Books List 13

வாசிப்பில் நுழைதல்

அன்புள்ள சுந்தரவடிவேலன்

உங்கள் பெயர் அருமையாக ஒலிக்கிரது. அதை சுந்தரவடிவேல் என்று சுருக்கிக் கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு என்றல்ல அனைவருக்குமே தமிழ் நாட்டில் வாசிப்பு தற்செயலாகத்தான் அறிமுகமாகிறது. பலசமயம் அது மிகவும் தாமதமாகிவிடுகிறது. ஒன்றும்செய்வதற்கில்லை– விதி என்று கொள்ளவேண்டியதுதான். ஆனால் இலக்கியம் என்பது எத்தனை தாமதமாக அறிமுகமானாலும் பயனுள்ளதே.

இலக்கியவாசிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். ஒரு வளர்ச்சிப்போக்கு. ஆகவே இலக்கியத்தில் சரியாக வாசிக்கவில்லையோ என்ற ஐயத்துக்கே இடமில்லை. எல்லா வாசிப்புகள் வழியாகவும் நாம் தொடர்ச்சியாக மேலேறிக்கொண்டே இருக்கிறோம். அதுவே முக்கியமானது. என்ன கவனிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு மூளை இளைபாறலுக்காக திருப்பித்திருப்பி ஒரே தரத்திலான ஆக்கங்களை வாசிக்கிறோமா என்பது ஒன்று. நனவிடைதோய்தலுக்காக பழையவற்றை மட்டுமே வாசிக்கிறோமா என்பது இரண்டு. இரண்டையும் தவிர்த்தாலே போதுமானது.

இலக்கியவாசிப்பின் மனநிலைகள் தேவைகள் எல்லாமே ஆளுக்கொருவகை. ஆகவே ஒருவர் இன்னொருவருக்கு திட்டவட்டமான வழி எதையும் காட்டிவிடமுடியாது. இலக்கியவாசகர் தன் வழியை தானே விழுந்து எழுந்து நடந்து கற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் நாம் நம் வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியும். வாசித்ததை விவாதிக்க முடியும். அதையே என் இணையதளத்தில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

ஒரு புதுவாசகருக்கு என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் ஒரு நல்ல துணைநூலாக இருக்கும் என நினைக்கிறேன். என்னிடம் கடந்த காலத்தில் அவ்வாறு கேட்ட பல வாசகர்களுக்கு நான் எழுதியவற்றின் பெருந்தொகுதி அந்த நூல். அதில் இலக்கிய வாசிப்பின் ஆரம்பகாலத்துச் சிக்கல்கள், ஐயங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கம் உள்ளது. இலக்கிய வரலாறு சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய கோட்பாடுகளும் இலக்கிய இயக்கங்களும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இலக்கியக் கலைச்சொற்களும் அளிக்கப்பட்டுள்ளன

அதைப்போலவே என்னுடைய கண்ணீரைப் பின்தொடர்தல் ஒரு முக்கியமான நூல். இந்திய இலக்கியத்தை அது விரிவாக அறிமுகம்செய்து வாசிப்புக்கு உகந்த நூல்களின் பட்டியம் ஒன்றையும் அளிக்கிறது. முக்கியமான இன்னொரு நூல் எதிர்முகம். இது இணையவாசகர்களுக்கு நான் அளித்த பதில்களின் தொகை. இதிலும் இலக்கிய அடிப்படைகளை விரிவாக விவாதித்திருக்கிறேன். இதன் பெரும்பகுதி என் இணையதளத்தில் கேள்விபதில்களாக உள்ளது.

இப்பட்டியல்கள் அனைத்தும் என்னுடைய இணையதளத்தில் உள்ளன. விமரிசகனின் சிபாரிசு என்ற பத்தியை பார்க்கவும். கலைச்சொற்கள் இலக்கியக் கலைச்சொற்கள் என்னும் தலைப்பில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை உங்களுக்கு உதவக்கூடும்

படிப்பதன் மூலம் மிகவிரைவிலேயே நீங்கள் இலக்கியத்தின் அனைத்து வாசல்களையும் திறந்துவிடமுடியும். வாழ்த்துக்கள்

ஜெ

 

தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்

கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல்

சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்


காடு -கடிதம்

October 7th, 2010

விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கக் காட்டிற்கு சென்று வரும் நம் அனைவருக்கும் , ஊருக்குத்திரும்பி வந்த பிறகும், நம் மனதை விட்டு அகலாமல் , மறுபடியும் அடுத்த பயனத்தின்போது இருகரம் நீட்டி அழைக்கும் சக்தி கொண்டதுதான் காடு. அதுபோல மேலோட்டமாக , ஜெயமோகனின் “காடு” நாவலை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மழையூறிய ஒரு இரவில் மீண்டும் என் கைகளில் வந்தமர்ந்தது இந்த நாவல்.

நாவலில் இடம்பெறும் கிரிதரன் கதாபாத்திரம் முதலில் காட்டிற்குள் வழிதவறி சென்று விடுவான். அடுத்தடுத்த முறை காட்டிற்குள் செல்லும்போது காடு வரைபடமாக அவன் கண்முன்னால் விரிவடைந்து கொண்டே போகும். அது போல இந்த மறுவாசிப்பின்பொது என்னால் நாவலின் கதாபாத்திரங்களோடு பேச முடிந்தது. எனக்கு சற்றும் பரிச்சயமில்லாத மொழி நடைத்தான். ஆனாலும் ஜெயமோகன் எழுதும்போது அப்படியொன்றும் அந்நியமாகத்தெரியவில்லைதான். பலகாலம் பழகிய மலையாளப் பெண்ணின் மொழியைபோல என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது. காடும் அது காட்டும் பல நிகழ்வுகளும் 48 மணி நேரத்துக்கும் மேலாக அந்த நாவலோடு என்னைக்கட்டிபோட்டு வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை போன்ற எழுத்தின் மூலம், காடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றத்திற்கு உள்ளாகி வருவதை நாவலில் விரியும் பல்வேறு சம்பவங்களினூடாக காட்சிப் படுத்தும் தன்மை ஜெயமோகனுக்கு மட்டுமே உரித்தானது. முக்கியமாக கனவுகள் ஜெயமோகன் நாவல்களில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நாவலிலும், ஆழ்மனதின் காட்சிகள், நாவலின் கதா பாத்திரங்களின் கனவுகளின் மூலம் ஒரு யட்சியைபோல நம்மைத் தழுவிக்கொள்கின்றன.

கிரிதரன் குட்டப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் வழியாகவே பெருமளவு நாவல் விவரிக்கப்படுகிறது. ஆயினும், குட்டப்பனை விட கிரிதரன் கதாபாத்திரம் சிறியதாகவே தெரிவதற்கு காரனம், குட்டப்பனின் வாழ்வனுபவமு, அவன் வாழ்க்கையை எளிமையாக புரிந்து வைத்திருப்பதுமேயாகும் என்பதின் மூலம் நமக்கு விளங்குகிறது.

இந்த நாவல் நானறிந்த வரையில் மனிதர்களைப் பற்றி மட்டும் பேசுகின்ற மற்றும் வழமையான உறவுச் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசுகிறது என்பதோடல்லாமல் , ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் காணக்கிடைத்த , அழகிய காட்டைப் பற்றிய வரலாறு என்றே கூற வேண்டும்.

“ ஒரு சாலைபோதும் ஒரு முழுக்காட்டையே அழிப்பதற்கு” என்பார் கானியலாளர் தியோடர் பாஸ்கரன். அதுபோல சாதாரன கட்டுமானத் தொழிலுக்காக ஒரு காடும் அதன் வளமும் , அதன் சகல ஜீவராசிகளும் அழித்தொழிக்கப்படுவதன் ஆதங்கத்தை இந்த நாவல் வழிநெடுகிலும், ஒரு சிறுத்தையின் காலடித்தடத்தை போல விட்டுச் செல்கிறது.

“அப்படித்தான் நிகழும், எல்லாப் பெரு நகரங்களும் ஒரு காலத்தில் காடுகளாக இருந்தவைதான், காடுகள் அழிந்துகொண்டே இருக்கின்றன. பின்வாங்கிப் பின்வாங்கி மலையடிவாரத்துக்கு வந்து விட்டன. இனி நகரங்கள் மலைகளையும் வளைத்து உள்ளிழுத்துக் கொள்ளும்…”

“காடு அழிந்து ஊர்களானதே நாகரீகம்…”

“நாகரீகம் என்ற சொல்லுடன் புரண்டு படுத்தேன். நகர் சார்ந்தது நாகரீகம். அதற்கு எதிர்ப்பதம் காட்டுத்தனம், காட்டு மிராண்டி. எவ்வளவு தெளிவாக இருக்கிறது எல்லாம்.!.ஆரம்பப் பள்ளியிலேயே கற்பிப்பது. காட்டை வென்றடைக்கும் ஊர்களின் கதைதான் மனித நாகரீகம் போலும்”

என்ற வரிகளின் மூலம் இந்த நாவல் காட்டின் முக்கியத்துவத்தை எந்தளவு பேசுகிறது என்பதை அறியலாம்.

டிஸ்கவரி சேனலின் “ Survivor Man” நிகழ்ச்சியில் வரும் சாகசக்காரர் இனி எனக்கு நாவலின் கதாபாத்திரமான “குட்டப்பனை” எப்போதும் நினைவு கூர்வர். காட்டில் உள்ள பொருட்களையே உணவாய் கொண்டு வாழும் குட்டப்பன் நாவலில் வாழ்ந்திருக்கிறார். அவருடைய முடிவு நாவலின் ஆரம்பத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டாலும், நாவலின் ஒவ்வொரு கனத்திலும் அவரே நிறைந்திருக்கிறார்.

வெகுஜன வாழ்க்கையில் நாமனைவரும் சாதாரனமாக சந்திக்கும் ஒரு கதாபாத்திரமே “அய்யர்”. அவருடைய சபலத்தை அழகிய நகைச்சுவை உணர்வுடன் கையாண்டிருப்பது அழகு. குறிப்பாக கையுடைந்து மருத்துவமனையில் படித்திருப்பதாக வருமிடம். இந்த நகைச்சுவை ஜெயமோகனுக்கே உரியது.

நாவல் முழுக்க ஒரு சாதாரன மனிதனின் பயணத்தின் போது காட்டுக்குள் காணக் கிடைக்கு, மிளா, முயல், தேவாங்கு, மலை அணில், மாண், கூழக்கடா மற்றும் யானை இவற்றை மட்டுமே பயன்படுத்தி இருப்பதன் மூலம் ஒரு பயனியின் நிறைவை நாம் அடைகிறோம். மற்ற அரிய உயிர்கள் ஆராய்ச்சியாளர்களின் பைனாகுலர் கண்களுக்கே கிடைக்கும் என்பதே உண்மை.

நீலி நாவல் முழுவது ஒரு வந்தாலும், அவளுடைய முடிவின் மூலம் வாசகரை ஒரு கணம் துக்கப்பட வைக்கிறாள். நீலியுடனான கிரிதரனின் சந்திப்புகள் ஜெயமோகனின் வேறொரு நாவலை நினைவுறுத்துகிறது. கபிலனும் குறுந்தொகையும் காட்சிகளை விளக்குவதற்கு பயன்பட்டிருந்தாலும் ஜெயமோகனின் வரிகளே பெரிதான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருவேளை குறுந்தைகையையும் கபிலனையும் புரிந்துகொள்ள எனக்கு இன்னும் பலகாலமாகலாம். ஆனால் எனக்கு அதுவரை ஜெயமோகன் போதும். அடுத்தமுறை இந்த நாவலைப்படிக்கும்போது 40 வருடம் காட்டில் அலைந்தவனைபோல பரிச்சயமாக இருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

நாவல் தந்த அனுபவம் காட்டை மேலும் மேலும் ரசிக்கவும், வாழ்க்கையை புத்துணர்ச்சியுடையதாகவும் ஆக்கும் என்ற ஆவலோடு அடுத்த காட்டு பயணத்திற்கு காத்திருக்கின்றேன்.

எனக்கு தீவிர இலக்கிய விமர்சகர்களின், பூதக்கண்ணாடிகளின் மேலும், இந்த நாவலைப்பற்றிய விமர்சனத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லை. ஜெயமோகனுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். மாறாக ஒரு மண்ணும் அது சார்ந்த மலையினமும், நம் கண் முன்னே அழிந்து கொண்டிருப்பதை தேர்ந்த வாசகனுக்கு நாவலின் வழி சொன்ன ஜெயமோகனின் இலட்சம் வார்த்தைகளுக்கு கோடானு கோடி நன்றி.

அன்புடன்
கோகுல்.

அன்புள்ள கோகுல்
நன்றி.
காடு நாம் மீண்டும் மீண்டும் எழுதும் ஒரு கரு. நமக்கு காடு என்பது வெறும் மரக்கூட்டம் மட்டும் அல்ல. அச்சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கையின் மறுபக்கம்
புத்தகம் சுமத்தல்

திரு ஆர்வி அவர்கள் சிலிகான் ஷெல்ப் என்ற பெயரில் தனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு புதிய வலைத்தளம் துவங்கி இருக்கிறார்.  ப்ளாகுக்கு மாலை போட்டு வரவேற்க முடியாதில்லையா? அதற்கு பதிலாக, ஒரு சுட்டி கொடுத்து வாழ்க வளர்க, என்று வாழ்த்தும் முகமாகத்தான் இந்தப் பதிவு.

ஏன் படிக்கிறேன்?” என்று ஒரு கேள்வியைத் தன்னையே கேட்டுக் கொண்டு அதற்கு பதில் தந்திருக்கிற ஆர்வி, உங்கள் காரணங்களையும் சொல்லுங்களேன் என்று கேட்டிருக்கிறார். நமக்கு நீளமான பின்னூட்டங்களை எல்லாம் போடுவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை- அதற்கு பாதிக்கப்பட்ட பதிவர்களே சாட்சி. வேறு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பின்னால் சொல்கிறேன்.

ஆர்வி, தான் புத்தகங்களின் மூலம் ஒரு நிறைவை அடைவதாகவும், அதனால்தான் படிப்பதாகவும் ஒருவாறு கூறுகிறார். அப்படி அவர் நிறைவை உணரும் தருணங்கள்-

நேர்வதாகப் பட்டியலிடுகிறார். இவை தவிர, புத்தகங்கள் பகல் கனவுகளுக்கான ஜன்னல்களாகத் தன் சிறு வயதில் இருந்ததாகவும் சொல்கிறார்.

நமக்கு இவ்வளவு விவரமாக எழுத வராது- ஏதோ தெரிந்த வகையில் சொல்கிறேன்…

பேண்ட் தைக்கும்போது அதில், ஒரு இருநூறு பக்க அளவில் உள்ள ஒரு பேப்பர்பாக் புத்தகத்தை பதுக்கிக் கொள்ளுமளவுக்கு ஒருவாரான கொள்ளளவுள்ள பாக்கெட்டையும் வைத்துத் தைக்கும்படி தையல்காரரிடம் சொல்கிறவன் நான். இதுதான் ஆப்டிமம் சைஸ் என்று நினைக்கிறேன்.  ”இன்னும் பெரிதாகத் தைப்பதானால் அது கத்தி வைக்கிற உறை மாதிரி நீண்டு விடும், அப்புறம் முழங்கை வரை பாக்கெட்டுக்குள் விட்டுதான் உங்கள் புத்தகத்தைத் துழாவி எடுக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா, தைக்கட்டுமா?” என்று ஒரு டைலர் கேட்டது நினைவிருக்கிறது.

டாய்லெட்டில் படிக்கும் நல்ல பழக்கம் ஒன்றை மட்டும்தான் கற்றுக் கொள்ளவில்லை, சாப்பிடும்போது ஆரம்பித்து பஸ்ஸில் ரயிலில் பயணிப்பது வரை எப்போதும் கையில், கையில் இல்லாதபோது பையில், ஒரு புத்தகம் இருந்து கொண்டே இருக்கிறது.

படித்ததெல்லாம் மறந்து போகும் என்கிற நிலையில் ஏன் படிக்கிறேன் என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. புத்தகமும் கையுமாகத் திரிகிற என்னைப் பெரிய அறிவாளியாக இருப்பானோ என்று ஆரம்பத்தில் மலைப்பாகப் பார்க்கிறவர்களும், கொஞ்சம்போல பழகிய பின், “அட, இது புத்தகம் சுமக்கும் கழுதை!” என்று அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்கள். இப்படி புத்தகம் சுமப்பதால் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வந்தேன்.

படித்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது என்று சொன்னேன் இல்லையா? அது ஒரு பெரிய சங்கடம். இப்படிதான் ஒருவரது வலைதளத்தில், நான் Kazuo Ishiguro எழுதிய Artist of the Floating World Remains of the Day என்ற நாவலைப் படித்திருப்பதாகவும், அது மிகச் சிறந்த நாவல் என்றும் பின்னூட்டம் போட்டேன். அதைப் பற்றி மேலும் எழுதலாம் என்றால், சனியன், அது ஒரு பட்லரின் பார்வையில் எழுதப்பட்ட கள்ளச் சிரிப்பு வரவைக்கும் ஒரு நாவல் என்று மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. யார் யார் என்ன என்ன எப்போது எங்கு செய்தார்கள் என்கிற விஷயம் எல்லாம் மறந்து விட்டது. அப்புறம் கூகுள் பண்ணி ஒருவாறு விஷயத்தைத் தேற்றி பின்னூட்டத்தை நிறைவு செய்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதுவாவது பரவாயில்லை, நீல பத்மநாபனின் தலைமுறைகள் என்ற நாவலின் கெட்டி அட்டை மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அதன்கூட, “எழுதினா இந்த மாதிரிதான் எழுதணும்டா!” என்று என் தம்பியிடம் பேசிய வீர வசனம் வேறு அசந்தர்ப்பமாய் நினைவில் ஒட்டிக் கொண்டு எட்டிப் பார்க்கிறது- அவர் என்ன எழுதினார் ஏது விஷயம் என்று ஒன்றும் நினைவில் இல்லை. தலைமுறைகள், பழுது சொல்ல முடியாத நடையில் எழுதப்பட்ட நேர்த்தியான நாவல் என்று ப்ளர்ப்புத்தனமான ஒரு வாக்கியம் மட்டும் பளிச்சிடுகிறது, அது எங்கிருந்து வந்தது என்றுத் தெரியவில்லை.

சரி, படிப்பதால் என்னை யாரும் அறிவாளி என்றுக் கொண்டாடுவதுமில்லை, படித்ததெல்லாம் என்னை அறிவாளி ஆக்குவதும் இல்லை என்றால், எதற்காகப் படிக்கிறேன்?

அது ஒரு வகையிலான அடிக்ஷன், அது நம் இதயத்தின் கருணை ஊற்றுகளைத் திறந்து விடுகிறது என்பன சட்டென எனக்குத் தோன்றும் காரணங்கள். அதை விவரிக்க இப்போது நேரமில்லை, அலுவலகம் கிளம்ப வேண்டும். வந்து மிச்ச மீதியை வைத்துக் கொள்கிறேன்.

அதற்கு முன்பாக,  நண்பர் கிரியை, “ஏன் படிக்கிறேன்?” என்று தொடர் பதிவிட அழைக்கிறேன்- சுட்டியை அன்பர் ஆர்வியின் வலைதலத்துக்குத் தந்து அவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே நிபந்தனை.

——————————————————————————

எங்கே விட்டேன் என்றே தெரியவில்லை, இருந்தாலும் பரவாயில்லை- விட்ட இடத்திலிருந்தே தொடருகிறேன்.

படிக்கப் பழகியவனுக்கு புத்தகங்கள் போதைப் பொருள் மாதிரி- மாதிரி என்ன, போதைப் பொருளேதான்.  ஒரு புத்தகப்புழு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது அதன் மூளையில் என்ன நடக்கிறது?

அது வார்த்தைகளில் துவங்கி, வரிகளை மேய்ந்து, பத்திகளில் பாய்ந்து, பக்கங்களைத் திருப்பி, அத்தியாயம் அத்தியாயமாக புத்தகத்தினூடே துளைத்துக் கொண்டு போகும்போது, மூளை ஒரு உன்மத்த நிலை அடைகிறது. ஆமாம் நண்பர்களே, பசி தாகம் தவிர மற்ற அனைத்து கணங்களிலும் புத்தகத்தில் கண்ணைப் பதித்தவனது மூளை, அதற்கு சன்மானமாக இயற்கையாகவே ஓப்பியத்தை சுரந்து கொடுக்கிறதாம்.

நம்பிக்கை இல்லை என்றால், இங்கேயும் இங்கேயும் போய் படித்துப் பாருங்கள். இந்த ஓப்பியம் விஷயம் உண்மையாக இல்லாவிட்டால் என் மாறு கண்ணை வேறு எப்படி விளக்குவதாம்?

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். இரவு வெகு நேரம் கதைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். தலைக்கு மேலே மங்கலாக நாற்பது வாட்ஸ் பல்பு தொங்கும். அந்த வெளிச்சத்தில் சீக்கிரமே களைத்து என் வலது கண்ணிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்துவிடும். அறிவுப் பசி/ ஓப்பிய வெறி அதற்கெல்லாம் அடங்குமா என்ன? வலது கண்ணை மூடிக் கொண்டு ஒற்றைக் கண்ணால் கதையைத் தொடருவேன். காலப்போக்கில் வலது கண் லேஜி ஐ ஆகி, இப்போது மாறு கண்ணாய் முழித்துக் கொண்டு நிற்கிறது.

ஏன் முழிக்கிறது என்று கேட்கிறீர்களா? இப்போதும் படிப்பதற்கு அந்தக் கண்தான் முந்திக்கொண்டு முன்னால் வருகிறது- மிகையாகப் பயன்படுத்தியதில் அதன் பவர் அதிகமாகி, இப்போது ஒரு அடிக்கு அப்பால் இருப்பதெல்லாம் மங்களம்தான். ஆனாலும்கூட இந்த அதிசயத்தைப் பாருங்கள், எதையாவது ரொம்ப ஆர்வமாக, ஆழ்ந்து படிக்கும்போது, கை தானாகவே புத்தகத்தை என் வலது கண்ணுக்கு ரொம்ப கிட்டே கொண்டு வந்து காட்டி விடுகிறது. இத்தனைக்கும் என் இடது கண் நன்றாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இப்படி வெறித்தனமாகக் கண் பார்வையை இழந்தது என்ன சாதனையை செய்வதற்காக என்று கேட்கிறீர்களா? சேஸ், லென் டீய்ட்டன் நாவல்கள் எல்லாம் ஒரு நாள் தீனிதான். லட்லம் வேண்டுமானால் ஒரு நான்கைந்து நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்- ஹ்ம்ம், அதெல்லாம் ஒரு காலம்.

புத்தகங்கள் ஒரு போதையாக இருந்தாலேயொழிய இப்படிப்பட்டத் தீவிர வாசித்தல் என் போன்ற குருவி மூளை இருக்கிறவனுக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

உங்களில் சிலர், வாசிப்பு வேண்டுமானால் போதையாக இருக்கலாம், புத்தகமே போதை மருந்தாக இருக்குமா என்ன என்று சந்தேகப்படலாம். அவர்களுக்காக என் தாத்தாக்கள் இருவரை சாட்சி சொல்ல அழைக்கிறேன்.

ஒருவர், எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அவரிடமிருந்து இன்று காலை வந்த குமுதம் விகடனை எல்லாம் பிடுங்குவது என்பது மனிதனால் ஆகாத காரியம். பயங்கரக் கோபக்காரர்.  ”சூ! சூ!” என்று அதை எடுக்கப் போனால் எங்களை நாயை விரட்டுகிற மாதிரி விரட்டுகிற அவராவது புத்தகத்தைப் படிப்பாரா என்றால், அதுதான் இல்லை. என்போல் அவர் கண்ணும் பழுதோ என்னவோ, யார் கண்டது? அவர் இந்தப் புத்தகங்களை வைத்துக் கொண்டு செய்கிற ஒரே காரியம் எப்போதெல்லாம் அபின் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தன் பக்கத்திலிருக்கிற புத்தகத்தின் பக்கங்களை பரபரவென்றுத் திருப்பி அதிலிருந்து கமகமவென்று கிளம்புகிற நறுமணத்தில் தன் மூக்கைப் புதைத்து ஆழ மூச்சிழுப்பார்.

நான் சொல்வது பொய் இல்லை என்பதை நிருபிக்க சா___, பா____, சி____ ஆகியோரை சாட்சிக்கு அழைக்கிறேன்.

நானெல்லாம் சாதாரண உபாசகன்- படித்தால்தான் அபின் கிடைக்கிறது.  இந்தத் தாத்தா இன்னும் கொஞ்சம் உயர்ந்த தளத்தை அடைந்த சாதகர்-  புத்தகங்களை முகர்ந்தே தனது அபின் தேவையைப் போக்கிக் கொண்டார். ஆனால் இன்னொரு தாத்தா இருக்கிறாரே, அவர் வாசித்தலின் உன்னத நிலையை அடைந்து விட்டவர்.

நான் சொன்னேனே சா___, அவன் ரொம்ப நாளைக்குக் கெஞ்சிக் கெஞ்சி அந்தத் தாத்தா பெட்டி பெட்டியாய் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஒரு நல்ல நாள் அன்றைக்குக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டான். அந்த காலத்து ரீடர்ஸ் டைஜெஸ்ட் வெளியிட்ட புத்தக சுருக்கங்களின் தொகுப்பு. தடி தடியான புத்தகங்கள். அதன் நறுமணம் இப்போதும் நினைத்த மாத்திரத்தில் என் நாசியைத் தாக்குகிறது :)

அது தவிர எட்கார் வாலஸ், பேர்ல் எஸ் பக், லெஸ்லி சார்ட்டரிஸ் என்று நிறைய புத்தகங்கள் (செயிண்ட்- நினைவிருக்கிறதா? நம் சூப்பர் ஸ்டார் நிச்சயம் அந்தப் புத்தகங்களைப் படித்துதான் தன் ஸ்டைலை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்: செயிண்ட்டும் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கிறவர்தான். ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட சாகசக் கதைகள்). அவற்றைப் பிரித்துப் பார்த்தால்தான் அதிர்ச்சி.

பல புத்தகங்கள் படிக்கப்படவே இல்லை- அதையெல்லாம் அப்படியே அடுக்கி வைத்திருக்கிறார்!  அந்தத் தாத்தாவுக்கு ஆர்டர் பண்ணின புத்தகங்கள் வீட்டுக்கு வந்து அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே அபின் கிடைத்திருக்கிறது- சாரூப்யம் என்று இதைத்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்: புத்தகங்களைப் பார்வையாலேயே பருகுகிற உத்தம ஆராதகன் ஆகி விட்டிருந்தார் அவர்.

அவரோடெல்லாம் கம்பேர் பண்ணினால், அழுதுகொண்டே படிக்கிற நானெல்லாம் எம்மாத்திரம்! இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி: பதிவு ரொம்ப நீஈஈஈளமாகப் போய் விடும் என்று பயமாக இருக்கிறது. புத்தகம் படிப்பது அபின் புகைப்பதற்கு சமம் என்று கடைசியாக சொல்லி விட்டு அடுத்த விஷயத்துக்கு வருகிறேன்.

புத்தகங்கள் நம் இதயத்தின் கருணை ஊற்றுகளைத் திறந்து விடுகிறது என்று சொன்னேனில்லையா? அது விளையாட்டாக சொல்லவில்லை.

—–

இது மிக சுவாரசியமான விவாதம்: ஸ்டீவன் பிங்க்கர் என்ன சொல்கிறாரென்றால், கற்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாட்பட நாட்பட வன்முறை மனித சமுதாயத்தில் குறைந்து வந்திருக்கிறதென்று- நாம் வாழும் காலம் ஒருவகையில் பொற்காலம். கேட்பதற்கு தப்பு தப்பாகத் தெரிந்தாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து.

பிங்க்கர் ஏன் வன்முறை இப்படி குறைந்தது என்று விவாதிக்கையில் ஒரு கருத்தை முன் வைக்கிறார், பீட்டர் சிங்கர் என்ற தத்துவ மேதை (உண்மையிலேயே மேதைதான்) சொன்னது: என் குடும்பம், என் குடி, என் கிராமம், என்று விரிந்து கொண்டே வருகிற மனிதனின் உறவு வட்டம்தான் வன்முறையைக் குறைத்திருக்கிறது என்கிறார் அவர். இதற்கும் பல காரணங்கள். அவற்றில் ஒன்று, மனிதன் மற்றவர்களைக் குறித்து அறிய அறிய அவன் தனது கருணை வட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்கிறான் என்பது. இதற்குப் பயணம், புத்தகம், போன்ற தொடர்பு சாதனங்கள் துணை செய்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

எப்படி என்று கேட்கிறீர்களா? என் அனுபவம்தான்.

வில்லியம் சரோயன் என்று ஒருவர். ஆங்கிலத்தில் நிறைய எழுதி இருக்கிறார். எப்படியோ எனக்கு அவர் எழுத்தில் ஈர்ப்பு வந்து விட்டது- வில்லியம் சரோயன் எழுதிய ஒரு மேற்கோளை எழுதி வைத்து நினைவு வந்த போதெல்லாம் உருவேற்றி இருக்கிறேன்- இதுதான் அது: (இதை அப்புறம் தமிழாக்குகிறேன்)-IN THE DAYS OF YOUR LIFE, WILLIAM SAROYAN THE MAN THE WRITER. அற்புதமான சொற்கள், இல்லையா? ஏதோ ஒரு வேதத்தில் படித்த மாதிரி இருக்கிறது எனக்கு, இப்போது படித்தால்கூட.

ஆர்மீனியா பற்றி அவர் பக்கம் பக்கமாக எழுதியதைப் படித்த காரணத்தால் இன்றைக்கு அவர்கள் எந்த வம்பில் மாட்டிக் கொண்டாலும் எனக்கு முதலில் ஆர்மீனியர்கள் மீதுதான் ஐயோ பாவம் என்று தோன்றுகிறது.

இன்னும் இருக்கிறது- நாளைய சமையலுக்குக் காய் வாங்கிவரக் கடைக்குப் போக வேண்டும்.

வந்து தொடர்கிறேன். ஏண்டா கேட்டோம் என்று ஆர்வி அவர்கள் நொந்து கொள்ளப் போகிறார்- அதைப் பற்றி எனக்கென்ன கவலை? இத்தனை நேரம் படித்து விட்டீர்கள், இனியும் படிக்காமலா போய் விடுவீர்கள்!

———————————–

அடிப்படையில் நான் பிற்போக்குவாதி- உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்- என் அலுவலகத்தில் உடன் வேலை செய்கிற ஒரு பெண் எனக்கு சரியாகக் காது கேட்காததைக் கருத்தில் கொண்டு, ஒரு அரை அடிக்கு தன் நாற்காலியை என்னருகேக் கொண்டு வந்தால், ஒரு ஐந்து பத்து நிமிட அவகாசம் தந்து விட்டு, குனிந்து எதையோ தேடுகிற சாக்கில் என் நாற்காலியை ஒரு அடி அப்பால் தள்ளிக் கொள்கிறவன். ஒன்றும் செய்ய முடியாது, சுபாவம் அப்படி.

ஆனால், எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது- Shakespeare in Love, The English Patient போன்ற திரைப்படங்களில் வருகிற கள்ள உறவுகள் பிரியும்போது என்னையும் மீறி என் கண்களில் இருந்து நீர் வடிகிறது. நிஜ வாழ்க்கையில் ஒன்று நடந்தால் அது தப்பு என்று சொல்லக் கூடியவன், திரைப்படத்தில் அதைப் பார்த்து, தப்பு செய்கிறவர்களுடன் எம்பதைஸ் செய்வது இலக்கியத்தின் ரசவாதம் என்றால் நான் சொல்வது சரிதானே? இப்போதெல்லாம் அரசல் புரசலாக அவன் அப்படி, அவள் இப்படி என்று கிசுகிசுக்கள் கிளம்பும்போது, “ஓஹோ, ஷேக்ஸ்பியர் செய்த மாதிரி செய்கிறார்கள் போல,” என்று அதை ஏற்றுக் கொள்கிற புனிதபிம்பம் புத்தகங்களில் தயவால் கிடைத்து விட்டது.

டேவிட் செடாரிஸ் என்று ஒரு எழுத்தாளர். ஓரினச்சேர்க்கையாளர். எழுதும்போதே இந்த வார்த்தையில்கூட ஏதோ தப்பு இருக்கிற மாதிரி தோன்றுகிறது- அது என்ன, பொறியாளர், ஆய்வாளர் மாதிரி ஓரினச்சேர்க்கையாளர்? அது ஒரு தொழிலா என்ன! செடாரிஸ் எழுதிய Dress your family in corduroy and denim என்ற தொகுப்பைப் படித்தபின் என்னால் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுக்க முடியாது.

புத்தகங்கள், அன்னியர்களை நம்மவர்கள் ஆக்குகின்றன. அரசியல் the other என்று சொல்வோமே,  அப்படி வேண்டாதவர்களை அந்நியப்படுத்தி demonise செய்தால், புத்தகங்கள் அவர்கள் பார்வையில் உலகைக் காட்டி, அவர்கள் உணர்வுகளை நம்மை உணரச் செய்து, இவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்ற புரிதலைத் தருகிறது- புத்தகங்களை ஒரு humanising agent என்று சொல்லலாம்.

டேவிட் செடாரிஸ் குறித்து ஒரு வார்த்தை- நான் அவர் எழுதியதை பெரும்பாலும் சிரிப்பும் சில சமயம் வருத்தமுமாகப் படித்தாலும், அவரை சாதாரண சிரிப்பு எழுத்தாளராகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கோ ஓரிடத்தில் செடாரிஸ்தான் அ முத்துலிங்கம் அவர்களின் அபிமான எழுத்தாளர் என்று படித்தவுடன் என் அவதானிப்பில் செடாரிஸ் எங்கேயோ போய் விட்டார். எதற்கு சொல்கிறேன் என்றால், என்னதான் பிடித்து இருந்தாலும், ஒரு எழுத்தாளருடைய அருமை பெருமைகள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரிகின்றன.

ஆர்வி தான் புத்தகங்களை விரும்பிப் படிப்பதற்கு ஐந்து பாயிண்ட்டுகள் சொன்னார். என்னால் இரண்டுதான் சொல்ல முடிகிறது- அந்த இரண்டும் கூட காரணங்கள் அல்ல, நியாப்படுத்தல்தான்.

புத்தகங்கள் எனக்கு அபின் மாதிரி, புத்தகங்கள் எனக்கு எம்பதி உணர்வு தருகின்றன, ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடிக்கும்போது, என் கருணை வட்டம் முன்னை விட இப்போது இன்னும் சற்று விரிந்திருப்பதை உணர்கிறேன், என்றெல்லாம் சொல்ல முடியுமா என்ன! சொன்னால்தான் நம்பி விடப் போகிறீர்கள்.

புத்தகங்களை மேற்கொண்ட காரணங்களுக்காகப் படித்தது அந்தக் காலம். இப்போது இந்த மாதிரி யோசிக்க  ஆரம்பித்து விட்டேனா, புத்தகங்களைப் பொழுது போக்கவும் சந்தோஷமாக இருக்கவும் படித்த காலம் போய், வாசிப்பு அனுபவம் ஒரு அலுவல் போல் ஆகி விட்டது- அதாவது ஒன்றும் செய்யாமல் வெறுமே பிரசண்ட் சார் என்று இருக்கிறேன் என்பதை சொல்ல வருகிறேன். தற்போது படிப்பதற்காக எடுத்து வைத்து அட்டையைப் பார்த்து நான் திகைத்துக் கொண்டிருக்கிற புத்தகங்களின் லிஸ்ட் பாருங்கள்-

இதில் எதுவாவது படிக்கிற மாதிரி இருக்கிறதா?  இதெல்லாம் பார்ப்பதற்குத்தான் வைத்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டுவதில்லை. முக்கி முனகி ஒவ்வொன்றையும் படிப்பதற்குள் போதும் போதும் என்று இருக்கிறது. புத்தகம் வாசித்தல் லேகியம் சாப்பிடுகிற மாதிரி ஆகி விட்டது.

முழுதும் அப்படித்தானா என்றால் அதுவும் இல்லை. இந்தப் பட்டியலில் விட்டுப் போன புத்தகங்கள் இவை-

இவையெல்லாம் என்ன? ஐந்தாவது படிக்கிற என் மகனுக்கு நான் படித்துக் காட்டும் புத்தகங்கள். இரவு பாயில் படுத்துக் கொண்டு இதை நாங்கள் இருவரும் படிக்கிறோம்- அதாவது நான் படிக்கிறேன், அவன் எதுவும் சொல்லாமல் விரிந்த கண்ணும் திறந்த வாயுமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். கதையைப் படித்துக் காட்டுகிற வேகத்தில் நான் ஆவேசம், கெஞ்சல், கொஞ்சல் என்று நவரசங்களையும் என் குரலில் பிழிந்து காட்டி ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறேன். சில சமயம் என் பையன் எப்போதோ தூங்கிப் போய்விட்டது (ஆமாம் சார், நான் என்ன சிவாஜியா என்ன- என் நடிப்பைப் பார்த்தால் கொட்டாவிதான் வரும். அதற்குத்தானே கதை சொல்கிறது!) லேட்டாகத்தான் தெரிகிறது- அடப்பாவி, இந்தக் கதையை உனக்காகத்தானா இத்தனை நேரம் படித்துக் கொண்டிருந்தாய்? என்று அந்த சமயம்தான் உரைக்கிறது.

உண்மைதான், கனவுகள் கலைந்துபோய் விட்ட இந்த நாட்களில், புதிய உலகங்களின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்ட நிலையில், என் மகன் மூலமாகத்தான் நான் இப்போது புத்தகங்களை உண்மையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, அதற்கப்புறம் இது முடியாது.

அந்த நாளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது- ஆனால் அதனால் என்ன? நீங்கள் இருக்கிறீர்களே!

யாரோ ஒருவர் விரிந்த கண்ணும் திறந்த வாயுமாக இதைப் படித்துக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு மொக்கை போட வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள்!


ஏன் படிக்கிறேன்?
by RV on செப்டம்பர் 8, 2010

 

எனக்கு கொஞ்ச நாளாகவே இந்த கேள்வி இருக்கிறது. எதற்காக படிக்கிறோம், குறிப்பாக புனைகதைகளை எதற்காக படிக்கிறோம்?

தை கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் நம் ரத்தத்திலேயே ஊறி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அம்மாவும் பாட்டியும் தூங்க வைக்க சொன்ன கதைகளும், காலட்சேபமும், தெருக்கூத்தும், சினிமாவும், படித்த புத்தகங்களும், தன்னை எம்ஜிஆராகவும் ஜெய்ஷங்கராகவும் நினைத்து கண்ட பகல் கனவுகளும் கதைதானே! அதில் ஒரு சந்தோஷம், நிறைவு! அந்த சந்தோஷத்தை என்னால் லாஜிகலாக விளக்க முடியவில்லை. ஆனால் எப்போது அந்த நிறைவு கிடைக்கிறது, அந்த நிறைவுக்கு என்ன அறிகுறி என்றாவது சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

அறிகுறி என்றால் இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று செக் செய்கிறேனா இல்லையா என்பதுதான். இன்று ஒரு கதையை கேட்கும்/பார்க்கும்/படிக்கும்போது அந்த கதையை நம்முடைய மன அலமாரியில் எங்கே பொருத்தலாம், சிறந்த புத்தக வரிசையிலா, டைம் பாஸ் வரிசையிலா, இல்லை குப்பையா என்று மனதில் எண்ணங்கள் ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. ஒரு புத்தகத்தை படிக்கும்போது இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று புரட்டி கடைசி பக்கத்தின் எண்ணைப பார்த்தால் எண்ண ஓட்டங்கள் மறையவில்லை என்று நிச்சயமாக சொல்லலாம். இப்படி எத்தனை பக்கம் இன்னும் இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு அனேகமாக எல்லா துப்பறியும் கதைகளிலும் நடக்கும், சில சமயம் க்ளைமாக்சை முதலில் படித்துவிடுவேன். :-) அப்படி எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் படிப்பதிலோ, பார்ப்பதிலோ மனம் முழுமையாக ஆழ்ந்தால் படிப்பது சிறந்த புத்தகம், பார்ப்பது சிறந்த சினிமா. அப்படி முழுமையாக மனம் ஆழ்வது என்பது மேலும் மேலும் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் புத்தகங்கள் படிக்கும்போது அப்படி நடந்தது. ஏழாவது உலகம், விஷ்ணுபுரம், பொய்த்தேவு மாதிரி புத்தகங்கள் படிக்கும்போது வேறு எண்ணம் வரவில்லை. ஆனால் இதய நாதம் மாதிரி ஒரு புத்தகம் படிக்கும்போது எண்ண ஓட்டங்கள் மறைவதில்லை. இப்போதெல்லாம் முக்கால்வாசி புத்தகங்களில் கடைசி பக்க எண்ணை பார்ப்பது நிகழ்கிறது.

மிச்ச கால்வாசி புத்தகங்களுக்காகத்தான் படிக்கிறேன். அந்த கால்வாசி புத்தகங்களின் குணாதிசயங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்தால்:

  • மனிதனின் உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை உண்மையாக காட்டும்போது

    அந்த நிலையை – அன்பு, பாசம், நட்பு, நேர்மை, உண்மை என்ற உயர்ந்த நிலையாகட்டும், இல்லை குரூரம், சுயநலம், வெட்டி பந்தா, கயமைத்தனம், போலித்தனம் மாதிரி தாழ்ந்த நிலையாகட்டும் – அதை உண்மையாக சித்தரிக்கும்போது பெரும் மன எழுச்சியோ, இல்லை சீ, மனிதன் இவ்வளவுதானா என்ற வெறுப்போ எழுகிறது. அந்த அன்பும் பாசமும் குரூரமும் சுயநலமும் நம்முள்ளும் இருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது. To Kill a Mockingbird படிக்கும்போது என் குழந்தைகளுக்கும் எனக்கும் அட்டிகசுக்கும் ஸ்கவுட்டுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும் என்று தோன்றியது. (படித்து பத்து வருஷத்துக்கு பிறகுதான் என் முதல் பெண் பிறந்தாள்.) அப்போதெல்லாம் நண்பர்கள் யார் கர்ப்பமானாலும் அவர்களுக்கு இந்த புத்தகத்தை வாங்கி பரிசளிப்பேன். உதாரணமாகமோக முள், பின் தொடரும் நிழலின் குரல், Les Miserables போன்ற புத்தகங்களை படிக்கும்போது இப்படி உணர்ந்தேன்.

  • சிந்திக்க வைக்கும்போது

    புனைகதைகளுக்கு சிந்திக்க வைக்கும் ஆற்றல் அதிகம். கற்பு, பெண்ணியம் என்று பக்கம் பக்கமாக எழுதலாம். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற ஒரு வரி கற்பு என்ற கருத்தில் இருக்கும் செயற்கைத்தன்மையை காட்டிவிடுகிறது. சீதையின் அக்னி பிரவேசத்தைப் பற்றி கேட்ட அகலிகை மீண்டும் கல்லானாள் என்ற நாலு பக்க கதை ஆயிரம் ஆயிரம் வருஷமாக வழிப்படப்படும் ராமனின் முரண்பாட்டை காட்டிவிடுகிறது. Atlas Shrugged-இல் ஃபிரான்சிஸ்கோ டன்கொனியா money is the root of all evil என்ற கருத்தைப் பற்றி ஆற்றும் ஒரு மூன்று பக்க “சொற்பொழிவு” பணக்காரன் என்றால் கெட்டவன் என்றே கேட்டு வளர்ந்த என்னை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது.All Quite on the Western Front நாவல் போர் என்றால் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பங்களாதேஷ் கொண்டாள் மாதிரி ஹீரோக்களுக்கான, வீரம் செறிந்த ஒரு நிகழ்வு என்று நினைத்திருந்த எனக்கு போரின் dehumanizationபற்றி புரிய வைத்தது.
    ஆனால் இவற்றுக்கு ஒரு குறை உண்டு. பொன்னகரம் கதை கற்பைப் பற்றி பெரிதாக கவலைப்படாத ஒரு சமூகத்திடம் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்? அவர்களுக்கு நளாயினி கதையோ, சீதையின் கதையோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். (அப்படித்தான் இந்திய பழங்குடி சமூகங்களிடம் நடந்திருக்க வேண்டும் என்பது என் தியரி.) உங்களுக்கு போதிக்கப்பட்ட, நீங்கள் கற்ற சிந்தனைகளை தாண்டும் கதைகள் உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாரிடமும் ஏற்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
    சில science fiction கதைகள் இந்த குறைபாட்டை தாண்டுகின்றன. அவற்றில் மனித இனத்தின் அடிப்படை கொஞ்சம் மாற்றப்படுகிறது. உதாரணமாக உர்சுலா லீ க்வினின்sexuality பற்றிய விஞ்ஞானக் கதைகள் – ஒரு கதையில் மனித இனத்துக்கும் ஒரு mating season உண்டு. அப்போது கிடைக்கும் stimuli-ஐ வைத்து நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ மாறலாம். சீசன் முடிந்த பிறகு நீங்கள் “பழைய நிலைக்கு” திரும்பிவிடுவீர்கள். இப்படி ஒன்று நடந்தால் மனித சமூகம் – குடும்பம், உறவுகள், காதல், கத்தரிக்காய் – எல்லாம் என்ன ஆகும்?

  • ஒரு புதிய உலகம் என் கண்ணால் முன்னால் விரியும்போது

    மகாபாரதம், விஷ்ணுபுரம், ஹாரி பாட்டர், Lord  of  the  Rings, மோக முள், Atlas  Shrugged, One Hundred Years of Solitude, To Kill a Mockingbird மாதிரி புத்தகங்களை குறிப்பிடலாம். அந்த உலகத்தின் எழுதப்படாத விதிகள், அவர்கள் மனநிலை புரியும்போது, அதை ஒரு சித்திரமாக எழுத்தாளன் தீட்டும்போது, அதில் முழுமையாக ஆழ்ந்துவிடுகிறேன்.
    ஒரு உதாரணம் சொல்கிறேன் – செயின்ட் எக்ஸுப்பரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த ஒரு tribal தலைவன் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்கும் அனுபவத்தை எழுதுகிறார் – அந்த தலைவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தானாம் – “I can’t understand this!” பாலைவனம், தண்ணீர் தட்டுப்பாடு என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது. ஒரு வாக்கியத்தில் அந்த tribe-க்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துவிடுகிறது.
    நுண்விவரங்கள் நிரம்பி இருந்தால் மீண்டும் மீண்டும் படிக்கவும் தோன்றுகிறது, ஒவ்வொரு முறை படிக்கும்போது மிஸ் செய்துவிட்ட நுண்விவரங்கள் தெரிகின்றன. ஹாரி பாட்டரில் கதையை விட, அதில் மாஜிகல் வாழ்க்கை முறையை காட்டும் விஷயங்கள் – நகரும் புகைப்படங்கள்+ஓவியங்கள், க்விட்டிச் விளையாட்டு, Marauder’s map, மாஜிக் செய்தித்தாள்கள், மாஜிக் tabloids – எல்லாம் சுவாரசியத்தை கூட்டுகின்றன.
    இதில் ஒரு sub-category உண்டு. ஒரு தருணத்தை புகைப்படம் மாதிரி அருமையாக capture செய்யும் கதைகள். அசோகமித்ரன் இதில் நிபுணர். காலமும் ஐந்து குழந்தைகளும்,புலிக்கலைஞன், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஒரு நொடி பற்றிய ஒரு கதை என்று நிறைய சொல்லலாம்.

  • முடிச்சுகள் பர்ஃபெக்டாக அவிழும்போது

    இது ஒரு கலை. பொன்னியின் செல்வன் மிக சிறந்த உதாரணம். பல ஷெர்லாக் ஹோம்ஸ்கதைகள், சில அகதா கிறிஸ்டி நாவல்களை சொல்லலாம்.

  • வாய் விட்டு சிரிக்கும்போது

    வாய்விட்டு சிரிப்பது அபூர்வமாகிக் கொண்டே போகிறது. சாகியின் Open Window நினைவு வருகிறது. ஒரு காலத்தில் வுட்ஹவுஸ் எழுத்துகளைப் படித்துவிட்டு ரயிலிலும் பஸ் ஸ்டாண்டிலும் சிரித்துவிட்டு பிறகு எல்லாரும் என்னை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்து தலை குனிந்து படித்திருக்கிறேன். இப்போது வுட்ஹவுசைப் படித்தால் புன்முறுவல் வருவதே அபூர்வமாக இருக்கிறது.

  • சிறு வயதில் இருந்த ஒரு காரணம் இப்போது இல்லை. பகல் கனவு!

    பகல் கனவு சந்தோஷம் தர காரணம் சிம்பிள். It strokes the ego. செயற்கரிய செயல் செய்வதாக fantasize செய்யும்போது ஒரு அற்ப பெருமை. ஆனால் பகல் கனவு என்பதெல்லாம் சின்ன வயதிலேயே போய்விட்டது. அதாவது சின்ன வயதில் இருந்த ஒரு காரணம் காலி.

    உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். படிப்பதற்கு இன்னொரு prosaic காரணமும் இருக்கிறது. நிறைவு/சந்தோஷம் மட்டுமில்லை, பழக்கமும் மிக முக்கியமான காரணம் மனதும் கையும் பல சமயங்களில் அனிச்சையாக புத்தகத்தை நாடுகின்றன. சின்ன வயதில் வேர்க்கடலை சுற்றி வந்த பேப்பரை எல்லாம் கூட படிப்பேன். அப்போது எல்லா புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது. பதின்ம வயதில் கணிசமான நேரத்தை என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று லிஸ்ட் போடுவதில் செலவழித்தேன். முதல் முறையாக எங்கள் கிராம நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் கூட படிக்க முடியாது என்று ஒன்பது, பத்து வயதில் உணர்ந்தபோது ரொம்ப துக்கமாக இருந்தது. அப்போது ஆரம்பித்த பழக்கம் – சிலருக்கு சிகரெட் மாதிரி எனக்கு இது ஒரு addiction-தானோ என்று சில சமயம் தோன்றுகிறது.

    எனக்கு இருக்கும் காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன காரணங்கள், என்னுடைய காரணிகளில் ஏதாவது உங்களுக்கும் பொருந்துமா என்று எழுதுங்களேன்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: வாசிப்பு அனுபவங்கள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்” பதிவு குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
    ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர்பாஸ்கரின் பதிவு பற்றி நான்


    பிரசுரம்

    அன்புள்ள அர்விந்த்,

    உங்கள் கடிதத்துக்கு விரிவாகவே பதில் சொல்கிறேன். நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதனால். பலமுறை சொல்லிய விஷயங்கள்தான்.

    நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதனால் அச்சு ஊடகங்களில் எழுத முனைவது நல்லதே. ஏனென்றால் அங்கே ஒரு போட்டி உள்ளது. அதன் விளைவான நிராகரிப்பும் உள்ளது. அந்த நிராகரிப்பு ஓர் எதிர்சக்தியாக விளங்கி உங்கள் தரத்தை கூட்ட உங்களுக்கு உதவும்.

    ஆனால் இதற்கும்கூட பிரபல இதழ்கள் உதவாது. பிரபல இதழ்களில் எழுத தேவையானது மொழி, வடிவம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி மட்டுமே. என் கல்லூரி நாட்களிலேயே நான் இந்த பயிற்சிக்குள் வந்துவிட்டேன். ஆரம்பத்தில் ஒரு சவாலாக பல பேர்களில் கதைகள் எழுதினேன். கிட்டத்தட்ட நூறு கதைகள் அச்சில்வந்துள்ளன. எந்தக்கதையும் பிரசுரமாகும் என்ற நிலை வந்ததும் ஆர்வம் போய்விட்டது. அதன்பின் அதன்மூலம் கிடைக்கும் சிறு தொகைக்காக மட்டுமே எழுதிதள்ளியிருக்கிறேன். பிரபல இதழ்களில் உங்கள் மொழியை பயில்வதற்காக மட்டுமே எழுதலாம்.

    1990ல் நான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அப்போது அறிவிக்கப்பட்ட எல்லா இலக்கிய போட்டிகளுக்கும் என் வருங்கால மனைவி பெயர் உட்பட பல பெயர்களில் கதைகள் அனுப்பினேன். அத்தனை போட்டிகளிலும் பரிசுபெற்றேன். அன்று அது பெரிய தொகை. அதைவைத்தே வீட்டுச்சாமான்கள் வாங்கி வாழ்க்கையை தொடங்கினேன். ‘செக்குக்கு பதிலா கதை குடுப்பீங்க போல’ என்று ராமசாமி கிண்டல்செய்தார். ஆனால் தனிப்பட்ட முறையில் பின்பு அதை நான்செய்யக்கூடாது என்றார். கதையின் தொழில்நுட்பம் கைவந்தவன் பின்னர் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்றார்.

    ஆகவே சிற்றிதழ்களிலேயே நீங்கள் எழுத முயலவேண்டும். அவர்களின் தர அளவுகோலை எட்ட முயலலாம். ஆனால் அதுவும் சில நாட்களிலேயே கைவந்துவிடும். அதன் பின்பு நீங்கள் மானசீகமாக போட்டிகளை உருவாக்க ஆரம்பித்துவிடவேண்டும்.

    பின் சிலவருடங்கள் கழித்து சிற்றிதழ்களில் எழுத ஆரம்பிக்கும்போதே நான் முழுக்க தொழில்நுட்பத்தேர்ச்சி அடைந்த எழுத்தாளனாகவே இருந்தேன். அங்கும் என் கதைகள் ஏதும் நிராகரிக்கப்பட்டதில்லை. கணையாழியில் என் முதல்கதையை அசோகமித்திரன் ஒரு சிறப்புக்குறிப்புடன்தான் வெளியிட்டார். அதன் பின் நானே என் எதிர்சக்திகளாக அதுவரை இருந்த எழுத்துக்களை முழுக்க எடுத்துக்கொண்டேன். சுந்தர ராமசாமியையும் அசோகமித்திரனையும் என் போட்டியாளர்களாக எடுத்துக்கொண்டேன். இந்நிலையில் உங்களுக்கு அச்சு ஊடகமோ அதன் ஆசிரியர்களின் தேர்வோ எதிர்சக்தி அல்ல . உங்கள் வாசகர்கள் தான்.

    அதன்பின் ஒருகட்டம் வரும். நீங்கள் முன்னால் எழுதிய எழுத்துக்களே உங்களுக்கான எதிர்சக்திகளாக ஆகும். எனக்கு இன்று நான் இதுவரை எழுதியவற்றை விட தாண்டிச்சென்று எழுதும் சவாலே உள்ளது. அது நானே விதித்துக்கொள்வது. இந்நிலையில் உங்கள் எதிர்சக்தி நீங்கள், உங்களின் சுய அளவுகோல்மட்டுமே.

    உண்மையிலேயே பிரசுரம் ஒரு சிக்கலே அல்ல என்பதை எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். பிரசுரமாகுமா என்ற பதற்றம் இளமையில் இருக்கலாம். நாமே பெருமைகொள்ளும் ஒரு நல்ல ஆக்கம் நம்மால் எழுதப்பட்டதாக நாம் உணரும் கணமே பிரசுரம் சம்பந்தமான அச்சம் சுத்தமாக இல்லாமலாகிவிடும்.

    உண்மையில் எல்லா ஊடகங்களும் நல்ல ஆக்கங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இன்று நல்ல எழுத்து சிக்காமல் ஊடகங்கள் தேடும் அளவுக்கு ஊடகப்பெருக்கம் உள்ளது. ஒருசில நல்ல ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்றாலே தெரியும் தேடி வந்து படைப்புகள் கேட்பார்கள்.

    என்னைப்பொறுத்தவரை நிகழில் ’படுகை’ வெளிவந்த காலம் [1986] முதல் என்னிடம் ஊடகங்கள் தொடர்ந்து படைப்புகளை கோரும் நிலையே இருந்துள்ளது. பாதிக்கதைகளை ஊடகங்கள் கோரியதனால் உருவான கட்டாயம் மூலம் எழுதியிருக்கிறேன். எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுதச்செய்யும் என்பதை எழுத்தாளர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

    பல கதைகளை பிரசுரிக்க எனக்கு அன்று சிற்றிதழ்கள் கிடைக்கவில்லை. காரணம் எண்பதுகளில் சிற்றிதழ்கள் குறைவு. அவை நூல்களிலேயே வெளிவந்தன. ‘மடம்’ போன்ற பலகதைகள். அவை நூலிலேயே வாசிக்கப்பட்டன.

    பிரசுரமாகும் இதழின் பிரபலம் ஒரு அளவுகோலே இல்லை. நான் எழுதிய கதைகளில் அதிகமாக பிரபலமானது மாடன் மோட்சம். அது 200 பிரதிகள் அச்சிடப்பட்ட புதியநம்பிக்கை [பொன் விஜயன் நடத்திய சிற்றிதழ்] வெளியிட்ட கதை. கதை நன்றாக இருந்தமையால் அது பலமுறை மறுபிரசுரமாகியது. படுகை, போதி முதலிய புகழ்மிக்க கதைகல் அச்சிடப்பட்டது 500 பிரதி அச்சிடப்பட்ட நிகழ் சிற்றிதழில் [ஞானி நடத்தியது]

    என்னுடைய மிகச்சிறந்த பல கதைகள் ஓம் சக்தி என்ற இதழால் கேட்டு வெலியிடப்பட்டன. அந்த இதழ் நவீன இலக்கிய இதழாக வரவில்லை. ஆனால் என் கதைகளை அங்கும் தேடிவந்து வாசித்தார்கள். அக்கதைகள் பிறகதைகளை போலவே புகழ்பெற்றன. ஆகவே நல்ல கதை எழுதுவதே சவால். அச்சாவது அல்ல

    எழுத்தாளனாக என் வளர்ச்சியில் பங்களிப்பாற்றியவர்கள் என சுந்தர ராமசாமி, ஞானி , கோமல் சுவாமிநாதன் ஆகியோரைச் சொல்வதுண்டு. அது எனக்கு கற்பித்து என்னுடன் விவாதித்து என்னை விமர்சித்து வளரச்செய்தமைக்காக. நான் அறிமுகமான வருடம் முதல், 1986ல் நிகழில் படுகை அச்சான மறுவாரம் முதல், கிட்டத்தட்ட இன்றுள்ள இலக்கிய அங்கீகாரத்துடன் மட்டுமே இருந்து வருகிறேன். அந்த ஒரு கதையைப்பற்றி இந்திராபார்த்தசாரதி சுஜாதா சுந்தர ராமசாமி அனைவருமே எழுதினார்கள்.

    இதுவே கோணங்கிக்கும். மதினிமார்கள் கதை என்ற ஒரேகதைதான் மீட்சியில் வெளிவந்தது . ‘புதிய புதுமைப்பித்தன்’ என்று அவரை ஞானி கொண்டாடினார். எஸ்.ராமகிருஷ்ணன் சுபமங்களாவில் வேலையில்லாதவனின் ஒருநாள் குறித்து எழுதிய ஒரு கதையுடன் எழுத்தாளராக ஆனார். அந்த கதைக்கு நான் வாசகர்கடிதம் எழுதி பின் ஒரு கட்டுரையும் எழுதினேன். சுந்தர ராமசாமி தந்தி அடித்தார். அசோகமித்திரன் கடிதம் போட்டார். அ.முத்துலிங்கம் மீண்டும் எழுதவந்தபோது ஆப்கானிஸ்தான் பற்றி அவர் எழுதி இந்தியா டுடேயில் வந்த முதல் கதை மூலமே தமிழகத்தில் அத்தனை நல்லவாசகர்களிடமும் கவனம் பெற்றார். நான் அதற்கொரு வாசகர் கடிதம் எழுதினேன்.

    கோணங்கியும் நானும் சிற்றிதழில் எழுதினோம். ராமகிருஷ்ணன் நடு இதழில். அ.முத்துலிங்கம் பேரிதழில். விளைவு ஒன்றுதான். ஆகவே நல்ல கதை எழுதுவதே முக்கியம். இதுவரை எழுதப்பட்ட எந்தக்கதையுடனும் இணையாத, ஒரு அடியேனும் முன்வைக்கிற, ஒருகதை போதும். நீங்கள் எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள். பிரசுரங்கள் உங்களை தேடிவரும். நீங்கள் எவரையும் தேடிச்செல்லவேண்டியதில்லை.

    மாறாக பிரசுரம் பற்றிய பதற்றம் இருந்துகொண்டிருந்தது என்றால் பிரசுரத்துக்காக எழுதும் பிழையைச் செய்வீர்கள். அது உங்கள் தனித்தன்மையை மெல்ல மெல்ல அழிக்கும். தனித்தன்மை இழக்கப்பட்ட பின் எத்தனை கதை பிரசுரமானாலும் பயனே இல்லை. அன்னம் என்ற எழுத்தாளரை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாகர்கோயில்காரர். குமுதம் விகடன்களில் ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவரது இலக்கிய இடம் என்ன? எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

    5 இதழ்களுக்கு உண்மையில் இடம் என்ன? ஜோ.டி.குரூஸையும் சு.வெங்கடேசனையும் விலக்கி தமிழிலக்கியத்தை எழுதிவிட முடியுமா? அவர்கள் இன்றுவரை எந்த இதழ்களிலும் எதையும் எழுதியதில்லை. வெண்ணிலை என்ற தொகுதியில் சு.வேணுகோபால் எழுதிய எந்தக்கதையுமே எந்த இதழிலும் வெளியாகவில்லை. தமிழின் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று அது என இன்று வாசகர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். உண்மையில் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட ஒரு நூறுபக்கத்தை உங்களால் எழுத முடிந்தால் தமிழினி வசந்தகுமாரை சென்று பாருங்கள். மீதி அனைத்தையும் அவரே சொல்லிக்கொடுப்பார்.

    ஆக, ஓர் எழுத்தாளனாக உள்ளூர உணர்ந்தீர்கள் என்றால் பிரசுரம் என்பதை ஒரு பிரச்சினையாகவே உணர மாட்டீர்கள். நீங்கள் எழுதி மேஜை டிராயரில் போட்டு வைத்திருந்தால் போதும். அதை தேடி எடுத்து அச்சிட ஆட்கள் வருவார்கள். நம்புங்கள், யுவன் சந்திரசேகர் அப்படி உண்மையிலேயே மேஜை டிராயரில்தான் போட்டு வைத்திருந்தான். நான் அதை அவன் கதறக் கதறப் பிடுங்கி சுப்ரபாரதி மணியனின் கனவு இதழில் பிரசுரத்துக்கு கொண்டுவந்து அவனை எழுத்தாளனாக ஆக்கினேன்.

    எழுத்தின் சவால்களை எழுத்திலேயே சந்தியுங்கள்.அப்போது எழுத்து என்பது மிக உல்லாசமான ஒரு நிகழ்வாக ஆகும். அந்த இன்பம் உங்களை மேலும் மேலும் எழுதச்செய்யும். பிரபலம் அல்லது பிரசுரம் என்பதை அளவுகோலாகக் கொண்டீர்கள் என்றால் மெல்ல மெல்ல மனம் கசப்புகளால் நிறையக்கூடும்

    வாழ்த்துக்கள்

    ஜெ