Home / Books List 16

Books List 16





சீனா - விலகும் திரை: ஒரு பார்வை
சை
னா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது.

china-war_1962

அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்லியோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.

ஆனாலும் நாம் கண்களை மூடிக்கொள்வதில் அர்த்தமில்லை. சைனாவுடன் ஒரு சின்ன தகராறு என்றால் கூட நமக்கு உதவ யாரும் இல்லை. சைனாவுடனான நமது தகராறு சைனாவுடனேயே நின்று விடாது. அது தான் சாக்கு என்று நம்மீது பாய சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தயார் தான். இப்போது இலங்கையும் அந்தக் கூட்டணி முகாமில் கடைசியாகச் சேர்ந்துள்ளது. சைனா நம்மை ஒன்றும் விழுங்கி விடப்போவ தில்லை. அந்த மாதிரி பைத்தியக்காரத் தனத்தை அது செய்யாது. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே கால் நடுக்கங்கொள்ளும், முகம் வியர்க்கும் ஸ்திதியில் இந்தியாவை வைத்துக் கொண்டாலே அது போதும். சைனாவுக்கு. அதை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. ”தேஜ்பூர் போகாதே” என்றால் நாம் தில்லிக்குத் திரும்பிவிடுவோம். அது போதும் தர்மஸ்தலாவில் உள்ள திபெத்தியர்களை அடக்கி வை என்றால் நாம் மறுபேச்சு பேசப்போவதில்லை. 1962-லிருந்து . ஒவ்வொரு தில்லி அரசுக்கும் ”நம் காலத்துக்கு பயந்து நடுங்கி தகராறு ஏதும் இல்லாது சைனாவைக் கோபப் படுத்தாது அமைதியாகக் காலம் கழித்துவிடுவோம்” என்பதே தொடர்ந்துவரும் சைனா பாலிஸி. 1962-ல் எல்லை கடந்து வந்த சீனர்களைத் “துரத்தி விரட்டுங்கள்” என்று நேரு சொன்ன வார்த்தையின் விளைவுகள் இன்னொரு முறை நேராது.

இடையில் சைனா, ஏழ்மையிலும். 30 வருட உள்நாட்டுப் போரின் நாசத்திலும் மூழ்கியிருந்த போதிலும் தனக்கு இருந்த ஒரே துணையும் அப்போது ஒரு வல்லரசுமான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது. எவரது மிரட்டலுக்கும் அஞ்சாது திபெத்தைக் கபளீகரம் செய்தது. இப்போது சைனா தனக்குப் போட்டியாகக் கருதுவது அமெரிக்காவைத் தான். வேறு எந்த நாடும் அதற்கு லட்சியமில்லை. இந்தியா அதற்கு ஒரு லக்ஷியமே இல்லை. ஒரு மிரட்டல் போதும் இந்தியா வாலைச் சுருட்டிக்கொள்ள என்று தான் நினைக்கிறது. அப்படி நாம் அரை நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டு வந்துள்ளோம். காந்தியும் புத்தரும் அவதரித்த நாடாயிற்றே!

அறுபது வருட காலத்துக்குள் பல துறைகளில் இந்தியாவுக்குப் பின் தங்கியிருந்த நாடு தான் சைனா, இப்போது பொருளா தாரத்திலும், ராணுவ பலத்திலும் இந்தியா என்ன, பல முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முன் சென்று விட்டது. அறுபது வருட கால உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. மாவோவின் கலாசாரப் புரட்சி வரை சைனா இன்னும் படு மோசமாக நாசமடைந்திருந்தது. ஆக சைனாவின் பயங்கர பாய்ச்சல் நடந்தது சுமார் இருபது வருடங்களுக்குள்ளாக.

la-chine-chung-kuo-cina-1972காரணம், சைனாவின் அதிகார வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் மாத்திரமல்ல. அந்த யதேச்சாதிகாரம், அசாத்திய தன்முனைப்போடு, துணிச்சலோடு, செயல்பட்டது. அதன் சரித்திரத்திலேயே ஊறியிருக்கும் ஏகாதிபத்ய பெருமை உணர்வு.. உலகமே தன்னைச் சுற்றியிருப்பதாக தான் அதன் மத்தியில் வீற்றிருப்பதாகத் தான் அதன் வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருக்கிறது. தன்னை மத்திய நாடு, அதாவது சுங் க்கோ (Chung kuo) என்று தான் சொல்லிக்கொள்கிறது. 60 வருட காலமாக ஒரு வெறிபிடித்த யதேச்சாதிகாரத்துக்கு அடிமைப் பட்டு, வாழ்ந்தாலும், எந்த சீனனும் நாட்டுப் பற்று குறைந்தவனாகி விடவில்லை. தான் நன்றாக வாழ்வதாகவே நம்புகிறான். அப்படி நம்ப வைக்கப் பட்டிருக்கிறான் என்பதுடன் அவன் நாட்டுப் பற்றும் அதற்குக் காரணம். இன்றும் சைனாவுக்காக பரிந்து பேசும் நம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல, சைனாவில் இந்தியாவுக்காகப் பரிந்து பேச யாரும் அதன் வரலாற்றில் இருந்ததில்லை. ரஷ்யா ஒரு வல்லரசாக இருந்த ஐம்பது அறுபதுகளில் கூட சைனா ரஷ்யாவை லக்ஷியம் செய்ததில்லை. மாவோ தன் போக்கில் தான் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஸ்டாலினுக்கு மாவோ என்றும் தண்டனிட்டவரில்லை. அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை. சமயம் கிடைத்த போதெல்லாம் யாரை கபளீகரம் செய்யலாம் என்றே அதன் வரலாறு இருந்து வந்திருக்கிறது.

இப்போது உலக நாடுகள் பலவும் சைனாவுடன் தம் உறவுகளை வெகு ஜாக்கிரதை உணர்வுடன் சுமுகமாகத்தான் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. வல்லரசாக இன்னும் ஆகாத போதே ஒரு வல்லரசின் கெடுபிடிகளுடன் சைனா உலக அரங்கில் மிதப்புடன் நடந்து கொள்கிறது. எங்கும் யாருக்கும் அது தன் உரிமைகள் என தான் கருதுவதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற நாடுகள் தான், அவை வல்லரசாக இருந்த போதிலும், அதனோடு சமாதானமாகப் போக சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உலகம் முழுதும் இப்போது சைனா- இந்தியா என்றே ஒரு இடைக்கோடு போட்டு இரண்டு பெரிய நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு தான் இப்படிப் பேசப்படுவதில், சந்தடி சாக்கில் தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்தப்படும் சந்தோஷம். Basking in reflected glory என்பார்களே, அப்படித்தான் இந்த ஒரே அடைப்புக்குறிக்குள் அடைபடும் ஜொலிப்புக்கும் மேல் அடிக்கடி நடக்கும் ஒப்பீடுகளில், சில விஷயங்கள் நமக்கு ஒரு கிறுகிறுப்பு தரம் விஷயங்களும் உள்ளன. சைனாவின் அதி வேக வளமும் பெருகி வரும் பலமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. மக்களைக் கொத்தடிமைகளாக்கி பெறப்படும் அதிவேக பாய்ச்சல். அந்த அதிவேகமும், பாய்ச்சலும் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியமில்லை. காரணங்கள், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இல்லாத போது ஒரு நாள் அடிமனக் கொந்தளிப்பு வெடிதெழும்.

இந்தியா அப்படி அல்ல. அதன் ஜனநாயக கட்டமைப்பு. அத்தகைய திடீர் கொந்தளிப்புக்கள் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா நிதானமாக, நிச்சயமாக முன்னேறி வருகிறது. ஆக இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் என்றும் ஆனால் சைனா அதிகம் போனால் இன்னம் ஒரு பத்திருபது வருடங்களுக்கு மேல் இத்தகைய வேகத்தைத் தொடர முடியாது. திடீரென அதன் கால் முடங்கிவிடும் என்றும் ஜோதிடம் சொல்கிறார்கள். சைனா என்றாலேயே, பயந்து நடுங்கிக் கொண்டு, வாய் பொத்தி இருக்கும் இந்திய அதிகார தலைமைகளுக்கு இந்த ஜோதிடங்கள் ஒருவாறான ஆறுதல் அளிக்கின்றனதான். ”சரி, நம் காலம் ஒழுங்காக கடந்து விடும்” என்ற நிம்மதியோடு வாளா இருக்கும் நடவடிக்கை தான். சும்மா இருப்பதும் ஒரு நடவடிக்கை தான் என்று வேறு ஒரு மகத்தான ராஜதந்திர பிரகடனம். (Not taking any action is also an action) நமக்குப் பழக்கமானது.

நம்மால் நம் அதிகார தலைமைகளின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால், ஏகாதிபத்ய கனவுகளும், வரலாற்று ப்ரக்ஞையும், உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற அயராத முனைப்பும் அதை நோக்கிய நீண்டகால செயல் திட்டத்தோடு தளராது செயல்பட்டுவரும் ஒரு அண்டை நாட்டை, நம்மை அடக்கியே வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட அந்த அண்டை நாட்டை, நாம் சரிவர புரிந்துகொள்ளவும் வேண்டும். அத்தோடு நம் எதிர்காலத்தை பற்றியும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு நமக்கு வேண்டும். இது இரண்டும் நம் தலைமைகளுக்கு இல்லாத போது நாமாவது நமக்குள் இது பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். அது பற்றி நம் அளவிலாவது கருத்துப் பரிமாறல்களும் சர்ச்சைகளும் எழச் செய்யவேண்டும். ஆனால் குடிமக்களாகிய நமக்கு,  made in China எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொம்மைகளும் ரொம்ப சீப்பாகக் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் நம் கவலைகள் முடிந்து விடுவது, பயந்து பயந்து காலத்தை ஓட்டிவிடப் பார்க்கும் நம் அரசியல் தலைமகளுக்கேற்ற பிரஜைகள் தாம் நாமும் - என்பதைத் தான் காட்டுகிறது.

china_vilagum_thirai_book_coverஇந்த சந்தர்ப்பத்தில் பல்லவி அய்யரின் சீனா – விலகும் திரை என்னும் புத்தகம் ஒரு முக்கியமான காலடி வைப்பு. நமக்கு இந்த காலடி வைப்பு இப்போதெல்லாம் ரஷ்யாவுக்குப் போய் ஆண்டையை பார்த்து தரிசனம் பாக்கியம் பெறுவது நின்று சைனாவுக்குப் போய் ஆண்டையப் பார்த்து தரிசன பாக்கியமும் உபதேசங்களும் பெற்று வரும் கம்யூனிஸ்டுகள் சொல்வதையோ, அல்லது நம் அரசியல் தலைமைகள் சொல்வதையோ (அல்லது சொல்லபயந்து வாய் மூடி இருப்பதையோ) கேட்டுப் பயன் இல்லை. இவர்களிடம் பெற நமக்கு ஏதும் இல்லை. நமக்குக் கொடுக்க அவர்களிடமும் ஏதும் இல்லை.

பல்லவி அய்யர் சைனாவில் ஐந்து வருட காலம் இருந்தவர். சீன ஒளி பரப்புத் துறையில் பணியாற்றச் சென்று பின்னர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பத்திரிகைக் கல்வி படிப்பித்தவர். அங்கு சென்று சீன மொழி கற்றவர். அவரிடம் நாம் சந்தேகம் கொள்ளத் தூண்டும் ஒரே விஷயம் நம்ம ஊர் ஹிந்து பத்திரிகையுடன் அதுவும் உலகறிந்த சீனாவுக்குப் பல்லாண்டு பாடும் என். ராம் இருந்த காலத்திய தொடர்பு தான். ஆனால் அவர் புத்தகத்தைப் படித்த பின் அந்த சந்தேகங்களும் முற்றாக விலகின.

பல்லவி அய்யர் தில்லியில் வளர்ந்தவர். முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் நிஜாமுதீன் பகுதியில் அவரது சிறு பிராயம் கழிந்தது. கலாசார நோக்கில் தான் பாதி முஸ்லீம் என்று இந்த அய்யர் வித்தியாசமான அய்யர் என்று சொல்லும் பாவனையில் சொல்லிக் கொள்கிறார். தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். பின்னர். இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லும். இங்கிலாந்தில் இருந்த போது ஒரு ஸ்பானியரைக் காதலித்து மணந்தவர். பல்லவி ஜூலியோவாக தன்னை நாமகரணம் செய்துகொள்ளாது பல்லவி அய்யராகவே தன்னை அறியப்படுத்திக் கொள்பவர். சைனாவில் உணவு அவருக்குப் பிரசினயாக இருக்கவில்லை. சாப்பிடும் போது, ”இது என்ன நாய் மாமிசமா?” என்று ஜோக் அடிப்பாராம். இந்த பின்னணி போதும், அவருக்கு அனுபவங்களையும் பார்வையையும் எந்த சார்பும் முன் தீர்மானிக்கவில்லை என்பதைச் சொல்ல. ஆகவே அவருடைய ஹிந்து பத்திரிகைத் தொடர்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. .

எனக்கு இது மிக சுவாரஸ்யமான, இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பல புதிய தகவல்களைப் பார்வைகளை அளித்த புத்தகமாக இருந்தது. ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) ஐம்பதுகளில் படித்த Edgar Snow-வின் Red Star Over China –க்குப் பிறகு சைனாவில் நிகழும் பெரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் புத்தகம். ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) சைனாவில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்த மாற்றங்கள். அவை.

ஏதோ ராணுவ படையெடுப்பு நடப்பது போலத்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை உலகம் வியக்கும் வகையில் பிரமாண்டமாக நிகழ்த்தி விடவேண்டும் என்ற தீவிர முனைப்பில் எதுவும் அரசுக்குத் தடையாக இருக்கவில்லை.

பெய்ஜிங்கின் மூன்றில் ஒரு பகுதி, பழமையும் வரலாறும் தன்னுள் கொண்ட பகுதியை இடித்துத் தள்ள அவர்கள் தயங்க வில்லை. சாய் என்று இடிக்கப்பட வேண்டிய கட்டிட சுவர்களில் எழுதினால் போதும். எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம். இடிக்கப் பட்டன. அவ்விடத்தில் புதிய ராக்ஷஸ கட்டிடங்கள் எழுந்துவிட்டன.

உலகத்திலேயே பெரிய அணைக்கட்டுகள் அசுர செலவில், அசுர வேகத்தில் கட்டப் படுகின்றன. லக்ஷக் கணக்கில் மக்கள் குடிபெயர்க்கப் படுகின்றனர்.

லாஸா எக்ஸ்ப்ரெஸ், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து திபேத் தலைநகர் லாஸாவுக்கு 4000 மைல் நீள ரயில் பாதை, மலைகளைக் குடைந்து, அமைக்கப்பட்ட ரயில் பாதை பிராணவாயு குறைந்துவிடும் மூச்சுத் திணறும் உச்சத்தில், திடீரென உறையும் பனி, திடீரென அது கரைந்து தண்ணீராகவும் பெருக்கெடுக்குமாம். வேடிக்கை தான். இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு ஐந்து வருட காலத்தில் முடிந்து விடுகிறது. நம் ஊரில் மாயவரம் கும்பகோணம் அகலப் பாதை இன்னமும் போக்குவரத்துக்கு தயாராகவில்லை! எத்தனை வருடங்கள்? (இந்த அழகில் இந்தியாவும் சைனாவும் வல்லரசாகப் போகின்றனவாம்). பெய்ஜிங்கிலிருந்து லாஸாவுக்கு ஒரு வாரம் பிடிக்கும் பயணம் மிக சொகுசாக 2 நாட்களில் முடிகிறது. உலகம் வியக்கும் ரயில் பாதை அமைத்தது ராணுவத் தேவையை முன்னிட்டு என்று சொல்லலாம். உண்மை உண்டு. இந்தியாவிலும் ரயில் பாதை அமைத்தது பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ராணுவத் தேவைக்குத் தான் என்றார்கள். அந்த ரயிலில் தான் மகாத்மா காந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்ள. திபெத்தியர்கள் பயமும் அது தான். ஆனால் அது பயணிகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் உல்லாச பயணிகளுக்கும் பயன் படும். பயன் படப் போவது சீனர்களுக்குத் தான், திபேத்தியர்களுக்கு அல்ல என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கைவிரித்த காரியம் ஐந்து வருடங்களில் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளது சீன அரசு. இப்போது லாஸாவில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், பெரிய மால்கள் காட்சி தருகின்றன. திபேத்தில் பல புதிய சாலைகள், நகரங்கள். புதிய வியாபார ஸ்தலங்கள்.

முன்னால் இடித்துத் தள்ளப்பட்ட பௌத்த கோயில்களும் லாமாக்களின் மடங்களும் இப்போது திரும்ப கட்டப்பட்டு வருகின்றன. காரணம் மாவோ காலத்தில் மதம் ஒரு அபினி. அழிக்கப்பட வேண்டியது. இப்போது அவரவர் மதம் சார்ந்த வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. காரணம் மறுபடியும் மக்களுக்கு ஒரளவு வாழும் சுதந்திரம் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. அரசு கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். திபெத்தில் தலாய் லாமா பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது. அந்தந்த பிரதேச மொழிகளைக் கற்கலாம். ஆனால் மண்டாரின் (வடக்கு சைனாவில் பேசப்படும் சீன மொழி) கட்டாயம் கற்க வேண்டும். அதில் தான் அரசு பணிகள் அத்தனையும் நடக்கும்.

முன்னர் தடைபடுத்தப்பட்ட இடங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்போது அரசு ஆதரவு பெறுகின்றன. நிறைய இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் கட்டப் படுகின்றன. அரபு மொழி கற்க முகம்மதியர்கள் பெரும்பான்மையில் வாழும் மேற்கு எல்லையோர பிரதேசத்தில் அனுமதிக்கப்படுகிறது. காரணம், மறுபடியும் இப்போது சீன தலைவர் ஹு ஜிண்டாவின் சுருதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தேசீய கொள்கை தான். அவ்வப்போது இப்படி ஏதோ ஒரு தேசிய கொள்கை பிரகடனப்படுத்தப் படும். நூறு பூக்கள் மலரட்டும் என்ற மாவின் கோஷத்தில் எத்தனையோ மாவோ கூட்டாளிகள் அவமானப்படுத்தப்பட்டார்கள். மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறை வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான ஸ்லோகன் அல்ல இது. அவ்வப்போது அரசு வெளியிடும் கொள்கைகளை எதிர்க்கக் கூடாது. கொடுக்கப் பட்டுள்ள வேலிக்குள் யாரும் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம்.
திபெத்தில் தனக்கு திபெத்திய மொழி பெயர்ப்பாளனாக பல்லவி அய்யர் அமர்த்திக் கொண்டவன் சைனாவை உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து எதிர்ப்பவன். எல்லா திபெத்தியர்களும் அப்படித்தான். 60 வருடகால கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னும் சீன எதிர்ப்பு அவர்கள் ரத்தத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளன் தன் விசிட்டிங் கார்டை கொடுக்கிறான். மடித்த அந்த கார்டை சற்றே திறந்து அதில் தலாய் லாமா படம் அச்சிட்டிருப்பதைக் காட்டுகிறான் ரகசியமாக. தலாய் லாமா பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப் பட்டுள்ள நிலையில் அவன் எதிர்ப்பு அது. இந்தியா திபேத்தியர் அனைவருக்கும் ஒரு யாத்திரை பூமி. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு.

three-gorge-dam-chinaசைனா கொஞ்சம் கூட இடைவிடாது ராக்ஷஸ வேகத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டும் நாட்டை வளப்படுத்திக் கொண்டும் வருகிறது. பல்லவி அய்யர் சொல்கிறார்:  ”2006-ல் சீனாவில் ஏற்கனவே 86,000 அணைகள் இருந்தன இது உலகம் முழுதும் இருக்கும் அணைகளில் 46 சதவிகிதம். இதில் வீடிழந்தவர்கள் தொகை 1.6 கோடி பேர்.” அங்கு மேதா பட்கரோ அல்லது வேறு யாருக்குமோ இடமில்லை. தலைதூக்கிய அடுத்த நிமிடம் அவர்கள் மாவோ இருக்குமிடத்தை அடைவார்கள். ஒரு இடத்தில் அணைகட்ட சர்வே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. யாருக்கும், அங்கு வீடு இழக்கப் போகும் லக்ஷக்கணக்கிலானவர் எவருக்கும், அது பற்றி செய்தி இல்லை. ஒரு நாள அனைவரும் முன்னறிவிப்பு இன்றி வேறிடத்துக்கு அனுப்பப் படுவார்கள். அதிர்ஷ்டமுள்ளவருக்கு ஏதோ நஷ்ட ஈடு கிடைக்கும். தமிழ் நாட்டில் ஜனநாயகத்தில் நடப்பது அங்கு பெரும் அளவில் சர்வாதிகார ஆட்சியில் நடக்கிறது.

ஆனால் பல்லவி அய்யர் சொல்கிறார் - கொழுத்த பணக் காரர்கள் இருக்கிறார்கள் தான். முன்னை விட இப்போது பணம் புரள்கிறது தான். முன்னைவிட மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மறுக்கப்பட்ட சுதந்திரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பொருளாதார சுதந்திரம் அவர்களை மகிழ்விக்கிறது. இந்தியாவில் காணுவது போல ஏழைகளை அங்கு காணவில்லை. சைனா பூராவும் எந்த மூலைக்கும் செல்ல அகலமான சாலைகள், கார் வழுக்கிக்கொண்டே விரைந்து செல்லும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வசதிகளே வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய அழைக்கின்றன. விரைவாகச் செயல்படுவதால் அரசின் முடிவுகளில் எங்கும் தாமதம் ஏற்படுவதில்லை. (வாஜ் பாய் அரசு தொடங்கிய இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் பெருவழிச் சாலை பற்றி யாருக்கும் இப்போது நினைவிருக்கிறதா?)

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். அதற்கான எல்லா வசதிகளும் நாட்டில் ஏற்படவேண்டும். என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அரசை எதிர்த்து மாத்திரம் மூச்சு விடக்கூடாது. இந்தியா போல் அசுத்தமும் குப்பைகளும் குண்டும் குழியுமான சாலைகளும் சைனாவில் இல்லை. வாஸ்தவம், அங்கும் லஞ்சம் உண்டு தான். ஆனால் காரியங்கள் நடக்கின்றன. 10 இருபது சதவிகிதம் பணத்தை அதிகாரிகளும் இன்னும் சம்பந்தப் பட்ட மற்றவர்களும் சுருட்டிக் கொண்டாலும், 80 சதவிகித வேலைகள் நடக்கின்றன. இந்தியாவிலோ வேலையே ஏதும் நடக்காமல் பணம் கொள்ளை போகின்றது. அது தான் இங்குள்ள லஞ்சத்துக்கும் அங்குள்ள லஞ்சத்துக்குமான வித்தியாசம். மேஸ்திரியிலிருந்து கவுன்சிலர் என்று ஒரு பெரிய வரிசை மந்திரி வரை லஞ்சப் பணம் நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதத்தில் வினியோகிக்கப்படுவது நடைமுறையானால், இந்த ப்ராண்ட் ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? சாய் என்று எழுதப்பட்டால் வீடு என்ன ஒரு குடியிருப்பு பகுதியே இடிக்கப்பட்டு விடும். அங்கு ஒரு அகல சாலையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ, அல்லது ஒலிம்பிஸ் கட்டிடமோ எழும். எழும் கட்டாயம். 1970-லிருந்து பிரகடனப் படுத்தப்பட்ட கூவம் மணக்கும் கோஷம் இன்றும் 40 வருடங்களாக கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தான். ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு போடுகிறவர்களுக்கெல்லாம் ரூ. ஆயிரமோ ஐயாயிரமோ கிடைத்துவிடுகிறது.

இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே இடைப்புள்ளி எதுவுமே கிடையாதா? லஞ்சம் கொடுத்து, இலவசங்களை வாரி இறைத்து பெற்ற வோட்டுகள் அதிகாரம் செய்பவர்கள் தாம் நாம் இருப்பது ஜனநாயக நாட்டில். சர்வாதிகார ஆட்சியில் அல்ல என்பார்கள். இந்த வாதத்தின் ஆபாசத்தை என்ன சொல்ல?

சீனாவில் இப்போது யோகா ஆங்கிலம் ஹிந்தி, அரபி என்று எல்லா மொழிகளையும் கற்கும் வேகம் பற்றியிருக்கிறது. காரணம் அவை தான் வெளி உறவுக்கும் உலக வாணிப பெருக்கத்திற்கும் சீன பொருளாதார வளத்திற்கும் இட்டுச் செல்லும்.

china_yoga_practitioner2003-ல் பல்லவி அய்யரும் அவரது கணவர் ஜூலியோவும் ஒரு டாங்கோ வகுப்புக்குச் செல்ல அங்கு இருந்த ஒரு சீனப் பெண் “ஓம் சூர்யாய நமஹ” என்று வரவேற்கிறார். அந்தச் சீனப் பெண்ணுக்கு சைன அரசுக்கு இருக்கும் இந்தியப் பகைமை, மண்டாரினில் இதை எப்படி சொலவது? என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள். பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம்? யோகாவை நாடுபவர்கள் சைனாவின் செல்வந்தர்கள்.

2002-ல் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு 5.5 பில்லியன் டாலர். சரிதானா. அதேசமயம் கம்யூனிஸம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் சைனாவில் 2005-ல் அந்நிய முதலீடு 72.4 பில்லியன் டாலர். இந்திய கம்யூனிஸ்டுகள் இது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. இந்தியாவை மாத்திரம் தாக்குவார்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அடிமையாகிவிட்டதாக. சைனா இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் அடிமையாகிவிட்டதே இந்தக் கணக்கில்!

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னம் ஒரே ஒரு காட்சியை மாத்திரம் சொல்லி, மேலும் அறிய பல்லவி அய்யரின் புத்தகத்துக்குச் செல்லுமாறு சொல்லி முடிக்கிறேன். அடுக்கு மாடி வீட்டை விட்டு பெய்ஜிங்கின் (ஹூடாங் என்று சொல்லப்படும்) பழம் வீடுகள் இருக்கும் பகுதிக்குக் குடிபோக நினைத்து கடைசியில் வீடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பழங்கால வீடு. நவீன வசதிகளுடன் அதன் உள்கட்டமைப்பு மாற்றப் படுகிறது, பல்லவி அய்யர் சொன்ன மாற்றங்களுடன்.  வீட்டுக்குச் சொந்தக்காரர் வூ எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறார். கழிப்பறையைக் காட்டி உபயோகித்துப் பாருங்கள் என்று. அதன் மகத்துவத்தில் பெருமை கொள்கிறார்.

வீடு சின்னதாக நன்றாக இருக்கிறது. வீட்டு நடுவில் ஒரு மரம். அழகாக அதன் அடியில் உட்கார்ந்து கொள்ளலாம்.

திடீரென காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் வூ. குழாய் ரிப்பேர் சாமான்களுடன். கதவு திறந்ததும் அனுமதி கூட கேட்காமல் உள்ளே நுழைந்து டாய்லெட்டைக் கழுவுகிறார். குழாய்களை ரிபேர் செய்கிறார். மற்றும் ஒருமுறை வாசலில் துடைப்பத்துடன் நிற்கிறார். வழ்க்கம் போல உள்ளே நுழைந்து மரத்தடியிலும் சுற்றிலும் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறார். துடைப்பத்தை பல்லவி அய்யரிடம் கொடுக்க மறுக்கிறார்!

ஒரு நாள் தன் மனைவியை அழைத்து வருகிறார். இவர் வேலை செய்ய வூ தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். சுற்றியிருப்பவர்கள் எல்லாம் வெள்ளைக் காரனை மணந்த ஒரு கருப்பு இந்தியரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.

வூ ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஞ்சினீயர். அவருக்கு இது போல இன்னும் பல வீடுகள் ஹூடாங்கில் சொந்தம். அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் தன் வேலைகளுக்கு ஒரு மோபெட்டும், தன் மகனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மகன் காரில் ஊர் சுற்றுவது தான் வேலை. அவர் தன் மகனுக்கு எங்காவது ஒரு டிரைவர் வேலை வாங்கிக்கொடுக்கும்படி பல்லவியையும் அவர் கணவரையும் கேட்கிறார்.

வூ ஆரம்பத்தில் இம்மாதிரி ஒரு பழைய வீட்டில் தான் இருந்தார். கலாசாரப் புரட்சியின் போது அவர் வீடு பறிபோயிற்று. அவர் எங்கோ தூரத்தில் அகதியாக அனுப்பப் படுகிறார். அங்கு அவரைச்சீர்திருத்த கக்கூஸ் கழுவும் வேலை தரப்படுகிறது. பல வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, டங் சியாவ் பிங் ஆட்சியில் அவர் ஊர் திரும்புகிறார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றுத் திரும்புகிறார். அந்தச் சமயம் அரசு கொள்கை மாறி யாரும் கொஞ்சம் நிலம் அரசு குத்தகையில் பயிர் செய்து கொள்ளலாம். வீடு வைத்துக்கொள்ளலாம் என்று மாறுகிறது. வூ முதலில் ஒரு வீடும் பின்னர் ஹூடாங்கில் அலைந்து இன்னும் பல வீடுகளும் வாங்குகிறார். இப்போது அவர் கோடீஸ்வரர். சில வருஷங்கள் முன் மக்கள் விரோதி என குற்றம் சாட்டப்பட்டு எங்கோ கக்கூஸ் கழுவியவர். இப்போதும் அவர் குழாய் ரிப்பேர், வீடு பெருக்குவது கக்கூஸ் சுத்தம் செயவது என பல வேலைகள் செய்பவர். முகம் சிணுங்காமல். சந்தோஷமாக. பல சமயம் பல்லவி அய்யரின் விருந்தினராவார்.

இன்னொரு காட்சி. படித்தவன். வேறுஏதோ வேலை செய்தவன். இப்போது ஹூடாங்கில் உள்ள கக்கூஸை கழுவி சுத்தம் செய்கிறான். இதில் பணமும் நிறையக் கிடைக்கிறது. வேலையும் சுலபம்.

சைனாவில் யாரும் எந்த வேலையும் செய்யும் மனப் பக்குவம் பெற்றவர்கள். உழைப்பில் கௌரவம் பார்ப்பதில்லை.

நம்மூரில் நம் வாழ்க்கையில் அனேக நம்பிக்கைகள் நம்மை அடக்கியாள்கின்றன. மூட நம்பிக்கையோ பகுத்தறிவோ என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும்.

மார்க்ஸ் எங்கோ சொல்லியிருக்கிறாராம். ஏழு பேருக்கு மேல் ஒருத்தன் தன் கீழ் வேலைக்கமர்த்தினால் அவனிடம் முதலாளீய சுரண்டல் மனம் தோன்றிவிடுகிறது என. இந்த ஏழு கணக்கு எப்படி வந்ததோ. இருக்கட்டும். சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்திசாலி சீனர்கள். யாரும் யாருக்கும் கீழ் வேலை செய்வதில்லை, கூட்டுறவு அடிப்படையில் எல்லோரும் வேலையாட்கள் எல்லோரும் முதலாளிகள் தான் -  என்று அரசு விதிகளின் கண்ணில் மிளகாய் தூவி பெரிய தொழில் சாலைகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.

சட்டத்துக்குச் சட்டமும் ஆயிற்று. தன் காரியத்துக்கும் தடையில்லை.

சுரீந்தர் சிங் என்று ஒரு சர்தார்ஜிக்கு ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது. சுரீந்தர் சிங்கின் தலைப்பாகை வெளிநாட்டவரைக் கவரும் என்பது அவர்கள் எண்ணம்.. ஒரு நாள் சுரீந்தர் சிங் கிராப் வைத்துக் கொண்டான் ஹோட்டல் நிர்வாகம் கிராப் வைத்துக்கொண்டாலும் தலைப்பகையை விடக்கூடாது. இல்லையெனில் அவனுக்கு வேலை கிடையாது என்று சொன்னதாம். சீன அரசு போலவே ஹோட்டலுக்கும் தன் வியாபாரத்தில் தான் அக்கரை. சுரீந்தர் சிங்கின் மதம் பற்றி ஏதும் அக்கறை இல்லை.

சைனாவை ஒரு சமயம் சார்ஸ் அசுரத்தனமாகத் தாக்கியது. சீன அரசு அதை மறைத்தது. ஒப்புக்கொள்ள மறுத்தது. ஆனால் அது விஷவேகத்தில் பரவவே, இந்த  இணைய யுகத்தில் எதை மறைக்க முடியும்? உடனே சார்ஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டு அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டது அரசு.  தீவிரத்தையும் செயல் உத்வேகத்தையும் காட்டியது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனை ஏழே நாளில், ஏப்ரல் 24லிருந்து 30க்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 1200 டாக்டர்கள் நர்ஸுகள்.

ஒரு ஊரையே முதலாளிகளின் பங்களா வாசிகளின்  குடியிருப்பாக மாற்றிய ஒரு தொழிலதிபர் கூறுகிறார்:” எங்களூர் மக்கள் கம்பெனி பங்குகள் வைத்திருக்கிறார்கள். நல்ல டிவிடெண்ட் வருகிறது. இது முதலாளித்துவம். எல்லோருக்கும் இலவசமாகக் கல்வி, மருத்துவ உதவி கிடைக்கிறது. இது கம்யூனிசம். மாதா மாதம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கிறது. இது சோஷலிசம். இப்படி எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்கிறோம். கெட்டதைத் தள்ளி விடுகிறோம்”

இன்னொரு மேற்கோள்; ”ஆண்டான் அடிமை என்ற நிலபிரபுத்துவ வேற்றுமை மறைந்தது. அதற்குப் பதிலாக கட்சிக்காரன் மற்றவன் என்ற புதிய கோணத்தில் அதிகாரமும் சலுகைகளும் சிலருக்கு மாத்திரம் அமோகமாகக் கிடைத்தன” ( தமிழ் நாட்டைச் சொல்வதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த நினைப்பு சரியென்றே தோன்றினாலும், சொல்லப்படுவது சைனாவைப்பற்றி.) .

கடைசியாக, “ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார சீனாவில் தான் குடிமக்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள்” இது பல்லவி அய்யர் ஒரு கட்டுரையில்.

சீனா: விலகும் திரை - பல்லவி அய்யர். தமிழில்: ராமன் ராஜா
கிழக்கு பதிப்பகம். 33/15 எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார் பேட்டை. சென்னை – 18
பக்கங்கள்: 360
விலை: ரூ 200

இணையம்  மூலம் புத்தகத்தை இங்கே[1] வாங்கலாம்.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே[2].



Saturday October 2, 2010

கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்ற சுதந்திரம் என்று அலங்காரமாக கூறிகொண்டாலும், உண்மையில் ரத்தம் சிந்தாமல் நமது இந்திய சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. அகிம்சை போராட்டத்தின் மூலம் கட்டுபட்டிருந்த வன்முறையும் ரத்தமும் இந்திய பிரிவினையின் போது கட்டுக்கு அடங்காமல் வெளியேறியது. சில ஆய்வுகள் கொல்லப்பட்ட மக்கள் தொகை பத்து லக்ஷம் என்றும், சில ஆய்வுகள் இருபது லக்ஷம் வரை இருக்கலாம் என்றும் கணக்கிட்டு இருந்தாலும் உண்மையில் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடிய வேளையில்தான் நாம் சுதந்திரம் பெற்றோம்.

இந்த பின்னணியுடன் தொடங்கும் 'இந்திய வரலாறு - காந்திக்கு பிறகு' (பாகம் ஒன்று) என்ற திரு. ராமச்சந்திர குஹாவின் புத்தகம் (Translation of 'India after Gandhi; தமிழில்: ஆர். பி. சாரதி) , இந்திய வரலாற்றை அறுபதுகளின் மத்தியில் வரை சொல்கிறது. இந்த காலகட்டத்தை சுதந்திர இந்தியாவின் 'eventful years' என்று கூறினால் தவறாகாது. குறிப்பாக பிரிவினையும் அதன் பிறகு நடந்வைகளையும் சொல்லி செல்லும் விதம் அபாரமானது. பிரிவினை துயரங்களை இந்த புத்தகத்தின் மூலம் தெளிவாகவே உணர முடிகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் கதாநாயகன் திரு காந்தி என்றால், நவீன இந்தியாவின் கதாநாயகன் திரு. ஜவஹர்லால் நேரு என்பதை நிலைநாட்ட முயலும் இந்த புத்தகம், இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டத்தை சுவையாக சொல்லிக்கொண்டு செல்கிறது.

இந்திய சுதந்திரம் பெற்ற காலகட்டங்களில் இந்தியா ஒரே நாடாக நீடிக்கும் என்று எந்த மேற்க்கத்திய நாடுகளும் கருதவில்லை. ஏனென்றால் இந்தியாவை போன்ற ஒரு தேசத்தை அவர்கள் அதற்கு முன் கண்டதே இல்லை. பல வகையான மதங்கள், மதங்களுக்குள் பல வகையான வேறுபாடுகள், தேசம் முழுமைக்குமான ஒரே மொழி இல்லாமை, கடுமையான வறுமை, அடிப்படை கல்வி கூட இல்லாத பெரும்பான்மையான ஜனத்தொகை என ஒரு நாட்டை உருவாக்கும் எந்த விதமான காரணிகளும் இல்லாத தேசம் இது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் இருந்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல். கிட்டத்தட்ட இன்றுள்ள பாராளுமன்ற இடங்களின் எண்ணிக்கை. (அவைகளுக்கு இந்த நாட்டுடன் சேருவதா இல்லை தனித்திருப்பதா என முடிவெடுக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் சமஸ்தானங்களுக்கே விட்டு சென்றிருந்தனர்.) உண்மையில் இந்த நாட்டை பிரிவு படுத்தும் காரணங்களின் எண்ணிக்கை ஒன்று படுத்தும் காரணங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானது. மிக வலிமையானது.

என்றாலும், பல சோதனைகளுக்கு இடையிலும் இந்த தேசம் ஒற்றுமையாக இருக்க காரணம் என்ன? முக்கியமான காரணங்களில், இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டங்களில், இந்த தேசத்திற்கு ஸ்திரமான ஒரு அரசை அளித்த நேருவின் பங்களிப்பு சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்திரமான அரசு இல்லாத அண்டை நாடு இன்றளவும் படும் கஷ்டங்களை காண நோக்கினால் இது நன்றாகவே விளங்கும். குறிப்பாக வரலாற்றின் மாபெரும் சூதாட்டம் என முதல் இந்திய தேர்தல்களை பற்றி குஹா விளக்கும்போது நாம் எப்படிபட்ட அக்னி பரிக்ஷைகளை தாண்டி வந்து இருக்கிறோம் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஐம்பதுகளில் இந்தியா முழுவதும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நேரு மட்டுமே. அவரே ஒன்று பட்ட நாட்டின் அரசியல் முகமாக இருந்தார். அவர் போன்ற அனைவராலும் எற்றுக்கொள்ளபடாத தலைவர் இல்லையெனில், நாட்டின் எந்த ஒரு அரசியல் அடிப்படை அமைப்பையும் ஏற்படுத்த முடியாமல் போகியிருக்ககூடும். அதன் விளைவுகளை சொல்ல தேவையே இல்லை.

இந்த நாட்டின் அரசியல் பாதை அவரே அமைத்து கொடுத்தார். சரியான வழியோ தவறான வழியோ, இந்த நாட்டின் பொருளாதார பாதையையும் அவரே அமைத்தார். இந்த நாட்டின் சுபிக்ஷத்திற்கான திட்டங்களை தீட்டினார். அவைகள் மூலம் ஒரு மாபெரும் ராஜ்ஜியத்துக்கான அடிப்படையை அமைத்தார்.

இந்த விவரங்கள் ராமச்சந்திர குஹாவின் புத்தகத்தில் சிறப்பாகவே வெளிபடுகிறது. குறிப்பாக இந்தியா அரசியல் சட்ட உருவாக்கத்தின்போது நேரு காட்டிய உறுதியை கூறலாம். அதிலும் குறிப்பாக இந்து சட்ட மசோதாவை கூறலாம். நேரு போன்ற பெரும்பாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒருவர் இல்லையெனில் இவை நிகழ்ந்தே இருக்காது.

பொதுவாக வரலாற்றை இரு முறைகளில் எழுதலாம். நடந்ததை நடந்தபடியே கூறிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை வாசகனிடம் விட்டு விடுவது ஒரு முறை. அல்லது எதாவது ஒரு தரப்பின் வழியே வரலாற்றை விளக்குவது. இந்த புத்தகம் எந்த வகையை சார்ந்தது?

காந்தி இல்லாத இந்தியாவில் நேரு ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருந்தாலும் அது அவருக்கு போதவில்லை. அவர் தன்னை உலக தலைவராக கருதி கொண்டார். உலக தலைவர் எப்படி ஒரு நாட்டிற்க்கு மட்டுமாக சிந்திப்பார்? உதாரணமாக நாட்டின் ஒரு பகுதியில் பிரச்சனை வந்தால் அதை தான் சார்ந்த நாட்டிற்க்கு மட்டும் ஆதரவாக பார்த்தால் உலக பார்வை என்ன ஆவது?

காஷ்மீர் பிரச்சனை வந்த போது நேருவின் பார்வை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் காஷ்மீர் பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்து சென்று இருக்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனையை ஐ. நா. சபைக்கு எடுத்து சென்றது நேரு என்று ஒரு சிறு குழந்தை கூட அறியும். ஆனா குஹா இந்த காரியம் அப்போது இருந்த கவர்னர் ஜெனரராலும் (மௌன்பேட்டன்) பிரிட்டிஷ் தளபதியினாலும் செய்யப்பட்டதாக ஒரு சித்திரத்தை அளிக்கிறார். மேலும் இந்த முடிவில் நேருவின் பங்கு பற்றி குஹா பேசவே இல்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பது. ஆனால் இந்த இடத்தில் தொடங்கும் அதிர்ச்சி வேறு பல இடங்களிலும் தொடர்கிறது. (பிறகு ஒரு இடத்தில் காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளித்திருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து குஹா எழுதுகிறார்).

அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் யூனியனிற்கும் பனி போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், சுதந்திர இந்தியாவிற்கு தனது பாதையை வகுத்து கொள்ளும் கட்டாயம் இருந்தது. இந்து மஹா சபா மற்றும் ஜன சங்கம் போன்ற இயக்கங்கள் வலது சாரி பாதையை ஆதிரிக்க, கம்யூனிஸ்ட் இடது சாரி சோவியத்தை ஆதரித்தனர். நேரு இரண்டையும் சாராமல், அணி சேரா நாடாக இந்தியாவை முன்னிறுத்தினார். ஆனால் சோ ராமஸ்வாமி கூறியதை போல நடை முறையில் இந்த அணி சோவியத்தை ஆதரிப்பதாகவே இருந்தது.

எகிப்து சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியபோது அதை எதிர்த்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகள் எகிப்து மேல் போர் தொடுத்தன. (இது 'Suez Crisis' என அழைக்கப்படுகிறது.) இந்த படையெடுப்பை நேரு கடுமையாக கண்டித்தார்.

இது நடந்த சில காலத்திலேயே சோவியத் யூனியன் ஹங்கேரி நாட்டின் மேல் படை எடுத்தது. (ஹங்கேரியில் கம்யுனிச ஆட்சி கவிழ்ந்ததை ஒட்டி இந்த படை எடுப்பை சோவியத் நிகழ்த்தியது. ). இதை எதிர்த்து ஐ.நா. சபையில் வோட்டெடுப்பு நிகழ்ந்தபோது இந்திய பிரதிநிதி வி. கே. கிருஷ்ண மேனன் வாக்களிக்காமல் நடு நிலை வகித்தார். இது உலக அளவில் நேருவின் இரட்டை நிலையை வெளிச்சமாகியது. மேலை நாடுகளில் இந்தியாவின் மீது ஆழமான கசப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தை குஹா எப்படி விளக்குகிறார்? கிருஷ்ண மேனன் வாக்களிக்காமல் இருந்ததாகவும், நேரு அதை ஆதரிக்க மட்டுமே செய்ததாகவும் குறிப்பிடும் குஹா, நேரு சோவியத்தின் செயலின் மூலம் வருந்தமடைந்தார் எனவும் குறிப்பிட தவறவில்லை. இவ்வளவு முக்கியமான முடிவை நேருவின் அனுமதியின்றியா கிருஷ்ண மேனன் எடுத்திருப்பார்?

நீங்கள் தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளை கண்டு கொதிப்பவரா? உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகுகிறதா? அப்படியெனில் சீனா இந்தியாவின் மேல் நடத்திய படையெடுப்பை பற்றி படிக்காமல் இருப்பதே நல்லது. இதய அடைப்பே வந்துவிடும்.

ஐம்பதுகளின் மத்தியிலேயே இந்திய சீன பிரச்சனை தொடங்கி விட்டது. சீனா போருக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கி விட்டுருந்தது. குறிப்பாக 1959 -ல் சில இடங்களில் துப்பாக்கி சூடும் நடத்தியது. சீனா எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்கலாம் என்ற நிலையே இருந்தது. இந்திய பகுதிகளை ஆக்கிரமித்தும் இருந்தனர்.

இந்திய தரப்பு என்ன செய்து கொண்டு இருந்தது? நேரு சீன பிரதமர் சௌ என் லாய் -க்கு கடிதம் எழுதினார். பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இந்திய படை தலைவர் மேஜர் திம்மையா அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த கிருஷ்ண மேனனுக்கு இந்திய படையை வலிமை படுத்தும் அவசியத்தை எடுத்து கூறியும் ஒரு பிரயோஜனமுமில்லை. இந்தியா போருக்கு தேவையான ஆயத்தமும் இன்றி இருந்தது.

இந்த நிலையை கடுமையாக எதிர்த்தவர்கள் க்ருபாளினியும் வலது சாரி கட்சிகளும் மட்டுமே. ஆனாலும் நேரு உறுதியாக கிருஷ்ண மேனன் பக்கம் நின்றார். (1961 தேர்தலில் கிருஷ்ண மேனன் போட்டியிடும் முன்பு கோவாவில் போர்த்துகீசிய அரசை எதிர்த்து இந்திய படை வெற்றி பெற்றது. இந்த போர் கிருஷ்ண மேனன் பம்பாய் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தேர்தலுக்கு சில காலம் முன்பு நடை பெற்றது. போரின் தாக்கத்தால் இந்த தேர்தலில் மேனனை எதிர்த்த கிருபாளினி தோல்வியுற்றார்.) .

சீன பிரதமர் இந்தியா வந்தபோது அப்போது இருந்த ஒரு ஜோக் நிலைமையை தெளிவாக காட்டுகிறது. ("சீனாவுடனான பேச்சு வார்த்தை இந்திய குழுவில் கிருஷ்ண மேனன் ஏன் இல்லை? ஏனென்றால் அவர் சீன குழுவில் இருக்கிறார்".). இதில் இன்னுமொரு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம், நேருவின் அணுகுமுறை. சீன ஆக்கிரமிப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் வந்தபோது நேரு (சீனா கோரிய) அக்சாய் சென் பகுதி புல் பூண்டு கூட வளராத வறண்ட நிலம் அது என்று பதிலுரைத்தார்.

எதிர்பார்த்தபடி 1962 -ல் போர் தொடங்கிய போது, சீனா பெரும் வெற்றி பெற்றது. பெரும்பாலும் பிரிட்டிஷார் விட்டு சென்றிருந்த ஆயதங்களை வைத்து போராடிய இந்திய துருப்புகள் வெகு எளிதில் தோல்வியுற்றது.

இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் இந்திய சீன போர் குறித்த சோவியத்தின் நிலைப்பாடு. இந்தியா சோவியத்திற்கு மிக நெருக்கமாக இருந்தாலும், சோவியத் யூனியன் இந்த போரில் நடுநிலை வகித்தது. ஆனால் அதுவரை நேரு வெறுத்த அமெரிக்கா இந்தியாவிற்கு உதவ முன்வந்தது. பிரிட்டனும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கினர். இந்தியாவிற்கு உதவ அமெரிக்க துருப்புகளும் வந்தன. (கிட்டத்தட்ட இதே போன்ற நிலைமை சமிபத்தில் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. சமிபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் உதவின. பாகிஸ்தான் தனது நட்பு நாடு என நினைக்கும் சீனாவோ, பிற முகமதிய தேசங்களோ பெயரளவுக்கு மட்டும் உதவிகளை அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டன. இதை குறிப்பிடும் வகையில் ஒரு அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானை நோக்கி 'where is your friends' என கேட்டார். )

சோவியத் கைவிட்டும், அமெரிக்கா உதவியும் கூட, இந்தியா சோவியத் ஆதரவை விட்டு வெளிவரவே இல்லை. (தற்காலத்தில், அமெரிக்கா இந்தியாவை விட பாகிஸ்தானை நம்புவதற்கு தேவையான காரணங்கள் அமெரிக்காவிற்கு உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.)

குஹா சறுக்கியிருக்கும் இன்னொரு இடம் இந்துத்துவ அமைப்புகளின் மேல் அவர் காட்டியிருக்கும் அப்பட்டமான வெறுப்பு . காஷ்மீர் பிரச்சனையில் போராடிய திரு ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நோக்கத்தையே சந்தேகிக்கும் குஹா, சீனா இந்தியாவின் மீது படை எடுத்தபோது அதிர்ச்சியூட்டும் வகையில் சீனாவை ஆதிரிக்கும் வகையில் இந்திய இடது சாரியினரில் ஒரு பிரிவினர் நடந்து கொண்டதை பற்றி குறிப்பிடவே இல்லை. ( அவர்கள் இந்த போரை முதலாளிதுவத்திர்க்கும் பொதுவுடமைக்கும் இடையிலான போராக வர்ணித்தனர் . ஆனால் இந்த விவரங்கள் எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை.). அவ்வளவு ஏன், இந்திய சீன பிரச்சனைகள் தீராததற்கு ஜனசங்க அமைப்பையே ஒரு இடத்தில் குறை கூறுகிறார். (சீன பிரச்சனை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென வாஜ்பாய் தலைமையில் ஜனசங்கம் கோரியது. வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்ய பட்டது, இதை பற்றி குறிப்பிடும்போது "வெள்ளை அறிக்கை வெளியிட்டது நேருவின் கைகளை கட்டிபோட்டு விட்டது என்றார் ஸ்டீபன் ஹாப்மன். எல்லை பிரச்சனை ரகசியமானதாக இருந்திருந்தால் பிரதமர் அமைதியான ராஜதந்திர வழியில் சமாதானத்தை நாடியிருப்பார்......வெள்ளை அறிக்கைகள், விட்டு கொடுக்கும் மனோபவத்தை விடுத்து தேசிய உணர்வுகளை கொழுந்துவிட்டு ஏறிய செய்தன " என குஹா எழுதுகிறார்.).

அடிப்படையில் நேருவை வைத்து இந்திய வரலாற்றை விளக்க முயன்றிருக்கிறது இந்த புத்தகம். காந்திக்கு பிறகு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்திய வரலாற்றை பெரும்பாலும் நேருவை தவிர்த்து எழுதவே முடியாது. ஆனால் அந்த வரலாற்றையும் நடுநிலைமையோடு எழுதி இருந்தால் புத்தகத்தை முடிக்கும்போது நேருவின் சார்பாக மட்டுமே குஹா எழுதி இருக்கிறாரோ என்று எழும் என்ணத்தை தவிர்த்து இருக்கலாம்.

- சிற்றோடை.

கொஞ்சம் கணிதம் http://www.karthicks.net/2011/03/blog-post.html
ஜான் மார்ஷல் சில மாதங்களுக்கு முன்னால் இடது மூளையில் Stroke வந்ததன் காரணமாக ஓய்வுக்குப் பின் மருத்துவ சோதனைக்காக டாக்டரைப் பார்க்க சென்றார்.பொதுவாக சில நிமிடங்கள் பொது விஷயங்களைப் பேசிவிட்டு, டாக்டர் அவரின் தொழில் பற்றி விசாரிக்கத்தொடங்கினார்.

“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?”
“பைலட்”
“எது மாதிரியான விமானங்களை நீங்கள் ஓட்டுகிறீர்கள்?”
ஜான் விமானத்தின் பெயர் சொல்லி “இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டதில் இதுதான் மிகவேகமாகப் பறக்கக்கூடிய விமானம்”.
இப்படி சில கேள்விகளுக்குப்பின் டாக்டர் கேட்டார்.
“நூறிலிருந்து ஏழைக் கழித்தால் எவ்வளவு?” . 
”ஓ,நூறிலிருந்து ஏழைக்கழித்தாலா?” - இது ஜான்.
“ஆமாம்”
“ஓ,அது நூறிலிருந்து ஏழைக்கழித்தால்?”
”ஆமாம்,நூறிலிருந்து ஏழைக்கழித்தால்.”
“96?” -ஜான்.
“இல்லை,சரி இதை முயலுங்கள்.பதினேழிலிருந்து மூன்றைக்கழித்தால்?”
”பணிரெண்டு?”
டாக்டருக்கு ஆச்சரியம்.ஒரு பைலட்,நிறைய பொதுவிஷயங்களைத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர். ஆனால்,பதினேழிலிருந்து மூன்றைக்கழித்தால் பணிரெண்டு எனச் சொல்கிறார்.ஒரு சாதாரணமான கணக்குக்கு விடை சொல்ல இவ்வளவு சிரமமா? 

இந்தக் குறைபாட்டை மருத்துவத்தில் Dyscalculia என்கிறார்கள்.மூளையில் Angular Gyrus என்ற பகுதி இருக்கிறது.இந்தப்பகுதியில்தான் இது போன்ற Arithmetic
http://4.bp.blogspot.com/-y7S3bDH7LTk/TYXG32EpjUI/AAAAAAAAAEY/5wfvd1eN-3w/s400/Gyrus.jpg
 நடவடிக்கைகள் நடக்கிறது.இந்த Angular Gyrusல் எல்லா Arithmetic நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எண் மையம்(Number Centre) இருக்கிறதா? இல்லை,ஆனால், இது போன்ற Computational Tasks நடக்க Angular Gyrus மிக முக்கியம்.இந்தப்பகுதியில் இது போன்ற Arithmetic நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என்பது ஆராயப்பட்டு வருகிறது.
ஞாபகசக்தி,மொழி அறிவு,நகைச்சுவை உணர்வு இதற்கும் Angular Gyrusக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு மிகப்பெரிய நகைச்சுவையாளருக்கு இருபதிலிருந்து பத்தைக்கழித்தால் கிடைப்பது என்ன என்பது தெரியாமல் கூட இருக்கலாம்.

இதுபோன்ற கூட்டல், கழித்தல் கணக்குகளைத்தவிர்த்து, பொதுவாகவே கணிதத்தைக் கண்டால் சிலருக்கு ஒரு மிரட்சி உண்டு.ஜெர்மனியில் Hans Enzensberger என்னும் எழுத்தாளர் பல வருடங்களுக்கு முன்னால் The Number Devil என்னும் புத்தகத்தை எழுதினார்.கணிதத்தைக்கண்டு மிரளும் அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.இந்தப் புத்தகத்தில் Number Theoryஐ மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தினார்.Enzensberger ராபர்ட் என்னும் ஒரு கற்பனை மாணவனை உருவாக்கினார்.அவனுக்குக் கணிதத்தின் மேல் அத்தனை வெறுப்பு.அதற்கு அவனது கணித ஆசிரியரும் ஒரு காரணம்.ராத்திரி தூங்கும்போது தினமும் அவன் கனவில் ஒரு பூதம் வருகிறது.பணிரெண்டு நாட்களில் அந்தப்பூதம் மாணவனுக்கு Number Theoryஐ மிக எளிமையான முறையில் சொல்லித்தருகிறது. இத்தனை நாள், கணிதத்தின் மேல் இருந்த வெறுப்பு பிறகு ஆவலாக மாறுகிறது.

பூதம் சொல்லிக்கொடுக்கும் சில ஸ்வாரசியங்கள் இங்கே:

1)
11ஐ 11ஆல் பெருக்கும்போது கிடைக்கும் விடை ஒரு Palindrome.(11*11=121).
111ஐ 111ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 12321 இதுவும் ஒரு Palindrome
1111ஐ 1111ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடை 1234321.

ஒவ்வொரு முறையும் ஒன்றை அதிகப்படுத்தும்போது கிடைக்கும் விடை Palindromeஆ? 
இல்லை.இது ஒன்பது முறை மட்டுமே Palindromஐக் கொடுக்கும்.

நீதி: நிரூபிக்கப்படும்வரை பொதுப்படுத்துதல் தவறு.

2) ஒன்றை ஏழால் வகுத்தால்(1/7) கிடைக்கும் விடை 0.142857142857142857142857142857
இந்த 0.142857142857142857142857142857 என்ற எண்ணை ஒன்றிலிருந்து ஆறு வ்ரை எந்த எண்ணால் பெருக்கினாலும் கிடைக்கும் விடையில் இதே எண்கள்(142857) இடம்மாறி சுழற்சியாக வரும். 

இது போன்ற ஸ்வாரசியங்கள் நிறைய இந்தப்புத்தகத்தில் உண்டு.சுமார் 15ஆண்டுகளுக்கு முன்பே இந்தப்புத்தகம் கிடைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

Everything comes too late in this Life .


இளமையில் வறுமை கொடியது தான். அதே அளவுக்கு, இளமையில் வேலையில்லாமல் இருப்பதையும் சொல்லலாம். (வேலை இல்லாமல் இருப்பது எப்போதும் கொடுமை தான், இருந்தாலும் இது இன்னும் கொடிது). அதுவும், வீட்டில் முதியவர்கள் வேலை செய்து கொண்டு இருக்க, தம்பி, அக்காக்கள் இருக்கும் போது வேலையில்லாமல் இருப்பது என்பது மிகவும் கொடியது தான். அப்படிப்பட்ட ஒருவனின் கதை தான், வண்ணநிலவனின் 'கரையும் உருவங்கள்'.
கதை சங்கரன் என்னும் இளைஞனின் பார்வையில், அவன் வீடு வந்து திரும்பும் ஒரு இரவில் நடப்பது. இரவில் நேரம் கழித்து வீட்டிற்கு வரும் அவன், கதவை தட்டாமலே வெளியேவே நிற்கின்றான். அவன் அக்கா அவனை பார்த்து உள்ளே அழைக்கின்றாள். அவனின்  இந்த ஒரு செயலே, அவனின் குற்றுனர்வை கோடிட்டு காட்டுகின்றது. அவன் அக்காவிற்கு இது எல்லாம் புரிகின்றது, அவனை அவள் பரிவோடு நடத்துகின்றாள்.வீட்டிற்குள் வரும் அவனுக்கு, சாப்பாடு வைக்கின்றாள், அன்பாக பேசுகின்றாள். வேலையில்லாமல் இருக்கும் சூழலில், வீட்டிலிருப்பவர்கள் கடிந்து பேசினால் கூட பரவாயில்லை தானே? நாம் அதற்கு எதிர்வினையாக கோபத்தை காட்டி நம்முடைய இயலாமைக்கு கவசமாக உபயோகிக்கலாம். ஆனால் இந்த மாதிரி அன்புடன் இருக்கும் போது, அது இன்னும் குற்ற உணர்வை பெருக்கி, நம் இயலாமை மீதே இன்னும் வெறுப்பு கொள்ளதான் செய்யும். இந்த அன்பிற்கு முன்பு நிராயுதபாணியாக தான் உணர்வோம். சங்கரனுக்கு இந்த நிலை தான், சாப்பிட கூச்சம், வீட்டில் படுக்கவே கூச்சமாக உள்ளது. இந்த உணர்வு நம்மில் பலருக்கு இருந்திருக்கும். அவன் துணியை சரி வர தோய்ப்பது கூட இல்லை, நேர்முகத்தேர்வுக்கு கூட நடந்தே செல்ல நினைக்கின்றான். அவன் அக்கா அவனை தேற்றுகிறாள். இந்த உரையாடல்கள் அனைத்தும் மிக இயல்பாக உள்ளன.ஒரு வகையில் சங்காரம், நம்மில் பலரும் தான்.

சரி, இது வரை இது நல்ல கதை தான், ஆனால், வேலையில்லா பிரச்சனை, அந்த உணர்வுகள் பற்றி பல கதைகள் வந்து தான் உள்ளன. இறுதியில் வரும் அக்கா பேசும் வார்த்தைகள் தான், இந்த கதையை அதையும் மீறி ஒரு சிறந்த கதையாக மாற்றுகின்றது. சங்கரனின் செயல்களை பார்த்து அவள் கூறுகிறாள், '... அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறசிருக்கேனா. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா', இப்படி அவள் விசும்பலுடன் கூறி கதை முடியும் போது, சங்கரனின் POVஇல்  நகரும் கதை, சட்டென்று ஒரு நொடியில் மாறி இன்னும் பல தளங்களை நமக்கு திறக்கின்றது. இது ஒன்றும், ஒ.ஹென்றி பாணியிலான, வலிந்து வரவழைக்கப்பட்ட திருப்பமோ, உச்ச நிகழ்வோ அல்ல, மிக இயல்பாக நிகழும் ஒன்றும். இறுதியில் நம்மக்கு ஏற்படும் மன உணர்வுகளை விவரிக்க முடியாது. ஒவ்வொருவரும் இப்படித்தான் நம்முடைய தனிப்பட்ட சிலுவையை சுமந்து, இயலாமையின் குற்ற உணர்வுடன் வாழ்கின்றோம். 
படித்து பல காலம் ஆகியும், மறக்க முடியாத கதை இது. சிறுகதை எழுத வேண்டும் என்றால் இந்த கதையை, வண்ணநிலவனை படிக்கலாம், தவறொன்றும் இல்லை. உள்ளொளி பயணம், தத்துவம், தரிசனம் என்றெல்லாம் படம் போடாமல் எளிமையான சிறந்த கதைகள் இவருடையது. 
வண்ணநிலவன் கதை தொகுப்பு - சந்தியா பதிப்பகம். 

வாசிப்போம் வாருங்கள்

ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய  எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு  சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,  அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன்

••

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன்,

ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம்.  பின்நவீனத்துவம். என்று ஒவ்வொரு பத்தாண்டிலும் உலக இலக்கியத்தின் போக்கு ஏதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டிருக்கும்,  தற்போது அந்த மையப்புள்ளியாக உருக்கொண்டிருப்பது ஆசிய இலக்கியமே,

ஆசியநாடுகளின் இலக்கியப்படைப்புகள்  குறித்த தீவிரமான சர்ச்சைகள். ஆய்வரங்குகள் மேற்குலகில் தொடர்ந்து நடந்து வருகின்றன, சமீபத்தைய வருசங்களில் புக்கர் பரிசு உள்ளிட்ட  பல முக்கியமான இலக்கியப் பரிசுகளை வென்றவர்கள் ஆசிய எழுத்தாளர்களே.

1)யான் மார்டில்    ( Yann Martel)

2002 ம் ஆண்டிற்கான மான்புக்கர் பரிசு பெற்ற Life of pi  என்ற நாவலின் மூலம் உலகின் கவனத்தை பெற்ற யான் மார்டில் கனடாவைச்சேர்ந்தவர்,

பட்டேல் என்ற பாண்டிச்சேரியை சேர்ந்த இளைஞன் கடற்பயணத்தில் சந்திக்கும் விசித்திரமான நெருக்கடியைப் பற்றியதே இந்த நாவல், பட்டேல் தன் பெயரை பை என்று சுருக்கிக் கொண்டிருக்கிறான், அவனது  பெற்றோர் ஒரு மிருகக்காட்சி சாலை நடத்துகிறார்கள், இங்கிருந்து இடம் பெயர்ந்து கனடா போய் வாழ்வது என்று ஒரு கப்பலில் பையின் குடும்பம் புறப்படுகிறார்கள்,அதற்காக மிருக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் ஒரு கப்பலில் ஏற்றப்படுகின்றன, அந்தக்கப்பல் கடலில் விபத்திற்கு உள்ளாகிறது

அதில் தப்பி உயிர்காக்கும் படகில் ஒரு வங்கப்புலியோடு 227 நாட்கள் கடலில் தவித்து உயிர் பிழைக்கிறான் பை, முடிவில் அவன் ஜப்பானிய அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு விசாரணை செய்யப்படுகிறான் அப்போது தனது கடற்பாடுகளை வேறு ஒரு கதை போல மாற்றிச் சொல்கிறான், இரண்டில் எது நன்றாக உள்ளது என்று கேட்கையில் அதிகாரிகள் மிருகங்களுடன் தப்பி உயிர்பிழைத்த கதையே என்கிறார்கள்,

இந்த நாவல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது,  தனது நாவலின் களத்தை அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் ஒன்றரை வருசங்கள் வாழ்ந்திருக்கிறார் யான் மாட்டில்,  Beatrice and Virgil  இவரது சமீபத்தைய நாவல், உருவகக்கதை போல அமைந்துள்ள இந்த நாவலும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது

2)ரானா தாஸ் குப்தா, (Rana Dasgupta)

இங்கிலாந்தில் வாழும் இந்தியர், இவரது முதல் நாவல் Tokyo Cancelled, 13 சிறுகதைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கபட்ட புதிய வடிவம் கொண்டுள்ளது, போர்ஹெஸ் மற்றும் மார்க்வெஸின் எழுத்துகளில் காணப்படும் மாயத்தன்மையும் கவித்துவமான கதை சொல்லும் முறையும் இவரிடமும் காணப்படுகின்றன,  இவரது SOLO நாவல் பல்கேரியாவில் வசிக்கும் நூறு வயதான  ஒரு பார்வையற்ற ஒருவரின் நினைவுகளின் வழியே இரண்டு வேறுபட்ட காலங்களில் நடைபெறும் வரலாற்று முக்கியமான சம்பவங்களை ஒன்று  சேர்க்கின்றன,  பழைய டெல்லி பற்றிய இவரது அவதானிப்புகள் வியப்பளிக்கின்றன.

3) கார்லோஸ்  ருஸ் ஜபான்  (Carlos Ruiz Zafón)

ஸ்பானிய எழுத்தாளரான இவரது THE SHADOW OF THE WIND  மிக முக்கியமான நாவல், இந்த நாவல் காலத்தால் கைவிடப்பட்டு மறந்து போன புத்தகங்களுக்கான ஒரு ரகசிய கல்லறை போன்ற நூலகம் ஒன்றிற்குள் சென்று தனக்கு விருப்பமான ஒரு புத்தகத்தை தேர்வு செய்யும் டேனியல் என்ற இளைஞனை பற்றியது

அவன் தேர்வு செய்த புத்தகமே காற்றின் நிழல்,  அந்த நாவலின் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த எழுத்தாளரின் அடுத்த புத்தகத்தை தேட துவங்கி அதன் வழியாக தனது சொந்த வாழ்வின் நினைவுகளை இழந்த அடையாளங்களை தெரிந்து கொள்வதே நாவலாக விரிகிறது,

ஒரு புத்தகத்தோடு ஒரு வாசகனுக்கு உள்ள உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவல் அழகாக விவரிக்கிறது, புனைவில் உள்ள ஒரு கதாபாத்திரம் நிஜமாகி புத்தகங்களின் விதியை அது முடிவு செய்கிறது என்ற கற்பனை அபாரமானது, நாவலின் உரையாடல்களும். கதைத்துவமும் போர்ஹெஸை அதிகம் நினைவூட்டுகின்றன, சமகால உலக இலக்கியத்தில் போர்ஹெஸின் பாதிப்பு இல்லாத முக்கிய எழுத்தாளர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

இவரது சமீபத்தைய நாவல் , THE ANGELS GAME இதுவும் மிகைபுனைவு வகை எழுத்தே,

4) காலித் ஹொசைனி ( Khaled Hosseini)

அமெரிக்காவில் வாழும் ஆப்கானிய எழுத்தாளர், THE KITE RUNNER என்ற இவரது நாவல் 2003ம் ஆண்டு வெளியாகி மிகுந்த பிரபலமாகியதுடன் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றியடைந்தது, இந்த நாவல் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இவரது A THOUSAND SPLENDID SUNS நாவலும் விற்பனையில் பெரிய சாதனை செய்திருக்கிறது, யுத்த பின்புலத்தில் சிதறுண்ட குடும்பங்களின் கதையை சொல்வதே இவரது எழுத்து .  ஆப்கானில் இருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் தேடிச் சென்ற அமீர் என்ற சிறுவன் மற்றும் அவனது தந்தையின் வாழ்க்கையும் பால்யத்தின் மறக்கமுடியாத நினைவுகளுமே கதையின் மையம், நாற்பத்தைந்து வயதாகும் ஹொசைனி அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டினையும் உறவுகளையும் துறந்து செல்லும் மனிதர்களின் வாழ்வே தன்னை தொடர்ந்து எழுதச் செய்கிறது என்கிறார், யுத்தம் ஒரு தனிநபரின் நட்பு மற்றும் உறவுகளின் மீது என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை இவரது எழுத்தின் வழியாக நுட்பமாக உணர முடிகிறது,

5)  ஹருகி முராகமி, (Haruki Murakami)

சமகால ஜப்பானிய இலக்கியத்தில் இவரே மிகச்சிறந்த எழுத்தாளர், உலகெங்கும் இவருக்கான வாசகர்கள் பல லட்சமிருக்கிறார்கள், ஐரோப்பிய இலக்கியங்களை ஜப்பானில் மொழிபெயர்ப்பு செய்வதில் துவங்கி இன்று மிக முக்கிய எழுத்தாளர் ஆகியிருக்கிறார், தமிழில் கூட இவரது சிறுகதைகள் தனித்தொகுப்பாக வெளியாகி உள்ளது, ஜி, குப்புசாமி மொழிபெயர்த்திருக்கிறார், முராகமியின் சிறுகதைகள் வடிவ ரீதியாக முற்றிலும் மாறுபட்டவை,  பகடியும் மாயத்தன்மையும் மிக்கவை, இவர் ஒரு மராத்தான் ஒட்டப் பந்தய வீரர் என்பதால் ஒட்டப்பந்தயம் குறித்து what i talk about when i talk about running  என்றொரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார், முராகமி நூற்றுக்கும் மேலான சிறுகதைகள் எழுதியிருக்கிறார், அந்தக் கதைகள் ஜப்பானிய தினசரி வாழ்வின் ஊடாக ஒரு மாயத்தன்மையை அல்லது அசாதாரண நிகழ்வை அடையாளப்படுத்துபவையாக இருக்கின்றன, இவரது இரண்டு முக்கிய நாவல்கள்  KAFKA ON THE SHORE மற்றும்  THE WIND-UP BIRD CHRONICLE,

இசையிலிருந்தே தனது எழுத்து பிறக்கிறது எனும் முராகமி காப்கா விருது . கிரையாமா விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார், இவரது கதைகளில் வரும் தவளைகள்  பூனைகள் மற்றும் நாய்கள் குறித்து தனியே ஒரு புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது, அந்த அளவு வளர்ப்புமிருகங்களை நாம் எப்படி நடத்துகிறோம், மனிதநம்பிக்கைகள் எந்த அளவு சீரழிந்து வருகின்றன என்பதை பகடி செய்து எழுதியிருக்கிறார் முராகமி.

பிறந்த நாள் கதைகள் என்று பிறந்தநாளை முதன்படுத்தி  பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் கொண்ட ஒரு கதைத்தொகுப்பை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்

6  ராபர்ட்டோ போலனோ ( Roberto Bolaño .)

சிலி நாட்டை சேர்ந்த நாவலாசிரியர், 2666  என்ற இவரது 900 பக்க நாவல் சமீபத்தைய நாவல்களில் மிக முக்கியமானது, இந்த நாவல் போலனாவின் மறைவிற்கு பிறகு இந்த நாவல் வெளியாகி உள்ளது ஐந்து பகுதிகளாக உள்ள இந்நாவல் இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் நடைபெற்ற தொடர்கொலைகளை விவரிக்கிறது, போலனோவின் கனவுதன்மை மிக்க எழுத்து லத்தீன் அமெரிக்காவில் அரசியல் உருவாக்கிய வன்முறை மற்றும் துர்மரணங்கள் குறித்த ஆழ்ந்த மனவேதனை மற்றும் அதிகாரத்திற்கு எதிரான மாற்றுக்குரலாக ஒலிக்கிறது, BY NIGT IN CHILE இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க நாவல் 

7) ஹாசு இஷிகாரோ  (Kazuo Ishiguro)

இங்கிலாந்தில் வசிக்கும் ஜப்பானிய எழுத்தாளர், மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறார் இங்கிலாந்தில் வசித்த போதும் ஜப்பானிய வாழ்வின் கடந்த காலங்களைப் பற்றியே இவரது நாவல்கள் பேசுகின்றன, The Remains of the Day என்ற இவரது நாவல்  முக்கியமானது, இது ஒரு இங்கிலிஷ் பட்லரின் நினைவுகளைப் பேசுகிறது, குறிப்பாக அவரது நன்னடத்தை மற்றும் நம்பிக்கைகளை விவரிக்கிறது,

ஒரு மனிதன் தனது மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வது என்பது காலப்போக்கில் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்பதையே இந்த நாவல் முதன்மையாக சுட்டிக்காட்டுகிறது, குறிப்பாக வேலைக்காரராக பணியாற்றும் ஒருவரின் தனிப்பட்ட சுகதுக்கங்கள் அவர் வேலை செய்யும் சூழலில் எப்படி வெளிப்படுகிறது,  அது சரியா தவறா என்பதை பற்றி ஸ்டீவன் என்ற நாவலின் கதாநாயகன் மனக்குழப்பம் அடைகிறான், விசுவாசமாக இருப்பது என்றால் என்ன, அதை எப்படி வரையறை செய்வது என்பதை அவன் ஆராய்கிறான், நினைவுகளாலும் நடப்பு நிகழ்ச்சிகளாகவும் இடைவெட்டிச் செல்கிறது நாவல்

8) ஜீன் சினோஷ்  (Jean Echenoz)

பனிரெண்டு நாவல்களை எழுதியுள்ள இவர் சமகாலத்தின் முக்கியமான பிரெஞ்சு எழுத்தாளர், இவரது எழுத்தும் பகடி வகையை சேர்ந்ததே, அலன் ராபே கிரியோவிற்கு நிகராகப் பேசப்படுகிறார், சரளமான கிண்டலுடன் கூடிய கதை சொல்லும் முறையே இவரது தனித்துவம், முதல்வரியிலே கதையை சொல்லத்துவங்கிவிடும் கதை சொல்லும் முறையை கொண்ட இவர் தன்னை ஒரு சீரியஸ் எழுத்தாளர் என்று சொல்வதைக் கூட கேலிசெய்தே எழுதுகிறார்

I’m Gone என்ற இவரது நாவல் ஒரு கலைக்கூடத்தை நடத்துகின்ற ஒருவரின் சொந்த வாழ்வின் சிக்கல்களையும் கலைப்பொருள் விற்பனை எந்த அளவு மலிமாகப்பட்டிருக்கிறது என்பதையும் விவரிக்கிறது, துப்பறியும் கதையை போன்ற எழுத்துமுறையோடு ஆசிரியரின் குரலும் இணைந்து இந்தக்கதையை விவரிக்கிறது,

9) எட்கர் கரிட்( Etgar Keret)

சிறந்த இஸ்ரேலிய சிறுகதையாசிரியர், பல்வேறுவிதமான கதை சொல்லும் முறையை உருவாக்கி சிறுகதைகள் எழுதி வரும் இவர் குறுங்கதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் The Bus Driver Who Wanted To Be God & Other Stories  என்ற இவரது சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன், தனிமையும் விரக்தியான மனநிலையும் கொண்டவர்களின் கதைகளையே அதிகம் எழுதுகிறார், திரைப்படத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் தனது மனைவியுடன் சேர்ந்து இயக்கிய படமான ஜெல்லி பிஷ் கான்ஸ் படவிழாவில் விருது பெற்றிருக்கிறது

10)ஷியாம் செல்லதுரை (Shyam Selvadurai)

கனடாவில் வசிக்கும் ஷியாம் செல்லதுரை  FUNNY BOY   என்ற தனது முதல்நாவலின் வழியே கவனத்தை ஈர்த்துக் கொண்டார், இந்த நாவல் இலங்கையில் உள்ள ஒரு தமிழ் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது,  ஷியாம் செல்லதுரையின் அப்பா தமிழர், அம்மா சிங்கள இனத்தை சேர்ந்தவர், 1983 இனக்கலவரத்தில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து போன செல்லதுரை டொரன்டோவில் வசிக்கிறார், இந்த நாவல் கொழும்புவில் அவர் வசித்த பதின்வயது நாட்களை விவரிக்கிறது, குறிப்பாக பதின்வயதின் பாலின்ப ஈடுபாட்டை மையமாக;f கொண்டு அதன் ஊடாக ஒரு தமிழ் குடும்பத்தின் அகஉலகைச் சொல்கிறது இவரது எழுத்து,  இனப்பிரச்சனையின் துவக்ககாலம். பதின்வயதின் அடையாளச்சிக்கல்கள். ஒருபாலின்ப ஈடுபாடு என்று நாவல் விவரிக்கும் களம் நுட்பமானது, CINNAMON GARDENS இவரது சமீபத்தைய நாவல்

இவர்களுடன் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக்(Orhan Pamuk) கனடாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்க்ரெட் அட்வுட் (Margaret  Atwood).  இத்தாலியின் ராபர்ட்டோ கலாசோ (Roberto Calassoபிரான்சின் மார்க்ரெட் யூரிசனார் ( Marguerite Yourcenar) அமெரிக்காவின் பிலிப் ராத் ( Philip Roth) போன்றவர்களையும் விரும்பி வாசிப்பதுண்டு

இவர்களது நாவல்கள் ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக எழுதினால் அது தனிப்புத்தகம் அளவு வந்துவிடும், ஆகவே  இவர்களைத் தேடி வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது  உங்களின் வேலை,

இந்தப் புத்தகங்கள் சென்னை பெங்களுர் டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள லேண்ட்மார்க், ஒடிசி மற்றும் புக்வார்ம் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன, இணையத்தில் ஆன்லைனிலும் இவற்றை  வாங்க இயலும்,

புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பதில் உங்களது மனவிருப்பமும் ஈடுபாடுமே முதன்மையானது, இருபது வயதில் நான் படித்துக் கொண்டாடிய சில புத்தகங்களை இன்று பத்து பக்கங்கள் கூடப் புரட்டிப்படிக்க முடியவில்லை, அதே நேரம் அன்று வீண்வேலை என்று புறமொதுக்கிய சிறுவர்களுக்கான நாவல்கள் இன்று வாசிக்க அருமையாக இருக்கின்றன, ஆகவே படிப்பது நமது மனதின் தேர்வாலே பெரிதும் அமைகிறது,

நான் தற்போது CHILDREN CLASSIC`S எனப்படும் ROBINSON CRUSOE ,GULLIVER’S TRAVELS , RIP VAN WINKLE, LITTLE WOMEN, THE WONDERFUL WIZARD OF OZ, THE ADVENTURES OF TOM SAWYER , HEIDI படிப்பதில் தான் அதிகம் விருப்பம் கொண்டிருக்கிறேன், அது தரும் புத்துணர்வும மற்றும் அலாதியான வாசிப்பு இன்பத்திற்கு நிகராக வேறு எதுவும் இல்லை.



எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்

அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே,

ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள்.  நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள்.

அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,  

பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,

வெற்றி எல்லா வலிகளையும் மறக்கடிக்க செய்துவிடக்கூடியது என்பது தானே உண்மை

பெரும்பான்மை எழுத்தாளர்கள் தனது நாவல்கள் குறித்து திருப்தியின்மையே கொண்டிருக்கிறார்கள், திரும்பிச் செல்ல முடியாத பால்யத்தைப் பற்றி நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டுக் கொள்வது போன்ற ஒரு ரகசியவேதனை. அல்லது ரகசிய சந்தோஷம் இரண்டும் ஒவ்வொரு நாவல் எழுதி முடித்த போதும் ஏற்படுகிறது

டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு (Resurrection) நாவல் வெளியானதன் பின்புலம் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், அவரது மற்ற நாவல்களை விட அது அதிக வாசகர்களின் கவனத்தை பெறவில்லை என்று அந்தக் கட்டுரை துவங்கியிருந்த்து, தமிழில் இந்த நாவலை ராதுகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது, எனக்கு புத்துயிர்ப்பு நாவலில் வரும் மாஸ்லாவை ரொம்பவும் பிடிக்கும், அவளை எனது ஊரில் நான் கண்ட மதினிகளில் ஒருத்தியைப் போலவே நினைக்கிறேன், அவ்வளவு அற்புதமான பெண் , மாஸ்லாவா என அந்தப் பெயரை சொல்வதிலே ஒரு கிளர்ச்சியிருக்கிறது, வேசைமை குறித்து டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறார், இவள் அதில் ஒரு புனிதை, ஒருவகையில் இவள் வழியாகவே தனது ஆன்ம மீட்சிக்கான தேடுதலை டால்ஸ்டாய் முன்வைக்கிறார்,

புத்துயிர்ப்பு நாவலின் மீது திடீரெனக் கவனம் கொள்ள காரணமாக இருந்த்து டால்ஸ்டாயின் மூத்த பையன் செர்ஜீ எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பான  Sergei Tolstoy and the Doukhobors: A journey to Canada புத்தகம் வாசித்ததே

ஒரு நாவலை எழுதுவத்ற்கு எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு அக்க்காரணம் இருக்க்கூடும், ஆனால் இந்த நாவலை  டால்ஸ்டாய் எழுதுவற்கு இருந்த காரணம் வியப்பானது,

1898ல் பனிரெண்டாயிரம் டுகோபார்ஸ் (Dukhobors) குடும்பங்கள் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வெளியேறி கனடாவில் தஞசம் புகும் நிலை ஏற்பட்டது, ரஷ்யாவில் இருந்து அந்தக்குடும்பங்கள் கப்பல் ஏறி ஆறாயிரம் மைல் தூரம் பயணம் செய்யத் தேவையான பணமும் பொருள்உதவியும் தேவைப்பட்டது, அந்த உதவியை செய்தவற்காகவே டால்ஸ்டாய் தனது ஐந்தாவது நாவலாக Resurrection எழுத முன்வந்தார், அந்நாவலுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை டுகோபார்ஸ் இயக்கத்திற்கும், அகதியாக செல்லும் மக்களின் வழிச்செலவிற்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பினார்

நாவல் எழுதத் துவங்கும் போது அவரது வயது 78, பத்தாண்டுகாலம் அவர் நாவல் எதையும் எழுதவும் இல்லை, முந்தைய நாவல்களான ANNA KARENINA , WAR AND PEACE, இரண்டும் மகத்தான வெற்றி பெற்றிருந்தன, ஆனால் புத்துயிர்ப்பு  நாவலை எழுதும் காலத்தில் டால்ஸ்டாயின் மனது ஆன்மீக விசயங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்த்து, அவர் நேரடியான மக்கள் சேவையை பெரிதும் விரும்பினார்,

ஒரு முறை பிரான்சில் அவர் பிரபல எழுத்தாளர் விக்டர் க்யூகோவைச் சந்தித்தார் அவர் அடித்தட்டு மக்க்ளின் வாழக்கையை பற்றி கவலை கொள்வதே எழுத்தாளனின் வேலை என்று சொன்னது டால்ஸ்டாய் மனதிலே ஆழமாகப்பதிந்து போயிருந்த்து, அது போலவே பிரான்சில் இருந்த நாட்களில் ஏற்ப்டட அடிப்படை கல்வி சார்ந்த விவாதம் ஈடுபாடு காரணமாக தனது முக்கிய கவனமாக கல்வி  மற்றும் அடிப்படை வசதி சார்ந்த சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தி வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரது எண்ணங்களை பின்பற்றும் டால்ஸ்டாய்வாதிகளுடன் இணைந்து  அறிவார்ந்த சபையை உருவாக்கி கொண்டு இயற்கையோடு கூடிய கூட்டுபண்ணையை நடத்திக் கொண்டிருந்தார், அத்தோடு தனது படைப்புகளை எவரும் இலவசமாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற அவரது அறிவிப்பின் காரணமாக அவரது புத்தகங்கள் பரவலாக வெளியிடப்பட்டன, அந்த நாட்களில் தனது மொத்த சொத்தையும் விவசாயிகளுக்கு பகிர்ந்து தந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்,

இந்த சூழலில் அவர் டுகோபர்ஸ் இயக்கத்திற்காக பணம் வசூல் செய்ய ஒரு நாவலை எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை உருவானது

டுகோபார்ஸ் இயக்கம் என்றால் என்ன- ஏன் அதில் டால்ஸ்டாய் இவ்வளவு காட்டினார் என்ற கேள்வி எழுவது இயல்பே

பதினேழாம் நூற்றாணடில இருந்து ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ், இவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் தேவாலயம். மதச்சடங்குகள் பாதிரிகளின் கட்டுபாடுகள் யாவற்றையும் எதிர்த்தனர், மனிதனின் மனதே ஆலயம், மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆத்மாவை பலமாகவும். எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாக்க் கொண்டிருக்க வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் வன்முறை. கொலை கூடாது,  மனிதர்களில் எவரும் உயர்வும் தாழ்வும் கிடையாது, ஆகவே தங்களை ஆத்ம போராளிகள் என்று அழைத்துக் கொண்ட இவர்கள் எலிஸ்தவ்போல். டிப்லிவஸ் போன்ற பகுதிகளில் விவசாயப் பண்ணை அமைத்துக் கொண்டு சிறுசிறு கிராமங்களாக வாழ்ந்தனர்

காந்தி டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்ட பல விஷயங்கள் டுகோபார்ஸ்  மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த வந்த பழக்கங்களே,

டால்ஸ்டாயின் படைப்புகள் எந்த அறத்தை வலியுறுத்தியதோ அதே விசயங்களை தங்களது வாழ்வில் கடைபிடித்தவர்கள் டுகோபார்ஸ், அதனால் டால்ஸ்டாய் அவர்களை தனது எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் முன்னோடிகளாகக் கருதினார், டுகோபார்ஸ்சின் வாழ்க்கை இயற்கையோடு இணந்த்து மகத்தானதாக உள்ளதை கண்டு டால்ஸ்டாய் வியந்து போற்றியிருக்கிறார்

டுகோபார்ஸ் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். தங்களது சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி  செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோட்பாடு, அதற்காக விவசாயம். ஆடு மாடுகளின் பண்ணை. வீட்டுஉபயோகப் பொருட்கள் தயாரித்தல். காய்கறிகள். பழங்கள். உற்பத்தி செய்வது. உடைகளை தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் மரசாமான்களை தாங்களே செய்து கொள்வது.  மண்ணர்ல் வீடுகட்டுதல். பொது சமுதாயக்கூடம் அமைப்பது என்று அவர்களின் உலகம் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காதது,

அது போலவே இறைவழிபாட்டிலும் அவர்களுக்கான வழிபாட்டுமுறைகள். பாடல்கள். விழாக்களை அவர்களே உருவாக்கிக் கொண்டனர். பைபிள் வாசிப்பது கூட அவர்களிடம் கிடையாது,

அவர்கள் முழுமையாக சைவஉணவு பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். முட்டை சாப்பிடுவது கூட பாவம் என்று விலக்கப்பட்டிருந்த்து. அது போலவே பாலை அருந்தவும் அவர்கள் மறுத்தார்கள், அது முழுமையாக கன்றுகளுக்கு மட்டுமே உரியது என்று பாலை  ஒதுக்கினார்கள், திருமணத்திலும் கூட பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது,

தங்களை எவராது தாக்க வந்தால் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக அந்த அடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நடைமுறை, எவ்வளவு வன்முறை பிரயோகப்படுத்தபட்டாலும் டுகோபார்ஸ் திரும்பி அடிக்க மாட்டார்கள், அடியை தங்களது ஆத்மாவின் பலத்தை சோதிப்பதற்கான பரிட்சையாக நினைத்தார்கள்

புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அவர்களிடம் கிடையாது, அது போலவே தங்களைத் தேடிவரும் விருந்தாளிகளுக்கு உணவு உறைவிடம் தருவதற்கு அவர்கள் ஒரு போதும் பணம் வாங்குவதில்லை, ரொட்டியை விலைக்கு விற்பது மிக்க் கொடிய பாவம் என்பது அவர்களின் எண்ணம்

கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில் தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக் கொள்ளக் கூடாது, பணத்தை ஒரு போதும் பெரிதாக நினைக்க்கூடாது, விலங்குகள் மற்றும் விவசாய உடைமைகள் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கட்டாயம் தங்களால் ஆன வேலையை செய்தே ஆக வேண்டும். வயதாகியவர்களை ஊரே பராமரிக்கும், ஊரின் நிர்வாகத்தை கவனிக்க அவர்களே குழு அமைத்து கொள்வார்கள், ஆகவே அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லாமல் அவர்களே தங்களுக்கான சாலைகள் அடிப்படை வசதிகளை அமைத்து கொண்டார்கள், குளியலுக்காக பொதுகுளியல் கூடம் அவர்களிடம் இருந்தது,

திருமணம் செய்து கொள்வது கடவுளின் விருப்பம் என்பதால் அதை அரசாங்கத்தில் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்க்ள

தொலைபேசி அறிமுகமான உடன் தங்களது கிராமங்களுக்குள் தொலைபேசி வசதியை தாங்களாகவே உருவாக்கி கொண்டது அவர்களின் முன்னோடி சாதனை, இது போலவே ஜாம் செய்வதிலும் தானியங்களைப் பாதுகாப்பதிலும். மாவு அரைப்பதிலும் அவர்கள் தனித்திறன் கொண்டிருந்தார்கள், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கையால் வேலை செய்வதே அவர்களின் பாணி, எங்கே செல்லும் போது நடந்து போவதையே அவர்கள் விரும்பினார்கள்

இவை யாவையும் விட அவர்கள் ராணுவசேவையை வெறுத்தனர், ஒரு ஆண் கூட ராணுவத்தில் போய் பணியாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர், ராணுவம் என்பது ஒரு ஆயுதங்களால் மனிதனை அச்சுறுத்தி அடக்க்கூடியது, ஆகவே ராணுவசேவை எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது என்று தாங்கள் எதிர்ப்பை காட்ட தங்களது அத்தனை ஆயுதங்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள் டுகோபார்ஸ் மக்கள்

இன்னொரு பக்கம் தங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் அவர் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தாங்கள் ஒரு தனிராஜ்ஜியம் போலவே அமைதியாக வாழ்ந்தார்கள்

ஆனால் அரசு மக்கள் நிம்மதியாக ஒதுங்கி வாழ ஒரு போதும் அனுமதிக்காது தானே, ஆகவே கசாக்கியப்படையை அனுப்பி அவர்களை ராணுவத்தில் சேர்க்க முயன்றது, மறுத்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள், டுகோபார்ஸின் ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து அவர்களை அடிபணியும் படியாக அடித்தார்கள், அடியை தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டபோதும் ஒருவரும் அடிபணியவேயில்லை, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, கைகால்கள் ஒடிக்கப்பட்டு சைபீரிய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள், பல ஊர்கள் தீக்கிரையாகின, வீடுகள் நொறுக்கப்பட்டன, ஆனால் அவர்களின் ஆத்மபலம் குறையவேயில்லை,

ஒரு நாள் முழுவதும் முந்நூறு கசை அடிவாங்கிய ஒரு மனிதன் மறுநாள் தன்னை அடிக்கின்ற கசாக்கிய வீரனிட்ம் உனக்கு சரியான ஒய்வு இல்லை, தேவையான உணவும். பழங்களும்  என் சேமிப்பில் இருக்கின்றன, அதை சாப்பிட்டு வந்து என்னை அடிக்கலாமே என்று சொல்லியிருக்கிறான்,. அது தான் டுகோபார்ஸின் இயல்பு

பெண்களும் குழந்தைகளும் கூட இந்த வெறியாட்டத்தில் இருந்து தப்பவில்லை, அப்போது தான் டால்ஸ்டாய் டுகோபார்ஸ் பிரிவினரைப் பற்றி கேள்விபட துவங்கினார், உடனே அவர்களுக்கு ஆதரவாக தனது அறிக்கையை வெளியிட்டதோடு அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார் தைரியமாக இருங்கள் என்று ஊக்கப்படுத்தினார், அன்றிலிருந்து டுகோபார்ஸ் மக்கள் டால்ஸ்டாயை தங்களது ரட்சகராகவே கருதினார்கள், அவர்களுக்காக அரசிட்ம் டால்ஸ்டாய்  முறையிட்டார், உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார், இதற்காக மதவாதிகள் டால்ஸ்டாயைக் கடுமையாக எதிர்த்தனர், டுகோபார்ஸ் போன்ற இழிவான மக்களுக்காக போராடாதீர்கள் என்று டால்ஸ்டாய்க்கு எச்சரிக்கை விடுத்தனர் நிலபிரபுக்கள்,  ஆனால் அந்த எளிய மக்களின் பக்கமே டால்ஸ்டாய் நின்றார், அவர்கள் போராட்டத்திற்கு துணை செய்தார்

அரசாங்கத்தின் கண்களில் இருந்து தப்பியோடி வரும் டுகோபார்ஸ் இயக்கத்தவர்களுக்கு தனது வீட்டை புகலிடமாக்கினார், அவர்களது நியாயத்திற்காக வாதாடினார்.

இந்த நிலையில் ரஷ்ய அரசாங்கம் நாற்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட டுகோபார்ஸ் பிரிவினர் மொத்தமாக நாட்டை விட்டு வெளியேறிப் போவது என்றால் ஒத்துக் கொள்வதாகச் சொன்னது, அப்போது கூட அவர்கள் இனி ஒரு போதும் ரஷ்யாவிற்குத் திரும்பி வரக்கூடாது, தங்களது பயண செலவை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். சைபீரிய சிறையில் உள்ள கைதிகள் தண்ட்னைகாலம் முடிந்த பிறகே நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பார்கள் என்ற நிபந்தனைகளை விதித்த்து,

அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், அதன் முதற்கட்டமாக 7500 பேர் ரஷ்யாவை விட்டு கனடா புறப்பட முடிவு செய்தனர், கனடா அரசு அவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த்து, ஆனால் 6000 மைல் பயணம் செய்ய வேண்டும், அது பெரிய சவால்

ஆகவே டால்ஸ்டாய் தனது நாவலில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு அவர்களுக்கு உதவ திட்டமிட்டார், அதற்காக நாவலைத் தொடராக வெளியிட முன்வந்தார்,  ஒரே நேரம் ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட் மொழிகளில் அது வெளியாக வேண்டும் அப்போது தான் அதிக ராயல்டி கிடைக்கும் என்று முயற்சி செய்தார்

டால்ஸ்ட்ர்யின் விருப்ப்படி 1899ம் ஆண்டு  தொட்ர்கதை நீவா என்ற இதழில் ஆரம்பிக்கப்பட்ட்து, அதற்காக பனிரெண்டாயிரம் ரூபிள் பணம் பெறப்பட்டு டுகோபார்ஸ் இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது

அகதிகளை ஏற்றிக் கொண்டு முதற்கப்பல் 1899 ஜனவரி 4ம் தேதி புறப்படுவதாக இருந்த்து, தனது மகன் செர்ஜியையும் அவனது நண்பர்களையும் டுகோபார்ஸ் மக்களுக்குத் துணையாக கனடா அனுப்பிவைத்தார் டால்ஸ்டாய், செர்ஜிக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட மொழிக்ள தெரியும், பல்கலைகழக்த்தில் படித்தவர் ஆகவே கனேடிய அரசுடன் பேசி மக்களை அங்கே தங்க வைக்க அவர் உதவி செய்வார் என டால்ஸ்டாய் நினைத்தார்

2300 டுகோபார்களை ஏற்றிக் கொண்டு முதல்கப்பல் புறப்பட்டது, கடலில் பயணமான சில நாட்களிலே ஒரு குழந்தைக்கு அம்மை வ்நது கப்பல் முழுவதும் தொற்றுநோய் பரவியது, ஆகவே எந்த துறைமுகத்திலும் கப்பல் நிற்க அனுமதி கிடைக்கவில்லை, 27 நாட்கள் கடலில் நின்றது அந்த கப்பல், பசி. நோய்மை என அவர்கள் கப்பலில் முடங்கி கிடந்தனர்

இன்னொரு பக்கம் தனது நாவலை எழுத்த் துவங்கும் முன்பாக டால்ஸ்டாய் அதன் மையமாக ரட்சிப்பும் ஆத்மவிசாரணையும் இருக்க வேண்டும் என்று விரும்பினார், அந்த நாவலின் மையக்கதை அவரது நண்பர் வழக்கறிஞர் கோனி சொன்ன ஒரு நிஜசம்பவத்திலிருந்து உருவானது, அதே போலவே ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி கைவிட்ட சம்பவம் டால்ஸ்டாய் வாழ்விலும் நடைபெற்றிருக்கிறது, ஆகவே அதை தனது தவறுக்காக மனம் வருந்தும் ஒருவனின் வாக்குமூலம் போலவே டால்ஸ்டாய் எழுத ஆரம்பித்தார்,

ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தொடர்ந்து எழுதினார், உடல்நலக்கோளாறு ஏற்பட்டது, வேளைவேளைக்கு உணவு சாப்பிட மறந்து போய் எழுதிக் கொண்டேயிருந்தார், பாதி உறக்கத்தில் எழுந்து மெழுகுவர்த்தி உதவியால் எழுதியதும் நடந்தேறியது, தன்னைக் காண வந்த மகள்களை கூட அவர் பார்க்க் அனுமதிக்கவில்லை, உறக்கத்தில் நாவலைப்பற்றியே புலம்பியதைக் கண்டு மனைவி பயந்து போனார், எங்கே ஒருவேளை இந்த நாவலை முடிக்காமல் இறந்து போய்விடுமோ என்ற பயம் அவருக்கும் உருவானது,

அவர் நினைத்த்து போல வேகமாக எழுத இயலவில்லை, எழுதிய அத்யாயங்களை திரும்பத் திரும்ப அடித்துத் திருத்தி எழுதினார், இதனால் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவானது, நாவலின் ஒரு அத்யாயத்தை அச்சிற்கு  அனுப்பிவிட்டு அதில் மாற்றம் செய்ய வேண்டியதை தந்தி அனுப்புவார். அது போலவே இதற்க்கான மொழிபெயர்ப்பு உரிமையைத் தவறுதலாக இரண்டு பேருக்கு தந்துவிடவே அதிலும் குழப்பம். சட்டசிக்கல் உருவானது

டுகோபார்ஸ் மக்கள் அவர் தங்களுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக அவருக்காக மனதாரப் பிரார்த்தனை செய்தனர், ரஷ்ய மக்களோ வாரவாரம் அவரது அத்யாயங்களுக்காக கர்த்திருந்து வாசித்தனர், நாவல் பாதி எழுதும் போது டால்ஸ்டாய் கடுமையாக நோய்வாய்பட்டார், நாவலை அப்படியே முடித்துவிடும்படியாக மனைவி வற்புறுத்தினார் ஆனால் டால்ஸ்டாய் கேட்கவேயில்லை, அவர் நோய்நீங்கியதும் நாவலைத் தொடர ஆரம்பித்தார்

டால்ஸ்டாயோடு உதவி செய்த அவரது நண்பர்களை அரசு நாடுகடத்தியது, அவர் தனித்து விடப்பட்டார், தனது புத்தக விற்பனை. ராயல்டி. சொந்த வருமானம் என தன்னால் முடிந்த அளவு 17 ஆயிரம் ரூபிள் பணம் திரட்டி டுகோபார்ஸ் மக்கள் இடம் பெயர்ந்து போக உதவி செய்து கொண்டேயிருந்தார்

ஆறுமாத காலம் கடுமையான கஷ்டங்களை தாங்கி கொண்டு டுகோபார்ஸ் மக்களை ஏற்றிக் கொண்ட கப்பல் கனடா போய் சேர்ந்த்து, பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் அவர்கள் தங்க வைக்கபட்டார்கள், புதிய நிலம். புதிய சூழல் ஆனாலும் கடுமையாக உழைத்து தங்களது வசிப்பிடங்களை அவர்கள் சிறப்பாக உருவாக்கி கொண்டார்கள், ஆறுமாதகாலத்தின் பின்பு செர்ஜீ நாடு திரும்பினார்,

டால்ஸ்டாயின் நாவல் 1899 டிசம்பர் 18 அன்று முடிவு பெற்றது, அதை எழுதி முடித்த கையோடு தனது நாட்குறிப்பில் இப்படி தான் எழுதியிருக்கிறார்

Completed Resurrection. Not good, uncorrected, hurried, but it is done with and I’m no longer interested.

தான் நேசித்த மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு எழுத்தாளன் எழுதிய ஒரே நாவல் இதுவே, இது போல உலகில் வேறு எங்கும் நடைபெறவேயில்லை, எழுத்தாளனாக தான் எதை அறமாக கொண்டிருந்தாரோ அதை நடைமுறை வாழ்வில் டால்ஸ்டாய் சாதித்துக் காட்டியிருக்கிறார்

ரஷ்ய இலக்கிய உலகம் இந்த நாவலை டால்ஸ்டாயின் மகத்தான தோல்வி என்று விமர்சனம் செய்தது, குளறுபடியான மொழியாக்கத்தால் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியிலும் நாவல் பெரிதாக வெற்றி பெறவில்லை, ஆங்கிலத்தில் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்தது,

இரண்டு மிகமுக்கிய நாவல்களை எழுதி அடைந்த வெற்றியை டால்ஸ்டாயால் தாண்ட முடியவில்லை, ஆனால் அவர் தனது இந்த நாவல் மற்ற நாவல்களை விட பயனுள்ளது, அதனால் அதன் வெற்றி தோல்விகளை விட அது மகத்தானது என்று அறிவித்தார், அது உண்மையும் கூட

இந்த நாவலில் வரும் மாஸ்லாவோ அவரது முந்தைய நாவல்களை விட வலிமையான பாத்திரம், அன்னகரீனினாவை விடவும் பலமடங்கு சிறப்பானவள். அவளை நெக்லதுப் சந்திக்கும் இடமும் நீதிமன்ற் விசாரணையும் அவனது மனக்குழப்பங்க்ளும் டால்ஸ்டாய் என்ற மேதையின் எழுத்து மேன்மைக்குச் சான்றாக உள்ளது,

இன்றும் அகிம்சை. சமாதானம். சைவஉணவு பழக்கம். சுயதேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வது, எளிமை, நல்லசிந்தனை நல்ல செயல். நல்ல் மனது என்று டுகோபார்ஸ் வம்சாவழிகள் வாழ்கிறார்கள், காலமாற்றத்தில் பலர் தங்களது பூர்வ அடையாளங்களை மறைத்து கொண்டு வாழ்கிறார்கள்.  ஆரம்ப காலங்களில் கனேடிய அரசு தங்களைப் பலவந்தப்படுத்தி மாற்ற முயற்சித்த போது தங்கள் எதிர்ப்பை காட்ட டுகோபார்ஸ் உலகிலே முதன்முறையாக நிர்வாணமாக ஊர்வலம் போனார்கள், அது தான் அவர்கள் காட்டும் அமைதியின் வழி,

டால்ஸ்டாயின் மகன் செர்ஜி தான் டுகோபார்ஸ்களுட்ன் மேற்கொண்ட பயணம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார், அந்த நூலில் தனது அப்பாவை பற்றி அவர் குறிப்பிடுவது நெகிழ்ச்சியடைய செய்கிறது

புத்துயிர்ப்பு நாவலின் காரணமாக  உருவான வழக்குகள். தடைகள். எதிர்ப்புகுரல்கள் என பிரச்சனைகள் அத்தனையும் ஒருங்கே சந்தித்தார் டால்ஸ்டாய், அதைப் பற்றி வாசிக்கையில் அது புத்துயிர்ப்பு நாவலை விடவும் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது

புத்துயிர்ப்பு நாவல் ஆன்மாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது, புறக்கணிக்க்படும் நீதியைப் பற்றி பேசுகிறது, குற்றமனப்பாங்கின் துயரத்தைப் பற்றி பேசுகிறது, காதலுக்காக ஒரு பெண் எதிர் கொள்ளும் அவமானங்களைப் பேசுகிறது, அவ்வித்த்தில் மனிதன் தனது செயல்களுக்கு தானே பொறுப்பாளி என்பதையே வலியுறுத்துகிறது,

இன்றும் கனடாவில் இருபதாயிரத்திற்கும் அதிகமாக டுகோபார்ஸ் பிரிவினர் வசிக்கிறார்கள், உலகெங்கும் அவர்கள் தாங்கள் வாழும் இடமெல்லாம் டால்ஸ்டாய்க்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள், தங்களின் வேதப்புத்தகம் போல புத்துயிர்ப்பு நாவலை தினசரி வாசிக்கிறார்கள்,

தான் வாழும் சமூகத்திற்கு எழுத்தாளன் ஆற்ற வேண்டிய பங்களிப்பு என்ன, என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டியிருக்கிறது.



செகாவைக் கொண்டாடுவோம்

(21-01-2011 அன்று சென்னை LLA சிற்றரங்கத்தில்  கூடு இலக்கிய அமைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் உரைவடிவம்)

**

ஆன்டன் செகாவைப் பற்றிப் பேசுவதற்கு நான் இந்த ஆண்டு பிறந்தது முதலே காத்துக் கொண்டிருந்தேன், இது. செகாவ் பற்றி நான் பேசுகிற நான்காவது கூட்டம், செகாவ் மீது பனி பெய்கிறது என்ற எனது புத்தகத்தை ருஷ்ய மேயர் சென்னைக்கு வந்து வெளியிட்டிருக்கிறார், 150 ஆண்டுகளுக்கு முன்பு. ஜனவரி 29-ம் தேதி பிறந்து 44ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவரான ஆன்டன் செகாவைப் பற்றி இன்றைக்கு நாம் ஏன் பேச வேண்டும்? அவருக்கு எதற்காகப் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்?

என்னைக் கூட ஒருவர் கேட்டார் : நீங்கள் ஏன் செகாவிற்கு விழா எடுக்கிறீர்கள்? இங்கே நமது புதுமைப்பித்தனுக்கு விழா எடுக்கலாமே? என்று, நாம் புதுமைப்பித்தன் உட்பட முக்கியமான எல்லா எழுத்தாளர்களுக்குமே விழா எடுத்திருக்கிறோம், கொண்டாடியிருக்கிறோம், நானேஅதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன்

செகாவைக் கொண்டாடுவது என்பதே புதுமைப்பித்தனைக் கொண்டாடுவது போல்தான், இவரைப் போலவே அவரும் நையாண்டியாக (satire) எழுதுவதில் தேர்ந்தவர்,  கூர்மையான சமூக விமர்சனம் உண்டு.  குடும்ப உறவுகளை ஆழந்து எழுதியவர் இருவரிடமும் நகைச்சுவை உணர்வு அதிகம் , அதற்காகவே செகாவை நாம் கொண்டாட வேண்டும்

செகாவை பற்றிப் பேச எங்கிருந்து துவங்குவது.

செகாவ் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்தே தொடங்குகிறேன், அவர் எழுதிய ஒரு குறிப்பு இது :

தினமும் அவர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காட்சி – காரில் வருகிற செல்வந்தர் ஒருவர். பல்கலைக்கழகத்தின் வாயிலில் சாலையோரமாகக் காரை நிறுத்தச் சொல்ல. கண்ணாடியை இறக்கி விட்டு ‘த்தூ’ என்று பல்கலைக்கழகத்துப் பக்கமாகப் பார்த்து துப்பிவிட்டு உடனே மறுபடி கண்ணாடியை ஏற்றியபடி போய்விடுவாராம், வேறு ஒரு வார்த்தைக் கூடப் பேசுவது கிடையாது, காரோட்டிக்கு. அந்த இடம் வந்ததுமே தன்னிச்சையாகக் காரை நிறுத்தி விடுகிற அளவுக்கு இது பழக்கமாகி விட்டது, இதை செகாவ் பதிவு செய்திருக்கிறார், எதற்காக அந்தச் செல்வந்தர், தினமும் சரிலிக்காமல் இப்படிச் செய்ய வேண்டும்? பல்கலைக்கழகத்தின் மீது அவருக்கு அப்படி என்ன கோபம்? அவரது கோபம் ஆசிரியர்கள் மீதா,, கல்வித் திட்டத்தின் மீதா,, பல்கலைக்கழகப் பாடங்களின் மீதா,,? ஏதோ ஒன்றின் மீது அவரது கோபம் இப்படி வெளிப்படுகிறது, இதை ஏன் செகாவ் பதிவு செய்ய வேண்டும்?

இது போல மற்றொரு சம்பவம், அவரது குறிப்பேட்டில் உள்ளது

ஒரு பையன். அவனுடைய தேர்வுத்தாளை மாலையில் அவன் வீடு திரும்பியதும் தந்தை வாங்கிப் பார்க்கிறார், 5 மதிப்பெண் வாங்கி வந்திருக்கிறான் பையன், தந்தைக்குக் கண்மண் தெரியாத கோபம், பையனைப் போட்டு அடிஅடி என்று அடிக்கிறார், அவன் பரீட்சைப் பேப்பரைக் காட்டி ஏதோ சொல்ல வருகிறான், ஆனால் அப்பா கேட்பதாக இல்லை, வெளுத்து வாங்கி விட்ட பிறகுதான் ஓய்கிறார், மறுநாள் காலை – பையனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகிறார், தலைமை ஆசிரியரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்கிறார் : என்ன பாடம் நடத்தறீங்க நீங்க? என் பையன் 5 மார்க் வாங்கிக் கொண்டு வருகிறான், இதுதான் நீங்க சொல்லித்தரும் லட்சணமா – அதுவா,, இதுவா,,? என்று திட்டும் அப்பாவிடம். தலைமையாசிரியர் அமைதியாகச் சொல்லுகிறார் : ஐயா. உங்கள் பையன் 5க்கு 5 மார்க் வாங்கியிருக்கிறான், அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? – தந்தை திடுக்கிட்டுப் போய்த் தன் கையிலுள்ள பேப்பரைப் பார்க்கிறார், பையன் 5க்கு 5 மார்க்தான்வாங்கியிருக்கிறான்.

இதை ஏன் நீ நேற்று சொல்லவில்லை? என்று பையன் மீது பாய்கிறார், அதைச் சொல்வதற்குத் தானே அப்பா நான் பலமுறை முயற்சி செய்தேன், நீங்கள் காது கொடுத்துக் கேட்காமலே அடித்தீர்கள்,,, என்கிறான், தந்தைக்கு அப்போதும் தான் செய்த தவறு புரியவில்லை, அவருக்கு அதுபற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லை. அந்த பையன் அடைந்த வலியும் அவமானமும் ஏன் கண்டுகொள்ளப்படாமலே போகிறது, ஏன் பெற்றோர் பிள்ளைகளை புரிந்து கொள்ளாமல் அடிக்கிறார்கள், பால்ய வயதின் கசப்பு எளிதில் மறைந்து போகாது, இந்த நிகழ்ச்சி அந்தப் பையன் மனதில் நீங்காத வடுவாக தங்கிப்போய்விடும், அது எவ்வளவு பெரிய சோகம்

இதில் வருகிற பையன் போலவே இருந்த்து செகாவ்வின் சிறுவயது,  இப்படி அப்பாவிடம் தினமும் எடுத்ததற்கெல்லாம் அடிவாங்கி வளர்ந்தவர்தான் செகாவ்.

செகாவ் ஒரு முறை சாலையில் செல்லும் போது எதிரில் ஒரு பள்ளி ஆசிரியரைக் காண்கிறார், உடனே தலைகவிழ்ந்து கொள்கிறார்,  எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று அவரது நண்பர் கேட்கிறார் அதற்கு செகாவ் எனக்கு ஆசிரியர்களை பார்க்கும் போது அவமானமும். குற்ற உணர்வும் ஏற்படுகிறது , காரணம் ஆசிரியர்கள் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள், அவர்களை சமூகத்தின் மனசாட்சியாக நான் நினைக்கிறேன் அவர்கள் அப்படி ஒருபோதும் நடந்து கொள்வதேயில்லை, ஆகவே என்னால் ஆசிரியரின் முகத்தையோ – கண்களையோ நேராகப் பார்க்க முடிவதில்லைத,  ஆசிரியர் என்பவர் மதிக்கத்தக்கவராக – வழிகாட்டியாக இருக்க வேண்டும், அது ஒரு வேலையில்லை சேவை,

ருஷ்ய ஆசியர்கள் பலருக்கும்  பண்பு நலன்கள் இல்லை,  ஆசிரியர் தனது தோற்றத்தில். செயலில், பேச்சில் முன்மாதிரியாக இருக்க வேண்டும், அவரை பார்த்தவுடனே நாம் மரியாதை செய்ய வேண்டும் ஆனால் இன்று அப்படியா இருக்கிறார்கள்,  ஆகவே அது என் மனசாட்சியை வதைக்கிறது என்கிறார்

ஆசிரியரின் தோற்றம். நடத்தை. அவரது அணுகுமுறை பற்றி. அன்றைக்கு நிலவிய கல்வி முறை பற்றி. சமூகத்தைப் பற்றி – சூழ்ந்துள்ள பல விஷயங்களைப் பற்றி செகாவ் தீவிரமான விமர்சனங்களுடன் இருந்தவர்,

அவர் மாற்றுகல்வி பற்றி சிந்தித்தார் அதைச் செயல்படுத்த அவரே ஒரு பள்ளியையும் நடத்தியவர், இந்த வகையில் செகாவ் – டால்ஸ்டாய் இருவரும் நமது மகாத்மா காந்திக்கு முன்னோடிகள், காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய பள்ளிக்கு டால்ஸ்டாய் பெயரைத் தானே இட்டிருந்தார், எழுத்தாளர்களாக மட்டுமின்றி இவர்கள் கல்வி. மருத்துவம். சமூகமேம்பாடு போன்ற அடிப்படையான தளங்களில் வேலை செய்தவர்களாகவும் அமைந்தார்கள்,

பச்சோந்தி என்ற செகாவ் கதையை இங்கே மயிலைபாலு குறிப்பிட்டார்.  அந்த கதை நாம் ஒரு போதும் மறக்கமுடியாதது, எளிமையான. கூர்மையான சமூக விமர்சனமுள்ள கதை, இது போல ஒன்றை கு.அழகரிசாமி கூட எழுதியிருக்கிறார், எல்லா ஊரிலும் தெருநாயைப் பற்றி எழுத்தாளர்கள் கவலைப்படத்தான் செய்கிறார்கள், போலித்தனமான மனிதர்களை விட அது மேலானது தானே

ஒரு மனிதனை. நாய் ஒன்று தெருவழியே போகும்போது கடித்து விடுகிறது, கடிபட்டவன் வலிதாங்க முடியாமல் கதறி புகார் செய்கையில். அதை விசாரிக்க வரும் போலீஸ்காரனின் தன்மையை இக்கதை சித்தரிக்கிறது, கடித்தது தெரு நாய் என்றதும் அதைப் பிடித்துக் கூண்டில் அடைத்தாக வேண்டும்; உரிமையாளன் யாரென்று கண்டறிந்து தண்டித்தே தீர வேண்டுமென்று கூப்பாடு போடுகிற போலீஸ்காரன். அது ஒருவேளை ஜெனரலின் அல்லது அவரது சகோதரரின் நாயாக இருக்கக் கூடும் என்று கூட்டத்திலிருந்து யாரோ சொன்னதுமே, கடிபட்ட மனிதன்தான் தப்பு செய்திருக்க வேண்டும்; உயர்குலத்து அதிகாரி வீட்டு நாய் அப்படியெல்லாம் தெருவில் போகிறவனைக் கடிக்காது எனறு மாறிப் பேசுகிற பச்சோந்தித் தனத்தை கதையில் செகாவ் கேலி செய்கிறார், இதில் அவர் விமர்சித்திருப்பது அன்றைய  அரசின் அதிகாரத்துவத்தை,  ஆனால் இன்றைக்கும் நமது வாழ்க்கையில் இது போல சம்பவங்கள் நடக்கதானே செய்கிறது ஆகவே  இது எங்கோ ரஷ்யாவில் மட்டுமே நடந்ததல்ல, நமது தெருவில். நமது வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதுதான், நமது வாழ்க்கையை யார். எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அவரை நாம் கொண்டாடத்தானே வேண்டும்,,,?

செகாவ் 206 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்,  அவர் மருத்துவப் படிப்புப் படித்து விட்டு டாக்டராகப் பணியாற்றியவர்,  டாக்டராக இருந்த போதிலும் கடுமையான காசநோய்ப் பாதிப்பிற்கு ஆளானவர், 44 வயதிலேயே இறந்தும் போனவர், புதுமைப்பித்தனும் காசநோயினால் மிக இளம் வயதில் இறந்தவர்தான், இவரும் செகாவைப் போலவே தீவிர நையாண்டி. கேலி. கிண்டல் நிறைந்த படைப்புகளைத் தந்தவர், செகாவின் கதையைக் கூட தமிழில் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருந்த போதிலும் தனது வாழ்க்கையும் – செகாவின் வாழ்க்கையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன என்பதைப் புதுமைப்பித்தன் அறிந்திருக்கவில்லை, இரண்டு பேரின் தந்தையரும் அளவுக்கு மீறிய கண்டிப்புடனும், கோபத்துடனுமே தங்களின் பிள்ளைகளைச் சிறு வயது முதல் அணுகி வந்திருக்கிறார்கள்,

மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் உள்ள உறவு உலகெங்கும் ஒன்று போலவே இருக்கிறது, ஆகவே செகாவை வாசிக்கையில் புதுமைபித்தனின் நினைவு ததும்புகிறது,

இருவரிடம் நிறைய ஒற்றுமைகளை என்னால் சொல்ல முடியும், செகாவிற்கு நாடகம் புதுமைபித்தனுக்குச் சினிமா, இருவருமே மனைவியை பிரிந்து வாழ்ந்தவர்கள். கடவுளைக் கூட கேலி செய்தவர்கள். அரசியலை பகடி செய்தவர்கள். பத்திரிக்கையில் எழுதி பெயர் பெற்றவர்கள், ஆக செகாவைப் பேசுவது என்பது புதுமைபித்தனை ஒர்மை கொள்வது போலதான் இருக்கிறது

ரஷிய இலக்கியம். உலக இலக்கியத்திற்குப் பல கொடைகளைத் தந்திருக்கிறது, உலகின் சிறந்த நாவல்கள் என்று ஒரு பட்டியலை யார். எந்த மொழியில் தயாரித்தாலும் அதில் குறைந்தது பத்து நாவல்களாவது ரஷிய நாவல்களாகத்தான் இருக்கும், அந்த வகையில். டால்ஸ்டாயும் – தாஸ்தாவெஸ்கியும் சிகரங்கள்,

அறிவியல் மேதையான ஐன்ஸ்டீன். அறிவியல் தொடர்பாக தாஸ்தாவெஸ்கி தன் நாவலில் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்குப் பதில் சொன்னவர், அவ்வளவு ஆழமான கேள்விகளை தாஸ்தாவெஸ்கி எழுப்பியிருந்தார். அவர் எழுத்தாளர் மட்டுமில்லை, தத்துவவாதி.  உளவியல் அறிஞர். முன்னோடி சிந்தனையாளர். என்று பல முகங்கள் இருக்கின்றன, தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் சைபீரிய சிறைச்சாலை பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்,

டால்ஸ்டாய் ஆகச்சிறந்த மனிதாபிமானி. காந்திக்கே முன்மாதிரி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வெறுமனே எழுத்தில் மட்டும் அல்ல; செயலிலும் தன் மனிதாபிமானத்தை. வற்றாத அன்பை வெளிப்படுத்தியவர்,

ரஷியாவில் மிகக் கடுமையான ஒரு பஞ்சம் நிலவியது, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஓர் எலும்புத் துண்டிற்காக ஒரு மனிதனும் – நாயும் சண்டை போட்டுப் போராடிய காட்சியைக் காண்கிறார் அவர்.

உடனே மனம் பதறி தனது மாபெரும் பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் முழுவதையும் பஞ்சத்தினால் துயரப்படும் மக்களுக்கு விநியோகிக்கிறார், டால்ஸ்டாயின் உதாரணத்தைப் பார்த்து ஆன்டன் செகாவ். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் நடத்துகிறார்,   மக்களுக்காக இறங்கி பணியாற்றும்  டால்ஸ்டாயை ஏசுவாக  செகாவ் உணருகிறார்,

பகிர்ந்து கொள்ளப்படும் அன்பைப் போல உன்னதமானது வேறு எதுவுமே இல்லை,,, என்கிறார் டால்ஸ்டாய். எவ்வளவு மகத்தான வாசகமது

டால்ஸ்டாய் ஒரு பிரபு, அறுநூறு ஏக்கர் நிலம் வைத்திருந்தவர். ஆனால் அவர் ஒரு போது பணம் படைத்தவராக நடந்து கொள்ளவில்லை, எளிய மனிதனுக்காகவே பேசினார் ,எழுதினார், தன் வாழ்நாளின் முடிவில் தனது மொத்த சொத்தையும் விவசாயிகளுக்கு எழுதி வைத்துவிட்டார் என்பதே அவரது மனைவியின் குற்றச்சாட்டு,

ஒரு முறை அவர் மாஸ்கோவில் இருந்த போது இரவில் சன்னலின் வழியே வெளியே பார்க்கும் போது தூரத்தே தெரியும் ஒரு மினுக்கிடும் விளக்கு வெளிச்சம் டால்ஸ்டாயை ஈர்க்கிறது, பனி கொட்டும் இரவு. அந்த இரவில் எங்கே இருந்து இந்த வெளிச்சப்புள்ளி தென்படுகிறது என்று அறிவதற்காக பனியோடு நடந்து செல்கிறார் டால்ஸ்டாய், நெடுந்தூரத்தில். குளிருக்கு நடுங்கியபடி குப்பை – செத்தை – சுள்ளிகளை எரிக்கும் மனிதர்களின் கூட்டம் ஒன்றைக் காண்கிறார் அவர்,  அந்தக் காட்சி அவரை உலுக்குகிறது, என்ன அவலமிது, பணக்காரன் கணப்பு அடுப்போடு உறங்க முடியாமல் தவிக்கிறான். வசதியற்றவன் சாலையில் குளிரில் உறங்க இடமில்லாமல் வாழ்கிறான், இதை ஏன் சமூகம் சகித்து கொள்கிறது என்று ஆத்திரப்படுகிறார், மறுநாள் எளிய மனிதர்களுக்காக சேவை செய்ய போகிறேன் என்று எழுதுவதையே நிறுத்திவிட்டு அந்த மக்களுக்காக போராடத்துவங்கிவிட்டார்

இதே போல ஒரு சம்பவத்தை தஸ்தாயெவ்ஸ்கியும் எழுதுகிறார், கடுமையான குளிர் கொண்ட ஒரு இரவில் நடைபாதையில் வசிக்கும் குடும்பத்தில் ஒரு குழந்தை குளிர் தாங்கமுடியாமல் இற்நதுவிடுகிறது அதன் பெற்றோர் பனியில் நனைந்தபடியே. குளிரில் விறைத்து இறந்துபோன குழந்தையைக் கையில் ஏந்தியபடி இரவெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்கள்,

இறந்த குழந்தைக்கு மூத்தவளான பெண் குழந்தை தூக்கத்திலிருந்தவள் – கண் விழித்துப் பார்க்கையில் தனது பெற்றோரும். அருகில் இருக்கும் நடைபாதைவாசிகளும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து என்ன நடந்ததென்று புரியாமலேயே தானும் அழத் தொடங்குகிறாள், ஏதோ நடந்து விட்டது என்பது மட்டும் புரிகிறது அவளுக்கு, என்ன நடந்தது என்று பெற்றோரால் சொல்ல முடியவில்லை, சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய வயதுமில்லை, ஆனால் தொடர்ந்து அழும் சிறுமியின் அழுகையை நிறுத்துவதற்காக அருகே நடைபாதைவாசி தன்னிடம் பாக்கெட்டில் கிடந்த ஒரு மிட்டாயைப் பிரித்து அவள் வாயில் இடுகிறார், ஒரு கணம் அழுகையை நிறுத்தும் சிறுமி. மிட்டாயை வெளியே எடுத்து எறிந்து விட்டுத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள், சாவு என்பது. ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் சுவையுணர்வைக் கூட மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பது தஸ்தாயெவ்ஸ்கியின் பதிவு.

இந்த இலக்கிய மரபில் தான் செகாவ் வருகிறார், நமது முன்னோடிகளே நமது இலக்கியப் போக்கினை வழிகாட்டுகிறார்கள். செகாவின் ஆசான் லியோ டால்ஸ்டாய். நெருக்கமான நண்பர் மாக்சிம் கார்க்கி அவருக்கு பிடித்த கவி புஷ்கின், அந்த மரபில் வருபவர் இப்படித் தானே எழுதுவார், அது தானே நடக்கும்.

ஏன் ரஷ்ய எழுத்தாளர்களை நாம் படிக்க வேண்டும், 

அவர்கள் வாழ்வின் ஆதார விசயங்களைப் பற்றி கவலைபட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து விவாதிக்கிறார்கள், மனித மனதை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள், கடவுள், மதம் குறித்து நிறைய கேள்விகளை கேட்டவர்கள் எழுத்தாளர்களே, அதிகாரத்திற்கு எதிராக அவர்கள் குரல் ஒலித்திருக்கிறது, சமூகத்தின் மனசாட்சி போல இருந்திருக்கிறார்கள், எழுதி பணம் சேர்ப்பது அல்ல அவர்களது நோக்கம். மக்கள் வாழ்வை மேம்படுத்துவதே,

தினசரி வாழ்வின் நெருக்கடி. துர்மரணம், ஏமாற்றம், பேராசை, நிர்கதி, புறக்கணிப்பு போன்றவற்றை  பார்க்கும்போது. வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? என்ற கேள்வி பிறக்கிறது,

இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்வதுதான் எழுத்தாளனின் வேலை, மனித மனம் விசித்திரமானது, அதை புரிந்து கொள்வது எளிதில்லை, அதன் ரணங்களை வலிகளை. நினைவுளை எழுத்தாளர்களே சரியாக புரிந்து கொள்கிறார்கள்

 செகாவின் நாட்குறிப்பில் தனது ஐந்து பேரன்களில், குடித்து – திருட்டுத்தனம் செய்து சிறையில் இருக்கிற பேரனைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் வயதான ஒரு பெண், அது தான் உலக இயல்பு, அது தான் மனதின் விசித்திரம்

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தந்தை கொலை செய்யப்பட்டு விடுகிறார், அவரது  பிள்ளைகளில் ஒருவன்தான் கொலை செய்தவன், ஆனால். அவர் கொலை செய்யப்பட்டதற்கு தாங்கள் அத்தனை பேருமே ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்று  மகன்கள் உணருவதுதான் நாவலின் மையம்,  கொலை அல்ல அதற்கான குற்றமனதையே எழுத்தாளர்கள் ஆராய்கிறார்கள், பிறப்பு வளர்ப்பு மரணம் நோய் பணம் அதிகாரம் அறம் என்று எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து பார்க்கிறார்கள், அவர்கள்  மேற்கொள்ளும் விசாரணை நாம் விதி என்று அடையாளப்படுத்தி நம்மை ஏமாற்றிக் கொள்வதை கடுமையாக சாடுகின்றன

டால்ஸ்டாய் – தாஸ்தாவெஸ்கி ஆகிய இருபெரும் சிகரங்களுக்கு நடுவே பொங்கி நுரைத்துப் பாய்ந்த பேராறுதான் ஆன்டன் செகாவ், அவரின் படைப்புகள் அனைத்திலுமாகச் சேர்த்து 8000 கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார் என்கிறார்கள்

செகாவ், இத்தனை கதாப்பாத்திரங்களை எங்கேயிருந்து படைத்தார் அவர்? தன்னை சுற்றிய வாழ்க்கையிலிருந்துதான், அவர் கண்டு கேட்டு அனுபவித்த நிகழ்ச்சிகளில் இருந்துதான் இத்தனை பாத்திரங்களையும் சிருஷ்டித்தார் செகாவ். அதில் பெரும்பான்மை எளிய மனிதர்கள், உலகின் கண்ணில் முக்கியம் எனப்படாதவர்கள். சாமான்யர்கள். பெண்கள், பெண்களை குறித்து அதிகம் எழுதிய சிறுகதை ஆசிரியர் அவரே,

செகாவினுடைய முன்னோர் பண்ணையடிமைகளாய் இருந்தவர்கள், செகாவின் காலத்தில்தான் அந்தப் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டது, செகாவின் அப்பா துறைமுக நகரம் ஒன்றில் சிறிய பலசரக்குக் கடை ஒன்று நடத்தி வந்தவர் -, மிகவும் சாதாரண – குறைந்த வருமானம்தான், ஏழ்மை ஆறுபிள்ளைகள். மதநம்பிக்கை கொண்ட அம்மா, கோபக்கார அப்பா இது தான் அவரது பால்யம், சிறுவயதில் நாம் படும் சிரமங்கள் வாழ்வில் எவ்வளவு வசதியாக உயர்ந்து போனாலும் மனதில் இருந்து மறைந்து போகவே செய்யாது, அந்த ஆதங்கம் தீராதது, பால்யத்தின் வடுக்கள் ஒரு போதும் ஆறாதவை

அப்பாவின் அடி-உதையால்தான் தனக்கு மதநம்பிக்கையே இல்லாமற் போனதற்குக் காரணம் என்கிறார் செகாவ், நம்மில்கூட பெரும்பாலானோருக்கு மத நம்பிக்கை – ஈடுபாடு இருப்பதற்கும், இல்லாமல் இருப்பதற்கு நமது குடும்பங்களில் அது  திணிக்கப்படுவதுதான் காரணம், இச்சூழலில் செகாவ் குடும்பம், கடன்சுமை தாங்காமல் இரவில் ஊரை விட்டு வெளியேறிப் போய்விட முயன்றது இது மிகத் துயரமான ஓர் அனுபவம், கடன் கட்ட முடியாமற் போகும் குடும்பங்கள், பெரும்பாலும் இரவில்தான் வெளியேறிப் போகிறார்கள். வாழ்ந்து கெட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். அவர்கள் வெளியேறிப் போவதை உடனிருப்பவர்கள் பார்ப்பது பெரும் துயரமில்லையா,

எல்லாச் சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல இருக்கின்றன ஆனால் துயருற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனியாகவே இருக்கின்றன என்பது  டால்ஸ்டாயின் வரி, இது ஒரு கண்டுபிடிப்பு இல்லையா, இது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பிற்கு இணையான சாதனையில்லையா,

அப்படி செகாவின் பெற்றோர். பிள்ளைகளுடன் வெளியேற முயன்ற பொழுது கடன்காரர்கள் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள், நீ வாங்கிய கடனைக் கொடுத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போ, தொகையைக் கொடுக்க முடியாவிட்டால், அடமானமாக எதையாவது கொடு, உன் பிள்ளைகளில் யாரையாவது அடமானம் வைத்து விட்டுப் போ,,,? என்கிறார்கள், அப்போது வழியில்லாமல்செகாவைத்தான் அடமானமாக விட்டுவிட்டுப் போகிறார்கள் அவரது பெற்றோர்.  அதில் சில வருசம் போராடி கடன் அடைந்த பிறகு மாஸ்கோ போகிறார் செகாவ்

துயரங்களால் மட்டுமே நிரம்பியிருந்த எனது சிறு வயது வாழ்க்கை முழுவதிலும் – இறுதி வரையிலும்கூட – என்னைக் காப்பாற்றியது என்னுள் இருந்த நகைச்சுவை உணர்வுதான்,,, – என்கிறார் ஆன்டன் செகாவ், அப்போது – ரஷியாவில் நிலவிய சமூக சூழலை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம்

 நம்மூரில் ஆங்கிலம்போல் அங்கு பிரெஞ்ச் மொழி மோகம் தலைவிரித்தாடியது, பொதுமொழியாக ரஷிய இருந்தாலும் உயர்குடி மொழியாக  ப்ரெஞ்ச் மொழிதான் இருந்தது, பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்டாடினார்கள். பிரெஞ்சு இலக்கியவாதிகள் இசைக்கலைஞர்கள் போற்றப்பட்டார்கள். அது மாறி  ருஷ்ய மொழி மீது புதிய விழிப்புணர்வு வர எழுத்தாளர்கள் முயற்சித்தார்கள். அன்று இருந்த அரசு கல்வியை எளிய மக்களும் கற்றுக் கொள்ளக் கதவுகளைத் திறந்துவிட்டது

அதனால் அடித்தட்டு மக்கள் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தபோது. செகாவ் மருத்துவம் படிப்பதற்குப் போகிறார்.  குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மேல்வருமானம் தேவை அதற்காகத்தான் எழுதஆரம்பிக்கிறார் செகாவ், நகைச்சுவைத் துணுக்குகள் தான் அவரது ஆரம்ப காலக் கதைகள், உதாரணமாக- மீசை இல்லாத ஆண் எப்படி இருப்பான்,,,? – மீசை உள்ள பெண் எப்படி இருப்பாளோ அப்படித்தான் இருப்பான்,,, என்பது போன்ற சின்னஞ்சிறு நகைச்சுவைக் கதைத்துணுக்குகளாக நிறைய எழுதினார் செகாவ், அவற்றைப் படித்த ஒரு விமர்சகர் செகாவிற்கு எழுதிய கடிதமொன்றில். இந்த மாதிரிக் குட்டிக் கதைகள் எழுதுவதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விடு, பல்வேறு விதமானவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களை நுட்பமாகப் பார்த்து எழுத வேண்டும்,,, என்று குறிப்பிடுகிறார், அதைப்படித்த பின்தான் செகாவ் தீவிரமான படைப்புகளை எழுதத் தொடங்கினார். செகாவிற்கு நாடகத்தில் சிறுவயது முதலே ஈடுபாடு இருந்த்து, ஆகவே நாடகங்களும் எழுதத் துவங்கினார்

அவரால் ஒரு நாளில் நாலு சிறுகதைகளை எழுதி விட முடிந்திருக்கிறது, அவரது எல்லாக்கதைகளிலும் தனிமை தான் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது, அதிலும் பெண்கள் தனிமையை எதிர் கொள்ளும் விதத்தை அவர் உன்னிப்பாக அறிந்து எழுதியிருக்கிறார்,

குடும்பம் எப்படி ரசனையற்று இருக்கிறது என்பதை. அதிகார போட்டியை. பணக்காரர்களின் போலித்தனத்தை. மருத்துவர்களின் அறியாமையை என அவரது கதைகளின் கவனம் மிக நுட்பமானது, நனவோடை எனப்படும் உத்தியை செகாவ் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார், பகட்டான மொழியில்லாத எளிய நடை அவருடையது, உரையாடல் எழுதுவதில் அவருக்கு இணையாரும் கிடையாது.

செகாவ்  எழுத்தாளராக மட்டும் இருந்தவரல்ல, பல்வேறு மாற்று செயல்பாடுகளை – களத்தில் இறங்கிச் செய்து வந்தவர், மருத்துவ பணியை சேவையாகவே செய்து வந்தார் அதனால்  “மூணுரூபிள்’ டாக்டர் என்றே அவருக்குப் பெயர், அவ்வளவுதான் அவர் வாங்கிய கட்டணம், தனது மருத்துவமனைக்கு நோயாளிகள் வரவேண்டுமென எதிர்பார்த்தவர் இல்லை, நோயாளிகளைத் தேடிச்சென்று சிகிச்சை அளிப்பார், ஒரு பெண் குழந்தை பிரியமாய் வளர்த்த நாயை. இவரிடம் சிகிச்சைக்காக கொண்டு வருகிறாள், “”அம்மா. நான் மிருகங்கட்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் இல்லையே, நீ மிருக வைததியரிடம்தான் போக வேண்டும்,,,ஃஃ என்றார் செகாவ், “”இந்த ஊரில் அப்படி ஒரு மிருக வைத்தியர் யாரும் இல்லையே? என்ன செய்யட்டும்? நீங்கள் தான் எப்படியாவது இந்த நாய்க்கு சிகிச்சையளிக்க வேண்டும்ஃஃ என்று மன்றாடுகிறாள் சிறுமி, செகாவவும் “அப்பெண் சொல்வது சரிதான்; அந்த ஊரில் மிருக வைத்தியர் யாரும் கிடையாதேஃ என்பதை உணர்கிறார், நாய்க்கு சிகிச்சையளிப்பதோடு உனக்கு அறிவு கிடையாதா? அந்தப் பெண் உன்னை நம்பித்தானே இருக்கிறாள்? நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி அவளை கஷ்டப்படுத்துகிறாயே? என்று அந்த நாயைக் கடிந்து கொள்ளவும் செய்கிறார், அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சிறுமி. “நான் என் நாயை வளர்ப்பதை சரியாகப் புரிந்து கொண்ட ஒரே ஆள் நீங்கள்தான்,,,ஃ? என்று நன்றி கூறுகிறாள், இதுதான் செகாவின் மேன்மை.

செகாவின் பல கதைகளில் பலரகமான நாய்கள் வருகின்றன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், ஒன்றைப் போல் இன்னொன்று கிடையாது, ஒரு கதையில் வருகிற நாய்க்குத் தன் வால் அழகாயில்லை என்று ஒரே ஆதங்கம், போகும்போதும். வருகிற போதும் தன் வாலைத் திரும்பிப் பார்த்தபடி வருத்தப்படும் நாய் அது, அதற்கு தான் நாயாய் இருப்பது பற்றி வருத்தமேயில்லை, தன் வால் அழகாய் இல்லையே என்பதுதான் ஒரே வருத்தம்,  அவர் தனது பயணத்தின் போது ஒரு முறை இலங்கைக்கு  வந்து இறங்கினார், இலங்கையில் இருந்து திரும்புகையில் அவருக்கு நினைவுப் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்கிறார்கள், ஒரு கீரீப்பிள்ளை இருந்தால் கொடுங்கள் என்று சொல்கிறார் செகாவ், ஆச்சரியத்துடன் கீரிப்பிள்ளையையும். புனுகுப்பூனை ஒன்றையும் கொடுத்தனுப்புகிறார்கள், தனது ஊருக்குத் திரும்பி வந்த செகாவினால். அங்கு அவற்றைத் தன்னுடனேயே வைத்து வளர்க்க முடியாது என்று தெரிய வரும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, அதை மிருக் காட்சிசாலை கூட வாங்க மறுக்கிறது, அந்த கீரிபிள்ளை அவருக்கு இலங்கையை நினைவூட்டியபடியே இருக்கிறது.  

நாரை ஒன்றை வாழ்நாளின் இறுதி வரை பிரியத்துடன் வளர்த்து வந்தவர் செகாவ். அந்த நாரை எந்த எழுத்தாளர் செகாவை பார்க்க வந்து பேச துவங்கினாலும் அருகில் வந்து நின்று கொள்ளும். தன்னை விட அதிக இலக்கிய அறிவு உள்ள நாரை என்று அதைச் சொல்கிறார் செகாவ்

செகாவ் தனது மருத்துவமனையை ஒட்டி கட்டாந்தரையாக இருந்த நிலத்தைப் பண்படுத்தி விதவிதமான பூச்செடிகளை வளர்க்கிறார், பூக்கள் நிறைந்த தனது தோட்டத்தை வந்து பார்க்குமாறு கார்க்கியை அழைக்கிறார், கார்க்கியும் வந்து பார்வையிடுகிறார், “”ரஷ்யாவில் சாதாரணமாக எல்லா இடத்திலும் பூக்கிற பூக்களைத்தானே இந்தச் செடிகளிலும் பார்க்கிறேன், இதைப் பார்க்கவா என்னை அழைத்து வந்தீர்கள்?”" என்று கேட்கிறார் கார்க்கி, அப்போது செகாவ் கார்க்கியிடம் சொன்னது இது; “”ஆச்சர்யம் இந்தப் பூக்களில் இல்லை, இவை மலர்ந்திருக்கும் இந்த நிலம் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வெறும் கட்டாந்தரையாக இருந்த தரிசு நிலம், இந்த மாதிரிக் கட்டாந்தரையிலும் கூட பூக்கள் பூக்கும் என்று தெரிந்ததுதான் எனது ஆச்சரியத்திற்குக் காரணம், இப்படியே ஒவ்வொரு மனிதரும் தன்னைச் சூழ்ந்துள்ள கட்டாந்தரைகளில் பூக்கள் மலரும் என்று தெரிந்து கொண்டால். மலரச் செய்தால் – உலகமே பூக்க்ளின் மயமாகி விடும்தானே?”" என்று செகாவ் சொன்னதும் கார்க்கியும் வியந்து போகிறார்.

எவ்வளவு பெரிய மனது எவ்வளவு பெரிய கனவு,

டால்ஸ்டாய் மிகவும் பலமான உடல்வாகுடையவர், பிரபு குடும்பத்துப் பிள்ளை, குதிரையேற்றம். நடை என்று தன் உடலை மிகுந்த வலிமையான ஆசிருதியுடன் வைத்திருந்தவர், அவர் எழுதின ஒவ்வொரு நாவலும் அச்சிலேயே 1500 பக்கங்கள் வரை வரும், இப்படி 5 முக்கிய நாவல்களை எழுதியவர், அப்போது மையில் தொட்டுத் தொட்டு எழுதும் பேனாதான், ஒருமுறை தொட்டு ஒரு வாக்கியம் எழுதுவதற்குள் மை உலர்ந்து போகும், இதைக் கொண்டு 20000 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதிகளாக 5 நாவலுக்கும் எழுதினார் என்றால் அவரது உடல்வலிமைக்கு வேறு சான்று வேண்டாம், அப்படிப்பட்டவர். ஒருமுறை குதிரையேற்றத்திற்குப் போகையில் செகாவையும் உடன் அழைத்துப் போகிறார், காட்டுப் பகுதியில் போய்க் கொண்டே இருக்கும்போது ஒரு குருவியின் துயரம் தோய்ந்த பாடலைக் கேட்கிறார்கள் இரண்டுபேரும், எப்போதும் அந்தக் குருவி ஒரே சோகப் பாடலை மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறதே என்று டால்ஸ்டாய் சோகமடைகிறார். மனிதர்களுக்கு எவ்வளவோ இசையிருக்கிறது, குரலிருக்கிறது, குருவிக்கு ஒரே குரல் ஒரே இசை, அதன் சோகம் தன்னை மிகவும் வருத்துவதாக சொல்லி பலநேரங்களில் இது போல நாம் தேற்றமுடியாத சோகம் நம்மை படுத்தி எடுக்கிறது செகாவ் என்கிறார், எப்பேர்ப்ட்ட ஆசான் பாருங்கள்

செகாவ். மருத்துவமனையில் டாக்டராகப் பணி செய்து கொண்டேதான் எழுதிக் கொண்டு வந்தார், காசநோய் அவரை வாட்டிக் கொண்டிருந்தது,  ரத்தவாந்தி எடுத்தபடியே வாழ்ந்தார், சாவின் கை அவரது தோளில் எப்போதும் கிடந்த்து ஆனால் அவர் பயம் கொள்ளவேயில்லை

எப்போதும் போல கிராமங்கள் தோறும் சென்று சிகிச்சை அளிக்கிறார், அவர் சந்தித்த மக்கள் பலரகமானவர்கள், அடிப்படை உணவில் தொடங்கி ஒவ்வோர் அம்சத்திலும் வெவ்வேறு ரசனையுடையவர்கள், வெவ்வேறு வாழ்க்கைத் தரங்களையும். தட்டுகளையும் சார்ந்திருக்கிருந்தவர்கள். அத்தனையும் ஒன்று சேர்ந்து அவரை எழுத்தாளராக்கியது,

அவரது ஆறாவது வார்டு சிறுகதை நம் சமூகத்தின் சீரழிந்த அடையாளம் தானே.  செகாவின் கதைகளில் எதுவுமில்லை என்று அவரை விமர்சகர்கள் கடுமையாக திட்டினார்கள், இன்று அவர் தான்  உலகின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று கொண்டாடப்படுகிறது, ஆகவே ஒரு எழுத்தாளன் மீது வைக்கபடும் விமர்சனம் அவனை ஒன்று செய்துவிடாது,  நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.

ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பில் தான் நவீன தமிழ் சிறுகதை உருவானது, அதில் செகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது, உலகெங்கும் சிறுகதைகள் எழுதுவோர் விரும்பி படிப்பது செகாவை தான். 32 மொழிகளில் அவரது கதைகள் வெளியாகி உள்ளன, தமிழில் இவரது முக்கியக் கதைகள் வெளிவந்துள்ள, அதுவும் நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன,

குற்றவாளிகளை பற்றி அறிந்து கொள்வதில் செகாவிற்கு  எப்போதுமே ஈடுபாடு அதிகம், அவர் இளைஞராக இருந்த போது சிறைக்கைதிகளை சந்திக்க Sakhalin என்ற் ஜப்பானிய ரஷ்ய எல்லைபகுதிக்கு சென்றிருக்கிறார்

சைபீரியாவின் துயரங்களை இரண்டே பேர்தான் நேரில் சென்று கண்டறிந்து தமது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்கள், ஒருவர் செகாவ், மற்றொருவர் – தாஸ்தாவெஸ்கி, அவர் தனது Notes from the Underground -ல் சைபீரியா பற்றிப் பதிவு செய்திருக்கிறார்,  

அன்றைய ரஷ்யாவின் பீனல் காலனியாக – குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்தது சைபீரியா – Sakhalin என்ற் இடத்தைப் போய்ப்பார்த்து. அங்கிருந்த பத்தாயிரம் பேரையும் சந்தித்து நேர்காணல் எடுக்கிறார், அங்கே சந்தித்த ஒரு தாயையும் – மகளையும் பற்றி அவர் பதிவு செய்கிறார், வறுமையின் கொடுமை தாளாமல். அந்தத் தாயே மகளை விபச்சாரம் செய்து ஏதாவது கொஞ்சம் பணத்துடன் வருமாறு அனுப்புகிறார், மகளும் பக்கத்து நகரத்தில் அம்மாவின் சொற்படி வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறார், இரண்டு நாட்கள் வரை இந்தப் பெண்ணை ஒருவரும் அணுகவில்லை, மூன்றாவது நாள் இரண்டு ஆண்கள் இவளிடம் வந்து பேசி அழைத்துப் போகிறார்கள், இருவருமாக இவரை அனுபவித்தபின். ஒரு நோட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள், வீட்டிற்கு வந்து பொழுது விடிந்ததும் தான் சம்பாதித்து வந்த ரூபாயை அம்மாவிடம் கொடுக்கும் போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது; அந்த நோட்டு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட காலாவதியாகிப் போன ஒரு லாட்டரிச் சீட்டுதான் அது;

அந்த லாட்டரிச் சீட்டைப் பார்த்துப் பார்த்து தான் ஏமாந்து போனதை எண்ணி அழுது கொண்டே இருக்கிறாள் தாய், செகாவின் பாத்திரங்கள் இப்படியான துயரப்பட்ட மனிதர்கள்தாம்.

“பந்தயம்” என்ற செகாவின் கதை இந்த மாத செம்மலர் இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது, நொடித்துப் போன வங்கி முதலாளியும் – அறையினுள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் ஒரு குற்றவாளியும் தங்களுக்குள் போடுகிற பந்தயமும்; அதில் கடைசியில் இருவருமே தோற்றார்களா. ஜெயித்தார்களா எனறு இரண்டிற்கும் பொருந்தி வருகிற விதத்தில் அமைந்திருக்கும் முடிவும்தான் அக்கதை,

“”வாழ்க்கை தான் எல்லாவற்றையும் விட பெரியது, தனிமைச் சிறையில் ஒருவன் அடைபட்டு உயிருடன் இருப்பதை விட வெளியேறிப் போய் உயிரை விடுவது மேல், வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்காதீர்கள்ஃஃ என்று வங்கி முதலாளிக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு தனிமைச் சிறையான பாதாள அறையிலிருந்து தப்பித்துப் போயிருப்பான் அந்த மனிதன்.

இதேபோல – இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்ஹேஸின் சிறு கதை – Pedro Salvadores நிலவறையினுள் அடைபட்டிருக்கும் ஒரு மனிதன் – தனிமை. அந்த மனிதனுக்கு காலத்தின் சின்னஞ்சிறு துகளைக் கூட அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தந்து விடுகிறது என்பதை உணர்த்துகிறது,  கற்பனை பயத்தால் தனது வாழ்வை இழப்பவனை பற்றி சொல்கிறது இக்கதை, செகாவ் தான் இதற்கு மூலம் என்பது போலவே இருக்கிறது

செகாவின் “ஆறாவது வார்டுஃ நாவலில் – அரசாங்க அதிகாரத்துவம் தனது குடிமக்களுக்கு. ஏன். தனது அங்கமான ஊழியர் ஒருவருக்குக் கூட எப்படி அடக்குமுறை பற்றிய அச்சத்தை ஊட்டி விடுகிறது என்பதைத்தான் நையாண்டியுடன் சித்தரித்திருக்கிறார் அவர்,

இதற்கு வரலாற்றில் சாக்ரடீஸ் காலத்திலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டுகளைக் காண முடியும், ஒரு அமைச்சர் அளிக்கும் விருந்திற்குப் போய் அவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் சாக்ரடீசும். அவரது நண்பர்களும்

அமைச்சர் வரத் தாமதமாகிறது, பொறுமையிழந்த சாக்ரடீஸ் நண்பருடன் வெளியேறி விடலாமா என ஆலோசிக்கிறார், அமைச்சர் வரும் வேளையில் நாம் வெளியே போனால் அரசாங்கப் பிரதிநிதியை நாம் அவமதித்து விட்டதாகக் கருதி நம்மைத் தண்டித்து விடுவார்களே?ஃஃ என்று கேட்கிறார் நண்பர், சாக்ரடீஸ் சொல்கிற பதில் இது;

“அரசு. என்னையோ – வேறு யாராவது ஒருவரையோ – தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால். முடிவு செய்தால் அதற்கான காரணத்தையும் அரசே சிருஷ்டித்துக் கொள்ளும். அரசுக்கு அது ஒரு போதும் பிரச்சினையே இல்லைஃஃ – இந்த அனுபவம்தான். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்த “”ஆறாவது வார்டுஃஃ நாவலில் வருகிற திமீத்ரிச்சின் அனுபவமும்.

செகாவின் வாழ்க்கை காதல்கள் நிரம்யிது, பல பெண் நண்பர்கள். அவர்களுடனான காதல்கள்,,, கடைசியில் அவர் திருமணமும் செய்து கொள்கிறார், வினோதமான ஓர் ஒப்பந்தத்தை இருவரும் செய்து கொள்கிறார்கள், செகாவின் நாடகங்களில் நடித்து வந்த ஒல்கா நிப்பர் என்ற நாடக நடிகையை. அவர் காதலித்தார் அவரையே மணந்து கொள்ள விரும்பினார்

அதற்கு தான் இந்த நிபந்தனை, அதாவது திருமணத்திற்கு பிறகு ஒல்கா மாஸ்கோவில் வசிக்க வேண்டும், அவர் யால்டாவில் இருப்பார் அதாவது கணவன் ஒரு ஊர் மனைவி ஒரு ஊர், இருவரில் எவர் எப்போது விரும்பினாலும் மற்றவரை தேடி வரலாம் தங்கலாம். ஒன்றாக ஒரே வீட்டில் வசிப்பது மட்டும் வேண்ர்ம், காரணம் அதற்காக இருவருமே நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் சமரச்ம் செய்து கொள்ள வேண்டும். அது தேவையற்றது, அவரவர் சுதந்திரத்தோ நாம் வாழ வேண்டும் என்றால் தனியே வாழ்வதே சிறப்பானது, அதை ஏற்றுக் கொண்டு ஒல்கா அவரை திருமணம் செய்து கொண்டார் தனித்தே மாஸ்கோவில் நாடகநடிகையாக வாழ்ந்தார்,

நிஜம் தானே, திருமணத்தின்போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்ணே, அவள் அத்தனை வருடமாகத் தான் வேர் கொண்டிருந்த இடத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு விடுகிறவள் பெண்தான்.

ஒரே வீட்டில் பல காலம் ஒன்றாக வசிக்கும் கணவன் மனைவி இருவரும் மேஜையும் நாற்காலியும் போல அலுப்பூட்டும் பொருளாகி போகிறார்கள் என்கிறார் செகாவ் ஆகவே இதைப் போக்க காதலி போலவே மனைவியை நேசிக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்  

,”நீங்கள் தனிமை போரடிக்கிறது என்று விரும்பி திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு ஒரு போதும் உங்களுக்குத் தனிமை என்பதே கிடைக்காது ” என்பது தான் செகாவின் எண்ணம்

செகாவின் காசநோய் முற்றுகிறது, தன் வாழ்நாள் எண்ணப்படுவதை அவர் அறிந்தே வாழ்ந்திருக்கிறார், ஆனால் அதைப் பற்றி அவருக்கு ஒரு புகாரும் கிடையாது, சந்தோஷமாகவே நடந்து கொண்டார்

நோய் முற்றிய ஒரு கட்டத்தில் ஜெர்மன் சென்று அங்கே நோய்க்கு இதமான சீதோஷ்ணநிலை இருந்த ஆரோக்கிய நிலையத்தில் தங்கி சிகிட்சை எடுத்து கொள்கிறார்கள், அதிர்ஷ்டவசமாக அவருக்குச் சிகிச்சை அளிக்க ஒரு ரஷிய டாக்டர் கிடைத்து விடுகிறார்,

சாவின் கடைசிநொடி நெருங்குகிறது, மரணத்தின் முன்பாக கடைசியாக ஒரு சாம்பெயின் குடித்து சந்தோஷமாக இறந்து போகிறார் செகாவ்,

செகாவின் மனைவி, அன்று இரவு முழுவதும் செகாவின் பிணத்துடன் இருக்கப் போவதாகக் கூறி அவ்வாறே செய்கிறார் , இறந்த உடலின் முன்பு அவர் என் ன பேசியிருப்பார், என்ன தனிமையது, காதலின் உன்மத்தம் அது தானோ,

மருத்துவமனையில் தினசரி செகாவைப் பார்த்துப் போக ஒரு பூங்கொத்துடன் வருகிற ஒரு பையன் மறுநாளும் வருகிறான், அவனிடம். “”இன்று மட்டும் அந்தப் பூங்கொத்தை நீயே அவரின் தலைமாட்டில் வைத்து விடு, இன்று அவர் தானே எழுந்து வந்து அதை வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை, என்கிறாள் மனைவி

 மறுநாள் – செகாவின் உடல் ஒரு பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தவறுதலாக மீன்கள் சிப்பிகள் ஏற்றிவரும் சரக்கு வண்டி மூலம் சொந்த ஊருக்கு வருகிறது,

அவரது மரணம் நடந்த நாளில் யுத்தமுனையில் இறந்து போன மிலிட்டரி ஜெனரல் ஒருவரின் உடலும் மற்றொரு பெட்டகத்தில் அதே ஊருக்கு வருகிறது, செகாவின் உடல் இருந்த பெட்டகத்தின் பின்னால் தவறுதலாக இராணுவ அதிகாரிகள் குழல் ஊதிக் கொண்டு வந்துவிடுகிறார்கள், இதனால் மரண ஊர்வலத்தில் பெரிய குழப்பம் நடக்கிறது

, “வாழ்நாள் முழுக்க இருந்தது போலவே சாவுக்குப் பிறகும் செகாவ் வேடிக்கையானவராகவே இருந்திருக்கிறார்,, என்று கார்க்கி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார்,

44 வயதில் மறைந்து விட்டாலும். இன்றும் செகாவின் அலை உலகு முழுவதும் பரவியிருக்கிறது, செகாவின் நாடகங்கள் உலக புகழ்பெற்றவை, அவை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன, அவரது கதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன , தொடர்ந்து நிறைய எழுதியவர் அவர், அவரது புகழ்பெற்ற வாசகம் கதையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டால் கதை முடிவதற்குள் அது வெடித்துவிட வேண்டும் என்பது, புனைவின் நுட்பத்திற்காக சொன்ன வாசகமது

ஷேக்ஸ்பியர். இப்சன் எழுதிய நாடகங்களைப் போலவே இவரின் நாடகங்களும் உலக முழுமையிலும் பரவியவை, சிறுகதைத் துறையை விடவும் நாடக உலகில் செகாவின் இடம் பிரமாண்டமானது, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகம் வாசிக்கப்பட்டவர் செகாவ் மட்டுமே, அமெரிக்க நகரம் ஒன்றில். வீதியில். நாள் முழுக்க செகாவின் கதைகளை போவோர் வருவோரிடம் ஓர் ஐந்து நிமிடம் உட்கார்ந்து இதைக் கேட்பீர்களா? என்று வேண்டிக் கொண்டு படித்துக் காட்டியவாறு இருக்கிறார் ஒரு ரசிகர், கேட்டு விட்டுப் போகிறவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்புகிறார் அவர்.

அந்த அளவிற்கு செகாவ் கதைகள் ஐரோப்பாவில் பிரபலமானவை, அவரால் உருவான மிகப்பெரிய எழுத்தாளர் ரேமண்ட் கார்வர், கார்வரது கடைசிக் கதை – “எர்ரன்ட். அது செகாவின் இறுதி நாளைப்பற்றியது , செகாவை அமெரிக்கா கொண்டாட காரணமாக இருந்தவர் கார்வர், தனது ஆசான் செகாவ் என்று கார்வர் பெருமிதத்துடன் சொல்கிறார்,

செகாவ்வின்150 விழாவை இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்றன . அவரது கதைகள் – அவரைப் பற்றிய படங்கள் – நாடகங்கள் என்பதாக உலகம் முழுவதும் கொண்டாட்டம் நடந்து வருகிறது,

 என்னால் ஒரு போதும் மறக்கமுடியாத செகாவ்வின் ஒரு கதை “துக்கம்- ஒரு குதிரை வண்டியோட்டியின் குறிப்பிட்ட ஒருநாள் வாழ்க்கையைப் பற்றியது, அவன் அன்றைய தினத்தில் வண்டியில் ஏறும் ஒவ்வொருவரிடமும் தான் ஒன்று சொல்ல வேண்டுமெனவும். அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்குமாறும் வேண்டிக் கொள்கிறான், ஆனால் அவன் சொல்வதைக் கேட்பதற்கு ஒருவர்கூடத் தயாராக இல்லை. அன்று மாலை வரை இப்படியே போகிறது, சோர்வும். சலிப்புமாக வண்டியில் இருந்து குதிரையை அவிழ்த்து ஓரமாகக் கட்டி விட்டு அதற்கு நீரும். இரையும் கொடுத்தபடியே அதனிடம் பேசுகிறான் வண்டியோட்டி, “இன்றைக்கு என் மகன் இறந்துபோய் விட்டான், அந்த இழப்பின் துக்கம் நிரம்பிய மனதுடன்தான் இன்று முழுக்க வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன், இதைத்தான் வண்டியில் சவாரி செய்ய வந்தவர்களிடம் சொல்லுவதற்கு முயற்சி செய்தேன், ஒருவர்கூட அதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை, நீயாவது என் துக்கத்தைக் கேட்கிறாயா?ஃஃ என்று குதிரையிடம் சொல்லச் சொல்ல. அதுவும் ஏதோ புரிந்ததைப் போலத் தலையாட்டிக் கொண்டிருக்கிறது,

 இப்படியாக முடிகிறது அந்தக் கதை.

இந்த கதையை போன்றது தான் செகாவின் வாழ்வு. துயரக்கதை கேட்ட குதிரை போன்றது தான் அவரது எழுத்து

செகாவ் மனிதர்களை. அவர்களின் உணர்வுகளைத் தானே நேரடியாகக் கண்டு – அறிந்து – உணர்ந்து எழுதியவர், அதை நாமும் நிஜமாக உணரச் செய்கிறார் என்பதே அதன்தனிச்சிறப்பு

 ஒருமுறை குதிரை இரவில் பனியில் நனைவதை கண்டு தானும் அது போல பனி கொட்டும் இரவில் வெளியே நின்று பனி உணர்ந்து பார்த்தவர்  செகாவ், அதைச் சொல்லும் போது மொழியற்ற துயரை பகிர்ந்து கொள்வதே அவரது சிறுகதையின் இயல்பு என்று குறிப்பிட்டிருந்தேன், அது உண்மை

அவரது நாய்க்கார சீமாட்டி கதை தான் நான் படித்த மிகச்சிறந்த காதல்கதை, அதைப்பற்றி எனது “செகாவின் மீது பனி பெய்கிறது என்ற

புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

உலகின் துயரம் பல நேரங்களில் மொழியற்றது, மொழியற்ற துக்கத்தை யாரெல்லாம் எழுதுகிறார்களோ. படைப்பு மொழியில் சொல்லுகிறார்களோ அவர்களெல்லாம் உன்னதமான – மாபெரும் எழுத்தாளர்கள், செகாவ் அப்படியான ஓர் உன்னதமான – மாபெரும் படைப்பாளி.

அவரை நாம் தொடர்ந்து வாசிப்போம்
கொண்டாடுவோம்.

••
நன்றி : பேச்சின் உரைவடிவத்தை எழுதியவர் – எழுத்தாளர் கமலாலயன்

வெளியிட்ட தமிழ் ஸ்டுடியோவிற்கும் நண்பர் அருணிற்கும் நன்றி

Project Gutenberg இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கின்ற ஆன்டன் செகாவின் முக்கியப் புத்தகங்கள்

  1. The Bishop and Other Stories
  2. The Chorus Girl and Other Stories
  3. The Darling and Other Stories
  4. The Duel and Other Stories
  5. The Horse-Stealers and Other Stories
  6. The Lady with the Dog and Other Stories
  7. The Wife, and other stories
  8. The Schoolmistress, and other stories
  9. Letters of Anton Chekhov
  10. Note-Book of Anton Chekhov
  11. The Sea-Gull
  12. Uncle Vanya

•••




அந்த கம்பெனிக்காரர்களோ, 'இது மிக நவீன தொழில்நுட்பம். இந்தியர்களால் கற்றுக்கொள்ள முடியாது' என்றார்கள். 'இதன் செலவும் மிக அதிகம். முதலில்,இந்தியாவில் தடுப்பு மருந்து எல்லாம் எதற்கு? உங்கள் நாட்டில்தான் ஜனத்தொகை இப்போதே அளவுக்கு மீறி இருக்கிறதே? அதில் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?'

நாற்காலியை உதைத்துக்கொண்டு எழுந்தார்: 'எண்ணி இரண்டே வருஷம். நானே இந்த வாக்ஸினைத் தயாரித்துக் காட்டுகிறேன் பார். இந்தியாவில், இந்தியர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகமே பார்க்கத்தான் போகிறது!'

தன்னந்தனி மனிதர் அவர்; அவருக்கோ, தடுப்பு ஊசிகள், மருந்துகள் பற்றி எதுவுமே தெரியாது. பேட்டரி, எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் புழங்கிக்கொண்டிருந்தவர் அவர். அந்த மனிதரால், ஹெபடைடிஸ் - பி தடுப்பு மருந்தின் விலை 750 லிருந்து வெறும் 50 ரூபாயாகக் குறைந்தது!

வரப்ரசாத் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஒரு சக்தி வாய்ந்த பன்னாட்டு கம்பெனியைப் புறமுதுகு காட்ட வைத்தார். உலக மார்க்கெட்டில் காமாலைத் தடுப்பு மருந்தின் விலையைச் சரிய வைத்தார்.


 
திருப்புமுனை - நூல் அனுபவம்

'இது சாதித்துக்காட்டிய 11 இந்திய நிறுவனங்களின் சாகசக் கதை.' என்கிற அறிமுகத்துடன் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருப்புமுனை புத்தகம் நான் சமீபத்தில் படித்த, முன்னேற, வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் ஹை-ரேட்டிங்கில் பரிந்துரை செய்யும் அருமையான புத்தகம்.

ஜெய்ப்பூரில் தைனிக் பாஸ்கர் தொடங்கிய அன்று 1,72,347 பிரதிகள் விற்றது. முதலில் திட்டமிட்டதோ நம்பர் 2 இடம்தான்; ஆனால் பாஸ்கர் அதிரடியாக நம்பர் 1 இடத்தையே பிடித்துவிட்டது!

பல வடக்கிந்திய மாநிலங்களில் ஆரம்பித்த ஒரே நாளில் மற்ற பாரம்பரிய பத்திரிக்கை ஜாம்பவான்களை நிலைகுலைய வைத்த தைனிக் பாஸ்கர் செய்தித்தாளின் துள்ளல் கதையுடன் துவங்கும் புத்தகம், மொத்தம் இதே போன்ற வெவ்வேறான 11 பிரமிக்க வைக்கும் கதைகளை கூறி நம்மை நமது சிந்தனைகளை முழுவதுமாக மாற்றி மனதிற்கு உரம் ஏற்றுகிறது.

பல நிறுவனங்களிடம் ஒரு பயம் உண்டு. புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினால், ஏற்கனவே மார்க்கெட்டில் நன்றாக விற்றுக்கொண்டிருக்கும் நம் பழைய தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்... திடீரென்று ஒரு நாள் வெளியிலிருந்து ஒருவர் நுழைவார். புத்தம் புதிதாக எதையோ கொண்டு வந்து, மொத்த மார்க்கெட்டையும் அள்ளிக்கொண்டு போய்விடுவார். எப்படி ஒரு ஐடியா, ஒரு கனவு, ஒரு குறிக்கோள் 'முடியாது' என உலகம் நினைத்து வந்த விஷயங்களை சுக்குநூறாக உடைக்கிறது என்பதை பல புத்தங்களில் படித்திருப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் தனித்தன்மை என்னவெனில் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் எங்கோ அமெரிக்க ஆய்வு கூடத்திலோ, ஆஸ்திரேலிய நிறுவனத்திலோ நடந்தவை அல்ல. திருச்சியில், சென்னையில், சூரத்தில் என நமது மண்ணில் நமக்கு வெகு அருகாமையில் நடந்தவைகளாகும்.

மாபெரும் ராட்சசர்களைப் பண பலம், படை பலத்தால் வெல்ல முடியாது. ஆனால் ஐடியாக்களால் அடித்து வீழ்த்தவிட முடியும்! 

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒளி தருவதில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அரவிந்த் கண் மருத்துவமனை, மாபெரும் சந்தையில் 'சிக்'கென புகுந்து பெரும் நிறுவனங்களை தடுமாற வைத்த கவின் கேர், விவசாயகளிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஐடிசி ஐபிடி, இந்தியர்கள் உள்ளதை செய்வார்கள் புதியதாக உருவாக்க மாட்டார்கள் என்கிற கருத்தை உடைத்த பாஷ் இந்தியா, கடமை தவறாத காவல் அதிகாரிகளை திரையிலேயே பார்த்திருந்த நமக்கு நிஜத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார் என சொல்லும் திருச்சி காவல் துறை திரிபாதி, ஃபைனான்ஸ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய சோழா வாகன பைனான்ஸ், பற்பல சவால்களை எதிர்கொண்டு மெல்லிய கேஸ் உள்ளே வாட்சை உருவாக்கிய டைட்டன் எட்ஜ், தடுப்பு மருந்துகளில் உலகத்தையே தும்மல் போட வைத்த சாந்தா பயோடெக், பிளாக் நோய் தாக்கி நிலைகுலைந்த சூரத் நகராட்சியை முன்மாதிரியாக மாற்றிய ராவ், இன்வெர்ட்டர் துறையில் கலக்கிய சு-காம் என அனைத்தும் ஒவ்வொரு விதமான புரட்சிக்கதைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறிக்கோள், பாதை, பயணம், சவால், வெற்றி என புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது அறிவு கிடங்கில் உயரும் தகவல்களுடன் மனதில் எழும் தெம்பும் அதிகமாக இருக்கும்.

நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது; அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.
புத்தகத்தின் ஆசிரியர் - போரஸ் முன்ஷி. எடுத்துக்கொண்டுள்ள சிறப்பான பணிக்காகவும் படைத்துள்ள அருமையான புத்தகத்திற்காகவும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

நம்மில் பல பேருக்கு, ஏதோ கெட்டது நேர்ந்துவிட்டது என்பதால் அதிகம் பாதிப்பு கிடையாது. 'இனிமேல் நமக்கு இதுதான் நிரந்தரம்' என்று நினைத்துக்கொண்டு, கெட்டதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமே, அதுதான் நம்மை முடக்கிப்போடுகிறது. 'தமிழில் : ராமன் ராஜா' என அட்டையில் குறிப்பிட்டிருக்காவிட்டால் இது ஒரு மொழி மாற்று புத்தகம் என அறிய வாய்ப்பே இல்லாத அளவிற்கு மொழி ஆளுமை கம்பீரமாக இருக்கிறது. கருத்துக்கள் துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளதற்கு ராமன் ராஜா சிறப்பு பாராட்டுதல்களுக்குரியவர்.புத்தகத்தன் வடிவமைப்பு அழகாக உள்ளது. கிரே நிறத்தில் ஆங்காங்கே கதையை நிறுத்தி ஆய்வு செய்யும் யுத்தி அழகு. உங்களால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள வேலை, உங்கள் நிறுவனம், தொழில்துறை அல்லது நாடு நகரத்தைக்கூட மாற்ற முடியும். இன்றைக்கு, இப்போது நீங்கள் செய்யும் உத்தியோகத்திலேயே மொத்த உலகத்தையும் மாற்ற முடியும்!

தொழில்முனைவோர், நிறுவன அதிகாரிகள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாது முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஒரு கட்டத்தில் இருக்கிற வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கி விடாலாமா என்கிற அளவிற்கு உற்சாகம் கொடுத்து சிந்திக்க வைத்துவிடும் வல்லமை கொண்டது இது. சின்ன வேலை, சின்னப்பொறுப்பு என்று எதுவும் கிடையாது. எந்த ஒரு வேலையையும் சரியான கோணத்தில அணுகினாலே போதும்;  நம்மால் மனித நாகரிகத்தையே மாற்ற முடியும். இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் அது இந்த புத்தகத்திற்கு குறைவாகவே அமையும் என்பதால், வாங்கி படியுங்கள். ஜொலியுங்கள்!
----------------------------------------
திருப்புமுனை | ஆசிரியர் போரஸ் முன்ஷி | தமிழில் ராமன் ராஜா | விலை ரூ.150 | வெளியீடு கிழக்கு பதிப்பகம் | https://www.nhm.in/shop/978-81-8493-462-5.html

மானசரோவர்

 மானசரோவர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 207
விலை : ரூ. 90



மானசரோவர் திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன.

இரண்டு முறை வாசித்துவிட்டேன். அசோகமித்திரனின் நேர்மையான சொல் முறைக்காகவே மீண்டும் ஒரு முறை படிக்கலாம். இந்தக் குட்டி நாவலை பாகம் பாகமாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இரண்டு கதை சொல்லிகள் மாறி மாறி ஒவ்வொரு பாகத்திலும் தன்னிலையிலிருந்து கதை சொல்லுகிறார்கள். விறுவிறுப்பாகவும், அதேநேரம் ஆழ்ந்த தத்துவ தளங்களிலும் பயணப்பட்டுச் செல்லும் இந்த நாவலை சாவி வார இதழில் தொடராக எழுதினார் என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. (ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார்). இருந்தாலும் வார இதழ் தொடர்களுக்கே உரித்தான வகையில் ஒவ்வொரு அத்தியாமும் ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு முடிகின்றது.

சத்யன் குமார் என்கிற வட இந்திய நட்சத்திர நடிகனுக்கும், தமிழ்த்திரையுலகில் கதைக்குழுவில் சொற்ப ஊதியத்துக்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் கோபால்ஜிக்கும் (சத்யன் குமாரின் விளிப்பில்) இடையே நிலவும் அபூர்வமான நட்பின் தன்மைதான் கதை. ஒரு பெரிய நட்சத்திர நடிகனுக்கு அன்றாட வருமானத்துக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு நோஞ்சான் எழுத்தாளர் மீது (வேறு யார்? அசோகமித்திரன்தான்) ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பும், பிரமிப்பும், அதனால் அவன் அவரை நோக்கிச் செலுத்தப்படுவதும், அவரைப் பின்தொடர்ந்து சென்று இறுதியில் தன்னிலை தெளிதலுமே கதையின் அடிநாதம். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் பிரிந்த இஸ்லாமியச் சிறுவன் பின் மும்பை வந்து சத்யன் குமார் என்ற நடிகனானவன். புகழின் உச்சத்தில் இருந்தவன். காதலில் தோற்றுத் துவண்டு போகும் அவனது சோக நடிப்புக்கும், இறுதியில் அவன் காதலுக்காக செய்யும் தியாகத்துக்கும் தேசமே சொக்கிக் கிடந்திருக்கிறது. ஜவஹர்லால் நேருவே தனியாக அழைத்துப் பாராட்டுமளவு பிரபலமானவன். முப்பதெட்டு வயதாகியும் திருமணம் புரிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டவன். புகழ் தேயத்தொடங்கும் போது மதராசிக் கம்பெனிகளுக்கு நடிக்க வரும் பிற வட இந்திய நட்சத்திரங்களைப் போலவே அவனும் படம் பண்ணுவதற்காகச் சென்னை வருகிறான். சமீபத்தில் விஜய் டிவியில் கமல் பேட்டி பார்த்தபோது ஒருவேளை இந்த சத்யன் குமார் பாத்திரம் யூசுஃப் கான் என்ற இயற்பெயர் கொண்ட இந்தி நடிகர் திலீப் குமாரைக் குறிக்கிறதோ என்று தோன்றியது. நிச்சயமாகத் தெரியவில்லை. வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் எவருக்குமே இது ஒரு விசித்திரப் பிரதேசமாகத்தான் காட்சி தரும். அதுவும் கதை நடப்பது அறுபதுகளில். ஹிந்தி தெரிந்த ஆட்களைச் சந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அங்கு அவன் சந்திக்கும் கோபாலின் புன்னகை யாரையோ அவனை நினைவுபடுத்துகிறது.

இவனது புகழும், கவர்ச்சியும் சற்றும் பாதிக்காதைப் போல நடந்துகொள்ளும் கோபால்ஜி இவன் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறார். அவர் வீட்டுக்கே தேடிச் சென்று அவர் கொடுக்கும் ஃபில்டர் காஃபிக்காகக் காத்திருக்கிறான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறான். கோபால்ஜியிடம் சத்யன் குமார் கொண்டிருக்கிற நெருக்கம் காரணமாக அவன் எப்போது சென்னைக்கு நடிக்க வந்தாலும் அவரையே அவனுக்கு உதவியாக அனுப்பி வைக்கின்றன படக்கம்பெனிகள். பெரிய நடிகர்கள் சகவாசத்தையெல்லாம் விரும்பாத கோபால் அவனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றறிந்து ஆச்சரியப்படுகிறார். ஆனால் அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. குடிகாரனையும், பொம்பளைப் பொறுக்கியையும் கூட்டிக் கொண்டு எதுக்கு வீட்டுக்கு வருகிறாய் என்கிறாள். கோபாலுக்குத் திருமணமாகி புக்ககம் சென்று விட்ட மகளும், பள்ளிக்குச் செல்லும் மகனும் உண்டு. திடீர் திடீரென்று பித்துப் பிடித்த மாதிரி உளறுகிறாள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் கோபால். அவர் வீட்டில் யாருக்கும் ஆண்பிள்ளை தங்குவதில்லை. அதை நிரூபிப்பது போலவே அவர் மகனும் அன்றே இறந்து போகிறான். அவன் எப்படி இறந்து போகிறான் என்று நான் சொல்ல மாட்டேன். மனைவிக்குப் பைத்தியம் முற்றிவிடுகிறது. அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு துணைநடிகையை அழைத்துக் கொண்டு மும்பை சென்று இவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான் சத்யன் குமார். மனத்தில் மட்டும் கோபால்ஜியின் நினைவு நீங்குவதில்லை அவனுக்கு. மெல்லியதாக மாரடைப்பு வந்து படுத்தவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகி விடுகிறது. உடனே கிளம்பிச் சென்னை செல்கிறான். காரை எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி அவரைத் தேடுகிறான். எங்கும் பார்க்க முடியவில்லை. பிறகு ஒரு பெண்கள் மறுவாழ்வு நிலையத்தை நடத்தி வரும் பெண்மணியின் மூலம் துப்பு கிடைத்து அவரது சொந்த ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான். அவரைச் சந்திக்கும் போது அவர் தனது குருநாதர் ஸ்தானத்தில் உள்ள ஒரு சித்தரோடு இருப்பதைப் பார்க்கிறான். கோபால்ஜி நான் ஏன் உங்களைப் பார்க்க வந்தேன் தெரியுமா என்று கேட்கிறான். கோபால்ஜி இல்லாத நேரம் அவர் வீட்டுக்குச் சென்றதையும், அங்கு அவரது மனைவியுடன் தான் நடந்து கொண்ட விதம் பற்றியும் சொல்ல விழைகிறான். கோபால்ஜி இப்போது அதெல்லாம் வேண்டாமே என்று மென்மையாக மறுக்கிறார். சித்தரோ அருகில் இருக்கும் நீர்நிலையில் சென்று முழுகிவிட்டு வா, அதுதான் உன் பாவங்களைத் தீர்க்கும் மானசரோவர் என்கிறார். சத்யன் குமார் அதுபோலவே செய்கிறான். இரண்டு நட்புள்ளங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த கறை  வடு எதையும் ஏற்படுத்தாமலேயே மறைந்து விட வழி வகுத்து விடுகிறார் சித்தர். அசோகமித்திரன் வழக்கம் போலத் தன் நாவலை படக்கென்று முடித்துக் கொள்கிறார்.

கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டும். கச்சிதமான வடிவத்தில், ஏறக்குறைய எழுத்துப்பிழைகளே இன்றி, வாங்கக்கூடிய விலையில் நூல்களை வெளியிடுகிறார்கள். அவற்றின் வடிவமைப்பின் காரணமாகவே எனக்கு அவர்கள் வெளியிடும் புத்தகங்களின் மீது மோகம் வந்து விட்டது. கடல்புரத்திலேயும், மானசரோவரும், அவர்கள் வெளியிட்டதுதான். நிறைய இலக்கியத் தொடர்பான நூல்களை வெளியிட்டால் நமக்கெல்லாம் சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.



After 2000 – தமிழ் நாவல்: Shortlist

காலச்சுவடு க்ளாசிக் வரிசை வருகிறது. Vanity publishing எனப்படும் தனக்குத் தானே திட்டத்தினால் கூட உயிர்மை போன்ற பதிப்பகங்களின், பிரான்ட் வேல்யூ குறைந்ததாக தெரியாத காலம். கிழக்கு, உயிர்மை, தமிழினி மூலம் வெளியாகும் கதைகள் பரவலான கவனிப்பு பெறுபவையாக இருக்கின்றன.

முக்கியமோ/முகாந்திரமில்லையோ… தெரியாது; எனினும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் புனைவுகள் பெருமளவில் விற்கின்றன.

அப்படி பரவலான கவனிப்பைப் பெறாத, ஆனால் நான் மதிக்கும் சிலரால் (புத்தக விமர்சனங்கள், திண்ணையில் பாவண்ணன், நேசமுடன் வெங்கடேஷ் மின் மடல், தனி அரட்டையில் மெத்தப் படிக்கும் நண்பர்கள்) பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தொகுப்பு இது.

மூன்றாக லிஸ்ட்டை பிரிக்கலாம்.

1) நான் படித்தவை – நிச்சயம் முக்கியமானவை; விருது கோரும் ஆக்கம்: முழுநேரப் பதிவராய் பரபரப்பை கிளப்பாததால் மட்டுமே அதிகம் கவனிப்பு கிட்டாத புனைவுகள்.
2) நான் புரட்டியவை – வாசித்து முடிக்கவில்லை (சுவாரசியம் கிடைக்காததாலோ, பக்க அளவினாலோ அல்லது நண்பராக இல்லாததாலோ); இலக்கியத்தரமானவை

3) விஷ்லிஸ்ட்

படித்ததில் முக்கியமானவை

  • மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை
  • வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை
  • காக்டெயில் & ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
  • கொசு – பா ராகவன்
  • அலகிலா விளையாட்டு – பா ராகவன்
  • அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி
  • மனப்பிரிகை :: ஜெயந்தி சங்கர்
  • சல்மா - இரண்டாம் ஜாமங்களின் கதை
  • உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை

புரட்டியதில் தரமானவை

  • கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா
  • நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு
  • கீரனூர் ஜாகிர்ராஜா – துருக்கித்தொப்பி & வடக்கேமுறி அலிமா
  • வளவ. துரையன் – மலைச்சாமி – மருதா
  • வட்டத்துள்:வத்சலா
  • பாபுஜியின் மரணம்: நிஜந்தன்
  • நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த்
  • அம்மன் நெசவு: சூத்ரதாரி
  • வா.மு.கோமுவின் – கள்ளி
  • க.சீ. சிவக்குமார் - நாற்று
  • சோ. தருமன் - வலைகள்
  • பாலமுருகன் - சோளகர் தொட்டி

ரிடையர்மென்ட் விஷ்லிஸ்ட்

  • காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா
  • குவியம் – ஜெயந்தி சங்கர்
  • நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி
  • தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி
  • மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு
  • கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை
  • சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை
  • அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை
  • கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை
  • க.வை.பழனிசாமி – ஆதிரை
  • மனோஜ்குமார் – பால்
  • எஸ். செந்திகுமாரின் – ஜீ. செளந்தர ராஜனின் கதை
  • நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்
  • பாலிதீன் பைகள் – இரா நடராசன்
  • லங்காட் நதிக்கரை – அ. ரெங்கசாமி; தமிழினி
  • சிறீதர கணேசன் – சந்தி
  • தளவாய் சுந்தரம் – ஹிம்சை
  • கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  • பவா செல்லத்துரை – வேட்டை
  • லட்சுமிமணிவண்ணன் – பூனை
  • குமாரசெல்வா – உக்கிலு
  • பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  • சி.எம். முத்து – வேரடி மண்
  • செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
  • மில் :: ம காமுத்துரை

தூக்கம் வர சிரமதசை சாய்ஸ்

  • பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  • காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
  • மஞ்சள் வெயில் : யூமா.வாசுகி
  • மாயினி – எஸ்.பொன்னுத்துரை
  • எம்.ஜி. சுரேஷ் – 37

முந்தைய பதிவு: தமிழ் நூல் பரிந்துரை – 2010




பதினெட்டாவது அட்சக்கோடு January 28th, 2011
அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?
ஆர்வி

18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும் கதை. ஒரு முக்கியமான வரலாற்றுநிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம். எல்லீ வீசலின் இரவு தன்வரலாற்று நாவலில் இதே விஷயம் வருகிறது. ஹிட்லரின் படுகொலை முகாம்களில் என்ன நடக்கிறது எனத் தெரிந்த ஒருவன் திரும்பிவந்து போலந்தின் யூதக்குடியிருப்புகளில் அதைச் சொல்கிறான். எவருமே பொருட்படுத்துவதில்லை. எளிய மனிதர்களால் வரலாற்றை கற்பனைசெய்ய முடியவில்லை. கற்பனை செய்தாலும் என்ன செய்வதென்று புரியவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு மட்டுமே அவர்கள் பழகியிருக்கிறார்கள். வரும்போது பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்கிறார்கள்.

18 ஆவது அட்சக்கோடு காட்டுவது இந்திய தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்தர்ப்பம். ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்புகிறார். அதன்பொருட்டு மதவெறி தூண்டிவிடப்படுகிறது. நெருக்கமானவர்கள் கூட சட்டென்று மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். ரசாக்கர்களின் அடிதடி அரசியலுக்கு அஞ்சி மக்கள் அனாதைகளாக தப்பி ஓடுகிறார்கள். எங்கும் அச்சம், பதற்றம். இந்திய ராணுவம் வந்ததும் நிலைமை தலைகீழாகிறது. அஞ்சியவர்கள் தலைதூக்க அடிதடியில் அலைந்தவர்கள் அஞ்சி ஓடும் நிலைமை.

நவீன இந்திய அரசியல் தேசிய உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனை தருணம் அது. பிற மகாராஜாக்களுக்கும் பிராந்திய ஆதிக்கங்களுக்கும் முன்னுதாரணமான அச்சுறுத்தலாக விளங்கியது அந்நிகழ்ச்சி. அது நிகழவில்லை என்றால் இந்தியா முழுக்க இன்னும் பல பிரிவினைக்குரல்கள் கிளம்பி குட்டையை மேலும் குழப்பியிருக்கும். பல இடங்களில் அதேபோல வன்முறைக் கலவரமும் பிரிவினைப்போக்கும் ஒரேசமயம் தலையெடுத்திருந்தால் இந்தியராணுவம் செயலற்றிருக்கும். பெரும் மானுட அழிவுகள் நிகழ்ந்திருக்கும். அந்த வடுக்களை ஆற்ற முடியாமல் சுதந்திர இந்தியா மேலும் அழிவை நோக்கிச் சென்றிருக்கும்.

சிறந்த உதாரணம் தெலுங்கானாவும், திருவிதாங்கூரும். நல்லவேளை நாயர்கள் திருவிதாங்கூர் மகாராஜாவை நம்பவில்லை. காரணம் திவான் ஒரு அய்யர். நாயர்கள் நம்பி ஆயுதமெடுத்திருந்தால் திருவிதாங்கூரிலும் கலவரம் நடந்திருக்கும்
அவனைச்சுற்றி இத்தனை வரலாறு நடக்கும்போதும் சந்திரசேகரன் கிரிக்கெட் தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். கன்யாகுமரியில் இருந்து கிளம்பி, சென்னை வரை ஓடி, டெல்லியில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி எறிவதாக உத்தேசித்து கராச்சிக்கோ டாக்காவுக்கோ பந்தை விட்டெறிந்துகொண்டிருக்கிறான் . அவன் அப்பா வழியில் சிங்கம் வந்து உறுமினாலும் ’நான் ரெயில்வே செர்வெண்ட்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். வீட்டுக்கு வெளியே நிகழ்பவை அவர்களுக்கு மெல்லிய அதிர்வுகளாக மட்டுமே வந்து சேர்கின்றன. நிலைமை சூடாகும்போதுகூட முடிந்தவரை வாழ்ந்து பார்க்கலாம் என்றே நினைக்கிறார்கள். அவர்களுக்குள் வன்முறை இல்லை. ஆகவே வன்முறை தங்களை பாதிக்காது என்ற அசட்டு நம்பிக்கை. பிரச்சினை என்றால் எங்காவது பதுங்கினால் போயிற்று என்கிற தலைமுறை தலைமுறையாக பயின்று வைத்திருக்கும் மனநிலை. இன்னொருபக்கம் நைஜாமின் அரசகுலப்பின்னணியைச்சேர்ந்த உயர்குடிகளும் அவர்களின் சொகுசு வாழ்க்கையில் எந்தச்சிக்கலும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் வரலாற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. அது அவர்கள் வரை வந்து தொடாது என்று நினைக்கிறார்கள். சந்திரசேகரனுக்கு வரலாறு தலைக்குமேல் நிகழ்கிறது அவர்களுக்கு கால்கீழே ஓடிக்கொண்டிருக்கிறது

அசோகமித்திரனின் நாவல் பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம் மதமோ அரசியலோ இல்லாத எளிய மாணவனாகிய சந்திரசேகரனில் அவனுடைய அன்றாட வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகும்போதுதான் அரசியல் குடியேறுகிறது. அதுவும் எளிமையான அரசியல். பணம் உள்ளவர்கள் அதிகாரத்தைக்கையாளும் விதத்தைப்பற்றிய ஒரு பிரக்ஞையாக மட்டும் அந்த அரசியல் நீடிக்கிறது. அவனுடைய சூழலே இந்து- முஸ்லீம் என பிரிவுபடும்போது கூட அவன் சையது மாமாவை நம்பிக்கொண்டு மதவெறுப்புக்கு அப்பால்தான் வாழ்கிறான். காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைக்கும்போது அந்தக்கொலையை ஒரு முஸ்லீம்தான் செய்திருப்பான் என ஊகித்து சந்திரசேகரன் கொலைவெறி கொண்டு ஒரு மைதானத்தில் ஓடும் காட்சி அவன் எப்படி அரசியல்படுத்தப்படுகிறான் என்பதைக் காட்டுகிறது. அவனே உள்ளூர மதத்துருவத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறான். அந்த தருணத்தில் கொன்றது முஸ்லீம் என அவன் இயல்பாக நம்புவதே அதற்குச் சான்று

காந்தியை தன்னுடைய கையாலாகாத எளிமையின் அடையாளமாகவே அவனும் அவனைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினரும் காண்கிறார்கள். அவர் கொல்லப்படுவது அவர்களின் கடைசி எல்லை. விழுமியங்களுக்கும் பணிந்துபோவதற்கும் மதிப்பே இல்லை என அவர்களுக்கு காட்டுவது அது. சந்திரசேகரன் கையாலாகாதவனாகத்தான் இருளில் ’காந்தீ காந்தீ ’ என கூச்சலிடுகிறான். ஆனால் அந்த அரசியல்படுத்தப்படலின் மறுபக்கத்தை உடனே காட்டி நாவல் முடிகிறது. இந்துக்கள் திரும்ப அடிக்கும்போது அடிவாங்குவது பணக்கார நைஜாம் வம்சம் அல்ல. எளிய அன்றாடங்காய்ச்சி முஸ்லீம்கள். அவர்களின் கந்தைக்குடிசைகள். யார் யாருடன் சண்டையிட்டாலும் அந்த குடிசைகள்தான் எரிந்தாகவேண்டும். இந்துக்குடிசை அல்லது இஸ்லாமிய குடிசை. ஆனால் அது குடிசைதான் எப்போதும். எங்கிருந்தோ வந்து உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கும் அந்த எளிய இஸ்லாமியக்குடும்பத்தின் பெண் உயிரச்சத்துடன் வந்து சட்டையை கழட்டி ’என்னை எடுத்துக்கொள் என் குடும்பத்தை விட்டுவிடு’ என கூறும் இடத்தில் சந்திரசேகரன் உடைந்து விடுகிறான். அந்த கணத்தில் அவன் அவனுடைய அரசியல் பிரக்ஞையை மீறி அறப்பிரக்ஞையை அடைகிறான். அதுவே இந்நாவலின் உச்சம்

இந்த மூன்று புள்ளிகளும் முக்கியமானவை. காந்திகொலையில் சந்திரசேகரன் மதம் சார்ந்த திரள் அடையாளத்தை அடைகிறான். அதன் கோபங்களையும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்கிறான். எளிய தனிமனிதனாக இருந்தவன் அரசியல்சுயம் கொள்கிறான் இரண்டாவது புள்ளியில் அந்த அரசியல் சுயம் எத்தனை செயற்கையானது என உணர்கிறான். அவனறிந்த யதார்த்தம் அந்த குடிசை வாசிகளும் அவனும் ஒன்றே என்பதுதான். எந்த அரசியலும் அவர்களுடையவை அல்ல. அவையெல்லாம் வீடும் சோறும் உள்ளவர்களுடையவை. அவர்கள் எல்லாரும் அதற்குகீழே வாழ்பவர்கள். தன்னை அவன் அம்மனிதர்களின் ஒருவனாக, வரலாறெங்கும் நிறைந்திருக்கும் சாமானியனாக காண்கிறான் சந்திரசேகரன். மூன்றாவது புள்ளியில் அவன் தன் ஆழத்து அற உணர்ச்சியைக் கண்டுகொள்கிறான். அவன் ஏதும் செய்யவில்லை. ஆனால் அந்த எளிய பெண் அவனை அவள் எதிரியாக எண்ணி விட்டாள். எண்ணும் இடத்தில் அவன் இருக்க நேர்கிறது. அந்த அடையாளம் அவனுக்கு இருக்கிறது. அதுவேகூட பாவம் என அவன் உணர்கிறான். அந்த அடையாளத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் தனியனாக ஆகி அவன் ஓடும்போது அவனுடைய அறம் முழுமை அடைகிறது. இனி எந்த திரளிலும் அவனால் இணைய முடியாது. அவன் தன் அறவுணர்ச்சியுடன் தனித்தே வாழப்போகிறவன் இந்த பரிணாமத்தைச் சொல்லும் முக்கியமான படைப்பு 18 ஆவது அட்சக்கோடு. அதை மிக நுட்பமாக நகைச்சுவையாக சாதாரணமாகச் சொல்லிச்செல்கிறார் அசோகமித்திரன்.

‘நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நானும் கூட்டுப்பொறுப்புள்ளவன்’ இந்தவரியை அசோகமித்திரனின் ஆக்கங்களில் மீண்டும் மீண்டும் காணலாம். ஹிட்லரின் வதைமுகாம்களை, இலங்கைச்சிறையின் படுகொலைகளை, மதக்கலவரங்களை அப்படி உணரக்கூடிய சாமானியர்களின் அகக்கொந்தளிப்புகளை அற்புதமாக விவரிக்கும் கதைகளை அவர் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தில் ’சாமானியனின் அறப்பிரக்ஞை’ என்ற இந்த அம்சம் அசோகமித்திரன் ஆக்கங்களில் வெளிவந்த அளவுக்கு நுட்பமும் தீவிரமுமாக எவர் ஆக்கத்திலும் வெளிப்பட்டதில்லை. உலக இலக்கியத்திலேயே குறைவுதான். நான் ஐசக் பாஷவிஸ் சிங்கரை மட்டுமே அவருக்கு நிகராகச் சொல்வேன் சதத் ஹசன் மாண்டோவைத் தமிழில் சிலர் திடீரென்று தூக்கிப்பிடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் கண்டுவிட்டார்களாம். மாண்டோவோ அல்லது பீஷ்ம சாஹ்னியோ [தமஸ்] எழுதியவை அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள், செயற்கையான நாடக உச்சங்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் அல்ல அவை. அசோகமித்திரன் எழுதுவதும் நாமனைவரும் அறியும் நமது ஆழத்தை கண்முன், நம் சமகாலத்தில், இலக்கியமேதை ஒருவர் தன் மகத்தான ஆக்கங்களுடன் வாழ்கிறார். நாம் தொலைநோக்கி வைத்து திசைகளை துழாவிக்கொண்டிருக்கிறோம்
ஜெ


புத்தகப் பரிந்துரை

சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது

சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை.

1)      இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்

மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு மிக முக்கியமானது, நிராகரிப்பும் அவமதிப்பும் கொண்ட வாழ்வை கவிஞன் எதிர்கொள்ளும் சவாலை இந்த கவிதைகள் நுட்பமாக அடையாளம் காட்டுகின்றன.

உயிர்மை பதிப்பகம் விலை ரூ 190

2)      அசையும் படம்

சினிமா கலை ரசனை இயக்கம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு முழுமையான ஒளிப்பதிவு கையேடு, இதை எழுதியிருப்பவர் ஒளிப்பதிவாளர்  சி, ஜெ, ராஜ்குமார். இவர்  கனவு மெய்ப்பட வேண்டும், மண், பெரியார் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இந்தப் புத்தகம் ஒளிப்பதிவின் வரலாற்றை துல்லியமாக விவரிப்பதோடு சினிமா எப்படி உருவாகிறது என்று அதன் அத்தனை தொழில் நுட்ப அம்சங்களையும் விரிவாக, எளிமையாக விவரிக்கிறது, முதன்முறையாக இது போன்ற புத்தகம் தமிழில் வெளியாகி உள்ளது,  திரைக்கலை பயிலும் மாணவர்களும். உதவி இயக்குனர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது,

விஜயா புத்தக கடையில் கிடைக்கிறது, விலை ரூ 150

3)      மனம் கொத்திப் பறவை

நண்பர் சாருநிவேதிதா ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய மனம் கொத்திப்பறவை விகடனில் நேர்த்தியான புத்தகமாக வெளியாகி உள்ளது, சமகால உலக இலக்கியம், உலகசினிமா, அரசியல் என பல தளங்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவமும். கேலியும்  தார்மீக கோபமும் பரபரப்பும். கொண்டதாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வாசிப்பில் புதிய எழுச்சி தருகிறது

விகடன் பிரசுரம்  விலை ரூ 85

4)      லா.ச.ராமாமிருதம் கதைகள்

தமிழ் சிறுகதையில் கவித்துவ எழுத்துமுறையை உருவாக்கிய முன்னோடி ஆளுமையான  லா.ச.ராவின் மொத்த சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் தேர்ந்த பதிப்பாக வெளியிட்டுள்ளது ஒரு சேர லா.ச.ராவை வாசிப்பது உன்னதமான அனுபவம்,

உயிர்மை பதிப்பகம் ஒரு தொகுதியின் விலை ரூ 300

5)      போர்க்கலை

புகழ்பெற்ற சீன யுத்தக்கலை நூலான The Art of War  தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் பொன் சின்னதம்பி முருகேசன், சந்தியா பதிப்பகம்  வெளியிட்டுள்ளது,  சன்ஸீ எழுதிய இந்த நூல் இன்று உலகின் பல்வேறு பல்கலைகழகங்களில் எம்பிஏ மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது, இது வெறும் போர்க்கலை நூல் மட்டுமில்லை மாறாக வாழ்வுண்மைகளை. சுயதிட்டமிடுதலைப்பற்றிய அருமையான புத்தகம்

சந்தியாபதிப்பகம் விலை  ரூ 60

6)      கடல்

புக்கர் பரிசு பெற்ற நாவலான ஜான் பான்வில்லின் கடல் தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இந்த நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி குப்புசாமி. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் முன்னதாக நோபல்பரிசு பெற்ற நாவலான ஒரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை மொழியாக்கம் செய்து பாராட்டு பெற்றவர்

காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ 125

7)      அர்ச்சுன்ன் தபசு

சா.பாலுசாமி எழுதியுள்ள இந்த புத்தகம் மாமல்லபுரத்து கலைப்பற்றி வெளிவந்த தமிழ் நூல்களில் மிகவும் சிறப்பு மிக்கது.மாமல்லபுர சிற்பத்தொகுதியை நுட்பமாக ஆராய்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ளது சிற்பக்கலை குறித்து இவ்வளவு விரிவான புத்தகம் தமிழில் வெளியாவது இதுவே முதல்முறை.

காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ 300

8)      சோழர்கால ஒவியங்கள்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஒவியங்கள் குறித்து வண்ணப்படங்களுடன் வெளியாகி உள்ள மிக முக்கியமான புத்தகமிது, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது, மாதிரி கோட்டு சித்தரங்களுட்ன மூல ஒவியங்கள் அச்சிடப்பட்டுள்ளது 156 பக்கம் உள்ள ரூ 500 விலை உள்ள இந்த புத்தகம் கண்காட்சியில் சலுகை விலையில் ரூ.375க்கு கிடைக்கிறது

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் ரூ.375

9)      அந்தரத்தில் நின்ற நீர்

நவீன கன்னட சிறுகதைகளில் முக்கிய எழுத்தாளர் எஸ் திவாகர் இவரது கதைகளின் மொழியாக்கம் இது. தி.சு, சதாசிவம் மொழியாக்கம் செய்துள்ளார் சென்னைவாழ்க்கையை பற்றி கன்னடத்தில் எழுதியிருப்பதே இதன் கூடுதல் சிறப்பு. திவாகர் மிகைபுனைவு கதைகள் எழுதுவதில் சிறப்பானவர். இவரது கதைகள் ஆங்கிலம் பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது, உலகப்புகழ்பெற்ற ஒரு நவீன சிறுகதை எழுத்தாளரது முக்கிய சிறுகதைகள் தமிழில் வெளியாகி ஐந்து ஆண்டுகளாக  ஆகிவிட்டன ஆனாலும் சரியான கவனம் கிடைக்கவில்லை.  அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகமிது

சந்தியா பதிப்பகம் விலை ரூ.90

10)   முத்துக்குளித்துறையில் போர்த்துகீசியர்

போர்த்துகீசியர் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முத்துக்குளிப்பு பற்றிய ஆய்வேடு, நுட்பமான தகவல்கள். சரித்திர சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ளது, நியு செஞ்சரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

நியு செஞ்சரி பதிப்பகம் விலை ரூ. 75



சரித்திர நாவல்கள்

தமிழ் வரலாற்று நாவல்களைப்பற்றி ஆர்வி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். நான்தான் வேலைமெனக்கெட்டு நிறைய படித்துவைத்திருக்கிறேன் என்றால் இவர் அதற்கும் மேலே. ஆனால் குற்றாலக்குறிஞ்சியை எல்லாம் அவர் வாசித்திருப்பது மன்னிக்கமுடியாதது.

ஆர்வியின் விவாதத்தில் நான் கவனித்தது என்னவென்றால் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாசித்து ரசிக்கக்கூடிய அவரே பெரும்பாலான வரலாற்றுநாவல்களை நிராகரிக்கிறார் என்பதுதான். அதற்கான காரணம் என்னவென்று யோசித்தேன்.

வரலாற்றுநாவல்கள் கல்கியால் தமிழில் ஆழமாக நிறுவப்பட்டன. கல்கியின் நாவல்கள் பெற்ற வெற்றி மேலும்மேலும் நாவலாசிரியர்களை உள்ளே கொண்டுவந்தது. ஒருகட்டத்தில் வார இதழ்களில் ஒரு வரலாற்றுத்தொடர்கதை கண்டிப்பாக இருக்கவேண்டுமென்ற நிலை உருவாகியது.

இந்த வார இதழ்களின் வாசகர்கள் இலக்கிய அறிமுகமற்றவர்கள். பொழுதுபோக்குக்காக மட்டுமே வாசிப்பவர்கள். பலர் உரிய மொழியறிமுகமும் இல்லாதவர்கள். கல்கி கிட்டத்தட்ட சிறுவர்நாவல்களின் மொழியில்தான் எழுதியிருக்கிறார்

அதைவிட இந்நாவல்களை வாசிப்பதற்கான ஒரு கலாச்சாரமனநிலை அன்று நிலவியது. சென்றகாலம் பற்றிய கனவு. தமிழியக்கங்களால் உருவாக்கப்பட்டு திராவிட இயக்கத்தால் மேலெடுக்கப்பட்டது. அந்த மனநிலைதான் இந்த எளிய புனைகதைகளில் ஒரு கனவுலகை உருவாக்கிக்கொள்ள தூண்டியது நம் சென்ற தலைமுறை வாசகர்களை

இன்று அந்த வகையான கனவுகள் இல்லை. நம் கலாச்சார மனம் வேறு வகையான உருவகங்களைப் பெற்று விட்டிருக்கிறது. வாசிப்பின் தரமும் மேலே சென்றிருக்கிறது. ஆகவே இன்று இக்கதைகள் வெறும் கதைகளாக மட்டுமே நிற்கின்றன. கரிகால்சோழனும் வேலுநாச்சியாரும் எல்லாம் கதைமாந்தர் மட்டுமே. கதையை அளவுகோலாக கொண்டு பார்க்கையில் பெரும்பாலான நாவல்கள் தோல்வியடைகின்றன

தமிழில் சரித்திர நாவல்கள்

பொன்னியின்செல்வன்


தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், மார்ச் மாதம் வெளியாக உள்ள இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்

••

தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And PunishmentThe IdiotThe Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன.

நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல்  ஒதுங்கியே வாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது 

பொதுவாக பிரசித்திபெற்ற பல நாவல்கள் பெண்களின் அகவுலகை, உளவியலை மிக நுட்பமாகச் சித்தரிப்பவை.  உதாரணமாக மேடம் பவாரி. ஜேன் ஐயர். வுதரிங் ஹைட்ஸ். எம்மா. அன்னாகரீனனா போன்றவற்றைக் குறிப்பிடலாம், ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ஆண்களின் அகபுறநெருக்கடியை அதிகம் முன்வைக்கிறார், அதிலும் வாழ்வில் தோற்றுப்போய். தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஆண்களின் மனதை நெருங்கி எழுதுவதே அவரது முதல்விருப்பம். அதைத் தான் அவரது புனைவெழுத்து முழுவதிலும் காணமுடிகிறது, வீழ்ச்சியுற்ற ஆண்களுக்குத் தூய வெளிச்சம் போல மீட்சி தருபவர்கள் பெண்கள் என்கிறார்  தஸ்தாயெஸ்வ்கி

அதற்காக பெண்களை உலகைக் காக்க வந்த உன்னத தேவதைகள் போல அவர் சித்தரிப்பதில்லை. தனது நெருக்கடிகளுக்கு உள்ளும் மற்றவர் துயரை தனதாக்கி கொள்கிறார்கள் என்றே அவர்களை அடையாளம் காட்டுகிறார், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் பெண்கள் அதிகம் சிரிப்பதில்லை, துயரத்தின் நிழல்களாகவே உலவுகிறார்கள். ஆனாலும் அவர்கள் உறுதியான மனதும். தீராத அன்பும் கொண்டிருக்கிறார்கள். தன்னை வதைப்பவர்களைக்கூட  அவர்கள் நேசிக்க தயங்குவதேயில்லை, அப்பாவோடு மகள்களுக்குள் உள்ள உறவு பற்றி தஸ்தாயெவ்ஸ்கி எப்போதுமே எழுதுகிறார். அது வெறுப்பும் அன்பும் கலந்தே எழுதப்படுகிறது

தஸ்தாயெவ்ஸ்கியின் தாயான மரியாவின் சாயல் அவரது எல்லாப் பெண் கதாபாத்திரங்கள் மீதும் படிந்தேயிருக்கிறது, தஸ்தாயெவ்ஸ்கியிடம் பாலுணர்வு குறித்த தேடுதல் அதிகமிருக்காது, வேசமை குறித்து எழுதும் போதும் அவர் ஆன்ம வீழ்ச்சியின் அடையாளமாகவே அதை எழுதுகிறார். சூழலின் நெருக்கடி பெண்களின் விருப்பத்தைச் சிதறடிக்கிறது, அவர்கள் குடும்பத்தின் வறுமை. அதனால் உருவாகும் புறக்கணிப்பு, அவமானத்தின் பொருட்டு தனது ஆசைகளைக் கைவிடுகிறார்கள். அவர்களுக்குள் தன்னை யாராவது உண்மையாக நேசிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் மின்மினியின் ஒளி போல மினுங்கி கொண்டிருக்கிறது.

விதியின் பெருங்கரம் இரக்கமின்றி தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை உருட்டி விளையாடுகிறது, அவர்கள் நம்பிக்கை எனும் முறிந்தகழியை ஊன்றி இருண்ட உலகில் முன்னேறிச் செல்கிறார்கள். நரகம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது தான் என்ற உண்மை அவரது நாவல்களில் துல்லியமாக வெளிப்படுகிறது.

மெல்விலின் மோபிடிக் நாவலில் திமிலிங்க வேட்டைக்கு கப்பலில் செல்வார்கள். திமிங்கலம் மனித விருப்பங்களைச் சூறையாடி தனது இயல்பில் கடலில் சென்றபடி இருக்கும், அந்தத் திமிங்கலத்தை ஒத்த மனிதர்களையும் அவர்களிடம் சிக்கி தவிக்கும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, ஆசையின் பின்சென்று வீழ்ச்சியுறும் போராட்டத்தையே தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன.

வீழ்ச்சி தான் தஸ்தாவெஸ்கியின் எல்லா நாவல்களின் மையப்படிமம், எதிர்பாராமையும் குற்றவுணர்ச்சியுமே அவரது முக்கிய கதைநரம்புகள், வாழ்வின் துயரம் மனிதனை எந்த இழிநிலைகளுக்குக் கொண்டு போய்விடும் என்பதையே கதைப் போக்காக கொள்கிறார்

நாவல் என்பது ஒரு நீண்ட கதையாடல் என்பதைத் தாண்டி நாவலின் வழியே சமகால சமூகச் சூழல். ஆன்மவிடுதலை. மதத்திற்கும் மனிதனுக்குமான உறவு. கடவுளின் இருப்பு. அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்வு என்று நிறைய வாதங்களை முன்வைக்கிறார். ஆகவே இவரது நாவல்கள் தர்க்கங்களும். தத்துவார்த்தப் பின்புலமும் கொண்டவை, வாழ்வனுபவங்களின் வழியே அவை புதிய உண்மைகளை அடையாளம் காட்டுகின்றன.

முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாக உப கதாபாத்திரங்களை உருவாக்குவது தஸ்தாயெவ்ஸ்கியின் தனிச்சிறப்பு, கரமசோவ் சகோதரர்கள் நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இடியட்டிலும் அதைக் காண முடிகிறது,

உலகை முழுமையாக நேசிப்பவன் அசடனாகவே கருதப்படுவான் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, தன்னை அறிந்தவன் மற்றவர்களின் பரிகாசத்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கிகாட்டுகிறார்,

இந்த நாவலில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்களும் முக்கியமானவர்கள் அதிலும் நடாஷ்யா கதாபாத்திரம் பைபிளில் வரும் மரியா மக்தேலனாவை நினைவுபடுத்துவது போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த நாவலை தஸ்தாயெவ்ஸ்கி மூன்று ஆண்டுகாலம் ஒரு இதழில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார்

 இடியட் நாவல் நான்கு பகுதிகளாக உள்ளது, இந்நாவலை பிரெஞ்சு எழுத்தாளர் மார்ச்ல் புருஸீன் Remembrance Of Things Past உடன் ஒப்பிடலாம், இரண்டும் எழுத்தாளரின் சொந்த வாழ்வும் புனைவும் இணைந்து உருவான நாவல்கள், இடியட் நாவலின் நாயகன் மிஷ்கின் இயேசுவின் மாற்றுஉருவம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறான், ஆனால் இவன் ஒரு தோற்றுப்போன கிறிஸ்து, உலகின் மீதான அன்பையும் மனித உறவுகளின் நெருக்கடிகளையும் இந்நாவலெங்கும் தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பாக விவரிக்கிறார் 

மிஷ்கின் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல் போலவே காட்சிதருகிறான், நான்கு ஆண்டுகாலம் சுவிட்சர்லாந்தின் சானிடோரியத்தில் தங்கி வலிப்பு நோயிற்கு சிகிட்சை எடுத்து கொண்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்புகிறான் மிஷ்கின், அவன் அதிகம் படித்தவனில்லை, உடல் வலிமையற்ற ஒரு நோயாளி. ஆனால் அவன் மனதில் நேசமும் அன்பும் நிரம்பியிருக்கிறது, அவனது ஒரே உறவினரான ஜெனரலைச் சந்திப்பதே அவனது நோக்கம், அதற்காகவே பீட்டர்ஸ்பெர்க்  வருகிறான் அவருக்கு மூன்று மகளிருக்கிறார்கள் அதில் ஒருத்தி அழகி. இவர்களுடன் தங்கி நட்பு கொள்ளத் துவங்குகிறான்

மிஷ்கினுக்கு எதிர்நிலை அவன் ரயிலில் சந்திக்கும் ரோகோஜீன், அவன் தீமையின் உருவம் போலவே அடையாளப்படுத்தப்படுகிறான், ஆனால் அவனோடும் மிஷ்கின் நட்பாகவே இருக்கிறான், அவனுக்காக கண்ணீர் விடுகிறான். மிஷ்கின் சந்திக்கும் மனிதர்களும் அவர்களோடு உள்ள நட்பும் என உபகதைகளோடு நாவல் நீள்கிறது,

தஸ்தாயெவ்ஸ்கி தான் மரணதண்டனைக்காக காத்திருந்த நிமிசத்தை இந்த நாவலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார், சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிசத்தை எப்படித் துளித்துளியாக பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இலக்கியத்தின் மிக உயர்ந்த பதிவு

 அதுபோலவே கில்லடின் எனப்படும் தலைவெட்டப்படும் தண்டனையின் குரூரம் பற்றி மிஷ்கின் வேதனைப்படுகிறான், torture is better than instantaneous death because one still has hope if tortured  என்பதே அவனது எண்ணம்

சிறையில் சிலந்தியோடு பேசும் ஒரு குற்றவாளி ஒரு இடத்தில் அறிமுகப்படுத்தபடுகிறான், தனிமை எவ்வளவு பெரிய தண்டனை என்பதை அது சுட்டிக்காட்டுகிறது

மிஷ்கினுக்காக நடைபெறும் விருந்தில் அவன் பணியாளரைப் போல நடந்து கொள்கிறான், தன்னை நேசிக்கும் பெண்ணிற்காக அவமானங்களை எதிர்கொள்வதில் தவறில்லை என்று ஒரு இடத்தில் சொல்கிறான். வலிப்பு நோய் அவனை வாட்டுகிறது, அது துயருற்ற அவனது ஆன்மாவின் குறியீடு போலவே இருக்கிறது

அபத்தமான சூழலும், போலித்தனமும் பகட்டும். பொய்மையும் வணிக தந்திரங்களும் நிரம்பிய ருஷ்ய மேல்தட்டு வர்க்க சமூகத்தின் மீது வைக்கப்பட்ட கறாரான விமர்சனமாக இந்த நாவலைக் குறிப்பிடலாம்

 ஏன் இடியட் என்ற தலைப்பு இந்த நாவலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற வாதபிரதிவாதங்கள் இன்றும் இருக்கின்றன, அப்பாவி என்பதே சரியான சொல் என்று ஒரு தரப்பு இன்றும் வாதிடுகிறது, ஆனால் வெளியில் பார்க்க முட்டாள்தனமாக தோன்றும் ஒருவன் உள்மனதில் தெய்வாம்சம் கொண்டிருக்கிறான் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம் என்று இன்னொரு தரப்பு வாதிடுகிறது 

இந்த நாவல் எழுதியதைப் பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்பு இப்படிதானிருக்கிறது

 My primary hero [Prince Myshkin]—is extraordinarily weak. Perhaps he does not sit weakly in my heart, but he is terribly difficult.’ And in the same letter he complains that sanctity is not a natural literary theme. ‘In order to create the image of a saint, one has to be a saint oneself. Sanctity is a miracle; the writer cannot be a miracle-worker.

 நாவலின் பெரிய பலம் உரையாடல்கள். கவித்துவமான. ஆழ்ந்த உண்மைகளை எளிமையாக வெளிப்படுத்தும் உரையாடல்கள் அவை, தனது எண்ணங்கள். கடந்த கால வாழ்வு என அத்தனையும் உரையாடல் வழியாகவே மிஷ்கின் வெளிப்படுத்துகிறான், ஜெனரலின் மகள்களோடு மிஷ்கின் உரையாடும் பகுதி அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, அது தான் நாவலின் மையப்புள்ளி.

 நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது, ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார் .

 ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன, அதில் சமீபத்தில் வெளியான David McDuff பின் மொழிபெயர்ப்பு மிகச்சிறந்த ஒன்று

 இந்த நாவலைப்பற்றி ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கட்டுரை முக்கியமான ஒன்று, அதில் அவர் மிஷ்கினை பற்றி  சரியாகக் குறிப்பிடுகிறார்

 Why does no one understand myshkin, even though almost all love him in some fashion, almost everyone finds his gentleness sympathetic, indeed often exemplary? What distinguishes him, the man of magic, from the others, the ordinary people?

It is because the “idiot’s” way of thinking is different from that of the others. Not that he thinks less

logically or in a more childlike and associative way than they – that is not it. His way of thought is what I call “magical.” This gentle “idiot” completely denies the life, the way of thought and feeling, the world and the reality of other people. His reality is something quite different from theirs. Their reality in his eyes is no more than a shadow, and it is by seeing and demanding a completely new reality that he becomes their enemy.

 For Myshkin the highest reality, however, is the magical experience of the reversibility of all fixed rules, of the equal justification for the existence  of both poles.    Hermann Hesse- Thoughts on The Idiot )

 தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது, கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது,

 இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்

 தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு

 நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்

••

தமிழில் 800 பக்க அளவு வெளிவரவிருக்கும் இந்நாவலின் விலை 500 ரூபாய்;

பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூபாய். கூரியரில்பெற.. 75 ரூபாய்கூடுதல் பாரதி புக் ஹவுஸ்என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம்

மேலும் தொடர்புக்கு;

 Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai 1

பதிப்பாளர்- துரைப்பாண்டி- செல்போன் 97893 36277


நெகிழும் தருணம்

Posted on 12 January 2011. Categories: நல்ல எழுத்து 

அவர் ஒரு சன்னியாசி. இளைஞர். ஆண்மையின் கம்பீரமும் அறிவின் சுடர் பிரகாசமும் கொண்டவர். அவள் ஒரு நடனப்பெண். அழகி. பெண்மையின் நளினம் கொண்டவள். அரசவை நர்த்தகி. அரசவைக்கு வந்த துறவியை மரியாதை செய்ய அவளது நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துறவி தீர்மானமாக வர மறுத்துவிட்டார். ‘முற்றும் துறந்த துறவிக்கு பெண்ணின் நடனம் எதற்கு?’ என்று மறுத்துவிட்டாராம் துறவி. எத்தனையோ அவைகளில் எத்தனையோ வித மனிதர்கள் முன் நடனமாடியே வாழ்ந்த அந்த பெண் அன்றைய தினத்தை அருட்பிரசாதமாகவே எண்ணியிருந்தாள். அவள் அதை தன் வாழ்க்கை நிறைவாகவே எண்ணியிருந்தாள். பெரும் ஏமாற்றம் அவளுக்கு.

ஏமாற்றம் நெகிழ்ச்சியான இசையாக மாறியது. சூரதாஸரின் பாடல்:

பிரபுவே என் குறைகளைப் பாராதே சமதர்ஸி என்பது உன் பெயரல்லவா…வழிபடப்படும் சிலையும் கொலை செய்யும் கத்தியும் ஒரே இரும்பல்லவா…ஆனால் பரிசமணி அவற்றைத் தீண்டினால் இரண்டும் பொன்னாக மாறிவிடுமே.. அந்த பரிசமணிக்கு வேற்றுமை உணர்வு தகுமா கூறு…

வெளியில் நின்ற சன்னியாசியின் காதில் இக்குரல் பாய்ந்தது. இதயத்தில் இறங்கியது. அவர் சிந்தையில் எழுந்தது ஞான சூரியன்.

துறவிக்கு ஏது பேதம்? அவள் பெண் என்பதால் பார்க்க மறுத்தேனே…அந்த மறுப்பு ‘நான் தேகம் அதுவும் ஆண்’ என்ற தேகாபிமானத்தின் ஏற்பு தானே…

துறவி மீண்டும் அவையில் நுழைகிறார்.

தெரிந்த நிகழ்வுதான். ஒரு சமஸ்தானத்துக்கு சென்ற போது சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு. அதனை அருமையான ஆன்மிகச் சிறுகதையாக வடித்தெடுத்திருக்கிறார் பாமதிமைந்தன்.

துறவு என்றால் மானுட உறவுகள் அனைத்தையும் துறந்த வைராக்கியம் மட்டுமே என்றும் வேதாந்தம் என்றால் வறட்டு தத்துவம் என்றும் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அத்துடன் விவேகானந்தர்-ஸ்ரீ ராமகிருஷ்ணர்-தூய அன்னை ஆகியோர் வாழ்க்கை சம்பவங்களையும் இணைக்கோட்டில் நிறுத்தி சிறுகதைகளாக்கி அளிக்கிறார் பாமதிமைந்தன். விவேகானந்த-பக்தர்களுக்கு ஒவ்வொரு சிறுகதையும் கண்களில் நீர் துளிக்க வைப்பதை தவிர்க்கமுடியாது.

கணவனை இழந்த பெண் ஆறுதலுக்காக ராமகிருஷ்ண ஆலயத்துக்கு வருகிறாள். இது நிகழ்வு. தூய அன்னை சாரதை வாழ்க்கையில் தன்னிடம் வந்த மகவிழந்த பெண்ணுக்காக அன்னை அழுகிறாள். மாயைதானே சம்சார வாழ்க்கை என்றெல்லாம் சொல்லவில்லை. அந்த பெண்ணின் இழப்புக்காக தன் இழப்பாகவே எண்ணி அழுகிறார் அன்னை. ஒரு தருணத்தில் மகவினை இழந்த பெண் அன்னை சாரதைக்கு ஆறுதல் சொல்கிறார். தன்னை விரித்து பிறர் துயரை தன் துயராக கருதும் இதய விரிவே உண்மை துறவு. மனித உறவுகளை முறிப்பதல்ல துறவு. அனைத்துலகையும் ஏன் பிரபஞ்சமனைத்தையும் தன் உறவாக்கும் விரிதலே துறவு. அதற்கான திண்மையையும் அனைத்துயிர்களின் துயரத்துக்கும் தன் இதய செந்நீரை சிந்துவதற்குமான தன்மையை பெறுவதே உண்மை வேதாந்தம்.

தந்தையுடன் மனவிலகல் கொண்ட பதின்ம சிறுவன் வாழ்க்கையில் திசை தேடும் போது தற்செயலாக கண்ணில் படிம் விவேகானந்தரின் மேற்கோள் அவனுக்கு வாழ்க்கைப்பாதையை காட்டுகிறது. ஆசிரியர்-மாணவர் உறவு (அவன் ஒரு முரட்டு மாணவன்), சகோதர-சகோதரி உறவு, பணியிட உறவு இப்படி பல்வேறு மானுட உறவுகளில் வேதாந்த சிந்தனை எப்படி ஓர் இனிமைப்படுத்தும் சக்தியாக செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது இச்சிறுகதை தொகுப்பு.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் முதன்முதலாக வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு இது. ஒழுக்க கதைகள் போல இருக்கிறதே எனும் நினைப்பு எழலாம். ஆனால் சுவாமி விவேகானந்தர் முன்வைத்த வேதாந்த கருத்துக்கள், அவர் வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி இன்றைக்கும் நம் வாழ்க்கையில் வழிகாட்டும், உத்வேகமூட்டும் சக்தியாக திகழ்கின்றன என்பதை சிறுகதை வடிவத்தை பயன்படுத்தி அருமையாகவே தந்திருக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்தன.

இக்கதைகள் உண்மை சம்பவங்களை கருக்களாக கொண்டவை என்று பின்னட்டை சொல்கிறது: “கரு உண்மை உரு கற்பனை”. இதுவும் இன்னொரு முக்கியமான விஷயம். கணவனையும் மகளையும் பிரிந்து வாழும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறுகதை ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் வெளியான போது அக்குடும்பம் மீண்டும் இணையும் நிலை உருவானதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அர்னே நாயிஸ் (Arne Næss) என்கிற பெல்ஜிய சூழலியல் சிந்தனையாளர் இன்று உலக சூழலியல் இயக்க சிந்தனையில் மிக முக்கியமாக பேசப்படுபவர். மேற்கத்திய சிந்தனையில் அகம் என்பது வெறும் ஈகோவாக தொடங்கி பின்னர் சமூக சுயமாக (social self) மாறி பிறகு தத்துவார்த்த சுயமாக (metaphysical self) நின்றுவிடுவதாக சொல்லுவார் அவர்.  ஆனால் அதற்கும் மேலாக அனைத்து உயிர்களையும் தனதாக காணும் சூழலியல் சுயமாக (ecological self) ஆக மாறுவது சூழலியல் இயக்கத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அதனை அத்வைத-அஹிம்சை தன்மையுடன் இணைத்து பேசுவார் நாயிஸ்.

12 சிறுகதைகள் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பில் ’அன்னையைச் சரண் புகுந்தால்’ என்று ஒரு சிறுகதை உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் அந்த சிறிய அழகிய மரங்களில் காகங்களுக்கு பயந்து தன் குஞ்சுகள் இருக்கும் கூட்டை மாற்றி மாற்றி இறுதியில் மடத்துக்குள் இருக்கும் சாரதா தேவியின் பெரிய படத்தில் அன்னை காலடியில் மாற்றிவிட்ட அணிலின் கதை. நம் சுயம் மானுடத்தையும் தாண்டி இயற்கையை நாமாக பார்க்கும் பார்வையை அளிக்கிறது. கதையா அது?

சென்ற முறை சென்னை வந்திருந்த போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அலுவலகத்தில் அன்னை சாரதையின் திருவுருவப்படத்தின் கீழ் அணில் கூட்டின் விளிம்பு வெளியே தெரிந்தது நினைவாடுகிறது.

சுவாமி விவேகானந்தர் கூறினார்: “நான் உருவமற்ற குரலாக செயல்பட்டுக்கொண்டிருப்பேன்” (A voice without form) ஆம் அவர் குரல் இந்த சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுகிறது. வாங்கிப்படியுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் விவேகானந்தரின் குரல் வளத்தையும் வலிமையையும் அறத்தையும் சேர்க்கட்டும்.

[என்றும் நான் உன் அன்னை: ஆசிரியர் பாமதி மைந்தன். வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர், விலை ரூ 30.00]

கதம்பம் - 4

நமது கலாசாரம் என்றுமே பணத்தை வெறுத்ததில்லை. லட்சுமி என்று பணத்தைத் தெய்வமாக வழிபடுவதுதான் நம் இயல்பு. பணம் பெருகவேண்டும் என்றுதான் சொல்கிறேமோ தவிர, பணத்தைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று சொல்வதில்லை. மோசமான வழியில் ஈட்டிய செல்வம் தங்காது என்றுதான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித்தந்துள்ளனர். அதே நேரம், சரியான, நியாயமான வழியில் செல்வம் ஈட்டவேண்டும்; அப்படி ஈட்டியபின் அதனை படாடோபமாகச் செலவழித்து அல்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது; ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு வாரி வழங்கவேண்டும் என்றும் நாம் நீதிநூல்களிலிருந்து அறிகிறோம்.

இந்தச் செல்வத்தை எப்படி ஈட்டுவது? வெறும் கடின உழைப்பு போதாது. சினிமாவில்தான் பால்கார அண்ணாமலை ஒரு பாடலின் ஆரம்பத்தில் பால் கறக்க ஆரம்பித்து பாட்டின் முடிவில் பணக்காரர் ஆவார். தேவை நிறைய முதலீடும் அல்ல. தேவை சரியான யோசனைகள். சட்டெனத் தோன்றும் சின்னஞ்சிறு பொறி, உங்களைத் தூண்டவேண்டும். செலுத்தவேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தி, வெற்றிகரமாக ஆக்க நீங்கள் உழைக்கவேண்டும். அதாவது உழைப்பு தேவை; ஆனால் சரியான யோசனை அதற்குமுன் தேவை. சும்மா மாடு போல் உழைத்தால் அலுப்புதான் மிஞ்சும். ப்ரஸன்னாவின் பணமே ஜெயம் என்ற இந்தப் புத்தகம் பல நிஜ வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லி, உங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் சில ஐடியாக்களை வெளியே கொண்டுவரக்கூடும்.

முத்துராமலிங்கத் தேவர் பற்றிய புத்தகத்தை எங்கள் வாசகர்கள் வெகுநாள்களாகக் கேட்டபடி இருந்தனர். சில பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை, இந்த முறை முத்துராமலிங்கத் தேவர் புத்தகம், பாலு சத்யா எழுத்தில் வெளியாகிறது. தேவர் ஒரு தேசியத் தலைவராக, காங்கிரஸ்காரராக, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளராக, தமிழகத்தில் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் ஒரே முகமாக வளைய வருகிறார். குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார் தேவர். இதன் பலனாக, தென் தமிழகத்தின் பல சாதிகள் விடுதலை பெறுகிறார்கள். இந்தப் புத்தகம் சர்ச்சைகள் பற்றியதல்ல. இருந்தாலும் இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கு, முதுகுளத்தூர் கலவரம் ஆகியவை பற்றியும் தகவல்கள் இருக்கின்றன.

இன்று தேவர் பெயரைச் சொல்லி குருபூஜையில் கலந்துகொள்ளாத கட்சிகளே இல்லை. தேவர், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குக் கடவுள். அவர் முருகனுடன் ஐக்கியமாகிவிட்டதாகவே இவர்கள் நம்புகின்றனர். அந்த அளவுக்கு ஒரு சமுதாயப் பிரிவினர் ஒருவர்மீது வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையின் காரணம் என்ன? இந்தப் புத்தகம் ஓரளவுக்கு அதனை ஆராய்கிறது.

இரா. முருகன் 2006-ல் எழுதி வெகு நாள்களாக வைத்திருந்து, இந்த ஆண்டு வெளியாகிறது, அவரது ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகம். இரா. முருகனை இலக்கியவாதியாக மட்டுமே உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கும் இவர் எழுதிய மூன்று விரல் புத்தகம் ஒரு புரோகிராமரின் வாழ்க்கையை சுவைபடக் கூறுகிறது. ப்ராஜெக்ட் ‘எம்’ என்பது முருகன் தினமணி கதிரில் தொடராக எழுதியது. கடினமான ஒரு சப்ஜெக்டைச் சொல்ல, இரா. முருகன், ஒரு டிஜிட்டல் சாமியாரை உருவாக்கியிருப்பார். அந்த சாமியாருடன் அவருடைய சிஷ்யர்கள் நடத்தும் உரையாடலின் வழியாக ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டின் சூட்சுமங்கள் வெளிவரும். இது சாமானியர்களுக்கான புத்தகம் அல்ல. ஆனால், ஏதோ நிறுவனத்தில் மென்பொருள் புரோகிராமர்களாக இருந்தீர்கள் என்றால், ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக விரும்புகிறீர்கள் என்றால் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாங்குங்கள். உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

சென்ற பதிவில் எழுத மறந்த சொக்கனின் புத்தகம், கம்ப்யூட்டர் கையேடு. கிழக்கிலிருந்து கம்ப்யூட்டர் தொடர்பாக ஒரு புத்தகமும் வரவில்லை. இது கம்ப்யூட்டர் வாங்க விரும்பும், கம்ப்யூட்டரை இப்போதுதான் வாங்கியிருக்கும் ஒருவருக்கான புத்தகம். வெகு நாள்களுக்குமுன் நான் இந்தப் புத்தகத்தை எழுத விரும்பினேன்! அதற்கான அவுட்லைனும் போட்டிருந்தேன். ஆனால் எழுதும் பக்குவமும் சுறுசுறுப்பும் வரவில்லை. பெரும்பாலானோர் தவறு செய்வது சரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதில்தான். எங்கள் அலுவலகத்திலேயே இரண்டு பேர் மாகிண்டாஷ் கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்று துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சொக்கனின் புத்தகம் அங்குதான் ஆரம்பிக்கிறது.

சொக்கனின் புத்தகம் சிறு குழந்தைக்குச் சொல்லித்தருவதுபோல, கம்ப்யூட்டரில் எந்தெந்தப் பிரச்னை வந்தால், எப்படிச் சரி செய்யவேண்டும், வைரஸ் என்றால் என்ன, அது எப்படி கணினியைத் தாக்கும், அதிலிருந்து மீள்வது எப்படி, இணையச் சேவைகள் என்னவெல்லாம் உள்ளன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பலவற்றையும் அழகாகச் சொல்லித்தருகிறது.

தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் - சொல்வனம் புத்தக வெளியீடுகள்    

இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.– வண்ணதாசன்

சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.

– பாலுமகேந்திரா

விட்ட ஷட்ஜம்

சேதுபதி அருணாசலம் | இதழ் 41 | 01-01-2011 | 

['சிலிக்கான் கடவுள்' புத்தகத்துக்கு எழுதப்பட்ட நன்றியுரை]

ஓர் இரவு முழுக்க சுகா புத்தகத்தைப் பிழைதிருத்தித் தூக்கமிழந்ததில் அடுத்த இரவு சோம்பேறித்தனத்தோடு ஆரம்பித்தது. ராமன்ராஜா புத்தகத்தைப் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டுவந்து பிழை திருத்த உட்கார்ந்தபோது மணி இரவு 10.30 ஆகியிருந்தது. நியாயப்படி அப்போதிருந்த ஆயாசத்துக்கு, முதல்நாள் இழந்த உறக்கத்துக்கு, அந்த வேலை ஒரு பெரிய மனச்சுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு உணர்வு ஒரு துளி கூட வரவில்லை. நள்ளிரவில் பல வரிகளுக்காகத் தன்னந்தனியாக சிரித்துக்கொண்டிருந்தேன். [“உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்துசீட்காரர் முறைக்கமாட்டார்.” "வளைகுடா கடற்கரையில், மெக்ஸிகோ தேசத்தின் அத்தனை சலவைக்காரிகளும் திரண்டு வந்தாலும் சுத்தம் செய்யமுடியாத எண்ணெய்க்கறை."]

முதல் கட்டுரையிலிருந்து கடைசிக் கட்டுரை வரை உற்சாகம் குன்றாமல் படிக்க முடிந்தது. அதிலும், நிற்காமல் தகவல்மழை பெய்துகொண்டிருக்கும் இணைய யுகத்தில் மனிதனின் நிலை என்ன, மனிதமூளையின் எல்லை என்ன, இந்த பரிணாம வளர்ச்சிப்பாதையில் அடுத்து என்ன என்று ஒரு தொடராக விளக்கிய முதல் ஐந்து கட்டுரைகள் அபாரமான வாசிப்பனுபவத்தைத் தந்தன. இதைக் குறித்தே இவர் ஒரு முழுப்புத்தகத்தையும் எழுதியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமே என்றுகூட தோன்றியது. ஆல்வின் டாஃப்ளர் 1970களில் தகவல் புரட்சியைக் குறித்துப் புத்தகமே எழுதியிருந்தாலும் அது தமிழக அறிவுச்சூழலுக்குள் அதிகம் பேசப்படவில்லை. இத்தனைக்கும் நம்மில் பெரும்பாலானோர் இன்று இணையத்திலேயே அதிகம் நேரம் செலவழிக்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டப் பல நல்ல ‘பயன்பாட்டு அறிவியல்’ (application science) கட்டுரைகள் இணையம் மூலம் படிக்கக்கிடைக்கின்றன. நியூயார்க்கர், ஸ்லேட், நேச்சர் போன்ற இதழ்களில் வெளியாகும் வெகுஜன அறிவியல் கட்டுரைகள் என்னைப் பிரமிக்க வைத்திருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது ‘பாயின்கேர் தியரம்’ குறித்தும், வி.எஸ்.ராமச்சந்திரன் குறித்தும் நியூயார்க்கரில் வெளியான கட்டுரைகள். தமிழில் இதுபோன்ற கட்டுரைகள் எப்போது வெளியாகும் என்று ஏங்கியிருக்கிறேன். எழுதும் துறை சார்ந்த நேரடிப்பயிற்சியும், அனுபவமும் குறைவாக இருக்கும் தமிழ்ச்சூழலில், அறிவியல்துறையில் நேரடி அனுபவமும், சரளமான எழுத்துமுறையும் கொண்ட ராமன்ராஜாவின் பங்களிப்பு மிகவும் பெரியது.


நகைச்சுவை உணர்வும், சமகால அறிவியல் குறித்து அப்டேட்டடாக இருப்பதும் ராமன் ராஜாவின் பெரிய பலங்கள். வெறும் அசட்டுத்தனமான வார்த்தை விளையாட்டாக இல்லாமல், எதிர்பார்க்காத இடங்களிலிருந்து ‘அட!’ என்று சொல்லவைக்கும்படியான வாக்கியங்களால் நிரம்பியவை இவர் கட்டுரைகள். (“போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக்காலம் மாதிரி அற்ப நேரம்தான்.”) தமிழில் சமகால அறிவியல்சூழலைக் குறித்து ராமன்ராஜா அளவுக்குத் தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்தியவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. (அருண் நரசிம்மனும், அரவிந்தன் நீலகண்டனும் சமகால அறிவியல் குறித்து நல்ல கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக இருவருமே அதிகம் எழுதுவதில்லை.) இத்தனைக்கும் சமகால அறிவியல்சூழல் என்பது பெரும்பாலும் மேற்கின் அறிவியல் ஆராய்ச்சித்துறையோடு தொடர்பு கொண்டது; நமக்கு அந்நியமானது. ஆனால் ராமன்ராஜாவின் எழுத்தில், அவர் கொடுக்கும் உதாரணங்கள் மூலம் நம் வேளச்சேரிக்கே இந்த அறிவியல்சூழல் வந்துவிடுகிறது.

உதாரணமாக, ‘ஹிக்ஸ் போஸான்’ துகளை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று ஒரு மிகப்பெரிய ‘துகள் வெடிப்பு’ நடத்தப்போவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ராமன்ராஜா அதைக்குறித்து இவ்வாறு எழுதுகிறார்:

“இப்படி எல்லாம் முரட்டுப் பரிசோதனை செய்தால் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு வெப்பமான நரகத்தில் ப்ளாக் ஹோல் என்ற கரும்பொந்து உருவாவதற்கு சான்ஸ் இருக்கிறது. கரும்பொந்துகளுக்குப் பசி அதிகம். அக்கம்பக்கத்தில் இருப்பதையெல்லாம் விழுங்கி விழுங்கிப் பெரிதாகி வேளச்சேரி வரை வந்துவிட்டால் - நான் எங்கே ஓடுவேன்? என் லாப்டாப் வேறு ஏகப்பட்ட கனம் கனக்கிறதே!”

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் - இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை. நம்மை நேரடியாக பாதிக்கக்கூடிய எண்ணெய்ச்சிதறல், NDM மரபணுப் பிரச்சினை போன்றவற்றைக் குறித்து நம் வெகுஜனப் பத்திரிகைகளே விரிவாகப் பேசியிருக்கவேண்டும். ஆனால் இப்பிரச்சினைகளைக் குறித்து வெகு அரிதாக எழுப்பப்பட்ட குரல்களில் ராமன்ராஜாவின் குரலும் ஒன்று.

எப்போதும் புன்னகைக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் குரலில் மனிதனின் பேராசை ஏற்படுத்தும் அழிவுகள், அறிவியலாளர்கள், வணிகர்களின் கூட்டுக்கொள்ளைகள், அமெரிக்காவின் விரிவாக்கம், சுற்றுச்சூழலை நம் இஷ்டத்துக்கு ஆள நினைப்பது, இந்தியாவை இழிவுபடுத்தும் மேற்கத்திய அறிவியல்சூழல், இந்தியாவின் கையாலாகாத்தனம் என இத்தனையைக் குறித்த தார்மீகக்கோபமும் ஆங்காங்கே தெறித்தபடியே இருக்கிறது. இவையெல்லாம் போக, ராமன்ராஜாவின் கார்ட்டூன்கள் - அதிலும் பப்லு அடித்த லூட்டிகளும், அதிகப்பிரசிங்கித்தனமும் வெகுவாக ரசிக்க வைத்தவை. பல பக்கங்களில் சொல்ல முடியாத விஷயங்களை அநாயசமாக ஒரே ஒரு பப்லு கமெண்ட்டில் சொல்லிவிடுகிறார் ராமன்ராஜா. (”என்ன அங்க்கிள், ஜுரத்துக்கு எப்பவும் பாராஸிடமாலையே எழுதிக் கொடுக்கறீங்க? டைலினால், அட்வில், நியோப்ரோஃபென்னு எத்தனை புது மருந்தெல்லாம் வந்திருக்கு?” - டாக்டரிடம் கேட்கிறான் பப்லு.)

“சுத்தமான அதிர்வு எழுப்பும் இசைக்கவையின் (tuning fork) ஒலியைக் கேட்டுக்கேட்டுப் பழகியபிறகு, சங்கீத உணர்வே இல்லாதவர்களுக்குக்கூட சுருதியில் வந்து ‘டக்’கென்று நிற்க முடிகிறது. கச்சேரியின் நடுவே, மேல் ஷட்ஜத்தைப் பிடிக்க முடியாமல், கையாலேயே விட்டத்தை சுட்டிக்காட்டி சமாளிக்கும் வித்வான்கள் கவனிக்கவும்.” என்று ஒரு கட்டுரையில் சொல்கிறார் ராமன்ராஜா. நள்ளிரவில் சிரிக்கவைத்த அந்தக் கடைசிவரிக்காக ராமன்ராஜாவுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று எழுதியதுதான் இக்கட்டுரை.

மைக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்தப் புத்தகங்களைக் குறித்து மேலும் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். திட்டமிடப்படாமல் திடீரென்று சொல்வனம் இணைய இதழ் ஆரம்பிக்கப்பட்டதைப் போன்று, திடீரென்று முடிவானதுதான் ராமன்ராஜாவின் ‘சிலிக்கான் கடவுள்’ புத்தகமும், சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகமும். ஒரு யோசனையாகப் பேசப்பட்ட சில மணித்துளிகளிலேயே அடுத்தடுத்து நண்பர்களுக்குத் தகவல் சொல்லி ஒரு வடிவத்துக்கு இப்புத்தகங்கள் வந்துவிட்டன. அதற்குப்பின் நாங்களே நினைத்திருந்தாலும் இதை நிறுத்தியிருக்க முடியாது.

ராமன்ராஜா, சுகா இருவருமே ஆசிரியர்குழுவாலும், சொல்வன வாசகர்களாலும் கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் மெல்லிய நகைச்சுவை மூலம் அசாதாரணமான உயரத்துக்குத் தங்கள் கருத்துகளைக் கொண்டுசென்றவர்கள். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோது நாங்கள் ‘யாரோ’! படைப்புகள் கேட்டுத் தொடர்பு கொண்டதில் பலரிடமிருந்து மரியாதை நிமித்தமாகக் கூட பதில் வரவில்லை. ஆனால் இப்படி ஒரு இணையதளம் ஆரம்பிக்கிறோம் என்று சொல்லி கட்டுரை கேட்டவுடனேயே அனுப்பினார் சுகா. ராமன்ராஜாவும் அப்படியே! இருவரும் எந்த நினைவூட்டலும் இல்லாமல் மிகச்சரியாகக் கட்டுரை அனுப்பிவைத்துவிடக்கூடியவர்கள். இப்படிப்பட்ட எழுத்தாளர்களே ஒரு பத்திரிகை நடத்துவதற்கான உத்வேகத்தைத் தருபவர்கள். கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடத்தி, திரைப் பிரபலங்களை வைத்துப் புத்தகம் வெளியிடுமளவுக்கு இன்றைய பதிப்புச்சூழல் வளர்ந்திருந்தாலும், எளிமையான புதிய பதிப்பாளர்களான நாங்கள் இவற்றை வெளியிடுவதற்கு அனுமதி தந்திருக்கும் இருவருக்கும் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது சொல்வனம்.

சுகா, ராமன்ராஜா, அச்சுப்பணியில் பல யோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் செய்த ஹரன்பிரசன்னா, புத்தக வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், முன்னுரை எழுதி சிறப்பளித்த வண்ணதாசன், பாலுமகேந்திரா, கோ.ராஜாராம், அற்புதமான கோட்டோவியங்களைத் தந்த பொன்.வள்ளிநாயகம், ஆசிரியர்குழு நண்பர்கள் ரவிஷங்கர், சாமிநாதன், ஹரிவெங்கட், வ.ஸ்ரீனிவாஸன் - என இப்புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைவருமே நட்பார்ந்த முறையில்தான் இதைச் செய்தார்களே தவிர, கிஞ்சித்தும் வியாபார மனநிலை இங்கே வந்துவிடவேயில்லை. பன்னீர் சொம்பிலிருந்து, காசியாத்திரை செருப்பு வரை காண்ட்ராக்ட் விட்டு நடத்தும் கல்யாணங்கள் இருக்க, ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப்போட்டு நடத்திய ஒரு கிராமத்துத் திருமணம் அளிக்கும் திருப்தி இந்தப் புத்தகங்கள் உருவாக்கத்தில் கிடைத்தது. வணிகம் பிரதானமாகாத ஆத்மார்த்தமான முயற்சி தரும் இந்தத் திருப்தி, சொல்வனத்திலும் எல்லா முயற்சிகளிலும் சாத்தியமாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி.

சேதுபதி அருணாசலம்,

28-12-2010.

கார்ட்டூன் சரித்திரம்

ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’.


ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப்  பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம்.

ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு அல்ல, அந்தக் காலகட்டத்தின் விஷுவல் சரித்திரப் பதிவு என்பது புரிந்தது.

1949 ஜனவரியில் தொடங்கி 1960 டிசம்பர் வரையிலான பன்னிரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் இதழில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு இது. அதிக ஆர்ப்பாட்டமில்லாத எளிய கோட்டோவியங்கள் தமிழ்நாடு (அப்போது ‘சென்னை மாகாணம்’), கேரளா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், மற்ற உலக நாடுகள் என்று சகலத்தையும் தொட்டுச்செல்கின்றன. அந்தக் காலத்து முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் வரைந்திருக்கிறார்.

கார்ட்டூன்களை மொத்தமாக அள்ளி இறைக்காமல், ஒவ்வொரு படமும் எப்போது எந்தச் சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதற்கான விளக்கமும் தந்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு. அதுதான் இதனை ஒரு சரித்திர ஆவணமாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் உலகச் சரித்திரம், ஒரு தமிழர் / தமிழ்ப் பத்திரிகையின் பார்வையில்.

(Image Courtesy: http://new.vikatan.com/shopping/index.php?cid=149&pro_id=4&area=1)

ஸ்ரீதரின் முதல் கார்ட்டூன் பட்டாபி சீதாராமய்யா மொழிவாரி மாகாணப் பிரிவினைப் பூனையைக் கொஞ்சுவதில் ஆரம்பமாகிறது. பின்வரும் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாகக் காமராஜரும் ராஜாஜியும், எப்போதாவது அபூர்வமாகப் பெரியார், அண்ணா தென்படுகிறார்கள் (இந்தக் கார்ட்டூன்கள் வரையப்பட்டது 1960க்கு முன்பாக என்பதைக் கவனத்தில் வைக்கவும்).

(Image Courtesy: http://marinabharani.com/index.htm)

அமெரிக்கா, ரஷ்யாவின் ஜப்பான் ஆசை, பர்மாவில் கரேன்கள் கலகம், ரஷ்யாவில் ஸ்டாலின் அடாவடி, சென்னையா கொச்சியா என்று தடுமாறும் திருவாங்கூர் சமஸ்தானம், தொழிலாளர்களைப் பிடித்துச் செல்லப் பார்க்கும் ‘பூச்சாண்டி’களாகக் கம்யூனிஸ்ட்கள் (பின்னர் வரும் கார்ட்டூன்களில் இதே கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாகக் கரடி உருவத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்), காஷ்மிர் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தான், தேசிய சீனாவை இறுக்கிப் பிடிக்கும் பாம்பாக உருவகிக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகும் அவர்கள் தொடர்ந்து வில்லன்களைப்போல்தான் சித்திரிக்கப்படுகிறார்கள்), அணுகுண்டு பயம், ஆந்திர மாநிலத்தின் ‘சென்னை எனக்குதான்’ பிடிவாதம், இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சிலோன் சர்க்கார், அமெரிக்காவில் சகட்டுமேனிக்குக் குத்தித் தள்ளப்பட்ட ’ரஷ்ய உளவாளி’ முத்திரைகள், இந்தியா – பாகிஸ்தான் சேர்ந்து செயல்படாதா என்கிற ஏக்கம், உணவுப்பிரச்னை, அதைச் சரிசெய்ய முயன்று தோற்கும் உணவு மந்திரிகள், வரிச்சுமை, தபால் கட்டண உயர்வு, கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகள், பொங்கல் பரிசாக ராஜாஜியின் ’கடன் ஒத்திவைப்புச் சட்டம்’, நேருவின் பஞ்ச சீலக் கொள்கை (ஏனோ ஸ்ரீதரின் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு ‘உர்’ரென்றுதான் இருக்கிறார், க்ளிஷே சமாதானப் புறாக்களைப் பறக்க விடும்போதுகூட!), இந்தித் திணிப்பு, பம்பாய் நகரம் எனக்கா உனக்கா என்று சண்டை போடும் குஜராத், மஹாராஷ்டிரா, ஐந்தாண்டுத் திட்டங்கள், விநோபா பாவேவின் ஸம்பத் தானம், பூ தானம், நேருவுக்கு ராஜாஜி கொடுத்த நெருக்கடிகள், ‘கோதாவரியைத் தெற்கே கொண்டுவருவோம்’ என்று அறிவித்துவிட்டு ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நவீன பகீரதராகக் காமராஜர், ‘உன்னை நம்பி எப்படிக் கடன் கொடுக்கறது? உன் மனைவி ரொம்பச் செலவுக்காரியாச்சே’ என்று நிதி அமைச்சர் டி. டி. கே.விடம் அங்கலாய்க்கும் உலக வங்கி (அந்த மனைவி, ’ஐந்தாண்டுத் திட்டம்’ ;) ), 63 வயதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மா ஸே துங், ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் ‘தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்கும் காமராஜர் (அந்தப் பெண்கள், ஆந்திராவும் கேரளாவும்!), பட்ஜெட்டை நேரு கையில் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு நடையைக் கட்டும் டி. டி. கே., நேருவை ஓய்வெடுக்கச் சொல்லும் மற்ற தலைவர்கள், ஓய்வெடுக்கும் ’ரிஷி’ நேருவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டும் உதவியாளராக மகள் இந்திரா, திராவிட நாடு கோரிக்கை, ’இந்தியாவிலேயே சென்னையில்தான் சிறந்த நிர்வாகம் நடந்துவருகிறது’ என்று பாராட்டும் நேரு, ‘அவசியம் ஏற்பட்டால் காய்கறி வியாபாரத்தை சர்க்காரே ஏற்று நடத்தும்’ என்று அறிவிக்கும் சென்னை மாகாண அரசு, ராஜாஜியின் சுதந்தரக் கட்சிக் கொள்கைகள் ‘ஒண்ணுமே புரியலை’ என்று அறிவிக்கும் ம. பொ. சி., ‘எங்க கட்சியில சேர்ந்துக்கறீங்களா?’ என்று காமராஜரைச் சீண்டும் ராஜாஜி, காஷ்மீர் விஷயத்தில் மத்யஸ்தம் செய்துவைப்பதாகச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கும் எகிப்து அதிபர் நாஸர் (அந்த மூக்கு! அதை என்னாமாக வரைந்திருக்கிறார், நாஸர் என்றாலே மூக்கு விசேஷமோ?), ஸ்ட்ரைக் மனப்பான்மை …

நிஜமாகவே சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரந்துபட்ட விஷயங்களைத் தமிழ் கார்ட்டூன்கள் பதிவு செய்திருக்கின்றன என்பதே பெரிய அதிசயம். ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக அதன் அன்றைய ஆட்சியாளர் முகம் நுணுக்கமாகப் பதிவு செய்யப்படுகிறது, அப்புறம் சமாதான அன்னை, அணு ஆயுத அரக்கன், சமூக விரோதிப் பாம்புகள் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். இந்தக் கார்ட்டூன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திகள் சில இப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய மொழியில், அப்போதைய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான காலப் பதிவு கிடைக்கிறது. சில கருத்துகள் ஒருதலைப்பட்சமாகத் தோன்றினாலும், அந்தக் காலகட்டத்தின் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். சரித்திரப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

(ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1 – விகடன் பிரசுரம் – விலை ரூ 190)





     RSS of this page