வாழ்க்கை வரலாறுகள்
தன் வரலாறுகளைத் தொடர்ந்து வாழ்க்கை வரலாறுகளைப் பார்த்தால் இன்னும் பெரிய ஏமாற்றம். நம் அரசியல்தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளெல்லாம் வெறும் குப்பைகள். ஒன்று கறாரான மதிப்பீடுநோக்கு இருக்கவேண்டும். அல்லது அக்காலகட்டத்தைப்பற்றிய உண்மையான சித்திரத்தையவது அளிக்கவேண்டும். நிறையத் தகவல்களைக் கொடுக்கவேண்டும். இரண்டுமே இல்லாமல் ஆசிரியர் தன் பாட்டுடைத்தலைவனைப்பற்றிப் பொங்கிப் பொங்கி ஏதாவது சொல்வதும் அதற்காகத் தெரிந்த தகவல்களைக்கூடத் திரித்து அரைகுறை வரலாற்றை அளிப்பதும்தான் அதிகமாக உள்ளது
ஜீவா, காமராஜ்,அண்ணாதுரை, ஈவேரா பற்றியெல்லாம் உள்ள வரலாறுகளை- என்ன சொல்ல? நம் நடிகர்களைப்பற்றிக்கூட ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு கிடையாது. கலைஞர்கள்,அரசியல்வாதிகள் எவரைப்பற்றியும் நல்ல வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டதில்லை.பாமாலைகளே எக்கச்சக்கமாக கிடைக்கின்றன. பத்துப்பக்கம் படித்தால்கூட ஒரு ஆர்வமூட்டும் தகவலோ உண்மையின் ஒளிகொண்ட நிகழ்ச்சியோ வாசிக்கக்கிடைக்காதென்றால் அது என்ன வாழ்க்கை வரலாறு?
வாழ்க்கைவரலாற்றின் முக்கியமான கச்சாப்பொருள் ஏராளமான தகவல்கள். சுவாரசியமாக அந்தத் தகவல்களை அடுக்குவதே அதன் அழகியல். கதாநாயகனின் பிறப்பு முதல் ஆரம்பித்து காப்பு ,செங்கீரை, சிற்றில், சிறுபறை என்று பாடிச்செல்வது அல்ல. ஆனால் தகவல் திரட்டுவதில் நம்மவர்க்கு ஆர்வமே இல்லை. எது முக்கியமான தகவல் என்றும் தெரியாது. ஒரு ஆளுமை பிறந்து உருவான சூழல், செயல்பட்ட வரலாற்றுச் சந்தர்ப்பம் ஆகியவை விரிவாகச் சொல்லப்படாமல் வாழ்க்கைவரலாறு எழுதப்படமுடியாது. அதில் குறைந்தபட்ச நேர்மை இல்லாமல் எழுதுவது வீண்
சமீபத்தில் டாக்டர் சுப்பராயன் [குமாரமங்கலம்] குடும்பம் பற்றிப் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நிதியுதவியுடன் ஒரு நூல் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட குடும்பம். எவ்வளவு சாகசங்கள் கொண்ட வாழ்க்கைகள். எவ்வளவு அரசியல் காலகட்டங்கள்! ஆர்வத்துடன் வாங்கி வாசித்தால் பெரும் சலிப்பு. ஒரு தகவலும் இல்லை. ஆசிரியர் அவருக்குத் தோன்றியதை எழுதி வைத்திருக்கிறார்.
எழுத நினைப்பவர்கள் ஏன் ஏதாவது ஒர் ஆளுமையை எடுத்துக்கொண்டு கொஞ்சம் ஆர்வமாகப் பின்னால் சென்று தகவல்களைத் திரட்டி நல்ல ஒரு வாழ்க்கைவரலாற்றை எழுதிப்பார்க்கக்கூடாது? சொ.தருமன் அப்படி ஒரு முயற்சி செய்தார். அது ஒரு நல்ல நூல். இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். ஆனால் அந்த அளவிலேயே நல்ல நூல்.
இது ஒரு சிறிய உடனடிப் பட்டியல்
1.எனது குருநாதர்- உ.வே.சாமிநாதய்யர் [மீனாட்சிசுந்தரம்பிள்ளை வரலாறு]
2 எனது குருநாதர்[1][பாரதியார் வாழ்க்கை] – கனகலிங்கம்
3 .என் கணவர் பாரதி[2] -செல்லம்மாள் பாரதி
4.பாரதி சில நினைவுகள்[3]- யதுகிரி அம்மாள்
5. மகாகவிபாரதியார் -வ.ரா[4]
6. புதுமைப்பித்தன் வரலாறு – ரகுநாதன்[5]
7. பொன்னியின்புதல்வர்-கல்கிவரலாறு[6]- சுந்தா
8. ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி அய்யர்- கி சந்திரசேகரன்
11. வடலூர் ராமலிங்கம்- ராஜ்கௌதமன்
12.வில்லிசைப்புலவர் எஸ்.கெ. பிச்சைக்குட்டி- சொ.தருமன்
தன் வரலாற்று நாவல்கள்
வணக்கம் . சில தன்வரலாற்றுத் தொனியில் இருக்கும் சில நாவல்கள் குறித்த பதிவு இது. தன்வரலாறு,நாவலுக்கான தன்மையுடன் ஒலிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் ஒன்று நாவலின் தன்மையோடு இருக்கிறதா?
http://vallinam.com.my/navin/?p=759[1]
ம.நவீன்
அன்புள்ள நவீன்
ஓர் ஆசிரியர் அதைப் புனைகதை என்று சொல்லிக் கொண்டாரென்றால் அதைப் பிறகு தன்வரலாறாகக் கொள்ளக்கூடாது. தன் வரலாற்று அம்சம் பெரும்பாலும் எல்லாப் புனைகதைகளிலும் இருக்கும். சில கதைகளில் அதிகம். அவற்றைத் தன்வரலாற்று நாவல் என்கிறோம்.
உதாரணமாகக் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ [சுந்தர ராமசாமி] தன் வரலாற்று அம்சம் உள்ள நாவல். ஆனால் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ [ராஜ் கௌதமன்] தன்வரலாற்று நாவல்.
சில தன்வரலாற்று நாவல்களைப் பட்டியலிடுகிறேன்.
1. சுதந்திரதாகம் – சி.சு.செல்லப்பா
2. காதுகள் -எம்.வி.வெங்கட்ராம்
3. தேரோடும் வீதி- நீலபத்மநாபன்
4.உறவுகள் -நீல பத்மநாபன்
5 சிலுவைராஜ் சரித்திரம்[2] – ராஜ்கௌதமன்
6. கருக்கு -பாமா
7. புதியதோர் உலகம்[3]- கோவிந்தன்.
8. நிலாக்கள்தூர தூரமாய் – பாரததேவி
9. நிறங்களின் உலகம்[4]- தேனி சீருடையான்
10. உண்மைகலந்த நாட்குறிப்புகள்[5] -அ.முத்துலிங்கம்
ஜெ
*
அன்புள்ள ஜெ,
சிறையிலிருந்து வெளிவந்த எம். ஆர் . ராதாவைப்பேட்டி கண்டு விந்தன் தினமணி கதிரில் தொடராக எழுதிய சிறைச்சாலை நினைவுகள்(?) உண்மையிலேயே மினி சுயசரிதம் எனும் தகுதி பெறக்கூடிய ஒன்று. சில விடுபட்ட, மறைக்கப்பட்ட பகுதிகள் இருந்தாலும் பல விஷயங்களில் ராதாவிற்கே உரிய முகத்திலறையும் நேரடித்தனம் நிரம்பியது. அப்பட்டமாகப் பேசப்படும் பல தகவல்களால் ஆவணமாகும் அளவுக்கு முக்கியமானது.
அருணகிரி
*
அன்புள்ள அருணகிரி,
தன்வரலாறுகளுக்கு ஒரு இரண்டாம்பட்டியல் போடமுடியும் என்றால்
1. நனவிடைத் தோய்தல் – எஸ்.பொன்னுதுரை
2 ஈழப்போராட்டம் எனது சாட்சியம்- சி. புஷ்பராஜா
3. நாடுவிட்டு நாடு வந்து – முத்தம்மாள் பழனிச்சாமி
4 தூக்குமரநிழலில் -சி.ஏ.பாலன்
5. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்[தன் வரலாறு]- [தொகுப்பு மு இளங்கோவன்]
ஆகியநூல்களையும் சொல்வேன்
தன்வரலாறுகள் குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழின் சிறந்த அபுனைவுகள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்காக நான் தன்வரலாறுகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். பாரதி, வ.உ.சி ஆகியோர் செய்யுளில் தன்வரலாறுகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.
என் பார்வையில் தமிழில் நல்ல தன்வரலாறுகள் மிகமிகக் குறைவு. சுயசரிதையை எழுதுபவர் தான்வாழ்ந்தகாலகட்டத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருந்தாலே அது முக்கியமான நூலாகிறது. ஆனால் பெரும்பாலும் அது நிகழ்வதில்லை. அதற்கு அவருக்குத் தன்னைவிட்டு வெளியே பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். பல பிரபலங்களால் அது முடிவதில்லை
சிறந்த உதாரணங்கள், எம்.ஜி.ஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ மு.கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’.இரண்டுமே வீங்கிப்போன அகந்தை மட்டுமே மாறுவேடமிட்டு ஆடும் மோசமான நூல்கள். தமிழின் பெரும்பாலான தன்வரலாறுகள் இந்தவகையானவை.
இன்னொன்று, ஒரு காலகட்டத்தை ஒரு பெரிய வாழ்க்கைப்பரப்பை எழுதுகிறோம் என்ற பொறுப்பே இல்லாமல் போகிறபோக்கில் எழுதுபவை. சிறந்த உதாரணம் கண்ணதாசனின் ’வனவாசம்’.
நல்ல தன்வரலாறு,ஒரு ஆளுமை தன் வாழ்க்கையைப்பற்றி எழுதும் போக்கில் வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு காலகட்டத்தையே எழுதிவிடுபவைதான். தன்னைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை நுட்பமாகப்பார்த்துச் சொல்லும் ஒருவராலேயே அது சாத்தியமாகிறது.
முட்டிமோதி என் தேர்வுக்குச் சிக்கும் 12 முக்கியமான தன்வரலாறுகளைச் சொல்லியிருக்கிறேன்
1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாதய்யர்
2. ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன்
3. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
4.வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்]
5. எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து
6. என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார்
7. எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம்
8 .நினைவுகள்- க.சந்தானம்
9. உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்
10. எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்
11. நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன்
12. நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு
மாற்று சினிமாகிராபியன் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்,
அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்றுசினிமா, மற்றது திரைப்படக்கல்லூரி ஆளுமைகள், இரண்டையும் புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது
இதில் மாற்றுசினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது,
குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன்வழியே புதிய கதைக்களம் காட்சிமொழி மற்றும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள முடியும், தமிழில் பல நல்ல குறும்படங்கள் வெளியாகி திரைப்பட விழாக்களில் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றன,
குறும்பட உருவாக்கம் மற்றும் திரையிடுவதற்காக தமிழ் ஸ்டுடியோ. நிழல் போல புதிய அமைப்புகள் உருவாகி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன, இவை தமிழகம் முழுவதும் குறும்படம் எடுக்கப் பயிற்சி தருகின்றன,
கிராபியன் குறும்படங்களை விமர்சனம் செய்தவன் ஊடாகவே வாழ்வின் அரிய தருணங்களையும் சமகால அரசியல் சமூக மாற்றங்கள் குறித்த அக்கறையையும் எழுதுகிறார், காட்சிரூபமாக மொழியைக் கையாளுவதில் அவருக்கு நல்ல தேர்ச்சியிருக்கிறது, திரைப்படக்கல்லூரி ஆளுமைகள் என்ற புத்தகம் சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் படித்து தமிழ் சினிமாவிற்குப் பங்காற்றியுள்ள் பத்து முக்கிய கலைஞர்களைப் பற்றியது, ஊமை விழிகள் வழியாக சென்னை திரைப்படக்கல்லூரி அடைந்த கவனம் மற்றும் ஆபாவாணன் குறித்தும் நடிப்பு பயிற்சி பெற்ற ரகுவரன் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன மாற்று தமிழ்சினிமாவை உருவாக்க விரும்பும் பலருக்கும் இந்த புத்தகங்கள் தூண்டுகோலாக அமையும் , புதிதாக்க் குறும்படம் எடுக்க விரும்புவர்களுக்கு இது ஒரு கையேடாக இருக்கும், அவ்வகையில் கிராபியன் ப்ளாக்கின் இரண்டு புத்தகங்களும் முக்கியமானவை
***
திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்
கிராபியன் பிளாக் விலை ரூ80
மாற்றுசினிமா / கிராபியன் பிளாக் விலை ரூ 90
கிடைக்குமிடம்
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை தேனாம்பேட்டை சென்னை 18
தொலை 04424332424, 24332924,
பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன்செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன ஏதோ காலத்தின் இன்றைய தோற்றங்களாக துறவிகள்.
மணிகர்ணிகா கட்டத்தின் ஆரவாரத்தை தாண்டி நடந்தேன். பிறகு தாங்க முடியாத அமைதி கனத்து வழிந்த இடமொன்றை அடைந்தேன். அங்கும் இடிந்த படிக்கட்டு. தளும்பிச் செல்லும் நதி. அதன்மீது அசையும் ஒரு தோணி. நீர்ப்பரப்பை தொட்டு உயர்ந்த ஒரு மீன்கொத்தி. படிக்கட்டில் நிதானமாக நீராடும் காவியுடையணிந்த சடாதாரி. சட்டென்று எங்கோ `ஹரிபோல்! ஹரிபோல்!’ என்று ஒலிகேட்டது. மரணத்தின் கட்டியம் என மனம் சிலிர்த்தது. ஒரு கணத்தில் காசியின் விசுவரூபம் எனக்குப் புலனாயிற்று.
காசி ஒரு மாபெரும் இடுகாடு. ஆனால் அங்கு வாழ்வு அனைத்து எக்காளங்களுடனும் நுரைத்து குமிழியிட்டபடியேதான் இருக்கிறது. எத்தனை மதங்கள், எத்தனையெத்தனை சித்தாந்த தரிசனங்கள். எத்தனை ஞானியர். அந்தப் படிக்கட்டின் முன் என் கல்வியும் கர்வமும் நுரைக்குமிழியென்றுப்பட்டது. அந்த படிக்கட்டில் காளிதாசன் அலைந்துகளைத்து வந்து அமர்ந்திருக்கக் கூடும். அங்குதான் ஜகன்னாத பண்டிதன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். அங்கே சுப்பையா தன் குடுமியை துறந்து பாரதி ஆக உருமாறியிருக்கக் கூடும். வேர்த்து தலை சுழன்று அமர்ந்துவிட்டேன். அப்போது அப்படி அதற்கு முன்பு பலதடவை நான் அமர்ந்ததுண்டு என்று தோன்றியது. பல ஜென்மங்களில் பல யுகங்களில் இன்னும் இந்த நதி ஓடும், முடிவின்றி என்று மனம் அரற்றியது. நதியைப் பார்த்திருக்கையில் காலத்திசைவெளியின் முடிவின்மையில் மனம் விரைந்தபடியே இருப்பது ஒரு பேரனுபவம்.
அவ்வனுபவத்தைத் தரும் அசாதாரணமான நாவல் ஒன்றை அடுத்த வருடமே படிக்க நேர்ந்தது, மலையாளம் மூலம். குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய `அக்னி நதி.’ தமிழ் எழுத்தாளரான சௌரி 1971இல் இதை மொழி பெயர்த்தார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.அன்றுமுதல் இந்நாவல் தமிழில்ளார்வத்துடன் வாசிக்கபப்டுகிரது. எனக்கு நண்பர் கோணங்கி இந்நாவலை அறிமுகம் செய்தார்
உத்தரப்பிரதேசத்து இஸ்லாமியப் பிரபு குடும்பத்தில் பிறந்த குர்அதுல் ஐன், அலிகட் பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். டெய்லி டெலிகிராப், பிபிஸி ஆகியவற்றின் நிருபராக லண்டனில் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பி உருது மொழியில் எழுதத் தொடங்கினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராக இந்திய இலக்கியச் சூழலில் பரவலாக அறியப்பட்டார். 1990இல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது. 1993ல் எனக்கு `சம்ஸ்கிருதி சம்மான்’ விருது கிடைத்தபோது இவரிடமிருந்து அதைப்பெறும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
அக்னிநதி `கௌதம நீலாம்பரன்’ என்ற இளம் பிரம்மச்சாரி ஒரு நதியை நீந்திக் கடப்பதுடன் தொடங்குகிறது. அது சரயூ அல்லது கோமதி நதி. கௌதம நீலாம்பரன் ஞானத் தேடலுடன் சாக்கியமுனி புத்தனின் அருகாமைக்காக சிராலஸ்தி முதல் பாடலிபுத்திரம் வரை அலைகிறான். அவனுடைய தேடலையும் அவனுடன் இணைத்து சித்தரிக்கப்படும் பிற கதாபாத்திரங்களின் தேடல்களையும் விவரித்தபடி நகர்கிறது நாவல். பிக்குணியாக விரும்பும் நிர்மலா, அவள் தோழி சம்பகா, பிக்கு ஹரிசங்கர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் தங்கள் கேள்விகளால் வழிநடத்தப்பட்டு, துரத்தப்பட்டு முன்னகர்கிறார்கள். பயணத்தில் அதன் முடிவில்லாத சாத்தியங்களில் ஒன்றில் மோதி நின்று விடுகிறார்கள், மறைகிறார்கள். அந்தத் தேடல் மட்டும் முன்னகர்கிறது.
பாடலிபுத்திரத்துப் படித்துறையில் சரயூ நதியின் அலைகளில் நீந்தும் கௌதம நீலாம்பரனை தொடரும் நாவல் ஒரு வரியில் நழுவி வேறு காலகட்டத்தில் அந்நதிக்கரையில் வந்து சேர்ந்த அபுல் மன்சூர் கமாலுத்தீனிடம் வந்து விடுகிறது. “சரயூ நதியின் பேரலைகள் கௌதம நீலாம்பரனின் தலைக்கு மேல் எழுந்து வியாபித்தன… மறுபக்கம் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி கடிவாளக் கயிற்றை ஆலமர வேரில் முடித்தான். கறுப்பு வண்ணக் குதிரை. அவன் பெயர் மன்சூர் கமாலுத்தீன்’’. இதுதான் நாவலின் நகர்வு உத்தி. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாறுவதில்லை. ஆனால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். காலம் மாறி விடுகிறது மாறாமலிருப்பது நதி. அதன் ஒரே படித்துறை வழியாக வரலாறும் சுழித்தோடுகிறது. நவீன இந்தியாவில் பாட்னா நகரில் அதே படித்துறையில் கௌதம நீலாம்பர தத்தன், சாக்கிய முனி கௌதமனின் சொற்களை நினைவு கூர்கையில் முடிகிறது இந்த அபூர்வமான நாவல்.
குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதியில் சீராக வளர்ச்சிபெறும் கதைக்கட்டுமானம் இல்லை. அல்லது நாம் அறிந்த வகையான கதை இல்லை. கௌதமநீலாம்பரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. அது புத்தரின் கோட்பாடுகள் தேசத்தை குலுக்கிய காலகட்டம். எங்கும் தத்துவ விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அறுபத்திரண்டு மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளும் வாழ்ந்த பூமியில் சாக்கிய இளவரசனின் புதியமதமும் உருவாகிறது. கௌதம நீலாம்பரன் அந்த தத்துவ விவாதங்களால் ஈர்க்கப்படுகிறான். மறுபக்கம் காதலாலும் காமத்தாலும். அலைச்சலும் ஆவேசமும் மிக்க நாட்கள்.மகதத்தை சந்திரகுப்த மௌரியன் சாணக்கியனின் உதவியுடன் கைப்பற்றும் நாட்கள். போரும் கொடுமைகளும் நிறைந்த காலகட்டம். அனைத்தையும் இழந்து தன்னை கண்டடையும் அவன் கடைசியில் கலையில் சரண் அடைகிறான். மகத்தான மோகினிச்சிலை ஒன்றை அவன்செய்கிறான். அதுவே அவன் வாழ்வின் உச்சமும் சாரமும். அவன் மறைகிறான்.
அடுத்த கதை பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் அபுல் மன்சூர் கமாலுத்தீனின் இந்தியவருகை. ஆப்கானியர் சாரிசாரியாக இந்தியாவில் நுழைந்த காலகட்டம். சுல்தான் ஹ¤சேனின் தூதராக இந்தியா வந்து தொன்மையான கலைகளையும் இலக்கியத்தையும் தேடி அலைகிறான். முகலாய ஆட்சி நிறுவப்படும் போர்ச்சூழல். கமால் போர்வீரனாகிறான். பெருவெள்ளத்துரும்புபோல அலைக்கழிந்து சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் ஒரு எளியபெண்ணை மணம்புரிந்துகொண்டு வேளாண்மை செய்து மக்களைபெறுகிறான். கற்றதையெல்லாம் மறந்து சிந்திப்பதை துறந்து இசையில் தஞ்சமடைகிறான். அவனைப் யாரோசில போர்வீரர்கள் சாதாரணமாகக் கொன்று வீழ்த்துகிறார்கள்.
மூன்றாவது கதை பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றிய காலகட்டம். லண்டனில் கவிதையும் தத்துவமும் பயின்று வழக்கறிஞர் ஆக எண்ணும் சிரில் பிரிட்டிஷ் ஆட்சி அளிக்கும் செல்வத்தைப்பற்றியும் போகங்களைப்பற்றியும் அறிந்து இந்தியா வந்து வணிகனாகிறான். கொள்ளை வணிகமும் ஊழலும் புரிந்து கோடிகள் திரட்டி பெண்களையும் பாரத மண்ணையும் நுகர்பொருளாக மட்டுமே கண்டு வென்று கொண்டு விலக்கி போகத்தில் ஆழ்ந்து திளைத்து முதிர்ந்து இறக்கிறான். தன்னந்தனியனாக. தான் அடைந்தது என்ன என்று தெரியாதவனாக. ஆனால் இழந்தது என்ன என்பதை இறுதியில் தெளிவாகவே கண்டுகொண்டவனாக.
சிரிலின் கீழ் குமாஸ்தாவாக இருக்கும் கௌதம நீலாம்பர நாத் தத்தாவின் வழியாக நீளும் கதை அவர் காசியில் கற்று பண்டிதரானதையும் அவரது மகன் காலகட்டத்தில் இந்திய சுய உணர்வு உருவாக ஆரம்பிப்பதையும் காட்டுகிறது. வங்கப்பஞ்சங்கள். கல்கத்தா நகரின் எழுச்சி. புராதன நகர்கள் சிதைந்து அழிகின்றன. புதிய காலகட்டம் பிறக்கிறது. லக்னோவில் தொடரும் கதை இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் நீள்கிறது. சிப்பாய் கலவரம். காங்கிரஸின் உதயம். இந்த இடத்தில் கதையின் போக்கு மாறுகிறது. சுருக்கமான வரலாற்றுச்சித்தரிப்புக்குப் பதிலாக விரிவான தற்கால விவரிப்பு இடம்பெறுகிறது. தலயத் , கமால், கௌதம நீலாம்பரன், ஹரிசங்கர், சம்பா ஆகியோரினூடாக இந்திய விடுதலையும் தேசப்பிரிவினையையும் இந்தியா தன்னைக் கண்டடைய நிகழ்த்தும் அலைபாய்தல்களையும் சித்தரிக்கிறது
’1925ல் பாசேஜ் டு இந்தியா நாவலை எழுதியபோது இ.எம்.பாஸ்டர் ஒரு முஸ்லீமை இந்தியாவின் பிரதிநிதியாக உருவகித்தார். இன்று அவர் எழுதியிருந்தால் அவ்வாறு உருவகித்திருக்க மாட்டார். ஒரு இந்துவே இதியாவின் பிரதிநிதியாக இப்போது கருதப்பட இயலும்’ .கமால் இந்நாவலில் உணரும் இச்சிக்கலையே நாவலின் இப்பகுதியெங்கும் காண்கிறோம். தேசம் என்ற பொது அடையாளம் இல்லமலாகிறது. இரு தேசியங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. முஸ்லீம் லீகில் இணைந்து பாகிஸ்தானுக்காக வாழ்நாள் முழுக்க போராடிய கமாலின் தந்தை நவாப் லக்னோவை விட்டு அங்கே போக விரும்பவில்லை. முஸ்லீம்களுக்கு தனிநாடு என்பது அவர் நம்பிய கோட்பாடு. லக்னோ அவரது உயிர்மூச்சான மண். ஆனால் கமால் என்றுமே பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரி. பிரிவினைக்குப்பின்னர் தன் நாடாக இந்தியாவை நினைத்து லண்டனில் இருந்து இந்தியா வருகிறான். இங்கே அவனுக்கு வேலை இல்லை. தெரிந்த உயர்வற்கத்தினர் எவரும் இல்லை. வேலைதேடி உழன்று சலித்து அவன் வேறுவழியில்லாமல் பாகிஸ்தான் செல்கிறான். பாகிஸ்தானையே நாடாகக் கொள்கிறான்
நாவல் மேலும் விரிந்து கிழக்குபாகிஸ்தான் வங்கதேசமாகப் பிரியும் இடம் வரை வந்து நிற்கிறது. மீண்டும் ஒரு சிரில் மீண்டும் ஒருமுறை வங்கத்துக்கு வருகிறான். மீண்டும் கொந்தளிக்கும் நதி அவனை எதிர்கொள்கிறது. சந்தால்களின் வறுமை. மதக்காழ்ப்புகள். போராட்டச் சூழல். கௌதம நீலாம்பர, ஹரிசங்கர் ஆகியோரின் அன்னியப்படல் மூலம் முடிவை நோக்கிச்செல்லும் நாவல் வரலாறு என்பது என்ன என்ற வினாவை அவர்கள் தங்கள் அளவில் எதிர்கொள்ளுவதை காட்டுகிறது. அன்னியமாகும் ஒருவன் அடிப்படையில் வரலாற்றிலிருந்து அன்னியமாகிறான். வரலாறென்பது பொருளிலா பேரியக்கமான கடந்தகாலமே என்று உணர்தலே அவன் அடையும் வெறுமையின் சாரம்.
கௌதமநீலாம்பரன் சிராவஸ்தியில் மௌரியர் காலத்தில் கௌதம நீலாம்பரன் செய்த அந்த மோகினிச்சிலையை தொபொருளாக காண்கிறான். அதை உருவாக்கிய கலை எழுச்சியைப்பற்றி எண்ணிக்கொள்கிறான். நதிக்கரையில் அதே படித்துறையில் அவன் அமர்ந்துகொண்டு நீல நீரலைகளைக் காணும் இடத்தில் இந்த நாவல் நிறைவு பெறுகிறது. ” அன்னையே நான் உன் மடியில் நிற்கிறேன். நான் தோல்வி காணவில்லை.எனக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.நான் புண்படுத்தபப்டவும் இல்லை.நான் முழுமையானவன்.பூர்ணன்.என்னை எவராலும் அழித்துவிடமுடியாது.”
*
அக்னி நதியின் வலிமை அதன் தாவிச்செல்லும் சித்தரிப்பில் உள்ளது. வானில் பாயும் குதிரைபோல கதை காலகட்டங்களை சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்தை அழிவை தொட்டுச்செல்கிறது. இதன் அமைப்பு மிக நுண்ணிய திட்டமிடல்கொண்டது. மௌரியப்பேரரசின் எழுச்சி , முகலாய வருகை, ஆங்கிலேயவருகை, சுதந்திர எழுச்சி, சுதந்திரத்துப் பிந்திய தொழில்மய நவீன வாழ்க்கையின் தொடக்கம் என இது தன் கதைகளத்தை அமைத்துள்ளது. எல்லாக் காலகட்டத்திலும் நடப்பது ஒன்றே. அதிகாரத்தின் குரூரமான போர். அழிவு.அதன் மானுடதுயரம். அதையெல்லாம் கண்டு அதன் சாரமென்ன எனறு ஆராயும் சிந்தனையாளர்கள். அவர்களின் அலைச்சல். தனிமை. அதனூடாக கலைகள் மூலம் மனிதமனம் கொள்ளும் மீட்பு. மீண்டும் மீண்டும் இதையே சொல்ல்லிச்செல்கிறது இந்நாவல்
பல இடங்களை சுருக்கமாகச் சொல்லி பெரிய காலமாற்றத்தை காட்டுகிறது இந்நாவல். பெரும் சரித்திர நிகழ்வுகள் போகிற போக்கில் யாரோ சொல்வதுபோலவோ முக்கியமற்ற தகவல் போலவோ சொல்லப்படுகின்றன. சாணக்கியன் என்ற பிராமணனின் உதவியுடன் தனநந்தனை வீழ்த்தி சந்திரகுப்தன் அரசேறும் செய்தி அகிலேசனின் சில சொற்கள் வழியாக காட்டப்படுகின்றது. பெரும் காட்சிவர்ணனைகளும் சித்தரிப்புகளும் இல்லை என்பதை ஒரு குறையாகவும் நிறையாகவும் சொல்லலாம். வரலாறென்பதே நாம் சுதாரிப்பதற்குள் நம்மை சூழ்ந்து தாண்டிச்சென்று பின்னர் நமக்கே செவிவழிச்செய்தியாக மாறிவிடும் ஒன்றுதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அதேபோல வழிப்போக்கர்களால் இசையும் நாட்டியமும் பரத்தைமையும் கோலோச்சிய லக்னோவின் சித்தரிப்பு கௌதம நீலாம்பர நாத தத்தாவின் நோக்கில் சில காட்சிகளாக சொல்லப்படுகிறது. பேரழகியும் செல்வந்தர்கள் காலடியில் பணிந்து நின்றவளுமான கணிகை சம்பா சிப்பாய் கலவரத்தால் அனைத்தையும் இழந்து தெருவில் பிச்சையெடுத்து அபின் வாங்கியுண்ணும் சித்திரம் சாதாரணமாக முன்வைக்கப்பட்டு நாவல் தாண்டிச்செல்கிறது. வரலாற்றுநதியின் ஓட்டத்தில் எல்லாமே வெறும் காட்சிகள் மட்டுமே.
ஆனால் இந்நாவலின் அமைப்பில் உள்ள ஒரு சமநிலையின்மை உள்ளது. இதன் வடிவத்தில் மூன்றில் ஒருபங்குமட்டுமே மொத்த இந்தியவரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதை சட்டென்று சமகாலத்தில் வந்து சாவகாசமாக விரிகிறது. இதன்காரணமாக கணிசமான வாசகர்கள் சற்று சலிப்படையக்கூடும். சமகால இந்தியாவின் வரலாற்றுப்புலம்தான் நாவல் என்றால் ஆசிரியை கதையை இங்கேயே தொடங்கி பின்னால் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவே அக்னி நதியை வாசிக்கும் வாசகர்களில் ஒருசாராருக்கு அது சமகாலத்தை நெருங்க நெருங்க உருவாகும் கறாரான யதார்த்தம் பிடிக்காமலாகிறது. ஆனால் ஆசிரியையின் திட்டம் தெளிவானது. கௌதம நீலாம்பரன் ஒரு புள்ளி என்றால் கமால் இன்னொரு புள்ளி. இருவரும் வரலாறுமுழுக்க நீண்டு வருகிறார்கள். இரு சரடுகளாக பின்னிப்பிணைந்து. தேசப்பிரிவினை அவர்களை இரண்டு துருவங்களாக மாற்றுகிறது. நாவலின் முடிவுப்புள்ளி அப்பிரிவில்தான் உள்ளது. அதை மையமாக்கி வாசிக்கையில் நாவலின் அமைப்பும் அதற்கேற்ப அமைந்திருப்பதை காணலாம்.
&&&&
வரலாற்றின் இரு முகங்களை நாம் அடிக்கடி உணர்ந்திருப்போம். நாம் வரலாறு என சாதாரணமாக உணர்வது நமக்குக் கற்பிக்கப்படும் பழங்காலம். நம்மிடமிருந்து மிக மிக விலகிய ஓர் அற்புத உலகம் அது. ஐதீகங்களின் தொன்மங்களின் உலகம். அங்கேயுள்ள எல்லாமே படிமங்களாக ஏற்கனவே மாறிவிட்டவை. பேரழிவும் துக்கங்களும் கூட கனவுச்சாயை பெற்று இனியவையாக மாறிவிட்டிருக்கின்றன. ராஜராஜசோழனும் கபிலனும் காளிதாசனும் புத்தரும் உயிருடன் நடமாடும் உலகம் என்றால் அது என்ன? நம் ஒவ்வொருவரின் ஆழத்திலும் உறைந்துள்ள நுண்ணிய கனவுலகம் தானே அது?
பெரும்பாலான சரித்திர நாவல்கள் உண்மையில் ஐதீக நாவல்களே. அபூர்வமாக சிலநாவல்கள் படிமநாவல்கள் ஆகின்றன. பொன்ன்னியின்செல்வன் ஒரு ஐதீகநாவல். யவன ராணி ஒரு ஐதீக சாகச நாவல். வரலாறு என்பது ஐதீகமல்ல. ஐதீகம் என்பது விழுமியங்கள் இணைக்கப்பட்டு மறு ஆக்கம்செய்யப்பட்ட நிகழ்வு. விழுமியங்களின் சாரம் இல்லாத ‘சாதாரண’ நிகழ்வுகளின் வரிசையால் ஆனதே வரலாறு.ஆஅகவே அது கனவுச்சாயை இல்லாமல் கறாரான உலகியல்தன்மையுடன் இருக்கும். சிறந்த உதாரணம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’ தமிழில் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’
அக்னிநதியின் தொடக்கப்பகுதி ஐதீகப்பரப்பில் உள்ளது. கனவு நிகர்த்த ஓர் உலகம். சித்தரிப்பில் கூட ஒரு கனவைக் கொண்டுவர குர் அதுலைன் ஹைதர் முயன்றிருப்பதைக் காணலாம். மெல்லமெல்ல கதை வரலாறாக மாருகிறது. அப்படியே பரிணாமம்பெற்று சமகால வரலாறாக மாறுகிறது. நாம் வாழும் காலம்வரை வந்து நிற்கிறது அது. நாவல் இரு பகுதிகளாக ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பதாகவும் சிலருக்குப் படுகிறது. உண்மையில் அப்படி இரு வண்ணங்களில் அமைந்திருப்பதே இந்நாவலின் சிறப்பு. இதன் மையப்பொருளே அம்மாற்றம்தான். புத்தமதம் பித்துபோல வளரும் ஒரு காலத்தில் தொடங்கும் நாவல் சமகாலத்தில் வந்து நிற்கிறது. ஒரே படித்துறை. மீண்டும் மீண்டும் வெவ்வேறுபெயர்களில் அந்தப்படித்துறை நாவலில் வந்துகொண்டே இருக்கிறது. காலந்தோறும். ஒருகரை கனவாகவும் மறுகரை நிஜமாகவும்கொண்டு ஓடும் காலநதியில் அமைந்திருக்கும் படித்துறையாக நாவலில் அது கொள்ளும் நிறமாற்றமே இந்நாவலின் மையமாகும்.
இநாவலை வாசிக்கும்போது வாசகன் கொள்ள வேண்டிய கவனங்கள் பல. நேர்வாசிப்பாக ஒரு சீரான கதையோட்டமாக வாசித்து முடிக்கலாம். தேர்ந்த வாசகனின் கற்பனை ஊடுபாவாக நகர்வதற்கான பலவேறு சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்பதே இந்நாவலின் வலிமையாகும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே பெயரில் மீளமீள வருகின்றன. ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் உள்ள பிரச்சினை என்ன என்று நோக்குவது நாவலை புரிந்துகொள்ள மிகவும் உதவும். முதல்கமால் தத்துவஞானம் தேடி கங்கை கரைக்கு வருகிறான். கடைசிக்கமால் வேலைதேடி அலைகிறான். ஒவ்வொருவரையும் நதி எப்படி எதிர்கொள்கிறது என்று நோக்கும் வாசகனுக்கு பலவகையான மனத்திறப்புகள் ஏற்படும். இளவெயிலும் மழையும் கலந்த பருவத்தில் அதில் குதித்து நீந்தி திளைத்து மறுகரை ஏறுகிறான் கௌதமநீலாம்பரன். பிரிட்டிஷ் பிரஜையான சிரில் அங்கே அவ்ரும்போது அது கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆறு இங்கே காலநதியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது
தேவதேவதைகளை அதிகமறியேன்
தேவதையொன்றை நன்கறிவேன்
தீம்புனலாறு மகாநதி
தீயென இயல்பு தீரா வலிமை
மண்ணகத்தேவதை மன்னிய சினத்தள்
தண்ணாத எழுச்சியின் தனித்தலைவி
தன் பருவங்களுக்கெல்லாம் தனிநாயகி
என்ற டி எஸ் எலியட்டின் கவிதைவரிகள் முகப்பில் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இந்நாவலின் மைய கவியுருவகம் [மெட்ட·பர்] என்ன என்பதை முதலியேயே வாசகனுக்குச் சுட்டிவிடுகின்றன. இவ்வாறு மைய உருவகம் ஒன்றை வைத்து புனையபடும் நாவல்களில் அந்த மைய உருவகம் யதார்த்தத்தில் பதிந்துள்ள ஒரு பருப்பொருளாக — ஓர் இடமாகவோ பொருளாகவோ மனிதராகவோ — இருக்கும். அது நாவலெங்கும் பல்வேறு வகையில் யதார்த்தமாக விவரிக்கப்பட்டிருக்கும். கதைமாந்தருடன் பல்வேறு வகையில் தொடர்புகொண்டிருக்கும். அந்த மைய உருவகத்தை நாவல் கூறவிரும்பும் கருத்தாக எடுத்துக் கொண்டு அது நாவல் முழுக்க எப்படி இலங்குகிறது என்ரு நோக்குவதன் மூலமே நாம் அந்நாவலை முழ்மையாக புரிந்துகொள்ள முடியும். கோமதியை காலநதியாக, அப் படித்துறையை அந்நதிக்கரையின் ஒரு இடமாக — என் இந்தியாவாக– வைத்துக்கொண்டு இந்நாவலைப்படிக்கும்போது நதியின் ஒவ்வொரு வர்ணனையும் கவித்துவ விரிவடைவதைக் காணலாம்.
இந்நாவலுக்கு வடிவ அளவிலும் தரிசன அளவிலும் பொருத்தம் கொண்ட நாவல் ஒன்று உள்ளது. 1961ல் நோபல் பரிசு பெற்ற யூகோஸ்லாவிய நாவலாசிரியர் இவோ ஆண்ட்ரிச் எழுதிய ‘ட்ரினா நதிப் பாலம்’. இருநூற்றை ஐம்பது அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்ட அந்தப்பாலத்தின் ஒருபக்கம் விஷ்கிராத் என்ற செர்பிய நகரம் உள்ளது. நகரத்தின் மையமே அந்தப்பாலத்தில் இருந்து சற்று தள்ளித்தான். மறுபக்கம் துருக்கியர்களின் ஓட்டோமான் பெரரசு. துருக்கியர் ஐரோப்பாவில் நுழைவதற்கான வாசல் அந்தப்பாலம். ஏறத்தாழ மூன்று நூற்ராண்டுக்காலம் அந்தப்பாலம் வழியாக நடந்த போர்களையும் அப்பாலத்தை மையமாக்கி நடந்த அதிகாரவிளையாட்டுகளையும் சொல்லும் காவியநாவல் இது. இரு கலாச்சாரங்களுக்கு இடையே இரு மதங்களுக்கு நடுவே பற்பல நூற்றாண்டுக்காலம் நீண்டு நின்ற மாபெரும் அதிகாரப்போட்டியை சித்தரித்துக்காட்ட அந்தப் பாலத்தை மையமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். நாடுகளுக்கு நடுவேயான போர்களின் மானுடப்பெரழிவையும் தியாகங்களின் முடிவிலாத தொடரையும் கண்ணீரையும் கனவையும் சொல்கியிருக்கிறார். குர் அதுர்ஐன் ஹைதரின் அக்னிந்தியில் வரும் படித்துறை பலவகையிலும் அந்தப்பாலத்துக்கு நிகரானதாகும்
மனிதர் மறக்கவிரும்பும் அனைத்தையும்
நினைக்க வைக்கும் தேவதை அவள்…
என்று ஆசிரியர் எடுத்துக் கொடுத்திருகும் வரி. வரலாறு மனிதர்கள் மறக்க நினைக்கும் விஷயங்களும் நினைக்க விரும்பும் விஷயங்களும் பிரித்துக்காண முடியாமல் கலந்துள்ள பெருங்கலவை. வரலாற்றை ஒவ்வொரு கணமும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். தான் வாழும் வாழ்க்கை வரலாற்றின் இயல்பான தொடர்ச்சி என்று நம்ப தன் சிந்தனையின் கடைசித்துளி வரை செலவழிக்கிறான்.வரலாற்றுக்கு ஒரு சாரம், ஒரு திசைவழி உண்டு என்றும் அது இயற்கையின் இயற்கையை ஆளும் இறைவனின் இச்சை என்றும் நம்ப விழைகிறான். இதையே வரலாற்றுவாதம் [ ஹிஸ்டாரிசிசம்] என்று நவீன சிந்தனை சொல்கிறது. வரலாற்றுவாதம் மூலமே தன் வாழ்க்கைக்கு ஒரு பொருளை மனிதன் தேடமுடியும். அரசியல்சமூகவியல் கோட்பாடுகள், தரிசனங்கள் எல்லாமே வரலாற்றுக்குப் பொருள்கொள்ள மனிதன் உருவாக்கியவை. ஆனால் அப்படி ஒரு பொருள் உண்மையாகவே வரலாற்றுக்கு உண்டா?
”முழுவரலாறும் ஆழங்காணமுடியாத ஒரு கடல்.அதில் நீயும் நானும் இலைகளைப்போல அல்லாடிக்கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் அறியப்பட்டுள்ள தகவல்களுக்கு நான் பொறுப்பாளியா என்ன?” என்று வரலாறை எழுத முற்படும் ஹரிசங்கர் கேட்கிறான். இந்துக்களுக்கு வரலாறு இல்லை. ஒரு மனிதனின் வாழ்வென்பது எரிந்து அணையும் சுடர். ஆகவே அவன் உடலும் எரிந்தழிவதே முறை. வாழ்க்கையை தத்துவங்களாக்கி அவற்றை மட்டுமே எஞ்சவிடுவது இந்துக்களின் முறை
ஆனால் எதிர்காலத்துக்காக கல்லறைகளை உருவாக்கும் இஸ்லாமியர்களுக்கு வரலாறு என்பது கல்லறைகளின் கதை மட்டுமே ”இவ்வளவு அரும்பெரும் சிறப்புகள் இருந்தும் இவ்வளவு அறிந்தும் மனிதகுலம் நாசம் அடைந்தே வருகிறது. மனித ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரணகளங்கள் வெறியாவேசத்துடன் பரவுகின்றன.வரலாற்றில் அவனுக்கு எவ்வளவுக்கு ஆர்வம் இருந்ததோ அவ்வளவுக்கு இப்போது அருவறுப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் சுல்தான்களின் ஆட்சி அவர்களின் காலம் கோலம் அனைதையும் மறந்துவிடவே விரும்பினான்” கமால் அறியும் வலராறு அர்த்தமற்ற ஆதிக்க வெறிமட்டுமே.
கௌதம நீலாம்பரன், கமால் இருவருமே கடைசியில் கலைகளில் தான் சென்று அணைகிறார்கள். வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளையும் கல்லறைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த காலகட்டத்தின் ஆத்மாவின் பதிவுகள் என கலைகள் மட்டுமே எஞ்சுகின்றன.
வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக்காணும்தோறும் நாம் அற்பமானவர்களாக சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னிநதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.
[அக்னி நதி _ குர்அதுல் ஜன் ஹைதர், தமிழில்: சௌரி; நேஷனல் புக் டிரஸ்ட்]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா?நீங்கள் என்னை மறந்திருக்கக்கூடும்.தங்களுடன் பேசமுடியாதபடி சூழ்நிலை,மனநிலை.நான் ‘காடு’ படித்துமுடித்து வெகுகாலம் ஆகிவிட்டது.ஆனால் இப்போதும் காடு பற்றிய எண்ணங்கள்,கேள்விகள்,வியப்புகள்.மனமெங்கும் சொற்கள்,சொற்கள்,சொற்கள்.உங்களுடன் பேசினால் தான் அந்த சொற் கலவரத்தை அடக்கமுடியும் .
வாசிப்பை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்த எனக்கு அவற்றை என் எண்ணங்களோடு சுமந்து கொண்டு அலைவது ஒரு புதிய அனுபவம்.காடு சிந்தனை முழுவதும் நிறைத்துக்கொண்டு விரிகிறது.
மனிதர்கள் எத்தனை வகை!நல்லவர்கள் ,கெட்டவர்கள்.
பாதி நல்லவன் ,பாதி கெட்டவன் என்று உண்டா!?குட்டப்பன் எந்தவகை.சினேகம்மையுடனான அவன் உறவு அவனைக் கெட்டவன் என்றே காட்டியது.ஆனால் அவன் உதவும் குணம் உள்ளவன்,உழைப்பாளி,ரெசாலத்தின் மன உணர்வுகளை உணர்ந்தவன்,அந்த இரட்டையர்களின் காதலை இழிவு படுத்தாமல் இயல்பாய் ஏற்றுக்கொள்பவன்.அவன் நல்லவன்.அவன் பற்றிய கண்ணோட்டத்தை வெகு லாவகமாகத் தடம் மாற்றிவிடுகிறீர்கள்.
நுட்பமான பாத்திரப்படைப்பு.
நீங்கள் காமத்தைக் கையாண்ட விதம் மீண்டும் ஆண் எழுத்தாளரின் சுதந்திரம் அங்கே தெரிந்தது.இங்கு காமம் என்றால் அசிங்கம்.அது அரை இருட்டு சங்கதி.வெளிச்சத்தில் வேண்டாத ஒன்று.எப்படி..நைட் பிடிச்சிருந்துதா ?என்று கணவன் கேட்டால் மனைவி வெட்கப்பட்டுத்தான் ஓடவேண்டும்.அவள் அங்கே விரிவாய்ப் பதில் கொடுத்தால் அவள் கற்புக்குச் சற்று மாற்றுக் குறைவே.காட்டில் காமத்தை அவர்கள் just like that கடக்கும் விதம் எனக்கு வியப்பையும் சற்று அசௌகரிய உணர்வையும் தந்தது.
நீலி பற்றிய சித்தரிப்பு அவளை ஒரு கற்சிலை போலக் காட்டியது.அவள் என்ன வன நீலியா?அதனால் தான் கிரிதரனால் அந்தக் காட்டின் மேல் காதல் கொண்டு அதை ரசித்துக் கிடந்ததைப் போல்,நீலி மேல் மோகம் கொண்டு நெருங்கியும் அவனால் ரசிக்கத்தான் முடிந்தது.அவளை அடைய முடியாமலேயே போனதோ?தனிமை எப்போதும் அவனை சுய இன்பத்திற்கே இட்டுச்செல்கிறது.ஆனால் நீலியுடனான தனிமையில் அவன் மனம் மட்டுமே துள்ளிக்கிடக்கிறது.
அவன் காமம் காணாமல் போவது பெரும் விந்தை.அவளை ஒரு வன தேவதையாக மனதில் வரித்துக் கொண்டதால் பறிக்கப்படாத மலராகவே அவள் உதிர வேண்டும் என்று எண்ணினீர்களா? ஆனாலும் ஒரு சாதாரணப் பெண்ணாக அவளுக்காக மனம் வேதனை கொள்கிறது.
நாவலின் கடைசி ஐந்து பக்கங்களில் நான் அடைந்த தவிப்பு நான் நீலியாகவே மாறித் துடித்தேன்.எத்தனை சுலபமாக முடிந்து போனது.இதற்குத்தானா இத்தனை தவிப்பு,தேடல்,கற்பனை,காதல்.
வேட்டையாடப்பட்ட மிளாவைப்போல் கிரிதரன் அங்கே பரிதாபமாய்த் தெரிந்தான்.விருப்பத்திற்கு நேர் எதிர் திசையில் பயணிக்கவேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் பொதுவான ஒன்றோ?
ஆழமாக யோசித்தால் நம் வாழ்க்கையைப் பிறர் தான் வாழ்கிறார்களோ என்ற சந்தேகம் எழும் அபாயம் உள்ளது.பிடித்ததைச் செய்யவும் ,நினைத்ததைச் சொல்லவும் முடியும் என்றால் அது தான் வரமா?
நீங்கள் ஓரினச்சேர்க்கை ஆதரவாளரா?அந்த இரட்டையர்களின் காதல் வெகு சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே நீங்கள் இதைப்பற்றிச் சொல்லி இருப்பது உங்கள் மேல் மதிப்பைக் கூட்டுகிறது.compromise செய்து கொள்ளாத தங்களின் எழுத்துக்களை நான் விரும்புகிறேன்.உங்களை எப்படியாவது பார்த்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் போல இந்தநாவலை முடிக்கும் போதும் பெரும் ஆவலாய் முட்டிமோதுகிறது.
ரெசாலதிர்க்கும்,தேவாங்கிர்க்கும் இடையேயான பிணைப்பும் கூட சுலபமாய்க் கடக்கமுடியாமல் மனதை அழுத்தித் தடம் செய்தே செல்கிறது. ஆனால் தேவாங்கை அவன் இழப்பான் என்று உள் மனம் சொல்லியபடியே இருந்தது.மிகுந்த விருப்பம் கொண்டவை எப்போதும் தட்டிப்பறிக்கப்படும் என்பது உலக நியதி தானே?
கர்நாடகாவின் கபினி ஆற்றை ஒட்டியுள்ள நாகர்ஹோலே காடு நான் வெகுவாக ரசித்த ஒன்று.அந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிக்காட்டியது தங்களின் ‘காடு’.'காட்டில் உள்ளது எல்லாம் நமக்கே சொந்தம் என்றென்னும் நகர புத்தி’ என்று நாவலின் ஒரு வரி எத்தனை வீரியமானது!!நாம் அப்படித்தானே எண்ணுகிறோம்.அத்தனை உரிமை எடுத்துக்கொள்ளும் நாம்,நீர் தேடி மிருகங்கள் ஊருக்குள் வந்தால் ‘யானைகள் அட்டகாசம்’என்று அறிவித்து அலறுகிறோம்.காட்டிற்குள் சுற்றுலா என்ற பெயரில் காமிராவும் கையுமாகக் கொத்துக்கொத்தாக வாகனங்களில் அலையும் நாம் செய்வது அட்டகாசம் இல்லையா?வனங்களை இழந்துவிட்டு வாழப் பழகிவிட்ட நாம் கொடிய மிருகங்கள் ஆனால் துரதிஷ்டசாலிகள்.
நான் ஒரு தேர்ந்த வாசகி இல்லை.சங்க இலக்கியம் பற்றியோ,குறிஞ்சி,பாலைத் திணைகளோடு பொருத்திக்கொண்டோ நான் இந்த நாவலை அணுகவில்லை.பெரும் பசி கொண்டவனுக்குக் கிடைக்கும் உணவு வயிறு நிறையும். சந்தோசமும்,சுவையும்,பரிமாறப்பட்ட சுமுகமான சூழலும் தான் மனதில் நிறையும்.உணவின் ஆதி அந்தங்களை அங்கே அவன் அறிந்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.எல்லோரும் அணுகும் வண்ணம் உங்கள் எழுத்துக்கள் எளிமையாய் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.உங்கள் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்த நண்பர், மற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் உங்களின் எழுத்துக்கள் சற்று அணுகக் கடினமாக இருக்கும் என்று சொன்னார்.ஆனால் எனக்குப் பிரச்சனையாக இல்லை.வளர்ந்தவர்களுக்குத்தான் அது பெரும் வனம்.திரும்பும் பாதை பற்றிய அக்கறையும்,விலங்குகள் பற்றிய அச்சமும். குழந்தைக்கு அது அழகிய வனம்.அவ்வளவே.ரசித்து மகிழவேண்டும்,நீள அகலங்களை ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை.உங்கள் எழுத்துக்களை நான் அப்படித்தான் அணுகுகிறேன்.
‘காடு’ பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம்.உங்கள் நேரம் மதிப்பு மிக்கது.ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.விரிவான எதிர் வினைகளுக்கு உங்களுக்கு நேரம் இருப்பதில்லை,ஆனாலும் சில வரிகளேனும் பதிலாக எதிர் பார்க்கிறேன்.உடல்,மன நலனைப் பேணவும்.நன்றி.
என்றும் அன்புடன்,
சுஜாதா செல்வராஜ்,
பெங்களூர்.
மலேசிய இலக்கியம் பரந்துபட்ட தளத்தில் வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வெகுசன எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்படுவது அதில் முக்கியமானது. தொடர் உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக முந்தைய படைப்பிலக்கியங்கள் மற்றுமொரு காலக்கட்டத்தில் விவாதங்கள் மூலம் மீட்கப்படாமல் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அதேபோல மலேசிய எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் பினாமிகள் போல மலேசிய இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பு இல்லாமல் அதன் மீது ஆழமான விமர்சனங்களை வைக்காமல் 'ஒன்றும் இல்லை' என மொண்ணையாக கருத்துக்கூறுவதும் மோசமான அரசியல்தான். இதைவிட முக்கியமாக தமிழகத்தில் கா.நா.சு, சு.ரா, ஜெயமோகன், அ. மார்க்ஸ் போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மீது தங்களின் ஆழமான பதிவுகளைச் செய்வது போல இலங்கை இலக்கியத்தை ஒட்டிய மதிப்பீடுகள் கைலாசபதி, கா.சிவதம்பி, எம்.ஏ.நுஃமான், மு.தலையசிங்கம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரப்பட்டுள்ளது. மலேசியாவின் இலக்கியத்தை அவ்வாறான ஒரு பரந்த வாசிப்பு மற்றும் தீவிரமான விமர்சன போக்கில் முன்னெடுக்கும் ஆளுமைகள் இல்லை எனலாம். துரதிஷ்டவசமாகப் பேராசிரியர்கள் சிலர் அப்பாத்திரத்தை மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே தகுதியினால் ஏற்கின்றனர்.
இவ்வாறான விமர்சகப் பார்வைகள் அதையொட்டிய விவாதங்கள், மதிப்புரைகள் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் பதிப்பிக்கப்படும் நூற்றுக்கணக்கான பிரதிகளில் நமது வாசக ரசனையைத் தாண்டி சிலவற்றைத் தேர்வு செய்ய காரணியாக உள்ளன. தமிழகத்தில் இச்சூழல் மிக ஆரோக்கியமாக உள்ளது. அவ்வகையில் கடந்த ஆண்டில் ஜெயமோகனின் வருகை சில நல்ல நாவல்களை அறிமுகம் செய்து வைத்தது.
வல்லினம் நிகழ்விலும் அதற்குப் பின்பான உரையாடலிலும் அவர் தொடர்ந்து முன்வைத்துப் பேசிய நாவல் 'ஆழி சூழ் உலகு'. அதற்குமுன் நான் அந்த நாவலின் பெயரைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை. மலேசியாவில் அந்த நாவலின் ஒரு பிரதிகூட எந்தக் கடையிலும் கிடைக்காது என நன்கு தெரியும். டாக்டர் சண்முகசிவா தமிழகம் சென்றபோது அந்நாவலை வாங்கி வர கேட்டேன். மறக்காமல் வாங்கி வந்தார்.
இந்நாவலை நான் படிக்கத் தொடங்கியபோது பினாங்கிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டவர். நாவலில் உள்ள சில மீன்கள் தொடர்பாகவும் மீனவர் வாழ்வு தொடர்பாகவும் தொடர்ந்து கேட்டபடி இருந்தேன். அவருக்கு பெரும்பான்மையான விடயங்கள் புதியனவாக இருந்தன. நாவல் சொல்லும் சூழல் 1933 ஆக இருந்தாலும் எல்லாவகையிலும் மலேசியர்கள் வாழ்வு மேம்போக்கானதாய் இருப்பது மட்டும் புரிந்தது. நாம் ஒரு கலவையான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் பொருளியல் நோக்கில் மட்டுமே ஈடுபடுகிறோம். எத்துறையிலுமே நமக்கு அழுத்தமான ஆழமான பயிற்சி இருப்பதில்லை. அல்லது அதை நாம் நம்புவதில்லை எனப்பட்டது. 'ஆழி சூழ் உலகு' போன்ற நாவல்கள் வெவ்வேறு வாழ்வினை வாழ்வதற்கான துல்லியமான பயிற்சியை அளிக்கின்றன.
000
பொதுவாகவே நான் ஒரு ஞாபக மறதியான ஆள். மனிதர்களின் முகங்களும் பெயர்களும் என் நினைவில் இருப்பது மிகவும் சிரமம். அவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு சிறப்பு அம்சத்தை மனதில் பதித்து வைத்துக்கொள்வேன். அதே போலதான் பாதைகளும். பாதைகளைத் தவறவிடுவதிலும் மறந்துவிட்டு வேறெங்காவது சுற்றிக்கொண்டிருப்பதிலும் நான் பலே கில்லாடி. மனதில் மிக ஆழமான உணர்வுகளைத் தூண்டினாலே எதுவும் என் நினைவில் நின்றிருக்கும்; மற்றவையெல்லாம் மனதில் மங்கலாகவே இருக்கும்.
இத்தனை குழப்பம் மிக்க ஒரு மனிதன் 'ஆழி சூழ் உலகு' நாவலை வாசிப்பது என்பது மிகச் சவாலானதாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். காரணம் அந்நாவல் முக்கால் நூற்றாண்டின் (1933 - 1985) கதையைச் சொல்கிறது. நாவல் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுடனும் சுவாரசியமான புலிச்சுறா வேட்டையுடன்தான் தொடங்கியது. புலிச்சுறா பிடிக்கச்செல்லும் மூவர் (சிலுவை, சூசை, கோத்ரா) கட்டுமரம் கவிழ நடுக்கடலில் மூவரும் ஒரே கத்தையைப் பிடித்துக்கொண்டு மிதக்கும் காட்சி நாவலின் இடையிடையே வந்து அம்மனிதர்களிடம் இருக்கும் அன்பை, கருணையை, தியாகங்களை, காதலை ஒட்டுமொத்த பரதவர்களின் ஆதாரமாகச் சொல்லிச்செல்கிறது.
இவ்வாறு ஆரம்பிக்கும் நாவலில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதக் கூட்டங்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டிருக்கிறது. இம்மக்கள் திரளில் நான் யாரையும் குறிப்பாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியாமல் தத்தளித்தபடி வாசித்துச் சென்றேன். அவ்வட்டார வழக்கு மொழியும் பெரும் தடையாக இருக்க, பெரும் சவாலுடன் தொடர்ந்து அவர்கள் அனுபவங்களைக் கடக்கும் போதுதான் எனக்கு அது நிகழ்ந்தது. நான் அந்த மக்களை மொத்தமாகவே அடையாளம் கண்டுக்கொண்டிருந்தேன். அந்தச் சனத்திரளில் நானும் ஒருவனாகியிருந்தேன். தொம்மந்திரையையும் கோத்ராவும் அவர்களின் உருவ அமைப்புடன் கண்முன் கடந்து சென்று கொண்டிருந்தனர். அதற்கு பின் பெயர்கள் முக்கியமானதாக இல்லை. மொழி முக்கியமானதாக இல்லை. பெயரும் மொழியும் கடந்த ஒரு பெரும் வாழ்வில் என்னால் அவர்களுடன் இணைய முடிந்திருந்தது.
000
நாவல் இரு வெவ்வேறு மனநிலையைக் கொடுக்கிறது.
ஒரு வசதிக்காக 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதை முதல் பகுதியாக வைத்துக்கொள்ளலாம். அவர்கள் பசியாலும் குளிராலும் வாடி, ஒருவர் மற்றவருக்காக உயிர் துறப்பதின் தியாகத்தைச் சொல்லிச்செல்கிறது. சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான்.
இரண்டாவதாக, 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் பரதவர்களுக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள், அவற்றோடு சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்கள் என மிக விரிவான வாழ்வு சொல்லப்படுகிறது. இவ்விரண்டு சம்பவங்களும் வாசகனுக்கு வெவ்வேறான மனநிலையைக் கொடுக்கக்கூடியவை. முன்னது மிகப் பதைபதைப்பான ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்தியபடி இருக்கிறது. இரண்டாவது ஒரு நீண்ட வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதற்கான நிதானத்தைக் கொடுக்கிறது. ஆனால் இவ்விரு தருணங்களின் போதும் ஏதோ இரைச்சல் மட்டும் மனதிலிருந்து நீங்கவில்லை. அதை கடலலை ஓசையாக நான் நம்பிக்கொண்டேன்.
1985: மறுநாட்களில் தொடரும் தியாகங்கள்
நாவலை நான் ஒரு முறைதான் வாசித்தேன். ஆனால் வட்டார சொற்கள் என்றபடியால் கூர்மை கூடியிருந்தது. நாவலை வாசித்து முடித்த பின்பும் நாவலின் இடையில் சிலுவை, சூசை, கோத்ரா ஆகியோர் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு மிதப்பதை மட்டும் பலமுறை வாசித்தபடி இருந்தேன். அவர்களின் எவ்வித பின்புலத்தையும் நினைவில் கொள்ளாதபடி அதை வாசிப்பது புதிய அனுபவமாக இருந்தது. அதை மட்டுமே இன்னும் கொஞ்சம் நீட்டி தொகுத்து ஒரு குறுநாவலாகக் கூட வெளியிடலாமே எனப்பட்டது. 1985 ல் அடுத்தடுத்த நாள் நிகழும் சம்பவத் திரள் அது. இதே போன்ற அனுபவம் எனக்கு யூமா வாசுகியின் 'இரத்த உறவு' வாசித்த போதும் இருந்தது. அதில் வரும் தம்பியின் கனவுகளை மட்டும் தனியாக வாசித்துக்கொண்டிருக்கலாம்.
மூவர் மிதந்துகொண்டிருக்கின்றனர். அங்கு ஓங்கில்கள் (டால்பினை அவர்கள் அவ்வாறுதான் அழைக்கின்றனர். நல்ல தமிழ்ச்சொல்.) இருப்பதால் சுறாவின் பயம் இல்லை. பசிக்கிறது. மயக்கத்தில் இருந்த கோத்ரா கண்விழிக்கிறார். அவரை 'பெரியாளு' என்றுதான் அழைக்கின்றனர். பெரியாளுக்குத் தன் மனைவி தோக்களத்தா நினைவாகவே உள்ளது. தூரத்தில் மிதந்து வரும் பாசிகளைப் பிடித்து சிலுவைக்கும் சூசைக்கும் சாப்பிடக்கொடுக்கிறார். அவருக்கு நெஞ்சு அடைப்பதாகக் கூறி சாப்பிட மறுக்கிறார். அவர் இருக்கும் நம்பிக்கையில் இருவரும் நிம்மதியாக மிதக்கின்றனர்.
மறுநாள் அவர்களுக்குப் பஞ்சு ஆமை கிடைக்கிறது. பெரியவர் அதை தலையால் முட்டி கவிழ்க்க சூசையும் கோத்ராவும் அதன் கழுத்தின் மென்மையானப் பகுதியைக் கடித்து இரத்தம் குடிக்கின்றனர். பெரியாள் அதன் கால்களை வாகாகப் பிடித்துக்கொள்கிறார். அது திடுமென திரும்ப பெரியவருக்கு அடிப்படுகிறது. மூவரும் மீண்டும் மிதக்கும் போது ஊறிய கத்து இனி தாங்காது என பெரியாள் முடிவு செய்கிறார். கத்திலிருந்து தன் பிடியைத் தளர்த்துகிறார். உயிருடன் ஊர் போகும்போது கிழவியிடம் தான் இறக்கும் போது அவளை நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறச்சொல்கிறார். இயற்கையுடன் தானும் ஒன்றாகிறார்.
மறுநாள் அவர்கள் களைப்பில் இருக்கும்போது ஏதோ சத்தம் கேட்கிறது. திக்கிலாத அவர்கள் பயணம் குறித்த கவலையில் அன்றைய பொழுது மெல்ல இருட்டுக்கிறது. திடீரென மின்னிக்கொண்டு ஒரு மீன் கூட்டம் அவர்களைச் சூழ்கிறது. அதில் ஒன்றிரண்டைப் பிடித்து சாப்பிடுகின்றனர். மீன்கூட்டம் ஓடிவிடுகின்றது. மீண்டும் விசித்திர ஒலி. ஆயிரக்கணக்கான கடல்குதிரைகள் மேலெலும்பி வந்து மேய்ந்துகொண்டிருக்கின்றன. காண முடியாத அந்த அதிசயக் காட்சியைக் கண்டு இருவரும் ஆனந்தப்படுகின்றனர். சூசை, தாங்கள் மிகுந்த ஆழ் பகுதியில் இருப்பதை உணர்கிறார். அவர் எதிர்ப்பார்த்ததைப் போல சிறிது நேரத்திலெல்லாம் அங்கு ஒரு பூந்நோட்டமே மலர்கிறது. பலவண்ண மீன்கள் அவ்விடத்தில் வலம் வருகின்றன. இயற்கை அவர்களின் பசியை அன்று மறக்கடிக்கின்றது.
மறுநாள் சிலுவை கொஞ்சம் துடிப்புடன் இருக்கிறான். தொலைவில் ஒரு பாய் தெரிகிறது. ஏதோ ஒரு கப்பல் போவதற்கான அடையாளம். அது தங்களைக் மீட்கும் என நம்புகிறான். அருகில் வரும் போது கை காட்டி தங்கள் அடையாளத்தைக் காண்பிக்க முடிவெடுக்கிறார்கள். அது அருகில் வரும்போதுதான் திமிங்கலம் எனத் தெரிகிறது. சூசை அவை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை எனவும், நாம் சீண்டாமல் ஒன்றும் செய்யாது என்கிறார். அவர் கைகள் நடுங்குகின்றன. திமிங்கலத்தின் வால்தான் பாய் போல தெரிந்திருக்கின்றது. அது கடந்து போகும் போது சூசை சொல்கிறார் 'இந்த மீன்கள் எல்லாங் குசும்பு பண்ண ஆரம்பிச்சா நம்மளால இந்தக் கடல்ல தொழில் செய்ய முடியுமாய்யா!'
மறுநாள் இருவரும் விழித்தபோது, இன்னும் தாங்கள் இருக்கும் உண்மை தெரியவர துன்பம் தொற்றிக்கொள்கிறது. சூசையின் மனம் பலவாறாகக் குழம்புகிறது; புலம்புகிறது. கடல் சுழிப்பெடுப்பதை அறிந்து சூசை கத்தையை சுழிப்பிலிருந்து தள்ளிவிட்டு தான் அதில் மாட்டி கடலுக்குள் செல்கிறார். சிலுவைத் தனியனாகிறான். மூச்சு மட்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெரிய கப்பல் கேப்டன் கண்களில் பட்டு காப்பாற்றப்படுகிறான். மனம் முழுதும் தான் காப்பாற்றப்படுவதற்காக உயிர்விட்ட இருவரின் நினைப்பு மட்டும் இருக்கிறது.
மரணத்தை வெல்ல தியாகத்தால் மட்டுமே முடிகிறது.
1933: ஊகங்களில் எஞ்சிய உணர்வுகள்
ஆமந்துறை என்ற சிற்றூர். பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மூன்று தலைமுறைகளாக கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் மூலமே பதிவாகியுள்ளது. அங்கிருக்கும் பரதவர்கள் ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கின்றனர். கடல் சார்ந்த வாழ்வில் அவர்களின் துயரங்கள், உயிரிழப்புகள் ,போராட்டங்கள் , பொருளியல் ரீதியானச் சுரண்டல்கள், பாலியல் வெளிப்பாடுகள் என மிகப்பெரும் சமூகத்தின் எல்லா குணாதிசயங்களோடும் நாவல் 1933 லிருந்து நகர்கிறது.
சுரண்டல்களை எதிர்க்கொள்ள சிந்தனையற்று தங்களுக்குள் பிரிந்து உருவாக்கிக்கொள்ளும் வன்முறைகள் , நாடார்களுடன் ஏற்படும் மோதல்கள் என பரதவர்களின் வாழ்வு பதிவாகியுள்ளது.
இவர்கள் வாழ்வில் கிருத்துவ மதமும் காகு பாதிரியாரின் பங்களிப்பும் முக்கியமானது. பரதவர்களுக்கும் அவருக்குமான உறவும் பின்னர் அவர் பிரிவும் அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த அன்பினை வெளிப்படுத்துகிறது. பரதவர்களின் வாழ்வில் எல்லாச் சூழலிலும் உடனிருப்பவராக அவர் சித்தரிக்கப்படுகிறார். அவர் சொல்லுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது. ஏதோ ஒருவகையில் அவர் அம்மக்களுடன் தன்னை பிணைத்தே வருகிறார்.
அவர்களின் மத நம்பிக்கை மலேசியாவில் உள்ள கிருத்துவ மதத்துடனான உறவைச் சிந்திக்க வைத்தது. மனிதன் தொடர்ந்து கருணையைத் தேடிக்கொண்டிருக்கிறான். தன்னால் தடைசெய்ய முடியாத ஒரு அதிகாரத்திடமிருந்து சுரண்டலை எதிர்க்கொள்ளும்போது அவனுக்கு பாதுகாப்பு அளிக்க மதம் முன்வருகிறது. மதம் இதை ஒரு கொடுக்கல் வாங்கலாகச் செய்கிறது எனலாம். இன்னமும் மலேசியாவில் ஏழ்மை நிலைக்காரணமாக அரிசி, பருப்பு கிடைக்கும் என மதத்தை ஒரு வணிகமாகச் செயல்படுத்துபவர்கள் இருக்கவே செய்கின்றனர். அல்லது இப்படிச் சொல்லலாம் வணிகமாக இருக்கின்ற மதம் தன் பணியைச் செவ்வனே செய்கிறது.
000
இது ஜோ டி குருஸின் முதல் நாவல் என ஜெயமோகன் மூலம் அறிய முடிந்தது. அவர் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி நாட்களில் மீனவர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியுள்ளார். இப்போது கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார்.
ஆழி சூழ் உலகு உருவான விதம் குறித்தும் ஜெயமோகன் சொன்னத் தகவல் சுவாரசியமானது. சில கவிதைகளுடன் அவர் தமிழினி வசந்தகுமாரை சந்தித்துள்ளார். அவை வசந்த குமாருக்கு திருப்தி அளிக்காததால் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் கடல் சார்ந்த அவரது மகத்தான அனுபவம் புரிய வந்திருக்கிறது. வசந்தகுமாரே அவரை நாவல் எழுத ஆர்வம் கொடுத்துள்ளார். வசந்தகுமாரின் ஆலோசனைகள் அவருக்கு உதவியாக இருந்துள்ளன.
பல தருணங்களில் அவர் நாவலின் அல்லது படைப்பிலக்கியத்தின் மிக முக்கிய தன்மையாக வாசகனின் யூகத்திற்கு வழிவிடுகிறார். எல்லாவற்றையும் சொல்ல அவர் மெனக்கெடவில்லை. சில சமயங்களில் ஒரு பகுதியின் இறுதிப்பாகத்தில் மிக உச்சமான ஒரு தருணத்தில் நிறுத்தி அடுத்தடுத்த சம்பவங்களுக்குத் தாவிச்செல்கிறார். பின்னர் இயல்பாக நாவலின் மற்றுமொரு பகுதியில் அதன் விளைவுகள் இடைவெளி இல்லாமல் பற்றிக்கொள்கின்றன. மேலும் 1933 ல் தொடங்கும் நாவலின் இடையிடையே 1985 காட்சிகள் வந்தாலும் அவை நாவல் கொண்டிருக்கின்ற எந்தப் புதிருக்கும் முதலிலேயே பதில் சொல்லவில்லை. ஒவ்வொரு பகுதியும் மிகச் சரியான இடத்தில் செருகப்பட்டிருக்கின்றன. இது கதையோட்டத்தில் நாம் காண்கிற மனிதர்களின் மனப் பரிணாமத்தை உணர வகை செய்கிறது. மிக முக்கியமாக சூசை.
ஊமையன் மற்றும் சாரா நினைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவனாக இருக்கிறான். நாவல் முழுதும் வன்முறையுடனும் காமத்துடனும் வரும் அவனா உயிர்த்தியாகம் செய்கிறான் என வியக்க வைக்கிறது. தியாகம் சில சமயங்களில் மனம் கேட்கும் இரக்கமற்ற கேள்விகளுக்குச் சொல்லும் பதிலாகவும் மாறிவிடுகிறது.
அதேபோல வருவேல் பாத்திரம். தன் தகப்பனுடன் உறவு கொண்டதால் தாய்க்குச் சமமாக நினைக்கும் ரோஸம்மாவிடம் உறவு கொண்டப்பின் வருவேலின் மன உளைச்சல் அடைவதும் அதிலிருந்து விடுப்பட முடியாமல் மீண்டும் மீண்டும் கொள்ளும் உறவும் அதன் மனச்சிக்கலையும் ஆசிரியர் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். இதில் ரோஸம்மா அவளுக்கே உரிய பாலியல் சுதந்திரத்துடன் செயல்படுகிறாள். தன் மகளை திட்டமிட்டு வருவேலிடம் இணைத்து அவளைக் கூட்டிக்கொண்டு ஓடச்சொல்வதுவரை அவளது வன்மம் செயல்படுகிறது.
அதிகம் பேசாமல் ஒரு ஏமாளிப்போல நாவலில் வரும் மேரி (சூசையின் மனைவி) நாவலின் இறுதியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். சுந்தரி டீச்சருக்கும் சூசையருக்கும் உள்ள இரகசிய உறவு மேரிக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாதது போலவே வந்து போகிறாள். இறுதியில் மீன் பிடிக்கச் சென்ற சூசையரின் நிலை அறியாமல் சுந்தரியைப் பார்த்து, "நம்மள விட்டுட்டு போயிருவாரா அக்கா..." என மேரி அழும்போதுதான் சுந்தரியோடு வாசகனுக்கும் புரிகிறது. அவள் வாழ்வைப் புரிந்து வைத்திருக்கிறாள்.
000
நாவலின் பக்கங்கள் 558. மிக நீண்ட வாழ்வனுபவத்தைக் கொடுக்கும் இதுபோன்ற நாவல்கள் வழியே மீண்டும் மீண்டும் மனிதர்கள் மேல் நம்பிக்கையும் அன்பும் வைக்க முடிகின்றது. நமது வாழ்வில் நாம் வெறுக்கும் ஒருவரை மீட்டும் மனதில் நிறுத்துப்பார்க்க வைக்கிறது. காலம் ஒரு மனிதனை மாற்றியமைக்கும் பெரும் சக்தி. யார் போதிக்காவிட்டாலும் அல்லது நாமே மறுத்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஓர் அற உணவை மையமிட்டே நாம் இயங்க வேண்டியதாக உள்ளது. அதற்கு பதில் சொல்ல வேண்டியதாய் உள்ளது. அதனோடு காலம் முழுவதும் போராட வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் ஒருவனாக இருப்பதில்லை. அவன் பல மனிதர்களைத் தனக்குள் கொண்டுள்ளான். அதில் நாம் காணும் ஒரு பகுதியை மட்டுமே வைத்து மொத்தத்தையும் முடிவு செய்ய வேண்டியவர்களாகி விடுகின்றோம். காலம் முழுதும் ஒருவனை கூர்ந்து அவதானித்து அவனை தீர்வு செய்வதென்பதும் நடவாத காரியம்தான். ஆனால் படைப்பிலக்கியங்கள் அதற்கான சாத்தியங்களை நமக்குத் தருகின்றன. நெடுங்காலத்தை சுருக்கிக் கைகளில் தருகின்றன. நமது இதற்கு முன்பான முடிவுகளை மீள்பார்வை செய்யத் தூண்டுகின்றன.
இந்நாவலை நான் ஆறு மாதங்களுக்கு முன் வாசித்த போது இவ்வாறான ஒரு மனநிலையில்தான் இருந்தேன். அவ்வுணர்வின் மீது எனக்கே சந்தேகம் இருந்தது. ஒரு நீண்ட நாவலை வாசித்த உழைப்பின் பெருமிதமா... அல்லது ஒரு பெரும் அனுபவத்தைக் கொடுத்த பிரதியின் பால் உண்டான ஈர்ப்பா என்ற குழப்பத்தில் நாவல் குறித்து அதிகம் பேசாமல் கொஞ்சம் ஒத்திப்போட்டேன். இவ்வாறான உணர்வுகளுடன் ஒரு பிரதி குறித்து பேசுவது அல்லது எழுதுவது வெற்றுக் கொண்டாட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகப் போகலாம். ஆனால் மனதின் அடியாழத்தில் இருக்கின்ற ஒன்று இன்றும் இந்நாவல் கொடுத்த அனுபவங்களை மீட்டுணர்ந்தபடி உள்ளது.
அந்த ஒன்றின் பெயர் ஒருவேளை மனிதம் என்று இருக்கலாம்.
எனது துணையெழுத்து புத்தகம் பற்றி விக்னேஷ் என்ற இளம் வாசகர் தனது வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு இது, மிக உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பு.
துணையெழுத்து வெளியாகி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நான் எழுதிய புத்தகங்களில் அதிகம் விற்பனையானது அதுவே, ஒரு லட்சம் பிரதியைக் கடந்திருக்கும் என்று நம்புகிறேன், ஒவ்வொரு நாளும் அதற்கான வாசகர்கள் விரிந்து கொண்டேயிருக்கிறார்கள், துணையெழுத்து புத்தகத்தை ஆங்கிலத்தில் சுதா நரசிம்மாச்சாரி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் , விரைவில் அது பிரபல ஆங்கில வெளியீட்டகம் ஒன்றின் வழியே வெளியாகக்கூடும்.
துணையெழுத்தில் இருந்த கட்டுரைகளை மையமாகக் கொண்டு இதுவரை மூன்று குறும்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன, ஹிந்தி, பெங்காலி, மராத்தியில் இதன் சில கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு ஆய்வாளர்கள் துணையெழுத்தினை ஆய்வு செய்து எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள்,
இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட ஒரு மென்பொருள்துறை நண்பர் தனது பிறந்தநாள் பரிசாக இருநூறு பிரதிகளை விலைக்கு வாங்கி தன்னோடு அலுவலகத்தில் வேலை செய்கின்ற அனைவருக்கும் பரிசு அளித்துள்ளதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,
புத்தகம் அதற்கான வாசகர்களைத் தேடிக் கொள்கிறது என்பதே உண்மை,
துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி. கேள்விக்குறி. சிறிது வெளிச்சம் என விகடனில் நான் எழுதிய பத்திகளின் வழியாக நிறைய புதுவாசகர்கள் வாழ்க்கையை நுண்மையாக அவதானிக்கவும். சக மனிதர்கள் மீதான அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், தரமான இலக்கியவாதிகளைத் தேடி வாசிக்கத் துவங்கியிருப்பதையுமே அதன் உண்மையான வெற்றி என்று நினைக்கிறேன்.
*
Can a book change lives? Can an author alter all the perceptions that you had on living? Can a few printed words induce changes deep down inside your soul? Can reading someone turnout to be the most cherished moment of your life? Can a book transform you into a different entity altogether?
It was some five or six years back, I was then a small time reader, reading mostly cheap English fiction. Back then I read to keep me entertained, I read for the thrills it gave me, I read to satisfy the hormones that disturbed my pineal glands. I would have easily become yet another representative of this modern generation.
A generation which takes pride in reading Jefferey Archer and John Grisham. A generation which is more than happy to fill its bookshelves with Robert Ludlum and Sidney Sheldon. A Generation which is unaware of the existence of Jeyakanthan and Asokamithran. A generation which reads only in English. A generation of mere Fakers. But then there came S.Ramakrishnan (S.Ra).
It all started on a sleepless night, jobless, bored; i was looking for something to read. And ended up with an literary essay by S.Ra in Anandha Vikatan titled Thunai Ezhuthu(துணை எழுத்து ). I wasn’t too eager to read it. Maybe i found it to be too serious for my tastes or maybe i feared that i can never understand such serious writing. But somehow i started reading it, and suddenly all heavens broke loose. I was losing my conscience and was traveling into a magical world created by his words. It was like reading something that the my inner soul has always tried to convey . It was like all my philosophies were acquiring a printed form. It made me visualize the world just like the way my mystical third eye had perceived it.
This is no exaggeration, i went speechless. The same night i went through the archieves finding all the essays from previous issues. I read them all. I read till dawn, and soon i could sense the difference that the words had made in me.
A change was underway, a change that would introduce me into serious reading, a change that would make me go in search of my roots in Tamil literature, a change that will alter my preferences forever, a change that will make the name S.Ra sound like a chant.
What is Thunai Ezhuthu about? It is collection of essays in Tamil, in which the author speaks about human lives, that he has witnessed till date as an onlooker. He writes about his experiences with life, as a wanderer, as an observer, as a kid, as someones friend, as a scholar, as a dreamer and as a normal human like the rest of us.
He writes about incidents that we all face, but in a way that we have never perceived them. He brings in front the truths and hidden emotions that we would have failed to notice.He applies magical realism to normal life and brings out something very unique and special. He makes words flow like a whisper down the ear, silent and mesmerizing. Intense words written vividly to capture the senses and the soul together.
Stories about ordinary lives and their plight for surviving the complexities are narrated like epics. Like a spiritual guru S.Ra teaches philosophies about living. lessons that you could take with you for a long and unending journey of life. I know people who carry around Thunai Ezhuthu just as Bible and Qur’an , it makes wonders in peoples lives. It made one in mine.
My opinions on life started to differ, maybe for the first time i started to have opinions on living. Reading was no more a pass time, it soon became one of the very reasons of my existence. I ventured into unexplored teritories, i lost the fear that i had for literature. I read S.Ra till the last drop.
He introduced me to Jayakanthan, Jeyamohan, Sundara.Ramasamy and all other men who served the echelons of Tamil writing. He made me understand Rushdie and McEvan in better sense. When I then saw cinemas from around the globe i was able to relate with the humanity that it portrayed. My search for life grew bigger. I started to look out for life in everything i that I sensed. He made profound impacts on my thoughts, and in whatever i write or do I could find his influence all along.
S.Ra words filled me with something that i have been missing all these years. His philosophies became my tenets for living and a more sensible human being was born out of me.Hence there is definitely a book out there which can change your life and alter all your perceptions .It lies somewhere, in the undusted shelves of a bookstore very near to your proximity. All you got to do is find it…. before its too late!
I would be really happy if the book was to be Thunai Ezhuthu. And to know more about Ramakrishnan and his works visithttp://www.sramakrishnan.com/::[1]
(நன்றி - விக்னேஷ்)
சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: கதை சொல்லி
அலுவலகத்தில் என் இருக்கைக்கு எதிரே சுவற்றில் ஒரு பெரிய சைஸ் இந்தியன் பொலிட்டிக்கல் மேப் தொங்கிக் கொண்டிருக்கும். நான் கணிணித் திரையில் இருந்து கண் விலக்கி எதிரே நோக்கும் போதெல்லாம் என்னுடன் மானசீகமாக உரையாடும். அதில் இருக்கும் மாநிலப் பரப்புகளின் மீது என் கண்கள் பயணம் செய்யும் போதெல்லாம் அந்தந்த மாநிலத்தில் யாருடனெல்லாம் உரையாடியிருக்கின்றேன் என அசை போடுவேன்.
என் தொழில் ரீதியான உரையாடலின் தொடர்ச்சியாக ,'தமிழ்நாடு என்றதும் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும்' எனும் கேள்விக்கு கிடைத்த பதிலில் அதிகம் இடம் பெற்றது எம்.ஜி.ஆர், ஸ்ரீதேவி, ரஜினி காந்த், கமல்ஹாசன், இளையராஜா எனும் திரை அடையாளங்கள், ஜெ, கருணாநிதி எனும் அரசியல் பிரமுகர்கள் என்பது போக எப்போதாவது அபூர்வமாக பாரதி என்ற பதில் கூடக் கிடைத்திருக்கிறது.
சென்னையின் புவியியல் பரப்புகளை நபர்களைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ளும் தனது வழக்கத்தினை எழுத்தாளர் எஸ்.ரா தனது வாசகர் பர்வத்தில் சொல்லியிருப்பார்
பொதுவாக ஒரு நாட்டின் அட்லஸை கவனித்தீர்கள் என்றால் அவை மாநில எல்லை, பருவ நிலை, நதிகள், மலைகள், தொழில், மண் வளம் என்பதாய் வகைப்பத்தப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கும் இவற்றில் மாநிலங்களின் கலாச்சார அடையாளம் தெரியவருவதில்லை
ஏகே இராமானுஜன் தொகுத்த Folk Tales From India எனும் பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்த புத்தகம் இப்படியான அடையாளம நல்கும் ஒரு பொக்கிஷம்.
தமிழ், கொண்டி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி, மால்வி, ராஜஸ்தானி, ஒரிய ,கன்னடம், தெலுங்கு, காஷ்மீரி,சண்டாலி, உருது, அஸ்ஸாமி, குஜராத்தி, துளு, தித்யாதி, மலையாளம், மராத்தி,கும்மோனி, சிந்தி எனும் பல்வேறு மொழிகளில் விளங்கும் நாட்டுப் புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்திருக்கும் தொகுப்பு
சமீபத்தில் வாசித்த மிகவும் பயனுள்ள புத்தகம் எனச் சொல்வேன். கதைகளை தொகுத்திருக்கும் நேர்த்தியினைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்
இந்திய நாகரீகத்தின் பிரதிபலிப்பு அச்சில் வந்து பிரபலமான புத்தகங்களினால் மட்டுமல்ல வாய்மொழியாக சொல்லப்படும் நாட்டுப் புறக் கதைகளின் மூலமாகவும் கிடைக்கும்
இந்த தொகுப்பு ஒருவிதமான பாலம் அமைக்கும் பணி. ஒவ்வொரு மொழியினைச் சேர்ந்தவரும் இதைப்படிக்கும் போது பிற மொழிகளின் நாட்டுப்புற வழக்கில் விளங்கும் இயல்பை புரிந்து கொள்ள சான்ஸ் கிடைக்கிறது.
சில கதைகள் எல்லா மொழியிலும் சொல்லப்படுவதுண்டு. எந்த மொழியில் தோன்றி எந்த மொழிக்கு வாக்க்ப்பட்டு ( வார்க்கப்பட்டு ?) பின்னர் எல்லா மொழிக்கும் பரவியது எனத் தெரியவில்லை
அடுத்த முறை அஸ்ஸாமில் இருக்கும் ஒருவரிடம் பேசும் போது உங்கள் வட்டாரக் கதைகள் சில படித்தேன் என கதை சுருக்கம் சொல்லும் போது, எனக்கு காணக் கிடைக்காத மறு முனைப் புன்னகை, கதை சொல்லி இராமானுஜம் பெற்ற வெற்றி
துயில் : ஒரு பார்வைஎனது நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான டாக்டர் ராமானுஜம் திருநெல்வேலியில் உளவியல் மருத்துவராகப் பணியாற்றுகிறார், அவர் எனது துயில் நாவல் பற்றி எழுதிய விமர்சனம்
••
துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு
மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள இயலாததாக இருக்கிறது.
எந்த நோயும் தனியே வருவதில்லை. பயமும் நிச்சயமின்மையும் சேர்ந்தே வருகின்றன.நவீன மருத்துவத்தில் பல நோய்களுக்குச் சிகிச்சை இருப்பினும் நோய் பற்றிய கற்பனைகளும் பயங்களும் மனிதனை அலைக்கழிக்கின்றன.விடை தெரியாத போது ஆன்மீகம் ,மதம் என்று திசை திரும்புகிறான்.எங்கு பயமும்,நிச்சயமின்மையும் சேர்கிறதோ அங்கு மதம் நுழைகிறது.
ஒவ்வொருவரும் நோயை ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கின்றனர்.நான் முதன் முதலில் தூத்துக்குடி அருகேயுள்ள ஆத்தூரில் மருத்துவனாகப் பணியாற்றிய போது அங்குள்ள எளிய மக்கள் உடலைப் பற்றியும் நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றியும் பெரிய ஆர்வம் காட்டாமல் இருப்பது கண்டு கோபப்படுவேன்.அதே நேரம் அந்த மக்கள் எவ்வளவு பெரிய நோயையும் எளிதில் தாங்கிக் கொள்வதை வியப்புடன் கண்டிருக்கிறேன்.
கீழைத் தேச மக்கள் நோய்மையை எதிர்கொள்வதற்கும் மேலைத் தேச மக்கள் எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.மேற்கத்தியப் பார்வை உடலைப் பருப்பொருளாகப் பார்க்கிறது.நம்முடையதைப் போன்ற மரபோ உடலை ஆன்மீக மற்றும் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது.சுயம் முன்னிருத்தப் படுவது குறைவே.
இதுபோன்ற நோய் மற்றும் நோய்மையோடு தொடர்புடைய வரலாற்று,சமூக உளவியல் பார்வைகளைத் தன் வசீகர மொழியால் ‘துயில்’ நாவலில் ஆவணப் படுத்தியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நாவல் மூன்று தளங்களில் இயங்குகிறது.தெக்கோடு எனும் கிராமத்தைச் சுற்றியே கதைக்களம் அமைத்திருக்கிறார். 1982 ஆம் ஆண்டு மனைவிக்குக் கடற்கன்னி வேடமிட்டுத் திருவிழாவில் ஷோ நடத்தத் தெக்கோடு கிராமத்துத் துயில்தரு மாதாவின் திருவிழாவுக்குச் செல்லும் அழகர் மற்றும் அவனது மனைவியின் இருத்தலியல் சிக்கல்கள் ஒரு புறம் .மறு புறம் அதே கால கட்டத்தில் அந்தத் திருவிழாவிற்குச் சென்றால் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையில் செல்லும் நோயாளிகள் வழியில் எட்டூர் என்ற இடத்தில் தங்கித் தங்கள் நோய்மையின் காரணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு தளத்தில் கொல்கத்தாவிலிருந்து மருத்துவ சேவையாற்றுவதற்காகத் தெக்கோடு கிராமத்துக்கு வரும் கிருத்துவ மருத்துவர் ஏலன் பொவார் அடையும் அனுபவங்கள்.இது 1870 களில் நடக்கிறது.
அழகர் முற்றிலும் முழுமையான இருத்தலியல்வாதியாகச் சித்தரிக்கப் படுகிறான்.நாவலின் மையக் களமான நோய்மைக்கும் அழகரின் அனுபவங்களுக்கும் பெரிய தொடர்பு இல்லை எனினும் அடிப்படைத் தேவைகளான பசி ,காமம் போன்றவை அவனை ஆட்டிப்படைக்கின்றன.இளவயதில் ஏற்படும் அனுபவங்கள் அவனது ஆளுமையைச் செதுக்குகிற விதம் நன்கு சித்தரிக்கப்படுகிறது.
வீட்டை விட்டு ஓடி பழனியில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் செல்கிறான்.ஓட்டலில் தங்கியிருப்பவர்களின் துயரங்களைப் பிரிவுகளைச் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் காட்டுகிறார். எல்லாப் பெரிய ஓட்டல்களுக்கு அருகிலும் அவற்றின் கழிவுகள், குப்பைகளால் நிரம்பிய ஒரு மிக அழுக்கான சந்து இருக்கும். அது போல் அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களுக்கு உள்ளே உள்ள அறியப்படாத வெளிகளை அழகரின் கதை மூலம் எட்டிப் பார்க்கிறது நாவல்.
பாலியல் தொழிலாளி(எஸ்.ரா வின் பாணியில் ‘வேசை’ ) ஜிக்கியுடன் சென்று அவளுக்கு உதவியாக இருக்கிறான். ஓட்டல் வேலையைப் போன்று இங்கும் அழகர் வலி வேதனைகள் ,நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றைக் காண்கிறான்.பின்னர் தன் மனைவியைக் கடல்கன்னி வேடமிட்டுக் காட்சிப் பொருளாக்கிச் சம்பாதிக்கிறான்.
அழகர் வரும் பகுதி முழுதும் விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாடச் சிக்கல்கள்,அதை அவர்கள் எதிர்கொள்ளும் முறை அவர்களுக்குள் நிலவும் உறவுமுறை,அவர்களது நம்பிக்கைகள்,ஆச்சரியங்கள்,கொண்டாட்டங்கள் பற்றிய நுட்பமான பதிவுகள் காணப் படுகின்றன.திருவிழாவில் ஷோ நடத்தும் பல்வேறு வகையான மனிதர்களைப் பற்றி இவ்வளவு விவரங்களுடன் வேறு ஒரு நாவல் வந்திருக்குமா என்பது சந்தேகமே.
கொல்கத்தாவிலிருந்து மருத்துவ சேவை செய்ய தெக்கோடு கிராமம் வரும் ஏலன் பவார் ஆரம்பத்தில் மக்களின் நம்பிக்கையைப் போராட வேண்டியிருந்தது.நவீன மருத்துவம் விஞ்ஞானத்தின் நீட்சியாதலால் மத நம்பிக்கைகளுக்கும்,பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் எதிரானதாகவே இருக்கிறது.எனவே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அவ்வூரின் பாதிரியாரும் அவளது முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.
ஏலன் பவார் கல்கொத்தாவில் உள்ள தலைமைப் பாதிரியார் லகோம்பிற்கு எழுதும் கடிதங்கள் மதத்திற்கும் மருத்துவத்திற்கும் நடக்கும் முரணியக்கத்தைக் கவித்துவமாக வெளிப்படுத்துகின்றன.கரமசாவ் சகோதரர்களில் வரும் பாதிரி ஜோசிமாவுக்கும் அல்யோஷாவிற்கும் நடக்கும் உரையாடலை நினைவுபடுத்தும் செறிவு கொண்டது.ஏலன் பவார் கூறுகிறாள் “உண்மையில் மருத்துவத்தின் முதல் எதிரி மதம் தான். நோயைச் சொல்லித்தான் மனிதர்களை மதம் தன்வசம் இழுக்கிறது.இந்த பயத்தால்தான் அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள்”.
நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் கிருத்துவ மதம் நம் நாட்டில் பரவியதற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் ஒரு சில மிஷினரிகள் ஆரம்ப காலத்தில் நவீன மருத்துவம் பரவினால் மக்களிடம் கடவுள் மதம் மீது நம்பிக்கை குறைந்துவிடுமோ என்று அச்சப் பட்டனர் என்பதை பவார் விளக்குகிறாள். ஆனால் உண்மையான கிருத்துவரான லகோம்ப் மூலம் மருத்துவமும் ஆன்மீகம் ஒரே தளத்தில் இயங்குபவையே என்பதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
பாதிரி லகோம்பே கூறுகிறார் “மதம் என்ற மாளிகைக்கு நான்கு தூண்கள் அடிப்படையாக இருக்கின்றன.அதில் ஒன்று நோய்.மற்றது பசி.மூன்றாவது காமம்.நான்காவது அதிகாரம்.இந்த நான்கிலுருந்தும் உலகில் எந்த மதமும் விலக முடியாது.”
“நோயாளிகள் தன்னைப் பற்றிச் சொல்வதில் எப்போதும் பாதி அளவே உண்மையிருக்கிறது.அந்தப் பாதி உண்மைகளைக் கூட அவன் தன் வலி தாங்க முடியாமல்தான் சொல்கிறான்.”
எட்டூர் மண்டபத்திற்கு வரும் நோயாளிகளின் கதைகளும் அதற்கு அவர்களுக்குச் சேவை செய்யும் கொண்டலு அக்கா என்பவர் கூறும் பதில்களும்தான் கதையின் மைய ஓட்டமான நோய்மையைப் பற்றிய விவாதங்களாக இருக்கின்றன.உடல் மனத் தொடர்பு குறித்துத் தத்துவவாதிகள்,ஆன்மீகவாதிகள்,அறிவிலாளர்கள் என்று பலரும் விவாதித்துள்ளனர். நவீன மருத்துவம் மனதை உடலின் ஒரு அங்கமாக ஒரு பருப்பொருளாகப் பார்க்கிறது.இது தட்டையான பார்வையாக இருந்தாலும் உடல் மனத் தொடர்பு நோய் உருவாகுவதையும், நோயை எதிர்கொள்வதையும் விளக்குகிறது.ஒரே நோய் இருவருக்கு வந்தாலும் இருவரும் வேறு வேறானவர் என்பது மருத்துவத்தின் பால பாடம்.
நோயுற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான சில இயல்புகளைக் கதை படம் பிடிக்கிறது.நோயுற்றவர்கள் அனைவரது முகங்களும் ஒரே மாதிரி ஆகிவிடுகின்றதன;நாம் நோயுறும் போது அடுத்தவரோடு அதைப் பற்றிப் பேச விரும்புகிறோம்.மனதுக்குள் புதைந்த நினைவுகள் நோய்களாகின்றன;இதுபோன்ற கருத்தாக்கங்கள் எட்டூர் மண்டப விவாதங்களில் வெளிப்படுகின்றன.நோயுற்றவர்களும் உடன் இருப்பவர்களும் பரஸ்பரம் மற்றவரை வெறுக்கத் துவங்குகின்றனர்.
நோய்மை மனதின் சிக்கல்களிலிருந்து உருவாகுவதையும் ,அதை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் எதிர்கொள்வதையும் நோயுற்றவர் மீது சுற்றமும் சமூகமும் காட்டும் வெறுப்பையும் இந்தப் பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ் ரா.
ஒரு பறவைப் பார்வையில் சொன்னால் அழகர் சம்பந்தப்பட்ட பகுதிகள் ‘நாளை மற்றுமொரு நாளே’ வின் இருத்திலியல் பார்வையைப் போன்றும், ஏலன் பொவார் வரும் பகுதி ‘கரம்சாவ் சகோதரர்களின்’ தத்துவ விவாதப் பகுதி போன்றும், எட்டூர் மண்டபப் பகுதி ‘பசித்த மானுடம்’ போல் நோயுற்றவர்களின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சித்தரிப்பதாகவும் அமைந்திருக்கிறது.தெக்கோடு என்னும் முடிச்சில் இம்மூன்று சரடுகளும் இணைகின்றன.
நோய்மையின் வரலாற்று சமூக உளவியல் கூறுகளைத் தன் கவித்துவ மொழி மூலம் அழியாத பதிவாக்குகிறார்.தீவிரத் தளத்தில் இயங்கும் இந்நாவலில் சில இடங்களில் பாத்திரங்கள் இயல்பு மொழியன்றிச் செந்தமிழில் பேசுவது சற்று ஒட்டாமல் இருக்கிறது எனினும் அங்கு ஆசிரியரின் குரலே ஒலிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நோயை அறிந்து கொள்வதை விட நோயாளியைப் புரிந்து கொள்வது முக்கியம்.இந்த நாவலை மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.மருத்துவர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் .ஆனால் அவர்களது வாசிப்புப் பழக்கம் குறித்து அறிந்தவர்களுக்கு அது ஒரு இன்பக்கனவே என்று புரியும்.
(துயில்: உயிர்மை வெளியீடு; 527 பக்கங்கள்; விலை ரூ.350)
சிலிக்கான் கடவுள் - அறிவியல் எழுத்துக்கான திறவுகோல் ரா.கிரிதரன் | இதழ் 48 | 24-04-2011
சொல்வனம் இதழ் மூலமாக ராமன் ராஜாவின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. முதலில் ஒரு மன விலக்கத்துடனேயே இவரது கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்பகாலத்திலிருந்தே தமிழில் அறிவியல் கட்டுரைகள் மேலோட்டமாக மட்டுமே எழுதப்பட்டு வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அறிவியல் கட்டுரைகளை பிரபல இதழ்களில் அறிமுகப்படுத்திய சுஜாதாவைத் தவிர பெரும்பான்மையானவர் அறிமுக வாசலைத் தாண்டவில்லை. ’தலைமைச்
செயலகம்’, ‘கற்பனைக்கும் அப்பால்’, ‘கடவுள் இருக்கிறாரா?’ போன்ற கட்டுரைத் தொகுப்புகள் அறிவியல் எழுத்துக்கு மிகக் கச்சிதமான மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அவர் ஆழமாகப் பயணிக்க அச்சு இதழ்கள் நேரம்/இடம் வழங்கவில்லை. இதனாலேயே, சுஜாதாவைப் பின் தொடர்ந்தவர்கள் எழுதிய கட்டுரைகள் தேவையான ஆழத்துக்குச் செல்லாமல் மிக மேலோட்டமான அறிமுகத்துடன் நின்றுவிட்டன.
‘அறிமுகம்’ எனச் சொல்லும்போது - ஓரளவு ஆங்கில வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் அதே அறிவியல் கருத்துகளைச் சுலபமாகவும், மேலும் ஆழத்துடனும் ஆங்கிலக் கட்டுரைகள் வழியே சென்றடைய முடியும் - என அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். மேலும் ‘மேலோட்டமானது’ எனச் சொல்லும் போது - பல கட்டுரைகளில் அறிவியல் முடிவுகளை முன்னிறுத்துவதில் இருக்கும் முனைப்பு, அறிவியல் எனும் முறைமை (Methodology) விளக்குவதில் தெரிவதில்லை - எனப் புரிந்துகொள்ளலாம்.
திண்ணை இதழில் எழுதிக்கொண்டிருக்கும் சி.ஜெயபாரதன் அறிவியல் முறைமையைப் பிரதானமாக தன் கட்டுரைகளில் முன்னிறுத்துபவர். உதாரணத்துக்கு, அணுசக்தி பற்றி எழுதும் போது, அவரது கட்டுரையின் மையம் அணுசக்தி தொழில்நுட்பத்துக்கு பின்னால் இருக்கும் அறிவியலை முன்வைக்கிறது. இதனால் இத்துறை சார்ந்த ஆர்வம் மற்றும் அடிப்படை அறிவியல் ஞானம் கொண்ட வாசகனை இவ்வகை எழுத்து அதிகமாக ஈர்க்கும். அறிவியல் முறைமையைத் தெரிந்து கொள்ள விழையும் வாசகன் இவ்வகை எழுத்துக்குள் ஓர் நுழைவைக் கண்டடைவான். அறிவியலில் ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகன் இவ்வகை எழுத்தைப் புரிந்து கொள்ள இயலாது.
தமிழில் அறிவியல் கட்டுரைகள் என இதுவரை வெளிவந்தவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று புரியும். அவை பொதுவாக, எளிமையான அறிவியல் முடிவுகளைக் கொண்ட விளக்கக் கட்டுரைகள் அல்லது ஆராய்ச்சியாளனின் ஆய்வுக்கட்டுரை போன்று ஆழமான அலசல்களுடன் படிப்பவர்களின் கடின உழைப்பை கோரும் கட்டுரைகளாக இருக்கும். ராமன் ராஜாவின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிக்கும் வரை, நான் படித்த தமிழ் அறிவியல் கட்டுரைகள் இந்த இரு எல்லைகளுக்குள்ளே ஊசலாடிக்கொண்டிருந்தன.
இவ்விரண்டு எல்லைகளை இணைப்பது இன்றைய துறைசார் எழுத்தின் மிகப் பெரிய சவாலாகும். எழுதும் கருத்துகள் இலகுவான மொழியில் , துறை சார்ந்த சொல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி தெளிவாக இருக்க வேண்டும். அதே சமயம் குறிப்பிட்ட அறிவுசார் துறையின் முறைமையையும் ஓரளவு விவரிக்க வேண்டும். மிக ஆழமான விளக்கங்களுக்குள் செல்லும் அறிவியல் முறைமை, நம் பள்ளி /கல்லூரி அறிவியல் பாடபுத்தகங்கள் போல் தட்டையாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதே சமயம், மிக சுவாரஸ்யமாக எழுதும்போது கட்டுரையின் மையக் கருத்து நூலறுந்த காற்றாடி போல் பறந்துவிடுகிறது.
சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் ராமன் ராஜாவின் அறிவியல் கட்டுரைகளை ‘சிலிக்கான் கடவுள்‘ எனச் சரியாகப் பெயரிட்டுள்ளார்கள். இப்புத்தகத்தின் கட்டுரைகளைப் பல தலைப்புகளாகப் பிரித்திருந்தாலும், அனைத்தையும் இவ்வுலகில் மனித உயிர் நீட்டிப்புக்கான/உருவாக்கத்துக்கான முயற்சிகள் என்ற பகுப்புக்குள் அடக்கிவிடலாம். கொஞ்சம் சில்லறைக்காக குட்டிக்கரணம் போடும் குரங்கு போல் தன இனப் பாதுகாப்புக்காக மனிதன் செய்யும் ஆராய்ச்சிகளை, அபாயங்களை பல கட்டுரைகள் வழியாக ராமன் ராஜா விவரிக்கிறார்.
ராமன் ராஜாவின் கட்டுரையைப் படிக்கத் தொடங்கும் எவரும் அவரது சிக்கலில்லாத மொழிக்கு ரசிகராக மாறிவிடுவர். எளிமையான மொழி என்பதைத் தாண்டி அவர் உபயோகப்படுத்தும் பிரயோகங்கள், சொல்ல வரும் அறிவியல் கருத்துக்குத் தேவையான கச்சித மொழியாக எனக்குத் தோன்றுகிறது. தூய தமிழில் சொல்லவேண்டிய அவசியத்தைப் பலரும் வற்புறுத்தினாலும், தேவையான இடங்களில் எல்லாருக்கும் புரியக்கூடிய சரியான வார்த்தையை, அவை ஆங்கிலத்தில் இருந்தாலும், பயன்படுத்த இவர் தயங்குவதில்லை.
குறிப்பாக ஆங்கில மூலக் கட்டுரையிலிருந்து எழுதும்போது தமிழ் வாசகர்களுக்கேற்ற வகையில் உதாரணங்களையும், தொடர்புறுத்துல்களையும் உறுத்தல் இல்லாமல் சொல்வது இவரது பலம். கட்டுரைகளிலிருந்து பல உதாரணங்களைத் தரலாம். அவை இவ்விதழ் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் என்ற பயத்தால், சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
‘ஆட்டையும் மாட்டையும் கொல்லாமல் ஆம்பூர் ஃபாக்டரியில் தயாரித்த சுத்த சைவ மட்டன் பிரியாணி என்றால், அருட் பிரகாச வள்ளலார் கூட ஆட்சேபிக்க நியாயமில்லை.’ - டிஷ்யூ எஞ்சினியரிங் பற்றி ‘எந்த கடையில் வாங்கிய மூக்கு?’ கட்டுரையிலிருந்து.
’இது எபிஜெனடிக்ஸின் நூற்றாண்டு. காட்டாங்குளத்தூர் கல்லூரி ஒன்றில் உங்கள் மகன் அல்லது மகளை எபிஜெனடிக்ஸ் பிரிவில் படிக்க வைக்க சீட்டுக்கு முந்துங்கள்.’ -எபிஜெனடிக்ஸ் பற்றி ‘நார்ப்பாட்டனும், நம்ம பாட்டனும்’ கட்டுரையிலிருந்து.
ஆழ்கடல் முதல் சிறு தேனீக்கள் வரை சுயலாபத்துக்காக ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதன் இயற்கையின் மேல் நடத்தும் வன்முறையை வருத்தத்துடன் விவரிக்கிறார் ராமன் ராஜா. இதை சாக்காகக் கொண்டு ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களை இவர் கட்டுரைகள் முன் வைப்பதில்லை. தவறான வழியில் செல்லும் சிறுவனுக்கு ‘ஏண்டாப்பா இப்படி செய்யறே?’ என கண்டிக்கும் அறிவுரைகளை வழங்கும் ‘பெரிசு’ பட்டத்துக்கும் இவர் போட்டி போடவில்லை. இயல்பாக ஒலிக்கும் நகைச்சுவையைக் கலந்து மனிதன் செய்யும் முயற்சிகளை கரிசனத்தோடு எழுதுகிறார். இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சமாக இதைப் பார்க்கிறேன்.
நவீன மருத்துவம் பற்றிய கட்டுரைகள் இக்காலகட்டத்துக்கு மிக முக்கியமானவை. மருந்து நிறுவனங்கள், உலகளாவிய மருந்துச் சந்தை, புதிய மருந்து ஆராய்ச்சிக்காக மனித எலிகளாக மாறும் மூன்றாம் உலகு மனிதர்கள், உலக நல நிறுவனங்கள் போன்றவர்கள் பின்னிய வலைக்குள் நம் அன்றாட மருத்துவ உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது. நடமாடும் மருத்துவர் போல் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து வித மாத்திரைகளின் உபயோகங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இதை அறிவு விருத்தியாகக் கருத முடியுமா? தினம் வெளியாகும் மருத்துவச் செய்திகள் நம் உளவியலை பாதிக்கின்றன என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சோகம். உடல் மற்றும் மனம் இணைந்து சமாளிக்க வேண்டிய வியாதிகளை மருந்து உட்கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது என ‘மருந்து இருந்தால் சொல்லுங்கள்‘ கட்டுரையில் மிக நயமாக விளக்குகிறார்.
பரிணாமம் பற்றி இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை மேலும் விரிவாகத் தனிப் புத்தகமாக ராமன் ராஜா உருவாக்க வேண்டும். அத்தனையும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. மரபீனி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மனிதனின் அடுத்த பரிணாமச் சூழல் போன்றவற்றை ஒரு தனித்த அறிவியல் கருத்தாக்கமாக மட்டும் பாராமல், ஒரு விரிவான சமூக மாற்றமாக இவர் முன்வைக்கிறார். அறிவியல் உலகில் நாளை நடக்கும் மாற்றங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டும் நடக்கப்போகும் விஷயமில்லை. அவை கூடத்துக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் மாற்றப் போகின்றன. மூன்று கைகள், நான்கு காதுகள் போல் கண்கூடாகத் தெரியாவிட்டாலும், நம் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஏற்கனவே இவ்வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. நவீன தொழில்நுட்பம் மூலம் சுருங்கப் பேசுவது (ட்விட்டர்), சுருக்கமாக விஷயத்தை உள்வாங்குவது (ஒரு பக்க/அரை பக்க கேப்சூல் கதைகள்), சிதறுண்ட கவனத்தை பல திசைகளிலும் மேலோட்டமாக மேய விடுவது போன்றவை மனிதன் 2.0- வின் அடுத்த கட்ட வளர்ச்சி என விவரிக்கிறார். குறைந்த சதவிகித மக்கள் மட்டுமே இணைய அடிமைகளாக மாறியிருந்தாலும், சமூகத்தின் இந்த முக்கியமான மாற்றத்தை முன்னகர்த்தும் காரணியாக இச்சிறு கூட்டம் இருக்கப் போகிறது எனும் பயம் நமக்கு எழாமல் இல்லை. இப்படிப்பட்ட மனிதனை Pancake மனிதர்களாக ரிச்சர்ட் போர்மேன் விவரிக்கிறார்.
ராமன் ராஜாவின் அக்கறை அறிவியலைத் தாண்டி அறிவுசார் துறைகளிலும் பரவியிருக்கிறது. சமூகவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், உளவியல் என அன்றாட அறிவியல் அவியலாக மாறிவருவதால் அதை ஒரு தனிக்கூறாக இனி பார்க்க முடியாது என விளக்குகிறார். முக்கியமாக நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி, கொள்முதல், சம்பாத்தியம் போன்ற திட்டவட்டத் தரவுகளைக் கொண்டு அளப்பதொடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமும் அது அளக்கப்படலாம் என்பதை ‘பளிச்சென்று எரிந்த பொருளாதாரம் ‘ கட்டுரையில் அழகாக விவரிக்கிறார். செயற்கைக் கோள்கள் மூலமாக ஒரு நாட்டின் மேல் படர்ந்திருக்கும் இரவு வெளிச்சத்தின் பரவலைக் கொண்டு பொருளாதாரத்தின் வளர்ச்சி/வீழ்ச்சியை கணக்கிடலாம். இதை ஒரு கறாரான அறிவியலாகக் கருத முடியாது எனினும், ஒரு சமூகம் பணத்தில் திளைப்பதை இவ்வெளிச்சத்தைக் கொண்டு அளக்கலாம் என்பது மிக முக்கியமான சமூகவியல் தரவாக மாறுகிறது.
இப்புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் சமூக அறிவியல் எனும் அறிவுத்துறைக்குள் பலமாக ஊடுருவியுள்ளன. எந்த திசையில் பாய்ச்சலை நிகழ்த்தும் என்ற ஆர்வத்தைத் தாண்டி, எதிர்கால அறிவியலால் மனிதனுக்கு உண்டாகும் சாதகம்/பாதகம் பற்றிய கரிசனம் ராமன் ராஜாவின் கட்டுரைகளில் துருத்திக்கொண்டிருக்கிறது. எதிர்கால மனிதன் எப்படிப்பட்டவன், தொழில்நுட்பத்தால் உந்தப்படும் மனிதனின் மனம் நிகழ்த்தும் பாய்ச்சல் எப்படிப்பட்டது, ஊடகம் முன் வைக்கும் அன்றாட அறிவியல் எப்படிப்பட்ட விளைவை உண்டுசெய்யும் என்பதே அவர் எடுத்தாளும் மையக் கருவாக இருக்கிறது. இதனாலேயே இக்கட்டுரைகளை சமூக அறிவியல் எனப் பகுத்துவிடலாம்.
இணைப்புகளாக இக்கட்டுரைகளின் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. The Scientist, Seed Magazine போன்ற இதழ்களின் மூலக் கட்டுரையிலிருந்து அறிவியல் செய்திகளை நமக்கு புரியும் விதத்தில் ராமன் ராஜா அழகாக எழுதியுள்ளார். முக்கியமாக அவரது நகைச்சுவை உணர்வு மூலம் சிக்கலான கருத்துகளை எளிமையாக விளக்கிவிடுகிறார். இக்கட்டுரைகளின் ஆகப்பெரிய பலமாக அவரது மொழி இயங்கியுள்ளது. எளிமை என்பதை மேலோட்டம் என தப்பர்த்தம் செய்துகொள்ளாமல், அறிவியல் கட்டுரைக்கு தேவையான வார்த்தை பிரயோகங்களும், பல அர்த்தங்களுக்கு சாத்தியப்படாத கச்சிதமான சொற்தொடர்களாலும் இவை சிறப்பாக அமைந்துள்ளது.
அறிவியல் கட்டுரைகளுக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக ‘சிலிக்கான் கடவுள்’ அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தீவிரமான அறிவியல் சவாலை முன்வைத்திருப்பது, இலகுவான மொழியில் ஹாஸ்யமாக வழுக்கும் நடை , தேவையான அளவு அறிவியல் முறைமையை எளிமைப்படுத்தாமல் முன்வைத்திருப்பது போன்றவை இப்புத்தகத்தின் வெற்றிக்கான காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது. இதில் மூன்றாவது காரணம் மிக முக்கியமானதும், இதுவரை எழுதப்பட்ட தமிழ் அறிவியல் கட்டுரைகளில் அரிதாகக் காணப்பெற்றதுமாகும். இக்கலவையினால் இதுவரை அறிவியல் கட்டுரைகளாக அறியப்பட்டு வந்த கட்டுமானத்தை மேலும் செறிவாக ராமன் ராஜா மாற்றியிருக்கிறார். தமிழின் நவீன அறிவியல் எழுத்தாக அறியப்பட்ட சுஜாதாவின் கட்டுரைகளையும் இக்காரணங்களால் பல இடங்களில் இவை விஞ்சி நிற்கின்றன.
அறிவியல் முறைமையும் எளிமையான விவரணைகளும் இரு தண்டவாளங்கள் போன்றவை; ஒன்றாகப் பயணம் செய்ய முடியாதவை எனும் கோட்பாட்டை சர்வ சாதாரணமாக ராமன் ராஜா தாண்டியுள்ளார். அறிவுசார் முறைமைகளை விளக்கும்போது அத்துறை சார்த்த மொழிக் களஞ்சியம் கைகூட வேண்டும். மேலும் மிகவும் தட்டையான பாட புஸ்தக நடையில் இல்லாமல், நம் சிந்தனைக்கு சவால் விடும் விதத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இக்கட்டுரைகளில் மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ’பூச்சி உலகில் மர்ம மரணங்கள்’ மற்றும் ’எண்ணெய்ச் சிதறல்கள் பற்றி: சில எண்ணச் சிதறல்கள்’. இதுவரை தமிழில் அறிவியல் கட்டுரைகள் கண்டிராத பாய்ச்சல் இது; ஒரு விதத்தில் தமிழ் அறிவியல் கட்டுரைகளுக்கான சரியான ஆரம்பத் திறவுகோலே இக்கட்டுரைகள்.
மேலும், இப்புத்தகத்தில் முக்கியமானதாக நான் கருதுவது ரா.ரா என்ற பெயரில் ராமன் ராஜா உருவாக்கிய அமெச்சூர் கார்டூன்கள். பத்து வரிகளில் சொல்வதை பப்லுவின் அதிகப்பிரசங்கித்தனக் குறும்புகள் மூலம் ஒரே படத்தில் சொல்லிவிடுகிறார். தன் வீட்டிலுள்ள பப்லுவே இதன் வெற்றிக்குக் காரணம் எனச் சொன்னாலும், இன்றும் ராமன் ராஜா பப்லு போன்ற inquisitive குறும்பராகவே இருப்பார் என கட்டுரை படிக்கும்போது தோன்றியது.
சொல்வனம் புத்தக பிரசுரத்தில் நுழைந்ததை மிக அவசியமான ஒன்றாகக் கருதுகிறேன். இணைய வசதி இல்லாத வாசகர்களுக்கு இக்கட்டுரைகளை முனைப்போடு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சொல்வனம் தீவிரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. சொல்வனம் போன்ற இணைய இதழ், ஊடகத் தொழில்நுட்பத்தின் மூலம் வாசகர்களுக்கு மேலும் பல தகவல்களைக் காணொளி மற்றும் ஒலித்துண்டுகள் வழியாகக் கொண்டு செல்கிறது. அச்சு ஊடகத்தில் அவற்றை இணைக்க முடியாது என்ற குறை இருந்தாலும், சுட்டிகள் தருவதன் மூலம் வாய்ப்பு கிடைப்பவர்கள் மேல் தகவல்களுக்காக அவற்றை சென்றடைய வசதி செய்திருக்கிறது. அல்லது முன்னுரையில் ராமன் ராஜா கூறியிருப்பது போல் Tabletஇல் படித்துக்கொள்ளலாம்.
சொல்வனம் இதழின் ஆரம்ப காலத்திலிருந்து தீவிர வாசகனாகத் தொடர்ந்து படித்து வருவதால், அதன் வளர்ச்சிப் போக்கை ஆவல் கலந்த பிரமிப்புடன் பார்த்து நெகிழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு நிமிடமும் வாசிப்பு, புத்தகங்கள் என விழித்திருந்து அறிவுத்தேடலில் இருக்கும் இக்குழு, அறிவுப் பரவலுக்காகத் தரமான அறிவியல் கட்டுரைகளைத் தருவதில் குழந்தைத்தனமான குதூகலத்தோடு ஈடுபட்டு வருவதை ஒவ்வொரு இதழிலும் கண்டு வருகிறேன். அருண் நரசிம்மன், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஜாம்பவான்களின் அறிவியல் கட்டுரைகளும் இதற்கு மிகப் பெரியச் சான்றாகும். இவர்கள் அறிவியல் பற்றி மட்டும் எழுதுவதில்லை. பல் துறை ஈடுபாட்டோடு, அன்றாட வாழ்வின் ஈடுபாடுகளையும் தரையில் கால் ஊன்றித் தருவதால் இவர்களது கட்டுரைகள் பேராசிரியர் சொற்பொழிவாக இல்லாமல் நண்பர்களுடனான உரையாடல் போல் அமைகின்றன. வான் குடைக்குக் கீழே இருக்கும் சகலத்திலும் ஆர்வம் கொண்டுள்ள சொல்வனம் குழு உருவாக்கியிருக்கும் பிரசுர பிஞ்சுக் கால்கள் இதழியல், இலக்கியம், கலை மேம்பாடு என சரியான திசையில் பயணித்துவருகிறது. களைப்படையாமல் மேலும் பயணிக்க வேண்டும் என நண்பர்களை வாழ்த்துகிறேன். சொல்வனம் இதழ் உருவாக்குவதிலேயே அவர்கள் ஊக்கம் பெறுவதால், தனியாக ஊக்க மருந்து தேவையில்லாததாகிறது.
இப்புத்தகத்தில் அமைந்திருக்கும் கட்டுரைகளை ராமன் ராஜா மேலும் விரித்தெடுக்க வேண்டும் என அவரது வாசகனாக விண்ணப்பம் வைக்கிறேன். தமிழில் அறிவியல் கட்டுரைகளுக்கான சிறந்த வகை மாதிரியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
‘சிலிக்கான் கடவுள் ’ புத்தகத்தில் இணையத்தில் இங்கே வாங்கலாம்.
சொல்வனம் பிரசுரம் புத்தகங்களான தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் புத்தகங்கள் விற்பனையாகும் கடைகள் விவரங்களை இங்கே படிக்கலாம்.
புத்தக விமர்சனம் பத்திரிகை சினிமா என் பயணம் விலை : ரூ.60
எழுத்தாளர் : ஆர்.எஸ்.அந்தணன்
பதிப்பகம் : தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம்
அது பெரிய ரோதனைங்க....
ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரே பூ பூத்துச்சாம்....
செட்டியார் வீட்டு பிள்ளையாக இருந்தாலும், வட்டிக்கணக்கு பார்க்காமல் விளையாடும் சிறு பிராய விளையாட்டு இது. ஒரு குடம் தண்ணிக்கு ஒரு பூ நியாயமா? குறைந்தது ஐந்து பூக்களாவது பூத்தால்தானே கணக்கு டேலி ஆகும் என்றெல்லாம் மனக்கணக்கு போட அது கரப்ட் ஆகும் வயசில்லை.
நான் சின்னவனாக இருந்த போது விளையாடிய இந்த விளையாட்டைதான் 2006 ன் முற்பகுதியில் விளையாடினேன். ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு லட்சம் பூ பறிக்கலாமே என்ற பேராசை! படம் எடுக்க போனேன். குடம் குடமாக நிரப்பிக் கொண்டிருக்கிறேன் இன்னும். தோள் வலியும் மார் வலியும்தான் மிச்சம். பறிக்கலாம் என்று நான் கனவு கண்டு கொண்டிருந்த அந்த பூ? அட ஃபூ....
ஒரு டார்ட்டாய்ஸ் பேக்டரியையே சுற்றி விட்டாலும் என் சினிமா பிளாஷ் பேக் அவ்வளவு எளிதில் முடியாது. அதை எப்படி இரண்டு பக்கங்களில் சொல்வது?
எங்கே ஆரம்பிக்கலாம்? ஆங்... நான் ஸ்ரீகாந்திடம் சேர்ந்த நாளில் இருந்தே ஆரம்பிக்கலாம். ஒரு பேட்டிக்காக போயிருந்தேன் அவர் வீட்டுக்கு. தண்ணி... ஜுஸ்... காபி... என்று சிறு மெனுவில் துவங்கி, இருந்து சாப்பிட்டுதான் போகணும் என்கிற அளவில் முடிந்தது முதல் சந்திப்பே. அப்புறம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். ரோஜா கூட்டம் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருந்த நேரம் அது. அவருக்கும் முதல் படம்.
திடீரென்று தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் முட்டிக் கொண்டது. இத்தனைக்கும் மிக எளிமையானவர் டைரக்டர் சசி. அவருக்கே கோபம் வந்திருக்கிறது என்றால்? என்ன நடந்திருக்கும் என்பதையெல்லாம் யூகிக்க தெரியவில்லை ஸ்ரீகாந்துக்கு. சார் படம் நின்னுடுச்சு என்றார் கர்சீப்பால் முகத்தை மூடிக் கொண்டு. ஒரு நிமிஷம் மவுனம். டைரக்டரை பார்த்தீங்களா என்றேன். அவரை போய் பார்த்தா ரவி சார்(தயாரிப்பாளர்) கோச்சிப்பாரு என்றார் ஸ்ரீகாந்த். சரி இவரையாவது போய் பார்த்தீங்களா என்றேன். டைரக்டர் கோச்சிப்பாரே...? இது அவரது பதில்.
என்ன சார் நீங்க? பணம் போடுற ஆள்தான் முக்கியம். முதல்ல அவரை பாருங்க. எதுவா இருந்தாலும் அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்கிறன்னு சொல்லுங்க. இந்த படத்துலதான் என் லைப் இருக்குன்னு காலில் விழுங்க என்றேன். அப்படியா சொல்றீங்க என்றவர், அடுத்த நிமிடம் என்னையும் அழைத்துக் கொண்டு ஆஸ்கர் பிலிம்சுக்கு தயங்கி தயங்கி சென்றார். நான் நினைத்ததுதான் நடந்தது. உனக்காக இந்த படத்தை திரும்ப ஆரம்பிக்கிறேன் என்றார் ரவி சார்.
அன்றிலிருந்து நான் ஸ்ரீகாந்தின் குடும்பத்தில் ஒருவன் ஆனேன். எந்த விஷயமாக இருந்தாலும் என்னை கேட்காமல் நடக்காது என்கிற அளவுக்கு அன்பை பொழிந்தது மொத்த குடும்பமும். நானும் வளர்ந்தேன். அவர்களும் வளர்ந்தார்கள். எல்லாவற்றையும் கெடுத்தது நான் ஆரம்பத்தில் சொன்னேனே... அந்த பேராசைதான்.
முத்துராமலிங்கம் முன்னாள் பத்திரிகையாளர். அப்புறம் பாலாவிடம் இருந்தார். பின்பு ஸ்ரீகாந்திடம் வந்து சேர்ந்தார். ஆலோசனைக்கும் தயாரிப்பு உறுதுணைக்கும் அவரை வைத்துக் கொண்டு பிள்ளையார் சுழியை போட்டேன். ஏங்க... எஸ்.எஸ்.ஸ்டான்லியை டைரக்டரா போட்டுறலாம். அவரு ஒரு குட்டி கே.எஸ்.ரவிகுமார். இருக்கிற பணத்துல படத்தை எடுத்து தருவார். கமர்ஷியல் டைரக்டர். நமக்கு சின்ன சங்கடம் கூட தர மாட்டார் என்றார் முத்துராமலிங்கம்.
கதைய கேட்டுரலாமே?
தேவையே இல்லைங்க. ஏன்னா ஸ்கிரிப்டை புத்தகமா ரெடி பண்ணி நம்ம கையில கொடுத்துட்டுதான் ஷ§ட்டிங்கே போவார். அதுமட்டுமில்ல, இந்த கதையின் நாட் ஸ்ரீகாந்திடம் ஏற்கனவே சொல்லிட்டார். அவரும் கேட்டுட்டு இது என்னோட முதல் படமா வந்திருந்தா என் லைஃப்பே வேறயா இருந்திருக்கும்னு சொல்லிட்டார். அதனால் இப்ப மற்ற வேலைகளை பார்ப்போம் என்றார்.
ஜரூராக அடுத்தடுத்த வேலைகளை பார்த்தோம். அட்வான்ஸ் லொட்டு லொஸ்கு என்று இருபத்தைந்து லட்சம் நான்கே நாட்களில் கரைந்தது. இடையில், டைரக்டர் சார் கதையை மெருகேத்தணும். அதனால் எங்கயாவது ரூம் போட்டு கொடுத்திங்கன்னா அவருக்கு சவுரியமா இருக்குமே என்றார் அசோசியேட். லீக் கிளப்பில் சூட் போட்டோம்.
பதினைந்து நாட்கள் ஓடியது. டைரக்டரிடம் கதையை கேட்டுடலாமே? உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டேயிருக்க, வலுக்கட்டாயமாக கதை சொல்லுங்க சார் என்றேன் போனில். நேர்ல வாங்க. ரெடியா இருக்கேன் என்றார். ஆவலோடு ஓடினோம். ஒரு மணி நேரம் போனது. அவர் கதையை சொல்லி முடித்த போது நான் பேட்டரி இறங்கி பேஸ்த் அடித்து போயிருந்தேன்.
தனியாக முத்துராமலிங்கத்தை அழைத்து, ஏங்க. ஸ்டான்லிக்கு ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கோம். போனா போகட்டும். நம்ம வேற டைரக்டரை பார்க்கலாம் என்றேன்.
அதெப்படிங்க, முடியவே முடியாது. இந்த புராஜக்ட்ல நான் இருக்கணும்னா ஸ்டான்லியும் இருந்தாகணும். இல்லைன்னா என்னைய விட்ருங்க. முறுக்கிக் கொண்டு கிளம்பினார் முத்து. என்ன சொல்ல வர்றேன்னா... நான் இழுக்க, இதுதான் என் முடிவு என்றார் கறாராக. பாலாவிடம் இருந்தவர். பட வியாபாரங்களில் அனுபவப்பட்டவர் என்பதால் இவரை விடுவதா, அவரை விடுவதா என்ற குழப்பம் எனக்கு. கடைசியில் முத்துராமலிங்கமே வென்றார். படத்தை துவங்கினோம்.
முதல் பத்து நாள் ஷ§ட்டிங் நடந்தது. திடீரென்று ஒருநாள் ஸ்டான்லி என்னை தனியாக சந்தித்தார். சார்... முத்துராமலிங்கம் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா நான் ஷ§ட்டிங்குக்கு வர மாட்டேன் பார்த்துக்கோங்க என்றார். (இதாண்டா சினிமா) எனக்கு பேரதிர்ச்சி. முட்டிக் கொண்ட இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை. நான் ஊரெல்லாம் பேச்சு வாங்கினேன் ரிலீசுக்கு பிறகு. (இந்த எபிசோட் பெருங்காப்பியம் என்பதால் இதோடு நிற்க)
கட்டெறும்பை பிடிச்சு காதுல விட்ட குறையாக அதன்பின் ஸ்டான்லி கொடுத்த குடைச்சல்கள் என்னை அழவே வைத்துவிட்டது. முன்னணி சோப்பு நிறுவனம் ஒன்று எங்கள் படத்தில் இன்பிலிம் செய்ய ஆசைப்பட்டது. ஒரு சீனில் அந்த கம்பெனி சோப்பை குளோஸ் அப்பில் காண்பிக்க வேண்டும். ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் பாவனாவிடம் அந்த சோப்பை கொடுத்து அதன் பெயரை சொல்லி, இதை போட்டு குளிச்சிட்டு வா என்று சொல்ல வேண்டும். இப்படி செய்தால் ஐம்பது லட்சத்தை சுளையாக என் பாக்கெட்டில் வைப்பதாக சொன்னது சோப்பு கம்பெனி. 'ஹம்மாம்' பெரிய கம்பெனி. நம்மை தேடி வந்திருக்கிறார்களே என்ற பிரமிப்பு எனக்கு. அதைவிட பிரமிப்பு அந்த ஐம்பது லட்சம்.
பாண்டிச்சேரியில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஸ்டான்லியிடம், இப்படி ஒரு சீன் வச்சுருங்க சார். இன்பிலிம் வந்திருக்கு என்றேன். நான் என்ன விளம்பர படமா எடுக்கிறேன். முடியாது என்றார் முறைத்துக் கொண்டு. படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் கூட அதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் ஸ்டான்லியால் ஐம்பது லட்சம் அம்போவானது. இதுபோல் ஆயிரம் குடைச்சல்கள்.
படம் முடிவதற்குள் எனக்கும் ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கும் இடையே இருந்த அன்பை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்தார் ஸ்டான்லி. ஒரு கோடியே எண்பது லட்சத்தில் முடித்து தருவதாக சொன்ன படத்தை இரண்டு கோடியே முப்பத்தெட்டு லட்சத்திற்கு கொண்டு போனார். விழி பிதுங்கியது எனக்கு. அவருக்கு தர வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் சம்பள பாக்கிக்கு லேப் லெட்டர் வாங்கிக் கொண்டார். (அது என்ன என்பதை விளக்கினால் தனி ரோதனையாகிவிடும். சுருக்கமாக சொன்னால் தேள்கடி)
படத்தை ரிலீஸ் செய்ய திண்டாடிக் கொண்டிருந்தோம். பெட்டி வெளியேறுகிற நேரம் விநியோகஸ்தர்களுக்கு கோபம் வந்து ஸ்ரீகாந்த் வீட்டுக்கு படையெடுத்தார்கள். (அவருக்கு தர வேண்டிய பத்து லட்சத்திற்கு அவரும் ஒரு கிடுக்கிப் பிடி போட்டிருந்தார்) தள்ளுமுள்ளு ரகளைகளுக்கு பின் படம் வெளியானது. தன் வீட்டுக்கு வந்த விநியோகஸ்தர்களை து£ண்டி விட்டது நான்தான் என்று ஸ்ரீகாந்துக்கு உருவேற்றினார்கள் சிலர். அதையும் நம்பிய அவர் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கொலை முயற்சி வழக்கில் போலீஸ் வலைவீசியது.
எப்படியோ தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு என்னை உடல் சேதமில்லாமல் காப்பாற்றியதுடன் புகாரையும் வாபஸ் வாங்க வைத்தது.
படம் வெளியாகி முதல் ஷோவே 'இந்த படம் டப்பா...' என்று ரசிகர்களின் பாராட்டை பெற்றது ஸ்டான்லி செய்த மகா பாக்கியம்.
ஏங்க படம் எடுத்தது போதும். போய் ஏதாவது வேலைக்கு சேர்ந்தாதான் குடும்பம் நடத்த முடியும் என்றாள் மனைவி. மீண்டும் ரிப்போர்ட்டர் வேலை. அதற்குள் பத்து நாட்கள் முடிந்திருந்தது. சத்யம் திரையரங்கில் ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழா. நான் அமைதியாக சென்று நிருபர் பகுதியில் உட்கார்ந்திருந்தேன். கிழக்கு கடற்கரை சாலை 'வெற்றிப்பட' இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லியை மேடைக்கு அழைக்கிறோம் என்று அறிவித்தார்கள். உடம்பின் அத்தனை துவாரங்களில் இருந்தும் எனக்கு சிரிப்பு வந்தது.
படம் வெளியாகி ஐந்து வருஷங்கள் ஓடிவிட்டது. இப்பவும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஒன்றிரண்டு பூக்கிறது. அதுவே போதும், பெரிய நிம்மதி...
(பத்திரிகை-சினிமா-என் பயணம். பிரபலங்களின் அனுபவம் தொகுப்பில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரையிலிருந்து)
ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையின் போதுதான் ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை நானே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு வானதிகளை தேட ஆரம்பித்த காலம் அது (பி செக்ஷன் குமுதா வானதி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினாள்). அடுத்தடுத்து பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கியை கரைத்துக் குடிக்க ஆரம்பித்தேன்.
கல்கி தாகம் தீர்ந்தபோதுதான் சாண்டில்யனை நாடினேன். கடல்புறா, ராஜதிலகம், கன்னிமாடம், யவனராணி, இளையராணி, ராணா ஹமீர் என்று அடுத்தடுத்து வாசித்த அவரது நாவல்களால் கிறங்கிப் போனேன். பதலக்கூர் சீனிவாசலுவை துரோணராக ஏற்றுக்கொண்ட ஏகலைவன் என்பதால் எனக்கு சாண்டில்யனை இயல்பாகவே பிடித்துப் போனது. அந்த காலத்தில் குமுதத்தில் தொடர்கதை எழுதுவதற்காகவே, இவருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் சரித்திரப் புதினங்களின் சாதனை மன்ன்ன் சாண்டில்யன் என்று சொல்வதில் தவறேதுமில்லை. அவர் எழுதுவது இலக்கியமா, வெறும் செக்ஸ் கதைகளா என்று அந்த காலத்தில் பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்ததாம்.
யவனராணியின் முல்லைக்கொடி போன்ற இடை, மைவிழிச்செல்வியின் பரந்து விரிந்த மார்புகள், வாழைத்தொடைகள், அம்சமான தொப்புள்கள் என்று ஜில்பான்ஸாக எழுதும் சரித்திர எழுத்தாளர் அவர் என்பதாகவே எனது மனதில் பதிந்துப்போனார். சாண்டில்யனின் சுயசரிதையான ‘போராட்டங்கள்’ நூலினை கடந்த இரவில் வாசிக்கும் வரை.
இவ்வளவு எளிமையான மொழியில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை குமுதம் இதழில் இவர் தொடராக எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் எளிய, அசத்தலான தமிழ் இந்த இண்டர்நெட் யுகத்தில் கூட எனக்கு கைவரவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். வரிக்கு வரி இழையோடும் நகைச்சுவை, சுய எள்ளல், எதிர்க்கருத்து கொண்டோர் மீது மெல்லிய வன்மத்தோடு கூடிய நையாண்டி. சந்தேகமேயில்லை. சாண்டில்யன் ஒரு மன்னன்தான்.
சாண்டில்யன் என்றதுமே உங்கள் மனதுக்குள் எப்படியான ஒரு தோற்றம் கற்பனைக்கு வருகிறது?
கருத்த உயரமான கம்பீரத் தமிழ் தோற்றம். வெட்டறுவா மீசை. எதிரில் பேசுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்களது கழுத்துக்கு கீழேயே அலைபாயும் குறும்புக் கண்கள். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவரை அந்தக்காலத்தில் சந்திக்க வந்த சில கல்லூரி மாணவிகளும் இப்படியான கற்பனையிலேயே அவரை சந்திக்க வந்திருக்கலாம். அவர்கள் சந்தித்தது ஒரு அறுபத்தைந்து வயது கிழவரை. நெற்றியில் நாமம். வைணவப் பாரம்பரிய குடுமி. கீழே எட்டுமுழ வேட்டி. மேலே மூன்று முழத்துண்டு.
மாணவிகளில் ஒருவர் கேட்கிறார். “நீங்கள்தானா?”
சாண்டில்யன் சொல்கிறார். “ஆமாம். நானேதான்!”
திருக்கோயிலூரில் 1910ஆம் ஆண்டு, ராமானுஜம் அய்யங்கார் – பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த பாஷ்யம் அய்யங்காரை உங்களுக்கு தெரிந்திருக்காது. எனக்கும்தான். பிற்பாடு அவரைதான் சாண்டில்யனாக தமிழகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.
சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பாஷ்யம், திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லூரிப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்தில்தான் ராஜாஜியின் மூலமாக தேசிய எழுச்சி பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். 1929ல் இவருக்கும், ரங்கநாயகிக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அப்பா காசிலேயே கும்மியடித்ததை, சாண்டில்யன் பெருமையாகவும், நகைச்சுவையாகவும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
சோற்றுக்குப் பிரச்சினை இல்லை என்பதால் அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். 1930ல் சென்னை தி.நகரில் குடியேறுகிறார். விகடனில் பின்னி, பெடலெடுத்துக் கொண்டிருந்த கல்கி இவரது தெருக்காரர். திரு வி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்த சாமிநாத சர்மா இவரது இலக்கிய வெறிக்கு சோளப்பொறி ஆன நண்பர். இடையில் சும்மா இருந்த காலத்தில் இவரது அப்பா தமிழ்பயில, திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்கிற தமிழறிஞரிடம் சேர்த்து விட்டதாகவும் தெரிகிறது.
சாண்டில்யனின் முதல் கதையை வெளியிட்டவர் தந்தை பெரியாரின் நண்பரான தோழர் சுப்பிரமணியம். பார்ப்பனர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நீதிக்கட்சியின் பத்திரிகையான ‘திராவிடன்’ இதழில்தான் இவரது முதல்கதை ‘சாந்த சீலன்’ வெளியானது. காங்கிரசுக்கு ஆதரவான கதை. இந்த கதையை வெளியிட்டதால் தோழர் சுப்பிரமணியத்துக்கு வேலைபோனது தனி கிளைக்கதை.
பின்னர் சிறுகதைகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் அடுத்தடுத்து இவரது சிறுகதைகளை கல்கி வெளியிட, பாஷ்யம் அய்யங்கார் சாண்டில்யன் ஆனார். நவசக்தியில் சாமிநாத சர்மா மூலமாக கட்டுரைகளும் எழுதினார்.
இந்த கட்டத்தில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசனை ஒருநாள் சந்திக்கிறார்.
“என்ன செய்கிறாய்?”
“கதை எழுதுகிறேன். உங்கள் பேப்பரில் கூட எழுதியிருக்கிறேன்”
“அதில் எப்படி பிழைக்க முடியும்?”
“முடியாதுதான்”
“நீ கிராஜூவேட்டா?”
“இல்லை” (கல்லூரிப் படிப்பை சுதந்திரப் போராட்ட வெறியில் – ஐ மீன் உணர்வில் - முழுமையாக முடிக்கவில்லை என்று தெரிகிறது)
“உனக்கு வேலை தருகிறேன். குமாஸ்தா வேலை என்றால் 35 ரூபாய் சம்பளம். பத்திரிகையாளன் ஆக வேண்டுமானால் ஆறு மாதங்கள் சம்பளமின்றி பயிற்சியாளனாக வேலை பார்க்க வேண்டும். எது வேண்டும்?”
“பத்திரிகையாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்”
சாண்டில்யனின் ‘போராட்டம்’ தொடங்கிய நொடி அதுதான்.
அந்த காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் நிருபர்களின் சம்பளம் இருநூற்றி ஐம்பது ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தினமணியில் கூட அறுபது ரூபாய். ஆறு மாதம் அல்லாடியபிறகே சாண்டில்யனுக்கு முப்பத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.
ஆனால் ஒரு பத்திரிகையாளன் சம்பாதிப்பதை, உலகில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வேறு எவருமே சம்பாதிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அவன் சம்பாதிப்பது பணமல்ல. அனுபவம். நூறாண்டுகள் வாழும் சாதாரண ஒரு மனிதர் பெறும் அனுபவங்களை ஒரு பத்திரிகையாளன் நான்கைந்து ஆண்டுகளிலேயே பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பணியின் சிறப்பு (ஒழுங்காக வேலை பார்த்தால்).
சாண்டில்யனும் அனுபவங்களை சம்பாதிக்கிறார். மகாத்மா காந்தியை கூட சந்தித்து பேட்டி கண்ட புண்ணியம் அவருக்கு வாய்க்கிறது. யாரால் ஈர்க்கப்பட்டு, அரசியல் ஆர்வம் கொண்டாரோ, அதே ராஜாஜியை கட்டுரை எழுதி விளாசவும் அவர் தயாராகவே இருந்தார். கல்கியோடு கூட மோதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
1952ஆம் ஆண்டு சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜாஜி பேசுகிறார்.
“சினிமா பார்ப்பது அபாயகரமான படிப்பு. அதனால் புத்தி கெடுகிறது. உண்மை மறைகிறது. கொலை, கொள்ளை அதிகரிக்கிறது. அவ்வளவு ஏன்? ‘கம்யூனிஸம்’ கூட உண்டாகிறது”
இந்தக் கருத்துக்கு எதிராக சுதேசமித்திரன் வார இதழில் சாண்டில்யன் ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட கமல்ஹாசன் பாணி சிந்தனைகள் இவருடையது. சினிமா ஒரு தொழில்நுட்பம் அதை தவிர்க்க இயலாது. அதை நல்ல முறையில் மாற்ற வேண்டியதுதான் நமது கடமை என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார்.
ராஜாஜியையே எதிர்த்துவிட்டார் என்று சாண்டில்யன் மீது பலரும் பாய்ந்தார்கள். பிற்பாடு சாண்டில்யன்தான் வெல்கிறார். ஏனெனில் ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ கூட சினிமா ஆனது.
அதேநேரம் சாண்டில்யனும் சினிமா விமர்சனங்களில் ரொம்பவும் கறாராகவே இருந்திருக்கிறார். திராவிட கருத்தாக்கங்களை தாங்கி வந்த படங்களை இவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. கல்கி, அறிஞர் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அடைமொழியிட்டு அழைத்ததை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். ‘நாத்திகம்’ என்கிற சிந்தனையை சாண்டில்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக ‘கற்பு’ குறித்தான கற்பிதங்களை திராவிட எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும், சினிமாவிலும் உடைத்தெறிந்ததை எதிர்த்து பெரும் போராட்டத்தையே சாண்டில்யன் நிகழ்த்த வேண்டியதாக இருக்கிறது. டி.கே.எஸ். சகோதர்களின் ‘மனிதன்’ நாடகமாகவும், பிற்பாடு திரைப்படமாகவும் வந்தபோது ‘விபச்சாரக்கதை’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். நவகாளி யாத்திரையின் போது நாட்டில் ஏற்பட்ட வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு என்கிற உயரிய நோக்கத்தில் ‘மனிதன்’ உருவானாலும், பிறப்பிலேயே பிற்போக்காளராக பிறந்துவிட்ட சாண்டில்யனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரது போராட்டங்களை வாசிக்கும்போது, சாண்டில்யன் ஒரு கண்டிப்பான பார்ப்பன பிற்போக்காளராகவே வாழ்ந்திருக்கிறார் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.
சினிமா மீது சாண்டில்யனுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?
காரணம் இருக்கிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்றிக்கொண்டே திரைத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார் சாண்டில்யன். நிறைய டிஸ்கஷனில் கலந்துகொண்டிருக்கிறார். சுவர்க்க சீமா, என் வீடு ஆகிய படங்களில் திரைக்கதைப் பிரிவில் இவரது பங்களிப்பு நேரடியாகவே இருந்திருக்கிறது. தனது சினிமா அனுபவங்களை பிற்பாடு (1985) ‘சினிமா வளர்ந்த கதை’ என்கிற நூலில் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்.
சுதேசமித்திரனில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாதி சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் டைமில் பணிக்கு சேர்ந்தது, பின்னர் மீண்டும் சுதேசமித்திரனுக்கே வந்தது என்று பத்திரிகை அலுவலக அரசியல், சாண்டில்யனின் வாழ்க்கையை ஏற்றமும், இறக்கமும் ஆனதாக மாற்றியமைத்தது. இன்றைய தினப்பத்திரிகைகளின் வார இதழ்களுக்கான வடிவமைப்பை தமிழில் முதலில் உருவாக்கியவர் சாண்டில்யன்தான் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம். மகா த்ராபையாக வந்துக்கொண்டிருந்த ‘அனுபந்தம்’ என்று சொல்லக்கூடிய இதழுடன் இணைப்புகளை வாரமலராக்கி, மணம் வீச செய்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.
ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்ல. பத்திரிகையாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் என்று பலவிதங்களிலும் சாண்டில்யன் முன்னோடியாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணகான சபா கூட இவரது வீட்டு வராந்தாவில்தான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். உழைக்கும் பத்திரிகையாளருக்காக கடுமையாகப் போராடி பல சலுகைகளை வாங்கித்தந்த இவரால், எந்த சங்கத்திலும் கடைசிவரை நீடிக்கவே முடியவில்லை. நிறுவனர்களில் ஒருவராக பல சங்கங்களிலும் இவர் இருந்திருந்தாலும், பிற்பாடு வந்து இணைந்தவர்களோடு மோதி பாதியிலேயே வெளியேறிவிடுவது சாண்டில்யனின் ராசி. இவர் யாரிடமெல்லாம் மோதுகிறாரோ, அவர்களெல்லாம் சாண்டில்யனை மிகவும் மதித்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள் (மோதல்களுக்குப் பிறகும்) என்பதுதான் இங்கே குறிப்பிடத்தகுந்தது. கொள்கை வேறு, நட்பு வேறு, அபிமானம் வேறு என்று வாழ்ந்த கண்டிப்பான மனிதராகவே சாண்டில்யனை பார்க்க முடிகிறது.
விருதுகள் குறித்த கேலியான பார்வை சாண்டில்யனுக்கு உண்டு. விருது தகுதியானவர்களுக்கு போய் சேருகிறது என்றாலும், அவர்களது தகுதியற்ற படைப்புகளுக்குதான் கிடைக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ‘ஆளுக்குதான் பரிசே தவிர, நூலுக்கு பரிசில்லை’ என்று அழகான சொற்றொடரை இங்கே பயன்படுத்துகிறார். சாகித்ய அகாடமி தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்.
எழுபதுகளில் மலர்ந்த நவீன இலக்கியப் போக்கையும் சாண்டில்யனால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது அவருக்கு பிடிக்கவில்லை. விமர்சனம் என்கிற சொல்லையே திறனாய்வு என்று மாற்றியதை கூட குறைபட்டுக் கொள்கிறார்.
இந்நூல் குறிப்பாக பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டியது. எழுத்து மற்றும் அலுவலகப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இலகுவாக எடுக்கப்பட்ட பாடமாக இந்நூலை கருதலாம். பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் கூட ஒரு சுயமுன்னேற்ற நூலாக இந்நூலை வாசிக்கலாம். தவறேதுமில்லை. நல்லதொரு மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய கதைதான் சாண்டில்யனின் கதை.
சாண்டில்யன் உள்ளிட்ட 28 எழுத்தாளர்களின் எழுத்துகளை நாட்டுடமையாக்க 2009ல் கலைஞர் ஆணையிட்டார். அப்போது சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் இந்த ஆணையை கடுமையாக எதிர்த்தார்கள். நாட்டுடமைக்கு ஒத்துக்கொள்வது அவரவர் வாரிசுகளின் விருப்பம் என்று அரசு பல்டியடிக்க வேண்டியதாயிற்று. எனவே சாண்டில்யனின் வாரிசுகளும் அவரது எழுத்தை நாட்டுடமை ஆக்கவேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்.
போராட்டங்கள் என்கிற தலைப்பில் குமுதத்தில், 70களின் மத்தியில் இத்தொடர் எழுதும்போதே சாண்டில்யனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக கல்கி தரப்பிலிருந்தும், டி.கே.எஸ். வாரிசுகளின் தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளை நூலிலேயே கொஞ்சம் குசும்போடு பதிவு செய்திருக்கிறார் சாண்டில்யன். இத்தொடர் திடீரென முடிந்ததும் ஏராளமான வாசகர்கள் “ஏன் முடித்து விட்டீர்கள்?” என்று சாண்டில்யனுக்கு கடிதம் எழுதினார்கள். “இது முடியவில்லை. எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவகாசம் கிடைக்கும்போது மீண்டும் எழுதுவேன்” என்று பிற்சேர்க்கையில் சாண்டில்யன் குறிப்பிட்டிருக்கிறார். எழுதினாரா என்றுதான் தெரியவில்லை.
நூலின் பெயர் : போராட்டங்கள்.
ஆசிரியர் : சாண்டில்யன்
வெளியீடு : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
விலை ரூ.32.
Veera: ஏழாம் உலகம் - துயரங்களின் அணிவகுப்பு
ஒரு முன் குறிப்பு : இது “நான் கடவுள்” திரைப்படம் வெளிவருவதற்க்கு முன்னால் எழுதப்பட்டது.
இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன். அருகில் படுத்திருந்த என் மனைவி என்னை எதேச்சையாக கட்டியணைக்க என் உடல் நடுங்குவது கண்டு 'என்னங்க என்னாச்சு?' என்றாள். நான் தொடர்ந்து சில விசித்திரமான ஒலிகளை எழுப்பியபடி இருக்க அவள் மேலும் என்னை இறுக அணைக்க முற்பட்டாள். சற்று முன்பு முத்தம்மையைக் கூனன் அணையும் அந்த பயங்கர சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நான் ஆவேசமான மனஎழுச்சியுடன் விலகி, அவளைத் தள்ளிவிட்டு சட்டென்று எழுந்து அமர்ந்தேன். அது நாவலின் பாதிப்பு என்று என் மனைவிக்குத் தெரிந்த பிற்பாடுதான் ஆசுவாசம் அடைந்தாள். இவ்விதம் எனக்குள் ஆழ்ந்த அதிர்வை, சலனத்தை ஏற்படுத்திய இந்த நாவலைப் பற்றி யாருடனாவது பகிர்ந்து கொள்ளும் போது மட்டுமே என் மனநிலை சமநிலையாகும் என்பதால் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.
இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று நினைத்தாலே மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறேன். காரணம் ஏழாம் உலகத்தின் உக்கிரம் அப்படி.
இந்த நாவலை போத்திவேலுப் பண்டாரம் எனும் ஈனத்தொழில் புரியும் மனிதனைப் பற்றிய ஒரு வாழ்கைப் பதிவு என்று கொள்ளலாம். அல்லது மனித உடலுடன் நடமாடும் சில கொடூர மிருகங்களின் கைகளில் சிக்கிய, ஊனமுற்ற குறைப்பிறவிகள், பெரு நோயாளிகள் சொல்லெனாத் துயரங்களை அனுபவித்தபடி தங்கள் உயிரைத் தாங்கிக் கொண்டு அந்த மிருகங்களின் தொழிலுக்கு இரையாகிப் பின் மடிந்தொழியும் நிஜத்தைச் சீழ் வடிய, இரத்தம் கசிய, பீ வாடையடிக்கச் சொல்லும் இருண்ட தொகுப்பு என்றும் கொள்ளலாம்.
போத்திவேலுப் பண்டாரம் எனும் மனிதன் ஒரு கொடூரமான ஈனத் தொழிலைக் கூட ஆத்ம சுத்தியுடனும் அதற்கே உரிய நேர்மையுடனும் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு செய்யும் விதத்தையும், அவருடைய இயல்பான குடும்ப சூழ்நிலை, மகளின் திருமணம், குழந்தைகள் மேல் உள்ள பரிவு, தனிப்பட்ட ஆசாபாசங்கள், போன்ற வாழ்வியல் எதார்த்தங்களையும், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குறைப்பிறவிகளின் துன்பத்தையும் உடல் வேதனைகளையும் மனவேதனைகளையும் அவர்களின் சந்தோஷங்களையும் காதல், காமம், பாசம், நம்பிக்கைகள் போன்ற உணர்வுகளையும் முதலாளி விசுவாசம், ஜாதிய உணர்வு, மதஈடுபாடு போன்ற குணங்களையும் மற்றும் பல அமானுஷ்ய சூழ்நிலைகளையும் தனக்கே உரிய எழுத்து வன்மையால் காட்சிச் சித்திரமாக்கி நம் மனக்கண்முன் உலவ விடுகிறார் ஜெயமோகன்.
எந்த ஒரு கொடூரமான மனிதனுக்குள்ளும் இறை எனும் மாபெரும் ஆற்றல் பொதித்து வைத்திருக்கின்ற அறம் சார்ந்த அடிப்படைகளும் அவனுடைய சமூகம் அவனுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற ஒழுக்க விதிகளும் மனசாட்சியின் ரூபமாக இருந்து அவனுடைய செயல்களை அளவிடும் மாபெரும் உண்மையை ஒரு நட்சத்திர மிணுங்களில் உணர்த்தி, அந்த மிணுங்களைப் பண்டாரம் சந்திக்கத் திராணியல்லாமல் புறக்கணிப்பதில் கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட மனித மனத்தின் நிலையைத் துல்லியமாக்குகிறார் ஜெயமோகன்.
முத்தம்மையின் பிரசவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது அவர்களின் உடல் வேதனையும் மனவேதனையும். டெம்போவில் உயிருள்ள உடல்கள் அடுக்கப் படும்போது அவர்களின் பயணம் எப்படியிருக்கும் என்று நினைத்து ஒரு கணம் கண் மூடினேன். லாரிகளில் ஏற்றி மாடுகளையும் எருமைகளையும் கேரளாவுக்கு அடிக்கக் கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு, அவைகளின் வலியை எண்ணிக் கண்ணீர் விட்டு அழுதவன் நான். அப்படிப்பட்ட எனக்கு இந்த நாவலில் மனிதர்களே அப்படிக் கொண்டு செல்லப்படும் போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
முத்தம்மையை அவளுடைய பிறப்புறுப்பில் இருந்து வழியும் இரத்தத்தைக் கூட பொருட்படுத்தாமல் 'வயறு வலுக்குதே' என்ற அவளின் கதறலைக் கேலி செய்துவிட்டுக் கைகால்களைக் கட்டி மலைமேல் ஏற்றும் போது துவங்கியது என் அதிர்வு. அவள் குழந்தையை வெயிலில் போட்டு அதன் மேல் தண்ணீர் ஊற்றி அதைச் சந்தைப்படுத்தும் போதும், மனித மிருகங்கள் உடல் வேட்கையைத் தனிக்க இரண்டு கால்களும் இல்லாத எருக்கை தூக்கிக் கொண்டு சென்று பயன்படுத்தும் போதும், அதனால் அவள் முதுகெலும்பு மேலும் பாதிப்படையும் போதும், தொரப்பன் குழந்தையைத் தொட்டுப்பார்க்கத் தேடியலைந்து வழிமாறிவிட, அதனால் அவனுக்கு விழும் அடியிருக்கிறதே... அந்த ஆரம்ப அத்தியாயங்களிலேயே புரிந்து போயிற்று எனக்கு நாவலின் வீரியம் என்னவென்று.
உடல்வேதனை மட்டுமா அவர்களுக்கு? ஒவ்வொரு முறையும் குழந்தை பெற்று சிறிது நாள் அதைச் சீராட்டி, பாலூட்டி, பேர் வைத்து, தொட்டு ரசித்து, முகர்ந்து, உருகி வளர்த்த குழந்தையைச் சரியான கால இடைவெளி விட்டுப் பிரித்தெடுத்து விற்றுவிட்டு, மீண்டும் மீண்டும் அவளை வேறு ஒரு குறைப்பிறவியோடு அணையவிட்டுக் குறையுருவைப் பெற்றெடுக்க வைத்தபடியே இருக்கும் போது, இவள் போன்ற முத்தம்மைகளை நினைத்து அயர்ச்சி கொள்வது தவிர வேறென்ன செய்து விட முடியும் நம்மால்.
நமக்கெல்லாம் மனமுண்டு. அதற்கும் வேதனைகள் உண்டு. ஆனால் அந்த பரிதாபத்துக்குரியவர்களின் வேதனைகளை உணர்ந்தால் நாமெல்லாம் அனுபவிப்பது வேதனையல்ல,வேதனை எனும் பெயரில் நாமாகச் செய்து கொள்ளும் கற்பிதங்கள் என்று புரிபடும்.
இவர்களுக்கும் சில சந்தோஷங்கள் உண்டு. ஆனால் அது நிரந்திரமானது அல்ல என்பதுதான் கொடுமையே. இருப்பினும் அவர்களுடைய சந்தோஷங்களும் கொண்டாடப்படுகின்றன. 'வயசு முத்திப் பளுத்தாலும் செரி, சீக்கு வந்து சீறலுஞ்சாலும் செரி, ஆம்பளை கண்ணுல ஆச எறங்காது' என்று உடல் தேவைகளின் எதார்த்தங்கள் இங்கு அழகாகக் கலையாக்கப்படுகின்றன.
'மொகம், சுண்டு, நெஞ்சு, வயிறு, காலு, ஏன் காலில் உள்ள மண்ணைப் பாக்கப்பிடாதோ? எல்லாம் அளகுதான். பாக்கிற மாதிரி பாக்கணும்' என்று அவர்களின் ரசனைக்கும் உயிர் கொடுக்கப்படுகிறது. எருக்கின் ஒருதலைக் காதலும், அகமது குட்டியின் கண்ணீர் காதலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய உணர்வுகள். தனது ஒவ்வொரு பேச்சையும் சந்தோஷச் சிதறலாக வெளிப்படுத்தும் குய்யனின் நக்கல்கூட அவனுக்கு மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷத்தையே தருகிறது.
இங்கு குழந்தைப் பாசம் அளவிட முடியாதபடிக்கு முத்தம்மையின் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது. குழந்தைக்கு கெடுதல் என்று தெரியவந்தவுடன் பீடி பற்றவைக்க மறுக்கிறாள். மயக்கமான நிலையிலும் கூடத் தன் குழந்தையை இருக கட்டி அணைத்துக் கொள்கிறாள். குழந்தையைக் கடிக்க வரும் நாயின் குரல்வளையைக் கடித்துத் துப்புகிறாள்.
'முலை கடிக்கும்பம். கடிச்சா வலிக்கும் பாத்துக்கொ அப்பம் அது நம்மகிட்ட என்னமோ சொல்லுத மாதிரி இருக்கும்' என்ற உருகலில் அவள் பாசமும் சந்தோஷமும் ஒருசேரத்ததும்பி வழிகிறது.
இந்த நாவலில் கூர்ந்து கவனித்து உள்வாங்கி ரசிக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில....
பேப்பரை படித்து யாரும் புரட்சிவாதி ஆகிறது இல்லை. பேப்பர் ஒரு மாதிரி கஞ்சா தான்.
மனுசன மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?
சேர்ந்து சிரிக்கிற சந்தோஷம் பத்து ரூபாய்னாக்கா சேர்ந்து அழுவுற சந்தோஷம் நூறு ரூபாய்க்கு சமம். அதெல்லாம் அறிஞ்சவன் அறிவான்.
நிரபராதிக்கு சர்க்கார் பயம் இல்லை, போலீசு பயம் இல்லை, சாமி பயமும் இல்லை.
மாங்காண்டி சாமியின் பாடல்கள்.
'பனிவிழும் மலர் வனம்... ' பாடல்.
என்று சொல்லிக் கொண்டே போகலாம். பிறகு முழு நாவலையும் மீண்டும் நகல் எடுக்கும்படி ஆகிவிடும். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது விவரித்து அலசும் அளவில் தான் அதன் அழகியலும் எழுத்தாக்கமும் அமைந்துள்ளது. நாவலின் போக்கில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு துயரத்துக்கும் நம்மைத் தயார்படுத்தி, அதனுடன் கலந்து மெல்ல ஆசுவாசம் அடையும் போது சட்டென்று நம்மை விதிர்விதிர்க்க வைக்கவே அடுத்த துயரம் தயாராகக் காத்திருக்கின்றது.
அவ்விதம் நான் விதிர்விதிர்த்த துயரங்கள்....
யாருமற்ற இரவில், பனியின் வெடவெடப்பில் நிராதரவாய்,பிரசவ வலியில் துடித்துப் பிள்ளை பெறும் போது முத்தம்மை என்னை முதன்முறையாக அதிரவைத்தாள்.
பிச்சைக்கு மட்டுமின்றி சில மிருகங்களின் இச்சைக்கும் ஈடுகொடுக்கும் அந்த இரண்டு கால்களும் இல்லாத எருக்கு இரண்டாவது முறையாக என்னை அதிரவைத்தாள்.
வெய்யிலின் வெட்கையை அறியாத உயிரினங்கள் அனேகமாக உலகில் இல்லை. சுட்டெரிக்கும் சூடுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உயிரையே விட்ட கதைகள் நம்மிடம் உண்டு. ஆனால் ஒரு சிசுவுக்கு ஏற்படும் அந்த வேதனையை எழுத்தில் படித்துணர்ந்த போது மூன்றாம் முறையாக அதிர்ந்தேன்.
நாவலில் இன்னொரு இடம் வருகிறது. பண்டாரத்தை ஒருவன் அழைத்துச் சென்று விற்பனைக்காக சில உருப்படிகளைக் காட்டுவான். நல்ல இளம்பிஞ்சுக் குழந்தைகளைத் திருடி, கண்களைப் பிடுங்கி உறுப்புகளைச் சிதைத்து ஆசிட் ஊற்றி முகத்தைக் கருக்கி மருந்து கொடுத்து மயக்கமாக்கி படுக்க வைத்திருப்பார்கள் பாருங்கள். அய்யோ... அரண்டுவிட்டேன். என் குழந்தையே அங்கு படுத்திருப்பதாய் உணர்ந்தேன். நெஞ்சு துடிப்பது நின்று போனது அக்கணம்.
எல்லாவற்றிற்கும் மேல் மொத்த உயிரையும் உறிஞ்சி எடுப்பதைப்போல் இருந்தன இறுதி அத்தியாயம். கடைசியில் முத்தம்மையுடன் அணைய விடுவார்கள் பாருங்கள் ஒரு ஒற்றைவிரல் குருட்டுக் கூனனை... . 'ஆனா ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன். எனக்க பிள்ளையை தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்' என்று முத்தம்மை முன்பு ஒரு முறை கூறியது அப்போது ஞாபகம் வந்தது. அய்யோ அது மகா பயங்கரமடா சாமி.
இனியும் ஒருமுறை முத்தம்மையின் கடைசி அணைவை நினைக்க எனக்கு மனதிடமும் போதாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் நடக்காத ஒன்றை, இல்லாத ஒன்றை உருவகப்படுத்துவதல்ல. நமக்கு தெரியாமல், நாம் அறியாமல் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை உள்ளது உள்ளபடி உணர வைக்கும் திறமையே. அவ்விதத்தில் ஜெயமோகனின் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அன்புடன்,
வீரா
சொல்வதற்க்கு இன்னும் ஒன்று....
உருப்படிகளைத் தவிர எத்தனையோ பாத்திரங்கள் இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் குணாதிசயங்கள், அவற்றின் குறியீட்டு நோக்கங்கள் சார்ந்து நிறைய விஷயங்கள் எழுத முடியும். ஆனால் இதில் ஒரு பாத்திரத்தை அதன் நோக்கம் சார்ந்து குறிப்பிட்டேயாக வேண்டும். அது பகடை எனும் பிணம் அப்புறப்படுத்தும் தொழிலாளியின் பாத்திரம். 500 ரூபாய்க்கு கூட கொலை செய்யத் தயாராக இருக்கும் பாத்திரங்களுக்கு மத்தியிலும் 'பாவம், பெரும்பாவம்' என்று 100ரூபாயை தட்டி விட்டு, தவறு செய்யத் துணியாத நேர்மை மனம் அவருக்கு. அவர் பொருட்டு இங்கு எல்லோர்க்கும் பெய்யும் மழை.
புத்தகம் : ஏழாம் உலகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : யுனைடெட் ரைட்டர்ஸ்
என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன்.
பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது.
நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது.
இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது.
முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான்.
எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது.
வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.
எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன.
ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன.
2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது.ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
தேர்தல் பரபரப்பில் புத்தகக் கடைப் பக்கம் போகவே முடியவில்லை. போனாலும் படிக்க வேண்டுமென்கிற பேராசை `பர்ஸை' புண்ணாக்கிவிடுகிறது. ஆனாலும் இந்த பேராசையை அடக்க வேண்டியதில்லை என்று பல முன்னோர்கள் சொல்லியிருப்பதால் தொடர்ந்து பேராசைப் பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.
அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. இதில் படிக்க வேண்டுமென்கிற கொள்கை பரப்பு வேறு! `நான் பட்டதாரிதான் ஆனாலும் ஆங்கிலம் அதிகமாக படிக்க வராது' என்று காரணம் சொல்லி பலர் தப்பித்துக்கொள்ள பார்ப்பார்கள்.நானும் விடமாட்டேன் நீ படிக்க விரும்பும் பல புத்தகங்கள் இப்போது தமிழிலும் இருக்கிறது. என்று பட்டியலிடுவேன். இப்படி பல புத்தகங்கள் என்னால் விற்பனையாகியிருக்கிறது. இதற்காக பதிப்பாளர்களிடம் நான் ` ராயல்டி' வசூலிப்பதில்லை.
அப்படித்தான் அன்றைக்கு கடைக்குள் நுழைந்தபோது, நண்பர் திரைப்பட, நாடக எழத்தாள நண்பர் காரைக்குடி நாராயணன் என்னை காரைக்குடியிலிருந்து கைபேசியில் அழைத்தார். `பழ. கருப்பையாவின் கருணாநிதி என்ன கடவுளா?' புத்தகம் வாங்கிவிட்டிர்களா?' என்றார். இந்த தலைப்பில் அவர் தின்மணியில் கட்டுரை எழதியது எனக்குத் தெரியும். அது புத்தகமாக வந்த விஷயம் எனக்கு தெரியவில்லை.
ஒரு வித குற்ற உணர்ச்சியுடன், புத்தக கடைக்காரரிடம் கேட்டேன் ` அது வந்தவுடனேயே வேகமாக வித்துப்போச்சு' என்றார். புருவத்தை உயர்த்திக்கொண்டேன்.புத்தகம் என்ன டாஸ்மாக் சரக்கா அத்தனை வேகமாக வித்துப் போக? மனதிற்குள் ஒரு உற்சாக ஆச்சர்யம்.
உடனே படிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் இன்னும் கடைகளில் தேடினேன். பல இடங்களில் ஏமாற்றும். கடைசியில் அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக கடையிலேயே வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அரசியல், தலைவர்கள், சமயம், சமூகம், மொழி, பிற என்று ஆறு தலைப்புகளில் வந்திருக்கும் 34 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.அதிமுகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பழ. கருப்பையா. என்ன சிந்திக்க, எழத தெரிந்தவர்களுக்கு கூட திராவிட கட்சிகள் சீட் கொடுக்கிறதா ? என்று ஆச்சர்யபடவேண்டாம். சில சமயங்களில் அந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்துவிடும்.
இந்த கட்டுரைகள் எல்லாமே அவர் தினமணியிலும், துக்ளக் வார இதழிலும் எழதி நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆனாலும் முழமையாக படிக்கும்போது, சிந்தனை மெருகேறத்தான் செய்கிறது. தமிழ்நாட்டு சூழலில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அவருடன் முரண்பட, அல்லது காந்த எழத்துக்களில் கவரப்படவாவது நிச்சயம் படிக்க வேண்டும். கருணாநிதி வீட்டு வாயிலில் நிற்கும் வைரமுத்து மாதிரி, கருப்பையா வீட்டு வாயிலில் கைகட்டி நிற்கிறாள் தமிழ் அன்னை. அத்தனை அற்புத நடை. சொற்பிரயோகங்கள்.
உதாரணங்கள். கட்டுரையின் தலைப்பு `எடியூரப்பாவுக்கே சிலை வைக்கலாம்'. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்தபோது எழதியது.
`கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி பம்பாயிலும், லக்னோவிலும், சண்டீகரிலும் கால்பதிக்க முனைந்து கொண்டிருக்கிறது '
`ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் டாலிமியாவுக்குக் கல்லக்குடியில் என்ன வேலை என்று கேட்டார் கருணாநிதி. இப்போது கருணாந்திக்கு லக்னோவில் என்ன வேலை என்று கேட்கக் கூடும்தானே .....!
இன்னும் சில க்ட்டுரைகளிலிருந்து சில உதாரணங்கள்
சாதியை திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்!
இராசாசி, பெரியார், அண்ணா, காமராசர் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்து போய்விட்ட நிலையில் நாடு வெறுமை அடைந்துவிட்டது! கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வ்க்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன !
ஒரு கூட்டத்தின் தகுதிக்குக் குறைவான ஒருவனும் தலைவனாக முடியாது; கூட்டத்தின் தகுதிக்கு மிகமிக மேலான ஒருவனும் தலைவனாக ஏற்கப்படுவதில்லை.
காமராசர் சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்டது போல், கக்கன் வைத்தியநாத ஐயரை அரசியல் குருவாகக் கொண்டவர்! சாதி என்னும் படி வரிசையில் மேலும் கீழுமான இருவர் கை கோர்த்து நின்றதென்பது, காந்திய அரசியல் இவற்றையெல்லாம் கடந்தது என்பதை மக்களுக்கு உணர்த்தியது.
உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படப்போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் அல்ல ! இவ்வலவு சொத்து வைத்திருந்து, உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்கிறார் நபிகள் நாயகம்.
பூமி அல்லாவுக்குச் சொந்தம் என்னும் கருத்துக்கும் நிலம் அரசுக்கே சொந்தம் என்னும் சமதருமக் கருத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லை. இரண்டிலும் நிலப்பிரபுக்கள் இல்லை !
பழைய காலத்தில் இருந்த சாதியமைப்புக்களில் ஒவ்வொரு சாதியும் தன்னை மேல் நிலைக்குத் தூக்கிக் கொள்ளப் போராடியது ! இப்போது ஒவ்வொரு சாதியும் தன்னைக் கீழ் நிலைக்கு இறக்கிக் கொள்ளப் போராடுகின்றது ! பிற்பட்டவன் மிகவும் பிற்பட்டவனாக விரும்புகிறான்; மிகவும் பிற்பட்டவனோ தாழ்த்தப்பட்ட சாதியினரோடு சேர்த்து அறிவிக்க கோருகிறான்.
1961ல் சம்பத்; 1972ல் எம்ஜிஆர்; நெருக்கடி நிலைக் காலத்தில் நெடுஞ்செழியன்: ஈழப்போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளேயாவது சனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே !
முதலவருக்கான போட்டி நடக்கப்போவதில்லை; அப்படி ஒரு வேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பது போல் இர்ருமுனைப் போட்டியாக இருக்காது" மும்முனைப் போட்டியாகவே இருக்கும்!
தயாநிதி மாறன் திமுக காரராகவே, நேடே முகங்காட்டாதி காங்கிரசால் களமிறக்கப்படுவார்! தயநிதியிடம் இல்லாத பணமா ? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும், ` போது;போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள்!
காங்கிரசின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே ! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும் ?
திமுகவின் சார்பாகச் சிறுபொழதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரசு தீர்மானிக்கும்! தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்!
தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும் என்பது இயற்கை விதி!
அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக்க் கருணாநிதி என்ன கடவுளா ?
----இப்படி பல விஷயங்களைச் சொல்லி யோசிக்க வைக்கிறார் கருப்பையா. அது சரி இந்த புத்தகம் ஏன் இப்படி பரபரப்பாக விற்பனையாகிறது. புத்தகத்தின் தலைப்பா? அல்லது வாக்காள மக்கள் மனதில் தொக்கி நிற்கும் கேள்வியா?
நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சித்துக் கொண்டிருப்பவரா? தயவுசெய்து நம்புங்கள். உங்கள் இலக்கான உன்னத நிலையை மனப்பயிற்சி மூலமே அடைந்துவிடலாம். எதிலும் உன்னதம் என்ற மகத்தான நிலையை அடைய உங்களை தயார்படுத்துகிறது ‘எக்ஸலண்ட்’ என்ற புத்தகம்.
நெய்வேலி நகரில் ஒரு பாடாவதி தியேட்டரில் அந்த பத்திரிகையாளர் ஒரு படம் பார்க்கிறார். படம் பார்த்து முடித்ததும் அவரிடம் நம் நூலாசிரியர் கேட்கிறார். “எப்படி இருந்தது படம்?”. வந்த பதில் வித்தியாசமானதாக இருந்தது. “இந்த வருஷத்துக்கு இதுதான் படம்!” அந்தப் படம் ‘சுப்பிரமணியபுரம்’. “இதுதான் படம்!” என்று தமிழகமே கொண்டாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அந்தப் படம் இயக்குனர் சசிகுமாருக்கு முதல் படம். கிட்டத்தட்ட அந்தப் படத்தில் பங்கேற்ற பலருக்கும் அதுதான் முதல் படம். தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட ‘முதல் முயற்சிகளில்’ தலைசிறந்ததாக இம்முயற்சி திரைப்பட வல்லுனர்களால் போற்றப்படுகிறது. எப்படி இது சசிகுமாருக்கு மட்டும் சாத்தியமானது?
ஏனெனில் அவர் உன்னதமானவற்றை மட்டுமே முயற்சித்தார். அதனால் அவரால் நல்ல ஒரு விஷயத்தை பெறவும், மக்களுக்கு தரவும் முடிந்தது. ஒரு ‘சுமாரான’ சரக்கை உத்தேசிக்கும்போது அது நீங்கள் உத்தேசித்த சுமாரான அல்லது மோசமான தரத்திலேயே உற்பத்தியாகும். எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. அது ஒரு கட்டாயமும் கூட.
சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது எப்படி?
கொலம்பியாவை சேர்ந்த எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்க்குவேஸை துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். ரொம்ப நாளாக எழுத உத்தேசித்திருந்த ஒரு நாவலின் மொழி அந்த எழுத்தாளருக்கு பிடிபடவேயில்லை. குடும்பத்தோடு காரில் சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்தபோது திடீரென தட்டுகிறது ஒரு பொறி. பாட்டி கதை சொல்லும் தொனிதான் அந்நாவலுக்கான மொழி.
காரை வீட்டுக்கு திருப்புகிறார். ஓர் அறைக்குள் புகுகிறார். எழுத ஆரம்பிக்கிறார். எப்போதாவது பசித்தால் சாப்பாடு. வீடு, மனைவி, குழந்தைகள் எல்லாமே மார்க்குவேஸுக்கு மறந்துபோகிறது. எத்தனை நாட்களுக்கு? கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு. குளிக்காமல், சாப்பிடாமல், தூங்காமல், சவரம் செய்யாமல், மனநிலை குன்றியவரைப் போல எழுதிக்கொண்டே இருப்பது அத்தனை அவசியமா என்ன? இந்த கேள்விக்கு 1967ல் வெளியான அந்த நாவல் பதில் கொடுத்தது.
நூற்றாண்டு கால தனிமை (One Hundred Years of Solitude) என்கிற அந்நாவல் இன்றுவரை விற்பனையில் சாதனை படைக்கும் மாபெரும் இலக்கியம். நவீன படைப்பிலக்கத்துறையில் இன்றுவரை தோன்றிய உன்னத படைப்புகளின் சிகரம். மார்க்குவேஸை படைப்பாளிகளும், வாசகர்களும் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
உன்னத இலக்கை அடைய எளிய குறுக்குவழி உழைப்புதான் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். சரி. கடுமையான உழைப்பாளி உன்னதநிலையை அடைந்துவிட முடியுமென்றால் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மூட்டை தூக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் மூட்டை மட்டுமே தூக்கிக் கொண்டிருப்பார்களா என்றொரு கேள்வி உங்களுக்கு எழுமே?
உன்னதமான நிலையை அடைவதற்கு உழைப்பு மட்டுமே ஒரே ஒரு பாதையல்ல. ஏராளமான வழிகள் உண்டு. வழிகளை அறிய இப்புத்தகத்தை வாசிப்பதுதான் உங்களுக்கு நாம் சொல்லக்கூடிய எளியவழி. வழுக்கும் மொழி நடையில், வாழ்வியல் உதாரணங்களோடு, நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு பக்கமும் சிலையை செதுக்கும் நேர்த்தியோடு எழுதப்பட்டிருக்கிறது.
இளையராஜா, கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், இசைக்கலைஞர் யானி, இயக்குனர் ஜி.வி.ஐயர், ஒசாமா பின்லேடன், பாரதிராஜா, மகாத்மா காந்தி என்று பலரும், இதுவரை நாம் கண்டிராத பல்வேறு பரிமாணங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.
இந்த புத்தகம் உருவான பின்னணிக்கதை சுவாரஸ்யமானது. தன் மனதுக்கு உகந்த சிந்தனைகளை நண்பர்களுக்கும், அலுவலக சகாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அவ்வப்போது எழுத்தாளர் பா.ராகவன் பகிர்ந்துகொள்வார். ஒரு சில ஆண்டுகளில் அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை, மீள்பார்வை செய்துபார்த்தபோது அவருக்கே அவை உன்னதமானவையாக தோன்றியிருக்கின்றன. உன்னதத்தை போதிக்கும் ஒரு உன்னதப் புத்தகம் தயாரான கதை இதுதான்.
நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-600 018. விலை ரூ.70. நூலாசிரியர் : பா.ராகவன்.
இணையத்தில் நூலை வாங்க...
அன்புள்ள கணேசன்
கம்பராமாயணத்தை வாசிக்க இன்று மிகச்சிறந்த நூல் என்பது கோவை கம்பன் அறநிலை வெளியிட்டான கம்பராமாயண பதிப்புதான். அதில் அ. அ. மணவாளன் அவர்களால் கிட்டத்தட்ட எல்லா உரைகளுமே தொகுக்கப்பட்டுள்ளன
கருத்திருமன் அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட முக்கியமான கம்பன்பாடல்களைக் கொண்டு கம்பனை தொகுத்தளித்த கம்பராமாயணம் உதவியானது
கம்பராமாயணத்தை ரசிக்க ஒரு தொடக்கத்துக்காக
1. கம்பன் கண்ட பெண்கள் – சாண்டில்யன்
2. தம்பியர் இருவர் அ ச ஞானசம்பந்தன்
3.ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அ ச ஞானசம்பந்தன்
4. கமபனும் மில்டனும் ஒரு ஒப்பாய்வு : எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களை வாசிக்கலாம்
ஜெ
கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...!
வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.
கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.
இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.
இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.
கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.
நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.
நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.
புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.
இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.
மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.
வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...
கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....
பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...
இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.
கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280
சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், செ. முஹம்மது யூனுஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் ‘எனது பர்மா குறிப்புகள்’. பொதுவாக இம்மாதிரியான தலைப்புகள் உள்ள புத்தகங்களை நான் எடுக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியாது. என் பல புத்தகத் தேர்வுகளைத் தலைப்புகள் தீர்மானித்து வந்திருக்கின்றன. இதன் காரணம் பற்றியே ஜேஜே சில குறிப்புகளை, அதைப் பார்த்த நாள் தொடங்கிப் பலகாலம் கழித்தே வாசித்தேன். இது ஒரு பலவீனம்தான். ஆனால் இதுதான் நான்.
இந்தப் புத்தகத்தை எனக்கு இந்திரா பார்த்தசாரதி இரு நாள்கள் முன்னர் கொடுத்தார். பர்மாவில் பலகாலம் வசித்துவிட்டு, ஹாங்காங்குக்கு இடம்பெயர்ந்து சென்ற ஒரு வியாபாரப் பிரமுகரின் அனுபவங்களை விவரிப்பதுபோல் ஆரம்பிக்கிறது. தன்மையில் எழுதப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் அப்படித் தோன்றுகிறது. ஆனால் ஒரு சில பக்கங்கள் நகர்வதற்குள்ளாக, இது ஒரு தனி நபரின் அனுபவங்கள் என்னும் தளத்திலிருந்து நகர்ந்து ஒரு தேசத்தின் கதையாக, ஒரு காலக்கட்டத்தின் சித்திரிப்பாக, பர்மாவில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய இன வரைவியல் பிரதியாக மாறிவிடுகிறது. இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம் என்று இறுதிவரை தோன்றிக்கொண்டே இருந்தாலும், நிச்சயமாக ஒரு முக்கியமான புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானைப் போல் பர்மா நமக்கு அண்டை நாடுதான். ஆனால் பாகிஸ்தான் அளவுக்கு நமக்கு அறிமுகமான தேசமல்ல. பர்மாவின் பெயரை அத்தேசத்தின் ராணுவ ஆட்சியாளர்கள் மியான்மர் என்று மாற்றி அறிவித்ததை நாளிதழ்கள்மூலம் அறிவோம். ஆனால் மியான்மர் என்பதுதான் மூலம், அது பாமர் என்று பேச்சு வழக்கில் உருமாறி, பர்மாவானதெல்லாம் நமக்குத் தெரியாது. இந்தப் புத்தகத்திலும் இந்த மாதிரி விவரங்களெல்லாம் கிடையாது. ஆனால், இன்றைய ராணுவ ஆட்சிக்காலத்துக்கு முந்தைய தலைமுறை பர்மா எப்படியெல்லாம் இருந்தது என்பதை மிக எளிமையான சில உதாரணங்களில் விளக்கிவிடுகிறார் ஆசிரியர்.
பர்மாவுக்கு இடம்பெயர்ந்த சீனர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:
சீனர்கள் பர்மாவுக்கு வரும்போது ஒரு காவடியைப் போட்டுக்கொண்டு வருவார்கள். காவடியின் இரண்டு பக்கமும் கூடைகள் இருக்கும். அந்தக் கூடைகளுக்குள் மூங்கில் சீப்பு இருக்கும். கோழி இறகுக்குச் சாயம் அடித்துக் கட்டப்பட்ட மூங்கில் கழிகள் இருக்கும், தூசி துடைப்பதற்கானது. இவற்றைத் தூக்கிக்கொண்டு பர்மாவுக்குள் நுழைவார்கள். கொஞ்சநாளில் அவர்களது உடைகளை மாற்றிவிட்டுப் பர்மீய உடைகளைப் போட்டுக்கொள்வார்கள். சில நாட்களிலேயே பர்மீய மொழி பேசக் கற்றுக்கொள்வார்கள். பிறகு பர்மீயரோடு பர்மீயராகவே கலந்து விடுவார்கள்… கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பார்த்தால், எங்காவது காய்கறித் தோட்டம் போடுவார்கள், பணக்காரர்களாகிவிடுவார்கள். வாத்துகளை வளர்ப்பார்கள், பெரும் பணக்காரர்களாகி விடுவார்கள். பன்றிகளை வளர்ப்பார்கள், பின்பு அவர்கள் மேல் மட்டம்தான், கீழே கிடையாது. பர்மீயர்கள் அவர்களிடம் கைகட்டி வட்டிக்குப் பணம் வாங்குவார்கள்…
சீனர்களுக்கு நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. அவர்கள் தாமாக பர்மாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். இந்தியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரிட்டிஷாரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். பர்மா சீனர்களை அவர்களது தொழில்மூலம் அறிமுகப்படுத்தும் ஆசிரியர், அங்குள்ள தமிழர்களைக் கோயில்களின்மூலம் அறிமுகப்படுத்துகிறார். செட்டியார்களும் அவர்கள் கட்டிய கோயில்களும். அப்புறம், பத்திரிகைகள். வெங்களத்தூர் சாமிநாத சர்மா நடத்திய பத்திரிகைக்கும் ஏ.கே. செட்டியார் நடத்திய பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்? சாமிநாத சர்மாவின் பத்திரிகையில் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இருக்கும். பத்திரிகையோடுகூட சிறு சிறு புத்தக வெளியீடுகளையும் அவர் செய்வார். ஆனால் படிக்க ஆள் இருக்காது. ஏ.கே. செட்டியாரின் பத்திரிகையில் கப்பலில் சரக்கு ஏற்றும் நேரம், நதிப் போக்குவரத்தில் கப்பல்கள் புறப்படும், வந்து சேரும் விவரங்கள், ரயில் கால அட்டவணை, வங்கி வட்டி, நடப்பு வட்டி போன்ற தகவல்கள் மட்டும் இருக்கும். ஆனால், செட்டியார்கள் எல்லோரும் சந்தா கட்டியிருப்பார்கள்.
பர்மா, சொல்லிவைத்து மழை பொழியும் பூமி. விவசாயிகள் தேதி சொல்லி விதைப்புக்கும் அறுவடைக்கும் முன்கூட்டியே தயாராகிவிடுவார்கள் என்கிறார் ஆசிரியர். வளமைக்குப் பஞ்சமில்லாத மண். பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்த இந்தியர்கள், மெல்ல மெல்ல அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, உறுதியான பொருளாதார பலத்தைப் பெற்ற வேளை, பர்மியர்களுக்கு இந்தியர்களுடனான பகை தோன்ற ஆரம்பித்தது. உலகப்போருக்குச் சற்று முன்னதாகத் தொடங்கிய இந்தப் பகைக் காண்டத்துக்கு முன்னர் பர்மாவில் மக்கள் எத்தனை அன்பாக, ஒற்றுமையாக, பாசம் பொங்கப் பொங்க வாழ்ந்தார்கள் என்று ஆசிரியர் நினைவுகூரும் விதம் மிகவும் ரசமாக இருக்கிறது.
‘நமது பிள்ளைகளுக்குக் கண் வலிக்கிறது, முலைப்பால் வேண்டும் என்றால், பர்மீயத் தாய்மார்கள் பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டு கண்ணிலேயே நேரடியாகப் பாலைப் பீய்ச்சுவார்கள்.’
என்கிறார். ஆனால் அதே பர்மியர்கள்தாம் இரண்டாம் உலகப்போர் சமயம் ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாக இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்று குவித்தவர்களும்கூட. ஒரு வகையில் ஜப்பானிய ராணுவம் பர்மாவுக்கு வந்தபிறகுதான் இந்தக் கொலைவெறிக் கூத்து சற்று குறைய ஆரம்பித்தது.
பிரிட்டிஷ் காலனியாக இருப்பதிலிருந்து தப்பிக்க நினைத்து, குறுகிய காலமேயானாலும் ஜப்பானியக் காலனியாகிப் போன பர்மாவின் அவலத்தை இந்நூல் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. எழுத்துப் போக்கில் தற்செயலாக வந்து விழுந்துவிட்ட ஒரு சில வரிகள் ஆச்சரியகரமான மனச்சித்திரங்களை வாசிப்பவர்களுக்கு உண்டாக்குகின்றன. உதாரணமாக, ஜப்பானிய ராணுவத்தினர் ரங்கூன் வீதிகளில் முழு நிர்வாணமாகக் குளிக்கிற காட்சி.
‘அது அவர்களுக்கு வழக்கம்போலும். இதெல்லாம் பர்மீயர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தியது…’
அப்புறம் சுபாஷ் சந்திர போஸ். எல்லா கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த நினைவுகூர் ஆசிரியர்களைப் போலவே இந்நூலாசிரியரும் சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்திருக்கிறார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார், அவருக்காக உழைத்திருக்கிறார். சுபாஷைப் பற்றிய இவருடைய மதிப்பீடு சற்று வேறு விதமானது. அவர் ஜப்பானியர்களின் உதவியைக் கோரிப் பெறவில்லை; ஓர் அவசரத்துக்கு ஜப்பானைச் சிலகாலம் தனது களமாக்கிக்கொண்டாரே தவிர, ஜப்பான் உதவியுடன் இந்தியாவுக்குப் படை திரட்டிக்கொண்டு வரும் உத்தேசம் அவருக்கு இல்லை என்று சொல்கிறார். திட்டமிட்ட காலத்துக்கு மிகவும் பிந்தியே நேதாஜியின் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை இதற்கு ஆதாரமாக முன்வைக்கும் ஆசிரியர், நேதாஜியை ஜப்பானிய தற்கொலைப்படையைச் சேர்ந்த விமானிகளே தனியே அழைத்துச் சென்று மோதிக் கொன்றுவிட்டார்கள் என்றும் தனது ஊகத்தை முன்வைக்கிறார்.
தெளிவில்லாத மரணங்கள் எப்போதும் நூற்றுக்கணக்கான ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடமளித்துக்கொண்டேதான் இருக்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதல், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான பர்மாவைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு தனி மனிதரின் அனுபவங்களாகத் தேங்கிவிடாமல், அதே சமயம் விரிவான சரித்திர நூலாக சாதாரண வாசகர்களை அச்சுறுத்தாமல், ஒரு தேசத்தின் குணாதிசயங்களை அதன் பல்வேறுதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் புரியவைக்கிற முயற்சியில் இது வெற்றிகண்டிருக்கிறது.
ஒரு விஷயத்தைச் சொல்லி முடித்துவிடலாம். இன்றுவரை பர்மாவின் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருப்பவர் ஆன் சாங் சூகி. அவரது தந்தைதான் அன்று பர்மாவை ஜப்பானியர்கள் ஆக்கிரமிக்க வழிவகுத்துக் கொடுத்தவர்!
எனது பர்மா குறிப்புகள் | செ. முஹம்மது யூனூஸ் | தொகுப்பு – மு. இராமநாதன் | வெளியீடு: காலச்சுவடு | விலை ரூ. 165.00
O
பர்மாவை மேலும் அறிய இந்தப் புத்தகத்தையும் வாசிக்கலாம்.