படுத்தினாலும் மூன்று தலைமுறைக்கும் மேலாக சினிமா தியேட்டர் சம்பிரதாயமாக மாறிவிட்ட பாப்கார்ன் வாசனை கடைசிவரை நாவலில் இடம்பெறவேயில்லை.

பல வருஷங்களுக்குப் பிறகு எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸான கிருஷ்ணாபேலஸ் பக்கம் போயிருந்தேன். எதுவும் மாறவில்லை. டிக்கெட் விலை மட்டும் ஏறியிருந்த்து. மூன்றாவது வகுப்பு பத்து ரூபாய், இரண்டாவது வகுப்பு இருபது ரூபாய், முதல் வகுப்பு சோபா டிக்கெட் முப்பது ரூபாய். கவுண்டரில் மொத்தமாய் பத்து, பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள. எனக்கு படம் பார்க்கப் பிடிக்கவில்லை. ஏனோ தியேட்டரில் படம் பார்த்தால் தலைவலிக்கிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்து குளக்கரையோரமாய் நடக்க ஆரம்பித்தேன். தெருவின் முடிவில் அதே வேப்பமரம். மேடை மட்டும் சிதிலமாகிக்கிடந்தது. மரத்தை ஒட்டிய நிழலில் மண் தரையில் சிடி பரப்பியிருந்தார்கள். ஆயிரத்தில் ஒருவன், ரங்கா, குரு, பாவ மன்னிப்பு எல்லாம் குவிந்து கிடந்த்து.  சிடி விலை அதிகமில்லை. இருபது ரூபாய்தான்!

 - ஜெ. ராம்கி