Home / Books List 18

Books List 18


சொல்வனம் » செந்தமிழ்க் காப்பியங்கள்
எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் வேறு என்பதும். பஞ்ச கவ்யம் என்பது பசுவில் இருந்து உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் எனும் ஐந்து பொருட்களை மந்திரபூர்வமாகச் சேர்ப்பது.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் பின்னிரு நூல்களும் முற்றும் கிடைத்திலது.

சிலப்பதிகாரம் பற்றி ஓரளவுக்கு நமக்கு அறிமுகம் உண்டு. சில பாடல் வரிகளை அறிந்திருப்போம். வழக்குரை காதையில்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்!

என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரிகளைக் கேட்டிருப்போம்.

தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்உரை அஞ்சுமின், புறம்சொல் போற்றுமின்,
ஊன்உண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்.
தானம் செய்மின், தவம்பல தாங்குமின்.

என்று அறிவுறுத்தும் நூல் சிலப்பதிகாரம்.

முதிரா முலை முகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்

என்று கண்ணகியின் கதை பாடுவது.

ஆய்ச்சியர் குரவையில்

அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுது ஏத்த
உறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

என்றும்

வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

என்றும்

மூவுலகம் ஈர்அடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
?’

என்றும் பாடுவது ஆழ்வாராதிகள் அல்லர், இளங்கோ அடிகள் எனும் சமண முனிவன். ஆனால் மேற்கொண்ட பாடல்களின் மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. இளங்கோவடிகளின் சொல்லாட்சிகளை ஆழ்வார் சிலர் ஆண்ட காரணமாக இருக்கலாம்.

அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும். ஐம்பெருங்காப்பியங்களில் மற்ற நான்கும் பௌத்த, சமணக் காப்பியங்களாக இருக்கும்போது, சிலம்பு ஒன்றே சமயங்கடந்த காப்பியமாகும்.

மேலும் தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள்.

“இக்காப்பியத்திற்கு அரும்பத உரை என்றும், அடியார்க்கு நல்லார் உரையென்றும் இரண்டு உரைகள் உள்ளன. அரும்பதவுரை நூல் முழுவதற்கும் இருக்கின்றது. அடியார்க்கு நல்லார் உரையோ ‘கானல்வரி’ நீங்கலாக, ‘ஊர் சூழ் வரி’ வரையில் உள்ளது. அரும்பதவுரை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் காப்பியம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளார்” என்கிறார் ம.பொ.சி.

‘இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் - விளக்கத் தெளிவுரை எனும் ம.பொ.சி. உரையின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி, தனது பதிப்புரையில் காட்டும் சிலம்புச் செல்வரின் மேற்கோள் ஒன்றுண்டு.

“சிலம்பைப் பல்கலைக்கழகப் படிப்பில் இலக்கியத்திற்காக எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் பார்க்கின்ற பார்வை வேறு. பாட்டாளியாக இருந்து, சுய முயற்சியால் படிப்பாளியாக வளர்ந்து, தாய்மொழியான தமிழை மட்டும் கொண்டு வாழவும் வளரவும் வரம் பெற்றுவிட்ட எனது பார்வை வேறு”

ஒருவேளை, சிலப்பதிகாரத்துப் பதிகம் பேசும்,‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்’ எனும் வரி காரணமாக இருக்கலாம்.

இன்னும் வாசிக்கப்பெறும், circulationஇல் இருக்கும் காப்பியமாக, சிலப்பதிகாரத்தைப் பரப்பிய பெரும்பணி ம.பொ.சி. உடையது. ஆனால் அவர் தனது வாழ்நாளில் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரைப் பதிப்பில் ஈடுபடவில்லை. அவர் ‘செங்கோல்’ இதழில் தொடராக வந்த கட்டுரைகளைத் தொகுத்து, விடுபட்ட சில பகுதிகளுக்கு ம.ரா.போ. குருசாமி அவர்கள் உரை எழுதி, முழுமையானதாக இந்த நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. இந்த நூலைத் தொகுத்தளித்த ம.பொ.சி.யின் மகன் வழிப் பேத்தி, முனைவர் கவிஞர், தி. பரமேசுவரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.

சிலப்பதிகாரத்துக்கு மிக முக்கிய உரை, உ.வே.சா. பதிப்பித்த ‘சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்’ ஆகும்.

“14 மூலச்சுவடிகளை ஒப்பு நோக்கி, அரிதின் முயன்று, 1829-ம் ஆண்டு முதன் முதலாக வெளியிட்டார். 1920-ம் ஆண்டு மூன்று கையெழுத்துப் பிரதிகளை மேலும் ஒப்பு நோக்கி இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். 1927-ல் வெளிவந்த மூன்றாம் பதிப்பு மிகத்திருத்தமான செம்பதிப்பாகும்,” என்கிறார் மதிப்பியல் காப்பாட்சியர் ம.வே.பசுபதி.  உ.வே.சா. நூலகம் 2008 வரை சிலப்பதிகாரத்தை 11 பதிப்புகள் கொணர்ந்துள்ளது.

ஆக, சிலம்பு இன்றளவுக்கு காப்பாற்றப்பட்டுவிட்டது. கானல் வரியில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு,

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதித் தீர்த்த முகம் திங்களோ காணீர்

என்று இளங்கோவின் கவித்திறன் காட்ட.

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதி போற்றுவது எண்ணற்பாலது.

நமது காப்பியங்களில் பலவும் வடமொழிக்காவியங்களின் மூலக் கதைகளின் தழுவல்கள், சிலப்பதிகாரம் ஒரு சக்தி வாய்ந்த விதிவிலக்கு. மணிமேகலையும் இன்னொரு தமிழ்க்காப்பியம். சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் மற்றொரு தமிழ்க்காப்பியம்.

மன்னரைப் பாடாத, மாயா ஜாலங்கள் செய்யும் அவதார புருடர்களைப் பாடாத, சிலப்பதிகாரம் எப்படி காலத்தை வென்று நின்றது? பாரதி பாடுகிறார்,’ சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்’ என்று. ஆம், செய்யுள், தமிழ்ச் செய்யுள்…

மதுரையை அடைந்த கோவலன் தொழில் செய்து பிழைக்கக் கையில் ஏதுமில்லாது வருந்தும் போது, சிலம்பு இருக்கிறது என்றாள் கண்ணகி. சிலம்பு உள கொள் என்று சொல்லலாம் அவள். கணவனை ஏக வசனத்தில் கட்டளை இட இயலாது. சிலம்பு உள கொள்ளுங்கள் என்று சொல்லலாம். வசனமாகிவிடும். சரி, சிலம்பு உள கொள்ளும் என்றாலோ? காலையில் செய்த பொங்கல் மதியம் தின்பது போல் இருக்கிறது. இளங்கோ கையாளும் கவித்தொடர், ‘சிலம்பு கொண்ம்’ என்று. கொள்ளும் என்பது எங்ஞனம் கொண்ம் என்றாயிற்று. இரண்டு ஒற்றுக்கள் வரலாமா, திரிபா, விகாரமா, இடைக்குறையா என்பனவற்றைத் தமிழ்இலக்கணம் கற்றவரைக் கேளுங்கள். ஆனால் எத்தனை வசீகரமாக இருக்கிறது? அதுதான் சிலப்பதிகாரச் செய்யுள்,

வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டு அருளிய அணங்கு, சூர்உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர்உரம் கிழித்த பெண்ணும் அல்லள்

என்று வாயில்  காப்போன், பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தெரிவிப்பதில் வெளிப்படும் அச்சம், பிரமிப்பு, திகில் எனப் பல்சால் மெய்ப்பாடுகள் தமிழ்ச் செய்யுள் செய்யும் விந்தை.
தமிழில் எழுதப்பெற்ற முதல் காப்பியம் சிலப்பதிகாரம், ஆசிரியப்பா, வெண்பா, இசைப்பாடல்கள் கொண்டது.

மணிமேகலை பற்றி நமக்கு என்ன தெரியும்.

யாராவது ஒரு பாடல் வரி சொல்வீர்களா சகாக்களே?

சிலப்பதிகாரத்தின் காலமும் மணிமேகலையின் காலமும் ஒன்று என்றும், கி.பி. இரண்டாம் நுõற்றாண்டு என்றும் ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள். சமகாலத்தில் வலுவான கால ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.சிலப்பதிகாரத்தின், மணிமேகலையின் தொன்மையை சில நூற்றாண்டுகள் முன்னால் கொண்டு வைக்கக் கூடும்.

சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்கிறார்கள். ஐதராபாத்தையும் செகந்திராபாத்தையும், மும்பையையும் புனேயையும், கோவையும் திருப்பூரையும் இரட்டை நகரங்கள் என்று சொல்வதைப் போல. சிலப்பதிகாரத்தின் பிரதான கதை மாந்தர் கோவலன், கண்ணகி, மாதவி எனில், மணிமேகலையின் கதை மாந்தர் மாதவியின் மகள் மணிமேகலை.

பரத்தமை எனும் மாசடைந்து கிடந்த சோழ நாட்டு அவலத்தைச் சுட்டிக் காட்டுவதற்காகவும் எழுதப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரம். காப்பியத்தின் முதன் மூன்று நோக்கங்கள் - அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பனவே. ஆயினும் பரத்தமை பெருத்துக் கிடந்தது.

பரத்தமை எனும் சொல் நற்றிணை, அகநானூறு, கலித்தொகைப் பாடல்களிலும், பரத்தையர் எனும் சொல் பரிபாடலிலும், பரத்தை எனும் சொல் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, நற்றிணைப் பாடல்களிலும் பரத்தன் எனும் சொல் அகநானூற்றிலும் ஆளப்பட்டிருக்கின்றன. ஆண் பரத்தனும் இருந்திருக்கிறான்.

மற்றொரு தவிர்க்க இயலாத சமண முனிவர் திருவள்ளுவர். புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பரத்தமை எதிர்ப்பு என எத்தனை வலுவாகப் பேசுகிறார் என்பதறிவோம்.

மாதவி எனும் ஆடல் மகளின் மகள், கோவலனின் மகள், பெற்ற ஏற்றத்தைப் பாடுவது மணிமேகலை. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பியம் இது. கூலம் எனில் தானியம் என்று பொருள். கூலக்கடைத் தெரு என்று இன்றும் வழங்கப் பெறுகிறது.

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினும் அறியவைத்தனனென்

என்பது பதிகம்.

கூலம் என்பன - நெல்லு, புல்லு(கம்மம் புல்), வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி எனும் எண்வகைத் தானியங்கள். கூத்த நூலார் கூலம் பதினெட்டு என்கிறார்.

சீத்தலை என்பதோர் ஊர் என அறியாமல், அடுத்தவர் பிழை செய்தால் சாத்தனார் தன் தலையில் எழுத்தாணியால் குத்துவார் என்றும், குத்திக் குத்திச் சீழ் வைத்து அவர் பெயர் சீழ்த்தலைச் சாத்தனார் என்றாகி, அது மருவிச் சீத்தலைச் சாத்தனார் ஆயிற்று என முட்டாள்கள் நமக்குப் பாடம் சொன்னார்கள்.

சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்ட பாவினங்களே மணிமேகலையிலும். பதிகம் தவிர்த்து 30 காதைகள், 4745 அடிகள். மேலும் நாம் அறிய வேண்டியது சங்ககாலச் சாத்தனார் வேறு, கூலவணிகன் சாத்தன் வேறு என்பதாகும்.

பெளத்தக் கருத்துக்களை வலியுறுத்த எழுந்த பெளத்தக் காப்பியம் மணிமேகலை என்பது வெளிப்படை. மேலும் உலகில் வேறெந்த மொழியிலும் பெளத்த மதத்திற்குக் காப்பியம் இல்லை, மணிமேகலை தவிர என்கிறார்கள். மணிமேகலைக்கு நூலாசிரியர் வைத்த பெயர் - மணிமேகலைத் துறவு என்பதாகும்.  ‘இளங்கோ வேந்தன் அருளக் கேட்ப’ கூலவாணிகன் சாத்தன் முப்பது காதைகளில் ‘மணிமேகலைத் துறவு’ எனும் காப்பியம் தந்தான் என்கிறது பதிகம்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக

என்றும்

உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்

என்றும் சிலப்பதிகாரப் பதிகம் தெளிவாகக் கூறுகிறது.

எனினும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையின் காலங்கள், ஆசிரியர்கள் பற்றிச் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. போபால் வழக்கு போன்றும் போஃபர்ஸ் வழக்குப் போன்றும்.

அற்புதமான பாடல்களைக் கொண்டது மணிமேகலை. குறிஞ்சிப் பாட்டு கபிலர் 99 மலர்களை வரிசைப்படுத்துவதைப் போல, சாத்தனாரும் மணிமேகலை பூக்கொய்யும் காட்சியில் மலர்களை வரிசைப் படுத்துகிறார்.

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி

சத்தியமாகச் சொல்லுங்கள், இவற்றுள் எத்தனை மலர்களை இன்று நாம் அடையாளம் காட்ட இயலும்?

அறம் வலியுறுத்தும் பல அற்புதமான பாடல்கள் மணிமேகலையில் உண்டு. ஏற்கனவே வேறு சில கட்டுரைகளில் நான் எடுத்தாண்டிருக்கிறேன்.

கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திருந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே எனும் வரி யாவராலும் அவ்வப்போது கையாளப் படுவது. அது மணிமேகலையின் வரி.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

மேலும் ஒன்று -

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது

மணிமேகலை இராசமாதேவிக்கு அறிவு புகட்டும் பாடல் ஒன்று -

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்காயினும் இரங்குதல் வேண்டும்

இதுபோல் அறம் பேசும் பல பாடல்கள்.

நம் மூதாதையர் மணிமேகலைக்கு ஏன் உரை எழுதவில்லை என்பது தெரியவில்லை. மகா மகோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர்தான் முதன் முதலில் அரும்பத உரையெழுதிப் பதிப்பிக்கிறார். மணிமேகலை மூலத்தை முதன் முதலில் அச்சேற்றியவர் திருமயிலை சண்முகம் பிள்ளை என்பார். பின்னர் மணிமேகலையின் முதல் 26 காதைகளுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், இறுதி 4 காதைகளுக்கு ஒளவை.துரைசாமிப் பிள்ளையும் உரை எழுதி முழுமைப்படுத்தியுள்ளனர்.

-o00o-

ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவது சீவக சிந்தாமணி. திருத்தக்க தேவரின் தமிழ்க் கொடை. சிலம்பின் காலம் இரண்டாம் நூற்றாண்டு எனக்கொண்டால், சீவகசிந்தாமணியின் காலம் 7-ஆம் நூற்றாண்டு என்மனார் புலவ. முற்று முடிவான தீர்மானங்கள் இன்னும் எய்தப்படவில்லை. கால ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இன்னொருவர் சைவக் குரவர்களில் ஒருவரான, திருவாசகமும் திருவெம்பாவையும் எழுதிய மாணிக்கவாசகர். எட்டாம் நூற்றாண்டு என்று கொள்கிறார்கள்.

பொதுவாகத் தமிழ் காப்பிய மரபு, காப்பியத்தைக் காண்டம் எனப் பிரிக்கிறது. சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்கள். சிலப்பதிகாரக் காண்டங்களின் சிறிய அலகுகள் காதை எனப்பட்டன. மணிமேகலையில் காண்டங்கள் இல்லை. யாவும் முப்பது காதைகள் மட்டுமே!

காண்டங்களாகப் பிரிக்கப்பட்ட மற்றுமோர் காவியம் இராமகாதை எனக் கம்பனால் நாமகரணம் செய்யப்பட்ட இன்று கம்ப ராமாயணம் எனும் பெயரால் வழங்கப்பெறும் காவியம்.  கம்பராமாயணம், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், என ஆறாகப் பிரிகிறது. பூசை அறையில் சாமி படங்களுடன் வைத்திருப்பது ஐசுவரியம் எனக்கருதிப் பலர் சுந்தரகாண்டம் மட்டும் வாங்கி வைத்துள்ளனர். அது வாசிப்பதற்கு அன்று, தொட்டுக் கும்பிடுவதற்கு. ஆகவே, கடலைப் பொரி விற்பது போல் பல பதிப்பகங்கள் சுந்தர காண்டம் மட்டும் அடித்து இறக்குகின்றனர். கம்பனுக்கு ராயல்டியும் தரவேண்டியதில்லை.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் மங்கல வாழ்த்துப் பாடலை விடுத்து, கானல் வரி தவிர்த்து எட்டுக் காதைகள் மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வஞ்சின மாலை விடுத்து எட்டு காதைகள். வஞ்சிக் காண்டத்தில் குன்றக் குரவை தவிர்த்து ஆறு காதைகள். இது சிலப்பதிகாரப் பகுப்பு எனில் கம்பன் ஆறு காண்டங்களில், சிறு அலகுகளாகப் படலம் எனும் பெயரைக் கையாள்கிறான். ஆறு காண்டங்களிலுமாக 118 படலங்கள். பால காண்டத்தில் 23, அயோத்தியா காண்டத்தில் 13, ஆரணிய காண்டத்தில் 13, கிட்கிந்தா காண்டத்தில் 16, சுந்தர காண்டத்தில் 14, யுத்த காண்டத்தில் 39 என. யுத்த காண்டம் அளவிலும் ஆளுமையிலும் பெரியது.

ஐம்பெருங்காப்பியங்களில் கம்பனுக்கு நிகரானதாக, காவிய அமைதி பெற்ற, கவித்துவமும் தீஞ்சுவையும் காமரசமும் செறிந்த 3145 பாடல்கள் அடங்கிய காப்பியம் சீவக சிந்தாமணி. கிட்டத்தட்ட கம்பனில் நாலில் ஒரு பங்கு. ஆனால் ஐம்பெருங்காப்பியங்களில் பெரியது.

ஆனால் திருத்தக்க தேவர், காண்டம் எனும் பெரும் பிரிவும் காதை அல்லது படலம் எனும் சிறு பிரிவும் கொள்ளாமல், இலம்பகம் என்று பிரிக்கிறார். நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம்,  மண்மகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம், முக்தி இலம்பகம் எனப் பதின்மூன்று. இதில் இரண்டு முதல் ஒன்பது வரையிலான இலம்பகங்கள், சிந்தாமணியின் நாயகன் சீவகனின் தேவியர் எண்மர் பெயரால் அமைந்தன. தேவியரில் குளித்துக் கரையேறி, துறவு பூண்டு, முக்தி பெற்ற கதைதான் சீவக சிந்தாமணி.

சற்றுப் பொறாமையாக- சற்று என்ன மிகவும் பொறாமையாக இல்லையா, தேவியர் எண்மர் எனும் போது?

பெருநூல்களை ‘உலகு’ என்று முதற் பாடலில் அமைத்துத் தொடங்குவது தமிழ் மரபு. சில தெய்வப் புலவர்களுக்கு இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததாகப் புராணங்கள் உண்டு. அடியெடுத்துக் கொடுப்பது என்பது இறைவன் நேரில் வந்து ஏடெடுத்து எழுத்தாணி கொண்டு எழுதி நீட்டுவதல்ல. புத்தியில் தோன்றும் சின்னப் பொறிதான். கும்பமுனி கூட ஒரு சிறுகதையை ‘உலகெலாம்’ என்றே எடுக்கிறார்.

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் ‘உலகெலாம்’ என்று எடுத்து ‘உலகெலாம்’ என்று முடிக்கப் படுகிறது, சேக்கிழாரால்.

உலகுஎலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்,
நிலவு உலவிய நீர்மலி வேணியன்,
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

என்று எடுக்கப்பெற்ற திருத்தொண்டர் புராணம், இறுதியில், கலிவிருத்தத்தில் அமைந்த பாடலால்,

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுஉளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது;- எங்கும் நிலவி, உலகெலாம்

என்று முடிகிறது.

காவிய கர்த்தா எத்தனை பிரக்ஞை பூர்வமாகச் செயல் படுகிறார் பாருங்கள்.

எழுத ஆரம்பித்தபோது, ஆண்டுக்கு ஒரு முறை 21 நாள் விடுப்பில் மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம், அன்று நான் மதித்த படைப்பாளிகளை ஓடியோடிச் சென்று சந்திப்பது வழக்கம். சென்னையில் ஒரு நாவலாசிரியரைச் சந்தித்தபோது சொன்னார்- “என் நாவல்களின் கடைசி வரியை முதலில் எழுதி விடுவேன்” என்று. நான் விரித்த குடையைக் கண்ட மாடு போல மிரண்டு போனேன்.

திருவள்ளுவர் முதற் குறலிலேயே,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்றே முடிக்கிறார். ஆனால் ‘உலகு’ என்ற ஈற்றுச் சீர் என்றே வாய்ப்பாடு கொண்ட திருக்குறள்கள் மேலும் 24 உண்டு. அதாவது மொத்தம் 25 குறள்கள். இருபத்தைந்தாவது குரல் இன்பத்துப் பாலில்-

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
‘                 (1103)

தாமரைபோல் சிவந்த கண்கள் படைத்த திருமால் உலகு இனிதென்பார். காதல் நாயகியின் மெல் தோள்களில் மேவித் துயிலும் இன்பத்தை விடவும்  இனியதோ அது? (கவிஞர் சிற்பி உரை)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய முதல் பத்துப் பாட்டு நூலாகிய திருமுருகாற்றுப் படை -

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு

என்று தொடங்குகிறது.

“உலகம் மூன்றும்’ என்று அடியெடுத்து வைக்கிறது வளையாபதி என்கிறார்கள். கம்பனோ எனில்

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்- அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று பெரிய எடுப்பாக எடுக்கிறான். கம்பன் பெரிதின் பெரிது கேட்பவன், கனவு காண்பவன். ஆகவேதான் பாரதி ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ தமிழை அமரச் சாதி என்கிறான்.

நன்றி : www.amarchitrakatha.com

இளங்கோவடிகள், மங்கல வாழ்த்துப் பாடல் முதலில்,

திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னிக் குளிர்வெண் குடைபோன்று இவ்
அம்கண் உலகு அளித்தலான்
‘  என்கிறார்.

சீவக சிந்தாமணி ஆசிரியரோ, ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்று முதற்பாடலில் இறைவணக்கம் செய்கிறார்.

தீப்பேறு யாதெனில் பன்னிரு திருமுறைகளைப் பேச சைவர்கள் இருந்தனர். திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம் பாராட்ட வைணவர் இருந்தனர். திருக்குறள் உலகப் பொதுமறை என்று கூவி, எட்டறி கோடித் தமிழர்களும் தலைக்குச் சில குறள்களேனும் அறிந்து வைத்திருந்தனர். சிலப்பதிகாரத்துக்கு உயிர் கொடுக்க ம.போ.சி. இருந்தார். மணிமேகலை பௌத்த காப்பியம். சீவக சிந்தாமணி சமணக் காப்பியம். சீராட்டிப் பாராட்டிப் பேச ஆளில்லை. கற்க ஆளில்லை. பட்டி மன்ற தாசர்களும் துணியவில்லை.

திருவாவடுதுறை மடாதிபதி மூலச் சுவடிகளைக் கொடுத்து, பிற சுவடிகளையும் தேடித் தருவித்துக் கொடுத்து, அரும்பாடுபட்டு உ.வே. சாமிநாதைய்யர் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார், நச்சினார்க்கினியர் உரையுடன். இன்று அது மறு பதிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இது ‘செம்மொழியான தமிழ் மொழியே’. தேடிக் கண்டெடுத்தவை பலவற்றையும் மறுபடியும் தொலைக்கத் தயாராகி நிற்கிறோம் நாம்.

‘விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது’

-o00o-

சிறு காப்பியங்கள் என ஐந்துண்டு நம்மிடம். ஐஞ்சிறு காப்பியங்களில் சில அளவிற் பெரியன. சிறு காப்பியம் என எதனால் அவற்றை அடக்கினர் என்பது தெரியவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையை விடவும் பெரியது சூளாமணி.

ஐஞ்சிறு காப்பியங்களில் முதலாவது சூளாமணி. சூடாமணி என்பதன் திரிபுதான் சூளாமணி. இது ஒரு தலை அணியாகும்.  தோலாமொழித் தேவர் அருளியது. ஏன் ‘அருளியது’ என்று நான் எழுதுகிறேன் என்று கேட்கலாம். ஒரு பீத்தல் சினிமாவை நாம் வழங்கும் என்றும் படைக்கும் என்றும் அளிக்கும் என்றும் விளம்பரப்படுத்தும்போது ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு காப்பியத்தை இயற்றியவரை அருளியவர் என்று சொன்னால் என்ன?

தோலாமொழி என்பது கூட அவர் இயற்பெயராக இருக்க வழியில்லை. பாடல் வரியின் மூலம் அழைக்கப்படும் பெயராயிற்று. திட்டவட்டமாக வரையறை செய்யப்படவில்லை எனினும் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். மொத்தம் 2130 பாடல்கள், 12 சருக்கங்கள். இவர் காண்டமும் பகுக்கவில்லை, இலம்பகமும் பிரிக்கவில்லை, காதையும் செய்யவில்லை, படலமும் ஆக்கவில்லை. சருக்கம் என்கிறார் பாருங்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசும் சமணக் காப்பியம் இது. பல உரையாசிரியர்கள் இதன் செய்யுட்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். சிறு காப்பியம் எனக் கூறப்பட்டாலும் பெருங்காப்பியத்துக்கான சிறப்புகள் அனைத்தும் உடையது.

சீவக சிந்தாமணியைப் புரட்டிப் பார்க்க ஆளில்லை இன்று. சூளாமணியைத் தேடுவது யார்?

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ

என்ற ஒரு சூளாமணிப் பாடல் உலக வாழ்க்கையை விளக்குவது.

யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயலுகிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் தொங்குகிறான். ஒன்று யானையிடம் மிதிபட்டு சாகலாம். அன்றேல் அரவம் கொத்தி இறக்கலாம். எது நல்ல சாய்ஸ்? இந்நிலையில் பாழ்க்குழியின் பக்கத்தில் நிற்கும் மரத்தில் தொங்கும் தேன் கூட்டில் இருந்து கொட்டும் தேன்துளியை நக்க முயல்வது போல வாழ்க்கை என்பது பாடலின் பொருள். இதில் உரையாசிரியனின் ஓவர் ஸ்மார்ட்னெஸ் ஒன்றுண்டு. பற்றி நான்று கொண்டு கிடக்கும் புற்கற்றையை எலிகள் கத்தரிக்க முற்படுகின்றன என்பதது.

இரண்டாம் சிறு காப்பியம் நீலகேசி. இஃதோர் தத்துவ, தருக்க நூல் என்றும், காலம் கி.பி. 5ம் நூற்றாண்டு என்றும் சமண ஞானி எழுதியது என்றும் கருதுகிறார்கள். நூலாசிரியர் பெயர் கிடைத்திலது. ஈண்டு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, புலிகேசி ஆண்பால் பெயர் எனில் நீலகேசி பெண்பால் பெயர் என்பது.

பண்டைய சமண வரலாற்றில் நீலகேசி என்று ஒரு பெண் இருந்ததில்லை என்கிறார்கள். நீலகேசிக் காப்பியமும் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் நீங்கலாகப் பத்து சருக்கங்களால் ஆனது. 894 பாடல்கள். இந்நூலுக்கு சமய திவாகரர் எனும் பேராசிரியர் எழுதிய பழைய உரை உண்டு.

நீலகேசியில் இருந்து ஒரேயொரு பாடல் எடுத்துக்காட்டு.

தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத் தாரொடு இழிந்தவர் என்பது மெய்ம்மை பெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே

உரையாசிரியர் கூற்று: மருத்துவ நூல் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் மலத்தின் நிறம், நாற்றம், சுவை, ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து, அது நோயாளியின் மலமா அல்லது நோயற்ற ஒருவனின் மலமா என்று கூறுவர். ஆனால் அம்மலம் மேல்குலத்தவனின் மலம் அல்லது கீழ்குலத்தவன் மலம் என்று அறிய இயலாது. அதுபோலவே, நுண்ணறிவுடைய சான்றோர், வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையோரா அல்லது அறிவில் குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து அறிவர். ஆனால் அதனைச் செய்தவர் மேல்குலத்தோரா அல்லது கீழ்க்குலத்தோரா என்பதை அறிய இயலாது.

பாடலின் பொருளுக்குள் இருக்கும் குறிப்பு ஒன்று நம்மை வியப்படையச் செய்கிறது. ஸ்ட்டெதாஸ்கோப் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், எக்ஸ்-ரே, இரத்தப் பரிசோதனை, ஸ்கேனிங் என எதுவும் இல்லாத காலத்து, நாக்கைப் பார்த்தும் கண்ணைப் பார்த்தும், நாடி பிடித்துப் பார்த்தும், தோலைப் பார்த்தும், வயிற்றைத் தட்டி ஓசை பார்த்தும் மூச்சுக் காற்றின் வெப்பத்தைப் பார்த்தும் நோய் அறிய முற்பட்டதன்றியும் மலத்தின் நிறம், நாற்றம், சுவை, ஊறு கண்டு நோயறிய மருத்துவர் முனைந்திருக்கிறார் என்ற வியப்பு அது. அதாவது தன்னையே பரிசோதனைக் கூடமாகப் பயன்படுத்தி  நோய் கண்டு மருத்துவர் தேர்ந்திருக்கிறார் என்பது. தொட்டுப் பார்த்த உடன் சோப்புத் திரவத்தில் கை கழுவித் துண்டில் துடைப்பது போன்றதல்ல அது.

எனக்குள் எழும் கேள்வி யொன்றுண்டு இங்கே. ‘ஆயிரு வல்லார்கள்’ எனும் சொற்றொடரில் வரும் ‘ஆயிரு’ எனும் சொல் பின்பு ‘ஆயுர்’ என்றாகி, ஆயுர்வேதத்துக்கு மூலச்சொல் ஆயிற்றோ என்பதது.

மூன்றாம் சிறு காப்பியம் யசோதர காவியம். இதுவும் ஆசிரியர் பெயரறியாச் சமணக் காப்பியம்.

மத்வாச்சாரியார், உயிர்ப்பலியைத் தடுக்க யாக விதிகளில் மாற்றம் கொண்டு வந்தார். யாகத்தின் போது, உயிர்ப்பலிக்குப் பதில் அரிசி மாவினால் செய்த உருவங்களை தெய்வங்களுக்குப் பலியிட்டு அர்ப்பணிக்கலாம் என்பதது. அதனையும் மறுக்க எழுந்தது யசோதர காவியம். பாவனைக் கொலை கூட வினைக்குக் காரணமாகும் என்பதால், அதன் தீய பயன்கள் பல பிறவிகள் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதை இச்சிறு காப்பியம் வலியுறுத்துகிறது.

320 பாடல்கள், நான்கு சருக்கங்களால் ஆனது இந்நூல். வடமொழி மூல நூலின் மொழிபெயர்ப்பு இது என்கிறார்கள். மூல நூலின் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் மூல நூலாசிரியர் வாதி ராஜ சூரி என்பவர் என்கிறார்கள்.

நான்காம் சிறு காப்பியம், ‘உதயண குமார காவியம்’. இது ஆறு காண்டங்களால் ஆனது. ஆசிரியர் பெயரும் இல்லை, காலம் பற்றிய குறிப்பும் இல்லை. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்காப்பியமான, இன்று முற்றும் கிடைத்திராத, பெருங்கதையின் உதயணன் வரலாறுதான் இச்சிறு காப்பியத்திலும் காணப்படுகிறது. இதன் மூலமும் வடமொழிக் காப்பியம்தான். 367 பாடல்கள். உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களால் ஆனது.

உதயண குமார காவியத்தின் காண்டங்களையும் உள் அமைந்த செய்யுள்களையும் கருத்தில் வைத்துக் கொள்ள அறுசீர்க் கழில்நெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும் உள்ளது. இப்படித்தான் பதிகத்தில் நூல் பற்றிய சுருக்கத்தையும் ஆசிரியர் வரலாறும் கூறினார்கள். எத்தனை காண்டங்கள் எத்தனை பாடல்கள் என்று பாடல்களும் எழுதி வைத்தார்கள். சங்க இலக்கியத் தொகை நூற்களுக்கே இந்த மரபு உண்டு. பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள், எட்டுத்தொகையில் எத்தனை நூல்கள் என்பதற்குப் பாடல்களிலேயே பட்டியல் உண்டு.

ஐந்தாம் சிறு காப்பியம் ‘நாக குமார காவியம்’. இதுவும் சமணக் காப்பியம், நூலாசிரியன் பெயர் அறியோம். காலம் 12-ம் நூற்றாண்டுக்கு முன்னர் என்கிறார்கள். வட மொழியில் பஞ்சமி சரிதம், நாக குமார சரிதம் எனும் இந்த நாக பஞ்சமி சரிதம் உள்ளது. ஐந்து சருக்கங்கள் கொண்ட இந்த நூலின் பாடல்கள் 170.

சுவாரசியமான தகவல் ஒன்று. நாக குமாரனின் ஆயுட் காலம் 1164 ஆண்டுகள். இதில் குமார காலம் 300 ஆண்டுகள், பூமியை ஆண்ட காலம் 800 ஆண்டுகள், நற்றவம் புரிந்து வினைகளை வென்ற காலம் 64 ஆண்டுகள்.

இந்தக் கணக்கில் இந்தக் கட்டுரையை எழுதும் கணபதி-சரசுவதி குமாரனுக்கும் ஆயுள் இருக்குமானால் இன்னும் 1100 ஆண்டுகள் மிச்சமுண்டு. சொல்வனத்துக்கு மேலும் 5000 கட்டுரைகள் எழுதலாம். எழுதவும் தமிழில் சேதி உண்டு.

நாககுமார காவியம், தனது 170-வது பாடலில் அறிவுறுத்துவது,

அறமின்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்கு அரணில்லை என்றும்
மறமின்றி உயிர்க்கு இடர் மற்றொன்றில்லை

என்பதாகும்.

ஐம்பெருங் காப்பியங்களைத் தாண்டி, ஐஞ்சிறு காப்பியங்களைத் தாண்டி வந்தால் நமக்குக் கிடைக்கும் மாபெரும் காப்பியம் 9-ம் நூற்றாண்டு கம்பனின் இராம காதை என்ற கம்ப ராமாயணம். ஆறு காண்டங்கள், 118 படலங்கள், பன்னீராயிரத்துக்கும் அதிகமான பாடல்கள். கம்பன் பற்றி ஏராளமான வழிநூல்கள் உண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும். கம்பராமாயணத்துக்கு மிக முக்கியமான உரை வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து உரையொன்றும் கம்பன் கழக உரையும் இன்றும் வாங்கக் கிடைக்கின்றன. மேலும் பற்பல பதிப்புகளும் உண்டு. சக்தி வை. கோவிந்தன் பதிப்பித்த மூல நூல், பாலகாண்டமும் அயோத்தியா காண்டமும் சேர்ந்தது என்னிடம் இருந்தது. மர்ரே ராஜம் ஐயர் மூலம் மாத்திரம் பதிப்பித்தார். நான் அதை முன்னாள் வைத்துக் கொண்டு 35 ஆண்டுகள் முன்பு பாடம் கேட்டேன், கம்பன் முழுக்க. ஸ்ரீ வைகுண்டம் பதிப்பு ஒன்றிருந்தது. நான் கண்டதில்லை. ‘புலி நகக் கொன்றை’ நாவல் எழுதிய திரு P.A. கிருஷ்ணனின் தந்தையார், பக்ஷிராஜ ஐயங்கார் எனும் தென்கலை வைணவர், பண்டித நேருவின் தோழர், அந்தப் பதிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மற்றும் ஏராளமான பதிப்புகள் வந்திருக்கின்றன. பழைய பதிப்புகளில் கலாக்ஷேத்திரம் பதிப்பும் ஒன்று.

கம்ப ராமாயண அகராதி ஒன்று தொகுக்கும் முயற்சி நடந்திருக்கிறது. அ.சே. சுந்தரராஜன், 1971-ல் தொகுத்து வெளியிட்டது. முதலாம் பாகம், அ-ஔ, என்னிடம் உண்டு. பிற பாகங்கள் வந்தனவா என்றோ, யாரிடமாவது உண்டோ என்றோ என்னிடம் தகவல்கள் இல்லை.

மேற்சொன்னவை தவிர முழுமையற்று நமக்குக் கிடைப்பன மிகவும் பிந்திய காலத்து மகாபாரதத் தமிழாக்கங்கள். நல்லாப் பிள்ளை, பெருந்தேவனார், வில்லிப்புத்தூரார் என்ற மூவர். பாரதத்தைத் தமிழில் தந்துள்ளனர். ஆனால் முழுமையாகத் தந்ததாகத் தெரியவில்லை. இவற்றுள் நல்லாப் பிள்ளை பாரதம் நான் கண்கொண்டு கூடப் பார்த்ததில்லை.

சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணம் ஒரு வகையில் காப்பியம்தான். சைவ நாயன்மார்களின் வரலாறு பேசுவது. பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

சேக்கிழார், சீவக சிந்தாமணி மீது காழ்ப்புக் கொண்டு பெரிய புராணம் பாடினர் என்று கதை ஒன்றுண்டு. அதற்கு பெரியபுராணத்தில் ஆதாரமில்லை என்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

“காவியங்கள் பல திறத்தான. அவைகளுள் சிலவற்றில் உலகைக் காணலாம், சிலவற்றில் உயிரைக் காணலாம், சிலவற்றில் கடவுளைக் காணலாம். மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியங்கள் மிகச் சில. அச்சிலவற்றுள் பெரிய புராணமும் ஒன்று” என்கிறார் திரு.வி.க.

பெரிய புராணத்தை ஒரு காவியம் என்றே கருதலாம். ‘பெரியபுராணம் பௌராணிகத்தை வித்தாகக் கொண்டு எழுந்த நூல் அன்று. அது சரித்திரத்தை வித்தாகக் கொண்டு எழுந்த காவியம்’ என்பது திரு.வி.க.வின் முடிவு.

பெரிய புராணத்தில் சைவத்தைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது என்றாலும் சைவர்களுக்கு மட்டுமேயான நூல் அல்ல என்கிறார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன். எவ்விதம் கம்ப ராமாயணம் என்பது வைணவருக்கான நூல் மட்டுமே இல்லையோ அவ்விதம். பைபிள் என்ற சொல்லை நாம் கிருஸ்துவத்துக்கு மட்டுமே தொடர்பு படுத்திக் கொள்ளவும் இயலாது. சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ‘இந்து பைபிள்’ என்றொரு அரிய பெரிய தத்துவ நூல் எழுதியுள்ளார் என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

கம்ப ராமாயணம் போல, அதற்கு முந்திய சீவக சிந்தாமணி போல, அதற்குப் பிந்திய வில்லி பாரதம் போல, பெரிய புராணமும் விருத்தப் பாக்களால் ஆனது. மா. துரைசாமி முதலியார் தொகுத்த யாப்புக் குறிப்பு அட்டவணை ஒன்று சுவாரசியமானது. பெரிய புராணத்தில் ஏழு வகையான விருத்தப் பாவினங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் கையாளப்பட்ட விருத்த வகை, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.

அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1805
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்        75
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்        280
தரவு கொச்சகக் கலிப்பா             1207
கலி நிலைத் துறை     545
கலி விருத்தம்                  368
வஞ்சி விருத்தம்                           6

மொத்தம் 4286

ஏன் தமிழன் வசன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் ஓடினான் பாய்ந்து என்பது நமக்குப் புலனாகிறது. மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் அறிய வேண்டாம்.

மிகவும் பிந்திய காலத்தில் உமறுப் புலவர் யாத்த சீராபுராணமும், கிருஸ்துவக் கம்பர் என்றழைக்கப்பட்ட ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ண பிள்ளை செய்த இரட்சணிய யாத்ரீகமும், வீரமா முனிவர் அருளிய தேம்பாவணியும் தமிழின் காப்பியங்களே!

-o00o-

இராமாயணமும் மகாபாரதமும் வடமொழி இதிகாசங்கள். ஒன்று சொன்னால் யாரும் வருத்தப்பட்டுக் கொள்ளக் கூடாது. மற்றவரை விடவும் தாய்மொழிப் பற்றும் தமிழ் நேசமும் மாற்றுக் குறைந்தவன் அல்லன் இந்தக் கட்டுரை ஆசிரியன். வலிக்கிறது என்றால் அதற்கு யாம் பொறுப்பல்ல. இந்தியாவுக்கே பொதுவான இதிகாசங்கள் இரண்டுதான். மேலும் இதிகாசம் இல்லை என்பது ஒரு மொழிக்கு இழுக்கும் அல்ல.

இதிகாசம் இல்லாவிட்டால் என்ன? நம்மிடம் இருப்பவற்றை நாம் கற்றுத் துறை போகி விட்டோமா, இதிகாசம் இல்லாத குறை நினைத்து வருந்த, இரங்க? நம்மிடம் இருக்கும் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போல் வேறு எம்மொழியில் உண்டு? அவையாவும் நமக்கு கரதலப் பாடமா?

விருத்தப் பாக்களால் நெய்யப்பட்ட முதல் காவியம் சீவக சிந்தாமணி. பிற்காலத்தில் வில்லிபுத்தூராரும் விருத்தப் பாக்களாலேயே பாரதம் செய்கிறார். ஆனால் ‘விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன்’ என்கிறார்கள். சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் கையாண்ட அனைத்து விருத்தப்பா வகைகளையும் கம்பன் மேம்படுத்திக் கையாண்டான் என்கிறார்கள்.

வில்லியின் விருத்தங்கள் குதிரையின் நடையை ஒத்தது என்பார்கள். குதிரையின் நடையை ஐங்கதி, பஞ்ச கதி அல்லது அஸ்வ கதி என்பர். குதிரையின் ஐவகையான வேகங்கள். கதி எனில் வேகம். மேற்சொன்ன மூன்றுமே ஆதித் தமிழ் மூலக் காப்பியங்கள் அல்ல. எனினும் ஏன் உயர்கம்பன்? அது கம்பநாடனின் கவி ஆளுமை, தமிழ் ஆளுமை.

சிலப்பதிகாரம் செய்யுள் கட்டமைப்பின் சிகரம். ஆனால் இளங்கோ கையாண்ட பாவினங்கள் அனைத்தையும் கையாண்ட மணிமேகலையில் ஏன் சிலம்பில் உள்ளது போன்ற சுவை இல்லை. பெளத்த நீதி புகட்ட வந்த காப்பியம் என்பதாலா? தமிழ் அழகியலில் சிலப்பதிகாரம் முனைந்து முந்தி நிற்கின்ற காரணமா?

சிலம்பும் மணிமேகலையும் செய்யப்பட்ட பின் ஐந்து நூற்றாண்டுகள் சென்று செய்யப்பட்ட காப்பியம் சீவக சிந்தாமணி திருத்தக்கதேவர் ஏன் விருத்தப்பாக்களைத் தேர்ந்தெடுத்தார்? கம்பன் எங்ஙனம் அதை வழிமொழிந்தான்? பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப்பாக்கள்…

தமிழின் வனப்பு, உவமை நலன்கள், இயற்கை வளன், அலங்காரங்கள், அணிகள், அங்கதம், நாடகம், கருணை, போர், வீரம், காதல், விரகம், நட்பு, சகோதரத்துவம் என சகல உச்சங்களையும் தொட்டவன் கம்பன்.

பாரதி, கம்பனின் முயற்சியைப் போற்றுகிறான். ஆம், முயற்சி, அது மிக முக்கியமானது. எதை முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமானது.

’கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

என வள்ளுவன் எடுத்துக்காட்டுவது போல, கம்பன் செய்த முயற்சி, சாதனை, எண்ணியெண்ணி வியக்கத்தக்கது.

மற்றுமொன்று, இராமாயணமும், பாரதமும் வடமொழி இதிகாசங்களே ஆயினும் இந்திய மொழிகளில், மரபில், மக்களின் மனதில் பெற்றிருந்த செல்வாக்கு. அது அபரிமிதமானது. சங்க இலக்கியங்கள் இராமனையும் சிலப்பதிகாரம் திருமாலையும் பாடி இருக்கின்றன.

இவற்றுள் மகாபாரதம் மிக மிகச் சிக்கலான உறவுகளைப் பேசும் பெருங்காப்பியம். கதை, கிளைக்கதை, நுண்கதை என விரிந்து போவது. மனிதகுல வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றையும் ஆராய்வது. அந்த விதத்தில் இராமாயணத்துக்கு இரண்டாவது இடம்தான்.

ஆனால் மற்றெந்தக் காப்பியத்தை விடவும் தமிழில் கம்பராமாயணத்தின் செல்வாக்கு அதிகம்.

கம்பரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப்படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பாலடிக்கலாம், செருப்பு மாலை போடலாம், சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம்.

ஆனால் கம்பனும் அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.

(முற்றும்)



ஜெமோ'வின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படித்தேன். நல்ல அறிமுகம்.
'நல்ல அறிமுகம்' என்று சான்றிதழ் வழங்குவது, அந்நூலை மட்டுமே படித்தவன் செய்யக்கூடியதில்லை. அறிமுக நூலுக்கு அவசியமாகிற சுருக்குதல்/எளிமைப்படுத்துதல்களால், சாரம் பாதிக்கப்பட்டுவிடவில்லை என்று சொல்ல அத்துறையை ஓரளவு நன்கறிந்தவர்களால் தான் முடியும். தகுதியெல்லாம் பார்த்தால் வலையுலகில் தொழில் பண்ண முடியுமா. என் சான்றிதழும் ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டுமே.

என்னளவில் கொஞ்சம் புகை மூட்டம் விலகியதாகவே உணர்கிறேன். கச்சாமுச்சாவென்று தகவல்கள், எது-எதற்கு எதிர்வினையாக வளர்ந்தது, சரித்திர ஓட்டத்தில் ஒரு தத்துவத்தின் இடம் என்ன, நீட்சி என்ன, போன்றவை எல்லாம் தெரியாமல் ஒரு விதக் கலவையாக நம்முன் வந்து விழுவதை கொஞ்சம் தெளிவுபடுத்திக்கொள்ள உதவும் இந்நூல்.

வில் ட்யுரண்டின் 'த ஸ்டோரி அஃப் ஃபிலாஸஃபி' என்ற பிரபலமான நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது செய்வது இதைத் தான்: தத்துவங்களையும், தத்துவாசிரியர்களையும் சரியான context வரிசையில் விளக்குகிறது. எதிலிருந்து எது வளர்ந்தது, எதோடு எது முரண் பட்டது என்று தெரிந்து கொள்ள உதவும். அது போல - அத்தனை ஆழமாக இல்லாவிட்டாலும் - இந்திய தத்துவத்துக்கு ஒரு அறிமுகம் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. ஜெமோவின் விருப்பமான சொற்றொடர்ப்படி: "அறிவு என்பது தகவல்களை பகுத்து பின் சீராக தொகுத்து அடுக்கிக் கொள்வது" தானே.

இந்திய தத்துவங்களைப் பற்றி வேதாந்தம், யோகம், மீமாம்சம் என்று சொற்கள் பறப்பதை பார்த்து மிரண்டிருக்கிறேன்(றோம்...துணைக்கு வந்தால்தான் என்னவாம்) . 'ஹோல்டேன்...எதுஎது, எதுஎது முதல்ல சொல்லுங்கப்பா' என்று கத்தவேண்டும் போல நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். தேவி பிரசாத் சட்டோபாத்யாயின் 'இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்' என்ற தலைகாணியுடன் ஒரு மோது மோதிப்பார்த்து 'நெஸ்ட் மீட் பண்ணுவோம்' என்று விட்டுவிட்டேன். ஒருமுறை Encyclopedia of Brittanicaவின் எஸ்.சி.சாட்டர்ஜி (?) எழுதிய கட்டுரைகளை எடுத்து வைத்துக்கொண்டு, படங்களெல்லாம் வரைந்து புரிந்துகொள்ள முற்பட்டேன். வேலைக்காகவில்லை.

ஜெயமோகனின் எழுத்து நுட்பமான விஷயங்களை மிகத்தெளிவாக விளக்கும் விதமாக இருக்கிறது. 'இவ்விடம் சிடுக்கு, கவனமாக படிக்கவும்' என்று பலகை வைக்காத குறையாக பல இடங்களை மிகுந்த பிரக்ஞையையோடு தெளிவாக்கி இருக்கிறார். எதை ஆராய முற்படுகிறோம், அதை எவ்வாறெல்லாம் ஒரு தத்துவம் விளக்க முற்படுகிறது, அதன் கலைச்சொற்கள் (அந்த contextஇல் அவற்றுக்கு உள்ள பிரத்யேக அர்த்தங்கள்), இடரல்கள்..என்று தத்துவ நூல் வாசித்துப் பழக்கமில்லாதவர்கள் (என்னைப் போன்றவர்கள்) கூட படிக்கமுடியும்படி இருந்தது. இவ்விஷயங்களில் ஆர்வம் இருந்து, கரையோரத்தில் மிரண்டு நிற்கும் சகாக்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கொஞ்ச நாட்களாகவே சந்தையில் இல்லாமல் இருந்ததை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இனி கழிவிரக்கப் படலம்

"ட்யுராண்ட என்று பெயருதிர்த்தாயே படவா, அந்த லட்சணத்தைப் பார்ப்போம்: 'இப்போது ஷோபென்ஹௌவரும்-ஹெகெலும் இனின்ன விஷயங்களை இவ்விவ்வாறு முரண்பட்டார்கள் என்று 100 வார்த்தைகள் மிகாமல் எழுது'" என்று சொன்னால் அசடு வழிவேன். இன்னும் சில மாதங்கள் கழித்து 'வைசேஷிகத்தின் அணுக்கொள்கையில் உள்ள முரண் ,என்று சங்கரர் எதைக் கூறினார்?'' என்று கேட்டாலும் இதே கதி தான் என்று தெரியும். தகவற்பட்டியலில் ஒன்றிரண்டை மறப்பதைக் கூறவில்லை, அது ஜகஜம். முக்கியமான சாராம்சக் கருத்துக்களைக் கூறுகிறேன்.

ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து படிக்காமல் 'இங்கெ கொஞ்சம் பிளிச்சு, அங்கெ கொஞ்சம் பிளிச்சு' என்பதால் வரும் வினை இது. என்ன செய்ய, எதைப் படிக்கும்போதும் படிக்காதவை இன்னும் இவ்வளவு இருக்கிறதே என்ற நினைப்பு தான். (இதிலிருந்து 'வாழும்போதே வாழ்வனுபவங்களுக்கு ஏங்குவது' என்று கவித்துவமான இணைக்கோடு ஒன்றைப் பிடித்து லயிக்கவேண்டியது வாசகர் கடன்). பிடிப்பதே கைமண் தான். அதுவும் விரலிடுக்கில் வழிந்தோடினால் என்ன செய்வது? எண்ணை தேய்த்து மண்ணில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்று இதை விட்டுவிட முடியுமா? (அடடா, மண்ணில்தான் எத்தனை மெட்டஃபர்கள்! மண்ணாங்கட்டி...மேல சொல்லு).

குறிப்புகள் வேண்டும். அவற்றைப் படித்த நிமிடத்தில் வாசக அனுபவத்தின் ஞாபகங்கள் கிட்டத்தட்ட திரும்ப வேண்டும். என்ன செய்யலாம்? வெண்பா இலக்கணத்துக்கப்புறம் வில்லியம் ஷேக்ஸ்பியருக்குத் தாவ வேண்டிய நிர்பந்தம் வந்தால், மாமுன் நிரை..என்று வாய்பாட்டை கஜினிபோல நெஞ்சில் பச்சைகுத்திக்கொள்ளவேண்டியது தான். பார்த்ததும் சட்டென்று நியாபகப்படுத்திக்கொண்டுவிடலாம். அது போல ஆறு தரிசனங்கள் பற்றிய குறிப்புகளையும் தலா ஒன்றென சிக்ஸ் பேக்கில் (விடு விடு) எழுதிக்கொள்ளலாம்.

மேற்சொன்னதும் உருவகம் ஐயா: பேசாட்டு படிக்க படிக்க இந்த ப்ளாகில் இறக்கி வைத்து விட வேண்டியது (வலைத்தளத்தை உடலின் நீட்சியாக பார்ப்பதன் உடலரசியல் அவதானத்துக்குரியது). என்ன ஒரு பிரச்சினை, படித்ததற்கும், தங்கியதற்கும் நடுவே உள்ள பயணச்செலவு முதற்கொண்டு உலகறிய இருந்துத் தொலைக்கும். போவுது போ.

இன்னொரு பிரச்சினை, உள்ளுக்குள்ளேயே வைத்து marinate ஆக விடாமல் இங்கே கொட்டிக்கொண்டிருந்தால் நானெல்லாம் எப்போது நாவல் எழுதுவதாம்? அதுசரி, அதைப்பத்தி உங்களுக்கென்ன கவலை. It's between me and தமிழ்த்தாய்.
----------------
வாழ்க்கையின் விசுவரூபம்
ஒருமுறை கல்பற்றா நாராயணனும்[1] நானும் விவாதித்துக்கொண்டே பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம்.தகழி சிவசங்கரப்பிள்ளை[2]யின் ‘கயறு’ என்ற பெருநாவல் பற்றிப் பேச்சுவந்தது. ஞானபீட விருது பெற்ற இந்நாவல் தமிழில் சி.ஏ.பாலன் மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்திருக்கிறது. நான் சொன்னேன்,  ‘தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல்களில் என்ன பிரச்சினை என்றால் அத்தனை பக்கங்களைத் தூக்கிக் கொண்டுசெல்லக்கூடிய தனக்கான வரலாற்றுத்தரிசனம் இல்லை. அவருக்கு மக்களைக் கூர்ந்து பார்க்கத் தெரிகிறது. அவர்களை மனமார நேசிக்கிறார்.வாழ்க்கையின் ஒட்டுமொத்த அசைவைக்கூட அவரால் பார்த்துவிடமுடிகிறது. அதனால்தான் நாம் அவரை இன்னும் முக்கியமான படைப்பாளியாக நினைக்கிறோம். ஆனால் எப்போதும் ஒன்று குறைகிறது. அது அந்த தரிசனம்தான். தரிசனமற்ற ஒரு ஆக்கம் அத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது நமக்கு அதில் ஒரு ஏமாற்றம் உருவாகிறது’

கல்பற்றா சொன்னார் ‘தகழிக்குக் கவித்துவம் இல்லை என்று எனக்கு தோன்றியிருக்கிறது. நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட அதுதான். இருவகைக் கலைஞர்கள் உண்டு. வாழ்க்கையைப் பார்ப்பவர்கள்,வாழ்க்கையை விளக்குபவர்கள் ஒரு சாரார். வாழ்க்கைக்கு அப்பால் எங்கோ செல்ல வாழ்க்கையைக் கையாள்பவர்கள் இன்னொருசாரார். மனிதகுலம் இங்கே இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது வேறு ஒருவகையில் வேறு ஒரு இலக்கில் வாழவேண்டுமென்ற கனவை முன்வைப்பவர்கள் அவர்கள். மகத்தான எழுத்து என்பது இலட்சியவாதத்தை உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும்தான்’

[Prianishnikov[3]  வரைந்த ஓவியம். நன்றி விக்கிபீடியா]

கல்பற்றா தொடர்ந்தார் ‘தகழியின் பிரச்சினை,அவரது அபாரமான பொதுப்புத்தி. [காமன்சென்ஸ்] வாழ்க்கையை அவர் வாழ்ந்து அறிந்த ஒரு முதுபாட்டாவின் முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் அணுகுகிறார். அதுவே அவரது அழகு. குறிப்பாக மனித உறவுகளின் சிக்கல்களையும் விசித்திரங்களையும் அவர் சொல்லும் இடம். அந்த பொதுப்புத்திதான் அவரைக்  கவிதைக்கு வரமுடியாமல் செய்கிறது. கவிதையும் தரிசனமும் எப்போதுமே பொதுப்புத்திக்கு எதிரான எழுச்சிகள்தான்’

நான் ’அப்படியானால் டால்ஸ்டாய்?’ என்றேன். ‘எந்த விதியையும் மீறிச்செல்லும் மேதைகள் உண்டு. அவர் அந்தவகை.  பிரம்மாண்டமான பொதுப்புத்தியின் சித்திரம் என ’போரும் அமைதியும்’நாவலைச் சொல்லலாம். ஆனால் அது ஒரு மகத்தான கவிதை. அதில் விளைவது மானுடம் உருவாக்கிய மிகப்பெரிய இலட்சியவாதங்களில் ஒன்று’ என்றார் அவர். கல்பற்றா நாராயணனின் எப்போதைக்கும் பிரியமான எழுத்தாளர் தல்ஸ்தோய். இந்த மீறலை அவரது அகம் காத்திருந்திருக்கலாம். கவிதையில் சிறகடித்தெழும்போதெல்லாம் பொதுப்புத்தியெனும் நிலவிரிவை அவர் பாதங்கள் ஏங்கியிருக்கக்கூடும். அதை தல்ஸ்தோய் நிகழ்த்திக்காட்டுகிறார்

தல்ஸ்தோய் அவரது மகத்தான நாவலை ல் எழுதினார். 1861ல் புரூதோன் என்ற பிரெஞ்ச் அறிஞர் பிரெஞ்சில் எழுதிய போரும் அமைதியும் என்ற நூலின் தலைப்பில் இருந்தே இந்நூலுக்கான தூண்டுதலைப் பெற்றார். ஆரம்பத்தில் 1801 என்ற தலைப்பில்தான் இதை எழுத ஆரம்பித்திருந்தார். அவருடைய திருமணத்தை ஒட்டித் தன் சொந்த கிராமத்திலேயே வசிக்க ஆரம்பித்த உற்சாகமான நாட்களில் எழுத ஆரம்பித்த நாவல் இது. அவரது மனைவி சோஃபியா இந்தப் பெருநாவலை நான்குமுறை கையால் பிரதி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது

இந்நாவலின் பேசுபொருள் நெப்போலியனின் மாஸ்கோ படையெடுப்பு. உண்மையில் அதைப்பற்றிய பேச்சு எப்போதுமே தல்ஸ்தோயின் குடும்பத்தில் இருந்துவந்தது. இந்நாவலில் வரும் பல கதைமாந்தர்கள் தல்ஸ்தோயின் முன்னோர்களே என பலவகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்த 160 கதைமாந்தர்கள் உண்மையான மனிதர்களாக அவர்களின் பெயர்களிலேயே வருகிறார்கள்.  குறிப்பிடத்தக்க கதைமாந்தர்கள்  500க்கும் மேல் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

1863ல் முடிக்கப்பட்ட இந்நாவல் 1865ல் வெளியாகியது.  ரஸ்கிய் வெஸ்ட்னிக் என்ற ருஷ்யமொழி வார இதழில் இந்நாவல் 1805 என்ற பேரில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தல்ஸ்தோய் இந்நாவலைப் பலமுறை பலவகைகளில் திருத்தியும் சீர்படுத்தியும் எழுதினார். போரும் அமைதியும் என்ற பேரில் 1869ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. மூலத்தில் பலவகையான மொழிநுட்பங்கள் கொண்ட நாவல் என்று இது சொல்லப்படுகிறது. அன்றைய ருஷ்ய உயர்குடிகள் பேசிய போலி பிரெஞ்சு மொழியை நுட்பமாகப் பகடி செய்து தல்ஸ்தோய் பயன்படுத்தியிருந்தாராம்.

முதலில் பிரெஞ்சுக்கும் பின்னர் உலகமொழிகளிலும் மொழியாக்கம்செய்யப்பட்ட போரும் அமைதியும் உலகமொழிகளனைத்திலும் விரும்பி மொழியாக்கம்செய்யப்பட்டு கடந்த ஒரு நூற்றாண்டாக உலகசிந்தனையையும் உலக இலக்கியப்போக்கையும் தீர்மானித்த பெரும்படைப்பாக திகழ்கிறது. தமிழில் டி எஸ் சொக்கலிங்கம் மொழியாக்கத்தில்  நவம்பர் 20, 1957 ல் சக்தி வை கோவிந்தன்[4] வெளியிட இந்நாவல் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த நாவல்களில் எல்லா வகையிலும் முதன்மையானது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் லேவ் தல்ஸ்தோயின் இந்த பேரிலக்கியத்தைக் கூறமுடியும். டி.எஸ். சொக்கலிங்கம் தன் மொழிபெயர்ப்புக்குப் `போரும் வாழ்வும்’ என்று பெயர் சூட்டியிருந்தார்.

புதுமைப்பித்தனின் இதழியல் குருநாதர், போதகர் என்ற முறையில்தான் டி. எஸ்சொக்கலிங்கம்[5] இன்று இலக்கியப் பேச்சுக்களில் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறார். புகழ்பெற்ற இலக்கிய இதழான மணிக் கொடியின் நிறுவனர்களுள் ஒருவர் என்ற முறையில் அடுத்தபடியாகக் குறிப்பிடப்படுகிறார். தினமணியின் ஆசிரியராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சொக்கலிங்கம் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. எனினும் இந்த மொழி பெயர்ப்பே அவருடைய மிகப்பெரிய சாதனை.

இன்னொரு மொழிச்சூழல் இத்தகைய ஒரு சாதனையைத் தன் மார்பில் பொறித்து வைத்திருக்கும். உதாரணமாக மலையாளத்தில் நாலப்பாட்டு நாராயண மேனன் மொழிபெயர்த்த விக்டர் யூகோவின் துயரப்படுபவர்கள் (லெ.மிசரபில்ஸ்) மிக விரிவான இலக்கியப் பாதிப்பை மலையாளத்தில் ஏற்படுத்தியது. முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளுக்கு நிகரான கௌரவம் இதன்மூலம் அம்மொழி பெயர்ப்பாளருக்கு இன்று தரப்படுகிறது. ஆனால் அதே பாதிப்பை நிகழ்த்திய சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பு விரிவான கவனத்திற்கு வரவில்லை. அதற்கு  நெடுங்காலம் மறு பதிப்புக்கூட வரவில்லை. இலக்கியச் சூழலில் அது குறித்து விரிவான விமர்சனங்களும் உருவாகவில்லை.

`போரும் அமைதியும்’ தான் உலகில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த நாவல் என்று நினைக்கும் வாசகர்கள் உலகமெங்கும் உண்டு. நான் அவர்களுள் ஒருவன். தீவிரம், கூர்மை, கச்சிதம், வாசக ஊடுருவலுக்கான சாத்தியங்கள் ஆகியவற்றில் `போரும் அமைதியு’மைத்தாண்டிச் செல்லும் பல நாவல்களை நான் படித்ததுண்டு. ஒவ்வொரு சிறந்த நாவல் அனுபவமும் என்னை தன்னினைவின்றியே ’போரும் அமைதியு’முடன் அதை ஒப்பிடச் செய்கின்றது. உடனடியாக உருவாகும் உணர்ச்சிவேகங்களுக்குப் பிறகு வெல்லமுடியாத சிகரம் போலப் போரும் அமைதியும் மேலெழுவதே எனக்குத் தரிசனமாகிறது.

தல்ஸ்தோயின் பெரும் நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக் கூடியது அது. அதில் உள்ளது வாழ்வின் ஒரு பெரும் அலை. வரலாற்றின் ஒரு சுழிப்பு. நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு சுழிப்பில் எத்தனை எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப்படுகின்றன, உறவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன, அழிவும் ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் தல்ஸ்தோய்.

இந்நோக்கம் காரணமாகவே இதற்கு ஒரு கதையை அவர் தேர்வுசெய்யவில்லை. ஒரு கதை இருந்திருந்தால் கதையின் ஒருமைக்காக வாழ்க்கையையும் வரலாற்றையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டியிருந்திருக்கும். வெட்டிச்செதுக்கி அமைக்கவேண்டியிருக்கும். இந்த வடிவில் நாவல் அதன்போக்கில் வளர்ந்து விரிந்து ஒரு உயிர்த்துடிப்பான காடுபோல் இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு வாசிப்பிலும் ஒருவர் நமக்குக் கதாநாயகனாக ஆகிறார். ஒருகதை மையச்சரடாகிறது. புதிய ஒரு நாவல் நம் முன் விரிகிறது.

வரலாற்றை ஒரு விசுவரூப தரிசனமாகக் காட்டும் இப்பெரும் படைப்புக்கு இதற்கு முன்பும் பின்பும் இணையுதாரணங்கள் இல்லை. இந்தப் பிரமாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை உயிர்த்துடிப்புள்ள தனிக்கதாபாத்திரங்களின் வாழ்வுச் சம்பவங்கள் மூலம் தல்ஸ்தோய் உருவாக்கிக் காட்டுகிறார் என்பது இரண்டாவது சிறப்பு. ஒட்டுமொத்தச் சித்திரங்களை அளிக்கும் பெரும் படைப்புகள் பல ஒட்டுமொத்த தரிசனங்களில் கொள்ளும் கவனத்தைத் துளிகளில் கொள்வதில்லை. மிகச்சிறந்த உதாரணம் ஷோலக்கோவின் பெரும் நாவல்கள். அவற்றின் வரலாற்றுச்சித்திரிப்பு நமக்கு பிரமிப்பும் ஆர்வமும் ஊட்டுகிறது. அதேசமயம் அவற்றில் உள்ள கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் தனித்தனியாகப் பார்த்தால் செறிவற்றவையாக உள்ளன.

மாறாகப் போரும் அமைதியும் எந்த பக்கத்தைத் திருப்பிப் படித்துப் பார்த்தாலும் உயிர்த்துடிப்புள்ள தீவிரமும், சூட்சுமங்களும் நிரம்பிய சிறுகதை ஒன்றை வாசிக்கும் அனுபவம் நமக்கு ஏற்படும். போரும் அமைதியும் நாவலை வாசிக்கும் அனுபவத்தை இவ்வாறு உருவகிக்கலாம். ஒரு பெரிய திரைப்படக் காட்சியை கண்டு பிரமிக்கிறோம். திரையை நெருங்கி  நெருங்கிச் செல்கிறோம். திரைப் பிம்பத்தின் ஒவ்வொரு துளியும் ஒரு தனிமனிதன் என்று காண்கிறோம். தன் விருப்பு வெறுப்புகளுடன், தன் தன்னிச்சையான செயல்பாடுகளுடன் அவர்கள் தங்கள் வாழ்வை வாழ்கிறார்கள். மீண்டும் பின்னகர்கிறோம். துளிகள் இணைந்து படமாகி அந்த மாபெரும் திரைப்படம் ஓடுவதைக் காண்கிறோம்.

வரலாறு கோடிக் கணக்கான மக்களின் இச்சைகளையும் இயல்புகளையும் இணைத்துக் கொண்டு உருவாகும் பெரும் பிரவாகம் என்று காட்டுகிறது நாவல். அந்தப்பிரவாகத்தின் ஒரு சுழிப்பை சித்திரிக்கும் தல்ஸ்தோய் ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தையும் பிரமிப்பூட்டும் துல்லியத்துடன் படைத்துள்ளார். நாவல் முழுக்கத் தொடரும் பெரும் கதாபாத்திரங்களே ஐநூற்றுக்கும் மேலாக உள்ளன. தனித்தன்மை மிக்க ஆளுமையுடன் அவ்வப்போது வரும் கதாபாத்திரங்கள் சிலநூறு. மின்னல் போல தெரிந்து மறையும் முகங்கள் பலநூறு. ஆனால் போகிறபோக்கில் சொல்லப்பட்ட, அடையாளமும் தனித்தன்மையும் இல்லாத கதைமாந்தர் என ஒருவர்கூட இல்லை.

ஒருபக்கம் பெரிய கதாபாத்திரங்கள். ஆன்ட்ரூ இளவரசரின் தந்தையான இளவரசர் பால்தோன்ஸ்கியின் குணச்சித்திரமே உதாரணம். அபாரமான கனிவும் நேர்மையும் உடையவர் கிழவர். ஆனால் மரபையும் சடங்குகளையும் நேசிப்பவர். பழைமைவாதி. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் போற்றப்பட்ட ஒரு காலகட்டத்தைச்செர்ந்தவர்.மெல்ல மெல்ல அன்னியமாகித் தன்னை விலக்கிக்கொண்டவர். ஆகவே எந்நேரமும் சிடுசிடுப்பாக இருக்கிறார். சிடுசிடுத்தே அவரது குணமாக அது ஆகிவிடுகிறது. ஆண்ட்ரூவின் மனைவி லிசா பிரசவத்தில் இறந்து சவப்பெட்டியில் ஓர் அழகிய பொம்மைபோல படுத்திருப்பதைக் காண்கிறார். அவருக்குக் குற்றவுணர்ச்சி எழுகிறது, அவளை ஒருபோதும் பிரியமாக நடத்தியதில்லை என. ஆனால் கடும் கோபத்துடன் திரும்பிக்கொள்கிறார்.

பால்தோன்ஸ்கியின் முதிய வேலையாள் இன்னொரு உதாரணம். மாஸ்கோ கைப்பற்றப்பட்டுவிட்ட இக்கட்டான நாட்களில் தன் எஜமானனின் வண்டியில் ஏறி ஓர் அவசர வேலையாக அவர் போக நேர்கிறது “இந்தப் பெண்கள்! பெண்கள்! ஓ!’’ என்று தன் எஜமானனைப் போலவே பேசி அலுத்துக் கொண்டபடி சாட்டைக்குச்சியால் ஷ§க்களை தட்டியபடி ஏறியமர்கிறார் கிழவர். பலகாலம் எஜமானனுடன் பழகி வாழ்ந்து அவருடைய நகலாகவே மாறிவிட்டவர் கிழவர். வாழ்வின் ஒரு கணத்தில் எஜமானனாகவே ஆகும்போது அவருக்கு `முக்தி’ கிடைக்கிறது! மிக அற்புதமான சிறுகதை போல உள்ள இந்தச் சந்தர்ப்பம் கதையின் போக்கில் தெறிக்கும் பல்லாயிரம் துளிகளில் ஒன்று.

இந்நாவலின் மூன்றாவது முக்கியச் சிறப்பு இதன் ஒருமை. பலநூறு கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் பல்லாயிரம் நிகழ்வுகள் ஒன்றோடொன்று கலந்து பின்னி ஒருமையை உருவாக்கிக் காட்டுவது ஒரு மகத்தான வாழ்க்கைத் தரிசனம் என்றே கூறவேண்டும். வாழ்வுக்கு உண்மையில் அத்தகைய பரஸ்பரத் தொடர்பு, காரணகாரியப் பொருத்தம் ஏதும் இல்லை. வாழ்வு நம்மால் புரிந்து கொள்ள முடியாத பேரியக்கம். புரிந்து கொள்ளும் பொருட்டே படைப்புகள் ஆக்கப்படுகின்றன. பெரும் படைப்புகள் வாழ்வின் அர்த்தமற்ற பேரியக்கத்தை சித்திரித்துக் காட்டி அதன்மீதான தங்கள் தரிசனம் மூலம் ஒருமையையும், அர்த்தத்தையும், காரணகாரியப் பொருத்தத்தையும் நிறுவிக் காட்டுகின்றன.

போரும் அமைதியும் போல இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இல்லை. துயரம், மகிழ்ச்சி, ஆசை, அதிகாரம், துரோகம், பாசம், மரணம் என்று நாலாபக்கமும் பொங்கி வழிந்து பரவும் மனித வாழ்வின் இயக்கம் வழியாக நாம் நகர்ந்து இறுதியில் முடிவை நெருங்கும் போது வாழ்வுகுறித்த ஒரு தரிசனத்தை அடைகிறோம். அதன் அடிப்படையில் மொத்த நாவலும் அழகாக ஒருங்கிணைவதைக் காண்கிறோம். இந்நாவல் மானுடவாழ்க்கையைப்பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் அழித்து அதன்மேல் பிரம்மாண்டமான ஓர் இலட்சியவாதத்தை நிறுவுகிறது.

முற்றத்தில் நிற்கும் செடி எப்போது வளர்கிறது, பூக்கிறது, காய்க்கிறது என நாம் அறிவதில்லை. நாம் அறியாமல் நம் கண்முன்னால்  அதன் வளர்ச்சி நிகழ்கிறது. போரும் அமைதியும் நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அப்படி மிக இயல்பாக நம் பார்வைக்கே படாமல் முதிர்ந்து கனிவதை, வெம்பி உதிர்வதைக் காண்கிறோம். ஒரு புனைவிலக்கியம் அளிக்கும் உச்சகட்ட காலதரிசனம் இதுவேயாக இருக்கமுடியும்.

உதாரணமாக நடாஷவைச் சொல்லலாம். சுட்டிக் குழந்தையாகத் துருதுருவென்று அறிமுகமாகி நமது மானசீக முத்தங்களை அள்ளிக் கொள்கிறாள். போரீஸுடன் இளமைக் காதல் கொள்கிறாள். பிரின்ஸ் ஆன்ட்ரூவைக் காதலிக்கிறாள். அனடோலைப் பார்த்ததும் சபலம் கொள்கிறாள். ஆன்ட்ரூவில் பிறகு தன் காதலின் முழுமையை காண்கிறாள். பியரியை மணந்து அன்னையாகிறாள். நாவலின் இறுதியில் நாம் காணும் நடாஷா கனிந்த அன்னை. அவளில் நிகழும் இந்த பரிணாமமாற்றம், மிகச்சகஜமாக நடைபெறும் அழகுக்கு இணைகூற உலக இலக்கியத்திலேயே உதாரணங்கள் குறைவு. அவளுடைய வாழ்வின் நகர்வை இங்கிருந்து பார்க்கையில் பிறர் மீது பொங்கி வழியும் அன்பின் தத்தளிப்பு நமக்குத் தெரியும். குழந்தைகள் பிறந்த உடன் தன் அன்புக்குப் பூரண இலக்கு கிடைத்து அவள் நிறைவும் முழுமையும் கொள்வது தெரியும்.

போரும் அமைதியும் நாவலுக்கு உரிய இறுதிச் சிறப்பு வாழ்வின் `பிரம்மாண்டமான சாதாரணத் தன்மையை’ அது நமக்கு அனுபவமாக்கித் தருகிறது என்பதே. பெரும் போர்கள் நிகழ்கின்றன. காதல்கள், பிரிவுகள் நிகழ்கின்றன. பெரும் தத்துவ தரிசனங்களும் அபத்தமான வாழ்க்கைத் தருணங்களும் இதில் நிகழ்கின்றன. ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகளில் உள்ளதைவிட அதிகமான நாடகீயக் காட்சிகள் உள்ளன. ஆனால் எதுவுமே நிகழாமல் வெறுமையாக விரிந்து கிடக்கும் பாலைவனம் போல உள்ளது நாவல். எதனாலும் மாற்றமுடியாத வாழ்வின் `மந்தத்’ தன்மையை அல்லது யதார்த்தத்தின் `வெறிச்சிட்ட’ தன்மையை ஒருபோதும் மறக்க முடியாத அனுபவமாக நம்மில் நிகழ்த்தும் படைப்பு இது.

பரபரப்பாக வாழ்க்கையைச் சொல்லும் ஆக்கங்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் அசைவின்மையை மாற்றமின்மையை பிரம்மாண்டமான சலிப்பைச் சித்தரித்துக்காட்டிய அற்புதம் இந்நாவல்.ஆனால் கொந்தளிக்கும் நிகழ்ச்சிகளால் ஆனது இது. போர்கள் , அழிவுகள், சிதைவுகள், பிரிவுகள்…ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒன்றும் நிகழாததுபோலவும் இருக்கிறது. பிரம்மாண்டமான மலைமேல் நின்றுகொண்டு கீழே ஒரு நகரைப் பார்த்தால் மொத்த நகரமும் அப்படியே அசைவில்லாமல் தூங்கிக்கிடப்பதாகத் தோன்றுவதைப்போல. போரும் அமைதிக்கும் பின் இந்த பிரம்மாண்டமான இயக்கத்தைச் சித்தரிக்கும் பெரும் சவாலைப் பலநாவல்கள் ஏற்றுக்கொண்டன. வெற்றிபெற்றவை சிலவே.

கவித்துவத்தின் உச்சநிலையிலும், பொதுப்புத்தியின் முதிர்ந்த சமநிலையிலும் ஒரே சமயம் இப்படைப்பு உலவுவது எப்படி என்று வாசகன் எளிதில் கூறிவிட முடியாது. லிசா பிரசவ விடுதியில் இருக்கையில் போரில் இறந்து போனதாக நம்பப்பட்ட அவள் கணவன் ஆன்ட்ரூ மீண்டு வருகிறான். அவளுக்கு வலி. அவனைப் பார்த்ததும் வலி வலி என்றுதான் அழுகிறாள். அவனது வருகை அப்போது அவளுக்கு முக்கியமாகப் படவேயில்லை. எந்த சாதாரணமான படைப்பாளியும் “ஆ! வந்துவிட்டீர்களா!?’’ என்று ஒரு வரியை எழுதி விடுவான் அங்கு.

ஒவ்வொரு கட்டத்திலும் தல்ஸ்தோயின் பொதுப் புத்தியின் சமநிலை அல்லது முதுமையின் விவேகம் கதையில் உள்ளது. அதேசமயம் போரில் அடிபட்டுக் களத்தில் விழுந்து வானில் நகரும் வெண்மேகங்களின் பேரமைதியைக் கண்டு போர் எனும் அபத்தம் பற்றிய தரிசனத்தை ஆன்ட்ரூ அடைவது போன்ற அற்புதமான கவித்துவம் ததும்பும் பகுதிகளும் இதில் உண்டு. கணக்கு வழக்கும் கவிதையும் பிசிறின்றிக் கலந்த தல்ஸ்தோயின் உலகு ஓர் இலக்கிய சாதனை.

எழுதப்பட்டு நூற்றைம்பது வருடம் தாண்டிய பிறகும் இன்னும் போரும் அமைதியும் முன்வைக்கும் பிரச்சினை,  போரில்லாத உலகு குறித்த பெரும் கனவு , மானுடகுலத்தின் எட்டாக் கனவாகவே உள்ளது. இந்தப் பெரும் படைப்புக்கு சொக்கலிங்கம் தந்த போரும் வாழ்வும் என்ற பெயர் இன்னும் பொருள் மிக்கது. போருக்கு எதிர்ப்பதம்தான் வாழ்வு. எனினும் மனிதனுக்கு என்ன காரணத்தால் போர் தேவைப்படுகிறது? அன்புக்கு துவேஷமும் ஆக்கத்திற்கு அழிவும் மீட்பனுக்கு சாத்தானும் தேவைப்படுகிறது ஏன்? ஒளிக்கு இருள் தேவைப்படுகிறது போலவா?

சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பு மிகசரளமானதும் கச்சிதமானதுமாகும். அவர் காலத்திய படைப்பிலக்கியவாதிகளின் மொழி நடைகள் பழகித் தூசி படிந்து விட்டபிறகும் இந்த மொழிபெயர்ப்பு நடை புதுமை மாறாமல் இருப்பது வியப்புத் தருவது. ஆசிரியரின் மொழித் தேர்ச்சியைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் மொழிபெயர்ப்பாளரின் மொழிப் பயிற்சி மட்டும் காரணமல்ல. மொழி பெயர்ப்பாளருக்கு படைப்பு மீதிருந்த காதலும் முக்கியமான காரணம். இல்லையேல் இந்த இரண்டாயிரம் பக்கங்களை ஒருவர் மொழி பெயர்த்துவிட முடியாது.

தமிழின் பெயரில் அர்த்தமற்ற கூச்சல்கள் காற்றை நிரப்பியிருந்த காலகட்டத்தில் பெரும் முதலீட்டில்  உதாசீனம் மிக்க வாசகச் சூழல் குறித்த கவலையே இல்லாமல்  இந்தப் பெரும் நூலை வெளியிட்ட சக்தி வை.கோவிந்தன் தமிழ்க் கலாச்சாரத்திற்குச் செய்த சேவை முக்கியமானது.

[போரும் வாழ்வும் _ லியோ டால்ஸ்டாய்; தமிழாக்கம்: டி.எஸ். சொக்கலிங்கம்; சக்தி காரியாலயம் வெளியீடு, சென்னை, மறுபதிப்பு சீதை  பதிப்பகம்[6] ]

http://www.noolulagam.com/product/?pid=4753[7]

பிற இணைப்புகள்

போரும் அமைதியும் : http://bookimpact.blogspot.com/2007/01/blog-post.html[8]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9992:2010-07-16-02-11-21&catid=1149:10&Itemid=417[9] சக்தி கோவிந்தன் பற்றிய பதிவு

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=471&Itemid=612[10] டி எஸ் சொக்கலிங்கம் பற்றிய பதிவு

பிற பதிவுகள்

அசடனும் ஞானியும்[11]

தல்ஸ்தோயின் கலைநோக்கு[12]

புரட்சி இலக்கியம்[13]

தல்ஸ்தோய் காட்சி [14]

ஆண்பெண் சமூகம் [15]

இரும்புத்தெய்வத்துக்கு ஒரு பலி [16]

-------------------------

புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி »

தாய் – மாக்ஸிம் கார்க்கி

சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க வந்த நாளைப்பற்றி விவரித்தேன். சாமியார்கள்மேல் பெரும் சலிப்பு இருந்த காலகட்டம். நிர்மால்யா  கட்டாயப்படுத்தியும்கூட நான் ஊட்டி குருகுலத்துக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் அவர் சொன்னார், நித்யா கார்க்கியைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பதாக. ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. குருகுலம் வந்தேன். நான் உள்ளே நுழைகையில் அவர் காவிநிறக் குளிருடையும் குல்லாவும் அணிந்து குனிந்து புதிதாகப்பூத்த ரோஜாக்களைப் பார்த்துக்கொண்டு புத்தம் புதியதாகப் பிறந்தவர் போல வந்து கொண்டிருந்தார்.என்னைப்பொறுத்தவரை அது ஒரு தரிசனம்.

நித்யா,கார்க்கியைப்பற்றி எழுதிய நூல் பின்னர் வெளியாகியது. அதில் அவர் கார்க்கியை ஒரு பேரன்பின் சித்திரமாகவே காட்டியிருந்தார். தினமும் ஒருமணிநேரம் அவர் சொல்வதை ராமகிருஷ்ணன் எழுதிக்கொள்வார். நான் அந்த சபையில் இருந்து அவரிடம் கார்க்கியைப்பற்றி விவாதிப்பேன். கார்க்கியை நான் முழுமையாக நிராகரிக்கும் மனநிலையில் இருந்தேன்.

தமிழ் நாவல்களை மிக அதிகமாகப் பாதித்த அன்னியமொழி நாவல் எது என்ற கேள்விக்குக் கணிசமான பேர் மாக்ஸிம் கார்க்கியின் `தாய்’ என்று கூறக்கூடும். அது உண்மையும் கூட. பல தமிழ் எழுத்தாளர்களின் குழந்தைகளுக்குக் கார்க்கி என்று பெயர் உண்டு (உதாரணம் பாவண்ணன்).கார்க்கியின் நாவல் மிகத்தொடக்க காலத்திலேயே 1950களில், ரகுநாதன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்து பரவலாகப் படிக்கப்பட்டது. அந்த நாவலை ஒட்டி ஆழமான விவாதங்களும் நடந்தன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1960, 70களில் `தாய்’, ராகுலசாங்கிருத்தியாயனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற `அரை’ நாவல் ஆகியவற்றைப் படிக்காத இலக்கியவாதிகளே இருக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தமிழக முற்போக்கு இலக்கிய அலையை உருவாக்கியவை இவ்விரு படைப்புகளும்தான் என்றால் அது சற்றும் மிகையல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் அறிவுலகம்,சித்தாந்த விவாதங்கள், தத்துவ நூல்கள் மூலம் மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தையும் வரலாற்றுப் பார்வையையும் புரிந்து கொண்டது என்று கூறுவதைவிட இவ்விரு இலக்கியப் படைப்புகளின் வழியாகப் புரிந்து கொண்டது என்பதே முறையாகும். இன்றும் இவ்விரு நூல்களும் நம்ப முடியாத செல்வாக்குடன்தான் திகழ்கின்றன. ராகுல்ஜியின் நூல்,தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக (மொழி பெயர்ப்பு கண முத்தையா) சமீபத்தில் மறுபதிப்பு வந்தது. சராசரியாக இரண்டு வருடத்திற்கு ஒரு பதிப்பு என்ற கணக்கில் இருபது பதிப்புகள் வந்துள்ளன. இப்போதும் தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கங்கள்,தங்கள் புதுத்தேர்வு உறுப்பினர்களுக்கு வாசிக்கத்தரும் நூல்களாக இவை இரண்டும் உள்ளன.

என் கருத்தில் இலக்கியம் மூலம் ஒரு புது சித்தாந்தம், ஒரு வாழ்க்கைத் தரிசனம் ஒரு சமூகத்துக்கு அறிமுகமாவது மிகச் சிறந்த விஷயம்தான். சித்தாந்தம் எப்படியோ `மனித’ அம்சத்தை `வாழ்வனுபவ’ அம்சத்தைத் தவிர்த்து விடுகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது வெறும் மூளை விளையட்டாகவும் அகங்காரப் பிரகடனமாகவும் சுருங்கி விடுகிறது. இலக்கியம் அப்படியல்ல. கூறப்பட்டவற்றை விட அதிகமாக அளிக்க இலக்கியத்தால் முடியும். புரட்சிகரக் கருத்தொன்றை `அறிய’ நேரும் தமிழ் மனம் அதனை ஓர் அன்னியக் கருத்தாகக் கண்டு பிறகுதான் ஏற்கிறது. `தாய்’ போன்ற ஒரு நாவல் வழியாக அதை அடைய நேரும் போது அது அக்கதாபாத்திரங்களுடன், சூழலுடன் மெதுவாகத் தன்னையும் அடையாளம் கண்டு கொள்கிறது. தன் சொந்தப் புரட்சிகரத்தையே அது கண்டடைகிறது.

மார்க்ஸியத்தின் அரசியல் ரீதியான பாதிப்பு, தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியமானது. சங்கம் சேர்ந்து உரிமைக்குரல் எழுப்பும் எந்தத் தருணத்திலும் _ எந்தக் கருத்தியல், கட்சி சார்ந்து ஆனாலும் – மார்க்ஸியத்தின் சொற்கள் ,வழிமுறைகள்,மனோபாவங்கள் இங்கு வெளிப்படுவதைக் காணலாம். ஆனால், அதை விட முக்கியமானது மார்க்ஸியத்தின் சமூகப் பங்களிப்பு. என் தனிப்பட்ட கணிப்பில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூக மனத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பாதிப்பு, மார்க்ஸியம் மூலம் உருவானதேயாகும். காந்தியம் ஒரு விலகிய தளத்தில் (அன்றாட வாழ்வுக்குத் தொடர்பற்ற புனித தளத்தில்) இயங்கிய கருத்தியலாகவே இங்கு இருந்தது. மேலும் காந்தியம் தொடர்ந்து இங்கிருந்த சமூக மனக்கட்டுமானத்துடன் சமரசம் செய்தபடியே இருந்தது. ஆகவே அது பெரிய அதிர்வுகளை உருவாக்கவில்லை. திராவிட இயக்கங்கள் மார்க்ஸின் தரிசனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களைப் பிரகடனங்களாக மாற்றின. மேலோட்டமான அலையை மட்டுமே அவை உருவாக்கின.

தன் தளர்வற்ற தொண்டர் வரிசையாலும் தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரத்தாலும் படிப்படியாக இயக்க வடிவம் கொண்டு சமூகப் போராட்டங்களாக மாறிய அமைப்பு வல்லமையினாலும் மார்க்ஸியம் தமிழ் மனதில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது. ஒரு தமிழ் மனதில் இன்று காணக் கிடைக்கும் மானுடசமத்துவம் சார்ந்த எண்ணங்கள், மனிதனின் உரிமைகள் பற்றிய பிரக்ஞைகள், வரலாறு குறித்த புரிதல் அனைத்துமே மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை அவர்கள் உபயோகிக்கும் சொற்கள் மூலமே அறியலாம். இம்மாபெரும் பாதிப்பை உருவாக்கிய அலையின் ஊற்றுப்புள்ளியாக ஒரு இலக்கியப் படைப்பு இருந்திருக்கிறது என்றால் அதன் வரலாற்று முக்கியத்துவம் சாமானியமானதல்ல. ‘தாயை’த் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று கூடக் கூறிவிடலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்நாவலின் பங்களிப்புக் குறித்து இதுவரை ஏதும் எழுதப்பட்டதில்லை. ஏன் இந்த இலக்கியப் படைப்பு குறித்து இதுவரை சுயமான ஒரு விமர்சனக் கணிப்பைக் கூடத் தமிழ்ச்சூழலில் எங்கும் முன்வைத்தது இல்லை. இதன் இருப்பு கிட்டத்தட்ட ஆழ்மன அளவிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

உணர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்ட நேரடியான கதை என்பது ‘தாயி’ன் முக்கியமான பலம். பிற ருஷ்ய பெரும் நாவல்களில் காணப்படும் மிக விரிவான கதைப்புலமும் விரிந்து விரிந்து பரவும் சித்தரிப்பும் இந்நாவலில் இல்லை. முரண்பட்டுச் செல்லும் சிக்கலான கருத்துச் சரடுகள் இல்லை. ஆகவேதான் இது இலக்கியப் பயிற்சியே இல்லாத எளிய வாசகனிடம் நேரடியாகப் பேச முடிகிறது. அத்துடன் அவன் மனம் இலக்கியப் பயிற்சி இல்லாததனால் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் என்ற சாதக அம்சமும் சேர்ந்து கொள்கிறது. பதினெட்டு பத்தொன்பது வயதில், அறியும் ஆவலும் கற்பனைத்திறனும் இலட்சியக் கனவுத் தன்மையும் உச்சத்தில் இருக்கும் தருணத்தில், முதன்முதலாகப் படிக்கும் நாவலாக இது ஒரு வாசகனிடம் வந்து சேரும்போது மலைவெள்ளப் பெருக்குபோல அவனை அடித்துச்சென்று விடுகிறது.

இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்தது இதன் கதை. கடுமையான சுரண்டல் சூழலில் வாழும் தொழிலாளர் காலனி. அங்கு படிப்படியாகப் புரட்சியின் விதைகள் முளைக்கின்றன. அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் தட்டியெழுப்பப்படுகிறது. அதில் ஈர்க்கப்படுகிறான் இளம் தொழிலாளியான பாவெல். படிப்பின் மூலமாக மெல்லப் புரட்சியாளனாகிறான். அவன் அன்னை அவனது மாற்றத்தைப் பீதியுடன் பார்க்கிறாள் “தன்னந்தனியாக நீ என்ன செய்து விடமுடியும்?’’ என்று மீண்டும் மீண்டும் அவள் கேட்கிறாள். தன்மகன் அன்னியப்பட்டு விடுவான் என்றும், பிரம்மாண்டமான சக்திகளினால் தோற்கடிக்கப்பட்டு விடுவான் என்றும் அஞ்சுகிறாள். அவனைத் தடுக்க முயல்கிறாள். துயரமும் ஆற்றாமையும் கொள்கிறாள். படிப்படியாக அவளே பிரக்ஞை பெற்று ஒரு புரட்சிக்காரியாக மாறுவதுதான் நாவலின் மையச்சரடு. “இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது’’ என்று அவள் கூவியபடி கைதாகும் போது நாவல் முடிகிறது.

இலட்சியவாதத்தை ஒற்றைப்படையான தீவிரத்துடன் முன்வைக்கிறது இந்நாவல் .ஒரு வேளை இலட்சியவாதம் என்பதே ஒற்றைப்படையான தீவிரம்தானோ? பாவெல், அன்னை போன்ற எல்லா இலட்சியவாதிகளும் படிப்படியாக பிம்பமாக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அகமுரண்பாடுகளோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஊடுபாவுகளோ கருத்தில் கொள்ளப்படவேயில்லை. இந்நாவலின் முக்கியமான குறை,இதன் புரட்சிகரத் தன்மையை உருவகித்திருக்கும் முறைதான். இங்கு சுரண்டலைத் தன் அடிப்படையான இயல்பாகக் கொண்ட அதிகார அமைப்பு `வெளியே’ உள்ளது. அது குறித்த ஒரு விழிப்புணர்வு உருவாகி விட்டால் அதை எதிர்த்துப் போராட ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்கிறது இது.

ஆனால், உண்மையில் ஒரு சுரண்டல் அதிகார அமைப்பு நாம் அதற்கு அளிக்கும் சம்மதங்களின் மீது தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் இருப்பை நமது பயம், சுயநலம், நாம் மரபாகப் பெற்ற நெறிகள், நமது ஆழ்மனக் கூறுகளின் பலவிதமான தேவைகள் முதலிய எண்ணற்ற காரணங்களுக்காக நாமே ஏற்றுத் தக்கவைத்திருக்கிறோம். மிகமிக அபூர்வமான வரலாற்றுத் தருணங்களில் மட்டுமே பொது மக்களுக்கு இம்மிகூடப் பங்கில்லாத முற்றிலும் வெளியே உள்ள அடக்குமுறை அரசு இருக்க முடியும். ஆகவே சுரண்டலுக்கு எதிராகப் போராட்டம் என்பது நமது சமரசங்களுக்கு எதிரான போராட்டம்தான். அடிப்படையில் புரட்சிகரம் என்பது ஒருவன் தன் எல்லைகளுக்கு எதிராகக் கொள்ளும் விழிப்பு நிலைதான். அதிகார அமைப்பு வெளியே இல்லை உள்ளேதான் உள்ளது. அதிகாரம், புரட்சிகரம் இரண்டையும் இப்படி மேலோட்டமாகப் புரிந்து கொண்டதுதான் இந்நாவலின் மிகப்பெரிய சரிவு.

கார்க்கி இதன் கருத்தியல் சட்டத்தை `வெளியே’ பார்த்துச் சமகால மார்க்ஸியக் கருதுகோள்களில் இருந்து பெற்றுக் கொண்டார். தன் உள்ளே பார்த்திருந்தாரானால் புரட்சிகரத்தின் உண்மையான ஊற்றைக் கண்டடைந்திருப்பார். தல்ஸ்தோயியின் `ரெல்யிடோவும்’, தஸ்தயேவ்ஸ்கியின் `ரஸ்கால்நிகாப்பும்’ துர்கனேவின் `பசரோவும்’ அப்படித்தான் கண்டு கொள்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது இன்னொன்றும் தெரியவரும் புறவயமான கொடிய அடக்குமுறை நிலவும் சூழலில் மட்டுமல்ல, இனிமையான வாழ்வுநிலை உள்ள சூழலில்கூட மோசமான சுரண்டல் நிலவக்கூடும். அச் சுரண்டலை எதிர்ப்பதே மேலும் சிரமமானது.

இன்றைய வாசகர்களில் கணிசமானோர் தாய் நூலை எளிதில் கடந்து வந்து விடுகிறார்கள். பதினாறு வயதில் சாண்டில்யனையும் கல்கியையும் படித்துக் கச்சணிந்த கொங்கை மாதரையும் ஆதித்த கரிகாலனைக் கொன்ற கொடியவனையும் பற்றி யோசித்திருந்தது போலப் பதினெட்டு வயதில் உருவான ஓர் அசட்டு இளமைக்கனவாக அவர்கள் இந்நாவலைப் பிறகு கருதத் தலைப்படுகிறார்கள். ருஷ்யாவிலும், சீனாவிலும் `தாய்’ எப்படி ஒரு வேடிக்கைப் பொருளாக உள்ளது என்பதை இந்நாடுகளுக்குச் சென்று வந்த சச்சிதானந்தனும் கெ.ஜி. சங்கரப்பிள்ளையும் (மலையாளத்தில்) எழுதியுள்ளார்கள்.

ஆனால் அத்தனை எளிதில் நிராகரித்து விடமுடியாத சில அம்சங்கள் இப்படைப்பில் உள்ளன. ஒன்று: வன்முறையை எதிர் கொள்ளும் தருணங்களில் மானுட மனதில் வன்முறைக்கு எதிர்விசையாக உருவாகும் உச்சகட்டமான உறுதிப்பாட்டை பல தருணங்களில் இந்நாவல் காட்டித் தருகிறது. நீதிக்காக மனித மனம் கொள்ளும் ஆதி உத்வேகத்தின் சித்திரம் இது. நித்யா அதையே பெருங்கருணை என்றும் சொல்கிறார்

அதைவிட முக்கியமாக்க புரட்சி அரசியல் என்பது ஆண்களின் அதிகார விளையாட்டாக இருக்கும் போது அது எதையும் சாதிப்பதில்லை அது பெண்களிடம் வரவேண்டும், அன்னையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்நாவல் கூறுகிறது. கம்யூனிச சித்தாந்தத்தில் மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரை எவராவது பெண்களின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. இந்த அம்சத்தால் தாய் மிக முக்கியமான ஒரு பெண்ணியப் பிரதி ஆகிறது.

’அன்னை’ யின் வரலாற்று முக்கியத்துவம் எதுவாயினும் அதன் இலக்கிய முக்கியத்துவம் குறைவுதான். காரணம் அது எளிமைப்படுத்துவதன் வழியாக ஒரு கருத்தை முன்வைத்து வாதிடும் பிரச்சாரப் படைப்பு. இலக்கியப் படைப்பின் அடிப்படை இயங்குமுறை என்பது சிக்கல் படுத்துவது உள்ளிழைகளைத் தேடுவது. அந்த வகையில் கார்க்கியின் முக்கியமான நாவல் (தமிழிலும் வெளிவந்துள்ள) அர்த்த மோனவ்கள் தான். ருஷ்யப் பெரும் நாவல்களின் விரிந்திறங்கிச் செல்லும் பார்வை உடைய முக்கியப்படைப்பு இது.

ரகுநாதனின் மொழிபெயர்ப்பே இந்நாவலின் பலவீனமான அம்சம். செயற்கையான ஆர்ப்பாட்ட நடையில் இதை பெயர்த்திருக்கிறார். 1975ல் முன்னேற்றப் பதிப்பகம் இதன் மறுபதிப்பை வெளியிட்டது. 1985ல் இறுதிப்பதிப்பு வெளிவந்துள்ளது.

----------------------

ரப்பர் நினைவுகள் »

என் முதல் நாவலான ரப்பர் அக்டோபர் 1990ல் வெளிவந்தது. தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன் நடத்திவந்த தாகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அப்போது அவர் தந்தை அகிலனின் பெயரால் ஒரு நாவல்போட்டி நடத்திவந்தார். அதில் ரப்பர் பரிசு பெற்றது. 2000 ரூபாய். ரப்பர் இன்னும்  மேலும் நான்கு வருடம் முன்பு 1986இல் இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதப்பட்டது. போட்டியின் பக்க நிபந்தனைக்காக சற்று சுருக்கப்பட்டது.  காசர்கோட்டில் இருக்கையிலேயே அதை எழுதி முடித்து வைத்திருந்தேன். 200 பக்கம் மிகக்கூடாது என்பதற்காக அதை சுருக்கினேன். மேலும் சுருக்கமுடியாமல் சுந்தர ராமசாமிக்கு அனுப்பி ஒரு தட்டச்சுநிலையத்தில் கொடுத்துத் தட்டச்சிட்டேன். அப்போது 290 பக்கம் 200 பக்கமாக ஆகியது

ரப்பர் என் முதல் புத்தகம்.  அது எழுதப்படும்போது 24 வயது. வெளிவரும்போது  28 வயது.  அந்நாவலுக்கு முன்னால் கவனத்தைக்கவர்ந்த சில கதைகள் எழுதியிருந்தேன். அவை நிகழ் இதழில் வெளிவந்த படுகை, போதி  மற்றும் புதியநம்பிக்கை இதழில் வெளிவந்த மாடன் மோட்சம். ஓர் எழுத்தாளனாக எனக்கு நல்ல அறிமுகத்தை அன்று பரவலாக விவாதிக்கப்பட்ட அக்கதைகள் உருவாக்கியிருந்தன என்றாலும் அகிலன் பரிசுதான் சட்டென்று ஒரு முக்கியத்துவத்தை அளித்தது. விஷ்ணுபுரம் வரும்வரை ரப்பர் ஜெயமோகன் என்றுதான் சொல்லப்பட்டேன்.

அன்றெல்லாம் ஒரு புத்தகம் வெளியிடுவது சாமானிய விஷயமல்ல. பலநூல்களை எழுதி விருது பெற்ற படைப்பாளிகள் கூடப் பதிப்பகங்கள் பின்னால் அலைவார்கள். பதிப்பாளர்கள் அவர்களைக் கழற்சிக்காய் மாதிரி சுற்றி விளையாடுவார்கள். நீல பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’ என்ற ஆயிரம்பக்க நாவலே அவர் பிரசுரகர்த்தர்களிடம் பட்ட அனுபவங்களின் பதிவு என்றால் மிகையல்ல. ஆகவே முதல் புத்தகம் கைக்காசு செலவில்லாமல், எளிதாக வெளிவர அந்நாவல்போட்டி காரணமாகியது.

போட்டியின் நடுவர்களாக கி.ராஜநாராயணன், தா.வே.வீராச்சாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் இருந்தார்கள் . அந்நாவலுக்கு ஒரு விழா நடந்ததும் அதில் நாவலின் வடிவத்தைப்பற்றி நான் பேசிய பேச்சு ஒரு விவாதமாக ஆனதும் தெரிந்திருக்கலாம். பின்னர் அக்கருத்துக்களை ‘நாவல்’ என்ற பேரில் வெளியிட்டேன். அதன் மறுபதிப்பைக் கிழக்கு வெளியிட்டிருக்கிறது. அந்நாவலின் விழாவில் இந்திரா பார்த்தசாரதியின் துணைவியார் இந்திராவைப் பார்த்த நினைவிருக்கிறது. கொட்டும் மழையில் , அண்ணாசாலையில் செத்த பூனைகள் மிதந்துசெல்லும்படி பெருக்கெடுத்த வெள்ளத்தினூடே நடந்த விழாவில் சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் போன்றோர் வந்திருந்தார்கள்.

நாவல் அச்சான நாட்கள் கொந்தளிப்பானவை.  நான் பலமுறை மெய்ப்புப் பார்த்தும் அச்சுப்பிழைகள். என்னால் நாவலைப் படிக்கவே முடியவில்லை, பரவசம். முதல் புத்தகம் எந்த ஆசிரியருக்கும் அப்படித்தானே. என் சுயசரிதைக் குறிப்பு ஒன்று அனுப்பவேண்டும் எனக் கண்ணன் கேட்டார். நான் அலுவலக பாணியில் சுயவிவரப்பட்டியலாக அனுப்பி வைத்தேன். அது அப்படியே அச்சாகி வெளிவந்தது. முன் அட்டையிலும் எனக்கு ஆச்சரியம். ரப்பர் என்றால் பால்மரம் எனப் புரிந்துகொண்ட ஓவியர்,ரப்பரை ஒருவகைக் கள்ளிமரம் போல உருவகம் செய்து வரைந்துவிட்டிருந்தார்.

அதில் நான் எழுதிய முன்னுரை ஒரு நல்ல சுயபிரகடனம் என்றே நினைக்கிறேன். இருபத்திரண்டு வருடம் கழித்து வாசிக்கும்போது ’சரிதான், இப்போதும் அப்படியே’ என்று சொல்லத்தோன்றுவதை வாழ்க்கையின் வெற்றி என நினைக்கிறேன்.

ரப்பர் நாவலுக்கு விஜயா வேலாயுதம் ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடுசெய்தார், கோவையில். ஓர் இளம் ஆசிரியருக்கு அப்படி ஒரு கூட்டம் நடப்பதென்பது அன்றெல்லாம் தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாதது. அன்றைய இலக்கிய நட்சதிரங்களான நாஞ்சில்நாடன் போன்ற பலருக்கு மேலும் பத்து வருடங்கள் வரைகூட ஒரு கூட்டம் நடந்ததில்லை என்பதை நினைவுகொள்ளவேண்டும். ஒரு வகையில் தமிழில் எனக்கு எல்லாமே இயல்பாக சரியாக நடந்தது. எழுதிய ஒரு வரிகூட கவனிக்கப்படாமல் போனதில்லை. ஒரு வாசலில் கூட வரவேற்பு இல்லாமல் இருந்ததில்லை. அதை அதிருஷ்டம் என்றே சொல்லவேண்டும்.

அந்த விழாவில் ஒரு பேராசிரியர் பேசும்போது பின்னட்டைக் குறிப்பு மணமகள் தேவை விளம்பரம் போல் இருக்கிறது என்றார். ஆச்சரியமென்னவென்றால் மேலும் நாலுமாதம் கழித்து அருண்மொழிநங்கை அந்நாவலைப் படித்துவிட்டுக் கடிதம் எழுதினாள். நாவல் வெளிவந்த ஒருவருடத்தில் 1991 ஆகஸ்ட் 8 அன்று திருமணம் நடந்தது. ஆம், ரப்பர் மிகவும் ராசியான புத்தகம்.


ரப்பர் முன்னுரை

வேறு எவ்வகையிலும் என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன். அந்தரங்கமாய், என் எழுத்தின் நோக்கம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் ‘இருக்க’ விழையும் என் அகங்காரம்தான் என அறிகிறேன். ஆனால், பிற்பாடு இது வளர்ந்து பலமுகங்களைப் பெற்றுவிட்டது.

வாசக லட்சங்களைப் பித்து கொள்ளச் செய்யும் நாயகனாக ஆகிவிடவேண்டும் என்ற கனவு இன்று என்னில் இல்லை என்பதில் பெருமிதமடைகிறேன். அந்தரங்க சுத்தியுடன் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகளின் அளவுக்குத் தூய்மையுடன், சத்தியத்தின் ஒளியுடன் எழுதவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.

சிறந்த எழுத்துக்கு இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு, தார்மீக எழுச்சி, சுதந்திரம், ஆழம் என சகல மேன்மைகளும் இந்த அந்தரங்க நிலை ஒன்றினாலேயே கைகூடிவிடும் என்று உணர்கிறேன்.

‘ரப்பர்’ என் முதல் நாவல். வெளியிடப்படும் முதல் புத்தகமும்கூட. இது வெற்றி பெற்ற கலைப்படைப்பா என்று கூறத் தெரியவில்லை. ஆனால் இதை எழுதும்போது பல இடங்களில் எனக்கும் இதற்குமான இடைவெளி இல்லாமல் ஆகிவிடும் அனுபவம் கிடைத்திருக்கிறது. வாசகர்கள்முன் துணிவுடன் இதை வைக்க இந்த ஒரு காரணமே போதுமானதாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு. சொல்கிறேன். கடைசியில்.

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிக்கைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிக்கைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம். ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோகமித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம். ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில்தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப்படுகிறது” என்று ந.முத்துசாமி தனது சௌகரியத்துக்கு ஒரு புதியதும் வேடிக்கையானதுமான சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence when they should protest, makes cowards of men” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்தில் தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.

அப்போது அதே சதங்கை என்ற சிறுபத்திரிகையில் ‘பார்ட்டி’ என்றும் ஒரு கதை வெளிவந்தது. அந்தக் கதை இப்பொது கையிலிருக்கும் தொகுப்பில் சேர்ந்திருக்கிறது. 1973 சதங்கை தீபாவளி மலர் கதை 2010-ல் தான் மற்ற கதைகளோடு புத்தக வடிவம் பெற்றுள்ளது. கடைசியாக சிந்துஜா எழுதிய ‘அயோக்கியர்’ என்ற கதை மேகலா மார்ச் 1980 என்பதை இத்தொகுப்பில் பார்க்கிறேன். முதல் கதை கணையாழியில் 1971-ல் வெளிவந்தது. 1971 லிருந்து 1980 வரையில் உள்ள காலத்தில் எழுதப்பட்ட சுமார் 18 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

அதற்குப் பின் முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. முதலில் நானறிந்து, கலாப்ரியா, அசோகமித்திரன், முத்துசாமியையெல்லாம் கலாய்த்து தான் எழுதியபோதெல்லாம் சிலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு திகிலையும் தந்த ஸிந்துஜாவைப் பின்னர் நாம் காணவில்லை. அந்த ஸிந்துஜாவுக்கு சிறுபத்திரிகைகளில்தான் இடம் இருந்திருக்க முடியும். ஆனால் கதைகள் எழுதிய ஸிந்துஜா கணயாழி, சதங்கை என்று மாத்திரமல்ல, கலைமகள், தினமணி கதிர், விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வரவேற்பு பெற்றவர்.

ஆக இரு தரப்புகளிலும் அவர் வரவேற்கத்தக்கவராகவே இருந்திருக்கிறார். அவர் கதைகளில் சரளமாக கதை சொல்லும் நடை கைவந்திருப்பது தெரிகிறது. தனக்கு பழக்கமான,  சரளமாகச் சொல்லத் தெரிந்த உலகையும் அனுபவங்களையும்தான் ஸிந்துஜாவின் கதைகளில் பார்க்கிறோம். உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். பெரும் வர்த்தக நிறுவனங்களில், வேலை செய்பவர்கள். பெரும் அரசு அதிகாரிகளுடன் உறவு வேண்டி, உறவு கிடைத்து பழகுகிறவர்கள். அலுவலக நேரம் முடிந்ததும் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள். மது, மாது எல்லாம் எவ்வித சம்பிரதாய தடைகளும் அற்ற உலகில் வாழ்பவர்கள். மரபு சார்ந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக அவர்களைக் கஷ்டப்படுத்துவதில்லை. இந்த உலகில் பாவனைகள், சாமர்த்தியமான பேச்சுக்கள், மேல்தட்டு வர்க்க நாகரீக ஆசைகள் எல்லாம் உண்டு.

வெகு அநாயாசமாக அந்த உலகை, அந்த உலகின் மனிதர்களை, நம் முன் நிறுத்திவிடுகிறார் ஸிந்துஜா. இவர்கள் புத்திசாலித்தனமாகப் பேசக் கற்றுக்கொண்டவர்கள். பேசத் தெரிந்தவர்கள். அது மாலை நேரக் கேளிக்கைகளில் சகஜமாக உறவாட, நாகரீகமாக கேலிப் புன்னகை செய்ய, காலை வாற என்றெல்லாம் பயன்படும். இந்த புத்திசாலிப் பேச்சும் சாமர்த்தியமும் இல்லையெனில் பார்ட்டீயிங் அவ்வளவாக கலகலக்காது. சப்பென்று போகும். அதற்கல்ல இந்த மாலை நேர சந்திப்புகள்.

“யாரோ கூப்பிட்டதால் காமினி எழுந்து சென்றாள். ஸ்டெல்லா வேணுவைப் பார்த்து கண் சிமிட்டினாள். அந்த சிமிட்டலில் வம்புக்கு இழுக்கும் பாவனை துள்ளிற்று.

“என்ன ஸ்டெல்லா,” என்று கேட்டான்.

”வயிற்று வலியை உண்டாக்கியது யார் என்று நீ கேட்பாய் என்று எதிர்பார்த்தேன்,” என்றாள் அவள்.

“வாட் டு யு மீன்?”

“அந்தப் பெண் பானர்ஜீயுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் அந்த ஃபில்ம் டைரக்டரின் பையனுடன். ஏக சுற்று. அவன் தான் அந்த வயிற்று வலியை………”

இன்னொரு இடத்தில்…..

“பியாரேலாலுக்குக் கல்யாணம் ஆகப் போகிறது.”

“தனது துரதிர்ஷ்டத்தையும் சந்தோஷமாக வரவேற்கிற பிரகிருதியை இப்போது தான் நான் பார்க்கிறேன்.” என்றான் வேணு.

இப்படித்தான் ஏதேதோ உறவுகள். எது எதற்காகவோ உறவுகள். அதை ஒரு கேளிக்கை நேரப் பேச்சுக்கான விஷயமாக சகஜமாக எடுத்துக்கொள்வது அல்லது ஒரு கேலிப் புன்னகையோடு உதறி விடுவது சகஜமான உலகம்.

பெரும்பாலான கதைகளில் பேசும் பேச்சுக்கள், தமிழில் தரப்பட்டிருந்தாலும் அது தமிழில் பேசப்படவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. அதுதான் மதுரையானாலும் தில்லியானாலும் பேசப்படும் மொழி.

கதைகள் அனைத்துமே முதலில் மதுரை, பின்னர் தில்லி, பின்னர் கடைசியாக பங்களூரில் களம் கொண்டவை. இதே வரிசையில்தான் ஸிந்துஜாவும் அந்த கால கட்டத்தில் அந்த இடங்களில் இருந்திருக்கிறார். அவர் கதைகள் சொல்லும் சூழலில் அவர் ஒரு பார்வையாளராக இருந்திருக்கிறார்,  ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தும் சற்று மனம் வெறுப்புற்றும். ஆனால் இச்சூழலில் உலவுகிறவர்கள் அதை சந்தோஷத்துடனும், கொஞ்சம் பெருமிதத்துடனும் அனுபவிப்பவர்கள். அவர்கள் தேர்வும்தான். அவர்களது சாமர்த்தியப் பேச்சுக்களும், பெருமிதங்களும் மதிப்புகளும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யத்துக்காக ஸிந்துஜா சேர்த்ததல்ல. சுஜாதாவின் எழுத்திலும் இந்த புத்திசாலித்தனமும் கிண்டலும் இருக்கும். அது அவரது கேலியும் புத்திசாலித்தனமும். அதற்கான சின்னச் சின்ன வெட்டித் தெறிக்கும் உரைநடை அவரது ஆளுமையிலிருந்து பிறந்தது. ஸிந்துஜா தன் பழகிய அனுபவத்திலிருந்து உருவாக்கிக்கொண்ட நடை மிக எளிதாகவே அவருக்கு கைவந்துள்ளது. எனக்கு ஒரு நெருடல். கதைகளில் சில விஷயங்கள் தாமே தம்மைச் சொல்லிக் கொள்கின்றன. காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள் என்றெல்லாம் கதைத் தலைப்புகள் கொடுத்து உரக்கச் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று. அது எள்ளலாகவும் பொருள் கொள்கிறதுதான். ’ஊனம்’ என்ற கதையில் செல்வாக்கு மிகுந்த ஒருவர் வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு வேலை தேடிக்கொடுத்து அவனை நல்ல நிலைக்குக் கொணர்ந்து தன் ஊனமுற்ற  பெண்ணைக் கொடுக்க,- அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும்தான்-, ஆனால் அது அவனுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை. அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு விருப்பம்தான். ஆனால் தான் பெற்ற உதவிக்கு பிரதியாக அல்ல. தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவளை மணப்பதாகச் சொல்கிறான். அதை அவன் உரக்க நீண்ட வசனத்தில் சொல்வது அகிலன் கதை போலாக்குகிறது. கதை முழுதும் எழுத்து ஸிந்துஜாவினது. ஆனால் கடைசி பாராவும் முடிவும் அகிலனது. தவிர்த்திருக்கலாம்.

லக்ஷியங்களும் மதிப்புகளும் மாறிவிட்ட உயர் மத்திம வகுப்பு மக்களின் வாழ்க்கைச் சூழல்தான் ஸிந்துஜா வின் கதை உலகம்.  அதன் வர்ணம் தன்னைதானே வெளிப்படுத்திக் கொள்ளும்.

என் வருத்தமெல்லாம் ’எங்கே போனார் அந்த ஸிந்துஜா?’ என்பதுதான். நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்தத் திறனும், பார்வையும், சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின? ஸிந்துஜாவை நாம் தொடர்ந்து பார்க்க முடியாது போனது ஒரு இழப்புதான்.

இப்படித்தான் நல்ல திறனின் சாத்தியங்களைக் காட்டுகிறவர்களெல்லாம் திடீரென நம் கண்களை விட்டு மறைந்து விடுகிறார்கள். க.நா.சு. சிலர் எழுத்தைப் பாராட்டி எழுதியிருப்பார். இப்போது ஒன்றிரண்டு பெயர் சொல்லக் கூட அவர்கள் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. (பி.எம் கண்ணன் என்று ஒரு பெயர் நினைவுக்கு வருகிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் சில கவிஞர்கள் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது. எனக்கும் பாராட்டத் தோன்றியது. பாராட்டி எழுதவும் செய்தேன். ஆனால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள்? சிலர் பாட்டாளி மக்கள் துயரத்திற்கும், வியட்நாம் மக்களுக்காக கண்ணீர் உகுத்தும் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும்.)

தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அசோகமித்திரன் சொன்னது விஷயம் தெரிந்து சொல்லப்பட்டதுதான். எல்லோரும் மௌனியாக முடியுமா? முப்பது வருடங்கள் கழித்து க.நா.சு. தேடி எடுத்து பிரசுரித்திராவிட்டால் மௌனியை நாம் இழந்திருக்கக்கூடும். விட்டல் ராவ் “இந்த நூற்றாண்டுக் கதைகள்” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளில் எல்லாரையும் தேடி எடுத்துத் தொகுத்திருந்தார். சந்தோஷமாக இருந்தது.

ஸிந்துஜாவுக்கும் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கும் பாவை சந்திரனுக்கும் பொதுவான ஒன்று என்று ஆரம்பித்திருந்தேன். பாவை சந்திரன் ’நல்ல நிலம்’ என்ற ஒரு நீண்ட, கிட்டத்தட்ட 500 பக்க நாவலை புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, தொன்னூறுகளில் எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்தின், கிட்டத்தட்ட நூறு வருட கால வாழ்வின் கதை. எவ்வளவு அழகாக, கலை நேர்த்தியுடன் எழுதப்பட்ட முதிர்ந்த எழுத்து என்று நான் வியந்திருக்கிறேன். அத்தகைய முதிர்ச்சிக்கு முன்னும் பின்னுமான செய்தி எனக்கு ஏதும் இல்லை. குங்குமம் பத்திரிகைக்கு பொறுப்பு ஏற்றிருந்தபோது அதை வெகுஜனபத்திரிகை என்ற தளத்திலிருந்து உயர்த்த முயன்றிருக்கிறார். குங்குமத்தில் க.நா.சு. தொடர்ந்து எழுதியிருக்கிறார் என்றால் பலர் ஆச்சரியப்படக் கூடும். நல்ல நிலம் நாவலாக வெளிவந்தது. அதை மனமாரப் பாராட்டி எழுதியிருக்கிறேன். தஞ்சை விவசாய குடும்பத்தின் ஒரு கால கட்டம் நம் முன் விரியும். சுகமான எழுத்து. அவர் மறக்கப்படக்கூடியவர் அல்ல.

எங்கே போனார் அந்த பாவை சந்திரன்? தன்னைப் போலவே இன்னொருவரான ஸிந்துஜாவை அவர் வெளியிட்டது பொருத்தம்தான். அவர்கள் நமக்கு ஒருவரையொருவர் நினைவுபடுத்துகிறார்கள்.

ஸிந்துஜா சிறுகதைகள்
வெளியீடு: நன்னூல் அகம்
A -8, 29, தெற்கு கால்வாய்க் கரை சாலை,
மந்தைவெளி சென்னை-28
ப.160 விலை ரூ. 70


காந்தியின் தேசம்
என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய ‘இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு’ என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் ‘ஏன் அப்படிச் சொல்கிறார்?’ என்று .அது, ’இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது’என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது எந்த மதத்தை விடவும் ஆழமான மூடநம்பிக்கைகளால் ஆனது. வாசிப்புக்கும் சிந்தனைக்கும் எதிரானது.

இந்தியா உடைந்து சிதறவேண்டுமென இடதுசாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் அதை சீனாவின் ஆதிக்கத்துக்குள் எளிதில் கொண்டுசெல்ல முடியும். எளிதில் சிவப்பாக்க முடியும் திபெத் போல நேபாளம் போல. ஒருங்கிணைந்த இந்தியா என்றைக்குமே சீனாவுக்கு எதிரான சக்தி. அவர்களின் வரலாற்றுத்தர்க்கம் இது உடையும் என்றே சொல்கிறது. ஏன் உடையவில்லை என்று புரியவில்லை

கிழக்கு வெளியீடாக ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள குகாவின் நூலின் சாராம்சமான கேள்வி உண்மையில் அதுதான். இந்தியா பெருங்குழப்பத்தில் கலவரத்தில் அவநம்பிக்கையில் பிறவிகொண்ட தேசம். 1947ல் நிகழ்ந்த கலவரங்களைக்  கண்ட எந்த அரசியல் நிபுணரும் இந்தியா சில ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்காது என்றுதான் நினைத்திருப்பார். உண்மையில் தேசியத்தலைவர்களுக்கே அந்த எண்ணம் இருந்திருக்கலாம்.  இந்தியாவைச்சுற்றி இருந்த எல்லா நாடுகளும் ஜனநாயகத்தை இழந்தன. பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்தன.

[ராமச்சந்திர குகா]

ஆனால் இந்தியா அரைநூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது.  மெதுவாக என்றாலும் உறுதியான பொருளியல் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் அத்தனை சிக்கல்களுடனும் போராட்டங்களுடனும் இன்னும் உயிருள்ள ஒரு பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது ஏன் என்ற கேள்வியைத்தான் இந்தப் பெரிய நூல் மிக விரிவாக நுட்பமான தகவல்களினூடாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா உடைந்து சிதறுவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கிறது, உடைந்து சிதற எந்த வாய்ப்பும் இல்லை என்றே இந்நூல் முடிகிறது. அந்த விந்தையை இதுவரையிலான அரசியல் வரலாற்றைக் கறாரான தகவல்கள் வழியாக விவரிப்பதனூடாகக் கண்டடைய முயல்கிறது.

ஆகவே நம் இடதுசாரி மூடநம்பிக்கையாளர்களின் கசப்பு விளக்கக்கூடியதுதான். அவர்கள் இந்தியாவின் வரலாறு,பண்பாடு, சமகால ஜனநாயகம்,பொருளியல் அனைத்தைப்பற்றியும் மிக இருண்ட ஒரு சித்திரத்தையே உருவாக்கிவந்திருக்கிறார்கள். ரஜனிபாமி தத்தின் ‘இன்றைய இந்தியா’ முதல் இன்று வரும் நாளிதழ் கட்டுரைகள் வரை அந்த மனநிலையைக் காணலாம். அவர்கள் அளிக்கும் அத்தனை தகவல்களையும் இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் திரட்டி அளிக்கிறார் குகா.  அதேசமயம் கடந்த அறுபதாண்டுக்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மேற்கத்திய தாராளவாத அரசியல் ஆய்வாளர்களும் இடதுசாரி ஆய்வாளர்களும் இந்தியா பற்றி முன்வைத்த மிக இருண்ட ஆருடங்கள் எப்படிப் பொய்த்துப்போயின என்று சொல்கிறார். இன்றுவரை அவர்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரம் எத்தனைதூரம் உள்ளீடற்றது என உடைத்துவைக்கிறார்.

அதேபோல இன்று இந்தியா பற்றி அதே மேலை ஆய்வாளர்கள் முன்வைக்கும் சாதகமான ஆருடங்களையும் தகவல்களின் அடிப்படையில் நிராகரிக்கிறார் குகா. இந்நூல் உண்மையில் இந்தியாவைப் புகழ்வதோ வாழ்த்துவதோ அல்ல. சொல்லப்போனால் இந்நூல் காட்டுமளவுக்கு இருண்ட சித்திரங்களை உள்நோக்கமும் குரோதமும் கொண்ட மேலைஆய்வாளர்களும் இடதுசாரிமூடநம்பிக்கையாளர்களும்கூட முன்வைத்ததில்லை. இந்நூல் அதனூடாக ஓடும் அந்த வசீகரமான மர்மத்தை மட்டுமே அறியமுயல்கிறது.

குகா அவரது நூலை இப்படி முடிக்கிறார். ‘ இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்’

குகாவின் பட்டியலில் முதலாவதாகச் சொல்லப்படுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம்தான். ஒரேநாடாக இந்தியாவை இன்றும் காப்பாற்றிவருவதில் அரசியலமைப்புச்சட்டத்தில் இருக்கும் தொலைநோக்குப்பார்வை,ஜனநாயகப்பிடிப்பு,நடைமுறை நோக்கு மற்றும் இலட்சியவாதத்துக்கு பெரும் முக்கிகியத்துவம் உண்டு. இன்றும் இந்தியாவின் எந்த அறச்சிக்கலும் அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கங்களுக்கு இசைவாக விளக்கப்படுமென்றால் நியாயமாகவே அதன் எல்லா குடிகளாலும் உணரப்படுகிறது. குகாவின் நூல் முழுக்க அதற்கான ஆதாரங்களைக் காணலாம்.அந்த அரசியல்சட்டம், அடிபப்டையில் காந்தி அரைநூற்றாண்டுகளாகப் போராடிவந்த விழுமியங்களுக்காக நிலைகொள்வதாக உறுதிகொண்ட ஒன்று. . அரசியலமைப்புச்சட்டத்தின் சிற்பிகளான அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழுவுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.

ஒரு தேசமாக இந்தியாவை நிலைநாட்டுவதில் காந்தி என்ற குறியீட்டுக்கு, காந்தியம் என்ற கோட்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் குகாவின் நூல் பலநூறு ஆதாரங்களை சாதாரணத் தகவல்களாகவே அளித்துச்செல்கிறது. உதாரணமாக இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல்.1952இல் இந்தத் தேர்தலை இந்தியா சந்திக்கும்போது அப்போதுதான் அரசியல்சட்டம் எழுதிமுடிக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் பெற்று ஐந்தாண்டு ஆகாத தேசத்தில் பலபகுதிகளில் சுதேசிமன்னர்கள் அப்போதும்கூட செல்வாக்குடன் இருந்தனர். மக்களில் கணிசமானவர்களுக்கு இந்தியா என்ற தேசம் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜாதியால் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரிந்து கிடந்த பலநூறு மக்கள்கூட்டங்களின் பெருந்தொகையாக இருந்தது இந்தியா. அனைத்துக்கும் மேலாக ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளும் கல்வியறிவு பெரும்பாலானவர்களுக்கு இருக்கவில்லை

ஆகவே இந்தியாவின் முதல் தேர்தல் பெரியதோர் அற்புதமாக இருந்தது. அது வெற்றிகரமாக நிகழ்ந்ததே இன்றும் நீடிக்கும் இந்திய ஜனநாயகத்துக்கான அடிப்படையை அமைத்தது. இந்திய அரசியல்சட்டத்துக்கு இந்தியமக்கள் அளித்த அங்கீகாரம் அது. அந்த அங்கீகாரத்தை இமயம் முதல் குமரி வரை ஒரே குரலில் மிகமிகப்பெரும்பான்மை வாக்குகள் வழியாக இந்திய மக்கள் அளித்ததற்குக் காரணமாக அமைந்தது காந்தி என்ற ஒற்றைச்சொல். அதைத் தன் அடையாளமாக முன்வைத்த நேருவின் ஆளுமை. அதை முதல் தொகுதியிலேயே மிகத்தெளிவாக முன்வைக்கிறார் குகா

இரண்டாவது பகுதி,நேருவின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. முதல் பகுதி காட்டிய நேரு உண்மையில் ஆட்சியாளருக்கு அவசியமான நடைமுறை நோக்கு குறைவான இலட்சிவாதி மட்டுமே. அவரது வாழ்க்கையின் இறுதிக்காலம் மனமுடைந்த நிலையில் இருந்தது. சீனா இந்தியாமேல் தொடுத்த போர்,தன் வசீகரத்தின் மீதும், தார்மீகத்தின் அடிப்படை வல்லமை மீதும் நேருவிற்கு இருந்த நம்பிக்கையை குலைத்தது. அவரைக் கிட்டத்தட்ட செயலற்றவராக ஆக்கியது. பெரும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர் ஐம்பதுகளில் ஆரம்பித்த பெருந்தொழில்மயமாக்கம் வறுமை ஒழிப்புக்குப் பெரிய அளவில் உதவவில்லை. கிராமப்புறங்களில் சுதந்திரத்தின் மறுமலர்ச்சி உருவாகவில்லை என்பதை நேரு கண்டார். வாழ்நாளெல்லாம் காந்தியக்கொள்கைகளை எதிர்த்து நவீனமயமாதலை ஆதரித்துவந்த நேரு அந்நம்பிக்கையை இழந்தார். காந்திய வழிமுறைகளை நோக்கிச் செல்லவும் மனமில்லாதவராக இருந்தார். 1964ல் அவர் மறைந்தார்

வழக்கம்போல நேருவின் மரணத்துக்குப்பின் இந்தியா அழியும் என ஆருடங்கள் கிளம்பின. இந்தியாவின் ஜனநாயகமே நேரு என்ற மனிதரின் ஆளுமையின் கவர்ச்சியால் உருவான ஒரு கொப்புளம் மட்டுமே என்றனர் ஆய்வாளர்கள். அதற்கேற்ப இந்தியா பஞ்சத்தால் இருண்டு கிடந்தது. மொழிவழி மாநிலப்பிரிவினைக்கான கிளர்ச்சிகள் மனக்கசப்புகளாக ஆகிப் பிராந்தியவாதங்களாக வளர்ந்திருந்தன. ஆனால் காங்கிரஸ் எளிதாகவே அடுத்த தலைவரைக் கண்டுகொண்டது. இந்தியாவின் அமைப்பு,சிறு கசங்கலுமில்லாமல் தலைமை மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.

லால்பகதூர் சாஸ்திரி பற்றிப் பொதுவாக இந்திய ஊடகம் மிக எதிர்மறையான சித்திரத்தையே அளித்து வருகிறது. நானும் அச்சித்திரத்தை வெகுநாள் கொண்டிருந்தேன். அவர் திறமையற்ற கோழையான கூழைக்கும்பிடு ஆசாமி என்ற சித்திரம். இச்சித்திரத்தை உருவாக்கி நிலைநிறுத்தியதில் காங்கிரஸுக்குப் பெரும்பங்குண்டு. நேருவுக்குப்பின் நேரடியாக இந்திரா காந்திக்கு வரும் மனநிலையில் உதித்த தந்திரம் அது. அத்துடன் நம் இதழாளர்களின் மேட்டுக்குடிச்சிந்தனைக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்குடிப்பிறப்போ ஆங்கில ஞானமோ தோற்றப்பொலிவோ உள்ளவரல்ல சாஸ்திரி . மிக எளிய மனிதர். ஒரு சாதாரண ’தேசி’.

குகா காட்டும் லால்பகதூரின் சித்திரமே வேறு. அவர் ஒரு சமரசமாகவே தலைமைக்கு தேர்வுசெய்யப்பட்டாரென்பது உண்மை. பிடிவாதக்காரரும் அரசியல் அடித்தளம் உடையவருமான மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதற்கான குறுக்குவழி அது. ஆனால்,மிகச்சில மாதங்களிலேயே அரசையும் ஆட்சியையும் தன் முழுப்பிடிக்குக் கொண்டுவந்தார் லால் பகதூர். ஒருகட்டத்தில் அவர் உண்மையான இந்திய ஆட்சியாளராக ஆனார். அவரது காலகட்டத்தில்தான் இந்தியா மேல் முதன்முதலாகப் பாகிஸ்தான் படை எடுத்தது.

ஒரு முதன்மையான ஆட்சியாளர் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார் லால் பகதூர்.  உண்மையிலேயே தகுதியான மனிதர்களிடம்  போரை ஒப்படைத்தார். தெளிவான விரைவான ஆணைகளை அளித்தார். நாட்டு மக்களுக்கும் ராணுவத்துக்கும் ஊக்கமூட்டும் அரசியல் கோஷத்தை உருவாக்கி அதை முன்னிறுத்தினார் [ஜெய் ஜவான் ஜெய் கிசான்] முந்தைய சீனப்போரின்போது நேருவால் இவை எவற்றையுமே செய்யமுடியவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இந்தியா அடைந்த போர்வெற்றி இந்தியாவின் தேசியத் தன்னம்பிக்கையை மிக ஆழமாக நிலைநாட்டியது. சீனப்போரின் சோர்விலிருந்து இந்தியா அதிசயகரமாக மீண்டு வந்தது

இந்தியாவில் உணவுப்பஞ்சங்களை சமாளிக்கப் பசுமைப்புரட்சியை ஆரம்பித்து வைத்து அதன் ஆரம்பவெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவரும் சாஸ்திரிதான். இன்னும் சொல்லப்போனால் வெறும் இரண்டு வருடங்களில் நேருவின் பதினைந்து வருட ஆட்சியின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நடைமுறைத்தீர்வு காண சாஸ்திரியால் முடிந்தது என்பதே உண்மை. அதற்குக் காரணம், அவர் இந்திய சாமானியர்களின் பிரதிநிதி என்பதே. நேருவையும் பின்னர் வந்த இந்திராவையும்போல இந்திய சாமானிய வாழ்க்கையை அறியாத உயர்குடியினர் அல்ல அவர்.

லால்பகதூர் மேலும் பத்து வருடம் உயிருடனிருந்திருந்தால் நேரு குடும்ப ஆதிக்கம் இந்தியாவில் உருவாகியிருக்காதென்பதில் ஐயமில்லை.  ஆனால் 1966ல் சாஸ்திரி இறந்தார். அன்று காங்கிரஸின் பொறுப்பில் இருந்த கு.காமராஜ் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தங்களுக்குத் தலைமை வகித்தார். அப்போதும் செல்வாக்கு மிக்க போட்டியாளராக இருந்த மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதே முக்கியமான நோக்கமாக இருந்தது. மொரார்ஜிதேசாயை சக்திவாய்ந்த மும்பை- அகமதாபாத் தொழில்கூட்டணி ஆதரித்ததனால் பிற தொழில்வட்டங்கள் அனைத்தும் அவரை எதிர்த்தன. ஆகவே காமராஜ் நேருவின் மகளான இந்திராகாந்தியை முன்னிறுத்த முடிவெடுத்தார்.

[லால் பகதூர் சாஸ்திரி]

காமராஜ் அப்படி முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தன. நேருவின் பெயர் தேர்தல் வெற்றிகளுக்கு உதவும் என நினைத்திருக்கலாம். அதைவிட வெறும் நாற்பத்தொன்பது வயதான அனுபவமற்ற பெண்மணியான இந்திரா,தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அதன்வழியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒரு அநீதியை காமராஜ் இழைத்தார் என்பதே உண்மை. பின்னர் தன் வாழ்நாளெல்லாம் அதற்காகக் காமராஜ் வருந்திக் கண்ணீர் சிந்தினார்

ராம் மனோகர் லோகியாவால் குங்கி குடியா [முட்டாள் பொம்மை] என வர்ணிக்கப்பட்ட இந்திரா,படிப்பறிவு குறைந்தவர். மோசமான மாணவியாக அறியப்பட்டவர். வாசிப்போ சிந்தனையோ அற்றவர். தந்தையின் நிழலாக இருந்துவந்தது மட்டுமே அரசியல் தகுதியாகக் கொண்டவர். தாயில்லாமல் வளர்ந்து மேட்டிமைப்போக்கு கொண்ட விஜயலட்சுமிபண்டிட் போன்ற அத்தைகளால் அவமதிக்கப்பட்டு முரட்டுத்தனமும் தனிமையுணர்ச்சியும் கொண்டவராக உருவானவர்.

ராமச்சந்திர குகாவின் இந்நூல்,ஆரம்பம் முதலே இந்து பழைமைவாதத்தை இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நோயாகச் சித்தரிக்கிறது. இந்தியாவின் பிறவிக்கணத்தில் காந்தியைக் கொலைசெய்தது அது. இந்தியாவின் ஆரம்ப வரலாறு முழுக்க அது உருவாக்கிய அழிவுகள் தேசத்தைப் பின்னுக்கிழுத்தன. அதற்கு நிகரான அழிவுச்சக்தியாக இந்திராகாந்தியைக் காட்டுகின்றன,குகா விமர்சனமே இல்லாமல் வைத்துச்செல்லும் நேரடித் தகவல்கள். தன்னுடைய பாதுகாப்பின்மையுணர்வால் இந்திராகாந்தி காந்தி, அம்பேத்காரும் நேருவும் உருவாக்கிச்சென்ற இந்தியாவின் ஜனநாயகக் கட்டுமானத்தை அழித்தார். இந்தியாவில் பொதுநிர்வாகத்துறை நியமனங்களிலும் ஜனநாயக அமைப்புகளிலும் அரசியல் செல்வாக்கைச் செலுத்திய முதல் ஆட்சியாளர் இந்திராதான். ஆட்சியின் மையத்தில் சதிகார துதிபாடிக் கும்பல் ஒன்றை அமர்த்தி அனைவரையும் அவர்களுக்கு அடிபணிய வைத்தது அவர்தான்.

இந்தியாவின் முதல்பெரும் பிரிவினைக்கோரிக்கையானது உண்மையில் ஜம்முகாஷ்மீரின் டோக்ரி மக்களின் போராட்டத்தை இந்து போராட்டமாக உருமாற்றிக் காஷ்மீர் முஸ்லீம்களின் அவநம்பிக்கையை எழுப்பிய பாரதிய ஜனசங்கத்தின் சிருஷ்டி எனக் காட்டுகிறார் குகா. அன்றுவரை இந்தியாவின் பகுதியே காஷ்மீர் என்று சொல்லிவந்த ஷேக் அப்துல்லாவின் குரல் மாறுபட ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் அஸ்ஸாம், பஞ்சாப், மேகாலயா, மணிப்பூர் என எல்லாப் பிரிவினைக்கோரிக்கைகளும் இந்திராகாந்தியின் உருவாக்கங்களே. அவரால் பிராந்திய தன்னதிகாரங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மக்களின் ஜனநாயகத் தேர்வுகளை எதேச்சாதிகாரமாக அவர் கலைத்து ஒடுக்கினார். உணர்வுகளை அவமதித்தார்.

அதைவிட மோசமாக, இந்திரா மாநில உணர்வுகளை அழிக்க அதைவிடத் தீவிர மாநிலப்பிரிவினையுணர்வுக்ளை உருவாக்கினார், சிறந்த உதாரணம் பிந்திரன் வாலே. ஒரு ராட்சதனை உருவாக்கி அவனைஅழித்து அரசியல் லாபம் பெறுவதே அவரது வழியாக இருந்தது. அதற்கு தேசம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. இந்திராகாந்தியே அதற்குப் பலியானார்.

இந்திய அரசியல் சூழலில் அரசியல் விவாதங்களை சீரழித்ததில் முன்னோடியான அரசியல்வாதி அவர்தான். தன் கொள்கைக்கு எதிரான எந்தப் பேச்சையுமே தேசத்துரோகம் , அன்னியநாட்டுச்சதி, தன்னைக்கொல்ல முயற்சி என்று வசைபாடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக, இன்று இந்தியாவில் நீடிக்கும் ஆயுதபேர ஊழல்களுக்கு அடித்தளமிட்டதே அவர்தான்.

அனைத்துக்கும் மேலாக நெருக்கடி நிலை. இந்திராவின் நெருக்கடிநிலைமூலம் இந்தியாவில் உருவானது வெறும் அடக்குமுறை மட்டுமல்ல, இந்த தேசத்தை எப்படி ஏகாதிபத்தியமயமாக்குவதென்ற முன்னுதாரணமும்கூடத்தான். நாளை என்றாவது இந்தியா சர்வாதிகார நாடாகுமென்றால் அதற்கான வழிகாட்டி இந்திராதான். இந்தியாவின் எல்லா அமைப்புகளையும் வெற்றிகரமாகச் சீரழித்ததுடன் இன்றும் இந்தியாவில் நீடிக்கும் போலீஸ் அடக்குமுறைக்கு இந்திய ஆயுதப்படைகளைப் பழக்கியதும் நெருக்கடிநிலையே.

எல்லா சர்வாதிகாரிகளும் அவர்களின் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் அழிகிறார்கள். இந்திரா அவரது நெருக்கடிநிலையை ரத்து செய்து தேர்தலைச் சந்தித்ததும் அதனால்தான்.  இந்தியாவின் ஜனநாயகம் திருப்பியடித்தது. இந்தியாவின் பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுபவை, ஆனால் ஜனநாயகம் இயற்கையானது என நிரூபித்த தேர்தல் அது. அதன் நாயகர்களாக உருவாகி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் அழியாத சித்திரத்தை இந்நூல் காட்டுகிறது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

இந்திய ஜனநாயகம் என்பது காந்தியின் கொடை என்பதை மீண்டும் நிரூபித்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் பங்களிப்பு. காந்தியர்களான அவர்களே இந்திய ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டுவந்தார்கள். பின்னும் இந்தியாவின் பெரும் மக்களியக்கமான சூழியலியக்கங்கள் காந்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டன. அந்த மரபு இன்று அண்ணா ஹசாரே வரை நீடிக்கிறது.

வரலாறு அளித்த வாய்ப்பை ஜனதா கட்சி வீணடித்ததை குகா சுருக்கமான தகவல்கள்மூலம் விளக்குகிறார்.இரு விஷயங்கள் கவனத்துக்குரியவை. நெருக்கடிநிலைக்காலத்தில் செய்யப்பட்ட கட்டாயக் கருத்தடை மற்றும் காவல்துறை ஒடுக்குமுறை மூலம் தலித்துக்களும் இஸ்லாமியர்களும் காங்கிரஸைக் கைவிட்டார்கள். ஆகவேதான் இந்திரா தோற்றார். ஆனால் ஜனதா வந்ததுமே காந்தியவாதிகளான அதன் வழிகாட்டிகள் கழற்றிவிடப்பட்டார்கள். இரு புதிய அதிகார சக்திகள் உருவாகி வந்தன. இந்துக் கட்சியான பாரதிய ஜனசங்கம் ஜனதாவின் முக்கியமான அம்சமாக இருந்தது. லோகியாவின் சோஷலிசக் கட்சியின் துண்டுகள் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகங்களாக மாறி ஜனதாக்கட்சியின் இரண்டாவது பெரிய அம்சமாக இருந்தன.

ஜனதாகட்சியின் ஆட்சி பலவகைகளில் முக்கியமானது என்று குகா காட்டுகிறார். முக்கியமாக எளிதில் ஜனநாயகப்படுகொலை செய்யமுடியாதபடி அரசியல்சட்டம் திருத்தப்பட்டது. ஜனநாயக அமைப்புகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டது. இந்திரா உருவாக்கிய பல தேசிய அழிவுகள் சீர்செய்யப்பட்டன. ஆனால் அதிகாரம் பெற்ற இந்துத்துவசக்திகள் இக்காலகட்டத்தில் இந்தியாவின் வரலாற்றில் மிக அதிகமான மதக்கலவரங்களை உருவாக்கினர். கலவரம் எதற்காக யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் கடைசியில் இஸ்லாமியரே பாதிக்கப்பட்டனர் என்று குகா காட்டுகிறார்

அதேபோலப் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் பெற்ற மறுகணமே தலித்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்தது. இந்திய வரலாற்றிலேயே தலித்துக்களுக்கு எதிரான அதிக வன்முறை நிகழ்ந்த காலகட்டம் அதுவே. ஆதலால் தலித்துக்களும் இஸ்லாமியரும் மீண்டும் காங்கிரஸுக்கே சென்றார்கள். இந்திரா வெற்றிகரமாக ஜனதா கட்சியைப் பிளந்து சிதறடித்து ஆட்சிக்கு வந்தார். அவரது மரணம் ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்தது. ராஜீவ் காலகட்டம் அதுவரை இந்தியா கொண்டிருந்த இடதுசாரிப் பொருளியலை முழுமையாகக் கைவிட்டு வலதுசாரிப் பொருளியலுக்குத் திரும்ப வழிகோலியது.

இந்நூலை வாசிக்கையில் தகவல்களாக சரித்திரம் தொகுத்தளிக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம். அந்தத் தொகுப்பில்தான் குகாவின் கருத்துநோக்கு உள்ளதே ஒழிய அவ்ர் வாதாடுவதில்லை. பலகோணங்களில் இந்திய அரசியல் பொருளியல் நிகழ்வுகளை தொகுத்தளித்தபடி சரித்திர விவரணை ஓடிச்செல்கிறது. வாசகனாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அவதானிப்புகளே இது அளிக்கும் அனுபவம்.

உதாரணமாக, ஜெபி பற்றி ஓர் அமெரிக்கத் தோழிக்கு இந்திரா எழுதிய கடிதமொன்றில் அவர்  தன் தந்தையின் தோழரான ஜெபியை அவமரியாதையாகப் பேசியிருக்கும் இடம். ஜெபியின் பிரம்மசரிய சோதனைகளைக் கிண்டலடிக்கிறார் இந்திரா. அவருக்குக் காந்திய மதிப்பீடுகளில் இருந்த அவநம்பிக்கைக்கான சான்று இது.அவர் காந்தியத்தைக் குறைத்து மதிப்பிட்டாரென்பதற்கு ஜெபி அவரைக் கீழே இறக்கிக் காட்டியதே சான்று.

இந்திய அரசியலை அவதானிக்கும் மேலைநாட்டு அரசியல்நோக்கர்கள் தொடர்ந்து இந்தியா மேல் முன்வைக்கும் ஆழமான அவநம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது. பலசமயம் அதற்குத் தர்க்கமே இருப்பதில்லை. ஐம்பதாண்டுகளில் பல்வேறு முறை அந்த மோசமானஆருடங்கள் பொய்யான பிறகும் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக நீடிப்பதை அவர்கள் நம்பவில்லை என்று முதலில் பட்டாலும் அவர்கள் நம்ப விரும்பவில்லை அல்லது அப்படி இருப்பதையே விரும்பவில்லை என்றுதான் இறுதியாகத் தோன்றுகிறது.

காரணம் ஐரோப்பா,தங்கள் உச்சகட்ட சாதனையாக முன்வைப்பது அவர்களின் ஜனநாயகத்தைத்தான். பலநூறு வருடப் போராட்டங்கள், போர்களுக்குப்பின் அவர்கள் அடைந்த ஒன்றைப் பெரிதும் ஏழை மக்கள் நிறைந்த ஒரு நாடு சாதாரணமாக அடைந்ததை ஏற்க அவர்களால் முடியவில்லை. அதிலும் பேதங்களும் பற்றாக்குறைகளும் நிறைந்த ஒரு நாடு. இந்தியா ஆப்ரிக்க நாடுகளைப்போல ஜனநாயகம் சீரழிந்து வறுமையில் மூழ்கிப்போனதென்றால் அவர்களுக்குள் உள்ள வெள்ளையன் நிறைவடைந்திருக்கக்கூடும்

அதற்கு மாற்றாக உள்ளது இந்நூலின் கடைசியில் இந்தியக்குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் ஹால்டேன் எழுதிய வெளியிடப்படாத கடிதத்தில் இந்தியாவைப்பற்றி சொல்லியிருக்கும் மதிப்பீடு.’ஐரோப்பாவை விட இந்தியாவே அதிக வேறுபாடுகள் கொண்டதாக உள்ளது.இது எதிர்காலத்தில் உடைந்தாலும் உடையலாம். ஆனாலும் இது அற்புதமான சோதனை.எனவே நான் இந்தியக்குடிமகன் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புகிறேன்’

என் உணர்வுகளைத்தொட்ட வரி இது. சமீபகாலங்களில் இனப்பன்மைக்காக முயலும் கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று அங்கே இன்னும் தனித்தனியாகவே வாழும் மக்களையும் நடுவே இனக்கலப்பால் உருவான குழந்தைகளையும் காணும்போது நான் நினைத்துக்கொள்வதுண்டு– இப்படியே இவர்கள் இன்னும் சிலநூறு ஆண்டுகள் சென்றால் ஓர் இந்தியாவாக உருமாறக்கூடும் என்று.

பன்மையில் ஒருமையை நிலைநாட்டும் சக்தியாக நான் காண்பது இரு கூறுகளைத்தான். ஒன்று, இந்திய மெய்ஞான மரபு. இன்னொன்று அது காட்டிய சமரச வழியை நவீன அரசியல் சித்தாந்தமாக ஆக்கிய காந்தியம். அத்தனைக்கும் அப்பால் இந்தியா இந்தியாவாக இன்றும் நீடிக்கும் மர்மத்திற்குக் காரணம் அவ்விரு வாழும் பாரம்பரியங்கள்தான்.

அதை நாமறியாவிட்டாலும் நம் எதிரிகள் அறிவார்கள். ஆகவேதான் எப்போதுமே இந்திய ஞானமரபுக்கும் காந்தியத்துக்கும் எதிராக உச்சகட்ட அவதூறுப்பிரச்சாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

நாம் அரசியல் பேச்சுகளில் எப்போதுமே அன்றாட அரசியலை அன்றாடச்செய்திகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அரசியலைத் தொகுத்துப்பார்க்க முடிவதில்லை. அத்தகைய பார்வையை உருவாக்கும் அரிய நூல் இது.

[இந்திய வரலாறு காந்திக்குப்பிறகு. [பகுதி 2]  ராமச்சந்திர குகா. தமிழாக்கம் ஆர்.பி.சாரதி. கிழக்கு பிரசுரம். விலை 350]

இவை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்த முக்கியமான ஐந்து இணையதளங்கள். ஒவ்வொன்றும் தனித்துவமானவை, முக்கியமான இந்த இணையதளங்களின் வழியே வாசிப்பு அனுபவத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்தொகுப்புகள்
 

தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு, இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்

 

http://thoguppukal.wordpress.com/

 

மலேசியாவிலிருந்து ரெ.கா

 

மலேசியாவின் முக்கிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசுவின் இணையதளம், அவரது சிறுகதைகள், கட்டுரைகளை வாசிக்க உதவி செய்கிறது

 

http://reka.anjal.net/?p=18

 

ஈழத்தமிழ் நூலகம்

 

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி. இதில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்ய கிடைக்கின்றன.

 

http://www.noolaham.org

 

தினம் ஒரு தமிழ்நூல்

 

அரிய இலக்கிய இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், புத்தகங்கள் என்று தினம் ஒரு நூலை பதிவேற்றம் செய்கிறது இந்த இணையதளம், வாசகர்களின் மேம்பாட்டிற்காக நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய உள்ளீடு செய்திருக்கிறது, இந்த முயற்சிக்கு காரணமாக இருந்த பொள்ளாச்சி நசன் மிகுந்த பாராட்டிற்குரியவர், அவர் சிற்றதழ்களைத் தொகுத்து சிறப்பானதொரு கண்காட்சி வைத்திருக்கிறார், அவரது தமிழ்சேவையில் விருப்பமான அனைவரும் இணைந்து பங்கு கொள்ளுங்கள்

 

http://www.thamizham.net/

 

புதுமைப்பித்தனை வாசிக்க

 

புதுமைபித்தனின் சிறுகதைகளை முழுமையாக வாசிக்கவும் அவர் மொழியாக்கம் செய்துள்ள உலக இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் உதவும் இணையதளம்,பழந்தமிழ் இலக்கியப்பிரதிகளும் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.

 

http://www.chennailibrary.com/ppn/ppn.html


What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக ஒடக்கூடியது என்று உலகிற்கு அறிவிக்கபடும் வெற்றி ஆகவே ஒரு பந்தய வீரனின் சாதனையின் வழியே மனித குலமே தன்னை மேம்படுத்திக் கொள்கிறது எனும் முராகமி ஒட்டப்பந்தயம் குறித்த தனது எண்ணங்களையும் நினைவுகளையும் விரிவாக இதில் பதிவு செய்திருக்கிறார்

••

Dostoevsky in 90 Minutes என்ற இரண்டு பகுதிகளால் ஆன Paul Strathern னின் ஆடியோ புத்தகம் ஒன்றினைக் கேட்டேன், புதிய வாசகர்கள் தஸ்தாயெவ்ஸ்கியை அறிந்து கொள்வதற்கான எளிய வழியிது, சுவாரஸ்யமாக, அதே நேரம் அவரது தனித்துவங்கள் அத்தனையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்த உரை அமைந்திருக்கிறது, பிளாட்டோ, நீட்ஷே போன்ற ஆளுமைகளைப்பற்றிய எளிய அறிமுகப்புத்தகங்களை எழுதிய பவுல் தற்போது இலக்கிய ஆளுமைகளை குறித்து இது போன்ற உடனடி புத்தகங்களை உருவாக்கி வருகிறார்

••

RAYMOND SMULLYAN கணிதப்புதிர்களை உருவாக்குவதில் கில்லாடி, இவரது புத்தகங்கள் பெரும்பாலும் புனைவும் கணிதமும் ஒன்று சேர்ந்தே உருவாக்கபடுகின்றன, கணிதத்தை புனைவோடு சுவாரஸ்யமாக எழுதும் சிமுலியன் எழுதிய The Lady or the Tiger ? ஒரு முக்கியமான கணிதபுதிர்களின் தொகுப்பு, போர்ஹேயின் கதையை வாசிப்பது போன்ற ஈர்ப்பு கொண்டதாகயிருக்கிறது , சிமுலியன் தாவோ சிந்தனை மரபில் அதிக ஈடுபாடு கொண்டவர், அது குறித்தும் விரிவான நூலை எழுதியிருக்கிறார், சதுரங்க விளையாட்டின் வழியே அராபியப் புனைகதைகளின் புதிர்தன்மையை விளக்கும் அவரது எழுத்தை முன்னதாக வாசித்திருக்கிறேன், புதிர்பாதைகளை உருவாக்கும் இந்த விசித்திர ஆளுமை நாம் அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய புதிராளர்,

••

சுவாமி சிவானந்த பரமஹம்ஸரின் சித்தாஸ்ரமத்திற்கு சென்றிருந்தேன், சிவானந்த பரமஹம்ஸர் சித்தவேதம் என்ற நூலை எழுதியிருக்கிறார், அதில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் ஒரு ஜீவன் இல்லை, இருப்பது ஒரே ஜீவன், அது எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்று பொருள் கொள்ளும்விதமாக தனது ஜீவனுடைய சரித்திரத்தை சித்த வேதம் என்ற நூலாக எழுதியிருக்கிறார், சித்தவேத்த்தின் மொழியும் கேள்விபதில் முறைகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன,

••

விவேக சிந்தாமணியை வாசித்துக் கொண்டிருந்தேன்.  தமிழ் நீதி நூல்களை ஒருவன் ஆழ்ந்து வாசித்தால் போது திரைக்கதை எழுதுவது மிக எளிதாகிவிடும், இந்தப் பாடலை பாருங்கள், அதில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு காட்சிகள், அதன் பின்னே ஒரு கதை ஒளிந்திருக்கிறது, திரைக்கதை எழுதுவதற்கு சிட் பீல்டினை திரைக்கதை நூலை வாசிப்பதை விட இது போன்ற நீதிநூற்களை வாசிக்கும்படியாகவே நான் சிபாரிசு செய்வேன்

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

**

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே

**

அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பார் தாமே.

**

‘சங்காரா’  என்ற பிரசன்ன ஜெயக்கொடி இயக்கிய சிங்களப்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன் புத்த ஜாதகக்தைகளைச் சுவரோவியமாக கொண்ட ஒரு பழமையான மடாலயம் ஒன்றிற்கு வருகை தரும் ஆனந்த தேரா என்ற பிக்குவின் கதை. இயற்கையோடு இணைந்த அழகான புறவெளி, அதன் ஊடாக பயணிக்கும் பிக்கு என படம் அற்புதமாக துவங்குகிறது

சிதைந்து போன ஒவியத்தினைத் திருத்தி புதிதாக நிறமூட்டி சரிசெய்வதே பிக்குவின் வேலை, அவன் விகாரையில் தங்கிக் கொண்டு ஒவியங்களைச் சரிசெய்கிறான்,

ஒருநாள் ஒவியத்தில் உள்ள பெண்ணின் சிதைந்த ஸ்தனங்களை வர்ணம் தீட்ட தொட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு இளம் பெண் சிரிக்கிறாள், பிக்கு அதை கண்டு வெட்கமடைகிறான்,

தன்னை பரிகசித்த பெண்ணின் மீது பிக்குவிற்கு ஆசை உருவாகிறது, அவன் மனது சஞ்சலமடையத் துவங்குகிறது, தன்னியல்பை இழக்கிறான், அந்த பெண்ணின் நினைவு அவனை துயரப்படுத்துகிறது

படம் முழுவதும் ஊதுபத்தியின் புகையில் இருந்து வரும் நறுமணம் போல பௌத்தம் ஊடுகலந்திருக்கிறது, படத்தில் பிக்கு காட்சிபடுத்த விதம் மிக அற்புதமாக உள்ளது, மனதின் தூய்மையை இழந்துவிடுகின்ற பிக்குவின் கதை வழியே ஆசையின் கொந்தளிப்பை நாம் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது, சமகாலத்தில் வெளியான மிக முக்கியமான சிங்களப் படமிது,

••

Jostein Gaarder  எழுதிய Sophie’s World புத்தகம் தத்துவத்தின் வரலாற்றை விவரிக்கும் மிக முக்கியமான புத்தகம், சோபி என்ற பதிநான்கு வயது சிறுமிக்கு ஒருநாள் யார் எழுதியது எனத்தெரியாத ஒரு தபால் அட்டை வருகிறது, அதில் Who are you? Where does the world come from? என்ற கேள்வி உள்ளது, அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அந்தக் கேள்விக்கான விடைதேடுதலின் வழியே தத்துவத்தின் நீண்ட வரலாறு விவரிக்கபடுகிறது, இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் இதுவே எளிமையாகவும் ஆழமாகவும் தத்துவத்தின் சாரத்தை விளக்குகிறது, சுவாரஸ்யமாக வாசிக்க முடிகிறது என்பதே இதன் பலம், இந்த வகை எழுத்திற்குத் தமிழில் கவிஞர் ஆனந்த் முன்னோடி, அவரது இரண்டு சிகரங்களின் கீழ் மற்றும் நான் காணாமல் போகும் கதை இரண்டிலும் வெளிப்படும் தத்துவம் சார்ந்த புனைவெழுத்து சிறப்பானது.

••

இயக்குனர் மணிக்கௌலின் மரணம் இந்திய சினிமாவின் மாபெரும் இழப்பு, அவர் நாட்டார்கலைமரபின் உயர்கூறுகளை இந்திய சினிமாவில் இடம் பெறச் செய்தவர், ராஜஸ்தானத்தை சேர்ந்த மணிக்கௌல் அதன் நாட்டார் மரபிசையை தொன்மக்கதையை திரைப்படமாக்கியிருக்கிறார், அவரது துவிதா நாட்டார்மரபுக்கதையே.

மணிக்கௌல் தனது ஆசானாக கொண்டது ராபர்ட் பிரஸ்ஸானை, அவரது பிக்பாக்கெட் படத்தினை பலமுறை பார்த்துள்ளதாக தெரிவித்திருக்கிறார், பிரஸ்ஸானின் வழியில் தான் மணிக்கௌலின் படங்களும் உருவாக்கபட்டிருக்கின்றன.

தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle Creature சிறுகதையை மணிக்கௌல் நசர் என்ற தலைப்பில் படமாக்கியிருக்கிறார், இறந்து போன மனைவியின் உடலின் முன்பாக ஒரு இரவைக் கழிக்கும் கணவனின் மனவோட்டமே இக்கதை, கதையின் அதே அழுத்தமும் இறுக்கமும் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது

தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலையும் மணிக்கௌல் படமாக்கியிருக்கிறார், இவரது சித்தேஸ்வரி மற்றும் துருபத் பற்றிய டாக்குமெண்டரி படங்கள் புதிய அழகியலை உருவாக்கியவை,

மணிக்கௌலிற்கு  மிகவும் பிடித்தமான படம் குருதத் தயாரித்த Sahib Bibi Aur Ghulam . அப்ரார் ஆல்வி இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம்,

மணிக்கௌலின் நினைவாக நேற்று சாகிப் பீபீ அவுர் குலாம் படத்தை மறுபடியும் பார்த்தேன், ஒரு பெண் தன்னைக் கணவன் நேசிக்கவில்லை என்பதற்காக குடிக்கப் பழகி மெல்ல அந்தக் குடியால் தன்னை அழித்துக் கொள்ளும் அந்த சோகம் நெஞ்சைக் கவ்வக் கூடியது, குருதத், மீனா குமாரி, வகிதா ரஹ்மான் மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், பாடல்களும் அது பாடமாக்கப்பட்ட விதமும் மெய்மறக்க செய்கின்றன.

**




     RSS of this page