1946-லிருந்து 75 வரை நடிகர் சிவகுமார் எழுதிய டைரி என்ற நூலைப் படித்தேன். (அல்லயன்ஸ் வெளியீடு. விலை ரூ 300/-).சிவகுமாரைப் பற்றி எனக்கு ஏற்கனவே நல்ல கருத்து உண்டு. அவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய இரண்டு விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. ஒன்று அவர் அக்கா மகள் ஜானகி என்பவர் தீவிபத்தில் கருகிச் செத்தது பற்றியது. இன்னொன்று கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக்கொண்டிருக்கும் சிவகுமாருக்கடியில் தண்ணீர் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுக்கிறார். அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். அது என்னை மிகவும் கவர்ந்தது. மனித மலத்தை மனிதர்களையே அள்ளச் சொல்லும் பழக்கம் நமக்கிருக்கிருந்தது. அந்தக் கொடுமைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் பொறுப்புதான். அதற்கு தண்டனையாக அதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் சொன்னார். இதே வார்த்தைகளில் அல்ல. இந்த அர்த்தத்தில். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை அது எனக்குக் காட்டியது.
உடனே அவரது அலைபேசி எண்ணை நண்பர்களிடம் கேட்டு வாங்கி அவரைத் தொடர்பு கொண்டு ஒருசில வார்த்தைகள் பாராட்டிப் பேசினேன். இப்போதுதான் அவரது டைரியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரைப்பற்றிய மதிப்பு இன்னும் கூடிவிட்டது என்று சொல்ல வேண்டும்.
அவரை எனக்குப் பிடிக்கும் என்பதற்கு முக்கியமான காரணம் அவர் ஒரு நடிகர் என்பதானால் மட்டுமல்ல. அவர் ஒரு ஓவியர் என்பதனாலும். காரணம் நானும் ஒரு ஓவியன்தான். பாத்ரூம் பாடகன் மாதிரி பாத்ரூம் ஓவியன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். (இதை என் நண்பனும் நல்ல ஓவியனுமான ஆபிதீன் படிக்காமலிருக்க ஆண்டவன் உதவி செய்வானாக)! ஆனால் அவர் சென்னை ஓவியக்கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியம் பயின்றவர் என்ற தகவல் இந்த டைரியில்தான் எனக்குக் கிடைத்தது. சிவகுமார் ஒரு நல்ல நடிகரும்கூட. என்றுமே இளமை மாறாத ஒரு மார்க்கண்டேயம் அவரிடத்தில் இருப்பது அவருக்கும் எனக்குமான இன்னொரு தொடர்பு முடிச்சு! என்ன, அவர் யோகாவெல்லாம் தொடர்ந்து செய்து இளமையாக இருக்கிறார், நான் என் தந்தை கொடுத்த ஜீன்களின், டி.என்.ஏ.க்களின் புண்ணியத்தில் இப்படித் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறேன்! (சிவகுமாரைப் பற்றிச் சொல்ல வந்துவிட்டு சுயபுராணம் எதற்கு என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதை நான் இப்போதைக்கு அசட்டை செய்துவிடுகிறேன்.அதுதான் எனக்கு நல்லது)!
சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். ஒரு நல்ல எழுத்தாளருக்கு உரிய அம்சம் என்னவென்று என்னைக் கேட்டால் — என்னை யாரும் கேட்கமாட்டார்கள் என்பது தெரிந்ததுதான், சரி, நானே என்னைக் கேட்டால் என்று வைத்துக் கொள்ளுங்களேன் — நான் சொல்வது இதுதான்: உண்மையோடு கூடிய நகைச்சுவை உணர்வு, விமர்சனப் போக்கு, கற்பனை வளம். இவை மூன்றும் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். இவை மூன்றுமே சிவகுமாரின் டைரியில் காணக்கிடைக்கிறது.
சிறுவயதில் தூரத்தில் செல்லும் ரயில் வண்டியைப் பார்க்கும் சிறுவன் பழனிச்சாமியின் கண்களுக்கு அது, “தூரத்தே மரவெட்டை பூச்சிக்குள் விளக்குப் போட்டால் அது ஊர்ந்து செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்குமோ..அப்படி” இருந்ததாகக் கூறுகிறார் (பக்கம் 14).
அவருடைய பெரியம்மா ரங்காத்தாள் பற்றி அவர் சொல்லும் வார்த்தைகள் எனக்கு என் சின்னம்மாவை நினைவு படுத்தின:
பெரியம்மாள் ரங்காத்தாள் அபூர்வப் பெண்மணி…அக்கா, தங்கை குழந்தைகளை முதல் வரிசையில், தன் குழந்தைகளைக் கடைசி வரிசையில் அமர்த்துவார்[சாப்பிட]. உறவுக் குழந்தைகளுக்கு பரிமாறி மீந்ததை தன் குழந்தைகளுக்குப் பரிமாறுவார் (பக்கம் 17). என் தாயாரின் தங்கை என் சின்னம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கியது. சின்னம்மாவுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. ஆனால் பள்ளிக்கூடத்துக்குப் போகுமுன் எனக்கு முட்டை தோசை கொடுக்கும். தன் குழந்தைகளுக்கு வெறும் தோசைதான் கொடுக்கும்! இப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என்று நான் பலமுறை நினைத்துப் பார்த்ததுண்டு. எனக்கு ஆச்சரியமே மிஞ்சும். சிவ்குமாரின் பெரியம்மாளைப் பற்றிப் படித்தவுடன் அந்த ஆச்சரியம் இன்னும் அதிகமானது. தாய்மை எனும் உணர்வோடு இரக்கம் எனும் உணர்வும் சேர்ந்துகொள்ளும்போது எந்தப் பெண்ணும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் போல!
அந்த அபூர்வப் பெண்மணியின் குணத்தை நினைவு வைத்திருந்து அதைப் பதிவு செய்திருப்பதே சிவகுமார் அந்த அம்மாளுக்குச் செய்த ஒரு மரியாதையாகவே நான் கருதுகிறேன். நம்மால் இதைத்தான்
செய்ய முடியும். ஆனால் இதையாவது செய்ய வேண்டியது நமது கடமை.
பள்ளிப்பருவத்தில் ஐந்து ரூபாய் இல்லாமல் க்ரூப் ஃபோட்டோ எடுக்க முடியாமல் போனதாம் சிவகுமாருக்கு. பிற்காலத்தில் நடிகரான பிறகு, 2007-ல் அவர் படித்த பள்ளியின் பொன்விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்களாம். அப்போது அவரோடு பத்தாம் வகுப்பு படித்த பழைய மாணவர்களை ஒன்று திரட்டி படம் எடுத்துக் கொண்டேன் என்று சொல்லிவிட்டு, “ஒரு அழுகை சிரிப்பாக மாற ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது” (பக்கம் 24) என்று எழுதுகிறார். ஒரு முதிர்ந்த எழுத்தாளனால் மட்டுமே இப்படி எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். அற்புதமான வரிகள். உண்மை தெறிக்கும் வரிகள். நெகிழ வைக்கும் வரிகள். சுயமரியாதையும், கண்ணியமும், மனித நேயமும் கொண்ட வரிகள். அவரை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
எங்கள் வகுப்பில் எல்லோருக்கும் ஆங்கிலம்தான் ஆயுள் எதிரி (பக்கம் 32) என்று சொல்லும்போது என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. புத்தகம் முடிந்த பிறகான பிற்சேர்க்கையில் அவர் டைரியில் சில பக்கங்களை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். அவருடைய ஆங்கிலமும் சுத்தமானதாகவே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஏழை மக்களின் சென்னை வாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது, “சாக்கடைக்குப் பக்கத்தில் குழந்தை தன்னுடைய சாப்பாட்டை சாப்பிடும் காட்சியை முதன் முதலில் பார்த்ததும் உறைந்து போனேன். கொஞ்ச நாளானால் மனசுக்கு எல்லாமே மரத்துப் போய்விடுகிறது” (பக்கம் 48) என்று எழுதுகிறார். எவ்வளவு உண்மை! முதல் முறையாக ஒரு அநியாயத்தைப் பற்றிக் கேள்விப்படும்போது கொதித்து எழுகிறோம். ஆனால் அதையொத்த நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதுதான் வாழ்க்கை என்றாகிவிடும்போது பொறுப்பற்று மரத்துத்தான் போய்விடுகிறது.ஆனால் இதை ஒத்துக் கொள்வதற்கும் ஒரு துணிச்சலும் ஒரு நேர்மையும் வேண்டும்.
”மாதம் இருமுறை திருமணமானவர்கள் மனைவியுடன் கூட வேண்டும். அது ஆண்களுக்கு கட்டுப்படியாகாது. அதனால் வாரம் ஒரு முறையோடு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்”என்று (பக்கம் 61)ல் அவர் தரும் அறிவுரையை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. ஏன்? இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்றுதான்! வாரம் ஒரு முறையா?! வாரத்துக்கு 14 முறை மட்டுமே மனைவியோடு கூடும் நண்பர்கள் இருக்கிறார்கள்! “ரொம்ப கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிறேன் மாப்ளே” என்பார்கள்! அவர் சொல்றது சரிதான், பொண்டாட்டியோட வாரத்துக்கு ஒரு முறை போதும், மற்றவர்களோட அப்படி இருக்க வேண்டியதில்லையல்லவா என்றார்! அவர் ‘மற்றவர்கள்’ என்று யாரைச் சொன்னார் என்று மற்றவர்களுக்குப் புரியும்தானே?!
தன் சைக்கிள் திருட்டு போனதைப் பற்றி போலீஸ்டேஷனில் புகார் கொடுத்த பிறகு அந்த இன்ஸ்பெக்டர் சைக்கிள்கள் எப்படியெல்லாம் திருட்டுப் போகும் என்று விலாவாரியாக சிவகுமாரிடம் விளக்க ஆரம்பிக்கிறார்! “அவரே சைக்கிள் திருடியதுபோல தத்ரூபமாக விளக்கினார்” என்கிறார் (பக்கம் 102)!
எம்ஜியாரோடு நடித்தபோது ஷூ போட்டுக்கொள்ள அனுமதியில்லாதது, எம்ஜியார் காதல் காட்சிகளில் ’நடிக்கும்’போது வேறு யாரையும் செட்டுக்குள் அனுமதிப்பதில்லை, உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தபோது சம்பளம் வெறும் 5000 ரூபாய்தான், ஆனால் (இரண்டாண்டுகளாக எடுக்கப்பட்ட) படம் முடியும்வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது போன்ற தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
சிவாஜி கணேசன் பற்றிய சிவகுமாரின் மதிப்பீடு ஒரு இடத்தில் வருகிறது. சிவாஜி மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னுடைய கருத்தில் சிவாஜியைவிட நாகேஷ் ஒரு விதத்தில் இன்னும் சிறந்த நடிகர் என்று சொல்லுவேன். காரணம், காமடி, ட்ராஜடி என்ற இரண்டு தளங்களிலும் நாகேஷ் சோபித்தார். நீர்க்குமிழி போன்ற ஒரு படம் போதும் அவரது துன்பியல் நடிப்புக்கு. ஆனால் காமடியில் சிவாஜியால், கமல், ரஜினி போல, வெற்றியடைய முடியவில்லை என்பது என் கருத்து. அதோடு, சிவாஜியின் நடிப்பில் ஒரு இயல்பான தன்மை இருக்காது. ஓவர்-ஆக்டிங் என்று சொல்லப்படும் மிகை இருக்கும். அது ஏன் என்று எனக்குப் புரியாமல் இருந்தது. ஆனால் சிவகுமாரின் விளக்கத்தைப் படித்தவுடன் புரிந்து விட்டது.
சிவாஜி கணேசன் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து பருவ வயது வரை பெண் வேடங்களில் நடித்து வந்தாராம். ஆனால் ஒரு இளைஞனான பிறகும் அப்படி நடித்தபோது அவரை ஒரு திருநங்கை மாதிரிப் பார்க்கவும், கிண்டலடிக்கவும் தொடங்கினார்களாம். அதை “மனதில் வாங்கிக்கொண்டு, பின்னாளில் நாடகங்களிலும் திரையிலும் நடிக்கும்போது, கதாநாயகனாக நடிக்கும் காட்சிகளிலும் கம்சன் போல, யமதர்மன் போல, பீமன் போல, மிகையான உடல் மொழியுடன், அதிகபட்ச முகபாவங்களுடன், ஓங்கிக் குரலெடுத்தோ, அழுத்தமாக உச்சரித்தோ நடித்தார் என்று நான் உணர்கிறேன்” (பக்கம் 194) என்று சிவகுமார் கூறுவதை நான் நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.சிவாஜி பற்றிய ஒரு புதிருக்கு விடை கிடைத்த மாதிரியும் இருந்தது. அதே சமயம், சிவாஜி கணேசன் பற்றிய சக நடிகரிடமிருந்து கிடைத்த மிகச்சரியான விமர்சனமாகவும் நான் இதைப் பார்க்கிறேன்.
நன்றாகப் பேசக்கூடியவராக மட்டுமின்றி, மிக நன்றாக எழுதக் கூடியவராகவும் சிவகுமார் இருப்பதற்கு இன்னும் ஒரே ஒரு உதாரணம் கொடுத்து முடிக்கிறேன். காமராஜரை வரைந்த சிவகுமார் அந்த ஓவியத்தின் பின்னால் காமராஜர் பற்றி சில வரிகள் எழுதியிருக்கிறார். அத்துடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்:
அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்காரர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரை காங்கிரஸ் அலுவலகம் எடுத்துக் கொண்டது. அவரின் பூத உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரின் மகத்தான வாழ்வை வரலாறு எடுத்துக் கொண்டது (பக்கம் 208).
அழகான, உண்மையான வார்த்தைகள்.
முதல் நிழல்படம் இளம் சிவகுமார். மற்ற மூன்றும் சிவகுமாரின் ஓவியங்கள், முறையே அவருடைய அம்மாச்சி, ஓவியர் ஆதிமூலம், ஹிந்தி நடிகை நூதன்.