Home / Books List 11

Books List 11


ஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின் வாழ்நாள் கனவு

(புத்தகம் பேசுது செப்டெம்பர் 2010 இதழில் வெளியானது) 

Fermat’s Last Theorem, Simon Singh, Harper Perennial

சிறு வயதில் கணிதப் பாடப் புத்தகத்தில் பிதகோரஸ் தேற்றம் என்பதைப் படித்திருப்போம். ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்களின் வர்க்கத்தைக் கூட்டினால், அதன் செம்பக்கத்தின் வர்க்கம் கிடைக்கும். x2 + y2 = z2 என்பதுதான் இதன் சமன்பாட்டு வடிவம். இதைப் படிக்காமல் எந்த மாணவரும் பத்தாம் வகுப்பைக் கடக்கமுடியாது.

பியர் தி ஃபெர்மா என்ற ஒரு பிரெஞ்சுக்காரர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் வக்கீலாகவும் துலூஸ் என்ற நகரின் நீதிபதியாகவும் இருந்தவர். ஓய்வு நேரத்தில் கணிதத்தில் ஆழ்வது அவரது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் கணித மறுமலர்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து அரேபியா சென்ற கணிதம், அங்கிருந்து இத்தாலிக்கு 12-ம், 13-ம் நூற்றாண்டுகளில் சென்றிருந்தது. மற்றொரு பக்கம், 2,000 ஆண்டுகளுக்குமுன் கிரேக்கர்கள் உருவாக்கியிருந்த அற்புதமான கணிதங்கள் மொழிமாறி லத்தீன் வழியாக மீண்டும் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.

இரண்டு முக்கியமான புத்தகங்கள் ஐரோப்பிய கணித மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. ஒன்று யூக்ளிட் எழுதிய ஜியோமெட்ரி. வடிவ கணிதம் பற்றிய அற்புதமான இந்தப் புத்தகம் இன்றும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தரத்தில் உள்ளது. மற்றொன்று டயஃபேண்டஸ் எழுதிய அரிதமெடிகா என்ற புத்தகம். யூக்ளிட், டயஃபேண்டஸ் இருவருமே கிரேக்கர்கள். தங்கள் புத்தகங்களை கிரேக்க மொழியில் அவர்கள் எழுதியிருந்தாலும், 17-ம் நூற்றாண்டில் லத்தீன் மொழி வழியாகவே இந்தப் புத்தகங்கள் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்தன.

ஃபெர்மா, தினமும் டயஃபேண்டஸின் புத்தகத்துடன்தான் தன் பொழுதைக் கழிப்பார். அரிதமெடிகா புத்தகம், இன்றைய ‘நம்பர் தியரி’ எனப்படும் துறையின் ஆரம்பம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தில் பல்வேறு சமன்பாடுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் முழு எண்கள் மட்டுமே விடைகளாக இருக்கலாம். 1, 2, 3, 4... போன்ற நேர் எண்களும், -1, -2, -3, -4 போன்ற எதிர்ம எண்களும், 0 என்ற பூஜ்யமும் மட்டுமே அந்தச் சமன்பாடுகளுக்கு விடைகள் ஆகமுடியும். பின்னங்களும் சில இடங்களில் அனுமதிக்கப்படும்.

அந்தப் புத்தகத்தில்தான் பிதகோரஸின் சமன்பாட்டை ஃபெர்மா பார்த்தார். x2 + y2 = z2 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்கள் விடைகளாக வரக்கூடிய பல தீர்வுகள் உண்டு. உதாரணமாக, 32 + 42 = 52. அதேபோல, 52 + 122 = 132. இப்படிப் பல முழு எண் தீர்வுகள் உள்ள ஒரு சமன்பாடு இது. ஆனால் x3 + y3 = z3 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்களில் தீர்வுகள் உண்டா? x4 + y4 = z4 என்ற சமன்பாட்டுக்கு?

ஃபெர்மா கொஞ்சம் குறும்புக்கார மனிதர். தன் புத்தகத்தின் மார்ஜினில் ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்தார்: ‘xn+ yn = zn என்ற சமன்பாட்டில், n ≥ 3 என்ற கட்டத்தில் முழு எண்களில் தீர்வுக்குச் சாத்தியமே இல்லை. அதற்கான அழகான நிரூபணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். ஆனால் அதனை எழுத இந்த மார்ஜினில் இடம் இல்லை.’

இப்படிச் சொல்லிவிட்டு மனிதர் செத்தும் போய்விட்டார். அடுத்த 350 ஆண்டுகளுக்கு உலகின் கணித நிபுணர்கள் பைத்தியம் பிடித்து அலைந்தனர். இந்த மனிதர் ஃபெர்மா சொன்னது நிஜம்தானா? இதற்கு நிரூபணம் உள்ளதா? அந்த நிரூபணம் அவ்வளவு எளிதானதா? ஃபெர்மாவின் இந்தக் கூற்றைத்தான் ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் (ஃபெர்மாஸ் லாஸ்ட் தியரம்) என்றனர் கணிதவியலாளர்கள். கடைசி என்றால், 20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இன்னமும் விடை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒரு கணிதச் சிக்கல் என்று பொருள். உண்மையில் இதனை ‘தேற்றம்’ என்று சொல்லக்கூடாது. ‘யூகம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ‘தேற்றம்’ என்ற பெயரே கடைசிவரை பரவியிருந்தது.

358 ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரூ வைல்ஸ் என்பவர் இந்தச் சிக்கலுக்கான நிரூபணத்தை முன்வைக்கிறார்.

இதுதான் சைமன் சிங்கின் புத்தகம் எடுத்துக்கொள்ளும் பொருள். ஃபெர்மா யார், ஆண்ட்ரூ வைல்ஸ் யார் என்பதிலிருந்து ஆரம்பிக்கும் கேள்விகளுக்கான விடைகளில் மேலும் பலர் வருகின்றனர். கணித உலகின் பல வித்தியாசமான, வியக்கத்தக்க நபர்களை நாம் பார்க்கிறோம்.

முதலில் ஆண்ட்ரூ வைல்ஸையே எடுத்துக்கொள்வோம். பத்து வயதில் ஒரு நூலகத்தில் இ.டி. பெல் என்பவர் எழுதிய ‘கடைசி கணிதப் புதிர்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போதுதான் வைல்ஸ், ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றித் தெரிந்துகொள்கிறார். ஒரு சிறுவனுக்கே உள்ள ஆர்வத்தில் ஃபெர்மாவின் மார்ஜினுக்குள் அடங்காத நிரூபணத்தை தன் ஐந்தாம் வகுப்பு கணக்கு கொண்டு நிரூபித்துவிடத் துடிக்கிறார். முடியாதபோது ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. மேற்படிப்பில் கணிதம் எடுத்து கேம்பிரிட்ஜில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளுக்குள் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை உடைத்தே தீருவது என்று தனக்குள்ளாகக் கங்கணம் கட்டிக்கொள்கிறார்.

சோஃபி ஜெர்மைன் என்ற ஃபிரெஞ்சுப் பெண் கணித நிபுணரின் கதை அற்புதமானது. பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி இல்லாத காலம் அது. எனவே ஆணாகப் பொய் சொல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவரது ஆசிரியர் ஜோசஃப் தி லக்ராஞ்ச் என்ற மாபெரும் கணித, இயல்பியல் மேதை சோஃபியின் சில வீட்டுப் பாடங்களைப் பார்த்து அதிர்ந்துபோய் அவரை நேரில் பார்க்க வருமாறு கூறுகிறார். சோஃபி உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிடுகிறது. ஆனால் நல்ல வேளையாக லக்ராஞ்ச், ஒரு பெண்ணா கணிதம் படிப்பது என்று கொதித்து எழுவதில்லை. ஜெர்மானியக் கணித மேதை கார்ல் கவுஸுடன் சோஃபி கடித உரையாடலில் ஈடுபட்டு, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை நிரூபிக்குமாறு வேண்டிக்கொள்கிறார். ஆனால் கவுஸுக்கு இதுபோன்ற கணிதப் புதிர்களில் ஆர்வம் இல்லை. ஆனாலும் சோஃபியே இந்தப் புதிரைத் தீர்ப்பதில் பெருமளவு முன்னேறுகிறார். நெப்போலியனின் படை ஜெர்மனியைத் தாக்கும்போது கவுஸின் உயிருக்கு எந்தவிதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று பிரெஞ்சுப் படைத் தளபதிகளுக்குத் தகவல் அனுப்பி, அதனைச் சாதித்த சோஃபி, அதற்காகவும் சேர்த்து கணித வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதச் சாதனைகளைக் கொண்டு ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை யாராலும் முழுமையாக நிரூபிக்க முடிவதில்லை. தனித்தனியாக n = 3, n = 4, n = 5 என்பதெற்கெலாம் தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் கணித வல்லுனர்களால், எல்லா n-க்கும் சேர்த்துத் தீர்வு காணமுடிவதில்லை.

இருபதாம் நூற்றாண்டில்தான் இதற்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

அடுத்து நாம் காண்பது ஒரு சோகக் கதையை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானில் ஒரு இளைஞர் கூட்டம் கணிதத்தில் மூழ்கி தங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்கிறது. அந்தக் கூட்டத்தில் இருவர் யுடாகா தானியாமா, கோரோ ஷிமுரா என்பவர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை இரவல் வாங்க வரும் ஷிமுரா, அதே புத்தகத்தை தானியாமா எடுத்திருப்பதைக் கண்டு நட்பாகிறார். இருவரும் மாடுலாரிடி தேற்றம் என்ற துறையில் மூழ்குகின்றனர். தானியாமாவுக்கு ஒரு பெண் நண்பரும் உள்ளார். இருவரும் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் திடீரென ஒரு நாள் தானியாமா தற்கொலை செய்துகொள்கிறார்.

தன் தற்கொலைக் குறிப்பில், தான் பாதி பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடமும் தன் சக ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் தானியாமா, தான் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே இல்லை. சில நாள்களில் அவருடைய பெண் நண்பரும் தற்கொலை செய்துகொள்கிறார். ஷிமுரா, தன் நண்பரின் நினைவாக மேற்கொண்டு தொடரும் ஆராய்ச்சியின் முடிவில் ‘தானியாமா-ஷிமுரா யூகம்’ என்ற புதிரை முன்வைக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யூகத்தில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் ஆந்திரே வெய்ல் என்பவர் பெயரையும் சேர்த்து, ‘தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகம்’ என்று அதற்குப் பெயர் வருகிறது.

அதைப் பார்க்கும் அனைவருக்குமே ஒன்று தெளிவாகிறது. ஒருவிதத்தில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றமும், இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகமும் ஒன்றுதான். ஒன்றை நிரூபித்தால் மற்றொன்று நிரூபிக்கப்படும்.

ஆண்ட்ரூ வைல்ஸ் இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகத்தைத்தான் கையில் எடுத்துக்கொள்கிறார். கடைசியில் வெற்றியும் பெறுகிறார்.

358 ஆண்டுகள், நூற்றுக்கணக்கான கணித மேதைகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய இந்தப் புதிருக்கு ஃபெர்மா நிஜமாகவே விடையைக் கண்டுபிடித்திருந்தாரா அல்லது சும்மா புருடா விட்டாரா என்ற கேள்விக்கு நம்மால் நிஜமாகவே விடை காணமுடியாது. ஆனால் எப்படி ஒரு பத்து வயதுப் பையன் விளையாட்டாக நூலகத்தில் படித்த ஒரு புத்தகம் அவனது வாழ்க்கையை முற்றிலும் வியாபித்து, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும்வரை அவனைத் துரத்தியது என்பது நம் மாணவர்களுக்குப் பெருத்த நம்பிக்கையை ஊட்டும்.

சைமன் சிங்கின் புத்தகம் ‘பாபுலர் மேத்ஸ்’ என்ற வகையைச் சேர்ந்தது. கடினமான சமன்பாடுகள் ஏதும் இருக்காது. ஜாலியாக கதை படிப்பதுபோலப் படிக்கலாம். எல்லாமே நிஜ மனிதர்களைப் பற்றியது. ஆனால் அந்த உலகத்தில் ஆழும்போதே சோஃபி ஜெர்மைன், தானியாமா, ஆய்லர், கவுஸ், வைல்ஸ் போன்ற மேதைகளைச் சந்திக்கலாம். அவர்கள் துறையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சுவாரசியமான பல புத்தகங்கள் தமிழில் தேவை.

அவற்றைப் படிக்கும் பத்து வயதுத் தமிழ் மாணவனும் நாளை ஆண்ட்ரூ வைல்ஸைப் போல சாதனை படைப்பான்.

அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வரலாறு


(புத்தகம் பேசுது ஜூலை 2010 இதழில் வெளியானது.) 

Too Big To Fail: Inside the Battle to Save Wall Street, Andrew Ross Sorkin, Allen Lane, Penguin, 2009

2008-ல் அமெரிக்காவில் வரிசையாக பல நிதி நிறுவனங்கள் சரிந்து விழுந்தன. எண்ணற்ற சிறு சிறு வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு இடையே, பல பெரிய நிறுவனங்களும் சரிந்து விழுந்தன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குத் தரகு விற்பனை நிறுவனத்தை அரசின் வற்புறுத்தல் காரணமாக ஜேபி மார்கன் வங்கி விலைக்கு வாங்கியது. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் திவால் ஆனது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கி வாங்கியது. 

வாக்கோவியா என்ற வங்கியை வெல்ஸ் ஃபார்கோ என்ற வங்கி வாங்கிக்கொண்டது. மார்கன் ஸ்டேன்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய முதலீட்டு வங்கிகள், பொதுமக்களிடமிருந்து பணம் பெறக்கூடிய வங்கிகளாக மாறின. ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் அப்போது தடுமாற ஆரம்பித்தது, இன்றுவரை சரியாகவில்லை. வீட்டுக் கடன் தரும் ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் ஆகிய இரு நிறுவனங்களிலும் அமெரிக்க அரசு எக்கச்சக்கமான முதலீட்டை உள்ளே கொண்டுவர வேண்டியிருந்தது.

சிடிபேங் முதற்கொண்டு அனைத்து நிதி நிறுவனங்களும் அரசிடமிருந்து பல பில்லியன் டாலர்களை உதவிக்காக வாங்கவேண்டியிருந்தது. ஒரு சிலர் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாலும், அமெரிக்க அரசு செலவிட்ட அனைத்துப் பணமும் அதற்குத் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே வரிசையாகச் சொல்லியிருந்தேன். அதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். இது எதுவுமே விரும்பி வாங்கப்பட்டவை அல்ல. உங்கள் பக்கத்து வீடு கடனில் தத்தளிக்கிறது. அவர்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்ற நிலை. அப்போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சோறு இன்றித் தள்ளாடுவார்கள் அல்லவா? அதை விரும்பாத அரசு, உங்களை வற்புறுத்தி பக்கத்து வீட்டின் சொத்துகளையும் கடன்களையும் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. நீங்கள் மறுக்கமுடியாது. வேண்டுமானால், பக்கத்து வீட்டின் கடன்களை ஏற்பதற்காக அரசு உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும். 

இதுதான் நடந்தது. இதனால் எல்லாம் அமெரிக்காவின் நிதிப் பிரச்னை முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. 2008-ல் நிகழ்ந்த பொருளாதார பூகம்பத்தின் அதிர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னை 2008-க்கு வெகு நாள்கள் முன்னதாகவே, 9/11 எனப்படும் அமெரிக்க ரெட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

பிரச்னையின் ஆரம்பம் அமெரிக்க வாழ்க்கைமுறையிலும் அவர்களது அரசியலிலும் இருக்கிறது. கடன் வாங்கியாவது பணம் செலவழித்து, விரும்பிய பொருளை வாங்கிக் குவிக்கும் ஒரு ‘அமெரிக்கக் கனவு’ அவர்களுடையது. தன் சக்திக்கு மேற்பட்டு பொருளை நுகரவேண்டும் என்று மக்கள் ஒருபக்கம் விரும்ப, பெரும் நிறுவனங்களோ அதற்கு விளம்பரம், சிறப்புச் சலுகை என்று தூபம் போட்டன. மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.

9/11 தாக்குதலை அடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறும் என்று பயந்த அமெரிக்க மத்திய வங்கி (ஃபெட்) தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். வட்டி குறைந்தால், நீங்கள் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். அதே நேரம் உங்கள் வங்கி வைப்புக்கும் வட்டி குறையும். எனவே பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டுவதற்கு பதில், செலவு செய்யலாம் என்று தோன்றும். இல்லாத பணத்தையும் குறைந்த வட்டிக் கடனுக்கு வாங்கிச் செலவு செய்யத் தோன்றும்.

நிறுவனங்கள், தனியார்கள் என அனைவரும் அதைத்தான் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் அதே காரியத்தைச் செய்தது. அமெரிக்கா என்ற நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம். அதாவது அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கும் பொருள்கள் அதிகம்; வெளி நாடுகளுக்கு விற்கும் பொருள்களோ குறைவு. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (டிரெஷரி பில்) வெளியிடும். இந்தக் கடன் பத்திரங்களை இந்தியா முதற்கொண்டு, சீனா, ரஷ்யா, பிரேசில், அரபு நாடுகள், ஜப்பான் ஆகியவை வாங்கிக் குவிக்கும். ஆக, அமெரிக்க அரசு, உலக நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது; அமெரிக்க மக்கள் அமெரிக்க வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் உலகம் எங்கும் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டியை ஆலன் கிரீன்ஸ்பான் குறைத்துக்கொண்டே வந்தார். இதனால் இந்தப் பத்திரங்களை வாங்கிய உலக நாடுகள், உலக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வருமானம் அதிகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் CDO என்ற புதிய நிதிப் பத்திரத்தை உருவாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் என்பது பெரிய பிசினஸ். அனைவரும் சொந்தமாக வீடு வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க அரசே வீட்டுக் கடன்களைக் கடுமையாக ஊக்குவித்தது. அப்படி உருவாக்கப்பட்ட வீட்டுக்கடன் நிறுவனங்கள்தான் ஃபேனி மே, பிரெட்டி மேக் ஆகியவை.

வீட்டுக் கடன்கள் பலவகை. கட்டாயமாகக் கையில் பணம் கிடைத்துவிடும் என்ற வகைக் கடன்கள் சில. நல்ல சம்பளம் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இத்தகையவை. ஆனால் இங்கு ஆரம்பித்து நாளடைவில் கடன் பெறத் தகுதியற்ற பலருக்கும் வீட்டுக் கடன்கள் தரப்பட்டன. காரணம் CDO என்ற கருவிதான். அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்கள் அதிக வட்டி தராத நிலையில், பல்வேறு வீட்டுக் கடன்களைச் சேர்த்து ஒரு குவியலாக்கி, அவற்றிலிருந்து பல துண்டுகளை எடுத்து, அந்தத் துண்டுகளை ‘கடன் பத்திரங்கள்’ என்ற பெயரில் விற்க ஆரம்பித்தனர். நீங்கள் இந்தப் பத்திரம் ஒன்றை வாங்கினீர்கள் என்றால், மாதாமாதம், ஒரு ஆயிரம் பேர் கட்டும் வீட்டுக் கடன் EMI-யிலிருந்து ஒரு பகுதி உங்களுக்கு வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பான பத்திரம் என்று கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின. பாதுகாப்பும் அதிகம், வட்டியும் அதிகம் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் உலக நாடுகள் முதற்கொண்டு பல அமைப்புகளும் இந்தப் பத்திரங்களை வாங்க ஆரம்பித்தன.

ஆனால் விரைவில் இந்தப் பத்திரங்கள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. எல்லா வீட்டுக் கடன்களையும் இப்படிப் பத்திரமாக்கி விற்றுவிட்டால் பிறகு என்ன ஆகும்?

மேலும் மேலும் வீட்டுக் கடன்களை உருவாக்கினால்தான் இந்தப் பத்திரங்களை மேலும் உற்பத்தி செய்யலாம்; அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம். உடனே பல புதிய நிறுவனங்கள் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் வீடு வேண்டுமா, கடன் வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு வைத்திருப்போரை நான்கு வீடுகள் வாங்கச் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு வீடு வாங்கக் கடன் கேட்டால், வீட்டின் விலையில் 75%-தான் உங்களுக்குக் கடனாகத் தருவார்கள். ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலையைப் போல 110% கடன் தருவதாகச் சொன்னார்கள்! ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம்! கடன் பெறுபவர் வேலையில் இருக்கிறாரா, சம்பளம் வாங்குகிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் கடன் கொடுக்கப்பட்டது.

இப்படிக் கடன் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் விழுந்தது. ஏகப்பட்ட வீடுகள்; வாங்கத்தான் ஒருவரும் இல்லை. இதனால் CDO பத்திரங்களை வாங்கியவர்களுக்குப் பணம் வருவது நின்றுபோனது. இதனால் அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டது. அத்துடன் உலக நிதிச் சந்தையுமே ஆட்டம் கண்டது.

இதுதான் சீட்டுக் கட்டு மாளிகை சரிய ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது இருப்புக் கணக்கைப் பார்க்க ஆரம்பித்தபோது இந்த வீட்டுக்கடன் பத்திரங்களால் பெரும் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். பெரும் ஓட்டை என்றால் பல பில்லியன் டாலர். இந்த ஓட்டையை எப்படி அடைப்பது?

இந்தக் குழப்பம் அவர்களை ஆட்கொண்ட செப்டெம்பர் 2008 முதற்கொண்டு தினம் தினம் என்ன நடந்தது என்பதை ஆண்டிரூ ராஸ் சார்கின் அற்புதமாக விளக்குகிறார். கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மன் பிரதர்ஸ், பியர் ஸ்டெர்ன்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்க, சிடிபேங்க், வெல்ஸ் ஃபார்கோ, வாக்கோவியா, ஏ.ஐ.ஜி, ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் போன்ற நிறுவனங்கள் ஒரு பக்கம். இந்தப் பிரச்னையில் சிக்காத வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர், சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் வங்கிகள் அல்லது அரசின் முதலீட்டு அமைப்புகள் ஆகியோர் ஒரு பக்கம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அவரது ஆலோசகர்கள், ஃபெட் தலைவர் பால் பெர்னாங்க், மத்திய வங்கியின் முக்கிய ஆளுநர்கள், நாடாளுமன்ற செனட்டர்கள், ரெப்ரசெண்டேடிவ்கள் ஒரு பக்கம். இந்த நிதிச் சிக்கலால் பயந்து நடுங்கும் பொதுமக்கள் மற்றொரு பக்கம்.

நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை நிர்வாகிகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளே வேலை செய்யும் முக்கியமானவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பல நேர்முகங்கள் மூலம் சேகரித்து, நடந்தது நடந்தபடியே ஒப்பிக்கிறார் சார்கின். பாரதப் போர் நடக்கும்போது சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளித்த நேர்முகம் போல உள்ளது இந்தப் புத்தகம்.

புத்தகம் எந்தவிதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. இது சரியா, தவறா, யார் நல்லவர், கெட்டவர் என்று எதையும் சொல்வதில்லை. ஆனால் சமீப காலத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்றைத் துல்லியமான வரலாறாக மாற்றிக் கொடுத்துள்ளது இந்தப் புத்தகம். இதைப் படிப்போர் நிகழ்வுகளை சரியான முறையில் அலசி, யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.

ஒரு செய்திப் பத்திரிகையாளர் தினசரிச் செய்தியில் எதைத்தரவேண்டும் என்பதற்கு நியூ யார்க் டைம்ஸ் நிருபர் சார்கினின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். ‘Too Big to Fail’ - அதாவது இந்த நிதி நிறுவனங்கள் மிகப் பெரியதாகிவிட்டன; எனவே வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்ற இறுமாப்புடன் வலம் வந்துகொண்டிருந்தவர்களுக்கு மரண அடி கிடைத்தது 2008-ல். எந்தப் பெரிய அளவை அடைந்தாலும் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. அதுவும் எக்கச்சக்கமான லாபத்தைத் தேடி ரிஸ்க்கியான வியாபாரங்களிலும் நிதிப் பேரங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களால்... என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.
நாராயணன் said...

ராஸ் சார்கினின் நியுயார்க் டைம்ஸ் டீல் புக் என்கிற தினசரி நியுஸ்லெட்டர் மகா பிரசித்தம். அதன் வாசகன் என்கிற முறையிலும், ராஸ் சார்க்கினை தொடர்ச்சியாக வாசிப்பவன் என்கிற முறையிலும் இந்த புத்தகத்தில் முக்காலே முழுவாசி ராஸ் சார்க்கினின் தினசரி வேலை. நியுயார்க்கின் பெரிய உணவுவிடுதிகளில், பார்களில் ராஸ்கினை பெரு நிறுவனங்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள் போன்றவர்களோடு பார்க்க முடியும். அங்கே இருந்து தான் இந்த புத்தகம் வந்திருக்கக்கூடும்.

அடுத்தவாரம் அமெரிக்காவில் "WallStreet:Money Never Sleeps" ரிலீஸாக போகிறது. இது 1984ல் வந்த பிரசத்தி பெற்ற "Wall Street" படத்தின் இரண்டாம் பாகம். மைக்கேல் டக்ளஸ் கார்டன் கெகோவாக வந்து சொல்லும் "Greed is Good" என்பது ஒரு பிரபலமான வசனம். விஷயம் என்னவெனில், ஆலிவர் ஸ்டோன் இந்த படத்தின் இயக்குநர் ராஸ் சார்க்கினோடு அமர்ந்து விஷயங்களை கேட்டுக் கொண்டு தான் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.

இத்தனைக்கும் ராஸ் சர்க்கின் 30களில் இருக்ககூடிய கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒரு பையன் ;)

நாராயணன் said...

பிற்சேர்க்கை: இந்த புத்தகத்தினை விட அமெரிக்க நிதி சீர்குலைவு வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக சொல்லும் இன்னொரு புத்தகம் Bailout Nation: How Greed and Easy Money Corrupted Wall Street and shook the world economy - எழுதியவர்: Barry Riholtz.


சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Aug 17 2010 at 01:20 pm

எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.

புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இன்னொரு புறம். இவை தான் இப்படியான படைப்புகளின் வெற்றி என்றும் நம்புகிறேன்.

தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் நமக்கு முழுமையாக கிடைத்திருப்பவை மூன்று மட்டுமே. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தானார் எழுதிய மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி. இதில் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி.

இவை எல்லாம் செய்யுள் வடிவில் வடிக்கப்பட்ட இலக்கியங்கள். அருகில் ஒரு வாத்தியார் இருந்து நமக்கு சொல்லிக்கொடுக்காமல் எளிதில் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். ஏனெனில் நமக்கான தமிழறிவும் அப்படித்தான் இருக்கிறது. பாடங்களை மொட்டை உறு செய்தால் தேர்வில் வெற்று பெற்றுவிடக்கூடிய கல்வி முறையில் வேறு என்ன எதிர் பாக்க முடியும்.

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது? கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.- என்ற ரீதியில் ஒருவரியில் விடையளிக்கும் அளவுக்கே எனக்கு இக்காப்பியங்கள் பற்றி தெரிந்திருந்தது.

எண்பதுகளின் மத்தியில் நூலகத்தில் சேர்ந்து வாசிப்பு பழக்கத்திற்கு வந்துவிட்டாலும், வாசிப்பு வசப்பட்டதென்னவோ தொண்ணூறுகளின் மத்தியில் தான். நூலகம் தவிர்த்து வெளியேவும் புத்தகங்களை தேடத்தொடங்கி இருந்த சமயம் அது. சென்னையில் அநுராகம் என்ற பெயரில் இயங்கிவந்த(இப்போதும் உள்ளது என நினைக்கிறேன்) பதிப்பகம் ஒன்று ரு.4.50க்கு நூல்கள் வெளியிட்டு வந்தது.

சோதிடம், சமையல் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் வரை சகல விதமானவைகளையும் சிறு பிரசுரங்களாக, உரைநடை வடிவில் அவ்விலைக்கே கிடைக்க வழிசெய்தது. அப்படி அநுராகம் வெளிட்ட நூல்கள் வழிதான்.. தமிழின் தொன்மையான இலக்கியங்களை கதைவடிவில் அறிந்துகொண்டேன் நான். ஆனால்.. அவை முழுமையானதாக இருக்கவில்லை. பள்ளி பாடநூலில் சொல்லப்படும் கதை போலவே இருந்தது. அதுவும் 32 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் சுருங்கச்சொல்லவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கிருந்தது. எனக்கோ செய்யுள் வழி இக்காப்பியங்களின் அடிப்படை கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அந்த வகையில் அப்புத்தகங்கள் என் ஆரம்பகால வாசிப்புக்கு விதையாக இருந்தன என்றால் மறுப்பதற்கில்லை.

அதன் பின் மூல உரையை தேடி பயணப்பட்டபோதும் என்னால் முழுமையாக அவற்றை வாசிக்க முடியாமல் என் தமிழறிவு தடுத்தது. உரையாசிரியர்களின் உரையும் கூட துண்டு துண்டாகவே நின்றன. சரி இது சரிப்படாது என்று ஓடி வந்துவிட்டேன். சமீபத்தில் பழங்காப்பியங்களை உரைநடைவடிவில் கிழக்கு வெளியிட்டு இருந்தது. அவற்றை வாங்கிவிட்டேன். நான் முதலில் வாசிக்க எடுத்தது சீவக சிந்தமணி.

முதலில் கதை சுருக்கத்தை கூறிவிடுகிறேன். சச்சந்தன் என்றும் மன்னனுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் மகனாக பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். சமண குருவான அச்சணந்தி என்பவரிடம் குருகுல கல்வி பயில்கிறான். சீவகன் அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்ற யுவனாக வளர்கிறான். தந்தையை ஏமாற்றிக் கொலை செய்து ஆட்சியை பிடித்த கட்டியங்காரனை பழிவாங்குவது தான் மீதிக் கதை. இடையிடையே சீவகன் எட்டு பெண்களை மணந்து கொள்கிறான். இப்படி பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், உறவுகளையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்யும் சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொள்கிறான். அவனோடு அவனது எட்டு மனைவியரும் துறவறம் மேற்கொள்கின்றனர். எட்டு திருமணங்களை சீவகன் செய்தாலும் காமக்களியாட்டங்களில் கதை பயணிக்காமலும் சீவகனை காமுகனாக காட்டாமலும் இப்படைப்பு இயற்றப்பட்டிருப்பதை இன்றைய நவீன எழுத்தாளர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது. :)

நாவல் வடிவ இந்நூலில் தொடக்கமே சுஜாதா கையாளும் பாணியான அதிர்ச்சியை கொடுக்கும் வரிகளில் தொடங்குகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் நடை. படிக்க படிக்க சோர்வு ஏற்படுத்திவிடாத மொழி.

சீவகனின் பிறப்பில் தொடங்கி, அவனது வாலிப பருவம் என எல்லாமும் படுவேகமாக நகர்கிறது. இக்காலத்தில் அதிகம் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களும் இடையிடையே இருக்கிறது. பழங்கால இலக்கியமென்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனாலும் கல்கி மாதிரியானவர்களின் எழுத்துக்களை அதிகம் படித்தறியாத வாசகவட்டம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனால்.. முன் பின் வார்த்தைகளை வைத்து சில இடங்களில் சொற்களுக்கு பொருள் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு சிறு குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.

உதா:

”மாலுமி! இன்னும் எவ்வளவு தூரம் நாம் போகவேண்டும்? என்ன நாம் கிளம்பி ஒரு மாதம் ஆகி இருக்குமா” சீதத்தன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் மாலுமி முகத்தில் இருந்த கலவரம் அவரை பயமுறுத்தியது.

‘என்ன ஆயிற்று? ஏன் இந்த கலக்கம்?’

‘ஐநூறு காத தூரத்தைக் கடந்துவிட்டோம். ஏமாங்கத்தை அடைய இன்னும் ஒரு யோசனை தூரம் தான் இருக்கிறது. இப்போது பார்த்துத்தானா இப்படி ஆகவேண்டும்?’(பக்கம்.63)

இதில் காத தூரம், யோசனை தூரம் என்பது எவ்வளவு என்று எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடியும்? குத்துமதிப்பாக கணக்கு பண்ணிக்கொள்ள வேண்டியது தான் போல. அதுபோலவே சமணசமய கதையான இதில் அருகர் என்று ஒரு தெய்வத்தை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்த அருகர் குறித்து எங்கும் குறிப்பு படித்தது போல நினைவு இல்லை. இத்தெய்வம் குறித்து விவரணைகளோ, குறிப்போ இல்லாதது நூலின் குறையென எனக்கு படுகிறது.

மேலும் மூல ஆசிரியரான திருத்தக்கத்தேவர் பற்றிய குறிப்பு இல்லாததும், நாவலாசிரியரின் அனுபவக் குறிப்பு இல்லாததும் பெரிதும் வருத்தமே. அவை வாசகனை இன்னும் நூலோடு ஒன்றச்செய்யும் விசயமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம்.

நூலாசிரியர் ராம்சுரேஷின் உழைப்பும், எழுத்தாற்றலும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. காட்சியின் விவரிப்புகள் அப்படியே நம்மையும் அக்களத்திற்குள் அழைத்துச்செல்லுகின்றன. சினிமா பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. (சீவகன் கேரக்டரில் எனக்கு மனதிற்குள் ஓடிய உருவம் கருப்பு வெள்ளை காலத்து ஜெமினி :))

செய்யுள் விருத்தங்களாக உள்ள எழுத்துக்கள் விரிவான உரைநடையாக மாறும்போது என் போன்ற பாமரர்களும் இது போன்ற இலக்கியங்களைச் சுவைக்க முடிகிறது. இது போன்ற புது முயற்சிகளுக்காக நன்றி பத்ரி & பாரா! :)

பழந்தமிழ் காப்பியங்களை படிக்க விரும்புகின்றவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். உரைநடையில் படிக்கும் போதே இவ்வளவு சுவையாக இருக்கும் நூல், செய்யுள் வடிவில் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதைப் படிக்கும் பத்தில் ஒருவருக்காவது வரும் என்பது நிச்சயம்.

நூல்: சீவக சிந்தாமணி- (நாவல்)
நாவல் வடிவ ஆசிரியர்- ராம் சுரேஷ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 256
விலை: ரூபாய்.125/-

இணையச்சுட்டி:- https://www.nhm.in/shop/978-81-8493-448-9.html

ஆசிரியர் குறிப்பு: ராம் சுரேஷ் 2004ல் இருந்து இணையத்தில் பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதி வருகிறார். :) )புத்தகம் படிப்பது எப்படி?

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.

நான் படிக்க துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்க துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.

இந்த கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (VirginiaWoolf)எழுதியிருக்கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது.

வர்ஜீனியாவின் கட்டுரை இந்த பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே.  அது  நீச்சல் அடிப்பது எப்படி என்று  சொற்பொழிவு ஆற்றுவது போன்றது, 

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது.

வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதை பற்றிய முன்முடிவுகள் வேண்டாம்திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.

ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கபோவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும்நேரமும்விருப்பமும்பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.

இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (perception,

இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள்நிலக்காட்சிகள்,நிகழ்வுகள்நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்

மூன்றாவது கற்றல் (learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ,அறிவுதொகுப்பாகவோஉண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும்தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துபாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளபடாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படி தான் புத்தகங்களும்.

புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்

அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் தூய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப் படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாகயிருக்கிறது.

வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியதரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.

புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளபடாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.

ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்ககூடும்.

அல்லது அந்த கதையோ. கவிதையோ எதைப்பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தபட்டிருக்க கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இசையை போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.

சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சாரசரித்திர,விஞ்ஞான அறிவும்சங்கேதங்கள்குறியீடுகள்கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன

வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம். என்று யோசிப்பதேயில்லை.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பிடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களை கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படி புரிந்து கொண்டேன்அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ,வலிந்து உருவாக்கபட்டதாகவோசெயற்கையாகவோபொருத்தமில்லாமில்லாமோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.

நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளை கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல. உடன் வேலைசெய்யும் ஒருவரை போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.

ஒரு நண்பனை போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மை போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பதிற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.

ஷேக்ஸ்பியர்டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோபால்சாக்மாபசான்டால்ஸ்டாய்தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிக குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்க கூடியது. 

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.

ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்து கொண்டேயிருப்போம். 

கதை கவிதை நாவல் சிறுகதைகட்டுரை வாழ்க்கை வரலாறுவிமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேச பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை

கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமானமாயமான சம்பவங்களை ஒத்து கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அது தான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும்நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பபடுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.

இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது.

புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுபடுத்துவதில்லை. சமூகம் உளவியல்,மொழியியல்தத்துவக்கோட்பாடுகள்தர்க்கம் மற்றும் விமர்சன பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களைபுரிதல்களை கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.

ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை அவனது பலம் பலவீனஙகளை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாக பரிசீலனை செய்கிறான். விஞ்ஞான பரிசோதனை கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போல துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.

அதற்காக ரசனை சார்ந்து வாசிப்பு கைவிடப்படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையை கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும்நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனை போல காண்பதை தாண்டிஎழுத்தாளன் மனசாட்சியை போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.

புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிபார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போது தான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம்அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கபடுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினை கொண்டாடுகிறான்

வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும கற்பனை கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,

ஏய் வாசக உனக்கு தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலன் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.

வர்ஜீனியா வுல்பின் கட்டுரையை போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள்ஆதங்கங்கள்வருத்தங்கள்சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.

இயற்கைபிறப்புஇறப்புபசிகாமம்மூப்பு நோய்மைஅதிகாரம்வெற்றி தோல்விவிதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும்சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள்தோல்வியுணர்வுவெறுப்புஏமாற்றம்வெறுமை,இயலாமைநிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்று கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது.

ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னசிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்க துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.

**

வளரும் புத்தகங்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன்.

நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் படித்து பார்த்தபடியே இருந்தேன் சரியான வரிகள் தானா என்று ஒப்பிட்டுப் பார்க்க புத்தகம் எதுவும் இப்போது என்னிடமில்லை.

சிங்கம் ஒரு நாள் இரை தனைத்

தேடித்திரியும் வேளையில்

அந்த வழியில் ஒரு முயல்

அயர்ந்து தூங்க கண்டது

இந்த முயலைக் கொல்லுவோம்

என்று சிங்கம் எண்ணுகையில்

அந்த வழியில் வந்தவோர்

அழகு மானைக் கண்டது.

துள்ளியோடும் மானையே

துரத்தி கொல்வோம் முதலிலே என்று சிங்கம் எண்ணியே

திடுதிடுவென்று ஒடவே

சப்தம் கேட்டு முயலுமே சட்டென்று விழித்தது

செத்துப் பிழைத்தோம் என்றது

சென்று எங்கோ மறைந்தது

பள்ளம் மேடு யாவிலும்

பாய்ந்து சிங்கம் ஒடியும்

துள்ளியோடும் மானையே

துரத்தி பிடிக்கவில்லையே

தோற்றுப் போன சிங்கமோ

தொங்கிப் போன முகத்துடன்

கையில் கிடைத்த பொருளினை

காற்றில் பறக்கவிட்டேனே

அய்யோ இரண்டும் போயின

அதிக ஆசை கெடுத்ததே.

**

சிறுவயதில் படித்த புத்தகங்களை தற்போது கையில் எடுத்து பார்க்கும் போது குள்ளர்களை போல சுருங்கிப் போய் ரொம்பவும் சின்னதாக விட்டதாக தோன்றுகிறது. பத்து வயதில் ஒரு புத்தகத்தை பகலில் படிக்கத் துவங்கி அரைமணி படிப்பது பிறகு விளையாட்டு என்று ஒருவாரம் வரை வைத்து படிப்பேன்.

புத்தகத்தின் கடைசிப் பக்கங்களை நெருங்கி வரும்போதே மனது குதூகலிக்க துவங்கிவிடும். படித்த புத்தகத்தைப் பற்றி உடனே யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருக்கும். தேடிச் சென்று உடன்படிக்கும் மாணவர்களை அழைத்தால் எவருக்கும் புத்தங்களைப் பற்றி பேச விருப்பமிருக்காது. கதை சொல்லும் போது கூட இது புத்தகக் கதையா, இல்லை நீயாகச் சொல்கிறாயா என்று கேட்பார்கள். படித்த கதை என்றால் அது வேண்டாம் என்று சொல்லி நாமாக கதை பேசலாம் என்பார்கள்.

புத்தகங்களைப் படித்து விட்டு மௌனமாக இருப்பது பெரிய கொடுமை. அதை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும். வழியில்லாமல் கிணற்றின் படியில் உட்கார்ந்து கொண்டு வெறித்து பார்க்கும் தவளையிடம் படித்த புத்தகங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். சில வேளைகளில் மேயும் கோழிகளிடம் கதை சொல்லியிருக்கிறேன். கட்டிப்போடப்பட்ட ஆட்டின் முன்னால் கிடந்த ஆட்டுஉரலில் உட்கார்ந்து கொண்டு அதனிடம் மாய இளவரசியைப் பற்றி பேசியிருக்கிறேன். தானே பேசிக் கொள்ளும் குழந்தைகள் கற்பனையானவர்கள்.

ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்வதற்கு  அந்த வயதில் அதன் அட்டையே காரணமாக இருக்கிறது. அதிலும் மந்திரவாதிகள், மாயமான உலகம், அல்லது பயமுறுத்தும் பேய்கள், கொலைகள், ரத்தம் படிந்த கத்தி அல்லது ஒற்றை கண் கொண்ட அரக்கன் என்ற சித்திரங்களை கண்டால் உடனே  படிக்க கையில் எடுப்பேன்.

முகப்பு சித்திரங்களுக்கும் கதைக்கும் பெரும்பாலும் தொடர்பேயிருக்காது. பாண்டிபஜார் படுகொலை என்ற புத்தகத்தின் அட்டையில் ஒரு கத்தி  மனிதனின் முதுகில் குத்தியிருக்க அவன் கிழே விழுந்து கிடக்கும் சித்திரம் இன்றும் நினைவில் இருக்கிறது. கதை மறந்து போய்விட்டது. எங்கே படித்தேன் என்பது கூட நினைவில் இல்லை. அன்று முப்பத்தி ரெண்டு பக்கம் உள்ள புத்தகம் ஒன்றை படித்து முடிப்பதை பெரிய சாதனையாக நினைத்திருந்தேன். பெட்டிக்கடைகளில் காமிக்ஸ் வாசிக்க கிடைக்கும். அங்கேயே உட்கார்ந்து வாசிக்க வேண்டும். ஒரு புத்தகம் வாசிக்க பத்து பைசா. அதற்காக ஒரு மர ஸ்டுல் போட்டிருப்பார்கள். அவசர அவசரமாக காமிக்�ஸ வாசித்துமுடிப்பேன். காகிதங்களின் வழியே படங்கள் ஒடும் அதிசயமது.

.ஒரு நாளைக்கு ஐந்து காமிக்ஸ் புத்தகங்கள் படித்திருக்கிறேன். அன்று ஆசையாக தேடிப்படித்த புத்தகங்களை மறுபடி பாக்கும் போது இது தானா அது என சந்தேகமாக இருக்கின்றது. இன்று பார்ப்பதைப் விட மிகப்பெரியதாக இருந்தது போலவே தோன்றுகிறது.

ஒரு வேளை நான் வளர துவங்கிய போது நான் படித்த புத்தங்கள் சுருங்க துவங்கிவிட்டதா என்ன? சிறுவயதின் புத்தங்களை இன்று வாசிக்கையில்  மனம் அதிகம் கிளர்ச்சி அடையவில்லை. அதை வாசித்த பரபரப்பு இன்று உருமாறி விட்டிருக்கிறது.

பள்ளிவயதில் நூலகங்களில் இருந்து சிறுவர்கள் புத்தகங்களை இரவல் எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அதற்காக யாராவது ஒரு பெரிய ஆளை அழைத்துக் கொண்டு போக வேண்டும்.  நாமாக உறுப்பினராகவும் முடியாது. தனியே சிறுவர்ளுக்கு என்று நூலகமும் கிடையாது. எரிச்சலாக இருக்க கூடிய செயலது.

காரணமில்லாமல் நூலகர் புத்தகம் தர மறுப்பதோடு சிறுவர்கள் புத்தகங்களைத் தொலைத்துவிடுவார்கள் என்று கோபபடுவார். உண்மையில் சிறுவர்கள் புத்தகங்களைத் தொலைப்பதில்லை. மாறாக திருடிக் கொள்ளவோ, தனக்கானது என்று ஒளித்து வைத்துக் கொள்ளவோ தான் ஆசைப்படுகிறார்கள். அதை நேரடியாகச் சொல்ல முடியாது என்பதால் தொலைத்துவிட்டதாக பொய் சொல்லுவார்கள். அதை ஏன் பெரியவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று அந்த நாட்களில் ஆத்திரமாக வரும்

நூலகங்களில் சிரிக்க கூடாது என்ற விசித்திரமான அறிவிப்பு பலகை தொங்குவதை கண்டிருக்கிறேன். சிரிக்க கூடாத இடம் என்று தனித்து அடையாளப்படுத்தபட்ட ஒன்றை அப்போது தான் கண்டேன். கோவில்களில் சிரிக்கலாம் பள்ளிக்கூடங்களில் சிரிக்கலாம், வீதியில் சிரிக்கலாம், ஏன் மருத்துவ மனையில் கூட சிரிக்கலாம் ஆனால் ஏன் நூலகத்தில் மட்டும் சிரிக்க கூடாது. சிரிக்காமல் எப்படி படிப்பது.  கிராம நூலகத்தில் சிறுவர்கள் படிப்பதற்கு என்று தனிஇடமோ இருக்கைகளோ கிடையாது. அந்த மேஜைகளில் அலுப்பும் சலிப்பும் படிந்து கிடந்தன.

அதில் உட்கார்ந்தவுடனே தானே தூக்கம் கவ்வி பிடித்துகொண்டுவிடுமோ என்று பயமாக இருக்கும். காரணம் அப்படியான சிலர் நூலகத்திற்கு தினமும் வருவார்கள். அவர்கள் தடியான புத்தகம் ஒன்றை பிரித்து வைத்துக் கொண்டு விழித்தபடியே தூங்குவார்கள். மீன்கள் தான் அப்படி தூங்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன். மனிதர்களும் கண்திறந்தபடியே தூங்குவதை நூலகத்தில் தான் கண்டேன். ஒரு நாள் கூட அவர்கள் அயர்ந்து தடுமாறி சரிந்தது கிடையாது. உறக்கத்தை கூட கட்டுப்படுத்தி வழிநடத்தும் மனிதர்கள் அவர்கள்.

அந்த வரிசை தாண்டினால் லாட்டரி சீட்டின் ரிசெல்ட் பார்க்க நூலகம் வந்தவர்கள். அவர்கள் தங்கள் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளதா என்று நூறு முறை திரும்ப திரும்ப நாளிதழை புரட்டிபார்ப்பார்கள். நூலகத்திற்கு வந்து புத்தகம் எடுக்கும் பெண்கள் குறைவு. ஆகவே அப்படி யாராவது வரும்போது நூலகம் சற்று விழிப்பு நிலைக்கு வரும்

பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்து படிக்க நீளமான ஒற்றை மேஜை போடப்பட்டிருக்கும். அங்கே  அமர்ந்து படிக்க துவங்கினால் நம்மை யாரோ பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் என்ற குறுகுறுப்பு வந்துவிடும். ஆகவே அவர்கள் அறியாமல் படிக்க இடம் தேட வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் மட்டுமே படிக்க தரப்படும் என்று வேறு நூலகர் எச்சரிக்கை செய்வார். எந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் தலைப்பை வைத்து நூலை நானாக கற்பனை செய்து கொள்வேன். அப்படி தான் ஒருநாள் இவான்கோவை கையில் எடுத்தேன்.

வால்டர் ஸ்காட் பற்றியோ, அந்த நூலைப் பற்றியே எதுவுமே தெரியாது. ஆனால் அந்த பெயர் வசீகரமாக இருந்தது. இரண்டு பக்கத்தை புரட்டினேன்.  ஒருவரியை படிக்க முடியவில்லை. பின்மண்டையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க துவங்கியது. வெறுமனே புத்தகத்தை மேலும் கீழுமாக புரட்டியபடியே இருந்தேன். இதை எப்படி எழுதியிருப்பார் என்று நானே கற்பனை செய்து கொண்டேன். அந்தப் புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை கண்ணை மூடிக்கொண்டு மனதில் ஒரு எண்ணை நினைத்து கொண்டு திறப்பேன். நான் நினைத்த எண்ணும் பக்கமும் சமமாக வந்தால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம். இந்த விளையாட்டினை நூலகர் கண்டுபிடித்துவிட்டார்.

ஒரு வாரம் என்னை நூலகத்திற்குள் அனுமதிக்கவேயில்லை. வீட்டில் இருந்த புத்தகங்களை மறுபடி வாசிக்க ஆரம்பித்தேன். சின்ட்ரெல்லா எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். ஏன் தேவதை சிறுமிகளுக்கு மட்டுமே உதவுகிறாள் என்று கோபமாக இருக்கும். சின்ட்ரெல்லாவை போல மாயக்காலணிகள் அணிந்து கொண்டு பறந்து சென்று வந்தால் எப்படியிருக்கும் என்று நானாக ஒரு கதையை மனதில் உருவாக்கத் துவங்குவேன். என் ஊரின் மீது சின்ட்ரெல்லா போல பறப்பது வேடிக்கையாக இருக்கும். என் கதையில் ஊரிலிருந்த கழுதை, நாய்கள், பசுக்கள் யாவும் பறக்க தெரிந்திருந்தன. ஒன்றோடு ஒன்று போட்டியிட்டன. மனது கனவின் தறியை நெய்தபடியே இருந்த நாட்கள் அது.

சிறுவயதில் புத்தகங்களோடு நெருக்கம் கொள்பவர் பின்னாளில் மிகவும் தனிமையாகவே இருக்க விரும்புவார்கள். காரணம் புத்தகம் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாகிவிடும். நூலகத்தில் அமர்ந்து புத்தகம் என்னோடு பேசுவதை கேட்டிருக்கிறேன். அது உலகைப் பற்றிய எண்ணிக்கையற்ற கற்பனைகளை எனக்குள் உருவாக்கியது. உலக வரைபடம் போல வசீகரம் ஊட்டும் ஒன்றை இன்று வரை காணமுடியவில்லை. முழு உலகமும் இவ்வளவு தான் என்பது எவ்வளவு பெரிய விந்தை. ஏதேதோ ஊர்கள், கடல் மலைகள் என்று விரலால் உலகை சுற்றிவருவேன்.

ஒவ்வொரு நாட்டினையும் உற்று கவனித்து அது எப்படியிருக்க கூடும் என்று நானாக ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி கொள்வேன். எனது ஊரோ வீதிகளோ எதுவும் உலக வரைபடத்தில் இல்லை. அது பெரிய வருத்தமாக இருந்தது. எல்லா ஊர்களையும் உள்ளடக்கிய ஒரு வரைபடம் உருவாக்கபட வேண்டும். அப்படி உருவானால் அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நினைத்து கொள்வேன்.

பின்னாளில் போர்ஹேயின் ஒரு கதையை படித்த போது அதில் ஒரு சீன அரசன் அப்படியொரு மாபெரும் வரைபடத்தை உருவாக்க முனைந்ததை அறிந்தேன். முடிவற்று அந்த வரைபடம் நீண்டு போய்விடும் என்பது வியப்பாக இருந்தது.

உண்மையில் உலக வரைபடமும் உலக உருண்டையும் ஒவ்வொரு குழந்தையும் வைத்து வைத்து பார்த்துகொண்டேயிருக்க வேண்டும். அப்போது தான் உலகின் விஸ்தாரணம் நமக்கு புரியும். இல்லாவிட்டால் அவை வெறும் சொற்களாக சுருங்கிப் போய்விடும். வரைபடத்தை பார்த்து பழகியதால் பள்ளியில் வரைபடம் குறிப்பது மிக எளிதாக இருக்கும். பள்ளிவரைபடத்தில் கங்கை காவிரி நர்மதா என்று கோடுகள் போடுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு ஆற்றை எப்படி இரண்டு வளைந்த கோடுகளால் அடையாளப்படுத்திவிட முடியும் என்று சண்டையிட்டிருக்கிறேன்.

புத்தகங்கள் கிராமத்து சிறுவனாக இருந்த என்னை உருமாற்றத் துவங்கியது. நூலகங்களால் தான் வளர்க்கபட்டேன். யாரும் கையால் தொட்டுப் பார்க்காத யுனெஸ்கோ கூரியரை தேடிப் படிக்கும் சிறுவனாக என்னை வியப்போடு பார்ப்பார்கள். என்னிடம் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது என்று நூலகர் பலமுறை ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார். புத்தகங்களின் மீதான ஈடுபாடு ஒரு மனிதனின் அகத்தை செழுமைப்படுத்தி வளர்க்ககூடியது என்பதே என் அனுபவம்.

அலெக்சாண்டரின் குதிரையைப் பற்றி படித்தபோது அது என் முன்னே ஒடுவது போல இருந்தது. பாபிலோனிய தொங்குதோட்டங்களில் நடந்து திரிவதைப் போல கனவு கண்டிருக்கிறேன். ஸ்டெப்பி புல்வெளியும் ஜிப்சிகளும் கனவில் வந்தார்கள். ருஷ்ய தேவதை கதைகள் மற்றநாடுகளின் சிறார் கதைகளை விட அதிகமான ஈர்ப்பை கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக ருஷ்ய புத்தகங்களில் உள்ள சித்திரங்கள். நீல நிற வானத்தில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பது போன்ற ருஷ்யசித்திரம் ஒன்றை பல வருசம் பாதுகாத்து வைத்திருந்தேன்.

பெரிய புத்தகங்களைப் படிப்பதால் அறிவாளியாகிவிட முடியும் என்ற தவறான கற்பனை எப்போதுமேயிருக்கிறது. அது எனக்கும் இருந்தது. இதற்காகவே  அப்படியான  ஆயிரம் பக்க புத்தகங்களைத் தேடி எடுத்து வருவேன். ஆனால் பெரிய புத்தகங்கள் மலைகளைப் போன்றவை. அவற்றை கண்ணால் பார்க்க தான் முடியும். படிக்க வேண்டும் என்றால் மலையேற்றம் போல நாம் அதிக முயற்சி செய்தாக வேண்டும்.

புத்தகத்திற்கு நிறைய வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசகனும் ஒரு வழியாகவே அதற்குள் நுழைகிறான். ஒரு வழியாகவே வெளியேறுகிறான். கதையின் துவக்கம் என்பது நுழை வாயில் அல்ல. மாறாக அங்கிருந்து நடக்கத் துவங்கினால் ஏதாவது புள்ளியில் கதையின் நுழைவாயில் தென்படும். அப்படி தான் கதை முடியும் இடமும். கடைசி வரி என்பது ஒரு தற்காலி நிறுத்தம் மட்டுமே. ஈடுபாடு கொண்ட வாசகன் கதையை நீட்டிக் கொண்டேயிருப்பான். எனக்குப் பிடித்தமான நிறைய புத்தகங்களுக்கு நான் கூடுதலாக சில பக்கங்கள் எழுதிப் பார்த்திருக்கிறேன். அந்த முடிவு என்னுடையது. வாசகன் அடையும் முக்கிய சுதந்திரம் இதுவே.

புத்தகங்களைப் படிப்பதற்கு எந்த குறுக்குவழிகளும் கிடையாது. அதன்வசம் நம்மை ஒப்படைப்பதைத் தவிர. புத்தகம் நம்மை அழைத்து செல்லும் வழிகள் விசித்திரமானவை. சொற்களை நம்பி நாம் முன்னேறிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு இசைக்கருவியைப் போன்றது. அதிலிருந்து ஒரு  தனித்துவமான இசை பீறிடுகிறது. நம் கண்கள் சொற்களின் மீது நகர்ந்து போவதால் அந்த இசை உருவாக்கபடுகிறது. புத்தகங்களின் இசையைக் கேட்டு பழகிவிட்டால் அதன் மயக்கம் நம்மைப் பற்றிக் கொண்டுவிடும். அந்த சந்தோஷத்திற்கு இணையாக வேறு எதையும் என்னால்  சொல்ல முடியவில்லை.

பள்ளிவயதில் படிக்க நினைத்து கிடைக்காத புத்தகங்களை இப்போது கடைகளில் பார்க்கும் போதும் அந்த ஏக்கம் தொடரவே செய்கிறது. ஆனால் அதை வாங்க மனதில்லை. இனி எதற்காக என்று மனம் அதைப் புறந்தள்ளிவிடுகிறது.

சிறுவர் புத்தகங்கள் சிலவற்றை மீண்டும் வாசித்து பார்த்தேன். அன்று எது மயக்கியதோ அது இன்று எளிமையாக இருக்கிறது. அன்று எது எளிமையாக இருந்ததோ அது இன்று மயக்குகிறது. அதே புத்தகம் தான் ஆனால் நான் தான் மாறிக் கொண்டேயிருக்கிறேன்.

சிறுவயதில் படித்த படக்கதை ஒன்று.

ஒரு பூனை ஒன்று நூல்கண்டை உருட்டிக் கொண்டிருக்கிறது. நூல் உருண்டு உருண்டு போகிறது. பூனை நூலின் பின்னாலே விரட்டி போகிறது. முடிவில் நூல் முடிந்துவிடுகிறது. பூனை நூல் எங்கே போனது என்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. அந்த திகைப்பு அற்புதமானது.இந்த சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. எட்டே வண்ணச்சித்திரங்கள்.  வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனை தான் வாசகனின் மனது.

புத்தகம் என்பது வெறும் சொல் அல்ல அது ஒரு முடிவற்ற பயணம். நமது விருப்பமும் தேடுதலுமே அதற்கு முக்கியம். கடல்மாலுமிகளுக்கு மட்டும் தேவதைகளின் குரல் கேட்கும் என்பார்கள். அப்படி விருப்பமான வாசகர்களுக்கு கேட்க கூடியது புத்தகங்களின் பாடல்.

**
எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: ‘பனுவல் போற்றுதும்

நெருக்கமான நண்பர்களிடம் இருந்தும் கூட சிலசமயம் தொலைபேசி அழைப்புகள் வரும்.

“ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, பொ, பெள லே ஆரம்பிக்கப்பட்ட நல்ல பேராச் சொல்லுங்க!”

“ஆம்பிளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா?”

“பொம்பளைப் பிள்ளைதான்” அதில் ஒரு அலட்சியத் தொனியும் அங்கலாய்ப்பும்.

“உங்களுக்கு ஆரு?”

“தம்பிக்க மக… சோசியரு இங்கிலீசு பி-யிலே தொடங்கப்பட்ட பேரா வய்க்கச் சொல்லுதாரு!”

“ ‘பி’ண்ணா பூனாவா, பாம்பேயா?”

“பி ஃபார் பொட்டேட்டோ”

“ஓ அது சரி. பிள்ளை என்ன நச்சத்திரம்?”

“அது தெரியாதுல்லா!”

“அதும் அப்பிடியா? நீங்கோ பிள்ளைக்கு அப்பனைப் பெத்த ஆத்தா பேரு, அம்மையைப் பெத்த ஆத்தா பேர் வய்க்க மாட்டேளா?”

“அது வளக்கமில்லே பாத்த்துக்கிடுங்க”

“எத்தனை எளுத்திலே வேணும்?”

“ரெண்டு அல்லது மூணு எளுத்து. கூடிப்போனா நாலு எளுத்து”

“ஒரு எளுத்து ஆகாது?”

“அது வேண்டாம்” ஒரு வேளை “பூ” என்று வைத்துவிடுவேனோ என்று அஞ்சியிருக்கலாம்.

“ம்… சரி… விஜயா பதிப்பகத்திலே கேட்டா, ஆண்-பெண், இந்து - இஸ்லாம் - கிறிஸ்துவம், முற்போக்கு, தனித்தமிழ் பெயரு வைக்க நல்லா தடிப் பொஸ்தகமா தருவாங்க…”

“அதெல்லாம் வேண்டாம்… நீரே சொன்னாப் போரும்”

நெருங்கிய இலக்கிய நண்பராக இருப்பார். பகைத்துக்கொள்ள இயலாது. நான் பாட்டுக்குத் திண்டுக்கு முண்டு ஏதும் சொன்னால் வெள்ளாளத் திமிர் எனக் கட்டுரை எழுதவும் ஆகும்.

“சரி கொஞ்சம் சமயம் கொடுங்க… யோசிச்சுச் சொல்லுகேன்”

“சரி அண்ணாச்சி, காலம்பற கூப்பிடுகேன்”

இந்த உரையாடல் நடக்கும்போது இரவு பத்தரை மணியாக இருக்கும். இனி விடிவதற்குள் ‘P’யில் தொடங்கும் பெண்பாற் பெயர், 2 முதல் 4 எழுத்துக்குள் யோசிக்க வேண்டும். அதுவும் நண்பர் பகுத்தறிவு, முற்போக்கு, தனித்தமிழ்ப் பாசறை எனில் சாமிப்பெயர், மரபுப்பெயர் ஆகாது. பரமேஸ்வரி, பகவதி, பச்சை நாயகி என யோசிக்க இயலாது. உச்சரிப்பில் Bயும் வரலாகாது. நாமே விஜயா பதிப்பகத்துச் சிதம்பரத்துக்கு ஃபோன் செய்யலாம் எனில் கடை சாத்தி இருப்பார்கள். இனி காலை ஒன்பது மணிதான். வேலாயுத அண்ணாச்சி ஊரில் இருந்தால் ஒரு புத்தகமே ஆனாலும் காலை ஏழுமணிக்குத் திறந்து எடுத்துத் தருவார். சிதம்பரத்திடம் அதுவும் நடக்காது. ஒரு எழுத்தாளனாக இருப்பதில் எத்தனை துன்பம் பார்த்தீர்களா? பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் - சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு - விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு - பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற - சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி - புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?

நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.

உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.

பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.

ஆங்கில நாடகத் தலைப்பு, ‘Waiting for Godart’ஐ மறந்திருக்க மாட்டீர்கள். பாதல் சர்க்கார் எனும் வங்காள நாடகத் தலைப்பு ‘ஜுலுஸ்’. எனில் ‘ஊர்வலம்’. பரீக்‌ஷா ஞாநி, அதிலிருந்துதான் தனது நாடகத் தலைப்பான ‘பலூன் ஊர்வலம்’ பெற்றிருப்பார். சுரேஷ்வர்மாவின் இந்தி நாடகம் ‘சூரஜ் கா அந்திம் கிரண் சே சூரஜ் கா பஃஹ்லே கிரண் தக்’ என்பது தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்தது ‘சூரியனின் கடைசிக் கிரணத்தில் இருந்து சூரியனின் முதல் கிரணம் வரை’. நாடகத்தைப் பார்த்தவன், வாசித்தவன் எனும் ரீதியில் எனக்கு அந்தத் தலைப்பு என்றுமோர் மயக்கம். ‘சாந்த்ததா, கோர்ட் சாலு ஆஹே’ என்பது மராத்திய நாடகத் தலைப்பு. ‘அமைதி காக்க. நீதிமன்றம் நடக்கிறது’ என்று உத்தேசமாகச் சொல்லலாம். இன்னொரு மராத்தி நாடகம், ‘மோகன் ஜோஷி ஹாஸிர் ஹோ?’ பொருள், ‘மோகன் ஜோஷி ஆஜராகி இருக்கிறீரா?’

முன்பு அமோல் பாலேகர், அவர் மனைவி சித்ரா பாலேகர் கிராமத்து நிலப்பிரபுத்துவக் கணவன் - மனைவியாகவும் ஸ்மிதா பாட்டில் குழந்தைப் பேறில்லாத வைப்பாட்டியாகவும் நடித்த மராத்தி சினிமா ஒன்று வந்தது. முப்பது ஆண்டுகள் இருக்கும். மும்பாயில் ஞான.ராஜசேகரனுடன் சேர்ந்து பார்த்த அபூர்வமான படங்களில் ஒன்று. மக்கட்பேறு வேண்டி கிராமத்து உக்கிர தேவதைக்கு பத்து வயதுச் சிறுமியைப் பலி கொடுக்கும் படம். புணே பக்கத்துக் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. பலி செய்து கிண்ணத்தில் ஏந்திய சிறுமியின் ரத்தத்தைப் பெண் தெய்வத்துக்கு தெளிக்கும் காட்சியில் வாந்தியைக் கட்டுப்படுத்தப் பிராயாசைப்பட வேண்டியிருந்தது. பின்னொரு நாளில், வொர்லி NFDC அலுவலகத்தில், தமிழ்ச் சிறுகதை, நாவல்களில் முக்கியமானவரான பூமணியின் சினிமாத் தயாரிப்புக்கான உதவித் தொகை பற்றி விசாரிக்க NFDC தலைவராக இருந்த அமோல் பாலேகரைச் சந்தித்து உரையாடியபோது, அந்த மராத்தி சினிமா பற்றி பாராட்டிச் சொன்னேன். படத்தின் தலைப்பு ‘அக்ரீத்’. எனக்குத் தெரிந்த தமிழில் அதை ஒற்றைச் சொல்லில் பெயர்க்க இயலாது. வேண்டுமானால் ‘எது நடந்திருக்கக் கூடாதோ அது நடந்து விட்டது’ எனலாம்.

பால்சக்கரியாவின் சிறுகதை ஒன்றின் தலைப்பு, தமிழில் ‘ஏசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப் பற்றியதோர் குற்றச்சாட்டு’. காக்கநாடனின் சிறுகதை என்று நினைவு, தலைப்பு ‘சொர்க்கத்துக்கு ஒரு அடியீடு மட்டும்’. இந்த சந்தர்ப்பத்தில் சா.கந்தசாமியின் சிறுகதைத் தலைப்பை என்னால் நினைக்காமல் இருக்க இயலாது. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. பின்னர் அஃதோர் குறும்படமாக வந்தது.

எனக்குப் பிடித்த சில மொழிபெயர்ப்பு நாவல்களின் தலைப்புகள், ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்’ போன்றவை. நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்த்து வெளியிட்டவை.

ஒரு புத்தகத்தின் முகம் தலைப்பு. புத்தகத்தின் பாடுபொருளைத் தலைப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பூடகமாகவோ கோடி காட்ட வேண்டும். வாசக மனத்தைக் கவர்வதாக, யோசிக்க வைப்பதாக, கற்பனைக்கு இடமளிப்பதாக, கவித்துவத்துடன் இருக்க வேண்டும். நேரடியான தலைப்புகள் கவர்ச்சி அற்றன, வாசக வரவேற்பைப் பெறாமற் போயின எனக் கூறவரவில்லை ஈண்டு.

‘Old Man And The Sea’ எனும் எளிமையான தலைப்பைத் தனது நாவலுக்குச் சூட்டுமுன் எர்னஸ்ட் ஹெமிங்வே நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளை யோசித்ததாகச் சொல்வார்கள்.

ச.து.சு.யோகியார் அதைத் தமிழில் பெயர்த்தபோது ‘கடலும், கிழவனும்’ எனப் பெயர் சூட்டினார். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த எம்.எஸ் மொழிபெயர்ப்பு ‘கிழவனும் கடலும்’ எனத் தலைப்பிட்டது. இரண்டுக்கும் உள்ள நுட்பமான தொனி வேறுபாட்டை நாம் கருத்தில் கொள்ளலாம்.

சா.கந்தசாமியின் நாவல் தலைப்புகளில் சிறப்பானது ‘அவன் ஆனது’. இந்தத் தலைப்பை ஆங்கிலத்தில் பெயர்க்க யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். இந்தத் தலைப்பைச் சூட்டியவர் ஞானக்கூத்தன் என்று எனக்கு யாரோ சொன்னார்கள். அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’, நகுலனின் ‘நினைவுப் பாதை’, எஸ்.செந்தில்குமாரின் ‘முறி மருந்து’ எனும் தலைப்புகள் என்னை வசீகரித்தவை.

கவிதைத் தொகுப்புகள் சிலவற்றின் தலைப்புகள் சில பிரமிக்க வைப்பவை. எனது முதல் மதிப்பெண் யூமா வாசுகியின் ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’. தலைப்பே ஒரு கவிதை.

பிரான்சிஸ் கிருபாவின் ‘நிழலன்றி ஏதுமற்றவன்’, தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’, சமயவேலின் ‘காற்றின் பாடல்’, சக்தி ஜோதியின் ‘நிழல் புகும் சொற்கள்’, தாணு பிச்சையாவின் ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ உடனடியாக நினைவுக்கு வரும் சில.

ஜெயமோகனின் சிறுகதைத் தலைப்பு ‘திசைகளின் நடுவே’, பா.திருச்செந்தாழையின் ‘ஆண்கள் விடுதி: அறை எண் 12’, அழகிய பெரியவனின் ‘திசையெல்லாம் அவர்கள் கொண்ட கிராமம்’, ஜே.பி.சாணக்கியாவின் ‘உடைந்த புல்லாங்குழல்’ வேறுபட்ட தலைப்புகள்.

நின்று நிதானமாக யோசிக்க வைத்து, கற்பனையின் வெளியை விரித்து, நல்ல கவிதை ஒன்றினை வாசித்த அனுபவத்தை ஒரு தலைப்பே தந்துவிடுவதுண்டு.

கோவையைச் சேர்ந்த இளம் படைப்பாளி கனகலட்சுமி, கால்செண்டர் ஒன்றில் வேலை பார்ப்பவர். மேடைப் பேச்சாளர், அவ்வப்போது எழுதுகிறவர். கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்து, கால் செண்டர்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களின் தொழில் ஒவ்வாமை பற்றி எழுதிய நாவல் விரைவில் வெளியாக உள்ளது. என்னிடம் சில தலைப்புகள் சொன்னார். அவற்றுள் ஒன்று ‘பேச்சரவம் கேட்டிலையோ?’. அந்தத் தலைப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூலொன்று உண்டு என்றேன். ‘நடுநிசி’ என்றார். சுந்தர ராமசாமியின் கவிதைத் தலைப்பொன்று ‘நடுநிசி நாய்கள்’ என்றேன்.

‘காசும் பிறப்பும்’ என்றொரு தலைப்பு ஓடியது என் மனதில். ஆனால் அதற்கொரு தெளிவுரை எழுத வேண்டும் கையோடு.

‘என்பிலதனை வெயில் காயும்’ என்று என் இரண்டாவது நாவலுக்குத் தலைப்பு வைத்தபோது வண்ணதாசன் எனக்கு எழுதினார் - ‘இந்தத் தமிழ் மீது யாருக்கும் கோபமில்லை. எளிமையாக வெயில் என்றே வைத்திருக்கலாம்’ என. அந்த நாவல் மூன்றாம் பதிப்பு வந்தபோது, அட்டை வடிவமைத்தபோது, பிழையாகத் தலைப்பு ‘என்பிதலனை வெயில் காயும்’ என மாறிவிட்டது. என் மனைவிதான் கண்டு சொன்னாள். வேறு எவருமே கவனிக்கவில்லை என்பதோர் வாழ்நாள் சோகம். வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வைத்த பெயர் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’. அந்தப் புத்தகத்தின் தலைப்பும், பரந்தாமனின் தயாரிப்பும் என்றும் நினைவில் நிற்பவை.

எனது ஆறாவது நாவலின் தலைப்பு ‘எட்டுத்திக்கும் மதயானை’. சமீபத்தில் ‘Against All Odds’ ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு வந்தது, கிழக்குப் பதிப்பகம் வெளியீடு. அந்தத் தலைப்பை நான் இந்தியத் தொன்மங்களில் இருந்து எடுத்துக் கொண்டேன். திசையானைகள் எட்டும் பூமியைத் தாங்குகின்றன என்பது தொன்மம். ‘திசையானை மருப்பொசித்துச் செருச் செய்து’ என்றொரு பாடல்வரி உண்டு. ஆண்டாள், ‘மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக்’ கேட்டவள் ஆழி வெண் சங்கிடம். திசையானைகள் எட்டும் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பெளமம், சுப்ர தீபம் எனும் நாமங்கொண்ட களிறுகள். அவற்றின் பிடி யானைகளுக்கு அப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்ரபரணி, சுப தந்தி, அங்கனை, அஞ்சனாவதி என்பன நாமங்கள்.

ettu2

திசையானைகளைப் போரிட்டு, அவற்றின் தந்தங்கள் மார்பிலே பாய்ந்து முறிந்ததைப் பிடுங்கி வீசாமல், அவற்றில் நவமணிகள் பதித்து ஆபரணம் போலக் கொண்டு நடந்தான் இராவணன் என்றொரு தொன்மம் உண்டு. கம்பன் இராவணனை, ‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்’ என்பான். வாரணம் எனில் யானை, வரை எனில் மலை, ஈண்டு கைலாயம்.

பூமி உருண்டையைத் திசை எட்டில் நின்று சுமக்கும் அட்ட திக்கயங்களுக்கும் மதம் பிடித்தால் எனும் கற்பனையே நாவலின் தலைப்பு ‘எட்டுத் திக்கும் மதயானை’.

சமீபத்தில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் திசையில் நான் தலைவைத்துப் படுக்கவில்லை. ‘அழையாத வீட்டில் நாய் நுழைந்தாற்போல’ எனும் பழமொழிதான் காரணம்.

ஆனால் தினமும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொண்டாட்டங்கள், கவியரங்குகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் எனப் பார்த்தேன். செம்மொழி செல்லும் திசையறிய வேண்டாமா?

பார்க்கும்போது, பக்கத்தில், சின்னத் தட்டத்தில் நறுக்கிய எலுமிச்சம்பழத்தின் பாதியும், உப்பும் வைத்திருந்தேன். வாந்தி வரும் சமயம் நாக்கில் தடவிக்கொள்ள.

செம்மொழி மாநாடு முடிந்த பிறகு தினமும் புத்தகக் கண்காட்சி போனேன். அங்கு நான் வாங்கிய பல நூல்களில் ஒன்று கவிஞர் விக்ரமாதித்யனின் ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.

கவிதைகள் குறித்த, தன் வரலாற்றுக் கட்டுரைகளும் நேர்காணல்களும். சந்தியா பதிப்பகம் நேர்த்தியாகத் தயாரித்தது. இருநூறு பக்கங்கள், தொண்ணூறு ரூபாய் விலை. இந்தத் தரத்தில், அளவில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் 200 பக்கம் என்றால் நூற்றெண்பது ரூபாய் விலை வைப்பதையும் நாம் பார்க்கிறோம். கவிஞர்கள் உரைநடை எழுத வரும்போது, அதற்கெனத் தனியான வாசனை உண்டு. விக்ரமாதித்யன், தேவதேவன் சிறுகதைகள், ராஜசுந்தர ராஜன் கட்டுரைகள் சில எடுத்துக்காட்டுகள். மொழியைக் கூர்மையாகக் கையாளத் தெரியாதவன் கவி எழுதுவதற்கு தகுதியற்றவன். கவிஞர்களின் உரைநடைக்கு என மொழி வசீகரம் உண்டு.

கவிஞர்கள் சிறப்பாகச் சிறுகதை எழுதுகிறார்கள் என்று சொல்வது அவர்தம் கவிதை பற்றிய திறனாய்வு அல்ல.

இந்தத் தொகுப்பில் விக்ரமாதித்யன் தனது வாழ்க்கைச் சூழல், கவிதைகள் பிறந்த சூழல், தனது கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் எனப் பலவற்றையும் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்கிறார். தனது கவிதைகளையே விலகி நின்று அவதானிக்கும் அவரது பார்வை நேர்மையானது. தனது கவிதைகளில் குறைந்தது முப்பதாவது சிறந்த கவிதைகளாக நிற்கும் என்பது அவரது கோரிக்கையல்ல, எதிர்பார்ப்பல்ல, ஏக்கமும் அல்ல, அவதானிப்பு.

நான் எழுதும் இந்தக் கட்டுரை, இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்ய அல்ல. அதன் தலைப்பை அறிமுகம் செய்ய. என்ன நுட்பமான தலைப்பு பாருங்கள். ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.

கவிஞனின் மொத்த வாழ்க்கையை, கவிதைகளின் மொத்தப் போக்கை இந்தத் தலைப்பு குன்றேறி நின்று கூவுகிறது. அந்த வரியே ஒரு முழுக்கவிதை. ஒரு கவிஞனால் மட்டுமே இவ்விதமானதோர் தலைப்பை சிந்திக்க முடியும்.

கவனியுங்கள் - எனக்கும் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு அல்ல. எனக்கு என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு. இங்கு என் எனும் சொல் விரிக்கும் பொருள் அனந்தம்.

தெய்வத்தை diswon செய்வதல்ல. முன்னிறுத்தி சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி கேட்பது. இதில் வாதி கவிஞன், பிரதி தெய்வம். தீர்ப்பெழுதும் நீதிபதி யார்? அதுவும் பிரதியான தெய்வம்தான். பிரதியும், நீதிபதியும், சாட்சியும் ஆன தெய்வம்.

இன்றைய அரசியல் சூழலுக்கு இதைச் சற்று மாற்றுப் போட்டு யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். வாதி மக்கள். பிரதியும், சாட்சியும், தீர்ப்பு எழுதுகிறவனும் ஆள்கிற வர்க்கம். இது சமகாலத் தேய்வு. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கைப் பேசுகிறார் கவிஞர்.

மொத்த வழக்கின் போக்கே, என் தெய்வம் எனும் பிரயோகத்தில் இருக்கிறது. என் தெய்வம் எனும்போது, அந்தத் தெய்வம் கலாப்ரியாவின் தெய்வம் இல்லை, தேவதேவனின் தெய்வம் இல்லை, சுகுமாரனின் தெய்வம் இல்லை, மனுஷ்யபுத்திரனின் தெய்வம் இல்லை, கல்யாண்ஜியின் தெய்வம் இல்லை, யவனிகா ஸ்ரீராம் தெய்வம் இல்லை, விக்ரமாதித்யனின் தெய்வம்.

அதெப்படி, ஆளுக்கொரு தெய்வமா என்று கேட்பீர்கள். ஆமென்பேன் நான். தெய்வம் தேவைக்கு, சூழலுக்கு, முறையீட்டுக்குத் தகுந்தாற் போன்றது. ஆதிமலைவாசியின் தெய்வமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளர் தெய்வமும் ஒன்றல்ல. சிவனை, திருமாலை, விநாயகனை, முருகனைப் பொருட்படுத்தாத கிராமத்தான் காடனையும் மாடனையும் துணைக்கு அழைத்துப் பேசுகிறான்.

விக்ரமாதித்யன் கட்டுரைகளிலேயே நெறிப்படுத்தப்பட்ட பெருந்தெய்வங்கள் பற்றியும் சுடலைக்கார மாடனைப் பொன்ற தெய்வங்கள் பற்றியும் குறிப்புகள் உண்டு.

மற்றெந்தக் கலைஞனை விடவும் ஒரு கவிஞன்தான் இந்த வழக்கைப் பேச முடியும். எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நிர்மால்யம்’ சினிமாவின் வெளிச்சப்பாடு போல. ஒரு வகையில் கவிஞன் என்பவன் உபாசகன். வெளிச்சப்பாடு. உபாசனா தெய்வத்தின் அருட்கனம் தாங்காமல் துவண்டு உழல்பவன்.

விக்ரமாதித்யன் எனும் கவிஞனின் வாழ்நாள் சாதனைக்குத் தலைப்பாக வாய்த்த இந்தக் கவிதை வரி ஒன்றே போதுமானது என்றெனக்குத் தோன்றுகிறது.

     RSS of this page