மழைக்காடுகள் நிரம்பிய ஒரு பெரும் நிலப்பரப்பு கோசாம்பி காட்டும் அதிபுராதன இந்தியா. அங்கு வனத்தாவரங்கள் போல, மிருகங்கள் போல பரஸ்பரத் தொடர்பற்ற பழங்குடிச் சமூகங்கள் வாழ்கின்றன. உயிர் வாழ்தல், பரவிப் பெருகுதல் ஆகியவற்றுக்காக அவை காலப்போக்கில் தங்களுக்குள் போரிட ஆரம்பித்தன. போர் மூலம் உறவாடிக் கொண்டு தங்களை விருத்தி செய்து கொண்டன.
வனம் நடுவே வனத்தின் ஒரு பகுதியாக இருந்த `ஊர்’ வளர்ந்து நாடுகளாகியது, நகரங்களாகியது. நகரங்களும் சாம்ராஜ்யங்களும் மேலும் மேலும் உக்கிரமாக வனத்துடன் போர் புரிந்தன. வனம் இயற்கையின் ஆயுதங்களுடன் களத்தில் இருந்தது. நகரம் கலாச்சாரத்தின் ஆயுதங்களுடன் . தேவ அசுர யுத்தங்களையும், ராமாயண மகாபாரதக் கதைகளில் வரும் பெரும் போர்களையும் எல்லாம் கோசாம்பி இப்படித்தான் புரிந்து கொள்கிறார்.
யோசிக்கப் புகுந்தால் இம்மனச்சித்திரத்தை முழுமைப்படுத்தும் தகவல்கள் நம்முன் வந்து குவிந்தபடியே இருக்கும். நமது நாடோடிக் கதைகளில் பாதி விறகுவெட்டிகளின் கதைகள் தான். நமது கதாபாத்திரங்கள் ஊரில் இருந்து (மன்னனாலோ கொடுமைக்கார சித்தியாலோ) புறக்கணிக்கப்படும்போது காட்டுக்குத்தான் ஓடுகின்றன. துறவிகள் `அனைத்தை’யும் துறந்து காட்டுக்குச் செல்கிறார்கள். மன்னர்கள் காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறார்கள். `காடழித்து நிலம் பெருக்கி’ வளம் சேர்க்கிறார்கள்.
கலாச்சாரம் பகல் என்றால் காடுதான் இரவு. வாழ்க்கைக்கு எதிரானது அது; எனவே சுடுகாடும்கூட. மனிதன் என்பதற்கு நேர் எதிரான சொல்லாக நம் மனதில் காட்டுமிராண்டி என்ற சொல் உறைந்துள்ளது.’நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்கிறாள் அவ்வை. நிலத்துக்கு நலம் சேர்ப்பது மக்களே என்கிறாள்.
அதே சமயம் `வனவளம்’ தான் நமது நகரங்களை போஷித்து வந்துள்ளது. மலையிலிருந்து வரும் அருவி முதல் அகிலும் சந்தனமும் வரை நகரங்களை நோக்கிப் பெய்தபடியே இருந்தாக வேண்டியுள்ளது. காட்டிலிருந்து ஒரு தொப்புள் கொடி நகரத்தை வந்து பிணைத்துக் கொண்டு அதனூடாக உதிரமும் அமுதமும் தந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்காவியங்களில் பெரும்பாலானவை காடும் நாடும் உரையாடியதன் விளைவுகள். ஆதி காவியங்கள் முதல் `பிருகத் கதா’ வரை இதற்கான ஐதீகப் பின்புலத்துடன்தான் நம்முன் உள்ளன.
ஆனால், காடு நோக்கித் திரும்பும் பார்வை தொழிற்புரட்சியின் விளைவான நகர்மயமாக்கம் இந்தியாவை தழுவிக்கொண்ட பிறகுதான் தொடங்கியது. காடழிவையும் நகர்மயமாதலையும் பல கோணங்களில் அணுகும் நாவல்கள் இந்திய மொழிகளில் உள்ளன. காட்டை அழித்து வேளாண் நிலத்தை உருவாக்குவதை இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டமாகச் சித்தரிக்கும் நாவல்கள் ஒருவகை. எஸ்.கெ.பொற்றெக்காட்டின் ‘விஷக்கன்னி’ [மலையாளம்] சிறந்த உதாரணம். காட்டை ஒரு சொத்தாக , மூலதனமாக மட்டுமே பார்க்கும் இப்பார்வையையே மகாஸ்வேதா தேவியின் `காட்டின் உரிமை’ நாவலிலும் காண்கிறோம். காடு எளிய பழங்குடிகளிடமிருந்து பிடுங்கப்படுவதை சித்தரிக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் காலகட்டத்தில் எழுதப்பட்ட விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ இதிலிருந்து அலாதியாக வேறுபட்டு நிற்கும் பெரும் படைப்பு. தமிழில் த.நா. குமாரசாமியால் `வனவாசி’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்ட இப்புதினம் பிறகு மறுபதிப்பு வராவிட்டாலும் தமிழ்ச் சூழலால் கூர்ந்து படிக்கப்பட்டு உள்வாங்கப்பட்ட ஒன்று.
1938ல் வங்க மொழியில் வெளியான இந்நாவலை அக்கால கட்டத்தின் பொதுவான கருத்தியல் உத்வேகங்களுடன் ஒப்பிட்டால் பெரும் வியப்புதான் ஏற்படும். அது இந்திய `நவீனமய’ மாதலின் காலகட்டம். மதிப்பீடுகள் மாற்றியமைக்கப்பட்டன. மதம் உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டது. கிராமங்கள், சாலைகள் மூலம் இணைக்கப்பட்டன. தகவல் தொடர்பு ஊடகங்கள் உருவாயின. ஒருங்கிணைந்த மைய அரசு உருவாயிற்று. இயந்திர யுகம் மீது அலாதியான காதல் பிறந்த காலம். இயந்திரம் மனிதனை மீட்கும் என்ற நம்பிக்கை மாற்று மதம் போல பரவிய காலகட்டம். சகல சக்தியாலும் இயற்கையை சுரண்டுவதே கலாச்சாரத்தின் இயல்பான இயங்குமுறை என்ற ஐரோப்பிய தொழில்யுக நம்பிக்கை இங்கு வேரூன்றியது அப்போது.
நவீனயுக மதம் (ராஜா ராம் மோகன் ராய்) நவீன கலைகள் (தேவேந்திர நாத் தாகூர்) நவீன இலக்கியம் (பங்கிம் சந்திர சட்டர்ஜி) நவீனப் பொருளாதாரம் (மகாலானோபிஸ்) என்று நவீன யுகத்தின் எல்லா முகங்களிலும் முக்கிய ஆளுமைகள் உருவானது வங்க மண்ணில்தான். மொத்த கலாச்சாரமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி பதற்றத்துடன் உத்வேகத்துடன் முன்னேறியபோது நேர் எதிராக திரும்பி நடந்தது. இந்நாவல். ஆரண்யக் `ஊரில்’ இருந்து `காட்டுக்கு’ செல்பவனின் கதை. ]
ஆரண்யக் 1932 முதல் பிரபாஷி என்ற வங்க இதழில் தொடராக வெளிவந்தது. பிகார் அருகே உள்ள பாகல்பூர் பகுதி காடுகளில் 1020களில் கொஞ்சநாள் விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய பணியாற்றினார். அந்நினைவுகள் அவரை தொடரவே இந்நாவலை அவர் எழுதினார். கதைநடக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பகுதி காடுகளாக இருந்தது. காடுகளை அழிப்பது முன்னேற்றமாக கருதப்பட்டு அந்த சிந்தனை பிரிட்டிஷாரால் இந்திய மனத்திலும் கட்டமைக்கப்பட்டது. 1970 வரைக்கும்கூட எந்தவித மனச்சங்கடமும் இல்லாமல் இந்திய அரசும் சமூகமும் தேவைக்கெல்லாம் காடுகளை அழித்தனர். இந்தியக்காடுகளில் 70 சதவீதம் இந்த ஐம்பது வருடங்களில் அழிந்து விட்டன என்பது வரலாறு. வனவாசி அந்த அழிவின் சித்திரம்
விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய இந்தியாவின் மாபெரும் நாவலாசிரியர்களில் ஒருவர். 1894ல் பிறந்த 1950ல் மறைந்தார். அவரது சுயசரிதைத்தன்மை கொண்ட நாவலான பாதேர் பாஞ்சாலி மற்றும் அதன் நீட்சியான அபராஜிதோ ஆகியவை சத்யஜித் ரேயால் மூன்று படங்களாக எடுக்கப்பட்டு உலகப்புகழ்பெற்றன. [பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார்] திரைப்படங்களை விட பல மடங்கு அழகியவை அவரது நாவல்கள்.தமிழில் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ ஆகியவற்றை ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.குமாரசாமி ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
மகானந்த பந்த்யோபாத்யாய என்ற ஏழை பௌராணிகரின் மகனாக பிறந்த விபூதிபூஷன் கல்கத்தாவில் சுரேந்திரநாத் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இளவயதில் கௌரிதேவி என்ற பெண்ணை மணாந்தார். குழந்தைப்பேறின்போது கௌரிதேவி மரணம்டைந்தார். அது விபூதிபூஷனின் பல கதைகளில் ஆழமான அகக்கொந்தளிப்பாக வெளிப்படுகிறது.
அதன்பின் ரமா சட்டோபாத்யாய என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரே மகன், தாராதாஸ். ஆசிரியராகவும் தோட்டநிர்வாகியாகவும் பணியாற்றிய விபூதிபூஷன் காட்டின்மேல் அபாரமான காதல்கொண்டிருந்தார். தினமும் பல கிலோமீட்டர் நடப்பது அவரது வழக்கம். செடிகள் பறவைகள் குறித்து மிகவிரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.
*
வனவாசி நாவலின் கட்டமைப்பு இதன் அடிப்படைத் தரிசனத்துக்கு மிக உவப்பானதாக உள்ளது. நகரத்தில் குமாஸ்தா வாழ்வு வாழும் ஒருவன் தன் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வங்காள – பிகார் எல்லையில் உள்ள வனப்பிரதேசமொன்றுக்குச் சென்று தங்கியிருந்த நாட்களை நினைவுகூரும் விதமாக அல்லது தொடர்ந்து அந்நினைவுகள் அவனில் மீண்டபடியே இருக்கும் விதமாக, இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வனம் நம்முள் உறையும் ஓரு பழைய `ஞாபகம்’ என்று இந்நாவல் கூறுகிறது போலும்.
கதை சொல்லியான சத்யாசரன் லுப்துலியா என்ற வனப்பகுதிக்கு ஒரு ஜமீன்தாரின் குமாஸ்தாவாக செல்ல நேர்கிறது. அக்காடு முழுக்க அவருக்குச் சொந்தமானது. அதை விவசாய நிலமாக மாற்றும் பொருட்டு விவசாயிகளுக்கு குத்தகைக்குப் பங்கிட்டு கொடுப்பதே அவன் பணி. உண்மையில் `வனவாசி’ காட்டுவது படிப்படியாக கையேறப்பட்டு அழிக்கப்படும் வனத்தின் சித்திரத்தையேயாகும். பிற்பாடு ஆழமான குற்றஉணர்வுடன் கதைசொல்லி நினைவு கூரும் துயரம் படர்ந்த கானகமே நாம் காண்பது. ‘என்னுடைய கைகளில் குருதி படிந்திருக்கிறது. இயற்கையின் ஆடரங்கை நான் என் கைகளாலேயே அழித்தேன்’ என்று அவன் பின்னாளில் எண்ணிக்கொள்கிறான்.
முதலில் காடு சத்யாசரனுக்கு முற்றிலும்பிடிக்கவில்லை. முதலில் அவன் அறிவது அதன் லௌகீகமான சிக்கல்களை. எங்கும் நடந்தே செல்லவேண்டும்.சரியான வழிகள் இல்லை. காட்டுமிருகங்களின் ஆபத்தும் உண்டு. அந்த இடத்தில் மனம் நிலைத்ததும் அவனை உக்கிரமான தனிமை வந்து மூடிக்கொள்கிறது. ‘தனிமை என் நெஞ்சை கல்லாக இறுகவைத்தது’ என்கிறான். பல்லாயிரம் சதுரகிலோமீட்டருக்கு விரிந்து பரந்து பல்லாயிரம் பல லட்சம் உயிக்குலங்களுடன் துலங்கும் காடு அவனுக்கு துணையாக ஆகவில்லை என்ற வசீகரமான மர்மத்தில் இருந்தே வனவாசி நம்மை சிந்திக்கச் செய்கிறது
ஏனென்றால் அவன் நகர மனிதன். அவன் என்பது அவனுடைய பிரக்ஞைதான். அது நகரின் காட்சிகளில், உறவுகளில், சிந்தனைகளில், கலைகளில் இருந்து வடிவமைக்கப்பட்டது. காட்டில் அவந் அன்னியனாகவே இருக்கிறான். காட்டை அவனால் வேடிக்கை பார்க்கவே முடிகிறது. ஆனால் சிலநாட்களில் காட்டின்வேடிக்கையும் பழகிப்போகிறது. காடு மிகச்சாதாரணமாக ,மிக மெல்ல, தன் மகத்தான மௌனத்துடன் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவன் சலிப்புற்ற சாட்சியாக அந்த மலைக்கட்டிடத்தில் இருக்கிறான்
இன்னும் சிலநாட்களில் காடு அவனுக்குள் நுழைகிறது. அவனுடைய மனம் அறியாமலேயே ஆழ்மனம் காட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டது. அவன் வனவாசியாக ஆகிவிட்டதை அவன் அறிவதே இல்லை. இப்போது அவன் அங்கே இருக்கவில்லை, அங்கே வாழ ஆரம்பிக்க்கிறான். அவனது அந்த பரிணாமத்தை நாம் உணர்வதே இந்நாவலின் கதைபோக்கு. பின்னர் அவன் காட்டைவிட்டு வெளியே செல்லநேர்கிறது. இப்போது நகரத்தில் அவன் ஒன்ற முடியவில்லை. அவன் அகத்தில் காடு இருக்கிறது.
வனவாசி காட்டுவது ஒரே ஒரு மழைக்காலம் கொண்ட நடுநிலக் காடு. அதன் மடியில் கதைசொல்லி வந்திறங்கும்போது அது பூத்து மலர்ந்து அவனை எதிர்கொள்கிறது. நகரவாசியின் மன விலக்கத்துடன் வந்து சேரும் கதாநாயகனை காடு மெல்ல மெல்ல தன் பெரும் அழகுத் தோற்றத்தைக் காட்டி வசீகரித்து மடியில் அமர்த்திக் கொள்கிறது.
`ஆரண்யக்’ தாவரங்களினாலான நாவல். பலவகையான செடிகளும், பூக்களும் அதில் தங்கள் போக்கில் வளர்ந்து பூத்து மறைகின்றன. மழைக்காட்டின் பயங்கரம் இல்லாத வசீகரமான எளிய காடு இது. அட்டை இல்லாத நூலகப்பதிப்பாக இதை வாசித்த வண்ணதாசன் இதன் அட்டையைக் கண்டபோது அதுபச்சையாக இல்லாதது கண்டு மனமுடைந்ததாக சொல்லியிருக்கிறார்.
இந்நாவலில் கால நகர்வு வனத்தில் நிகழும் பருவ மாற்றங்களினூடாக சித்தரிக்கப்படுவதுதான் இதன் உச்சகட்ட காவியத் தன்மை. பசுமை நிரம்பிய காடு வரண்டு உலர்ந்து கருகி காட்டுத்தீ படர்ந்து பின் புதுமழையில் தளிர்த்து அடரும் காட்சி மனித விழிகள் முன் ஒரு பிரபஞ்ச சலனமே நிகழ்ந்து விடுவதுபோல பிரமை கூட்டுகிறது.
நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் கீழே, இருண்டு சூழ்ந்து விரிந்த காட்டின் ஒலிகளை கேட்டபடி குதிரைமீது போகும் கதாநாயகனின் சித்திரம் ஒரு கனவு போல நாவலில் பலமுறை வந்து நம் மனதில் ஆழப் பதிகிறது. காடு அவன் முன் காட்சிவெளியாக நிகழ்கிறது. நிலவில், அதிகாலையில், எரியும் மதியத்தில் , சிவந்தணையும் அந்தியில் புதிய தோற்றங்களுடன் வந்தபடியே இருக்கிறது. ஆரண்யக் அடிப்படையில் ஒரு வனதரிசனம்.
ஆரண்யத்தில் மனிதர்கள் நிறையவே வருகிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் மனிதர்கள்தான், கதாபாத்திரங்களல்ல. கதாபாத்திரங்களின் அகமோதல், பரிணாம வளர்ச்சி அவற்றுக்கு இல்லை. அவர்கள் அந்த இயற்கையின் உள்ளே பிற உயிர்களைப் போல உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் கடுமையாக உழைக்கிறார்கள்.
சத்யாசரனின் வேலைஎன்பது காட்டுநிலத்தை குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து அவர்களை காட்டை அழித்து விவசாயம்செய்யவைத்து குத்தகையை வாங்கி ஜமீன்தாருக்குக் கொடுப்பது. ஒவ்வொரு குடியானவரும் ஒவ்வொரு வகை. இரவுபகலாக பக்தியில் மூழ்கி பட்டினிகிடக்கும் ராஜூ பனாரே ஓர் உதாரணம். கதைத்தொடர்ச்சிக்காக முயலாமல் நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட ஒரு தினவிவரணை போல சொல்லிச்செல்கிறார் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய. கதாபாத்திரங்கள் எளியமனிதர்கள்.
விதிவிலக்கு இரண்டு கதாபாத்திரங்கள். காடு முழுக்க பலவிதமான பூச்செடிகள் கொண்டு வந்து நட்டு வைப்பது தவிர வேறெதிலும் நாட்டமில்லாத யுகல பிரசாத் என்ற பித்தன். நடனமாடுவது தவிர வேறு எதுவும் அறியாத சிறுவனான தாதுரியா என்ற இடையச் சிறுவன். இவர்களையும் அதே இயற்கையின் மடியில் இயல்பாக உலவவிட்டு ஒரு கவித்துவமான முரண் சித்திரத்தை விபூதி பூஷண் உருவாக்குகிறார்.
யுகலபிரசாத், தாதுரியா இருவரும் இரு எல்லைகள். காட்டை இருவகையில் உள்வாங்கிக் கொள்பவர்கள். யுகலபிரசாத் படித்தவர், வங்காளி. நாகரீகம் அறிந்தவர். இந்தக்காடு அழியும் என அவர் அறிவார் அவர் காட்டுக்குள் வாழவில்லை, காட்டை கண்டபடி காட்டுக்கு வெளியே வாழ்கிறார். அவருக்கு காடு கவிதையாக இசையாக அனுபவமாகலாம். காட்டுக்குள் அவர் பரப்பும் மலர்ச்செடிகள் அவருக்கும் காட்டுக்குமான காதல் போன்றது. பின்னர் காட்டுக்குள் குதிரையில் செல்லும் சத்யாசரன் காடெங்கும் யுகலபிரசாத் நட்ட செடிகள் மண்டிப்பரந்திருப்பதைக் காண்கிறான். அவரது காதலாக காட்டில் பரவிய அந்த மலர்வெளி அவருக்கும் காட்டுக்கும் இடையேயான அகத்தொலைவுக்கும் சான்றுதான்.
ஆனால் தாதுரியா அப்படி இல்லை. அவனும் காடும் வேறல்ல. எந்தக்காட்டுமிருகமும் காட்டின் எதிர்காலம் பற்றி எண்ணுவதில்லை. காட்டை பேணவும் வளர்க்கவும் முனவதில்லை. காடு அதன் தாய்மண். மூச்சுக்காற்று. உணவு. கனவு. அது காட்டில் வாழ்ந்து காட்டில் மறைகிறது. தாதுரியாவின் உடல் வழியாக செல்லும் நடனம் காட்டுக்குள் காற்று நுழையும்போது மரங்கள் ஆடும் நடனமேதான். மிருகங்களுக்குள் காதல் நுழையும்போது நிகழும் நடனம்தான். அது காட்டின் நடனம். தன்னை ஒரு குதூகலமாக அவனூடாக வெளிப்படுத்துகிறது காடு.
ஆனால் காடு அது மட்டும் அல்ல. சென்ற உடனேயே அதைக் கண்டுகொள்கிறான் சத்யாசரன். சோறுபொங்கும்போது அந்த மணத்தை உணர்ந்தே சோறு கிடைக்கும் என்று நடந்து வந்து சேரும் மக்கள். காட்டின் விளையாட்டில் பட்டினி இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்கள் அனைத்துமே பசியால் சுழற்றியடிக்கப்படுகின்றன. உணவுக்காக ஒவ்வொரு கணமும் போராடிக்கொண்டிருக்கின்றன. வேனிற்காலத்தில் அடிமண் வரள காட்டின் ஒவ்வொரு இலையும் தாகத்தால் வரண்ட நாக்குகளாக மாறி துடிதுடித்து உதிர்கிறது
வனவாசி காட்டும் இன்னொரு காடும் உள்ளது, கதைகளின் காடு. நாவலெங்கும் காட்டுமனிதர்கள் உருவாக்கிய எளிமையான கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. காட்டைச் சந்திக்கும் மானுடப்பிரக்ஞை அந்த கதைகளை முளைக்கவைக்கிறது. அதுவும் ஒரு மண்தான். காடு அங்கும்தான் விதைகளை விரவுகிறது. காட்டுமிருகங்களை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் எருமைத்தெய்வத்தின் கதையை முதலில் கேட்கும்போது அதன் எளிமையில் சத்யாசரன் வியந்து போகிறான். கூடவே சிறு ஏளனமும் அடைகிறான். மெல்ல மெல்ல அந்தக் கதைகள் வழியாகவே அவன் காட்டின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறான்.
இறுதியில் கதாநாயகன் காட்டின் சாராம்சத்தை அல்லது மையத்தை கண்டு கொள்கிறான். ராமாயண காலத்தைவிடப் பழைய வரலாறு கொண்ட காட்டு அரச வம்சமான சந்தாலர்களின் ஒரு பிரிவான தோபரு வம்சத்து மன்னர் தோபரு பன்னாவையும், அவர் மகள் பானுமதியையும் மகன் ஜகருவையும் அவன் சந்திக்குமிடம் இந்நாவலின் முக்கியமான ஒரு இடமாகும். 1862ல் நடந்த சந்தால் கலவரத்திற்கு தலைமையேற்று பிரிட்டிஷாரிடம் போராடித் தோற்ற பன்னா தன் வயோதிகத்தை காட்டுக்குள் குடிசை கட்டி மாடுமேய்த்து கழிக்கிறார். பன்னாவின் குடிலில் அமர்ந்து அவர்களது வம்ச மகிமையை கேட்கும் கதாநாயகன் நாமறிந்த வரலாற்றின் மறுபக்கத்தைக் கண்டு கொள்கிறான்.
ஒரு காலத்தில் வங்கக்காடுகள் முழுக்கவே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்களுடைய மூதாதையர் சமாதிகள் வேரூன்றிப் பரந்த பெருமரங்களுக்கு அடியில் மலர்களால் மூடப்பட்டு தூங்குவதை அவன் கண்டான். அவர்களது புராதன அரண்மனை இடிபாடுகளாக கிடப்பதைக் கண்டான். காட்டுக் கூலிக்காரி போலிருந்த பானுமதியின் அழகிய முகத்தைப் பார்த்தபடி நிலவில் நடந்தபோது அவளை மணந்தாலென்ன என்ற எண்ணம் ஒரு கணம் கதை சொல்லிக்கு வந்தது. ஆனால், அவள் ஒரு ராஜகுமாரி, தான் ஒரு எளிய மானுடன் என்று உணரும் விவேகத்தை காட்டு வாழ்க்கை அவனுக்கு வழங்கியிருந்தது.
காடு மெல்லமெல்ல பின்வாங்கும் சித்திரம் வனவாசி வழியாக உருவாகிறது. ஒரு திரைச்சீலை சரிந்து மறைவதுபோல, ஒரு ஏரி வற்றுவதுபோல. அதன் மனிதர்கள் அதன் கதைகள் அதன் மன்னர்கள் அதன் நினைவுகள் அனைத்தும் அழிந்து இல்லாமலாகின்றன. சந்தால்கள் மெல்லமெல்ல மறைவார்கள். அந்த இனத்தின் உடல்கள் எஞ்சும், உள்ளே நவநாகரீகம் மட்டும் குடியேறும். அப்போது ஒருநாள் தங்கள் இனம் காடுகளை ஆண்டது என்பதை அவர்கள் நினைக்க மாட்டார்கள். தங்களை ‘நாகரீகத்தின்’ வால்நுனியில் கடைசிக்கண்ணியாக பொருத்திக்கொள்வார்கள்
பானுமதியின் முகத்தை கண்டபடி நிலவொளியில் நடக்கும்போது சத்யாசாரன் கண்டுகொண்டது அதையே. அவளிடம் அவன் கேட்கும் வினாக்கள் எல்லாமே அதைத்தான் சொல்கின்றன, அவளுக்கும் நிகழ்காலத்துக்கும் தொடர்பில்லை. தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கிவிட்ட ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு ஆழ்நினைவு, ஒரு கனவு.
*
பதினேழாம் நூற்றாண்டுக்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் இயற்கைவாதம் என்ற அழகியல்-தத்துவக் கோட்பாடு உருவாகி ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. இயற்கைவழிபாடே அதன் அடிப்படை மனநிலை. இறைச்சக்தியின் செய்தியை இயற்கை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கிருந்தது. இயற்கைக்கு மாறான மனநிலைகளை உதறி மீண்டும் அதனுடன் இணையும் மனநிலையை அடைந்து அதில் ஈடுபட்டு வாழும்போது இயற்கை தன் ஆசியை நமக்களிக்கும் என்றும் அதுவே உண்மையான ஆன்மீகமாக இருக்கும் என்றும் இவர்கள் நம்பினார்கள்.
பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவாகி வலுப்பெற்ற இந்த கருத்தின் உலகளாவிய பிரச்சாரகர்கள் என்று வேர்ட்ஸ்வர்த் முதலிய கற்பனாவாதக் கவிஞர்களைச் சொல்லலாம். பின்னர் வால்ட்டேர் ,ரூசோ போன்றவர்களிலும் எமர்சன், தோரோ போன்றவர்களிடமும் விரிவானதோர் கருத்தியலாக இது வளர்ந்தது. எமர்சன், தோரோ போன்றவர்களின் எழுத்துக்கள் வழியாக இந்தியா முதலிய நாடுகளின் சிந்தனையாளர்களிடமும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. தமிழில்கூட ந.பிச்சமூர்த்தி முதல் தேவதேவன் வரையிலான கவிஞர்கள் அந்தப்பாதிப்பை சாட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
இயற்கைவழிபாட்டாளர்களில் ஒருசாரார் ‘பண்படாத புனிதன்’ [Noble savage] என்ற கருத்தை உருவாக்கினர். ஜான் டிரைடனின் ஒரு கவிதையில் இருந்து உருவான இச்சொல் பின்னர் ஒரு முக்கியமான கருத்தாக்கமாக வளர்ந்தது. கிறித்தவத்தின் கருதுகோள்களுக்கு எதிராக, பண்டைய பாகன் வழிபாட்டுமுறைகளின் சாரத்தில் இருந்து உருவாகி வந்த இச்சொல்லின் உருவாக்கத்திலும் கிறித்தவ இறையியல்அடிப்படையே இருந்தது என்பது ஒரு முரண்நகை.
மனிதப் பண்பாடு ஆதிபாவத்தால் உருவானது, மனிதர்கள் பாவத்தில் கருத்தரிக்கப்பட்டவர்கள் என்ற கொள்கை கிறித்தவத்தால் நிலைநாட்டப்பட்டது. அதைமறுத்து மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் என்றும் ‘நாகரீகம்’ என்று சொல்லப்படும் பிற்கால மானுட அமைப்பு மூலமே அவர்கள் சுயநலம், பேராசை, பரஸ்பர ஐயம் போன்ற உணர்வுகளை அடைந்தார்கள் என்றும் ‘பண்படா புனிதன்’ கொள்கை குறிப்பிடுகிறது. இதனை அவனே உணர்ந்தபின்னரே மனிதன் ஆன்மீகமீட்பு குறித்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டான். அந்த இரு கருத்துநிலைகளுக்கும் நடுவே போராடுவதாக மனித அகம் மாறியது. பண்படாத மனிதன் இந்த இரு கருத்துநிலைகளுக்கும் முற்பட்டவன். அவனிடம் பாவம் இல்லை ஆகவே மீட்பும் அவனுக்கு தேவையில்லை.
இந்தக்கொள்கை சார்ந்து உருவான கருத்துக்களை பொதுவாக பண்படாமைவாதம் [Primitivism.] என்று குறிப்பிடுவது வழக்கம். இந்தக் கோட்பாடும் பரவலாக இலக்கியவாதிகளிடம் கூரிய செல்வாக்கைச் செலுத்தியது. தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்த க.நா.சு இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களையே அதிகமும் மொழியாக்கம்செய்திருக்கிறார். உதாரணம் நட் ஹாம்சனின் ‘நிலவளம்’
வனவாசியை இச்சிந்தனைகளின் பின்னணியில் ஆராய்வது பல அகவெளிச்சங்களை அளிக்கும். முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இதுதான், காட்டின் சித்திரத்தை அளிக்கும் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய அதை ஐரோப்பிய பாணி இயற்கைவாதத்துக்கு எவ்வகையிலும் சமானத்தன்மை இல்லாத ஒன்றாகவே உருவாக்கியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் வனவாசி முழுக்கமுழுக்க ஓர் இந்தியநாவலாக உள்ளது. அதைப்போன்ற நூற்றுக்கணக்கான ஐரோப்பிய நாவல்களுடன் அதை எவ்வகையிலும் சமானமாக காணமுடியாது. இந்த தனித்தன்மையே அதன் சிறப்பு.
அபாரமான கற்பனாவாதத் தன்மை கொண்ட ஆக்கம் வனவாசி. அதன் மொழிநடை மிக கவித்துவமானது. த.நா.குமாரசாமியின் மொழியாக்கமும் கவித்துவமானதே. ஆனால் விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டுவாழ்க்கையை மிகைப்படுத்தவில்லை, இலட்சியப்படுத்தவில்லை. அதேசமயம் அதை வரண்ட யதார்த்தம் நோக்கியும் கொண்டுசெல்லவில்லை. விபூதி பூஷனிடம் செயல்படுவது முதிர்ந்த இந்திய தத்துவ நோக்கு. அது இயற்கையை -பிரகிருதியை- ஒரு லீலையாக காண்பது. அந்த லீலை என்பது முரணியக்கம் மூலம் உருவாவது. ஆக்கமும் அழிவும், நன்மையும் தீமையும், இருளும் ஒளியும், வளமும் வரட்சியும் ஒன்றையொன்று சமன்செய்ய முயலும் சக்கரம் அது. வனவாசியில் பருவச்சுழற்சி மூலம் நாம் காண்பது அந்த மகத்தான லீலாசக்கரத்தை. அதுவே இந்த நாவலின் சாரம்.
அதையே மனிதனைப்பற்றிச் சொல்லும்போதும் ஆசிரியர் சொல்லக்கூடும். அவன் அகமும் நன்மைதீமைகளின் லீலையரங்குதான். அவனே பிரம்மாண்டமான ஒரு அரங்கின் ஒரு காய் மட்டும்தான். ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இயங்கும் வாழ்க்கையைச் சொல்லும் விபூதிபூஷண் காட்டும் மனிதர்களில் அனேகமாக அனைவருமே காட்டுமிருகங்களைப்போல இலக்கு என ஏதும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இலக்கின்மை என்பது பொருளின்மை அல்ல. வெறுமை அல்ல. அவர்களின் வாழ்க்கை இயற்கை என்ற மாபெரும் அறியமுடியாத பொருள்கொண்ட விளையாடலுடன் இணைந்துள்ளது.
முற்றிலும் இந்தியத்தன்மை கொண்ட இந்த தரிசனத்தில் இருந்து விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டும் நுண்சித்திரங்களுக்குள் வந்தால் நாம் இன்னும் நுட்பமான ஒரு நாவலை வாசிக்க முடியும். அது ஐரோப்பிய இயற்கைவாதம் போன்ற ஒன்றல்ல. இயற்கைவாதம் ஓர் எதிர்வினை. கிறித்தவ விஸ்தரிப்பு வாதத்துக்கும் மையப்படுத்தல்நோக்குக்கும் எதிரானது. ஐரோப்பிய தொழில்மயமாதலுக்கு எதிரானது. அவை இரண்டு இணைந்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பூர்வகுடிகளை கொன்றே அழித்த வரலாற்று உண்மைக்கு எதிரான மனசாட்சியின் எழுச்சி அது. ஆனாலும் அது எதிர்வினை மட்டும்தான். விபூதிபூஷன் பந்தோபாத்யாய முன்வைப்பது பலநூறு வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி முதிர்ந்த ஒரு தரிசனம்.
வனவாசி இந்திய மொழிகளில் நிகழ்ந்த பேரிலக்கியங்களில் ஒன்று. நமது வரலாற்றுப் பின்புலத்தில், நமது அகஉருவங்களின் சாயலுடன் இந்நாவலை படிப்போமெனில் இதன் ஒவ்வொரு வரியும் கவிதைக்குரிய எல்லையின்மையுடன் திறந்து கொள்வதைக் காணமுடியும். வயல்களாக மாறிக்கெண்டிருக்கும் காட்டில் யுகலப் பிரசாதன் நடும் மலர்ச்செடிகள் அப்போது நம்மை துயிலிலும் பின்தொடரும்.
[வனவாசி. வங்கநாவல் [ஆரண்யக்] விபூதிபூஷன் பந்தோபாத்யாய. தமிழாக்கம் த.நா.குமார்சாமி சாகித்ய அகாதமி வெளியீடு; 1968.]
http://www.jeyamohan.in/?p=192 விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’
http://www.jeyamohan.in/?p=203 கண்ணீரைப் பின்தொடர்தல்
http://www.jeyamohan.in/?p=216 சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய நாவல்கள்
தேசியபுத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய நூல்கள் http://www.jeyamohan.in/?p=218
சோழிகள் - குறுநாவல் விமர்சனம்!
"சிரித்தபடி சிதறின சோழிகள்" இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.
ரேகை
ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி
ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ்
ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு
புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை
பரவலாக இருந்திருக்கலாம்.
கிட்டத்தட்ட
ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து
பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால்,
மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம்.
சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான
எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச்
சொல்லவேண்டுமானால், 'பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்' என்றுகூட சோழிகளை
சொல்லலாம்.
திருவல்லிக்கேணி
கதைக்கான களம். அறுபதைக் கடந்த ராயர் நாயகன். ஜோசியம் முழுநேரத் தொழிலல்ல
என்றாலும், கேட்பவர்களுக்கு சோழிகளை உருட்டித் துல்லியமாக சொல்கிறார்.
வாழ்வின் இறுதிக்காலத்தை மற்றவர்களுக்கு உதவி நிம்மதியாக வாழநினைக்கும்
பரந்த மனப்பான்மை கொண்டவர். திருவல்லிக்கேணி இடையர்களுக்கு அடிக்கடி மாடு
தொலைந்துபோவது பெரியப் பிரச்சினை. ராயரிடம் ஆரூடம் கேட்பார்கள். "மந்தவெளி
காடுதாண்டி நடைபோடுது. சாயரக்ஷைக்குள்ளே பிடிச்சாந்துடு. கோபதாபத்துலக் குச்சிய வீசிடப் படாது. வாயில்லா ஜீவனை அடிக்கறதுக்கான ஆயுதமில்லையே இது, சும்மா அதட்டதான் புரியறதோ" - பெரும்பாலும் இதுதான் ராயரின் ஜோசியம்.
ஒருநாள் சூர்யஸ்தமனத்துக்குப் பிறகு கைக்குழந்தையோடு ஒரு பெண் வருகிறாள்.
வெள்ளிக்கிழமை கார்த்தாலே வேலைக்குப் போன ஆத்துக்காரர் ரெண்டு நாளா வீடு
திரும்பலை. "ஆரூடம் பார்க்கோணும் ஸாமி" எப்படி கேட்கக்கூடாதோ அப்படிக்
கேட்கிறாள். ராகவேந்திரசாமிகள் மீது பாரத்தை போட்டுவிட்டு சோழிகளை
உருட்டுகிறார் ராயர். அவராலேயே நம்பமுடியவில்லை. உருண்ட சோழிகள் உண்மையை
சொல்கிறது. இதுவரை இப்படியொரு ஆரூடம் சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு
நேர்ந்ததில்லை. ஒருவேளை சோழிகள் பொய் சொல்கிறதோ?
மீண்டும் உருட்டுகிறார். மீண்டும் அதே பதில். இவர் கேட்க கேட்க சோழிகள்
எந்த உணர்வுமில்லாமல் சொன்ன பதிலையே திரும்ப சொல்கிறது. சோழிகள் அஃறிணை.
உணர்ச்சியோ நெகிழ்ச்சியோ கிடையாது. ராயர் மனிதர் ஆயிற்றே? அந்தப்
பெண்ணுக்கு என்ன பதில் சொல்வார்? குழந்தைக்கு ஒன்று, ஒன்றரை வயதுதான்
இருக்கும். "என்னமோ தெரியல. கணக்கு தப்பாவே வந்துண்டிருக்கு. செத்த ஸ்ரமம்
பாக்காம காத்தால வர முடியுமாம்மா" என்று சமாதானம் சொல்லி அனுப்புகிறார்.
அந்த
கிருஷ்ணபட்சத்து இரவு ராயருக்கு தூங்கா இரவு. அவரது பத்தினி சுலோசனா பாய்
தனது பர்த்தாவை இந்தக் கோலத்தில் கண்டதேயில்லை. கடவுளோடு மனதில்
பேசுகிறார். அல்ப மனித வாழ்வு குறித்த ஆத்ம விசாரம். தர்ம நியாயம்.
காற்றில் வெறுமனே கத்தி சுத்தி களைப்படைகிறார். இவ்வளவுதானா மனிதவாழ்வு?
காலையில் அந்தப் பெண் வந்துவிடுவாள். மகள் வயதில் இருப்பவளிடம் என்ன பதில்
சொல்வது? சோழிகள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடலாமா? நல்ல ஆரூடம்
சொல்வேன் என்று என்னை நம்பி வந்தவளை நானே ஏமாற்றலாமா?
இப்படியாகப் போகிறது கதை. கடைசியில் "நதி எதுவாய் இருந்தாலும் சங்கமித்தாக வேண்டிய இடம்தானே கடல்" என்ற யதார்த்த வரியோடு முடிகிறது.
விமலாதித்த
மாமல்லன் எடுத்தாண்டிருக்கும் பார்ப்பன மொழி மிக மிக அழகானது. தூர்தர்ஷன்
நாடகங்களிலும், தமிழ் சினிமாவிலும் நாம் கண்ட, கேட்ட மொழியல்ல இது. நாவல்
முழுக்கவே இம்மொழியாளுகை மிகச்சிறப்பாக எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது.
ஆனாலும் ஒரு நறுக்கென்ற சிறுகதைக்கான புள்ளியை குறுநாவலாக - வேறு சில
சம்பவங்களை புத்திசாலித்தனமாக கோர்த்திருந்தாலும் - நீளமாக
இழுத்திருப்பதால், இடையில் மெகாசீரியல் அலுப்பு வாசகனுக்கு ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம்.
கதையின்
தொடக்கத்தில் பார்த்தசாரதி கோயில் பட்டரோடு ராயர் பேசும் சமூக விவாதம்
இக்கதையின் ஹைலைட் என்று எடுத்துக் கொள்ளலாம், அது கதைக்கு சம்பந்தமற்ற,
இடைச்செருகலான நிகழ்ச்சி என்றபோதிலும்.
"பிராம்மண
குலத்தையே வாய்க்கு வந்தபடி தூஷிக்கிற துடைப்பக்கட்டைப் பயல்களுக்கெல்லாம்
சோழி உருட்டி ஜோசியம் சொல்றீரே சொரணை இல்லையோ உமக்கு" - பட்டர்.
ராயர் சிரிக்கிறார்.
"நேக்கு வயத்தப் பத்திண்டு வரது, உமக்கு சிரிப்பா இருக்காங்காணும்"
"படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்னு இருக்கறவாளைப் பாத்து சிரிக்காம வேற எண்ணப் பண்ணச் சொல்றேள்"
"நாத்தழும்பேற நாஸ்திகவாதம் பேசற நாய்களைப் போய் சப்போர்ட் பண்றீரே நியாயமாய்ப் பட்றதா உமக்கு"
ராயர் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பூணூல் போட்டிருந்தா பார்ப்பானா?
போட்டவாளுக்குப் பொறந்துட்டா பார்ப்பானா? எத்தனை பேரு வேளை தவறாம சந்தி
பண்றான்? எத்தனை பேரு அர்த்தம் புரிஞ்சி காயத்ரி சொல்றான்? முக்காலே மூணு
வீசம் பேருக்கு முதுகு சொறியத்தான் பூணூல் உபயோகப்பட்டுண்டிருக்கு என்று
பிராமண நிந்தனை செய்கிறார்.
"க்ருஷ்ண. க்ருஷ்ண" என்று தலையில் அடித்துக் கொள்ளும் பட்டர்,
"என்னங்காணும் நீர். நாயக்கரை (பெரியாரை) தோக்கடிச்சிடுவீர் போலிருக்கே?
உம்ம பூணூலை கழட்டிப் போட்டுற வேண்டியதுதானே?" என்று சொல்லிவிட்டு
பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறார்.
டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான
விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக
சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை
திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின்
பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு
சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.
1994ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் 1996ல் மாலைக்கதிர் இதழில்
வெளிவந்திருக்கிறது. இருபது வயதுகளிலேயே தீவிர இலக்கியத்தில்
முத்துக்குளித்து, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கவனிக்கப்பட்ட
இவர் அடிக்கடி வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி சந்நியாசம்
வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரின் பதினாறு
ஆண்டுகால வனவாசத்தை அகநாழிகை இலக்கிய இதழ் முடித்து வைத்திருக்கிறது.
'சோழிகள்' குறுநாவல் செப்டம்பர் - நவம்பர் 2010 தேதியிட்ட அகநாழிகை இதழில்
மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இவரின் கும்பகர்ண இலக்கியத்
தூக்கத்தை நீர் தெளித்து எழுப்பியிருக்கிறார் அகநாழிகை ஆசிரியர்
பொன்.வாசுதேவன். இதன் மூலமாக அடுத்த இலக்கிய இன்னிங்சை துவக்குவதற்கான
வாய்ப்பு விமலாதித்த மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. இச்சூழலில் இது ஒரு
முக்கியமான இலக்கிய நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.
இடைப்பட்ட காலத்தில் ஒன் டே மாட்சுகள் மட்டுமின்றி, டி20 மாட்சுகளும்
பிரபலமாகி விட்டது மாமல்லன் சார். இதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு
விளையாடுங்க. உங்க அடுத்த இன்னிங்ஸுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!
எழுதுவதென்பது ஒரு சுய இன்பச்செயல்
மூன்று வருடங்களுக்கு முன் என் பையனிற்கு மொட்டை அடிப்பதற்காக ஒப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். தஞ்சை மாவட்டம் தஞ்சை மாவட்டமாக இருந்தது - பசுமையாக. ஆச்சரியமாக காவேரியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. என் தந்தையாரின் பூர்வீகம் தஞ்சாவூர் பக்கத்திலுள்ள மஹாதானபுரம். அவர் படித்தது தஞ்சையில். தாத்தாவிற்கு தஞ்சையில் ஒரு பெரிய வீடு இருந்திருக்கிறது.
தஞ்சாவூர் அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று விட்டு தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு புகைவண்டி பிடிப்பதாகத் திட்டம்.
“மாதவா, ட்ரெயினுக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கு… செத்த ஒரு எட்டு போய் நாங்க இருந்த ஆத்த பாத்துட்டு வந்துடலாமா?”
“இங்கேருந்து எவ்வளவு தூரம்பா?”
“ஆட்டோல போனா இருபது நிமிஷத்துல போயிடலாம்”
“சரிப்பா”
ஆட்டோ சந்து பொந்துகளைக் கடந்து சென்றது.
“ஆ… வந்தாச்சு… அந்த நாலுகால் மண்டபம் முன்னாடி நிறுத்துப்பா”
அப்பாவிற்கு ஐம்பது வயது குறைந்தது.
“அதோ… அங்க ஒரு இடிஞ்ச வீடு இருக்கு பார், அப்பல்லாம் அந்த வீடு ரொம்ப ஃபேமஸ். ஒரு தேவதாசி அங்க இருந்தா. இதோ இந்த நாலுகால் மண்டபத்துலதான் பெரிய பெரிய ஜாம்பவான்லாம் கச்சேரி பண்ணியிருக்கா. இந்த ஆஞ்ஜநேயருக்கு முன்னாடி கச்சேரி பண்ணனும்னு எல்லா வித்வான்களுக்கும் ஆசை. மூர்த்தி சின்னதுன்னாலும் கீர்த்தி பெருசு.
அதோ அதுதான் என் ஃப்ரெண்டு கெளரிஷங்கரோட வீடு. மராட்டி. சின்ன வயசுல நம்ம ஆத்துக்கு வந்துருக்கான். செக்கச் செவேல்னு இருப்பான். நீ கூட பாத்திருப்ப. அவன் போய்ட்டான், அவன் ஒய்ஃப் மாத்திரம் இங்க இருக்கா, வா பாத்துட்டு வந்துடலாம்”
ஒரு பெரிய, பழைய வீட்டிற்குள் நுழைந்தோம்.
முன்பொரு காலத்தில் அழகாக இருந்திருக்கக்கூடிய ஒரு மாமி வந்தாள்.
“யாரு… ஓ பாபு அண்ணாவா… வாங்கோ வாங்கோ. யாரு உங்க பையனா?”
”ஆமாம்… அமெரிக்கால இருக்கான். பழைய எடத்தல்லாம் காட்டலாம்னு கூட்டிண்டு வந்தேன்”
கெளரிஷங்கர் பற்றி பேச்சு நகர்ந்தது. “அவர் எப்பப் பாத்தாலும் ஒங்களப் பத்தியே பேசிண்டிருப்பார் அண்ணா”.
இருவர் முகத்திலும் கலக்கம் தெரிந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு “சரி. அப்ப நாங்க வரோம். ட்ரெயினுக்கு நேரமாயிடுத்து”
“என்ன ஒரு வா காப்பி கூட குடிக்காம?”
“இல்ல இப்பதான் மத்தியானச் சாப்பாடு ஆச்சு. பரவாயில்லை”
சிறிது தூரம் நடந்தோம்.
“அதோ அங்க பார் எங்க வீடு. அப்படியே இருக்கு.”
வீட்டில் மாற்றம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, வெளியில் அடிக்கப்பட்ட புதுச்சாயம் தவிர. ஆஜானுபாகுவாக, அதே சமயம் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தது வீடு. என் கடமைக்கு நான் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன்.
நட்ட நடு ரோட்டில் நின்று கொண்டு நாங்கள் வீட்டை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்தாள் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பாட்டி.
“யாரு?”
“அம்பது வருஷத்துக்கு முன்னாடி, நாங்க இந்த வீட்ல இருந்தோம்” என்றார் அப்பா. பாட்டிக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.
“இது என்னா கேமராவா, என்ன ஒரு போட்டோ எடுக்கறயா?” என்றாள். எடுத்தேன். “எனக்கு அனுப்பு” என்றபடி தன் வழியே நடக்கத் தொடங்கினாள்.
பல நிமிடங்கள் வீட்டைப் பார்த்தபடியே நின்றிருந்தார் அப்பா. “அதோ மாடில ஜன்னல் தெரியறதே…அதான் என்னோட ரூம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் மெளனமானார்.
—oooOOOooo—-
அப்பாவின் மெளனம், இயன் மெக்கீவனின் (Ian McEwan) ‘பிராயச்சித்தம்’ (Atonement) நாவலில் வரும் ஒரு பத்தியை நினைவுபடுத்தியது. அக்கதையின் முக்கிய கதாபாத்திரம், தான் ஐம்பது வருடத்திற்கு முன் வசித்த லண்டனிலுள்ள ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தை ஒரு டாக்சியில் கடப்பாள். அப்போது அவள் மனதில் இந்த சிந்தனைகள் ஓடும், “ஓரு வயதுக்குப் பிறகு நகரத்தினூடே பயணம் செய்தல் துயரமிக்க நினைவுகளை கொண்டு வருகின்றது. இறந்தவர்களின் முகவரிகள் குவிந்துகொண்டே போகின்றன… ஒரு நாள் நானும் ஒரு வழிப்போக்கனின் மனதில் நொடி நேர நினைவைத் தோற்றுவிப்பேன்.” (”Beyond a certain age, a journey across the city becomes uncomfortably reflective. The addresses of the dead pile up… One day I too will prompt a moment’s reflection in the passenger of a passing cab”.)
—oooOOOooo—-
மெக்கீவன் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். சல்மான் ரஷ்டி, மார்ட்டின் ஏமிஸ் ஆகியோரது நண்பர். ஓரு நல்ல கதாசிரியன் தத்துவத்திலும், மனோதத்துவத்திலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். மெக்கீவன் சிறந்த மனோதத்துவவாதி மட்டுமல்லாமல், ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரும் கூட. ஒரு சிறு பெண்ணின் செயலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையான அடோன்மண்ட்டை எழுதுவதற்காக மெக்கீவன் மனோதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மெக்கீவன் காலத்தின் கடிவாளங்களை தன் கைகளில் வைத்திருக்கிறார். கடிவாளத்தை இழுத்து காலத்தை எப்போது விரைவு படுத்தவேண்டும், எப்பொழுது தளர்த்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கின்றார். இந்த உத்தி அவரது ‘பிராயச்சித்தம்’ (Atonement), ‘செஸில் கடற்கரையில்’ (On Chesil Beach) என்ற இரு கதைகளிலும் நன்கு தெரிகிறது. அடோன்மண்ட்டின் முதல் நூறு பக்கங்களுக்குக் கதை நகராமல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். 1930களில் லண்டன் அருகிலுள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் நடக்கும் கோடைகால நிகழ்வுகளை வர்ணித்திருப்பார் மெக்கீவன் - குழந்தைகளின் நாடக ஒத்திகை, விடுமுறைக்காக நகரத்திலிருந்து வரும் அண்ணன், அக்கா, சித்தியின் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள், அக்காவுடன் படிக்கும் தோட்டக்காரரின் மகன் - என்பனவாக விரியும் காட்சிகள்.
“செஸில் கடற்கரையில்” 60களில் நடக்கும் கதை. திருமணம் முடிந்து முதலிரவுக்காக செஸில் கடற்கரைக்குப் போகும் ஒரு ஜோடி. இருவரும் முன் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களின் ஐயங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், அவர்களின் குடும்பப் பின்புலம் ஆகியவைப் பற்றி கதையின் முக்கால்வாசிப் பகுதிக்கு விவரிக்கிறார் ஆசிரியர். காலத்தை ஒரு அறையில் அடைத்து வைத்தும் பின்னோக்கி நகர்த்தியும் அடக்கி ஆள்கிறார். கடைசி சில பக்கங்களில், வெறிகொண்ட குதிரையோட்டி போல் சாட்டையைச் சுழற்றி காலத்தை ஒட வைக்கிறார். மனித மனங்களின் ஆழங்களை வைத்து கதைகளை வடித்திருந்தாலும், மெக்கீவனின் கதைளைப் படிக்கும் போது, சிறந்த துப்பறியும் கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் பரபரப்பு உண்டாகின்றது.
“நான் எழுதும்போது கதைக்கருவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ‘நுண்ணிய தகவல்களை வாஞ்சையுடன் அணுகு’ என்று நபகோவ் கூறியதை மனதில் கொள்கிறேன். எழுதுவதென்பது கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் செயல். இலக்கியத்தைப் பற்றி பேசும்போது நாம் அது தரும் இன்பத்தைப் பற்றி பேச மறந்துவிடுகிறோம். அது படிப்பவனுக்குத் தரும் இன்பத்தைப் பற்றி மட்டும் அல்ல, எழுதுபவனுக்கு கூட. எழுதுவதென்பது ஒரு சுய இன்பச் செயல்” என்கிறார் மெக்கீவன், நியூயார்க்கர் பேட்டி ஒன்றில். மெக்கீவன் மாந்திரீக யதார்த்தவாதத்தைத் தவிர்த்து யதார்த்தில் தன் கதைகளை அமைத்திருக்கிறார். மேலும் அப்பேட்டியில் “இருப்பதைக்கொண்டு ஒரு உருப்படியான கதை படைத்தால் அது போதும் எனக்கு. கதாபாத்திரங்களுக்கு சிறகு முளைத்து ஜன்னல் வழியே வெளியே பறக்கத் தேவையில்லை” என்கிறார்.
—oooOOOooo—-
அடோன்மண்ட் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி 1935ல் இங்கிலாந்து அருகே ஜாக் டாலிஸ் என்ற பணக்காரரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கிறது. ஜாக் டாலிஸின் பதிமூன்று வயது ப்ரயனி தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளைக் கொண்டு நாடக ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறாள். தோட்டக்காரன் ராபிக்கு ப்ரயனியின் அக்காவான செசிலியா மேல் ஒரு கண். காதல் மலர்கிறது, காதல் காமமாகிறது. புத்தக அறையில் ராபியும் செசிலியாயும் உச்சகட்டத்தில் இருப்பதைப் பார்த்து விடுகிறாள் ப்ரயனி. ஒன்றும் புரியாத வயது. எல்லோரும் இருவு சாப்பாட்டிற்காக உட்காரும்போது, வீட்டிற்கு வந்த இரு வால்கள் (சித்தியின் பையன்கள்) காணாமல் போகிறார்கள். ராபி அவர்களைத் தேடிக்கொண்டு போகிறான். தோட்டத்தில் சித்தியின் பெண் லோலா கெடுக்கப் படுகிறாள். ராபியின் மேல் பழியைப் போடுகிறாள் ப்ரயனி. காவலர்கள் ராபியைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்.
இரண்டாம் பகுதி இரண்டாம் உலகப் போரைக் காட்டுகிறது. ராபி டன்கிர்க் என்ற இடத்தில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். போரில் இங்கிலாந்து வீழ்ச்சி அடையக்கூடிய சூழ்நிலை. போரின் கொடுமை விரிவாகச் சொல்லப்படுகிறது. ராபியைப் பிறிந்த செசிலியா வீட்டை விட்டு வெளியேறி செவிலியாகிறாள்.
மூன்றாம் பகுதி. லோலாவைக் கெடுத்தது ராபி அல்ல என்பதை உணர்கிறாள் ப்ரயனி. தன் தவறுக்கு ப்ராயச்சித்தமாக தானும் ஒரு செவிலியாகிறாள். போரில் அடிபட்டு வரும் வீரர்களுக்கு பணிவிடையாற்றுகிறாள். ராபியையும் செசிலியாவையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்கிறாள். ஒரு காலத்தில் எழுத்தாளராக வேண்டும் என்று கனவு காண்கிறாள்.
நிறைவுப் பகுதி 1999ல் லண்டனில் இடம்பெருகிறது. ப்ரயனி பெரிய கதாசிரியை ஆகிவிட்டாள். அவளது 77வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவளது பேரப்பிள்ளைகள் அவள் 64 வருடங்களுக்கு போட நினைத்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
—oooOOOooo—-
“முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்ததால் கடவுளுக்கு ஒப்பான கதாசிரியைக்கு ஏது பிராயச்சித்தம்?” என்று ப்ரயனி கூறுதாக கதையை முடிக்கிறார் மெக்கீவன். (How can a novelist achieve atonement when, with her absolute power of deciding outcome, she is also God?)
—oooOOOooo—-
ஐம்பது வருடங்கள் கழித்துப் பார்க்க நேர்ந்த பூர்வீகவீட்டு முன் மெளனமாக நின்றிருந்த அப்பாவிடம் கேட்டேன்:
“அப்பா…உள்ள போய் பாக்கலாமா?”
“இல்லடா… கெளம்பலாம் வா… ட்ரெயினுக்கு நேரமாயிடும்”
அன்புள்ள திரு ஜெ,நலமா?
ஒரு பரிந்துரை. நான் சிறு வயதிலிருந்து பல மகாபாரதக் கதைகள் படித்திருக்கிறேன். ஒன்று அவை தொகுப்புகளாக இருக்கும் (இராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து போல) அல்லது பாரதத்திலிருந்து எடுத்த ஏதாவது ஒரு கிளைக் கதையாயிருக்கும் (நளதமயந்தி போல). நான் தற்போது ஒரு முழு பாரதத்தொகுப்பு தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன். அவ்வாறு ஒன்று தமிழில் உள்ளதா? அப்படியாயின், தங்கள் படித்தவற்றுள் நல்ல ஒரு பதிப்பை பரிந்துரைப்பீர்களா? இதே போல் இராமாயணமும் பரிந்துரைத்தால் மிகவும் உதவியாயிருக்கும்.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்
மகாபாரதம் ஒரு கலைககளஞ்சியம் போல. முழுமையான நூலை சேர்த்து வாசித்துச்செல்ல முடியாது. ஆகவே வர்தமானன் பதிப்பகத்தின் வியாசமகாபாரதமே சிறந்தது என்பேன். முழுக்க வாசிக்க வைமு கிருஷ்ணமாச்சாரியார் மகாபாரத மொழியாக்கம் இப்போது கிடைக்கிறது.
கம்பராமாயணம் கோவை கம்பன் அறநிலை வெளியீடு நல்லது.
ஜெ
ஒரு வாழ்க்கையின் துகள்கள்எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள்
இருக்கின்றன.ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது.
அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது.
- ஜெஸ்ஸி பெர்னார்டு
மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு வாழ்க்கையின் துகள்கள் என வெளியாகி உள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகமிது. சுப்புலட்சுமி என்ற அந்த அரிய மனுஷியின் வாழ்வை எழுத்தில் மீட்டெடுத்திருக்கிறார் மைதிலி சிவராமன். முதலில் அதற்காக அவரை மனம் நிறைய பாராட்டுகிறேன்.
1924 முதல் 26 வரை சுப்புலட்சுமி எழுதிய நாட்குறிப்புகள் இவை. சுப்புலட்சுமி சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்தவர். அவரது கணவர் ஆங்கிலேய அதிகாரத்தில் பணியாற்றிய போதும் அதை மீறி அவரது சுதந்திர போராட்ட வேட்கை செயல்பட்டிருக்கிறது.சுப்புலட்சுமி தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த நீலநிறப்பெட்டி ஒன்றில் இருந்த எழுபது வருச பழமையான 26 தாள்களைக் கொண்ட அந்த நாட்குறிப்புகள் அவரது மொத்த வாழ்வின் அடையாளமாகவே உள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்பில் அவரது ஆசைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி எதுவும் நேரடியாக எழுதப்படவில்லை மாறாக தனது கஷ்டங்களை மறைத்துக் கொண்டு எளிய சம்பவங்கள், தினசரி குறிப்புகளின் வழியே அகவலியை வெளிப்படுத்தும் குறிப்புகளாகவே எழுதியிருக்கிறார். இந்த நாட்குறிப்பின் வழியாக நூற்றாண்டின் முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் துயரசித்திரம் துல்லியமாக வெளிப்படுகிறது. அசலான வரிகளின் மூலமாக சுப்புலட்சுமியின் குரலை நாம் கேட்க முடிகிறது. அவரது இதயம் விம்முவதை நாம் உணர முடிகிறது. அது தான் இந்த நாட்குறிப்பின் தனித்துவம்.
ஆண்கள் எழுதுவதற்கு அறிவார்ந்த அங்கீகாரம், பெயர், புகழ், தனித்துவம், நுட்பமான ரசனை, தன்னை அறிதல், என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு எழுத்து பெரும்பான்மை நேரங்களில் தனது சொந்தத் துயரங்களை மறைத்துக் கொள்ளவும் மீட்சி பெறவும், தன்னைச் சுற்றிய உலகின் மீதான தனது விருப்பு வெறுப்புகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாத குடும்ப, சமூக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குமே உதவியிருக்கிறது. எழுதுதல் ஒரு விதமான குணமாக்கும் செயலே (healing). பெண் எழுத்தில் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.
ஆனி பிராங் என்ற பதின்வயதுச் சிறுமியின் டைரியான Diary of a Young Girl ஹிட்லரின் யூதப்படுகொலைகளுக்கான அழியாத சாட்சியமாக உள்ளது. ஆயிரம் வருசங்களுக்கு முன்பாக ஜப்பானின் அந்தப்புரங்களில் வாழ்ந்த சுகப்பெண்களான சராஸினா, இருமி ஆகிய இருவரின் நாட்குறிப்புகள் இப்போது வெளியாகி உள்ளது. அந்த நாட்குறிப்புகள் முழுவதும் தனிமையும் காமத்தின் பெயரால் ஒடுக்கபட்ட வாழ்வுமே பதிவாகி உள்ளது.
ஐப்பானின் முதல்நாவலான கெஞ்சிக்கதையை எழுதிய லேடி முராசகியின் நாட்குறிப்பு ஆயிரத்து நூறு வருசங்களுக்கு முற்பட்டது. அவள் ஒரு எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனை பிரச்சனைகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த காலங்களின் சாட்சியாக இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்குறிப்புகள் அச்சாகி உள்ளன. இவை வெறும் சுயவாழ்வுபற்றிய பதிவுகள் மட்டுமல்ல. மாறாக குடும்ப அதிகாரம், சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய ஆவணங்களாகவே உள்ளன.
பெண்களின் மீது யுத்தம் உருவாக்கிய வன்முறைகள், அவமதிப்புகளை விட குடும்பம் உருவாக்கி வரும் வன்முறைகள் அதிகமானது. அது அங்கீகரிக்கபட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. அதிலும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெயரால் பெண்கள் எழுதுவதையும், தங்களது வாழ்வியல் அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதையும் தமிழ்சமூகம் எப்போதுமே எதிர்த்தும் கண்காணித்தும் வருகிறது.சுற்றித் திரிந்து கவிஞராக வாழ்வதற்காக முதுமையை ஏற்றுக் கொண்டதாக கருதப்படும் ஒளவையின் வாழ்வு ஒன்று போதும் இதற்கான சாட்சி.
தனிமனித வரலாறுகள் முழுதுவம் உண்மையானவையல்ல. அவை எழுதுபவனின் புனைவுகளும் விலக்கப்பட்ட உண்மைகளும் கொண்டது என்று மார்க்டிவைன் கூறுகிறார். புகழ்பெற்ற பல சுயசரிதைகள் இப்படியாகவே இருக்கின்றன.ஆனால் சுப்புலட்சுமியின் வாழ்க்கை அவர் நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறைத்தவை. தான் வாழ்ந்து மறைந்தபிறகு தனது மிச்சமாக அவர் விட்டுச்சென்ற நினைவுகள். இது சுப்புலட்சுமி என்ற ஒரு பெண்ணின் நினைவுகள் மட்டுமில்லை. நூற்றாண்டின் முன்பாக படித்த,அறிவார்ந்து செயல்பட்ட குடும்பங்கள் கூட பெண்களை எப்படி ஒடுக்கி அடக்கியது என்பதன் நேரடியான அத்தாட்சி.
சுப்புலட்சுமி உயிரோடு இருந்த போது அவரை வெறும் விசித்திரங்களின் தொகுப்பாகவே நான் பார்த்ததில்லை, பள்ளிக்குச் சென்று படிக்காமலே உலக விஷயங்கள் அத்தனையும் அறிந்தவராக, தனக்கான ஒரு அகவெளியை கொண்டவராகவே அவரை அறிந்திருக்கிறேன் என மைதிலி சிவராமன் தனது முன்னுரையில் பாட்டி பற்றிய மனச்சித்திரத்தை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
அந்த முன்னுரையில் என்னை அதிர்ச்சியுறச்செய்த வரி சுப்புலட்சுமி இரண்டே அறைகளுக்குள் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்பதே. இந்த வரி தரும் வலியும் நடுக்கமும் மனதை துவளச் செய்துவிட்டது. மைதிலியே தொடர்ந்து சொல்கிறார் இது அவரது உடல்நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்பதால் அல்ல. மாறாக மேற்கத்திய வைத்திய முறைகளில் அவரது கணவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவருக்குச் சரியான சிகிட்சை தரப்படாமல் இந்த நிலை ஏற்பட்டது என்கிறார்.
தனது உடல்நலனை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது கருணைக்காக காத்திருப்பது எவ்வளவு வேதனையானது. அதுவும் ஐம்பது ஆண்டுகாலம் நோயாளியாக ஒடுங்கிவாழ்வது என்பது பெருந்துயரம். ஹிஸ்டீரியாஎனப்படும் மனசிதைவு நோயால் சுப்புலட்சுமி பாதிக்கபட்டிருக்கிறார் என்று அவரை குடும்பமே ஒதுக்கிவைத்துவிட்டது என்பதை வாசிக்கும் போது குடும்ப வன்முறையின் உச்சம் இதுவென்றே தோன்றுகிறது.
சுப்புலட்சுமி மார்ச்14ம் தேதி 1897ம் ஆண்டு பிறந்தார். அவரது அப்பா திருவிதாங்கூர் மகாராஜாவின் சபையில் சர்வேயராக பணியாற்றியிருக்கிறார். பிரிட்டீஷ் கலச்சார பண்புகளின் மீது அதிக ஈடுபாடு கொண்ட குடும்பமது. சுப்புலட்சுமியை அவரது அப்பா ஆங்கில கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஐந்து வயதில் அப்பா இறந்து போய்விடவே அந்த கனவு சிதைவுற்றது. தாத்தா வீடான திருவையாற்றிற்கு வந்து சேர்ந்த சுப்புலட்சுமியின் தினசரி வேலை தாத்தாவிற்கு ஆங்கில தினசரியை வாசித்துக் காட்டுவது. பதினோரு வயதாகும் போது அவருக்கு திருமணமானது.
அதன் இரண்டு வருசங்கள் கழித்தே அவர் வயதுக்கு வந்திருக்கிறார். கணவர் பி.ஆர். கோபாலகிருஷ்ணனுக்கு அப்போது வயது 23. 1910ம் ஆண்டு தனது பதிமூன்றாவது வயதில் அவர் தனது புகுந்த வீட்டிற்கு அனுப்பபட்டிருக்கிறார். 14வது வயதிலே தாயாகி விட்டார். அவருக்கு பதினேழு வயதில் வலிப்பு நோய் கண்டிருக்கிறது. அதனால் அவரால் வீட்டுவேலைகள் செய்ய முடியவில்லை.
சுப்புலட்சுமியின் கணவர் பி.ஆர்.ஜி.காலனிய அரசாங்கத்தில் சால்ட் இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர். அவர் பணியாற்றிய இடங்கள் கடவுளால் கைவிடப்பட்டவை. யாருமேயில்லாத கடற்கரை டாக் பங்களா ஒன்றில் தனி ஆளாக கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்ததை பற்றி சுப்புலட்சுமி தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். அவர்களது முதல் குழந்தை இறந்து போகிறது. சுப்புலட்சுமி நோயுற்று மனச்சோர்வு அடைகிறார். கணவருக்கோ குழந்தை இறந்தது மட்டுமே துக்கம். மனைவியின் நோய்மை சகிக்க முடியாத இடையூறு மட்டுமே. சுப்புலட்சுமிக்கு வலிப்பு நோய் உருவானதற்குக் காரணம் அவரது மூன்றாவது குழந்தை இறந்துபோனதே என்கிறார் அவரது மூத்த மகள் பங்கஜம்.
தன்னால் படிக்க முடியாமல் போய்விடவே தன் மகள் பங்கஜத்தை எப்படியாவது பள்ளியில் சேர்ந்துபடிக்க வைக்க ஆசைப்படுகிறார் சுப்புலட்சுமி. இதற்காகவே அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் தன் மகள் பள்ளியில் சேர்ந்து கல்விபெறுவதைப் படித்த அவரது கணவர் விரும்பவில்லை என்பது சுப்புலட்சுமிக்கு அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் கடைக்குபோய் சாமான் வாங்கும் போது கடைக்காரன் ஏமாற்றிவிடாதபடி அறிவு இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறார் என தன்னுடைய கணவரைப் பற்றி சுப்புலட்சுமி எழுதியிருக்கிறார்.
1920களில் உள்ள சென்னை. அன்றுள்ள வாசகசாலை, நாளிதழ்கள், குடும்பக் கனவுகள், படித்த நடுத்தர வர்க்கத்தினரின் காலனிய மோகம், புதிதாக உருவாகிய பெண்களுக்கான கல்விநிலையங்கள். சுப்புலட்சுமியின் அரசியல் விழிப்புணர்வு என்று இதன் அத்யாயங்கள் அவரது வாழ்வின் காட்சிகளாக நீள்கின்றன.
இன்னொரு பக்கம் சுப்புலட்சுமி போன்று பல பெண்கள் கடந்தகாலங்களின் எதிர்கொண்ட பிரச்சனைகள், சமூக நெருக்கடிகள் என்று இடைவெட்டாக சமூக பிரச்சனைகளையும் மைதிலி சிவராமன் விவரித்துக் கொண்டே போகிறார். சுப்புலட்சுமிக்கும் அவரது தோழியாக இருந்த கிரேஸிற்குமான உறவு ஒரு நாவலைப் போல விரிகிறது. தனித்து விரிவாக எழுதப்படவேண்டிய அற்புதமான பகுதியது.
ஷேக்ஸ்பியர், தாகூர், பாரதியார், ஹீரிந்தரநாத் சட்டோபாத்யாயா, காந்தி என்று இந்த நூலெங்கும் இடையிட்டு செல்லும் கவிதைகளும் மேற்கோள்களும் மைதிலி சிவராமனின் தேர்ந்த ரசனை மற்றும் எழுத்தாற்றலின் சான்றாக உள்ளன. முழுமையற்ற இந்த நாட்குறிப்புகளின் வழியே சுப்புலட்சுமியின் மனக்குரலை நாம் நேரடியாக கேட்க முடிகிறது. அந்த அளவு வலிமையாக தனது எழுத்தை உருவாக்கிய மைதிலி சிவராமன் மிகுந்த பாராட்டிற்கு உரியவர்.
இந்த கடிதங்கள் அப்படியே மொழியாக்கம் செய்து பின் இணைப்பாகவோ, அல்லது தனித்தபகுதியாகவோ சேர்க்கபட்டிருந்தால் கூடுதல் உதவியாக இருந்திருக்கும். அது போலவே ஒரே விஷயம் சில அத்தியாயங்களில் மறுபடி மறுபடி எழுதப்பட்டிருப்பது சற்று அயர்ச்சி தருவதாக உள்ளது. சுப்புலட்சுமி குறித்த சுயவிபரக்குறிப்பு அதாவது அவர் பிறந்ததேதி, இடம், திருமணம், வாழ்ந்த இடங்கள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவும் ஒன்றிணைந்தாக தனித்து உருவாக்கபட்டு பின்இணைப்பாக சேர்க்கபடுதல் அவசியம்.
தேசம் வீடுகளால் ஆனது. நீங்கள் உங்கள் இல்லத்தில் நீதியில்லாமலும், சமத்துவத்தை முழுமையாக அனுசரிக்காமலும் இருக்கும்வரை அவற்றை உங்கள் பொதுவாழ்வில் காணமுடியாது என்கிறார் பாரதியார். அது நிஜம் என்பதற்கு இந்த நூலே சாட்சி. சமகாலத்தில் வெளியான ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவே இந்த புத்தகம் உள்ளது.அதற்காகவே ஒவ்வொருவரும் இதை வாசிக்க வேண்டும்.
**
ஒரு வாழ்க்கையின் துகள்கள்.
மைதிலி சிவராமன் pages .216 Rs.100.
பாரதி புத்தகாலயம்
421 அண்ணாசாலை, சென்னை 600018
தொலைபேசி 04424332424
thamizhbooks@gmail.com
பட்டாம்பூச்சியின் சிறகுகள்September 3rd, 2010
நான் பள்ளிநாட்களில் வாசித்த தொடர்களில் ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கத்தில் குமுதத்தில் வெளிவந்த ‘பட்டாம் பூச்சி’ முக்கியமானது. அதற்கு ஜெ வரைந்த நிழல்வடிவ ஓவியங்களும் கணிப்பொறிவரைகலை இல்லாத அக்காலத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கின. ஒருசாகச நாவலாகவே நான் பட்டாம்பூச்சியை வாசித்தேன். அந்த சுயவரலாறு அடைந்த வெற்றிக்கும் அதுவே காரணம்
பின்னர் ஆங்கிலத்தில் அதன் மூலத்தை ஒரு ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன். அந்த சுயசரிதை பற்றிய மனச்சித்திரங்கள் மாறின. முத்ல் எண்ணம் அது ஒரு புனைவு என்பதே. அதில் உண்மையான வாழ்க்கைதான் பேசபப்டுகிறது, ஆனால் தேர்ந்த புனைவெழுத்தாளனால் அது மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாழ்க்கைவரலாறு அந்த அளவுக்கு நுட்பமான தகவல்களும் உதேவகமான கணங்களும் கொண்டதாக இருக்க முடியாது.
அது புனைவு கலந்தது என்று சொல்லும்போது நான் அதை கீழே இறக்கவில்லை, மாறாக மேலே கொண்டு செல்கிறேன். அதன் அனுபவத்தளம் புனைவின்மூலம் மேலும் செறிவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மானுடவாழ்க்கையின் சாராம்சத்தை நோக்கிச் செல்லும் ஒரு தீவிரம் அதில் கைகூடுகிறது. அது ஒரு வரலாறாக அல்லாமல் இலக்கியமாக, ஏன் பேரிலக்கியமாக, ஆவதன் பரிணாமம் அதுவே
ஹென்றி ஷாரியர் [ Henri Charrière] என்ற வெனுசுவேலா குடிமகன் 1969ல் எழுதி பிரான்ஸில் வெளியிட்ட சுயசரிதைதான் பட்டாம்பூச்சி. [Papillon]. இரவுவிடுதிகளில் மாலைகளை கழிக்கும் ஒரு இளைஞனாக இருந்த ஹென்றி ஷாரியர் தற்செயலாக ஒரு கொலைக்குற்றச்சாட்டில் சிக்குகிறான். ஜூரி முறை காரணமாக அவனை எளிதில் குற்றவாளி என தீர்ப்பளிக்க வைக்கிறார் அரசு வழக்கறிஞர். ஜூரிகளான குடும்பத்தலைவர்களுக்கு ஷாரியர் ஒரு சுகவாசி என்பதே கசப்பைக் கொடுக்கிறது, அதை சொல்லிச் சொல்லி அவனை அவர்கள் கண்ணில் கொலையாளியாக காட்டி விடுகிறார் வழக்கறிஞர்
அன்றைய வழக்கப்படி ஷாரியர் 1931ல் பிற கைதிகளுடன் கப்பலில் ஏற்றப்பட்டு தீவாந்தர சிறைத்தண்டனைக்காக லத்தீன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறான். பிரெஞ்சு கயானாவில் உள்ள ஆளற்ற தீவுகளில் உருவாக்கப்பட்ட சிறைகளில் முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆன ஒரு சமூகம் இருக்கிறது. அவர்களில் ஒருசாரார் கைதிகள் பிறர் காவலர்கள். வன்முறையும் வதையும் அன்றாட வாழ்க்கையாக ஆன ஒரு சூழல். அந்த சிறைத்தீவுக்கு பெயரே டெவில்ஸ் ஐலண்ட் என்பதுதான்.
தன்னை சிக்கவைத்தவர்களை பழிவாங்குவதற்காக சிறையில் இருந்து தப்பி திரும்பி பாரீஸ் வரவேண்டும் என்று உறுதி கொள்கிறான் ஷாரியர். கப்பலிலேயே அந்த உறுதியுடன்தான் ஏறுகிறான். ஆனால் தீவாந்தர சிறைத்தண்டனைக்குச் சென்ற எவரும் திரும்பி வருவதில்லை என்பதே உண்மை. அவர்களை கொண்டுசெல்லும்போது அதிகாரியும் அதைச் சொல்கிறார் ‘உங்களை பிரான்ஸுக்கு இனிமேல் தேவையில்லை. போய்த்தொலையுங்கள்’ என்று
கப்பலிலேயே தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான் ஷாரியர். அதன்பின்னர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒவ்வொரு கணமும் அவன் தப்பமுயன்றுகொண்டே இருக்கிறான். சென்றதுமே ஆஸ்பத்திரிக்குச் செல்ல ஏற்பாடுசெய்து, அங்கிருந்து பணம்கொடுத்து படகுகளை ஏற்பாடு செய்துகொண்டபின், காவலனைதாக்கிவிட்டு தப்பிச்செல்கிறான். படகை விற்றவன் ஒரு பாடாவதி படகை கொடுத்து ஏமாற்றிவிடுகிறான். முயற்சி தோற்கிறது. இன்னொருவன் உதவியுடன் புதிய படகை வாங்கி தப்பிச்செல்ல முயல்கிறான். பிடிபடுகிறான். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகிறான்.
ஆனால் மீண்டும் மீண்டும் பலமுறை புது தோழர்களைச் சந்தித்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான். இருமுறை தனிமைச்சிறை. தனிமைச்சிறை என்பது மரணத்தை முகத்தோடுமுகம் கண்டு கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு உக்கிரமான சித்திரவதை. மனம் ஒரு புற்றுநோய்க்கட்டியாக மாறும் நிலை. அதை அஞ்சாத கைதியே இல்லை. அதில் இருந்து அவனுடன் பிடிபட்ட கைதிகள் தப்புவதும் இல்லை. அவனோ அதில் இருந்து மீண்டதும் மீண்டும் தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான். தப்புவதற்கான எண்ணம் ஒருநாளும் அவனில் இருந்து விடுபடுவதில்லை
ஒரு சந்தர்ப்பம் நூலில் உண்டு.உண்மையாகவே தப்பும் முயற்சியில் இருக்கும் ஒரு கைதியை இன்னொரு முரட்டுக்கைதி கத்தியுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு இழுக்கிறான். அதை சிறையில் எவரும் மறுக்க முடியாது. யாரும் உதவிக்கும் செல்லக்கூடாது. இது ஒரு நடைமுறை விதி. அந்தக்கைதிக்கு ஆதரவாக ஷாரியர் கத்தியுடன் களமிறங்குகிறான். ‘ஒவ்வொரு கைதிக்கும் புனிதமான கடமையாக ஒன்றுதான் இருக்க முடியும். தப்பிச்செல்வது. நம்மில் சிலர் மெதுவாக இங்கேயே இருக்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அதுகூட மன்னிக்கப்படலாம். ஆனால் உண்மையிலேயே தப்பிச்செல்லும் முயற்சியில் இருக்கும் ஒருவனை ஆதரிக்காமல் அவனை அழிக்க நினைக்கிறோம். இதைவிட கேவலம் வேறு இல்லை. அந்த கைதிக்காக நான் சண்டைக்கு வருகிறேன்’ என்கிறான்
சண்டைக்கு அழைத்த முரட்டுக்கைதி கத்தியை வீசி விடுகிறான். அவன் தான் அஞ்சவில்லை என்று காட்டுவதற்காக வெறும் கையுடன் ஒரு சண்டையை நடத்துகிறான். அதன் பின் ‘நீ சொன்னதுதான் உண்மை. எப்படியோ நமது மனங்கள் இந்த அழுக்குக்குழியில் சுகம் கண்டுகொள்கின்றன’ என்கிறான். அன்று மதியத்துக்குள் முகாமில் வாழும் அத்தனை கைதிகளும் அதையே ஷாரியரிடம் வந்து சொல்கிறார்கள். அதுதான் ஷாரியரின் பிரகடனம். கைதிகளின் ஆன்மாவின் குரலும்கூட.
கடைசியில், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் கழித்து 1945ல் பிரெஞ்சு நாட்டுடன் சட்ட உறவு இல்லாத வெனுசுவேலா நாட்டுக்கு தப்பிச்செல்லும் ஷாரியர் அங்கே ஒரு சுதந்திரக் குடிமகனாக ஆகிறான். தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்கிறான்.உழைத்து செல்வந்தனாகிறான். அதன்பின் தன் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சில் எழுதி உலகப்புகழ்பெற்றான்.
நூலில் வாசக மனதை எழுச்சி கொள்ளச்செய்யும் பலபகுதிகள் உள்ளன. தூயநட்பும் அபாரமான மனிதாபிமானமும் வெளிப்படும் பல தருணங்கள் கொண்டது பாப்பில்யான். கடுமையான துயரங்கள் மானுடனுக்கு அமிலச்சோதனைபோல. அவனுடைய சாராம்சத்தில் உள்ள நல்லியல்புகளும் கெட்ட இயல்புகளும் ஒரேசமயம் உக்கிரமாக வெளிப்படுகின்றன. சர்வ சாதாரணமாக வார்டரை தாக்கும் ஷாரியரே ஒரு வார்டரின் குழந்தையைக் காப்பாற்ற சுறாமீன்கள் நீந்தும் கடலில் குதிக்கவும் தயாராகிறான். பலவேறு துணைக்கதைகள் வழியாக கைதிகளின் முகங்கள் நூலெங்கும் வந்துகொண்டே இருக்கின்றன
நூலில் வெளிப்படும் ஷாரியரின் பரிணாமம் மிக முக்கியமானது. அவன் தப்ப விரும்புவது பழிவாங்குவதற்காக மட்டுமே. மெல்லமெல்ல தப்பிச்செல்லுதல் என்பதே நோக்கமாக ஆகிறது. தப்பிச்சென்று செய்யவேண்டியது ஏதும் இல்லையென்றாலும். சுதந்திரத்தின் உபாசகனாக அவன் ஆகிறான். பழி வாங்கும் உணர்வு மறைகிறது. ’நான் மனிதன், ஆகவே சுதந்திரமானவன், ஒருபோதும் சிறையில் இருக்கமாட்டேன்’ – இந்த ஒரே வரிதான் ஷாரியரின் மந்திரம் எனலாம். ஆகவேதான் ஒரு மானுட சாசனம் என்று இந்நூல் கருதப்படுகிறது.
நூலின் இறுதியில் ஷாரியர் சென்று சேரும் இரு இடங்கள் முக்கியமானவை. ஒன்று அவனுக்கும் ஒரு எருமைக்குமான உறவு. அந்த எருமைகளை தன்னைப்போலவே சுதந்திரமான கௌரவமான உயிர்கள் என அவன் உணர்கிறான். அந்த எருமையை தன் தோழனாகவே அவன் ஏற்கிறான். இரண்டு, பிரெஞ்சு அரசால் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு தீவாந்தரச் சிறைக்கு அனுப்பப்பட்டு சலிக்காமல் நீதிக்காக போராடி மீண்ட ஜெனரல் டிரைஃபஸ் என்ற வீரருடன் அவன் தன்னை அடையாளம் காண்கிறான். அவர் அமர்ந்திருந்த அதே கடலோர பெஞ்சில் அவனும் அமர்ந்து கனவு காண்கிறான். ஒரு சுகவாசியான கைதி மானுடத்துக்கான புரட்சியாளனாக ஆகும் பரிணாமம் அது.
நாவலில் ஷாரியருடன் தப்பும் அனைவருமே எங்கோ ஒரு இடத்தில் தங்கள் விதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவன் ஏற்பதே இல்லை. நேரடி தண்டனை முடிந்து தீவுக்குள் சுற்றும் உரிமையும் வேளாண்மை செய்யும் வசதியும் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுள்ள சுதந்திரம் அளிக்கப்படும்போது பலர் அதற்குள் நிறைவடைகிறார்கள். ஷாரியர் அதிலிருந்தும் தப்பிச்செல்கிறான்.
நூலில் இந்த அம்சம் மிகவும் சிந்தனைக்குரியதாக எனக்கு தென்பட்டிருக்கிறது. ஷாரியர் ஒருமுறை தப்பி கோவாஜிரா என்ற சிவப்பிந்தியர் கிராமத்துக்குச் சென்றுவிடுகிறான். அங்கே அவனுக்கு இரு மனைவிகள் கிடைக்கிறார்கள். எளிய இனிய வாழ்க்கை. கடல், வெயில். நட்புகள்.சமூக உறவுகள். ஆனால் அங்கிருந்தும் அவன் தப்புகிறான். காரணம் அதுவும் ஒரு சிறைதான் என்பதே. அவனுக்கு உலகம் எத்தனை பெரியது என தெரியும், அதன்பின் அவன் ஒரு சிறு பழங்குடிக் கிராமத்தில் வசிக்கமுடியாது.
சமீபத்தில் இந்நூலின் திரைவடிவமான பாப்பிலான் என்ற திரைப்படத்தை பார்த்தேன். 1973 ல் வெளிவந்த இந்தப்படம் ஷாரியர் உயிருடன் இருக்கும்போதே அவரது பங்களிப்புடன் எடுக்கப்பட்டது. பிராங்க் சாஃப்னர் . [Franklin Schaffner] இயக்கியிருந்தார் ஸ்டீவ் மக்வீன் [Steve McQueen] ஷாரியராக நடித்திருந்தார் டால்டன் டிரம்போ [Dalton Trumbo] மற்றும் லாரன்ஸோ செம்பிள் Lorenzo Semple Jr.][ ஆகியோர் திரைக்கதை..
ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது. படத்தின் தொடக்கக் காட்சியில் கைதிகள் வரிசையாக பாரீஸை விட்டு கப்பலுக்குக் கொண்டுசெல்லப்படும்போது அவர்களின் பூட்ஸ்களின் ஒலி அதிர அதிர அக்காட்சி நீண்டுகொண்டே செல்கிறது. அந்த விடைபெறலில் உள்ள கொடூரத்தை அற்புதமாக நிறுவியது அது.திரைக்கலையின் சாத்தியங்களைக் காட்டிய காட்சி என்று தோன்றியது.
மொழிக்கலைக்கும் காட்சிக்கலைக்கும் இடையேயான தூரத்தையும் இரண்டுக்கும் உள்ள சாத்தியங்களையும் இந்தப் படம் நினைவுறுத்தியது. நூலில் ஷாரியர் அந்த சிறைவாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் உணர நேர்ந்த அவமதிப்பையும் சிறுமையையும் பற்பல நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்வார். மீண்டும் மீண்டும் கைதிகளை நிர்வாணமாக ஆக்கி மந்தை மந்தையாக சுவரை நோக்கி நிற்கச்செய்தும், அமர்ந்து முக்கச்செய்தும் செய்யும் சோதனைகள் வழியாக எப்படி அவர்கள் தன்னை ஒரு கீழ்த்தர மிருகமாக உணரச்செய்தார்கள் என்பதைக் காட்டுகிறார். அதை உணர்ந்து ஆரம்பத்தில் அவர் அடையும் மனக்கொந்தளிப்பும் விடும் கண்ணீரும் மெல்லமெல்ல அது ஒரு வன்மமாக மாறுவதும் அந்நூலில் தெரியும். ஒருசந்தர்ப்பத்தில் நண்பனை அவமதிக்கும் ஒரு வார்டர் மீது கொதிக்கும் நீரை அள்ளி ஊற்றுகிறான். அதற்கான கடுமையான தண்டனையை அனுபவிக்கிறான்.
திரைப்படம் அந்த மன ஓட்டங்களைச் சொல்ல முடியாது. ஆனால் இதில் அங்கே சேற்றில் ஒரு முதலையை பிடிப்பதற்காக ஷாரியரும் நண்பனும் செய்யும் முயற்சி மிக விரிவாக காட்டப்படுகிறது, நூலில் இல்லாத காட்சி அது. அச்சித்தரிப்பின் வழியாக அந்த வாழ்க்கை, மனித மாண்பை இழந்து சேற்றுப்பன்றியென ஆகும் நிலை, மிக தீவிரமாக உணரச்செய்யபப்டுகிறது. அந்த உழல்தலுக்கு காவலாக துப்பாக்கி ஏந்திய காவலர்.
அதேபோல ஷாரியரின் தனிமைச்சிறைக்காட்சிகள். நூலில் அவர் அந்த தனிமையை எதிர்கொள்ளும் முறை மிக முக்கியமான உளச்சித்தரிப்பு. அறையை தன் உலகமாக உருவகித்துக்கொள்கிறான். அதை பெண்டுலம் போல குறுக்கும் மறுக்கும் நடந்து நடந்து, அந்த காலடிகளை எண்ணி, தன் காலத்தை உருவாக்கிக் கொள்கிறான். வெளியும் காலமும் உருவாகும்போது வாழ்க்கை அங்கும் உருவாகி விடுகிறது. அதன்மூலம் தனிமையை வெல்கிறான். ஒரு தனிமனிதனே சமூகமாக ஆவதுதான் அது. அவ்வாறுசெய்யாதவர்கள் மனப்பிறழ்வடைந்து சாகும்போது அவன் மீள்கிறான்.
சினிமாவில் அந்தச் சிறைக்காட்சி நம் கற்பனை உருவாக்கிய அதிர்ச்சியை அளிப்பதில்லை. ஆனால் மேலிருந்து காவலன் ‘கருணைகூர்ந்து’ கீழே உதிர்க்கும் சிகரெட்டை காலால் மிதித்து தேய்க்கும் கைதியின் சுயமரியாதையும், பூரானக்கூட பிடித்துத் தின்னும் அளவுக்கு அவன் கொள்ளும் கடும் பசியின் மனப்பிறழ்வும் காட்சி வடிவில் மேலும் உலுக்குகின்றன.
ஷாரியரின் தன்வரலாற்றை வேகமான காட்சிப்படுத்திய படத்தின் மூன்று தருணங்கள் முக்கியமானவை. தப்பி ஓடி தொழுநோயாளிகள் மட்டும் வாழும் தீவொன்றை அடையும் ஷாரியர் அவர்களிடம் உதவிகேட்கிறான். தொழுநோயாளி தன் வாயில் வைத்த சிகரெட் ஒன்றை எடுத்து நீட்டுகிறான். சற்றும் தயங்காமல் அதை தன்வாயில் வைத்து ஷாரியர் இழுக்கிறான். தொழுநோயாளி புன்னகை செய்கிறான். ‘என் நோய் தொற்றாது’ என்கிறான். அவன் எதிர்பார்த்தது சகோதரத்துவத்தை மட்டுமே. அனைத்து உதவிகளையும் செய்கிறான் அவன். அந்த நோயாளி ஒரு தொப்பியை நீட்ட அதில் அந்த தீவின் தொழுநோயாளிக் கைதிகள் தங்களிடமிருந்த பணத்தை போடுகிறார்கள். ஷாரியர் மானுட சகோதரத்துவத்தை உணரும் கணம் அது.
இது நூலில் உள்ள இடம். ஆனால் இந்த திரைப்படத்தின் உச்சம் என நான் நினைக்கும் காட்சி நூலில் இல்லாதது, நூலின் சாரமாக திரைக்கதையாளரால் எழுதப்பட்டது. தனிமைச்சிறையில்; ஒரு மனப்பேதலிப்பின் தருணத்தில் ஷாரியர் சுதந்திரம் மீதான நம்பிக்கையை சில கணங்களுக்கு இழக்கிறான். அப்போது ஒரு கனவுக்காட்சி, அல்லது உருவெளிக்காட்சி தெரிகிறது. ஒரு உயர்ந்த இடத்தில் பிரெஞ்சு நீதிபதியும் அரசு வழக்கறிஞர்களும் ஜூரிகளும் தோன்றுகிறார்கள். அவர்கள் கைநீட்டி குற்றம் சாட்டுகிறார்கள். ‘ ஹென்றி ஷாரியர், நீ குற்றவாளி’ திக்பிரமையுடன் அதை கேட்டு நிற்கிறான் ஷாரியர். அவர்கள் சொல்கிறர்கள் ‘நீ சுதந்திரத்துக்கான விழைவை இழந்து விட்டாய். அதில் சமரசம் செய்துகொண்டாய். ஆகவே நீ குற்றவாளி’ ஷாரியர் மனம் சோர்ந்து மெல்ல பின்னடைகிறான். ‘’ஆம் குற்றவாளி…நான் குற்றவாளி’’ என்று பின்னகர்ந்து இருளுக்குள் செல்கிறான். ஒரு ’ஷேக்ஸ்பீரியன்’ கற்பனை இந்தக் காட்சி. இந்த ஒரு காட்சியை எழுதியதன் வழியாக திரைக்கதையாசிரியர்கள் மூலத்தை எழுதிய ஹென்றி ஷாரியரை தாண்டிச்செல்கிறார்கள்.
திரைப்படத்தின் கடைசிக் காட்சியும் நூலின் சாரத்தில் இருந்து முளைத்த அபாரமான காட்சியாக எனக்குப் பட்டது. நூலிலேயே அந்தக் காட்சி மிகவிரிவாக உள்ளது. தான் தங்கியிருக்கும் செங்குத்தான கரைக்குக் கீழே உக்கிரமாக அலையடிக்கும் கடலில் பல அலைகளுக்கு ஒருமுறை ஒரு பேரலை வருகிறது என்றும் அதில் குதித்தால் அலையே ஆழ்கடலுக்குள் கொண்டு சென்றுவிடும் என்றும் ஷாரியர் கண்டுபிடிக்கிறான். கொப்பரைகளைச் சேர்த்துக் கட்டி தெப்பம்செய்து அதில் ஏறி தப்பி சென்று விடலாம் என்று திட்டமிடுகிறான். முதல் சிலமுறை அவன் போட்டுபபர்த்த கொப்பரைத்தெப்பங்களை அலை சிதறடிக்கிறது. அவனுடன் வருவதாகச் சொன்ன நண்பன் பின்வாங்கிவிடுகிறான். ஆனால் ஷாரியர் கடைசியில் அந்த பெரிய அலைமேல் ஏறி தப்பி விடுகிறான், அதுவே கடைசி விடுதலை.
சினிமாவில் ஆச்சரியமாக இக்காட்சி அற்புதமான குறியீடாக மாறியிருக்கிறது. விடுதலையின் முடிவிலாப் பெருவெளியாகிய கடல் ஷாரியரை சோதிக்கிறது. மீண்டும் மீண்டும் அவனை தோற்கடிக்கிறது. ஆனால் அவன் முயன்றுகொண்டே இருக்கிறான். கடைசியில் சுதந்திரதேவியின் வல்லமை மிக்க அந்தக் கரம் ஒன்று வந்து அவனை ஏந்திக்கொண்டு தனக்குள் எடுத்துச் செல்கிறது. கடலின் நீல விரிவில் தெப்பம் மீது படுத்துக்கொண்டு வான்வெளி நோக்கி அறைகூவிச்சிரிக்கும் ஷாரியரில் படம் முடிவடைகிறது.
இன்னும் கவித்துவமான விஷயம் ஷாரியரின் தப்புதல் முயற்சியின் தவிப்பும், திகைப்பும், வெற்றியின் களிப்பும், இறுதி நெகிழ்வும் எல்லாம் அவனுடன் தப்பாது கரையிலேயே நின்றுவிட்ட தோழனின் முகம் வழியாகச் சொல்லப்படுகிறது என்பது. அவனுடைய உடல் ஷாரியருடன் தப்ப முயலவில்லைதான். ஆனால் ஆத்மா சேர்ந்து தப்பத்தான் செய்தது. அது கைதிக்குள் எப்போதும் துடிக்கும் விடுதலைக்கான விழைவின் சாட்சியம். அந்த கடைசிக்காட்சியில் கண்ணிருடன் கரையில் நிற்பவர் மகத்தான நடிகர் . அந்த துளிக்கண்ணீர் ஒட்டுமொத்த படத்தையே விடுதலைபற்றிய ஒரு காட்சிக்காவியமாக ஆக்கிவிடுகிறது. சிறகற்று பறக்கமுடியாமலானாலும் பட்டாம்பூச்சியின் ஆன்மா சிறகடித்துக்கொண்டேதான் இருக்கும்.